எழுத்தாளன் முகவரி -8

புனைவும் -உண்மையும்

பிரெஞ்சு மொழியியல் அறிஞர்  ரொலான் பர்த் (Roland Gerard Barthes)  ‘ Ecrivain, Ecrivant. என படைப்பாளிகளை இருவகையாக பிரிக்கிறார்.

Écrivantஎன்பவர்களை கட்டுரையாளர்கள் எனபொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் தரும் விளக்கத்தின்படி கட்டுரையாளர்களுக்கு  மொழி ஒரு கருவி. அம்மொழியின் பணி நடந்தவற்றிற்கு தாங்கள் சாட்சி என்பதை பிறருக்கு உணர்த்துவது, அறிந்தவற்றைப்  பிறருக்கு விவரிப்பது, உற்ற ஞானத்தை பிறருக்கு போதிப்பது. இப்பணியிற் பெரிதாய் நாம் கொண்டாட ஒன்றுமில்லை. பார்த்தை பொறுத்தவரை இங்கே மொழி செயல்பாடற்றது

Ecrivain என்றால் தமிழில் படைப்பாளிகள் என பொருள் கொள்ளலாம். ரொலான் பர்த் பார்வையின் படி படைப்பாளிகள் மொழி தகவலைச் சுமப்பதோடு பிற பணிகளையும் செய்கிறது.  சொல்லப்படும் தகவலும் ஐயப்பாடுடையதாக அதாவது இருமுடிவிற்கு வழிகோலுகின்றவகையில் அமையவேண்டுமென்கிறார். தீர்க்கமான ஒரு முடிவைச்சொல்கிறபோதுகூட தொடர்ந்து கேள்விக்கு ஆளாகிற ஒரு முடிவாக அது அமையவேண்டுமென்பது பர்த் முன் வைக்கும் யோசனை.

ரொலான் பர்த் கருத்தின் அடிப்படையில் எழுத்துக்களை இருவகையாகப் பிரிக்கின்றனர்: முதலாவது தகவலைத் தெரிவிக்க எழுதுவது; இரண்டாவது படைப்புக்கென எழுதுவது.

தகவலைத் தெரிவிக்க எழுதுதல் என்று சொல்கிறபோதே, ஓரளவிற்கு அவ்வெழுத்தின் செயல்படும் விதத்தை ஊகிக்கலாம். இங்கே மொழியின் பணி சம்பந்தப்பட்டத் தகவலைக் கொண்டு சேர்க்கும் வாகனம் -பொதி சுமக்கும் கழுதை- தகவலைக்கொண்டு சேர்க்கும் பணியில் மொழியின் சேவையை ஒரு கழுதையின் இடத்தில் வைத்தே பார்க்கிறோம். கொஞ்சம் கடுமையான சொல்லை இங்கே மொழிக்கு உவமைப்படுத்தியிருந்தபோதிலும் அதில் உண்மையில்லாமலில்லை. சமையற் குறிப்பு, அறிக்கைகள். நித்யா டிஸ்மிஸ் என்று தூயதமிழில் எழுதும் திமுக குடும்ப ஏடு, டெங்கு சுரம் வராமல் தடுக்க  கொசுவை விரட்டி பிடியுங்கள் என அமைச்சர் தரும் யோசனை, கற்பில் சிறந்தவள் சீதையா? மண்டோதரியா? என்பதுபோன்ற சிகாமணிகளின் கட்டுரைகள் அனைத்தும் தகவலைத் தெரிவிக்கும் எழுத்துக்கள் அதாவது ரொலான் பர்த் மொழியில் சொல்வதெனில் ‘Ecrivant’.

படைப்பு எழுத்துக்கள்: இங்கேயும் சொல்வதற்கு விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை சொல்கிறவர் கொஞ்சம் சுவாரசியமாகச் சொல்லவேண்டுமென்று நினைக்கிறார். எழுதுபவர் உண்மையை சொன்னால்போதுமென்று நினைப்பதில்லை கொஞ்சம் பொடிவைத்து பேசுகிறார். அப்படி பேசுவதற்குச் சில கற்பனை பாத்திரங்களை படைக்கிறார்.கற்பனை காட்சிகளையும் தீட்டுகிறார். நல்ல வாசகன் அமைந்தால் பொருள், தொனி, அழகு, சந்தம் அவ்வளவையும் பெறலாம். இவ்வெழுத்திலும் பிறவிடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் இருந்தபோதிலும், எழுதுபவர் சுயசிந்தனையிற் புதிதாக உதித்ததைச் சேர்த்து அவ்வெழுத்துக்கு மெருகூட்டுகிறார். தாம் கற்பனையில் எழுப்பிய உலகத்தில் தமது விருப்பத்துக்குகந்த மனிதர்களை நடமாடவிட்டு அவர்களை நாமென்கிறார். கவிஞனாக இருப்பபன் கவிதையில் நாம் இதுவரை அறிந்திராத காட்சியைத் தீட்டுகிறான்; சொல் புதிது பொருள் புதிது என்கிறான். ஓர் தத்துவவாதி, புதிதாய் ஒரு தத்துவத்தைக்கூறி நம்மைச் சிந்திக்க வைக்கிறான். படைப்பு என்றவகையில் உருவாகும் எழுத்துகள் சென்ற தலைமுறை ஞானத்தை பேணுவதோடு வரும் தலைமுறை உயர்விற்கும் உதவுகிறது.

மேற்கண்ட இரண்டையும் வேறு சொற்களில் சொல்வதெனில் ஒன்று ஆவணம் மற்றது இலக்கியம்: புனைவு, அபுனைவு. பிரெஞ்சில் முன்னதை
‘நடை’ யென்றும் பின்னதை ‘நாட்டிய’ மென்றுங்கூட ஒப்பிடுவதுண்டு.

நடையை எடுத்துக்கொள்ளூங்கள். தகவலைப்போன்றே அது தெளிவானது. புறவுலகோடு தொடர்புடையது. ஒரிடத்தில் தொடங்கி இன்னொரு இடத்தில் முடிந்துவிடும். ஏதாவதொன்றை சுமக்கும் பணி அதற்குண்டு. நடையில் நிதானமிருக்கலாம் அவசரமிருக்கலாம், நேர்த்தியாய் அழகாய் நடக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தகவலைத் தெரிவிக்கும் மொழியின் பணியும் நடையை ஒத்ததே.  சொல்லவேண்டிய கருத்தை ஒரு முனையிலிருந்து சுமந்து சென்று அடுத்த முனையில் இறக்கிவைத்துவிட்டதெனில் மொழியின் பணிமுடிந்தது. ஆனால் நடனம் அப்படிப்பட்டதல்ல, கைகளும் கால்களும் பிறவும் நளினமாக இயங்கவேண்டும். நடனமாடுகிறவர் தமது நாட்டியம் நேர்த்தியாக அமைய வேண்டுமென்பதில் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார். நன்றாக ஆடினால் கூடுதலாகக் கூட்டம் வருமென்பதும் சம்பாதிக்கமுடியுமென்பதும் உண்மைதான் ஆனால் ஆடும் கலைஞனுக்கு அது முதன்மையான நோக்கு அல்ல. தவிர முடமல்லாத மனிதர் யாராயினும் நடக்கலாம் ஆனால் நடனமாட ஞானம், உழைப்பு,பொருத்தமான உடல் என்று பலவிழுமியங்கள் தேவைப்படுகின்றன.

எனினும் ஓர் எழுத்தை அல்லது படைப்பை தெள்ளத் தெளிவாக மேற்கண்டவகையில் இரு பிரிவுக்குள் அடக்கவியலாது. கட்டுரையைக்கதைபோல சொல்லவும், கதையைக் கட்டுரைபோல எழுதவும் செய்கிற ஆசாமிகளைப்பார்க்கிறோம். வராலாற்றாசிரியர்களே சார்பற்று, சமநிலையில் சொல்ல வாய்ப்பில்லை என்கிறபோது பிறவற்றை புனைவுகளாக சொல்லலாம் தவறில்லை. தகவலைத் தெரிவிக்கிற  விளம்பரங்களைக்கூட நேர்த்தியாகவும் கலைநயத்துடனும் சொல்லத்தவறினால், செய்யப்படும் விளம்பரத்திற்குரிய பலன் கிட்டுவதில்லை.

இன்றைய எழுத்துக்களை Fiction என்பதைக்காட்டிலும் Faction என்று சொல்வதுதான் பொருந்தும். கட்டுரை எழுதும்போதுகூட கதை சொல்லும் திறனை கலவுங்கள். அவ்வாறே புனைவில் கட்டுரைக்குரிய நம்பகத் தன்மை ஏற்படுத்தித்தரும் உண்மையைக் கலவுங்கள்.

எனது இரண்டாவது நாவல் மாத்தாஹரி. முதல் உலகப்போரின்போது அவள் பெயர் பிரசித்தம். பரத்தையென்று விமரிசிக்கப்பட்டவள். பிரெஞ்சு அரசுக்குப் பெண் உளவாளியாகப் பணியாற்றியவளை பின் நாளில் பிரெஞ்சு அரசு தண்டித்துக் கொலைசெய்தது. புதுச்சேரியிலிருந்து கனவுகளுடன்  பாரீஸ¤க்கு திருமணமாகிவரும் பெண்கள் அநேகரின் வாழ்க்கை இன்னல்களை ஓரளவு அறிந்திருந்தேன். நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூரில் ஒரு புதுச்சேரி பெண் தீக்குளிக்கவும் செய்தாள்.  நான் இளைஞனாக இருந்த காலத்தில், புதுச்சேரியில்எனக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் பவானிபோன்றே பெண்ணொருத்தியிருந்தாள். அவள் அறிவுக்கும் அழகுக்கும் வாய்த்தவனோ எல்லாவற்றிலும் நேரெதிர். இந்த உண்மைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி புனைவாகச் சொல்லவேண்டுமென்று விரும்பினேன்: பவானி உருவானாள். பலரும் இன்றைக்குப் மாத்தாஹரி கதையில் வரும் பவானியை உண்மையென்றே நம்புகிறார்கள். அப்படியொரு நம்பகத்தன்மையை வாசக நண்பர்களுக்கு உருவாக்கியிருந்தேன்.

