Monthly Archives: ஒக்ரோபர் 2011

இரவு- அகத்திணை – எமிலிஜோலா

‘J’aime la nuit avec passion’  ‘இரவு’ சிறுகதையில் கி மாப்பசான் -வாக்கியம். இரவை ஆராதிக்க இத்தனை பொருத்தமாக சொற்கள் அமையாது. இரவுவேளைகளில் ஆணோ பெண்ணோ மற்றவருக்காக காத்திருக்கின்ற தவிப்பும் மெல்லியப் பதற்றமும் விநோதமான உடல்மொழி. மாப்பசான் போலவே ஆர்வத்துடன் இரவைவெகுவாக நேசித்திருக்கிறேன், காத்திருந்திருக்கிறேன். திருமண வீட்டிற்குப் போன இடத்தில் இரண்டுநாள் பழக்கத்தில் ஒரு பெண்ணிடம் வைத்த கெஞ்சுதலுக்கு, அவள் தலையாட்டலையும், சமிக்கைகளையும் புரிந்துகொண்டதற்கு இலட்சணமாய் எனது சகோதரி வீட்டு, மோட்டர் ஷெட்டினைத் திறந்துவைத்துக்கொண்டு விடிய விடியகாத்திருந்ததும், நீர் இறைக்க அதிகாலையில், எந்திரத்தை இயக்கவந்த ஆசாமி கதவை திறந்துக்கிடப்பதைப் பார்த்து, நீர் இறைக்கும் எந்திரத்தை திருட வந்தவனென்று தப்பாக எண்ணி சத்தம்போட அவனைத் தடுத்து சமாதனப்படுத்த வேண்டியிருந்தது. பெண்ணிடம் என்ன நடந்ததென காலையில் விசாரித்தால், ‘உங்களை வெகு நேரம் தேடிபார்த்துட்டு நீங்கள் இல்லைண்ணு தெரிஞ்சதும் கொண்டுபோயிட்டேன், என்றாள். என்ன சொல்கிறாளென யோசித்துக்கொண்டிருக்க, உள்ளே சென்றவள் திரும்பவும் வந்தாள், பத்திரப்படுத்தி வைத்திருந்ததாகக்கூறி ‘ஒரு லட்டையும் இரண்டு மைசூர்பாகையும்’ கொண்டுவந்தாள். இனிப்பைக்கொடுத்து என்னை ஏளனம் செய்த இரவை இன்னமும் மறக்கவில்லை. மிக பொல்லாத இரவு அது.

இதே அனுபவம் முத்தொள்ளாயிர அப்பாவிக்கும் நேர்ந்திருக்கிறது இரவில் வருவதாகச் சொல்லியிருக்கிறான் தலைவன். அவ்வாறே பாவிப்பயல் வந்துமிருக்கிறான். வீட்டு நாய் குரைத்ததோ, அடைகாத்த கோழி இறக்கைகட்டி பறந்ததோ, ஏதோ நடந்தது. தலைவியும், தலைவி என்றொருத்தி உண்டென்றால் தோழியும் வேண்டுமில்லையா அவளுமாக அவன் வருகையை உணர மறந்திருக்கிறார்கள். மறுநாள் வந்த தலைவன் காத்திருந்து ஏமாற்றம் அடைந்ததைக்கூறி வருந்தியிருக்கிறான். தோழியும், “இங்கே பாரு எங்க தரப்பிலும் அதுதான் நடந்தது. ஊரே உறங்கியிருந்தது, உனக்காக இரவெல்லாம் காத்திருந்தோம். எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் ஏழில் குன்றத்தின் மேல் உள்ள நொச்சியின் அழகு மிகுந்த மெல்லிய கிளைகள் உதிர்க்கும் பூக்கள் விழும் ஓசையையும் நன்றாகக் கேட்டு உறங்காமலிருந்தோமே, நீதான் வரவில்லை வீணாக எங்கள்மேலே பழிசொல்லாதே”, என்றாளாம். “கொன் ஊர்துஞ்சினும் யாம் துஞ் சலமே” என ஆரம்பிக்கிறது அக்குறுந்தொகை பாடல். பகற்பொழுதுகளில் வாய்கிழிய சாதிபேசும் நாட்டாமைகள், பின்னிரவில் சாதிமறந்த உடலின் எதார்த்தம் சார்ந்த தேவைக்கு  பனியில் நனைவார்கள், அவை சாதி இரண்டொழிய வேறில்லையென சாதிக்கும் இரவுகள்.

பேய் பிசாசுகளுக்கிடையிலும் இளைஞர்களுக்கென்றால் மோகினிப் பிசாசுவை இரவு சிபாரிசு செய்கிறது, ஆக இரவு துர்த்தேவதைகளுக்கானதல்ல என்பது வாலிபம் தந்த அனுபவம். இளமைகாலத்து  கிராமத்து இரவு ஒரு தேனடைபோல மனதிற் ஒட்டிக்கிடக்கிறது. திருமணக் காலங்களில் மணப்பெண் ஊர்வலமாகட்டும்,  திருவிழாக்காலங்களில் சுவாமி வீதி உலாவரும் நேரமாகட்டும், இருள் வெருட்டும் ஆகாச வாணமும்; முன்னூரும் தீப்பந்தமும், பெட்ரோமாக்ஸ் ஒளி வில்லைகளும்; உறக்கத்தை கலைக்கும் தவிலின் டமடமாவும் நாதசுவரத்தின் மல்லாரியும் பகலுக்கு வாய்க்காத ஒன்று. தீபாரதனைக்காக சுவாமி நிற்கிறபோது தீப்பந்த ஒளியில் கன்னமும் கண்களும் மினுங்க தெருவாசலில் இரவு பூத்ததுபோல நிற்கிற பெண்கள் தேவதைகள்! நாதஸ்வரம் வாசிக்கும் உள்ளூர் இளைஞன் எங்கள் விருப்பத்தை ‘ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே’ என பூர்த்திசெய்வான். இளமை வேகத்தில் எழுதிப் பகிர்ந்துகொண்ட வரிகள் இன்றும் நினைவில் அசைபோடுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் கழியும்/ உறக்கம் பதுக்கி, உறவில் பதுங்கி இரவை விலக்கி எழுந்து வருவாய்/ ஒவ்வோர் அடியிலும் உனக்குள் அச்சம்/ காரணம் அறிவேன்/ நீ கால்களைப் பதிப்பது என் கண்களில் அல்லவா?… ஓ! எத்தனை ரம்மியமான இரவுகள் அவை!

எமிலி ஜோலாவின் ‘காதல் இரவொன்றிர்க்காக'(Pour une nuit d’amour)  என்ற நெடுங்கதை இரவின் மௌனத்தையும், தாபத்தையும், ஏமாற்றத்தையும், இருட்டோடுகூடிய காதல் வெக்கையுடன் விவரிக்கிறது.

