Category Archives: கட்டுரைகள்

‘நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள் – தேவமைந்தன்

இக்கட்டுரை செப்டம்பர் 27 2007ல் தமிழின் முதல் இணைய இதழான திண்ணை யில் வெளிவந்த கட்டுரை. கட்டுரை ஆசிரியர் தமிழ் மரபிலக்கியம, நவீன இலக்கியம் இரண்டையும் நன்றாக அறிந்த தமிழ்பேராசிரியர்களில் ஒருவர். 1948ல் கோவையில்பிறந்த இவர்,  இந்தியாவில் புதுச்சேரிமாநிலத்தில்,  புதுச்சேரி அரசின் தாகூர் கலைக் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணிபுரிந்துதன் 52-ஆம்அகவையில்விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம்ஆண்டுமுதல்தேவமைந்தன்படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில்ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்றமூன்றுநூல்களாகவெளிவந்துள்ளன. 1969 முதல்வானொலி உரைகள்நிகழ்த்திவருபவர். செந்தமிழும் நாப் பழக்கம் என்ற இவர் தம் வானொலி உரைத் தொடர் குறிப்பிடத் தகுந்தது.

நந்தகுமாரா நந்தகுமாரா:’ கைதேர்ந்த கதைசொல்லியின் சிறுகதைகள் – தேவமைந்தன்

செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர் அந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திவிட்ட சிறுகதையையும் அதன் இலக்கண அடிப்படைகளையும் பன்முகங்களையும் சுவடிப் படுத்தினர்.

அவர்களைத் தொடர்ந்து பேராசிரியர்கள் பலர் சிறுகதை மற்றும் நெடுங்கதை வடிவங்களைக் குறித்துப் புத்தகங்கள் எழுதலாயினர். சற்றேறக்குறைய நாற்பதாண்டுகளுக்குமுன் புதுமைப்பித்தனின் ‘துன்பக் கேணி'(3) போன்ற கதைகளின் அளவைக் குறித்துப் பயன்படுத்திய ‘நெடுங்கதை’ என்ற சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல்லாக ‘novella’ இருந்தது. நாகரத்தினம் கிருஷ்ணா ‘வணக்கம் நண்பர்களே!’ என்ற தன்னுரையில் குறிப்பிட்டுள்ளதுபோல் பிரெஞ்சில் ‘nouvelle’ ‘ஒருவகை சுருக்கமான இலக்கிய’க் கட்டுரைதான். இருப்பினும், ‘éditions de la connaissance’ இன் பதிப்பான பிரஞ்சு ஆங்கில அகராதியில் – நா.கி. தெரிவிப்பதுபோல் இலங்கைத் தமிழர் சொல்லும் ‘தகவல்’ அல்லது ‘செய்தி’ ‘nouvelle’க்குப் பொருளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘nouvelle’க்கு – அடுத்த பொருள் ‘சிறுகதை’ என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.(4) சான்றுகளாக, இத்தொகுப்பில் உள்ள ‘மொரீஷியஸ் கண்ணகி’யைச் சிறுகதை என்றும்; ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதையை நெடுங்கதை என்றும் சொல்லலாம். கதை சொல்லல்(narration)தான் அளவு அடிப்படையாக நெடுங்கதையையும் சிறுகதையையும் வேறுபடுத்துகிறது. ஆறரைப்பக்கங்கள் அச்சில் வருகின்ற அளவு சிறுகதையான ‘மொரீஷியஸ் கண்ணகி’ கதைசொல்லப்படுகையில், இருபத்திரண்டு பக்கங்கள் வருமளவு நெடுங்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ கதைசொல்லப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.

“ஒரு தேர்ந்த கதைசொல்லியாக என்னை உருவாக்கிய பெருமை அனைத்தும் பிரெஞ்சு படைப்புலகம் சார்ந்தது என்று எனது படைப்புகளை படிப்பவர் எவரும் முடிவுக்கு வரக்கூடும்” என்கிறார் நா.கி. மேம்போக்காகப் படிக்கும் பொழுதுதான் அப்படியான முடிவுக்கு வரமுடியும். வாசிப்புக்கும் மறுவாசிப்புக்கும் நா.கி. அவர்களின் இத்தொகுப்புக் கதைகளை உட்படுத்தும்பொழுது, நா.கி.’யின் கதைபுனையும் திறன்(skill) மட்டுமே பிரெஞ்சுப் படைப்புலகம் சார்ந்தது என்றும், அவர்தம் தேர்ந்த கதைசொல்லலைக் ‘குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள்’ என்று நம்பிய காலத்திலிருந்தே வாழ்க்கை ஏட்டுக்குள் பொந்தி வைத்தது – இந்தியத் தமிழ்நாட்டின் திண்டிவனம் வட்டம் ஒழிந்தியாப்பட்டின் அருகில் உள்ள கிராமத்து மண்ணும் மக்களுமே என்றும் இக்கட்டுரையாளர் சிந்தையுள் தோன்றுகிறது. இம் முடிபுக்கு(finding) ‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பிலுள்ள கடைசிக்கதையான ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்”-ஆகவும் பொருத்தமான சாட்சியம் ஆகும்.

பிரெஞ்சுப் படைப்புலகத்துக்கு மிகவும் உரியவையான குறியீட்டியமும்(symbolisme) ஆழ்மனவெளிப்பாட்டியமும்(surréalisme) கீழைத்தேயங்களுக்கேயுரிய தொன்மத்துடன்(myth) ஒன்றியும் உறழ்ந்தும் கலந்து நா.கி.யின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. ‘எமன் – அக்காள் – கழுதை’ சிறுகதை இதற்குச் சரியான சான்று. மேற்படிக் கலவையின் எதிர்மறையான சான்று என்றும் இக்கதையைக் கூறலாம். ஏனென்றால், இதில் வரும் ‘அக்காள்'(5) எமன் ஏறிவரும் எருமைக்கிடாவையும் கழுதைக் கிடா என்றே சாகுமுன்/எமனுடன் போகுமுன் சாதிக்கிறாள். அதற்குக் காரணமான அவள் ஆழ்மனப் பாதிப்பை நா.கி.(பக்.41-43) மிக நுட்பமாகச் சித்தரித்திருக்கிறார். சலவைத் தொழிலாளி முருகேசனின் முறைப்பாட்டுக்கு ‘அக்கா’ளின் தந்தையார் பஞ்சாட்சர நாயக்கர், “பத்து ரூபாயை விட்டெறிஞ்சி, போடா போய் வேலையைப்பாருண்ணு அவனைத் துரத்தியதும் தப்பில்லை, ஆனால் துரத்திய வேகத்தில் அக்காளைப் பார்த்து “பொட்டைக் கழுதைக்கு கொஞ்சம் அடக்கம் வேணும்” என்று சொல்லாமலிருந்திருக்கலாம்..” என்பதிலும் ஒரு மென்மையான கோரம் கரைந்திருக்கிறது.

மேற்படிக் கலவையின் உடன்பாடான சான்றாக, ‘அம்மா எனக்கொரு சிநேகிதி ‘ கதையைச் சுட்டலாம். இந்தக் கதைப்பாத்திரங்களோடு ‘ஓர் அசாதரணமான மௌன’மும் கதைப்பாத்திரமாகக் கலந்துள்ளது. கர்ணன்பால் குந்திதேவி கொண்டிருந்த வேறுபாடான தாயன்பை இக்கதையில் வரும் அம்மா கொண்டிருக்கிறார். இதில் அம்மாவுக்கும் மகனுக்கும் ஏற்படும் இருபதாண்டு இடைவெளி, குந்திக்கும் கர்ணனுக்கும் ஏற்பட்ட இடைவெளியைப் போலவே உள்ளது. குறியீட்டு நிலையில் வைத்து நோக்கினால்தான் இது புலப்படும். கதையடிப்படையில், கர்ணன் – மகன், குந்திதேவி – அம்மா கதைமுடிவு, முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படைப்பாளர் ஒருவர் இதையெல்லாம் சிந்தித்து இவ்வாறு படைக்க வேண்டும் என்பதில்லை. அவருடைய ஆழ்மனத்தில் தைத்து, மறைவாக இயக்கம் கொள்ளும் தொன்மப் பதிவு இதைச் சாதித்துக் காட்டிவிடும். அம்மா தனக்கொரு சிநேகிதி என்று இக்கதையில் வரும் மகன் நம்பினாலும், அம்மா – தான் அவனுக்கு அம்மா என்றே உணர்வு நிலையிலும் சாதித்துவிட்டு மறைகிறார். “குந்திக்கு நேர்ந்ததுபோல என் மார்பு நிறைய அன்பு”(ப.31) என்றுதன் கடைசிக் கட்டத்தில் அவர் கூறுவது இதை மெய்ப்பிக்கும். அந்தியூரில்(கோவை மாவட்டம்), கதைசொல்லியொருவர் பாரதக் கதை சொல்லுவதில் தேர்ந்தவராயிருந்தார். அவர் இந்தக் கட்டம் குறித்துச் சொல்லுகையில், “கர்ணன் தன் மகனென அறிவிக்கக் குந்தி எத்தனிக்கும் முன்பே அவள் தாய்ப்பால் அறிவித்துவிட்டது. நாகாத்திரம், அவன் அதை அறியக் காரணம் ஆயிற்று. அருச்சுனன்மேல் ஒருமுறைக்குமேல் அந்த அத்திரத்தைப் பிரயோகிக்கலாகாது என்று கண்ணன் தன் உள்ளத்துள் கொண்ட தீர்மானமே, குந்தியிடமிருந்து தாய்ப்பால் வெளிப்பட்டுக் கர்ணன் முகம் தீண்ட ஏது ஆயிற்று” என்று சொன்னது நாற்பதாண்டுகளுக்குப் பின்னும் என் செவிகளில் ஒலிக்கிறது. ‘அம்மா எனக்கொரு சிநேகிதி,’ ‘அக்கினிகாரியம்,’ ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்,’ ‘எமன் – அக்காள் – கழுதை,’ ‘குஞ்சுபொரிக்கும் மயிலிறகுகள்,'(6) ‘நந்தகுமாரா நந்தகுமாரா'(7), ‘சாமி – பெரிய சாமி,’ ‘தாண்டவராயன்'(8), ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ ஆகிய கதைகள் – நா.கி. “வாழ்க்கையின் ஒரு பகுதியைத் தமிழ் மண்ணிலும் மறுபகுதியை பிரெஞ்சு மண்ணிலும் செலவிட்டுள்ள”(9) போதும், இவர்தம் ஆழ்நெஞ்சின் வேர்கள் தனக்கே சொந்தமானதும் பூர்விகமானதுமான அடையாளத்தைத் தேடுவதில்தான் ஊன்றியுள்ளன(10) என்பதைத் தெற்றெனப் புலப்படுத்துகின்றன.

“சொந்த மண்ணிலும், வந்த மண்ணிலும் தன்னை நிறுத்தி வதைபடும் என்னுள் உள்ள ‘வேறொருவன்’ பார்த்த அல்லது பங்கீடு செய்துகொண்ட சாட்சிகளை சார்பற்று சொல்லியிருக்கிறேன். எத்தனை நாளைக்குச் சுமப்பது? இறக்கி வைக்கவேண்டுமில்லையா? இறக்கிவைத்திருக்கிறேன்”(11) என்று நா.கி. சொல்கிறார். புலம்பெயர்வோர் காணும் கனவுகள், தங்களின் சொந்த மண் குறித்ததாகவே பெரும்பாலுமிருக்கும் என்றும், காட்சிகள் வேறுபட்டாலும் களங்கள் தம் புலத்தைச் சார்ந்தவையாகவே இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

அடுத்தடுத்த வீடுகளில் நிகழும் நிகழ்வுகளைச் சித்தரிப்பதான கதை, ‘38,39,40 – புல்வார் விக்தோர் யுகோ.’ சொந்த மண்ணின் வாழ்க்கை பகட்டாக இல்லை(ப.8) என்று வேர்களைத் துறந்து, தங்களைத் தாங்களே தங்கள் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கிக் கொண்டு, அன்னிய மண்ணில் தங்களை நட்டுக் கொள்ள முயன்றவர்களின் பிள்ளைகள் அடையும் பின்னடைவு(12), புலம்பெயர்ந்த கறுப்பின மக்கள்(13), அரபு மக்கள்[அரபினர்மேல் கடும் வெறுப்பு ப.6], புதுச்சேரித் தமிழர்கள்(14) வியத்னாம் மக்கள்(15) ஈழத்துத் தமிழ் மக்கள்(16) ஆகியோர் இந்தக் கதையில் நம் மனக்கண் முன்னே பலவகைகளில் சுயமிழந்து நொந்து நூலழிந்து போகிறார்கள்.

அறிவியல் கதைகள்(scifi) இரண்டு, இத்தொகுப்பில் உள்ளன. ‘அமலா..விமலா..கமலா,’ ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்’ என்பவையே அவை. முதல் கதையில், அசுரத்தனமான அறிவுபடைத்த கிழவரை அபத்தமானவர் என்று நினைக்கிறான் ‘பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் செய்யும்’ சுந்தரம். 1997இல் – முதல் குளோனிங் ஆட்டுக்குட்டியைக் கொண்டுவந்த டாக்டர் வில்மட், தன்னை முழுதாக ஏமாற்றியவர்; அவர் சாதித்தவை எல்லாமே தன்னுடைய உழைப்பு என்று அவர் சொல்லும்பொழுதும் “அதோ அந்த அறை முழுக்க எனது இருபது ஆண்டு கால உழைப்பிருக்கிறது. எல்லாமே டீ.என்.ஏ., ஆர்.என்.ஏ. பற்றிய சுவாரஸ்யமான சங்கதிகள்” என்று காட்டும்பொழுதும் அவன் நம்பவில்லை. திருமணமானவுடன், அவன் அவரைச் சகித்துக்கொண்டதற்கு ஒரே காரணமாகிய அவர் மகள் – அமலா மட்டுமல்ல, விமலா – கமலாவும்தான் என்று அறிய வரும்பொழுதுதான் அவனுக்கு உறைக்கிறது;
அதிர்ச்சியே மேலிடுகிறது. குளோனிங்கில் தொடங்கும் கதை, ‘ரீஜெனெரேஷன்’ என்று தொடர்கிறது. இரண்டாம் கதையான ‘ஆப்பரேஷன் மகா சங்காரம்,’
இலெமூரியாக் கண்டம் துண்டாடப்பட்டதுமுதல் சுனாமி என்னும் ஆழிப்பேரலை வரை எல்லாமே சிறு சிறு ‘புரொக்ராம்’கள்தாம்… உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதற்கான ஏற்பாடுகளை ‘மகா சங்கார’த்துக்கான ‘புராஜக்ட்’டைச் சிலர் செய்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் கிளுகிளுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் நா.கி.

