நண்பர் க.பஞ்சாங்கம் இன்றொரு முதுமகன் ; 75 ஆண்டுகள் அகவையார். எனக்கது வயது சார்ந்தது அல்ல அறிவில், அனுபவத் தெளிவில், மொழியின் தேர்ச்சியில், கலை இலக்கியத்தின் மீதுள்ள காதலில், நித்தம் நித்தம் மொழித் திடலில் அவர் முயற்சிக்கும் சொல்லேறு தழுவலில், இதுவன்றி இங்கு விடுபட்ட பலபண்புகளில் அவர் முதுமகன். இப்பெருமகனாருக்குப் பலமுகங்கள் உண்டு. இல்வாழ்வில் நல்வழி நிலைபெற்ற துணைவன், பெருமிதத்திற்குரிய தந்தை, பெருமைக்குரிய தலை மாணாக்கர்களை பெற்ற பேராசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாவலாசிரியர், தேர்ந்த திறனாய்வாளர், அசலான இடது சாரி சிந்தனையாளர், பாசாங்கற்ற பகுத்தறிவுவாதி, அனைத்திற்கும் மேலாக இனிய நண்பர்.
எனக்கும் அவருக்குமான நட்பும் ஒரு நாயக்கர் வறலாறுதான். கி.ரா என தமிழ் படைப்புகலம் கொண்டாடும் கரிசல் காட்டு நாயக்கரின் தீவிர அனுதாபியான பேராசிரியர் பஞ்சுவின் அறிமுகம், வெங்கிட சுப்புராய நாயக்கர் எனும் பிரெஞ்சு பேராசிய நண்பரால், என்னுடைய கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி எனும் வரலாற்று புதினத்தால் வாய்த்தது. இப்புதினம் குறித்த திறனாய்வு ஒன்றை செஞ்சியில் புதுவை சீனு தமிழ்மணியின் நண்பர், தற்போது காஞ்சிபுரம் கல்லூரியொன்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் ஜெ. இராதாகிருஷ்ணன் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் பஞ்சாங்கம் நூலைக்குறித்து வைத்த கருத்துகள் அவருடன் நெருங்க வைத்தது. உலகில் மனிதமும் மனிதர்களும் அருகிவிட்டார்களோ என்ற அவ நம்பிக்கையில் வாழ்ந்தவன் ; அன்று எனக்கு அறுபது வயது. இளமை வாழ்க்கை மிகக் கடினமானது. கல்லூரி நாட்களில் தீக்கதிர் இதழ், மார்க்ஸியம், திராவிடக் கட்சிகளில் ஆர்வம் என்றிருந்தது. இன்றைக்கு எந்த அரசியலும் எனக்கு உகந்ததாக இல்லை, எப்போதும் ஆளுகின்றவர்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பதும், பாதித்தவர் எவராயினும் அவர்பக்கம் துணை நிற்கும் உணர்ச்சிப்பிண்டமாகவும் உணருகிறேன். சட்டென்று கோபப்படவும் செய்வேன் மறுகணம் அதற்காக வருந்தி எதிர்தரப்பில் நியாயமிருப்பின் மன்னிப்புக்கேட்கவும் தயங்குவதில்லை. அநீதி இழைத்தவர்களை மன்னிப்பதுமில்லை. இந்த எனக்குள் ஒருவராக நான் கண்டெத்த நண்பர்தான் பேராசிரியர் க.பஞ்சாங்கம். அவரை, அவரது எழுத்துக்கள் ஊடாக அறியவந்த நாள்முதல், அவருள் நானா என்னுள் அவரா என விளங்கிக்கொள்ள முடியாத குழப்பம். அவரது பாசாங்கற்ற மொழியும், நலிந்தோருக்கான குரலும் என்னை வசீகரிப்பவை. நண்பரின் நவீன இலக்கிய கோட்பாடுகளையும், திறனாய்வு கட்டுரைகளையும் வாசித்து வியந்தவன் ; இன்றும் வியப்பவன். தமிழ் மொழியிலும், தொல் இலக்கியங்களிலும் எனக்குப் போதாமைகள் உண்டு ; ‘அவை’ அடக்கமல்ல உண்மையும் அதுதான் ; அவருடைய நவீன இலக்கியங்கள் திற்னாய்வுகளை முன்வைத்தும், பிற ஆளுமைகள் குறித்தும் இன்றளவும் ஆச்சர்யங்கள் தொடருகின்றன.
பார்வைக்கு எளியவராகவும், பழகுவதற்கு இனியவராகவும், பண்பிற் சிறந்தவராகவும், படைப்புக் கலைஞராகவும் திகழ்கிற பேராசிரிய நண்பர் தொல் இலக்கியம் நவீன இலக்கியம் இரண்டிலும் தோய்ந்தவர்; இப்படி தமிழில் இருமுனைகளிலும் கரைகண்டவர்களைக் காண்பது அரிது, எனவேதான் திறனாய்வு துறையில் பேராசிரியர் பஞ்சு தனித்துவமானதோர் அடையாளத்தைப் பெறமுடிந்துள்ளது.
கலை இலக்கியம் இரண்டுமே எங்கிருந்து வருகின்றன என்பதைப் போலவே எவரிடம் போய்ச்சேருகின்றன என்பதன் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்ந்ததொரு சிற்பியின் கைவண்னத்தில் உருவாகும் சிலையில் அழகும், கலை நேர்த்தியும், உணர்வின் வெளிப்பாடும், உரையாடும் மொழியும், அதன் பின்னல்களும்,வளைவுகளூம்,நெளிவு சுளிவுகளும், நேர்க்கோடுகளும் ஏற்ற இறக்கங்களும், தவழலும், நடையும், ஓட்டமும், மழலைப்பேச்சும், ஊடலும் சிணுங்கலும் இன்னமும் இதுபோன்ற படைப்பிலுள்ள எண்ணற்ற கூறுகளும், அணுக்களும், இதயத்தில் இறங்கவும் உடல் சிலிர்க்கவும் ஒருவர் தேவை. நீரில் மிதக்கும் நிலவை உள்ளங்கையில் ஏந்தி உதிரத்தில் வெதுவெதுப்பை உணர்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அம்மனிதர் வாசகர் மட்டுமல்ல வாசகருக்கும் மேலானவர், படைத்தவனைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தவர் – ஒரு தேர்ந்த திறனாய்வாளர். ஒரு நல்ல தலைவிக்கு உரிய தலைவன் அமைவதுபோல அது நிகழவேண்டும். அது நிகழாதவரை அந்த நூல் தனது பிறவிப்பயனை எட்டியதாகச் சொல்வதற்கில்லை. தமிழிலக்கியக் கொப்பில் முகிழ்த்து இதழ்பரப்பிய அனேக மலர்களை முகர்ந்து முகர்ந்து அதன் நறுமணத்தையும் துர்க்கந்தத்தையும் இனம் பிரிக்க அளப்பரிய ஞானமும், பழுத்த அனுபவும் வேண்டும்.
இலக்கிய திறனாய்வு என்பது தேடல், வாசிப்பு, ஒப்பீடு, மதிப்பீடு, முடிவெடுத்தல் என்கிற வினைத்திறன்களை உள்ளடக்கியது. எழுத்தூடாக பிறிதொரு பனுவல் பற்றிய தமது வாசிப்பு, உணர்தல் மற்றும் தெளிதலை மூன்றாவது மனிதருடன் பகிர்ந்துகொள்ளல், அடிப்படையில் ஓர் ஒப்பீடு நோக்கு. ஓரு விவாத களம்: ஒரு புறம் திறனாய்வாளன் -திறனாய்வு; எதிர் திசையில் பிரதி – படைப்பாளி. உண்மையில் இவ்விவாதகளத்தில் ஒரு தரப்பில் திறனாய்வாளர் உருவத்தில் அவரைக் கட்டமைத்த அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகள். தன்னை உருவாக்கிய சமூகம், மனிதர்கள், அவற்றின் இயக்கம் ஆகியவற்றைக் குறித்த அவரது நியாயங்கள் முடிவுகள், தெளிதல் அடிப்படையில் கையளிக்கபட்ட பனுவலின் குறை நிறைகளை அவர் விவாதிக்கிறார். பனுவலின் கலைநேர்த்தி, மொழி, சொல்லாடல்கள், எடுத்துரைப்பு என்றெல்ளாம் தொடர்ந்தது அவதானிப்பதும், வியப்பதும் திறனாய்வாளரின் பின் புலத்தைப் பொருத்தது. இன்று நவீன தமிழிலக்கியத்தில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களில் ஆரம்பித்து புதிதாக எழுதத் தொடங்கும் படைப்பாளிவரை, பேராசிரியர் பஞ்சுவின் பார்வை தங்கள் எழுத்தில் மீது விழாதா எனக் காத்திருப்பது, ஏங்குவது பஞ்சுவின் திறனாய்வுகளுக்குள்ள பெருமையை பறைசாற்றும்.
தமிழே வாழ்க தாயே வாழ்க !
அமிழ்தே வாழ்க அன்பே வாழ்க !
கமழக் கமழக் கனிந்த கனியே
அமைந்த வாழ்வின் அழகே வாழ்க !
என எங்கள் இனிய நண்பரை பாரதிதாசன் தமிழால் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
டாக்டர் சண்முகம் சிவாவை 2014ல் கோவையில் சந்தித்தேன். கோவை தமிழ் பண்பாட்டு இயக்கம் கூட்டிய ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டிற்கு வந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்த க.பஞ்சாங்கம் கட்டுரையை ‘சிற்றேடு’ காலாண்டிதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். க.பஞ்சாங்கம் உண்மையை எழுதக்கூடியவர். எனவே மருத்துவர் சண்முக சிவா ஓர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற கருத்து மனதில் இருந்தது. கடந்த கால தமிழ் புனைவுகளில் ‘ஆஜானுபாகு’ என்ற சொல்லாடல் உபயோகத்திலுண்டு, அதோடு நல்ல தேஜஸ் என்ற வடமொழி சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மனிதர்களை அளக்கும் பார்வை. வார்த்தைகள் நிதனாமாக வருகின்றன. எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் பேசுகிறார்.
தமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன், ஈழத் தமிழ் நண்பர்கள் பலரிடமும் இது நிறைய இருக்கிறது. சிங்கப்பூர் நண்பர்களிடமும் கவனித்தேன். ஒன்றரைபக்கத்திற்குத் தங்கள் புகழ்பாடி மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நாம் ஏமாளிகளாக இருந்தால், நேற்று கிளேசியோகூட பிரான்சிலிருந்து என்னிடம் பேசினார், உங்கள் எழுத்தைப் படித்துத்தான் எழுதவந்தேன் என்றார் என என்னை மூர்ச்சை அடையச்செய்கிற படைப்பாளிகளும் தமிழில் உண்டு. தமிழினத்தின் சரிவிற்கு தம்மை எப்போதுமே உயரத்தில் வைத்து பார்ப்பதுங்கூட ( எதிராளியை குறைத்து மதிப்பிட்டு) காரணமாக இருக்கலாம். ஒரு வேளை இது நமது தேசிய குணமோ. மலேசியா தமிழர்களிடங்கூட அது பொதுப்பண்பாக இருக்கக்கூடும். அவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா? அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திகேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நாம் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டாக்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா? இலக்கிய நூலா? என்ற சந்தேகம் வாசித்து முடித்த பின்பும் நீடிக்கிறது. மருத்துவ அறிவைக்காட்டிலும் தமக்குள்ள இலக்கிய தேடலை தெரிவிக்கவேண்டுமென்ற அவா அவருக்குள் ஆழமாக இருந்திருக்கவேண்டும். திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோல அவரது நூலூடாக நோய்முதல்நாடி உருவான கருத்து.
நூலுக்குப் பிரபஞ்சன், எம்.ஏ. நு•மான் இருவரும் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். நூலைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் குறைவு, மாறாக ஆசிரியர் பற்றிய பாராட்டுமழைகள் நிறைய. சண்முகம் சிவா நிறையவே நனைந்திருப்பார்.. ஆசிரியரின் முன்னுரையிலிருந்து அவர் உள்ளூர் சஞ்சிகைகளிலும் தொலைகாட்சியிலும் வழங்கிய மருத்துவ ஆலோசனைகளே நூலாக வடிவம் எடுத்திருக்கிறதென அறிய வருகிறோம். உடல் நோய், மன நோய் இரண்டிற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூலை ஒரு மருத்துவ கையேடு எனலாம். நமக்கெழும் அநேக சந்தேகங்களுக்கு, நம்மிடமுள்ள அநேக கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திரு சண்முகம் சிவாவின் பதில்கள் மருத்துவம் அறிந்த மனிதநேயமிக்க ஒருவருவரின் பதில் போல இருக்கிறது. அவை ஒவ்வொன்றிலும் மெலிதான நகைச்சுவை அடிநாதமாக ஒலிக்கிறது. முத்தாய்ப்பாக கவிதை ஒன்று.
ஏற்கனவே கூறியதுபோன்று அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் உடல் உளம் இரண்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. வயது, சிறியவர் பெரியவர்; ஆண் பெண் பாலினப் பாகுபாடு இப்படி எதுவும் அப்பதில்களில் குறுக்கிடுவதில்லை. அனைவருக்கும் அனைத்திற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன என்பது வியப்பை அளிக்கிறது. கிட்டதட்ட பெரும்பானமையான பதில்களில் – நடிகர் கே. பாக்யராஜ் தமது தமிழ் வார இதழ் கேள்வி பதிலில், பதிலுடன் ஒரு கதையைக் கூறியதுபோல ( இப்போதும் உண்டா?) மருத்துவர் சண்முகம் சிவா கவிதை சொல்லி முடிக்கிறார். கே.பாக்யராஜ் ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்களிலிருந்தோ, இதிகாசத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தோ உதாரணத்தைக் காட்டும்போது அவரது கேள்விபதில் பகுதியே அதற்காகத்தான் வாசிக்கப்பட்டது எனச்சொல்வதுண்டு. இந்த நூலிலுங்கூட ஆசிரியரின் மருத்துவ ஆலோசனைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் அதில் சொல்லப்பட்ட கவிதைகளுக்காக வாசிப்பவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். பல நேரங்களில் கவிதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கேற்ப மருத்துவ கேள்விகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் போன்ற ஐயங்களும் எழாமலில்லை.
பத்திரிகைகள், வார மாத இதழ்களில் இடம்பெறும் அநேகக் கேள்வி- பதில்கள் தயாரிக்கப்படுபவைதான். அந்தச்சந்தேகம் கவிதைகளை வாசிக்கிறபோது இங்கும் வருகிறது. விருந்தளித்த கையோடு ‘தாம்பூலம் எடுங்க’ என்பதைப்போல மருத்துவ ஆலோசனையோடு கொசுறாக ஒரு கவிதை கிடைக்கிறது. எனக்கு ‘ஊட்டிவரை உறவு’ நாகேஷ¤ம் நினைவுக்கு வருகிறார். சிலரின் கேள்விகளை படிக்கிறபோது, அவர்கள் மருத்துவரின் கவிதைக் ‘கொசுறை’ எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. உளவியல் அறிந்த மருத்துவருக்கு இது தெரியாதிருக்குமா? கண்டிப்பாக. தமது மருத்துவ ஆலோசனையைக்காட்டிலும் தாம் படித்த, இரசித்த கவிதைகளை அடையாளப்படுத்தவேண்டும் என்பது மருத்துவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையெனில் அவர் ஜெயித்திருக்கிறார். ‘மருத்துவக் கேள்வி-பதில்’ என்ற உபதலைப்பு, நமக்கெழும் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகள் காமாசோமா அல்ல. நல்ல கவிதை மனம் இருந்தாலொழிய அப்படியான கவிதைகளை இடம் பொருள் அறிந்து உபயோகம் காண சாத்தியமில்லை.
மருந்துக்கு ஒரு உதாரணம்:
சில நேரங்களில் மனம் எதிலும் ஈடுபடமுடியாமல் ஒருவிதமான கவலையுடன் இருக்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம்?
மருத்துவர் சண்முக சிவாவின் பதில்:
கவிதை எழுதலாம். கவிதை எழுத வராது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். புலவர்கள் பண்டிதர்கள், கவிஞர்கள் அதனைக் கவிதை இல்லை என்று சொல்லலாம். கவலைப் படாதீர்கள். எழுதுங்கள். உங்களுடைய கவலை ஒரு தவிப்பு. அதற்கு வடிகால் வேண்டும். நமது உணர்வுக்கெல்லாம் ஆக்க பூர்வமான வடிகால்களை அமைத்துக்கொண்டால் அது பாடலாகவோ இசையாகவோ ஓவியமாகவோ இருந்துவிட்டால் நாம் கலைஞராவோம்.
சோகத்திலும் ஒரு சுகமான கவிதைக் கிடைக்கும். மொழி கைவந்துவிட்டால். உணர்வுகளுக்கு ஆடைகட்டி ஆடவிடலாம், பாடவிடலாம். மனசுக்கு சிறகுகட்டி பறக்கவிடலாம். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கலாம். கவலையில் மூழ்கிக் காணாமல் போய்விடாமல் இருக்கத்தானே கலைகள் இருக்கின்றன. கவிஞர் ஆசுவின் இந்த வரிகளைப் பாருங்கள்:
“வலிக்குது மவனே சொமய கொஞ்சம் இறக்கி வையேன்”
“இறக்கி வைத்தேன் அம்மா கவிதைகளாக அதற்குள்ளும் அழுகின்றன அம்மா நமது வலிகள்.” —-
மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் மருத்துவ கேள்வி-பதில் ஆசிரியர் டாக்டர் மா. சண்முகசிவா
இயல்பாகவே மனிதகுலம் உட்பட விலங்கினங்கள், ஒன்று பிறிதொன்றிடம் தன்னைத் தேடுகிறது. தோள் உரசவும், கலந்துரையாடவும், சேர்ந்து விருந்துண்ணவும், விழி சுரக்கும் நீரை விரலால் தொட்டுத் துடைக்கவும் ஒருவன் அல்லது ஒருத்தி தேவை. அந்த இன்னொரு உயிரியை பொதுவான புள்ளிகளில் வைத்து அடையாளம் காண்கிறோம். தனிமனிதன் குடும்பம், சமூகமென்று தன்னைச்சார்ந்தோரை மனித கும்பலில் தேடி உறவுச்சங்கிலியில் பிணைத்துக்கொள்ளும் நுட்பம், இத் தேடலைச் சார்ந்தது. கண்ணாடியில் எதிர்ப்படுபவையெல்லாம் நாமாக இருப்பின் வலுவான கரைகள் கிடைத்த தெம்பில் ஆறுபோல பாய்ந்தும், நிதானித்தும் ஓடி வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம், அமைவது வரத்தைப் பொருத்தது.
