Monthly Archives: ஜூலை 2014

மொழிவது சுகம் ஜூலை 26 2014

1. பிரான்சில் என்ன நடக்கிறது? : கச்சைக் கட்டி நிற்கிறார்கள்

                   ‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா வருடம் பிரெஞ்சு அகராதிகள் புதிதாகப் பதிப்பித்து வெளிவரும். இவ்வருட கல்வி ஆண்டில் Robert அகராதியைச் சேர்ந்தவர்கள் பன்மையில் ‘soutiens-Gorges’ எனப் போட்டிருக்கிறார்களாம். அதாவது Gorge -மார்பு அல்ல Gorges-மார்புகள். மாறாக Larousse அகராதிக்கு ‘soutiens-Gorge’ சரி. அவர்களுக்கு la gorge என்ற பெயர்ச்சொல் ஒருமை சார்ந்த விஷயம் எனவே ஒரு வினைச்சொல்லிலிருந்து (soutenir) பிறந்த இப்பெயர்ச்சொல்லோடு மட்டும்(soutien) S சேர்த்தால் போதும். இரு தரப்பிலும் நியாயம் இருப்பதுபோல தெரிந்தாலும் தற்போதைக்குப் பெரும்பாலோர் ‘soutiens-gorge’ஐ தாங்கிப்பிடிக்கிறார்கள். மூத்த கல்விமான்களின் முடிவுக்குக் காத்திருக்கிறார்கள். இதில் வயதுபோன ஆசாமிகளுக்கு சொல்ல என்ன இருக்கிறது?

 2. காஸா பிரச்சினை
காஸா பிரச்சினை மறுபடியும் வெடித்திருக்கிறது. அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலிய ராணுவத் தலையீட்டினால் நாள்தோறும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் சிற்றிதழ்கள் இஸ்ரேல் பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கலாம், தலையங்கத்தில் கண்டிக்கலாம், கட்டுரைகள் எழுதலாம். இஸ்ரேலுக்குப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகள் இருப்பது உண்மை. ஆண்டுகள் பலவாக தொடரும் இப்பிரச்சினைக்கு அரபு நாடுகளும் ஒரு வகையில் பொறுப்பு. இன்னொரு பார்வையும் நம்மிடம் இருக்கிறது. புட்டின் ஒரு பக்கம், ஒபாமா மறுபக்கமென சிரியாவில் நடக்கும் சண்டையில் கொல்லப்படுவது ரஷ்யர்களோ, அமெரிக்கர்களோ அல்ல சிரிய ராணுவ வீரர்களும், சிரிய புரட்சியாளர்களும், அப்பாவி சிரிய மக்களும். இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் சிரிய நாட்டு உள்நாட்டுப்போரில் நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் இறந்துகொண்டிருக்கிறார்கள். இராக்கில் அமெரிக்க அரசியலின் கைங்கர்யத்தில் ஆரம்பித்துவைத்த உயிர்ப்பலிகள் கடந்த ஒரு மாதமாக இரட்டிப்பாகியிருக்கின்றன. எகிப்தில் தீவிர இஸ்லாமியப் பிரிவினரின் தலைவர் தேர்தலில் ஜெயித்து அதிபரானார். மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரைப் பதவியிலிருந்து இறக்கிய எகிப்திய ராணுவ தளபதி தனக்கேற்ப ஒரு தேர்தலை நடத்தி அதிபராக பதவி ஏற்றிருக்கிறார். இஸ்லாமிய சகோதரர்கள் கட்சியைச் சேர்ந்த அநேகர் ராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிரியாவில், ஈராக்கில், எகிப்தில், ஆப்கானிஸ்தானத்தில், பாகிஸ்தானில் கூட அப்பாவிகள் கொல்லப்படகூடாதுதான். இஸ்ரேலை கண்டிக்கிற அதே மனோபவத்துடன் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டாமா?

3. மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் (மருத்துவக் கேள்வி-பதில்’) – டாக்டர் சண்முக சிவா

டாக்டர் சண்முகம் சிவாவை அண்மையில் கோவையில் சந்தித்தேன். கோவை தமிழ் பண்பாட்டு இயக்கம் கூட்டிய ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டிற்கு வந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்த க.பஞ்சாங்கம் கட்டுரையை ‘சிற்றேடு’ காலாண்டிதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். க.பஞ்சாங்கம் உண்மையை எழுதக்கூடியவர். எனவே மருத்துவர் சண்முக சிவா ஓர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற கருத்து மனதில் இருந்தது. கடந்த கால தமிழ் புனைவுகளில் ‘ஆஜானுபாகு’ என்ற சொல்லாடல் உபயோகத்திலுண்டு, அதோடு நல்ல தேஜஸ் என்ற வடமொழி சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மனிதர்களை அளக்கும் பார்வை. வார்த்தைகள் நிதனாமாக வருகின்றன. எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன், ஈழத் தமிழ் நண்பர்கள் பலரிடமும் இது நிறைய இருக்கிறது. சிங்கப்பூர் நண்பர்களிடமும் கவனித்தேன். ஒன்றரைபக்கத்திற்குத் தங்கள் புகழ்பாடி மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நாம் ஏமாளிகளாக இருந்தால், நேற்று கிளேசியோகூட பிரான்சிலிருந்து என்னிடம் பேசினார், உங்கள் எழுத்தைப் படித்துத்தான் எழுதவந்தேன் என்றார் என என்னை மூர்ச்சை அடையச்செய்கிற படைப்பாளிகளும் தமிழில் உண்டு. தமிழினத்தின் சரிவிற்கு தம்மை எப்போதுமே உயரத்தில் வைத்து பார்ப்பதுங்கூட ( எதிராளியை குறைத்து மதிப்பிட்டு) காரணமாக இருக்கலாம். ஒரு வேளை இது நமது தேசிய குணமோ. மலேசியா தமிழர்களிடங்கூட அது பொதுப்பண்பாக இருக்கக்கூடும். அவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா? அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திகேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நாம் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டாக்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா? இலக்கிய நூலா? என்ற சந்தேகம் வாசித்து முடித்த பின்பும் நீடிக்கிறது. மருத்துவ அறிவைக்காட்டிலும் தமக்குள்ள இலக்கிய தேடலை தெரிவிக்கவேண்டுமென்ற அவா அவருக்குள் ஆழமாக இருந்திருக்கவேண்டும். திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோல அவரது நூலூடாக நோய்முதல்நாடி உருவான கருத்து.

நூலுக்குப் பிரபஞ்சன், எம்.ஏ. நு•மான் இருவரும் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். நூலைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் குறைவு, மாறாக ஆசிரியர் பற்றிய பாராட்டுமழைகள் நிறைய. சண்முகம் சிவா நிறையவே நனைந்திருப்பார்.. ஆசிரியரின் முன்னுரையிலிருந்து அவர் உள்ளூர் சஞ்சிகைகளிலும் தொலைகாட்சியிலும் வழங்கிய மருத்துவ ஆலோசனைகளே நூலாக வடிவம் எடுத்திருக்கிறதென அறிய வருகிறோம். உடல் நோய், மன நோய் இரண்டிற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூலை ஒரு மருத்துவ கையேடு எனலாம். நமக்கெழும் அநேக சந்தேகங்களுக்கு, நம்மிடமுள்ள அநேக கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திரு சண்முகம் சிவாவின் பதில்கள் மருத்துவம் அறிந்த மனிதநேயமிக்க ஒருவருவரின் பதில் போல இருக்கிறது. அவை ஒவ்வொன்றிலும் மெலிதான நகைச்சுவை அடிநாதமாக ஒலிக்கிறது. முத்தாய்ப்பாக கவிதை ஒன்று.

ஏற்கனவே கூறியதுபோன்று அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் உடல் உளம் இரண்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. வயது, சிறியவர் பெரியவர்; ஆண் பெண் பாலினப் பாகுபாடு இப்படி எதுவும் அப்பதில்களில் குறுக்கிடுவதில்லை. அனைவருக்கும் அனைத்திற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன என்பது வியப்பை அளிக்கிறது. கிட்டதட்ட பெரும்பானமையான பதில்களில் – நடிகர் கே. பாக்யராஜ் தமது தமிழ் வார இதழ் கேள்வி பதிலில், பதிலுடன் ஒரு கதையைக் கூறியதுபோல ( இப்போதும் உண்டா?) மருத்துவர் சண்முகம் சிவா கவிதை சொல்லி முடிக்கிறார். கே.பாக்யராஜ் ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்களிலிருந்தோ, இதிகாசத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தோ உதாரணத்தைக் காட்டும்போது அவரது கேள்விபதில் பகுதியே அதற்காகத்தான் வாசிக்கப்பட்டது எனச்சொல்வதுண்டு. இந்த நூலிலுங்கூட ஆசிரியரின் மருத்துவ ஆலோசனைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் அதில் சொல்லப்பட்ட கவிதைகளுக்காக வாசிப்பவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். பல நேரங்களில் கவிதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கேற்ப மருத்துவ கேள்விகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் போன்ற ஐயங்களும் எழாமலில்லை.

பத்திரிகைகள், வார மாத இதழ்களில் இடம்பெறும் அநேகக் கேள்வி- பதில்கள் தயாரிக்கப்படுபவைதான். அந்தச்சந்தேகம் கவிதைகளை வாசிக்கிறபோது இங்கும் வருகிறது. விருந்தளித்த கையோடு ‘தாம்பூலம் எடுங்க’ என்பதைப்போல மருத்துவ ஆலோசனையோடு கொசுறாக ஒரு கவிதை கிடைக்கிறது. எனக்கு ‘ஊட்டிவரை உறவு’ நாகேஷ¤ம் நினைவுக்கு வருகிறார். சிலரின் கேள்விகளை படிக்கிறபோது, அவர்கள் மருத்துவரின் கவிதைக் ‘கொசுறை’ எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. உளவியல் அறிந்த மருத்துவருக்கு இது தெரியாதிருக்குமா? கண்டிப்பாக. தமது மருத்துவ ஆலோசனையைக்காட்டிலும் தாம் படித்த, இரசித்த கவிதைகளை அடையாளப்படுத்தவேண்டும் என்பது மருத்துவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையெனில் அவர் ஜெயித்திருக்கிறார். ‘மருத்துவக் கேள்வி-பதில்’ என்ற உபதலைப்பு, நமக்கெழும் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகள் காமாசோமா அல்ல. நல்ல கவிதை மனம் இருந்தாலொழிய அப்படியான கவிதைகளை இடம் பொருள் அறிந்து உபயோகம் காண சாத்தியமில்லை.

மருந்துக்கு ஒரு உதாரணம்:

 

சில நேரங்களில் மனம் எதிலும் ஈடுபடமுடியாமல் ஒருவிதமான கவலையுடன் இருக்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம்?

மருத்துவர் சண்முக சிவாவின் பதில்:

கவிதை எழுதலாம். கவிதை எழுத வராது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். புலவர்கள் பண்டிதர்கள், கவிஞர்கள் அதனைக் கவிதை இல்லை என்று சொல்லலாம். கவலைப் படாதீர்கள். எழுதுங்கள். உங்களுடைய கவலை ஒரு தவிப்பு. அதற்கு வடிகால் வேண்டும். நமது உணர்வுக்கெல்லாம் ஆக்க பூர்வமான வடிகால்களை அமைத்துக்கொண்டால் அது பாடலாகவோ இசையாகவோ ஓவியமாகவோ இருந்துவிட்டால் நாம் கலைஞராவோம்.

சோகத்திலும் ஒரு சுகமான கவிதைக் கிடைக்கும். மொழி கைவந்துவிட்டால். உணர்வுகளுக்கு ஆடைகட்டி ஆடவிடலாம், பாடவிடலாம். மனசுக்கு சிறகுகட்டி பறக்கவிடலாம். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கலாம். கவலையில் மூழ்கிக் காணாமல் போய்விடாமல் இருக்கத்தானே கலைகள் இருக்கின்றன. கவிஞர் ஆசுவின் இந்த வரிகளைப் பாருங்கள்:

“வலிக்குது மவனே
சொமய கொஞ்சம் இறக்கி வையேன்”

“இறக்கி வைத்தேன் அம்மா
கவிதைகளாக
அதற்குள்ளும்
அழுகின்றன அம்மா
நமது வலிகள்.”
—-

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்
மருத்துவ கேள்வி-பதில்
ஆசிரியர் டாக்டர் மா. சண்முகசிவா

உமா பதிப்பகம், கோலாலம்பூர்
umapublications@gmail.com
——————————
நன்றி: திண்ணை 27/07/2014

பிரம்மிப்பூட்டும் பிரெஞ்சு சிறுகதைகள் – க. முத்துகிருஷ்ணன்

நாகரத்திNew Imageனம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து வித்தியாசமான ஐந்து சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நவீன உத்திகளைப் பின்பற்றி இந்தச் சிறுகதைகள் அமைந்துள்ளன. காலசுவடு பதிப்பித்திருக்கிறது.

