பிரெஞ்சு தமிழிலக்கியம்

மேற்கத்திய நாடுகளில் தற்போதைக்கு இலக்கியம் என்பதற்கு எழுதப்படாத விதியொன்றிருக்கிறது.

– மொழி ஆளுமைகொண்டதும், வாசகன் சிந்தனையை மேம்படுத்தக் கூடியதும் இலக்கியம்.

– தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வது இலக்கியம்.

– பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம்.

இருபதாம் நூற்றாண்டு தமிழிலக்கியம்: இந்திய இலக்கியம், ஈழ இலக்கியம், சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியமென்றிருந்தது, அக்களத்தைப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளாக தலித் இலக்கியமும், பெண்ணிலக்கியமும் பாகம் பிரித்துக் கொண்டிருக்கின்றன.

“அகதியாக இருப்பதற்கு மைல் தொலைவு அவசியமில்லை இரண்டு மைல்களே போதும். பழக்கப்பட்ட, பரிச்சயப்பட்ட மனிதர்களையும் பொருள்களையும் மண்ணையும் வானத்தையும் குடிதண்ணீரையும் கோயிலையும் இழக்க வேண்டி நேரிடும் பொழுது, இழந்து அதன்பின் தொடர்ந்து வாழுதல் வேண்டும் என்ற நினைப்பில் தொழிற்படுகிற பொழுது அகதி உருவாகிறான்/ள் – என்கிறார்  முனைவர் கா. சிவத்தம்பி.

பேராசிரியர் கருத்தின்படி பிரான்சு நாட்டில் வாழ்கிற தமிழர்கள் பூர்வீகம் எதுவென்றாலும் புலம்பெயர்ந்ததற்கான காரணம் எதுவாயினும் அனவருமே ஒருவகையில் அகதிகளே.

அரசியல் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இருபதாம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் புலம்பெயர்ந்த எழுத்துகளென்ற அடையாளம்பெற்றன. அதனைப் புகலிட எழுத்துக்கள், புலம்பெயர்ந்த எழுத்துக்களாகப் பிரித்துணரவேண்டுமென தர்கித்து தற்போது பிரெஞ்சு தமிழிலக்கியம் என்கிற குடை விரிக்கப்படுள்ளது. எதிரில் நோர்வே தமிழிலக்கியம், சுவிஸ் தமிலக்கியம் குடைகளெல்லாம் கண்ணிற்படுகின்றன. புலம்பெயர்ந்த அல்லது புகலிட நாடுகள் தமிழர்களின் பிற்பாதி வாழ்க்கைக்குத் தரும் நம்பிக்கையைப் பொறுத்தது, இக்குடைகளின் எதிர்காலம்.

தமிழைத் தாய்மொழியாகக்கொண்டு, புலம்பெயர்ந்தோ பெயராமலோ; மொழி, அரசியல், பண்பாடு போன்ற காரணிகளால் பிரான்சு நாட்டோடு, பிரெஞ்சு மண்ணோடு, தங்கள் வாழ்க்கையைப் பதியமிட்டு வளர்ந்த மக்களின் படைப்புகளைப் பிரெஞ்சு தமிழிலக்கியமென்று வரையறுத்துக்கொள்ளலாம். 17ம் நூற்றாண்டில் ஆரம்பித்துவைத்த காலனி ஆதிக்கமும், இருபதாம் நூற்றாண்டில் இலங்கையில் நிகழ்ந்த இனக்கலவரமும் இவற்றுக்கான நதிமூலங்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள்,புகலிடத் தமிழர்கள் என்ற புதிய சொல்லாடல்களில் நுழைவது பிரெஞ்சு தமிழிலக்கியமென்ற தலைப்பிலிருந்து திசை பிறழ நேருமென்பதால் அதனைத் தவிர்க்கிறேன். இரண்டிற்கும் நதிமூலங்கள் அரசியலும் பொருளாதாரமும். சொந்த மண்ணில் நிகழ்ந்த அரசியல் வாணலுக்குத் தப்பி, அடைக்கலம் தந்த நாடுகளின் பொருளாதார சுகபோகங்களென்ற தீயிற் கருகிக்கொண்டிருப்பவர்களின் முனகல்களாகப் (பெரும்பாலான)பிரெஞ்சு தமிழிலக்கியத்தை பார்க்கிறேன்.

