பிரெஞ்சு புனைவுவுலகம் இன்று

நேற்றைய சிந்தனைகள் என்பது இன்றைய சிந்தனைகளின் ஆணிவேர், படைப்பிலக்கியமும் இதற்கு விதிவிலக்கல்ல.

இயல்பாகவே கட்டற்றச் சுதந்திரத்தில் ஆர்வங்கொண்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இலக்கியம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றில் தங்கள் மன உந்துதலுக்கேற்ப புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள். பிரெஞ்சு படைப்புலகில் நேர்ந்த இவ்வுருமாற்றங்கள் பெற்ற ஞானஸ்தானங்களையும் அறிந்திருக்கிறோம். பட்டியல் நீளமானது. இடைக்காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்து மறைந்த கவிஞர் பிரான்சுவா வியோன் ஆகட்டும்; ஹ¤மானிஸம் என்கிற மனிதநலக்கோட்பாடு வழிவந்த கவிஞர் பிரான்சுவா ரபெலெ ஆகட்டும்; மதம், சமூக நெறி முரண்பாட்டாளர்களைக்கொண்ட ‘லிபெர்த்தென்’ கூட்டத்தினராகட்டும்; உயர்ந்த கோட்பாடு, மேட்டிமைத்தனமென்று மரபுகளில் நம்பிக்கைக்கொண்ட ‘கிளாசிஸம்’ என்கிற செந்நெறிவாதத்தினராகட்டும்; அவர்களைத் தொடர்ந்து வந்த ‘ரேஷனாலிஸ்டுகள்’ என்கிற நியாயவாதிகளாகட்டும்; உணர்ச்சிகள், மிதமிஞ்சியக் கனவுகள், ஏக்கங்கள், அனுபவப் பங்கீடுகளென விரிந்த ரொமாண்டிக்யுக படைப்பாளிகள் விக்தொர் யுகோ, ஷத்தோபிரியோன் போன்றவர்கள் ஆகட்டும்; இருத்தலியல் புரவலர் ழான் போல் சார்த்துரு ஆகட்டும்; இன்றைக்கு எழுதிக்கொண்டிருக் கிறவர்களாகட்டும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பிரெஞ்சு படைப்புலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர்கள், ஏற்படுத்திக்கொண்டிருப்பவர்கள். இன்று பிரெஞ்சு படைப்புலகத்தின் நிலையென்ன?

இன்றைய படைப்புலகம் என்பதை இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டு படைப்புலகம் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தாக்கத்திலிருந்து முற்றாக நாம் விடுபட இல்லை. இன்றைய  இலக்கிய உலகைப்புரிந்துகொள்ள இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பித்துவைக்கப்பட்ட 1. படைப்பாளியின் மரணம்  2. எழுத்தாளன் யார்? விவாதங்கள் தவிர்க்கமுடியாதவை:

படைப்பாளிகளில் பலரும், ‘நாம் சாகாவரம் பெற்றவர்கள்’ என எண்ணிக்கொண்டிருக்க, அப்படியொரு எண்ணமிருப்பின், கிள்ளி எறியுங்கள், எனக்கூறி ‘எழுத்தாளன் மரணத்தை'(1968) அறிவித்தவர் ரொலான் பர்த் (Roland Barthes). அவரைத் தொடர்ந்து மிஷெல் பு·க்கோ (Michel Foucault), ‘எழுத்தாளன் என்பவன் யார்? எனக்கேட்டு அக்கேள்விக்குரிய பதிலையும் அளித்தார். இரண்டு கருத்துகளுக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரெஞ்சு வரலாறு என்ற நூலைப்படைத்த குஸ்ட்டாவ் லாசன் (Gustave Lanson) என்பவர் காரணம். இக்குஸ்ட்டாவ் லாசனுக்கு பல்கலைகழக மட்டத்தில் பிரெஞ்சு இலக்கியத்தின் தராதரம் பற்றி விமர்சிப்பதும், படைப்பாளியைப் படைப்பிலிருந்து தனிமைப்படுத்துவதும் ஏற்புடையதில்லை. அவருக்கு எதிராக மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust) ‘சேன் பேவ்க்கு எதிராக’ என்ற நூலை எழுதுகிறார். அத்தகைய சூழ்நிலையில்தான் மேற்கண்டவை விவாதத்திற்கு முன்வைக்கப்பட்டன. ரொலன் பார்த்தும், மிஷெல் ·பூக்கோவும் பின்-அமைப்பியத்தையும் அதனைத்தொடர்ந்து ‘வாசிப்பு ஒழுங்கைப் புரட்டிப்போட்ட ழாக் தெரிதாவையும் கொண்டாடும் மனநிலையிலிருந்தனர். படைப்பு – படைப்பாளி இருவருக்குமான பந்தங்களும், ஒரு படைப்பு தரும் புரிதலில் நூலாசிரியனின் பங்களிப்புக் குறித்தும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ரொலான் பர்த் படைப்பாளிகளை இருவகைபடுத்துகிறார். முதலாவது வகையினர் ‘Ecrivant’ – தாம் கற்றதை, பெற்றதை பிறருக்கு கூடுதல் அல்லது குறைவின்றி கொண்டுபோய் சேர்க்கிறவர்கள்- மொழி இவர்களுக்கொரு கருவி: கட்டுரையாளர்கள், உரையாசிரியர்கள், பத்திரிகையாளர்களை இதற்கு உதாரணம். இரண்டாம் வகையினர் Ecrivain-  இவர்கள் மொழியைச் செயல்படுத்தத் தெரிந்தவர்கள், இலாவகமாகக் கையாளுவதிற் தேர்ந்தவர்கள். மொழியைக் கலைநேர்த்தியுடனும், தொழில் நுட்பத்துடனும் பயன்படுத்துபவர்கள். இவர்களிடத்திலும் பிறருக்குத் தெரிவிக்க தகவல்கள் உள்ளன, உண்மைகள் இருக்கின்றன. பிறரிடம் சேர்ப்பதற்குமுன் அவ்வுண்மைகளை இவர்கள் பரிசோதிக்கிறார்கள். மனக்குப்பியில்  அவ்வுண்மையைப் பலமுறைக் குலுக்கி, தெளிவுற்றபோதும் நிறைவின்றி, பிறரை அழைத்து தங்கள் சோதனையின் முடிவையும் தங்களையும் மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வற்புறுத்துகிறவர்கள். ரொலான் பர்த்துடையக் கருத்தின் படி படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே தொடர்பென்று எதுவுமில்லை  அல்லது சராசரியான செய்தித் தொடர்புகள் இவ்விருவருக்குமிடையில் இல்லை. ‘அதாகப்பட்டது’ என்ற கதா காலட்சேபம் செய்யும் பணியில் எழுத்தாளனில்லை. இதை மறுக்கிறவர்கள் இரூக்கிறார்கள். எழுத்தையும் எழுத்தாளனையும் பிரித்துப்பார்க்கக்கூடாது, பிரித்துப்பார்க்க இயலாது என்பது அவர்கள் முன் வைக்கும் வாதம். எழுத்தாளன் இறந்துவிட்டான் என்ற பார்த்தின் முழக்கமே, ரொலான் பார்த்தோடு இணைந்ததுதான். ஒரு படைப்பாளியின் தொகுப்பை எழுத்தின் அடிப்படையிலல்ல, படைப்பாளியின் பெயரால் தொகுக்கிறோம். எழுத்துடனான எழுத்தாளன் உறவு துண்டிக்கப்பட்ட பிறகு காப்புரிமைகேட்பது எந்த உரிமையில்? என்பதுபோன்ற கேள்விகளை அவர்கள் வைக்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் மேட்டுக்குடியினருக்கென்றிருந்த இலக்கியம் எல்லோருக்கும் என்றானது. இந்த ‘எல்லோரையும்’ ஒருபடித்தான பண்புடன் அடையாளப்படுத்த சாத்தியமில்லை. அடிப்படையில் இவர்கள் ஒருவர் -மற்றவர்-பிறர். உயிரியல் தன்மையினாலும், பிற காரணிகள் அடிப்படையிலும் வேறுபட்டவர்கள். சந்தைபொருளாதாரத்தைச் சார்ந்த இருபதாம் நூற்றாண்டு இலக்கியமும் இதை மறந்து செயல்படுவதில்லை. பிற நாடுகளைப்போலவே பிரான்சு நாட்டிலும் படைப்புலம் விமரிசனங்கள், விளம்பர உத்திகள், எழுத்தாளரின் புகழ், வெற்றிபெற்ற படைப்புகளை முடிந்தவரை காசாக்கும் தந்திரம் என்பதுபோன்ற செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டு செயல்படுகிறது. இந்நிலையில் மீண்டும் நூலாசிரியன்- அவன் நூல் இரண்டிற்குமிடையே பந்தம் குறித்துக் கேள்விகள் எழுகின்றன. இன்றெழுதும் எழுத்தாளனை- அவன் படைப்பு சார்ந்து அல்ல – எழுதும் பொருள்சார்ந்து மூன்றாகப் பிரிக்கலாம். வேறுவகையான கோட்பாடுகள் இஸங்களின் கீழ் அவர்களுக்கு நிழல்தர வாய்ப்புகளில்லை.

– ‘இது விலைபோகும்’ என்பதற்காக எழுதுபவர்கள்.

– ‘தான்’, எழுத்து வினை குறித்த அக்கறை – என்பதுபோன்ற சிந்தனைகள் வழிநடத்த – எழுத்துக்காக எழுதுபவர்கள்.

நடைமுறை வாழ்க்கைச் சிக்கல்கள், சமூகமுரண்கள், வரலாறு ஆகியவற்றைப் பதிவுசெய்ய எழுதுபவர்கள்.

ஒரு நாடு அதன் மக்கள்; ஒரு சமூகம் அதன் பண்பு என்ற சுவருக்குள்ளிருந்த பிரெஞ்சு படைப்புலகம் இன்றில்லை. மனிதம், மானுடம் அவற்றின் அனுபவங்கள், செயல்பாடுகள், நெருக்கடிகள்  “Poetry is not a turning loose of emotion, but an escape”, எனக் எலியட் (T.S. Eliot) கூற்றிர்க்கொப்ப ‘தப்பிக்கும் மனப்பாங்குகள்’ கொண்ட எழுத்துக்களை எங்கிருந்தாலும் பிரெஞ்சு படைப்புலகம் வரவேற்கிறது. பல்சாக், கி மாப்பசான், அல்பெர் கமுய் போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களுக்கு ஈடாக காப்கா, ஜாய்ஸ் போன்றவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். பலவேறு இயக்கங்களைக் கண்ட பிரெஞ்சு படைப்புலகத்திற்குத் தற்போதைக்குப் புதிதாக ஓர் இஸத்தினை அறிமுகப்படுத்தும் எண்ணமில்லை. ஒவ்வொருமுறையும் சுதந்திரமென்ற பேரால் தங்கள் எழுத்துக்கு இலக்கணம் கற்பித்த ஊக்க எழுச்சிகளின் சமிக்கைகளைக் காண அரிதாக இருக்கிறது.  புகழ்பெற்ற Saint-Germain-des-Prés மதுச்சாலைகளில் எழுத்தாளர்களின் நடமாட்டம் குறைந்திருக்கிறது.

எழுத்து எழுத்தாளன் உறவில் கவனம் செலுத்திய இலக்கிய உலகம், தமது வளர்ச்சியில் கவனம் செலுத்தியதா அல்லது செலுத்துகிறாவென்றால், ‘இல்லை’ என்று ஒருமித்தக் குரலில் அபயக்குரல் எழுப்புகிறார்கள் படைப்புலகினர். உலகெங்கும் கல்வி நிறுவனங்களில் இலக்கியத்தைச் சீந்துவாரில்லை என்கிற நிலையிலிருப்பதைப் பார்க்கிறோம். மாணவர்களுக்கு வலைவிரித்து ஏமாந்து இன்று தூண்டிலாவது உதவுமா? எனக்கேட்கும் கையறு நிலையில் இலக்கியத்துறைகள் உள்ளன. நேற்றிருந்த மொழிப் பற்றும் அதனூடாகப் பெற்ற இலக்கிய தாகமும் இன்றில்லை. அதன் தாக்கம் படைப்புலகிலும் எதிரொலிக்கிறது, முன்னெப்போதும் கண்டிராத சோர்வு. இலக்கியத்தியத்தில் பல வடிவங்கள் நிறமிழந்து வருகின்றன. பிரெஞ்சு படைப்புலகில் இன்று சிறுகதைகளும், கவிதைகளும் அரிதாகவே வெளிவருகின்றன. ஊருக்கு ஒன்றிரண்டு அபிமானிகள் அவற்றிர்க்கு இருந்தபோதிலும்,  இணைய தளங்களையே இன்றவை பெரிதும் சார்ந்திருக்கின்றன. படைப்பிலக்கியத்தின் பிற வடிவங்கள் படுக்கையிற் கிடப்பதின் அடிப்படையில் இலக்கியமென்பதற்கு உரைநடை புனைவுகள் என்றே சுருக்கிப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பம் நாளை புனைவிலக்கியத்தின் தலைவிதியையும் மாற்றி எழுதலாம். புனைகதை வடிவத்தை (புதினம்) ஆங்கிலத்தில் Novel என்றும், பிரெஞ்சு மொழியில் Roman ( Nouveau Roman?) என்றும் அழைக்கிறோம். ரொமாண்டிக் (Romantique), ரொமாண்ட்டிஸம், (Romantisme), Roman என்ற மூன்று சொற்களுமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.  ரொமாண்டிக் பிரெஞ்சுமொழியில் உரிச்சொல் மட்டுமல்ல பெயர்ச்சொல்லுமாகும்: கற்பனைவாதத் தன்மைய, கற்பனைநவிற்சிவாதி என இருவகையில் அதனைப்பொருள்கொள்ளலாம். ஒரு ரொமாண்ட்டிக் என்பவன் அறிவைப் பின்னொதுக்கி உணர்வை முன்வைப்பவன், மரபுகளை ஒதுக்குகிறவன்.

‘ரொமாண்டிக்’ என்ற சொல் இன்று பலவீனமடைந்திருக்கிறது. மாறாக கூருணர்ச்சியைப் கதைபடுத்துகிறது. அப்பழுக்கற்ற ஒற்றை நாயகன், நாயகியை வியந்தோதும் கிலுகிலுப்பைகள் இன்றில்லை. அவர்களை உத்தமர்கள், அசகாய சூரர்கள் அநீதிக்கு எதிரானவர்கள் போன்ற தேன் தடவிய சொற்களை கொடுப்பாருமில்லை கொள்வாருமில்லை, அவை பழங்கதைகள். சூப்பர் ஹீ ரோக்களை கேலிச்சித்திரங்களில் மட்டுமே நாம் சந்திக்க முடியும். இன்றைய பிரெஞ்சு இலக்கியத்திற்கு நவீனமென்றோ பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq),  சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag).

