கவனம் பெற்ற பதிவுகள் டிசம்பர் 2012

1. மனதிற் பதிந்த கவிதை

வாப்பாவின் மடி – ஹெச்.ஜி.ரசூல்

எனக்குத் தொப்புள் கொடியறுத்த
அம்மச்சியை இன்றுவரை பார்த்த்தில்லை.
கர்ப்ப பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு
பூமியின் முதல்காற்றை சுவாசித்தபோது
என் காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன
எலப்பையின்குரல் ஓர்மையில் இல்லை.
சுட்டுவிரலால்
சேனைத்தண்ணி தொட்டுவைத்தபோது
அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்..
நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில்
பாதுகாத்து வைத்திருந்த மயிலிறகு
இன்னமும் குட்டி போடவில்லை.
நாலெழுத்து படிக்கவும்
நாலணா சம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா
ஒரு துறவி போல
உறவுகடந்து கடல்கடந்து
கண்ணுக்கெட்டாத தொலைதூரத்தில்
என்றேனும் ஒரு நாள்
வாப்பாவின் மடியில் தலைவைத்து
ஒரு இரவு முழுதும் தூங்க வேண்டும்.

நன்றி: ஆபிதீன் பக்கங்கள்
http://abedheen.blogspot.fr/

2. மலைகள். காம்

மலைகள்.காம் இணைய இதழில் பார்ஸ்க்கர் இலட்சுமணனின் ‘எம்.எஸ். சுப்புலட்சுமியைப் பற்றிய கட்டுரை, ‘நிழல்’ என்ற தலைப்பில் அறிமுகப்படைப்பாளி சு.சந்தோஷ்குமார் கட்டுரை;அறிமுக படைப்பாளி செந்தமிழன், சின்னப்பயல், குமார நந்தன் கவிதகள்; சொ.பிரபாகரன், விஷ்ணுபுரம் சரவணன் சிறுகதைககளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு இதழிலும் பதிப்பக அலமாரி என்கிற தலைப்பில் புதிய நூல்களின் அறிமுகமும் இருக்கிறது. ‘வைத்தியம்’ என்ற சிறுகதை மனித வாழ்க்கையின் நவீன தேடல்கள் குறித்து வினா எழுப்புகிறது. மனித மூளைகள் தமது வாழ்விடத்தைத் தலைக்குப் பதில் கால்கள் எனத் தேர்வு செய்திருக்குமோ என்ற ஐயம் எனக்கும் அவ்வப்போது எழுவதுண்டு, அதை உறுதிபடுத்தும் கதை. ‘வெள்ளை நிறப்பாம்பு’  என்கிற சிறுகதையை விஷ்ணுபுரம் சரவணன் எழுதியிருக்கிறார். மனச்சிதைவுக்குள்ளானவன் ஒருவனுடைய மன ஓட்டங்களை கதைப்படுத்தியிருக்கிறார். விஷ்ணுபுரம் என்ற பெயரை ஒட்டிக்கொண்டிருப்பதாலோ என்னவோ விரும்பி வாசிக்கும் படி எழுதியிருந்தார். இவர் எழுத்துகள் கவனம் பெறும்.
http://malaigal.wordpress.com/

3. அசதா: தாகூர் சிறுகதைகள்

த.நா. குமாரஸ்வாமி வங்கமொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகளின் தொகுப்பு. சா. கந்தசாமி தேர்வுசெய்த கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘தாகூர் சிறுகதைகள்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது அத்தொகுப்பைக்குறித்த மதிப்புரை இது. ‘புதிய புத்தகம் பேசுகிறது’ ஜூன் 2012ல் வெளிவந்த கட்டுரையை தமது தளத்தில் மீள் பிரசுரம் செய்திருக்கிறார். கதைகள் குறித்த சிறு விவரிப்பும், கதை மீதான கட்டுரையாளர் கருத்தும், வாசிப்பவர்க்கு கதைகள் குறித்த நல்லெண்ணத்தை உயிர்ப்பிக்கின்றன.

http://mugaiyurasadha.blogspot.fr/

4. அழகிய சிங்கர்: எதையாவது சொல்லட்டுமா?

போகிற இடங்களிலெல்லாம் வாசிப்பதற்கென அவ்வபோது ஒன்றிரண்டு புத்தகங்களை (‘பலபுத்தகங்கள் புரட்டிப்பார்க்காமலேயே இருக்கின்றன) வாங்குவது எனக்கும் பழகிவிட்டது. எதிர்காலத்தில் எனக்கும் பயனளிக்கக்கூடிய கட்டுரை. படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. வணக்கத்திற்குரிய கி.அ. சச்சிதானந்தன் வீட்டிலும் எப்படி ஏராளமான புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள் இருக்கின்றனவென்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். கட்டுரையைப் படித்தபோது அவர் ஞாபகமே வந்தது. அம்ருதா டிசம்பர் மாத இதழில் வந்த கட்டுரையை, அழகியசிங்கர் பதிவு செய்திருக்கிறார்.

http://navinavirutcham.blogspot.fr/

5. எம்.டி. முத்துகுமாரசுவாமி: பாகேஸ்வரி ராகம்.

நண்பர் எம்.டி.முத்துகுமாரசுவாமியின் இசைகுறித்த கட்டுரைகளை அண்மைக்காலங்களில் விரும்பி வாசிக்கிறேன். பாகேஸ்வரி காலம், தருணம், உகந்த மனநிலை என அவ்வளவையும் ஒரு காதலின் மனோ நிலையில் எழுதியிருக்கிறார். கட்டுரையை படித்திர்களெனில் நீங்களும் காதலுக்கு ஏங்கக்கூடும்.

http://mdmuthukumaraswamy.blogspot.

——————————————————

மொழிவது சுகம் டிசம்பர் -15-2012


1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு

Poomaniபிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும்,  கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும்  ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு என்று முடிவுசெய்து, எழுத்தாளர் பூமணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவரது நூலொன்றை விரைவில் பிரெஞ்சுமொழியில் கொண்டு வர இருப்பதாகவும், கீதாஞ்சலியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நூலின் பெயர் குறிப்பிடபடவில்லை. பூமணியின் தேர்வைத் தமிழ்ப் படைப்புலகம் ஒருமனதாக ஆதரிக்குமென நினைக்கிறேன். பிரான்சைத் தவிர்த்த பிறநாடுகளுக்கான பிரெஞ்சுமொழி படைப்புக்குரிய பரிசு ஹைத்தி எழுத்தாளர் ‘Lyonel Trouillot ‘ எழுதியுள்ள ‘La Belle amour humaine’ என்ற நாவலுக்குக் கிடைத்திருக்கிறது.

2. மனித நேயம் (La Belle Amour Humaine) லியொனெல்  ட்ரூயோ (Lyonel Trouillot)  – தருமபுரி – மாதவ் சவாண்.

Lyonel ‘La Belle amour humaine’ நாவலுக்கு கீதாஞ்சலி பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. 2011ம் ஆண்டு பிரான்சுநாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசெனக் கருதப்படுகிற கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்று பின்னர் வெற்றிவாய்ப்பை இழந்த படைப்பு. நூலாசிரியர் பிரெஞ்சு காலனியாகவிருந்த ஹைத்தி நாட்டைச் சேர்ந்தவர்.  ‘La Belle Amour Humaine’ என்ற நூலின் பெயரை ‘மனித நேயம்’ என பொருள்கொள்ளலாம். பெரும் மழைக்குப்பிறகு வெள்ளத்தில் மூழ்கியும் மூழ்காமலுமிருக்கிற விளைச்சல் நிலத்தை பார்க்கும் விவசாயிபோல நூலாசிரியர் மானுட வாழ்க்கையைக் துண்டு காட்சிகளாக கதைக்குள் கதையாக விவரித்து செல்கிறார். இந்த உலகத்திற்கு நம்மால் செய்யக்கூடியதென்ன? என்ற கேள்வி இலைமறைகாயாக புனைவெங்கும் கண்பொத்தி விளையாடுகிறது. எல்லா மனிதருக்குள்ளும் இது பற்றிய பிரக்ஞையிருப்பின் பாவ புண்ணியங்கள் பொருளிழந்திருக்கக்கூடும். கடவுள்களுக்கும் அவசியமில்லை.

ஆஸ் -அ- ·பொலெர் ஒரு கடற்கரை குப்பம், மீனவர்கள் அதிகம் வாழும் ஊர். அவ்வூரில் இரண்டு பேர் காட்டுதர்பார் நடத்துகிறார்கள். ஒருவர் பியர் ஆந்தரே- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி- முன்னாள் காவல்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ராணுவ அகாதமியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவையெல்லாம் கொழுப்புகளாக உடலில் தங்கியிருக்கின்றன. தரித்த ராணுவ சீருடையும், வகித்த பதவிகளும் ‘தான் சாதாரணன் அல்ல’ என்கிற மனப்பாங்கை அவரிடத்தில் வளர்த்தெடுந்திருந்தது.  தனது பிறப்பும் வாழ்க்கையும் பிறரை அடக்கி ஆள, தண்டிக்க, வதைசெய்ய என நினைக்கும் ஆசாமி. இரண்டாவது நபர் ஒரு பயண முகவர், சில நிறுவனங்களின் பங்குதாரராகவும் இருக்கிற நிழலான ஆசாமி. கடத்தல் தொழிலும், கலப்படத் தொழிலும் அவருக்குப் பணத்தைக் குவிக்க உதவுகின்றன. பார்க்க சாது, ஆனால் பரம அய்யோக்கியன். அகத்தில் பேதமற்ற இரண்டு மனிதர்கள் இருவகையில் செயல்படுகிறவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். ஒருநாள் இரவு நடந்த தீ விபத்தில் இருவரின் வில்லாக்களும் உடமைகளும் தீக்கிரையாக, சாம்பல் பட்டுமே மிஞ்சுகிறது. தொழிலதிபரின் பேர்த்தி அனெஸ் என்பவள் தீவிபத்திற்குப் பிறகு காண்மாற்போன தனது தாத்தாவைத் தேடி அக்கடற்கரை ஊருக்கு வருகிறாள். கதைசொல்லியான தாமஸ் அவளை வரவேற்கிறான், இருக்க இடத்தையும் கொடுத்து, சிறுகச் சிறுக அப்பெண்ணை கிராம மனிதர்களிடை நடத்திச் செல்கிறான். சொற்பிரவாகமெடுத்து கதை நீள, அனெஸ்ஸ¤டன் கதைமணலில் நாமும் புதைகிறோம். “இங்கே அதிகாலையியில் கண் விழிக்கிறபோதே யுத்தத்திற்கு எங்களை தயார்செய்து கொள்ளவேண்டிய கட்டாயம், தவறினால் எங்கள் உயிருக்கு உத்தரவாதமல்ல’; “எங்கள் தீவில் பறவை வேட்டைபோன்றதே ரொட்டிக்கான வேட்டையும், எல்லோருக்கும் கிடைக்கச் சாத்தியமில்லாததால், குறிதப்பிய ரொட்டிக்காக போடும் கூச்சலே எங்கள் நம்பிக்கை” போன்றவரிகளிலிருக்கும் சத்தியம் இந்தியாவிற்கும் பொருந்தகூடியது. ஆஸ் -அ- ·பொலெர் சபிக்கப்பட்டதா? கதை சொல்லி மறுக்கிறான். அதற்கான காரனத்தையும் சொல்கிறான். நாவலுக்குப் பரிசளித்ததை நியாயப்படுத்தும் பகுதிகள் இதற்குப்பின்னேதான் வருகின்றன. ‘தாமஸ்’  நாவலாசிரியன், ‘அனெஸ்’ வேறுயாருமல்ல நூலை வாசிக்கிற நாம். அல்லது தன்னைத் தவிர்த்து பிறரை குற்றவாளியாக விமர்சித்துப் பழகிய மனிதர்கள். மனிதர்கள் கறுப்போ வெள்ளையோ, அதிகார கூட்டமோ தரித்திரர்களோ, மேற்கத்திய நாடுகளோ மூன்றாம் உலக நாடுகளோ எவராயினும் ஒருவர் மற்றவக்கு அந்நியர். எனக்கு எதிரே உள்ளவன் விரோதி, கடித்துக் குதற காத்திருக்கிறோம், காரணம் தேடுகிறோம்.

