துருக்கி பயணம்-7

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

ஏப்ரல் – 1

 மீண்டும் அண்ட்டால்யா விலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல் நாள் அண்ட்டால்யா: அவ்லாமணி அண்ட்டல்யா, அஸ்பெண்ட்டோஸ் அண்ட்டல்யா, மனவ்காட் அண்ட்டல்யா, செலிமியே அண்ட்டால்யா ஆகியவை சட்டைபொத்தான்களைப்போல  நினைவில் அணிவித்ததும் வரிசையாக வந்தன. இவ்விரண்டு நாட்களும் நாங்கள் பார்க்கவிருக்கிற அண்டால்யா வேறுவகையென்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கி கைவசமிருந்த குறிப்புகள் தெரிவித்தன.

அண்டல்யாவில் எப்போதும்போல நல்ல சீதோஷ்ணநிலை. மாசுமருவின்றி வானம் வெளுர் நீலத்தில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தெரிந்தது. இதமான குளிர்ந்தகாற்று. நாளையும் இதுபோலவே இருக்கவேண்டுமென வேண்டிக்கொண்டேன். ரோம் நகரில் மூன்று நாட்கள் மழையில் அலைந்தது நினைவுக்கு வந்தது. இன்றும் எங்களை பெட்டிகளுடன் இறங்கும்படி வழிகாட்டிக் கேட்டுக்கொண்டார். இதுதான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இருக்கப்போவது இரண்டு நாட்கள், ஒரே ஓட்டலில் தங்க வைத்திருக்கலாம். அன்றிரவு நகரத்தை ஒட்டிய  மற்றொரு ஓட்டலில் தங்கவிருக்கிறோமென்றார்கள். உருப்படியான ஓட்டலாக இருந்தால் சௌகரியமென நினைத்துக்கொண்டேன்.

சென்ற வார கட்டுரையில் தெரிவித்த சுவட்டில் பண்பாட்டு சுற்றுலாவில் இன்றைய உபயம் நகை உற்பத்தித் தொழிற்சாலை. எங்கள் கிராமத்தில் ஒருகிராம் இரண்டுகிராம் தங்கத்தை குமிட்டி உமி உழக்கில் வைத்து உருக்கும் கோவிந்தசாமி பத்தரைத் தவிர்த்து வேறு தொழிற்சாலைகளைக் கண்டதில்லை.  நகைகள் மேற்கத்தியரின் ரசனைகேற்று தயாரித்திருந்ததால் என் மனைவி அக்கறைகொள்ளமாட்டாளெனத் தெரியும். எங்கள் குழுவினருடன் நுழைந்தபொழுதே, இங்கிருந்து தப்பிக்க வழியிருக்கிறதாவென அங்கிருந்த நபரிடம் கேட்க, அவர் முகம் சுருங்கிப்போனது. இங்கும் ஒருவர் வாடிக்கையாளர்களை வலையில் வீழ்த்த பெரியதொரு சொற்பொழுவு ஆற்றினார். அவர் ஓய்ந்ததும்   விற்பனையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். ஒரு விற்பனையாளர் நீங்கள் பாகிஸ்தானியரா என்றார், மறுத்தேன். எங்களைவிடாமல் பின்தொடர்ந்து வந்தவரிடம் எங்கள் பேருந்து நிற்கும் இடத்திற்குத் திரும்பவேண்டும் சாத்தியமா என்றேன். வழி சொன்னார். எங்களுக்குத் துணையாக மூன்று தம்பதிகள். வெளியில்வந்து பேருந்தைக் கண்டுபிடித்தோம். வரிசை வரிசையாக நின்றிருந்த பேருந்துகளில் எங்கள் பேருந்து எண்ணைக் கண்டு பிடித்தோம். குழுவைச்சேர்ந்த மற்றவர்கள் வந்து சேர ஒரு மணி நேரம் ஆகுமென்று தோன்றியது. நடுத்தரவயது மனிதரொருவர் ஆரஞ்சு பழச்சாற்றை பிழிந்துவிற்றார். துருக்கியில் போனவிடங்களிலெல்லாம் ஆரஞ்சு சாறு விற்பது ஒரு தேசியத் தொழிலாக இருந்தது. பொதுவாக ஒரு குவளைச்சாறு ஒரு டாலரெனில் நகை உற்பத்தி நிறுவனத்தில் 1.50 டாலர்.

அங்கிருந்து பத்துமணிஅளவில் நாங்கள் சென்று பார்த்தது பெர்க(Perge) என துருக்கி மொழியிலும் பெர்ஜ் என்று ஆங்கிலத்திலும்  சொல்லப்படும் வரலாற்று நகரம். அண்ட்டால்யாவிற்கு 20கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இத்தொடரில் ஏற்கனவே பலமுறை துருக்கிக்கும் கிரேக்கத்திற்குமுள்ள வரலாற்று தொடர்புகள் குறித்து எழுதி வந்துள்ளேன். 12ம் நூற்றாண்டில் பெரும் எண்ணிக்கையில் கிரேக்க மக்கள் துருக்கிக்கு வடக்கிலிருந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். நுழைந்தவர்கள் ஆரம்பகால புலம்பெயர்ந்தோர் விதிமுறைப்படி செழுமையாகவிருந்த மத்திய தரைகடலொட்டி குடியேறியிருக்கிறார்கள். அவர்கள் குடியேறிய அப்பிரதேசம் ‘பாம்பிலி (Pamphylie) என அழைக்கப்பட்டது. இத்தொடரின் இரண்டாம் நாள் கட்டுரையில் அஸ்பெண்ட்டோஸ் திறந்த வெளி நாடக அரங்கத்தைபற்றி விளக்கமாக எழுதுயிருந்தேன். அந்நாடக அரங்கு பெர்ஜ் நகரத்தின் ஒரு பகுதிஅல்லது பெர்ஜ் நகர கிரேக்கமக்களின் கலை பண்பாட்டுக் குறியீடு. நகரத்தைச் சுற்றிப் பாதுகாப்பு அரண்போல பெரிய கோட்டை சுவரொன்று இருந்ததன் அடையாளமாக பத்துபன்னிரண்டு மீட்டர் உயரமுள்ள மதிற் சுவரின் எச்ச சொச்சங்கள் நுழைவாயிலில் காணக் கிடைக்கின்றன.  அடுத்த பெரிய அதிசயம் கவிழ்த்த ‘U’ போன்ற குதிரை இரத போட்டி மைதானம்,  ரதபோட்டிக்கென பாதைகளில் கற்களைபாவித்திருக்க அவற்றில் இன்றும்  ரதங்கள் தொடர்ந்து ஓடியதால் ஏற்பட்ட தடங்கள், அதிசயமாக சீர்குலையாமல் இருக்கின்றன. ஏறக்குறைய பதினைந்தாயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் இருக்கைகளும் உள்ளன. இது தவிர நகரில் கடைத்தெருக்களும், மக்களுக்கான நடைபாதைகளும், கடைச்சொந்தக்காரர்கள் பின்புறமாக கடைக்குள் வரவும், வாடிக்கையாளருடன் தொடர்புகொள்ள மக்கள் நடைபாதையோடு கடைமுன்புறம் திறப்பும் உள்ளன. இங்கே முக்கியமாக குறிப்பிடவேண்டியது பொது நீராடுமிடமும், வெந்நீர் போடுவதற்கென அவர்கள் கையாண்ட பொறி இயல் நுட்பமும் வியக்கவைப்பவை. திரும்பிய திசைகளிலெல்லாம் பல மொழிகளில் (சீன மொழி உட்பட) வழிகாட்டிகள் உரத்த குரலில்  அழைத்து வந்திருந்த சுற்றுலா பயணியருக்கு கிரேக்க பழைய நகரத்தின் பெருமையைக் கூறிக்கொண்டிருக்க,  நம் அண்மையில் வந்து மெல்லிய குரலில், கைப்பிடியைத் திறந்துக்காட்டி இவ்விடத்தைச்சேர்ந்த பொருள், ஐம்பது டாலருக்குக் கிடைக்கும், வேண்டுமா என்கிற துருக்கியர்களையும் காணமுடிந்தது பெரும் அதிர்ச்சி.

அங்கிருந்து மத்திய தரைக்கடலொட்டி மேற்கத்தியர்களாலும், கோடீஸ்வரர்களாலும் ஆக்ரமிக்கபட்டிருந்த நவீன அண்ட்டல்யாவைக் கண்டபிறகு தூங்கி வழிந்த ரெஸ்டாரெண்ட் ஒன்றில் மதிய உணவிற்கு அழைத்துசென்றார்கள். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்த உணவகம். உப்பு சப்பில்லாமலிருந்தது. கடந்த ஏழு நாட்களில் வேறெங்கும் அத்தனைமோசமான உணவை எடுத்துக்கொண்டதில்லை.

பிற்பகல் அண்ட்டால்யாவின் இதயப்பகுதிக்குச் சென்று பார்த்தோம். அதை கொஞ்சம் விபரமாக எழுதவேண்டியிருக்கிறது. அடுத்த வாரம் எழுதுகிறேன்.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

துருக்கி பயணம்-6

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-31

உயிர் வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு நாட்களும் முக்கிய

மானதுதான். கப்ப டோஸை பிரிகிறபோது மனதைச் சமாதானப்படுத்த வேறு காரணங்கள் உடனடியாகத் தோன்றவில்லை. இனி திரும்பவும் கப்படோஸ் அனுபவம் வாய்க்குமா? இங்கு கழித்த இரண்டு நாட்கள் போல மறுபடியும் அமையுமாவென என்னை நானே கேட்டுக்கொண்டபோதுதான், நமது வாழ்க்கையில் எல்லா நாட்களும் முக்கியமானவையென நினைத்துக்கொண்டேன். இன்னொரு கப்படோஸ் எனக்கு அவசியமற்றதாகப் பட்டது. கப்படோஸ் கப்படோஸ் மட்டுமே அப்படி இருக்கவேண்டும். வேறொரு நாட்டில் வேறொரு பிரதேசம் அதன் சாயலில் இருப்பதை சகித்துக்கொள்ள முடியாது, மனம் அலுப்பில் நுரைதள்ளக்கூடும். உலகத்தின் சுவாரஸ்யமே ‘அதைப்போல இது’, ‘மற்றவரைபோல நானென’ சொல்லிக்கொள்ளாத இருப்புகளினாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. தங்கிய விடுதி, ஊழியர்கள், மக்கள் இப்படி எல்லோரும் வேறாக இருந்ததாலேயே, நினைவில் இருக்கிறார்கள். குறிப்பாக அமீது என்ற இளைஞரை மறக்க முடியாது. சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பகலில் நாங்கள் வெளியிற் செல்கிறபோதும், தங்கிய ஓட்டலில் காலை சிற்றுண்டி, இரவு உணவு என சாப்பிட்டபோதும் கப்படோஸ் பிரதேச உணவை ( பயண ஏற்பாட்டாளர்க்கு அதில் இலாபமும் இருக்கக்கூடும்)  சிபாரிசு செய்தார்கள். வேண்டாமென்றால் வேறு உணவிற்கு வாய்ப்பிருந்தது. அந்த வேற்று உணவுகள் இரண்டொரு ஐரோப்பிய மற்று துருக்கிய உணவுகள். அண்ட்டல்யாவில் தங்கியிருந்தபோன்று அதிக பல்வகையான உணவுகளுக்கு வாய்ப்பில்லை.

உணவு பிரியர்களுக்காக:  காலை உணவுக்கு துருக்கியில் காவல்ட்டி ( kahvalti) என்று பெயர். ஏற்கனவே காலையில் என்ன உண்டோமென்பதை எழுதியிருக்கிறேன். வேண்டுமானால் அங்கே எழுதாதவற்றை இங்கே குறிப்பிடுகிறேன். பிரத்தியேக உணவுகளின் பெயர்களை  (துருக்கி பெயர்கள்) சிலவற்றை கேட்டுக் குறித்துக்கொண்டாலும், பின்னர் எங்கள் வழிகாட்டியிடம் காட்டிய பொழுது, அவற்றை திருத்தினார்.  பலபெயர்களை தவறாக காதில் வாங்கிக்கொண்டு கையேட்டில் குறித்துவைத்திருந்தேன். Bazlama, lavash ரொட்டிகளில் குறிப்பிடப்படவேண்டியவை.  இறைச்சி தூவிய Lahmacun வாய்க்கு ருசியாக இருந்தது. இதை துருக்கியரின் பிஸ்ஸா எனவும் சொல்லக்கேட்டேன். ஹொமோஸ் (houmous) கப்படோஸில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது: கொத்துகடலையையும் எள்ளையும் சேர்த்து அரைத்த தொகையல் போன்ற ஒன்று, கொஞ்சம் புளிக்கவும் செய்கிறது, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுகிறார்கள். பதப்படுத்தபட்ட மிளகாய், ஆலிவ் (ஊறுகாய்?) ஆகியவற்றையும் துருக்கியர்கள் நிறைய சாப்பிடுகிறார்கள். துருக்கி காபி: பால்கலவாத மிக ஸ்ட்ராங்கான கறுப்புகாபி. முயற்சி செய்தேன், தொடர விருப்பமில்லை.

கப்படோஸ் எனும்போது நினைவில் நிற்கக்கூடிய நபர் உணவு விடுதியிலில் பணியாற்றிய அமீது. இருபது வயதைத் தாண்டாத இளைஞர். பயிற்சி மாணவராக இருக்கவேண்டும்.  பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்த மணிப்பிரவாள மொழியில் உரையாடுவது அவருக்கான குறியீடு. அவரவருக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொள்ளும்வகையில் மேசைகளில் உணவுவகைகள் காத்திருக்க, விருந்தினர் அம்மேசைகளை நெருங்கினால் போதும், அமீதுவின் கண்களோடு பற்களும் அகலத் திறக்கும், அதை நாங்கள் புன்னகையென எடுத்துக்கொண்டோம்.  பாலினத்திற்கேற்ப முஸே அல்லது மதாம் மூக்கடைப்புடன் ஒலிக்கும். தொடர்ந்து சூப் வேண்டுமா என்பது ஆங்கிலத்தில் கேட்பார். அவர் வாக்கியத்தை முடிக்குமுன்பே கோப்பையில் ஊற்றப்பட்ட சூப்பின் ஆவி உங்கள் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டிருக்கலாம். முதல் முறையாக அவரது உபசரிப்பைக் கண்டு குதூகலித்து பதிலுக்கு புன்னகைத்தது உண்மை.  அதுவே இரண்டாவது மூன்றாவதெனத் தொடர்ந்தபோது, இளைஞரைகண்டு ஒளியவேண்டியிருந்தது. மூன்றாம்நாள் மாலை, மறுநாள் ஓட்டலை காலிசெய்யவிருந்ததால், இரவு உணவைமுடித்துக்கொண்டு அறைக்குத் திரும்புவதற்கு முன், வரிசையில் நின்று இளைஞரிடம் எங்கள் குழுவினர் விடைபெற்றுக்கொண்டது அற்புதமான காட்சி.

