அல்பெர் கமுய் இறப்புக்கு KGB காரணமா?

1960ம் ஆண்டு நடந்த கார் விபத்தொன்றில் அல்பெர் கமுய் இறந்தாரென்பதை நம்மில் பலரும் அறிவோம். அக் கார்விபத்துக்குக் காரணம் முன்னாள் சோவியத் யூனியனின் உளவுபடை என்றால் நம்புவீர்களா? நம்பவேண்டும் என்கிறார் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கல்வியாளர் Giovanni Catelli. கிழக்கு ஐரோப்பிய விவகாரங்களை கரைத்துக்குடித்தவர் என்பதால், இத்தாலி நாட்டின் தினசரியான Il Corriere Della Sara பிரசரித்துள்ள இவருடைய செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Giovanni Catelliயின் தகவலுக்கு ஆதாரம் செக் நாட்டுக் கவிஞர் Jan Zabranna, இவர் தமது Lifetime நூலில் KGBக்கு நெருக்கமான ரஷ்ய நண்பரைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஆக இந்த ரஷ்யரின் தகவற்படி அப்போதைய ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Chepilov சொந்தத் தலையீட்டில், அல்பெர் கமுய் பயணம்செய்யவிருந்த வாகனத்தின் டயர் சேதப்படுத்தப்பட்டதெனவும், பின்னர் அதிவேகமாக செல்லுத்தப்பட்ட அக்கார் சதிகாரர்களின் திட்டபடி விபத்துக்குள்ளானதென்றும் கூறுகிறார்கள். ரஷ்ய அமைச்சருக்கும் அல்பெர் கமுய்க்கும் அப்படியென்ன பெரிய பகை? பம்பாய் தாதாக்களுக்கும் அண்மையில் கொலையுண்ட பத்திரிகையாளருக்கும் என்ன பகையோ அதுவேதான். 1957ம் ஆண்டு Franc-Tireurs என்ற பிரெஞ்சு தினசரியில் கமுய் 1956ம் ஆண்டு ஹங்கேரி எழுச்சியை சோவியத் படை இரும்புக்கரம்கொண்டு அடக்கியதற்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை வெளிப்படையாகக் குற்றம் சாட்டி எழுதியிருந்ததாகவும், அப்பிரச்சினையே ரஷ்ய அமைச்சரின் கோபத்தைத் தூண்டியதாகவும் சொல்லப்படுகிறது.

அண்மையில் அல்பெர் கமுய்யின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய பிரெஞ்சு தத்துவவாதி Michel Onfray இச்செய்தியை மறுக்கிறார். ரஷ்யர்கள் அல்பெர் கமுய் மீது கோபம் கொண்டிருந்ததென்னவோ உண்மைதான் என்றாலும் அவர்கள்தான் விபத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதை தான் நம்பமாட்டேன் என்கிறார். தமது மறுப்புக்கு அவர் சொல்லும் காரணம், அன்றைய தினம் கமுய் இரயிலில் பயணம் செய்யத் தீர்மானித்து பயணச்சீட்டை வாங்கிவைத்திருந்தாரென்றும், கடைசி நிமிடத்தில் இரயிற் பயணத்தை ரத்து செய்து தம்முடைய பதிப்பாளர் சகோதரர் மகனுடன் தற்செயலாக பயணம் செய்ய நேரிட்டது என்கிறார். தவிர பயணம் செய்த வாகனம் அல்பெர் கமுய் உடையது அல்லவென்றும், அவரது சொந்த வாகனத்தை அன்றைக்குத் தொடும் எண்ணம் அவருக்கு துளியுமில்லை என்கிறார்.

ஆக அல்பெர் கமுய்யின் அகால மரணத்தின் புதிர் நீடிக்கவே செய்கிறது. அவர் புனைவுகள் அனைத்துமே மரணத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிப்பவை. அடுத்து ரஷ்யாவுடனான பகை திடீரென்று முளைத்ததல்ல. கிழக்கு பெர்லினில் -(1953) ஆரம்பித்த காம்ப்ரேட்டுகளுடனான பகை புதாபெஸ்டுவரை (1956) தொடர்ந்தது. இருவருமே – டெத்திஸமும் கம்யூனிஸமும் கமுய்க்கு எதிராக காய் நகர்த்தியிருக்கக்கூடும் என்பதுங்கூட ஓர் அபத்தமான உண்மைதான்.

காஃப்காவின் தீரா ‘வழக்கு’

பிரான்ஸ் காஃப்காவின் ‘வழக்கு”(Der Prozess- The Trial) புனைகதையின் நாயகன் ஜோசெப் K. போன்றே, நாவலின் மூலாதாரமான கையெழுத்து பிரதியும் விநோதமான வழக்கில் சிக்குண்டு தவிக்கிறது. ஏவா ஹோப் என்ற டெல் அவிவ் (Tel Aviv) நகரவாசியான பெண்மணியின் வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு பின்னிரவு ஒருமணி அளவில் அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்திருக்கிறது. ‘வீட்டிற்குள் திருடனிருக்கிறான்  உடனே வரவேண்டும், என்ற பதட்டக் குரலை நம்பி சைரன் சகிதம் காவல்துறையினர் வந்திறங்கியபோது திருடவந்தவன் மாயமாய் மறைந்திருந்தான். திருமதி ஏவா ஹோப் வீட்டில் நுழைந்த கள்வனுக்குப்  பொன்னோ பொருளோ நோக்கமல்ல. பின்னே தமிழ் மரபில் திருடவந்தது இதயத்தை என்றெல்லால் கற்பனை வேண்டாம், ஏனெனில் பெண்மணிக்கு 72 வயது. களவாணிப்பயல் பின் எதற்காக வந்தான் எனக் கேட்கிறீர்கள் இல்லையா? இந்த எண்ணம் உள்ளூர் பொலீசாருக்கும் வந்திருக்க வேண்டும். பெண்மணியைக் கேட்டிருக்கிறார்கள். கிடைத்த பதில்: காஃப்காவின் எஞ்சியிருக்கிற கையெழுத்து பிரதிகளை திருட வந்திருக்கலாம் என்பது. திருமதி ஏவா ஹோப், காஃப்கா விட்டுச்சென்ற எழுத்துக்களின் இன்றைய வாரிசுதாரர்.

செக்நாட்டைச் சேர்ந்த நண்பரும் எழுத்தாளருமான மாக்ஸ் ப்ரோடிடம்(Max Brod) முடிக்கப்படாத தமது ‘The Trial’ நாவலின் கையெழுத்து பிரதியை, காஃப்கா இறுதிக்காலத்தில் ஒப்படைத்திருந்தார். மாக்ஸ் ப்ரோட் அப்பிரதியைப் தமது பெண் செயலாளருக்குப் பரிசாகக் கொடுத்தார். எஸ்த்தெர் ஹோப் என்ற பெயர்கொண்ட அப்பெண்மணி பின்னாளில் தமது பெண்களுக்கு உரிமைசெய்து ஆவணப்படுத்த அவர்களில் ஒருத்தி 1988ம் ஆண்டு ஜெர்மன் அரசாங்கத்தின் நூலகத்திற்கு நல்ல விலைக்கு விற்றார். ஆக தற்போது ஜெர்மன் நாட்டில் மார்பக் அம் நெக்கர்(Marbach am Neckar) நகரின் நூலகத்தில் அது பாதுகாப்பாக இருக்கிறது. காஃப்காவும், மாக்ஸ் ப்ரோடும் நெருங்கிய சினேகிதர்கள். காசநோயில் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் காஃப்கா, 1824ஆம் ஆண்டு இறந்தபோது, நூலின் கையெழுத்துப் பிரதியை தாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எரித்துவிடுவாரென மனமார நம்பினார். நண்பரிடம் அதற்கான உறுதிமொழியைக் காஃப்கா கேட்டுப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. காஃப்காவின் இறுதி ஆசையை நண்பர் நிறைவேற்றவில்லை. 1939ம் ஆண்டு பிராகு (Prague) நகரம் நாஜிப் படையினரால் கைப்பற்றபட்ட நிலையில் அங்கிருந்து தப்பிய காஃப்காவின் நண்பர், எஞ்சியிருந்த காஃப்கா படைப்புகளை மறக்காமல் உடன்கொண்டுசென்றிருக்கிறார். மாக்ஸ் ப்ரோடு 1968ம் ஆண்டு இறந்ததும் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல காஃப்காவின் கையெழுத்து பிரதிகள் அனைத்தும் அவரது விருப்பப்படி எஸ்த்தெர் ஹோப் என்ற செயலாளரை அடைகின்றன. அவரது இறப்புக்குப் பிறகு, செயலாளர் பெண்மணியின் மகள்களிருவரும் காஃப்கா படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