Madav Chavanஊழலுக்கு ஒழுங்கின்மைக்கும், உலக நாடுகளுக்குச் சவால் விடும் இந்தியாவின் குணங்களை உறுதிபடுத்துவதுபோல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் செய்திகளை வாசித்து அலுப்புறும் நம்மைச் சமாதானமெய்வதுபோன்று அண்மையில் செய்தியொன்றைப் பிரெஞ்சு தினசரியொன்றில்( Le Monde) வாசித்தேன். இந்தியாவில் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர்வரை தன்னலமற்று உழைக்கிற மனிதர்கள் இல்லாமலில்லை. மனிதர் நெருக்கடியில் பிதுங்கும் மும்பையில் இயங்குகிறது மாதவ் சவாணுடைய தொண்டு நிறுவனம். கிட்டத்தட்ட 80000 பரந்த உள்ளங்கொண்ட தொண்டர்கள் அவருடைய வழிகாட்டுதலில் பணியாற்றுகிறார்களாம். ‘தற்குறிகளுக்கு எழுதப் படிக்க கற்றுதருவதன்மூலம் மார்க்சியத்திற்கு ஈடானப் புரட்சியை நடத்திக் காட்ட முடியுமென உறுதியளிக்கிறார். மாதவ் சவாண் குடும்பம் இடதுசாரி சிந்தனையைச் சுவாசித்து வந்த குடும்பம். தந்தையும் அவரது தோழர்களும் நாள்முழுக்க பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரையாடலை மாதவ் சவாண் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். இளம் வயதில்,   இந்தித் திரைப்பட பாடல்களின் மெட்டில் புரட்சிகீதங்களை எழுதி நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். பொதுவுடமைக் கருத்தியத்தில் நாட்டம் கொண்டிருந்த சவாண் வேதி இயலில் உயர்கல்வி படிப்பதற்குத் தேர்வு செய்த நாடு அமெரிக்கா. ‘மார்க்ஸ் மூலதன நூலை எழுத இங்கிலாந்து காரணமானதைப்போல எனது பொதுவுடமைச் சித்தாந்தத்தை வலுப்படுத்த அமெரிக்க சூழல் உதவுமென நம்பினேன்’, என வேடிக்கையாகக்கூறுகிறார். இந்தியா திரும்பியதும் லெனினுடைய அறிவு மெய்மையியலில் (Epistémologie) காதலுற்றதன் பலனாக அமெரிக்க  வேதியியல் கசக்கிறது. “தவறான வழிமுறை சிக்கல்களிலிருந்து மீள்வதற்குண்டான உபாயங்களைத் தேடுவதற்கு நேரத்தைச் செலவிடுவதினும் பார்க்க, மாற்று வழிமுறைகளைத் தேடுவதில் நன்மையுண்டு’ என்ற லெலினுடையக் கருத்து அவரை யோசிக்கவைத்தது. அதன் விளைவாக ‘பிரதாம்’ என்ற அமைப்பு பிறக்கிறது. மதாவ் சவானின் தொண்டர்கள் நகரத்தின் ஒதுக்குப்புறமான, கவனிப்பாரற்ற மக்களைத் தேடி ஒவ்வொரு நாளும் செல்கிறார்கள்; அவர்களுக்கான கல்வித்தேவையை மதிப்பிடுகிறார்கள். அதனடிப்படையில் தனிப்போதனை வகுப்புகள் உருவாகின்றன. மரத்தடிகளிலும், தெருவோரங்களிலும், சமுதாயக்கூடங்களிலும் மாணவர்களுக்கன்றி தேவைப்படின் அவர்களின் பெற்றோருக்கும் கல்வி அளிப்பது தங்கள் தொண்டு நிறுவனத்தின் பணி என்கிறார் .சவாணின் தொண்டுநிறுவனத்தில் கல்விபெற்ற ஏழைமாணவர்கள், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மாதவ சவாணுடைய அமைப்பை முன்மாதரியாகக்கொண்டு இன்று ஆப்ரிக்க நாடுகளிலும் ஏழைமாணவர்களின் கல்வியில் அக்கறைகொண்ட தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றனவாம்.

Strasbourg நகரிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் ஒருமணிநேரத்திற்குமேல் விவாதித்து, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்திருக்கிறது. காந்தி பிறந்த நாட்டில் பெரியார் முழக்கமிட்ட தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் வெட்கக்கேடானவை என்பது உண்மை. தலித்மக்கள் மீது தாக்குதல் நடத்திய அந்த பிறருக்குத் தலித் மக்கள்மீது அப்படியென்ன வன்மம்? தரித்திரத்திலிலும் கடைநிலை வாழ்க்கையிலும் மயிரிழை வேற்றுமைகூட இவர்களிடமில்லை. பொதுவில் உழைத்து வாழும்(ஏய்த்து அல்ல) மனிதர்கூட்டம். இருதரப்பிலும் அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவர்களென்ற ஒருசாதி வழி நடத்துகிறது. அவர்களுக்கு பிழைப்பு வேண்டும்.   Lyonel Trouillot மொழியிற் சொல்வதெனில் யாரைக்குற்றம் சொல்வது? இந்தியாவிற்கு புத்திக்கூற ஐரோப்பியர்களுக்கு யோக்கியதை உண்டா? La Belle Amour Humaine (மனிதநேயம்) நாவலின் ஆசிரியர் வற்புறுத்துவதுபோல மனிதர்கள் கைகோர்க்கவேண்டும், மனதில் பிறப்பிலிருந்து தொடரும் அந்நியர்மீதான கசப்புகள் வேருடன் பிடுங்கப்படவேண்டும். புன்னகைக்கவும்வேண்டும் பிறரை புரிந்து கொள்ளவும்வேண்டும்.  . ராமதாஸ் திருமாவளவன்கள் நமக்குவேண்டாம் இந்திய மண்ணுக்கு தற்போதைய தேவை மாதவ் சவாண் போன்ற ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்கள்.

—————————————

எழுத்தாளன் முகவரி -9: அலுப்பும் நூல்களும்

Ken Folletபுத்தகத்தைப் பிரித்தால் கொட்டாவி வருகிறதா? அதுதான் இலக்கியம் எனச்சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். நேற்று வர்ஜீனியா உல்பும், இன்று கிளேஸியோவும் எனக்கு சில நேரங்களில் வாசிப்பு அலுப்பைத் தருகிறார்கள், இருந்தாலும் சில காரணங்களுக்காக வாசிக்கிறேன். தாலிகட்டிய மனைவியை வேடிக்கை பார்க்கவா முடியும். வாசகர்களிடத்தில் இவர்களைப்போன்றவர்களுக்குக் கொஞ்சம் பரிவும் இரக்கமும் இருந்திருக்குமென்றால் கூடுதலாகக் கொண்டாடப்பட்டிருப்பார்கள். கொஞ்சம் யோசித்துப்பார்க்க வேறொரு கேள்வியையும் எழுப்பவேண்டியவர்களாக இருக்கிறோம். உண்மையிலேயே நல்ல நூல்கள் அனைத்துமே அலுப்பைத் தருகின்றனவா? இல்லை, என்கிறார் கென் ·போலெட்.

கென் போலெட் (Ken Follet)ஆங்கில நாவலாசிரியர். வரலாற்று புனைவுகளை விறுவிறுப்பான மொழியில் எழுதக்கூடியவர். கென் போலெட் நூல்களின் விற்பனை சாதனையை விக்கிபீடியாவில் வாசித்த போது தலைச் சுற்றியது; இதுவரை 100 மில்லியன்கள் விற்று தீர்ந்திருக்கிறதாம். அவருடைய நான்கு நூல்கள் நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிகம் விற்பனையாகும் நூல்கள் வரிசையில் முதலிடம் பிடித்தனவாம். எனக்கு இன்னமும் ஆர். எல். ஸ்டீவன்சனின் The Black Arrow அவ்வகையில் மிகப் பிடித்தமான நாவல். ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, ஆங்கில துணைப்பாடத்தில் எங்களுக்கிருந்தது. அந்நாவலில் பெரிதும் ஈர்க்கப்பட்டு பின்நாளில் நாவல்கள் வாங்கி படிக்க ஆரம்பித்த பொழுது, கல்லூரி நாட்களில் விரும்பிப்படித்த அலிஸ்ட்டெர் மக்லின் போன்றவர்கள்கூட திருப்தி அளிக்கவில்லை.

கென் போலெட்டை பொறுத்தவரை “நல்ல நால்களென்றாலே வாசகனுடைய பொறுமையைச் சோதிக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை”. உயர் நிலைப்பள்ளியில் படித்தபோதும் சரி, பின்னர் கல்லூரில் சேர்ந்துபடித்தபோதும் சரி ஒரு சில ஆசிரியர்களை விரும்பியிருக்கிறேன், ஒரு சில ஆசிரியர்களை விரும்பாமலிருந்திருக்கிறேன். காரணம் அந்த ஆசிரியர்களேயன்றி நானில்லை. மிகக்கடினமான பாடங்களையும் எளிதாய்ப் புரியவைத்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள். மிக எளிதானப்பாடங்களையும் விளக்கெண்ணெய் வைத்தியர்களாக அவதாரமெடுத்து வகுப்பைத் தூங்க வைப்பவர்களும் இருக்கிறார்கள். கென்போலெட் இளைஞராக இருந்தகாலத்தில் ஆலிவர் ட்விஸ்ட் தொடராக வந்திருக்கிறது. பில் சைக்ஸ் நான்சியைத் துன்புறுத்துவதாக ஒரு அத்தியாத்தில் முடிந்தது. மறு அத்தியாயத்துடன் அத்தொடர்வந்த இதழ்கள் நியூயார்க் துறைமுகத்தில் கப்பலில் வந்திறங்கியபோது நான்சியின் தலையெழுத்தை அறியவதற்காக ஒரு பெருங்கூட்டம் காத்திருந்ததாம். ஆலிவர் ட்விஸ்டு அதன் பெயருக்கேற்ப பல திருப்பங்களை கொண்டதாகச் சொல்லப்பட்டிருப்பினும், அந்நூல் தெரிவிக்கும் உண்மையை மறுக்க முடியாதென்கிறார் கென் போலெட். உலகின் மிகப்பெரிய நாவலாசிரியர்களென ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறவர்கள் அனவருமே மனநெகிழ்வைத் தரும் சம்பவங்களை வாசகர்களுக்கு ஏற்படுத்தித் தருவதை ஒரு விதியாகக் தங்கள் எழுத்துக்களில் கொண்டிருந்திருக்கிறார்கள். உலகில் எந்த எழுத்திற்கும் இது பொருந்தும்.

