Category Archives: Uncategorized

விற்பனைக்கு(à vendre)….

                          கி தெ மாப்பசான்

                                       தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

சூரியன் உதிக்கும் போது,  பனி பெய்த பூமியில், ஒருபக்கம் வயல்கள், மறுபக்கம் கடலென்றிருக்க, இரண்டிற்கும் நடுவே நெடுக காலாற நடப்பதில்தான் எவ்வளவு சுகம்!  

 எவ்வளவு சுகம் !  கண்கள் ஊடாக ஒளியாகவும், மூக்குத் துவாரங்கள்  வழியாக சுவாசக் காற்றாகவும், உடலூடாக வீசும் காற்றாகவும் நம்முள் அது பிரவேசிக்கிற போது !

பூமி என்றதும் மிகவும் தெளிவான, அசாதரண, துல்லியமான, நினைவுகள் நம்மிடம், அந்நினைவு இனிமையான, கணநேர மனக்கிளர்ச்சிக்குரியது: ஒரு சாலையின் வளைவில், பள்ளத்தாக்கொன்றின் நுழைவாயிலில், ஆற்றங்கரையோரம், கண்ட காட்சிகளால், உணரப்படுபவை, மனதிற்கிசைந்த அழகான ஒருத்தியை சந்தித்ததுபோல, பூமி விஷயத்தில் மட்டும் இத்தனை பிரியமிக்க தருணங்களை நாம் நினைவில் வைத்திருப்பது ஏன் ?

நான் திக்குதிசையின்றி நடந்த நாட்கள் எத்தனையோ, அதில் ஒருநாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றைய தினம் ஃபினிஸ்த்தேர்(Finistère) முனையைக் குறிவைத்து பிரெத்தாஜ்ன்(Bretagne)  பிரதேச கடற்கரையையொட்டி, எவ்விதச் சிந்தனைகளுமின்றி வேகமாக நடந்து கொண்டிருந்தேன். பிரெத்தாஞ்ன் பிராந்தியத்தின் கண்ணுக்கினிய அழகான பகுதி, காம்ப்பெர்லே (Quimperlé) அதிக தூரத்தில் இல்லை, பக்கம். 

இளவேனிற்காலத்தின் காலைநேரம். நம்முடைய இருபதுவயது இளமையை மீட்டெடுக்கக்கூடிய, நம்பிக்கைகளை மறுகட்டமைப்புச் செய்து, பதின் வயது கனவுகளைத் திருப்பித்தரவல்ல காலைகளில் ஒன்று.

திசைகள் பிடிபடாத நிலையில், கோதுமை வயல்களுக்கும், அலைகடலுக்குமிடையில் நடக்கவேண்டியிருந்தது. அலைகளாவது அவ்வப்போது அசைந்தன, கோதுமைக் கதிர்களில் அசைவென்பதே இல்லை. முற்றிய  கோதுமைக் கதிர்களின் மணத்தையும்,கடற்பாசியின் மணத்தையும் நுகர்ந்தவண்ணம், எவ்வித சிந்தனையுமின்றி. முன்னோக்கி, பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த பயணத்தின் தொடர்ச்சியாக அன்று பிரெத்தாஞ் கடற்கரைப் பகுதிகளில் திரிந்து கொண்டிருந்தேன். சோர்வென்று எதுவுமில்லை, மாறாக சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும்,உற்சாகமும் என்னிடமிருக்க நடந்துகொண்டிருந்தேன்.

எதைக் குறித்தும் யோசனைகளில்லை. தன்னை மறந்து, ஆழமாக, சரீரத்திற்கு சுகமளிக்கும் இயற்கை இன்பத்தில் திளைக்கிறபோதும், சந்தோஷ மிருகம் புற்களிடையே ஓடும் போதும் அல்லது அதுவே ஒரு இராட்சஸ பறவைபோல  நீல ஆகாயத்தில் பகலவன் முன்பாக பறக்கிறபோதும் வாய்ப்பதெல்லாம் மகிழ்ச்சிக் கணங்கள்,  இந்நிலையில் எதைப் பற்றிச் சிந்திக்கபோகிறேன்? தூரத்தில் பக்திப் பாடல்களின்    ஓசை. அன்று ஞாயிற்றுக்கிழமை, எனவே கிறித்துவ சமய ஊர்வலமாக இருக்கலாம். இரண்டொரு அடியெடுத்துவைத்து திருப்பமொன்றில் அசையாமல் நின்றேன், மனதில் ஒருவித சிலிர்ப்பு. ஐந்து பெரிய மீன்பிடி பாய்மரப்படகுகள், அவற்றில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளென்று மனிதர்கூட்டம், அவர்கள் ப்ளூனெவென் (Plouneven) புனிதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களென விளங்கிக்கொண்டேன்.

சொற்பநேரமே நீடித்த மென்காற்று, பழுப்பு நிற பாய்மரக் கித்தான்களை ஊதித் தள்ள சிரமப்பட, படகுகளும் மெதுவாகச் சென்றன, அடுத்து, வீசிய மறுகணமே காற்று களைத்துப்போனதும், கித்தான்கள் பாய்மரங்களைத் தழுவிக்கொண்டு விழுந்திருந்ததும் காரணம்.

மனிதச் சுமைகாரணமாக படகுகள் தள்ளாடி நகர்ந்தன. படகிலிருந்த  அனைவரும்  பாடிக்கொண்டிருந்தனர். பெரிய தொப்பியை அணிந்திருந்த ஆடவர் கூட்டம் படகின் விளிம்பைஒட்டி நின்றவண்ணம் சத்தமிட்டுப் பாட, பெண்கள் கீச்சொலியில் கத்துகிறார்கள், இந்நிலையில் கரகரகரப்புடன் பாடும் பிள்ளைகளின் கம்மியக் குரல், பொதுவாகத் தோத்திரப்பாடல்களின் பெருங்கூச்சலில் அடங்கிப்போகும்  போலி குழலோசைகள் கதிக்கு ஆளாயின.

ஐந்து படகுகளின் பயணிகளும் பாடியது ஒரே தோத்திரப் பாடலை,அதைச் சத்தமாகவும்  பாடினார்கள், அப்பாடலின் சலிப்பூட்டுகிற ஒலி வானத்தை முட்டியது. ஐந்து படகுகளும் ஒன்றன் பின் ஒன்றாக, உரசிக்கொண்டு சென்றன.

அவர்கள் என்னை முந்திக்கொண்டதோடு, என்னைக்கடந்தும் சென்றார்கள். அவர்களுக்கும் எனக்குமான இடைவெளி தூரம் மெள்ள மெள்ள அதிகரிக்க பாடல் ஒசை பலவீனமடைந்து. இறுதியில் அடங்கியும் போனது.

இனிமையான விஷயங்களைக் கனவுகான ஆரம்பித்தேன், அதாவது இளம்வயது பையன்களைப்போலச்  சிறுபிள்ளைத்தனமான, சொகுசான கனவுகளை.   

கனவுக்குறிய வயதை எத்தனைச் சீக்கிரம் நாம் தொலைத்து விடுகிறோம். உயிர்வாழ்க்கையில், மகிழ்ச்சியான கணங்களே கனவுகாணும் வயதொன்றுதான்!  தனிதிருக்கிற கணத்திலெல்லாம், நம்ம்பிக்கைகளில் கவனத்தைச் செலுத்தவல்ல தெய்வீகமான மனோசக்தியை நெஞ்சில் சுமக்கிறொம், எனவே ஒருபோதும் நாம் துணையின்றியோ, சோகத்துடனோ, முகவாட்டத்துடனோ இருப்பதில்லை, அது எத்தனை விசித்திரமான பூமி ! அங்கு காடுமேடென்று அலைந்து திரியும் சிந்தனையின் அமானுஷ்ய கற்பனையில் எதுவும் நடக்கலாம். கனவுகளின் பொன்னுலகில், வாழ்க்கை எவ்வளவு ரம்மியமானது!

ம்! என் துரதிர்ஷ்டம், எல்லாம் முடிந்தது!

திரும்பவும் கனவு காணத் ஆரம்பித்தேன்.இளம்வயது கனவுகள் அல்ல, பின் எதைக் குறித்து?  எவற்றையெல்லாம் தொடர்ந்து எதிர்பார்ப்போமோ, எவற்றுக்கெல்லாம் ஆசைப்படுவோமோ அவற்றுக்காக : செல்வம்,புகழ்  பெண்கள் என்று அனைத்திற்கும் கனவு கண்டேன்.

நடந்துகொண்டிருந்தேன், முற்றிய கோதுமைக் கதிர்கள், என்விரல்களுக்கு வளைந்துகொடுத்து எனக்குக் கிளுகிளுபூட்ட தலைமுடியைக் கோதுவதுபோல, கோதுமையின் பொன்னிற தலையை வருடியபடி வேகமாக நடந்துகொண்டிருந்தேன்.

சிறிய மேடுபாங்கான நிலப்பகுதியை சுற்றிக்கொண்டு நடக்க, ஒரு குறுகிய, வட்டமான கடற்கரையின் முடிவில், அதைத் தொட்டதுபோல அமைந்திருந்த மூன்றடுக்கான நிலப்பாங்கில் வெள்ளைவெளேரென்று ஒரு வீடு.

இவ்வீட்டின் தோற்றம், எதற்காக என்னிடம் சந்தோஷ சிலிர்ப்பை ஏற்படுத்தவேண்டும், இதற்கான காரணம் என்ன, எனது மனம் அறிந்திருக்குமா? சிற்சில சந்தர்ப்பங்களில் இதுபோன்று சுற்றித் திரிகிறபோது, அப்பகுதிகளில் சிலவற்றை வெகுகாலமாக  அறிந்திருப்பதுபோலவும், மிகவும் பரிச்சயமானவை போலவும், மனதிற்குப் பரவசமூட்டுவதுபோலவும் உணர்கிறோம். இவற்றை நாம் அதற்கு முன்பாக கண்டிருக்க சாத்தியமில்லையா? இதற்கு முன்பு அப்பகுதியில் ஒருவேளை வாழ்ந்திருக்க முடியாதா? நம்மை அனைத்தும் ஈர்க்கின்றன, இன்பத்தில் மூழ்கடிக்கின்றன, அடிவானத்தின் மென்மையான கோடு,  மரங்களின் அமைப்பு, மணலின் நிறம்!

ஓ! உயரமான படிகள் போலமைந்த நில அடுக்குகளில் நிற்கும் அந்த வீடுதான் எவ்வளவு அழகு! பிரம்மாண்டமான படிகளாக  நீருள்ள திசைநோக்கி இறங்கியுள்ள அடுக்குகளின் நிலப்பரப்பில் உயரமான பழ மரங்கள். அவ்வடுக்குகளின் விளிம்புகளில், நெடுக மஞ்சள் வண்ண பூக்களுடன் ஸ்பெயின் தேச ழெனெ (genêts) வகைப் பூச்செடிகள் புதர்போல  மண்டிக்கிடக்க, ஒவ்வொரு அடுக்கும் தலையில் தங்கக் கிரீடத்தை அணிந்திருக்கும் தோற்றத்தை அளித்தது.

குடியிருப்பினால் காதல் வயப்பட்டிருக்க, நடப்பதை நிறுத்திக் கொண்டேன், அவ்வீட்டை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும், அங்கே வாழவேண்டும், அதுவும் கொஞ்ச காலத்திற்கல்ல நிரந்தரமாக என்பதுபோல, அதன்மீது காதலாகியிருந்தேன். 

வாயிலை நெருங்கினேன், இதயம் மட்டுமீறிய உந்துதலில் படபடவென அடித்துக்கொண்டது, தடுப்புச்சுவரின் சிறுதூண்களில் ஒன்றில், ஒரு பெரிய விளம்பர அட்டை, அதில்  “விற்பனைக்கு”, என்றொரு வாசகம். மறுகணம் யாரோ அவ்வீட்டை எனக்குத் தானமாக கொடுத்ததுபோல ஒரு இன்ப அதிர்ச்சி! ஏன் ? எதற்காக? எனக்குத் தெரியாது !

அவ்வீடு” விற்பனைக்கு”. எனவே,  தற்போதைய நிலையில்  கிட்டத்தட்ட ஒருவருக்கும் சொந்தமானதல்ல, நாளை யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாகலாம், நான் உட்பட, ஆம் எனக்கே கூட சொந்தமாகலாம்.!  எனக்கு! ஏன் இந்த விஷயத்தில் இப்படியொரு ஆழமான, விவரிக்கப் போதாத உணர்வு? இந்த வீட்டை வாங்க என்னால் ஆகாதென்பது நன்றாகத் தெரியும்! வாங்குவதற்கு என்னிடம் ஏது பணம்? அதனாலென்ன, அவ்வீடு விற்பனைக்குரியது என்ற சொல் முக்கியம். கூண்டில் அடைபட்டிருக்கும்  ஒரு பறவை அதன் எஜமானருக்கு மட்டுமே சொந்தம், மாறாக வானில் பறக்கும் பறவை பொதுவானது என்கிறபோது, நான் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

வளமான நிலப்பரப்பிற்குள் சென்றேன்.  ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிய அரங்குகளைப் போல நில அமைப்பு,  சிலுவையில் அறையப்பட்டத்  தோற்றத்துடன் எஸ்ப்பலியெக்கள் (espaliers)(1), கொத்து கொத்தாக பூத்திருந்த மஞ்சள் வண்ண ழெனெ பூக்கள்,  ஒவ்வொரு அடுக்கின் முடிவிலும் வயதான இரண்டு அத்தி மரங்கள், மொத்தத்தில் அத்தோட்டம்தான் எவ்வளவு அழகு!

ஒவ்வொரு அடுக்காக கடந்து நில அமைப்பின் கடைசி அடுக்கான மூன்றாவது அடுக்கில் நின்று, அடிவானத்தைப் பார்த்தேன்.  கீழே வளைந்தும், எங்கும் மணலாகவும் பரந்து கிடந்த  சின்னஞ்சிறு கடற்கரையை நிலப்பகுதியிலிருந்து கனத்த மூன்று  பழுப்பு நிற பாறைகள் பிரித்திருந்தன. இங்கிருந்து காண, கடல்வாயிலை அடைத்த பெருங்கதவுகள் போலவும் இருந்தன, தவிர  கடற் கொந்தளிப்பு நாட்களில், அப்பாறைகளில் அலைகள் மோதிச் சிதறுமென்பது நிச்சயம்.

 எதிர் முனையில் இரண்டு பாறைகள் அவற்றில் ஒன்று நிற்பது போலவும் மற்றது புற்களின் மீது படுத்திருப்பதுபோலவும் இருந்தன, நிற்பது மெனிர்(menhir) மற்றது தொல்மென்(dolmen)(2) என்றும் புரிந்தது. இரண்டும் பார்ப்பதற்கு கணவன் மனைவிபோலவும், ஏதோஒரு சாபத்தால் கற்களாக மாறியவை போலவும், முன்பொரு காலத்தில் தனித்திருந்த கடலை பல நூற்றாண்டு காலமாக தெரிந்துவைத்திருப்பவை போலவும், சிறிய வீடு முழுமையாக கட்டிமுடிக்கபடும்வரை தொடர்ந்து  அவதானித்து வந்ததுபோலவும் எனக்குப் பட்டது, விற்பனைக்கென்று உள்ள அச்சிறிய வீடு ஒருநாள் இடிந்து நொறுங்க, காற்றில் கலக்க, பின்னர்  அவ்விடத்தில் புல்பூண்டுமுளைக்க  அவற்றையுங்கூட  இந்த ஜோடி காண நேரலாமென எனக்குத் தோன்றியது.

பல நூற்றாண்டுகளைக் கண்ட ‘மெனிர் தொல்மென்’ தம்பதிகளே, நீங்கள் இருவரும் என் அன்புக்குரியவர்கள் ! என அக்கற்களிடம் தெரிவித்தேன்.

வீட்டின் வாயிற்கதவில் நின்று, சொந்தவீட்டின் அழைப்பு மணியை உபயோகிப்பதுபோல அடித்துவிட்டுக் காத்திருந்தேன்.  ஒரு பெண் கதவைத் திறந்தாள், பணிப்பெண் தோற்றம், சற்று வயதானவள்,  கருப்பு உடை, தலையில் மடத்துப்பெண்களின் வெண்ணிற தொப்பி. இப் பெண்மணியைக்கூட இதற்குமுன் பார்த்திருக்கவேண்டும் என்பதுபோல எனக்குப்,பட்டது.

-நீங்கள் பிரெத்தோன் பெண்மணியாக இருக்கவேண்டும், சரிதானே? – என அவளிடம் கேட்டேன்.

– இல்லை ஐயா, நான் லொர்ரேன்(Lorraine) பிராந்தியத்தைச் சேர்ந்தவள்” என பதிலிறுத்தவள் தொடர்ந்து: 

-நீங்கள் வீட்டைப் பார்க்க வந்தவரா?” »  எனக்கேட்க,

அவளிடம்:

« நீங்கள் நினைத்தது சரி! » எனக்கூறிவிட்டு, அப்பெண்மணியைத் தொடர்ந்தேன். அங்கிருந்த சுவர்கள், தளவாடங்களென ஒவ்வொன்றையும் என்னால் நினைவு கூர முடிந்தது. முன்கூடத்தில் என்வீட்டில்  வழக்கமாக எனது கைத்தடியை சாத்தி வைப்பது வழக்கம், அன்று அதைக்கூட அங்கு தேடினேன். வீட்டின் வரவேற்புக் கூடத்திற்குள் சென்றேன், சுவர்கள் கோரையில்முடைந்த விரிப்புகொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்க, கடல் நீரைப் பார்க்கும் வகையில் மூன்று மிகப்பெரிய சன்னல்கள். தீக்காயும் அடுப்பின் மீது அலங்காரமாக சீனத்துப் பீங்கானில் பொருட்கள், அவற்றோடு ஒரு பெண்ணின் பெரிய அளவு புகைப்படம். தாமதிக்காது, அதை நோக்கிச் சென்றேன். நிச்சயம் என்னால் அவளை அடையாளம் காணமுடியும் என்ற நம்பிக்கை காரணமாக. நினைத்ததுபோலவே, அவள் யாரென்று விளங்கியது, அதேவேளை அவளை ஒருபோதும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை என்பதும் நிச்சயம். அவளா அது? எனக்கு வியப்பு. எவளுக்காக காத்திருந்தேனோ, எவளை அடையவேண்டுமென விரும்பினேனோ அதேபெண்!  என்னுடைய கனவுகளில் ஒயாமல் துரத்தும் அம்முகத்தை நினைவு  கூர்ந்தேன். இரவுபகலாக செல்லும் இடமெல்லாம் என்னால் தேடப்படும் பெண் ; இன்னும் சற்று நேரத்தில் வீதியில், அல்லது கிராமப்புறம் பக்கம் போகிறபோது கோதுமைக் கதிர்களில் சிவப்புக் குடையோடு ; பயணம் முடித்து, ஓர் விடுதியில் தங்கலாம் எனப் போகிறபோது, என்னை முந்திக்கொண்டிருப்பவளாக அல்லது நான் பயணிக்கிற இரயில்பெட்டியில் சக பயணியாகவோ அல்லது எனக்கென திறக்கும் வரவேற்பு கூடத்தில் எனக்கு முன்பாகவோ காண நேரும், அதே பெண்.

நிழற்படப் பெண் அவள் தான், நிச்சயமாக, சந்தேகத்திற்கு இடமின்றி அவள்தான்! என்னை அவதானிக்கும் அவளுடைய கண்கள் ; தலைமுடியை ஆங்கிலப் பெண்களைப்போல முடிந்திருக்கும் பாங்கு ; குறிப்பாக அவளுடைய வாய் ; வெகுகாலமாக அவளை யாரென்று யூகிக்க உதவும் அவள் புன்னகை, அனைத்தும் அப்பெண்ணை அடையாளப் படுத்தின.

 – யார் இந்தப் பெண்?- எனப் பணிப்பெண்ணிடம் கேட்டேன்.

சுரத்தின்றி அவரிடமிருந்து பதில் வெளிப்பட்டது: « இதுவா … மேடம் » .

நான் விடவில்லை, “அந்த அம்மாள் உங்கள் எஜமானியா?”

« ஓ! இல்லை, ‘அப்பெண் என் எஜமானி இல்லை, ஐயா !» இம்முறை அவளுடைய பதிலில் தன் பணி நிமித்தமான  கடமையோடு, சிறிது எரிச்சலும் கலந்திருந்தன.

இருக்கையைத் தேடி அமர்ந்த பின்னர், பணிப்பெண்ணிடம், ” – கொஞ்சம் விவரமாக அதைச் சொல்லமுடியுமா ? எனக் கேட்டேன்.

அவள் திகைத்து, அசையாமல், அமைதியாக நின்றாள்.

நான் விடுவதாக இல்லை: “படத்தில் இருப்பவர் இந்த வீட்டின் எஜமானி அம்மாள், சரியா?

–   இல்லை, அதுவுமில்லை,

–  இந்த வீடு யாருக்குத்தான் சொந்தம் ?

–  என்னுடைய எஜமான் தூர்னெல்  என்பவருடையது.

புகைப்படத்தை நோக்கி விரலைச் சுட்டி:

–  அப்போது இந்தப் பெண்?

– அது வந்து மேடம் ….

–  அப்படியெனில், உங்கள் எஜமானின் மனைவி என்று சொல்?

–  இல்லை, ஐயா.

–  மனைவி இல்லையென்றால் வேறு யார், உங்க எஜமானுடைய வைப்பாட்டியா?

மடத்துப் பெண் சாயலைக்கொண்ட பணிப்பெண்ணிடம் பதிலில்லை. மாறாகப் புகைப்படப் பெண்ணோடு சம்பந்தப்பட்ட  மனிதருக்கு எதிராகத் தெளிவில்லா பொறாமையும், குழப்பமான கோபமும் என்னை பீடித்திருந்த நிலையில் பிடிவாதமாக என் கேள்வியைத் தொடர்ந்தேன்.

–  சரி, இருவரும் இப்போது எங்கே?

பணிப்பெண் தாழ்ந்த குரலில்:

– எங்கள் ஐயா பாரீசில் இருக்கிறார், ஆனால் மேடம் பற்றிய தகவல் எதுவும் தெரியாது.

 ஒரு விதச் சிலிர்ப்புடன்

 – அப்படியென்றால்,  அவர்கள் இப்போது ஒன்றாக இல்லை.

–  இல்லை ஐயா.

சற்று தந்திரத்துடன், வருத்தம் தோய்ந்த குரலில் :

– என்னதான் நடந்தது சொல்லுங்களேன், உங்கள் முதலாளிக்கு என்னால் ஏதாவது உதவ முடியுமா என்று பார்க்கிறேன். எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியும், மோசமானவள், என்றேன்.

பணிப்பெண், பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை. நான் சற்று வெளிப்படையாக பேசுவது, அப்பெண்மணிக்கு   நம்பிக்கை அளித்திருக்க வேண்டும்.

« ஓ! அதை என்னன்னு சொல்வது. எங்க வீட்டு ஐயாவுக்கு அத்தனைத்  துன்பத்தையும் கொடுத்தாள். இத்தாலிக்குப் போயிருந்தபோது அங்கு இருவருக்கும் பழக்கம், மணம் செய்துகொண்டதுபோல தன்னுடன் அழைத்தும் வந்தார். அவள் நன்றாகப் பாடுவாள். அவள் மீது எங்க ஐயா உயிரையே வைத்திருந்தார்.  அவர் நிலைமையைப் காண பரிதாபமாக இருக்கும். கழிந்த ஆண்டு, இந்தப்பக்கம் சுற்றுப் பயணமாக வந்தவர்கள், யாரோ ஒரு பைத்தியக்காரன் கட்டியிருந்த இந்தவீட்டைக் கண்டிருக்கிறார்கள். அவனை உண்மையில் ஒரு பைத்தியக்காரன் என்று தான் சொல்லவேண்டும், இல்லையெனில், கிராமத்திலிருந்து இத்த்னை கல் தூரத்தில் இப்படியொரு வீட்டைக் கட்டுவானா? வீட்டைப் பார்த்த மறுகணமே அதைவிலைக்கு வாங்கி, எங்க எஜமானுடன்  இந்தவீட்டில் குடியிருக்க அவளுக்கு ஆசை. அவளைச் சந்தோஷப்படுத்த எங்க ஐயாவும் வீட்டை வாங்கினார்.

கடந்த வருடம் பனிக்காலம் முழுக்க இங்கே அவர்கள் இருந்ததாகச் சொல்லமுடியாது, ஆனால் கோடைக்காலத்தை  இந்த வீட்டில்தான் கழித்தார்கள்.

“ஒரு நாள் மதிய உணவு நேரம், “செசரின்!” என்றென்னைக் கூப்பிட்ட  முதலாளி : « வெளியில் சென்றிருந்த, மேடம் வீடு திரும்பிட்டார்களா? » எனக்கேட்டார். « இல்லை ஐயா » – என்றேன்.“ அன்றைய தினம் நாள் முழுக்க காத்திருந்தோம். கோபத்தின் உச்சத்தில் முதலாளி இருந்தார். எங்கெங்கோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. போனவள் போனவளே, ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடையாது,  பணிப்பெண் பதிலைக் கேட்டதும், எனக்குத் தலைகால் புரியவில்லை.  மகிழ்ச்சியியை வெளிப்படுத்த பணிப்பெண்ணை முத்தமிடவும், அவள் இடுப்பைப் பிடித்தபடி நடனம் ஆடவும் விரும்பினேன்.

ஆகத் தற்போது புகைப்படக்காரி வீட்டு உரிமையாளரோடு இல்லை ! அவள் வீட்டை விட்டு போய்விட்டாள், நல்லவேளை தப்பித்தாள். இந்த மனிதரின் உறவு அவளுக்கு அலுப்பைத் தந்திருக்கவேண்டும், வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அவளிடம் அம்மனிதர் நடந்துகொண்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் கிடைத்த செய்தியால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

வயதான பணிப்பெண் இன்னும் தான் சொல்லவேண்டியது இருக்கிறது என்பதுபோல தொடர்ந்தார்: « என் முதலாளி கவலையில் வாடினார், என் கனவரிடமும் என்னிடமும் வீட்டை விற்கப் பணித்துவிட்டு, பாரிஸுக்குத் திரும்பிட்டார், வீட்டின் விலை இருபதாயிரம் பிராங்குகள்», எனகூறிவிட்டு நிறுத்தினாள்.

வேலைக்கரப்பெண் கூறியவைகளை காதில் வாங்கும் நிலையில் நானில்லை! எனது நினைவெல்லாம் புகைப்பட பெண்ணிடம் இருந்தது. மறுகணம், எப்படியேனும் அவளை கண்டுபிடித்து இங்கே அழைத்து வரவேண்டும். இளவேனிற்காலத்தில் இப்பிரதேசத்திற்குத் திரும்பவும் கூட்டிவந்து, அவள் மிகவும் விரும்பிய அழகான இவ்வீட்டை, உடையவர் தற்போது இங்கில்லை என்பதையும் கூறி , திரும்பக் காணச் செய்யவேண்டும். செய்யவேண்டியது அதொன்றுதான்.

வயதான பணிப்பெண்ணின் கைகளில் பத்து பிராங்குகளைப் போட்டேன். தற்போது புகைப்படம் என்கையில். வேகமாகச் சென்று அட்டையிலிருந்த  இனிமையான அம்முகத்தை வெறித்தனமாக முத்தமிட்டேன்.  

வீட்டைலிருந்து வெளியேறியவன், வந்த சாலையைப் பிடித்து புகைப்படப் பெண்ணை பார்த்தவண்ணம் நடந்தேன். தற்போது அவளுக்கு விடுதலை, விடுதலைக்கு பின் அவள் எவ்வளவு அழகு!  அவள் காப்பாற்றப்பட்டிருந்தாள்!  வீட்டு மனிதரைப் பிரிந்தாயிற்று. இன்றோ நாளையோ, இந்த வாரமோ, அடுத்த வாரமோ அவளை நான் சந்திக்கப் போவது நிச்சயம்! அம்மனிதரைப் பெண் பிரிய என்னுடைய அதிர்ஷ்டமே காரணமென்றும் நினைத்தேன்.

நான் அறிந்த அப்பெண்  தற்போது இவ்வுலகில் ஏதோவொரு மூலையில்  சுதந்திரமாக இருக்கிறாள், நான் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், எப்படியாவது அவளை தேடி கண்டுபிடிக்கவேண்டும்.