நூற்றுக்கணக்கில் புனைவுகள் வருடந்தோறும் எழுதி பிரெஞ்சில் வெளிவருகின்றன. அவை இலக்கியமா? இலக்கியமில்லையா என்று எப்படித் தீர்மானிப்பது?

– மொழிஆளுமையும், சிந்திக்கவும் சிந்திக்கவைக்கவும் முடிந்தால் இலக்கியம்.

– பெருவாரியான மக்கள் நிராகரிப்பது இலக்கியம்.

– தீவிர இலக்கிய விமர்சகர்கள் ஏற்றுக்கொண்டால் இலக்கியம்.

இன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது? வெகு சன எழுத்தா- இலக்கியமா?’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வருடத்திற்கு 1,5 மில்லியன் புத்தகங்கள் விறபனையாகும் வெகுசன எழுத்தாளர் மார்க் லெவி (பொறியாளரான இவர் எழுத்துக்கள் தமிழில் சுஜாதாவை நினைவூட்டுகின்றன ), அன்னா கவால்டா  என்ற பெண்மணி மற்றொரு வெகுசன எழுத்தாளர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பிரதிகள் இவரது நூல்கள் விற்பதாகச் சொல்கிறார்கள். இலக்கிய புனைவுகள் எனப்படுபவை புதிய எழுத்தாளர்களெனில் இருபதாயிரமும் பரிசுபெற்ற அல்லது விமர்சகர்கள் ஏற்றுக்கொள்ளும் நூல்கள் அதிகபட்சமாக ஏழு லட்சம் பிரதிகளும் விற்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையிற் கிடைத்த தகவலின் படி  2012ல் பிரெஞ்சில் மொழிபெயர்ப்புகளையும் சேர்த்து 646 புதினங்கள் வெளிவந்துள்ளன. வெளிவரும் அனைத்துப் புதினங்களுக்கும் உடனுக்குடன் விமர்சனங்கள் எழுதும் மரபைக் கடைபிடிக்கிற பிரெஞ்சு இதழியல்துறைக்கு இதொரு சவால். 2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது, இது மிகவும் குறைவு. மற்றொன்று புதிதாக எழுத முற்படும் இளைஞர்களில் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு. சுமார் எட்டுவருடத்திற்கு முன்பு சராசாரியாக வருடத்திற்கு 100 புதிய எழுத்தாளர்களின் அறிமுகம் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்ந்தது. இன்று அவ்வெண்ணிக்கை ஐம்பது விழுக்காடிற்கும் குறைவாக இருப்பது பிரெஞ்சுப் படைப்புலகை கவலைகொள்ள வைத்திருக்கிறது. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென ஒரு நூறு பெயர்களைக் குறிப்பிடலாம்: லெ கிளேசியோ, பத்ரிக் மொதியானோ, மிஷெல் ஹ¥ல்பெக்,  ஜொனாத்தன் லிட்டெல், லொரான் கொடெ, மரி தியாய், அத்திக் ராயிமி, ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp),  ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்டோப் ரு•பன் (Jean-Christophe Rufin) ஆகியோர் முக்கியமானவர்களில் ஒரு சிலர்.

———————————————–

 

 

 

மொழிவது சுகம் – மே 18 -2013

1. கான் திரைப்பட திருவிழா -2013

66 வது கான் திரைப்படவிழா இம்மாதம் 15,தேதியன்று  தொடங்கிவைக்கபட்டது. இவ்வருட பிரதம விருந்தினர் டைட்டான் புகழ் நடிகர் Leonardo di Caprio. தவிர அவருடைய ” The Great Gatsby” தொடக்க நாள் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது.  ஜூரிகள்: Steven Spielberg (USA), Christopher Waltz (Austria), Daniel Auteuil (France), Nicole Kidman ( Australia). முதலாவது ஜூரிகுறித்து புதிதாய் சொல்ல ஒன்றுமில்லை. மற்ற நால்வரும் நடிகர்கள். மே. 15லிருந்து -26 க்குள் போட்டியில் கலந்துகொள்கிற 20 படங்களை ஜூரிகள் பார்வையிட்டு பரிசுக்குரிய திரைப்படங்களை மே. 26ந்தேதி அறிவிப்பார்கள். ஆக 10 நாட்கள் கான் நகர La Croisette அவென்யுவில் திருவிழா. மிகப்பெரிய நடிகர் நடிகைகளென பெயரெடுத்துள்ள அனைவருக்கும் உள்ள கனவு என்றாவது ஒருநாள் தங்கள் வாழ்நாளில் கான் திரைப்படவிழா அரங்கின் சிவப்பு கம்பளத்தில் ஒரு முறை கால்பதித்திட வேண்டும்.

Monsoon Shootout – அமித்குமார்

Amid kumarஇவ்வருட கான் திரைப்படவிழாவில் அதிகாரபூவமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒர் முழுநீள இந்தியத் திரைப்படம் -Monsoon Shootout.  கலை இலக்கியமென்று காத்திரமாக இயங்குகிற Arte பிரெஞ்சு தொலைகாட்சி நிறுவனம், இப்படத்தைத் தயாரித்த நான்கு தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று. மற்ற மூன்று நிறுவனங்கள்: இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மன். படத்தின் இயக்குனர் அமித் குமார் ஏற்கனவே The Bypass என்ற குறும்படத்தின் மூலம் மேற்கத்திய திரைப்படவிமர்சகர்களின் பாராட்டுதலைப் பெற்றவர். இந்தியாவில் பிறந்து ஆப்ரிக்காவில் வளர்ந்த இவர், பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் வார்ப்பு.

மான்சூன் ஷ¥ட் வழக்கமான இந்தியா மசாலா அல்லவாம். ஒரு பக்கம் புதிதாய் நியமனம்பெற்று வந்திருக்கும் காவலதிகாரி, இன்னொரு பக்கம் அவர் வேட்டையாடவேண்டிய கொடூர மனம் படைத்த நிழல் உலக தாதா. இருவரின் உள்ளுணர்வுகளை திரைக்கதையில் அழகாக இயக்குனர் வெளிக்கொணர்ந்திருக்கிறாராம். படத்தைக்குறித்து மேற்கத்திய இதழ்கள் வைத்திருக்கும் அபிப்ராயங்களை வாசிக்கிறபொழுது கண்டிப்பாக ஏதோ ஒரு பரிசை இப்படம் வெல்வது உறுதியென தெரிகிறது.
——————-

2. Mariage pour tous – Marriage for all

ஒரு வருடத்திற்கு முன்பு பிரான்சு அதிபராகப் பொறுப்பேற்ற சோஷலிஸ்டு கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து கொடுத்த வாக்குறுதி. அதன் படி கடந்த வெள்ளிகிழமை அதாவது 17/05/2013 அன்று பிரான்சுநாட்டு அரசியல் நிர்ணயசபை  ஓரின திருமண சட்டவரைவிற்கு தமது ஒப்புதலை அளித்தது. அதற்கு முன்பாக நாட்டின் நீதித்துறை அமைச்சர், அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதல் பெற்றதும் நாட்டின் ஒருபாலின திருமணம் ஜூன் மாதத்திலிருந்து அனுமதிக்கப்படுமென்று தெரிவித்திருந்தார். அதற்கேற்ப முதல் ஒருபாலினத் திருமணம் மே 29ந்தேதி மொன்பெலியெ என்ற நகரில் நடைபெற உள்ளது. நகர மேயர், ஆளுங்கட்சியைச்சேர்ந்த ஓர் இடது சாரி. மாறாக வலது சாரி கட்சிகள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதால் அக்கட்சிகளின் மேயர்கள் தங்கள் நகரத்தில் இத்திருமணத்தை நடைமுறைபடுத்தமாட்டார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையில்  ஒருபாலினத் திருமணத்தை பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பதாகக் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்க மதத்தில் தீவிர மதவாதிகள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இம்மாதம் 27ந்தேதி எதிர்ப்பாளர்கள் பிரான்சு நாடெங்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளார்கள்.
——-

3. இப்படியும் நடந்தது…

இம்மாதம் 4ந்தேதி பிரெஞ்சு தினசரியைப் புரட்டியபோது ஓர் வியப்புக்குரிய செய்தி.  ஒவ்வொரு நாளும் வலைப்பூவில் இடவேண்டுமென நினைத்து தள்ளிபோய்விட்டது. எழுதாமற்போனால் பிறவி எடுத்த பயனை அடையாமற்போய்விடுவேன் என்பதுபோல அச்சம்: பாரதத்தாய் மன்னிப்பாளாக. என்றாவதொரு நாள் இந்திய தேசத்திலும் இதுபோன்ற அதிசயங்கள் நடைபெற்றாகவேண்டுமென்ற வேண்டுதலுடன் எழுதுகிறேன்.

மே மூன்றாம்தேதி பாரீசிலுள்ள கிழக்குதிசை இரயில் சந்திப்பிற்கு பெண்மணி ஒருவர் சென்றார். அவர் செல்லவேண்டிய நகரம் நாட்டின் வடபகுதியிலுள்ள ரேன்ஸ் (Reims). குறிப்பிட்ட பிளாட்பார்மில் அந்த இரயிலை பிடிக்கவேண்டும். வந்தவர் எதிர்புறம் நின்றிருந்த அதிவேக இரயிலில் ஏறிவிட்டார் அது நான்ஸி நகருக்கு போகும் இரயில்.

இரயில் நகர்ந்தபோது அறிவிப்பை உள்ளே கேட்ட பிறகுதான் செய்திருக்கும் தவறு எவ்வளவு பெரியதென்ற உண்மை அப்பெண்மணிக்கு தெரியவந்திருக்கிறது. அழத் தொடங்கிவிட்டாராம். அருகிலிருந்த சகபயணிகள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். நான்சி நகரில் இறங்கியதும் அவர் தங்குவதற்கும் மறுநாள் தங்கள் வாகனத்தில் ரேன்ஸ் நகரில் கொண்டு விடுவதாகவும் சமாதானம் செய்திருக்கிறார்கள். பெண்மணியோ தான் அன்று ரேன்ஸ் நகரில் இருக்கவேண்டிய நிப்பந்தத்தை தெரிவித்திருக்கிறார்.

சகபயணிகளில் ஒருவர் பிரச்சினையை பரிசோதகரிடம் தெரிவித்திருக்கிறார்.  பயணிகள், பரிசோதகரிடம் எட்டு கி.மீட்டரில்  வரக்கூடிய Champagne -Ardenne நிலையத்தில் இரயிலை நிறுத்த வாய்ப்புண்டா எனக்கேட்டிருக்கிறார்கள். பொதுவாக அதிவேக இரயில்கள் அங்கு நிற்பதில்லை. இந்த இரயிலும் மணிக்கு 240.கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.  பரிசோதகர் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டார். 30 நொடிகளில் மேலிடத்து ஒப்புதல் கிடைத்ததாம்.  ரேன்ஸ் நகருக்குப்போய்க்கொண்டிருக்கிற இரயிலையும் ஒருசில நிமிடங்கள் Champagne -Ardenne நகரில் நிறுத்த ஏற்பாடு செய்தார்கள்.  அதன்படி  Champagne -Ardenne  இரயில் நிலையத்தில் இரு இரயில்களும் நிறுத்தப்பட்டு பயணியைப் பத்திரமாக ரேன்ஸ் நகருக்கு வழி அனுப்பிவைத்திருக்கிறார்கள். இப்பிரச்சினையால் பாரீஸ் -நாண்சி இரயில் வழக்கத்தைக்காட்டிலும் 3 நிமிடங்கள் தாமதமாக வந்துசேர்ந்ததைத் தவிர வேறு சங்கடங்கள் பயணிகளுக்கு இல்லையாம். ஆமென்.
—————

4. கடந்த வாரம் படித்த நூல்

நூல் பேராசிரியர் பஞ்சாங்கத்துடையது. பெயர். கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்.  இந்நூலில் மூன்று ஆளுமைகளை தரிசித்தேன். முதலாவது கி.ராஜநாராயணன், இரண்டாவதாக இராஜநாராயணனின் இயற்கை உபாசிப்பை மிக நுணுக்கமாக ஆய்ந்து, சொல்வேள்வி நடத்தும் பேராசிரியர், மூன்றாவதாக இந்நூலுக்கு முன்னுரை என்ற பெயரில் அமுதைப் பொழியும் பேராசிரியை  மீனாட்சியின் எழுத்து. கி. ராஜநாராயனனின் கிராமமும், அதன் மக்களும், பிற பங்குதாரர்களும் நமக்கு என்றுமே அலுக்காதவர்கள். அவர்களை பேராசிரியர் க. பஞ்சாங்கம் அறிமுகபடுத்துகிறபோது மேலும் உயர்ந்துவிடுகிறார்கள், அம்மாக்கள் கையளிக்கும் சோற்றுருண்டைபோல அவ்வளவு ருசி. தவிர அவரது தமிழ் ஞானம் நூலை பகுத்தாய்வுசெய்ய கூடுதலாகவே உதவி இருக்கிறது. இன்னொரு முறை கி.ரா. வின் எழுத்துக்களை தேடிபிடித்து வாசிக்க செய்திருக்கிறார். நமது நூலகத்தில் அவசியம் இருக்கவேண்டிய நூல். .
—————————————————————–

எழுத்தாளன் முகவரி -13: எழுத்து வியாதி

roger-caras_KKwkdRoger A. Caras ஓர் எழுத்தாளர், விலங்கு அபிமானி. விலங்குகளைக்குறித்து நிறைய புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். அமெரிக்காவின் முக்கிய தொலைகாட்சி நிறுவனங்களில் பறவைகள், விலங்கு சம்பந்தமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவந்திருக்கிறார். திரைப்படத் துறையையும் விட்டுவைக்கவில்லை. நாய், பூனை ஆகியவற்றிர்க்கு நீங்கள் அபிமானியெனில்  Cat is watching, Dog is listening என்ற அவருடைய இரண்டு நூல்களும் உங்களுக்குத் தேவைப்படலாம். விலங்குகளை மையமாக வைத்து ஒன்றிரண்டு புனைவுகளையும் படைத்திருப்பதாக அறிகிறேன். இந்த ரோஜெர்தான் எழுத்து வியாதி பற்றி பேசுகிறார். ஆங்கிலத்தில் Writer’s block என்று பெயராம். மருத்துவ நூல்களில் இந்நோய் பற்றிய மேல்விபரங்கள் கிடைக்காதென்று  எச்சரிக்கவும் செய்கிறார்.  நண்பர்கள் யாரேனும் இப்பெயரை முன்னதாக அறிந்திருக்கலாம். அவர் கட்டுரை ஒன்றை படிப்பதற்கு முன்பாக நான் அறிந்ததில்லை. இந் நோய்க்கு ஆளாகாதவர் எழுத்தாளரே இல்லை என்று ரோஜெர் துண்டைப்போட்டுத் தாண்டுகிறார்.

