இன்றைய தேதியில் உலகறிந்த பரிசுகளில் நோபெல் பரிசு முதன்மையானது. நோபல் பரிசு அளிக்கும் பணத்தால் அல்ல, அது வழங்கப்படும் பெயரால் பெற்ற பெருமை. இலக்கிய பரிசுகள் பொதுவில் அப்பரிசினைத் தாங்கி நிற்கும் மனிதர்களாலும் பெருமை பெறுபவை. பிரெஞ்சு மொழியில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியத்திற்காக வழங்கப்படும் பரிசுத் தொகை, பரிசு பெற்றவரின் ஒரு மாத காபி செலவுக்குக் கூட காணாது. இருந்தும் கொன்க்கூர் பரிசோடு இணைந்த பெயரும் அடையாளமும் பரிசு பெற்றவருக்கு முக்கியம். கொன்க்கூர் சகோதரர்கள் இலக்கியத்திற்கென வாழ்ந்தவர்கள், தங்கள் சொத்துக்களை அழித்துக்கொண்டவர்கள். இந்த அடையாளம் புக்கர் பரிசுக்கும் உண்டு. ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நூலொன்றுக்கும் , பிறமொழிகளில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூலொன்றுக்கும் புக்கர் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அணில் மார்க் சேமியா, குத்துவிளக்கு தோசைமாவு இவர்கள் ஸ்பான்சர் செய்துகொடுக்கும் இலக்கிய பரிசுகளைக் காட்டிலும் மேற்கண்ட பரிசுகள் தரத்தில் உயர்ந்தவை.
நோபெல் விருதுடன், பரிசு பெற்றவருக்கு பெருந்தொகை கிடைக்கிறது என்பதும் உண்மை. இருந்தும் தேர்வுப் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களில் வறுமைவாடுபவர்கள் யார் ? எனக்கேட்டு அவர்களைத் தேர்வு செய்ய்யும் நம்முடைய வள்ளல்கள் அரசியல் நோபெல் கமிட்டியிடம் இல்லை. மானுட நலனுக்காக தங்கள் அறிவின் பலனை அளித்த நன்மக்களுக்கு பரிசுகள் வழங்கப்படவேண்டும் என்பது நோபெல் பரிக்கென தம் சம்பாத்தியம் முழுவதையும் அர்ப்பணித்த ஆல்பிரடு நோபெலின் கனவு. உலகின் முக்கிய இலக்கிய பீடங்களுக்கு எழுதுகிறார்கள், கவனம் பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல் கிடைக்கிறது (300 லிருந்து 400 எழுத்தாளர்கள்). அவர்களில் பலமுறை நோபெல் கமிட்டியின் இறுதிப்பட்டியல் வரை வந்தவர் யார் யார் எனப் பார்க்கிறர்கள். ஐவரை தேர்வு செய்கிறார்கள். நூல் ஆங்கிலத்தில் இல்லையெனில் ஆங்கில மொழிபெயர்ப்பு தேர்வு கமிட்டிக்குப் போகிறது. ஐவர்கொண்ட குழுவில் மூவர் தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தாளர் விருதினைப் பெறுகிறார்.
நோபல் பரிசுபற்றியும் பிற பரிசுகளைப்போலவே விமர்சன ங்கள் உண்டு. சில தேர்வுகள் அரசியல் அடிப்படையில் நடைபெற்றிருக்கின்றன. ஆட்சியாளர்களை விமர்சித்து வெளியேறி பிற நாடுகளில் தஞ்சம் புகுத்த எழுத்தாளர்களுக்கு நோபெல் பரிசு கரிசனம் காட்டியுள்ளது, சர்ச்சிலின் அரசியல் உரைகளுக்காக இலக்கிய நோபெல் பரிசை வழங்கியிருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு கமிட்டியின் காரியதரிசி பெண்மணியின் பிரெஞ்சு கணவரின் பாலியல் விளயாட்டுகள் ஏற்படுத்திய அவதூறால் 2018 இலக்கியத்திறான நோபல் பரிசை அறிவிக்காமல் தள்ளிவைத்தார்கள்.
