Monthly Archives: மே 2021

தனிமனித விடுதலை சமூக விடுதலை (நேர்காணல்)

தனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை

(இந்த நேர்காணலை 2019 இறுதியில் பேராசிரியர் பஞ்சு சார் எடுத்திருந்தார். என அரிதாக வாய்த்த நண்பர்களில் அவரும் ஒருவர் என கடந்துபோகமுடியாது, அப்படியொரு மாமனிதர். அவருடைய நேர்காணல் என்கிறபோது மறுக்கவா முடியும் சம்மதித்தேன். காலச்சுவடுக்கு அனுப்பிவையுங்கள் என்றார். நட்பு காரணமாக காலசுவடு  இதழ் அதன் பொறுபாசிரியர் கண்ணன் ஆகியோரிடம் உரிமை பாராட்டமுடியும் என்றாலும் நேர்காணல் என்னைப்பற்றியது என்பதால் தயங்கினேன், அனுப்பவில்லை. ஒரு வருடம் ஓடிவிட்ட து. மதுரையிலிருந்து தமிழ்த் தேசன் இமப்யக்காப்பியன் என்ற நண்பர் படைப்பாளிகளின் நேர்காணல்களை ஒரு தொகுப்பாக கொண்டுவருவதாகவும், என்னிடம் ஏதாவது நேர்காணல் இருக்கிறதா எனக்கேட்டார். பஞ்சுவிடம்  ஒருவருடமாக கையிலிருக்கும் நேர்காணலை அனுப்பிவைக்கலாமா என்றுகேட்டேன். அவர் இதழொன்றில் வந்தால் நன்றாக இருக்குமென்றார். நண்பர் தமிழ்த் தேசனுக்கு கவிஞர் மதுமிதா  எடுத்த பழைய நேர்காணலொன்றை அனுப்பிவிட்டு, பஞ்சுவின் நேர்காணலை கடந்த மார்ச் மாதம் காலசுவடுக்குக்கு அனுப்பி வைத்தேன். பேராசிரியர் க. பஞ்சுவிற்கும், காலச்சுவடு  பொறுபாசிரியருக்கும் நன்றிகள் )

காலச்சுவடு மே மாத இதழ் நேர்காணல்

* எழுதணும் என்கிற மனநிலைக்கு உங்களைச் செலுத்திய பின்புலங்களைக் கூறுங்கள்.

ஒலியின் உதவியுடன் மொழியைத் தேடவும், சொற்கள் வளம்பெற்றவுடன் எழுத்தைத் தேடவும் மனிதனை உந்தியது எதுவோ அது என்னுள்ளும் இருந்திருக்கலாம். குழந்தைகள் தம் உள்ளுணர்வை வெளிப்படுத்தச் சுவரைத் தேடுவதுபோல, எனக்கும் என்னுடையதென்று இட்டுக்கட்டிக் கதைவிட கிராமத்தில் என்வயதுத் தோழர்களைத் தேடிய அனுபவம் உண்டு. வீட்டில் அம்மா அதிகம் வாசிப்பவர் , கிராமப் பஞ்சாயத்தின் சிறிய நூலகமும்  உதவியது. ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கிராமத்து ஆசிரியையிடம் சில இதழ்கள் கிடைத்தன. வாசிப்பை அச்சிறுவயதிலேயே வளர்த்துக் கொண்டதும் எழுதக் காரணமாக இருந்திருக்கலாம். உயர்நிலைப் பள்ளியில் ‘எண்ணம்’ என்ற கையெழுத்து இதழை மரியதாசு என்ற ஆசிரியர், பள்ளி ஓவிய ஆசிரியர் இளங்கோவன் உதவியுடன் தொடங்கினார். ஆசிரியப்பாவில் எழுதிய எனது முதல் கவிதை அதில் வெளிவந்தது. அந்த வயதுக்குரிய கட்டுரைகளும், ஒன்றிரண்டு கதைகளும் அப்போது எழுதினேன். என் தந்தை உட்பட ஊர்ப்பெரியவர்களை விமர்சனம் செய்து அபத்தமான அடுக்குமொழியில் நாடகம் எழுதியிருக்கிறேன். ஓர் இளைஞன் தற்கொலைசெய்துகொண்டு தன் கண்களைத் தானம் செய்வதாகச் சொல்லப்பட்ட எனது முதல் கதையை அம்மா இரசிக்கவில்லை.

* முதலில் வெகு சனம் சார்ந்த பெரும் பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்த நீங்கள் தீவிரமான படைப்புச் சூழலில் எப்போது வந்தீர்கள்.?