பெண்மேல் ஆழமான வெறுப்பு, மனநோய்போல் மாறும்போது அதை ‘misogyny’ என்பார்கள்.(17) இந்தத் தொகுப்பின் தலைப்புக்குரிய கதையான ‘நந்தகுமாரா நந்தகுமாரா’வும் ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னா’ரும் அத்தகைய கதைமாந்தரான ஆண்களைக் கொண்டவை. பெண்ணின் ஐரோப்பிய ஆணவத்தால் மனமுடையும் ஆணான நந்தகுமாரன் தவறான முடிவுக்கு வரும்பொழுது, தன்னின உறவை நெடுநாளாகத் தொடர்ந்திருந்தும் இவனுடன் நான்காண்டுகள் உறவுகொண்டு கருத்தரித்திருக்கும் ஐரோப்பியப்பெண் தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை, தோழியுடன் தான் ஏலவே செய்திருக்கும் முடிவுக்கு மாறாக, இவனுடன் தான் சேர்ந்தே வளர்க்கத் தீர்மானித்திருப்பதாக – தன் ஓரினஉறவுத் தோழியிடம் சொல்கிறாள். புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்குப் போய் வாழும் நந்தகுமாருக்கு மனதிடம் இல்லாமல், பொறுமையாக அவளிடம் அமர்ந்துபேசத் திராணியில்லாமல் போனதற்கு சித்தியுடனான அவனது இளம் வயது அதிரடி அனுபவம் காரணமாக இருக்கலாம்.(18) ‘அப்பா படிச்சுப் படிச்சு சொன்னார்’ கதை கொஞ்சம் வித்தியாசமானது. அரசுப் பணி நிரந்தரம் என்று நம்புகிறவர்களுக்கு ஓர் எச்சரிக்கை. முதுகில் எலும்பில்லாததுகளே கடைசிவரை நீடிக்கும் அவலம் இதில் ‘அறைய’ப்பட்டிருக்கிறது. அரசுப் பணியைப் போராட்டத்தால் இழந்து தன்மானத்துடன் வாழும் ‘அவர்,’ தன் மனைவியும் தொடர்ந்து தன்னைச் சொற்களால் தாக்கிக் கேவலப்படுத்துவதைச் சகித்துக் கொண்டே வருபவர். ஒரு நாள், “திண்டிவனத்தைக் குறுக்கும் நெடுக்குமாக அளந்துவிட்டு(19) வீட்டை அடைந்தபின், வழக்கத்துக்கும் அதிகமாகப் பேசுவதுடன் அவரது ஆண் தகைமையையும் (பௌருஷம்)(20) அவர் மனையாள் தாக்கத் தொடங்குகிற போது கொதித்துப் போகிறார். அப்பா அவரை அவர் இளம்பருவத்தில் எச்சரித்த சொற்கள் நினைவுக்குள் கனலுகின்றன.(21) இதன் பிறகு கதையில் வரும் எட்டுப் பத்திகள், நீங்களே படித்துக்கொள்ள வேண்டியவை.(ப.37)

‘மொரீஷியஸ் கண்ணகி’ கதையில் காப்பியில் கலக்கும் சர்க்கரைக்கட்டிகூட ஒரு குறியீடாகி, திடமானதும் தீர்க்கமானதுமான முடிவைக் கண்ணகி என்கிற கதாபாத்திரம் மேற்கொள்ளுவதற்கான காரணியாகவும் மாறுகிறது. “கண்ணகி..உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்” என்பவனுக்கு, “இல்லை. நான் சர்க்கரைக்கட்டி இல்லை கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷியஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை. கோவலனை எரிக்கும் ரகம்” என்று உறுதிப்படுத்த “கைப்பையிலிருந்த ஒரு சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்” என்று கதை முடிகிறது. நா.கி.’யின் ‘நீலக்கடல்’ தேவானி/தெய்வானை, நினைவுக்குள் நுழைந்து பேருரு எடுப்பதை இவ்விரண்டிலும் ஆழ்ந்தவர்கள் தவிர்க்கஇயலாது.

‘பிறகு’ என்ற கதை, ஓர் ஈழத் தமிழ்ப் பெண் தனது தமக்கையின் இரண்டு பிள்ளைகளுக்காக எடுக்கும் அழுத்தமானதும் தீர்க்கமானதுமான தீர்மானத்தையும்; அவள் ஒவ்வொரு முறையும் அதைச் சொல்ல வரும்பொழுது முழுமையாய்க்கூட அதைக்கேட்காத புதுச்சேரித் தமிழனின் அவசர புத்தியையும் மென்மையாக அலசிக் காட்டியிருக்கிறது.

பிரஞ்சிலக்கியப் படைப்பாளிகளின் உத்தியொன்றை நா.கி. பின்பற்றுவது, இரண்டு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. முதலாவது, ‘மொரீஷியஸ் கண்ணகி.’ அடுத்தது, இத்தொகுப்பைப் பெருமைப்படுத்துகிற ‘ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும்’ என்கிற கடைசிக்கதை. ‘டிஜிட்டல் காமரா’ போல – நாள், நேரத்தைப் பதிவு செய்யும் உத்தியே அது. 10-1-1994 10 மு.ப.; 11-1-1994 08 மு.ப.; 30-1-1994 10 மு.ப.; 20-2-1994 11 மு.ப.; 15-10-1994; 06-11-1994 ஆகிய நாள் நேரங்களில் ஒழிந்தியாப்பட்டுக்கு நாலு கல் தள்ளியுள்ள கிராமத்தில், அரை ஏக்கர் நஞ்சையொன்று தொடர்பாக, வந்துவிட்ட இந்தியச் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும், அதன் வெள்ளிவிழாக் காலத்தும், வரப்போகும் இந்தியச் சுதந்திரத்தின் வைரவிழாவின் பொழுதும், விபத்தில் இறந்துபோன ராமசாமியின் பாட்டன் கோவிந்தசாமி/ தந்தை சின்னசாமி/ பார்வதியின் புருசன் ராமசாமி/ ராமசாமியின் வம்சாவளியினரில்(22) எவரேனும் ஒருவர் அடையக்கூடிய நியாயமான ஆசையின் பரிணாமம் மிகவும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பார்வதியின் புருசன் ராமசாமியைச் செயற்கை கொண்டுபோனது; பார்வதியை எவ்வெவ்வாறோ சேர்ந்துவிட்ட அரை ஏக்கர் நஞ்சையை(23) இயற்கை கொண்டு போகிறது. ராமசாமியின் அநியாயமான இறப்பிலிருந்தும் ஆதாயம் பார்த்த மருத்துவமனை – காவல்துறை ஆள்களுக்குப் படியளக்கவும், அவர்கள் வாழும்போதே வாய்க்கரிசிபோடகவும் உடனடியாக உதவி, போக்கியமாகக் கொண்டு கடன்கொடுத்த காசாம்பு முதலி அதில் பயிரிட்டிருந்த ஒரு போகம் பயிருடன் ஏரியுடைந்து வெள்ளக்காடாகிக் கொண்டுபோனது – இயற்கை. இப்பொழுதெல்லாம் புதுச்சேரி – திண்டிவனம் பாதையில் காரோட்டுபவர்கள், மக்கள் மேல் தாங்கள் ஓட்டும் வண்டி பட்டுவிடும் நிலைகூட ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சும் நிலை வந்து விட்டதன் உண்மையான காரணத்தை இந்தக்கதை உணர்த்துகிறது.

‘நந்தகுமாரா நந்தகுமாரா’ தொகுப்பு, நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் சிறுகதைகளைக் கொண்டுள்ளது என்பதை சிறுகதை ஆர்வலர்கள் வாசித்துப் பார்த்தால் உணர்ந்து கொள்வார்கள்.
********
அடிக்குறிப்புகள்:
1. செந்தில்நாதன்,ச., தமிழ்ச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், சென்னை. 1967.
2. சிவத்தம்பி, கா., தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரிநிலையம், சென்னை, 1967.
3. முதற்பதிப்பில் 38 பக்கங்கள்.
4. nouvelle f piece of news; short story. dictionnaire: français/anglais: anglais/ français. éditions de la connaissance. 1995. pg.126.
5. பெயர், கதை முழுதும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் அவள் பெற்றோர் – உற்றார் உறவினர் – எதிரிகள் ஒவ்வொருவரும் பெயர் குறிப்பிடப்படுகின்றனர்.
6. இது, வகைமாதிரிச் சான்று.[typical example]
7. சித்தியின் பாதிப்பு, அவனைப் பிரான்சிலும் விடவில்லை. – பக்.67, 69.
8. “எதற்காக ‘என்னுடைய’ அடையாளத்தின் மீது குறிவைக்கிறாள்? முடியுமா? என்னை, என் பிரதியை வயிற்றில் சுமந்து கொண்டு? நான் இல்லை என்றால் எப்படி? – நினைக்க நினைக்க ஆத்திரம்.” ப.107.
பிரான்சுக்குப் புறப்படும்போது, அவனது தாத்தா தாண்டவராயப் பிள்ளை கசந்துபோய்க் கேட்டவை. பக்.107-108. “தாத்தா சொன்னது உண்மையா? இழப்புகளுக்குப் பழகிக் கொண்டோமா?” ப.108. “…இறுதியாகப் பதிவேட்டில் குழந்தை பிறந்த நேரத்தை எழுதி முடித்து பெயரினைக் கேட்டபோது, இவன் சொன்னான்: / தாண்டவராயன்.” ப.109.
9. கடைசி அட்டைப் பக்கம்.
10.”இதைத்தான் திரும்பத் திரும்ப சொல்றீங்க. நீங்க வரலைண்ணு யாரங்கே அழுவறாங்க”
“சொந்தமண் நினைவுகள் என்பது ஜீவாத்மா பரமாத்மா உறவு மாதிரி. ஜீவாத்மாவை யாரும் அழைக்க வேண்டியதில்லை. அதுவாகத்தான் தேடிப்போகும்.”-குஞ்சுபொறிக்கும் மயிலிறகுகள், ப.53.
11. வணக்கம் நண்பர்களே!, ப.4
12. “இவனைப் போலவே உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை படித்திருந்த எதிர்வீட்டுப் பையனுக்கு சுலபமாய் வேலை கிடைக்கிறது. அவன் பெயர் கியோம். இவன் பெயர் ரஷீத்.” – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.10.
13. ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயல். – ‘38,39,40 ‘புல்வார் விக்தோர் யுகோ,’ ப.9.
14. புதுச்சேரித் தமிழர்களையும் கறுப்பினமாகப் பார்க்கும் வெள்ளை மனப்பான்மை ப.12; பிரான்சில் வாழும் புதுச்சேரித் தமிழர்களுக்குத் தமிழில் பேசப் பிடிக்காது. – கதை: ‘பிறகு..’ ப.117.
15. எதற்கும் தளராத மரியம் என்கிற வியத்னாம் அம்மையார் தனது அப்பார்ட்மெண்ட்டின் படிக்கட்டுகளின் இடைவெளியிலிருந்த கூடத்தில் ஆப்பிரிக்கப் பொடியனும் வெள்ளைப் பெண்ணும் பண்ணும் செயலை எதிர்த்ததால் உயிரோடு எரித்துக் கொல்லப்படும் நிகழ்ச்சி ப.14.
16. அறுபது வயதான சந்திரானந்தம் மாஸ்டருக்கேற்பட்ட கொடுமை பக்.6-8: அவருக்கும் ஏற்படும் ஆறுதல்! – “காது மடலுக்குக் கீழே, பிடறியில் நமைச்சல் தணிந்திருந்தது. தலையணையைக் கொஞ்சம் உயர்த்திப் போடச்சொல்லிக் கேட்டு ஒருக்களித்துப் படுத்தார்.” ப.14.
17. misogyny=பெண்மேல் வெறுப்பு. பிரெஞ்சில் misogyne mf = misogynist. தொடர்புடைய சொற்கள்: misogamy =திருமணத்தின் மேல் வெறுப்பு misandry=ஆண்மேல் வெறுப்பு.
18. நந்தகுமாரனுக்கான சித்தி, பத்துத் தலைகளும், கருகருவென்ற புருவமும் பெரிய கண்களும், மூன்று வாய்களும் தொங்கும் நாக்கும், இரண்டு கால்களுமாய் கறுப்புச் சரீரத்துடன் தமிழ்ப் பஞ்சாங்கங்களில் வருகின்ற மகர சங்கராந்தி புருஷ ஸ்த்ரீ ரகம். துர்த்தேவதை. அவள் ராச்சியத்தில் அவனப்பா செய்ததெல்லாம் சேவகம்தான். அந்தச் சேவகத்தின் சூட்சுமம் அவளது பெரிய மார்புகளில் இருப்பதை ஒரு மழைநாளில் அவன் அறிந்திருக்கிறான்…… ப.67.
19. “திண்டிவனத்தில் அவரை அறிந்தவர்கள் அரசாங்க ஜீப்பில் பயணித்தே அவரைப் பார்த்திருக்கின்றார்கள். ப.35.
20. இந்தச் சொல்லை நா.கி. பயன்படுத்தவில்லை. ‘பௌருஷம்’ என்ற தலைப்பில் த. ஜெயகாந்தன் சிறுகதை உள்ளது. அதனால்தான் அடைப்புக்குள் இட்டேன்.
21. “எங்க.. அவங்கிட்டயா…வேண்டாம்டி. நான் மூர்க்கன். அப்பா படிச்சு படிச்சுச் சொன்னார். உங்களை நம்ப வேண்டாம்னு சொன்னார். அவரை மாதிரியே என்னையும் கொண்டுபோயிடாதே.” ப.37.
22. ‘ஆவளி’ என்றால் வரிசை; ‘வம்சாவளி’ என்பது பிழையல்ல; தீபாவளி போல வம்சாவளி. தீபங்களின் வரிசைபோல வம்சங்களின் வரிசை. அதேபோல, ‘கனவு'(dream state)க்கு மாற்று ‘நனவு'(reality)தான்; நினைவு(thought) அல்ல. ‘நினைவுகூர்தல்’ என்ற சரியான சொல்லையும் வாய்வந்தவழியே மேடைகளில் பேசி ‘நினைவுகூறுதல்’ என்று ஆக்கிவிட்டார்கள்.

********

புத்தகம்:

நந்தகுமாரா நந்தகுமாரா (சிறுகதைகள்)

ஆசிரியர்:

நாகரத்தினம் கிருஷ்ணா

பதிப்பகம்:

சந்தியா பதிப்பகம்
ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ்,
57 – 53ஆவது தெரு, அசோக் நகர்,
சென்னை – 600 083.
புத்தக அளவு: தெமி 1×8
பக்கங்கள்: 144. விலை: ரூ. 70/-
தொ.பே: 044 -24896979, 55855704
****
annan.pasupathy@hotmail.com
http://kalapathy.blogspot.com
http://360.yahoo.com/pasu2tamil

மொழிவது சுகம் : அவ்வை நடராசன்

« அண்மையில்தான் மரணத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.  மரணத்திடம், இன்றைய மனிதர் சூழல் அறியத்தவறிய பலரகசியங்கள் உள்ளன. இருப்பினும், ஓரளவு மறக்கப்பட்டதும், அதிகம் புரிந்துகொள்ள முடியாததுமான மரணத்தின் இரகசியங்கள் மிகவும் சிக்கலானதும் ஆழமானதுமாகும். விளைவாக ஏதோ ஓர் இடத்தில் உறக்கமென்ற ஊற்றும், மரணமென்ற ஊற்றும் ஒன்றுடனொன்று நன்கு கலந்திருப்பதைப் போன்ற உணர்வு…….. »

மேற்கண்டவை மார்கெரித் யூர்செனார் என்ற பிரெஞ்சு எழுத்தாளரில் « அதிரியன் நினைவுகள் நாவலில் வரும் சிலவரிகள் (சொல்வனம் இணைய இதழில் வாசிக்கலாம்)

Xavier Debell என்கிற 35 ஆண்டுகால பிரெஞ்சு நண்பர், சர்க்கரை நோயினை அலட்சியம் செய்ததின் விளைவாக கடந்த ஒரு மாதகாலமாக  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்து, நலமுடன் வீடு திரும்பிவிடுவார் என்ற நிலையில், நவம்பர் 11 அன்று இறந்தார். நான்கு நாட்களுக்கு முன்னர் இறுதிச் சடங்கு நடந்துமுடிந்தது. அவர் இழப்பு எனக்குப் பேரிழப்பு, இன்றுவரை அதிலிருந்து மீளவில்லை. வாரத்தில் ஒரு முறையேனும் சந்திப்போம். முரண்பாடுகள் நிறைய, இருந்தும் ஆழமான நட்பு. இந்திய நண்பர்கள் ஒரு சிலரும் அவரை அறிவார்கள்.