ஆங்கிலத்தில் Soap Opéra என்ற சொல்லுண்டு. ஒப்பேரா என்கிற இசை நாடகங்களில் அக்காலங்களில் இடையில் சோப்பு விளம்பரங்கள் இடம்பெறுவதுண்டாம். அம்மாதரியான ஒப்பேராக்கள் அதிகம் மெலொடிராமாக்களாக இருப்பதுண்டு. தமிழ் தொலைகாட்சிகளில் வரும் தொடர்களைப்போல. எனவே Soap Opéra க்களெனில் பெண்களை மூக்கைச் சிந்தவைக்கிற வகையில் கதைசொல்லப்படுவது. நளதமயந்தி, அரிச்சந்திரன் கதை, நல்லதங்காளென நமக்கும் அனுபவங்கள் உண்டு. இராமயணத்தையும் மகாபாரதத்தையும் இத்தனை காலம்கடந்தும் வாசிப்பதற்கும், வடிவங்கள் எதுவாயினும் அது வெற்றிபெறுவதற்கு இச் சூத்திரமே  அடிப்படை.

இது எப்படி நிகழ்ந்தது, எதனால் மெலொடிராமாக்கள் வெகு சனமெனப்படுகிற பெருவாரியான மக்களை ஈர்க்கின்றன? இங்கிலாந்து அரசாங்கம் எல்லோருக்கும் கல்வியென 1870ல் ஒரு சட்டத்தைக்கொண்டு வருகிறது. கிட்டத்தட்ட அதுமாதரியான சட்டம் அமெரிக்காவிலும் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. இவற்றின் விளைவாக நாட்டில் கல்விகற்றோர் எண்ணிக்கை பெருக, புனைவுகளுக்குப் பெரும் எண்ணிக்கையினாலான வாசகச் சந்தை திறக்கிறது. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்ற பங்குதார்களைக்கொண்ட வாசிப்புலகம் இப்புதிய தாக்கத்தால் இரண்டாகப் பிளவுபடுகிறது: பழைய வாசகர்கள் ( மேட்டுக்குடி வாசகர்கள்) தங்களை அறிவார்ந்த வாசகர்களென அழைத்துக்கொண்டு கனத்தப் புத்தகங்களைத் தேடி வாசித்தார்கள். புதிதாகக் கல்விபெற்ற பெரும் எண்ணிக்கையிலான வாசகர்கள், பரபரப்பூட்டுகிற  கிளர்ச்சியூட்டக்கூடியவற்றை தேர்வு செய்தார்கள். முதல் வகையினர் தங்களுக்கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ, தாங்கள் மேன்மக்கள் என்று சொல்லிக்கொள்ளவும் பெரும் எண்ணிக்கையான மக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்பதைக் காட்டிக்கொள்ளவும் சில நூல்களை தேர்வுசெய்துவாசித்தனர். இப்பிரிவினால் இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டார்கள் என்கிறார் கென் பொலெட்.

இதன் விளைவாக புனைவுகளில் கதைமாந்தர்கள் இடத்தை கதை பொருட்கள் அபகரிக்கின்றன. ராபின்சன் குரூசோ இடத்தில் உதாரணத்திற்கு டைட்டானிக் கப்பல். ஜேம்ஸ் ஜாய்ஸின் உல்லிசெஸ¤க்குபிறகு, புற உலகு, சமூகம் எனற அக்கறைகள் வலுவிழந்து, நுணுகி ஆயும் தன்மையும், உண்முக நோக்கும் கவனம் பெறுகின்றன. இது மெல்ல மெல்ல வளர்ந்து இன்று இலக்கியமெனச் சொல்லப்படுபவை எளிய மனிதனின் வாழ்க்கைப்போராட்டங்கள், நெருக்கடிகள், சிக்கல்கள் இவற்றைக் கணக்கில்கொள்ளாது தள்ளி வெகுதூரத்தில் நிற்கின்றன. ஒருநல்ல இலக்கியம் இரண்டிலும் கால் ஊன்ற தெரிந்திருக்கவேண்டும். பெரும் எண்ணிக்கையிலான வாசகர்களிடமும் போய்ச்சேரவேண்டும். நன்றாகவும் எழுதப்படவேண்டும். நல்ல எழுத்துக்கள் நடுத்தர எளிய மக்களை சென்றடையவேண்டாமா? வேண்டும். அவ்வாறே புத்திஜீவிகளுக்குமட்டுமே எனச்சொல்லிக்கொள்கிற எழுத்துக்களிலும் சிறிது கவனமெடுத்து கதைக்களன், கதை சொல்லல்,  சிறிதளவு கிளர்ச்சி, கொஞ்சம் பரபரப்பு என்றமைத்துக்கொள்வதால் என்ன குடிமுழுகிப்போய்விடும்? சாலமன் ருஷ்டி, குந்தர் கிராஸ், உப்பர்ட்டோ எக்கோ போன்றோர் சாதிக்கவில்லையா? தமிழிலும் உதாரணங்களுண்டு.

——————————————

வெ.சுப.நாயகரின் நூல்வெளியீடு விழாப்படங்கள்

நண்பர் வெ.சுப. நாயகரின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு மிகச்சிறப்பாக நடைபெற்றதென நண்பர்கள் சொல்லக் கேட்டேன். வாழ்த்துகள்.

விழாவில் எடுத்த படங்களை இங்கே நண்பர்களுக்காக நாயகரின் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறேன்.

IMGP0267 IMGP0277  IMGP0261 IMGP0272 IMGP0268

மொழிவது சுகம் டிசம்பர் 2 -2012

மின்னுவதெல்லாம் பெண்ணல்ல

அழகில் தேவதை, அஞ்சப்பரையும் முனியாண்டியையும் அசத்தும் சமையற் கைபக்குவம், “களவின் வழிவந்த கற்பிற் புணர்ச்சி, கிளைஞரின் எய்தாக் கேண்மையும் உடைத்தே, உடன்போய் வரைதலும் உண்மையான வாழ்க்கைத் துணை – 19 ஆண்டுகால இல்லற வாழ்க்கை -இன்று பொய்யாய் பழங்கதையாய்ப் போய்விட்டதென ஒப்பாரிவைக்கிறார் மனிதர் -பெயர் ஜான், பெல்ஜியம் நாட்டின் 64 வயது குடிமகன்.

இந்திய உபகண்டத்தில் ‘சர்தார்ஜி ஜோக்குகள்’ எத்தனை பிரசித்தமோ அத்தனை பிரசித்தம், ஐரோப்பியர்களிடையே – குறிப்பாக பிரான்சுநாட்டில் -பெல்ஜிய மக்களை முட்டாள்களாகச் சித்தரிக்கும் – ‘Histoire Belge’. அண்மையில் பிரெஞ்சுத் தினசரியில் வந்திருக்கும் செய்தி பிரெஞ்சு பேசும் பெல்ஜியமக்களைப் பற்றிய கருத்திற்கு வலுவூட்டியிருக்கிறது.  நமது பெல்ஜியக்கதை நாயகருக்கு தற்போது 64 வயது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, காதலித்தவளைக் காந்தர்வ மணம்புரிந்து 19 ஆண்டுகாலம் இல்லறவாழ்க்கை அவருக்கு அமைதியாகவேக் கழிந்திருக்கிறது. ஜான், களவு வாழ்க்கையிலும் களவுக்குப்பின் தொடர்ந்த கற்பு வாழ்க்கையிலும் எவ்வித குறையுமில்லை என்கிறார். கடந்த வாரத்தில் அவர் சகபாலினத்தைச்சேர்ந்த ஒருவருடன் தாம் பல ஆண்டுகள் இல்லறம் நடத்தியிருக்கிற உண்மை தெரியவந்ததிலிருந்து மனிதர் பேயறைந்தவர் போலிருக்கிறார்.

இரண்டுமுறை விவாகரத்து செய்த மனிதருக்குக் கணக்கை நேர் செய்ய மூன்றாவதாக ஒன்று தேவைபட்டிருக்கிறது. 1993ம் ஆண்டு மோனிக்கா என்பவளைச் சந்தித்திருக்கிறார். மோனிக்காவிற்கு இந்தொனேசியா சொந்த நாடு. பெல்ஜியத்திற்குப் புலம்பெயர்ந்திருந்தாள். ஜான் உடைய சகோதரிவீட்டில் பணி. வழக்கம்போலவே சகோதரி இல்லத்திற்கு அன்றைய தினம் சென்றிருக்கிறார். கதவைத் திறந்த மோனிக்காவின் முதற்பார்வையே மோகம் கொள்ளும் வகையில் இருந்ததாம். அவள் அழகும், நடத்தையும் ஜானிடத்தில் காதலை விதைத்திருக்கிறது. சந்திப்பும் அதனைத் தொடர்ந்து காதலும் இருவருக்கிடையில் முகிழ்ந்தபோது இவருக்கு 44 அவளுக்கு இருபத்தேழு வயது. இருதரப்பிலும் குறுக்கீடுகளில்லை. நெருங்கிவந்தார்கள். உறவுக்கும் தடையில்லை. ஜானுக்குச் சின்னதாக ஒரு நெருடல். ‘ உனக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணமேதுமில்லையே?’ எனக்கேட்டிருக்கிறார். “சீச்சி அப்படியேதுமில்லை. சந்தோஷமாக இருக்கவேண்டிய வயதில், எதற்குப் பிக்கல் பிடுங்கல்”, என்றிருக்கிறாள். 44 வயதில் 4 பிள்ளைகளுக்குத் தந்தை என்ற நிலையிலிருந்த ஜானுக்கு, இருபத்தேழு வயது மோனிக்காவின் குடும்ப வாழ்க்கையைக்குறித்த கருத்தியம் மகிழ்ச்சியை அளித்தது.

ஏறக்குறைய இருபதாண்டுகால மணவாழ்க்கை.  மணவாழ்க்கையிலும்  அதன்பாற்பட்ட உறவுகளிலும் தம்பதிகளுக்கிடையே விரிசல்களில்லை.  வாழ்க்கைத் துணையின் பாலினம் குறித்து அவருக்கு ஐயங்கள் எழுந்ததில்லை. “உறவுக்கு முன்னும் பின்னும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வாள். ஆனால் என்னிடம் உண்மையை மறைக்க என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவ்வளைவையும் செய்திருக்கிறாள்”, என்கிறார். “பாலியல் உறவில் அது சாத்தியம் என்கிறார்கள், அத்துறைசார்ந்த வல்லுனர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஆரம்பித்திருக்கிறது. மோனிக்கா பின்னிரவுகளில் வெளியில் போக ஆரம்பித்திருக்கிறார். அப்போது உடுத்திக்கொண்டவிதம் சந்தேகங்களுக்குக் காரணமாகியிருக்கிறது. அரசல் புரசலாக வதந்திகள் பரவ ஆரம்பித்து, கடைசியில் இவர் காதையும் எட்டின. மோனிக்காவின் ஒன்றுவிட்ட சகோதரன் இந்தோனேசியாவிலிருந்து வர, உண்மையைப்போட்டு உடைத்திருக்கிறான். ‘ஒரு சில நொடிகளில் எனதுலகம் இருண்டுபோய்விட்டது’ இருபதாண்டுகாலம் என்னை வன்புணர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டதாக நினைக்கிறேன், ‘ என அழுகிறார். அவரைச்சேர்ந்தவர்கள் பலருக்கும் உண்மை தெரியுமென்றபோதிலும் இவரிடத்தில் சொல்லாமல் மறைத்தது,  மனதைப் பெரிதும் பாதித்திருக்கிறது. மோனிக்காவுடனான தமது திருமணத்தைச் செல்லாதென அறிவிக்கக்கோரி ஜான் வழக்குத் தொடுத்திருக்கிறார். மோனிக்கா ஜானை மட்டுமல்ல பொய்யான ஆவனங்களை அரசுக்கு அளித்ததன்மூலம் பெல்ஜிய அரசாங்கத்தையே ஏமாற்றி இருக்கிறாள்(ர்) என்கிறார் ஜானுடைய வழக்குரைஞர்.

