தமிழும் நதியும் – நா கிருஷ்ணா

 

‘நீரின்றி  அமையாது உலகு ‘  என்ற உண்மையை உணர்ந்து,  நிலக்குடத்தை நிரப்ப  வள்ளல் வான்பசுக்கள் மடி சுரக்கும்  உயிர்ப்பாலின் வெள்ளமே ஆறு. மனிதர் வாழ்க்கையை ஆற்றுப்படுத்துகிற  நதியென்னும் அற நூல்.  பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நிகழும் இயற்கையின்  இவ்வினையையே நாம்  ஆறு, புனல், நதியென அழகு  தமிழ் பெயர்ச் சொற்கள்களாக `மாற்றி உள்ளோம். ஆறு என்ற சொல்லுக்கு நதி, புனலென்று விளக்கம்தரும் அகரமுதலிகள் அதற்கு ஒழுக்கம், பயன் என்ற பொருளைத் தருவதையும்  கவனத்திற்கொள்ளுதல் வேண்டும்.

 

பனிப்பிரதேசத்தில் வாழ்பவனைக் காட்டிலும் , பாலை நில மனிதனும், விலங்கும் நீரின் அருமையைக் கூடுதலாக உணர்ந்திருப்பார்கள். தமிழ் நிலம் கடுமையான வெம்மையையும் வறட்சியையும்  மட்டுமே கொண்ட பாலை நிலம் அல்ல, ஆனால் அதுபோல ஆக்விடக்கூடாதென்ற அச்சத்தில் நாட்களைத் தள்ளும் அவலத்தில் தவிக்கும் நிலம்.  மாரிப் பொய்த்து, காவிரி வறண்டு அறுபோகம் கண்ட தமிழ்நிலம் இன்று ஒருபோகத்திற்குக் கூட வழியின்றி போய்விடுமோவென நம் உள்ளம் தவிக்கிறது.

 

காலம் காலமாகவே வானத்தைப் பார்த்து வாழ்ந்தவன் தமிழன். தமிழனின் உயர்ந்த சிந்தனைக்கு இதுகூட காரணமாக இருதிருக்கலாம். « நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை  என்ற இரண்டு பண்புகளும் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ்’ மொழிப்பெயருக்கு விளக்கம் தர வந்தவர்கள், ‘ இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக்குறிப்பிட்டனர் »  என எழுதுகிறார் பேராசிரியர் தொ. பரமசிவன், தமது வடுப்பூக்கள் என்ற  கட்டுரைத் தொகுப்பில். ஆக நீரையே மொழியாக கொண்ட தமிழினம்,  நீரைத் தன் வாழ்க்கையாக வைத்து ஒழுகியதில் வியப்பில்லை.

 

பண்டைய நாகரீகங்கள் அனைத்துமே நதிகளில் பிறந்தவை, நதிகளில் வளர்ந்தவை என்பதை வரலாறுகள் தெரிவிக்கின்றன. நாகரீகங்கள் என்பது உண்பது, உடுத்துவது அல்ல. பெரும் எண்ணிக்கையிலான மக்கள் சமூகத்தின் வாழ்க்கை நெறி,  பண்புகளின் கண்ணாடி, கலை  இலக்கிய சாட்சியம், நுண்மாண் நுழைபுலத்தின் வெளிப்பாடு. சிந்து நதியைத் தொட்டிலாகக்கொண்ட மொகஞ்சாதாரோ – ஆரப்பா , நைல் நதியைத் தொட்டிலாக்கிக்கொண்ட எகிப்து, டைக்ரீசு யூப்ரட்டீசு நதிக் கரைகளில் வளர்ந்த  மெசொபொத்தோமியா  ஆகியவற்றை நாம் அறிவோம். இன்றும் பல முக்கிய நகரங்கள் அனைத்திலும்  ஏதோவொரு நதி, நகரின் செழுமைக்கும் பெருமைக்கும் அழகியல், பொருளியல் அடிப்படையில் பயன்தருகிறது என்பது கண்கூடு.

 

இன்றைய மனிதர்கள் நீரைத்தேடி எதற்காக நாம் போக வேண்டும், அது ஆட்சியாளர்கள் உறங்கினாலும்,  அண்டைமாநிலமும்  கைவிரித்தாலும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பு உதவாவிட்டாலும், வானம் கருணைகாட்டும், தன் வாசல்தேடி  வரும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். ஆனால் அன்றைக்கு,  தன்னைத் தேடி நீர் வராதென்ற  நிலையில்  தனது உயிர்வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நதிகளைத் தேடி மனிதர்கூட்டம் அலைந்தது.  அந்த அலைதலின் பயனாக, ஓரிடத்தில்  ஓங்கி வளர்ந்திருக்கிற  மரங்களையும், தழைத்திருக்கிற புல்பூண்டுகளையும் , எறும்புப் புற்றுகளையும்  வைத்து வெள்ளம் கரைபுண்டோடக் கூடிய இடம் எதுவாக இருக்குமென்ற புத்திக் கூர்மையை அவர்கள் பெற்றிருந்தார்கள். .