விளைந்த  கோதுமையின் வளைந்த கதிர்கள் மீன்டும் என் கை தடவலில் இருக்க, கடற்காற்றை உள்வாங்கி என் மார்பு புடைத்தது, முகத்தில் சூரியன் முத்தமிட்டது. விரைவில் அவளைச் சந்திப்பதும், “விற்பனைக்கு”  என்றுள்ள அந்த அழகான வீட்டில், இம்முறை நாங்கள் வசிப்பதும் நிச்சயம். இனி தான் விரும்பும் வீட்டைப் பிரிய  அவளுக்கு மனம்வராது!

எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், நம்பிக்கை அளிந்த போதையுடனும் நடந்துகொண்டிருந்தேன்.

_______________________________________________________________

  1. எஸ்ப்பலியெ (espaliers) : ஒரு வகையான தோட்டக் கலை, பழமரங்களையும், பூச்செடிகளையும் சுவரில் பதியம். செய்வதுபோல வளர்க்கும் முறை

2;மெனிர்(menhir) தொல்மென் (dolmen) இவற்றுள் முதலாவது, ஒரு வகை குத்துக்கல், இரண்டாவது படுக்கைநிலையில் உள்ள ஒரு கல், இரண்டும் இறந்தவர்கள் நினைவுச் சின்ங்கள்,  கற்காலங்களில் புழக்கத்தில் இருந்

“எப்போதும் கைபேசி, காதுபேசி என அலைந்து திரிந்து மற்றவர்களை அலட்சியம் செய்தே அழிந்த மனிதனின் வம்சம்தானே”   – (காலாழ் களரில் உலகு ) – வித்யா அருண்

                         

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம்,  தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை  சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம். 

« காலாழ் களரில் உலகு » அண்மையில் கிடைத்த ஒரு சிறுகதை தொகுப்பு, படைப்பாளி சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இளம் குடும்பத் தலைவி. பெயர் வித்யா அருண். அவர் குடுபத்தலைவி மட்டுமல்ல, உயர் கல்விபெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை பொறுப்பில் இருக்கிறவர், இந்தியப்பண்பாடு  தமிழ்மரபு என்கிற பின்புலத்திற்குச் சொந்தக்காரர்,நவீனம் தொன்மமென இலக்கியத்தின் இருகூறுகளிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.  இவை அனைத்தும் புனைவின்  மையப் பொருளில், சொல்லும் மொழியில், உத்தியில், கதையைக் கட்டமைக்கும் திறனில், பெரும்பாலான இவருடைய கதைகளில் தெளிவாக வெளிப்படுகின்றன.

நூலுக்கு  முன்னுரை எழுதியுள்ள  எழுத்தாள நண்பர் நாஞ்சிலார் « காலாழ் களரில் உலகு » என்ற  சிறுகதைநூலின் பெயர்  குறித்து அவருக்கே உரித்தான ஆர்வத்துடன்  வேர்மூலத்தைத் தேடி வியக்கிறார். கவித்துமான மொழியில், நூலின் பெயர்கொண்ட சிறுகதையில் அன்றி பிறகதைகளிலும், அவற்றைக்  காட்சிப்படுத்த கையாளும் காலப் பிரமாணங்களினாலும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் மொழியில் சொல்வதெனில் சுகமான வாசிப்புக்குச் சிறுகதை ஆசிரியர் துணைசெய்கிறார்.

ஏழாம் அறிவு, மோனம், வழித்துணை, தொட்டால் பூ மலரும், கானல் காலங்கள், வெட்டென மற எனத் தொகுப்பில்  பன்னிரண்டு சிறுகதைகள். ஒவ்வொரு கதையும்  ஆசிரியரையும், ஆசிரியரைச் சூழ்ந்துள்ள உலகையும், மனிதர்களையும், அவர்கள் மனங்களையும் அவற்றின் வாசத்தை உணரவும் அவர்களோடு பயணிக்கவும் உதவுகின்றன. செயல்பாடுகளே மனிதர் இருத்தலைத் தீர்மானிப்பதாக பிரெஞ்சுத் தத்துவவாதி சார்த்துரு கூறுவார். இப்பன்னிரண்டு சிறுகதைகளும் ஓர் எழுத்தாளரின் « தன் »னையும்,  « பிறரை »யும் கூர்ந்து கவனித்து அவர்கள் இருத்தலைப் பேசுகின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் நூலாசிரியர் யார், என்பதைத் தெரிவித்திருந்தேன் இந்த « யார் ? » சிறுகதைகளாக, வாழ்க்கைச்சித்திரங்களாக பிக்காசோ மொழியில் – பூடகமும் நவீனமும் இணைந்து- இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென்று மூன்று உலகிலும் பயணிக்கிறது.

« ஏழாம் அறிவு », « காலாழ் களரில் உலகு » இரண்டும் அறிவியல் புனைகதைகள். இரண்டும் வித்தியாசமான கற்பனை ( கொரோனா வுக்கு நன்றி), பிற்காலத்தில் நம்முடைய மனிதச் சந்ததியினர் இக்கதையில்  நடமாடும் உயிரினங்களாக மாறவும் நேரலாம், நேற்றுவரை குரங்காக இருந்தவர்கள்தானே நாம் எதுவும் நடக்கலாம்.

« மோனம் », « தொட்டால் பூ மலரும் », இருகதைகளும் ஒரு தாயின், ஒரு சாராசரி குடும்பப்பெண்ணின் ஆசைகள், நிராசைகள் ; எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ; மருட்சிகள் மன உளைச்சல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றன.

« வழித்துணை », « வெட்டென மற », « போகாதே » மூன்று சிறுகதைகளும் இன்று உயர்கல்வி பெற்று ஆண்களுக்கு நிகராக பணியாற்றுகிற பெண்களுக்குள்ள நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அவிழ்க்கின்றன. மேற்குநாடுகளில், பெண்விடுதலை என்பது ஓரளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று ஆனால்  இந்தியப்பெண்களுக்கு இன்றளவும் அது எட்டாகனி. இப்புதுமைப் பெண்ணின்  அடையாளம் அலுவலகத்தில் திறமைசாலி, ஐம்பதுபேரை வைத்து வேலை வாங்குகிறாள், ஸ்கூட்டியில் வேலைக்குப் போகிறாள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாள், என்பதெல்லாம் பெற்றோருக்கும் ஏன் அவளை மணமுடித்த கணவனுக்குக்கூட  மகிழ்ச்சி அளிப்பவைதான். இருந்தும் அவள் பிறந்தவீட்டையும்,  புகுந்த வீட்டையும் மறக்காமல் இருக்கவேண்டும், எத்தனை மணிக்குத் திரும்பினாலும், எவ்வளவு பிரச்சினைகளை சமாளித்துவிட்டு வீடு திரும்பினாலும், வீட்டின் பராமரிப்பு, பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடம், குடும்பத்தின் வரவு செலவு அனைத்தும் அவள் தலையில்தான் விடியும். வேலைசார்ந்து பயணம் மேற்கொள்கிறபோது  « அம்மா ஏன்போற ? எப்போ வருவே அம்மா ? » என பெட்டியை மூடும் நேரத்தில் மகன் கேட்டால், இவளுக்கு வயிறு பிசையத் தொடங்கும்.  « ஆத்திலே ஒருகால் சேத்திலே ஒருகால் »என்பார்கள் படித்த வேலைக்குப் போகும் பெண்களுக்கு’ » என்கிறார், ‘போகாதே’ சிறுகதையில் நூலாசிரியர். இக்கதைகள் உயர் அலுவலராக பன்னாட்டு நிறுவங்களில் வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளை மூன்று விதமான கதைக் களனில் தன்மையில் வளவளவென்றில்லாமல் சிக்கனமான மொழியில் எதைச் சொல்லவேண்டுமோ அதைக் கச்சிதமாகத் தெரிவிக்கின்றன.

இத்தொகுப்பில் « அதிர்வலைகள் », நவீன யுகத்தின் உறவுச் சிதைவுகளையும், « கானல் காலங்கள் » மனப் பிறழ்வுக்கு உள்ளான மனைவியின் நிலைமை கண்டு ஆற்றாமையில் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பக் கணவனின் குமுறலையும் பேசுபவை. இவை இரண்டுங்கூட தரமான சிறுகதைகள்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, « புதையல் » என்ற சிறுகதையையும். « அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை » என்ற சிறுகதையையும். முதல்கதை பொதுக்கழிவறையைச் சுத்தம் செய்கிற ஒரு தமிழ்ப் பெண்மணியின் கதை, அப்பணியின் அத்தனைக் கூறுகளும், தொழிலாளிப் பெண்மணியின்  ஒருநாள் வாழ்க்கை கொண்டு மனச்சுளிப்பின்றி சொல்லப்படுகின்றன. அதுபோல பெண்களின் தலையாய பிரச்சனைகளை, பலரும் சொல்லத் தயங்கும் சபிக்கபட்ட பெண்பிறவியின் உயிரியல் பிரச்சனகளை, துணிச்சலுடன் « அது இருளால் செய்த ஒரு வழிச் சாலை » என்கிற கதையில் பெண்ணுக்கேயுரிய வலிகளுடன், அவள் சுமக்கும் பாரத்தை மொழி மருத்துவரின் துணைகொண்டு இறக்கிவைக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியுடன் உள்ளன்போடு கைகோர்க்க, இதனைக் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

ஓர் ஆரம்பம் ஒரு முடிவு,   இடையில் எதையாவது நிரப்பி நானும் கதைஎழுதினேன், என கதைவிடும்  உலகில், மனித உணர்வுக்கும், உள்ளத்தின் குரலுக்கும் செவிமடுத்து அழகான வார்த்தைகள் கொண்டு தொய்வற்ற நடையில் கதைசொல்லும் நூலாசிரியரை திறனைப்  பாராட்டுகிறென்.

——————————————————————–

காலாழ் களரில் உலகு- வித்யா அருண்

தொடர்புக்கு :kavidhya@gmail.com

புதுச்சேரியின் அடையாளங்கள் – வரலாறு காட்டும் தொன்மையும் தொடர்ச்சியும்- முனைவர் அ.இராமதாசு

                                                                                  – நாகரத்தினம் கிருஷ்ணா

        வரலாறு என்பது காலத்தின் வடுக்கள். தேசத்தின், ஓர் இனத்தின், ஓர் ஊரின் பெருமை சிறுமைகளை, உற்ற பெருமித த்தை, அடைந்த அவமானத்தை ச் சொல்வது. அக் குறிப்பிட்ட நிலம் சார்ந்த மக்களின் இறந்த காலத்தைப் பேசும் பண்பாட்டு ஆவணம். வரலாறுகள் உண்மை என நம்பப்படுவதால், ஆதாரங்களை அடித்தளமாக கொண்டு கட்டப் படவேண்டும்.  

              நூலாசிரியர் முனைவர்  அ. இராமதாசு சராசரி பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, துணை முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், தொடக்க கல்வித் துணை இயக்குனர், கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர், இணை இயக்குனரென தம்மைக் கல்வி உலைக்களத்தில் உருமாற்றப்பெற்ற கல்விமான், முனைவர். நிறைகுடம். ஏதோ பணி செய்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல்  ஓய்வு பெற்றபின்பும்  ஆய்வுகளில் கவனம் செலுத்தி புதுச்சேரி நகரின் வரலாற்றுத் தடத்தில்  பயனித்து கண்டறிந்த தடயங்களை, படித்தறிந்த ஆவணங்களை – ஆய்ந்து தெளிந்த உண்மைகளை நமது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே ‘புதுச்சேரியின் அடையாளங்கள்’ என்கிற இத் தொல்லியல் நூல்.

பதினான்கு அத்தியாயங்கள்.  புதுச்சேரியை அறிந்த மனிதர்களுக்கு முனைவர் அ. இராமதாசு நம் கண்முன் நிறுத்தும், கற்றூண்களும், கலங்கரை விளக்கமும், வாராவதியும் பிறவும் புதியதல்ல ஆனால் அவற்றின் பிறப்பும், தொடக்கமும் அதனையொட்டிய பல செய்திகளும் நம்மில் பலர்  அதிகம் அறிந்திராதவை.

உதாரணமாக , புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலைக்கு அழகூட்டுகிற கற்றூண்கள் எங்கிருந்து வந்தன, எப்போது வந்தன, அவற்றின் உயரம்  என்ன வேலைப்பாடுகள் என்ன – என ஆழமாக உரிய ஆவணங்களின் துணைகொண்டு விவரித்துக் கொண்டு போகிற முனைவர் « உருவாக்கபட்டு நான்னூறு ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் பெரிய அளவில் சிதைந்து விடாமல் இன்றும் பெருமையோடு காட்சியளிக்கும் கருங்கல் தூண்களை இப்போது நம்மால் உருவாக்க இயலாதுஎன்பதை உணர்ந்து மேலும் பலதலைமுறைகளைகண்டு களிக்கும் வகையில் அதிகப்பொறுப்போடு அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் » ( பக்கம் 8  ) என்று ஓர் அக்கறைகொண்ட புதுச்சேரிவாசி என்கிற வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விண்ணப்பமும் வைக்கிறார். இதற்கிடையில் கற்தூண்களைக் குறித்து ஒரு பெரும் வரலாறே நம் கண்முன்னே  நதிபோல சுழன்றோடுகிறது.

ஒரு தேசத்தை, அதன் கருவறையாக நின்று மனித உயிர்களை சுமக்கிற சிற்றூர் பேரூரின்  சுவடுப் பனைகளில் ஏறி இறங்கும் ஆர்வம் எல்லோருக்கும் வராதென்பது தெரிந்த துதான்,  நம் வாழ்நாளில் அதனை கடக்கின்றபோதேனும், கருத்தரித்த வயிற்றின் அருமை பெருமைகளை அறிய முயல்வோமா என்றால், இல்லையென்றே சொல்லவேண்டியிருக்கிறது. பாமர ர்களை விடுங்கள் படித்த மனிதர்களுக்கே கூட  இங்குள்ள மதுச்சாலைகளின் முகவரி தெரிந்த அளவிற்கு புதுச்சேரியின் தொன்ம வரலாற்றின் சாட்சியங்களையோ அவற்றின் முகவரியையோ அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இன்று காலை பாரதியார் பூங்காவில் நடந்தேன், சிலை அரசியலிலும் தமிழர்கள் தேர்ந்தவர் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் பாரதியார் சிலையின் காலடியில் ஒரு  குப்பைப் பையொன்று காக்கை அலகொன்றின் கவனத்தைப் பெற்றிருந்தது.  பாரதி இதொரு பிரச்சனையே அல்ல என்பதுபோல நின்றிருந்தான். பாரதிக்கே இந்த கதியெனில், கற்றூண்கள்  பராமரிப்பை, புதுச்சேரி நிர்வாக எந்திரத்திடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்.  

தொன்மங்களைத் தேடித் தேடி ஆவணபடுத்தும் நூலாசிரியர் : புதுச்சேரி அங்காடிகள், அவற்றுக்கு மகுடமாக அமைந்த மணிகூண்டுகள், கலங்கரை விளக்கம், தாவரவியல் பூங்காக்கள் முதலியவற்றினைக் குறித்தும் விரிவான செய்திகளை, பல தொல்லியல் கல்விமான்களின் நூற்குறிப்புகள் துணைகொண்டு விரிவாகப் பதிவுசெய்துள்ளார். புதுச்சேரி காலனிய ஆட்சியிலிருந்த போக்குவரத்து வாகனங்கள், பஞ்சாலைகளின் தோற்றமும் முடிவும், அவை இயங்கிய விதம்,அவைசார்ந்த அரசியல், தொழிலாளர் பிரச்சனைகள், காலனிய அரசு அவற்றை அணுகிய விதம், தொடர்ந்து கட்சிபேதமின்றி  புதுச்சேரி ஆட்சியாளர்கள் தொழிலாளர் நலனில் காட்டிய அக்கறை, விளைவாக  மூடப்பட்ட பஞ்சாலைகள் என வரலாற்றை வலியுடன் எழுதுகிறார்.

நூலிலுள்ள எந்தவொரு அத்தியாயத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது, ஒவ்வொன்றிலும் செறிவானத் தகவல்கள், குறிப்பாகக் கீழ்க்கண்டவை :

அ. ஆறுகளும் ஏரிகளும்

புதுச்சேரியில் 1889 ஆம் ஆண்டில் விவசாயத்திற்காக் பெரிய ஏரிகள் உள்ளிட்ட 59 ஏரிகளும், 9 பெரிய வாய்க்கால்களும், 5  தடுப்பணைகளும், 202 நீரூற்றுகளும், 12 பெரிய கேணிகளும்  53 நீர்த்தேக்கங்களும் இருந்தன என்கிற உண்மையை 1889ம் ஆண்டில் லூயிஸ் ஹாரிக் எழுதியுள்ள குறிப்புடன் தொடங்கும் ஆசிரியர் புதுச்சேரியில் பாய்ந்த, பாய்கிற ஆறுகளை : செஞ்சி ஆறு, திருக்காஞ்சி ஆறு, அரியாங்குப்பம் ஆறு, சுண்ணாம்பு ஆறு, பம்பை ஆறு, குடுவை ஆறு, மலட்டாறு, பெண்ணையாறு எனப்பட்டியலிட்டு அவற்றைபற்றிய விரிவானதகவல்களுடன் எழுதியுள்ளா.  இவற்றில் பல தகவல்கள் அரியவை, புதியவை. இவை மட்டுமல்ல, நீர் சார்ந்த, நீர்ப்பாசனம் சார்ந்த ஒட்டுமொத்த தகவகளின் கலைக் களஞ்சியம் எனவும் இந்நூலை நாம் கருத்லாம்.  

ஆ. துய்ப்ப்ளெக்சு மாளிகை, கோட்டையும் அரணும்,

காலனிய நிர்வாகத்தின் போது பிரெஞ்சு நிர்வாகிகள் வாழ்ந்த மாளிகையும், அதனுடன் இணைந்த கோட்டையையும் பின்னர் அவற்றுக்கு நேர்ந்த கேட்டையும்  என்னைப் போலவே உங்களில் சிலர் வாசித்திருக்க க் கூடும், இங்கும் ஆசிரியர் சோர்வின்றி பல அரியத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். உதாரணமாக புதுச்சேரியினல் முதன் முதலாக கட்டப்பட்ட பர்லோன் கோட்டையைப் பற்றிப் பேசுகிறபோது :

« 1688ல் கட்டப்பட்ட அக்கோட்டைக் கடலிலிருந்து 400 அடிதூரத்தில் அமைந்திருந்த து. பிரெஞ்சுக் காரர்களுக்கு முன்பு புதுச்சேரியில் தங்கி வர்த்தகம் செய்துவந்த டேனிஷ்கார ர்கள் கட்டியிருந்த கட்ட டத்திற்கு 50 அடி வடக்கில் அக்கோட்டை ஏற்படுத்தப்பட்டது. சதுரமா அல்லது நீள் சதுரமா என்று கூற முடியாத ஓர் ஒழுங்குமுறையற்ற வடிவில் நான்கு கோபுரங்களோடு அது இருந்த து. கோட்டையின் வடக்குப் புறத்திலும் தெற்குப் புறத்திலும் சிறிய கொத்தளங்கள் அமைக்கபட்டிருந்தன. சில ஆண்டுகள் கழித்து, அரை வட்ட வடிவிலான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுக் கோட்டையின் வடக்குப்  பகுதி பலப்படுத்தப்பட்ட து. 32 பீரங்கிகள்கோட்டை மதிற் சுவரில் வைக்கப்பட்டிருந்தன. கோட்டைக்குள் பிரான்சுவா மர்த்தனும் கும்பெனி அலுவலர்களும் குடியிருந்தனர் . கப்புசின் பாதிரியாளர்களின் சிறிய தேவாலயம் ஒன்று கோட்டைக்குள் அமைந்திருந்த து. கோட்டையை எழுப்புவதற்கான ஒப்புதல் பெற்ற செஞ்சியை ஆண்ட ராம்ராஜாவுக்கு (சிவாஜியின் இரண்டாவது மகன்)  5000 சக்கரம் பிரான்சுவா மர்த்தன் கொடுத்தார் (Alfred Martineau, 1962) »(பக்கம் 114 ) என ஆழமான தகவல்கள்.  

இ. அரிக்கமேடு

கீழடி உண்மைகள் அறிவதற்கு முன்பாக அரிக்கமேடு ஆய்வும், அறியவந்தவையும்  தமிழர் வரலாற்றுச் சான்றுகள். அரிக்கமேட்டைப் பற்றிய முதல் தகவல் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிடைத்ததாக அறிகிறோம். இது தவிர படிப்படியாக அந்நிலப்பகுதி குறித்த அரசியல் வரலாறு, ஆய்க்கான ஏற்பாடுகள், திட்டங்கள், இருபதாம் நூற்றாண்டில் முப்பதுகளில் மூவர்கொண்ட பிரெஞ்சுகுழு ஒன்று அங்கு சென்று சேகரித்த தகவல், கிடைத்தபொருட்களைப் பற்றிய தகவல்கள். பொதுகே, பழவேற்காடு, அருவாநாடுஇவற்றுக்கு இடையே உள்ள சிக்கல்கள், ஊகங்கள் குழப்பங்களுக்கிடையில் புதுச்சேரி என்ற சொல் முதன் முதலாக 16 நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் தரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த து என்கிற தகவலையும் அறிகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்சு  தேசம் கலை, இலக்கியத்தில் தனித்துவம் பெற்ற ஒரு தேசம். அவை காலனிய பிராந்தியத்திலும் எதிரொலித்தன. அவற்றிலும் புதுச்சேரி ஆசியப் பிராந்தியத்தில், இந்தியத்துணைகன்டத்தில்  தனக்கென பிரத்தியேக அடையாளத்தை வகுத்துக்கொண்ட நகரம். முனைவர் ஆ. இராமதாசு அவர்களின் இந்நூல் ஒரு கலங்கறை விளக்கமாக நின்று, பண்ட்டைய புதுவையைப் புரிந்துகொள்ள  உதவுகிறது. இந்நூலின் துணைகொண்டு ஒரு வரலாற்று சுற்றுலாவை புதுவை பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரலாம். புதுவை அரசு சுற்றுலாத் துறையும், நகரின் கடந்த காலத்  தடயங்களை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்நூல் வழிகாட்டுதலில் ஒரு நகரச் சுற்றுலாவிற்கு வழிகோல முடியும்.

உறங்குவது போலுஞ் சாக்காடு

எதிர்வரும் 8ந்தேதி இந்தியா வர உள்ள நிலையில் எனது மனைவியின் ஒன்றுவிட்ட சகோதர ர்,  பெயர் பலராமன், பொதுப்பணித் துறையில் ஒப்பந்தங்கள் எடுத்து செய்வார், எனது புதுச்சேரி வீட்டைக் கட்டிக் கொடுத்தவர். முதிர்ந்த வயது, உதிரும் வயதுங்கூட. அவர்  இறந்த செய்தி காலையில்  கிடைத்தது. புதுச்சேரியில் நான் சென்று பார்க்க இருந்த உறவினர்களில் முக்கியமானவர். நீலக் கடல் நாவலில் பலராம பிள்ளை என்றொரு கதை பாத்திரம்  அவர் நினைவில் உருவானதுதான். பெர்னார்ஃ போத்தெனுக்கு துபாஷாக இருப்பார்.  மிகவும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் அளித்த செய்தி.

«  உறங்குவது போலுஞ் சாக்காடு » என வள்ளுவன் ஆழமாக மரணம் குறித்துப் பாடியிருப்பான்.

மாத்தாஹரி நாவலிலும் கதை நாயகி பவானியின் எதிர்பாராத இறப்பை வாய்ப்பாகக் கொண்டு மரணத்தைக் குறித்து எழுதியிருப்பேன். இங்கே பதிவு செய்திருப்பது நான் தற்போது மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்   ‘அதிரியன்  நினைவுகள்’ நாவலில் இருந்து :

« மெல்ல மெல்ல என்னை கைவிடும் விலைமதிப்பற்ற நற்பேறுகளில் உறக்கமும் ஒன்று. குறைந்த நேரத்தை உறக்கத்திற்கென ஒதுக்கி அதையும் சரிவர உறங்காமல் துன்பப்படும் மனிதன், ஒன்றுக்கு பலவாக தலையணைகளைக் கொடுத்து இக்குறிப்பிட்ட சுகத்தினை வேண்டி வெகு நேரம் தவமிருக்கிறான். இரு உடல்களில் பிரதிபலிக்கிற இணக்கமான துயில் மட்டுமே உடலுறவிற்கு   தவிர்க்கமுடியாத மிகச் சரியானதொரு பிற்சேர்க்கையாக இருக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இங்கே எனக்கு ஆர்வமூட்டுகிற விஷயம் தன்னை நன்கு சுகிக்க வேண்டுமென்பதற்காக உறக்கத்தின் அணூகுமுறையிலுள்ள பிரத்தியேகப் புதிர்தன்மை : அதன் வண்ணம், அதன் அடர்த்தி, அதன் சுவாச ரிதம் அனைத்திலும் நிகழக்கூடிய மாற்றங்கள், இவைதவிர உறக்கத்தின்போது  கிடைக்கிற இறப்பையும் சந்திக்கும் வாய்ப்பு எனப்பார்க்கிறபொழுது உறக்கத்தை ஒரு  பெருங்கடலோடு ஒப்பிடமுடியும். இந்த உறக்கமெனும் சமுத்திரத்தில்   ஆடையைக் களைந்து, தனியொருவனாக, நிராயுதபானியாக தவிர்க்க முடியாதது என்பதுபோல மனிதன் தலைகீழாகப் பாய்ந்து ஆபத்துடன் விளையாகிறான்.  உறக்கம் தரும் ஒரே நம்பிக்கை, அதிலிருந்து  மீண்டு நாம் வெளியில் வரமுடியும் என்கிற உண்மை. குறிப்பாக எவ்வித மாற்றமுமின்றி உறங்குவதற்கு முன்பாக எப்படி இருந்தோமோ அப்படி வெளியில் வரமுடியும். காரணம், வினோதமானதொரு தடையுத்தரவுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், எனவே கண்ட கனவுகளின் எஞ்சியவற்றை, முழுமையாக நம்முடன் கொண்டு வர சாத்தியமில்லை, அப்படி வரமுடிந்தால் ஒருவகையில் நாம் சிதைந்த மனிதர்கள். நமக்கு நம்பிக்கைதரும் பிறிதொரு  விஷயம், நம்முடைய சோர்வுக்கு உறக்கம் தரும் சிகிச்சை. இச்சிகிச்சை தற்காலிகமானது என்கிறபோதும், இனியும் அவ்வாறான நிலைக்குப் போகக்கூடாதென்று நம்முடன் ஒப்பந்த்ம் செய்துகொண்டதைப்போல, மிகவும் தீர்க்கமான வழிமுறைகளுடன்  அளிக்கப்படும் சிகிச்சை அது. இங்கும், பிற இடங்களில் நடைபெறுவதைப்போல ‘இன்பமும்’ ‘கலையும்’ பேரின்ப மயக்கத்தின்பொருட்டு உணர்வுபூர்வமாக சரணடைகின்றன,  ‘தான்’ஐ காட்டிலும் மிகவும் பலவீனமாகவும், திடமாகவும், இலகுவாகவும், தடுமாற்றத்துடனும் இருப்பதற்கு ‘கலையும்’ ‘இன்பமும்’ சாதுர்யத்துடன் சம்மதிக்கின்றன.  கனவுகளின் வியப்பிற்குரிய மக்களைக் குறித்து  பின்னர் பேசுகிறேன், அதற்கு முன்பாக மரித்தலுக்கும், உயிர்த்தெழுலுக்கும் நெருக்கமான  தூய உறக்கம் மற்றும் தூய விழிப்பு குறித்து பேச வேண்டும் குறிப்பாக பதின்பருவத்தின்போது உறக்கம் சட்டென்று நடத்திய தாக்குதலை இங்கே நினைவுகூர்கிறேன். நன்றாக உடுத்திய நிலையில் அவனிருக்க, கணிதம் அல்லது சட்டம் சம்பந்தமான பாடங்களிலிருந்து விடுவித்து திடீரென உறக்கம் அப்பையனை தன்வசமெடுத்துக் கொள்ளும். புத்தகம் கைநழுவ, அவன் உறக்கத்தில் வீழ்வான்.  அவ்வுறக்கம் ஆழமானது, செறிவானது, இதுவரை உபயோத்திராத சக்தியையெல்லாம் பிரயோகித்து செயல்படுகிறதோ என்றுகூட சொல்லக்கூடிய பரிபூரன அனுபவத்தினை, மூடிய விழிமடல்களின் ஊடாக பெற முயற்சித்த உறக்கம். பிறகு கானகத்தில் நாள்முழுக்க விலங்குகளை வேட்டையாடி அலுத்து, வெற்றுத்துரையில் கணத்தில் நித்திரைபோவதும், நாய்களின் குரைப்புச் சப்தம் கேட்டோ அல்லது எனது மார்பில் அவை பிறாண்டுவதாலோ விழித்துக்கொண்ட அனுபவங்களும் சொல்வதற்கு இருக்கின்றன.  என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியதோடு, மனவுளைச்சலை ஏற்படுத்திய அனுபவமென்று சொன்னால் அது, ஒவ்வொருமுறையும் கூடுவிட்டு கூடுபாய்ந்து புதிய அனுபவத்தினை எதிர்பார்க்கிறநேரத்தில், ஏதோவொரு சக்தி என்னை மீண்டும் இழுத்துவந்து எனது சொந்த சரீரத்திற்குள் சாமர்த்தியமாக அடைத்துவிடுகிறது.  அவ்வுடல் படுத்தவுடன் நித்திரைகொள்ளும் பாக்கியவான்களுக்கு, ஓர் அற்ப பிண்டம், எனக்கோ – அத்ரியன் என்ற அந்தச்கூடு – அதனைச் சிறிது நேரம் ரசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் அளிக்கும் ஜடம், அதாவது கடந்தகாலத்தை மறந்திருக்கும் சரீரம்  சரியா ?