காலையில் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வரவேற்பு கூடத்தில் நேரத்திற்கு இருந்தோம்.  பனி கொட்டிக்கொண்டிருந்தது. நல்லவேளை நேற்றும் அதற்கு முந்தைய நாளும் பனி இல்லையே என்றளவில் ஆறுதல். ஐரோப்பாவில் குளிர்காலமென்பது டிசம்பர் நான்காவது வாரத்தில் ஆரம்பித்து மார்ச் நான்காவது வாரம் முடிய என்பது பொதுவிதி. இருப்பினும், மார்ச் மாதத்தில் இரண்டாவதுவாரத்திற்குப்பிறகு பணிப்பொழிவு அரிது. கப்படோஸில் பனிப்பொழிவு அன்று கடுமையாகவே இருந்தது. எங்கள்  ஓட்டுனர் பேருந்தை நிதானமாகவே செலுத்தினார்.

 கைவினை நெசவு ஊடாக தரைவிரிப்புகள் செய்யும் நிறுவனமொன்றை பார்வையிட எங்களை அழைத்துச்சென்றார்கள். நவீன சுற்றுலா அகராதியில் எங்கள் சுற்றுலாவிற்கு கலாச்சார சுற்றுலா என்று பெயர். சுற்றுலாவின்போது ஏதாவதொரு நிறுவனத்தின் தயாரிப்பை – நுகர் பொருளை- பார்வையிட அழைத்துசெல்வார்கள். சுற்றுலா பயணிகளில் 90 விழுக்காட்டினர் ஏமாளிகள் என்று பரிபூரணமாக  நம்புகிறார்கள். சுற்றுலா கட்டணம் கவர்ச்சிகரமாக இருக்கும். அக் கட்டண இழப்பை ஈடு செய்ய இதுபோன்ற துனை சுற்றுலா திட்டங்கள் உதவுகின்றன. தரை விரிப்பு நிறுவனத்தில் நுழைந்தவுடன் ராஜ உபச்சாரம். கோட்டு சூட்டுடன் ஒரு விரிவுரையாளர் உங்களை வரவேற்பார். உலக அளவில் தங்கள் பொருட்களுக்குள்ள வரவேற்பை கவர்சிகரமான உரிச்சொற்களுடன் புகழ்பாடுகிறார். பக்கிங்காம் அரண்மணைக்குப்பிறகு உங்கள் வீட்டு வரவேற்பறையைமட்டுமே எங்கள் தரைவிரிப்பு அலங்கரிக்கப்போகிறது என்கிறார், சொல்லி முடித்ததும், நமது தேவைக்குரிய பானங்கள் (ஒயின், ஸ்னாப்ஸ், தேநீர்..) வரவழைக்கப்படுகின்றன. கம்பளம், பட்டு பருத்தி என மூவகை நூல்களையும் கலந்தும் தனித்தனியாகவும் செய்திருந்த விரிப்புகள் விரித்துபோட்டபொழுது, அடடா! ஆகா! உச்சுகள். விலை? பக்கிங்காம் அரண்மனைக்கு நெசவு செய்த நுணுக்கமும், ஞானமும் உங்கள் வீட்டிற்கு வருகிறதென்றால் விலையைபற்றி யோசிக்க என்ன இருக்கிறது. உங்களுக்குத் தலைச்சுற்றல் வராதெனில் கடிதம் எழுதுங்கள் விலையைச் சொல்கிறேன். விரிவுரையாளரின் சொற்பொழிவுக்குப்பிறகு, ஒவ்வொரு சுற்றுலா பயணியையும் தேடி விற்பனையாளர் முதலைகள் படையெடுக்கின்றன. ஸ்பெயினில் எருதுசண்டை பார்த்திருக்கிறீர்களா? ஏறக்குறைய அதே அணுகுமுறை. என்னை அணுகியபோதே அவர்களுக்கு நெற்றியில் என்ன எழுதியிருக்கிறதென ஊகித்திருக்கவேண்டும். அரைமணி நேரத்திற்குக்கூடுதலாக எங்களிடம் ஒரு பெண்மணிவிவாதித்தாள். எனது மனைவி அருகிலில்லையெனில் ஒருவேளை துருக்கிப்பெண்மணியின் பிரெஞ்சுக்காக இல்லாவிட்டாலும் அவள் முகத்திற்காகவாவது அசடு வழிந்திருப்பேன். அவள் சாமர்த்தியமான பேச்சையெல்லாம் சமாளித்து  எங்கள் வீட்டிற்கு பக்கிங்காம் அரண்மனை வேலக்காரி கூட வரமாட்டாள், உங்களுக்கேன் வீண் சிரமமென்றேன். வேண்டிய விலையில் கிடைக்கும் என்றாள், எதுவென்று கேட்க ஆசை.  வயதும் மனைவியும் தடையாக இருந்தார்கள், தவிர்த்தேன். விலையைப் பாதியாகக்குறைத்தாள், நான்கு தவணையில் கட்டலாம் என்றாள். வீட்டிற்கு அனுப்பிவைப்போம் என்றாள். ம்.. இல்லை. அநேகமாக அன்றிரவு அவள் சபித்திருக்கக்கூடும்.

Mustapa Pasa (Sinosa)அண்டல்யா விற்குப் பயணத்தைத் தொடர்வதற்கு முன்பாக காணநேர்ந்த சிறு நகரம் அதனையும் அங்கிருந்த சந்தையையும் கண்டோம். ஒட்டோமான் காலத்தில் இங்கே கிரேக்கர்கள் பெரும் எண்ணிக்கையில் வசித்திருக்கிறார்கள். அப்பொழுது பெயர் சினாசோஸ். இன்றைக்கும் ஒன்றிரண்டு கிரேக்க குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை அந்நகரம் சினாசோஸ். துருக்கியர் தேனீரோ அவர்கள் மதுவையோ அருந்தும்போது, கணப்படுப்பை எரியவிட்டு சுற்றிலும் மணிக்கணக்கில் உட்கார்ந்துகொண்டு ஊர்க்கதைகளை அளக்கிறார்கள்.தேனீரை இந்தியாவில் சாய் என்பதுபோல சே என்கிறார்கள். அங்கே பெண்களை தவிர்த்துவிட்டு எங்கள் வழிகாட்டி, ஓட்டுனர், டாக்டர், இன்னும் நான்குபேரென உட்கார்ந்து துருக்கி-பிரெஞ்சு அரசியல் பேசினோம்.

 Saratli:ரண்டாவதாக நாங்கள் பார்த்தது. கப்படோஸ் அருகில் எண்ணற்ற நிலவறை கிராமங்கள் இருக்கின்றன. அதாவது இருந்தன.  அவற்றில் ஒன்று சராத்தலி. ஏற்கனவே கொரேம், உர்க்கூட் போன்ற இடங்களில் மலைகளை குடைந்து மக்களும், மதகுருமார்களும் வசித்தற்கான காரணங்களைக் கூறினேன். அவை இக் கிராமங்களுக்கு ப்பொருந்தும், அதாவது எதிரிகள் படையெடுக்கிற போது நிலவறை உறைவிடங்கள் அவர்களுக்கு மிகப்பாதுகாப்பாக இருந்திருக் கின்றன.  இதில் வியப்புக்குரிய விடயம், குடியிருப்பு ஒவ்வொன்றிர்க்கும் ஒரு சுரங்க வழி, அது தவிர குடியிருப்புக்களிடையேயும் தொடர்புகள். உள்ளே அறைகள், கிணறு, சூரிய ஒளி உள்வாங்கிக்கொள்வதற்காக மறைவான திறப்பு, காற்றுவாங்கிகள், உணவு தானியங்களை சேமிக்க ஜாடிகள் என எல்லாம் உபயோகத்திலிருந்திருக்கின்றன. இறந்தவர்களை அக்குடியிருப்புகளிலேயே புதைத்துமிருக்கிறார்கள். சில நிலவறை கிராமங்கள் பல அடுக்குகளைக்கொண்டவை. துருக்கி அரசாங்கத்தின் தொல் பொருள் இலாகா இவ்விடங்களை மிகப்பொறுப்புடன் பாதுகாத்து வருகிறார்கள்.

பேருந்தில் தொடர்ந்து பயணம். மீண்டும் கொன்யா, தொரஸ் மலைத்தொடர் எனக்கடந்து வழியில் கிராமங்களில் நிறுத்தி அவ்வப்போது கிடைக்கும் பழங்களை: ஆரஞ்சு, ஆப்ரிகாட், திராட்சை – வாங்கிக்கொண்டு அண்டல்யா ஓட்டலை அடைந்தபோது மாலை மணி ஐந்து. (பொதுவாக 30யூரோவிலிருந்து 50யூரோவரை இரண்டுபேருக்கான அறைகிடைக்கிறது. ஐரோப்பாவினும்பார்க்க மலிவு. இந்தியாவில் கூட நட்சத்திர ஓட்டல்களில் இன்று 5000 ரூபாய்க்குக்குறைந்து அறைகளில்லை). ஓட்டலில்  எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் பெட்டிகளைபோட்டுவிட்டு, ஒருமணி நேரம் அக்கடாவென்று ஓய்வு. மாலை 6.30 க்கு சிறிது வெளியிற் சுற்றிவிட்டுவரலாம் எனக் கிளம்பியபொழுது, டாக்டர் தம்பதிகள் எதிர்பட்டார்கள். பக்கத்தில்தான் கடல் அங்கிருந்து தான் வருகிறோம் என்றார்கள். நானும் எனது மனைவியும் கடலை பார்த்துவருவதென்று கிளம்பினோம் ஓட்டலின் பின்புறம் இருபது முப்பது மீட்டரில் ஆரவாரமின்றி கடல் உறங்குவதுபோல கிடந்தது. ஒரு மணிநேரத்துக்குமேல் இருந்திருப்போமென நினைக்கிறேன். ஓட்டலுக்குத் திரும்பும்போது இரவு எட்டு மணி.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

அணமையில் வாசித்த பதிவுகள் -june 16

அ. தமிழில் விமர்சகர்களே இல்லை:

“விமர்சனம் என்பது வெறும் கோட்பாடோ, ஆய்வோ அல்லது வெறும் ரசனை சார்ந்து உதிர்க்கப்படும் அபிப்பிராயங்களோ அல்ல. மொழியின் அழகும், படைப்பின் ஆழமும் ஒரு சேர வெளிப்படும் அபூர்வமான கலையே விமர்சனம் என்பது. ஒரு படைப்பையோ, அல்லது ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த மன உலகையோ நளினமும், அழகும் மிக்க உரைநடையில் ஆழமான வீச்சுடன் எழுதத் தெரிந்தவனே முதல் தரமான விமர்சகன் -“வண்ண நிலவன்.

பெருமதிப்பிற்குரிய வண்ண நிலவன் தளத்தில் வாசித்த கட்டுரை “தமிழில் விமர்சகர்களே இல்லை” ஓர் எல்டாரோடாவை கட்டிக்கொண்டு  இதுதான் இலக்கியமென பரமார்த்த குருகதை அளந்துகொண்டிருக்கிற இன்றைய தமிழ் படைப்புலகத்தின் கன்னத்தில் அறைகிறது.

வண்ண நிலவன் சொல்வதுபோல ஒரு தேர்ந்த சார்பற்ற விமர்சகன் வேண்டும். அதுவன்றி தற்போதைக்கு விமோசனமில்லை. கிணற்றை எட்டிப்பார்த்து இதுதான் கடல் என்கிற  வாசகர்கூட்டத்திற்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. படைப்புலகம் ஆரோக்கியமாக இருக்க முதுகு சொறியாத விமர்சனமும், தேர்ந்த வாசகர்களும் தேவை. அமெரிக்காவிலிருந்து கொண்டு தமிழில் வலைத் தளங்களில் எழுதும் இளைஞர்கள் (இவ்வளவிற்கும் தீவிர இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள்போல தெரிகிறது) எப்போதேனும் அமெரிக்காவின் இன்றைய நவீன எழுத்துக்கள் பற்றியோ, நவீன எழுத்தாளர்கள் பற்றியோ எழுதுவார்களென எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறேன். தமிழ் நாட்டெல்லைக்குள் வாசிக்க போதிய வசதியற்றிருக்கும் வாசகர்களை இங்கே நான் கணக்கிற்கொள்ளவில்லை.  எங்கே பாரபட்சமற்ற விமர்சகர்களும், வாசிப்பில் பரந்த ஞானமும் உண்டோ அங்கே மட்டுமே இலக்கியம் வளரும்.

http://wannanilavan.wordpress.com/2012/06/06

ஆ. கசல் கடவுள்

“அவர் பாடல்கள் நடுவே கொடுக்கும் ‘இசைமௌனம்’ அப்படிப்பட்டது. அதை பெற்றுக்கொள்ள காது மட்டும் போதாது. அவரது இசை கேட்பவனுக்குள் அலையாழியென வலியையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் எழுப்பி, சென்ற காலங்களின் அடிநுனி முதல் இக்கணம் வரை காதலை இழந்து துயருறும் அத்தனை பேருடைய ஒட்டுமொத்த துயரத்தையும் அவன் நெஞ்சில் கொண்டுவந்து நிறைக்கும் வல்லமைகொண்டது. அவரது குரல் இன்னொரு மானுடக்குரல் அல்ல. வலியையும் தியாகத்தையும் மீட்பையும் ஒலிவடிவம் கொள்ளச்செய்யும் ஒன்று அது. அது தூயகாதலின் வெற்றியைப்பற்றிய புனிதமான நன்னம்பிக்கையை முன்வைத்து, இறப்பையும் விதியையும் நோக்கி அறைகூவுகிறது. அது இணையற்ற, அழிவில்லாத ஒரு அனுபவம்.. ” (கசல் கடவுள் கட்டுரையில் ஷாஜி)