 

பருமரக் கரு ஆல் அத்தி பாற்பொடி

மருதுடன் இலுப்பையும் வஞ்சிமாப் பொளி

தருநொச்சி இத்தி ஏழ்பாளை புங்கோர்

கருமொய்த்த எறும்பு விளங்கு காணுமே !

 

காணும் வெண்புல் கருரும்புல் கருஞ்சடை

தோறு செங்கோல் அணுகு குறுந்தொட்டி

தாணு தெற்பை சிறுபீளை சாடிணை

வெங்கோரை பொருதலை வெள்ளமே !

 

என 19 நூற்றாண்டு பாடல்கள் தெரிவிக்கின்றன, எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை ஆனால்  நூலின் பதிப்பாசிரியர் ச.வெ. சுப்பிரமணியன் என இவற்றைக் குறிப்பிடுபிறார், கடலடியில் தமிழர் நாகரீகம் என்ற நூலை எழுதியுள்ள புதுவை நந்திவர்மன்.

 

நதியைக் கண்ட தும்  நீரைபார்த்த மகிழ்ச்சியில் நிலையாக இருப்பிடத்தை அமைத்துக்கொண்டு மக்கள் ஆங்கே  தங்கலாயினர்.  ஆற்றங்கரைகளும், அதனையொட்டிய வெளிகளும் ;  அடர்ந்த மரங்கள் செடிகொடிகள், பறவைகள், விலங்குகள்  என்ற உயிர் வாழ்க்கையின் கருவறையாக இலங்குவதைக் கண்ட மனிதன், அவற்றோடு ஒன்றாக தாம் வாழ்வதற்கும் புனல் இடமளிக்கும்  என்று நம்பினான், அன்றிலிருந்து  நாடோடிவாழ்க்க்கையை நதிக்கரை வாழ்க்கையாக  மானுட வாழ்க்கை அணைத்துக்கொண்டது. மனிதம், ஆற்றின் துணைகொண்டு ஆற்றியது வயிற்றின் பசியைமட்டுமல்ல, பொருட்பசியையும்.

 

எனவேதான்,

 

பூவார் சோலை மயில் ஆல

புரிந்து குயில்கள் இசைபாட

காமர் மலை அருகசைய

நடந்தாய் வாழி காவேரி !

 

என்று  காவிரியின் நடைபயணத்தை வாழ்த்துவதன் ஊடாக  இளங்கோ, ஏன் மனிதன் தன் நடைபயணத்தில் இளைப்பாற நதிக்கரையை தேர்ந்தெடுத்தான் என்ற இரகசியத்தையும் போட்டுடைக்கிறான். மனித இனம் நதிக்கரையில்  இளைப்பாறியபின்னர் அங்கே என்ன நிகழ்ந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் நமக்கு விளக்குகிறது.

 

உழவர் ஓதை, மதகோதை

உடைநீர் ஓதை, தண்பதங்கொள்

விழவரோதை, சிறந்தார்ப்ப

நடந்தாய், வாழி காவேரி !

 

காவிரிக்கரையில்  காவிரி பாயும் ஓசைமட்டுமல்ல  உழவர் எழுப்பும் ஓசையும் உண்டென்கிறான். இந்த உழவர் ஓசையில் : நுகத்தடி, நுகத்தானி, பூட்டாங் கயிறு, கொழு, கொழுவாணி, தாற்றுக்கோல், உழுவெருது, உழுசாலில் நீர்பாயும் சலசலப்பு அவ்வளவும் அடங்கும். மதஓதை உடைநீர் ஓதை  நீர் பாய்ச்சலின்போது எழும், மண்வெட்டியை மடையில் போடும் ஓசை, மடை திறக்கும் ஓசை, மடை உடைந்து பாயும் தண்ணீர்ன் ஓசை ; வெள்ளத்தில் நீராடி மகிழும் மாந்தரின் ஓசை என்ற  எல்லாமுமான ஓசையாக ஓசையின் வெள்ளமாக நடக்கின்ற காவிரையை இளவல் பாடுகிறான்.

 

உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழ்கூறும் நல்லுல கம் நதியோரம் தம்மைப் பிணைத்துக்கொண்ட உலகம், நதி புனலுடன் தம்

பிறப்பை, இளமையை, முதுமையை, காதலை,மணவாழ்க்கையை, முறிவை,  இறப்பை ஒப்படைத்து வாழ்ந்த இனம் தமிழினம்.  அலெக்ஸாந்திரியா போல, ஆம்ஸ்டர்டாம்போல, பாக்தாத்போல, பெல்கிரேடுபோல, இலண்டன்போல, பாரீசுபோல, ஹோசிமின் போல கல்கத்தா வாரணாசிபோல இன்னும் இது போன்ற நூற்றுக்கணக்கான நகரங்களைப்போல தமிழ் நாட்டின் நகரங்களும் நதிக்கரைகளில்  செழித்தவை, நதிகளால் வளம் பெற்றவை நதிகளால் காதல்வயப்பட்டவை.