எவ்லன் காலன், பத்ரிக்மோதியானோ, மார்கெரித் துராஸ், லெ கிளேஸியோ மற்றும் அலென் ஸ்பீஸ் ஆகியோரின் சிறுகதைகள் அவை.

இந்த ஐந்து கதைகளுமே மனித மனங்களில் உறங்கிக்கிடக்கும் உள்ளுணர்வுகளை உணர்வுபூர்வமான வார்த்தைகளில் விவரித்து சொல்கின்றன. இக்கதைகளில் வரும் கதை என்ன? சொல்ல இயலாதவை, படித்து மட்டுமே சிலாகிக்ககூடியவை. மனித மனங்களின் ஊடாடும் உணர்வுகளை உள்ளது உள்ளபடி இக்கதைகள் விவரிக்கின்றன.

ஒளிரும் சிவப்பும் ஓர் நிறமே என்ற எவ்லன் காலனின் கதையில் ஒரு பெண்ணின் உள்மனதில் கொந்தளிக்கும் உணர்வுகள் எழிலார்ந்த தொனியில் அமைக்கப்பட்டுள்ளது.

சேன்நதி என்ற பத்ரிக் மோதியானோவின் கதையில் தன் உதிரத் தொடர்பற்ற ஒரு குழந்தையின் பிரிவால் ஏற்படும் துயரினை உரித்து காட்டுவதோடன்றி படிப்பவர்களின் மனதில் உணர்வதிர்வலைகளை உண்டுபண்ணுகிறது.

படிப்பவர்களை முன்னிறுத்தி மனித மனம் உடல் ரீதியாக உணர்வுகள் ஓங்குதலையும் சிதைந்து சின்னாபின்னமாகிப்போனாலும் நிலை நிறுத்தி விடுகின்ற இயல்புத் தன்மைகளை விவரிக்கிறது மார்க்கரித் துராஸ் எழுதிய உயிர்க்கொல்லி என்னும் கதை. இதுவே நூலின் தலைப்பு.

பாசத்திற்காக ஏங்கித் தவித்து ஒவ்வொரு கிளைகள் போன்ற சமூக அமைப்பினரின் பிரதிநிதிகளிடம் தஞ்சம் புகுந்து ஒரு ஆன்மீகத் தேடலையோ அதற்கும் மிஞ்சிய ஒரு சொல்லவியலாத தேடலைத் தேடி அலைகிறான் மோந்தோ என்ற அனாதைச் சிறுவன். இக்கதை லெ கிளேஸியோவால் எழுதப்பட்டுள்ளது. எதையோ தேடி அலைவது அந்த மோந்தோ சிறுவன் மட்டுமல்ல, இந்த உலகம், இந்த நாடு, இந்த மக்கள், ஏன் நாமும்கூட. மோந்தோ என்ற தலைப்பில் மிக அற்புதமான உயிர் விரவிய கதை.

ஒரு மனநலம் பாதித்தவன், மன நல காப்பகம் ஆகியன உள்ளார்ந்த வாழ்வு நிகழ்வுகளை ஏக்கமான பரிதாபக்குரலில் எடுத்துரைக்கிறது அலன் அஸ்பிஸ் எழுதிய ஏன் என்ற கதை.

ஐந்து கதைகளும் வெவ்வேறு வகையான உள்ளீடுகளை உணர்வுகள் என்ற தொனி என்கிற அஸ்திவாரங்களில் மிக எளிமையாக, மிக அருமையாக அமைகின்றன. இக்கதைகளில் உலவி வாழும் கதை மாந்தர்கள் மனம் விட்டுப் பேசுவதை படிப்பவர்களாகிய நாம் நிச்சயம் கேட்டு உணரமுடியும்.

நன்றி சிற்றேடு ஜூலை – செப்டம்பர் 2014

மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்

ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் பின்புறமிருக்கிற தோட்டம். கோடைவெயிலை சுமந்தபடி அலையும் காற்று. காற்றின் அலைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீஸ்மரத்தின் கிளைகளும், கைவிரல்கள் போல பிரிந்த அவற்றின் கொப்புகளும் அசைந்துகொண்டிருந்தன. மண்தரையெங்கும் பரவலாக நாவல்போல உலர்ந்த செரீஸ் பழங்கள், உதிர்ந்த இலைகள், மிலாறுகள். இரு செரீஸ் மரங்களுக்கிடையில் நான்குக்கு இரண்டு ச.மீட்டரில் அமைந்த மரக்குடில். பிளாஸ்டிக் நாற்காலியொன்றில் கால்களைப் பின்புறமாக மடித்து அந்தோணிசாமி உட்கார்ந்திருந்தார். பார்வை அவருக்கு நேர் எதிரே, இனி தேறாது என்றிருந்த வாழைமரத்தின் மீது நிலைத்திருக்கிறது. அரையில் முழங்கால் மூட்டுவரை இறங்கிய, காக்கி நிற பெர்முடா; மேலே பூக்கள் அச்சிட்ட பொத்தான்களிடப்படாத அரைக்கை பருத்திச் சட்டை; பூத்த சாம்பல்போன்ற நரைத்த ரோமங்களுடன் மார்பு, கொளகொளவென்று மடிந்த வயிறு; தலையில் ஓலையில் முடைந்த வெள்ளை நிற ஹவாய்த் தொப்பி. தோட்டங்களில் உபயோகித்திற்கென்று தயாரிக்கப்பட்ட மேசைமீது ஒரு பீர் பாட்டிலும் கண்ணாடி கிளாஸ¤ம் இருக்கின்றன. கிளாஸின் அடிப்பகுதியில் மிச்சமிருக்கிற தேன்நிற திரவத்துடன் இணைந்துகொள்ள, விளிம்பிலிருந்து கண்ணாடி சுவரில் எச்சிலும் நீர்த்த நுரையுமாக வடிகிறது. ‘ஏவ்’ என்று புளித்த ஏப்பம் உதடுகளால் பூட்டப்படிருந்த வாயை அகலமாகத் திறக்க வைத்தது. மனைவி பிரான்சுவாஸ் பக்கத்தில் இல்லாத தைரியத்தில் புட்டத்தை உயர்த்தி அபாணவாயுவை இலகுவாக வெளியேற்றியதும், வயிறு இலேசானது. மண் தரையிலிருந்து இறக்கைமுளைத்த எறும்பொன்று தலையை இருபுறமும் அசைத்தபடி முழங்கால் ரோமங்களைச் சாமர்த்தியமாகப் பற்றி முன்னேறுவதை தாமதமாகத்தான் உணர்ந்தார். மேசையில் பேட்டிருந்த இடதுகை ஒத்துழைப்புடன் அதைத் தட்டி விட்டார். அவர் அங்கே உட்கார்ந்திருப்பது செரீஸ் பழங்களுக்கென்று வேலி தாண்ட முனையும் சிறுவர்களைத் தடுக்கவென, பிரான்சுவாஸ் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அக்கம்பக்கத்திலிருக்கிற அரபு நாட்டவர் பிள்ளைகள் வேலியைத் தாண்டிக்குதித்து செரீஸ் மரங்களில் ஏறி விடுகிறார்கள். பூமியில் அழிந்தாலும் பரவாயில்லை, அப் பிள்ளைகள் வாயில்மட்டும் போய்விடக்கூடாது என்பதில் தீர்மானமாகப் பிரான்சுவாஸ் இருக்கிறாள். அவளுக்குக் கடந்த மேமாதத்திலிருந்து வயது ஐம்பத்தைந்து. அந்தோணிசாமிக்கு இரண்டொரு வருடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக்கூடும். அவளைப் போல துல்லியமாக அவர் வயதைக் கணக்கிட முடியாது. அவர் பிறந்ததேதியோ வருடமோ நமக்குமட்டுமல்ல அவருக்கும் தெரியாது. பெயர்கூட பீட்டர் சாமியார் வைத்ததுதான். பெற்றவள் என்ன பெயர் வைத்திருப்பாளென்று ஒருவருக்கும் தெரியாது. ‘கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில்’ அவரை பெற்றுபோட்டுவிட்டு காணாமற் போனதாகச் சொல்லபட்டது. பிரான்சுவாஸை ஒரு சுற்றுலா பயணியாக புதுச்சேரியில்வைத்து சந்திக்க நேர்ந்தது. ரிக்ஷா ஓட்டும் ஒரு நபருக்கும், சேவையொன்றிர்க்கான விலையைச் செலுத்த தயாராக இருந்த பயனாளிக்குமான சந்திப்பாகத்தான் அது தொடங்கியது. இருவருக்கும் மணம் செய்துகொள்ளும் உத்தேசம் எதுவும் அந்த முதற் சந்திப்பில் இருந்திருக்க முடியாது. அவளுக்கு எப்படியோ, நம்முடைய அந்தோணிசாமிக்கு இல்லை.