ஆனால் உயிர் வாழ்க்கையின் மூன்றில் ஒருபகுதியை தனதாக்கிக்கொள்ளும் ஒரு நிகழ்வை – உறக்கத்தை-  நாம் அதிகம் பொருட்படுத்துவதில்லை. காரணம் அது தரும் நன்மைகளை புரிந்துகொள்ள எளிமையான அணுகுமுறை வேண்டும் அது நம்மிடமில்லை. உறங்கும்போது காயஸ் கலிகுலா (Caïs Caligula)வும் ஒன்றுதான் நீதிக்குப் பெயர்பெற்ற அரிஸ்டித் (le Juste Aristide)ம் ஒன்றுதான். உறங்கும் நிலையில் என்னுடைய முக்கியமான சிறப்புரிமைகள் பொருளற்றவைகளாகி விடுகின்றன.

 நல்லது, உறக்கமின்மை என்றால் என்ன ? அடுக்கடுக்காக சிந்தனைகள், தொடர்ந்து விதர்க்கங்கள், அடையும் தெளிவு,  அதற்கேற்ப கட்டமைக்கும் விளக்கம், இமை மூடிய கண்களின் தெய்வீகமான மடமைக்கு ஆதரவாக  அல்லது கனவுகளின் பாண்டித்ய மூடத்தனத்திற்காக தனது மகுடத்தை துறக்க மறுத்து, நமது அறிவு பைத்தியக்காரத்தனமாக பிடிவாதம் காட்டுகிறது என்பதன்றி வேறென்ன ? ஆக, உறக்கமின்றி தவிக்கும் அம்மனிதன்(கடந்த சிலமாதங்களாக என்னிடம் அவனைக் காண்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள்) ஏறக்குறைய அநேக விஷயங்களை  வேண்டுமென்றே நம்ப மறுக்கிறான். ‘மரணத்தின் உடன்பிறப்பே…’ ஐசோகிரட்டீஸ்(Isocarate) உரையின் ஆரம்பமே தவறு, பேச்சாற்றல் மிக்க  கலைஞர் ஒருவரின், அலங்கார வார்த்தைகளாகவே இத்னை எடுத்துக்கொள்ள வேண்டும். அண்மையில்தான் மரணத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.  மரணத்திடம், இன்றைய மனிதர் சூழல் அறியத்தவறிய பலரகசியங்கள் உள்ளன. இருப்பினும், ஓரளவு மறக்கப்பட்டதும், அதிகம் புரிந்துகொள்ள முடியாததுமான மரணத்தின் இரகசியங்கள் மிகவும் சிக்கலானதும் ஆழமானதுமாகும். விளைவாக ஏதோ ஓர் இடத்தில் உறக்கமென்ற ஊற்றும், மரணமென்ற ஊற்றும் ஒன்றுடனொன்று நன்கு கலந்திருப்பதைப் போன்ற உணர்வு.

அழகியல் உற்சவம் : ஜெயமோகன்

கதையாடல் என்பது புராணிகம் ஐதீகம் காலத்திலிருந்து மனித வாழ்க்கையின் அகம் புறம் என்ற இரண்டையும் பேசுவது. ஆரம்பகாலங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் நலனை பொது நெறியாகக் கொண்டு இணக்கமான, அமைதியான வாழ்வு என்பதை நோக்காக அமைத்து : நற்குடி பிறப்பு, பருவ வயதை அடைந்ததும் மணமுடித்தல், மக்கட்பேறு, பொருளீட்டல், வறியவர்க்கு உதவுதல், இறுதியில் இறைவன் அடி சேர்தல் என்ற வரிசையில் அமைத்துகொண்ட கதையில் பொதுநலனுக்கு எதிரானவைகளைத் தீயவை எனச் சித்தரித்து, அவ்வழியில் செல்கிறவர்களை தீயமனிதர்களாக அடையாளமிட்டு அவர்களுடைய அவல முடிவைக் கூறி, புனைவுகளில் சமூக அறத்தை உயர்த்திப் பிடித்தார்கள். இணக்கமான அமைதியான வாழ்வு தசரதராமன் அரச குடும்பத்திற்கு மட்டுமல்ல, அய்யோத்திக் குடிமக்களுக்கும் தேவை என்பதை காலம் போதிக்க, கதைசொல்லில் மாற்றம் நிகழ்ந்தது. பொதுபுத்திக்கான சமூகம், என்பதை உப களமாக, துணை நிலமாக வடித்துக்கொண்டு இன்று தனி மனிதனின் புறத்தைக் காட்டிலும் அகவாழ்க்கை, அதன் சிக்கல், அவன் நெஞ்சில் பிடிவாதமாக உட்கார்ந்திருக்கிற ஊமுள் சாக்குபோக்குகள் ஆகியவற்றை முன்நிறுத்தி, இன்று  கதைசொல்லிகளின் திறனுக்கேற்ப கதைகேட்கிறவர்களின் ஞானத்திற்கேற்ப புனைவுகள் படைக்கப்படுகின்றன. மரபும், இயற்கையும், வாழ்க்கை முறையும் நமது உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன, சுவையைத் தீர்மானிக்கின்றன. காவிய கதையாடலுக்கான இடம் இன்றில்லை, சகமனிதனின் அகமும் புறமும் இன்று பாடும்பொருளாக, எழுதும் பொருளாக இருக்கிறது,

கதைசொல்லியையும், அவனால் சொல்லப்படும் கதையும் கேட்கின்ற அனைவருக்கும், வாசிக்கின்ற மொத்தபேருக்கும் விரும்பத் தக்கதாக இருக்கவேண்டுமென்கிற கட்டாயம் எதுவுமில்லை. நம்முடைய புட்டும், கொழுக்கட்டையும் பாவ்பஜ்ஜி சாப்பிடுகிற்வர்களுக்கும் பிடித்தாகவேண்டும் என்கிற நிர்ப்பந்தங்கள் இருக்கமுடியாது. சிறுவயதில் என் வீட்டில எனக்குப் பிடித்த உணவு என் சகோதரருக்குப் பிடிக்காது, அவருக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது. எனக்குப்  பிடிக்காததை அம்மா சமைத்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக சாப்பிடாமல் எழுந்து சென்றிருக்கிறேன். அதேவேளையில் விரும்பியதைச் செய்திருந்தால் கேட்டும் சாப்பிட்டிருக்கிறேன்.

« எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு » என்கிறது குறள். கலை இரசனை அல்லது ஒரு கலைமீதான அபிமானம் என்பது அறிவு சார்ந்ததாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை, அது முதலில் உணர்வு சார்ந்தது. எனவே வள்ளுவன் கூறும் மெய்ப்பொருளை இங்கே படைப்பிலக்கியமெனில்,  அறிவை இரசனையென்று பொருள் கொளவேண்டும், இப்பிரச்சனையை அணுகவேண்டும்.  

தமிழிலக்கிய சூழலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கென்று ஒரு தனித்துவமுள்ளது. தமிழில்  அவருடைய படைப்புகள் சிலவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன், ஏன் எதற்கு என்கிற கேள்விகளுடன் மனதில் அசைபோட்டிருக்கிறேன். நான் போற்றுகிற எழுத்தாளர்களில் ஒருவர். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. மாறாக அவருடைய கதையாடல் திறனை, மொழியை கலைப்டுத்தும் ஆற்றலை வியக்கும் மனிதர்களில் நானும் ஒருவன். சங்கச்சித்திரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது மிகுந்த ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். அவருக்குக் கடிதமும் எழுதினேன், அக்கடிதத்திற்குப் பதிலும் அளித்திருந்தார். நாகர்கோவில் சென்றிருந்தபோது எம்.எஸ்ஸுடன் எழுத்தாளரை அவர் இல்லத்தில் சந்தித்தேன். எனது எழுத்தின் மீது திடமான நம்பிக்கை இருப்பதாலும், தமிழிலக்கியத்திலும், நவீன இலக்கிய கோட்பாட்டில் ஆழ்ந்த ஞானமும், திறனாய்வில் தேர்ச்சியும் மிக்க பேராசிரியர் க. பஞ்சாங்கம் போன்ற  சான்றாண்மைகளின் நட்பும், தமிழ் ஆங்கிலம், பிரெஞ்சு எனும் மூன்று மொழிபடைப்புகளின் தீவிர வாசகன் என்கிற தகுதியும், எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் நவீன இலக்கியத்திற்கு அளித்துள்ள கொடையை நன்றியுடன் நினைவுகூர எனக்கொரு வாய்ப்பினைக் காலம் அளித்துள்ளது.

கலையும் இலக்கியமும்

பெண்ணின் நோக்கும் சுவையை, பிறர் பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
பண்ணின் நோக்கும் பரா அமுதை, பசுங்
கண்ணின் நோக்கினர், உள்ளம் களிக்கின்றார்.

கம்பன் நவீன இலக்கிய கோடபாட்பாடின் கருத்தாக்கமான நோக்கு நிலையை தாம் முன்னரே அறிந்தவன்போல பெண்கள் நோக்கும் சுவையை அதாவது அவர்தம் ஐம்புலன் பெறும் இன்பத்தை இசைவடிவான பரம்பொருளைக் கண்டவர்கள் அடைந்தனர் என  அயோத்தியா காண்டத்தில் கங்கைப் படலத்தில் எழுஎதுகிறான்.

« கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
 »

(காமத்துப்பால், களவியல், புணர்ச்சி மகிழ்தல்)

வள்ளுவரும் பெண்களில் நோகில் ஐம்புலன்களுகும் தனித்தனியாக அடையும் இன்பத்தை பெறு ஆற்றல் ஐபுலன்களில் ஒன்றான கண்களுக்கு உண்டென்பதை இரு வரிகளில் உறுதிசெய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறான். வள்ளுவன், கம்பன் இருவருக்கும் நோக்கமொன்றுதான், ஐம்புலன்களில் பார்வையை, நோக்கும் செயலை முதன்மைப்படுத்துவது. ஈர்க்கின்ற பொருளுக்கென விழிக் கதவுகள் திறக்க பிற புலன்கள் வரவேற்பிற்குத் துணை நின்று அதனதன் பண்பூடாக உடலுக்கும் ஆன்மாவிற்கும் மகிழ்ச்சியை ஊட்டுகின்றன.

வள்ளுவன் பெண்களின் நோக்கினை அடிப்படையாக கொண்டு முன்வைக்கும் கருத்து, கம்பனுக்கு பிரிதொரு பார்வையை கட்டமைக்கவும் அக்கலையூடாக, நோக்கு தரும் இன்பத்தை அவனுடைய பரம்பொருளை கண்ணுற்றவர்கள் மாத்திரமின்றி அவன் படைப்பை வாசிக்கிறவர்களிடமும் கொண்டுபோய் சேர்க்கிறான்.  இது அழகு என்ற குறியீட்டுக்குரிய திறன், கலையும் அழகும் வேறுவேறல்ல, இருந்தும் அது : அகம் புறம், ஆழமான மேலோட்டமான, பூடமாக வெளிப்படையாக, மையம் விளிம்பென இருவேறு பண்புகளால் கட்டமைக்கப்பட்ட மாதொருபாகன். கலை என்பது பொதுவில் சகமனிதர்களின் புலன்சார்ந்த உணர்வுகளையும் மனக்கிளர்ச்சியையும் தட்டியெழுப்புவதை மட்டுமே நோக்கமாக கொண்டது அல்ல. அறிவென்கிற சோதனைச்சாலயில் ஏன் எதெற்கென்ற கேள்விகளுக்கு விடைகாண முயல்வது. அழகென்பது இயற்கையானது, கலை அறிவோடு கலந்த கற்பனைதிறன் வெளிப்பாடு.

‘அழகு’ என உச்சரிக்கிறபோது, நம் கண் முன்னே உள்ள பொருளின் எதார்த்த வடிவமும், வனப்பும் அப்பொருள்மீது விருப்பத்தை தருகிறது. தமிழ் அறிஞர் தி.சு  நடராசன் கருத்துப்படி « புலப்பாட்டுத் திறனைக் காட்டுகிற நுண்ணர்வாகிய இவ்வழகு கேட்போர் பார்ப்போரின் புலனறிவோடும் மன நிலையோடும் செயல்படுகிறது. பொருளுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் இடையிலான உணர்வு நிலை, அழகுக்கும் அதன் நுகர்வுக்கும் மிகவும் முக்கியமானது … » « எனவே அழகு என்பது பொருளின் (object) பண்பு மட்டுமல்ல, காண்பவரின் மன உணர்வை(subject) அதாவது அவ்விரண்டின் உறவையும் சார்ந்தது ஆகும் » என்கிறார்.

 இலக்கியம் மொழியை அடிபடையாகக் கொண்தொரு கலை. ஒரு தேர்ந்த கலைஞன் மொழியை இசையாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், கையாளுகிறான். பலரும் உபயோகித்துவந்த பாதையோரம் கிடந்த பாறாங்கல் ஒன்று அவ்வழியாகப்போன ஸ்தபதியின் கண்பட்டு, கற்பனைத் திறனுடன் வினையாற்றப்பட சில மாதங்களுக்குப்பிறகு கருவறை மூலவராக கோவிலில் நிற்கிறது. ஜெயமோகன் ஒரு தேர்ந்த எழுத்துச்சிற்பி.

எழுத்தாளர் ஜெயமோகன் புனைவுகளில் காணும் அழகியல் பண்பை,  சொல் விளையாட்டை,  அதாவது தேர்ந்த ஒரு பொற்கொல்லர்போல எங்கே வார்த்தைகளை பதித்தால் வாக்கியம் அழகு பெறும் எனபதில் தெளிந்து கையாளும் சொற்கொல்லராக வார்த்தைகளை வாசகனுக்கு அர்த்தமாக்கிக்கொள்ள உதவும் உத்தியை, வர்ணனையை, நடையை, உவமங்களின் புதிய வரவை கன்னியாகுமரி நாவலை முன்வைத்து இங்கே இலக்கிய அபிமானிகளுடன் பகிர்ந்துகொள்வது கட்டுரையின் நோக்கம்.

கதை மாந்தர்கள் :

ரவி,

கதை நாயகன் தொழில் : பட இயக்குனர், மலையாளத் திரைப்பட உலகைச் சேர்ந்தவன்.  88ல் ஏகயாய ராஜகுமாரி என்ற சினிமாவை இயக்குவதற்கு முன்பு அப்படத்திற்காக கன்னியாகுமரியில் தங்கியிருந்தபோது « ராத்திரி இருட்டில கடற்கரைல நடக்கிறது, பகலில படுத்து தூங்கறது, தனக்குத்தானே பேசிக்கிறது, சிரிக்கிறது, கடைசீல ஒரு இருப்பு, ஒரு எழுத்து, அதாக்கும் ஏகயாய ராஜகுமாரி ! கதைன்னா அதுகதை….  அதுமாதிரி கதை, அது மாதிரி படம் இந்த மலையாள ஃபீல்டில எண்ணி அஞ்சு தேறாது… » என மொத்த மலையாளப் பட உலகமும் நேற்றுவரை கொண்டாடிய ஒரு மனிதன், இன்று அவனுடைய திரைப்பட இருப்பு கேள்விக்குறி. அதே  திரைப்பட உலகம் « இண்ணை தேதிவரை வேற ஒரு படமும் அந்த ரேஞ்சுக்கு வரலை. அது சொல்லாம இருக்கப்பிடாது… » என அவன் முகத்துக்கெதிரே விமர்சனமும் செய்கிறது. இவனும் « ஏகாய ராஜகுமாரிதான் என்படம். அது எந்த இடத்தில் தொட்டதோ அதுதான் என் இடம். அங்க மறுபடியும் தொட்டாகனும். அதுக்காக மறுபடியும் அதே படத்தை எடுக்க முடியாது. மறுபடியும் அதே மனநிலையில அதே ஆவேசத்தில்நான் ஒரு முயற்சி பண்ணனும். அதுக்காகத்தான் இங்கே வந்தேன் » எனத் தன் இழப்பை மீட்டெடுக்க திரும்பவும் கன்னியாகுமரி வந்திருக்கிறான். பெண்கள், மது, சுருக்கென்ற கோபம், சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள், தன் இருத்தலை நிறுவ பிறரை நிராகரிக்கும் அற்ப குணம் இவைதான் ரவி, இங்கே அப்பழுக்கற்ற மனிதர்கள் என்று யாrராவது உண்டா என்ன, அவன் ஒரு கலைஞன் என்பதால் தன்னை ஊரறிய அம்மணபடுத்திக்கொள்வதில் அப்படியொரு மூர்க்கம், வெறி.

விமலா

ரவி வாழ்க்கையில் குறுக்கிட்ட முதல் பெண். கல்லூரியில், இளம் வயதில் காதலிக்கிறார்கள். உள்ளத்தைப் புரிந்துகொண்டது போதாதென்று ஒருவர் மற்றவர் உடலைப் புரிந்துகொள்ள நாள் குறித்து,  ரவியின் ஆதமார்த்த தலமான கன்னியாகுமரிக்கு  காதல் யாத்திரையாக புறப்பட்டு வருகிறார்கள். அங்கே என்ன நடந்தது ? எதிர்பாராமல் நடந்ததொரு சம்பவம் அவர்கள் உறவைத் துண்டாடியது எப்படி ? நெருக்கடி காலங்களில்தான்  மக்களின் உண்மை குணம் வெளிப்படுகிறது.  அவசரத்தேர்வுகளை எதிர்கொள்ளும் போதுதான், மனிதர்கள்  எங்கனம்  உண்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது வாழ்க்கையில் உண்மை, கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தும். கன்னியாகுமரியில் நடந்த அந்த மிகப்பெரிய அசம்பாவிதத்திற்குப் பிறகு இருவர் வாழ்க்கையும் ஆளுக்கொரு திசை என்றாகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாய ராஜகுமாரிபோல இன்னொரு படம் எடுத்து தன் திரைப்பட வாழ்க்கையை திடப்படுத்திக்கொள்ளும் கனவுடன் கன்னியாகுமரிக்குத் தமது திரையுலக நண்பர்களுடன் வந்திருக்கும் ரவி அமெரிக்காவிலிருந்து ஒரு டாக்டராக இந்தியா வந்துள்ள விமலாவை சந்திக்கிறான். இச்சந்திப்பே கதையை ஊசி, நூலை அழைத்துச் செல்வதுபோல நகர்த்த நாமும் விடுகதைக்கான விடையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கதையில் பயணிக்கிறோம்.

பிரவீணா

வாய்ப்புக்காக காத்திருக்கும் நடிகை, எதற்கும் தயார். கையில் எரிக்கா யங்(Erica Jong) எழுதிய ‘Fanny’ ; வாய்ப்புக்காக காத்திருக்கும் பெண் என்பதால் ரவியோடு படுகையைப் பகிர்ந்துகொள்வதில் தாராளம். எனினும் பேச்சு, செயல், சாயல் அனைத்திலும் நுட்பமும் தன்னம்பிக்கையும் இயல்பாக மெய்பிக்கப்படுகிறது.

« மிக நுட்பமான பெண். அவளை அஞ்சுவதும், வெறுப்பதும், மோகம் கொளதும், வெல்லத் துடிப்பதும் அதனால்தான். ஆனால் அவளை வெல்ல முடியாது. ஏனெனில் எந்தக் களத்திலும் அவள் எவரையும் சந்திப்பதில்லை…. » இது ரவியின் மனதில் பிரவீனாபற்றிய அபிப்ராயம்.

பிற பாத்திரங்கள்

மேலே சொல்லபட்ட மூவரும் நாவலின் முக்கிய பாத்திரங்கள், இவர்கள் தவிர ரவியின் திரையுலக மனிதர்கள் : வேணுகோபால், நாராயணன். ரவியை முறைப்படி மணம் செய்துகொண்டு, கணவன் எங்கே எவளுடன் இருக்கின்றானோ என்றெழும் சந்தேகத்தை நிவர்த்திசெய்துகொள்ள அவ்வப்போது தொலைபேசி அழைப்பூடாக நாவலில் குறுக்கிடும் ரமணி, விமலாவின் கிரேக்க நண்பன், பல ஆண்டுகளுக்கு விமலாவின் உடலை சீரழித்தவனாக அறிமுகமாகும் காசநோய்க்காரன் ஸ்டீபன் என நமக்கு அறிமுகமானாலும், இவர்கள் எண்ணிக்கையில் அதிகமில்லை, அவர்கள் பங்களிப்பு, நாவலை நகர்த்த குறிப்பாக ரவியுடைய முகவிலாசத்தையும், மனவிலாசத்தையும் கூடுதலாக விளங்கிக்கொள்ள உதவுகிறது.

கதையும் கதையாடலும்

கதைசொல்லி, ஒரு கதைக்கான பொருள், கதையைக் கேட்பவன் அல்லது வாசகன். இம்மூன்றும் கதையாடலுக்குக் கட்டாயம். அதன் பொருண்மைகள் எதுவாயினும் ‘இந்திய இலக்கிய கோட்பாடுகள்’ என்ற நூலில் வெ. அய்யப்ப பணிக்கர் என்பவர் ஆறு சொற்களை கதையாடலின் முக்கியம் வாய்ந்த வேர்ச்சொற்களாகக் காண்கிறார். அவை « எவன் ? அல்லது எவள் ?, எப்போது ?, எங்கே ?, என்ன ?, எதற்காக ?, எப்படி ? ». கன்னியாகுமரி நாவலும் இதற்குரிய பதிலை தெளிவாகவே வைத்திருக்கிறது.

ஒரு புனை கதை இலக்கியம் ஆவது எப்போது ?

கட்டுரையின் ஆரம்பத்தில் தெரிவித்ததைப்போன்று அழகியலில் அடங்கியிருக்கிறது அதன் உயிர் மூச்சு. இலக்கியம் மொழி சார்ந்த கலை. ஒரு சமகால படைப்பாளி தம்முடைய வாழ்க்கைச் சூழலில், தான் அங்கம் வகிக்கும் சமூகம் சார்ந்து பெற்ற அனுபவங்களை, பெற்ற உணர்வுகளை,  அதன் அடிப்படையில் எடுத்த முடிவுகளை, சந்தோஷங்களை, துயரங்களை, முரண்களை உரிய பாத்திரங்கள் மூலமாக சொல்ல நினைக்கிறான். இலக்கிய நடை அதற்கு உதவுகிறது. ‘அ’ என்று சொன்னால் காதுக்கு இனிமைக் கிடைப்பதில்லை, ‘ஆ’ என நீட்டி முழங்கவேண்டும். அப்போதுதான் எழுத்து இசையாகும், கவனம் பெறும். வாசகன் படைப்பாளியின் சொற்களை அர்த்தப்படுத்திக்கொள்வதில் இலக்கியமில்லை அச்சொற்களைக் கடந்து நிற்கும் கவிஞனின், புனைகதை ஆசிரியனின் நோக்கத்தை, எண்ணத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு சம்பவத்தை, மன நிலையை விவரிக்க படைப்பாளி ஆற்றல் மிக்கச் சொற்களை உபயோகிக்கவேண்டும். அச்சொற்கள் வாசிப்பவர் மனதைச் சென்றடையும்போது அவர்கள் உள்ளத்தில் படைப்பாளி சொல்லாமல் விட்ட செய்திகளும் புரிகின்றன. துரதிஷ்டவசமாக இந்த அனுபவத்தைப் பெறும் திறமை எல்லா உள்ளங்களுக்கும் இருப்பதில்லை. வெற்றிகரமாக இச்செயல்பாட்டை அரங்கேற்ற கோபிசந்த் நாராங்  என்பவர் சொல்பதுபோல சொல்லின் மிகச் சிறந்த உற்பத்தித் திறனை படைப்பாளி புரிந்தவராக இருக்கவேண்டும். ஜெயமோகனின் கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் அனைத்திலும் இந்த ஆற்றலைக் காண்கிறோம்.

« மாலை வெயிலின் நெந்நிறம்  ஈர மென்மணல் மீது தகதவென ஒளிர்ந்து, குமிழிகள் துகள்களாக மாறி அழிய, உலர்ந்து மறைந்தது. அவள் சற்று தூரம் விலகிச் சென்றுவிட்டிருந்தாள் . அவள் பாதத் தடங்கள் மீது, அலை வெண்நுரை விசிறிப் பரவிச் சென்றது. »(பக்கம் 10)

« இந்தக் கடற்கரைக்கு எத்தனையோ வருஷமா திரும்பத் திருப வந்திட்டிருக்கேன். இங்கே என்ன இருக்கு ? கண்டிப்பா இது ஒரு அழகான கடற்கரை இல்லை. இன்னைக்கு இருக்கிற நிலமையைப் பார்த்தா உலகத்திலேயே அழுக்கான ஆபாசமான கடற்கரைகளில ஒண்ணுன்னு கூடச்சொல்லிடலாம். ஆனா இங்க என்னமோ ஒண்ணு இருக்கு, மத்த கடற்கரையில இல்லாதது. இப்ப சொன்னேனே இந்தத் தரைக்கு அடியில மூணு பிரம்மாண்டங்கள் மோதற உச்சக் கட்ட மௌனம் இருக்கு. அதுக்கு மேல சித்தாட கட்டிகிட்டு மூக்குத்தி ஒளியோட தூய கன்னியா தேவி காத்திட்டிருக்கா »(பக்கம் 27)

« விரிந்த பாதையின் இருபுறமும் பெரிய கொன்றை மரங்கள், முதலை உடம்புடன், சாமரக்கொத்து இலைகளுடன், மஞ்சள் நிற பூக்குலைகளுடன் நின்றன. தரையெங்கும் மஞ்சள் நிற பூக்கள். பெண்கள் சிறு சிறு குழுக்களாகச் சென்றுகொண்டிருந்தார்கள்……பெண் முகங்களில், கழுத்துச் சரும மென்மைகளில், முழங்கை மென்மயிர்களில். பின்னல்களின் முடிப்பிசிறுகளில், அலைபாயும் பாவாடைகளில் முற்றிலுமாக தன்னை மறந்திருந்தான். (பக்கம் 41)

இதுபோல நிறைய உதாரணங்களை நூல் முழுக்கத் தரமுடியும், அதிலும் குறிப்பாக ரவியின் பழைய நினைவுகள் ஊடாக காதலி விமலா வுடனான தருணங்களை அவர்களிடையே பரிமாறிக்கொள்ளபட்ட இளமை பூரித்த உரையாடலை வாசிக்கிறபோது, மடியேந்திபெற்ற இலக்கியப்பூக்களை மார்பில் அணைத்து மகிழ்வதைப்போன்ற உணர்வை வாசகர்கள் பெற முடியும்

இப்படி வர்ணனைகளில் சோபிக்கிற பகுதிகள் ஒருபக்கமெனில்,அத்தியாயம் 10ல்

விமலாவை அவமானப் படுத்துவதாக நினைத்துக்கொண்டு « ஆமா நீ எஞ்சாய் பண்ண. உனக்கு நான் பத்தலை . அந்த நாலு தடியனுங்க வந்தப்பதான் உனக்குத் திருப்தியாச்சு . அதை மறக்க அழுது நாடகமாடற » எனப் போடுகிற கூச்சலும்,  

அத்தியாயம் 13Lல் தமது இறுமாப்பும், அகங்காரமும் சிறுமையுற, ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதுபோல பிரவீனாவுக்கு எதிராக ரவி கொட்டுகிற வார்த்தைகளும் அவனைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. இவைதவிர விமலாவின் பேச்சில் ஒருவித பெருமிதத்தையும், பிரவீனாவின்  வார்த்தைகளில் அறிவுக்கூர்மையையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார், சொற்களைக் கொண்டு பாத்திரங்களின் தன்மையைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஆண் பெண் வர்ணைகளிலும் இலக்கியம் ஒரு மொழி சார் கலை என்பதை படைப்பாசிரியர் வாய்ப்பு அமைகிறபோதெல்லாம் உறுதிபடுத்துகிறார்.

