கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி -நூல் வெளியீட்டு விழா – 26-01-2013

OLYMPUS DIGITAL CAMERAமுதல் நாவல் நீலக்கடல் 2005ல் வெளிவந்தது. தமிழ்ப் படைப்புலகிற்குப் புதியவன் என்ற வகையில், வெளியீட்டுவிழா அவசியமென நண்பர்கள் கூற  எனதன்பிற்கும் மரியாதைக்குரிய பிரபஞ்சன் தலைமையில் நடந்தேறியது. பெரிய படைப்பென்று சொல்லமாட்டேன். ஆனாலும் நடுநிலையான விமர்சகர்களின் கவனத்தைப்பெற்றது. திருவாளர்கள் ரெ.கார்த்திகேசு, வே. சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தேவமைந்தன் ஆகியோர் எனக்கு உற்சாகத்தை ஊட்டும் வகையில் எழுதியிருந்தார்கள். நீலக்கடல் நாவலை  பாராட்டி எழுதுவதற்கு முன்பு, இவர்களிடம் எனக்குத் தொடர்பில்லை. அவர்கள் பாராட்டுதலை உறுதிப்டுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் பரிசும் அந்நாவலுக்குக் கிடைத்தது.   மூன்றாண்டுகள் கழித்து இரண்டாவது நாவல்- மாத்தாஹரி வெளிவந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் 2008ல் வெளிவந்திருந்த கதை, கட்டுரை, கவிதைகளில் தமது தேர்வென பத்து படைப்புகளைக் குறிப்பிட்டிருந்தார், அவற்றுள் மாத்தாஹரி ஒன்று. தொடர்ந்து அந்நாவலையும் திருவாளர்கள் ரெ. கார்த்திகேசு, வெ.சபாநாயகம், கி.அ. சச்சிதானந்தம் ஆகியோர் பாராட்டி எழுதினார்கள். தமிழவன் சிங்கப்பூரில் நடந்த மாநாடொன்றில் வாசித்த கட்டுரையில் மாத்தாஹரி நாவலை வெகுவாக பாராட்டியிருந்தார். நாவலுக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை பரிசு கிடைத்தது.

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ எனது மூன்றாவது நாவல். என்னைக்காட்டிலும் எனதெழுத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நண்பர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன், ந.முருகேசபாண்டியன், கி.அ.சச்சிதானந்தன், மதுமிதா ஆகியோரை நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தேன். அன்பிற்குரிய திரு.பிரபஞ்சன் அவர்களுக்கு சாரல்விருதுக்கான பாராட்டுவிழாவில் நண்பர் ந.முருகேச பாண்டியன் கலந்துகொண்டதால் அவரால் வர இயலவில்லை. பின்னர் அக்குறை மதுரையில் எங்கள் சந்திப்பால் நீங்கியது. அழைப்பிதழில் போட்டிருந்த விருந்தினர்களின்றி  ஆன்றோர்கள் முன்னிலையில் (திருவாளர்கள் லெனின் தங்கப்பா, தேவமைந்தன், முருகேசன், ரமேஷ் பிரேதன், பக்தவச்சலபாரதி, மு. இளங்கோவன், விஜெயவேணுகோபால், இளம்பாரதி, பாலகிருட்டிணன், சந்தியா நடராசன், சங்கர நாராயணன், உதய கண்ணன், அகநாழிகை வாசுதேவன் அவரது நண்பர்கள்… தமிழ் சான்றோர்கள், பிரெஞ்சு பேராசிரியர்களென கலந்துகொள்ள நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது. நண்பர் பாவண்ணன் கலந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்த்தேன். அவருக்கும் சாத்தியமில்லாமல் போய்விட்டது.

நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய பேராசிரியர்  நாயகர், கவிஞர் சீனு. தமிழ்மணி, கவிஞர் பூங்குழலி பெருமாள் அவர் தம் துணைவர் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்னும் பல எழுத்தாள நண்பர்கள் விடுபட்டிருக்கலாம் மன்னிப்பார்களாக. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாவிடினும் உள்ளன்போடு வாழ்த்திய உள்ளங்கள் இருக்கின்றன:  பிரான்சு சிவன்கோவிலைச்சேர்ந்த நண்பர் முத்துக்குமரன், என்மீது அளவற்ற அன்புகொண்டிருக்கும் பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் அண்ணாமலை பாஸ்கர், நண்பர் இந்திரன் ஆகியோரை மறந்துவிடமுடியாது. அனைவருக்கும் எனது நன்றிகள்.

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’க்கு வரவேற்பு எப்படி?

அஜய் என்ற முகம் தெரியாத நண்பர் எழுதியிருக்கிறார்:

வணக்கம் ஸார்,
 
உங்க கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் படிச்சேன். just wanted to share my feelings with you.
களன்,   கதை சொல்லல் முறை (back and forth between the present and past) ,  பாத்திர வார்ப்பு எல்லாம் மிக நேர்த்தி. நடுவில் வந்த நிகழ்காலத்தில் நடக்கும் மர்ம இழையை விட வரலாற்று இழையே நாவலின் முக்கிய பகுதியாக எனக்கு தோன்றுகிறது. சில விஷயங்கள் பூடமாகவே இருப்பது, சில நிகழ்வுகள் முன்னும் பின்னுமாக வருவது,  வாசகனை உழைக்கக் கோருகிறது, an interesting exercise for us too. ஒரு 15-20 ஆண்டு கால snapshots, ஆட்சியாளர்களின் machinations, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நிலைபாடுகள் மாறுவது, சைவ, வைணவ பூசல், இதையெல்லாம் விட காலத்தின், வரலாற்றின் போக்கில் மனிதர்கள் (அவர்கள் யாராக, எந்த உயர்ந்த/எளிய நிலையில் இருந்தாலும்) சிதறி அடிக்கப்படுவது  நன்றாக பதிவாகி உள்ளது. Shows us how insignificant we are in the overall scheme of things. தீட்சிதரின் பெருமைகள் அனைத்தும் ஒரு நாளின் தவிடு பொடியாகின்றன,ஜகன்னாத்தன்/சித்ராங்கி/செண்பகம்  வாழ்கை முற்றிலும் மாற கால வெள்ளத்தில் அனைவரும் அடித்து செல்லப்படுகிறார்கள். சென்பகத்தையும், சித்ராங்கியையும் எளிதில் மறக்க முடியாது, குறிப்பாக செண்பகம், a multi layered personality. ஒரு புறம் தன்னிச்சையாக செயல்படுபவளாக தோன்றினாலும், இன்னொரு புறம் தங்கக் கூண்டில் இருக்கும் பார்வை போல் இருக்கிறாள் (குழந்தையை பிரிவதூ என்பது சுலபமா என்ன?)
 
நாவலின் blurb படித்து முழு வரலாறு சார்ந்தது என்று நினைத்ததால் நாவல் நிகழ்காலத்தில் நடக்கும் இழை (ஹரிணி சார்ந்து நடக்கும் மர்மமான விஷயங்கள்) எனக்கு சற்று ஏமாற்றம்  அளித்திருக்கலாம்.  அதுவும் சுவாரஸ்யமாகவே இருந்தது. இருந்தும் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது போல் தோன்றியது. குறிப்பாக பத்திர பதிவு இடம், எரிக் நோவா  பற்றிய உண்மை என இறுதியில் தெரிய வருவது.  நாவல் குறிப்பிட்ட பக்க அளவில் இருக்க வேண்டுமென்பதால் இப்படி இருந்திருக்கலாமோ.
 