 

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்

கண்ட தோர் வையை பொருனைநதி-என

மேவியாறு பலஓடத்- திரு

மேனி செழித்த தமிழ்நாடு !

 

என்று தமிழ் நாட்டின் வளத்தை ஆறுகளோடு இணைத்து பாரதி பாடுகிறான். தமிழ் மண்ணை செழிக்கவைக்கும்  ஆறுகளாக ஐந்து ஆறுகளை பாரதி குறிப்பிடிருப்பினும், நமது  தமிழ் நிலத்தின் திருமேனியை செழிக்கவைப்பதில்  இந்த ஐந்து அல்லாது  பல நதிகளின்  பங்கிருப்பதை ‘மேவிய ஆறு பல ஓட’ என்ற வரியைக்கொண்டு புரிந்துகொள்கிறோம். அடையாறு, அமராவதி, கல்லாறு, மணிமுத்தாறு, செய்யாறு, கொள்ளிடம், செஞ்சி ஆறு , கபினி, குடமுருட்டி என சொல்லிக்கொண்டுபோகலாம்.

 

தமிழர்தம் வாக்கையும் இந்த ஆறுகளைப்போலவே அமைதியும் ஆர்ப்பரிப்பும், வெறுமையும் செழுமையும், அழகும் ஆவேசமுமாக அமைந்திருந்ததை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் காப்பியங்கள் அனைத்தும்  நதியைப் போற்றுபவை, நதியின் பெருமையைக்கூறி  விளக்கி . அந்நதியை ஒட்டி எழுந்த நகரங்களையும், மக்களின் வாழ்நெறியையும் வடிக்க முனைந்தவை. தண்டியலங்காரம் பெருங்காப்பியத்திற்கான இலக்கணப்ப்பட்டியலில்  «  …..பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் … » என்பதையும் ஓர் அங்கமாகச் சேர்த்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

 

ஆற்றின் கரைகளில் உலகின் பிறபகுதிகளைபோலவே தமிழகத்திலும் ஊர்களும் நகரங்களும் தோன்றின. « ஆறில்லா ஊருக்கு அழகேது » என்ற பழமொழி தமிழ் வழக்கறிந்த ஒன்று. சோழநாட்டின் தலைநகரமாகிய உறையூர் காவிரி ஆற்றங்கரையிலும், பாண்டி நாட்டின் தலை நகரமாகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும், சேர நாட்டின் தலைநகர் வஞ்சி கூட ஓர் நதிகரையில் இருந்த தாகவே சொல்லப்படுகிறது.   அவ்வாறே  துருத்தி என்ற பெயர் ஆற்றின் நடுவே எழுந்த ஊர்களுக்கு அமைந்தது என சொல்லின் செல்வர் ரா. பி சேதுப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஆகக் கரையோரம் எழுந்த ஊர்களெல்லாம் தமிழ் இலக்கியப் பக்கங்களைக் காப்பியங்கள், பக்தி இலக்கியங்களாக நிரம்பியுள்ளன.

 

‘ அன்பு எனும் ஆறுகரை அது புரள

நன்புலனொன்றி நாத என்று அரற்றி ‘

 

‘மாறு இலாத மாக்கருணை வெள்ளமே’

என மாணிக்கவாசகர் தமது பக்தியை யும், அப்பகுத்திகுரிய தலைவனையும் வெள்ளத்தின் மருங்கே நிறுத்துவது, தமிழ் நிலம்,  நீர் நிலம்  என்பதால்.

 

ஒரு பொருளின் மிகுதியை, அபரித த்தைக் குறிக்க தமிழில் வெள்ளம் என்ற  உறிச்சொல் அதிகம் பயன்பாட்டில் இருந்த து. காலவெள்ளம் புரட்டிபோட்டதில், இன்று நிலை தடுமாறி, அன்பு வெள்ளம், ஆசைவெள்ளம் அருள் வெள்ளம், கருணைவெள்ளம் என்ற காலம்போய், சாதிவெள்ளக் கரை உடைந்து, குருதிவெள்ளத்தில் அவ்வப்போது தமிழ்நிலம் மூழ்கடிக்கப்படும்  அவலத்தையும் இடையில் நினைகூர வேண்டியுள்ளது.

 

ஆற்றுப் பெருக்கற்றடி சுடுமந்நாளும வ்வாற்று

ஊற்றுப்பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு

நல்குடி பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை எனமாட்டார் இசைந்து.