அப்போதெல்லாம் வெகுசன பத்திரிகைகள் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு என்றிருந்தன. அவர்களைத் தவிரப் பிற படைப்பாளிகளின் எழுத்துக்கள் இடம்பெற, குமுதம் போன்ற இதழ்கள் இருந்தால்கூட எழுத்துக்கெனச் சில வரையறைகளை வகுத்துக்கொண்டு – படித்த நடுத்தர வகுப்பினரை, வாசகர்களை ஈர்க்கும் சக்தி எழுத்துக்கு இருக்கிறதா ? – என்கிற அடிப்படையில் படைப்பாளிகளைத் தேர்வு செய்தார்கள். அன்று தீவிர இலக்கியம் பேசும் இதழ்களும் அபூர்வம். நவீனத் தமிழிலக்கியத்தில் இரண்டொருவரைத் தவிர நாம் கொண்டாடும் பலர்( குறிப்பாக உரைநடைஇலக்கியவாதிகள்) வெகுசன இதழ்களால் அறிமுகம் ஆனவர்கள். காலப்போக்கில் அவ்விதழ்கள் காட்சி ஊடகங்களுக்குப் பலி ஆகும் காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பிரான்சுக்குக் குடிபெயர்ந்தேன். ஆங்கிலத்தில் அலிஸ்ட்டெர் மக்ளீன், ராபர்ட் லுட்லம், ஜான் கிரிஷாம் என்று வாசித்துக்கொண்டிருந்தவனுக்கு, கி மாப்பசானும், எமிலி ஜோலாவும், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் போன்றவர்களும் வேறுவகையான பேசு பொருளை, மொழியை அறிமுகப்படுத்தினார்கள். கவிதையிலிருந்து சிறுகதை மற்றும் நாவல் வடிவம், வெகுசன இதழ்களிலிருந்து இணைய இதழ்கள்,சிற்றிதழ்களெனத் தொடர்ச்சியாக இடப்பெயர்வுகள் எனக்குள் நிகழ்ந்தன. ஆக மொத்தத்தில் பிரான்சில்குடியேறியதற்கும், இன்றைய எனது எழுத்திற்கும் நிறையத்தொடர்புகள் இருக்கின்றன.

* பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களையும்போலவே நீங்களும் கவிதை எழுதத் தொடங்கினீர்கள் என்று தெரிகிறது பிறகு எப்படிச் சிறுகதை, நாவல் என்று உரைநடையிலான புனைவெழுத்தைக் கைப்பற்றினீர்கள்?

முதற் படைப்பு கவிதை என்றபோதிலும் அதற்குப்பிறகு சிறுகதை, கவிதை என்று இரண்டு வடிவத்திலும் ஈடுபாடுண்டு. 90க்குப்பிறகே பாரதி மீதும் நல்ல புதுக்கவிதைகளிலும் ஆர்வம் உண்டாயிற்று. சிறுகதைகளிலும் நாவலிலும் கூடுதலாக உணர்வுகளை, சமூகம் பற்றிய அவதானிப்புகளைப் பதிவு செய்யவும், விமர்சனம் செய்யவும் இயலும். கவிதையினும் பார்க்க அதிக எண்ணிக்கையில் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு போகவும் உரைநடை வடிவம் உகந்த வடிவம். தவிர, 85 இல் பிரான்சில் குடியேறியபோது கவிதை எழுத்தாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சிறுகதைகள் கூடக் குறைந்து, படைப்பாளிகள் எனில் நாவல் எழுதுபவர்கள் என்பது இன்றைய சூழல்.

