இட்லரின் பிணம் -(தொடர்ச்சி)
5. ஏப்ரல் மாதம் 30ந்தேதி.
பங்க்கரிலிருந்த ஒரு அறையைக்கூட இட்லர் மறக்கவில்லையாம் ஒவ்வொரு அறையாக சென்று அங்கிருந்தவர்களிடம் நலன் விசாரித்தும் தைரியம் சொல்லியும் திரும்பியிருக்கிறார். ஒருவரும் அன்றிரவு உறங்கவில்லையாம். இட்லரின் மரணத்தை அறிவித்தபோது கோயபெல்ஸையும் அவரது மனைவியையும் தவிர்த்து உணவு விடுதியில் வெகு நேரம் மற்றவர்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பின்னர் கோயபெல்ஸின் மனைவி அமெரிக்கர்கள் நடத்திய விசாரனையின் போது, இடலரின் தீவிர அபிமானிகளாக இருந்தவர்கள் கொஞ்சங்கூட நாகரீகமின்றி அப்படி நடந்துகொண்டதை வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
ஹைன்ஸிடம் தமக்கு உறக்கம் வரவில்லையென சொல்லியிருக்கிறார். பின்னர் நிம்மதியாய் அனைவரும் உறங்கட்டும், என்றாராம். காலை ஆறுமணி அளவில் பொர்மானுடைய செயலாளரை அழைத்து தம்முடைய செல்லப்பிராணியான நாய் புளொந்திக்கு விஷம் கொடுத்து கொல்லுமாறு கட்டளையிட, அதை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
காலை சுமார் பத்துமணிக்கு ஹைன்ஸிடம் என்ன நிலமையில் நாடு இருக்கிறதென விசாரித்திருக்கிறார். ஹைன்ஸ் விசாரித்துவிட்டு, “வெள்ளம் தலைக்குமேல் வந்தாயிற்று, ரஷ்யர்கள் எந்த நேரமும் நம்மை கைதுசெய்ய இங்குவரலாம் என்று பதில் கூறியிருக்கிறார். இட்லர் தலையை ஆட்டி அப்படியா என்று கேட்டுக்கொண்டாராம். அங்கே அமர்ந்திருந்த ஆக்ஸ்மான் சட்டென்று எழுந்து, “என்னிடம் தீரமிக்க 200 இளைஞர்களும், ஒரு டாங்கியும் உள்ளது. விரும்பினால் நீங்கள் தப்புவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றிருக்கிறார்..
“வேண்டாம் அது தேவையற்ற வேலை. நான் இறக்க விரும்புகிறேன்”, என்று இடலரிடமிருந்து பதில் வருகிறது.
சம்பவத்திற்குப் பிறகு ரஷ்யாவில் பதினோறு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த ஹைன்ஸ் விடுதலைக்குப்பிறகு அவரது நண்பர்களிடத்தில், ” உங்களோடு எங்களையும் இறக்க அனுமதிக்கவேண்டுமென்று இட்லரிடம் கேட்டுக்கொண்டதாகவும், தடுத்த இட்லர், “நீங்கள் உயிர்வாழ்வது அவசியம், என்றேனும் ஒருநாள் இன்னுமொரு எஜமானர் ஜெர்மனுக்குத் திரும்பக்கூடும்”, எனப் பதிலிறுத்ததாகவும் கூறியிருந்தார்.