 

நல்குடிப்பிறந்தோர்,  தங்களுக்கு ‘இல்லை’ நேரும் காலையும்  அடுத்தவர்  கேட்கும்போது தங்களிடம் உள்ள பொருளை, கால் சுடும் அளவிற்கு நீர்வற்றி வெறும் மணலாக ஆறுறுவற்றிப்போனாலும் அதை நீருக்காக தோண்டுவோருக்கு ஊற்று நீர் கொடுத்து உதவும் நதியைப் போல  என்று ‘நல்வழி’யில் ஔவை குறிப்பிடுவாள். இது தீயவழியில் மணற்கொள்ளைக்குத் தோண்டும் மனிதர்களுக்குப் பாடப்பட்டததல்ல.

 

தமிழே  தலைவனாக, தமிழே தலைவியாக தமிழே தோழன் தோழியாக, பிறமாந்தராக அவர் தம் வாழ்க்கையாக நீர்ப்பர்வல் போல ஆற்றுப்படுத்துதல் தமிழ்க்காவியங்களில் நிகழ அப்பெருமை தமிழுக்கும் நீருக்குமுள்ள நெருங்கிய உறவால் நிகழ்ந்த து என்றால்  மிகையில்லை.

 

குடகுமலையில் பிறக்கும் காவிரியும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குச் சொந்தமான  வைகையும்  இன்றளவும் தமிழ் மொழியோடும், தமிழர் வாழ்வாதாரத்தோடும்  பின்னிப்பிணைந்தவை.  காவிரி ப்பாயும் ஊர்களெங்கும் ஆடிப்பெருக்கு விழா  புதுப்புனலை வரவேற்கும் வித த்தில் ஆடிப்பெருக்கு விழாவாக, ஒவ்வொரு வருடமும்   ஆடிமாதம் பதினெட்டாம் நாள்  கொண்டாடப்படுகிறது. கள்ளழகர் வைகையில் இறங்கும் நாள், மதுரைப்பகுதியில் இன்றளவும் ஒரு பெருவிழா.

 

நீராடல் நீர் விளையாட்டு வேறு  என்கிறார். தொ.பரமசிவன். அவர் கூற்றின்படி, «   நீராடல் என்பது திராவிட நாகரிகத்தில் சடங்கியல் தகுதி உடையன » மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும்  தமிழர் வழக்கினை அகநானூறு பாடல் கொண்டு விளக்குகிறார். பெண்களின் பூப்பு நீராட்டும் அவர் கூற்றின் படி நீராட்டலின் கீழ் வருகிறது. குளித்தல் அல்லது உடலை குளிர்வித்தல் வெப்பத்தால், அல்லது உழைப்பால் வெப்பமடைந்த உடலை குளிரவைத்தல் என்பது அவர் மூலம் நாம் தெரிந்துகொள்ளும் மற்றொரு முக்கியமான தகவல்.  நீரில் நீந்தி மகிழ்வது, நீர் விளையாட்டு . குறுந்தொகை, அகநானூறு, சிலப்பதிகாரம் முதலான நூல்களில் இடம்பெறும்  ஆட்டனத்தியும் ஆதிமந்தியும் காவிரில் ஆடி மகிழ்ந்தது நீர் விளையாட்டு.  புதுப்புனல்விளையாட்டில்  பங்கேற்க வந்த சேரநாட்டு இளவரசன்ஆட்டநத்தி காவிரிவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறான்.  ஆவனுடன் நீரில் விளையாடிமகிழ்ந்த ஆதிமந்தி,   நீரோடு அடித்துச்செல்லபட்ட கணவனைத் தேடிக் கண்டடைந்த  கதையை

 

“– உரைசான்ற
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன்
தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று
‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து
முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு
பொன்னங் கொடிபோலப் போதந்தாள்” என சிலப்பதிகாரம் நமக்குத் தெரிவிக்கிறது. «  கன்னியர் ஆகி நிலவினில்  ஆடிக் களித்த தும் இந்நாடே-   தங்கள் பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல் போர்ந்த தும் இந்நாடே !  »   என்ற வரிகளில் பாரதியும் ‘ நீராடுதல் ‘என்று கூறாமல் ‘நீர் விளையாடி’ என்றே  எழுதுகிறான். கவி அரசு கண்ணதாசனும், « நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே » என்று  எழுதியிருப்பதை நாம் மறந்துவிடமுடியாது. வருங்காலங்களில் நீர்  விளையாட்டுக்கு அல்ல நீராடுவதற்கேனும்  வெள்ளம் வருமா என்பது நமது இன்றைய  கவலை.

