படித்ததும் சுவைத்ததும் – 4 : ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்
(இத்தொடரிலுள்ள கட்டுரைகள் அவ்வப்போது எழுதப்பட்டு சிற்றிதழ்களிலும், திண்ணைமுதலான இணைய இதழ்களிலும் வெளிவந்தவை)
“பண்டைநாள் பெருமைபேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்” என உரிமையோடு தமிழினத்தைச் சாடுகிற அசலான இனப்பற்றுள்ள ப. சிங்காரம் தமிழினத்தின் காவலரோ, தமிழினத் தலைவரோ அல்ல ஆனாலும் இனத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை தமது எழுத்துகளில் தயக்கமின்றி தெரிவித்திருக்கிறார். எத்தனை படித்தாலும், எங்கே வாழ்ந்தாலும் “அடுத்தக் காட்சிக்காக சினிமா ஜோடனையுடன் தவம் செய்கிறது தமிழர்கூட்டம்”-(பக்கம் 114 -புயலில் ஒரு தோணி ) என்ற அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழினத்தின் பொதுபிம்பத்திற்கும், தங்கள் இலக்கியவெளியை தமிழிலக்கிய வரலாற்றில் முதல் இருநூறு பக்கங்களில் குறுக்கிக்கொண்டு மொழியை வளர்ப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற பிதாமகர்களுக்கும் ப. சிங்காரம் போன்றவர்கள் அவசியமற்றவர்கள். ஆனால் வாசிப்பு, எழுத்து, படைப்புபென்று அலைகிற நம்மைப் போன்றோருக்கு அவர் தவிர்க்கமுடியாதவர் ஆகிறார்.
சராசரி மனிதனைக்காட்டிலும், கலைஞன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன், உண்மையோடு கைகோர்க்கிறவன், சிறுமை கண்டு கொதித்துப்போகிறவன். படைப்பு: ஒருவகையான ஆயுதம், ஊடகம். படைப்பாளி தமக்குள் இருக்கும் அந்த மற்றொருவனை சமாதானப்படுத்தும் தந்திரம். ப. சிங்காரமும் அதைத்தான் செய்திருக்கிறார். அவரால் எழுதப்பட்டவை இரண்டே இரண்டு நூல்கள். அவர் எழுத்தைப் புரிந்து, அவரைப்புரிந்து ஊக்குவிக்க அப்போதைய படைப்பிலக்கிய சூழல் தவறி இருக்கிறது. அதற்கு அவரும் ஒருவகையில் பொறுப்பு. “இப்போதுதான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கங்கூட வாசிக்க முடியலை.” என்ற அவரது எரிச்சலும், “தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். “அவங்க எழுதியதை படிக்கவில்லை”, என்றாறென அவரைச் சந்தித்த ந. முருகேச பாண்டியன் தரும் வாக்குமூலமும், மாற்றுதளத்தில் இயங்கிய தமிழ் படைப்பாளிகளை பற்றியோ, அவர்கள் தம் படைப்புகள் குறித்தோ ஞானம் ஏதுமின்றியே வாழ்ந்து மடிந்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகின்றன.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம் புணரி கிராமத்தில் பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனான ப. சிங்காரம் பிறந்த ஆண்டு 1920. சிங்கம் புணரி தொடக்கப்பள்ளி, மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியென்று கல்வியினை முடித்து பிழைப்புத் தேடி இந்தோனேஷியாவிற்குச் சென்றிருக்கிறார். இடையில் 1940 ஆண்டுவாக்கில் இந்தியாவிற்கு வந்திருந்தபோதிலும், 1946ல் இந்தியா திரும்பியவர் மதுரையில் நிரந்தரமாக தங்கி தினத்தந்தியின் பணியாற்றி இருக்கிறார். முதல் நாவல் ‘கடலுக்கு அப்பால்’ 1950ம் ஆண்டு எழுதப்பட்டு கலைமகள் நாவல் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது நாவல் ‘புயலிலே ஒரு தோணி’ 1962ல் எழுதபட்டு கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது இரண்டு நாவல்களையும் இணைத்து தமிழினி முதல் பதிப்பை 1999ம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பினை 2005ம் ஆண்டிலும் வெளியிட்டிருப்பதை அறியமுடிகிறது. இந்த மூன்றாண்டுகள் இடைவெளியில் மூன்றாவது பதிப்பினை வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை.
‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ என்ற இரு நாவல்களும், நல்ல நாவல்கள் என்பதற்கான இலக்கணங்களைத் தவிர்த்து, புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளன் ஒருவனின் படைப்புகளாக அவை என்னை பெரிதும் கவர்ந்தன. கண்ணிற பட்ட அவலங்களை ஒளிக்காமல், ஒதுங்கிப்போகாமல் வெளிக்கொணர்ந்த ப. சிங்காரத்தின் உணர்வும், மனதை நச்சரிக்கும் தாய்நாட்டு ஏக்கமும், அவர் அமைத்துக்கொண்ட துறவு வாழ்க்கையும், முரண்பாடுகள் ஏதுமின்றியே உறவுகளிடம் அவர் ஒதுங்கிவாழ்ந்தமை போன்ற அம்சங்களில் என்னைக்கண்டது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஆசிரியரே சொல்லுவதுபோன்று ‘புயலில் ஒரு தோணி’ இரண்டாம் உலகப்போரைபற்றிய நாவலா? என்றால் ஆமோதிக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. கதைக் களம் யுத்தகாலம். தாயகம் பற்றிய பல கனவுகளுடனிருந்த கதை நாயகனை யுத்தம் சுவீகரித்துக் கொள்கிறது, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஆதிக்க யுத்தம், அவர்களுடைய காலனி நாடுகளையும் விட்டுவைக்கவில்லை, உலகின் பலமுனைகளிலும் நடைபெறும் யுத்தமும் அதன் வெற்றி தோல்விகளும் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகின்றன என்பதுதான் கதைக்கான Trame. ஒரு சில அத்தியாங்களில் டாய் நிப்பன் (ஜப்பானியரின்) படையின் ராணுவ திட்டங்கள், கடற்படை நடவடிக்கைகள், விமானத் தாக்குதல்கள், நேச நாடுகளுடைய பதிலடிபற்றிய விபரங்கள் தெளிவாகச் சொல்லபட்டிருக்கின்றன. ஜப்பானியபடை மெடான் நகருக்குள் நுழைவதுடன் ஆரம்பமாகும் கதை. ரஷ்யாவுக்குள் நுழைந்த நாஜிப்படைகள் ஈட்டும் வெற்றி, ஜப்பானியரின் நீதகா யாமா நோபுரே போர்த்திட்டம், பெர்ள் ஹார்பர் தாக்குதல், பிரிட்டிஷார் வசமிருந்த தெற்கு ஆசியாவைத் தங்கள் வசம்கொள்ள ஒரே நேரத்தில் பல திசைகளில் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியுள்ள இடங்களில் போர்தொடுத்து கண்ட வெற்றிகளென்று ஜப்பானியர் தற்காலிக வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த நேரம். யுத்தகால விபரீதங்களையும் ஆசிரியர் நாம் திடமனதின்றி வாசிக்க இயலாதென்கிற அளவிற்கு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
“வடக்கேயுள்ள பேப்பேயெம் பெட்ரோல் கிடங்கு சீறி எரியும் தீக்குரல் இப்போது தெளிவாகக் கேட்கிறது..இடையிடையே பீப்பாய்கள் வெடிக்கும் ஓசை: ட்ராஅஅம்…ட்ராஅஅம்…அச்சின் மாட்ஸ்கப்பை கிடங்குகள் உடைந்து கிடக்கின்றன. அவற்றினுள் ஈசல்போல் மொய்த்திருக்கும் மனிதக் கும்பலின் களவு- வெறி இறைச்சல்; வெளியே ஓவல் டின், டயர், பூட்ஸ், டார்ச் லைட்டுகளுடன் விரையும்- இடறிவிழும் ஆட்கள், மனிதக்கூட்டம் அகப்பட்டதை அள்ளிச் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறது.(பக்கம்- 24);