இந்நிலையில் நேற்று அவ்வை நடராசன் மரண செய்தி, நண்பர் பஞ்சுமூலம் கிடைத்தது. என்னுடைய ஆரம்பகால கவிதைநூல்கள் ஒரு சிறுகதை தொகுப்பிற்கு முதன்முதலில் தலைமையேற்று வெளியிட்டவர் அவர். புதுச்சேரியிலும் சென்னையிலும் நிகழ்ச்சிகள் நடந்தன. தலைமை தாங்கி வெளியிட்டிருக்கிறார். அவ்வை அறிமுகம் புதுவை வருமானவரித்துறை மேனாள் இயக்குனர் இராமதாசு அவர்களால் வாய்த்தது. ஈரோடு தமிழன்பன், சு. சமுத்திரம், கலந்துகொள்ள அவர் தலைமையேற்ற ஒரு நிகழ்வு சென்னை ஒய்.எம்.சி.எ. அரங்கில் நடந்தபோது, “அம்மா உன் சிறுகதை குறித்து இரண்டொடு வார்த்தைகள் பேசவேண்டுமாம் ” என்றவர் « இதுபோன்ற மேடைகளில் அவர் பேசியதில்லை, இருந்தும் உன்னுடைய சிறுகதைகள் பற்றி வரும்போதுகூட பேசிக்கொண்டுவந்தார் » என்று குறிப்பிட்டு மருத்துவரான அவர் துணைவியார் தாரா அவர்களையும் மேடையேற்றினார். அண்மையில்கூட நண்பர் பஞ்சாங்கத்துடனும் பிற நண்பர்களுடனும் அவ்வை அவர்களை ‘தாரா இல்லத்தில்’ சந்தித்தோம். அவ்வை நல்ல சுவைஞர், கடல்போல தமிழறிவு இருந்தும் தந்தையைப்போல தமது அறிவு நலத்தைப் அச்சிலேற்ற தவறிவிட்டார், பண்பும் அன்பும் ஒருசேரப்பெற்ற தமிழறிஞர்.

மானுடம் காலாண்டிதழ்: அறத்தின் குரல்

மானுடம் காலாண்டிதழ் நண்பர்கள் அண்மையில் தங்கள் இதழ்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை அனுப்பிய நண்பர், அறந்த்தின் குரல் என்ற பெயரிட்டே அவற்றை மின் அஞ்சலில் அனுப்பியும் வைத்தார்.

மானுடம் என்பது, நிற இன வேற்பாடுகளைக்கொண்ட மனிதர்கூட்டம் முழுமைக்கான சொல் என்கிற போதும் அறத்தின் குரல் தேசத்துக்குத் தேசம் வேற்படுகிறது, அவரவர் பண்பாடு, சமூகம், சார்ந்து ஒலிப்பது. இந்தியாவின் அறமும் பாகிஸ்தானின் அறமும் ஒன்றல்ல. கீழைநாடுகளின் அறமும் மேற்கத்திய நாடுகள் அமைத்துக்கொண்ட அறமும் ஒன்றல்ல. ஈரான் அறம் வேறு, அமெரிக்காவின் அறமும் வேறு வேறு, கற்காலத்தின் அறம் வேறு இருபதாம் நூற்றாண்டின் அறம் வேறு, கண்ணகிக்கும் மாதவிக்கும் வேறு வேறு அறங்கள். அறிவியல் உண்மையின் அடிப்படையில் அது எழுதப்படுவது அல்ல அவரவர் பார்வையின் உண்மையில் எழுதபடுவது. மானுடம் என்ற உயிரியின் உறுப்புகள் என்கிறபோதும் புலனுக்கு வகுக்கப்பட்ட  அறத்தின் வழி ஒழுக கடமைபட்டுள்ளன. ஆம் அறம்,  பெற்ற ஞானம், உற்ற அனுபவம்,  சார்ந்த சமூகம் என்கிற அடிப்படைகளின் உண்டியல் சேமிப்பு. அவை கடமை, செஞ்சோற்றுக் கடன், மூடத்தனம் இதுபோன்ற திசைமானிகளால் வழி நடத்தப்படும் அபாயங்கள் இருக்கின்றன.

தமிழில் பருவ இதழ்கள் ஏராளமாக வருகின்றன. தமிழ், மொழி, இலக்கியம், சமூகம், மனித வாழ்க்கை அது சார்ந்த  ஆய்வுகள் கருத்துக்கள், விசாரணைகள், விவாதங்கள் அவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இலக்கிய திங்களிதழ், மாத இதழ், காலாண்டிதழ், என்றபெயரில் அச்சிலும், காலத்தோடு இணைந்து மின்னிதழ், இணைய இதழ்களும் வருகின்றன. புரட்டுகிறபோதே அவற்றின் வாசனைகளை முகர்ந்துவிடுகிறோம், அவற்றில் சுகந்தம் துர்நாற்றம் இரண்டுமுண்டு. குழுவின் குல தெய்வ இலக்கியத்திற்கு  பிரார்ந்த்தனைகளை நிறவேற்றவேண்டிய கடமைகள் ஒருசிவலவற்றிற்க்கு  இருக்கின்றன. புரவலர்கள், ஆயுள் சந்தாதாரர்கள், சந்தாதாரர்கள் எடைக்கேற்ப பால் காவடி, பன்னீர்காவடி, தீ மிதித்தல், அலகு குத்துதல், செடல் தேர் இழுத்தல் உண்டு. உக்கிரத்தைப்பொறுத்து கோழியோ, ஆடோ காவு வாங்கியபின் மலையேறி திரும்ப பாதைக்கு வரலாம்.

‘மானுடம்’ எவ்வித ஒய்யாரங்களுமின்றி இலக்கியபணி ஆற்றுகிற, அக்காலத்திய  டி.ஸ். பட்டணம்பொடி போல  காரசாரமான கட்டுரைகளுடன் வருகின்றன. பெரும்பாலானவை புருவத்தை உயர்த்தவைக்கின்றன, மனித இனம் சார்ந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சிகள் அவை. இதழ்கள் ஒவ்வொன்றிலும் பேராசிரியர்கள், மூத்த இலக்கியவாதிகள், ஆரோக்கியமான சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் எனபலரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இதழ்களைப் புரட்டும்போது கலைக் களஞ்சியமொன்றை புரட்டும் அனுபவம்.

இக்கட்டுரைகள் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமின்றி, உயர்கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு, ஆய்வு மாணவர்களுக்கு உதவக் கூடியவை. தமிழை வளர்ப்பதென்பது, தமிழ் அறிவை வளர்ப்பதென்பது இது போன்ற இதழ்களை ஆதரித்து முன்னெடுத்துச் செல்வதில் இருக்கிறது. மானுட த் தேரை தமிழிலக்கிய வெளியில் வலம்வரச் செய்ய உழைக்கும் நண்பர்களைப் பாராட்டுகிறேன்.

நாடா கொன்றோ, காடா கொன்றோ

 

 “ ஆரோவில் நகரைச்சேர்ந்த ஆறு குடியிருப்புவாசிகள் மீதான காவல்துறையின் வழக்குப் பதிவு துரதிஷ்டமானது: ஆரோவில் நகர நிர்வாகம் கருத்து

அண்மையில் (22 May 2022) ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இச்செய்தி இணைப்பை நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் எனக்கு அனுப்பிவைத்தார். செய்தி புதுச்சேரி ஆரோவில் நகரம் பற்றியது, நண்பர் இச்செய்தியை எனக்கு அனுப்பியதற்கான காரணத்தை இக்கட்டுரையை வாசிக்கின்ற நண்பர்களில் ஒரு சிலர் (எனது படைப்புகளை அறிந்தவர்களாக இருப்பின்) ஊகித்திருக்கக் கூடும், மற்றவர்களுக்கு ‘ஏன்’ என்ற கேள்வி எழலாம். 2019 இறுதியில் வெளிவந்த என்னுடைய நாவல் ‘இறந்த காலம்’ ஆரோவில் நகரையும் அதன் இன்றைய பிரச்ச்னைகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல்.

« ஆரோவில் » நகரை, அதன் பிறப்பை, விடியல்நகரம் என்ற பொருள் கொண்ட இச்சிறுநகரத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற வரிக்குச் சாட்சியமாகலாம் என்கிற நம்பிக்கையைத் தமிழறிந்த மக்களுக்கு ஊட்டிய மனிதர்களின் கானகத்தை,  ஆன்மீக மார்க்ஸியக் கனவை நனவாக்க இந்திய மண்ணில், தமிழ் நாட்டில் புதுச்சேரிக்குக் கூப்பிடு தூரத்தில் அமைந்த மேற்கத்திய சாயல் கொண்ட கீழைதேசத்து சர்வதேச நகரின்  தற்போதைய ‘தான்’(self) அடையாளத்தை  அறிந்தவர்களுக்கு அல்லது ‘இறந்தகாலம்’ நாவலை வாசித்தவர்களுக்கு ஆங்கில தினசரியில் அண்மையில் வெளிவந்த இச்செய்தி வியப்பினை அளிக்க வாய்ப்பில்லை.

     நாவலை வாசிக்காத நண்பர்களுக்குச் சுருக்கமாகச் சில செய்திகள். ஆரோவில் நகரம் அறுபதுகளின் இறுதியில் உருவானதொரு சர்வதேச நகரம். புதுச்சேரியை அறிந்தவர்கள் அரவிந்தர், அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கக் கூடும். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில், ஆங்கிலேயருக்கு அவர்கள் ஆட்சிக்கு – எதிரானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள், தண்டனையிலிருந்து தப்பிக்க, பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி வந்தனர். வந்தவர்களில், வங்காளத்தைச் சேர்ந்த அரவிந்தரும் ஒருவர். புதுசேரியில் அவர் ஆன்மீகவாதியாக மாறி ஓர் ஆஸ்ரமத்தையும் நிறுவினார். அவருடைய பெண்சீடராகவும், பின்னர் ஆன்மீகத் தோழியராகவும்  மாறியவர்தான் பிரெஞ்சுப் பெண்மணியான மீரா அல்ஃபஸா, என்கிற « அன்னை ». இவருடைய ஆசியுடன் உருவானதுதான் ஆரோவில் நகரம். அடிக்கல் நாட்டியபோது அதன் இலட்சியங்கள் உன்னதமானவை :

« ஆரோவில் ஒரு சர்வதேச நகரமாகத் திகழவேண்டுமென  விரும்புகிறது, இங்கு உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் அமைதியாகவும், முற்போக்கான நல்லிணக்கத்துடனும், எல்லாவற்றிற்கும் மேலாக மதம், அரசியல், மற்றும் நாடு என்கிற அடையாளத்தைக் கடந்து  வாழமுடியும். ஆரோவில்லின் நோக்கம் மனித ஒற்றுமையை நிலைநாட்டுவது. »

ஆக ஆரோவில்லை நிர்மாணித்தவர்களின் நோக்கத்தைக் குறைசொல்லமுடியாது. பிரச்ச்னை ஆரோவில்லையும் ஆஸ்ரமத்தையும் தொடர்ந்து நிர்வகித்தவர்களிடையே உருவான அரசியல் மற்றும் ஆதிக்கப்போட்டிகள். சில ஆரோவிலியன்களின் அத்துமீறல்கள். விளைவாகப் பிரச்சனைகள் வீதிக்கு வந்தன. பல குற்றசாட்டுகள், வழக்குகள் என ஒரு சராசரி நகரமாக மாறியதன் விளைவாக இன்று இந்திய அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில், கனவு நகரம்.  அடிக்கல் நாட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நகரை நிர்மாணித்தவர்களின் கனவு நிறைவேறியதா, சத்தியம் செய்ததுபோல சமய பேதமின்றி நிறபேதமின்றி உலகின் பல முனைகளிலிருந்தும் வருகின்ற மக்கள் ஆரோவில் குடிமகனாக வாய்ப்புண்டா ? நகரை விரிவாக்க அபகரிக்கபட்ட நிலங்களுக்கு உரிய நட்ட ஈடு ஏழைத் தமிழக விவசாயிகளுக்கு வழங்கபட்டதா ? என எழும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களில்லை .  

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்கிறார் வள்ளுவர். அதாவது “எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை ».என குறளுக்கு மு.வ.விளக்கம் தருகிறார்.

கானக விலங்குகளை எடுத்துக்கொள்வோம். வள்ளுவன் கூறுவதுபோல அனைத்தும்  பிறப்பில் ஒத்தவைதான். எனினும் இயல்பில் சில கோரைப் புற்களையும் இலைதழைகளையும் மேய்ந்து பசியாற, வேறு சில பசிக்குத் தங்களுக்குத் தீங்கிழைக்காதவற்றை கொன்று பசியாறவேண்டிய இயற்கைத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இந்த அநீதியிலிருந்து தம்பிக்க முதல்வகை விலங்குகள் குற்றமிழைத்தவரைத் தண்டிக்கப் பலமின்றி, ஓடி ஒளியவேண்டிய நெருக்கடி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என நமக்கு வள்ளுவர் ஆறுதல் கூறினாலும், ஓர் உயிரின் இயல்பும், இயற்கை குணமும் அதன் பெற்றோர் உயிர் அணுக்களையும் சார்ந்தது என்கிறது அறிவியல். ஆனால் அதிலிருந்து மெள்ள மெள்ள விடுபட மனிதனால் முடியும். காரணம் மனித விலங்கு ஆறறிவு கொண்ட இனம். மனிதரினத்திற்கும் இயற்கை குணங்கள் உண்டென்கிற போதும் பல அடையாளங்களை முன்னிறுத்தி தமது சுயத்தை சமூகத்தில் பதிவுசெய்தாலும்,  அனைவரும் எதிர்பார்ப்பது அமைதியும் சுபிட்சமும் கூடிய வாழ்க்கை. ஆனால் அது அத்தனை எளிதானதல்ல என்பதை வரலாறுகள் உறுதிசெய்கின்றன. யுத்தங்களை வேடிக்கைபார்த்ததுபோதும் என ஒரு கட்டத்தில் தீர்மானித்து அமைதிகாண முயற்சிப்பதில்லையா ?  எழுத்தும் ஒரு சமுகத்தின் மக்களிடையே இணக்கமான சூழ்நிலையை உருவாக்க, குறைகளை களைய தமது கதைமாந்தர்கள் ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

      கொடிய விலங்கிடமிருந்து, காட்டில் சாதுவான மிருகங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடி ஒளிகின்றன. விலங்குகளின் புறதோற்றம் கொண்டு, அவை கொடியவையா அல்லவா எனத் தீர்மானிக்கமுடியும். மனிதரின் புறத்தோற்றம் என்பது என்ன ? அது ஒருவரைப் பார்த்து யார் எனக்கேள்வி கேட்பதில் தொடங்குகிறது ? அவரது அடையாளத் தேடலின் ஆரம்பம் அது. 

