மாரியம்மன் கஞ்சியும் அந்தோணிசாமியும்

ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. வீட்டின் பின்புறமிருக்கிற தோட்டம். கோடைவெயிலை சுமந்தபடி அலையும் காற்று. காற்றின் அலைச்சலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் செரீஸ்மரத்தின் கிளைகளும், கைவிரல்கள் போல பிரிந்த அவற்றின் கொப்புகளும் அசைந்துகொண்டிருந்தன. மண்தரையெங்கும் பரவலாக நாவல்போல உலர்ந்த செரீஸ் பழங்கள், உதிர்ந்த இலைகள், மிலாறுகள். இரு செரீஸ் மரங்களுக்கிடையில் நான்குக்கு இரண்டு ச.மீட்டரில் அமைந்த மரக்குடில். பிளாஸ்டிக் நாற்காலியொன்றில் கால்களைப் பின்புறமாக மடித்து அந்தோணிசாமி உட்கார்ந்திருந்தார். பார்வை அவருக்கு நேர் எதிரே, இனி தேறாது என்றிருந்த வாழைமரத்தின் மீது நிலைத்திருக்கிறது. அரையில் முழங்கால் மூட்டுவரை இறங்கிய, காக்கி நிற பெர்முடா; மேலே பூக்கள் அச்சிட்ட பொத்தான்களிடப்படாத அரைக்கை பருத்திச் சட்டை; பூத்த சாம்பல்போன்ற நரைத்த ரோமங்களுடன் மார்பு, கொளகொளவென்று மடிந்த வயிறு; தலையில் ஓலையில் முடைந்த வெள்ளை நிற ஹவாய்த் தொப்பி. தோட்டங்களில் உபயோகித்திற்கென்று தயாரிக்கப்பட்ட மேசைமீது ஒரு பீர் பாட்டிலும் கண்ணாடி கிளாஸ¤ம் இருக்கின்றன. கிளாஸின் அடிப்பகுதியில் மிச்சமிருக்கிற தேன்நிற திரவத்துடன் இணைந்துகொள்ள, விளிம்பிலிருந்து கண்ணாடி சுவரில் எச்சிலும் நீர்த்த நுரையுமாக வடிகிறது. ‘ஏவ்’ என்று புளித்த ஏப்பம் உதடுகளால் பூட்டப்படிருந்த வாயை அகலமாகத் திறக்க வைத்தது. மனைவி பிரான்சுவாஸ் பக்கத்தில் இல்லாத தைரியத்தில் புட்டத்தை உயர்த்தி அபாணவாயுவை இலகுவாக வெளியேற்றியதும், வயிறு இலேசானது. மண் தரையிலிருந்து இறக்கைமுளைத்த எறும்பொன்று தலையை இருபுறமும் அசைத்தபடி முழங்கால் ரோமங்களைச் சாமர்த்தியமாகப் பற்றி முன்னேறுவதை தாமதமாகத்தான் உணர்ந்தார். மேசையில் பேட்டிருந்த இடதுகை ஒத்துழைப்புடன் அதைத் தட்டி விட்டார். அவர் அங்கே உட்கார்ந்திருப்பது செரீஸ் பழங்களுக்கென்று வேலி தாண்ட முனையும் சிறுவர்களைத் தடுக்கவென, பிரான்சுவாஸ் நினைத்துக்கொண்டிருக்கிறாள். அக்கம்பக்கத்திலிருக்கிற அரபு நாட்டவர் பிள்ளைகள் வேலியைத் தாண்டிக்குதித்து செரீஸ் மரங்களில் ஏறி விடுகிறார்கள். பூமியில் அழிந்தாலும் பரவாயில்லை, அப் பிள்ளைகள் வாயில்மட்டும் போய்விடக்கூடாது என்பதில் தீர்மானமாகப் பிரான்சுவாஸ் இருக்கிறாள். அவளுக்குக் கடந்த மேமாதத்திலிருந்து வயது ஐம்பத்தைந்து. அந்தோணிசாமிக்கு இரண்டொரு வருடங்கள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக்கூடும். அவளைப் போல துல்லியமாக அவர் வயதைக் கணக்கிட முடியாது. அவர் பிறந்ததேதியோ வருடமோ நமக்குமட்டுமல்ல அவருக்கும் தெரியாது. பெயர்கூட பீட்டர் சாமியார் வைத்ததுதான். பெற்றவள் என்ன பெயர் வைத்திருப்பாளென்று ஒருவருக்கும் தெரியாது. ‘கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில்’ அவரை பெற்றுபோட்டுவிட்டு காணாமற் போனதாகச் சொல்லபட்டது. பிரான்சுவாஸை ஒரு சுற்றுலா பயணியாக புதுச்சேரியில்வைத்து சந்திக்க நேர்ந்தது. ரிக்ஷா ஓட்டும் ஒரு நபருக்கும், சேவையொன்றிர்க்கான விலையைச் செலுத்த தயாராக இருந்த பயனாளிக்குமான சந்திப்பாகத்தான் அது தொடங்கியது. இருவருக்கும் மணம் செய்துகொள்ளும் உத்தேசம் எதுவும் அந்த முதற் சந்திப்பில் இருந்திருக்க முடியாது. அவளுக்கு எப்படியோ, நம்முடைய அந்தோணிசாமிக்கு இல்லை.

முப்பது வருடங்களுக்கு முன்பு அது நடந்தது. மதியம் கடந்த நேரம். பள்ளிக்கூடப் பிள்ளைகள் சவாரியை முடித்துக்கொண்டு வழக்கம்போல தமது ஸ்டாண்டிற்கு அந்தோணிசாமி திரும்பியிருந்தார். எதிர்வெய்யிலுக்காகப் படுதாவை இறக்கிவிட்டு ரிக்ஷாவில் கண்ணயர்ந்திருந்தார். சொடுக்குப்போட்டதுபோல திரண்ட மேகங்கள் சூரியனைச் சூழ்ந்துகொண்டன. தூறலும் காற்றுமாக இணைந்து மனிதர்களை விரட்ட ஆரம்பித்தது. இறக்கியிருந்த படுதா விலக தூறலில் நனைந்த கால்களா, மனிதர் குரலா அல்லது இரண்டும் சேர்ந்துமேவா? அந்தோணிசாமியின் தற்காலிகத் தூக்கத்தை ஏதோ ஒன்று கலைத்தது. திடுக்கிட்டு எழுந்தபோது, வெள்ளைக்கார பெண்ணொருத்தி புருவ மயிர்களில் நீர்சொட்ட கழுத்தை இறக்கிக்கொண்டு இவர் எதிரே நிற்கிறாள். சவாரி வரமுடியுமா? என அவள் கேட்டதுபோலிருந்தது. இரண்டவது முறை குரலைச் செலவிட விருப்பம் இல்லாதவளாகத் தெரிந்தாள். ஒன்று இரண்டு என விழ ஆரம்பித்த மழைத்துளிகள் பல்கிப் பெருகி அடுத்த சில நொடிகளில் பறைபோல சடசடவென கொட்ட, அந்தோணிசாமி ரிக்க்ஷாவிலிருந்து இறங்கினார். அவள் ரிக்க்ஷாவில் அமர்ந்ததும் போக வேண்டிய இடத்தைச்சொன்னாள். லுங்கியை மடித்துக் கட்டினார். துண்டைத் தலையிற்போட்டுக்கொண்டார். ஹேண்ட்பாரில் ஒரு கையும், சீட்டின் பின்புறம் ஒருகையும் கொடுத்து வேகக்கால் வைத்து ரிஷாவைத் தோள்கொடுத்து தூக்க முனைபவர்போல சில அடிகள் தள்ளிக்கொண்டு ஓடினார். அதற்கு அடுத்தகட்டமாக இடப்பக்க பெடலில் ஒருகாலை ஊன்றி மறு காலால் அடுத்த பெடலைத் தொட்டு மிதித்து உடலின் மொத்தபாரத்தையும் அதில் இறக்கினார். ரிக்ஷா உருளத் தொடங்கியது. வண்டி சீராக ஓடவும், தமக்கும் பிரெஞ்சு மொழி வரும் என்பதுபோல, “மதாம் சவா?” எனக் கழுத்தை ஒடித்துக் கேட்டார். அவள் காதில் விழவில்லையா அல்லது பதில் சொல்ல விருப்பமில்லையா எனத் தெரியவில்லை, அமைதியாக இருந்தாள். அடுத்த பதினைந்து நிமிடங்களில், அவள் இறங்க வேண்டிய இடம் வந்தது. பத்து ரூபாயோடு கூடுதலாக ஒர் இரண்டு ரூபாய் தாளை அவள் நீட்டியபோது அந்தோணிசாமி மறுத்தார். அவள் வற்புறுத்திக் கையிற் திணித்துவிட்டுச் சென்றாள். அதற்கும் மறுநாளே அவளை மறுபடியும் சந்திக்கவேண்டிவருமென அவர் நினைக்கவில்லை. நேருவீதியில் தமது ரிக்க்ஷாவில் சவாரி வந்த உள்ளூர் தம்பதிகளை இறக்கிவிட்டு எதிரே பார்த்தபோது அரிஸ்டோ ஒட்டல் வாயிலில் பூ விற்கும் பெண்மனியுடன் அதே பெண் சண்டை பிடித்துக்கொண்டிருந்தாள். “வண்டியை உடனே எடு!” என்ற போலீஸ்காரரின் அதட்டலைக் பொருட்படுத்தாது அவர்கள் பிரச்சினையில் குறுக்கிட இரண்டொரு நிமிடங்கள் தேவைப்பட்டன. பூவிற்கும் பெண்மணியின் கையில் மல்லிகைச் சரம் மடித்த பொட்டலம். பிரெஞ்சுப் பெண்ணின் கைவிரல்களிடை இரண்டுரூபாய் தாள் ஒன்று. அந்தோணிசாமிக்குப் புரிந்தது “மல்லிதானேம்மா, எத்தனை முழம்கொடுத்த?”, என்ற அவரின் கேள்விக்கு, ” ஒரு முழம்தான் தம்பி கொடுத்தேன், ஆனா முழம் ஐந்து ரூபாய்ண்ணு அஞ்சு விரலைக் காட்டினேன். அந்தப் பொண்ணு, இரண்டு ரூபாய் தாளை நீட்டுது” எனப் பூ விற்கிற பெண்மணி, அந்தோணிசாமியின் காதுக்குள் குசுகுசுத்தாள். அவருக்குக் கோபம் வந்தது, “ஏம்மா கொஞ்சங்கூட மனசாட்சிவேணாம், முழம் ஒரு ரூவாண்ணுதானே விக்கிற, அந்தப் பொண்ணு ரெண்டு ரூவாவை நீட்டுது. வாங்கிக்கிணு சந்தோஷமா போவியா” என்றவர் அவள் கையிலிருந்த பூச்சரத்தைப் பிரெஞ்சு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவளிடமிருந்த இரண்டு ரூபாய் தாளை வாங்கி பூக்கார பெண்மணியிடம் கொடுத்தார். பிரெஞ்சுப் பெண் முகம் மலர “மெர்ஸி” என்றாள். அச்சம்பவத்திற்குப் பிறகு பலமுறை இருவரும் குறுக்கிட்டுக்கொண்டது எதேச்சயாக நடந்ததென்று அந்தோணிசாமி நினைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அவளாகவே இவரைத் தேடிவந்ததாக நினைத்தாள். ஒரு முறை “என்னை மணம் செய்துகொள்ள விருப்பமா” என அவரிடம் கேட்டாள். வெகுநாட்கள கேட்பாறின்றி சிதிலமாகக்கிடந்த வீடொன்றின் திண்ணையிற் குடிவைத்திருந்த “பொண்டாட்டியும் பிள்ளைகளும்” அவர்கள் பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவளிடம் மறைத்துவிட்டார். இருவரும் அவள் விருப்பப்படி ஒரு கோவிலில் மணம் செய்துகொண்டார்கள். பிரான்சுக்குப்போன ஆறுமாதத்தில், அவரை அழைத்துக்கொண்டாள். இன்றுவரை ஊர் திரும்பவில்லை. பலமுறை பிரான்சுவாஸிடம் கேட்டுப்பார்த்தார் அவள் சம்மதிக்கவில்லை. ஆகாயத்தில் விமானங்களைப் பார்க்கிறபோதெல்லாம் ஊர் ஞாபகம் வருகிறது. இப்போதும் வாழைக்கு மேலே மெல்ல உருமிக்கொண்டு  தெற்கு நோக்கி விமானமொன்று போகிறது. குறுக்கிய விழிகளுடன் அந்தோணிசாமியின் பார்வையும் அதனுடன் பயணித்தது.

விமானம் அடிவானத்தில் மறைந்ததும் மீண்டும் அந்தோணிசாமியின் கவனம் வாழையின் பக்கம் திரும்பியது. தோட்டத்தில் பருவத்திற்கேற்ப பிரான்சுவாஸ் பூச்செடிகள், பிறதாவரங்களென வளர்ப்பதும் புதுபித்தலுமாக இருப்பாள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்படியொரு தோட்டக்கடைக்கு அவளுடன் சென்றபோதுதான் இந்த வாழையைப் கண்டார். ஊரின் ஞாபகமாக இருக்கட்டுமென்று அதை வாங்க நினைத்தார், பிரான்சுவாஸ் கூடாதென்றாள். அந்தோணிசாமி தமது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார். வீட்டுத் தோட்டத்தில் அதைப் பதியமிட்டார். ஒருவாரத்திலேயே குருத்து நீண்டு இலையாக உருமாறி சிரித்தபோது, இவரது நெஞ்சில் பூபூத்து, குலைதள்ளியது. தினப்படிக்கு நீர்வார்த்தார். தழை உரம், இராசயன உரமென்று பார்த்து பார்த்து வைத்தார். குருத்துகள் தொடர்ந்தன. ஓரிலை இரண்டிலை ஆனது. முன்னிரவுகளில் விஸ்கிபோதை தலைக்கேறியதும் அதனோடு உரையாடத்தொடங்கி, பல நாட்கள் மண்தரையில் உறங்கிவிடுவார். பிரான்சுவாஸ் பிரம்பும் தண்ணீருமாக வருவாள். தண்ணீர் முகத்தில் விழும்போதே பிரம்படிகள் உட்காருமிடத்தில் விழும். சரியாக ஐந்தாவது அடியில் எழுந்து உட்கார்ந்து வாயைத் திறவாமல் கட்டிலுக்குத் திரும்புவார். அந்நாட்களில் இரவு சாப்பிடுவதில்லை. அவளும் அதற்கெல்லாம் கவலைகொள்வதில்லை. அந்த வாழைதான் திடீரென்று ஒருநாள் நிலைகுலைந்ததுபோல வாடி நின்றது. இலைகள் சுருண்டு, பசுமையெல்லாம் உறிஞ்சப்பட்டு துவண்டு தலைசாய்ந்து நிற்கிறது. அந்தோணிசாமிக்கு அதற்கான காரணங்கள் விளங்கவில்லை. பிரான்சுவாஸிடம் கேட்க தைரியமில்லை. கேட்டாலும் “உனக்கெல்லாம் அதைச் சொல்லி புரியவைக்க முடியாது” என்பாளென்று அவருக்குத் தெரியும்.

ஒரு நாள் அமெரிக்க சீரியலொன்றைப் பார்த்துவிட்டு, பார் மேசையைத் திறந்து ஆரோக்கியத்திற்கும் அவளுக்குமாக விஸ்கி பரிமாறிக்கொண்டு பிரான்ஸ¤வாஸ் சோபாவில் புதைந்தாள். தம்முடைய விஸ்கி கிளாஸ்கொண்டு, அவள் கரத்திலிருந்த கிளாஸைத் தொட்டு ‘உனது உடல் நலனிற்காக’ எனக்கூறிவிட்டு ஒரு மிடறு விழுங்கியதும் அந்தோணிசாமி: “இரண்டு வருடம் தாக்குப்பிடித்த வாழை மூன்றாவது வருடம் ஏன் கருகவேண்டும்?” எனக்கேட்டார். அவள் பதில் சொல்ல விருப்பமில்லாதவள் போல ஒரு மிடறு விஸ்கியைத் தொண்டைக்குழியில் இறக்கினாள். கண்களை மூடி, அச்சுகத்தை நரம்புகள் உடலெங்கும் கொண்டுசேர்த்து முடிக்கட்டுமெனக் காத்திருப்பவள்போல இரண்டொருநிமிடங்கள் மௌனமாக இருந்தாள். அந்தோணிசாமி நிதானமிழந்தார். அவள் கையிலிருந்த விஸ்கி கிளாஸைப் பறித்து, அருகிலிருந்த மேசைமீது வைத்தார். “இல்லை எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும், நான் விடமாட்டேன்” என்று உதடுகள் துடிக்க அவர் கூறியபோது, மது நெடிசுமந்த எச்சில் அவள் முகத்தில் தெறித்தது. இரண்டொரு நிமிடங்கள் சுவாசிப்பதைக்கூட நிறுத்திக்கொண்டு ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக்கொண்டனர். என்னவோ நடக்கப்போகிறதென அவர் உள்மனம் எச்சரித்தது. ‘எதுவேண்டுமானாலும் நடக்கட்டும்” என அதே மனம் அவருக்குத் தைரியமும் சொன்னது. அவள் எழுந்தாள். நெருங்கியவள் கையிலிருந்த அவர் விஸ்கி கிளாஸைப் பிடுங்கித் தரையில் வீசினாள். அது உடைந்து நான்குபக்கமும் சிதறியது. “ஒவ்வொண்ணுக்கும் உயிர்வாழ சில அடிப்படை தேவைகள் இருக்கு, அதை நம்மால சரியா கொடுக்க முடியாதென்றுதான், அன்றைக்கு வாங்க வேண்டாம் என்றேன். உங்கள் வாழைமரத்தின் முடிவுக்கு நீங்கள் தான் பொறுப்பு” எனக் கோபத்துடன் அவள் கூறியபோது, அந்தோணிசாமியும் ஏதோகேட்கவேண்டுமென்று நினைத்தார். அவள் முகத்தைப் பார்த்ததும் ‘நா காப்பது’ உத்தமமென அடங்கிப்போனார். அதன் பிறகு அவள் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டாள். வழக்கம்போல அன்றிரவும் சோபாவிலேயே அந்தோணிசாமி உறங்கவேண்டியிருந்தது. வாழை இருந்த இடத்தில் “ஒயிட் டேஸ்லர்’ வைக்கலாம் என்றிருக்கிறேன்” என்றாள், பிறகொரு நாள்.

“அந்தோணி! என்ன செய்யற? கூப்பிடுவது காதுலே விழலை. ஏற்கனவே மணி பத்து ஆகிவிட்டது. நிகழ்ச்சி ஒன்பதரை மணிக்குத் தொடங்குமென்று சொன்ன ஞாபகம்” – தோட்டத்திற்குள் காலெடுத்து வைக்காமல், வீட்டிலிருந்தபடி பிரான்சுவாஸ் குரல் கொடுத்த்தாள். வாழைமீதிருந்த கவனத்தை கரகரப்பான அவள் குரல் சிதைத்தது.  அவர்கள் வீட்டுக்கு நான்குவீடுகள் தள்ளி மொரீஷியஸ் குடும்பமொன்று இருக்கிறது. அந்தோணிசாமி ஒரு ‘தமுல்’-(Tamoul-தமிழர்) என்று அறிந்த நாளிலிருந்து அவர்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் அழைப்பார்கள். ஆனால் அந்தோணிசாமி-பிரான்சுவாஸ் தம்பதிகள் எங்கும் போவதில்லையெனத் தீர்மானமாக இருந்தார்கள்.  காரணம் இருந்தது. பிரான்சுக்கு வந்த புதிதில் புதுச்சேரிகாரர் ஒருவர் கல்யாணத்திற்கு அழைத்திருந்தார். நகரசபையில் பதிவு திருமணத்தை முடித்தபின் இரவு விருந்து. விஸ்கியும், ஒயினும் தாராளாமகக் கிடைத்தது. அந்தோணிசாமி – பிரான்சுவாஸ் மேசைக்கருகே மற்றொரு கணவன் – மனைவி ஜோடி. கணவன் இவரைப்பார்த்து: “மிஸியே அந்தோணி! ஊருலே நீங்க ரிக்க்ஷா ஓட்டினவர் இல்லை, இங்கே என்ன பண்ணறீங்க” எனக்கேட்டு, ஏதோ பெரிய நகைச்சுவையைக் கூறியதுபோல கலகலவென்று சிரிக்கிறார். மற்றவர்களும் சேர்ந்துகொண்டார்கள். பலரின் முன்னிலையில் தமது கடந்த காலத்தை அந்தப் புதுச்சேரிக்காரர் நினைவூட்டியவிதம் போதையிலிருந்த அந்தோணிசாமியைத் சீண்டிவிட்டது. சிவ்வென்று கோபம் தலைக்கேறிவிட்டது. பிரான்சுவாஸ¤க்கு அங்கு நடந்த தமிழ் உரையாடல் விளங்காமற்போனாலும், உரையாடல் நடுவே வந்து விழுந்த ரிக்க்ஷா என்ற சொல் சம்பவத்தின் தீவிரத்தை உணர்த்திவிட்டது. அந்தோணிசாமியின் கோபத்தைத் தணிக்க நினைத்தவள்போல அவருடைய கையைப் பிடித்து இழுத்தாள். ” அந்தோணி! வம்பெதுவும் வேண்டாம், புறப்படுவோம்”, என்றாள். அந்தோணிசாமி தணியவில்லை,” ஆமா உங்க பொண்டாட்டியக்கூட லாட்ஜ்லே கொண்டுபோய் விட்டிருக்கேனே. அவங்களுக்கு இங்கே எப்படி, தொழில் பரவாயில்லையா?” எனத் திருப்பிக் கேட்க,  கட்டிப் புரண்டார்கள். மற்றவர்கள் சிரமப்பட்டு விலக்குபடி ஆனது. சம்பவத்திற்குப் பிறகு, பிரான்சுவாஸே எபோதாவது சம்மதித்தாலும், அந்தோணிசாமிக்குத் தமிழர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயக்கமாக இருந்தது. அந்த விரதத்தை முடித்து வைத்தவர் மத்யாஸ் மாஸ்ட்டர். பிரான்சுவாஸும் மது சம்பந்தப்படாத எதுவென்றாலும் வீடே கதியென்று கிடக்கிற மனுஷன் வெளியிற் போய்வர உதவுமென்றால் பரவாயில்லை என்பதுபோல அனுமதிக்கிறாள்.