“புல்லாந்தரையில் பிறந்த மேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டபகலில் ஊரறிய உலகறிய காதறிய கண்ணறியக் கட்டாய உடலாட்டு. ஆயயவோய்! ஓ மரியா! ஆயயயோவ்!” (பக்கம் – 25),
“ஹக்கா- வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிளந்த வாயும் மங்கிய கண்களுமாய் ஐந்து தலைகள் மேசைமீது கிடந்தன- இல்லை நின்றன. சூழ்ந்திருந்த ஜப்பானியர் சிரித்து விளையாடினர்.(பக்கம்-30)
ஆயுதத்தினாலுற்ற வெற்றிக்குப்பின்னே கொலை, கொள்ளை கற்பழிப்பு என்ற பழிவாங்கல் படலம், தளையுண்டிருக்கிறவரை சாதுவாகவும், நுகத்தடி நீங்கியதும் துள்ளுகிற மனித மிருகங்களின் பற்களிலும் கால்களிலும் சிக்கித் தவிக்கும் மானிடத்தின் பரிதாப நிலையை விவரித்து இருப்பதாலேயே போர்பற்றிய நாவலென்றொரு வரையறைக்குள் அவசரப்பட்டு திணிப்பதும் நியாயயமாகாது. அதனை மறுப்பதற்கு ஆசிரியரது வார்த்தைகளேபோதும், வேறு சாட்சிகள் வேண்டாம். “இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்திலே எங்க இருக்கு? ஆனா போன இடத்துல என்ன இருக்குண்ணு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க. அப்படி பார்த்திருந்தாகன்னா இன்னக்கித் தமிழிலே ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்” என்று ந. முருகேச பாண்டியனிடம் அவர் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை, தமது நாவலில் புரிந்துகொண்டு செயல்பட்டிருப்பதன் மூலம் நாவலை எழுத அவருக்கு வேறுகாரணங்களும் இருக்கின்றன.
படைப்பவனில்லாத நாவலெது? கதை நாயகன் ஊடாகவும் பிற மாந்தர்கள் ஊடாகவும் சொந்த மண் உழப்படுகிறது. அந்த நாள் நினைவுகளில் ஆசிரியர் மூழ்கித் திளைக்கிறார், கூடவே விடுபடமுடியாமல் இனம், நாடு சார்ந்த கனவுகள் கவலைகள் அது சார்ந்த கோபங்கள், ஆவேசங்கள்.
“பாண்டி! உங்கள் நாட்டுக்கு எப்போது விடுதலை?”
“அடுத்த தைப்பூசம்.”
“தைப்பூசத்தன்று பரம்பரை வழக்கபடி காவடியாட்டம் தான்” (பக்கம் -30)
“கோட்டைக் கொத்தளங்களைத் தகர்த்தெறிந்த தமிழ் வீரர்களின் கொடிவழியில் வந்தோரிற் சிலர், இதோ….. பண்டைய ஸ்ரீவிஜய அரசின் ஒரு பகுதியான சுமத்ராவிலிருந்து மற்றொரு பகுதியான மலேயாவை நோக்கித் தொங்கானில் செல்கின்றனர். கடல் கடந்து போய்ப் புத்தம் புதுமைகளை கண்டறிந்து செயல் புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டல்ல – வயிற்றுப் பிழைப்புக்காக.”(பக்கம்-71)
“தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாகப் ‘பொதியமலை போதை’யிலிருந்து விடுபடவேண்டும். அதுவரையில் முறையான மேம்பாட்டு முயற்சிகளுக்கு வழிபிறக்காது. ‘திருக்குறளைப் பார்! சிலப்பதிகாரத்தைப் பார்! தஞ்சைப் பெரியகோயிலைப்பார்! காவேரி கல்லணையைப்பார்!” என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப்படுகிறது.”
“வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
– மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்
– இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள்
– பர்மாவில் மூட்டைத் தூக்குகிறார்கள்
– கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள்
– பாரத கண்டம் எங்கும் பரவி பிச்சை எடுக்கிறார்கள் (பக்கம் – 132)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலகமெங்கும் வாழ்ந்த தமிழினத்தின் அவல நிலை, இன்றைக்கு உலகெங்கும் சிதறி வாழும் பெரும்பான்மைத் தமிழரின் அடிப்படை குணமாக மாறிப் போயிருக்கிறது. திரைகடலோடியும் திரவியும் தேடு என்பதில் மட்டும் குறியாய் இருக்கும் தமிழினத்தை உலகெங்கும் பார்க்கிறோம்: நமக்கு வன்முறையிலோ, அடிமைப்பட்டோ பொருளீட்டவேண்டும், மற்றபடி இனப்பற்றாவது மொழிப்பற்றாவது. தன்னை சுய விசாரனைக்குட்படுத்தாத தனிமனிதன் மாத்திரமல்ல, இனமும் உருப்படாது.
புயலில் ஒரு தோணி நாவலாசிரியருக்கு சொந்த நாட்டின் ஏக்கங்களும் நோஸ்ட்டால்ஜியாக நிறைய வருகின்றன. சேதாரமின்றி தமது நெஞ்சத்தை அவரால் விடுவிக்க முடிவதில்லை. பாண்டியன் தொடங்கி, ஆவன்னா என்று சொல்லப்படுகிற ஆண்டியப்ப பிள்ளைவரை பலரும் ஊர் நினைவில் திளைக்கிறவர்கள். வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி வசூலுக்குப் போகும் நாளையும், அடுத்தாட்கள் மேலாளாகி ஆட்டி வைக்கும் காலத்தையும் எண்ணிக் கனவு காண்பார்கள். “திருப்பத்தூரில் கார் ஏசண்டுகள் சின்ன இபுராகிமும் சாமிக்கண்ணுவும் வந்தே மாதரம் ஐயர் கிளப்பு கடைக்கு முன்னே, நானாச்சு நீயாச்சென்று கட்டி புரண்டு மல்லுகட்டியது; வலம்புரிக் கொட்டகை சுந்தராம்பாள் நாடகத்தில் புதுப்பட்டி ஆட்களுக்கும் திருப்பத்தூர்காரர்களுக்கும் இடையே பொம்பளைச் சங்கதியாய் நடந்த கலகம்; சிராவயல் மன்சு விரட்டில் மாரியூர்க் காரிக்காளையை வல்லாளப்பட்டி ஐயன் பந்தயம்போட்டு பிடித்தது போன்ற பழம் நிகழ்ச்சிகளை சலிப்பின்றி மீண்டும் மீண்டும் பேசிபேசி..” ( பக்கம் -36) அவர்கள் மகிழ்கிறவர்கள்.
“அந்தக்காலம் திரும்புமா… கையைச் சுழற்றி பாடிக்கொண்டே தெருவில் ஓடலாம். அப்பாயி செட்டியார்கடை மசால் மொச்சை! ராளிப் பாட்டி விற்கும் புளி வடை! தெருப்புழுதியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டை பெரியாயிடம் பிட்டும் அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும்.. போனதுபோனதுதான். அது ‘மறை எனல் அறியா மாயமில்’ வயது (பக்கம் -98) என்று ஏங்குகிறவர்கள்.
“இங்கினக் கிடந்துக்கிணு சீனன் மலாய்க்காரனோட மாரடிக்கிறதுக்கு வதிலாய் ஊர்ல போயி என்னமாச்சும் ஒரு தொழிலைப் பார்க்கலாம்… ஊர்ல இருக்கிறவுகள்ளாம் சம்பாரிக்கலையா.. நாமள்தான் அக்கறையில என்னமோ கொட்டிக்கிடக்குதுண்ணு வந்து இப்படி லோலாயப்படுறம்” ( பக்கம்-86) என்பது வெளிநாட்டில் வாழும் அநேகர் தவறாமல் சொல்வது.
