Monthly Archives: மார்ச் 2021

கலையும் இலக்கியமும் -1

மனிதர் வாழ்க்கை என்பது  விருப்பு வெறுப்பு என்கிற இருபெரும் உணர்வுகளால் வழிநடத்தப்படுவது. ஒவ்வொரு நாளும் வைகறைத்தொடங்கி  இரவுநித்திரை கொள்வதற்கு முன்புவரை உடல்சார்ந்தும் உணர்வுசார்ந்தும் நமக்குத் தேர்வுகள் இருக்கின்றன. தேர்வு என்பது ஒன்றை நிராகரித்து மற்றொன்றை  தெரிவு செய்தல் : ஒன்றை வெறுத்து, மற்றொன்றை விரும்புவதல். உடலுக்கு ஒவ்வாமைகள் இருப்பதைப்போல உள்ளத்திற்கும் ஒவ்வாமைகள் இருக்கின்றன.   எனவேதான் இரண்டின் நலன் கருதி  அதாவது அவற்றின் நலன் நமது மகிழ்ச்சி எனக் கருதி  ஒன்றை நிராகரிப்பது பிறிதொன்றை ஏற்பது என்கிற வினையாடலுக்கு உட்பட்டதாக  நமது உயிர்வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறோம்.

நாம் எப்பொழுதெல்லாம் துன்பப் படுகிறோமோஅல்லது கவலையில் விழுகிறோமோ, அப்பொழுதெல்லாம் அதிலிருந்து விடுபட நினைக்கிறோம். மகிழ்ச்சியை, சந்தோஷத்தை மாற்றாக நினைக்கிறோம். இந்த மகிழ்ச்சியைபெற :

  புலன்சார்ந்த வழிமுறைகளை மட்டுமே முழுமையாக நம்பி மகிழ்ச்சியைத் தேடுவதென்பது ஒன்று,புலன்களோடு அறிவின் துணைகொண்டு தேடும் மகிழ்ச்சி என்பது மற்றொன்று.

முதல்வகை இன்பம் குறுகியது, அது மாயை தரும் இன்பம். «  நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே ! » என்கிற பாரதியின் தெளிவு நமக்கிருப்பின், இத்தகைய தற்காலிக இன்பத்தின்பால் நமக்கு நாட்டம் செல்லாது. « இடும்பையைத் தவிர்க்க, வேண்டுதல் வேண்டாமை இலாதவன் அடி »  சேர்தல் என்பது  இறை நம்பிக்கை உடையோருக்கு வள்ளுவர் காட்டும் வழிமுறை. அறிவைக் கணக்கிற்கொள்ளாத இன்பத்திற்கும், ஆன்மீக அடிப்படையிலான இன்பத்திற்கும் இடையில் வேறொரு இன்பம் இருக்கிறது  « காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் , நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்க களியாட்டம் ! » என்கிற அறிவுமதி புலன்களுக்கு ஊட்டும் இன்பம் அதாவது, கலைகள் அளிக்கின்ற  இன்பம்.   

மனித உள்ளம் வெக்கையில்  துடிக்கிறபோது நிழலாக இருப்பது கலை. காண்போர்க்கு, கேட்போர்க்கு, ருசிப்போர்க்கு உணர்வோர்க்கு,  மகிழ்ச்சி தருவது, இன்பம் அளிப்பது என்பது கலையினால் நமக்குக் கிடைக்கக் கூடிய பலன். கலையின் நோக்கம் புரிகிறது அதன் வகைமைகள் என்னவென்பதும் நமக்குத் தெரியும். ஆனால் ஒரு வினை கலையாக மாறும் மாயம் எப்படி நிகழ்கிறது ?

ஒருவன் தனது கற்பனைக்கேற்ப ஒன்றை வார்த்தெடுக்கும் அழகியல் திறனைக் கலை என்கிறோம். இத்திறன் படைப்பவனின் சிந்தனை, ஆன்மா, பண்பாடு, அவன் சார்ந்த சமூகம் எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. இருள் வேண்டாம் ஒளி வேண்டும் ; கசப்பு வேண்டாம் இனிப்பு வேண்டும் ; துன்பம் வேண்டாம் மகிழ்ச்சி வேண்டும் ; வாடைவேண்டாம் தென்றல் வேண்டும் ; முட்கள் வேண்டாம் மலர் வேண்டும் ; முடியாட்சிவேண்டாம் மக்களாட்சி வேண்டும் என ஒவ்வொரு கணமும், ஒவ்வொருநாளும் காலம் கருதி, தேவையின் பொருட்டு இடர்கள், காணச்சகியாதவைகள், கேட்க அருவருப்பானவைகள், தாங்கிக்கொள்ள இயலாதவைகள் போன்றவற்றை ஒதுக்கி, உயிவாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்கும்  திறவுகோல் கலையும் இலக்கியமும். கூர்ந்து கவனித்தால் இரண்டுமே ஒன்றென்கிற முடிவுக்கு வரமுடியும்.தான் விரும்பாத ஒன்றை மறுக்க வும், தனது அகபுற கவலைகளை மறக்கவும் கலையைப் படைக்கிறான், ‘தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என பொதுவெளிக்குக் கொண்டுபோகிறான். சுருக்கமாக க்  கூறினால் மனிதரின் அழகியல் சார்ந்த வினை கலை.ஒரு மனிதன் பல நூறுபேராக மாறியபின்னர்,  ஓர் இனத்தின் கலை சாட்சியங்களாக பண்பாடுகள் உலகெங்கும் விட்டுச்செல்லப்பட்டிருக்கின்றன. பண்டைய நாகரிகங்களைப் போகிறபோக்கில் வேதகால நாகரிகம், சிந்துவெளிநாகரிகம், கிரேக்க நாகரிகம் பெயர்களைக் கூறி சொல்லிப் புரிந்துகொண்டுவிட முடியாது. வெறுமனே அவை குடியிருப்பு, நகரவாழ்க்கை என விரித்து மதிப்பெண் வழங்கிடவும் முடியாது.  அவற்றின்  நுட்பமான உட்கூறுகளில் வெளிப்பட்ட அழகியல் அணுக்கமே  பிற்காலத்தில் அவற்றை நாகரிகம் என்ற சொல்லாடலின் கீழ்  அணிதிரட்ட அறிஞர்களால் முடிந்தது.  கலையின் பிறப்பு நூறாண்டுகளுக்கு முன்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  நிகழ்ந்ததென்று வரையறுப்பது நியாயமாகாது. என்றைக்கு மனிதரினம் தோன்றியதோ, எக்கணத்தில் துன்பத்தை எதிர்கொள்ளநேர்ந்ததோ அன்றே கலையும் பிறந்தது.  அழுதகுழந்தையை அமைதிப்படுத்திய  குரலும், அவள் பாலூட்டிய செயலும் கலைமுயற்சிகள். இயல், இசை, நாடகம் புகைப்படம், திரைப்படம், ஓவியம், சிற்பம் இவற்றோடு  நுட்பமான மகிழ்ச்சிக்கு  மனிதர்வாழ்க்கை உறுதி அளிக்கின்ற ஒவ்வொரு செயலும் கலை.