லொலிட்டா(Lolita) புகழ் விளாடிமிர் நபோக்காவை (Vladimir Nabokov) நண்பர்கள் அறிந்திருக்கக்கூடும். ரஷ்யாவில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து, இலண்டனில் கல்விகற்று, பாரீசை நேசித்து, அமெரிக்க பிரஜையாகி, இறுதியில் சுவிஸ்நாட்டில் பயணத்தை முடித்துக்கொண்ட அவருடைய விளாடிமிரின் வாழ்க்கை ஓர் உயிரியின் மெய்பொருள் தேடல். லொலிட்டாவைக் காட்டிலும் அவருடைய விரக்தி (Despair) நாவல் மீது எனக்கு முழுமையான காதலுண்டு. லொலிட்டா: வாழ்க்கையின் ஒழுங்கு மற்றும் நியதிகளில் நம்பிக்கையற்று உடலிச்சையில் தத்தளிக்கும் அறிவுஜீவிக்கும், தனக்கு என்ன நேர்ந்ததென்பதைக்கூட விளங்கிக்கொள்ளப்போதாத ஓர் அப்பாவி சிறுமிக்குமிடையே நிகழும் தகா உறவினைக்கொண்டு இருவேறு மனித உயிர்களின் இயக்கத்தைப்பேசுகிறதெனில், ‘விரக்தி’ எதிரும்புதிருமான இருமனிதர்களின் திசைக்குழப்பத்தைச் சொல்கிறது. நாவலை ஜெர்மன் திரைப்பட இயக்குனர்களில் அதிகம் பேசப்படுபவரான பஸ்பிண்டெர் (Fassbinder) திரைப்படமாகக் கொண்டுவந்திருக்கிறார். மிகவும் காலம் கடந்து இத்திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் கிடைத்தது. 1978ம் ஆண்டு கான் விழாவில் பங்கேற்றத் திரைப்படம். ஆனால் அதற்கும் முன்பாக (1977) இறந்திருந்த விளாடிமிருக்கு படத்தைக் காணும் பேறு வாய்க்கவில்லை. நாவலாசிரியரையும், அதனைத் திரைக்குக்கொணர்ந்த இயக்குனரையும் அறிந்தவர்கள் அந்நாவலில் வரும் இருகதாபாத்திரங்களைப்போலவே பிறப்பு, வாழ்க்கை, தாங்கள் அடங்கிய சமூகம் என எல்லாவற்றிலும் இருவரும் எதிரெதிர் துருவங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்கிறார்கள். விரக்தி நாவலை நீங்கள் வாசித்திருப்பவரென்றால். படத்தைத் தவிர்ப்பது நல்லது.
விளாடிமிர் இந்நாவலை முதன்முதலில் ரஷ்யமொழியில் எழுதியபோது வைத்தபெயர் வேறு என்கிறார்கள். அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது Despair என்று மொழி பெயர்க்கிறார். பிரெஞ்சில் Despair என்கிற சொல் இருக்கிறது. இருந்தும், ‘La Meprise’ என விளாடிமிர் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புக்கென விதிகளை எழுதிக் களைப்பவர்களுக்காக இதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது. அதுவன்றி அவரே மொழிபெயர்த்ததால் சில உரிமைகளை விளாடிமிர் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி கூடுதலாக சில பகுதிகளைச் சேர்க்கவும், சிலபகுதிகளைத் தவிர்க்கவும் செய்திருக்கிறார். “எனது படைப்பாற்றல் மீது முழுமையான நம்பிக்கையும், உயர்வும் நேர்த்தியும்கொண்ட எனதெண்ணங்களை சாதுர்யமாக வெளிப்படுத்தும் திறனுமில்லையேல் இக்கதையை உங்களுக்குத் தெரிவித்திருக்கமாட்டேன்”..என Super-Ego’ தொனியில் நாவலில் பிரதான ஆசாமி கதையைத் தொடங்குவான். கதைநாயகன் ஹெர்மான் ஒரு விசித்திரமான ஆசாமி புத்திசாலியா அரைவேக்காடா என தெளிவுபடுத்திக்கொள்ள இயலாமல் கதை முழுக்க சங்கடப்படுகிறோம். இருந்தாலும் அவன் கதைசொல்லி. வாசகனை ஈர்ப்பதில் தேர்ந்திருக்கிறான். ஆர்வத்துடன் உட்கார்ந்து கேட்கிறோம். இடைக்கிடை நம்மையும் முட்டாளாக்குகிறான். கதை நாயகன் ஹெர்மான், மனைவியை நம்புகிறான் அல்லது கொண்டாடுகிறான். (அவள் அவர்கள் குடும்பத்து நெருங்கிய உறவினனுடன் கள்ள உறவுகொண்டிருக்கிறாளென தெரிந்தும் ) பின்னர் அதுவே அவனை அவ்வாழ்க்கையிலிருந்து விடுவிக்கிறது, வேறொருவனாக அவனை உயிர்ப்பித்து இழப்பை நிவர்த்திசெய்யத்தூண்டுகிறது. இன்னொருவனைத்தேடி அவனிடம் தனது வாழ்க்கையைப் பண்டமாற்றுசெய்துகொள்கிறான். அவன் சந்திக்கும் ஓடுகாலனிடம் உருவ ஒற்றுமையில் ‘எனக்கும் உனக்கும் வேற்றுமை இல்லை’ எனக்கூறி நம்பவைக்கிறான். உண்மையில் அவனுக்கும் இவனுக்கும் ஒற்றுமையென்று எதுவுமில்லை. ஒரு புறம் அப்பழுக்கற்ற யோக்கியன்- மறுபுறம் ஊத்தைகுணங்களில் ஊறிய அய்யோக்கியன். கதைகேட்கும் கவனத்திலிருக்கும் நாம் விளாடிமிர் நடத்தும் கண்கட்டுவித்தையில் கட்டுண்டு என்ன நடக்கிறதென விளங்கிக்கொள்ள இயலாமற் தவிக்கிறோம். கதையில் ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது. அதை உடைத்தால் விளாடிமிருக்குத் துரோகம்செய்தவர்களாவோம்.
பாஸ்பிண்டர்(திரைப்பட இயக்குனர்) 1936ல் நடக்கின்ற ரஷ்யப் பின்புலத்தில் சொல்லப்பட்ட கதையை ஜெர்மனி அரசியலோடு கலந்து சொல்கிறார். அண்மையில்தான் பிரெஞ்சு Arte தொலைகாட்சியியின் தயவில் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை பொறுத்தவதை விளாடிமிருக்கு பாஸ்மிண்டர் துரோகமிழைத்திருப்பதாகவே நம்புகிறேன். விளாடிமிர் இத பார்க்காமல் இறந்ததே நல்லதென நினைக்கத் தோன்றுகிறது.
மோன் பிளாங்(Mont -Blanc), அல்லது பாரதி மொழியில் சொல்வதெனில் வெள்ளிப் பனிமலை. இத்தாலிக்கும் பிரான்சுக்கும் சிறிது தூரத்தில் சுவிட்சர்லாந்துக்கு இடையில் கூன்போட்டு படுத்திருக்கும் மலை. 2013 செப்டம்பர் மாதம் அம்மலையின் அடிவாரத்திலிருக்கும் ஷமோனி( Chamonix ) கிராமத்து மலையேற்றத்தில் ஆர்வம்கொண்ட மனிதருக்கு இந்த வெள்ளிப்பனி மலையில் கிடைத்தப் பயணக் கைப்பெட்டியொன்றில் ஐரோப்பிய யூரோவில் 300000 பெறுமான விலையுயர்ந்த கற்களுடன் ஒரு பை கிடைத்திருக்கிறது.
இம்மலையில் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளாகி இருக்கின்றன, இரண்டுமே ஏர் இந்தியாவுக்குச் சொந்தம். முதலாவது ஒரு போயிங் 707 கஞ்சன்சங்கா என்று பெயர். ஜெனீவா (சுவிஸ்)விமானநிலையத்தில் இறங்க இம்மலையை கடந்து செல்லவேண்டும். 108 பயணிகள், 11 விமான ஊழியர்கள். இவ்விபத்தில் மாண்டனர். விபத்து நடந்த ஆண்டு 1966. இதற்கு முன்ப்பாக இதே மலையில் 1950ல் ஏர் இந்தியாவின் மலபார் இளவரசி தமது பயணிகள் விமானஓட்டிகள் ஊழியர்களுடன் விபத்துக்குளாகியது. ஆக இரண்டில் ஒரு விமானத்திற்கு இப்புதையல் சொந்தம். இதற்கு முன்பாக இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான, மற்றும் அதிகாரபூர்வமாக உரிமை கோரிய பொருட்கள், ஆவணங்கள் – மலையேறிகளுக்கு கிடைத்தவற்றை பிரெஞ்சு அரசாங்கம் இந்திய அரசாங்கத்தை தொடர்புகொண்டு ஒப்படைத்திருக்கிறது. இவ்விலையுயர்ந்த கற்கள் வாஷிங்டனுக்கு ப் போகவிருந்த உயர்மட்ட தூதரக அதிகாரியின் கைப்பெட்டியில் இருந்து கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அவர் அமெரிக்காவிற்கு சுவிஸ் வழியாக ஏன் செல்லவேண்டுமென்பது கேள்வி. இக்கேள்வி பதிலின்றி இருக்க விலையுயர்ந்த கற்களை பனிமலையிலில் கண்டெடுத்த பிழைக்கத் தெரியாத மனிதர் கொண்டுபோய் போலீஸ்காரர்களிடம் கொடுக்க அவர்கள் பிரெஞ்சு அரசாக்கத்திடம் கொடுக்க எட்டாண்டுகள் காத்திருப்பிற்கு(2021) பிறகு பிரெஞ்சு அரசாங்கம் மலையேறியின் ஊரான ஷமோனி மேயரிடம் ஒப்படைக்க , அவர் மலையேறியின் குடும்பம் உடபட ஊர்வாசிகள் அனைவருக்கும் பகிர்ந்தளித்திருக்கிறார். இதிலிருந்து தெரியவரும் நீதி இந்திய அமைச்சர்கள் அமலாக்கத்துறைக்குப் பயந்து சுவிஸ்பயணம் மேற்கொள்ளவேண்டாம், ஆபத்தில் முடிய வாய்ப்புண்டு.
மனிதப் பண்புகள் நூலில் மணிகோர்ப்பதுபோல சிறுகச்சிறுக அநத நூலின் சம்மதமின்றியே, அதன் உணர்வுக்குக் கொண்டுபோகாமலேயே நடைபெறுகிறது, கோர்க்கும் கைகளில் ஒன்று நாம் சார்ந்த சமூகம், மற்றது நித்தம் நித்தம் குளித்து, பருவகாலத்திற்கேற்ப உடைகள் தரித்து, போதிய அலங்காரத்துடனும், சௌகரியத்துடனும் இயற்கையை மீற முயலும் மானுடத்தின் பொதுப்பண்புக்குரியது. இப்பொதுப்பண்பின் கை கொஞ்சமல்ல கூடுதலாகவே நீளமானது, நீ அப்படியிரு அல்லது இப்படியிருவென கண்காணாத தேசத்திலிருந்தும் கட்டளையிடலாம். இதுதான் நாம் வாழும் காலத்தின் மனித வாழ்க்கை.
தனிமனிதன் யார்? அல்லது ஒரு பெண் என்பவள் யார்? எல்லா உயிர்களையும் போலவே மனித உயிர் படைக்கப்படுகிறது. Mémoire d’Hadrien என்கிற பிரெஞ்சு நூலை மொழிபெயர்க்கத் தொடங்கியதில் பல இலத்தீன் சொற்களின் அறிமுகம் கிடைத்தது அதில் ஒன்று “individus” கிரேக்க மொழியின் “atomon”என்கிறச் சொல்லுக்குப் பங்காளி அதன் பொருள் பொருள் தனித்தது, பிரித்தறிய முடியாதது. பெற்றோர் மரபணுக்களின் கூட்டுத்தொகையில் 1+1=2 என அறியபட்டாலும், இந்த இரண்டு ஒன்றுக்ககளின் (1+1) அல்லாத பண்பு இந்த 2 – இரண்டில் இருக்கிறது, இங்கேதான் அந்த இரண்டாவது கையை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
மூலக்கதை எழுத்தாளர் வேண்டாம் சிவசங்கரிஎன்றே குறிப்பிட்டுவிடலாம், எழுத்து வாசிப்பு என்றிருப்பவர்களுக்கு எழுத்தாளர் என்கிற பட்டபெயர் தேவையில்லை, தெருவில் போகிறவர்களோடு அறிமுகம் என்கிறபோதுதான் இது தேவையாகிறது. ரிக்ஷா ஓட்டும் நடிகர் திடீரென ஆங்கிலம்பேசி பாமர இரசிகனை மெய்சிலிர்க்கவைக்கும் அறிமுகம் சிவசங்கரிக்கு தேவையல்ல. ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ கவிஞர் எழுத்தாளர் எனக் கூறி அறிமுகப்படுத்துவதில்லை. சிவசங்கரியின் “ஒரு சிங்கம் முலாகிறது ” என்கிற கதையின் சினிமா வடிவம் “அவன் அவள் அது ” . இயக்கம் முக்தா சீனிவாசன். சராசரி தமிழ்ப்பட வெகுசன இரசனையிலிருந்து விலகி எடுத்திருக்கும் திரைப்படம். சிவக்குமார், இலட்சுமி, ஸ்ரீபிரியா வழ்க்கம்போல , முன்னணி நட்சத்திரங்கள் என்கிற வார்த்தைப் பிரயோகம் தமிழில் இருக்கிறதில்லையா அதைத் தெரிவிப்பதற்காக சில நடிகர்கள். அவர்கள் வந்துபோகிறார்கள், மனோரமா உட்பட. படம் என்னவோ ஸ்ரீப்பிரியா, இலட்சுமி, சிவக்குமார் இவர்களுக்கான படம். திரைப்படத்தில் இவர்கள் பங்களிப்பை இப்படித்தான் வரிசைப் படுத்த வேண்டியுள்ளது. சிவக்குமார் ஒரு கதாநாயகன் வேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்.
சிவக்குமார் – இலட்சுமி கண்வன் மனைவி, இருவருக்கும் தமிழ்வழக்கில் உச்சுகொட்டி சொல்வதுபோல குழந்தை பாக்கியமில்லை. காளையில்லாமல் பசு கருத்தரிக்கும் அறிவியல் வழிமுறை மனிதர்க்கு ஒத்துவருமோ? லாவன்யா(லட்சுமி) கருப்பையில் கட்டி, விளைவாக அவள் வயிற்றில் குழந்தையுண்டாகச் சாத்தியமில்லை. மாமனாரின் வாரரிசு ஆசையை நிராசையாக மருமகளுக்கு விருப்பமில்லை, “வழி வழியாக காலம் காலமாக நம்பிக்கை என்கிற பெயரில் அரசமரத்தை சுத்திட்டு, அடிவயிற்றைத் தொட்டுப்பார்காமல்” அறிவியல் தீர்வைத் தேடும் இந்த நகரத் தம்பதிகளுக்கு , கதாநாயகனுடைய தந்தையின் ஆரூட நம்பிக்கையை மெய்யாகவேண்டிய கடமை இருக்கிறது. கருப்பை நலிவுற்ற லாவன்யா தனது கணவனின் ஜீவ அணுக்களைக்கொண்டு குழந்தையை பெற்றுத்தரக்கூடிய ஒரு பெண்ணைத் தேடுகிறாள். அப்படிக் கிடைத்தவளே துணை நடிகையான மேனகா. தன்னுடைய காதலையும் அன்பையும் உறுதிசெய்ய ஒரு குழந்தை வேண்டி லாவண்யா தேடும் முயற்சியில் கணவனை பறிக்கொடுத்துவிடுவோமோ என்கிற அச்சம், மனைவிக்கு; கருப்பையை வாடகைக்குவிட்ட மேனகா, அக்கருவிற்கு சொந்தக்காரனிடத்தில் மனதையும் கொடுக்கிறாள். மனம் வாடகைக்கு விடப்பட்டதில்லை, இயற்கையின் ஆற்றலை எதிர்க்க சக்தியற்ற மனித மரம் அவள், வேரோடு சாய்கிறாள். இலட்சுமியும் ஸ்ரீபிரியாவும் போட்டிபோட்டு நடித்திருக்கிறாகள், என்னுடைய வாக்கு மேனகாவிற்கு. இயல்பாக மனித மனங்களின் குணாதிசயங்களை படம் பிடித்து இருக்கிறார்கள், தமிழ் சினிமாவின் சில பிரத்தியேக அம்சங்களுடன்.
( பாக்கியம் ராமசுவாமி, அப்புசாமி சீதாப்பட்டி கதைகளை குமுத த்தில் எழுதி புகழ்பெற்றவர். அக்கதைகளுக்கு நானும் ரசிகன், ஆப்புசாமி சீதாப்பாட்டி நினைவு சிறுகதைபோட்டியை ஒன்றை நடத்தினார்கள் வருடம் நினைவில்லை,, அதில்கலந்துகொண்டு பரிசு பெற்ற கதை. 2006ல் வெளிவந்த நந்தகுமாரா நந்தகுமாரா சிறுகதை தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.)
ருக்குமணியின் ஆராவமுதுக்கும், சீதாபாட்டியின் அப்புசாமிக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களில் ஒன்று கொடுவா மீசை யார் கண் பட்டதோ அதற்கு ஆபத்து நெட் சாட் மூலம் வந்திருந்தது.
அருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆசை ஆசையாய் கிராமத்து நாவிதனிடம் கெஞ்சி கூத்தாடி முதல் மீசையை ஒதுக்கிக்கொண்டு ஆராவமுது வீட்டிற்குள் நுழைந்தபோது இவரது தகப்பனார் வானத்துக்கும் பூமிக்குமாக எகிறிக் குதிக்க, வலது கால் சுளுக்கியதில் மந்திதோப்பு மணிக்கட்டு தைலத்திற்கு மாத்திரம் அயன் நஞ்சை நிலத்தில் இரண்டு குழியை விற்க வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு தகப்பனாரின் அந்திமக் காலம் வரை மீசையை வைத்து நடந்த இரணியன் பிரகலாதன் யுத்தத்தில் தகப்பனாருக்கு இருமலும் இவருக்கு ஜெயமும் ஆசீர்வதிக்கப்பட்டது. தகப்பனார் இருமலுக்கு பயந்து ஊரிலிருந்த கிழங்களில் பாதி வைகுண்டத்திற்கும் மறு பாதி கைலாயத்திற்குமாக புறப்பட்டு போக நம்ம ஆராவமுது இல்லறம் மேற்கொண்டு மயிலாப்பூர் வந்து சேர்ந்தார்.
ஆராவ்முது மீசையை எடுத்தே தீருவேன் என்று புறப்பட்ட பேர்வழிகளில் இந்தியாவில் இருக்கின்ற வரை பிளேடும் கையுமாககத் திரிந்த இவரது மைத்துனன் வெங்கட்ராகவன் என்கிற வெங்கட்டும் சிங்கப்பெருமாள் கோயில் பாஷ்யம் ஐயங்கார் சீமந்தபுத்திரியும் இவரது பிட்டர் ஹாஃப் ஆகிய ருக்குமணியும் இங்கு முக்கியமானவர்கள்.
ஆராவமுதுடைய மீசை முகத்தின் வேரைத் தேடிப் போனால் முதலிற் தட்டுப்படுவது சின்ன வயசுல அவரது கிராமத்தில் கண்ட குதிரை சவாரி செய்யும் மதுரை வீரன் சிலையும், சிவப்புச் சாயத்துடன் விகாரமான முகத்திலிருந்த பெரிய கண்களை காட்டிலும் சும்மா கருகருவென்று காதுவரை நீண்ட மீசைக்கிருந்த மரியாதையை படையில் வைத்த ஆடு கோழிகளும் சாராயமும் தெரிவிக்கும், அதுபோல மீசை பண்டாரம் என்று ஒருத்தர் இருந்தாகவும் மீசையை வெச்சே பல காரியங்களை சாதித்துக் கொண்டதாகவும் ஊர் முழுக்க பேச்சு.
இராணுவத்தில் இருக்கும் போது, இவரிடமிருந்து துப்பாக்கியை விட மீசையே எதிரிகளை பயமுறுத்தியதென ஆராவமுது நம்புவார். மீசை வைக்காத காந்திஜி ராஜாஜி தொந்தி கணபதிஜியை விட, மீசை வைத்த காமராஜர் ஜி மா போ சி ஜி முனீஸ்வரன் ஜி போன்றவர்கள் இவரை ரொம்பவே கவர்ந்தனர். இந்த லிஸ்டில் ஸ்டாலின் ஜி ஹிட்லர் ஜி, ஹீரோக்குளையும் இதை சேர்த்துக் கொள்ள, ஆவேசம் கொண்ட ருக்குமணி, இவரது மீசையை எடுக்காமல் சோற்றில் கை வைப்பதில்லையென சபதம் எடுத்து ஸ்பூனால் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். “மீசைக்கும் வீரத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை” என அடிக்கடி புலம்புவாள் ; ருக்மணியை பெண் பார்க்க வந்த போது அவர் ‘பிடித்திருந்தது’ என்று சொன்னது அவளது மேலுதட்டில் படர்ந்திருந்த பூனை மீசைக்காக, அதனை மற்றவர்கள் தவறாக விளங்கிக் கொண்டதற்கு அவர் என்ன செய்வார், பாவம். ஆனால் நிஜத்தில் நம்ம ஆரவமுது மூஞ்சுறுக்குக் கூட பயப்படும் சுபாவம் உள்ளவரென்பது சாந்தி முகூர்த்தம் அன்றே தெரியவந்ததில் ஆரம்பித்து வீட்டில் என்னவோ அல்லி ராஜ்ஜியம் தான்.
