நீலக்கடல்

(நீலக்கடல் – நாவல், நாகரத்தினம் கிருஷ்ணா, சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 -53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083 தொலைபேசி 24896979,55855704 விலை,ரூ250)

உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்பிரபஞ்சன்

பிரஞ்சு ஏகாதிபத்யம், ஆங்கில, போர்ச்சுகீசிய, ஆலந்து ஏகாதிபத்யம் போல, கிழக்கு ஆசிய நாடுகளைச் சுரண்ட தம் கப்பல் சக்திகளை திரட்டிக்கொண்டிருந்த நேரம். இந்திய மிளகை கருப்புத் தங்கம் என்று கண்டுபிடித்தார்கள் அவர்கள். இந்திய முத்துகள், உணவுக்கான மூலப்பொருட்கள் மற்றும் தமிழக நெசவுகளின் நேர்த்தி, தங்கள் தேசத்து கறுப்பு அடிமைகளுக்கு உகக்கும் என்று அவர்கள் கருதிய நீலத் துணிகள் எல்லாம் சேர்ந்து, ஐரோப்பிய வணிகக் கப்பல்கள் கிழக்கை நோக்கி நகர்ந்த காலம், பதினேழாம் நூற்றாண்டு. வியாபாரிகளாக வந்த அவர்கள், அடுத்த ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் ஆள்வோர்கள் ஆயினர். இன்றைய ஆளுனர் என்ற சொல், அவர்கள் உருவாக்கிய கருத்தாக்கந்தான். பதினேழாம் நூற்றாண்டு போர்ச்சாதனம் கப்பல்களாகவே இருந்தது. எந்த நாடு கப்பல்படை அதிகமாகக் கொண்டதோ, அந்த நாடே வல்லரசு எனவாயிற்று.

பிரெஞ்சு தேசத்தின் படைபலம், கப்பல்களைத்தான் நம்பி இருந்தது. வரலாற்று நெடுகிலும் புகழ்பெற்ற கப்பல்படை வீரர்கள், பிரஞ்சு அரசியலில் காணப்படுகிறார்கள். அந்த வரிசையில் வருபவர் இந் நாவலின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான லா போர்தொனே. பிரான்சு தேசத்தின் கடற்கரைப் பட்டணமான சேன் மாலோ, கப்பல் தளபதிகளை, வீரர்களை, வியாபாரிகளை உருவாக்குவதில் மிகவும் புகழ்பெற்றது. அந்தப் பகுதியில் பிறந்தவன் லா போர்தொனே. கப்பல் கட்டுதல், என்பதே அவன் படித்த படிப்பு. பத்தொன்பது வயதில் மொரீஷியஸ் தீவுக்கருகில் தன் உடைந்த கப்பலை, ஓர் இரவு முழுக்கத் தனியாக இருந்து கட்டியவன். தன் அனுபவத்தைப் புத்தகமாக, தன் இருபது வயதில் வெளியிட்டு பணமும் புகழும் அடைந்தவன். கேரளாவில் இருந்த மாஹே எனும் ஊரைப் பிரஞ்சியர்க்குப் போரிட்டுப் பெற்று தந்தவன் இவன். இவனது வாழ்நாள் சாதனை என்பது, தமிழகத் தலைநகர் சென்னையை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றிப் பிரஞ்சியருக்குத் தந்ததுதான்.

இது அவனது மேலோட்டமான குணாம்ச சித்தரிப்புதான். அடிப்படையில், மிகுந்த புகழ் விரும்பியும், தலைமைக்குக் கட்டுபடாத தன்மையும் கொண்டவனாக அவன் இருந்திருக்கிறான். புதுச்சேரி குவர்னர் துயப்பிளக்சுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட, யார் பெரியவர் என்ற அக நெருக்கடி தொடங்கியதன் விளைவாக, கைப்பற்றிய சென்னையை ஆங்கிலேயரிடம் விற்று, பிரஞ்சு வரலாற்றில் பெரும் இழிவை ஏற்படுத்தியவன்.

இன்றைய மொரீஷியஸ் தீவில் வாழ்பவர்களாகிய தமிழர்களில் கணிசமான பேர் அந்தப் பதினேழாம் நூற்றாண்டுகால பகுதியில் குடிபெயர்ந்தவர்கள். சொந்த தேசத்து சாதி அடிமை முறை, மதப் பிணக்கு, சுரண்டும் அமைப்பில் சிக்கி தம் வாழ்வை இழந்தவர்கள் என்று பலரும், தம் பொன்னுலகம் என்று நம்பிய பிரஞ்சு தீவுகளுக்குக் காலடி மண்ணையும் துடைத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள். சற்றே பெரிய புறாக்கூடுகளில் இவர்கள் அடைத்து வைக்கபட்டுக் சகல விதமான வன்முறைக்கும் ஆளானார்கள். தாய்நாடு திரும்புவோம் என்ற நம்பிக்கை இன்றியே சென்ற ‘சொர்க்கத்தில் ‘ தம் உயிரை பலி கொடுத்தார்கள்.

இந்தத் துயர வாழ்க்கையை ஆதாரபூர்வமாகவும் வரலாற்று பிழையற்ற தகவல்களோடும் தருகிறது, நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய இந்த நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்று பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது. பெண்களைக் குறித்த இவர் பார்வை மிக முக்கியமானது. பெண்களை சதையாகவும், காமப்பங்காளிகளாகவும் மட்டுமே பார்க்கபட்டு வந்த பார்வையிலிருந்து விலகி, அவர்களை உயிரும் ரத்தமும் கொண்ட உயிர்களாக, உணர்வும் மனமுங்கொண்ட மனிதர்களாக இவர் சித்தரித்து இருப்பது, இந்த நாவலின் முக்கிய அம்சங்களில் ஒன்று.

மனித மனத்தின் வன்மங்கள், ஆசைகள், கோபங்கள் என்று நீடிக்கிற சகல அடிப்படைக் குணங்களிலும் எழுத்துப் பயணம் செய்யவேண்டும். இலக்கியத்தின் அடிப்படைகளில் மிகவும் முக்கியமான அம்சம், உன்னதங்களைச் சித்தரிப்பது மட்டுமல்ல. மனித குலம் இதுகாறும் ஏற்றுப் போற்றிவந்த சகல கயமைகளையும், சகல போலிமைகளையும் எந்தச் சார்பும் அற்று விசாரணை செய்யவேண்டிய பொறுப்பும் இலக்கியத்துக்கு உள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணா அந்தப் பொறுப்பைக் குறைவற நிறைவேற்றி இருக்கிறார்.

இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவல் : நீலக்கடல் – நூலாய்வு

– மலேசிய எழுத்தாளர் : முனைவர்.ரெ.கார்த்திகேசு.

(முனைவர்ரெ.கார்த்திகேசுஅவர்கள்மலேசியா, பினாங்குநகரைச்சேர்ந்தவர். மலேசியஅறிவியல்பல்கலைக்கழகத்தில்பொதுமக்கள்தகவல்சாதனைத்துறையில்பேராசிரியராகஇருந்துஓய்வுபெற்றவர். மலேசியவானொலி, தொலைக்காட்சியின்முன்னாள்அலுவலர். தமிழ்கூறும்நல்லுலகத்திற்கும்மலேசியாவிலும்நன்கறியப்பட்டசிறுகதைஎழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத்திறனாய்வாளர். அனைத்துலகநாடுகள்பலவற்றில்கலந்துகொண்டுஆய்வுக்கட்டுரைகளைச்சமர்ப்பித்தபெருமைக்கும்உரியவர்இவர்!)

2005 இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை.

தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சிலபுத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. http://www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில் தந்துள்ளார்.

அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.

2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார்.

முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையானபெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.

ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.

பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார்.

மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.

******

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:
‘நீலக்கடல்’ குறிப்பாக... தேவமைந்தன்.