இந்த ஏக்கத்திற்கு மாற்றாகவும், தங்கள் இனத்தின் கையாலாகாதத்தனத்தின் மீதிருந்த கோபத்திற்கு வடிகாலாவும் எதிர்பாராமல் குறுக்கிட்ட யுத்தம் அமைகிறது. போர்காரணமாக நிலைகுலைந்து கலங்கிநின்ற தென் கிழக்காசியத் தமிழரின் கவலையை ஓரளவுக்கேணும் போக்கும் அருமருந்தாக இந்தியச் சுதந்திர சங்கமும், அதன் போர் அமைப்பாக ‘ஆஸாத் ஹிந்த் ·ப்வ்ஜிலும்’ இருக்கவே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர் பயிற்சி பெறுகின்றனர், “இந்தியச் சமுதாயத்தையே மாற்றித் திருத்தி அமைக்கபோவதாகவும் அதற்குத் தேவையான தகுதியும், திறமையும் தம்மிடம் இருப்பதாக” (பக்கம் -140) பாண்டியனும் அவனது கூட்டாளிகளும் நம்புகிறார்கள்:
“நாம் எதை நம்புவது?”
“இருள் விலகி ஒளி பிறக்குமென்பதை.”
“ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது”( பக்கம் -50) என்ற பாண்டியனுடைய விரக்தி கலந்த சிரிப்பில் ந. முருகேசபாண்டியன் சந்தித்த மதுரை ப. சிங்காரத்தைப் பார்க்கிறோம்.
இந்தியச் சுதந்திரத்தில் சுபாஸ் சந்திர போஸின் பங்கினை வரையறுக்க உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவருடன் தங்களை இணைத்துப் புதையுண்ட தென் கிழக்காசிய தமிழ் இளைஞர்களின் பங்களிப்பும் கவனத்தைப் பெறாமலேயே போனது மிகப்பெரிய சோகம். நாவலாசிரியர் பங்களிப்பு அவ்விழப்பை ஈடு செய்ய முயற்சிப்பது புரிகிறது. நாவலாசிரியர் தகுந்த அதற்கான ஆதாரங்களை பின் இணைப்பில் சேர்த்திருந்தால் ஓர் ஆவணமாகக்கூட இந்நாவல் பின்நாட்களில் உபயோகம் கண்டிருக்கும்.
ஜப்பானிய துருப்புகள் வருகையை வேடிக்கைப் பார்க்கவென்று மெடான் நகர வீதியொன்றில் இந்தோனேஷிய மக்கள் ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். “அன்னெமெர் காதர் மொய்தீன் ராவுத்தரின் பெரிய கிராணி பாண்டியன் சைக்கிளை தள்ளிக்கொண்டு, வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும், வெள்ளை சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.” என்ற கதை நாயகனின் சிக்கனமான அறிமுகத்தில் பலத் தகவல்கள் அடங்கியுள்ளன. நிறம் தெரியாத சராய், வெள்ளை சட்டை, வளர்ந்து நிமிர்ந்த உருவம், ஒரே சீராய் ஒலி எழுப்பும் காலடிகள், தீயொளி வீசும் சிகரெட், பாண்டியன் என்ற பெயருக்கான தேர்வு அனைத்திலும் ஒரு கசிவற்ற முழுமை அல்லது எல்லை மீறா கச்சிதம் இருக்கிறது. கறாரான இக்குணப்பொதிகளை சுமந்தபடி வலம்வரும் பாண்டியனை எங்கும் பார்க்கிறோம். மெடான் சந்துகள்; வட்டிக்கடை தமிழர்கள் நிறைந்த மொஸ்கி ஸ்ட்ராட்டில்; “கடமையிலிருந்து வழுவாமலே, இயலாதவர்க்கு உதவ வேண்டிய அவசியத்தை” (பக்கம்- 44), அர்னேமிய ஆற்றுப் படுகையில் செயல்படுத்துகிற நேரத்தில்; “இந்தாம்பிள இவுஹ குளிக்யணும், ஜல்தியா வென்னிபோடு” என்று பினாங் சீனி இராவுத்தர்கடை அப்துல் காதர் அன்பு உபசரிப்பிற்கு, “வெந்நீர் வேண்டாம், பச்சைத் தண்ணீரே போதும்”, என்ற நாசூக்கான மறுப்பில்; “நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன்”(பக்கம் – 59) என்பதிலுள்ள அகம்பாவத்தில்; ஜராங் லெப்டினென்ட் ஆக மாறியது தொடங்கி கண்ணிற் தெரிகிற கொலைவெறியென பல பாண்டியன்களை சந்திக்கிறோம். “கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு” (பக்கம் – 26) என்பதற்கு அவனே சாட்சி.