* கதையை எடுத்துரைக்கும் உங்கள் மொழிநடை பெரிதும் செறிவானது. மிகையான சொற்கள் விழாமல் நகர்கிறது; இத்தகைய நடை கூடிவந்த வரலாற்றைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மிக்க நன்றி ஐயா. அதே வேளை தொடக்கத்தில் நான் தடுமாறி இருக்கிறேன். இப்போதைய கவனத்தை ஆரம்பத்தில் கொள்ளவில்லை. நீலக்கடல் நாவல் நல்ல எடிட்டர் பார்வைக்கு உட்படவில்லை என்ற குறை எனக்குண்டு. பின்னர் தெளிவு பெற்றதற்கு முதற் காரணம் கவிதை எழுதிய அனுபவமாக இருக்கலாம். எத்தகைய உணர்வாயினும் அதைச் சரியாக வெளிப்படுத்தும் ஒற்றைச் சொல்லில் கவிதை ஒளிர்கிறது. உரைநடைக்கும் இது பொருந்தும். என்ன சொல்ல நினைக்கிறேன் என்பதில் தெளிவாக இருக்கிறேன். கதைமாந்தர் காலம், சமூகப் பின்புலம், கல்வி, அறிவுத்திறன் இவைபோன்ற பண்புகளைக் கருத்தில் கொண்டு, என்னைத் திரைக்குப் பின்புறம் நிறுத்தி மொழியைக் கையாளும் சக்தியுமுண்டு. நீலக்கடல் புதினத்தில் 14, 18, 20 ஆம் நூற்றாண்டு கதை நிகழ்வுக்கும் உரையாடலுக்கும் ஏற்ப மொழியைப் பயன்படுத்தி இருக்கிறேன்.பின்காலனித்துவக் குரலுக்குரியவன் பாதிக்கப்பட்டவன். எனவே சில இடங்களில் உரத்த குரலைத் தவிர்க்க முடிவதில்லை. அதுபோலவே விவரணைப் பகுதிகளில் பிறருடைய படைப்புக்களைப் போலவே என்னுடையவற்றையும் கூர்மையாக அவதானிக்கும் வழக்கம் எனக்குண்டு.அதனால் எனது படைப்புகளில் குறையிருப்பின் அடையாளம் காண முடிகிறது. தமிழ் வினைச்சொற்களுக்குள்ள வசதி, பல நேரங்களில் எழுவாயின் அநாவசியத் தேவையைக் குறைக்க உதவுகிறது. எதிர்மறை வாக்கியங்களையும் முடிந்தமட்டும் தவிர்க்கிறேன். இதுபோன்ற சில நகாசுவேலைகள் இருக்கின்றன. இவ்விடயத்தில் பிரெஞ்சு எழுத்தாளர்கள் சிலரைக் குறிப்பிடலாம், உதாரணத்திற்கு மாக்ஸ் கலோ. வள்ளுவனிடமும் பாரதியிடமும் பயிற்சிபெற்றால் போதும் சரியான சொல் தெரிவுக்குப் பழகிவிடுவோம்.

* பொதுவாக உங்கள் புனைவெழுத்துக்கள் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கீழிருந்த புதுச்சேரி மக்களின் வாழ்க்கைப்பாட்டைச் சொல்லுபவை. அதற்காகப் பல ஆவணங்களைத்திரட்டிக் கதையின் திசைகளை வடிவமைக்கும்போது நீங்கள் எந்தவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறீர்கள்? எப்படித் தீர்வு காண்கிறீர்கள்?.

வரலாற்றைப் புனைவாகச் சொல்கிறபோது, புனைவைத் தவிர்த்த பிறவிடயங்களில் உண்மை பேசவேண்டும்., அதற்கு ஆவண சாட்சியங்கள் தேவை. பிரான்சு வாழ்க்கை அதற்குப் பெரிதும் உதவுகிறது. கடந்தகால எழுத்தாளர்களுக்கு இன்றுள்ளதுபோல, கணினி மற்றும் இணையவசதிகள் இல்லை. இன்று தேடுதலில் சிரமங்கள் இல்லை. இளங்கோ அடிகள் எப்படியெல்லாம் அலைந்து திரிந்து தகவல்களைப் பெற்றிருப்பார். அத்தகைய சிரமங்கள் பிரபஞ்சனுக்கு இல்லை. பிரபஞ்சன் பட்ட பாட்டில் நான்கில் ஒருபங்கு சிரமங்கள்கூட எனக்குக் கிடையா. இன்றைய எழுத்தாளனுக்கு தகவல் சேகரிப்பில் நேற்றைய சங்கடங்கள் இல்லை. புதுச்சேரி வரலாற்றைச் சில பிரெஞ்சுக்காரர்கள் திரித்து எழுதியிருக்கிறார்கள். சில ஆசிரியர்கள் நடந்தது என்னவென்று தெளிவாகச் சொல்கிறார்கள். உண்மை என நம்புபவற்றை உறுதி செய்துகொண்டு எழுதுகிறேன். அவைகளுக்கு ஆதாரங்களும் இருப்பதால் சங்கடங்கள் இல்லை. இது மற்ற புதினங்களுக்கும் பொருந்தும்.

* ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ ஆனாலும் சமீபத்திய ‘இறந்தகாலம் நாவல் ஆனாலும் மாய எதார்த்த எடுத்துரைப்பினை பயன்படுத்துவது உங்களின் எழுத்து முறையாக இருக்கிறது. படைப்பின் அழகியலுக்கு மாய எதார்த்த எழுத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது ?

