Monthly Archives: ஏப்ரல் 2024

பிரான்சு நிஜமும் நிழலும் – II

இடைக்காலம் (கி.பி 476- 1453)

இன்றைய பிரெஞ்சு மொழியின் தாய்மொழி இலத்தீன் அல்லது  இலத்தீன் மொழியின்  வெகுசன வடிவம்.  இரும்பு யுகத்தில்,  பிரான்சு நாட்டின் பூர்வாங்கப்பெயர் கோல் (la Gaule) என்றும், மக்களைக் கொலுவாக்கள் என்றும், அவர்கள் பேசிய மொழி   கொலுவா என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு ரோமானியர்  படையெடுத்துப்பின் விளைகாக இலத்தீன் மொழி உள்ளே நுழைகிறது. இந்த இலத்தீன் உள்ளூர் மொழியோடு கலந்து  வெகுசனப் பயன்பாட்டிற்கு வருகிறது. இடைக்காலத்தின் ஆரம்பத்தில் ரொமானியர்களின் செல்வாக்கு ஜெர்மானியர்களின் படையெடுப்பினால் சரிவுற்றதும், ஜெர்மானிய பிராங்க் இன மக்கள் ரொமானியர் இடத்தைப்  பிடிக்கின்றனர்,  இந்நிலையில்  இடைக்காலத்தின் போது பிரான்சுநாட்டில் செல்வாக்குடனிருந்வை மூன்று வெகுசன மொழிகள். அ. ஓக் மொழி (la langue d’oc); ஆ. ஓய் மொழி (la langue d’oïl ); இ. பிராங்ஃகோ – ப்ரொவொன்சால்(le franco-provençal). இவற்றைத் தவிர பேச்சு வழக்கிலிருந்த மொழிகளும் அனேகம். பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில்  ஈல் தெ பிரான்சு (ile de france) அரசவை  மொழியை  இலத்தீன் மொழிக்குப் பதிலாக பயன்படுத்துவதென,  1539 ஆம் ஆண்டில் தீர்மானிக்கிறார்கள். ஆக முதன்முறையாக இலத்தீன் மொழியின் இடத்தில், வெகுசனமொழியாக மட்டுமே இருந்து வந்த இன்றைய பிரெஞ்சு மொழி அதிகாரமொழியாக, அரசு மொழியாக, சமயமொழியாக, இலக்கியமொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பிரெஞ்சுமொழியின் இலக்கிய வரலாறென்பது இடைக்காலத்தில் தொடங்குகிறது, அதாவது ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுவரையிலானக் காலத்தை  இடைக்காலத்திற்குரிய காலம் என்போமெனில் அதில் கடைசி  இருநூறு ஆண்டுகளில்தான் இலக்கியம் என்ற சொல்லை இன்று  நாம் விளங்கிக்கொள்ளும் பொருளில் கையாளுகிறார்கள்.  பிரெஞ்சு இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கு முன்பாகச் சுருக்கமாக  பிரெஞ்சு மொழியின் வரலாறு:

இடைக்காலத்தில்  எழுதவும் படிக்கவும் தெரிந்த மக்கள் குறைந்த எண்ணிக்கையினர், அதுவும் தவிர  ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் அறிந்திராத மக்களின் வாய்மொழியாக  இலக்கியம் அறியப்பட்ட காலம். ‘les troubadours’ அல்லது ‘les trouvères’  என்கிற   பாணர்கள் நிலமானிய  பிரபுக்களின் வரவேற்பறைகளில்,  அவைக் களத்தில்  இட்டுக்கட்டிக் பாடியவைதான் அன்றைக்கு இலக்கியம்.  வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டவை என்பதால் மறக்காலிருக்க ஓசையால் சொற்களை வரிசைப்படுத்திக்கொள்வது அவசியமாயிற்று. அவர்களின் படைப்புத் திறன் என்பது நினைவு படுத்த இயலாத சொற்களை, வரிகளை இட்டு நிரப்புவது.  எனவேதான் இடைக்காலத்தின் ஆரம்பகாலத்தில் படைப்பாளிகள் பெயரைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை.  திரும்பத் திரும்ப ஒரே கதை  கூறுபவரின் சொல்வன்மையைப் பொறுத்து புதிய புதிய கற்பனைகளுடன் சொல்லபட்டன. பொதுவாகவே இடைக்கால இலக்கியங்களைத் தழுவல்கள், மொழிபெயர்ப்புகள் என்றுதான் ( இலத்தீன் மொழியிலிருந்து வெகுசன மொழிக்கு)  கூறமுடியும். நிலமானிய முறை வழக்கில் இருந்தகாலம். எனவே பணம் படைத்த, அதிகாரம் படைத்த செல்வந்தர்களின்  ஆதரவினை நம்பியே  இலக்கியங்களுமிருந்தன.

‘படைப்பு’,  ‘படைப்பாளி’ முதலான சொல்லாடல்கள் இடைக்காலத்தில் இறுதியில் சரியாகச் சொல்லவேண்டுமெனில்  பதின்மூன்றாம் நூற்றாண்டில்  வழக்கிற்கு வருகின்றன. குறிப்பாக, நகரங்களின் வளர்ச்சி  கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின்பால் கவனம் செலுத்த உதவியது. நிலமானிய அமைப்பு முறையில் பிரபுக்களின் ஆதரவு, குறிப்பாக அவர்களின் பொருளுதவி என்பது ஒருபக்கம்,  மக்களில் ஒரு பிரிவினர், பண்பாடென்பது சிந்தனை அடிப்படையிலானதென்பதை உணர்ந்திருந்தார்கள் என்பது இன்னொரு பக்கம்.  இந்த இரண்டாவது வகையினர்  பிரபுக்கள் இல்லாமல் தாங்கள் இல்லை என்பதை உணர்ந்துமிருந்தார்கள். இத்தகைய படைப்பாளிகளின் மொழியாளுமையும், சிந்னையும்,  பிரபுக்கள்  அவைக்களத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.  இப்பிரபுக்களின் பக்கபலமாக பெரும் சொத்தாக ‘les chevaliers’   என்கிற குதிரைவீரர்கள்  இருந்தனர்.   இவர்கள் மீதான அபிமானம் திடீரென்று அதிகரித்தது. இவர்களை மையமாகவைத்து, பிரதானப் பாத்திரமாகப் படைத்து பாடல்கள் சொல்லப் பட்டன.  இப்பாடல்களுக்கு « Les chansons des Gestes » என்று பெயரிட்டார்கள். தமிழில் சொல்லவேண்டுமெனில் ‘பரணி’ இலக்கியவகை. ஆனால் தமிழ்ப் பரணிபோல அல்லது காவியங்கள் போல கடவுள் வாழ்த்து முலான இலக்கண வரிசைகளில்லை. கதை நாயகனை வானளாவ புகழவேண்டுமென்பது மட்டுமே அடிப்படை நோக்கம். ஆகப் பாடுவது பரணி என்பதால், கதை நாயகன் வீரதீர சாகசங்களுக்குப் பெயர்பெற்றவன். ஆனைகள் இல்லாத நாட்டில் ஆயிரம் ஆனைகளை அமரிடை வெல்வதெப்படி ? எனவே இங்கு ஆனைகளுக்குப் பதிலாக குதிரைகள், ஆயிரக்கணக்கில் எதிரிப் படையின் குதிரைவீரர்களைச் சமரில் வெல்பவர்களைப் பற்றிய காவியம்.  இக்குதிரை வீரர்கள் இடைக்காலத்தில் இருகாரணங்களால்  முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.