P**** என்றொரு சிற்றூர், ஊருக்குள் நுழைய ஷான்கிளேர் என்ற சிற்றோடைமீது அமைந்த பாலத்தைக் கடந்துசெல்லவேண்டும். உள்ளூர் முதிய ஆசாமிகளுக்குப் பாலமே கதைபேசுமிடம். பாலத்தைத் தாண்டினால் ‘போ-சொலெய்’ வீதி. வீதியின் முடிவில், மிகப்பெரிய சதுக்கம். உறக்கத்திலிருப்பதுபோல குடியிருப்புகள். தோட்டக்கலைஞர் ஒருவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியில், மிகப்பெரிய அறையில் நமது கதைநாயகன் ஜூலியன் வாடகைக்குக் குடியிருக்கிறான் அல்லது  அடைந்துகிடக்கிறான். வயது 25. பெற்றோரை இளம்வயதிலேயே பறிகொடுத்திருந்த ஜூலியனுக்கு அஞ்சல் அலுவலகத்தில் ஊழியம்.  ஊதியம் சுமார் என்கிறபோதும், சிக்கன பேர்வழி. எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகளுமில்லை கனவுகளுமில்லை. நெடு நெடுவென்று நல்ல உயரம், எலும்புகள் துருத்திக்கொண்டு பார்க்க முரடன்போல தெரிவான் ஆனால் ரொம்ப ரொம்ப சாது. கதாநாயக இலட்சனங்களின்றி இருப்பது அவனுக்குப் பெருங்குறை. பெண்கள் தன்னைச் சீந்தமாட்டார்களென்று நம்பியதால் அவர்களைக் கண்டு ஓடி ஒளிவான். அவனது தினசரி அலுவல்கள் கடந்த ஐந்து வருடங்களாக மாற்றமின்றி, சீராக  நடந்துவந்தன. காலையில் அலுவலகம், முதல் நாள் முடிக்காதவேலையை மறுநாள் தொடரவேண்டும், பிறகு மதிய உணவென்று ஒரு துண்டு ரொட்டி, மீண்டும் அலுவலகம், மாலை வீடு, இரவு உணவு, பிறகு தூக்கம். என்றைக்காகவது கொஞ்சம் மகிழ்ச்சியை விரும்பினால் இரவு உணவுக்குப் பிறகு காலாரப் ‘போ-சொலெய்’ வீதியில் நடப்பான், பாலம் வரை செல்வான், கட்டை சுவரில் உட்காருவான். நீருக்கு மேலே கால்களை தொங்கவிட்டபடி ஓடும் நீரின் ஆழகை ரசிப்பான். ஒர் ஊமையன் சினேகிதமுமுண்டு. விடுமுறை நாட்களில் இருவரும் கைகோர்த்துகொண்டு உரையாடலின்றி நடந்து அலுத்து திரும்புவதுண்டு. பிரியமாக வளர்த்த நாய் வாகனத்தில் அடிபட்டு இறந்தது வெகுவாக அவனைப் பாதித்திருந்தது, அதுமுதல் வீட்டில் நாய் அல்லது பூனையை வளர்க்கும் ஆசைகளில்லை. ஜூலியனுக்கு அவனது அறையே சொர்க்கம். இவ்வுலகத்தில் அவனை ஆதரித்து அடைக்கலம்கொடுக்கிற ஒரே ஒரு போக்கிடம் அறையென்பதால் அதனை மிகவும் நேசித்தான். வாசிப்பதில் ஆர்வமில்லை, புத்தகங்களுக்கு நடமுறைவாழ்வைப்பற்றிய ஞானம் குறைவென்று நினைத்தான். எழுத்திலும் ஆர்வமில்லைஅலுவலகத்தில் எழுதுவதே போதுமானதாக இருந்தது. இப்படிப்பட்டவனுக்கு புல்லாங்குழல் வாசிப்பதில் மட்டும் மிகுந்த ஆர்வம். ஒருமுறை பழம்பொருட்கள் விற்கிற கடையில் புல்லாங்குழலொன்றைக் கண்டான், கையில் பணமிருந்தும் கடைக்குள் நுழையவோ, பேரம் பேசவோ வெட்கம். ஒரு நாள் துணிச்சலுடன் கடையில் நுழைந்து எவர்கண்ணிலும் படாமல் எப்படியோ அறைக்கும் புல்லாங்குழலைக் கொண்டுவந்தாயிற்று. அறைக்குள் நுழைந்ததும், கதவு சன்னல்களென்று அனைத்தையும் இறுக மூடினான், இருந்தும் வாசிப்பைக்கேட்டுப் பிறர் கேலி செய்யக்கூடுமென அஞ்சி முடிந்த அளவுக்கு அடக்கி வாசித்தான். மெல்ல மெல்ல பழகிக் கொண்டான். எல்லாமே எளிமையான, பழமையான இசைக்குறிப்புகள். நூலகமொன்றில் கிடைத்த இசை நூல்களும் அவனுக்கு உதவின. ஓரளவு வாசிக்கவந்ததும் சன்னற் கதவுகளை திறந்துவைத்து இசைத்தான். அப்போதுகூட ஊரெல்லாம் அடங்கியபிறகு, இரவில், வீட்டில் விளக்கைக்கூட அணைத்துவிட்டு இசைப்பது அவன் வழக்கம். சன்னல் அருகே வானத்தை பார்த்தவண்ணம் அமர்ந்துகொண்டு பொதுவாக வாசிப்பான். வீதியில் நடந்துபோகிறவர்கள் தலையை உயர்த்திமேலே பார்ப்பார்கள், அலைஅலையாய், இவ்வளவு இனிமையாய் இசை எங்கிருந்து மிதந்து வருகிறதென யோசிப்பார்கள், பிறகு குழப்பத்துடன் நடப்பார்கள். அண்டை அயலார்கள், இவனது வாசிப்பை தொல்லையாக நினைப்பார்களோ என்ற அச்சமும் இவனுக்குண்டு. அண்டை மனிதர்களில் ஒருவர் பத்திரம் எழுதுபவர், மற்றொருவர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. இருவருமே ஒன்பது மணிக்கெல்லாம், உறங்கப்போய்விடுவார்களென்பதால், அவர்களிடத்தில் இவனுக்கு பயமில்லை. மாறாக, நேரெதிரே இருந்த பங்களா வீட்டுக்காரர்களை நினைத்தால்தான் அச்சம். மர்சான் என்றபெயர்கொண்ட பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த குடும்பமது. பங்களாவின் மாடியில் பத்து சன்னல்களிருந்தன, பத்து சன்னல்களும் திறப்பதும் மூடுவதும் ஒரே நேரத்தில் நடக்கும். சன்னல்களின் பின்னே யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது? ஒன்றையும் அறியாதபடி தடித்த சன்னல் திரைகள். பங்களா குடும்பத்தினரைப் பற்றியும், அங்கு வந்துபோகும் விருந்தினர்களைப் பற்றியும், அவர்கள் செல்வநிலை குறித்தும் ஊர்முழுக்க வதந்திகள் உலாவின. பங்களாவுக்குள் நுழைந்து அதன் மர்மங்களை விளங்கிக்கொள்ளும் ஆவல் இவனுக்கும் நிறைய இருந்தது. இவனுடைய குடியிருப்பு திசைக்காயிருந்த பெரிய நுழைவாயில் எந்நேரமும் மூடியபடியே இருந்தது. ஓர் ஆத்மாகூட அவ்வழியை உபயோகித்து இவன் பார்த்ததில்லை. மற்றொரு சந்தொன்றில் இன்னொரு வழியிருந்தது, அநேகமாக அதுதான் உபயோகத்திலிருக்கவேண்டும். மாளிகையைபார்க்க ஏதோ கவனிப்பாரற்ற கல்லரைபோல அவனுக்குத் தோற்றம்தந்தது. அநேகதடவை, உறங்கச்செல்வதற்கு முன்னால் மெழுகுத்திரியை அணைத்துவிட்டு சன்னலருகில் நின்று எதிரிலிருக்கும் மாளிகையில் ஏதேனும் நடமாட்டம் தெரிகிறதாவென பார்ப்பான், மாளிகையை அவதானித்தபடி குழலூதவும் செய்வான்.

ஒரு ஞாயிற்றுகிழமை தேவாலயத்தின் எதிரே, அஞ்சலக சக ஊழியனொருவன் ஜூலியனுக்கு முதிய தம்பதிகளிருவரை அறிமுகப்படுத்தி இவன் வீட்டெதிரே குடியிருக்கிற மாளிகைவாசிகள், என்றான். அவர்கள் இருவருக்கும் மகளொருத்தி இருப்பதாகவும், விடுதியொன்றில் தங்கி படிப்பதாகவும், பெயர் தெரெஸா மர்சென் என்றும், பத்திர எழுத்தாளரிடம் உதவியாளராக இருக்கிற குள்ளன் கொலொம்பெல் அவளுக்கு வளர்ப்புச்சகோதரனென்றும் அடுத்தடுத்து ஜூலியனுக்குக் கிடைத்தக் கூடுதல் தகவல்கள். குள்ளன் கொலொம்பெலுக்கும் ஜூலியனுக்கும் ஆகாது. ஜூலியனை கொலம்பெல் ஒருமுறை கேலி செய்யப்போக இருவரும் கட்டிபுரண்டிருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் அது நிகழ்ந்தது. அன்றிரவு மிகவும் வெக்கையாக இருந்தது, நட்சத்திரங்கள் நிறைந்திருந்த வானம். வழக்கம்போல விளக்கை அணைத்துவிட்டு, இருட்டில் சன்னலருகே அமர்ந்தபடி புல்லாங்குழல் வாசித்தான், கண்ணிமைக்கும் நேரத்தில் அது நடந்தது. எதிரிலிருந்த மாளிகையின் சன்னலொன்று திறக்க இருட்டுக்கிடையில் குபீரென்று ஒளிவெள்ளம், இமைக்க மறந்தவனாய் ஜூலியன் பார்த்துக்கொண்டிருந்தான். இளம்பெண்ணொருத்தி நடந்துவந்தாள். கைகளை ஊன்றிக்கொண்டு பார்த்தாள். அவள் முகத்தை தனித்து அடையாளப்படுத்த இயலவில்லை, தலைமயிர் கற்றையாய் சரிந்து கழுத்தில் இறங்கி பிரிந்திருந்தது. அவள் கேட்பது இவன் காதில் விழுந்தது, ‘ஏதோ இசையென்று நினைக்கிறேன், உனக்குக் கேட்கிறதா? தனது வளர்ப்புத் தாயிடம் கேட்கிறாள். ‘அநேகமாக குயிலாக இருக்கும்!’ வளர்ப்புத்தாய் பிரான்சுவாவின் பதில். பங்களாவைச்சுற்றி அடர்த்தியாக மரங்களிருந்ததால் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும். வளர்ப்புத்தாய் இளம்பெண்ணிடம், “இராக்கால விலங்குகளிடத்தில் கவனமாக இருக்கவேண்டும்”, எனவும் எச்சரிக்கிறாள். தொடர்ந்து திறந்த சன்னல் மூடப்படுகிறது. அருகிலிருந்த மரங்களில் குயிலிருக்கவேண்டுமென நம்பும் பெண்ணின் மனது இவனுக்குள் சந்தோஷத்தை விதைக்கிறது.

மறுநாள் அஞ்சல் அலுவலகத்தில் மர்சான் குடுபத்தில் இளம்பெண் தெரெஸா விடுதியிலிருந்து திரும்பியிருந்ததைப் பற்றிய பேச்சு. ஜூலியன் சன்னல் வழியாக அவள் கூந்தலையும், கழுத்தையும் காண நேர்ந்ததை வாய் திறக்கவில்லை. அத்தரிசனம் அவனை பாதித்திருந்தது, அவளைத் திரும்பவும் பார்க்கநினைத்தான். அவன் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இப்போது அவனது அறை கூட அந்நியமாகத் தோன்றியது. அவனுக்குப் பொதுவாகவே பெண்களென்றால் வெறுப்பு, ஆண்களைக் காட்டிலும் பெண்களிடத்திலேதான் அவனைக்கண்டதும் கேலியும் கிண்டலும் அதிகரிக்கிறது. வெகு நேர யோசனைக்குப்பிறகு எதிர்வீட்டுப்பெண்ணை அவன் வெறுப்பதாகப்பட்டது. ஒவ்வொரு நாளும் அறைவாழ்க்கை பதுங்கு வாழ்க்கைபோல கழிந்தது, இதற்கிடையில் சன்னல் திறக்காதாவென ஏங்கவும் ஆரம்பித்தான். இரவு பத்துமணி அளவில் எப்போதாவாது சன்னற் கதவுக்கூடாக அறையில் ஆள் நடமாட்டம் இருப்பதன் அறிகுறியாக வெளிச்சம் தெரியும், பின்னற் சட்டென்று அதுவும் அணைந்துவிடும். தனது அறையிலிருந்துகொண்டே கரிய இருளின் ஊடே சன்னலை அவதானிப்பான். ஒவ்வொரு நாளும் தவறாமல் வேவு பார்த்தான். சன்னல், வெளிச்சம், காலடிகள், இளம்பெண்ணின் முகமென சதா கனவுகளில் மிதந்தான். ஒரு நாள் காலை சன்னலை திறந்தபொழுது எதிர்வீட்டு பெண் நிற்கிறாள், வெகு நேரம் சிலைபோல நிற்கிறாள், யோசிப்பதுபோல தெரிந்தது, முகம் வெளுத்திருந்தது, கண்களில் ஒளியில்லை, உதடுகள் நன்கு சிவந்து, வீங்கியிருப்பதுபோல பட்டது. ஏதோ துயரத்தில் இருக்கிறாள். அவளுடைய கவலையை இவனுடையதாக கற்பனை செய்துகொண்டு வருந்தினான்.

பிரச்சினை என்னவெனில், இதுவரை எதிர்வீட்டு பெண் இவனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இவனை ஒருபொருட்டாகவே அவள் கருதவில்லை. அப்படித்தான் இருக்கவேண்டும், அவனை பார்த்தவுடன் பலரும் என்ன நினைப்பார்களென அவனுக்குத் தெரியாதா என்ன? எனினும் இவனுக்கு அவள் மீது தீரா காதல் இருந்தது. அவள் வேண்டும், இவனது சரீரம் அதற்கு உதவாது. இசை, இசை மட்டுமே அதைசெய்ய முடியும். எனவே நிலவில்லா இரவுகளை தேர்வுசெய்து நீண்ட நேரம் வழக்கம்போல மெழுகுத் திரியைக்கூட அணைத்துவிட்டு இருளில் திளைத்தபடி அவளுக்காக குழலிசைத்தான். ஒருநாள் இரவு மீண்டும் வெண்ணிற உடையில் சன்னல் அருகே தேவதைபோல வந்து நிற்கிறாள். இசையைகேட்டே வந்திருக்கவேண்டும், புரிந்ததும் வாசிப்பதை நிறுத்திவிட்டு, இருட்டுபோதாதென்று சன்னல் திரையில்  தன்னை முற்றாக மறைத்துக்கொண்டான்.