புனைவு என்பதே கற்பனை சார்த்த வினை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இலக்கிய அழகியல் என்பது கற்பனையே. எதார்த்தத்தில் சாத்தியமற்றதை மாய எதார்த்தம் என்கிறோம். மாய எதார்த்தம் என்பதை நனவிலி, கனவு அனுபவங்கள் என நவீன இலக்கியம் குறித்தாலும் அதையும் புனைவு மொழியின் அல்லது கற்பனை அழகியலின் அடுத்தக் கட்ட நகர்வாகப் பார்க்கவேண்டும். பாட்டி வடைசுட்ட கதையில் அவள் மரத்தின் கீழிருந்து வடைசுடுகிறாள் என்ற கற்பனை, எதார்த்தத்தில் சாத்தியமாகக் கூடிய அழகியல். ஆனால் காக்காவைப் பாட்டுப்பாடு என்று நரி கேட்டுக்கொண்ட தாகவும் , காக்கை பாடியதாவும் சொல்வது எதார்த்தத்தில் சாத்தியமானதல்ல. உண்மையில் நரியும் பேசாது, காக்கையும் பாடாது என்பது சிறார்களுக்குத் தெரியும். இருந்தும் வியப்புடன் கதை கேட்கக் காத்திருக்கிறார்கள். இராவணனுக்குப் பத்துதலை, தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவிகள், கண்ணகி மார்பைத் திருகி எரிந்து மதுரையை எரித்தமை இவைகளெல்லாம் பாட்டி வடை சுட்ட கதையைக் கேட்கும் சிறுவர்கள் மனநிலையில் நம்மை நிறுத்த உதவும் மாய எதார்த்தக் கற்பனைகளே. புனவைத் தூக்கி நிறுத்த, வாசகர்களைத் தொடர்ந்து வாசிக்கச் செய்ய மாய எதார்த்தம் உதவுகிறது.

* உங்கள் காஃப்காவின் நாய்க்குட்டி நாவல் உட்படப் பலவும் பிரெஞ்சுக் காலனித்துவம் நிகழ்த்திய சுரண்டலையும்ஒடுக்கு முறைகளையும், மனிதத் தன்மையற்ற அதிகாரச் செயல்பாட்டினையும் படம் பிடித்துக் காட்டுபவை. மண்ணில் நடந்த அத்தகைய காலனித்துவக் கொடுமையை மறதியில் மூழ்கடித்தவர்களாக பிரஞ்சியர் ஆட்சியைக்கொண்டாடும் போக்கு இங்கே நிலவுவதை எப்படிப்பார்க்கிறீர்கள் ?

காலனித்துவக் காலத்தில் அவர்களால் கிடைத்த ஒன்றிரண்டு நன்மைகளையும் சுட்டியிருக்கிறேன். ஆனால் காலனித்துவ அரசியல் பொதுவில் சுரண்டல் அரசியல்தான். எஜமான் – அடிமை அரசியலில் அடிமைகளுக்குச் சோறுபோடுவது, அடிமையின் உழைப்பை உறிஞ்சவே அன்றிப் பசியின்றி அவனை வைத்திருக்கவேண்டும் என்ற காருண்யம் கிஞ்சித்தும் இருக்கமுடியாது. இருந்தாலும் அடிமை உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என நினைக்கிறான். எந்த உள் நோக்கமும் இன்றிக் கொடுப்பவன் ஒருவேளைக்குத்தான் சோறுபோடுவான். காலனித்துவ அரசியலில், பிரச்சினையின்றி அவர்கள் அரசியல் வண்டியை இழுத்துப்போகக் குதிரைக்கும் மாட்டிற்கும் கொள்ளும், புண்ணாக்கும் வைத்தார்கள். ஐந்தறிவு உயிர்களாயிற்றே, வாலை ஆட்டித் தங்கள் நன்றியை வெளிப்படுத்துகிறார்கள். அடுத்து நாம்,மரபின் பேரால் அடிமைச் சிந்தனையிலிருந்து விடுபடாமல் இருப்பவர்கள். மூத்தவர், பெரியவர், எஜமான், குரு, முதலாளி போன்ற சொற்களுக்கு கடன்பட்டவர்கள் மரபுகளிலிருந்து இன்றைக்கும் நாம் விடுபடாமலிருப்பதும் ஒரு காரணம்.