உண்மையையும் புனைவையும் சரியான விகிதத்தில் கலந்து வெற்றிபெற்ற படைப்பாளிகள் நிறைய பேருண்டு. தமிழில் ரா.சு நல்லபெருமாளின் ‘போராட்டங்கள் சிறந்த உதாரணம். சார்லஸ் டிக்கன்ஸ¤டைய நாவல்கள் அனைத்துமே அப்படிப்பட்டவையெனலாம். லியோ டால்ஸ்டாயும், ஸ்டெந்த்தாலுங்கூட அதை நன்றாகவேச் செய்தார்கள். அனுபவங்களென்று  நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திப்பவைகள் புனைவுகளுக்கு உதவக்கூடும். உண்மைக்கூறுகளை கற்பனை மெருகேற்றிச்சொல்லும் திறன் உங்களுக்கிருந்தால் கதைசொல்லலில் நீங்கள் தேர்ந்தவர். கணவன் அல்லது மனைவியைச் சந்தேகிக்கும் தம்பதி; “எதிர் வீட்டுபெண்ணைப் பார்த்தியா!” எனக் கேள்வியையும் கேட்டு அதற்குப் பதிலையும் சொல்வதுபோல, அப்பெண் வெளியில் போனதில் ஆரம்பித்து வீடு திரும்பும் வரை நேரில் கண்டதைப்போல சொல்லத்தெரிந்த பெண்மணி; தொலைபேசியை எடுத்ததுமே புலம்புகிற மனிதர்கள் இவர்களெல்லாங்கூட கதை சொல்வதில் தேர்ந்தவர்கள்தான். ஆனால் இவர்களிடமுள்ள பிரச்சினை நாக்கு புரளும் அளவிற்கு விரல்கள் (உட்கார்ந்து எழுத )  ஒத்துழைப்பதில்லை.

உண்மையைப் புனைவில் கலப்பதென்பதென்பது ஒரு வித தொழில் நுட்பம். உண்மை புனைவென்ற இரு இழைகளையும் சேர்த்து திரிப்பதன் இலக்கு, கதைக்கு நேர்த்தியையும், கதைமீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தித்தருகின்ற வகையில் புனைவுக்கொரு நம்பகத் தன்மையை ஏற்படுத்தித் தருதல்.

———————————————————

இரண்டு நிகழ்வுகள்

1. பாரீஸில் கம்பன் விழா

பிரான்சு கம்பன் கழகமென்கிறபோது சட்டென நினைவுக்கு வரக்கூடிய கம்பன் கழகத்தலைவர் கி.பாரதிதாசன் மொழிக்காக உண்மையில் உழைக்கும் நண்பர். பலமுறை பாரீஸில் தங்கட் சொந்தப்பணத்தை தமிழுக்காக செலவிடும் நண்பர்கள் பெயர்களை ஏற்கனவே பதிவுசெய்திருக்கிறேன். அவர்களில்  பாரதிதாசன் முதன்மையானவர். பதினோறாவது ஆண்டாக கம்பன் விழாவை நடத்துகிறார். சென்னையிலிருந்து வழக்குரைஞர் த. இராமலிங்கம் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.

நாள்:-11- 11-2012 நேரம் பிற்பகல் 2மணிமுதல் – இரவு 8.30வரை
இடம்  L’Espace Associatif des Doucettes, Rue du Tiers, 95140- Garges Les Gonesse
————————————–

2. Salon du Livre sur L’Inde

பாரீஸிலும் புதுச்சேரியிலும் விளம்பரமின்றி, பிரெஞ்சு மொழியூடாக இந்தியாவையும், தமிழ்மொழியையும் ஐரோப்பியரிடையே கொண்டு செல்லும் பணியை அயராமற் செய்கிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.  திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, குரோ, முருகையன், முடியப்பநாதன், மதனகல்யாணி, வெ.சுப. நாயகர், கோபாலகிருஷ்ணன் என நீண்டதொரு பட்டியலை வாசிக்கமுடியும். இவர்கள் அசலான கல்விமான்கள். நிலைய வித்துவான்கள் கச்சேரியில் கலப்பதில்லை. அவர்களில் ஒருவர் திருவாளர் துக்ளாஸ் கிரெஸ்ஸியெ (Douglas Gressieux).

திரு துக்ளாஸ் கிரெஸ்ஸியெ ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். அவருடைய Les Troupes Indiennes en France கட்டாயம் வாசிக்கப்படவேண்டியது. புதுச்சேரியில் பிறந்தவர்.  பிரெஞ்சுக்காரராக இருந்தாலும் தமிழை நன்கு பேசுகிறார். இவருடைய தந்தை புரட்சிக்கவி பாரதிதாசனின் நண்பர் என்பதை பெருமையோடுக் குறிப்பிட்டார். அவரது சங்கத்தில் இந்தியாவைப்பற்றிய ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சில் வெளிவந்த அரிய நூல்களின் தொகுப்பாக நூலகத்தை நடத்திவருகிறார். பத்தாயிரத்துக்குமேற்பட்ட நூல்கள் உள்ளன. புதுச்சேரியைப்பற்றி ஆய்வுநோக்கில் அறியவிரும்புவர்களுக்கு இந்நூல்கள் பெரிதும் உதவக்கூடும்.

துக்ளாஸ் உடைய இந்திய அமைப்பான L’Association les Comptpires de l’Inde என்கிறச் சங்கம் எதிர்வரும் 18, 19தேதிகளில் பாரீஸில்

2eme Salon Du Livre Sur L’Inde என்ற நிகழ்வை இரண்டு நாட்கள் நடத்துகிறது. நிகழ்வின்போது விவாதங்களும் உரையாடல்களும் இந்தியக் கலை,இலக்கியம், பண்பாடு என்றபொருளில் நடக்கவிருக்கின்றன. பிரெஞ்சு ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக அறிஞர்பெருமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

Salon du Livre sur l’Inde
Nov.17-18- 2012
Mairie du 20e – 6, Place Gambetta-Paris
———————————————————————————————————

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

சந்திப்பும் இருநோக்கும்....

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக ஏங்கும் மனிதர்கள் வேறெவரேனும் உலகில் இருப்பார்களா? கடந்த வெள்ளியன்று பாரீஸில் நண்பர் ஒருவர் மகளின் திருமண வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். புதன்கிழமையன்றே பாரீஸ் புறப்பட்டாயிற்று. பிரான்சு நாட்டில் ஓரளவு எனது நட்புவட்டம் என்பது பெரிதும் பாரீஸில் வசிக்கும் நண்பர்களைச் சார்ந்தது. அவர்களில் பலரும் தமிழ்ச் சங்கங்களை ஏற்படுத்தி நடத்திவருபவர்கள். அவர்களில் ஒரு சிலருடன் நெருக்கமாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று அப்படியில்லை. ஏற்பட்ட இடைவெளிக்கு அல்லது சந்திப்பு தாமதத்திற்கு ஒருவகையில் இரு தரப்புமே பொறுப்பேற்கவேண்டும்.

மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு உயிருக்குச் சுவாசம்போல. தினசரியும், தொலைக்காட்சி பெட்டிகளும், வலைத்தளங்களும் இல்லாத காலங்களில் சந்திக்கிற மனிதர்களின் எண்ணிக்கையும் கூடுதலாக இருந்தன. எங்கள் கிராமத்தில் தேனீர்க்கடையில் அறுவடை முடிந்தகாலங்களிலும், வயல்வெளி வேலைகள் அதிகரிக்கிறபொழுது பிற நேரங்களிலும் கூடுவார்கள். தேனீர்க்கடைகள் தவிர்த்து சிலர் வீட்டுத் திண்ணைகளும் உபயோகத்திற்கிருந்தன. இச்சந்திப்பின் போது ஒருவரையொருவர் உறவுமுறைவைத்து விளித்துக்கொள்வார்கள். இவர் அவரை மாமா என்பார், அவர் இவரை ‘இல்லை மச்சான்’ என மறுதலித்துப் பேசுவார். பேசப்படும் பொருள் அவர்கள்வாழ்க்கையின் அன்றையதின குறுக்கீடுகளை நினைவூட்டுவதாக அமையும். தெற்குவெளிக்கு தண்ணீர் எட்டமாட்டேங்குது, நட்ட நடவு நாலு நாளா தண்ணீர்வரத்தின்றிகாயுது, உரக்கடைக்குப் போயுட்டுவந்தேன், யூரியா வர ஒரு வாரமாகுமாம்’, இப்படி அப்பேச்சு அமையும். இத்திண்ணைபேச்சும், உறவின் முறையும் அவர்கள் அடிப்படையில் உள்ளூர் விவசாயிகள் என்ற சரடால் உருவானது. அதிலொரு விவசாயிக்குப் பார்த்தவிவசாயம் போதும், நெல்லை வாங்கி அவித்து, அரைத்து அரிசியாக குப்பங்களுக்குக் கொண்டு சென்று விற்று சிறிது பணம் பார்க்கலாமென எண்ணம் வந்ததெனில் அன்று முதல் அவ்விவசாயியின் சந்திப்பும் நட்பும் அவரைப்போன்று தொழிலில் ஈடுபடும் மற்றொரு மனிதரிடம் என்றாகிவிடுகிறது. ஆக வாழ்க்கை உறைந்து போய்விடுவதில்லை. கடலைச்சென்றடையும்வரை, கடக்க வேண்டியவைகளை கடந்தே ஆகவேண்டும்.

பிரமிப்பாக இருக்கிறது, பிறந்ததுமுதல் சந்தித்த மனிதர்கள்தான் எவ்வளவுபேர்? குடும்பம், உறவுகள், வீட்டுத் திண்ணைகள், கூடங்கள், பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், பருவகால நண்பர்கள், அலுவலகங்கள், திருமண மண்டபங்கள் கடைகள், பயணங்களில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள்… இவர்களில் எத்தனைபேரை நட்பின்பேரால் இன்றும் சுமக்கிறோம் சந்திக்கிறோம், உரையோடுகிறோம், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறோம், துன்பத்தை இறக்கிவைக்கிறோம். எங்கள் கிராமத்து நெல் வியாபாரிபோல நேற்றுவரை என்னோடிருந்த மனிதர் பலரை இழந்திருக்கிறேன். வினை சார்ந்து, உரிப்பொருள் அல்லது கருப்பொருள் சார்ந்து சந்திப்பில் இடம்பெறும் பங்குதாரர்கள் வேறாக இருப்பார்களென்பது வாழ்க்கைப் பயணம் போதிக்கும் அறம்.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்கள் குறிப்பிட்ட இடத்தில் எதேச்சையாக அல்லது ஏற்கனவே தீர்மானித்தபடி கூடுவது சந்திப்பு. இச்சந்திப்பிற்கு பங்கேற்கிறவர்களின் பொதுநலன் மையமாகவிருக்கலாம். அவரால் இவருக்கும் இவரால் அவருக்கும் ஏதேனும் பலன்களிருக்கலாம். இரகசியமாக அல்லது பிறர் அறியவந்தால் பாதகமில்லை எனச்சந்திக்கிறவர்கள் ஒருபுறமெனில் மூன்றாவது நபரை சீண்டவேண்டுமென்பதாக அல்லது அவரது நித்திரையைக்குலைக்க வேண்டுமென்பதற்காகச் சந்திக்கிறவர்களுமிருக்கிறார்கள். அண்மையில் சில தே.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டு முதலைமைச்சரைச் சந்தித்ததைப்போல. விளம்பரத்திற்காகவும் சில சந்திப்புகள் நிகழ்வதுண்டு. டெசோ தீர்மானத்தை கோட்டு சூட்டுடன் தி.மு.க புள்ளிகள் ஐநா துணைக்காரியதரிசியை ஓர் ஐந்து நிமிடம் தயவுபண்ணச்செய்து சந்தித்தது (ராஜபக்ஷே வயிற்றில் புளியைகரைக்க அல்ல அவர் கல்லுளிமங்கனென்று தி.மு.க தலைவர் நன்றாகவே அறிவார்.  வேண்டுமானால் மத்திய ஆளும் காங்கிராஸாருக்கு எரிச்சலூட்டவென்று கருத இடமுண்டு) எதிர்காலத்தில் காங்கிரஸ¤க்கு எதிராக ஓர் அணியை ஏற்பாடு செய்யவந்தால் தமிழ்த் தேசியவாதிகளை வளைத்துப்போட கையாளும் தந்திரம். கூடுதலாக ஊசிப்போன பண்டத்தை சொந்த ஊடங்களில் கூவியும் விற்கலாம். இனி எதிர்வரும் தேர்தலுக்கு முன்பாக மரியாதை நிமித்தமாக கருணாநிதி, வைகோ, ராமதாஸ் சந்திப்பு நிகழலாம்.

