பத்ரிக் மொதியானோ -நோபெல் பரிசு!

France Nobel Literature பிரான்சு நாட்டில் வாழும் இந்தியன் என்றவகையில் இருவகையில் பெருமை.

முதலாவதாக அமைதிக்கான நோபெல்பரிசை பாகிஸ்தானிய சிறுமிக்கும் இந்தியருக்குமாக பகிர்ந்தளிந்து எல்லைச் சண்டையைத் தற்காலிகமாக நார்வே நோபெல் பரிசு நிறுத்திவைத்திருக்கிறது. பரிசுக்குறியவர்கள் இருவரும் இளஞ்சிறார்களுக்காக உழைத்திருக்கிறார்கள் என்கிறது தேர்வுக்குழு.

இரண்டாவதாக – பிரெஞ்சு இலக்கியத்திற்கு கிடைத்துள்ள நோபெல் பரிசு. ஒரு சிலருக்கு நோபெல் பரிசு கிடைக்க வாய்ப்புகளுண்டு என நான் நம்புபவர்களில் மிஷெல் ஹூல்பெக், பத்ரிக் மொதியானோ உண்டு, பிலிப் சொலியெ கூட அதற்கான தகுதிகொண்டவர்தான். ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பிரெஞ்சு இலக்கியத்தை பரிசீலித்தபிறகே பிறமொழிகளில் வந்த நூல்களைத் தேர்வுகுழுவினர் தங்கள் கவனத்தில் கொள்கின்றனர் என்றார். அவர் சொல்வது உண்மையாகவும் இருக்கக்கூடும். இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற உலக நாடுகளில் பிரான்சு முதலிடத்தைப் பெறுகிறது. இதுவரை 57 நோபெல் பரிசுகளை வென்றுள்ள பிரான்சு இலக்கியத்திற்கு மட்டும் 15 பரிசுகளை வென்றுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன.

பத்ரிக் மொதியானோவின் சிறுகதையை ஏற்கனவே மொழி பெயர்த்து திண்ணை இணைய இதழில் வந்துள்ளது. பின்னர் காலசுவடு வெளியீடான ‘உயிர்க்கொல்லி’ தொகுப்பிலும் இக்கதை உள்ளது நண்பர்களுக்காக:
சேன் நதி –
பத்ரிக் மொதியானோ

இடம் பூலோஞ், புவான்-துய்-ழூர் என்ற ஆற்றோர வீதி. சூரியனின் ஒற்றைக் கதிரொளியில் பிரகாசித்த கட்டடமொன்றின் சுவரில் பிளாஷ்’ (Blache) என்று நீல வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது, எழுத்துக்கள் மங்கியும் உரிந்துமிருந்தன. ‘அருகிலிருந்த காப்பிக் கடைக்காரனிடம் விசாரித்தேன். அவன், .’பிளாஷ்’ என்ற பேரில் வெகுகாலத்திற்குமுன் சந்தின் தொங்கலில் சைக்கிள் கடையொன்றை நடத்தியவன் இறந்துவிட்டதாகவும், அவனது ஒரேமகள் தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டு இளம்வயதில் புறப்பட்டுப் போனவவள், பிறகு திரும்பவேயில்லை”, என்றான்.

‘பிழு'(1) வின் தாயார்க்காரியான ‘கோந்த்தெஸை'(2) நினைத்துக்கொண்டேன். முதலாம் அல்பெர் வீதியிலிருந்த தொகுப்பு வீட்டிலிருந்த மேசையைக் குடைந்தபோது ‘பிளாஷ் ஒதெத்’ என்ற பெயரில் அடையாள அட்டையொன்று கையிற் கிடைத்தது. அடையாள அட்டையின் நிழற்படத்தினை பார்த்த மாத்திரத்தில் அவள் ‘பிளாஷ் ஒதெத்’ என்று புரிந்துவிட்டது. பாதையைத் தொலைத்துவிட்டு அலைகிறபோது, அதிர்ஷ்டவசமாக ஏதாவது நேரும், அப்படித்தான் எனக்கும் நடந்தது. ஒருநாள் மாவட்ட நிருவாக அலுவலகத்தில், “‘பிளாஷ்’ என்ற பெயரில் தகவல் ஏதேனும் கிடைக்குமா”, என்று அங்கிருந்த பெண் உதவியாளரை விசாரிக்கப்போக, அவள் கொஞ்சம் நல்லமாதிரியென நினைக்கிறேன், நான்கைந்து பக்கங்கள் தேறும் கையிற் திணித்தாள்.

அப்பெயர் பட்டியல்கள் தட்டச்சிலிருந்தன: சேன் நதியும் மார்ன் நதியும் சந்திக்கிற ஷராந்தோன் பக்கமிருந்த இரவுவிடுதிகளையெல்லாம் வலம் வந்தாயிற்று.

பட்டியலில் இருந்த பெயர்களில் பிளாஷ் ஒதெத், வயது பதினெட்டு, 23-bis, கே துய் புவான் துய் ழூர், பூலோஞ்- என்பதுமொன்று.

முதலாம் அல்பெர் வீதி, பூலோஞ் -ஆற்றோர சாலை பக்கமிருந்த ‘பிளாஷ்’ பெயர்கொண்ட சைக்கிள்கடை, தடிச்சி மதெலின் லூயி தனது சொகுசுப்படகை நிறுத்திவைக்கிற புத்தோ தீவு, நதியின் மற்றபக்கம், ஷரந்த்தோன் பாலம்.. அத்தனையும் சேன் நதியோடு சம்பந்தப்பட்டவைதான். ஏன், பிழுவின் கண்களை நினைத்துக்கொள்ளும்போதுகூட சேன் நதியின் நிறம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

*******

அப்போது எனக்குப் பதினெட்டு வயது. நாடகப் பட்டறையில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நேரம் – பள்ளிக்கு, ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கம்’ என்று பெயர். அந் நாடகப்பட்டறை மாணவர்களில் ‘பூபூல்’ என்றழைக்கபட்டத் தடியனைத் தவிர வேறெவரும் தொழில்முறை நாடக நடிகர்கள் இல்லை. பள்ளியில் வாரத்திற்கு மூன்றுமுறை மொத்த மாணவர்களுக்குமாகச் சேர்த்து, எங்கள் பயிற்சி ஆசிரியையால், ‘பொது வகுப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்ட சிறப்பு வகுப்புகள் நடந்து வந்தன, நான் தவறாமல் அவ்வகுப்புகளுக்குச் செல்வேன். நாடகப் பட்டறையை நிர்வாகியும் எங்களுக்குப் பயிற்சி ஆசிரியையுமாக இருந்த பெண்மணி ஒரு காலத்தில் ‘பிரெஞ்சு நாடகத்துறையில்’ தீவிரமாக உழைத்தவள். தனது பணிக்காலம் முடிவுக்கு வந்த நேரத்தில் நாடகத்துறையிலிருந்த ஈர்ப்பும், வெகுசனத் தொடர்பில் கொண்டிருந்த பற்றுமே ‘எத்துவால்’ அருகே, ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தை’ அவள்’ தொடங்குவதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன. ‘வழக்கமான மேடை நாடக அரங்குகள், திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிற்குத் தான் எதிரியென்று ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கம்’ வெளியிட்டத் துண்டு பிரசுரங்கள் தெரிவித்தன.

‘பொது வகுப்பு’ என்கிறபோதெல்லாம் இரவுடன் கூடிய கடும்பனிக்காலம் நினைவுக்கு வருகிறது. இரவு எட்டு மணியிலிருந்து பத்தரைமணி வரை எங்களுக்கு வகுப்பு. வகுப்பு முடிந்ததும் இருட்டில் கலப்பதற்கு முன்பாக பூபூலும் நானும் உரையாடியபடி வெளியேறுவோம். எங்கள் உரையாடலில் வேறு சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘புபூல்’, ‘சோனியா ஓ தொய்யே’ என்ற இரண்டு பெயர்களைத்தான் என்னால் இப்போது ஞாபகப்படுத்த முடிகிறது..

‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தின்’ நட்சத்திரமென்று அவளைச் சொல்லலாம். நாங்கள் அனைவரும் கலந்துகொள்கிற ‘பொது வகுப்பிற்கு’ மொத்தத்தில் இரண்டு அல்லது மூன்று முறைதான் அவள் வந்திருப்பாள். எங்கள் நாடகப் பட்டறை ஆசிரியரிடம், தனக்கென பிரத்தியேகமாகப் பாடஞ்சொல்லித் தர ஏற்பாடு செய்துகொண்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். தனி வகுப்பு என்பது எல்லோராலும் முடிகிற காரியமல்ல- அதற்கெல்லாம் பணம் வேண்டும். அவளைத் தவிர அங்கிருந்த வேறு மாணவர்களுக்கு, என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் – அதற்குச் சாத்தியமில்லை. அவள் நல்ல அழகு, முகமாத்திரம் சற்று ஒடுங்கலானது, நிர்மலமான கண்கள். பார்த்த மாத்திரத்தில் எவரையும் கவரக்கூடியவள், எங்கள் கவனத்தை ஈர்த்ததில் வியப்பேதுமில்லை. எங்களைக் காட்டிலும் கண்டிப்பாக ஒரு சில ஆண்டுகளாகிலும் வயதில் மூத்தவளாக இருக்கவேண்டும். போலந்து நாட்டு பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவளெனச் சொல்லிக்கொண்டாள். அவளைப்பற்றி இரண்டு மூன்று சஞ்சிகைகள் அந்த நேரத்தில் எழுதப்போக, கிட்டதட்ட ஒருமாத காலம் வகுப்பிற்கு அவள் வரவில்லை, எங்களுக்கு ஆச்சரியம். வெகுசீக்கிரம் பொது மேடைகளில் அவள் தோன்றவிருப்பதாகவும் அப்போது பேச்சிருந்தது.

‘கோந்த்தெஸ்’ என்ற பெயரை நாங்கள்தான் அவளுக்கு வைத்திருந்தோம். அப்பெண்ணுடைய முதல் மேடையேற்றத்தைப் பற்றிய எந்தக் கேள்வியையும் நாங்கள் கேட்டுவிடக்கூடாதென்பதில், நாடகப்பட்டறையின் நிர்வாகி கறாராக இருந்தாள். ஆனல் எங்கள் குழுவில் புபூல் மிகவும் கெட்டிக்காரன்; அவனுக்கு நாடக அரங்குகள், திரை உலகம், கேளிக்கை விடுதிகள் சம்பந்தப்பட்ட இடங்களின் அறிமுகம் இருந்ததால் அவளைப்பற்றிய எல்லாத் தகவல்களும் அவ்வப்போது வந்து சேர்ந்தன. முதலாம் அல்பெர் வீதியில் ஆடம்பரமான மாடி வீடொன்றில் ‘கோந்த்தெஸ்’ வசிப்பதாகவும், பின்புலத்தில் என்னவோ நடக்கிறதென்றும் பொடிவைத்துப் பேசினான்: “அவளை சௌகரியமாக யாரோ பராமரிக்கவேண்டும். நகைக்கடைகளிலும், துணிக்கடைகளிலும் இப்படி ஏராளமாக செலவு செய்ய எல்லோருக்கும் ஆகிற காரியமா என்ன?”, என்றான். “La Tour d’Argent (‘லா தூர் த்’அர்ழான்) உணவு விடுதியில் சுமார் பத்துபேருக்கான இருக்கைகளை முன்கூட்டியே சொல்லிவைத்து, இன்னார்தானென்றில்லை எவரையும் அவளுடன் உணவருந்த அழைக்கிறாளென்றும், வந்தவர்களுக்கு அன்பளிப்புகளை தாராளமாக வாரி வழங்குகிறாளென்றும், அன்பளிப்புப் பெற்றவர்கள் பதிலுக்கு அவளுக்கு வேண்டியதைச் செய்துகொடுக்கிறார்களென்றும் கூறி அவள் நினைத்ததை சாதிக்க முடிகிற தந்திரத்தை ஒரு முறை விளக்கினான். இப்படியெல்லாம் அவளை விமரிசித்தபோதிலும் புபூலுக்கு, தன்னையும் ஒருநாள் அவளுடன் உணவருந்த அழைக்கமாட்டாளா? என்ற ஏக்கம் நிறையவே இருந்தது..

சிறுமி ‘பிழு’ மாத்திரம் இல்லையெனில், எல்லாச் சம்பவங்களுக்கும் குப்பைக்குப் போகிற மலர்ச்செண்டின் கதிதான்.

எங்கள் நாடகப் பட்டறை மாணவர்களிடையே பரிசுபோட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த நாளொன்றில்தான் அவளை முதன் முதலில் சந்தித்தேன். நிகழ்ச்சியை பள்ளியிலேயே விசாலமாக இருந்த ஓர் இடத்தில் சில மாற்றங்கள் செய்து, நாடகப் பட்டறையின் முதல்வர் பெண்மணி ஏற்பாடு செய்திருந்தாள். சுமார் ஐம்பது பார்வையாளர்களும், கலையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் பரிசிக்குரியவர்களை தேர்வு செய்யவென்று நடுவர் ஒருவரையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டி ஏற்பாடு செய்திருந்தபோது, வகுப்புக்கு நான் புதிய மாணவன், மேடைக்கூச்சமும் இருந்தது, போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியில் சென்றிருந்தேன். நான் திரும்ப வந்தபோது போட்டி நடந்து, பரிசுக்குறியவர்களை அறிவித்தும் முடித்திருந்தார்கள். நிகழ்ச்சி நடந்த மண்டபத்திலிருந்து பார்வையாளர்கள்கூட புறப்பட்டுபோய்விட்டார்கள். ஒரு சில நண்பர்களுடன் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்த புபூல் என்னைக் கண்டதும், பேச்சைத் துண்டித்துக்கொண்டு சட்டென்று என்னிடம்:

– முதல் பரிசைப் பெற்றது யாரென்று நினைக்கிற? கோந்த்தெஸ்- எனக்கு ‘ம்யூசிக்-?¡லுக்கான'(3) வாய்ப்பு கிடைத்திருக்கிறது, என்றான். எனது பாராட்டுதலை அவனுக்குத் தெரிவித்தேன்.

– ‘La Dame aux Camelias’ நாடகத்திலிருந்து மரணக்காட்சியைப் தேர்வு செய்து அவள் நடித்தாள். ஆனால் வசனத்தைச் சுத்தமாக மறந்துவிட்டாள், என்று என் காதில் முணுமுணுத்தான், தொடர்ந்து, திட்டமிட்டபடிதான் எல்லாம் நடந்தது தம்பி.. பேசிவைத்துக்கொண்டு அதன்படிதான் காய் நகர்த்தியிருக்கிறார்கள். நடுவருக்கும், நம்முடைய மதாம் சான்-ழேனுக்கும் உறையில் பணம் போயிருக்கிறது, என்றான்.

மதாம் சான்-ழேன் எங்கள் பயிற்சி ஆசிரியை, பிரெஞ்சு நாடக உலகம் அவளைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது.

– “கோந்தெஸ்’க்காகவே நிழற்படக் கலைஞர்கள் வரவழைக்கபட்டார்கள் தெரியுமா? பேட்டிக்குக் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நட்சத்திரமென்றால் சும்மாவா? ம்.. பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்திருப்பாளென நினைக்கிறேன்” தொடர்ந்து புலம்பி கொண்டிருந்ததான்..

அப்போதுதான் கவனித்தேன், மண்டபத்தில் கடைசியாக சிவப்பு நிற வெல்வெட் இருக்கையொன்றில் சிறுமியொருத்தி உறங்கியபடியிருந்தாள்.

– யார் அது?- புபூலிடம் கேட்டேன்.

– ‘கோந்த்தெஸ்’ மகள். அவளுக்கு நேரமில்லையாம். மதியத்திற்கு, அந்தபெண்ணைப் பார்த்துக்கொள்ளும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள். ஒத்திகையொன்றிற்குப் போகவேண்டியிருக்கிறது, என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். உனக்கு சரிவருமா?

– உனக்காக வேண்டுமென்றால் செய்யறேன்.

– கொஞ்சநேரம் அவளைக் கூட்டிக்கொண்டு உலாத்து, பிறகு முதலாம் அல்பெர் வீதியிலிருக்கும் 21ம் எண் வீட்டில் அவளை கொண்டுபோய் சேர்த்திடு, வேறு பெரிதாக செய்ய ஒன்றுமில்லை.

– சரி.

– அப்போ நான் புறப்படறேன். கேளிக்கை விடுதிகளில் இனி நானும் மேடையேற வேண்டியிருக்கும்…

போகும்போதுதான் கவனித்தேன் பதட்டத்துடனிருந்தான். உடலில் முத்துமுத்தாக வியர்வைத் துளிகள்.

– புபூல், கவலையை விடு நான் பார்த்துக்குறேன். கேளிக்கை விடுதிகளில் நீயும் மேடை ஏற வாய்ப்பு அமையுமென்று சொல்ற.. வாழ்த்துக்கள்.

புபூலும் போன பிறகு மண்டபத்தில் எங்களைத் தவிர வேறு நபர்களில்லை. சிறுமி இன்னமும் உறக்கத்திலிருக்கிறாள். அவளை நெருங்கினேன். கன்னம் நாற்காலில் படிந்திருக்க, இடது கை தோளிலும், முன் கை மார்பிலுமாக இருந்தன. தலைமயிர் நெளியாய் நெளியாய் தேன் நிறத்திலிருந்தது. வெளிர் நீலத்தில் மேலங்கியொன்றை அணிந்திருந்தாள். கால்களில் பழுப்புவண்ண ஷூக்கள். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம்.

தோளில் மெல்லத் தட்டி எழுப்ப, கண் விழித்தாள்.

கோந்த்தெஸ் கண்களைப்போலவே சிறுமியின் விழிகளிரண்டும் சாம்பல்நிறத்தில் ஒளிர்ந்தன.

– வெளியிற் சென்று உலாத்திவிட்டு வரலாம். என்ன?

அவள் வியப்புக்குள்ளாகி இருக்கவேண்டும், முகத்தில் தெரிந்தது. எழுந்து கொண்டாள். அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டேன், இருவருமாக ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தை’ விட்டு வெளியில் வந்தோம்.

அவென்யூ §?¡ஷ் வழியா இருவரும் நடந்து, மோன்சோ பூங்காவுடைய நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

– என்ன உள்ளேபோய் உலாத்திவிட்டு வரலாமா?

– ம்.- சம்மதம் என்பதுபோல தலையாட்டினாள்.

இடது திசையில் புல்வார் பக்கமாக, வண்ணம் உரிந்த ஊஞ்சல்களும், பழைய சறுக்குமரமொன்றும், மணற்திட்டொன்றும் இருந்தன..

– என்ன விளையாட ஆசையா?

– ஆமாம்.

அங்கே குழந்தைகள் பெரியவர்கள் ஒருவருமில்லை. சீக்கிரம் பனிகொட்டினாலும் கொட்டலாம், பஞ்சுபோல வெண்மையான மேகமூட்டத்துடன் வானம். இரண்டு அல்லது மூன்றுமுறை சறுக்கு மரத்தில் விளையாடியவள், தயக்கத்துடன் தன்னை ஊஞ்சலில் ஏற்றிவிடச் சொல்லி கேட்கிறாள். அப்படியொன்றும் எடை போட்டவளாக இல்லை. தூக்கி உட்காரவைத்ததும் ஊஞ்சலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

– உனக்கு என்ன பேரு?

– மர்த்தீன். ஆனா என்னை அம்மா பிழுவென்றுதான் கூப்பிடுவாள்.

மணல்திட்டில் ஒரு சிறிய முறத்தைப்பார்த்ததும், மண்ணைக் கிளறி விளையாட ஆரம்பித்தாள். அருகிலேயே சிமெண்ட்டால் செய்த இருக்கையொன்று இருந்தது. அதிலமர்ந்தபடி அவள் விளையாடப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கவனித்தேன்: அவளணிந்திருந்த காலுறைகள் வித்தியாசமாகவிருந்தன: ஒன்று கரும்பச்சை வண்ணத்தில் முழங்கால் வரையும், மற்றொன்று நீலவண்ணத்தில் பழுப்பு வண்ண ஷூவை இறுக்கியிருந்த கயிற்றுக்கு மேலாக ஒரு சில செ.மீட்டர்கள் கூடுதலான அளவிலும் இருக்கக் கண்டேன். அன்றையதினம், உண்மையில் ‘கோந்த்தெஸ்’தான் தனது மகளுக்கு உடுத்தி அனுப்பியிருப்பாளா? என்றெனக்குச் சந்தேகம்.

அதிக நேரம் ஈரமணலில் இருந்தால், சிறுமியின் உடம்புக்கு ஆகாமற் போனாலும் போகலாம் என்ற பயத்தில், அவளுடைய ஷூக் கயிறுகளை ஒருமுறை சரிபார்த்தபிறகு பூங்காவின் மறுபக்கம் அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு சில குழந்தைகள் குடைராட்டின குதிரைகளில் சுற்றிவந்தனர். அவள் மரத்தலான அன்னமொன்றில் உட்கார விரும்பினாள். குடைராட்டினம் கிரீச்சிட்டுக்கொண்டு சுற்றியது. எனக்கெதிரே வரும்போதெல்லாம் வலது கையை உயர்த்தி ஆட்டினாள், இடது கரம் அன்னத்தின் கழுத்தை வளைத்துப் பிடித்திருக்க உதடுகளுக்கிடையே சிறிய புன்னகை.

ஐந்து சுற்று வந்திருப்பாள், அம்மா உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள், சுரங்கப்பாதை ரயில் பிடித்து நாம் உடனே திரும்புவது அவசியம், என்று அவளிடம் கூறினேன்.

– அங்க்கிள் எனக்கு நடந்துபோகணும்

– சரி. உனக்கு அப்படியொரு ஆசைன்னா, நடந்தே திரும்புவோம்.

கூடாதென்று சொல்ல எனக்குத் தைரியம் காணாது. அவளுடைய தந்தையைப் போல் நடந்துகொள்வதற்கான வயதும் எனக்கில்லை.

மோன்சோ வீதி, அவென்யூ ஜார்ஜ்-5 எனக் கடந்து மீண்டும் சேன் நதி பக்கம் வந்தோம். கட்டடச்சுவர்கள் சூரிய ஒளியிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்த நேரம், வெகு சீக்கிரம் அத்தனையும் இருட்டில் கலந்துவிடும். நேரமில்லை, கொஞ்சம் வேகமாக நடக்கவேண்டும். அன்றைய தினமும் அந்தி சாயும் நேரத்தில் எனக்கேற்படும் வழக்கமான மனக் குமுறல்கள். சிறுமியும் என்னுடைய மனநிலையில்தான் இருந்திருக்கவேண்டும் இல்லையென்றால் அத்தனை இறுக்கத்துடன் எனது கையை பற்றியபடி நடப்பாளா?

மாடியை அடைந்தபோது, சலசலவென்று பேச்சும் சிரிப்பும் கலந்தொலித்தது. ஐம்பது வயது மதிக்கக்கூடிய பெண்மணி, தலைமுடியைக் குட்டையாகக் வெட்டிக்கொண்டிருந்தாள் சதுரமுகம், பார்க்க ‘புல்-தெரியெர்’ வகை நாய்க்குண்டான சுறுசுறுப்பும், துடிப்பும் தெரிந்தது. கதவைத் திறந்தாள். ஒருவிதமான அவநம்பிக்கையுடன் மேலுங்கீழுமாக எங்களைப் பார்த்தாள்.

– வணக்கம் மதாம் மதெலென்-லூயி, – சிறுமி

– வணக்கம், பிழூ.

– நான்தான் இவளை வெளியே அழைத்துக்கொண்டு போனேன்.

– உள்ளே வாங்க

நுழைவுக் கூடத்து தரைமுழுக்க பூங்கொத்துகள். வரவேற்பறையில் கடைசியாகத் தெரிந்த இரட்டைக் கதவினூடாகக் கும்பல் கும்பலாய் மனிதர்கள்.

– கொஞ்சம் பொறுங்க, சோனியாவைக் கூப்பிடறேன், – சொன்னவள் ‘புல்-தெரியர்’ நாய்போலிருந்த பெண்மணி.

சிறுமியும் நானும்- இருவருமாக நுழைவுக் கூடத்தில் காத்துக் கிடந்தோம், எங்களைச் சுற்றிலும் கேட்பாரற்று கிடக்கும் பூங்கொத்துகள்..

– பூங்கொத்துகள் நிறையதான் வந்திருக்கின்றன…,- நான்.

– எல்லாம் அம்மாவுக்கு.

‘கோந்தெஸ்’ வெளிப்பட்டாள்; தோளில் கற்கள் பதித்த கறுப்பு நிற வெல்வெட்டாலான ஆடை, தேவதைபோல ஜொலித்தாள்.

– மறுப்பேதும் சொல்லாமல் ‘பிழு’ வைத் வெளியில் அழைத்துபோன உங்க நல்ல மனசைப் பாராட்டணும்.

– என்ன இதையெல்லாம் நீங்க பெரிசு பண்ணிகிட்டு… இன்றைக்கு நடந்த போட்டியில் உங்களுக்கு முதற் பரிசு கிடைத்ததாமே, பாராட்டுகள்.

– நன்றி.. மிகவும் நன்றி

எனக்கு உடம்பை என்னவோ செய்தது. அந்த இடத்தைவிட்டு சீக்கிரம் புறப்பட்டால் நல்லது என்பதுபோல தோன்றியது. அவள் தனது மகள் பக்கம் திரும்பினாள்.

– பிழு, அம்மாவுக்கு இன்றைக்கு மிகவும் முக்கியமான தினமென்று தெரியுமில்லை…

சிறுமியின் கண்கள் சட்டென்று அகலவிரிந்து அவள் மீது பதிந்தன. அக்கண்களில் வெளிப்பட்டது அச்சமா? வியப்பா?

– பிழு, அம்மாவுக்கு பெரியதொரு வெகுமதி கிடைச்சிருக்குத் தெரியுமா? அதற்காகக் அம்மாவுக்கு நீ முத்தம் கொடுத்தாகணும்…

சொன்னாளே தவிர சிறுமியின் திசைக்காய்க் குனிந்தவளில்லை. சிறுமி கால்விரல்களை ஊன்றி, எம்பி முத்தமிட மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ‘கோந்த்தெஸ்’ சிறுமி தன்னை முத்தமிட எடுத்துக்கொண்ட முயற்சிகளை கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை, அவள் கவனம் இறைந்து கிடந்த பூங்கொத்துகளிற் சென்றது.

– பிழு, பார்த்தியா? எவ்வளவு பூக்கள்! இவற்றையெல்லாம் எடுத்து ஜாடியில் வைக்கக்கூட இப்போது எனக்கு நேரமில்லை. வந்திருக்கும் நண்பர்களை கவனிச்சாகணும், பிறகு அவர்களை இரவு விருந்துக்கு அழைத்துப் போகணும். இராத்திரிக்கு எத்தனை மணிக்குத் திரும்புவேனோ தெரியாது… நீங்க இன்றிறவு பிழுவை பார்த்துக்க முடியுமா?

நான் மறுக்கமாட்டேன் என்பதைத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்ததைப் போல, அவள் கேட்ட தோரணை இருந்தது.

– உங்க விருப்பம் அப்படீண்ணா, செய்தால் போச்சு.

– உங்களுக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்றேன். இரவு இங்கேயே நீங்கள் தூங்கிக்கொள்ளலாம்.

எனக்குப் பதில்சொல்லக் கூட நேரம் கொடுக்கவில்லை, சட்டென்று. சிறுமி பிழுவின் பக்கம் திரும்பினாள்.

– பிழு செல்லம்.. அப்போ நான் கிளம்பட்டுமா? நண்பர்கள் எனக்காக காத்திருக்காங்க பாரு.. அம்மாவை மறந்திடாதே..என்ன? – குனிந்து சிறுமியின் நெற்றியில் செயற்கையாய் முத்தமிட்டாள்.

– மிஸியே, உங்களுக்கு மறுபடியும் நன்றி.