போன கிறிஸ்துமஸ¤க்கு முன்பாக ஒரு பகல் வேளையில் இரண்டு பெண்கள் சூழ, மத்யாஸ் மாஸ்ட்டர் அந்தோணிசாமியின் இல்லத்திற்கு வந்தார். அழைப்பு மணி சத்தம் கேட்டு கதவைத் திறந்ததும் “வணக்கம்” என்று ஏகக் காலத்தில் மூன்று குரல்கள். அந்தோணிசாமி “வணக்கம்” என்ற சொல்லை புத்துச்சேரியில் கூட கேட்டதில்லை. பீட்டர் சாமியார் கூட, “வாடா அந்தோணி” என்றுதான் முகமன் கூறியிருக்கிறார். “அந்தோணி! அவர்களை உள்ளே கூப்பிடு, எதற்கு வெளியிலே நிக்கவச்சிருக்க” என்றாள் பிரான்சுவாஸ். வந்திருந்த மூவரும் உள்ளே வந்தார்கள். இவரை வந்தவர்களுடன் பேசச்சொல்லிவிட்டு பிரான்சுவாஸ் போய்விட்டாள். அந்தோணிசாமி மூவரையும் சோபாவில் உட்காரவைத்தார். “என்ன குடிக்கிறீர்கள்”, எனக்கேட்டார். நாசூக்காக மறுத்த மத்யாஸ் மாஸ்டர்தான் முதலில் பேசினார். பெண்கள் இருவரும் அவர் பேசுவதை ஆமோதிப்பவர்களைப்போல ஓயாது புன்னகைப்பதும் தலை அசைப்பதுமாக இருந்தார்கள்.

“நாங்கள் மூவரும் யெகோவா சாட்சிகள். தேவனுடைய சாம்ராச்சியப் புகழைப் பரப்பும் பிரசங்கிகள். யெகோவாதான் கடவுள் என்பதை நீங்கள் நம்பவேண்டும். பரிசுத்த ஆவி என்பதெல்லாம் சுத்தப் பொய், அவர் கடவுளே அல்ல. நித்திய நரகம், நித்திய தண்டனை என்பதெல்லாம் ஏமாற்று பேச்சு. சிரியாவில் போர், ஈராக்கில் பங்காளிச் சண்டைகள், உக்ரைன் பிரச்சினை இப்படி எல்லா பிரச்சினைகளுக்கும் இருக்கிற ஒரே தீர்வு தேவனரசு நிறுவப்படுவது” – என மாத்யாஸ் மாஸ்ட்டர் மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டுபோக, அந்தோணிசாமிக்கு சோர்வைத் தந்தது.

– “நீங்கள் சொல்வது எதுவும் எனக்கு விளங்கலைங்க மிஸியெ”, எனக் குறுக்கிட்டார்.

– ” இதை புரிந்துகொள்வதில் என்ன சங்கடம்? நீங்கள் தமிழ் வாசிப்பீர்கள் இல்லையா?”

– “ஓரளவு எழுத்தைக்கூட்டி வாசிப்பேன்”.

– ” பிரெஞ்சு அல்லது ஆங்கிலமாவது தெரியுமா? ”

– “எனக்குத் தெரியாது. மனைவி பிரெஞ்சு வாசிப்பாங்க”

– ” எங்களிடத்தில் பிரெஞ்சிலோ ஆங்கிலத்திலோ பிரதிகள் இல்லை. தமிழில்தான் இருக்கின்றன” – என்ற மத்யாஸ் மாஸ்ட்டர் ‘காவற்கோபுரம், ‘விழித்திரு’ என்றிருந்த புத்தகங்களில் இரண்டிலும் தலா ஒன்றைக் கொடுத்தார். பின்னர் ” நாங்கள் பைபிள் வாசிக்கிறோம், நேரம் கிடைக்கும்போது அவசியம் வரவேண்டும்” எனப் பெண்களுடன் புறப்பட்டுச் சென்ற மத்யாஸ் மாஸ்ட்டர், அன்று மாலை தொலைபேசியில் “ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்கணும், வெள்ளென வந்திடுவேன். வீட்டுலே தயாரா இருங்கோ” என்றார். பிரான்சுவாஸ் சம்மதிக்க அந்தோணிசாமியும் பைபிள் படிக்கப் போகிறார்.

இப்போது ஒரு மொரீஷியக் குடும்பம் “மாரியம்மன் கஞ்சிக்கு” அழைத்திருக்கிறது. மாத்யாஸ் மாஸ்ட்டருக்குப் போன்போட்டு “மொரீஷியஸ் தமிழர்கள் ‘மாரியம்மனுக்குக் கஞ்சி’ படைக்கிறார்களாம், அழைத்திருக்கிறார்கள், இந்த ஞாயிற்றுகிழமை பைபிள் படிக்க வரமுடியாது” என்றார். மாத்யாஸ் மாஸ்ட்டருக்குக்கோபம் வந்தது.

– “உண்மையில் உங்களை அழைத்திருப்பது யார் தெரியுமா?

– “——” – இவர் பதில் சொல்லவில்லை.

– பிசாசாகிய சாத்தான். கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்து அவருக்கு எதிரான கலகத்தில் தன்னுடன் உங்களை இணைத்துக்கொள்ள பார்க்கிறான். பைபிள் படிப்பதைவிட்டு இப்படி சாத்தானுக்குப் பலியாகாதீர்கள்.

– மிஸியே. எனக்கு இதுபற்றியெல்லாம் விவாதிக்கப்போதாது. பைபிள் படிக்க நீங்க கூப்பிட்டீங்க வந்தேன், அவங்க மாரியம்மன் கஞ்சிக்கு கூப்பிடறாங்க போகிறேன்.

– இப்படியொரு பதிலை சொன்னால் எப்படி? தெளிவா ஒரு காரணத்தைச் சொல்லுங்களேன், பார்ப்போம்.

– எனக்குச்சொல்ல தெரியலை.

மத்யாஸ் மாஸ்ட்டரின் கையில் தொலைபேசி இருக்கிறபோதே, அந்தோணிசாமி உரையாடலைத் துண்டித்துக்கொண்டார்.
பிரான்சுவாஸ¤ம் அந்தோணிசாமியும் மண்டபத்தை நெருங்கும்போது, நான்கு பேர் மாரியம்மன் சிலையை சுமந்தபடி நடந்தார்கள். நான்கைந்தடி துராத்தில், அவர்களுக்கு முன்பாக ஒருவர் கரகத்துடனிருந்தார். சிறுவன் ஒருவன் தோளில் சூலத்தைத் தாங்கியபடி நடந்தான். இரண்டு பெண்கள் “களிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுட்டே, யுகம் பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுட்டே” எனப்பாட, மற்றவர்கள் கோரஸாக ‘ஓம் ஷக்டி’ என்றார்கள். அந்தோணிசாமியின் அண்டை வீட்டு மொரீஷியஸ் நண்பர் இவர்களைப் பார்த்துவிட்டார். “வாங்க வாங்க இப்போதுதான் ‘ஷிவ் ஜீ’ பூஜா முடிந்தது, உள்ளே போய் உட்காருங்க” என்றார். மண்டபத்திற்குள் அந்தோணிசாமியும் -பிரான்சுவாசும் நுழைந்தார்கள். பெரும்பாலோர் வெளியிலிருந்தால் பாதி நாற்காலிகளுக்கு மேலே காலியாக இருந்தன. எதிரே வரிசையாக நான்கைந்து பஞ்சலோக சிலைகள் சுவர்களில் தகுந்த இடைவெளிகளில் சாமிப்டம்போட்ட காலண்டர்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. வலதுபக்கம் நாற்காலிகளை அடுத்து, நடக்க இடம்விட்டு சுவர் ஓரத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவரவர் வீட்டில் செய்துகொண்டுவந்த உணவுவகைகளையும் கஞ்சிக்குடத்தையும் எல்லோரும் பார்க்கும்படி வைத்திருந்தார்கள். ஒலிபெருக்கியில் தமிழ் திரைப்படபாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. மொரீஷியஸ் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். புதுச்சேரி மற்றும் ஈழத்தமிழர்களின் குடும்பங்களும் இருந்தன. திடீரென்று மண்டபத்தில் சலசலப்பு. வெளியில் ஊர்வலம்போன மாரி அம்மன் சிலையும் மனிதர் கூட்டமும் உள்ளே நுழைந்தது. அவர்களுக்காகவே காத்திருந்ததுபோல மண்டபத்தை நிறைத்த கற்பூர வாடையும் வேப்பிலை மணமும் அந்தோணிசாமிக்குப் பிடித்திருந்தது. மண்டபம் நிரம்பியதும் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களின் முகங்களை ஆர்வத்துடன் பார்த்தார். அவர்கள் மனங்களைப்படித்தார். மிக எளிதாகத்தான் எழுதப்பட்டிருந்தன . நீண்ட வாக்கியங்கள் இல்லை. புரியாத சொற்கள் இல்லை. வெவ்வேறான இழைகள் தறியில் ஒன்றிணையும் அதே சாதுர்யத்துடன் முகங்களில் பாவனைகளும், சமிக்கைகளும். ஒரு கிளிஷேக்கு தம்மை தயார்படுத்தி வந்தவைபோலவும், அக் கணத்திற்கு வாழ்ந்துமுடித்துவிட்டு நீர்த்திடவேண்டுமென்பதுபோலவும் இருக்கிற முகங்கள். பிரான்சுவாவும்-அவரும் எதிரெதிரே அமர்ந்து நடத்திய உரையாடல்களும்; மத்யாஸ் மாஸ்டரின் சாத்தான்பற்றிய விளக்கங்களும் பிறவும் ஒரு பெருங்கனவு சமுத்திரத்தின் ஜெல்லிமீன்களாக ஆழ்மனைதில் நீந்திக்கொண்டிருக்க இதுவரை உபயோகித்திராத பலத்துடன் கைகால்களை உதறி பெரும்பாய்ச்சலுடன் வெளியில் வந்தார். எல்லா நாற்காலிகளிலும் அந்தோணிசாமிகள். பெஞ்சிலிருந்த பஞ்சலோகச் சிலைகள்கூட அந்தோணிசாமிகளாகத் தெரிந்தன.

– பிரான்சுவா கொஞ்சம் உன்னுடைய மொபைலைக் கொடேன்.

– எதற்கு?

– அவசரமா ஒருத்தருக்குப் போன்பண்னனும்.

– இந்த நேரம் போன் பண்ணக்கூடாது. பிறகு செய்யலாமே.

– இப்பவே சொல்லியாகணும், பிறகென்றால் மறந்துபோகும்.

போனை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தார். மத்யாஸ் மாஸ்ட்டரைப் போனில் பிடித்தார்.

– ஹலோ! மத்யாஸ் மாஸ்ட்டரா? அந்தோணிசாமி பேசறேன். நான் உங்களிடம் பைபிள் படிக்க வந்தற்கும் மொரீஷியர்கள் அழைத்தார்களென்று “மாரியம்மன் கஞ்சி”க்கு வந்ததற்கும் காரணத்தைக் கண்டுபிடிச்சுட்டேன்.

– என்ன அந்த எழவு காரணம்?

அந்தோணிசாமிகளைப் பார்க்க முடிவது

—-

நன்றி: சொல்வனம் – இதழ் 108 – 01-07- 2014

——————————————————–

 

மொழிவது சுகம் ஜூலை 10 2014

1.உண்டாலம்ம இவ்வுலகம்: செல்வேந்திரா

Asaiஅச்செய்தியை வெகு சாதாரணமாகக் கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. செல்வேந்திராவைப் பார்க்கிறபோதெல்லாம் கீழ்க்கண்ட பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன:

 

இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத்தேழு வருடங்கள் காத்தனன்;
வந்தனம்; அடி பேரருள் அன்னாய்!
வைரவீ! திறர் சாமுண்டி! காளி!
சிந்தனை தெளிந்தேனிதை! யுந்தன்
திருவருட்கென அர்ப்பனம் செய்தேன்!

 
நண்பர் செல்வேந்திராவிற்கு எல்லோரும் வைத்துள்ள பெயர் ‘ஆசை’ நானும் ஆசை என்ற பெயரில்தான் அவரை அறிவேன். ‘தமிழ் வானொலி -தொலைபேசி’- ஆசை: ஒரு முக்கோண வாழ்க்கை. இலண்டனிலிருந்து ஒலிப்பரப்பாகிக்கொண்டிருக்கும் தமிழ் வானொலி ஒன்றின் தீவிர ரசிகர். ஆசுகவி ! கவிதைகள் அவர் கவனமெடுத்து செய்யும்போதெல்லாம் பரவாயில்லை என எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு கவிதையா? தமிழ் வானொலியா? எதுவேண்டும் எனக்கேட்டால், தமிழ் வானொலியென்று பதில் வரும். கவிதையை என்றைக்குத் தேர்வு செய்கிறாரோ அன்றைக்கு நன்றாக கவிதை வருமென சொல்லிக் கொண்டிருக்கிறேன். நண்பர் க.பஞ்சாங்கம் ஸ்ட்ராஸ்ஸ்பூர் வந்திருந்தபோது, எங்களுடன் ஜூரிச் வரை வந்தார். அவருக்கொரு வானொலி நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்து தமது அன்பினை வெளிப்படுத்திக்கொண்டவர். பிள்ளைகள், மனைவி இருக்கிறார்கள். நண்பர் பெருமிதத்துடன் மற்ற்வர்களிடம் பகிர்ந்துகொள்ளுபடியான வாழ்க்கையை அவர்கள் நடத்துகிறார்கள்; இருந்தும் அவர் தனிமனிதராக “உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்” என ஒரு சித்தரைபோல வாழ்ந்துகொண்டிருக்கிறார். கடந்த இருமாதங்களுக்கு முன் அவர் அறிவித்த செய்தி ‘இறந்த பிறகு’ எனது உடலை மருத்துவ கல்லூரிக்குப் பயன் படவேண்டும் என முடிவெடுத்து எழுதிக்கொடுத்திருக்கிறேன் என்றார். அவர்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் என்னிடம் காட்டினார். ஊரெல்லாம் கண்தானம் பற்றி பேசுகிறார்கள். சிலர் துணிச்சசலாக அதை செயல் படுத்தவும் செய்கிறார்கள். இறந்த பிறகுதானே? என நக்கலாக சிரிப்பவர்களுமுண்டு, அந்த மனம் எத்தனை பேருக்கு வரும். இதுவரை எனக்கில்லை. “இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்/தமியர் உண்டலும் இலரே வகை மக்களால்தான் “உண்டாலம்ம இவ்வுலகம்” என பாடப்பட்டது. நமக்கு எழுதவும் சொல்லவும் அழகாகவும் வருகிறது. ஆனால் செயல்படுத்த துணிச்சலில்லை. செல்வேந்திராவைப் போன்றவர்கள் சொல்வதில்லை. நற்காரியங்கள் என நாம் நினைப்பதை அல்லது சிந்தனைகளை வாய்கிழிய பேசி சாதித்ததென்ன என பல முறை யோசிக்கிறேன். பேசும் மனிதர்களால் அல்ல செயல்படுத்தும் மனிதர்களால் ‘இவ்வுலகம் உண்டாலம்ம!

 

2. பிரியங்களின் அந்தாதி – இவள் பாரதி

 
இன்றைக்குக் கவிதை என்பது உருவகங்களாற் கட்டமைத்த படிமங்களாக; பரவசங்கள், குமுறல்கள், கோபங்கள் ஆகியவற்றை அடர்த்தியான சொற் சிக்கனத்துடன் மன அனுபவத்தின் வரிசையில் சொல்வது என்றாகி இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை ஓகோவென்றிருந்த கவிதை இடையிற் சோர்ந்து இன்றைக்கு மீண்டும் இளைய தலைமுறையினரின் வரவால் புத்துயிர் பெற்றுள்ளது. இலக்கியம், ஓவியம், சிற்பம் எனச் சொல்லப்படும் மூன்றுமே கலையின் பன்முக வெளிப்பாடுகள். கலைத்துறை, உணர்ச்சியும் அறிவும் இணைந்து செயல்படும் களம். கலைத்துறைக்கு இரண்டும் வேண்டும். உணர்ச்சியோ அறிவோ தனித்து சாதிக்க முடியாது. எனினும் கலைஞன் என்பவன் அறிவைக்காட்டிலும் புலன்களால் வழிநடத்தப்படுபவன். புலன் உணர்வுகளை அறிவூடாக புரிந்துகொள்வதும், மற்றவருடன் பகிர்ந்துகொள்வதும் கலை ஆகிறது. ‘கலை’ என்பது அழகின் ‘ஞான’ வடிவம் என்றும் பொருள்கொள்ளலாம். படைப்பிலக்கியத்தில் கவிதைதான் சிறுகதை, பெருங்கதை என்கிற பிற வடிவங்களைக் காட்டிலும் ‘அழகின் அறிவு வடிவமாக அடையாளப் படுத்த உதவும் மொழியாடல். சாபக்கேடுபோல அண்மைக்காலங்களில் கவிதைகள் அதிகம் கொண்டாடப்படுவதில்லை, கவிஞர்கள் அதிகம் போற்றப்படுவதில்லை. (வருகிற தகவல்கள் சிறுகதை, நாவல்களுக்கும் சாதகமாக இல்லை. கட்டுரைகள வாசிப்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகரித்து வருகிறதாம். கட்டுரைகள், பிரமுகர்களின் சுயசரித்திரம் ஆகியவற்றைப் பதிப்பிக்கவே, பதிப்பகங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனவாம்.

 

இளம்பாரதி
இக்கவிஞருடைய ‘பிரியங்களின் அந்தாதி என்ற தொகுப்பை அண்மையில் வாசித்தேன். கவிதைக்கு கலை வடிவமென்று ஒன்றிருக்கிறது. அது அழகியல் சார்ந்தது. அக்கலை வடிவம் வார்த்தைத் தேர்வுகளிலும் வாக்கியங்களைச் செதுக்குவதிலும் கிடைப்பதாகும். இவரது கவிதையிலுள்ள பூடகமற்ற மொழி, நேரான வாக்கியங்கள், அவர் கவிமனத்தைக் குறைத்து மதிப்பிட வைக்கின்றன. நவீன இலக்கியம் வகுத்துள்ள கருத்தியம் இவரது கவிதைகளுக்குப் பொருந்தவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் அவைமட்டுமே ஒரு கவிஞனை எடைபோடக் காணுமா? அதனால் ஒட்டுமொத்த கவிதைகளையும் குறைத்து மதிப்பிட முடியாதில்லையா? சொல் அலங்கராத்தை தவிர்த்த அவர் கவிதைமொழி, பாசாங்கற்ற தொனியில் உரையாடுவதே கூட அழகுதான். எதிர்காலத்தில் பல நல்ல கவிதைகளைப் படைக்ககூடிய ஆற்றல் கவிஞருக்கு உண்டென்பதை இத்தொகுப்பு தெரிவிக்கிறது. . இன்றைய தேவை இயற்கையைக் கண்டு பரவசப்படும் கவிஞர்கள் அல்ல, இச்சமுதாயத்த்தைக்குறித்து சில கணங்களேனும் அக்கறைகொள்ளும் கவிஞர்கள். எது நடந்தால் என்ன? யார் எக்கேடு கெட்டால் என்ன? ‘நான்’ ‘எனது’தான் வாழ்க்கையென வாழப்பழகிய உலகில் ( படைப்பிலக்கிய உலகும் இதில் அடங்கும்) தமது கவிதைகள் கொண்டு ஊழியம் செயும் கவிஞராக இவரைப் பார்க்கிறேன். காட்சிகளைக் கண்டு குதூகலிக்கும் மனநிலைக்கு மாறாக, அக்காட்சிக்கான காரண காரிய தேடல்களில் பங்கெடுப்பவராக, இச்சமுயாதத்தின் ஒழுங்கிசைவுக்குக்குக் குரல்கொடுப்பவராக – கலை மக்களுக்காக – என்ற கொள்கையைப் பிரகடனப்படுத்தும் கவிஞராக இருக்கிறார்.
புவி, ‘வெப்பமயமாதல்’ குறித்து அவருக்குள்ள கவலையும், அக்கவலையூடாக அவர் கட்டுகின்ற நம்பிக்கையும் இக்கவிதையில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

 

வெப்பமயமாதல்

வெப்பமயமாதல் பற்றி
அடிக்கடி கனவு வருகிறது
தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திற்காக
வேரோடு அறுத்தெரியப்பட்ட
ஆண்டுகள் பலவான மரங்களைக்
கடந்து சென்ற பயணத்திற்குப்பின்

கனவிலிருந்து தப்பிக்கும்
உபாயம் ஏதும் தெரியாதபோது
நான் சாப்பிட்டுத் தூக்கியெறிந்த
மாமரத்தின்கொட்டை
கொல்லையின் ஈரப்பதம் உள்வாங்கி
முளை விட்டிருந்தது

அன்று முதல் நீரூற்றி வளர்க்க
ஆரம்பித்தேன்
அதற்கடுத்த நாளிலிருந்து
அந்தக் கனவு வருவது
நின்றுவிட்டது.