தமதிருப்பின் மீது நம்பிக்கைவைத்து உறைந்த இரு உயிர்களை இளக்கி ஒன்றிணைத்து இயங்கச் செய்வது சந்திப்பு என்பது உளவியலாளர்கள் கருத்து. சமுதாய ஒழுங்கமைவு, சமூகக் கட்டுமானம், சமூக இயக்கம் என பல வழிநடத்தல்களுக்கு சந்திப்புகள் உதவியாயிருக்கின்றன. எவ்வகையான சந்திப்புகளிலும் முதல்சந்திப்புக் கிளர்ச்சியூட்டக்கூடியவைகளாகவும், ஆவலும் எதிர்பார்ப்புமாக அலைக்கழிக்கவும் செய்யும். காதலன் காதலி சந்திப்பு, தம்பதிகளின் முதலிரவு, உத்தியோகத்திற்கான நேர்முகத் தேர்வு… ஆகியவை உதாரணத்திற்கு இருக்கின்றன. இச்சந்திப்புகளில் கள்ளம் கலக்கிறபோது கூடுதலாக போதைதருமோ என்னவோ பங்குதாரர்களில் எளிதில்சுயமிழந்துபோகிறார்கள். சில நேரங்களில் சந்திப்பு மௌனியின் மனக்கோட்டை மனிதர்களைப்போல நம்மைக் கடந்து முன் சென்று என்றோ நம்மைக் கண்டதை நினைவுகூர்ந்து “என்னப்பா சௌக்கியமா?” என விசாரிக்கலாம். ஒருவர் “உன்  சிரிப்பு கூட மாறிவிட்டது”, எனலாம். மற்றொருவர், நேற்றுகூட நாங்கள் சங்கரைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உன் நினைவுகூடவந்து, உன்னைப்பற்றியும் பேசினோம்” எனச் சமாளிக்கலாம். சந்திப்புகளில் சில சலவைக்குறிகளாகும் அதிசயமிது.

சந்திப்பு என்பது இருமனிதர்களுக்கிடையேயானதாக இருக்கவேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருக்கிறதாவென்ன?

பாரீஸ¤க்கு வருகிறபோதெல்லாம் அவளைச்சந்திக்கிறேன். சந்திப்பின் இலக்கணங்களில் 90விழுக்காடுகள் பொருந்துகின்றன. என் மகன் வீட்டிலிருந்து பாரீசின் பிறபகுதிகளுக்கு பயணிக்கிறபோது நிகழ்கிறது. Cite Universitaire என்ற இரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த ஐந்தாண்டுகளாக வெயில், மழை, பனியென காலங்களை வென்று அவள்  எனக்காகக்காத்திருக்கிறாள். சந்திப்பின் முடிவில் பங்குதாரர்கள் எதிர்பார்ப்புகள் சமதளத்தில் வைத்து திருப்தியுறக்கூடியவை என்ற விதி எங்கள்வரையில் சரியாதென்பதென் அனுமானம். ஒரே ஒரு குறை அவள் ஊர்பேர் தெரியாத ஓவியன் கிறுக்கிய கிரா·பிட்டி எனும் சுவரோவியம். தற்போதைக்கு அவள் ஆயுட்காலம்வரை எங்கள் சந்திப்புகள் தொடரலாம். குறள் சொல்வதுபோல, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது”.

—————————————————————————

கவனத்தை ஈர்த்த கவிதை நவம்பர்-2012

சந்திப்பு…
– தேனம்மை இலட்சுமணன்

ஒரு உறவு ஏற்படும்போதே
அதிலிருந்து விலகிப்
பார்ப்பதான சிந்தனையும்
தோன்ற ஆரம்பிக்கிறது.

எந்நேரமும் பிரியலாம்
என்ற அணுக்கத்தோடே
பகிரப்படுகிறது எல்லா
சொந்த விஷயங்களும்

இந்நேரத்தில் இன்னதுதான்
செய்து கொண்டிருக்கக்கூடும்
என்பது தெரியும் வரை
தொடர்கிறது பேச்சு.

ஏன் பேசுகிறோம்
எதற்கு சந்திக்கிறோம்
என்ன உண்கிறோம் என்பது
சிந்தனைக்கு உரியதாயில்லை.

முதல் முதல் ஏற்பட்ட
ஒரு சந்திப்பு மட்டுமே
வித்யாசமாய் இருந்ததால்
நினைவில் இருக்கிறது.

அடுத்தடுத்து நட்பும் பிரிவும்
சகஜமாகிப்போவதால்
எல்லாமே ஒரு
சாதாரண விஷயமாகிறது.

ஆனாலும் முதல் சந்திப்பின்
ஆவலும் சந்தித்த பின் நீர்ப்பும்
புரையேற்றிக் கொண்டேயிருக்கிறது
திரும்பச் சந்திக்கும் ஆவலை.

எல்லா சந்திப்புகளையும்
தூக்கிப்போட்டுவிட்டுப்
போகச் சொல்கிறது
யதார்த்த வாழ்க்கை.

ஏதோ ஒன்று இனிமையைத்
தூண்டிக்கொண்டே இருப்பதால்
இன்னும் விட்டுப் போகாமல்
தொடர்கிறது சில சந்திப்பு.

-திண்ணை இணைய இதழில் 25-9-2011 அன்று பிரசுரமான கவிதை.

http://honeylaksh.blogspot.fr

—————————————–

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்- குளிர்கால நேரம்

கடந்த சனிக்கிழமை இந்தியாவிற்கும் பிரான்சுக்குமான நேர இடைவெளி மூன்றரை மணி நேரமாகவிருந்தது நேற்றைய தினத்திலிருந்து அது நான்கரை மணி நேரமாக கூடியிருக்கிறது. என்ன நடந்தது? பிரான்சு நாட்டில் நேற்று அதிகாலை மூன்றுமணி எனக்காட்டிக்கொண்டிருந்த முட்களைத் திருத்தி இரண்டு மணிக்குக் கொண்டு போனதால் இந்த மாற்றம்.

ஒவ்வொரு வருடமும் கோடையில் ஒரு மணிநேரத்தைக் கூட்டுவதும், குளிர்காலத்தில் ஒரு மணி நேரத்தை குறைப்பதும் வழக்கமாக நடப்பதுதான். பிரான்சு என்றில்லை உலகில் அநேக நாடுகளில் இவ்வழக்கம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனக்குத் தெரிந்து மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் (ரஷ்யா நீங்கலாக). வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் ஒரு சில நாடுகளில் இவ்வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது ஆப்ரிக்க நாடுகளில் மொராக்கோவிலுண்டு, இஸ்ரேல் ஈரான் நாடுகளிலுமுண்டு.

இந் நேரமாற்றத்திற்கு முக்கியமான காரணம் பகற்பொழுதைக் குறிப்பாக குளிர்காலத்தில் கூடுதலாகப்பெறவேண்டும். இலையிதிர் காலத்தில் ஆரம்பித்து குளிர்காலம்வரை பகற்பொழுதைக்காலை ஒன்பதுமணிக்கு புலர்ந்தும் புலராமலும் தொடங்குவதும் மாலை நான்குமணிக்கெல்லாம் இருட்டத்தொடங்குவதும் காரணமாக இருக்கலாம். இந்தியாவில் அதிகம்பார்த்திராத சாம்பல் நிறவானத்தை இலையுதிர்காலம் தொடங்கி குளிர்காலம் முடியக் காணலாம்.

பகற்பொழுதைக்கூடுதலாகப் பெறும் நோக்கில் எடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை  2ந்தேதி ஒரு மணி நேரத்தை கூட்டிவைத்து ஆரம்பித்துவைக்கிறார்கள் பிறகு அவ்வருடத்திலேயே அக்டோபர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒருமணிநேரத்தை குறைத்து முடிக்கிறார்கள்.
——————————–

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்: SOLDES

 

தமிழ்நாட்டில் குறிப்பாக ஆடித்தள்ளுபடி, பண்டிகைக்கால விசேடத் தள்ளுபடி என விளம்பரங்களைப் பார்க்கிறேன். பிரான்சுநாட்டில் பண்டிகைக்கால விசேடத் தள்ளுபடியென்று எதுவுமில்லை. வருடத்தில் இரண்டுமுறை குளிர்காலத்தில் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தொடங்கி பிப்ரவரி இரண்டாவது வாரம்வரை அதிகபட்சம் மூன்று வாரங்களும், கோடையில் ஜூன் ஜூலை ஆகஸ்டுமாதங்களிலும் நடைபெறும். பிரதேசங்களைப் பொறுத்து தேதிகளில் முன்பின்னாக மாற்றம் இருக்கலாம். வருடம் முழுக்க கடைகள் தங்கட் பொருட்களை விலைகுறைத்து விற்க சுதந்திரமுண்டு என்றபோதிலும் ‘SOLDES” என்ற சொல்லை விளம்பரப்படுத்தி விற்க ஏற்கனவே கூறியதுபோன்று வருடத்தில் இருமுறையே அனுமதியுண்டு. தேதியையும் விற்பனைகாலத்தையும் அரசாங்கமே தீர்மானிக்கிறது. மற்றகாலங்களில் விலையைக்குறைத்துவிற்க ஏன் அனுமதியில்லை. வால்மார்ட்டுகள் இந்தியாவிற்கு வந்தால் அண்ணாச்சிகடைகளுக்கு ஆபத்தாகிப்போகும் என்பதைப்போல இத்தள்ளுபடியை அனுமதித்தால் அதாவது SOLDES என்ற சொல்லைப் பயன்படுத்திக்கொள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களை அனுமதித்தால் சில்லறைகடைகளின் விற்பனை பாதிக்குமென்று அரசாங்கம் நம்புகிறது எனினும் திமிங்கலங்கள் வாய்க்குள் வருடத்திற்குப் பல ஆயிரம் கடைகள் சமாதிஆவது தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.