« அவள் தலை மயிரை நீவியபடி எதிரே வந்தமர்ந்தாள். கனமான மங்கிய நிறம் கொண்ட காதிப் புடவை. சிறு முகப்பருக்கள், சிவந்து நிற்கும் மேக்கப் முற்றிலும் இல்லாத முகம், மெல்லிய உடல், ஏதோ செயற்கை உலோகத்திலான மாலையும் தோடுகளும்-பல்கலைகழக மாணவிக்குரிய தோற்றம் »(பக்கம் 22)

« பறக்கும் தலைமயிரை கைகளால் விலக்கியபடி, ஒளிகொப்பளிக்கும் கடலைப் பார்த்தபடிஒரு கணம் நின்றாள். நீல நிற ஜீன்ஸும் வெண்ணிற டீ ஷர்ட்டுமாக வெள்ளைக்காரி போலிருந்தாள். பட்டுப் பாவாடையும் தாவணியும் அணிந்து இரட்டைச் சடைபோட்டு, பிச்சிப்பூ சூடி குங்குமப்பொட்டும் குடிகூரா பௌடருமாக கல்லூரிக்கு வருவாள். சுழலும் கண்களுடன் மார்பில் புத்தகங்களை அடுக்கியபடி சிரிப்பின் ஒளி பூசிய முகத்துடனவள் தோழிகள் நடுவே வரும் காட்சிமட்டும் நினைவில் பிரகாசமான தணித்த வண்னத்தில் பதிந்திருக்கிறது. »(பக்கம் 10)

சில நேரங்களின் சில மனிதர்களின் நடவடிக்கைகள் நமது புருவங்களைச் சிலிர்ப்புடன் அனிச்சையாக உயர்த்தச் செய்யும். அத்தகைய அனுபவத்தை  நண்பர் ஜெயமோகன் சொற்களைகொண்டு  ஒரு தேர்ந்த மொழி ஒப்பனையாளரின் கலைஞானத்துடன் வாக்கியங்களைப் படைக்கிறார்.

« நாராயணன் பேச்சை அவன் முறித்து உட்புகுந்தான் »,

« இருட்டின் கனத்தப் போர்வை கடலின் ஓசைக்குக் கார்வையைக் கூட்டியிருந்தது. காற்றாலான பெரிய அருவி ஒன்று கடலிலிருந்து நிலம் நோக்கிக் கொட்டிகொண்டிருந்ததில் உடல் குளிர்ந்து நடுங்கி நிற்பதாக உணர்ந்தான் »

« தலைசுழன்று கால்கள் பதறின காதுகளில் ரீங் என்ற ஒலியும் வாயில் அமிலக் குமட்டலும் வந்தன. »

« சிவப்பும் சாம்பலும் பரவி விரிந்த வானத்தின்கீழே ஆழ்ந்த நீல நிறம் பெற்ற நீர்பரப்பு சுருண்டு எழுந்துவந்து கரையில் வெண் இறகாக விரிந்து பரவியது. மீண்டும் சுருண்டெழுந்தது. . »

இவைதவிர, வடிவமைப்பு, உவம வழக்குகள் என ஜெயமோகன் எழுத்துக்களில் கொண்டாடுவதற்கு விஷயங்களுக்கு பஞ்சமில்லை.

    இறுதியாக

« சப்ளைம்னு சொல்லிட்டா ஆச்சா ?  எனக்குப் புரியலை அது…

அது ஒரு அனுபவம்ங்கிறப்ப எப்படி அதை வரையறுத்துச் சொல்லமுடியும் ? ஆனா உங்களுக்குத் தெரியும் நான் என்ன சொல்றேன்னு . கலையனுபவம் இல்லாதவங்க யாருமில்லை. அதனால இதை உணர முடியாதவங்கன்னும் யாருமில்லை.

மனசு பொங்குதே அதைச் சொல்றியா ?….

உச்சக்கட்ட அனுபவம்னு வச்சிக்கிடுங்க இல்லை பெரிய தார்மீகமான மன எழுச்சி, இல்லை பிரபஞ்ச ரீதியான ஓர் உண்மையைத் தரிசிக்கிறது, இல்லை மனசுக்கு சாத்தியமான உச்சக்கட்ட உணர்ச்சி நிலைய அடையறது-ஏதோ ஒண்ணு. இல்லை இதில எல்லாமும்தான். ஒண்ணு இல்லைன்னா இன்னொண்ணூம் இல்லாம ஆயிடலாம். ஒருபக்கா அரசியல் படத்தோட உச்சக்கட்ட ஆவேசமும் ஒரு வயலின் சங்கீதத்தோட அற்புதமான ஒரு குழைவும் ஒரே அனுபவம் தான்னு நான் சொல்வேன். கலைன்னா அந்த உச்சத்தை நோக்கிபோற ஒரு யாத்திரை மட்டும் தான். அது இல்லைன்னா வேற ஒண்ணூமில்ல. அதை உள்வாங்கிக்க முடியாதவங்கதான் வேற எதையாவது பேசிகிட்டிருப்பாங்க »(பக்கம் 114)

மனப்பூர்வமாக நீங்கள் சொல்கிற கருத்தை ஏற்கிறோம் சாரே,

கன்னியா குமரி நாவல் கதை நாயகன் ரவிக்கு வேண்டுமானால் ஏகாய ராஜகுமாரி ஒன்று போதும் என சாபமிருக்கக்கட்டும், உங்களிமிருந்து பல ஏகாய ராஜகுமாரிகளை எதிர்பார்த்து மேன்மாடங்கள் காத்திருக்கின்றன என்பதை மட்டும் நினைவூட்டுகிறோம்.

———————————————————————————————————————————————.

அலைகடலுக்கு அப்பால் தமிழ் :

அண்மையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் வாசித்த கட்டுரை

அனைவருக்கும் வணக்கம்,

பிஷப் ஹீபர் கல்லூர் முதல்வர்  தா. பால் தயாபரன், பேராசிரியர்கள்  டென்னிசன், இராஜசேகரன், மூ. முனீஸ்மூர்த்தி, விஜயராணி, சாம் கிதியோன் மற்றும் எனதுரையைக் கேட்க வந்துள்ள அனைத்து பெருமக்களுக்கும் வணக்கமும் நன்றியும். 

அலைகடலுக்கு அப்பால் தமிழ் என்கிறபோது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டைத் தமிழர்களின் பூர்வீக நிலமாகவும் இலங்கை, மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளைக் குடியேற்ற நாடுகளாகவும் ஏற்றுக்கொண்டு கருத்தைச் சொல்கிற பார்வை இருந்தது. இன்று நிலமை வேறு. அலைகடலுக்கு அப்பால் தமிழர்கள் எனில் அவர்கள் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் கடல்கடந்து சென்று உலகின் பலபாகங்களிலும் அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களை முன்னிட்டு வாழ்கிற தமிழர்கள். காலனிய ஆட்சி காலத்தில் வறுமையும், சமூக அமைப்பில் இருந்த சாதிய ஒடுக்குமுறையும் புலம்பெயர காரணமாயிற்று, இன்று பேரினவாத அரசியல் பிரச்சினைகளும், வளமான வாழ்க்கைத் தேடலும் மக்கள் இடம்பெயரக் காரணமாகின்றன.  

                  இதுதான் நாம் பிறந்த மண், இப்படித்தான் என் வாழ்க்கை, இங்குதான் என் கட்டை வேக வேண்டும் எனத் தீர்மானமாக ஓரிடத்தில் வாழ்க்கையை நடத்துகிற ஒரு சிலரின் வாழ்க்கையில் காட்டாறுபோல சம்பவங்கள் திடீர்ப்பெருக்கெடுத்து இவர்கள் திசையில் பாய தட்டுமுட்டு சாமான்களுடனும், குஞ்சு குளுவான்களுடனும் தம்மையும் பெண்டு பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, விதியை நொந்து, திக்கு திசையின்றி, மயக்கமானதொரு வெளியை நோக்கி ஒரு நாள் ஒரு கணம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரும் மரணத்தைப் போல புலம்பெயரும் மனிதனின் பயணம் தொடங்குகிறது. இடையில் எதுவும் நேரலாம், என்ற கையறு நிலையில் வேதனை, விரக்தி, சோர்வு, கொசுறாக சிறிது நம்பிக்கை என்ற பிரித்துணர முடியாத சகதியில் காலூன்றி, வாழ்க்கை முழுவதும் தவிக்கச் சபிக்கபட்ட மக்களின் இடப்பெயர்வு ஒருவகை. .  அரசியல்  நெருக்கடிகளின்றி முன்னதாகத் திட்டமிட்டு, சுகமான வாழ்க்கையை எதிர்பார்ந்து  புலம்பெயருகின்ற மனிதர்கள் பிறிதொரு வகை.  

நடந்துதான் போகவேண்டும் என்றிருந்த காலங்களில் கால்களும் மனங்களும் அனுமதித்த தூரத்தை, இன்றைய தினம் புலம்பெயரும் மனிதர்களின் பொருளாதாரமும், பயண ஊர்திகளும் தீர்மானிக்கின்றன. புலப்பெயர்வின் துணைக் கூறுகள் இவை.. கற்கால மனிதன் உயிர்வாழ்க்கையின் ‘அடிப்படைத் தேவை’க்குப் புலம் பெயர்ந்தான். நிகழ்கால மனிதர்களுக்கு அடிப்படைதேவையைக் காட்டிலும் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ முக்கியம். பருவம் பொய்த்து, பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு ஊர்போதல் வெகு காலம்தொட்டு நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் விவசாயக்கூலிகளாக, அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடியது போதும், “பட்டணம் போகலாம், பணம் காசு சேர்க்கலாம்” எனப் பட்டணம் சென்று, கொத்தவால் சாவடியில் மூட்டைத்தூக்கி பொங்கலுக்கு கிராமத்திற்குத் திரும்பி, கிராமத்தில் கம்பத்தம் எனக்கொண்டாடப்படுக்கிற பெருந்தனக்காரர்களுக்கு புரோ நோட்டின்பேரில் கடன் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோலவே படிப்பதற்கும், படித்தபின் உரிய வேலைதேடி நகரங்களுக்கும் மனிதர்கள் பயணிப்பதை இன்றும் காண்கிறோம். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் போகிறவர்கள், மேற்குலகில் குடியேறுகிறவர்கள் பிறநாடுகளுக்குப் புலபெயர்கிறவர்களில் அநேகர் ‘பணம் காசு சேர்க்கலாம்’ எனப் புலம் பெயரும் இனம். பணத்தோடுகூடிய பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிப் போகிறவர்கள்.

இந்தியத் தமிழர்கள் இந்தியாவிலேயே பிறபகுதிகளுக்கும், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, மேற்கு நாடுகள், வட அமெரிக்கா எனப் புலம் பெயர்வது வாழ்க்கையில் சுபிட்சத்தைத் தேடி. எண்பதுகளில் இலங்கையில்  தமிழருக்கெதிராக சிங்கள அரசு மற்றும் சிங்கள மக்களின் ஒரு பகுதியினரின் இனவாதம் தமிழினத்தைப் பாதிக்க, அதன் அடிப்படையில் உருவான பிரச்சனைகள், சம்பவங்கள், விளைவுகள் பொருட்டு முடிந்தவர்கள் மேற்கத்திய நாடுகள் கனடா எனக் குடி பெயர இயலாதவர்கள் இந்தியாவில் குடியேறினார்கள். இந்தியாவிலிருந்தும் சந்தர்ப்பம் அமைகிறபோது அவர்கள் மேற்கு நாடுகள், கனடா எனப் புலம்பெயர்ந்தார்கள். கண்டங்கள் எதுவாயினும், நாடுகள் எதுவாயினும் மனிதர்கள் இடம் பெயர அடிப்படையில் இரண்டு நோக்கங்கள் : அமைதியும், வளமான வாழ்வும் வேண்டும். தமக்கு மட்டுமல்ல தம்முடைய வருங்கால சந்ததியினருக்கும் வேண்டும்.  

அண்மைக்காலங்களில் குறிப்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு ஆணையம் ஏற்பட்ட பிறகு புலம் பெயர்தல் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்திலிலிருந்து ரஷ்ய படையெடுப்பு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டிலிருந்து பல இலட்சகணக்காண் மக்களை போலந்து, மறும் பிற ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக நிறுத்தியிருப்பதை நாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.. பன்னாட்டு அரசியலில், பொருளியல் நோக்கில், உள்ளூர் அரசியலில், ஊடகங்களில் புலம் பெயருதல் இன்று விவாதத்திற்குரிய பொருள். என்றைக்கு விலங்கினங்களும், மனிதரினமும் தோன்றியதோ அன்றையிலிருந்து புலம்பெயர்தல் நடந்துகொண்டிருக்கிறது. கால்கள் இருக்கிறபோது நடந்துதானே ஆக வேண்டும், ஓரிடத்தில் மரம்போல வேருன்றி நீரையும், உயிர்ச்சத்தையும் பெற முடியாதபோது இடம்பெயரத்தானே வேண்டும். ஆக இயல்பிலேயே மனிதன் புலம் பெயரும் உயிரினம். குகையில் – வெட்டவெளியைக் காட்டிலும் குகை பாதுகாப்பானது – உயிர்வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் இடம் பெயராதிருந்தால் இன்றைக்குக் “கோபல்ல கிராமங்கள்” ஏது, , நகரங்கள் ஏது. உலகமெங்கும் விவாதிக்கப்படுகிற பன்முக கலாச்சாரம்தான் ஏது. நீலக்கடலையோ, மாத்தாஹரியையோ, அண்மையில் வெளிவந்த சைகோன் – புதுச்சேரி நாவலையோ நான் எழுதியிருக்க முடியாது;

நீண்டகாலப் புலம்பெயருதலில், கலாச்சாரம், மொழி இவற்றில் அடிப்படை ஒற்றுமைகள் கொண்ட அரசியல் எல்லைக்குள் பொருளாதாரத் தேவையைமட்டும் கருத்திற் கொண்டு நடப்பது ஒருவகை உ.ம். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கோ, இங்கிலாந்திலிருந்து பிரான்சுக்கோ இடம்பெயருவது. மொழி கலாச்சாரத்தையொதுக்கிவிட்டு, அரசியல் நிர்பந்தங்களுக்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் முற்றிலும் புதிய மண்ணிற்குப் புலம்பெயருதல் மற்றொருவகை, உ.ம் மூன்றாவது உலக நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கோ அல்லது அமெரிகாவிற்கோ இடம்பெயருவது. புலம் பெயருதல் என்ற சொல், குறிப்பாக இவ்விரண்டாம் நிலை மக்களையே அடையாளப்படுத்துகிறது. .

புலம்பெயர்ந்த மக்களின் மொழியும் பண்பாடும்

மொழி மற்றும் பண்பாட்டுத்தேவை, புலபெயர்ந்த மக்களின் எண்ணிக்கைச் சார்ந்த சூழலைபொறுத்தது. அலைகடலுக்கு அப்பால் புலம்பெயர்வது என்பது காலனி ஆதிக்கத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்று. பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் புதிய நாடுகளைத் தேடி அடைந்த வெற்றி,  அந்நாடுகளில் அதிக எதிர்ப்பின்றி ஆதிக்க அரசியலை வணிகத் தந்திரத்தால் அடைய மேற்கு நாடுகளுக்கு உதவிற்று.  கைப்பற்றிய காலனிகளுக்கு முதலாளிகளாக அவர்கள் இடம்பெயர்ந்தார்கள் எனில், அவர்கள் பண்ணைகளில், தொழிற்கூடங்களில் அடிமைகளாக ஊழியம் செய்ய காலனி குடிமக்கள் கப்பல்களில் கொண்டுவரபட்டார்கள். பண்ணை முதலாளிகளான மேற்கத்தியர்களுக்கு அதிகாரம் அரசியல் என்பதால், அவர்கள் வெகு சுலபமாக தங்கள் மொழியையும், மரபையும் உறுதிபடுத்தகொள்ள முடிந்தது, மாறாக கூலிகளாக அழைத்துவரபட்ட காலனி மக்களோ குடியேறிய நிலங்களின் அதிகார மொழியை பொதுவிடங்களிலும் எஜமானர்களிடமும் உபயோகிக்கவேண்டிய  நெருக்கடியில் தள்ளப்பட்டனர். வீட்டில், தமிழர்கள் ஒன்று கூடும்போது, தமிழ்நாட்டிலிருந்து அவர்கள் உடலோடு கொண்டுவந்தை தமிழை உபயோகித்தபோதும், அவர்கள் வயிற்றுப் பசியை ஆற்றும் மொழியாக தமிழ் இல்லை. விளைவாக மொரீஷியஸ தீவு தமிழர்களிடத்தில். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் தமிழில்லை. இது ஏதோ தமிழுக்குமட்டும் ஏற்பட்ட நெருக்கடி அல்ல இது.

போர்ச்சுகல் நாட்டிலிருந்து, ஸ்பெயின் நாட்டிலிருந்து, இத்தாலி நாட்டிலிருந்து பிரான்சுக்கு கடந்த நூற்றாடுகளில் குடியேறியவர்களின் வீட்டில் கூட இன்று அவர்களின் தாய்மொழி உபயோகத்தில் இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் லூசியானா (Louisiana) விற்கு பிரான்சு மக்கள் குடியேறினார்கள் ஆனால் இன்று அவர்கள் பிரெஞ்சு பேசுவதில்லை. தங்கள் மூதாதையர்கள் பிரெஞ்சு பேசினார்கள் என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சில பிரெஞ்சு பண்டிகைகளை மட்டும் கொண்டாடுகிறார்கள்.காரணம் குடியேறிய பகுதியில் அவர்களின் அவர்களின் வாழ்க்கை மொழி அதாவது சம்பாத்திய மொழி வேறு.  இன்று தமிழில் அலைகடலுக்கு அப்பாலிருந்து எழுதுகின்ற அனேகர் தங்கள் உயிர்வாழ்க்கையில் பாதி ஆண்டுகளை இலங்கையிலோ இந்தியாவிலோ கழித்துவிட்டு மறுபாதியை புலம்பெயர்ந்த மண்ணில் தொடர்கிறவர்கள். எங்களைப் போன்றவர்களின் மொழி ஆர்வமும் பண்பாட்டின் மீதான அக்கறையும் எதிர்காலத்தில் எங்கள் சந்ததியினரிடமும் தொடருமா என்பது கேள்விக்குறி. பாண்டியன் கண்ணகி,  பெயர்களோ, தீ மிதித்து காவடி எடுப்பதோ, ஓ சாமி பாட்டோ, ரஜனி, கமல் படங்களோ தமிழை வளர்க்காது. இலங்கையிலும், இந்தியாவிலும் வாழ்கிற தமிழர்களையே தமிழ் அதிகம் நம்பியிருக்கிறது.

அயலக படைப்புகளும் தமிழும் 

குடியேற்ற நாடுகளுடைய பூர்வீக மக்களின் அடையாளங்களை முற்றிலுமாக எரித்துவிட்டு வந்த நாட்டை சொந்த நாடாக வரித்துக்கொண்டு வாழுகின்ற அமெரிக்கர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் போன்றவர்கள் ஒருபுறமிருக்க, புதிய மண்ணுக்கு வாழ்க்கைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இனம், கலாச்சாரம், மொழி இவைகள் தன்னிடமிருந்து விலகிச் செல்வதைத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்க பழகிய மக்களே இன்றைக்குப் பரவலாக புலம்பெயர்ந்தவர்கள் அடையாளத்துடன் வாழுகின்றார்கள். இவர்களின் உணர்வுகள், அனுபவங்கள், துயர்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் படைப்புகளாக வலம் வருகின்றன.

பொதுவாகவே இன்றைக்கு, தெற்காசிய எழுத்தாளர்களின் படைப்புகள் முன் எப்போதுமில்லாத அளவிற்கு மேற்கத்திய புத்தக விற்பனைக் கூடங்களிற் காணக் கிடைக்கின்றன. மேற்கத்திய மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் ஏன் பிரெஞ்சில்கூட இந்தியம் பேசுகின்ற படைப்புகள் நிறைய வருகின்றன. இவைகளுக்கு மேற்கத்திய நாடுகளில் அமோக வரவேற்பு.  இந்தியாவைக் களனாகக் கொண்ட படைப்புகள் சுலபமாய் விற்றுத் தீருகின்றன. ஆங்கிலத்தில் எழுதிய, எழுதும் இந்தியப் படைப்பாளர்களுள் ஆர்.கே நாராயணன், குஷ்வந்த் சிங், எம்.ஆர். ஆனந்த் இவர்களோடு சமீபகாலமாக அருந்ததிராய், விக்ரம் சேத், யு. ஆர் அனந்தமூர்த்தி, உபமன்யு சட்டர்ஜீ, ஆகியோரது படைப்புகளும் இங்கே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. மேற்கத்தியர்களும் இந்தியமண்ணின் வரலாறுகள், நிகழ்வுகள், வாழ்வியல் நேர்மைகளைக் களனாகக்கொண்டு படைப்புகளை எழுதி வெற்றிபெறுகின்றார்கள் என்பதற்கு, போல் ஸ்காட், ஷரோன் மாஸ், பெத்தி கிறிஸ்டியன், வில்லியம் டால்ரிம்பிள், எரிக் தெஷொ- ழான் குளோது லாத்தே போன்றவர்களைக் குறிப்பிடமுடியும்.

ஆனால் மேற்கண்ட இரு கூட்டத்திலும் சாராமல், இந்தியாவிற் பிறந்து அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழ்ந்தபோதிலும் இரு நாடுகளையும் கருவாகவும் களனாகவும் கொண்டு ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்கள் அதிகரித்து வருகின்றார்கள். இவர்களுடைய எழுத்தில் தங்கள் மூதாதையர் மண்ணின் ஈரப்பதம் உலறாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் நிறைகளும் குறைகளும், இரத்தமும், தசையும் நரம்புமாக எழுத்தில் வந்துவிழுகின்றன. அதே குணத்தோடு குடியேறிய நாட்டுப் பிரச்சினைகளையும் துணிவோடு தெளிவாகச் சொல்ல முடிகிறது. தன் வாழ்நாளில் கணிசமாகவொரு பகுதியைப் பிறந்த நாட்டில் அல்லது சொந்த மண்ணில் கழித்துவிட்டு, எஞ்சிய ஆயுளை இன்னொரு மண்ணில் அல்லது இன்னொரு நாட்டில் கழிக்க நேரும்போது, அவனுடல் மாற்றத்தை ஏற்றுகொண்ட அளவிற்கு, அவனுள்ளம்  மாற்றத்தை ஏற்பதில்லை. உணர்ச்சிகள் மாற்றத்தைச் சுலபமாக ஏற்க, அறிவு விலகி நின்று போராடுகின்றது. இப்போராட்ட வாழ்க்கை முதற் தலைமுறையைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் உண்டு. சுடர் மிகும் அறிவுள்ள அவன், அதன் நலங்கெடப் புழுதியில் எறிவதில்லை. மாறாகத் தனது அடையாளத்தை வெளிப்படுத்த அறிவைப் பயன்படுத்திக்கொள்கிறான். புலம்பெயர்ந்தவர்களிடம் கிடைக்கும் சொந்த நாட்டின் சிந்தனைகளும் வந்த நாட்டின் அனுபவங்களும் உலக இலக்கியங்களுக்கு ஓரு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.  உலகின் ஏனைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சொந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகளைக் கொண்டுவந்ததுபோக, வந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகள் சமீபகாலங்களில் இத்தகு படைப்பாளிகளாற் பெருகிவருகின்றன.வி.எஸ் நேப்போல், சல்மான் ருஷ்டீ, கமலா மார்க்கண்டேயா, அனிதா தேசாய் போன்றவர்களும் பாங்களா தேஷைச் சேர்ந்த தலிமா நஸ்ரீன், இலங்கையைச் சேர்ந்த ஷியாம் செல்வதுரை போன்ற புலம்பெயர்ந்த படைபாளிகளைப் பார்க்கிறோம்.

தமிழிலும் இன்றைக்குப் புலம் பெயர்ந்த எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.. தமிழ்நாட்டிற்கு வெளியே, சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு வேறு நாடுகளுக்குக்(சிங்கப்பூர், மலேயா,..) குடியேறி இன்றைக்கு அவற்றைத் தாய்நாடுகளாக வரித்துக்கொண்டு தமிழில் எழுதுபவர்கள் ஒருபக்கமெனில், சமீபத்தில் கட்டுரையின் ஆரம்பத்திற் குறிப்பிட்டதுபோன்று அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக உலகின் பலநாடுகளிலும் குடியேறி, புதிய கலாச்சாரத்தினைச் சந்தித்து அதனைத் தமிழில் சொல்பவர்கள் மறுபக்கமென இவர்களைப் பிரிக்கலாம். தாயக எழுத்தாளர்களில் சிலர் மிகச் சுலபமாக வைக்கும் குற்றச்சாட்டு, “அங்கேபோயும் அவர்கள் இதைத் தானே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்”, என்பது. இதற்கான பதில், “கொழும்பிலிருந்துகொண்டு மட்டக்கிளப்பு, கிளிநொச்சி என்று எழுதுவதற்கும், சென்னையிருந்துகொண்டு வடுகப்பட்டியையும், திருவரங்கத்தையும் எழுதுவதற்கும் தாயகத் தமிழர்களுக்கு என்ன உரிமையுண்டோ, நியாயங்கள் உண்டோ, அவைகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் உண்டு என்பதாகும். புலம்பெயர்ந்த எழுத்துக்கள் எதைச் சொல்கின்றன என்பதைவிட எப்படிச் சொல்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்களின் சொற்கள் தமிழுக்குப் புதிது, எழுதும் பொருள் தமிழுக்குப் புதிது, களம் தமிழுக்குப் புதிது.

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவென தமிழர்கள் பரவியுள்ள இடங்களிலிருந்து ஏற்கனவே தமிழுலகம் அறிந்த படைப்பாளிகளிடமிருந்தும், இளம் படைப்பாளிகளிடமிருந்தும் நல்ல தமிழில், அறிவியல், இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்பதாகப் பல தேர்ந்த படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தாயகத் படைப்பாளிகளுடன் இணைந்து, இணையக்குழுமங்களிலும் இணையத்தளங்களிலும் தமிழிலொரு முதிர்ச்சிபெற்ற இலக்கியச் சூழலுக்காகப் பங்காற்றிவருகின்றார்கள், உழைத்து வருகின்றார்கள்.