“பிரான்சுவாஸ்! நீ நினைப்பதுபோல எந்தப் பறவையின் குரலுமல்ல!”

“உண்மைதான் வெளியே யாரோ இசைக்கலைஞன் வாசிக்க வேண்டுமென நினைக்கிறேன்”

“சன்னற் கதவைத் சாத்து, மழைவரும்போலவிருக்கிறது

எதிர்வீட்டில் பேசுவது, இவனுக்கு நன்றாகக் கேட்கிறது. அன்றிலிருந்து மிகவும் அக்கறையெடுத்துக்கொண்டு வாசிக்கலானான். ஒவ்வொரு இரவும் இவனது அறையின் சன்னற்கதவுகளை விரிய திறந்துவைத்து இருளில் பதுங்கியபடி குழலை சளைக்காமல் ஊதினான். ஒருநாள் காலை ஆறுமணி. தனது புல்லாங்குழலை உறைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறான் எதிர்வீட்டு சன்னல் திடீரென்று திறக்கிறது. காலையில் இதுநாள்வரை எட்டு மணிக்கு முன்னால் எதிர்வீட்டு சன்னல் திறக்கப் பார்த்ததில்லை. ஜூலியனுக்கு அதிசயமாக இருந்தது. தெரெஸா குளித்துமுடித்த ஆடையில் இருந்தாள், வழக்கம்போல கூந்தல் கழுத்தை சுற்றிக்கொண்டிருந்து. ஜூலியன் கற்சிலையாக சமைந்து போனான். கைவசமிருந்த புல்லாங்குழலை அவள் பார்த்துவிடக்கூடாதென நினைத்து மறைக்க எடுத்துக்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அவளுடையை பார்வையும் இவன்மீது ஒருமுகபடுத்தப்பட்டிருந்தது, ஒன்றிரண்டு நொடிகளில் முடிவுக்குவந்ததுபோல முதுகைத் திருப்பிக்கொண்டு போய்விட்டாள். இவனுக்குப் பெருத்த ஏமாற்றம், தமது தோற்றம் அவளுக்குக் கசந்திருக்கவேண்டுமென நினைத்தான். கால்கள் சோர்ந்துபோயின. நிலை தடுமாறி சோபாவில் விழுந்தான். தலையைப் பிடித்துக் கொண்டு கலங்கினான். காதல் முடிந்ததென்று நினைத்தான். அதற்குப் பிறகு பலமுறை சன்னலருகில் கையூன்றிகொண்டு அவள் நின்றபோதெல்லாம் இவனை வேண்டுமென்றே அலட்சியபடுத்துவதுபோலிருந்தது. ஒரு நாள் ” என்ன வாசிக்கிறான், தப்பு தப்பாய் கேட்கக் கொடுமையாக இருக்கிறது” என அவள் கூறுவது காதில் விழுந்தது. இனி புல்லாங்குழலைத் தொடுவதில்லையென ஜூலியன் தீர்மானித்தான்

ஒரு வருடம் கழிந்திருந்தது. தெரெஸாவுக்காகவே தனதுயிர் தரித்திருக்கிறதென்பதாக ஜூலியன் நினைத்தான். அவனுடைய இதயம் குளிரில் உறைந்துகிடந்த மாளிகையைச் சுற்றிவந்தது. திறந்திருக்கும் சன்னலை தரிசிக்க நேர்வதே அவனுடைய உயிருக்கு ஆதாரமாக இருந்தது. காலையில் சன்னற்கதவும் திறக்கப்படும்போதும், முன்னிரவில் சாத்தும்போதும் அவளைச் சந்திப்பது அவனது தினசரிகளின் முக்கிய தருணங்கள். இருமுறை பெண்ணின் திசைக்காய் முத்தங்களை காற்றில் அனுப்பிவைக்கவும் துணிந்தான். அவள் பார்வையை அகற்றவில்லை, சன்னலைவிட்டு அகலவுமில்லை. அன்றிலிருந்து தொடர்ந்து அந்திசாய்ந்ததும்  சன்னலைத் திறப்பதும், பின்னர் மூடுவதுமாக கழிந்தது. பிறகு வெகுநாட்கள் சன்னற்கதவுகள் திறக்கப்படவில்லை. கார்காலத்தில் ஒருநாள் எதிர் வீட்டு சன்னல் திடீரென்று திறக்க இவனுக்கு உயிர் வந்தது. கண்ணீர்விட்டான். அன்று காலை நல்ல மழை பெய்திருந்தது, பங்களாவுக்கு அருகிருலிருந்த செஸ்ட்நட் மரங்கள் இலைகளை உதிர்த்திருந்ததில் ஒருவித பிணவாடை எங்கு வீசியது. எப்படியும் எதிரிலிருக்கும் மாளிகையின் சன்னற் கதவுகள் திறக்குமென ஜூலியன் காத்திருந்தான். கதவுகள் திறந்துகொண்டன. தெரெஸா நிற்கிறாள், கண்கள் வழக்கத்தைக்காட்டிலும் பெரிதாக தெரிந்தன, தலைமயிர் கட்டவிழ்ந்து கழுத்தில் கிடந்தது. சன்னலை ஒட்டி நேராக நின்றாள். அவளுடையை பத்துவிரல்களையும் வாய்மீதுவைத்து ஜூலியன் திசைக்கு முத்தத்தை அனுப்பினாள். இவன் மயக்கமடையாதகுறை, இவன் தனது மார்பினை வலதுகையைக் குவித்துத் தொட்டுக்காட்டி, முத்தம் எனக்கா என்றுகேட்டான். இம்முறை சன்னல் விளிம்பில் மடிந்து சாய்ந்தவள் மீண்டும் பத்துவிரல்களையும் உதட்டில் தொட்டு உறுதிபடுத்துகிறாள். அவளனுப்பிய செய்தி அவனை எட்டிவிட்டதென்பதன் அடுத்தகட்டமாக, வாயேன் என்றாள். இவன் இறங்கிச் சென்றான். நெடுநாளாக திறக்கப்படாதப் பங்களாவின் கதவு இவனுக்காக ரகசியமாக திறக்கிறது. அவளைத் தொடர்ந்து மாடியில் தினமும் அவளை காண நேர்கிற அறைக்கு இருவருவருமாக வந்தார்கள். இவனெதிரே இதுநாள் வரை எவளுக்காக ஏங்கினானோ அவள் .

– என்னை காதலிக்கிறாய் இல்லையா?

– ம்ம்.. இவனுக்கு நா குழறுகிறது

– இப்போ என்னை உனக்கு கொடுத்தால், எனக்காக எதுவும் செய்வாயில்லையா? இவனிடத்தில் பதிலில்லை. ஆனால் அவள் தரப்பிலிருந்து ஒரே ஒரு முத்தமென்றாலும், தன்னையே இழக்க தாயாரென்ற நிலையில் அவன்.

– நல்லது எனக்காக ஒன்று செய்யவேண்டும்

இம்முறையும் அவன் பதிலின்றி இருந்தது அவளை எரிச்சலடைய செய்திருக்கவேண்டும்.

– இப்படி நின்றால் என்ன அர்த்தம். நீ எனக்காக எதையும் செய்வேனெனறு சத்தியம் பண்ணு -அவள்

– சத்தியம், சத்தியம். நீ எதை சொன்னாலும் செய்வேன்

அவள் கிடு கிடுவென்று நடந்தாள். அவள் அறையில் மெத்தையும், தலையணைகளும் சிதறிக்கிடந்தன, கட்டில் துணிகளோடு கலந்து ஒர் ஆணின் பிணம்.

” இவன் என்னுடைய காதலன், இரண்டுபேருக்குமிடையில் நடந்த விளையாட்டுச்சண்டையின் முடிவில், அவன் இறந்துட்டான். பிணத்தை நீதான் இங்கிருந்து அகற்றியாகணும். ” என்கிறாள்

இதற்குமேல் கதை அவ்வளவு முக்கியமல்ல, இருந்தாலும் இறந்திருந்த காதலன் அவளுடைய வளர்ப்பு சகோதரன் கொம்பெல் என்ற செய்தியும், இருவரும் பால்யவயதிலிருந்தே நண்பர்கள் என்பதும், இளம்பெண் தெரெஸா மனப்பிறழ்வு கொண்டவளென்பதும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள். நம்முடைய ஜூலியன் என்ன ஆனானென தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? தனது காதலுக்காக  பிணத்தை சுமந்துகொண்டு ஓடையில் எறிவதற்குச் சென்றவன், பிணத்தை எறிகிறபோது இவனைச் சுற்றியிருந்த கைகளை பிரிக்க இயலாமல் உடன் விழுந்து சாகிறான். இளம்பெண் மூன்றுமாதத்திற்குப் பிறகு பிரபு ஒருவனை மணந்துகொள்கிறாள். மணக்கோலத்தில் அவளைப்பார்க்க தேவதைபோல இருந்தாளாம். ஆபத்தான இரவு தேவதை.

மனித குலம் தோன்றிய காலம் தொட்டே வாழ்வின் முழு பரிமாணத்தையும் எட்டிவிடுவதென்ற நோக்கத்தைக் பெற்றிருந்திருக்க வேண்டும். நமது புலன்களும் அறிவும் அதற்கான உபகரணங்கள். உணர்வில் வளர்ச்சி, அல்லது மோன நிலையை எட்ட மனம் நிறைவடைய வேண்டும். இரவு அவரவர் புலன்களின் தேடலுக்கொப்ப வழிநடத்துகிறது. பகல் அறிவை வளர்த்துக்கொண்டுபோக உதவலாம் அதனை நெறிபடுத்த உணர்வும் இரவும் தேவை:

சினம் இறக்கக் கற்றாலும்  சித்தியெல்லாம் பெற்றாலும்
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே (தாயுமானவர்-பராபரக்கண்ணி)

பகற்பொழுது, காலத்துக்கு இணையாக ஓடிக் களைத்துபோகும் பொழுது. மூர்க்கத்துடன் நாளை முட்டித் தள்ள வேண்டியிருக்கிறது. புறவாழ்க்கையான பகல் இறைச்சலும் கூச்சலும், ஓட்டமும் நடையும், வெப்பமும் வேர்வையுமாக கழிகின்ற பொழுது. அந்திச் சாய்ந்ததும் அமைதியும் தொடர்ந்து வருகிறது, இரவென்ற பெயரில். இரவென்பது அகவாழ்வு. “ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்த இன்பம் உறுவதோர் பொருள் ஆகலின், அதனை அகம் என்றார்..இன்பமேயன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாவெனின், அதுவும் காமம் கண்ணிற்றேல் (கருதினால்) இன்பத்துள் அடங்கும்.” என்பது அகத்திணைக்கான விளக்கம். உறவு தரும் இன்பம் மாத்திரமல்ல, பிரிவும் தரும் துன்பமும் இரவுக்காலங்களில் பெரிதுதான். தலைவனைப் பிரிந்துவாழும் தலைவிக்கு,  இரவில் தலைவனின் நினைவு அதிகமென்று கூறாத இலக்கியங்கள் உலகில் எங்குமில்லை. அத் துன்பம் நெடியது. குறும்பொழுதுக்குரியதல்ல. தலைவனில்லாத தனிமையின் இரவு நத்தைபோல ஊர்வதை – அவள் உணர்கிற அத்துன்பத்தை வெளிப்படுத்தும்பொழுது, ‘நெடிய கழியும் இரா’ என்று இரவின் மேல் பழி சுமத்துகிறாள்.