கலை என்பது பரவசம்கொள்ள,  தோல்ல்விக்கு ஆறுதல் தேட, அது ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்கும்’ வித்தை.  கலையைச் சரியாகப் புரிந்துகொண்டோமெனில் துன்பமோ இன்பமோ யாழெடுத்து பாடுகின்றவரும், பாடலைக் கேட்கும் வாய்ப்புள்ள மனிதரும் துன்பத்தை மறந்து இன்பத்தில் திளைக்கின்றனர். இலக்கிய கலையும் இத்தகையை பயன்பாட்டினை அளிப்பதுதான்.

 கலை என்பது தனித்ததொரு படைப்பு. ஒப்புமை இல்லாதது. ஒன்றுக்கு மேற்ப்பட்டவையை  உருவாக்கப்பட்டால் அது உற்பத்தி, படைப்பு அல்ல. அவனும் கலைஞனல்ல தொழிலாளி. நிர்ப்பந்தமின்றி தன்னார்வத்துடன் ஒரு கலைஞனால் பிறப்பெடுக்கும் படைப்பு அப்படைப்பைக் காண்பவர், கேட்பவர், சுவைப்பவர், இரசிப்பவர் எவராயினும் அவரவர் புரிதலுக்கொப்ப, சுவைக்கொப்ப அக்கணத்தில் மாத்திரமின்றி தொடரும் கணத்திலும் புரிதலையும் சுவையையும் அளித்து மகிழ்விக்க கூடியது.   இந்த வரையரைகள் இலக்கியக் கலைக்கும் பொருந்தும். அழகியல் சார்ந்த எழுத்தாக அமைந்து, வாசிப்பவருக்கும் வாசகருக்கும் மகிழ்ச்சியை அளிப்பது அதன் முதல் நோக்கம் :

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

 என பல நூற்றாண்டுகளுக்கு எழுதப்பட்ட குறள் தரும் சுவையும்

« இன்னபடி இவ்விடம் யாவரும் எவையும்
   க்ஷேமமென்றன் நிலையோ என்றால்,
   ‘இருக்கின்றேன்; சாகவில்லை’ என்றறிக. »

கடந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட பாரதிதாசன் பாடலும் வாசிக்கும் கணத்திலும் வாசித்தபின்னும் சுவைதரக்கூடியவை.

சாஸ்திரிய சங்கீதம் மெல்லிசையாக பரிணமித்து இராகம் ஸ்வரம் அக்கறையின்றி சராசரி மனிதன் முணுமுணுப்பதைப்போல இலக்கிய கலையும் இன்று பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.  படைப்பிலக்கியத்தின் வடிவம் என்கிறபோது கவிதை , உரைநடை என்ற இரண்டு சொற்களும் நம் கண்முன் நிற்கின்றன. இரண்டும் உடன்பிறந்தவை என்கிறபோதும், குணத்தால் பங்காளிகள்:  கவிதை என்ற சொல்  இன்றைக்கும் புதிராகவும், எளிதில் விளங்கிக் கொள்ள இயலாததாகவும், பண்டித மொழிக்குரியதாகவும்,  அதனால் கற்றறிந்த மேலோரின் அறிவுப் புலனுக்கு மட்டுமே எட்டக்கூடிய இலக்கிய பண்புகளைக் கொண்டதாகவும், படைப்பாளியின் நெஞ்சை வெகு அருகில் நின்று புரிந்துகொள்ள உதவும் ஊடகமாகவும் இருக்கின்றது.  மாறாக உரைநடை என்ற சொல் மகிழுந்தில் பயணிப்பதல்ல, பேருந்தில் பயணிப்பது, அன்றாடம் நீங்களும் நானும் உரையாடும் மொழியில், பெருவாரியான மக்களின் வாழ்வியலோடு  தொடர்புடைய மொழி.  அடர்த்தியும் சொற் சிக்கனம், இவற்றிலிருந்து விடுபட்டு வாசிப்பவருடன் நெருக்கம் காட்டும் மொழி.  உலகெங்கும் படைப்பிலக்கிய மொழியாக கவிதையே  தொடக்கத்தில் இருந்துவந்திருக்கிறது.  முடியாட்சி அரசியலில்  இலக்கிய சமூகத்தில்  கவிதைமொழி  மேட்டிமை அடையாளத்தைப் பெற்றிருந்தது. உரையாசிரியர்கள், இல்லையெனில்  நம்மில் பலரும் சபை நடுவே நீட்டு ஒலை வாசியாத, குறிப்பு அறியமாட்டாத நன் மரங்களாக மட்டுமே  இருந்திருப்போம்.   முடியாட்சியை மக்களாட்சியாக மாற்றுவதற்கு நடத்திய புரட்சியை ஒத்ததுதான் அந்த நாளில் இலக்கிய வெளியில் கவிதை சிம்மாசனத்தில் உரைநடையை உட்காரவைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளும்.  கவிதை உரைநடை வடிவத்திற்கு உட்படாமல் இருந்திருந்தால், கல்விப்புலத்திலும், கருத்துப்புலத்திலும் இன்று நாம் கண்டிருக்கிற நுட்பமான வளர்ச்சிகள் இல்லையென்று ஆகியிருக்கும். இலக்கண பண்டிதர்கள் பெருகி இருப்பார்கள், ஆக இன்றைய இலக்கியகலை பெரும் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கிறது. நாட்டுப்புற பாடல்களும், எற்றப்பாட்டும், வட்டாரவழக்கும், இலக்கியமாக ஏற்கப்பட்டுள்ள காலம்.  இலக்கண அணிகளை நிராகரித்து ஒதுக்கி  எளிமையைப் போற்றும் காலம். கற்பனையுடன் அதிகம் கைகோர்த்த காலம் போய், எதார்த்தத்தை இலக்கியங்கள் தோளில் சுமக்கும் காலம். சமயத்திற்கும் ஆட்சியாளருக்கும் அஞ்சியவைகளாக இருந்த இலக்கிய கலை, இன்று ஆட்சியாளர்கள், சமூகம் என எதைப்பற்றியும் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கும் கலை ஊடகமாகவும் வளர்ந்துள்ளது.

