எழுத்தாளன் முகவரி -4: படைப்புக் கூட்டணி

படைப்பிலக்கிய பிரபஞ்சம்: ‘எழுத்தாளன்- வாசகனென்ற’ இருகோள்கள் இயங்கும் வெளி. எழுத்தாளன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு வாசனையும் சுற்றிவருகிறான்.  வாசகன் எழுத்தாளனன்றி வேறுகோள்களையும் சுற்றவேண்டியவனாக இருக்கிறானென்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.  எனினும் இருவரும் வாசிப்பு, கலை, இலக்கியமென்ற ஈர்ப்புவிசையாற் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.

“வாசகன் விரும்பிய வகையில் – அவன் கற்பனைக்கொப்ப-  சித்திரங்களை வடித்துக்கொள்ள உதவும் பொருட்களைக் கையளிப்பவன்  படைப்பிலக்கியவாதி. எழுத்தாளன் கொடுத்த கையேட்டின் துணைகொண்டு சித்திரத்தை முடிப்பவனாக வாசகன் இருக்கிறான்”- என்கிறார் ஜான் மக்டொனால்டு. குற்றவியல் மற்றும் மர்ம புனைவுகளில் எழுதிக்குவித்து புகழ் பெற்றவர். விக்கிபீடியாவில் இரண்டு ஜான் மக்டொனால்டுகள் வருகிறார்கள்: ஒருவர் ஜான் ஏ மக்டொனால்டு அரசியல்வாதி, கனடா நாட்டைச்சேர்ந்தவர். இரண்டாவது ஆசாமி ஜான் டி.மக்டொனால்டு எழுத்தாளர் அமெரிக்கர். இந்த இரண்டாவது ஆசாமியும் அவரது ‘Creative Trust’ என்ற கட்டுரையும் நமக்கு வேண்டியவை. ‘படைப்புக் கூட்டணி என்பது அக்கட்டுரைக்கு பொருத்தமான மொழிபெயர்ப்பு. இக்கட்டுரையில் எழுத்தாளன் வாசகனென்ற இருவரின் உறவையும் படைப்பூடாக மேம்படுத்துவதற்குரிய வழிகளை மக்டொனால்டு விவரிக்கிறார்.

‘இயக்குனரும் நடிகரும் இணைந்து ஒரு காட்சிக்கு உயிரூட்டுவதைப்போல’ என்று இதனைச்சொல்லலாம்.  ஒரு நாவலின் வெற்றியென்பது, அதனைச் சமைத்த படைப்பாளியிடமில்லை, அதைச்சுவைக்க காத்திருக்கும் விருந்தினரிடமிருக்கிறது. காட்சிக்கான மேடை, வெளி, சூழல்; ஒலி ஒளி; ஆடைகள்; நடிகர்கள்; நடிப்பு; வசனம் என அனைத்தையும் இயக்கும் மையபொருள் இயக்குனர். காமிரா, கோணம், வசனம், ஒளி. ஒத்திகை என எல்லாம் முடிந்து,  அவரது அவ்வளவு உழைப்பையும் முழுமையாக உள்வாங்கிக்கொண்டு கூடுதலாக மெருகூட்டும் நடிகர்கள் அமைந்தால், திரைப்படம் வெற்றி பெறுகிறது. உதாரணம் கிளவுஸ் கின்ஸ்கி(Klaus Kinski)- வெர்னெர் ஹெர்ஸோக் (Werner Herzog); பீம்சிங் – சிவாஜிகணேசன் கூட்டணியில் உருவானத் திரைப்படங்கள்.

இனி ஜான் மக்டொனால்டு முன்வைக்கிற உதாரணத்தைப்பார்ப்போம். நம்மெதிரே ஒரு குழந்தை இருக்கிறது. அக்குழந்தையை மகிழ்வூட்டவேண்டும். என்ன செய்யலாம்? நம்மிடம் ஒர் அட்டை, காகிதம், கத்திரிக்கோல், பசை, சில வண்ணப்பென்சில்கள் இருக்கின்றன. காகிதத்தைப் போதிய அளவில் கத்திரித்தெடுத்து கோழி ஒன்றைச் செய்து குழந்தையிடம், “இது கோழி” என்கிறோம். அடுத்து வண்ணபென்சில் கொண்டு வரைந்து கத்தரித்தெடுத்த மற்றொரு காகிதத்தை  ”இதுதான் தானியக் களஞ்சியம்”, என்கிறோம். பின்னர் மஞ்சள் பென்சில் கொண்டு வரைந்த வாகனமொன்றை வெட்டியெடுக்து குழந்தையிடம், “இதோபார் வாகனம் வேகமாக வந்துகொண்டிருக்கிறது, இனி கோழி வாகனச் சக்கரத்திற் சிக்காமல் தப்பிக்கவைப்பதோடு படத்தையும் உன் கற்பனைக்கேற்ப முடிக்கலாம் எனக்கூறி நாம் ஒதுங்கிக்கொள்கிறோம். அளித்திருந்த பொருட்கள் ஆர்வத்தை தூண்டுகிறதென வைத்துக்கொண்டால், குழந்தை தனது கற்பனைக்குகந்த மரங்களைச் சேர்க்கலாம், ஒரு வீட்டைத் தீட்டலாம், அவ்வீட்டிற்கு வேலி போடலாம், சுவர் எழுப்பலாம், கிராமத்துக் குழந்தையெனில் கூரைவேயலாம். நகரத்துக்குழந்தையெனில் எங்காவதொரு தீம் பார்க்கிற் கண்ட காட்சி நினவுக்கு வர மாடுகளையோ வேறுகாட்சிகளையோ பென்சிலால் வரைய முயற்சிக்கலாம். கிராமத்துக்குழந்தையின் கற்பனையில் உதித்தவையும் சரி நகரத்துக் குழந்தை தமது மனதிற் தீட்டியதை வெளிப்படுத்தியவையும் சரி, நாம் சொல்லி உருவானவை அல்ல. நம்மால் ஆரம்பிக்கப்பட்ட படைப்புப்பணியில் குழந்தையும் தன் பங்கிற்கு இணைந்துகொண்டிருக்கிறதென்பது தெரியவரும் உண்மை.  நாம் கோழி, தானியக்களஞ்சியம், டிராக்டரென்று வரைந்துக்காட்ட நகரம் மற்றும் கிராமக் குழந்தைகள் அதனதன் கற்பனைக்கொப்ப நாம் படைத்திருந்த மூன்றோடு பொருந்தக்கூடிய பிறவற்றை வரைந்து நிரப்புகின்றன.

மக்டொனால்டு கூற்றின்படி இம்மூன்று சித்திரங்களோடு, குழந்தையின் கற்பனையில் உதித்த வீடு, வேலி, கூரைபோன்ற பிறவற்றையும் நாமே வரைந்து குழந்தையிடம் கொடுத்து, “இது கோழி, இது வேலி, இது மரம், இது டிராக்டர்” என சொல்லியிருப்போமென்றால் குழந்தை அடப் போய்யா நீயும் கெட்டது உன் சித்திரமும் கெட்டது எனக்கூறுகின்ற வகையில், கொட்டாவி விடலாம். அதைப்போலவே கோழிச்சித்திரத்தை மட்டும் போட்டுக் காட்டிவிட்டு மற்றதை நீப்போடு என சொல்லியிருந்தாலும், குழந்தைக்கு அழுகை முட்டிக்கொண்டு வரலாம். குழந்தையின் கற்பனையை வளர்க்கவேண்டுமெனில்  ஆர்வத்தோடு நாம் வரைந்த ஓவியத்தில் குழந்தையும் தம் கைப்பட சில சித்திரங்களை கிறுக்க வேண்டுமெனில் எல்லாவற்றையும் நாமே தீட்டிவிட்டுக் குழந்தையை அழைக்க கூடாது அல்லது ஒன்றை மட்டும் தீட்டி இனி உன்பாடென ஒதுங்கிக்கொள்ளவும் கூடாது. சித்திரம், குழந்தை உதாரணத்தைத் தருகிற மக்டொனால்டு வேறொன்றிலும் எச்சரிக்கை வேண்டுமென்கிறார். கோழி, தானியக் களஞ்சியம், டிராக்டர் ஆகியவற்றை வரைந்து பிறவற்றை நீ தீட்டு எனக்குழந்தையிடம் கொடுக்கிறபோது அவ் ஓவியங்களைப்பற்றிய கூடுதற் தகவல்களும் குழந்தையின் கற்பனையைப் பாதிக்கலாம் என்கிறார். உதாரணமாக படத்திலுள்ளது கோழி அல்ல, பதினோருமாத சேவல், பெயர் மெல்வின், சிறகுகள் ஒளிர சூரிய ஒளியில் நிற்பது அதற்குப் பெருமை, பிற சேவல்கள்போலன்றி நீண்ட கால்களென மூச்சு திணறும் அளவிற்குத் தகவல்களைத் திணிப்பதும் குழந்தைக்கு அயற்சியைத் தரலாம், இதில் நாம் செய்ய ஒன்றுமில்லை எனக்குழந்தை ஓடக்கூடும். இங்கே சித்திரமும் குழந்தையும்:படைப்பும் வாசகனும்.

சொல்லப்படும் பொருளின் தனித்தன்மை

நடை, செறிவு, வாசிப்புத்தன்மை ஆகியகூறுகள் வாசகன் புரிதலைத் தீர்மானிக்கின்றன. இரண்டுகுழந்தைகளிடம் ஓவியங்களைக்கொடுப்பின் அவரவர் கற்பனைக்கொப்ப அவற்றை முடிப்பதுபோல ஒரு புனைவை வாசிக்கிற இரு வாசகர்களுக்கும் வெவ்வேறு கற்பனைகளிருக்கக்கூடும். அவர்கள் கற்பனைகளைக் குறுக்குவதற்கான முயற்சியில் ஓர் எழுத்தாளன் இறங்கக்கூடாதென்கிறார் மக்டொனால்டு. எக்மோர் ஸ்டேஷனை பலரும் சொல்லியிருக்கலாம். நம்முடைய  பங்கிற்கு: டிக்கெடுக்கும் வரிசை நீண்டிருந்தது, பயணிகள் மூட்டை முடிச்சுகளுடன் நின்று கொண்டிருந்தார்கள். வெளியூர் இரயில்கள் புறப்பட தயாராக இருந்தன என்றெழுவதைத் தவிர்த்து பிறர் சொல்லாத எக்மோர் கண்ணிற்படுகிறதா எனப்பார்க்கவேண்டியவர்களாக இருக்கிறோம். புனைவின் நம்பகத்தனமையைக் கூட்ட அது உதவும். உதராணமாக கடந்த பத்தாண்டுகளாக திருத்தப்படாத பழுதடைந்த கடிகாரம். 2012லும் எக்மோர் சந்திப்பில் காணநேர்ந்த நீராவி எஞ்சின், இடுப்புக்குழந்தையுடன் போர்ட்டர்வேலைபார்க்கும் பெண்மணி..

” ‘டிக்கெட் வரிசை நீண்டிருந்தது, பயணிகள் மூட்டை முடிச்சுடன் நின்றுகொண்டிருந்தார்கள்”- என குறைவானத் தகவல்களைக்கொண்டு எக்மோர் இரயில் நிலையத்தின் பிம்பத்தை எழுதி முடித்துக்கொள்ளலாமென்ற முயற்சியும் மெக்டொனால்டிற்கு கூடாதவேலை. பல்வேறு சேர்மங்களின் பங்களிப்பில் உருவான காட்சியொன்றை எழுத்தாளன் குறைத்து மதிப்பிட்டு வாசகனுக்கு அளிக்கிறபோது, அக்காட்சி நம்பகத்தன்மையை இழப்பதோடு, வாசகனுடைய ஆர்வத்தை குறைக்கக்கூடுமென்கிறார்.

நாம் சொல்ல விழையும் பொருள் தனித்துவமானது என்ற எண்ணத்தை வாசகன் மனதில் உருவாக்கவேண்டும். அதற்கு உதவுபவை என்ற பட்டியலில் அதிக எண்ணிக்கையில் ‘சொற்களை’ தெரிந்து வைத்திருப்பது முதலாவது. சொற்களை அறிய தொடர்ந்தும்; நேரமிருப்பின் கண்டதையும், நேரம் போதாதெனில் தேர்வு செய்தும் வாசிப்பதும் நல்லதென்கிறார். அடுத்து அவதானிப்பு. எதையும் கூர்ந்து நோக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளவேண்டும். எங்கே இருந்தாலும், எதைசெய்தாலும் ஐம்புலன்களையும் திறந்துவைத்துக்கொண்டு செயல்படுங்கள் உங்கள் எழுத்துக்கு மிகவும் உதவியாக இருக்கக்கூடுமென்பது மக்டொனால்டு தரும் உத்தரவாதம். நம்மைச்சுற்றியிருக்கும் உலகின் இழைநயம் அதாவது கட்டமைப்பு, வடிவம், பாணி, நிறம், அமைவு, இயக்கமென எல்லாவற்றையும் அவதானிக்கவேண்டும். நிறம், ருசி, ஓசையென நம் கண்ணிற்படுகின்ற பொருட்களின் பண்புகளை மட்டுமின்றி அப்பொருட்களோடு மனிதர்கள்கொண்டிருக்கிற பல்வேறுவிதமான உறவுகளையும் புரிந்துகொள்ள முயற்சிப்பதும் கட்டாயம்.

 மனிதர்கள் இருவகை

கண்களிருந்தும் அவறை உபயோகிப்பதில்லையென வாழும் மனிதர்களும் இவ்வுலகிலுண்டு என்கிறார் மக்டொனால்டு. பிரெஞ்சு உளவியல்வாதியான ‘யுங்’ வகைப்படுத்தும் மனிதர்களில் ‘ நானற்ற’ (Not I) மனிதர்களாக எழுத்தாளர்கள் இருக்கவேண்டுமாம். ‘நான்’ (I) வகை மனிதர்கள் எப்போதும் தம்மைப்பற்றியே சிந்திப்பவர்கள், தன்னைச் சுற்றி உலகம் இயங்கவேண்டுமென்ற எண்ணுபவர்கள். எனவே பிறரை அவதானிக்க, தானற்ற மற்றமைகளில் இவர்களுக்கு அக்கறை உருவாவதில்லை என்பது அவரது கணிப்பு.