        விசும்பின் துளி : நதி

                                                  

        ஆகாயம் – திசை – தேவலோகம் -மேகம் -வீம்பு- கருவம்- இறுமாப்பு – செருக்கு என்றெல்லாம் அகராதிகள் ‘விசும்பு’ என்ற சொல்லுக்குப் பொருள் தருகின்றன. இவற்றோடு ‘மெல்லிய அழுகையையும் சேர்த்துக்கொண்டால் சொல்லை முழுமையாக உள்வாங்கிக்கொள்ள உதவும். சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் நாஞ்சில் நாடனுடன் பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடந்தும், உட்கார்ந்தும், உண்டும் பருகியும் உரையாடியதன் விளவு இக்கட்டுரையை எழுத உட்கார்ந்தபோது விசும்பு என்ற சொல் குறித்து அகராதியைப் புரட்டத்  தூண்டியது.

         ‘விசும்பு’  என்பதற்கு வான் சிறப்பு அதிகாரத்தின் குறள் பதினொன்றின்படி ஆகாயம். வான் சிறப்பு – பசும்புல்  இரண்டையும் இணைத்து, ‘விசும்பின் துளி’ என்பதை  மேகத்தின் துளியாக பார்க்கவேண்டியுள்ளது. கடவுள் வாழ்த்துப்பாடிய வள்ளுவன் விசும்பை கருவம்-இறுமாப்பு-செருக்கு என்ற பொருளில் கையாண்டிருக்க கிஞ்சித்தும் நியாயமில்லை. பழம்தமிழ்ப்பாடல்கள் அனைத்தும் விசும்பு என்ற சொல்லை ஆகாயம் என்ற பொருளில் பயன்படுத்தியுமைக்குச் சான்றுகள் உள்ளன. விசும்பின் துளியை மெல்லிய அழுகையாக காண்பதிலும் ஓர் அழகிருக்கிறது. ஒவென்று குரலெடுத்து அழுதல் அல்லது கதறி அழுதல் சோகத்தின் உச்சம், கொடும் துன்பம். விசும்பல் அப்படியல்ல. அது குழந்தைகள், பெண்களென்று தனக்கானவர்களை தேர்ந்தெடுத்துக் கையாளுகிறது. அவர்களின் விசும்பல் பெரிதும் சுய தேவையின்பாற்பட்டது.

        விசும்பலை மெல்லிய கேவலாகப் பொருள்கொண்டு ஆகாயத்துடன் இணைத்துப்பார்க்கலாமா ?  ஐம்பெரும் பூதாங்களில் ஒன்றான ஆகாயத்திற்கு, உயிர்களைக் காப்பதன்றி ; அவற்றின் ஆயுளை நீட்டிக்க, அவற்றின் சந்ததியினரை  உய்விக்க என்பதன்றி வேறு சுயதேவைகள் இல்லை என்பது இயற்கைத் தரும் செய்தி.  விசும்பின் அழுகைத்துளிக் கூட்டத்தால் அவற்றின் பெருக்கத்தால் உருவாகும் நதிகள் ஆகாயத்தின் கொடை.

        ‘நீரின்றி  அமையாது உலகு ‘  என்ற உண்மையை உணர்ந்து,  நிலக்குடத்தை நிரப்ப  வள்ளல் வான்பசுக்கள் மடி சுரக்கும்  உயிர்ப்பாலின் வெள்ளமே ஆறு. மனிதர் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துகிற  நதியென்னும் அற நூல்.  பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நிகழும் இயற்கையின்  இவ்வினையையே நாம்  ஆறு, புனல், நதியென அழகு  தமிழ் பெயர்ச் சொற்கள்களாக `மாற்றி உள்ளோம். ஆறு என்ற சொல்லுக்கு நதி, புனலென்று விளக்கம்தரும் அகரமுதலிகள் அதற்கு ஒழுக்கம், பயன் என்ற பொருளைத் தருவதையும்  கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.

        பனிப்பிரதேசத்தில் வாழ்பவனைக் காட்டிலும் , பாலை நில மனிதனும், விலங்கும் நீரின் அருமையைக் கூடுதலாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் நிலம் கடுமையான வெம்மையையும் வறட்சியையும்  மட்டுமே கொண்ட பாலை நிலம் அல்ல, ஆனால் அதுபோல ஆக்விடக்கூடாதென்ற அச்சத்தில் நாட்களைத் தள்ளும் அவலத்தில் தவிக்கும் நிலம்.  மாரிப் பொய்த்து, காவிரி வறண்டு அறுபோகம் கண்ட தமிழ்நிலம் இன்று ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி போய்விடுமோவென நம் உள்ளம் தவிக்கிறது.

        காலம் காலமாகவே வானத்தைப் பார்த்து வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் உயர்ந்த சிந்தனைக்கு இதுகூட காரணமாக இருதிருக்கலாம். « நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை  என்ற இரண்டு பண்புகளும் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ மொழிப்பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள், ‘ இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக்குறிப்பிட்டனர் »  என எழுதுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன், தமது வடுப்பூக்கள் என்ற  கட்டுரைத் தொகுப்பில். ஆக நீரையே மொழியாக கொண்ட தமிழினம்,  நீரைத் தன் வாழ்க்கையாக வைத்து ஒழுகியதில் வியப்பில்லை.

        பண்டைய நாகரீகங்கள் அனைத்துமே நதிகளில் பிறந்தவை, நதிகளில் வளர்ந்தவை என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. நாகரீகங்கள் என்பது உண்பது, உடுத்துவது அல்ல. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தின் வாழ்க்கை நெறி,  பண்புகளின் கண்ணாடி, கலை  இலக்கிய சாட்சியம், நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. சிந்து நதியைத் தொட்டிலாகக்கொண்ட மொகஞ்சாதாரோ – ஆரப்பா , நைல் நதியைத் தொட்டிலாக்கிக்கொண்ட எகிப்து, டைக்ரீசு யூப்ரட்டீசு நதிக் கரைகளில் வளர்ந்த  மெசொபொத்தோமியா  ஆகியவற்றை நாம் அறிவோம். இன்றும் பல முக்கிய நகரங்கள் அனைத்திலும்  ஏதோவொரு நதி, நகரின் செழுமைக்கும் பெருமைக்கும் அழகியல், பொருளியல் அடிப்படையில் பயன்தருகிறது என்பது கண்கூடு. 