காஃப்கா எழுத்துக்களின் தற்போதைய வாரிசுதாரர் இஸ்ரேலிய பிரஜை. ‘ஜெர்மன் வசமிருக்கும் ‘The Trial’ புனைவின் கையெழுத்துப் பிரதியை, தம்மிடம் ஒப்படைக்கபடவேண்டுமென இஸ்ரேல் நாட்டு தேசிய நூலகம் அணமையில் கேட்டுக்கொண்டுள்ளது. ‘ஆவணப் பாதுகாப்புச்சட்டத்தின்படி தகுந்த வகையில் கையெழுத்துப் பிரதி முன்னதாக அரசின் பரிசீலனைக்கு உட்படுத்தபட்டு அவற்றிலுள்ள வரலாற்று தகவல்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும், அது தவிர ஆவணத்தின் முக்கியத்துவம் கருதி, பாதுகாப்பிற்காக வேண்டிய நகல்களை எடுத்தபின்பே கையெழுத்துப்பிரதியை வெளியிற் கொண்டு சென்றிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறெதுவும் செய்யப்படாமலேயே ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதி விற்கப்பட்டிருக்கிறதென்பது இஸ்ரேல் சொல்லும் காரணம். ஆனால் காஃப்கா யூதரேத் தவிர இஸ்ரேலியரல்ல, தாய்மொழியும் ஜெர்மன். காஃப்கா படைப்புகள் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டன, எனினும் இஸ்ரேல் நாட்டின் தேசிய நூலக இயக்குனர் Shamuel Har Noy, அந்நூலிலுள்ள சில வரலாற்று பிழைகள் திருத்தப்படவேண்டுமென்கிறார். காஃப்காவின் நண்பரான ப்ரோடுவின் இறுதி விருப்பத்தை முன்வைத்தும் இயக்குனர் சிலபிரச்சினைகளை எழுப்புகிறார். காஃப்காவின் பிற கையெழுத்துப்பிரதிகளைப் பற்றிய ப்ரோடுவின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்க அவர் விரும்பியதில்லையெனவும், இஸ்ரேலைத் தவிர வேறு நாட்டிற்கு மூலப்பிரதி கொண்டுசெல்லப்படுவதை ஒருக்காலும் அவர் ஏற்கமாட்டாரென்றும் சாதிக்கிறார். ப்ரோடுவின் இறுதிவிருப்பமென்று எழுதப்பட்டுள்ள உயிலை அவரவர்க்கு விருப்பமான வகையில் பொருள்கொள்ள முடியுமென்கிறார்கள். கையெழுத்துப்பிரதியின் தற்போதைய உரிமையாளருடைய வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? 1974ம் ஆண்டு  உரிமையாளர்களுக்கிடையேயான குடும்ப வழக்கில் டெல் அவிவ்  நகர (இஸ்ரேல்) நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்: ப்ரோடு,  வாரிசுதாரர்களுக்கு காஃப்கா உடமைகள் குறித்த வழிகாட்டுதல்கள் எதையும் உயிலில் தெரிவிக்கவில்லையென்றும், காஃப்காவின் படைப்புகளை விருப்பம்போல கையாள வாரிசுதாரருக்கு(எஸ்த்தர்ஹோப்- பின்னர் அவர் மகள்கள்)உரிமையுண்டெனவும் கூறியுள்ளதை அவர் நினைவூட்டுகிறார். 1988ம் ஆண்டு லண்டனில் எஸ்த்தர் ஹோப்பின் மகள்களிருவரும் ஏலவிற்பனையில் கலந்துகொண்டு ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்கமுனைய ஜெர்மன் அரசாங்கம் 1.98 மில்லியன் டாலர்கொடுத்து அதை வாங்கியுள்ளது. இந்நிலையில் தமக்கு(ஜெர்மன் நாட்டிற்கு) ஒருக்காலும் கையெழுத்துப் பிரதியை இஸ்ரேல் அரசாங்கத்திடம் திருப்பித் தரும் எண்ணமில்லையென தெளிவாக அறிவித்திருக்கிறது. நவீன இலக்கிய உலகில் ஓர் படைப்பாளியின் கையெழுத்துப் பிரதிக்கு இவ்வளவு விலைகொடுத்து வாங்கபட்டதற்கு வேறு சான்றுகளில்லை. இந்த விற்றல் வாங்கல் விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டவருடையக் கூற்றின்படி 4மில்லியன் டாலர்வரை காஃப்காவின் கையெழுத்துப் பிரதிக்கு ஜெர்மன் அரசாங்கம் கொடுக்க அப்போது தயாராக இருந்திருக்கிறது.

1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டிலுள்ள நூலகமொன்றிர்க்கு காஃப்காவின் வேறுசில கையெழுத்துப் பிரதிகளை, (The castle, America…) மாக்ஸ் ·ப்ரோடு தானமாக வழங்கியிருந்தபோதும், ”The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை அவ்வாறு கொடுக்கவில்லை என்பதை நினைவுகூர்தல் வேண்டும், காரணம் காஃப்கா அதனை தமது இலக்கிய நண்பருக்கு பரிசாகக் கொடுத்திருந்தார். ‘The Trial’ ‘ கையெழுத்துப் பிரதி விற்கப்படுவதற்கு முன்பாக காஃப்கா தமது சினேகிதியான ·பெலிஸ் போயருக்கு(Felice Bauer) எழுதிய 327 கடிதங்களை 1987ம் ஆண்டு எஸ்த்தர் ஹோப் 550 000 டாலருக்கு விற்றிருந்தார். 2007ல் எஸ்த்தர் ஹோப் இறந்தபோது காஃப்காவின் எழுத்துக்களென மாக்ஸ் ப்ரோடு விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான கையெழுத்துப்பிரதிகள் கடிதங்களாகவும், ஆவணங்களாகவும், படைப்புகளாகவும் அவரிடம் இருந்திருக்கின்றன. இன்று அவற்றின் தலைவிதி கேள்விக்குறியாகியிருக்கிறது. ஓர் இலக்கியவாதியின் கையெழுத்துப்பிரதிகள் என்ற குறியீட்டை இழந்து, கார்ல் மார்க்ஸ் வர்ணிப்பதுபோல விற்பனை சரக்காக, அதாவது சரக்குகளெனில் அவை புலன்களால் உணரமுடிந்தவை உணரமுடியாதவையென்ற இரு பிரிக்கவியலாத பண்புகளைக்கொண்ட சமூகப் பொருளாக(social thing) மாறி உள்ளதெனலாம். ‘உருமாற்றம்’மென்ற சிறுகதையை எழுதிய காஃப்காவுக்கு இந்த விதிப்பொருத்தம் நிகழ்ந்திருப்பதுதான் வேடிக்கை. தவிர எஞ்சியுள்ள காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் இன்றைய தினம் அவற்றின் நிறத்தையும் குணத்தையும் இழந்து துண்டாடப்பட்டு விற்கபடுவதாகவும் கேள்வி. ஏனெனில் அவற்றில் அக்கறைகொண்டு முறையாக வரிசைபடுத்த மாக்ஸ் ப்ரோடு இன்றில்லை.  தவிர எதற்காக வெளிப்படையாக விற்பனையில் இறங்கி தேவையற்ற வழக்குகளை சந்திக்கவேண்டுமெனவும் உடமையாளர்கள் நினைக்கிறார்கள்.

இப்பிரச்சினையில் காஃப்காவின் நண்பர் மாக்ஸ் ப்ரோடை குறை சொல்ல ஒன்றுமேயில்லை. ப்ரோட் இல்லையெனில் இன்றைக்கு காஃப்காவைக் குறித்து நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. காஃப்காவின் நாவல்கள் மூன்றுமே அவரது இறப்பிற்கு பின்னர் நண்பரின் முயற்சியால் பதிப்பிக்கப்பட்டவை. இஸ்ரேலிய சஞ்சிகையான Haaretz தரும் தகவலின்படி எஸ்த்தர் ஹோப் இறந்தபோது அவர் வசமிருந்த கையெழுத்துப் பிரதிகளில் முக்கியமானவை ஏற்கனவே பிரசுரமாகியிருப்பினும், எஞ்சியிருப்பவைகளும் அலட்சியப்படுத்தக்கூடியவைகளல்ல. காஃப்காவின் சொந்தவாழ்க்கைப் பதிவுகள், இலக்கிய தடங்கள், வரலாற்று சாட்சியங்கள் என அப்பட்டியல் நீள்கிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய வளம் மற்றும் வளாகத்தைப்போல உலகத்தின் பொதுசொத்தாக அறிவித்து பாதுகாக்கப்படவேண்டிய காஃப்காவின் இலக்கிய சாட்சியங்கள் இரகசியமாக வங்கிப் பெட்டகங்களிலும், பிற இடங்களிலும் உரிய பராமரிப்பின்றி கரப்பான்களுக்கும் செல்லரிப்புகளுக்கும் இரையாகின்றனவே என வருந்துகிறவர்களும் உண்டு.

இறுதியாக ”The Trial’ ‘ நாவலைக்குறித்து எழுதாவிடில் இக்கட்டுரை நிறைவடையாது. நாவலுக்கான சமிக்கைகள் 1914லியே தெரிகின்றன. காஃப்கா இப்படியொரு நாவலை எழுதவிருக்கும் எண்ணத்தை தமது சஞ்சிகையொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தமது நெருங்கிய சிநேகிதியான பெலிஸ் போயர் உறவில் ஏற்பட்ட கசப்பு, நாவலை அலைக்கழித்திருக்கிறது. ஒரு பகுதியை முடிக்காமலேயே இன்னொன்று பிறகு வேறொன்றென எழுத்தாளரின் மனநிலை நாவலோடு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறது. பலமுறை நாவல் திருத்தப்பட்டிருக்கிறது. 1917ம் ஆண்டு இரண்டாம் முறையாக பெலின்போயரோடு ஏற்பட்டக் கசப்பு நாவலை வெகுவாகப் பாதித்தது. 1924ம் ஆண்டு காஃப்கா இறந்தபோது ”The Trial’ நாவலின் தலைவிதிக் கேள்விக்குரியதாகவே இருந்திருக்கிறது. ”என்னவோ எழுதினேன், புத்தகமாக்க விருப்பமில்லை” என்பதுதான் காஃப்கா தெரிவித்தது. 1925ம் ஆண்டு நண்பரின் விருப்பத்துக்கு மாறாக மாக்ஸ்ப்ரோடு பதிப்பிக்க விரும்பினார், எனினும் அதற்காக அவர் பட்ட சிரமங்கள் அதிகம். முதலாவதாக அங்கொன்றும் இங்கொ¡ன்றுமாகவிருந்த அத்தியாயங்களை வரிசைபடுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, அடுத்து முடிக்கப்படாத பத்திளையெல்லாம் நீக்கினார். தவிர நூலாசிரியரும் பதிப்பிக்க முயன்ற நண்பரும் யூதர்களென்ற உண்மை பதிப்பாளர்களுக்குக் கசந்தது, நிராகரித்தார்கள். ஆக மொத்தத்தில் இன்றிருக்கும் நாவல் ·ப்ரோடுவின் புரிதலுக்கேற்ப, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் காலவரிசையைக் கணக்கிற்கொண்டு கட்டமைக்கப்பட்ட நாவல். காஃபாவின் நண்பர் மிகச் சிரத்தையுடன் கண்ட வெற்றி.