(தொடரும்)

இடைத்தேர்தல்

(காலச்சுவடு இதழில் ஆர் கே நகர் தொகுதி தேர்தலை முன்வைத்து எழுதியகதை)

தேர்தல் மாதாவுக்குச் சமர்ப்பணம்

இடைத்தேர்தல்

தொரம்மா ! தொரம்மா ! என்று கதவருகே வாசலில் கேட்கும் குரல் கன்னியம்மாவுடையது. இரவு அவன் இச்சைக்கு ஈடுகொடுத்ததில், விடிந்தது கூட தெரியாமல் உறங்கிக் கிடந்தவள் திடீரென்று கண்விழித்தாள், விழித்த வேகத்தில் கையைத் பக்கத்தில் துழாவினாள்.  அவனில்லை, நம்பிக்கையின்றி இரண்டாவது முறையாகத் துழாவினாள். அவன் விட்டுச்சென்ற வெப்பம்மட்டுமே விரித்திருந்த பாயில் மிச்சமிருந்தது.  சுவரோரமிருந்த தகரப்பெட்டி திறந்திருந்தது. தலையை நிமிர்த்தில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டிருந்த  சீவராசுவைப் பார்த்தாள். துக்கம் தொண்டையில் அடைத்து, நீர்க் கழிவாகக் கண்களை நிரப்பியது. 

*                            *                            *                            *

தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்திருந்தார்கள். தேர்தலென்று அறிவித்த மறுகணம் அவள் வாசலில் மட்டுமல்ல, அப்பகுதியைச் சேர்ந்த பிற வாசல்களிலும்  வழக்கம்போல சந்தோஷம்.  ஊருல திருவிழாவுக்குக் கொடிகட்டினா சவலைப் பிள்ளைக்குப் பாலுட்டினக் கதையா ஒரு துடிப்பு வந்திடும். ‘தாலிக் கட்டிக்கிட்டு புருஷன்வீட்டுக்குப் போன பெண்களெல்லாங்கூட தங்கள் தங்கள் பிள்ளைக்குட்டிகள் இழுத்துக்கொண்டு பிறந்தவீட்டுக்கு வருவார்கள், அதுபோலத்தான் தங்கள் பகுதியும் மாறியிருப்பதாக நினைத்தாள். சாட்சிக்கு வேறெங்கும் போகவேண்டிய அவசியமில்லை  அவள் வீட்டு வாசலேபோதும். ஒவ்வொரு ஒண்டு குடித்தனத்திலும் நான்கைந்துபேர் கூடுதலாக இருந்தனர். கக்கூஸுக்கும், குளிக்கவும் வாளியை வைத்துக்கொண்டு காத்திருக்க வேண்டியிருந்தது. இத்தனை ஆர்ப்பாட்டத்துக்கிடையிலும், அவனைப்பற்றிய நினைப்பும் குறுக்கிடுகிறது. போனமுறைபோல இம் முறையும் அவன் தன்னைத் தேடிவருவானா ? என்று மனதிற்குள் பலமுறைக் கேட்டுக்கொண்டாள்.  எதற்காக இந்தக்கேள்வி, எப்படி திடீரென்று அவனை மனம் நினைக்கப் போயிற்று ? என்பதுபோன்ற கேள்விகளுக்கு அவளுக்குப் பதில் சொல்லத்தெரியாது.

அவள் மனதை அலைக்கழித்த சிந்தனைகுப் பதில்போல  கடந்த இரண்டுமூன்று  நாட்களாக, அடிக்கடி  அவனை எதிர்கொள்கிறாள். எம்சி ரோட்டிலுள்ள ஒரு ஓட்டலுக்கு பாத்திரங்களை துலக்கிவைக்கிற வேலைக்குப்போகிற நேரத்திலும் சரி, பத்து மணிக்கு மார்க்கெட்டுக்குப் போகிறபோதும், திடீரென்று கடை கண்ணிக்கு கிளம்பிப்போகும் நேரத்திலும், திரும்பும்போதும் இவளுக்காகவே அவன் ஏதாவது ஓரிடத்தில் காத்திருக்கிறான்.  இரக்கப்பட்டு பேசலாமென்று கூட நினைத்தாள். ஒரு வருடமா இரண்டு வருடமா ‘தோ ன்னாலும் நாலஞ்சு வருஷமிருக்கும்’ என்று அவள் மனதில் அவனைப் பிரிந்திருக்கும் காலம் குறித்துத் தோராயாமாக ஒரு கணக்கு இருந்தது. ஜெயலலிதாஅம்மா போனமுறை ஜெயித்த மறுநாள் போனவன், பிறகு அவர்கள் இறந்து, முதன்முறையாக இடைத்தேர்தல் அறிவித்தபோது, தற்போதுபோலவே அவளை விடாமல் துரத்தினான். அப்போது அவளிடத்தில் கோபம் மட்டுமே இருந்தது.