கசல் கடவுள்: மெஹ்தி ஹசன் என்ற தலைப்பிலுள்ள ஷாஜியின் பதிவு வாசிக்கவேண்டிய ஒன்று. தமது நண்பரும் பாடகருமான ஸ்ரீனிவாஸ் ஊடாக ஹசனை அறிந்துகொண்டது தொடங்கி கசல் பாடகரின் சரிதை, சாதனை, இசையாற்றல் அவ்வளவையும் உணர்வுபூர்வமாக கட்டுரையாளர் எழுதியிருக்கிறார்.

http://www.musicshaji.blogspot.fr/

இ. Pattu’s terrace Garden

ஊர்வம்பில்லாத வலைத்தளங்களை தேடிப்பிடித்து வாசிக்கவேண்டியிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் Pattu’s terrace Garden. நண்பர் இயற்கை தாவரவளர்ப்பில் ஆர்வலர். அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். உபயோகமான பதிவு. வீட்டில் தோட்டமும் அல்லது வேறு வகையில் வசதிகளுமிருப்பின்  நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள குறிப்புகளிருக்கின்றன;

Seethaphal (Custard Apple)

ஈ நெஞ்சின் அலைகள்

திண்ணை இணைய இதழில் தொடர்ந்து காணக்கூடிய பெயரொன்று உண்டெனில் அநேகமாக திரு. ஜெயபாரதன் என்ற பெயராக இருக்கும். எளிய தமிழில் சிக்கலான அறிவியல் கூறுகளையும் தெளிவுபடுத்தும் ஆற்றலில் அணமையில் இவருக்கு நிகராக வேறொருவரைக் கண்டதில்லை. அன்னாருடைய வலைத்தளமே நெஞ்சின் அலைகள். கோவையிலிருந்து வெளிவந்த கலைக்கதிர் என்ற நூலை எழுபதுகளில் விரும்பி வாசித்ததுண்டு. அதற்குப்பிறகு அதுபோன்றதொரு மொழியில் அறிவியலில் அக்கறையற்றவர்களையும்  வசீகரிப்பதில் நண்பர் தேர்ந்திருக்கிறார். வாசித்த கட்டுரை, கூடிய சீக்கிரம் செவ்வாய் கோளில் இறங்கவிருக்கும் தளவூர்தி பற்றியது.

http://jayabarathan.wordpress.com/

உ. கணையாழின் கதை

அன்பிற்குரிய திரு வே.சபாநாயகம்  தமது நினைவுத் தடங்களில் கணையாழியின் வரலாற்றை தொடக்கமுதல் இன்றுவரை பதிவு செய்திருக்கிறார். திண்ணை இதழிலும் வெளிவந்துள்ளது. கணையாழி பற்றிய பொதுவான தகவல்களை அறிந்திருக்கிறேன். கணையாழின் தொடக்கம், ஆரம்பாகால முயற்சிகள், பங்களிப்புகள் வெளியான படைப்புகள் கணையாழியால் அறியப்பட்ட எழுத்தாளர்கள், இன்று ம. ராஜேந்திரனிடம் கணையாழி வந்திருப்பதுவரை தெளிவாக்ச் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று பத்துக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் வருகின்றன. நிலைத்து நிற்க ஆர்வமும், உழைப்பும், புதிய யுக்தியும், நிதியும் வேண்டும். கணையாழிக்கு வாழ்த்துகள்

http://ninaivu.blogspot.fr/
——–

மொழிவது சுகம்:ஜூன் 16

பிரான்சில் என்ன நடக்கிறது?: மூன்று பெண்கள்

ராணிகள் அரசனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இறங்கக்கூடுமென்பதால், அவர்களிடம் அரசன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிறார் அர்த்தசாஸ்திரத்தில் கௌடில்யர். ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்கிற சொலவடையில், முன்னதை ஏற்கலாம் அடுத்து வருவதை பெண்களிடத்திற் சொல்ல துணிச்சல் வேண்டும்.

ஆன் சேங்க்ளேர் (Anne Sanclair)

அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். உண்மையில் சோஷலிஸ்டு கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). சிறந்த பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர், சோஷலிஸ்டு இயக்கத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவர், மிதவாதி. பிரான்சுநாட்டில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவது கடினம் என்ற நிலையில் இடதுசாரியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஆதரவைப் பெற்றவர். அப்போதைய அதிபராக இருந்த சர்க்கோசி UMP எனும் வலது சாரிகட்சியின் சார்பில் அதிபரானவர். கொஞ்சம் தந்திரசாலியுங்கூட. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அவர், உள்ளூர் அரசியலிலில் இருந்து,  எதிர்காலத்தில் தமக்கு எதிராக நிற்கக்கூடிய சோஷலிஸ்டு வேட்பாளரை களத்திலிருந்து வெளியேற்றினால் – உள்ளூர் மக்களிடமிருந்தும் அரசியலிலிருந்தும் வெளியேற்றினால் – ஓரளவு தொமினிக்கின் செல்வாக்கைக் குறைக்கலாம், அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்கவும் செய்யலாமென கருதி தந்திரமாக டொமினிக்கை பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்தார். ஓர் எதிர்கட்சிதலைவரின் திறமையை மதித்து உலக அரங்கில் பொறுப்பான பதவியில் அமர்த்திய சர்க்கோசியின் தயாள குணத்தை அப்போது புகழாதவர் எவருமில்லை. சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. உள்ளூர் பிரெஞ்சு ரகசியபோலீஸார் தெரிவித்த தகவலின்படி டொமினிக் பெண்களென்றால் கார்த்திகை மாதத்து நாயாகிவிடுவார் என்ற உண்மை சர்க்கோசிக்கு உற்சாகத்தை அளித்திருந்தது. சர்க்கோசி எதிர்பார்த்ததுபோலவே எல்லாம் நடந்தது. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் கலந்துகொள்வதற்கு  பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் தமது பெயரை பிரேரிப்பதற்காக பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க்கில் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல் அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக டொமினிக் கைதுசெய்யப்பட்டார். விசாரணை, வழக்கு, சிறைவாசம். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. தொடர்ந்து பிரான்சு நாட்டிலும் அவருக்கெதிராக பல பெண்கள் குற்றம் சாட்டினர். பெண்பத்திரிகையாளரில் ஆரம்பித்து, கால்கேர்ள்கள் வரை இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமலில்லை. இதில் சர்கோசியை சுலபமாக குற்றம் சாட்டமுடியாது. டொமினிக்கின் பலவீனத்தை அவர் பயன் படுத்திக்கொண்டார். அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழிநீர் பானையில் விழுந்தார்.

ஆனால் இங்கே சொல்லவந்தது டொமினிக் பற்றியோ சர்க்கோசி பற்றியோ அல்ல  டொமினிக்கின் மனைவி குறித்து. நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. சம்பவம் நடந்தது மேற்கத்திய நாடொன்றில், குறிப்பாக பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி (பில் கிளிங்டன் போல அல்ல, இரவுவேளைகளில் இதற்கெனவே டொமினிக் அலைகிறவரென வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையில்), மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது.  தாம் சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும் பாலியல் வழக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்ட பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். பத்ரிகையாளர்களிடம் தம் குடும்பபிரச்சினையை பிறரோடு பகிர்ந்துகொள்ளவிருப்பமில்லையென தெரிவிக்கிறார். வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி நட்சத்திரம், பெண்விடுதலையாளர்.

வலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:

இவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள்.

செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். தோற்றதற்கு சோஷலிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளராக அப்போதிருந்த ஒலாந்து சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றசாட்டு உண்டு, இக்குற்றசாட்டிற்கு பின்புலத்தில் இருந்தவர் யாரென்று அடுத்துவரும் வரிகளை படித்தால் புரிந்துகொள்வீர்கள். 2012ல் அதிபர் தேர்தலின்போது கட்சிக்குள் ஆளுங்கட்சிக்கு எதிராக யாரை வேட்பாளராக நிறுத்துவதென்ற தேர்தல் நடந்தது.  டொமினிக் போட்டியிடவாய்ப்பில்லை என்றானபிறகு,  கட்சிக்குள் நடைபெற்ற அதிபர் வேட்பாளருக்கான தேர்வுக்காக சோஷலிஸ்டு கட்சியில் ஆறுபேர் போட்டியிட்டனர். அவர்களில் செகொலன் ரொயால் ஒருவர். ஆனால் துரதிஷ்டவசமாக முதல் சுற்றில் தோற்றார். இரண்டாவது சுற்றில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளராக ஒலாந்தை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

செகொலன் ரொயால் பற்றிய பிற தகவல்கள் முக்கியமானவை. அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பிள்ளைகளும் உண்டு. முந்தையை சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் இப்பெண்மணிக்குண்டு.  2006ம் ஆண்டுவரை ஒலாந்தோடு வாழ்க்கை நடத்தியிருக்கிறார்.  2006ல் ஒலாந்து வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் பிரிகிறார்கள். அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்விலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைகொண்டவர்.

அதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது தங்கள் தந்தைக்காக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கினார்கள்.  செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற  தலைவர்களை நடதுவதைபோலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவ்ரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள். அதை கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த பிரதேசத்தில் வருகிறபோதும் அதேக் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது.  புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவதுகூட பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும், அதைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். சோஷலிஸ்டுகட்சி மட்டுமல்ல பிரான்சே கொந்தளித்து போனது. இப்பெண்மணி இவ்வளவு கீழ்தரமாக நடந்துகொள்வாரென எவரும் எதிர்பார்க்கவில்லை. பத்திரிகைகள் அனைத்தும் விளாசிதள்ளிவிட்டன. ஒரு பக்கம் மணச்சடங்குகளில் ஒப்புதலில்லை, தொடர்ந்து பத்ரிகையாளராக இருந்துகொண்டு சுதந்திரமாக இருக்கப்போகிறேன் என அறிவித்துக்கொண்டே, இன்னொரு பந்தத்தை புறவாசல்வழியாக நாகரீகமற்ற வகையில் நிரூபணம் செய்வதாக விமர்சனங்களை வைக்கப்படுகின்றன. நெருக்கடியான நிலையில் நாட்டின் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒலாந்துவிற்கு இது கூடாத தலைவலி. ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்னசங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள்.  அவரது புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதி செய்கின்றன. இதையே கையாளதவர் நாட்டின் நெருக்கடியை எப்படி கையாளுவார் என்கிறார்கள் எதிர்கட்சிகாரர்கள்.

ஆன் சேங்க்ளேர் – வலேரி திரேவிலெர் இருவருமே மேற்கத்திய கலாச்சாரத்தில் விளைச்சல். பண்பாடு நாம் கற்ற ஞானத்தின் எடைசார்ந்ததல்ல, நம்மை முன்னிருத்திக்கொள்ளும் வகைமை சார்ந்தது.
——————————–

மொழிவது சுகம்:- ஜூன் 12

அம்பானிவீடும் சென்னை விமான தளமும்:

அண்மையில் அருந்ததிராய் கட்டுரையொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது அம்பானி மும்பையில் கட்டியெழுப்பிய ‘வசந்தமாளிகை’  ‘Antilla’ பற்றியது. அவரது மனைவிக்காக கட்டினார் என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வசந்த மாளிகையைக்காண மும்பை வாசிகள் கூடுகிறார்களென்று பேச்சு. அண்ணாந்து பார்த்துவியக்கிறார்களாம். எங்கள் கிராமத்திலிருந்து சென்னைக்கு சுற்றுலா வருவார்கள். அந்த ஒரு நாள் சுற்றுலாவின்போது ஒருமணிநேரமோ இரண்டுமணிநேரமோ மீனம்பாக்கம் அருகே பேருந்தை நிறுத்தி காத்திருந்து விமானங்கள் வந்திறங்குவதைப் பார்ப்பார்கள். பழைய திரைப்படங்களில் கதாநாயகன் விமானத்தில் இறங்குவதை காண்பிக்கவென காட்சிகளை வலுக்கட்டாயமாக சேர்ப்பதுண்டு. கதாநாயகனோ அல்ல கதாநயகியோ யாரேனும் இருவரில் ஒருவர் மாளிகைக்குச் சொந்தக்காரர்களாக  இருக்கவேண்டும். வயிறு ஒட்டிப்போன ரசிகர்களை நம்பியே பிலிம் சுருள்கள் இருந்தன. விமானங்களின் எண்ணிக்கையும் பெருகி, நகரவாழ்க்கை அதிசயங்களுக்கும் பழகியிருக்கும் இந்நாட்களில்கூட தென்மாவட்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஆர்வத்துடன் விமானத்தை பார்க்கும் பயணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ‘Antilla’ வைப்பற்றிய அருந்ததிராயின் கட்டுரையை வாசித்தபோது விமானத்தை வேடிக்கைப்பார்க்கும் தென்மாவட்ட கிராமத்து மனிதர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். நியூயார்க்கிலோ, சிங்கப்பூரிலோ ‘Antilla’விற்கு இம்முக்கியத்துவம் கிடைக்குமாவென்று சொல்லவியலாது. உலகில் சேரிகள் நெருக்கமாகவுள்ள நகரங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்ரிக்க ஆசிய நாடுகளிலுமுள்ளன, ஏன் இந்தியாவில் சென்னையைக்கூட குறிப்பிடலாம். எனினும் மும்பை நகருக்கு அம்பானியின் தயவால் இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. மும்பை குடிசைவாசிகள் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அதிலும்  ஹெலிகாப்டர் உபயோகத்திற்கான தளம், 27மாடிகள், 9 லிப்டுகள், மாடியிலேயே பூங்கா, உடற்பயிற்சிக்கான கூடம், வாகனங்கள் நிறுத்த ஆறுமாடிகள், 600 பணிஆட்களென்றால் சும்மாவா. தற்போதைக்கு ‘Antilla’ வில் ஆள் நடமாட்டமில்லையாம். அதாவது குடிபோகாமல் இருக்கிறார்கள். வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்து கட்டவில்லையோ? அதனாலென்ன அறுபதினாயிரம் மனைவியர், அக்குரோணி கணக்கில் சேனைகள், அஷ்டதிக்கு பாலகர் என்றெல்லாம் கற்பனைகளை வரித்துப் பழகிய நமக்கு இந்த மாளிகையை மையமாகவைத்து புனையப்படும கதைகள் கசக்கவா செய்யும். அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் முதலாளிகள் சுவாசிக்க பிராணவாயுயின்றிதவிக்க இந்தியப்பொருளாதாரத்தில் இவர்கள் காட்டில் மழை. 1.22 பில்லியன் மக்கத்தொகைகொண்ட பாரதத்தின் மொத்த தேசியவருவாயில் 25 சதவீதம் அம்பானியையொத்த முதல் நூறு பணக்காரர்களிடம் இருக்கிறதாம். இவர்களைப்போன்றவர்களும் புதிதாய் இந்தியப்பொருளாதாரத்தில் தலையெடுத்திருக்கிற 300மில்லியன் நடுத்தர வர்க்கமும் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கு வழியற்ற 800 மில்லியன்மக்களின் வாழ்க்கையைக்குறித்தும், வாழ்வாதாரங்களைக்குறித்தும் பிரக்ஞையற்று வாழ்வதாக அருந்ததிராய் எழுதுகிறார், யோசிக்கவேண்டியிருக்கிறது.