வாசிப்பாலும் பிற முயற்சிகளாலும் பெற்ற சொற்திறன், புற உலக அவதானிப்பு, சொல்லும் வகை என்று எழுத்தாளன் வளர்கிறபோது, தனக்கும் வாசகனுக்குமான உறவை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிறார், மக்டொனால்டு.

————————————————————___________________________________________________________________________________________

மொழிவது சுகம் – செப்டம்பர் – 12

1. கூடங்குளம் விவகாரம்: ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்கள்

1985லிருந்து பிரான்சு நாட்டில் Strasbourg நகரில் இருக்கிறேன். ஒரே ஒரு நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதென்ற அனுபவமில்லை. (அதுபோலவே கடந்த இருப்பந்தைத்து ஆண்டுகளில் ஒரேயொரு பிரெஞ்சு பிராங்கைக்கூட அல்லது யூரோ அமலில் வந்தபிறகு ஒரே யொரு யூரோவைக்கூட கையூட்டாகத் தர நேர்ந்ததில்லை- 99 விழுக்காடு சாதாரண மக்களின் அனுபவமிது- அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ அல்லது வேறு மேற்கு நாடுகளில் வசிக்கும் நண்பர்களைக்கேட்டுத் தகவலை உறுதிபடுத்திக்கொள்ளலாம். ) பிரான்சு நாட்டின் வேறு பகுதிகளில் இயற்கை பேரழிவுகளால் எப்போதேனும் மின்சார விநியோகத்திற்கு தட்டுப்பாடு வருவதுண்டு, அதைக்கூட அதிகபட்சமாக இரண்டொரு நாட்களில் தீர்க்கப்பட்டதாகத்தான் செய்திகளில் வாசித்திருக்கிறேன். மின்சார பற்றாக்குறையைப் பிரான்சு நாட்டில் சந்திக்காமலிருப்பதற்கு, இங்கே பெரும்பானமையான மின் சக்தி, அணு உலைகளிலிருந்து பெறப்படுகிறதென்பது முதன்மைக் காரணம். அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினகள் கடுமையான விவாதங்களுக்கு உட்பட்டன. எனினும் திறப்பு விழாவில் காட்டும் அக்கறையை அதன் பராமரிப்பிலும், பாதுகாப்பு விஷயத்திலுல் காட்டும் மேற்கத்தியர்களின் மனப்பாங்கு பிரெஞ்சு மக்களை அமைதிபடுத்தியிருக்கிறது. இதனினும் மலிவாக மின்சக்திக்கு மாற்று உபாயங்கள் கிடைக்கும்வரை அணு உலைகள்  தவிர்க்க முடியாதவை.

இந்தியாவின் நிலமை வேறு, கோலாகலமாக கிரகப்பிரவேசம் செய்யும் சொந்தவீட்டிற்கு சுண்ணாம்பு அடிக்கவே பலமுறை யோசிக்கும் நமக்கு பொதுசொத்து பராமரிப்பின் இலட்சணமென்னவென்பதை ஊரை ஒரு முறைவலம்வந்தால் புரியும். இந்த லட்சணத்தில் கூடங்குளம் அணு உலைபற்றி பேச ஒன்று மில்லை. அது 30 பேரை பலிவாங்கும் பட்டாசு தொழிற்சாலை விவகாரமல்ல, ஒரு ஆர்டிஓ விசாரனை நடத்தி நான்கைந்து ஏமாந்த சோணகிரிகளை கைது செய்து பிரச்சினைக்கு மங்களம் பாட. நமது அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகார எந்திரங்களின் செயல் திறன் உலகறிந்த செய்தி, உரசிப்பார்க்க அவசியமில்லை. ஒரு பொருளை அடைவதிற் பெருமை இல்லை.  பொருளை பராமரிப்பதில், அதன் பயன்பாட்டினை முழுமையாகப் பெறுவதில் நமக்கும் மேற்கத்தியர்களுக்கும் வேறுபாடுகளிருக்கின்றன. நம்மிடம் உள்ள குறை நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தில் ஆரம்பிக்கிறது. போப்பால் யூனியன் கார்பைடு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அழுகுரல் இன்றும் கேட்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கில் ஆரம்பித்து, தமிழ் நாட்டு லெட்டர்பேடுகள்வரை  கூடங்குளம் பிரச்சினைக்குப் பின்னால் வெளிநாட்டினர் என்கின்றனர். காஷ்மீர், அஸ்ஸாம் கலவரம், மாவோக்கள், வடகிழக்கு மக்களின் பீதி, தெலுங்கானா, காவிரி நீர் சிக்கல், நிலக்கரி சுரங்க ஊழல், 2G விவகாரம், கல்குவாரி என ஆரம்பித்து நாளை சிவகாசி விபத்து, சஹானா விவகாரம், டெங்கு சுரம், சாக்கடையில் கொசு என எல்லாவற்றிர்க்கும் வெளிநாட்டினர் சதி எனக்கூறலாம்.

இப்பிரச்சினையில் மத்திய ஆளுங்கட்சி பிடிவாதமாக இருக்கிறது. அக்கட்சியின் தலைவர் சோனியா பிறப்பால் இத்தாலியர், அது தவிர கூடங்குள அணு உலையை கட்டமைத்தவர்கள் செர்ணோபில் புகழ்  ரஷ்யர்கள். இப்பிரச்சினையில் நாமறிந்த வெளிநாட்டினர் இவர்கள்தான். இவர்களைத் தவிர வேற்றுநாட்டினரின் தொடர்பிருப்பின் ஆட்சியும் உரிய அதிகாரமும் கொண்ட அரசாங்கங்கள் அதைக்கண்டுபிடித்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவது கடமை.

கூடங்குள அணு உலை இயங்க போராடும் மக்களின்அச்சங்களைத் தவிர்ப்பது மத்திய மாநில அரசுகளின் வேலை. இரண்டு அரசுமே அதனைச் செய்வதில்லை. இந்தியாவில் பொறுத்தவரை எதுவும் நடக்கலாம் என்பதுதான் விதி.

இரத்தக் கண்ணீர் என்றொரு திரைப்படம்: ஆரம்பக்காட்சியில் எம்.ஆர். இராதா கூட்டமொன்றில் பேசும் வசனம்  ஞாபகத்திற்கு வந்து தொலைகிறது. சத்யாகிரகிகளை ஒருகட்டத்தில் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் இறங்கிவந்து பேசியதாக இந்தியச் சுதந்திரத்தின் வரலாறு தெரிவிக்கிறது . ஆனால் அவர்கள் ஆங்கிலேயர்கள்.

2. ரெ. கார்த்திகேசு வின் இரண்டு நூல்கள்:

நீர்மேல் எழுத்து என்ற சிறுகதை தொகுப்பும், விமர்சன முகம் -2 என்கிற கட்டுரை தொகுதியும் மின்னூல்கள் வடிவத்தில் Kobo books தளத்தில் 1.99 டாலருக்கு கிடைக்கின்றன. ஆசிரியர் பெயரை எழுதித் தேடவேண்டும். ரெ.கார்த்திகேசுவின் சிறுகதைகளையும் கட்டுரைகளையும் நீங்கள் வாசித்தவரில்லையெனில் அரிதான வாய்ப்பு. காற்றும் தண்ணீரும் மலிவாகக்கிடைப்பதால் அவற்றின் தேவையை குறைத்துமதிப்பிடமுடியாது அதுபோலவே ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்களூம்.

3. நண்பர்களுக்காக ஒரு குறும்படம்:மசாலா மாமா

http://replay.fr/masala-mama-488243
__________________________

மொழிவது சுகம் செப்டம்பர் -6

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்

பிரான்சு நாட்டில் கோடைவிடுமுறை என்பது ஜூலை ஆகஸ்டுமாதங்களில் வருகிறது. கல்வி ஸ்தாபனங்கள் மட்டுமல்லாது, தனியார் துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவாக இக்காலங்களில் மூடப்படுவதுண்டு. அவ்வாறில்லாத நிறுவனங்களின் ஊழியர்கள்  விடுப்பெடுப்பதும் இக்காலங்களிலேயே. அரசு அலுவலங்களிற்கூட அதிக எண்ணிக்கையில் விடுப்பெடுப்பதற்கு இக்காலங்களையே தேர்வு செய்கின்றனர். நாட்டின் அதிபர், பிரதமர், அமைச்சர்கள் முதற்கொண்டு கடையை கட்டிவிடும் காரியமும் அரங்கேறும்.

சோர்வைத் தொலைத்து புத்துணர்வுடன் இயங்கும் பிரான்சைக் காண்பதற்கு செப்டம்பர் முதல் வாரம்வரை காத்திருக்கவேண்டும்.  கல்விஸ்தாபனங்கள் கோடைவிடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் முதல்வாரத்தில் கதவுகளைத் திறக்கின்றன.  இம்மாதத்தில் தொலைகாட்சிகளிலும் புதிய நிகழ்ச்சிகள் அறிமுகமாகும், தொலைகாட்சி நட்சத்திரங்கள் இடம் மாறியிருப்பார்கள். தனது  புதிய தோழன் அல்லது தோழியை பிள்ளைகள் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தலாம். மிஷல், வீட்டிலிருக்கு பழைய பொருட்களை மாற்றபோகிறேன் என்ன நினைக்கிறாய்? என மனைவி ஆகஸ்டு மாத இறுதியில் தனது கணவரிடம் கேட்கிறாரெனில், அவர் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பதில் சொல்வது நல்லது, அல்லது மன்மோகன்சிங் போல பதிலளிப்பதைத் தள்ளிப்போடலாம். படைப்புலகமும் செப்டம்பர் மாதத்தில் புதிய நூல்களுடன கதவைத் திறக்கின்றன. இங்கு பிப்ரவரி மாதத்தில் புத்தகக் கண்காட்சியென்கிறபோதும் பொதுவாக அதிக எண்ணிக்கையில் புதிய படைப்புகள் வாசகர்களுக்கு முகமன் கூறுவது செம்படம்பர் மாதத்தின் தொடக்கத்தில், சில நேரங்கள் அக்டோபர்மாத இறுதிவரை நீடிக்கக்கூடும். படைப்புகள் அறிமுகமாகத் தொடங்குகிறபோதே இலக்கிய இதழ்கள், தினசரிகள்,  சஞ்சிகைகளில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் வந்துவிடுகின்றன.

இவ்வருடம் உள்ளூர் படைப்புகள், மொழிபெயர்ப்புகளென மொத்தம் 646 புதினங்கள் வாசகர் வாடிக்கையாளர்களை நம்பியிருக்கின்றன.   அவற்றுள் 90 விழுக்காடு நூல்களை மூன்றில் ஒருபங்கு விலைக்கு இலக்கமுறையில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மேலே குறிப்பிட்ட 646 நாவல்களில் இந்திய நாவலென்றும் அறிமுகமாகியிருக்கிறது. கவிதா தஸ்வானி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய Bombay Girl என்ற நூலின் பிரெஞ்சு மொழியாக்கம். பிரெஞ்சு இதழொன்றிற்கு அளித்திருந்த பேட்டியொன்றில்  பெண்ணுரிமைக்குக் குரல்கொடுப்பவரென ஒவ்வொரு பத்தியிலும் சொல்லிக்கொள்கிறார். கதைச்சுருக்கத்தைப் படித்தேன். கதாநாயகிக்கு வீடு ஜுஹ¤வில் இருக்கவேண்டுமென நினைக்கிறேன். விஜயசாந்தி நடித்த படமொன்றின் திரைக்கதை சுருக்கத்தை வாசித்தது போலிருந்தது.

—————————–

3. ‘விரக்தி’யால் எழுதுகிறேன்.

இயல்பாகவே மனிதகுலம் உட்பட விலங்கினங்கள்,  ஒன்று பிறிதொன்றிடம் தன்னைத் தேடுகிறது. தோள் உரசவும், கலந்துரையாடவும், சேர்ந்து விருந்துண்ணவும், விழி சுரக்கும் நீரை விரலால் தொட்டுத் துடைக்கவும் ஒருவன் அல்லது ஒருத்தி தேவை. அந்த இன்னொரு உயிரியை பொதுவான புள்ளிகளில் வைத்து அடையாளம் காண்கிறோம். தனிமனிதன் குடும்பம், சமூகமென்று தன்னைச்சார்ந்தோரை மனித கும்பலில் தேடி உறவுச்சங்கிலியில் பிணைத்துக்கொள்ளும் நுட்பம், இத் தேடலைச் சார்ந்தது. கண்ணாடியில் எதிர்ப்படுபவையெல்லாம் நாமாக இருப்பின் வலுவான கரைகள் கிடைத்த தெம்பில் ஆறுபோல பாய்ந்தும், நிதானித்தும் ஓடி வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம், அமைவது வரத்தைப் பொருத்தது.