‘தப்பிய சொல்’ என்றொரு கவிதையும் இக்கவிஞர் மீது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இரு சக்கர வாகனத்தில்
மேம்பாலத்தில்
ஏறிக்கொண்டிருக்கையில்
கவிதைக்கான ஒரு சொல்லை
காதுகளில் வழிந்திருந்த
ஒரு பாடலில் இருந்து
பிடித்துக்கொண்டேன்

அலுவலகம் வந்த பின்பு
நெடுநேரம் கழிந்து வந்தது
அந்தச் சொல்லுக்கான நினைவு
மீண்டும் மீண்டும்
நினைவு படுத்திப் பார்க்கிறேன்
அந்தப் பாடலையும் முணுமுணுக்கிறேன்
உள்ளிருந்து தப்பிய அந்த சொல்
அகப்படவில்லை

பல பிரயத்தனங்களிலிம் சிக்காத
அது ஒருவேளை
என்னைத் தேடியபடியிருக்குமோ
எனும் ஆதங்கம் மேலிட
அனைத்து வேலைகளையும்
அப்படியே விட்டுவிட்டு
இருசக்கரவாகனத்தில் செல்கிறேன்
மேம்பாலம் நோக்கி
காதுகளில் இசை வழிய

‘காதலை’ பாடாத கவிஞர்கள் இருக்க முடியுமா? இளங்கவிஞர்கள் தாண்ட முடியாத சொல். இத்தொகுப்பிலும் காதல் கவிதைகளின் எண்ணிக்கைக்குக் குறையில்லை. இவரும் தன் பங்கிற்கு நிறையவே எழுதியுள்ளார். ‘வெற்றிடத்தின் கடைசிப்புள்ளி’ என்ற கவிதையில் இடம்பெறும் இவ்வரிகள் முக்கியமானவை:


இருவருக்குமிடையில்
விழத் துவங்கியிருக்கும்
வெற்றிடத்தை
எதைக்கொண்டு நிரப்புவதென
சிந்திக்கிறேன்
………………….
…………………….

வெற்றிடத்தின்
கடைசிப்புள்ளி மறையும்போது
நாம் மேற்கொண்டு பேசலாம்
ஒரு நண்பனைபோல நீயும்
ஒரு தோழியைபோல நானும்
—-
இத்தொகுப்பில் ஓரிடத்தில் கவிஞர் “எதில் தொடங்கப்படுகிறதோ அதிலே முடியவும் கூடிய விசித்திரங்களைக்கொண்டது வாழ்க்கை” எனக் குறிப்ப்டிருப்பார். அவ்வரியே இத்தொகுப்பைப் பற்றி நான்கைந்து வரிகள் எழுத தூண்டுகோலாக அமைந்தன.

பிரியங்களின் அந்தாதி
ஆசிரியர்: இவள் பாரதி
முகவரி வெளியீடு
6/25 பத்மாவதி நகர்,
இரண்டாவது குறுக்குத் தெரு
விருகம்பாக்கம், சென்னை-92

 

3.The Land of Green Plums

 

Herta Muller என்பவரின் இந்த நாவலை அண்மையில் வாசித்தேன். . தன்மையில் சொல்லப்படும் கதை. கதை சொல்லி ஓர் இளம்பெண் அவள் பெயர் நாவலில் இல்லை. ஆசிரியரின் சுயசரிதைதான் நாவல் என்று சொல்லப்படுகிறது. ருமேனிய கம்யூனிஸ அரசாங்கத்தின் இறுதிக்கால சர்வாதிகாரியாக இருந்தவர் நிக்கோலா சௌசெஸ்கு(Nicolae Ceausescu). மிக்கேல் கார்பச்சேவின் பெரெஸ்றோயிகா, ருமேனியாவையும் விட்டு வைக்கவில்லை. பிற இடங்களில் அமைதியாக கம்யூனிஸம் வீழ்ந்தது. இங்கே மட்டும் இரத்த களறியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. பலியான உயிர்களில் (1989) சர்வாதிகாரியும் அவருடைய துணைவியாரும் அடக்கம். புரட்சியாளர்கள் தம்பதிகளை கைது செய்து அவசரமாய் தீர்ப்பளித்து தீர்ப்பின் மை உலர்வதர்க்குள் சுட்டுக்கொன்றார்கள். இன்றளவும் இப் புரட்சிகுறித்து மர்மம் நீடிக்கிறது. இந்த ருமேனிய அதிபர் கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டாலும் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என நடந்துகொண்டவர். அன்றைய செக்கோஸ்லோவோகியா தன்னிச்சையாக செயல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களை தடுத்த நிறுத்த சோவியத் யூனியன் வார்சா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமது நேசநாடுகளின் உதவியோடு பிராகு நகரை ஆக்ரமிக்கிறது(1968) இந்த ஆக்ரமிப்பின்போது வார்சா ஒப்பந்தத்தின் அடிப்படையில் போலந்து, அங்கேரி போன்ற நாடுகள் தங்கள் படைகளை சோவியத் யூனியன் படைக்குத் துணையாக அனுப்பிவைத்தன. இதில் பங்கேற்காத நாடு ருமேனியா. இதுபோல பல விஷயங்களில் சோவியத் யூனியனுக்கு எதிராக மேற்கத்தியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் சௌசெஸ்கு. எனினும் வடகொரிய நாட்டின் அப்போதைய அதிபரை ரோல் மாடலாகக்கொண்டு ஆட்சி செய்தமையால் அமெரிக்கர்களின் கோபத்திற்கும் ஆளானவர் எனவே இவரை வீழ்த்த KGB, CBI இரண்டுமே காத்திருந்தன. இந்த சர்வாதிகாரியின் ருமேனியாவிலிருந்து, ஜெர்மன் மொழிபேசிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த இளைஞர் கூட்டம் தப்பநினைக்கிறது. இடையில் நாம் எதிர்பார்ப்பதுபோல கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ நாடுகளிள் அசல் முகத்தை எதிர்கொள்கிறோம். பேசகூட உரிமையற்ற மக்கள், சிறைக்கைகதிகளின் உபயோகம், பன்றிகள், மாடுகள் இறைச்சிக்காக கொல்லும் இடங்களில் இரத்தத்தைக் குடித்தும், அதன் வயிற்றிலிருக்கும் கழிவுகளை வீட்டிற்குக் கடத்திச்சென்றும் பசியாறும் தொழிலாளிகள். சர்வாதிகாரியைப்பற்றிய துதிபாடல்கள். செக்யூரிட்டேட் உளவுப்படை காவலர்களின் சந்தேக வளையம், நண்பர்களைக்கூட நம்பமுடியாத கொடூரம், கேள்விமுறையற்ற கைதுகள், சிறைவாழ்க்கை என கதை சொல்லி ருமேனிய நாட்டின் சர்வாதிகார வாழ்க்கையை விவரிக்கிறார். ஆனால் அவ்வளவும் அங்கத மொழியில் உருவகக் கதைபோல சொல்லப்படுகிறது. நாவலாசிரியர் கவிஞர் என்கிறார்கள்; கதை கவிதை மொழியில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மிகமிக எளிமையாகசொல்லப்பட்டிருக்கிறது. எனினும் நாவல் நெடுக குறுக்கிடும் ஐரோப்பிய தாவரங்களின் பெயர்கள் நம்மை அந்நியப்படுத்துவதைபோன்ற உணர்வை ஏற்படுத்தித் தருகின்றன.

நன்றி: திண்ணை July 14 2014

————————————————————-

 

 

இலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-5: எடுத்துரைப்பியல் -1

P1000909(இக்கட்டுரைகள் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி)

இது எடுத்துரைப்பு உலகம், எடுத்துரைப்பின் காலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதுகுறித்த அறிவியல் பிரக்ஞையோ, பயிற்சியோ இன்றி எடுத்துரைப்பில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எடுத்துரைப்பு’ என்ற சொல்லாடல் வேண்டுமானால் நமக்குப் புதிதாக இருக்கலாம். மாறாக அதனுடைய செயற்கூறுகள் இலைமறைகாயாக மனிதர்கள் என்றைக்கு மொழியூடாக உரையாட ஆரம்பித்தார்களோ அன்றே தொடங்கிவிட்டன. குழைந்தைப் பருவத்தில் தாலாட்டிலும்; மொழி புரிய ஆரம்பித்ததும் பாட்டியின் கதையிலும் எடுத்துரைப்பு நம்மை மடியில் போட்டுக்கொண்டது. கதைகளின்றி நாமில்லை என்றாகிவிட்டோம் அதற்கான தேவைகள், கையாளும் மனிதர்கள் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் கவர்ச்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன. உண்மைகளைக் காட்டிலும் அவ்வுண்மைகளைச் சுற்றிக் கட்டப்படும் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. உண்மைகளைச்சொல்ல கதைகள் உதவியதுபோக தற்போது கதைகளைச் சொல்ல உண்மைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். எடுத்துரைப்பை நம்பியே கலைகளும், இலக்கியங்களும், திரைப்படங்களும் பிறவும் உள்ளன. ஓர் படைப்பிலக்கியவாதியை அவன் எடுத்துரைப்பை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் அது வியாபித்தித்திருக்கிறது. விளம்பரங்கள், அரசியல், இதழியல், பொருளியல், மருத்துவம்.. எடுத்துரைப்பின் நிழல்படியா துறைகள் இன்றில்லை.

“ஒருவர் தாம் கையாளும் பொருளைக்குறித்து, பிறரால் ஏற்றுக்கொள்ள்பட்ட உண்மைககளின் அடிப்படையில் காலவரிசையில் கூறினால் சரித்திரம் ஆகிறது. மாறாக அப்பொருள் குறித்த சரித்திரத்தை தம்முடைய உண்மைகளின் அடிப்படையில் தம்முடைய விருப்பவரிசையில் ஒருவர் தெரிவித்தால் கதையாகிறது”( பிரேமோன்). இரண்டுமே நடந்து முடிந்த ஒன்றை தெரிந்துகொள்ள முனையும் ஒரு புதிய மனிதருக்கு உரைப்பதாகும். ஆக சரித்திரமும் கதையும் ஒன்றுதான். பிரெஞ்சு மொழியில் Histoire (History) என்றசொல்லுக்கு ‘கதை’ என்றும் ‘வரலாறு’ என்றும் ‘பொய்’ என்றும் பொருளுண்டு. தற்போது அதிகம் வழக்கில் இல்லையென்கிறபோதும் சரித்திரம் என்ற சொல் தமிழிலும் வரலாற்றையும், கதையையும் (உ.ம். பிரதாப முதலியார் சரித்திரம்) குறிக்கும் சொல்லாக அண்மைக் காலம்வரை இருந்திருக்கிறது. பிரெஞ்சு மொழியில் எடுத்துரைப்பியலை பற்றி பேசுவதற்கு Histoire, ‘Récit, Intrigue போன்ற சொற்கள் உள்ளன. ஆங்கிலத்தில் அத்தனை துல்லியமாக வேறுபாடு உணர்த்தப்படவில்லை. இந்நிலையில் பேராசிரியருடைய அசுர உழைப்பைகண்டு பிரம்மிக்கவேண்டியிருக்கிறது. தமிழில் க.பஞ்சாங்கத்தைத் தவிர்த்து வேறொருவர் எடுத்துரைப்பியல் குறித்து இத்தனை நுட்பமாக தமிழ் மரபில் காலூன்றி பேசியிருக்கிறார்களா? பேசியிருப்பினும், விரிவாகவும் தெளிவாகவும் அப்பொருளைக் கையாண்டிருப்பார்களா எனத்தெரியவில்லை. நவீன இலக்கிய கோட்பாடுகள் என்ற இந்நூலில் பத்து கட்டுரைகளை எடுத்துரைப்பியல் என்ற தலைப்பின் கீழ் வாசிக்கக் கிடைக்கிறது. “எடுத்துரைப்பியல் சில விளக்கங்கள்” என்ற முதல் கட்டுரை எடுத்துரைப்பியலை அறிமுகம் செய்கிறது. அதனைத் தொடர்ந்து ஒன்பது கட்டுரைகள், பாமரரும் விளங்கிக்கொள்ளும் வகையிற் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது.

1 எடுத்துரைப்பியல்: சில விளக்கங்கள்

நம்மிடம் வந்தடையும் தகவல்கள் அல்லது செய்திகள் அனைத்துமே திரித்து கூறப்படுவைதான் என்ற உண்மையை நமது தினசரி வாழ்க்கையிலிருந்து உதாரணம் காட்டுகிறார் க.பஞ்சாங்கம். ஒரு முனையிலிருந்து மறுமுனையை சென்றடையும் ஒரு தகவல் அல்லது செய்தி, அச்சம்பவத்தின் கவர்ச்சியைப் பொருத்து, அதைக்கொண்டு சேர்க்கும் மனிதரைப் பொறுத்து விரியவோ அல்லது சுருங்கவோ செய்கிறது. ஒரு நிகழ்ச்சிக்குப் “புனைவு மதிப்பு” உருவாவதன் ரகசியம் மனிதப் பிரச்சினைகளோடு தொடர்பு உடையதென்கிறார். “ஒருவர் சந்தையில் ரத்த வாந்தி எடுத்தான்” என்ற தகவல் ஒவ்வொரு மனிதராகக் கடந்து இறுதியில் “நம்ம தெரு நல்லதம்பி இருக்கான்ல, அதான் ஒங்க சித்தப்பா மகன் நல்லதம்பி , மந்தையில காக்கா காக்காவா வாந்தி எடுத்தானமில்ல. உனக்குத் தெரியுமா? என்னப்பா அதிசயம்!” எனமுடிகிறது. “பேனை பெருமாளுக்கும்” கலையில் மனிதர்கள் எல்லோருமே தேர்ந்தவர்கள்தான். ஒரு கதைக் கட்டுக்கதையாகும் இரகசியத்தை – புனைகதையாக உருமாறும் நுட்பத்தை நம் அன்றாட வாழ்க்கை நரம்புகளின் துணைகொண்டு சொல்ல கட்டுரைகளை மட்டுமே எழுதிக்கொண்டிருக்கிற மனிதர்களுக்குச் சாத்தியமில்லை. புனைவும் வசப்படவேண்டும், மனிதர் கற்பனைகளுக்குள் ஊடுறுவும் வல்லமையும் வேண்டும். எனவேதான் மொழியியல், படைப்பியல் இரண்டையும் நன்கறிந்த க.பஞ்சாங்கம் எடுத்துரைப்பு குறித்து பேசுவதை நாம் கேட்கவேண்டியவர்காளாக இருக்கிறோம். பேராசிரியர் சொல்வதுபோல இன்றைக்கு ஊடகங்கள் மூலமாக நம்கவனத்திற்கு வருகிற தகவல்கள், செய்திகள், உண்மையென நம்பிக்கொண்டிருக்கிற வரலாறுகள், ஆவணங்கள், திரைப்படங்கள், துணுக்குகள், சிறுகதைகள், நாவல்கள் அனைத்துமே எடுத்துரைப்பு களமாக, தளமாக விளங்குகின்றன.

எடுத்துரைப்பின் குணநலன்களைப் பேசவருகிற அவர் பாரதியின் கவிதையை மேற்கோள்காட்டுவது அழகு:

“இன்பமெனச் சிறுகதைகள் -எனக்கு
ஏற்றமென்றும் வெற்றியென்றும் சிலகதைகள்
துன்பமெனச் சிலகதைகள் – கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சிலகதைகள் ( ந. இ.கோ. பக்.131)

புனைகதை எடுத்துரைப்பைப் பற்றி பேசுவது கட்டுரை ஆசிரியரின் நோக்கம் என்பதால் ‘இலக்கியம், இலக்கியத்தின் வகைமைகள்,கலை, வடிவங்கள் குறித்தும் சுருக்கமான அறிமுகங்கள் உள்ளன. அவை கட்டுரையின் மையப்பொருளை நோக்கி நம்மை அழைத்து செல்ல உதவுகின்றன. “புனைகதை எடுத்துரைப்பு என்பது தொடர் நிகழ்ச்சிகளால் ஆனது, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளின் தொகுப்பு. ‘புனைவு மதிப்பு’ என்பது மனிதப்பிரச்சினைகளோடு தொடர்புடையவை” என ஆசிரியர் தரும் குறிப்புகளும் கவனத்திற்கொள்ளதக்கவை.

 எடுத்துரைப்பு என்பது என்ன?

1. நிகழ்ச்சிகள். 2. நிகழ்ச்சிகளுக்கான வார்த்தைக் குறியீடுகள். 3. எடுத்துசொல்லும் அல்லது எழுதும் செயல்பாடென்றும் முறையே மூன்று அலகுகளாலானவை எனக்கூறி, அவையே கதை(story), பனுவல் (Text), எடுத்துரைப்பு (Narration) என மொழியியல் வல்லுனர்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளன என ஆசிரியர் தெரிவிக்கிறார். “பனுவலிலிருந்து நம்முடைய மனநிலைக்கு ஏற்ப, தேவைக்கேற்ப சுருக்கி எடுத்துக்கொள்ளப்படும் எடுத்துரைப்பு நிகழ்ச்சிகள் – கதை யென்றும்; பேசுகின்ற அல்லது எழுதுகின்ற மொழியாடலே பனுவலென்றும் விளக்கம் கிடைக்கிறது.

எல்லாவிதமான புனைகதை எடுத்துரைப்புகளையும் ஆராய்வதற்குப் பொதுவான ஒரு முறையியலை உருவாக்குவதற்காக இப்பகுதி எழுதப்பட்டதென்பதை முதலாவது காரணமாகவும்; தனிப்பட்ட ஒரு எடுத்துரைப்பு வகையினைப் பிரித்தெடுத்து அதைக் கற்றுகொள்வதற்கான ஒரு வழிமுறையைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற நோக்கம் இரண்டாவது காரணமென்றும் கட்டுரை ஆசிரியர் தெரிவிக்கிறார். எடுத்துரைப்பியல் கட்டுரைகளில் அடிக்குறிப்பாக வருகிற செய்திகள் முக்கியமானவை. பல கலைச்சொற்களை சந்திக்கிறோம், அவை நமக்குப் புதியனவும் அல்ல. எனினும் எடுத்துரைப்பியல் பின்புலத்தில் கேட்டிராத தொனியில் அவை ஒலிக்கின்றன. அவற்றில் மூன்று சொற்களைப் பற்றி பேராசிரியர் இங்கு சற்று விரிவாக தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பனுவல் (Text), புதிய வரலாற்றியல் (The New Historicism), மொழியாடல் ( Discourse) ஆகியவையே அந்த மூன்று சொற்கள்.

பனுவலா? பிரதியா?