முப்பது வருடங்களுக்கு முன்பு அது நடந்தது. மதியம் கடந்த நேரம். பள்ளிக்கூடப் பிள்ளைகள் சவாரியை முடித்துக்கொண்டு வழக்கம்போல தமது ஸ்டாண்டிற்கு அந்தோணிசாமி திரும்பியிருந்தார். எதிர்வெய்யிலுக்காகப் படுதாவை இறக்கிவிட்டு ரிக்ஷாவில் கண்ணயர்ந்திருந்தார். சொடுக்குப்போட்டதுபோல திரண்ட மேகங்கள் சூரியனைச் சூழ்ந்துகொண்டன. தூறலும் காற்றுமாக இணைந்து மனிதர்களை விரட்ட ஆரம்பித்தது. இறக்கியிருந்த படுதா விலக தூறலில் நனைந்த கால்களா, மனிதர் குரலா அல்லது இரண்டும் சேர்ந்துமேவா? அந்தோணிசாமியின் தற்காலிகத் தூக்கத்தை ஏதோ ஒன்று கலைத்தது. திடுக்கிட்டு எழுந்தபோது, வெள்ளைக்கார பெண்ணொருத்தி புருவ மயிர்களில் நீர்சொட்ட கழுத்தை இறக்கிக்கொண்டு இவர் எதிரே நிற்கிறாள். சவாரி வரமுடியுமா? என அவள் கேட்டதுபோலிருந்தது. இரண்டவது முறை குரலைச் செலவிட விருப்பம் இல்லாதவளாகத் தெரிந்தாள். ஒன்று இரண்டு என விழ ஆரம்பித்த மழைத்துளிகள் பல்கிப் பெருகி அடுத்த சில நொடிகளில் பறைபோல சடசடவென கொட்ட, அந்தோணிசாமி ரிக்க்ஷாவிலிருந்து இறங்கினார். அவள் ரிக்க்ஷாவில் அமர்ந்ததும் போக வேண்டிய இடத்தைச்சொன்னாள். லுங்கியை மடித்துக் கட்டினார். துண்டைத் தலையிற்போட்டுக்கொண்டார். ஹேண்ட்பாரில் ஒரு கையும், சீட்டின் பின்புறம் ஒருகையும் கொடுத்து வேகக்கால் வைத்து ரிஷாவைத் தோள்கொடுத்து தூக்க முனைபவர்போல சில அடிகள் தள்ளிக்கொண்டு ஓடினார். அதற்கு அடுத்தகட்டமாக இடப்பக்க பெடலில் ஒருகாலை ஊன்றி மறு காலால் அடுத்த பெடலைத் தொட்டு மிதித்து உடலின் மொத்தபாரத்தையும் அதில் இறக்கினார். ரிக்ஷா உருளத் தொடங்கியது. வண்டி சீராக ஓடவும், தமக்கும் பிரெஞ்சு மொழி வரும் என்பதுபோல, “மதாம் சவா?” எனக் கழுத்தை ஒடித்துக் கேட்டார். அவள் காதில் விழவில்லையா அல்லது பதில் சொல்ல விருப்பமில்லையா எனத் தெரியவில்லை, அமைதியாக இருந்தாள். அடுத்த பதினைந்து நிமிடங்களில், அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. பத்து ரூபாயோடு கூடுதலாக ஒர் இரண்டு ரூபாய் தாளை அவள் நீட்டியபோது அந்தோணிசாமி மறுத்தார். அவள் வற்புறுத்திக் கையிற் திணித்துவிட்டுச் சென்றாள். அதற்கும் மறுநாளே அவளை மறுபடியும் சந்திக்கவேண்டிவருமென அவர் நினைக்கவில்லை. நேருவீதியில் தமது ரிக்க்ஷாவில் சவாரி வந்த உள்ளூர் தம்பதிகளை இறக்கிவிட்டு எதிரே பார்த்தபோது அரிஸ்டோ ஒட்டல் வாயிலில் பூ விற்கும் பெண்மனியுடன் அதே பெண் சண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். “வண்டியை உடனே எடு!” என்ற போலீஸ்காரரின் அதட்டலைக் பொருட்படுத்தாது அவர்கள் பிரச்சினையில் குறுக்கிட இரண்டொரு நிமிடங்கள் தேவைப்பட்டன. பூவிற்கும் பெண்மணியின் கையில் மல்லிகைச் சரம் மடித்த பொட்டலம். பிரெஞ்சுப் பெண்ணின் கைவிரல்களிடை இரண்டுரூபாய் தாள் ஒன்று. அந்தோணிசாமிக்குப் புரிந்தது “மல்லிதானேம்மா, எத்தனை முழம்கொடுத்த?”, என்ற அவரின் கேள்விக்கு, ” ஒரு முழம்தான் தம்பி கொடுத்தேன், ஆனா முழம் ஐந்து ரூபாய்ண்ணு அஞ்சு விரலைக் காட்டினேன். அந்தப் பொண்ணு, இரண்டு ரூபாய் தாளை நீட்டுது” எனப் பூ விற்கிற பெண்மணி, அந்தோணிசாமியின் காதுக்குள் குசுகுசுத்தாள். அவருக்குக் கோபம் வந்தது, “ஏம்மா கொஞ்சங்கூட மனசாட்சிவேணாம், முழம் ஒரு ரூவாண்ணுதானே விக்கிற, அந்தப் பொண்ணு ரெண்டு ரூவாவை நீட்டுது. வாங்கிக்கிணு சந்தோஷமா போவியா” என்றவர் அவள் கையிலிருந்த பூச்சரத்தைப் பிரெஞ்சு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்த இரண்டு ரூபாய் தாளை வாங்கி பூக்கார பெண்மணியிடம் கொடுத்தார். பிரெஞ்சுப் பெண் முகம் மலர “மெர்ஸி” என்றாள். அச்சம்பவத்திற்குப் பிறகு பலமுறை இருவரும் குறுக்கிட்டுக்கொண்டது எதேச்சயாக நடந்ததென்று அந்தோணிசாமி நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவளாகவே இவரைத் தேடிவந்ததாக நினைத்தாள். ஒரு முறை “என்னை மணம் செய்துகொள்ள விருப்பமா” என அவரிடம் கேட்டாள். வெகுநாட்கள கேட்பாறின்றி சிதிலமாகக்கிடந்த வீடொன்றின் திண்ணையிற் குடிவைத்திருந்த “பொண்டாட்டியும் பிள்ளைகளும்” அவர்கள் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவளிடம் மறைத்துவிட்டார். இருவரும் அவள் விருப்பப்படி ஒரு கோவிலில் மணம் செய்துகொண்டார்கள். பிரான்சுக்குப்போன ஆறுமாதத்தில், அவரை அழைத்துக்கொண்டாள். இன்றுவரை ஊர் திரும்பவில்லை. பலமுறை பிரான்சுவாஸிடம் கேட்டுப்பார்த்தார் அவள் சம்மதிக்கவில்லை. ஆகாயத்தில் விமானங்களைப் பார்க்கிறபோதெல்லாம் ஊர் ஞாபகம் வருகிறது. இப்போதும் வாழைக்கு மேலே மெல்ல உருமிக்கொண்டு  தெற்கு நோக்கி விமானமொன்று போகிறது. குறுக்கிய விழிகளுடன் அந்தோணிசாமியின் பார்வையும் அதனுடன் பயணித்தது.

விமானம் அடிவானத்தில் மறைந்ததும் மீண்டும் அந்தோணிசாமியின் கவனம் வாழையின் பக்கம் திரும்பியது. தோட்டத்தில் பருவத்திற்கேற்ப பிரான்சுவாஸ் பூச்செடிகள், பிறதாவரங்களென வளர்ப்பதும் புதுபித்தலுமாக இருப்பாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு தோட்டக்கடைக்கு அவளுடன் சென்றபோதுதான் இந்த வாழையைப் கண்டார். ஊரின் ஞாபகமாக இருக்கட்டுமென்று அதை வாங்க நினைத்தார், பிரான்சுவாஸ் கூடாதென்றாள். அந்தோணிசாமி தமது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். வீட்டுத் தோட்டத்தில் அதைப் பதியமிட்டார். ஒருவாரத்திலேயே குருத்து நீண்டு இலையாக உருமாறி சிரித்தபோது, இவரது நெஞ்சில் பூபூத்து, குலைதள்ளியது. தினப்படிக்கு நீர்வார்த்தார். தழை உரம், இராசயன உரமென்று பார்த்து பார்த்து வைத்தார். குருத்துகள் தொடர்ந்தன. ஓரிலை இரண்டிலை ஆனது. முன்னிரவுகளில் விஸ்கிபோதை தலைக்கேறியதும் அதனோடு உரையாடத்தொடங்கி, பல நாட்கள் மண்தரையில் உறங்கிவிடுவார். பிரான்சுவாஸ் பிரம்பும் தண்ணீருமாக வருவாள். தண்ணீர் முகத்தில் விழும்போதே பிரம்படிகள் உட்காருமிடத்தில் விழும். சரியாக ஐந்தாவது அடியில் எழுந்து உட்கார்ந்து வாயைத் திறவாமல் கட்டிலுக்குத் திரும்புவார். அந்நாட்களில் இரவு சாப்பிடுவதில்லை. அவளும் அதற்கெல்லாம் கவலைகொள்வதில்லை. அந்த வாழைதான் திடீரென்று ஒருநாள் நிலைகுலைந்ததுபோல வாடி நின்றது. இலைகள் சுருண்டு, பசுமையெல்லாம் உறிஞ்சப்பட்டு துவண்டு தலைசாய்ந்து நிற்கிறது. அந்தோணிசாமிக்கு அதற்கான காரணங்கள் விளங்கவில்லை. பிரான்சுவாஸிடம் கேட்க தைரியமில்லை. கேட்டாலும் “உனக்கெல்லாம் அதைச் சொல்லி புரியவைக்க முடியாது” என்பாளென்று அவருக்குத் தெரியும்.

ஒரு நாள் அமெரிக்க சீரியலொன்றைப் பார்த்துவிட்டு, பார் மேசையைத் திறந்து ஆரோக்கியத்திற்கும் அவளுக்குமாக விஸ்கி பரிமாறிக்கொண்டு பிரான்ஸ¤வாஸ் சோபாவில் புதைந்தாள். தம்முடைய விஸ்கி கிளாஸ்கொண்டு, அவள் கரத்திலிருந்த கிளாஸைத் தொட்டு ‘உனது உடல் நலனிற்காக’ எனக்கூறிவிட்டு ஒரு மிடறு விழுங்கியதும் அந்தோணிசாமி: “இரண்டு வருடம் தாக்குப்பிடித்த வாழை மூன்றாவது வருடம் ஏன் கருகவேண்டும்?” எனக்கேட்டார். அவள் பதில் சொல்ல விருப்பமில்லாதவள் போல ஒரு மிடறு விஸ்கியைத் தொண்டைக்குழியில் இறக்கினாள். கண்களை மூடி, அச்சுகத்தை நரம்புகள் உடலெங்கும் கொண்டுசேர்த்து முடிக்கட்டுமெனக் காத்திருப்பவள்போல இரண்டொருநிமிடங்கள் மௌனமாக இருந்தாள். அந்தோணிசாமி நிதானமிழந்தார். அவள் கையிலிருந்த விஸ்கி கிளாஸைப் பறித்து, அருகிலிருந்த மேசைமீது வைத்தார். “இல்லை எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும், நான் விடமாட்டேன்” என்று உதடுகள் துடிக்க அவர் கூறியபோது, மது நெடிசுமந்த எச்சில் அவள் முகத்தில் தெறித்தது. இரண்டொரு நிமிடங்கள் சுவாசிப்பதைக்கூட நிறுத்திக்கொண்டு ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டனர். என்னவோ நடக்கப்போகிறதென அவர் உள்மனம் எச்சரித்தது. ‘எதுவேண்டுமானாலும் நடக்கட்டும்” என அதே மனம் அவருக்குத் தைரியமும் சொன்னது. அவள் எழுந்தாள். நெருங்கியவள் கையிலிருந்த அவர் விஸ்கி கிளாஸைப் பிடுங்கித் தரையில் வீசினாள். அது உடைந்து நான்குபக்கமும் சிதறியது. “ஒவ்வொண்ணுக்கும் உயிர்வாழ சில அடிப்படை தேவைகள் இருக்கு, அதை நம்மால சரியா கொடுக்க முடியாதென்றுதான், அன்றைக்கு வாங்க வேண்டாம் என்றேன். உங்கள் வாழைமரத்தின் முடிவுக்கு நீங்கள் தான் பொறுப்பு” எனக் கோபத்துடன் அவள் கூறியபோது, அந்தோணிசாமியும் ஏதோகேட்கவேண்டுமென்று நினைத்தார். அவள் முகத்தைப் பார்த்ததும் ‘நா காப்பது’ உத்தமமென அடங்கிப்போனார். அதன் பிறகு அவள் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள். வழக்கம்போல அன்றிரவும் சோபாவிலேயே அந்தோணிசாமி உறங்கவேண்டியிருந்தது. வாழை இருந்த இடத்தில் “ஒயிட் டேஸ்லர்’ வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்றாள், பிறகொரு நாள்.

“அந்தோணி! என்ன செய்யற? கூப்பிடுவது காதுலே விழலை. ஏற்கனவே மணி பத்து ஆகிவிட்டது. நிகழ்ச்சி ஒன்பதரை மணிக்குத் தொடங்குமென்று சொன்ன ஞாபகம்” – தோட்டத்திற்குள் காலெடுத்து வைக்காமல், வீட்டிலிருந்தபடி பிரான்சுவாஸ் குரல் கொடுத்த்தாள். வாழைமீதிருந்த கவனத்தை கரகரப்பான அவள் குரல் சிதைத்தது.  அவர்கள் வீட்டுக்கு நான்குவீடுகள் தள்ளி மொரீஷியஸ் குடும்பமொன்று இருக்கிறது. அந்தோணிசாமி ஒரு ‘தமுல்’-(Tamoul-தமிழர்) என்று அறிந்த நாளிலிருந்து அவர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அழைப்பார்கள். ஆனால் அந்தோணிசாமி-பிரான்சுவாஸ் தம்பதிகள் எங்கும் போவதில்லையெனத் தீர்மானமாக இருந்தார்கள்.  காரணம் இருந்தது. பிரான்சுக்கு வந்த புதிதில் புதுச்சேரிகாரர் ஒருவர் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார். நகரசபையில் பதிவு திருமணத்தை முடித்தபின் இரவு விருந்து. விஸ்கியும், ஒயினும் தாராளாமகக் கிடைத்தது. அந்தோணிசாமி – பிரான்சுவாஸ் மேசைக்கருகே மற்றொரு கணவன் – மனைவி ஜோடி. கணவன் இவரைப்பார்த்து: “மிஸியே அந்தோணி! ஊருலே நீங்க ரிக்க்ஷா ஓட்டினவர் இல்லை, இங்கே என்ன பண்ணறீங்க” எனக்கேட்டு, ஏதோ பெரிய நகைச்சுவையைக் கூறியதுபோல கலகலவென்று சிரிக்கிறார். மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள். பலரின் முன்னிலையில் தமது கடந்த காலத்தை அந்தப் புதுச்சேரிக்காரர் நினைவூட்டியவிதம் போதையிலிருந்த அந்தோணிசாமியைத் சீண்டிவிட்டது. சிவ்வென்று கோபம் தலைக்கேறிவிட்டது. பிரான்சுவாஸ¤க்கு அங்கு நடந்த தமிழ் உரையாடல் விளங்காமற்போனாலும், உரையாடல் நடுவே வந்து விழுந்த ரிக்க்ஷா என்ற சொல் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்திவிட்டது. அந்தோணிசாமியின் கோபத்தைத் தணிக்க நினைத்தவள்போல அவருடைய கையைப் பிடித்து இழுத்தாள். ” அந்தோணி! வம்பெதுவும் வேண்டாம், புறப்படுவோம்”, என்றாள். அந்தோணிசாமி தணியவில்லை,” ஆமா உங்க பொண்டாட்டியக்கூட லாட்ஜ்லே கொண்டுபோய் விட்டிருக்கேனே. அவங்களுக்கு இங்கே எப்படி, தொழில் பரவாயில்லையா?” எனத் திருப்பிக் கேட்க,  கட்டிப் புரண்டார்கள். மற்றவர்கள் சிரமப்பட்டு விலக்குபடி ஆனது. சம்பவத்திற்குப் பிறகு, பிரான்சுவாஸே எபோதாவது சம்மதித்தாலும், அந்தோணிசாமிக்குத் தமிழர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயக்கமாக இருந்தது. அந்த விரதத்தை முடித்து வைத்தவர் மத்யாஸ் மாஸ்ட்டர். பிரான்சுவாஸும் மது சம்பந்தப்படாத எதுவென்றாலும் வீடே கதியென்று கிடக்கிற மனுஷன் வெளியிற் போய்வர உதவுமென்றால் பரவாயில்லை என்பதுபோல அனுமதிக்கிறாள்.