ட்ரோவர்- ரோப்பர் கூறியிருந்ததற்கு மாறாக இறந்த அன்று ·பூயுரெர், ஏவா பிரௌனுடன் மதிய உணவருந்தியதாக லேன்ழ் கூறுகிறார். உணவருந்திய பிறகு நெருங்கிய நண்பர்களிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தாராம். டாங்கியொன்றினால் கொல்லப்படவிருந்த போர்மன், தமது ஆறு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றபிறகு, தங்களையும் சாகடித்துக்கொண்ட கோயெபெல்ஸ் ஆகியோர் அந்த நெருங்கிய வட்டாரம். கோயெபெல்ஸிடம் மிகவும் மனம் திறந்து இட்லர் பேசியிருக்கிறார். தமது ஆடையிலிருந்த பொன்னாலான சிலுவையை நண்பரின் ஆடையில் குத்திவிட்டு நெகிழ்ந்திருக்கிறார். அடுத்ததாக லேன்ழிடம் வந்த இட்லர் 1935லிருந்து எனது நிழல்போல தொடர்ந்தவன், உன்னை மறக்க முடியுமா என்றாராம். ஏவா பிரௌனும் லேன்ழிடம் விடைபெற்றுக்கொண்டாராம். அவர், தமது சகோதரியைச் சந்திக்கநேர்ந்தால் அவளுடைய கணவரை என் கணவர் ஆணையின் பேரில் சுட நேர்ந்ததென்ற உண்மையை தெரிவிக்கவேண்டாமென்றும் அதனை சோவியத் ராணுவம் செய்ததாகச் தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். லேன்ழ் அவ்வாறே செய்வதாக கூறினார்.
பிறகு இட்லரும் அவரது புதிய மனைவியுமாக தங்கள் படுக்கை அறைக்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளின்படி இரு துப்பாக்கிகள் தோட்டாக்களிட்டு கொடுக்கப்பட்டன. “அதிகாலை 3.35க்கு வேட்டு சப்தம் கேட்டது, ஒரே ஒருமுறை. உடனே படுக்கை அரைக்குள் நுழைந்தேன். ·புயூரெர் இட்லர் திவானொன்றில் அமர்ந்திருந்தார். வலப்புறம் தலையில் சுட்டுக்கொண்டிருந்தார். எல்லோரும் சொல்வதுபோல வாயில் சுட்டுக்கொல்லவில்லை. கைத்துப்பாகிக் கீழே கிடந்தது. கீழே விரிப்பில் இரத்தம். அவரருகில் ஒரு சோபாவில் சற்று சாய்ந்து படுத்திருப்பதுபோன்ற நிலையில் ஏவா பிரௌன், அநேகமாக விஷம் குடித்து இறப்பதென்பது அவரது விருப்பமாக இருந்திருக்கவேண்டும்”, என்கிறார் லேன்ழ். அவரது கூற்றை வரி பிசகாமல் இறுதிக்காலத்தில் அங்கிருந்தவர்கள் உறுதிபடுத்துகிறார்கள். இட்லரும் அவரது புது மனைவியும் இறந்திருப்பதை நேரில் பார்த்த சாட்சியங்கள்: பொர்மான், கோயெபெல்ஸ், லேன்ழ், கென்ஷ், ஆக்ஸ்மான் ஆகியோர். பின்னர் இச்சம்பவத்தின் சாட்சியாக இருந்தவர்களில் பொர்மான் மற்றும் கோயெபெல்ஸ் தலையெழுத்தை அறிவோம். ஆக இட்லரின் இறப்பு பற்றிய மர்மப்புனைவுகளுக்கு எஞ்சிய மூவர்தான் பொறுப்பாகிறார்கள். அவர்களைத் தவிர வேறு சாட்சியங்களில்லை. ஆக தற்கொலை செய்துகொண்ட இரு உடல்கள் அந்த அரையிலிருந்தன. அடுத்து செய்யவேண்டியதென்ன. ரஷ்யர்களின் கைக்கு உடல்கள்போகக்கூடாது என்பது இட்லரின் கடைசி விருப்பம். அதனை நிறைவேற்றியாகவேண்டும். இரு உடல்களையும் எரிக்க போதுமான மண்ணெண்னெய் வேண்டும். 30ந்தேதி காலையிலேயே தேவையான எண்ணைக்காக முன்னேற்பாட்டுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். இட்லரின் மெய்க்காவலர் கெனெஷ் போர்மனிடம், “இரு உடல்களை எரிக்கவேண்டிய வேலை தம்மிடம் ஒப்படைக்கபட்டதாக” , தெரிவித்திருக்கிறார். தொலைபேசியில் இட்லரின் வாகன ஓட்டியான எரிக் கெம்கா என்பவரை அவர் அழைத்து அப்பணியை ஒப்படைத்திருக்கிறார்.