எல்லா நாவல்களையும்போலவே ‘The Trial’  உண்மையும் புனைவும் சம விகிதத்தில் சொல்லபட்ட ஒரு நாவல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால மனிதரையும், அவரது  சமூகத்தைப் பற்றியதுமான விமர்சனமென்றாலும், இந்த நூற்றாண்டுக்கும் பொருந்தும். உலகில் அறுபடாத பண்புகளாகிப்போன அபத்தமும், சூதும், உருவாக்குகிற புதைமணலில் நித்தம் நித்தம் சிக்கித்தவிக்கும் நாதியற்றவர்களின் குரல் நாவல் முழுக்க ஒலிக்கிறது. நாவலின் பெரும்பகுதி ஆசிரியரின் சொந்தவாழ்க்கையின் எதிரொலி. கதைமாந்தர்கள் அவர்கள் பெயரில் முதல் எழுத்தால் சுட்டப்படுகிறார்கள் ‘Nouveau roman’ வரிசையில் எழுதபட்ட படைப்பிலக்கியங்களில் காஃப்காவைப்போலவே பல படைப்பாளிகள் இம்முறையை கையாண்டிருக்கிறார்கள். தமிழிலும் சுந்தர ராமசாமி தமது பாத்திரங்களின் சர்வ வல்லமை குறியீடாக  ஒற்றை எழுத்து நாமகரணத்தை அரங்கேற்றியிருக்கிறார். வழக்குவிசாரணையின் நாயகன் கே. அசாதரணமானச் சம்பவமொன்றின் சாதாரணமனிதன். இங்கே மேலே குறிப்பிட்ட சர்வ வல்லமை என்பது முட்டை ஓடுபோல. உண்மையில் இவர்கள் பலவீனமானவர்கள், ஒருவித போலிகள்-பாசாங்கு மனிதர்கள்-  They’re all impostures – விழுந்தால் நொறுங்கிப்போகும் சராசரிமனிதர்கள். காஃபாவைப்போலவே நாயகன் Kவும் மனப்பாதிப்புக்கு உள்ளானவன், அவனுடைய தவிப்பும் கலக்கமும் காஃப்காவுடையது. ஒருமுறை குஸ்த்தாவ் ஜானுக்(Gustav Janouch) என்ற நண்பரிடம் காஃப்கா, தன்னுடைய தனிமை மிகக்கொடியதென்றும் காஃப்காவைத் தவிற வேறு எவருடைய தனிமையுடனும் அதனை ஒப்பிடமுடியாதென வேடிக்கையாகக் கூறியதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும். குறிப்பாக பெலிஸ் போயர் இல்லா வெறுமை ஊமுட்களாகக் குத்த, முகந்தெரியாத எதிரியிடம் மோதி உருக்குலையும் எரிச்சலில்  ”Our enemy feeds on the blood we lose. He gnaws our heart, and look how strong he grows'(The Enemy) என்ற பொதுலேரின்(Baudelaire) எதிரொலிக்குரலை நாவலில் கேட்க முடிகிறது. அத்தனிமை  கிணற்றில் விழுந்து குரலெடுத்துக் கதறும் பசுபடும் துன்பத்தைக் கண்டும் சொல்லவியலாமற் தவிக்கும் ஊமையனுக்கு நிகரானது – ‘கூவல் குரால்ஆன் படுதுயர் இரவில் கண்ட  உயர்திணை ஊமன்போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே!(குறுந்தொகை-224)

‘The Trial’  உண்மையில் ஓர் விநோதமான வழக்கு. அல்பெர் காம்யூவின் அந்நியன் நாயகன் அபத்தத்தின் போக்கிற்கு இணங்கி தனக்கான முடிவினை எதிர்பார்த்து நீதிவிசாரணைக்கு உட்படுபவன். இங்கே ஜோசெப்.கே அதாவது காஃப்காவின் ”The Trial’  கதை நாயகன், அபத்தத்திற்கு முரண்பட்டு, தனக்கான முடிவு எதுவென்று அறியாமலேயே விசாரணைக்கு உட்படுகிறான். அந்நியன் நாயகன் விலங்கிடப்பட்ட நான்கு சுவர்களுக்குள் நிறுத்தபட்ட ஒரு கைதியெனில் காஃப்காவின் நாயகன் ஒருவகையான எதிர்மறை சுதந்திரத்திடன் (Negative Liberty) தினசரிவாழ்க்கையைத் தொடர அனுமதிக்கபட்டு வழக்கைச் சந்திக்கக் கேட்டுக்கொள்ளபடுபவன்.  ஜோசப் கே. வங்கியொன்றில் அதிகாரி. விடுதியொன்றில் தங்கி தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இந்த நூற்றாண்டின் சராசரி மனிதர்களான நம்மில் ஒருவன்.  அன்றைய தினம் ஜோசெப் கேவுக்கு 30வது பிறந்த தினம். வழக்கம்போல விழித்தவனைத்தேடி சனிதிசை காவலர்கள் வடிவில் வருகிறது. அறைக்குள் நுழையும் காவலர்கள், கைது செய்கிறார்கள். விசாரனைக்கு அழைத்துபோகிறார்கள். செய்த குற்றமென்ன ஜோசெப் கே யோசித்துப் பார்க்கிறான். எந்தக்குற்றமும் எதன்பொருட்டும், யாருக்காவும் இழைத்ததாக நினைவில்லை. அவனைக் கைது செய்தவர்களுக்கேனும் அவன் செய்த குற்றம் தெரியுமா, தெரியாதென்கிறார்கள். மேலதிகாரத்தின் கட்டளையை நிறைவேற்றினேன் என்கிறார்கள்.

– உங்கள் அறையை விட்டு எங்கும் போகக்கூடாதென்று பிரான்ஸ்(மற்றொரு காவலதிகாரியின் பெயர்) சொல்லியிருப்பாரே? உங்களை கைது செய்திருக்கிறோம்.

– புரியுது, ஆனால் எதற்காக என்னை கைது செய்திருக்கிறீர்களென்பதுதான் விளங்கலை.

– கே. சொல்வதிலும் நியாயமிருக்கிறது

– இங்கே பாருங்க என்னைப் பற்றிய தகவல்களெல்லாம் இந்த பேப்பரில் இருக்கின்றன..

– இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம். இவற்றைக் காட்டி விசாரணையிலிருந்து தப்பி விடலாமென்று மட்டும் நினைத்திடவேண்டாம். இவ்விடயத்தில் எங்கள் தரப்பில் எந்தத் தப்புமில்லை. மேலிடத்து உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறோம், அவ்வளவுதான். பத்துமணிநேரம் காவலில் வைத்திருக்கவேண்டும், எங்களுக்குச் சம்பளமும் அதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. இங்கே தப்பு எக்கட்டத்திலும் நிகழவில்லையென்றும் எங்களுக்குத் தெரியும், என்ன செய்வது. இது நடந்தாக வேண்டும். எங்கள்(துறையின்) பணி மக்கள்கூட்டத்திலே கலந்திருக்கிற குற்றத்தைப் பொறிவைத்து பிடிப்பதல்ல, மாறாக குற்றம் எங்களைத் தேடி வருமாறு பார்த்துக்கொள்வது, எங்கள் விதிமுறை அப்படி.(1)
———————————————————————–

1. The Trial – Le Proces – Franz Kafka நாவலின் பிரெஞ்சு நாடகவடிவத்திலிருந்து எடுத்தாளப்பட்ட உரையாடல். நாடகமாக்கம் Alain Timar.

மாத்தா ஹரிக்கு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை -2011 சிறப்பு விருது –

அண்மையில் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது -2011 அறிவிப்பில் சிறப்பு பரிசினை வென்றுள்ள பத்து வெளிநாட்டினரில் மாத்தா ஹரி நாவலுக்காக எனது பெயரையும் அறிவித்திருக்கிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த டென்மார்க்கில் தற்போது வசித்துவரும் திரு. ஜீவகுமாரன் இதே வரிசையில் பரிசினைப்பெற்றிருக்கும் மற்றொரு எழுத்தாளர். அவர் இத்தகவலை 26 ஜுலை 2011 அன்று முதன்முதலாக எனக்கு எழுதியிருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு எனது மரியாதைக்குக்கும் அன்பிற்குமுரிய நண்பர் இந்திரனும் உங்களுக்குப் பரிசு கிடைக்க வாய்ய்ப்பிருக்கிறதென்று தெரிவித்திருந்தார். எனினும் இப்பரிசுத்தகவலை எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஒருவருக்கும் (விதிவிலக்காக நெருங்கிய நண்பர் பசுபதி அறிவார்) நான் சொல்லவில்லை. இங்கே வலைத் தலத்தில்கூட இடவில்லை. காரணம் இதுதான்:

நீலக்கடல் நாவல் தமிழ் நாடு அரசின் வெளிவாட்டினருக்கான பரிசினை வென்றிருக்கும் செய்தியை 2007ல்  திடீரென்று அறியவந்தபோது பெரும் மகிழ்ச்சியை அளித்தது, உண்மையில் குதூகலப்பட்டேன்.  இரண்டாவது நாவல் மாத்தா ஹரிக்கும் ஏதாவதொரு பரிசு கிடைக்குமென எதிர்பார்த்தேன், எனக்கு மாத்தா ஹரி பிடித்தமான நாவல்.  எதுவுமில்லையென்றானதில் மிகுந்த ஏமாற்றம். அப்போதுதான் நண்பர் ஒருவர், அன்பிற்குரிய மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2008ல் வெளிவந்த நூல்களுள் தமக்கு விருப்பமான முதல் பத்து நூல்களைத் தேர்வு செய்து தமது வலைத்தலத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் அதில் ஐந்தாவது இடத்தை மாத்தா ஹரிக்கு அவர் கொடுத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். இங்கே வரிசை எண் முக்கியமல்ல,  ஒரு மூத்த எழுத்தாளர் மனமுவந்து தேர்வு செய்தததை அந்த நாவலுக்குக்கிடைத்த பரிசாகவே கருதினேன்.  இன்றைக்கும் அந்த சந்தோஷம் நிலைத்திருக்கிறது, தவிர மாத்தா ஹரிக்கு திருவாளர்கள் கி.அ. சச்சிதானந்தமும், வே.சபாநாயகமும் எழுதியுள்ள விமர்சனமும் ஒருவகையில் எனக்கு நிறைவைத் தந்திருந்தது.