லொலிட்டா(Lolita) புகழ் விளாடிமிர் நபோக்காவை (Vladimir Nabokov) நண்பர்கள்  அறிந்திருக்கக்கூடும். ரஷ்யாவில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து, இலண்டனில் கல்விகற்று, பாரீசை நேசித்து அமெரிக்க பிரஜையாகி இறுதியில் சுவிஸ்நாட்டில்  பயணத்தை முடித்துக்கொண்ட அவருடைய விளாடிமிரின் வாழ்க்கை ஓர் உயிரியின் மெய்பொருள் தேடல். லொலிட்டாவைக் காட்டிலும் அவருடைய விரக்தி (Despair) நாவல் மீது எனக்கு முழுமையான காதலுண்டு. லொலிட்டா: வாழ்க்கையின் ஒழுங்கு மற்றும் நியதிகளில் நம்பிக்கையற்று உடலிச்சையில் தத்தளிக்கும் அறிவுஜீவிக்கும், தனக்கு என்ன நேர்ந்ததென்பதைக்கூட விளங்கிக்கொள்ளப்போதாத ஓர் அப்பாவி சிறுமிக்குமிடையே நிகழும் தகா உறவினைக்கொண்டு இருவேறு மனித உயிர்களின் இயக்கத்தைப்பேசுகிறதெனில், ‘விரக்தி’ எதிரும்புதிருமான இருமனிதர்களின் திசைக்குழப்பத்தைச் சொல்கிறது. நாவலை ஜெர்மன் திரைப்பட இயக்குனர்களில் அதிகம் பேசப்படுபவரான பஸ்பிண்டெர் (Fassbinder) திரைப்படமாகக் கொண்டுவந்திருக்கிறார். மிகவும் காலம் கடந்து இத்திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது.  1978ம் ஆண்டு கான் விழாவில் பங்கேற்றத் திரைப்படம். ஆனால் அதற்கும் முன்பாக (1977) இறந்திருந்த விளாடிமிருக்கு படத்தைக் காணும் பேறு வாய்க்கவில்லை. நாவலாசிரியரையும், அதனைத்  திரைக்குக்கொணர்ந்த இயக்குனரையும் அறிந்தவர்கள் அந்நாவலில் வரும் இருகதாபாத்திரங்களைப்போலவே பிறப்பு, வாழ்க்கை, தாங்கள் அடங்கிய சமூகம் என எல்லாவற்றிலும் இருவரும் எதிரெதிர் துருவங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்கிறார்கள். விரக்தி நாவலை நீங்கள் வாசித்திருப்பவரென்றால். படத்தைத் தவிர்ப்பது நல்லது.

விளாடிமிர் இந்நாவலை முதன்முதலில் ரஷ்யமொழியில் எழுதியபோது வைத்தபெயர் வேறு என்கிறார்கள். அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது Despair என்று மொழி பெயர்க்கிறார். பிரெஞ்சில் Despair என்கிற சொல் இருக்கிறது. இருந்தும், ‘La Meprise’ என விளாடிமிர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புக்கென விதிகளை எழுதிக் களைப்பவர்களுக்காக இதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அதுவன்றி அவரே மொழிபெயர்த்ததால் சில உரிமைகளை விளாடிமிர் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி கூடுதலாக சில பகுதிகளைச் சேர்க்கவும், சிலபகுதிகளைத் தவிர்க்கவும் செய்திருக்கிறார்.  “எனது படைப்பாற்றல் மீது முழுமையான நம்பிக்கையும், உயர்வும் நேர்த்தியும்கொண்ட எனதெண்ணங்களை சாதுர்யமாக வெளிப்படுத்தும் திறனுமில்லையேல் இக்கதையை உங்களுக்குத் தெரிவித்திருக்கமாட்டேன்”..என Super-Ego’ தொனியில் நாவலில் பிரதான ஆசாமி கதையைத் தொடங்குவான். கதைநாயகன் ஹெர்மான் ஒரு விசித்திரமான ஆசாமி புத்திசாலியா அரைவேக்காடா என தெளிவுபடுத்திக்கொள்ள இயலாமல் கதை முழுக்க சங்கடப்படுகிறோம். இருந்தாலும் அவன் கதைசொல்லி. வாசகனை ஈர்ப்பதில்  தேர்ந்திருக்கிறான். ஆர்வத்துடன் உட்கார்ந்து கேட்கிறோம். இடைக்கிடை நம்மையும் முட்டாளாக்குகிறான். கதை நாயகன் ஹெர்மான், மனைவியை நம்புகிறான் அல்லது கொண்டாடுகிறான். (அவள் அவர்கள் குடும்பத்து நெருங்கிய உறவினனுடன் கள்ள உறவுகொண்டிருக்கிறாளென தெரிந்தும் ) பின்னர் அதுவே அவனை அவ்வாழ்க்கையிலிருந்து விடுவிக்கிறது, வேறொருவனாக அவனை உயிர்ப்பித்து இழப்பை நிவர்த்திசெய்யத்தூண்டுகிறது. இன்னொருவனைத்தேடி அவனிடம் தனது வாழ்க்கையைப் பண்டமாற்றுசெய்துகொள்கிறான். அவன் சந்திக்கும் ஓடுகாலனிடம் உருவ ஒற்றுமையில் ‘எனக்கும் உனக்கும் வேற்றுமை இல்லை’ எனக்கூறி நம்பவைக்கிறான். உண்மையில் அவனுக்கும் இவனுக்கும் ஒற்றுமையென்று எதுவுமில்லை. ஒரு புறம் அப்பழுக்கற்ற யோக்கியன்- மறுபுறம் ஊத்தைகுணங்களில் ஊறிய அய்யோக்கியன். கதைகேட்கும் கவனத்திலிருக்கும் நாம் விளாடிமிர் நடத்தும் கண்கட்டுவித்தையில் கட்டுண்டு என்ன நடக்கிறதென விளங்கிக்கொள்ள இயலாமற் தவிக்கிறோம். கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அதை உடைத்தால் விளாடிமிருக்குத் துரோகம்செய்தவர்களாவோம்.

பாஸ்பிண்டர்(திரைப்பட இயக்குனர்) 1936ல் நடக்கின்ற ரஷ்யப் பின்புலத்தில் சொல்லப்பட்ட கதையை ஜெர்மனி அரசியலோடு கலந்து சொல்கிறார். அண்மையில்தான் பிரெஞ்சு Arte தொலைகாட்சியியின் தயவில் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை பொறுத்தவதை விளாடிமிருக்கு பாஸ்மிண்டர் துரோகமிழைத்திருப்பதாகவே நம்புகிறேன். விளாடிமிர் இத பார்க்காமல் இறந்ததே நல்லதென நினைக்கத் தோன்றுகிறது.

——————————-

3. எனக்கிணையாக தர்பாரில் எவருமுண்டோ?

பிரிட்டனில் அண்மையில் 49 ஆங்கில எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து Daily Telegraph ஆங்கில தினசரியில் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அவ்வறிக்கைக்கு வட அமெரிக்கா எழுத்தாளார்கள் ஆதரவும் கிடைத்திருக்கிறது.  இந்த நாற்பத்தொன்பதுபேரும் கண்டித்திருப்பது R.J. Ellory என்ற எழுத்தாளரை. 49 எழுத்தாளர்களை தமக்கெதிராக ஒன்று திரட்டும் அளவிற்கு எலோரி செய்தக்குற்றம் தமது புனைவுகளுக்கு விமரிசனங்கள் என்ற பெயரில் தமக்குத்தாமே  புகழுரைகள் எழுதிக்கொள்வதும் பிறரின் படைப்புக்களை கடுமையாகத் தாக்கி எழுதுவதும் குற்றம் என்கிறார்கள் அவர் எதிரிகள் அல்லது அவரால் விமரிசனம் செய்யப்பட்டவர்கள்.

Jeremey Duns என்கிற மற்றொரு பிரிட்டிஷ் எழுத்தாளர் சமூக வலைத்தல விவாதமொன்றில் பல புனைபெயர்களில் ஒளிந்து  தமது படைப்புகளையும், தம்மையும் புகழ்ந்து எழுதிக்கொள்ளும் கூட்டத்தில் ஒருவர் Ellory என வெளிப்படையாக தெரிவிக்க பிரச்சினை வெடித்திருக்கிறது.

Elloryயின் குற்ற புனைவுநாவல்கள் அண்மைக்காலத்தில் வெற்றிகரமாக வலம் வருபவை. அவருடைய Ghost heart, A Quiet Beilef  in Angeles ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றவை என்கிறார்கள். ஜெல்லி பீன், என். ஜோன்ஸ் மற்றும் வேறு  பெயர்களில் தொடர்ந்து தமது படைப்புக்களையும் தம்மையும் புகழ்ந்து எழுதிவருவாராம். மக்கள் மத்தியில் தம்மைப் பற்றிய உயர்வான கருதுகோளை முன்னெடுக்க அவர் மேற்கொள்ளும் தந்திரம் என்கிறார்கள்.  A Quiet Beilef  in Angeles புனைவுக்கு அவரால் எழுதப்பட்ட விமர்சனமொன்றில், நாவலுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியதோடு, “என்னை மிகவும் நெகிழவைத்த, இதுபோன்றதொரு நூலை  இதற்கு முன்பு வாசித்ததில்லை” எனப் புகழாரம் சூட்டிக்கொள்கிறார். வேறு இரண்டு புகழ்பெற்ற இரண்டு பிரிட்டிஷ் எழுத்தாளர்களைத் தமது பெயருடன் இணைத்துக்கொண்டு இன்றுள்ள பிரிட்டிஷ் எழுத்தளார்களில் (குற்றபுனைவுகள் வரிசை) இவர்கள் மூவரும் தவிர்க்கமுடியாதவர்கள் எனக்கூறிக்கொண்டிருக்கிறார்.

எலோரி யை அறிந்தவர்கள், வியப்பதில்லை. வெகுகாலமாகவே அவர் இதைச் செய்துவருகிறார் என்கிறார்கள். சம்பவத்திற்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எனது நாவல்கள் குறித்து புனைபெயர்களில் சிலாகித்து எழுதியது உண்மை. எனது படைப்புகள் குறித்து விமரிசினங்கள் வைக்கப்படுவதில்லையென்பதால், இப்படி எழுதவேண்டியதாயிற்று.” என்கிறார்.

திருவிளையாடல் திரைப்படத்தில் “ஒரு நாள்போதுமா?” பாடலின் இறுதிவரி “எனக்கிணையாக தர்பாரில் எவருமுண்டோ? என முடியும். அப்போது பாலையாவை கவனித்திருக்கிறீர்களா? மீசைமுறுக்கும் ‘ஞானச்செறுக்கு’ பாலையாவின் அகங்காரத்தைக் கட்டவிழ்க்கும் கணங்கள், கலையின் மேன்மையைக் கேலிக்கூத்தாக்கும் தருணங்கள். எலோரியின் சாதுர்யத்தை ஹேம நாத பாகவதர் பெற்றிருப்பாயின் பானபத்திரரை மட்டுமல்ல சுந்தரேஸ்வரரையே வென்றிருப்பார்.

——

கவனத்தைப்பெற்ற அண்மைக்கால பதிவுகள் செப்.1 2012

 1. அகம் கொள் பொருள்

– முபீன் சாதிகா

 வண்ணத்தி நீள்பறந்து துடித்து

அமரும் ஆங்கே. சேதியும்

மறைத்து. எவ்வகை திறக்கும்

மறைபொருள் அறிய. திறம்

கொள் புலனும் கையறு காட்டி.

தவம் தரு ஞானம் ஒரு வழிகாட்டி

பாறை இடுக்கில்

புலர்ந்த மொட்டை

பறித்து தேனும்

சொறிந்த அகமாய்

செறிந்த குருவிடத்து

சேவித்த தருணம்

வண்ணத்தி நிறம் புரிந்தது: மண்ணென்று

வடிவம் தரித்தது: ரௌத்ரமாய்

நிலைத்தது: நீரின் இடத்து

இணைக்கும் பொருளின் சேர்க்கை:

மண்பெறும் ரௌத்ரம் நீராய் மாறுமோ…

மாறியது நிலமும் ஆடி

கொண்டது பேரலையாய்…

இவரது பிறகவிதைகளை வாசிக்க:

 http://mubeensadhika.blogspot.fr/

 

———————–

2. என்னை வழி நடத்துபவர்கள்

புதிய தலைமுறை இதழுக்கென எழுதிய பிரபஞ்சன் கட்டுரை மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். என் குருநாதர் என விளித்து தனது வாழ்க்கையை அவர்களிடம் கற்றதாக மூவரை எழுத்தாளர் பிரபஞ்சன் கைகாட்டுகிறார்: பெருமாள், மிட்டாய் தாத்தா, எம்.வி.வி.

பிரபஞ்சனை அறிந்த நமக்கு அம்மூவரும் அந்நியர்களல்ல

http://prapanchan.in/

————————————-

 3. சூ·பியும் காபியும்

மணக்க மணக்க ரமீஸ் பிலாலி என்பவர் எழுதியுள்ள காப்பி பற்றிய கட்டுரையை, காப்பி பிரியர்கள் அவசியம் வாசிக்கவேண்டும். காப்பியின் நதிமூலம் இவ்வளவு நீளமாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை. என் மனைவி அடிக்கடி காப்பிகுடித்து உடம்பை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்கிறாள். இனி காரணம் கேட்டால் தியானத்திற்காக காப்பிகுடிக்கிறேன் எனக் கூறி தப்பித்துக் கொள்ளலாம். கட்டுரையாளருக்கு மனமார்ந்த நன்றிகள்.

http://pirapanjakkudil.blogspot.fr/

————————————————–

 4.. சுயாதீனச் சினிமா

சுயாதீன சினிமாக் குறித்தும் தமிழ்ச் சூழலில் அதன் செயல்பாடு குறித்தும் பேசுகிற லீனா மணிமேகலை தமது ‘செங்கடல்’ உருவாக்கத்தின்போதும், பின்னரும் எதிர்கொண்ட நெருக்கடிகளையும் விரிவாக மனக்குமுறலுடன் பகிர்ந்துகொள்கிறார்.

வாசிக்க வேண்டிய கட்டுரை:

http://ulaginazhagiyamuthalpenn.blogspot.fr/

—————————————

 

.

 

 

 

***************************

எழுத்தாளன் முகவரி-3

எழுத்தும் செயல்திறனும்

ஓர் எழுத்தாளர் ஓயாமல் இயங்குவதில் சங்கடங்கள் உள்ளன. நல்ல எழுத்தாளர் பலரும் செயல் திறனுடன் இருப்பார்களென்பது கட்டாயமில்லை. ஐசக் அசிமோவ் ரஷ்யராகப்பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர். எழுதிக்குவித்த எழுத்தாளர்களென்று ஒரு வரிசையை உருவாக்குவோமெனில், ஐசக் அசிமோவிற்கு கட்டாயம் அதிலிடமுண்டு.