இவ்வியாதிக்கான அறிகுறிகளென்ன? எப்படி தெரிந்துகொள்வது? எந்தப் பரிசோதனைசாலைக்குச்சென்று இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாம்? பொது மருத்துவர்களே போதுமா அல்லது நிபுணர்களை பார்க்கவேண்டுமா? என்று சில கேள்விகள் உங்களைப்போலவே எனக்கும் இருந்தன. பெயரேதுமில்லாமலேயே வதைக்கும் நோய்களை நாம் அறிவோம், இப்படி புதுப்புது பெயர்களில் வெருட்டும் நோய்களும் இன்னொரு பக்கம். தமிழிலக்கியத்தில் பசலை நோய் என்று ஒன்றுண்டு. இன்றுவரை அது என்ன நோயென்று நான் விளங்கிக்கொண்டதில்லை. படித்தவற்றில் சொல்லப்பட்ட விளக்கங்களெல்லாம் எங்கள் ஊரில் பேயோட்டும் பண்டாரம் சொல்வதுதான். ரோஜெரின் Writer’s blockஐயும் அப்படி யொரு பசலை நோய் இனத்தில் சேர்த்துக்கொண்டேன். எழுத்துவியாதி: தொத்துவியாதியா, பரம்பரை வியாதியா? மனநோயா? உடல் நோயா? குணப்படுத்தகூடியதா? அல்லோபதிக்கு இணங்குமா சித்தவைத்தியமே போதுமா? எனது சிற்றறிவுக்கு உட்பட்டு ஒன்றிரண்டு விளக்கம் கொடுப்பதற்கு முன்பாக எழுத்து வியாதி, தொத்து நோய் அல்ல என்பதை உறுதிப்படுத்த இயலாதென்றாலும்,  அதொரு பரம்பரை வியாதியுமல்ல. .

இந்த எழுத்துவியாதிக்கு ரோஜெர் தரும் விளக்கம் அந்நோய் மன அழுத்தம், சித்தபிரமை, தன்னிரக்கம், தசைபிடிப்பு என எல்லாம் கலந்த ஓர் கலவை. அது நமக்கிருக்கிறதா இல்லையா என்பதை எப்படி தெரிந்துகொள்வதாம்? உங்கள் மேசையில் சிறிய அளவு பேப்பர் கிளிப்புகளை ஒரு பக்கமும், பெரிய அளவு பேப்பர் கிளிப்புகளை இன்னொரும் பக்கமும் என சேர்க்க ஆரம்பித்தல் நோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்கிறார். அடுத்த அறிகுறி இதுநாள்வரை உங்கள் மின்னஞ்சலில் குப்பையென  ஒதுக்கி வாசிக்காமல்விட்ட கடிதங்களைத் தேடிப்பிடித்து வாசிப்பதும், எவ்வித தேவையுமில்லை என்கிற கடிதங்களை எழுதுவதும், அம்மாதரியான கடிதங்களுக்கு வேலைமெனக்கெட்டு பதில் எழுதுவதும், வெகுநாளாக சந்திக்காதிருந்த நண்பர்களை போனில் தொடர்பு கொள்வதும், தன்னை யாரும் கண்டுக்கொள்ளவில்லையென கவலைப்படுவதுமென ரோஜெர் நிறைய காரணங்களை அடுக்குகிறார்.

ரோஜெர் எழுத்து நோய் முற்றிய நிலையில் அதன் சிக்கல்களை பேசுகிறார். எனக்கென்னவோ ஆரம்பநிலையிலியே இந்நோயை கண்டறியும் வாய்ப்பு தமிழில் இருக்கிறதென்பேன். உதாரணமாக பிள்ளை பருவத்தில் மண்ணைத் தின்று, அம்மண்ணும் கரிசல் காட்டுமண்ணாக இருந்து, குடித்தநீரும்  தாமிர பரணி தண்ணீராக இருந்தால் பின்னாளில் எழுத்துவியாதி வர 99 விழுக்காடுகள் சாத்தியமிருக்கிறது. பள்ளிக்குப்போகும் வயதில் பக்கத்துவீட்டு அக்கா உங்களை மாலைவேளைகளில் கோவிலுக்குத் துணைக்கு அழைத்து சென்றிருப்பாளா? அவள் கொடுத்த கடிதத்தை பத்திரமாக எதிர்வீட்டு மாமாவிடம் சேர்த்துவிட்டு அவர்கள் தயவில் எள்ளுருண்டையோ கடலைமிட்டாயோ வாங்கித் தின்றுவிட்டு கற்பனையில் மூழ்கி இருப்பீர்களா? இருபதுவயதில் காதல் கவிதை எழுதுவதுண்டா? சக நண்பர்கள் ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் என அலைந்தபோது நீங்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களை தேடியவரா? பணக்கார பெண்ணைப் பார்த்து திருமணம் செய்தோமா, வாழ்க்கையில் செட்டில் ஆனோமா என்றில்லாமல், உங்கள் எழுத்து நிராகரிக்கபட்டதென்பதற்காகவே சொந்த முதலீட்டில் சிற்றிதழ் சேற்றில் காலை விட்டிருக்கிறீகளா? வீட்டு நிர்வாகத்தை மனைவி ஏற்றுக்கொண்டிருக்க நேரத்தோடு இலக்கிய கூட்டத்திற்கு சென்று எழுத்தாள நண்பர்களிடையே உள்ள விருப்பு வெறுப்புகளை வெப்பமானியில் கணக்கிடுபவரா? உங்களுக்கு எழுத்து நோய் உண்டு உண்டு…

எழுத்துநோயிலிருந்து விடுபட என்ன வழி: ரோஜெர் வழிமுறை பஸ் ஸ்டாண்டிற்கு எதிரிலுள்ள ….லாட்ஜில் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் … சந்தியுங்கள் என்பதுபோல இருக்கிறது. சன்னல் பக்கம் நிற்பதையும், மாத்திரைகள் உபயோகத்தையும் தவிர்த்தால் அதுபோயே போய்விடும் என்கிறார். எனக்கென்னவோ அந்த நல்ல காரியத்தை சில எழுத்தாளர்களே உங்களுக்குச் செய்யக்கூடுமென்று தோன்றுகிறது. தவிர ‘இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது நான் ஒருவன் மட்டுமே’, என்ற எண்ணத்தை தவிர்ப்பதுகூட குணமடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாம். சில எழுத்தாளர்கள் (சம்பாதிக்கும் எழுத்தாளர்கள்) ஏற்கனவே கழுவிய காரை இரண்டாம் முறையாக கழுவியோ, தங்கள் தோட்டத்து புல்லை மீண்டும் ஒரு தடவை வெட்டியோ, சோர்ந்திருக்கும் வீட்டு நாயை மீண்டும் ஒருமுறை வெளியில் அழைத்து சென்றோ இந்நோயை தவிர்க்க முற்படுவார்களாம்.

நம் தமிழில் என்ன செய்கிறோம். நம்மையும் இந்த நோய் பீடிக்காமலில்லை, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை கையாளாமலும் இல்லை. சில நண்பர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதை தூசுதட்டி மறுபதிப்புக்கு சாத்தியமுண்டா என பதிப்பாளரை கேட்கிறார்கள். ஒரு சிலர் கேட்பதற்கு ஆளிருந்தால், “கேழ்வரகில் நெய்வடிகிறது”,  எனலாம் என்பதுபோல, “நேற்றிரவு பதினோருமணிக்கு நெடுங்கதை வணங்காமுடி போன் பண்ணினார், ஒரு மணி நேரத்திற்குமேல் என்னிடம் உரையாடியவர் “என்ன இருந்தாலும் உங்களைப்போல எழுதமுடியுமா? இன்றைக்கு நாங்கள் எழுதுவதெல்லாம், உங்களிடம்  கற்றதுதானே” என இவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கமாட்டார்களென நம்புவர்களிடத்தில் கதைவிடுவார். அவ்வாறில்லையா? ஈவ்னிங் ஸ்டார் போன் போட்டு தானெழுதியுள்ள பாடலைக்குறித்து எனது அபிப்ராயத்தைக்கேட்டாரென முக நூலில் எழுதுகிறவர்களுமுண்டு. வேறு சில நண்பர்கள் அத்திப்பட்டில் ஆரம்பித்து அண்டார்ட்டிக் வரையில், அகில உலக எழுதாக் கவிதை விருது, ஞாயிற்றுகிழமை பெருங்கதை விருதென்று தங்களுக்குள்ள ‘நெட் வொர்க்’கால் பெற்றிருப்பார்கள், எவ்வித கூச்சமுமின்றி ஆஸ்துமா நோயாளிபோல மூச்சிறைக்க அதனை விநியோகித்துக்கொண்டிருப்பார்கள்.

ரோஜெர் கைப்பக்குவத்தில் மருந்தொன்றை தயாரித்திருக்கிறார். அது அவருக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கிறது. எழுத்து வியாதியிலிருந்து தப்பிக்க சமைலறைக்குள் புகுந்து விடுவாராம். விதவிதமாக சமைப்பாராம். அதுபற்றிய புத்தகங்களையும் உடனுக்குடன் எழுதுவாராம். அவர் கூறும் யோசனை எழுத்துநோய் முற்றிய நிலையில் நிவாரணம் வேண்டுமெனில் வேறு படைப்பு துறைகளில் இறங்குவது நல்லது. அது ஓவியம், சிற்பம், சமையல், தோட்டக்கலை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பிற எழுத்தாளர்களைப்பார்த்து வயிறு எரிந்து, இதயவலியால் துடிப்பதைக்காட்டிலும் உகந்த வழிமுறை.

ரோஜெர் சொல்கிற எழுத்துநோய் உண்மையில் நமக்குண்டா அல்லது  வருவதற்கான சாத்தியங்கள் உண்டாவென்று எனக்குத் தெரியாது.  எழுதிக்கொண்டிருக்கையில் சட்டென்று சோம்பல் நம்மிட கைகோர்க்கிறதென்பது உண்மை. அச்சோம்பல்தான் எழுத்து நோயாவென்றும் தெரியாது. நமது மூத்த எழுத்தாளர்களில் பலர் இனி நான் எழுதுகோலை தொடமாட்டேன் என சத்தியம் செய்து சம்பாதித்த புகழை கட்டிகாப்பதற்கு வழிமுறைகளென்ன என்ற கவலையில் மூழ்கியிருக்க மேலை நாடுகளில்  எண்பது, தொண்ணூறு வயதிலும் எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறேன். எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவரவர் பணியில் முடக்கம் ஏற்படுவது இயற்கைதான். கல்லூரியில் பாடம் எடுத்ததுபோதும், மாலை ஆறுமணிக்கு மேல் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து பிழைக்கபோகிறேன் என்கிற பேராசிரியர்களுக்கும், பகல் முழுக்க கட்சிகாரர்கள், கோர்ட், வாய்தா என அலைந்து அலுத்துவிட்டது இனி ஓர் அரசியல் கட்சியில் தேர்ந்து தேர்தலில் நிற்கப்போகிறேன் என்கிற வழக்கறிஞர்களுக்கும் வரும் நோய்கூட அவ்வகையில் ஒரே இனம் தான்.

ஆக மீண்டும் எழுத்தைக் கையிலெடுப்பதுதான் எழுத்து நோயிலிருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழிமுறை.கந்துவட்டி பேராசிரியரைப்போல, அரசியற்களமிறங்க நினைக்கும் வழக்கறிஞரைப்போல, எழுத்தாளர்களும் இன்னொரு  நிலத்தில் கால்பதித்து அங்கேயும் அலுத்து நாளை மற்றொன்றை தேடி எதிலும் நிறைவுறாமற் தேய்ந்து கரையலாம். ஆனால் எந்தத் தொழில் செய்தாலும் நான் தனித்தவன் என்ற உணர்வு இல்லாவிட்டால் எப்படி? புகழுக்கும் விருதுக்கும் தகுதிவேண்டாமா? தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள் இருக்கலாம், ஆயிரக்கணக்கில் வழக்குரைஞர்கள் இருக்கலாம் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நாடறிந்தவர்களாக இருக்கிறார்கள். எழுத்திலும் அதற்கான சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன. எழுத்து வியாதி எழுதத் தூண்டுகிற வியாதியாக இருக்கவேண்டுமேயன்றி எழுதாமல் உங்களை முடக்கும் வியாதியாக இருக்கக்கூடாது. என்ன செய்யலாம்? எனக்குத் தெரிந்த வழி தொடர்ந்து எழுதுவது. கணினி முன் உட்காருங்கள், கூடாத காரியங்களை ( ரோஜெர் சொல்வதுபோல அர்த்தமற்ற கடிதங்களை தேடிப் படிப்பது, கூடாத காரியங்களில் கவனம்  என்றெல்லாம் வேண்டாம். உங்கள் எழுத்தில் புதிதாய் என்ன சேர்க்கலாம் என்று யோசியுங்கள் அது உத்தியாக இருக்கலாம், மொழியாக இருக்கலாம், கதை சொல்லலாக இருக்கலாம். சக நண்பர்கள், வாசகர்கள் உங்களைவிட புத்திசாலிகள் என்பது எப்போதும் நினைவிலிருக்கட்டும், எழுதுங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள்…

————————————————–

நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துலகம்

முனைவர் மு.இளங்கோவன்

தமிழ் இலக்கியங்களை உலகத் தரத்திற்கு எழுதவேண்டும் என்ற முயற்சியில் எழுத்தாளர்கள் பலர் பலவகையில் முயற்சி செய்கின்றனர். தமிழக எழுத்தாளர்களின் முயற்சியைப் போலவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் முயற்சிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவ்வகையில் புதுச்சேரியில் வாழ்ந்து, தற்பொழுது பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தமிழ் இலக்கியப்படைப்புகளை இக்கட்டுரை அறிமுகப்படுத்துவதுடன் அவரின் படைப்புகள் சிலவற்றை மதிப்பிடவும் முனைந்துள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டுக்கு அருகில் உள்ள கொழுவாரி என்ற ஊரில் 07.01.201952 இல் பிறந்தவர். பெற்றோர் இராதாகிருஷ்ணன் பிள்ளை, இந்திராணி அம்மாள். புதுவை காலாப்பட்டு பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். சென்னையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் இளங்கலைப் பொருளியல் படித்தவர் (1972).

