நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு புதுச்சேரி மற்றும் தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய “நீலக்கடல்” மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன. மாத்தாஹரி நாவல் கு. சின்னப்பாரதி அறக்கட்டளை விருதையும், சைகோன்-புதுச்சேரி நாவல், சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டு கடந்த் ஐந்து ஆண்டுகளில் சிறந்த நாவலுக்குரிய அட்ஷரவிருதையும் பெற்றுள்ளன. 2016ம் ஆண்டில் சிறந்த எழுத்தாளருக்கான மதுரை ஆயர் விருதையும் பெற்றுள்ளார்
இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர்.[1] புதுச்சேரி அரசு வருவாய்த் துறையில் பணியாற்றிவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்று கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்து வருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதி வருபவர்.
எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுயதம், விகடன், கல்கி எனத் தொடங்கி தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். பிரான்சு நாட்டில் ‘ நிலா’ என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர். ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஆறு சிறுகதை தொகுப்புகள்; தமிழில் எட்டு நாவல்கள்; இரண்டு பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஒன்பது மொழிபெயர்ப்புகள்; பதினோறு கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு – De haute luttre (Editions Zulma) இவரது மொழிபெயர்ப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய ‘மாத்தா ஹரி’ நாவல் ‘Bavani, l’avatar de Mata- Hari என்ற பெயரில் பிரெஞ்சு மொழியிலும், இறந்த காலம் நாவல் ‘ Je vis dans le passé என்ற பெயரில் பிரெஞ்சிலும் (Edilivre), I Live in the Past என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு, பிரான்சு நாட்டில் Tu connais la nouvelle? என்கிற பிரெஞ்சு இலக்கிய அமைப்பு Centre- Val de Loire மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மே 25-29 ஷத்தோதன் (Châteaudun) என்ற நகரிலும் ஜூன் 1-5 ழர்ழோ(Jarjeau) நகரிலும் நடத்திய தமிழ் இலக்கிய அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Bienvenue
Nanri suresh
naki