நன்றாக எழுதுவதென்பதுவேறு, வேகமாக எழுதிமுடிப்பதென்பது வேறு. இரண்டும் இணைவதென்பது அரிதாகவே நிகழ்கிறது. இவ்விரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். நன்றாக எழுதவேண்டுமென்று நினைக்கிறபொழுது, அதிக நேரத்தைச் செலவிட்டாக வேண்டிய கட்டாயம். மேற்கத்திய எழுத்தாளர்களில் பலர் ஒரு நாவலை முடிக்க குறைந்தது ஒருவருடமென்ற கணக்கில் இயங்குகிறார்கள். பிறதுறைகளைப்போலவே படைப்பிலக்கியத்திற்கும் பொதுவாக காலம், நேர்விகித்தில் உதவுகிறது. செலவிடும் நேரம் கூடுதலாக இருப்பின் படைப்பின் தரமும் நன்றாகவே அமையும். எங்கேயேனும் பிழைகள் நிகழலாம்.

படைப்பாற்றல் அல்லது ஒரு படைப்பாளியின் செயல் திறன் என்பதென்ன? பத்துநிமிடத்தில் ஒரு சிறுகதை, மாதத்திற்கு ஒர் நாவல், வாரத்திற்கு ஏழுகட்டுரைகள், தூங்கி எழுகிறபோது நெஞ்சில் ஊறுபவைகளை கொட்டி ஒரு கவிதைத் தொகுப்பென்று எழுதிப்பழகுவதா? போதிய நேரத்தை ஒதுக்கி எழுதுகிறபோது எழுத்தில் ஒரு பளபளப்பு கூடிவருமே, அதனைத் தவிர்த்த எந்திரத்தனமான பற்றற்ற எழுத்துவினையை  தேர்வுசெய்ய நல்ல எழுத்தாளன் விரும்புவதில்லை. எழுத்தில் வேகமும் வேண்டும் அது தரமானதாகவும் அமையவேண்டும், இதற்கென உபாயம் அல்லது ஔடதமிருக்கிறதா, இருக்கிறதென்கிறார் ஐசக் அசிமோவ். ‘தீர்வில்லாத பிரச்சினைகள்’  என்று ஓரினம் இருக்கிறதா என்ன? .

1. எழுத உட்காரவேண்டுமென்ற விருப்பம்.

எழுத்தை நேசிப்பதாலும், அதிக வாசிப்பாலும் நூற்றில் ஐந்துவிழுக்காட்டினருக்கு எழுத்தின்மீது உருவாகும் பற்றுதல் முதலாவது. இவ்விருப்பம் இல்லையெனில் எழுதிக்குவிக்க சாத்தியமில்லை. உங்களுக்கான கதவு அடைபட்டுவிட்டதென்று பொருள்.  எந்த ஒன்றுக்கும் முதற்தேவை விருப்பம், அதுவன்றி எதுவும் அசையாது. படைப்புத் திறனுக்கும் அதுவே முதற்படி. ஐசக் அசிமோவ் கருத்தின்படி விருப்பமென்பது உந்துதலோ, மிகப்பெரிய கனவோ அல்ல. எழுத்தில் அக்கறைகொள்ள அல்லது எழுத உட்கார கனவும் உந்துதலும் அவர்வரையில் அத்தியாவசியமுமல்ல. எழுதவேண்டுமென்று நினைக்கிற நம்மில் பலரும் உந்துதலன்றி வேறு காரணங்களை முன்னிட்டு இத்துறையை தேர்வுசெய்திருக்க சாத்தியமில்லை. ஆனால் அந்த உந்துதலுக்கும், உங்கள் கற்பனை அல்லது சிந்தனை புத்தகமாக உருப்பெறுவதற்குமிடையில் ஆற்றவேண்டிய வினைகளுள்ளன. அவ்வினைகள் வெள்ளை காகிதத்தையும் எழுதுகோலையும் இணைக்கும் பணியாக இருக்கலாம், கணினியின் விசைப்பலகையைத் தொட்டு கற்பனை வடிவத்தை வார்த்தைகளில் உருமாற்றம் செய்வதாகவும் இருக்கலாம். வினையை விருப்பமின்றி, ஆர்வமில்லாது நிறைவேற்றுபவராக இருப்பின்; கதைசொல்லலில் உங்களுக்குள்ள அபார ஞானம் எத்தகைய பயன்பாட்டையும் அல்லது முன்னேற்றத்தையும் உங்கள் எழுத்தில் சேர்த்திடாது.

2. எழுதுவதைத்தவிர வேறெதையும் தேடுவதில்லை என்ற பிடிவாதம்

” உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்/ கண்ணன்எம் பெருமான் என்றென்றே” என்பது திருவாய்மொழி. எழுத்தாளனுக்கும் எழுதுவதன்றி, பிறவற்றை நேசிப்பதில்லை என்ற பக்தியை எழுத்தின்மீது செலுத்த வேண்டியவராக இருக்கவேண்டும். எழுத்தாளனும் பிற மனிதர்களைப்போலவே எண்ணற்ற ஆசைகளால் இழுபடுகிறவன். இந்த இழுபறியிலும் எழுத்தை தேர்வுசெய்து இறுகப்பற்றி பக்தி செலுத்துவதன் மூலம் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் எழுதிக்குவிக்கவும் நமக்கு முடியும். எழுதுவதன்றி வேறொன்றை விரும்புவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைத் திடப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. எழுத உட்காருகிறீர்கள், அச்சமயம். இயற்கையின் எல்லாகுணாம்சமும் இணைந்து,  ‘வாழ்க்கையில் இதைக்காட்டிலும் சுவாரஸ்யமானவை வேறு இருக்கின்றன, ‘எழுந்திரு’, என்கிறது. அதற்கென்ன நாளைக்கு உட்கார்ந்து எழுதுகிறேன்’, என நீங்கள் பதில் கூறிக்கொள்கிறீர்கள். அப்போதே செயல் திறனுள்ள எழுத்தாளனாக வரவேண்டுமென்ற நமது கனவு இடிந்து நொறுங்குகிறது.

3. சொந்த உழைப்பின் மீதான நம்பிக்கை.

உங்கள் எழுத்து இப்போதெல்லாம் உங்களை திருப்திபடுத்துவதில்லை. ஒரு முறைக்கு இருமுறை என்று ஆரம்பித்த பழக்கம் பத்து பன்னிரண்டுமுறை வளர்ந்திருக்கிறது. எழுத்தைத் திருத்துகிறீர்கள். ‘நான் அவனிடம் பேசினேன்’ என்ற வாக்கியத்தில் ‘நான்’ என்ற எழுவாயை அதிகப்பிரசங்கித்தனமாக உணருகிறீர்கள். ‘அவனிடம் பேசினேன்’ என்று மாற்றினாலும் சொல்ல வந்தது சொல்லப்படுகிறது என நினைக்கிறீர்கள் முன் வாக்கியத்திலும் ‘பேசினேன்’ என்று வருகிறது, எனவே அடுத்த வாக்கியத்தை ‘அவனிடம் உரைத்தேன்’ என மாற்றி, அமைக்கிறீர்கள். இப்படி அடித்து, திருத்தி சொற்கள், வாக்கியம், பத்தி பின்னர் மொத்த நூலையும் பல்வேறு காரணங்களுக்காக மாற்றி அமைத்து … அவ்வாறு செய்தாலன்றி அமைதியாக தொடர்ந்து எழுத முடியாதெனில் இத்திருத்தமும், மாற்றமும் தேவை. சில நேரங்களில் முதலில் எழுதப்பட்ட வரியே மீண்டும் வந்தமரலாம். இருந்தாலும் மாற்றத்தை செய்தே ஆகவேண்டுமென்கிறார் ஐசக் அசிமோவ். இந்த வாக்கியத்தை இப்படியே அனுப்பினாலென்ன? இங்கே யார் கேள்விகேட்க இருக்கிறார்கள்? ‘லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும் என்று பதிப்பாளரும், பணம் கொடுத்தால் பாராட்டுக்கூட்டம் நடத்தி நம்மைப்புகழ்வதற்கு நான்கு பேரை திரட்டமுடியுமென்ற எண்ணமும் எழுத்தாளருக்கும் வருகிறபோது இதுபோன்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் பெரிய எழுத்தாளனாகவரவேண்டுமென்ற கனவுகாண்போருக்கு இச்செயல்திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.

4. நேரம்…நேரம்…நேரம்.

ஐசக் அசிமோவ் நான்காவதாக அறிவுறுத்துவது நம்மில் பலரும் அறிந்த விஷயத்தை அதாவது: காலம் பொன்போன்றது- கறந்தபால் முலைக்குத் திரும்பாதது என்பதுபோல கழிந்த விநாடியை திரும்ப ஈட்ட முடியாது. அசிமோவ் கூறுகிறார்: உலகில் பல இழப்புகளை ஈடு செய்யலாம். நேரத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது இருபது வயதில் ஒருவனுக்குக்கிடைக்கும் ‘ஒரு நிமிடத்திற்கும்’ அறுபது வயதில் அவனுக்கு கிடைக்கும் ‘ஒருநிமிடத்திற்கும்’ வேற்பாடு உண்டு. இருபது வயது இளைஞனுக்கு அமையும் நிமிடம் அவனைப்போலவே ஆரோக்கியமானது, ஆடும், பாடும், ஓடும், உட்காரும், வீரியமும் அதிகம். அறுபது வயதில் ஒருவனுக்கு அமையும் நிமிடம்: தள்ளாடும், படுக்கும், உறங்கும், மூச்சுவாங்கும், பலருக்கு அது பல்போன நிமிடமாகக்கூட இருக்கலாம். செயல் திறன்மிக்க எழுத்தாளனுக்கு நேரத்தை மிச்சப்படுத்த அனேகவழிகளிருக்கின்றன. அது அவரவர் திறன் சார்ந்தது. சிலர் கதவை அடைத்துக்கொள்கிறார்கள். சிலர் மின்னஞ்சல் கூட பார்ப்பதில்லை என்கிறார்கள். ஐசக் அசிமோவ் பணியாளர், செயலாளர், முகவர் என எவரையும் அவர் நியமித்ததுகொண்டதில்லையாம். தனது காரியங்களை தானே பார்த்துக்கொண்டதால் நேரத்தை மிச்சப்படுத்த முடிந்ததென்கிறார். இது அவரவர் தேவையையும் சூழலையும் பொறுத்தது.

செயல் திறன்கொண்ட எழுத்தாளராக  வரவேண்டுமா? மனத்தை அலையவிடாதீர்கள், ஓயாமல் செயல்படுங்கள்.

————————————-

மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25

1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: Ponts des arts

பாரீஸ் நகரை அறிந்தவர்கள் சேன் நதியைப்போலவே அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களும் புகழ்பெற்றவை என்பதை அறிவார்கள். குறிப்பாக பாரீஸ் நகரின் இதயப்பகுதியில் சேன்நதியைக்கடக்க உபயோகத்திலிருக்கும் பாலங்கள் அனைத்துமே பாரம்பரியச் சின்னங்கள் தொகுப்புக்குள் வருபவை.  Ponts des arts என்பதும் அவற்றில் ஒன்று..  பாரீஸ் நகரத்தின் ஆறாவது வட்டத்தில் (arrondissement) இப்பாலம் உள்ளது. பாலத்தின் பிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இக்கறையிலிருந்து அக்றைக்குச்செல்ல இரும்புக் கிராதிகளைக்கொண்டு நடைபாதை போன்றதொரு பாலத்தை அமைத்தார்கள். பின்னர் சுங்கக்கடவு பாலமாகவும் இருந்து வந்திருக்கிறது. பல்சாக்கின் La Rabouilleuse நாவலை படித்தவர்களுக்கு, அகதாவின் மூத்தமகன் பிலிப் பிதோ பாலத்திற்கு தண்டம் கட்ட ஷ¥க்களைத் துடைப்பது ஞாபகத்திற்கு வரலாம். முதல் இரண்டு உலகயுத்தங்களின் காரணமாக இப்பாலம் கலகலத்துப்போக பிரெஞ்சு அரசு சில ஆண்டுகள் போக்குவரத்தை தடைசெய்தும் வைத்திருந்தது. தற்போதுள்ள பாலம் 1981ம் ஆண்டு உருவானது.

இவ்வளவு புராணமும் எதற்கென்று கேட்கறீர்களா? ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச்சொல்ல இப்படி சுற்றிவளைத்து பாட்டிகதை சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக காதலர்களின் பிரார்த்தனைக் கூடமாக மாறிவருகிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் கிடாய் வெட்டி பொங்கல் வைக்கலாம். விளைவு பாலத்தருகே இருக்கும் லூவ்ரு அருங்காட்சியகத்தைப் பார்க்க மறந்தாலும் Ponts des arts பாலத்தை பார்க்காத சுற்றுலாவாசிகள் இல்லையென்கிறார்கள். அதிலும் நீங்கள் ஆணாக இருந்து சஹானாவின் உத்தரவாதத்தை நம்பி திருமணமும் செய்து, அவளுக்காக கால்கடுக்க காத்திருந்து, சென்னை காவல் துறை ஆணையகத்திற்குள் நுழைவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்து பொருமிக்கொண்டிருப்பவரெனில், கடனோடு கடனாக பாரீஸ¤க்கு ஒரு முறை வந்து அம்பாள் Ponts des arts பாலத்தை ஒரு சுபயோல சுபதினத்தில் தரிசித்துவிட்டுபோவது நல்லது. காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும், ஒற்றையாகவோ, ஜோடியாகவோ ஒரு பூட்டை வாங்கி உங்கள் அன்பிற்குரியவர் அல்லது அன்புக்குறியவள் பெயரையும் எழுதி பூட்டிவிட்டு போனீர்களெனில் உங்கள் காதல் ஆசீர்வதிக்கப்படும், ஆமென்.