கொடியார் கொடிமையின் தாம் கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா (குறள்)

மேற்கத்திய நாடுகளில் ஆரம்பித்து, கீழைநாடுகளிலும் பரவியுள்ள ‘The night concept’ (கள்ளும் காமமும் பொய்யுமான) வியாதியை புரிந்துகொள்ள முடிகிறது. நெடிய இரவின் தனிமையில் வருந்தக்கூடிய நேற்றைய தலைவனோ தலைவியோ இன்றில்லை என்பதற்கான சாட்சியங்கள் அவை. இரவோடு இணைந்த சொற்களை வரிசைப்படுத்தினால்: பெண்ணில் ஆரம்பித்து நிலா, குளிர்ச்சி, கனவு, களவு, பதற்றம், அச்சம், புணர்ச்சி… சூன்யம் வரை இரவு சிமிழுக்குள் எதுவும் அடங்கும். உயிர்த்தெழும். பிரபஞ்சத்தின் மூச்சே இரவு. உலகம் இருமைப் பண்புகளாலானது. பகலென்று எழுத இரவு வேண்டும், ‘உண்டென்று’ சொல்வதற்கு ‘இல்லை’ வேண்டுமென்பதுபோல. இரவற்ற பகலை, உயிர் வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே இயலாது. இந்தியாவின் மக்கள்பெருக்கத்தினை குறைப்பதற்குச் சாத்தியமற்ற யோசனையொன்றை வைத்திருந்தேன். ஆறுமாதம் பகல் ஆறுமாதம் இரவு என்பதுபோல ஓர் ஐம்பது ஆண்டுகள் இந்தியாவை இரவிலிருந்து விடுவித்தால் மக்கத்தொகையைக் கணிசமாக குறைத்துவிடலாமென்பது எனது கணக்கு. மனித உயிர் தொழிற்சாலையின் உற்பத்தி நேரமல்லவா இரவு. சரீரமும், புலன்களும், மூளையும் பகலில் பிறருக்காகவும் இரவில் தமக்காவும் ஜீவிக்கின்றன. இரவொன்று இல்லையேல் ஓய்வின்றி உழைத்து மூளையும் புலன்களும் வெடித்து சிதறிவிடும். இரவுபெண் பொதுவில் பலரும் நினப்பதுபோல துர்த்தேவதையே அல்ல அவள் ரொம்பச் சாது. அடக்கமானவள், அமைதியானவள், புதிரானவள் மர்மங்கள் சூழ்ந்தவள், சூட்சமங்கள்நிறைந்தவள். மீண்டும் மாப்பசான் நினைவுக்கு வருகிறான். அவனைப்போலவே கண்கள் அவளைத் தரிசிக்கின்றன, நாசி அவளை சுவாசிக்கிறது, காதுகள் அவள் இசைக்கும் ‘அமைதியைக் கேட்கின்றன, சரீரம் அவள் தழுவலில் சுகம் பெறுகிறது.

——————————————————————————————–

‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி. ‘

நீலக்கடல் நாவல் தமிழ்நாடு அரசின் பரிசினை பெற்றபின்பு ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அளித்திருந்த பேட்டி. ‘

 (பதிவுகள்’ இணைய இதழ் ஆசிரியர் திரு. வ. கிரிதரன் அவர்களுக்கும், தமிழ் மீது தீராதுகாதல்கொண்டு அமெரிக்காவில் இயங்கிவரும் திரு. ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். )

பதிவுகள்:-  தங்கள் நாவலுக்கு விருது கிடைத்தமைக்கும் மென்மேலும் கிடைக்கவும் முதலில் வாழ்த்துக்கள். விருது கிடைத்த செய்தியறிந்தபோது உங்கள் உள்ளத்துணர்வுகள் குறித்து…?

மிக்க நன்றி. உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்தேன், மறுப்பதற்கில்லை. நீலக்கடல் நாவலை சிரத்தை எடுத்துக்கொண்டு  வித்தியாசமாக எழுதினேன். மூன்று காலத்திற்கும் மூன்றுவிதமான மொழிகளை பாவித்தேன். அம்மொழிகளும் பாத்திரங்களின் சமூகச் சூழல், அறிவுத் திறன், சம்பவ நெருக்கடிகள் என பலக் காரணிகளின் அடிப்படையில் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இது கதையல்ல  ஆண்டவர்களையும், அவர்களின் குடிகளையும் சமதளத்தில் வைத்து, வரலாறு என்பது வெற்றிபெற்றவர்களின் உண்மை மட்டுமல்ல, வாழ்ந்தவர்களின் உண்மை என தெரிவித்த முயற்சி. அந்த உண்மையையை நிறுத்த ஒரு சராசரி தமிழ் எழுத்தாளனைக்காட்டிலும் பொருட் செலவையும், புலம்பெயர்ந்தவர்களால் இயலாத காலச் செலவையும் தயக்கமின்றி செய்திருக்கிறேன். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழக வெளியீடுகளையும், பிரான்சில் நான் வசிக்கிற நகரத்து நூலகங்களில் கிடைக்காத புத்தகங்கள், இந்தியாவில் வாங்கிய நூல்களென சொந்தமாக வாங்கி வரவழைத்துப் படித்தேன், நீலகடலுக்கெனவே சிறிய நூலகம் வைக்கலாம். கதை நடக்கும் முக்கிய இடங்களுக்கெல்லாம் சென்று வந்தேன். பிறகு இணைய தளங்களின் உதவியையும் மறுப்பதற்கில்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சுக் காரர்களின் உணவென்றால், பிரான்சின் எந்தப் பகுதியிலிருந்து அவர்கள் வந்தவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டில் அவர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள் என்னென்ன, ஒரு இசைக்கருவியின் பெயரைச் சொல்லவேண்டுமானால் கூட கதை நடந்த ஆண்டில், கதை நடக்கும் களத்தில் அதன் உபயோகத்திற்கான சான்றுகள் இப்படித் தேடித் தேடி எழுதியதுகூட பரிசுக்குக் காரணமாக இருக்கலாம். பிறகு எதையும் எனக்காகத்தான் செய்கிறேன். உண்பது, உடுப்பது, நேசிப்பது என எல்லாவற்றையும். எனது எழுத்தும் அப்படித்தான். ஒருவகை சுயநலம். சில சுயநலங்கள் பிறருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நீலக்கடலுக்கு அப்படியான வெற்றியாகக்கூட இருக்கலாம், பரிசுக்காக எழுதப்படவில்லை. எனினும் தமிழக அரசுக்கு நன்றி. இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும், அது நீங்களும் அறிந்ததுதான். பரிசுபெற்றவைமட்டுந்தான் உலகில் பெரிய படைப்புகளென்றோ, பரிசுவாங்கியவர்கள் மாத்திரந்தான் பெரிய எழுத்தாளர்களென்றோ சொல்வதற்கில்லை. பரிசேதும் இல்லை என்றாலும் சோர்ந்திருக்கமாட்டேன். உலகமெங்கும் பரிசுகள் பெற்றிராத தரம் வாய்ந்த படைப்புகள், மிகப்பெரிய படைப்பாளிகள் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்திய உதாரணம் சுந்தர ராமசாமி.

பதிவுகள்:- நீலக் கடல் நாவல் உருவானது குறித்து உங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்துகொள்ளமுடியுமா?

நீலக்கடல் நாவலை1973ஆம் ஆண்டிலிருந்து எனக்கு தொல்லைகொடுத்த, இரண்டு மன ஆக்ரமிப்புகளின் வடிகால் என்று சொல்லலாம். முதலாவது சென்னையில் சர் தியாகராயாக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரம். இராயபுரத்திலிருந்து கல்லூரிக்குத் நடந்து செல்வது வழக்கம். அப்போது ஒவ்வொரு நாளும் ஒன்பது நாற்பந்தைத்துக்கு, T.H. ரோடு எனப்படும், திருவொற்றியூர் சாலையில் ஒரு பள்ளிமாணவி எதிர்படுவாள். நான் அறிந்து, தோழியர் கூட்டத்தோடு அவளைப் பார்த்ததில்லை. சில நேரங்களில் எங்கள் பார்வைகள் சந்தித்திருக்கின்றன. மனதில் பதிந்திருந்தாள், நிறைய கவிதைகள், ஒன்றிரண்டு சிறுகதைகள் அவளை மையமாக வைத்து எழுதியிருக்கிறேன். இன்றுவரை சிறுகதைகள் ஒவ்வொன்றிலும் வர்ணணைகள் என்று எழுதுகிறபோதெல்லாம் அவள் குறுக்கிடுகிறாள். நீலக்கடல் தேவயானி அந்தப் பெண்ணாகக் கூட இருக்கலாம். இரண்டாவதாக அதே ஆண்டில் ஏதேச்சையாகக் கேட்ட புலவர் கீரனின் கந்தபுராண சொற்பொழிவு. நீலக்கடல் கதைக்கு ஆதாரமான கருமாறிப்பாய்தல் என்றால் என்ன? என்பதை, தமது உரைக்கு இடையில் குறிப்பிட்டார். ஆக நீலக்கடலுக்கான விதை 1973ம் ஆண்டிலேயே என் மனதில் ஊன்றப்பட்டுவிட்டது.

பதிவுகள்:- நீலக்கடல் நாவல் உருவாக வித்திட்டது ஆனந்தவிகடனில் வெளியான தங்கள் சிறுகதை.

முன்பே குறிப்பிட்டதுபோல 1973ம் ஆண்டு வித்திட்ட நீலக்கடல் ‘பார்த்திபேந்திரன் காதலி’ என்ற பெயரில் ‘கதை சூப்பர் ஸ்பீடு, கலக்கல் டர்னிங், நெஞ்சை தொட்டுட்டேம்மா’ என்ற குறிப்புடன் ஆனந்தவிகடன் இதழில் (09-05-2004) பிரசுரமானது.