(தேவமைந்தன்ஒருகுறிப்பு:-தேவமைந்தனின்இயற்பெயர். பசுபதி. 11-03-1948ல்கோவையில்பிறந்தஇவர், இந்தியாவில்புதுச்சேரிமாநிலத்தில், புதுச்சேரிஅரசின்தாகூர்கலைக்கல்லூரியில்தமிழ்த்துறைத்தலைவராகப்பணிபுரிந்துதன் 52-ஆம்அகவையில்விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம்ஆண்டுமுதல்தேவமைந்தன்படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில்ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்றமூன்றுநூல்களாகவெளிவந்துள்ளன. 1969 முதல்வானொலிஉரைகள்நிகழ்த்திவருபவர். ‘செந்தமிழும்நாப்பழக்கம்என்றஇவர்தம்வானொலிஉரைத்தொடர்பலமுறைஒலிபரப்பாகிவருகிறது. புலம்பெயர்ந்தோர்இலக்கியம்குறித்துப்புதுவைநடுவண்பல்கலைக்கழகத்தில்தேவமைந்தன்ஆற்றியஉரை, கீற்று.காம்இல்பதிவேற்றப்பட்டுள்ளது. திண்ணை.காம்ல்தொடர்ந்துகவிதைகளும்கட்டுரைகளும்எழுதிவரும்தேவமைந்தனின்கவிதைப்பக்கங்கள்மரத்தடி.காம், புதுச்சேரி.காம், வார்ப்பு.காம், கவிகள்.தமிழ்.நெட், கீற்று.காம்ஆகியவலையேடுகளில்உள்ளன.

http://kalapathy.blogspot.com,
http://360.yahoo.com/pasu2tamil,
http://httpdevamaindhan.blogspot.com
ஆகியவலைப்பூக்கள்இவருடையவை.)

1673 ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன் முதலாகக் காலூன்றத்  தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச் சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட  மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன. 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால்  கையகப்படுத்தப் பட்டன.

1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப் பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த
புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே ‘இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது.

மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் ‘புதுவை வரலாறும் பண்பாடும்’ ‘தமிழகம் புதுவை வரலாறும்  பண்பாடும்’ போன்ற நூல்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதி குறிப்பு முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பல வற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை  அந்த நூல்கள்.

இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் ‘புதுவைக் கலைமகள்’ என்ற ‘மாத சஞ்சிகை’ நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி, வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள  தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன.1916ஆம் ஆண்டில், ‘புதுவைக் கலைமக’ளில், அதன்  ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், ‘ரமணி’ என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு ‘குணாகுணவாராய்ச்சி” (புதுவைக் கலைமகள்– [1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும்.

சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் ‘ரமணி’ போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார்.

“உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்” என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார்.

இந்த அடிப்படையிலேயே – தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா!

நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலானவற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு ‘Les Tamouls A L’lle Maurice – Ramoo Sooria Moorthy,’ ‘Les Indienes A L’lle de France, ‘ ‘A Lougnon – (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)’ முதலான பற்பல நேரடி  ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.

புதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய ‘ஆண்களும் பெண்களும்'(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார்.

பிரான்சுக்குப் போய்வரும் தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப்பட்டிருக்கிறார் பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு ‘பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்’ என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார்.

“என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்!” என்று பிரபஞ்சன் மொழிவது ‘எழுத்தாளர் தர்ம’த்துக்கு ஏற்றதே.

(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து ‘வைகறை’ என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய ‘எழுத்தாளர் தர்மம்’ என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது)

“எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு வந்து சேர்த்தார்கள்?

தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்து விடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை”  என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.

இருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள  நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கட’ல் (திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு [தெமி 1×8] பக்கங்கள் நிரம்பிய நாவல் – முன்னுரைகள் நீங்கலாக…) அந்தப் போலி வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்தி லெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார்.

இப்பொழுது, திண்ணை.காம்-இல் தொடராக வெளிவரும் ‘மாத்தா ஹரி” இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த ‘சொல்தா வாழ்க்கை’யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன.

சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316)

பிரபஞ்சனின் ‘மகாநதி” (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி – விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன், தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல்.

பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம்.

குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன.

தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப் போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை – என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது. அவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர்.

மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன் குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம் செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே.

தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக் காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன.

பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற நாவல் ‘மானுடம் வெல்லும்’ என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது.

இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன்.

(மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி) ‘வானம் வசப்படும்,’ ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது.

இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு – சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே (மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, “மசூதியை இடிக்க வேண்டாம்!” என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(வானம் வசப்படும், பக்.659-668) தவிர, அப்துல் ரகுமான் சாதித்ததை, “துலுக்கர்தமை, தமிழருக்கு வேறாகப் பிரித்துப் பேசியும் எழுதியும் இருக்கிற”(மேற்படி, ப.681-அடிக்குறிப்பு) ஆனந்தரங்கப்பிள்ளை சாதிக்க முடியாமல் மதாம் ழானுக்கும் குவர்னர் துய்ப்ளெக் ஸுக்கும் ஒத்துப்போன வயணமெல்லாம் அடுத்து வரும் பக்கங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.(ப.669+) தினமணி கதிரில் தொடர்ந்து வெளியான ‘நேசம் மறக்கவில்லை நெஞ்சம்’ நாவல், புதுச்சேரியில் விடுதலைக்குப் பின் நிலவி வருகின்ற சொல்தா வாழ்க்கையில், ஓர் எளிய பெண்ணைப் பிரஞ்சுக்குடியுரிமை பெற்ற இளைஞன் ஒருவன் மெய்யாகவே காதலித்த பின்பும் அவளுக்கு நிகழும் அவலத்தைக் காட்டுவது.

இதைத் தொடராக வரும்பொழுது வாசித்தேன். தொடராக வரும்பொழுது நாவலொன்றை வாசிப்பதில் நினைவுத் தொடர்ச்சி சற்றேனும் அற்றுப் போகாமலிராது அல்லவா? புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார்.

1987இல் ‘வாழ்க்கை ஒரு விசாரணை’ நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர்.

எவருக்கும் அஞ்சாதவருங்கூட. “நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்?” என்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன.

பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் ‘சிதறல்கள்(1990)’ நாவலில் காணமுடியும். சென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது.

பாவண்ணனின் ‘ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),’  மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும்.

பாவண்ணன் படைத்த ‘இது வாழ்க்கை அல்ல(1988)’ என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும் உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா?

ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள். புதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் ‘நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14)

“ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால்  வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள் (இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்” என்று சொல்லும் பிரபஞ்சன்(‘உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்’: நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி ‘நீலக்கட’லில் ஐக்கியமாகின்றன.

பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம்  நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது

‘நீலக்கடல்.’ பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து ‘டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் ‘அன்னத் தீவு’ என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் ‘மொரீஸ்’ என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் ‘பிரஞ்சுத் தீவு’ என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். (“பெயரில் என்ன இருக்கிறது!” என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.)

ஆம். “பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது.”(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம்.

தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே. ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் ‘கருமாறி ‘ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள்.

தாந்திரிக நிலையில் “வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி”(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் – கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் – தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் ‘கருமாறிப் பாய்வ’தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல – தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) ‘நீலக்கடல்’ நாவலில்தான் பார்க்க முடிகிறது.

சரி. ‘நீலக்கட’லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். “சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் – நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் – நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis – லூயி துறைமுகம்). கடல் – தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.)

பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் – தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவி களிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது.

யாருக்காகக் காத்திருக்கிறாள்? பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். “தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்.”(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா? காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் – மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள்
தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான்.

“கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?”(ப.13)
என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம்  தருகிறார் நாவலாசிரியர்.ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய “புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது” என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது.

(மத்திய ஆட்சிப்பகுதிகள் – 6: புதுச்சேரி. qu.in ‘மனோரமா இயர்புக்’) ‘நீலக்கடல்’ குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது.

இதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). ‘உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.’ அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார்.

புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை ‘The Serpent Of Paradise’ என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார்.

நீட்ஷே, “சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்?” என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். ‘தாந்திரிக மைதுனம்’ என்ற சடங்கைப் பற்றி (Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது – ‘நீலக்கட’லில் அலை – 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான். ” The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini”(op.cit.p.91) என்பது செர்ரனோவின் பதிவு.

வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது.

‘நீலக்கட’லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ‘சொர்க்கத்தின் சர்ப்ப’த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. ‘நீலக்கட’லில் அமானுஷ்யமானதாக வருவது, ‘சொர்க்கத்தின் சர்ப்பத்’தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

‘நீலக்கடல்’ நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் “பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு… மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்” என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் – தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது.

ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் – தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை – வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவு இல்லம் ஆகிய ‘காஞ்சி மனை’யில், அதன் நிர்வாகி’யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது.

பின்தொடரும் ‘அடங்கல்’ – மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான ‘தினா’ புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. ‘உயிர்ச்சேதம்’ பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது மறைமெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520)

“பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது”(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும்.

இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி – கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் ‘பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி”யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் – சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108)

நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. “நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக”(ப.519) என்பது ஒரு சான்று.

உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால்.

பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!” என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா?”

அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) ‘உளவியலுக்கான சார்பியல்’ (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். ‘The World According To Garp’ என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது.

மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. “தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே.” இதில் ‘தன்’ என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது? இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது… ‘நீலக்கடல்’ நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன? “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்”(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு?

இல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா? எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக(அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் ‘சாமர்த்தியம்.’ எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார்.

‘நீலக்கட’லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் ‘சொஸ்த லிகித’மான ‘தினசரிப்படி சேதிக் குறிப்’பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் ‘Narrative’ என்பதை மனத்துள் கொண்டு ‘நவிலல்’ என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். ‘நீலக்கட’லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் “இந்தப்படிக்குப் படித்துப்போட” முடியாது.

இலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus…pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற ‘Ars Poetica’ என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் ‘Purple Patch’ என்பது. “It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose — especially a descriptive passage — stand out from its context”(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று ‘நீலக்கட’லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள்.

‘நீலக்கட’லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் “நண்பனே!” என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் – கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் – கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது.

புதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்! கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.

(“ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க?”).. “மிசியே! போன்சூருங்க!” என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; “முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு’ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு’ருக்காதே.. இன்னா! கண்டுபுடிச்சிக்கினியா?” (காரைக்காலில் “என்ன புள்ளா!”வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், “தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி!” என்றும் தமிழோசையை “நாங்க படிச்சாச்சு..நீங்க..?” என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

பிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று.

உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):
கிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 – 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083. முதற் பதிப்பு. 2005.

சண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது ‘E’ குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் – 560 038. முதற் பதிப்பு. 1991.

சாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை – 600 041. ஏழாம் பதிப்பு. 1971.

சுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977.

தில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 605 008.

பிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை – 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990)

பிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை – 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993)

பிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.

Abrams, M.H., A Glossary of Literary Terms, Seventh Edition 2001.
Harcourt India Pvt. Ltd. New Delhi. First Published by Harcourt, Inc. 1999.

Serrano, Miguel., The Serpent Of Paradise(The Story of an Indian Pilgrimage),
Translated by Prank MacShane. Bell Books – Vikas Publishing house Pvt Ltd., Delhi 110006. 5 Daryaganj, Ansari Road,1975.
First published in 1974 by Routledge and Kegan Paul Ltd.,London.

நன்றி: ‘நீலக்கடல்நாவலைஎன்மறுவாசிப்புக்கும்உரத்தவாசிப்புக்கும்உட்படுத்தியபுதுச்சேரிஎழுத்தாளர்.ரா.கலாவதிக்கு.

 

புலம் பெயர்ந்தோர் நாவல்கள் : தமிழர் வாழ்நிலையை முன் வைத்து      .முருகேசபாண்டியன்

மனித இனம் காலந்தோறும் உணவு, தங்குமிடம், இயற்கைச் சீற்றம் காரணமாக இடம்விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே இடத்தில் தங்கியிருத்தல் இயற்கைக்கு முரணானது. சமூக வளர்ச்சி என்பது புலம்பெயர்தல் மூலமாகவே நடந்தேறியுள்ளது. தமிழர்கள் இன்று வரையிலும் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். கி.பி. 14ஆம் நூற்றாண்டில் முகமதியரின் ஆளுகைக்குட்பட்ட தமிழகம், தொடர்ந்து நாயக்கர், மராட்டியர், டச்சுக்காரர், பிரெஞ்சுகாரர், ஆங்கிலேயர் எனப் பிறமொழியினரின் ஆட்சியில் பொருளியல் சீரழிவுக்குள்ளானது. வைதீக இந்து சமயம் அதிகாரத்துடன் சமரசம் செய்து கொண்டு தனது மேலாண்மையைத்தக்க வைத்துக்கொண்டது. சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, பால் சமத்துவமின்மை, உழவுத்தொழில் நசிவு காரணமாக விளிம்புநிலையினர் வாழ வழியற்றுத் தவித்தனர். வறுமையினால் அடித்தட்டு மக்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் அடிமைகளாகத் தங்களை விற்றுக்கொண்டனர். இத்தகு சூழலில் பொருளாதாரச் சுரண்டலையும் அரசியல் அதிகாரத்தையும் ஒருங்கே அனுபவிக்க விரும்பும் ஐரோப்பிய நாடுகள் மனிதவளம் மலிவாகக் கிடைக்கும் நாடுகளிலிருந்து மனிதர்களைப் பிற குடியேற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன.

கி.பி.18ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ வழியற்றோர்- தலித்துகள், உடைமை எதுவுமற்ற உடல் உழைப்பவர்கள்-புலம்பெயர்ந்தால் வளமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையில் கப்பலேறினர். சொந்த மண்ணில், சாதிய ரீதியில் தீண்டந்தகாதவராகி, நாயினும் கேவலமாக வாழ்வதைவிட அந்நிய நாட்டில் தன்மானத்துடன் வாழலாம் எனக் கூட்டம் கூட்டமாகப் பயணமாயினர். மொரிஷியஸ், ஃபிஜி, நியூசினி, டச்சுக்கயானா, குரினாம், காங்கோ, தென்னாப்பிரிக்கா, மடகாஸ்கர், பர்மா, மலேயா, இலங்கை போன்ற நாடுகளுக்குப் பல நாட்களுக்குக் கடலில் பயணம் செய்து தரை இறங்கிய தமிழரின் வாழ்நிலை அங்கும் கடினமாக இருந்தது. காடுகளை அழித்தல், சாலைகள் போடுதல், வேளாண்மை செய்தல், கட்டடங்கள் கட்டுதல் போன்ற வேலைகளில் கடுமையாக உழைத்தனர். இவ்வாறு கொத்தடிமைகளாகப் போன தமிழர்களில் பெரும்பாலானோர் மீண்டும் தமிழகத்திற்குத் திரும்பவே இல்லை. அவர்களுடைய வாரிசுகள் தமிழைப் பேச அறியாமல் தமிழ் அடையாளங்களுடன் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த நூற்றாண்டில் ஈழத்துத் தமிழர்களின் புலம்பெயர்வு தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். 1983ஆம் ஆண்டு இனக்கலவரமும் ராணுவத்தாக்குதல்களும், இயக்கங்களின் ஆயுதமேந்திய போராட்டங்களும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழ வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இன்று ஈழத்தமிழரில் நான்கில் ஒருவர் புலம் பெயர்ந்து வாழ்கின்றனர்.

1990க்குப் பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள பிரமாண்டமான வளர்ச்சி, வேலைவாய்ப்பு காரணமாக உயர்கல்வி கற்ற தமிழர்கள் அமெரிக்கா, அரேபியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்நிலை லட்சியமாகக் கொண்டுள்ளனர்.

 எவ்வாறாயினும் புலம்பெயர்ந்தோர் புதிய நாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். என்றாவது ஒருநாள் தாயகம் திரும்புவோம் என்ற மனநிலையுடன் வாழ்ந்த தலைமுறையினருக்கும், புதிய சூழலில் இயல்பாக ஒத்திசைந்து வாழும் இளம் தலைமுறையினருக்குமான முரண் முக்கியமானது. மேலும் புகலிடத்தில் சுய அடையாளம் என்பது தாய்நாட்டைச் சார்ந்திருக்கும் நிலையில், அடையாளச் சிக்கல் தோன்றுகிறது.

புலம்பெயர்தல் என்பது தாயகத்தை மறுவிளக்கம் செய்ய அடிப்படையாக விளங்குகிறது. ஒவ்வொருவருக்குள்ளும் இயல்பாகப் பொதிந்துள்ள இழந்தது குறித்த ஏக்கம், புலம்பெயரும் இடத்தில் ஒப்பீட்டு மனநிலையை உருவாக்குகின்றது. நடப்பில் தான் வாழ நேர்ந்திடும் சமுதாயத்துடனும் பண்பாட்டுச் சூழலுடனும் ஒருவருக்குள்ள உறவுக்கூறுகளை ஆராய்வதன் மூலம், கடந்த காலத்தினுக்கும் நிகழ்காலத்தினுக்குமிடையில் தொடர்பு ஏற்படுகின்றது. ஒப்பாக்கல் மூலம் எல்லாவற்றையும் பூர்வீக நாடு, புகலிட நாடு என்ற முரணில் பண்பாட்டு வேறுபாடுகளை அடையாளப்படுத்துதல் புலம்பெயர்ந்த சூழலில் புகலிட நாட்டில் எதிர்கொண்ட புதிய பழக்கவழக்கங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாகப் புலம்பெயர்ந்த நாட்டுச் சூழல் ஒத்துப்போகாத மனநிலையும், பூர்வீக நாடு குறித்த ஏக்க மனநிலையும் படைப்பாளரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவுகள், பாலுறவு, ஆண்-பெண் உறவு, தட்பவெப்பநிலை, மொழி, உணவு போன்றவற்றில் ஏற்படும் புதிய அனுபவங்கள் சமூக மதிப்பீட்டில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.