மெய்க்காவலரின் தொலைபேசி வேண்டுகோளுக்கிணங்க 200 லிட்டர் மண்ணெண்னெயுடன் இட்லரின் வாகன ஓட்டி வந்த போது பிற்பகல் ஆரம்பம். பிறகுதான் இறந்திருப்பது தம் எஜமானரும் அவரது புதிய மனைவியும் என்கிற உண்மையும் அவருக்குத் தெரியவருகிறது. நண்பர்கள் அனைவருமாக சேர்ந்து இரு உடல்களையும் துணியிற்சுற்றி பங்கருக்கு வெளியிலிருந்த தோட்டத்தை அடைந்தபொழுது பெர்லின் குண்டுமழையில் நனைந்துகொண்டிருக்கிறது. மிக மோசமான தாக்குதலுக்கு பெர்லின் உள்ளாகியிருந்தது. பங்க்கரில் அதன்பாதிப்புகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்தன. வாயிலுக்கு மிக அருகிலேயே கிடைத்த இடத்தில் உடல்களிரண்டையும் கிடத்தி எண்ணெயை ஊற்றி தீ வைக்கிறார்கள். இட்லர், ஏவா பிரௌன் உடல்களிரண்டும் கொழுந்துவிட்டு எரிந்தபோது, நாம் கூறியிருந்த ஆறுபேரைத்தவிர வேறு சிலரும் சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இட்லரின் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள். எரிந்த தீ அடங்கியவுடன் பெரிதாய் எதுவும் உடல்களில் எதுவும் எஞ்சவில்லையென்கிறவர்கள் இவர்களில் உண்டு. லேன்ழ் மீண்டும் இட்லரின் அறைக்குத் திரும்பியிருக்கிறார். எஞ்சியிருந்த இட்லரின் ராணுவ உடைகள், ஏவா பிரௌனின் ஆடைகள் பிறகு தடயமென்று சந்தேகிக்கப்பட்டவை அனைத்தையும் மேலே கொண்டுவந்து எரித்திருக்கிறார்கள். லேன்ழ் உடல்கள் எரிந்ததுபோதாதென்று நினைக்கிறார், இட்லரின் தலை எரிந்திருக்கிறதே தவிர உடலின் பிறபாகங்கள் முழுமையாக எதிர்பார்த்த அளவு எரிக்கப்படவில்லை. Gleitcommando என்கிற படைபிரிவில் ஆறுபேரை அழைத்து இரு உடல்களையும் குண்டுகள் விழுந்துள்ள பள்ளத்தில் ஏதேனும் ஒன்றில் புதைத்துவிடுமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறார். லேன்ழ் வார்த்தைகளை நம்புவதெனில் இட்லர் உடல்களுக்கு நேர்ந்த இந்த இறுதி தலைவிதியை அவர் நேரில் பார்த்தவரல்ல. அவர் மட்டுமல்ல இறுதியாக இட்லரின் பிணத்தைப்பார்த்த ஆறு பேரில் ஒருவர்கூட இட்லர் உடலையும், ஏவா உடலையும் புதைத்தபோது இருக்கவில்லை.
6. 1946 ஆண்டுவாக்கில் இச்சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள்; கெனெஷ் கூற்றின்படி எஞ்சியிருந்த எலும்புகளை ஒரு பெட்டியில்வைத்து சோவியத் வீரர்களின் கண்களிலிருந்து தப்பிக்க புதைக்கப்ட்டதாக கூறினார். இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்ட ட் ரோவர் – ரோப்பெர்¢ கருத்துகூற மறுத்துவிட்டார். இடல்ரின் பாதுகாப்பு படையைசேர்ந்தவர்களின் சாட்சியங்களை பதிவு செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். அன்றையதினம் தொடர்ந்து குண்டுதாக்குதல் நிகழ்ந்ததாகவும் எரித்த உடல்களை புதைப்பதற்கென தேடியபோது மாயமாய் மறைந்துவிட்டன எனவும் அச்சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவு சோவியத் படைகள் பங்க்கருக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள். ஹாரி மங்கெர்ஹௌசென் (Harri Mangerhaussen) என்கிற காவலர் ஒருவரை கைது செய்கிறார்கள். பத்து நாள் விசாரணை. இட்லரோடு தமக்கு எவ்விதத் தொடர்புமில்லையென அவர் மறுக்கிறார். கடைசியில் அவன் தான் கென்ஷ் வாக்குமூலத்தின்படி இட்லர் மற்றும் ஏவா உடலை புதைத்தவனென தெரிய வருகிறது. அவனை அழைத்துக்கொண்டு புதைத்த இடத்தில் தோண்டினார்கள் ஆனால் உடல்களிரண்டும் கிடைக்கவில்லை.