நதியோடு நமக்கு வாய்த்த பெருமையையும் இன்று அடைந்துள்ள சிறுமையையும் பேசுவதற்கு முன்பாக கடந்தகாலத்தில் நமது காவிரியும் இப்படித்தான் இருந்திருக்குமோ என என்னைக் காணும்தோறும் கனவில் ஆழ்த்தும் ரைன்(Rhin) நதி பற்றிச் சொல்லாமற்போனால் இந்தக் கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு எப்படியோ எனக்கு நிறைவாகாது.

பிரான்சு நாட்டை பொறுத்தவரை பெரிய நதிகளென ஐந்து நதிகள் இருக்கின்றன. இவற்றை இந்திய பெருநதிகளோடு ஒப்பிடமுடியாது. பிரான்சின் கிழக்கு எல்லையில் பாய்கிற ரைன் நதியே பிரான்சின் நீளமான நதி. கங்கையைப்போல பலகோடிமக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான புனித நதி அல்ல என்கிறபோதும் தனது பிரவாகத்தால்  கரையோர நகரங்களுக்கும், அந்நகர் சார்ந்த நாடுகளுக்கும் பொருள்வளத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கின்றது. சற்றேரக்குறைய 1500 கி. மீ தூரம் பாய்கின்ற மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிற ஐரோப்பிய நதிகளில் இதுவுமொன்று. சுவிட்ஸர்லாந்து, ஆஸ்த்திரியா, ஜெர்மன், பிரான்சு, ஹாலந்து ஆகிய நாடுகளுக்கிடையே மனிதர் மற்றும் சரக்குகள் பரிமாற்ற பயன்பாட்டிற்கு உதவும் நதி.

ஒ ரைன் நதியே !

காதல் பைத்தியங்கள்

இப்போதெல்லாம்

இனிமையான கனவுகளுக்கு

 இதயத்தைப் பறிகொடுப்பது

ஏன் தெரியுமா ?

பச்சைபசேல் என்றிருக்கும் – நின்

காடுகளும், பரந்துவிரித

புல்வெளிகளும்

நித்தம் நித்தம் அவர்களைப்

பித்தர்களாக்கினால்

வேறென் செய்வார்கள் ?

இது ஆல்பிரடு முஸ்ஸே (Alfred Musset) என்கிற பிரெஞ்சு கவிஞனின் ரைன் நதிபற்றிய கவிதை.

என்னைக் கவர்ந்த இன்னொரு நதி செக் நாட்டின் தலைநகர் பிராஹா வில் பாயும் வல்ட்டாவாநதி. சிலவருடங்களுக்கு முன் நகரையும் அதன் ஊடேபாயும் வல்ட்டாவா நதியிலும் பயணம் செய்த அனுப்பவம். காஃப்காபவின் நாய்க்குட்டி நாவலில் பல பக்கங்களை நதிக்கென ஒதுக்கி இருக்கிறேன், விரிக்க ஆரம்பித்தால் கட்டுரை நீளும்.      

        நண்பர்களே ! இயற்கை நம்மை ஈர்க்க பல்வேறு சங்கதிகளைத் தம் கைவசம் வைத்திருக்கிறது. அவற்றுள் நதிகளுக்குத் தனித்தசிறப்பு உண்டு. உயிர் வாழ, செழித்துவாழ அதனால் இவ்வுலகம் உய்ய அண்டசராசரத்தையும் தன்னுள் அடக்கிய மழைத்துளியின் பூதவடிவம் நதி. கடந்தகாலத்தில் தன்னைத் தேடி நீர் வராதென்ற  நிலையில்  தனது உயிர்வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நதிகளைத் தேடி மனிதர்கூட்டம் அலைந்தது.  அந்த அலைதலின் பயனாக, ஓரிடத்தில்  ஓங்கி வளர்ந்திருக்கிற  மரங்களையும், தழைத்திருக்கிற புல்பூண்டுகளையும் , எறும்புப் புற்றுகளையும்  வைத்து வெள்ளம் கரைபுண்டோடக் கூடிய இடம் எதுவாக இருக்குமென்ற புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். .

பருமரக் கரு ஆல் அத்தி பாற்பொடி

மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் பொளி

தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்

கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே !

காணும் வெண்புல் கருரும்புல் கருஞ்சடை

தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி

தாணு தெற்பை சிறுபீளை சாடிணை

வெங்கோரை பொருதலை வெள்ளமே !

என 19 நூற்றாண்டு பாடல்கள் தெரிவிக்கின்றன, எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை ஆனால்  நூலின் பதிப்பாசிரியர் ச.வெ. சுப்பிரமணியன் என இவற்றைக் குறிப்பிடுபிறார், கடலடியில் தமிழர் நாகரீகம் என்ற நூலை எழுதியுள்ள புதுவை நந்திவர்மன்.

        நதியைக் கண்ட தும்  நீரைபார்த்த மகிழ்ச்சியில் நிலையாக இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு மக்கள் ஆங்கே  தங்கலாயினர்.  ஆற்றங்கரைகளும், அதனையொட்டிய வெளிகளும் ;  அடர்ந்த மரங்கள் செடிகொடிகள், பறவைகள், விலங்குகள்  என்ற உயிர் வாழ்க்கையின் கருவறையாக இலங்குவதைக் கண்ட மனிதன், அவற்றோடு ஒன்றாக தாம் வாழ்வதற்கும் புனல் இடமளிக்கும்  என்று நம்பினான், அன்றிலிருந்து  நாடோடிவாழ்க்க்கையை நதிக்கரை வாழ்க்கையாக  மானுட வாழ்க்கை அணைத்துக்கொண்டது. மனிதம், ஆற்றின் துணைகொண்டு ஆற்றியது வயிற்றின் பசியைமட்டுமல்ல, பொருட்பசியையும்.

        எனவேதான்,

         பூவார் சோலை மயில் ஆல

        புரிந்து குயில்கள் இசைபாட

        காமர் மலை அருகசைய

        நடந்தாய் வாழி காவேரி !

         என்று  காவிரியின் நடைபயணத்தை வாழ்த்துவதன் ஊடாக  இளங்கோ, ஏன் மனிதன் தன் நடைபயணத்தில் இளைப்பாற நதிக்கரையை தேர்ந்தெடுத்தான் என்ற இரகசியத்தையும் போட்டுடைக்கிறான். மனித இனம் நதிக்கரையில்  இளைப்பாறியபின்னர் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் நமக்கு விளக்குகிறது. 

        உழவர் ஓதை, மதகோதை

        உடைநீர் ஓதை, தண்பதங்கொள்

        விழவரோதை, சிறந்தார்ப்ப

        நடந்தாய், வாழி காவேரி !