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் படித்தவர். தொடக்கத்தில் விக்சு நிறுவனத்தின் முகவராக மூன்றாண்டுகள் பணியாற்றியவர். பின்னர் வருவாய்த்துறையில் புதுச்சேரியில் எழுத்தர் பணியாற்றினார். பின்னர்த் துணை வட்டாட்சியர் பணியில் இணைந்தார். கென்னடி டுட்டோரியல் கல்லூரியில் பணி, பின்னர் புதுவையின் அல்லயன்சு பிரான்சுவேயில் பிரெஞ்சு பயின்றார். துணிவணிகத்தில் சில காலம் ஈடுபட்டிருந்தார்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குத் தமிழாசிரியர் புலவர் நாகி அவர்களால் தமிழ் ஈடுபாடு உருவானது. பள்ளியில் எண்ணம் என்ற கையெழுத்து ஏட்டை நடத்தினார். 1973 முதல் கிருஷ்ணா என்ற பெயரில் எழுதினார். குமுதம், இராணி, குங்குமம் போன்ற ஏடுகளில் இவரின் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. 1977 இல் இவருக்குத் திருமணம். மனைவி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். 1985 இல் பிரான்சுக்குச் சென்றார். அங்குச் சென்று கணக்கியல் பட்டயப் படிப்பு முடித்தார். மூன்று ஆண்டுகள் நகர் மன்றத்தில் உதவிக் கணக்காளராகப் பணிபுரிந்தார். 1991 இல் மளிகைக்கடை வைத்து வணிகம் நடத்தினார். 1999 வரை இவர் எழுத்தில் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து வாசிப்புகளில் ஈடுபட்டிருந்தார்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் நிலா என்ற இதழினைத் தொடங்கி நடத்தினார். 1999 முதல் 2002 வரை இந்த இந்த இதழ் வெளிவந்தது. ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா. துணை ஆசிரியர் பாலகிருஷ்ணன். தமிழில் இணைய இதழ்கள் தோற்றம்பெற்ற சூழலில் தொடர்ந்து இணைய இதழ்களில் எழுதத்தொடங்கினார். மின்னம்பலம், ஆறாம்திணை, திண்ணை போன்ற புகழ்பெற்ற இணைய இதழ்களில் எழுதத் தொடங்கினார்.

 நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள்

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று பல வடிவங்களில் படைப்புகளை வழங்கியுள்ளார். இவர்தம் படைப்புகளில் நாவல்கள் பலவும் பல்வேறு சோதனை முயற்சிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே நேர்கோட்டில் கதை சொல்வதிலிருந்து விலகி, நூற்றாண்டுகளைக் கடந்தும், நாடு கடந்தும், கண்டம் கடந்தும், பண்பாடு நாகரிகம் கடந்தும் இவர்தம் கதைகள் அமைந்துள்ளன. காலத்திற்கு அமைந்த மொழிநடையைக் கையாண்டு படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

கதைக்கருக்களைத் தேர்வு செய்தல், செய்தி சேகரிப்பு, விவரிப்பு என்று ஒவ்வொன்றிலும் இவர் கவனம் செலுத்தியுள்ளார். கற்பனைகள் நிறைந்த மொழிநடையும், உவமை உருவக உத்திகளும் இயல்பாக இவர் புதினங்களில் மின்னி மிளிர்கின்றன. பன்மொழியறிவும், பன்னூல் பயிற்சியும் வாழ்க்கை குறித்த தெளிவும், மானுடத்தை நேசிக்கும் இயல்பும், பழைமையிலிருந்து புதுமையை உருவாக்க வேண்டும் என்ற உந்துதலும் இவர் படைப்புகளைச் செழுமையடையச் செய்துள்ளன. பழைய வரலாறுகளையும் சம்பவங்களையும் பொருத்தமான இடங்களில் பொருத்திக்காடியுள்ள இவரின் செய்நேர்த்தி வியக்க வைக்கின்றது. கற்பனை, வெளியீட்டில் மிகைப்படுத்தல் சிலவிடங்களில் தலைகாட்டினாலும் அவை படைப்பின் வேகத்தைத் தடுக்கவில்லை.

கப்பல்களின் போக்கு, காற்றடிக்கும் திசை, கடந்த நூற்றாண்டுகளில் அமைந்த கடற்பயண அனுபவங்களை உள்வாங்கி இவர் வரைந்துள்ள போக்கினைப் படிப்பவர்கள் வியக்காமல் இருக்கமுடியாது. இந்திய வரலாறு, பிரெஞ்சுநாட்டு வரலாறு, மொரீசியசு நாட்டு வரலாறு இவர் நாவல்களில் பொதிந்து கிடப்பதுபோல் உலக வரலாறுகளும் அங்கங்கு புலப்படுகின்றன.

வரலாற்றுப் புதினங்களில் கதையை மட்டும் நகர்த்தாமல் உரிய இடங்களில் வரலாற்றை எழுதிச் செல்வதும் இவரின் பாணியாக உள்ளது. கடல்கடந்த தமிழர்கள் ஒவ்வொரு நாடுகளில் எவ்வாறு கடும் உழைப்பில் அந்தந்த நாட்டை வளப்படுத்தினர் என்பதை நாவலில் மிகச்சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் இன்று தொழில் நிமித்தமும், பணி நிமித்தமும் செல்வதுபோல் இல்லாமல் பல சூழ்நிலைகளால் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதை இவர் நாவல்களால் அறியலாம்.

பசி, பஞ்சத்திலிருந்து தப்பிக்கவும், வெளிநாட்டார் அல்லது கண்காணிகளின் பசப்பு வார்த்தைகளாலும் பலர் வெளிநாடு சென்றுள்ளனர். சிலர் இங்குத் தவறு செய்துவிட்டுத் தண்டனைகள் அல்லது சமூக அடக்குமுறைகளுக்கு அஞ்சிச் சென்று நாடு திரும்பாமல் இறந்த செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுபோல் அயல்நாட்டுக்காரர்களைத் திருமணம் செய்துகொண்ட தமிழ்ப்பெண்கள், வெளிநாட்டுப் பெண்களை மணந்துகொண்ட தமிழக ஆண்கள் பற்றிய பல குறிப்புகளை இவர் புதினத்தில் காணமுடிகின்றது. தமிழர்களிடம் காலம் காலமாக இருந்துவரும் அடிமை உணர்வு, காட்டிக்கொடுக்கும் இயல்பு, நன்றி மறவாமை யாவும் இவர் புதினத்தில் இடம்பெற்றுள்ளன.

மொழிவது சுகம் என்ற தொடரை வாரந்தோறும் எழுதினார். இதில் வாரந்தோறும் தம் எண்ணங்களைப் பதிவுசெய்தார். சிந்தனை மின்னல்கள் என்ற குறிப்புடன் இந்தத் தொடர் நூலாக வெளிவந்துள்ளது. 24 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் பயனுடைய பல செய்திகள் உள்ளன. வெளிநாடுகளில் நூல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் மதிப்பீடுகளைப் படிக்கும்பொழுது எந்த அளவுக்குப் பரிசுக்குரிய நூல்கள் வாசிக்கப்படுகின்றன என்ற வியப்பு ஏற்படும். சமகால நடப்புகளைத் தீவிரமாக எண்ணி எழுதியுள்ள மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பிரான்சு நாட்டின் அரசியல், சமூகம், கலை, இலக்கிய முயற்சிகள் ஆசிரியரால் இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன. வாரந்தோறும் எழுதிய சிந்தனைகள் என்று அடக்கிவிடமுடியாதபடி தகவல்களின் களஞ்சியமாகவும், விவாதங்களின் தொகுப்பாகவும் பல கட்டுரைகள் உள்ளன.

வணக்கம் துயரமே என்ற நூல் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். 16 வயது பெண் தன்னுடைய அனுபவங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொள்வதாக உள்ள நூலாகும். பிரான்சில் அதிகம் விற்பனையான நூல் இதுவாகும். 160 பக்கம் கொண்ட நூல் நாகரத்தினம் கிருஷ்ணாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

காதலன் என்ற நாவல் பிரெஞ்சுப்புரட்சியை ஏற்படுத்திய நாவலின் மொழிபெயர்ப்பு வடிவமாகும். இளம் பெண்ணொருத்தித் தன் அனுபவங்களைக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.

மார்க்சின் கொடுங்கனவு என்னும் நூல் மூலதனம் நூல் பற்றிய விமர்சனமாகும்.

உலகங்கள் விற்பனைக்கு என்ற நூல் (அதிர்வுக்கதைகளின் தொகுப்பு) பிரெஞ்சிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட நூலாகும். இந்த நூலின் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும்.

கிருஷ்ணப்ப நாயக்கன் கௌமுதி என்னும் நாவல் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கன் என்பவனின் வரலாற்றைச் சொல்லும் புதினமாக வெளிவந்துள்ளது. செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்லும் வகையில் அக்காலத் தமிழக நிலையைச் சிறப்பாக இந்தப் புதினத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புதினத்தின் கதை இருபதாம் நூற்றாண்டுக்கும் பதினாறும் நூற்றாண்டுக்குமாகத் தாவித் தாவி நடக்கின்றது. செஞ்சி பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் பல அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாகச் செஞ்சியின் வரலாற்றை நினைவுகூர்ந்தாலும் அக்காலப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளை நூலாசிரியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதியில் சிதம்பரம் தீட்சிதர்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் கோவிந்தராசனுக்குச் சிலைவைக்கக் கூடாது என்று எதிர்ப்பைத் தெரிவித்து கோயில் கோபுரத்திலிருந்து வீழ்ந்து இறந்த செய்தியை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூலில் பழைமையும், புதுமையும் கலந்தபடி செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. படைப்பாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா அக் காலத்துக்குத் தகுந்த மொழிநடையைப் படைக்கும் நோக்கில் மிகுதியான சமற்கிருதச் சொல்லாட்சிகளை ஆண்டுள்ளார். சமகாலப் புதுச்சேரி வாழ்க்கையும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நீலக்கடல்

நீலக்கடல் என்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புதுச்சேரியைக் கைப்பற்றி ஆட்சி செய்த பிரெஞ்சியர்களைப் பற்றியும், பிரெஞ்சு தேசமாக விளங்கிய புதுச்சேரியிலிருந்து மொரீசியசு தீவுக்குச்(பிரெஞ்சு தீவு) சென்ற மக்களைப் பற்றியும் சிறப்பாக விவரிக்கின்றது. கடந்த காலங்களை விவரிப்பதுடன் அமையாமல் தற்கால புதுவை அரசியல் வரை இந்த நாவலில் செய்திகள் பதிவாகியுள்ளன. மொரீசியசு வரலாற்றை விவரிக்கும் முதல் தமிழ் நாவலாக இதனைக் குறிக்கலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் நீலக்கடல் நாவலில் பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளார். மக்களுக்கு வரலாற்று அறிவைக் கதைப்போக்கில் தந்துள்ளார். தாம் பயின்ற இந்திய வரலாறு, உலகவரலாறு, ஆன்மீக, வேதாந்த, சித்தாந்த சாத்திரங்களை இந்த நாவலில் தேன்தடவிய கனிபோல் தந்துள்ளார்.

முன்பு வெளிவந்த வரலாற்று நாவல்கள் என்பவை அரசன், குறுநில மன்னன் வீரதீரங்களை மட்டும் பேசும். சராசரி மக்களின் வாழ்க்கையை எதிரொலிக்காது. அரசியர்களின் அந்தப்புர வாழ்க்கை, பற்றிய செய்திகளையும் மிகைக் கற்பனைகளையும் கொண்டிருக்கும். உழைக்கும் மக்களின் துன்பம் மருந்துக்கும் இருக்காது. ஆனால் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் நாவலில் சாதாரண மக்களும் கதைப்பாத்திரங்களாக உலா வருகின்றனர். கொல்லாசாரியார்களும், தச்சாசாரியார்களும் உலவுகின்றனர். கிராமத்து மருத்துவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக உலவிக் கதையை நகர்த்துகின்றனர். திருப்புமுனைகள், அதிர்ச்சிகள் நாவலில் இடம்பெற்றுப் படிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றன.

பழமொழிகளும், சமயச்செய்திகளும், புராண இதிகாசச் செய்திகளும், ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்புச் செய்திகளும், இலக்கிய மேற்கோள்களும், வரலாற்றுக் குறிப்புகளும் உரிய இடங்களில் பக்குவமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடம் காலம் காலமாகப் படிந்துகிடக்கும் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை மிக நுட்பமாகத் தம் புதினத்தில் பதிவுசெய்துள்ளார்.

மக்களிடம் இருந்த பசி, பஞ்சம், கோப, தாபங்கள் பதிவாகியுள்ளன, மொரீசியசு தீவினை வளப்படுத்தத் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நேரில் கண்டுரைத்தவர்போல் இந்த நாவலில் கிருஷ்ணா பதிவு செய்துள்ளார். 520 பக்கத்தில் விரியும் நீலக்கடல் நாவல் தமிழில் வரவேற்கத் தகுந்த முயற்சியாகும். இந்த நாவலில் பிரெஞ்சு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் இடம்பெறுவதுபோல் அவர்களின் சொற்களும் மிகுதியாக ஆளப்பட்டுள்ளன. லஸ்கர், கும்பெனி, சொல்தா, போத்தல், குவர்னர், கப்பித்தேன், லெ பொந்திஷேரி, மிஸியே என்ற பல சொற்களின் ஆட்சியைக் குறிப்பிடலாம்.

நாவலில் கதை விவரிப்பு மட்டும் என்று அமையாமல் அக்காலத்தில் நிகழ்ந்த கப்பல் கட்டுமானம், கப்பல் செலுத்ததுதல், கப்பல் வாழ்க்கை, மாலுமிகளின் செயல்பாடுகள், கடல்பயணம், வணிகப்பொருள்கள், பிரெஞ்சுக்காரர்களின் மதுவிருந்து, காற்றின் வேகம், கரும்புவெட்டு, ஆப்பிரிக்கர் வாழ்க்கை, மொரீசியசு பழங்குடிமக்களின் வாழ்க்கை, மொரீசியசைப் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு உட்படுத்தியமை, பிரெஞ்சியர்கள் மக்களுக்கு வழங்கிய தண்டனைகள் யாவும் பதிவாகியுள்ளன.