ஒருபாலினத் திருமணத்தை ஆதரித்து விரைவில் பிரான்சுநாட்டில் சட்டவரைவு கொண்டுவர இருக்கிறார்கள்; இம் முடிவை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் கடந்த சில கிழமைகளாக ஊர்வலம் ஆர்ப்பாட்டமென இறங்கியிருக்கிறார்கள். ஆதரிப்பவர்கள் இடதுசாரிகள், பெண்ணியம் பேசுகிறவர்கள், புத்திஜீவிகள். எதிர்ப்பவர்கள் வலதுசாரிகள், தீர மதச்சார்பு சிந்தனையாளர்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரேன் நாட்டைச்சேர்ந்த ‘திறந்த மார்பு’ பெண்ணியக்கத்தினர் கணிசமாக ஐரோப்பிய நாடுகளில் பரவிக்கொண்டிருக்க அவர்களும் ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவாக கொடிபிடித்துக்கொண்டு பாரீஸ் வீதிகளில் ஊர்வலம்போகின்றனர். ஒருபாலின எதிர்ப்பாளர்களுக்கும் இவர்களுக்கும் நடக்கும் அடிதடிச் சண்டைகள், காவற்து¨றையினர் தலையீட்டுடன் பார்க்க விறுவிறுப்பாக இருக்கின்றன.

எதிர்பாலினத்தைச்சேர்தவர்களை மணப்பதென்பது இயற்கையின்பாற்பட்டது. ஒருபாலினப் புணர்ச்சி, உலகம் தோன்றிய நாளிலிருந்து இருந்திருக்கலாம் எனினும் சமூகம் அதனை ஒதுக்கிவைத்தது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் ஓர் ஆண் மற்றொரு ஆனை அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணை மணப்பது தனி மனிதச் சுதந்திரத்தின் பேரால் நியாயப்படுத்தப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆலந்து, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பெல்ஜியம், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஒருபாலினத் திருமணத்தை ஆதரித்து சட்டங்களை இயற்றியுள்ளன. இவற்றைத் தவிர வேறு சில ஐரோப்பியநாடுகளில் திருமணச் சடங்கின்றி ஒரு பாலின மக்கள் சேர்ந்துவாழலாம் என்கிற வகையில் சட்டப் பாதுகாப்புகளை வழங்குகின்றன. அவைகளில் பிரான்சுமொன்று. பிரான்சுநாடு கூடிய விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாமென அறிவிக்க இருக்கிறது. பிரான்சைச்சேர்ந்த ஒருபாலின விரும்பிகள் பலரும் அண்டைநாடுகளுக்குச் சென்று திருமணம் செய்துக்கொள்கிறார்கள். ஐரோப்பியரிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கே மணம் செய்துகொண்டாலும் அது சட்டப்படி செல்லும் என்பதால் இந்நடைமுறை அதிகரித்துவருகிறது. அதைத் தடுக்கவும், எல்லோருக்கும் திருமணம் என்பதை ஒரு சமூகத் தேவையாகவும் உணர்ந்து ஒரு பாலின திருமணச் சட்டத்தைக்கொண்டுவரவிருப்பதாக அரசு காரணம் சொல்கிறது. ஆனால் பிரச்சினை அதுமாத்திரமல்ல. இப்போது ஒரு பாலினத் தம்பதியினர் குழந்தைகளைக் தத்தெடுக்கவும் சட்டபடி அனுமதிவேண்டும் என்கின்றனர். சில நாடுகள் அதனை அனுமதிக்கவும் செய்கின்றன.

ஒரு பாலினமக்கள் திருமண உரிமைகோருவது ஒருபக்கமெனில் அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்க நினைப்பது எந்தத் தனிமனிதத் சுதந்திரத்தின் பாற்பட்டதென விளங்கவில்லை. நாய்போல பூனைபோல பிள்ளைகளை வளர்க்க நினைக்கிறார்கள். என் பிள்ளைக்கு இரண்டு தந்தை அல்லது இரண்டுதாய் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். மனதளவில் பிள்ளைகளுறும் சேதத்தை இவர்கள் கணக்கில் கொள்வதில்லை.

இருபதாம் நூற்றாண்டிற்கான பிரச்சினையே தனிமனிதச் சுதந்திரமென்று சொல்லவேண்டும். நான்குபேர், அண்டைவீடு, தெரு, சமூகம் இவர்களுக்காகவும் நாமிருக்கிறோம் என்றிருந்த வாழ்க்கையை நமக்கே நமக்கென்று அமைத்துக்கொள்வதே இன்றுள்ள பிரச்சினை. குடும்பத்திற்குள்ளும் சரி, புறமும் சரி தன்னலவாழ்க்கை அமைந்தால் போதும். இனி மரங்களுக்குக் கிளைகள் வேண்டாம். அது எனது சுவற்றைக்கடந்து நீளலாம் துளிர்க்கலாம், பூ பூக்கலாம். காயாகாலாம் கனியாகலாம் நிழல்தரலாம் ஆகவே கூடவே கூடாது. எனது மரம் நான் வெட்டுவேன், விறகாக்குவேன் கேள்விகேட்க அந்நியருக்கு உரிமையில்லை. எப்படியும் வாழ்வேன். உனக்குக் பிடிக்காதென்றால் கண்ணைமூடிக்கொள். நான் எனது, எனது உணர்வுகள், ஆசைகள், உந்துதல்கள் முக்கியம்.  இன்னும் நாற்பது ஆண்டுகள் கழித்து நாய் பூனையைக்கூட மணம் செய்துகொள்வேன்! புத்தி சுவாதீனத்துடன்து நாற்பது பேராகி நாற்பது இலட்சம்பேராகி நான்குகோடிபேராகி நாய் பூனையுடன் திருமணம் செய்துகொள்ள நினைத்தால்  தவறேஇல்லை, தனிமனிதச்சுதந்திரத்தின் பேரால் நீங்கள் ஆதரிக்கவேண்டும். நான் அறிவுஜீவி. எனவே செய்வது சரி. கேட்பார் கூடாது.

பர்மெனிட் (Parménide) கிரேக்கத் தத்துவவாதி. பிறப்பு, இறப்பு, ‘இருத்தல்’ ஆகியவற்றை விவாதித்தவர் அவர் உயிர்வாழ்க்கை நெறியை இருவகைபடுத்துகிறார். ஒன்று உண்மை மற்றது அபிப்ராயம் அவற்றின் தொடர்ச்சியாக. இருத்தல் மற்றது இருத்தலின்மை என்ற இரு சொற்களை உபயோகித்தவர். இருத்தலின் பணி உறபத்தியில் ஈடுவது, உற்பத்தி முடிவுக்கு வருகிறபோது இருத்தலின்மையாகிறது. ‘இருத்தலை’யும் (être) ‘இருத்தலின்மையையும் (Non-être) உயிரி, பிணம் என்றும் எழுதலாம். பர்மெனிட்டின் சிந்தனைப்படி செயல்பாடற்ற, உற்பத்தியில் ஈடுபடாதவை பிணம்.

———————————————

 

.

நூல் வெளியீட்டு விழா:கலகம் செய்யும் இடது கை’

நண்பர் நாயகரின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு சிறுகதைகளை இலக்கிய நண்பர்கள் வாசித்திருக்கக்கூடும். அவரது ‘கலகம் செய்யும் இடது கை’ நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது- தொகுப்பிலுள்ள கதைகள் நேரடி பிரெஞ்சு மொழிபெயர்ப்பு. இந்நூல் வெளியீட்டுவிழாவைப் புதுச்சேரியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

திருவாளர்கள் தாவீது அன்னுசாமி, பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், ராஜா போன்ற பெருந்தகைகள் கலந்துகொள்ளவிருப்பது நிகழ்ச்சியின் சிறப்பு. நண்பர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு நாயக்கரின் தமிழ்ப்பணிக்கு உறசாகமூட்டவேண்டும்.

இடம்: புதுவைச் தமிழ்ச்சங்கம்,   எண் 2, தமிழ்ச்சங்க வீதி,    வெங்கட்டா நகர், புதுச்சேரி 2011

நாள்: 2012 -ஞாயிறு மாலை

மேலும் தகவல்களை அறிய:http://muelangovan.blogspot.in/

 

கவனத்தைப் பெற்ற பதிவுகள் நவம்பர்-26 2012

1. உலக சினிமா குறித்த சொற்பொழிவு – எஸ். ராமகிருஷ்ணன்

நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் உலக சினிமா குறித்து பேருரை ஆற்றுகிறார்.

எதிர்வரும் டிசம்பர் 4 முதல் 10ந்தேதிவரை நடைபெறுகிறது.  தினந்தோறும் மாலை 6 மணி நிகழ்ச்சித் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10. 30க்குத் தொடங்குமென்று கூறுகிறார்கள்.

இடம். சர். பி.டி. தியாகராயர் ஹால், ஜி.என். செட்டி சாலை, தி.நகர் சென்னை -17.

கட்டணமில்லை. நண்பர்கள் கலந்துகொண்டு பயனுறவேண்டிய நிகழ்வு.

Home-2

———————————-
2.  மீட்சிக்கான விருப்பம் -பாவண்ணன்

நாம் பள்ளியில், கல்லூரியில் மாணாக்கர்களாக இருந்தபோது பல ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களென்று பலரைச் சந்தித்திருப்போம். எல்லோரையும் நாம் நினைவுகூர்வதில்லை. நண்பர் பாவண்ணன் தமது கல்வி வாழ்க்கையிற் குறுக்கிட்ட ஒரு தமிழாசிரியரை அவருக்கே உரிய எளிய மொழியில் நன்றியில் தோய்த்த சொற்களில் நினைவுகூர்கிறார்.

“ஒவ்வொரு நாளும் தன் சொற்களால் மெல்ல மெல்ல ஒரு சிலைபோல காந்தியைச் செதுக்கி எங்கள் மனபீடத்தில் நிற்கவைத்தவர்” என்கிற பாவண்ணன்,   அதைக் காந்தியைப்பற்றிய கட்டுரையில் விரிவாகவும் எடுத்துரைத்த்திருக்கிறார்.

ஊர் வம்புகளுக்கு அலையும் இலக்கிய கட்டுரைகளுக்கிடையே, மனித மன உயர்வுக்காக எழுதப்பட்டக் கட்டுரை.