        காவிரிக்கரையில்  காவிரி பாயும் ஓசைமட்டுமல்ல  உழவர் எழுப்பும் ஓசையும் உண்டென்கிறான். இந்த உழவர் ஓசையில் : நுகத்தடி, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது, உழுசாலில் நீர்பாயும் சலசலப்பு அவ்வளவும் அடங்கும். மதஓதை உடைநீர் ஓதை  நீர் பாய்ச்சலின்போது எழும், மண்வெட்டியை மடையில் போடும் ஓசை, மடை திறக்கும் ஓசை, மடை உடைந்து பாயும் தண்ணீர்ன் ஓசை ; வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஓசை என்ற  எல்லாமுமான ஓசையாக ஓசையின் வெள்ளமாக நடக்கின்ற காவிரையை இளவல் பாடுகிறான்.

        உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழ்கூறும் நல்லுல கம் நதியோரம் தம்மைப் பிணைத்துக்கொண்ட உலகம், நதி புனலுடன் தம்

பிறப்பை, இளமையை, முதுமையை, காதலை,மணவாழ்க்கையை, முறிவை,  இறப்பை ஒப்படைத்து வாழ்ந்த இனம் தமிழினம்.  அலெக்ஸாந்திரியா போல, ஆம்ஸ்டர்டாம்போல, பாக்தாத்போல, பெல்கிரேடுபோல, இலண்டன்போல, பாரீசுபோல, ஹோசிமின் போல கல்கத்தா வாரணாசிபோல இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களைப்போல தமிழ் நாட்டின் நகரங்களும் நதிக்கரைகளில்  செழித்தவை, நதிகளால் வளம் பெற்றவை நதிகளால் காதல்வயப்பட்டவை.

                 காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

                 கண்ட தோர் வையை பொருனைநதி-என

                 மேவியாறு பலஓடத்- திரு

                 மேனி செழித்த தமிழ்நாடு !

என்று தமிழ் நாட்டின் வளத்தை ஆறுகளோடு இணைத்து பாரதி பாடுகிறான். தமிழ் மண்ணை செழிக்கவைக்கும்  ஆறுகளாக ஐந்து ஆறுகளை பாரதி குறிப்பிடிருப்பினும், நமது  தமிழ் நிலத்தின் திருமேனியை செழிக்கவைப்பதில்  இந்த ஐந்து அல்லாது  பல நதிகளின்  பங்கிருப்பதை ‘மேவிய ஆறு பல ஓட’ என்ற வரியைக்கொண்டு புரிந்துகொள்கிறோம். அடையாறு, அமராவதி, கல்லாறு, மணிமுத்தாறு, செய்யாறு, கொள்ளிடம், செஞ்சி ஆறு , கபினி, குடமுருட்டி என சொல்லிக்கொண்டுபோகலாம்.

        தமிழர்தம் வாக்கையும் இந்த ஆறுகளைப்போலவே அமைதியும் ஆர்ப்பரிப்பும், வெறுமையும் செழுமையும், அழகும் ஆவேசமுமாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் காப்பியங்கள் அனைத்தும்  நதியைப் போற்றுபவை, நதியின் பெருமையைக்கூறி  விளக்கி . அந்நதியை ஒட்டி எழுந்த நகரங்களையும், மக்களின் வாழ்நெறியையும் வடிக்க முனைந்தவை. தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்கான இலக்கணப்ப்பட்டியலில்  «  …..பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் … » என்பதையும் ஓர் அங்கமாகச் சேர்த்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

        ஆற்றின் கரைகளில் உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழகத்திலும் ஊர்களும் நகரங்களும் தோன்றின. « ஆறில்லா ஊருக்கு அழகேது » என்ற பழமொழி தமிழ் வழக்கறிந்த ஒன்று. சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரி ஆற்றங்கரையிலும், பாண்டி நாட்டின் தலை நகரமாகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும், சேர நாட்டின் தலைநகர் வஞ்சி கூட ஓர் நதிகரையில் இருந்த தாகவே சொல்லப்படுகிறது.   அவ்வாறே  துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது என சொல்லின் செல்வர் ரா. பி சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆகக் கரையோரம் எழுந்த ஊர்களெல்லாம் தமிழ் இலக்கியப் பக்கங்களைக் காப்பியங்கள், பக்தி இலக்கியங்களாக நிரம்பியுள்ளன.

        ‘ அன்பு எனும் ஆறுகரை அது புரள

        நன்புலனொன்றி நாத என்று அரற்றி ‘

        ‘மாறு இலாத மாக்கருணை வெள்ளமே’ 

என மாணிக்கவாசகர் தமது பக்தியை யும், அப்பகுத்திகுரிய தலைவனையும் வெள்ளத்தின் மருங்கே நிறுத்துவது, தமிழ் நிலம்,  நீர் நிலம்  என்பதால்.

        ஒரு பொருளின் மிகுதியை, அபரித த்தைக் குறிக்க தமிழில் வெள்ளம் என்ற  உறிச்சொல் அதிகம் பயன்பாட்டில் இருந்த து. காலவெள்ளம் புரட்டிபோட்டதில், இன்று நிலை தடுமாறி, அன்பு வெள்ளம், ஆசைவெள்ளம் அருள் வெள்ளம், கருணைவெள்ளம் என்ற காலம்போய், சாதிவெள்ளக் கரை உடைந்து, குருதிவெள்ளத்தில் அவ்வப்போது தமிழ்நிலம் மூழ்கடிக்கப்படும்  அவலத்தையும் இடையில் நினைகூர வேண்டியுள்ளது.

        ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந்நாளும வ்வாற்று

        ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு

        நல்குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

        இல்லை எனமாட்டார் இசைந்து.

நல்குடிப்பிறந்தோர்,  தங்களுக்கு ‘இல்லை’ நேரும் காலையும்  அடுத்தவர்  கேட்கும்போது தங்களிடம் உள்ள பொருளை, கால் சுடும் அளவிற்கு நீர்வற்றி வெறும் மணலாக ஆறுறுவற்றிப்போனாலும் அதை நீருக்காக தோண்டுவோருக்கு ஊற்று நீர் கொடுத்து உதவும் நதியைப் போல  என்று ‘நல்வழி’யில் ஔவை குறிப்பிடுவாள். இது தீயவழியில் மணற்கொள்ளைக்குத் தோண்டும் மனிதர்களுக்குப் பாடப்பட்டததல்ல.

         தமிழே  தலைவனாக, தமிழே தலைவியாக தமிழே தோழன் தோழியாக, பிறமாந்தராக அவர் தம் வாழ்க்கையாக நீர்ப்பர்வல் போல ஆற்றுப்படுத்துதல் தமிழ்க்காவியங்களில் நிகழ அப்பெருமை தமிழுக்கும் நீருக்குமுள்ள நெருங்கிய உறவால் நிகழ்ந்த து என்றால்  மிகையில்லை.