எழுத்தாளன் முகவரி-7: நடைவாசல்கள்

“பத்திரிகையாளரான சகோதரி ஒருத்தி என்னைத் தடுத்து, ” ஒரு புனைகதை ஆசிரியர் எப்படி உருவாகிறார்?” எனக் கேட்டார். இது காலங் காலங்காலமாய் வெற்றிபெற்ற எழுத்தாளரிடம் முன்வைக்கபடும் புளித்துபோன கேள்வி. ‘என்னிடம் அதற்கு பதிலேதுமில்லையென்று ‘ கூறினேன். எனது தயக்கத்திற்குக் காரணம், இக்கேள்விக்கொரு பொதுவான பதிலை சொல்லமுடியாதது. ஒவ்வொரு எழுத்தாளரும் சிலகாரணங்களை சொல்லக்கூடும், பிறகு அப்பத்திரிகையாளரே, “நீங்கள் ஒரு நல்ல புனைகதை ஆசிரியராக எப்படி மாறினீர்கள்?”, எனக்கேட்டார். இக்கேள்விக்கு என்னால் ஓரளவிற்கு பதிலளிக்க முடியுமெனத் தோன்றியது. கதை சொல்லலில் எனக்கு நாட்டம் ஏற்பட காரணத்தை யோசித்தபோது, நீண்டா காலமாகத் தொடர்ந்து வாசிப்பது, சொற்களின் மீதுள்ள பிரியம் போன்றவை உடனடியாக ஞாபகத்திற்கு வந்தன, எனினும் இது தவிர வேறுகாரணங்களை இருக்கின்றன”, என்று தமது கட்டுரையொன்றினைத் தொடங்குகிறார் B.J. Chute. (1913-1987)

பேயாத்ரீஸ் ஜாய் ஷ¤ட் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். அமெரிக்க எழுத்தாளர் அமைப்பின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சிறுவர் இலக்கியம், பதின்ம வயதினர், பெரியவர்களென வயதிற்கொத்த படைப்புகளை எழுதியவர். அவருடைய நாவல்களில் ‘Greenwillow”(1956) முக்கியமானது.

பத்திரிகையாளர் கேட்டகேள்வி (What makes you a fiction writer?) அவரை உறங்கவிடாலற் செய்திருக்கிறது. பலமுறைத் தனக்குத்தானே இக்கேள்வியைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்குத் தம்மை ஜாய் என அழைத்துக்கொள்வதில் அல்லது அழைக்கப்படுவதில் விருப்பம் அதிகமாம். அவரது விருப்பத்திற்கு மரியாதை அளித்து இக்கட்டுரையில் ஜாய் என்றே அழைக்கிறேன். நமது ஜாய் ஓர் எழுத்தாளனாக சாதனைப்படைக்க நான்கு யோசனைகளை முன்வைக்கிறார்.மூன்றாம் திருமுறையில் வரும் வள்ளலார் பாடலோடு ஜாயின் யோசனை மிகக் கச்சிதமாக பொருந்துகிறது. கட்டுரையின் முடிவில் உங்கள் வாசிப்புக்கு அப்பாடல் காத்திருக்கிறது.

படைப்பு தரிசினத்திற்கு எழுத்தாளனுக்கென்று பிரத்தியேகமாக நான்கு நடைவாசல்களை ஜாய் திறக்கிறார்:

1. கற்பனை:

சிறுகதை ஆசியரனாக வரவேண்டுமென்றாலும் சரி, நாவலாசிரியனாக ஜெயிக்க வேண்டுமென்றாலும் சரி கற்பனை முதலாவது நடைவாசல். ஜாய் எழுத்தாளனை சிலந்தியென்றும், எழுத்தை சிலந்திவலையென்றும் கூறுகிறார். வாசகன் அவ்வலையில் சிக்கும் இரை. ஜாயைப் பொறுத்தவரை கற்பனையே எழுத்துக்கான அடிப்படைத் தூண்டுதல் – Muse என்ற கிரேக்க பெண்தெய்வம். கிரேக்க புராணக்கதைகளின்படி பல்வேறு கலைகளுக்குப் பொறுப்பேற்று வழிபடுத்துகிற ஒன்பது பெண்தெய்வங்களுள் ம்யூஸ¤ம் ஒருத்தி. அவளுடையப் பணி அகத்தூண்டுதலுக்கு வழிகோலுவது. கதையாசிரியனுக்கு இம் ம்யூஸின் கடாட்சம் வேண்டும். ஆனால் அதற்காக 108 தேங்காய், நேர்த்திக்கடன் போன்ற வழிமுறைகளை ஜாய் போதிப்பதில்லை. ‘கற்பனை’ என்பது வரமாகப் பெறுவதல்ல அல்லது கடைக்குப்போய் சிறுகதை எழுதலாமென்றிருக்கிறேன் 200 கிராம் கற்பனை கொடுங்கள் அண்ணாச்சியென்று கேட்கவும் முடியாது. பால் கறக்கிற பசுமாட்டுக்குத் தீனி வைப்பதுபோல, எழுதும் மூளைக்கு தீனிகொடுக்கவேண்டும், கறந்து பழக வேண்டும். ஒரு படைப்பாளி நித்தம் நித்தம் எழுதவேண்டும் எழுதத் தவறினால் தொழிற்படும்  கற்பனையும் துருபிடிக்கலாம், உற்பத்தியும் (எழுத்தும்) பாதிக்கலாம். சிலந்தி வலைபின்னும் சாமர்த்தியத்தை கவனித்திருக்கிறீர்களா? பிடிப்பற்ற வெளியில் ஒரு பாய்ச்சல், கசியும் மிக மெல்லிய இழையினூடே தொடர்ந்து வியப்புக்குரிய வகையில் நேர்த்தியாக உருவெடுக்கும் வலை, அந்தரத்தில் ஒருமாய்மாலத்தையே நடத்தி, சுற்றியிருக்கிற ஈக்களுக்கு அதில் காலார உட்காரலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தித் தருகிறது.  வாசகனைச் சிலந்திவலையிற் சிக்கும் ஈக்களோடு ஒப்பிடக்கூடாதென்றாலும் உண்மை அதுதானே.

2. அனுதாபம்:

ஜாய் கூறும் இரண்டாவது நடைவாசல். அனுதாபம். ஆங்கிலச்சொல்லான ‘Embathy’ என்ற சொல்லை இதற்கு உபயோகிக்கிறார். அகராதியில் பொருள் தேடினால்: மாற்றார் உணர்வு அறிதல் அல்லது மற்றொருவரின் ஆளுமையிற் புகுந்து அவரது அனுபவத்தை கற்பனையாக அனுபவித்தல்’ எனப்பொருள் கிடைக்கிறது. கற்பனையைப் போலவே அடுத்தவர் நிலைகண்டு பரிதாபப்படுவதற்கும் பயிற்சிவேண்டும், மன அளவில் எதிராளியாக நம்மை நிறுத்தி அவ்வுணர்வில் திளைக்கவேண்டும். சில நேரங்களில் அவ்வனுபவத்தை வார்த்தைகளிற் சொல்ல இடற்பாடுகள் நேர்ந்தாலும் கல்யாண்ஜி போலவும் எழுதலாம்:

“இப்படியா அப்படியா
எப்படி இருந்தது என்று
நாலைந்து சொற்களை
அவரே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னார்
உச்ச மகிழ்ச்சிக்கும்
உச்ச வலிக்கும்
அனுபவிப்பவனிடம்
அடைமொழி இல்லை
மேலும்
எம் வலியும் ஆகாது
உம் வலி”

தலித் பிரச்சினைகளை ஒரு தலித் எழுத்தாளர்தான் எழுதமுடியும், பெண்ணியப்பிரச்சினைகளை பெண்கள் மட்டுமே சொல்லவேண்டும் என்பதுபோன்ற உதவாக்கரை கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. ஜெயகாந்தனின் கோகிலா என்ன செய்துவிட்டாள் ஏற்படுத்திய பிரளயத்தைத் பெண் எழுத்தாளர்கள் இதுவரை ஏற்படுத்தித் தரவில்லை. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை உட்பட. மதாம் பொவாரி நாவலின் நாயகி ‘எம்மா’வுடைய  பேரார்வமும், வாழ்க்கைமீதான எரிச்சலும், கோபமும், சலிப்பும், விரக்தியும், வேதனையும் பிரெஞ்சில் வேறொரு பெண்ணாற் சொல்லப்பட்டதில்லை என்பதுதான் உண்மை. நாவலாசிரியர் ·ப்ளோபெர் (Gustave Flaubert) தமது வாழ்க்கையில் எங்கேயோ சந்தித்த பெண்ணொருத்தியின் மீது ஏற்பட்ட பரிவு அவரை ‘எம்மா’ வாக உருக்கொள்ள வைத்தது. சென்ற அத்தியாயத்தில் உருமாற்றம் என கேல் காட்வின் கூறியதையே ஜாய் “மாற்றார் உணர்வை அறிதல்’ என்கிறார்.

3. எழுத்து நடை அல்லது பாணி:

B.J. Chute திறக்கும் மூன்றாவது நடைவாசல்  எழுத்துநடை. கதை சொல்லலில் இது மிகவும் முக்கியமானது. தொனி, சொற் தேர்வு வாக்கிய அமைப்பு என மூன்று பண்புகளையும் உள்ளடக்கியது நடை. கதை மாத்திரமே ஓர் படைப்பின் தலைவிதியைத் தீர்மானிப்பதல்ல. ஒரு நாவல் கவனிப்பைப்பெறுவது சொல்லப்படும் விதத்தைச் சார்ந்தது. கதை சொல்லலையும் புனைவையும் பிரித்துப்பார்க்கக்கூடாது. ஒரே கதையை பத்து எழுத்தாளர்கள் சொல்லமுடியும். ஆனால் சொல்லுகிறவிதம் ஒன்றுபோலவே இருக்க வாய்ப்பில்லை. கல்லூரியில் படிக்கிறபோது ஒரு வசனத்தை அவர் சொன்னால் எப்படியிருக்கும் இவர் சொன்னால் எப்படியிருக்குமென மிமிக்ரி செய்வதுபோல, ஒரு கதையை ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், கல்கி, புஷ்பா தங்கதுரையென பல எழுத்தாளர்கள் மொழியில் எழுதிப்பார்த்து நண்பர்களிடம் வாசித்துக்காட்டுவேன். நல்ல நடை நிச்சயமாக உங்கள் கதையைத் திரும்பவும் வாசிக்கவைக்கும்.