எனது படைப்புகள்

        அ. கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்

கவிதை, கட்டுரைகள், மொழி பெயர்ப்புகள். சிறுகதைகள், நாவல்கள் என படைப்பிலக்கிய வடிவங்கள் எதுவாயினும் புலம் பெயர்ந்தவன் அடையாளத்தை அவற்றில் வெளிப்படுத்தியுள்ளேன். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் எனப் பாரதியின் அன்புக் கட்டளைக்கேற்ப புலம் பெயர்ந்த வாழ்க்கையை ஓரு வாய்ப்பாக கொண்டு இயங்கி வருகிறேன், இந்தியாவில் இருந்து கொண்டு பிரெஞ்சிலிருந்தும், ஜெர்மனியிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் ஸ்பானிஷ் மொழியிலிருந்தும் மொழி பெயர்ப்ப்வர்களைக் காட்டிலும், அம்மொழிகள் பேசும் மக்களுடனான வாழ்க்கையையும் பண்பாட்டையும் கூடுதலாக அறிந்த புலம்பெயர்ந்த மக்கள் நன்றாகவே மொழிபெயர்க்கமுடியும், தவிர நான் ஒரு எழுத்தாளனாகவும் இருப்பதால் மூல நூல் ஆசிரியர்கள் மனதை கூடுதலாக வாசிக்க முடியும்.அவ்வகையில் பிரெஞ்சு இலக்கியம் சார்ந்து தமிழில், இலக்கியத்தில் தேடுதல் வேட்கை உள்ளவர்களுக்கு தாகசாந்தியை அளிக்கின்ற வகையில் பல நூல்களை மொழிபெயர்த்துள்ளேன், அவ்வாறே கட்டுரைத் தொகுப்புகளும் வந்துள்ளன. குறிப்பாக பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன், எழுத்தின் தேடுதல் வேட்டை,  தத்துவத்தின் சித்திர வடிவம்,சிமொன் தெ பொவ்வார் ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவ்வாறே பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு இதுவரை எட்டு மொழி பெயர்ப்புகள் வந்துள்ளன. அனைத்துமே பிரெஞ்சு இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியவை. அவ்வாறே தமிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அவ்வப்போது தமிழ்ச் சிறுகதைகளை பிரெஞ்சு இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டி இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளை பிரெஞ்சுக்கு கொண்டுபோகிறேன்.

ஆ. சிறுகதைகள் நாவல்கள்

அரசியல் நெருக்கடியை முன்னிட்டு புலம்பெயர்ந்திருந்தாலும் சரி, வளமான வாழ்க்கையை எதிர்பார்த்து புலம்பெயர்ந்தாலும் சரி பிறந்த வளர்ந்த மண் அதன் கொடையாக கிடைத்த பண்பாடு, மரபுகள், அவற்றைப் பகிர்ந்து கொண்ட தன்னையொத்த மனிதர்கள், அவர்களின் அன்பு, அரவணைப்பு, பற்றிய ஏக்கங்கள், இறந்த கால நினைவுகள், வாழ்க்கை மொழிகள் ஓர் எழுத்தாளனிடத்தில் எதிரொலிக்கவே செய்யும், புலம்பெயர்ந்த மண்ணில் எதிர்கொள்கிற வாழ்க்கை நெருக்கடிகளையும், புலம்பெயர்ந்த மண்ணில் அவனை ஒத்திராத மனிதர்களிடம் மொக்குவிடுகிற உறவுகளையும் அவற்றின் ஈரம் மற்றும் , வறட்சிட்யையும் தனது பார்வையில் பதிவு செய்கிறான். இலக்கியம் என்பதே ஒருவன் தான் புலன்களாளல் உணர்ந்தவற்றை, மொழியின் துணைகொண்டு படைப்பிலக்கிய கலையாக வடித்தெடுத்து, அவ்வுணர்வை உள்வாங்கிக்கொள்ளும் சக மனிதருக்குக் கொண்டுசெல்லல். அதைச் சரியாகவே நான் செய்திருக்கிறேன். இதுவரை ஐந்து சிறுகதை தொகுப்புகளும், ஓர் அறிவியல் சிறுகதை தொகுப்பும் வந்துள்ளன. சிறுகதை தொகுப்புகள் நாவல்கள் அனைத்திலும் கதைக் களமாக புதுச்சேரியும், தமிழ்நாடும், பிரான்சும் இடம்பெற்றுள்ளன, அவ்வாறே கதைமாந்தர்கள், அவர்கள் இரு நாடுகளிலும் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் நாவல்களில் பேசப்படுகின்றன. ஏற்கனவே கூறியதைப்போன்று புலம் பெயர்ந்த மனிதர்களின் வேதனைகள், வலிகள் ஏக்கங்கள் படைப்பிலக்கிய கலையாக வடிக்கபட்டுள்ளது.

« முதல் நாவலான ‘நீலக்கடல்’ (2005), 16, 17ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரீசியஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்ட புதுச்சேரிப் பிரெஞ்சு காலனிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பற்றிப் பேசுகிறது. மொரீசியஸ் தீவு என்ற, தமிழில் இதுவரை யாருமே தொடாத, புதிய களத்தில் காலூன்றிக் கொண்டு அந்த நாவல் நடக்கிறது. இது போலவே மாத்தாஹரி (2008), காஃப்காவின் நாய்க்குட்டி (2015), ரணகளம் (2018) ஆகிய நாவல்கள் பிரெஞ்சுக் காலனியாக இருந்த, புதுச்சேரியைக் களமாகக் கொண்டு ஐரோப்பா வரை நீளுகின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2012), நாயக்கர் காலச் செஞ்சியையும் புதுச்சேரியையும் களமாகக் கொண்டு இயங்குகிறது. இறந்த காலம் (2019) என்ற நாவல் புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் ‘ஆரோவில்’-ஐ இயங்கு களமாக அமைத்துக் கொள்ளுகிறது. இப்போது இந்த நாவல், –சைகோன் புதுச்சேரி– பிரெஞ்சு காலனியாக இருந்த இந்தோ சீனாவைத் (சைகோன்) தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறு போல நகர்கிறது.; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும், தொடர்ந்து மொழிமயப்படுத்துவதுமென முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கிருஷ்ணாவின் இந்த எழுத்துப் பயணம் முழுவதிலும் நின்று செயல்படும் மற்றொரு முக்கியமான போக்கைக் கவனிக்க வேண்டும்; அதாவது அனைத்திலும் புதுச்சேரிப் பகுதியை ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கீழ் புதுச்சேரி மக்கள் பட்ட பெரும்பாட்டைத்தான் படைப்பாக்கித் தந்துள்ளார். இந்த அளவிற்குப் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கோரமுகத்தையும் தமிழ் நிலப்பரப்பிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றங்களையும் அவற்றால் பெருவாரித் தமிழ் மக்கள் அடைந்த வலிகளையும் வேதனைகளையும் இலக்கியமாக்கித் தந்தவர்கள் நாம் போற்றும் பிரபஞ்சனும் நம் போற்றுதலுக்குரிய நாகரத்தினம் கிருஷ்ணாவும்தான்; இதிலும் பிரபஞ்சனின் களம் காலனிக்குள்ளான புதுச்சேரி நிலப்பரப்பு மட்டும்தான்; ஆனால் கிருஷ்ணாவின் களம் பிரெஞ்சுக் காலனிக்கு ஆட்பட்ட பல்வேறு வகையான நிலப்பரப்பென விரிந்தது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும். »

அண்மையில் வெளிவந்த சைகோன் புதுச்சேரி நாவலைக்குறித்து பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் கருத்து இது. 

நீலக்கடல் நாவல்(1)

பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் கூலிகளாக அழைத்துச் செல்லபட்ட மொரீஷியஸ் தீவு தமிழர்களின் வாழ்க்கைச் சோகத்தை பேசுகின்ற நாவல். இந்தியாவில் பிரெஞ்சுக் காலனியாகவிருந்த புதுச்சேரியும், அதே காலத்தில் இந்துமா பெருங்கடலில் பிரெஞ்சு ஆட்சிக்கு உட்பட்டிருந்த மொரீஷியஸ் தீவும் கதைக்களம். பெர்னார் குளோதன், தேவயானி, பார்த்திபேந்திரன், காத்தமுத்து, துய்ப்ளே, ஆனந்தரங்கப்பிள்ளை என ஐரோப்பியரும், தமிழரும் கதைப் பாத்திரங்களாக இடம் பெற்றிருக்கின்றனர். 14, 17, 18, 20 நூற்றாண்டுகளில் கதை நடக்கிறது. உண்மையும், புனைவும் கை கோர்த்த படைப்பு.

« வெள்ளையர்களின் இதர ஊழியங்களுக்கு மதகாஸ்கர், கனாரித் தீவுகள் அடிமைகளைத் தவிர, தீவின் பூர்வீக மக்களும் மலிவாய் கிடைக்க, கட்டுமானப் பணிகளுக்குத் (கப்பல் கட்டும் லஸ்கர்கள், தச்சர், கொத்தனார், கொல்லர்) தனது தாய்நாடான பிரான்சிலிருந்து அழைத்துவந்து அதிக ஊதியம் கொடுப்பதைவிட ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் குறைந்த ஊதியத்தில் இந்தியர்களை அமர்த்திக்கொள்வது இலாபகரமானதென்று கருதினார். தவிர, செய்யும் தொழில்களில் தமிழர்களுக்குள்ள திறனும், நேர்த்தியும் அவரை ஆச்சரியப்படுத்தியது. இவர்களது திறனை வெகுவாக கம்பெனி நிருவாகம் மதிக்கத் தொடங்கியதால்,  பூர்வீக மக்களான மல்காஷ், கனாரிகள், கிறேயோல் மக்களின் வாழ்க்கை மோசமான நிலைக்குத் தள்ளப் பட்டது. பண்ணைகளில் இவர்களது வாழ்வு மிகப் பரிதாபமானதாக இருந்தது. மக்காச் சோளத்திற்கும் மரவள்ளிக்கிழங்கு மாவிற்குமாக, எஜமானர்களின் பிரம்படிகளுக்கு ஈடுகொடுத்து நாள் முழுக்க உழைக்கவேண்டியிருந்தது. தப்பிக்க நினைத்த அடிமைகளுக்குக் கறுப்பர் சட்டத்தின் (The Code Noir 1723)(4) கீழ்க் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதனால் பண்னையிலிருந்து தப்பிவரும் அடிமைகளுக்குப் புகலிடம் கொடுக்கும் கறுப்பர் ஒவ்வொரு நாளுக்கும் பத்து பியாஸ்தர்*** அபராதத் தொகையாகக் கட்டவேண்டும், அவ்வாறின்றி புகலிடம் கொடுப்பவர் வெள்ளையரென்றால் அவருக்கு மூன்று பியாஸ்தர் அபராதம். தவிர பண்ணையிலிருந்து தப்பிக்க முதன் முறையாக முயல்பவர்களுக்குப் பிடிபட்டவுடன் வழங்கப்படும் தண்டனை, கைதிகளின் இரு காதினையும் அறுத்தெறிவது. இரண்டாவது முறை அவர்கள் தப்பித்து பிடிபடும் பட்ஷத்தில் மரண தண்டனை விதிக்கபடும். »

« கரும்புப் பண்ணையிலே வேலையென்று அழைத்துச் சென்றார்கள். நாலுமுழவேட்டியை அவிழ்த்துவிட்டு அவர்கள் கொடுத்த நீலநிற நீண்ட காற்சராயைப் போட்டுக்கொண்டு பாதங்களில் துணியைச் சுற்றிக்கொண்டு, கரும்புகளை வெட்ட ஆரம்பித்தபோது, சுலபமாகத்தானிருந்தது. ஆனால் சுணங்காமல் தொடர்ந்து வெட்டவேணுமென்று ஒருவன் காட்டுக் கூச்சலிட்டபோது இடுப்பிலும், தோளிலும் விண் விண்ணென்ற வலி. நிமிர்ந்தான். முதுகில் சுளீரெனச் சாட்டையடி. விழுந்தது. வலி பொறுக்கமுடியாமல் கீழேவிழுந்தவனை, எழுந்திருக்க வைத்து, கறுப்புக் கங்காணி மீண்டும் சாட்டையைச் சொடுக்கினான். பக்கத்திலிருந்தவர்கள் எதுவுமே நடாவாததுபோல் கரும்பு வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். தூரத்திலிருந்த பறங்கியன் சிரிக்கிறான். கருப்பங்கழிகளை பிடித்து ஓய்ந்திருந்த இடதுகை எரிந்தது. உள்ளங்கையைப் பார்க்கிறான். கரும்பின் அடிக்கட்டைச் சோலைகளும், கணுக்களும் கிழித்ததில் தசைப் பிசிறுகளுடன் இரத்த வரிகளை இட்டிருக்கின்றன. மீண்டும் முதுகில் சுளீரென்று விழுகிறது.. இம்முறை சில்லென்று ஆரம்பித்து, பிறகு உஷ்ணத்துடன் திரவம் பரவுகிறது. முதுகிலும் இரத்தமாக இருக்கலாம். ….. சொந்த மண்ணுல, கிராமத்துல, உடையார் ஆண்டை எப்போதும் இப்படி அடிச்சதில்லை. அப்படியே அடிச்சிருந்தால்கூட. மஞ்சளை இழைச்சு வீரம்மா பத்துப் போட்டா, மறுநாள் வீக்கங்கள் காணாமப் போயிடும்….கண்காணாத தேசத்துல இருந்த, அவனது பெண்ஜாதி வீரம்மா ஞாபகத்திற்குவந்தாள். புதுச்சேரி வெள்ளைக்காரன்கிட்ட பஞ்சத்திற்கு விற்றிருந்த, பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தார்கள். தான் ‘படியாளாக’விருந்த, கம்பத்துக்காரர் உடையார் ஞாபகத்திற்கு வந்தார். அவர் சகதர்மிணி மனோரஞ்சிதம் அம்மாள் ஞாபகத்திற்குவந்தாள். கடைசியாக சேரியின் பச்சைவாழியம்மன் ஞாபகத்திற்கு வந்தாள். திரும்பவும் அவர்களையெல்லாம் பார்ப்போமா? என்று நினைத்து அழுதான்…. இவ்விடத்தில் வந்ததினத்திலிருந்து முப்பொழுதும் நின்றால், உட்கார்ந்தால், வேலையில் சுணக்கமென்றால் முதுகில் சுளீர் சுளீரென சாட்டையினால் விளாசுகிறார்கள். அவற்றைத் தாங்குவதற்கு இனியும் அவன் சரீரத்திற்குத் தெம்பில்லை. இவனருகில் கரும்பு வெட்டிக்கொண்டிருந்த மற்ற கூலிகளுக்கு அடிகள் பழகியிருந்தன. அவர்கள் வேக வேகமாகக் கரும்பினை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு இடுப்பில் முள் குத்துவதுபோல வலியெடுக்கத் தொடங்கி, முதுகுத்தண்டில் சிவ்வென்று மேல் நோக்கி நகர்ந்து இருபுரமும் சமனாய் இறங்குகிறது. முதுகு முழுக்க கன்றிப்போய், திகுதிகுவென்று எரிகிறது, இரண்டொரு ஈக்கள் எப்படியோ மோப்பம்பிடித்து, முதுகை வட்டமிடுகின்றன. உட்கார்ந்து விட்டான். பார்த்துவிட்ட கறுப்பன் – கங்காணி ஓடிவந்தான். சாட்டையை மறுபடியும் சொடுக்கினான். அவன் கைகளைப் பாம்பு பிடுங்க. கயிற்றில் நுணியில் இறுக்கியிருந்த தோற் பின்னல் இவனது முதுகுப்பரப்பின் புண்ணை ருசிபார்த்தவண்ணம் முடிந்தவரை ஓடி மீண்டது. சுருண்டுவிழுந்தான் ».

மாத்தாஹரி(1)

இருபதாம் நூற்றாண்டில் புதுசேரியிலிருந்து பிரான்சுக்குத் தனது காதல் கணவனுடன் குடியேறிய பவானி என்ற பெண்ணின் வாழ்க்கை, முதல் உலகப்போரின்,பெண் உளவாளியென பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு கொலைசெய்யபட்ட மாத்தா ஹரி என்ற பெண்ணின் வாழ்க்கை இரண்டும் ஒரு பொது இழையால் நெய்யப்பட்டது என்பதைத் தெரிவிக்கும் புனைவு.  

«  தேவா, என்ன பழையபடி ஆரம்பிச்சுட்ட..மாத்தா ஹரியைப் பத்தி உனக்கு என்ன தெரியும், கொஞ்ச நாட்களுக்கு முன்னால, நேரு பூங்காவில இரவு பத்துமணிக்குமேலே நீ இருந்த நிலைமையை வைத்து, தேவா என்பவன் இப்படித்தான் என்று ஒரு தீர்மானத்துக்கு நாங்க வந்திட முடியுமா? வேறொரு நாடா இருந்தா அதற்கேகூட உன் தலையை வாங்கிவிடமுடியும். பவானியை நெருங்கமுடியாதுண்ணு சொன்ன.  இப்போது வேறுவிதமாகச் சொல்ற. மாத்தா-ஹரி நிறைய கனவுகளுடன் வளர்ந்தவள். வயது வித்தியாசம் பாராமல் ராணுவ அதிகாரியை மணந்துகொண்டது எதற்காகவென்று நினைக்கிற. கப்பல் ஏறிப் பயணம் செய்யவும், இந்தோ சீனாவை சுற்றிப்பார்க்கவுமா? ருடோல்ஃப்·பென்ற ஆண்வர்க்கத்தை எதிர்த்து அவள் வழியில் நியாயம் தேடி இருக்கிறாள். ஐந்துபேருக்கு மனைவியாக இருக்கிறவள் உத்தமப் பெண்மணியாகவும் இருக்க முடியுமென்பதை உங்க மகாபாரதம் நியாயப்படுத்துமெனில், எனக்கு மாத்தா-ஹரியும் உத்தமி. நீ மெச்சுகிற பவானியை நாளைக்கே பிரான்சுக்கு அழைத்துப்போய், மாத்தா ஹரிக்கான நெருக்கடியைக் கொடுத்துப்பார், என்ன நடக்கிறதென்று தெரியும். »

 கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி(2)

        புதுச்சேரி பிரெஞ்சுகாலனியாக இருந்தபோது செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கர் என்ற மன்னர்கால சம்பவங்களை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட புனைவு. இந்நாவலும் இந்தற்கு முந்தைய நாவல்களைப் போன்றே பதினெட்டாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டு என இருகாலத்தையும் இணைக்கின்ற நாவல், வழக்கம்போல உண்மை புனைவு என இரு கூறுகளையும் உள்ளடக்கிய புதினம்.

« படுக்கையிலிருந்து பிமெண்ட்டா எழுந்து உட்கார்ந்தார். கண்களைத் துடைத்தார். காலையில் முடிந்த அளவு வேளையாய்க் கோவிலுக்குப் போகவேண்டுமென வேங்கடவன் கூறியிருந்தான். பயண அலுப்பும்  வெப்பமும் வழக்கத்தைக்காட்டிலும் கூடுதலாக கண்ணயர செய்துவிட்டன. முழங்காலில் நின்று: « அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். உம்மை புகழிடமாகக் கொள்ளுகிறேன். உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. ஆமேன் », என சிலுவைப்போட்டுக்கொண்டு எழுந்தார்.

காலைக் கடனை எங்கேயாவது வெளியிற்சென்று முடிக்கவேண்டும், நிர்ப்பந்தமில்லை காத்திருக்கமுடியும். திரையை விலக்கி கூடாரத்தின் மறுபக்கம் நுழைந்தார். முழங்கால் தோய தரையில் அமர்ந்திருந்த நடுத்தரவயது பெண்மணி எழுந்து  பவ்யமாக கும்பிடுபோட்டாள். பெரிய பாத்திரமொன்றில் வெந்நீர் வைத்திருந்தது. “நீ போகலாம்” என்று கையை அசைத்ததும் அவள் மீண்டும் இடுப்பை மடித்து மார்புகள் தொங்க வணங்கி கால்களைப் பின்வாங்குவதுப்போல நடந்து சென்று மறைந்தாள். ஒரு துவாலையைச்  சுடுநீரில் நனைத்து சரீரத்தைக் கைகளைத் துவளவிட்டு அழுத்தத் துடைத்து திருப்தியுற்றவராய் தமது சேசுசபையினருக்குரிய அங்கியை அணிந்து இடுப்பில் சுற்றியிருந்த நூல் கயிற்றை இறுக்கி முடிச்சுபோட்டார். மேசையிலிருந்த தொப்பியை ஒருமுறைக்கு இருமுறை தலையில் பொருத்தி தமக்குத்தானே நிறைவு கண்டவராய் புன்னகைத்துக்கொண்டார். பாடம் செய்த தோலில் குறிப்புகளை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்துக்கள் ராச்சியத்தில் குறிப்பாக தென்பகுதிகளில் எழுத உபயோகிக்கும் ஓலைசுவடிகளும், எழுத்தாணியும் அவருக்கு வசதியாக இருந்ததோடு எளிதில் கிடைக்கக்கூடியவைகளாக இருந்தன. நான்கைந்து ஓலை நறுக்குகளையும், எழுத்தாணியைம் மறக்காமல் அங்கியிலிருந்த பையில் போட்டுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் தமது அலுவல் பற்றிய முழுவிபரத்தையும் எழுதிவைத்து பின்னர் சேசு சபையினரின் பொதுச்சபைக்கு அதை அனுப்பவேண்டிய கடமைகள் இருந்தன. அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அருகிலிருந்த மேசையில் ஒரு தட்டில் கிழங்கும், அடையும் இருந்தன. அதனை வேண்டாமென்று தவிர்த்துவிட்டு கூடாரத்தின் வாசலில் மனிதர் மனிதர் நடமாட்டம் தெரிவதுபோலிருக்க; யாரங்கே! என குரல் கொடுத்தார். »

காஃப்காவின் நாய்க்குட்டி(3)

இலங்கை, இந்தியா (புதுச்சேரி), பிரான்சு, முன்னாளில் செகோஸ்லோவோகியா என அழைக்கபட்ட இன்றைய ‘செக்’ ஆகிய நாடுகளைக் களமாகக்கொண்டு எழுதபட்ட நாவல். ஈழத்தைச்  சேர்ந்த நித்திலா வாகீசன்; இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஹரிணி, பாலா, சாமி; பிரான்சு  நாட்டைச்சேர்ந்த அத்ரியானா, ஆக பிறந்த தேசத்தாலும் பண்பாட்டாலும் எதிரெதிர் துருவத்தைச் சேர்ந்த மனிதர்களைக் கொண்டு பின்னப்பட்ட புனைவு.

« காவல் அதிகாரியின் மேசைக்கெதிரே இரண்டு நாற்காலிகள். முதல் நாற்காலியில் அவர்கள் அழைத்துவந்த பெண் உட்கார்ந்ததும், ஹரிணி இரண்டாவது நாற்காலியில் அமர்ந்தாள். பெண் வலது கையில் தலையைத் தாங்கியவளாக இருந்தாள். உருண்டைமுகம், அலட்சியமாக ஊன்றியிருந்த கைக்கிடையில் ஒற்றைப்பின்னல் ஊசலாடியது. கருஞ்சிவப்பாக இருந்த உதடுகள் வெடித்தும் மென்தோல் உரிந்தும் இருந்தன. நெற்றியில் மிளகு அளவில் சாந்துப்பொட்டு. அவள் விழிகளைக் குறுக்கிப் பார்க்கிறபோதெல்லாம் சாந்துபொட்டு இருபுருவங்களுக்கும் இடையிலிருந்த குழியில் உட்காருகிறது. காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்குப் போகாது என்பதுபோல தனது வலதுகைகொண்டு அப்பெண்ணின் இடதுகையை பற்றினாள். அப்பெண் ஹரிணியை ஏறிட்டுப் பார்த்தாள். முதன் முறையாக அப்பெண்ணின் முகத்தில் இறுக்கம் குறைந்திருந்தது. அவள் கண்களில் ஸ்விட்சைபோட்டதுபோல பிரகாசம்.

“இதற்கு முன் வந்திருக்கிறீர்களா?” – காவலதிகாரியின் கேள்வி சூழலை உணர்த்திற்று. அவசரமாக தலையைத் திருப்பி, அவர் கேட்டதைப் புரிதுகொண்டவளாய்:

“இல்லை! இதுதான் முதல் முறை.” – என்றாள்.

” மிஸியெ கிருஷ்ணாவுக்குப் போன் செய்தேன். அவரால் வரமுடியாதென்றார். வேறு யாரேனும் உதவுவார்களா என்றுஅவரிடம் கேட்டிருந்தேன். அவர் உங்களைத் தொடர்பு கொண்டிருக்கிறார்” – காவல் அதிகாரி.

“ஆம் கிருஷ்ணதான் எனக்குத் தகவலைத் தெரிவித்தார்” – ஹரிணி.

” பெண்ணின் பெயர் நித்திலா? சரிதானா எனக்கேளுங்கள்?”

” நான் மொழிபெயர்ப்பதற்கு முன்பாகவே, நித்திலா என அழைக்கபட்ட அப்பெண் “ஓம்” என்றாள்.

” இதுபோன்ற முதற்கட்ட விசாரணையின்போது, குற்றம் சாட்டப்ட்டிருப்பவருக்கென்று சில உரிமைகள் இருக்கின்றன. அவை இந்தத் தாள்களில் இருக்கின்றன. அவற்றை பெண்ணிடம் விளக்கிசொல்லுங்கள். “

காவலதிகாரி நீட்டியதாள் கைக்கு வந்ததும், “நான் படித்துப் பார்க்கட்டுமா” என அவளிடம் ஹரிணி கேட்டாள். பெண்ணிடம் முதன் முறையாக பூ பூப்பதுபோல ஒரு சிரிப்பு. அதைச் சம்மதெமென்று எடுத்துக்கொண்டு இவள் கடகடவென்று வாசித்து முடித்தாள். பிரெஞ்சு குற்றவியல் சட்டம் “Art. L. 611-1-1. – I –விசாரணக்குட்படுத்தப்படும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குச் சில உரிமைகளை வழங்கியிருந்தது: “மொழி பிரச்சினையெனில், மொழி பெயர்ப்பாளரை வைத்துக்கொள்ளலாம், விசாரணக்கு உட்படுத்தபட்ட நபர் ஒருவழக்கறிஞர் உதவியை தமது விருப்படி சொந்தச் செலவிலோ அல்லது வழக்கறிஞர்கள் சங்கத்திலிருந்து அரசுச்செலவிலோ கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு முன் மருத்துவர் உதவியும் கேட்கலாம். நண்பர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு அவள் தடுப்புக் காவலில் இருக்கிற செய்தியை தெரிவிக்கலாம், காவல்துறை அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்” என்றிருந்தவற்றைத் தெரிவிக்க இரண்டொரு நிமிடங்கள் ஹரிணிக்குத் தேவையாய் இருந்தன.

காவலதிகாரி தடுப்புக்காவல் பற்றிய நேரத்தைத் தெரிவித்திருந்த பதிவேட்டில் பெண்ணைக் கையெழுத்திடக் கூறினார். ஹரிணியை ஒருமுறை கையெழுத்திடலாமா? என்பதுபோலப் பார்த்துவிட்டு, தயக்கத்துடன் கைஎழுத்திட்டாள். ஹரிணி கையொப்பத்தையும் அதில் வாங்கிக்கொண்டு, விசாரணையை ஆரம்பிப்பதுபோல விசைப்பலகையில் அவர் விரல்கள் சென்றன ».

இது தவிர ரணகளம், இறந்தகாலம்(3) நாவலிலும் இந்தியா, பிரான்சு, புலந்த மக்களின் வாழ்க்கை, அவர்களின் வலிகள் என்று பேசுபவை.

« எங்கள் கப்பலில் பெரும்பாலும் வெள்ளாழ கிறிஸ்துவர்கள்தான். அவர்களும் புதுச்சேரிகாரர்களாக இருந்தார்கள்.  ரெட்டியார் பாளையம் நெல்லித்தோப்பிலிருந்து வந்தவர்களில் நம்ம சாதி சனங்களைப் பார்த்தேன். கடல் கடந்து போகிறோம் என்பதால் எல்லோரும் பிற பயணிகளிடம் சகஜமாக பேசிப்பழகினார்கள்.  கப்பலில் இருந்து இறங்கியபோது, அரசாங்க மனிதர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்று விடுதியொன்றில் தங்க வைத்தார். அதன் பின்னர், மாமாவுக்குச் சிப்பாய் வேலை குதிர்ந்ததும், வாடகைக்கு வீடு பார்த்து குடியேறியதும் மளமளவென்று நடந்துமுடிந்தன. முதல் நாள் எங்களுக்கு வழங்கப்பட்ட உணவு என்ன தெரியுமா, பன்றிக்கறியுடன் கூடிய சேமியா சூப். இங்கு அதை நூடில்ஸ் என்கிறார்கள். மாமா சாப்பிடத் தயங்கினார். சுப்புராயன் ஃபெலிஃஸ் சுப்புராயனாக அவதாரம் எடுத்து நாமும் பரங்கியரும் ஒன்றென ஆனபிறகு பின்வாங்கலாமா எனக் கேட்ட தும், மனிதர் வீம்பாக உட்கார்ந்து அதைச் சாப்பிட்டார். அன்றையதினம் அவற்றையெல்லாம் தொடவில்லையே தவிர அதன் பிறகு எல்லாவற்றையும் முகம் சுளிக்காமல் உண்ண நானும் பழகிக்கொண்டேன்.