புராணம், இதிகாசம், கூத்து, நாட்டுப்புறவியல் குறித்த பல செய்திகளைத் தாங்கியக் கருவூலமாக இந்த நீலக்கடல் நாவல் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வருணனைகள், அணி அமைப்புகள், பழமொழிகள் தனித்துக் கண்டு ஆராயத்தக்கன. “மூன்றாம் வகை நரகமான அந்ததாமிங்ரம் நரகம்” என்று மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.

“மெல்ல நிமிர்ந்ததும் வெட்கமுற்றவளாய், முகம் கவிழ்ந்து மெள்ளக் கதவடைத்துவிட்டு விடுவிடுவென்று உள்ளே போகத்தான் செய்தாள். ஆனால் இவன் மன வாசலைத் திறந்துகொண்டு கால்பதித்தவள் உள்ளத்துக்குள்ளே அல்லவா உட்கார்ந்துகொண்டாள்” (பக்கம்.465) என்று கற்பனையில் வரையும் நாகரத்தினம் அவர்களின் எழுத்துகளைத் தேர்ந்த வாசகர்கள் சுவைக்காமல் இருக்கமுடியாது. “துருவ நட்சத்திரத்தைக் குறிவைத்துப் பயணிக்கும் மரக்கலத்தினைப்போல, நெஞ்சம் அப்பெண்ணைக் குறிவைத்துப் பயணிக்கிறது”(பக்கம்.465). “சாவியைச் செருகித் திருப்ப எஞ்சின், அந்நிய மனிதனைக் கண்ட நாய்போல உர்ரென்றது” (பக்கம்.445) என்று உவமைகள் உரிய இடத்தில் சிறப்பாக ஆளப்பட்டுள்ளன.

காமாட்சி அம்மாள், தெய்வானை, கைலாசம், சில்வி, காமாட்சியம்மாள், பொன்னப்ப ஆசாரி, தேவராசன், காத்தமுத்து, வீரம்மா, பாகூர் உடையார், மனோரஞ்சிதம் அம்மாள், நீலவேணி, தானப்பமுதலியார், கனகராய முதலியார், வைத்தியர் சபாபதி படையாட்சி, பலராம் பிள்ளை, வேலாயுத முதலியார், ஆனந்தரங்க பிள்ளை, ஆதிகேசவலு ரெட்டியார், கம்மாளன் முருகேசன், மாறன், பரங்கிணி நடேசன், கேணிப்பட்டு கோவிந்தன், வேம்புலி நாயக்கர், சீனுவாச நாயக்கர், விசாலாட்சி, உள்ளிட்ட பல பாத்திங்கள் இடம்பெற்றுள்ளன.

அதுபோல் லாபூர்தொனே(பிரெஞ்சு தீவின் குவர்னர்), பெர்னார் குளோதான், துய்மா, துய்ப்ளே போன்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியை ஒட்டிய ஊர்களான முத்தியால்பேட்டை, வழுதாவூர், திருவக்கரை, பறங்கிப்பேட்டை, காரைக்கால்(அல்வா), கும்பகோணம், கடலூர், தொண்டைமாநத்தம், ஊசுடு ஏரி, வில்லியனூர், முத்தரையர்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களும் அதில் வாழும் மக்களும் இந்த நாவலில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஒரு வரலாற்றை மிக எளிமையாகக் கதைப்போக்கில் வெளியிட்டுள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்பு முயற்சி புதுமையாகவும், நேர்த்தியாகவும் அமைந்துள்ளது. புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர்கள் அடைந்த வரலாறு, ஆண்ட வரலாறு, மிகத்தெளிவாக எளிய நடையில் விளக்கப்புட்டள்ளன. வரலாறு, நாட்குறிப்பு, களப்பணி, வாய்மொழி மரப்புகளை உள்வாங்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். மொரீசியசு தீவில் தங்கியும் களப்பணியாற்றியும் செய்திகளைச் சேகரித்துள்ளார்.

தமிழகத்தின் ஏற்றப்பாட்டு, பழமொழிகள், உவமைகள் இந்த நாவலில் பொருத்தமாக ஆளப்பட்டுள்ளன.

 மாத்தா ஹரி

நாகரத்தினம் கிருஷணாவின் மற்றொரு அரிய படைப்பு மாத்தாஹரி புதினம் ஆகும். புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை என்ற குறிப்புடன் வெளிவந்துள்ள இந்தப் புதினம். பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்தப் புதினத்தை ஆசிரியர் படைத்துள்ளார். மாத்தாஹரி வேவுக்காரியாக அறியப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு 1917 இல் பிரான்சில் சுட்டுக்கொள்ளப்பட்டவள். மாத்தா ஹரி இராணுவவீரர்கள், இலக்கியவாதிகள், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள் எனப்பலரின் கனவுக்கன்னியாக இருந்தவள். அவள் வாழ்க்கையை மையமிட்டு பல படைப்புகள் பல வடிவங்களில் வெளிவந்துள்ளன. மாத்தா ஹரிக்குப் பிறகு பிரான்சுக்குப் போன பவானி, பவானியின் மகள் ஹரினியைப் பற்றிய கதையாக இந்த நாவல் உள்ளது.

மாத்தாஹரி, பவானி, ஹரினியின் வாழ்க்கை ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருப்பதை நாவலில் உணரமுடிகின்றது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள்

கட்டுரை
பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – (2005)
சிமொன் தெ பொவ்வார் – ஒரு திமிர்ந்த ஞானசெருக்கு (2008)
எழுத்தின் தேடுதல் வேட்டை- (2010)
கதையல்ல வரலாறு- 2013
மொழிவது சுகம் 2013
ஊர்ப்பேச்சு 2013

நாவல்

நீலக்கடல் (தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற நாவல்) 2005)
மாத்தா ஹரி (2008)
கிருஷ்ணப்ப நாயக்கர்கௌமுதி (செஞ்சி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல்) 2013

சிறுகதை

கனவு மெய்ப்படவேண்டும் -(2002)
நந்தகுமாரா நந்தகுமாரா -(2005)
சன்னலொட்டி அமரும் குருவிகள்-(2010)
சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது (அறிவியல் புனைகதைகள்))(2010)
மொழிபெயர்ப்பு

போர் அறிவித்தாகிவிட்டது- நவீன பிரெஞ்சு சிறுகதைகள் -(2005)
காதலன் – மார்கெரித் துராஸ் -பிரெஞ்சு நாவல் (2008)
வணக்கம் துயரமே – பிரான்சுவாஸ் சகாங் பிரெஞ்சு நாவல் -2009)
உயிர்க்கொல்லி (உலகச் சிறுகதைகள்- 2012

மார்க்சின் கொடுங்கனவு -டெனிஸ்கோலன் – 2012

உலகங்கள் விற்பனைக்கு (அதிர்வுக்கதைகள்) -2012

கவிதை
அழுவதும் சுகமே (2002)

நன்றி http://muelangovan.blogspot.in/

——————————–

சிற்றேடு ஏப்ரல் – ஜூன் காலாண்டிதழில் செய்தி:

சிற்றேடு ஏப்ரல் – ஜூன் காலாண்டிதழில் செய்தி:

திரு. தமிழவன் அவர்களை பொறுப்பாசிரியராகக் கொண்டு வரும் இதழ் ‘சிற்றேடு’ அவ்விதழில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவல் வெளியீடு குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.   அச்செய்தியை வெளியிட சிறிது தயக்கம். எனது நெருங்கிய இலங்கை நண்பர் மரியதாஸ் என்பவரிடம் கலந்து பேசினேன். எதற்காகத் தயக்கம் தாராளமாக வெளியிடுங்கள் என்றார். தமிழவன் ஏட்டில் வந்துள்ள செய்தி  புறம்தள்ளக்கூடியதா எனக் கேட்டார். தமிழவன் என்னை முன்பின் அறியாமலேயே  சிங்கப்பூர் இலக்கிய மாநாடொன்றில் வாசித்த கட்டுரையில் ‘மாத்தாஹரி நாவலை பாராட்டினார் என்பதை நவீன இலக்கியம் சார்ந்த நண்பர்கள் அறிவார்கள்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் புது நாவல் – செ.ஜெ.

மாத்தாஹரி என்ற மிகவும் வித்தியாசமான நாவலை எழுதி அனைத்துலகத் தமிழ் எழுத்து சார்ந்து புகழ்பெற்றுள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்க கௌமுதி’ என்ற நாவலில் வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் 26-1-2013 அன்று நடைபெற்றது. இந்த நாவல் ஒரு நாவலுக்குள் இன்னொரு நாவலாய் அமைப்புக்கொண்டிருக்கிறது. நாவல் வெளியீட்டுவிழாவில் கி.அ. சச்சிதானந்தம், கவிஞர் மதுமிதா, பேரா.விஜெயவேணுகோபால், எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன் ஆகியோர் பேசினர். ஆங்கிலப் பாதிப்புடன் தற்கால தமிழிலக்கியம் தோன்றியது. பிரெஞ்சு பாதிப்புத் தற்கால தமிழுக்குப் புதுத் தொனியையும் அழுத்தத்தையும் கொடுத்தது. பாரதிதாசன் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆனால் “புரட்சிகவி” என்ற கவிதை பற்றிய சில அபிப்ராயங்களைத் தவிர “பாரதிதாசனின் அமைப்பாக்கத்தில்” பிரெஞ்சு இலக்கிய பாதிப்பு பற்றிப் பாண்டிச்சேரியிலுள்ள தமிழாய்வுத் துறைகளில் ஆய்வு நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. நடக்கவேண்டும்.

எது எப்படி இருப்பினும், பிரெஞ்சு மொழியிலிருந்தும், பண்பாட்டிலிருந்தும் தமிழின் தற்காலத்தை வளப்படுத்த ஒருவர் கிடைத்துள்ளார் என்பது தமிழுக்கு யோகமாகும். (கடைசி சொற்கள் சி.சு. செல்லப்பாவுடையவை).

———————————————–

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு

1..இந்தியா – ஏப்ரல் 21 -கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு

ஏப்ரல் 12-13 காலச்சுவடு நண்பர் கண்ணன், கன்னியாகுமரியில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் கலந்துரையாடலுக்குப்பிறகு 17ந்தேதி புதுச்சேரியில் எனது சகோதரர்மகன் திருமணம். அதன் பிறகு நடந்த முக்கிய நிகழ்ச்சியெனில் செஞ்சியில் புதுவை ‘இலக்கியம்’ சீனு தமிழ்மணியின் நண்பர் பேராசிரியர் ஜெ. ராதாகிருஷ்ணன் என்கிற ‘நறுமுகை’ குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் கிருஷ்ணப்ப நாயக்கர் நூலை முன்வைத்து செஞ்சியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை சொல்லவேண்டும். திருச்சியிலிருந்து வந்திருந்த ந.முருகேசபாண்டியனுக்கும் மற்றவர்களுக்கும் ஓட்டலில் அறை, மதிய உணவு, நிகழ்ச்சியென அவ்வளவையும் குறிஞ்சி இலக்கியவட்டத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பார்வையாளர்களாக பேராசியர்கள், தமிழ் முதுகலை ஆய்வு மாணவர்கள், சிற்றிலக்கிய அபிமானிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேராசிரியர் க. பஞ்சாங்கம், ந. முருகேசபாண்டியன், திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனா ( இவர்  பேராசியர் அ. மார்க்ஸின் படைப்புலகத்தை முனைவர் தேர்வுக்கு ஆய்வுக்கு எடுத்துள்ளார், சிற்றிலக்கிய படைப்பாளி) ஆகியோரின் உரைகள் இருந்தன. மூவரின் உரையும் எனது எழுத்தை உயர்வாகவே மதிப்பிட்டிருந்தன. நவீன இலக்கிய உலகில் பேராசிரியர் க.பஞ்சாங்ககத்தையும், ந.முருகேசபாண்டியனையும் அறிந்தவர்கள் இருவரின் கருத்தையும் குறைத்து மதிப்பிட இயலாது. இன்றைய இலக்கிய சூழலில் பாரபட்சமற்ற விமர்சனத்தை வைக்கிற அரிதான ஒரு சிலரில் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களை அறிந்தோர்க்கு உண்மை புரியும். கிருஷ்ணப்ப நாயக்கர் குறித்த அவர்களின் மதிப்பீடு எனக்கு அரு மருந்து. உரைகளை ஒலிநாடாவில் பதித்து குறிஞ்சி வட்டம் இணைய தளத்தில் வெளியிடுவார்கள்.

Senji -5 JPGSenji -9 JPGSenji -10 JPGSenji -4 JPGSenji -2Senji -1
—————————

2. ஆளுமைகளுடன் சந்திப்பு.

இம்முறை சென்னை சென்று சந்திக்க நினைத்த எழுத்துலக நண்பர்களை கடுமையான வெயில் காரணமாக சந்திக்க இல்லை. திருவாளர்கள்:தமிழவன், எஸ். ராமகிருஷ்ணன், இந்திரன், பாவண்ணன், திலகவதி, திருப்பூர் கிருஷ்ணன், கி. அ. சச்சிதானந்தம், சந்தியா நடராசன்,மதுமிதா, சுதா ராமலிங்கமென திட்டங்கள் இருந்தும் வெயிலுக்குப்பயந்து சென்னை போகவில்லை. எனக்கு பெரும் இழப்பு. வருத்தங்கள் இருக்கின்றன.

அதை ஈடுகட்ட நண்பர் நாயக்கர், சீனு தமிழ் மணி உதவியால் சில ஆளுமைகளை புதுச்சேரியிலேயே சந்திக்க முடிந்தது. பெரியவர் கி.ரா., பேராசிரியர் க. பஞ்சாங்கம், ராஜேந்திர சோழன், ஜெயப்பிரகாசம் இச்சந்திப்புகள் குறித்து சிறிய தொடரொன்றை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசையிலிருக்கிறது. இவர்களைத் தவிர நண்பர் நாயக்கர், மு. இளங்கோ, சீனு.தமிழ்மணி, நறுமுகை ஆகியோரைப்பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.
———————————————-

மொழிவது சுகம் ஏப்ரல் 15

1. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி கருத்தரங்கம்

வரும் ஞாயிறு அன்று  செஞ்சியில் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ வரலாறு புதினம் தொடர்பாக நண்பர் புதுவை ‘இலக்கியம்’ சீனு. தமிழ்மணியும், செஞ்சியைச் சேர்ந்த நறுமுகை என்ற நண்பரும் குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் ஓர் கருத்தரங்கையும்,தொடர்ந்து கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இடம்: செஞ்சி- திருவண்ணாமலை சாலை, ஏ.என்.ஏ சிற்றரங்கு,

நேரம்: காலை 9.30  அளவில்.