காட்சியை நேர்முகப்படுத்துவதாகட்டும்:
“காலை நேரத்தில் கிட்டங்கி முழுவதும் நன்மணம் கமழும் -மல்லிகை சாம்பிராணி, அரகஜா. அன்றாடச் சலவை ஆடையும் பரக்கப் பூசிய திரு நீறுமாய்க் கைமேசைகளுக்குப் பின்னே, கடன் சீட்டுகளையும் குறிப்புப் பேரேடுகளையும் புரட்டியவாறு அடுத்தாட்கள் அமர்ந்திருப்பர். பெட்டியடி பையன் கால்களை சம்மண்மாய் இறுக்கிப்பூட்டிப் பெட்டகத்தோடு பெட்டகமாய் நேர்முதுகுடன் உட்கார்ந்து, பாங்கியில் சமால் போடுவதற்காக பணம் எண்ணிக் கண்ணாடிக் காகிதங்களில் சுருட்டிக்கொண்டிருப்பான்…..” (பக்கம்- 36)
மொழியைக் கையாளும் லாவகமாக இருக்கட்டும்:
“வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்றுகூடிக் கொந்தளிக்கின்றன. வானம் பிளந்து தீ கக்கியது. மழைவெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறிக்கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவித் குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சாகிறோம். சாகப்போகிறோம். மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாவு சாவு…”(பக்கம்- 108)
மென்மையான நகைச்சுவையாகட்டும்:
“பொண்டாட்டியக் கூப்பிடச் சொன்னா மாமியாளைக் கூட்டியாந்து விடுகிற பயல்ங்கிரது சரியாப்போய்ச்சுது. போடா கொதக்குப்பலே, போ.”(பக்கம் – 65)
“மந்தை மாடுகள் வருவதும் போவதுமே சின்ன மங்கலம் பெண்களின் காலக்கோல்… ஆனால் யூனியன் ஆபீஸ் பெரிய கடிகாரத்தை அவ்வளவு திண்ணமாய் நம்பமுடியாது. ஒரு நாள் உச்சிப்பொழுதில் அது ஆறு மணி அடித்தது..”(பக்கம் -99)
ஒரு நல்ல பின் நவீனத்து நாவலுக்குரிய அத்தனை இலட்சணங்களும் இருக்கின்றன. புயலில் ஒரு நாவல் 1964ல் எழுதப்பட்டதாக சொல்லப்டுகிறது. நாவலைப் படிக்கிறபோது சமீப காலமாக தமக்கென ஒரு அடையாளத்துடன் தீவிரமாக இயங்கிவரும் குண்ட்டெர் கிராஸ¤ம் (Gunter Grass), லூயி தெ பெர்னியேரும் (Louis de Bernieres) நினைவுக்கு வருகிறார்கள்
—————————————————————————————————————–
புயலில் ஒரு தோணி- கடலுக்கப்பால் -நாவல்கள்
விலை -180ரூ
ஆசிரியர் – ப. சிங்காரம்
தமிழினி பதிப்பகம்- சென்னை -14