இந்நிலையில் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது அறிவிப்பு வந்தபோது மிக அமைதியாகவே ஏற்றுக்கொண்டேன். தவிர இவ்விடயத்தில் நண்பர் இந்திரன் தலையீடு இல்லையெனில் எனக்குக் கிடைத்திருக்குமா என்ற சந்தேகம். அவர்தான் இரண்டுமாதங்களுக்கு முன்பு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதுக்கு உங்கள் நூல் வேண்டும் அனுப்ப முடியுமாவென்று கேட்டிருந்தார். சராசரி எழுத்தாளனுக்குள்ள ஆசையில் அனுப்பியும் விட்டேன். அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நூலையும் அனுப்பியிருப்பதாக பின்னர் தெரிவித்தார். இடையில் திடீரென்று சிபாரிசு காரணமாகத்தான் அதற்குப் பரிசு என்ற நிலை வந்துவிடுமோ என்றெனக்கு அச்சம். நண்பர் இந்திரனிடம் எனது மன நிலையைச் சொன்னேன். ‘நாகி” ஏன் இப்படி குழப்பிக்கொள்கிறீர்கள், புத்தகத்தை அனுப்பியதோடு எனது வேலை முடிந்தது, நன்றாக இருந்தால் கொடுப்பார்கள் இல்லையெனில் இல்லையென்றார். இதில் எனது பங்கு எதுவுமில்லை என ஒதுங்கிக்கொண்டாலும் மனதிற்குச் சங்கடமாக இருந்தது. மாத்தா ஹரி நூலை போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ள சொல்லலாமா என்று நினைத்து. வீட்டில் கலந்தாலோசித்த அன்று, முடிவினை அறிவித்திருந்த மின்னஞ்சல் ஆரம்பத்தில் தெரிவித்திருந்ததுபோல இலங்கை ஜீவகுமாரன் மூலம் வந்திருந்தது. நண்பர் இந்திரனும் தகவலை உறுதிசெய்தார். தொடர்ந்து குழப்பமாக இருந்தது. என்னைப்போன்ற எழுத்தாளனுக்கு இதுபோன்ற டானிக்குகள் தேவைதான் என்பது இன்றைய மனநிலை.

மனதில் இன்னமும் நெருடல்கள் இருப்பினும் மாத்தா ஹரியை தேர்வு செய்த கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை குழுமத்திற்கும் குறிப்பாக மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. கு சின்னப்ப பாரதி அவர்கட்கும், என்மீது அக்கறைகொண்டு எனி இந்தியன் பதிப்பகத்தின் பணி முடங்கியிருக்கிற சூழ்நிலையில் மாத்தா ஹரி நூலை அறக்கட்டளைக்கு உரிய காலத்தில் அனுப்பிவைத்து பரிசு பெற உதவிய அன்பிற்குரிய  நண்பர்  இந்திரனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மாத்தா ஹரிக்கு பரிசெனில் வழக்கம்போல திண்ணைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன், குறிப்பாக நண்பர் கோ. ராஜாராம் அவர்கட்கு. நீலக்கடல் நாவல் போலவே மாத்தாஹரி நாவலும் திண்ணையில் வெளிவந்தது. அவர்கள் தொடங்கிய எனி இந்திய பதிப்பகமே பின்னர் புத்தகமாகவும் அதனைக் கொண்டுவந்தாரகள். எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட சிமொன் தெ பொவ்வார் கட்டுரைதொகுதியும் மிகசிறப்பானதொரு நூல், உரிய வகையில் அடையாளம் பெறுமென நம்புகிறேன். ஏற்கனவே கவிஞர் தமிழ்நதி  அவருடைய பத்து விருப்ப நூல்களுள் ஒன்றாக அதனை தேர்வு செய்திருக்கிறார், என்ன நடக்கிறதென பார்ப்போம்.

நா.கிருஷ்ணா

எழுத்தாளர் ரெ.கா.

மலேசியாவிலிருந்து ஓயாமல் எழுதிக்கொண்டிருக்கும் ரெ.கா என அழைக்கப்படும் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவை அனைவரும் அறிவோம். எளிய மொழியில், நீர்பரவல்போன்ற நடையில் மனித உறவின் நடைமுறை சிக்கல்களை எழுத்தில் கொண்டுவருவதில் தேர்ந்தவர். வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார். எனது வளர்ச்சியில் பலரும் பங்கு வகுத்திருக்கிறார்கள், சில விழுக்காடுகளுக்கு ரெ.காவும் சொந்தக்காரர்.

ரெ.கா வுக்குள்ள அறிவியல் ஞானமும், அறிவியல் புனைகதைகளில் ஈடுபாடும் பலரும் அறிந்தது. அவரது வலைதளத்தில் அண்மையில் இட்டுள்ள பதிவுகள் எதிர்காலத்தில் மனித இனம் எங்கே வாழக்கூடும் என்பது பற்றிய சிந்தனைகளை விவாதிக்கிறது, உலக நாடுகள் இத்துறையில் மேற்கொண்டுள்ள ஆய்வுகளையும் முயற்சிகளையுங்கூட பகிர்ந்துகொள்கின்றன. மிகவும் சுவாரஸ்மாக சொல்லப்பட்டிருக்கிற இப்பதிவை அவசியம் வாசிக்கவேண்டும்.

அவரது தள முகவரி:http://reka.anjal.net/?p=198

இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’

எழுத்தும் எழுத்தாளனும் ஓர் கடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள், ஒப்பந்ததாரர்கள் இருவரும்  ஒருவர்  மற்றவர் உயிரைத் தங்கள் சிமிழுக்குள் வைத்திருக்கிறார்கள். இருவருக்கும் எதிராளியின் ஆரோக்கியம் முக்கியம். இவர் அவரையோ அவர் இவரையோ தவிர்த்து உயிர்வாழமுடியாது. தனது வளத்தில் ஒரு பகுதியை எழுத்தாளனுக்கு கடன்கொடுக்க முன் வரும் எழுத்து, எழுத்தாளனின் தேவையையும், திருப்பி அளிக்கும் திறனையும் பொறுத்து கடன்தொகையை தீர்மானிப்பதில்லை. முழுச்சுதந்திரத்தையும் எழுத்தாளனுக்கு அளிக்கிறது, அவனது தேவையையும் திருப்பி அளிக்கும் திறனின் அடிப்படையிலும் கடன் தொகையை அவனே தீர்மானிக்கிறான்.

கைச்சாத்திடப்படாத இந்த ஒப்பந்தம் பரஸ்பரநம்பிக்கையின் அடிப்டையில் நிறைவேற்றப்படுகிறது. அசலுடன் வட்டியுயும் சேர்த்து பெற்று தனது கருவூலத்தை வளப்படுத்திக்கொள்ளும் எழுத்துக்குள்ளசுயநலம் எழுத்தாளனுக்கும் உண்டென்பதால் பரஸ்பர ஒட்டுண்ணிகுணத்தை மறந்து இருவரும் மற்றவர்களுக்கு நேர்மையாக இருக்கக் கடமைப் பட்டவர்கள் என்பதை இக்கடன் ஒப்பந்தத்தின் அடிப்படை சாரமாக கருதவேண்டியது. சார்த்துரு மொழியில் இதனை கடப்பாடு என்று அடையாளப்படுத்தலாம்.

மொழிக்குக் கடப்பாடுவடையானாக இருப்பவன் – கொஞ்சம் யோசித்துபார்த்தோமெனில் -அவனுக்கே அவன் கடப்பாடுடையவனாக இருக்கிறானென்று அச்சூத்திரத்தை தெளிவுபடுத்திகொள்கிறோம். சற்று கூடுதலாக சிந்தித்தால் எழுத்தும் எழுத்தாளனும் வேறுவேறல்ல- என்றாகிறது. வேண்டுமானால் புரிதலுக்காக எழுத்தாளர்களை எழுத்தின் அவதாரங்கள் எனக்கொள்வோம். அந்த அவதாரத்தில் அம்பையுமிருக்கலாம் ரமணிசந்திரனுமிருக்கலாம். எடுக்கின்ற அவதாரத்தின் நோக்கத்தை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு அவர்களுக்கிருக்கிறது. ஜெயகாந்தனுக்கென்று ஒரு மொழியை கதைசொல்லலை மேற்குறிப்பிட்ட கடன்பத்திரத்தில் ஷரத்தாக சேர்த்திருப்பார்கள், அந்த ஒப்பந்தத்தின் ஷரத்தை நிறைவேற்ற வேண்டிய தார்மீக கடப்பாடு ஜெயகாந்தனென்ற அவதாரத்திற்கு இருக்கிறது. எழுத்தாளனுக்குள்ள சுதந்திரம் என்பது ஒருவகையில் எழுத்திடமுள்ள கடப்பாட்டை புரிந்து நடப்பது.

உம்பர்ட்டோ எக்கோ தனது கறுப்பு நாயை வெள்ளை நாயாக மாற்றப்போகிறேன் என்கிறார். அவரது கறுப்பு நாய் நீங்கள் அறிந்த நாய்தான் பெயர் ‘The name of the Rose’. வெகுசன ரசனைகேற்றவகையில் தமது நாவலை திரும்பவும் எழுதப்போகிறாராம், பரவலான வாசகர்களை அவரது படைப்பு எட்டவேண்டுமாம்..

உம்பர்ட்டோவின் நல்லெண்ணத்தை சந்தேகிக்கமுடியாது. கூடுதலாக ஒன்றிரண்டு மில்லியன் டா¡லரை சம்பாதிக்கவேண்டுமென்ற என்ணம் அவரது பதிப்பாளருக்கு இருக்கக்கூடும். உம்பர்ட்டோவுக்கு இருக்கமுடியாது. அண்மையில் வெளிவந்த The Cemetery of Prague, நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்கிறார்கள் – வாசித்ததில்லை. இன்றையதேதியில் உம்பர்ட்டோ எக்கோ என்ற பெயரில் ஒரு விலைப்பட்டியலை நூலகத்தில் வைத்தால்கூடபோதும், அதற்கும் வாசகர்கள் கிடைப்பார்கள். இச்சூழலில் எல்லோருக்கும் கொண்டுபோகிறேனென்று இலக்கியத்தை எளிமைபடுத்து அவசியமா என்று கேள்வி எழுகிறது.