கதை சொல்லலில் இந்த நடை அல்லது பாணி எப்படி பிறக்கிறது. ஜாயைப் பொறுத்தவரை கதையின் நடை என்பது, தெளிவான சிந்தனை. அதாவது பேனா பிடிக்கும் முன்பாக அல்லது விசைப்பலகையில் தட்டுவதற்கு முன்பாக உங்கள் தலைக்கு வேலைகொடுக்கவேண்டும். இரண்டொரு நிமிடங்கள் எதைச் சொல்லபோகிறேன் எப்படிச் சொல்லபோகிறேன் எங்கே தொடங்கப்போகிறேன் என்பதில் தெளிவு இருப்பின் நடையிலும் தெளிவு இருக்கும், ஓர் அழுத்தம் வரும். சிந்தனையிற் தெளிவு, அதற்குரிய சொற்கள் (இச்சொற்கள் தேர்விலேயே ஓர் எழுத்தாளனின் இடம் படைப்புலகில் தீர்மானிக்கப்படுகிறதென்பதை நாம் மறக்கக்கூடாது. மர்செல் ப்ரூஸ்டு என்ற பிரெஞ்சு எழுத்தாளருடையப் படைப்பை நண்பர்கள் வாசித்திருக்கலாம் அவர் நடையை சூ-ழஸாங்(Sous-Jacent) எனப்பிரெஞ்சில் சொல்வார்கள் (ஆங்கிலத்தில் – The underlying tune). அடக்கிவாசிப்பது, ஆழ்ந்து அல்லது கூர்ந்து கவனித்தாலன்றி வெளிப்படையாக உணரமுடியாதது, இலைமறைகாயாக ஒன்றை தெரிவிப்பது என்றெல்லாம் பொருள்கொள்ளலாம். அது அவருடைய பாணி. ஆனால் அதையே எல்லா எழுத்தாளரும் பின்பற்றவேண்டுமென நினைப்பது நமது தனித் தன்மைக்குக் கொள்ளிவைப்பதாகும். எனக்குப் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப மொழியைக் கையாளலாம்.
தமிழில் நடையில் சுஜாதாவுக்கென ஒரு தனித்தன்மையுண்டு. சாண்டியல்னைக்காட்டிலும் கதைசொல்லலில் கல்கி தேர்ந்தவர். ஆங்கிலத்தில் பிலிப் ரோத், நத்தானியெல் ஹாத்தோர்ன் இவர்களையெல்லாம் கதை சொல்லலிலுள்ள தொனிக்காகவே வாசித்திருக்கிறேன். கி மொப்பசான் கூட கதை சொல்லலில் அசகாயசூரர். கா·ப்காவும் ச¨ளைத்தவரல்ல.

4. இடையறா ஊக்கம்

ஜாய் திறக்கும் நான்காவது நடைவாசல் பொறுமை. கற்பனைகதவுகள் திறக்கின்றன. கதைமாந்தர்களின் மீது அனுதாபம்சுரந்து அவர்களிடத்தில் உங்களை வைத்து அவ்வனுபத்தில் திளைக்கமுடிகிறது, எழுத்து நடையைத் தீர்மானிக்கிறீர்கள். இப்பொழுது படைப்பில் மேற்கொண்ட மூன்றையும்  ஒன்றிணைப்பதில் தேவைப்படும் சோர்வற்ற உழைப்பே நான்காவதாகும். Joyce Cary, ‘to see the thing and throw the loop of creation around it” என்கிறார். இங்கே ‘the thing’ என்பது வேறொன்றுமல்ல கதைக்கரு  அல்லது கதைப்பொருள். இலையில் சாதத்தை வைத்தாகிவிட்டது. பருப்பு, கூட்டு, பொரியல், நெய் என எல்லாம் தயார் நிலையில்; எதை எப்படி ஆரம்பிப்பது, எப்போது சாம்பார், எப்போது ரசம் என வரிசைபடுத்திக்கொண்டு பிசைவதற்குத்தோதாக படைப்பை உருவாக்கமுடிந்தால், வாசகர்களும் திருப்தியாக சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கலாம்.

மூன்றாம் திருமுறையிலுள்ள இப்பாடலை இனியொரு எழுத்தாளனாக வாசியுங்கள்.

படித்தேன்பொய் உலகியநூல் எந்தாய் நீயே
படிப்பித்தாய் அன்றியும்அப் படிப்பில் இச்சை
ஒடித்தேன்நான் ஒடித்தேனோ ஒடிப்பித் தாய்பின்
உன்னடியே துணையெனநான் உறுதி யாகப்
பிடித்தேன்மற் றதுவும்நீ பிடிப்பித் தாய்இப்
பேதையேன் நின்னருளைப் பெற்றோர் போல
நடித்தேனெம் பெருமான்ஈ தொன்றும் நானே
நடித்தேனோ அல்லது நீ நடிப்பித்தாயோ

—————————————————

மொழிவது சுகம் அக்டோபர் -20

1. புதுச்சேரி சுதந்திரம்

கடந்த ஆகஸ்டுமாதம் 16ந்தேதி -2012 அன்று, புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டு 50 ஆண்டுகளாகின்றன.

இந்தியாவின் பிறபகுதிகள் இந்தியக்குடியரசின் கீழ் வந்தபோதும். புதுச்சேரி காரைக்கால் போன்றவை இந்தியாவில் இணைய 15 ஆண்டுகள் காத்திருந்தன. புதுச்சேரியில் சுதந்திரப்போராட்டமென்பது நமத்துப்போனதொரு பட்டாசு.

1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ந்தேதி பிரெஞ்சு அரசாங்கமும் நேரு தலமையிலான காங்கிரஸ் அரசாங்கமும் ‘De Jure’ ஒப்பந்தத்தில் கைச்சாற்றிட அதுவரை பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் நான்கும் இந்திய ஆளுகைக்குட்பட்ட தனி மாநிலமாக (அல்லது யூனியன் பிரதேசமாக) உருப்பெற்றது. காங்கிரஸின் முக்கிய தலைவர்களும், அன்றைய ஊடகங்களும் இதனைக் கடுமையாக எதிர்த்தார்கள். அண்டை மாநிலமான தமிழகத்துடன் இணைப்பதுதான் முறையென்றார்கள். பிரெஞ்சு மொழியைக் கற்றிருந்த நேரு அம்மொழிமீதிருந்த காதலால் பிரத்தியேக சலுகைகள்கொண்ட இந்திய யூனியன் பிரதேசமாக புதுச்சேரியை அறிவித்தார். அவர் தயவில் புதுச்சேரி அத்தைக்கு மீசை முளைக்கிறது. கையளவு பிரதேசமான புதுச்சேரி தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருந்தால் அநேகமாக ஒரு பிர்க்காவாகவோ அல்லது அதிகபட்சமாக ஒரு தாலுக்காகவோ வந்திருக்கலாம். இன்றைக்கு ஒரு ஆட்சியர், நான்கு துணை ஆட்சியர், டசன் கணக்கில் தாசில்தார்கள்.. போதாதற்கு ஒரு மந்திரிசபை. கோலி விளையாடியக் கையைத் துடைக்காமற்கூட மந்திரி ஆவதற்கான வாய்ப்புகள் புதுச்சேரியில் அதிகம்.

இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ந்தேதி. ஆனாலும் புதுச்சேரியின் சுதந்திரம் பற்றிய கேள்விகள் அப்போதைக்கு எழவில்லை. பல காரணங்கள் இரண்டு தரப்பிலுமிருந்தன. இங்கே சுதந்திரம் வழங்கினால் பிரான்சு தமது பிறகாலனிகளையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறவேண்டும். அந்த ஒரு காரனத்திற்காகவே புதுச்சேரியைக் கட்டிக்கொண்டு அழுதது.  இந்தியாவிற்கும் புதுச்சேரி அப்படியொன்றும் முக்கியமானதாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு நூற்பாலை. அதை நம்பியே பெரும்பாலான மக்களின் வாழ்க்கை. தண்ணீர் மின்சாரமென புதுச்சேரியின் அத்தியாவசிய வாழ்க்கை அண்டை மாநிலங்களைச் சார்ந்திருந்தது. ஆங்கிலேயர்களிடம் சுந்தந்திரம் பெற்றபின், நாட்டின் ஒரு பகுதியை அந்நியர்களிடம் விட்டுவைப்பதா என்றதொரு கௌரவப்பிரச்சினையாக காங்கிரஸ் அரசாங்கம் புதுச்சேரியைப் பார்த்ததேயன்றி, மற்றபடி கொடுக்கும்போது கொடுக்கட்டும் என்றே காத்திருந்தார்கள். 1948ல் பிரெஞ்சு அரசாங்கம் ஒரு யோசனையை முன்வைத்தது. பொது வாக்கெடுப்பொன்றிற்கு ஏற்பாடு செய்து பெரும்பாலான மக்கள் விரும்புவதுபோல செய்துவிடலாமென்றது. நேரு அபத்தமாக இந்த யோசனையை ஏற்றுக் கொள்கிறார். சந்திரநாகூரில் நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான மக்கள் இந்தியாவோடு இணைவதை விரும்புகிறார்கள். விழித்துக்கொண்ட பிரெஞ்சு அரசாங்கம் பிற இடங்களில் வாக்கெடுப்பைத் தள்ளிவைப்பதாக அறிவித்து கடைசிவரை அதனை நடத்தவே இல்லை. இந்திய அரசாங்கமும் ஏன் நிறுத்தினாயென்று கேட்கவில்லை. புதுச்சேரியில் அப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால் இந்தியாவிலும் நாளை குறிப்பாக காஷ்மீரில் அதுபோன்றதொரு பிரச்சினையைச் சந்திக்கக்கூடுமென்ற நிலை. ஆக இரு தரப்பிலும் பொது வாக்கெடுப்பிற்கு ஆதரவில்லை. இந்தியா இதையொரு கௌரவப்பிரச்சினையாகக் கருதி பிரெஞ்சு அரசாங்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு நிர்வாக சிக்கல்களைக் கொடுத்து வந்தது. ஒரு கட்டத்தில் புதுச்சேரி நிர்வாகமே ஸ்தம்பித்து போகும் நிலை. அந்நிலையை எட்டியபோது ஏழாண்டுகள் கடந்திருந்தன.