நண்பர்கள் வாசிக்க:
http://puthu.thinnai.com/?p=15672
____________________

3.  நல்ல படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்: பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம்
            அ.ராமசாமி

” ஒவ்வொரு மனிதர்களும் தாங்கள் பார்த்த படங்களிலிருந்து அவர்களுக்குப் பிடித்த விருப்பப் பட்டியலை உருவாக்கிக்கொள்கிறார்கள்”

ஒரு பாமரத் தமிழ்த் திரைப்பட இரசிகன் தேர்ந்த திரப்பட விமர்சகனாக மாறியதெப்படி என்ற இரகசியத்தை கட்டுரை ஆசிரியர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய திறனாய்வில் தமது இடத்தை உறுதிபடுத்திக்கொள்ள முனையும் கட்டுரை. அ.ராமசாமியின் கட்டுரைகள் பொதுவாக சிந்தனைக்குரியவை.  இக்கட்டுரையும் அதற்கு விதிவிலக்கல்ல.

http://ramasamywritings.blogspot.fr/
—————————–

மனதிற் பதிந்த கவிதை

சிறந்த பத்து
        – முனைவர் இலக்கணச்சுடர் இரா- திருமுருகனார்

அழிவதும் ஆவதும் அவ்வூழ்ப் பயன்என்று
ஒழிதலின் சிறந்தது ஊக்கம் உடைமை.
இறைவனின் உண்மையை இன்மையை வாய்கிழிந்து
அறைதலின் சிறந்தது அறத்தின் வழிப்படல்.
நீற்றினை மண்ணினை நெற்றியிற் காட்டியே
மாற்றலின் சிறந்தது மனத்தின் தூய்மை
நாடிய நலம்பெற நாள்தொறும் கோயிலுக்கு
ஓடலின் சிறந்தது உழைப்பினைப் போற்றல்
பலபல துறைகளில் பலபல கற்றிட
அலைதலின் சிறந்தது ஆழ்ந்தொன்று கற்றல்
பொய்த்துறைச் சோதிடம் போற்றிச் செயல்ஒழிந்து
எய்த்தலின் சிறந்தது எண்ணித் துணிதல்
கொடை, மிகு செல்வம், கூர்மதி, கலைஇவை
உடைமையின் சிறந்தது ஒழுக்கம் உடைமை
நாத்தழும்பு ஏறிட நயங்கெழு சொல்தொடுத்து
ஆர்த்தலின் சிறந்தது அருங்கருத்து உரைத்தல்
அரும்பொருள் கருத்து ஓர் ஆயிரம் பேச
விரும்பலின் சிறந்ததுஓர் வினைதனைச் செய்தல்
பயங்கெழு மதநெறி பாரினில் எமது என…

நன்றி: தேவமைந்தன்

http://httpdevamaindhan.blogspot.fr/
———————————————————-

தாதாயிஸம் – மீயதார்த்தவாதம் சந்திப்பு

சுவிஸ் -ஜெர்மன் எல்லைக்கருகே பிரான்சின் தென்கிழக்கிலுள்ள சிறு நகரம் சேன் லூயி (Saint Louis). பல நேரங்களில் மேற்கத்திய நாடுகளில் கிராமம், சிற்றூர், பேரூர், நகரம் மாநகரம் எனக்கூறப்படுவற்றோடு நம் கிராமங்களையோ அல்லது நகரங்களையோ இணைத்துப் பார்க்கவியலுமா என யோசிப்பதுண்டு. விவசாயம், குறைவான மக்கட்தொகை இவைதான் கிராமத்திற்கான அடிப்படை  இலக்கணமெனில், உலகில் எங்கிருந்தாலும் கிராமமே. மக்களின் வருவாய், போக்குவரத்து, சுகாதாரம், வாழ்க்கை வசதிகள் எனப்பார்க்கிறபொழுது மேற்கத்திய கிராமங்கள் வேறுபடுகின்றன. நான் வசிக்கும் ஸ்ட்ராஸ்பூர் நகரிலிருந்து சேன் லூயிக்குச்செல்ல அதிகபட்சமாக ஒன்றரைமணி நேர வாகனப்பயணம், இரயிலென்றாலும் பயண நேரமென்பது அவ்வளவுதான். கடந்த சில மாதங்களாக திடீரென்று இந்நகரத்தோடு நெருக்கமாக இருக்கிறேன். மனித உறவுகள்போல சில நேரங்களில் ஊர்களுடனான சந்திப்பும் நேருகிறது. ஆர்வத்தோடு பழகுகிறோம். சந்திப்பின் தொடக்கத்தில் மனிதர்களைப் போலவே ஊர்களும் அலுப்பதில்லை. சேன்-லூயி நகரத்துடன் முகமன் கூறவும் பின்னர் தொடர்ந்து உரையாடி மகிழவும் காரணமாக இருந்தவள் இளைய மகள். உயிர்வேதியியலை முடித்திருந்த எனது இளையமகளுக்கு கடந்த நவம்பர் (2011) மாதத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அங்கே வேலைகிடைத்திருக்க சேன்-லூயி நகருக்கு மாதத்திற்கொரு முறையேனும் செல்லவேண்டியிருக்கிறது. இரு கிழமைகளுக்கு முன்பாக அங்கு சென்றபோது செய்தித்தாளில் ஒரு விளம்பரம்: ‘·பெர்னெ -பிராங்க்கா’ சமகால ஓவியகூடத்தில் (Fernet -Branca Espace D’art Contemporain) “Chassé-Croisé : Dada- surréaliste 1916-1969 ஜனவரி-15 – ஜூலை 1 -2012 என விளம்பரப்படுத்தியிருந்தார்கள். “தாதா – மீயாதார்த்தச் சந்திப்பு அல்லது சங்கமம் – என்ற பெயரில் நடை பெற்றுக்கொண்டிருந்த ஓவியக் காட்சியைப்பற்றி அதில் பேசப்பட்டிருந்தது.

“Chassé-Croisé” என்ற சொல்லுக்கு பரிவர்த்தனை, சந்திப்பு என்று பொருள்கொள்ளலாம். தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் படைப்பிலக்கியத்தில் குறிப்பாக கவிதைகளிலும் புது முயற்சிகளில் இறங்கியதை அனைவரும் அறிவோமென்றாலும் ஓவியமும் சிற்பமுமே கூடுதலாக கவனம் பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்றிருந்தவை மொத்தம் 98 கலைஞர்களின் 300 படைப்புகள் தகவல் உபயம் நுழைவாயிலில் பார்வையாளருக்கென வழங்கப்பட்ட பிரசுரம். இப்படைப்புகள் அனைத்தும் பாரீஸைச்சேர்ந்த ஒரு தம்பதியினருக்குச் சொந்தமென அங்கிருந்த பெண்மணி கூறினார். விலைமதிப்பற்ற ஓவியங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தவர்கள் (கட்டணம் 7 யூரோ) தங்களை இன்னாரென்று காட்டிக்கொள்ள விருப்பமில்லையாம். வெளியே வந்தபோதுதான் எண்ணிப்பார்க்காதது ஒரு குறையாக உறுத்தியது. ஒரு வசதிக்காக மொத்தம் 300 படைப்புகள் என்று கணக்குவைத்துக்கொண்டே தொடருகிறேன். இம்முன்னூறு படைப்புகளையும் ஒன்பது கூடங்களில் பிரித்து காட்சிபடுத்தியிருந்தார்கள். தாதாக்களில் ஆரம்பித்து மீயதார்த்தவாதிகளின் ஓவியங்கள் சிற்பங்கள் என்று ஒரு பிரிவு. மாயை -புதிர் என்கிற Esotericism வகைசார்ந்த ஓவியங்கள் எனும் பிரிவும் அங்கே இருந்தது. பின்னர் நிழற்படங்களில் புதுமைகளை சாதித்தவர்களின் படைப்புகளும் இருந்தன.

 கபாரே வொல்த்தேர் :

தாதா இயக்கம் உருவான இடம் கபாரே வொல்த்தேர் (Cabaret Voltaire). கபாரே என்னும் சொல்லுக்கு இரவு கேளிக்கைக்கான இடமென்று பொருள். சுவிஸ்நாட்டில் ஜூரிச் நகரில் கிழடுதட்டியிருந்த மரபுகளில் ஆயாசப்பட்டுக்கிடந்த இளம்கலைஞர்களில் சிலர் இரவு நேர பார்களில் அவவப்போது நுழைந்து விடியவிடிய குடித்து கூத்தடித்துவிட்டுத் திரும்புவது வழக்கம். தங்கள் குழுவுக்கு ‘கபாரே பந்த்தாகுருவெல்’ என ஆரம்பத்தில் பெயரிட்டிருந்தனர். பந்தாக்குருவெல் பிரெஞ்சுக் கவிஞர் ரபலெ கவிதையில் வருகிற ஒரு குண்டோதரன். இப்பெயர் கூட பின்னாளில் அலுத்திருந்தது. சோதனைபோல முதல் உலகப்போர் மும்முரமாக நடந்துகொண்டிருக்க போர்க்கால அவலங்களுக்கு  சாட்சிகளாக இருப்பது இளம் கலைஞர்களின் மனதைப் பிசைந்தது.  1916ம் ஆண்டு பனி கொட்டிக்கொண்டிருந்த ஓர் இரவு பிப்ரவரி மாதம் தேதி 5, இளம் கலைஞர்கள் ஒரு குழுவாக ஜூரிச் நகரின் வீதியில் இரவு விடுதி ஏதேனும் திறந்திருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறிய ‘பப்’ திறந்திருக்க நண்பர்கள் கூட்டம் நுழைந்தது.  யுகொ பால்  என்ற இளைஞர் ‘பப்’ பின் முதலாளியிடம், “நண்பர்களுடன் வந்திருக்கிறேன், எங்களுக்கு மட்டும் தனியாக ஓர் கூடமிருந்தால் அரட்டை அடிக்க வசதியாயிருக்கும், பிறவாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு இருக்காது”, என்றிருக்கிறார். முதலாளி யோசித்தார், “பின்பக்கம் சிறியதொரு இடமிருக்கிறது, வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், என்னை குறைசொல்லகூடாது”, என திறந்து விட்டிருக்கிறார். அவ்விடத்திற்கு, “கபாரெ வொல்த்தேர்” என்று பெயர் சூட்டினார்கள் நண்பர்கள். பிரெஞ்சு தத்துவாதியான வொல்த்தேர் பெயர் அவர்களுக்குப் பொருத்தமானதாக இருந்தது. ஆனால் தாதா என்ற பெயரை அதே இடத்தில் மூன்றாம் நாள் அறிவித்து கொண்டாடுவோமென அவர்கள் அப்போது நினைக்கவில்லை.

தாதாக்களும் மீயதார்த்தவாதிகளும் [1916 -1960]

முதல் உலகப்போரின்போது தாதா(Dada)க்கள் என அழைத்துக்கொண்டவர்களுக்கும் அறுபதுகளில் தங்களை மீயதார்த்தவாதிகளென அழைத்துக்கொண்டவர்களுக்கு முள்ள வேறுபாடு மயிரிழைதான். முதல் உலகப்போரும் அதன்  விளைவுகளும் ஐரோப்பிய மண்ணிலும் அம்மக்களின் வாழ்வாதாரங்களிலும் ஏற்படுத்தியிருந்த சிதைவுகள் அலட்சியப்படுத்தக்கூடிதல்ல. பாதித்திருந்த கலைஞர்களில் ஒரு பிரிவினருக்கு ஆதிக்க அரசியல் காயப்படுத்திய மானுட இனத்திற்கு அவசர சிகிச்சை, காலத்தின் நிர்ப்பந்தமாக இருந்திருக்கிறது. தங்கள் அபயக்குரலுக்கு மேடை தேடிகொண்டிருந்தகாலம் அது. தங்களின் இம்முயற்சியை சிறுபிள்ளைத்தனமான, வரம்பு மீறிய, எள்ளலுக்குறிய, குறுப்புத்தனமானதென்று கூறிக்கொள்ளும் துணிச்சலும் அவர்களுக்கிருந்தது. இக்கலைஞர்கள் வரம்பற்ற சுதந்திரத்தைக் கனவு கண்டவர்கள். அவர்களுடைய கனவை நனவாக்க கைக்குக்கிடைத்தன வற்றையெல்லாம் படைப்பாக மீட்டெடுத்தனர். தாதா இயக்கம் பிறந்தது. பிறந்த ஆண்டு 1916. கவிஞர்கள் யுகோ பால் ( Hugo Pal), திரிஸ்டன் ஸாரா (Tristan Zara); ஓவியர்கள் ழான் அர்ப் (Jean Arp), மர்செல் ழான்கோ (Marcel Janco), சோபி டபர் அர்ப் (Sophie Tauber Arp – இவர் ழான் அர்ப்பின் மனைவி)  ஆகியோர் இணைந்து செய்த புரட்சியென கூறவேண்டும். ஜூரிச்சில் ‘Spiegelgasse’ என்ற மதுச்சாலையில் மரபுகளுக்கு எதிரான தங்கள் கலகக்குரலை பதிவு செய்தார்கள். கலை, கல்வி, இலக்கியத்தில் பயணம் செய்தவர்களை வழமையான பாதையிலிருந்து விலக்கி கண்களை மூடிக்கொண்டு திசையின்றி பயணிக்க இந்த இளைஞர்கள் ஊக்குவித்தார்கள்.