உம்பர்ட்டோவின் இந்த முயற்சியை கண்டிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள். நான் கண்டிக்கிறவர்கள் பக்கம். நாளை விஷ்ணுபுரத்தை எளிமைபடுத்துவதாக அதன் ஆசிரியர் கூறினால் ஏற்கமாட்டேன். விழ்ணுபுரத்து அழகே அதன் சிக்கலான நடையில்தானிருக்கிறது.. அப்படியொரு ஒப்பந்தத்தை ஜெயமோகன்  எழுத்தோடு கைசாத்திட்டுள்ளார். உம்பர்ட்டோ எக்கோவிற்கும் அத்தகைய கடப்பாடு எழுத்திடமுள்ளதென்பது எனது கருத்து. The name of the Rose வாசகர்கர்களில்  ஒரு விழுக்காட்டினர் கூட லத்தீன்மொழியை கற்றிருக்க சாத்தியமில்லை, அதனாலென்ன இடைக்காலத்தைப் பற்றி பேசுகிற நாவலொன்றில் அதன் உபயோகம் நாவலின் தரத்தை கூட்டியுள்ளதென்றே சொல்லவேண்டும். தவிர நாவலெங்கும் தற்காலத்தையும் இடைக்காலத்தையும் பிணைக்கும் தத்துவ விசாரங்களையும் குறியீடுகளையுங்கூட எளிமைப்படுத்துவாரா எனத் தெரியவில்லை. தவிர உம்பர்ட்டோவின் இந்த முடிவில் எனக்கென்னவோ ஏளனமும் கலந்திருக்குமோ என்ற சந்தேகம். அதாவது வெகுசன வாசகர்கள் இவரது படைப்பை தொடமறுப்பதற்குக்காரணம் வாசகர்களின் போதாமை எனச்சொல்லாமல் சொல்லுகிறார். அதாவது நாவலில் இவர் வெளிப்படுத்தியிருக்கிற மொழி ஆளுமையும், நுட்பமான சொல்லாடலையும், கோத்திக் நிழலையும், குறிப்பாக ‘I was a medievalist’ in hibernation’ எனக் கர்வப்படுகிற விஷயத்தை ஞான சூன்யங்களுக்குத் தெரியபடுத்துவானேன் என நினைக்கிறார் போலிருக்கிறது.

எனக்குள்ள ஆதங்கம் இதுதான் ‘இதனை இவனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து’ எழுத்து இவர்களோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது அக்கடப்பாட்டை மீறுவானேன், மீறி தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்வானேன்.
——–

.

ஒரு கவிஞனின் பிறப்பும் இறப்பும்

கவிதை மூலமாக இலக்கிய பிரவேசத்தினை தொடங்குவது அநேகமாக தமிழில் அதிகமாக இருக்குமென நினைக்கிறேன். வெகு சன புத்தியில் குறிப்பாக எழுபதுகளில் இலக்கியமென்பது கவிதைதான் என்ற பார்வை இருந்தது. கதை -தொடர்கதை எழுதுவது என்பது சினிமாவின் நீட்சியாக பார்க்கப்பட்டது. திருமணங்களில் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் எவர்சில்வரில் கிடைக்கும் தட்டுகள் டம்ளர்களை வரிசை வைப்பவர்களிடையே, மாப்பிள்ளையின் ரசிகத்தன்மைக்கேற்ப (இதில் மணப்பெண்ணையெல்லாம் கணக்கிற்கொள்ள மாட்டார்கள்) எம்ஜியார் படத்தையோ சிவாஜிபடத்தையோ போட்டு வாழ்த்துமடல் தயாரித்து, சாஸ்திரிகள் ‘மாங்கல்யம் தந்துநானே’ சொல்லிமுடித்தாரோ இல்லையோ மைக்கை வாங்கி வாழ்த்து மடலை வாசிக்கும் வழக்கம் பின்னர் நடைமுறைக்கு வந்தது. அநேகருக்கு பள்ளியில் படித்த கவிஞர்கள் மறந்துபோகும், எதுகை மோனையைமட்டுமே இலக்கணமாகக்கொண்டு உள்ளூர் பெண்ணுக்கு காதல் கவிதை எழுத ஆரம்பித்த பயிற்சியில் திருமணங்களில் ஒரு பெரிய வாழ்ந்து மடலையே எழுதி சட்டமிட்டு மணமக்களுக்கு பரிசளித்துவிட்டு, அச்சடித்த மடலை கல்யாண மண்டபத்தில் சுண்டல்போல விநியோகிப்பதுண்டு. மணப்பெண்ணின் தோழிகளுக்குப் போய்ச்செரவேண்டுமென்பதில் குறியாக இருப்பார்கள். விநியோகித்து முடித்து ஆண்கள் கும்பலில் உட்கார்ந்தபடி பெண்கள் கூட்டத்தில் அதற்கு வரவேற்பு எப்படி என்பதை தெரிந்துகொள்ளும் ஆவலில் அவ்வப்போது தீனி தேடும் கோழிபோல தலையைத் திருப்பிக்கொண்டிருப்பார்கள். இவனுகளுக்கு வேற வேலை என்ன? என்று காதுபட முனுமுனுக்கும் பெருசுகளும் உண்டு.
என் நண்பன் ஒருவன் இருந்தான். மஞ்சள் நீர், திருமணம், தேர்திருவிழா நாட்களில் அம்மனுக்கு, இறப்பு நாட்களில் அஞ்சலி யென ஆசிரியப்பாவில் கவிதை எழுதியிருப்பான். ஒரு நாள் ரொம்ப வருத்தப்பட்டான். என்னம்மா ‘இத்தனை கவிதை எழுதிக்கொடுத்துட்டேன்’ என்னன்னுகூட கேட்கமாட்டேங்கிறா? என்றான். உனக்கு காதல் முக்கியமா கவிதை முக்கியமா எனக்கேட்டேன். காதல் என்றான். பேசாம கண்னதாசன் பாட்டுலே இரண்டு வரி எழுதிக்கொடு என்றேன். இவன் கண்ணதாசன் பாட்டை எழுதிக்கொண்டுபோனபோது அவளுடைய முறைப்பையனுக்கு நிச்சயித்திருந்தார்கள். வாலிபத்தில் முறுக்கேறும் இக்கவிதை யாத்தல் ஒரு பெண்ணிற்குத் தாலிகட்டின கையோடு அநேகருக்கு மறந்துபோகும்.  என்னிடம் கூடுதலாக சிலகாலம் தாக்குப்பிடித்திருந்தது. நண்பனிடம் பழகிய தோஷத்தில் இரண்டொன்றை அவ்வபோது அரைவேக்காட்டுக் கவிதைகளை (இப்போதைய பார்வையில்) பள்ளி இதழிலும்? கல்லூரி மலரிலும், சில வார சஞ்சிகைகளிலும் பார்த்து பரவசப்பட்டதுண்டு.  பின்னர் காலப்போக்கில் சிற்றிதழ்களில் வருகிற கவிதைகளின் தரத்தைப் பார்த்து வேண்டாமென்று ஒதுங்கிக்கொண்டேன். அவற்றில் பரவாயில்லை சாதியைச் சேர்ந்தவற்றில் ஒரு சிலதை தளைத்தில் இட்டிருக்கிறேன், அதிலொன்று இங்கே இருக்கிறது, சகிக்க முடிந்தால் மற்றவற்றை வாசியுங்கள்:

ஞாபக அம்மா ‘(1990)

வாழ்வியல் கவித்துவத்தில்
குயிற்பாட்டாய் ஞாபகங்கள்

இளவேனிற்காலத்து
இலைநீர் முத்தென
காற்றில் கலந்து
மனதை விசிறிடும்
பசிக்கும் வாழ்க்கையில்
பழைய அமுது

நினைவு பதிப்பில்
பிழைதிருத்தப்படாமல்
பிரசுரமாவதில்
வருத்தமென்றில்லை

சுட்டதும் சுடாததும்
ஞாபகத்தில் உண்டு
சுட்டது அந்தரங்கமானது
சுடாதது அ(வ்)வைக்களிப்பது

ஒரு மழைநாளில்
எனக்காக அம்மா
இரவிரவாய் அலைந்து
நாய்குட்டி தோழனை
தேடித் துவட்டி
திண்ணையில் விட்டதாய்
ஞாபகம்

இப்போதும் எனக்குள்
நாய்குட்டிகள் உண்டு
அம்மா?

——-

மோசமான எழுத்தாளர்?

” Cheryl’s mind turned like the vanes of a wind-powered turbine, chopping her sparrow-like thoughts into bloody pieces that fell onto a growing pile of forgotten memories”.

இருபத்தாறு வார்தைகள் ஒர் அரைப்புள்ளி, ஒரு புள்ளி என்ற மூன்று தகுதிகளின் அடிப்படையில் எழுத்தாளர் ஒருவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் பெயர் சூ ·போண்டரி அமெரிக்காவின் விஸ்லான்சின் பல்கலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை.

கழகங்கள் அரசியலுக்கு வந்த பிறகு பேராசிரியர்கள் என்ற பெயரைக்கேட்டாலே சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. அசலான பேராசிரியர்கள் மன்னிக்கவேண்டும். சூ ·போண்டரி கதைக்கு வருகிறேன். இந்தப் பெண்மணிஓர் எழுத்தாளருங்கூட, அவர் எழுத்தைப் பாராட்டி Bulwer-Lytten 2011பரிசினைத் தந்திருக்கிறார்கள். எல்லா பரிசுகளையும்போலவே இப்பரிசினைத் தீர்மானிக்கும் தேர்வுகுழுவினரும் – கலிபோர்னிய மாநிலத்தைசேர்ந்த சான் ஜொசே பல்கலைகழகத்தைசேர்ந்தவர்கள்-  தங்கள் பரிசுக்கென்று சில தகுதியை வைத்திருக்கிறார்கள்.

அதென்ன தகுதி?