 

2. அண்மையில் பார்த்த பிரெஞ்சுத் திரைப்படம்: Après lui.

 ‘அவன் பின்னால்’ என மொழிபெயர்க்கவேண்டும்.  சுவாரஸ்யத்திற்காக ‘சுற்றி சுற்றி வந்தீக’ என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவன் அல்லது ஒருத்தி பின்னால் அலைவதற்கான கிரியாஊக்கி எது?

படத்தின் ஆரம்ப காட்சியில் மாத்யூ கிட்டார் வாசிக்க அவன் நண்பன் பெண்ணுடையில் ஆடுகிறான். நண்பனின் வற்புறுத்தலுக்கிணங்க கிடார் வாசிப்பவனும் பெண்ணுடை தரித்துக்கொள்ள இருவரும் ஓரிரு நிமிடங்கள் சேர்ந்தே ஆட்டம் போடுகிறார்கள். நண்பர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையில் நாட்டம் உடையவர்கள் என்பதை இயக்குனர் கோடிட்டு காட்டுகிறார். அதேக் காட்சியில் எதிர்பாராமல் மகனைப்பார்க்க வரும் தாய் மகனும் அவன் சினேகிதனும் உடுத்தியுள்ள ஆடைகளைக் கண்டு அதிர்ச்சியுறுவதில்லை. மாறாக மகனை பெண்ணொருத்தியை சிங்காரிப்பதுபோல, முகமாவு இட்டு, கண்மை தீட்டி உதட்டுச்சாயம் பூசி பூரித்து போகிறார். அடுத்து வரும் காட்சிகளை நியாயப்படுத்துவதற்காக இக்காட்சியை அமைத்திருக்கவேண்டும். அடுத்த காட்சியில் கேமரா சாலைவிபத்தை காட்சிபடுத்துகிறது. முழுத்திரைக்கதையும் பிரெஞ்சுத் திரை உலகின் புகழ்பெற்ற நடிகையான காதரின் தெனெவ் (Catherine Deneuve )என்பவரையும் மற்றொரு இளைஞரையும் நம்பிச் சொல்லப்ட்டிருக்கிறது. கதாநாயகி என்றால் மும்பை வரவு, இருபது வயசு என்றபிம்பங்கள் நம்மிடத்திலிருக்கின்றன. இப்படத்தில் அறுபது வயது காதரீன் கதை நாயகி,  பிலிம் சுருள்கள் மொத்தமும் அவருக்காக செலவிடப்பட்டிருக்கின்றன.

தன்னுடைய மகன் மாத்யூவின் இறப்பிற்குப் பிறகு கமி(காதரீன் தெனெவ்) பிராங்க் மீது பாசத்தைப் பொழிகிறாள். பிராங்க் மாத்யூவின் நெருங்கிய ஆண் சினேகிதனென்று இதற்கு முந்தைய பத்தியில் சொல்லியிருக்கிறேன். ஆனால் கமியின் கணவன், அவள் மகள் அனைவரும் பிராங்க்கை வெறுக்கிறார்கள். அவன் தன்பாலின விரும்பி என்பதால் மட்டுமல்ல, விபத்து நடந்தபோது வாகனத்தை ஓட்டியவன். மாத்யூவின் மரணத்திற்கு ஒருவகையில் அவனும் பொறுப்பு. மகனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பிராங்க் மீது கமி அன்பை பொழிகிறாள். அந்த அன்பு படிப்படியாக எல்லை மீறுகிறது.

போர்ச்சுகீசுய நாட்டைச் சேர்ந்தவனான பிராங்க் ஏழைப்பெற்றோருடன் வாழ்பவன். அவனுடைய தகப்பனார் கட்டடத் தொழிலாளி. பிராங்க்குடைய பல்கலைக்கழக படிப்பு இதுவரை மாத்யுவின் ஆதரவில் இருந்தது. படிப்பைத் தொடரமுடியாதென்ற நிலையில் தந்தையுடன் கட்டட வேலைக்குப்போகும் பிராங்க்கை மீண்டும் படிப்பைத் தொடரச் செய்கிறாள் கமி. அவன் வீட்டில் நிதிநிலமை சங்கடத்தைத் தருகிறபோது, இவளுடைய புத்தகக்கடையில் வேலைபோட்டுக்கொடுக்கிறாள். அவன் போகும் இரவு விடுதிகளைத்தேடி இவளும் போகிறாள். அவன் விரும்பும் பாடல்களை இவளும் கேட்கிறாள். அவன் கதைக்கும் இளைஞர்களை இவளும் தேடிச்சென்று கதைக்கிறாள். அவன் நடப்பதை பொறுக்காது ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கிறாள். (பிராங்க்கின் பெற்றோர் தங்கள் ஏழ்மையை அவள் அவமானப்படுத்துவதாகக் கூறி ஒரு நாள் அந்த ஸ்கூட்டரைத் தள்ளிவந்து  கமியின் கடைவாசலில் போட்டுவிட்டுப்போகிறார்கள்). கமிக்கு பிராங்க் மீதூறும் அன்பை இனம்காணமுடியாமல் குழம்புகிறாள்.  அன்பு முற்றி நோயாக அவளுக்குள் வளர்ந்து சீழ்பிடிக்கிறது, அது புரையோடுவதற்கு முன்பாக அவள் கணவனும் பிள்ளைகளும் அவளுடைய ஊத்தை அன்பை வெட்டி எறிய நினைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட இளைஞனே கமியில் தொல்லை தாங்காது சொந்த நாட்டிற்கு ஓடுகிறான். இவள் விடுவதில்லை லிஸ்பனுக்குச்சென்று அவன் தங்கிய அறையை தன்னுடயதாக பாவிக்க கதை முடிகிறது.

மிகவும் சிக்கலான கதை.  திரைக்கதை மட்டுமல்லை, காதரீனும் பிராங்க்காக நடிக்கும் இளைஞனும் கத்திமீது நடக்கிறார்கள். பிராங்க்கைத்தவிர பிறமனிதர்கள் இயங்கும் உலகம் அவளுக்கு வனாந்தரம். மனிதர்கள் விலங்குகள். மகனை இழந்து விரக்தியின் உச்சத்திலிருக்கும் தாயென்ற பிரதிமைக்குள் உறைந்திருக்கும்  பெண்ணுடலின் கட்டளையை மறுக்கப்போதாது தவிக்கும் ஒருபெண்மணியை நன்றாகவே உணர்ந்து சித்தரிக்கிறார் காதரீன் தெனெவ். கேயெல் மொரெல் (Gaël Morel) படத்தின் இயக்குனர். இவருடைய வேறெந்த படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. இப்படம் 2007ல் வெளியாகியிருக்கிறது. பட உபயம் பிரெஞ்சு ARTE தொலைக்காட்சி. பிரெஞ்சோ ஜெர்மனோ தெரிந்தவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.

http://videos.arte.tv/fr/videos/apres_lui-6870156.html

—————————

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-3

 மொரீஷியஸ் கண்ணகி:

கதை பிறந்த கதை: இந்தியாவிலிருந்து பிரான்சுக்கு வந்த புதிதில் ‘அவர்களைக் கண்டதும் எனது அண்டை மனிதர்கள் என நினைத்தேன். நெருங்கிப்போனால் விலகிப்போவார்கள்.  ரொம்பவும் சீரியஸாக தேடித் தேடி தமிழ் பெயர் வைத்திருப்பார்கள். தீவிரமாக விரதமிருந்து காவடி எடுப்பார்கள். கோவிந்தன் பூஜை என்பார்கள். விசேட நாட்களில் பபளபள சாரிகளைத் தேடிபிடித்து உடுத்துவார்கள் ஆனால் 200% மேற்கத்தியர்கள். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. மொரீஷிய தமிழர்கள் எதிர்கால தமிழர் வரலாற்றின் கல்வெட்டுகள்.

இன்றைக்கு உலகெங்கும் பரவிக்கிடக்கிற இந்தியத் தமிழர்களோ இலங்கைத்தமிழர்களோ (வாழ்ந்துகொண்டிருக்கிற தமிழர்களைச் சொல்லவில்லை, வருங்கால சந்ததியை சொல்கிறேன்) எப்படி இருப்பார்களென நினைக்கிறீர்கள். இன்றிருக்கிற மொரீஷியஸ் மக்களாக பெருகியிருப்பார்கள்: அதாவது காவடி எடுப்பார்கள், மாலைபோட்டுக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்குப்போவார்கள், தேர் இழுப்பார்கள். விசேட நாட்களில் புடவை கட்டுவார்கள். ரஜனி, கமல்,அஜித் விஜெய் வாரிசுகளின் படங்களை தரவிறக்கம் செய்து பார்த்து மகிழ்வார்கள். மேற்கத்தியர்களினும் மேற்கத்தியர்களாக வாழ்க்கையை முடித்து செத்தவுடன் திருவாசகம் படிப்பார்கள். மொரீஷியஸ் கண்ணகி என்ற சிறுகதை 2002ல் குங்குமத்திலும், 2003 அக்டோபரில் திண்ணையிலும் வெளிவந்தது

 மொரீஷியஸ் கண்ணகி

அவளுக்கு வயது 28. பிறந்தது போர்ட்லூயிஸ், மொரீஷியஸ். வளர்ந்தது, படித்தது, செக்ஸை அறிய நேர்ந்தது சர்சல், பாரீஸ். அதிநவீனமும் சம்பிரதாயமும் ஐம்பது ஐம்பது விகிதத்திற் கலந்த சராசரி மொரீஷியஸ் மத்மசல். ஆண்களோடு கலந்து கூச்சமின்றி ஆடவும் தெரியும், பிப்ரவரி மாதக் குளிரில் பித்துக்குளி முருகதாஸ் பாடலைப் பாடிக் கொண்டு காவடியெடுக்கவும் தெரியும். நான்கு ஆண்டுகளுக்கு முன்தான் அனந்தாசாமி சர்மா என்கின்ற அனந்தசாமி சர்மா மந்திரம் சொல்ல மொரீஷியஸ் தமிழர்கள் முறைப்படி இந்தியன் ஒருவனை ‘மரியாழ் ‘ செய்திருந்தாள். பிறகு அந்தத் திருமணம்- நகர சபையில் நண்பர்கள் முன்னிலையில் முறையாக பதிவுச் செய்யப்பட்டது. இன்றைய தேதியில் இருவருமே பிரெஞ்சுக்காரர்கள், குடியுரிமைச் சட்டப்படி மட்டுமல்ல வாழ்க்கை முறையிலும் கூட.

2003ல் ஒரு பிப்ரவரிமாதம் காலை மணி 6.00

படுக்கையைச் சரி செய்துவிட்டு எழுந்தபோதே மனம் வலித்தது. அவளது நண்பன்- கடந்த நான்கு ஆண்டுகளாக படுக்கையைப் பகிர்ந்துகொண்ட, பரஸ்பர அக்கறைக் காட்டிய இந்திய நண்பன்- சில நாட்களில் சற்று நேரம் கழித்தேனும் வரப் பழகிய நண்பன், இப்போது இரவுகளையும் தவிர்க்கிறான். மனதிற் மெல்லப் பயம் ஒட்டிக்கொண்டது. முதன் முறையாக அளவாக அழுதாள். கட்டில் விரிப்பின் முனையால் கண்களைத் துடைத்துக் கொண்டு. குளிக்கும் அறைக்குள் நுழைந்து கதவினை அடைத்தாள்.

இரவு மணி 9.20:

தயக்கமின்றி ‘பார் ‘ ன் கதவினைத் தள்ளிக்கொண்டு அவள் நுழைந்தபோது, மழை அங்கியையும் மீறி ஈரப்பட்டிருந்த உடலில் இலேசாக நடுக்கம். கைக்கடிகாரத்தை பார்த்து கொண்டாள் இரவு 9மணி 20 நமிடங்கள். சுவாரஸ்யமாக குடித்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள், தங்கள் இனத்துக்குச் சம்பந்தமில்லாத ஒருத்தியின் திடார்ப் பிரவேசத்தை, ஆச்சரியத்தோடு பார்வையில் ஏற்று, பின்னர் அலட்சியம் செய்து உரையாடலைத் தொடர்ந்தனர். வாய்ப்புக் கிடைத்தவர்கள் மழையில் நனைந்திருந்த தலையை அவள் துடைக்க, தெரிந்த மார்பை தெரியாமற் பார்த்து மதுக்கோப்பையோடு ஒப்பிட்டு வாய் பிளந்ததனர். பார் வாசலிற் போடப்பட்டிருந்த விரிப்பில் சற்றே நின்று, மழையங்கியின் நீர்வடியட்டுமெனக் காத்திருந்து, அதனைக் கழற்றி பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘தாங்கி ‘யில் மாட்டினாள். குடையைச் சுருக்கிக் கீழுள்ள அதற்கான இடத்தில் வைத்தாள். இப்பொழுது தன்னைச் சுதாரித்துக்கொண்டவளாய், மெள்ள மறுபடியும் பார்வையை ஓட்டினாள்.

காலை மணி 6.30:

கோல்கேட் மெளத்வாஷால் வாயைக் கொப்பளித்தாள். குளிர்ந்த நீரை வாரி முகத்திலறைந்து கொண்டாள். நிவியா ஐ லோஷனால் கண்களை அலம்பி பின்னர் டர்க்கி டவலால் அழுந்தத் துடைத்த முகத்திற்கு டஸ்டி ரோஸ் ஒத்தினாள். புருவங்களை ஒதுக்கி ட்ரிம் செய்து பென்சிலிட்டாள். கண்களை அகலத்திறந்து மஸ்க்கராவால் வருடிமுடித்து, கண்ணிரப்பைகளுக்கு ஐ ஷேடிட்டு, அதரங்களில் ப்ளூ ரோஸ் லிப்ஸ்டிகை தடவி முடித்து மீண்டும் கண்ணாடியைப் பார்த்தபோது இரப்பைகளில் கண்ணீர். காகிதக் கைக்குட்டையை நான்காக மடித்து அதன் முனையால் ஒற்றியெடுத்து மூக்கை உறிஞ்சினாள்.