நாவலை இன்னும் நீட்டித்து நிகழ் காலத்தையும், வரலாற்றையும் இணைப்பதை இன்னும் காத்திரமாக செய்திருக்கலாம். அல்லது முழு வரலாற்று புனைவாக எழுதி இருக்கலாம். I feel that length has played spoilsport here, would have been even more simulating if it had been extended to another 100 or more pages, (would have loved read more about padre and how they viewed us). One of the rare instances where we want the novel to still continue. Still a very engrossing and erudite read sir. Apologies if I have offended you with my comments.
 
Regards
Ajay
 


http://wordsbeyondborders.blogspot.com

நண்பரின் கூற்றுப்படி நன்றாக வந்திருக்கிறதென நினைக்கிறேன். எனது வளர்ச்சிக்குப் பலர் காரணமாக இருந்திருக்கிறார்கள். அவ்வை நடராசன், சு. சமுத்திரம், சுஜாதா, இரா.முருகன்- இராயர் காப்பி கிளப், திண்ணை, பதிவுகள் போன்ற இணைய இதழ்கள் எனக் குறிப்பிடலாம். முக்கியமாக நால்வரை நான் எவ்வளவு வணங்கினாலும் தகும்: மனமாச்சர்யங்களின்றி ‘நீலக்கடல்’ நாவல்மூலம் என்னை அடையாளம் கண்டு எழுதிப் பாராட்டிய திரு. ரெ.கார்த்திகேசு, திரு.வே.சபாநாயகம், திரு.ந.முருகேசபாண்டியன், தேவமைந்தன் ஆகியோரே அந்த நால்வர். குடத்திலிட்ட இவ்விளக்கை குன்றின்மீது நிறுத்த விழைந்தவர்கள் அவர்கள். மீண்டும் வனங்குகிறேன்.

———————————–

விழாப்படங்கள்

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

அன்புடையீர்!

அன்புடையீர்!

இன்று புதுச்சேரியில் (ஜெயராமன் ஓட்டல், மாலை 5.30மணி அளவில் ) வணக்கத்திற்குரிய கி.அ.சச்சிதானந்தம், தமிழவன் நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் சிறப்பு செய்ய நடைபெறவிருக்கும் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டுவிழாவில் நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க பணிவுடன் வேண்டுகிறேன்

நா.கிருஷ்ணா

படம்

INVITATION

 

krishnapa book invitation final proof

 

 

But the book release is to be held on Saturday 26th

Anbudan

Na.Krishna

 

ஒரு பணிவான வேண்டுகோள்!

பத்திரிகைகளப் பிரித்தாலும், சஞ்சிகைகளை வாசித்தாலும், தொலைகாட்சிகளிலும் இந்தியாவில்  90 விழுக்காடுகள் கெட்டதே நடப்பதுபோன்று சித்தரிக்கப்படுகின்றன. சினிமா, அரசியல், ஊழல்கள், விபத்துகள் மற்றும் பிற அழுக்கான சாக்கடைகளைத் தவிர்த்துவிட்டு வாரத்திற்கொரு முறை அல்லது மாதத்திற்கொருமுறை உங்கள் தெருவிலோ, ஊரிலோ, நகரிலோ ஆரவாரமின்றி பொது நலனுக்கென்று உழைக்கிற நண்பர்கள், மனிதர்கள் இருக்கக்கூடும், அவர்களைப் பாராட்டி முக நூலில் எழுதுங்களேன். வருடத்திற்கொருமுறை அவரில் ஒருவரை தேர்வு செய்து கௌரவப்படுத்தலாமே. அண்மையில் தொடர்ந்து ஆனந்தவிகடன் இதழால் அடையாளப்படுத்தப்படும் மனிதர்களால் ஏற்பட்ட ஆசை இது.

நா.கிருஷ்ணா

ஓ இந்தியா!

அன்பினிய நண்பர்களுக்கு

ஜனவரி 11 அன்று இந்தியா வருகிறேன்- செல்கிறேன். நண்பர்கள் அவரவர் வசிப்பிடத்திற்கேற்ப இரண்டிலொரு வினைச்சொல்லை பயன்படுத்திக்கொள்ளலாம். இடையில் ஒருவாரம் மனைவியுடன் இந்தியத் தலைநகருக்குச்செல்கிறேன். நண்பர் நாயகரும் அவர் துணைவியாருடன் வருகிறார்கள். ஜனவரி 26ந்தேதி புதுச்சேரியில்’கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீடு. இதர நாட்கள் புதுச்சேரி, சென்னையென தங்க நேரிடும். அவ்வப்போது வலைத்தளத்திற்கு வந்தும்போவேன். கடந்த மூன்றுமாதமாக சிற்றிதழ்களுக்கென்று எழுதவில்லை. எழுதவேண்டும். சிறுகதைக் கங்குகள் ஒன்றிரண்டு உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கின்றன, காலச்சுவடுக்காக லெ.கிளேசியோவின் ‘விசாரணை’ என்ற நூலை மொழிப்பெயர்க்கத் தொடங்கியிருக்கிறேன், மார்ச்சுக்குள் முடிக்கவேண்டும். ஏப்ரலுக்குள் எனது நிறுவனத்தின் ஆண்டுகணக்கை முடித்து சமர்ப்பிக்க வேண்டும், ஆடிட்டரிடம் கொடுக்கும் அளவிற்கு பெரிய நிறுவனமுமல்ல. தவிர கடந்த இருபது ஆண்டுகளாவே கணக்கு வழக்குகளை நானே பார்க்கிறேன். நாமே கணக்குவழக்குகளைப் பார்க்கிறபோது, திட்டமிட்டு எதையும் செய்ய முடிகிறது. பகுத்தறியும் மனிதர்கள் அதிகம் புழங்கும் எழுத்துலக நிழலில் ஒதுங்க முடிந்தது எனக்குக் கிடைத்த வரம்.  தொடர்ந்து ஆதரவளித்துவரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்நன்றிக்கு முதற்காரணம் நீங்கள் என்னைவிட மேலானவர்களென்று மனம் சொல்கிறது, நம்புகிறது.