பிரான்சுவா ஒலாந்து

எதிர்பார்த்ததுபோலவே பிரான்சுநாட்டு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து வெற்றிபெற்றிருக்கிறார். இந்த ஒலாந்து என்ற சொல்லை ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பில் கண்டேன். ஆனந்தரங்கபிள்ளைக்கும், இன்றைய பிரெஞ்சு அதிபருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? எதையாவது எழுதலாம். கற்பனையிருப்பின் முடிச்சுகளா இல்லை. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பில் வருகிறவர்கள் டச்சுகாரர்களென்று நாமழைத்த  ஓலாந்துகாரர்கள்.

பிரான்சுவா ஓலாந்து அதிபர் தேர்தலுக்கு நின்றபோது, ஆட்சியிலிருந்த வலதுசாரி கட்சியும் அவர்களது அனுதாபிகளும் கடுமையாக விமர்சித்தார்கள். அவர் தேர்தலில் நின்று ஜெயித்தும் ஆயிற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக புலம்பலும் தொடர்கிறது. மொத்த வாக்காளார்களில் 80 சதவீதத்தினர் தங்கள் உரிமையைப் பயன்படுத்தியிருந்தனர். பிரான்சுநாட்டின் அரசியலமைப்பு விதிப்படி முதல் சுற்றில் வெற்றிபெற்றிருந்த முதலிரண்டு வேட்பாளர்களும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பிற்கு  அனுமதிக்கப்பட்டிருந்தனர். சோஷலிஸ்டுகட்சியின் ஒலாந்தும், வலதுசாரிகளின் சர்க்கோசியும் மோதினார்கள். போனமாதம் எழுதியிருந்ததைத்போன்றே ஒலாந்து வெற்றிபெற்றார். சர்க்கோசிக்கு எதிரான அலையே ஒலாந்துவின் வெற்றிக்கு உதவியதென சொல்லவேண்டும். பிரான்சுவா ஒலாந்து 52 விழுக்காடு வாக்குகளையும், சர்க்கோசி 48 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள்.

“வளர்ச்சியைப் புறக்கணித்து செலவினைக் குறைக்கவேண்டும்” என்று ஐரோப்பிய கூட்டமைப்பு எடுத்திருந்த முடிவை பிரான்சுவா ஒலாந்து மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த சொல்கிறார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த பலரும் வலதுசாரி பின்புலத்திலிருந்துவந்தவர்களென்பதால், பசியேப்பக்காரகளின்  சஞ்சலத்தைக்காட்டிலும் புளிஏப்பக் காரர்களின் சங்கடங்கள் அவர்களுக்கு முக்கியமாகபட்டன. ஒலாந்துக்கு பசிஏப்பக் காரர்களின் சஞ்சலங்கள் முக்கியம். அவரது தேர்தல் வாக்குறுதிகள் தெளிவாக இருக்கின்றன. அவருக்கெதிராக கட்சிகட்டிகொண்டிருந்த ஐரோப்பிய வலதுசாரிகள், இறங்கிவந்திருக்கிறார்கள். பொருளியல் நிபுணர்களின் விமர்சன தொனியிலும் இறக்கமிருக்கிறது. நேற்றுவரை ஆட்சியிலிருந்த வலதுசாரி நடந்ததனைத்திற்கும் தாங்கள் பொறுப்பல்ல, அதற்கு உலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியே காரணம் என்றார்கள். புதிய அதிபரின் வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை என்கிற சர்க்கோசி அனுதாபிகளுக்கு,  தங்கள் சர்க்கோசி சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததில் வருத்தங்களில்லை. பிரான்சிலேற்பட்ட நெருக்கடிக்கு சர்க்கோசியும் அவரது சகாக்களும் பொறுப்பல்ல என்றும் உலகம் திணித்ததாக கூறவும் அவர்களுக்கு தயக்கமில்லை.

இந்த உலகம் எங்கிருந்து வந்தது, யார்கையில் இருக்கிறது? தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாட்டிலும் கைவிரல் எண்ணிக்கையிலிருக்கிற மனிதர்களிடம் உலகப்பொருளாதாரம் இருக்கிறது. உலகத்தின் தலைவிதியை இந்தச் சிறுகூட்டமே கைவலிக்காமல் எழுதுகிறது. அதை எழுதியதில் சர்க்கோசிகளுக்கும் பங்குண்டு. இன்றைய முதலாளியியத்திற்கு சில செப்படிவித்தைகள் தெரியும். சீனாவில் மாவோயிஸம்; பொதுவுடமைகாரர்களுக்கு சோஷலிஸம் -மார்க்ஸிஸம்; அமெரிக்காவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முதலாளியியம்; இந்தியாவுக்கு ஜனநாயக சோஷலிஸமென மேடைக்கும் எதிரிலிருக்கும் ரசிகர்க¨ளைப் பொறுத்தும் எந்த வேடமும் முதலாளித்துவம் தரிக்கும். நேற்றுவரை பிரான்சு சர்க்கோசி குத்திரைபட்டிருந்தது.. இன்று ஒலாந்து முத்திரை. பீடித்துள்ள நோய்க்கு இதுதான் மருந்து என்று அறியாதபோது புதிய மருந்தையும் முயற்சிக்க வேண்டியதுதான். தற்போதைக்கு புதிய மருத்துவரின் கைராசிபற்றி கருத்து கூற உடனடியாக எதுவுமில்லை. அவருடைய ஒலாந்து முகராசியை பலரும் நம்புகிறார்கள். ஒலாந்து தீவிர இடதுசாரியுமல்ல. இங்கிலாந்தின் முன்னாள் அதிபர் தோனி பிளேர் ரகம். ஆக உருப்படியான மாற்றங்களுக்கு உத்தரவாதமுண்டு. சிக்கனத்தின் அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைக்கு மாறாக ஒலாந்து வற்புறுத்தும் வளர்ச்சியின் அடிப்படையிலான பொருளாதாரக்கொள்கையின் யோசனைக்கு ஆதரவாக சில ஐரோப்பிய தலைவர்களன்றி, ஒபாமாவின் அரசும் செவிசாய்த்திருக்கிறது

புதிய அதிபர் பதவியேற்றதும், ஆட்சிபொறுப்பிலிருந்த வலதுசாரி அரசாங்கம் விலகிக்கொண்டது. அதிபர் ஒலாந்துவின் சோஷலிஸ்டு கட்சியின் அமைச்சரவை பதவியேற்றுள்ளது. எனினும் ஜூன்மாதத்தில் நடைபெறவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் பெரும்பான்மை பெற்றாலொழிய ஆட்சியில் நீடிப்பது சாத்தியமில்லை. பிரெஞ்சு குடியாட்சியில் அதிபர் ஒரு கட்சி, ஆள்பவர்கள் ஒருகட்சி என்ற காட்சிகள் புதியதல்ல. எனினும் இப்போதுள்ள சூழல் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். அன்றியும் ஒலாந்து தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், எதிர்கட்சிவசமிருக்கிற நிர்வாகமே காரணமெனக்கூறி நாளை தந்திரமாக தப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மையான கருத்துகணிப்புகள் புதிய அமைச்சரின் சோஷலிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆக அதிபரின் அமைச்சரவை தப்பி ஜீவித்திருக்க வாய்ப்புண்டு. சட்டவரைவிற்கு உட்படுத்தவேண்டிய எந்தவொரு முடிவையும் பாராளுமன்றத் தேர்தல் நடந்தேறும்வரை இடைக்கால அரசாங்கம் எடுக்கமுடியாது. புதிய அதிபர் தற்போதைக்கு உடனடியாக அவரால் செய்யமுடிந்த சிலவற்றை நடைமுறைபடுத்தியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக தமது அமைச்சரவையில் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையிலிருப்பார்கள், எனத் தெரிவித்திருந்தார். அதைபோலவே புதிய அமைச்சரவையில் 17 ஆண்கள், 17 பெண்கள். அடுத்து அதிபர் தமது ஊதியத்தையும் அமைச்சர்கள் ஊதியத்தையும்; தங்கள் இருதரப்பு செலவினங்களையும் 30 சதவீதம் குறைப்பதாக அறிவித்திருந்தார். அதையும் நடைமுறை படுத்தியிருக்கிறார். இனி பிறநடவடிக்கைள் குறித்து ஜூன்மாத பாராளுமன்ற தேர்தலுக்குபிறகே சொல்லமுடியும்.

——————–

துருக்கி பயணம்-5

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-30

இரண்டாம் நாளாக கப்படோஸ் பிரதேசத்தை பார்வையிட விருந்தோம்.  இப்பிரதேச மெங்கும்  பார்வைக்கும், தெரிந்து கொள்ளவும் கலைகூறுகளும் கல்விக்கூறுகளும் திகட்டும் அளவிற்கும் இருக்கின்றன,  வருடம் முழுக்க தங்கி பார்த்துவரலாம். கடந்தவாரம் எழுதியதுபோன்று  வரலாறு, புவியியல், பண்பாடு மூன்றும் தமது தழும்பை ஆழமாகப் பதிவுசெய்திருப்பதால் துருக்கிக்கு பயணிக்கும் மேலேகுறிப்பிட்டுள்ள துறை ஆர்வலர்கள் எவரும் இப்பிரதேசத்தைத் தவிர்க்கக்கூடாதென்பதில் கவனமாக இருக்கின்றனர். பாரசீகமக்கள், அஸ்ஸீரியன் மக்கள், கிரேக்க நாட்டவர், உலகின் ஏனைய நாகரீகங்களோடு ஒப்பிட்டு பெருமைபேச துருக்கியருக்கு வாய்ப்பளித்த இட்டிட்ஸ் (Hittites)களும் இப்பகுதியைக் கைப்பற்றி பலகாலம் ஆண்டிருக்கிறார்கள். கனிமவளம் நிறைந்த பகுதியானதால் (குறிப்பாக  வெள்ளியும் தங்கமும் ) படையெடுப்பிற்கு காரனமாகியிருக்கிறது. வந்தவர்கள் வழக்கம்போல மதத்தையும் மதத்தையொட்டிய நம்பிக்கையையும், நம்பிக்கையோடு விரவிய பண்பாட்டையும் பொதிகளாக கொண்டுவந்து சேர்த்திருக்கின்றனர். பாரசீகர்கள் இப்பகுதிக்கு கட்படுகா (Katpatuka) என்று பெயரிட்டிருக்கிறார்கள். ‘கட்படுகா’ என்றால் குதிரைகள் நாடு என்று பெயராம். அலெக்ஸாண்டர் தமக்கு வரவேண்டிய திரைப்பணத்திற்கு குதிரைகளை கொடுக்கும்படி கேட்டதாக குறிப்ப்ட்டிருந்தேன். கப்படோஸ் வரலாற்றோடு எனது பயண எழுத்தையும் ஓடவிடுவது உங்களுக்கு அயற்சியை தருமோ என்னவோ எனக்குத் தரக்கூடும் ஆகவே சுற்றுலா வாசிகளைக் கவர்ந்த அல்லது கவரங்கூடிய அருங்காட்சிகளுக்கு காரணமான முகத்துவாரத்தை அறிமுகபடுத்திவிட்டு இன்று பார்த்தவைகளை பட்டியலிடுகிறேன்.  ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டுவரை கப்படோஸ் பலமுறை சுன்னி பிரிவு அப்பாசிட் அரபு இனத்தவரின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. கிட்டதட்ட மூன்று நூற்றாண்டுகள். உயிர்பிழைக்க அடிக்கடி பதுங்குழிகளை தேடியவர்கள் அதையே நிரந்தரமாக்கிக்கொள்கிறார்கள். இப்பிரதேசமெங்கும் மலைகளிலும் நிலவறைகளிலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டதற்கு இதுவே முதலும் முடிவான காரணம்.

காலை உணவிற்கு நாங்கள் மேசையில் அமர்ந்தபொழுது டாக்டருடன் அவர் மனைவியும் இறங்கியிருந்தார்; இன்று உடல்நலம் தேவலாம் என அவர் கூறிக்கொண்டாலும் முகத்தில் முந்தைய நாட்களில் கண்ட களையில்லை.

ஒர்த்தாயிஸ்ஸார் (Ortalhisar) – கொரேம் பள்ளதாக்கு ‘Goreme Valley):

காலையில் முதலிற் பார்த்தது ஒர்த்தேயிஸ்ஸார். மதிய உணவிற்குபிறகு பிற்பகல் மாலை ஐந்து மணிவரை கொரெம் பள்ளதாக்கென்கிற கொரெம் அருங்காட்சியகத்தை கண்டோம். இவ்விரண்டுமே கொரெம் நகரத்திற்கு வெளியே சில கி.மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றன. கப்படோஸ் பகுதியில் எரிமலைகள் வெடித்து அதன் லாவாக்களால் உருவான குன்றுகள் குடைவதற்கு எளிதாகவும் பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் இருந்திருக்கின்றன. மக்கள் குடியிருப்பிற்கு மட்டுமின்றி, கிருத்துவ குருமார்கள் தேவாலாயங்களுக்கும் அவை உதவின. (முதல் நாள்  மனிதஉருவில்  கண்ட தோற்றங்களுக்கும் அக்குன்றுகளில் மென்மையே காரணம். அம்மனித உருகொண்ட தோற்றங்களை Cheminளூe de fளூe என்று பிரெஞ்சில் அழைக்கிறார்கள் அல்லது நிலவியலில் hoodoo என்கிறார்கள்.) ஆக இப்பகுதி முழுக்க ஆர்தடோக்ஸ் கிருத்துவர்கள் வசம் இருந்திருக்கிறது. குகைகளில் பைசாண்ட்டைன் வகை ஓவியங்கள் இருக்கின்றன. ஒர்த்தாயிஸ்ஸார் வித்தியாசமானதொரு சிறுநகரம். மலைகோட்டைபோல தோற்றம் தரும் இக்கிராமமெங்கும் குடியிருப்புகள் புறாக்கூண்டுகள் போல உள்ளன. அரபு படைகளில் பயம் முற்றாக விலகிய பிறகு (பத்தாம் நூற்றாண்டில்) பூமிக்குமேலே திறந்தவெளியில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். அச்சிறிய நகரில் இடைக்காலத்தைச்சேர்ந்த ஒரு மசூதியுமிருந்தது. வீடுகள் எளிமையாக இருந்தன. நுழைவாயில்கள் கிரேக்கர் சாயலுடன் இருக்கின்றன. கப்படோஸ் பிரதேசத்தின் செராமிக் வகை அலங்கார தட்டுகள் பொம்மைகள் நிறைய கிடைக்கின்றன.  நாங்கள் சுற்றுலா சென்ற இடங்களிலெல்லாம் இதுபோன்ற கடைகள் ஏராளமாக இருந்தனவென்றாலும் இங்கே விலை மலிவு. கண்ணேறு கழிக்கவென்று, செராமிக்கில் செய்து நீலவண்னத்தில் மயிற்கண் தோற்றமும் அலங்காரப் பின்னலும்கொண்ட சில்லுகள் கிடைக்கின்றன. வீட்டு முகப்புகளிலோ வரவேற்பறைகளிலோ கட்டித் தொங்கவிடலாமென்றார்கள். ஐரோப்பியர்ககளுக்கு குதிரை லாடத்தைவீட்டுச் சுவற்றில் அடித்துவைக்கும் பழக்கமுண்டு. இந்நகரத்து வீதிமுழுக்க கடைகள், அவற்றுள் விதவிதமான பேரிச்சைகள், உலர்ந்த திராட்சைகள், பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளரி பருப்புவகைகள் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன.