புலம் பெயர்ந்தோர் தமது அனுபவங்களைப் பதிவாக்கிடுதல், புலம் பெயர்ந்தோர் பற்றிய நாவல்களைத் தொடுத்து எழுதுதல் எனப் புலப்பெயர்ந்தோர் பற்றிய படைப்புகளைப் பகுக்கலாம். புலம்பெயர்ந்த தமிழர்களின் பெருங்கதையாடலை விவரிக்க ஒப்பீட்டளவில் நாவல் வடிவம் பொருத்தமானது. ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களைத் தேர்ந்தெடுத்துப் புனைவுடன் விவரிக்கும் மொழியானது வாசிப்பில் நெருக்கத்தைத் தரும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் புலம் பெயர்ந்த தமிழர்களின் அவல வாழ்க்கை பொதுப் புத்தியில் பதிவாகியுள்ளது. பிஜித் தீவினில் கரும்புத் தோட்டத்தில் தமிழர் படும் துயரம் பற்றிய பாரதியாரின் கவிதை வரிகளும், இலங்கைக்குத் தேயிலைத் தோட்ட வேலைக்குச் சென்றவர்களின் அவல வாழ்க்கையைத் ‘துன்பக்கேணி’ கதையில் பதிவாக்கியுள்ள புதுமைப்பித்தனின் படைப்பும் தற்செயலானவை அல்ல. அன்றைய தமிழகத்தில் நிலவிய சாதியக் கொடுமையும் வறுமையும்தான் எழுத்தறிவற்ற தமிழர்களைப் பூர்வீகக் கிராமங்களை விட்டுக் கிளம்பச் செய்ததில் முதன்மைக் காரணங்களாக விளங்கின. புலம்பெயரும் இடம் நிச்சயம் தமிழகத்தைவிட மோசமாக இருக்காது என்ற நம்பிக்கையில் ஓரளவு உண்மை உள்ளது. புலம்பெயர்ந்த இடத்தில் எந்த வேலை செய்தாவது வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம் என்ற கனவுடன் சென்ற தமிழர்கள் அங்கேயும் கஷ்டப்பட்டனர்; கோயில், சடங்குகள் என்று பழமையைப் போற்றினர். வைதீக இந்து சமயம் புலம் பெயர்ந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்தியது வரலாற்றின் விநோதம்தான். இத்தகு பின்புலத்தில் நாகரத்தினம் கிருஷ்ணா எழுதியுள்ள ‘நீலக்கடல்’ நாவல் தமிழர் வாழ்க்கையை மறுவாசிப்புச் செய்துள்ளது. கி.பி. 18ஆம் நூற்றாண்டில் மொரிஷியஸ் தீவுக்குப் பிரெஞ்சுக்காரரிடம் ஒப்பந்த அடிமைகளாகவும், அடிமைகளாகவும் கொண்டு செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் துயர வாழ்க்கையை நாவல் சித்தரித்துள்ளது. ஒரு பெண்ணைச் சுற்றி சுழலும் கதை, பல நூற்றாண்டுகளைக் கடந்து புதியதான புனைவில் நீள்கின்றது. கவர்னர் துய்ப்ளே, லா போர்தொ, ஆனந்தரங்கம் பிள்ளை, கனகராய முதலி போன்ற அதிகார வர்க்கத்தினருடன் எளிய மக்களின் வாழ்க்கைக்கு நாவலில் முன்னுரிமை தரப்பட்டுள்ளது. தமிழர்களின் குருதியில் உறைந்துள்ள அடிபணியும் குணமும், விசுவாசமும் நிலவுடைமையாளர்களான பிரெஞ்சுக்காரர் முன் மண்டியிடச் செய்கின்றன. அதிகாரத்தினுக்கு அடங்கியிருத்தலை நல்ல  பண்பாகத் தமிழர் கருதுகின்றனர். காட்டை அழித்தல், கரும்பு வெட்டுதல், சாலை போடுதல், குடியிருப்புக் கட்டுதல் போன்ற வேலைகளில் நாள் முழுக்க வியர்வை சிந்திட கடுமையாக உழைத்திடும் தமிழர்களின் ஆழ்மனத்தில் தமிழகத்திற்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் நம்பிக்கை தருவதாக உள்ளது. பிரெஞ்சுக்காரர்களின் ஒடுக்குமுறையை எதிர்த்த காத்தமுத்து கொல்லப்படுகிறான்; நீலவேணி, கமலம் பாலியல் வல்லுறவுக்குள்ளாகின்றனர்; போல்பிரபுவைத் தமிழனான அனங்கோ வெட்டிக் கொல்கிறான்; பிரெஞ்சுப் பண்ணையாரின் மகனும் கொலை செய்யப்படுகிறான் . . . மொரிஷியஸ் தீவில் மனித உடல்கள் அதிகாரத்தின் பெயரால் அத்து மீறப்படுகின்றன. வன்முறையின் வழியே நிலைபெறும் அதிகாரம், எதிர்காலக் கனவுகளுடன் புலம்பெயர்ந்த தமிழர்களின் இருப்பினைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனித மதிப்பீடுகள் அர்த்தமிழந்து போவதை நாகரத்தினம் மொரிஷியஸ் தீவை முன்வைத்துச் சொல்லியுள்ள நாவல் அழுத்தமான வரலாற்றுப் பதிவாகும்.

மலேயாவிலுள்ள காடுகளை அழித்து, ரப்பர் மரங்களை வளர்த்து, ரப்பர் பால் சேகரிக்கும் வேலை செய்ய தமிழகத்திலிருந்து பல்லாயிரக்கணக்கில் அழைத்துச் செல்லப்பெற்ற தமிழர்களின் புலம்பெயர்வு குறிப்பிடத்தக்கது. இன்று ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்கள் என அழைக்கப்பெறும் பகுதிகள் கடும் வறட்சிக்குள்ளாகக்கூடியன. வானம் பார்த்த பூமியில் வேளாண்மை அடிக்கடி பொய்த்துவிடும். இதனால் வாழ வழியற்ற தமிழர்கள் மலேயாவிற்குப் புலம்பெயந்தனர். அதே வேளையில் வட்டித் தொழில் செய்யும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் மலேயாவுக்குச் சென்றனர். சீனர்களுக்கும் மலேசியருக்கும் வட்டிக்குப் பணம் தந்து பொருளீட்டிய செட்டியார்களும், அவர்களுடைய கடைகளில் வேலை செய்ய வேறு சாதியினரும் பொருளியல் ரீதியில் வளமானவர்கள். மலைக் காடுகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த தமிழர்கள் கடுமையான சுரண்டலுக்குள்ளாயினர்.  பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாயினர். 1960களில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக மலேயாவிலிருந்து லட்சக்கணக்கான தமிழர்கள் தமிழகம் திரும்பினாலும், இன்று வரையிலும் மலேசியா மக்கள் தொகையில் 7% தமிழர்கள்.

மலேயாவில் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பின்வரும் நாவல்கள் பதிவாக்கியுள்ளன; கடலுக்கு அப்பால் (ப. சிங்காரம்), புயலிலே ஒரு தோணி (ப.சிங்காரம்), பால்மரக் காட்டினிலே (அகிலன்), சயாம் மரண ரயில் (ஆர். சண்முகம்), இவைதவிர லங்கா நதிக்கரையில் (ரங்கசாமி) செம்மண்ணில் நீல மலர்கள் (குமரன்) லட்சியப் பாதை (இளம் வழுதி) ஆகிய நாவல்களும் புலம்பெயர் வாழ்வைச் சித்தரித்துள்ளன.

மலேயாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் சாதிய ஏற்றத் தாழ்வுகள், பால் சமத்துவமின்மை, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை மரபு ரீதியில் கண் மூடித்தனமாகப் பின்பற்றினர். அது தமிழ் அடையாளத்தைப் போற்றுவது என்று நம்பினர். இந்நிலையில் இரண்டாம் உலகப் போர் தமிழர்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அடிமைத்தனமும் விசுவாசமும் தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருந்த தமிழனின் பொதுப்பிம்பம் சிதைந்தது. வட்டித் தொழில் பொண்டுகத்தனமானது; வட்டி வசூலிக்கப்போன இடத்தில் யாராவது அடித்தால் வெளியே சொல்லக் கூடாது என்ற நியதியைக் கொண்டிருந்த வட்டித் தொழிலில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் நேதாஜியின் ஆளுமையினால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய ராணுவத்தில் (ஐ. என். ஏ) சேர்ந்து ராணுவப் பயிற்சி பெறுகின்றனர். ராணுவத் தாக்குதல்கள், போருக்குப் பிந்தைய வாழ்நிலை என விரியும்        ப. சிங்காரத்தின் இரு நாவல்களிலும் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வில் இரண்டாம் உலகப்போர் ஏற்படுத்தும் மாற்றங்கள் நுட்பமாகப் பதிவாகியுள்ளன.

புலம்பெயர்ந்த இடத்தில் இப்படித் தான் தமிழ் அடையாளத்துடன் வாழ வேண்டுமென்ற வட்டிக்கடை செட்டியார்களின் மனநிலைக்கும், மாறியுள்ள புதிய சூழலுக்கேற்பப் பொருந்தி வாழ முயலும் இளைய தலைமுறையினருக்குமான முரண்பாட்டினை கடலுக்கு அப்பால் நாவல் விவரித்துள்ளது.

புயலிலே ஒரு தோணி நாவலில் தமிழகத்திலிருந்து மலேயாவிற்குப் போன பாண்டியனின் மனவோட்டமும், இருத்தல் குறித்த அக்கரையும், சமூக மதிப்பீடுகள் பற்றிய அபத்தமும் பதிவாகியுள்ளன.

இரண்டாம் உலகப் போரின் காரணமாக உருவாக்கப்பட்ட ஐ. என்.ஏ.யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெறும் பாண்டியன் அடிப்படையில் சாகசங்களை விரும்புபவன். புலம்பெயர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையில், பல்லாண்டுகளாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த நிலையில் மலேயாவில் வாழும் தமிழர்கள் சீன, மலேசிய, தமிழ் விலைமகளிருடன் தயக்கமின்றி உறவு கொள்கின்றனர். ஒழுக்கம் பற்றிய அக்கறையற்று மது, மாது என அலையும் தமிழரின் இன்னொரு முகம் சுவாரசியமானது. புலம் பெயர்ந்த இடத்தில் வாழ்ந்திடும்போதும் சின்னமங்கலம், மதுரை, திருப்பத்தூர் என விரியும் ஊர் பற்றிய நினைவுகள் ஏக்கமானது. மன நிலையின் வெளிப்பாடு மட்டுமல்ல, கடந்த காலத்தின் வழியே தன்னுடைய இருப்பை மீட்டுருவாக்கம் செய்ய முயலும் முயற்சியில் ஈடுபடுவதாகும். டில்லியிலிருந்து முகமதியர்கள் படையெடுத்து வந்தபோதும், அதைத் தொடர்ந்து நவாபுகள், ராயர்கள், மராட்டியர், நாயக்கர், ஐரோப்பியர் வந்து அதிகாரம் செய்தபோதும் கோழைத்தனமாக ஒடுங்கி இருந்த தமிழரின் ‘மறம்’ ‘வீரம்’ குறித்துக் கேள்விகள் எழும்புகின்றன. வைதிக இந்து சமயத்தின் ஆழமான ஊடுருவல் காரணமாகக் கோவிலை மையமிட்டுச் சீரழிந்து போனதா தமிழரின் வாழ்க்கை என்று யோசிக்க வேண்டியுள்ளது. இத்தகு சூழலில் மலேயாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் ஐ.என்.ஏ.யில் பெருமளவில் சேர்ந்ததும், கொரில்லாப் போராட்டத்தில் பங்கேற்று ஜப்பானுக்கு எதிராகப் போராடியதும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள். மலேசியா, சுமத்ரா, இந்தோனேஷியா  போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறுவதாக விரியும் புயலிலே ஒரு தோணி நாவல் புலம்பெயர்ந்தோர் பற்றித் தமிழில் வெளியான முதல் நாவலாகும். மலேயாவிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் நாவலில் இடம் பெற்றாலும், அவர்கள் படும் அவலங்கள் பதிவாக்கப்படவில்லை. நாவலாசிரியர் ப. சிங்காரம் பல்லாண்டுகள் மலேயாவில் வாழ்ந்தவர். எனவே புலம்பெயர்ந்த இடத்தில் வாழும் பிற மொழியினருடன் தமிழர்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தமிழ்-தமிழர் பற்று வீண் பெருமைகளைப் பகடி செய்துள்ளார். இரண்டாம் உலகப் போர்ச் சூழலும், வல்லரசு நாடுகளின் பொருளாதார வளமும், அரசியல் மேலாதிக்கப் போக்கும் பற்றிய கண்ணோட்டத்தில் தமிழ் அடையாளம் மதிப்பிடப்பெறுவது இந்நாவலின் தனித்துவமாகும். தமிழக வாழ்க்கைச் சூழலுடன் புலம்பெயர்ந்த வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் தன்மை நாவல் முழுக்க நிலவினாலும் அடையாளத்தைத் துறந்து புதிய போக்கினை வரவேற்பது ஏற்புடையதாக உள்ளது.

1970களில் மலேசியத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் கண்டு, அவர்களுடன் பேசிய அகிலன் எழுதிய பால் மரக் காட்டினிலே மேலோட்டமான சம்பவங்களின் தொகுப்பாக உள்ளது. தமிழகத்திலிருந்து கங்காணியினால் ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டுவரப்பட்ட வீரப்பன்-வேலம்மாள் ரப்பர் தோட்ட வேலையில் சிரமப்படுகின்றனர். மலேயா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட பின்னமும் தோட்டமுதலாளிகளான ஆங்கிலேயரும் கிராணிகளும் தொடர்ந்து அதிகாரம் செலுத்துகின்றனர். பாலன், கண்ணம்மா, முருகன், செல்லம்மா போன்றோரைப் பற்றிய பல்வேறு உணர்ச்சிமயமான சம்பவங்கள் உருக்கமான மொழியில் விவரிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்க்கைச் சம்பவங்களின் கோவை மட்டும் நாவலாக முடியாது என்பதற்கு பால்மரக் காட்டினிலே சிறந்த எடுத்துக்காட்டு. புலம் பெயர்ந்து வாழும் தமிழர் பற்றிய ஆழமான விவாதங்களை உருவாக்கிடாமல் செயற்கையான முறையில் சோகத்தையும் கண்ணீரையும் வரவழைக்க முயன்றிருப்பது நாவலின் பலவீனமான அம்சம்.

ஜப்பான் நாடு, 1942ஆம் ஆண்டு சயாமிலிருந்து (தாய்லாந்து) பர்மா வரையிலும் மலை, காடுகளிடையே ரயில்பாதையை நிர்மாணித்தது. இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில் 15,000 போர்க் கைதிகளுடன் ஆசியத் தொழிலாளர்களும் பயன்படுத்தப்பட்டனர். மலேசியாவிலுள்ள ரப்பர் தோட்டங்களில் வேலை பார்த்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சயாம் இருப்பு பாதை நிர்மாணப் பணியில் ஈடுபட்டனர். கடுமையான வேலை, தொற்றுநோய், மலேரியா காய்ச்சல், சத்தற்ற உணவு காரணமாகப் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இறந்தனர். ஓர் ஆய்வின்படி 10% தமிழர்கள்தான் மீண்டும் மலேயாவிற்குத் திரும்பியுள்ளனர். புலம்பெயர்ந்த வாழ்க்கையில், போர்ச்சூழல் காரணமாகக் கடின வேலையில் ஈடுபட்டு மரணமடைந்த தமிழர்களின் அனுபவங்களைத் தொகுத்து சயாம் மரண ரயில் என்ற பெயரில் ஆர். சண்முகம் நாவலாக்கியுள்ளார்.