போன கிறிஸ்துமஸ¤க்கு முன்பாக ஒரு பகல் வேளையில் இரண்டு பெண்கள் சூழ, மத்யாஸ் மாஸ்ட்டர் அந்தோணிசாமியின் இல்லத்திற்கு வந்தார். அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறந்ததும் “வணக்கம்” என்று ஏகக் காலத்தில் மூன்று குரல்கள். அந்தோணிசாமி “வணக்கம்” என்ற சொல்லை புத்துச்சேரியில் கூட கேட்டதில்லை. பீட்டர் சாமியார் கூட, “வாடா அந்தோணி” என்றுதான் முகமன் கூறியிருக்கிறார். “அந்தோணி! அவர்களை உள்ளே கூப்பிடு, எதற்கு வெளியிலே நிக்கவச்சிருக்க” என்றாள் பிரான்சுவாஸ். வந்திருந்த மூவரும் உள்ளே வந்தார்கள். இவரை வந்தவர்களுடன் பேசச்சொல்லிவிட்டு பிரான்சுவாஸ் போய்விட்டாள். அந்தோணிசாமி மூவரையும் சோபாவில் உட்காரவைத்தார். “என்ன குடிக்கிறீர்கள்”, எனக்கேட்டார். நாசூக்காக மறுத்த மத்யாஸ் மாஸ்டர்தான் முதலில் பேசினார். பெண்கள் இருவரும் அவர் பேசுவதை ஆமோதிப்பவர்களைப்போல ஓயாது புன்னகைப்பதும் தலை அசைப்பதுமாக இருந்தார்கள்.

“நாங்கள் மூவரும் யெகோவா சாட்சிகள். தேவனுடைய சாம்ராச்சியப் புகழைப் பரப்பும் பிரசங்கிகள். யெகோவாதான் கடவுள் என்பதை நீங்கள் நம்பவேண்டும். பரிசுத்த ஆவி என்பதெல்லாம் சுத்தப் பொய், அவர் கடவுளே அல்ல. நித்திய நரகம், நித்திய தண்டனை என்பதெல்லாம் ஏமாற்று பேச்சு. சிரியாவில் போர், ஈராக்கில் பங்காளிச் சண்டைகள், உக்ரைன் பிரச்சினை இப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் இருக்கிற ஒரே தீர்வு தேவனரசு நிறுவப்படுவது” – என மாத்யாஸ் மாஸ்ட்டர் மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டுபோக, அந்தோணிசாமிக்கு சோர்வைத் தந்தது.

– “நீங்கள் சொல்வது எதுவும் எனக்கு விளங்கலைங்க மிஸியெ”, எனக் குறுக்கிட்டார்.

– ” இதை புரிந்துகொள்வதில் என்ன சங்கடம்? நீங்கள் தமிழ் வாசிப்பீர்கள் இல்லையா?”

– “ஓரளவு எழுத்தைக்கூட்டி வாசிப்பேன்”.

– ” பிரெஞ்சு அல்லது ஆங்கிலமாவது தெரியுமா? ”

– “எனக்குத் தெரியாது. மனைவி பிரெஞ்சு வாசிப்பாங்க”

– ” எங்களிடத்தில் பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ பிரதிகள் இல்லை. தமிழில்தான் இருக்கின்றன” – என்ற மத்யாஸ் மாஸ்ட்டர் ‘காவற்கோபுரம், ‘விழித்திரு’ என்றிருந்த புத்தகங்களில் இரண்டிலும் தலா ஒன்றைக் கொடுத்தார். பின்னர் ” நாங்கள் பைபிள் வாசிக்கிறோம், நேரம் கிடைக்கும்போது அவசியம் வரவேண்டும்” எனப் பெண்களுடன் புறப்பட்டுச் சென்ற மத்யாஸ் மாஸ்ட்டர், அன்று மாலை தொலைபேசியில் “ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்கணும், வெள்ளென வந்திடுவேன். வீட்டுலே தயாரா இருங்கோ” என்றார். பிரான்சுவாஸ் சம்மதிக்க அந்தோணிசாமியும் பைபிள் படிக்கப் போகிறார்.

இப்போது ஒரு மொரீஷியக் குடும்பம் “மாரியம்மன் கஞ்சிக்கு” அழைத்திருக்கிறது. மாத்யாஸ் மாஸ்ட்டருக்குப் போன்போட்டு “மொரீஷியஸ் தமிழர்கள் ‘மாரியம்மனுக்குக் கஞ்சி’ படைக்கிறார்களாம், அழைத்திருக்கிறார்கள், இந்த ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்க வரமுடியாது” என்றார். மாத்யாஸ் மாஸ்ட்டருக்குக்கோபம் வந்தது.

– “உண்மையில் உங்களை அழைத்திருப்பது யார் தெரியுமா?

– “——” – இவர் பதில் சொல்லவில்லை.

– பிசாசாகிய சாத்தான். கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்து அவருக்கு எதிரான கலகத்தில் தன்னுடன் உங்களை இணைத்துக்கொள்ள பார்க்கிறான். பைபிள் படிப்பதைவிட்டு இப்படி சாத்தானுக்குப் பலியாகாதீர்கள்.

– மிஸியே. எனக்கு இதுபற்றியெல்லாம் விவாதிக்கப்போதாது. பைபிள் படிக்க நீங்க கூப்பிட்டீங்க வந்தேன், அவங்க மாரியம்மன் கஞ்சிக்கு கூப்பிடறாங்க போகிறேன்.

– இப்படியொரு பதிலை சொன்னால் எப்படி? தெளிவா ஒரு காரணத்தைச் சொல்லுங்களேன், பார்ப்போம்.

– எனக்குச்சொல்ல தெரியலை.

மத்யாஸ் மாஸ்ட்டரின் கையில் தொலைபேசி இருக்கிறபோதே, அந்தோணிசாமி உரையாடலைத் துண்டித்துக்கொண்டார்.
பிரான்சுவாஸ¤ம் அந்தோணிசாமியும் மண்டபத்தை நெருங்கும்போது, நான்கு பேர் மாரியம்மன் சிலையை சுமந்தபடி நடந்தார்கள். நான்கைந்தடி துராத்தில், அவர்களுக்கு முன்பாக ஒருவர் கரகத்துடனிருந்தார். சிறுவன் ஒருவன் தோளில் சூலத்தைத் தாங்கியபடி நடந்தான். இரண்டு பெண்கள் “களிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுட்டே, யுகம் பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுட்டே” எனப்பாட, மற்றவர்கள் கோரஸாக ‘ஓம் ஷக்டி’ என்றார்கள். அந்தோணிசாமியின் அண்டை வீட்டு மொரீஷியஸ் நண்பர் இவர்களைப் பார்த்துவிட்டார். “வாங்க வாங்க இப்போதுதான் ‘ஷிவ் ஜீ’ பூஜா முடிந்தது, உள்ளே போய் உட்காருங்க” என்றார். மண்டபத்திற்குள் அந்தோணிசாமியும் -பிரான்சுவாசும் நுழைந்தார்கள். பெரும்பாலோர் வெளியிலிருந்தால் பாதி நாற்காலிகளுக்கு மேலே காலியாக இருந்தன. எதிரே வரிசையாக நான்கைந்து பஞ்சலோக சிலைகள் சுவர்களில் தகுந்த இடைவெளிகளில் சாமிப்டம்போட்ட காலண்டர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. வலதுபக்கம் நாற்காலிகளை அடுத்து, நடக்க இடம்விட்டு சுவர் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவரவர் வீட்டில் செய்துகொண்டுவந்த உணவுவகைகளையும் கஞ்சிக்குடத்தையும் எல்லோரும் பார்க்கும்படி வைத்திருந்தார்கள். ஒலிபெருக்கியில் தமிழ் திரைப்படபாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. மொரீஷியஸ் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். புதுச்சேரி மற்றும் ஈழத்தமிழர்களின் குடும்பங்களும் இருந்தன. திடீரென்று மண்டபத்தில் சலசலப்பு. வெளியில் ஊர்வலம்போன மாரி அம்மன் சிலையும் மனிதர் கூட்டமும் உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல மண்டபத்தை நிறைத்த கற்பூர வாடையும் வேப்பிலை மணமும் அந்தோணிசாமிக்குப் பிடித்திருந்தது. மண்டபம் நிரம்பியதும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார். அவர்கள் மனங்களைப்படித்தார். மிக எளிதாகத்தான் எழுதப்பட்டிருந்தன . நீண்ட வாக்கியங்கள் இல்லை. புரியாத சொற்கள் இல்லை. வெவ்வேறான இழைகள் தறியில் ஒன்றிணையும் அதே சாதுர்யத்துடன் முகங்களில் பாவனைகளும், சமிக்கைகளும். ஒரு கிளிஷேக்கு தம்மை தயார்படுத்தி வந்தவைபோலவும், அக் கணத்திற்கு வாழ்ந்துமுடித்துவிட்டு நீர்த்திடவேண்டுமென்பதுபோலவும் இருக்கிற முகங்கள். பிரான்சுவாவும்-அவரும் எதிரெதிரே அமர்ந்து நடத்திய உரையாடல்களும்; மத்யாஸ் மாஸ்டரின் சாத்தான்பற்றிய விளக்கங்களும் பிறவும் ஒரு பெருங்கனவு சமுத்திரத்தின் ஜெல்லிமீன்களாக ஆழ்மனைதில் நீந்திக்கொண்டிருக்க இதுவரை உபயோகித்திராத பலத்துடன் கைகால்களை உதறி பெரும்பாய்ச்சலுடன் வெளியில் வந்தார். எல்லா நாற்காலிகளிலும் அந்தோணிசாமிகள். பெஞ்சிலிருந்த பஞ்சலோகச் சிலைகள்கூட அந்தோணிசாமிகளாகத் தெரிந்தன.

– பிரான்சுவா கொஞ்சம் உன்னுடைய மொபைலைக் கொடேன்.

– எதற்கு?

– அவசரமா ஒருத்தருக்குப் போன்பண்னனும்.

– இந்த நேரம் போன் பண்ணக்கூடாது. பிறகு செய்யலாமே.

– இப்பவே சொல்லியாகணும், பிறகென்றால் மறந்துபோகும்.

போனை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார். மத்யாஸ் மாஸ்ட்டரைப் போனில் பிடித்தார்.

– ஹலோ! மத்யாஸ் மாஸ்ட்டரா? அந்தோணிசாமி பேசறேன். நான் உங்களிடம் பைபிள் படிக்க வந்தற்கும் மொரீஷியர்கள் அழைத்தார்களென்று “மாரியம்மன் கஞ்சி”க்கு வந்ததற்கும் காரணத்தைக் கண்டுபிடிச்சுட்டேன்.

– என்ன அந்த எழவு காரணம்?