தென்திசையிலுள்ள குமரியில் நீராடி, வடக்கிலுள்ள காவிரியில் நீராடச்செல்லும் செங்கால் நாரையிடம் தனது துயரத்தைப் பகிர்ந்துகொண்ட சத்திமுற்ற புலவரின் தூதுமுயற்சிகள் பிரெஞ்சு தமிழிலக்கியத்திலுமுண்டு ஆனால் வலிகளை – தமது வரலாற்றின் ஊடாக, இழப்புகளையும் அடையாள அழிப்புக்களையும் இலக்கியமாக முன்வைத்தவர்கள் நான் அறிந்த வகையில் உரைநடையில் சி.புஸ்பராஜா, கவிதையில் கி.பி. அரவிந்தன்.

பிரான்சு நாட்டைப் பொறுத்தவரை படைப்பிலக்கியங்களை இருவகைபடுத்தலாம் ஒன்று பிரெஞ்சுமொழியில் எழுதப்படுபவை மற்றது பிரெஞ்சு அல்லாத மொழிகளில் எழுதப்படுபவை. இரண்டாவதுவகைக் குறித்து பிரான்சுநாட்டின் படைப்புலகமோ, அரசாங்கமோ எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. பிரெஞ்சு மொழிகளில் எழுதப்படும் படைப்பிலக்கியங்களை ‘Francophonie littéraire’என அழைக்கிறார்கள். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகவோ, அல்லது இரண்டாவது மொழியாகவோக் கொண்டு பிரான்சு நாட்டிலும் பிற நாடுகளிலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்படுகிற படைப்புகள் ‘Francophonie littéraire’. பிரான்சுநாட்டின் முன்னாள் காலனி நாடுகள் அனைத்தும் இதன்கீழ் வருகின்றன. இது தவிர பிரெஞ்சுமொழியை அரசுமொழியாக ஏற்றுக்கொண்ட கனடா, பெல்ஜியம், சுவிஸ் நாட்டின் சில பகுதிகளுமிருக்கின்றன. Phonie என்ற சொல்லுக்குக் ‘குரல்’ என்பதுதான் சரியான பொருள், எனவே ‘Francophonie என்பது பிரெஞ்சு மொழியில் எழுதுவதல்ல பிரெஞ்சில் குரல்கொடுப்பது எனப்பொருள்கொண்டு பிரெஞ்சு மொழி படைப்புகளை அலசி ஆய்கிறவர்களுமுண்டு. பின் காலனியத்துவ மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்கள் பலவும் இவ்வகமைக்குள் அடைக்கப்பட்டு, அசலான பிரெஞ்சு படைப்பாளிகளின் நலனுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர். அல்ஜீரிய, மொராக்கோ, ஆப்ரிக்க காலனி நாடுகளில் பிரெஞ்சு மொழியில் எழுதிக்கொண்டிருப்பவர்கள் பலரும் பிரான்சுநாட்டின் நிழலில் உரிய அங்கீகாரமின்றி மூச்சு முட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆங்கிலத்தில் எழுதி உலகப் புகழ்பெற்ற காமன்வெல்த் நாடுகளின் எழுத்தாளர்களுண்டு. ஆனால் செனெகெல் நாட்டின் செங்கோர் (Léopold Sédar Senghor), பிரான்சுநாட்டின் ஆட்சிக்குட்பட்ட மர்த்தினிக் பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர் எமெ செசேர் (Aimé CESAIRE) ஆகியோருக்குக்கிடைக்கவேண்டிய மரியாதை இங்கே கிடைத்ததில்லை.