பதிவுகள்:- நண்பர்களின் ஆலோசனையின் பெயரில் தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பித்தீர்களா? அல்லது  தற்செயலாக நீங்கள் அனுப்ப எதிர்பாராமல் விருது கிடைத்ததா?

இதில் என்பங்கு எதுவுமில்லை. கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதியன்று, சந்தியா பதிப்பகம் தெரிவித்த செய்தியை எனது இளைய மகள் மூலம் அறிந்தேன். மறுநாள் தொடர்புகொண்டு விசாரித்ததில் நீலக்கடலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பதைத் தெரிவித்தார்கள். எல்லா பதிப்பாளர்களையும்போலவே, போட்டியில் கலந்துகொள்ள தாம் வெளியிட்ட நூல்களை அரசின் பார்வைக்கு சந்தியா பதிப்பகம் அனுப்பிவைத்திருக்கிறது. பரிசு கிடைத்தபிறகுதான் இதனை அறிந்தேன். உண்மையில் இந்த விருது 2005ல் வெளிவந்த நூல்களுக்கான விருது, 2006ம் ஆண்டு கூடிய தேர்வுக்குழுவினர் அதுபற்றி விவாதித்து  2007ல் விருதினைக் கொடுத்திருக்கிறார்கள்.

பதிவுகள்:- முதல் கதை, முதல் கவிதை எழுதி வெளிவந்தபோது உங்களுக்குள் பொங்கிவழிந்த மகரந்த நினைவுகளை கொஞ்சம் மலருங்களேன்….?

அதனைப் படைப்பென்று சொல்ல முடியாது, எனது உணர்வுகளை எழுத்தில் அளிக்க முடியுமென்கிற நம்பிக்கையை ஊட்டிய தருணமென்று சொல்லலாம். அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த வேளை,எனது தமிழாசிரியர் ‘நாகி’யென எங்களால் அன்புடன் அழைக்கப்பட்ட திரு நா.கிருஷ்ணசாமி யாப்பிலக்கணத்தின் ஒருபகுதியாக ஆசிரியப்பாவை முடித்துவிட்டு, ஆளுக்கொரு கவிதை எழுதச்சொன்னார் ‘காகமே காகமே கருநிறக் காகமே,வேகமாய்ச் சென்று நீ மேகமாய் மறைவதேன்’, என ஒருக் கவிதையை எழுதிப்போய் காட்ட, பிற மாணவர்களைக்காட்டிலும் எனக்குக் கொஞ்சம் எழுதவருகிறதென நினைத்தவர் பள்ளி ஆண்டுமலர் தயாரிக்கும் ஆசிரியர் குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டார். அதற்கடுத்த ஆண்டு, பள்ளியில் தொடங்கப்பட்ட கையெழுத்துப் பிரதியான ‘மனம்’ இதழுக்கு ஆசிரியராக உத்தியோக உயர்வு. எனது முதற் கவிதை, முதற்கதை, முதற்கட்டுரை மூன்றும் அவ்விதழில் இடம்பெற நேர்ந்ததை வாய்ப்பென்றுதான் சொல்லவேண்டும். அக்கையெழுத்துப் பிரதியை எவர்கையில் கண்டாலும் என்னிடத்தில் ஒருவித பெருமிதம் தொற்றிக்கொள்ளூம். அந்த இதழை அநேகமாகப் பள்ளியில் அதிகமுறைவாசித்தவன் நானொருவனாகத்தான் இருக்கவேண்டும்.

பதிவுகள்:- எத்தனை மொழிகளில் பரிச்சயம் உண்டு? உங்கள் நூல் எதுவும் பிற மொழியில் மொழிபெயர்க்கப்படவுள்ளதா?

ஆங்கிலமும், பிரெஞ்சும் அறிவேன். இதுவரை எனது எந்தநூலும் மொழிபெயர்க்கபடவில்லை. பிரான்சில் உள்ள நண்பர்கள் சிலர் நீலக்கடலை மொழி பெயர்க்கவேண்டுமென்றனர். பிரான்சில் Act Sud பதிப்பகம் நீலக்கடல் மாதிரியான நூல்களில் அக்கறை காட்டும் நிறுவனம். அவர்களிடம் ஓராண்டிற்குமுன் எழுதி கேட்க மொழிபெயர்ப்பினை அனுப்பச் சொல்லிக் கேட்டிருந்தார்கள். ஒரு சில நண்பர்கள் மொழி பெயர்க்கிறேனென்று இணங்கி ஒரு பக்கங்கூட மொழிபெயர்க்கவில்லை. நானுங்கூட முதல் அத்தியாயத்தை மொழிபெயர்க்க உட்கார்ந்து சோர்ந்துவிட்டேன்.  நாவலின் பதினெட்டாம் நூற்றாண்டு மொழி சங்கடப்படுத்துகிறது. சிறுகதையொன்றை நேரடியாக பிரெஞ்சில் எழுதியிருக்கிறேன். தமிழ் அளவிற்கு மொழியை லாவகமாக பிரெஞ்சில் என்னால் கையாள இயலவில்லை. ஆனால் நீலக் கடலை எப்படியும் மொழி பெயர்த்து பிரெஞ்சில் வெளியிடுவது என்கிற கனவிலிருந்து இன்னும் விடுபடவில்லை.

பதிவுகள்:- இந்தப் பன்மொழிப் புலமை உங்கள் படைப்புகளை செழுமைப்படுத்த உதவுகிறதா?

பன்மொழிப் புலமை என்றெல்லாம் சொல்வது அதிகப்படியான அடைமொழி. மூன்று மொழிகளிலும் பேச எழுத முடியும், தமிழில் கொஞ்சம் கூடுதலாகக் கவனம் செலுத்துகிறேன் அவ்வளவுதான். நிறைய விஷயங்களில் எனக்குப் பற்றாக்குறை இருக்கிறது அதனை எழுதும்போது உணருகிறேன். எனக்கு வாசிப்பு போதாது. ஆங்கிலமும் பிரெஞ்சும் படைப்புலகில் முக்கியமான மொழிகள். சமீபகாலமாக ஆங்கிலத்தில் வெளிவரும் நூல்கள் சந்தை நோக்கோடு செயல்படுகின்றன. விற்பனைக்கான அத்தனை தந்திரங்களும் கையாளப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கர்கள் கதைசொல்வதில் தேர்ந்தவர்கள். பிரெஞ்சுக் காரர்களுக்கு எழுத்து முக்கியம். ரஷ்ய எழுத்தாளர்களைப்போல. உயிர்ப்புள்ள இலக்கிய படைப்புகளில் ஆர்வம் கொண்டவர்கள்-பிரெஞ்சு படைப்புலகம் என்பது நிலைப்பாடுக்கு எதிரான கலகக்குரல்களால் வளர்ந்தது. தன்னுணர்வு, அகமனப் போராட்டம் இவைகள் பிரெஞ்சில் அதிகம். இரண்டு மொழி படைப்புகளையும் அந்தந்த மொழியில் படிக்கிறேன். இரு மொழி படைப்பும் என் எழுத்துக்கு உதவுகின்றன. இங்கேயுள்ள நூலகத்தில் Bi-Langue என்று ஒரு பிரிவு உண்டு. அப்பிரிவில் புகழ்பெற்ற ஆங்கில சிறுகதைகள், மூலமும் மொழிபெயர்ப்புமாக எதிரெதிர் பக்கங்களில் இருக்கும். அம்மாதிரியான நூல்களை மாதத்திற்கு ஒன்றேனும் வாசிக்கும் பழக்கமுண்டு. இந்த ஒப்புநோக்குவாசிப்பு புறநோக்கில், மொழியின் வல்லமையை புரிந்துகொள்ள உதவ, அகநோக்கில்(மொழி இரண்டையும் இரு கண்களெனக் கொண்டால்) ஒத்துணர்வில் துடிப்பது வலமா இடமா? என்பதைப் புரிய வைக்கிறது. இப்படியானப் புரிதல்கள், நமது எழுதும் திறனிற்கு நிச்சயம் உதவக் கூடும்.

பதிவுகள்:- விருது..வாசகனின் பாராட்டு…இதில் எதைப் பெருமையாகக் கருதுவீர்கள்?

பாராட்டும் விருதும் இருவேறு சொற்கள் என்றாலும் பொருள் ஒன்றுதான். இரண்டுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை, வாசிப்பில்லாமல் விருது ஏது. பாராட்டுவதற்கு முன்னால் வாசிப்பு, வாசிப்பு முக்கியம்.

பதிவுகள்:- புதுக்கவிதையின் திசை திருப்பப்பட்டு, அதன் பாதை இன்றைக்குச் சரியாக இல்லை என்ற கவிஞர் மேத்தாவின் கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்?

 இதில் சொல்வதற்கென்ன இருக்கிறது, அறுபதுகளில் எழுப்பி பாரதியைக் கேட்டிருந்தால் கூட அவருக்குப் பின்னால் கவிதை எழுதவந்தவர்களைப் பார்த்து இதைத்தான் சொல்லியிருப்பார். தம்மை அடையாளப்படுத்த பிறர் இருப்பை நிராகரிப்பதென்பது, அரசியல்வாதிகளிடமிருந்து படைப்பாளிகள் பெற்ற தாக்கம். கவிதையை ஓர் வீடென்று வைத்துக்கொண்டால், அதன் வடிவங்களில் ஒன்று புதுக்கவிதை. ஒரு வீட்டின் உட்பகுதி எந்த நாட்டிலும், எக்காலத்திலும் பொதுவானத் தன்மைகளுடன் நிரந்தரமாக இருக்கின்றன, வெளித்தோற்றங்கள் அதாவது வடிவங்கள் காலத்திற்கேற்ப, மக்களின் வளர்ச்சிக்கேற்ப, தேவைசார்ந்து மாற்றம் பெருகின்றன. கவிதை நிரந்தரமானது. அதன் உணர்வுகள் நிரந்தரமானவை. வடிவம் மாறும் தன்மையது, புதுக்கவிதையும் அதிலொன்று. கற்பனைத் திறனும், நாடகப் புலமையும் இணைந்த காப்பியங்களை அறிவோம், உரைநடை வடிவத்திற்கு மாற்றாக அவை எழுதபட்டன. பிறகு நாடகத் தன்மைகளை குறைத்துகொண்டு கவிஞன் தன் மனம்சார்ந்த உணர்வுகளில் அக்கறைகாட்டினான் எனினும் மரபுக் கவிதைகளாகத்தான் அவை இருந்தன. கவிதையென்பது இசையோடு தொடர்புகொண்டது, என்ற எண்ணத்தின் அடிப்படையில், தனிமனித உணர்வுகளை பேசும் போதுங்கூட யாப்பிலக்கணம்: சீர், அசை, தளை எதுகை மோனை விதிகள் அத்தியாவசியமாக இருந்தன. உலகமெங்கும் அதுதான் நடந்தது. பிரான்சில் மரபுக் கவிதைகளை அவர்கள் Poesie Classique என்று அழைத்தனர், பின்னர் Poesie Moderne (புதுக்கவிதை) அங்கு 1880ல் குறியீட்டாளர்களால்(Symbolists) அறிமுகப்படுத்தபட்டது. கட்டுபாடற்ற வரிகளில், ஓசை ஒழுங்குகளை ஒதுக்கிவிட்டு எழுதத் துணிந்த Gustave Kahnன் கவிதையான Palais Nomade அதற்கு முன் உதாரணமாகச் சொல்லப்படுகிறது. Vers Libres – Free verses என இலக்கியத்தில் பொருள்கொள்ளப்படும் அக்கவிதைகள் கவிதை வடிவத்தின் ஓர் அங்கம். உணர்வுகளுக்கு,  சுதந்திரமான எழுத்து உருவம் கொடுக்கப்படவேண்டும், என்பது புதுக்கவிதைகளின் எழுதப்படாத விதி. புதுக்கவிதையை கர்த்தாக்களான குறியீட்டாளர்கள் கவனமெல்லாம், அந்த நேரத்தில் அபௌதிகம், புதிர்நிலை என்றிருந்தது. டி.எஸ் எலியட் புதுக்கவிதையை “means too much to mean anything at all” என்றவர். புதுக்கவிதை என்பதே சுதந்திர எழுத்து என்கிறபோது அதற்கான திசை, குவிமையம் என்றெல்லாம் பேசுவது சரியல்ல. அதைவிட திசைகளைப் பற்றி அக்கறைகொள்ளாமல், கவிதை இருக்கிறதா, படைப்பு மனம் இருக்கிறதா என்று பார்ப்பது நல்லது.  நல்ல படைப்புகள் வலிகளைச் சொல்லவேண்டும், உண்மையைப் பேசவேண்டும். சமுதாயத்தின் எல்லா தரப்பினரும் எழுத்துலகில் தங்கள் உணர்வை பதிப்பிக்க முடியும் காலமிது. படைப்புலகம் அவ்வப்போது தடுமாறினாலும், நிமிர்ந்தே நிற்கும். திசைமாற்றமும் அதற்கு உதவலாம்.