ஆராவமுதுக்கு அடுத்த வைகாசி பொறந்தால் வயது அருபது, மிலிட்டரி ரிட்டயர்டு ஆசாமி என்பதால், வேணுமானா ஒரு பத்துவயசைக் குறைச்சுக்கலாம், பல்லி மாதிரி குறுக்கும் நடுக்குமாக ஓடிக் கொண்டிருப்பார். ராணுவத்தில் ரிட்டயர்ட் ஆகி வந்த அன்றைக்கே ‘மயிலாப்பூர் மீசை வளர்ப்போர் சங்கத்தினை’ ஏற்படுத்தி இருந்தார் இன்றைக்கு அதற்கு நாடு முழுவதும் கிளைகள். உறுப்பினர்களுக்கு மீசையின் மகாத்மியத்தை குறித்து வகுப்பு எடுப்பதற்காக உபியில் கஞ்சா அடித்து கிடந்து கிடக்கும் கின்னஸ் புகழ் சாமியாரிலிருந்து கொருக்குப்பேட்டை பஸ்த்தாதுகள் வரை வந்து போனார்கள். மீசை இருந்தால் எதிரிகளை குறிப்பாக பெண்களை வீட்டில் அடக்கி ஆளலாம் என்பது குறித்து, “அப்பாவி கணவன்மார்கள் சங்கத்தின்” ஆதரவில் பிரத்தியேக வகுப்புகள் நடந்தன. சங்க உறுப்பினர்களுக்கு ‘மீசை பார்லர்கள்’ உருவாக்கப்பட்டன, ‘மீசை இணையதளம் உருவானது. ‘தேசத்திற்கு பெரிதும் அவசியம் அரும்பு மீசை ஆண்களா முறுக்கு மீசை ஆண்களா” என பட்டிமன்றங்களில் விவாதிக்கப்பட, மீசைமான் பாப்பையா தலைமை தாங்கினார். விவாதங்களில் மீசை முளைத்த அத்தைகளும் சந்தோஷமாக கலந்து கொண்டார்கள் என்பது கொசுறு செய்தி. சங்க உறுப்பினர்களுக்கு மீசை முளைத்த பூனை எலி மூஞ்சூறு கரப்பான் பூச்சிகளை செல்ல பிராணிகளாக வீட்டில் வளர்க்க உலக வங்கியிடமிருந்து கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்படி மீசை மீசைன்னு, தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணித்துக் கொண்ட மனுஷர் கொஞ்ச நாளா அநியாயத்துக்கு மாறி இருந்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், இவரது பிரியமான மீசையை மழித்திருந்தார். முட்டிக்கால் வரை இறங்கிய பெர்முடா டவுசர், மேலே லொடலொடவென்று ஒரு பூ போட்ட காட்டன் டீ ஷர்ட், ஃபங்க் தலை, கால்களில் நைக்ஷூ, கண்களில் போஸ் சன் கிளாஸ், அதனை அர்த்தராத்திரியில் மின்சார தடை வந்தால் கூட கழற்றாமல், நேற்று வரை “கொடுவா மீசை அருவா பார்வை” என்று பாடிக் கொண்டிருந்தவர் “ஏ கில்லி…. கில்லி” என்கிற ரேஞ்சில் துள்ளி விளையாடுகிறார்; இந்த கூத்துக்கெல்லாம் சாட்சாத் நெட்-சாட் தான் காரணம்.
நேற்றும் அப்படித்தான், ” சாமியை மீசையோடு பார்க்க அப்படியே எங்க ஊரு மதுரை வீரன் தான்” என்று பிரியப்பட்டு சிலாகிக்கிற காய்கறிக் கூடைக்காரி வந்திருந்தாள். ஆராவமுதை பார்க்க மீசை போன கரப்பான் பூச்சி மாதிரி இருக்க, ரொம்பத்தான் உருகிப் போனாள். “பாட்டிம்மா! அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கொண்டு வந்திருக்கன் கொஞ்சம் சீக்கிரம் வரியேளா!” என்று குரல் கொடுத்தவள், முந்தானையை பிரித்து “காலங்காத்தாலே வெயில் என்னமா கொளுத்துது”, என்று முகத்தில் ஒத்திக் கொண்டாள்.
கூடத்தில் தினசரியை வாசித்துக் கொண்டு ஜாடையாக அதனை ரவுசு விட்ட ஆராவமுதிர்க்கு குப்பை மேட்டில் வாக்காளர் அட்டைகளை கண்ட சுகம். பரவை முனியம்மா கெட்டப்பிலிருந்த கமலத்திற்கு டூ பீஸை அணிவித்து பமிலா ஆண்டர்சன் மாதிரி நடக்க விட்டு ரசித்தார். கூடைக்காரி கமலத்துக்கு வயசானாலும் இது மாதிரியான சங்கதிகளை உடனே மோப்பம் பிடிச்சிடுவாள்.
“சாமிக்கு வேப்பிலை அடிக்கணும்னு நினைக்கிறேன், காத்து கருப்பு ஓட்டுறதுல, என் கொழுந்தியா புருஷன் கில்லாடி, அனுப்பி வைக்கணுமா?”, முந்தானையை மார்பில் பரத்திக்கொண்டு, அவள் கேட்டதில் கிழவருக்கு நாடி தவிர சர்வமும் அடங்கிப் போனது.
காய்கறிக்காரியிடம் வந்த ருக்குமணி, “வேணாண்டியம்மா! நான் பார்த்துக்கிறேன், தேவைப்பட்டால் உன்கிட்ட சொல்லி அனுப்புறேன், நீ புறப்படு!” என்று முன் ஜாக்கிரதையுடன் அவளை அனுப்பி வைத்தவள், மீசை இழந்த இவர் முகத்தைப் பார்த்து, ஒரு நமட்டு சிரிப்பினை உதிர்த்து விட்டு உள்ளே போகிறாள்.
“போடி நான் மீசை எடுத்தது உனக்காக அல்ல” என்று சொல்ல நினைத்து வார்த்தைகளை விழுங்கிக் கொண்டார். அவள் அடுக்களைக்குள் மறைந்த வேகத்தில் சட்டசபையில் ஆளுங்கட்சித் தலைவரை காணப் பிடிக்காமல் வெளியேறுகிற எதிர்க்கட்சித் தலைவரைப் போல நழுவினார். எங்கே போனார்? ஆராவமுது கெட்டால், ” தெப்பக்குளம் – கபாலீஸ்வரர் கோவில் -கொழுப்பு கோவாலு “;
கொழுப்பு கோவாலை சாதாரணமா நினைச்சிடப்படாது. அமெரிக்காவில் இருக்க வேண்டியவன் நம் ஆராவமுது செய்திருந்த பூர்ண பூர்வ ஜென்ம புண்ணியத்தால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பிச்சை எடுக்கிறான்; செல்ஃ போன், பேங்கில் அக்கவுண்ட், கிரெடிட் கார்ட், காரில் ஏறிச் சென்று கலெக்ஷன் பார்ப்பது என அவனது கீர்த்தி மயிலாப்பூரில் நான்கு மாட வீதிகளிலும் பிரசித்தம். பாத்திர கடை நாடார் கூட, “அவன் பைனான்ஸ் தொழில் செய்துவிட்டு இத்தொழிலுக்கு வந்திருக்க வேண்டும்” என்று சத்தியம் செய்கிறார்.
ஆரா வமுதுக்கு அவனோடு ஏற்பட்ட சிநேகிதம் கூட ஒருவகையில் பைனான்ஸ் விவகாரன்தான். கிழவரும் ருக்குவும் ஒருமுறை சாமி தரிசனம் பண்ணிட்டு வெளியே வருகிறார்கள். ” ஐயா… தர்மதுரை! என்று கூப்பிட்ட குரல்கள், தர்ம சங்கடமான குரல்கள். பெரியவர் ஏதாச்சும் போடணும்னு தீர்மானிச்சு பாக்கெட்டைத் துழாவியதில் கிடைத்தது என்னவோ இரண்டு ஐந்து பைசாக்கள். இரண்டையும் விரல் நுனியில் பிடித்து அலுமினிய தட்டில் எல்லோருக்கும் கேட்கட்டும் என்ற வகையில் கொஞ்சம் உயர்த்திப் போட்டிருக்கக் ககூடாது, போட்டுட்டார், வந்தது ஆபத்து. சற்று முன்னால் “தர்மதுரை தர்மதுரை” என்று கூப்பிட்டவன், “யோவ் கசமாலம்”னு ஆரம்பிச்சு வசை மாறி பொழிந்தான். கபாலீஸ்வரர் சபையில் போகவிருந்த கிழவர் ஆராவமுதின் மானத்தை காக்க கொழுப்பு கோபாலு உதவி கரம் நீட்டுகிறான்: “இந்தாதொரை! நம்மாணடகிற துட்டை வச்சுக்க, அப்பாலே கொடு!” என்று காங்கிரசுக்கு ஒத்தாசை பண்ண வந்த கம்யூனிஸ்ட் போல, அவன் விட்ட டயலாக்கில் மனிதர் தயிரில் போட்ட உளுந்து வடை மாதிரி குளிர்ந்து போனார். போதாதற்கு அவன் மேல் உதட்டில் உட்கார்ந்திருந்த வஸ்துவும் இவருக்கு பிடித்திருந்தது. அன்றைக்கு தொடங்கிய சினேகிதம், அதற்குப் பிறகும் ‘விஜயகாந்தும் தமிலும்’ போல ஒருபோதும் பிரிக்க முடியாததாக உருமாறியது.
ஒரு நாள் தெப்பக்குளத்துல வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாக இறங்கி வேடிக்கை பார்க்கிறார்கள் அவர்கள் பிரமித்து நிற்பதை நம்ம கொடுவாள் மீசை ஆராவமுது, நாடார் கடையிலிருந்து பார்க்கிறார். வந்தவர்கள் பிரெஞ்சு பேசுகின்றார்கள். அவர்களில் ஒருத்தி ஒவ்வொரு படியாக இறங்கி வந்து சலசலக்கும் தண்ணீரில் கால்கள் நனைத்த குதூகலத்தில் ஆழ்கிறாள். அந்த நேரம் பார்த்து ஓர் ஆசாமி ஒருவன் எழுந்து நிற்கிறான். கால்களை நனைத்திருந்த பெண், அச்சத்துடன் பிரெஞ்சு மொழியில் « கடவுளே ! ஒரு எருமை மாடு ! » என்று கூச்சலிட்டுக்கொண்டு மூச்சிறைக்க படிகளில் இரண்டிரண்டாக ஏறுகிறாள். அவளைத் தொடர்ந்து மொத்தக்கூட்டமும் மேலே ஓடிவருகிறது.
நடந்த தைப் பார்த்த ஆராவமுது, நாடார்கடையிலிருந்து ஓடி வருகிறார். « மதாம் அது எருமை மாடல்ல , மனுஷந்தான் . அங்க பாருங்க », எப்போதோ படித்த பிரெஞ்சைக்கொண்டு இவர் பதில் சொல்ல, கூட்டம் மொத்தமும் தண்ணீரிலிருந்து எழுந்த மனிதனை கேமராவில் அதிசயமாக கிளிக்கிட்டுகொண்டு இவருக்குத் திரும்ப திரும்ப நன்றி என்றது. ஆனாலும் எலிசபெத் ஜாடையிலிருந்த அப்பெண்மணியிடம் இவர் மனம் தடம் புரண்ட இரயிலாயிட்டுது.
கல்யானத்துக்கு முன்னே எப்படியோ ருக்குமணியைக் கைப்பிடிச்ச நாள்முதல் கிழவர் ஆராவமுதன் ஏகப்பத்தினி விரதனாகத் தான் இருந்தார். அந்நிய நாட்டுப் பெண்டுகள் வாடை கூடவே கூடாதுண்ணு மூக்கை பிடிச்சுக்கிட்டு நடந்த மனுஷன். ஐம்பதுகளின் கனவுக்கன்னி டி. ஆர் ராஜகுமாரியோ, அறுபதுகளில் பிரகாசித்த நாட்டியப் பேரொளியோ, கன்னடத்துப் பைங்கிளியோ ஏற்படுத்தாத ‘லப் டப்’ஐ அந்த பிரெஞ்சு பெண்மணி ஏற்படுத்தியிருந்தாள்.
மறுநாள் தெப்பக்குளம் பக்கமிருக்கிற நாடார் பாத்திரக்கடை இரவல் கொடுத்த தினத்தந்தியில் வெள்ளித் திரையும், குருவியார் பதில்களையும் படிக்க ஆரம்பிச்சவர் கவர்ச்சிப் படங்களைப் பார்த்து கடலை போட ஆரம்பித்தார், விட்ட ஜொள்ளில் தெப்பகுளம் வழிஞ்சிஓடுது, கோவில் வாசலில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த கொழுப்பு கோவாலு, பதறிபோய் வடையைபார்த்த எலிபோல ஓடிவந்தான்.
« இன்னா நைனா ! இளமை திரும்புதா,. நம்ம பசங்க நெட்-சாட் சொல்லிட்டு கம்ப்யூட்டர்ல்ல டாவு அடிக்கிறானுவ, படா படா புஇகருங்களெல்லாம் சுலபத்துல கவுத்திடுதாம், சேந்துகிறியா ? », என்று சொன்னவன் மாறு நாள் நல்லநேரமாகப் பார்த்து மீசைவைத்த ஒருவர் நடத்துகிற சைபர் டீஸ்டாலில் கொண்டு விட்டான்.
சுற்றிலும் நெட் சாட்டில் டயலாக் விடும் பையன்களையும் பெண்களையும் பார்க்க பெரியவருக்கு ஏதோ குட்டிச் சாமியார் அந்தஸ்து கிடைச்ச சந்தோஷம். கட கடவென்று தட்டுகிறார். கம்ப்யூட்டர் திரையில் « ஹாய்l » என்றழைத்துக்கொண்டு ஒரு குரல் எழுத்துகளாய் வந்து விழ இவரது கனவு சொய்ங் என்று மேலே போகிறது.. « ஹாய்.. » எனப் பதிலுக்குத் த்ட்டுகிறார்.
ஐ..ம் ரெய்ன், நீ ?
இவருக்கு டக்கென்று என்ன தட்டுவதென புரியவில்லை.
ஐ..ம் தண்டர், என்று தட்டிவிட்டு, ரெய்ன் எங்கிருந்து ? என்று கேட்டார்.
நிலாவிலிருந்து…
உண்மையைச்சொல்லு ? -இவர்.
அமெரிக்காவிலிருந்து-நீ ?
நான் சென்னை, இந்தியா.
ஆணா பெண்ணா ?
ஆண், நீ ?
பெண், எனக்கு இருபது, உனக்கு ?
பதினெட்டு
பொய்சொல்லாதடா பையா, ஒரு ஐம்பதைக் கூட்டிக்கிலாமா ?
இரண்டு பேருக்குமேயா ? கொழுப்புக் கோவாலைக் கேட்டுச் சொல்றன்.
எனக்கு மீசைபிடிக்காதுண்ணு சொல்லவ்ந்தேன் … பைதிபை உனக்கொரு சர்ப்பிரைசிங் நியூஸ்..
என்னது ?
டாலிங்.. அடுத்த மாதம் இந்தியாவுக்கு டூர் வரேன், உன்னை பார்க்கணும், கேன் ஐ ?
ஆராவமுது மனசுக்குள் பட்டாம்பூச்சி பிடித்து விளையாடுகிறார். ருக்குமணிக்குத் தெரியாமல் மெரினாவில் அவளோடு ஐஸ்கிரீம் சாப்பிடுவது போல கற்பனை செய்து பார்த்தார். தப்பில்லை, காட்சி நன்றாக வந்தது. ஆனால் மெரினாவிற்கு போவதற்கு முன்னால் மறக்காமல் ருக்குமணியிடம் துட்டு கேட்டு வாங்கி போகணும்.
என்ன பதிலையே காணோம் இந்தியாவிற்கு வந்தால் உங்களை பார்க்கலாமா இல்லையா ?
உன்னை விட எனக்குத்தான் அதில் சந்தோஷம் ஹனி !
ஆனால் ஒரு கண்டிஷன்
என்ன பிளைட் டிக்கெட்டை நான் எடுத்துக் கொடுக்கணுமா ?
அவசரப்படாதே டார்லிங் !… எனக்கு மீசைன்னா அலர்ஜி இந்தியா வரும்போது உன் முகத்தில் நான் மீசையை பார்க்கக் கூடாது. இதற்கு சம்மதம்னா அடுத்த மாதமே புறப்பட்டு வந்துடுவேன். என்ன சொல்ற ?
அவள் டார்லிங்னு சொல்லிட்டு மீசை எடுத்துச் சொன்னது, எம்பி சீட்டை விட்டுக் கொடுத்தா, ராஜ்யசபா சீட்டை கொடுப்போம் என கட்சி மேலிடங்கள் சொல்வது போல இருந்தது.
நீ இந்தியா வருவது உண்மைன்னா மீசை எடுத்திடறேன்.
ஷ்யூர்.. ஷ்யூர்.. !
எப்போ வற ?
அடுத்த மாதம் 12ஆம் தேதி. சென்னை ஏர்போர்ட்டில் இரவு 2 மனிக்கு காத்திருங்க. லூப்தான்சவுல வறேன்.
எப்படி உன்னை அடையாளம் வச்சிகிறது ?
பயப்படாதீங்க அதை நான் பார்த்துப்பேன், பை.., அடுத்த வினாடி செய்ங் என காணாமல் போய்விட்டாள்.
ஆராவமுதுக்கு குழப்பமாக இருந்த து. ச்சே…ருக்குமணியிடம் காட்டிய பாச்சா இந்த அமெரிக்க பெண்மணியிடம் நீட்சாவாகி போனதில் மனிதர் நொந்து போனார். கொழுப்பு கோபாலிடம் கலந்து ஆலோசித்தார் அவன் இடியாப்பமும் பாயாவும் வாங்கிக் கொடுத்து புஷ் முஷ்ரஃப் ஸ்டைலில் தாஜா செய்தான்.
இன்னா தொரை உனுக்குப் பொய்க்கத் தெரியலையே, ஒரே கல்லிலே ரெண்டு மாங்கா. அதாம்பா லெஃப்ட்ல அமெரிக்கா ரைட்ல இந்தியா, கலக்கீடீம்மா. இந்த காலத்துல தமிழனுக்கு அடையாளமே ரெண்டு பொண்டாட்டிங்கிறதை மறந்துட்டியே நைனா ! ஜாம்… ஜாம்னு மீசையை எடுத்துட்டு வா, அல்லாத்தையும் நான் பார்த்துக்கிறன்.
நெட் சாட் பெண்ணை வரவேற்க ஆராவமுது ஏர்போர்ட்டிற்கு வந்தபோது இவரது தர்மபத்தினி ருக்குமணியும் அங்கே வந்திருந்தாள். இவள் எங்கே வந்தாளென யோசித்தார். கொஞ்சம் ஒதுங்கி நின்று கவனித்தார். லூஃப்தான்சா பயணிகள் வெளியில் வந்தனர். பயணிகளிடையே இவர் மைத்துனன் ருக்குவின் தம்பி வெங்கட்ராகவன். கடன் காரன், இவனெப்படி இங்கே ? போதாக்குறைக்கு இப்போது சாதாம் உசேன் மாதிரி வேற.