இந்நிலையில்தான் 1954ம் ஆண்டு மே 7ந்தேதி  Dien Bien Phu யுத்தத்தில் வியட்நாமுடன் தோற்று ஜெனீவா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட கையோடு இந்தோசீனாவிலிருந்து பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறுகிறார்கள் அதே வேளை அல்ஜீரியாவில் காலனிவாசிகள் பிரான்சுடன் ஆயுதப்போரில் இறங்குகிறார்கள். அதன் விளைவாக புதுச்சேரியைக் கைகழுவும் முகாந்திரமாக 1954 ஆண்டு நவம்பர் 1ந்தேதி ‘De Facto’ வில் இரு நாடுகளும் கையொப்பமிடுகின்றன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பொருளாதாரம், பண்பாட்டு அரசியலுக்கு குந்தகமிருக்கக்கூடாதென்றவகையில் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் காரணமாக அப்போதுமுதலே புதுச்சேரி தாதாக்களின் அரசாங்கமாகிவிட்டது. குபேர் புதுச்சேரி நிர்வாகத்தின் முதல் தாதா. இவர்களுக்கெல்லாம் புதுச்சேரி இந்தியாவில் இணைவதில் துளியும் விருப்பமில்லை. பிரெஞ்சு அரசாங்கத்திற்குத் தலையும் இந்திய அரசாங்கத்திற்கு வாலும் காட்டிவந்த மனிதர்.

‘De Facto’ விலிருந்து ‘De Jour’ ஒப்பந்தத்திற் கைச்சாற்றிட மீண்டும் ஏழாண்டுகளுக்குமேலாக காந்திருந்தார்கள். அதற்கும் புதுச்சேரி தியாகிகளோ, இந்திய அரசாங்கமோ காரணமல்ல. அல்ஜீரியாவில் காலனிமக்களுடன் நடத்திய  யுத்தத்தில் மிகக்கடுமையாக  தோற்றிருந்த பிரெஞ்சு அரசாங்கம் 1962ம் ஆண்டு ஜூலைமாதம் 16ந்தேதி அல்ஜீரியாவிற்கு சுந்திரத்தை வழங்கவேண்டியதாயிற்று. அதற்கும் ஒரு மாதத்திற்குப் பிறகு பிரெஞ்சு அரசாங்கம் புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக இந்தியாவசம் ஒப்படைப்பதென தீர்மானித்து 1962ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் 16ந்தேதி, புதுச்சேரியை இந்தியாவிடம் தாரைவார்க்கிறார்கள். ஆக உண்மையில் புதுச்சேரி சுதந்திரம்பெற ஒரு வகையில்  அல்ஜீரிய மக்களே மூல காரணம். அங்கே இடி இடிக்க இங்கே மழைபெய்தது. புதுச்சேரி சுதந்திரத்திற்கு புதுச்சேரி மக்களோ, நேருவின் காங்கிரஸ் அரசோ காரணமேயல்ல என்பதுதான் உண்மை. அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தமென்று கேட்பார்கள் புதுச்சேரி சுதந்திரத்தைப் பொறுத்தவரை சம்பந்தமிருக்கிறது.

தனிமனிதனாகட்டும்  ஒரு நாடாகட்டும் அதன் சிறுமை பெருமைளை அறிய வரலாற்றை புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது. கொடுக்கிற விலையைப் பொருத்ததே பண்டங்களின் பெறுமானம் அமைகிறது. புதுச்சேரியின் வரலாற்றின் அடிப்படையில் ஒரு நாவலை அதன் வரலாற்றை வியந்தோதும் வகைமையின்றி எழுதும் ஆவலிருக்கிறது.

————————-

2.  மொ-யன் (Mo-Yan)

முராகாமிக்கு இவ்வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசென்ற வதந்தி இருந்தது. சீனரான மொ-யன் என்பவருக்குக் கிடைத்திருக்கிறது. சீனர்கள் காட்டில் மழை பொழியும் நேரம். வல்லரசுக்கான அத்தனை இறக்கைகளையும் சிறகடித்து மேலே மேலே என்று பறந்துகொண்டிருக்கிறார்கள். அடுத்த தெரு ஆசாமி வீட்டில் உலை கொதிக்கலாம் ஆனால்  அண்டைவீட்டுக்காரன் அடுப்பில் பூனை தூங்கவேண்டுமென எதிர்ப்பார்க்கிற மனித மனத்திற்கு நாமும் விதிவிலக்கல்ல என்கிறபோதும் நலன் விசாரிக்கிறவர்களிடம் அவர்களுக்குக் கிடைத்தால் எங்களுக்குக் கிடைத்ததுபோல என பெருமூச்சுவிடவேண்டியிருக்கிறது. நமது சிற்றிதழ்களில் இப்போதெல்லாம்  இலக்கியத்திற்கென ஒதுக்குகிற பக்கங்களைப் பார்க்கிறபொழுது அப்பெருபெருமூச்சும் சிறுமூச்சாகிபோகிறது. அக்டோபர் பதினொன்றுவரை (அவரது பெயரை பத்துநாட்களுக்கு முன்பு நோபெல் குழுவினர் அறிவிக்கும்வரை) பிரெஞ்சு இலக்கிய இதழ்களில் எப்போதாவது ‘மொ-யன்’  பேரை படிக்கிறபோது அல்லது அவர் புகைப்படத்தை பார்க்கிறபோது அறுபதுகளில் சூ-என்-லாய் கொளுத்திப்போட்ட பகைமைக் கங்கு மனதில் விசிறிக்கொண்டு கனிய ஆரம்பித்துவிடும், அவசரமாய்ப் பக்கங்களை புரட்டிவிடுவேன். முந்தைய வரிகளில் சொன்னதுபோல அண்டைவீட்டுக்காரனென்ற பொறாமை காரணமாக இருக்கலாம். இன்னொரு காரணமும் இருக்கிறது, பெரும்பாலான காம்ப்ரேட் சீனர்களைப்போலவே கமுக்கமாகச்  சிரிக்கிறார். பஞ்ச சீலத்தில் கையெழுத்துபோட்ட போட்ட சூ-என்-லாயின் சிரிப்பு அது.

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 2000 ஆண்டுக்கான நோபெல் பரிசுபெற்ற சீனரை ஞாபகம் நண்பர்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் கௌ-சிங்யங் (Gao- Xingjian). தமது எழுத்தைச் சீனக் காம்ரேட்டுகளுக்கு எதிராக உபயோகிக்கப்போக பிரான்சு நாட்டிற்கு 1988ம் ஆண்டு அரசியல் தஞ்சம் கேட்டு வரவேண்டியதாயிற்று. 1989ல் பிரெஞ்சுக் குடியுரிமையும் கிடைத்தது. சீனாவில் இருந்திருந்தால் முதல் நோபெல் பரிசுபெற்ற சீனர் என்ற பெருமை கிடைத்திருக்கும். மொ-யன் விஷயத்தில் சீனர்கள் கவனமாக இருந்தனர். இவரும் காம்ரேட்டுகளையும் அவர்கள் தலமையையும், அதிகார ஊழலையும் விமரிசிக்கத் தயங்கியவரல்ல. எனினும் சீன அரசாங்கம் இவரை வெளியேற்றவில்லை. ஏற்கனவே மனித உரிமையென்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையிலிருந்த சீனர்களுக்கு, பொருளாதாரம் மற்றும் ராணுவபலம் போன்றவற்றால் பெறும் கீர்த்தியை பூர்த்திசெய்யவும் சீனஅரசு விமரிசினங்களைச் சகித்துக்கொள்ள கூடிய அரசு என்பதைத் தெரிவிக்கவும் மொ-யன் என்ற சரக்குச் சந்தைக்குத் தேவைபட்டது.

பிரெஞ்சுப் புத்தககடைகாரர்கள், ‘மொ-யன்’ படைப்புகளை தூசுதட்டி, பர்·யூம் அடித்து கடை பரப்புகிறார்கள். சீன உற்பத்தியென்றாலே பொருளாதாரச்சந்தையில் போலிச்சரக்கு, விலை மலிவு எனப்பொருள் கொள்ளப்படுவதுண்டு. எதற்கும் அச்சு அசலாக மாற்றுபொருளை தயாரிப்பதில் சீனர்கள் கைதேர்ந்தவர்களென்ற தீர்க்கமான கருத்துண்டு. சீனர்களின் ஆயுத பலம் கண்டு பயமிருக்கிறதோ இல்லையோ, போலி சரக்குகளைப் பற்றிய பயத்தை அதிகமாகவே மேற்கத்தியர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். ‘மார்க்ஸின்’ சரக்கிற்கே போலியைத் தயாரித்தவர்கள் ஆயிற்றே, பயமில்லாதுபோனால் எப்படி? மொ-யன் சரக்கை அசலான சரக்கென்று கடந்த சில தினங்களாக புத்தக விமரிசகர்கள் வானொலியிலும் தொலைகாட்சிலும் வற்புறுத்துகிறார்கள். ஏற்கனவே கூறியதுபோன்று இதுவரை மொ-யன் படைப்புகள் எதையும் வாசித்ததில்லை பிரெஞ்சு பத்திரிகையொன்றில் வந்தக்குறிப்பை அவரது படைப்புகளை வாசிக்க நினைக்கிறவர்களுக்காக சிபாரிசு செய்கிறேன்.

மொ-யன் பெற்றோர்கள் முன்பின்தெரியாதவர்களிடம் வாய் திறவாதே! – அதாவது பேசாதே!  என அடிக்கடி தங்கள் மகனை எச்சரிப்பதுண்டாம். பிற்காலத்தில் தமது எழுத்துக்கு ஒரு புனைபெயரை தேடியபொழுது, சிறுவயதில் காதில் விழுந்த ‘வாய் திறவாதே’ நினைவுக்கு வர அதனையே வைத்துக்கொண்டிருக்கிறார். ‘மொ-யன்’ என்ற புனைபெயருக்கு, அதுவே ரிஷிமூலம். ஆனால் ‘வாய் திறவாதே’ என்ற பெயரில் நிறைய எழுதுகிறார். எண்பதுக்கும் அதிகமாக சிறுகதைகள், புனைவுகள், அபுனைவுகளென எழுதிக்குவித்திருக்கிறார். நாவல்களில் புதிய உத்திகளை பயன்படுத்தியிருக்கிறாராம். கதைக்குள் கதை, நாவவலுக்குள் சிறுகதை, கடித இலக்கியம், சமூகம், ஆட்சியாளர்களெக்கெதிரான கலகக்குரல்கள், புதிய வரலாற்றுப்பார்வையென  இவரது எழுத்துப்பாதை தடங்கலின்றிச்செல்கிறது. முக்கிய நூல்கள் 1. Red Sorghom  2. The Rupublic of Wine. 3. Big breasts and Wide hips. பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் 4. La loi du Karma வாங்கி வைத்திருக்கிறேன், படித்துவிட்டு எழுதுகிறேன்.