புரிந்துகொள்ள Edward Bulwer-Lytton என்ற எழுத்தாளரை நாம் அறிந்திருக்க வேண்டும். அவர் பல நாவல்களுக்குச் சொந்தக்காரர், அதிலொன்று ‘The Last days of Pompei’. ‘it was dark and stormy night” என ஆரம்பிக்கும் நாவலின் முதல்வரி வாசகர்களுக்குச் மிகுந்த சோர்வினைத் தரக்கூடிய மோசமான வரியாம். மிக மோசமான எழுத்து என தீர்மானிக்கப்பட்டு 1982ம் ஆண்டு புல்வெர்-லிட்டன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டக் கணக்கு, இப்பொழுது பரவலாக்கப்பட்டுள்ளது. மோசமான வரியை எழுதியவர் என்றவகையில் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு இப்பரிசினை வென்றிருப்பவர்தான்  சூ ·போண்டரி. ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வாக்கியத்தைப் படித்துபாருங்கள். தேர்வுக்குழுவினர் காணும் குறை, ‘புனைவில் வரும் நாயகியின் மனதை காற்றாலையாகவும், நினைவுகளை அவற்றில் அடிபட்டு சிதறும் மைனாக்களோடு’ ஒப்பிட்டிருப்பது. பரிசுகொடுக்க நேர்ந்ததில் பொருத்தப்பாடிருப்பதாகச் சாதிக்கும் சூ இலக்கியம் போதிக்கும் பெண்மணிக்கு இப்படியான தகுதியும் ஒருவகையில் அவசியம் என்கிறார். சூ ·போண்டரி மனத்திடம் கொண்டவராக இருக்கவேண்டும், வேடிக்கையாக இம்முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

————————————————————————-

 

எஸ்.ரா.வுக்கு நன்றிகள்

தமிழின் மூத்த எழுத்தாளரும், படைப்பிலக்கிய ஆளுமைகளுள் முதல் வரிசையில் இருப்பவருமான வணக்கதிற்குரிய நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எனது தளத்தை தமது தளத்தில் அறிமுகபடுத்தியிருக்கிறார். ஏற்கனவே மாத்தா ஹரி நூலை 2008ல் தமிழில் வெளிவந்த முக்கிய நூல்களுல் ஒன்றாக அவரது விருப்பத் தேர்வில் இடமளித்திருந்தார். அந்தச் செய்தி காலம்தாழ்ந்தே கிடைத்திருந்தது. உரியகாலத்தில் எனது நன்றியை தெரிவிக்கமுடியாமல் போய்விட்டதே என்று வருந்தினேன். மனதில் எவ்வித இடரலுமின்றி அன்போடு எனது தளத்தை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி தமது உயர்பண்பை மறுபடியும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

பணிவுடன்
நா.கிருஷ்ணா

மனித வாழ்க்கையும் தேர்வும்.

‘வாய்யா அல்லது வாம்மாவென்று அழைத்து, ‘தமிழ்நாட்டிலே உங்களுக்குக் குடைக்கூலிக்குக்கூட இடம் கிடக்கவில்லைண்ணு கேள்விபட்டேன், இங்கேதான் கொஞ்சகாலம் தங்கிக்குங்களேன்’ என்று மத்திய சிறையோ அல்லது திகார் சிறையோ சொல்வதில்லை. அழையாவீட்டு விருந்தாளியாக இவர்கள்தான் வலியச்சென்று கதவைத் தட்டுகிறார்கள். அவர்கள் வாழ்க்கைத் தேர்வு அப்படி.  “அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோ டூர்ந்தான் இடை” என்கிறது குறள். இந்த அறம் வேறொன்றுமல்ல – தேர்வு. பல்லக்கு சுமப்பவனும், அமர்ந்திருப்பவனும் அவரவருக்கு எது வேண்டுமோ அதை தேடிப்பெற்றிருக்கிறார்கள். இத்தருணத்தில் நமது இடமென்ன? என்ற கேள்விக்குண்டான பதில் அதற்கு முந்தைய தருணம் வரையிலான நமது தேர்வுகளின் அடிப்படையில் பெறப்பட்டது. கோளும் நாளும் அதனதன் விதியை அவைகளே எழுதிக்கொள்கின்றன. அருபது நொடி, அருபது நிமிடம், இருபத்துநான்கு மணி நேரமென்று ராசிபலன் பார்க்காமல், சனீஸ்வரன் கோயிலைச் சுற்றாமல் தம்மை மட்டுமே கருத்தில்கொண்டு நாட்கள் முன்நகர்ந்துகொண்டுதானிருக்கிறன. இவர் நம்ம ஆள் அதனால் நல்லது செய்யவேண்டுமென்றோ, அவர் எதிர் தரப்பு ஆள் அவருக்குத் தீங்கு செய்யவேண்டுமென்ற திட்டமெல்லாம் நாளுக்கில்லை. நமது வாழ்க்கைக்கு அவை எவ்விதத்திலும் பொறுப்பல்ல. தீதுநன்றும் பிறர் தர வருவதல்ல.

மனிதர் வாழ்க்கையில் தேர்வு முக்கியம். நம்மால் தேர்வு செய்யய்யப்படமுடியாதது மூன்று: பெற்றோர்கள், இனம், மொழி இவற்றைத் தவிர பிற அனைத்தும் தேர்வுசெய்ய முடிந்தவைதான். கல்வி, வேலை,  வாழ்க்கைத்துணை, நண்பர்கள், படிக்கும் புத்தகங்கள், நெறிகள், முரண்கள், சண்டை, சமாதானம், சவடால் பேச்சு, கோபம், அமைதி, சிரிப்பு அழுகை என இப்பட்டியலை முடிக்காமல் நீட்டிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு வினையும் அவ்வினையின் பலனும் எதிரெதிர் பண்புகளைக்கொண்ட இரு தனிமங்களொன்றின் தேர்வை சார்ந்தது. இத்தேர்வில் எனக்குச் சாதகமானதென்ற கருத்தியத்தின் அடிப்படையில் ஒரு தேர்வையும் எனது பாதகத்தைத்தரும் என்ற கருத்தியத்தின் அடிப்படையில் மற்றொன்றையும் தேர்வு செய்கிறோம். அதாவது பின்னதும் ஒரு வகையில் தேர்வு என்றாகிறது. எனினும் இந்த இரண்டாம் வகை தேர்வுக்கு நிராகரிப்பு என்று பெயர். வேண்டாமென்று முகம் சுளிப்போம், போதும், மிக்க நன்றிங்க என நாகரீகமாகவும் மறுக்கக்கூடும், கடுமையாக விவாதிக்கலாம். தள்ளி நிற்கலாம் ஒதுங்கிப் போகலாம், சிலநேரங்களில் ஓடவும் செய்யலாம். தேர்வுக்கு அறிவு புலன் இரண்டும் துணை நிற்கின்றன, குறள் சுட்டும் பல்லக்கில் ஊர்பவன் அறிவினைக்கொண்டு தேர்வு செய்திருக்கலாம். இருந்தபோதிலும் அதை சாசுவதப்படுத்திக்கொள்ள ஒவ்வொரு நாளும் அவனதுதேர்வு சரியானதாக அமையவேண்டும்.

‘எக்ஸ்பிரஸ்’ பிரெஞ்சு தினசரிகளுள் முக்கியமானது. நித்தியானந்தா- ரஞ்சிதா, பட்டப்பகலில் கொலை. ரஜனிப்பேரப்பிள்ளை மூத்திரம் போனார் போன்ற நாட்டின் அதிமுக்கியமான கவலைகளில் அக்கறைகொண்ட நாட்டின் நெம்பர் ஒன் தினசரி அல்ல, ஒரு சராசரி தினசரி. இவ்வருடம் வாசகர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேர்வுக்குழுவினர் சிறந்த நாவலாக பிலிப் விலென்(Philippe Vilain) என்ற எழுத்தாளரின் ‘Pas son Genre’ (அவனுக்கு உகந்ததல்ல) நாவலை தேர்வு செய்துள்ளனர்.

ஒரு தத்துவவாதி முடிவெட்டும் பெண்ணை நேசிக்க முடியுமா? பேராசிரியர்கள், அறிஞர்கள், சித்தாந்தம், பேருரைகள், விவாதங்கள், ஆய்வு கட்டுரைகளென நேரத்தை செலவழித்து,  பல்கலைகழக வளாகங்கள் நிறைந்த பாரீஸ் மாநகரில் வாழ்ந்துபழகிய ஒரு சிந்தனாவாதி திடீரென்று ஒரு நாள் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு பட்டிக்காட்டு வாழ்க்கையை தேர்வு செய்யமுடியுமா? என்ற இரண்டு கேள்விகளை முன்வைத்து அப்பதிலுக்குண்டான சாதக பாதகங்களை ஆய்ந்து மனித வாழ்க்கையில் தேர்வுக்குள்ள முக்கியத்துவத்தை வெகு நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.  ‘எதை தேர்ந்தெடுப்பது?’ என்ற கேள்வியை மையப்பாடுத்திய கதை சொல்லல்  நீர்ச்சுழலின் வேகத்துடன் வாசகனை ( முதல் அத்தியாயத்தை சகித்துக்கொண்டால்) உள்வாங்கிகொள்கிறது. எந்த மருந்துக்கும் குணமாகாத எந்த வேப்பிலை அடிக்கும் இறங்கிவராத ஒரு தீராத நோய் கதை சொல்லிக்கு இருக்கிறது. அந்நோய் உடனடியாக முடிவுக்கு வரவிடாமல் அவனைத் தடுக்கிறது, விளைவு, பிரச்சினைகளிலிருந்து விடுபடமுடியாமல் தவிக்கிறான்.  அவனுக்கு ஒன்றைத் தேர்வு செய்கிறபோது மற்றவற்றை நிராகரிக்கிறோமென்கிற குற்ற உணர்வு, ஓர் இருப்பின் நிராகரிப்புக்குண்டான தகுதியை நிர்ணயிப்பதில் அவனுக்கு சிக்கல்கள் இருக்கின்றன. தேர்வு குறித்து அவனுக்குள் உறையும் தயக்கத்தின், ஆரம்பம் எங்கே என்று பார்க்கிறபொழுது தனி மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் பிணைத்திருக்கிற கயிற்றின் தன்மையை ஆராய வேண்டியிருக்கிறது. கதைசொல்லியான பிரான்சுவா தனக்குப் பிறர்கொடுக்கின்ற மரியாதை சமூகமென்ற சனாதன தர்மத்தின்பாற்பட்டதென்ற முடிவினைக்கொண்டவன். அவர்களோடு வாழ நேர்ந்தாலும் தான் அவர்களிலொருவனல்ல என்று நம்புபவன். ( சாதிகட்சிகளில் தலைவர்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு பிலிப் விலென் பொறுப்பல்ல). தேர்வு செய்வதில் தயக்கமுள்ள ஆசாமி என்பதால், அவனாக அவன் இருப்பதில்லை, அவனுக்கான் வாழ்க்கையை அவன் தர மறுக்கிறான். வாழ்க்கையை இரண்டாக வகுந்து: பகுத்தும், காரண காரிய அடிப்படையில் செயல்களை தீர்மானித்தும் கற்பனா உலகில் உலாவரும் வாழ்வு ஒருபுறம் எதார்த்ததின் வெக்கைக்கும் குளிருக்கும் ஏற்ப போர்வைதேடும் சராசரி மனித வாழ்க்கை தேர்வு மறுபுறம். மேற்குடிதன்மையும் பாரீஸ்நாகரத்தின் அகங்காரமும்  பாம்புபோல இறுக சுற்றிக்கொண்டிருக்கிறது. தொட்டால் கொத்திவிடுமோ என்கிற பயம்.