தமக்கையும் தம்பியமாக இவரை நோக்கி வருகிறார்கள் அவர்களோடு கொழுப்பு கோபால் வேறு.
என்ன அத்திம்பேர் அப்படி பார்க்கிறேள், மீசையோடு என்னை அடையாளம் தெரியலையா ?
பிரான்ஸ் காஃப்காவின் ‘வழக்கு”(Der Prozess- The Trial) புனைகதையின் நாயகன் ஜோசெப் K. போன்றே, நாவலின் மூலாதாரமான கையெழுத்து பிரதியும் விநோதமான வழக்கில் சிக்குண்டு தவிக்கிறது. ஏவா ஹோப் என்ற டெல் அவிவ் (Tel Aviv) நகரவாசியான பெண்மணியின் வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு பின்னிரவு ஒருமணி அளவில் அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்திருக்கிறது. ‘வீட்டிற்குள் திருடனிருக்கிறான் உடனே வரவேண்டும், என்ற பதட்டக் குரலை நம்பி சைரன் சகிதம் காவல்துறையினர் வந்திறங்கியபோது திருடவந்தவன் மாயமாய் மறைந்திருந்தான். திருமதி ஏவா ஹோப் வீட்டில் நுழைந்த கள்வனுக்குப் பொன்னோ பொருளோ நோக்கமல்ல. பின்னே தமிழ் மரபில் திருடவந்தது இதயத்தை என்றெல்லால் கற்பனை வேண்டாம், ஏனெனில் பெண்மணிக்கு 72 வயது. களவாணிப்பயல் பின் எதற்காக வந்தான் எனக் கேட்கிறீர்கள் இல்லையா? இந்த எண்ணம் உள்ளூர் பொலீசாருக்கும் வந்திருக்க வேண்டும். பெண்மணியைக் கேட்டிருக்கிறார்கள். கிடைத்த பதில்: காஃப்காவின் எஞ்சியிருக்கிற கையெழுத்து பிரதிகளை திருட வந்திருக்கலாம் என்பது. திருமதி ஏவா ஹோப், காஃப்கா விட்டுச்சென்ற எழுத்துக்களின் இன்றைய வாரிசுதாரர்.
செக்நாட்டைச் சேர்ந்த நண்பரும் எழுத்தாளருமான மாக்ஸ் ப்ரோடிடம்(Max Brod) முடிக்கப்படாத தமது ‘The Trial’ நாவலின் கையெழுத்து பிரதியை, காஃப்கா இறுதிக்காலத்தில் ஒப்படைத்திருந்தார். மாக்ஸ் ப்ரோட் அப்பிரதியைப் தமது பெண் செயலாளருக்குப் பரிசாகக் கொடுத்தார். எஸ்த்தெர் ஹோப் என்ற பெயர்கொண்ட அப்பெண்மணி பின்னாளில் தமது பெண்களுக்கு உரிமைசெய்து ஆவணப்படுத்த அவர்களில் ஒருத்தி 1988ம் ஆண்டு ஜெர்மன் அரசாங்கத்தின் நூலகத்திற்கு நல்ல விலைக்கு விற்றார். ஆக தற்போது ஜெர்மன் நாட்டில் மார்பக் அம் நெக்கர்(Marbach am Neckar) நகரின் நூலகத்தில் அது பாதுகாப்பாக இருக்கிறது. காஃப்காவும், மாக்ஸ் ப்ரோடும் நெருங்கிய சினேகிதர்கள். காசநோயில் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் காஃப்கா, 1824ஆம் ஆண்டு இறந்தபோது, நூலின் கையெழுத்துப் பிரதியை தாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எரித்துவிடுவாரென மனமார நம்பினார். நண்பரிடம் அதற்கான உறுதிமொழியைக் காஃப்கா கேட்டுப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. காஃப்காவின் இறுதி ஆசையை நண்பர் நிறைவேற்றவில்லை. 1939ம் ஆண்டு பிராகு (Prague) நகரம் நாஜிப் படையினரால் கைப்பற்றபட்ட நிலையில் அங்கிருந்து தப்பிய காஃப்காவின் நண்பர், எஞ்சியிருந்த காஃப்கா படைப்புகளை மறக்காமல் உடன்கொண்டுசென்றிருக்கிறார். மாக்ஸ் ப்ரோடு 1968ம் ஆண்டு இறந்ததும் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல காஃப்காவின் கையெழுத்து பிரதிகள் அனைத்தும் அவரது விருப்பப்படி எஸ்த்தெர் ஹோப் என்ற செயலாளரை அடைகின்றன. அவரது இறப்புக்குப் பிறகு, செயலாளர் பெண்மணியின் மகள்களிருவரும் காஃப்கா படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.
காஃப்கா எழுத்துக்களின் தற்போதைய வாரிசுதாரர் இஸ்ரேலிய பிரஜை. ‘ஜெர்மன் வசமிருக்கும் ‘The Trial’ புனைவின் கையெழுத்துப் பிரதியை, தம்மிடம் ஒப்படைக்கபடவேண்டுமென இஸ்ரேல் நாட்டு தேசிய நூலகம் அணமையில் கேட்டுக்கொண்டுள்ளது. ‘ஆவணப் பாதுகாப்புச்சட்டத்தின்படி தகுந்த வகையில் கையெழுத்துப் பிரதி முன்னதாக அரசின் பரிசீலனைக்கு உட்படுத்தபட்டு அவற்றிலுள்ள வரலாற்று தகவல்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும், அது தவிர ஆவணத்தின் முக்கியத்துவம் கருதி, பாதுகாப்பிற்காக வேண்டிய நகல்களை எடுத்தபின்பே கையெழுத்துப்பிரதியை வெளியிற் கொண்டு சென்றிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறெதுவும் செய்யப்படாமலேயே ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதி விற்கப்பட்டிருக்கிறதென்பது இஸ்ரேல் சொல்லும் காரணம். ஆனால் காஃப்கா யூதரேத் தவிர இஸ்ரேலியரல்ல, தாய்மொழியும் ஜெர்மன். காஃப்கா படைப்புகள் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டன, எனினும் இஸ்ரேல் நாட்டின் தேசிய நூலக இயக்குனர் Shamuel Har Noy, அந்நூலிலுள்ள சில வரலாற்று பிழைகள் திருத்தப்படவேண்டுமென்கிறார். காஃப்காவின் நண்பரான ப்ரோடுவின் இறுதி விருப்பத்தை முன்வைத்தும் இயக்குனர் சிலபிரச்சினைகளை எழுப்புகிறார். காஃப்காவின் பிற கையெழுத்துப்பிரதிகளைப் பற்றிய ப்ரோடுவின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்க அவர் விரும்பியதில்லையெனவும், இஸ்ரேலைத் தவிர வேறு நாட்டிற்கு மூலப்பிரதி கொண்டுசெல்லப்படுவதை ஒருக்காலும் அவர் ஏற்கமாட்டாரென்றும் சாதிக்கிறார். ப்ரோடுவின் இறுதிவிருப்பமென்று எழுதப்பட்டுள்ள உயிலை அவரவர்க்கு விருப்பமான வகையில் பொருள்கொள்ள முடியுமென்கிறார்கள். கையெழுத்துப்பிரதியின் தற்போதைய உரிமையாளருடைய வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? 1974ம் ஆண்டு உரிமையாளர்களுக்கிடையேயான குடும்ப வழக்கில் டெல் அவிவ் நகர (இஸ்ரேல்) நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்: ப்ரோடு, வாரிசுதாரர்களுக்கு காஃப்கா உடமைகள் குறித்த வழிகாட்டுதல்கள் எதையும் உயிலில் தெரிவிக்கவில்லையென்றும், காஃப்காவின் படைப்புகளை விருப்பம்போல கையாள வாரிசுதாரருக்கு(எஸ்த்தர்ஹோப்- பின்னர் அவர் மகள்கள்)உரிமையுண்டெனவும் கூறியுள்ளதை அவர் நினைவூட்டுகிறார். 1988ம் ஆண்டு லண்டனில் எஸ்த்தர் ஹோப்பின் மகள்களிருவரும் ஏலவிற்பனையில் கலந்துகொண்டு ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்கமுனைய ஜெர்மன் அரசாங்கம் 1.98 மில்லியன் டாலர்கொடுத்து அதை வாங்கியுள்ளது. இந்நிலையில் தமக்கு(ஜெர்மன் நாட்டிற்கு) ஒருக்காலும் கையெழுத்துப் பிரதியை இஸ்ரேல் அரசாங்கத்திடம் திருப்பித் தரும் எண்ணமில்லையென தெளிவாக அறிவித்திருக்கிறது. நவீன இலக்கிய உலகில் ஓர் படைப்பாளியின் கையெழுத்துப் பிரதிக்கு இவ்வளவு விலைகொடுத்து வாங்கபட்டதற்கு வேறு சான்றுகளில்லை. இந்த விற்றல் வாங்கல் விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டவருடையக் கூற்றின்படி 4மில்லியன் டாலர்வரை காஃப்காவின் கையெழுத்துப் பிரதிக்கு ஜெர்மன் அரசாங்கம் கொடுக்க அப்போது தயாராக இருந்திருக்கிறது.
1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டிலுள்ள நூலகமொன்றிர்க்கு காஃப்காவின் வேறுசில கையெழுத்துப் பிரதிகளை, (The castle, America…) மாக்ஸ் ·ப்ரோடு தானமாக வழங்கியிருந்தபோதும், ”The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை அவ்வாறு கொடுக்கவில்லை என்பதை நினைவுகூர்தல் வேண்டும், காரணம் காஃப்கா அதனை தமது இலக்கிய நண்பருக்கு பரிசாகக் கொடுத்திருந்தார். ‘The Trial’ ‘ கையெழுத்துப் பிரதி விற்கப்படுவதற்கு முன்பாக காஃப்கா தமது சினேகிதியான ·பெலிஸ் போயருக்கு(Felice Bauer) எழுதிய 327 கடிதங்களை 1987ம் ஆண்டு எஸ்த்தர் ஹோப் 550 000 டாலருக்கு விற்றிருந்தார். 2007ல் எஸ்த்தர் ஹோப் இறந்தபோது காஃப்காவின் எழுத்துக்களென மாக்ஸ் ப்ரோடு விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான கையெழுத்துப்பிரதிகள் கடிதங்களாகவும், ஆவணங்களாகவும், படைப்புகளாகவும் அவரிடம் இருந்திருக்கின்றன. இன்று அவற்றின் தலைவிதி கேள்விக்குறியாகியிருக்கிறது. ஓர் இலக்கியவாதியின் கையெழுத்துப்பிரதிகள் என்ற குறியீட்டை இழந்து, கார்ல் மார்க்ஸ் வர்ணிப்பதுபோல விற்பனை சரக்காக, அதாவது சரக்குகளெனில் அவை புலன்களால் உணரமுடிந்தவை உணரமுடியாதவையென்ற இரு பிரிக்கவியலாத பண்புகளைக்கொண்ட சமூகப் பொருளாக(social thing) மாறி உள்ளதெனலாம். ‘உருமாற்றம்’மென்ற சிறுகதையை எழுதிய காஃப்காவுக்கு இந்த விதிப்பொருத்தம் நிகழ்ந்திருப்பதுதான் வேடிக்கை. தவிர எஞ்சியுள்ள காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் இன்றைய தினம் அவற்றின் நிறத்தையும் குணத்தையும் இழந்து துண்டாடப்பட்டு விற்கபடுவதாகவும் கேள்வி. ஏனெனில் அவற்றில் அக்கறைகொண்டு முறையாக வரிசைபடுத்த மாக்ஸ் ப்ரோடு இன்றில்லை. தவிர எதற்காக வெளிப்படையாக விற்பனையில் இறங்கி தேவையற்ற வழக்குகளை சந்திக்கவேண்டுமெனவும் உடமையாளர்கள் நினைக்கிறார்கள்.
இப்பிரச்சினையில் காஃப்காவின் நண்பர் மாக்ஸ் ப்ரோடை குறை சொல்ல ஒன்றுமேயில்லை. ப்ரோட் இல்லையெனில் இன்றைக்கு காஃப்காவைக் குறித்து நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. காஃப்காவின் நாவல்கள் மூன்றுமே அவரது இறப்பிற்கு பின்னர் நண்பரின் முயற்சியால் பதிப்பிக்கப்பட்டவை. இஸ்ரேலிய சஞ்சிகையான Haaretz தரும் தகவலின்படி எஸ்த்தர் ஹோப் இறந்தபோது அவர் வசமிருந்த கையெழுத்துப் பிரதிகளில் முக்கியமானவை ஏற்கனவே பிரசுரமாகியிருப்பினும், எஞ்சியிருப்பவைகளும் அலட்சியப்படுத்தக்கூடியவைகளல்ல. காஃப்காவின் சொந்தவாழ்க்கைப் பதிவுகள், இலக்கிய தடங்கள், வரலாற்று சாட்சியங்கள் என அப்பட்டியல் நீள்கிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய வளம் மற்றும் வளாகத்தைப்போல உலகத்தின் பொதுசொத்தாக அறிவித்து பாதுகாக்கப்படவேண்டிய காஃப்காவின் இலக்கிய சாட்சியங்கள் இரகசியமாக வங்கிப் பெட்டகங்களிலும், பிற இடங்களிலும் உரிய பராமரிப்பின்றி கரப்பான்களுக்கும் செல்லரிப்புகளுக்கும் இரையாகின்றனவே என வருந்துகிறவர்களும் உண்டு.
இறுதியாக ”The Trial’ ‘ நாவலைக்குறித்து எழுதாவிடில் இக்கட்டுரை நிறைவடையாது. நாவலுக்கான சமிக்கைகள் 1914லியே தெரிகின்றன. காஃப்கா இப்படியொரு நாவலை எழுதவிருக்கும் எண்ணத்தை தமது சஞ்சிகையொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தமது நெருங்கிய சிநேகிதியான பெலிஸ் போயர் உறவில் ஏற்பட்ட கசப்பு, நாவலை அலைக்கழித்திருக்கிறது. ஒரு பகுதியை முடிக்காமலேயே இன்னொன்று பிறகு வேறொன்றென எழுத்தாளரின் மனநிலை நாவலோடு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறது. பலமுறை நாவல் திருத்தப்பட்டிருக்கிறது. 1917ம் ஆண்டு இரண்டாம் முறையாக பெலின்போயரோடு ஏற்பட்டக் கசப்பு நாவலை வெகுவாகப் பாதித்தது. 1924ம் ஆண்டு காஃப்கா இறந்தபோது ”The Trial’ நாவலின் தலைவிதிக் கேள்விக்குரியதாகவே இருந்திருக்கிறது. ”என்னவோ எழுதினேன், புத்தகமாக்க விருப்பமில்லை” என்பதுதான் காஃப்கா தெரிவித்தது. 1925ம் ஆண்டு நண்பரின் விருப்பத்துக்கு மாறாக மாக்ஸ்ப்ரோடு பதிப்பிக்க விரும்பினார், எனினும் அதற்காக அவர் பட்ட சிரமங்கள் அதிகம். முதலாவதாக அங்கொன்றும் இங்கொ¡ன்றுமாகவிருந்த அத்தியாயங்களை வரிசைபடுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, அடுத்து முடிக்கப்படாத பத்திளையெல்லாம் நீக்கினார். தவிர நூலாசிரியரும் பதிப்பிக்க முயன்ற நண்பரும் யூதர்களென்ற உண்மை பதிப்பாளர்களுக்குக் கசந்தது, நிராகரித்தார்கள். ஆக மொத்தத்தில் இன்றிருக்கும் நாவல் ·ப்ரோடுவின் புரிதலுக்கேற்ப, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் காலவரிசையைக் கணக்கிற்கொண்டு கட்டமைக்கப்பட்ட நாவல். காஃபாவின் நண்பர் மிகச் சிரத்தையுடன் கண்ட வெற்றி.
எல்லா நாவல்களையும்போலவே ‘The Trial’ உண்மையும் புனைவும் சம விகிதத்தில் சொல்லபட்ட ஒரு நாவல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால மனிதரையும், அவரது சமூகத்தைப் பற்றியதுமான விமர்சனமென்றாலும், இந்த நூற்றாண்டுக்கும் பொருந்தும். உலகில் அறுபடாத பண்புகளாகிப்போன அபத்தமும், சூதும், உருவாக்குகிற புதைமணலில் நித்தம் நித்தம் சிக்கித்தவிக்கும் நாதியற்றவர்களின் குரல் நாவல் முழுக்க ஒலிக்கிறது. நாவலின் பெரும்பகுதி ஆசிரியரின் சொந்தவாழ்க்கையின் எதிரொலி. கதைமாந்தர்கள் அவர்கள் பெயரில் முதல் எழுத்தால் சுட்டப்படுகிறார்கள் ‘Nouveau roman’ வரிசையில் எழுதபட்ட படைப்பிலக்கியங்களில் காஃப்காவைப்போலவே பல படைப்பாளிகள் இம்முறையை கையாண்டிருக்கிறார்கள். தமிழிலும் சுந்தர ராமசாமி தமது பாத்திரங்களின் சர்வ வல்லமை குறியீடாக ஒற்றை எழுத்து நாமகரணத்தை அரங்கேற்றியிருக்கிறார். வழக்குவிசாரணையின் நாயகன் கே. அசாதரணமானச் சம்பவமொன்றின் சாதாரணமனிதன். இங்கே மேலே குறிப்பிட்ட சர்வ வல்லமை என்பது முட்டை ஓடுபோல. உண்மையில் இவர்கள் பலவீனமானவர்கள், ஒருவித போலிகள்-பாசாங்கு மனிதர்கள்- They’re all impostures – விழுந்தால் நொறுங்கிப்போகும் சராசரிமனிதர்கள். காஃபாவைப்போலவே நாயகன் Kவும் மனப்பாதிப்புக்கு உள்ளானவன், அவனுடைய தவிப்பும் கலக்கமும் காஃப்காவுடையது. ஒருமுறை குஸ்த்தாவ் ஜானுக்(Gustav Janouch) என்ற நண்பரிடம் காஃப்கா, தன்னுடைய தனிமை மிகக்கொடியதென்றும் காஃப்காவைத் தவிற வேறு எவருடைய தனிமையுடனும் அதனை ஒப்பிடமுடியாதென வேடிக்கையாகக் கூறியதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும். குறிப்பாக பெலிஸ் போயர் இல்லா வெறுமை ஊமுட்களாகக் குத்த, முகந்தெரியாத எதிரியிடம் மோதி உருக்குலையும் எரிச்சலில் ”Our enemy feeds on the blood we lose. He gnaws our heart, and look how strong he grows'(The Enemy) என்ற பொதுலேரின்(Baudelaire) எதிரொலிக்குரலை நாவலில் கேட்க முடிகிறது. அத்தனிமை கிணற்றில் விழுந்து குரலெடுத்துக் கதறும் பசுபடும் துன்பத்தைக் கண்டும் சொல்லவியலாமற் தவிக்கும் ஊமையனுக்கு நிகரானது – ‘கூவல் குரால்ஆன் படுதுயர் இரவில் கண்ட உயர்திணை ஊமன்போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே!(குறுந்தொகை-224)
‘The Trial’ உண்மையில் ஓர் விநோதமான வழக்கு. அல்பெர் காம்யூவின் அந்நியன் நாயகன் அபத்தத்தின் போக்கிற்கு இணங்கி தனக்கான முடிவினை எதிர்பார்த்து நீதிவிசாரணைக்கு உட்படுபவன். இங்கே ஜோசெப்.கே அதாவது காஃப்காவின் ”The Trial’ கதை நாயகன், அபத்தத்திற்கு முரண்பட்டு, தனக்கான முடிவு எதுவென்று அறியாமலேயே விசாரணைக்கு உட்படுகிறான். அந்நியன் நாயகன் விலங்கிடப்பட்ட நான்கு சுவர்களுக்குள் நிறுத்தபட்ட ஒரு கைதியெனில் காஃப்காவின் நாயகன் ஒருவகையான எதிர்மறை சுதந்திரத்திடன் (Negative Liberty) தினசரிவாழ்க்கையைத் தொடர அனுமதிக்கபட்டு வழக்கைச் சந்திக்கக் கேட்டுக்கொள்ளபடுபவன். ஜோசப் கே. வங்கியொன்றில் அதிகாரி. விடுதியொன்றில் தங்கி தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இந்த நூற்றாண்டின் சராசரி மனிதர்களான நம்மில் ஒருவன். அன்றைய தினம் ஜோசெப் கேவுக்கு 30வது பிறந்த தினம். வழக்கம்போல விழித்தவனைத்தேடி சனிதிசை காவலர்கள் வடிவில் வருகிறது. அறைக்குள் நுழையும் காவலர்கள், கைது செய்கிறார்கள். விசாரனைக்கு அழைத்துபோகிறார்கள். செய்த குற்றமென்ன ஜோசெப் கே யோசித்துப் பார்க்கிறான். எந்தக்குற்றமும் எதன்பொருட்டும், யாருக்காவும் இழைத்ததாக நினைவில்லை. அவனைக் கைது செய்தவர்களுக்கேனும் அவன் செய்த குற்றம் தெரியுமா, தெரியாதென்கிறார்கள். மேலதிகாரத்தின் கட்டளையை நிறைவேற்றினேன் என்கிறார்கள்.