அதிகம் அலட்டிக்கொள்ளாமல், வர§ற்பறையில் காத்திருந்த நண்பர்களைத் தேடி சென்றாள். அத்தனை இரைச்சல்களுக்கிடையிலும், வெடித்து பிறகு மெலிந்து அடங்கிய சிரிப்பிலிருந்து அவளைத் தனியே என்னால் அடையாளப்படுத்த முடிந்தது.

அவர்கள் படிகளில் இறங்கிச் செல்ல செல்ல, ஒன்றன் பின்னொன்றாக குரல்களும் தேய்ந்து அடங்கின. பிழுவும் நானுமாக தனித்து இருந்தோம். சிறுமி சாப்பிடும் அறைக்கு என்னைக் கூட்டிச்சென்றாள். இருவரும் எதிரெதிராக மார்பிள் மூடிய நீள்சதுர மேசையொன்றில் அமர்ந்தோம். நான் உட்கார்ந்திருந்த நாற்காலியோ வீட்டின் பின்புறத்தில் தோட்டவெளியில் பொழுதைக்கழிக்க உபயோகிக்கப்படும் வகையைச் சார்ந்தது. அதுவும் ஆங்காங்கே துரு பிடித்து மிகப் பழையதாக இருந்தது. அவள் உட்கார்ந்திருந்ததோ வெல்வெட்மெத்தை தைத்த முக்காலி. தலைக்கு நேராகத் தொங்கவிடப்பட்டிருந்த பல்பிலிருந்து விழுந்த வெளிச்சம் மொத்தமும் எங்கள் மீதுதான் படிந்திருந்தது.

– சீன சமையற்காரனொருவன் உணவைப் பரிமாறினான்.

– இவரெப்படி, நல்ல மனிதர்தானே? – பிழுவைக் கேட்டேன்.

– ஆமாம்.

– என்ன பேர்?

– தியூங்.

சிலை போல விறைத்து உட்கார்ந்தபடி சூப்பை முடிப்பதில் கவனமாக இருந்தாள். உண்டு முடிக்குவரை வாய் திறக்கவில்லை.

– என்ன நான் எழுந்திருக்கலாமா?

– ம்.

அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். சுவரும் அலங்காரங்களும் நீல வண்ணத்திலிருந்தன. மரச்சாமான்களென்று சொன்னால் இரண்டே இரண்டுதான்: ஒன்று சிறுபிள்ளைகளுக்கான கட்டில். மற்றொன்று இரண்டு சன்னல்களுக்கும் இடையிலிருந்த வட்டமேசை. மேசையில் போட்டிருந்த விரிப்பின் மீது மேசை விளக்கொன்று இருந்தது.

அறையோடு சேர்ந்தாற்போல இருந்த குளியல் அறைக்குள் நழுவினாள். பல்துலக்கும் சத்தம் கேட்டது. வெளியில் வந்தபோது வெண்ணிற இரவு ஆடையிலிருந்தாள்

– தயவு செய்து ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டு வரமுடியுமா? அவள் கேட்டவிதம், நான் அவள் வேண்டுகோளை தப்பாக எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்ற கவலையில் தொனிப்பது போலிருந்தது.

– அதற்கென்ன கொண்டுவருகிறேன்

– பிழு கொடுத்த டார்ச் விளக்கின் துணையுடன் சமையலறையை தேடிக்கொண்டு போனேன். பயமுறுத்தும் இருட்டில், அவள் ஒருத்திமாத்திரம் தனியாக உலாத்துகிறபோது இந்த டார்ச்சே கூட ஒருவகையில் சுமைதான், நினைத்துக்கொண்டேன். பெரும்பாலான அறைகள் காலியாக இருந்தன. வழியெல்லாம் டார்ச் விளக்கை ஒளிர வைக்க முயற்சித்தபோதிலும், நிறுத்தவும் அணைக்கவுமான பொத்தான் சரியாக நடக்கவில்லை. பார்ப்பதற்கு கைவிடப்பட்டக் குடியிருப்புபோல, மாடியிருந்தது. சுவரில் செவ்வக வடிவிலிருந்த கறைகள் அவை ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்களாக இருக்கவேண்டும். மற்றொரு அறை அநேகமாக ‘கோந்த்தெஸ்’ உடையதாக இருக்கவேண்டும், பெரியதொரு கட்டில் போட்டிருக்க, சற்றேரக்குறைய அதே அளவிலான வெண்ணிற சாட்டின் துணியால் அக்கட்டில் மூடப்பட்டிருந்தது. தரையில் ஒரு தொலைபேசி, கட்டிலைச் சுற்றிலும் சிவப்பு ரோஜாக்கள், பவுடர் டப்பியொன்று, ஒரு மப்ளர்…

சமையலறை மேசையில், சீனன் இரண்டு வேற்று மனிதர்களோடு சீட்டைக்கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அவர்களில் ஒருவன் அவனைப்போலவே சீனன், மற்றவன் ஐரோப்பியன்.

– சிறுமிக்காக ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுபோக வந்தேன்.

குழாயிருக்கும் திசையைக் காட்டினான். கண்ணாடித் தம்ளர் நிரம்பியதும் அவர்கள் பக்கம் மீண்டும் என்பார்வை சென்றது. விரித்திருந்த துணியில், வகை வகையாய் உணவுகள் தயாரிக்கும் முறைபற்றிய அட்டைகள். அவற்றைத்தான் பந்தயம் வைத்திருந்தார்கள். அங்கிருந்து வெளியேறினேன். கதவு பின்புறம் மூடப்பட்டதற்கான கிறீச்சென்று சத்தம்.

மீண்டும் வெறிச்சோடிக்கிடந்த அறைகளை ஒவ்வொன்றாக கடந்துவந்தேன். அண்மையில்தான், அவசர அவசரமாக அங்குள்ள தளவாடங்களைகாலி செய்திருக்கவேண்டும்.. அவற்றைப் பாதுகாப்பதற்கென நிறுவனங்கள் இருக்கின்றனவே அங்கே ஒப்படைத்து பத்திரபடுத்தியிருப்பார்களோ? ஆனால் வெள்ளை சாட்டின் துணியினால் மூடப்படிருந்த பெரிய கட்டில்; சுவரை ஒட்டியிருந்த சோபா; இரண்டு பெட்டிகளும், பயணப் பையொன்றுமாக அடுக்கப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகள் ஆகியவற்றைத் தற்காலிகமாக அங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும். .

அவளுடைய கட்டிலில் எனக்காகக் காத்திருந்தாள்.

– எனக்காக சில பக்கங்களை வாசிக்க முடியுமா?

குரலில், அவளுடைய வேண்டுகோளை மீண்டும் நான் தப்பாக எடுத்துக்கொள்ளபோகிறேன் என்ற கவலை. மேலட்டை பழுப்படைந்திருந்த ‘Le Prisonnier de Zenda’ என்ற புத்தகத்தை என் கையிற் கொடுத்தாள். அவள் வயதுக்கு அப்புத்தகத்தில் ஆர்வம் காட்டியது கண்டு எனக்கு வியப்பு. நான் வாசிக்க, கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அமைதியாக் கேட்டாள், கண்களில் அப்படியொரு பிரகாசம்.

ஓர் அத்தியாயம் முழுவதையும் படித்து முடித்தேன். அந்த அறையிலிருந்த விளக்கை மாத்திரமல்ல பக்கத்து அறை அலங்கார விளக்கையும் அணைக்க வேண்டாமென்றாள். இருட்டுக்குப் பயந்தாள். அவள் தூங்குகிறாளா என்று பார்க்க மூடியகதவுகளை விலக்கி பார்க்கவேண்டியிருந்தது. பிறகு மாடிமுழுக்க அலைந்ததில் தோலினாலான சோபாவொன்றை கண்டேன், இரவை அதிலேயே கழிந்தது.

மறுநாள் காலை, ‘கோந்த்தெஸ் குழைந்தையைப் பராமரிக்கிற வேலை தந்தால், செய்வேனா என்று கேட்டாள். அவளுடைய கலையுலக வாழ்க்கையும், உல்லாச உலகும் பிழுவைக் கவனித்துக்கொள்ள தடையாக இருந்தனவாம். ஆக, அவளுக்கு எனது உதவி தேவையாயிற்று. தனிமையிலிருந்து தப்பிக்கவென்று மரிவோ நாடகப் பயிற்சி பள்ளியில் சேர்ந்திருந்த எனக்கு, அதைத் தொடரமுடியாமற்போனது குறித்து வருத்தங்களில்லை. எனக்கென்று இப்போது சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. உணவிற்கும், உறைவிடத்திற்கும் வசதி செய்து கொடுத்தார்கள், முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு என் மீது நம்பிக்கையும் ஏற்பட்டது.

ழான்-குழோன் வீதியில் குல்ம் என்ற பெயரில் பள்ளியொன்றிருந்தது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருத்தி அதை நடத்திவந்தாள். அவளிடம் பிழுவுக்குத் தனி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலும், பின்னேரமும் பிழுவை அழைத்துவருவதற்காக அந்தப் பள்ளிக்குச் சென்றபோதேல்லாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன் அதாவது பிழுவைத் தவிர வேறு சிறுமிகள் அங்கு படிப்பதற்கான அறிகுறிகளில்லை. அமைதியாகவும் இருண்டும்கிடக்கிற உபயோகத்திலில்லாத தேவாலயத்தைப்போல ஒரு வகுப்பறையில் அவளும் சுவிஸ் பெண்மணியுமாக அமர்ந்திருப்பார்கள். அங்கே அவள் படித்த நேரம்போக மற்ற நேரங்களில் முதலாம் அல்பெர் வீதியிலுள்ள புற்களிட்ட பாதையிலோ, ட்ரொக்காடேரொ பூங்காவிலோ என்னையும் பிழுவையும் காணலாம், பிறகு நதிக்கரை வீதிகள் வழியாக வீட்டிற்குத் திரும்புவதை வழக்காமக் கொண்டிருந்தோம்.

எல்லாமே இரவும் பனியுமான பேழைக்குள் அரங்கேறியவை. பிழுவுக்கு ஏதோ இரவிடம் மட்டும் பயம் என்றில்லை, திரைத் துணிகளில் தெரியும் அவளுடைய அறை மின்சார விளக்கின் நிழலிடத்திலும், கதவிடுக்கினூடாகக் கண்ணிற்படும் பக்கத்து அறையின் லஸ்கர்கர் விளக்கிடத்திலுங்கூட அவளுக்கு அச்சமுண்டு. அவற்றையெல்லாம் தன்னைநோக்கி நீளும் கரங்களாக நினைத்துப் பயந்து கட்டிலில் சுருண்டு படுப்பவளை அணைத்துக்கொண்டு, பயப்பட ஒன்றுமில்லையென அவள் உறங்குவரை தைரியமூட்டவேண்டும். அவளை பயமுறுத்தும் நிழல்களைத் தவிர்க்க அல்லது அவற்றை இல்லாமல் செய்ய பல வழிகளிலும் முயற்சிப்பதுண்டு.

நானறிந்த எளியவழிமுறை திரைத்துணிகளை இருபக்கமும் ஒதுக்கிவைப்பது, ஆனால் விளக்கொளி எனது அமைதியான தற்காப்பு முயற்சியைக் காட்டிகொடுத்துவிடும். மின்சார விளக்கைக் கொஞ்சம் வலது பக்கம் கொஞ்சம் இடதுபக்கமென இடம்மாற்றம் செய்து பார்ப்பேன், ம்..பலனில்லை, நிழல்கள் எப்போதும்போல பயமுறுத்திகொண்டுதானிருந்தன.

அவளைப் பார்த்துக்கொள்வதென்கிற பணியில் சேர்ந்து சரியாக பதினைந்து நாட்கள் கடந்திருந்தன. என்னுடைய துணை ஒருவகையில் அவளுடைய அச்சத்தை தவிர்த்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன், இல்லையெனில் Prisonnier de Zenda புத்தகத்தின் படிக்கவேண்டிய அன்றைய அத்தியாத்தை முடிக்கும்முன்பாகவே, திரைத் துணிகளில் தெரிகிற கைகளைப்பற்றிய கவலைகளின்றி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

கடும்பனிபெய்த குளிர்காலம் அது. பாரீஸில் நாங்கள் குடியிருந்த இடம், முதலாம் அல்பெர் வீதி, நவீன ஓவியத்திற்கான அருங்காட்சியக கட்டத்தின் முன்பிருந்த திறந்தவெளி, ஒன்றின் மேலொன்றாக அடுக்கிவைத்ததுபோல இருக்கின்ற ‘பஸ்ஸி’ குன்றின் சரிவில் தெரிகிற வீதீகள் என எல்லாமுமாக சேர்ந்து அப்பகுதியே ஆங்காடின் (4) போல இருக்கிறது. கொன்கோர்டு திடலில்(5) குதிரைமீது சவாரிசெய்வதுபோல பெல்ஜிய அரசர்(முதலாம் அல்பெர்)சிலை. வெள்ளை வெளேரென்று மன்னர் ஏதோ பனிச்சூராவளியில் அகப்பட்டு தப்பித்துவந்தவர் போலவிருந்தார். பழைய பொருட்களுக்கான கடையொன்றில், கவனிப்பாரற்று மூலையிற் கிடந்த மரத்தால் செய்த பனிச் சறுக்கு வண்டியொன்றை பிழுவுக்கு விளையாட உதவுமென்று வாங்கினேன். ட்ரொக்காடேரொ பூங்காவிற்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த அவளுக்கு அதிக சிரமமற்ற சரிவில் விளையாடினாள். மாலை நதிக்கரை வீதிகள் வழியாக இருவருமாக வீடு திரும்பியபொழுது அவளது வழக்கபடி விறைத்தவாறு பனிச்சறுக்கு வண்டியில் உட்கார்ந்து வந்தாள். பார்க்க ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பவள்போல இருந்தாள், வண்டியை நான் இழுத்து வந்தேன். சட்டென்று வண்டியை வண்டியை நிறுத்தி விளையாடினேன். மரங்கள் அடர்ந்த காடொன்றில் தன்னந்தனியே அகப்பட்டுக்கொண்டதுபோல இருவரும் பாவனை செய்கிறோம். அந்த விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, அவள் கன்னங்களிரண்டும் சந்தோஷத்தில் சிவந்துவிட்டன.

இரவுநேர கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் புறப்படும் அவசரத்தில் (மாலை எழுமணி அளவில்) கோந்த்தெஸ் மகளுக்குக் கொடுக்கும் முத்தங்களைப் பற்றி சொல்லி என்ன ஆகப்போகிறது. அந்த வீட்டில் புரியாதப் புதிராக இருந்த மதெலென்-லூயீஸ் என அழைக்கப்பட்டவளுக்கு பின்னேரம் முழுக்க தொலைபேசியில் கதைத்தாகவேண்டும், எங்களைக் கவனிக்க அவளுக்கும் நேரமில்லை. குஸ்தி போடுபவனைப்போல முகத்தை வைத்துக்கொண்டு தொனதொனவென்று தொலைபேசியில் பேசவேண்டிய அவசியம் என்னவோ? ஈரமற்ற குரலில், கேட்கின்றவர்களுக்கு அவளுடைய அலுவலகத்தில் சந்திப்பதற்கான நேரத்தைச் சொல்கிறாள், முகவரியும் கொடுக்கிறாள், “ஆர்க்காட் த்யு லிடோ”, ஆம் அங்குதான் அவளுடைய அலுவலகமுள்ளது. கோந்த்தெஸ் மீது அவளுடைய ஆதிக்கம் நிறைய என்பது வெளிப்படை. அவள் சோனியாவென்று பெயர்சொல்லி அழைத்ததில்லை, எப்போதும் ‘ஒதெத்’ என்றழைத்தே பழகியவள். புபூல் சொல்வதுபோல கோந்த்தெஸுக்கு வேண்டிய ஆடம்பர செலவுக்காண பணத்தை இவள்தான் கொடுக்கிறாளோ?, என்னை நானே கேட்டுக்கொண்டேன். முதலாம் அல்பெர் வீதியில் தான் இவளும் வசிக்கிறாளா? கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் முடித்துக்கொண்டு அதிகாலையில் திரும்புகிறபோது பெரும்பாலும் அவளும் சோனியாவும் ஒன்றாகத்தான் வருகிறார்கள். ஆனால் அவளது அலுவலகத்தில்தான் மதலின் லூயி தூங்குகிறாளென நினைக்கிறேன்.

கடைசிகாலத்தில் சொந்தமாக ஒரு சொகுசு படகொன்று வாங்கியிருந்தாள், அதை எப்போதும் புய்த்தோ தீவென்று சொல்கிற இடத்தில் கரையோரமாக நிறுத்தி வைத்திருப்பாள். ஒரு ஞாயிற்றுக் கிழமை அவளை படலில் வைத்து பார்க்கவென்று பிழு, கோந்த்தெஸ், நானென்று மூவருமாகச் சென்றிருந்தோம். உள்ளே விருந்தினர்களை உபசரிக்கவென்று வசதி செய்யபட்டு மெத்தை தைத்த நாற்காலிகளெல்லாம் வாங்கிப்போட்டிருந்தார்கள். அன்றையதினம் தொப்பியும், காற்சட்டையுமணிந்து பார்க்க உடற்பெருத்த இளம் கப்பல் பணியாளர்போல இருந்தாள், முகத்தில் கவலை தெரிந்தது.

எங்களுக்குத் தேநீர் வழங்கினாள், தேக்குமரத்திலான சுவற்றில் சிவப்பு சட்டமிட்ட நிழற்படம் தொங்கிக்கொண்டிருந்தது. குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிருடன் படத்தில் இருந்தவள் அவளுடைய சிநேகிதி, சுர்கூஃப் (6) வழி வந்தவள்; தோணித்துறை, படகு, மழையில் நனையும் துறைமுகம் என்பதான அவளதுபாடல்கள் பிரசித்தம். பாடகி ஏற்படுத்திய தாக்கத்தில்தான் சொகுசுபடகை வாங்கியிருப்பாளா?

இரவு வந்தது. மதெலென்- லூயியும், கோந்த்தெஸ்ஸும் என்னையும் பிழுவையும் விருந்தினர்களை உபசரிக்கும் இடத்திலேயே தனித்து விட்டிருந்தனர். புதிர் விளையாட்டொன்றை அவளுக்கென்று கண்டுபிடித்தேன், இடம் பெரியதாக இருந்ததால் ஆர்வத்துடன் சிரமங்களின்றி விளையாடப் பழகிக்கொண்டாள்.

அப்பனிக்காலத்தில், சேன்நதியில் புது வெள்ளம் – சொகுசுப்படகின் சன்ன¨லை நீர்மட்டம் தொட்டிருந்தது. லீலா பூக்களின் மணமும் சேற்றின்மணமும் சொகுசுப்படகுக்குளேயும் இருந்தன.

இருவருமாக படகில் சதுப்பு நில பிரதேசங்களெங்கும் பயணித்தோம். நதியில் தொடர்ந்து செல்ல செல்ல எனக்கும் வயதுகுறைந்து அவள் வயது பையனாக மாறினதுபோல நினைப்பு, ‘லெ ப்வா'(le Bois) வுக்கும் ‘லா சேன்'(La Seine)னுக்கும் இடையிலிருக்கிற பூலோஜ்ன்(7) கடல்வரை சென்றிருந்தோம், நான் பிறந்ததும் அங்குதான்.

பிழுவுடன் தனிமையிலிருக்கிறபோது, இரவுநேரங்களில் அந்த ஆளின் காலடிச் சத்தத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை கேட்டிருப்பேன். அவனுக்கு முப்பது வயதிருக்கும்.. அவனிடத்தில் ஒரு திறப்பு இருக்கவேண்டும், முன் கதவினை உபயோகிக்காமல் வேலைக்காரர்களுக்கான கதவின் வழியாக உள்ளே வருகிறான். முதல் முதலாக அவனைச் சந்திக்க நேர்ந்தபொழுது தனது பெயர் ‘ழான்-பொரி” என்றும் ‘சோனியா’வுக்குத் தான் சகோதரனெறும் அறிமுகபடுத்திக்கொண்டான். ஆனால் இருவருக்கும் இனிஷியல் வேறாக இருந்தது ஆச்சரியம்?

ஓ’தொயே என்றழைக்கப்படும் சோனியாவுடைய குடும்பத்தவர்களுக்குப் பூர்வீகம் அயர்லாந்து; பிரபுக்கள் வம்சத்தைச் சார்ந்தவர்கள்; பதினெட்டாம் நூற்றாண்டில் போலந்து நாட்டில் குடியேறியவர்கள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்களென்ற ரகசிய தகவலை மெல்லிய குரலில் ஒருநாள் மதெலென் என்னிடம் தெரிவித்தாள். தகவல் உண்மையெனில் எதற்காக அவள் தன்னை சோனியா ஓ’தொயே என்று அழைத்துக்கொள்வதற்குப் பதிலாகத் ‘சோனியா ஓதெத்’தென்று வெளியிற் சொல்லிக்கொள்கிறாள்?

சோனியாவின் சகோதரனென்று சொல்லிக்கொண்டு ஒடுங்கிய முகமும், மெல்லிய தேகமுமாக இருந்த ‘ழான்-பொரி’, பார்க்க எனக்கு நல்லமனிதனாகத்தான் தெரிந்தான். சீன சமையற்காரன் பறிமாற அவன் சாப்பிடுவதென்பது வழக்கமாக நடப்பது, ஒரு சில நாட்கள் அப்படியான சந்தற்பங்கள் அவனுக்கு அமைவதில்லை. அந்நாட்களில் எங்களுடன் சாப்பிடவிரும்பி தேடிக்கொண்டு வருவான், நாங்களும் – பிழுவும் நானும் – அவனுடன் சேர்ந்து உணவருந்துவோம். சிறுமியிடத்தில் அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத பிரியம் அவனிடத்திலிருந்தது. அவளுடைய தகப்பனோ? உடைவிஷயத்தில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்பவன் என்பதை, டையுடன் பின்னும் குத்தியிருக்கப் புரிந்துகொண்டேன். இரவில் படுப்பது எங்கே? முதலாம் அல்பெர் வீதியிலென்றால் சோனியாவின் அறையிலா அல்லது குடியிருப்பில் மூலையில் போட்டுவைத்திருக்கிற சோபாவிலா?

வருகிறபோதெல்லாம் வெகுநேரம் கழித்து பொதுவாக ‘ழானுக்கு’ என்று எழுதப்பட்ட காகித உறையுடன் புறப்பட்டுச்செல்வான். பெரிய எழுத்துக்களில் அதை பார்க்கிறபோதே சோனியாவுடைய கையெழுத்தென்று விளங்கிவிடும். மதெலென் இருக்கிறபோது எங்களைப் பார்க்க அவன் வருவதில்லை.

ஒரு நாள் இரவு சிறுமி தூங்கும்போது, அவள் அருகிலிருக்க விரும்பினான். அவளுடைய கட்டிலருகே அமர்ந்து ‘Prisonnier de Zinda’ வாசிக்கக் கேட்டான். பிறகு இருவரும் சிறுமியை முத்தமிட்டு படுக்க வைத்தோம்.

வரவேற்பறை (எனக்கு அப்படி அழைக்க விருப்பமில்லை) என்று சொல்லப்படுகிற பெரிய அறையொன்றில் சீனன் மதுவை ஊற்றிக்கொடுத்தான்.

– ஒதெத் எனக்கென்னவோ புரிந்துகொள்ளமுடியாத பெண்ணாக இருக்கிறாள்…

சட்டென்று தனது பர்சிலிருந்து முனை மடிந்து பழுத்திருந்த ஒரு நிழற்படத்தை எடுத்து நீட்டினான்.

– பிற்காலத்தில் பெரிய அளவில் ஒதெத் வாழ்விலேற்பட்ட மாறுதல்களுக்கு அந்நிகழ்ச்சிதான் ‘தொடக்கம்’. ஐந்து வருடங்கள் ஆகிறது. முக்கியமான நபரொருவரின் கண்ணிற்படநேர்ந்தது அன்றைய இரவு கொண்டாட்டத்தின்போதுதான். போட்டோ எப்படி, பிரமாதமாக இல்லை?

வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட மேசைகள், ஓவ்வொரு மேசையிலும், படாடோபமாக உடையணிந்த மனிதர்கள், மண்டபத்தில் கோடியிலிருந்த மேடையில் ஓர் இசைக்குழு. ஒளிமழையில் நனைந்தபடி காகித அட்டைகளால் ஆல்ப்ஸ்மலையை தத்ரூபமாக கொண்டுவந்திருந்தார்கள். மலைகள், அருகிலிருந்த. கிறிஸ்துமஸ் மரம், மரத்தாலான மூன்று சிறு குடில்களென அனைத்துமே செயற்கைப்பனியில் மூழ்கியிருந்தன. எதிரே விருந்தினர்களாக கறுப்பு கோட்டிலும், இரவுக்கான கேளிக்கை உடையிலும் ஆண்களும் பெண்களும், இரண்டு வரிசைகளில் விறைத்துக்கொண்டு நிற்கிற ஆல்ப்ஸ்மலை ஆபத்துதவிகள் 30பேர். அவர்கள் அருகே நிறுத்திவைத்திருக்கிறக பனிச்சறுக்கு மட்டைகள். தரையெங்கும் பனிமூடியிருக்கிறது, அதுவும் செயற்கையாக இருக்கவேண்டும். இரவு முழுக்க ஆபத்துதவிகளால் எப்படித்தான் விறைத்து நிற்க முடிந்ததோ, அவர்களுக்கு அது சிரமாக இல்லையா? நிகழ்ச்சியில் ஒதெத்துடைய பங்குதான் என்ன? நிகழ்ச்சி நன்றாக நடக்க ஒத்துழைத்ததுதான் அவளுடைய பங்கா அல்லது வேறு ஏதேனுமா? ழான்பொரியிடம் தயக்கமின்றி எனது சந்தேகத்தைக் கேட்டேன்.

– அதுவொரு கேளிக்கை இரவு. ‘பனிச்சறுக்கு விளையாட்டு இரவு’ என்ற பெயரில் நடத்தினோம்.

ஒதெத்துடைய ‘தொடக்கமென்று’ சொல்லப்படுகிற கேளிக்கை இரவுக்கான அர்த்தமற்ற அப்பனிக்காலமும் செயற்கை இரவும் பல நேரங்களில் உண்மைபோல தோற்றந்தந்து, குழப்பின. அதிலிருந்து தப்பிக்க சன்னலைத் திறந்துவைத்துக்கொண்டு முதலாம் அல்பெர் வீதியில் பெய்யும் பனியை அவதானிக்கலானேன்.

– குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையை ஒதெத் உனக்குக் கொடுத்திருக்கிறாளே, நல்ல ஊதியமா?

– ஆமாம்,- யோசிப்பதுபோல சட்டென்று முகம் மாறியது.

– சிறுமியை இவ்வளவு பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் நீங்க உண்மையில் நல்லவர்தான்.

அவனை வழியனுப்ப வாசற்கதவுவரை சென்றவன், “அவனும் அவன் சகோதரியும் பிரபுக்கள் வம்சமா? பதினெட்டாம் நூற்றாண்டில் அயர்லாந்திலிருந்து போலந்துக்கு குடியேறியதாகச் சொல்லப்படுவதில் உண்மை இருக்குமா?” மனதை அரித்துக்கொண்டிருந்த தகவல்கள் குறித்து அவனிடம் விசாரித்தேன். அக்கேள்விகள் அவனைக் குழப்பியிருக்கவேண்டும், முகத்தைப் பார்க்க அப்படித்தான் தெரிந்தது.

– என்ன … நாங்கள் போலந்து நாட்டவர்களா? யார் சொன்னது..ஒதெத்தா?

அவனது பெரிய கனடா கம்பளி ஆடையைய அணிந்துகொண்டான்.

– உங்களுக்கு விருப்பமென்றால், நாங்கள் போலந்து நாட்டவர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம். ஆனால் நாங்கள் ‘போர்த் தோரே'(8) போலந்துக்காரர்கள்.