இருப்புப் பாதை வேலையில் ஈடுபட்டுள்ள மாயா என்ற தமிழ் இளைஞனை முன்னிறுத்திப் பல்வேறு சம்பவங்களை ஓரளவு நம்பகத்தன்மையுடன் நாவல் விவரித்துள்ளது. நோயினால் இறந்த தொழிலாளர்களைக் குப்பையைப் போல அகற்றுதல், தொற்று நோயினால் இறந்தோரை ஒட்டு மொத்தமாக வைத்து எரித்தல், துயரத்தை மறக்க போதையில் மூழ்குதல் போன்றன வாழ்க்கை மதிப்பீட்டைச் சிதைக்கின்றன. பேரழிவிலிருந்து தப்பிய தமிழர்கள் மீண்டும் மலேயாவிற்கு வந்தபோது, பலரின் குடும்பம் அழிவிற்குள்ளாகியிருந்தது. போர்ச் சூழலில் மனித இருப்பு அர்த்தமற்ற நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. கடந்த காலத்தில் புலம் பெயர் வாழ்க்கையைப் பற்றிப் பதிவு செய்ய வேண்டுமென்ற நாவலாசிரியரின் ஆர்வம் காரணமாக மிகைப்படுத்தப்பட்ட சம்பவங்களும், கூறியது கூறல்களும், ஆரவாரமான உணர்ச்சி வெளிப்பாடும் நாவலின் செம்மையைச்   சிதைக்கின்றன. வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்துகின்றன.

மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மா நாட்டினுக்கு 19-ஆம் நூற்றாண்டில் வட்டிக் கடைக்காரர், அரசு அலுவலர், தொழிலாளர் எனப் பல்வேறுபட்ட தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றனர். இரண்டாம் உலகப்போர் காரணமாக அங்கு பொருளியல் ஆதிக்கம் செலுத்திய தமிழர்களின் வாழ்க்கை சிதைவடைந்தது; கூட்டம் கூட்டமாகத் தமிழகம் திரும்பினர். இத்தகைய சூழலைப் பின்புலமாகக் கொண்டு ஹெப்சிபா ஜேசுதாசன் எழுதிய மா னீ நாவல், காட்டிலாகாவில் அதிகாரியான தமிழர் செல்வராஜின் குடும்பத்தினர் பட்ட சிரமங்களை விவரித்துள்ளது. மேலோட்டமான விவரிப்பு, செயற்கையான கதைசொல்லல், நாவல் விவரிப்பினுக்குத் தடையாக உள்ளன.

நவீன வாழ்க்கை நெருக்கடிகள், பொருள் தேடல் காரணமாகத் தமிழகத்திலிருந்து இந்தியாவிற்குள் வேற்றுமொழி பேசும் மாநிலங்களில் வாழ நேர்ந்திடும் தமிழர்களின் வாழ்க்கையும் புலம்பெயர்ந்த தன்மையினைக் கொண்டுள்ளது. பொருளியல் ரீதியில் மிகவும் பின் தங்கிய தமிழர்கள் மும்பை நகருக்குச் சென்று குடியேறுவது ஆண்டுதோறும் பன்மடங்கு அதிகரிக்கின்றது. இத்தகையோரின் வாழ்நிலையை நாஞ்சில் நாடனின் மிதவை நாவல் ஆழமாகச் சித்தரித்துள்ளது. பட்டதாரி இளைஞன் சண்முகம் குடும்ப வறுமையினால், மும்பையிலுள்ள தாராவிப் பகுதிக்குச் செல்கிறான். அங்கு அவனுடைய இருத்தல் போராட்டம் தொடர்கின்றது. மனிதனின் அடிப்படைத் தேவையான கழிவறை வசதிகூட அற்ற பெருநகரச் சூழலில், புலம் பெயர்ந்து வாழ்க்கை துயரத்திற்குள்ளாகிறது. புலம் பெயர்ந்து எல்லாவிதமான அடையாளங்களும் இழந்துபோன நிலையில் மீண்டும் மீண்டும் எந்த அடிப்படையில் நம்பிக்கை கொள்வது என்ற கேள்வியை நாஞ்சில் நாடன் நுட்பமான முறையில் நாவலாக்கியுள்ளார்.

உலகத்தமிழர் வரலாற்றில் ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தனித்துவமானது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திட்ட உயர்சாதி மனோபாவம்மிக்க சைவப் பிள்ளைமார் 20ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் மலேயாவுக்குப் பெருமளவில் புலம்பெயர்ந்து சென்றனர். ரப்பர் தோட்டங்களில் எழுத்தராகப் பணியாற்றிய ஈழத்துத் தமிழர்களின் மனநிலை ஆங்கிலேயரைப் போலிருந்தது. தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்ற, தமிழகத்திலிருந்து சென்றிருந்த தலித்துகளையும் விளிம்பு நிலையினரையும் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் கேவலமாக நடத்தினர். பின்னர் நிலைமை மாறியவுடன் வேறு வழியில்லாமல் ஈழத்தினுக்குக் திரும்பினர். இத்தகைய வளமான யாழ்ப்பாணத்துத் தமிழர்களுக்கு இலங்கையில் மலையகத் தோட்டங்களில் வேலை செய்த தமிழகத்துத் தமிழர்கள் ‘தீண்டப்படாதவராக’த் தோன்றினர். இத்தகு சூழலில் சிங்களவரின் நலனைப் போற்றும் வகையில் இலங்கை அரசாங்கம் இயற்றிய சட்டங்கள், ஈழத்துத் தமிழர்களுக்குப் பாதகமாக ஆயின. 1983 ஆம் ஆண்டு கொழும்புவில் நடைபெற்ற இனக் கலவரத்தில் சுமார் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்; கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகள் அழிக்கப்பட்டன.

தமிழர் நலனைப் பாதுகாக்க விடுதலைப் புலிகள் உள்ளிட்ட விடுதலை இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தினால், பிரச்சினை தீவிரமானது. ராணுவத்தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இயக்கங்களுக்கிடையிலான சகோதரச் சண்டையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால் வாழ வழியற்ற மக்கள் உள்நாட்டிலே அகதி முகாம்களிலும், கொழும்புவிலும் வாழ்கின்றனர். தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களிலும், பிரான்ஸ், கனடா, நார்வே, ஜெர்மனி, ஸ்விஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

எண்பதுகளில் மேலைநாடுகளுக்குப் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் இன்றும் பாரம்பரியமான நெறியுடன் வாழ முயலுகின்றனர். இளைய தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள் தமிழைப் பேச அறியாமல், வெறுமன தமிழ் அடையாளத்துடன் உள்ளனர். நிறவெறிப் பிரச்சினை நிலவும் ஜெர்மனி போன்ற நாடுகளில் கறுத்த தோலும் குட்டையான உருவமும் கொண்ட  ஈழத்தமிழரின் தோற்றம் அந்நியப்படுத்துகிறது. நினைவின் வழியே தமிழன் என்ற அடையாளத்தைப் போற்ற வேண்டிய நெருக்கடி நிலவுகிறது. புலம்பெயர்ந்த நாட்டில் இழிவாகக் கருதப்படும் வேலைகளைச் செய்து வாழ வேண்டிய நிர்ப்பந்தமுள்ளது. முற்றிலும் அந்நியமான பண்பாட்டுச்  சூழலில், பரதேசி போல வாழ்ந்திடும் தமிழரின் அடையாளம் தக்க வைத்துக் கொள்ளப்படுமா என்பது முக்கியமான கேள்வி.

ஈழத்திலுள்ள நெருக்கடியான சூழல்,  நாவல் புனைவில் பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளது. அரச பயங்கரவாதம்  ஒருபுறமும் புலிகளின் மேலாதிக்க நடவடிக்கைகள் இன்னொருபுறமும் பெரும்பாலான படைப்பாளர்களை மௌனியாக்கிவிட்டன. புதியதோர் உலகம்-(கோவிந்தன்), உதிர்வின் ஓசை, அக்னி திரவம் (தேவகாந்தன்), கொரில்லா, ம். . . (ஷோபாசக்தி) போன்ற  நாவல்கள் ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்வைச் சித்தரிப்பதில் முக்கியமானவை. ஷோபாசக்தி உள்பட எல்லாப் படைப்பாளர்களும் எண்பதுகளிலே ஈழத்தை விட்டு வெளியேறிவிட்டவர்கள்; கடந்த இருபதாண்டுகளில் ஈழத்தில் நடைபெறும் விஷயங்கள் குறித்து நேரடி அனுபவம் இல்லாதவர்கள். புலம்பெயர் வாழ்க்கையைப் பற்றிப் பல்வேறு அனுபவங்கள் இருப்பினும், ஈழத்துச் சூழலுக்கு முக்கியத்துவம் தருவதில், புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கைக்குப் படைப்புகளில் குறைவான முக்கியத்துவமே தரப்பட்டுள்ளது. இன்று உலகமெங்கும் அகதிகளாகப் பரவியுள்ள ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்க்கை நாவலாக்கப்படும்போது, அவை உயிர்த்துடிப்புடன் வெளிப்படும்.