பிற்பகல் கொரெம் நகரில் ஒரு ஓட்டலில் நல்ல உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறகு அங்கிருந்து கொரெம் பள்ளதாக்கு, திறந்தவெளி அருங்காட்சியகம். காவல் பலமாக உள்ளது. அவ்வாறிருந்தும் சிற்சில இடங்களில் விஷமிகளின் அத்துமீறல்களை உணரமுடிந்தது. இங்குள்ள தேவாலயங்களுள் நுழைவாயில்களில் பெரும்பாலானவை ஓர் ஆள் மட்டுமே புகுந்து செல்லகூடியவை. ஒவ்வொருமுறையும் ஒரு குழுவினரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குமேல் உள்ளே இருக்க அனுமதிலில்லை. வெளியே காத்திருக்கிற குழுக்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்ததால் இந்தத் திட்டம். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுக்குப்பிறகு அதிக எண்ணிக்கையில் சீனர்களையும் ஜப்பானியர்களையும் அங்கே சந்திக்க நேர்ந்தது. துருக்கிமொழியில் Kilise என்றால் தேவாலாயமென எங்கள் வழிகாட்டி சொன்னார். பிரெஞ்சு மொழியில் Eglise என்ற சொல்லுக்கு இது மிகவும் நெருக்கம். இந்த கொரெம் பள்ளதாக்கில் நிறைய Kiliseகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நான்கைமட்டுமே நாங்கள் கண்டோம். அவற்றுள் இரண்டு முக்கியமானவை.

Elmali Kilise: மிகச்சிறியது பதினோறாம் நூற்றாண்டில் உருவானது. உள்ளே டார்ச்சை உபயோகித்தே எங்கள் வழிகாட்டி விளக்கவேண்டியிருந்தது காவி நிறத்திலிருந்த ஓவியங்களில் பைபிளோடு தொடர்புடைய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

Tokali Kilise இவ்வாலயம் கொரெம் அருங்காட்சிகத்திற்கு வெளியே இருபது முப்பதுமீட்டர் தொலைவிலுள்ளது. வாடிகன் அரசாங்க நிதியுதவியுடன், இத்தாலி அரசின் தொழில் நுட்பத்தையும் பெற்று இங்கே புணருத்தான வேலைகள் நடக்கின்றன. அங்கும் பைபிளில் சொல்லப்படும் காட்சிகளை நினைவூட்டும் சித்திரங்கள்.

ஆறுமணிக்கு ஓட்டல் உணவை முடித்துக்கொண்டு இரவு விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  Folk மற்றும் ‘Belly Dance’ காணச்சென்றோம். இன்னும்பத்துவருடங் கழித்து கப்படோஸ் சென்றாலும் சுற்றுலாவாசிகளுக்கு இது வாய்க்கும். கொரெம் நகருக்கு வெளியே  இருந்தது. பெரியதொரு இரவு விடுதி. சுமார் இருநூறுபேர் அமர்ந்துபார்க்கக்கூடிய மண்டபம், சுற்றிலும் இருக்கைகள் -மேசைகள். உள்ளே நுழைகிறபோதே புகைப்படக்காரரை ஏற்பாடுசெய்து ‘கிளிக்’க்கிட்டார்கள். இரவு வெளியேறுகிறபோது தவறாமற் காத்திருந்து ஐந்து யூரோக்குப் ஒரு பீங்கான் தட்டின் பின்புறம் பதிவுசெய்த நமது நிழற்படத்தை நமது தலையிற்கட்டுகிறார்கள். முதலில் இசைக்கலைஞர்கள் வந்து அமர்கிறார்கள். இருக்கைகளுக்கெதிரே குளிர்பானங்கள் மது பாட்டில்கள் கொறிப்பதற்கு தீனி. உங்கள் விருப்பம்போல குடிக்கலாம்.

முதலாவதாக கிராமிய நடனம். ரஷ்யாவைச் சேர்ந்த கொக்காஸ் கலைஞர்கள் என்றார்கள். நடனம் மட்டும் கப்படோஸ் பிரதேசத்திற்குரியதாம். ஒருபெண்ணை மணக்க இருவர் போட்டி போடுகிறார்கள். அதற்கு ஆட்டம் பாட்டம் சண்டை எல்லாமுண்டு.  ஜெயித்தவனை புறம்தள்ளிவிட்டு பெண் தோற்றவனுக்கு கை நீட்டுகிறாள். மொழி புரியாதுபோனாலும், நம்ம ஊர் நையாண்டிமேளக் கலைஞர்கள் நினைவுக்கு வந்தார்கள். சுமார் ஒரு மணி நேர நிகழ்ச்சி. அடுத்து இளம்பெண்ணின் வயிற்றசைவு நடனம்.30 நிமிடம் தனியொருத்தியாகவும், அடுத்து சுற்றுலா வாசிகளுடன் அரைமணிநேரமென்றும் அவள் நடனம் இருந்தது.  randomமாக ஆண் பெண் பேதமின்றி அழைத்து ஒவ்வொருவரையும் வயிற்றை அசைத்து ஆடச் செய்தாள். பத்துபேர் இருக்கலாம். ஒவ்வொருவரோடும் இரண்டு அல்லது மூன்று நிமிடம் செலவிட்டிருப்பாள். சிலர் முயற்சி எடுத்து ஆடவும் செய்தனர். அவள் ஆட்டத்தினும் பார்க்க சில தொப்பை ஆசாமிகள் ஆட்டத்திற்கு கைத்தட்டல்கள். தேறும் ஆசாமிகளுக்கு பெண்ணின் முத்தமும் கிடைத்தது. வேடிக்கையாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து வெளியேறியபோது அப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. டாக்டரின் சகோதரி அவளிடம் பேசினார். இந்தப்பெண்ணா சற்றுமுன் அப்படி ஆடினாள் என நினைக்கும் அளவிற்கு உடையில் பெருத்தமாற்றம். பேருந்து ஏறும்போது கடுங்குளிர்காற்று இரவு ஒருமணிக்கு ஓட்டல் திரும்பினோம்.

கீழ்க்கண்ட youtubeஐ வலைத்தலத்தில் கிடைக்கிறது. நாங்கள் சென்ற இடத்தில்தான் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். மண்டபம், கலைஞர்கள் ஆடும்பெண் உட்பட நாங்கள் பார்த்த நிஜத்தின் நிழலென்பதில் துளியும் சந்தேகமில்லை.

(தொடரும்)

மொழிவது சுகம் ஜூன் 9-2012

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

பிரான்சுநாட்டுக்கு வருகிற கிறிஸ்துவர்களைதவிர புதுச்சேரி தமிழர்கள் பலருக்கும் ஏற்படும் பெயர் குழப்பங்களை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆங்கிலத்தில் 1. First name (Christian name) 2. Second name (Sur name) 3. Full name என்று நமது பெயர்களை எழுதுகிறார்கள். இவ்வரிசையை பிரெஞ்சில்: 1. Prénom 2. Nom de Famille 3. Nom et Prénom என வருகிறது. .

ஆங்கிலேயர்கள் விண்ணப்ப படிவங்களில் மேலே குறிப்பிட்ட வரிசையில் எழுத: அதாவது First name (Christian name)  முதலிலும் Second name இரண்டாவதென்று வரும். மாறாக பிரெஞ்சுக்கார்கள் ஆவணங்களில் Seconde name (Nom de famille) முதலாவதாகவும் First name (Prénom) இரண்டாவதாகவும் வரும். பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழிருந்த புதுச்சேரியை சேர்ந்த மக்களுக்கு பிரச்சினைகளில்லை. மற்றவர்கள் பாட்டனோ பூட்டனோ பிரெஞ்சு ராணுவத்திலோ அல்லது சிவில் நிர்வாகத்திலோ பணியில் சேர்ந்தபொழுது தகப்பனார் பெயரென்று இவர்கள் கூறிய 20, 30 செ.மீ. நீளமுள்ள பெயர்கள் பிரெஞ்சுக்காரன் காதில் நுழையவும், காதில் நுழைந்தாலும் பின்னர் வாயில் நுழையவும் கடினமாக இருந்ததால், காதில் வாங்கிய ஒலியை எழுத்திற் கொண்டுவந்தான். அவனுக்கு மிகவும் கடுமையாகத் தோன்றியபொழுது,  அவன் என்ன கேட்கிறான் என்பதை விளங்கிக்கொள்ளாத தமிழருக்கு  அவனுக்கு தோன்றியவவற்றையெல்லாம் பெயராக வைத்தான். பெயர்வைக்கும் போது கடுமையாக வெயிலா வெப்பம், குளிரா குளிர், சொரிந்துகொண்டிருந்தானா சொரி: இவ்வரிசையில் le chien, Paris, Samedi, dimanche, janvier (நாய், பாரீஸ், சனி, ஞாயிறு, ஜனவரி) பெயராகக்கொண்ட தமிழர்களுண்டு. இது முதல் தலைமுறை கதை. அடுத்து  பிரெஞ்சு நிர்வாகத்திலடங்காத தமிழர்கள் அறுபதில் பிரான்சுக்குள் வந்தார்கள். இவர்கள் Nom, Prénom கதைகள் அறியாத  இந்திய சமூகத்தினர். பிரெஞ்சு Nom ஐ (குடும்பப்பெயரை) ஆங்கிலேயரின் First name உடன் குழப்பிக்கொண்டு தங்கள் பெயரை தந்தைபெயரிடத்திலும் தந்தைபெயர் போடவேண்டிய இடத்தில் தங்கள் பெயரையும் இட்டு நிரப்பிக்கொண்டு இருப்பவர்கள்.  இவர்களில் சிலர் குடும்பப்பெயரில் தங்கள் பெயரை நிரப்பி தங்கள் பெயர் போடவேண்டிய இடத்தில் என்ன எழுதுவதென்று தெரியாமல் ஆவணத்தை பிரெஞ்சு அரசாங்கத்திடம் சமர்த்தியதன் பலனாக ‘Néant (Nothingness- சூன்யம்) -என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களுமுண்டு.

இன்று பிரெஞ்சு பெயர்களில் தமிழ்நாட்டு தமிழரில் ஆறுமுகம், சீனுவாசன் பெயர்கள் அதிகமாக இருப்பதைப்போல பிரான்சு நாட்டில் சுமார் 200 பெயர்களைத் திரும்ப திரும்ப வைக்கின்றனர்.  இப்பெயர்களுல் இணைப்புக்குறிகொண்ட பெயர்கள் அதிகமுண்டு Jean-Pierre, Paul-Henri, Anne- Laure.

2. பிரெஞ்சு மொழியில் இந்தியைப்போல பெயர்ச்சொல்களில் ஆண்பால் பெண்பாலுண்டு. அதை மனிடர்க்கு வைக்கும் பெயர்களிலும் பார்க்கிறோம். அதாவது ஆண்களுக்கு வைக்கப்படும்பெயர்களின் இறுதியில் ஒரு ‘e’, ‘ette’ அல்லது ‘ine’சேர்த்து அப்பெயரை பெண்ணுக்கு வைக்கும் வழக்கும் பிரெஞ்சிலுண்டு. உதாரணமாக Jean என்று ஒரு ஆணை அழைத்தால் பெண்ணுக்கு ‘Jeanne’ Daniel -Danielle. நாம் சந்திரனை சந்திராவாக மாற்றுவதைப்போல. பிரெஞ்சில் அதிக உபயோகத்திலுள்ள பெயர்கள், பிரான்சுவா, அத்ரியென், அலென், அந்த்துவான், பெர்னார்ட், ப்ருனோ,சார்லஸ், கிரிஸ்டியன், தாவீத், திதியெ, எதுவார்….

———————————————
மலைகள்.காம்

நண்பர் சிபிச்செல்வன் முயற்சியில் மலர்ந்திருக்கும் புதிய இணைய இதழ் மலைகள்.காம். நண்பருக்கு இலக்கிய உலகில் நண்பர்களுக்கு குறைவில்லை என்பதை இதழைப்பார்த்ததும் விளங்குகிறது. இதுவரை மூன்று இதழ்கள் வந்துள்ளன. நவீன கன்னட சினிமா குறித்து  விட்டல் ராவ் எழுதியுள்ள நூலினை முன்வைத்து பாவண்ணன் கூடுதலாகச் சில செய்திகளைத் தந்து கன்னட திரையுலகத்தின் மரியாதையை அவர் பங்கிற்கும் கூட்டியுள்ளார். மலைகள். காம் ஒணைய இதழில் நோக்கம் பல புதிய படைப்பாளிகளை குறிப்பாக இளைய தலைமுறையை அறிமுகப் படுத்தவேண்டுமென்ற முயற்சியைப் பார்க்கிறோம். மில நல்ல முயற்சி. அடுத்து ‘புத்தக அலமாரி’  எனும் பகுதியும் வரவேற்க தக்கது. இப்பகுதியின் நோக்கம் தமிழின் முன்னணி பதிப்பகத்தார் நூல்களை குறிப்பாக அதிகம் வெளியுலகிற்கு எட்டாத படைப்புகளுக்கு புதிய வாசகர்களைத் தேடும் ஆர்வம். முதல் நூலாக காலச்சுவடு வெளியீடான “டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் வரலாறென்ற நூலை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். நூலாசிரியர் பழ. அதியமான். நூலிலிருந்து சில பகுதிகளையுமெடுத்துப் போட்டிருக்கிறார்கள். நல்ல முயற்சி. தொடரவேண்டும்.

http://malaigal.wordpress.com/
————————————-
கவிஞர் வைதீஸ்வரன்.