பதிவுகள்:- உடலுறுப்புகளை கொச்சையாகப் பெயர் குறிப்பிட்டு கவிதையில் பெண்களே எழுதுவது இன்றைக்கு பரவலாக நடந்துவருகிறது. இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?

எழுதினால் என்ன தப்பு? ஏன் பெண்கள் எழுதக்கூடாதா?  ஒரு படைப்பாளி அவர் ஆணோ, பெண்ணோ தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், தானொரு புரட்சிகரமான சிந்தனாவாதி என்று காட்டிக்கொள்வதற்காகவும், தனது படைப்புப் பேசப்படவேண்டுமென்பதற்காகவும் உடலுறுப்புகளை நீங்கள் சொல்வதுபோல கொச்சையாக தமது எழுத்துக்களில் கொண்டுவருகிறாரென்றால் அது கண்டிக்கத் தக்கது.  ஆனால் தனது வலிகளையும், குமுறல்களையும் வெளிப்படுத்த, அல்லது ஒரு படைப்பின் தேவை சார்ந்து அதைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது என்றால் தாராளமாக எழுதலாம். அந்த உரிமையைப் பெண்கள் விஷயத்தில்மட்டும் மறுப்பது என்ன நியாயம். சொல்லபோனால் ஆண்களைக்காட்டிலும் பெண்கள் தார்மீக உரிமை உடையவர்கள். அக்கவிதைகளில் தாக்குதல்களில்லை, தற்காப்பு நிலை. மூச்சுத் திணறிக் கிடந்தவன் சுவாசம் பெறும் முயற்சி. பொதுவாக இம்மாதிரியான கவிதைகளுக்கு புகலிடமாக இருப்பவை சிற்றிதழ்கள் சிற்றிதழ்வாசகர்களில் பெரும்பாலோர் அவர்களது கவிதைகளை ஏனைய கவிதைகளைப்போலவே எடுத்துக்கொள்கின்றனர், புரிந்துகொள்கின்றனர். முகஞ்சுளிப்பதில்லை. ஆபாசம் எங்கே இருக்கிறது தெரியுமா குடும்பபத்திரிகைகளில், வெகுசன இதழ்களில், தினசரிகளில், நமது சீரியல்களில், சினிமாக்களில்.

பதிவுகள்:- பிரான்சில் நீங்கள் நடத்திவந்த “நிலா” இதழைத் தொடர்ந்து நடத்த இயலாது போனதற்கு என்ன காரணம்?

எல்லாவற்றையும் தனி ஒருவனாக செய்ய வேண்டியிருந்தது. எனது எழுத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. தவிர ‘நிலா’ இதழ், வெகுசன இதழ் சாயலில் வெளியிடவேண்டிய நிர்ப்பந்தம். எனக்கான இடம் அது இல்லை என்பதும், வாசகர்களுக்காக நான் என்ற மனநிலையில், சினிமா செய்திகள், துணுக்குகள், ஜோக்குகள் என்று எழுதி அலுத்துவிட்டது. எனினும் மூன்றாண்டுகள் தொடர்ந்து இருமாத இதழாக வெளிவந்தது.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பில் அடங்கிய கதைகளில் மூன்றில் ஒரு பங்கு அதில் பிரசுரமானவையே. எனது பாரீஸ் நண்பர்களில் திரு பாலகிருஷ்ணன் எழுதிய ‘நானொரு சங்கத்தமிழன்’, திரு. முத்துக்குமரன் எழுதிய ‘பிரான்சு தொழிற்சட்டங்கள்’ போன்ற தொடர்கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பிருந்தது.

பதிவுகள்:- எழுத்தாளர், இதழ் ஆசிரியர் அனுபவங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

எழுத்தாளராக இருந்துவிடலாம், இதழ் ஆசிரியராக இருப்பது கடினம். உங்களுக்குத் தெரியாததா என்ன? எழுத்தாளனுக்கு இரண்டே இரண்டு கவலைகள்தான். ஒன்று: தனது எழுத்து பிரசுரத்திற்கு ஏற்கப்படுமா? என்பது. இரண்டாவது பிரசுரமானபின் எத்தனை வாசகர்கள் படித்திருப்பார்கள் என்பது. அத்துடன் சரி. மாறாக இதழ் ஆசிரியர்களை எடுத்துக்கொண்டால் தலைவலிகள் நிறைய இருக்கின்றன. சொந்த எழுத்துக்களில் கவனம் செலுத்தமுடியாது. விரும்பியோ விரும்பாமலோ எல்லா எழுத்துக்களையும் படித்துப்பார்க்கவேண்டிய கட்டாயம். பிரசுரமாகும் ஆக்கங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய நிர்ப்பந்தம், இனம், மதம், நாடு என எல்லாவற்றையும் ஒளித்துக்கொண்டு, நடு நிலையாளராக அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய அவசியம்..என நிறைய  சொல்லலாம். எழுத்தாளனாக இருக்கவே விரும்புகிறேன்.

பதிவுகள்:- சிறுகதை, நாவல், கவிதை இந்த மூன்றிலுமே தடம்பதித்துள்ள தாங்கள் எதில் அதிகமாக முகம் காட்ட விரும்புகிறீர்கள்?.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் தரமானக் கவிதைகள் எழுத எனக்குப் போதாது. கவிதை உலகம் எனக்குப் பிடிபடாததுபோல இருக்கிறது.  கவிதை எழுதுவதென்பது உட்கார்ந்துகொண்டு  காய்களை நகர்த்தும் சதுரங்க விளையாட்டு, எனக்கு ஓடிப் பிடித்து விளையாடவேண்டும். அதற்கு உரைநடை வெளியே எனக்கு உகந்ததென தீர்மானித்திருக்கிறேன். குறிப்பாக சிறுகதைகள்:அன்றாட வாழ்க்கையில்,  சட்டென்று நமது கவனத்தில் இடம்பெறும் ஏதோ ஒன்று சிறுகதையாகக்கூடும். அமெரிக்க சிறுகதை எழுத்தாளர்கள் மீது எனக்குப் பொறாமைகள் நிறைய.

பதிவுகள்:- அச்சு இதழ்களில் உங்கள் ஆக்கம்….. இணைய இதழ்களில் உங்கள் ஆக்கம் வெளியாகும்போது எதில் அதிக மகிழ்ச்சி ஏற்படுவதாக கருதுகிறீர்கள்?

அச்சு இதழ்களில் வருகிறபோது கூடுதலாக மகிழ்ச்சிக் கிடைக்கிறது. எனினும் அச்சு இதழ்களில் படித்துவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட வாசகர்களைக் காட்டிலும் இணைய இதழ்களில் குறிப்பாக திண்ணை, பதிவுகள் இதழ்களில் படித்துவிட்டு தொடர்புகொண்டவர்கள் அதிகம். உண்மையைசொல்லபோனால் எனது வளர்ச்சியே இணைய இதழ்களினால் ஏற்பட்ட வளர்ச்சி.

பதிவுகள்:- புலம்பெயர்ந்து வாழும் தமிழ்க் குழந்தைகளுக்கு ஏற்ப கதை, பாட்டு எழுதி வெளியிடும் எண்ணம் உண்டா?

அப்படி ஏதும் எண்ணம், இதுவரை தோன்றவில்லை. உங்கள் கேள்வி அதற்கு வித்திட்டிருக்கிறது.  குழந்தைகளுக்குச் சொல்ல, நிறைய இருக்கிறது. வழக்கமான உத்திகளிலிருந்து மாறுபட்டு கதை பாட்டு எழுதலாம்.

பதிவுகள்:- நீங்கள் எழுதிய படைப்புக்களில் மன நிறைவைத் தந்த ஆக்கமாகக் கருதுவது எதை?

 சிறுகதைகள். துரதிஷ்டவசமாக அவை சரியாக அறியப்படவில்லை. அன்புள்ள அப்பா, அக்கினி காரியம், எமன் அக்காள் கழுதை, பிறகு, நாளை போவேன்..எனக்குப் பிடித்த என்னுடைய சிறுகதைகளில் முக்கியமானவை.

பதிவுகள்:- எழுத்தாளர் என்ற நிலையில் உங்களின் இலட்சியங்கள் என்று…..?

எல்லா எழுத்தாளர்களுக்குமுள்ள இலட்சியங்கள் எனக்கும் இருக்கின்றன. முதலாவதாக ஒரு நல்ல எழுத்தாளனென்று பேர்வாங்கவேண்டும். இரண்டாவது கனவு, Simone de Beauvoir எழுதிய Le Deuxieme Sex  நூலையும், Margurite Yourcenarடைய Memoire d’Adrien நூலையும் தமிழுக்குக் கொண்டுவரவேண்டும். இதைத் தவிர பெரிதாகச் சொல்ல ஒன்றுமில்லை

பதிவுகள்:- உங்களின் நாவல் வெற்றிக்கு மூவர்  காரணம் என்று சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக இணையத்தில் கதையைப் படித்து ஊக்கமூட்டும்வகையில் பின்னூட்டு கொடுத்தவர்கள் குறித்து…?