முகம்கொடுக்கக் கூடாதென வைராக்கியமாக இருந்தாள். இம்முறை அவ் வைராக்கியம் விரிசல் கண்டிருந்தது.  சகக் குடித்தனக்காரர்களிடம் சென்றமுறை  நடந்தச் சம்பவங்களைக் கூறியபோது, வாசல்பெண்கள் எல்லோரும் திட்டித் தீர்த்தார்கள். « என்ன பொம்பிளை  நீ ! வலிய வந்த புருஷனை இப்படித் தொலைக்கலாமா ? ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பாங்க, கூத்தியாவூடு புளிச்சுப்போச்சுன்னு வந்த மனுஷனை தண்ணித்தெளிச்சு வூட்டுக்குள்ள வான்னு சொல்லுவியா, அத வுட்டுட்டு வீம்புபிடிச்சு நிக்கிற ? » என ஆளாளுக்குச் சண்டைபோட்டார்கள். தற்போது முன்புபோலவே அவனிடம் கோபமிருந்தாலும், கொஞ்சம் இரக்கமும் பிறந்திருந்தது. இந்தக் குழப்பத்தில் ஒழுங்காக சமைப்பதோ சாப்பிடுவதோ இல்லை. சோற்றைத் தட்டில்போட்டுக்கொண்டு உட்கார்ந்தாலும் அவன் நினைப்பில் கையைக் கழுவிவிட்டு எழுந்துவிடுகிறாள்.

அன்று தெருமுனையில கூறுகட்டி விற்றப்  பெண்மணியிடம், வயிறென்று ஒன்றிருக்கிறதே என்பதற்காக வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு திரும்பிக்கோண்டிருந்தாள்.  இவள் குடியிருக்கும் வீட்டு வாசலில் நின்றுகொண்டு அவன்  உற்றுப்பார்ப்பது போலிருந்தது, சந்தேகமில்லை இவளைத்தான் பார்க்கிறான். சுருள் சுருளான தலைமயிரைப் பின்பக்கம் அணைத்துச் சீவியிருந்ததும், அதற்குரிய முகமும் அவன்தான் என்கிற சந்தேகம் வீட்டுவாசலை நெருங்கநெருங்க  திடப்பட்டதும், முதன்முறையாக மனதில் இலேசாக வெட்கமும் மகிழ்ச்சியும். வீட்டை நெருங்கியவள், அவன் இவளைப் பார்த்து, « இன்னா தனம் எப்படியிருக்க ? » என்று தொட்டக் கையை உதறிவிட்டு விடுவிடுவென்று  வீட்டிற்குள் நுழைந்து தனது ஒண்டுக்குடித்தன கதவின் பூட்டைத் திறந்தபோது, அவன் இவள் பின்னால் நின்று தொண்டையைச் செருமினான். அதற்குள் வாசலில் இருந்த மற்றக் குடித்தனக்கார பெண்களில் இரண்டொருவர் கூடியிருந்தனர். வெத்திலைப் பெட்டி சகிதமாக அங்கு வந்த வீட்டுக்கார அம்மா « வாய்யா ! இப்பத்தான் உனக்குப் பொண்டாட்டி நெனப்பு வந்ததா ?  » என்று கேட்டவள் தனத்திடம், « ஒன் கோவத்தையெல்லாம் பிறகு வச்சுக்கோ, முதலில் வந்தவருக்கு உள்ள அழைச்சுபோய் ஒரு வாய்த் தண்ணிகொடு, நீ ஒண்ணும் கொறைஞ்சிடமாட்ட » எனவும், சீவராசும் உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவனுக்கு மனையை எடுத்துபோட்டாள். கொஞ்சம் இரு வரேன், என்றவள் கதவருகே நின்று எட்டிப்பார்த்தாள். வாசலில் கூடியிருந்த பெண்கள் இல்லை என்றானதும், கதவைத் தாழ்ப்பாள் போட்டாள். வெளியில் யாரோ சிரிப்பது கேட்டது.  தகரப்பெட்டியைத் திறந்து இருப்பதில் சுமாராக ஒரு புடவையையும் இரவிக்கையையும் எடுத்தாள், அவனிடம், கொஞ்சம் அப்படித் திரும்பு எனக்கூறி புடவையையும் ஜாக்கெட்டையும் அணிந்தாள். கண்ணாடியைப் பார்த்து தலையைச் சீராக்கிக்கொண்டாள். நெற்றியில் வைத்த சாந்துபொட்டும் திருப்தியாக இருந்தது. அவன் எதிரே சம்மணமிட்டு உட்கார்ந்தாள்.  சட்டையின் முதலிரண்டு பொத்தான்களை அவிழ்த்த்திருந்ததில் கழுத்தும் மார்பும் அவனுக்குக் கூடுதலாகத் தெரிந்தன. முண்டாபனியனுக்கு மேலாக மார்பில் செழிப்பாக இருந்த மயிர்கள் வியர்வையில் நனைந்து பிசைந்துக் கிடந்தன. மிச்சமிருந்த  உடம்பு எப்போதும்போல கட்டுக் குலையாமலிருந்தது.  சுருள் சுருளாக நெற்றியில் முன் இறக்கத்தில் விழுந்திருந்த கேசம் மட்டும் அடர்த்தியின்றி வெறிச்சோடி கிடந்தது. நெற்றியின் கீழ்ப்பரப்பில் மழைக்கால அட்டைகள்போல கருத்த இரு புருவங்கள். அவை இரண்டிற்கும் கீழிருந்த கண்கள் சிறியவை என்றாலும் அதை ஒரு குறையென்று சொல்லமுடியாது. குறிப்பாக மூக்கு, மூக்கிற்குக் கீழிருந்த உதடுகள், இரண்டையும்  பிரித்திருந்த கட்டை மீசை; கழுத்துக்கு இருபுறமும் புடைத்துக்கொண்டிருந்த தோள்கள் ஆகியவை எந்தப் பெண்பிள்ளையையும் கவரக்கூடியவை.