வணக்கத்துடன்
நா.கிருஷ்ணா

தமிழ் சினிமா பற்றி பிரெஞ்சு பத்திரிகையாளர்கள்

அண்மையிற் பிரபல பிரெஞ்சு சஞ்சிகை  இந்தியாவைப்பற்றிய சிறப்பு இதழொன்றை வெளியிட்டிருந்தது. அவ்விதழ் தயாரிப்புக்காக இந்தியா சென்றிருந்த பத்திரிகையாளர்களில் ஒரு பிரிவினர் கோலிவுட்டையும் எட்டிப்பார்த்துவிட்டு வந்தனர். அதை ஓளிநாடாவில் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் சினிமாவை கேலிசெய்திருக்கிறார்களென நினைக்கவேண்டாம், கடைசியில் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய முழுவதுமாக ஒளிநாடாவைப்பாருங்கள், அல்லது மொழிபெயர்ப்பின் கடைசி ஐந்துவரிகளை தவறாமற் படியுங்கள்.

http://www.lexpress.fr/actualite/monde/kollywood-l-autre-cinema-indien_1201939.html

“இந்தியா சினிமா என்றதும் பம்பாய் பற்றி பேசுகிறோம், உடனடியாக பாலிவுட் நமது நினைவுக்கு வருகிறது. நமது வாசகர்கள் அதிகம் அறிந்திராத இந்தியா சினிமா ஒன்றிருக்கிறது, பெயர் ‘கோலிவுட்’, அது குறித்தும் நாம் தெரிந்து கொள்வதும் அவசியமாகிறது. கோலிவுட்டைத் தெரிந்துகொள்ள இந்தியாவின் தென்கிழக்கிலுள்ள சென்னைக்குச் செல்லவேண்டும். பாலிவுட் திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையானச் செய்பொருட்களைக்கொண்டே இவர்களும் திரைப்படங்கள் தயாரிக்கிறார்கள். ‘மசாலா சினிமாக்கள்’ என்று பொதுவில் அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு கரண்டி காதல், ஒருகரண்டி சண்டை, ஒரு கரண்டி ஆட்டம், ஒரு கரண்டி பாட்டு, ஒரு சிட்டிகை  நகைச்சுவை எனப்போட்டுத் தயாரிக்கப்படும் ஒருவகையான கோக்டெய்ல் அனுபவம். தமிழ் சினிமா என்பது தொய்வின்றி இயங்கும் ஓர் வணிக சினிமா. போலிவுட் சினிமா தயாரிப்பிலுள்ள பரபரப்பும் வேகமும் தமிழ் சினிமாக்களிலும் இருக்கின்றன.  நாங்கள் அங்கு சென்றிருந்தபோது பத்திரிகையாளர் சந்திப்புகள், திரைப்படங்களைப்பற்றிய அறிமுகம், நடிகர் நடிகைகளின் பேட்டி ஆகியவற்றை காணமுடிந்தது. அவர்களுக்குத் திரையுலகம் தேவாலயம். ஒரு சில நடிகர் நடிகைகளுக்குக் கோவிலெழுப்பி வழிபடுகிறார்கள். வேறு சில நடிக நடிகையரிடம் வெறித்தனமான அபிமானமும் இருக்கிறது.  திரைப்படம் வெகுவிரைவாக நகர்கிறது, காட்சிகள் படுவேகமாக வந்துபோகின்றன. ‘Story Board’, ‘Script’ என்றெதுவுமில்லை. நடனங்கள் மிகமிக முக்கியம். குறைந்தபட்சம் ஐந்து பாட்டுகள், ஐந்து நடனங்கள் கட்டாயம் இருந்தாகவேண்டும். இதில் ஆச்சரியத்திற்குரிய விஷயம் நடிகர் நடிகைகள் ஓரிரு நிமிட ஒத்திகைக்குப்பிறகு, தொடர்ந்து அப்பியாசம் செய்துப்பார்க்க நேரமில்லாதபோதும் மிகத் துல்லியமாக சொல்லிக்கொடுப்பதை செய்கிறார்கள். நடிகர் நடிகைகளுக்குத் தங்கள் இருப்பைக் கட்டிக்காத்துக்கொள்ளும் உந்துதலிருப்பதால் வெகு எளிதாக ரசிகர்களிடம் கலக்கிறார்கள், சூழ் நிலை எதுவாயினும் படம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறார்கள். அத்தகைய எளிமையான அணுகுமுறையை பிரான்சில் நாம் பார்க்கமுடியாது. தவிர சொற்ப வருமானத்தைக்கொண்ட தங்கள் ரசிகர்களுக்கு இருக்கிற சந்தோஷமும் பொழுதுபோக்கும் சினிமா மட்டுமே என்பதை நடிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள். திரைப்படம் வெளிவர ஒருமாதம் இருக்கிறபொழுது அப்படத்தின் இசைக்கு பொது அறிமுகம் நடைபெறுகிறது, பத்திரிகையாளர்களை அழைத்து விழா எடுத்து பாடலை வெளியிடுகிறார்கள். அதனால் ரசிகர்கள் அப்பாடலை மனனம் செய்து பாடுகிறார்கள். வானொலிகள் திரும்பத் திரும்ப ஒலிபரப்புகின்றன. அப்பாடல்களின் வெற்றியைப்பொறுத்தே படத்தின் வெற்றியும் தீர்மானிக்கப்படுகிறது. பாடல் வெளியீடு நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு திரைப்படம் வருகிறது. முதற்காட்சி மிகவும் முக்கியம். நடிகைகளுக்குப் பாலாபிஷேகம் செய்கிறார்கள்; திரைப்பட விளமபரங்களில் மஞ்சள் பூசுகிறார்கள். தியேட்டருக்குள்ளே மக்கள் முண்டியடித்துக்கொண்டு நுழைகிறார்கள். தங்கள் அபிமான நடிகர் திரையில் தோன்றியவுடன் ஆரவாரம் செய்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து இவர்களும் ஆடுகிறார்கள். நாணயங்களை திரையில் வீசுகிறார்கள். அடுத்தடுத்து இருபது முப்பதுமுறை படத்தைத் திரும்பத் திரும்பத் பார்க்கும் வழக்கமிருப்பதால், திரைப்படத்தில் கவனம் செலுத்தாமல் கேலி கிண்டலில் ஆர்வமாக இருக்கிறார்கள். இதை வேறெங்கும் நாம் காணமுடியாது. அடுத்து நடிகர் நடிகைகளுக்கு இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம்வரை ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன, ஒவ்வொரு மன்றத்திலும் இருபது இருபத்தைந்து உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்களுக்குத் தங்கள் அபிமான நடிகர் நடிகையரின் ஒவ்வொரு அசைவும் செயல்பாடும் முக்கியம், அதுபற்றி பேசுகின்றனர், விவாதிக்கின்றனர். சில ரசிகர் மன்றங்கள் சமூகப்பணிகளிலும் ஆர்வம் காட்டுகின்றன. ஒரு சில ரசிகர்களிடம் பேசினோம், “எங்கள் நடிகருக்காக நாங்கள் எதையும் செய்வோம்”, என அவர்கள் சொல்கிறார்கள். கடந்தகாலத்தில் அதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. நடிகர்கள் அரசியலுக்கு வருகிறபொழுது அவருடைய ரசிகர்கள் அவ்வளவுபேரும் அடுத்தநொடி அவரை ஆதரித்து அரசியலுக்கு வருகின்றனர். உங்கள் அபிமான நடிகர் இறந்துவிட்டால்? என்ற கேள்வியை எழுப்பிய நேரத்தில் அவர்கள் முகத்தில் கவலை படர்வதை அவதானிக்க முடிந்தது. தங்கள் நடிகர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அம்மருத்துவ மனைவாசலில் ரசிகர்கள் உட்கார்ந்துவிடுகிறார்கள். அந்நடிகரின் கவனிப்பில் ஏதேனும் பிரச்சினைகளிருப்பின் மருத்துவமனையை துவம்சம் செய்துவிடுவார்கள். அந்நடிகரை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்களுக்கும் ஆபத்து. பெரும்பாலான தமிழ்ப்படங்கள் ஏன் அவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த ரசிகர்களே காரணம். இத்தகைய தமிழ்த் திரைப்படங்கள் அசலான வாழ்க்கையிலிருந்து விலகியவை.