மழலை மொழியில் ‘தாதா’ (Dada) என்றால் குதிரை   இவர்கள் தூரிகையை கையில் பிடித்தவர்கள்.   தங்கள் படைப்புக்கே பொருள் தேடவேண்டாம் என்றவர்கள், ‘தாதா’வென தங்கள் கலைபுரட்சிக்கு பெயரிட மழலைகளின் ‘தாதாவை’ தேர்வு செய்தது எதிர்பாராமல் நிகழ்ந்தது. முதன் முதலாக இயக்கத்திற்கு பெயர்வைக்கதீர்மானித்தவர்கள், அகராதியை புரட்டினால் என்ன பெயர் கண்ணிற் படுகிறதோ அதனை வைப்பதென முடிவெடுத்தார்கள். ‘தாதா’ என்ற சொல் கண்ணிற்பட ‘தாதா’ இயக்கம் பிறக்கிறது.

“தாதா இயக்கத்தின் படைப்புகளுக்கு பொருள்தேடும் முயற்சிவேண்டாம், அதற்காக பொருளற்றதெனவும் எண்ணவேண்டாம். இயற்கையைப்போல இதுதானென தாதாவுக்கும் பொருள்கொள்ளமுடியாது. ஆக தாதா  சுயமான, மரபுக்கு எதிரான கலை”, என்றார் ழான் அர்ப். ஓவியர், சிற்பி, கவிஞரென மூன்று அவதாரங்களை எடுத்தவர் இவர். பிறந்தது வாழ்ந்தது, ஓவியம் பயின்றதென மூன்றும் ஸ்ட்ராஸ்பூர் நகரை மையப்படுத்தியது.

” தாதா’ என்பதற்கு ஒரு பொருளுமில்லை(Dada ne signifie rien)- அவன் வழிவழியாய் நிலவிவரும் நெறிகளுக்கும், பொதுவில் பலரும் ஏற்றுக்கொண்ட வழிமுறைகளுக்கும் பகைவன். இதுதான் நெறியென்ற வழி காட்டுதலுக்கு எதிரானவன். தாதா எனில் கேலிகூத்து என்பதோடு, பதின்பருவத்தினரின் சகிக்கவொண்ணா வலியுமாகும்.. .என்கிறார் திரிஸ்த்தன் ஸாரா

தாதாக்களுக்குப் பிறகு வேறுவகையாகக் கலகக்குரல்கள் கேட்டன. அவர்கள் மீயதார்த்தவாதிகள் எனத் தங்களை அழைத்துக்கொண்டபோதும், இரு தரப்பினருமே மரபுகளுக்கு எதிராவனவர்கள்.  இவர்களுக்கு கலையென்பது எதார்த்தத்தை பிரதிபலிப்பதுமட்டுமல்ல, கனவுகளைத் தீட்டுவது. பரவசம், வியப்பு, தற்செயல்களால் கட்டமைக்கப்படுவது. மீயதார்த்தவாதத்தின் நதிமூலம் தாதா இயக்கம். தாதா இயக்கத்திற்கு ஜூரிச் பிறப்பென்றால் மீயதார்த்தத்திற்கு பாரீஸ் பிறந்த மண். தாதா இயக்கம் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது உருவானதெனில், மீயதார்த்தவாதம் யுத்தம்முடிந்தபின்னர் உருவாயிற்று. இரண்டுக்குமே யுத்தம் அடிப்படையான காரணம்.

மீயதார்த்தவாதம் அகராதியில் அதுவரை இடம்பெற்றிராத சொல். பிரெஞ்சு கவிஞர் அர்த்துய்ர் ரெம்போ சிந்தனையிலுதித்த புதிய படைப்புக் கருத்தியத்தின்( ஒவ்வொரு பொருளுக்கும் வேறு முகமுண்டு) அடிப்படையில் 1917ம் ஆண்டு பிக்காஸோவின் கற்பனையிலுதித்த ஓவியங்களைக் கண்ட மற்றொரு பிரெஞ்சு கவிஞரான அப்பொலினேர் அவைகளை மீயதார்த்தவகை படைப்புகளென வர்ணிக்கிறார். ஆனால் மீயதார்த்தத்தை ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் மற்றொரு பிரெஞ்சு கவிஞர் பெயர் ஆந்தரே பிரெத்தோன்(‘André Breton).

இலக்கியம் என்னும் இதழில் 1922ம் ஆண்டு ஆந்தரே பிரெத்தோன் எழுதுகிறார்: “தாதா இயக்கமென்றில்லை- இனியெதுவுமே நமக்கு வேண்டாம், எல்லாவற்றையும் கைகழுவுவோம்”.  ஆனால் பிரெத்தோன் இம்முடிவினை எடுக்க பலகாலம் காத்திருந்திருக்கிறார். ஆண்டுகள் பலவாக அவரிடைய இலக்கிய பிதாக்களில் சிலர் மெல்ல மெல்ல இம்மாற்றத்தை அவர் மனதில் விதைத்துவந்திருக்கிறார்கள். மீயதார்த்தவாதம் என்றதும் இரண்டு பெயர்கள் உடனடியாக நினைவுக்குவருகின்றன. முதல் உலகப்போரின் சூத்திரதாரியான கிய்யோம் (ஆங்கிலத்தில் வில்லியம்) கெய்சர் என்கிற ஜெர்மன் முடியாட்சியின் இறுதி வாரிசு ஒருவரெனில் மற்றவர் கிய்யோம் அப்பொலினேர் என்னும் பிரெஞ்சு கவிஞர். முதல் உலகப்போர் ஜெர்மன் நாட்டின் தோல்வியில் முடிய, கிய்யோம்  கெய்சர் 1918ம் ஆண்டு நவம்பர் 9ந்தேதி மகுடத்தைத் துறக்கிறார். அதேதேதியில் பாரீஸ் நகரில்,  புல்வார் சேன்-ழேர்மன் வீதியில் 202 எண் இல்லத்தில் போரின்போது தலையில் குண்டுடடிப்பட்டிருந்த கியோம் அப்பொலினேர்  உயிர் துறக்கிறார். இறந்த போது கவிஞருக்கு வயது 38. ஜெர்மன் கிய்யோம் கெய்சர் வீழ்ச்சியைக் கொண்டாடிய பிரெஞ்சு மக்கள் தங்கள் கவிஞர் கியோம் இறந்திருப்பதை அறியாமலேயே  “கியோம் ஒழிந்தான்” என மகிழ்ச்சிபொங்க பாரிஸ் நகரவீதிகளில் கொண்டாடுகிறார்கள். இச்சம்பவத்தையே ஒரு மீயதார்த்த காட்சியாக சித்தரிக்கலாம். யுத்தத்தின் முடிவில் வெற்றியை கொண்டாடவோ, பழிவாங்கும் உணர்வோ கவிஞர் அப்பொலினேருக்கு இல்லை. கவிதையொன்றில்:

“வெற்றியென்பது/ தொலைநோக்கும்/ அண்மித்த  பார்வைக்கும் உரியது/ அதுவன்றி / இவற்றிர்க்குப் புதிதாய் / ஒரு பெயருமுண்டு”. எனக் குறிப்பிடுகிறார்.

‘Les Mamelles de Tiresias’ என்ற நாடகத்தின் முன்னுரையில் அப்பொலினேர், “மனிதன் தான் ‘கால்களால்’ நடப்பதை வேறுவகையில் வெளிப்படுத்த விரும்பியபோது, தோற்றத்தில் கால்களைப்போன்றிராத சக்கரங்களை உருவாக்கினான். மீ எதார்த்தத்தை அறியாமலேயே, மனிதன் அதனை நடைமுறைபடுத்தினான்” என்கிறார். வெற்றிகுறித்து கவிஞர் அப்பொலினேரின் கருத்தியத்திற்கு வலுவூட்ட இளைஞர்களில் சிலர் முன்வந்தனர். அவர்களில் இருவர் – ஆந்தரே பிரெத்தோன், பிலிப் சுப்போ. கவிஞரை ‘·ப்ளோர் கபே’ என்கிற சிறுவிடுதியில் அடிக்கடி சந்திப்பது இவர்களின் வழக்கம். அப்பொலினேர் இறந்தைக் கேள்விப்பட்டதும் பிரெத்தோன் தனது நண்பரும் கவிஞருமான லூயி அரகோனுக்கு எழுதுகிறார்:

ஆனால் கியோம்/அப்பொலினேர்/  சற்றுமுன் இறந்தாரென்று அந்த ஹைக்கூ வடிவம்பெற்றிருந்தது. இக்கவிதையில் மீயதார்த்தத்தின் தோற்றுவாயும் எழுதப்பட்டிருப்பதாக படைப்பிலக்கியவாதிகள் கூறுகிறார்கள். அப்பொலினேர் மீயதார்த்தவாதமென்ற சொல்லுருவாக்கத்தின் தந்தையெனக் கருதப்படினும் அவருடைய கவிதைகள் மரபுகளிலிருந்து விடுபடாதது முரணாகக்கொள்ளப்பட்டது. அவரது இறப்பு சீடர்களுக்கு முழுச்சுதந்திரத்தையும் கொடுக்கிறது. மீயதார்த்தவாதம் பிறக்கிறது. குருவின் இறப்பு சீடர்களுக்கு மீயதார்த்தத்தை முன்னெடுத்துசெல்ல கிடைத்த சமிக்கை. அரகோன் (Louis Aragon), பிரெத்தோன், சுப்போ (Philipe Soupault) ஆகிய மூவர் கூட்டணியோடு எலுவார் (Eluard) என்பவரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நால்வரும் இருபத்தைந்து வயதிற்கு குறைவான இளைஞர்கள், முதல் உலகபோரில் பங்கெடுத்தவர்கள். அந்நேரத்தில் நாட்டிலிருந்த படைப்பாளிகள் பலரும் தேசியம், காலனி ஆதிக்கம், இனவெறி என்றபொருளில் கவனம் செலுத்த  “மனித மனத்தின் எண்ணங்களை உள்ளது உள்ளவாறு இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட களங்கம் ஏதுமற்ற தானியங்குமுறையில் தெரிவிப்பது” (Manifeste du surréalisme -1924) என மீயதார்த்தத்திற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.

மீயதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ‘ அழகான சடலம்’ (cadavre exquis) என்ற ஒன்று போதும்.  இவ்விளையாட்டின்படி ‘அடுத்தவர் வாக்கியம் பற்றிய அக்கறையின்றி எதையாவது எழுதி பின்னர் ஒன்று சேர்த்தல்.’ இலக்கியம், ஒவியம் அனைத்து பரிமாணங்களிலும் அழகான சடலம் அடையாளம்பெற்றது. பிற இயக்கங்களைப்போலவே மீயதார்த்தவாதமும் முடிவுக்குவந்தது. அம்முடிவு எப்போது எப்படி நிகழந்ததென்பது குறித்து விவாதங்கள் இருக்கின்றன. ஒருமித்த கருத்துகளில்லை. உலகெங்கும் மீயதார்த்த அடிச்சுவட்டில் வேறு இயக்கங்கள் தோன்றவும் செய்தன. ஆனால் ஆந்தரே பிரெத்தோன் இறந்தபிறகு மீயதார்த்தவாதம் அநாதையாயிற்று.