சிறிதுநேரம் அவனை வைத்தகண்களை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவள், திரும்பவும், « கொஞ்சம் இரு தோ வரேன் » என வெளியிற்சென்று அடுத்த ஐந்தாவது நிமிடம் உள்ளே வந்தாள். தம்ளரில் பால் இருந்தது. வீட்டுக் கார அம்மாவிடம் கேட்டு வாங்கி வந்திருக்க வேண்டும், அந்த வாசலில் பிறக் குடித்தனக்காரர்களில்  ஒருவருக்கும் வீட்டில் பால் வாங்கி வைத்திருக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. பாலில் கொஞ்சமாச் சர்க்கரை போட்டு அவனிடம், தம்ளரை நீட்டினாள். அவனும் அவள் கைத்தொட்டு வாங்கி சப்புக்கொட்டிக் குடித்தான். அவன் உதட்டோரம் குடித்த பாலின் அடையாளம் நுரை செதிள்களாக ஒட்டிக்கிடந்தன. முந்தானையால் துடைத்தாள்.

– தனம் உனக்கும் எனக்கும் ஐம்பது வயசுக்கு மேல, நாலுபிள்ளைகீது, மறந்துடாத ! 

– அந்த ஞாபகமிருந்தா இன்னொருத்தியைத் தேடிப் போயிருப்பியா ?

– தப்பு பண்ணிட்டேன் தனம். இனிமே பெரிய பாளையத்தம்மன் மேல சத்தியமா அவவீட்டை எட்டிப் பாக்கறதில்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.

– சரி இந்த நேரத்துல அதெல்லாம் எதுக்கு, நான் ஒருத்திதான என்று நெனைச்சி கத்தரிக்காயும் தக்காளியும் போதும்னு வாங்கிவந்தேன். இராத்திரிக்கு வேணுமின்னா, ரெண்டுபேருமா மார்க்கெட்டுக்குப் போயி உனக்குப் பிடிச்சத வாங்கி வருவோம்யா. எனக்கும் வாய்க்கு ருசியா சாப்பிட்டு வருஷக் கணக்காச்சு. என்ன சொல்ற, எனக் கேட்டாள்.

சொன்னதுபோலவே, புருஷனும் பொண்டாட்டியுமா நான்கு மணிக்குக் காசிமேடு மார்க்கெட்டுக்குப் போனார்கள். வஞ்சிரமும், சுராவும் வாங்கினார்கள். வரும் வழியில் டாஸ்மார்க்கில் இரண்டு கால் பாட்டிலும் வாங்கினாள். கட்சிக்காரங்க கொடுத்த பணம் கையிலிருந்ததால் கொஞ்சம் தாராளமாகச் செலவு பண்னமுடிந்தது.

ஒருகால் பாட்டிலை மட்டும் இரவு குடித்து முடிக்க அனுமதித்தாள். தட்டு நிறைய சோற்றைப்போட்டு வஞ்சிரம் மீன் குழம்பை ஊற்றி சுராப் புட்டை வைத்து விசிறி மட்டையை எடுத்து விசிற ஆரம்பித்ததும். அழுதான்.

– அழாம சாப்பிடுய்யா, அதான் வந்துட்ட இல்ல.

– என் மனசு தாங்கலை. உன் தலையில அடிச்சு வேணா சத்தியம் பண்றன், தலையைக் காட்டு, இனி அந்தத் தெவடியா வீட்டுல காலெடுத்து வைக்கமாட்டன்.

சோறு பிசைந்த கையை அவள் தலையில்வைக்கப்போனவனைத் தடுத்தாள்.

– பேசாம சாப்பிடு, அப்புறம் பேசலாம், என்றாள்.

–  சரி, ஒங்கிட்ட ஒண்ணு கேப்பன் கோவிச்சுக்க மாட்டிய.

– நான் ஏன் கோவிச்சுக்கப்போறன், தாலிக்கட்டினவள் ஆச்சே.

– அந்தக் கழுதைக்கு ஒரு முப்பதினாயிரம் கொடுக்கவேண்டியிருக்கு, அவ மூஞ்சில கடாசிட்டன்னு வச்சிக்கோ, நான் நிம்மதியா ஒங்கூட இருந்திடுவேன்.

– ஏன் நீ சம்பாதிச்சதைல்லாம் என்ன பண்ண ?

– ஏதோ பண்ணன், என் கையில இருந்தா ஒங்கிட்ட ஏன் கேக்கறன்

– அவளோ பணத்துக்கு நான் எங்கேபோவன்.

– ஓட்டுக்குக் கொடுத்த பணத்தையெல்லாம் என்ன பண்ண ? இன்ன ராத்திரிக்கு குண்டான் கட்சிகாருங்க வர்ராங்கன்னு கேள்வி பட்டன். நீ தாம் தூம்னு செலவு பண்றவ இல்லியெ.  பெட்டியிலதான வச்சிருப்ப. அதை இதைச்சேர்த்து அவ கிட்ட கொடுத்தா பிரச்சினை தீர்ந்திடும். அவள் சங்காத்தியமே வாணாம்.  மாசம்பொறந்தா சம்பள பணம் வந்திடும், அதை இனி உங்கிட்டத் தவற யார்கிட்ட கொடுக்கப்போறன்.

சொல்லிவிட்டு இவள் கண்களைப் பார்த்தான், கையில் பிசைந்தசோறு அப்படியே இருந்தது. பொலபொலவென்று அவன் கண்ணீர், கன்னக் கதுப்புகளில் இறங்கியது. அவள் மனம் இளகிப்போனது.