– உங்கள் அறையை விட்டு எங்கும் போகக்கூடாதென்று பிரான்ஸ்(மற்றொரு காவலதிகாரியின் பெயர்) சொல்லியிருப்பாரே? உங்களை கைது செய்திருக்கிறோம்.
– புரியுது, ஆனால் எதற்காக என்னை கைது செய்திருக்கிறீர்களென்பதுதான் விளங்கலை.
– கே. சொல்வதிலும் நியாயமிருக்கிறது
– இங்கே பாருங்க என்னைப் பற்றிய தகவல்களெல்லாம் இந்த பேப்பரில் இருக்கின்றன..
– இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம். இவற்றைக் காட்டி விசாரணையிலிருந்து தப்பி விடலாமென்று மட்டும் நினைத்திடவேண்டாம். இவ்விடயத்தில் எங்கள் தரப்பில் எந்தத் தப்புமில்லை. மேலிடத்து உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறோம், அவ்வளவுதான். பத்துமணிநேரம் காவலில் வைத்திருக்கவேண்டும், எங்களுக்குச் சம்பளமும் அதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. இங்கே தப்பு எக்கட்டத்திலும் நிகழவில்லையென்றும் எங்களுக்குத் தெரியும், என்ன செய்வது. இது நடந்தாக வேண்டும். எங்கள்(துறையின்) பணி மக்கள்கூட்டத்திலே கலந்திருக்கிற குற்றத்தைப் பொறிவைத்து பிடிப்பதல்ல, மாறாக குற்றம் எங்களைத் தேடி வருமாறு பார்த்துக்கொள்வது, எங்கள் விதிமுறை அப்படி.(1) ———————————————————————–
1. The Trial – Le Proces – Franz Kafka நாவலின் பிரெஞ்சு நாடகவடிவத்திலிருந்து எடுத்தாளப்பட்ட உரையாடல். நாடகமாக்கம் Alain Timar.
பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர்பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமும் அக் கட்டிடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது.. தடித்தக் கண்ணாடியின் கீழ் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு பச்சை பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டிடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாக கையில் வாங்கிய வேகத்தில் மதுவை தொண்டைக்குழிக்கனுப்பி குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர்.
அந்தப்பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக்கால ரயில்கள் போல வீறிட்டுக்கொண்டு சீழ்க்கையொலி. பண்டிகைக்கால குடைராட்டினம் தூவிய கூச்சலும் சீழ்க்கையொலியும் கேட்டுமுடித்த சிலநொடிகளில் கொட்டும் பனியில் நமத்துப்போனது. குதிரை, ஆனை, ஆகாயவிமானம்மென்று வகைவகையான இருக்கைகளில் அமர்ந்த சந்தோஷத்தில் பிள்ளைகள் எழுப்பிய குரல்கள், ஓசைக்கு வண்ணம் பூசிகொண்டு சிரித்தன. ‘பப்பா..!பப்பா என்ன செய்யறேன் பாருங்க! பிடித்திருந்த கையை சட்டென்றி விலக்கி சிறுமி கலகலவென்று சிரித்தாள். சிறுமியின் தகப்பன், ‘வேண்டாம் வேண்டா’மென பதறுகிறான். இங்கே பாரு! அம்மா விமானம் புறப்பட்டுவிட்டது!- ஒரு சிறுவன். ‘எனக்கு இந்த குட்டி ஆனைவேண்டாம்! அதோ அந்த பெரிய ஆனையில்தான் உட்காருவேன்’.. ம்..ம்.. .மற்றொரு சிறுவன். ‘இந்த முறை போயுட்டுவா, அடுத்த முறை அதிலே உட்காரலாம்! தாயின் சமாதானம். கப்ரியேல்! பிடியைக் கெட்டியாப் பிடிச்சுக்கோ’, பேரப்பிள்ளைக்கு வாஞ்சையுடன் கட்டளையிட்டுவிட்டு, மனதில் அரும்பிய சந்தோஷத்தை காலம் சிதைத்திருந்த முகத்தில் வெளிப்படுத்தும் பாட்டி. பஞ்சுபோன்ற தலை கூன்போட்ட முதுகு வயது எண்பதுக்குக்குக் குறையாமலிருக்கலாம். குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள போதுமான ஆடைகளில் தாத்தாக்கள், பாட்டிகள், பெற்றோர்கள், சிறுவர்கள். தலையில் அன்னாசிபழத்தைக் குடைந்து கவிழ்த்ததுபோன்று சிறுவர் சிறுமியர் தலையில் வண்ணமயமான கம்பளிக்குல்லாய்கள். கழுத்தை அரவம்போல சுற்றிக்கொண்டு கம்பளி இலேஞ்சி.
மனதில் ஈரபூமியில் பரவும் நீர்போல சிந்தனைகள். கடந்ததைத் திரும்பிப்பார்க்கிறபொழுது ஒரு நாள் மற்றநாளோடு ஒட்டமாட்டேன் என்கிறது, இத்தனைக்கும் எல்லா நேரமும் நாட்களும் புறத்தில் சமமதிப்புகொண்டவை போலத்தான் தோற்றம் தருகின்றன. யுக தர்மத்தின் கரைகளுக்கடங்கியே காலப்பிரவாகம் சுழித்து ஓடுகிறது. அகத்தில் பேதங்களற்றதென்று எதுவுமில்லை. நேற்றைய உறவுகள் மேடை இறங்கியதும் வேடத்தைக் கலைத்துகொண்டன. வேறு தயாரிப்புகளோடு புதிய ஒப்பந்தம். புதியகதை, புதிய இயக்குனர், புதிய ஒப்பனையென பிரிந்துபோயாயிற்று. பிடித்த காட்சிகள் ஓரிப்பிடிக்கும் விளையாட்டில், உடலை ஸ்பரிசிக்கும் சினேகிதர்கள்போல சீண்டுவதும் பின்னர் நழுவி கெக்கலி கொட்டுகின்றன. உண்டது, விளையாடியது, உறங்கியதென ஒரேகூரையில் ஒரே புள்ளியில் நடந்தவைகள் அவரவர் குடும்பம், அவரவர்பாதை என்றான பிறகு ஆளுக்கொருதிசைநோக்கிய பயணம். அக்காளிடமிருந்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுப்புப்பிறகு கடிதம் வந்திருந்தது: “அண்ணன்களிடம் பேசிபார்த்தேன். நமக்கு ஒரு செண்ட்கூட தரமாட்டார்களாம். எங்க வீட்டுக்காரர் கோர்ட்டுக்குப் போவதென்று பிடிவாதமாக இருக்கிறார். நாம் இரண்டுபேரும் சேர்ந்து செய்யவேண்டிய விஷயம். இத்துடன் அனுப்பியுள்ள பாரத்தை நிரப்பி..”
பாண்டி அக்கா எங்கே இந்தப் பக்கம்? பழக்கப்பட்ட குரல். இத்தனை கம்பீரமாக தமிழ்க்குரலெடுத்து அழைக்கிறவர்கள் கல்யாணியைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். கவனத்தையும் தலையையும் சேர்த்தே திருப்பினாள். வணக்கம்! கறுத்தமுகத்தில் வெண்ணிறபற்கள் பிரகாசிக்க சிரிக்கும் கல்யாணி. நீண்ட குளிர்காலத்துக்கான கறுப்பு ஜாக்கெட். தோளில் தொங்கவிடப்பட்டிருந்த தோலினாலான பையின் நிறமும் கறுப்பு. அது முழங்கையின் அ¨ணைப்பில் கிடந்தது. இடதுகையால் நாப்கின் கொண்டு மூக்கை அடிக்கடித் துடைத்துக்கொண்டிருந்தாள். ஈழத்துப்பெண்மணி, தைரியசாலி. இவளைக்காட்டிலும் வயதில் நான்கைந்து ஆண்டுகள் மூத்தவளென்றாலும் அவளுக்கு இவள் அக்காள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேருந்தொன்றில் சந்தித்தது. இவளுடன் வெகுநேரம் உரையாடியபின், புதுச்சேரி பெண்மணியொருத்தி இறங்கிக் கொண்டதும் எதிரில் அமர்ந்திருந்தவள், “என்ன இப்படி ஆகமெல்லென கதைக்கிறீர்கள்? மிகவும் ரகசியமோ” என்று கேட்டு முறுவலித்தாள். ‘அதெல்லாமில்லை. நம்மைச்சுற்றிலும் பிரெஞ்சுமனிதர்கள். அவர்களை வைத்துக்கொண்டு தமிழில் சத்தமாகப்பேசினால் என்ன நினைப்பார்களோ? – என்ற பதிலைக்கேட்டுக் கலகலவென சிரித்தாள். ‘ஏங்க சிரிக்கிறீங்க? இவ்வளவுபேரை வைத்துக்கொண்டு உரத்து பேசினால், நம்ம தப்பா நெனைக்கமாட்டாங்களா? அவளை மடக்கிவிட்டதாக நினைத்தேன். ‘உரத்து பேசுவது தப்புதான், ஆனால் தமிழில் உரத்து பேசினால் தப்பு என்கிறமாதிரி’ உங்க பதில் இருந்தது அதனாற் கேட்டேன்’. என்ற பதிலை எப்படி எடுத்துக்கொள்வதென தெரியாமல் இவள் சிரித்து சமாளித்தாள். அதற்குப் பிறகு வெவ்வேறு கூடுகள் என்றபோதிலும், பறக்கிறபோது இவள் அமர்கிற மரக்கிளைகளைத் தேடிவரும் தற்செயல்கள் நிறையவே அமைந்தன. “அக்கா நான் வாரென், வெள்ளென போகணும். இப்போதே காமணிதியாலம் தாமதம். எங்க முதலாளிக்குப் பதில் சொல்லி மாளாது.” கையை ஆட்டிவிட்டு நடந்தாள். அவள் விந்தி விந்தி நடந்துபோனபோது, கூட்டத்தில் ஸ்கார்ப் சுற்றிய அவள் தலை உயர்ந்து அடங்குவதைக் கவனித்தாள். ஊரில் இருந்தபோது, ‘இந்திய ஆமிக்காரன்கள் ஏற்படுத்திய வடு மனதிலும் உடம்பிலும் நிறைய இருகிறதக்கா’ என்று ஒருமுறை கண்களில் நீர்பரவ கூறியிருந்தாள். அவளைப் பார்க்கிறபோதெல்லாம், தண்ணீரில் முங்கிக்கிடந்த கண்கள்போல ஒருவித குற்ற உணர்வு சிவந்த நெஞ்சை உறுத்துகிறது.
பர்தோன்’, இடித்துவிட்டு மன்னிப்பு கேட்ட வயதான பெண்மணியிடம், ‘கவனத்துடன் வர நான்தான் தவறிவிட்டேன், நீங்கதான் மன்னிக்கணும்”, என்ற இவள் பதிலை முடிக்குமுன்பே அப்பெண்மணி கூட்டத்தில் கலந் திருந்தாள். ஒவ்வொருவருடமும் கிருஸ்துமஸ்காலத்தில் தேவாலயத்தைச் சுற்றிப் போடப்படும் கடைகளைச் சுற்றி பார்க்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்த வருடம்தான் முடிந்தது. போனமாதமே ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையை அதற்கென்று ஒதுக்கியாயிற்று. ‘பிரதான சாலையின் இடப்புறமாக அமைந்திருந்தது தேவாலயத்துக்குச் செல்லும் அப்பாதை. பிரத்தியேகமாக கற்கள் பதித்து செப்பனிட்டிருந்தார்கள். அகலமான பாதை. பனியில் நனைந்திருக்கிறது. உள்ளூர் மனிதர்களைக்காட்டிலும் சுற்றுலா பயணிகளின் கால்களில் மிதிபட்டு மெருகேறிய புதுத்தேன்போல பளிச்சிட்டது. முல்லைப்பூக்கள் நிறைந்திருந்த கூடையை எடுத்துக் கவிழ்த்ததுபோல ஆகாயத்திலிருந்து பனி பொலபொலபென்று உதிர்ந்தது. காற்று வேகமாக வீசுகிறபோதெல்லாம் சிதையும் பனித் துகள்கள் திசைக்குப் பலவாக பறந்து, கடைசியில் வாழ்க்கைச் சுற்றை அறிந்தவைபோல மீண்டும் பூமிக்குத் திரும்பின. சில பூமியைத் தொட்டமாத்திரத்தில் கரைந்தும் மற்றவை தங்கள் முறைக்காகவும் காத்திருந்தன. திடீர் திடீரென்று ஆவேசமாகப் புறப்பட்டுவரும் மக்கள்வெள்ளம் அங்கே வந்ததும் நிதானம் பெற்றுவிடும். பிறகு மெல்லமெல்ல தேவாலயத்தை நோக்கி முன்னேறும். காலையில் எட்டுமணிக்கு முன்பாக வாகனங்கள் வரலாம் போகலாம். தேவாலயத்தைச் சுற்றியிருக்கிற கடைகளுக்கு தேவையான சரக்குகளை ஏற்றிவரும் வாகனங்கள் அவை. அதன்பிறகு விடிய விடிய மனிதர்கள் நடப்பார்கள். அண்ணாந்து பார்த்து கோபுரத்தின் உயரத்தைக் கண்டு பிரம்மிப்பார்கள். புகைப்படங்களில் முடிந்தமட்டும் அதன் வடிவத்தை குறுக்கிச் சேமிப்பார்கள். கோரைத்தலையும் குண்டு முகமும், கீற்றுக் கண்களும், சிறு உதடுகளுமாக சீனர்கள், ஜப்பானியர், தென் கொரியர்கள் எப்போதாகிலும் ஒன்றிரண்டு இந்தியர்களென ஆசியநாட்டவர்களைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் சுற்றுலா வாசிகள். இவ்வெண் பனிபோல திடீரென்று சரஞ்சரமாக இறங்குவார்கள், புற்றீசல்போல கலைந்து நடப்பார்கள். அவர்களுக்கு முன்னே கூட்டத்தினர் மொழியில் தலையை அடிக்கடித் திருப்பி குட்டிகுட்டி உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டு பெண்ணோ ஆணோ குடை உயர்த்தியோ அல்லது உடன்பாடு செய்துகொண்ட அதுபோன்றதொரு குறிப்பொன்றின் வழிகாட்டுதலின் கீழோ குளிரைப் பொருட்படுத்தாது நடப்பார்கள்.
போன ஞாயிற்றுகிழமை நடந்தது. காலை பதினோறு மணி. படுக்கை அவளைக் கெட்டியாக பிடித்திருந்தது. இரவு வெகுநேரம் டி.வி. பார்த்ததன் பலனாக அதிகாலையில்தான் கண்ணயர்ந்திருந்தாள். திறக்காத சன்னற் கதவும், வாயடைத்திருந்த சப்தமும் உறக்கத்தை சுகமாக்கியிருந்தது. புரண்டுபடுத்து போர்வையைத் தலைவரை இழுத்துப் போர்த்திய நேரம், தீவிபத்து நேர்ந்ததுபோல அழைப்புமணி விடாது ஒலித்து நிலவிய அமைதியைக் குலைத்து அநாவசியப் பதட்டத்தை அவளிடத்தில் உண்டாக்கியது. ஞாயிற்றுக்கிழமைகளில் இவளைத் தேடிவருகின்றவர்களென்று எவருமில்லை. மனதில் முறுகேசனாக இருக்குமோவென்று சந்தேகம். இவளைவிட்டு விலகிப்போய் ஆறுமாதங்களுக்கு மேலாகிறது. எழுந்தவள் இரவு ஆடையை சரி செய்துகொண்டாள். கைகளைப் பின்கழுத்துக்காய் அனுப்பிவைத்து த¨லைமுடியை கைகொள்ள சுழற்றிக்கொண்டையாக்கினாள். எழுந்து மின்விளக்கை போட்டபோது அழைப்புமணி இரண்டாவதுமுறையாகத் தொடர்ந்து ஒலித்தது. எரிச்சல் வந்தது. வந்திருப்பவன் முறுகேசன் என்பது உறுதியாயிற்று. “இப்படித் தட்டினால் கதவைத் திறக்கமாட்டேன்” என்று சத்தமிட்டபடியே கதவைத்திறந்தாள். குப்பென்று மதுவாடை. காலையிலேயே குடித்திருந்தான். இவளுக்குக் கோபம் வந்தது:
– எங்கே வந்த?- என்றாள்.
– இனிமே அவகூட நான் இருக்கவிரும்பலை. நாம இரண்டுபேரும் பழையபடி சேர்ந்திருக்கலாமென்று வந்துட்டேன். என்னுடைய பொருட்களெல்லாம் காரில் இருக்கிறது கொண்டுவரட்டுமா?
– வேண்டாம். அதற்கு சாத்தியமில்லை.
– சரி உள்ளே வரட்டுமா? வெளியே நிக்கவச்சு பேசற?
– முடியாது. என் பிரண்டு ஒருத்தன் உள்ளே தூங்கறான். அவனைச்சீண்டுவதற்கும், தவிர்ப்பதற்கும் சட்டென்று முளைத்த பொய் உதவியது.
– பிரண்டுன்னா
– நீங்க நினைக்கிறமாதிரிதான்.
வால் மிதிப்பட்ட நாய்போல சத்தமிட்டான்.
– தெவடியா. தெவடியா..
குடித்திருந்த அவனைக் கையாளுவது எளிதாக இருந்தது. வெளியிற் தள்ளி கதவை அறைந்து சாத்தினாள்.