கதை சொல்லி,  நாவலில் வருகிற மனிதர்களின் இயல்பான குணத்திற்காக அவர்களை நேசிப்பதை ஏற்றுக்கொள்கிறோம்: சிலர் நிறைகளுக்காக நேசிக்கப்படுகிறார்கள்.  வேறு சிலரை அவர்களின் குறைகளுக்காக நேசிக்கிறான். இதுவே அவன் தேர்விற்கான நபரை அடையாளப்படுத்த தயங்குவதற்குக் காரணமாகிறது. தவிர குறையும் நிறையும் அவரவர் பார்வையைப் பொறுத்ததென்ற உண்மையை உணராமலுமில்லை. அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் ஜெனி·பர் ஒரு சிகைத் திருத்தும் பெண்மனியாக இருந்தும் அவள் ஸ்பரிசத்தில் ஒரு தத்துவவாதியாக இருந்துகொண்டு இவன் போதிக்கமறந்த அல்லது இயலாத உண்மைகளை அவள் போதிப்பதாக நினைக்கிறான்.

இந்நாவலில் வரும் கதைநாயகனின் அச்சமும் பதட்டமும் உலகில் பலருக்கும் ஏற்படும் அனுபவம். எதைதேர்ந்தெடுப்பது என்று ஆரம்பித்து, தேர்வுக்காக பல தேர்வுகளை எழுதி காத்திருந்து அலுப்பவர்களில்  ஒருவன். நீதிக்குப் பொருந்தக்கூடிய ஒரு தேர்வினை எட்ட உச்ச நீதிமன்றத்திற்கா போகமுடியும்.

புலம் பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள்

பிறந்த மண்ணையும், பேசும் மொழியையும் துறந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களால், புதிய புதிய நாடுகளுக்குப் புலம் பெயர்வது என்பது, இன்றைய வாழ்வியல் விதியாகிவிட்டது.

மனித குலத்தின் வரலாறு அறிந்தவர்களுக்குப் புலம்பெயருதல் புதியதல்ல என்பது விளங்கும். தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்வதற்காக, இயற்கையாகவும் செயற்கையாகவும் புலம்பெயருதல் உலகம்தோன்றிய நாட்தொட்டு நடந்து வருகின்றது. குறுகிய காலத்திற்கு ஓரிடத்திற்கு அல்லது ஒரு நாட்டிற்கு சுற்றுலா, கல்வி, மருத்துவம், உறவினரைப் பார்க்கவென்று சென்று வருபவர்கள் இருக்கின்றார்கள். இவர்களைப் புலம்பெயர்ந்தவர்களாக எவரும் கணக்கிற் கொள்வதில்லை. ஏனெனில் புலம்பெயர்ந்த  இடங்களில் அல்லது நாடுகளில்இவர்களது குறுகியகால வாழ்க்கை ஒரு பார்வையாளர் வாழ்க்கை. ஷாப்பிங் சென்று தனது கையிலிருக்கும் பணத்திற்கும், தனது தேவைக்கும் பொருட்கள வாங்கும் தம்பதியினரைப் போல அற்ப காலத்தில் அதீதச் சந்தோஷத்துடன் திரும்பவேண்டும் என்ற நோக்குடன் பயணிக்கும் மக்கள் இவர்கள். இத்தகு மக்களை திக்குத்தெரியாதக் காட்டில், பல ஆண்டுகளுக்குப் பிறகும் தனது தேவையும், இருப்பும் என்ன? எங்கே? என்று அறியாமலேயே பயணிக்கும் மக்களோடு ஒப்பிடமுடியாது.

நீண்டகாலப் புலம்பெயருதலில், கலாச்சாரம், மொழி இவற்றில் அடிப்படை ஒற்றுமைகள் கொண்ட அரசியல் எல்லைக்குள் பொருளாதாரத் தேவையைமட்டும் கருத்திற் கொண்டு நடப்பது ஒருவகை உ.ம். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கோ, இங்கிலாந்திலிருந்து பிரான்சுக்கோ இடம்பெயருவது. மொழி கலாச்சாரத்தையொதுக்கிவிட்டு, அரசியல் நிர்பந்தங்களுக்காகவும், பொருளாதாரக் காரணங்களுக்காகவும் முற்றிலும் புதிய மண்ணிற்குப் புலம்பெயருதல் மற்றொருவகை, உ.ம் மூன்றாவது உலக நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கோ அல்லது அமெரிகாவிற்கோ இடம்பெயருவது. புலம் பெயருதல் என்ற சொல், குறிப்பாக இவ்விரண்டாம் நிலை மக்களோடே அதிகத் தொடர்புடையதாகும்.

குடியேற்ற நாடுகளுடைய பூர்வீக மக்களின் அடையாளங்களை முற்றிலுமாக எரித்துவிட்டு வந்த நாட்டை சொந்த நாடாக வரித்துக்கொண்டு வாழுகின்ற அமெரிக்கர்கள் மற்றும் ஆஸ்திரேலியர்கள் போன்றவர்கள் ஒருபுறமிருக்க, புதிய மண்ணுக்குப் வாழ்க்கைப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் இனம், கலாச்சாரம், மொழி இவைகள் தன்னிடமிருந்து விலகிச் செல்வதைத் தெரிந்தோ தெரியாமலோ ஏற்க பழகிய மக்களே இன்றைக்குப் பரவலாக புலம்பெயர்ந்தவர்கள் அடையாளத்துடன் வாழுகின்றார்கள். இவர்களின் உணர்வுகள், அனுபவங்கள், துயர்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள் முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் படைப்புகளாக வலம் வருகின்றன.

பொதுவாகவே இன்றைக்கு, தெற்காசிய எழுத்தாளர்களின் படைப்புகள் முன் எப்போதுமில்லாத அளவிற்கு மேற்கத்திய புத்தக விற்பனைக் கூடங்களிற் காணக் கிடைக்கின்றன. மேற்கத்திய மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்தில் ஏன் பிரெஞ்சில்கூட இந்தியம் பேசுகின்ற படைப்புகள் நிறைய வருகின்றன. இவைகளுக்கு மேற்கத்திய நாடுகளில் அமோக வரவேற்பு.  இந்தியாவைக் களனாகக் கொண்ட படைப்புகள் சுலபமாய் விற்றுத் தீருகின்றன. ஆங்கிலத்தில் எழுதிய, எழுதும் இந்தியப் படைப்பாளர்களுள் ஆர்.கே நாராயணன், குஷ்வந்த் சிங், எம்.ஆர். ஆனந்த் இவர்களோடு சமீபகாலமாக அருந்ததிராய், விக்ரம் சேத், யு. ஆர் அனந்தமூர்த்தி, உபமன்யு சட்டர்ஜீ, கமலா தாஸ், முகுந்தன், தமிழ்நாட்டின் பாமா ஆகியோரது படைப்புகளும் இங்கே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. மேற்கத்தியர்களும் இந்தியமண்ணின் வரலாறுகள், நிகழ்வுகள், வாழ்வியல் நேர்மைகளைக் களனாகக்கொண்டு படைப்புகளை எழுதி வெற்றிபெறுகின்றார்கள் என்பதற்கு, போல் ஸ்காட், ஷரோன் மாஸ், பெத்தி கிறிஸ்டியன், வில்லியம் டால்ரிம்பிள், எரிக் தெஷொ- ழான் குளோது லாத்தே போன்றவர்களைக் குறிப்பிடமுடியும்.

ஆனால் மேற்கண்ட இரு கூட்டத்திலும் சாராமல், இந்தியாவிற் பிறந்து அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வாழ்ந்தபோதிலும் இரு நாடுகளையும் கருவாகவும் களனாகவும் கொண்டு ஆங்கிலத்தில் எழுதுகின்றவர்கள் அதிகரித்து வருகின்றார்கள். இவர்களுடைய எழுத்தில் தங்கள் மூதாதையர் மண்ணின் ஈரப்பதம் உலறாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் நிறைகளும் குறைகளும், இரத்தமும், தசையும் நரம்புமாக எழுத்தில் வந்துவிழுகின்றன. அதே குணத்தோடு குடியேறிய நாட்டுப் பிரச்சினைகளையும் துணிவோடு தெளிவாகச் சொல்ல முடிகிறது. தன் வாழ்நாளில் கணிசமாகவொரு பகுதியைப் பிறந்த நாட்டில் அல்லது சொந்த மண்ணில் கழித்துவிட்டு, எஞ்சிய ஆயுளை இன்னொரு மண்ணில் அல்லது இன்னொரு நாட்டில் கழிக்க நேரும்போது, அவனுடல் மாற்றத்தை ஏற்றுகொண்ட அளவிற்கு, அவனுள்ளம்  மாற்றத்தை ஏற்பதில்லை. இதையே வேறுவகையிற் சொல்வதென்றால், உணர்ச்சிகள் மாற்றத்தைச் சுலபமாக ஏற்க, அறிவு விலகி நின்று போராடுகின்றது. இப்போராட்ட வாழ்க்கை முதற் தலைமுறையைச் சார்ந்த அனைத்து மக்களுக்கும் உண்டு. சுடர் மிகும் அறிவுள்ள அவன், அதன் நலங்கெடப் புழுதியில் எறிவதில்லை. மாறாகத் தனது அடையாளத்தை வெளிப்படுத்த அறிவைப் பயன்படுத்திக்கொள்கிறான். புலம்பெயர்ந்தவர்களிடம் கிடைக்கும் சொந்த நாட்டின் சிந்தனைகளும் வந்த நாட்டின் அனுபவங்களும் உலக இலக்கியங்களுக்கு ஓரு புதிய அனுபவத்தைக் கொடுத்துள்ளது.  உலகின் ஏனைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்களைப் போலவே சொந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகளைக் கொண்டுவந்ததுபோக, வந்த மண்ணின் உணர்வுகளை, அனுபவங்களை, பார்வைகளை எழுத்தில் வடிக்கும் படைப்புகள் சமீபகாலங்களில் இத்தகு படைப்பாளிகளாற் பெருகிவருகின்றன.