இவளது பார்வை.. சுவர்களிற் சென்று படியும் எல்லைவரை முடிச்சு முடிச்சாக மேசை நாற்காலிகள். அவற்றை நிரப்பியிருந்த அரைமயக்க மானுடர்கள். புகையும் மதுவும் அனுமதித்த மட்டரக விமர்சனங்கள், கேலிகள் கிண்டல்கள், புரிதலற்ற சிரிப்புகள். பிறகு இறுதியாக சில நிமிடத் தேடலுக்குப் பிறகு அவள் தேடிய மாதவி..

இவளையொத்த வயது, அளவாக வெட்டபட்டு, தோளிற் பதுங்கியும் பதுங்காமலும் தெரிந்த செம்பட்டை முடி. இறுக்கமாக ஒரு ஜம்பர். தடித்த உதட்டில் இரத்தம் குடித்த காட்டேரியாக ஈவ்ரொஷே சிவப்பு உதட்டுச் சாயம், கன்னங்களிற் தேவையின்றிக் கூடுதலாக ‘ரூழ் ‘. சற்றே பெரிய கண்கள்.

அந்தப் பெண்ணின் இருக்கை ‘பார் ‘ ன் வாசற்கதவைப் பார்க்கின்ற வகையில் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் அக்கதவு திறந்து மூடப்படும்போதெல்லாம் அவள் இயல்பாய் நிமிர்ந்து நுழைகின்ற நபரைச் சரிபார்த்தபின் கைக்கடியாரத்தைப் பார்த்துப் பெருமூச்சுவிடுகிறாள்- யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். அவளுக்கெதிரேவிருந்த நாற்காலியும் அதனை உறுதி செய்தது. இவள் அவளைக் குறி வைத்து நடந்து எதிரே போய் நின்றாள்.

காலை மணி 7.30:

கீழே டெனிம் ஸ்கர்ட் மேலே 3/4 ஸ்லீவ்ஸ் போலோ, ·பெதர்ட் §?ர்ஸ்டைல், கால்களிற் குதியுயர்ந்த கீழ்த்திசை மாடல் ஷ¥. இடது கரத்தில் ஸ்வாட்ச். வலது கரத்தில் கால்ப் லெதர் வேனிட்டி பாக். வீட்டிலிருந்து கிளம்பி பாரீஸின் கிழக்கு ·பெரிபெரிக் பிடித்து வெளியே வந்தபோது, அதி வேகப்பாதை சாலைகளில், ஆமைவேகத்தில் கார்கள் ஊர்ந்து செல்ல ‘மெர்து ‘ (ஷிட்)! சலித்துக் கொண்டாள். அலுவலகத்தை அடைந்து பிரதான கதவிற் தனக்கான அட்டையை உள்வாங்கிய இயந்திரத்திடம் வலது கட்டைவிரலை பதிப்பித்து அனுமதிகேட்க அது ‘க்வாக் ‘ கென்றது. போகின்றபோதே தனது மத்திய ஆப்ரிக்க தோழி ‘மர்லேன் ‘ க்கு ஒரு ‘சலுய் ‘(?¡ய்) சொல்லிவிட்டு இவளது கேபினில் நுழைந்தபோது, பக்கத்து கேபினில் நாற்பதுவயது மார்க்கெட்டிங் மேனேஜர் ·பிரான்சிஸ் தனது மனைவி-கம்-செகரட்ரிக்கு வழக்கம்போல முத்தமிட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களிருவர்க்கும் சேர்ந்தாற்போல ஒரு போன்ழூர் சொல்லிவிட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள்

இரவு 9.25

‘மன்னிக்கணும்… யாருக்காகவோ காத்திருக்கீங்கன்னு நினக்கிறேன் ? ‘ -இவள்.

‘ ம் ..என் நண்பனுக்காகக் காத்திருக்கிறேன் ‘ – அவள்.

‘ உங்கள் நண்பர் வரும்வரை இந்த நாற்காலியில் உட்காரலாமா ? ‘

அந்தப் பெண்ணிடம் தயக்கமிருந்தது. இவளும் அவளது அனுமதி வேண்டி, கேள்வியைக் கேட்கவில்லை. நாற்காலியை இழுத்து உட்கார்ந்தாள். சிறிது நேரத் தயக்கத்திற்குப் பிறகு எதிரே இருந்தவள் அவளாகவே முன்வந்து இவளிடம் பேசினாள்.

‘நீங்க.. ? ‘

‘கண்ணகி ‘

‘இந்தியாவா ?

‘இல்லை மொரீஷியஸ். மொரீஷியஸ் கண்ணகி ‘ சிரித்துக் கொண்டாள்

‘நான் சோ·பி ‘

‘எனக்குக் காப்பிகுடிக்கணும். உங்களுக்கு .. ? ‘

‘நோ..மெர்சி (நன்றி). இப்போதுதான் குடித்தேன் ‘

‘காத்திருக்கும்போது நிறையக் காப்பியைக் குடிக்கவேண்டியிருக்கும் ‘ என்று சொன்னவள் இவளுக்கான காபியைக் கொண்டுவருமாறு பணித்துவிட்டு எதிரே இருந்தவளிடம் கேட்டாள்:

‘நீங்க அடிக்கடி இங்க வருவீங்களா ? ‘

‘அடிக்கடின்னு சொல்ல முடியாது. ஆனால் வருவதுண்டு. நீங்க என்ன பேரு சொன்னீங்க.. காண்ணகி ? ‘

‘இல்லை கண்ணகி. ‘ நிதானித்து அழுந்தச் சொன்னாள்.

‘ம்.. கண்ணகி. .. இதுக்கு முன்ன உங்களை நான் பார்த்தமாதிரி தெரியலையே ? ‘

உதட்டை மடித்து பற்களை அழுந்தப் பதித்து கண்களை இறுக மூடி பதில் சொல்ல யோசித்து, முகத்தைத் திருப்பி மீண்டும் எதிர்கொண்டவள்,

‘உண்மை. இப்போதுதான் இங்கே முதன் முறையாக வறேன். வரக்கூடாதுதான் ? ‘

‘பின்னே எதற்காக ? ‘ கேள்வியைக் கேட்டுவிட்டு, இவள் பதிலுக்குக் காத்திருந்தாள்.

கேட்டிருந்த காப்பி வந்து சேர்ந்தது. கூடவே சர்க்கரைக் கட்டிகளும் பாலும் தனித் தனியாக வைக்கப்பட்டன. குனிந்து கோப்பையைப் பார்த்தாள். சர்க்கரைத் துண்டங்களை எடுத்தவள், எதிரே இருந்தவளிடம் பேசினாள்.

‘இது என்ன ? சர்க்கரை. இந்த நேரம்வரை அதற்கெதுவும் நேர்ந்துவிடவில்லை. அதன் புனிதத்திற்கு எந்த பங்கமுமில்லை. இந்தப் பாழாய்ப் போன காப்பியை பிடிக்கவில்லை என்பதற்காக சர்க்கரையால் தப்பிக்க முடியுமா என்ன ? காபி சூடாக இருப்பதும் அதில் குதித்தால் தான் கரைந்துவிடக்கூடும் என்பதையும் சர்க்கரை அறிந்தே உள்ளது. ‘

இவளது தத்துவம் அவளுக்குக் குழப்பத்தைத் தந்திருக்கவேண்டும். தப்புவிக்க, ஒரு சிகரட்டினை எடுத்துப் பற்றவைத்து, நுரையீரல் கொள்ள புகையினைத் வாங்கி, பின்னர் தவணைமுறையில் நாசிகள் மற்றும் வாய் வழியாக விருப்பமின்றி வெளியேற்றினாள். முழங்கைகளை மேசையில் ஊன்றி, மடித்திருந்த கைகளிற் தலையை இறக்கி நம்ம கண்ணகியை நேரிட்டு பார்த்தாள்.

‘ஆனா விருப்பப் படாத சர்க்கரையை, இந்தக் கோப்பையிலிருக்கின்றக் காப்பியில் இறக்கியே ஆகணும்னு ஏதோவொரு சக்தி தீர்மானிச்சாச்சு. அதை சர்க்கரை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதைத்தான் நாங்க விதின்னு சொல்லுறோம் ‘..

மாலை மணி 5.30

கம்ப்யூட்டரை அணைத்துவிட்டுச் வெகு நேரமாக சோர்ந்து உட்கார்ந்திருந்த இவளை எழுப்பியவள் ஆப்ரிக்கத் தோழி மெர்லன் .

‘என்ன செய்யற ? வீட்டுக்குக் கிளம்பலையா ? ‘ எனக் கேட்டவள் சோர்ந்திருந்த இவளது முகத்தைப் பார்த்து, பாந்தமாக அணைத்துக் கொண்டாள்.

என்ன இன்றைக்கும் அவன் வரவேயில்லையா ? ‘

‘இல்லை ‘ சொன்னவள் வெடித்து அழுதாள் ‘ இவள் அழுது முடிக்கும்வரை மெர்லன் காத்திருந்தாள்.

‘மனதிற் தேக்கி வைக்காதே. நன்றாக அழுதிடு! விட்டது சனியன்னு தலை முழுகு. டிவோர்ஸ் செய்!. உனக்காக எத்தனை பேரு வரிசையில் நிற்கிறாங்க தெரியுமா ? மிஷல் இப்போதே அரைப் பைத்தியமா அலையறான். நேற்றுபாரு, ? எங்கூடபடுத்துக்கிட்டு உன்னைப்பற்றியே பேசறான் ‘

‘இல்லை. தீர்மானிச்சுட்டேன் ‘

‘என்னன்னு ? ‘

‘நாளைக்குச் சொல்றேன் ‘ என்று கிளம்பியவைளை புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த மெர்லன், உதட்டைச் சுழித்து தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்

இரவு மணி 9.30

தன் கைக்கடியாரத்தைப் இந்தமுறைப் பார்த்துக் கொண்டவள் சோ·பி.

‘ அப்போ நீங்க கண்ணகி இல்லை. சர்க்கரைன்னு சொல்லுங்க. ஆக இந்தச் சர்க்கரை இங்கே வந்ததற்கானக் காரணத்தைச் தெரிஞ்சுக்கலாமா ?

‘ தாராளாமா.. இவள் சிரித்தவாறே எழுந்தாள். அந்தச் சிரிப்பில், ஒரு எச்சரிக்கை இருந்தது. வெற்றியின் எக்காளமிருந்தது.

சோ·பிக்குப் புரிந்திருக்க வேண்டும். அவசரமாக கையில் வைத்திருந்த சிகரட்டை அணைத்தாள். ஏதோ ஒருவித பயம். இவளிடம் பயம். எழுந்து கொண்டாள்.

திரும்பியபோது அவன் பாருக்குள் நுழைந்து கொண்டிருந்தான்: 30லிருந்து 35 வயதிருக்கலாம், தமிழர்களின் சராரி உயரம், மானிறம், பழுப்பு நிறத்தில் லெதர் ஜாக்கெட். கருப்பு பாண்ட், புள்ளியிட்ட வெள்ளை முழுக்கைச் சட்டை. கழுத்தில் மப்ளர்.

சோ·பிக்கு வேண்டியவன். இரண்டுவருடங்களுக்கு முன்பு, ஒரு இந்திய ரெஸ்டரெண்டில் அறிமுகமாகி, வாலைக் குழைத்துக் கொண்டு விரட்ட விரட்ட அவளிடமே ஓடி வருபவன் – இந்தியத் தமிழன்.

‘குமார்.. ‘ கூப்பிட்டவள் சோ·பி.

அவைளைப் பார்த்துக் சந்தோஷமாகக் கையைசைத்தவன் பக்கத்திலுருந்த கண்ணகியைப் பார்த்ததும் பேயறைந்தவன் போலானான்.

தயக்கத்துக்கிடையே, மெல்ல இரு பெண்கைளையும் நெருங்கினான்.

‘கண்ணகி! நீ.. நீ இங்க என்ன செய்யற ? ‘ அவனுக்கு நா குழறியது.

சோ·பிக்கு இவன் என்ன சொல்கிறான் என்பது புரியலை. ‘குமார் என்ன நடக்குது இங்கே ? ‘

‘ம்.. அவன் சொல்ல மாட்டான். நான் சொல்றேன். நீ மாதவி அவன் கோவலன்னு சொல்றேன். உனக்குப் புரியாது. அவனுக்குப் புரியும். கொஞ்ச நேர முன்னாடி நான் இங்கே வந்ததுக்குக் காரணம் கேட்டியே ? பெக்க பெக்கன்னு நிக்கிறானே இவனைக் கேளு. காரணம் சொல்வான் ‘

‘.கண்ணகி.. அவசரப்படாதே…………. ‘ பயத்தில் அவனுக்குப் பேண்ட் நனைந்துவிட்டது.

சோ·பிக்கு நடக்கவிருக்கின்ற விபரீதம் புரிந்திருக்கவேண்டும்.

‘ கண்ணகி… உட்கார். அமைதியாகப் பேசித் தீர்க்கலாம்

‘ இல்லை. நான் சர்க்கரைகட்டி இல்லை. கரைந்திட மாட்டேன். கண்ணகி. மொரீஷீயஸ் கண்ணகி. எழுந்து நிற்பேன். மதுரையை எரிக்கும் ரகமில்லை கோவலனை எரிக்கும் ரகம் ‘.

கைப்பையிலிருந்த அந்தச் சின்னத் துப்பாக்கியை எடுத்தாள்.