எங்களுக்கு கிடைத்த வாழ்க்கை. கூடப்பிறந்த உங்களுக்கோ, நெல்லித் தோப்பில் வாழ்ந்த எங்கள் அண்டைவீட்டாருக்கோ, பள்ளியில் என்னுடன் படித்த சினேகிதிகளுக்கோ எளிதில் கிடைக்காத வாழ்க்கையென்று, எவ்வளவு கர்வம் மனதில் இருந்தது தெரியுமா?   இதுபோன்றதொரு வாழ்க்கை அமைந்ததற்கு நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று உன் மாமாவுக்கும் மகிழ்ச்சி. இட்ட உறவு எட்டு நாளைக்கு என்பதுபோல, எல்லாமே கொஞ்ச நாட்கள்தான்.

சரி இப்போது எப்படி? சொல்லவேண்டுமில்லையா. எங்களுக்கு வயிற்றுக்குத் தீனி கிடைக்கிறது, ஆனால் மனதைப் பட்டினிப் போட்டுக்கொண்டிருக்கிறோம்.  பசிக்கு உணவுகிடைக்கிறது, ருசிக்கு ஏங்குகிறோம். புதிய உறவுகளை நெருங்கி, பழைய உறவுகளிடமிருந்து விலகியிருக்கிறோம்.காடுகளும், மலைகளும், நதியும் கடலுமான பூமி என்கிறார்கள். ஆனால் வறட்சியும் வெப்பமும் என் மனதைத் தகிக்கிறது. உறியடி வாழ்க்கை. கைகளில் கம்பும், கண்களில் மறைப்பும், கால்களில் தடுமாற்றமுமாக இலக்கின்றி வீசும் கம்பு காற்றில் அலைகிறது. உன் மாமன் எடுத்த முடிவை காலில் விழுந்தேனும் தடுத்திருக்கலாமோ என தற்போது நினைக்கிறேன். ‘வுங் டோ’ கடற்கரைக்குச் சென்றிருந்தேன். தென் சீனக் கடலின் அலைகள் என்னைகண்டதும் வா வா புதுச்சேரிக்கு அழைத்துபோகிறேன் என்பது காதில் விழுந்தது. நீரில் இறங்கினேன். விவரம் புரியாமல்கணவர் உட்பட அங்கிருந்த பலரும் தற்கொலை முயற்சி என்றார்கள். இறப்பு தவிர்க்கமுடியாதது என்கிறபோது எப்போது இறந்தாலென்ன.  சொந்தமண்ணைப் பிரிந்து வாழும் வாழ்க்கையும் தற்கொலையும் ஒன்றுதான். நினைவுகளும் ஏக்கமும் நெஞ்சை இறுக்க, அவற்றின் கைகளை விலக்க விருப்பமின்றி, காலவிரயத்துடன் கூடிய புதியவகைத் தற்கொலையை நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கிறேன்.    

பிள்ளைகள் பிரெஞ்சு பேசுகிறார்கள், வியட்நாம் மொழி பேசுகிறார்கள். என் கணவருக்குத் அவர்கள் தமிழ் கற்க வாய்ப்பில்லை என்பது குறை. சுப்பராயன் ‘ஃபெலிஃஸ்’ என்றும் வேதவல்லி, ‘ஆன்’ என்றும், வேட்டி காற்சட்டை என்றும், சேலை கவுனென்றும் ஆனபிறகு; மாமன் என்றும் அத்தை யென்றும், தாத்தா வென்றும் பாட்டியென்றும் கூப்பிட உறவுகள் இல்லை என்கிறபோது அவர்கள் பேசினாலும் அத் தமிழ் இனிக்குமா என்ற சஞ்சலமும் எங்களுக்கு இருக்கிறது.  மேலும் மேலும் ஏதாவது எழுதி, எனது கவலையை உங்களிடம் இறக்கிவைப்பதில் எவ்வித நியாயமுமில்லை. இது நாங்களாகத் தேடிக்கொண்டவாழ்க்கை.  சன்னலை மூடிவிட்டு வாழப் பழகிக் கொள்ளவேண்டும். பழகிக்கொண்டிருக்கிறேன். » (இறந்த காலம் நாவலில் இருந்து)

நாவலின் தன்மையையையும் அவற்றின் போக்கையும் நாவல்களிலிருந்து சாட்சியமாக கொடுக்கப்பட்டுள்ள இப்பகுதிகள் புலப்படுத்தும், இலக்கியத்தில் அழகியல் என்பது வர்ணைனைகள்  மடுமல்ல வலிகளும் துயரங்களும்கூடத்தான், அவை அகம் புறம் இரண்டையும் பேசவேண்டும். புலம்பெயர்ந்த மனித உள்ளங்களின் உணர்வுகளை முடிந்த அளவு மொழிபடுத்தியுள்ளேன்.

        எதிர்காலத்தில் எப்படியோ, எங்கள் சந்ததியினரில் எத்தனை விழுக்காட்டினர் தமிழில் எழுதவும், மொழிபெயர்க்கவும் செய்கிறார்களோ என்னவோ தமிழிலக்கியவரலாறு, இந்த நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களால் முக்கியத்துவம் பெறும். தாயக ஏக்கமும், குடியேற்ற நாடுகளில் அவன் சந்திக்கின்ற பிரச்சினைகளும் படைப்புகளின் தரத்தைக் கூட்ட உதவும்.

அவ்வாறே மொழி பெயர்ப்பிலும் புலம்பெயர்ந்தவர்கள் கணிசமானப் பங்கினை ஆற்றமுடியுமென நம்புகிறேன்.  எந்த எழுத்தையும் மொழிபெயர்க்கும்பொழுது, மூலமொழியை வாங்கிக்கொள்ளும் திறனும் சொந்தமொழியில்  அதை வெளிபடுத்தும் ஆளுமையும் அவசியம். மொழி அறிவோடு, மூல ஆசிரியனின் காலம், சமூகம், கலாச்சாரம் பற்றிய அடிப்படை அறிவில் தெளிவாக இருக்கவேண்டும். இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், நோர்வே, கனடா என வாழும் தமிழர்கள் முயன்றார்களெனில் பல நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரமுடியும்.

————————————————–

  1. நீலக்கடல், மாத்தஹரி நாவல் இரண்டும் பரிசில் வெளியீடு, சென்னை.
  2. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, ரணகளம், இறந்த காலம் மூன்று நாவல்களும் சந்தியா பதிப்பகம், சென்னை.
  3. காஃப்காவின் நாய்க்குட்டி, காலச்சுவடு பதிப்பகம்
  4. சைகோன் – புதுச்சேரி டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

———————————————————————————————————————

பெருமாள் முருகனின் கதையாடல்

எழுத்தாளர் பெருமாள் முருகன் தமது பூக்குழி நாவலில் ஓரிடத்தில் கதை நாயகி சரோஜாவால் பேசாமல் இருக்கமுடியாது என்பதைச் சொல்ல :

« இருப்பதிலேயே பெரும் சிரமம் பேசாமல் இருப்பதுதான் » என எழுதுகிறார். உண்மைதான். மனிதர் வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களுக்கு, பேச்சு வித்திட்டிருக்கிறது: உறவோடு நட்போடு அன்பை வெளிப்படுத்த, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள, காதலைச் சொல்ல, துன்பத்தை இறக்கிவைக்க, கோபத்தைக் காட்ட, விருப்பத்தைத் தெரிவிக்க, வேண்டியதைப் பெற, வேணடாததை மறுக்க, பேசாமல் இருக்க முடியாதுதான். ஆனால் பேச்சின் வீச்சுக்கு எல்லையுண்டு.  எதிரிலிருப்பவரை மட்டுமே பேச்சு எட்டும், அவர்கள் ஒருவராக இருக்கலாம், இருவராக இருக்கலாம், மேடைபேச்செனில் ஒரு பெருங்கூட்டத்தை நோக்கியும் அமையலாம். ஆனால் எழுத்து அப்படி அல்ல, அது பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைக் குறிவைப்பது. கடல்கடந்து ஐரோப்பாவரை நண்பர் பெருமாள் முருகனைக் கொண்டுவந்திருப்பது பேச்சு அல்ல அவருடைய எழுத்து.  அது கைதட்டலை மட்டும் நோக்கமாகக் கொண்டதல்ல. பல நூற்றாண்டுகள், தலைமுறைகள் கடந்து மனிதவாழ்க்கையோடு கைகோர்த்து வழிநடத்துவது. மனிதம், தம் குடிலாக அமைத்துக்கொண்ட சமூகம், அதன் பகலுக்கும் இரவுக்கும் அமைத்துக்கொண்ட அல்லது வகுத்துக்கொண்ட நெறிகள் இவற்றால் உற்றதை பெற்றதை, நொந்ததை நோகாததை, வெறுமனே சாட்சியாளனாக அல்லது பார்வையாளனாக சம்பவத்தைக் கடந்துவிடாமல், அதனை மனதில் நிறுத்தி வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து, தம் மனதிடம்  விவாதிக்க தீர்ப்பு, எழுத்தாகிறது. நெஞ்சு பொறுக்காத, சகிக்காத விஷயங்கள் பல நேரங்களில் எழுத்தாக அவதாரம் எடுக்கின்றன. 

பூக்குழி முன்னுரையில் நூலாசிரியர் பெருமாள் முருகன் :

« வாழ்வை ஒரு கோணத்தில் அணுகுவதை முதன்மையாக்கிப் பிற கோணங்களையும் கொண்டுவந்து முரண்களைக் கூர்மையாக்கிக் காட்டும் தன்மையில் எழுதப்பட்டது இது. பருண்மையல்லாத கருத்துக்களின் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறி நிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன ; சலிப்புறவைக்கின்றன. ஏன் நாம் வேறுபாடுகளை முன்னிலை படுத்துகிறோம் ? அவற்றை இயல்பாகக் கடந்து அன்போடும் மகிழ்ச்சியோடும் வாழ இயலாதா ? நம் சிந்தனையின் குறுகலுக்குக் காரணம் என்ன ? இந்தப் பிரபஞ்சம் தன் விரிவை ஏன் நமக்குள் நடத்தவில்லை ? » எனத் தம்மிடம் வினவுகிறார்.

 பிரெஞ்சு மண்ணில் வொல்த்தேர் ரூஸ்ஸோ போன்றவர்கள் தங்கள் சமூகம் சார்ந்து எழுப்பிய கேள்விகளும் இவை போன்றவைதான், அவர்களது எழுத்துக்கள்தான் பிரெஞ்சு முடியாட்சியை முடித்துவைத்து  அரசியல் சமூக மாற்றங்களுக்கு வித்திட்டன. பெரியார் போன்றவர்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடினார்கள், இருந்தும் விழித்தோமா என்றால் இல்லை. அதிலும் இந்தியாவில பிறபகுதிகளில் எப்படியோ நானறியேன், ஆனால் எழுத்தாளர் சுட்டுவது போன்று தமிழ்ச் சமூகத்தில் அடித்தட்டு மக்களிடம் உலகில் வேறெங்கும் காணாதவகையில் இன்றுங்கூட உண்பது நாழி, உடுப்பவை இரண்டு என்கிற அடிப்படைத் தேவையில் அக்கறை கொள்ளுகிறார்களோ இல்லையோ ஆனால் உள்ளம் முழுக்க  சாதிய வெறியும், வன்மமும், சொத்தையான உயர்வு தாழ்வு நெறிமுறைகளுக்கு அடிமைகளாகவும் வாழ்வது தொடரவே செய்கிறது. எனவே நண்பர் பெருமாள் முருகனின் படைப்புகள் அனைத்துமே அழுக்கடைந்த தமிழ்ச்சமூகத்தை ‘வெள்ளாவி வைத்து’ வெளுக்கவேண்டும் என்கிற அக்கறையோடு ஆர்வத்தோடு எழுதப்பட்டிருக்கின்றன, அவருடைய கதையாடலும் இநோக்கத்தை முன் மொழிவதாக உள்ளது.   

நண்பர்களே ! கதையாடல் என்றசொல் பல கூறுகளை உள்ளடக்கியது, தமிழ் இலக்கணம் வகுத்துள்ள முதற்பொருள், கருப்பொருள், உரிபொருளுக்குறிய பண்பாடுகளில் கதையாடலை நிகழ்த்துவது. நிலம், நிலம் எதிர்கொள்ளும் காலம், தட்பவெப்பம், அதற்குறிரிய மனிதர்கள், அவர்களின் கல்வி அறிவு, சமூகச் சூழல், சுற்றுச்சூழல், மரபு என்கிற சாரங்களை உள்ளடக்கி புனைவை கட்டமைப்பது. நேற்றைய கதையாடலில் காவியங்ளைப் படைத்தவர்கள், பெரும் இலக்கியங்களைக் கட்டமைத்தவர்கள் சராசரி மனிதர்களைக் கணக்கில் கொள்வதில்லை.இது ஏதோ கீழைத்தேச உண்மை மட்டுமல்ல மேற்கத்திய மொழிகளான ஆங்கிலம் பிரெஞ்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் பின்பற்றபட்ட உண்மை. மன்னர்களையும், பிரபுக்களையும் அண்டிவாழ்ந்து, அவர்கள் தயவில் பசியாறவேண்டிய நெருக்கடியிலிருந்த படைப்பாளிகள் கோமான்களையும் சீமான்களையும் கதைமாந்தர்களாக முன்நிறுத்தி அவைக்களத்தில் பாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்கள் இருந்தனர், தவிர கதை நாயகனும், கதை நாயகியும் அகவாழ்க்கை, புறவாழ்க்கை இரண்டிலும் களங்கமற்றவர்களாக, ஒழுக்க சீலர்களாக சித்தரிக்கப்பட்டனர். மாறாக எதிர் மாந்தர்கள், ஒழுக்கக்  கேடர்களாக சித்தரிக்கபட்டு, அதனால் அவர்கள் இறுதியில் அடையும் தீப்பயனை சொல்பவையாக இருந்தன. கடந்த சில நூற்றாண்டுகளாக நிலமை சீரடைந்துள்ளது. மனிதர் வாழ்க்கையில் பெரும் மாறங்கள் நிகழ்ந்துள்ளன. முடியாட்சியை, நில உடமையாளர் செல்வாக்கை, மரபுகளின் பெயரால் ஆட்டம்போட்ட ஆதிக்கச் சக்திகளை இன்று  புரட்சி, விடுதலை, சுதந்திரம் போன்ற சொற்களும் அவற்றின் வீச்சும் குழிதோண்டி புதைத்துள்ளன.

கதைமாந்தர்கள், களம், இவற்றில் பெரும் மாற்றத்தைக்கான்கிறோம். இன்றைய புனைகதைகளில் இராமயண இராமனையோ, இராவணனையோ தனித்தனியாக சந்திக்க முடிவதில்லை, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் பிரபுவாக கூட அவர்கள் இருக்கலாம், அதுபோல சீதையை கங்காவாக கூட நாம் எதிர்கொள்ளலாம், காலம் மாறிவிட்டது.  

பெருமாள் முருகனின் கதை மாந்தர்களும் நமது சமூகத்தின் இடைமாந்தர்கள், அடித்தட்டுமக்கள். நாம் அன்றாடம் எதிர்வீட்டில், வீதியில், பேருந்தில், கடைகண்ணியில் சந்திக்கின்ற மனிதர்கள். இன்று தமிழ்ச்சூழலில் பேதங்ளில் அக்கறைகொண்டவர்களாக அதிகம் இருப்பவர்கள் படித்தவர்கள் இல்லை, பாமர மக்கள். கலப்பினத் திருமணம் கலவரத்தில் முடிவது, நகரத்தில் இல்லை, கிராமங்களில். கோமணம் கட்டும் மனிதர்களிடையே குத்தும் வெட்டும். இந்த நரகத்திலிருந்து விடுதலை பெறுவது எப்போது ?  சமூக அக்கறைகொண்ட ஓர் எழுத்தாளனுக்கு தன் இனத்தின் மீது அக்கறை இருப்பது இயல்பு, தமிழினம் மேன்மக்களாக மாறுவதென்பது உடலழுக்கை வெளுப்பதில் இல்லை உள்ளம் வெளுக்க வேண்டும். எழுத்தாளர் பெருமாள் முருகன் அதைத்தான் நம் எழுத்தூடாக வற்புறுத்துகிறார்.

மாதொருபாகன், ஏறுவெயில், இன்று பூக்குழி அனைத்துமே தமிழ் சமூகத்தின் பாசாங்குளை வெளிச்சத்திற்கு கொண்டுவருகின்றன. குறைகளைச் சுட்டுவதால் ஆசிரியம் மீது கோபம் வரும், யோசித்துப் பார்த்தால் அவருடைய அக்கறையில் நூற்றில் ஒருபங்கேனும் நமது சமூகத்தின் மீது நமக்குப் பற்றுதல் இருப்பின் நமது செயலுக்கு வருந்துவோம்.

பூக்குழி நாவலின் முன்னுரையில் தன் மனதில் எழுந்த கேள்விக்கு விடையாக க் கிடைத்தக் கருப்பொருளை கதையாக படைக்கும் ஆசிரியர் அவருடைய கதையாடலுக்குரிய நிலத்தையும் பொழுதையும் மனிதர்களையும் உரையாடலையும் அமைத்துக்கொள்கிறார். இவை ஒரு படைப்பின் வெற்றிக்கான காரணிகள்.

« பொழுது உச்சியிலிருந்த வெயில் வேளையில் சரோஜாவும் குமரேசனும் பேருந்திலிருந்து இறங்கினார்கள். சாலைப் புளியமரங்களைக் கடந்து விழுந்த பார்வையில் பொட்டல் காடுகள் பரந்து தெரிந்தன. எட்டிய தொலைவு வரைக்கும் வீடு எதுவும் கண்ணில் படவில்லை. கானல் அலையடிக்க அந்தரத்தில் வெள்ளைச் சேலைகளை விரித்துவிட்டது மாதிரி வெயில். ஆள் நடமாட்டத்தையே காணோம். பறவைச் சத்தங்களும் இல்லை. எங்கும் அனல் தீய்ந்த சாம்பல் தூவல்.நுழைந்து செல்ல தயங்கினாள். » இது பூக்குழி நாவலின் தொடக்கம் இது. நூலின் பாயிரம்போல அமைந்துள்ள முதல் பத்தி போதும் நாவலைப் புரித்துகொள்ள. ஒருவகையில் நாயகி சரோஜாவுக்கு நேரும் துன்ப முடிவை இப்பகுதி சூசகமாகமாகக் கோடிட்டுக் காட்டுகிறது. அதுபோல முதன்முதலாக சரோஜா குமரேசனைக் கண்டபோது, « சாம்பல் பூத்த நெருப்புக் கங்கு ஒரே ஊதலில் ஜொலிப்பது போலிருந்தது »என்கிற வரியும், தனது காதலனால் நேரவிருக்கும் அவளது முடிவை பூடகமாக தெரிவிப்பதுதான். ததவிர நாவலெங்கும் எதிர்கொள்ளும்  ‘புழுதி’, ‘வெக்கை’, சுடுகாடு’, புதைகுழி, சமாதி, மொட்டக்காடு, வெயில், கொடுமழை, ஒப்பாரி, தலையெரிக்கும் வெயில், கானக்காடு போன்ற சொற்களும் நாவலின் தன்மையை வாசகருக்கு நினைவூட்டுகின்றன.

கதைமாந்தர்கள் :

பூக்குழி நாவலில் ஓரிடத்தில் ஆசிரியர் இப்படி எழுதுகிறார் :

« அப்பனும் அண்ணனும் வேலை செய்யும் கம்பெனிக்கு அவள் போனால் வலிந்து பேச ஆட்கள் நிறையபேர் வர்வார்கள். அவர்களின் முகங்கள் எல்லாம் ஒரேமாதிரி அவளுக்குள் பதிந்திருந்தன. ஒரே ஆண்முகம். யாருக்கும் வேறுபாடில்லை. அவளால் ஒருவரையும் நினைவில் இருத்திக்கொள்ள முடிந்ததில்லை. குமரேசன் வேறாகத் தெரிந்தான். »உண்மைதான், ஆசிரியர் சொல்வதைபோன்று நாம் நித்தம் நித்தம் சந்திக்கிற ஆயிரக்கணக்கான மனிதர்களிடை வேறாகத் தெரிகிறவர்களே  கவனம் பெறுகிறார்கள், நமது தேடலைப் பொறுத்து விடையாகக் கிடைக்கின்ற முகங்களே நமக்கு வேண்டியவர்களாக நம்மை நெருங்கி வருகிறார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட மனிதர்களின் குணத்தை எப்படித் தீர்மானிப்பது. குமரேசன், சரோஜா, « எந்தலயில கல்லதூக்கிப் போட்ட்டுட்டியேடா » எனக் கத்திக்கொண்டே ஓடிவந்து மகன் குமரேசனையும், அவன் காதலித்துகூட்டிவந்த மருமகளையும் வரவேற்கும் குமரேசனின் அன்னையையும் பிற கதைமாந்தர்களையும் நாவலுக்கேற்ப ஆசிரியர் தேர்வு செய்திருப்பதை, அவர்களின் பேச்சுகளும்  செயல்பாடுகளும் முன்னிறுத்துகின்றன.

பொதுவாக நெருக்கடி காலங்களில்தான்  மக்களின் உண்மை குணம் வெளிப்படுகிறது.  அவசரத்தேர்வுகளை எதிர்கொள்ளும் போதுதான், மனிதர்கள்  எங்கனம்  உண்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது வாழ்க்கையில் உண்மை, கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தும்.. கதாபாத்திரங்களும் கதையும் புனைவென்கிறபோதும் உண்மை இல்லாமல் புனைவு ஏது. குமரேசனுடனான சரோஜாவின் உடன்போக்கு, குமரேசனின் தாய், முட்டை சாயபு, குமரேசனின் அப்புச்சி, அம்மாயி  அனைவருமே தமிழ் நாடு கிராமங்களில் சந்தித்த சந்திக்க முடிகிற மனிதர்களே. கதாபாத்திரங்களின் இயல்பைக் காட்டுவதற்கான சிறந்த வழி, அவர்கள் மீது ஒரு தேர்வைத் திணிப்பது… அவர்கள் எந்தப் பாதையில் செல்கிறார்கள் என்பதைப் பார்ப்பதுதான். தனிப்பட்ட ஆதாயத்திற்காக மற்றவர்களைக் காயப்படுத்துகிற குமரேசன் தாய்மாமன் பாத்திரமும் நமக்குப்  புதிது அல்ல. இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில்தான் மனித முகங்கள் அடையாளம் பெறுகின்றன நமது தேர்வுகள் நம்மை மட்டும் பாதிக்காது. அவை நம்மைச் சுற்றியுள்ளவர்களை பாதிக்கின்றன. அவை நம் வாழ்க்கையின் போக்கை பாதிக்கின்றன. புனைகதையிலும் அப்படித்தான். கதாபாத்திரங்கள் தேர்வு மிகமுக்கியமானது.  அதை நண்பர் பெருமாள் முருகன் தேர்ந்த படைப்பாளிக்குரிய அவதானிப்புடன் நன்றாகவே செய்திருக்கிறார்.

அதுபோல ஆசிரியர் கதைமாந்தர்கள், கதைக்களம், நிகழும் கணம் இவற்றுக்கு உரிய மொழியில் சொல்லாடலையும்,உரையாடலையும் கையாண்டிருப்பது நாவலுக்குக் கூடுதல் பலத்தை அளிக்கிறது, உதாரணமாக :

« பொழுது சாயற நேரத்துல ஆட்டப் புடிச்சிக் கட்டுவா, மாட்டப்புடிச்சுக்கட்டுவா, புரசனுக்குத் தண்ணிக்குதீப்போடுவா, சோத்துக்கு ஒலவைப்பா. அவ குடியானச்சி. இது பொழுதோட நேரத்துலே சீவிச் சிங்காரிச்சுக்கிட்டு நிக்குதே. காட்டூரு தெருவுல பாரிவதான் இப்ப்டி நிப்பாளுவ. அந்தக் கூட்டத்துலருந்து ஒன்னப் புடிச்சாந்து வெச்சிட்டானே . இவனுக்கு சோத்துல மருந்த கலந்து குடுத்திட்டாளா. இந்த மருந்த எந்த வையித்தியங்கிட்ட போயி எடுப்பன் நானு. எத்தன காசு செலவு பண்ணுவன் . எம்பையன் எனக்குக் கிடைப்பானா. இல்ல, இந்த எச்சக் கலயோடதான்  இருப்பானா.. »  

என சரோஜாவின் மாமியார் புலம்பலைக் கண்டு நமக்குக் கோபம் வருவதில்லை, இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது.

. ———————————————————————————————

இலங்கு நூல் செயவலர்: முனைவர் க. பஞ்சாங்கம்

 

Ilangu nool seya valar (notionpress.com)

சந்தையில் கிடைக்காத எனது நூல்களை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். அம்முயற்சியில் முதற்படிதான் முனைவர் க.பஞ்சாங்கம் திறனாய்வு நூல்கள் பற்றிய எனது கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல். சில வருடங்களுக்கு முன் வெளிவந்தது. தமிழ் வாசிப்பு என்பது சாதி, சமயம் , என்னைத் தேடிவருவதில்லை, என்னை அழைப்பதில்லை, அந்த இதழில் அடிக்கடி காணுகின்ற பெயர், நூலுக்கு முன்னுரை அவருடையதாமே, பத்திரிகைகளின் சிபாரிசு, இடதுசாரி வலது சாரி, பெரியார் ராஜாஜி, தலித் பிராமணர் என்கிற இவற்றையெல்லாம் கடந்து படைப்புக்காக வாசிக்கபடுவது தமிழில் குறைவு. இன்றைக்கு சில வாசிப்புத் வட்டங்கள், இவாசிப்பு அரிதாரத்தைக் கலைத்து பொதுவான வாசிப்ப்பை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. நவீன தமிழிலக்கியத்திற்கு பெரும்பங்கு ஆற்றி இருப்பவர் பேராசிரியர் க. பஞ்சாங்கள். அவர் திறனாய்வு நூல்களை வாசித்தபின் எடுத்த முடிவு. அவர் கரையில் ஒதுங்கியவற்றை சேகரித்தவரில்லை. ஆழ்கடலில் சோர்வின்றி தேடிய முத்துக்களைகொண்டு செய்வித்த ஆரங்கள் அவை. பாராட்டினையும் பரிசினையும் எதிர்பார்க்காது உழைத்த அன்றும் உழைக்கிற அறிஞர்கள் இன்றும் இல்லாமலில்லை. அவர்களில் பேராசிரியரும் ஒருவர். அவருடைய திறனாய்வு நூல்கள் குறித்த எனது பார்வைதான் இக்கடுரைகள். பிரெஞ்சு இலக்கியங்கள் இன்றைக்கும், நூற்றுக்கு 99 விழுக்காடு படைப்புகள், அவை தினசரி, செய்திகளாக இருந்தாலும் கூட மொழியைக் கையாளுவதில் கவனமாக இருக்கின்றன. இளம் படைப்பாளிகள் நவீன இலக்கியத்தினை நன்கு உள்வாங்கிகொள்ள பேராசிரியர் பஞ்சாயங்கத்தின் இலக்கியக் கோட்பாடுகள், இலக்கிய திறனாய்வுக் கட்டுரைகள் நூல்களை வாசிக்கவேண்டும். அதற்கான அற்முகநூலே இலங்கு நூல் செயவலர் எனும் இந்த நூல்.