அவர்கள் எனது நாவல் வாசகர்கள் மட்டுமல்ல எனது சிறுகதைகளையும், கவிதைகளையுங்கூட வாசித்து விட்டு பாராட்டுபவர்கள் எனவே நாவல் எழுதியபோது அவ்வப்போது பாராட்டினாலும் புத்தகமாக வெளிவந்தபிறகுதான் முழுவதுமாக படித்துவிட்டுப் பாராட்டினார்கள். அப்படித்தான் கவிஞர் சதாரமாலதியின் நட்புக் கிடைத்தது. பிறகு மரியதாஸ் என்ற நண்பர்  தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தியவர். இந்த நாவல் எனக்குப் புகழ் சேர்க்கும் என்று உறுதியாக நம்பியவர் அவர்.

பதிவுகள்:- உங்கள் குடும்பத்தைப்பற்றி….?

மனைவி கிரிஜா, சராசரி இந்தியப் பெண்மணி. வணிகம் தொடர்பான எனது பணிகளை அவள் பங்கீடு செய்துகொள்வதால் எழுத்தில் என்னால் கவனம் செலுத்த முடிகிறது. ஒரு மகன் இரண்டு பெண்கள்.மகன் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பாரீஸில் பணிபுரிறார். மூத்த மகள் தனது கணவருடன் அமெரிக்காவில் இருக்கிறாள். இளையவள் வேதியியில் துறையில் இருக்கிறாள்.

———–

உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

‘தேனும் திணை மாவுங்கொண்டு’ விருந்தினர்களை உபசரித்த காலமொன்றுண்டு. ‘தேன்’ என்பதற்கு மதுவென்றும், கள்ளென்றும் பொருள். அருந்தேன், பைந்தேன், நறுந்தேன் என எழுதிக் கை சோர்ந்தவர்களையும் தமிழில் கண்டிருக்கிறோம். ”செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே”. எங்கெல்லாம் இனிமையின் அடர்த்தியும், செறிவும் கொழகொழப்பும் இடம்பெறவேண்டுமோ, அங்கெல்லாம் படிமமாக தேன் இடம் பிடித்துவிடும். ஈழத்திற்கும் ‘மீன்பாடும் தேன் நாடு’ என்றபெயருண்டு. தமிழின் இனிமைக்கு வலு சேர்க்கவும், வக்காலத்தாகவும் மரபு இலக்கியங்களில் தேன் புறங்கை வழிய எடுத்தாளப்பட்டிருக்கிறது. தேனில் அறுபது வகைகளுண்டா, இருக்கலாம் இல்லாமலுமிருக்கலாம், யாமறியேன் பராபரமே! துளியை வெள்ளமாகவும், துகளை மலையாகவும் பருத்துப்பார்த்துப் பழக்கப்பட்ட தமிழருக்கு உயர்வு நவிற்சி அந்நியமே அல்ல. அறிந்தவகையில் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன், புறக்கடை தேன்கூட்டில் எடுத்தத் தேன் புற்றுத் தேன் என்றும் சொல்லக்கேள்வி. ஆக எனது ஞானத்தின்படி நான்குவகைகள். மிச்சமுள்ள ஐம்பத்தாறுவகைக்குக் கண்ணதாசனின் பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் என்ற பாடலை கணக்கிற் சேர்த்துக்கொண்டால்தான் உண்டு, அப்போது கூட அறுபது  தேறாதென்றுதான் நினைக்கிறேன்.

தேனின் மணத்தைக்கொண்டு கொம்புத்தேனா, மலைத்தேனா எனக் கண்டுபிடித்துவிடலாம் என்கிறார்கள். எங்கள் கிராமத்தில் சித்திரை வைகாசிமாதங்களில், குறவர்கள் சும்மாடில் தேன் குடத்தைச் சுமந்துகொண்டு வருவார்கள், ‘சளுக் என்று சுண்டுவிரலையும் மோதிரவிரலையும் தேனில் நனைத்து, ‘மோந்து பாருங்க சாமி’ என்பார்கள். அப்படித்தான் ஒருமுறை மலைத்தேன் என்று கூவி விற்றுக்கொண்டிருந்த பெண்ணை அழைத்து, அம்மா தேனை வாங்கிக்கொண்டிருந்தார். அங்கே வந்த என் அசட்டு மாமா ஒருவர், “எங்கே தேனைக் கொடு முகர்ந்து பார்க்கணும்” என்றார். அவளும் அளந்து ஊற்றிக்கொண்டிருந்த மாகாணியை என் மாமாவிடம் நீட்டினாள். மூக்கை நீட்டிய மாமாவின் முகத்தைப் பார்க்க வேண்டுமே, இருக்கின்ற குடல்மொத்தத்தையும் வெளியிற்கொண்டுவந்து விடும் யோசனையில் ‘உவ்வே’ என்றார். குறத்தியிடமிருந்து, “அய்யா! நீங்க தப்பா எடுத்துகாதீங்க, சித்தேமுன்னே அணிப்பிள்ளையை உரிச்சேன், அதுதான் கையிலே வாசம், மற்றபடி மலைத்தேனுன்னு எங்க சாமி சத்தியமா சொல்லமுடியும்”, என்று அப்பிராணியாக பதில் வந்தது.

மலைத்தேன் எடுக்க வில்லும் அம்புமாக புறப்பட்டுப்போவார்கள். கொம்புத்தேனுக்கு தீப்பந்தம் உதவியதைப் பார்த்த அனுபவம், சுயமுயற்சியாக தேனெடுக்க என்னைத் தூண்டியது. வீட்டுப் பின்புறத்திலிருந்த புளியமரத்தினடியில் நான்கைந்து நண்பர்கள் சகிதம் தாழ்வாக இருந்த கிளையைப்  பிடித்து தொங்கியபடி ஆட்டம்போட தலைக்கு மேலே அடுத்திருந்த கிளையில் தேன்கூடொன்று இருந்தது. தேனிக்கள் ஏதுமில்லை. ஒரு குச்செடுத்து தட்டினால் கீழே விழுந்துவிடுமென்று எங்கள் கும்பலில் ஒருவன் சொல்ல, அவன் பேச்சை நம்பி, பக்கத்திற் கிடந்த சவுக்கு மிலாரை எடுத்து உறியடித் திருவிழா விளையாட்டை நடத்த அடுத்த ஐந்து நிமிடத்தில் தேனடையோடு தேனிக்களும் சேர்ந்தாற்போல முகத்தில் மொத்தென்று விழுந்தன. பயந்து அலறினேன். பையன்களுக்குக் கொண்டாட்டம். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் முகம் பூசனிப்பழம்போல ஊதிப்பெருத்ததின் காரணமாக மூன்று கல் தொலைவிலிருந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தின் கம்பவுண்டர் போட்ட ஊசியின் வலி தேனீக்கள் கொட்டியதைக்காட்டிலும் அதிகம், இன்னமும் நோஸ்ட்டால்ஜியாக கையிலிருக்கிறது.

தேனடையில் மொய்த்திருக்கும் தேனீக்களை, இலட்சமிருக்குமா கோடியிருக்குமா என தோராயமாகக் பந்தயங்கட்டி, அந்த உதவாக்கரை மாமாவை கூட்டிவைந்து எண்ண வைத்திருக்கிறேன், அவரும் வேலைமெனகெட்டு எண்ணிக்கொண்டிருப்பார். எனக்குப் பிடிபடாத மர்மம். இடமில்லை திரும்பிப்போ என்று சொல்லும் வகையில் அவை நடந்துகொண்டதாகவோ, தேனடைவரை வந்து இடமின்றி ஏமாற்றத்துடன் திரும்பும் தேனிக்களைக் கண்டதாகவோ நினைவில்லை, அவைக்களுக்குள் இருக்கிற பரஸ்பஸ ஒற்றுமை வியப்பில் ஆழ்த்துகிறது. தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?/ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!/தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்/ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!” என்பது இறைவன் முகவரியை தொலைத்தவர்களுக்கு திருமூலர் தருவது முகவரித்தேன். தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ? தெரியாது, ஆனால் தேனின் நிறத்தை மேற்கத்தியர்கள் ‘Blonde’ என்று கூறுகிறார்கள். ஐரோப்பிய பெண்களின் அழகு ரகசியம் இந்த ‘Blonde’ல் அடங்கி கிடக்கிறது, கருங்கூந்தலில் ஜொலிப்பதில்லை. பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது தேன்மொழி எந்த நாடாக இருந்தாலும்.

யூசு·ப் ஆறுவயது சிறுவன், தனது பெற்றோர்களுடன் குக்கிராமமஒன்றில் வசித்துவருகிறான். தந்தைக்கு தேன் எடுத்தல் தொழில். ஊரையொட்டிய காடு அவனது அதிசய உலகம், தேனெடுத்து விற்கும் தொழில் புரியும் தந்தையுடன் காட்டிற்குச்சென்று, வானளாவிய மரங்களில் அவர் தேனெடுக்கும் அழகை கண்கள் விரிய அண்ணாந்து பார்த்தபடி வியந்து நிற்கவேண்டும், அதில் பையனுக்கு மிகவும் சந்தோஷம். ஒருநாள் பள்ளியில் பையனிடம் ஒரு பிரதியைக்கொடுத்து வாசிக்கச்சொல்ல, பையன் திக்குகிறான், கேலிசெய்யும் பையன்கள் அது முதல் அவனை தங்கள் விளையாட்டில் சேர்த்துக்கொள்வதில்லை. நாளுக்கு நாள் தேனடைகளின் கண்ணிற்படுவது அரிதாகிபோக அடர்ந்தகாட்டிற்குள் தந்தையும் மகனும் வெகுதூரம் இப்போது ஆபத்தான மலைகளில் தேன்கூடுகளைத்தேடி செல்லவேண்டியிருக்கிற நிலையில் உணர்வுகள் உறைந்துபோக ஊமையாகிறான். ஒளிக்கரைசலில் தெப்பமாக மிதக்கும் அசல் உலகமும்; பதுங்கிய ஒளியும், பசுமையும், குளுமையும் அடர்த்தியாய் விரவிக்கிடக்கிற கானகமும் ஒன்றல்ல வேறுவேறு என மொழியப்படும் உண்மை அவனை மீளமுடியாத அதிர்ச்சியில் நிறுத்துகிறது. அண்மையில் ‘Miel'(தேன்) என்ற பெயரில் பிரெஞ்சில் மொழிபடுத்தப்பட்டு வந்திருக்கும் இத் துருக்கி திரைப்படம் ஒரு கவிதை. குறிப்பாக பையனின் தந்தை எதிர்பாராவிதமாக குதிரையிலிருந்து விழுந்தனால் நிகழும் திடீர் மரணம் சிறுவன் அவனது அம்மா இருவரின் தினசரி வாழ்க்கையில் பறிக்கும் குழியும், இன்மையும் வலிகளைத் தருகின்றன- படத்தின் இயக்குனர் Semih Kaplanoglu.