Text என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ் அறிஞர்களில் ஒரு பிரிவினர் ‘பிரதி’யென்றும் மற்றொரு பிரிவினர் பனுவல் என்றும் அழைக்க இரண்டுமே வழக்கிலுள்ளதை ஆசிரியர் சுட்டிக்காட்டிவிட்டு தமக்குப் பனுவல் என்ற சொல்லே ஏற்புடையதென்று தெரிவிக்கிறார். அகராதியை புரட்டிப் பார்த்தபோது எடுத்துரப்பியலில் உள்ள Text என்ற சொல்லுக்கு பிரதி பொருந்திவதைப்போல தெரிகிறது. இன்னொரு பக்கம் நடைமுறை வழக்கில் copy என்ற சொல்லுக்குப் பிரதி என்ற சொல்லை பயன்படுத்திவருவதைப்பார்க்க, அதே ‘பிரதி’ என்ற சொல்லை எடுத்துரைப்பியல் மொழிக்கும் பயன்படுத்தினால் குழப்பத்தைத் தராதா என்ற ஐயமும் வருகிறது. இது மொழியியலாளர்கள் தீர்மானிக்கவேண்டிய ஒன்று. பனுவல் என்ற சொல்லோடு வேறு சில பிரச்சினைகளையும் ஆசிரியர் எழுப்புகிறார். அதிலொன்று, அண்மைக்காலங்களில் படைப்பு,படைப்பாளி, வாசகன் குறித்து தரப்படும் புதிய விளக்கங்கள். விக்கிரமாதித்தன் கதை கேள்விபோல பின் நவீனத்துவவாதிகள் எழுப்பும் கேள்வியை [ஒரு படைப்புக்கு யார் சொந்தம் கொண்டாடுவது ” படைத்தவனா” (எழுதாளனா?) “உயிர்கொடுப்பவனா” (வாசகனா?)] ஆசிரியரும் எழுப்புகிறார். ரொலாண் பர்த்தின் கருத்துக்களை முற்றாக மறுத்தும் நூல்கள் பல வந்துவிட்டன. இலக்கியம் என்பது அறிவியல் அல்ல, இங்கே முடிவான உண்மைகளுக்கு சாத்தியமில்லை.

புதிய வரலாற்றியல்

அமெரிக்க திறனாய்வாளர் ஸ்டீபன் க்ரீன்ப்ளாட் என்பதுகளில் பயன்படுத்தியை இப்புதிய இலக்கிய சித்தாந்தம், பிநவீனத்துவத்தின்கீழ் பலகோட்பாடுகளை உள்ளடக்கியதென்கிறார் கட்டுரை ஆசிரியர். இப்புதிய வரலாற்றியலின்படி “வரலாற்றுக்குள் புனைவையும் புனவுக்குள் வரலாற்றையும் தேடி அடையலாம்……. வரலாற்று தகவல்கூட ஒரு கதைதான்….ஒவ்வொரு தலைமுறையும் தன் காலத்தின் தேவைக்கு ஏற்ப இறந்த காலத்தை வரலாறு என்ற பேரில் மாற்றி எழுதிக் கொள்ளுகின்றன..”( ந.இ.கோ. பக்கம் 136)

டிஸ்கோர்ஸ் ( Discourse)

மொழியியலில் மிகவும் முக்கியமானதொரு சொல்லாக கருதப்படுகிற இச்சொல்ல்லைக்குறித்து, “எடுத்துரைப்பியல்: சில விளக்கங்கள் என்ற இக்கட்டுரையின் அடிக்குறிப்பு விரிவாகப் பேசியிருக்கிறது. மிஷெல் •பூக்கோ என்கிற பிரெஞ்சு மொழியியல் அறிஞர் இச்சொல்லுக்கு ஒரு பன்முகப்பார்வையைக் கொடுத்திருக்கிறார். வெகுசன வழக்கில் ‘டிஸ்க்கூர்'(Discours) என்ற பிரெஞ்சு சொல்லுக்கு சொற்பொழிவு அல்லது உரை(பேச்சு) என்றே பொருள். பிரெஞ்சு அகராதியில் பொருள் தேடினால்: மேடையில் பேசுதல்; கொடுத்த தலைப்பில் விரிவாகப் பேசுதல்; சீராக முன்னெடுத்துச்செல்லும் பேச்சு; மேடைப்பேச்சுகென்று எழுதி தயாரித்த உரை என்றெல்லாம் பொருள் இருக்கின்றன. இவற்றை யெல்லாம் கணக்கிற்கொண்டே மொழியியலுக்குள் மிஷெல் பூக்கோ இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெளிவு. இலத்தீன் மொழியை வேர்சொல்லாகக் கொண்ட இப்பிரெஞ்சு சொல்லுக்கு ‘சொல்லாடல்’ என்ற தமிழ்ச்சொல்லை விட ‘மொழியாடல்’ என்ற தமிழ்ச்சொல் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.

2. கதையும் நிகழ்ச்சியும்

எடுத்துரைப்பியலில் க.பஞ்சாங்கத்தின் இரண்டாவது கட்டுரை.

“கதை என்பது என்ன? ‘கதை’ என வொன்று இல்லாமல் மனித இருப்பு சாத்தியமா?” என்ற கேள்விகளை எழுப்பும் ஆசிரியர் அதற்கான பதிலையும் கூறிவிடுகிறார். அவரது கூற்றுப்படி கதை என்கிற ஒரு கூறுதான், உலக நிகழ்ச்சிகளை எடுத்துரைப்புப் பனுவலாக மாற்றிப் போடுவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எனினும் இதொரு நுட்பமான கருத்தியலாகக் கதை பனுவலுக்குள் விளங்குவதால் வாசகருக்கு இது நேரடியாக எளிதில் வசப்படக்கூடியதாக இல்லை எனும் கூற்றை நாம் மறுப்பதற்கில்லை.

“திரும்பத் திரும்பக் கதையை சலிக்காமல் கூறும் பண்பு, ஒரே கதையில் பல்வேறு வடிவங்களை எளிதில் கண்டு கொள்ளும் திறம் வெவ்வேறு ஊடகங்களில் அதே கதை எப்படியெல்லாம் மாறி விளங்குகிறது என்பதை அடையாளம் காணும் திறம் ஆகிய திறங்களை உடையவர்களால்தான் கதை வடிவத்தை விளக்க முடியும்” என ஆசிரியர் கூறுவதைப்போல இப்பகுதி சாதாரண வாசகர்களுக்கு அத்தனை எளிதாக விளங்கக்கூடிதல்ல.

கதையின் உள்ளார்ந்த அமைப்பு – குறியியல்:

எடுத்துரைப்பியலில் குறியியல் ( Sémiotique) குறித்து ஆய்வு செய்து அதன் பண்பாட்டை வரையறை செய்தவர் அமெரிக்க அறிஞரான சார்லஸ் சாண்டர்ஸ் பியெர்ஸ் ( Charles Sanders Peirce). பின்னர் சுவிஸ் மொழியியலாளர் பெர்டினான் தெ சொஸ்ஸ¤ய்(Ferdinand de saussure) என்பவருக்கு குறியியல் சமூகத்தில் பொதிந்துள்ள குறியீடுகளின் உயிர் வாழ்க்கைச் சம்பந்தப்பட்ட அறிவியல்.
ஒரு கதையோட்டத்தில் குறியியல் ஆய்வு என்பது இருவகையானது:
எடுத்துரைப்பில் தொழில் நுட்பங்களை ஆய்வதென்பது முதலாவது; கதைசொல்லல் எனும் பிரபஞ்சத்தினுடைய நிர்வாக சட்டதிட்டங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென்பது இரண்டாவது. இவற்றைக்கூட பொது அலகொன்றினால் அள்விட முடியாது. இருவகையான அணுகுமுறைகள் தேவையென்கின்றனர் இத்துறையில் ஆய்வினை மேற்கொண்ட மொழியியல் வல்லுனர்கள்: அவர்களின் முடிவின்படி:

1. அனைத்து தொடர் நிகழ்வுகளையும்கொண்டு உருவாகும் ஒரு கதை புரிதலுக்குரியதாக இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்த தர்க்கத்தை பிரதிபலிக்கும் சட்டங்களின் கீழ் அணுகுவது முதலாவது வகை.

2. மேற்கண்ட நிர்பந்தந்துடன், அக்கதைக்கென ஏற்படுத்திக்கொண்ட பிரத்தியேக மரபு; பண்பாடு, இலக்கியம், நிகழ்வு அரங்கேறும் காலம், கதை சொல்லியின் பாணி போன்ற காரணிகள் இணைந்து நடைமுறைபடுத்துகிற சட்டதிட்டங்களின் லீழ் அணுகுவதென்பது இரண்டாவது வகை.
ரஷ்ய எடுத்துரைப்பு ஆய்வாளர் விளாதிமீர் ப்ராப், பிரேமோண்ட், கிரேமோஸ் போன்ற அறிஞர்களின் மொழியியல் உண்மைகளைக்கொண்டு ஆசிரியர் கதையின் உள்ளார்ந்தை அமைப்புகளை விளக்க முற்படுகிறார். குறிப்பாக கிரேமாஸ் (Greimas) திறனாய்வாளரின் நிகழ்ச்சியைக் குறியீடுபடுத்தலில் உள்ள இரண்டு தளங்கள்: 1. வெளிப்படையாகத் தெரியும் எடுத்துரைப்புத் தளம். 2. உள்ளார்ந்து அமையும் தளம். “எடுத்துரைப்பின் அமைப்பியல் பற்றிய புரிதலில் ஓரளவிற்காவது பயிற்ச்யில்லாமல் வாசகர்கள் பனுவலில் சொல்லப்பட்டிருக்கும் இயற்கை மொழிமூலமாக அப்பனுவலுக்குள் இருந்து கதையைக் கண்டுணரமுடியாது” எச்சரிக்கயை மீண்டும் நாம் சந்திக்கிறோம்.

எடுத்துரைப்பியல் பற்றிய கருத்தாக்கங்கள்

எடுத்துரைப்பியலை மதிப்பிட மேற்கத்திய மொழியியல் அறிஞர்கள் முன்வைத்த அலகுகளைக் குறித்து இப்பகுதி பேசுகிறது. குறிப்பாக மொழியியல் துறை விவாதிக்கிற மொழியின் மேனிலை மற்றும் ஆழ்நிலை அமைப்பு எடுத்துரப்பியலுக்கும் பொருந்தும் எனத் தெரியவருகிறது. லெவிஸ்ட்ரோஸ், கிரேமாஸ் போன்றோரின் அறிவியல் உண்மைகளை தமிழ் நிலத்திற்குப் பொருந்தும் வகையில் ஆசிரியர் பயன்படுத்திக்கொண்டிருப்பது சிறப்பு.

ஆழ்நிலை எடுத்துரைப்பு அமைப்பு என்பது வாய்ப்பாடு அல்லது சூத்திரம் தன்மையது என்பதை உருதிப்படுத்தும் வகையில், மானுடவியல் அறிஞரான லெவிஸ்ட்ரோஸ் தொன்மத்தின் அடிப்படையில் ஆய்வினைமேற்கொண்டு ” “எதிர் இணைநிலைகளைக்கொண்டு இயங்குகிற முதுகுடி சார்ந்த படைப்புகளை முழுமையற்ற தன்மைகொண்டவை எனக்காரணம் காட்டி மனித இனம் விலக முடியாது” என முன்வைத்த உண்மையின் அடிப்படையில் கிரேமாஸ் என்பவரின் குறியீட்டுச்சித்திரங்களின் அடிப்படையில் இரண்டுவகையான மிகக்குறைந்த அலகுகளையுடைய எதிரிணைகளை விளக்கியிருக்கிறார்.

மேனிலை எடுத்துரைப்பு அமைப்பு என்பது கதைச் சுருக்கத்தின் (Plot) பிரச்சினைகளை பேசுவதன் ஊடாக விளக்குதலில் எதிர்கொள்கிற சிக்கல்களை அலசுகிறது. கதை என்பது குறியீடுகளின் தொகுதியான பனுவலிலிருந்து சுருக்கமாகக் கட்டமைக்கப்பட்ட கருத்தியல், எனவே மொழியியல் வல்லுனர்களுக்கு அது தன்னளவிலேயே புரிய முடியாத புதிர். இந்த ஒரு காரணத்தினாலேயே கதையொன்றை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறபொழுது, இக்கதைச்சுருக்க பிரச்சினையுடனேயே தொடங்கவேண்டியிருக்கிறது. கதையைத் தொடர் நிகழ்ச்சிகளின் பெயர் முத்திரையாக மொழியிலாளர்கள் பார்க்கும் காரணம் இதுதான். ரொலாண்ட் பர்த்தினுடைய ஐந்து வகையான வாசிப்பு முறைகளில் இப் பெயர்முத்திரை வாசிப்பு அணுகு முறையும் ஒன்றெனச் சொல்லப்படுகிறது.
இப்பகுதியில் நாம் விளங்கிக்கொள்வது “வாசகர் தமது வாசிப்புத் தளத்தில் தன்னுடைய அறிவுத் தேவைக்கேற்ப ஒரு தலைப்பைக் கதைக்கு அமைத்து கொள்கிறார். வாசிப்பில் முன்னேறிச் செல்ல செல்ல தொடக்கத்தில் இட்ட தலைப்புகளை அவர் மாற்றிக்கொள்ளவும் செய்யலாம்”. கிடைக்கும் வேறொரு சுவாரசியமான செய்தி, “கதைக்கு மாறாக, கதைச்சுருக்கம் கால வரிசைப்படி எழுதப்படவேண்டும், அவ்வாறில்லையெனில் அது கதைச் சுருக்கமாகாது.

கதை நிகழ்ச்சிகள்

“ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாற்றுகிற காரியமே நிகழ்ச்சி”. இப்பண்பு ஒரு பனுவலில் கதையை உருவாக்கும் ஒரு செயலி. ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகளே கதையை பனுவலுக்குள் நடத்துகின்றன. இங்கே ‘நிலை அமைதி’ மற்றும் “இயங்கும் நிகழ்ச்சி” என்கிற இரண்டு சொற்களையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது. ஆசிரியர் பனுவலின் கதை நிகழ்வை நிகழ்வுகளின் இயக்கமாக, வெகு எளிமையாக விளக்கிச்சொல்கிறார். அவருடைய மொழியில் சொல்வதெனில் “அடுத்து வருகிற நிலவமைதிகள் வரிசையாக வருகிற நிகழ்ச்சியாக தன்னளவில் வளர்ந்து கொள்கின்றன” இந்நிகழ்ச்சிகள் அவற்றின் செயல்பாட்டளவில் இருவகைப்படுகின்றன. முதலாவது: தமக்கு இணையான வேறொரு மூலத்தை அல்லது தொடக்கத்தை உருவாக்குதல்; இரண்டாவது: ஒரு மூலத்தை அல்லது தொடக்க சம்பவத்தை விரிவு படுத்துகிற கண்ணிகளை பின்னுதல்.

நிகழ்ச்சிகளும் தொடர் ஒழுங்குகளும்

நிகழ்ச்சிகள் இணைந்து ஒழுங்கான தொடர்ச்சிகளாக மாறுவது எப்படி? ஒழுங்கான தொடர்ச்சிகள் எவ்வாறு கதையாகின்றன என்ற வினாக்களை எழுப்பி இரண்டு அடிப்படை விதிமுறைகள் இருக்கின்றன என்கிறார். ஒன்று: காலம் சார்ந்த தொடர் ஒழுங்கு இரண்டு: காரணகாரிய தொடர் ஒழுங்கு.

காலம் சார்ந்த தொடரொழுங்குவில் “கதைக்காலம் பற்றிய கோட்பாடு மிகச் சிறந்த முறையில் காலவொழுங்கோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய மரபோடு தொடர்புடையதாக இருக்கிறது. எனவே இது “கதையினுடைய எதார்த்தமான பன்முகப்பட்ட பண்பினை மாற்றி அந்த இடத்தைப் பதிலீடு செய்கிறது. இவ்வாறு செய்வதன்மூலம் போலியான ஓர் இயல்புத் தன்மையை ஏற்படுத்துகிறது”.

காரண காரிய தொடரொழுங்கில் ‘அதுவும் அதற்குப் பிறகும்’ என்ற காலம்சார்ந்தும் ‘அது ஏன் அல்லது அது ஏனென்றால்’ என்ற காரணகாரியத்தோடும் தொடர்ச்சி நிகழ்கிறது.

மிகக்குறைந்த அளவிளான கதை:

மேற்கண்ட இரண்டினுள் எது கதையை முன் நகர்த்துகிறது என்ற கேள்வி ஒரு புறமிருக்க பேராசிரியர் பிரின்ஸ் என்பவரின் மற்றொரு ஆய்வுக் கருத்தையும், நிகழ்ச்சிகளை முன்வைத்து இங்கே நினைவூட்டுகிறார். அது மிகக்குறைந்த அளவிளான கதை என்ற கருத்தியம்: உ.ம். 1. அவன் பணக்காரனாக இருந்தான்; 2. பிறகு நிறைய பணத்தை இழந்தான்; 3. அதன் விளைவாக அவன் ஏழையாகிவிட்டான். . இக்கருத்தியம் மூன்று காரணிகளால் உருவானது: 1. காலத்தொடர்ச்சி 2.காரண காரிய உறவு 3. தலைகீழ் மாற்றம் இம்மூன்றும் காரண காரிய உறவோடு கூடிய அணுகுமுறைக்கு ஒரு முழுமைத் தன்மையை வழங்குபவை.

நிலையான அலகுகளும் செயற்கூறுகளும்

நிலழ்வுகளின் பொது அலகை கண்டறிய ரஷ்ய அறிஞர் விளாடிமீர் ப்ராப் , அந்நாட்டின் வனதேவதை கதைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். அதில் அவர் அறியவந்த உண்மை, தனிக்கதைகளுக்கு இவைதான் காரணமென சுட்டப்படும் தகுதிகொண்ட நிகழ்வுகளும், நிரந்தரமற்ற பிற காரணிகளும் சேர்ந்தே நிலையான அலகுகளை கட்டமைக்கின்றனவென்றுகூறி, தனிக்கதைகளை வடிவமைக்கிற இந்நிலையான அலகுகளை செயல் கூறு என அழைத்தார்.

விளாடிமீர் நிகழ்ச்சியின் செயற்கூறுகளை இருவகையில் பொருள்கொள்கிறார். “செயற்கூறு என்பது எந்த ஒன்றிலும் முழுமையாக செயல்படும் முறையியல்மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிகொள்ளுகிறது”, அடுத்ததாக “செயற்கூறு மற்றவையோடு கொள்ளுகிற உறவானது வெவ்வேறுபட்ட அளவை உடையது என்ற முறையில் இயங்கி அதன் மூலமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளுகிறது. பிராப்பின் முடிவுகள் நான்கு :

1. கதை மாந்தர்களின் செயல்பாடுகள் எப்படி, யாரால் நிறைவுற்றன என்பவைபற்றி பொரு படுத்தாமல், அவைகள் ஒரு கதையில் நிலையான கூறுகளாக அமைந்துள்ளன.

2. வனதேவதை கதைகளில் அறியப்படும் செயற்கூறுகளின் எண்ணிக்கை அள்விடக்கூடியதாகும்.

3. செயற்கூறுகளின் வரிசை முறை எப்பொழுதும் ஒரே மாதிரியானதாகும்.

4. வனதேவதை கதைகளின் அமைப்பைபொருத்தவரை எல்லா கதைகளும் ஒரே மாதிரியானவை

விளாடிமிர் முடிவை கட்டுரை ஆசிரியர் இப்படி சுருங்க உரைக்கிறார்: “கதையில் ஒரு செயற்கூறு மற்ற செயற்கூறுக்குத் தானாகவே இயங்கிச்செல்கிறது. ஒவ்வொரு செயற்கூறும் இரண்டு மாற்றுக்கூறுகளையும் இரண்டு திசைகளையும் தொடங்கிவைக்கின்றன. இதன் தொடர்ச்சியாக கதை உருவாக்கம் நிகழ்கிறது.”

விளாடிமிரைத் தொடர்ந்து அவர் வழியில் கதை நிகழ்வுகளில் ஆய்வினை மேற்கொண்டவர் பிரெஞ்சு மொழியியல் அறிஞர் குளோது பிரேமோன் (Claude Bremond): ” எல்லா வரிசைமுறைகளும் வளர்கின்றன அல்லது கெட்டுவிடுகின்றன” “ஒரு வளர் நிலையிலான வரிசைமுறை பற்றா குறையினாலோ அல்லது சமநிலை இன்மையினாலோ தொடங்குகிறது.

இறுதியாக பேராசிரியர் இக்கட்டுரையில் ( கதையும் நிகழ்ச்சியும்) “ஒரு தெளிவான முறையியலை இதுவரை அமைக்க முடியவில்லை ” என முடிக்கிறார். பிறதுறையில் வேண்டுமானால் எடுத்துரைப்பு நிகழ்வினைப்பற்றிய ஆய்வுகள் ஒரு தெளிந்த முடிவினைக்கொடுத்திருக்க வாய்ப்புண்டு. (இதுவரை பிற துறைகளை, ஆய்வுக்கு மொழியியல் அறிஞர்கள் அதிகம் எடுத்துக்கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை) கதை சார்ந்த தளத்தில் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான். காரணம் இக்கட்டுரையின் இடையில் சொல்லப்பட்டதுபோல கதைசொல்லும் பிரபஞ்ச நிருவாகத்தில் இருவகையான சட்டங்கள் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு உண்மை அவை புரியாததும் புதிருக்குரியதுமான மொழியில் சொல்லப் பட்டுக்கொண்டிருப்பதும்.

(தொடரும்)

 

மொழிவது சுகம் ஜூன் 29

1. Herta Muller:

2009 ஆண்டு நோபெல் பரிசை பெற்றவர். -ருமேனியா நாட்டைச்சேர்ந்த இந்த எழுத்தாளர் பெண்மணி ஜெர்மனில் வசிக்கிறார். கடந்த முறை அமெரிக்கா சென்றிருந்தபோது எனது பெரிய மகள் நன்றாக இருக்கிறதென்று சொல்லி இவரது ஆங்கில மொழி பெயர்ப்பு நாவலைக் கொடுத்தாள். நாவலின் பெயர் The Land of Green Plums.