இரண்டுக்கு நான்கென்ற அளவில் தேவாலயத்துக்குக்கென வழிவிட்டு இருபுறமும் மரப்பலகைகள்கொண்டு உருவாக்கபட்ட குடில்கள். கடைகள் தோறும் கிருஸ்துமஸ் பண்டிகை, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கிற்கொண்டு உருவாக்கிய லைவேலைப்பாடு பொருட்கள். ‘மெழுகுவர்த்தித் தொட்டி, உள்ளே உள்ள செடியும் பூக்களுங்கூட மெழுகுதான்”, மெல்லிய உலோகத்தகடு பாதுகாப்பிற்காக வேயப்பட்டிருக்கிறது. சாப்பட்டுமேசையில் கொளுத்திவைக்க அழகாயிருக்கும்’, விற்பனைசெய்த இளம்பெண் கையில் வண்ணத்தொட்டியை ஏந்தியபடி விவரித்துக்கொண்டிருந்தாள். அவள் விவரித்து முடித்ததும். எங்களுக்குப் பிரெஞ்சு தெரியாதென்ற பிரிட்டிஷ் தம்பதியினரின் குரலை காதில் வாங்கியபடி நடந்தாள். கைப்பையை அணைத்திருந்த வலதுகையில் குளிர்காரணாமாகக் குத்தலெடுத்தது. பையை இடது தோளிற்கு மாற்றிக்கொள்ள வலதுகை தீக்கோழிபோல கம்பளி ஆடைக்குட் பதுங்கிக்கொண்டது. “பொனே..பொனே” தொப்பி விற்கும் ஆப்ரிக்கரின் குரல். அவரது முழங்கையில் வேட்டையாடப்பட்ட கொக்குகள்போல தொப்பிகள். அவரைப் பார்க்க விநோதமாக இருந்தது. நீண்ட கழுத்தும் மஞ்சள் மூக்கும், பக்கத்திற்கொன்றாக தளரக் காலைதொங்கவிட்டபடி இறக்கையை பரத்தி அடைகாப்பதுபோல கொக்கொன்று அவர் தலையில் அமர்ந்திருந்தது. அவர் விற்கிற தொப்பியொன்றைதான் தலையில் அணிந்திருக்கிறார் என்பதை விளங்கிகொண்டதும் சிரித்துக்கொண்டாள். இரண்டாவது கடையில் முண்டியடித்துக்கொண்டு மக்கள் கைகளை நீட்டிக்கொண்டு நின்றனர். “இங்கே இரண்டு சிவப்பு ஒயின், ஒரு ஆரஞ்சு ஜூஸ் மூன்று தார்த் •பிளாம்பே”என்று ஓர் இளைஞன் தங்கள் குடும்பத்தின் தேவைகளை பட்டியலிட்டான். ‘மிஸியே உங்கள் ஆரஞ்சு பானம்!-என்று புன்னகைத்த விற்பனைபெண்ணிடம், ‘ நான் கேட்டது ஒயின்! என்று மறுத்தார் முதியவர் ஒருவர். அப்படியா? என்றவள் முனுமுனுத்துக்கொண்டே இன்னுமொரு ஒயின் கொடு என்று தனதருகிலிருந்த சக ஊழியனிடம், கட்டளையிட்டாள். அவன், ‘கொஞ்சம் பொறு எனக்கு நான்குகைகளா இருக்கின்றன?’ என்கிறான். இவள் சிரித்துக்கொண்டே வலப் பக்கமாக ஒவ்வொரு கடையாகப் பார்த்துக்கொண்டு நடந்தாள். லொரான்! லொரான்! நில்லு நில்லு! ஓடாதே!. முன்னால் ஓடுகின்ற குழந்தையைப் பார்த்துத் தாய் பதறினாள். காலை எட்டிவைத்து நடந்து குழந்தையைத் தடுத்து அதன் தாயிடம் ஒப்படைத்தாள்.
ஜிங்கிள் பெல்..ஜிங்கிள் பெல்லென்று பாட்டு வடக்கிருந்து மிதந்துவந்தது. அப்பாட்டிற்கேற்ப கைகோர்த்து நடனமிட்டபடி ஆணுபெண்ணுமாக ஒரு ஜோடி. கூட்டம் சிரித்தபடி அவர்களுக்கு இடம்விட்டு ஒதுங்கி முன்னேறியது. ஸ்கேட்டிங் திடலை அடைந்திருந்தாள். வயது வித்தியாசமின்றி மகிழ்ச்சிப்பொங்க ஸ்கேட்டிங் விளையாடுகிறார்கள். அவர்கள் காலில் பிரத்தியேகமான ஷ¥. ஷ¥க்களில் பொருத்தியிருந்த கத்திபோன்ற கனத்ததகடுகள் நழுவிச்செல்கிறவேளையில் உறைபனியில் கம்பிமத்தாப்புபோல எதிரொளித்தன. அக்காட்சியில் மனம் லயித்தவளாய் சிறிதுநேரம் அங்கே நின்றாள். பனிபொழிந்து கொண்டிருந்தாலும் ஸ்கேட்டிங் செய்ய போதுமான வெப்ப நிலைக்குத் விளையாட்டுத் திடலை செயற்கையாக கொண்டுவந்திருந்தார்கள். திடலைச் சுற்றி இலை உதிர்ந்த மீமோசா மரங்கள். ராஜஸ்தான் பெண்கள் கைகளில் அணிகிற பஞ்சாபோல அவற்றின் கொம்புக¨ளில் இணைத்து சரஞ்சரமாக பொன்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் மின்சார பல்புகள். ஓர் இளஞ்ஜோடியொன்று கைகளை பிணைத்தபடி ஸ்கேட்டிங் செய்கிறார்கள். பள்ளிபிள்ளைகள் வரிசையொன்று ஒருவர் தோளை ஒருவர்பற்றியபடி சறுக்குவதுகூட நன்றாக இருந்தது. பதின்வயது பையன் ஒருவன் அம்புபோல விரைந்து வழுக்கிச்சென்றவன் கும்பலாய் நின்று பேசிக்கொண்டிருந்த இளம்வயது பெண்களை மோதுவதுபோல நெருங்கி, சட்டென்று நிற்கிறான். பனித்தூள்களைத் வாரி அவன் மீது எறிந்து பொய்யாய் அப்பெண்கள் கோபிக்கிறார்கள். சிறுமியொருத்தி பருந்துபோல கைகளை பரத்தி சறுக்குகிறாள். ஒரு கறுப்பின பெண்மணிகூட அநாயசமாக சறுக்கி விளையாடுகிறாள். ஓர் இளைஞனும் யுவதியும் தம்மைச்சுற்றியிருக்கிற மனிதர் கூட்டத்தை கருத்தில் கொள்ளாதவர்கள்போலத் திடற் தடுப்பில் சாய்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஸ்கேட்டிங் விளையாடும் ஆசை இவளுக்கு வந்தது. வரிசையில் நின்று ஐந்து யூரோகொடுத்து தமது கால்கள் அளவு 38 என்று கூறி ஒரு ஜோடி ஸ்கேட்டிங் ஷ¥க்களை வாங்கி அணிந்தாள். நடக்கக் தடுமாறினாள். மெல்ல தடுமாற்றத்துடன் முன்னேறி உறைந்து கண்ணாடிபோலிருந்த பனித் திடலுக்குள் காலை வைத்தாள். இரண்டொருவர் இவளைத் திரும்பிப்பார்ப்பதுபோல இருந்தது. மேற்கொண்டு செயல் படத் தயக்கம் காட்டினாள். அங்கிருந்தவர்கள் கண்கள் இவளைச் சீண்டுவதுபோல உணர்ந்ததும் உடலில் லேசாக நடுக்கம். தலையைத் திருப்பி பிறமனிதர்களின் கவனத்தைத் தேடியபொழுது எல்லாம் கற்பனையென தோன்றியது. அவரவர்கள் தங்கள் பாட்டுக்குத் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவண்ணம் சறுக்கிக் கொண்டிருந்தார்கள். திடலுக்கு வேலிபோல அமைத்திருந்த கண்ணாடித் தடுப்பை பிடித்தபடி மாற்றி மாற்றி கால்களை வைத்து நடந்தவள், ஓரிடத்தில் கால்கள் இவள் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவைபோல நீண்டதில் முழுஉடலும் பின்பாரமாய் சரிந்தது. மடாரென்று விழுந்தாள். ‘மத்மசல் கவனம்’, என்றபடி அருகிலிருந்த இளைஞனொருவன் கைகொடுத்தான். இவளுக்குக் வெட்கம் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலிருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்பதுபோல அவன்கையை இறுகப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள். அவன் முகத்தை நேரிட்டுப்பார்க்கத் தயங்கி நன்றி என்றாள். நிற்க முடியவில்லை இடுப்பில் தாங்கொணாதவலி. நடு முதுகில் சூட்டுக்கோல் வைத்ததுபோல சுரீரென்றது. மீண்டும் விழப்போனவள் எப்படியோ சமாளித்து தடுப்புக் கண்ணாடியைப் பிடித்தபடி நிற்க எத்தனித்தாள். நிலைமையை இளைஞன் புரிந்துகொண்டான். சற்று தூரத்தில் அமர்ந்திருந்த மருத்துவ குழுவினரைக் கூவி அழைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் ஓடிவந்தார்கள். ஆளுக்கொருபக்கம் தாங்கியவர்களாய் பனித்திடலை ஒட்டியிருந்த முதலுதவிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று உடகாரமுடியுமாவென கேட்டார்கள். முயன்று பார்க்கிறேனென்றாள். உட்காரமுடிந்தது.
பரிசோதித்தார்கள். பாதத்தைப் பிடித்து மெல்ல இப்படியும் அப்படியுமாக ஆட்டிபார்த்தார்கள். கைகளால் தொட்டுப்பார்த்து இவளுடைய முகக்குறிப்பிலிருந்து வலிதெரிந்த இடத்தை உணர்ந்தவர்களாய் மருந்தொன்றை தற்காலிகமாக ஸ்ப்ரே செய்தார்கள். ஆம்புலன்ஸ் வந்திருந்தது. ஸ்ட்ரெட்சரை இறக்கி அவளைக்கிடத்தினார்கள் இரண்டு ஊழியர்கள் முன்னுபின்னுமாக அதைத் தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றபோது சற்றுமுன் திடலில் இவளுக்குதவிய வாலிபன் கை அசைப்பது தெரிந்தது. ஆம்புலன்ஸ் தேவாலயத்தை ச் சுற்றிக்கொண்டு பிரதானசாலையைப் பிடித்து இறங்கி ஓடத்தொடங்கியபோது, குடைராட்டினத்திலிருந்து ஹோவென்று மீண்டும் சப்தம்.
(“சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது” அறிவியல் சிறுகதை தொகுப்பிலிருந்து)
துறைத் தலைவர் ச்சின் – ஹ¤வா தொலைக்காட்சிபேசியில் தோன்றி தம்மை உடனே வந்து பார்க்குமாறு அழைத்தபோது ‘ஷிட்’டென்று அலுத்துக்கொண்டேன். போனமாதத்தில் எங்கள் துறை நடத்திய சிம்போசியத்தின் முடிவில் ஏற்பாடு செய்திருந்த டின்னரின்போது டாய்லெட்டில் அவரது மனைவியும் நானுமாக ”அலரில் தோன்றும் காமத்து மிகுதிக்கு” பரிகாரம் தேடிக்கொண்டிருந்தநேரம், மனிதர் கரடிபோல உள்ளே நுழைந்ததும் பின்னர் அவருடைய ஜிப்பைத் திறந்த வேகத்திலேயே மூடிக்கொண்டு வெளியேறியதும் நினைவுக்கு வந்தது. அதற்குப் பிறகு இன்றைக்குத்தான் அழைக்கிறார்.
1950களில் சென்னைப்பல்கலை கழகத் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்த ராவ்பகதூர் கருணாகரத் தம்பிரான் உங்களுக்குத் தெரியுமில்லையா? அவருடைய மகள் வயிற்று வாரிசு எனச்சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை இருக்கிறதோ இல்லையோ எனது பாட்டிக்கு நிறையவே இருக்கிறது. சூ-மின் பல்கலைகழகத்தில் தென் கிழக்கு ஆசியமொழிகள் துறை பிரிவில் பேராசிரியராக இருக்கிறேன், பெயர் செழியன். கடந்த ஐந்து ஆண்டுகளாக பாட்டியும் நானுமாக இந்தக்கோளில்(1) இருக்கிறோம். எனக்குத் திருமணம் முடித்த கையோடு எனது பெற்றோர்களிருக்கிற அன்னா கோளுக்கே தான் போய்விடப்போவதாக சொல்லிக்கொள்ளும் பாட்டி அதற்கொரு நிபந்தனைவைத்திருக்கிறது. எனக்கு மனைவியாக வரப்போகிறவளுக்கு தமிழ் தெரிந்திருக்கவேண்டும், தமிழ் பேசவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. எங்கள் கோளில் எங்கள் குடும்பத்தையும் சேர்த்து ஐந்து தமிழ்க்குடும்பங்கள் இருக்கின்றன. இரண்டு பெண்கள் என்னோட இரசனைக்கு ஏற்றவர்களாகவும் இருக்கிறார்கள். பாட்டி இல்லாதபோது வீட்டுக்கு அழைத்திருந்த ஒருத்தியிடம் இப்படித்தான் ஒருமுறை ‘உன்னாலே தமிழ் பேசமுடியுமெனில் நாமிருவரும் திருமணம் செய்துகொள்ள முடியுமென’ விஸ்கி போதையில் உளறப்போக அவள் “செலியன்! வம்ச விருத்தி செய்யறதுக்கும் தமிழ் பேசறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்னு எனக்குத் தெரியலை, அப்படி பார்த்தா இந்த ஜென்மத்துலே உனக்கு கல்யாணம் ஆகும்னு நான் நினைக்கலை, என்று சொல்லிவிட்டாள். Bitch! எந்த நேரத்தில் சாபமிட்டாளோ, நாற்பது வயது பேச்சுலராக சில சில்லரை விளையாட்டு உரிமைகளுடன் தமிழ் பேசுங் கிளியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
– செழியன் நான் கூப்பிட்டிருந்தது மறந்துபோச்சா? மறந்திடாம வந்துட்டு போங்க. தொலைபேசியில் மீண்டும் ச்சின்-ஹ¤வா, துறைத் தலைவர்.
– மன்னிச்சுக்குங்க, அஞ்சு நிமிடத்திலே அங்கிருப்பேன், என்றேன் அவரிடம். ஆறுமணிக்கு மெய்நிகர் பெண்ணொருத்தியைப்(Virtual girl) பைசாக் தோட்டத்தில் சந்திக்க வேண்டும். இத்தனைக்கும் வீட்டுக்குப் புறப்படற நேரத்தில் கூப்பிடாதீர்கள் சார், வயசுப்பையன்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் இருக்குமென்று ஒருமுறை அவரும் நானுமாக முன்னிரவில் சொஷ¤ குடித்துக்கொண்டிருந்தபோது கூறியிருந்தேன். எரிச்சலுடன் வெளியில் வந்து வாக்வே(walkway) பிடித்து, சொன்னதுபோல ஐந்தாவது நிமிடம் எனது துறைத்தலைவர் அலுவலகத்திலிருந்தேன்.
– உட்காருங்க, என்றவர் தரவு ஒலிபரப்பு(Datacasting) ஊடாக பதிவுசெய்திருந்த அழைப்பிதழை என்னிடத்தில் நீட்டினார். பிறகு தொடர்ந்து, ‘நீங்கள் பூமிக்குச் செல்லவேண்டியிருக்கிறது.
– எங்கே?
– இந்தியாவுக்கு, அங்கே தமிழ்நாட்டில் வெகுகாலத்திற்குப் பிறகு உலகத்தமிழ் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சூ-மின் பல்கலைகழகத்தின் சார்பில் நீங்கள் கலந்துகொள்கிறீர்கள்.
– மாநாடு எப்போ?
– அடுத்தமாதம் பதினைந்தாம் தேதி. நிறைய நேரமிருக்கிறது. பயண ஏற்பாடுகளை பற்றிய கவலைவேண்டாம் நம்ம துறை அலுவலகம் கவனித்துக்கொள்ளும். தமிழ்- பிராமி எழுத்துக்களைபற்றிய ஆய்வுக்கும் உங்களது பயணம் உதவறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். எபிகிரா·பிஸ்டுகள் பற்றிய தகவல்களையும் திரட்டி வச்சிருக்கேன். கூடுதலாக விடுமுறை தேவைப்பட்டாலும் என்னைத் தொடர்புகொள்ளுங்கள். இந்தக் அட்டையைப் பாருங்கள்.
பெரியவர் டிஜிட்டல் அட்டையொன்றை மேசையில் வைத்தார். எறும்புகளை வரிசைபடுத்தி நிற்கவைத்ததுபோன்று ஆங்கிலத்தில் அட்டையைப் பற்றிய செயல்முறைவிளக்கம். சுமார் 50X50 மி.மீட்டரில் ஒரு திரை. நீலமாய் ஒளிர்ந்த புள்ளியை விரல் தொட்டது. மறுகணம் வெண்ணிறத்தில் பூவொன்று இதழ்விரிப்பதுபோல ஒளிபடர்ந்து திரையை நிறைத்தது: கவர்ச்சிகரமாக வெளிர் நீலத்தில் ஒரு மேலுடுப்பு, அதே நிறத்தில் வெள்ளைச் சட்டைக்குமேலாக ஒரு கழுத்துப்பட்டை, ஓவல் வடிவத்தில் வெள்ளைவெளேரென்றிருந்த முகம், காது மடல்களை கடித்துக்கொண்டு இரு முத்துகள், தலைமுடி பிசிரின்றி இறங்கி பிடறிக்குமேலே கேள்விக்குறியாய் வளைந்திருப்பதுபோல தோற்றம். பல முறை பயிற்சி எடுத்துக்கொண்ட சிரிப்பு. மார்புகளிரண்டையும் சம அளவில் பங்கிட்டபடி வணங்கினாள். சன்னமான குரலில் வணக்கம் என்றாள். இடைவெளிவிட்டு சொற்களை கவனத்துடன் உச்சரிப்பதுபோல இருந்தது: பெயர் தாமரை, பெண்-வயது 21, உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் உங்கள் வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறேன். அறிமுக உரைக்குப்பிறகு தமிழ்நாட்டு கோவில்கள், பாலை நிலக்காட்சிகள், உருமிமேளம்.. அணைத்தேன்.
பணியில் சேர்ந்த இத்தனை வருடங்களில் பெரியவர் இத்தனை அக்கறையோடு என்னிடம் பேசியதில்லை. எனக்குக் காரணம் புரிந்தது. இருந்தாலும் மனதிலிருந்த சந்தோஷம் அதைவிட பெரிது. வாயெல்லாம் பல்லாக,’ ரொம்ப நன்றி சார் என்றேன். வீட்டுக்குத் திரும்பியதும் செய்தியைக்கேட்ட ஐஸ்வர்யா பாட்டிக்கும் மகிழ்ச்சி.
– “ஏண்டா தம்பி, என்னையும் அழைச்சுபோயேன். இந்தியா எப்படி இருக்கிறதென்று நானுந்தான் பார்க்கிறேனே.
பாட்டி நீ நினைக்கிறமாதிரியெல்லாம் இந்தியா இல்லை. கடலோரமிருந்த ஊர்களில் பல இப்போதில்லைண்ணு சொல்றாங்க. சென்னையிலே கூட இப்போ பாதிதான் இருக்குதாம். டாக்டர் கிட்டே கேட்டுப்பார்ப்போம். விண்கலத்துலே பயணம் செய்ய உன் உடம்புக்கு முடியுமாண்ணு அவர்தான் சொல்லணும். அவர் முடியாதென்று சொன்னால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. தனியா இருக்க யோசித்தால் நான் வரும்வரை அம்மா அப்பாவோட இரண்டுவாரம் தங்கிவிட்டு வாயேன்.
– இப்போ போகலை. பூமிக்குப் போயுட்டு நல்லபடியா திரும்பி வா, கோடை விடுமுறைக்கு வேண்டுமானா இருவருமா ‘அன்னா’வுக்குப் போகலாம்.
முதல் இரண்டுநாட்கள், பாட்டி சோர்வாக வீட்டில் இருந்தாள். பிறகு எப்போதும்போல ஒன்பது மணிக்கு ஜிம், பதினோருமணிக்கு கான்•ப்ரன்ஸ் சேம்பரில் பிறகோள்களிலுள்ள தோழிகளுடன் அரட்டை. பகல் ஒருமணிக்கு சின்னதாய் ஒரு லன்ச், குட்டித்தூக்கமென்று மாறிவிட்டாள். இந்தியாவிற்கான எனது பயண நாள் நெருங்க, ரொம்ப அவதிபட்டாள். அங்கே இதெல்லாம் கிடைக்குமோ, கிடைச்சாலும் கலப்பிடமில்லாம இருக்கணுமே என்றபடி அமினோ அமிலம், நீரில் கரையக்கூடிய வைட்டமீன்கள், கார்போஹைடிரேட்ஸ், கொழுப்பு, உப்பென்ற இரசாயனக் கலவையிலான உணவுமாத்திரைகளை பாட்டில்களில் அடைத்து, தேதிவாரியாக பட்டியலிட்டாள். இந்தியாவில் குடிப்பதற்கன்றி வேறு உபயோகங்களுக்கு நீர் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து அதற்கு மாற்றாக சீனாவிலிருந்து இறக்குமதியாகியிருந்த ஸ்ப்ரேக்களெல்லாங்கூட தயார்.
