பிப்ரவரி 10
திண்டுக்கல்லில் ஒன்பதாம் தேதி இரவு பார்சன்ஸ் கோர்ட் என்ற ஓட்டலில் தங்கியிருந்தோம். காலையில் ஆறரைமணிக்கெல்லாம் புறப்பட்டு, எங்கள் காலை உணவை முடித்துக்கொண்டு எட்டுமணிக்கெல்லாம் நாமக்கல் புறப்பட்டுவிட்டோம். ஹோசூர் கிருஷ்ணகிரி சாலையில் வடக்கே பயணம் செய்யவேண்டியிருந்தது. அண்மைக்காலங்களில் சாலைகளின் துரிதவளர்ச்சியை இந்தியாவில் பார்க்க முடிந்தது. திண்டுக்கல் நாமக்கல் சாலையும் எதிர்பார்த்ததைக்காட்டிலும் நன்றாக இருந்தது. கு. சின்னப்ப பாரதி காலையிலேயே ஒருமுறை தொடர்புகொண்டிருந்தார். வழிகளையெல்லாம் சரியாகச் சொல்லியிருந்தார். ஓரிடத்தில் எங்கள் வாகனஓட்டி சாலையைத் தவறவிட்டு கரூருக்குள் போய்விட்டார். பத்து நிமிடநேரம் கூடுதலாக செலவிட்டிருந்தோம். ஆனால் அதை பெரிதாகச் சொல்லிக்கொள்ள இல்லை. இடையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் சிறிது நேரம் வாகனத்தை நிறுத்த நேர்ந்தது. திண்டுக்கல் நாமக்கல் சாலை ஓரம் நன்றாகவே இருந்தன. ஒன்பது மணிக்கெல்லாம் நாமக்கல் அடைந்துவிட்டோம். நகரத்தின் உள்ளே சேலம் ரோட்டில் எழுத்தாளர் சின்னப்ப பாரதி அவரது நண்பருடன் காத்திருந்தார்.
கிறித்துவ சகோதரி ஒருவரால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த தமது சங்கம் என்ற நாவலை பிரான்சு நாட்டில் எந்த பதிப்பகமாவது வெளியிட முன் வருமா எனக்கேட்டு எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி எழுதியிருந்தார். எனக்கும் தமிழ் படைப்புகளை எனது அமைப்பு மூலமாக பிரெஞ்சில் கொண்டுவரும் ஆர்வம் இருந்ததால் சம்மதித்தேன். எங்கள் அமைப்பு மூலம் கொண்டுவந்தால் பிரயோசனமில்லையென்பதும் தெரியவந்தது. காரணம் பிரெஞ்சு பதிப்பகங்கள் துணையின்றி அதனைப் பரவலாக பிரெஞ்சு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியாதென்பது காலம் கடந்து தெரியவந்தது. எனினும் பதிப்பகங்களுக்கு அனுப்பி வைப்பதென்று முடிவு செய்தேன். இதற்கிடையில் தமிழ்நாட்டிலிருந்த மூத்த எழுத்தாளர்களில் சிலர் பிரெஞ்சு பதிப்பகங்களுக்கு முதன் முதலாக அனுப்புகிறபொழுது தமிழில் நல்ல நூல்களை அனுப்பினால்தானே தொடர்ந்து ஆர்வம் காட்டுவார்கள் என்றார்கள். நான் பிரெஞ்சில் வெளிவந்த அந்த நூலை வாசித்தேன். எனக்கு நிறைவாக இருந்தது. தவிர கொல்லிமலை மக்களின் பிரச்சினையை பேசுவதாக இருந்தது. பிரெஞ்சு பதிப்பகங்கள் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இதுபோன்ற நூல்களைத்தான் எதிபார்க்கிறார்கள் என்ற எனது நம்பிக்கை காரணமாக முதலில் ஒரு பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். அவர்கள் எழுதிய கடிதத்தில் தங்கள் பதிப்பகத்தின் மீது நம்பிக்கைவைத்து கையெழுத்து பிரதியை அனுப்பியதற்காக நன்றி தெரிவித்துவிட்டு, தாங்கள் பதிப்புக்கு இணங்கினால் ஒரு மாதத்தில் கடிதம் எழுதுவதாகவும் இல்லையெனில் உரிய தபால் கட்டணம் அனுப்பிவைத்தால் திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்திருந்தார்கள். கு.சின்னப்பாரதி பிரெஞ்சு மொழி பெயர்ப்புவெளிவர மிகுந்த ஆர்வமும்காட்டினார் அவசரமும்காட்டினார். எனவே வேறு இரண்டு பதிப்பகங்களுக்கு அனுப்பிவைத்தேன். மூத்த எழுத்தாளர்கள் கூறியதுபோல அதனை அப்படைப்பின் குற்றமாக ஏற்றுகொள்ள இயலாது. இக்காலத்தில் மொழிபெயர்ப்பினை பதிப்பிக்கிறபோது அம்மொழிபெயர்ப்பும் ஒழுங்காக வந்திருக்கவேண்டும். எனக்கு நன்றாக இருந்தது. படித்த பதிப்பாளர்களின் விருப்பம் வேறாக இருந்திருக்கிறது. தவிர பல நல்ல எழுத்துகள் பதிப்பாளர்களால் பல முறை நிராகரிக்கப்பட்டமைக்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன.