      ஒரு பெண்ணும் அவள் வீட்டுப் பசுவும் கருவுறுகிறார்கள் என்பதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒரு பசுவின் பேறுகாலம் ஒன்பது மாதங்கள் எனச்சொல்லப்படுகிறது. பெண்ணிற்குப் பேறுகாலம் பத்து மாதங்கள். இருவருக்கும் பிரசவ வலியும் சம்பவ நிகழ்வும் வள்ளுவர் குறள்படி அதிகவேற்றுமைகள் இல்லை. ஆனாலும் பிறந்த குழந்தையை அடையாளப் படுத்த தாய் மட்டும் போதாதென்று அவனது கணவனையும்( உண்மையில் தாய் மட்டுமே குழந்தையின் தந்தையை அறிவாள் என்கிறபோதும்) முன்னிறுத்தவேண்டிய சமூகத் தேவை மனிதருக்கு உள்ளது. கன்றுக்குத் தன் தந்தையை  தாயுடன் உறவுகொண்ட காளையை அடையாளப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லை.

ஓர் உயிரை மனிதன், பறவை, பூச்சி, விலங்கு என பகுத்து அடையாளம் காண ஆரம்பித்து மெள்ள மெள்ள ஆண் பெண், கொடிய சாதுவான, காடு வீடென அடையாளம் பெற்று குறிப்பாக மனித உயிர் பின்னர் ஆப்ரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என இன அடையாளமும்;  இந்தியன், பிரான்சு நாட்டவன், ஸ்பெயின் நாட்டவன் என்கிற  தேச அடையாளமும், இன்னும் நுணுக்கமாக அதற்குள் நுழைந்து தமிழன், மலையாளி, தெலுங்கன் வங்காளி என பல குறியீடுகள் மனிதர்களின் அடையாளச் சங்கிலியில் கண்ணிகளாகளாக இருக்கின்றன. இவை அனைத்துமே செய்தொழில் அளித்த அடையாளங்களில்லை, பிறப்புதரும் உயிரியல் அடையாளங்கள், புற அடையாளங்கள். இவை நமது உடன் பிறந்த அடையாளங்கள்.  

மனிதருக்கு இன்னொரு அடையாளம் அது அவனுடைய அக அடையாளாம். விலங்குகளித்திலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளம் : அறிவும், அதன்விளைவாக சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும்.

விலங்குகள் பிறர் கட்டளைக்கு கீழ்ப் படிய மட்டுமே தெரிந்தவை, அவை இன்று என்னால் உழமுடியாது என கிளர்ச்சியோ, ஒட்டுமொத்த உழவுமாடுகளையும் சேர்த்துக்கொண்டு, நிலம் எங்களுக்குச் சொந்தம், இனி மனிதர்கள் நிலத்தை உழவேண்டுமென புரட்சியிலோ இறங்குவதில்லை.  மனிதன் சிந்திக்கிறான், சிந்தித்து அதனபடி நடக்கிறான். முட்டாளாக இருந்தால் கூட யோசித்து ஒரு முடிவச்சொல்கிறான். அம்முடிவுப்படி செயல்படுகிறான். அடிமையாக இருப்பதும், ஆள்பவனாக இருப்பதும் மனிதன் கற்றவை கேட்டவை மட்டுமின்றி, அவன் அனுபவத்தினாலும் எடுக்கிற முடிவு.  அடிமையாக இருந்தது போதும் என கிளர்ச்சியில் இறங்குவதும், ஒட்டுமொத்த மாற்றம் வேண்டி புரட்சியில் இறங்குவதும் அவன் அறிவு தரும் வழிகாட்டலில். நடக்கின்றன. இது அம்மனிதனைச் சார்ந்த சமூகம், ஊர் அனைத்திற்கும் பொருந்தும்.

மனிதர்களின் அகஅடையாளம் நூறுவிழுக்காடு தீமையை மட்டுமே கொண்டோ அல்லது நன்மையைமட்டுமே கொண்டோ உருவாவது அல்ல அவரவர்க்கு கிடைக்கும் வாய்ப்பும் வசதியும், அமையும் சமூகச் சூழலும் பெற்ற கல்வியும், அனுபவமும் அதனைத் தீர்மானிக்கின்றது. நகரீக சமூகம் வன விலங்குகளுக்கான நீதிமுறையிலிருந்து விலக்களித்து மெலியாரை வலியாரிடமிருந்து காப்பாற்ற சட்டத்தையும் சாட்சிகளைக்கொண்டு இழைத்த குற்றங்களுக்குக் குற்றவாளி பொறுப்பென்கிறது. காரணம் குற்றம் இழைக்கிறவன் மனிதன், விலங்கு அல்ல. அவன் விரும்பினால், முனைந்தால் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகளைத் தவிர்க்கமுடியும், விலங்குகளிடமிருந்து அவனை வேறாக அடையாளப்படுத்துகிற அவனுடைய அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டத்தில் யார் வெல்கிறார்கள் எனபதை பொறுத்தது அது.

இயற்கை, இயல்பு என்பது ஒழுங்கின்மை பண்பைக்கொண்டது. காட்டில் செடிகொடியும்பிறவும்  அதன் இயல்பில் வளரலாம், பிறவற்றை நிராகரித்து தம் நலம் பேணலாம். மாறாக ஒரு நகருக்கு அழகூட்ட பொது பூங்காவிற்கு கொண்டுவரப்படும் செடியும், கொடியும் மரமும் சில ஒழுங்குகளுக்கு, நியதிகளுக்கு உடபடவேண்டும் அதுதான் பூங்காவிற்கு அழகைத் தரும். ஆரோவில் நகருக்கு மட்டுமல்ல, எல்லா சமூகத்திற்கும் இதுபொருந்தும்.

 நாடா கொன்றோ ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே

                                – ஔவை

_______________________________________

இறந்த காலம் (நாவல்)

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

சந்தியா பதிப்பகம், சென்னை

நீ வரவில்லை எனில்

Désert du Thar, l’indienne blanche – YouTube

நீ வரவில்லை எனில்

அவர் பிரான்சு நாட்டில் பிறந்து வளர்ந்த பெண். கட்டட வடிவமைப்பாளர் துறையில் கல்வி,. இந்தியாவின் வடமேற்கு பகுதிக்கு – இராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா பயணியாக வருகிறார். பயணத்தின் ஒரு பகுதியாக பிற பயணிகளைப்போலவே ஜெயசல்மீர் அருகே ஒட்டகச் சவாரி செய்தவர், இவருடைய ஒட்டகப் பாகனாக உடன் வந்த தலித் இளைஞர் ஒருவரிடம் மனதை இழக்கிறார். இளைஞர் மனைவியை பிரிந்து அவர் விட்டுச்சென்ற நான்கு குழந்தைகளுக்குத் தந்தை. இளைஞரை மணந்த பிரெஞ்சுப் பெண்ணுக்கு இன்று ஓர் ஆண் மகன், ஆக ஐந்து குழந்தைகளுக்கு இன்று அவள் தாய். இந்த ஐந்து பிள்ளைகளோடு ஏழைக் கணவரின் உறவினர் பிள்ளைகளும் தற்போது இத்தம்பதிகளுடன் வாழ்கின்றனர். வீட்டில் மின்சாரமில்லை. தண்ணீருக்கு வெகுதூரம் செல்லவேண்டும். காய்கறிகளோ, பிற சமையல் பொருட்களோ கிடைப்பது அரிது என்பதால் தீயில் வாட்டிய ரொட்டியும் ஊறுகாயுமே பெரும்பாலான நாட்களில் உணவு. தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி பெறவேண்டி ஒவ்வொரு நாளும் வாகனத்தில் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார், கணவரின் உறவுடகளுடனும் சுற்றத்துடனும் தார்ப் பாலைவனத்தில் அநாமதேய கிராமம் ஒன்றில் இன்று நாட்கள் கழிகின்றன. இவைகளெல்லாம் பெண்பற்றிய வீடியோவை எதிர்பாராமல் காண நேர்ந்து எனக்குத் தெரிய வந்தவை. அவற்றைத்தான் உங்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

மனிதர்களில் இரு தரப்பினர், மனத்தேவைக்கு முக்கியம் கொடுப்பவர்கள் ஒரு வகை, உடற்தேவைக்கு முக்கியம் கொடுப்பவர்கள் இன்னொரு வகை. உடற்தேவைக்கு முக்கியம் அளித்து மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதுபோல பாவனை செய்கிறவர்கள் பிரிதொருவகை. பாலைத் திணையின் தெய்வம் கொற்றவை என்கிறது தமிழ். இப்பெண்ணின் கண்களில் உக்கிரம் இல்லை, மாறாக நித்தம் நித்தம் வாழ்க்கையில் காடு மேடென்று அலைந்து நாவறண்டு தவித்த உள்ளங்களுக்கு அன்பும், பரிவும், கருணையும் சுனை நீராகப் பெருகித் தாகத்தைத் தணிக்கிறது. மாட மாளிகை, ராஜபோக வாழ்க்கை, காலில் விழும் அரசியல்வாதிகள் எனவாழும் ராஜரிஷிகளுக்கு மத்தியில் இப்படியும் சில தேவதைகள், தேடல்கள்.

விளம்பரத்தையே வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்கூட்டத்திடை இப்பெண் போன்றவர்கள் தேடுவது எது? முதியவர், நோயாளி, இறந்த உடல், துறவி இவர்களை எதிர்கொள்ள நேர்ந்ததே அரசவாழ்க்கையைத் துறந்த கௌமதமர் தேடலுக்குக் காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இத் தேவதை எவற்றைக் கண்டு அல்லது எதற்காக இந்த எளிய வாழ்க்கை தேடினாள்? என்ற தேடலுடன் எழுதத் தொடங்கிய நாவல் ” நீ வரவில்லை எனில் ” (பெயர் பழைய பாடல் ஒன்றின் உபயம்). என் மனைவியை நல்ல மூடுடன் எதிர்கொள்கிற போதெல்லாம் என்னுள் அசையும் இந்த வரி நாவலுக்கும் பொருந்தும் என தோன்றியது.

மொழிவது சுகம் மே 10 – 2020

அ. படித்த தும் சுவைத்த தும்: சாமத்தில் முனகும் கதவு

    மனம் அதிசயமானது, அதிவினோத பராக்கிரமசாலி. ஐம்புலன்களால்: தொட்டு, பார்த்து, கேட்டு, சுவைத்து,  நுகர்ந்து அறிய இயலாதவற்றை மனம் தொடுகிறது, மனம் காண்கிறது, மனம் கேட்கிறது, மனம் சுவைக்கிறது, மனம் நுகர்கிறது.

மனத்தின்  உண்மையான சொரூபம் நிர்வாணமானது.  உடலைப்போல அலங்கரிக்கப்பட்டதோ, வாசனை ஊட்டப் பட்ட தோ அல்ல. சமயம், சமூகம், அறிவதிகாரம், அனுபவ மூதுரை முதலான கட்டுகள் இறுக மறக்கும் நிலையில் அல்லது தளர்கின்ற கணத்தில் “பசியாற வேட்டையாடுவதில் தவறில்லை” எனபோதிக்கிற மனதின் நியாயத்திற்கு ஐம்புலன்கள் சேவகர்கள். இந்த மனத்தை உளவியல் அறிஞர்கள் நனவு(consciousness), முன்நனவு அல்லது மன உணர்வின் இடைநிலை அல்லது தயார்நிலை(preconciousness), இறுதியாக நனவிலி நிலை (unconsciousness) என வகைப்படுத்துகின்றனர். எழுத்தென்பதே நனவிலி நிலையின் வெளிப்பாடென்பது இவ்வறிஞர்களின் கருத்து.

கேஜே.அசோக்குமார் எழுத்துகள் நனவிலி  நிலையைக் கடந்தவை. அதாவது மன வீட்டின் நிலைப்படியைக் கடந்து, நுழைவாயிலில் காத்திருந்து அலுத்து, வீதிக்கு வந்தவை. தன்னையும் தானறிந்த மனிதர்களையும் மனக்கண்களால் பார்ப்பவை, மனதால் பரிசீலிப்பவை, சிற்சில சமயங்களில் கதையாடல் தேர் தமக்கான வீதியை திசைதப்பியபோதும் கவனத்துடன் தேரடிக்குத் திரும்புகிற கதைகள்.

முதல் மனிதனும் இரண்டாம் மனிதனும்:

மனிதர் சமூகத்தை மூன்று மனிதர்களாகப் பிரதிநிதித்துவப்படுத்தலாம்.  முதல்மனிதன் வேறுயாருமல்ல நாம். மூன்றாம் மனிதன்: நாம் அதிகம் சந்திக்க வாய்ப்பற்ற பெரும் திரளான மக்கள் கூட்ட த்தில் ஒருவன். இரண்டாம் மனிதன்? கண்களுக்கு அப்பால் இருக்கிற மனிதனல்ல தினம் தினம் கண்ணிற் படுகிற மனிதன், கடலுக்கு அப்பால் இருப்பவனல்லன், கைக்கெட்டும் தூரத்தில் இருப்பவன். தூரத்து சொந்தமல்ல பங்காளி .  மூன்றாவது வீட்டிலோ அடுத்த தெருவிலோ வசிப்பவன் அல்ல, உங்கள் தெருவில் நீங்கள் தினமும் சந்திக்கிற எதிர்வீட்டுக்காரன். வேறொரு துறைசார்ந்த ஊழியனல்ல, உங்கள் அலுவலகத்தில் அடுத்த மேசையில் கோப்பு பார்க்கிற சக ஊழியன். வேறு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரல்ல, உங்கள் கல்லூரியில் உங்கள் துறை சார்ந்த பேராசிரியர். மலையாள எழுத்தாளரோ, கன்னட மொழி எழுத்தாளரோ அல்ல  நம்பைப்போலவே நோபல் விருதை தவறவிட்ட தமிழ் எழுத்தாளர்.  இந்த இரண்டாம் மனிதனை, அவன் விழுந்தால் ஓடிச்சென்று அனுதாபம் தெரிவிக்கும் மனம் ஆறுதல் படுத்தும் மனம், அவன் எழுந்து கம்பீரமாக நடந்தால்  அசூயை கொள்கிறது. கந்தல் கோலத்தில் பிச்சை கேட்கும் மனிதனுக்கு இரக்கப்படும் மனம், அவனே கொஞ்சம் வெள்ளையும் சள்ளையுமாக வீதிக்கு வந்தால் “இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு”என்கிறது.  இச்சிறுகதை தொகுப்பின் பிணவாடை   சகமனிதன் வளர்ச்சிக்கண்டு காயும் மனங்களுக்கு நல்ல உதாரணம்.