இவ்வியக்கங்களில் தீவிரமாக பெண்களும் பங்கேற்றிருக்கின்றனர். அவ்வகையில் அன்று 16 பெண்களின் ஓவியங்களை காணமுடிந்தது. ஆண் படைப்பாளிகளுக்கு ஈடான புகழை அவர்கள் எட்டவில்லையென்றாலும் அவர்களின் படைப்புகள் ஆண்களின் படைப்புக்கு சற்றும் குறைந்தவையல்ல. குறிப்பாக ஜேன் கிரேவ்ரோலின் (Jane Gaverolle) Le Démon Mesquin’ (குட்டிச்சாத்தான்), போனா (Bona Tibertelli de Pisis) என்பவரின் Le Chef d’Etat (அதிபர்) முக்கியமானவை.

சேன்- லூயி கண்காட்சி ஏழு கூடங்களில்: 1. குறிப்பிடத்தக்கவை 2. தொடரும் தாதாக்கள், 3 ஆரம்பகால மீஎதார்த்தவாதிகள் வட்டம் 4. வட்டத்தின் வளர்ச்சி 5. சித்தர் மனநிலை, 6. நிழற்படங்களில் மீயதார்த்தம் என பல்வேறுதலைப்புகளில் ஓவியங்களையும் சிற்பங்களையும் பார்வையாளர்களுக்கு காட்சிபடுத்தியிருந்தார்கள்.

இறுதியாக போட்டோகிராம் (Photogram) என்ற பெயரில்  மீயதார்த்தவாத நிழற்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. 1922ம் ஆண்டு மன் ரே (Man Ray) என்ற கலைஞர் ஒரு புனல், அடுக்களையில் உபயோகமாகும் ஒரு அளவைக் கோப்பை, ஒரு வெப்பமானி ஆகிய மூன்றையும் நீரில் நனைத்த ஒளியுணர் காகிதத்தின்( Papier sensible) மீதுவைத்து மின்விளக்கை ஏற்ற அவருக்கு ஓர் அற்புதக் காட்சி கிடைத்திருக்கிறது அந்நிகழ்விற்கு ‘Rayo Gramme’ என்று பெயரும் வைத்திருக்கிறார். அவருக்குப்பின் பலர் அம்மாதிரியான அரிய காட்சிகளை தங்கள் புகைப்படக்கருவியின் உதவி கொண்டு எடுக்க பல நல்ல படைப்புகள் கிடைத்துள்ளன.

அல்பெர்ட்டொ சவினோவின் (Alberto savino) ‘ஈடன்'(Paradis Terrestre-1828), ஜார்ஜோ டெ சிரிக்கோ(Georgio de Chirico)வின்  ஒரு புறப்பாட்டின் புதிர் (Enigme d’un départ- 1920), ஹன்ஸ் ரிஷ்ட்டருடைய (Hans Richter) மினுமினுப்பு (Eclat-1960); ஆந்தரே மஸ்ஸோன் (André Masson) வரைந்த மீன்கள் (Les Poissons -1923), ஸ்டான்லி வில்லியம் ஹேட்டர்(stanley william hayter) படைப்பில் ‘ஓட்டம்'(Runner -1930), வில்பிரெடு லாம் (Wilfredo Lam) என்பவருடைய ‘உருவம்’ (Figure- 1939), ஜாக் ஹெரால்டுவின்(Jacques Hérold) ‘பெண்மணி'(La Femmoiselle-1945) ஆகியவை முக்கியமான படைப்புகளில் சில.

கட்டுரையின் தொடக்கத்தில் ஓவியக்கண்காட்சி நடைபெற்ற சேன் லூயி ஒரு சிறிய நகரமெனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே வந்திருந்த பார்வையாளர்கள் மிகக்குறைவு. தவிர ஜனவரியில் ஆரம்பித்து ஜூலைமாதம்வரை ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததும், குறைவான பார்வையாளர்களுக்கு காரணமாக இருந்திருக்கலாம். எண்ணிக்கைக் குறைவான பார்வையாளர்களுக்கிடையே நான் ஒருவன் மட்டுமே அந்நியன். ஓவியங்களுக்கு காவலிருந்தவர்கள், எங்கு சென்றாலும் என்னையே தொடர்ந்து வந்ததைபோல இருந்தது. வெளியேறும்போது என்சட்டைப் பையை திறந்துகாட்டி ஒன்றும் எடுத்துச்செல்லவில்லை, திருப்தியில்லையெனில் எதற்கும் ஒருமுறை நன்றாகச் சோதனையிட்டுக்கொள்ளுங்ககளென்று கூறியபோது காவலாளியின் உதட்டில் வழிந்த முறுவல் கூட மீயதார்த்தவகை சார்ந்ததுதான்.

நன்றி: காலச்சுவடு

——————————–

மொழிவது சுகம் நவம்பர் 15-2012

எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும்   மாக்ஸ் ப்ரோடும்

நட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில்  சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது நண்பனைப் ‘பிறன்’ ஆகப் பார்க்கும் மனப்பான்மை காலூன்றுகிறது. நண்பனின் தோல்வியை ஏற்கும் நமக்கு அவன் வெற்றியை சகித்துக்கொள்ள ஆவதில்லை. இது உறவுக்குப்பொருந்தும், ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். பொதுவில் உலகம் இவ்வடிப்படையிலேயே இயங்குகிறது. பாலஸ்தீனியரும், இஸ்ரேலியருக்கும் நடப்பது உண்மையில் ஒருவிதமானப் பங்காளிச் சண்டை. இந்திய இலங்கைத் தமிழர்களிடையே மட்டுமல்ல சிங்களவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயும் தொப்புட்கொடி உறவு உண்டு. ஆனாலும் காலம் இன்றைக்கு மற்றுமொரு பாரத யுத்தத்தை எழுதிக்கொண்டிருக்கிறது.  உலகில் முதல் மனிதன் ஆப்ரிக்கக்கண்டத்துகாரனாக இருப்பான் என்கிறபோது, மனிதர் சமுதாயத்தில் வேரூன்றிப்போன இனம், நிறம் கசப்புகளுக்கு நியாயமே இல்லை. ‘நான்’ ‘எனது’ இவற்றின் நலன்களில் சிரத்தைகொண்டு நீரூற்றி, எருவிட்டு வளர்க்கும் கடமைக்கான மானுட ஜென்மம் எனத் தன்னை வீட்டிற்குள் நுழைந்த மறுகணம் மனிதன் நினைத்துக்கொள்கிறான்.

‘ஓ அவரா, தினமும் வேலைக்குச்செல்கிறபோது பேருந்து நிறுத்தத்தில் சந்திக்கிறேனே எனது நண்பர்தான்! என்கிறோம். அந்த அவருக்கும் இவருக்கும் பேருந்து நிறுத்தத்தில் புன்னகை பரிமாற்றம் மட்டுமே நிகழ்ந்திருக்கும். ‘பேஸ்புக்கில்’ என்னோடு இணைந்துகொண்ட 68வது சினேகிதர். என இன்னொரு நண்பருக்கு எழுதுகிறோம். ஆயிரத்தியோரு இரவுகள் கதைகள்போல ஆளுக்கொரு திசையிருந்தாலும் நண்பர்களாக இருக்க முயற்சிக்கிறோம். ‘என்னங்க அவரை உங்களுக்குத் தெரியுமா? தெரியாமல் எப்படி, எனது நண்பர்தான்! என்கிறோம். இரண்டுபேருமே ஒரே ஊர்க்காரர்கள் என்பதைத் தவிர அந்த ‘நண்பர்’ என்ற சொல்லுக்கு வேறுகாரணங்கள்  சொல்ல முடியாது. “நான் 1980ல் அண்ணாமலையில் படித்தேன்!” என்பார் ஒருவர். “அப்படியா நான் 1981ல் அண்ணாமலையில் சேர்ந்தேன்”, என்பார் மற்றவர். மூன்றாவது பேர்வழியிடம் இவர்களில் ஒருவர் “நாங்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைகழக நண்பர்கள்” என்பார்: இப்படியும் நண்பர்கள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் பிரான்சுக்கு வந்தபோது நடந்தது: ஒரு நண்பர் அவரிடம் புதுச்சேரியில் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம் நினைவிருக்கிறதா? எனக்கேட்டிருக்கிறார். அந்த நண்பருடன் ஒரே வகுப்பில் படித்தது பிரபஞ்சனுக்கு நினைவில்லையென்கிறபோதும் நண்பர் குறிப்பிட்ட தகவல்கள் பொருந்திவந்ததால் ஆமோதித்திருக்கிறார். அதன்பிறகு அங்கு நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளில் பாரீஸ் நண்பர் ‘பிரபஞ்சனும் நானும் நெருங்கிய நண்பர்கள் எனக் கூறியிருக்கிறார். பிரபஞ்சன் ஒரு கட்டத்தில் அவரிடம், வானம் வசப்படும் நூலைப்பற்றி ஏதேனும் தெரியுமா? எனது நூல்கள் என்னென்ன உங்களிடமிருக்கின்றன? எனக்கேட்க அந்த நண்பர் அசடு வழிந்தாராம். தங்கர்பச்சான் திரைப்படத்தில் வரும் ஏற்றதாழ்வுகளுக்கிடையேயான நட்புகள் அரவான் திருமணம் போல. அப்துல் கலாம் தம் பள்ளிதொடங்கி கல்லூரி, பல்கலைகழகம் வரை பல ஆசிரியர்களைக் கண்டிருப்பார், அல்லது கடந்து வந்திருப்பார். அவர் வாழ்க்கையில் குறைந்தது நூறு ஆசிரியர்களைப் பார்த்திருக்கக்கூடும். அந்த நூறு ஆசிரியர்களும் ஆளுக்கு ஆயிரம் மாணவர்களையாவது தங்கட் பணியின்போது சந்தித்திருப்பார்கள்.  தங்கள் வாழ்நாளில் பத்தாயிரம் மானவர்களுக்குக் கல்விபோதித்து சமுதாயத்திடம் ஒப்படைத்திருப்பார்கள். ஆனால் ஒருவர் மட்டுமே நாட்டின் அதிபராக முடிந்தது. அதற்கு அப்துல்கலாம் காரணமேயன்றி அவர்களுக்குப் பாடமெடுத்த ஆசிரியர்கள் காரணமாக இருக்கமுடியாது. அப்படி ஒன்றிருவர் காரணமாக இருந்தால் அதை அப்துல்கலாமே சொல்லவேண்டும் அல்லது எழுதவேண்டும். அப்போதுதான் அந்த ஆசிரியர்களுக்குப்பெருமை. நட்பும் அப்படிப்பட்டதுதான்.