“When we don’t speak, said Edgar, we become unbearable, and when we do, we make fools of ourselves என ஆரம்பமே ஈர்ப்பதாக இருந்தது. நாவல் எளிமையான, சிறுசிறு வாக்கியங்களில் சொல்லப்பட்டிருப்பினும் எனக்குப் புரியாத சொற்கள் நிறைய. மிக மெதுவாகத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசித்து முடித்ததும் எழுதுகிறேன்

2. La terre du cielம் ஹரூகி முராகாமியும்

ழான் பியர் க்ரோ என்ற பிரெஞ்சு நண்பர், இங்கே (Strasbourg) La terre du ciel கிளை ஒன்றை துவக்கி இருக்கிறோம். அதன் அமைப்பாளர்கள் எதிர்வரும் 25/6/2014 அண்று கூட இருக்கிறோம் நீயும் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைத்திருந்தார். நண்பர் குரோ 70வயது ஆசாமி. மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பவர். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் குடும்பத்துடன் நட்பிருக்கிறது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த என் மகள் திருமணத்திற்கு கணவன் மனைவி இருவரும் வந்திருந்தார்கள். இந்தியாவிலிருந்து கொண்டு சென்றிருந்த இரண்டு சைக்கிள்களில் ஒன்றை பரிசாக அவருக்கு அளித்திருந்தேன். அதற்கு ஒரு டயர் வேண்டுமெனக் கேட்டிருந்தார். சென்றமுறை இந்தியா வந்தபோது அதைக் கொண்டுவர தவறிவிட்டேன். ஊரிலிருந்து திரும்பி நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிலையில்தான் La terre du ciel அமைப்பை பற்றிக் கூறி அழைத்தார். புதன் கிழமை அக் கூட்டம் இருந்தது. திங்கட்கிழமை குரோவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. புதன் கிழமை நிகழ்ச்சியை மறந்திடாதே என நினைவூட்டியவர், நான் சற்று முன்னதாகப் போகவேண்டியிருக்கிறது, நீ எலிஸபெத்தை ( அவர் மனைவி) காரில் அழைத்துக்கொண்டு ஆறுமணிக்கெல்லாம் வந்துவிடவேண்டும் என்றார். வரும்போதே எல்லோரையும்போல் உன்னுடைய பங்களிப்பாக நான்கு பேர் சாப்பிடக்கூடிய அளவில் இரவு உணவிற்கு இருவகையான உணவுவகைகளை கொண்டுவந்துவிடு என்றார். உண்மையில் அன்று போகும் எண்ணத்தில் இல்லை. உலகக் கால் பந்து போட்டியின் முதல் சுற்று கfடைசி போட்டி. ஏற்கனவே பிரான்சு கலந்துகொண்ட இரு போட்டியிலும் நன்றாக விளையாடி, போட்டிக்கு 3 கோல்கள் என்று போட்டிருந்தார்கள். புதன் கிழமை போட்டி நன்றாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு இருந்தது. விருப்பமின்றியே அந்த நிகழ்வுக்குப் போனேன். Strasbourg லிருந்து 20 கி.மீ. தொலைவிலிருந்த Niedernai ஓர் அழகான ஊர். நிகழ்ச்சி, மரி என்பவர் வீட்டில் நடந்தது. பதினைந்து பேருக்குமேல் கூடியிருந்தனர். இங்கே குரோ குடும்பத்தைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள்: குரோ ஸ்ட்ராஸ்பூர் நகர சபையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், சமூக ஆர்வலர், பியானோ தொடங்கி நான்கைந்து இசைக்கருவிகளை வாசிப்பவர். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளை தனியாகவும் அவர் மனைவியுடனும் சேர்ந்து நடத்திவருகிறார். எலிஸபெத் உளப்பகுப்பாய்வு வல்லுனர், புல்லாங்குழல் நன்கு வாசிப்பார். எனவே இயல்பாகவே la terre du ciel உறுப்பினர்களைக் குறித்து நல்ல அபிப்ராயம். நிகழ்ச்சியில் ‘இந்தியர்களின் தீர்க்க தரிசனம்’ (la Sagesse indienne ) என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவு நன்றாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் இரவு உணவிற்கு இல்லை. பத்துமணிக்கெல்லாம் வந்துவிட்டேன். வீட்டை அடைந்த பிறகுதான் காற்பந்துபோட்டி இரவு பத்துமணிக்கு தொடங்குகிறது என்பதை புரிந்துகொண்டேன்.போட்டி முடியும்போது இரவு பன்னிரண்டு. இரவில் சீக்கிரம் படுத்துப் பழக்கம் உறக்கம் வரவில்லை. கைவசம் “ஹரூகி முராகாமியின்” ஸ்புட்னிக்கின் காதலர்கள்’ (Les amants du Spoutnick) என்ற படைப்பு ஒலிவடிவில் இரண்டு நாட்களுக்கு முன் நூலகத்தில் வாங்கிவந்த குறுந்தகடு இருந்தது. அதைபோட்டுக் கேட்டுவிட்டு படுத்தபோது இரவு மூன்றுமணி. இது பற்றி தனியாக எழுதவேண்டும்.

பா. செயப்பிரகாசம். – உயிர்வேலி.

இந்த வாரத்தில் எனக்கு இரண்டு வேலைத் திட்டங்கள் இருந்தன. கடந்த ஜனவரி மாதம் கோவை வந்திருந்தபோது சில நண்பர்கள் தங்கள் படைப்புகள அளித்தார்கள். அவர்களில் ஒரு சிலர் படைப்புகளைக் குறித்து எழுதுவதென்று தீர்மானித்தும் தள்ளிப்போட்டுவந்தேன். அனார் என்ற இலங்கைக் கவிஞர் மூன்று தொகுப்புகளை அளித்திருந்தார். அவற்றை வாசித்தேன். கவிதைகள் என்னை ஏமாற்றவில்லை. இன்றுள்ள தமிழ்க் கவிஞர்களில் அனார் முக்கியமானவ்ர் என்று புரிந்தது. மகிழ்ச்சியோடு ஒரு கட்டுரையை எழுதி முடித்துதேன். அடுத்ததாக இலங்கு நூல் செயல் வலர் பெயரில் க.பஞ்சாங்கத்தைபற்றிய கட்டுரைத் தொடரின் ஐந்தாவது பகுதி. அவரது தலித் இலக்கியம் பற்றிய பார்வையை எழுதலாமா என மீள் பார்வைபோல அக்கட்டுரைகளைத் திரும்பவும் படித்தேன். எனக்கு உடன்பாடற்றவை அதிகம் இருப்பதுபோல தெரிந்தது; எழுதும் கட்டுரையில் அவற்றை பதிவு செய்யாமல் எழுதவியலாது என்ற நிலையில் அதனைத் தவிர்த்துவிட்டு எடுத்துரைப்பு பற்றிய அவரது கட்டுரைகள் மிக நன்றாக வந்திருந்தன அதுபற்றி எழுதலாம் தலித் இலக்கியத்தை பிறகு வைத்துக்கொள்ளலாம் எனமுடிவெடுத்து கட்டுரை ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் பா.செயப்பிரகாசத்த்தின் சிறுகதை ஒன்றை வாசித்ததையும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் போல தோன்றியது

மே தீராநதி இதழில் தி.க.சி பற்றிய கட்டுரையைப் படித்தேன். அக்கட்டுரை நன்றாக வந்திருந்தது. அவருக்கு எழுதினேன். ஜூன் இதழில் தமது சிறுகதையொன்று வந்திருப்பதாகத் தெரிவித்தார். தீராநதி ஒவ்வொரு மாதமும் 15 தேதிகளில் கிடைத்துவிடும். இம்முறை அது தள்ளிப்போனது. இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கத்திற்கு மாறாக தீராநதி இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு எனது கருத்தைச் சொல்கிறேன் என்று எழுதினேன். அவர் தீராநதி வந்த சிறுகதையையும்  மீண்டும் அகரம் இதழில் வந்திருந்த மற்றொரு கதையையும் அனுப்பியிருந்தார். இடது சாரி சிந்தனையாளர், சமூக ஆர்வலர். நல்ல படைப்பாளி, எளிமையானவர். இந்த நான்கும் அவரிடம் எப்போதும் கலந்தே வினை புரிகிறது; ஒன்றின் செயல்பாட்டில் மற்றவையும் முன் நிற்கின்றன; அவருடைய சிறுகதைக்கு வருகிறேன் நாவலின் குறுகிய வடிவம் என்றாலும் ஒற்றை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டது; உரைநடையின் கவிதை வடிவம் அல்லது புகைப்படம் அல்லது ஓவியம். காட்சியை உள்வாங்குவது உணர்ச்சியை மொழிபடுத்துவதென்கிற இரண்டு வினைகள் ஒரு புனைவை எழுத காரணமாகின்றன. முதுகில் விழும் சாட்டை வார் பற்றிய சொரணையின்றி வண்டிமாடுகளைபோல வாழ்க்கையை இழுத்துச்செல்லும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கையில் நிகழும் சம்பவம் சிறுகதையாக்கப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்கிறார் கதை ஆசிரியர் வண்ணான் குடியைச்சேர்ந்த பெண்ணொருத்தி பால்குடி மறக்காத சிசுவையும், கணவனையும் விட்டுவிட்டு வேறு சாதி இளைஞனோடு ஓடிவிடுகிறாள்; காலம் காலமாக கிராமங்களில் நடங்கும் சம்பவம்தான்; ஆனால் அதனை தட்டிக்கொட்டி, நகாசு வேலைகள் செய்து, ஒரு நல்ல குறும்படத்தை அளித்திருக்கிறார் எனச் சொல்லவேண்டும். வட்டார வழக்கு மொழிகளை கையாளுவதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதன் தொனியும் வடிவமும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். அதை எழுத்தில் சிதைக்காமல் கொண்டுவருவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல. பா.செயப்பிரகாசம் ஒரு கிராமத்தின் உயிர்மூச்சை வெப்பத்துடனும், ஈரப்பதத்துடனும் மொழியாக்கி இருக்கிறார்.

நாட்டுப்புற பாடல்போல வாக்கியங்கள்:

– ஏன் ஆத்தா நேரமாயிருச்சா

‘ச்சா’ என்பதை அழுத்தி விதைபோட்டாள்

“வண்னாரப் பிள்ளைக்கு கொழுப்பை பாரு!”

இந்த கேலியையும் கிண்டலையும் கிராமத்து வாசத்தை நுகராதவர்கள் உணர முடியாது.

அதுபோல கீழ்க்கண்ட உவமையும் என்மனதைக் கவர்ந்தது. சாதாரண சொற்கள் கலைவடிவம் பெறும் தந்திரம் இதுதான்.

“தேவாணை நெஞ்சோடு அணைத்து சேலையை விலக்கி, புகையிலைக் கட்டையைபோல் கிடந்த மார்பெலும்பில் பூவரசங்காய்களைப் போல்திருத்தியிருந்த காம்பில் பிள்ளை வாயை வைத்து அழுத்தினான். அப்படியே பல் பதித்துவிட்டது”

“காற்சதங்கையுடன் ஆடும் சாமியாடியின் கழுத்தில் தொங்கும் சாட்டைபோல் அந்தச் சிறுநகரின் கழுத்துக்கு மேலாக ஆறு ஓடுயது”

கிராமத்துக் கதையை எழுதும் இன்றைய இளைஞரகள் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம், உவமை உருவங்களை படைக்கிறபோதும் கவனமாக கதைக்கும், கதை மாந்தர்களுக்கும் கதைக்களனுக்கும் உரிய சொல்லாடல்களை கையாளுவது..

—————————————————————————-

 

மொழிவது சுகம் -ஜூன் 22 2014

1. Procrastination அல்லது தள்ளிப்போடுதல்

தள்ளிப்போடுதல் என்ற சொல்லை நண்பர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதுவும் ஒரு மன நோய்தான். இம்த மனநோய்க்கு நானும் பலியாகி இருப்பதின் அடையாளம் தான் எனது எழுத்தில் உள்ள தொய்வுக்கான காரணம். கடந்த காலங்களைப் பார்க்கிறபோது இவ் வருடத்தில் எழுதியது குறைவுதான். 2013 ஆரம்பத்திலிருந்து 8 சிறுகதைகளோடு ஒரு தொகுப்பு நிறைவுறாமல் இருக்கிறது.  வெகு நாட்களுக்குப்பிறகு சொல்வனம் நண்பர் கிரிதரன் அன்பினால் அவர்களுக்கு ஒரு சிறுகதையை இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். எனது கடைக்கு வருகிற மொரீஷியஸ் வாடிக்கையாளர்கள் அவர்கள் நடத்தும் ‘மாரியம்மன் கஞ்சி’ என்ற பண்டிகைக்கு அழைத்திருந்தார்கள். வருடத்தில் மூன்று பண்டிகைகள் நடத்துவார்கள்; எல்லா பண்டிகைகளுக்கும் போக முடிவதில்லை. ஞாயிற்றுகிழமைகளில் அல்லது முன்னிரவுகளில் அவற்றை நடத்துகிறார்கள். குறைந்தது 3 மணிநேரம் அந்நிகழ்ச்சிக்கு ஒதுக்கவேண்டும். கடைவைத்திருப்பதால், வாடிக்கையாளர்களின் மனங்கோணக்கூடாது எனப் போகவேண்டியிருக்கிறது ஒரு சிறுகதைக்கான கரு கிடைத்தது.  உடனே எழுதாமற் தள்ளிப்போட்டுவந்தேன்.  சிறுகதைத் தொகுப்பைப்போல,  பிரெஞ்சு இலக்கியத்தைப்பற்றிய கட்டுரைத் தொகுப்பும் முடியாமல் இருக்கிறது. கூடுதலாக நான்கைந்து கட்டுரைகள் எழுதினால் முடித்துவிடலாம். போன வருடத்தில் அம்பை சிறுகதைகளை மொழி பெயர்க்க உட்கார்ந்ததில் அதிக நேரத்தை ஒதுக்கவேண்டியதாயிற்று. பிரெஞ்சு பெண்மணியோடு இணைந்து செய்வதால் நேரம் பிடித்தது.  மொழி பெயர்ப்பு எனது படைப்புத் திறனை (?) கூர்மையைத் சிதைப்பதாக உணர்கிறேன்.  சோம்பலுக்கும் தள்ளிபோடும் மனநோய்க்கும் மொழி பெயர்ப்பு ஒரு காரணம். காலூன்றி இருக்கிற வலைத்தளங்களிலும்ங்கூட அவற்றின் தாக்கம் எதிரொலிக்கிறது. தள்ளிபோடும் மனநோயிலிருந்து விடுபடவேண்டும் என நினைப்பதே  நல்ல அறிகுறிதான். ஆனால் அதையும் தள்ளிப்போடக்கூடாதல்லவா?

சொல்வனம்  இணைய இதழ் 16-6-2014

இந்த இதழ் சிறுகதை இதழாக வந்துள்ளது. நாஞ்சில் நாடன்மொழியில் சொல்வதெனில் ‘அரைக்கோட்டை விதைப்பாடு வேணும்னாலும் எழுதித் தரலாம்” அப்படி வாச்சிருக்கு. நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேகர், குட்டி ரேவதி வ.ஸ்ரீனிவாசன், ரெ. கார்த்திகேசுவின் படைப்புக்களோடு, மொழி பெயர்ப்புளும் உள்ளன.

வல்விருந்து – நாஞ்சில் நாடன் எழுதியுள்ள சிறுகதை.

வழக்கம்போல மனிதர் சிலம்பம் சுழற்றுகிறார். நாஞ்சிலார் எழுத்து. ஒப்பிடமுடியாதது. லாசாரா, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், சு.ரா. என சேர்ந்ததொரு கலவை. கும்ப முனியின் எண்ணைகுளியலை ஓர் பத்துதடவையாவது வாசித்திருப்பேன். எதையாவது எழுதி கிச்சு கிச்சு மூட்டுவதென்பது வேறு. பிறரைக் காயப்படுத்தாத நக்கலும், கேலியும், குத்தலும், கோபமும் எத்தனை படைப்பாளிகளுக்குச்சாத்தியம். அவர் வீட்டில் கட்டுதறி இருக்குமென்றால் களவாடிடணும் என்ற எண்ணம் கடந்த சில நாட்களாவே இருந்துவருகிறது.

குளி முறை அன்று கொஞ்சமாக எடுத்து, பெரிய எண்ணெய்க் கரண்டியில் அளவாய் ஊற்றி, அடுப்பில் வைப்பார். நல்லெண்ணெய் நன்கு காயவும் வேண்டும், முறுகவும் கூடாது. இது கொழுக்கட்டையும் வேண்டும், மாவும் குறையக்கூடாது என்பது போல. எண்ணெய் முறுகாமல் இறக்குவதற்கு எளிய வழி ஒன்று உண்டு. எண்ணெய் காய்ந்து வரும்போது இரண்டு நெல் எடுத்து எண்ணெய்ச் சட்டியில் எறிய வேண்டும். நெல் பொரியும் பருவம் சரியான பருவம். பிறகு சதைத்து வைத்திருந்த இஞ்சி, ஒன்றிரண்டாய்த் தல்லிய குருமிளகு போட்டுப் பொரித்தவுடன் இறக்கி விடலாம். இளஞ்சூட்டில் நல்லெண்ணெய் வடிகட்டியபின், உமியுடன் பொரிந்து கிடக்கும் நெல்லைப் பொறுக்கி வீசிவிட்டு, பொரிந்து கிடக்கும் இஞ்சி, குருமிளமை வாயில் போட்டுக் கரகரவெனக் கடித்துத் தின்பது ஆலயம் தொழுவது போல சாலவும் நன்று. கும்பமுனிக்குக் கடைவாய்ப் பற்கள் கண்காணாத தேசத்துக்குப் போய்விட்டபடியால், தவசிப்பிள்ளையே அதைத் தின்று விடுவார்.

கௌபீன சுத்தனான கும்பமுனி, சிரசில் இருந்து கால் பெருவிரல் வரை எண்ணெய் தேய்த்து முடிக்க 24 நிமிடங்கள் ஆகும். அ·தென்ன கணக்கு 24 நிமிடங்கள் என்று கேட்பீர்கள்! ஏனெனில் ஒரு நாழிகை நேரமாகும் என்று எழுதினால் உங்களுக்கு அர்த்தமாகாது. நீங்கள் FB, Twitter காலக் கணக்கர்கள்.

எண்ணெய்ச் சொட்டுகளை தொப்பூழ் குழி, மூலஸ்தானம், செம்பியன் ஏற்றையின் முகம் எங்கும் தொட்டு வைப்பார் நிதானமாக. மீசை இல்லாத, பல் விழுந்த, வழுக்கையும் நரையும் கூடிய, தோல் திரைந்த கிழட்டு உடலுக்கு எண்ணெய் முழுக்காட்டியது போலிருந்தது கும்ப முனியைப் பார்க்க. தலையினின்றும் இழிந்த எண்ணெய் கண்களில் கசிந்து காந்தியது. கம்பனின் கடவுள் வாழ்த்துப் பாடலொன்று சாரைப் பாம்பு போல் சீறிப் பாய்ந்தது.
– (வல் விருந்து- சொல்வனம் 16-6-20014)
இடுக்கிகோல்ட். -குட்டி ரேவதி.

கதைசொல்லலிலும் தாம் வல்லவர் என்பதைக் குட்டி ரேவதி நிரூபித்திருக்கும் சிறுகதை. அவருடைய படைப்பாற்றலை – மொழிக்கும் அவருக்குமான பிணைப்பை ஒருவரும் குறைசொல்லிவிடமுடியாது. சில பகுதிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதை வாசிக்கிறபோது உணரமுடிகிறது. அது ஒரு குறைதான். எனினும் அவர் எழுத்தாற்றல் பிரமிப்பதாக இருக்கிறது. தக்க தருணத்தில் தமது இருப்பை உறுதிசெய்திருக்கும் ஆக்ரோஷமான எழுத்து. பிரெஞ்சில் துராஸ் ஞாபகம் வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு கவிதையை ஒதுக்கிவிட்டு உரைநடைபக்கம் வாங்களேன் என்ற கோரிக்கையை தாராளமாக நாம் வைக்கலாம்.

சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்பத் தன் அறிவை, அவள் கலையாகத்தீட்டிக்கொண்டாள். பாடினாள், ஆடினாள், நீந்தினாள், வானவியல் பேசினாள், வேட்டையாடினாள், சமைத்தாள், பயிர்வெளி வளர்த்தாள், கவிதை இயற்றினாள், எழுதினாள், எல்லாமே அவள் காலத்தின் நீளமெங்கும் நடந்தபடியே செய்து கொண்டிருந்தாள். அவளுக்குத் தன் வாழ்க்கையில் எதுவுமே மீண்டும் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை”(இடுக்கிகோல்ட் – சொல்வனம் 16-6-20014)

“கவிதை எழுதுகிறவர்கள் உரைநடயிலும் ஜெயிக்கக்கூடும்” என்று சொல்வதுண்டு – இச்சிறுகதை உதாரணம்.