பெரும் எண்ணிக்கையில் இயங்கும் இத்தகைய முதல் மனிதர்களின் மனதை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது கே ஜே.  அசோக்குமாரின் கதைகள். அவர் கதைகள் தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கையில் சொல்லப்பட்டாலும் வீழ்ந்த மனிதர்களைப் பற்றியது, அவர்களின் வீழ்ச்சிகாண காரணத்தை பார்வையாளனாக அறிய முற்படுவது.

“இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்ததைவிட பாதியாகிவிட்டிருந்த” வௌவால்கள் உலவும் வீடு கதையில் வரும் அண்ணன்; “உன்னைச் சுமந்து செல்ல முடியாது எனச் சொல்லும்படி வளைந்த முன் சக்கரம் ஆடியபடி மறுப்பு தெரிவிக்கின்ற “ சாமத்தில் முனகும் கதவு நாயகன் கூத்தையா; “பிச்சைக்கார ர் என முதலில் நினைத்திருந்தான். ஆனா இல்லைஎன்றும் சொல்ல முடியாது.” எனும் மயக்கத் தோற்றம்கொண்ட அந்நியன் என ஒருவன் பெரியவர்; “தாழ்ப்பாள் போடப்பட்டிருப்பதை உறுதிபடுத்திக்கொண்டு விளக்குகளை அணைக்காமல் “ படுத்துறங்கும் போதும் கனவில் புலியைக் காண்கிற வருகை கதைநாயகன்; “வாசனையே இல்ல. இத யாரு வச்சிக்குவா” எனக் கனகாம்புரம் பூவை விரும்பாத வாசமில்லாத மலர் சந்திரா; “நான் சத்தியபிரகாஷைக்கொன்று அவனுடலில் உட்புகவேண்டும்” என்கிற கொதிநிலை பொறாமையில் உள்ள பிணவாடை பரந்தாமன். “ஆமாமா, நாங்க பிரிஞ்சோன்னயே பெரிய கட தெருவில நட த்த முடியாம வித்துட்டு கும்பேஸ்வரம் கோயில் கிட்டப் போச்சி, அப்புறம் உங்கப்பன் திருவாலூரு போயிட்டு திரும்பிவந்தப்ப கீழ சந்து தெருவில வந்துச்சு. அப்பவே ரொம்ப ஒடிச்சிட்டாரு” மாங்காச்சாமி வரும் கதை சொல்லியின் தந்தை. கதிர்தான் முதலில் பஸ் ஸ்டாண்ட் என்று அழைக்க ஆரம்பித்தான். பஸ் ஸ்டாண்டில் கண்டெடுக்கப்பட்டதால் இப்பெயர்” பஸ் ஸ்டாண்ட் கதையில் வரும் சிறுவனென  தொகுப்பில் எழுத்தின் மையப்பொருளாக இடம்பெறும் ஆண் பெண் இரு பாலருமே வீழ்ந்த மனிதர்களாக இருக்கிறார்கள்.

மனித மனத்தின் ஓட்டைகளும் இரத்தக் கசிவும் அவசரச் சிகிச்சைக்கு காத்திருக்கும் நோயாளியை நினைவூட்டுகின்றன. நமக்கும் வாழ்ந்த மனிதர்களைக்காட்டிலும் வாழ்ந்துகெட்ட மனிதர்களெனில் கூடுதல் கரிசனம்.  மனிதர்களின் இச்சபலத்தை புரிந்துகொண்டு, பரிவும் குற்றவுணர்வுமாக  கதைசொல்லி இம்மனிதர்களை தேடிஅலைகிறார். அலைந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் மொழியும் இதமானவை.

கே.ஜே அசோக்குமாரின் கதைகளில்  உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் ஏராளம். கொஞ்சம் குறைத்துக் கையாண்டிருக்கலாம். பல இடங்களில் பொருத்தமாக கதைக்கிசைந்து கையாண்டிருப்பதால், அவற்றின் இருப்பையும் சந்தேகிக்க முடிவதில்லை.

“எதிர்ச்சாரி வீட்டுவாசலில் இரவெல்லாம் திரிந்த களைப்பில் இரண்டு நாய்கள் வண்டியில் அடிபட்ட துபோல படுத்துக்கிடந்தன.”

“நீருக்கு அடியில் தெரியும் கூழாங்கல்லைப்போல மின்னும் கண்களோடு உற்சாகத்தோடு அவர் பேசுவதைக்கேட்க சிலர் எப்போதும் இருப்பார்கள்.”

“ கூரையில் ஒட்ட டைகள் வெளித்திண்ணைவரை பரவித் தொங்கிக்கொண்டிருப்பதை இப்போதுதான் கவனிப்பதுபோலப் பார்த்தான்”

“ உச்சியில் சில சில்வண்டுகள் பறந்துகொண்டிருந்தன. நீர்போன்ற தெளிந்த நீலவானத்து பின்னணியில் அது தெளிவாகத் தெரிந்த து.”

தன்மையில் சொல்லப்பட்ட கதைகள் சுயத்துடன் கதை சொல்லிக்குண்டான போராட்டங்களை விவரிப்பவை, ஆழ்மனதின் சிக்கல்கள் குழப்பமின்றி கதைகளாக்கப்பட்டுள்ளன. இத்த்கைய முயற்சிகள் தமிழுக்குத் தேவை. தமிழ்ச் சிறுகதைக் களத்தில் அதிகம் வாசித்திராத கதைக்களங்கள்.  வருகை, எறும்புடன் ஒரு சனிக்கிழமை, சாமத்தில் முனகும் கதவு, அவன் (இதே பெயரில் நான் எழுதியுள்ள ஒரு கதை நினைகுக்கு வந்தது.) ஆகியவை அவ்வகையிலான கதைகள்.

எனக்குக் குறிப்பாக சாமத்தில் முனகும் கதவு, அபரஞ்சி, அந்நியன் என ஒருவன், மாங்காச்சாமி, பின் தொடரும் காலம் ஆகியவை முக்கியமான கதைகள்.எனது தேர்வும் உங்கள் தேர்வும் இணங்கியாக வேண்டும் என்கிற  நிர்ப்பந்தங்கள் இல்லை. ஆனால் ஒரு நல்ல வாசிப்புணர்வை கே ஜே . அசோகுமார் கதைகள் தரும் என்பது உறுதி.

சிலவருடங்களுக்கு முன்பு இச்சிறுகதை தொகுப்பு ஆசிரியரின்  சிறுகதையொன்றை சொல்வனம் இணைய இதழில் வாசித்தேன். பாராட்டியிருந்தேன்.  இத்தொகுப்பிலுள்ள பெரும்பாலால கதைகள்  அதை நிரூபித்துள்ளன. மேலும் வளர்வார். பாராட்டுகள்.

நன்றி : திண்ணை இணைய இதழ்

__________________________________________________________

 

 

 

 

.

மொழிவது சுகம்  3 மே மாதம் 2020

 தமிழா தமிழா….நாளை ?

நேற்று  காற்றுவெளி வைகாசி மின்னிதழில்  : ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்,  என்கிற சிறுகதையை வாசிக்கக் கிடைத்தது ஒரு வார்த்தையில் சொல்வதெனில் அபாரம்.  எனக்கு இலக்கியம் என்பது வெறும் அழகியல் சார்ந்த கலை அல்ல, மனித மனத்தையும் சமூகத்தையும் உள்வாங்கிக்கொண்டு சொல்லப்படவேண்டும். சிறுகதை ஆசிரியர் மு. தயாளன் அப்படி எழுதியிருக்கிறார்.  பாராட்டுகள்.

கதைக்குள் போவதற்கு முன்பாக கதையை முன்னிட்டு என்னுள் விளைந்த  கருத்தை, பங்கிட்டு கொள்ள நினைக்கிறேன்.

இராமன் எத்தனை இராமனடி பாடலுக்கு எதிர்பாட்டு, ஏற்றப்பாட்டுக்குத்தான் எதிர்பாட்டிருக்க வேண்டுமென்பதில்லை.

இரண்டு பிரெஞ்சு பேராசிரியர்கள் : ஒருவர் தமிழர், மற்றவர் பிரெஞ்சுக்காரர். இருவரும் சந்திக்கின்றனர். அவர்கள் உரையாடும் மொழி என்னவாகயிருக்கும் ? நிச்சயம் பிரெஞ்சு மொழி, அது இயல்பு. காரணம் இருவருக்கும் தெரிந்த பொது மொழி பிரெஞ்சு. மாறாக இரண்டு தமிழ் அறிஞர்கள் :  ஒருவர் தமிழர் மற்றவர் பிரெஞ்சுக்காரர். இவர்கள் சந்திப்பு எந்த மொழியில் இருக்குமென எதிர்பார்க்கிறீர்கள் ? பொதுமொழியான தமிழில்தானே இருக்கவேண்டும். ஆனால் அப்படி இருப்பதில்லை. அதை நிராகரித்துவிட்டு தமிழறிந்த இருவரும் ஆங்கிலத்தில் உரையாடுவர். காரனம் நம் தமிழ் அறிஞருக்கு தமக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதைப் பறைசாற்றவேண்டும். தமிழ் அறிஞரான பிரெஞ்சு காரருக்குள்ள பிரச்சனை நடைமுறை தமிழில் சரளமாக உரையாடுவது.

தமிழில் பல ஆய்வுகள் செய்தவர், சங்க இலக்கியங்களப் பிரெஞ்சுமொழியில் மிகச் சிறப்பாக உள்வாங்கி மொழி பெயர்த்தும் இருப்பார். ஆனால் தமிழில் பேசுவதற்கு அப்பிரெஞ்சு தமிழ் அறிஞருக்குத்  தடுமாற்றம். காரணம் இங்கு சென்னைதமிழ், திருநெல்வேலி தமிழ், நாகர்கோவில் தமிழ்,  கோயம்புத்தூர் தமிழ், மதுரை தமிழ், சேரித் தமிழ்,  ஜஃப்னா தமிழ் என  பல தமிழ்கள். போதாதற்கு செட்டியார் தமிழ், நாடார் தமிழ், பிள்ளைமார் தமிழ், தெலுங்கர் தமிழ், பிராமணர் தமிழ், சினிமாதமிழ், தொலைக்காட்சி  காம்பையர் தமிழ் என தசரதனைப்போல தமிழுக்கும் ஏகப்பட்ட பத்தினிகள். இதில் அஃப்சியல் பத்தினி யாரோ ? உலகில் வேறு மொழிகளுக்கு இத்தனை சாளரங்கள் கொண்ட அந்தப்புரம்  இல்லை.

ஒரு முறை, மலையாளம் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி, தமிழ் கற்ற ஒரு பிரெஞ்சு பெண்மணி இருவரும் மொழிபெயர்ப்பில் கூடுதல் பயிற்சிபெற சென்னை வந்து இறங்குகிறார்கள்.( ஏற்கனவே இதுகுறித்து எழுதியிருக்கிறேன்.) காதில் வாங்கிய தமிழைக் கேட்டு வந்த வேகத்தில் தமிழ் கற்ற பெண்மணி இது சரிப்படாது என பிரான்சு திரும்புகிறார். மலையாளம் கற்ற பிரெஞ்சு பெண்மணியோ தொடர்ந்து இயங்குகிறார். பிரெஞ்சு எடிட்ட ர்களால் அங்கீகரிக்கபட்ட  பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட  தமிழ்-பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர்கள் இன்றில்லை. அதன் விளைவு என்ன என்பதை  சொல்லவேண்டியதில்லை.

‘இன்று’  எனப்படித்துவிட்டு  இண்னைக்கு, இண்னைக்கி இன்னிக்கி என பேசுவதும் எழுதுவதும், பிறப்பால் தமிழரலாதவர்களுக்கும்,  தமிழ் நிலத்தில் வசிக்காத தமிழ் கற்கும் புதியவர்களுக்கும்  மருட்சியை ஏற்படுத்தும்  என்பதை உணரவேண்டாமா. இன்றைய நவீன இலக்கியங்கள் பெரும்பாலும் வட்டார வழக்கில் வருகின்றன.    ஐம்பது சொற்களைத் திரும்ப திரும்ப உபயோகித்து சிறுகதையை முடித்துவிடுகிறோம். இங்கே நாவல் எழுதக் கூட  ஐநூறு சொற்கள் போதும் பலமுறை அவற்றை உபயோகித்து படைப்பை முடித்துக்கொள்ளலாம்.

எனது பிரெஞ்சு மொழி பெயர்ப்புகளைத் திருத்திக்கொடுக்கும் பிரெஞ்சு பெண்மணி  திருமதி Lliliane என்பவர் இன்றைக்கும் எதாவதொரு பிரெஞ்சு படைப்பை வாசிக்க நேருகிறபோது அகராதியை புரட்டாமல் வாசிக்க முடிவதில்லை என்கிறார். இந்த ஒரு காரணங்கூட பிரெஞ்சு படைப்புகள் அதிகம் நோபல் பரிசு  பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கலாம். நம்மிட ம் அகராதியைத் தேடவேண்டிய நெருக்கடியை உண்டாக்குகிற நவீன தமிழ் இலக்கியங்கள் உண்டா ? அப்படியே உபயோகித்தாலும் அந்நெருக்கடியைச் சமாளிக்க வருடந்தோறும்  நவீன சொற்களை உள்வாங்கிய புதிய  அகராதிகள் உண்டா ? ஆனால் கறிக்குதவாத ஏட்டுசுரக்காய்  தமிழ் விழாக்களுக்கு நம்மிடத்தில் பஞ்மே இல்லை.

இனி சிறுகதைக்கு வருகிறேன்.

ஒரு நாள் ஒரு மனிதன் ஒரு குடும்பம்.

கொரோனா தொற்று, ஐரோப்பா, புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பம், ஊரடங்கு,  இப்பிரசினைகளைக்கொண்டு, ஈழத்தமிழில் சொல்லபபட்ட ஒரு சிறுகதை.

கொரோனாவுக்கென படைக்கபட்ட இரு முதியவர்கள். அவர்கள் மகன் கோபி, மனைவி இரு பிள்ளைகள் கொண்ட இங்கிலாந்து வாழ்க்கைத்தரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பம். கோபி ஓர் இந்திய கட்டிட வேலை முதலாளியிடம் ஊழியம் பார்க்கிறவன். முறைப்படி அரசுக்குத் தெரிவித்து அவர் அவனை வேலைவாங்கவில்லை. இதனால் முதலாளி  தொழிலாளி இருவருக்கும் இலாபம். முதலாளி அரசுக்கு செலுத்தவேண்டிய சில வரிகளை ஏமாற்றலாம். தொழிலாளி தனக்கு வேலையில்லையென  சம்பந்தப் பட்ட அரசு நிறுவங்களிடம் உதவித் தொகை கேட்டுப் பெறலாம்.