* தாய் மண்ணைவிட்டுப் பிரான்சில் போய்க்குடியேறி ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஓடி விட்டாலும், உங்களின் நினைவுகள் ,சிந்தனைகள் எல்லாம் தாய்மண்ணை நோக்கியே இயங்குகின்றன. தாய்த்தமிழகம், தாய்மொழி, தமிழினம் என்ற உணர்வுகள் தீயாய் சுடர்விட்டவண்ணம் இருக்கின்றன. உங்கள் படைப்பாற்றலுக்கான எரிசக்தியாக இவைகள் பயன்படுகின்றனவா ?

ஒரு சராசரி படைப்பாளி தம் மொழிமீது கொண்டிருக்கும் அபிமானமே என்னிடத்திலும் இருப்பதாக நினைக்கிறேன். காலமும் தூரமும் அதனை அடிக்கோடிட்டுத் தெரிவித்திருக்கலாம். 33 வயதுவரை இந்தியாவில்- தமிழ் நாட்டில் இருந்தேன். நான் வாழ்ந்து கெட்ட குடும்பத்திலிருந்து வந்தவன்;, தமிழையும் அப்படித்தான் பார்க்கிறேன். ஒரு வகையில் சுய பச்சாதாபம். அடுத்து உங்களைப் போன்ற உண்மையான தமிழ் ஆர்வலர்களின் நட்பும் நெருக்கமுங்கூடக் காரணமாக இருக்கலாம்.

* பின் காலனித்துவப் போக்குமுறையின் முக்கிய போக்காக இருக்கும் காலனிய நீக்கம் என்ற கருத்திற்கு உங்கள் புதினங்கள் தமிழ்ச்சூழலில் வினைபுரிந்திருப்பதாகக் கருதுகிறீர்களா?

வினை புரிந்திருக்குமென நினைக்கவில்லை. காரணம் ஐரோப்பியரின் காலனி ஆதிக்கத்திற்கு முன்பே தமிழரல்லாத பிறரிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்கிற மனப்பாங்கு கொண்டோர்க்கு ஐரோப்பியருக்கு எதிரான பின்காலனித்துவக் குரல் செவிடன் காதில் ஊதப்படும் சங்கு. அன்றி, நவீன இலக்கியங்களின் உலகியல் தடத்தைப் பற்றிய புரிதல் இருந்தாலொழிய அதற்குச் சாத்தியமுமில்லை. பின் காலனித்துவ இலக்கியங்கள், காலனித்துவத்தால் காலனி நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார, இலக்கிய, சமூகப் பாதிப்புகளை விவாதிப்பவை. காலனி ஆட்சி இல்லை என்றான பின்பு, அவர்களின் நேரடி ஆட்சி இல்லை என்றானது. ஆனால் மறைமுகமாக அவர்களின் ஆதிக்கம் இன்றும் தொடரவே செய்கிறது. மேற்குலகின் நகலாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றும் நாம் காலனி மனிதர்களே. முழுமையான காலனி நீக்கம், தனிமனித அடையாளத்தில் தொடங்குகிறது. நான் நானாக இருப்பேன், ஆதிக்கத்திற்கு அடிமையல்ல என்கிற தனிமனிதனுடைய விடுதலை, சமூக விடுதலை.

* உண்மையில் உலகம் முழுவதுமே வலதுசாரிச் சிந்தனை மரபுகள் மீண்டும் கையோங்கி இருக்கும் யதார்த்த சூழலில் அதிகாரத்திற்கு எதிராக உண்மை பேசும் எழுத்தாளர்களின் இருப்புப் பெரிதும் நெருக்கடிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் மேற்கொள்ளவேண்டிய புதிய புதிய உத்திகள் யாவை.