மேமாத இறுதியில் ஹாரி மங்கெர்ஹௌசென் சோவியத் காவலர்கள் சிறையிலிருந்து விடுவித்து வாகனமொன்றில் ஏற்றிக்கொண்டு பெர்லினுக்கு வெளியே பின்லோ (Finlow) காட்டுபகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு மரத்தலான ஒரு பெட்டியைத் திறந்து அதில் கரிக்கட்டையாகக்கிடந்த மூன்று உடல்களைக் காட்டி அடையாளம் தெரிகிரதா என்றார்கள். பார்க்கும் நிலையில் அங்கு உடல்களில்லை. இருந்தாலும் ஹாரி மங்கெர்ஹௌசென் அவ்வுடல்கள் கோயெபெல்ஸ், அவரது மனவி மக்தா கொயெபெல்ஸ், மற்றும் இட்லருக்குச் சொந்தமானவை என அடையாளப்படுத்துகிறார். மீண்டும் அவரை சிறையில் அடைக்கிறார்கள். பிறகு அவரையிம் சோவியத்திற்குக்கொண்டு சென்று 11 ஆண்டுகள் சிறையில் வைக்கின்றனர். விடுதலைபெற்று அவரால் அறியவந்தவைதான் மேற்கண்ட தகவல்கள். தகவலை நம்புவதா வேண்டாமா என்கிற சந்தேகம் வருகிறது. கடைசியாக அவ்வுடல்களை ரஷ்யர்களுக்கு அவர் அடையாளம் காட்டியதாகவும், உடல்கள் ரஷ்யர்கள் வசமே இருக்கவேண்டுமென்று அவர் சத்தியம் செய்கிறார். இதை வலுப்படுத்த அவரைத் தவிர வேறு சாட்சியங்களில்லை. காரணம் ஸ்டாலின், ஜூர்க்கோவ் போன்றவர்கள் ஹிட்லரின் எஞ்சிய உடலை காணவில்லையென பத்திரிகையாளர்களுக்கு பேட்டிகொடுத்தவர்கள்.
ஆனால் ஹாரி மங்கெர்ஹௌசென் கூற்றை ஏற்கத்தான் வேண்டுமென்று சிலர் சொல்கிறார்கள். காரணம் 1946ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி சோவியத் நிர்வாகம் பிரெஞ்சு அரசாங்கத்தை ஒருமுக்கிய சம்பவத்தின் சாட்சியாக இருக்க மிக நம்பிக்கைக்குரிய ஒரு பிரதிநிதியை தங்கள் வசமிருக்கும் ஜெர்மனுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கிறார்கள். அவர்களும் ஹாரி ரத்னௌ (Henri Rathnau) என்பவரை அனுப்பிவைக்கிறார்கள். ஹார் ரத்னௌவை பிரெஞ்சு அரசாங்கம் அனுப்பிவைத்தது தற்செயலாக நிகழ்ந்ததல்ல. அவரது பூர்வீகம் ஜெர்மன். இனவெறியினரால் தமது எதிர்காலம் பாதிக்கப்படலாமென்று கருதி பிரான்சுநாட்டுக்கு தமது மனவியுடன் வந்தவர் குடியுரிமைபெற்று நிரந்தரமாகவே தங்கிவிட்டார். சோவியத் யூனியன் அழைப்பின்பேரில் அவர்கள் வசமிருந்த ஜெர்மனுக்குசென்ற ஹாரி ரத்னௌ அப்படியென்ன கண்டார்.