 

நன்றி: C.I.D.F.  29-8-2012

————————————

 

 

 

 

 

எழுத்தாளன் முகவரி -6: உருமாற்றம்

“கடுமையாக உழைக்கவும் பொறுமைகாக்கவும் உள்ளுணர்வுகள்மீது நம்பிக்கைவைத்து பொய்யான அச்சங்களை தவிர்க்கவும் முடிந்தால் எவர் ஒருவரையும்போல கூடுபாய என்னால் முடியும்”- கேல் காட்வின்

கேல் காட்வின் ( Gail Godwin) எழுத்தாளர் அதாவது வெற்றிகரமான எழுத்தாளர் (சிறுகதைகள், நாவல்கள்). அவரது நாவல்கள் கவனத்திற்கொள்ளும் அளவிலும், விற்பனையில் சாதனைபடைத்தவைகளாகவும் இருக்கின்றன. கேல் காட்வினுடைய  ‘A mother and two daughters, The Odd woman, இரண்டு நூல்களையும் சந்தர்ப்பம் அமைந்தால் வாசியுங்கள். கருவறைக்குச்சென்று பெண்களை தரிசிப்பீர்கள். அம்முகங்களில் ஒளிரும் கருமையிலும், இறுக்கத்திலும், உதடுபூக்கும் பார்வையிலும், இருபுருவருங்களிக்கிடையில் நெளியும் கேள்விகளிலும் பார்வையைத் திருப்பாது அவதானித்தால் பெண்ணென்ற ஜீவனின் முழுதரிசனத்திற்கு வாய்ப்புண்டு. தமது எழுத்தில் உருப்பெறும் பாத்திரங்களாகக் கூடுபாயும் திறனை, பத்து பன்னிரண்டு வயதிலேயே தாம் பெற்றிருந்ததாக கேல் தெரிவிக்கிறார். இளம்வயதிலேயே எழுத்தில் உயிர்ப்பிக்க நினைக்கும் பெண்ணாகவோ ஆணாகவோ மாறும் மோடிவித்தை எளிதாகக் கூடிவந்திருக்கிறது: மனைவிக்குத் தலையாட்டும் கணவன், கவனிப்பாரற்ற பணக்கார சிறுவன், உல்லாசமாகச் சுற்றித் திரிந்த நாயொன்றின் சொந்த அனுபவமென்று எதையும் அதனதன் இடத்திலிருந்து சொல்ல அவருக்கு சாத்தியமாகிறது.

பதின் வயதை எட்டியபோது வேறொரு அனுபவம். அது பொதுவாக சுயபுரிதலுக்கு உதவத்தொடங்கும் வயது. அன்றி தன் செயல்பாடுகளைப்பற்றிக் கேள்வியும் எழுப்பக்கூடியது.  கதைசொல்லலைக்குறித்து இவருக்கு வழிகாட்டியவர்கள் அந்நேரத்தில்’உனக்குத் தெரிந்ததை எழுது’ – எனக்கூறியிருக்கிறார்கள். விளைவாகத் தமது கற்பனைப்பரப்பை சுருக்கிக்கொண்டிருக்கிறார். இளம்வயது பெண்ணைக்குறித்து எழுதுவதென்றாலும், நடுத்தர வயது பெண்மணியைப்பற்றிய எழுத்தென்றாலும், முற்றுமுதலாக தம்மையே முன்நிறுத்தி அக்கதைமாந்தர்களைப் படைத்திருக்கிறார். இவ்வணுகு முறையில் அதுவரை அனுபவித்திராத உள்ளுணர்வுகளும், உத்தியும் வாய்த்தபோதிலும் அவருக்கு நாட்டமில்லை, இப்புதிய சிக்கலிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதெப்படி என்ற கவலை அவரை அரித்திருக்கிறது.

ஜெர்மன் சொல்லான ‘Zeitgeist’ (The Spirit of the Times) என்பதற்கு ஒரு கால கட்டத்தின் பண்பாடு, புத்திகூர்மை, அரசு, சமூகம் மற்றும் சமய நெறிமுறைகளின் கலவையென்று பொருள். விழிப்புணர்வு, தன்னை உணர்தல் மற்றும் அறிதல் ஆகியவற்றிற்கும், காலத்தின் பாற்பட்ட மேற்கண்ட கூறுகளுக்கும் அடிப்படையில் தொடர்புண்டு. இலக்கிய வரலாறுகளை அறிந்தவர்களுக்குக் கதைசொல்லலில் நிகழ்ந்துள்ள மாயத்திற்கும், அதன் வடிவமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்குங்கூட இக்கூறுகளே  காரணமென்பதை அறிவார்கள். மேற்கத்திய உலகில் விக்டோரிய காலத்து இலக்கியத்திற்கும் இன்றைய இலக்கியத்திற்கும் இடையில் நிகழ்ந்த இரசவாதம் இந்திய கதைசொல்லலிலும் நிகழ்ந்திருக்கிறது. பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையையும் புதுமைப்பித்தன் கதையையும் ஒப்பீடு நோக்கில் வாசித்தாலே இந்த உண்மைத் தெளிவாகும்.

மகாபாரத்திற்குத் தேவைப்பட்ட நூற்றுக்கணக்கான கதைமாந்தர்களை இன்று எந்த இலக்கியவாதியும் அழைப்பதில்லை. சுந்தரராமசாமிக்கு ஒரு ஜோசப் ஜேம்ஸ் போதும். ஏக நாயகன் அல்லது ஏக நாயகி கதைக்கு அச்சாணி.  சக்கரத்தின் குடம்போல படைப்பும் அதன் ஆரங்களென பிறமாந்தரும், சம்பவங்களும் சுற்றிவருகிறார்கள். மைய நாயகன் ஏதோஒரு குணத்திற்கு ஏகபோக உரிமையாளன், கதையை முன் நகர்த்த பிறகுணங்களும் அவனிடம் தற்செயலாக எட்டிப்பார்ப்பதுண்டு. உதாரணமாக ஜே.ஜே. சிலகுறிப்புகளில் வரும் ஜோசப் ஜேம்ஸ் ஓர் அறிவுஜீவி சகமனிதனின்று வேறுபட்டவன். முளங்காடு கிருஷ்ணப்ப வைத்தியர் அய்யப்பனால் “அவனது உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள்போல பரவசம் ஊட்டக்கூடியது” என வியந்தோதப்பட்டவன். ஜே.ஜே. அறிவாளி மட்டுமல்ல, கூர் உணவிற்குச்சொந்தக்காரன், அடுத்து அவனை மொய்க்கும் கூட்டமிருக்கிறது: முதலாவதாக நம்மிடம் வளவளவென்று உரையாடுகிற கதைசொல்லி, (உண்மையில் தான் தேடி அலையும் ஜே.ஜேவைக் காட்டிலும் விஷயஞானமுள்ளவனென எனச் சொல்லாமல் சொல்கிற பாத்திரம், அடுத்து அய்யப்பன், டிமிட்ரி, திருமதி சாராம்மா என ஒவ்வொருவரையும் காலார நடக்கவிட்டு கதைசொல்கிறார் சு.ரா.

ஜே.ஜே., கதைசொல்லி, அய்யப்பன், டிமிட்ரி, திருமதி சாராம்மா எங்கிருந்து முளைத்தார்கள். இவர்களை சு.ரா. எப்படி கண்டுபிடித்தார். அம்மனிதர்களின் குணங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டன. அவர்களுக்குள்ளே ஆசிரியரா? அவர்களுக்கு வெளியே ஆசிரியரா? என்ற கேள்விகளுக்கு விடைகள் அறிய உங்களைப்போலவே எனக்கும் ஆர்வம். கேல் காட்வினிடம் இதற்குப் பதிலிருக்கிறது. A Mother and Two daughters நாவலில் தமக்கேற்பட்ட அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நாவலின் கதை மூன்று வெவ்வேறு குணத்துடனான பெண்களுக்கிடையேயான பந்தத்தைச் சொல்வது. ஒவ்வொருத்திக்கும் பிரத்தியேக குணமிருக்கிறது அப்பிரத்தியேக குணம், பிற இருவரின் குணத்துடனும் செயல்பாடுடனும் உரசுகிறபோது ஏற்படுகிற சிக்கல்களால் எவ்வாறு மாற்றி கட்டமைக்கப்படுகிறதென்பதை கதையில் தெரிவிக்கவேண்டும்.

மூன்று பெண்களின் பிரத்தியேகக்குணத்தை காட்சிஊடகத்தில் பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்துவது சுலபம். ஆனால் இலக்கியமென்று வருகிறபொழுது. அவள் முகம் தட்டையானது, பெரிய கண்கள், கோபக்காரி எனக்கூறி வர்ணனைபோல குணத்திற்கும் ஒரு சொல்லைப்போட்டு முடித்துக்கொள்ளலாமா? கூடாதென்கிறார் கேல் காட்வின். மூன்று பெண்களின் குணத்தை பிரித்தறிவதற்கான சூழலை நாவல்களில் வாசகனுக்கு ஏற்படுத்தித் தரவேண்டுமென்கிறார். நாவலின் ஏதாவதொரு பக்கத்தை புரட்டி அங்கு வாசிக்கிற சொற்களை, அதன் தொனியைவைத்து கதைமாந்தர் யார்? அவளுடைய குணம் என்ன? என்று கண்டுணர வேண்டுமாம். அதைச்செய்யமுடிந்தால் நாம் நல்ல எழுத்தாளன்.  அக்கதைமாந்தரை எப்படி உருவாக்குவது, எங்கே கண்டுபிடிப்பது?