மேற்சொன்ன பிரிவில் மற்றுமொரு தரப்பினர் இருக்கின்றனர். அவர்கள் அரசியல் நெருக்கடிகள், வாழ்வாதாரச் சிக்கல்கள்  பிரச்சினை காரணமாக தொடக்ககாலத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும்,பிற்காலத்தில் காலனிகளிலிருந்தும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் பிரான்சு நாட்டிற்குக் குடியேறியவர்கள். இவர்களுக்கு பிரெஞ்சுமொழி சொந்த நாட்டில் அரசாங்க மொழியோ, தாய்மொழியோ அல்ல. பிரான்சுநாட்டில் குடியமர்ந்தபின்னர் தொடக்கத்தில் தாய்மொழியிலும்,பிற்காலத்தில் பிரெஞ்சு மொழியிலும்  (ஒருவேளை பெரும் எண்ணிக்கையில் புலம்பெயராததும், தேசிய அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் அவசியமெதுவும் அவர்களுக்கு இல்லையென்பதும் காரணமாக இருக்கலாம்) இலக்கியம் படைத்தனர். அவ்வரிசையில் அயர்காந்தைச்சேர்ந்த சாமுவெல் பெக்கெட், செக்நாட்டைச் சேர்ந்த மிலென் குந்தெரா, ருமேனியாவைச்சேர்ந்த எமில் சியோரான், ரஷ்யரான ஆந்தரே மக்கின், சீனரான தாய் சீஜி, அண்மைக்காலத்தில் புகழ்பெற்ற ஆப்கானியர் அத்திக் ரயிமி என்றதொரு நீண்டதொரு பட்டியல் இருக்கிறது. சியோரான் ( Cioran), “அந்நிய மொழியொன்றில் படைப்பது விடுதலைக்கு நிகரானது”, என்றார். எனினும் “அவ்விடுதலையை வலிகள் கொண்டது”, எனக் கூறியவர் மிலென் குந்தெரா. அதனாற்தானோ என்னவோ பிரான்சுக்குத் தஞ்சமடைந்து வெகுகாலம் கழித்தே பிரெஞ்சு மொழியில் அவர் எழுத ஆரம்பித்தார். மிலென் குந்தெராவின் எழுத்துகள் கடந்த காலத்திய நெருக்கடிகளையும்; புதிய மொழி, புதிய வாழ்க்கையென குடியேறிய நாட்டில் தனக்கேற்பட்ட சிக்கலையும் பொதுவில் பேசுபவை.

பிரான்சு நாட்டில் பிரெஞ்சு அல்லாத பிறமொழிகளில் எழுதிக்கொண்டிருப்பவர்களென்ற பிரிவுக்குள் பிரெஞ்சு தமிழிலக்கிய படைப்பாளிகளைக் கருதலாம். ஒரு பிரிவினர் பிரெஞ்சு காலனியாகவிருந்த புதுச்சேரி (இந்தியா)யுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புகொண்டவர்கள். பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக்கொண்டவர்களும் இவர்களுள் அடங்குவர்: பிரெஞ்சு- தமிழ் உறவுக்கும், பிரெஞ்சு-இலக்கியத்தைத் தமிழுக்கும், தமிழிலக்கியத்தைப் பிரெஞ்சுக்கும் கொண்டுபோய் இவர்கள் சேர்த்திருக்கிறார்கள். மொழிபெயர்ப்பில் தொல்லிலக்கியங்கள் பெரும் பங்கு வகித்தன.

தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு:

லமாரெஸ் – திருக்குறள்

பெருமாள் ஐயங்கார் – திருவரங்கக் கலம்பகம், தேவதாசிபாட்டு, தெருப்பாடு

ஜூலியன் வேன்சோன் – சிந்தாமணி, ஆனந்தரங்க பிள்ளை நாட்குறிப்பு

தெவெஷ் – அருணாசல புராணம்

அதாம் – ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, நால்வழி, நன்னெறி, ஆசாரக்கோவை, கம்ப புராணத்தில் சில பகுதிகள், அறநெறிசாரம்.