கீழ்க்கண்ட கட்டுரை நூலின் முதல் கட்டுரை: Ilangu nool seya valar (notionpress.com)

திறனாய்வும் திறனாய்வாளரும் 

க.பஞ்சாங்கத்தின் திறனாய்வு கட்டுரைகளின் முதற் தொகுப்பு நவீன இலக்கிய கோட்பாடுகள். இதற்கு அணிந்துரை பாரதி புத்திரன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எப்போதுமே  பலநேரங்களில் ‘ஏதோ கேட்டார்கள் எழுதினேன்’ என்பதுபோல சில அணிந்துரைகள் அமைந்துவிடும். இந்நூலுக்கான அணிந்துரை அவ்வாறு எழுதப்பட்டதல்ல. எழுதியிருப்பவர், உள்ளத்தால் க. பஞ்சாங்கத்தோடு அண்மித்தவராக இருக்கவேண்டும், எனினும் மருந்துக்கும் துதிபாடல்களில்லை. நூலாசிரியருக்கும் நூலுக்கும் எது பொருந்திவருமோ அதனைக் கூடுதல் குறைவின்றி சொல்லி யிருக்கிறார்.

” மனித நேயம் மிக்கதோர் இலக்கிய திறனாய்வாளனின் சமூகத் தொண்டாக, வாழ்வின் உண்மை நோக்கிய தேடுதலாக அவர் தம் பணிகளை –  படைப்புகளை உணர முடியும்”  என ஓரிடத்தில் பாரதிபுத்திரன் குறிப்பிடுகிறார்.  இலக்கிய நண்பர்களால் ‘பஞ்சு’ என அழைக்கப்படும் க. பஞ்சாங்கத்தின் உழைப்பை இதனினும் பார்க்க வேறு சொற்களால் செரிவுடனும், பெருவெடிப்பு பிரகாசத்துடனும் சொல்ல இயலாது. இவாக்கியத்தை வாசித்தபோது பஞ்சாங்கம் குறித்த எனது முடிவில் தவறில்லை என்பதை உணர்ந்தேன். இத்தொடரை எழுத உந்து கோலாக இருந்த சக்திமிக்க சொற்கள் அவை.

கலை இலக்கியம் இரண்டுமே எங்கிருந்து வருகின்றன என்பதைப் போலவே எவரிடம் போய்ச்சேருகின்றன என்பதன் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்ந்ததொரு சிற்பியின் கைவண்னத்தில் உருவாகும் சிலையில் அழகும், கலை நேர்த்தியும், உணர்வின் வெளிப்பாடும், உரையாடும் மொழியும், அதன் பின்னல்களும்,வளைவுகளூம்,நெளிவு சுளிவுகளும், நேர்க்கோடுகளும்  ஏற்ற இறக்கங்களும், தவழலும், நடையும், ஓட்டமும், மழலைப்பேச்சும், ஊடலும் சிணுங்கலும் இன்னமும் இதுபோன்ற படைப்பிலுள்ள எண்ணற்ற கூறுகளும், அணுக்களும், இதயத்தில் இறங்கவும் உடல் சிலிர்க்கவும் ஒருவன் தேவை. நீரில் மிதக்கும் நிலவை உள்ளங்கையில் ஏந்தி உதிரத்தில் வெதுவெதுப்பை உணர்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அவன் வாசகன் மட்டுமல்ல வாசகனுக்கும் மேலானவன், படைத்தவனைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தவன் – ஒரு தேர்ந்த திறனாய்வாளன். ஒரு நல்ல தலைவிக்கு உரிய  தலைவன் அமைவதுபோல அது நிகழவேண்டும். அது நிகழாதவரை அந்த நூல் தனது பிறவிப்பயனை எட்டியதாகச் சொல்வதற்கில்லை. தமிழிலக்கியக் கொப்பில் முகிழ்த்து இதழ்பரப்பிய அனேக மலர்களை முகர்ந்து முகர்ந்து அதன் நறுமணத்தையும் துர்க்கந்தத்தையும் இனம் பிரிக்க அளப்பரிய ஞானமும், பழுத்த அனுபவும் வேண்டும்.

க. பஞ்சாங்கத்தின் இரு திறனாய்வு நூல்களை முன்வைத்து இத்தொடரை எழுதுவதால் திறனாய்வு என்பதென்ன? ஒரு திறனாய்வாளன் என்பவன் யார்? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை தருவது முகவரிபோல அவசியமாகிறது. படைப்பிலக்கியத் துறையில் படைப்பு சார்ந்து வினையாற்றுபவர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம்

1. வாசகர்கள் 2. படைப்பாளிகள் 3. விமர்சகர்கள்

1. இரசிகர்கள்வாசகர்கள்: படைப்பு துறையின் முதற்படியில் இருப்பவர்கள். அறிதலில் ஆர்வம் காட்டுபவர்கள். இரண்டாவது படிநிலையான படைப்பாளியாக உருமாறும் ஆற்றல் இருந்தும் அதனைத் தொழிற்படுத்த விருப்பமின்றி இருப்பவர்கள். வெகு சன ரசனையிலிருந்து மாறுபட்டவர்கள். உயிர் வாழ்க்கையே தேடல்கள் என்ற உந்து சக்தியால் முன் நகர்த்தப்படுகிறது என்பதைக் கிஞ்சித்தும்  உணராமல் வாழ்ந்து சாகும் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து மாறுபட்ட சிறுபான்மையினர்.  படைப்புலகின் பூகோளத்தை புரிந்துகொள்ள கூடியவர்கள், அதன் தட்ப வெப்பத்தில் பயணிக்க அறிந்தவர்கள். இவர்கள் ஞானத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது,

2. கலைஞர்கள்– படைப்பாளிகள்:  உணர்வுகளால்  வழிநடத்தப்படுபவர்கள். வாசிப்பு தந்த உந்துதலால் படைப்பாளியாக உருமாருகிறவர்கள். புத்தக வாசிப்பும், மனித வாசிப்பும், கற்றதும் கேட்டதும், உற்ற அனுபவமும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் அக விழிப்புக்கு ஆளாகிறார்கள். கழுகின் பார்வைலிருந்து தப்பித்து ஓர் அரவம் போல இண்டு இடுக்குகளிலும் புதர்களிலும் ஊர்ந்தும், சுருண்டும் முடங்கியும் கிடப்பவர்கள், பெருமூச்சுக்குச் சொந்தக் காரர்கள். ஏதோஒருவகையில் எல்லாவற்றுடனுமான இவர்களின்  முரண்களும், மொழியும், மொழி சார்ந்த அழகியலும் எடுத்துரைப்பிற்கு இவர்களை இழுத்துவருகிறது,

3. கலை விமர்சகர்கள் மற்றும் திறனாய்வாளர்கள்: இவர்கள் கல்வியாளர்கள். உணர்வில் தோய்ந்தபோதும், வேண்டும்போது விலகியிருக்கக்கூடிய தெளிவு கொண்டவர்கள். அறிவில் தெளிவும் அனுபவத்தில் முதிர்ச்சியும், தடுமாறாத மனமும் இவர்களை கலை விமர்சகர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் செயல்பட ஊக்குவிக்கிறது.  திறனாய்வு என்பது வல்லுனர்களின் பணி. கல்வி, அனுபவம், எப்பொருள் குறித்து திறனாய்வு செய்கிறார்களோ அப்பொருள் பற்றிய முழுமையான அறிவுஎன மூன்றும் அமையவேண்டும். திறனாய்வாளர்களுக்கு அவர்களின் எல்லைகள் பிடிபடுவதுபோல தோற்றந்தரினும் பல நேரங்களில் அவர்களைத் திக்குத் தெரியாத காட்டில் அல்லாடவும் செய்யும். 

மேற்கண்ட மூன்று வகைபாட்டில் க. பஞ்சாங்கம் ஐயமின்றி மூன்றாவது பிரிவுக்குள் வருகிறார். கலைஞர்களும் படைப்பாளிகளும் எங்ஙனம் ரசிகர்களாகவும் வாசகர்களாகவும் தொடர்ந்து செயல்படுகிறார்களோ அங்ஙனம் கலைவிமர்சகர்களும், திறனாய்வாளர்களும் மேற்கண்ட இரு பிரிவின் கீழ் தொடர்ந்து செல்படுகிறவர்கள் அதாவது தொடர்ந்து வாசிப்பவர்களாவும், உந்துதல் தலைப்படுகிறபோது படைப்பாளிகளாகவும் செயல்படுகிறவர்கள். கடும் வாசிப்பின்றி திறனாய்வுகளுக்கு சாத்தியமில்லை என்பதால் . வாசிப்பில் தொடர்ந்து கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள். க. பஞ்சாங்கம் சோர்வின்றி வாசிப்பவர், வாசிப்புதான் அவரது சுவாசத்தை சீராக வைத்திருப்பதாக நினைக்கிறேன். அவர் கவிஞர், நாவலாசிரியர் என்பதையும் நாம் அறிவோம்.

திறனாய்வு?

இலக்கிய திறனாய்வு என்பது  தேடல், வாசிப்பு, ஒப்பீடு, மதிப்பீடு, முடிவெடுத்தல் என்கிற வினைத்திறன்களை உள்ளடக்கியது. எழுத்தூடாக பிறிதொரு பனுவல் பற்றிய தமது வாசிப்பு, உணர்தல் மற்றும் தெளிதலை மூன்றாவது மனிதருடன் பகிர்ந்துகொள்ளல், அடிப்படையில் ஓர் ஒப்பீடு நோக்கு. ஓரு விவாத களம்: ஒரு புறம் திறனாய்வாளன் -திறனாய்வு; எதிர் திசையில் பிரதி – படைப்பாளி. உண்மையில் இவ்விவாதகளத்தில் ஒரு தரப்பில் திறனாய்வாளர் உருவத்தில் அவரைக் கட்டமைத்த அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகள்.  தன்னை உருவாக்கிய சமூகம், மனிதர்கள், அவற்றின் இயக்கம் ஆகியவற்றைக் குறித்த அவரது நியாயங்கள் முடிவுகள், தெளிதல் அடிப்படையில் கையளிக்கபட்ட பனுவலின் குறை நிறைகளை அவர் விவாதிக்கிறார்.  பனுவலின் கலைநேர்த்தி, மொழி, சொல்லாடல்கள், எடுத்துரைப்பு என்றெல்ளாம் தொடர்ந்து அவதானிப்பதும், வியப்பதும் திறனாய்வாளரின் பின் புலத்தைப் பொருத்தது. அவர்கள் ஏற்றுக்கொண்ட சமூக மதிப்பீடுகளைக்கொண்டே பனுவலை அணுகுகிறார்கள் என்பதை ஒரு போதும் தமிழ்ச்சூழலில் நாம் மறக்கக்கூடாது. 

க. பஞ்சாங்கம் என்ற திறனாய்வாளர்

மேற்கத்திய உலகில் திறனாய்வில் இருவகையுண்டு:

1. பாராட்டுவதுபோல இகழ்வது  (La Critique Péjorative): நேர்மறையான விமர்சனங்களில் ஆரம்பித்து பின்னர் பனுவலை சிறுமை படுத்துவது

2. இகழ்வது போல பாராட்டுவது (La critique méliorative): எதிர்மறையான விமர்சங்களில் ஆரம்பித்து; சிறப்புகளை பேசுவது

தமிழ் திறனாய்வுகளை கீழ்க்கண்டவகையில் வகைபடுத்தலாம்

1. துதிபாடும் விமர்சனங்கள் 2. வசைபாடும் விமர்சனங்கள் 3. தனனை அண்டி இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும், தன் இருப்பைச் சொல்லவும் எழுதப்படும் விமர்சனங்கள்  4. நடு நிலையான திறனாய்வாளர்கள்.

க. பஞ்சாங்கம் இந்த நான்காம் வகைமைக்குள் வருகிறார் என்பதை அவரது திறனாய்வு கட்டுரைகள் தெரிவிக்கின்றன. பாரதி புத்திரணின் அணிந்துரையில் உபயோகித்துள்ள வார்த்தைகளின் படி “உயர்கல்வி,பேராசிரியர், ஒற்றைப் பரிமானபார்வையில் பன்முகத்தன்மை, சிறு பத்திரிகைகள் அறிமுகமும் உறவும், பார்வை முதிர்ச்சி, தொன்ம இலக்கியங்கள், பின்நவீனத்துவ பார்வை, வாசிப்பில் தெளிவு”  எனும் பல்வேறு கூறுகள் அவரது சிறந்ததொரு திறனாய்வாளராக உருவாக்கியிருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக “இந்தியன் இப்படிபட்டவன், தெலுங்கன் இப்படிபட்டவன், அந்த சாதிக்காரன் இப்படிப்பட்டவனென்று அன்றாடம்  உரைக்கப்படும் பொதுவிதிகளைப் புறக்கணித்து மனித மனம் அவற்றையும் கடந்து ஆழமானது என்று மனிதனைப் பற்றிய புதிரிலும் மூழ்கிவிட்டவர் பஞ்சு”

எனவேதான் தமிழ் புதுக்கவிதையின் வரலாறுகள் எழுதமுற்பட்டவர்களில் பலர் எங்ஙனம் குறுக்கு சால் ஓட்டினார்கள். பேரறிஞர்கள் எனசொல்லிக்கொண்டவர்கள் எல்லாம் தமிழின் புதிய வழித்தடத்தை அங்கீகரிப்பதில் காட்டிய தயக்கமென்ன என்பதைச் சொல்ல முடிந்தது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழ்கம் சார்பாக பாரதி பாடல்களின் ஆய்வு ப் பதிப்பினத் தயாரித்த மா. ரா. போ. குருசாமி பாரதியின் காட்சிகவிதைகளை அத்தொகுப்பில் மனமின்றி சேர்த்திருக்கிறார். அது பற்றி எழுதுகிறபோது: ” காட்சி என்ற தலைப்பில் இங்கே வெளியாகும் பகுதி கவிதை அன்று. பின் வந்தோர் தாம் எழுதிய ஒது புது வகை எழுத்தோவியத்துக்கு ‘வசன கவிதை ‘ என்று பெயரிட்டுக் கொண்டு, அந்த வகையான இலக்கிய வடிவத்துக்கு முன்னோடி பாரதியாரே என்று சாதிக்க லாயினர்; கவிதை கவிதை தான் வசனம் வசனம் தான்’ ‘ஒட்டு’ வேலை செய்வது சரி எனக்கூற இயலவில்லை”  என்று எழுதியதைக் குறிப்பிடும் க.பஞ்சாங்கம், ” 30களில்  தோன்றிய புதுக்கவிதைக்கு 1987ல் இந்த நிலமை. 1977லேயே “தமிழ்ப்  புதுகவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூல் வெளிவந்தும் , அந்நூலுக்கு 1978-இல் இந்திய அரசின் சாகித்ய அகாடெமிப் பரிசுவாங்கியதன் மூலம் அங்கீகாரம் இந்திய அள்வில் கிடைத்தும் இந்த நிலைமை ” என்று வருந்த க.பஞ்சாங்கத்தால் மட்டுமே இயலும். மா. ரா. போ. குருசாமி மட்டுமல்ல தமிழண்ணல், மு.வ. சி.பாலசுப்பிரமணியமென பலர் வரிசையாகப் பஞ்சாக்கத்திடம் குட்டுப்படுகிறார்கள். “1959ல் முதல் பதிப்பாக சி.பாலசுப்பிரமணியன் “பெயரில்” வந்துள்ள இலக்கிய வரலாற்று நூலிலும் புதுக்கவிதைக் குறித்து குறிப்பில்லை என்கிற திறனாய்வாளர் அதே சி.பாலசுப்பிரமணியன் 1982ல் மறுபதிப்பு கொண்டுவரும்போது “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்று சேர்த்துள்ளதைக்கூறி “இதுதான் வரலாற்றுக் கட்டாயம் என்பது” என நகைக்கிறார். இவர்களயெல்லாம் கண்டிக்கும் திறானாய்வாளர், புதுக்கவிதையை ஓர் இலக்கிய வகையாக ஏற்றுக்கொண்டு அதன் வரலாற்றை விரிவான முறையில் எழுத முயன்ற மரபான தமிழ் அறிஞர்கள் மது.ச. விமலானதம் (1987) சிலம்பொலி செல்லப்பன் ஆகியோரை பார்ராட்டவும் தவறுவதில்லை. 

——————————————————————

 

 

 

 

 

 

 

 

La solitude de M. Daniel Ramasamy

                                                      

— Cela ne t’ennuie-t-il pas de vivre en ermite, sans chercher à voir nos enfants ou à fréquenter autrui ?

Non. Pas de réaction de la part de celle qui est assise à l’autre bout de la table. Plus étonnant encore, sa question n’a même pas provoqué un grognement de sa part. Elle s’est levée. Dosa, la galette de riz dans l’assiette s’est émiettée en plusieurs bouts. On se demande si la femme a écouté ce qu’il lui a demandé. Sans regarder l’assiette ni chercher à savoir si son mari a mangé ou non, elle débarrasse la table comme un humanoïde programmé et retourne à la cuisine. Il lui faudra au moins une demi-heure pour en sortir après avoir fait la vaisselle à sa guise. Comme si elle l’attendait, à ce moment précis, une quinte de toux éclate en force, chez ‘Monsieur Daniel’. De son côté, les lumières se sont éteintes comme si elles attendaient qu’elle parte – il est cerné par le monde sans lumière – l’obscurité se déploie partout -l’espace sans vie – et ce qui se tend pour le saisir. Soudain il a la sensation d’être renversé et se voit tomber à la renverse dans l’abîme, au fond, où il ne trouve que boue, que puanteur.

— Papa ?

— Quand es-tu entré ?

— Quelle question, papa ? Je ne suis allé nulle part. J’étais dans ma chambre.

— Ne me raconte pas de bobards.

— Viens voir si tu veux. Même les livres que j’ai lus sont encore là.

Pensant suivre son fils, il se dirige vers la chambre d’en face, pousse la porte et entre. Une bibliothèque achetée dans un magasin spécialisé, les livres qui y étaient rangés, le lit, la table, la chaise, l’ordinateur qui grondait sans cesse, un banc de sport, tout est parti, la chambre est vide.

Lakshmi, viens voir la chambre de ton fils ! Où sont passés tous les meubles de cette pièce ?

Aurait-il pu l’appeler un peu plus doucement ? En effet, il ne parlait jamais d’une voix forte ou tonitruante dans cette maison où vivaient tous ensemble : lui, sa femme et ses enfants. En général, les questions posées à voix basse recevaient des réponses, et les ordres donnés étaient exécutés. Pourtant, depuis quelque temps, ce n’est plus le cas. Le bonheur va-t-il s’estomper à mesure que les attentes diminuent ? Et la voix va-t-elle dévoiler son vrai visage pour nous entraîner dans un conflit perpétuel ? En se posant de telles questions, il sort de la chambre de son fils, et tout à coup, il sent une main puissante s’emparer de son cou, ses efforts pour s’en débarrasser se soldent par un échec, les mains se multiplient, toutes commencent à l’étouffer.

Juste devant lui, une silhouette sans visage.

– « Qui es-tu », demande-t-il.

— Solitaire, mais je ne suis pas venu seul, c’est avec mes amis que je suis venu. Tous ceux qui ont travaillé pour toi pendant des années et qui sont aujourd’hui éveillés : malice, tromperie, jalousie.

Il crie à sa femme : « Laxmi, viens ici ! » et reprend : « Aie pitié de moi ! il se passe quelque chose ici. N’as-tu pas encore fini de laver ces deux assiettes ?

Il emploie sa force autant qu’il le peut pour libérer les mains étranges de son cou. Il s’avance ensuite lentement, à pas mesurés, et s’assied sur sa chaise préférée, qui se trouve toujours devant la table. Resté immobile, il halète — il ne peut plus respirer. Sa femme pour sa part ne finit pas de laver les deux assiettes dans la cuisine, il entend encore la cacophonie. Si elle peut aller chercher de la Ventoline, cela aidera peut-être à calmer cette toux qui ne veut pas lâcher. Pour affronter ou juguler cette méchanceté, M. Daniel n’a ni le courage ni la force. En effet, la crainte que la toux n’expulse les intestins avec du sang grandit de jour en jour. Et il arrive parfois que l’inséparable salive sur sa langue se disperse. La toux gémissante frappe les murs et lui revient comme un boomerang. Quand il parle, sa voix n’est pas aussi tonique. Il presse sa narine quatre ou cinq fois, joint son pouce et son index, essuie le mucus liquide qui a visiblement coulé du bout de son pouce sur le bord arrière de la chaise.

Voilà ce qui s’est passé l’année dernière. Leur fille unique, qui ressemblait trait pour trait à sa mère, est allée comme tous les jours à la fac et n’est pas rentrée à l’heure le soir. Pour la joindre par téléphone, le père essaya, mais sans succès. Il appela donc son fils pour y parvenir. Son fils rejeta d’emblée la demande de son père, disant qu’elle n’était plus une gamine à craindre. Et sa femme, ce soir-là aussi, faisait la vaisselle comme si de rien n’était. Finalement, vers 23 heures, tard dans la nuit, ils reçurent un appel téléphonique.

— Papa ?

— Oui ?

— Tu connais Michel, mon ami, n’est-ce pas ? Je l’ai même amené chez nous une fois. ‘

— Dis-moi ! Je ne m’en souviens pas.

— J’ai donc décidé de rester avec lui. Dis-le à maman. Je serai à la maison dimanche si je peux. Elle a raccroché le téléphone.

Il se sentait comme si on lui avait soudainement coupé une branche, bien feuillue. Il se souvient être resté longtemps assis dans sa chaise préférée ce soir-là. On peut dire que sa toux infernale a dû commencer ce jour-là. 

Puis vint le tour de son fils.  ‘J’ai trouvé du boulot à Mulhouse’, disait-il le mois dernier, mais le père ne se rappelle plus le jour. 

– C’est bien. Mulhouse n’est pas loin d’ici. Si tu pars à 7 heures, ça te suffit amplement pour être à l’heure au travail - dit-il à son fils.   

— Quoi… 250 km par jour ? Je ne peux pas faire ça. Je préfère rester sur place et faire ça plutôt que de faire 250 km aller-retour tous les jours. Si j’ai le temps, je vous verrai le week-end.

— Pourquoi ? Est-ce que tu as aussi trouvé une petite amie, dis-moi franchement.

Le jour même, il est parti, coupant toutes ses relations avec son foyer et les siens. Et sa mère, pour peu qu’elle l’ait voulu, aurait pu changer la décision de son fils. Elle n’a rien fait et est restée muette comme à son habitude. Pour compenser le manque après le départ de sa fille, sa femme a apporté un chien, mais pour son fils elle a apporté un chat, en vérité pour augmenter la fréquence de la toux de son mari. Peut-être savait-elle tout, qui sait ? Elle assiste à tous les spectacles de la maison, non pas en tant que protagoniste, mais plutôt en qualité de simple spectatrice, de complice silencieuse.

On ignore combien de temps s’est écoulé depuis qu’il s’est assis ou assoupi sur la chaise. Lorsque la sonnerie du téléphone est venue le réveiller, le jour s’est déjà levé. En fait, il vient de loin, de l’Inde, plus précisément de l’Inde française du XXe siècle. Il parle donc le français, ainsi que la langue de sa région natale. Cette connaissance de deux langues lui donne l’opportunité d’être interprète de temps en temps dans l’administration où le service est requis. C’est ainsi qu’il a été appelé par la police des frontières il y a quelques minutes :

— Monsieur Daniel ! Bonjour. Je suis Jaques Trinidad, garde-frontière, on a besoin de vous pour une mission d’interprétation, vous pouvez venir ?

— Quand ?

— Aujourd’hui, dès que possible ?

— D’accord.

—-

La toux semble s’être un peu calmée. Cette nuit, il a mal dormi et s’est senti fatigué. Cela dure depuis quelques années. Avec la télécommande, il en a eu assez de changer les chaînes de télévision les unes après les autres par TF1, Antenne2, FR3, RTL9. Il choisit alors la chaîne tamoule, mais malheureusement, là aussi, ceux qui lisent les informations semblent de plus en plus désireux d’utiliser le mot « sensation ». En colère, il retourne sur RTL. C’est l’émission « ça peut vous arriver ». Un homme du même âge que M. Daniel raconte en toussant par intermittence comment un dépanneur venu réparer leur machine à laver a fini par escroquer une énorme somme d’argent.

Monsieur Daniel Ramasamy ne se souvient pas à quel âge la toux a commencé. Mais la quinte de toux n’a commencé que récemment. Cela vient toujours à l’improviste. Pendant ces quelques minutes, il a l’impression d’être possédé par un démon, et en plus il s’en lasse. La semaine dernière, un jour, la toux a semblé s’apaiser après un verre de whisky. Depuis, chaque fois que la toux arrive, il s’abrite derrière cette ambroisie. Ainsi, ayant senti que la toux frappe à la porte, il ouvre le mini bar du salon, prend une bouteille de whisky et un verre, s’assied sur sa chaise habituelle de la table à manger. Juste à ce moment-là, un “hmm” vient de derrière lui. Il tourne la tête, il s’agit de sa femme, de qui d’autre ?

Cela fait déjà trente ans que le couple s’est marié, comme le veut la tradition hindoue. Dans les premières années de leur vie conjugale, elle appréciait tout ce qu’il aimait : la nourriture indienne du Sud et du Nord, épicée et pimentée comme lui : riz, colombo, curry, chapati, Naan, Laddu, Halwa, chai Masala et ainsi de suite. Elle voulait aussi regarder les films des acteurs et actrices indiens qu’il aime. Mais quand elle a constaté que la toux prenait M. Daniel Ramasamy dans sa main, elle n’a pas pu supporter cela, elle a commencé à détester tous ses favoris, y compris sa chaise préférée. Elle a alors élaboré de nombreuses tactiques pour exprimer sa colère envers lui, l’une d’entre elles étant de s’éclaircir la gorge.

Comme la prochaine étape consiste à mettre en œuvre, en essuyant plusieurs fois le visage, elle s’est rendue aux toilettes et s’est mise à uriner, en émettant délibérément un bruissement gênant. Si c’était l’autre fois, il l’aurait peut-être grondée, mais aujourd’hui il n’a ni le courage ni la force d’exercer son pouvoir sur elle. Pour échapper à cette épreuve indésirable, il se réfugie dans le reste du whisky. Il a encore changé de chaîne de télévision. La série « Nestor Burma » est diffusée sur « Antenne2′. Guy Marchand, qui joue le rôle de “Nestor Burma”, a presque le même âge que lui. Néanmoins, il est très sensible aux femmes. Même s’il garde ses distances, les femmes l’aiment et le courtisent. Leurs deux lèvres — comme si elles avaient été entraînées plusieurs fois — sont pressées l’une contre l’autre et contre ses lèvres. Après quelques secondes, ils se séparent. Ensuite, comme d’habitude,  “Guy” pose son chapeau sur une table à côté de lui, et la femme l’embrasse en déboutonnant sa veste. Une femme soupçonnée par la police d’avoir assassiné son mari, l’associé d’une société d’import-export, sollicite les services de “Nestor” pour l’innocenter, voilà l’histoire. M. Daniel n’a pas besoin de regarder le reste. Il est certain que l’épouse a tué son mari. Du fait de l’attitude de sa propre femme qui le conduit, depuis quelques mois, à avoir de telles convictions.

Comme il s’y attendait, elle est sortie de la salle de bains et l’a regardé, ce qui signifie : “Tu es toujours assis sur la chaise ?”. Il en est conscient. Mais dans son esprit résonne l’appel téléphonique reçu plus tôt, selon lequel il doit être au poste de la Police Aux Frontières à onze heures et demie, ce qui signifie qu’il doit être à l’arrêt de bus dans la prochaine demi-heure. La dernière fois, un gros agent, tout en lui pinçant une ampoule rouge au coude, lui a demandé de respecter l’heure. Il s’est donc levé, est allé aux toilettes et a allumé la lumière. La peur de la lumière a fait grimper deux cafards au plafond, dont l’un pouvait à peine être déplacé. Devant le miroir, ses yeux étaient rouges et gonflés. Il n’y avait que de l’air dans le dentifrice. Heureusement, ses deuxième et troisième essais lui ont permis de se brosser les dents.   Avec l’eau dans ses paumes, il s’est lavé le visage. Après avoir pris un copieux petit-déjeuner, s’être habillé de tout ce qu’il fallait, il a quitté la maison. Le ciel est couvert. Il ne pleut pas vraiment, mais c’est menaçant. Un volatile s’est envolé tout seul. La route goudronnée, trempée par la pluie de la veille, repose paresseusement.