அந்தோணிசாமிகளைப் பார்க்க முடிவது

—-

நன்றி: சொல்வனம் – இதழ் 108 – 01-07- 2014

——————————————————–

 

மொழிவது சுகம் ஜூலை 10 2014

1.உண்டாலம்ம இவ்வுலகம்: செல்வேந்திரா

Asaiஅச்செய்தியை வெகு சாதாரணமாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. செல்வேந்திராவைப் பார்க்கிறபோதெல்லாம் கீழ்க்கண்ட பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன:

 

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத்தேழு வருடங்கள் காத்தனன்;
வந்தனம்; அடி பேரருள் அன்னாய்!
வைரவீ! திறர் சாமுண்டி! காளி!
சிந்தனை தெளிந்தேனிதை! யுந்தன்
திருவருட்கென அர்ப்பனம் செய்தேன்!

 
நண்பர் செல்வேந்திராவிற்கு எல்லோரும் வைத்துள்ள பெயர் ‘ஆசை’ நானும் ஆசை என்ற பெயரில்தான் அவரை அறிவேன். ‘தமிழ் வானொலி -தொலைபேசி’- ஆசை: ஒரு முக்கோண வாழ்க்கை. இலண்டனிலிருந்து ஒலிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் தமிழ் வானொலி ஒன்றின் தீவிர ரசிகர். ஆசுகவி ! கவிதைகள் அவர் கவனமெடுத்து செய்யும்போதெல்லாம் பரவாயில்லை என எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு கவிதையா? தமிழ் வானொலியா? எதுவேண்டும் எனக்கேட்டால், தமிழ் வானொலியென்று பதில் வரும். கவிதையை என்றைக்குத் தேர்வு செய்கிறாரோ அன்றைக்கு நன்றாக கவிதை வருமென சொல்லிக் கொண்டிருக்கிறேன். நண்பர் க.பஞ்சாங்கம் ஸ்ட்ராஸ்ஸ்பூர் வந்திருந்தபோது, எங்களுடன் ஜூரிச் வரை வந்தார். அவருக்கொரு வானொலி நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்து தமது அன்பினை வெளிப்படுத்திக்கொண்டவர். பிள்ளைகள், மனைவி இருக்கிறார்கள். நண்பர் பெருமிதத்துடன் மற்ற்வர்களிடம் பகிர்ந்துகொள்ளுபடியான வாழ்க்கையை அவர்கள் நடத்துகிறார்கள்; இருந்தும் அவர் தனிமனிதராக “உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்” என ஒரு சித்தரைபோல வாழ்ந்துகொண்டிருக்கிறார். கடந்த இருமாதங்களுக்கு முன் அவர் அறிவித்த செய்தி ‘இறந்த பிறகு’ எனது உடலை மருத்துவ கல்லூரிக்குப் பயன் படவேண்டும் என முடிவெடுத்து எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்றார். அவர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் என்னிடம் காட்டினார். ஊரெல்லாம் கண்தானம் பற்றி பேசுகிறார்கள். சிலர் துணிச்சசலாக அதை செயல் படுத்தவும் செய்கிறார்கள். இறந்த பிறகுதானே? என நக்கலாக சிரிப்பவர்களுமுண்டு, அந்த மனம் எத்தனை பேருக்கு வரும். இதுவரை எனக்கில்லை. “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்/தமியர் உண்டலும் இலரே வகை மக்களால்தான் “உண்டாலம்ம இவ்வுலகம்” என பாடப்பட்டது. நமக்கு எழுதவும் சொல்லவும் அழகாகவும் வருகிறது. ஆனால் செயல்படுத்த துணிச்சலில்லை. செல்வேந்திராவைப் போன்றவர்கள் சொல்வதில்லை. நற்காரியங்கள் என நாம் நினைப்பதை அல்லது சிந்தனைகளை வாய்கிழிய பேசி சாதித்ததென்ன என பல முறை யோசிக்கிறேன். பேசும் மனிதர்களால் அல்ல செயல்படுத்தும் மனிதர்களால் ‘இவ்வுலகம் உண்டாலம்ம!

 

2. பிரியங்களின் அந்தாதி – இவள் பாரதி

 
இன்றைக்குக் கவிதை என்பது உருவகங்களாற் கட்டமைத்த படிமங்களாக; பரவசங்கள், குமுறல்கள், கோபங்கள் ஆகியவற்றை அடர்த்தியான சொற் சிக்கனத்துடன் மன அனுபவத்தின் வரிசையில் சொல்வது என்றாகி இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை ஓகோவென்றிருந்த கவிதை இடையிற் சோர்ந்து இன்றைக்கு மீண்டும் இளைய தலைமுறையினரின் வரவால் புத்துயிர் பெற்றுள்ளது. இலக்கியம், ஓவியம், சிற்பம் எனச் சொல்லப்படும் மூன்றுமே கலையின் பன்முக வெளிப்பாடுகள். கலைத்துறை, உணர்ச்சியும் அறிவும் இணைந்து செயல்படும் களம். கலைத்துறைக்கு இரண்டும் வேண்டும். உணர்ச்சியோ அறிவோ தனித்து சாதிக்க முடியாது. எனினும் கலைஞன் என்பவன் அறிவைக்காட்டிலும் புலன்களால் வழிநடத்தப்படுபவன். புலன் உணர்வுகளை அறிவூடாக புரிந்துகொள்வதும், மற்றவருடன் பகிர்ந்துகொள்வதும் கலை ஆகிறது. ‘கலை’ என்பது அழகின் ‘ஞான’ வடிவம் என்றும் பொருள்கொள்ளலாம். படைப்பிலக்கியத்தில் கவிதைதான் சிறுகதை, பெருங்கதை என்கிற பிற வடிவங்களைக் காட்டிலும் ‘அழகின் அறிவு வடிவமாக அடையாளப் படுத்த உதவும் மொழியாடல். சாபக்கேடுபோல அண்மைக்காலங்களில் கவிதைகள் அதிகம் கொண்டாடப்படுவதில்லை, கவிஞர்கள் அதிகம் போற்றப்படுவதில்லை. (வருகிற தகவல்கள் சிறுகதை, நாவல்களுக்கும் சாதகமாக இல்லை. கட்டுரைகள வாசிப்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறதாம். கட்டுரைகள், பிரமுகர்களின் சுயசரித்திரம் ஆகியவற்றைப் பதிப்பிக்கவே, பதிப்பகங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனவாம்.

 

இளம்பாரதி
இக்கவிஞருடைய ‘பிரியங்களின் அந்தாதி என்ற தொகுப்பை அண்மையில் வாசித்தேன். கவிதைக்கு கலை வடிவமென்று ஒன்றிருக்கிறது. அது அழகியல் சார்ந்தது. அக்கலை வடிவம் வார்த்தைத் தேர்வுகளிலும் வாக்கியங்களைச் செதுக்குவதிலும் கிடைப்பதாகும். இவரது கவிதையிலுள்ள பூடகமற்ற மொழி, நேரான வாக்கியங்கள், அவர் கவிமனத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கின்றன. நவீன இலக்கியம் வகுத்துள்ள கருத்தியம் இவரது கவிதைகளுக்குப் பொருந்தவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவைமட்டுமே ஒரு கவிஞனை எடைபோடக் காணுமா? அதனால் ஒட்டுமொத்த கவிதைகளையும் குறைத்து மதிப்பிட முடியாதில்லையா? சொல் அலங்கராத்தை தவிர்த்த அவர் கவிதைமொழி, பாசாங்கற்ற தொனியில் உரையாடுவதே கூட அழகுதான். எதிர்காலத்தில் பல நல்ல கவிதைகளைப் படைக்ககூடிய ஆற்றல் கவிஞருக்கு உண்டென்பதை இத்தொகுப்பு தெரிவிக்கிறது. . இன்றைய தேவை இயற்கையைக் கண்டு பரவசப்படும் கவிஞர்கள் அல்ல, இச்சமுதாயத்த்தைக்குறித்து சில கணங்களேனும் அக்கறைகொள்ளும் கவிஞர்கள். எது நடந்தால் என்ன? யார் எக்கேடு கெட்டால் என்ன? ‘நான்’ ‘எனது’தான் வாழ்க்கையென வாழப்பழகிய உலகில் ( படைப்பிலக்கிய உலகும் இதில் அடங்கும்) தமது கவிதைகள் கொண்டு ஊழியம் செயும் கவிஞராக இவரைப் பார்க்கிறேன். காட்சிகளைக் கண்டு குதூகலிக்கும் மனநிலைக்கு மாறாக, அக்காட்சிக்கான காரண காரிய தேடல்களில் பங்கெடுப்பவராக, இச்சமுயாதத்தின் ஒழுங்கிசைவுக்குக்குக் குரல்கொடுப்பவராக – கலை மக்களுக்காக – என்ற கொள்கையைப் பிரகடனப்படுத்தும் கவிஞராக இருக்கிறார்.
புவி, ‘வெப்பமயமாதல்’ குறித்து அவருக்குள்ள கவலையும், அக்கவலையூடாக அவர் கட்டுகின்ற நம்பிக்கையும் இக்கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

 

வெப்பமயமாதல்

வெப்பமயமாதல் பற்றி
அடிக்கடி கனவு வருகிறது
தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திற்காக
வேரோடு அறுத்தெரியப்பட்ட
ஆண்டுகள் பலவான மரங்களைக்
கடந்து சென்ற பயணத்திற்குப்பின்

கனவிலிருந்து தப்பிக்கும்
உபாயம் ஏதும் தெரியாதபோது
நான் சாப்பிட்டுத் தூக்கியெறிந்த
மாமரத்தின்கொட்டை
கொல்லையின் ஈரப்பதம் உள்வாங்கி
முளை விட்டிருந்தது

அன்று முதல் நீரூற்றி வளர்க்க
ஆரம்பித்தேன்
அதற்கடுத்த நாளிலிருந்து
அந்தக் கனவு வருவது
நின்றுவிட்டது.

‘தப்பிய சொல்’ என்றொரு கவிதையும் இக்கவிஞர் மீது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இரு சக்கர வாகனத்தில்
மேம்பாலத்தில்
ஏறிக்கொண்டிருக்கையில்
கவிதைக்கான ஒரு சொல்லை
காதுகளில் வழிந்திருந்த
ஒரு பாடலில் இருந்து
பிடித்துக்கொண்டேன்

அலுவலகம் வந்த பின்பு
நெடுநேரம் கழிந்து வந்தது
அந்தச் சொல்லுக்கான நினைவு
மீண்டும் மீண்டும்
நினைவு படுத்திப் பார்க்கிறேன்
அந்தப் பாடலையும் முணுமுணுக்கிறேன்
உள்ளிருந்து தப்பிய அந்த சொல்
அகப்படவில்லை

பல பிரயத்தனங்களிலிம் சிக்காத
அது ஒருவேளை
என்னைத் தேடியபடியிருக்குமோ
எனும் ஆதங்கம் மேலிட
அனைத்து வேலைகளையும்
அப்படியே விட்டுவிட்டு
இருசக்கரவாகனத்தில் செல்கிறேன்
மேம்பாலம் நோக்கி
காதுகளில் இசை வழிய

‘காதலை’ பாடாத கவிஞர்கள் இருக்க முடியுமா? இளங்கவிஞர்கள் தாண்ட முடியாத சொல். இத்தொகுப்பிலும் காதல் கவிதைகளின் எண்ணிக்கைக்குக் குறையில்லை. இவரும் தன் பங்கிற்கு நிறையவே எழுதியுள்ளார். ‘வெற்றிடத்தின் கடைசிப்புள்ளி’ என்ற கவிதையில் இடம்பெறும் இவ்வரிகள் முக்கியமானவை:


இருவருக்குமிடையில்
விழத் துவங்கியிருக்கும்
வெற்றிடத்தை
எதைக்கொண்டு நிரப்புவதென
சிந்திக்கிறேன்
………………….
…………………….

வெற்றிடத்தின்
கடைசிப்புள்ளி மறையும்போது
நாம் மேற்கொண்டு பேசலாம்
ஒரு நண்பனைபோல நீயும்
ஒரு தோழியைபோல நானும்
—-
இத்தொகுப்பில் ஓரிடத்தில் கவிஞர் “எதில் தொடங்கப்படுகிறதோ அதிலே முடியவும் கூடிய விசித்திரங்களைக்கொண்டது வாழ்க்கை” எனக் குறிப்ப்டிருப்பார். அவ்வரியே இத்தொகுப்பைப் பற்றி நான்கைந்து வரிகள் எழுத தூண்டுகோலாக அமைந்தன.