இறங்கிகொண்டே அவன் சிரித்த சிரிப்பு படிகளில் பரவித் தணிந்தது. கோட் ராக் வைத்திருக்குமிடத்தில் நான் சிலைபோல நின்றேன்.

இருண்டும், தரை விரிப்புகள் சுருட்டப்பட்டும், ஆள் நடமாட்டமின்றியும் இருந்த அறைகளை மீண்டும் கடந்து வந்தேன். தளவாடங்கள் அகற்றப்பட்ட அடையாளத்துடனிருந்த வெற்றுத்தரையைப் பார்க்க ஏதோ அமீனா புகுந்த வீடுபோல இருந்தது. சீனர்கள் இருவரும் வழக்கம்போல சமையற்கட்டுக்குள் சீட்டுவிளையாடியபடி இருக்கவேண்டும்.

அவள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். ஒருக்களித்து கன்னத்திற்கு தலையணையை கொடுத்திருந்தாள். ஆள் அரவமற்று வெறிச்சோடிகிடக்கும் வீட்டில் சிறுமி ஒருத்தி உறங்குவதும், அவளைக் கண்காணிக்கவென்று அருகிலேயே ஒருவன் இருப்பதும், அப்படியொன்றும் அலட்சியபடுத்தக்கூடிய விஷயங்களல்ல.

எல்லாம் ஒரு நாள் குட்டிச்சுவரானது. பிழுவை எப்பாடுபட்டாகிலும் கேளிக்கைக் கூட மேடைகளில் ஏற்றி நட்சத்திரமாக்கிக்காட்டுவதென்ற மதெலென் லூயியின் யோசனையை, சோனியா சந்தோஷத்துடன் வரவேற்றதோடு அதை நிறைவேற்றி காட்டுவதென்றும் தீர்மானம் செய்ததே அதற்கான காரணம். அவர்களிருவரின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டி பிழுவுவைத் தயார் செய்ய ஆரம்பித்தார்கள். முறைப்படி கொடுக்க வேண்டிய பயிற்சியையும் பாடத்தையும் கொடுத்தால் பிழுவும் நாளைக்கே அமெரிக்க குழந்தை திரை நட்சத்திரத்தைப்போல பேரும் புகழும் அடையலாம் யார் கண்டது. இனி தன்னுடைய வாழ்க்கையே பிழுதான் என்று முடிவெடுத்தவள்போல தனது கலைவாழ்க்கையைக் குறித்து அக்கறைகொள்வதை சோனியா முற்றாகத் தவிர்த்தாள். மதெலென் லூயியும், சோனியாவும் தங்கள் நிறைவேறாத ஆசைகளை சிறுமி பிழுவின்மூலம் அடையத் தீர்மானித்ததாகத்தான் எனக்குப் பட்டது.

ழான் குட்ழோன் வீதி, க்யுல்ம் பள்ளி தலைமை இயக்குனரான பெண்மணியிடம், பிழு இனி அவளது தனிவகுப்புக்கு வர சந்தர்ப்பமில்லையென்றேன். தனக்கிருந்த ஒரே மாணவியை இழந்த வருத்தம் அவளுக்கு. அவளுக்காகவும் பிழுவுக்காகவும் நானும் வருந்தினேன்.

இனி தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதவிதமான ஆடை அலங்காரத்துடன் நிழற்படங்கள் எடுத்து அனுப்பவேண்டியிருக்குமில்லையா? அந்த ஆடைகளையெல்லாம் வைப்பதற்கு இடம் வேண்டுமே, முன்னேற்பாடாக அலமாரியொன்று தருவிக்கப்பட்டது. குதிரை வீரனைப்போல, நார்வே பனிச்சறுக்கு வீராங்கனையான சொஞ்சா ¦?னிக்கே உரிய பாவனையில், ஆடைஅலங்கார துறைசார்ந்த சிறுமியைப்போல விதமான உடைகள் தயாரிக்கப்பட அவற்றை அணிந்துப் பார்க்கவென்றே நேரங்காலமின்றி அவர்கள் வெளியில் போகவேண்டியிருந்தது. மதெலென் லூயியும் சோனியாவும், மூடிய சொகுசுக்காரில் சிறுமியை வலிய அழைத்துக்கொண்டுபோய் திணிப்பதும், பனிமூடிய முதலாம் அல்பெர் வீதியிலிருந்து கார் புறப்பட்டுப்போவதுமான காட்சி நாள் தவறாமல் நடந்தது. என்னால் முடிந்ததெல்லாம் சன்னலூடாக வேடிக்கைப் பார்ப்பது, பார்த்தேன். அந்நேரத்தில் மதெலென்-லூயியைப் பார்க்க சர்க்கஸ் கூடாரங்களில் குதிரைகளை பயிற்றுவிக்க கையில் சாட்டையுடன் திரிகிற பயிற்சியாளர்போல இருப்பாள்.

பிழுவின் நட்சத்திர தகுதிக்காக, அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள், அத்தனை வகுப்புக்களுக்கும் அழைத்துசெல்லும் பொறுப்பு எனக்கென்று ஆயிற்று.: பியானோ வகுப்பு, நடன வகுப்பு, சொற்களை சரியாக உச்சரிக்க போட்ழோன் வீதியிருந்த எங்கள் பழைய ஆசிரியை என ஏற்பாடு செய்திருந்தார்கள். பயிற்சி வகுப்பு முடிந்த நேரங்களில் எனா வீதிலிருந்த நிழற்பட நிறுவனமொன்றிற்கு செல்லவேண்டும், அங்கே பலவிதவிதமான தோற்றத்தில், விதவிதமான ஆடை அலங்காரத்துடன் பிழுவைப் படமெடுப்பார்கள். குதிரை ஏற்ற வகுப்புமுண்டு. அது புலோஜ்ன் பகுதியிலிருந்த குடைராட்டின மரக்குதிரையில் நடந்தது- அதுவொன்றுதான் திறந்தவெளியில் அவளெடுத்துக்கொண்ட பாடம். அந்த வகையில் சிறுமிக்கு மிகவும் சந்தோஷம், சிவந்த கன்னங்களூடாக அம்மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டாள். சின்னன்சிறு பிள்ளையாய், கொள்ளை அழகுடன் அதிகாலை பனிமூட்டத்தையும், பனிப்பொழிவையும் நினைவூட்டும் சாம்பல் வண்ணக்குதிரையில் அவள் சுற்றிவரும் காட்சி இன்றைக்கும் கண்முன்னே தெரிகிறது.

பாடங்கள் பயிற்சிகள், படமெடுத்துக்கொள்ளவென்று ஸ்டுடியோக்கள் என அலைந்து களைத்தபோதிலும், குழந்தை பிழு ஒருவரிடமும் தனது வருத்தத்தை சொல்லிக்கொண்டதில்லை. மதெலென் லூயியும், சோனியாவும், அவளை படுத்தியதுபோதும் என்று நினைத்தார்களோ என்னவோ, அவளுடை வழக்கமான காரியங்களிருந்து விடுதலைத் தந்தார்கள். இருவருமாக ட்ரொக்காடெரோ பூங்காவரை சென்று வந்தோம். குழந்தை பனிச் சறுக்கு வண்டியியிலே ஆழ்ந்து உறங்கிவிட்டாள்.

பாரீஸ் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது என்றாகிவிட்டது, நான் பிரான்சின் தென்பகுதியிலிருந்த ‘லெ மிதி'(9) க்குச் செல்வதென்று தீர்மானித்தேன். நகராட்சி பள்ளியில் என்னுடன் படித்த நண்பன் கொடுத்த அடையாள அட்டையில் இருந்த பெயர்கூட மறந்துவிட்டது. பிழுவை பிழுவென்று ஒருவரும் அழைத்ததில்லை, சோனியாவும் அப்படித்தான், சோனியா என்ற பெயரில் ஒருவரும் அவளை அழைத்து கேட்டதில்லை. என்னையும் லெனோர்மாண்ட் என்று பெயரிட்டு ஒருவரும் அழைத்ததில்லை.

பிழுவை என்னுடன் அனுப்பிவையுங்கள், லெ மிதியில் அவள் சந்தோஷமாக இருப்பாள் என்று சொல்லிப்பார்த்தேன் பலனில்லை. பிறரை சந்தோஷப்படுத்தி பார்த்திராத கனத்த சாரீரத்தவளான மதெலென் லூயி அவளை திரை நட்சத்திரமாக்கித் தீருவது என்ற யோசனையில் பிடிவாதமாக இருந்தாள். சோனியாவோ சுயமாக சிந்திக்கப் போதாதவள், உறுதியற்றவள், எண்ணத்தில் தெளிவற்றவள்… பிறகு ‘Sonate au clair de lune’ போன்ற பாடலைக் கேட்பதில் பித்தாக இருப்பவள்…எனினும் அவள் எதையோ பிறரிடம் மறைக்கிறாள் என்பது நிச்சயம், மெல்லிய திரைக்கும், புகைமூட்டத்திற்கும் பின்னே சேரிப்பெண் ஒருத்தி ஒளிந்திருக்கிறாள்.

ஒரு நாள் விடியற்காலை, சிறுமி உறக்கம் கலைவதற்காக முன்பாகவே நான் புறப்பட்டு விட்டேன். ஒரு சில மாதங்கள் கடந்திருக்கும், நீஸ் நகரில் வார இதழொன்றில் திரைச்செய்திகள் தலைப்பிட்ட பக்கத்தில், அவளுடைய படத்தை போட்டிருந்தார்கள். ‘Le Carrefour des archers’ என்ற திறைபடத்தில் அவளும் நடிப்பதாகச் செய்தி. இரவுக்கான ஆடை, முகம் கொஞ்சம் ஒடுங்கியிருப்பதுமோல தெரிந்தது, கையில் டார்ச்சுடன் யாரையோ தேடுவதுபோல- படம். படத்திலிருந்த இடங்கூட முதலாம் அல்பெர் வீதியிலிருந்த தொகுப்பு வீட்டை ஒத்திருக்கிறது. யாரைத் தேடுகிறாள்?

ஒருவேளை என்னையா?

அதன்பிறகு அவளைப் பற்றிய எந்த செய்திகளுமில்லை. எத்தனையோ பனிக்காலங்கள் வந்துபோய்விட்டன. அவற்றைக் கணக்கிடத்தான் எனக்குத் தைரியமில்லை.

புபூலும் ஒரு வழியாக வாழ்க்கையில் ஜெயித்துவிட்டான், நெகிழ்வும், துள்ளலும் கொண்ட ஒரு ரப்பர் பந்தின் குணத்தை அவன் பெற்றிருந்தது காரணமாகவிருக்கலாம். ழான் கூட்ழோன் வீதியிலும், க்யுல்ம் பள்ளியிலும் காலையும் மாலையும் தேடிச்சென்று என்னால் அழைத்து வரப்பட்ட அவள் இனியில்லையென்றாகிப்போனது. நதிக்கரை வீதிகளில் இப்பொழுதும் நடந்துபோகிறேன். குதிரைகளில் முதலாம் அல்பெர் சிலையையும், சிமொன் பொலிவார் சிலையையும் பார்க்கிறேன், இரண்டுக்குமான இடைவெளி ஒரு நூறு மீட்டர்கள் இருக்கலாம். குளிர்காலத்தில், சிலைகளிரண்டும் வெண்பனியால் போர்த்தப்பட்டிருப்பதை பார்க்கிறபோதெல்லாம், எப்போதோ வந்துபோன அப்பனிக்காலத்தை நினைத்துக்கொள்கிறேன். குதிரை வீரர்கள் மாத்திரம் அங்கேயே இருக்கிறார்கள், இடம்பெயர விருப்பமில்லை போலிருக்கிறது. தங்களுக்குபின்னே சாம்பல் வண்ன நீரில் தோணிகள் ஏற்படுத்திய ததும்பும் நீரலைகளைக் குறித்த அக்கறையின்றி விறைத்துக் கொண்டு குதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

நன்றி திண்ணை,

காலச்சுவடு -வெளியீடான உயிர்க்கொல்லித் தொகுப்பிலிருந்து.
——————————————————————————————————–

1. பிழு(Bijou)- jewel- பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் பிரியத்துக்குரிய பொருளை செல்லமாக ‘பிழு’ என்று சொல்லிக்கொள்வார்கள், தமிழில் ‘என் தங்கம்’, ‘என் வைரம்’ என்று சொல்லிக்கொள்வதுபோல.

2. Comptesse- பிரபுவின் மனைவி அல்லது பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணி.

3. Music-Hall – பாரீஸில் உள்ள புகழ்பெற்ற கேளிக்கை விடுதி

4. பனி உறைந்த ஏரிகளும், பனிமூடிய மலைகளும் நிறைந்த சுவிஸ் நாட்டின் தென்பகுதிலுள்ள குளிர்கால விளையாட்டிற்கு புகழ்பெற்ற ஸ்தலம்.

5. Place de la Concorde- பாரீஸில் புகழ்பெற்ற ஷான்செலீஸே அவென்யூவுக்கு அருகிலுள்ள மிகப்பெரிய திறந்தவெளி

6. Robert Surcouf பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த பிரெஞ்சு போர்கப்பல் தளபதி

7. Boulogne, பிரான்சு நாட்டின் வடபகுதியைச் சேர்ந்த கடற்கரை பிரதேசம்

8. Porth Dore – போர்த் தொரே- தமிழில் சொல்வதென்றால் நுழைவு வாயில்- பாரிஸ் மாநகரத்தின் உட்புக பல நுழைவிடங்களுள்ளன, அவற்றுள் இதுவுமொன்று. 1920-30களில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவந்த ஏழை போலந்துமக்களைக் குறித்த அருங்காட்சியகமொன்று அங்கிருந்தது.

9. பிரான்சுக்கு தெற்கேயுள்ள பிரதேசம்
—————————————–

தன்னை எழுதுதல்

இருபத்தோராம் நூற்றாண்டில் படைப்பிலக்கியத்தை தனதாக சுவீகரித்துக்கொண்டு தழைத்து கிளைபரப்பியிருக்கும் ‘தன்னை எழுதுதல்’ (Ecriture de soi) எழுத்து வகைமைக்கு காரணங்கள் பல. ஆனால் அதன் வேர் இருத்தலியலும் அதன் மீதான விசாரணையும் என்பதை தொடக்கத்திலேயே அழுந்தப் பதிவு செய்துவிடலாம்.

எழுத்துக்கு வேர் பேச்சு எனில், தன்னை எழுதுதலுக்குத் ‘தன்னைப் பேசுதல்’. மனித வரலாற்றில் தொடக்கத்தில் பேச்சாளனும், பின்னர் எழுத்தாளனும் வருகிறார்கள். மேடையில் ஊரறிய அல்லது நாலுபேரிடம் தனது தனது சுபகீர்த்திகளைச் சொல்லப் பழகியவனுக்குத்: தனது அபகீர்த்தியினை, தனது அகவெளியின் அழகுகளை, ஆபாசங்களைப் பகிர்ந்துகொள்ள அல்லது தனியொருவனாக மனதிற்படுகிற வதைகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள ‘தன்னைப் பேசுதலைத்’ தொடக்கத்தில் இரண்டொருவரிடம் தொழிற்படுத்தியிருக்கவேண்டும். மனிதன் எழுதத்தொடங்கியபோதே ‘தன்னை எழுதுதல்’ பிறக்க இல்லை, அது பைய வளர்ந்ததால் நெடிய வரலாற்றினை கொண்டிருக்கிறது. தனது அந்தரங்கங்களை இரண்டொருவரிடம் வாய்மொழி ஊடாகப் பகிர்ந்துகொண்ட ஆரம்பகால மனிதன், தற்போது முச்சந்தியில் கூச்சமற்று பறைகொட்டித் தெரிவிக்கிறான். கொண்டாடப்பட வேண்டியவற்றைமட்டுமல்ல பழிக்கஞ்சவேண்டியவற்றையும் பகிர்ந்துகொள்கிறான். இதற்கு அசாத்திய துணிச்சல் தேவை.

சமயங்கள் கோலோச்சிய காலத்தில் (இன்றுங்கூட?) ‘தன்னை உரைத்தலின்போது’ கேட்கிறவனிடம் மண்டியிடவேண்டியிருக்கிறது, இவனுக்கும் கேட்பவனுக்குமான உறவு ‘கீழ்-மேல்’ என்ற நியதிக்குரியது. ‘கீழ்’ அசுத்தம், மேல் சுத்தம்; பாவசங்கீர்த்தனம் செய்கிறவன் பாவி, ஈனப்பிறவி. கேட்பவன் இவனை உய்விக்க வந்தவன், ஒருவகையில் இரட்சகன். வாய்மொழியின்போது கேட்போரின் முகபாவங்களை நேரில் எதிர்கொள்கிற இக்கட்டுகள் உண்டு, எழுத்தில் அவ்வாறான சங்கடங்கள்கூட இல்லை. பேச்சு ஊடாக இரண்டொருவர் பகிர்ந்துகொண்ட இவனது ‘சுயம்’, எழுத்து ஊடாக நூறு, ஆயிரம், இலட்சம்பேர்களை சென்றடையும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாசிப்புக்கூட்டத்தில் இவனோடு சமதளத்தில் நிற்பவர் அநேகர். எழுத்தில் வாசிக்கிற அந்த ‘அநேகரை’ப் படைக்கிறவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வாசிக்கிற அவர்களுக்கும் இவன் யாரென்ற கேள்வி அத்துணை முக்கியமல்ல. ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதுபவன் வாசகனிடம் நூலை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்கிறான். இன்று ஊடகமும் தொலைத்தொடர்பு சாதனங்களில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியும் கூடுதல் துணிச்சலை(?) தருகின்றன. ” சங்கடங்கள் காரணமாக மாடியிலிருந்து குதித்து இன்று காலை தற்கொலை செய்துகொள்ள இருக்கிறேன்” என முக நூலில் எழுதும் பதின்பருவத்தினர் உள்ள காலமிது.

தன்னை எழுதுதல் இன்று பல உட்பிரிவுகளை கொண்டு மேற்குலகில் இயங்குகிறதென்ற போதிலும் பொதுவில் அதனை சுயவரலாறு, சுயபுனைவு என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். இவ்விரண்டுள் சுயவரலாறு மூத்தது, 19ம் நூற்றாண்டு அதன் தொடக்கமென இலக்கியவரலாறுகள் தெரிவிக்கின்றன. இச்சுயவரலாறு என்பது நாம் அதிகம் வாசித்திருக்கிற …… அன்னாருக்கும் இன்னாருக்கும் தை திங்கள்…. மகவாய் பிறந்தேன் என ஆரம்பித்து உத்தமர்களாகவும் சாதனையாளர்களாவும் தங்களை வெளிஉலகிற்கு கற்பிதம் செய்யும் உயர்வு நவிற்சி அணி வகைப்பாடு அல்ல, தங்கள் வாழ்க்கையை உள்ளபடி விளங்கச்சொல்வது, நடந்ததை நடந்தவாறு சொல்வது:

“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்”

என தண்டிலங்கார ஆசிரியர் பொருளுரைப்பதை இங்கே நினைவுகூரத்தக்கது.

என்றைக்கு மனிதன் தனது வாழ்க்கையைப் பிறர் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டானோ அன்றைக்கே அவனது சுய விருப்பு வெறுப்புகள் முக்கியம் இழந்தன. தனது உணர்ச்சிகளைச் சிரைத்துக்கொண்டு வாழவும், அறிவுகொண்டு உணர்ச்சிகளை வெல்லவும் போதித்தார்கள், ஒழுக்கத்தையும் கற்பையும் கட்டாயம் ஆக்கினார்கள், அவற்றையெல்லாம் அறநூல்கள் என்றார்கள். குடும்பமும், சாத்தியமற்றவிடங்களில் சமயங்களூம் உட்புகுந்தன. கடவுள், ஊழ், சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்கள் கொண்டு மனிதர்களை அச்சுறுத்தி அவர்களின் ‘தான்’ உணர்வினைப் பொசுக்கி இருக்கிறார்கள். ‘நான்’ என்ற சொல் கர்வத்தின் குறியீடென்றும் கடவுளிடமிருந்து மனிதனை அப்புறபடுத்திவிடுமென்றும் திரும்பத் திரும்பப் போதித்தார்கள். புலன்களையும் அதுசார்ந்த உணர்ச்சிகளையும் தனது கட்டுக்குள் வைத்திருப்பது திருமடங்களின் வாழ்க்கை நெறி, அனைத்தையும் துறந்தவர்களே கடவுட் சேவைக்கு உகந்தவர்கள். பாவசங்கீர்த்தனங்கள் கூட மனிதர்களின் சுயபரிசோதனைகளுக்கு உதவவில்லை. இக்கட்டத்தில்தான், எங்கே கதவுகள் அடைக்கப்பட்டனவோ அங்கிருந்தே ‘தன்னை எழுதுதல்’ சுயவரலாறுகளுக்கு முன்பாகத் தோன்றின.

செயிண்ட் ஆகஸ்டீன் என்பவர் எழுதிய ‘பாவசங்கீர்த்தனம்’ ( confession -Saint Augustin ), மோந்தேஞ் என்பவரின் சுய பரிசோதனை (Les Essais – Michel de Montaigne), மிஷெல் தெ மரோல், ரெட்ஸ் கார்டினல் ஆகியோரின் ‘நினைவுகள்’ (Mémores) போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். பக்தி இலக்கியத்திலும், சித்தர் பாடல்களிலும் உதாரணங்கள் சொல்ல நமக்கு நிறைய இருக்கின்றன. இவர்கள் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் குருமார்கள், தேவ இரட்சகனின் பிரதிநிதிகள். அவசியம் என்கிறபோதெல்லாம் மேய்ப்பவனிடம் இந்த ஆடுகளுக்கு முறையிடும் வாய்ப்புகள் இருந்தன. எனினும் பாவங்கள் அரிப்பிலிருந்து நிவாரணம் தேடவேண்டிய நெருக்கடியும் அவர்களுக்கு இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து, இலக்கிய வாதிகள் உள்ளே நுழைகிறார்கள். பிரான்சு நாட்டில் ஷத்தோபிரியான், லமார்த்தின், கஸனோவா போன்றோர் குறிப்பிட வேண்டியவர்கள். இவர்கள் அனைவரும் என்ன பெயரிட்டு அழைத்திருப்பினும், எழுதுபொருள் அவர்கள் வாழ்க்கைப்பற்றிய ஆவணங்களாக, சாட்சியங்களாக, நினைவூட்டல்களாக இருக்கின்றன.

எனினும் தன்னை எழுதுதலை தெளிவுபடுத்திய முதலாவது இலக்கியவாதி (பிரெஞ்சு இலக்கிய உலகைப் பொறுத்தவரை) ரூஸ்ஸோ. . செயல்பாடுகளால் மனிதர்கள் கட்டமைக்கப்படுகிறார்கள் என நம்பும் இருத்தலியல் வாதிகளான சார்த்துருவும் சிமோன் தெ பொவாருங்கூட (2) ‘நான் ‘ ‘எனக்கு’ என்று உருவெடுக்கும் கருத்தியத்தின் அடிப்படையிலேயே தங்கள் இருத்தல் சுயவரலாற்றை எழுதினார்கள், ஆனால் அங்கு ‘இருத்தல்’ ‘சாரத்திற்கு- முந்தையது என்பதை வலியுறுத்த ‘தன்முனைப்பு’ தன்னைத்தானே விடுவித்துக்கொண்டதும் நடந்தது. தன்னை எழுதுதல் புதிய பாய்ச்சலுடனும், புதிய பரிமாணங்களுடனும் தழைத்தகாலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சிக்மண்ட் பிராய்டு உருவாக்கிய உளவியல் பகுப்பாய்வு பெரும் அளவில் உதவியது, காரண காரிய தர்க்கவியலை மறுத்து; உயிர்வாழ்க்கையில் வடுவாக நின்றுபோன சம்பவங்களைக் கணக்கிற்கொள்ளாமல்; சிறுகச்சிறுக ஆன்மா(3) (subject) கட்டமைத்துக்கொள்ளூம் உள்ளுடம்பை(Subjectivity) அதன் பண்பை சிறப்பித்தது. சுயவரலாறு என்பது ஒரு மனிதர் அல்லது பெண்மணியின் வாழ்க்கையில் சம்பவித்த மறக்கவியலாத தருணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதென்றும், சம்பந்தப்பட்ட மனிதர்களின் அகவய பண்புகளைக் கட்டமைப்பதே அதன் முழுமையான நோக்கமென்றும் கருதுகிற சிந்தனை வலுவுற்றது இக்காலக்கட்டத்தில்தான். In Search of Lost Time (தொலைத்த காலத்தைத் தேடி) புகழ் இலக்கியவாதி மர்செல் புரூஸ்ட்(Marcel Broust) தன்னை எழுதுதலில் புதிய விந்தையை நிகழ்த்தியிருந்தார். ‘தன்னை’ விசாரணக்கு உட்படுத்தி தனது செயல்பாடுகளுக்கான ‘காரண காரியத்தை’ ஆய்வதுதான் தன்னை எழுதுதலில் அவர் அறிமுகப்படுத்தும் வகைமை. இம்ப்ரெஷனிஸ ஓவியர்கள், “மேலோட்டமாக நாங்கள் வரைந்த ஓவியத்தை மட்டும் பார்க்காதீர்கள், அந்த ஓவியங்கள் ஊடாக எங்கள் கண்களைப் பாருங்கள்” – என்றார்கள். சுயவரலாற்றிலும் அது நிகழ்ந்தது அங்கே கதைமாந்தர் இடத்தை கதைசொல்லி அபகரித்து தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். அமைப்பியல் வாதத்தின் பங்கும் இதிலுண்டு, அவர்கள் தன்னை எழுதுதலைக் குறியியல் பரிணாமமாகப் பார்த்தனர். “தன்னைப் பற்றிய புனைவில்” ‘படைப்பு -ஆளுமை நிறமிழக்கிறது, ‘சுயவரலாறு’ அல்லது ‘தன் சரித்திர’த்திடம் அவன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் தன்னை உரசிப்பார்க்க அவனுக்கு உதவுகிறது. அதனால் யார் எழுதியது? எழுதியவரின் ஆளுமை என்ன, வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்குள்ள கவச்சிகள் குறைந்து, உண்மைகள் என்று சொல்வதைத் (மேன்மை கீழ்மையை) தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைப் பிறரிடம் தூண்டுகிறது. இதில் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும் தொடக்கத்தில் கூறியதுபோன்று சுயசரிதைகளில், “எழுதுபவரைத் தேடுவதாகப் பாசாங்குசெய்து, வாசகர்கள் தம்மை தேடுகிறார்கள்” என்பதே உண்மை. தன்னை எழுதுவதென்பது சில வேளைகளில் தன்னைச் சொல்வது, தன்னை விவரிப்பது. தனது நம்பிக்கையை, தனது அவநம்பிக்கையை பேசுவது:

” எப்படியாச்சும் ஒரு நல்ல வேலையைத் தேடிகிட்டு, சுயமா சம்பாரிச்சுகிட்டு யாரையுமே எதிர்பாராமே நம்ம காலுலே நாமே நிக்கனும்னு அவளுக்குள்ள தீர்மானமா ஒரு முடிவெடுத்துக்கிட்டா” ( மனுசி- பாமா பக்கம்- 19)

“முன் வாசல் படி இறங்கும்போது அவன் விட்டுவிட்டு வள்ளியின் முகத்தைப் பார்த்தான். அவளை அணைத்து அவள் முகத்தில் முத்தம் இட வேண்டுமென்று பாலுவுக்குத் தோன்றிற்று” ( குழைந்தைகள் பெண்கள் ஆண்கள் -சுந்தர ராமசாமி; பக்கம் 595)

” ஒரே ஒரு கருத்தை என் மனது சுற்றுகிறது. ஆனால் இந்த மையத்தில் புலையர்கள் உயிருள்ள மனிதர்களாக இன்னும் எனக்குத் தென்படவில்லை. மறையும் மாலைப் பொழுதில் வரும் நீளமான நிழல்கள், தொலைவிலேயே நின்று கேட்டுக்கொண்டிருக்கும் கருப்பு நிழல்கள்….இரவு எப்படிப் புணர்கின்றன, எப்படி யோசிக்கின்றன. குழந்தைகளை எப்படிக் கொஞ்சுகின்றன, எப்படி அழுகின்றன -எதுவுமே தெரியாது. பெயர்களே மறந்து போகின்றன. யார் பிள்ளன், யார் கரியன், யார் முத்தன்… ( பாரதிபுரம் -யு.ஆர். அனந்தமூர்த்தி; பக்கம் -166)

மேற்கண்ட உதாரணங்களிலிருந்து “மேற்கத்தியர்கள் மட்டுமே ‘தன்னைஎழுதுதலில் பங்கெடுத்தவர்கள்” என்ற கருத்தை மறுக்க முடிகிறது. ஆனால் மேலை நாட்டினரோடு ஒப்பிடுகையில் இது குறைவுதான். தவிர ஒரு பார்வையாளனாக தன்னை வைத்து நாவலைப் படைக்கிறபோதே புனைவில் இடம்பெறும் ஒவ்வாமைகளை படைப்பாளியோடு இணைத்துப் பார்க்கும் மனநிலைகொண்ட இந்தியச்சமூகத்தில் இதுவே அதிகம். தவிர இங்கே ‘தன்னை எழுதுதல்” என்ற முயற்சியே கூட ஒர் இந்தியத் திரைப்படகதைநாயகனை முன்னிறுத்துவதுபோன்ற பாமரத்தனமான செயலாக இருக்குமே ஒழிய, ஓர் உள்ளுடம்பின் உண்மையான ஆளுமையைப் (அழுக்குகளையும் சேர்த்து) புரிந்துகொள்ள வழிவகுக்காது. இதற்கு ஒரு வகையில் போலியான ஒரு மரபைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியச் சமூகமும் பொறுப்பு. செர்ழ் தூப்ரோஸ்கி (Serge Doubrovsky) ஒரு பிரெஞ்சு படைப்பிலக்கியவாதி, விமர்சகர், பிரெஞ்சு மொழி பேராசிரியர் “தன்னை எழுதுதல் குறித்த தெரிவித்தது: “எழுத்தாளன் இறந்தாலென்ன? அவனுக்கு மறுபிறவியை ஏற்படுத்தித்தர ‘தன்னை எழுதுதல்’ இருக்கிறதென” கூறியவர். அவருக்கு “அச்சடித்த காகிதத்தளத்தில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்தி தரும் சந்திப்பே ‘தன்னை எழுதுதல்’. அவருக்கு முன்பாக எழுத்தாளன் இறக்கிறான் என அறிவித்திருந்த ரொலான் பர்த், தூப்ரோஸ்கி கூற்றை வழிமொழிவதுபோல “ரொலான் பர்த் பற்றி ரொலான் பர்த்” என்ற தமது சுயசரிதையை எழுதி மறுபிறவி கண்டதை இங்கே குறிப்பிடவேண்டும்.