இருந்தும் கொரோனாவால் தமிழ்க்  குடும்பம் தள்ளாடுகிறது. களவாய் செய்த வேலை இல்லைஎன்றாகிவிட்ட து. ஒரு மாதமல்ல மூன்றுமாதத்திற்கு பிரச்சனை நீளும் என்கிறபோது அவர்கள் என்ன செய்ய முடியும். இதற்கிடையில் கொரோனாவைக் கோடிட்டுக் காட்டும் இருமல் கிழவர்.   கணவன் மனைவி இருவருடைய உரையாடலும் அதிகம் புலம் பெயர்ந்த குடும்பங்களில் கேட்க கூடியதுதான் :

« ஏனப்பா சோசல் காசு வரும் தானே ? » என்று திவ்யா கணவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

« அது வந்தென்ன பிரயோசனம். அப்பிடியே கொண்டுபோய் சீட்டுகட்டச் சரி » என்றான் கவலையோடு.

« ஓமப்பா, அது வேறை கிடக்குது. அது எப்பையப்பா முடியுது ? »

« இரண்டு சீட்டும் முடிய இன்னும் ஆறுமாதம் கிடக்குது »

« நீங்கள் அணடைக்குச் சீட்டு எடுக்கேக்கையே சொன்னனான். இப்ப அவசரப்படவேண்டாமெண்டு. நீங்கள் கேட்டால் தானே. அவசர அவசரமாய் தங்கச்சிக்கு எடுத்தனுப்பினியள். இப்பக்கிடந்து மண்டையைப்போட்டு உடைக்கிறியள். »

 

மேற்கண்ட உரையாடலைக்காட்டிலும் கிழவரின் இருமல் சத்தத் திற்குப்பிறகு தம்பதிகளுக்கிடையே நடக்கும் கீழ்க்கண்ட உரையாடலில் கதை பிரகாசிக்கிறது.

« இந்த நேரம் பார்த்து இந்த மனிசனும் இருமித்தள்ளுது »

……………………………………..

………………………………………

அவன் என்ன நினைத்தானோ தெரிய வில்லை.

« இஞ்சரப்பா பிள்ளையளை அவரோட விளையாட விடாதையும். »

« ஏனப்பா, அது சும்மா இருமல்தான். »

« அது எனக்குத் தெரியும். எதுக்கும் முன்னெச்சரிக்கையா இருக்கிறது நல்லது தானே. »

« ஓமப்பா அதுவும் சரிதான். அவர் வாழ்ந்து முடிச்சவர். »

இத்துடன் கதை முடிவதில்லை எல்லா வறிய குடும்பங்களிலும் நடப்பதுபோலவே அப்போதைய தேவைகளைச் சமாளிக்க உண்டியலை உடைத்து 35 பவுண்களுடன் தமிழ்க் கடைக்குச்செல்கிறான், கோபி. கொரோனவை முன்வைத்து இலாபம் பார்க்கும் கடைக்காரனை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறான். பட்டியலில் இருந்த அனைத்தையும் வாங்க இயலவில்லை.  முதியவருக்கு இருமல் மருந்தை  வாங்க வேண்டிய கட்டாயம். பொருட்களுடன் திரும்பவந்தபோது அதிர்ச்சிக் காத்திருந்தது. வீட்டெதிரே முதியவரை அழைத்துபோக ஆம்புலன்ஸ்.

சிறுகதையின் கடைசி வரி மிகவும் முக்கியம். நான் அதைச் சொல்லப்போவதில்லை. நீங்கள் வாசிக்கவேண்டும்.

_________________________________________________

 

 

ஆனந்தரங்கப்பிள்ளை – 4

கருமமே கண்ணாயினார்

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்

இவை ஒரு துறையில் தன்னை முன்நிறுத்தி அத்துறையில் ஒளிர்கிற மனிதர்களுக்கான இலக்கணங்கள். நமது பிள்ளயும் இவ்விலக்கணப்படி வாழ்ந்தார் என்பதை ஆதாரபூர்வமாகத் தெரிவிப்பவை பணிக்காலத்தில் தினந்தோறும் எழுதிய நாட்குறிப்பு. இந்த நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு புலங்களின் ஆய்வதும் விவாதிப்பதும் அவசியமாகிறது. பிள்ளையைப் பற்றிய இத்தொடருக்கு முதுகெலும்பாக இருப்பவை அவை. எனினும் அவற்றைக்குறித்து தொடரின் இறுதியில் விரிவானதொரு பார்வையை முன்வைக்கத் திட்டம். காரணம் இடைபட்ட அத்தியாங்களில் சொல்லப்படும் செய்திகள் அவருடைய நாட்குறிப்பு பற்றிய இறுதி அத்தியாயத்தை ஓரளவு புரிதலுடன் அணுக உதவும்.

தலைமை என்பது இருத்தல் சார்ந்த விடயமல்ல,ஆட்டுவித்தல் சார்ந்த பண்பு. பிடித்துவைத்த பிள்ளையாராக தலைமையில் அமர்ந்திருக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறோம். எதிர்பார்த்த அல்லது எதிர்பாராத காரணங்களால் தலைமைப்பொறுப்பேற்று, துணை நிற்கும் நபர்களால் வழி நடத்தப்பட்ட தலைமைகளுக்கு உலகில் சான்றுகள் நிறைய உண்டு. பதினெட்டாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் புதுச்சேரி கவர்னர் பதவி வகித்த துய்ப்ளே என்கிற தலைமைப் பம்பரத்தை சுழலச் செய்த நூல்கயிறும் கைகளும் பிள்ளைக்குரியவை. அவர் துரியோதனன் தலைமையை அழிவில் நிறுத்திய சகுணியல்ல, அவசியம் நேர்ந்தபோது பார்த்தனுக்கு தேரோட்டியாகவும் அமர்நது பாண்டவர்களுக்கு வெற்றியைத் தந்த மகாபாரதக்  கண்ணன்.

 

நண்பர்களே ! நமக்குக் கிடைத்திருக்கும் பிள்ளையின் நாட்குறிப்புகளில் முதல் நாட்குறிப்பு நளவருடம் ஆவணி மாதம் 25ந்தேதி எழுதப்பட்டுள்ளது அல்லது ஜூலியன் நாட்காட்டிப்படி 1736ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ந்தேதி தொடங்குகிறது. அதிசயமாக இந்த நாளில் நடந்ததாகப் பிள்ளை பதிவு செய்யும் சம்பவம் முக்கியம் :

அன்றைய தினம் காலை எட்டுமணிக்குக் கூடிய நிறுவனத்தின் ஆலோசனைக்குழு தங்கள் குழுவில் புதியதொரு அங்கத்தினரை நியமனம் செய்கிறார்கள் அவர் பெயர் துய்லொரான் (M. Dulaurens). நியமனப்பத்திரத்திரத்தில் இப்பொழுது புதிய உறுப்பினர் உட்பட பிறஉறுப்பினர்கள் கையொப்பம் இடவேண்டும். பழைய உறுப்பினர்களில் ஒருவர் துமெலியா (M. Dumeslier). அவர் தன்னுடைய கையெழுத்தைப் போடுகிறபோது, உறுப்பினர் வரிசையில் புதிய உறுப்பினர் பெயர் அவர் பெயருக்கு மேலே இருக்கிறது. ஏற்கனவே இப்படியொரு பிரச்சனையில் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் அப்போதைய முதன்மை நிர்வாகி இக்குறையைப் பிறகாலத்தில் தவிர்ப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். இருந்தும் அது தொடர்வது துமெலியா என்பருக்கு ஒரு மானப்பிரச்சினை. அலோசனைக்குழு கூட்டத்தின் முடிவுக்குப்பிறகு, பிற்பகல் கவர்னர் துய்மா (Dumas)வைச் சந்தித்து தமது மனக்குறையைத் தெரிவிக்கிறார் :

« முசே துலோராம் எனக்குப் பிறகு கையெழுத்துப் போடுகிறதானால் நானிந்த உத்தியோகத்திலேயே இருப்பேன் ; இல்லாவிட்டால் எனக்கு முன்னே அவன் கையெழுத்துப் போடுகிறதானால் எனக்குக் கும்பெனியார் உத்தியோகம் கவலை இல்லை » என்கிறார். அதற்குக் குவர்னர் : « கும்பெனியார் எழுதியனுப்பின படிக்கு நான்கொண்டு நடப்பிக்க வேணுமே யல்லாமல் அதைத்தள்ளி நடத்துகிறது எனக்கு ஞாயமில்லை » எனப் பதில் தருகிறார். « நீர் நானந்தப்படிக்கு நடப்பிப்பேன் என்று வார்த்தைப்பாடு கொடுத்தீரே ! அந்தப்படிக்கு ஒரு வருஷம் நடப்பித்தீரே ! இன்னும் பன்னிரண்டு மாதம் நடத்துகிறதானால இந்த உத்தியோகத்தில் இருக்கிறோம் இல்லாவிட்டால் எனக்கு இந்த உத்தியோகம் கனவில்லை » என்பது துமெலியா கவர்னருக்கு அளிக்கும் பதில். இவை அனைத்தும் பிள்ளையின் மொழியில் நாம் வாசிக்க கிடைக்கும் செய்தி. வியப்பான தகவலும் கூட. இந்நிகழ்வோடு பிள்ளை தன் நாட்குறிப்பைத் தொடர்வது நமக்கு வியப்பை அளிக்கிற்து.

பணியையும் அப்பணிசார்ந்த நெறியையும் கடைபிடித்த நம்முடைய துபாஷ், பணியை நிறைவேற்றுகிறபோது சுயமரியாதைக்கு இழுக்குவருமெனில் எத்தகைய முடிவுக்கும் வரக்கூடியவர் என்பதைக் கோடிட்டுக் காட்டும் கட்டளைக் கல்லாக இச்சம்பவத்தை நாம் அணுகலாம்.

நாட்குறிபில், ஒவ்வொருநாளும் தம் வாழ்க்கையில் குறுக்கிட்ட சம்பவங்கள் அனைத்தையும் பிள்ளை எழுதினார் என்கிற பார்வையை, பொதுவில் நாம் வைக்கிறோம். வாசிக்கின்ற நமது மன நிலையை வைத்து அவற்றை எடைபோடவும் செய்கிறோம். ஆனால் எழுதியவரின் மனப்பாங்கென்று ஒன்றுண்டு. பிள்ளையின் பெற்றோரோ, பிள்ளையோ பிறரிடம் சேவகம் பார்த்து பசியாறவேண்டிய நெருக்கடியில் இல்லை. வறுமை வெகுதூரத்தில் இருந்தது. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்துடனான உத்தியோகம் சமூகக் குறியீடாக பிள்ளையின் தந்தையையும் பிள்ளையையும் அடையாளப்படுத்த உதவியது என்பது உண்மை. அதேவேளை இப்படியொரு பிரச்சனை அவருடைய வாழ்க்கையில் குறிக்கிட்டிருப்பின் இதனை எப்படி அணுகி தன்னை முன்னெடுத்திருப்பார் என்பதற்கும் உதாரணங்கள் இருக்கின்றன.

பிள்ளையின் உறவினர் நைனியப்ப பிள்ளை பதவிக்காலத்தில் தவறான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்த செய்தி உங்களுக்கு புதியது அல்ல. அவருடைய மகன் குருவப்ப பிள்ளை அக்குற்றச்சாட்டை மறுத்து உரிய நீதிகேட்டு பாரீஸ் சென்றார், வழக்கில் வென்றார், நட்டயீட்டைப் பெற்றார் என்பதெல்லம் பழையசெய்திகள். எனினும் தந்தை வகித்த துபாஷ் பதவியைத் திரும்பத் தனக்குப் பெற குருவப்ப பிள்ளை கிறித்துவ மதத்தை த் தழுவுகிறார். அவருடைய இறப்பிற்குப் பிறகு அனுபவம், திறமை இவற்றை நன்கறிந்து பாராட்டிவந்த கம்பெனியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவு ஆகியவற்றின் அடிப்படையில் நமது பிள்ளை துபாஷாக நியமனம் செய்யப்பட்டிருக்கவேண்டும், ஆனால் அது நடைபெறவில்லை. காரணம் அவர் கிறித்துவர் இல்லை. கிறித்துவர் அல்லாத ஒருவரை துபாஷாக பதவி நியமனம் ஆவதை புதுச்சேரி கிறித்துவமத குருமார்கள் விரும்பவில்லை. ஆனந்தரங்கப்பிள்ளை மதம் மாறியிருப்பின் குருவப்ப பிள்ளையைப்போலவே துபாஷாக வந்திருப்பார்.ஆனால் ஆந்தரங்கப்பிள்ளை தமது சுயமரியாதையை இழக்கவிரும்பவில்லை. தமது வினைத் திட்பத்தில் பிள்ளைக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது. தன்னுடைய நேர்மையும், சாதுர்யமானப் பேச்சும்

தனக்குரிய சன்மானத்தை பெற்றுத்தருமென உறுதியுடனிருந்தார். பிள்ளை குடும்பத்திலிருந்து பறிக்கப்பட்ட துபாஷ்பதவி, இவரைத் தேடிவருகிறது.

பிரெஞ்சுக் காலனி ஆதிக்கத்தின்போது குருவப்ப பிள்ளைபோல தங்கள் பூர்வீக அடையாளத்தை ‘ La rénonciation ‘ என்ற பெயரில் துறந்து பிரெஞ்சு பெயரைக் குடும்பப் பெயராக (surname or famaily name) மாற்ரிக்கொண்டு, மதத்தையும் மாற்றிக்கொண்டு பலன் பெற்றவர்கள் அனேகர். இன்றைக்கு பிரான்சுநாட்டின் குடியுரிமைச் சட்டம் மதம் மாற வற்புறுத்தவில்லை. எனினும் சில சலுகைகள் கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறபோதும் பிரெஞ்சுக் குடியுரிமைக்கு விண்ணப்பிகிறபோது, புதுச்சேரி தமிழர்கள் கிறித்துவ பெயர்களை குடும்பப் பெயராக ஏற்றுக்கொள்கிறவர்கள் உண்டு. Dumont வடிவேலு, Antoin ராமசாமி என்று அழைக்கபடும் தமிழர்கள் பிரான்சில் ஏராளம். இக்கட்டுரையாளனான எனக்கும் அத்தகைய நெருக்கடி எற்பட்ட து. என்னுடைய பெயர் உண்மையில் நாகரத்தினம்( மதுராந்தகம் தாலுகாவில் செய்யூர் என்ற ஊரில் நாகரத்தினம் பிள்ளை என்ற உறவினர் செல்வாக்காக வாழ்ந்தவர், அவர் பெயரை எனக்கு வைத்திருந்தார்கள் ) என்னுடைய தகப்பனார் பெயர் இராதாகிருஷ்ணப்பிள்ளை. அவர் கிராம முன்சீப்பாக இருந்தவர். 1985ல் மனைவிமூலம் (அவர்கள் குடும்பப் பெயர் Eboly) பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்றேன். பிரான்சுக்கு வந்ததும் ஏதாவதொரு கிறித்துவ பெயரை குடும்ப பெயராக ஏற்கின்ற நெருக்கடிக்குத் தள்ளப்பட்டேன். நீதிமன்றத்தில் விண்ணப்பமிட்டு, குடும்ப பெயராக நாகரத்தினத்தையும், முதற்பெயராக (First name) எனதகப்பனார் பெயரில்ருந்து கிருஷ்ணாவையும் வைத்துக்கொண்டேன். அன்றியும் காவல் நிலையங்கள் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பிரெஞ்சு மொழி பேசவராத பிரச்சனைக்குரியத் தமிழர்களுக்கு மொழிபெயர்க்க அவ்வப்போது அழைக்கப்படுகிறேன். அவ்வகையில் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு 9 நூல்கள், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு 2 நூல்கள் ஆக பிள்ளையின் பெருமையைப் பேச யாம் இதழ் வாய்ப்பை அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.