பிரியங்களின் அந்தாதி
ஆசிரியர்: இவள் பாரதி
முகவரி வெளியீடு
6/25 பத்மாவதி நகர்,
இரண்டாவது குறுக்குத் தெரு
விருகம்பாக்கம், சென்னை-92

 

3.The Land of Green Plums

 

Herta Muller என்பவரின் இந்த நாவலை அண்மையில் வாசித்தேன். . தன்மையில் சொல்லப்படும் கதை. கதை சொல்லி ஓர் இளம்பெண் அவள் பெயர் நாவலில் இல்லை. ஆசிரியரின் சுயசரிதைதான் நாவல் என்று சொல்லப்படுகிறது. ருமேனிய கம்யூனிஸ அரசாங்கத்தின் இறுதிக்கால சர்வாதிகாரியாக இருந்தவர் நிக்கோலா சௌசெஸ்கு(Nicolae Ceausescu). மிக்கேல் கார்பச்சேவின் பெரெஸ்றோயிகா, ருமேனியாவையும் விட்டு வைக்கவில்லை. பிற இடங்களில் அமைதியாக கம்யூனிஸம் வீழ்ந்தது. இங்கே மட்டும் இரத்த களறியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. பலியான உயிர்களில் (1989) சர்வாதிகாரியும் அவருடைய துணைவியாரும் அடக்கம். புரட்சியாளர்கள் தம்பதிகளை கைது செய்து அவசரமாய் தீர்ப்பளித்து தீர்ப்பின் மை உலர்வதர்க்குள் சுட்டுக்கொன்றார்கள். இன்றளவும் இப் புரட்சிகுறித்து மர்மம் நீடிக்கிறது. இந்த ருமேனிய அதிபர் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டாலும் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என நடந்துகொண்டவர். அன்றைய செக்கோஸ்லோவோகியா தன்னிச்சையாக செயல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களை தடுத்த நிறுத்த சோவியத் யூனியன் வார்சா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது நேசநாடுகளின் உதவியோடு பிராகு நகரை ஆக்ரமிக்கிறது(1968) இந்த ஆக்ரமிப்பின்போது வார்சா ஒப்பந்தத்தின் அடிப்படையில் போலந்து, அங்கேரி போன்ற நாடுகள் தங்கள் படைகளை சோவியத் யூனியன் படைக்குத் துணையாக அனுப்பிவைத்தன. இதில் பங்கேற்காத நாடு ருமேனியா. இதுபோல பல விஷயங்களில் சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்கத்தியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் சௌசெஸ்கு. எனினும் வடகொரிய நாட்டின் அப்போதைய அதிபரை ரோல் மாடலாகக்கொண்டு ஆட்சி செய்தமையால் அமெரிக்கர்களின் கோபத்திற்கும் ஆளானவர் எனவே இவரை வீழ்த்த KGB, CBI இரண்டுமே காத்திருந்தன. இந்த சர்வாதிகாரியின் ருமேனியாவிலிருந்து, ஜெர்மன் மொழிபேசிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த இளைஞர் கூட்டம் தப்பநினைக்கிறது. இடையில் நாம் எதிர்பார்ப்பதுபோல கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ நாடுகளிள் அசல் முகத்தை எதிர்கொள்கிறோம். பேசகூட உரிமையற்ற மக்கள், சிறைக்கைகதிகளின் உபயோகம், பன்றிகள், மாடுகள் இறைச்சிக்காக கொல்லும் இடங்களில் இரத்தத்தைக் குடித்தும், அதன் வயிற்றிலிருக்கும் கழிவுகளை வீட்டிற்குக் கடத்திச்சென்றும் பசியாறும் தொழிலாளிகள். சர்வாதிகாரியைப்பற்றிய துதிபாடல்கள். செக்யூரிட்டேட் உளவுப்படை காவலர்களின் சந்தேக வளையம், நண்பர்களைக்கூட நம்பமுடியாத கொடூரம், கேள்விமுறையற்ற கைதுகள், சிறைவாழ்க்கை என கதை சொல்லி ருமேனிய நாட்டின் சர்வாதிகார வாழ்க்கையை விவரிக்கிறார். ஆனால் அவ்வளவும் அங்கத மொழியில் உருவகக் கதைபோல சொல்லப்படுகிறது. நாவலாசிரியர் கவிஞர் என்கிறார்கள்; கதை கவிதை மொழியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மிகமிக எளிமையாகசொல்லப்பட்டிருக்கிறது. எனினும் நாவல் நெடுக குறுக்கிடும் ஐரோப்பிய தாவரங்களின் பெயர்கள் நம்மை அந்நியப்படுத்துவதைபோன்ற உணர்வை ஏற்படுத்தித் தருகின்றன.

நன்றி: திண்ணை July 14 2014

————————————————————-

 

 

இலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-5: எடுத்துரைப்பியல் -1

P1000909(இக்கட்டுரைகள் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி)

இது எடுத்துரைப்பு உலகம், எடுத்துரைப்பின் காலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதுகுறித்த அறிவியல் பிரக்ஞையோ, பயிற்சியோ இன்றி எடுத்துரைப்பில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எடுத்துரைப்பு’ என்ற சொல்லாடல் வேண்டுமானால் நமக்குப் புதிதாக இருக்கலாம். மாறாக அதனுடைய செயற்கூறுகள் இலைமறைகாயாக மனிதர்கள் என்றைக்கு மொழியூடாக உரையாட ஆரம்பித்தார்களோ அன்றே தொடங்கிவிட்டன. குழைந்தைப் பருவத்தில் தாலாட்டிலும்; மொழி புரிய ஆரம்பித்ததும் பாட்டியின் கதையிலும் எடுத்துரைப்பு நம்மை மடியில் போட்டுக்கொண்டது. கதைகளின்றி நாமில்லை என்றாகிவிட்டோம் அதற்கான தேவைகள், கையாளும் மனிதர்கள் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் கவர்ச்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன. உண்மைகளைக் காட்டிலும் அவ்வுண்மைகளைச் சுற்றிக் கட்டப்படும் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. உண்மைகளைச்சொல்ல கதைகள் உதவியதுபோக தற்போது கதைகளைச் சொல்ல உண்மைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். எடுத்துரைப்பை நம்பியே கலைகளும், இலக்கியங்களும், திரைப்படங்களும் பிறவும் உள்ளன. ஓர் படைப்பிலக்கியவாதியை அவன் எடுத்துரைப்பை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் அது வியாபித்தித்திருக்கிறது. விளம்பரங்கள், அரசியல், இதழியல், பொருளியல், மருத்துவம்.. எடுத்துரைப்பின் நிழல்படியா துறைகள் இன்றில்லை.

“ஒருவர் தாம் கையாளும் பொருளைக்குறித்து, பிறரால் ஏற்றுக்கொள்ள்பட்ட உண்மைககளின் அடிப்படையில் காலவரிசையில் கூறினால் சரித்திரம் ஆகிறது. மாறாக அப்பொருள் குறித்த சரித்திரத்தை தம்முடைய உண்மைகளின் அடிப்படையில் தம்முடைய விருப்பவரிசையில் ஒருவர் தெரிவித்தால் கதையாகிறது”( பிரேமோன்). இரண்டுமே நடந்து முடிந்த ஒன்றை தெரிந்துகொள்ள முனையும் ஒரு புதிய மனிதருக்கு உரைப்பதாகும். ஆக சரித்திரமும் கதையும் ஒன்றுதான். பிரெஞ்சு மொழியில் Histoire (History) என்றசொல்லுக்கு ‘கதை’ என்றும் ‘வரலாறு’ என்றும் ‘பொய்’ என்றும் பொருளுண்டு. தற்போது அதிகம் வழக்கில் இல்லையென்கிறபோதும் சரித்திரம் என்ற சொல் தமிழிலும் வரலாற்றையும், கதையையும் (உ.ம். பிரதாப முதலியார் சரித்திரம்) குறிக்கும் சொல்லாக அண்மைக் காலம்வரை இருந்திருக்கிறது. பிரெஞ்சு மொழியில் எடுத்துரைப்பியலை பற்றி பேசுவதற்கு Histoire, ‘Récit, Intrigue போன்ற சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தில் அத்தனை துல்லியமாக வேறுபாடு உணர்த்தப்படவில்லை. இந்நிலையில் பேராசிரியருடைய அசுர உழைப்பைகண்டு பிரம்மிக்கவேண்டியிருக்கிறது. தமிழில் க.பஞ்சாங்கத்தைத் தவிர்த்து வேறொருவர் எடுத்துரைப்பியல் குறித்து இத்தனை நுட்பமாக தமிழ் மரபில் காலூன்றி பேசியிருக்கிறார்களா? பேசியிருப்பினும், விரிவாகவும் தெளிவாகவும் அப்பொருளைக் கையாண்டிருப்பார்களா எனத்தெரியவில்லை. நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற இந்நூலில் பத்து கட்டுரைகளை எடுத்துரைப்பியல் என்ற தலைப்பின் கீழ் வாசிக்கக் கிடைக்கிறது. “எடுத்துரைப்பியல் சில விளக்கங்கள்” என்ற முதல் கட்டுரை எடுத்துரைப்பியலை அறிமுகம் செய்கிறது. அதனைத் தொடர்ந்து ஒன்பது கட்டுரைகள், பாமரரும் விளங்கிக்கொள்ளும் வகையிற் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

1 எடுத்துரைப்பியல்: சில விளக்கங்கள்

நம்மிடம் வந்தடையும் தகவல்கள் அல்லது செய்திகள் அனைத்துமே திரித்து கூறப்படுவைதான் என்ற உண்மையை நமது தினசரி வாழ்க்கையிலிருந்து உதாரணம் காட்டுகிறார் க.பஞ்சாங்கம். ஒரு முனையிலிருந்து மறுமுனையை சென்றடையும் ஒரு தகவல் அல்லது செய்தி, அச்சம்பவத்தின் கவர்ச்சியைப் பொருத்து, அதைக்கொண்டு சேர்க்கும் மனிதரைப் பொறுத்து விரியவோ அல்லது சுருங்கவோ செய்கிறது. ஒரு நிகழ்ச்சிக்குப் “புனைவு மதிப்பு” உருவாவதன் ரகசியம் மனிதப் பிரச்சினைகளோடு தொடர்பு உடையதென்கிறார். “ஒருவர் சந்தையில் ரத்த வாந்தி எடுத்தான்” என்ற தகவல் ஒவ்வொரு மனிதராகக் கடந்து இறுதியில் “நம்ம தெரு நல்லதம்பி இருக்கான்ல, அதான் ஒங்க சித்தப்பா மகன் நல்லதம்பி , மந்தையில காக்கா காக்காவா வாந்தி எடுத்தானமில்ல. உனக்குத் தெரியுமா? என்னப்பா அதிசயம்!” எனமுடிகிறது. “பேனை பெருமாளுக்கும்” கலையில் மனிதர்கள் எல்லோருமே தேர்ந்தவர்கள்தான். ஒரு கதைக் கட்டுக்கதையாகும் இரகசியத்தை – புனைகதையாக உருமாறும் நுட்பத்தை நம் அன்றாட வாழ்க்கை நரம்புகளின் துணைகொண்டு சொல்ல கட்டுரைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களுக்குச் சாத்தியமில்லை. புனைவும் வசப்படவேண்டும், மனிதர் கற்பனைகளுக்குள் ஊடுறுவும் வல்லமையும் வேண்டும். எனவேதான் மொழியியல், படைப்பியல் இரண்டையும் நன்கறிந்த க.பஞ்சாங்கம் எடுத்துரைப்பு குறித்து பேசுவதை நாம் கேட்கவேண்டியவர்காளாக இருக்கிறோம். பேராசிரியர் சொல்வதுபோல இன்றைக்கு ஊடகங்கள் மூலமாக நம்கவனத்திற்கு வருகிற தகவல்கள், செய்திகள், உண்மையென நம்பிக்கொண்டிருக்கிற வரலாறுகள், ஆவணங்கள், திரைப்படங்கள், துணுக்குகள், சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே எடுத்துரைப்பு களமாக, தளமாக விளங்குகின்றன.