பிற சிறுகதைகளில் யுவன் சந்திரசேகரின் “உலகளந்த நாயகி” ரெ.கார்த்திகேசுவின் ‘வேளைவந்துவிட்டது’ வ.ஸ்ரீனிவாசனின் ‘தீட்டு’ ஆகியவை வாசித்துள்ள பிற சிறுகதைகள். மூன்று கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தி.கசியை நினைவுகூரும் வித்தியாசமான இருகட்டுரைகள். பெரியவர் வெங்கட் சுவாமிநாதனும், சுகாவும் தந்திருக்கிறார்கள். அசோகமித்திரனின் ‘இரண்டு விரல் தட்டச்சு’ம் இருக்கிறது. மூவருமே நன்றாகசொல்ல க்கூடியவர்கள் என்பதால், படிக்க சுவையாக இருக்கிறது.

குன்னி முத்து : இந்த வாரம் படித்து முடித்த நாவல். அரசியல்விமர்சகரின் நாவல்போல இருந்தது. அரசியல்கட்சிகள், இந்துமதம், கிறித்துவ மதத்தின் உட்பிரிவுகள் (இஸ்லாமை கவனமாகத் தவிர்த்துவிட்டு) விமர்சனத்திற்குள்ளாகின்றன. நாவலில் வரும் இருளி, சுந்தரி, கிரேசி, என அவ்வளவுபேரும் விரும்பியோ விரும்பாமலோ சோரம்போகின்றார்கள். அதிக எதிர்பார்ப்புடன் படித்ததாலோ என்னவோ பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானேன். ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் அது இலக்கியம். இதையே குட்டி ரேவதியோ அம்பையோ எழுதினால் அவர்கள் இருப்பை உறுதிசெய்துகொள்ள முனையும் தந்திரம்.  இதில் வலிந்து சொல்லப்பட்டவை அதிகம். ஒருவேளை நமக்குத்தான் இவர்களின் இலக்கிய அரசியலெல்லாம் பிடிபடவில்லையோ என்னவோ?
—————————

 

 

மொழிவது சுகம் மே 15 2014

1. Ap. JC

வஸிலிஸ் அலெக்ஸாக்கிஸ் (Vassilis Alexakis ) என்ற நாவலாசிரியரின் நாவல் ஒன்றை கடந்த ஒருமாதமாக படித்து நேற்றுதான் முடித்தேன், பெயர் Ap. JC. – அதாவது இயேசுவுக்குப் பிறகு. இந்த நாவலைப் பிரெஞ்சு விமர்ச்கர்கள் என்ன சொல்லியிருக்கிரார்கள் என்பதைப் படிக்கவில்லை. புத்தகத்தைச் சுற்றியிருந்த ஒரு துண்டு ரேப்பர் பிரெஞ்சு அகாடெமியின் பரிசுபெற்ற நூல் என்று தெரிவித்தது. ஆர்வ்சத்துடன் படித்தேன். தொடக்கவரிகள் கொடுத்த ஆர்வம் அடுத்திருந்த பக்கங்கள் தரவில்லை. இரண்டு நாட்களிலேயே கசந்துவிட்டது. தொடர்ந்து படித்திருக்க கூடாதுதான். பிரெஞ்சு அகாடெமியின் மீதிருந்த மரியாதை நூலுக்குப் பங்கிட்டு, படித்தேன். அவர்களே பரிசு கொடுத்திருக்கிறார்களே, ஏதேனும் இருக்கும் இருக்குமென்று கடைசிப்பக்கம்வரை இடையில் சில பக்களத் தாண்டிக் குதித்து – (ஒருவேளை அப்பகங்களில்தான் பிரெஞ்சு மொழி அகாடமியின் பரிசுக்கான தகுதி மொத்தமும் இருக்கிரதோ என்னவோ?) படித்துமுடித்தேன். ஒரு மாதம் பிடித்தது. என் வாழ்நாளில் 30 நாட்களை ஒரு புத்தகத்திற்காகாக – சாண்டில்யனில் ஆரம்பித்து ஜெயமோகன் வரை -ஒதுக்கியதில்லை. எதற்காக பிரெஞ்சு அகாடாமெ இதற்குப் பரிசிகொடுத்திருப்பார்கள் என பலமுறை யோசித்தும் விடைகிடைக்கவில்லை. 380 பக்க நாவலில் ஆசிரியரின், புனைவுக்காக ஒதுக்கிய பக்கங்கள் அதிகப்பட்சம் 50 பக்கங்களை ஒதுக்கலாம். மற்றவை பிறநூல்கள் பற்றிய தகவல்களும், அந்நூல்களில் தமது நாவலுக்கு எடுத்துக்கொண்ட கருவின் அடிப்படையில் சொல்லபட்டத் தகவல்களும். பரிசுக்கு வர் எடுத்துக்கொண்ட கருதான் காரணமாக இருக்கக்கூடும். கதை நாயகன் பல்கலைகழக ஆய்வு மாணவன். தந்தையின் நண்பர் சிபாரிசினால், பார்வை குறைந்த மூதாட்டி (Nausicaa Nicollaidis) வீட்டில் தங்கிப் பல்கலைகழகத்திற்கு போய்வருகிறான். கிழவிக்கு அவ்வப்போது நூல்களை வசித்து, தங்கும் செலவை சரிகட்டுகிறான். மிகப்பெரிய செல்வந்தரான கிழவிக்கு வாரிசுகளில்லை. 50 வருடங்களுக்கு முன்பு, தங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து அதோஸ் (Le Mont Athos ) மலையில் மரபார்ந்த கிறித்துவ நெறிமுறையினர் மடாலயங்கள் ஒன்றில் துறவுவாழ்க்கை மேற்கொண்டிருக்கிற சகோதரனை கண்டுபிடிக்குமாறு பணிக்கிறார். சீதையைத் தேடிய அனுமானைப்போல கதைநாயகனும் பயணத்தை மேற்கொள்கிறார். கதை தன்மையில் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லா தேடலிலும் நிலழ்வதுபோலவே, இந்த இளைஞனும் பேராசிரியர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நூலகர், பத்திரிகையாளர், இறுதியாக அதோஸ் மலை துறவி எனப் பலரைச் சந்திக்கிறான். எல்லோருக்கும் அத்தோஸ் மலைவாசிகள் – அதாவது மரபுசார்ந்த கிறித்துவத்தில் நம்பிக்கைவைத்து இயங்கும் மடாலயத்தினரைக் குறித்து குறைசொல்ல நிறைய இருக்கின்றன:

பேராசைப் பிடித்தவர்கள்; வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள், அதிகாரத்திற்காகவும், பொருளுக்காவும் கிரேக்கத்தில் எந்த அரசியல் தலையீட்டையும், ஆட்சியையும் ஏற்பதற்குத் தயாராக இருந்தவர்கள், பெண்களுக்கு எதிரானவ்ர்கள்; யூதர்களைக்கொல்ல காரணமாக இருந்தவர்கள், கொன்றவர்களுக்கு விசுவாசியாக நடந்துகொண்டவர்கள்; கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக இயங்கினார்கள்..என நீளுகிறது அவர்களின் குற்றப்பதிவு. பொதுவாக மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபை கூட்டத்திற்கு அதன் வழிவந்தவர்களுக்கு மரபுசார்ந்த தன்னதிகாரமிக்க கிழக்கு ஐரோப்பிய கிறித்துவர்களை அவ்வளாவாகப் பிடிக்காது. ஐரோப்பாவின் மேற்கு கிழக்கு அரசியல் விருப்பு வெறுப்புகள் ஏதோ பாட்டாளி வர்க்கம் முதலாளிவர்க்க அரசியலைமட்டும் சார்ந்ததல்ல. இதுபோன்ற நூற்றாண்டு பிரச்சினகளெல்லாம் அதற்குண்டு. அதுவும் தவிர அண்மைக்காலத்தில், Auto-fiction எனப்படுகிற சுபுனைவுகள் அதிகமாக வெளிவந்து பிரெஞ்சு வாசகர்களைக் களைபடையச்செய்திருப்பதும் உண்மை. மரபுசார்ந்த கிறித்துவர்களை ஆசிரியர் தமது படைப்பு(?) ஊடாக சில வதந்திகளையும் அதிற் சேர்த்துக்கொண்டு கொடுத்துகிழிகிழியென்று கிழித்திருப்பது பிரெஞ்சு அகாடெமிக்குச் சந்தோஷத்தை தந்திருக்கக்கூடும். அதனைத் தவிர 2007ல் இந்நூலை அகாடெமி பரிசுக்குத் தேர்வுசெய்ய வேறு காரணங்கள் இருக்க முடியாது. இந்த நூல முடித்தபோதுதான் நண்பர் பஞ்சாங்கம் ஒரு தகவல் நினைவுக்கு வந்தது. நாவல் மிக நன்றாக வந்திருந்ததாகக் குறிப்பிட்ட நண்பர் குன்னிமுத்து நாவலில் இந்தியாவில் எப்படி கிறித்துவ அமைப்புகள் செயல்படுகின்றன என்பதை ஆசிரியர் விமர்சித்திருந்ததாக எழுதியிருந்தார். இந்தியாவிலிருந்து வாங்கிவந்த நாவலை படிக்கவேண்டுமென்று எடுத்துவைத்திருக்கிறேன். ஆனால் இதனை ஒரு வாரத்தில் முடித்துவிடுவேன் தொடக்கத்திலே நாவலின் மொழி நடை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.

 

காஃப்காவின் பிராஹா -4

மே -10 -2014Prague 211

இத்தொடரின் இறுதிப் பாகத்திற்கு, (கொடுத்துள்ள தலைப்பிற்கும் ) வந்திருக்கிறேன். படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள எனக்கு பிராகு என்றதும் ஞாபகத்திற்கு வந்திருக்கவேண்டிய பெயர்கள் மிலென் குந்தெரா, மற்றொன்று பிரான்ஸ் காஃப்கா. அப்படி வந்ததா என்றால் இல்லை. வரவில்லை. இருந்தும் காஃப்காவை (?) சந்தித்தேன். ஆமாம் சந்தித்தேன். இக்கணம்வரை அப்படியொரு வாய்ப்பு எனக்கு எப்படி அமைந்தது? எனப்பலமுறை திரும்பத் திரும்ப என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.

Prague 131செக் நாட்டிற்கு பெரிய வரலாறு என்று எதுவுமில்லை. பத்தாண்டுகளாகத்தான் செக் நாடு. 1993 வரை செக்கோஸ்லோவோகியா (இதுவும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவானதுதான்) என்றிருந்த நாட்டை செக்-ஸ்லோவாக் அண்ணன் தம்பிகள் இருவரும் அடிதடியின்றி பாகம் பிரித்துக்கொண்டார்கள். தனிக்குடித்தனம் போனபிறகு அவர்களுக்கிடை காவிரி- முல்லைப்பெரியாறு சண்டை சச்சரவுகள் இல்லை. அவரவர் பாட்டுக்குத் தாமுண்டு தமது நாடுண்டு என்றிருக்கிறார்கள். செக்நாடு நிலப்பரப்பு 80000 ச.கி.மீ. (தமிழ் நாடு 130060 ச.கீ); மக்கட்தொகை 2012ம் ஆண்டுக் கணக்கின்படி 11 மில்லியன் மக்கள் (தமிழ்நாடு தோராயமாக 72 மில்லியன் மக்கள்). செக் நாட்டுக் கல்வியாளர்கள், கலை, சிற்ப, இலக்கிய ஆளுமைகள் உலகறியப்பட்டவர்கள். சமீபத்திய உதாரணத்திற்கு: 1984ம் வருட இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற அவான் கார்டிஸ்ட்டும் கவிஞருமான Jaroslav Seifert. நோபெல் பரிசெல்லாம் வேண்டாம், « நொந்தே போயினும் வெந்தே மாயினும் …… வந்தே மாதரம் » என்று முழங்கிய பாரதிக்கு, இந்தியாவின் அண்டைமாநில மொழித்துறைகள் செலுத்தும் மரியாதை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசை. எலிவளையென்றாலும் தனிவளைவேண்டும் என்பது இதற்காகத்தான்.

Prague 185
நேற்றிரவு நாங்கள் தங்கியிருந்த உணவு விடுதிக்குத் திரும்ப, முதல் நாளைப்போலவே இரவு பத்து மணி ஆகியிருந்தது. டிராம்வேயில் இறங்கி விடுதியின் ரிசப்ஷன் டெஸ்க்கை நெருங்கினால், ஒரு பெருங்கூட்டம் திரண்டிருந்தது. சற்றுதள்ளி அவர்களுடைய கைப்பெட்டிகள், முதுகுப் பைகள் குவிக்கப்பட்டிருந்தன. இரவு அந்த ஓட்டலில் தங்கவந்த சுற்றுலா பயணிகள் போலிருக்கிறது. அவர்கள் ஸ்லாவ் மொழிதான் பேசினார்கள் என்றாலும் செக், ஸ்லோவாக், செர்பியா இவற்றுள் ஏதோ ஒரு நாடாக இருக்கவேண்டும் என்பது புரிந்தது. ரஷ்ய மொழி தெரியாதென்றாலும் அவர்கள் உச்சரிக்குவிதம் ஓரளவு பழகியிருந்தது. எங்களுடைய அறைக்குரிய ஓட்டல் விதிப்படி காலையில் புறப்படுகிறபோது ரிசப்ஷனிஸ்ட்டிடம் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். எங்களுடன் வந்திருந்த பயணிகளில் பலர் சாவியைக் கொடுக்காமலேயே கையில் வைத்திருந்தனர். அவர்கள் செய்த காரியம் சரியா தவறா என்பது இங்கே முக்கியமில்லை, ஆனால் அதிலுள்ள சௌகரியம் அப்போதுதான் எனக்கு விளங்கிற்று. அவர்கள் வந்த வேகத்தில் லிப்ட் எடுத்து அவரவர் அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். நானும் மனைவியுமாக எங்கள் அறை சாவிக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. ஐந்து நிமிடக் காத்திருப்பு பத்து நிமிடமாயிற்று. ஏற்கனவே வரவேற்பு பெண்மணியைச் சுற்றியிருந்த கும்பல் கலைந்துபோனதும் மற்றொரு கும்பல் அந்த இடத்தை ஆக்ரமித்துவிட்டது. ரிசப்சனிஷ்ட்டைச்சூழ்ந்த கும்பலைப்பார்க்க எனக்கு மோடியைச் சூழ்ந்த NDA எம்.பிக்கள்தான் நினைவுக்கு வந்தனர். நமக்கென்று உள்ளது எங்கே போய்விடும் என பொன். இராதாகிருஷ்ணன் போல ஒரு ஓரமாக நிற்கிறேன். ரிசப்னிஷ்ட் பெண் கடைக்கண் பார்வைகூட என் மேல் விழவில்லை. அப்பெண்மணியைக் குறை சொல்ல முடியாது. அத்தனை பேரையும் அவர் ஒருவராய் எப்படி சமாளிப்பாரென மனம் சமாதானம் செய்துகொண்டாலும், காத்திருக்க பொறுமையில்லை. கும்பலை விலக்கிவிட்டு, எனது அறை எண்ணைக்கூறி சாவி வேண்டும் என்றேன். அந்த எண்ணுக்குரிய புறாக்கூட்டில் சாவியை சில நொடிகள் தேடினார். தேடிய வேகத்தில் திரும்ப வந்தார். சாவி இங்கில்லை என்றார். உடனே மீண்டும் கும்பலிலிருந்த பயணிகள் பக்கம் அப்பெண்மணியின் கவனம் சென்றது. ஐந்து நிமிடங்கள் கழிந்தன மீண்டு அப்பெண்மணியை விடுவதாக இல்லை. ”மீண்டும் சாவி?” என்றேன். அதுதான் இங்கில்லை என்றேனே, என்றாள். நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களை உடனே கூப்பிடு, எனக்குரிய பதில் கிடைத்த பிறகுதான் மற்றவர்களை கவனிக்க அனுமதிப்பேன் என்றேன். இரண்டொரு விநாடிகள் அவள் மூக்கும் முழியும், காதுகளும் சேர்ந்தாற்போல சிவந்தன. தொலைபேசியை எடுத்தாள். யாரையோ அழைத்தாள். நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களைத்தான் அழைக்கிறாள் என நினைத்தேன். பாதுகாவலர் ஒருவரை அழைத்தார். அவருக்கு ஸ்லாவ் மொழி மட்டுமே தெரிந்திருந்தது. அவர் என்னவோ கூறினார். கையிலிருந்த சிறு பெட்டியைக்காட்டினார். ரிசப்னிஷ்ட் அவர் உங்கள் அறையைத் திறந்துகொடுப்பார் என்றார். அவர் எங்களுடன் வந்து அறையைத் திறந்துகொடுக்க, அன்றிரவும் மணி பதினொன்று ஆகியிருந்தது.

மே பத்தாம் தேதி வழக்கம்போல காலையிலேயே எழுந்துவிட்டபோதிலும், மற்ற நண்பர்கள் பத்துமணிக்கு முன்பாக புறப்படுவதில்லை என்று தீர்மானித்தவர்கள்போல பொறுமை காப்பதால் நிதானமாகமாகவே கீழே இறங்கினோம். டைனிங்ஹாலில் வழக்கம் போல ஐரோப்பிய உணவுகள். செக் மக்கள் காலையில் பெரும்பாலோர் சாசேஜ் சூப் உடன் ரோஹ்லிக் என்ற பிரெட், தயிர், சீஸ் இவற்றையெல்லாங்கூட பிற ஐரோப்பியர்களைப்போலவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள்; நானும் மனவியும் வழக்கம்போல், அவர்களுடைய ரோஹ்லிக், ஆம்லேட் ஆரஞ்சு ஜூஸில் காலை உணவை முடித்துக்கொண்டோம். முடித்து விட்டு வரும்போது பயணிகளில் ஒருவர் எங்கள் அறை சாவியைக்கொண்டுவந்து கொடுத்தார். தவறுதலாக, வந்திருந்த சக பயணி ஒருவர் அறையில் கிடைத்தது என்றார்கள். அதன் பூர்வாங்க விசாரணையில் இறங்கவில்லை. மீண்டும் அறைக்குச்சென்று கைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்கினோம். இன்றைய திட்டம் வெல்ட்டாவா (Vltava – உச்சரிப்பு குழப்பம் இருக்கிறது, முந்தைய பக்கங்களில் வல்ட்டாவா என எழுதியிருந்தேன், தற்போது வெல்ட்டாவா என உச்சரிப்பதுதான் சரியென அறியவந்தேன்) – நதியில் படகு சவாரி, பிற்பகல் மீண்டும் பிராகு நகரத்தை வலம்வருவது. ஓட்டலை காலிசெய்துவிட்டு பேருந்தில் நாங்கள் கொண்டுவந்த பெட்டிகளை வைத்தாயிற்று. பேருந்து ஓட்டுனர்கள் படகுசவாரிக்கு வசதியாக எங்கள் பேருந்து, படகுத் துறைக்கே எங்களைக் கொண்டுபோய் சேர்த்தது