கலைப்படங்கள்:

வணிக ரீதியில் இப்படங்களுக்கு ஏற்பட்ட தோல்வி 2012ல் மாற்றுத் திரைப்படங்களுக்கு காரணமாயின. இயக்குனர்கள், படைப்பாளிகள் திறனில் நம்பிக்கைவைத்து, நட்சத்திர நடிகர் நடிகைகளின்றி குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்படும் புதிய அலை படங்கள் வரத்தொடங்கியுள்ளன.  வணிக ரீதியில் ஏற்படும் இழப்புகளை சமாளிக்கவேண்டிய நெருக்கடிளிருப்பதால் தற்போதைக்கு பிரான்சு கலைப்படங்களோடு இவற்றை ஒப்பிடமுடியாதென்கிறபோதும் இந்தியாவின் மாற்று வகைப்படங்களின் சோதனைக்களமாக கோலிவுட் இன்று மாறியுள்ளதெனச்சொல்லவேண்டும். புதியதொரு உத்வேகத்தை கோலிவுட் திரைப்படங்களிற் பார்க்க முடிகிறது. தமிழ்ப்பட தொழில் நுட்ப வல்லுனர்களையும் கலைஞர்களையும் போலிவுட் திரையுலகினர் இன்று தேடிவருகிறார்கள்.

—————————————–

புதுச்சேரியில் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி வெளியீட்டுவிழா

அன்பினிய நண்பர்களுக்கு,

Na.krishna -New books3 001எனது புதிய நாவல் வெளியீட்டுவிழா ஜனவரி 26ந்தேதி மாலை ஜெயராம் ஓட்டலில் நடைபெற இருக்கிறது.
கி.அ.சச்சிதானந்தம் தலைமையில் நடபெறவிருக்கிற நிகழ்வில் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன், திருவாளர்கள் தமிழவன், ந.முருகேசபாண்டியன், ழான் தெலொஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள். பிற எழுத்தாளர் நண்பர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அழைப்பிதழ் தயாராகிக்கொண்டிருக்கிறது. அழைப்பிதழ் கிடைக்கத் தவறினாலும் உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.

பணிவுடன்
நா.கிருஷ்ணா

புதிய நூல்கள்

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – மொழிவது சுகம் – கதையல்ல வரலாறு

மேற்கண்ட மூன்று நூல்களும் முறையே சந்தியா பதிப்பகம், இராஜராஜேஸ்வரி பதிப்பகம், நற்றிணை பதிப்பகம் ஆகிய மூன்று அரங்குகளிலும் எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்கிற எனது நாவலிருந்து:

கிருஷ்ணபுரம், கி.பி 1598

Na.krishna -New books3 001ருட்டின் பௌருஷ¤தத்தை பிரமாண்டமான விருட்ஷங்கள் கூட்டியிருந்தன. பறவைகள், விலங்குகளின் நடமாட்டங்களற்றதொரு வெறுமை. இறையெடுத்த விலங்கைப்போல அரை மயக்கத்தில் இரவு துயில் கொண்டிருக்கக்  கண்டான், அதன் கரியசருமம் பெய்திருந்த மழையில் பளபளத்தது.  இரவின் நித்திரையை தமது குறுக்கீடு கலைத்துவிடலாமென்று அஞ்சியவன்போல காலெடுத்து வைத்தான். நாசிதப்பிய அதன் மூச்சுக்காற்றில் காவற்காட்டின் மரங்கள்  அசைந்து கொடுத்தன. மௌனமான அவ்வதிர்வை  சரீரம் உறிஞ்சிக்கொண்டது. உரோமங்கள் குத்திட்டுக்கொள்ள தசைகள் ஒரு முறை உதறி அடங்கின. காற்றிலுங்கூட மழையின் கசகசப்பு கலந்திருப்பதை தேகம் உணர்த்திற்று. மழை விடாது பெய்துகொண்டிருந்தது. தொடர்ந்து இடிச்சத்தமும் கேட்டது. கீழ்வானில் மூர்க்கத்துடன் வெட்டிய மின்னலிற் சிதறித் தெறித்த ஒளித்துணுக்குகள் ஈரம் உலராதிருந்த தோப்புக்குள் விழுந்தன.  இடி மலைச்சரிவுகளில் விழுந்து உருண்டது., கருவேலமரமொன்று தீப்பற்றி சடசடவென்று எறிந்தது. அந்த சில நொடிகளில் பெருமுழக்கத்துடன்கேட்ட இடி  காலடி அருகே நிலமதிர கடந்த போது உடல் வெடவெடத்தது. முதுக்குப்பின்னே வெகுதொலைவில் பாறாங்கற்கள் ஒன்றோடொன்று மோதி சிதறுவதுபோல இடி எதிரொலித்து அடங்கியது அருங்குழைமிளை புதரிலிருந்து சாம்பல் நிற காட்டுமுயலொன்று  பந்துபோல தாவிக்குதித்து மண்டிக்கிடந்த கருமிளை செடிகளுக்குள் மறையக்கண்டான்.

ஒருவழியாக காவற்காட்டைத் தாண்டியிருந்தான். பழகியவர்களன்றி அந்நியர்கள் எவரும் காவற்காட்டிற்குள் புகுந்து மீளமுடியாது. முட்புதர் காடுகளைப் பிரித்து நீண்ட ஒற்றையடிபாதையில் இறுதியாக குறுக்கிட்ட செடிகொடிகளை விலக்கியபோது  குறுங்கற்பபரவிய திறந்த வெளியில் நின்றிருந்தான். எதிரே மூன்றுமலைகளையும் இணைத்து எழும்பிய  அடையவளைந்தான்.  சில அடிதூரத்தில் அகழி. மதிற்சுவரின் மறைவான நிலைகளில்  காவல்வீரர்கள் இருக்கலாம். மழையில் நனைந்த சம்பங்கூடை கூடுதலாகக் கனத்தது. தலையைப் பின்பக்கம் இறக்கி மலையை அண்ணாந்துபார்க்க முடிந்தது. சிறுமேகக்கூட்டம் உடைந்த தாழியின் வெண்ணெய்போல இராயகிரி உச்சியில் வழுக்கி இறங்கக் கண்டான். நட்சத்திரங்கள் சீதளவானத்தில் அடக்கமாகவே பிரகாசித்தன. சாம்பல் வண்ணத்தில் ஒளி சன்னமான திரைத் துணிபோல காற்றில் அலைந்துகொண்டிருந்தது. சர்க்கரை பாகின் நிறத்தில் கம்பியாக இறங்கிய மழையூடாக அவ்வொளியில் அமிழ்ந்துகிடக்கும் மலைகளைப் பார்த்தான். மேற்பரப்பில் நொய்போலவும் கீழ்ப்பரப்பில் ஆழ்கடலின் அடர்த்தியுடனும் இருள் பரவிக்கிடந்தது. கிளைகளுடனிருந்த மரங்களை வேருடன் பிடுங்க எத்தனிப்பதுபோல திடீர் திடீரென்று பேரிரைச்சலுடன் காற்று சுழன்று அடித்தது. தேங்கிக் கிடந்த தண்ணீரில் தவளைகள் கொரகொரத்தன. மழையில் நனைந்த முள்கற்றாழையும், செடிகொடி மண்டிய ஈரப் புதர்களும், பாறாங்கற்களின் இண்டு இடுக்குகளிற் பதுங்கிக்கிடந்த வெக்கையும், விழுந்து சிதறியிருந்த இலுப்பைப் பழங்களும் முயங்கி ஓர் இறுக்கமான வாடையை சமைத்திருந்தன.