        குடகுமலையில் பிறக்கும் காவிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமான  வைகையும்  இன்றளவும் தமிழ் மொழியோடும், தமிழர் வாழ்வாதாரத்தோடும்  பின்னிப்பிணைந்தவை.  காவிரி ப்பாயும் ஊர்களெங்கும் ஆடிப்பெருக்கு விழா  புதுப்புனலை வரவேற்கும் வித த்தில் ஆடிப்பெருக்கு விழாவாக, ஒவ்வொரு வருடமும்   ஆடிமாதம் பதினெட்டாம் நாள்  கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகையில் இறங்கும் நாள், மதுரைப்பகுதியில் இன்றளவும் ஒரு பெருவிழா.

        நீராடல் நீர் விளையாட்டு வேறு  என்கிறார். தொ.பரமசிவன். அவர் கூற்றின்படி, «   நீராடல் என்பது திராவிட நாகரிகத்தில் சடங்கியல் தகுதி உடையன » மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும்  தமிழர் வழக்கினை அகநானூறு பாடல் கொண்டு விளக்குகிறார். பெண்களின் பூப்பு நீராட்டும் அவர் கூற்றின் படி நீராட்டலின் கீழ் வருகிறது. குளித்தல் அல்லது உடலை குளிர்வித்தல் வெப்பத்தால், அல்லது உழைப்பால் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பது அவர் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் மற்றொரு முக்கியமான தகவல்.  நீரில் நீந்தி மகிழ்வது, நீர் விளையாட்டு . குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் இடம்பெறும்  ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் காவிரில் ஆடி மகிழ்ந்தது நீர் விளையாட்டு.  புதுப்புனல்விளையாட்டில்  பங்கேற்க வந்த சேரநாட்டு இளவரசன்ஆட்டநத்தி காவிரிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான்.  ஆவனுடன் நீரில் விளையாடிமகிழ்ந்த ஆதிமந்தி,   நீரோடு அடித்துச்செல்லபட்ட கணவனைத் தேடிக் கண்டடைந்த  கதையை

“– உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. «  கன்னியர் ஆகி நிலவினில்  ஆடிக் களித்த தும் இந்நாடே-   தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போர்ந்த தும் இந்நாடே !  »   என்ற வரிகளில் பாரதியும் ‘ நீராடுதல் ‘என்று கூறாமல் ‘நீர் விளையாடி’ என்றே  எழுதுகிறான். கவி அரசு கண்ணதாசனும், « நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே » என்று  எழுதியிருப்பதை நாம் மறந்துவிடமுடியாது. வருங்காலங்களில் நீர்  விளையாட்டுக்கு அல்ல நீராடுவதற்கேனும்  வெள்ளம் வருமா என்பது நமது இன்றைய  கவலை.

————————————————————————-

பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II :

           

கலையும் இலக்கியமும்

கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும்  உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக பிறந்தானோ, அல்லது என்னவாக இருக்கிறானோ  அப்படி இருக்கமுடியாதென மறுக்கக்கூடிய உயிரி.  அம்மறுப்பை கலை இலக்கிய வழிமுறைகளால் வெளிப்படுத்துவதென்பது ஒர் உபாயம் அல்லது உத்தி. வாழ்வின் நோக்கம் உண்பதும் உறங்குவதும், இனவிருத்தியோடு திருப்தியடைவதும் என முடித்துக்கொள்கிற  விலங்குகள்போலன்றி , அதற்கும் அப்பால் என்பதை உணர்ந்த மனித ஆற்றலின் வெளிப்பாடு. என்னவாக இருக்கிறோமோ, என்னவாக காண்கிறோமோ அந்த இயற்கை உண்மையை, இயல்பு நிலையை  அவன்  விரும்பும் வகையில், சகமனிதனின் ஒப்புதல் வேண்டி திருத்த முற்படுவதுதான் கலையும் இலக்கியமும்.   அவை  ஆன்மாவின் பலம், அறிவின் பலம்.

கலை இலக்கிய படைப்பாளிகள் ஐயன் வள்ளுவன் கூறுவதைப்போல  அவைக்கு அஞ்சாதோர், சொல்லின் தொகையறிந்த தூய்மையவர்.   « கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும், வேட்ப மொழிவதாம் சொல் » என்ற இலக்கணத்திற்குப் பொருந்த தொழில்படுபவர்கள். மனித  வாழ்க்கையின் மகிழ்ச்சிகள், அவலங்கள், மேடு பள்ளங்கள், குறைநிறைகள், அழகுகள், கோரங்கள் ஆகியவற்றை கலைபடுத்தும் வல்லுனர்கள்.. தன்னுடைய சொந்த அல்லது தான் சாட்சியாகவிருந்த சகமனிதரின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்துதலும், அதேவேளை அவ்வனுபவம் எவ்வகையில் தனித்துவம்பெறுகிறதென்பதை என்பித்தலும் கலை இலக்கியவாதிகளின் கடப்பாடு. எனவேதான் ஒருநாட்டைக்குறித்து, ஓர் இனத்தைக் குறித்து விவாதிக்கிறபோது இலக்கியமென்கிற எடைக்கல்லையும் தராசையும் கையிலெடுப்பது தவிர்க்க முடியாததாகிறது.  பிரெஞ்சு,  தமிழ்போல கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்தகுடிகளின் மொழியல்ல. இலத்தீன் மொழியிலிருந்து திரிந்த அடித்தட்டு மக்கள் மொழியாக , கீழ்மக்கள் மொழியாகத்தான் தொடக்க காலத்தில் இருந்தது.  பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டுகளில்தான் தன்னை இன்னாரென்று உணர்ந்துகொண்ட மொழி.   இருந்தும்,  உலகின் முக்கிய மொழிகளில் இன்றைக்கு பிரெஞ்சும் ஒன்று. பிரான்சு நாட்டில் மட்டுமின்றி பெல்ஜியம், கனடா, லக்ஸம்பர்க், சுவிட்ஸர்லாந்து, தவிர உலகில் 51 நாடுகளில் வழக்கிலுள்ள  மொழி, குறிப்பாக ஆங்கிலத்தைப் போலவே, பிரான்சுநாட்டின் காலனி நாடுகள் அனைத்திலும் சாபம்போல ஆயுள் முழுக்க விலக்க முடியாமல் தொடரும் மொழி.  உலகமெங்கும் பரவலாக உபயோகத்திலிருக்கிற பிரெஞ்சு மொழியின் இலக்கியம்,  பிரெஞ்சு மக்களால் மட்டுமே படைக்கப்பட்டதல்ல, அதிலும் நவீன பிரெஞ்சு இலக்கியம், உலகில் எங்கெல்லாம் பிரெஞ்சுமொழி பயன்பாட்டில்  உள்ளதோ அந்நாடுகளின் பங்களிப்பினாலும் ஊட்டம் பெற்றுள்ளதென்பதை நாம் மறந்துவிடமுடியாது.

