எஸ் ராமகிருஷ்ணன்:
வழங்கும் இலக்கிய தொடர் பேருரைகள் நவம்பர் 21லிருந்து 27 தேதிவரை ஒரு வாரகாலம் தினமும் மாலை 6 மணிக்கு ஆழ்வார் பேட்டையிலுள்ள ரஷ்ய அறிவியல் மற்றிம் கலாச்சார மையத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திங்கள் தொடங்கி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைவரை நாளுக்கொன்றென ஏழு இலக்கிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறார். நண்பர் எஸ்.ரா. நிகழ்த்தும் இவ்வுரைகள் ஏற்பாட்டாளர்கள் சொல்வதுபோல இளம்வாசகர்கள், கல்விப்புலம் சார்ந்து இலக்கியம் பயில்வோரன்றி இலக்கியத்தில் ஈடுபாடுகொண்டோர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடியது. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற சொற்பொழிவுகளை அடிக்கடி நிகழ்த்துகின்றனர். தமிழ் இலக்கியத்தில் நவீன இலக்கியத்தினை முன் வைத்து தொடர் சொற்பொழிவுகள் இதற்கு முன்பு நடந்திருக்கிறதாவென்று தெரியாது. நண்பர் எஸ்.ரா.விற்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் தமிழ் படைப்புலகு கடமைப்பட்டிருக்கிறது.
நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் தளத்தில் அவரது மகளின் திருமண விழா படங்கள். காணக் கண்கொள்ளா காட்சி. பார்த்து மகிழ்ந்தேன். திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர் ஜெயமோகனின் வர்ணனையை வாசித்தால் திருமணத்தில் கலந்துகொண்ட அனுபவத்திற்கு உள்ளாவோம். அவருக்கே உரிய நடையில் மிக ழகாக நிகழ்ச்சியைச் சித்தரித்திருக்கிறார். புதுச்சேரியில் இருந்திருந்தால் நாஞ்சிலார் அழைக்காவிட்டாலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பேன். மணமக்களை வாழ்த்த அல்ல, வாழ்த்த அவருக்கு ஏராளமான உறவினர்களும் நண்பர்களும் அவர்களுக்குக்கிடைப்பார்கள். அவர் தயவில் நல்ல நாஞ்சில் நாட்டு சமையலை ஒரு பிடி பிடித்திருக்கலாம்.
வித்தியாசமான புத்தகவிழா
வருடம் தோறும் நவம்பர் மாதத்தில் 17-19 தேதிகளில் ஒரு வித்தியாசமான புத்தகவிழா ஒன்றை பிரான்சு நாட்டில் கொண்டாடுவார்கள். படைப்பிலக்கியத்தில் வாசகனை நகைப்பில் ஆழ்த்துகிற சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற பகுதிகளை உரத்து வாசிப்பதென்பது நிகழ்ச்சியின் கருப்பொருள். இம்மையக்கருத்துக்கு உகந்தவை என்பது உடல்மொழியால் சொல்லகூடியவையாக இருத்தல்வேண்டும். படைப்பிலக்கிய பொது மரபிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டதாக இருக்கவேண்டும். தனது வாசகனை மகிழ்விக்கவும் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கும் வல்லமை அவ்வெழுத்துக்களுக்கு இருக்கவேண்டும். கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் எனது சொந்தத் தொழில் சம்பந்தமாக பாரீஸ¤க்குச் சென்றவன் பாரீஸ் சொர்போன் பலகலைகழகத்தின் கலை பண்பாட்டுத்துறை சேவை ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் நிகழ்ச்சியில், 19ந்தேதி நிகழ்ச்சியில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பியர் ழூர்து(Pierre Jourde) என்ற எழுத்தாளர் வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்திருந்ததாகக் கூறினார்கள். நன்கு அறியப்பட்ட மற்றும் அறியப்படாத எழுத்தாளர்களென இரு தரப்பினரின் படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. வாசிக்கப்பட்டவைகளில் அல்போன்ஸ் அல்லேஸ், மிகெல் தெ செவாந்த், இடாலோ கல்வினோ, டனியல் பென்ஸெக் போன்ற எழுத்தாள்ர்களின் பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. வாசித்த இருவரும் ஏற்கனவே, குறுந்தகடுகளில் ஒலிவடிவம் பெற்ற படைப்புகளுக்குக் குரல் கொடுத்தவர்கள். முன் வரிசையில் னric Chevillard. எதையும் நையாண்டிசெய்தே பபழக்கப்பட்டவர் Anti -novelist வகையறா என்கிறார்கள் (எனக்கு Anti -novel, New Roman, Modern novel, Post modern novel -விவாதத்திகுரியவை அனைத்துமே பழைய மொந்தையல்ல என்கிறார்கள்) இது பற்றி ஒரு தொடரை எழுதவேண்டும்.
தற்போதைய தமிழ் படைப்புகளில் நகைச்சுவை தேடவேண்டியிருக்கிறது. நகைசுவையாக எழுதுவதற்கு தனி ஆற்றல் வேண்டும். கல்கி எழுத்துக்களை நான் விரும்பிவாசிக்க நேர்ந்தது நகைச்சுவக்காகவே. கலைமணியின் எழுத்துகளில் தில்லானா மோகனாம்பாள், ராவ் பகதூர் சிங்காரம் இன்றளவும் எனக்கு தமிழில் விரும்பி வாசித்தவை. கடுகு என்கிற அகஸ்தியன், தேவன், துமிலன் போன்றோர் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். பாக்கியம் ராமசாமியைக்கூட கொண்டாடடலாம். அவரது அப்புசாமியும் சீதாபாட்டியும் சில கணங்கள் மகிச்சியாக வைத்திருக்க உதவுபவை. புதுமைபித்தன் சிறுகதைகளில் சமூகத்தையும் நடைமுறை வாழ்க்கையையும் போகிறபோக்கில் ஏளனம் செய்து நம்மைக் கடந்து செல்வார். நாம்தான் ஓடிச்சென்று அவரை பிடிக்கவேண்டும்.