இரண்டாவது முறையாக மலைகளை ஒருசேர விழிகளால் அளந்தான். பொம்மலாட்டக் கலைஞர்கள் திரைக்குப்பின்னே யானைகளை நடத்திச்செல்வதுபோல மேகங்கள்  முன்னேறின, அவற்றிலிருந்து குட்டியானையொன்று விலகி மலைகளைத் தொட்டு, நிலத்திட்டை எதிர்கொண்ட நதிபோல பிரிந்து கடந்துபோனது. மூன்று மலைகளிலும் விழுந்த நிலவொளி மலைகளில் வழிந்து அடிவாரத்தில் விழுந்து மௌனமாக சலசலத்தது. அவைகளை இறுக்கிப்பிணைத்துக்கொண்டு வட கயிறுபோல கோட்டை சுவர். கிருஷ்ணகிரிக்கும் சந்திராயன் துர்க்கத்திற்கும் இடையில் கவிழ்த்துவைத்த தொப்பிபோல இராயகிரி. ஒட்டியிருந்த இமைமயிர்களை விலக்கி கண்மணிக்குள் ஒளியும் நிழலுமாக முதல் பிரவேசத்தை  நிகழ்த்திய நாள்முதல் அவற்றின் காலடியில் கிடந்திருக்கிறான். மனிதர் எழுப்பிய கோட்டையும் அரண்மணையும், கோவில்களும், பிறவும் மூப்படைந்திருக்க, மலைகளுக்கோ காலத்தை வென்ற திமிர்.

வெள்ளைவெளேரென அன்று நிலா இருந்ததாக நினைவு. உதறி விரித்த நீலக் கம்பளம்போலவிருந்த ஆகாயத்தில் கையளவு மேகங்கூட இல்லை. இரண்டாம் சாமம், உறக்கம் வராமல் புரண்டு படுத்தத் தகப்பன் ஓலையில் முடைந்த வெற்றிலைப்பெட்டியை தனக்கு முன்னால் வைத்துக்கொண்டு இவனை எழுப்பினார், கதை சொல்லப்போகிறேன் என்றார். பழங்கலத்திலிருந்து விதை நெல்லை எடுப்பதுபோல சிந்தாமல் சொல்லப்பட்ட கதைகள். ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்க மனிதர் வாழ்க்கையில் கதைகளா இல்லை. தெற்கத்திய காற்றுபோல சிலகதைகள், புயலாக சிலகதைகள், தூறல்களாக சிலகதைகள், மழைபோல சிலகதைகள்.  ஒவ்வொருசமயம் பாலாற்றின் புதுவெள்ளம்போல சிலகதைகள் : ஆவேசத்துடன் நுரைத்துக்கொண்டு எறும்புக் கூட்டங்கள், நெளியும் பாம்புகள், வயிறு வீங்கிய ஆடுமாடுகள், முறிந்த கிளைகள், வைக்கோல் கட்டுகள், ஓலைவேய்ந்த குடிசைகள்  அவ்வளவையும் வாரிக்கொண்டுபோகும், ஒதுங்கி அவை அணுவாகி, பரமாணுவாகி பருப்பொருள் கடந்த மாயா ஆகும் என அப்பா கதையை முடிப்பார்.  உயிர் வாழ்க்கை அலுத்துபோனால் ஆன்மாவைப்பிரிந்த மனித உடலும் இற்று விழும், மக்கும் ; எலும்புகள் உதிர்ந்து காற்றில் நீந்தும். மலைகள் நிரந்தரம், உடைந்து சிதற நேர்ந்தாலும் கற்கூளமாய், கைப்பிடிமணலாய்  வாழ்ந்ததற்கு சாட்சியாக அறுத்தடிப்பு களமாகவேணும் மிஞ்சும்.

கார்மேகம் வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டியிருந்தான். முதுகில் ஊசல் வாடைகொண்ட நான்கு முழத் துண்டொன்று முதுகெலும்பையும் மார்பெலும்பையும், ஏற்ற இறக்கங்களுடன் தோளின் இருபுறத்தையும் போர்த்த உதவிற்று. சற்று முன்பு கொடியிலிருந்து எடுத்த மொடமொடப்பு இல்லை. குளிர்காற்றும், நீர் சாட்டைபோல விழுந்த மழைத்துளியின் உடைந்த துணுக்குகளும் அதை ஈரமாக்கியிருந்தன. காற்று குளிர்ந்து அடித்தது. கால்களை அரக்கிவைத்து அகழியோரமாகவே நடந்தான். சம்பங்கூடை க்கு ஒரு கை போக, மற்றது நடையின் வேகத்திற்கேற்ப முன்னும் பின்னுமாக அசைந்துகொடுத்தது. இருதினங்களாக்  கண்கொதியால்  அவதிப்படுகிறான். நோய்கண்ட நாளிலிருந்து வெதுவெதுப்பாக காலை மாலை இருவேளையும் ஆட்டுபாலை கண்களில் அவனே பீச்சிக்கொண்டு வருகிறான்.   பாறாங்கற்களும், பொடிக்கற்களுமாக நிறைந்திருந்த பூமி தொடர்ந்து நான்கு நாட்களாக பெய்த மழையில் இறுகிக் கிடந்தது. கால்களை ஊன்றி நடக்கிறபோது கூர்மையான கற்சில்லுகள் நெருஞ்சி முட்களைப்போல கால்களில் அப்பிக்கொள்கின்றன. நடப்பதற்குக் கடினமாக இருந்தது. கால்கள் கடுத்தன. சம்பங்கூடை வேண்டாமென்றுதான், காலெடுத்து வைத்தான். தலைகீழாகத் தொங்கவிட்டிருந்த  துருஞ்சில்களை கைத்தட்டி ஓட்டிவிட்டு அவன் தாய்தான் எடுத்துத் தந்தாள். இவன் கையில் வாங்கியபோது சிறுவண்டுகள் போல ஏதோ விரல்களில் ஊர்ந்ததைக்கண்டு கையை உதறினான். உதறியபின்னரும் விரலிடுக்கில் ஏதோ நச நசவென்று ஒட்டிக்கிடக்க தொட்டு நாசியில் வைத்தான் ஓக்காளம் வந்தது எலிபுழுக்கையோ துரிஞ்சல் புழுக்கையோ ஏதோவொன்று, தாயிடம், « வேண்டாம், தலைமேற் துண்டுடன்மலைப்பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு வந்திட  முடியும் », என்றான். அவள் வம்பு செய்து சம்பங்கூடை யைக் கொடுத்துவிட்டாள்.