நன்றி சொல்வனம்
——————————————————————
1. Cd. Page 46 -Le magazine Littéraire Avril 2013
2. Les Mots – J.P. Sartre, Mémoires d’une jeune fille rangée
3. உளப்பகுப்பாய்வில் Subject, subjectivity என்ற இரு சொற்களுக்கும் சரியான தமிழ்ச் சொற்களை கையாளுவது அவசியமாகிறது. Subject என்கிற சொல் உளப்பகுப்பாய்வின் படி ஓர் ‘being’ (உயிருரு). எனவே தமிழில் உளப்பகுப்பாய்வு பொருளில் ‘Subject’ஐக் குறிக்க ‘ஆன்மா’ பொருத்தமானது. அதுபோல ‘Subject’ தன்னில் கட்டமைக்கும் ‘subjectivity’ஐ ‘சூக்கும சரீரம்’ அல்லது ‘உள்ளுடல்’ எனலாம் அதை ‘அகநிலை’ (தற்போது அநேகர் உபயோகிக்கும் சொல்) என்ற சொல்லால் குறிப்பிடுவது உளப்பாகுபகுப்பாய்வு பொருளுக்கு ( அதற்கென உள்ள கராதிகளைப் பார்க்கவும்) எவ்விதத்திலும் பொருந்தவில்லை . அதுபோல பிறரிடம் அல்லது வெளி உலகிடம் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள Subject எடுக்கும் உருவமே உளப்பகுப்பாய்வின்படி ‘Object’. அதனைக் குறிக்க வழக்கிலுள்ள ஸ்தூல சரீரம் அல்லது ‘வெளியுடல்’ இரண்டிலொன்றை பாவிக்கலாம்.
—————————————————————

கனவுப்பெண் – கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து

“ஈழத் தமிழின் நபீனக் கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார்” – கவிஞர் சேரன்
தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன” – கவிஞர் சுகுமாரன்

 

கடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோது கவிஞர்கள் சிலர் தங்கத் தொகுப்புகளைக் கொடுத்தார்கள், வேறு சிலர் தங்கள் நாவல்களைக் கொடுத்தார்கள். இரு தரப்பு நண்பர்களுமே தங்கள் படைப்புகளை கொடுத்தபோது இவற்றைக்குறித்து எழுதவேண்டும் என்று கேட்கவில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. படைப்புகளை அளித்தவர்களில் சிலர் தபிழ்ப் படைப்புலகில் நன்கறியப்பட்டவர்கள்; மற்றவர்களும் தமது படைப்புகள் ஊடாக தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருபவர்கள். புனைவுகளைக் குறித்து எனது கருத்துக்களை முன்வைப்பதில் சிக்கல்கள் இல்லை. கவிதைகளைக் குறித்து எழுதும்போது தயக்கம் வருகிறது. ‘எனக்குத் தொழில் கவிதை’ அல்ல. ஒரு காட்சியைக் கண்டு வியக்கவும், பிரமிக்கவும்; வாடவும், வருந்தவும்; அநீதிகண்டு துடிக்கவும், ஆவேசம்கொள்ளவும் செய்கிறோமெனில் நமக்குள்ளும் கவிதை இருக்கிறது. இக்குணங்கள் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முதற்படி. ஆனால் புறத்திலும் கவிஞர்களாக வாழ்கிறவர்கள் தங்கள் பரவசத்தை, உணர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர்கள் தமது கண நேர உணர்ச்சி அனுபங்களை விசும்பலை, செறிவான பொருத்தமான வார்த்தைகொண்டு நிரந்தரப்படுத்த முடிந்தவர்கள். காணும்தோறும் மகிழ்ச்சியைத் தருகிற படச்சுருளைப் போல, அவர்கள் சமைக்கும் படிமங்கள் கவிதைகளை வாசிக்கும் தோறும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. எனினும் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ளவும், இதயத்தில் வாங்கிக்கொள்ளவும், உணர்வுதான் முக்கியம். இடைத்தரகனான அறிவையும், அறிவின் மொழிகளையும் (உவமை, உருவகம், படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றை) மறந்து புலன்களால் அதாவது தொட்டும், முகர்ந்தும், சுவைத்தும் கவிதைகளை வாசிப்பது போதுமானது.

‘பரிசில் வேண்டும் பாடாண் திணை’ கவிஞர்கள், கடந்த காலத்தைப்போலவே இன்றும் இருக்கவே செய்கிறார்கள். ‘காதல்’ சொல்ல கவிதையெழுத வந்து, பிறகு காணாமற்போகிற காளான் கவிஞர்கள் வருடத்திற்கு ஆயிரம் பேராவது தேறுவார்கள். இப் பெருங்கூட்டத்திடை, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குரல்கள் தனித்து ஒலிக்கின்றன. அக்குரல்கள் நம்மில் சிலரிடம் ஊமைக்குரலாக ஒலிப்பவைதாம். நம்மிடம் ஊமைக்குரலாக ஒலித்த குரல், தொழில்முறை கவிஞர்களிடம் கலைவடிவம் பெறுகிறது. இந்த உலகம் முரண்படுவோர்களால் கண்ட முன்னேற்றம். சமகால கவிஞர்கள் மண்ணில் காலூன்றி நிற்பவர்கள். ”கேழ்வரகில் நெய் வடிகிறது” என்றெல்லாம் எழுதி ஏமாற்ற முடியாது. என்பதை நன்கறிந்தவர்கள். இதற்கு முந்தைய பத்தியில் கூறியிருப்பதுபோல அறிவைக்குறைத்துக்கொண்டு உணர்ச்சிகளுக்கு சற்று கூடுதலாக இடமளிக்கும் இன்றைய கவிதைகளில் ‘தனிமனிதன், சமூகம்’ இரண்டும் மையப்பொருட்கள். அதிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் கட்டமைக்கபட்ட நமது சமூகத்தில், பெண்களுக்குச் சொல்ல நிறையவே இருக்கின்றன. மதங்களும், புராணங்களும் இதிகாசங்களும் -சங்கக் கவிதைகள் உட்பட தீட்டியுள்ள பெண்சித்திரங்கள் அவர்களுக்கு ஆதரவானவை அல்ல. அன்பானவள், அடக்கமானவள், குடும்பப்பெண், மகாலட்சுமி ( கவனியுங்கள் ‘சரஸ்வதி’ என்ற சொல்லை சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறோம்) போன்ற கவர்பொருளுடனான தூண்டில்கள் நம்மிடம் அதிகம். அவளை மஞ்சள் குங்குமமிட்ட ‘தொழுவ லட்சுமி’யாய் வைத்திருப்பதில் நமக்குப் பெருமிதம். வீட்டுப் பசுவென்றாலும் கொம்பைத் தற்காப்புக்கேனும் பயன்படுத்தாமலிருந்தால் எப்படி? தங்கள் கோபத்தைக் கைப்பிடி உப்பில் காட்டி கணவனைத் தண்டிக்கும் ‘குடும்பப் பெண்’களின் தந்திரமும், கையெறி குண்டாக கவிதைகளைப் பயன்படுத்தும் படைப்பிலக்கிய பெண்களின் தார்மீக கோபமும் அவ்வகை கொம்புகள்தாம்.

அனாரின் கவிதை மொழி

“பெருங்கடல் போடுகிறேன், உடல் பச்சை வர்ணம், “எனக்குக் கவிதை முகம்” என்று மூன்று கவிதைத் தொகுப்புகளை கவிஞர் எனக்களித்திருந்தார். அனார் ஒருகவிஞர் என்பதும், இருபது ஆண்டுகால ஈழ யுத்ததின் சாட்சியாக இருந்த ஓர் இஸ்லாமியத் தமிழ் பெண் என்பதும், அன்னாருடைய கவிதைகள் பற்றிய சிற்சில அபிப்ராயங்களை உருவாக்கியிருந்தன. எதிர்பார்ப்பிற்கு மாறாக சமகால ஈழ கவிஞர்களிடமிருந்து மாறுட்ட பாடுபொருட்களை அவர் கவிதைகளில் காண முடிந்தது. அனாரின் கவிதைமொழிக்குள் பிரவேசித்ததும் எனக்குப் பாரதியாரின் “சோதிமிக்க நவ கவிதை’ என்ற வரிதான் நினைவுக்கு வந்தது. உணர்வுகளை மீ எதார்த்த நிலையில் இத்தனைச் சுதந்திரமாக எழுத்துவடிவில் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
நவீன கவிதையின் நெளிவு சுளிவுகளையும், கட்டுமானங்களையும் வண்ணங்களையும் புரிந்துகொண்ட பின்நவீனத்துவ கவிஞர். சிற்சில கவிதைகளில் அவை விழலுக்கு இறைத்த நீராகின்றன என்பதையும் இங்கே சுட்டத்தான் வேண்டும். கவிதைத் தொகுதிகள் முழுவதும் கவிஞர் சுகுமாரன் கூறுவதைப் போல, ” படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார்”. கற்பனையின் புதுமையும், சொற்களில் செழுமையும் அவரது கூடுதல் பலம்: “நிலை கொள்ளாது ஆடும்/ பொன் மிளிர்வுத் தூவல்களில் / ரயில் பட்டுப்புழுவைபோல நீளுகிறது.” (போகும் ரயில்). “காரிருளில் பாய்ந்தோடும்/ கறுப்புக் குதிரையின் கண்களில்/ இறுகி மின்னுகின்றது என்னுடைய கண்ணீர்” ( கருமை). “இலைச்சுருட்டிச் செவ்வெறும்புகள்/ஆளும் மரமெங்கும்/ இனிப்பாய்க் கசியும்/ மரப்பிசின் ஒழுகி உறைந்து/ மணிச்சிற்பங்கள்/ காட்டிய வரிசைகள்” ( அரூபன்). இவற்றை வெறுமனே படிமங்களால் ஆனக் கவிதைகள், எனக் கடக்க மனம் இடம் கொடுப்பதில்லை. ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பில் “சந்திர கிரகணத்தின் ஸர்ப்பம்” கவிதையில் இடம் பெறும் இவ்வரிகளை ‘ஒரு சோறு’ பதமாக எடுத்துக்கொண்டேன்:

“…..நினைவுப் பந்தலின் கீழ்
காட்டுமல்லிகையின் வாசனை
ஸர்பத்தை வரவழைக்கிறது
மேனி மினுக்கத்தில்
தெளிவின் மென்மையில்
தாழம்பூ மண்டபம் விரிகிறது.”

அவருடைய கவித்துவத்தை அளக்க கீழ்க்கண்ட வரிகளும் உதவும்:

“தத்திச்செல்லும் பிள்ளையின் பாதச்சுவடுகள்
நிலவு பொறுக்கியுண்ணும்
மிக இனிக்கின்ற உணவோ”
…………………………….
……………………………..

” என பசுங்குருத்துச் சூரியன்
உதிக்க அதிகாலை இருள் நீங்கும்
உறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்” (நிலாக் குட்டி)

 

கனவுப்பெண்

 

அனார் கவிதைகளின் பெண்குரல் கனவுகளுக்கு நெருக்கமானது “கனவுகள் காண ஏங்கும் கனவு நான்” (சுலைஹா); “கனவுகளின் பாளைகளில் சேரும் ‘கள்’ என பொங்கும் இவ்விரவை நீ கொஞ்சம் நான் கொஞ்சம் பிடிக்கலாம் நிறையும் வரை” (குடுவையில் நிரையும் இரவு); “படியும் கனவுப் பனி வெள்ளைக்கரு/ ஒளிரும் மென்தகிப்பு மஞ்சள் கரு என/ உருமாறியது மச்சம்” (மண்புழுவின் கண்); “இரவுத் தேன் கூடு நிரம்பியிருக்கிறது / கனவில் இருந்தபடி/ முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம்/ மலை நகரந்து போகிறது. ( நீலத்தேன்); கனவின் துவாரங்கள் வழி/ சொட்டித் தேங்கிய/ காமக் கடல் அலைகள் பாய்கின்றது/ சிலந்தி வயிற்றினுள்” (பெண் சிலந்திப்பூச்சியின் வீடு); “கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்” (குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்); ” வாழ்வின் கனாக்காலம் முழுவதும்/ பருவங்கள் மாறி மாறி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் (வண்னத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை); ” முயலின் பளபளக்கும் கண்களாய்/ மிரட்சுயுடன்/ உன்னை வெறித்தபடி இருக்கும் என் கனவு”(வெறித்தபடி இருக்கும் என்கனவு).

தனிமைப்படுத்தபட்ட பெண்ணின் ஏக்கமும் கனவுகளும் அனார் கவிதைகளில் மையப்பொருளாக இருக்கின்றன. திரும்பத் திரும்பத் தமது இருப்பை முன்னிறுத்தியும் சோர்வுராதப் பெண் குரல் எல்லா கவிதைகளிலும் கேட்கிறது. காதலும் தேடலுமாக கழியும் பொழுது. அலைக்கழியும் வாழ்க்கை. மதத்தின் பேராலும் மரபுகள் பேராலும் பெண்களை விலங்கிட்டு இருட்டறைக்குள் வைத்திருக்கும் குருட்டு சமூகத்தைச் சேர்ந்த பெண் வெளிச்சத்திற்கு ஏங்குவது இயல்பு. கதவுகள் திறக்குமென்ற எதிர்பார்ப்பில்லை. சன்னல்கள் திறப்பதே போதுமானதுதான். இறை தூதரைகாதலித்த சுலைஹாவாக தம்மை கற்பிதம்செய்து மா¡ர்தட்டும் அப்பெண்ணுக்குள் “கடந்தகால சாபங்களை மீளவும் எதிர்கால சவால்களை வெல்லவும்” கனவுகள் இருக்கின்றன. ஆனால் நிஜத்தில் அவள் வாழ்க்கை வேறுவகையாக விதிக்கப்பட்டிருக்கிறது ‘போகும் இரயில்’ கவிதையும், ‘கருமை’ என்ற கவிதையும் ஓர் அப்பாவி பெண்ணின் கனவுக் குரலாக பொருமுகிறது. பட்டுப்புழுவைபோல என்ற உவமைக்கு ஆளாகும் இரயில், கவிதை முடிவில் ராட்த்சத பூரானென்கிற உவமை ஆகுபெயராக உருமாறி தரும் சோகம் கொடியது. கற்பனையில் கூட பெண்ணுக்கு வெளிச்சம் எட்டிவிடக்கூடாதென்பதுபோல அவளது நிஜம் குறுக்கிட்டு அக்கனவுகளைக் கலைத்துவிடுகிறது. கவிஞர் மொழியில் சொல்வதெனில் ” கனவுக்குள்ளே முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்”(சுவர் ஓவியம்). இந்தப் பரிதாபக்குரலுக்கு, காலம் பெருமிதத்தைப் பூட்டுகிற தருணமும் வாய்க்கிறது.

“பெண் உடல் பூண்ட இயற்கை நான் ”

“காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச்செய்பவன்…
இன்றென்னைத் தீண்டலாம்” (குறிஞ்சியின் தலைவி -உடல் பச்சை வானம்)

என்ற வரிகளைப் படிக்கிறபோது அக்குரலை ஒரு பெண்ணியக் குரலாகத்தான் பார்க்க முடிந்தது. பெண்ணியம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானதல்ல. ‘ஆண்’ பாலின முத்திரையொன்றுபோதும் தாம் செலவாணியாக என நினைக்கும் அற்ப புத்திகொண்ட ஆனாதிக்கத்திற்கு எதிரானது. அனார் கவிதைகளில் பெண்குரல் பொலபொலவென்று கண்ணீர்விடுவதில்லை, மூக்கைச்சிந்துவதில்லை. காதல் வயப்படும்போது கூட “கத்திகளால் கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள், நான் யூசுப்பைக் காதலிப்பவள், சுலைஹா”, என முழங்கக்கூடிய தைரியம் பெண்ணியத்திற்கு உரியது.

ஈழ யுத்தம் குறித்து அனார்

அனார் தமது கவிதைள் ( கைவசம் இருக்கும் தொகுப்புகளின் அடிப்படையில்) ஈழ யுத்தத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. சமகால ஈழக்கவிதைகளில் ஈழப்போரும் அதன் விளைவுகளும் அதிகம் இடம்பெற்றிருப்பதால் அவற்றை ஓர் அளவோடு கையாண்டிருக்கிறார். யுத்தத்தின் கோரங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன, பூடக மொழிக்கு இடமில்லை. ஆனால் யுத்தத்தை பாடுகிற அனார் வேறு. காதலும் தேடலுமாக காலத்தைக் கழித்த கனவுப்பெண்குரலுக்குரிய கவிஞரல்ல இவர், யுத்தகளத்தை நேரில் கண்ட புறநானூற்று தாய். ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பில் ‘மாபெரும் உணவுமேசை’ ஓர் உதாரணம்:

“சிசுக்களின் மூளையாலான
மிளகுரசம் (புதினா சேர்த்தது)
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றப்பட்டிருக்கிறது”

“………………………………..
கொல்லப்பட்டக் குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக” (மேலும் சில இரத்தக் குறிப்புகள்)

இறுதியாக கவிஞர் அனார் பற்றி எப்படி சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம் என யோசித்தபோது, அவரது வரிகளே உதவிக்கு வந்தன.

“நான் பாடல் எனக்குக் கவிதை முகம்”

நன்றி – காலச்சுவடு, செப்டம்பர் 2014
———————————————————————-

மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014

1. பிரான்சில் என்ன நடக்கிறது?

அ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி:

நமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சகித்துக்கொள்ளலாம் என்பதுபோல வேடிக்கையொன்று பிரான்சு நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. Ferney- Voltaire என்பது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு கொம்யூன், அதாவது பேரூராட்சி. பிரான்சு -சுவிஸ் எல்லையிலிருக்கிற ஊர். சுவிஸ் நாட்டிற்கு குறிப்பாக ஜெனீவாவிற்கு வெகு அருகிலிருந்ததாலும் அப்போதைய அரசியல் சூழலாலும் இவ்வூரை வசிப்பதற்கென வொல்த்தேர் தேர்வு செய்து (1759) இருந்தார். அறிவொளிகால தத்துவவாதியும் – படைப்பாளியுமான வொல்த்தேர்க்கு மரியாதை செலுத்தும்வகையில் அவரது பொன்மொழிகள் அடங்கிய செப்புத் தகட்டினை கொம்யூன் வைக்க நினைத்தது. வரவேற்கக்கூடிய யோசனைதான். கொம்யூனும் அதற்கான நிதியை ஒதுக்கியது. கல்வி ஆண்டு தொடங்கும்போது அதாவது செப்டம்பர் மாதத்தில் அதன் திறப்புவிழா இருக்கவேண்டுமென மேயர் நினைத்தார். அந்த அவசரமே அவரை சந்தியில் நிறுத்த காரணமாகி இருக்கிறது.

“சொற்பிழை, வாக்கிய பிழையுடன் அமைத்து வொல்த்தேர் சொல்லவந்ததையே மாற்றிப்பொருள்கொள்ளும் வகையில் கூற்றுகள் செப்புத் தகடுகளில் இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?. நீண்ட வாக்கியத்தை சுருக்குகிறேனென்று அதன் பொருளையே கேலிக்குரியதாக்கி இருக்கிறார்கள்” என்பது குற்ற சாட்டு. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் மீண்டும் திறப்பார்கள். கொம்யூன், வொல்த்தேருக்கு இந்த மரியாதையை(?) கல்வி ஆண்டின் தொடக்கப் பரிசாக உள்ளூர் மாணவர்களுக்கென அறிவித்திருந்தது நகைமுரண். “Rien ne se fait sans un peu d’enthousiasme” (சிறிதளவேனும் ஆர்வமின்றி எதையும் செய்துமுடிப்பதில்லை அல்லது ஒன்றைச் செய்ய சிறிதளவாயினும் ஆர்வம் வேண்டும்) என்ற வாக்கியம் “rien ne se fait sans peu d’enthousiasme” ( சிறிதளவு ஆர்வத்துடன் செய்யப்பட்டதென்று எதுவுமில்லை) என்று கொம்யூன் பதித்துள்ள தகட்டில் இருந்தது. அதுபோல Printing accentலும் தவறுகள் இருந்திருக்கின்றன.

இதைக் கண்டித்திருக்கும் பிரெஞ்சு தினசரிகள்: “இத்தவறுகள் Franck Ribéry (பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் – பிரெஞ்சு மொழியைப் பிழையுடன் பயன்படுத்துவபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகுபவர்களில் ஒருவர்) குடியிருப்பு வழித்தடத்தில் வைத்திருந்தால் கூட சகித்திருக்கலாம் அவர்கள் வைத்திருப்பது வோல்த்தேர் தமது மாளிகையிலிருந்து ஜெனீவா செல்லும் பாதையில். இது அவருக்குச் செய்யும் அவமரியாதை” எனக் கண்டித்திருக்கிறா¡ர்கள். பிழையுள்ள பொன்மொழிகள் அகற்றப்பட்டுள்ளன. “தவறுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இருக்கிறோம்”, என அறிவித்திருக்கிறார் மேயர்.

கடந்த சில ஆண்டுகளாவே மொழி அனுதாபிகள், « பிரெஞ்சு மொழியியை ஒரு சாரார் சரியாக உபயோகிப்பதில்லை » என குறைகூறிவருகிறார்கள்: பிழைபட உபயோகிப்பது, வாக்கியப் பிழைகள், ஒரே பொருளைத் தரும் இருசொற்களை பயன்படுத்துவது, ஆங்கில சொற்கள் உபயோகமென.. குற்றசாட்டுகள் உள்ளன.

அண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பு பிரெஞ்சு மொழியை கொலைசெய்கிறவர்கள் யார் யார் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி 78% விளையாட்டுவீரர்கள் பிரெஞ்சு மொழியை ஒழுங்காக உபயோகிப்பதில்லையாம், அடுத்ததாக நட்சத்திரங்கள் 51%( நடிகர்கள், பாடகர்கள்); பத்திரிகையாளர்களும் தப்பவில்லை 19%. ஆங்கிலசொற்களை கலந்து பேசுவதும் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். பத்து பேருக்கு 7 பேர் ஆங்கிலச் சொற்களை கலந்து பேசுகிறார்கள். அவர்களில் 13% பேர் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பவர்கள். குறிப்பாக 18லிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 29% ஆங்கிலச் சொற்களை உபயோகிக்கிறார்களாம்.

ஆ. புத்தகம் படுத்தும்பாடு:

வலெரி த்ரியெர்வெலெர் (Valérie Trierveiler) பிரான்சு நாட்டின் இந்நாள் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து(François Hollande)வின் முன்னாள்காதலி. 2013ம் ஆண்டு பிப்ரவரிமாதம் இப்பெண்மணி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் (2013). காந்தி சமாதிக்கு கதலருடன் மலர் வளையமெல்லாம் வைத்திருக்கிறார். அடுத்த ஜனவரி மாதம் ஊட்டச்சத்துப்பற்றாக்குறை குழந்தைகளின் நலனை முன்வைத்து அவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மும்பைக்கு வரவிருக்கிறார். அதிபர் திடீரென்று இப் பத்திரிகையாளர் பெண்மணியைக் கைவிட்டு ஜூலி கயெ (Julie Gayet) என்கிற நடிகைமேல் காதல்கொண்டுவிட, பத்திரிகையாளர் பெண்மணி அதிபரோடு இருந்த நாட்களையும் அவரது அரசியலையும், பக்கத்திற்குப்பக்கம் குற்றம் சாட்டி « Merci pour ce moment » (அத்தருணத்திற்கு நன்றி) என்ற நூலை எழுதியிருக்கிறார். இருக்கிறார். நான்கைந்து நாட்களுக்கு முன்பு முதற்பதிப்பாக இரண்டு லட்சம் புத்தகங்கள் வெளிவந்து விற்று முடிந்திருக்கிறது. மீண்டும் இரண்டாவது பதிப்பு. ஆங்கிலத்திலும் விரைவில் வர இருக்கிறது இதுவரை ஒரு மில்லியன் யூரோவை அவர் சம்பாதிருக்கக்கூடும் என்கிறார்கள்; முதற்பதிப்புக்குமட்டும் பதிப்பகம் ஐந்து லட்சம்யூரோவை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே அதிபர் பிரான்சுவா ஹொலாந்துவின் சோஷலிஸ்டுகளின் அரசாங்கத்தை, இடதுசாரிகள் அனைவரும் விமர்சிக்கிறார்கள்; அண்மையில் அரசின் கொள்கை ஏழைகளுக்கானதல்ல எனக்கூறி முக்கியமான அவரது கட்சியைச்சேர்ந்த மூன்று அமைச்சர்கள் (நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர்) பதவி விலக வலது சாரி மனப்பாங்குகொண்ட இவருடைய சோஷலிஸ்ட் கட்சி பிரதமர், மனுவெல் வால்ஸ் புதிய அமைச்சரவை பதவியேற்று இரண்டுவாரங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இந்த அம்மாவின் புத்தகம் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பு 13% பிரெஞ்சுமக்களே அதிபர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. பிரெஞ்சு அதிபர்கள் வரலாற்றில் எந்தவொரு அதிபருக்கும் இப்படியொரு நிலமை உருவானதில்லையாம்.
2. அண்மையில் வாசித்த புத்தகம்: பசித்த மானுடம் -கரிச்சான் குஞ்சு

முதன் முதலாக வாசித்தேன்.