-அழாதய்யா ! நீ நல்லபடியா என்னைத் தேடி வந்தியே அதுவே எனக்குப் போதும்யா. பணமென்ன பணம் !

தோளில் கிடந்த முந்தானையை எடுத்து அவன் கண்களைத் துடைத்தாள். அவன் கையை உதறினான். சோற்றுருண்டைகளைப் பிடித்து அவன் கையில் வைத்தாள்.

– இன்னும் கொஞ்சம் சோறுபோட்டுக்க, எனக்கூறி சோற்றுச் சட்டியை எடுத்தாள்.

– அப்புறம் உனக்கு.

– நீ வவுத்தை வஞ்சனை பண்ணாம சாப்பிடு, பொட்டச்சிக்கி  வவுரா பெருசு.

சாப்பிட்டு முடித்ததும் தட்டிலேயே கையைக் கழுவினான். « பாயைப் போடு தனம் » என்றவனின் பார்வைக் கொதிப்பைத் தாங்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டாள். அரைமயக்கத்திலேயே பாயையும் போட்டாள்.

*                                      *                                      *

சுவரில் புகைப்படத்தில்  அப்பாவிபோலச் சிரித்துக்கொண்டிருந்த சீவராசுவைத் திரும்பத் திரும்ப்ப் பார்த்தாள். ஓண்டு குடித்தன வாழ்க்கையை ஆரம்பித்த முதல் வாரத்திலேயே  எம்.சி ரோட்டிலிருந்த ஒரு போட்டாகடையில் எடுத்துக்கொண்டது.  வாசலில் இருந்த சராசரி ஆண்களைப்போலத்தான் சீவராசும் நடந்துகொண்டான். சம்பளம் வாங்கிவந்த நாட்களில் மட்டும் கொஞ்சம் கூடுதலாகக் குடிப்பான்,  ரகளைப் பண்ணுவான். உப்பில்லை, காரமில்லையென்று கொத்தாகத் தலைமயிரைப் பிடித்து சுவரில் மோதுவான். வீட்டுக்கார அம்மா கதவைத் தட்டிச் சத்தம் போட்டதும்  அடங்கிவிடுவான். மற்ற நாட்களில் சும்மாச் சொல்லக்கூடாது, அவளுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் செய்யவேண்டியவற்றை செய்தே வந்தான். ஒரு நாள் அவன் வீட்டில் இல்லாத தமயத்தில் « சீவராசுவை பீச் ஸ்டேஷன்ல பொரிகடலை விக்கிற பொம்பளையோட பார்த்தன் கவனமா இருந்துக்க » என்று  ஹார்பர் மேஸ்த்திரி துரைசாமி எச்சரித்தார்.  அவன் சீவராசுவிடம்  அது பற்றி கேட்கவும் செய்தாள். « எவன் சொன்னான் உனக்கு, ஒருத்திக்குப் பொறந்தவனா இருந்தா, அவன என் முன்னால வரச்சொல்லு » என வாசலில் இறங்கிச் சத்தம்போட்டான்.   இவளையும், அன்றைக்கு அடித்து உதைத்தான். வீட்டுக்கார அம்மாள் « நீங்க வரமாசம் காலி பண்ணிடுங்க, இதுக்கு மேல இங்கிருக்க வேணாம் », என்றாள். மறு நாள் வழக்கம்போல அரைக்கால் காக்கி நிஜாரையும், காக்கிச் சட்டையையும், சிவப்பு ஈரிழைத்துண்டு முண்டாசும், கையில் மூட்டையைக் குத்தித் தூக்குகிற கொக்கியுமாக வேலைக்குப் போனவன் திரும்பவில்லை.

தொரம்மா ! தொரம்மா !- என்று மீண்டும் கன்னியம்மாள் குரல்.

தொரம்மா என்கிற தனபாக்கியத்திற்கு வைகாசி பிறந்தால் வயது ஐம்பத்தொன்றோ ஐபத்திரண்டோ,இரண்டிலொன்று. அது ஐபத்துமூன்றாகவும் இருக்கலாம். பிறந்தவருடம் எதுவென்று தெளிவாகத் சொல்லத் தெரியாது. அவளுடைய ஆத்தாள், எதிர்வீட்டுச் செங்கமலம் ஈயம் பூசவந்தவனோட ஓடிப்போன வருஷமென்று சொல்லியிருக்கிறாள். ‘செங்கமலம் எந்த வருஷம் ஓடிப்போனாள் ?’ என்று பெற்றவளிடம் கேட்டாள், அதற்கு ‘ஏரி ஒடைஞ்சி ஊருக்குள்ள வெள்ளம் வந்ததே, அந்த வருஷமென்று !’ பதில் வரவும், ‘செங்கமலம் ஓடிப்போன வருஷத்தையே’ பிறந்த வருடமாக வைத்துக்கொண்டாள்.