தொழில் திறம்(Professionalism)

பிள்ளையின் ஆளுமைப் பண்பில் நான் முதலாவதாப் பார்ப்பது அவருடைய தொழில் பக்தி அல்லது தொழில் திறம். கல்வியோ, பணியோ, குடும்பமோ, நட்போ எதுவென்றாலும் அந்த ஒன்றில் உண்மையாகவும் அர்ப்பணிப்பு ஈடுபாட்டுடனும் நடந்துகொள்வது சம்பந்தப்பட்டவர் வெற்றிக்கு உதவுகிறது. ஒரு வகுப்பில் இருபது மாண்வர்கள் இருக்கிறார்கள் அவர்களில் பதினைந்து பேர் இறுதி த் தேர்வில் தேவாகிறார்கள், அவர்களில் முதல்வகுப்பில் தேர்வாகிற்வர்கள் நான்கு அல்லது ஐந்துபேர். இந்த ஐந்து பேருக்கும் பிற பனினைந்து பேருக்கும் என்ன வேறுபாடு, முதல் வகுப்பில் தேறிய ஐவரும் தல்விக்கு உண்மையாகவும் அர்ப்பணிப்பு ஈடுபாட்டுடனும் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்று பொருள். தொழில்திறத்திற்கும் அத்தகைய கடப்பாடு தேவைப்படுகிறது.

முடியாட்சியில் ராஜபக்தி ராஜவிசுவாசம் போன்ற சொற்களை கேள்விப்பட்டிருப்பீர்கள், ஜனநாயக உலகில் உண்மையான விசுவாசம் என்ற சொல்லை அறிந்திருக்கிறோம். கண்மூடித்தனமான விசுவாசம் தொழில் திறம் ஆகாது.

« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. »

என்கிற குறள் வகுத்த வினைத்திட்பத்தை நெறியாக கொண்டு வாழ்ந்து காட்டியவர் பிள்ளை. சொந்த தோற்றத்தில் காட்டிய அக்கறை, பணிசார்ந்த கோட்பாடுகளில் கொண்டிருக்கும் மரியாதை, செய்யும் தொழிலே தெய்வம் எனும் தெளிவு, இம்மியும் பிசகாத செய் நேர்த்தி, ஆகிய உட்பிரிவுகளை தன்னுள் அடக்கியது தொழில் திறம். இதனைச் சுருக்கிச் சொல்வதெனில் முழுமையன ஈடுபாடு, நேர்மை மற்றும் செயல் திறன், எண்ணிய முடித்தல் .

குணங்களைச் சொல்லிவிட்டோம் . இக்குணங்களின் நோக்கம் என்னவாக இருக்கமுடியும் ?

பலன்கள்.

இறுதியில் அடையும் பலன்களால் ஒருமனிதனின் தொழிலாற்றலை அளப்பதென்பது ஒருவகை. சுற்றியுள்ள மனிதர்களால் ஒருவரின் தொழில் திறத்தை அளப்பதென்பது இன்னொரு வகை. செய்பவரைக் காட்டிலும் செய்யும் மனிதரை அருகிலிருந்து பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், நமது பெருந்தகைகளிடம் பணி சார்ந்த பலன்களை எதிர்பார்ப்பவர்களாக இருக்கலாம். சக ஊழியர்களாகப் பணியாற்றி, ஒருவருடைய செயல்திறம், தனது வளர்ச்சியைப் பாதிக்கிறது எனக் மனம்

புழுங்கலாம். நமது பிள்ளையின் தொழில் திறமையைக் கண்டு வியப்பவர்களாக துய்ப்ளே முதலான கவர்னர்கள் இருந்தார்கள். அவர் வளர்ச்சிகண்டு பொறாமையில் புழுங்கியவர்களாக கனகராய முதலியாரும் பிற தமிழர்களும் இருந்தார்கள். நமக்கு அவர் துபாஷ் உத்தியோகத்தின் பெருமையை உரத்துச் சொல்வது, அவர் காலத்தில் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி அடைந்த வளர்ச்சியும் இலாபமும்.

—————————————————————————

 

ஆனந்தரங்கப் பிள்ளை : வாழ்க்கை, வரலாறு, ஆளுமை– 3,

அ. துய்ப்ளே வருகையும் ஆனந்தரங்கப்பிள்ளையின் துபாஷ் உத்தியோகமும்

ஆனந்தரங்கப்பிள்ளை தமது விடலைப்பருவத்திலேயே, பரங்கிபேட்டையிலிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நெசவுச் சாலையையும், சாயக்கிடங்கையும் நிர்வகிக்க லெனுவார் என்கிற புதுச்சேரி கவர்னரால், கவர்னரின் சுய விருப்பத்தின் பேரில் தேர்வு ஆனார் என்பதை சென்ற இதழில் வாசித்திருப்பீர்கள்.

லெனுவார் என்பவருக்குப்பிறகு,பியர் பெனுவா துய்மா (Pierre Bênoit Dumas) என்பவர் 1735 ஆம் ஆண்டு கவர்னர் பொறுப்பை ஏற்கிறார். லெனுவார் போலவே துய்மாவும் திருவேங்கடம் பிள்ளை அவர் மகன் ஆனந்த ரங்கப்பிள்ளை இவர்களின் நேர்மை, திறமை இரண்டிலும் அதீத நம்பிக்கை கொண்டிருந்தவர். பொதுவாகவே புதுச்சேரி கவர்னராக நியமிக்க்ப்பட்டவர்கள் அனைவரும் திடீரென்று இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகத்தில் வேறு பணிகளை ஆற்றிய அனுபவசாலிகள். எனவே நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த புதுச்சேரி இந்தியர்களின் நடத்தைகளை, பண்புகளை அருகிலிருந்து பார்த்து சில கருத்துகளை வைத்திருந்தார்கள்.

பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக குழுமத்தை ஓர் முழுமையான ஓர் அரசு நிறுவனம் என்றும் கூறமுடியாது. பிரெஞ்சு மன்னர் ஆட்சியின் ஆசியுடன், ஆதரவுடன் இயங்கிய குழுமம். அதனை நிர்வகித்த கவர்னரும் பிறருங்கூட(துபாஷ்களும் அடக்கம்) குழுமத்தின் ஆசியுடன் முமுதலீடு செய்து இலாபம் ஈட்டினார்கள். பொதுவாகவே நிர்வாக அரசியலைக் காட்டிலும் பணம் புரளும் வணிக அரசியலுக்கு விசுவாசம், திறமை போன்றவை ஊழியத்திற்கென எதிர்பார்க்கப்படும் பண்புகள் என்கிறபோதும் நேர்மையும் நானயமும் கூடுதலாக எதிர்பார்க்கப்படும் பண்புகள். இத்தகைய சூழலில் புதியவர்களை நியமித்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அறிந்த மனிதர்களை துபாஷாக நியமிப்பது புத்திசாலித்தனமென கவர்னர்கள் கருதி இருக்கலாம். இந்நிலையில் துய்மாவின் பதவிக்கு ஆபத்தை அளிக்கின்ற வகையில் இந்திய துணைக்கண்டத்தில் ஆதிக்கப் போர்கள் பரவலாக இடம் பெற்றன. தென்னிந்தியாவும் இத்தொத்து வியாதியிலிருந்து தப்பவில்லை.

1740ஆம் ஆண்டு மராத்தியர்களால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வணிக செயல்பாட்டுக்கு உதவிய தரங்கம்பாடி தாக்குதலுக்கு உள்ளானது. புதுச்சேரி அருகிலிருந்த ஆட்சியாளர்கள் மாராத்தியர்களுடன் தொடர் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். தரங்கம்பாடி இழப்பு பெரிய இழப்பு என்கிறபோதும் புதுச்சேரியில் பாதிப்பு இல்லை என்று தேற்றிக்கொண்டு பிரெஞ்சு கிழக்கிந்திய நிர்வாகத்தினர் இருப்பதையும் இழந்துவிடக்கூடாதே என்பதற்காக பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்பதுதுபோல நடந்துகொண்டனர்.

இத்தகைய சூழலில் தான் துய்ப்ளே (Joseph François Dupleix) 1742 ஆம் ஆண்டு புதுச்சேரி கவர்னராக நியமனம் ஆகிறார். ஏற்கனவே தெரிவித்ததைப்போல துய்ப்ளே புதுச்சேரிக்குப் புதியவர் அல்லர். 1720 லிருந்து 1730 வரை பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவின் உறுப்பினராக இருந்த அனுபவம் அவருக்கு உண்டு. எனவே முந்தைய கவர்னர்களைப்போலவே திருவேங்கடம் பிள்ளையையும், ஆனந்தரங்கப்பிள்ளையையும் நன்கு அறிந்தவர். துய்ப்ளே கவர்னர் பொறுப்பேற்றபோது துபாஷ் பணியில் இருந்தவர் கனகராயமுதலியார். நைனியப்பப்பிள்ளை தரகுத்தொழிலைத் தவறாகப்பயன்படுத்தி தன்னை வளர்ந்துக்கொண்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டு இறந்ததும், அவர் மகன் குருவப்ப பிள்ளை பிரான்சு சென்று சந்திக்க வேண்டியவர்களச் சந்தித்து தன் தந்தை குற்ற மற்றவர் என நிரூபித்ததும் ; அதற்கு நன்றிக் கடனாக கிறித்துவ மதத்தை அவர் தழுவியதும் ; இந்த மதமாற்றமே அவருடைய துபாஷ் நியமனத்தை கிறித்துவ மதகுருமார்கள் அனுமதிக்க காரணம் ஆயிற்று என்பதும் பழைய செய்தி. கிறித்துவராக மதம் மாறிய குருவப்ப பிள்ளை ஆயுளைக்கூட்டிக்கொள்ள சரியாக மண்டியிட்டு பிரார்த்திக்கவில்லை போலிருக்கிறது, விளைவாக குறுகியகாலத்தில் பரலோகம் அழைத்துக்கொள்கிறது.

குருவப்பப் பிள்ளை இறந்த பிறகு திருவேங்கடம்பிள்ளைக்கு துபாஷ் உத்தியோகம் கிடைத்திருக்கவேண்டும், திறமை மட்டும்போதாதே, திருவேங்கடம்பிள்ளைக்கு சுபாஷாக தகுதியிருந்தும் அப்போதையை கவர்னர் மதகுருமார்களின் பேச்சைக்கேட்டு ( அவர் கிறித்துவர் இல்லை என்கிற காரணத்தை முன்வைத்து) கனகராயமுதலியாரை (1725 ) துபாஷாக நியமனம் செய்கின்றனர். துய்ப்ளே 1742 ஆம் ஆண்டு கவர்னராக பொறுப்பேற்றபோது ஆக இந்த கனகராய முதலியாரே துபாஷ் பணியைத் தொடர்கிறார். அதுபோலவே ஆனந்த ரங்கப்பிள்ளையிடத்தில் துய்ப்ளேவுக்கும் அவருக்கு முந்தைய கவர்னர்களுக்கும் அபிமானம் இருந்தும் அவரை துபாஷாக நியமிக்க முடியாத நிலை. இந்நிலையில்தான் உடல்நிலைப் பாதிப்பினால் நிகழ்ந்த கனமுதலியாரின் இறப்பு, பிள்ளைக்குச் சாதகமாக முடிந்தது. நியமனத்தில் குறுக்கிட்ட மதகுருமார்கள் அவ்ர்ளுக்கு ஆதரவாக இருந்த மனைவி ஆகியோரின் கருத்துக்களை ஒதுக்கிவிட்டு எடுத்த முடிவில் உறுதியாக இருந்த துய்ப்ளே ஆனந்தரங்கப்பிள்ளையை அதிகாரபூர்வமாக 1747ஆம் ஆண்டில் சுபாஷாக பதவியில் உட்காரவைக்கிறார். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் வரலாற்றில் துப்ளேவும் ஆனந்தரங்கப்பிள்ளையும் இணைந்து பணியாற்றிய வருடங்களே பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் பெருமைமிகு வருடங்கள் எனச் சொல்லவேண்டும்.

ஆ. ஆனந்த ரங்கப்பிள்ளை என்கிற என்கிற பெருந்தச்சன் :

இத்தொடரின் தலைப்பு « ஆன ந்தரங்கப்பிள்ளை வாழ்க்கை, வரலாறு ஆளுமை» என்று உள்ளது. பல நண்பர்களுக்குக் குறிப்பாக ஆனந்தரங்கப்பிள்ளையை பற்றி அறிந்தவர்களுக்கு  தலைமையை ஆளுமையுடன் இணைத்துக் காண்கிறவர்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும். அவர் பிரெஞ்சுக்கார்களின் துபஷாகத் தானே இருந்தார், புதுச்சேரி ஆட்சி அரசியலில் எந்த அரியணையிலும் அமர்ந்ததாக செய்திகள் இல்லையே என யோசிக்க இடமுண்டு. பிள்ளை பிரெஞ்சு நிர்வாகிகளின், உள்ளூர் மக்களின், ஆன்றோர்கள், கவிஞர்களின் இதய அரியாசனத்தில் இடம்பிடித்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. இது « வெந்த சோற்றைத் தின்று விதி வந்தால் சாகிறது » என்ற கோட்பாடுடைய சராசரி மனிதர்களுக்கு வாய்ப்பதில்லை.

நண்பர்களே தலமை என்பது இரு வகையில் கிடைக்கிறது :ஒன்று பிறப்பால் மற்றது உழைப்பால். பிறப்பால் தலைமைப்பொறுப்பை அடைவதை முடிமன்னர்கள் வரலாற்றில் காண்கிறோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும், ( சர்வாதிகார நாடுகளை தவிர்த்துவிடுவோம்) ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து பெருவாரியான மக்களின் ஆதரவு பெற்றவர்களே ஆட்சிக்கட்டிலில் அமரமுடியும் என்கிற நாடுகளிலும் பிறப்பால் தலமையைத் திணிக்கும் வாரிசு அரசியல் நடைமுறை உண்மை.

ஆனந்தரங்கப்பிள்ளையின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அரியாசனத்திற்கு உரியவர்கள் மட்டுமின்றி, பிற நிர்வாகிகளும் மன்னரின் வாரிசாகவோ, உறவினர்களாகவோ இருக்கவேண்டும் என்பது முடியாட்சியின் எழுதப்படாத அரசியல் சாசனம். « அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், குடிமக்களுக்குப் பதில் சொல்லும் அவசியமில்லை » அதுவே Divine right of kings* என்பது முடியாட்சியின் கோட்பாடு. பிரெஞ்சு மன்னராட்சி அப்போதைய ஐரோப்பியா ஆட்சிகளுக்கிடையே நிலவிய அரசியல் மற்றும் வணிக போட்டிளின் படி தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காலூன்றிய பின், பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகச் சங்கத்தை கவனித்துக்கொள்ள அரசகுடும்பத்தினரையோ அல்லது அவர்களுக்கு வேண்டியவர்களையோ அனுப்பி வைத்தனர், என்பதை நாம் நினைவிற் கொள்ளவேண்டும்.