வெல்ட்டாவா படகு சவாரி

Prague 145வெல்ட்டாவா நதியில் இரவுவேளையில் படகிற் செல்ல கொடுப்பினை வேண்டும். எங்கள் பயணத்திட்டத்தில் இரண்டாம் நாள் மாலை படகு சவாரி எனச்சொல்லியிருந்தார்கள். பயணச் சீட்டை எங்கே பெறலாம் என்கிற தகவலின்மையும், மாலை ஆறுமணிக்குமேல் பயணச்சீட்டு விற்கும் முகமைகள் தொழில் புரிவதில்லை என்ற காரணத்தினாலும் அம்முயற்சியை பயண ஏற்பாட்டாளர்கள் கைவிட்டனர். ஆக 10ந்தேதி காலை படகுச்சவாரிக்குத் தயார்படுத்திக்கொண்டவர்களாய்ப் புறப்பட்டோம். மதிய உணவை படகிலேயே வைத்துக்கொள்ளலாம் என்ற சிலரின் யோசனையைப் பெரும்பானமை நிராகரித்துவிட்டது. படகுச் சவாரியை முடித்துக்கொண்டு அவரவர் விருப்பத்திற்கு எங்கேயேனும் மதிய உணவை எடுக்கலாம் எனத் தீர்மானித்து படகடிக்குச் சென்றோம். நாங்கள் ஐம்பதுபேருக்குமேல் இருந்ததால் மொத்தமாக படகொன்றை ஒரு மணிநேர சவாரிக்கு வாடகைக்கு எடுத்தோம். அதிலேயே உண்வு எடுத்துக்கொள்வதெனில் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகலாம். மொத்தபேரும் மேற் தளத்தில் அமர்ந்துகொண்டோம். Prague 151உடலை வருத்தாத வெயில், Prague 167நதியில்விளையாடி கொடியிற் தலைசீவி நடந்துவந்த இளங்காற்றின் சிலுசிலுப்பு, வலப்பக்கம் எனது வாழ்க்கைத் துணை, சற்று தூரத்தில் கூச்சலும் கும்மாளமுமாக ஆண்கள் ஓரணி பெண்கள் ஓரணியென உத்திபிரித்து பாட்டுக்குப் பாட்டு, இடைக்கிடை கொறிப்பதற்கு நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பகடிகள், கேலிகள், கிண்டல்கள், சிப்ஸ், வேர்க்கடலை, வீட்டுப் பக்குவத்துடன் செய்திருந்த முறுக்கு…. மகிழ்ச்சியை அளக்க நீட்டல், நிறுத்தல், கொள்ளளவு… எதுவும் காணாது. கம்பனைத்தான் அழைக்கவேண்டும். நதிக்கரையெங்கும் பிராகு நகரத்தின் கட்டிடம் மற்றும் கலை அற்புதங்கள் – சார்லஸ் பாலம், பிராகு கோட்டை, நேஷனல் தியேட்டர்…- எழில் கொஞ்ச முறுவலிக்கின்றன. Prague 159                                            Prague 164அப்போதுதான் ஒருநொடி, ஐம்பது நொடியென ஆரம்பித்து நிமிடங்களைஉண்டு ஒரு பெயர் கண் சிமிட்டுகிறது, கண்ணாடியைச் சரி செய்துகொண்டு மீண்டும் ஒரு முறை படிக்கிறேன். வெள்ளைப் பதாகை விரித்ததுபோல பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை: Prague 156‘காஃப்கா மியூசியம்’ என்று எழுதியிருக்கிறது. படித்து முடித்த மாத்திரத்தில் ஒரு சோர்வு தட்டியது. அடடா! எப்படியான வாய்ப்பைத் தவறவிட்டோம்! என நினைத்துக்கொண்டேன். நண்பர்களே! பிராகுவிற்கும் காஃப்காவிற்குமுள்ள பந்தம் குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று பயணம் செய்திருக்கிறேன் என நான் கூறுவதை நீங்கள் நம்பத்தான் வேண்டும். படகுச்சவாரி முடிந்ததும், வந்திருக்கிற நண்பர்களில் எவராவது விரும்பினால் அழைத்துக்கொண்டு மியூசியத்தைப் பார்த்து வருவது என சட்டென்று முடிவெடுத்தேன். படகு சவாரி முடிவுக்குவந்து, நண்பர்கள் படகைவிட்டு இறங்கியதும் “இரவு 10மணிக்கு பேருந்து நிற்கும் இடம் இதுதான் இங்கேயே வந்துவிடவேண்டுமென ஏற்பாட்டாளர்கள் வார்த்தைக்குக் காத்திருந்ததுபோல சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வந்திருந்த நண்பர்கள் சென்றார்கள். பயண ஏற்பாட்டாளர் வேறு, “தனித்தனியே எங்கும் போகவேண்டாம், நான்கைந்து பேராகச் செல்லவும். அப்போதுதான் இரவு பத்துமணிக்கு எளிதாக அனைவரும் ஒன்றுசேர முடியுமென்றார். அவர் கூறிய மறுகணம் காஃப்கா மியூசியத்தைப் பார்க்க சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். தவிர பிரான்சிலிருந்து புறப்படும்போது காஃப்கா குறித்து இம்மிகூட நினைப்பு இல்லை என்கிறபோதும், முதன்முறையாக அதொரு குறையாக அரித்தது.Prague 193

 

Prague 132படகுத் துறையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் பிரிந்து, நகரத்தின் இதயப்பகுதியில் 200 கடைகள் சேர்ந்தாற்போலவிருந்த ஒரு பேரங்காடி மையத்தில், ஓர் இந்தியத் தமிழர் எங்களைபார்த்ததும் தனது மனைவியிடம் ‘இலங்கைத் தமிழர்கள்’ எனக்கூறியது காதில் விழுந்தது. மணி பிற்பகல் இரண்டு. நல்ல பசி. மூன்றாவது தளத்தில், பொதுவாகப் பேரங்காடி மையங்களிற் காண்கிற எல்லாவிதமான உணவகங்களும் இருந்தன. ஒரு சீன உணவகத்தைத் தேர்வுசெய்து நானும் மனைவியும் சாப்பிட்டோம். அருகிலேயே பயண ஏற்பாட்டாளரின் சகோதரியும் கணவரும், பிள்ளைகளுமாக உணவருந்தினார்கள். பேரங்காடி மையத்திலேயே காலாற நடந்துவிட்டு ஐந்து மணி அளவில் கீழே இறங்கினோம். வொரெயால் தமிழ்ச் சங்கதலைவர் இலங்கைவேந்தன், திரு திருமதி குரோ என நாங்கள் ஐந்து பேருமாக பழைய பிராகுவில் இதுவரை காலெடுத்துவைக்காத பகுதிகளுக்குள் நுழைவதெனத் தீர்மானித்து Starmestske Namesti க்கு மேற்காக நடந்தோம், அதாவது புனித நிக்கோலாஸ் தேவாலயத்தினை நோக்கி. Prague 199இங்கும் வழியெங்கும் Prague 194நினைவுப்பொருட்கள் கடைகள், ஓவியக் கண்காட்சி சாலைகள். மனிதர்களை சித்திரவதைப் படுத்த உபயோகித்த கருவிகளையுங்கூட ஓரிடத்தில் காட்சிப்படுத்தியிருந்தார்கள், தாய் மசாஜ்க்கான இடங்களும் இருந்தன. கிரிஸ்ட்டல், விலையுயர்ந்த கற்களில் செய்த பொருட்களின் விற்பனையகங்கள் இங்கும் நிறைய இருந்தன. ஒரு திறந்தவெளியில் முடிந்தது. அங்கு முதன் முத்லாக கத்தோலிக்க மதச்பைக்குஎதிராகக் குரல்கொடுத்ததால் உயிருடன் எரிக்கபட்ட ஜான் ஹஸ் (Jan Hus)  என்பவரின் நினைவுசின்னம் இருக்கிறது. Prague 201அதை பார்த்துவிட்டு காப்பி குடிக்கலாம் என்று ஒரு விடுதிக்குச் சென்று வெளியில் போட்டுவைத்திருந்த மேசையில் அமர்ந்து ஐந்துபேரும் அவரவர்க்கு பிடித்தமான காப்பியை வரவழைத்து குடித்துவிட்டு வெரெயால் தமிழ்ச் சங்கதலைவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்பினேன்.

காஃப்கா பிறந்த வீடு

Prague 212நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வலது பக்கம் வீதியோரம் கட்டிடத்தின் முகப்பில் காஃப்காவின் பாதி உடல் சிலையாக பொறித்திருந்தது. அந்த இடத்திற்கு Namesti Franz Kafka என்று எழுதியிருந்தது. அதிர்ச்சியில் உறைந்திருந்தேன். உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. இலங்கைவேந்தனிடம் ஏதோ பேசவேண்டும் என நினைக்க நா குழறுகிறது. காஃப்காவைப் பற்றி சுருக்கமாகக்கூறினேன். வந்திருந்த பிறரும், குறிப்பாக எனது சந்தோஷத்திற்கு எவ்வித குறையும் நேர்ந்துவிடக்குடாது என்பதுபோல வொரெயால் தமிழ்சங்க தலைவர் என்னுடன் வந்தார். ஐவருமாக நடக்கவில்லை ஓடினோம். என் ஊகம் சரி. அந்தக்கட்டிடத்திற்கும் காஃப்காவிற்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் உணவு விடுதி. ஓட்டல் சர்வர்களை விசாரிக்கிறேன்: காப்காவின் வீடா? ஆம் என்பதுபோல தலையாட்டுகிறார். சந்தோஷத்துடன் அவர் கைகளைப் பிடித்துக்கொள்கிறேன். உள்ளே போய் பார்க்கலாமா? தாராளமாக என்று பதில் வருகிறது. உள்ளே போனால் சுவர் முழுக்க காஃப்காவின் புகைப்படங்கள். Prague 2141883 ஜூலை 3ந்தேதி காஃப்கா இந்த இடத்தில்தான் பிறந்திருக்கிறார். சரியாக சொல்லவேண்டுமெனில் மைஸ்லோவா (Maislova) வீதியும் கப்ரோவா (Kaprova) வீதியும் சந்திக்கும் இடத்தில் இருக்கிறது. துர் அதிர்ஷ்ட்டமாக 1897 ம் வருடத்தில் தீ விபத்தொன்றில் அக்கட்டிடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட 1906ல் இப்புதிய கட்டிடம் எழும்பி இருக்கிறது. கட்டிடத்தின் முகப்பில் உள்ள அரை உருவ காஃப்கா சிலையை வடித்தவர் செக் நாட்டின் புகழ்பெற்ற சிற்பக் கலைஞர் Hladik . இல்லத்தில் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். Prague 197நண்பர் இலங்கைவேந்தனுக்கு நன்றி சொல்லவேண்டும். அந்த வீதியில் நடந்ததும், அவர் நினைவாக நடத்தப்படும் புத்த்கக்கடை, நூல்நிலையம் முன்பு கழித்த நொடிகளும் பிறவும் மறக்க முடியாதவை. பிராகுவும்காஃப்காவும் என்னுள் அடுத்த நாவலுக்கான உந்துதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். அதனாற் சில தகவல்களில் முழுமையாக விவரிக்காமல் போனது. பொறுமையுடன் வாசித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
———————————-

 

 

 

கா•ப்காவின் பிராஹா -3

மே 9 -2014

Prague 092

பொதுவாகவே புதிய மனிதர்களின் சந்திப்புகளும் சரி, புதிய இடங்களின் தரிசனங்களும் சரி, அல்பெர் கமுய் கூறுவதைப்போல எதிர்பார்ப்பிற்கும் கிடைக்கும் அனுபவத்திற்குமான இடைநிலையாகவோ அல்லது பிராய்டு வகைபடுத்துகிற திருப்தி-அதிருப்தி இரண்டுக்குமான நனவிலி மனநிலையாகவோ இருப்பதால் இதுபோன்ற பயணங்களில் ஓர் ஆர்வத்துடனேயே கலந்துகொள்கிறோம். தவிர நண்பர்கள் அல்லது நமது மக்களுடன் செய்கிற குறுங்கால பயண அனுபவங்கள் பிராய்டுகூறுகிற அதிருப்தி விழுக்காடுகளைக் குறைக்க உதவுகின்றன என்பது சொந்த அனுபவம். ஓட்டலில் காலை உணவுக்கு மட்டும் ஏற்பாடு செய்திருந்தார்கள். பாரீஸிலிருந்த வந்திருந்த அனேகர் தங்கள் கையோடு கொண்டுவந்த உணவுகள் இரண்டாம் நாள் வரை பலரும் சாப்பிட உதவியது, குறிப்பாக வெரெயால் தமிழ்ச்சங்கத் தலைவரின் குடும்பம். ஆக முதல் நாள் இரவு அன்பழகன் என்பவரின் உபசரிப்பில் சப்பாத்தி, தமிழ்ச் சங்கத் தலைவர் இலங்கைவேந்தன் அன்பிற்காக மிளகாய்ப்பொடியுடன் இரண்டு இட்டலி எனப் பிராகுவிலும் பாரதப் பண்பாட்டை வாய்மொழிந்துவிட்டுப் படுக்க இரவு பதினொன்றாகியிருந்தது.

ஒன்பதாம் தேதியன்று எழுந்திருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக 7 மணி. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு ஓட்டலின் உணவுவிடுதிக்கு வந்தபோது 8.30 ஆகியிருந்தது. எதிர்பார்த்ததுபோலவே ஐரோப்பிய உணவுவகைகள். பெரும் எண்ணிக்கையில் இந்தியர்களைக் கண்டது அங்கிருந்த மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கலாம். பரிசாரகர்கள் அவ்வப்போது குறைகிற உணவு வகைகளை நிரப்புவதோடு; தட்டுகள், முள் கரண்டிகள், கத்திகள், கண்ணாடி தம்ளர்கள், கோப்பைகள் எனவைக்கிறபோதெல்லாம் எழுந்த ஓசைகள், உணவுண்ட மனிதர்களின் மெலிதான உரையாடலைத் துண்டித்து நேரத்தை நினைவூட்டுவதாக இருந்தது. பொதுவாக இதுபோன்ற ஓட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களிடம் காண்கிற பலமுறை ஒத்திகைபார்த்து பழகிய முகமனும், உபசரிப்பும் இல்லை. நேர்க்கோட்டிலிருந்து விலகாத ஒழுங்கு மட்டுமே காண முடிந்தது. இன்றைக்குப் பார்க்கவேண்டியவை பட்டியலில் Prague Castle என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிற பிராகா கோட்டை இருந்தது, அடுத்ததாக செக் நாட்டைச்சேர்ந்த தமிழ் அறிஞர் வாச்செக் யாரோஸ்லா•ப் (Vacek Jaroslav).

இந்தியர் வழக்கப்படி தாமதமாகப் புறபட்டோம். சந்தோஷத்தை மட்டும் கணக்கிற்கொள்ளவேண்டும் என்பதால் பயண ஏற்பாட்டாளர்களின் திட்டமிடலில் நிகழ்ந்த சிறு பிழைகளில் கவனம் செலுத்தவில்லை. ஓட்டல் அருகே முன்னூறு நானூறு மீட்டர் தொலைவிலிருந்த Zborov – Strašnické நிறுத்தத்தில் குழப்பங்களுக்கிடையில் எண் 5 டிராம்வே எடுத்து பின்னர் வேறொரு இடத்தில் மற்றொரு டிராம்வே எடுத்து பயணிக்கவேண்டியிருந்தது. ஐம்பது இந்தியர்கள் (தமிழர்கள்) கிழக்கு ஐரோப்பிய நாடொன்றில் இப்படி ஒட்டுமொத்தமாகக் காண்பது செக் நாட்டவர்க்கு அரிதானக் காட்சி. அரசுப் போக்குவரத்து சாதனங்களில் கலகலப்பான (?) பயண அனுபவங்களை இதற்கு முன்பாக அவர்கள் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

பிராகா கோட்டை – Prague Castle (Prazsky hrad)

பிராகா நகரத்தின் இதயத்துடிப்பு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையைப் பொருத்தது. சுற்றுலா பயணிகள் இல்லையெனில் பிராகு நகரமே வெறிச்சோடிக்கிடக்கும் என்ற எண்னம் அடிக்கடி வருகிறது. அதிலும் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒரு நகரத்தின் இயக்க அடையாளத்தை முற்று முதலாக இழந்திருந்தன. குறிப்பாக வால்ட்டவா நதியை டிராம்வேயின் ‘தடக்’குகளைப் பதினோரு மணி கிழக்கு ஐரோப்பிய குளிர்வெயிலில் அரைவிழிமூடி கடந்ததும் எதிர்கொள்கிற சொப்பன நகரமும் உறக்கம் கலையாத மனிதர்களும் வித்தியாசமான அனுபவம். இத்தனைக்கும் நாங்கள் சென்றிருந்தது ஒரு சனிக்கிழமை. Prazsky hrad என்றே ஒரு நிறுத்தம் இருந்தது. இறங்கியதும் இடப்புறமிருக்கும் தோட்டத்தைக் கடந்து ஒரு அரைகி.மீட்டர் தூரம் படியேறவேண்டும். கோட்டையென்றாலே குன்றின் மீதோ மலை மீதோ கட்டுவதுதான் பாதுகாப்பு என உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்ட நியதிக்கு செக் முடியாட்சியும் தப்பவில்லை என்பதன் அடையாளமாக இக்கோட்டையும், அதன் தேவைக்கான பிறவும் இங்கும் ஒரு மலையை சுவீகரித்துக்கொண்டிருந்தன. கோட்டைக்குள் நுழைவதற்கு முன்பு இடப்புறமிருக்கும் முற்றத்தில் – பிற சுற்றுலாவாசிகள் போகட்டுமென பொறுமையுடன் காத்திருந்து – பிராகு நகரத்தின் தென் கிழக்குப் பகுதியைக் காமிராவில் கிளிக்கிடுவதற்கு முன்பாக, தவறாமல் கண்களில் பதிவுசெய்துகொள்ளவேண்டும். Prague 087நுழைவாயிலில் காவலர்கள் இருவர் ஆடாமல் அசையாமல் பக்கத்திற்கு ஒருவரென நிற்கிறார்கள். கோட்டையின் நுழைவாயில் இடது புறம் இருக்கிற ராயல் கார்டனை வரும்போது பார்க்கலாம் என நினைத்து பாரக்காதது, தனிக்கதை. நுழைவாசலில் நுழைந்ததும் ஒரு பெரிய திறந்தவெளி. ஒரு நீரூற்று கோத்திக் காலத்து சிலையுடன் இருக்கிறது.Prague 094