À l’arrêt de bus, une femme africaine avec un bébé dans le landau et deux adolescentes font les cent pas. Il ne peut pas dire d’où vient l’Africaine, si elle est d’un pays colonisé par la France ou d’ailleurs. L’un des problèmes qu’il rencontre depuis vingt ans est de deviner la patrie des Africains. Puis il y a deux autres filles qui se sont habillées sans tenir compte du temps : un morceau de tissu pour couvrir leurs seins tombants, et une jupe courte en jean, comme portée à contrecœur, avec une ceinture de rex rouge astucieusement attachée pour éviter le risque encouru. Les filles sont en train de mâcher un chewing-gum dans la bouche et, de temps en temps, l’arrêtent entre les deux lèvres et font une sorte de ballon, qui explose et se colle à l’embout, le récupérant à nouveau et l’enfonçant. Son attention a été attirée par un paulownia. Au pied du tronc, un mille-pattes tente de l’escalader et tombe au sol à chaque tentative. Les branches se balancent à l’occasion sous l’effet du vent et, dans leur mouvement, pompent l’eau de pluie, telle qu’elle attend d’être versée.

— Vous avez l’heure monsieur, une fille d’entre elles s’est approchée de de Monsieur Daniel et lui a demandé l’heure.

— Oui, il est onze heures moins dix, a-t-il répondu.

Le temps qu’il regarde sa montre et dise à la fille l’heure exacte, le bus est venu et arrêté.. Les autres ont laissé passer Monsieur Daniel et la jeune mère africaine avec son bébé dans la poussette, en premier. Il a une carte de transport gratuite pour les personnes âgées, et la machine l’a validée en émettant un bip. Heureusement, à cette heure de la journée, de nombreux sièges sont vides, et il en choisit un près de la fenêtre. Il est très fatigué. Après quelques secondes, il s’est endormi en émettant un léger sifflement. Quand il se réveille, le bus s’est arrêté à un arrêt du centre-ville. Ceux qui sont descendus courent pour attraper le “tram”, ceux qui ne peuvent pas courir, font des pas rapides, certains courent dans la direction opposée vers un autre bus, d’autres montent dans son bus et cherchent des sièges vides. Il suppose que tous ces gens traversent avec une certaine audace les solitudes qui les entourent et se traînent dans cette fichu boue.

Une vieille femme qui est montée dans le bus est venue s’asseoir à côté de lui et disait “Désolé”. M. Daniel prend place correctement et hoche la tête en signe d’acceptation de son comportement digne. En face de lui, se trouvent deux vieilles femmes qui doivent avoir le même âge que lui. En effet, la plupart des passagers du bus sont âgés. Ce sont des oiseaux, qui profitent de l’occasion pour déployer leurs ailes, afin de ne pas être arbitrairement incarcérés dans les cages des solitudes. Dans dix minutes, il pourra se présenter au bureau des gardes-frontières, qui se trouve sur la rive du Rhin, pense-t-il.

— Un étranger qui, jusqu’à hier, était locataire comme moi est aujourd’hui devenu propriétaire d’une maison. D’ailleurs, je ne l’ai jamais vu aller travailler », dit l’une des femmes à sa voisine.

— ça ne m’étonne pas. Si nous faisons des naissances comme eux chaque année, nous pouvons aussi en acheter une sans problème. Qui profite de tous les impôts que nous payons, vous savez ?

— Excusez-moi mesdames ! Vous savez, pourquoi votre voisin étranger, a-t-il beaucoup d’enfants ? Si vous le désirez, je peux vous dire le secret.

–  « …. »

Leurs visages révèlent qu’elles ne veulent pas que M. Daniel s’immisce dans leurs affaires.En tout cas, il s’est résolu à partager son savoir dans cette affaire.

— La cause de l’aspiration de certaines personnes à avoir plusieurs enfants est un moyen de conjurer la solitude qui s’approche à la même vitesse que le départ de chaque enfant. C’est un moyen de combler le vide laissé par ceux qui sont partis.

Ils froncent les sourcils comme pour rejeter son intervention. Le bus s’est arrêté à l’endroit où il doit descendre.

Au début du pont européen, à gauche, les drapeaux nationaux des États membres de l’Union européenne sont alignés, ce qui lui donne le motif de leur union : la peur d’être seul est un problème fondamental de toute l’humanité. De l’autre côté du pont, le Rhin, qui évoque une mer calme, se déplace majestueusement du sud au nord. Le ciel, qui était gris et bruineux peu de temps auparavant, est devenu bleu et lumineux malgré la présence de quelques nuages ici et là, et l’on dirait que la moitié du ciel a été tirée et attachée de l’autre côté du Rhin. Le soleil tape impitoyablement. Les véhicules des deux côtés de la route roulent avec une férocité inouïe. M. Daniel se dirigea vers le trottoir situé à droite du pont. Il continue à marcher et arrive au début du pont. Il est juste devant le bureau de la police des frontières, dont il commence à radiographier les scènes dans sa tête, d’un bout à l’autre : un des policiers l’attend, regardant sa montre par moments. Un ou deux Tamouls captifs qui ont tenté d’entrer illégalement en France attendent, agonisants, de répondre aux demandes de renseignements. Dans la même situation, il voit aussi d’autres étrangers. L’un des policiers attend peut-être même un interprète pour eux. Ils s’inquiètent de la nécessité d’appliquer correctement la loi.

Le Rhin coule tranquillement sous le pont européen. Dans l’eau, il voit des nuages sales qui semblent avoir été rincés à dessein. Les barges, qui semblent avoir été trempées de noir au bout de la queue, rugissent dans le cœur de Monsieur Daniel. La nudité du fleuve le fascine. Les vagues montantes se condensent en bulles, qui se fendent à la vitesse de l’eau, puis des blocs d’écume descendent dans son âme sous forme de salive. L’esprit frappé trébuche dans le tourbillon du fleuve. Un air frais et agréable venant d’en haut, semble vouloir le libérer de sa détention de solitude. C’est agréable. Il lève les yeux et voit le ciel. Il contemple une dernière fois le poste de la police des frontières et descend vers le fleuve.

Le soir, un agent de la police des frontières française a appelé chez eux et a demandé si « Monsieur Daniel » était à la maison. Madame Daniel, comme si elle ne voulait pas lui répondre, a gardé le silence. L’agent poursuit : « Nous l’avons appelé pour une mission d’interprétation, mais il ne s’est pas présenté ». Décidant de rompre le silence, elle lui dit : « Vous n’avez qu’à lui demander, je ne sais pas » et a raccroché le téléphone. Quelques minutes plus tard, elle s’est assise pour la première fois sur la chaise habituelle de son mari. Elle pensait à préparer son plat préféré pour la nuit.

  —————————————————————–

புனைவுலகம் – கிழக்கும் மேற்கும்

                  

« உப்பரிகையின் மேல் நின்று வானத்தைப் பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப்  பட்ட து அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்ப்டவில்லை. வானத்தை யார்தான் தொடமுடியும் ? அது என்ன விரித்த ஜமுக்காளமா அல்லது பாயா, எக்கித்தொட ? »

          – மானுடம் வெல்லும் நாவைல் தொடக்கம், ஆசிரியர்  பிரபஞ்சன்

« அதொரு ஞாயிறு  காலை. வருடம் 1920. அமெரிக்காவின் கிழக்கு பெனிசில்வேனியாவைச்சேர்ந்த மிடில் ஹோப் பகுதி.  ஜோன் ரிச்சர்ட்ஸ் எழுந்திருக்க மனமின்றி மெத்தனமாகப் படுக்கையில் கிடந்தவள், நிதானமாக இமைகளை உயர்த்தி கண்களை முழுமையாகத் திறந்திருருந்தாள்.  பார்வை ஜன்னலில் சுள்ளென்று காய்ந்துகொண்டிருந்த  ஜூன் மாத கதிரவனிடத்தில் இருந்தது.குப்பென்று  ஒரு பரவசம் உடலுக்குள் பாய்ந்தது. கல்லூரியில் இறுதியாண்டு முழுக்க இனியும் தானொரு இளம்பெண்ணல்ல என்ற எண்ணத்துடனும் ஒரு முதிர்ந்த பெண்ணுக்குரிய வாழ்க்கையை எதிர்பார்த்தும் பதற்றமுடன் காத்திருந்தவள் அவள், திரும்ப தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்கு,  வாழ்க்கையைத் தொடர வந்திருக்கிறாள்.»

           இது பெர்ல் – எஸ் – பக், என்ற படைப்பாளியின்  the Time is Noon அல்லது  நண்பகல் நேரம் என்கிற நாவலின் தொடக்கம் .

          இரண்டு எழுத்தாளர்கள் இரு வேறு பண்புக்குச் சொந்தக்காரர்கள். இரு நிலம் சார்ந்த சமூகத்தின் பெண்களை அறிமுகபடுத்துகிறார்கள். இரு பெண்களும் நிலம் காலம்,சமூகம் சமயம் ஆகியவற்றால் வேறுபாடுகளைக் கொண்டவர்கள். ஆனாலும் அடிப்படை மனித உணர்வில் வேறுபட்டவர்களல்ல. இருவருக்கும் தங்கள் வாழ்க்கைசார்ந்து  சில உண்மைகளும் நம்பிக்கைகைகளும் இருக்கின்றன. இரு பெண்கள் ஊடாகவும் அவர்கள் சார்ந்த சமூகங்கள் ஊடாகவும் விதிக்கப்பட்ட வாழ்க்கைமுறையை சொல்வதும் விமர்சனம் செய்வதும் நூலாசிரியர்களின் நோக்கம். இலக்கியங்களின் குறிக்கோளும் இவைதான்.

நண்பர்களே ! உலகில்  மிகவும் சிக்கலான நூல்கண்டு , எது என்று  என்னைக் கேட்டால் அது மனிதன் என்பேன். இப்பிரபஞ்சத்தில்  மிகவும் மர்மமான பூமி  அல்லது மர்மதேசம்  என்று ஒன்றிருக்குமானால், அது  மனிதர் வாழ்க்கையாகத்தான் இருக்க முடியும். உடல் கண்ணாடியாக, தெளிவாகத் தன்னை விளங்கவைக்கும் பொருளாக இருக்குமெனில் எக்ஸ்ரேவோ பிற பரிசோதனைகளுக்கோ எந்த அவசியமும் இல்லை.  மனிதரும் மனிதர் வாழ்க்கையும் அப்படிப்பட்டது. அதற்கும்` எக்ஸ்ரே தேவைப்படுகிறது பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. இப்பரிசோதனை முடிவுகளே இலக்கியம். மனிதர் வாழ்க்கையை, மனிதரை எளிதாக புரிந்துகொள்ள முடியுமானால்  இலக்கியத்திற்கான அவசியமே இல்லை. « அதுதான் தெரியுமே ! » எனக் கடந்து போயிருப்போம். 

கலையும் இலக்கியமும் மனிதரை மகிழ்விக்கப் பிறந்தவை என்பதும் உண்மைதான். புலன்களைக் கடந்த இன்பத்திற்கு உரியவை.  அவை எழுத்துப் பேச்சென என எந்த வடிவத்திலும் இருக்கலாம். எழுத்தோ பேச்சோ இலக்கியம் ஆவது, காற்று தென்றலாவதுபோல நடபெறும் வினை. வீட்டில் அடைந்து கிடகும் மனதிற்கு வெளி உலகையும் புதிய மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் கலை. பல ஆயிரம் மைல்கள் பயணித்து பல நாடுகளுக்குச் சென்று, பல காலம் பழகியும் புரிந்துகொள்ள இயலாத மனிதர்களை, அவர்களின் பண்பை, குணாதிசயங்கள் சில மணிநேர வாசிப்பில் புரிய வைப்பது. அனைத்திற்கும் மேலாக  நம்மை நாமே உரசிப்பார்த்து தெளிவுற உதவும் கட்டளைக்கல்.

இந்த இலக்கியத்திற்குப் பல முகங்கள் இருக்கின்றன. எல்லாமனிதர்களும் அடிப்படைபண்பில் ஒன்றுபோல தோற்றம் தரினும் பூகோள இருத்தல், காலம் அரசியல், பொருளாதாரக் காரணங்களுக்கேற்ப, சமூகச் சூழலுக்கொப்ப  சிலபண்புகளைக் கொண்டிருக்கின்றனர். மனிதரையும் மனிதர் வாழ்க்கையைப் பேசுகிற இலக்கியத்திலும் இந்த ஒன்றும் பலவும் உண்டு. நிறத்தால், சமயத்தால், இனத்தால், பிறந்த மண்ணால், எந்த பெயரில் வாழ்ந்தாலும்,  எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மனிதருக்குப் பசியுண்டு. காதலுண்டு.  மனிதர்கள் அனைவரிடமும் காணக்கூடிய  அடிப்படை பண்பு இது.  இதுவரை பிரச்சனைகளில்லை. ஆக மனிதரின் அடிப்படைத் தேவைகளில் ஒற்றுமை  இருக்கிறது.  தேவை தீர்வுக்கான பொருள்களிலும், அதனைத் தேடும் வழிமுறைகளில் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.  இலக்கியத்தேடுதலிலும் அடிப்படைத் தேவைகளில் ஒற்றுமை இருப்பினும் அதைத் தேடுகின்ற வகையில் வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளால்தான்  சொந்தமொழியில் வாசித்தது போக மொழி பெயர்ப்புகளையும் தேடி வாசிக்கிறோம். பிறமனிதர்களிடம் கை குலுக்குகிறோம், அவர்களை புரிந்துகொள்ள முயற்சி செய்கிறோம்.

ஒருபடித்தான உருவங்கள், காட்சிகள் அலுத்துவிடும், குழப்பம் தரும். மனிதர்கள் அனைவரும் நகல் எடுத்ததுபோன்று நூறுகோடிபேரும் சின்னசாமி ஆகவோ பெரியசாமி ஆகவோ இருந்தால் என்ன  நடக்கும், யோசித்துபாருங்கள். ஆக அகத்திணையில் ஒற்றுமையும் புறத்திணையில் வேற்றுமையும் இருக்கிறது.  காலம், அரசியல், சமூகம், இயற்கை, தட்பவெப்பநிலைக்கேற்ப உயி வாழ்க்கை அமைவது போல  மனிதனையும் மனிதர் வாழ்க்கையையும் பேசும் கலை இலக்கியமும் காலம், அரசியல், சமூகம்  சூழலுக்கொப்பத் தன்னை எழுதிக்கொள்கிறது.

இலக்கியம் படைத்தல் என்பது ஓர் அறிவு சார் தொழில். பாரதி சுடர் மிகு அறிவு என்கிறான்.  இப்படித்தான் எழுதவேண்டுமென  மொழி நதிக்கு இலக்கணம் கரையிடுகிறது,  அம்மொழி நதியை சுதந்திர வெள்ளமாகப் பாய்ந்தோடச்செய்வது இலக்கியம். புனைவிலக்கியம் அதிலொன்று. படைப்பாளி கோவலனுக்கு வாய்த்தமாதவி அவள், ஊடலுமுண்டு, கூடலுமுண்டு. சிறுகதையாக முடிந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள அனுமதியும் தரலாம். பெருங்கதையாக நீண்டு வேர்வையும் சிந்தலாம்.

புனைவு என்பது இட்டுகட்டுவது ஆயினும், இட்டுக்கட்டியதை உண்மையென நம்பும்படிச் செய்வது புனைவிலக்கியத்திற்கான அறம்.  எழுத்தின் தொனி, இலை மறை காயாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள், கதைசொல்லி, கதைமாந்தர்கள், கற்பனை என்ற பெயரில் முன்வைக்கப் படும் உண்மைகள் அல்லது பொய்கள்  அனைத்தும் நாம் அறிந்த அல்லது அறியாத மனிதர்களை நாமாகவும்,   அவர்களின் வாழ்க்கையை நம்முடையதாகவும் நம்பவைக்கும் தந்திரத்தில் புனைவெழுத்தின் வெற்றி அடங்கியுள்ளது. கண்ணகியையும் கோவலனையும், ரோமியோவையும், ஜூலியட்டையும் இன்றுவரை நினைவுகூற முடிகிறதெனில், நம்பகத்தன்மையை வாசிப்புதோறும் ஏற்படுத்துவதால்தான். இந்த நம்பகத் தன்மையே புனைவிலக்கியத்தின் பிற பண்புகளை கூடுதலாக சிலாகிக்க உதவுகிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை போன்றவைகளெல்லாம் அந்தந்த நில மக்களின் தனித்தன்மையான பண்பாட்டைக் கூடுதலாகப் பேசின. இன்றைய புனைவிலக்கியங்களில் ஒரு பன்முகபண்பாடு கலந்திருக்கிறதென்பது வெளிப்படை.  

          இன்றைய புனைவுலகப்போக்கு குறிப்பாக நாவல்கள் பற்றி எனது கருத்தை பகிர்ந்துகொள்வதுதான் எனது நோக்கம். கிழக்கென்று எடுத்துக்கொண்டாலும் தமிழ் நாவல்களையே கூடுதலாக வாசித்துள்ளேன். ஒன்றிரண்டு ஜப்பானிய படைப்புகளை அவை பெரும்பாலும் எழுத்தாளர் முராகாமியின் படைப்புகள்.  பிரெஞ்சு மொழியில் வெளிவந்த வியட்நாமிய  பெண் எழுத்தாளர் டு யோங் த்யூ யோங் பெண்மணி படைப்பொன்றையும் வாசித்துள்ளேன். மேற்கெனில் ஆங்கிலம் பிரெஞ்சு இரண்டு மொழி நாவல்களையும் பல காலமாக வாசித்துவருகிறேன். எனினும் கிழகிலும் மேகிலும் பல ஆயிரம் நூல்கள் வந்துள்ளன. கம்பன் வார்த்தையில் சொல்வதெனில் இத்தமிழ்ப்பூனை சுண்டெலியைப் பிடிக்க நேரத்தை செலவிட்டு, இலக்கிய பாத்திரத்தை உருட்ட தவறியது அதிகம்.

           கீழை நாடுகள் தொடக்கத்தில அவைகளுக்கென தனி பண்புகளைக்கொண்டே இருந்திருக்கின்றன. சீன இலக்கியம் ஆறாம் நூற்றாண்டிலும் ஜப்பானியர் இலக்கியம் 11 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாக இலக்கிய வரலாறுகள் தெரிவிக்கின்றன. நம்முடைய ஐம்பெரும் காப்பியங்களைப்போல இவை சமயம், புத்த பிட்சுகள், துறவிகள், அறம் என்று பேசின. உரைநடை இலக்கியத்தை அவை நமக்கு முன்னதாக கண்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது. புனைவிலக்கிய அணுகுமுறைகளில் புதிய புதிய கலை நுட்பங்களை புகுத்தி வியப்பில் நம்மை ஆழ்ந்துவது மேற்குலகம் என்கிறபோதும் முதல்  உரைநடை புதினத்தை ஜப்பானியர்கள் படைத்தார்கள் என்கிற தகவல் கீழைதேயத்தவர்களுக்குப் பெருமைதரும் செய்தி. நூலின் பெயர் கெஞ்சியின் கதை. நூலாசிரியர் ஒரு பெண், பெயர் முராசாகி ஷிக்கிபு. இன்றைய நவீன படைப்பில் காணக்கூடிய பல்வேறு அம்சங்களை ஆசிரியர் கையாண்டிருப்பதும், மேட்டுகுடியினர் பின்புலத்தைக் கொண்ட ஆசிரியரே பிரபுக்களின் இழிவான நடவடிக்கைகளை விமர்சிப்பதும் நாவலின் சிறப்பு. காரணம் படைக்கப் பட்ட காலம் பதினோறாம் நூற்றாண்டு

          பத்தொன்பதாம் நூற்றாண்டில்  பிரதாப முதலியார் சரித்திரம் தொடங்கிவைத்த தமிழ் புனைவிலக்கியபோக்கு ஆரோக்கியமாகவே இருக்கிறது. தமிழ் புனைவுகளில் இன்று எதார்த்த நாவல்கள், சமுக நாவல்கள்,  வரலாற்றுப்புதினங்கள், சுற்றுச்சூழல் நாவல்கள்,  பின் காலனித்துவ புனைவுகள், எனப் பல்வகையான புதினங்களக் காண்கிறோம். ஒடுக்கப்பட்டமக்களின் கலக குரலாக ஒலிக்கும் எழுத்துக்களும் அதற்குரிய நியாயமும் தமிழ்ப் புதினங்களின் போக்கை உயர்த்தி இருக்கிறதென்கிற உண்மை பெருமைக்குரிய விடயம்.

           ஓநாயொன்று  ஆட்டைக் கடித்து மாட்டைகடித்து ஊருக்குள் நுழைந்து மனிதரையும் கடித்ததுபோல, இன்று உலகமயமாதல் என்ற ஓநாய், புறவுலகைக் கடித்த காலம்போய் மனித இனம், தமது நிலம், தட்பவெப்பம்  சார்ந்து வகுத்துக்கொண்ட  அறத்தை,பண்பாட்டை, ஒழுக்கத்தை கடிக்கின்ற காலம். மனித குலம் அவரவர் மண்சார்ந்து, பின்பற்றிய பண்பாடுகளில்கூட ஒருவகையான  மரபணு மாற்றத்திற்குட்பட்ட அக்கறை சீமை வாழ்க்கைமுறை. இம்மாற்றம் நம்முடைய  எழுத்துக்களிலும் இன்றில்லாவிடினும் நாளை எதிரொலிக்கவே செய்யும்.  

           படைப்பிலக்கியத்தில் அதிகம் ஆராதிக்கபடுகிற அல்லது புதியவகை படைப்பு முறையை அதிகம் அறிமுகப்படுத்தியவர்களென நம்பப்படுகிறவர்கள் பிரெஞ்சு படைப்பிலக்கியவாதிகள். எனவை பிரெஞ்சு இலக்கிய உலகின்  தற்போதையை  படைப்புகள் எதுபற்றி பேசுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, ஒருவகையில் மேற்குலக இலக்கியவெளியை  புரிந்துகொள்ளும் முயற்சி.

          பிரெஞ்சு, ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகள் தொன்மையில் தமிழுக்குப் பிந்தியவை. சங்கத் தமிழ் கோலோச்சிய காலத்தில், மேற்குலக மக்கள் தங்களுக்கான மொழியைச் செம்மைபடுத்தப் போராடிக்கொண்டிருந்தார்கள். எனினும் நாம் யாப்பிலக்கணத்தைக்கொண்டு கவிதைகள், நாடகங்கள், காப்பியங்களை எழுதிக்கொண்டிருக்க, மேற்குல வாசிகள் செக்குமாடுகள் வாழ்க்கையில் அலுத்து அறிவியல் தேடலுடன் தங்கள் தினசரிகளைப் புதுப்பித்துக் கொண்டது போல இலக்கியத்திலும் தேடலில் இறங்கினார்கள். பானை,சட்டியிலிருந்து குக்கருக்கும், கட்டுமரத்திலிருந்து கப்பலுக்கும் இலக்கியத்திலும் அவர்களால் தாவ முடிந்தது. மானுடவியல், பிளேயாது(Pléade), பரோக், செம்மொழி இயல், அறிவொளி இயக்கம், அபத்தவியல், இருத்தலியல், கட்டமைப்பு இயல், புனைவியல், புது புனைவியல், எதார்த்தம், மீ எதார்த்தம், நவீனத்துவம், பின் நவீனத்துவம், பின்காலனியத்துவம், பின்-பின் நவீனத்துவம் எனப் பல மைல்கற்களைக், கடந்து இன்று வேறு தேடலில் மேற்குலகு இறங்கியுள்ளது. இதுபோன்ற முயற்சிகள் தமிழிலும் நிகழ்ந்திருக்கலாம், அது முளையிலேயே கிள்ளப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புண்டு. நம்முடைய அறிவுப்புலம்  குரு சிஷ்யர்கள் உறவு சார்ந்தது  இல்லையா ? பாரதிக்கு முன்பாக, ஒரு பாரதி ‘சொல் புதிது பொருள் புதிது’ என நினைத்து, எழுதியதை தனது குருவிடம் காட்டி, அவருடைய  அசீர்வாதத்தைப் பெற நினைத்திருக்கலாம்.  குரு என்ன சொல்லியிருப்பார்( ஒரு கற்பனைதான்)  « போடா அதிகபிரசங்கி, இப்படியெல்லாம் எழுதப்படாது »  என எச்சரித்து அவனது ஓலை நறுக்கை அக்கினிக்குத் தானம் செய்திருக்கலாம்.

ஔவை சொல்லாததை, காக்கைப் பாடினியார் எழுத த் தயங்கியதை இந்த நூற்றாண்டு தமிழ்ப் பெண்படைப்பாளிகள் துணிச்சலாகப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். இருந்தும், இன்றுங்கூட மாற்றங்களுக்குப்  பல நேரங்களில் கதவுகள் அடைக்கப்படுகின்றன. கதவடைத்தலுக்குப் பின்னே ஒளிந்துள்ள மனமாச்சரிய குணம் நியாயமானதா ? எந்த ஒரு படைப்பும் அனைவரையும் திருப்திபடுத்த சாத்தியமில்லை. கசப்பதும் ருசிப்பதும் அவரவர் சுவை நரம்புகள் சார்ந்த விடயம்.

          இன்று பிரெஞ்சு படைப்புலகில் நடப்பதென்ன ? முதலாவதாக பாலுறவை அப்பட்டமாக பேசும் படைப்புகள்.  இது போன்ற படைப்புகள் பிரெஞ்சு மொழிக்குப்  புதிதல்ல என்கிறபோதும் இன்று அது வேறொரு பரிமாணத்தைத் தொட்டுள்ளது. மனிதர்களும் விலங்கென்ற உண்மையை உறுதிபடுத்த முனைந்ததைப்போல தகாத பாலுறவுகளை, ஓரினச் சேர்க்கையை  மையப்படுத்திய அப்பட்டமாக பேசுகிற, சில நேரங்களில் அருவருப்பும் ஊட்டுகிற வகையில் ஒருசில புனைவுகள் இருக்கின்றன. சந்தை அரசியலை அடிப்படையாக க் கொண்ட உலகில், மனித மனங்கள் காட்சி ஊடகம், சமூக ஊடகமென அடிமைப்பட்டுக் கிடக்க அவர்களை விடுவிக்கும் தந்திரமாக நெருப்போடு விளையாடுகிறார்களோ என்கிற வினாவும் அடிமனதில் எழுகிறது. வேறு சிலரோ இனவாதம் நிறபேதமென அலைகிறார்கள். மிஷெல் ஹூல்பெக் (Michel Houellebecq) ஆற்றல்மிக்க படைப்பாளிகளில் ஒருவர், அவருடைய மொழி ஆளுமையும், இலக்கிய திறனும் நாடறிந்தது, ஆனால் அண்மைக்காலமாக அவருடைய படைப்புகள், பிரெஞ்சு மக்களின் எதிர்காலம் இசுலாமியத்தால் பாழ்பட்டுவிடும் என்பதுபோன்ற கருத்துக்களை முன்னெடுக்கும் விதமாக இருக்கின்றன. ரெனார் கமுய் (Renard Camus) தொடக்க காலத்தில் தீவிர இடதுசாரி, இன்று தீவிர வலது சாரி. ஒருபாலின சேர்க்கையில் ஆர்வம் கொண்ட ஆசாமி, அருவருக்கத் தக்க தம்முடைய பாலுறவு  நாட்குறிப்புகளை இலக்கியம் என்ற பெயரில் பகிர்ந்துகொள்கிறார். அண்மைக்கால வாலது சாரி கொள்கைகளுக்கு ஏற்ப அந்நியர்களால் பிரான்சு தமது அடையாளத்தை இழந்துவிட்டதென்கிற புலம்பலும் அவரிடமுண்டு.  

இத்தகைய இலக்கிய சூழலில் கற்பனைவளம், மருட்சிப்புனைவு, ஆச்சரியங்கள் போன்றவற்றைத் தேடி மீண்டும் தொன்மம், தூரதேசம், எனப் பயணிக்கிற ஒன்றிரண்டுபேர் இல்லாமலில்லை. அவர்களில்  ஒருவர், பிரெஞ்சு இலக்கிய உலகின் மிகப்பெரிய பரிசு எனக் கூறப்படும் 2021 கொன்கூர் பரிசை வென்ற முகம்மது புகார் சார்(Mohammed Mbougar Sarr). இவர் ஒரு ஆப்ரிக்கர், செனெகல் நாடு  பூர்வீகம்.

—————————————