கணேசன் – கிட்டு இரு மனிதர்கள், இருவேறு வாழ்க்கை, பழமை மரபுகளில் ஊறிய குடும்பங்களின் வழித் தோன்றல்கள். வயிற்றுப் பசியைக்காட்டிலும் உடற்பசி அதிகமாக பேசப்படுகிறது. பெண்களை பரத்தைகளாக சித்தரித்திருக்கிறது. இக்காலத்தில் எழுதப்படிருந்தால் ஒரு வேளை Aides நோயைக் கதைநாயகனுக்குக் கொடுத்திருப்பார். இங்கே குஷ்டம். பெண்போகத்தால் வரும் நோய் குஷ்டம் என்ற நம்பிக்கையில் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல். மேற்கத்திய நாவல்களில் தான் நுணுக்கமான அவதானிப்பை கவனித்திருக்கிறேன் எழுதுவதற்கு முன்னால் ஒரு குஷ்ட ரோகியின் உடலை ஈபோல மொய்த்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவ்வளவு நுண்ணிய பார்வை. 1978ல் முதற் பதிப்பு வந்திருக்கிறது. அக்காலத்தில் இப்படியொருநாவல் என்பது மிகப்பெரிய புரட்சிதான். இன்று கற்பனையைக் காட்டிலும் நாவலில் சுய அனுபவங்கள் மேலோங்கி இருக்கற காலம். இந்நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. நோயினை, நோயாளியை, மனித மன விகாரங்களை ஒளிவு மறைவின்றி பேசுகிறது எனவே தனித்துவம் பெற்ற நூல் எனக்கூறலாமா? அதனினும் பார்க்க மேலான தகுதிகள், பெருமை சேர்க்கிற கூறுகள் நாவலில் இருக்கின்றன. முதலாவதாக கதை சொல்லியைப் படைத்திருக்கும் விதம். தன்னிலையிலும், படர்க்கையிலும் அவன் கதை தஞ்சை எழுத்துக்களுக்கே உரிய அடர்த்தியுடனும் அழகுடனும் சொல்லப்படிருக்கிறது. மையம் விளிம்பு என்கிற மயக்க நிலையில் கதை நாயகர்கள்.

இரு கதை நாயகர்களுமே ஆரம்பகால வாழ்க்கை சுகமானதல்ல. ஏன் கதை முழுவதுமே அவர்கள் வாழ்க்கை கடுமையானதுதான் என்பதைத் தெரிவிக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் இருந்தாலுங்கூட.

கணேசன் “சத்திரா போஜா மடா நித்திரா” என்று வாழ்க்கையைத் தொடங்கியவன்:
“ஊரில் எங்கு கல்யாணம், கருமாதி நடந்தாலும் தானும் அம்மாவும் போய்க் காசு வாங்கிகொண்டும் கடுமையான வசவுகள் வாங்கிக்கொண்டும் சாப்பிட்டுவிட்டும் வந்ததெல்லாம் உண்டு. அப்பொழுது எனக்கு ஐந்தாறு வயதிருக்குமா? ” என கடந்தகாலத்தை நினைவூட்டி நமக்கும் “எனது வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது” என்பதை கூச்சமின்றி தெரிவிப்பததன் மூலம் இன்றைய தனது நிலைமைக்கு சப்பைகட்டு கட்டுகிற கணேசன் தாய் தந்தையற்ற அநாதை.
“கிட்டாவின் தந்தை இறந்தபோது அந்தக் குடும்பத்திற்கு ஐந்து மா நிலமும் ஆயிரம் ரூபாய் கடனும் இருந்தது”. ஓர் விதவைத் தாயாராள் வளர்க்கப்பட்டவன்.

கணேசனின் இளம்வயதுக்கு பத்மா: “.. நீள மூஞ்சி, சுருட்டை மயிர் அவ்வளவு சேப்பு இல்லை.. கண் ரொம்ப அழகாயிருக்கும்” விசிப்பலகையிலே “மெதுவா அவனை ஒருக்களிக்க சொல்லிவிட்டுத் தானும் படுத்துக்கொள்ளும்” பத்மா.
கிட்டாவுக்கு ஒரு நீலா தன் முகத்தையும் மார்பையும் கிட்டாவின் மேல் படும்படி உராய்ந்து “சூடே ஒரு ருசி.. சேப்பே ஒரு அழகு இல்லையா கிட்டா” என்று கேட்டவள்.

இருவர் வாழ்க்கையிலுமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள். இருரையுமே எதிர்பாராத திருப்பங்களுடன வாழ்க்கை அழைத்துசெல்கிறது.

அனாதையான கணேசனை ஏற்றிவிட சங்கரியென்றும், ராயர் என்றும், வாத்தியார் என்றும் ரட்சகர்கள் குறுக்கிடுகிறார்கள் ஆனால் அவன் தலையெழுத்தை ‘சிங்க ரவுத்து’ எனும் சனி மாற்றி எழுதுகிறது. விதவை பாலாம்பாளால் வளர்க்கப்பட்ட கிட்டு சாமர்த்திய சாலி. தொட்டதெல்லாம் துலங்குகிறது காரோட்ட கற்றுகொள்ளவந்த கிட்டாவின் வாழ்க்கையில் குறுகிட்ட ராசுவும், செட்டியாரும் அவனை தனவந்தனாக மாற்றுகிறார்கள். இருவர் வாழ்க்கையும் ஏதோ ஒரு அறத்தை சத்தமில்லாமல் போதிக்கின்றன:

“இந்த அறிவுக்குப் பழைய நினைவே கனவாகத்தான் தெரிகிறது. தூக்கத்தில் கனவைத் தவறாகக் காண்பதுபோலவே விழித்திருக்கும்போதும் இந்த நனவையும் நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனோ. ஒன்றுமே புரியவில்லையே; பிறகு என்றாவது புரியப்போகிறதோ? ” என்று கேட்கிற கணேசனே இறுதியில் “விழிச்சிண்டிருந்தா எல்லாம் தெரியணுமே, அப்ப எனக்கு ஒண்ணுமே தெரியரதில்லை. நானே இருக்கிறதில்லை அப்பல்லாம் .. ஆனா சந்தோஷம் பொங்கிண்டிருந்தப்பலே தோணும் பின்னாடி.” என்கிறான். கனேசன் தோற்றவனா ஜெயித்தவனா? என்ற கேள்வி படித்து முடித்தபின்பும் நைந்த கயிறை பிடித்திருப்பதுபோல மனதிற் தொங்கிக்கொண்டிருக்கிறது. கடைசி நான்கைந்து பக்கங்களுக்காவே பலநூறுமுறை வாசிக்கலாம்.

நன்றி: திண்ணை
——-

இலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 7: கதைமாந்தர்கள்-2

panchu

எடுத்துரைப்பியலில் கதைமாந்தர்களின் முக்கியத்துவம் என்ன? கடந்தகாலங்களில் கதைமாந்தர்கள் நமக்கு எவ்வித கற்பிதத்தை உருவாக்கினார்கள். தற்காலத்தில் கதை மாந்தர்களின் தன்மை என்ன? என்பதையெல்லாம் இதற்கு முந்தையை கட்டுரையில் பார்த்தோம். இனி இக்கதைமாந்தர்களின் உருவாக்கம் எவ்வாறு நடைமுறையில் இயங்குகிறது? அதற்க்கென நியதிகள் இருக்கின்றனவா, இருந்தால் அவை என்னென்ன? என்பதை பேராசிரியரின் எடுத்துரைப்பியல் பற்றிய திறனாய்வின் இப்பகுதி நமக்கு விளக்கிச்சொல்கிறது.

கதைமாந்தர் உருவாக்கம்

“கதைமாந்தர் என்பவர் அரூபமான கதைக்குள் இருந்து கட்டமைக்கப்படுகின்ற ஒருவராவார்; இதை மாந்தர்களின் சாயல்களால் பின்னப்படும் வேலைப்பாடு என விளக்கலாம். ” என்கிறார் கட்டு¨லாசிரியர். அவரது கருத்துப்படி “கதைமாந்தர் உருவாக்கத்திற்கு ப் பயன்படுத்தப்படும் ஒரேவிதமான உத்திகளைப் பல்வேறுபட்ட எழுத்தாளர்கள் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தக்கூடும். ஒரே எழுத்தாளர் ஒரே உத்தியைத் தன்னுடைய பல்வேறுபட்ட படைப்புகளிலும் பயன்படுத்தக்கூடும். மேலும் சில நேரங்களில் பல்வேறு உத்திகள் பல்வேறுவிதமாகப் பயன்படுத்தப்படலாம்.” (பக்.196 ந.இ.கோ)

எடுத்துரைப்பில் இடம் பெறும் மாந்தரை வடிவமைக்க இரண்டு அடிப்படையான பண்புக்கூறுகளை எழுத்தாளர்கள் கடைபிடிப்பதாக அறிகிறோம். முதலாவது நேரடியான பண்பு விளக்கம் இரண்டாவது மறைமுகமாகப் புலப்படுத்துதல். இவை இரண்டிற்கும் பொதுவான நான்கு பண்புகளும் சொல்லப்படுகின்றன.

அ. பெயரைச் சொற்களால் குறிக்கப்படும் தனிக்கூறு: உ.ம். அவன் நல்ல உள்ளம் கொண்டவனாக இருந்தான்.
ஆ. அரூபமான பெயற்சொற்களால் கட்டப்படும் பண்புக்கூறு: உ.ம். அவனுடைய நல்ல குணத்திற்கு எல்லையே கிடையாது
இ. இயலக்கூடிய வேறுவகையான பெயற்சொற்கள் கொண்டு கட்டப்படுவது: உ.ம். அவள் ஓர் உண்மையான சிறுக்கி.
ஈ. ஒருவகையான பேச்சுமுறையிலும் கட்டமைக்கபடும்: உ.ம். அவன் தன்னை மட்டுமே விரும்புகிறவன்.

1. நேரடியான பண்பு விளக்கம்:

இதில் கதைமாந்தரின் பண்புநலன் வெளிப்படையாக சொல்லப்படுகிறது. இதற்கு ஓர் உதாரணத்தையும் கட்டுரை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

“மாதவி என்பவள் பலவிதமான கொள்கைகளையுடைய ஒரு இளம்பெண்ணாக இருந்தாள். அவளுடைய கற்பனை ஆற்றல் என்பது குறிப்பிட்டுக்கூறத்தக்க செயலாக்கம் மிக்கதாக இருந்தது.. அவளுடைய எண்ண ஓட்டங்கள் தெளிவில்லாத முறையில் சிக்கல் வாய்ந்த ஒர் தளத்தில் இயங்குவதாக இருந்தன.” ஆனால் இந்த வெளிப்படையான கூறலை முழுமையான வெளிப்படைக்கூறலாக நாம் கருதக்கூடாதென்கிறார். அவர் சொல்லும் காரணம் ” கதைமாந்தர்களின் பண்பு நலன்களை அடையாளப்படுத்தும் தன்மை வெளிப்படையாக இருந்தாலுங்கூட ‘நேரடியாகபண்பு விளக்கம் பெறுதல்’ என்ற வகைக்குள் எப்பொழுது அடங்குமென்றால், பனுவலில் கதைசொல்லியின் எடுத்துரைப்பு அவருக்கே உரிய அதிகாரத் தொனியோடு அமையும் போதுதான்” என்கிறார். மேற்கண்ட கூற்றை கதைசொல்லியைத் தவற வேறு மக்கள் பேசுவதாக வைத்துக்கொண்டால் “இந்த அளவிற்கு கனமும் முக்கியத்துவமும் அமையாது ” என்கிறார் நமது திறனாய்வாளர். எனவே ‘நேரடியான பண்பு விளக்கம்’ என்ற எடுத்துரைப்பு முறையானது ” காரண காரியத்திற்கு உட்பட்ட அதிகாரத் தொனியோடு கூடிய நிலையான ஒரு பதிவினைக் கதைமாந்தர் குறித்து உருவாக்கிவிடுகிறது” என்பது அவர் கருத்து. இத்தகைய முறையால் கதைமாந்தர் பற்றிய (கதை சொல்லி வாசகரிடத்தில் உருவாக்கும்) கருத்து இறுதிவரை குறைவதற்கு வாய்ப்பில்லை என்கிறபோதும் திறனாய்வாளர் அதை வலியுத்திச்சொல்ல தயங்குகிறார். காரணம் பனுவலில் அக்கதைமாந்தரின் பண்பை உணர்த்த எழுத்தாளர் கையாளும் பிற உத்திகள் பலவும் அம்மாற்றத்திற்குக் காரணமாகலாம் என்கிறார்.

2. மறைமுகப் புலப்படுத்துதல்

கதைமாந்தரின் பண்பு நலனை தெரிவிக்கும் இரண்டாவது முறை – மறைமுகமாக புலப்படுத்துதல். இதனை விளக்குவதற்கு முன்பாக நாவல் இலக்கியத்தின் தொடக்கத்தில் அதாவது 19ம் நூற்றாண்டின் இறுதிக்கட்டம் வரை கதை மாந்தர்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டனர் என்பதை நினைவுகூறும் பேராசிரியர் ”நிகழ்காலத்தில் குறிப்பாக கூறுவதும்; முடிந்த முடிவாக எந்த ஒன்றையும் கூறாமல் விடுவதுதான் சிறந்த முறையெனக் கருதப்படுகிறது” என்கிறார்.

இம்மறைமுகப் புலப்படுத்துதலில் நான்கு வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன: அ. செயல் ஆ. பேச்சு இ.. சூழல் ஈ. துணைவலுவாகப் பயன்படும் ஒப்புமை.

அ. செயல்

இப்பண்புக்கூறு பனுவலில் கதைமாந்தரின் ஒரு செயல் மூலமாகவோ அல்லது அடிக்கடி அவர் ஈடுபடும் செயல்களின் மூலமாகவோ கட்டமைக்கப்படும் என்கிறார். “ஒரேதடவை நிகழும் செயல், அந்த கதை மாந்தரின் ஆற்றல் மிகு பண்பினை வெளிக்கொண்டுவந்துவிடும்….பெரும்பாலும் கதை மாந்தரின் மாறாத நிலையான பண்புக்கூறினை வெளிப்படுத்துகிற போக்கினை உடையதாக அமையும் ” எனவும் “இந்தச் (ஒரு) செயலினால் கூடிவரும் நாடகத் தன்மை பல தடவை நிகழும் செயல்களைவிட அதிகமாகவும் தரமான முறையிலும் மிக நுட்பமாக கதைமாந்தரின் பண்பினை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாகும்” என்கிறார்.

இச்செயல்கள் நான்குவகை படுகின்றன.

1. பொறுப்பாக செய்கிற செயல் – கதை மாந்தரால் நிகழ்த்திக்காட்டப்படும் ஏதாவது ஒரு செயல்
2. செயலை செய்யாது விடுதல் – கதைமாந்தரால் செய்யமுடியும் -ஆனால் செய்யாதிருத்தல்
3. ஆச்ந்து சிந்தித்து செய்யும் செயல் – இது கதை மாந்தரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் செயல்.

இச்செயல்கள் அனைத்தும் கதை மாந்தருக்கு ஒரு குறீயீட்டுத்தன்மையை வழங்குவதாக அறியவருகிறோம்.

ஆ. பேச்சு

பேச்சு என்பது இங்கே மௌனமாகவும் இருக்கலாம். எனவே பேச்சு (உரையாடல் அல்லது மௌனம்) “தனது உள்ளடக்கத்தின் மூலமாகவும் வடிவத்தின் மூலமாகவும் கதைமாந்தரின் ஒரு பண்புக்கூறினையோ அல்லது பல்வேறு பண்புக் கூறுகளையோ விள்க்குபவைகளாக அமையும்” என்ற விளக்கம் கிடைக்கிறது

கதைமாந்தர் உருவாக்கத்தில் மறைமுகமாக அவர் பண்பினைக் கட்டமைத்தலில் செயலைக் காட்டிலும் பேச்சுக்கு முக்கித்துவம் கொடுக்கப்படுகிறது. கதைசொல்லலே உரையாடல் சார்ந்தது;அல்லது உரையாடலையே பெரிதும் நம்பி இருக்கிறது. கதை சொல்லியில் ஆரம்பித்து கதைமாந்தர்கள்வரை சொற்கள் மற்றும் தொனியின் துணைகொண்டு பிறமையுடன் உறவாட வேண்டிய நெருக்கடி எடுத்துரைப்பியலில் உண்டு. எனவே கதைமாந்தர் உருவாக்கத்தில் ‘பேச்சு’ தனித்து நிற்கிறது. “கதைமாந்தர்களின் உள்முரண்பாடுகளையும், ஆழத்தில் உறைந்துகிடக்கும் படிமங்களையும் அழுத்தமாக வெளிப்படுத்துவதற்கு இந்தப் பேச்சு பெரிய பங்களிப்பினைச் செய்கிறது” என்கிற கட்டுரை ஆசிரியரின் கருத்தை இங்கே கோடிட்டுக்காட்டவேண்டும். செயலைக்காட்டிலும், மறைமுகப் புலப்படுத்தலில் ‘பேச்சு’ முன்நிற்பதற்கு காரணம் ஒரு கதைமாந்தர் மற்றொரு கதைமாந்தரைப் பற்றி பேசும்சந்தர்ப்பம் அமைவதால் கதையில் இடம்பெறும் ஏனைய மாந்தர்களின் பண்பினைத் தீர்மானிக்கவும் ‘பேச்சு’ வாசகர்களுக்கு உதவுகிறது. இங்கே ஆசிரியர் எழுத்தாளர் கி.ரா.வின் கரிசல் காட்டு கதை மாந்தர்களை புரிந்துகொள்ள ‘பேச்சு’ எங்கனம் உதவியிருக்கிறதென நினைவுகூர்கிறார்.

மேற்கண்ட செயல் மற்றும் பேச்சு கொண்டு கதை மாந்தர்களை கட்டுகிறபோது சூழல் அல்லது இடம் வெளிப்புற தோற்றங்கள் ஆகிய உண்மைகளும் உதவுகின்றன எனத் தெரியவருகிறது. இவை இரண்டும் (இடம், வெளிப்புற தோற்றங்கள்) பாத்திரமயமாக்கலில் அல்லது கதைமாந்தர்களை உருவாக்குவதில் மேலாதிக்கம் செலுத்துவதில்லை என்கிறபோதும், கதைமாந்தர்களின் அலங்கோலமான நிலை அல்லது ஒழுங்கு அவர்கள் புழலும் இடத்தின் தராதரம் ஆகியவை கதைமாந்தர்களை புரிந்துகொள்ள உதவுகின்றன என்பது உண்மை. வெளிப்புறதோற்றத்தை சற்று கவனமாக புரிந்துகொள்ளவேண்டுமென்கிறார். ஏனெனில் இதில் ஒரு மனிதனின் இயற்கையான உடல் அமைப்பு ( உயரம், நிறம், மூக்கின் நீளம், கண்கள் அமைப்பு…) இருக்கிறது. பின்னர் அவன் விரும்பி அல்லது விரும்பாமல் அமைத்துக்கொள்கிற சிகை அலங்காரம், உடை அலங்காரங்கள் உள்ளன.

இ. சூழல்

ஒரு கதைமாந்தருக்கு திறனாய்வாளரின் கருத்துப்படி இருவகை சூழல்கள் கட்டமைக்கப்படுகின்றன. ஒன்று அவரின் உடல் சார்ந்தது – அறை, வீடு, தெரு, நகரம். முதலியன. மற்றது கதை மாந்தரின் சமூகம் சார்ந்தது -குடும்பம், வர்க்கம், சாதி, மதம், கட்சி. இவைகளை “கதைமாந்தரின் பண்புக்கூறுகளை வெளிப்படுத்தும் ஆகு பெயர்களாக அடிக்கடிப் பயன்படுத்தப்பட்டுள்ளன” என்பதைக்கூறி, வெளிப்புறத் தோற்றத்திற்கும் பண்புகூறுகளுக்குமான உறவை காரண காரிய அடிப்படையில் அணுகுவதுபோல சூழலையும் கதைமாந்தர் உறவையும் காரணகாரிய அடிப்படையில் அணுகமுடியாதெனச் சொல்லப்படுகிறது

ஈ. துணை வலுவாகப் பயன்படும் ஒப்புமை:

கதைமாந்தர் உருவாக்க வழிமுறைகளில் இது நான்காவதாக இடம் பெறுகிறது “கதை மாந்தர்களை ஒப்புமைபடுத்திப் பேசுவதானது கதைமாந்தர்களின் தனிப்பண்பினினை வெளிப்படுத்தப்பயன்படும் ஒன்று என்பதைவிட, பாத்திரமயப்படுத்துவதற்குத் துணை வலுவாக” பயன்படுகிறது என்கிறார் பேராசிரியர். உதாரணத்திற்கு “ஒரு சாம்பல் நிற நிலப்பரப்பு” மட்டுமே ஒரு பாத்திரத்தின் அவநம்பிக்கை அல்லது தோல்வி மனநிலையைப் புலப்படுத்திவிடாது. மாறாக அந்தப் பாத்திரத்தின் செயல் பேச்சு புறத்தோற்றம் ஆகியவற்றின் மூலம் ஏற்கனவே வாசகர் அறிந்து வைத்திருக்கக்கூடிய அந்தப் பாத்திரத்தில் அவநம்பிக்கையை காட்டுவதற்குப் பயன்படலாம்” என்கிறார். ஒப்புமை என்ற சொல் பயன்பட்டிருப்பினும் முரண்பட்டிருத்தல் (அதுவும் ஒருவகையில் ஒப்புமைதான்) என்ற கூறினையும் இதனுடன் இணைத்து திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வொப்புமையை மூன்று முறையில் விளக்கியிருக்கிறார்:

1. ஒத்திசைவான பெயர்கள்
2. ஒத்திசைவான நிலக்காட்சி
3. கதைமாந்தர்களுக்கு இடையிலான ஒத்திசைவு.

1.ஒத்திசைவான பெயர்கள்:

இங்கே பிரெஞ்சுக்காரரான பிலிப் ஹார்மோன் என்ற இலக்கிய திறனாய்வாளர் கண்டாய்ந்த முடிவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவர் கதைமாந்தருக்கும் குறியீடுகளுக்குமுள்ள உறவை உறுதிசெய்தவர். பனுவலில் கதைமாந்தரை ஒரு குறியீடாக நிறுவமுடியும் என்றதோடு, அக்கதைமாந்தரை ஒற்றை குறீயீடாக மட்டு ¢ன்றி பல குறியீடுகளின் தொகுப்பாகவும் பிரதிநிதித்துவபடுத்தமுடியும் என்றவர். “கதைமாந்தருக்கு நாம் தரும் ஒத்துழைப்பு என்பது எடுத்துரைப்பிலுள்ள பிற கதைமாந்தர்களுக்கும் நம்மால் பெயர் சூட்டவும், நினைவுகூரவும் முடியும் என்பதும் அவர்களை விசாரணைக்குட்படுத்தவும், விசாரணை செய்யவும் முடியும் என்பதும்” ஆகும் எனக்கூறியவர்.

ஹாமொன் ஒத்திசைவான பெயர்களை நான்கு பிரிவுக்குள் கொண்டுவருகிறார் என அறிகிறோம். அவை அ. சாட்சி ஆ. ஓசை. இ. தெளிவாக உச்சரித்தல் ஈ. மொழிவடிவம். இதில் நான்காவதாக வருகிற மொழிவடிவத்தை வாக்கிய அமைப்போடு பொருத்திப்பார்க்க தேவையில்லையாம். “ஒத்திசைவான பெயர்கள் ஒத்ததை வலியுறுத்துவதைவிட பெயருக்கும் அந்த கதைமாந்தரின் இடையிலுள்ள முரண்களை வலியுறுத்தவும் கையாளப்படலாம்” எனவும் சொல்லப்படுகிறது.

2. ஒத்திசைவான நிலக்காட்சி:

“கதைமாந்தரின் சமூகம் சார்ந்த சூழலானது அந்தக் கதைமாந்தரின் பண்புக் கூறுகளை மறைமுகமான ஒரு முறையில் வெளிப்படுத்துகிறதென்று” கூறப்படுகிறது. அதாவது மனிதர்களைச் சமூகமும், சமூகத்தை மனிதர்களும் கட்டமைக்கிறார்கள் மாறாக இயற்கை நிலக்காட்சி யாரையும் சாராமல் சுதந்திரமாக இயங்கிக்கொண்டிருப்பது. எனவே இங்கே சமூகத்தைபோல காரணகாரிய அடிப்படையில் இயற்கை சூழலையும் மனிதர்களையும் பொருத்திபார்க்க முடியாதென்கிறார்கள். எனினும் சில ஆய்வுகள் இக்கருத்தியத்திற்கு மாறாக இயற்கைக்கும் மனிதருக்கும் ஒப்புமை அடிப்படையிலோ முரண் அடிப்படையிலோ ஒத்திசைவுகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றன. பேராசிரியர் சங்க இலக்கியத்தில் வரும் கருப்பொருள் காட்சிகளை நினைவு கூர்கிறார்.

3. கதை மாந்தருக்கிடையில் ஒத்திசைவு

சில நேரங்களில் சில குறிப்பிட்ட சூழல்களில் “இரண்டு கதைமாந்தர்களின் நடத்தைகளுக்கு இடையிலுள்ள ஒப்புமை அல்லது முரணானது இரண்டு கதைமாந்தர்களின் பண்புக்கூறுகளையும் அழுத்தமாக வெளிப்படுத்துவதாகக்” கூறும் க.பஞ்சாங்கம் ஷேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ நாடகத்தில் வரும் ‘கார்டிலியா மற்றும் அவளது சகோதரிகளுக்கிடையே உள்ள குண வேறுபாடுகள் அவ்விதியின்படி தெளிவாக பதிவாகியிருக்கின்றன, என்கிறார்

பாத்திரமயபடுத்தலிலுள்ள பொதுவான வழிமுறையை வகுத்துக்கொள்ள வேறுசில கூறுகளை பற்றிய புரிதலும் அவசியமெனக்கூறும் ஆசிரியர் உதாரணத்திற்கு ஒரு கதைமாந்தரின் பண்புநலன்களைப் புலப்படுத்தப் பயன்படும் கூறுகள், அந்தக் கதைமாந்தரின் ஒரு பண்பினைத்தான் சுட்டிக்கூற வேண்டுமென்பது இல்லையென்றும், தொடர்பான வேறுபல கூறுகளையும் பேசலாம், எனவும் தெரிவிக்கிறார்.

கதைமாந்தர்கள் உருவாக்கம்?

நேற்றையை கதை மாந்தர்கள் இரு கூட்டத்தின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். நல்லவை தீயவை என்ற பொதுப்பண்பின் கீழ் அவர்கள் இனங்காணபட்டு, கதையாடலை இந்த இரு பண்பிற்குமான மோதலாக நடத்திக் காட்டினார்கள். ஆனால் இன்றைய எடுத்துரைப்பு சிக்க்லான மாந்தர்களை கையாளுகிறது அவர்களை மேற்கண்ட பொதுப்பண்பின் ஒன்றின்கீழ் அவ்வளவு எளிதாக நிறுத்திவிடலாமா?