மனம் சங்கடத்தில் ஆழ்ந்தது. ‘கமலக்கண்ணி  தயவு பண்ணுவாள்’ சக்கிலித் துர்க்கம் பக்கம் பார்த்துவா, அங்குதான்  வழியைத் தொலைத்துப்போட்டு படுத்துக்கிடக்கவேணும்”, ஜெகதாம்பாள் சம்பங்கூடையைப் கைகளில் பலவந்தமாகத் திணித்தபோது கூறியிருந்தாள். அவள் நெஞ்சில் ‘அகால வேளையிலே மகனை ஒண்டியாய் அனுப்பறோமே’, என்ற கவலை. அவர்களின் ஜீவனம் ஆடுகளை நம்பி இருந்தது. மொத்த குடும்பத்துக்கும் சகலமும் ஆடுகள். ‘நல்லது கெட்டது, கல்யாணம் காட்சிகள், வருடம் தவறாது பிள்ளை பெற்றுகொள்ள கீழ்பெண்ணாத்தூரிலிருந்து வரும் பெண்ணின் செலவு, செட்டி கடை நவதானிய செலவு, ஊர் ஏகாலி, நாவிதன், வரி கேட்டு நிற்கும் தண்டல்காரன்  அனைத்திற்கும் தீர்வு ஆடுகள். கிடைகட்ட நஞ்சை புஞ்சையென்று ஊர்மதிக்க ஐவேசியுடன் வாழும் மனிதர்கள் கூப்பிடுவார்கள். தெற்கே 20கல், வடக்கே 30 கல்லென்று தகப்பனும் மகனும் சித்திரைக்குப் போனார்களென்றால் நாட்டுக்குத் திரும்ப ஆனி மாதமாகிவிடும். மூன்று மாதமும் மோர்விட்டுக் கரைத்த கம்பங்கூழும், ஊறுகாய் பத்தையும் வயிற்றுக்கு ஆதாரம். பிறகு அந்திவரை துறட்டுக்கோலைத் தோளில் போட்டுக்கொண்டு ஆடுகள் பின்னால் சுற்றிவருவான்.

ஆடுகளை பட்டியிலிட்டு, படலை மூடும்போது கவனித்தான், சினைபட்டிருந்த கொம்பு முறுக்கிய மூக்கில் வெள்ளைபட்ட ஆடு மந்தையிலில்லை. தட்டியைத் திறந்ததும் ஆடுகள் தலையைத் தொங்கப்போட்டப்படி சோம்பலுடன் கால்களை வைத்து முன்னேறின. ஈச்சம் பழங்களை கொட்டி பரப்பியதுபோல கிடந்த புழுக்கைகளையும், ஆட்டு மூத்திரத்தையும் அடக்கி மேலெழும்பும் சினை ஆட்டின் மொப்பு இல்லையென்றானதும் மனம் கலவரப்பட்டது. “தம்பி மடி பேர்ந்திருக்கிறது, பொழுது சாய்வதற்குள்ளாக குட்டிபோடவேணும், மேய்ச்சலுக்கு இதை ஓட்டி போகாதே” என்று காலையில் எச்சரித்திருந்த தாய்க்கு என்ன பதில் சொல்வதெனக் கலக்கமுற்றான். அவளிடம் சொன்னால், சன்னதம் கண்டவள்போல ஊரைக்கூட்டிவிடுவாள். போன மாதம் பெருத்திருந்த வயிற்றைப் பார்த்து ‘இரட்டை குட்டி போடுமா?’ வயிறு இப்படி வண்ணான் சால்போல இருக்கிறதே”, என கண்கள் பிரகாசிக்கச் சொன்னாள். இரண்டுலே ஒன்று பெட்டையெனில் மகள் சிறுபாட்டுக்கென்று தவறாமல் கொடுத்திடவேணும், என்று அப்போதே ஆக்கினையும் பிறப்பித்தாள். தாயிடம் தொலைந்திருந்த ஆட்டைப்பற்றி வாய்திறவாமலேயே புறப்பட்டுப் போகலாமா என்றும் மனம் யோசித்தது. காலையில் ஒரு மிடறு கூழ் குடித்தது. பிறகு மலைச் சுணையில் அந்திவரை பசித்த நேரங்களில் கைநிறைய தண்ணீரை அள்ளிக் குடித்தது. வாசலிலிருந்து குரல் கொடுத்தான்.’அம்மா !  சினை ஆட்டை காண இல்லை, தேடிப்போகிறேன்’,  என்றான். கதவைத் திறந்துக்கொண்டு வெளியில் வந்து தலையை உயர்த்தியவளின் கறுத்தமுகம் அந்திவெயிலில் மேலும் கறுத்துபோனது. கவிழ்த்துப்போட்ட அட்டைபோல  பொரிந்திருந்த உதடு வெடிப்புகளில் வெற்றிலைசாறு. வாயுடன் சேர்ந்து மூக்கும் உயர்ந்தது. வார்த்தைகள் வந்து விழுந்தன: ” சினை ஆட்டை விட்டுப்போட்டு போவென்று காலமே ஒருமுறைக்கு இரண்டுமுறையா கத்தினேன், உங்கப்பனுக்கும் உனக்கும் பெட்டைக் கழுதைப் பேச்சை எதற்காக கேக்கோணுங்கிற இளக்காரம்”.

— ஆரம்பித்தாயிற்றா?

—எங்கே போகிறாய்?

— சினை ஆட்டைத் தேடி. மலைக்குப் போகிறேனென்று கூறினேன். காதில் வாங்கினாயா இல்லையா? எத்தனை நாழிகை ஆனாலும் ஆடு கிடைத்தது என்கிற சந்தோஷ சேதியுடன் வருவேன், போதுமா?

— சரி சரி இப்போது என்ன சொல்லிபோட்டேண்ணு  அந்தரப்படற, ஒரு வாய் சாப்பிட்டுபோ. மீன் குழம்புக்குத் தோதாக வரகரிசிசோறு. ஒரு மரக்கால் வரகை இடுப்பொடிய ஒருத்தியா அறைத்தேன் – கொசுவத்தை உதறி தோளில் போட்டவள், முகத்தை ஒடித்து திருப்பினாள்.