பிரான்சு நாட்டின் தனித்தன்மை

மொழி அளவில் ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடத்தில் பிரெஞ்சு மொழி இருப்பினும்,  இலக்கியம் தத்துவம் ஆகிய துறைகளில்  உலகச் சிந்தனையில் பிரெஞ்சு மொழியின் பங்களிப்பை உதாசீனப்படுத்து தல் இயலாது. இவ்வெற்றிக்கு அடிப்படையில் உள்ள வலுவான காரணங்கள் பல. நூற்றாண்டுகளைக்கடந்து இன்றுவரை பொறுப்புடனும் அக்கறையுடனும் ஆட்சியாளர்களின் குறுக்கீடின்றி செயல்படும் பிரெஞ்சுமொழி நிறுவனம்,அதனை வழிநடத்தும் மொழி அறிஞர்கள் ; உறுதுணையாக இருந்துவரும் அரசின் கலை இலக்கிய பண்பாட்டுத் துறை ;  படைப்பாளிகளை, இலக்கிய ஆளுமைகளைப் போற்றும் அரசாங்கம்ம ;  தரம் வாய்ந்த நூலகங்கள், பதிப்பகங்கள், படைப்புத்துறையின் பல்வேறு பங்குதாரர்களிடையே  பாலமாக இயங்கும் ஊடகங்கள், நாட்டின் கண்ணியமும் பெருமையும் பொருளியல் வளர்ச்சியில் மட்டுமல்ல கலை இலக்கியத்தையும் உள்ளடக்கியதென நம்பும் பெருவாரியான மக்கள் என வரிசைப்படுத்த முடியும். அவற்றில் ஒன்றிரண்டை அடிக்கோடிட்டும் சொல்லவும் வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் அறிமுகப்படுத்தப் பட்ட ழூல்ஸ்ஃபெரி  சட்டம் அனைத்துச் சிறார்களுக்கும் கல்வியை இலவசமென உரைப்பதும், அதைக் கட்டாயமென வற்புறுத்துவதும் ஏட்டுச்சுரக்காய் மொழியில் அல்ல, இன்றுவரை இம்மி அளவும் பிசகாது அரசு, அதனை ஓர் தார்மீக க் கடமையாக நிறைவேற்றிவருகிறது. நாட்டின் வரவு செலவுத் திட்ட த்தில் 22 விழுக்காடு, கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கென ஒதுக்கி சடங்காக அன்றி முறையாக அதனை பயன்படுத்தவும் செய்கிறது.. அனைத்திற்கும் மேலாக கலை, இலக்கிய துறை அமைச்சு இங்கு காலம் காலமாக அத்துறைசார்ந்த மனிதர்களிடத்தில், வல்லுனர்களிடத்தில் ஒப்படைக்கபடுகிறது.

இயல்பாகவே விடுதலை மனங்கொண்ட பிரெஞ்சு மக்கள்,  கலை இலக்கியத்திலும் அம்மதிரியான உணர்வுகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இம்முயற்சிகளை ஓவியம், சிற்பம், இசை யென பல துறைகளிலும் காண்கிறோம். இலக்கிய தேவதச்சர்களும் பரிட்சார்த்த முயற்சிகளுக்குத் தாங்கள் விதிவிலக்கானவர்களல்ல என்பதைக் காலந்தோறும் தங்கள் படைப்பின் ஊடாக நிரூபித்துவருகிறார்கள். இவ்விலக்கிய கட்டுமானங்கள்  படைத்தவனின் மனப்புரிதலுக்கேற்ப பெயர்களைச் சூட்டிக்கொண்டன. ஏற்றலும் நிராகரித்தலும் பிரெஞ்சு படைப்புலகில் புதியவை முளைவிடவும், வளர்ந்து தழைக்கவும் காரணமாயின. கடந்த காலத்தை நிகழ்காலம் நிராகரித்துள்ளது,  என இதனை விமர்சிக்க முடியுமா என்றால், அப்படி விமர்சிக்க கூடாது என்பதுதான் உண்மை. ஒரு வீட்டின் நிர்வாகத்திற்கு அந்தந்த காலத்திற்கேற்ப பொறுப்பேற்கிறவர்கள், அவரவர் சூழலுக்கேற்றக் கொள்கையைக் கடைபிடிக்கின்றனர். பாட்டன், தந்தை, மகன் என் நிர்வாகப்பொறுப்பேற்பவர்கள்  காலத்திற்கும்,  சூழலுக்கும், திறனுக்கும் ஏற்ப நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தலாம். வழிமுறை எதுவாயினும் குடும்பத்தின் பாரம்பர்யபெருமையை தக்கவைப்பதும், முன்னோக்கிக் கொண்டு செல்வதும் மட்டுமே அவர்களின் இலக்கு. அதை பிரெஞ்சுக்காரர்கள் சரியாகச் செய்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். நிறைய இஸங்களை பிரெஞ்சு இலக்கியத்தில் சந்திக்கிறோம், அவற்றை நாம் இத்தொடரில் காணலாம். பட்டியல் நீளமானது, இச்சோதனை முயற்சிகளின் பொதுவானப் பலன் பிரெஞ்சு இலக்கியத்திற்கும் கலைக்கும் பெருமை சேர்த்திருக்கிறதென்கிற இன்றைய உண்மை.

இடைக்காலத்திய படைப்பிலக்கியவாதி பிரான்சுவா லியோன் ஆகட்டும், மானுடவியல் வழிவந்த கவிஞர் பிரான்சுவ ரபெலெ ஆகட்டும், பதினேழாம் நூற்ராண்டின் சமயம், சமூக நெறிமுறைகளில் அத்துமீறலைப் போற்றிய போகிகள் ஆகட்டும், உயர்ந்த கோட்பாடு, மேட்டுக்குடுடி மக்களின் வாழ்வியல் , தேர்ந்தமொழி தொன்மவியல் கோட்பாட்டாளர்கள் ஆகட்டும், பின்னர்வந்த பகுத்தறிவுவாதிகளாகட்டும்  இப்படி அனைவரையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.இன்றைய பின்-பின் நவீனத்துவம் வரை முக்கிய இலக்கியவாதங்களையும் அவற்றை முன்னெடுத்தவர்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் இப்பகுதியின்  நோக்கம்

ஆஹா (தேர்தல்) வந்திருச்சி – 2

1938 டிசம்பர் 16….

  வாக்களித்த நூதனங் கேளும், பேதகர் சென்று

  வாக்களித்த நூதனங் கேளும்

  போக்கரெல்லாம் ஒன்றுகூடி

  பொதுக்கொலேழினை நாடி

  வாக்களிக்காபேரைத் தேடி

  மண்டையை உடைத்து ஓடி

  வாக்களித்த …

  குடிசையைக் கொளுத்தி னோரும்

  கோட்டைக்குப்பம் மேவினோரும்

  குடித்துத் திருடினோரும்

  கூடலூருக்குக் கோடினோரும்

  வாக்களித்த….