மகாத்மா காந்தியின் பெயர் நான்கு முறையோ ஐந்து முறையோ சமாதானத்திற்கான நோபல் பரிசுப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இருந்தும் பரிசு நிராகரிக்கப்பட்டது. பின்னர் 1948ல் அவர் சுடப்பட்டபோது அவ்வருடம் சமாதானத்திற்கான பரிசையே நிறுத்திவைத்து நோபல் கமிட்டியினர் அஞ்சலி செலுத்தினார்கள். உயிரோடு இருக்கும்போது கொடுத்திருந்தாலும் காந்தி மறுத்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனால் அவர் வாங்காத அப்பரிசை அவர் பெயரை பல முறை அரசியல் வாழ்க்கையில் உச்சரித்த மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, அண்மையில் ஒபாமா போன்றவர்களுக்கு அளித்து நோபல் கமிட்டி பிராயசித்தம் தேடிக்கொண்டது. திபெத்தில் பிறந்த தலாய் லாமாவுக்கு இந்தியர் என்ற அடையாளத்துடன் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியபோது இப்பரிசு காந்திக்குக் கொடுப்பதுபோல என அறிவிக்கவும் செய்தார்கள்.
டிரம்ப்கூட, சமாதானப் நோபெலுக்கு ஆசைப்பட்டு காய் நகர்த்தினார். எனக்கில்லாத தகுதியா ஒபாமாவுக்கு எனக் கேட்டதாக தகவல். இவர் கைதான் நீட்டலாம், முடிவு கொடுக்கிறவர்கள் கையில் இருக்கிறது.
தமிழிலக்கியமும் நோபல் பரிசும்.
1901 ல் நோபல் பரிசின் ஆரம்பம். எனவே இருபதாம் நூற்றாண்டுக்கு முந்தைய படைப்பாளிகளை மறந்து விடலாம்.பிந்தைய படைப்பாளிகளுள் பாரதிக்குக் கிடைத்திருக்கவேண்டும். இளம் வயது இறப்பு ஒரு தடை. வம்பு வேண்டாம என்பதால் தீவிர தமிழ் பற்றாளர்களின் அடியொற்றி நம்முடைய இறந்த இனிப் பிறக்கப்போகிற எல்லா எழுத்தாளர்களுக்கும் நோபல் பரிசுக்கான தகுதிகள் இருக்கின்றன என்பது அடியேனின் கருத்து. அதற்குமுன்பாக நமக்கென்று ஒரு ஆடுபுலி ஆட்டம் காத்திருக்கிறது .
- முதலாவதாக ஒரு மனதாக ஒரு பெயரை சிபாரிசு செய்ய முடிந்தாலே நோபல் பரிசு கிடைத்த மாதிரிதான். ஆக முதலில் மாநில எல்லைகளைக் கடந்து நம் படைப்புகள் அங்கீகரிக்கப்படவேண்டும்.
- அங்கிருந்து பிற நாடுகளுக்குள் நுழைய உலக மொழிகள் என அறியபட்ட ஆங்கிலத்திலோ, பிரெஞ்சு மொழியிலோ, ஸ்பானிய மொழியிலோ மொழிபெயர்க்கபடவேண்டும், அவற்றை மொழிபெயர்ப்பவர்கள் எந்த மொழிக்குப் படைப்பை கொண்டு செல்கிறார்களோ, அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவேண்டும்,
- மொழி பெயர்க்கபட்டபின் படைப்பும் படைத்தவர்பெயரும் அந்தந்த மொழிகளின் படைப்புலகம் அறிந்த பெயராக மாறவேண்டும்.
இந்த ஏழுகடலையும் தாண்டினால் திருபாற்கடலொன்று இருக்க்கிறது. அதுதான் நோபல் பரிசு கமிட்டி. அவர்கள் அனைவரும் ஐரோப்பியர்கள். அவர்களுக்கு பிளாக் ஃபாரெஸ்ட் கேக்கின் சுவை தெரியும், நம்முடைய கொழுக்கட்டை ருசி தெரிய வாய்ப்பில்லை. கமிட்டியில் ஆசியர், ஆப்ரிக்கர், ஐரோப்பியரென கண்டங்களையும் பிரதிநிதிப்படுத்த முடிந்தால் ஒருவேளை நம்முடைய கனவு நனவாகலாம்.
————————————————————