ஆங்கிலத்தைத் தவிர, தமிழில் வருகின்ற பெரும்பாலான இன்றைய இலக்கியபடைப்புகளில் உற்பத்தி இலக்கணம் இருக்கின்றதேயொழிய படைப்பிலக்கணமில்லை. இவர்களின் நோக்கங்களனைத்தும் புகழுக்கும், விற்பனைக்குமான தந்திரம். இதற்காக எல்லா உபாயங்களையும் (அடிதடி உட்பட..) கையாளுகின்றார்கள். உற்பத்திப் பொருளின் விற்பனைச் சந்தைக்குக்குப் பயன்படும் யுக்திகளான ‘ஒப்பீட்டு விளம்பரம்’, நுகர்வோர் சார்பில் ஆகா.. ஓகோச் சான்றிதழ்கள்.. இன்னபிறவற்றைத் திட்டமிட்டு நகர்த்துகின்றார்கள். இத்தகு தந்திரங்கள் அன்றன்றைய பங்குச்சந்தைக்கு உதவுமேயொழிய, காலத்தை எதிர்த்து நிற்க உதவாது. வெற்றியைத் திட்டமிட்டு செய்வது படைப்பாக முடியாது, வியாபாரம். அவ்வாறு செய்பவர்கள் படைப்பாளிகலல்ல வியாபாரிகள்.

அதற்குமாறாக படைப்பிலக்கணம் சார்ந்து, துணிச்சலுடன் எழுதுகின்ற வி.எஸ் நேப்போல், சல்மான் ருஷ்டீ, கமலா மார்க்கண்டேயா, அனிதா தேசாய் போன்றவர்களும் பாங்களா தேஷைச் சேர்ந்த தலிமா நஸ்ரீன், இலங்கையைச் சேர்ந்த ஷியாம் செல்வதுரை போன்ற புலம்பெயர்ந்த படைபாளிகளைப் பார்க்கிறோம். இவர்களின் எழுத்தில் நேர்மையும், துணிவும் இயல்பாய் அமைந்திருக்கின்றன.

தமிழிலும் இன்றைக்குப் புலம் பெயர்ந்த எழுத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.. தமிழ்நாட்டிற்கு வெளியே, சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு வேறு நாடுகளுக்குக்(சிங்கப்பூர், மலேயா,..) குடியேறி இன்றைக்கு அவற்றைத் தாய்நாடுகளாக வரித்துக்கொண்டு தமிழில் எழுதுபவர்கள் ஒருபக்கமெனில், சமீபத்தில் கட்டுரையின் ஆரம்பத்திற் குறிப்பிட்டதுபோன்று அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக உலகின் பலநாடுகளிலும் குடியேறி, புதிய கலாச்சாரத்தினைச் சந்தித்து அதனைத் தமிழில் சொல்பவர்கள் மறுபக்கமென இவர்களைப் பிரிக்கலாம். தாயக எழுத்தாளர்களில் சிலர் மிகச் சுலபமாக வைக்கும் குற்றச்சாட்டு, “அங்கேபோயும் அவர்கள் இதைத் தானே எழுதிக்கொண்டிருக்கிறார்கள்”, என்பது. இதற்கான பதில், “கொழும்பிலிருந்துகொண்டு மட்டக்கிளப்பு, கிளிநொச்சி என்று எழுதுவதற்கும், சென்னையிருந்துகொண்டு வடுகப்பட்டியையும், திருவரங்கத்தையும் எழுதுவதற்கும் தாயகத் தமிழர்களுக்கு என்ன உரிமையுண்டோ, நியாயங்கள் உண்டோ, அவைகள் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் உண்டு என்பதாகும். புலம்பெயர்ந்த எழுத்துக்கள் எதைச் சொல்கின்றன என்பதைவிட எப்படிச் சொல்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும். புலம் பெயர்ந்தவர்களின் சொற்கள் தமிழுக்குப் புதிது, எழுதும் பொருள் தமிழுக்குப் புதிது, களம் தமிழுக்குப் புதிது.

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும், கனடாவிலும், வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியாவென தமிழர்கள் பரவியுள்ள இடங்களிலிருந்து ஏற்கனவே தமிழுலகம் அறிந்த படைப்பாளிகளிடமிருந்தும், இளம் படைப்பாளிகளிடமிருந்தும் நல்ல தமிழில், அறிவியல், இலக்கியக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என்பதாகப் பல தேர்ந்த படைப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. தாயகத் படைப்பாளிகளுடன் இணைந்து, இணையக்குழுமங்களிலும் இணையத்தளங்களிலும் தமிழிலொரு முதிர்ச்சிபெற்ற இலக்கியச் சூழலுக்காகப் பங்காற்றிவருகின்றார்கள், உழைத்து வருகின்றார்கள்.

தமிழிலக்கியவரலாறு, இருபத்தோராம் நூற்றாண்டில் புலம்பெயர்ந்த தமிழர்களால் முக்கியத்துவம் பெறும். தாயக ஏக்கமும், குடியேற்ற நாடுகளில் அவன் சந்திக்கின்ற பிரச்சினைகளும் படைப்புகளின் தரத்தைக் கூட்ட உதவுமேயன்றி குறைக்க ஒருபோதும் உதவாது. இது தவிர தமிழகத் தீவர இலக்கியவாதிகள் கட்டியழும், மேற்கத்திய காலாவதியாகிவிட்ட இஸங்களைக் காட்டிலும், .குடியேற்ற நாடுகளில் எழுதப்படும்  புலம் பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் சமூகம் சார்ந்த பிரச்சினைகளான இனவெறி, நிறவெறி, பாலியற் பிரச்சினைகள் அந்தந்த நாடுகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். தமிழிலக்கியங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பேசபட்டவையே மேற்கத்திய படைப்பாளிகள் இஸங்கள் என்ற பெயரால் குழுக்களமைத்துக்கொண்டு எழுதப்போக, இன்றைக்கவை மேலைநாடுகளில் முகவரி இழந்து கிடக்கின்றன. ஆகவே இந்தியாவில் கூச்சலிட உதவும் இஸங்கள் இரண்டுங்கெட்டான் இந்தியவாசகனை மிரட்ட உதவுமேயன்றி மேலை நாடுகளை மிரட்டாது. ஜெயகாந்தனிலிருந்து – பாமாவரை அசலான தமிழ்ப் படைப்புகளே மேலைநாடுகளை எட்டிப்பா¡ர்த்திருக்கின்றன. இந்தச் சூழலில் எதிர்காலத்தில் தமிழிலக்கியத்தை மேற்கத்திய மக்களுக்குக் கொண்டு செல்வதில் தாயக மக்களைவிட புலம்பெயர்ந்தவர்களின் பங்கு கணிசமாகவிருக்கும் என்பது சத்தியம்.

அவ்வாறே மொழி பெயர்ப்பிலும் புலம்பெயர்ந்தவர்கள் கணிசமானப் பங்கினை ஆற்றமுடியுமென நம்புகிறேன்.  எந்த எழுத்தையும் மொழிபெயர்க்கும்பொழுது, மூலமொழியை வாங்கிக்கொள்ளும் திறனும் சொந்தமொழியில்  அதை வெளிபடுத்தும் ஆளுமையும் அவசியம். மொழி அறிவோடு, மூல ஆசிரியனின் காலம், சமூகம், கலாச்சாரம் பற்றிய அடிப்படை அறிவில் தெளிவாக இருக்கவேண்டும். சென்னையிலிருந்துகொண்டு ரஷ்ய நாவலை மூலத்திலில்லாமல், இரண்டாவது மொழியிலிருந்து மூன்றாவதாக ஒரு மொழியில் சொல்ல வருவதென்பது சரியாகாது. மலையாள நாவலொன்றை பக்கத்து எல்லையிலிருக்கும் தமிழ்நாட்டில் மலையாளமறிந்த ஒரு தமிழரால் தமிழுக்குக் கொண்டு வரும்போது பிரச்சினைகளில்லை. ஆனால் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திலும் அங்கிருந்து வடகிழக்கிலுள்ள ஒரியாவில், கேரளாபற்றிய பூகோள அறிவைமட்டுமே துணையாகக்கொண்டு மொழிபெயர்ப்பது அபத்தம். தமிழிலுள்ள பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் மூலத்தோடு பக்கங்களின் எண்ணிக்கையில் ஒத்துபோகின்றனவேயொழிய, மொழியிலோ, படைப்பாளியிடமோ அல்ல. இக்குறைகளைப் போக்க இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மன், நோர்வே, கனடா என வாழும் தமிழர்கள் முயன்றார்களெனில் பல நல்ல படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டு வரமுடியும்.

“புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்து விட முடியாது” என்கின்ற  ஜெயமோகனின் அபிப்ராயத்தை மிக எளிதாக ஒதுக்கலாம். அவ்வாறே  “உலக அரங்கில் தமிழ் இஇலக்கியத்தைப் புலம்பெயர் இஇலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்” என. எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால், இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இஇலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைப் புலம் பெயர்ந்தத் தமிழர்கள் கணிசமாகப் பெற்றுத்தருவார்கள் என்பதனை மறுக்கவியலாது.

……