கவிஞர் வைதீஸ்வரன் நாடறிந்த கவிஞர். அவருடைய ‘வைதீஸ்வரன் கவிதைகள் தொகுப்பு’ தமிழ்க் கவிதைகளை நேசிக்கிற எவரும் கட்டாயம் தங்கள் நூலகத்தில் வைத்திருக்கவேண்டிய நூல். மூத்த கவிஞர்களுள் ஒருவரான அவர் அண்மையில் ஓர் வலைப்பூவைத் தொடங்கியிருக்கிறார். அவரது வலைப்பூவின் 50 வயது சிறுகதையொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம்வாய்த்தது. 1961ம் ஆண்டு ‘எழுத்து’ இதழில் வந்த கதையென்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். கவிஞரின் முதல் சிறுகதையென்று சொல்கிறார்கள். நம்ப முடியவில்லை. படைப்பின் அழகும், தொனியும் கவிதையென்று நம்மை நம்ப வைக்கிறது. முதல் சிறுகதை இவ்வளவு கச்சிதமாக நேர்த்தியாகவும் உலகில் எத்தனைபேருக்கு அமையும். சிறுகதையின் தலைப்பு ‘கட்டையும் கடலும்’.  வாழ்ந்து முடித்த யோகிபோல கதைசொல்ல தமது இளமையின் முதற்படைப்பை தேர்வுசெய்திருக்கிறார். உருவகக்கதையொன்றில் பேருண்மையை பொத்திவைத்திருந்த இவ்அகத்தியர் கமண்டலத்தை உருட்டிவிட்ட காகமெதுவோ?

http://vaidheeswaran-mywritings.blogspot.fr
——————————————-

துருக்கி பயணம்-4

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-29

நேற்றே கப்படோஸ¤க்குக் வந்திருந்தபோதும், இன்றுதான் கப்படோஸை உண்மையாக தரிசித்தோம். பயணத்தில் கப்படோஸில் கழித்த இரண்டு நாட்களும் உன்னதமானவை. ஒவ்வொரு தருணமும் பல்வேறு காட்சிகளை ஓயாமல் அடுகடுக்காய் அறிமுகப்படுத்திற்று எனலாம். இவற்றை ஏற்கனவே இன்னொரு நாட்டில் வேறொரு பிரதேசத்தில் கண்டிருக்கிறேனென ஒப்புமைபடுத்தவியலாத காட்சிகள். கப்படோஸ் பிரதேசத்திலிருந்த மூன்று நாட்களும் உக்ருப் (Ugrup) என்ற நகருக்கருகே தங்கினோம்.

காலையில் எங்களுடன் நட்பு பாராட்டிய டாக்டர் தம்பதியருள் பெண்மணிக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவ குடும்பமென்றதால்,  அதனை எதிர்கொள்ளும் மனத் திட்பம் அவர்களிடமிருந்தது. அதாவது மனத் திட்பம் மட்டுமே இருந்தது. அதன் விளைவாக அன்றைய பொழுதைப் பெண்மணி ஓட்டல் அறையிலேயே கழிக்கவேண்டியிருந்தது. முதல் நாள் பேருந்தில் வரும்போது, எங்கள் வழிகாட்டி பலூனில் பறக்க விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளாலாமென தெரிவித்திருந்தார். அதற்கான கட்டணம் தனி. நபரொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு 250 யூரோவென்றார்கள். என் மனைவிக்கு விருப்பமில்லாததால் தவிர்க்கவேண்டியிருந்தது. அதுவும் தவிர முதல் நாள் பலூனில் பறப்பதைப்பற்றி எங்கள் வழிகாட்டி கூறும்போது வானிலை வேறு மோசமாக இருந்தது. எங்கள் குழுவிலிருந்த 30பேரில் பறப்பதற்கு பதிவு செய்துகொண்டதென்னவோ ஒரேயொரு ஜோடிதான். காலையில் பேருந்தில் புறப்படுவதற்கு முன்பாக அவர்கள் பலூனில் பறப்பதென்று ஏற்பாடு. பலூனில் பறப்பதென்று முடிவெடுத்த ஜோடியில் பெண்மணியைப் பார்த்துப் பயந்தது நிஜம். எனக்காக அல்ல. அவரது கனவருக்காக. கணவரை பலூனிலிருந்து தள்ளிவிடுவதற்காகவே பதிவு செய்திருப்பாரோ என்பதைப்போல பெண்மணியின் தோற்றம். பேருந்தில் ஏறியபோது அந்தஜோடி பேருந்தில் ஏறுகிறதா என்று பார்த்துக்கொண்டேன். .

கப்படோஸ் ஓர் அதிசயப்பிரதேசம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு: எரிமலை வெடிப்பு, உறைநிலைக்கு கீழான வெப்பம், குளிர்காலங்களில் கடுமையான பனிப்பொழிவு, ஹோவென்று சுற்றி சுழன்று அடிக்கும் (‘தெர்விஷ்?) காற்று ஆகிய நான்கும் கூட்டணி அமைத்துக்கொண்டு ஓர் விநோதமான இயற்கை காட்சியை செதுக்கியுள்ளன. விநோதமான சிற்பங்கள். தாதாயிஸமும், மீயெதார்த்தமும் அன்றே ஒத்திகைக்குப் பழகிக்கொண்டதுபோல. முகமற்ற விண்ணுலக மாந்தர்கள் பூமியில் கால பதித்ததும் சிலையாகக் கடவது என சாபமிட்டதுபோல அடுக்கடுக்காக நிற்கிறார்கள். அதுமாத்திரமல்ல வேறொரு அதிசயமும் உண்டு பிரதேசமெங்கும் மலையைக் குடைந்தும், பூமியின் கீழும் இன்றைக்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஓட்டல்கள், ரெஸ்ட்டாரெண்டுகள். கேளிக்கை விடுதிகள்,குடியிருப்புகள் இருக்கின்றன. கப்படோஸ் வரலாற்றில் ஆசிய ஐரோப்பிய பெரு நாகரீகங்கள் தங்கள் தடங்களைப் பதித்துள்ளன. எல்லா மனிதர்களும் வந்துபோயிருக்கிறார்கள்.

துறவிகள் பள்ளதாக்கு- Monks’ Valley: ஆறாம் நூற்றாண்டில் முதன்முதலாக கிறித்துவர்கள் கப்படோஸில் மலைகளைக் குடைந்தும் பூமிக்கும் கீழும் வாழ்ந்த இடம். அப்படி வாழ்வது அவர்களுக்கு இயற்கையிடமிருந்துமட்டுமல்ல பிற மதத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள உதவியிருக்கிறது.  மூன்றாவதாக நாங்கள் சென்று பார்த்தது முஸ்தாபாபாசா (Mustapapasa) என்ற சற்றே பெரிய கிராமம் அல்லது மிகச்சிறியதொரு நகரம். 1923 வரை கிரேக்கர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து சினோசா எனும் சிறு நகரம் இங்கும் பண்டைய கிரேக்கவீடுகளுக்கிடையில் நடந்து சென்றோம்.

மாலை ஆறுமணிக்கு ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம். இன்றிரவு ‘செமா’ என அழைக்கப்படும் The whirling Dervish நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இரவு உணவை ஏழரை மணிக்குள் முடித்துக்கொண்டு பேருந்துக்குள் தயாராக இருக்கவேண்டுமெனச் சொல்லப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய கட்டுரையில் இச்சுழல் நடனத்தின் நதிமூலத்தை தெரிவித்திருந்தேன்.

மெவ்லானா செலாலெதின் (1207-1273) கற்பனையில் உதித்த இச்சடங்கில் துருக்கியரின் மரபு, நம்பிக்கை, வரலாறு, பண்பாடு என நான்கும் கலந்திருக்கின்றன. இச்’செமா'(Sema) ஏழு பகுதிகள் கொண்ட ஒருவகையான மறைஞானப் பயணம். நவீன விஞ்ஞானம் தெரிவித்ததைத்தான் அன்றே மெவ்லான ‘செமா’ மூலமாக மெய்பித்திருக்கிறார். அதாவது உலகத்தின் இருப்பு தன்னைத்தானே சுற்றும் இயல்புசார்ந்தது. இப்படி சுற்றாத பொருளோ அல்லது உயிரியோ உலகில் எதுவுமில்லை. அது கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்கிறது. எலெக்ட்ரான் புரோட்டானும் அணுக்களில் ஆரம்பித்து கிரகங்கள் வரை இந்த அற்புத நிகழ்வை நடத்துகின்றன. இதில் நாமும் ஓர் அங்கம். மனித உடலில் இரத்த சுழற்சியும் பிறவும் இதற்கு சாட்சி. மண்ணிற் தோன்றி மண்ணில் மறையும் மனிதன் பிறப்பு இறப்புங்கூட இதனையே தெரிவில்லிறது. ‘செமா’ ஊடாக மனிதன் தனது தன்முனைப்பை துண்டித்துக்கொண்டு அன்பூடாக சத்தியத்தை எட்டுகிறான். தெர்விஷ் கலைஞர்கள் அணியும் தலைப்பாகை அல்லது தொப்பி கல்லறையின் குறியீடு, அவர்களுடைய வெள்ளை அங்கி சவத்தை மூட உதவும் துணியின்குறியீடு சுற்றுகிறபோது இடது கை பூமிக்கும் வலதுகை வானத்தை நோக்கியும் விரிகிறது. இறைவன் அருளைவேண்டி இதயத்தை சுற்றிவருவது செமா என்கிறார்கள். மொத்தம் 7 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். முதலில் முகம்மது நபியின் பெருமையைச்சொல்லி ஆரம்பித்து வைக்கிறார்கள், அடுத்து தோலிசைக்கருவிகொண்டு சத்தமெழுப்புகிறார்கள், பிறகு வயலின் போன்றவாத்திய இசைக்கருவி தொடருகிறது. உயியின் முதல் மூச்சை அது வழங்குகிறதாம். நான்கவதாக டெர்விஷ்கள் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்கிறார்கள். பிறகு ஒரு வட்டமாக நடக்கத் தொடங்குகின்றனர். ஐந்தவதாக சுற்றத் தொடங்குகிறார்கள். இறுதியில் எட்டும் உச்சநிலையை பௌத்தம் நிர்வானா என்பதைப்போல, தெரிஷ்கள் ·பெனபில்லா (Fenafillah) என்கிறார்கள் அதாவது முழுமையான சரணாகதி.   எங்கள் ஓட்டலிருந்து வெகு அண்மையில் ஒரு நிலவறை மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, மேடை நடுவிலிருக்க பார்வையாளர்கள் சுற்றி உட்காரவைக்கப்பட்டிருந்தோம். அவர்கள் சுற்றுகிறபோது பல நேரங்களில் சுற்றுவது அவர்களா நாமா என்ற கேள்வியை தவிர்க்க முடிவதில்லை.

(தொடரும்)

 

 

மேடையேற்றப்படாத ஒரு விவாதம்.

எழுத்தாளனை அடையாளப்படுத்துதெது படைப்பா, கொள்கைத்தேர்வா?  -ஒரு பிரெஞ்சு படைப்புலக அண்மைக்கால சர்ச்சை

Polémique என்ற பிரெஞ்சு சொல்லுக்கு மூலம் கிரேக்கமொழி: பட்டிமன்றம், தருக்கம், வாய்ச்சண்டை, சொற்போர், வாதம் கொஞ்சம் கதவைத் திறந்தால் அனல் வாதம், புனல்வாதமென அவ்வளவையும் சேர்த்துக்கொள்ளலாம். பக்கவாதம் இதிலடங்காதது.  ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்/பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்கிறது மணிமேகலை. இலக்கிய சர்ச்சைக்கும் இப்படியொரு விதியை வைக்கலாம். ‘சர்ச்சை’ மேடையேற்றப்படாத ஒரு விவாதம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதிய விதிமுறைக்குள் அதுவும் வரக்கூடியது. பெரும்பாலும் அரைவேக்காட்டுத்தனமாகவிருக்கிற இன்றைய பட்டிமன்றங்களை நாம் கணக்கிற்கொள்ளகூடாது. அங்கே வைக்கப்படும் வாதம், மறுப்பு அனைத்தும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மேடையேற்றப்படும் நாடகம் -பம்மாத்துகள் -பாசாங்குகள். போலியான குரல்கள் ‘சர்ச்சைக்குள்’ ஒலிக்காதென்பது ஆறுதலான செய்தி. பொதுவாகக் கலகக்குரல்கள் அல்லது எதிர்ப்புக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக நம்புகிறார்கள், கோபத்துடன் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்கிறார்கள். சர்ச்சையின் முடிவில் தங்கள் எழுப்பும் வினாவிற்கு தெளிவான விடைகிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருக்கிறது. தமிழ்மண்ணில் பாங்கறிந்து சர்ச்சையில் இறங்குகிறார்களோ இல்லையோ பிரெஞ்சு மண்ணில் மணிமேகலையில் கூறப்பட்டுள்ள விதியை நன்கு உள்வாங்கிக்கொண்டு சர்ச்சையில் இறங்குவதாகவே நினைக்கிறேன்.