மாறாக எனது அமைப்பு நண்பர்களிடம் மொழிபெயர்ப்பு நாவலை அனுப்பிவைத்தபோது அதில் பிரான்சுவாஸ் மட்டும் மொழிபெயர்ப்பு திருப்தியில்லை என்றார். மற்ற இருவரும் நாவல் நன்றாக இருக்கிறதென்றார்கள். ஆக நாவலைப்படித்துவிட்டு அடித்தட்டு மக்களின் துயரில் அக்கறைகொண்டிருக்கிற கு.சின்னப்ப பாரதியை பார்க்க ஆர்வம் காட்டினார்கள். இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக சின்னப்ப பாரதியிடம் இவ்விஷயத்தைக்கூறியிருந்தேன். அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். எந்த எழுத்தாளனும் எதிர்பார்ப்பது அதைத்தானே. விருதுகள், பரிசுகளைக்காட்டிலும் இதுபோன்ற பாராட்டுதல்கள்தான் எழுத்தாளனை உற்சாகப்படுத்துக்கின்றன. கு.சின்னப்பபாரதி சேலம் ரோட்டில் பிரெஞ்சு நண்பர்களைக் காரில் பார்த்ததும் கட்டி தழுவினார். சக எழுத்தாளனாக அந்த மகிழ்ச்சியை உள்வாங்கிக்கொண்டேன். அவரது வாகனத்தை பின்தொடர்ந்துவருமாறு எங்கள் வாகனஒட்டிக்கு கட்டளை பிறப்பித்துவிட்டு முன்னால் சென்றார். கொஞ்சதூரத்தில் ஒரு உணவு விடுதிமுன்னால், பலகாரம் சாப்பிடலாமே என்றார். நாங்கள் ஏற்கனவே திண்டுக்கல்லில் முடித்துவிட்டு வந்ததைக் கூறினோம். அவருடைய வீடு நகரத்தைவிட்டு தள்ளி, புற நகரில் அமைந்திருந்தது. பிரெஞ்சு நண்பர்களுக்கு ஆரத்தி எடுத்தார்கள். உள்ளே சென்றதும் தேநீர் வந்தது. சின்னப்பபாரதியின் துணைவியார் பாரதிக்கு வாய்த்த செல்லம்மாள் என நினைத்துக்கொண்டேன். வேறு சொற்கள்வேண்டாம். எழுத்தாள நண்பர் ஒரு குழந்தையைபோல தமது படைப்புகளையும் மொழிபெயர்ப்புகளையும் எடுத்துகாட்டி மகிழ்ந்தார். அந்தக் கண்களைப்பார்க்கவேண்டுமே!
எல்லோரும் செல்வம் காலேஜ் ஆவ் டெக்னாலஜிக்குச்சென்றோம். அங்கும் அனைவருக்கும் வரவேற்பு. பிறகு அறக்கட்டளை நண்பர்களின் அறிமுகம், செல்வம் கல்விஸ்தாபனத்தில் தலைவர் திருவாளர் முனைவர் செல்வராஜ் அறிமுகமென முடிந்து மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கு; சின்னப்பபாரதி அறக்கட்டளை தலைவரும் சரி நிர்வாகிகளும் சரி கு.சின்னப்பாரதி மீது வைத்திருந்த மரியாதையை புரிந்துகொள்ள முடிந்தது. மாணவர்கள் ஆசிரியர்களென சுமார் இரு நூறுபேருக்கு மேல் கூடியிருந்தனர். எனது மாத்தாஹரி அண்மையில் சின்னப்பாரதி அறக்கட்டளையின் சார்பாக பரிசினை வென்றிருந்தது. என்னை அறிமுகப்படுத்துகிறபோது அதனை மறக்காமல் குறிப்பிட்டார்கள். இரண்டு மாணவர்கள் காலச்சுவடில் எனது படைப்புகளை தொடர்ந்து படிப்பதாக கூறியது எதிர்பாராத சந்தோஷம். நண்பர் இந்திரனும் பேசினார். பிரெஞ்சு நண்பர்கள் சின்னப்பபாரதியின் நூலை குறிப்பிட்டு பேசினார்கள். பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.