காத்திருந்த அந்த மகா மகா நாள் வந்தது. ஐஸ்வர்யா பாட்டியுடன் விண்கல தளத்திற்கு இரவு 8.50க்கெல்லாம் வந்தாயிற்று. பேராசிரியர் ச்சின் – ஹ¤வா துறை நண்பர்களுடன் வந்திருந்தார். எனது முகப்பு மண்டப எண்ணை சரிபார்த்துக்கொண்டு காலடிவைத்தபோது, “டியர் பேரா! அங்கே நல்ல தமிழ் பேசுங்கிளி கிடைக்குமாவென்று பாரேன்”, என்று பாட்டி ஞாபகப்படுத்தியபோது, பொய்யாய் அலறியதை கணத்தில் புரிந்துகொண்டிருக்கவேண்டும், “போடா பைத்தியக்காரா எனக்கில்லை உனக்குத்தான்” என்றாள். எனக்குக்கூட, ‘மாசறு பொன்னே வலம்புரி முத்தேண்ணு’, பூம்புகார் கண்ணகி சைசுலே, தமிழ் தெரிந்த பெண் கிடைத்தால் தேவலாம் போல இருந்தது. ‘முயற்சி பண்றேன் பாட்டி” என்றபோது அவள் கண்களில் துலக்கம், முகச் சுருக்கங்கள் இரட்டிப்பாக, இமைகளை இறக்கி ஒருமுறை என்னை ஏற இறங்கபார்த்துவிட்டு சிரித்தாள். “உண்மையாகவா, பாட்டியை சமாதானப்படுத்த சொன்னதில்லைண்ணு எடுத்துக்கலாமா?”, “தாராளமா என்னை நம்பு. எப்பவாவது இந்தப்பேரன் பாட்டியை ஏமாற்றியதுண்டா? அப்போ சொன்னா சொன்னபடி நடப்பேன். பார்ப்போம்”, எனக்கூறி அவளை அணைத்துக்கொண்டு விடைபெற்றேன்.
கொண்டுவந்த உடமைகளைப் பதிவு செய்துவிட்டு, பயணிகளுக்கான பயோ சோதனைகளை முடித்துக்கொண்டு காத்திருந்தபோது, கூடத்தில் சகப்பயணிகள் மிகக்குறைவாகவே இருந்தனர். இந்தியாவுக்கு எங்கள் கோளிலிருந்து நான் ஒருவன் மாத்திரமே பயணப்படுகிறேன் என்பதை நினைக்க பெருமையா, வருத்தமா என்பது புரியாமல் குழம்பியிருந்தேன். ச்சின்-ஹ¤வா கொடுத்திருந்த தகவல் அட்டை நீலப் புள்ளியியைப் பதினோறாவது முறையாக ஆள்காட்டிவிரல் தன்னிச்சையாகத் தொட்டது. மீண்டும் அதேமுகம், அதே சிரிப்பு, மார்புகளிரண்டையும் சம அளவில் பங்கிட்டபடி அதே கும்பிடு, சன்னமான குரலில் வணக்கம் என்று ஆரம்பித்து, பெயர் தாமரை, பெண்-வயது 21, உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் உங்கள் வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறேன், என்றது. சென்னை விண்கலத் தலத்தில் எங்கள் ‘சூ-மின் ஸ்பேஸ்ஷிப் ஏஜென்ஸிக்குச்’ சொந்தமான எஸ்.எம்.121 தரையைத் தொட்டபோது எனக்கு பிரயாணக் களைப்பு நிறையவே இருந்தது. ஆனால் அக் களைப்பு சந்தணமாலையுடன் டிஜிட்டல் அட்டையில் பலமுறைபார்த்து மனதில் பதிவு செய்திருந்த பெண்ணைப் பார்த்ததும் போயே போயிற்று.
மிஸ்டர் செழியன்! என்றாள். கைக்குலுக்குவதற்காக கையை நீட்டியபொழுது அதை மறுத்தவளாய் கைகளைக் குவித்து வணங்கினாள். பின்னர் கடந்த சில தினங்களாக எனக்குப் பலமுறை பழகியிருந்த சிரிப்பினை முகத்தில் வரவழைத்தாள். பெயர் தாமரை என்று ஆரம்பித்து, பெண்-வயது 21 என்று சொல்லிக்கொண்டு போனவளை இடைமறித்து, ‘உலகத் தமிழ் மாநாட்டு வரவேற்பு குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஊழியை. விழா நாட்களிலும், பிற நேரங்களிலும் எனது வழிகாட்டியாக இருந்து உதவக் காத்திருக்கிறீர்கள், சரிதானா? என்றதும் கலகலவென சிரித்தாள்.
– மனப்பாடமாக நான் சொல்லவந்ததைச் சொல்கிறீர்கள், எப்படி?
– மிஸ் தாமரை குறைந்தது உங்கள் முகத்தையும் குரலும் இங்கே மாத்திரல்ல இங்கேயும் பதித்துவைத்திருக்கிறேன் எனகூறி தலைக்குபோன ஆள்காட்டிவிரலை என் நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்தியதும் அவள் அசல் சிலப்பதிகாரத் தமிழ்ப்பெண்போலவே முகம் சிவந்தாள்.
– மிஸ்டர் செழியன், போகலாமா? உங்கள் உடமைகள் நீங்கள் தங்கவேண்டிய விடுதிக்குப் போய்விடும். நாம் கடற்கரை ஓரமாக பறக்கலாம். மாநாட்டு வளைவுகள், அலங்காரங்கள் ஆகியவற்றைப் பார்த்ததுபோல இருக்கும்.
இருவருமாக ·பேன்விங் வாகனத்தில் ஏறி அமர்ந்தோம், தாமரையே வாகன ஓட்டியின் இடத்தில் அமர்ந்து எஞ்சினை உறுமவைத்தாள், சிவ்வென்று மேலே எழுந்தது. தாமரை கூட பரவாயில்லை, பாட்டிகேட்ட மாதிரிதான் இருக்கிறாள்.
– தாமரை உங்களுக்குத் தமிழ் வருமா?
– நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
– நிதானமாக கவனத்துடன் பேசுவதுபோல இருக்கிறது.
– விருந்தினர்களுடன் நாங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்ற விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறகூடாதில்லையா? கீழே பாருங்கள்
– எங்கே?
– நான் சொன்னது •பேன்விங் கண்ணாடி கவசத்திற்கு வெளியே.
– கடற்கரையையொட்டி இடது புறம் நகரின் குடியிருப்பு டவர்களை அடுத்துத் தெரிவது புகழ்பெற்ற ‘தாத்தா மைதானம்’ அதை முழுவதுமாக வளைத்து தற்காலிகமாக மண்டபம் கட்டியிருக்கிறார்கள். ஒரு இலட்சம்பேர்வரை உள்ளே அமரலாம். அலங்கரித்த வண்ணக் கோபுரங்கள் தெரிகிறதில்லையா அவை விழா மண்டபத்திற்கான நுழைவு வாயில்கள்.
– கடற்கரையையொட்டி நமக்கு வலது புறத்தில் வரிசையாக சூரிய ஒளியில் மின்னுகிற மண்டபங்களும் உலகத் தமிழ் மாநாடுக்கென்று கட்டப்பட்டதுதானா?
– இல்லை செழியன் அவைகள் தாத்தாக்களின் சமாதிகள்.
– புரியவில்லை.
– கடந்த இருநூறு ஆண்டுகளாக தாத்தா திராவிட முன்னேற்றகட்சிதான் ஆட்சியிலிருக்கிறது. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நிறைய தாத்தாக்களுக்கு சமாதி கட்டியிருக்கிறோம். அவற்றில் சென்னைக் கடற்கரை முக்கியம். தமிழ்நாட்டின் சுற்றுலா தளங்களில் தவறாமல் பார்க்கவேண்டிய இடம். ஏப்ரல் 18ந்தேதி மாநாடு விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா பட்டியலில் இந்த இடமுமிருக்கு. ஆகையால் கவலை வேண்டாம்.
– அய்யய்யோ, இப்படி என்னென்ன சுற்றுலா தள பட்டியல் வச்சிருக்கீங்க.
– ஏன்?
– தமிழ்- பிராமி எழுத்துக்களைபற்றிய ஆய்வுக்கு உதவற இடங்களைப் பார்க்கணும். பிறகு சொந்தப் பிரச்சினைவேறு இருக்கிறது.
– நீங்க தமிழ்நாட்டுலே பார்க்கவேண்டியவை என்னன்னு சொல்லுங்க. எங்க அதிகாரிகிட்டே பேசிப்பார்க்கிறேன். என்னாலே உங்க நிகழ்ச்சி நிரலை மாற்றமுடியுமென்று தோணலை, ஆனால் முயற்சி செய்யறேன். பிறகு ஏதோ சொந்தபிரச்சினைபற்றி சொல்ல வந்தீங்க. அதற்கும் எங்களால உதவ முடியுமாவென்று பார்க்கிறோம். இங்கிருந்து உங்கள் நாட்டுக்குத் திரும்புகிறபோது முடிந்தவரை குறைகளில்லாமல் திரும்பனும்.
– சொந்தப்பிரச்சினையென்றாலுல், நான் தனி ஆளா தீர்வுகாணமுடியாது. எங்கப் பாட்டியின் ஆசைப்படி இங்கிருந்து கிளிமாதிரி ஒருத்தியைக் கொண்டுபோகனும். அக்கிளி தமிழ்ப் பேசும் கிளியாகவும் இருக்கவேண்டும் என்பது பாட்டியின் நிபந்தனை. ஆனால் அத்தனை சுலபாமானதில்லை.
– ஏன்?
– என்னோட பாட்டி நினைப்புலே இருக்கிற தமிழ் கிளிக்குச் சேலைகட்டத் தெரியனும், கோலம்போடணும், கும்மி அடிக்கணும், குலவை இடணும் இப்படி நிறைய தகுதிகளைப் பூர்த்தி செய்யணும். பிறகு கடைசியா அவள் தமிழ்பேசணும், அவளோட பேரனுக்கு மனைவியா வரணும்.
– நீங்க சொல்வதுமாதிரியான ஒன்றிரண்டு பெண்களைக் கண்டுபிடிப்பதில் சிரமங்கள் எதுவுமிருக்காதென்றுதான் நினைக்கிறேன். ஆனால் உங்களை மனைவியாக வருவதற்கு சம்மதிப்பார்களாவென்று கேட்டுப்பார்க்கவேண்டும். வேண்டுமானா ஒன்றுசெய்யலாம், உள்ளூர் தினசரிகளில் விளம்பரம் கொடுத்து பார்க்கலாம். உங்கள் கணினிமுகவரிக்கு தகவல் அனுப்புகிறேன். அதில் கொடுத்துள்ள தினசரிகளின் விளம்பரப் பிரிவுக்குள் நுழைந்து, சுருக்கமாக உங்கள் விளம்பரத்தைக் கொடுங்கள். என்ன நடக்கிறதென்று பார்ப்போம். நீங்கள் தங்கவேண்டிய ஓட்டல் வந்துட்டுது. இறங்கிக்குவோம். நாளை காலை எட்டுமணிக்கெல்லாம் ரிசப்ஷன் ஹாலில் காத்திருக்கவேண்டும். எட்டு முப்பதுக்கு முதலமைச்சர் விருந்தினர்களுடன் மாநாடு ஊர்வலத்தை பார்வையிடுகிறார். ஒழுங்காக எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்திடுங்க ஊர்வலத்தைப் பார்த்து முடிக்க பிற்பகல் இரண்டு ஆகிவிடும். பிறகு ஓட்டலுக்குத் திரும்பி மறுபடியும் மாலை நான்கு முப்பதுக்கு விருந்தினர் நுழைவாயிலில் இருக்கவேண்டும் அப்போதுதான் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு நான்கு ஐம்பதுக்கு விழா மண்டபத்தில் இருக்க முடியும். ஐந்து மணிக்கு முதலமைச்சர் தலைமையில் தொடக்கவிழா இருக்கிறது.
விடுதிக்கு முன் இறங்குதளத்தில் •பேன்விங்கை தரை இறக்கி, விடைபெற்றுக்கொண்டோம்.
* * * *
மறு நாள் காலை 8.30க்கெல்லாம் •பிளாஷ்லீடரில் மாநாட்டு ஊர்வலத்தை பார்வையிடவந்துவிட்டோம். முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் சூழ வந்தார். சரியாக 9.00மணிக்குத் தொடங்கிய ஊர்வலத்தில், மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டமென்று வந்த ஊர்வலத்தில் இருபது பெண்கள் கைகளில் துடைப்பம், முறமென்று ஏந்திகொண்டு சேலையை முழங்கால்களுக்குமேல் வாரி இடுப்பில் சொருகியபடி வந்தனர். கையிலிருந்த ஊர்வலவிவரணையில் அதுபற்றிய தகவல்களில்லை. குழப்பதுடன் அருகிலிருந்த தாமரையைப் பார்த்தேன்.
– அவர்கள் தமிழர் பண்பாடு பாதுகாப்புப்படையின் பெண்கள் பிரிவினர். இருபதாம் நூற்றாண்டில் பிரசித்தம். தமிழர் பண்பாட்டிற்கு எதிராக ஏதேனும் நடந்தால் இப்படித்தான் வீதியில் இறங்கிவிடுவார்கள். ஒரு சில அரசியல் கட்சிகளிலும் இந்த அணி இருந்திருக்கிறது. அருகிலிருந்த பிரெஞ்சுகாரரும், அமெரிக்கரும் மிக ஆர்வத்துடன் ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன்.
– செழியன் அங்கே பாருங்கள்.
மீண்டும் கவனம் ஊர்வலத்தில் சென்றது. அலங்கரிக்கபட்ட ஊர்வலத்தில் ஆணும் பெண்ணுமாக பத்துபேர் அமர்ந்திருந்தனர்.
– தமிழ் அறிஞர்களா?
– தமிழறிஞர்களுக்கு இங்கே பஞ்சமில்லை, நிறையவே இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தேதியில் தமிழில் உரையாடக்கூடியவர்களென்று பத்துபேர்தான் தேறுவார்கள். அவர்கள் பத்துபேருக்கும் அரசாங்கம் மரியாதைசெய்ய வேண்டுமில்லையா? உங்கள் பாட்டியின் ஆசையை நிறைவேற்றுவதற்கான விளம்பர யோசனை என்னவாயிற்று, பலனேதாவது?
-ம் இல்லை.
– நம்பிக்கையை இழக்காதீர்கள். எனக்கு நிஜமாகவே ஒரு தமிழ் பேசும் கிளியைத் தெரியும். உங்கள் பாட்டி எதிர்பார்ப்பிற்கு பொருந்திவருவாள். சொல்லப்போனால் எனக்கு நெருங்கிய தோழி. அவளுக்கு உங்கள் கோளிற்கு வரவும் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதமெனில் இன்றைக்கு தேதி பதினைந்தில்லையா, அவளை பத்தொன்பதாம் தேதி உங்களை பார்க்கச்சொல்கிறேன்.
* * * *
மிஸ் தாமரையின் சினேகிதி ஒருநாள் முன்பாகவே என்னைத் தேடிக்கொண்டு வந்திருந்தாள். மாலை மூன்றுமணி இருக்கும், சென்னைப் பல்கலைகழகத்தின் தமிழ் துறை தலைவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன், எனது கைக்கடிகார தொலைபேசி ஒலித்தது. காதில்வைத்தேன்.
– யாரது, மிஸ். தாமரை சொல்லியிருந்தாங்களே அந்த தமிழ் பேசுங் கிளியா? மன்னிச்சுக்குங்க. இந்த நேரத்துக்கு நான் அங்கேதான் இருக்கவேண்டும். இங்கே பேசிக்கொண்டிருந்ததிலே நேரம்போனது தெரியல்லை. இங்கிருந்து ஓட்டலுக்கு வர 30 நிமிடம் பிடிக்கும் என்கிறார்கள். ஒன்று செய்யுங்கள் வரவேற்பில் கேட்டால் எனது அறைக்கான நுழைவு அட்டையைக்கொடுப்பார்கள். அறைக்குச்சென்று காத்திருங்கள் வந்துவிடுவேன்.
பதட்டத்துடன், ரொக்கார் ஒன்றை வாடகைக்குப்பிடித்து ஓட்டலில் நுழைந்து, நாற்பதாவது மாடிக்கு லிப்டில் வந்து திறந்து வழிவிட்டதும் வாக்வேயில் ஓட்டமாக ஓடி மூச்சிறைக்க கதவைத் தட்டினேன். பாட்டியின் கனவுத் தேவதை சிரித்தபடி வரவேற்றது.
– இவ்வளவு அழகா தாமரைக்கு ஒரு தோழி இருப்பாங்கண்ணு நினைக்கலை. எங்க பாட்டி சொன்ன விதிமுறைகளுக்கு நீங்க பொருந்துவீங்க இல்லையா? ஒன்றிரண்டு பொருந்தலைன்னாலும் பரவாயில்லை, பாட்டியிடம் சமாளித்துக்கொள்ளலாமென நினைக்கிறேன். சொல்லுங்க.. உங்களுக்கு சேலைகட்டறது, கோலம்போடறது, கும்மியடிக்கிறது எல்லாம் வருமா?
– வரும்.
– தமிழ் நல்லா பேசுவீங்க.
– பேசுவேன், தடுமாற்றமில்லை. எத்தனை பக்கமென்றாலும் தடுமாறாமல் பேசுவேன்.
– இப்படியொரு தமிழ் பேசுங்கிளியைத்தான் பாட்டி எனக்காகத் தேடிக்கொண்டிருந்தாள். தாமரைக்கு நிறைய நன்றி சொல்லணும்.
– அதற்கு முன்னே ஓரு உண்மையைச் சொல்லணும். நான் நீங்க நினைக்கிறமாதிரி தமிழ்ப் பெண்ணில்லை. நான் பஞ்சாபிலேயிருந்து வறேன். தாமரை கூட கர்னாடகாவைச் சேர்ந்தவங்க. இங்கே நாங்கதான் தமிழ் பேசறோம்.
– எப்படி?
– எல்லாம் சினிமாவுக்காக. சொல்லப்போனா இன்றைய தேதியிலே தமிழ் பேசற பெண்களென்றால் அது. நாங்கதான்.
– உங்க சினேகிதி தமிழ் பேசுங்கிளிண்ணு பெருமையா சொன்னாங்க..
– உண்மைதான் ‘தமிழ் பேசுங்கிளி’ங்கிற படத்திலே கூட நடிச்சிருக்கேன்.
அப்போதுதான் கவனித்தேன், மதுரைப்பகத்திலே ஏதோ ஒரு பட்டியைசேர்ந்தவன்போலவிருந்த ஒருவன் டாய்லெட்டிலிருந்து வெளியில் வந்தான்.
– இவரு யாரு?
– இவர் என் கூடத்தான் வந்திருக்கார். பல படங்களில் உதவி இயக்குனரா இருந்திருக்கார்.
– இவரை எதுக்கு கூட்டிக்கிட்டு வந்தீங்க?
– நான் தமிழ்வசனம் பேசவேண்டுமென்றால் இவர் பக்கத்திலே இருக்கணும்.
– என்னை மன்னிக்கணும் முதலில் இந்த ஆளை அனுப்பிட்டு வரேன். எட்டுபட்டி ஆசாமியை வெளியிற்தள்ளி கதவைச் சாத்தினேன்.
– மிஸ் கோப்பெருந்தேவி எனக்கு இப்போ ஒரே ஒரு வசனந்தான் தேவை, உங்களுக்கு என்னை மணம்செய்துகொள்ள சம்மதமா?