———————————–

எழுத்தாளனென்ற முகவரி-2

மூன்று காரணிகள்

மிகபெரிய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசிக்கிறபோது, அவர்களின் வாக்கிய அமைப்புகளை கவனியுங்கள், தேர்வு செய்யும் சொற்களை அவதானியுங்கள். ஒரு காட்சியை அல்லது சம்பவ விவரணையை அளிப்பதில் நம்மிடமிருந்து அவர்கள் எங்கனம் வேறுபடுகிறார்கள் என்பதை அவர்களுடைய படைப்பை வாசிக்கிறபோது கண்டுணர முடியுமெனில் எழுத்து நமக்கு வசப்படக்கூடுமென நம்பலாம். இது நம்பிக்கை மட்டுமே. ஆனால் அந்த இடத்தைப்பெறுவதற்கு அவர்கள் கொடுத்த விலையென்ன என்று நாம் பார்க்கவேண்டும். அது மந்திரத்தால் விழுந்த மாங்காய் அல்ல, கடின உழைப்பால் பெற்றது.

எவராவது வட்ட செயலாளரைப்பிடித்து கலைமாமணி வாங்கிவிடலாம், உரையில் வைத்து பணம்கொடுத்தால் சில தினசரி செய்திகளில் இடம் பெற்றுவிடலாம், அவரை இவரை பார்த்து தொலைகாட்சியில் பத்து நிமிடம் வந்து போகலாம், சாகித்ய அகாடமியில் யாரையாவது பிடித்து ஏதாவது செய்து ஒரு பரிசைவாங்கிவிடலாம் என்பது போன்ற ‘லாம்’கள் ஒரு நாள் அலுத்துபோகும். உண்மையான எழுத்தாளனைக்கண்டதும் பதற்றத்துடன் இந்த லாம்களையெல்லாம் உதறிவிட்டு எழுந்து நிற்கவேண்டிவரும்  இப்பணிவுக்கு அசலான படைப்பாளியிடம் நமக்குள்ள மரியாதையைக்காட்டிலும் விலைகொடுத்துவாங்கிய புகழ்தரும் கூச்சமே காரணம்.

எந்த மொழியாக இருப்பினும் மூத்த எழுத்தாளர்களெனச் சொல்லப்படுகிறவர்களின் வெற்றிக்கு மூன்று காரணங்கள் இருப்பதாக ஜான் ஜேக்ஸ் (John Jakes) என்ற அமெரிக்க எழுத்தாளர் சொல்கிறார். அவர் கூறும் மூன்று கர்த்தாக்கள்: Practice, Persistence Professionalism.

1. Practice: சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என தமிழில் சொலவடை இல்லையா அதையே Practice எனபெயரிட்டு ஜேக்ஸ் இன்றியமையாதது என்கிறார். எழுத்திற்கு புதியவராக இருந்தாலும், பதிப்பித்தவுடனே விற்பனையில் சூடுபிடிக்கும் எழுத்தாளர் என்ற தகுதியை எட்டிப்பிடித்தவரென்றாலும் காலக்கெடுவினை வரையரை செய்து எழுதுவது நம்மை வளர்க்க உதவுமாம். அக்காலவரையரை நாளாக இருக்கலாம், வாரமாக இருக்கலாம் அல்லது மாதமாக இருக்கலாம். ஒரு முறை காலக்கெடுவைத் தீர்மானித்தபிறகு செயலில் இறங்குவது பயிற்சியில் அடுத்த கட்டம். திட்டமிட்டபடி எழுதி முடிக்கவேண்டும். வள்ளுவன் கூறுவதைப்போல எண்ணியது கைகூட திண்ணியராகவும் இருக்கவேண்டும். எழுதும் வரம் பிறவியில் ஒரு சிலருக்கு அமைந்திருக்கலாம், உழைத்தால் பெறமுடியுமென்பது ஜேக்ஸ் தரும் உத்தரவாதம்.

தொடர்ந்து எழுதிப்பழகுவது நம்மை வளர்த்துக்கொள்வதற்கான கடவு சீட்டு. எத்துறையில் கடுமையான பயிற்சியைக் கைகொள்ளுகிறோமோ அத்துறையில் நம்மை அறியாமலே மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருப்போம் என்கிறார். அவ்வாறான பயிற்சி எளிதானதல்ல என்பதையும் ஜேக்ஸ் மறுப்பதில்லை. சொந்த அனுபவத்தை சாட்சியம் அளிக்கிறார். அவர் பிள்ளைகள் வளரும் பருவத்தில், ஓர் இரவிற்கு இரண்டரை மணிநேரத்திலிருந்து மூன்று மணி நேரம் எனவைத்து வாரத்திற்கு மூன்று இரவுகள் எழுதுவாராம். ஒரு பக்கம் விளம்பரத்தொழில், இன்னொருபக்கம் குடும்பத் தலைவன் இரண்டிற்கும் தாம் தலைவன் என்ற வகையில் நிறைவேற்ற பணிகள் இருந்தன, எனினும் தவறாமல் எழுதுவாராம். திடீரென்று வீட்டில் யாரேனும் சுகவீனமுற்றாலோ, அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிருந்தாலோ அன்றிரவு திட்டமிட்டபடி எழுத முடியாதுபோனாலுங்கூட வேறொரு இரவில் உட்கார்ந்து அவ்வாரத்திற்கென திட்டமிட்டிருந்த பணியை முடிக்கும் வழக்கத்தினை ஜேக்ஸ் கொண்டிருந்தேன் என்கிறார்.  தினந்தோறும் எழுதுவதென்று தீர்மானம் செய்து அத்தீர்மானத்தை விடாது நிறைவேற்றினாலொழிய ஓர் வெற்றிகரமான எழுத்தாளனாக நம்மால் வலம் வர முடியாதென்பது அவரின் கருத்து. எழுத்தாளனென்று பெயரெடுத்தால் போதும் என்கிற நினைப்பிற்கும், வெற்றிகரமான எழுத்தாளனாக வரவேண்டுமென்ற ஆசைக்குமுள்ள பேதம் ஜேக்ஸை பொறுத்தவரை, பின்னதற்கு நிறைய எழுதிப்பழகவேண்டும்.

2. Persistense: ஜேக்ஸின் செயல்முறை திட்டத்தில் இரண்டாவது இடத்தை பெற்றிருப்பது சோர்விலனாக இருத்தல். இன்றைக்கு வாசகர்களின் தேர்வுக்கொப்ப தினசரிகள்,  சஞ்சிகைகள் இருக்கின்றன. இது எழுதுபவர்களுக்கும் பொருந்தும். உங்கள் எழுத்தை சுதந்திரமாக பதிவுசெய்யவும் கூடுதலாக கவனம் பெறவும் விரும்பினீர்களெனில் இருக்கவே இருக்கின்றன இணையதளங்கள். எழுதும் உத்வேகத்திற்கும், அயர்வுறாது தொடர்ந்து இயங்க நினைக்கும் உங்கள் ஆர்வத்திற்கு ஒத்துழைக்கவும் இவை உதவுகின்றன.  ஆனால் அறுபது எழுபதுகளில் எழுதவந்த  படைப்பாளிகளை யோசித்துப்பாருங்கள்.  எந்தப்பின்புலமும் இல்லாது வெற்றிபெற்ற எழுத்தாளர்களை நினைவு கூருங்கள். அவர்களின் வெற்றிக்குப்பின்னே ஜேக்ஸ் கூறுவதுபோல அயராத உழைப்பு இருந்தது. முன்பெல்லாம் வாரசஞ்சிகைகளுக்கு வெள்ளைதாள்களை வாங்கி, பிறருக்கு படிக்க ஏதுவாக பொறுமையுடன் எழுதியதை நகலெடுத்து, திரும்பப்பெறுவதற்கும் போதிய தபால் தலைகளுடன் கூடிய உறையைவைத்து, சில சஞ்சிகைகள் நமக்கல்ல என்பதை புரிந்து, எங்கே நம்முடைய ஜம்பம் பலிக்குமென யோசித்து அனுப்பிவிட்டுக் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். பெண்கள் எனில் சொல்லவே வேண்டாம். அவர்கள் கூடுதலாக பாவப்பட்ட ஜென்மங்கள். முதலில் அவர்கள் எழுத உட்காரவே இருட்டறைக்குள் ஒதுங்கவேண்டும். இவைகளெல்லாம் ஓரளவு வசதிபடைத்த நடுத்தர மற்றும் முன்னேறிய சமூகத்திற்கு வாய்த்தது. சாமான்யனென்றால் அதுகூட இல்லை. உங்கள் படைப்பு எடுபடாமல் போனதற்குக் பல காரணங்கள் இருக்கலாம். அறிமுகமில்லாத பெயரெனில் அக்கறை கொள்ளமாட்டார்கள்; அதிட்டமிருந்து படிக்கப்படநேர்ந்தாலும் அன்றைக்கு அந்த உதவி ஆசிரியனின் மன நிலையைப்பொறுத்தும் உங்கள் தலைவிதி அமையலாம். படைப்பு நிராகரிக்கப்பட பெரும்பாலும் எழுத்தைத் தவிர்த்து வேறு காரணங்கள் இருக்கக்கூடும் என்பதுதான் உண்மை. சார்த்ரு தொடங்கி நம்ம ஊர் எழுத்தாளர்வரை இப்படி ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் உலகிலுண்டு. மேற்கத்திய உலகில் உங்கள் சரக்கு அசலான சரக்கு எனில் நிச்சயமாக விலைபோகும். தமிழில் இரண்டும் நடக்கிறது. உண்மையும் பொய்யும் கலந்தே விலைபோகும். தமிழ்நாட்டில் இலக்கியத்திலுங்கூட அரசியலுண்டு. சிபாரிசு முன்நிற்கிறது. பணத்தாலும் நைச்சியம் செய்தும் பெற்றவை நம்மை அதிக நாட்கள் தாங்கி நிற்காது. சிலர் என்னிடம் பேசும்பொழுது கூசாமல் தங்களைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். சுயபுராணங்கள் அதிகரிக்கிறபோது எனக்கு குமட்டிக்கொண்டுவரும். பத்திரிகையாளர்கள் இதழியல், பதிப்பாளர்கள் அனைவருமே பொய்யைக் கூவி விற்பவர்கள் அல்ல, எனது பத்தாண்டுகால எழுத்து அனுபவத்தில் அறியவந்த உண்மை, நல்ல எழுத்துக்கு ஆதரவு எப்போதுமுண்டு, கௌரவர்கள் கும்பலில் பாண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களை இனம் கண்டு நமது எழுத்தைக்கொண்டுபோகவேண்டும், நீங்களும் நேர்மையாளராக இருந்தால்.

3. Professionalism இதைத் தமிழில் தொழிற் திறம் அல்லது துறைமைத் திறம் எனக் கொள்ளலாம். தொழிற்திறம் என்பதென்ன? தொழிற்துறை நவீனமென்பது உற்பத்தியை உழைப்பு அல்லாது வேறுகாரணிகளைக்கொண்டு அதிகரித்தல் என்ற அறிவியலின் கீழ் வந்திருக்கிறது. ஆககூடிய உடலுழைப்பு, ஆககூடிய அறிவித்திறன் என்று அமைந்தாலே வெற்றியை ஈட்டித் தருமா? சென்ற பகுதியில் கூறியதுபோல நெட்வொர்க் வைத்திருந்தால் வெற்றி பெற்றுவிடலாமா. தான் ஒரு நல்ல எழுத்தாளனென்று இந்த நெட்வொர்க் ஆசாமிகள், கூமுட்டைகளிடம் தெரிவிக்கலாம், உழைத்து வெற்றிபெற்றிருக்கிற மற்றொரு எழுத்தாளனிடம் கூச்சமில்லாமல் சொல்லமுடியுமா? தொழிற்திறமென்பது இதைச் செய், அதைச் செய்யாதே (Do or Don’t) என்பதால் ஈட்டுவதல்ல.

ஜேக்ஸிற்கு படைப்பாளிக்குரிய தொழில்திறமென்பது ஒரு நாடக ஆசிரியனிடமிருந்து கற்றுக்கொள்வது. எழுதிய நாடகத்தை ஒத்திகை பார்ப்பது தேவையெனில் சிலகாட்சிகளை நீக்கவும், வசனங்களை துண்டிக்கவும், பாத்திரங்களை அகற்றவும் ஏன் அறவே நாடகத்தை கிழித்துப்போட்டுவிட்டு முற்றிலுமாக புதியதொன்றை எழுதவதற்காகவுமென நினைக்கவேண்டும்.  நாடக ஆசிரியனுக்கு நண்பர்களாக வந்திருக்கிற பார்வையாளர்களை முன்வைத்து மேற்கண்ட மாற்றங்களை கொண்டுவர இயலும். இவ்வாய்ப்பு படைப்பாளிக்குக் கிடைப்பதில்லை. அவனுடைய பார்வையாளர்கள் (வாசகர்கள்) முகமற்றவர்கள். தூரத்திலிருந்து படைப்பு, கைத்தட்டலை ஏன் இழந்ததென யோசிக்கக் கடமை பட்டவன். மெய்பார்ப்பில் தவறா, பதிப்பாசிரியரின் தவறா, நாவலுக்கு பெயரிட்டதில் குறையா என்பதுபோன்ற இரண்டாம் தர  ஐயங்களை அறவே ஒழித்துவிட்டு எழுத்தில் நாம் என்னகுறை வைத்தோம் என்ற தெளிவு வேண்டும். நாடக ஆசிரியனுக்கு கிடைக்கும் ‘ஒத்திகை நேர பார்வையாளன்’ எழுத்தாளனுக்கு பதிப்பாளர் மூலமாகக் கிடைக்கிறது.  ரசனையுள்ள பதிப்பாளர்களை தேர்வு செய்தல் நலம் அவர்கள் சுயநலத்தின் அடிப்படையில் சில குறைகளைச்சுட்டிக்காட்டினாலும் திருத்திக்கொள்ளுதல் அவசியம். பொதுவாக வளர்ந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்துவிடுவார்கள். அவர்கள் வெள்ளைத் தாள்களைக்கொடுத்தாலும், பிரசுரிக்கவும் அதைவாசித்து பின் நவீனத்துவம் எனவும் ஆட்களுண்டு. ஆனால் வளரும் நிலையில் இருக்கிற நம்மைப்போன்றவர்கள், பாரபட்சமற்ற விமரிசினங்கள் வரின் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாமே விமர்சகனாக இருந்தும் எழுத்தில் குறைகண்டு திருத்தி எழுதலாம். இந்த அனுபவம் எனது முந்தைய இரண்டு நாவல்களுக்கு ஏற்படவில்லை. திண்ணையில் வெளிவரும் எனது மலைபேச்சு நாவலுக்கும் கைவசம் சந்திதியா பதிப்பகம் அனுப்பவிருக்கும் பிரதிக்கும் நிறைய வேறுபாடுகளிருக்கின்றன. பிறர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும் எழுத்தாளன் தமது படைப்பின் முதல்வாசகனாக இருந்து திருப்தியுற்றால் அப்படைப்பு வெற்றிபெறுமென மனதார நம்புகிறேன்.