அது தவிர இன்றைய படைப்புலகம் படைப்பாளியோடு வாசகனுக்கும் ‘கதைமாந்தரின்’ பண்பைத் தீர்மானிக்கும் மந்திரக்கோலை கொடுத்திருக்கிற காலம். பிரெஞ்சு எழுத்தாளர் செர்ழ் தூப்ரோஸ்கி கூறுவதுபோல “அச்சடித்த காகிதத் தளத்தில் எடுத்துரைப்பவனுக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்திதரும் சந்திப்பே கதைமாந்தர்”. அடுத்து ‘தன்னை எழுதல்’ என்ற புதிய வகை எடுத்துரைப்பியலில் கதைசொல்லியே சிறப்பு கதைமாந்தன் என்கிறபோது மிகக்கவனமாக கதைமாந்தர் உருவாக்கத்தைப் பரிசீலிக்கவேண்டியிருக்கிறது. ஏற்கனவே நேற்றைய கதை மாந்தர்களும் இன்றைய கதைமாந்தர்களும் ஒன்றல்லவெனபார்த்தோம். இன்றைய மாந்தர்கள் குழைந்தைமுதல் பெரியவர் வரை சிக்கலான மனிதர்கள். ஆறுவயதில் தமது அறிவைக் கையாளத் தெரிந்த குழந்தைகளின் காலம் போய் இன்றைக்கு அப்பக்குவத்தை அவர்கள் தங்கள் மூன்றுவயதில் அடைந்திருக்கிறார்கள். தந்தைக்கு மந்திரம் உபதேசித்த மீஎதார்த்தம், நாளை எதார்த்தமாகக்கூடும். அனுபவத்தால் கட்டமைக்கப்பட்ட நேற்றைய மனிதனுக்கும் அறிவால் கட்டமைக்கப்படுகிற இன்றைய மனிதனுக்கும் வேறுபாடுகள் உள்ளன. எனவே மனிதனின் பரினாம வளர்ச்சி கதைமாந்தரிலும் எதிரொலித்தாகவேண்டிய கட்டாயம் உள்ளது, நமது திறனாய்வுகள் பலவும் மேற்கத்திய ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளபட்டவை. மேற்கத்திய சமூகத்தை, மேற்கத்திய மனிதர்களை, அவர்களின் பண்பாட்டை அடிப்படையாகக்கொண்டவை. கீழை தேசத்துக்கென கலப்பற்ற பண்பிருக்கிறதா என்பது அடுத்த கேள்வி. மேற்கத்தியரேனும் மேற்கத்தியர்களாக இருக்கிறார்கள் (பெரும்பாலோர்) என உறுதியாகக் கூறலாம். குறிப்பாக கீழைநாடுகளின் படித்த நடுத்தர வர்க்கம், மேற்கிலும் இல்லாமல் கிழக்கிலும் இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மாசற்ற அறிவு, மாசற்ற உணர்வு போன்ற சொல்லாடல்கள் பொருளிழந்துவிட்டன. ஒருவித மன நோய்க்கு ஆளான மனிதர்கள். மையமும் விளிம்புமிணைந்த ஒருவித மயக்க நிலை நமது உயிர்வாழ்க்கை. இன்றைய கதைமாந்தர் உருவாக்கம் பல முகப்பினைக்கொண்ட கண்ணாடி, தோற்ற பிழைக்கு வாய்ப்புண்டு. எனவே இவற்றையெல்லாம் மனதில் நிறுத்தியே ‘ கதைமாந்தர்கள் உருவாக்கம்’ பற்றிய கட்டுரையை நாம் அணுகவேண்டும்.

(தொடரும்)

மொழிவது சுகம் ஆகஸ்டு 24 2014

1. படைப்பாளி இறப்பதில்லை : யு.ஆர் அனந்தமூர்த்தி

URAநீட்சே கடவுள் இறந்துவிட்டார் என்றார், பெரியார் கடவுள் இல்லை என்றார். அறிவென்பது முரண்படுவதற்கு. அவ்வகையில் முரண்பட்டார்கள். இவற்றையெல்லாம் அப்படியே ஏற்றாகவேண்டிய கட்டாயம் நமக்கில்லை. நைவேத்தியம் செய்பவன் வேண்டுமானால் “கடவுள் இறந்துவிட்டார்”, “கடவுள் இல்லை” என்று சொன்னால் ஒரு வேளை நம்புவான். ஆடு, கோழி அறுக்கிறவனிடம் போய்ச் சொன்னால், “ஏதோ அய்யனாரப்பன் பேரைசொல்லி வாய்க்கு ருசியா சப்பிடலாம்னு நெனைச்சா அதுக்கும் வேட்டு வைக்கிற, போய்யா போய் வேலையை பாரு” என்பான். மேலை நாட்டில் “கடவுள் இறந்துவிட்டார்” என்று சொல்லவும் கடவுள் இருக்கிறார்” என்று சொல்லவும் அறிஞர்கள் வேண்டும். இந்திய ஞானம் “மூத்தோர் சொல் அமுதம்” என்பதில் பிறந்தது. மூத்த அரசியல் வாதி, மூத்த எழுத்தாளர், எங்கா தாத்தா சொன்னார், எங்க அப்பா சொன்னார், அவரே எழுதிவிட்டார் என்ற புலம்பல்கள் நமக்கு அதிகம். பூர்வபட்சம், சித்தாந்தம் என்பதெல்லாம் இந்திய மரபில் அரத்தமற்ற சொற்ககளாவே இருந்து வந்திருக்கின்றன. அனல் வாதம் புனல்வாதம் என்பதெல்லாம் மேடையைவிட்டு இறங்கினால், நீர்த்துபோகும், மூச்சடங்கிவிடும். இந்தியத் தத்துவங்கள் வளர்ச்சியடையாமைக்கு அதை யாரும் தொட்டுவிடக்கூடாதென்கிற பழமைவாதமும் ஒரு காரணம். நியாயமான அனுபவங்களுக்கு தலை வணங்கவேண்டியதுதான், வயதுக்கு அல்ல. முரண்படவேண்டிய சித்தாந்தத்திற்கு, முரண்பட வேண்டிய அதிகாரத்திற்கு முரண்படுவதுதான் அறிவு. தலை ஆட்டுவது அறிவின் பண்பாகது.

நீட்சே, கடவுள் இறந்துவிட்டார் என்றதுபோல “படைப்பாளி இறந்துவிட்டார்” என்ற ரொலான் பர்த் புதைக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன, ஆனால் அவர் பெயரை பிரான்சு உச்சரிக்க மறந்தாலும் நாம் மறப்பதில்ல்லை. “படைப்பாளி இறந்துவிட்டார்” இறந்துவிட்டார் எனச்சொல்லியே கல்லறையில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிக்கொண்டிருக்கிறோம். இப்படியானதொரு “சாகாவரம்” வேண்டியே இக்கருத்தை அவர் முன்வைத்திருப்பாரோ என்ற ஐயமும் எழாமலில்லை. செர்ழ் தூப்ரோஸ்கி என்ற மற்றொரு பிரெஞ்சு எழுத்தாளர்: “சுயசரிதையில் படைப்பாளி மறுபிவி எடுப்பதில் வியக்க என்ன இருக்கிறது, அவர் இறந்தார் எனச் சொல்லப்படுகிறபோது” என்றொரு சமாளிப்பை வைக்க, ரொலன்பர்த் தம் பங்கிற்கு ஒரு சுயசரிதையை எழுதி (Roland Barthes par Roland Barthes) அவருடைய சித்தாந்தத்தை அவரே பொய்யாக்கினார். நல்ல படைப்பாளி இறப்பதில்லை. ஒரு நல்ல படைப்பில், அது வாசிக்கப்படும் தருணத்தில் ஆசிரியன் குறுக்கிடுவதில்லை. வாசிப்பவனின் கற்பனைக்கு வழிவிட்டு அவன் ஒதுங்கிக்கொள்கிறான். ‘படைப்பாளி இறந்துவிட்டார்’ என்ற ‘பர்த்’தின் கூற்றை அப்படித்தான் புரிந்துகொள்ளவேண்டும். மற்றபடி பேரிலக்கியங்களை படைத்தவர்கள் அனைவருமே சாகாவரம் பெற்றவர்கள். கம்பன் முதல் பாரதிவரை இன்றும் கொண்டாடப்படுகிறார்கள், அவர்கள் மரிப்பதில்லை.

பதினந்து நாட்களுக்கு முன்பு அருந்ததிராய் பிரச்சினையில் யு.ஆர் அனந்தமூர்த்தியின் ‘பாரதிபுரம்’ நினைவுக்குவந்தது, எழுதியிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் இறந்ததாக செய்தி. இந்திய இலக்கிய ஆளுமைகள் என்றதும் சில பெயர்கள் தவிர்க்கமுடியாதவை, ‘யு.ஆர் அனந்தமூர்த்தி’ அவைகளுள் ஒன்று. அவர் எழுத்தாளர் மட்டுமல்ல ஓர் அறிவு ஜீவி. எழுத்தாளர்களெல்லாம் அறிவு ஜீவிகள் அல்ல ஆனால் அறிவு ஜீவிகள் எழுதுகிறபோது அந்த எழுத்துக்கு கூடுதல் மகத்துவம் கிடைக்கிறது. மேற்கத்திய எழுத்தாளர்களில் பெரும்பானமையோர், தத்துவவாதிகளாகவோ, மொழி வல்லுனர்களாகவோ, பேராசிரியர்களாகவோ இருக்கிறார்கள். அந்த மேதமையும் நுண்ணறிவும் அவர்கள் எழுத்திலும் வெளிப்படும். யு.ஆர் அனந்தமூர்த்தி அத்தகைய இனத்தைசேர்ந்தவர். அவர் படைப்புகளை வாசித்துமுடித்தபின்னும் அவர் எழுத்தைவிட்டு விலகமுடியாதது அவரது பலம். பல மனிதர்களைச் சந்திக்கிறோம், பல ஆசிரியர்களிடம் படித்திருக்கிறோம், பல பெண்களைச் சந்தித்திருக்கிறோம், தினசரி நடந்துபோகும் பாதையில் பார்த்துப் பழகிய காட்சி சித்திரங்கள் பல. இருந்தும் சில மனிதர்கள், சில பெண்கள், சில ஆசிரியர்கள், சில காட்சிகள் பசுமையாக நினைவில் நிற்கின்றன. அனந்த மூர்த்தியின் கதைமாந்தர்களும் அப்படியானவர்கள். ‘சமஸ்காராவை’ எழுதும் துணிச்சல் சராசரி எழுத்தளர்களுக்கு வராது. அதுவேறு மனம். ஆங்கிலத்தில் ‘the Great’ என்ற சொல்லை வரலாற்றாசிரியர்கள் பின்னொட்டு ஆக சிலருக்குச் சேர்ப்பார்கள். அவர்கள் சரித்திரத்தை மாற்றி எழுதியவர்கள். இந்த நூற்றாண்டிற்கு கொர்பச்சேவ், மாண்டெலா இருவரும் உதாரணம். இலக்கியத்திலும் அவ்வாறான படைப்பாளிகள் இருக்கவே செய்கிறார்கள். மலரைக்கூட சூடவேண்டியவர்கள் சூடினால் தான் பெருமை. யு.ஆர் அனந்தமூர்த்தியை அழகுபடுத்தி ஞானபீடபரிசு தன்னை உயர்த்திக்கொண்டது. சமஸ்காராவும், பாரதி புரமும் உள்ளவரை யு.ஆர் அனந்தமூர்த்தியும் வாழ்வார். அவருக்கு இறப்பில்லை.

2. Vengeance sans fin ( தொடரும் பழிவாங்கல்) ஒரு ஜெர்மன் திரைப்படம்:

vengeanceபால்டிக் கடலையொட்டிய அமைதியான கிராமமொன்றில் நடக்கும் கதை. ரா•ல்ப், ஹன்ஸென் என்ற இரண்டு குடும்பங்கள், அக்குடும்பத்தைசேர்ந்த பிள்ளைகள், ஒருமேயர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் முக்கிய கதை மாந்தர்கள். நாம் எல்லோரும் அலுத்துக்கொள்கிற அல்லது வாழ்க்கையைப் புரட்டிப்போடும் நிகழ்வுகள் குறுக்கிடாதவரை, நமது மனது சித்திரம் தீட்டி வைத்திருக்கிற சராசரி நாள். கணவன், மனைவி, நான்கு வயது சிறுமிகொண்ட ஒரு குடும்பத்தின் வழக்கமான காலை: டாய்லெட், பிரேக்•பாஸ்ட், அவசகரகதியில் அலங்காரம், உடுப்புகள், சினுங்கள், சேட்டை, கோபம், கொஞ்சல், சிக்கனமான வார்த்தையாடல்கள் போன்ற உள்ளடக்கத்தைக் கொண்ட காலை- ஒரு விபத்து காத்திருக்கிறது என்பதை நிமித்தமாகச் சொல்லப் போதாத காலை. விபத்துகளைச் சந்தித்தவர்களை கேட்டோமெனில். “எப்போதும்போலத்தான் அன்றைக்கும் அலுவலகம்போனேன், அவன் குறுகே வந்தான, ப்ரேக்கை மிதித்தேன், வண்டி நிதானமிழந்து மரத்தில் மோதி… என்ற பதிலை விம்மலும் வெடிப்புமாகக் கண்களைத் துடைத்து முடிப்பார்கள். அதுபோலவே ஒரு வாகனவிபத்து நிகழ்ந்து இரு குடும்பங்களின் வாழ்க்கைமுறையை கிழித்துப்போடுகிறது. விபத்தில் பலியான உயிரின் குடும்பம் மட்டுமல்ல விபத்துக்குக் காரணமான குடும்பமும் அல்லாடுகிறது. கிராமமே ஒரு குடும்பத்திற்கு எதிராக அணி திரளும் அவலத்திற்கு அந்த பெருநிகழ்வு காரணமாகிறது.

ஹன்ஸென் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் வழக்கம்போல ரொட்டிவாங்க கிராமத்திலிருக்கும் ஒரே கடைக்கு செல்கிறார்கள். ரொட்டிக் கடைக்கு எதிரே, பிள்ளைகள் முதுகில் ஏறி விளையாட சைத்தான் ரூபத்தில் குட்டியானையொன்று காத்திருக்கிறது. சிறுமி லிஸா தாயிடம்” ஆனை முதுகில் ஏறி சவாரி செய்யப்போகிறேன் என்கிறாள். தாய் அனுமதித்துவிட்டு, ரொட்டிக் கடைக்குள் நுழைகிறாள். அதே ரொட்டிக் கடையில் ஊதியத்திற்கு பணிசெய்கிறவளாக ரால்•ப்ப்பின் மனைவி. திருமதி ஹஸ்ஸன் ரொட்டி வாங்கிக்கொண்டு திரும்பவும் அந்த விபத்து நிகழ்கிறது. ரொட்டிவிற்கும் பெண்மணியும் பார்க்கிறாள். ரொட்டிவாங்கிகொண்டு திரும்பிய பெண்மணியும் பார்க்கிறாள். விபத்துக்குக் காரணமானவன் ரா•ல்ப். அவன் ஓட்டிவந்த காரால் உயிர் இழந்த சிறுமி ரொட்டிவாங்கவந்த திருமதி ஹன்ஸனின் ஒரே மகள். விபத்துக்குள்ளான வாகனத்தை ஓட்டிவந்த ரா•ல்ப்பிற்கு நடந்தது விபத்து, எதிர்பாராமல் நடந்தது. விபத்தில் மாண்ட சிறுமியியின் குடும்பத்திற்கு அவன் கொலைகாரன். ரால்•ப் நியாயப் படுத்துவதுபோல வாகனத்தை ஓட்டிவந்த அவனுக்கு திடீரென்று ஏற்பட்ட பக்கவாதத் தாக்குதலே விபத்துக்குக் காரணமென மருத்துவர்கள் உறுதிபடுத்துகிறார்கள். ஆனாலும் ஊரும் மனிதர்களும் அக்குடும்பத்தை வெறுக்கின்றனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? திரைக்கதை இரு குடும்பங்களையும் கருத்தில்கொண்டு இருவேறு படிமங்களை எதிரெதிராக தீட்டி காட்சிபடுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் விபத்தில் பலியான சிறுமியால் கணவன் மனைவி தாம்பத்ய வாழ்க்கையே தள்ளாடுகிறது. ஏதோ இதுவரை அவர்கள் வாழ்க்கையே சிறுமிக்காக பிணைக்கப்பட்டிருந்ததுபோல. இன்னொரு பக்கம் நடந்த விபத்திற்குத் தாங்களும் பொறுப்பென குற்ற உணர்வுடன் குமுறும் குடும்பம். இது எத்தனை நாளைக்கு? எரிமலையென்றால் இன்றோ நாளையோ வெடித்தே ஆகவேண்டுமில்லையா? விபத்து ஏற்படுத்திய ரா•ல்ப் வீட்டின் சன்னல் கண்ணாடி கல்லெறியில் உடைபடுகிறது. அவனுக்கு வேலை கொடுத்த நிறுவனம் “உன்மீது குற்றமில்லையென நீதிமன்றம் ஏற்கட்டும்” அதன் பிறகு பணிக்கு வரலாம் என்கிறது. அவன் மனைவியை, “நீ பணிக்கு வந்தால் வடிக்கையாளர்கள் கடைக்கு வரமாட்டார்கள் எனக்கூறி” ரொட்டிக்கடை வேலை நீக்கம் செய்கிறது. ஆஸ்மா நோயில் அவதியுறும் அவர்கள் இளையமகனை பள்ளிப் பிள்ளைகள் பாடாய்ப் படுத்துகிறார்கள். கடலோரம் தனது காதலிக்காகக் காத்திருக்கும் அவர்களின் பெரியமகன் ஏமாற்றத்துடன் திரும்புகிறான். இறுக்கமான சூழலில், ரால்ப்ப்பும் – மனைவியும்; பெரிய மகனும் ரால்ப்பும் தினசரி வாழ்க்கையை யுத்தகளமாக மாற்றிகொள்கின்றனர். ஒரு நாள் வீட்டு சன்னல் கண்ணாடியை பழுதுபார்க்க முனையும் ரால்ப் மண்ணில் இறந்து கிடக்கிறான், தலையின் பின்புறம் அடிபட்டிருக்கிறது. புலன் விசாரணை செய்யும் காவலதிகாரி ஹன்ஸன் குடும்பத்தை முதலில் சந்தேகிக்கிறார்.பின்னர் அந்த சந்தேகம் ரா•ல்பின் குடும்பத்தின் மீதே விழுகிறது. படம் முழுக்க முழுக்க இருபெண்களின் உடல் மொழியை நம்பியிருக்கிறது. ரால்ப் மனைவியாக நடிக்கிற பெண்மணியும், விபத்தில் மகளைப் பறிகொடுத்த தாயாக வரும் பெண்மணியும் பிரம்மிக்கவைக்கிறார்கள். தண்டனைகள் வலிகளை அதிகரிக்க உதவுமேயன்றி குறைக்க உதவாது என்பதை வலியுடன் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தை ரசிக்க கண்கள் போதும், மொழி அவசியமல்ல:

http://www.arte.tv/guide/fr/047883-000/vengeance-sans-fin
—————————————————–

மொழிவது சுகம் ஆகஸ்டு 8 -2014

1. பிரான்சில் என்ன நடக்கிறது?

un-couple-sur-le-pont-des-arts-recouvert-de-cadenas-a-paris-le-30-aout-2013_4910607காதலுக்குப் பூட்டு: எல்லா நாடுகளிலும் ஏதோவோரு நம்பிக்கை இருக்கவே செய்கிறது. கன்னிப்பெண்கள் விளக்கேற்றுவதும், பிள்ளைவரம் கேட்டுத் தொட்டிற் கட்டுவதும், அதிர்ஷ்ட்டம் வேண்டி நீர் ஊற்றுகளில் நாணயம் எறிவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாரீஸ் நகருக்குள்ள பிரச்சினை காதல் நிறைவேற காதல்ஜோடிகள் பாரீஸ் நகரத்தின் சிலபாலங்களில் தடுப்புக் கம்பிகளில் போடப்படும் பூட்டுகள். தொடக்கத்தில் அழகாகத்தான் இருந்தது, வருடந்தோறும் பூட்டுகளை அகற்றும் செலவு அதிகரித்துவருவதால், இன்று தொல்லைதரும் பிரச்சினையாக முடிந்திருக்கிறது. குறிப்பாக le pont des Arts பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ள மொத்தப்பூட்டுகளின் எடை Le Parisien என்ற செய்தித்தாளின்படி 54 டன். பாரீஸ் நகரின் புதிய மேயர் புதியதொரு யோசனையை அரங்கேற்றியிருக்கிறார். “பூட்டுகள் இல்லாத காதலை” வரவேற்போம் என்ற ஸ்லோகத்துடன் கூடிய காதலர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துமாறு காதலர்களை கேட்டுகொள்ளப்போகிறா¡ராம். ஆயிரக்கனக்கில் ஸ்டிக்கர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

2. அருந்ததிராய் – யு.ஆர் அனந்தமூர்த்தி

காந்தியைபற்றி மிகப்பெரிய நூலை எழுதியுள்ள ரொமன் ரொலான் (Rimain Rolland ), காந்தியின்நண்பர். நோபெல் பரிசுபெற்ற பிரெஞ்சு எழுத்தாளர், இருபதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான இலக்கியவாதி. அருந்ததிராயைக் காட்டிலும் உலகளவில் நன்கறியப்பட்டவர். காந்தியின் மிகப்பெரிய சாதனை ஆப்ரிக்க கண்டத்திற்கு ஒரு மண்டேலா, அமெரிக்கக்கண்டத்திற்கு ஒரு மார்ட்டின் லூதர் கிங் என இரு மாமனிதர்களை தமது அனுதாபிகளாக உருவாக்கியது. உலக வரலாற்றில் வேறொருவருக்கு இப்படியொரு புகழில்லை. கேரளப் பல்கலைக்கழக கருத்தரங்கில் கலந்துகொண்ட அருந்ததிராய் “காந்திஜி எப்போதுமே சாதிய மனப்பாங்கினை தூண்டும் விதமாக பேசி வந்துள்ளார். அய்யங்காளி போன்ற புரட்சியாளர்களின் சேவைகளை ஒப்பிடுகையில் இது மிகவும் தெளிவாகிறது'” என்று பேசியதும் அதற்கு நாடெங்கும் பரவலாக கண்டனமும் எழுந்துள்ளது. காந்தியை அருந்ததிராய்தான் ஏதோ முதல் முறையாக விமரிசிப்பதுபோல கண்டனக்குரல்கள் எழுகின்றன. காந்தி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரல்ல. காந்தியைத் தொடுவதால் எழுத்தாளர் அருந்ததிராய்க்குக்கூடுதலாக விளம்பரம் கிடைக்கக்கூடும். எல்லா மனிதருக்கும் இயல்பாக வரக்கூடிய வியாதிதான். அருந்ததிராயைக் கண்டிப்பதன்மூலம் அருந்ததிராயின் எதிர்பார்ப்பை காந்தியின் பக்தர்கள் நிறைவேற்றிவைக்கிறார்கள். “ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” எனச் சொல்வதுண்டு. வியாபாரம் ஆவதைத்தான் சந்தைக்குக்கொண்டுவரமுடியும். புக்கர் பரிசு வாங்கிய அருந்ததிராய்க்கு இந்த அடிப்படை ஞானங்கூடவா இருக்காது. காந்தியைப் புகழ்வது இகழ்வதும் சம்பந்தப்பட்டவரின் ‘இருப்பை’ அடையாளப்படுத்தும் விஷயம். தற்போது “எழுதி சோர்ந்தவர்கள்” பலருக்கும் தங்களை இருப்பை நிலை நிறுத்திக்கொள்ளும் தந்திரமாக இதுபோன்ற சர்ச்சைகள் பெரிதும் உதவுகின்றன. காந்தி சலவை செய்யப்பட்ட மனிதரல்ல. அப்படி அவர் சொல்லிக்கொண்டவரும் அல்ல. ஆனால் அவர் ஓர் அசாதாரண மனிதர், அபூர்வ மனிதர்.

இந்த நேரத்தில் யு.ஆர் அனந்தமூர்த்தியும், அல்பெர் காம்யூவும் எனது நினைவுக்கு வந்தார்கள். பாரதிபுரம் நாவலைப் படித்தபோது அவருள் ஓர் ‘அல்பெர் காம்யூ” இருந்தார். பாரதிபுரகதைநாயகன் ஜகன்னாதனும் ஒரு கலகக் காரன்தான். காந்தியத்தின் தாக்கத்தில் பிறந்த கலகக்காரன். அருந்ததிராய் போன்றவர்களின் கலகக்குரலுக்கும் பாரதிபுர ஜெகன்னாதனின்(அனந்தமூர்த்தியின்) கலகக்குரலுக்கும் அடிப்படையில் வேற்றுமை இருப்பதை ஒர் அப்பிராணி வாசகன்கூட அறிவான்.

“கலகக் காரன் என்பவன் யார் ( உபயம் – அல்பெர் காம்யூ)?

“மறுப்பவன்”, “கூடாது” என்பவன்” “இனி முடியாது” என்பவன். அதாவது அவன் மறுப்பவனேயன்றி நிராகரிப்பவனல்ல என்பதை கவனத்திற்கொள்லவேண்டும். ஓர் அடிமை, தனது வாழ்நாள்முழுவதும் எஜமான், முதலாளி அல்லது அதிகாரி இடும் ஏவல்களுக்கு அடிபணிந்து பழக்கப்பட்டவன் – அது ஒரு கொள்கையாகக்கூட இருக்கலாம் -மரபாகக் கூட இருக்கலாம் – திடீரென்று ஒருநாள் முடியாது என்கிறான். இந்த ‘முடியாது’ என்ற சொல்லை எப்படி விளங்கிக்கொள்ளலாம். “ஐயா! ஏதோ என் தலையெழுத்து இதுவரை சகித்துக்கொண்டேன், இனி ‘முடியாது’ என்பதாகக் கருதலாம். இதுவரை நீங்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டினேன், வாஸ்த்துவம். இனி ‘முடியாது’ என்றும் பொருள் கொள்ளலாம். அல்லது “போதும் சாமி! அததற்கு ஓர் அளவிருக்கு, நீங்க அந்த அளவைத் தாண்டினா எப்படி? நானென்ன மாடா மனுஷனா? ‘முடியாது’ என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இக்கலககுரலில் வேறொரு உண்மையும் இருக்கிறது. மறுக்கிறவன் தனக்காக மறுப்பதில்லை, தன்னிலையில் இருக்கும் பெருவாரியான அடிமைகளின் நிலமையிலிருந்து அக்குரல் எழுகிறது. ஒற்றைக்குரல் அல்ல ஒட்டுமொத்த அடிமைகளின் குரல். தன்னலம் சாராத கலகக்குரலாக அந்த மறுப்பு அமையவேண்டும். உலகில் எல்லா புரட்சிக்கும் இதுதான் அடிப்படை. அது ர்ஷ்யப் புரட்சியாக இருக்கட்டும், பிரெஞ்சு புரட்சியாக இருக்கட்டும் அல்லது வேறு புரட்சியாகக்கூட இருக்கலாம். காந்தி ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய சுதந்திரப் போராட்டமும் அத்தகையதுதான். இக்கலகக்குரல் பிறமைக்கு எதிராக தனிமனிதனுக்குள்ளும் ஒலிக்கும். பாரதிபுர நாவலின் ஆரம்பவரியே ஜகன்னாதன் உள்ளிருக்கும் கலககாரனை அடையாளப்படுத்துகிறது; ” தனியாக நடக்கும் ஜகன்னாதன் குழிகளைச் சுற்றிக்கொண்டு போவதில்லை, பறப்பதுபோலத்தான் தாண்டுவான்”.