எழுத்தாளர் காப்காவுக்கும் நண்பர் இருந்தார். பிரபஞ்சனிடம், பதினோராம் வகுப்பில் நீங்கள் முதல் பெஞ்சில் உட்கார்ந்திருந்தீர்கள் நான் மூன்றாவது பெஞ்சில் உட்கார்ந்திருந்தேன் எனச் சொல்லிக்கொள்ளும் கொச்சையான நட்பல்ல அது, மனத்தளவில் சீர்மைபெற்ற நட்புவட்டம். காப்காவும் மாக்ஸ் ப்ரோடும் சட்டம் பயிலுகிறபோது நண்பர்களாக இணைந்தவர்கள். அன்றைய செக்கோஸ்லோவோக்யா (இன்றைய செக்) நாட்டில் ஜெர்மன் யூத புத்திஜீவிகள் நட்புவட்டமொன்றிருந்தது. பிராக் நகரில் ஒவ்வொரு நாளும் இந்நண்பர்கள் கூடி அறிவு சார்ந்து தர்கிப்பதுண்டு. காப்காவுக்கும், ப்ரோடுவிற்கு மிடையில் ஒளிவுமறைவில்லை அத்தனை நெருக்கம். ஒன்றாகவேப் பயணம் செய்தனர். குடிக்கச்சென்றாலும் கூத்திவீட்டிற்குப்போனாலும் ஒற்றுமை. ‘உருமாற்றம்’ 1915ல் வெளிவந்திருந்தபோதும் காப்காவை அப்போது பெரிதாக யாரும் கொண்டாட இல்லை, எழுத்தாளருக்குத் தன்னைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையும் இருந்திருக்கிறது. பழகிய சில நாட்களிலேயே மாக்ஸ் ப்ரோடுவிற்கு தம் நண்பர் காப்காவின் எழுத்தில், ஞானத்தில் அபார நம்பிக்கை.  காப்காவிற்கு யூத சமயத்தின்மீது நண்பரால் மிகுந்த பற்றுதலும் உருவாகிறது. ஒருநேரத்தில் டெல்-அவிவ் சென்று ஒரு சிறிய உணவு விடுதியொன்றை திறக்கும் மனப்பான்மையில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். 1917ம் ஆண்டு தமக்கு காசநோய் இருக்கும் உண்மை எழுத்தாளருக்குத் தெரியவருகிறது. ‘அன்புள்ள மாக்ஸ்’ எனத் தொடங்கி காப்கா தமக்குப் பீடித்துள்ள நோய்பற்றிய உண்மையைக் கடிதத்தின்மூலம் நண்பருக்குத் தெரிவிக்கிறார். சிகிச்சைக்காக காசநோய் மருந்துவ இல்லமொன்றில் அனுமதிக்கப்பட்டபோதும் காப்கா தனது நண்பருக்கு எழுதிய கடிதங்களை நிறுத்தியதில்லை. அவ்வாறு எழுதிய கடிதங்கள் பலவும் மாக்ஸ¤டமிருந்தன. அவற்றைத் தவிர காப்காவின் பிரசுரம் ஆகாத படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகளும் ஏராளமாக இருந்தன. காப்கா தமது இறப்பிற்குப்பிறகு அவற்றை எரித்துவிட சொல்லியிருக்கிறார். மாக்ஸ் அவற்றை பிரசுரிக்கத் தீர்மானித்தார். காப்காவின் விருப்பத்தை நிறைவேற்றியிருந்தால் நமக்கு The Castle (novel), Amerika (novel), The Trial (novel) கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மாக்ஸ் தன் நண்பருடைய விருப்பத்திற்கு மாறாக அவற்றைப் பிரசுரம் செய்தது துரோகமில்லையா என்றகேள்விக்கு, இலக்கிய கர்த்தாக்களில் பலர் துரோகமில்லை என்கிறார்கள். காப்காவிற்கு மாக்ஸ் ப்ரோடு என்ன செய்வாரென்று தெரியும் அதனாற்தான் கொடுத்தார் என்கிறார்கள்.

1939 ஆண்டு நாஜிகள் பிராக் நகரைக் கைப்பற்றுகிறார்கள். தமது மனைவி எல்ஸாவுடன் ஒரு ரயிலைப்பிடித்து  எங்கெங்கோ அலைந்து இறுதியில் டெல் அவிவ் நகரை அடைந்து மாக்ஸ் ப்ரோடு வாழ்க்கையைத் தொடங்குகிறார். கொண்டுவந்த  பெட்டியில் மாக்ஸ் ப்ரோடுவின் எழுத்துக்களன்றி அவர் நண்பருடைய எழுத்துக்களும் கையெழுத்துப் பிரதிகளாக ஆயிரக்கணக்கிலிருந்தன.  மூன்றாண்டுகளில் ·ப்ரோடுவின் மனைவி இறக்கிறார்.  டெல் அவிவ் நகரில் பிராக் நகர இலக்கிய வட்ட நண்பர்களைச் சந்திக்கிறார். மீண்டும் இலக்கிய வட்டம் உருவாகிறது. அப்போதுதான் செக் நாட்டிலிருந்து வந்திருந்த ஹோப் தம்பதியினரின் அறிமுகமும் ப்ரோடுவிற்குக் கிடைக்கிறது. திருவாளர் ஹோப்பின் மனைவி எஸ்த்தெர் மாக்ஸ் ப்ரோடுவின் நட்பு வேறுவகையில் திரும்புகிறது. எஸ்த்தெர் தற்போது ப்ரோடுவின் அந்தரங்கக் காரியதரிசி. முழுக்க முழுக்க ப்ரோடுவின் கடிவாளம் இந்த அம்மாளின் கைக்குப்போகிறது. நெருங்கிய நண்பர்கள் சந்திப்பதென்றாலுங்கூட அம்மணியின் தயவு வேண்டும். இறுதிக்காலத்தில் மாக்ஸ் ப்ரோடு தம்கைவசமிருந்த அவ்வளவு கையெழுத்துப் பிரதிகளையும் அரசாங்க நூலகத்திடம் ஒப்படைக்க இருந்ததாக டெல் அவிவ் நகர இலக்கிய வட்ட நண்பர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் அது நடைபெற இல்லை. மாக்ஸ் ப்ரோடு இறந்த உடன் எஸ்த்தெர் ஆவணங்களைத் தாமே வைத்துக்கொள்வதெனத் தீர்மானிக்கிறார். கேட்கிறவர்களிடம் “எங்க முதலாளி கடைசிகாலத்தில் சில ஆவணங்களை என்னிடம் கொடுத்திருக்கிறார்”,  என ஒப்புக்கொள்கிறார். 1961 தேதியிட்ட உயிலொன்று ஆவணங்கள் குறித்து பேசுகிறது. இறப்பிற்குப் பிறகு மாக்ஸ் ப்ரோடு வசமிருந்த கையெழுத்து பிரதிகள் அனைத்தும் தேசிய நூலகத்திற்கோ அல்லது அதுபோன்ற வேறு அமைப்பிற்கோ கொடுக்கப்படவேண்டுமென்று எழுதப்பட்டுள்ள உயிலில் தெளிவில்லை என்கிறார்கள். தவிர அதுபற்றிய இறுதி முடிவு அப்பெண்மணியின் விருப்பம் சார்ந்ததாம். காப்காவும் அவர் நண்பர் மாக்ஸ் ப்ரொடுவும் யூதர்கள் என்பதால் இருவருடைய எழுத்தும் இஸ்ரேலுக்குச் சொந்தமென வாதிடுகிறவர்கள் இருக்கிறார்கள். அல்பெர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஸ்வெய்க் போன்ற யூத அறிவு ஜீவிகளின் ஆவணங்கள் தங்கள்வசமிருப்பதைக் கூறி தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள்.  இஸ்ரேல் தேசிய நூலகம்  மேற்கண்ட  தர்க்கத்தின் அடிப்படையில் அரசாங்கத்தின் பின்புலத்துடன் உரிமைகோரி வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 1974ல் இஸ்ரேலிய நீதிமன்றத்தின் முதற்தீர்ப்பு எஸ்த்தெருக்குச் சாதகமாக அமைந்தது.  பெண்மணிக்குக் காலப்போக்கில் காப்காவின் எழுத்துக்கள் பொன்முட்டையிடும் வாத்து என்று தெரியவர வேண்டுமென்கிறபோதெல்லாம் விற்க ஆரம்பித்தார். 1970ல் காப்காவின் பல கடிதங்கள் நல்ல விலைக்கு விற்கப்பட்டன. 1988ம் ஆண்டு The Trial நூலின் மூலப் பிரதி ஜெர்மன் இலக்கிய ஆவணக்காப்பகம் 2 மில்லியன் டாலரைக்கொடுத்து உரிமம் பெற்றது.

எஸ்த்தெர் ஜூரிச்சில் வங்கிப் பெட்டமொன்றிலும், டெல்-அவிவ் நகரில் ஆறு வங்கிப்பெட்டங்களிலும் போக சிலவற்றை வீட்டில் ஒரு பெட்டியில் பூட்டி வைத்திருப்பதாகவும் கூறுகிறார்கள். எஸ்த்தெருக்கு இரண்டு பெண்கள் ஒருத்தி பெயர் ரூத் மற்றொருத்தி பெயர் ஏவா.  இளைய மகள் ஏவா விமானப்பணிப்பெண், மணம் புரியாமல் தாய்க்குத் துணையாக இருந்துவந்தாள். 2007ல் 101 வயதில் எஸ்த்தெர் இறந்த பிறகு அவருடைய மகள்களுக்கிடையில் சிக்கல் ஏற்பட்டு நீதிமன்றத்திற்குப்போக, இஸ்ரேலிய தேசிய நூலகமும் தன்பங்கிற்கு முன்புபோலவே உரிமைகோரியது. ரூத் இஸ்ரேல் அரசாங்கத்துடன் சமாதனாமாகப்போக நேர்ந்தாலும் ஏவா விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. 2012 மேமாதத்தில் ரூத் என்பவளும் இறந்துவிட்டாள். இப்போது ஏவா மட்டுமே தனி ஒருவளாக கையெழுத்துப்பிரதிகளைப் பூதம் காப்பது போல காத்துவருகிறாள். கடந்த அக்டோபர் மாதம் (2012) 12ந்தேதி வந்துள்ள தீர்ப்பு இஸ்ரேலிய தேசிய நூலகத்திற்கு ஆதரவாக இருக்கிறது.  ஏவா மேல் முறையீடு செய்யவிருப்பதாகக் கூறுகிறார்கள். இம்முறை நீதிமன்றம் ஓர் அதிகாரியை நியமித்து ஜூரிச், டெல் அவிவ் வங்கிப்பெட்டகங்களை சோதனையிட்டு முறையாக அவற்றின் விவரத்தை பதிவுசெய்ய வேண்டுமென கட்டளைபிறப்பித்திருக்கிறது. ஜூரிச் பெட்டகத்தைப்பரிசோதிக்க நான்கு நாட்களும், டெல் அவிவ் பெட்டகத்தைத் சோதனையிட 6 நாட்களும் தேவைபட்டனவாம். ஏவா வீட்டிற்குள் நுழைய மிகவும் தயங்குகிறார் நீதிமன்ற அதிகாரி. அங்கே ஆவணங்களோடு ஏவா வளர்க்கும் ஐப்பதுக்கும் மேற்பட்ட பூனைகள் இருக்கின்றனவாம். உருமாற்றம் எழுதிய காப்காவும் அவர் நண்பரும் ஐம்பதில் இரண்டு பூனைகளாக்கூட இருக்கலாமென்பது எனக்குள்ள ஐயம். ஒரு புறம் இஸ்ரேல் அரசாங்கமும் இன்னொரு புறம் எஸ்த்தெர் குடும்பமும் காப்கா, மாக்ஸ் புரோடுவின் கையெழுத்துப்பிரதிகளுக்கு உரிமைகோரி வழக்காடிக்கொண்டிருக்க, உண்மையில் அவற்றுக்கு உரிமைகோரவேண்டிய செக் நாடு அசாதரண மௌனம் காப்பது இன்னொரு புதிர்.

காப்காவுக்கு நண்பர் மாக்ஸ் புரோடு இழைத்தது நன்மையா? தீமையா? ஒரு பட்டிமன்றத்திற்கான தலைப்பு.

——————-