மதியம் கேட்டரிங் மாணவர்கள் தயாரித்திருந்த இந்திய உணவு மேற்கத்திய பாணியில் பரிமாறப்பட்டது. இடையில் எழுத்தாளர் சின்னப்பபாரதி எ·ஸ்பிரஸ், இந்து பத்திரிகையாளர்களை பேட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரெஞ்சு நண்பர்களுக்கு நாமக்கல் மண்ணில் எழுத்தாளர் உத்தியோகம் கிடைத்திருந்தது. அந்த செய்தியை பின்னர் படிக்கவும் நேர்ந்தது. இந்தியாவில் ஆங்கிலதினசரிகளைக்கூட அத்தனை சுலபமாக நம்பக்கூடாதென்பதுபோல அடுத்த நாள் செய்திகளிருந்தன. பிரெஞ்சு நண்பர்கள் தங்களை எழுத்தாளர்களென்று சித்தரித்தும், சின்னப்பபாரதியைப் பார்க்கத்தான் இவ்வளவுதூரம் வந்தோமென்றும் நாங்கள் சொல்லவே இல்லையே என்றார்கள். இதெல்லாம் இந்திய தினசரிகளில் சகஜமென கூறி அவர்களை (பிரெஞ்சு நண்பர்களை) பிறகொருநாள் சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. மதியம் கொல்லிமலைக்கு பயணித்தோம். எழுத்தாளர் சின்னப் பாரதி நூலில் வரும் சந்தை நடக்குமிடத்தையெல்லாம் காண முடிந்தது. சின்னப்ப பாரதியின் தயவால் கொல்லிமலையின் தரிசனம். இன்னொரு முறை ஆற அமர குடும்பத்துடன் சென்று அங்கே தங்கிவிட்டு வரவேண்டும், என நினைத்துக்கொண்டிருக்கிறேன். சின்னப்பபாரதி கொல்லிமலைக்குத் துணையாக அனுப்பியிருந்த நண்பர் இருமுறை வழியைத் தவறவிட்டதும், நாமக்கல்லை நெருங்குகறபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதும் வழக்கம்போல நண்பர் சவியே தெபலுக்கு எரிச்சலூட்டியது. ஏதோ சொல்லப்போக நான் பதிலுக்கு ஏதோகூற விவாதம் விதண்டாவாதமாக நீண்டது. போதாதற்கு எங்களுக்கு முன்னால் காரில் சென்ற சின்னப்ப பாரதியின் நண்பர் நாங்கள் பின்னால் வருகிறோமா இல்லையா என்பதைக்கூட கவனியாமல் புறப்படுபோய்விட நாங்கள் வழியைத் தவறவிட்டு சில மணித் துளிகள் கூடுதலாக அலைந்தோம். பின்னர் சின்னப்பபாரதிக்கு போன்செய்து அவருடைய இளைய மருமகன் வந்து எங்களை அழைத்து சென்றார். இரவு எழுத்தாளர்வீட்டில் இலைபோட்டு குழிப்பணியாரம், இட்டலி, தோசை, பூரி யென வயிற்றை நிரப்பினார்கள். முதலில் பத்தாம்தேதி இரவு தங்கிவிட்டு பதினோறாம் தேதி காலை புதுச்சேரி செல்லலாமென்றுதான் யோசித்திருந்தோம். அதிகாலை எழுந்திருக்க தாமதித்துவிடும் பின்னர் புதுச்சேரிசெல்ல காலை பத்தும் ஆகலாம பதினொன்றும் ஆகலாமென்றுகூற அன்றிரவே புதுச்சேரிக்குப் புறப்பட்டாயிற்று.
————————