லெயோன் சென் ழான் – மூத்த திருப்பதிகம், திருவாசகம், தேவாரம், சிலப்பதிகாரம்.

இரா. தேசிகம் பிள்ளை – திருப்பாவை, சகலகலா வள்ளி மாலை, திருவிளையாடற் புராணம், காஞ்சி புராணம்

லெயோன்ஸ் கடெலி – பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, ரங்கோன் ராதா

துரைசாமி நாய்க்கர் – பாரதியார் பாடல்கள்

பிரான்சுவா குரோ – பரிபாடல் , காரைக்கால் அம்மையார்

ழான் லுய்க் ஷெவிய்யார் – தொல்காப்பியம் , தேவாரத்திலிருந்து சில பகுதிகள்

எம் கோபாலகிருஷ்ணன் – பட்டினப்பாலை

அலென் தனியெலூ, ஆர். எஸ். தேசிகன் – சிலப்பதிகாரம்

எஸ்.எ.வெங்கட சுப்ராய நாயக்கர் – குறுந்தொகை

மதனகல்யாணி – கரையெல்லாம் செண்பகப்பூ

கிருஷ்ணமூர்த்தி, மதனகல்யாணி – தமிழ்ச் சிறுகதைகள்

கிருஷ்ணமூர்த்தி – பெரியார் சிந்தனைகள், சித்ர சுதிர்

பிரான்சுவா குரோ – தமிழ்ச் சிறுகதைகள்

அம்பையின் சிறுகதை தொகுப்பொன்றை பிரெஞ்சு பதிப்பகமொன்று வெளியிட இருக்கிறது. வெ.சுப. நாயகரும் நானும் (நாகரத்தினம் கிருஷ்ணா) பிரெஞ்சு மொழியில் வலைத்தளமொன்றை நடத்தி வருகிறோம். அதில் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறோம், அவற்றைப் பிரெஞ்சு பதிப்பகங்களைத் தொடர்புகொண்டு வெளியிடத் திட்டம்.

பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு:

இந்தியா உபகண்ட அளவில் பிற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தொன்ம இலக்கியங்கள் குறிப்பிடத் தகுந்த வகையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன, அவ்வாறே நவீன இலக்கியங்களின் வரவும் இந்தியமொழிகளில் தமிழில் கூடுதலாக உள்ளன. தமிழ் படைப்புலகிற்கு பிரெஞ்சுக் காலனியத்துவத்தினாற்கிடைத்த நன்மை பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்க முடிவது.  பாரதியார் பிரெஞ்சு தேசியகீதத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து, ஸ்ரீனிவாச ஐயர், இரா. தேசிகம்பிள்ளை, சுத்தானந்த பாரதி, கோதண்டராமன், ஸ்ரீனிவாஸ சாஸ்திரி, சுவாமிநாதப்பிள்ளை, முத்துக்கண்ணன் ஆகியோர் கடந்த காலத்தில் பிரெஞ்சில் புகழ்பெற்ற படைப்புகளைத் தமிழ்படுத்தியிருக்கிறார்கள். நவீன பிரெஞ்சு இலக்கியங்களை தமிழுக்குக் கொணர்ந்து பாரியதாக்கமொன்றை ஏற்படுத்திய ‘ஸ்ரீராமையும்’ அவருடைய ‘அந்நியனையும்’ என்றும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். குட்டி இளவரசனை மொழிபெயர்த்த மதனகல்யாணியின் உழைப்பும் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. இவர்களைத் தவிர புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி பேராசியர்கள்: ஆர் நடராஜனின் ‘புத்த ஜாதகக் கதைகள், கிருஷ்ணமூர்த்தியின் பிரெஞ்சுக்கதைகள், அண்மையில் வெளிவந்த வெங்கட சுப்ராய நாயகரின், ‘கலகம் செய்யும் இடது கை’, தனியல் ஜெயராஜின் ‘தோப்பாஸ்’ ; க.சச்சிதானந்தத்தின் பிரெஞ்சு பக்கங்கள்; வி. ராஜகோபாலனின் சார்த்த்ருவின் படைப்புகள்; நாகரத்தினம் கிருஷ்ணாவின் வணக்கம் துயரமே, காதலன், ஆகிய புனைவுகள்; உயிர்க்கொல்லி, போர் அறிவித்தாகிவிட்டது சிறுகதைதொகுப்புகள், மார்க்ஸின் கொடுங்கனவு ஆகியவை முக்கியமானவை.