வணிகச் சங்கத்தின் புதுச்சேரி நிர்வாகியாக தலைமை ஏற்க ஐரோப்பியருக்கே கூட எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்கிறபோது ஆனந்தரங்கப்பிள்ளை போன்ற ஒரு ஆசியர், ஐரோப்பியரால் காலனி நாட்டில் இரண்டாம் வகை குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திப்பார்க்க அவர்களுக்குத் தலை எழுத்தா என்ன ? தவிர பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்ட உள்ளூர் ஆசாமிகள் கிறித்துவர்களாக இருக்கவேண்டும் என்பதில் ஐரோப்பிய மதகுருமார்கள் கறாராக இருந்தனர் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்நிலையில் கிறித்துவர்கள் அல்லாத நைனியப்ப பிள்ளை அவர் மைத்துனர் திருவேங்கடம்பிள்ளை, அவருக்குபின் அவருடைய திருக்குமரன் மூவரும் துபாஷ் பொறுப்பில் அமர முடிந்ததெனில் அவர்கள் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்த பரிசு ஆகும். ஆனால் பிற துபாஷ்களுக்கும், துபாஷ் ஆனந்தரங்கப்பிள்ளைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. மற்றவர்கள் துபாஷாக மட்டுமே பணி ஆற்றினார்கள். ஆனால் நமது பிள்ளை கவர்னரின் நண்பராக, அரசியல் ஆலோசகராக, அந்தரங்க காரியரிசியாக, மொழிபெயர்ப்பாளராக, ஏற்றுக்கொண்ட பணியை செவ்வனே முடிக்கும் வல்லமைக்குச் சொந்தக் காரராக, ஆட்சியாளரின் மன நோய் தீர்க்கும் குணவானாக வாழ்ந்தார் என்பது வரலாறு தரும் செய்தி.

தலைமை ஏற்பவர்கள் அனவருமே தலைமைக்குரிய பண்புகளைக் கொண்டிருப்பார்கள் என்பதில்லை. தலைமை என்பது 1. ஏற்றுக்கொண்ட பொறுப்பில் காட்டும் உண்மையான ஆர்வம் 2. ஒழுங்கு, நேர்மை 3. சொல்வன்மை 4. சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் விசுவாசம், ஏற்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை 5. முடிவில் தெளிவு 6. நிர்வாகத் திறன் 7. மனிதர்களின் திறனறிந்து பொறுப்பை ஒப்படைக்கும் தேர்வறிவு 8. ஈர்ப்புத் திறன். எனும் முக்கியப்பண்புகளைக் கொண்டது.

வெற்றிபெற்ற தலைவர்கள் பொதுவில் இப்பண்புகளை கொண்டிருப்பார்கள், அல்லது இப்பண்புகளை கொண்டவர்களால் வழிநத்தடப்படிருப்பார்கள். விக்கிரமாதித்தனுக்கு ஒரு பட்டிபோல, சந்திர குப்த மௌரியனுக்கு ஒரு கௌடியல்யர் போல ஒவ்வொரு தலமைக்குப் பின்பும் நிழல் மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களே உண்மையான தலைவர்களும் ஆவார்கள். இம்மனிதர்களின் பண்புகளாலேயே ஒரு தலைவனின், அவனை நம்பியிருக்கிற ஆட்சிபரப்பின் அதற்குட்பட்ட குடிமக்களின் உயர்வும் தாழ்வும் சபிக்கப்பட்டிருக்கிறது நண்பர்களே ! துய்ப்ளேயின் பிரெஞ்சு புதுச்சேரியிலும் உண்மையான தலைமை பிள்ளையிடமிருந்தது, அதனால்தான் அக்காலக் கட்ட ம் ஒளிரவும் செய்தது.

« கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு »

எனும் குறள் நெறியை, தமது பணியில் பரிசோதித்து, சாதித்துக் காட்டியவர் பிள்ளை.

(தொடரும்)

———————————————————————————————

* Divine right of kings – the doctrine that kings derive their right to rule directly from God and are not accountable to their subject.

இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம்- உரைநடையில் – க பஞ்சாங்கம்

 நெஞ்சை அள்ளும் இளங்கோவடிகளின்   உரைநடை சிலப்பதிகாரம்’

                                               நாகரத்தினம் கிருஷ்ணா

‘ நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று   பேச்சிலும் எழுத்திலும் பாரதியின் பாடல்வரியை மேற்கோள் காட்டும் பலர் அம் மகாகவியைப்போல   இளங்கோவடிகளின் படைப்பை  சுவைத்திருப்பார்களா ?  எனக் கேட்டால், இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.  இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம்  பேரிலக்கியங்களில் ஒரு மலைத்தேன்.  மலைத்தேனைப்போலவே காவியச்சிலம்பும் கடும் முயற்சியின்றி  மாந்தக்கூடிய தீஞ்சுவை அல்ல.   காலத்தாலும், கற்றோர்  தொழும் மொழியாலும் பாமரர்க்கு எட்டாத உயரத்தில், கட்டப் பட்டத் தேன்கூடு அது. இளங்கோவடிகள் எனும் தேனீ, தமிழ் நிலத்தின் காடுமேடெல்லாம் அலைந்து, அழகியல் பூக்களைத் தேடி மோந்து, அவற்றின் சுவைதரும் மதுரத்தை புலன்களில்  சுமந்து ஒராயிரம் தேனிக்களின் பணியை தான் ஒருவனாக  கலை நயத்துடன்  கட்டி எழுப்பிய  தேன்கூடு சிலப்பதிகாரம். இன்றைக்கிந்த மலைத்தேன் குடத்தை, முடவர்களாக அண்ணாந்துபார்த்துக்கொண்டிருந்த  நம் கைகளில் தந்து  எளிதாக மாந்துவதற்குரிய நற்காரியத்தைச் செய்திருக்கிறார், பேராசிரியர்.

பேராசிரியர்  க. பஞ்சாங்கம் இந்நூலைக்குறித்து எனதுக் கருத்தை  எழுத்துவடிவில் கேட்டிருந்தார். அக்கருத்தை அணிந்துரை என்றபெயரில் அழைப்பதென அவர் தீர்மானித்திருந்தாலும் எனக்கதில் உடன்பாடில்லை. சிலப்பதிகாரம் என்ற பெருங்காப்பியத்தை –  மூல ஆசிரியரின் கவிதைமொழியை, உரைநடை மொழியாக உருமாற்றம் செய்யும் துணிவும் ஆற்றலும் எல்லாருக்கும் ஆகிவராது. இவரோ சிலப்பதிகாரத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் கொண்டுள்ள தீராத காதலினால், விரும்பி இப்பணியைத் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.  இவருக்கு பல முகங்கள் உண்டு : தமிழ்ப் பேராசிரியர், படைப்பிலக்கிய நிலத்தின் நஞ்செய், புஞ்செய்களான தொன்மம் நவீனம்  இரண்டிலும் ஆழமான அறிவும் தேர்ச்சியும் பெற்றவர், கவிஞர், கட்டுரையாளர், புனைகதையாளர் அனைத்துக்கும் மேலாக   நெஞ்சில் கோடாமையை நிறுத்திய திறனாய்வாளர் எனத் தமிழுலகம் ஏற்றுக்கொண்ட மனிதர், பெரியர், செயர்க்கரிய செயல்களைச் செய்வார். நான் சிறியன், இத்தகையை முயற்சியை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளக்கூட போதாதவன். அறிந்ததெல்லாம் தற்கால இலக்கியங்கள் மற்றும் புனைவுலகம்.  எனவே இது முன்னுரை அல்ல  ஒரு சராசரி படைப்பிலக்கிய இரசிகனின் கருத்து.

இம்முயற்சியில் மூன்று கூறுகள் இருக்கின்றன. முதலாவதாக உரைநடைமொழிக்குப் பேராசிரியர் தேர்வு செய்த நூல் ; அடுத்து  தம் முயற்சியைத் திருவினையாக மாற்றிய  உரைநடை ஆசிரியரின் ஆற்றலும், உழைப்பும் ;  இறுதியாக இந்நூல் தரும் வாசிப்புப் பலன்.  இம்மூன்றும் இந்த நூலைக்குறித்த எனது கருத்தைத் தெரிவிக்க உதவியவை.

படைப்பிலக்கியத்தின் வடிவம் என்கிறபோது கவிதை , உரைநடை என்ற இரண்டு சொற்களும் நம் கண்முன் நிற்கின்றன. இரண்டும் உடன்பிறந்தவை என்கிறபோதும், குணத்தால் பங்காளிகள்:  கவிதை என்ற சொல்  இன்றைக்கும் புதிராகவும், எளிதில் விளங்கிக் கொள்ள இயலாததாகவும், பண்டித மொழிக்குரியதாகவும்,  அதனால் கற்றறிந்த மேலோரின் அறிவுப் புலனுக்கு மட்டுமே எட்டக்கூடிய இலக்கிய பண்புகளைக் கொண்டதாகவும், படைப்பாளியின் நெஞ்சை வெகு அருகில் நின்று புரிந்துகொள்ள உதவும் ஊடகமாகவும் இருக்கின்றது.  மாறாக உரைநடை என்ற சொல் மகிழுந்தில் பயணிப்பதல்ல, பேருந்தில் பயணிப்பது, அன்றாடம் நீங்களும் நானும் உரையாடும் மொழியில், பெருவாரியான மக்களின் வாழ்வியலோடு  தொடர்புடைய மொழி.  அடர்த்தியும் சொற் சிக்கனம், இவற்றிலிருந்து விடுபட்டு வாசிப்பவருடன் நெருக்கம் காட்டும் மொழி.  உலகெங்கும் படைப்பிலக்கிய மொழியாக கவிதையே  தொடக்கத்தில் இருந்துவந்திருக்கிறது.  முடியாட்சி அரசியலில்  இலக்கிய சமூகத்தில்  கவிதைமொழி  மேட்டிமை அடையாளத்தைப் பெற்றிருந்தது. உரையாசிரியர்கள், இல்லையெனில்  நம்மில் பலரும் சபை நடுவே நீட்டு ஒலை வாசியாத, குறிப்பு அறியமாட்டாத நன் மரங்களாக மட்டுமே  இருந்திருப்போம்.   முடியாட்சியை மக்களாட்சியாக மாற்றுவதற்கு நடத்திய புரட்சியை ஒத்ததுதான் அந்த நாளில் இலக்கிய வெளியில் கவிதை சிம்மாசனத்தில் உரைநடையை உட்காரவைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளும்.  கவிதை உரைநடை வடிவத்திற்கு உட்படாமல் இருந்திருந்தால், கல்விப்புலத்திலும், கருத்துப்புலத்திலும் இன்று நாம் கண்டிருக்கிற நுட்பமான வளர்ச்சிகள் இல்லையென்று ஆகியிருக்கும். இலக்கண பண்டிதர்கள் பெருகி இருப்பார்கள், இலக்கிய படைப்பாளிகள் சுருங்கி இருப்பார்கள்.       பேராசிரியர் க. பஞ்சாங்கம் பல நூற்றாண்டுகளுக்கு  முன்பு எழுதப்பட்ட இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தை

பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை ஆர்க்குங் கயிறு

குறளாரின் மூதுரைக்கிணங்க இன்றைய படைப்புலகின் முதன்மை மொழியில், எழுதியிருக்கிறார். ‘ 20ம் நூற்றாண்டு என்பது உரைநடைத் தமிழின் எழுச்சி காலம்’ என்பதற்கொப்ப இயங்கியுள்ளார். கவிதை மொழியை உரைநடைமொழியில் கொண்டுவந்திருக்கிற இப்பணி, நகல் அல்ல அசல். சிலம்புக்கு நிகரானதொரு காவியம் உலகில் எழுத்துவடிவில் எங்குமில்லை. குடிமக்களை காவிய மாந்தர்களாக உயர்த்திய பெருமை,  கதைமாந்தர்களின்  கலை இலக்கிய ஈடுபாட்டினையும் நுண்நோக்கி  எழுத்தில் சேர்த்த அருமை, படைப்பினத் தொடங்கும் உத்தி, கதை சொல்லும் பாங்கு, இயற்கையின் ஊமை வினைகளை சொல்லோவியமாகத் தீட்டும் திறன் என சிலப்பதிகாரத்தை  எழுதிய படைப்பாளிக்கும், நிகராக அவர்காலத்தில் ஒருவருமில்லை.

இத்தகைய சீர்மை மிக்கதொரு நூல்  பெருவாரியான  மக்களைச் சென்றடையவேண்டும் அதன் பெருமையை அவர்கள் தாமே வாசித்து உணரவேண்டும்  என்ற நோக்குடன், படைப்பாளியை மேலும் கொண்டாடும் வகையில் பேராசிரியர். க பஞ்சாங்கம் உழைத்திருக்கிறார். கணியன் பூங்குன்றனாரின் ‘உண்டாலம்ம இவ்வுலகம் ‘ என்ற பாடலையொத்து துஞ்சலின்றி, அயர்வின்றி, தமிழ்கூறும் நல்லுலகிற்கென எடுத்துக்கொண்ட முயற்சி. முயற்சியின் பொருண்மையை அவரது முன்னுரை கோடிட்டுக் காட்டுகிறது.  ஒவ்வொரு சொல்லையும், அச்சொற்களை சுமக்கும் பாடல் வரியையும், அவற்றின்  சுவை குன்றாமல் நயம் குலையாமல்  ‘ செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து.’   என்ற குறளுக்கிணங்க, உரைநடை காப்பியமாக எழுதியிருக்கிறார்.  தான் செயல்பட்ட விதம், முன்னோடிகள் முயற்சிக்கும் இவருடைய முயற்சிக்கும் உள்ள வேறுபாடு, எழுதியகாலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் என  தம்  முன்னுரையில்  இளங்கோவடிகளின் சிலப்பதிகார உரைநடை படைப்பாளி   பகிர்ந்துகொண்டுள்ளவற்றை   நண்பர்கள் கட்டாயமாக  வாசிக்க வேண்டும்.  இன்றைய இலக்கியத் தேவைக்கேற்ப காலம்கருதி  இளங்கோவடிகளே இவருள் புகுந்து, இதனை எழுதியிருப்பாரோ என்ற ஐயம் எனக்குண்டு.

« இந்த நூற்றாண்டு வாசகன் தன் நெஞ்சிற்கு நெருக்கமாக, இதம் தரும் ஒன்றாக உரைநடைத் தமிழை உணர்வதில் எந்த வியப்புமில்லை » என நூலாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவதுபோல இப்படைப்பும் வாசகர் நெஞ்சிற்கு நெருக்கமாக இதம்தரும் உரைநடை சிலப்பதிகாரமாக உணரப்படும்,  இளங்கோவடிகளின் புகழோடு இணைத்து நூலாசிரியரும், நூலும்  பேசப்படுவார்கள் என்பது உறுதி.


இளங்கோ அடிகளின் ”   சிலப்பதிகாரம்”

பேராசிரியர் க பஞ்சாங்கம்

அன்னம் பதிப்பகம்,மனை எண் -1, தஞ்சாவூர்.