இனம், மொழி, நாடு என உழைத்த மக்களை நினைவு கூர்வதென்பது இன்றைக்கு ஒரு சடங்காகவே மாறிவிட்டது. பிரான்சு நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடம் தோறும் அவ்வருடத்தில் யார் யாரையெல்லாம் நினைவு கூர்தல்வேண்டும், அரசு சார்பில் செய்யப்படவேண்டியவையென்ன என்பது பற்றி அது தொடர்பான அமைச்சும் அதிகாரிகளும், இதற்கென நியமிக்கப்பட்டிருந்த குழுவினரும் கலந்து பேசுவர். 2011ம் ஆண்டும் அப்படி கலந்து பேசிய பின் பட்டியலொன்றை தயார் செய்தனர். அப்பட்டியலில் இடம்பெற்றவர்களுள் செலின் என்று அழைக்கபடும் லூயிஸ் ·பெர்டினாண் செலின் (Louis-Ferdinand Céline) என்பவரும் ஒருவர். நவீன இலக்கியத்தைக்குறித்த விவாதமோ, கலந்துரையாடலோ பகுப்பாய்வோ நடைபெற்றாகவேண்டுமெனில் செலின் தவிர்க்க முடியாத நபர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இருவர்: ஒருவர் மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust), மற்றவர் செலின். Journey to the End of the Night மிக முக்கியமானதொரு படைப்பு. சொற்களை அதிகம் விரயம் செய்யக்கூடாதென்பவர். கொச்சை சொற்களை படைப்புகளில் கணிசமாகக் கையாண்டு அப்படியொரு முறைமைக்கு வழிகோலியவர். பிரெஞ்சு இலக்கியம் ஒரு தேர்ந்த படைப்பாளியென்கிற வகையில் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது.  செலின் இறந்து (1961ம் ஆண்டு ஜூலையில் இறந்திருந்தார்)  ஐம்பதாவது நினைவஞ்சலியென்பதால் அதனை ஓர் அரசுவிழாவாக, மிகச்சிறந்த முறையில் கொண்டாடவும் திட்டமிட்டார்கள். அரசுவிழா பொறுப்பாளராக தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டார். புகழஞ்சலி மலரும் தயாரானது. மலருக்கு முன்னுரை வழங்கியவர் ‘அலென் கொர்பன்’ என்ற வரலாற்றிஞர். மலருக்கு நாட்டின் கலை, இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சரால் அக்கறையுடன் எழுதப்பட்ட அணிந்துரையும் இடம்பெற்றது. ஆசியருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையிற் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. செலின் படைப்புளில் அதிக ஈடுபாடுகொண்டவரும், விற்பன்னருமான ஹாரி கொதார் (Henri godard) எழுதிய வரிகள் வியப்பில் ஆழ்த்துபவை. வழக்கமான புகழஞ்சலிக்குரிய சொற்கள் அங்கில்லை, வேறு தொனியிலிருந்தன. சில ஐயப்பாடுகளை எழுப்பின:

“செலினுக்கு விழா எடுக்கத்தான் வேண்டுமா?பிரெஞ்சு இலக்கியத்திற்கு அவரளித்துள்ள பங்களிப்பை மறுக்கவியலாத அதேவேளை கேள்விக்குச் சாதகமானதொரு பதிலைத் தருவதற்குத் தயங்க வேண்டியவர்களாகவுள்ளோம். நினைவாஞ்சலி கூடாதென்பதற்கு காரணங்கள் தெளிவாக உள்ளன. யூதர்கள்மீது தீராத வெறுப்பையும் கசப்பையும் வைத்திருந்தார். ப்ரூஸ்டுடன் பிரெஞ்சிலக்கிய வெளியை பகிர்ந்துகொண்டு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்த்திய சாதனைகளும் மறக்ககூடியல்ல” என்றெழுதி சர்ச்சையை ஹாரி கொதார் துவக்கி வைத்தாரெனலாம்.

ஹாரி கொதார் உபயோகித்த சொற்களை இரண்டாவது முறையாக வாசிப்பீர்களெனில், ‘செலினை’ ஒரு படைப்பாளியாக ஏற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில், அவரை ஒரு இனவெறியாளராக தயக்கமின்றி அவர்  சுட்டுவதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கு செலினைப்பற்றி கூடுதலாக சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். 1930களின் இறுதியில் இனவெறியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் செலின் ஈடுபட்டாரென்ற செய்தியை இங்கே கோடிட்டுக்காட்டினால் செலின் என்ற எழுத்தாளனுக்குள்ள எதிர்ப்புகளை புரிந்துகொள்ளக்கூடும்.  “யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட எனக்குத் தயக்கங்களில்லை; யூதர்களின் முதல் எதிரியாக என்னைக் காட்டிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்”, என்று வெளிப்படையாகவே தெரிவித்தவர் செலின். பிரான்சு நாட்டை ஜெர்மன் ஆக்ரமித்திருந்தபோது பிரான்சிலிருந்த நாஜி அபிமானிகள் நடத்திய இதழுக்குத் தொடர்ந்து எழுதிவந்தார். அப்பத்திகளில் யூதர்களின் இருத்தலைக் கடுமையாக விமர்சித்திருந்தார். செலின் யார் என்பது ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஹாரி கொதார் எழுப்பிய ஐயங்களைக் கையிலெடுத்துக்கோண்டு செர்ழ் கிளார்பெல்டு (Serge Klarsfeld) கிளர்ந்தெழுந்தார். கிளார்பெல்டு வழக்கறிஞர், எழுத்தாளர், அவரது படைப்புகள் முற்றுமுதலாக நாஜிகளுக்கு எதிரானது. பிரெஞ்சு மொழியில் நாஜிகளைப்பற்றிய கொடூரமான பிம்பத்தை உரிய சாட்சியங்களுடன் கட்டமைத்திருக்கிறார். தம் பெற்றோர்களை கொலைமுகாமில் பலிகொடுத்தவர். எல்லாவற்றிர்க்கும் மேலாக நாஜிகளின் வதை முகாம்களிலிருந்தும், கொலைமுகாம்களிலிருந்தும் உயிர் பிழைத்தவர்களைக்கொண்டு ஏற்படுத்திய அமைப்பொன்றின் தற்போதைய தலைவர்.

செர்ழ் கிளார்பெல்டு இதற்கெனவே காத்திருந்திருந்ததுபோல அரசாங்கத்தின் முடிவினை உடனடியாகக் கண்டித்தார்: “யூதர்களை தமது ஊத்தைபிடித்த எழுத்துக்களால் கண்டித்து எழுதியன் பலனாக பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட காரணமாகவிருந்த படைப்பாளரொருவரின் (செலின்) ஐம்பதாவது இறப்பு ஆண்டைக் கொண்டாடுவது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையென்ற நினைப்பே அவமானத்திற்குரியது. செலினைக் கொண்டாடுகிறபோது அப்பாவி யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் வயது பேதமின்றி வதைமுகாம்களுக்கும், கொலை கிடங்குகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதும், அவர்களில் குறைந்த எண்ணிக்கையினரே உயிர்பிழைத்தார்கள் என்பதும் நினைவுக்கு வரக்கூடுமேயண்றி செலினுடைய படைப்புகள் வாராது, எனவே உடனடியாக அமைச்சர் செய்யவேண்டியது 2011ம் ஆண்டு கொண்டாட்டப் பட்டியலிலிருந்து செலினை நீக்குவதாகும்”, என்பது போல அவரது அறிக்கை இருந்தது. இவ்வறிக்கை Le Figaro, Le nouvel Observateur போன்ற பிரெஞ்சு இதழ்களின் இணைய தளங்களிலும் இடம்பெற்றது.

அமைச்சரின் எதிர்வினை என்னவாக இருக்கும், என்பதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி அகாதமியைசேர்ந்த மொழியிலறிஞர் பிரெடெரிக் வித்து (Frédéric Vitoux),என்பவரின் கூற்றும் அலட்சியப்படுத்தக்கூடியல்ல: “இங்கே பிரச்சினை செலின் என்ற படைப்பாளியல்ல ‘கொண்டாட்டம்’ என்கிற  சொல்லே. அவரது 50வது நினைவஞ்சலி ஆண்டை ஏதோ செலினுக்கு இப்போதுதான் மகுடம் சூட்டப்போவதுபோல நினைத்துக்கொண்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றுவரையிலும் அவருக்குள்ள இடம் உறுதியாகவே இருக்கிறது. இந்த ஆண்டில் அவரது எழுத்துக்களை மீண்டும் நினைவஞ்சலி என்ற பெயரில் மறு வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கமுடியும். அவருடைய களங்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற பகுதியைக்கூட சார்பற்ற விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கலாம்.” என்றார் அவர். இதற்கு ஆதரவாகவும் மறுதலிக்கும் வகையிலும் கருத்துகள் குவிந்தன.

இந்தப்பிரச்சினையில் இன்னொன்றையும் விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டியிருக்கிறது. நாஜிகளின் பேரழிவுக்குள்ளான இனம் யூதரினம் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதற்கான நீதி வழங்கப்படவேண்டியதுதான், வழங்கியும் விட்டார்கள். ஆனால் அதையே காரணமாக வைத்து எதிர் தரப்பினரின் குரல்வளையை இவர்கள் இன்னும் எத்தனைகாலத்திற்கு நெறித்துக்கொண்டிருக்கப்போகிறார்கள். இன்றைய தேதியில் உலப்பொருளாதாரமும் அரசியலும் இந்த இனத்தின் கையில்தான் உள்ளது. பிரெஞ்சு கலை இலக்கிய பண்பாட்டுத்துறை அமைச்சர் செலின் நினைவுதினத்தை அனுசரிப்பது தொடர்பாக என்ன முடிவு எடுத்திருப்பாரென நினைக்கிறீர்கள்? பிரான்சு நாட்டின் அதிபர் ஒரு யூதர், பிரதமர் யூதர், அமைச்சர்களில் பாதிக்குமேல் யூதர்கள். எதிர்கட்சி தலைவர் ஒரு யூதர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள்கூட யூதர்களாக இருக்கலாம். இந்நிலையில் முடிவு நீங்கள் நினைப்பதுபோலத்தான் அமைந்தது. செலினை யூதரின துரோகியாகப்பாவித்து அரசு அவருக்கான விழாவை பட்டியலிலிருந்து நீக்கியது. எனக்கு ஒரு படைப்பாளியை படைப்பை மட்டுமே வைத்து பார்க்கவேண்டும். படைப்பில் ஒன்றிரண்டு யூத எதிர்ப்புக்கூட இருந்துபோகட்டுமே அதனாலென்ன? சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறநாட்டில் அதற்கு வாய்ப்பில்லையானால் எப்படி?

———————————————-

துருக்கி பயணம்-3

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-28

காலை 7.30க்கு பேருந்தில் இருக்கவேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. எங்கே உறங்கினாலும் இரவு எத்தனை மணிக்கு உறங்கப்போனாலும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக விழித்துக்கொள்வதென்பது பள்ளிவயதிலிருந்தே பழகிப்போனது. விழித்துக்கொண்டபோதும் அறையில் இணையத் தொடர்பு ஒழுங்காக கிடைக்காதென்பதை மூளை தெரிவித்தால் சோர்வுடன் படுத்திருந்தேன். ஐந்து மணிக்கு குளித்து முடித்ததும், லி·ப்ட் பிடித்து கீழே இறங்கினேன் லாபியில் ஒருவருமில்லை. வரவேற்பு முகப்பு அரை உறக்கத்தில் கிடந்தது. தனியே லாபியில் உட்கார்ந்திருக்க தயக்கமாக இருந்தது. எனது தயக்கத்தை டெலிபதியில் அறிந்தவர்போல குழுவின் வழிகாட்டி உள்ளேவந்தார். அவர் நாற்பது வயது இளைஞர். சுறுசுறுப்பான ஆசாமி. வளைகுடா நாடுகளைத் தவிர பிற இஸ்லாமிய நாடுகளில் இந்தியர்களை கூடுதலாக நேசிப்பதை எனது அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஹெய்டென் என பெயர்கொண்ட அத்துருக்கி வழிகாட்டியும் அப்படி பட்டவராக இருந்தார். பொதுவில் எல்லா வழிகாட்டிகளையும்போலவே தகவல்களை விரல் நுணியில் வைத்திருப்பார். அவருடைய பாலிவுட் பற்றிய கேள்விகளுக்கு எனது அஞ்ஞானம் ஏமாற்றத்தை அளித்திருக்கக்கூடும். இந்தித் திரைப்படங்களில் நான் அரிச்சுவடியைத் தாண்டியவனில்லை. A for Aradhana B for Bobby யென எழுபதுகளில் வந்த படங்களையும் அவற்றின் நாயக நாயகிகளயும் அறிவேனே தவிர மற்றபடி ஞானசூன்யம். தவிர ஹெய்டெனைப் போன்றவர்களுக்கு இந்தியர்களென்றாலே பம்பாயிலிருந்து வந்திறங்கியதாக எண்ணமிருக்கிறது. திலிப் குமார், மீனாகுமாரியில் ஆரம்பித்து அமீர்கான் ஷாருக்கான் வகையறாக்களைத் தொட்டுக்கொண்டு எழுபதுக்குள் நுழைந்தார். ஒருவரையும் விடவில்லை: ராஜேஷ் கன்னா, அமிதாப், தர்மேந்திரா, தேவ் ஆனந்த், கபூர் குடும்பம், ஹேமாமாலினி, ஜீனத்.. பாலிவுட்டின் அம்பாசடராக பணிய புரியலாமென்ற எனது யோசனையைக் காதில்வாங்கினதாக தெரியவில்லை. ‘மேரே சப்னொ கீ ராணி’யை மெல்லிய குரலில் பாடிக்காட்டினார். அசப்பில் கிஷோர் குரல். அவருக்கு நேரத்தை நினைவூட்டினேன். எழுமணிக்கு அறையப்பூட்டிக்கொண்டு இறங்கிவந்த மனைவியுடனும் டாக்டர் தம்பதியுடனும் டைனிங் ஹாலுக்குள் நுழைந்தோம். காலை உணவை முடித்துக்கொண்டு, பெட்டிகளுடன் ஏழரைமணிக்கு இறங்கிவிட்டோம். அன்றிரவு கப்படோஸில் தங்க இருந்ததால் ஓட்டலை காலிசெய்யவேண்டியிருந்தது.

ஓட்டலிலிருந்து புறப்பட்ட பேருந்து நேற்று பார்த்த மனவ்காட் நதியைத் தொட்டுக்கொண்டே சென்றது. சுமார் ஐம்பது கி.மீட்டர்தூரம் சமவெளி. கொன்யா நகருக்குச் செல்வதற்கு முன்னால் இடையில் குறுக்கிடும் தொரொஸ் மலைத் தொடரைப் பற்றி எழுதாதுபோனால் இன்றைய தினம் நிறைவுறாது. அண்ட்டால்யாவிலிருந்து கப்படோஸ் சுமார் அறுநூறு கி.மீட்டர். சமவெளிகளும் மலைத்தொடர்களும் மிடையில் குறுக்கிட்டன. சமவெளியெனில் கண்ணுக்கெட்டியதூரம்வரை தரிசு நிலங்கள் பயன்பாடற்று இருந்தன. கிராமங்களில்  குறைவான எண்ணிக்கையில் வீடுகள். அண்ட்டால்யாவுக்கும் கொன்யாவுக்குமிடையில் நானூறு கி.மீட்டர் இருக்கலாம்.இதில் குறைந்தது மூன்றுமணிநேரமாவது பனிமூடிய தொரொஸ் (Taurus) மலைத்தொடரைக் கடந்து செல்லவேண்டியிருந்தது.