1985ஆம் ஆண்டு வெளியான ‘புதியதோர் உலகம்’ கோவிந்தன் என்ற தமிழீழ விடுதலைப் போராளியினால் எழுதப்பெற்ற குறிப்பிடத்தக்க நாவலாகும். விடுதலை இயக்கங்களையும் போராளிகளையும் புனிதர்களாகக் கருதி விமர்சனமற்று ஏற்ற போக்கினை நாவல் கேள்விக்குள்ளாக்கியது. இயக்கங்களுக்கிடையில் நடைபெற்ற சகோதரச் சண்டையினால் பாதிக்கப்பட்ட போராளிகள் பற்றிய விவாதத்தை நாவல் முன்னிறுத்தியது. ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்து தமிழகத்தில் தங்கி முகாம்களில் ஆயுதப்பயிற்சி பெற்ற குழுவினர், தமக்குள்ளேயே ராணுவக் கட்டுப்பாட்டினை விதித்ததுடன், தமது போராட்டத்திற்குப் பின்புலமாக விளங்கிய தமிழக மக்களையும் பகைத்துக் கொள்ளும் சூழலை உருவாக்கினர். ஈழத்திலிருந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்காகத் தமிழகம் வந்த சங்கர் என்ற இளைஞனின் பார்வையில் கதை விரிகின்றது. முகாம்களில் நடைபெறும் சித்ரவதைகள், தலைவர்களின் அராஜக மனநிலை, அமைப்பினுள் நிலவும் சர்வாதிகாரப் போக்கு போன்றவற்றை நாவல் சித்தரித்துள்ளது. முகாமிலிருந்து சித்ரவதை தாங்காமல் தப்பியோடிய போராளிக்கு அடைக்கலம் தந்த தமிழகத்திலுள்ள பண்ணையாரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர் சுட வந்ததைப் பொய்யான தகவலை இயக்கத்தினர் பரப்புகின்றனர். புலம்பெயர்ந்து வாழும் போராளிகளின் தமிழகம் பற்றிய அலட்சிய மனப்பான்மையை நாவலில் இருந்து அறியமுடிகின்றது. எதிர் காலத்தில் ஈழ விடுதலை இயக்கங்கள், பின்புலமாக இருக்கும் தமிழக மக்களின் ஆதரவை இழக்கப் போகின்றன என்பதைக் கோவிந்தன் சூசகமாக உணர்த்தியுள்ளார். தாய்மண்ணில் சிங்கள ராணுவத்தை எதிர்த்துப் போராடுவதற்காகப் புலம்பெயர்ந்து தமிழகம் வந்த இயக்கத்தினரின் செயற்பாடுகள் பற்றிய நாவல், வெளிவந்தபோது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது; ஒருவகையில் எச்சரிக்கையும் செய்தது.

தேவகாந்தனின் அக்னி திரவம் (2000), உதிர்வின் ஓசை (2001) ஆகிய இருநாவல்களும் யாதார்த்தம் தளத்தில் ஈழமக்களின் துயரங்களையும் புலம்பெயர்ந்த வாழ்வின் அவலங்களையும் பதி வாக்கியுள்ளன. யாழ்பாணத்துக்கு அருகிலுள்ள சிறிய தீவான நயினா தீவில்வசிக்கும் குடும்பம், இனப் பிரச்சினைகளினால் சீரழிக்கின்றது. எளிமையாகவும் வளமான மதிப்பீடுகளுடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பத்தின்       சிதைவு குறியீடாக நாவலில் வெளிப்பட்டுள்ளது. ராஜலட்சுமி- சுதந்திரன் ஆகிய   இருவருக்கிடையில் நடைபெறவிருந்த திருமணம் தடைபட, இயக்கத்தில் சேர்ந்த சுதந்திரன் ஆயுதப் பயிற்சிக்காகத் தமிழகம் செல்கிறான். அங்கிருந்து வெளிநாடு செல்லுபவன், பின்னர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறான். ராஜியும் இந்தியாவிற்குப் போகிறாள். தமிழகத்து அகதிகள் முகாம்களிலும், வெளியிலும் தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கை, பொருளியல் பிரச்சினைகளாலும் குடும்ப உறவுகளினாலும் பெரிதும் சிதைவடைகின்றது.

சுதந்திரனின் நடத்தையால் எரிச்சலுற்ற ராஜலட்சுமி, அவனுடன் வெளிநாட்டிற்குப் போக மறுத்தவுடன், அதனால் எரிச்சலுற்றவன் ஷீலா என்றொரு ஈழத்துப் பெண்ணை அழைத்துக் கொண்டு போகிறான். ஷீலா சில ஆண்டுகள் கடந்த பிறகு சுதந்திரனிடமிருந்து பிரிந்து வேற்று நாட்டவருடன் சேர்ந்து வாழ்கிறாள். புலம் பெயர் வாழ்க்கையில் வெளிநாட்டிற்குப் போனால் வசதியாக வாழலாம் என்ற கனவு அகதிகள் பலருக்கும் இருக்கிறது. ஆனால் குடும்பத்தினர் வெவ்வேறு நாடுகளில் வாழநேரிடுகிறது. மீண்டும் ஒன்றுசேர்தல் என்பது குடும்பத்தினரைப் பொறுத்தவரையில் அபூர்வமானது. எனவே போர் முடிந்தவுடன் ஊருக்குத் திரும்பி விடலாம் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையுடனே அகதிகள் புலம் பெயர்ந்த நாட்டில் வாழ வேண்டியுள்ளது.

ராணுவத்தினரின் தாக்குதல் காரணமாக ஈழத்துத் தமிழர்கள் தங்கள் சொந்தநாட்டிலே புலம்பெயர்ந்து குடும்பத்துடன் முகாம்களில் படும் சிரமங்களை தேவகாந்தன் பதிவாக்கியுள்ளார்.

சூழலில்வெக்கைகாரணமாககால்பதிக்கநாடுஇல்லாமல், அடையாளமிழந்துஅகதியாகஅறியப்படும்நிலையிலும்ஈழத்துச்சைவவேளாளர்மனநிலைஎப்படியெல்லாம்தந்திரமாகச்செயற்படுகிறதுஎன்பதனைராசேந்திரன்அசாம்மாநிலப்பெண்ணின்திருமணத்தைஅவளதுதாயார்சிதைப்பதிலிருந்துஅறியமுடிகிறது. நிலம், வீடு, ஊர்என்றுஒருவட்டத்திற்குள்உறைந்திருந்தயாழ்ப்பாணத்தமிழர்களின்கட்டுக்கோப்பானசமூகம்சிதைவடைந்து, இன்றுஉலகமெங்கும்அகதிகளாய்ப்பரவியுள்ளதைதேவகாந்தன்துயரமொழியில்விவரித்துள்ளார். எனினும்ஈழத்துஅரசியல்குறித்துப்பருண்மையானவிமர்சனத்தைத்தவிர்த்துவிட்டுநாவல்கள்புனையப்பட்டிருப்பதுபலவீனமானஅம்சம்.