நவீன தமிழ் இலக்கியம்:

நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை, புதுச்சேரி பின்புலத்தைக்கொண்ட பிரெஞ்சுத் தமிழர்களின் பங்கு பிரான்சுநாட்டில் குறைவென்றே சொல்லவேண்டும். இருபதாம் நூற்றாண்டு தமிழிலிருந்து ஒதுங்கியவர்கள்,அவர்கள். நிலா என்றதொரு சிற்றிதழைத் தொடங்கி, அதன் பசிக்கு என்னை இரையாக்க விரும்பாமல் தப்பிப் பிழைத்தேன். கலைச்செல்வன் மறைவிற்குப் பிறகும் மன உறுதியுடனும் அயராத உழைப்புடனும் உயிர் நிழல் இதழைத் தொடர்ந்து நடத்தும் சகோதரி லட்சுமியின் துணிச்சல் எனக்கில்லை. பிரான்சு நாட்டில் வெளிவந்த சிற்றிதழ்கள் உலகின் பிறவிடங்களில் நிகழ்ந்ததைப்போலவே  குழுமனப்பான்மையுடன், தங்கள் ‘இருத்தலை’ முன்னிறுத்தும்பொருட்டுத் தோன்றியவை. இலங்கை இந்தியக் குழுசார்ந்த பிரிவினைகள் இவ்விதழ்களிலும் எதிரொலித்தன. மிகக் காத்திரமான இலக்கிய படைப்புகளை முன்வைத்த அச்சிற்றிதழ்களில் மாற்றணியினரைக்குறித்த  ஏச்சுக்களும் பேச்சுகளுமிருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. சில இதழ்கள் அதற்காகவே தொடங்கப்பட்டதுபோன்ற எண்ணத்தையும் கட்டமைத்தன. சமர், அம்மா, பள்ளம், ஓசை, கண், தேடல், சிந்து, எக்சில், உயிர் நிழல், நண்பன், அசை, மௌனம், தாய் நிலம், தாயகம், மத்தாப்பு, கதலி, மத்தாப்பு, வடு, விழுது என பெரும் எண்ணிக்கையில் உயிர்ப்பதும் உயிர்த்தவேகத்தில் மரிப்பதுமாக அவை இருந்திருக்கின்றன. அரசியல், இலக்கியம், அரசியலும் இலக்கியமும் என்ற சூத்திரத்தைப் பின்பற்றிய இவ்விதழ்களில் அவரவர் கொள்கைசார்ந்து முடிபுகள் சார்ந்து  தாய் நாட்டின் பிரச்சினைகள், உள்ளூர் அரசியல், படைப்பிலக்கியம் குறித்த விமர்சனங்கள், விவாதங்களை வைத்தனர். எஸ். மனோகரனை ஆசிரியராகக்கொண்ட அம்மா; கலைச்செல்வனை ஆசிரியராகக்கொண்ட ‘எக்சில்’, ‘உயிர்நிழல்’; இடதுசாரி சிந்தனைகளை முன்வைத்த ‘சமர்’, கி.பி. அரவிந்தனை ஆசிரியாகக்கொண்ட ‘மௌனம்’ கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. இன்றும், பல நெருக்கடிகளுக்கிடையிலும் லட்சுமி உயிர் நிழலைத் தொடர்ந்து நடத்திவருகிறார் என அறிகிறேன்.