——

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள் -ஆகஸ்டு -17

பிரெஞ்சுக்காரர்கள் திமிர் பிடித்தவர்கள்:  என்பது பொதுவில் பலரின் கருத்து. குறிப்பாக ஆங்கிலேயர்களும் அவர்களைச் சார்ந்தோரும் கூறுவது. எந்த குணமும் எந்த நாட்டிற்கு சொந்தமில்லையென்பதுதான் உண்மை. திமிர் பிடித்தவர்கள் எங்கேயில்லை. எந்த இடமாக இருக்கட்டும், எதிர் தரப்பில் இருக்கின்ற ஆசாமி போதி மரத்தடியிலிருந்து எழுந்தவவனென்றே வைத்துக்கொள்வோம் நமது வினைக்கேற்ப எதிர் வினை அமையும். கொடுத்ததை பெறுவோம். பிரான்சு நாடும் விதிவிலக்கல்ல. பிரெஞ்சு பண்பாடு அல்லது சமூகம் அகம்பாவத்தை அடிப்படையாகக்கொண்டது எனவே பிரெஞ்சுக்காரர்கள் அகம்பாவம் கொண்டவர்கள் என முடிவெடுக்கவியலாது. தவிர மனிதரின் அகம்பாவ நடத்தைகள் என்பது பண்பாடு அல்லது மண் சார்ந்தது அல்ல.

ரோம் நகரில் இருக்கிறபோது ரோமானியர்களைப்போல நடந்துகொள்ளவேண்டுமென்பது ஒரு சொலவடை. இங்கே பக்கத்தில் எங்கேயேனும் மசாலா தோசை கிடைக்குமாவென புதுதில்லியில் வைத்து ஒரு சப்பாத்தி சுடும் சர்தார்ஜியிடம் கேட்டால் அவருக்கு கோபம் வருமெனில் ஒரு பிரெஞ்சுக்காரனுக்கும் அதுபோன்ற காரணத்தை முன்வைத்து கோபம்வரும். அவனிடம் உரையாடுவதற்கு ஒன்றிரண்டு பிரெஞ்சு சொற்களையாவது நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறான். உலகமெங்கும் ஆங்கிலம் பேசலாம். ஆனால் இரண்டொரு வார்த்தைகளாவது நீங்கள் பிரான்சுக்குள் பிரெஞ்சில் பேசினால் அவன் சந்தோஷப்படுவான். ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் பிரெஞ்சுக்கார்களில் பெரும்பாலோர் வாய் திறக்கமாட்டார்கள். சுற்றுலா துறை அலுவலகத்தின் திசையைக்கைகாட்டிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். இதைத் திமிரென்று நீங்கள் நினைத்தால் அது அவர்கள் குற்றமல்ல.

——————–

மொழிவது சுகம்: ஆகஸ்டு10-2012

1. வாசிப்பு எவரெஸ்டுகள்’

The millions இணைய இதழ் ‘வாசிப்பு எவரெஸ்டுகள்’ என்ற விருதுக்கு தகுதியானவையென 10 இலக்கிய படைப்புகளை பட்டியலிட்டிருக்கிறது. உலகில் இதுவரை எழுதிவெளிவந்த படைப்புகளில் கடுமையானதாகவும், எரிச்சலூட்டும்வகையிலும் இருப்பவையென தேர்வு செய்ததோடு அப்படியொரு நிலைக்கு அப்படைப்புகள் தள்ளப்பட்டதற்கான காரணங்களையும் தெரிவித்திருக்கிறது.

1. Nightwood – Djuna Barnes.
2. A tale of a Tub – Jonathan swift
3. The Phenomenology of the sprit -G.F. Hegel
4. to The light house -Virginia Woolf
5. Clarissa, or the History of a Younglady – Samuel Richardson
6. Finnegans Wke – James Joyce

7. Being and Time Martin Heidegger
8. The Faerie Queen – Edmund Spenser
9. The Making of Americans -Gertrude Stein
10.Women and Men -joseph McElroy

இப்படைப்புகள் வாசிக்க முடியாமைக்கு என்ன காரணங்கள், முதலாவது அவற்றின் எடை அதாவது பக்கங்களின் எண்ணிக்கை, வாக்கிய அமைப்பு, நடை, வடிவம், பரிசோதனை முயற்சிகள், அலைக்கழிப்பென பட்டியல் நீளுகிறது.

பிரெஞ்சு இதழொன்றில்(l’Express) இவற்றைக்குறித்து பதிவுசெய்திருக்கும் இதழாளர் அவர் நண்பர்கள் தேர்வுசெய்த அதுபோன்ற வேறு  நூல்களை பட்டியலிட்டுவிட்டு சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்:

இந்நூல்களைக் கொண்டாடுபவர்களுக்கும், கடுமையான விமரிசனங்களை வைப்பவர்களுக்குமிடையே உள்ள பொதுவானதொரு ஒற்றுமை இருதரப்பினருமே அந்நூல்களை முழுமையாக வாசித்தவர்களல்ல, என்பது அவற்றிலொன்று. உண்மையில் இந்த எவரெஸ்டுகளில் ஏறியவர்கள் அதாவது பொறுமையோடு வாசித்தவர்கள்  நிறைகுறைகளை வாய்திறந்து சொல்வதில்லையாம்.

இறுதியாக அவர் கிண்டலாக முன்வைக்கும் யோசனை:

உங்கள் நூல் வாசிக்கப்பட்டு புகழ்பெறவேண்டுமெனில் நூறுபக்கங்களில் செறிவாக எழுதுங்கள், வாசிக்கப்படாமல் புகழ்பெறவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களில் எதைவேண்டுமானாலும் எழுதுங்கள்.

http://www.publishersweekly.com/pw/by-topic/book-news/tip-sheet/article/53409-the-top-10-most-difficult-books.html

—————————

2. ஒலிம்பிக்கில் தங்கத்தை அள்ளிக்கொண்டு வர சில யோசனைகள்.

இரு தினங்களுக்கு முன்பாக தொலைபேசியில் அழைத்த நண்பர், ” பார்த்தீர்களா இந்தியாவிற்கு 44 பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன”, என்றார். எனக்கு வியப்பு. நன்றாகத் தெரியுமா? எப்படிச் சொல்கிறீர்கள் என விசாரித்தேன். ஏனென்றால் அன்றையதினம் காலையில் நான் வாசித்திருந்த தினசரியின் தகவல், நண்பர் தெரிவித்ததோடு பொருந்தாமலிருந்தது. ஒருவேளை இந்தியர்களுக்கு ஒலிம்பிக் கமிட்டி செய்த அநீதிகண்டு சகித்துகொள்ளாத கலைஞர் வெகுண்டெழுந்து ஒலிம்பிக் கமிட்டிக்கு முன்னால் உண்ணாவிரதம் இருந்திருப்பாரோ, அவர்களும் பயந்து வேண்டாம் வம்பென இருந்த பதக்கங்களை  கொடுத்திருப்பார்களோ என நினைத்தேன். என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் தீவிர இந்திய அனுதாபி. அப்துல் கலாம் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு உரையாற்றவந்தபோது கதர்வேட்டி கதர்சட்டை, கையில் தேசிய கொடி எனக் காட்சியளித்து ஆச்சரிய படுத்தியவர். எனவே எதையாவதுகூறி நண்பரின் உற்சாகத்தில் மண்ணைப்போட நான் தயாரில்லை. அவர் அனுப்பியிருந்த இணைப்பை திறந்து பார்த்தபோது இந்தியா பதக்க வரிசையில் 44வது இடத்தில் இருந்த செய்தியை அவர் முழுமையாகப் பார்க்கவில்லை என்பது விளங்கிற்று.

உலகிலேயே வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள்,  எண்ணிக்கையில் இந்தியாவில் அதிகம். உறங்க இடமின்றி சாலைகளிலும் பொதுவிடங்களிலும் படுத்துறங்குவர்களையும், பெருநகரங்களைலுள்ள சேரிகளையும் பார்க்கிறபோது அச்சமாக இருக்கிறது. அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இந்தியாவில் 130 மில்லியன் குடும்பங்களில் சுகாதாரமான கழிவிட வசதிகளின்றி இருப்பதாக கூறியிருக்கிறார். இவற்றைக்காட்டிலும் எல்லோருக்கும் கைத்தொலைபேசி முக்கியம் என்பதையுணர்ந்து அரசு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. பொருளாதாரத்தில் நாங்கள் இளைத்தவர்களல்ல என்ற பெருமை. சரிந்துகொண்டிருக்கும் உலகப்பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தப்போவதாக சொல்லிக்கொண்டு BRICS அமைப்பில் ஓர் அங்கம். அண்மையில் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய மக்கட்தொகை 1.2 மில்லியன். உலக மக்கட் தொகையில் இந்தியா இரண்டாவாது இடம். மக்கட் தொகையில் முதலிடத்திலிருக்கும் சீனா தமது தகுதியைக் காப்பாற்றிக்கொள்ள பதக்கப்பட்டியலில் முதலிடத்திலோ அல்லது இரண்டாவது இடத்திலோ இருக்கக்கூடும். நமது இடம் என்னவென்று தெரிந்ததுதான்.

உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான இந்தியர் லட்சுமிமிட்டெல் இந்தியர்களின் முன்னாள் சாதனையை(?) மனதிற்கொண்டு தமது 8 மில்லியன் பவுண் முதலீட்டில் ஒர் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இந்திய விளையாட்டை உற்சாகப்படுத்தபோவதாக கூறியிருந்தார். அதன் பலன் ஒலிம்பிக்கில் எதிரொலித்ததாகத் தெரியவில்லை, மனுஷன் முகவரி தெரியாமல் கல்மாடி ஆட்களிடம் கொடுத்திருப்பாரோ?

ஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்காதது உங்கள் எல்லோரையும்போல எனக்கும் குறையாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் இதுவரை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப்பிறகு இங்கிலாந்தில் நடக்கிற ஒலிம்பிக்கிலேயே அதனைச் சீண்டுவாரில்லையெனில் இனியும் கனவுகாண இயலாது. வேறு சில விளையாட்டுகளை இந்தியாவின் சார்பில் முன்வைக்கலாம்.  நமக்கென்று சில விளையாட்டுகளில் திறன்கள் இருக்கின்றன அதை ஒலிம்பிக்க்கில் சேர்க்க முயற்சிகள் வேண்டும். எனது யோசனைகளை இந்திய அரசாங்கமோ அதன் விளையாட்டுத்துறையோ கணக்கில் எடுத்துக்கொள்ளுமாவெனத்தெரியவில்லை. நமது பத்திரிகையாளர்கள் சிலர் ஒபாமாவுக்கு, இஸ்ரேலுக்கு என கட்டுரைகள் எழுதுவதில்லையா. அதே தைரியத்தில் இதனை எழுதுகிறேன்.

1. ஊழல் விளையாட்டு. ஒவ்வொரு வருடமும் இந்தியா சிபிஐ அதிகாரிகளின் துணைகொண்டு திறமைசாலிகளைத் தேர்வு செய்து நான்காண்டுகாலம் திகார்சிறை அனுபவசாலிகளைக்கொண்டு பயிற்சி அளிக்கவேண்டும். பிறகு ஒலிம்பிக்கில் இவ்விளையாட்டை ஏற்குமாறு வற்புறுத்தவேண்டும்.  தங்கம் நிச்சயம் உண்டு

2. துப்பாக்கிச் சுடுதல்: என்கவுண்டர் புகழ் காவல்துறை வீரர்கள் இந்தியாவெங்கும் இருக்கிறார்கள். சுடும் தூரத்தையும், பலி ஆசாமிகளையும் இந்தியாவே தீர்மானிக்கும் என்கிற உபநிபந்தனையுடன் அனுப்பிவைக்கலாம்.

3. இரு சக்கரவாகன குடும்பி விருது. புதுச்சேரியில் இரு சக்கரவாகனத்தில் மனைவி, பிள்ளைகள், சுமைகளென ஏழெட்டுபேருடன் பேலன்ஸ்செய்து அநாயசமாக வாகனம் ஓட்டுக்கிற வீர விளையாட்டும் ஒலிம்பிக்கிற்கு ஏற்றது, தங்கத்தை எதிர்பார்க்கலாம்.

4. சாலைமறியல் விளையாட்டும் முக்கியமானது. திடீர் திடீரென்று சாலையில் கட்டுப்பாடுடன் உட்காருவதும், கலைவதும், போலீஸாரிடம்  விவாதிக்கும் ஒழுங்கும் உலக அளவில் புகழ் சேர்க்ககூடிய விளையாட்டு.

5. கால தாமத விளையாட்டு. இந்தியாவில் எதையும் காலதாமதத்துடன் தொடங்குகிற செய்கிற அனுபவங்கள் நமக்கு நிறைய. இவ்விளையாட்டின்படி பார்த்தால் பெரும்பாலான பந்தயங்களில் அவ்வளவு தங்கமும் நமக்கே.

————————————————-