பழைய அரண்மணை: இடதுபுறம் திரும்பியதும் பார்வையிடுவதற்கான அனுமதிச்சீட்டை வாங்கிவர ஏற்பாட்டாளர்கள் சென்றதால் காத்திருக்கவேண்டியிருந்தது. காத்திருந்ததும் தவறில்லை Joze Plenik சிற்ப கலைஞர் முதல் உலகப்போர் நினைவு ஸ்தூபத்தை காண நேரம் கிடைத்தது. அனுமதிசீட்டு வந்து சேர்ந்ததும், உள்ளே சென்றோம். இப்பகுதி 12ம் நூற்றாண்டிலிருந்து உபயோகத்திலிருக்கிறது தொடக்கக் காலத்தில் அரசகுமாரர்களுக்கும் பதினாறு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மன்னர்களின் உபயோகத்திந் கீழும் இருந்திருக்கிறது. விலாடிஸ்லாவ் மண்டபத்தில் கோத்திக் காலத்து உட்கூரை பார்க்கவேண்டிய ஒன்று. பூமிக்கடியில் குடைந்துள்ள பகுதியில் கோட்டையின் ஆயிரம் ஆண்டுவரலாற்றை ஆவணங்கள், பொருட்கள் துணைகொண்டு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இவற்றுள் வைரங்கள் விலை உயர்ந்த கற்கள் பதித்தப் பொருட்களும் அடக்கம். புனித கீ தேவாலயத்தின் வலது புறம் செக் நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறையின் சீருடைகளில் ஏற்பட்ட மாற்றங்களை தொடக்கங்காலத்திலிருந்து வைத்திருக்கிறார்கள் இதுவும் சரி தேவாலயத்தில் எதிரிலிருந்த புனித ஜார்ஜ் பசிலிக்கா என்கிற சிறுதேவாலயமும் சரி பெரிதாக ஈர்க்கவில்லை. Zlata Ulicka என அழைக்கப்படுகிற கோல்டன் லேனில் சிறு சிறு குடில்கள் இருக்கின்றன. Prague 121இதுபோன்றதொன்றை ஸ்பெயினிலுள்ள பார்சலோனா நகரிலும் பார்த்திருக்கிறேன். பதினாறாம் நூற்றாண்டிலிருந்து 20 ம் நூறாண்டுவரை பல் வேறு கலைஞர்கள், கைவினைஞர்களின் இல்லங்கள் எப்படி யிருந்தன என்பதைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு பொற்கொல்லரின் இல்லம், மதுச்சாலை, இறுதியாக சினிமா வரலாற்றறிஞரின் குடில். பார்த்துமுடித்து இடப்புறமுள்ள குறுகிய வழியில் குனிந்து வெளியேறினால் ஒரு திறந்த வெளியில் முடிகிறது. இடதுபக்கமாகச் சென்றால் டலிபோர்க்கா (Daliporka) வருகிறது. மிகவும் குறுகலான படிகளில் கீழே இறங்கிசெல்லவேண்டும். படிகளில் குறுகிய அமைப்பே பார்க்கவிருக்கும் பயங்கரத்தைக் குறித்த எச்சரிக்கையாகக் கருதலாம். டலிபோர் என்கிற வீரன், விவசாயிகள் அரசுக்கு எதிராகத் திரண்டபோது அவர்களுக்கு ஆதரவாக இருந்தவனாம். நீங்கள் நினைப்பதுபோலவே அவனைக் கைது செய்து நிலவறையில் அடைத்து சித்திரவதை செய்து தூக்கிலிட்டார்கள் எனச்சொல்கிறார்கள். அவன் அடைபட்டிருந்தபோது வாசித்த வயலின் இசை கோட்டையெங்கும் ஒலித்ததாம். அதன் அடிப்படையில் ஒரு ஒப்பேரா என்ற இசை நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கிறார்கள். ஆகக் கீழே எல்லாவிதமான வதை ஆயுதங்களையும் காணமுடிகிறது. இறுதியாக லோக்கோ விச் என்ற இடம் : இது தனிநபர் ஒருவரின் விசேடமாக சேர்த்துவைத்த பொருட்களின் கண்காட்சிக்கூடம். செக் நாட்டின் பிரசித்திபெற்ற ஓவியக்கலைஞர்களின் ஓவியங்கள், பீத்தோவன், மொஸார் போன்ற இசைக்கலைஞர்கள் கைப்பட எழுதிய இசைக் குறிப்புகள் இங்குள்ளன. இறுதியாக செயிண்ட் கி தேவாலயம் வந்தோம். மிகப் பிரம்மாண்டமான ஆலயம். பிராஹா கோட்டையில் Prague 091மிகமுக்கியமானதொரு இடம். இதன் வெளி முகப்பும் Prague 097சரி, உள் விதானங்களும் தனி அழகு. Prague 110அவற்றின் கண்ணாடிஓவியங்கள், குறிப்பாக சிலுவையில் அறைந்த இயேசுவின் மரச்சிற்பம், ‘புனித கி'(Saint Guy)யின் கல்லறை என எழுத நிறைய உண்டு.
Vacek Jaroslav
Prague 125வாச்செக் யார்ஸ்லோ• என உச்சரிக்கவேண்டும். தமிழில் குறிப்பாக செவ்விலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கு இப்பெயர் அன்னியமானதல்ல. இவரை அதிகம் அறிந்திராத நண்பர்களுக்காக வேண்டுமானால் சில கூடுதல் தகவல்கள்: பிராகு பல்கலைகழகத்தின் மொழியியல் பீடத் தலைவர். ஏற்கனவே ‘கமில்’ என்கிற செக்நாட்டு தமிழறிஞர் பற்றி அறிந்திருக்கிறோம். அடுத்தது இவர். அண்மையில் இந்திய அரசால் குறள் பீட விருதுவழங்கி கௌரவிக்கப்பட்டவர். இந்திய மொழிகளில் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலும் ஆழ்ந்த ஞானம். அவருடைய தமிழ்ப் பங்களிப்பை எழுத இங்கே இடம்போதாது. தமிழ் மொழி சார்ந்து பணி யாற்றுகிற நமது தமிழர்களிடம் நான் பேச அஞ்சுவதுண்டு. பெய்த மழையில் வள்ளுவர் நனைந்தார், இரண்டு நாள் அவர் சிலைக்குக் குடைபிடித்தேன் என்றெல்லாம் தமிழ்ச் சாதனையாளர்கள் பெருகிவிட்ட காலமிது. சுயபுராணம் படிக்காத ஒரு தமிழரை கண்டு பிடித்தல் அரிது. அதிலும் தற்போதெல்லாம் மனிதர்களின் ஆற்றலை தொலைகாட்சிகள், ஊடகங்களின் தராசுகொண்டு எடைபோட ஆரம்பித்த பிறகு; அடக்கமாய், நமது தொலைகாட்சிபெட்டிகள், ஊடங்களின் பிடியில் சிக்காத ஒரு மனிதரை, பிரான்சுநாட்டைசேர்ந்த வொரெயால் தமிழ்ச் சங்கமும், தலைவர் இலங்கைவேந்தனும் சங்கத்தின் பிற உறுப்பினர்களும் அழைத்துவைந்து பாராட்டநேர்ந்தது ஓர் அதிசய நிகழ்வுதான். கடந்த வருடத்தில், பாரீஸ் நகருக்கு அழைத்து அவரை கௌவரவித்திருக்கிறார்கள். இவர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்த அதே ஆண்டு குறள்பீட விருதும் கிடைத்திருக்கிறது. அம்மானிதர் Náměstí Republiky என்ற இடத்திற்கு வொரெயால் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்தவ்ர்களைத் தேடிவந்து தனது பல்கலைக்கழகப் பீடம் வரை அழைத்துச்சென்றதும் உரையாடியதும் மனம் நெகிழ்ந்த தருணங்கள். அவர் பேசியபோது உள்ளன்போடு வார்த்தைகள் வெளிவந்தன. குறள்பீடம் விருதைப்பற்றி அதிகம் வாய் திறக்காத; அதனைத் தமது சாதனைப்பட்டியலில் குறிப்பிட விரும்பாத முனைவர் வாச்சக் (Vacek), இவர்கள் கௌரவித்ததை மகிழ்ச்சியோடு ஏற்றார் எனில், அவர்மீது வொரெயால் தமிழ்ச்சங்கத்தினர் கொண்டிருந்த அன்பு முழுமையானது, கபடமற்றது -குறள்பீட விருது அரசியலுக்கு அப்பாற்பட்டது எனபதை மனமார உணர்ந்திருந்தார்.
(தொடரும்)

—————————————–

 

 

காஃப்காவின் பிராஹா -2

மே 8 -2014 -தொடர்ச்சி:
‘Staromestiske Namasti’ ஸ்லாவ் மொழிவருமெனில் உச்சரித்து பாருங்கள். கடந்த வாரத்தில் வென்ஸ்லஸ் சதுக்கம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா (Wenceslas Square) அதுவும் இப்படி “namesti” என்று தான் முடிந்தது. எனவே ஸ்லாவ் மொழியில் ‘namesti’ என்றால் சதுக்கம் என வைத்துக்கொள்ளுங்கள். ஸ்லாவ் மொழி பேசுபவர்களை முதன்முதலாக பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில்தான் கண்டிருக்கிறேன். பனிப்போர் காலங்களில் ஸ்லாவ் மொழி பேசுபவர்கள் ஒன்றிரண்டு பேராவது ஜேம்ஸ்பாண்ட் படங்களில் தலைகாட்டுவார்கள். ரோஜர் மூர் படத்திலும் சரி அதற்கு முன்பாக சீன் கானரி படத்திலும் சரி அது கட்டாயம். டில்லி பாபு என்றொரு நண்பனும் நானும் சென்னை ராயபுரத்தில் பிரைட்டன் தியேட்டரில் ஒருமுறை ஜேம்ஸ் பாண்ட் படமொன்று பார்க்கச் சென்றோம் (‘Never say Never again’ அல்லது ‘you only live twice இரண்டிலொன்று ). பார்த்த ப்டத்தில் எந்தக் காட்சியும் பெரிதாய் ஞாபகத்தில் இல்லை. ஆனால் வில்லன் ரஷ்ய மொழியில் பேசியபொழுது எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வடசென்னை துறைமுகத் தொழிலாளி ‘இன்னாபா இவன் அப்பப்ப வாயால … விடறான்” என சாராய வாடையுடன் உரத்து கூறியது நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. இருந்தாலும் ஸ்லாவ் மொழியைக் குறை சொல்லக்கூடாது. ஸ்லாவ் மொழிகளும் (ரஷ்ய, செக் முதலான..) இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பங்களுள் அடங்குகின்றன. இந்தி, உருது,வங்காளம் போன்ற மொழிகளுக்கு அவை பங்காளி, திராவிட மொழிகளுக்கு சம்பந்தி முறை. எனவே கொசோவா, ஸ்லோவாக், செக் நாட்டின் அதிபர்களையெல்லாம் கூட மோடி அழைத்திருக்கலாம், தவறே இல்லை.

Prague 038 Prague 039 Prague 041 Prague 057

‘Staromestiske Namasti’ என்கிற பிராஹா நகரத்தின் பழைய நகரம் வென்ஸ்லஸ் சதுக்கத்திலிருந்து கிழக்கே இருக்கிறது. அதிக தூரமில்லை நிதானமாக கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தால் (அதாவது கடை உள்ளே நுழையாமல்) அதிககப் பட்சம் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள் மீது கவனத்தை செலுத்தாது; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; அடுத்தடுத்து மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில் திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில், கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி (The Pied Piper of Prague?) நம்மை கடத்திக்கொண்டு போகிறார்’ – ஒரு திறந்த வெளியில் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிடாலும் வந்தடைகிறோம். அங்கே மனிதர் சமுத்திரத்தில் கலக்கிறோம். பொதுவில் சுற்றுலா தளங்களில் காண்கிற காட்சிகள்: சுற்றுலா பயணிகள் உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகளின் கீழ் அணி திரண்டும்; சீருடைபோல ஒற்றை வண்ணத்தில் மழைக் காப்பு (K-.way) ஆடைகளிலும்; பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க கணவன் மனைவியும்; இளம் காதலர்களும்; தோழிகள், நண்பர்கள் அலது இவை இரண்டுமல்லாத விசேட கலவையாகவும் சுற்றுலாபயணிகள்; இடைக்கிடை ஆபூர்வமான உடையணிந்து இசை அல்லது நாடகத்திற்கு விளம்பரத்திற்காக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கிறவர்கள் ஆகியோரையும் கணக்கிற்கொண்டால் சொதி, சம்பல், மரக்கறிகள், பாயாசம் அரிசிச்சோறு அத்தனையும் ஒன்றாக பரிமாறப்படும் ஈழத்தமிழர் இல்ல உணவுத் தட்டுகளை ஒத்ததொரு படிமம், அல்லது ஒர் இம்ப்பரனிஸ ஓவியம், மனிதர் போக மிச்சமிருந்த வெளிகளில் அவர்களின் மூச்சும் மொழியும். கேமராக்களை, வீடியோ கேமாராக்களை கண்களில் அணிந்து, வந்ததற்கு சாட்சியங்கள் தயாரிப்பதில் மும்முரமாக பலர் ஈடுபட்டனர். இதில் நானும் அடக்கம். இல்லையென்றால் உங்களை நம்ப வைப்பதெப்படி? வழக்கம்போல ஆசிய நாடுகளில் தற்போதைக்கு அதிகமாக உலகப்பயணம் மேற்கொள்கிற சீனர்களை கணிசமான எண்ணிக்கையில் அங்கும் பார்க்க முடிந்தது. கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறோம். அண்ணாந்து பார்த்தவர்களின் உயரத்தோடு ஒப்பிடுகிறபொழுது நானும் எனது துணைவியும் குள்ளம் என்பதால் இந்த எச்சரிக்கை. நட்சத்திர தகுதியை எட்டிய வி.ஐ.பி.க்குக் காத்திருக்கும் சராசரி மனிதர்களின் அதே எதிர்பார்ப்பு நின்றிருந்தவர்களின் முகத்தில் அல்லது அவர்கள் முகத்தை மறைத்திருந்த கேமராக்களில் தெரிந்தது. ஒட்டுமொத்த காத்திருப்பும், எதிர்பார்ப்பும் ஒரு கடிகார வி.ஐ.பி.க்காக.

பிராகு வானியல் கடிகாரமும் பிறவும்

Prague 034ஐரோப்பாவின் பெரும்பாலான நகரங்களில் வானியல் கடிகாரங்கள் இருந்தபோதிலும் ஸ்ட்ராஸ்பூர்(Strasbourg) வானியல் கடிகாரமும், பிராகு வானியல் கடிகாரமும் புகழ் பெற்ற்வை. பொதுவாக இக் கடிகாரங்கள் பிறகடிகாரங்களைப்போலவே நேரத்தை தருவதோடு சில வானியல் தகவல்களையும் தருகின்றன. தற்போதெல்லாம மிக நுணுக்கமான தகவல்களைத் தருகிற கைக்கடிகாரங்கள் விலைக்க்குக் கிடக்கின்றன. இருந்த போதிலும் திண்டுக்கல் லியோனி தமது குச்சி மிட்டாய் ரசிகர்களுக்கு வினியோகிக்கும் சொற்களில் அவற்றின் பெருமையைக் குறைத்து மதிப்பிடமுடியாது, ஒவ்வொன்றையும் அவற்றிற்கான கால சூழலில் எடைபோடுவது கட்டாயம் ஆகிறது. கடிகாரம் நிறுவப்பட்ட ஆண்டு பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கம். சரியாகச் சொல்வதெனில் பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் (1410 ) பின்னர் இன்றிருக்கிற வானியல் கடிகாரத்தை 1490ல் செம்மை படுத்தியவர் Hanus என்கிற கடிகார நிபுணர். இதுபோன்ற அதிசயங்களுக்குப் பின்னால் உலாவும் கதை இதற்கும் உண்டு. கடிகார நிபுணரின் கண்களை கடிகாரத்தை செம்மை படுத்திய மறுநாள் பறித்துவிட்டார்களாம் – (Page 98 Prague et la Républiques Tchèque). கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராகு மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை இலேசாகத் தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. நாங்கள் சென்றிருந்தபோது இரவு எட்டுமணி. பழைய நகர சதுக்கத்தை அடைந்திருந்த ஓரிரு நிமிடங்களில் மேற்கண்டவை நடந்து முடிந்தன. ஏற்கனவே Strasbourgல் இருக்கிற தேவாலயத்தில் கண்ட காட்சிதான். தலையைத் திருப்பினால் இதுகுறித்த அக்கறை அல்லது பிரக்ஞையின்றி தங்கள் அன்றையை பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. சட்டென்று அவ்விடத்தைவிட்டுச் செல்வது கடினமாக இருந்தது. பயணத்தின் தொடக்கத்தில் பிற ஐரோப்பிய நகரங்களோடு ஒப்பிட்டது உண்மைதான், ஆனால் பிராகுவின் பழமையை போற்றுகிற இப் பகுதி வெனீஸ், பார்சலோனா போன்ற நகரங்களைக்காட்டிலும் கூடுதலாகக் கவர்ந்தது, அக்கவர்ச்சியில் தொன்மத்தின் சாயலை இழக்காத கட்டிட முகப்புகளுக்கும் தேவாலயங்களுக்கும் பெரும்பங்குண்டு.

சார்லஸ் பாலம்:

Prague 066பிராகு நகரிர்க்குச் சென்று சார்லஸ் பாலத்தில் காலாற நடந்து போகமற் திரும்புவது, என்பது ஆக்ரா சென்கிறவர் தாஜ்மகாலைப் பார்க்காமற் திரும்புவதுபோல என வைத்துக்கொள்ளலாம். பாலத்தில் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள். கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம் பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. Prague 069வில்ட்டாவா நதியின் இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பவைபோல நகரமெங்கும் பாலங்கள் இருப்பினும் சார்லஸ் பாலத்தின் அழகைப் எழுத வார்த்தைகள் போதாது, பாரதி பார்த்திருந்தால் “சிந்து நதியின்மிசை”யைத் திருத்தி பாடியிருக்கலாம். கண்கள் விரியத் திறந்து அந்த அழகைக் குடித்தேன். முதன் முதலாக மனைவி மீது எனக்குப் பொறாமை வந்த தருணம். அவளுக்குக் கொஞ்சம் பெரிய கண்கள். அவள் கண்களை சிலாகித்து நல்லதாக நான்கு வார்த்தைச் சொல்லி இருக்கலாம். வரவிருக்கும் இரவு ‘கையறு இரவாக’ கழிந்துவிடகூடாதென்று சுஜாதாவுக்குப் பழகிய பட்சி என்னிடமும் ஜாக்கிரதை என்றது.
சார்லஸ் பாலத்தில் இருள் மெல்ல மெல்ல கவித்துகொண்டிருந்தது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. பாரதியின் ‘பட்டு கரு நீல புடவையும் பதித்த நல் வைரமும்’ வரிகளை நினை படுத்துகிற ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலபாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர்ளிழுத்த இழுப்புக்கு உடன்படுவதுபோல மிதந்து போகின்றன. பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்டதுபோல பரோக் காலத்து சிற்பங்கள். இதற்கு முன்பு லண்டன் டவர் பிரிட்ஜ், சான்பிரான்ஸிஸ்கோ கோல்டன் கேட், வெனிஸ் நகரப் பாலங்கள், எனப் பார்த்திருக்கிறேன், ஏன் பிரான்சில் கூட அழகான பாலங்களைக் கண்டதுண்டு, ஆனாலும் இது அழகில் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ (உபயம் மீண்டும் சுஜாதா).

(தொடரும்)

 

மொழிவது சுகம் – மே 28 -2014

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தல் – பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததுபோலவே பாசிஸ்டு சிந்தனைகொண்ட கட்சிகளின் வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக பிரான்சு நாட்டில் Front National (தேசிய முன்னணி) தீவிர வலது சாரி கட்சி, நாட்டில் நன்கு அறியப்பட்ட வலது மற்றும் இடது சாரி கட்சிகளை பின் தள்ளிவிட்டு முந்திக்கொண்டிருக்கிறது. வரவிருக்கும் நாட்டின் பொதுத் தேர்தல்களின் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கான அறிகுறி இது.

இந்த நூற்றாண்டில் பல சொற்களுக்கு விநோதமாகப் பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது. குடும்பம், வீதி, சமூகம் நாடு, சாதி, மதம், இனம், நிறம் என்கிற பல்வேறு கூறுகள் தங்கள் பண்பில் முரண்படும் ஒன்றிர்க்கு வழங்கும் சொல், அந்நியன். இந்த ‘அந்நியனை’ ஒருவர் நேசிப்பதும் வெறுப்பதும், அந்நியரின் இருப்பிடத்தைப் பொருத்தது. ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே’ என்பது ‘அந்நியன்’ சொல்லைப் பொருத்தவரை மிகவும் உபயோகமான வாக்கியம். இந்த அந்நியன் மூன்றாவது வீட்டில் இருந்தால் பிரச்சினையில்லை. நமக்கு அண்டைவீட்டுக்காரன் என்கிறபோது பிரச்சினை வருகிறது. இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் அந்நியனின் வளர்ச்சி நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. போகும்போது வரும்போதும் அவன் புன்னகைக்காக ஏங்குகிறோம். வாய்ப்பு அமையுமானால் வீடு தேடி சென்று பாராட்டவும் செய்வோம், கேட்கிற மனைவியிடம் அதிலென்ன தப்பு, அவர் உழைப்பு அப்ப, பாராட்டித்தானே ஆகவேண்டும் என்போம். ஆறுமாதம் கழிந்தது. அந்த மூன்றாவது வீட்டு அந்நியர் அடுத்த வீட்டுக்கு குடித்தனம் வருகிறார். மூன்றாவது வீட்டில் இருந்தவரை அவரின் உயர்வை சங்கடங்களின்றி ஏற்றமனம், அவர் துயரங்களைப் பரிவுடன் அணுகிய மனம், அவர் அண்டைவீட்டுக்காரரானதும் விரோதியாகப் பார்க்கிறது. தனது முன்னேற்றத்திற்கு இந்த அண்டைவீட்டு அன்னியர் தடையாக இருப்பார் என்கிற கற்பனையில், தமது தினசரி சந்தோஷங்களை தொலைத்து தூக்கமின்றி தவிக்கத் தொடங்குகிறது. அவருக்கு எதிராக வாய்ப்பு அமையுமானால் காய்களை நகர்த்தி தமது மனப்ப்புண்ணுக்கு மருந்திடுகிறது. இந்த அண்டைவீட்டு அந்நியர் அரசியல் நமது சமூகத்தின் எல்லா படிநிலைகளிலும் இன்று இடம்பிடித்திருக்கிறது. இவ் வாழ்க்கை அரசியல் நமது வர்க்க அரசியலையெல்லாம் ஓரங்கட்டிவிட்டன.ஒரு ஐரோப்பிய தொழிலாளி, ஆப்ரிக்கன் ஒருவரை அல்லது ஆசிய நாட்டவர் ஒருவரை அவர் நாட்டிலிருந்தபோது சக தொழிலாளியாகப் பார்த்தார், ஓடினார், உதவிக்கரம் நீட்டினார். அதே தொழிலாளி தனது அண்டைவீடுக்காரர் என்கிறபோது முகம் சுளிக்கிறார். பங்காளியாகப் பார்க்கிறார். பிரான்சு நாட்டில் பிரெஞ்சு தேசியவாதத்தை முன் நிறுத்திய ‘ தேசிய முன்னணி’ கட்சியில் இன்றைக்கு யார் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களெனப் பார்த்தால் சாதாரண தொழிலாளிகள், வேலையில்லாதவர்கள், பாமர மக்கள். நேற்றுவரை இடதுசாரி கட்சிகளில் தீவிர அனுதாபிகளாவும் உறுப்பினர்களாகவும் இருந்தவர்கள். மேற்கத்திய நாடுகளில் இதுவரை காணாத அளவில் பொருளாதார நெருக்கடிகளும், வேலையின்மையும் உள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தமது பொதுவுடமைக் குடையைச் சுருக்கிக்கொண்ட பிறகு அந்நாடுகளின் மக்கள் ஜெர்மன், பிரான்சு, இங்கிலாந்து முதலான வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்ற கொள்கை முடிவுகளால் உள்ளே நுழைவது எளிதாகியிருக்கிறது. ஏற்கனவே ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு விதி முறைகளின் கீழ் வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் வந்துவிட்டனர் என்ற கோபத்தீயில் இருக்கிற மேற்கு ஐரோப்பிய வெள்ளையர்களுக்கு, கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் ஒரு சில மக்கள் வருகை எண்ணெய் ஊற்றியதுபோலாகிவிட்டது. அடித்தட்டுமக்களின் பலவீனத்தில் அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் இந்தியாவில் மட்டுமில்லை உலகின் எல்லாபகுதிகளிலும் இருக்கிறார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையிலே ஐரோப்பிய பாராளுமன்ற முடிவுகளும் இருக்கின்றன. அவ நம்பிக்கை கூடாதுதான், நல்லதே நடக்குமென நம்புவோம்.