புலம்பெயர்தலின் வலியும் வேதனையும், மொழியும் பண்பாடும் வேறுபட்ட நாடுகளில் எவ்வாறு வெளிப்படும் என்பதனை விமர்சன நோக்கில் ஷோபாசக்தியின் கொரில்லா, ம். . . ஆகிய இருநாவல்களின் மூலம் அறிய முடிகின்றது. கதையாடலின் மூலம் கண்ணீரையும் துயரத்தையும் வரவழைப்பது ஷோபாசக்தியின் நோக்கமல்ல செறிந்த மொழியில் விவரணப் படம் போலக் காட்சிகள் கோக்கப்பட்டு விவாதத்தைத் தூண்டுகின்றன. யாழ்ப்பாணத்துக்கு அருகிலுள்ள குஞ்சன் வயல் என்ற கடற்கரைக் கிராமத்தைச் சார்ந்த ரொக்கிராஜ் பாரிஸ் மாநகரிலுள்ள அலுவலகத்திற்குப் புகலிட அனுமதி வேண்டி அனுப்பும் விண்ணப்பத்துடன் கொரில்லா நாவல் தொடங்குகிறது. விவிலிய நூலின் வசனங்கள் போல இலக்கமிடப்பட்டுள்ள பத்திகளின் வழியே விரியும் கதை, சத்தியமான விஷயங்களை முன்வைப்பதாக உள்ளது. அகதி உரிமை வேண்டிமன்றாடும் ரொக்கிராஜின் வாழ்க்கை விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையது.  இயக்கத்தில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்று போராட முன் வருகிறான். கிராமத்தில் மணல் அள்ளும் பிரச்சினையில் துணிந்து செயற்படமுயன்று மேலிடத்தாருடன் முரண்படுகிறான். அதற்காக இயக்கப் பொறுப்பாளரால் சித்திரவதைக்குள்ளாகிறான். ஊரில் இருக்க முடியாத நிலையில் கொழும்புக்குப் போய் அங்கிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸ் நாட்டுக்குள் கள்ளத்தனமாக நுழையும் ரொக்கிராஜுவுக்குக் கதை சொல்லி, ரொக்கியுடன் அறிமுகமேற்படுகிறது. எண்பதுகளின் தொடக்கத்தில் இனக்கலவரம் தொடங்கும் முன்னமே அகதியாகத் தனது மனைவி ஜீவராணியுடன் பிரான்ஸுக்கு வந்தவர் லொக்கா. அகதிகள் தங்கியிருக்கும் வசதிகுறைவான கட்டிடத்தில் வசிக்கும் கதை சொல்லிக்கும் ரொக்கிராஜுக்குமிடையிலான முரண்பாடுகள் புலம் பெயர்ந்த வாழ்வின் விமர்சனங்கள். ஜீவராணி அரேபிய இளைஞரான ரிடாவுடன் பாலுறவு கொள்கிறாள். இதனால் கோபமடைந்த லொக்கா அவளைக் குத்திக்கொள்கிறார். புலம் பெயர்ந்த வாழ்க்கையில் பெண்களுக்கு மரபு வழியில் ஏற்படும் பண்பாட்டு அழுத்தங்கள் பெரிய அளவில் இல்லை. ஒரு விதத்தில் பெண் மரபுத்தளையிலிருந்து விடுபடும் சூழலில் ஆண் X பெண் முரணில் புதிய பார்வையை ஏற்றுக்கொள்கிறாள். ஈழம் போன்ற சாதியம் தோய்ந்த சமூகப் பின்புலத்தில் கட்டுப்பாடுகளுடன் வாழநேரிட்ட பெண்களுக்கான ஒடுக்குமுறைகள், புலம்பெயர்ந்த சூழலில் தளர்கின்றன. குடும்பத்திற்கு வெளியே வேற்றுநாட்டு ஆளுடன்கூட உறவு கொள்வது அவளுக்கு ஏற்புடையதாகின்றது. ஜீவராணியின் பாலுறவு விழைவைப் புலம்பெயர்ந்த நாட்டுச் சூழலுடன் பொருத்திக் காண வேண்டியது அவசியம்.

கதைசொல்லியின் பங்கேற்புடன் நடைபெறவிருக்கும் சபாலிங்கத்தின் கொலை வாசிப்பில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. சபாலிங்கம் கொல்லப்படவிருக்கும் சூழலைத்  தேர்ந்த மொழியில் விவரித்துள்ள ஷோபா சக்தியின் எழுத்து, புலம்பெயர்ந்தோர் நாவலில் தனித்துவமானது சொந்த நாட்டிலும் வாழவழியற்ற சூழல் புலம்பெயர்ந்த பிரான்ஸிலும், இருப்புக்கான அவல நிலை என அல்லல்படும் ஈழத்தமிழரின் அவலத்தை ஷோபாசக்தி வீர்யமாகப் பதிவாக்கியுள்ளார்.

ஷோபா சக்தியின் இரண்டாவது நாவலான ‘ம்’ இயக்க அரசியல், பேரினவாத அரசியல் காரணமாக அகதியாகப் புலம்பெயர்ந்து வாழ்கின்றவனின் வாழ்க்கைக் கதையானது பெருங்கதையாடல்களாக விரிந்துள்ளது. ஈழத்தில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்ட  பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணம் தொடங்கி ஈழத்தை முன்னிறுத்தி விரிந்திடும் பேச்சுகளும் மறுபேச்சுகளும் அளவற்றவை. ஏற்கனவே நடந்த சம்பவங்களைக் கதைகளாக விவரிக்கப்படும்போது, ‘ம். . ம்’ எனக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் கதை சொல்லியின் பதினான்கு வயதான மகள் நிறமி கர்ப்பமான சம்பவம் கதைகளினூடே ஒரு கதையை விரிகின்றது. நிறமியின் கர்ப்பத்திற்குத் தானே காரணம் என்ற கதைசொல்லியின் மனநிலையையும் உரையையும் வெறும் ‘ம்’ என்று கேட்டு விடாதவாறு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. தியாகம் X துரோகம், வெற்றி X தோல்வி என்ற முரண்பட்ட இலக்குகளில் இயங்கிவிடும் நுண் அரசியல் அழுத்தமானது. கடந்த முப்பதாண்டு கால ஈழத்து அரசியலைக் குருதியின் வழியே மனிதக் கொலைகளை முன்னிறுத்தி ஷோபா சக்தி விவரித்திட அவருக்கு ஐரோப்பியப் பின்புலம் பயன்பட்டுள்ளது. கொரில்லா, ம் ஆகிய இரு நாவல்களின் ஆக்கத்திலும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வலியும் உபாதைகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன; ஈழத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் தமிழரின் இருப்புக் குறித்து விசாரணையை முன்னிறுத்தும் அவ்விரு நாவல்களும் முக்கியமானவை. சாதி, சமயம், மொழி, பண்பாடு என வடிவமைக்கப்பட்டிருக்கும். தமிழரின் புலம்பெயர்வு வாழ்க்கை ஒவ்வொரு   கணமும் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக ஈழத்தில் போர் நிகழும் வரையில் புலம்பெயர்ந்த இடத்தில் சுய அடையாளத்தைப் பேணுதல் தீவிரமாக நடைப்பெறும். புலம்பெயர்ந்த நாட்டில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்கின்றவர்களும் வேறுபல காரணங்களினால் தனித்த அடையாளத்துடன் வாழ வேண்டிய தேவையேற்படுகின்றது. வேலை வாய்ப்பு தேடி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரேபியா நாடுகள் போன்றவற்றுக்குப் புலம் பெயர்ந்திடும் தமிழர்களுக்குப் பெரிய அடையாளச் சிக்கல் எதுவுமில்லை. புலம்பெயர்ந்த நாட்டிலே குழந்தை பெற்றுக்கொண்டு, அங்கிருக்கும் மக்கள் உச்சரிப்பதற்கேற்றவாறு பெயரைக் குழந்தைக்கு வைத்து, அக்குழந்தையுடன் மறந்தும் தமிழ் பேசாமல் வாழும் தம்பதியினரின் கதைகளில் சுவாரசியம் எதுவுமில்லை; இழந்தது குறித்து வலி எதுவு மற்ற நிலையில் வேகம் வேகமாகத் தங்கள் அடையாளத்தை அழித்திட விழைவோர் பற்றிச் சொல்ல எதுவுமில்லை. ஈழத்தில் மக்கள் நல்வாழ்வினுக்காகவும் வளமான எதிர்காலத்தினுக்காகவும் இயக்கப் போராளிகள் அரசப் பயங்கரவாதத்துடன் போராடி மடியும் வேளையில் புலம்பெயர்ந்த நாட்டில் வளமாக வாழும் தமிழர்களின் பிரக்ஞையில் குற்ற மனமும் வலியும் ஏற்படுவது தவிர்க்கவியலாதன. மேலும் தமிழ் அடையாளத்துடன் இருப்பதா அல்லது துறப்பதா என்ற கேள்வி தோன்றும். இத்தகைய சூழலை நாவலில் பதிவு செய்வதற்கான தேவையும் இன்று ஏற்பட்டுள்ளது.

கடந்த பல நூற்றாண்டுகளாகப் பொருள், அரசியல், மதம், சாதி காரணமாகப் புலம் பெயர்ந்து வேறுநாடுகளில் வாழ வேண்டிய நெருக்கடிக்குள்ளான தமிழர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்துள்ள நாவல்கள் மிகக் குறைவாகவே தமிழில் உள்ளன. உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழர்கள் தங்களுடைய புலம்பெயர்ந்து வாழும் அனுபவங்களைப் படைப்புகளாக மாற்றுவதில் பெரிதும் அக்கறை கொள்ளவில்லை. ப.சிங்காரம், ஷோபா சக்தி போன்ற படைப்பாளர்களின் நாவல்கள் புலம் பெயர்ந்த தமிழரின் வாழ்க்கையை, விசாரணை செய்வதுடன், தமிழ் அடையாளம் குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளன. ஈழத்துத் தமிழரின் அண்மைக்காலப் புலம் பெயர்வு வாழ்க்கை பதிவாகிடும்போது தமிழ் நாவலுக்குப் புதிய பரிமாணம் உருவாகும். தமிழ் என்ற மொழி அரசியலின் வெளி இன்னும் பன்மடங்கு விரியும்.

நன்றி: உயிர்மை

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s