 

————————————————————————-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பெண் இலக்கியம்

 

நாகரத்தினம் கிருஷ்ணா

 

பெண் என்ற சொல் குறித்து அச்சொல் தரும் பிம்பம் குறித்து, அப்பிம்பத்தின் வளர்நிழல், தேய்நிழல் குறித்து எத்தகைய நோக்கினை, நோக்கிற்குரிய பொருளை இவ்வுலகும், அதனுள் அடங்கிய சமூகமும் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிறபோது அச்சமூகத்தின் அங்கமாகிய  நம்மீது – ஆணினத்தின் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது. இருமை வாத ஒழுங்கின்படி பருப்பொருள் உயிர் இருவேறெனக்கொள்வதில் சிக்கலில்லை ஆனால் ஆண்xபெண் என்கிற இருமையியத்தை தராசில் இட்டு, ஒன்றை எடைகூடியதாகவும் மற்றொன்றை எடைகுறைந்த தாகவும் காட்டுகிற  இந்த ஆண்சமூகத்தின் கட்டளை கற்களில்தான் பிரச்சினையே.  இறைநம்பிக்கை அடிப்படையில் உருவானது  மனிதர் வாழ்க்கை.. நமது சமூகத்தின் மரபுகள் இருமைவாதத்தை சமயநெறிகளின் அடிப்படையில் புண்ணியம்x பாவம், சொர்க்கம்x நரகம், நன்மைxதீமை  ஆகியவற்றின் வழிமுறையில்  ‘ஆண்xபெண்’ ஐயும் நிறுத்தி பொருள் காண்பது தான் நமக்குள்ள சிக்கல்.

நித்தம் நித்தம் வீட்டிலன்றி சாலையில், பேருந்தில், அலுவலகங்களில், பொதுவெளிகளில்  எங்கும் பெண்கள் என்கிறபோது  பெண்களற்ற  சமூகம்  மூலவரற்ற கருவறைக்குச் சமம் என்கிற ஞானத்தில்,  நமது பகுத்தறிவு முரண்நகையாக தெளிவு பெற்றிருக்கிறபோது மனிதர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கலை இலக்கிய படைப்புகள் பெண்களையும் கருத்தில்கொண்டு உருவாவது இயற்கை, இலக்கியத்தில் பெண்கள் இடம்பெறுவது ஒருவகையான சமூக நீதி.  இந்தச் சமூக நீதி சரியாக வழங்கப்படுகிறதா, யார் வழங்குவது முறை என்பதுதான் நமக்கு முன்னுள்ள கேள்வி.

« ஆண்கள் சமூகம் மூன்று வகைகளாகப் பெண்களைப் பிரித்திருக்கிறது. இயற்கையில்  பெண்கள் எப்படி இருக்கவேண்டுமென சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அவ்வாறு இருக்கிற சராசரி பெண்கள் முதல்வகை. தனக்காக என்றில்லாமல் பிறருக்கென வாழப்பழகிய அர்ப்பணிப்பு பெண்கள் இரண்டாம் வகை, புதிர்ப்பெண்கள் மூன்றாவது வகை. பெண்ணினத்தால் அனுகூலம் பெற்ற மனிதர்கள்  ஏற்படுத்திய வகைப்பாடே இவை மூன்றும். » என்கிறார் பெண்ணினத்தின் விவிலியம் எனப்படும் ‘இரண்டாம் பாலினம்’ நூலின் ஆசிரியர் சிமொன் தெ பொவ்வார்,   முத்தாய்ப்பாக, « ஒவ்வொரு ஆணும் தனிப்பட்ட வகையில் இப்பிரிவுகளால்  நன்மை அடைகிறான் » என்பதோடு, «  இதுபோன்ற பிரிவுகளின் அடிப்படையில் பெண்களுக்கெதிராகச் சட்டங்களை இயற்றுவதும், நெறிமுறைகளை வகுப்பதும் தந்தைவழிச் சமூகத்திற்கு எளிது », என்கிறார்.

சமூகமும் பெண்களும்   

உலகங்கும் நிறம் இனம் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களில் இந்த இரண்டிலும் சாராது சிறுமை படுத்தப்படுவதில் பெண்களும் அடக்கம் என்பதுதான் பெண்ணினத்தின் பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குரலெழுப்பிய  சிமொன் தெ பொவ்வாரின் நூல் தெரிவிக்கிறது. பெண்விடுதலைக்கான போராட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஓர் அலுவகத்தில் ஆணும் பெண்ணும் பதவியிலும், வாங்கும் ஊதியத்திலும், பெறும் சலுகைகளிலும் சமமென்றே சட்டம் கருதினாலும், அதை முறைப்படுத்தினாலும் இருவேறு உலகங்களை அவர்கள் அலுவலக வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதாக ஒரு பிரெஞ்சு இதழ் தெரிவிக்கிறது:

எதிர்ப்படும் உங்களுக்கு அலுவலகத்தில் வணக்கம் தெரிவிக்க மறந்தால்:

ஆண் எனில்: அவனுக்கு இன்று ஏதோ பிரச்சினைகள்.