  வந்ததோ ஒரு நூறுபேரே

  வாக்கோ முப்பது முன்னூரே

  இந்தவித செய்தபேரே

  எல்லாஞ் செய்வர் பெரியோரே

  வாக்களித்த நூதனங்கேளும் !

 கடைத்தெரு மூலையில் நின்று பாடிக்கொண்டிருந்த கோமாளியைச் சுற்றி ஒரு சிறுகூட்டம்.

– இங்கே என் கடைமுன்னால வேண்டாம். அவனை அடித்து விரட்டுங்கப்பா. பல்லை இளித்துக்கொண்டு என்ன வேடிக்கை – சத்தம் போட்டார் செட்டியார். நெற்றியிலும் கழுத்து மடிப்புகளிலும் சுரந்த வியர்வையை ஈரிழைத் துண்டால் அழுந்தத் துடைத்தார். பூணூலில் முடிந்திருந்த சாவிக்கொத்து இடம்பெயர்ந்து பானை வயிற்றில் முடிச்சிட்டிருந்த தொப்புளில் திரும்ப விழுந்தபோது சலங்கைபோலக் குலுங்கியது. மதிய உணவை உண்டுமுடித்த கையோடு கல்லாப் பெட்டியில் உட்கார்ந்திருந்தார், இட துகை விரல்கள் பிடியில்  பனை மட்டை விசிறி.

செட்டியார் கோமாளியை எதற்காக ஏசுகிறார் என்பது அரசப்பனுக்குத் தெரியும். பைத்தியக்காரன் ஏதோபாடுகிறான் நமக்கென்ன வந்தது எனச் செட்டியாரால்  அலட்சியப்படுத்த முடியாது.  கோமாளியின் பாடல் டேவிட் ஆட்கள் காதில் விழுந்தால், பாடுகின்ற கோமாளி மட்டுமல்ல காதில் வாங்கும் மனிதர்களும் பந்தாடப்படுவார்கள். « ஆனால் இப்படி எத்தனைநாளைக்கு இவர்கள் அட்டூழியத்தைச்  சகித்துக்கொண்டிருப்பது. ஏதாவது செய்தாலொழிய அவர்களின் கொட்டம் அடங்கப்போவதில்லை » என எண்ணியபடி வேகமாக நடந்தான். பசித்தது. காலையிலிருந்து பட்டினி.

அரசப்பன் வீடு காக்காயன் தோப்பிலிருந்தது, மனைவி, பிள்ளைகள், வயதான தாய் என்று ஐந்துபேர்கொண்ட குடும்பம். தகப்பனுக்குக் கள் இறக்கும் தொழில். நித்தம் நித்தம் தலைக்கயிறு,பெட்டி, பாளை சீவும் கத்தி எனச் சுமந்து மரமேறி, பாளையைச்  சீவி, கவனமாய்க் கலயத்திலிட்டு இறங்கிவந்து பசியாறும் தொழில். « இன்னும் எத்தனை காலத்திற்கு உயிரைப் பணயம் வைத்து மரமேறி வயிறைக் கழுவறது. உன் சந்ததிக்காகவாவது விடிவுகாலம் பொறக்கட்டும். ஆலைவேலக்குப்போ, அல்லாங்காட்டி சைகோன் அப்படி இப்படின்னு சொல்றாங்களே போயிட்டு வாயேன் »  என வேலாயுதக்  கிராமணி சொன்னதுல நம்ம அரசப்பனுக்கு வாய்த்தது ஆலைவேலை. பத்துவருடமாக சவானா ஆலையில் தறி ஓட்டும் தொழிலாளி. உத்தியோகம் நிரந்தரமானதும், தமக்கை மகள் பர்வதத்திற்கு மூன்று முடிச்சுப் போட்ட சூட்டோடு இரண்டு பிள்ளைகள். எந்தக் குறையுமில்லை சந்தோஷமாகத்தான் வாழ்ந்தார்கள்.ஒரு முறை மேஸ்திரியிடம் முறைத்துக்கொண்டான். அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. போனவருடத்தில்  புதுச்சேரி ஆலைகளில் ஊதிய உயர்வு மற்றும் பிற காரணங்களை முன்வைத்து நடந்த போராட்டம், துப்பாக்கிச்சூடு ஆள்குறைப்பு என முடிந்தபோது, உத்தியோகத்தை இழந்தவர்களில் நம் அரசப்பனும் ஒருவன். கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கும் ரெண்டு கொடுமை வந்து திங்குதிங்குன்னு குதிக்குது என்கிற கதை நம்முடைய  அரசப்பன் விஷயத்தில் நிஜம்.  நகராட்சித்  தேர்தலை முன்வைத்து மகாஜன சபை ஆதரவாளர்களுக்கு எதிராக பிரெஞ்சு  இந்தியக் கட்சியினர்  கட்டவிழ்த்து விட்ட வன்முறையில் அரசப்பன் கூரைவீடு தரைமட்டமானது, எரிந்த வீட்டோடு  பெண்டாட்டி பிள்ளைகள், தாய் என அவனுக்கென்றிருந்த உயிர்ச் சொத்துகளையும் தீ அடித்துப் போனது.

வீராம்பட்டணம் சாலையைப் பிடித்து அரசப்பன் நடந்தான். குடும்பத்தை அரசியல் கலவரத்திற்குப் பலிகொடுத்தபின்னர், நிரந்தர வாசத்திற்கு எதுவுமில்லை.   பகல் நேரங்களில் கடைத்தெருப்பக்கம் ஒதுங்குவான்,  கையை ஏந்துகிறபோது, காலணா அரையணா கொடுக்கிறார்கள். மதிய உணவென்பது பெரும்பாலுமில்லை. காக்கயந்தோப்பிற்குத் திரும்புகிறபோது இவன் வீட்டுக்கு எதிர்வீட்டுவாசியான சொர்ணம் அக்கா மறக்காமல் அழைத்துச் சோறுபோடுவதுண்டு. வழியில் ஏதாவது கோவில்கள் தென்பட்டால், கும்பிடத் தோன்றினால், மகராசி சொர்ணத்திற்காக வேண்டிக் கொள்கிறான்.