7 1946ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி நடந்ததென்ன?
கொடுத்திருந்த கெடுவின்படி சரியாக பகல் 12.30க்கு இட்லர் பதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட Chancellery என்ற ஜெர்மன் சோஷலிஸ நிர்வாகத்தின் தலைமை கேந்திரமியங்கிய இடத்திற்கு ஹாரி ரத்னௌ வந்திருந்தார். இவரை எதிர்பார்த்து சோவியத் ராணுவ அதிகாரி ஸ்ட்ராகோவ் (Stragov). அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பிரதிநிதிகளும் வருவார் என்கிறார் ஸ்ட்ராகோவ். அவர்கள் வர தாமத மாகிறது. பொறுமை இழந்தவர்களாக இவர்கள் மட்டும் பணியைக் கவனிப்பதென புறப்பட்டார்கள். பிறபகல் 1.15 மணிக்கு ஆரம்பமாயிற்று. அதிகாரிகளுடன் லூக் என்கிற இட்லரின் முன்னாள் காவலர், பிறகு இட்லரின் பல் மருத்துவர் இருவரும் இருந்தனர். மூன்றே கால் மணி அளவில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு பள்ளத்தை தோண்டியிருந்தார்கள், தோண்டிய இடத்தில் முதலில் ஒரு உடல் மிகவும் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மெண்மணியின் உடலென்பதில் அவர்களுக்குச் சந்தேகமில்லை. இரண்டாவது உடலைப் பரிசோதித்த சோவியத் மருத்துவர்கள் ஓர் ஆணுடல் என்கிறார்கள். பின்னர் இரு உடல்களையும் இடலர் மற்றும் ஏவா பிரௌன் உடல்களென முடிவுக்கு வருகிறார்கள். இச்செய்தியை Paris -Match என்கிற பிரெஞ்சு இதழுக்கு அளித்த பேட்டியில் ஹாரி ரத்னௌ பின்னர் தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த உண்மையை 1964வ் ஆண்டுவரை வெளி உலகிற்கு சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவிரும்பவில்லை. குறிப்பாக ஹாரி ரத்னௌ சோவ்யத் அரசாங்கத்தின் விருப்பத்தின் காரணமாக வாயடைத்திருந்தாலும், பிரான்சும் இந்த விடயத்தில் மௌனம் சாதித்திருந்தது அதிசயம். ரஷ்யர்களின் இசைவின்றி அமெரிக்காவும் பிரிட்டனும் இட்லர் பற்றிய விசாரணையை தொடங்கிய நிலையில் ரஷ்யா தன் இருத்தலையும் மரியாதையையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. தங்களிடமிருந்த முடிச்சுகளை அத்தனை சுலபமாக அவிழ்க்க அவர்கள் தயாரில்லை. தவிர இட்லரின் உடலை அடையாளப்படுத்துவதில் சிக்கல்களிருந்திருந்தன. இட்லரின் பல் சிகிச்சை சம்பந்தமான ஆவணங்கள் அவர்களுக்குத் தேவைபட்டன. அச்சிகிச்சைத் தொடர்பானவர்களிடமிருந்து உருதிப்பாடான தகவல்கள் தேவையிருந்த காரணத்தாலும், ரஷ்யர்கள் இட்லரின் உடலை உறுதிப்படுத்த தயங்கியிருக்கிறார்கள்.