– தாராளமா, இப்பவே நான் தயார். அதற்காக வசனங்களெல்லாம் மனப்பாடமா தெரியும்.
– பாட்டிக்கிட்ட மாத்திரம் வசனம் பேசினாப் போதும், நம்மிருவருக்குமிடையில் எதற்கு. புரியுதா?
புரிந்தமாதிரிதான் தலையாட்டினாள்.
———————————————————————
1. சூ-மின்- செவ்வாய் கிரகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில், 7826 ஹெக்டர் பரப்பு. (வடகொரிய அதிபருக்குச் சொந்தமாக எங்கள் நாடு இருந்திருக்கிறது. பின்நாட்களில் தென்கொரிய தொழிலதிபர் ஒருவர் நூடில்ஸ்சையும் அரிசியையும் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்து, அசலையும் வட்டியையும் திருப்பிச் வாங்க முடியாத நிலையில், இக்கோளைக் கணக்கில் பற்று வைத்துக்கொண்டிருந்ததாக இணையதளமொன்றிலிருக்கிற தகவலை நம்பவேண்டாம்)
அவசர அவசரமாக இயற்கை பாரத்தை இறக்கிவைக்க இலுப்பை மரத்தை தேடினார். எப்போது பிறந்த மண்ணுக்கு வர நேர்ந்தாலும் மற்ற விஷயங்களில் எப்படியோ காலைக் கடனை முடிப்பதற்கு அவர்கள் பூர்வீக வீட்டிற்குப் பின்புறமிருக்கும் இலுப்பை மரமும், மறைப்புக்கு அதன் சொந்தபந்தங்களான ஈச்சம் புதர்கள் செடிகொடிகளென்கிற இத்யாதிகள் வேண்டும். அவர் தகப்பனார் நகரவாழ்க்கைக்கு இணையான வீட்டையும் டாய்லெட் ஏற்பாடுகளையும் மகனுக்கென செய்திருந்தாலும், நம்ம எழுத்து சாமிக்கு அவர்கள் பூர்வீக வீட்டிலிருந்து ரெண்டு நிமிஷ நடையில் எதிர்ப்படுகிற புறம்போக்கு இலுப்பை மரத்தடியில் ஒதுங்கினால்தான் திருப்தி. அதன் அருகிலேயே இவர்களுக்கு சொந்தமான பட்டா நிலத்தில் புளியமரமொன்று இருக்கிறது அவசரத்திற்குக் கூட அதில் ஒதுங்குவதில்லை. இலுப்பை மரம்தான் அவருக்கு ராசியான மரம். ஒவ்வொரு முறையும் உட்கார்ந்து விட்டு, சொம்பு நீரை காலிசெய்துவிட்டு வீடு திரும்ப பிருஷ்டத்தின் ஈரம் காய்வதற்கு முன்பாக ஏதாவதொரு நல்ல சேதி வந்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை வாசம், எழுத்துசாமிக்கு பதிவுத் துறையில் டிபுடி டைரைக்டர் உத்தியோகம். ஓவ்வொரு பத்திரப்பதிவும் கரன்சிகளைக் கொட்டுகிறது. எந்தக் கட்சி ஆட்சிக்குவந்தாலும் முதலமைச்சரை பார்த்து ஒரு மாலை போட்டுவிடுவார். ஐந்து வருடத்திற்கு முன்பாக ஒரு கிலோ தங்க நகைகளோடு சாலி கிராமத்தில் இரண்டு கிரவுண்டு நிலத்தையும் வரதட்சணையாக கொடுத்து மூத்தமகள் திருமணத்தை ஜாம் ஜாமென்று நடத்தினார். எழுத்துலகம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியென எல்லா தரப்பினரும் ஆஜராகி இருந்தார்கள். உத்தியோகம் பதிவுத் துறை என்பதால் ரியல் எஸ்டேட் ஆசாமிகள் ஸ்பெஷலாக கண்டுகொண்டார்கள்.
உபதொழிலாக எழுத்தை வைத்திருக்கிறார். எழுத்தில் இன்றையதேதியில் நான்கைந்துபேர் இவருடன் போட்டியில் இருப்பதுபோல பட்டாலும் அவர்களெல்லாம் இவருக்கு ஜூஜூபி. எதிரிகளை பல்லில் படாமல் விழுங்கும் சாமர்த்தியம். ஒருவரிடமும் பகையில்லை,தந்திரசாலி. இளைய தலையமுறையினரில் பலர் தீவிர ரசிகர்கள். தோளில் கைபோட்டுப் பேசுவார், அவர்களோடு தலையைச் சிலுப்பி சிகரெட் பிடிப்பார், பனைமரத்தின் கீழிருந்து கள்ளும் குடிப்பார், பாரில் உட்கார்ந்து சீயர்ஸ்ஸும் சொல்லுவார். அவர்கள் வாசிப்பில் உள்ள நம்பிக்கையில் அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அச்சுறுத்துவார். « தம்பி , உன் கவிதையை படிச்சேன், நல்லா வந்திருக்குதுங்க » என்றோ « யாரு சிறுகதை சிங்காரியா, ‘சுக்கு மிளகு திப்பிலியில்’ ஒங்கதையை வாசிச்சேன்மா, மாமனாரோட மருமகள் ஓடிப்போக நினைக்கிற மனசை நல்லா சித்தரித்திருக்கிற, தத்ரூபமா வந்திருக்கு, அருமைம்மா ! » என தாராளாமாகப் பாராட்டும் குணமும் உண்டு.
அவருடைய கீர்த்திக்கும் எந்தக்ககுறையுமில்லை. கொறுக்குப் பேட்டை 13வது வட்டம் தோழர் முருகசாமி நினைவு பரிசிலிருந்து, தமிழ்நாடு, இந்தியா என்கிற வரைபடத்திற்குச் சொந்தமான பரிசுகள் வரை எல்லாவற்றையும் முறைப்படி எப்படி வாங்க வேண்டுமோ அப்படி வாங்கி இருக்கிறார். நாளிதழ்களிலும், சஞ்சிகைகளில் தொடர்ந்து அவரைப் பற்றி இரண்டொருவரிகள் எழுதுகிறார்கள், ‘எனக்கும் இலக்கியம் வரும்’ என்கிற சினிமா நடிகர்கள் வீடு தேடி வருகிறார்கள். வட ஆப்ரிக்க குளுபுளு மொழியில் தம்முடைய கவிதை வெளிவந்தாகவும் அதை அந்நாட்டு அதிபர் வெளியிட்டதாகவும் சொல்கிறார்.
‘ எட்டும் எட்டும் பதினாறு, எதிர்த்தவீட்டு பெண்யாருன்னு கவிதை எழுதினப்போ நம்ம எழுத்துசாமிக்குப் பதினாலு வயது. பிறகு சிறுகதைகள் நாவல்கள் என்று எழுத ஆரம்பித்தார். செங்கணாச்சேரி செந்தூர் பாண்டியன்போல தமிழ் எழுத்துலக சாம்ராச்சியத்தை கட்டி ஆளும் கனவு அவருக்கு முதல் கவிதைத் தொகுப்பு வெளிவரும்போதே இருந்தது. இரண்டொரு தொகுப்புகள் போட்டார். பதிவுத்துறை உத்தியோக உயர்வைக்காட்டிலும் எழுத்தில் பிரமோஷன் வாங்கணும் அதில்தான் பெருமை என்பது இலட்சியமாக இருந்தது, அதைத் தடித்தக் கழுத்தும் கனத்த சரீரமும், நடந்தால் மேல் மூச்சு கீழ் மூச்சு( ?) வாங்குகிற பாரியாள் சௌபாக்கியத்திடம் சொல்லவும் செய்தார்.
« என்னவோ செய்யுங்க, தம்படிக்குப் பிரயோசனமில்ல்லாத எழுத்து பொழப்பு, பையன் தலைக்கு மேல வளர்ந்துட்டான், வரிசையா மூணு பொண்ணுங்க இருக்கு, மறக்காம இருந்தா சரி », என்ற மனைவியின் நியாயமான எச்சரிக்கையையும் அலட்சியம் செய்தவரில்லை.
ஒருமுறை பரிசுக்குழுவில் இருந்த சக எழுத்தாளர் ஒருவர் « அண்ணே, முன்பின் நவீனத்துக்கான டபுள் டக்கர் நாவல் பரிசை இந்த வருஷம் நம்ம சொக்கப்பனுக்கு கொடுக்கலாம்னு இருக்கோம், பத்து வருஷமா எழுதறான். ஆட்டோ டிரைவர், குடும்பமும் கஷ்டத்துல இருக்கு, அடிக்கடி எங்களையெல்லாம் வந்து பார்த்துட்டு டீ காபின்னு வாங்கிக் கொடுத்துட்டுப் போற பணிவான பையன். அவர் என்ன சாதின்னும் உங்களுக்குத் தெரியும், அதனால » என்று இழுத்தபோது இவருக்குக் கோபம் வந்துவிட்ட து, குறுக்கிட்டார், « நீங்க ஒருத்தனும் எழுத்துக்குப் பரிசுக் கொடுக்கறதில்லைன்னு எனக்கும் தெரியும், அந்த தைரியத்துலதான் எனக்குக் கொடுங்கன்னு கேக்கறன். கூடுவாஞ்சேரியில ஒம் பட்டா நெலத்துக்கு வில்லங்கம் எடுக்கணும்னு ரெண்டுமாசத்துக்கு முன்ன நீ சொன்ன ஞாபகம், பிரச்சனை முடிஞ்சுடுச்சா ? » என இவர் கேட்க « இல்லை » என்பது எதிர்தரப்பு பதில். « என்னபண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது, பரிசு எனக்கு வேணும், ஒங் கூடுவாஞ்சேரி பிரச்சனை முடிஞ்சுதுன்னு வச்சுக்கோ » என்று சொல்லி போனை வைத்துவிட்டார். எதிர் பார்த்ததுபோல பரிசு அவருக்குக் கிடைத்தது. இவருக்குப் போட்டியாக இருந்த இளைஞனுக்கு குடும்பக் கஷ்டத்தைவிட, நான்கைந்து பாட்டில்களை அந்த மாசத்துல கூடுதலாக வாங்க முடியுமென்ற கனவில் மண்ணைப் போட்டிருந்தார்.
லோக்கல் பரிசுகள், அவற்றோடு வாங்கிய கேடயங்கள், இடம்போதாமல் ஷோகேசில் நாட்டிக்கொண்டு கிடக்க, தேசியவிருதை வாங்கவில்லை என்ற ஒரு குறை நெடுநாளாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் சிலர் « என்ன எழுத்துசாமி, எல்லா பரிசுகளையும் வாங்கிட்டீங்க தேசிய விருதை வாங்கலைன்னா எப்படி, அவரைப் பாருங்க வாங்கிடலாம் இவரை பாருங்க வாங்கிடலாமென » உற்சாகமூட்ட இவரும் தம்முடைய ‘ தாடியில் ஆங்காங்கே வெள்ளை மசுறு ’ நாவலில் இரண்டு பிரதியை அனுப்பிவைத்தார். அவருடைய எழுத்துகளை வாசிக்கும் மனைவி திருப்தியுடன் தலையை ஆட்டியது அதொன்றுக்குத்தான் என்ற காரணம் ஒரு பக்கம், ஐம்பது வயதில் அந்தப் பரிசை வாங்கியவன் நானொருத்தனாகத்தான் இருக்கணும் என்கிற வைராக்கியம் இன்னொரு பக்கம். பரிசுக்குழு தலைவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர். அவர் எழுதியக் கவிதைகளையும் சிறுகதைகளையும் தெலுங்கு. மலையாளம், கன்னடம் என தெரிந்தவர்களைக்கொண்டு மொழி பெயர்த்தார், ஒரு மலரும் வெளியானது. இவர் தந்திரங்கள் பலித்து தேசிய விருது செய்தியைப் பரிசுக் குழு தலைவர் அறிவித்தபோது அன்றும் நம்ம எழுத்துசாமி சொந்த கிராமத்து இலுப்பை மரத்தடியில் ஒதுங்கி முடித்து ஒரு சொம்பு நீரால் பிருஷ்டத்திற்கு அபிஷேகம் முடித்திருந்தார்.
தமிழ் அன்னையின் சுவாசமே தமது கவிதைகளிலும், சிறுகதைகளிலும், நாவல்களிலும் இருப்பதாக நம்பும் எழுத்துசாமிக்கு கடந்த ஒருமாதமாக நெஞ்செரிச்சல். தம்முடைய இலக்கிய புகழுக்கு ஈடு இணை எவருமில்லை என நினைத்திருந்தபோதுதான் அவருடைய நெடுநாளைய எதிரியான பால்ய வயது சினேகிதன் நமச்சிவாயம் வீடு தேடிவந்தார்.
உங்களுக்கு நமச்சிவாயம் என்ற பெயரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை, பதிலாக பேய்மழை பேச்சாண்டி என்றால் நீங்கள் புளகாங்கிதமடைந்து மெய் சிலிர்க்க கூடும். இடைநிலைப் பள்ளி ஆசிரியர், கூடுதல் தகுதி பட்டிமன்ற பேச்சாளர், நடுவர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்து முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நமச்சிவாயம் பேசத் தொடங்கினார். ‘முத்தாலம்மனும் கம்பனும் ’ என்ற தலைப்பில் பேசியவர், முத்தாலம்மனை சீதை என்றார், தொடர்ந்து குஷ்பு, ரம்பா, மும்தாஜ் என பல ரேஞ்சுக்கு கம்பன் கதை நாயகியை ஒப்பிட்டு பாடியும் ஆடியும் பேச ஒட்டுமொத்த கிராமமும் வாய் பொளந்து கேட்டது. ஊர் பஞ்சாயத்து தலைவரும் தருமகர்த்தாவாவும் பேய்மழை பேச்சாண்டி என்ற பட்டத்தைக் கொடுத்து பெரிய கேடயமும் வழங்கினார்கள். அன்றைய தினம் ஊர்த் திருவிழாவுக்கு வந்திருந்த எழுத்துசாமி, அஜீரணம் காரணமாக இரண்டு கோலிசோடாவை விழுங்க வேண்டியிருந்தது.
மாநில விருது, மத்திய (ஒன்றிய ?) விருது என வாங்கி குவித்துள்ளபோதிலும் அவருடைய மெய் கீர்த்திகளை அறிந்த ஊர் ஆசாமிகள் இன்றைக்கும் பத்துபேர்கூட தேறமாட்டார்கள். மாறாக பேய்மழை பேச்சாண்டி என்கிற நமச்சிவாயத்தை எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இவரிடமே « நம்ம நமச்சிவாயம் எங்கேயோ போயிட்டாம்பா. அடிக்கடி டிவி பொட்டியிலே வந்து போறான், ஒன்ன அப்படி பார்க்க முடியலை » எனக்கூறி அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்.
அந்த நமச்சிவாயம் வீடு தேடி வரவேண்டிய காரணமும் புரியாமலில்லை. சரியாக ஒருவாரத்திற்கு முன்பு கிராமத்து இளைஞர்கள் இருவர் எழுத்துசாமியைப் பார்க்க வந்திருந்தனர். « இந்த வருட முத்தாலம்மன் திருவிழாவில் பிறந்த மண்ணுக்குப் புகழ்தேடிகொடுத்தவர்களை பாராட்டப் போகிறோம் » என்றார்கள். எதிர்பார்த்தது போலவே இவருடைய பெயரும், பால்ய சினேகிதன் பெயரும் அழைப்பிதழில் இருந்தன. இரு பெயர்களுக்கும் ஒரே எழுத்துவகையை உபயோகித்திருந்தார்கள், எழுத்தின் பரிமாணமும் ஒன்று போலவே இருந்தன. ‘எழுத்துசாமி’ என்ற பெயரை மேலும், ‘பேய்மழை பேச்சாண்டி’பெயரை கீழுமாக அச்சடித்திருந்தார்கள், இதை எப்படி எடுத்துக்கொள்வதென்கிற குழப்பம் எழுத்துசாமிக்கு இருந்தது.
சரியாக ஒரு வாரம் கழித்து நமச்சிவாயம் வீடுதேடிவந்தார். விழாவையும் பரிசையும் நினைவூட்டிய சினேகிதன் « தவறாமல் வந்திடு, ஊர்ப் பசங்க ஏதோ விருது கொடுக்க போறாங்களாம்», என்றபோது அவர் கண்களில் தெரிந்த எள்ளலும், உதட்டோரம் வெளிப்பட்ட அலட்சியமும் கோபத்தையூட்ட, அதைச் சாமர்த்தியமாக சிரித்துச் சமாளித்தார்.
ஊர் உலகத்தையெல்லாம் ஜெயிக்க முடிந்த தம்மால் உள்ளூரில் ஜெயிக்க முடியவில்லை என்பதை நினைக்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. தேடிவந்த இளைஞர்களில் ஒருவன் கதை கவிதைகள்னு வாசிக்கிற பையன். ஆனால் இதுநாள்வரை வாய்திறந்து இவரை பாராட்டியவனில்லை என்கிறபோதும் பேச்சாண்டியா, எழுத்துசாமியா என்கிறபோது இவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப் பிருக்கிறது.
திருவிழா தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே கிராமத்துக்கு வந்துவிட்டார் . தமது வழக்கமான சாதுர்யத்துடன் ஊர்ப் பெரியவர்களைப் பார்த்தார். வெத்திலைப் பாக்கு பழமென தட்டில வைத்து அவர்கள் காலில் விழுந்தார். வீடு திரும்பியபோது தகப்பனார், சத்தம்போட்டார் : நம்ம கால்தூசிக்கு பொறமாட்டானுவ, அவனுங்க காலில் போய் விழுந்திருக்க, நாளைக்குப் பின்ன நான் தெருவுல தலைகாட்ட முடியுமா ? என ஆதங்கத்துடன் கண்டித்தார்.ஆனால், தந்தையிடம் « எனக்கு பேச்சாண்டி நமச்சிவாயத்தை எப்படியாவது தோற்கடிக்கணும், மான அவனமானத்தை பார்த்தா முடியுமா ! » என கேட்க நினைத்தாலும் வார்த்தைகள் வரவில்லை. ஒன்றே ஒன்று பாக்கி, அதையும் நாளை காலை நிறைவேற்றிவிட்டால், கிராமத்து விருது தனக்கென்பது நிச்சயமென உறங்கச் சென்றார். வெகு நேரம், புரண்டு நெளிந்து கடைசியில் எப்போது தூங்கினாரென்றே அவருக்குத் தெரியாது.
கண்விழித்தபோது நன்கு விடிந்து விட்டது. அவசரமாக தன்னுடைய ‘பதி ‘எங்கு போகிறார் என்பதை விளங்கிக்கொண்டு உதட்டைச்சுழித்த வாழ்க்கைத்துணை, « ஏங்க, ஒழுங்கா பாத்ரூம் கட்டிவச்சிருக்கிறப்ப எங்க கிளம்பிட்டீங்க, பூச்சி பொட்டு எதுனா கடிச்சா நாளைக்கு எங்க கதி ? » என்ற மனைவியின் பதிபக்தி எச்சரிக்கையைக் காதில் வாங்கவில்லை. கருமமே கண்ணாக தமது புண்ணிய ஸ்தலத்தைத் தேடி விரைந்தார், இரண்டு நிமிஷநேரம் நடந்திருப்பார். ம் இலுப்பைமரப் பிரகாரத்திற்குள் நுழைந்திருப்போம் என்ற நம்பிக்கையுடன் வேட்டியை உயர்த்திய கையோடு தலையையும் உயர்த்தினார், இலுப்பை மரம் மட்டுமல்ல அங்கிருந்த புளியமரமும் இல்லை, வெறிச்சோடி கிடந்தது.
« அதுகள சூளைபோட வெட்டி ஆறு மாசம் ஆவுது » என ஒரு குரல் அசரீரி போல ஒலிக்க திரும்பினார், வேகமாக ஒருவர் நடந்துகொண்டிருந்தார், பார்க்க பேச்சாண்டிபோல இருந்தது.