கண்களில் நீர் தளும்பி நின்ற தாய் ஜெகதாம்பாளின் முகத்தைப்பார்க்க பிள்ளைக்கு சங்கடமாக இருந்தது. தலையைக் குனிந்து வீட்டிற்குள் நுழைந்தான், நல்விளக்கின் தீபத்தில் சோறும் மீன்குழம்பும் ஒளிர்ந்தது. நாக்கில் நீர் புரண்டது. முகவாய்க்கட்டையை சொரிவதைப் பார்த்து, “கட்டையனிடத்தில் சவரம் செய்துகொண்டு வரவேண்டியதுதானே? என்றபடி தடுக்கொன்றை எடுத்துப் போட்டாள். கங்காளத்தை அதன் முன்னால் வைத்தாள். இவன் வாய் திறவாமல் செம்பொன்றை எடுத்து பானையிலிருந்த தண்ணீரை சேர்ந்துகொண்டு உட்கார்ந்தான். சோற்றைப்பிசைந்து விரலிடுக்குகளில் குழம்பொழுக கவளம் கவளமாக விழுங்கினான், அவள் முள்நீக்கி சதைப்பற்றைக் சோற்றுருண்டையில் வைத்தாள். மற்ற நாட்களெனில் ஜெகதாம்பாள் இதை அனுமதிக்கமாட்டாள். “எதற்காக இப்படி இறக்கைகட்டி பறக்கிறாய்” என்பாள். இன்றைக்கு அவளுக்கும் காணாமற்போன ஆட்டை பற்றிய கவலை. ஆடு கிடைத்தால் கன்னிசாமிக்கு சேவற் கோழி காணிக்கை செலுத்தறேனென மஞ்சள் துணியில் ஒரு பணத்தைவைத்து கங்கணம் கட்டிக்கொண்டாள். தாயும் மகனுமாக கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார்கள். தெற்கே பார்த்து அண்ணாந்து கும்பிடு போட்டாள். கும்பிட்டவள் கண்களில் இருண்டிருக்கும் வானம் கண்ணிற் பட்டிருக்கவேண்டும். உள்ளேசென்று சம்பங்கூடையுடன் திரும்பினாள். அதைக்குனிந்து தலையில் வாங்கிக்கொண்டான்.

மழையின் வேகம் தணிந்து தூறலாக உருமாறியிருந்தது. சந்திராயன் துர்க்கம் அடிவாரத்தை நெருங்கியிருந்தான். காலையில் ஆடுகளை அங்கு மேயவிட்டிருந்தான். மற்ற ஆடுகளெல்லாம் கால்களை ஊன்றிவைத்து மேலே செல்ல சினை ஆடுமட்டும் நடக்க சிரமப்பட்டது.  மெது மெதுவாய் குரங்குமலை திசைக்காய் இழுத்துச்சென்று  கொடுக்காப்புளி மரத்தடியில் வைத்து கிளைகளைத் துறட்டுக்கோலால் உடைத்துப்போட்டான். தலைக்குமேலே சூரியன் வந்தபோது ஆடு படுத்து அசைபோட்டது. மலைமேல் ஏறிய ஆடுகள் கண்ணிற்படவில்லை ஒன்றுமட்டும் வெண்திரவம்போல நிரம்பியிருந்த வெயிலில் நீர்அலைபோல தெரிந்தது. சினை ஆட்டை, மலையிலிருந்து இறங்கும்போது எழுப்பி ஓட்டிச்செல்லலாம் என்று தீர்மானித்தவனாய் மலை ஏறினான். ஆனால் அந்திச் சாய்ந்ததும் வீடு திரும்பும் அவசரத்தில்  மறந்துபோனான்.

குரங்கு மலைக்குத் திரும்ப இறங்கிவந்து பார்த்தபோது நினைத்ததுபோலவே ஆடு படுத்திருந்தது, சுற்றிலும் மஞ்சளும் சிவப்புமாய் திரவம், தேன் நிறத்தில் சதைபிண்டம் அதன் தொடையிடுக்கிற் கிடந்தது. குட்டிகளில் ஒன்று எழுந்திருப்பதும் குளிரில் வெடவெடத்து கீழே விழுவதுமாக இருந்தது. இவனுக்கு நேரெதிரே புதரொன்றிலிருந்து குள்ளநரியொன்று மெல்ல ஆட்டைக் குறிவைத்து நெருங்குவதைக்கண்டான். விபரீதத்தைப் உணர்ந்தவனாய் தலையிலிருந்த சம்பங்கூடையை தாமதமின்றி சுழட்டி வீசினான். இரண்டொரு கற்கள் உருண்டோடின. நரி இவன் மீது பாய்வதுகண்டு ஒதுங்கினான். அது எதிர் திசையில் ஓடி மறைந்தது.

நான்கைந்துபேர் பேசிக்கொண்டுவருவதுபோல குரல்கள் கேட்டன. அகால நேரத்தில் இதுபோன்ற குரல்களுக்கிங்கு அவசியமில்லையேயென யோசித்தான். கள்வர்களாக இருக்குமோ? தற்போது குரல்கள் வெகு அருகிற் கேட்டன. அவசர அவசரமாக மரத்தில் ஏறினான். மார்பில் மரச்செதிள்கள் சிராய்ப்புகளை ஏற்படுத்தின. தலையிலிருந்த துண்டை தவறவிட்டான். நல்லவேளை கிளை தடுத்தது. சுளுந்தொன்று தெரிந்தது. அசைகிறபோதெல்லாம் காற்றில் நன்றாகப்பிடித்து எரிந்தது, விளக்கெண்ணெயும் துணியும் சேர்ந்து எரிவதால் ஏற்படும் சிடுகு மணம் மூக்கை அடைத்தது. மூச்சைப் பிடித்துக்கொண்டு மரத்தில் அமர்ந்திருந்தான். வந்தவர்கள் ஆட்டைப்பார்த்ததும் தயங்கி நின்றார்கள்.

—ம். ஆகட்டும் நடவுங்கள் கடிதிற் போய்ச்சேரவேணும்.

—பூசாரி ஐயாவுக்கு எதற்கெடுத்தாலும் அதிகாரம் – முன்னால் நடந்த தாடிக்கார ஆசாமியின் பதில்.

ஒருவன் தலையில் கலசம் ஓன்றை வைத்திருந்தான் மொத்தம் ஆறு பேர் இருந்தார்கள், நடுவில் தலைவிரி கோலமாக ஒர் இளம்பெண். தலையை ஒருமுறை அவள் சிலுப்பியபோது ஒதுங்கி விழுந்த கூந்தலுக்கிடையில் நிழல்போல தெரிந்த அந்த முகம் ஆச்சரியமாக இருந்தது. அவளாக இருக்குமா? இருக்காது. இங்கே எப்படி? சிதம்பரத்துப் பெண்ணுக்கு கிருஷ்ணபுரத்தில் என்ன வேலை? மார்பிலும் இடுப்பிலும் அவளுக்கு வேப்பிலை பிரியை சுற்றியிருந்தார்கள். இதென்ன அலங்கோலம் ? இறுக பிடித்தபடி காவலர் இருவர்.

— மந்தை தப்பிய ஆடு, குட்டிபோட தங்கியிருக்கோணும், வரும்போது ஞாபகமாக கொண்டுபோகவேணும்— கீழிருந்து ஒர் ஆண் குரல்.

இரண்டு மாதத்திற்குமுன்பு கோவிந்தராஜர் திருப்பணியை மேற்பார்வையிட மன்னர் கிருஷ்ணநாயக்கர் சிதம்பரத்திற்குச் சென்றபோது பந்தோபஸ்து படையில் இவனுமிருந்தான். எதிர் முகாமில் கொள்ளிட பாளையக்கார கிழவன் ஆட்களும் இருந்தார்கள், அவர்களில் ஒருவன்  கள்ளைக் குடித்துவிட்டு இரவு முழுக்க கூச்சலிட்டுக்கொண்டிருந்தான். இவன் சகாக்களில் ஒருவன் வெகுண்டெழுந்து கண்டிக்கச் சென்றான்,  பிறகு கைகலப்பில் முடிந்தது. அக் குடிகாரனின் குரல்போல இருந்தது, உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை.