கொள்கை ,கோட்பாடுகள் அனைத்துமே காலம் ,சூழலைப் பொறுத்து, அப்போதைய தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.. மார்க்ஸியகால முதலாளித்துவம் வேறு; இன்றைய முதலாளித்துவம் வேறு. இன்றையச் சூழலுக்குப் பொருந்தக்கூடிய சோஷலிஸம் தேவை. அதேவேளை வலது சாரிகள் எவ்வளவுதான் கையோங்கினாலும் சுதந்திரம், மக்களாட்சி என்ற கோட்பாடுகளிலிருந்து விடுபடத் துணியமாட்டார்கள். தங்கள் அதிகாரத்தின் ஆயுள் மக்களை நம்பி இருக்கிறது என்பதும் அவர்கள் அறிந்ததே. மக்களாட்சிமுறையில், அதிகாரம் எல்லை மீறாமலிருக்க, சம பலத்தைக் கொண்ட எதிர் சக்தியைக் கட்டமைத்தல் வேண்டும். சரி சமதையான எதிர் சக்தி (Countervailing force) என்பது வலிமையான எதிர்க்கட்சி, ஆளும் கட்சிக்கு அசுரபலத்தைக் கொடுக்காத உறுப்பினர்கள் எண்ணிக்கை, அரசியல் அதிகாரத்தைக் கண்காணிக்கின்ற, கட்டுக்குள் வைத்திருக்கிற நீதிமன்றங்கள் ஆகியவை. குறைந்த பட்சம் பொது நலத்தைக் கருத்தில் கொண்ட அறிவு ஜீவிகள், படைப்பாளிகளில் பெரும்பாலோர் துணிச்சலுடன் ஓரணியில் நின்றாலே போதும், அதிகார எல்லை மீறலைத் தடுக்கமுடியும். ஆனால் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென்று வேதனையுடன் சொல்லவேண்டி இருக்கிறது.

* எல்லாவற்றையும் வெறும் தகவல்களாக மதிப்பிழக்கச்செய்துவிடும் ஊடக உலகின் கோரப் பிடிக்குள் இலக்கியத்தின் இடம் தான் என்ன ?

ஊடகத்தின் அத்துமீறலைத் தவிர்க்க முடியாது என்கிறபோதும் மனித உயிர்கள் உள்ளவரை இதயத்தை மகிழ்விக்கிற கலைகளில் ஒன்றாக எழுத்து இருக்கவே செய்யும். ஓலைச் சுவடிகள், அச்சு பிரதிகளாக வந்த காலம்போய் இன்று கணினியின் தயவினால் ஒரு நூலகத்தையே கையில் எடுத்துச் செல்லும் காலம். கடந்த காலத்தில் கற்றோர் நூற்றுக்கு இருவர்கூடத் தேறமாட்டார்கள். அந்த இரண்டுபேரும் இலக்கியத்தை விரும்பி வாசித்தனர். இன்று நூற்றுக்கு 98 பேர் கற்றோர்கள். அவர்களில் இரண்டுபேர் இலக்கியத்தை வாசித்தாலே ஆச்சரியம். இன்று படித்தவர்களுக்கு இலக்கியம்தவிர வாசிக்கப் பிறவும் இருக்கின்றன. கவிதை, உரைநடை ஆயிற்று, அச்சுப் பிரதிகள் தேவை இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மின்னூல்கள் வந்துள்ளன. யார் வேண்டுமானாலும் இன்று படைக்கலாம், பிரசுரிக்கலாம். அகம், புறம் என்ற பொருளைக் கடந்து அதிகாரம் மற்றும்போலிமைக்கு எதிராக , மானுடம் பேச, உண்மை அல்லாதவற்றைச் சுட்டிக்காட்ட, உணர்வுகளை விவரிக்க ஏதோ ஒரு வடிவில் இலக்கியம் மானுடத்துடன் தொடர்ந்து பயணிக்கும்..

* உலகம் முழுவதும் ‘ கவிதை ‘ எழுதுவது இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது என்று ஓர் உரையாடலின் போது கூறினீர்கள் .அப்படி என்றால் அதிகாரத்திற்கு எதிரான உரையாடலைப் பேசுகின்ற சக்திகள் வலுவிழந்து போனதன் அடையாளம் தான் இது என்று எடுத்துக்கொள்ளலாமா ?

அதற்குச் சாத்தியமில்லை ஐயா. இதற்கு முந்தைய கேள்விக்குரிய பதிலில்,இலக்கியம் மானுடத்துடன் தொடர்ந்து பயணிக்கும் என்றேன். சமூக ஊடகங்கள் பல்கிப் பெருகியுள்ள நிலையில் அதிகாரத்தை விமர்சிக்கும் வாய்ப்பு முன்பைக் காட்டிலும் அதிகம் என்றே சொல்லவேண்டும். அதிகாரம் என்பது சட்டம், காவலர், நீதி, ராணுவம் என்கிற சுற்றம் சார்ந்த உடல் பலத்துக்குரியது;எதிர்ப்புக் குரல்களோ சுதந்திரம், உரிமை, நீதி என்ற நெஞ்சுரத்திற்கு உரியன. தவிர இருமையியத்தின்படி, அதிகாரம் உள்ளவரை ஏதோ ஒரு வடிவில் எதிர்ப்புக் குரலும் தொடரும்.