அவள் வாழ்க்கையே  ஒரு தோராய வாழ்க்கை, தோராயக் கணக்கில் நாட்களைக் கடந்துகொண்டிருப்பது. பிறந்தது ; வயசுக்கு வந்தது ;  இப்போதோ அப்போதோ என்றிருந்த சினைப் பசுவுக்குப் புல் அறுக்கப்போன இடத்தில்  பரம்படித்த  மாடுகளை ஓடைநீரில்  குளிப்பாட்டிக்கொண்டிருந்த  காசிநாதனுடன் சவுக்குத்  தோப்பில் ஒதுங்கியது ; பொங்கலின்போது கொத்தவால் சாவடியில் வாழைத்தார்களைச் சுமக்கும்  சீவராசுக்கு உறவு சனத்திற்கு முன்னால்  கழுத்தை நீட்டியது,  அவனுடன் பதினைந்து நாள் கழித்து  சென்னைக்குப் ‘பஸ்’ ஏறியது ;  பாரி முனையில் பேருந்தை விட்டு இறங்கி, ஹைகோர்ட்டையும், ஊர்ந்த  வாகனங்களையும், இடித்துக்கொண்டு சென்ற மனிதர்களையும் கண்டு  பெரிதாகக் கண்களைத் திறந்து மூச்சை உள்வாங்கி பிரமித்தது ; அங்கிருந்து  ஜோடியாக சீவராசுடன்  ரிக்‌ஷாவில் பயணித்தது ; விதவிதமான ஓசைகள், புழுதிகள், கட்டிடங்களைப் பார்த்தபடி பழைய வண்ணாரப்பேட்டையில் ஒண்டுக் குடித்தனங்களில் ஒருத்தியாக குடைக்கூலிக்கு வந்தது என எல்லாமே ஒரு தோராயக் கணக்கிற்குறியவைதான். ஏன் அதன் பிறகு  அடுத்தடுத்து நான்கு பிள்ளைகளை  சீவராசுக்குப் பெற்றது, எவளோ ஒருத்தியுடன் தொடுப்பு வைத்துக்கொண்டு, இவளை  அவன் மறந்து,  வீட்டிற்கு வருவதை  நிறுத்திக்கொண்டது; வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ஆளாளுக்கு ஒருத்தியைப் பிடித்துக்கொண்டு பிள்ளைகள் இவளை மறந்தது ஆகியவற்றையெல்லாங்கூட ஒரு குத்துமதிப்பாகத்தான் இவளால் சொல்ல முடியும். 

தொரம்மா என்ற பெயர் வாசலில் இருக்கிற மற்ற குடித்தனக்காரர்கள் வைத்த பெயர். இவளுடைய மூத்த மகனுக்குப் பெயர் துரை, அதனால்  இவள் தொரம்மா.தமிழ்ப்பண்டிதர்களுக்கு மருவல், திரிபு என்று இலக்கண விளக்கம் தேவைப்படலாம். பழைய வண்ணாரப்பேட்டையில், அவசரத்திற்கு ஒதுங்கும் வசதிகொண்ட சந்தில் அன்றன்றைக்கு கையூன்றினால்தான் கரணம் என்ற நிலையில் குடியிருப்பவர்களுக்கு, இந்த விளக்கமெல்லாம் அதிகம்.  தனபாக்கியம் என்ற ஊர்ப்பெயரை அரசாங்கப் பிரச்சினைகளென்று வருகிறபோது, சிரமப்பட்டு ஞாபகத்தில் கொண்டுவந்திருக்கிறாள்.

தொரம்மா ! இன்னுமா  நீ எழுந்திருக்கல ! உள்ள வரலாமா, சீவராசு  அண்ணன்  உள்ளதான் இருக்காரா ?

கதவை உட்புறமாகத் தள்ளிய கன்னியம்மாவின் குரல் குனிந்த வாட்டில் தலையை இருட்டிற்குள் புதைத்து, தொரம்மாவைத் தேடியது.  திறந்திருந்த கதவின் அனுமதியுடன் முதிராத காலை வேளை, கன்னியம்மாவைத் தொடர்ந்து உள்ளே நுழைந்திருந்தது. சன்னமான பனிமூட்டம்போல சில இடங்களில் தளர்ந்தும், சில இடங்களில் இறுக்கமாகவும் தம்மைத் திடப்படுத்திக்கொண்டிருந்த காலை ஒளியின் துணையுடன் தொரம்மாவைக் கண்டுபிடிப்பதில் கன்னியம்மாவுக்கு அதிகச் சிரமங்கள் இல்லை. திறந்த கதவு சுவரில் அணையும் பக்கமாக அடுப்பும், தண்ணீர் தவலையும் பாத்திர பண்டங்ககளும் இருந்தன, அதற்கு அடுத்த சுவரில், அதன் முழு  நீளத்தையும் உபயோகித்துக்கொள்ளவேண்டும் என்பதுபோல பிளாஸ்ட்டிக் கயிறில் ஒரு கொடி. அதில் ஒழுங்கின்றி அவிழ்த்துப்போட்டப் புடவைகளும் ஜாக்கெட்டும் கிடந்தன, அதன் கீழே சீவராசுடன் பட்டணத்திற்குப் புறப்பட்டு வந்தபோது கொண்டுவந்த டிரங்க்பெட்டி. அதையொட்டி ஒர் அழுக்குச் சிப்பம்போல இருந்த தலையணையை வேண்டாமென்று ஒதுக்கியவள்போல கையை முக்கோணமாக மடக்கித் தலைக்குக் கொடுத்து தொரம்மா என்கிற தனபாக்கியம் பக்கவாட்டில்  உறங்குவதுபோல பாவனை செய்துகொண்டிருந்தாள். தலை அவிழ்ந்திருந்தது.  இடப்பக்கக்  கன்னத்தில் வாயிலியிருந்து கசிந்த எச்சிலின் நெளிந்த வெண்கோடு.

– தொரம்மா எழுந்திரு இன்னும் ஒரு மணி நேரத்துல நாமல்லாம் பூத்துல இருக்கனும்  இன்னைக்கு  ஓட்டுப் போடறது. மறந்துட்டியா ? 

கன்னியம்மா உலுக்கிய உலுக்கலில் திறந்த கண்கள், தொட்டெழுப்பிய கையையும், அந்தக் கைக்குச் சொந்தக்காரியையும் பார்த்துக்கொண்டிருந்தன.

– எழுந்திரு, லைட்டைப் போடட்டுமா ? மீண்டும் கன்னியம்மா.

‘வ்வா’ என்று ஒரு பெரிய கோட்டுவாயுடன், எழுந்த தொரம்மா அவிழ்ந்திருந்த தலைமயிரை கொண்டையாக்கி முடித்த மறுவினாடி, விலகிக்கிடந்த முந்தானையைச் சரி செய்து மார்பை போதிய அளவுக்கு புடவைப் பரப்பிற்குள் கொண்டுவந்த திருப்தியில் :

– அந்த மணையைப் போட்டு உட்காரு ! -சுவரில் சாத்தியிருந்த மணைப்பக்கம் கை  நீண்டது.