— ஆமாம் நரி தின்னாமலிருந்தால் உன் ஆசை நிறைவேறும். தாசி செங்கமலம் இப்போதெல்லாம் ஆடு மாடுகளுக்குக்கூட கதவு திறக்கிறாளாம். — ஒருவன்.

—அவள் கதவு எல்லாவற்றிற்கும் திறக்கும்- மற்றவன்

எல்லோரும் சிரிக்கிறார்கள். அவர்கள் தங்கள் சிரிப்பை அடக்கியே உதிர்த்தாலும், மரத்திலிருந்த இடையன் கார்மேகத்திற்கு  நெஞ்சை அடைத்தது, உடல் சிலிர்த்து அடங்கியது. கைகளை பெருக்கல் குறிபோல மார்பில் வைத்து தன்னை தைரியப்படுத்திக்கொண்டான்.

— எதற்கு வீண் பேச்சு, நடவுங்கள், — பூசாரியின் குரல் அதிகாரமாக ஒலித்தது தொடர்ந்து, ‘நமக்காக பெரியவர்களெல்லாம் காத்திருக்கிறார்கள்’. என்றார்.

ஆடு மீது கண்வைத்தவன் ஓரிரு நொடிகள் தயங்கி நின்றான். மேலே பார்த்தான். பின்னாலிருந்தவர்கள் அவனைத் தள்ள பெண்ணை இழுத்துக்கொண்டு ஆறுபேரும்  மரத்தைக் கடந்து சென்றார்கள். இப்போது அவர்கள் நடையில் வேகம். அடுத்த சரிவில் இறங்கி அவர்கள் மறைந்ததும் காத்திருந்தவன்போல கீழே குதித்தான். உடல் இலேசாக நடுங்கியது. கிளையிற்  தொங்கிய துண்டை எடுத்து தலையிற் கட்டிக்கொண்டான். ஆட்டை நெருங்கினான். அருகிலிருந்த  ஆடுதின்னாபாளை இலைகளை வேண்டியமட்டும் பறித்து முதலில் குட்டிகளின் உடலிலும் பின்னர் ஆட்டின் பின்புறத்திலும் வழியும் கோழைகளைத் துடைத்தான். நாளை ஏரியில் வைத்து கழுவிக்கொள்ளலாம் என்று முடிவுசெய்தான். மீண்டும் புதர்பக்கம் சென்று கொப்பும் தழைகளுமாகக் கொண்டுவந்து அதிற் கழிவுகளை வாரி எடுத்து கொடிகொண்டு சுற்றி கக்கத்தில் வைத்தான். அதே கையில் குட்டிகளையும் ஏந்திக்கொண்டான், மற்றொரு கையினால் ஆட்டை இழுத்துக்கொண்டு நடந்தான். சந்திராயன் துர்க்கத்திலிருந்து கிருஷ்ணகிரி இடைக்குடிகள் திசைக்காய் ஆடும் இவனுமாய் நடந்தபொழுது, தூறல் சுத்தமாக நின்றிருந்தது. ஆறுகணத்தில் குடிசை வந்துவிடும். தாயிடம் சற்றுமுன்பு கண்ட காட்சியைக் கூறலாமா எனநினைத்தான். அவள் வாயில் நிற்காது. ஊர்முழுக்க தண்டோரா போடுவாள். எதற்கு வம்பு என நினைத்தான். ஜெகதாம்பாள் இவனை எதிர்பார்த்து குடிசை வாசலில் காத்திருப்பாள். அவளுக்கு ஆட்டைப்பார்க்காமல் சோறுதண்ணிகூட இறங்காது, தாண்டுகால் வைத்தான்.

எதுவோ மிதிப்பட்டதுபோலிருந்தது. கணத்தில் காலை உயர்த்தி கீழே குனிந்து பார்த்தான். தவளையொன்று வயிறு கிழிந்து செத்துக்கிடந்தது. ஒதுங்கி காலைத் தூக்கிவைக்க முனைந்தபோது அங்கே இன்னொரு தவளை, கவனமாய் ஒதுங்கிக்கொண்டான். சற்றுமுன் கண்டகாட்சியையும் இதனையும் முடிச்சுப்போட்டு சஞ்சலப்பட்டான். ஆட்டை மீண்டும் இழுத்துக்கொண்டு நடந்தபோது கவனித்தான் சாரி சாரியாக ஆயிரக்கணக்கில் தவளைகள் குதித்து குதித்து வடக்கிலிருந்து தெற்காக போகின்றன. இவ்வளவு தவளைகளை சேர்ந்தாற்போல வாழ் நாளில் அன்றுதான் கண்டான்.

——————————————————–

 

 

புதுவருட நல்வாழ்த்துகள்

Je vous souhaite à tous une excellente Année 2013 !

நண்பர்கள் அனைவருக்கும் புதுவருட நல்வாழ்த்துகள்

– Nagarathinam krishna

பிரெஞ்சு புதுவருடம்:

reveillonபிரெஞ்சு மரபுப்படி ‘டிசம்பர் 31’ஐ – Saint Sylvestre’ என்று அழைப்பார்கள். நண்பர்களும் உறவினர்களுமாக சேர்ந்து கொண்டாடுகிற இரவு விருந்துக்கு ‘La Réveillon de Saint-Sylvestre’ என்று பெயர். எனது பெற்றோருடன் இருந்தவரை அதிரசமில்லாமல் தீபாவளியைக் கொண்டாடியதில்லை. (பிரான்சுக்கு வந்த பிறகு ஞாபகப்படுத்தினால், பாகு பதம் வரவில்லையென்று அரிசிமாவையும் வெல்லத்தையும் கையிற்கொடுக்கிறாள் மனைவி) தமிழ்நாட்டைப் பொருத்தவரை திபாவளிக்கு அதிரசம் முக்கியம் அதுபோல பிரெஞ்சுக்காரர்களுக்கு டிசம்பர் 31 இரவு விருந்து சாப்பாட்டிற்கு ஷாம்பெய்னும் – வாத்து ஈறலும் ( Foie -gras), தவிர்க்க முடியாதவை. Foie grasஅவவருடத்திலேயே ஆடம்பரமான விருந்தை குடும்பத்துடன் சாப்பிடுவதில் ஆரம்பித்து – நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நடனம் ஆடுவதென்பது வரையிலான சடங்குகள் அதிலுண்டு. டிசம்பர் 31 அன்று நள்ளிரவு 12மணிக்கு விருந்தினர்கள், உறவுகள், நண்பர்கள் ஒருவர்க்கொருவர் முத்தமிட்டு புத்தாண்டுவாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதென்பது பிரெஞ்சு மரபு. புதுவருடத்தின் முதல்நாள் வாழ்த்துகள் பரிமாறிக்கொள்வார்கள். ஜனவரி 6வரை பொதுவில் நீடிக்கும் இக்காலத்தை ‘Épiphanie’ என அழைக்கிறார்கள். la galette de roisஅதன் முடிவில் ‘ La Galette des rois’ என்ற இனியப்பம் வாங்கிச் சாப்பிடுவார்கள்.

 

 

————————————————————-