 தொரொஸ்: மத்தியதரைகடல் நிலப்பரப்பையும் அனத்தோலியன் பீடபூமியையும் இம்மலைத் தொடர் பிரிக்கிறது. நீள்சதுர கற் படிமங்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியதுபோன்றிருந்தது இம்மலைகள். தொடக்கத்தில் அந்நியரென்று உணராமல் முகத்தை மறைக்காமலும், பின்னர் சட்டென்று அன்னியர் இருப்பு நினைவுக்கு வந்ததைபோல துருக்கிப்பெண்களில் ஓரிருவர் முகத்தை மறைத்து உரையாடுவதைக்கண்டேன். அவர்களைப்போலவே தொரொஸ் மலைத்தொடரும் ஆரம்பத்தில் முகத்தை மறைக்கமறந்தும் பின்னர் பனிமூடியும் இருந்தது.  வெள்ளிச்சங்கிலிபோல தொடரும் மலைககளுக்கிடையே நீலக்கற்களை பதித்ததுபோல ஆங்காங்கே நீர்ப்பரப்பு. கரு நீலநிற ஏரிகளில் சர்க்கரைப்பொடியைத் தூவியதுபோல பனித்துகள்கள் மிதப்பதை நின்று நிதானமாக ரசிக்க ஆயிரம் ஆண்டுகளாவது குறைந்த பட்சம் வேண்டும். சாலை பல இடங்களில் 1500 மீட்டர் உயரத்திற்கு குறையாமலிருந்ததை அறிவிப்புப் பலகைகள் தெரிவித்தன. உலகெங்குமுள்ள நவீனசாலைகளை ஒத்திருந்தன. எனினும் ஐரோப்பிய நகரங்களில் இருக்கிற பராமரிப்பு இல்லை. ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் நிறைய. நாங்கள் சென்ற பேருந்துவில் அமர்ந்திருந்த பகுதிக்குக் கீழே ஏதோ விடுப்பட்டதுபோல சப்தம் வந்தது. அதை வழிகாட்டியிடம் தெரிவிக்கவும் செய்தோம். அவர் ஓட்டுனரிடம் தகவலைச்சேர்த்தார். முதல் அரைமணிநேரம் ஓட்டுனரிடம் எதிர்வினையேதுமில்லை என்பதால் நிம்மதியாகவே பேசிக்கொண்டு வந்தோம். மலைத்தொடருக்கிடையே ஒரு பள்ளத்தாக்கில் சாலையோரமாக வண்டியை நிறுத்த, நேர்ந்துள்ள சிக்கல் அலட்சியப்படுத்தக்கூடியதல்ல என்பது விளங்கிற்று. இறங்கினோம். ஒரு சிறிய கிராமம். பள்ளிவாசல் அருகில்  தேனீர்கடை, மளிகைக் கடையொன்று, கிராம நிர்வாக அலுவலகம், கழிவறை- அவசர தேவைக்கு பிரச்சினைகளில்லை.  வழிகாட்டியும் ஓட்டுனரும் பேருந்துக்கேற்பட்ட இடற்பாட்டை கைத்தொலைபேசியில் நிர்வாகத்திற்கு தெரிவித்தார்கள். அவ்வழியாகச்சென்ற எங்கள் சுற்றுலா நிறுவனத்தின் மற்ற பேருந்துகள் நின்றன. அனுதாபங்கள், நலன் விசாரிப்புகள். ஒரு சிலமுகங்களில், நமக்கு பிரச்சினையில்லை என்பதுபோன்ற நிம்மதி. விடைபெற்றுகொண்டார்கள். எங்களுக்கு அன்றையபொழுது அங்கேயே தங்க நேருமோ என்ற அச்சமிருந்தது. . ஒரு முறை இந்தியாவில் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டது. வழிகாட்டியின் தகவல் சமாதானம் செய்தது. ‘பெரிய பிரச்சினையென்றில்லை, அடுத்து இருபது கி.மீட்டர் தூரத்தில் பேருந்து பழுது சரிபார்க்கப்படுமென்றார். ஓட்டுனரின் மௌனம் அதை அங்கீகரிக்க பேருந்துக்குள் ஏறி அமர்ந்தோம். வழிகாட்டியின் கூற்றுக்கேற்ப பேருந்து அடுத்த பள்ளத்தாக்கில் நின்றது. கூடுதலாக இரண்டுமணிநேரம் செலவிடலாமென்பதுபோல அங்கே இயற்கை அழகு, ஆனால் அரைமணிநேரத்தில் பேருந்து சரி செய்யப்பட, பயனத்தைத் தொடர்ந்தோம்.

கொன்யா: மத்திய துருக்கியின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்று. இரண்டு மில்லியன் மக்கள் வசிப்பதாகச்சொல்லப்படுகிறது. சரித்திர புகழ்வாய்ந்த நகரம். இரண்டு இடங்களை அங்கே பார்த்தோம்.

அ. மெவ்லானா நினைவிடம்:

கொன்யா சூ·பிஸப் பிரிவினரின் முக்கிய புனிதத்தலமாக கருதப்படுகிறது. செலாலெதின் ரூமி அல்லது மெவ்லானா (Celaludin Rumi Mevlana) துருக்கிய சூபிஸ மெய்யியல்வாதி. அரபுமக்களால் ரொமானியர் பிரதேசமென நம்பப்பட்ட துருக்கியின் அனாத்தொலி பிரதேசத்தில் வாழ்ந்ததால், இவரை ரூமி எனவும் அழைத்தார்கள். ஆப்கானிஸ்தானத்திற்கும் ஈரானுக்குமிடையிலிருந்த பிரதேசமொன்றில் 1207ல் பிறந்த செலாலெதின், மங்கோலியரின் படையெடுப்பு காரணமாக குடும்பத்துடன் துருக்கிக்கு வருகிறார். தந்தையின் இறப்புக்குப் பிறகு மெவ்லானா சிரியா, டமாஸ்கஸ் போன்ற நகரங்களில் இறையியல் கற்கிறார். 1244ம் ஆண்டு   அவர்  நாடோடியாக சுற்றித் திரிந்த செமா என்கிற தெர்விஷ் துறவியை சந்திக்கிறார். அப்பெரியாரை ஆன்மீக குருவாக ஏற்கவும் செய்கிறார். தெர்விஷ் எதிர்பாராதவிதமாக கொல்லப்பட  அவருடைய நெறிமுறைகள் ரூமியைப் பெரிதும் ஈர்க்கின்றன. செமா (Sema) என்கிற சூபிநடனமும் சூபிஸமும் உருவாகிறது. சூபிஸ நடனம் – (Dervish)ஓர் ஆன்மீகப்பயணம். அன்பினூடாக, தன்முனைப்பை தொலைத்து உண்மையைத் தேடும் பயணம் என்கிறார்கள். அப்படியொரு நடனத்தை காணும் வாய்ப்பு பேறு கப்படோஸில் தங்கியிருந்த முதல் நாள் வாய்த்தது. அதை அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

மெவ்லானாவின் சமாதியும், அவரும் அவர் சீடர்களும் தங்கிய மடமும் இங்கு உள்ளன. மடம் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. அவரது ஆடை, அவர் வாசித்த திருமறை, அவர் அணிந்த தலைப்பாகை, அவர் உடலோடு ஒட்டிய பொருட்கள் என பலவும் காட்சிக்கு உள்ளன. ஆக்ரா தாஜ்மகாலில் வழங்கப்படுவதுபோல காலணிகளைத் தவிர்க்க பிளாஸ்டிக் உரைகளை கால்களுக்குக் கொடுக்கிறார்கள். வெகுதூரத்தில் வருகிறபோதே தாஜ்மகால் கலசம்போன்ற  நீலமும் பச்சையும் கலந்த பளிங்குக்கல் முகட்டைக் காண்கிறோம். முற்றமும்வாசலுங்கொண்ட பெரிய தொரு ஜமீன் வீட்டை நினைவுபடுத்துகிறது. நீண்ட நடைபாதையின் இடப்புறம் திரும்பியதும் முகப்பில் அழகான நீரூற்று, கைகால்களை சுத்திசெய்துகொள்ள வலப்புறம் நீண்ட தாழ்வாரத்துடன் கூடிய புறாக்கூண்டுபோல மிகச்சிறிய கொள்ளளவுடன் கூடிய அறைகள் இருக்கிந்றன. அறைகளில் டெர்விஷ் நடனக்கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.  இவர்கள் வெறும் நடனக் கலைஞர்களல்ல,   எளிமையான  வாழ்க்கையை நெறியாகக்கொண்டவர்கள். பிச்சுகள் வாழ்க்கை. பக்தியின் அடிப்படையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வளையவரும் நடனமொன்றை நிகழ்த்தியவர்கள். அடிப்படைகடமையான இவர்களுக்கு தொழுகையுமுண்டு.  இடப்புறமுள்ள மண்டபத்தில் நுழைந்ததும் அங்கே மெவ்லானாவின் செனொதாப்கள்(Cenotaph). இருக்கின்றன. செலாலெதினுடையது, அவரது குடும்பத்தைச்சேர்ந்தவர்களுடையது, அவரது சீடர்களுடையது என பலவுமுண்டு. அலங்கரிப்புகள் அவ்வளவும் தங்க முலாம் பூசப்பட்டோ தங்கச் சரிகை வேய்ந்த பட்டுத்துணிகளாகவோ இருக்கின்றன. சுவரெங்கும் பிறவற்றிலும் குர் ஆன் வாசகங்களை மிக அழகாக சித்திர எழுத்துகளில் தீட்டியிருந்தார்கள். இந்த செனொதாப்களின் மீது மெவ்லானாக்களின் பிரத்தியேக தலைப்பாகையுமிருந்தன. அருகிலிருந்த மற்றொரு மண்டபத்திலும் மெவ்லானாவுக்கு வேண்டியவர்களின் செனோதா·ப்களிருந்தன. இவற்றைதவிர மெவ்லானா உபயோகித்த பொருட்களனைத்தும் காட்சிபடுத்தப்பட்டிருந்தன. உலகின் மிகப்பெரிய ஜாடி, உலகத்தின் மிகச்சிறிய குர்ஆன், மெவ்லானா இசைத்த கருவி, கம்பள விரிப்பு, உயர்வகை கற்கள்..இவை தவிர வேறு பொருட்களுக்கும் குறைவில்லை. இங்கே சிறிய பேழையில் வைத்திருந்த அவரது தாடி மயிரையும்குறிப்பிடலாம்.

 ஆ. காரவான்செராய் (Caravanserail de Sultanhan) பயன்பாட்டளவில் நம்ம ஊர் சத்திரங்களையும், பாதுகாப்பில் கோட்டைகளையும் நினைவூட்டக்கூடியது.  இங்கே இரவு நேரங்களில் பயணிகளும் வியாபாரிகளும் கொள்ளையரியமிருந்து தங்களை காத்துக்கொள்ள தங்குவது வழக்கமாம். இதனுள்ளே குதிரைகளும், ஒட்டகங்களும் நூற்றுக்கணக்கில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பொழுது சாய்வதற்குள் உள்ளே போய்விடவேண்டும். இல்லையெனில் அதன் மிகப்பெரிய கதவுகள திறக்கப்படமாட்டா. நாங்கள் பார்த்த காரவான் செராய் துருக்கியிலேயே மிகப்பெரியது. பதின்மூன்றாம் நூற்றாண்டின் கைக்கோபாத் எனும் சுல்தானால் கட்டப்பட்டது.  பெரியகதவுகளைக் கடந்து சென்றால் உள்ளே பயணிகள், வியாபாரிகள் ஆகியோருக்கு தனித்தனி அறைகளும், தொழுகைக்கான மசூதியும், துருக்கி குளியலுக்கான ஹமாமும் விலங்குகளுக்கான கொட்டடிகளும் இருக்கின்றன. இந்நேரத்தில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு படித்த ‘Birds Without Wings'(Louis de Berniere என்பவர் எழுதிய) நாவல் நினைவுக்கு வருகிறது. இதில் காரவான்சாராயைப்பற்றிய விவரணை வருகிறது. இந்நாவல் பற்றி திண்ணையில் எழுதிய ஞாபகம். இந்நாவலுக்கு முன்னால், My name is Red ல் ஒன்றுமே இல்லை என்பேன்.

மதிய உணவு கொன்யாவிலேயேஒரு ஓட்டலிமென்று ஆயிற்று. துருக்கி ஓட்டல்களில் சைவ உணவுவகைகள் நிறையக் கிடைக்கின்றன. பொதுவாக நட்சத்திர ஓட்டல்களில் துருக்கியில் சிவப்பு ஒயின் கிடைக்கிறது. ஆனால் அன்று நாங்கள் மதிய உணவு சாப்பிட்ட ரெஸ்டாரெண்ட்டில் தடைசெய்யப்பட்டதென்றார்கள்.  உணவின் இறுதியில் எடுத்துக்கொள்ளும்  டெசெர்ட்களில் ஐஸ்கிரீமை காணமுடிவதில்லை. இந்திய இனிப்புகளோடு நிறைய ஒற்றுமைகள். கொரிக்க நிறைய கிடைக்கிறது விலையும் மலிவு: பாதாம், பிஸ்தா, வால்நட், உலர்ந்த பழவகைகள், உப்பு கடலை. மக்காசோளமென்று பட்டியல் போடலாம்.

கொன்யாவிலிருந்து மீண்டும் இரண்டரமணிநேர பயணம். கப்படோஸ¤க்கு மாலை ஆறுமணிக்கெல்லாம் வந்துவிட்டோம். பேருந்தின் வெளித்தோற்றம் பயமுறுத்தியது. ஆனால் அறைகளும், கவனித்துக்கொண்டவிதத்திலும் எவ்விதகுறைகளுமில்லை. ஒரு நான்கு நட்சத்திர ஓட்டலுக்குரிய அத்தனை சௌகரியங்களுமிருந்தன. துருக்கியர்களின் ஹமாம் சேவை உட்பட.

(தொடரும்)