பெண் எனில்: அவளுக்குத் திமிறு

நிறுவனத்தின் இயக்குனரோடு உணவு விடுதியில் சேர்ந்து சாப்பிடுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள்

ஆணென்றால்: கூடிய சீக்கிரம் அவனுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது

பெண்ணென்றால்: இயக்குனருக்கும் அவளுக்கும் ஏதோ கசமுசா

வேலையில் கறாராக இருப்பதாக வைத்துக்கொண்டால்

ஆணென்றால்: தனக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தத் தெரிந்தவன்
பெண்ணென்றால்: என்ன இருந்தாலும் அந்தப்பொம்பிளைக்கு இத்தனை ஆர்பாட்டம் கூடாது

மாலையில் அலுவலகத்தில் கூடுதலாக சில மணி நேரம் இருக்கவேண்டி இருக்கிறது

ஆணென்றால்: அவனுக்கு வேலையிலே அவ்வளவு அக்கறை
பெண்ணென்றால்: என்னவோ நடக்குது கேமரா வைக்கணும்

கூடுதலாக ஊதியம் கேட்பது

ஆணென்றால்: அவனுக்கு வேறு எங்கோ நல்ல வேலை கிடைப்பதற்கு சாத்தியங்கள் இருக்கவேண்டும்.
பெண்ணென்றால்: இப்போது அவள் வாங்குகிற சம்பளமே அதிகம்

அலுவல் விஷயமாக வெளிநாடு செல்லவேண்டும்

ஆணென்றால்: மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி அடிக்கடி பிரயாணம் செய்வது சிரமம்தான்
பெண்ணெனில்: இப்படி அடிக்கடி ஊர்மேயறாளே புருஷன் கண்டுகொள்வதில்லையா?

அலுவலகங்களைத் தவிர வீட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறையாமலிருப்பதை மேற்கு நாடுகளில் காணமுடிகிறது. அதிலும் சமயம், சாதி, எண்ணற்ற உட்பிரிவுகள்  என்கிற பாகுபாடுள்ள இந்தியச் சமூகத்தில். பண்பாட்டின் பேராலும், மரபின் பேராலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்  மேற்குநாடுகளைக் காட்டிலும் அதிகம் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்துவ மதத்தைக் காட்டிலும், இங்கு இந்துமதத்தைச் சார்ந்த பெண்களுக்குச்  சிக்கல்கள் அதிகம். இந்துமதத்தைச் சார்ந்த பெண்களைக்காட்டிலும் இஸ்லாமிய பெண்களுக்குக் கூடுதல் நெருக்கடிகள். பிராமண வகுப்பைச்சார்ந்த பெண்ணைக்காட்டிலும் தலித் பெண்ணிற்கு கல்வி வாய்ப்புகள் இங்கு குறைவு. குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்களில் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதில் ஆகட்டும், கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதிலாகட்டும் ‘பொட்டை புள்ளை’களுக்கு அநீதிதான்.  இந்நிலையில் உள்ள நமது சமூகத்தின் பெண்ணிலக்கியத்தை யாரிடம் தேடுவது எங்கே தேடுவது என்று கேள்வி.

இலக்கியத்தில் பெண்கள்

தமிழ் நிலத்தில் பெண்கள் சங்க காலம் தொட்டு கல்விகற்று ஆண்களுக்கு நிகராகத் திகழ்ந்துவந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களின் விழுக்காடுகள் குறைவு.  மகளிரில் பெரும்பாலோர் ‘மனை உறை’ மகளிராக வாழ்ந்து போருக்கான ‘வீர மறவர்களை ஈன்று புறம் தருதல்’ அறம் எனப் போற்றியதாகத்தான் சங்க கால வாழ்க்கை நெறி தெரிவிக்கிறது.  அக்கால இலக்கியங்களும் இவற்றையே எதிரொலிக்கின்றன. நவீன தமிழ் படைப்பாளுமைகளில் முதன்முதலாக பெண்ணினத்திற்கு குரல்கொடுத்தவர் பாரதி. ‘நத்தைப் புழுவைபோல ஆணும் பெண்ணும் கூடப்பிறக்கிறோம். இதில் உடன் பிறந்தான் ஆண்டான் ; உடன் பிறந்தவள் அடிமை, சுவாமி சுத்த பாமர ஜனங்கள்’, என்றதோடு ஆண்வர்க்கத்தைப் பார்த்து, ‘பெண் உயராவிட்டால் ஆண் ஏது ?’ எனக் கேட்டவர். அவரைத் தொடர்ந்து ஆண் எழுத்தாளர்கள் பலர் தங்கள் படைப்புகளில் பெண்களைப் புதிய கோணத்தில் படைத்திருப்பினும், ஒரு வகையில் அவை குற்ற உணர்வின்  வெளிப்பாடே. தவிர பெண் எனில்  ஏதோ அச்சம், நாணம், கற்பு, தியாகம் ; அழகு, மென்மையான உடல், இனிமையான குரல் என்று ஒரு சில பண்புகளுக்காகவே என்பதுபோல கட்டமைக்கும் போக்கும் ; சீதையாக, தமயந்தியாக, சாகுந்தலாவாக, ஆண்டாளாக, வாசுகியாக, கண்ணகியாக , மாதவியாக, கோப்பெரும் தேவியாக மொத்தத்தில் பெண்ணை உயர்த்துவதுபோல எழுத்தைப்படைத்ததும்  அவளைக் காதலன் அல்லது கணவனின் நிழலாகச் சித்தரிப்பதற்கே. நவீன ஆண்படைப்பாளிகளையும் இந்த அடிப்படையிலேயே அணுக வேண்டியுள்ளது.    « இலக்கியவாதிகள் பெண்களைக் காட்டும் சித்திரங்களனைத்தும் சொந்தச் சரக்கல்ல. ஏற்கனவே நமது பழங்கதைகளில் கட்டமைக்கப்பட்ட பெண்ணையே இவர்கள் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள், தவிர எழுத்தாளர்கள் காட்டுகிற பெண் வடிவம் பெண்களுடையதுமல்ல, அவர்களின் கற்பனைவடிவம் »  என்ற சிமொன் தெ பொவ்வார்  கூற்று  சிந்தனைக்குரியது.