ஜூன்மாதம் 9ந்தேதி ஜூக்கோவ் இட்லரின் உடலை அடையாளப்படுத்த முடியவில்லை என்கிறார். ஜூலை 16ந்தேதி போட்சாமில் (Potsam) ஸ்டாலின், இட்லர் அர்ஜெண்ட்டைனாவிலோ ஸ்பெயினிலோ உயிரோடு இருக்கலாமென்கிறார், ஆனால் 1946ம் ஆண்டு 17ந்தேதி அவர்கள் ரத்னௌ என்கிற பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரதிநிதி முன்னால் இட்லர் உடலை உறுதிபடுத்த முனைகிறார்கள். சோவியத் யூனியனுக்குள்ள சங்கடத்தை சோவியத் வசமிருந்த ஜெர்மனை நிர்வகித்துவந்த ரஷ்ய படைத் தலைவர் மூலம் தெளிவாகவே புரிந்துகொள்கிறோம். இட்லர் பதுங்கியிருந்த பாதாள கோட்டம் வீழ்ந்ததென்று அறியவந்தவுடன் உடனடியாக அவ்வ்விடத்திற்கு ரஷ்ய படைத் தளபதி இவான் க்ளிமான்க்கோ (Ivan Klimenko) படையுடன் வந்திருக்கிறார். இட்லர் இல்லை. மிகக்கவனமாக தேடியிருக்கிறார்கள். அங்கிருந்த பலரை கைதும் செய்கின்றனர் ஆனால் இட்லரோ கோயபெல்ஸோ என்ன ஆனார்களென தெரியவில்லை. “பிறகு கூடம் வாசலென்று வந்து நிற்கிறார்கள். பங்க்கருக்கு வெகு அருகில் கோயெபெள்ஸ் அவருடைய மனைவி ஆகியோரின் இரு உடல்களும் கிடைக்கின்றன. மே.2 மற்றும் 3 தேதிகளில் க்ளிமான்க்கோ கைதிகளிடம் விசாரணை நடத்துகிறார். ஒரு கைதி மூலம் முதல் நாள் திருமணம் செய்துகொண்ட மனைவி ஏவாவுடன் இட்லர் தற்கொலை செய்துகொண்ட செய்தி கிடைக்கிறது. அக்கைதியே கொயெபெல்ஸ் அவரது மனைவி , பிள்ளைகள் உடல்களையும் அடையாளம் காட்டுகிறார். தோட்டத்திற்குக் கைதியைக் கொண்டுவந்த இடத்தில் அங்கிருந்த பல பிணங்களுக்கிடையில் இட்லரை வெகுசுலபமாக சுட்டிக்காட்ட முடிகிறது. உடலை உள்ளே கொண்டுவந்தபார்த்தபோது இட்லர் உடலல்லவென்று அவர்களுக்கு புரிந்தது. காரணம் கொண்டுவந்த உடலின் மீசை நரைக்காமலிருந்தது. தேடுதல் வேட்டை தொடர்ந்தது கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு ஓரிடத்தில் இடிபாடுகளுக்கிடையில் இட்லர், ஏவா பிரௌன், சற்று தள்ளி இரண்டு நாய்களின் உடலையும் கண்டெடுத்ததாக முடிக்கிறார் க்ளிமான்க்கோ.
இவருடைய அறிக்கையோடு ஹாரி மங்கெர்ஹௌசென் கூற்றையும் சேர்த்தால் புதிர் அவிழ்ந்துவிடும். இவ்வளவு உண்மைகளையும் ஸ்டாலின் தொடக்கத்தில் மறைத்து அவர் உயிரோடிருக்கிறார் என அறிவித்தது ஏன்? உயிரோடு இருக்கிற விலங்கை வேட்டையாடுகிறேனென்றால் உலகம் நம்பும். ஆம் அவருக்கு எஞ்சியிருக்கிற நாஜிகளின் வேரை அறுத்தெடுக்க இட்லர் உயிரோடிருக்கிறார் என்கிற பொய் உதவிற்று. தவிர அமெரிக்காவும் பிரிட்டனும் மாத்திரம் நாஜிகள் விஷயத்தில் தலையிட்டால் எப்படி? அவர்களின் முடிவில் தமக்கு உடன்பாடில்லை என்பதை வெளி உலகிற்கு உணர்த்தவும் இட்லர் பற்றிய மர்மம் சோவியத் நிர்வாகத்திற்குத் தேவைபட்டது.
————————–
Like this:
Like ஏற்றப்படுகின்றது...