பாரதிபுர ஜகன்னாதன் மஞ்சு நாதர் மீது கட்டமைக்கபட்ட ஒரு சமூகத்தின் பழமை நியாயங்களைத் தகர்க்க நினைக்கிறான். அவன் தனது முன்னாள் இங்கிலாந்து காதலிக்கு எழுதும் கடிதத்தைப் பாருங்கள்: « Life has ceased to be creative here – மஞ்சு நாத சுவாமி இந்த உலகவாழ்க்கையின் புற்று நோய். இந்த கடைவீதி அவனுக்காக வளர்ந்த கேன்ஸர் »
அனந்தமூர்த்தியின் ஜகன்னாதன் உடை உள்ளம் இரண்டிலும் கோவணாண்டிகளாக வாழும் புலையர்களுக்கு கோவில் பிரவேசத்தினூடாக விமோசனத்தை ஈட்டுத் தரலாம் என நினைக்கிறான். பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த மனிதர்கள் ஒரு நாள் ஆலயப் பிரவேசத்தினால் உயர்ந்திடமாட்டார்கள். ஆனாலும் அடிமைப்பட்டுக்கிடந்த மக்களுக்கு ஜகன்னாதனைக்கொண்டு அனந்தமூர்த்தி நடத்துவதும் புரட்சிதான். இக்காந்திய புரட்சி உலகில் நடந்த ஏனைய புரட்சிகளுக்கு எந்தவிதத்திகும் குறைந்ததல்ல. காந்தியப்பிரட்சியில் குறையுண்டு என்றால். உலகில் ஏனைய புரட்சிகளும் தோல்வியில் முடிந்ததாகத்தான் இன்றையை வரலாறுகள் தெரிவிக்கின்றன. அனந்த மூர்த்தியைகுறித்து நேரமிருக்கும்போது தனியே எழுதவேண்டும். இந்திய எழுத்தாளர்களில் யு.ஆர் அனந்தமூர்த்தி முக்கியமானவர். மாண்டெலா, மார்ட்டின் லூதர்கிங் போல பாரதிபுர ஜெகன்னாதனும் காந்தியின் வாரிசுதான். அருந்ததிராய் போன்றவர்களின் விமர்சனங்கள் காந்தியையோ காந்தியத்தையோ ஒரு போதும் பாதிக்காது.

பாரதிபுர நூலுக்கு மதிப்புரை எழுதிய டி.ஆர்.நாகராஜ் சொல்கிறார்:

” ஒரு கருத்தை மறுப்பதற்குச் செய்கின்ற நடவடிக்கை, அதை மேலும் உறுதிபடுத்துவது வேடிக்கைதான்”.

எனவே காந்தியத்தின் அனுதாபிகள் கலகக்குரல் எழுப்பவேண்டியது அருந்ததிராய்க்கு எதிராக அல்ல, காந்தியத்திற்கு ஆதரவாக.

நன்றி: திண்ணை ஆகஸ்டு 8 2014

——

இலங்கு நூல் செயல் வலர்: க.பஞ்சாங்கம்-6:: கதைமாந்தர்கள்-1

  panchu பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் எடுத்துரைப்பியல் கட்டுரைகளில் “கதையும் கதைமாந்தர்களும் – கதை மாந்தர்கள் உருவாக்கமும்” ஆகியவற்றைப்பற்றி இப்பகுதியில் காண்போம். இத்தொடரை எழுத பேராசிரியர் எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகள் இப்பகுதியிலும் பிரதிபலிக்கின்றன. பிற துறைகளைப்போலவே மொழித்துறையிலும் இலக்கியத்திலும் மேற்கத்தியர்கள் ஓடிக்கொண்டிருக்க நாம் நொண்டிக்கொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருக்கிறவர்கள் இடறி விழமாட்டார்கள் என்பதென்ன நிச்சயம்? கதைமாந்தர்களைப் பற்றிய பார்வைகளில் குறையிருக்கலாம். ஆனாலும் நொண்டுபவனைக்காட்டிலும் ஓடுபவன் கூடுதல் தூரத்தில் இருக்கிறான். எல்லையைத் தொட்டு மீண்டும் ஓடுகிறான். அதன் தொடர்ச்சிதான் எடுத்துரைப்பு குறித்த ஆய்வு முடிவுகள், எதிர்வினைகள். நவீன கதையாடல்கள் – (குறிப்பாக மேற்கத்திய நாடுகளில்) அவர்களின் கருத்தியங்களுக்கு வலு சேர்க்கின்ற வகையில் இன்றிருப்பதும் அதற்குக் காரணம்.

1. கதையும் கதைமாந்தர்களும்

எப்பொழுது கதையென்று ஒன்றை சொல்லநினைத்தோமோ அப்பொழுதே கதை மாந்தர்கள் இடம்பெற்றுவிட்டார்கள். ஒரு சும்பவத்தை விவரிப்பதற்கு ஒரு மையப்பொருள் தேவையாகிறது அப்பொருள்சார்ந்த நடவடிக்கைககள் தேவையாகின்றன. கதை மாந்தர்கள் நடவடிக்கைகளே கதையை ஆரம்பிக்கவும், முன்னெடுத்து செல்லவும், முடித்துவைக்கவும் உதவுகின்றன. அந் நடவடிக்கைகளைக்கொண்டு கதைமாந்தர்களைப் பற்றிய சித்திரம் நமக்குக் கிடைக்கிறது. அவர்கள் நல்லவர் அல்லது கெட்டவர் என கடந்த காலத்தில் (தொன்ம இலக்கியங்களில்) உறுதிபடவும், தற்போதைக்கு (நவீன இலக்கியத்தில்) இவை இரண்டுமான தெளிவற்றதாகவும் அப்புரிதல் இருக்கிறது. க.பஞ்சாங்கத்தின் கதைமாந்தர்களைப்பற்றிய கட்டுரையின் சாரத்தை விளங்கிக்கொள்வதற்கு முன்பாக கதை மாந்தர்கள் ஏன்? நேற்றைய கதை மாந்தர்கள் யார்? பனுவலில் அவர்களுக்கான இடமென்ன? இன்றைய கதை மாந்தர்கள் யார்? பனுவலில் அவர்கள் இன்னமும் முக்கியம் பெறுகின்றனரா? என்பதைக்குறித்த குறைந்த பட்ச புரிதல் நமக்கு கட்டாயமாகிறது.

ஒரு பெருங்கதையோ, சிறுகதையோ; பண்டைய காவியமோ அல்லது நவீன இலக்கியமோ எதுவாயினும் ‘கதை மாந்தர்கள்’ எனப்படுவோர் மனித உயிர்கள். அல்லது விலங்காக, பொருளாக இருப்பினும் கதையின் நகர்வுக்கு முக்கியப்பங்கினை அளிப்பவர்கள். வாசகர்கள் அவர்களை அடையாளப்படுத்த முடியும். புதினத்தை வாசிக்கிறபோது திரும்பத் திரும்ப இடம்பெறுகிற பெயர்கள், வாசித்து முடித்த பின்பு அக்கதையோடு சொடர்புபடுத்திச் சொல்ல முடிகிற பெயர்களைக் ‘கதை மாந்தர்கள்’ எனக் கூறலாம். அவர்களை அடையாளப்படுத்த பெயர், வயது, பாலினம், சமூகப் பின்புலம், அவ்ர்களின் கட,ந்த காலம், தற்போதைய நிலை போன்ற தகவல்கள் கதையிலிருந்து கிடக்கின்றன. இத்தகவல்கள் அம்மனிதர்களின் புற அக கட்டமைப்பை வடிவமைக்கின்றன. அடுத்து நீங்கள் நாவலை சிறிது கவனமெடுத்து வாசிப்பவரெனில் இத்தகவல்களை படைப்பாளிகள் இருவகையில் தருகின்றார்கள் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்:

நேர்முகச் சித்திரம்: இங்கே படைப்பாளி கதை மாந்தரின் உடற் தோற்றம் மற்றும் உளம் சார்ந்த கூறுகளுக்கு முடிந்தவரை ஓர் முழுமையான வடிவத்தை அளிக்கிறார். இத்தகவல்களை அவர் ஒரு கதைசொல்லியைக்கொண்டோ அல்லது அதே கதைமாந்தரைக்கொண்டோ அல்லது வேறொரு கதைமாந்தர் மூலமாகவோ தெரிவிப்பது வழக்கம்.

மறைமுகச் சித்திரம்: இங்கே சம்பந்தப்பட்ட கதைமாந்தரின் பேச்சுகள், செயல்பாடுகள், அவரது வாழ்க்கையின் ஒரு கண நேர காட்சிகள் கதை மாந்தர் யார் என்பதை கோடிட்டுக் காட்டும். இங்கு வாசகன் ஆற்றலை படைப்பாளி வேண்டுகிறார். முதற் சித்திரத்தைப்போலன்றி இங்கே படைப்பாளியின் எண்ணத்திற்கு மாறான ஒரு கற்பனை வடிவத்தை வாசகர் கட்டமைக்க இது பெரிதும் உதவுகிறது.

பொதுவாக கதை மாந்தர்கள் இருவகைப்படுபர். முக்கிய பாத்திரங்கள் துணை பாத்திரங்களென அவர்களின்பங்களிப்பினை வைத்து அடையாளப்படுத்தமுடியும். அடுத்ததாக செயல்களின் அடிப்படையில் கதைமாந்தர்கள் மதிப்பிடப்படுவதால் பிரெஞ்சில் ‘actant ‘ என்ற சொல் முக்கியத்துவம் பெறுகிறது, ஆங்கிலத்தில் ‘agent’ என்ற பொருளில். அதாவது ‘செயலர்’ என்று தமிழில் பொருள் கொள்ளலாம். ஆனால் இந்த செயல்கள் கொண்டு தொன்ம இலக்கியங்களில் நடைபெற்றதுபோல கதைமாந்தர்களை இன்றும் தீர்மானிக்க முடியுமா என்று கேள்வி. இன்று பிரெஞ்சில் மரபான முறையில் சொல்லப்பட்ட ஒற்றைகுணங்கொண்ட (personnage monolithique அல்லது manichéen) கதைமாந்தர் இல்லை. இன்றைய கதைநாயகன் எதிர் நாயகப் பண்பையும் கொண்டவன். திட்டவட்டமாக அவனை நல்லவன் அல்லது கெட்டவன் எனத் தீர்மானிக்கமுடியாது.

“தற்கால அழகியல் கோட்பாட்டில் கதையில் வரும் நிகழ்ச்சிகளைப்பற்றியும், அந்நிகழ்ச்சிகளுக்கு இடையேயுள்ள தொடர்புகளைப்பற்றியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால் அந்த அளவிற்கு கதைமாந்தர்களைப்பற்றிய ஆராய்ச்சி இல்லை. எனவே தற்கால அழகியல் கோட்பாட்டில் கதை மாந்தர்களைப்பற்றிய கோட்பாட்டை உருவாக்குவது என்பது இன்னும் சவாலாகவே தொடர்கிறது. எனவே இந்த இயலில் இது ஏன் அவ்வாறு நிகழ்கிறது? என்பதையும் ஓரளவு சுட்டிக்காட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.” (ந.இ.கோ. பக்கம் 164) என்கிறார் பேராசிரியர்.

கட்டுரையின் தொடக்கத்திலேயே கதைமாந்தர்கள் எங்கனம் நமது சமூகத்தில் சாகாவரம் பெற்றிருக்கின்றனர் என்பதை இரண்டு உதராணங்கள் மூலம் காட்டுகிறார். முதலாவது, ஒரு திரைப்பட உரையாடல்:

“பத்தினிபெண்ணுக்கு உதாரணமாக ரெண்டுபேரக்கூறு”

கண்ணகி நளாயினி,

“ஏன் ஒங்க அம்மாவும் ஒம் பொண்டாட்டியும் பத்தினியில்லியா”

அடுத்து வரும் உதாரணத்தில் இடைக்கால புலவன் ஒருவன், படைப்புக் கடவுளாகக் கருதப்படும் பிரம்மாவிற்கே சவால் விடுகிறான், “பிரம்மா! நீ படைத்துவிடும் உயிர்கள் பட்டுவிடும் ; அழிந்துவிடும் ; ஆனால் நாங்கள் உருவாக்கிவிட்ட கதை மாந்தர்கள் என்றும் அழிவதில்லை; உனக்குத் தெரியுமா” என்று அப்புலவன் கேட்பதாகச் சொல்கிறார். இதனைத் தொடர்ந்து, “இந்த அளவிற்கு மொழியாலான இலக்கியமெனும் புனைவுலகில் கதை மாந்தர்கள் உருவாகி மானுட வாழ்வின் ஊடே சாகாமல் வாழ்ந்துகொண்டிருப்பது மட்டுமல்லாமல் அவர்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார்கள்; அத்தகைய கதைமாந்தர்களை நவீனத் திறனாய்வு கேள்விக்கு உட்படுத்துகிறது.” என்று முடிக்கிறார்.

கட்டுரை ஆசிரியரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மனநிலையில் நவீனத் திறனாய்வாளர்களின் கேள்விகள் சங்கடப்படுத்தவே செய்யும். நவீன இலக்கியங்களின் அடிப்படையில், மொழியியல் வல்லுனர்களின் கதைமாந்தர்களைப்பற்றிய கருத்தாக்கங்களைப் பகிர்ந்துகொள்கிற க.பஞ்சாங்கம், அவரும் ஒரு திறனாய்வாளர் என்றவகையில் சில நியாயமான கேள்விகளையும் எழுப்புகிறார். மேற்கத்திய ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அதன் அடிப்படையில் பேராசிரியர் எழுப்பும் கேள்விகளென்ன என்று பார்ப்போம்.

கதை மாந்தரின் மரணம்:

ரொலான் பர்த், டி.எச். லாரன்ஸ், வெர்ஜினா வுல்·ப், ஹெலென் சிக்சு மற்றும் கல்லர் ஆகியோரின் கருத்துக்களை க.பஞ்சாங்கம் எடுத்தாண்டிருக்கிறார்.

“தற்கால நாவல்களில் சிறிது சிறிதாக மறைகின்றது என்னவென்றால் , நாவலுக்கேயுரியனவாக உருவான புதிய புதிய கூறுகள் அல்ல; மாறாக அதன் கதை மாந்தர்கள் தாம்; கதை மாந்தர்களின் பெயர்கள் தாம்” – பர்த் (ந.இ.கோ. பக்கம் 164).

“தான் என்பது எப்பொழுதும் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கிறது; பன்முகப்பட்டதாகப் பிரிந்து போகும் படியாக இருக்கிறது; ஒரு கட்டத்தில் சமூகத்தில் இருக்கும் எல்லாமுமாகவும் வாழ்கிற திறமை மிக்கதாகவும் இருக்கிறது; ஒரு குழுவாக இயங்குகின்ற தன்மையுடையதாகவும் இருக்கிறது” – ஹெலென் சிக்சு.

” தனி மனிதனைப் புறந்தள்ளி மீறுகின்ற புதிய மரபிற்கு அழுத்தம் கொடுக்கும்போது புதிதாக ஒரு தளம் உருவாகின்றது . இந்தத் தளத்தில் தனிமனிதனின் சாரத்தைவிட நிகழ்ச்சிகளும் அதன் ஆற்றல்களும் ஒன்றிணைகின்றன. இந்த ஒன்றிணைவு, நாவலில் வெற்றிகரமான உயிருள்ள கதைமாந்தர்களென்றும், இக்கதை மாந்தர்கள் முழுமையாகத் தனித்து இயங்குபவர்கள் என்றும், கதைமாந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் மரபார்ந்த நடைமுறைகோட்பாடுகளை எல்லாம் மறுத்து விடுகிறது. இந்நிலையில் அமைப்பியல் வாதிகளின் பார்வையில் கதைமாந்தர்கள் பற்றிய கோட்பாடு என்பது வெறுமனே ஒரு புராணம்தான் எனக் கருதப்படுகிறது. -கல்லர் (Culler)

கதைமாந்தர் இறப்புகுறித்து க.பஞ்சாங்கம் எழுப்பும் கேள்வி:

“மேலே கூறியபடி கதை மாந்தர் என்பவர் இறந்துவிட்டாரா? இந்தப்புதிய அணுகுமுறை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக இல்லாமலாக்கிவிட்டதா? அல்லது கதைமாந்தர்கள் பற்றிய மரபார்ந்த சில கோட்பாடுகளைமட்டும் கவசம் அகற்றுவதுமாதிரி அகற்றிக் காட்டுகிறதா? இந்தப் புதியகோட்பாடுகளை முன்வைத்து ஏற்கனவே ஏற்றுக்கொள்ளபட்ட சிலகதைமாந்தர்களை விட்டுவிடவேண்டியதுதானா ? சான்றாக இளங்கோ அடிகளின் கண்ணகி என்ற கதைமாந்தர் வெறுமனே சில வார்த்தை வெளிப்பாடுதானா? ….. தற்கால புனைகதைகளில் கதைமாந்தர் இறந்துவிட்டார் என்பதை ஒத்துக்கொண்டாலும், பின்னோக்கி நகர்ந்து பார்க்கும்போது சென்ற நூற்றாண்டு இலக்கியங்களில் வந்துபோகும் கதை மாந்தர்களை என்ன செய்வது? கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை…குசேலர், கண்ணன் முதலிய கதை மாந்தர்களை கொன்று விடமுடியுமா? ”

திறனாய்வாளரான நண்பருக்குள்ள கேள்விகள் நமக்கும் எழக்கூடியதுதான். முதலில் திறனாய்வாளர்கள் கண்டறிகிற உண்மைகளை அல்லது அவர்களின் ஆய்வு முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொண்டதாக வரலாறு இருக்கிறதா? ரொலான் பர்த் பிறந்த நாட்டிலேகூட இன்னமும் நேற்றைய கதைமாந்தர்கள் பலர் உயிர்ப்புடன்தான் உலவுகிறார்கள். பத்தாண்டுகள் கழிந்த பிறகுங்கூட தமிழகத்தைச் சேர்ந்த ஆண்களை அழைத்து “பத்தினிப் பெண்ணுக்கு உதாரணமாக இரண்டுபேரக்கூறு!” எனக்கேட்டால் “கண்ணகி நளாயினி” என்றுதான் பதில் வரும். திறனாய்வாளர்களின் முடிவின் காரணமாக இப்பெயர்கள் தங்கள் செல்வாக்கை இழந்துவிடாது. ஆனால் அதே வேளை இன்றைய படைப்பாளிக்கு ஒரு “கண்ணகியையோ நளாயினியையோ” அல்லது பேராசிரியர் சொல்வதைப்போல இராமன் சீதை வரிசையில் கதைமாந்தர்களை உருவாக்கவும் இயலாது. கடந்த காலத்தில் சமயங்களின் பின் புலத்தில் எழுதப்பட்டவை அநேகம். எனவே கதைமாந்தர்கள் அவதாரப் புருஷர்கள் அல்லது அசாதரணமனிதர்கள். அவர்கள் தெய்வப்பிறவிகள் அல்லது அபூர்வ மனிதர்கள். நம்மில் ஒருவரல்ல என்ற எண்ணம் சமூகத்திற்கு இருந்தது. அவர்கள் ராமனாக இருப்பார்கள் இல்லையெனில் இராவணனாக இருப்பார்கள். சீதையாக இருப்பார்கள் அல்லது சூர்ப்பனகையாக இருப்பார்கள்.கோவலன் கண்ணகியைப் பிரிகிற தவறு நிகழ்ந்தாலும் அது கோவலன் குற்றமன்று முன்வினைப்பயன். இன்றைய படைப்பாளிகள் அப்படி எழுதமுடியாது. அசாதரண மனிதர்கள் இன்றில்லை. படைத்தாலும் நம்பத் தயாரில்லை. இன்று எவனையும் தருமன் அரிச்சந்திரன் என்று சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. ஹெலென் சிக்சு கூறுவதைப்போல இன்று ‘தான் என்பது ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கிறது; ஒரு கட்டத்தில் எல்லாமுமாககவும் வாழ்கிறத் திறமை மிக்கதாகவும் இருக்கிறது. ஆக நவீன இலக்கிய திறனாய்வாளர்களின் ககருத்தாக்கத்தில் உண்மை இல்லாமலில்லை.

கதை மாந்தர்களின் இருப்புமுறை : இரண்டு சிக்கல் – உயிருள்ள மக்களா அல்லது வார்த்தைகளா?

இப்பகுதியில் மேற்கண்ட கேள்விக்கு எதார்த்தவாதிகள் குறியீட்டாளர்கள் இரு தரப்பினர் கருத்துக்களையும் முன்னிறுத்தி கட்டுரை ஆசிரியர் தமது கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

“……கதைபாத்திரத்தின் இருப்பை வலியுறுத்தும் எதார்த்தவாதிகள் தங்கள் விவாதத்தை இப்படி முன்வைக்கின்றனர்; அதாவது கதையின் செயல்பாட்டின் போக்கில் கதைப் பாத்திரங்கள் உருவாகி விடுகின்றன என வலியுறுத்துகின்றனர். நிகழ்ச்சிகளிலிருந்து கதைபாத்திரம் ஒரு விதமான சுதந்திரமான நிலைபாட்டினை மேற்கொள்கின்றது. எனவே சூழலிலிருந்து கொஞ்சம் விலகி நின்று கதை பாத்திரங்களைப் பற்றி விவாதிக்க இடம் இருக்கிறது”. -மார்வின் முட்ரிக்

“குறியியல் திறனாய்வாளர் பார்வையில், கதைபாத்திரங்கள் தங்களுக்கான முக்கியத்துவத்தையும் தாங்களே மையமென்ற தகுதியையும், தங்களைப்பற்றிய மரபார்ந்த வரைமுறைகளையும் இழந்து விடுகின்றன. இவ்வாறு இழந்துவிடுவது என்பது கதைமாந்தர்களைச் சடப் பொருளாக உருமாற்றம் செய்துவிடுகிறது என்பதல்ல பொருள்; ………உண்மையில் கதைமாந்தர்கள் பனுவலாக்கப்படுகிறார்கள் என்பதுதான். ஒரு முடிவற்ற பனுவலின் இடைப்பட்ட ஒரு பகுதியாக இருக்கும் கதைபாத்திரங்கள் பெரும்பாலும் திரும்பத் திரும்ப வரும் அமைப்புகளாகவும் தொடர்ந்து மற்ற தலமை கருத்துகளோடு இணைந்து பனுவலுக்கான சூழ்நிலைகளை மறுருவாக்கம் செய்துகொள்ளும் திறம் வாய்ந்ததாகவும் விளங்குகின்றன. இவ்வாறு குறியியல் திறனாய்வாளரின் பார்வையில், கதை மாந்தர்கள் பனுவலுக்குள் கரைந்துவிடுகிறார்கள்.” -வீன்ஸீமர்

மேற்கண்ட இருதரப்பு கருத்துகள் குறித்து கட்டுரை ஆசிரியர் என்ன சொல்கிறார்:

“போலசெய்தல் கொள்கையில்(இப்போலச் செய்தல் கொள்கை, இலக்கியம் என்பது ஏதாவது ஒரு கோணத்தில் எதார்த்தத்தைப்போலச் செய்வது எனக் கருதுகிறது) கதைமாந்தர்கள் உயிருள்ள மக்களுக்கு இணையாக வைக்கப்படுகின்றனர். ஆனால் குறியியல் கொள்கையில் கதை மாந்தர்கள் பனுவல் உருவாக்கத்திற்குள் கரைந்து விடுகின்றனர். இவ்வாறு இரண்டு அணுகுமுறைகளும் இரண்டு வேறுபட்ட கோணங்களிலிருந்து அணுகினாலும் சிறப்பாக புனைகதைகளுக்கேயுரிய கதைமாந்தர்களின் தனித் தன்மையினை ஒழித்துக்கட்டிவிடுகின்றன. இந்நிலையில் கதைமாந்தர்கள் பற்றிய ஆய்வினைக் கைவிட்டுவிட வேண்டியதுதானா? கைவிடமுடியாது என்றால் இரண்டு அணுகுமுறைகளையும் தள்ளிவிடவேண்டியதுதானா? அல்லது வேறொரு புதிய அணுகுமுறையைத் தேடிச் செல்வதா? அந்தப் புதிய அணுகுமுறை எதிரெதிராக இருக்கும் இந்த இரண்டு அணுகுமுறைகளுக்கு நடுவே இருந்து தோன்றிக் கதைமாந்தர்களுக்குரிய இடத்தை அங்கீகரிக்குமா? இவ்வாறு ஒரே நேரத்தில் கதை மாந்தர்களை உயிருள்ள மனிதர்களாகவும்(முதல் அணுகுமுறை), அமைப்பின் ஒரு கூறாகவும்(இரண்டாவது அணுகுமுறை) காண்பது சாத்தியம் தானா?” எனக்கேட்டு சாத்தியம்தான் என்கிற ஆசிரியர் (க.பஞ்சாங்கம்). அப்பதிலை சாட்மன் என்பவர் கூற்றோடு உறுதிபடுத்துகிறார்.

இரண்டு தரப்பு வாதமும் சரியானவை அல்லது தவறானவை. எழுத்தென்பதே கற்பனை என்பதைக் கடந்து படைப்பாளியின் சுயசரிதையாக, சொந்த வாழ்க்கையாக அல்லது அவனது வாழ்க்கை அனுபவமாக உள்ள இன்றைய படைப்புலக கதைமாந்தர்களை மையப்பொருளாகக் கருதும் சூழலே நிலவுகிறது. ஆனால் புனைவு என்ற சொல் காரணமாக அது குறியீடுகளால் நிரப்பப்படுகிறதென்பதும் உண்மை, எனவே பனுவலின் ஒரு பகுதியாக கரைந்துவிடும் அபாயமும் உள்ளது. பொதுவில் ஒன்றிரண்டு திறனாய்வாளர்கள் தங்கள் நுண்ணறிவினால் முன்வைக்கிற கருத்துகள் வாசகர்ப் பெருங்கடலில் கரைத்த பெருங்காயம். கதை மாந்தர்களில் தன்னை இனம் காணும் சராசரி வாசகர் மனப்பாங்கினை (இது குறித்தும் விமர்சனங்களுண்டு) அத்தனை எளிதாக ஒதுக்கிவிடமுடியாது.

இருத்தல் அம்ல்லது செய்தல்:-

இக்கட்டுரையின் தொடக்கத்தில் கதைமாந்தர்களை செயலர்கள் என வர்ணிக்கப்படுகிறார்கள் எனக் கூறியிருந்தேன். அவர்களை அவ்வாறு செயலுக்குள் அடக்குவது சரிதானா? என்ற மற்றொரு கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது. பிராப் என்பவரின் கருத்துப்படி கதைமாந்தர்களை ஏழு செயல்களின் கீழ் அடக்கமுடியுமென்றும், மாறாக கிரோமாஸ் என்பவரின் கூற்றுப்படி செயல் எண்ணிக்கையில் அடங்காததென்றும், செயலர் ஆறுவகைப்படுவர் எனவும் அறிகிறோம். சில அமைப்பியல்வாதிகள் செயல்பாட்டிற்கும் கதைமாந்தர்களுக்கும் இடையிலான படிநிலையைத் தலைகீழாக மாற்றுவதற்கான வாய்ப்புகளைபற்றியும் சிந்தித்துள்ளனர் என்கிற தகவலும் கிடைக்கிறது. இங்கே ·பெரெரே என்பவரின் கூற்று முக்கியமானது:

“புனைகதையில் கதைமாந்தர்கள் அமைப்பியல் கூறுகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். புனைகதையில் பேசப்படும் பொருளும், நிகழ்ச்சிகளும் ஒரு முறையிலோ அல்லது பல்வேறு முறையிலோ எடுத்துரைப்பில் நிலைகொண்டிருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் கதைமாந்தர்களே. உண்மையில் கதைமாந்தர்களோடு மேற்கண்டவைகள் உறவுகொள்ளும்போதுதான் எடுத்துரைப்பினை அர்த்தமுள்ளதாகவும், புரிந்து கொள்ளத்தக்கதாகவும் ஆக்குகிற ஒத்திசைவுப் பண்பும், நம்பகத்தன்மையும் பனுவலுக்கு ஏற்படுகிறது”- ( ந.இ.கோ. பக்கம் 173)

நிகழ்ச்சியா கதைமாந்தரா? இவ்விவாதமும் நெடுநாளாக எழுப்பப்ட்டுவருகிற ஒன்று. கட்டுரை ஆசிரியர் சிறப்பனதொரு பதிலை அளித்திருக்கிறார்.