பெண்ணிலக்கியம்

‘பெண்ணியக் கவிதை’ என்று வகைப்படுத்துவதைவிட ‘பெண்களின் கவிதை’ என்றோ ‘பெண் கவிதை’ என்றோ வகைப்படுத்திக்கொள்வது நல்லதாக இருக்கும். என்கிறார், கவிஞர் மாலதி மைத்ரியின் ‘நீரின்றி அமையாது உலகு’ கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய கவிஞர் பிரம்மராஜன்.  அவர் வழிமுறையிலேயே  பெண்ணிய இலக்கியத்தை, ‘பெண்களின் இலக்கியம்’  என்றோ, பெண் இலக்கியம் என்றோ வகைப்படுத்திக் கொள்வதுதான் நல்லதாக இருக்கும், காரணம் இவை  பெண்களை முன்னிறுத்தி, பெண்ணுரிமைக்காக வாதிடும் பெண்படைப்பாளிகளின் இலக்கியம்.

பெண்களுக்காக குரல்கொடுத்த, குரல்கொடுக்கிற ஆண் இலக்கியவாதிகளின் நல்லெண்ணத்தில் குறை இல்லை. ஒர் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவருக்காக வழக்காடுவதும், தம் கட்சிக்கார ருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் கேட்பதும் சனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு. எனினும்   பாதிக்கப்பட்டவரே தமது வலியை,  சந்தித்த துயரங்களை, படும் வேதனைகளை, இழைக்கப்படும் அநீதிகளைத் தெள்ளத் தெளிவாக நீதிமன்றத்தில் வைக்க முடியுமானால் அவர்களின் குரலைத்தான் இச்சமூகம் செவிமடுக்கவேண்டும் அதுதான்  நியாயம், முறையுங்கூட.

« நாவலுக்கு உலவும் பெண்கள் என் உலகத்தில் என்னோடு  உலவும் பெண்கள். என் உலகத்தில் என்னோடு சகபயணிகளாக இருந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுக்கென சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்குப் பொருந்தாத யதார்த்தமானவர்கள். எல்லா மனித ஜீவன்களையும் போல தம் வாழ்வை , வாழவும் நேசிக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்  எல்லைக்குள்ளிருந்தபடியே தங்களுடைய சந்தோஷங்களை, கனவுகளை, ரகசியங்களை, துயரங்களைத் தேடிக் கொள்பவர்கள், பிறருடைய சவுகரியத்துக்காகவோ, அசவுகரியத்துக்காகவோ ஒரு வார்த்தையைக்கூட நான் எழுதவில்லை. மொத்த நாவலிலுமே இது இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன், அவ்வளவுதான். » (இரண்டாம் ஜாமங்களின் கதை முன்னுரையில் – நூலாசிரியர் சல்மா)

« திருமணத்தையும்  சாதியையும் உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிற இந்தச் சமுதாயத்தில்  தன்னந்தனியாக வாழ முடிவெடுத்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், சுகதுக்கங்களையும் , இன்னல் இடையூறுகளையும், இன்பதுன்பங்களையும் முழுமையாக அனுபவித்ததன் வெளிப்பாடுதான் இந்த ‘மனுசி’ . திருமணத்தை ஒரு கையிலும் சாதியத்தை மறுகையிலும் வைத்துக்கொண்டு பெண்ணைச் சிதைத்து சின்னா பின்னமாக்கும் இந்தச் சமூக அமைப்புக்குள் இருந்துகொண்டு  ஒரு போராட்ட வாழ்க்கையை  வாழ்ந்து விடவேண்டும்  என்ற கனவும், அதனை நனவாக்கிட எனக்குள் எழுந்த வேகத்தின், தாகத்தின் வீரிய விதைகளே இவ்வெழுத்துக்கள். » (மனுசி முன்னுரையில் -நூலாசிரியர் பாமா)