சிறப்பு விருந்தினர்:
திருவாளர்கள்: பேரா. க.பஞ்சாங்கம், புதுச்சேரி
ந. முருகேசபாண்டியன், திருச்சி
மீனா, திருவண்ணாமலை

நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

1 (1)

2. இந்தியப் பயணம்:

கடந்த ஏப்ரல் முதல் இந்தியாவில் இருக்கிறேன், வெகுகாலத்திற்குப் பிறகு ஏர் இந்தியாவில் பயணம். விமான சேவை நன்றாகவே இருந்தது. புறப்பாடும், அடைதலும் உரிய நேரத்திலிருந்தன. லூ·ப்தான்சா வைக் காட்டிலும் அனைத்திலும் மீசுரமெனச் சொல்லவேண்டும். ஸ்ட் ராஸ்பூர்(Strasbourg) நகரில் வசிப்பதால் எனக்கு ஜெர்மன் – பிராங்பர்ட்நகரம் பக்கமென்பதால்,ஜெர்மன்நாட்டு விமானமான லூப்த்தான்சா (Lufthansa)வில் (இந்தியா வருவதென்றாலும், அமெரிக்கா போவதென்றாலும்)பயணிப்பதுண்டு. இம்முறை திடீரென பயணிக்க நேர்ந்ததால் லூப்த்தான்சாவில் எதிர்பார்த்த வகுப்பு பயணசீட்டு கிடைக்கவில்லை. 800 யூரோவுக்குமேல் ஓரு நபருக்கு கொடுக்கப் பொருளாதாரம் ஒத்துழைக்காதென்பதால்
ஏர் இந்தியாவில் பயணம் செய்வதெனத் தீர்மானித்தோம். ஆயிரம் யூரோவில் மனைவியும்நானும் பயணம் செய்ய முடிந்தது. எட்டாம் தேதியே காரில் பாரீஸ்வந்தாயிற்று. ஒன்பதாம்தேதிமாலை பாரீஸ்-டில்லி பயணம். பத்தாம் தேதி காலை இந்தியநேரப்படி காலை 9.30க்கு புதுதில்லி வந்தடைந்தது. அங்கிருந்து 12.30க்கு மாற்றுவிமானத்தில் சென்னைக்குப் பிற்பகல் 3.30க்கு வந்தடைந்தோம். மாலை 7மணிக்கெல்லாம் புதுச்சேரிக்கு வந்தாயிற்று.

3. காலச்சுவடு கலந்துரையாடல்

ஏப்ரல் 12,13, 14 மூன்று நாடகள் காலச்சுவடு நண்பர்களிடையே கன்னியாகுமரியில்  ஓர்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தனர். இரயில் பயணச்சீட்டினை முன்னதாகவே எனது புதுவை முகவரிக்கு அனுப்பியிருந்தனர். முதல்வகுப்பு ஏ.சி கோச், பெர்த் வசதியென சொல்லப்பட்டாலும் எனக்கு உறக்கமில்லை. வசதியான பயணமில்லை. கன்னியாகுமரி அடைந்தபோது காலை 6.50. முதல்நாள் விழுப்புரத்தில் மாலை 8.15க்கு ஏறியது. இரயில் நிலையத்திற்கு கண்ணனும், நெய்தல் கிருஷ்ணனும் வந்திருந்தனர். நான் பயணம் செய்தசென்னை-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் சலபதி, யுவன்சந்திரசேகரர், மகாலிங்கம் ஆகியோரும் வந்திருந்தனர். இரண்டு நாட்கள் நிகழ்வில் கலந்துகொண்டேன். பி.எ.கிருஷ்ணன், சுகுமாரன், சலபதி, பெருமாள் முருகன், மோகனரங்கன், குப்புசாமி,தேவிபாரதி, யுவன் சந்திரசேகரர், பழ.அதியமான் எனபல நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. பதின்மூன்றாம் தேதி மாலை புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4மணிக்கு விழுப்புரம், பின்னர் புதுச்சேரிக்கு காலை 6 மணிக்கும் வந்து சேர்ந்தேன்.

4. 14 மற்றும் 15 ஏப்ரல்

இரண்டுநாட்களும் சகோதரர் மகன் திருமணநிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியிருந்தது. வழக்கம்போல புதுவைஇலக்கிய நண்பர்களுடன் வெயில் தணிந்தநேரங்களில் சந்திப்பு எனப்போய்க்கொண்டிருக்கிறது.
மற்றவை அடுத்த மடலில்….

எழுத்தாளனின் முகவரி -12: வரலாற்று நாவல்

உண்மையும் -புனைவும்

நன்கு அறியப்படாத (அறியப்பட்டதல்ல) வரலாற்றினை புனைகதையாகச் சொல்ல முற்படுபவதே ஒரு சரித்திர நாவல்.

சரித்திர நாவல் என்பது ஆதாரபூர்வமான உண்மைகளும், ஆசிரியனின் கற்பனைகளும் கலந்தது. இக்கலப்பு சீர்மையுடனும் ஒத்திசைவுடனும் நிகழ்த்தப்படுவது.  நன்கு அறியப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைகதை வடிவத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் பொதுவில் இருப்பதில்லை. வரலாற்று நாவலை எழுதுவதென்பது ஒரு சாதனை. கூடுதற் கவனம் வேண்டியிருக்கிறது. எது பற்றி எழுதுகிறோமோ அல்லது கதை சொல்ல ஆரம்பிக்கிறோமோ அது குறித்த முழுமையானப் பிழையற்ற தகவல்களை, முன்னதாக சேகரித்துக்கொண்டு அவற்றோடு இணைந்து கதையை நடத்தவேண்டும். சமூக புனைவுகளில் இவ்வித நியதிகளில்லை, அதனாற் சங்கடங்களும் குறைவு. சொற்களில் ஆளுமையும் கற்பனைத் திறனுமிருந்தால், எழுதிக்கொண்டுபோகலாம், “இடறி விழுந்தாலும்” அங்கே ‘கரடிவித்தை” எனச்சொல்லி சமாளிக்கும் திறனை எழுத்தாளனோ அல்லது அவன் ஏற்கனவே வாசகனிடத்தில் சம்பாதித்த புகழோ பெற்றிருப்பார்கள்.

சரித்திர நாவல் பிற நாவல்களைப்போலவே உண்மையும் புனைவும் கலந்தது. ஆனால் இதற்கு முந்தைய பத்தியில் குறிப்பிட்டதுபோன்று வரலாற்று புனைவில் இவ்வுண்மைகள் ஆதாரங்களைக்கொண்டதாக இருக்கவேண்டும். மாந்தர்கள் அவர்களோடு தொடர்புடைய சம்பவங்கள் என நேர்த்தி குலையாமால், வாசகனிடத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தித் தருதல் அதன் நோக்கம். காத்திரமான வரலாற்று நாவல்களில் இடம் பெறும் மாந்தர்கள் இரண்டுவகையினர்: முதல்வகையினர் நாவலாசிரியன் எழுத உட்காருவதற்கு முன்பாக தேடிஅலைந்த ஆதாரங்களிலிருந்துப் பெறப்பட்டவர்கள்; இரண்டாவது வகையினர் அவனது சொந்தக் கற்பனையிலிருந்து தருவிக்கப்பட்டவர்கள்.

Thomas Flemingதாமஸ் ·ப்ளிமிங் புகபெற்ற அமெரிக்க சரித்திர புனைகதை ஆசிரியர், The Offocers wives என்கிற நாவலின் பூர்வீகத்தைப் பற்றி பேசுகிறார். தமது நான்காண்டுகால ராணுவ அக்காதெமி வாழ்க்கையின் போது அதிகாரிகளைப்பற்றியும் அவர்களுடைய மனைவிமார்களைப்பற்றியும் நிறையத் தெரியவந்ததாம், குறிப்பாக பெண்களின் நடை உடை பாவனைகள், அவர்கள் நடந்துகொள்ளுவிதம், பழகும் முறைகள் ஆகியவற்றை அவதானித்து வந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அமெரிக்க படைகளைப்பற்றி, பெண்ணொருத்தியின் பார்வையில் இதுவரை சொல்லப்படாதது ஏன்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறார், இப்புதிய பார்வை ஒரு வரலாற்று நாவலுக்கு உதவுமென அவர் நினைத்தது வீண்போகவில்லை, கொரிய வியட்நாம் போருக்குப் பிந்திய அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை அவர் சொல்லியிருந்த முறை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. மனிதர்கள் காலத்தோடு வாழப்பழகியவர்களென்றாலும், அவர்களின் அடிப்படைப்பண்புகளில்  மாற்றங்கள் இல்லை. ஐம்புலன்களும், அவை நிகழ்த்தும் மாயங்களும் சாகாவரம் பெற்றவை. மனிதர்களின் பசியும், அன்பும், அழுக்காறும், அருளும், வாய்மையும், இன்னாசெய்தலும், காமமும் எக்காலத்திற்கும் பொருந்துபவை. ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலில் வரும் கிருஷ்ணப்ப நாயக்கரை நமது சமகால அரசியல்வாதியோடும், அதே நாவலில் வரும் செண்பகத்தை, அரசியல் வாதியின் மனைவியரில் ஒருத்தியாக மனதில் நிறுத்தி எழுதுகிறபோது, நாவலைக் கூடுதற் ஈடுபாட்டோடு என்னால் எழுதமுடிந்தது. ‘மாத்தா ஹரி’ நாவலில் முதல் உலகப்போரில் நியாயமின்றித் தண்டிக்கப்பட்ட ‘மாத்தாஹரி’க்கு, எனது உறவுக்காரப்பெண்ணொருத்தியின் வாழ்க்கை ஊடாக நீதி வழங்கினேன். புதுச்சேரியிலிருந்து வெளி நாடு வாழ்க்கைப்பற்றிய கனவுகளுடன் பிரான்சுக்கு வரும் பெண்களின் வாழ்க்கைமுறையை அந்நாவலிற் பயன்படுத்திக்கொண்டேன். இதுபோன்ற அணுகுமுறைகள் நாவலுக்கு நம்பகத் தன்மையையும் ஏற்படுத்தித்தருகின்றன.

 நடந்ததும் நடக்கவிருப்பதும்:

பொதுவாக கடந்தகாலமென்பது, நிகழ்காலத்தினும் பார்க்கக் கொடியது, கடுமையானது. கடந்தகால மனிதவாழ்க்கையின் இன்னல்கள், துயர்கள், இழைத்த தவறுகள், கற்ற பாடங்கள் ஆகியவற்றின் பொதுப்பலன்களே நிகழ்காலத்தில் பெற்றிருக்கும் நமது வளர்ச்சி. ஒரு தலைமுறை வாழ்க்கை, வருங்கால தலைமுறையின் நன்மைக்கு தன்னைப் பணயம் வைக்கிறது. பல இழப்புகளைச் சந்திக்கிறது. கடந்தகால வரலாற்றை மறுவாசிப்பு செய்வது, பின்வரும் சந்ததியினருக்கு எவ்வகையான வாழ்க்கைக்கு (இன்றைய நாம்)  உத்தரவாதம் தரப்போகிறோமென்பதை ஒருவகையில் உணர்வில் நிறுத்துவது. எக்காலத்திலும் வாழ்க்கையென்பது தடைகளின்றி களிமண்பூமியில் உருண்டோடும் நீர்த்தாரையாக இருந்ததில்லை. ஆங்காங்கே அதிர்வுகளையும் நடுக்கங்களையும்; யுத்தத்தையும் சமாதானத்தையும்; ஆக்கத்தையும் அழிவையும் கடந்தே ஆகவேண்டியிருக்கிறது. நெருக்கடிகள் வெயில் போலவும், கடும் பனிபோலவும் மனிதர் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவரவருக்குள்ள வாய்ப்பையும் ஆயுதங்களையும் கொண்டு களத்தில் அவற்றை உருவங்களாகவோ அருவங்களாவோ எதிர்கொள்கிறோம், நமது முன்னோர்களும் அதைச் செய்திருந்தனர். கடந்த காலத்திய நிகழ்வுகளையும், அவற்றின் பங்குதாரர்களையும் தேடிப்பெறுவதில் சரித்திர நாவலாசிரியர்களுக்கு இடையூறுகள் குறுக்கிடுவதில்லை. அவ்வாறு தேடிப்பெறும் தகவல்களூடாக நம்மைப்போலவே நமது முன்னோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பதும்; அவற்றின் முடிவுகளும் நமக்குத் தெரிய வருகின்றன, மாறாக சரித்திர நிகழ்வுகளில் பங்குபெற்ற நமது முன்னோர்களின் அலைச்சல்களென்ன -திட்டமிடல்களென்ன – குயுக்திகளென்ன என்பதுபோன்ற  நுணுக்கமான தகவல்கள் கிடைப்பதில்லை. கடந்த காலத்தின் இக்கோட்டை வாயிற்கதவைத் திறப்பதற்கு அசாதாரண பலமும், தந்திரமும் தேவைப்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் நம் மூதாதையர்கள் எவ்விதம் எதிர்கொண்டிருக்க முடியும் என்பதை அறிய அவர்கள் வாழ்க்கைக்குள் நம்மையும் இணைத்துக்கொள்ளுதல் அவ்வகையில் ஒரு தந்திரம். புனைவொன்றில் சாத்தியப்படும் இத்தந்திரத்தை வரலாறுகளில் காண்பதற்கில்லை. அக்பர் தானொரு சமயவிரோதியல்ல என நிரூபணம்செய்ய அவர் தேர்வு செய்த வழிமுறைகளிலொன்று இராஜபுதன பெண்ணொருத்தியை மணம் செய்துகொண்டது. பிற வழிமுறைகள் அக்பரின்  வரலாற்றை எழுத உதவலாம், ஆனால் அக்பரைப்பற்றிய புனைவொன்றை எழுத இராஜபுதனத்து பெண்ணை மணந்த தகவல் முக்கியமானது. அதனாற்றான் பல நேரங்களில் வரலாறுகள் நமக்குச் சோர்வைத் தருகின்றன. தவிரவும் அச்சோர்விற்கு பிரதான மனிதர்களிடம் மட்டும் வரலாறு கொள்ளும் அக்கறையும் ஒரு காரணம்.