* பிரஞ்சில் இருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்த்துப் பெரும் பங்களிப்பு செய்துள்ளீர்கள். சிமொன் தெ பொவ்வார், லெ கிளேசியோ, அல்பர் கமுய் உட்படப் பலரைத் தமிழுக்குத் தந்துள்ளீர்கள். அந்த மொழிபெயர்ப்பு அனுபவங்களை விரிவாகச் சொல்லுங்கள்.

இலக்கியம் பற்றிய பிரக்ஞையுடன் பிரஞ்சுக்காரர்கள் இயங்க ஆரம்பித்தது கி.பி 12ஆம் நூற்றாண்டு. ஆனால் அதற்கு முன்பே சங்க இலக்கியங்கள், இலக்கணத்தை வரையறுத்த தொல்காப்பியம், திருக்குறள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் எனத் தமிழிலக்கியம் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டது.. தமிழ் செவ்விலக்கியங்களுக்கு ஈடாகக் காலத்தாலும், பாடப்பட்ட பொருளாலும் நிகரென்று கூற பிரஞ்சு மொழியில் எதுவுமில்லையென மார்தட்டிச் சொல்லலாம். திருவள்ளுவருக்கு இணையாக; தொல்காப்பியர், கணியன் பூங்குன்றனாருக்கு ஈடாக ; கம்பன் அல்லது இளங்கோ முதலான செவ்விலக்கியப் படைப்பாளிகளுக்கு நிகராக அதேகாலத்தில் பிரஞ்சு மொழியில் ஒருவருமில்லை. மாறாக இன்று கலை இலக்கியத்தில் பல கோட்பாடுகளைப் புகுத்தி உலக இலக்கியவாதிகளிடையே பிரஞ்சு நவீனப் படைப்பாளிகள் தங்களுக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்தியுள்ளனர். வாசிப்பைப் பொதுவாகவே விரும்பும் எனக்குப் பிரெஞ்சுச் சாளரம் பாரதி கூறுவதுபோலச் சொல்புதிது பொருள்புதிது என்று உலகை அறிமுகப்படுத்தியது. 30 ஆண்டுகள் தமிழகத்திலும், 30 ஆண்டுகள் பிரான்சு மண்ணிலும் வாழ்ந்திருக்கிறேன். இரண்டு மொழியும் வாழ்வளித்திருக்கின்றன. படைப்பாளி என்பதால் விரும்பி வாசித்தவற்றைத் தமிழுக்குக் கொண்டுவர நினைத்தேன். இதில் சுய நலமும் இருக்கிறது.மொழிபெயர்ப்புக்கென நிகழ்த்தும் ஆழமான வாசிப்பு எனது படைப்புத் திறனுக்கு உதவுகிறது. வாசித்தவற்றுள் விருப்பமானவற்றை அவ்வப்போது மொழிபெயர்க்கிறேன். சொந்தப் படைப்புக்கு இடையூறின்றிச் செய்கிறேன். சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் மூன்று வடிவத்திலும் முயன்றிருக்கிறேன். பிரெஞ்சு விமர்சகர்கள் தேர்வும், எனது வாசிப்பு அனுபவமும் ஒன்றிணைகிற படைப்புகளை மொழிபெயர்ப்புக்குத் தேர்வு செய்கிறேன். ஏற்கனவே வாசித்த நூலாக இருப்பதால், இரண்டாவது வாசிப்பு தெருவாசல் முதல் அடுப்படி வரை ஏதோ பழகிய வீட்டிற்கு வந்ததுபோன்ற அனுபவத்தைத் தருகிறது. இருந்தும் எதிர்பாராதவிதமாக சில நிலவறைகள் கண்ணிற்பட்டு அச்சுறுத்துவதுண்டு. பிரஞ்சு நண்பர்கள் துணையுடன் திறந்து பார்ப்பேன்.பிரான்சு நாட்டில் இருப்பது பிரெஞ்சுப் பண்பாட்டைக கூடுதலாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. சிக்கலிருப்பின் பிரெஞ்சு ஆசிரியையும் தோழியுமான பெண்மணி ஒருவரிடம் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுண்டு. கலைச் சொற்கள் என்று வருகிறபோது தமிழ் அகராதிகளில் காணப்படும் பிரெஞ்சுச் சொல்லுக்கு ஈடான ஆங்கிலச் சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு, பிரெஞ்சுச்சொல்லுக்கு பிரெஞ்சு அகராதிகள் தருகிற விளக்கத்துடன் பொருந்துகிறதா எனப்பார்ப்பேன். தவறினால் நானே முயல்வதுண்டு. புரட்சியாளன் மொழிபெயர்ப்பு (காலச்சுவடு வெளியீடு)அப்படிப்பட்ட முயற்சி. மொழிபெயர்க்கிறபோது நானொரு படைப்பாளி அல்ல.