கசப்பான பூக்களிலிருந்தும் தேனெடுக்கமுடிந்த தேனிக்களாக மனித மனம் இருக்கவேண்டுமென்கிறார் போலந்து எழுத்தாளர் ஒருவர், இயற்கையில் எதுவும் நடக்கலாம், எனக்கு முடிந்ததில்லை, முடவன், கொம்புத்தேனுக்கெல்லாம் ஆசைப்படமுடியாது.

——-

இவ்வார பதிவுகள்: நினைவில் நிற்பவை

தளவாய் சுந்தரம்: காந்திராஜன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்.

ஒரு தேர்ந்த பத்திரிகையாளருக்கேயுரிய சாதுரியத்துடன் ‘தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்”  என்கிற கவர்ச்சிகரமான தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை குறித்து வெகுநாட்களாகவே  எழுதவேண்டும் எழுதவேண்டுமென தள்ளிபோய்விட்டது. தளவாய் எழுத்துக்களை சிலாகிப்பவர்களில் ஒருவர் திரு. இந்திரன். நல்ல எழுத்துக்களை மனம்திறந்து அரிதாக பாராட்டுகிறவர்களில் இந்திரனும் ஒருவர்.  ஆக தளவாய் எழுத்தும் அந்த மரியாதையை தக்கவைத்துக்கொள்ளும் எழுத்தென்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. எதிர்காலத்தில் இதழியலில் இரு பெயர்கள் பெரிதும் பேசப்படும் மெனில் அவற்றுள் ஒன்று திருமாவேலன், மற்றவர் தளவாய் சுந்தரம்.

சரி கட்டுரைக்கு வருகிறேன். கட்டுரை காந்திராஜன் என்ற இளைஞர் பற்றியது. தமிழ் இளைஞர்கள் சூப்பர் ஸ்டார், உலகநாயன் என்று அலைகிறபோது விதிவிலக்காக தமிழ்நாட்டில் பாலை வெக்கையில் மலைகளையும் குகைகளையும் தேடி அலைந்துகொண்டிருப்பவராக, அங்குள்ள குகை ஓவியங்களைக் கண்டு பதிவு செய்பவாராக நண்பர் காந்திராஜன் இருக்கிறார். எனக்கு உதவாக்கரை பேச்சில் மயங்கி உணர்ச்சிக்கு ஆளாகி கரிக்கட்டையாகிப்போகிற அபத்தமான இளைஞர்க¨ளைக்காட்டிலும் இவரைப்போன்றவர்கள் கொண்டாடப்படவேண்டியவர்கள். இது போன்ற மனிதர்களின் உழைப்பும் தியாகமும்  பேசப்பட்டாலன்றி ஓர் இனம் உருப்படாது என்பது எனது கருத்து. எனது இந்தக்கருத்திற்கு இணக்கமாக இருக்கிறது காந்திராஜனைப்பற்றி நண்பர் தளவாய் சுந்தரம் தீட்டியுள்ள சித்திரம். காந்திராஜன் போன்ற இளைஞர்களைத் தேடிப்பிடித்து பயனுள்ள தமிழனாய் இருப்பதெப்படியென்ற பாடத்தை வருடத்திற்கு ஒருமுறையேனும் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தீக்குளிக்கிற உயிர்களுக்கும், வெயிலில் கால்கடுக்க தியேட்டர்வாசலில் காத்துக்கிடக்கும் பிண்டங்களுக்கும் புத்தியில் உரைக்கிறமாதிரி சொல்லவேண்டும். தமிழ்ச்சமுதாயம் காப்பாற்றப்பட்டுவிடும். காந்திராஜனை வனங்குகிறேன், அக்காந்திராஜனை  அறிவதற்கு வாய்ப்பளித்த தளவாயையும் வணங்குகிறேன்.

http://dhalavaisundaram.blogspot.com/2011/03/blog-post.html

எஸ்.ராமகிருஷ்ணன்

பறவை கோணம் தலைப்பில் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் தமது வலைத்தளத்தில் உயிர்மை இதழில் வெளிவந்த தமது பத்தியை மறு பதிவு செய்துள்ளார். பாமாவிஜயம் திரைப்படத்தில் இயக்குனர் பாலச்சந்தர் பாடல்காட்சியொன்றின் நுணுக்கமான அவதானிப்பை கட்டுரை விவரிக்கிறது. அக்கட்டுரையில் பாடலைக் காட்சிப்படுத்திய திறன்குறித்து மட்டும் பேசாமல், அக்காட்சியினூடாக, இன்றைய தமிழ் வாழ்க்கை இழந்துபோன ஒரு குடும்பத்தின் அன்றாடத் தருணங்களை நினைவு கூர்ந்து அவருக்கே உரிய மொழி நடையில் அவரோடு சேர்த்து நம்மையும் ஏக்கத்தில் நிறுத்தியிருக்கிறார். நடிகையர் திலகம் என்று வர்ணிக்கபட்ட சாவித்திரி கணேசனின் பிராப்தம் படமும் அப்படத்தால் அப்பெண்மணிக்கு ஏற்பட்ட வாழ்க்கைச்சரிவும், உயிர்வதையும் கட்டுரையின் பிற்பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.

அ.ராமசாமி:

தனிக்கவனமெடுத்து வாசிக்கும் எழுத்துக்களில் திரு அ.ராமசாமியின் எழுத்துக்களுக்கு பிரத்தியேக இடமுண்டு. தமிழ் இனம், தமிழர் வாழ்வென்ற அக்கறை வெளிப்பாடாக மொழிப்படுத்தப்படும் அவரது கருத்தியல்கள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. தமிழ், தமிழர் என்கிற நிலைப்பாட்டை எப்போதும் முன்வைக்கிற அவரது எழுத்துக்களில் உடன்பாடு-மறுப்பு என்ற இருதரப்பு நியாயங்களையும் பொதுவில் சார்பின்றி வைத்து, தமது கருத்தை தெளிவாகக் கூறுவார். “தமிழ் ஊடகங்களில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் விடுதலையும்”, என்கிற அவரது பதிவு தமிழ் ஊடகங்களில் தமிழ்ச்சமூகத்தில் கேட்பாரற்றுக்கிடந்த மக்களினை சந்தைப்படுத்தும்  அண்மைக்கால இதழியல் அறத்தை சற்று ஆழமாகவே ஆய்வுசெய்திருக்கிறது.

“தினசரிகளின் கவனம் வட்டாரச் செய்திகளாக இருக்கப் பருவ இதழ்களின் கவனம் முழுவதும் அரசியல் மற்றும் திரைப்படத்துறை சார்ந்த ரகசியங்களைத் தேடுவதாக இருக்கின்றன. அரசியல்வாதிகளின் குற்றப் பின்புலம், ஊழல் நடவடிக்கைகள்,திரைப்படத்துறையினரின் அந்தரங்கங்கள், நட்புகள், ஆடம்பர வாழ்க்கை எனக் காட்சிப்படுத்தும் பருவ இதழ்களின் நோக்கம் அவற்றைக் களைய வேண்டும் என்பதாக இல்லை. அதற்கு மாறாக அவற்றைக் காட்சிப்படுத்தி அவற்றையே இயல்புநிலையாகக் காட்டி நம்பச் செய்வதாக இருக்கிறது.”

என்ற அவரது விமர்சனத்தில் உள்ள நியாயத்தை, தமிழைனத்தின் மீது அக்கறைகொண்ட எவரும் புரிந்துகொள்வார்கள்.

http://ramasamywritings.blogspot.com/2011/09/blog-post_6770.html

ஷாஜி

ஷாஜியின் தளத்தில் ஷம்மி கபூர் பற்றி நல்லதொரு கட்டுரை. எழுபதுகளில் இந்தி சினிமாக்கள் சென்னையை ஆக்ரமித்திருந்த நேரம் கல்லூரிகளில் தமிழ் சினிமாக்கள் பற்றி பேசுவதைக்காட்டிலும் இந்தி சினிமாக்கள் குறித்து அதன் நாயகர்கள் பற்றியும், அச்சினிமாக்களை திரையிடும் தியேட்டர்களைக் குறித்தும் பேசுவதே நாகரீகமென்றிருந்த காலம். குறிப்பாக அப்போது ராஜேஷ் கன்னா, தேவ் ஆனந்த், ஷம்மிகபூர், அமிதாபச்சன், தர்மேந்திரா பிறகு கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களென நடிகர் பட்டாளம்; நடிகைகளின் பட்டியலும் நீளமானது. ஷர்மிளா, ரேகா, ஹேமா மாலினி, ஜெயா, மும்தாஜ், ஜீனத் அம்மன் என பலர் இருந்தாலும் எனது அபிமான நடிகை சாய்ஸ் லீனா சந்தாவர்க்கர். ஷம்மி கபூரைப் பற்றி பேசும் இக்கட்டுரை அவரது ஆழமான பல பரிமாணங்களை உரிய சொற்களின் துனையோடு சொல்கிறது.

“இந்திய சினிமாவின் எக்காலத்துக்குமுரிய கலகக்கார நாயகன்தான் ஷம்மி கபூர். சுதந்திரம் கிடைத்து பத்தாண்டுகளுக்கு பின்னரும் இந்தியாவில் நிலவிய முன்னேற்றமின்மை கொண்டுவந்த சமூகப்பிரச்சினைகளுக்கும் அதையொட்டிய இளைஞர்களின் கோபத்துக்கும் அக்காலத்து பதின்பருவத்தினரின் அடக்கப்பட்ட காதல் ஏக்கங்களுக்கும் ஒரு வடிகாலாக அமைந்தது ஷம்மி கபூரின் கலகக்காரனும் கிளர்ச்சிக்காரனுமான திரைநாயகனின் பிம்பம். யா?¥. . டாலி §?¡. . ஸ¥க்கூ..ஸ¥க்கூ. . என்றெல்லாமான விசித்திர வார்த்தைகளில் கோஷமிட்டுக்கொண்டு திரையில் அவர் வெளிப்படுத்திய பித்தும் சுறுசுறுப்பும் இளைஞர்களை உன்மத்தர்களாக்கியது. அவரது பாத்திரங்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப காதலிகளை வெல்பவர்கள். அவரது படங்கள் எப்போதுமே சந்தோஷமாக முடிபவை. ஒரு பதின்பருவத்தினனுக்கு ஆனந்தமடைய வேறு என்ன வேண்டும்? ”

என்கிற கேட்கிற ஷாஜியின் கட்டுரை தவிர்க்கப்பட கூடாதது.

http://www.musicshaji.blogspot.com/