வரலாற்று மாந்தர்களும் வரலாற்று புனைகதை மாந்தர்களும்:

இந்தியச் சுதந்திரப்போரென்பது காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் இவர்களைமட்டுமே கொண்டதா? ஆயிரம்பக்கங்களில் வரலாறு எழுதப்படுகிறபோதும் இவர்களின் வீர தீரங்களை மட்டுமே பேசுவது சராசரி மனிதர்களாகிய நமக்கு அலுப்பை தரவில்லையா? சுதந்திரப்போராட்டத்தின் போது இத்தலைவர்கள் வீட்டுப் பெண்கள் அதனை எப்படி எதிர் கொண்டார்கள், இச்சுதந்திர போராட்டத் தலைவர் ஒருவரின் எதிர் வீட்டுக்காரர் மன நிலையென்ன, அவர் இந்திய விடுதலைப்போரை ஆதரித்தாரா எதிர்த்தாரா? பெரு நகரங்களில் சரி, கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வாழ்ந்த மக்கள் கூட ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்கு போராடினார்களா? மாடசாமிகளும் தொப்புளான்களும், உள்ளூர் ஆண்டைகளிடம் கொத்தடிமைகளாக பலதலைமுறைகளாக இருந்தவர்கள், அவர்களுக்கு இந்த விடுதலையால் கிடைக்கும் இலாபமென்ன? இதையெல்லாம் வரலாறு சொல்லுமா? பேசியிருக்கிறதா? ஆக புனைவுகளில் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது. அக்கால அரசர்கள், கோவிலைக் கட்டினார்கள், குளத்தை வெட்டினார்கள், மான்யம் வழங்கினார்கள். எங்கிருந்து வழங்கினார்கள்? யாருடையப்பணம்? என்ற கேள்விகளைக்கேட்டு அதற்குரியப் பதிலை முன் வைக்கவேண்டும். நீலக்கடல் நாவலிலும் சரி, அண்மையில் வெளிவந்துள்ள கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலிலும் சரி வரலாறு நினைவுகூர்கிற ட்யுப்ளே, லாபொர்தெனே, ஆனந்த ரங்கப்பிள்ளை; கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோருக்கு ஈடாக மாடசாமி, தொப்புளான், தீட்சதர் போன்றோரை வைத்து பேசியிருக்கிறேன். ஒரு சிலரின் பிறப்பும், சூழலும் காலமும் அரியாசனத்தில் வைத்துக் கொண்டாடுகிறது, ஆனாலும் கொண்டாகும் அளவிற்கான எவ்விதச்சாதனையையும் அவர்களில் 95 விழுக்காட்டினர் செய்வதில்லையென்பது எனது தரப்பு வாதம்.  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியில் வரும் தொப்புளான் எதிர்பாராதவிதமாக வழிப்பறிக்குத் திரும்புகிறான், சராசரி மனிதனாக வாழ்க்கையை எதிர்கொண்டவன், வெள்ளந்தியாக ஐயோ தப்பில்லையா என யோசிக்கிறான், பின்னர் கிருஷ்ணப்ப நாயக்கரும் அதைத்தானே செய்கிறாரெனத் தன்னைச் சமாதானம் செய்துகொள்கிறான். இருபதாம் நூற்றாண்டிலும் எவ்வித மாற்றமுமின்றி வரலாறு திரும்ப எழுதப்படுவதைக் காண்கிறோம். கிருஷ்ணப்ப நாயக்கர் அன்று அரசர், இன்றைக்கு நம் கண்முன்னே ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கலாம். ஆக கிருஷ்ணப்ப நாயக்கர்களும் தொப்புளான்களும் வேறு பெயரில் இருக்கவே செய்கிறார்கள். இன்றைய வாசகர்களுக்கு கடந்த கால வரலாற்றில் மறைக்கப்படுகிற இதுபோன்ற (வரலாற்று) உண்மைகளைப் புனைவாகச் சொல்வது அவசியமாகிறது.  பொதுவில் சரித்திர நிறுத்தும் கதை மாந்தர்களுக்கு அதிகப்பக்கங்களை ஒதுக்குவதில்லை, அவர்களை முதன்மைப் பாத்திரங்களாக முன் நிறுத்தும் வழக்கமும் எனக்கில்லை. நீலக்கடல், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டிலும்  இதனை வழக்கமாகப் பின்பற்றியிருந்தேன்.

தாமஸ் ·ப்ளீமிங்க் நாவல்களில் தமது சண்டைக்காட்சிகளை விவரித்து சொல்வதை வரவேற்கிறார். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியை எழுதுகிறபோது அதன் முக்கியத்துவத்தை உணரத்தவறிவிட்டேன். அடுத்த நாவலில் அதை சரிசெய்யவேண்டுமென நினைக்கிறேன். சரித்திர நாவல் எழுதும் நண்பர்கள் தாமஸ் யோசனையைப் பின்பற்றலாம். ஜான் ஹெர்சே (John Hersey) கூற்றுப்படி வரலாற்றாசிரியர்கள் உண்மைகளையும்;  புனைகதை ஆசிரியர்கள் கற்பனைகளை சொல்லப் பிறந்தவர்கள். ஆனால் வரலாற்று புனவுகளை எழுதுகிறவர்கள் இந்நியதிக்குப் பொருந்த மாட்டார்களென்கிறார் தாமஸ் ·பிளிமிங். அவரைப் பொறுத்தவரை வரலாற்று புனவை எழுதுகிறவன், இவை இரண்டிற்கும் இடையில் இயங்கக்கடமைப்பட்டவன்.

———————————————————–

மொழிவது சுகம் – ஏப்ரல் 1 -2013

1. Lilas இலக்கிய பரிசு -2013

‘Prix Lilas’ (Lilac Prize) 2007ல் பிரான்சு நாட்டில் அறிமுகமான இலக்கிய பரிசு. பெண்படைப்பாளிகளுக்கென்று பெண்களால் ஏற்படுத்தப்பட்டது. நோக்கம் பெண்ணிலக்கியத்தை ஊக்குவிக்கவேண்டும். பிரெஞ்சு மொழியில் எழுதும் பெண்எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒன்றை தேர்வுசெய்து வருடா வருடம் பரிசு வழங்குகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ‘Orange Prize’ க்கு இணையானது. குழுவில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், ஆறாவது ஜூரி மட்டும் வருடத்திற்கொருமுறை புதுப்பிக்கப்படுகிறார். இவ்வருடத்தில் 12 புதினங்கள் போட்டியில் கலந்து கொண்டன. அவற்றில் ஆறு இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.  வெல்லும் படைப்பாளி 3000 யூரோவுக்கான காசோலையும், ‘Mont blanc’ தயாரிப்பில் பிளாட்டினமும் தங்கமும் கலந்ததொரு பேனாவும், பாரீஸில் புகழ் பெற்ற ‘Clossarie Des Lilas’ ரெஸ்ட்டாரண்டில் விருந்தும் பெறுகிறார். இறுதி பட்டியலில் இடம்பெறும் ஆறு பேரில் எனது வாக்கு ‘Sylvie Bocqui’ என்கிற பெண்மணிக்கு. Sylvieஇவர் ‘Strasbourg’ ஐச் சேர்ந்தவர் என்பது இரண்டாவது காரணம். முதற்காரணம் ‘Une saison’ நாவல், நட்சத்திர ஓட்டலில் ‘House Keeper’ ஆக வேலைபார்க்கும் இளம்பெண்ணொருத்தியின் தனிமையையும், அலுவலையும் பற்றி உரைக்கிறது. வாடிக்கையாளர்கள் புறப்பட்டுச்சென்றதும் ஒவ்வொரு அறையாக நுழைந்துவெளிவரும் பெண்ணின் நிழலுக்குள் அடைக்கலம் தேடியிருக்கும் அவளது தனிமையின் வெக்கை நம்மைச் சுடுகிறது. வெளிஉலகத்தைவிட்டு வெகுதூரத்தில் கனவில் வாழும் ஒருத்தியின் தினசரிகள் கதையாக நீளுகிறது. .

2. வாசித்ததில் மனதிற் பதிந்தவை:

அ. அகநாழிகை: பொன் வாசுதேவன் கவிதை

விசையுந்தி எம்பி நீர்வெளி மேல்வந்து
கணநேரம் காற்று சுவைத்து
சற்றே ஆறுதலுற்று நிஜமுணர்ந்து நீர் மீளும் மீன்

சிறுபாம்புக் குவியலென நகர்ந்தபடியிருக்கும்
நீர்ப்புல மேல்பரப்பாய்
ஓயுதலற்றுச் சிறகசைக்கும் கேள்விகள்

விழிகளின் உள்ளூடுருவி
அண்மையில் புலப்படும் அகத்தெளிவின் சலனங்கள்

சரிந்து நீண்டு கவிழ்ந்த இருளில்
மெல்லப் புதையும் நான்

கன்னம் நனையப் பரவி காது நுனி சிதறி
வெளியேறிக் கசியும் நீர்
உணர்த்தும் கால ஜென்மங் கடந்த புதிர்ப்பித்து

———————————-

ஆ. நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா -ஷாஜி

“நாம் பயன் படுத்தும் ஒலிக்கருவிகளில் கேட்கும் இசையின் தரமானது பதிவுசெய்யப்படதில் பாதியைக்கூட எட்டுவதில்லை” என கட்டுரையின் இடையில் வரும் வரிகளின் உண்மையை ஓரளவிற்கு அறிந்தவன். ஷாஜி அளவிற்கு இசை நுட்பத்தில் தேர்ந்தவல்லவென்றாலும், இசையை பாமரனாக அனுபவிப்பவன். பல்வேறு பழங்குடிமக்களின் பாடல்களிலிருந்து சீன நாட்டின் மரபான வாத்தியகருவி இசைவரை எதையும் விடுவதில்லை. வாசிப்பு- இசை- சினிமா மூன்றும் எனது ஆயுளை நீட்டிக்கத் தேவை. இசையில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கவேண்டிய கட்டுரை.

http://www.musicshaji.blogspot.fr/
—————————————————

இ. நினைவுத் தடங்கள் வே. சபாநாயகம்.

‘நான் இரசித்த முன்னுரைகள்’ தொடரில் திரு. வே.சபாநாயகம், வல்லிக்கண்ணன் தமது கடிதங்கள் தொகுப்பொன்றிர்க்கு எழுதிய முன்னுரையை பதிவு செய்திருக்கிறார். தகவற் தொடர்பு: தொலைபேசி-மின்னஞ்சல் -முக நூலென அருவ நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற இந்நாளில், ஊடகப்பொருள்கள் மட்டுமல்ல  அவற்றின் உள்ளடக்கமும் குறுகிவிட்டன. உணர்வுகளை உண்மையிற் பரிமாறிக்கொண்டதுபோக இன்றைக்கு அதே உணர்வுகளை ஓரிருவார்த்தைகளில் உதறிக்கொள்கிறோம் -. இன்றைய வாழ்க்கையின் தன்னலபோக்கினால் விளைந்திருக்கும் கெடுதல். மனித மனங்களை இணைப்பதில் கடிதங்களின் பங்கென்ன என்பதை, பதிவை வாசித்து அறியுங்கள்.

http://ninaivu.blogspot.fr/

ஈ. மழை -வண்னதாசன்
‘இன்று..ஒன்று..நன்று’  தொடரில், ‘மழை’ குறித்து வண்ணதாசன் எழுதியது  அவரது வலைத்தளத்தில் மறு பிரசுரம் கண்டுள்ளது. வண்ணதாசனல்ல,  கல்யாண்ஜி முகம் காட்டுகிறார். கடவுளே! இவர்களுக்கு மட்டும் எப்படி இதுபோல எழுத வருகிறதென பலரை நான் பொறாமையுடன் வாசிப்பதுண்டு, வண்ணதாசன் அவர்களில் முதல் வரிசைக்காரர். மனிதர் நிறைய எழுதவேண்டும். எனக்கும் மழை என்றால் மோகம். விரும்பி பலமுறை திரும்பத் திரும்ப வாசித்தேன்.

http://vannathasan.wordpress.com/
————————————————————————–

3. இந்தியா.. இந்தியா

திரும்பவும் இந்தியா செல்லவேண்டியிருக்கிறது, சொந்த வேலைகள், குடும்ப விசேடங்களென காத்திருக்கின்றன. ஏப்ரலில் இந்தியப் பயணமென்று முடிவானதால் அதற்கு முன்னதாக 2012க்கான கணக்கை முடிக்கவேண்டும். வருமான வரித்துறை பொதுவாக மே 1ல் பேலன்ஸ் ஷீட் அனுப்பவேண்டுல், நேரமினமையால் இப்போதே முடித்துவிடலாம் என உட்கார்ந்து இரவுபகலாக செய்யவேண்டியிருக்கிறது எழுத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இடையில் ஒருவாரத்திற்கு இணையத் தொடர்பு துண்டிப்பு ஏற்பட தலைவலி, இப்போதுதான் சிறிது மூச்சுவிடுகிறேன். இரண்டு நல்ல சிறுகதைகளை மொழிபெயர்த்து அம்ருதாவிற்கொன்றும், சிற்றேடுக்கு ஒன்றும் அனுப்பியிருக்கிறேன்.

————————————-

எழுத்தாளன் முகவரி- 11:

கதையும் காலமும்

ஒரு நல்ல கதை சொல்லல், விருந்தோம்பலைப்போல. வாசகன் விருந்து, படைப்பாளி விருந்து படைப்பவன். இலையில் உட்காருபவனுக்கு எதில் தொடங்கலாமென்று தெரிந்தே இருக்கும், பிறந்தது முதல் சொந்தவீட்டில், உறவினர் வீட்டில், நண்பர்கள் வீட்டில், அந்நியர் வீட்டில் அவன் விரும்பியதை, விரும்பாததை சந்தோஷத்துடன் அல்லது கசப்புடன் சாப்பிட்டு முடிக்கிறான். விருந்தை இலையில் உட்காருவதற்கு முன், இலையில் உட்கார்ந்த பின் என இருவகையாகப் பிரித்துக்கொள்வோம். இ.மு.: வாசகன் சுந்ததிரத்தோடும், தேர்வோடும், விருப்பத்தோடும் சம்பந்தப்பட்டது. இல்லத்தரசனான கணவன் எனது சுதந்திரம் முக்கியத்துவம் பெறுகிறது, எனது தேர்வு முன்னிலை வகிக்கிறது, எனது விருப்பம் நிறைவேறுகிறதென அங்கே நினைக்கிறான், இ.பி.யில்? அவன் சுதந்திரமும், தேர்வும், விருப்பமும் மனைவியின் பரிசீலனக்கு உட்படுகிறது. உப்பும் உறைப்பும் அவள் எடுத்த முடிவு. நாக்கின்ருசி அவனால் தீர்மானிக்கப்ட்டதல்ல, அவள் தீர்மானித்தது, சமைத்துப்போட்டவர்கள் காட்டியது. படைப்பும் அப்படிபட்டதுதான், படைப்பாளியே வாசகனை உருவாக்குகிறான். விருந்தை வழிநடத்தும் பொறுப்பு விருந்து படைப்பவனுக்கு இருப்பது போல வாசகனை வழிநடத்தும் பொறுப்பு எழுத்தாளனுக்கு இருக்கிறது. அந்த வழி நடத்தலில் மிகமுக்கியமான இரண்டு  தனிமங்கள்: ‘தொடக்கமும்’, ‘முடிவும்’. ஒரு புனைவை எழுத உட்காருகிறபோது, எதில் தொடங்கவேண்டும் எங்கே முடிக்கவேண்டும் என்பதில் தெளிவும், காலத்துடன் அவற்றைச் சடைபோடும் சாதுர்யமும் இருந்தால், பாதிகிணறை தாண்டிவிட்டோமென்பது உறுதி.