* இறுதியாக ஒரு கேள்வி இந்த மனித வாழ்க்கை குறித்து என்னதான் நினைக்கிறீர்கள். பன்முகப்பட்ட உலகப் பண்பாடும் தத்துவமும் சங்கமிக்கும் பிரான்சில் வாழுகின்ற உங்களுக்கு இந்த வாழ்க்கை தந்த செய்திதான் என்ன ?அறிய ஆவலாக இருக்கிறது.

தேடலில் இருக்கும் மனிதர் நீங்கள். உங்கள் கேள்விக்குப் பின்னர்தான் மறந்திருந்த மனித வாழ்க்கை குறித்துச் சிந்திக்கத் தோன்றியது. பிறப்பும் இறப்பும் அனைத்து உயிர்களுக்கும் பொது. விலங்குகள் கிடைத்ததை உண்பது, உண்டதைக் கழிப்பது, உறங்குவது, பருவத்தில் இனப்பெருக்கம் என்று தங்கள் வாழ்க்கைக்கான பாதையை அமைத்துக்கொள்கின்றன. மனிதர்களின் சிந்திக்கும் திறனை Cogito என்ற கலைச்சொல்லால் பிரெஞ்சு தத்துவவாதி தெக்கார்த் அழைக்கிறார். சிந்தித்தலே மனிதர் இருத்தலை உறுதி செய்கிறது என்கிறார். முரண் நகையாக நா காக்காச் சிந்தனையாளர் ஆயுள் சீக்கிரம் முடிந்ததாக வரலாறு தெரிவிக்கிறது. சென்னை விமான சுங்க இலாகா குடிவரவு முகவர்களின் தடுப்புப் பலகையில் ‘’அதிகாரிகளுக்கு எதிரான வார்த்தைகள் பிரயோகிக்கும் பயணிகள் தண்டிக்கப்படுவர்’’ என எழுதப்பட்ட அறிவிப்பு. அதிகாரிகள் பயணிகளுக்கு எதிராகப் பயன்படுத்தும் சொற்களுக்குத் தண்டனை உண்டா என்பது பற்றிய விளக்கம் இல்லை.

உலகமெங்கும் பெருவாரியான மக்களுக்கு வாழ்க்கை பற்றிய கோட்பாடு சிக்கலற்றது. சாக்ரடீஸ் கூறுவதுபோல «வாழ்க்கை என்பது உயிர் வாழ்வது அல்ல, உயிர் வாழ்க்கையை நன்றாக வாழ்வது ». நன்றாக வாழ்வதென்பது சராசரிமனிதனுக்குக், காலம் காலமாக அவனைச் சுற்றியுள்ள சமூகத்தினால் தீர்மானிக்கப்பட்டது. நம்முடைய சமூகத்திற்கு வாழ்க்கை என்பது, நன்றாகப் பிழைக்கத் தெரிந்திருப்பது : வீடு, மனைவி, மக்கள், வாகனங்கள் என வாழ்க்கையை அமைத்துக்கொளவது. சாக்ரடீஸ் நன்றாக வாழ்வதை « விழுமியங்களால் வாழ்வது, விழுமியங்களுக்காக வாழ்வது » என்கிறார். நடந்ததை நினைத்தோ, நடக்கப்போவதை எண்ணியோ மனதைக் குழப்பிக்கொண்டிராமல், நிகழ்காலத் தருணங்களுக்காக வாழ்வதும் ஐரோப்பிய சிந்தனையே. சராசரி மனிதனாகச் சமூக நீரோட்ட த்தில் கலந்தாலும், காய்ந்த சருகுபோலை மூழ்காமல் மிதந்துசெல்லும் வாழ்க்கை உயர்ந்தது. கரை ஒதுங்கும் வாய்ப்பு நீரின் அடிப்பரப்பில் உருளும் கற்களைக் காட்டிலும், மேற்பரப்பில் மிதக்கும் காய்ந்த சருகுகளுக்கு அதிகம். வாழ்க்கை பற்றிய புரிதலில் கீழைத்தேயத்து ஞானம் மேம்பட்டதென்று நினைக்கிறேன்.

———————————————————————————————-