எடுத்துரைப்பின் குணநலன்களைப் பேசவருகிற அவர் பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டுவது அழகு:

“இன்பமெனச் சிறுகதைகள் -எனக்கு
ஏற்றமென்றும் வெற்றியென்றும் சிலகதைகள்
துன்பமெனச் சிலகதைகள் – கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சிலகதைகள் ( ந. இ.கோ. பக்.131)

புனைகதை எடுத்துரைப்பைப் பற்றி பேசுவது கட்டுரை ஆசிரியரின் நோக்கம் என்பதால் ‘இலக்கியம், இலக்கியத்தின் வகைமைகள்,கலை, வடிவங்கள் குறித்தும் சுருக்கமான அறிமுகங்கள் உள்ளன. அவை கட்டுரையின் மையப்பொருளை நோக்கி நம்மை அழைத்து செல்ல உதவுகின்றன. “புனைகதை எடுத்துரைப்பு என்பது தொடர் நிகழ்ச்சிகளால் ஆனது, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ‘புனைவு மதிப்பு’ என்பது மனிதப்பிரச்சினைகளோடு தொடர்புடையவை” என ஆசிரியர் தரும் குறிப்புகளும் கவனத்திற்கொள்ளதக்கவை.

 எடுத்துரைப்பு என்பது என்ன?

1. நிகழ்ச்சிகள். 2. நிகழ்ச்சிகளுக்கான வார்த்தைக் குறியீடுகள். 3. எடுத்துசொல்லும் அல்லது எழுதும் செயல்பாடென்றும் முறையே மூன்று அலகுகளாலானவை எனக்கூறி, அவையே கதை(story), பனுவல் (Text), எடுத்துரைப்பு (Narration) என மொழியியல் வல்லுனர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன என ஆசிரியர் தெரிவிக்கிறார். “பனுவலிலிருந்து நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, தேவைக்கேற்ப சுருக்கி எடுத்துக்கொள்ளப்படும் எடுத்துரைப்பு நிகழ்ச்சிகள் – கதை யென்றும்; பேசுகின்ற அல்லது எழுதுகின்ற மொழியாடலே பனுவலென்றும் விளக்கம் கிடைக்கிறது.

எல்லாவிதமான புனைகதை எடுத்துரைப்புகளையும் ஆராய்வதற்குப் பொதுவான ஒரு முறையியலை உருவாக்குவதற்காக இப்பகுதி எழுதப்பட்டதென்பதை முதலாவது காரணமாகவும்; தனிப்பட்ட ஒரு எடுத்துரைப்பு வகையினைப் பிரித்தெடுத்து அதைக் கற்றுகொள்வதற்கான ஒரு வழிமுறையைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நோக்கம் இரண்டாவது காரணமென்றும் கட்டுரை ஆசிரியர் தெரிவிக்கிறார். எடுத்துரைப்பியல் கட்டுரைகளில் அடிக்குறிப்பாக வருகிற செய்திகள் முக்கியமானவை. பல கலைச்சொற்களை சந்திக்கிறோம், அவை நமக்குப் புதியனவும் அல்ல. எனினும் எடுத்துரைப்பியல் பின்புலத்தில் கேட்டிராத தொனியில் அவை ஒலிக்கின்றன. அவற்றில் மூன்று சொற்களைப் பற்றி பேராசிரியர் இங்கு சற்று விரிவாக தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பனுவல் (Text), புதிய வரலாற்றியல் (The New Historicism), மொழியாடல் ( Discourse) ஆகியவையே அந்த மூன்று சொற்கள்.

பனுவலா? பிரதியா?

Text என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் அறிஞர்களில் ஒரு பிரிவினர் ‘பிரதி’யென்றும் மற்றொரு பிரிவினர் பனுவல் என்றும் அழைக்க இரண்டுமே வழக்கிலுள்ளதை ஆசிரியர் சுட்டிக்காட்டிவிட்டு தமக்குப் பனுவல் என்ற சொல்லே ஏற்புடையதென்று தெரிவிக்கிறார். அகராதியை புரட்டிப் பார்த்தபோது எடுத்துரப்பியலில் உள்ள Text என்ற சொல்லுக்கு பிரதி பொருந்திவதைப்போல தெரிகிறது. இன்னொரு பக்கம் நடைமுறை வழக்கில் copy என்ற சொல்லுக்குப் பிரதி என்ற சொல்லை பயன்படுத்திவருவதைப்பார்க்க, அதே ‘பிரதி’ என்ற சொல்லை எடுத்துரைப்பியல் மொழிக்கும் பயன்படுத்தினால் குழப்பத்தைத் தராதா என்ற ஐயமும் வருகிறது. இது மொழியியலாளர்கள் தீர்மானிக்கவேண்டிய ஒன்று. பனுவல் என்ற சொல்லோடு வேறு சில பிரச்சினைகளையும் ஆசிரியர் எழுப்புகிறார். அதிலொன்று, அண்மைக்காலங்களில் படைப்பு,படைப்பாளி, வாசகன் குறித்து தரப்படும் புதிய விளக்கங்கள். விக்கிரமாதித்தன் கதை கேள்விபோல பின் நவீனத்துவவாதிகள் எழுப்பும் கேள்வியை [ஒரு படைப்புக்கு யார் சொந்தம் கொண்டாடுவது ” படைத்தவனா” (எழுதாளனா?) “உயிர்கொடுப்பவனா” (வாசகனா?)] ஆசிரியரும் எழுப்புகிறார். ரொலாண் பர்த்தின் கருத்துக்களை முற்றாக மறுத்தும் நூல்கள் பல வந்துவிட்டன. இலக்கியம் என்பது அறிவியல் அல்ல, இங்கே முடிவான உண்மைகளுக்கு சாத்தியமில்லை.

புதிய வரலாற்றியல்

அமெரிக்க திறனாய்வாளர் ஸ்டீபன் க்ரீன்ப்ளாட் என்பதுகளில் பயன்படுத்தியை இப்புதிய இலக்கிய சித்தாந்தம், பிநவீனத்துவத்தின்கீழ் பலகோட்பாடுகளை உள்ளடக்கியதென்கிறார் கட்டுரை ஆசிரியர். இப்புதிய வரலாற்றியலின்படி “வரலாற்றுக்குள் புனைவையும் புனவுக்குள் வரலாற்றையும் தேடி அடையலாம்……. வரலாற்று தகவல்கூட ஒரு கதைதான்….ஒவ்வொரு தலைமுறையும் தன் காலத்தின் தேவைக்கு ஏற்ப இறந்த காலத்தை வரலாறு என்ற பேரில் மாற்றி எழுதிக் கொள்ளுகின்றன..”( ந.இ.கோ. பக்கம் 136)

டிஸ்கோர்ஸ் ( Discourse)

மொழியியலில் மிகவும் முக்கியமானதொரு சொல்லாக கருதப்படுகிற இச்சொல்ல்லைக்குறித்து, “எடுத்துரைப்பியல்: சில விளக்கங்கள் என்ற இக்கட்டுரையின் அடிக்குறிப்பு விரிவாகப் பேசியிருக்கிறது. மிஷெல் •பூக்கோ என்கிற பிரெஞ்சு மொழியியல் அறிஞர் இச்சொல்லுக்கு ஒரு பன்முகப்பார்வையைக் கொடுத்திருக்கிறார். வெகுசன வழக்கில் ‘டிஸ்க்கூர்'(Discours) என்ற பிரெஞ்சு சொல்லுக்கு சொற்பொழிவு அல்லது உரை(பேச்சு) என்றே பொருள். பிரெஞ்சு அகராதியில் பொருள் தேடினால்: மேடையில் பேசுதல்; கொடுத்த தலைப்பில் விரிவாகப் பேசுதல்; சீராக முன்னெடுத்துச்செல்லும் பேச்சு; மேடைப்பேச்சுகென்று எழுதி தயாரித்த உரை என்றெல்லாம் பொருள் இருக்கின்றன. இவற்றை யெல்லாம் கணக்கிற்கொண்டே மொழியியலுக்குள் மிஷெல் பூக்கோ இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு. இலத்தீன் மொழியை வேர்சொல்லாகக் கொண்ட இப்பிரெஞ்சு சொல்லுக்கு ‘சொல்லாடல்’ என்ற தமிழ்ச்சொல்லை விட ‘மொழியாடல்’ என்ற தமிழ்ச்சொல் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

2. கதையும் நிகழ்ச்சியும்

எடுத்துரைப்பியலில் க.பஞ்சாங்கத்தின் இரண்டாவது கட்டுரை.

“கதை என்பது என்ன? ‘கதை’ என வொன்று இல்லாமல் மனித இருப்பு சாத்தியமா?” என்ற கேள்விகளை எழுப்பும் ஆசிரியர் அதற்கான பதிலையும் கூறிவிடுகிறார். அவரது கூற்றுப்படி கதை என்கிற ஒரு கூறுதான், உலக நிகழ்ச்சிகளை எடுத்துரைப்புப் பனுவலாக மாற்றிப் போடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எனினும் இதொரு நுட்பமான கருத்தியலாகக் கதை பனுவலுக்குள் விளங்குவதால் வாசகருக்கு இது நேரடியாக எளிதில் வசப்படக்கூடியதாக இல்லை எனும் கூற்றை நாம் மறுப்பதற்கில்லை.

“திரும்பத் திரும்பக் கதையை சலிக்காமல் கூறும் பண்பு, ஒரே கதையில் பல்வேறு வடிவங்களை எளிதில் கண்டு கொள்ளும் திறம் வெவ்வேறு ஊடகங்களில் அதே கதை எப்படியெல்லாம் மாறி விளங்குகிறது என்பதை அடையாளம் காணும் திறம் ஆகிய திறங்களை உடையவர்களால்தான் கதை வடிவத்தை விளக்க முடியும்” என ஆசிரியர் கூறுவதைப்போல இப்பகுதி சாதாரண வாசகர்களுக்கு அத்தனை எளிதாக விளங்கக்கூடிதல்ல.

கதையின் உள்ளார்ந்த அமைப்பு – குறியியல்:

எடுத்துரைப்பியலில் குறியியல் ( Sémiotique) குறித்து ஆய்வு செய்து அதன் பண்பாட்டை வரையறை செய்தவர் அமெரிக்க அறிஞரான சார்லஸ் சாண்டர்ஸ் பியெர்ஸ் ( Charles Sanders Peirce). பின்னர் சுவிஸ் மொழியியலாளர் பெர்டினான் தெ சொஸ்ஸ¤ய்(Ferdinand de saussure) என்பவருக்கு குறியியல் சமூகத்தில் பொதிந்துள்ள குறியீடுகளின் உயிர் வாழ்க்கைச் சம்பந்தப்பட்ட அறிவியல்.
ஒரு கதையோட்டத்தில் குறியியல் ஆய்வு என்பது இருவகையானது:
எடுத்துரைப்பில் தொழில் நுட்பங்களை ஆய்வதென்பது முதலாவது; கதைசொல்லல் எனும் பிரபஞ்சத்தினுடைய நிர்வாக சட்டதிட்டங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென்பது இரண்டாவது. இவற்றைக்கூட பொது அலகொன்றினால் அள்விட முடியாது. இருவகையான அணுகுமுறைகள் தேவையென்கின்றனர் இத்துறையில் ஆய்வினை மேற்கொண்ட மொழியியல் வல்லுனர்கள்: அவர்களின் முடிவின்படி:

1. அனைத்து தொடர் நிகழ்வுகளையும்கொண்டு உருவாகும் ஒரு கதை புரிதலுக்குரியதாக இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்த தர்க்கத்தை பிரதிபலிக்கும் சட்டங்களின் கீழ் அணுகுவது முதலாவது வகை.

2. மேற்கண்ட நிர்பந்தந்துடன், அக்கதைக்கென ஏற்படுத்திக்கொண்ட பிரத்தியேக மரபு; பண்பாடு, இலக்கியம், நிகழ்வு அரங்கேறும் காலம், கதை சொல்லியின் பாணி போன்ற காரணிகள் இணைந்து நடைமுறைபடுத்துகிற சட்டதிட்டங்களின் லீழ் அணுகுவதென்பது இரண்டாவது வகை.
ரஷ்ய எடுத்துரைப்பு ஆய்வாளர் விளாதிமீர் ப்ராப், பிரேமோண்ட், கிரேமோஸ் போன்ற அறிஞர்களின் மொழியியல் உண்மைகளைக்கொண்டு ஆசிரியர் கதையின் உள்ளார்ந்தை அமைப்புகளை விளக்க முற்படுகிறார். குறிப்பாக கிரேமாஸ் (Greimas) திறனாய்வாளரின் நிகழ்ச்சியைக் குறியீடுபடுத்தலில் உள்ள இரண்டு தளங்கள்: 1. வெளிப்படையாகத் தெரியும் எடுத்துரைப்புத் தளம். 2. உள்ளார்ந்து அமையும் தளம். “எடுத்துரைப்பின் அமைப்பியல் பற்றிய புரிதலில் ஓரளவிற்காவது பயிற்ச்யில்லாமல் வாசகர்கள் பனுவலில் சொல்லப்பட்டிருக்கும் இயற்கை மொழிமூலமாக அப்பனுவலுக்குள் இருந்து கதையைக் கண்டுணரமுடியாது” எச்சரிக்கயை மீண்டும் நாம் சந்திக்கிறோம்.