புனைவுகள் அனைத்துமே வரிசைக்கிரமமாக சொல்லப்பட வேண்டுமென்பதில்லை: ஒரு நேர்க்கோட்டில் கதையை முன்னெடுத்துச் செல்பவர்கள் இருக்கிறார்கள், முடிவை நோக்கி கதையை நகர்த்தும் முறை, – விஷ்ணுபுரம் (ஜெயமோகன்)-வானம் வாசப்படும் (பிரபஞ்சன்). கதையின் முடிவை இடையில் வைத்து முன்னும் பின்னுமாக கதையைப் பிரித்து சொல்லுதலென்பது இன்னொரு ஒருவகை,  – வார்சாவில் ஒரு கடவுள் (தமிழவன்) -யாமம் (எஸ். ராமகிருஷ்ணன்). பின்னர் இறுதிச்சம்பவத்துடன் தொடங்கி – ஆரம்பத்தை முடிவில் வைப்பது என்பது பிரிதொருவகை – புலிநகக்கொன்றை (பி.எ. கிருஷ்ணன்) -மாத்தா ஹரி (நாகரத்தினம் கிருஷ்ணா). இம்மூன்று பிரிவுக்குள்ளும் அவரவர் கற்பனை சார்ந்து மேலும் பலவகைமைகளை கட்டமைக்க முடியும், மேற்கண்ட நாவல்களே அதற்கு சாட்சிகள்.

கதை ஆரம்பம் என்பது மிகமிக முக்கியமானது. கதையின் முதல் வாக்கியம், முதல் பத்தி அவற்றில் உபயோகிக்கபடும் சொற்கள், காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள், புள்ளிகள், உடுகுறிக்கள் இன்ன பிற சேர்ந்து நாவலின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன.

முச்சந்தியில் நின்று கொண்டிருந்தது புளிய மரம். முன்னால் சிமிண்டு ரஸ்தா. இந்த ரஸ்தா தென் திசையில் பன்னிரண்டு மைல் சென்றதும், குமரித் துறையில் நீராட இறங்கிவிடுகிறது. வடதிசையில் திருவனந்தபுரம் என்ன, பம்பாய் என்ன, இமயம் வரைகூட விரிகிறது. அதற்கு அப்பாலும் விரிகிறது என்றும் சொல்லலாம். மனிதனின் காலடிச்சுவடு பட்ட இடமெல்லாம் பாதை தானே?” – ஒரு புளியமரத்தின் கதை -சுந்தரராமசாமி.

“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”– புலிநகக்கொன்றை – பி.எ. கிருஷ்ணன்.

” உப்பரிகையின் மேல் நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தாள் கோகிலாம்பாள். வானம் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாகப்பட்டது அவளுக்கு. அப்படியே கையை உயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை. வானத்தை யார்தான் தொடமுடியும்? அது என்ன விரித்த ஜமக்காளமா, அல்லது பாயா, எக்கித்தொட?” – மானுடம் வெல்லும் -பிரபஞ்சன்.

எழுத்தைத் தொடர்ந்துப் படிக்க  வாசகனுக்கு உதவுவதைப்போலவே, கதையை உற்சாகத்துடன் நடத்திச்செல்ல படைப்பாளிக்கு உதவுவதும் ஒரு புனைவின் தொடக்கமே. முதல் வரிதொடக்கமென்பது, நமது பணிக்காலத்தில் முதல் நாள் வேலைக்கு ஒப்பானது: பதட்டமும், எதிர்பார்ப்பும் சிலிர்ப்பும், சந்தோஷமுமாக   தொடங்கி, வரும் நாட்களை ‘தலையெழுத்து’ இப்படி ஆகிவிட்டதென்றோ, புதுமாப்பிள்ளையின் குதூகலத்துடனோ எதிர்கொள்கிற சாத்தியங்களுள் இரண்டிலொன்றை ஏற்படுத்தித் தருவது.

ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும், கால வாரிசைப்படி முதலில் வரவேண்டியது, கதைசொல்லலில் பெரும்பாலும் முதலில் வருவதில்லை. நீங்கள் வாசித்த அல்லது வாசித்துக்கொண்டிருக்கிற எந்த வொரு புனைவை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டாலும், புனைவின் இடையிற்தான் வாசகர்கள் குறுக்கிடுகிறோம். மேற்சொல்லப்பட்ட மூன்று உதாரனங்களையும் திரும்பவும் வாசியுங்கள், நமக்குத் திறக்கப்படுவது நுழைவாயிலல்ல, சன்னலோ, புறவாசலோ அல்லது இரண்டுமற்ற வேறொரு கதவு ஆனால் நிச்சயமாக தெருக்கதவு அல்ல. தெருவில் கூவிப் பொருள் விற்பவர்களும், தெருவிபச்சாரிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தைப்பெற என்ன செய்கிறார்களோ அதைத்தான் இங்கே எழுத்தாளர்களும் செய்கிறார்கள், எழுத வேண்டிய வகையில் எழுதினால் வாசக விசுவாமித்திரர்களைக் கவிழ்ப்பது சாத்தியமென்பதற்கு இவை எடுத்துக்காட்டுகள். பெரிய பெரிய கடைகளில் நுழைவாயில் காட்சிப்பேழைகளிலுள்ள அலங்கார அணிவகுப்பும் வாடிக்கையாளர்களை கவர்கிற உபாயந்தான். இத்தொடக்க உபாயத்தால் வாசகன் குறிப்பிட்ட புனைவிடம் சரண் அடைகிறான். சரணடைந்த வாசகனை தக்கவைத்துக்கொள்ள இத் தந்திரத்தை நாவலெங்கும் நீட்டிக்கவும் செய்யலாம் அதாவது எப்போது வாசகனிடமிருக்கும் விமர்சகத்திறன், நாவலாசிரியன் கதையை முடிக்கப்போகிறானென்று மனதிற் கிசுகிசுக்கிறதோ அதுவரை. வாசகனின் அம்முணுமுணுப்பை முன்னதாக ஊகிக்கத் தெரிந்து அங்கே புனைகதையை முடித்துக்கொள்ளவேண்டும்: Alice in Wonderlandல் வரும் King of Hearts முயலிடம் சொல்வதுபோல “Go on still you come to the end, then you stop.

ஆனாலிந்த முதலுக்கும் முடிவுக்குமிடையில் காலத்தோடு இணைந்து கதை சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. எந்தவொரு புனைவுக்கும் முடிவென்பது ஒன்றுதான், மாறாக ஆரம்பம்  இரண்டுவகை: ஒன்று ஒரு கதையின் கால வரிசைப்படியுள்ள ஓர் ஆரம்பம் மற்றது கதைசொல்லலின்படியுள்ள ஓர் ஆரம்பம். கால வரிசைப்படி கதைச்சொல்லப்படுவதில்லையென்பதை ஏற்கனவே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

‘புலிநகக்கொன்றை’ நாவலின் இம்முதல் பத்தியை திரும்பவும் வாசியுங்கள்:

“பெரியபாட்டியின் கட்டில் சுவரிலிருந்து ஒரு அடியாவது தள்ளியிருந்தது. தண்ணீர் நிரம்பிய எவர்சில்வர் வட்டைகளின் உள்ளே அதன் கால் நுனிகள் அமிழ்ந்திருந்தன. சுவர்கள் அசாதாரணமான வெண்மையில் பளிச்சிட்டன. சுத்தமான படுக்கை விரிப்புகளிலும் தலையணை உறைகளிலும் அப்போதுதான் பெட்டிபோட்ட துணிகளின் முறுமுறுப்பு, கத கதப்பு. எப்போதும் சுவரில் ஓடிக்கொண்டிருக்கும் பல்லிகளைக் காணவில்லை. வேலைக்காரி செண்பகம் சில நாட்களுக்கு முன்புதான் ஒவ்வொன்றாகத் தேடி விரட்டினாள்”

வாசித்தீர்களா? இது கதை சொல்லலின் தொடக்கம், – மாறாக கட்டிலிற் கிடக்கிறபாட்டியிடம் அசைபோடும் நினைவுகள், காலக்கிரமப்படி கதையொன்றை நமக்கு வைத்திருக்கின்றன, அதற்குமொரு தொடக்கமுண்டு, அதனை இரண்டாவது தொடக்கமென வசதிக்காக வைத்துக்கொள்ளலாம்.  கதை சொல்லல் தொடக்கம் பிரதான தொடக்கமெனில், கதையின் காலவரிசைத் தொடக்கம் துணைத்தொடக்கமாகிறது, கதைசொல்லற்படி ஒரு தொடக்கத்தை எழுதியாயிற்று, உபதொடக்கமென்கிற கடந்த காலத்திற்கு நுழைந்தாக வேண்டும்,  அதற்கான தருணமெது? என்பதைச் தேர்வு செய்வதில் எழுத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.

‘கதை சொல்லல் தொடக்கத்தை’ வாசிக்கும் நமக்கு இரண்டு கேள்விகள் எழக்கூடும்: எதனால் பெரிய பாட்டி கட்டிலிற் கிடக்கிறாள், அதற்கு முன்னால் நடந்ததென்ன? என்பதொன்று, ‘பெரியபாட்டிக்கு அதன்பிறகு என்ன ஆயிற்று? என்பது மற்றொன்று. கேள்விக்கேற்ப பாட்டியின் கடந்த காலமோ, அல்லது வருங்காலமோ அடுத்து புனைவில் வருகிறது. அவற்றில் ஏதாவதொன்றைத்தான் படைப்பாளி உடனடியாக தேர்வு செய்ய முடியும், அதற்கான தருணமும் முக்கியம். படைப்பாளி மேற்கண்ட இருகேள்விகளுள் வாசகனுக்கு உடனடித் தேவை எது என்பதை ஊகித்து அக்கேள்விக்குரிய பதிலை தர எழுத்தாளர்கள் முன்வரவேண்டும், அடுத்தக் கேள்விக்கான பதிலை இரண்டுபக்கம் தள்ளி ஆரம்பிக்கலாம். புலிநகக்கொன்றை ஆசிரியர் நிகழ்காலமாக பாட்டியின் பேர்த்தியை (ராதா) சாட்சியாக வைத்து, கடந்த காலத்திற்கு நம்மை அழைத்துச்செல்கிறார். “நேற்று நடந்தவை பறந்துபோய்விட்டன. பலவருடங்களுக்கு முன்பு நடந்தவை பாறாங்கற்கள். அசைக்க முடியாதபடி அங்கங்கே நினைவிற் கிடந்தன” வென்று அக்கடந்த காலத்தை தான் எழுதுவதற்கு ஆசிரியர் நியாயமும் கற்பிக்கிறார்.

காலமும் வினைச்சொற்களும்.

பொதுவாக எல்லா புனைவுகளுமே கடந்த காலத்தில் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ எழுதும்பாது அதனை simple pastல் எழுதுகிறார்கள். Flashback ஐச்சொல்ல, past perfect அவர்களுக்கு கைகொடுக்கிறது.  ”ராதாவின் வயதில் அவள் நம்மாழ்வாருக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தாள்’ எனப் புலிநகைக்கொன்றை வரியை வாசித்தால், தமிழிலும் ஓரளவிற்கு இது சாத்தியம் என நினைப்போம். ஆனால் ஒரிருவரிகளுக்கு இது உதவலாம். கடந்த காலத்தை இரண்டொரு பக்கங்கள் நீட்டவிரும்பினால் ‘கொண்டிருந்தான், கொண்டிருந்தாள், கொண்டிருந்தது சொற்கள் வாசகனுக்கு அலுப்பைத்தரலாம். எனக்கென்று சில தேர்வுகளிருக்கின்றன. கடந்த காலத்தின் பொதுவான சம்பவங்களைத் தவிர்த்து பாத்திரங்களின் செயல்பாடுகளைச் சொல்ல வருகிறபோது நிகழ்காலத்தில் சொல்வது எனக்கு உகந்ததாக இருக்கிறது. பழைய படத்தைத் தியேட்டரில் பார்க்கிறபோது என்ன நடக்கிறது, அடைத்திருந்த கதவுகள் விரிய திறந்ததும் நுழையும் காற்றுபோல மனிதர்களும் அவர்களின் செயல்களும் நிகழ்காலத்திற்கு வந்து விடுகிறார்களில்லையா? அத்தகைய  Visual effects  கதைகளிற் கிடைக்க முயற்சி செய்கிறேன். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் ஊழியம் செய்தபோது, காலை நேரத்தில் பிரெஞ்சு மொழிவகுப்பிற்கு சென்றுவந்ததால் மாலையில் ‘கென்னடி டுட்டோரியல்’ என்ற ஸ்தாபனத்தில் வேலை செய்தேன். அங்கே வரலாறு பாடத்தை பயிற்றுவித்தேன். வரலாற்று பாடங்கள் இறந்த காலத்திற்குரியவை என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் அதனை நிகழ்காலத்தில் நடப்பவையாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது எனது முறை. மொஹஞ்சாதாரோ நகருக்குள் நுழைகிறீர்கள்: முதலில் நீங்கள் பார்ப்பது அகன்ற தெருக்கள், செங்கற்களான கட்டிடங்கள்…’ என்ற சாயலில் பாடபோதனை இருந்தது. இன்றைக்கு எனது புனைவுகளிலும் அதைக் கடைபிடிக்கிறேன்.

அவரவர் விருப்பம் சாந்து வினைச்சொற்களின் காலத்தைத் தீர்மானிக்கலாம். எப்படி எழுதினாலென்ன? வாசகரை நமதெழுத்தோடு ஒன்றச்செய்யவும்  அவருக்கு அலுப்பேற்பட சாத்தியமுண்டு என்ற தருணத்தில் கதையை முடிக்கவும்  தெரிந்திருக்கவேண்டும்.

மீண்டும் உங்கள் கவனத்திற்கு:

“Go on still you come to the end, then you stop.
——————————————————