பெரியவர் மாசிலாமணி எதிரில் வந்தார். விறுக் விறுக்கென எதிரில் வரும் நபரை எட்டி உதைக்க விரும்பியவர்போலப் பாதத்தை உயர்த்திவைப்பார். கால்களில் இலாடம் கட்டிய எருமைத் தோல் செருப்புகள், பூமியைத் தொடும்போது இரணியகசிபோவெனச் சந்தேகிக்கத் தோன்றும். வேட்டியை மடித்துக்  கட்டி இருந்தார், மேலுக்குச் சட்டை இல்லை, தோளைச் சுற்றிய துண்டு மார்பை மறைக்க வெட்கப்படும். மார்புக்குழியிலும், காம்புகளைச் சுற்றியும் கோரைபோல ரோமம். முகத்திலும் சவரம் செய்யாமல் மூக்கு, நெற்றி, கண்களுக்குவிலக்களித்து தரிசு நிலத்தை ஆக்ரமித்து மழை காணாத புற்கள்போல ரோமம். தொப்புளுக்குக்கீழ் அடிவயிற்றின் மெல்லிய மடிப்புகளை ஒட்டியும் அதற்குக் கீழும் இரண்டு சிப்பங்கள். முதல் சிப்பம் கோரைப்புல்லாலான  அரைப்பை. அதில் வெத்திலை, களிப்பாக்கு, வாசனைச் சுண்ணாம்பு, குண்டூர் புகையிலை, சிறியதொரு பாக்குவெட்டி – இப்படி எல்லாமும் உண்டு. அதற்குக் கீழுள்ள சிப்பம் மேலேயுள்ள சிப்பத்தைவிட அளவில் பெரியது. அது அவருடைய அண்டம். « உங்களைப்  பெரிய மனுஷன்னு  சொல்றாங்களே இதுக்குத்தானா ? » என ஒருமுறை அரசப்பன் விளையாட்டாகக் கேட்கப்போய் ஊர் முழுக்கப் பரவி விட்டது. அவரே ஒருமுறை அரசப்பனை அருகில் அழைத்து, « எனக்கு நாலு பையன், ஆறு பொண்ணு, எல்லாம் இதனுடைய மகத்துவம்தான் புரிஞ்சுக்க » என வேட்டியை அவிழ்த்தபோது, பதறிவிட்டான்.  அப்போதைக்கப்போது, « ஏதாவது சாப்பிட்டியா, வீட்டுக்குப் போ, இன்றைக்கு கிருத்திகைக்கு படைச்சோம். உனக்கு எடுத்துவச்சிருக்காங்க. » என உரிமையுடன் உத்தரவிடுகின்ற ஆசாமி.

கண்களுக்கு மேல் குடைபிடிப்பதுபோல உள்ளங்கையைக் கவிழ்த்தி  நிறுத்தி, « யாரு அரசப்பனா ? உன்னைக் காலையிலிருந்து தேடறோம் எங்க போயிட்ட ? » என வினவினார்.

 அரசப்பன் தலையைச் சொரிந்தான். « சரி மாமா », எனத் தலையாட்டிவிட்டு  நடந்தான். இருபது நிமிட நடைப்பயணத்திற்குப் பிறகு வீட்டுமுன்பாக நின்றான். பெரிய தூலகட்டு வீடு. இவன் தெருவாசலில் பாய்போட்டு படுத்திருந்தான். மனைவி அம்புஜம் தன் பிள்ளைகளுடன் உள் நடையில் படுத்திருந்தாள். தாய் அடுப்பங்கரையில் முந்தானையை விரித்துப் படுத்திருந்தார். நள்ளிரவைக்  கடந்த நேரம். மற்றொரு சாதிக்கார இளஞன் ஓடிவந்தான். தொழிற்சங்க ஆட்களை டேவிட் கட்சிக்காரங்க தடி, கம்புகளுடன் தாக்கறாங்க, நாம அதைத் தடுக்கனும் » என்றான். அரசப்பன் வீட்டிலிருந்த பாளைசீவும் கத்தியைக் கையிலேந்தியபடி அவனுடன் ஓடியவன் திரும்பியபோது, வீடு எரிந்துசாம்பலாகி இருந்தது. ஒரு ஜீவன் கூட மிஞசவில்லை.

வெகுநேரம் குத்துக்காலிட்டுத் தலையைப் பிடித்தபடி வீடிருந்த தழும்பைப் பார்த்து அலுத்து, கால்களைப் போலவே கண்களும் மரத்திருந்தன. ஆழ்ந்த நெடுமூச்சுடன் எழுந்து நின்றான். தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினான். பெரியவர் மாசிலாமணியின் நாலாவது மகன் அருணாசலம்.

– என்னண்ணே, அப்பாவைப் பார்த்தியா, வீட்டுப்பக்கம் வருவேன்னு உன்னை எதிர்பார்த்திருந்தேன்.

– ஏன்,என்ன விஷயம் ?

– இதைப்பிடி.

– என்னது ?

– பிரிச்சுப் பார்.

பொட்டலத்தைப் பிரித்த அரசப்பன் மூர்ச்சை ஆகாத குறை. கைத்துப்பாக்கி.

– சந்திரநாகூரிலிருந்து வந்த சரக்கு, பத்திரம். கவர்ன்மென்ட்டையும் சிப்பாய்களையும் துணைக்கு வச்சிக்கிட்டு அடியாட்களோட அவங்க பண்ற அட்டூழியத்தைக் கேட்க ஆளில்லைங்கிற தைரியத்துல ஆடறானுவ.   அவனுங்க கொட்டத்தை அடக்க நாமளும் ஏதாவது பதிலுக்குச் செய்தாகணும். அதை நீதான் செய்யணும். பெத்தவ, பொண்டாட்டி, புள்ளகள்னு மொத்தக்குடும்பமும் தீயில வெந்திருக்கு, சமந்த மில்லாத எங்களுக்கே நெஞ்சு கொதிக்குதுன்னா, நீ எப்படி நாளத் தள்ளுவ. காதக் கொடு !

அரசப்பன் காதில் திட்டத்தைக் குசுகுசுவென்று ஓதிவிட்டு, புரிஞ்சுதா எனக் கேட்டான் அருணாசலம். இவன் தலையாட்டினான். தலையாட்டிவன் கையில் இன்னொரு பொட்டலத்தைத் திணித்தான், தொடர்ந்து «  காரியம் முடிஞ்சதும் கொஞ்ச நாளைக்குத் தலைமறைவா இருந்துட்டு வா. அதுக்குத்தான் இந்தப்பணம். கரியமாணிக்கம் போயிடு, அங்கிருந்து கூடலூர். பிரச்சனை தணிஞ்சதும் திரும்பலாம், எப்ப வரணுமுன்னு தகவல் அனுப்புவோம், அப்ப  வந்தால் போதும். 

மறுநாள்  பிரெஞ்சிந்தியர் கட்சியைச் சேர்ந்த செல்வராஜு சுடப்பட்டார் என்ற தகவல் அவரைச் சார்ந்த மனிதர்களிட த்தில் பெரும் புயலைக் கிளப்பியது, தடி,கம்பு, திருக்கைவால் எனக் கையிற்கிடைத்த ஆயுதங்களுடன் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம் பகுதிகளில் மீண்டும் தாக்குதல்கள், கலவரமென்று புதுச்சேரி அல்லோலகல்லோலப்பட்டது.  

———————————

சைகோன் – புதுச்சேரி (நாவல்)

டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்

சென்னை