” எடுத்துரைப்பில் இந்த இரண்டில் ஒன்றை முழுமையாக முதன்மைபடுத்திபேசுவதைவிட எடுத்துரைப்பின் பல்வேறுவகைகளுக்கு ஏற்ப இவைகளில் ஏதோ ஒன்று ஒப்பீட்டளவில் ஒரு எடுத்துரைப்பில் முதன்மை இடத்திலும், மற்றொரு எடுத்துரைப்பில் இரண்டாவது இடத்திலும் மாறிமாறி இயக்கம் கொள்ளுகின்றன எனக் கருதுவது பொருத்தமாகப் படுகிறது. ”

கதைமாந்தர்கள் உயிருள்ள மக்களா? அல்லது வெறும் சொற்களா? என்று தீர்மானிக்கிற பொறுப்பை வாசகர்களிடம் ஒப்படைக்கலாம் என இதற்குமுன்பாகத் தெரிவித்ததைப்போல செயல்பாடா கதைமாந்தரா யாரை மையப்படுத்துவது, அல்லது யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற கேள்விக்கு கட்டுரை ஆசிரியர் ” வாசகர்களின் பார்வையில் இந்த விவாதத்தை அணுகும்போது நடுநிலையான ஒரு அணுகுமுறையே பொருத்தமெனப்படுகிறது” (ந.இ.கோ. பக்கம் 175) என்கிறார்.

பனுவலுக்குள் இருந்து எவ்வாறு கதைமாந்தர்கள் மறுவுருவாக்கம் செய்யப்படுகிறார்கள்

“வாசித்தல் என்பது பெயர் சூட்டுவதற்கான ஒரு போராட்டமே. பனுவலிடைய எழுவாயைக் குறியீட்டுப்பொருளாக உருமாற்றம் செய்வதற்கான ஒரு போராட்டமே. இந்த உருமாற்ற செயல்பாடு ஒழுங்கற்றது; பல தவறுடையது; வேறுபட்ட பல பெயர்களுக்கு நடுவே எந்தப் பெயரைக்கொள்வது என்று பல தடுமாற்றம் உடையது” -என்ற சாட்மனின் கூற்றோடு இப்பகுதி தொடங்குகிறது.

இக்கூற்றும் இதைத் தொடர்ந்து வைக்கப்படும் விவாதமும் நவீன இலக்கியத்திற்குங்கூட ஓரள்விற்குத்தான் பொருந்தும். இத்தலைப்பின் தொடக்கத்தில் இன்றைய கதைமாந்தர் தனிப்பண்பு அல்லது ஒற்றைகுணம் கொண்டவரல்ல என்பதைக் கண்டோம். அவ்வாறே கூற்றில் இடம்பெறும் ‘வாசித்தல்’ என்ற சொல் வாசிக்கிற காரியத்தில் ஈடுபடும் எவருக்கும் பொருந்தும். படைப்பாளியும் ஒருவகையில் தனது படைப்பை தனக்குத்தானே வாசித்தலாகவும் பொருள்கொள்ளலாம். ஒரு படைப்பாளி படைப்பில் கதைமாந்தருக்குப் பெயர்சூட்டுவது வாசகனுக்கு உதவ அதாவது வாசிப்பு சௌகரியத்தை ஏற்படுத்தித்தர. “கதைமாந்தர்களுக்குப் பெயரிடுதல் என்பதானது ஆளுமையின் தனிக்குணத்திற்குப் பெயர் சூட்டுதலாகும்” என்கிற சாட்மனுக்கு, தனிக்குணங்களே எடுத்துரைப்பு அடைகள் (adjectives) எனத் தெரியவருகிரது. அதற்கு உதாரணமாக நமது காப்பியங்கள், இதிகாசங்களிலிருந்து ‘கண்ணகி கற்புக்கரசி’; ‘கர்ணன் கொடைவள்ளல்’; ‘கூனி சூழ்ச்சிக்காரி’ போன்ற தனிமாந்தர்கள் உருவானதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். இவையெல்லாமே தொன்ம கதைசொல்லலில் வருவன. நவீன இலக்கியங்களில் தனிப்பண்புடைய கதைமாந்தர் இல்லையென்பது அறியத்தக்கது. “கதைமாந்தர் என்பது பனுவலின் ஒரு கூறு என்ற நிலையிலிருந்து கருத்தியல் சார்ந்த ஒரு தனிக்குணமென எப்பொழுதும் நடப்பதில்லை” என்ற கட்டுரை ஆசியரின் கூற்று இங்கே கவனிக்கத்தக்கது.

பார்ஸ்டர் கதை மாந்தர் விளக்கம்

அடுத்ததாக பார்ஸ்டர் மற்று ஈவன் ஆகியோரின் கதைமாந்தர்பற்றிய விளக்கங்கள் இடம்பெறுகின்றன.இவற்றைப்பற்றி பெரிதாகச்சொல்ல ஒன்றுமில்லை என்பதால் நண்பர்களுக்குத் தகவல்களாக அவற்றைத் தந்திருக்கிறேன்.

கதைமாந்தர்கள் ஒருகதையில் திரும்பத் திரும்ப வருகிறவர்கள் அல்லது அடிக்கடி பனுவலில் குறுக்கிடும் பெயர்கள். பனுவலில் இடம்பெறும் பல்வேறுபட்ட கதைமாந்தர்களை பார்ஸ்டர் இருவகையாக பிரித்திருப்பதையும் அதற்கான காரணத்தையும் கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார், அவை 1. வளரும் கதைமாந்தர் 2. வளராக் கதைமாந்தர்.

1.வளராக் கதைமாந்தர்கள்: கேலி, கிண்டல் நையாண்டிகுணத்துக்குச் சொந்தக்காரர்கள் இம்மாந்தரின் தூய்மையான வடிவம் ஒரு தனிப்பட்ட கருத்து அல்லது பண்பை படைக்கிறபோது வெளிப்படுமாம். தவிர இக்கதைமாந்தரை ஒரேயொரு வாக்கியத்தில் விளக்கிடமுடியுமாம். கதையின் போக்கில் வளர்ச்சி அடையா கதைமாந்தர்கள் இவர்கள் என்கிறார் ஆசிரியர். இகதைமாந்தர்களின் செயல்பரப்பு குறுகிய எல்லையைக் கொண்டிருப்பதும், வளர்ச்சியின்மையும், அவர்களை நம்மால் எளிதாக நினைவில் நிறுத்த முடியும் என்கிறார்கள்.

வளரும் கதை மாந்தர்கள்: மேற்கண்ட பண்பிற்கு எதிரானவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பண்புகளைக் கொண்டிருப்பவர்கள். கதைப்போக்கில் வளர்ச்சி அடைபவர்களாகவும் விளங்குவார்கள்.

பார்ஸ்டருடைய கதைமாந்தரில் உள்ள குறைகளையும் ஆசிரியர் சுட்டத் தவறவில்லை:

முதலதாக பார்ஸ்டர் பயன்படுத்தும் வளரா என்ற சொல் கதைமாந்தர்களிடம் ஆழமுமில்லை, உயிரோட்டமுமில்லை எனக் கருத்தை வைக்கிறது ஆனால் பார்ஸ்டரின் கூற்றுக்கு மாறாக டிக்கன்ஸனுடைய பல நாவல்களில் வளரா கதைமாந்தர்கள் பெரிதும் உயிரோட்டம் உடையவர்களாகவும் ஆழம்மிக்கவர்களாகவும் விளங்கிறார்கள் என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

இரண்டாவதாக வளரும் கதை மாந்தர் வளராக் கதைமாந்தர் எனப்பிரிப்பதால் கதைமாந்தர் பற்றிய சிக்கல்கள் பெரிதும் எளிமைபடுத்தியதுபோலாகிறது என்கிறார்.

ஈவன் கதை மாந்தர் விளக்கம்:

பார்ஸ்டரின் குறைகளைத் தவிர்க்க ஈவன் இப்புதிய பிரிவினையை கதைமாந்தருக்கு அளித்ததாக தெரியவருகிறது. அவர் இதனை ஒரு தொடர் நிகழ்வாக குறியீடு செய்து வகைமைப் படுத்துகிறார்.

(தொடரும்)

மொழிவது சுகம் ஜூலை 26 2014

1. பிரான்சில் என்ன நடக்கிறது? : கச்சைக் கட்டி நிற்கிறார்கள்

                   ‘மார்புக் கச்சை’ என்ற தமிழ்ச் சொல்லுக்கு பிரெஞ்சில் ‘soutien -Gorge’. தமிழைப்போலவே இருசொற்கள் கொண்டு உருவான சொல். Soutien என்பதற்கு support என்றும் Gorge என்பதற்கு bosom என்றும் பொருள். தற்போது இச் சொல்லைப் பன்மையில் எப்படி எழுதலாம் என்பதில் பிரெஞ்சு அகராதிகளுக்குள் பெரும் பிரச்சினை. கச்சை என்ற பொருள் குறித்த வார்த்தையில் இணைந்துள்ள மார்பு என்ற சொல்குறித்து பிரச்சினை உருவாகியுள்ளது. வருடா வருடம் பிரெஞ்சு அகராதிகள் புதிதாகப் பதிப்பித்து வெளிவரும். இவ்வருட கல்வி ஆண்டில் Robert அகராதியைச் சேர்ந்தவர்கள் பன்மையில் ‘soutiens-Gorges’ எனப் போட்டிருக்கிறார்களாம். அதாவது Gorge -மார்பு அல்ல Gorges-மார்புகள். மாறாக Larousse அகராதிக்கு ‘soutiens-Gorge’ சரி. அவர்களுக்கு la gorge என்ற பெயர்ச்சொல் ஒருமை சார்ந்த விஷயம் எனவே ஒரு வினைச்சொல்லிலிருந்து (soutenir) பிறந்த இப்பெயர்ச்சொல்லோடு மட்டும்(soutien) S சேர்த்தால் போதும். இரு தரப்பிலும் நியாயம் இருப்பதுபோல தெரிந்தாலும் தற்போதைக்குப் பெரும்பாலோர் ‘soutiens-gorge’ஐ தாங்கிப்பிடிக்கிறார்கள். மூத்த கல்விமான்களின் முடிவுக்குக் காத்திருக்கிறார்கள். இதில் வயதுபோன ஆசாமிகளுக்கு சொல்ல என்ன இருக்கிறது?

 2. காஸா பிரச்சினை
காஸா பிரச்சினை மறுபடியும் வெடித்திருக்கிறது. அப்பாவி மக்கள் நூற்றுக்கணக்கில் இஸ்ரேலிய ராணுவத் தலையீட்டினால் நாள்தோறும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் சிற்றிதழ்கள் இஸ்ரேல் பிரதமருக்கு எச்சரிக்கை விடுக்கலாம், தலையங்கத்தில் கண்டிக்கலாம், கட்டுரைகள் எழுதலாம். இஸ்ரேலுக்குப் பின்புலத்தில் மேற்கத்திய நாடுகள் இருப்பது உண்மை. ஆண்டுகள் பலவாக தொடரும் இப்பிரச்சினைக்கு அரபு நாடுகளும் ஒரு வகையில் பொறுப்பு. இன்னொரு பார்வையும் நம்மிடம் இருக்கிறது. புட்டின் ஒரு பக்கம், ஒபாமா மறுபக்கமென சிரியாவில் நடக்கும் சண்டையில் கொல்லப்படுவது ரஷ்யர்களோ, அமெரிக்கர்களோ அல்ல சிரிய ராணுவ வீரர்களும், சிரிய புரட்சியாளர்களும், அப்பாவி சிரிய மக்களும். இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் சிரிய நாட்டு உள்நாட்டுப்போரில் நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் இறந்துகொண்டிருக்கிறார்கள். இராக்கில் அமெரிக்க அரசியலின் கைங்கர்யத்தில் ஆரம்பித்துவைத்த உயிர்ப்பலிகள் கடந்த ஒரு மாதமாக இரட்டிப்பாகியிருக்கின்றன. எகிப்தில் தீவிர இஸ்லாமியப் பிரிவினரின் தலைவர் தேர்தலில் ஜெயித்து அதிபரானார். மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் அவரைப் பதவியிலிருந்து இறக்கிய எகிப்திய ராணுவ தளபதி தனக்கேற்ப ஒரு தேர்தலை நடத்தி அதிபராக பதவி ஏற்றிருக்கிறார். இஸ்லாமிய சகோதரர்கள் கட்சியைச் சேர்ந்த அநேகர் ராணுவ நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிரியாவில், ஈராக்கில், எகிப்தில், ஆப்கானிஸ்தானத்தில், பாகிஸ்தானில் கூட அப்பாவிகள் கொல்லப்படகூடாதுதான். இஸ்ரேலை கண்டிக்கிற அதே மனோபவத்துடன் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டாமா?

3. மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் (மருத்துவக் கேள்வி-பதில்’) – டாக்டர் சண்முக சிவா

டாக்டர் சண்முகம் சிவாவை அண்மையில் கோவையில் சந்தித்தேன். கோவை தமிழ் பண்பாட்டு இயக்கம் கூட்டிய ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டிற்கு வந்திருந்தார். அவரது படைப்புகள் குறித்த க.பஞ்சாங்கம் கட்டுரையை ‘சிற்றேடு’ காலாண்டிதழில் ஏற்கனவே வாசித்திருந்தேன். க.பஞ்சாங்கம் உண்மையை எழுதக்கூடியவர். எனவே மருத்துவர் சண்முக சிவா ஓர் நல்ல சிறுகதை ஆசிரியர் என்ற கருத்து மனதில் இருந்தது. கடந்த கால தமிழ் புனைவுகளில் ‘ஆஜானுபாகு’ என்ற சொல்லாடல் உபயோகத்திலுண்டு, அதோடு நல்ல தேஜஸ் என்ற வடமொழி சொல்லையும் சேர்த்துக்கொள்ளலாம். மனிதர்களை அளக்கும் பார்வை. வார்த்தைகள் நிதனாமாக வருகின்றன. எதைச் சொல்லவேண்டுமோ அதைமட்டும் பேசுகிறார்.

தமிழ்நாட்டில் கூச்சமில்லாமல் புளித்துப்போகும் அளவிற்கு தங்கள் பெருமைகளை தாங்களே சிலாகிக்கும் மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன், ஈழத் தமிழ் நண்பர்கள் பலரிடமும் இது நிறைய இருக்கிறது. சிங்கப்பூர் நண்பர்களிடமும் கவனித்தேன். ஒன்றரைபக்கத்திற்குத் தங்கள் புகழ்பாடி மின் அஞ்சல் அனுப்புகிறார்கள். நாம் ஏமாளிகளாக இருந்தால், நேற்று கிளேசியோகூட பிரான்சிலிருந்து என்னிடம் பேசினார், உங்கள் எழுத்தைப் படித்துத்தான் எழுதவந்தேன் என்றார் என என்னை மூர்ச்சை அடையச்செய்கிற படைப்பாளிகளும் தமிழில் உண்டு. தமிழினத்தின் சரிவிற்கு தம்மை எப்போதுமே உயரத்தில் வைத்து பார்ப்பதுங்கூட ( எதிராளியை குறைத்து மதிப்பிட்டு) காரணமாக இருக்கலாம். ஒரு வேளை இது நமது தேசிய குணமோ. மலேசியா தமிழர்களிடங்கூட அது பொதுப்பண்பாக இருக்கக்கூடும். அவர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காக எப்படி இருக்க முடியும்? எனினும் பத்து விழுக்காடு மனிதர்கள் இப்பொதுபண்பிலிருந்து விலகியவர்களாக இருப்பார்களில்லையா? அப்பத்துவிழுக்காடு மனிதர்களில் திருவாளர்கள் ரெ.கார்த்திகேசுவும், சண்முக சிவாவும் இருக்கக்கூடும். இருவருமே பொறுமைசாலிகள், வார்த்தைகளில் முதிர்ச்சி, கன்னியம். நாம் பேசுவதை அக்கறையோடு கேட்டு முழுவதுமாக கிரகித்துக்கொண்டு ஒருமுறை மனதில் திரையிட்டுப்பார்த்து திருப்தியுற்றவர்களாய் நம்மிடம் பேசுகிறார்கள். அவர்கள் உரையாடும்போது ஒன்றைக் கவனித்தேன். தங்களை ஒருபோதும் உயரத்தில் நிறுத்தி உரையாடுபவர்களல்ல. சொற்களில் பாசாங்குகள் இருப்பதில்லை. தற்புகழ்ச்சி நெடி நமது நாசி துவாரங்களை வதைப்பதில்லை. நம்மை சமதளத்தில் அமர்த்தி உரையாடுகிறார்கள். இது நல்ல கதை சொல்லிக்கான மனோபாவம். அரவணைக்கும், இனிக்கும் தொனி. நவீன், கே.பாலமுருகன் போன்றோரிடமும் இப்பண்புகள் இருக்கக்கூடும் அவர்களிடம் பேசிப்பார்த்ததில்லை. அவர்கள் படைப்புகள் வழி பிறந்த கற்பிதம். டாக்டர் சண்முகசிவா மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும் என்ற நூலை அளித்திருந்தார். அதொரு மருத்துவ நூலா? இலக்கிய நூலா? என்ற சந்தேகம் வாசித்து முடித்த பின்பும் நீடிக்கிறது. மருத்துவ அறிவைக்காட்டிலும் தமக்குள்ள இலக்கிய தேடலை தெரிவிக்கவேண்டுமென்ற அவா அவருக்குள் ஆழமாக இருந்திருக்கவேண்டும். திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோல அவரது நூலூடாக நோய்முதல்நாடி உருவான கருத்து.

நூலுக்குப் பிரபஞ்சன், எம்.ஏ. நு•மான் இருவரும் பாராட்டுரை வழங்கியிருக்கிறார்கள். நூலைப் பற்றிய அவர்களின் கருத்துக்கள் குறைவு, மாறாக ஆசிரியர் பற்றிய பாராட்டுமழைகள் நிறைய. சண்முகம் சிவா நிறையவே நனைந்திருப்பார்.. ஆசிரியரின் முன்னுரையிலிருந்து அவர் உள்ளூர் சஞ்சிகைகளிலும் தொலைகாட்சியிலும் வழங்கிய மருத்துவ ஆலோசனைகளே நூலாக வடிவம் எடுத்திருக்கிறதென அறிய வருகிறோம். உடல் நோய், மன நோய் இரண்டிற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட நூலை ஒரு மருத்துவ கையேடு எனலாம். நமக்கெழும் அநேக சந்தேகங்களுக்கு, நம்மிடமுள்ள அநேக கேள்விகளுக்குப் பதில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. திரு சண்முகம் சிவாவின் பதில்கள் மருத்துவம் அறிந்த மனிதநேயமிக்க ஒருவருவரின் பதில் போல இருக்கிறது. அவை ஒவ்வொன்றிலும் மெலிதான நகைச்சுவை அடிநாதமாக ஒலிக்கிறது. முத்தாய்ப்பாக கவிதை ஒன்று.

ஏற்கனவே கூறியதுபோன்று அவரிடம் கேட்கப்படும் கேள்விகள் உடல் உளம் இரண்டும் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. வயது, சிறியவர் பெரியவர்; ஆண் பெண் பாலினப் பாகுபாடு இப்படி எதுவும் அப்பதில்களில் குறுக்கிடுவதில்லை. அனைவருக்கும் அனைத்திற்கும் அவரிடம் ஆலோசனைகள் இருக்கின்றன என்பது வியப்பை அளிக்கிறது. கிட்டதட்ட பெரும்பானமையான பதில்களில் – நடிகர் கே. பாக்யராஜ் தமது தமிழ் வார இதழ் கேள்வி பதிலில், பதிலுடன் ஒரு கதையைக் கூறியதுபோல ( இப்போதும் உண்டா?) மருத்துவர் சண்முகம் சிவா கவிதை சொல்லி முடிக்கிறார். கே.பாக்யராஜ் ஒவ்வொரு கேள்விக்கும் புராணங்களிலிருந்தோ, இதிகாசத்திலிருந்தோ அல்லது எங்கிருந்தோ உதாரணத்தைக் காட்டும்போது அவரது கேள்விபதில் பகுதியே அதற்காகத்தான் வாசிக்கப்பட்டது எனச்சொல்வதுண்டு. இந்த நூலிலுங்கூட ஆசிரியரின் மருத்துவ ஆலோசனைக்கு வாசிக்கிறவர்களைக் காட்டிலும் அதில் சொல்லப்பட்ட கவிதைகளுக்காக வாசிப்பவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். பல நேரங்களில் கவிதையைத் தேர்ந்தெடுத்துவிட்டு அதற்கேற்ப மருத்துவ கேள்விகளை தேர்ந்தெடுத்திருக்கலாம் போன்ற ஐயங்களும் எழாமலில்லை.

பத்திரிகைகள், வார மாத இதழ்களில் இடம்பெறும் அநேகக் கேள்வி- பதில்கள் தயாரிக்கப்படுபவைதான். அந்தச்சந்தேகம் கவிதைகளை வாசிக்கிறபோது இங்கும் வருகிறது. விருந்தளித்த கையோடு ‘தாம்பூலம் எடுங்க’ என்பதைப்போல மருத்துவ ஆலோசனையோடு கொசுறாக ஒரு கவிதை கிடைக்கிறது. எனக்கு ‘ஊட்டிவரை உறவு’ நாகேஷ¤ம் நினைவுக்கு வருகிறார். சிலரின் கேள்விகளை படிக்கிறபோது, அவர்கள் மருத்துவரின் கவிதைக் ‘கொசுறை’ எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்கள் என ஊகிக்க முடிகிறது. உளவியல் அறிந்த மருத்துவருக்கு இது தெரியாதிருக்குமா? கண்டிப்பாக. தமது மருத்துவ ஆலோசனையைக்காட்டிலும் தாம் படித்த, இரசித்த கவிதைகளை அடையாளப்படுத்தவேண்டும் என்பது மருத்துவருக்கு முதல் நோக்கமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையெனில் அவர் ஜெயித்திருக்கிறார். ‘மருத்துவக் கேள்வி-பதில்’ என்ற உபதலைப்பு, நமக்கெழும் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே இருக்கிறது. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிதைகள் காமாசோமா அல்ல. நல்ல கவிதை மனம் இருந்தாலொழிய அப்படியான கவிதைகளை இடம் பொருள் அறிந்து உபயோகம் காண சாத்தியமில்லை.

மருந்துக்கு ஒரு உதாரணம்:

 

சில நேரங்களில் மனம் எதிலும் ஈடுபடமுடியாமல் ஒருவிதமான கவலையுடன் இருக்கிறது. அந்த மாதிரியான நேரங்களில் என்ன செய்யலாம்?

மருத்துவர் சண்முக சிவாவின் பதில்:

கவிதை எழுதலாம். கவிதை எழுத வராது என்றால் எதை வேண்டுமானாலும் எழுதுங்கள். புலவர்கள் பண்டிதர்கள், கவிஞர்கள் அதனைக் கவிதை இல்லை என்று சொல்லலாம். கவலைப் படாதீர்கள். எழுதுங்கள். உங்களுடைய கவலை ஒரு தவிப்பு. அதற்கு வடிகால் வேண்டும். நமது உணர்வுக்கெல்லாம் ஆக்க பூர்வமான வடிகால்களை அமைத்துக்கொண்டால் அது பாடலாகவோ இசையாகவோ ஓவியமாகவோ இருந்துவிட்டால் நாம் கலைஞராவோம்.

சோகத்திலும் ஒரு சுகமான கவிதைக் கிடைக்கும். மொழி கைவந்துவிட்டால். உணர்வுகளுக்கு ஆடைகட்டி ஆடவிடலாம், பாடவிடலாம். மனசுக்கு சிறகுகட்டி பறக்கவிடலாம். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து இன்பம் சேர்க்கலாம். கவலையில் மூழ்கிக் காணாமல் போய்விடாமல் இருக்கத்தானே கலைகள் இருக்கின்றன. கவிஞர் ஆசுவின் இந்த வரிகளைப் பாருங்கள்:

“வலிக்குது மவனே
சொமய கொஞ்சம் இறக்கி வையேன்”

“இறக்கி வைத்தேன் அம்மா
கவிதைகளாக
அதற்குள்ளும்
அழுகின்றன அம்மா
நமது வலிகள்.”
—-

மருந்திலிருந்தும் மனத்திலிருந்தும்
மருத்துவ கேள்வி-பதில்
ஆசிரியர் டாக்டர் மா. சண்முகசிவா

உமா பதிப்பகம், கோலாலம்பூர்
umapublications@gmail.com
——————————
நன்றி: திண்ணை 27/07/2014

பிரம்மிப்பூட்டும் பிரெஞ்சு சிறுகதைகள் – க. முத்துகிருஷ்ணன்

நாகரத்திNew Imageனம் கிருஷ்ணா பிரெஞ்சு மொழியிலிருந்து வித்தியாசமான ஐந்து சிறுகதைகளைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நவீன உத்திகளைப் பின்பற்றி இந்தச் சிறுகதைகள் அமைந்துள்ளன. காலசுவடு பதிப்பித்திருக்கிறது.

எவ்லன் காலன், பத்ரிக்மோதியானோ, மார்கெரித் துராஸ், லெ கிளேஸியோ மற்றும் அலென் ஸ்பீஸ் ஆகியோரின் சிறுகதைகள் அவை.

இந்த ஐந்து கதைகளுமே மனித மனங்களில் உறங்கிக்கிடக்கும் உள்ளுணர்வுகளை உணர்வுபூர்வமான வார்த்தைகளில் விவரித்து சொல்கின்றன. இக்கதைகளில் வரும் கதை என்ன? சொல்ல இயலாதவை, படித்து மட்டுமே சிலாகிக்ககூடியவை. மனித மனங்களின் ஊடாடும் உணர்வுகளை உள்ளது உள்ளபடி இக்கதைகள் விவரிக்கின்றன.

ஒளிரும் சிவப்பும் ஓர் நிறமே என்ற எவ்லன் காலனின் கதையில் ஒரு பெண்ணின் உள்மனதில் கொந்தளிக்கும் உணர்வுகள் எழிலார்ந்த தொனியில் அமைக்கப்பட்டுள்ளது.

சேன்நதி என்ற பத்ரிக் மோதியானோவின் கதையில் தன் உதிரத் தொடர்பற்ற ஒரு குழந்தையின் பிரிவால் ஏற்படும் துயரினை உரித்து காட்டுவதோடன்றி படிப்பவர்களின் மனதில் உணர்வதிர்வலைகளை உண்டுபண்ணுகிறது.

படிப்பவர்களை முன்னிறுத்தி மனித மனம் உடல் ரீதியாக உணர்வுகள் ஓங்குதலையும் சிதைந்து சின்னாபின்னமாகிப்போனாலும் நிலை நிறுத்தி விடுகின்ற இயல்புத் தன்மைகளை விவரிக்கிறது மார்க்கரித் துராஸ் எழுதிய உயிர்க்கொல்லி என்னும் கதை. இதுவே நூலின் தலைப்பு.

பாசத்திற்காக ஏங்கித் தவித்து ஒவ்வொரு கிளைகள் போன்ற சமூக அமைப்பினரின் பிரதிநிதிகளிடம் தஞ்சம் புகுந்து ஒரு ஆன்மீகத் தேடலையோ அதற்கும் மிஞ்சிய ஒரு சொல்லவியலாத தேடலைத் தேடி அலைகிறான் மோந்தோ என்ற அனாதைச் சிறுவன். இக்கதை லெ கிளேஸியோவால் எழுதப்பட்டுள்ளது. எதையோ தேடி அலைவது அந்த மோந்தோ சிறுவன் மட்டுமல்ல, இந்த உலகம், இந்த நாடு, இந்த மக்கள், ஏன் நாமும்கூட. மோந்தோ என்ற தலைப்பில் மிக அற்புதமான உயிர் விரவிய கதை.

ஒரு மனநலம் பாதித்தவன், மன நல காப்பகம் ஆகியன உள்ளார்ந்த வாழ்வு நிகழ்வுகளை ஏக்கமான பரிதாபக்குரலில் எடுத்துரைக்கிறது அலன் அஸ்பிஸ் எழுதிய ஏன் என்ற கதை.

ஐந்து கதைகளும் வெவ்வேறு வகையான உள்ளீடுகளை உணர்வுகள் என்ற தொனி என்கிற அஸ்திவாரங்களில் மிக எளிமையாக, மிக அருமையாக அமைகின்றன. இக்கதைகளில் உலவி வாழும் கதை மாந்தர்கள் மனம் விட்டுப் பேசுவதை படிப்பவர்களாகிய நாம் நிச்சயம் கேட்டு உணரமுடியும்.

நன்றி சிற்றேடு ஜூலை – செப்டம்பர் 2014