மணையை எடுத்துப் போட்டும், வழக்கம்போல சம்மணமிடாமல்  குத்துக்காலிட்டு உட்கார்ந்த கன்னியம்மா முகத்தில் கம்பி மத்தாப்பைக் கொளுத்தியதுபோல அப்படியொரு பிரகாசம். அந்தப் பிரகாசம், மின்சார விளக்கின் ஒளியில் கூடுதலாக மினுங்கியது. தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டத்  தினத்தில் பற்றிக்கொண்ட சந்தோஷம். ஏதோ சொல்லவந்த கன்னியம்மா தனபாக்கியத்தின் முகத்தைப் பார்த்து புரிந்துகொண்டவள்போல :

– என்ன அழுதியா ?

– அதெல்லாம் ஒண்ணுமில்லை, சொல்லு.

– நேற்று ராத்திரி செல்ராசு அண்ணன் எலெக்‌ஷன் டோக்கன் கொடுத்துட்டுப் போனாங்க, கதவைத் தட்டினோம்,சீவராசு அண்ணன் தான் கதவைத் திறந்தாரு.

தனபாக்கியத்திற்கு ஞாபகம் வந்தது. நள்ளிரவு, பன்னிரண்டு ஒன்றிருக்கலாம். இவளிருந்த அலங்கோலத்தில், பக்கத்திலிருந்த சீவராசிடம் கதவைத் திறந்து என்னவென்று பார்க்கச் சொன்னாள். 

– இரண்டு நாளைக்கு முன்ன இன்னொரு தம்பிக் கொடுத்துட்டுப் போச்சே ! இரண்டும் ஒண்ணுதானே ?

– இல்ல. செல்ராசு அண்ணன் அவங்க கூட இல்ல. இவங்க தனியா நிக்கறாங்க. அவங்க  அண்டா இவங்க குண்டான்! முந்தாநேத்து  செல்ராசு அண்ணன் வந்திருந்து வாசலில் எல்லாரையும் கூட்டி வச்சு, சொன்னதை மறந்திட்டியா ? வீட்டுக்கார அம்மாவும் குண்டானுக்குத்தான் ஓட்டுப்போடனும்னு சொல்லி பெரிய பாளையத்தம்மன் படத்துமேல சத்தியம் வாங்கினாங்களே !

–  என்னமோபோ நீ சுலபமாச் சொல்லிட்ட  எனக்குப் பயமா கீது.

– தோடா ! இன்னாத்துக்குப் பயம், எல்லாத்துக்கும்  நான் கிறேன்ன்னு சொல்லிட்டனில்ல.

– பணத்தைக் கொடுத்திட்டு சாமி பட த்துமேல சத்தியம் பண்ண சொல்றாங்க, நமக்கு ஒரு சாமியா ரெண்டு சாமியா எத்தனை சாமிமேலத்தான் சத்தியம் வக்கிறது. ஏற்கனவே செஞ்ச பாவத்துக்குத்தான் எல்லாத்தையும் தொலைச்சுட்டு அம்போன்னு நிக்கிறன்.

– அடப்போக்கா ! நீ வேற. பாவம் புண்ணியம் இன்னிக்கிட்டு. கொன்னாப்பாவம் தின்னாப் போச்சுன்னு போவியா.அவங்க ஒரு ஓட்டுக்கு எவ்ளொ கொடுத்தாங்கோ, இவங்க அதைப்போல ரெண்டு மடங்கு கொடுபாங்கோ. உங்க ஊட்டுல மட்டும் ஆறு ஓட்டு. அவ்ளோ துட்டை நீ பார்த்திருக்க மாட்ட, கறிய மீனவாங்கி துன்னுட்டு, கொஞ்சநாளைக்கு வீட்டுல கிட. இன்னா நான் சொல்றது புரியுதா. இந்த முறை  வாசலில் இருக்கிற அத்தனை பேரு ஓட்டும் குண்டானுக்குத்தான்.  பெரிய பாளயத்தம்மன் மேல சத்தியம் பண்ணிகிறோம் மறந்திடாத. இதுக்குப் பவரு ஜாஸ்த்தி.  அது சரி சீவராசு அண்ணன்  எங்க ?

சீவராசு கூட நேற்று ராத்திரி பெரிய பாளையத்து அம்மன் பேருலதான் சத்தியம் செய்தான். இராத்திரி இருந்த மனுஷன், விடிஞ்சதும்  சொல்லாமக் கொள்ளாம எங்க போயிருப்பார் என்று யோசித்தாள். இருந்தாலும் தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது என்பது சரியாக இருக்காதென்று நினைத்தாள்.

– நீதான் பார்த்திய நான் அசந்து தூக்கிட்டேன். எதற்காக எழுப்பறதுன்னு நினைச்சிருக்கனும், எங்கே போயிருப்பாரு டீக்கடைக்குதான். 

– அது சரி, அண்ணன் வந்த இரண்டு நாளா நீ ராத்திரியில தூங்கறது இல்லன்னு வாசல்பூரா பேச்சு,  சரி சரி நீ எழுந்திரு, நாஷ்ட்டால்லாம் ரெடியா கீது. ஒரு மணி நேரத்துல பூத்துல இருக்கனும்னு ஊட்டுக்காரம்மாவும் சொல்லிட்டாங்கோ. வரேன்.  

கன்னியம்மாள் கதவைத் திறந்துகொண்டு வெளியேறினாள். அவள் படி இறங்கியிருப்பாள் என்பதை உறுதிபடித்துக்கொண்டதும், இவள் தலையை மீண்டும் ஒருமுறை உயர்த்தி நிழற்படத்தில் சிரிக்கும் சீவராசுவை பார்த்தாள். கீழே திறந்திருக்கும் தகரப்பெட்டியையும் பார்த்தாள். முதன் முறையாக வெடித்து அழுதாள்.

—————————————————————————–