எடுத்துரைப்பியல் பற்றிய கருத்தாக்கங்கள்

எடுத்துரைப்பியலை மதிப்பிட மேற்கத்திய மொழியியல் அறிஞர்கள் முன்வைத்த அலகுகளைக் குறித்து இப்பகுதி பேசுகிறது. குறிப்பாக மொழியியல் துறை விவாதிக்கிற மொழியின் மேனிலை மற்றும் ஆழ்நிலை அமைப்பு எடுத்துரப்பியலுக்கும் பொருந்தும் எனத் தெரியவருகிறது. லெவிஸ்ட்ரோஸ், கிரேமாஸ் போன்றோரின் அறிவியல் உண்மைகளை தமிழ் நிலத்திற்குப் பொருந்தும் வகையில் ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டிருப்பது சிறப்பு.

ஆழ்நிலை எடுத்துரைப்பு அமைப்பு என்பது வாய்ப்பாடு அல்லது சூத்திரம் தன்மையது என்பதை உருதிப்படுத்தும் வகையில், மானுடவியல் அறிஞரான லெவிஸ்ட்ரோஸ் தொன்மத்தின் அடிப்படையில் ஆய்வினைமேற்கொண்டு ” “எதிர் இணைநிலைகளைக்கொண்டு இயங்குகிற முதுகுடி சார்ந்த படைப்புகளை முழுமையற்ற தன்மைகொண்டவை எனக்காரணம் காட்டி மனித இனம் விலக முடியாது” என முன்வைத்த உண்மையின் அடிப்படையில் கிரேமாஸ் என்பவரின் குறியீட்டுச்சித்திரங்களின் அடிப்படையில் இரண்டுவகையான மிகக்குறைந்த அலகுகளையுடைய எதிரிணைகளை விளக்கியிருக்கிறார்.

மேனிலை எடுத்துரைப்பு அமைப்பு என்பது கதைச் சுருக்கத்தின் (Plot) பிரச்சினைகளை பேசுவதன் ஊடாக விளக்குதலில் எதிர்கொள்கிற சிக்கல்களை அலசுகிறது. கதை என்பது குறியீடுகளின் தொகுதியான பனுவலிலிருந்து சுருக்கமாகக் கட்டமைக்கப்பட்ட கருத்தியல், எனவே மொழியியல் வல்லுனர்களுக்கு அது தன்னளவிலேயே புரிய முடியாத புதிர். இந்த ஒரு காரணத்தினாலேயே கதையொன்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறபொழுது, இக்கதைச்சுருக்க பிரச்சினையுடனேயே தொடங்கவேண்டியிருக்கிறது. கதையைத் தொடர் நிகழ்ச்சிகளின் பெயர் முத்திரையாக மொழியிலாளர்கள் பார்க்கும் காரணம் இதுதான். ரொலாண்ட் பர்த்தினுடைய ஐந்து வகையான வாசிப்பு முறைகளில் இப் பெயர்முத்திரை வாசிப்பு அணுகு முறையும் ஒன்றெனச் சொல்லப்படுகிறது.
இப்பகுதியில் நாம் விளங்கிக்கொள்வது “வாசகர் தமது வாசிப்புத் தளத்தில் தன்னுடைய அறிவுத் தேவைக்கேற்ப ஒரு தலைப்பைக் கதைக்கு அமைத்து கொள்கிறார். வாசிப்பில் முன்னேறிச் செல்ல செல்ல தொடக்கத்தில் இட்ட தலைப்புகளை அவர் மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்”. கிடைக்கும் வேறொரு சுவாரசியமான செய்தி, “கதைக்கு மாறாக, கதைச்சுருக்கம் கால வரிசைப்படி எழுதப்படவேண்டும், அவ்வாறில்லையெனில் அது கதைச் சுருக்கமாகாது.

கதை நிகழ்ச்சிகள்

“ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுகிற காரியமே நிகழ்ச்சி”. இப்பண்பு ஒரு பனுவலில் கதையை உருவாக்கும் ஒரு செயலி. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளே கதையை பனுவலுக்குள் நடத்துகின்றன. இங்கே ‘நிலை அமைதி’ மற்றும் “இயங்கும் நிகழ்ச்சி” என்கிற இரண்டு சொற்களையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆசிரியர் பனுவலின் கதை நிகழ்வை நிகழ்வுகளின் இயக்கமாக, வெகு எளிமையாக விளக்கிச்சொல்கிறார். அவருடைய மொழியில் சொல்வதெனில் “அடுத்து வருகிற நிலவமைதிகள் வரிசையாக வருகிற நிகழ்ச்சியாக தன்னளவில் வளர்ந்து கொள்கின்றன” இந்நிகழ்ச்சிகள் அவற்றின் செயல்பாட்டளவில் இருவகைப்படுகின்றன. முதலாவது: தமக்கு இணையான வேறொரு மூலத்தை அல்லது தொடக்கத்தை உருவாக்குதல்; இரண்டாவது: ஒரு மூலத்தை அல்லது தொடக்க சம்பவத்தை விரிவு படுத்துகிற கண்ணிகளை பின்னுதல்.

நிகழ்ச்சிகளும் தொடர் ஒழுங்குகளும்

நிகழ்ச்சிகள் இணைந்து ஒழுங்கான தொடர்ச்சிகளாக மாறுவது எப்படி? ஒழுங்கான தொடர்ச்சிகள் எவ்வாறு கதையாகின்றன என்ற வினாக்களை எழுப்பி இரண்டு அடிப்படை விதிமுறைகள் இருக்கின்றன என்கிறார். ஒன்று: காலம் சார்ந்த தொடர் ஒழுங்கு இரண்டு: காரணகாரிய தொடர் ஒழுங்கு.

காலம் சார்ந்த தொடரொழுங்குவில் “கதைக்காலம் பற்றிய கோட்பாடு மிகச் சிறந்த முறையில் காலவொழுங்கோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய மரபோடு தொடர்புடையதாக இருக்கிறது. எனவே இது “கதையினுடைய எதார்த்தமான பன்முகப்பட்ட பண்பினை மாற்றி அந்த இடத்தைப் பதிலீடு செய்கிறது. இவ்வாறு செய்வதன்மூலம் போலியான ஓர் இயல்புத் தன்மையை ஏற்படுத்துகிறது”.

காரண காரிய தொடரொழுங்கில் ‘அதுவும் அதற்குப் பிறகும்’ என்ற காலம்சார்ந்தும் ‘அது ஏன் அல்லது அது ஏனென்றால்’ என்ற காரணகாரியத்தோடும் தொடர்ச்சி நிகழ்கிறது.

மிகக்குறைந்த அளவிளான கதை:

மேற்கண்ட இரண்டினுள் எது கதையை முன் நகர்த்துகிறது என்ற கேள்வி ஒரு புறமிருக்க பேராசிரியர் பிரின்ஸ் என்பவரின் மற்றொரு ஆய்வுக் கருத்தையும், நிகழ்ச்சிகளை முன்வைத்து இங்கே நினைவூட்டுகிறார். அது மிகக்குறைந்த அளவிளான கதை என்ற கருத்தியம்: உ.ம். 1. அவன் பணக்காரனாக இருந்தான்; 2. பிறகு நிறைய பணத்தை இழந்தான்; 3. அதன் விளைவாக அவன் ஏழையாகிவிட்டான். . இக்கருத்தியம் மூன்று காரணிகளால் உருவானது: 1. காலத்தொடர்ச்சி 2.காரண காரிய உறவு 3. தலைகீழ் மாற்றம் இம்மூன்றும் காரண காரிய உறவோடு கூடிய அணுகுமுறைக்கு ஒரு முழுமைத் தன்மையை வழங்குபவை.

நிலையான அலகுகளும் செயற்கூறுகளும்

நிலழ்வுகளின் பொது அலகை கண்டறிய ரஷ்ய அறிஞர் விளாடிமீர் ப்ராப் , அந்நாட்டின் வனதேவதை கதைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். அதில் அவர் அறியவந்த உண்மை, தனிக்கதைகளுக்கு இவைதான் காரணமென சுட்டப்படும் தகுதிகொண்ட நிகழ்வுகளும், நிரந்தரமற்ற பிற காரணிகளும் சேர்ந்தே நிலையான அலகுகளை கட்டமைக்கின்றனவென்றுகூறி, தனிக்கதைகளை வடிவமைக்கிற இந்நிலையான அலகுகளை செயல் கூறு என அழைத்தார்.

விளாடிமீர் நிகழ்ச்சியின் செயற்கூறுகளை இருவகையில் பொருள்கொள்கிறார். “செயற்கூறு என்பது எந்த ஒன்றிலும் முழுமையாக செயல்படும் முறையியல்மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிகொள்ளுகிறது”, அடுத்ததாக “செயற்கூறு மற்றவையோடு கொள்ளுகிற உறவானது வெவ்வேறுபட்ட அளவை உடையது என்ற முறையில் இயங்கி அதன் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுகிறது. பிராப்பின் முடிவுகள் நான்கு :

1. கதை மாந்தர்களின் செயல்பாடுகள் எப்படி, யாரால் நிறைவுற்றன என்பவைபற்றி பொரு படுத்தாமல், அவைகள் ஒரு கதையில் நிலையான கூறுகளாக அமைந்துள்ளன.

2. வனதேவதை கதைகளில் அறியப்படும் செயற்கூறுகளின் எண்ணிக்கை அள்விடக்கூடியதாகும்.

3. செயற்கூறுகளின் வரிசை முறை எப்பொழுதும் ஒரே மாதிரியானதாகும்.

4. வனதேவதை கதைகளின் அமைப்பைபொருத்தவரை எல்லா கதைகளும் ஒரே மாதிரியானவை

விளாடிமிர் முடிவை கட்டுரை ஆசிரியர் இப்படி சுருங்க உரைக்கிறார்: “கதையில் ஒரு செயற்கூறு மற்ற செயற்கூறுக்குத் தானாகவே இயங்கிச்செல்கிறது. ஒவ்வொரு செயற்கூறும் இரண்டு மாற்றுக்கூறுகளையும் இரண்டு திசைகளையும் தொடங்கிவைக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கதை உருவாக்கம் நிகழ்கிறது.”

விளாடிமிரைத் தொடர்ந்து அவர் வழியில் கதை நிகழ்வுகளில் ஆய்வினை மேற்கொண்டவர் பிரெஞ்சு மொழியியல் அறிஞர் குளோது பிரேமோன் (Claude Bremond): ” எல்லா வரிசைமுறைகளும் வளர்கின்றன அல்லது கெட்டுவிடுகின்றன” “ஒரு வளர் நிலையிலான வரிசைமுறை பற்றா குறையினாலோ அல்லது சமநிலை இன்மையினாலோ தொடங்குகிறது.

இறுதியாக பேராசிரியர் இக்கட்டுரையில் ( கதையும் நிகழ்ச்சியும்) “ஒரு தெளிவான முறையியலை இதுவரை அமைக்க முடியவில்லை ” என முடிக்கிறார். பிறதுறையில் வேண்டுமானால் எடுத்துரைப்பு நிகழ்வினைப்பற்றிய ஆய்வுகள் ஒரு தெளிந்த முடிவினைக்கொடுத்திருக்க வாய்ப்புண்டு. (இதுவரை பிற துறைகளை, ஆய்வுக்கு மொழியியல் அறிஞர்கள் அதிகம் எடுத்துக்கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை) கதை சார்ந்த தளத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். காரணம் இக்கட்டுரையின் இடையில் சொல்லப்பட்டதுபோல கதைசொல்லும் பிரபஞ்ச நிருவாகத்தில் இருவகையான சட்டங்கள் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு உண்மை அவை புரியாததும் புதிருக்குரியதுமான மொழியில் சொல்லப் பட்டுக்கொண்டிருப்பதும்.

(தொடரும்)