படைப்பிலக்கியத்தில் கவிதைகளைப் பொறுத்தவரை கி.பி. அரவிந்தன் முக்கியத்துவம் பெறுகிறார். அவர் எழுத்தில் இன்று சோர்வுகளிருப்பினும், கவிதைத் தொகுப்புகள் ஆவணப்படுத்த வேண்டியவை. போரின் அவலத்தையும் போர் ஓய்ந்தும் உலராத வடுக்களின் உபாதைகளையும் விம்மலும் வெடிப்புமாக வார்த்தைகளில் அநிச்சையாக உருமாற்றத் தெரிந்தவர். ‘ வயல்களுக்குத் தீ வைத்து வரப்பினில் தானிய மணிகளைப் பொறுக்கினான்” என் நெஞ்சத்தை இன்றும் முட்டும் வரிகள்.  ‘இனியொருவைகை’, ‘கனவின் மீதி’, ‘முகம்கொள்’ ஆகியவை அவரது கவிதைத் தொகுப்புகள். புனைவிலக்கியத்தில் சோபாசக்தி தனித்து நிற்கிறார். எதிராளிகூட அவரது மூர்க்கத்தின் நியாயத்தை ஏற்பான். எள்ளலும்,எழுத்தில் கடைபிடிக்கும் தான் தோன்றித்தனமான சுதந்திரமும், கலகக்குரலும், வேகமும் அவர் எழுத்தின் அடையாளங்கள்:  ‘கொரில்லா’,  ‘ம்’ ஆகிய புனைவுகளும்; எம்.ஜி.ஆர் கொலைவழக்கு, தேசத்துரோகி ஆகிய சிறுகதைதொகுப்புகளும் குறிப்பிடத்தகுந்தவை.

பிரெஞ்சிலும் தமிழிலும் எழுதிவருவதாகச்சொல்லப்படும் கலாமோகனின் படைப்புகளை வாசித்ததில்லை. ‘நிஷ்டை’, ‘ஜெயந்தீசன் கதைகள்’ என்று இரண்டு தொகுப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை தவிர ‘வீடும் வீதியும்’ என்ற நாடக நூலும், பிரெஞ்சு மொழியில் Et demain’ (நாளையும்) கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளனவாம். புதுச்சேரிக்கும் பிரான்சுக்குமான தொங்கல் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலேயே எனது புனைவுகளும் (நாகரத்தினம் கிருஷ்ணா) அமைந்துள்ளன: நீலக்கடல்’, ‘மாத்தாஹரி’, வரவிருக்கிற  ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ ஆகியவை நாவல்கள்; ‘நந்தகுமாரா நந்தகுமாரா’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’ சிறுகதை தொகுப்புகளில் முக்கியமானவை; பிரெஞ்சு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும்: பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன், எழுத்தின் தேடுதல்வேட்டை, சிமொன் தெ பொவ்வா ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் இருக்கின்றன. புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த அப்பாதுரை, வண்ணை தெய்வம், சிவரூபன், சரீஸ், வி.ரி. இளங்கோவன், ஆகியோர் பிரெஞ்சு தமிழிலக்கிய உலகில் உத்வேகத்துடன் செயல்படுகிறவர்கள் என அறிய வருகிறேன். மரபுக் கவிதையில் தோய்ந்த கம்பன் கழகத் தலைவர் கி.பாரதிதாசனையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம், எனது கவனத்திற்கு வந்தவைகளை இட்டிருக்கிறேன். கட்டுரையில் இடம்பெறாதவர்கள் உழைப்பைக் குறைத்து மதிப்பிட இல்லை. அயராத உழைப்பும் எழுத்தில் நேர்மையும் இருப்பின், காலம் நிச்சயம் அவர்களைக் கவனத்திற்கொள்ளும்.

நன்றி: பதிவுகள்

———————————

————————————————————

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s