Les neiges du Kilimanjaro (The snow of Kilimanjaro):
எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் இச்சிறுகதையை (http://xroads.virginia.edu/~drbr/heming.html) நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். ஆப்ரிக்காவுக்கு தமது மனைவியுடன் சபாரிக்கு வந்த இடத்தில் வலது காலில் முள்குத்தி புரையோடிப்போக படுக்கையில் கிடக்கும் எழுத்தாளன் தமது கடந்தகால நினைவுகளில் மூழ்கிறான். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமென்று நம்மவர்கள் சொல்வார்கள். அறுபது வயதுக்குமேல் அமர்நாத் பனிலிங்க தரிசினத்திற்குச்செல்கிறவர்கள் தங்கள் கடந்தகாலத்தை அசைபோட்டுபார்ப்பார்களாவென்று தெரியவில்லை. எழுத்தாளனுக்குள்ள சாபக்கேடு எல்லாவற்றையும் கேள்விக்குடுப்படுத்துவது? இங்கே கூடாரத்தில் கால் கட்டுடன் இருக்கும் எழுத்தாளன் முன்னே அவனுடைய பழைய உன்னதமான நினைவுகளைக் கிளறும் வகையில் பனிமூடிய கிளிமாஞ்சாரோ, நெருங்கும் அவனது மரணத்தை ஞாபகப்படுத்த வெளியே வட்டமிடும் கழுகுகள். தன்னைத்தானே சபித்துக்கொள்கிறான். கங்குல்போல அவனுள் உறையும் பழைய நினைவுகள், பின்னோக்கி அழைக்கின்றன. எழுத்தில் கனியிருப்ப காயைமுன்னிருத்தியதற்காக வருந்துகிறான். ‘அரசியல், பெண்கள்,மது, பணம், கனவுகள்’ என்ற சுழலில் திக்கித் தவிக்கும் எழுத்தாளர்களின் ஒருவராக இக்கதையில் ஹெமிங்வே தம்மை அடையாளப்படுத்திக்கொள்வார். இச்சிறுகதை 1952ல் கிரிகிரிபெக்கும் ஏவா கார்டனரும் நடித்து திரைக்கு வந்திருக்கிறது. இப்போது இணைய தளங்களில் பார்க்ககிடைக்கிறது. கதையை சிதைக்காமல் படமாக்கிருக்கிறார்கள். கிரிகிரி பெக்கும் ஏவா கார்டனரும் நல்ல இளமைக் காலத்தில் இருந்தபோது எடுத்தபடம். இருவரும் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சிறுகதை தொடங்குவதுபோலவே திரைப்படமும் தொடங்குகிறது. பிற்காலத்தில் ஒரு பூர்ஷ்வாவாக மாறிபோன குற்றவுணர்வு ஹெமிங்வேக்கு இருந்திருக்கவேண்டும் இக்கதையில் அதற்கு கூடுதலாகவே வருந்துகிறார். இதேபெயரில் தற்பொழுது ஒரு பிரெஞ்சுப்படம் வந்துள்ளது. இப்படத்தில் கணவனும் மனைவியும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் தங்கள் வாழ்க்கையைக்குறித்து அலுத்துகொள்கிறார்கள். முதல் படத்திற்கும் இப்படத்திற்குமுள்ள பந்தம் அத்துடன் முடிந்தது. முதல் படத்தைபோன்றே கணவனும் மனைவியும் விஸ்கியை உறிஞ்சுகொண்டு தங்கள் நடந்துகொண்டது சரியா, தங்கள் வாழ்ந்தவிதம் சரியா என்று உரையாடுவதோடு சரி இவ்விரண்டு படங்களுக்கும் வேறு பந்தங்களில்லை. இங்கே கணவனும் மனைவியும் ஒரு கடற்கரை நகரில் படகு, கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளர்கள். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடியில் வேலை நீக்கம் செய்யப்படுகிறார்கள். தொழிற்சங்கத்தில் கனவனும் மனைவியும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள், தாங்கள் வேலை நீக்கம் செய்யப்பட்ட போதிலும் தங்கள் நண்பர்கள் உறவினர்களைக் காப்பாற்றி வேறு சிலரை வேலை நீக்கம் செய்ய காரணமாகிறார்கள். இவர்களுக்கு கிடைத்த பணத்தில் கிளிமாஞ்சாரோ செல்லலாமென்ற கனவு, இவர்கள் தந்திரத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களின் தாக்குதல்களால் முடிவுக்கு வருகிறது. இளைஞர்கள் இருவரையும் காவல்துறையிடம் காட்டிக்கொடுத்துவிட்டு பின்னர் தங்கள் செய்கைக்காக வருந்துகின்றனர். ஆனால் அவசியம் பார்க்க வேண்டியது The snow of Kilimanjaro (1952) திரைப்படம்.
—————————————
பிங்குபாக்: எர்னெஸ்ட் ஹெமிங்வே: புகழ்பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் | அகரம்