A Mother and Two daughters நாவலை ஆரம்பித்தபோது அவரது மனதில் கீழ்க்கண்டவகையில் சிந்தனை ஓடியிருக்கிறது. நாவலில் இடம்பெறவிருக்கிற  மூன்று பெண்களில் ஒருத்திகூட இவரது குணத்தின் அடிப்படையில் உருவாக்கப்படபோவதில்லை என்கிறபோதும், தம் ஒருத்தியால் மூன்று பேர் இடத்தையும் இட்டு நிரப்பமுடியுமென தோன்றியிருக்கிறது. முதலில் நாவலில் தாயாக வருகிற ‘நெல்’ (Nell) என்ற பாத்திரத்தின் விதவை என்ற அடையாளமோ, இரண்டு பெண்களுக்கு அன்னையென்ற குடும்பத் தகுதியோ, அவளுக்கு வயது 63 ஆக இருக்கலாமென தீர்மானித்ததோ ஆகிய எதுவுமே கேல் காட்வினோடு தொடர்பு உடையதல்ல, பதிலாகச் சுதந்திரத்தின் பெயரால் தனிமை நம்மை அநாதையாக்கிவிடுமென்ற உண்மையை இவரைப்போலவே நாவலில் இடம்பெறும் வயதானப்பெண்மணியும் தெரிந்துவைத்திருப்பவளென்று  எழுத்தாளரால் காட்டமுடிந்தது. நாவலில் வரும் இரண்டாவது பாத்திரம் கேட், பெண்மணியின் மூத்த மகள். ஒரு கலகக்காரி, மரபுகளுக்கு எதிரானவள். வாழ்க்கையில் சிற்சில சமயங்களில்  இவரும் அவ்வாறு நடந்துகொண்டிருக்கிறாராம், அக்குணத்தைக் கொஞ்சம் அழுத்தமாகவும் விரிவுபடுத்தியும் சொல்லநினக்க, கேட் பெண்பாத்திரம் உருவாயிற்று என்கிறார். நாவலில் வரும் மூன்றாவது பெண்ணும் அவ்வாறே உருவானதுதானாம். ஆக எந்தவொரு பாத்திரத்திலும் நம்மை நுழைத்து அப்பாத்திரத்தின் வழியில் சிந்தித்து செயல்பட கதைமாந்தர்கள் உயிர்ப்பித்துவிடுகிறார்கள்.

இனி கதையின் துணைமாந்தர்கள், படைப்பிற்குள் எப்படி நுழைகிறார்கள்?  உதாரணமாக கதையில் வரும் மூத்த பெண் கேட் என்பவள் எதிலும் முரண்பட்டவள், அவளொரு ஆணைச் சந்திக்கவேண்டும். சண்டைபிடிக்கும் குணத்தவளான கேட்டிற்கு இருவகையான ஆண்களைப் படைக்கலாம். கேல் காட்வின் தீர்மானித்தது அவளைச் சீண்டக்கூடிய ஆணை. அதிகம் பணம்படைத்த மனிதர்களை அவள் நம்புவதில்லை என்பதால், ஆணை ஒரு கோடீஸ்வரனாகப்படைக்கிறார். அவன் எப்படி கோடீஸ்வரனானான்? அவளுக்குப் பிடிக்காத இரசாயண பூச்சிக்கொல்லி வியாபாரம் செய்து பணம் சம்பாதித்தவனாக அவனை மாற்றுகிறார். தமது தொழிலை நியாயப்படுத்த அவனுக்கும் காரணங்கள் இருக்கின்றன. கதையில் வரும் கேட் என்பவளுக்குமட்டுமல்ல பொதுவாக நம்பகத்தனமைக்கொண்ட கதைமாந்தர்களை உருவாக்கவேண்டும். அப்பாத்திரம் என்ன பேசினால் எப்படி நடந்துகொண்டால் அதன் பண்பிற்கு நம்பகத்தனமையை ஏற்படுத்தித்தரமுடியுமென சிந்திக்கவேண்டுமாம்.

பாத்திரங்களின் தேர்வும், மொழியும்:

1 பாத்திரங்களின் தோற்றம்: பூனைக்கண்கள், சுருட்டைமுடி, அரும்புமீசை என்று எழுதிக்கொண்டிராமல்  அவர்கள் வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கிற உடல்மொழி சமிக்கைகளில் கவனம் செலுத்துவதென்பது முதலாவது.

2. பிறரைச் சந்திக்கிறபோதும், உரையாடுகிறபோதும் கதை மாந்தரின் மன நிலை, அவர்கள் கவனம் மற்றும் கவனமின்மை -இரண்டாவது

3. பாத்திரங்களின் உரையாடல் எப்படி அமையவேண்டும்: வளவளவென்று பேசுவதா? உளறுவதா? சுருக்கமாகவா? திணிக்கின்ற வகையிலா? – என்பது மூன்றாவது.

4. பேச்சும் பேச்சின் தொனியும்: கட்டளை, கிண்டல், வருத்தம்?  என எழுத்தில் நுண்ணுணர்வைப் பாய்ச்சுவது நான்காவதாகச் செய்யவேண்டியது

கதைமாந்தர்களையும், துணமாந்தர்களையும் அவர்களுடனான உறவுகளையும் தீர்மானிக்கமுடிந்தால் கதைசொல்லலில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். இனி மிச்சமுள்ள கிணறைத்தாண்ட நாம் செய்யவேண்டியது பாத்திரங்கள்தோறும் கூடுபாய்ந்து கதைமாந்தருடைய தனித்த அடையாளத்தை இறுதிவரைக் கட்டிக்காப்பது.

———————————————–

கவனத்தைப்பெற்ற பதிவுகள் அக்டோபர்-10:

1. வெடிக்கு மருந்தாகும் மக்கள் – முத்துகிருஷ்ணன்

அணமையில் சிவகாசியில் நடைபெற்ற கோரவிபத்தையும் அதற்கான நதிமூலங்களையும் கட்டுரை விவரிக்கிறது. பிரச்சினகளின் வேர் தேடி எழுதுகிற முத்துகிருஷ்ணன் காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் மக்களின் தள்ளாடும் உயிர்வாழ்க்கையையும், அவர்களின் இரத்தத்தை உறிஞ்சும்  கூட்டத்தையும், கண்டும் காணாததுபோல  இருக்கிற அரசாங்க எந்திரங்களின் கையாலாகாதத் தனத்தையும் பின்புலத்திலுள்ள அரசியலையும் பிட்டுவைத்திருக்கிறார். தமிழில் உருப்படியான படைப்புகள்  அபூர்வமாகவே வருகின்றன. ஆக்கபூர்வமான; சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கட்டுரை. நண்பர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

http://amuthukrishnan.com/

2. இடிந்தகரைXகூடங்குளம்: நிரந்தரத்தைத் தற்காலிகமாக்கும் எத்தணிப்புகள்- அ.ராமசாமி

இடிந்தகரை கூடங்குளம் சிக்கல்களில் ஊடங்களின் பங்களிப்பை நுணுக்கமாக ஆய்கிறது கட்டுரை.  இரண்டுவிதமாக ஊடகங்கள் உண்டு. மக்கள் நலனில் அக்கறைகொண்டு இயங்கும் ஊடங்கங்கள், அதுபோல பாவலா செய்யும் ஊடகங்கள். உலக அளவில் ஊடக அறம், சுதந்திரமென்பது பெரும்பாலும் இதழின் உரிமையாளர்களுடைய நலனைக் கருத்திற்கொண்டது. கூடங்குளம் தொடர்பான செய்திகளை தினசரிகளில் வாசிக்கிறபோதே பத்திரிகைகளின் நிறமும் குணமும் சந்தி சிரிக்கின்றன. கட்டுரை ஆசிரியர் இடிந்தகரை போராட்டகாரர்ளை அரசாங்கத்திடம் மட்டுமல்ல நமது ஊடகங்களிடமுங்கூட. கவனத்துடன் இருக்கவேண்டுமென எச்சரிக்கிறார்: அரசியல்வாதிகளைப்போலவே பெரும்பான்மையான ஊடகங்கள் எப்போ மக்களின் உண்மையான நலன்களில் அக்கறைகொண்டவையல்ல என்பது அவரது வாதம்.

http://ramasamywritings.blogspot.fr/2012/10/x.html#more

3.காலச்சுவடு கண்ணன் பதில்கள்

தமிழ்நாடு படைப்புலகம் தமிழ்நாடு அரசியலுலகத்திற்கு நிகரானது. அரசியலிலுள்ள அவ்வளவு கயமைகளும்  போலிகளும், பசப்புகளும், பாசாங்குகளும், வியந்தோதும் கூட்டத்தை விலைக்கு வாங்கும் கூட்டமும் அங்குண்டு. பல நேரங்களில் சமூக அக்கறைகொண்டும், சிறுமை கண்டும் கொந்தளிப்பவர்கள், நடிப்பில் களைத்து அரிதாரத்தை வெகுசீக்கிரம் கலைத்துக்கொள்கிறார்கள். அசல் வாழ்க்கையில் வேறு மனிதர்கள் என்பதை புரியவைக்கிறார்கள். என் அனுபவத்தில் பத்தாண்டுகளில் கண்ணன் சொல்லுக்கும் செயலுக்கும் பேதமற்று இயங்குபவர். ‘எதுவரை’ இணைய தளத்தில் அவருடைய பதில்கள் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளவை ‘கேள்வியும் நானே பதிலும் நானே’ இரகமல்ல.  சு.ரா.வுக்கு பரிசளிக்கக்கூடாதென்ற அரசியல், பிள்ளைகொடுத்தாள்விளை சிறுகதை சர்ச்சையென பல பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். பதில்களில் கடுமையான வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம், அவர் எரிச்சலுற்றிருப்பது வெளிப்படை. செயல்பாடுகளில் நியாயமிருப்பின் உரத்த குரலைத் தவிர்ப்பது சாத்தியம்மல்ல. இப்பதில்களை முடிந்தால் தொகுத்து ஒரு நூலாக கொண்டுவரவேண்டுமென அவரிடம் சொல்லியிருக்கிறேன். வழக்கம்போல ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இவ்வருடமும் கண்ணனைச் சந்திக்கிறேன்.

http://eathuvarai.net/

4.. வால் பசங்க வராங்க- ஞானி

பிரதமர் மன்மோகன்சிங் தலமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின்மீது வேளைக்கு ஒன்று நாளைக்கு ஐந்து என ஊழல் குற்றசாட்டுகள். காங்கிரஸ்காரர்களுக்குப்பழகிவிட்டது. ”நல்லமாட்டுக்கு ஒரு அடி’ என்ற சொலவடை கிராமத்திலுண்டு. மழையில் எருமைமாடுகள் அதுபாட்டுக்கு நனைந்துகொண்டு அசைபோட்டபடி படுத்திருக்கும். தலைக்கு மேலே வெள்ளம், இதில் சாண் போனாலென்ன முழம்போனாலென்ன? எரிகின்ற வைக்கோல்போரில் பிடுங்கினமட்டும் இலாபம் என்பதுபோல அவசர அவசரமாக அரசின் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. கூட்டணிகள் எதிர்கட்சிகள் என்றிருக்கிறவர்களின் பலங்களையும் பலவீனங்களையும் தெரிந்துவைத்திருப்பதால் சாதுர்யமாக காய் நகர்த்த முடிகிறது.  குற்றத்தை மறுப்பதற்குப் பதிலாக, அவருக்கும் அதில் பங்குண்டு எனசொல்லவும் முடிகிறது. சில்லரைவணிகத்தின் பின்னிருக்கும் அரசியலை வழக்கமான பாணியில் விளாசியிருக்கிறார் ஞானி.

http://gnani.net/

—————————————-