« பெண் இன்று மட்பாண்டமில்லை. யார் உடைத்தும் அவள் சிதறிப் போகமாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள். உயர் தேர்வுகளில் இடம்பெறுகிறாள். பணி செய்ய அலுவலகம் போகிறாள். சம்பாதிக்கிறாள். தன்னைக் கௌரவமாகப் பேணிக்கொள்கிறாள். சமூகத்தோடு இசைவாகத் தன்னைப் பொருத்திக்கொல்கிறாள் » ( நேசத்துணை – முன்னுரையில் நூலாசிரியர் திலகவதி)

ஆக இலக்கிய அலகு களுக்கு அப்பாற்பட்டது பெண்ணிலக்கியம். ஓர் இலக்கிய பிரதிக்குரிய அல்லது தேவையான பிரத்தியேகப் பண்புகளுடன் ஒடுக்கபட்ட பெண்ணினத்தின் குலாகவும் ஒலிப்பது இவற்றின் சிறப்பு. அது விடுதலைக்குரல், அடிமைபட்டுக் கிடக்கும் வர்க்கத்தின்  சுதந்திரக் குரல். « உன்னிலும் நான் உயந்தவள் ! » என்கிற அகங்காரம் இல்லை. « உன்னிலும் நான் எந்த விதத்தில் தாழ்ந்தவள் ? » எனக் கேட்கும் குரல்.  மேடும்பள்ளமுமாக இருக்கிற  மானுடச் சமூகத்தை சமப்படுத்த விழையும் குரல். இக்குரல்கள் அவரவர் பின்புலம், பெற்றகல்வி உற்ற அனுபவம் ஆகியவற்றிற்கேற்ப மென்மையாகவோ, வன்மையாகவோ ஒலித்தாலும் பெண்களுக்கென எழுதப்பட்ட விதியைத் திருத்த முற்பட்டவை, இதுநாள்வரை சகித்திருந்தோம், இனி சகிப்பதில்லை என ஒலிக்கும் குரல்கள்.

« அடிவயிற்றில் நெருப்பை வச்சிக்கிட்டு எத்தனை நாள் அலைய முடியும் ? » இதை  பல  பெண்களிடமிருந்து பல்வேறு தருணங்களில் நான் கேட்டிருக்கிறேன். இந்த வாக்கியம் நம் சமூகத்தின் பெண் இருப்பு சார்ந்த அச்சத்தை உணர்த்துவதாக இருந்தாலும் அது வேறெதையோ சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. » என்கிறார் மாலதி மைத்ரி

நவீன தமிழ் இலக்கிய பெண் படைப்பாளிகள் குறிப்பாக கவிஞர்கள்   இன்றைய தேதியில் ஆண் படைப்பாளிகளைப்போலவே ஆளுக்கொரு கவிதைத் தொகுப்பை வைத்துக்கொண்டு பதிப்பக க் கதவுகளை தட்டுகின்ற போதிலும் எனக்கு வாசிக்க கிடைத்த நவீன தமிழ் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள்  அனைத்துமே  ஒரு நல்ல படைப்புக்குரிய அடர்த்தியையும், ஆழத்தையும், நேர்த்தியையும் பெற்று, கூடுதலாக  பெண் விடுதலைக்காக வாதிடுகின்றன.

அம்பை, பாமா, திலகவதி, வைகைச்செல்வி, இளம்பிறை, சதாரா மாலதி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மாலதி மைத்ரி, சல்மா,அனார், குட்டி ரேவதி, சுகிர்தராணி, தமிழ்நதி அ.வெண்ணிலா, என நீளும் பட்டியலில் புதிய தலைமுறையினரும் இணைந்துகொண்டுள்ளனர்  இவர்களின் படைப்புக்களின் வடிவத் தேர்வு எதுவாக இருப்பினும், பெண்களை முன்னிலைப்படுத்தி, பெண்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பவையாக உள்ளன. காட்டழிப்பை கண்டிக்கும் நேரத்திலும்  கவிஞர் வைகைச் செல்வி « கருவில் பெண்ணை அழிப்பார்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ ? » எனப் பெண்ணினத்தின் பிரச்சினையை மறப்பதில்லை,  என்பதை உதாரணத்திற்குக் கூறவேண்டும்.

மணவாழ்க்கையும் பெண்ணிலக்கியமும்

இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை அல்லது நாமறிந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை குடும்ப வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் சரி, பெண்களின் கருத்துக்களைப் புறம்தள்ளுவது இன்றளவும் தொடர்கிறது. சுற்றம் சூழ பெண்பார்க்கச் செல்லும் ஓர் ஆண்,  தன் வாழ்க்கைத் தோழியின் மனதை அறிய முற்படுவதில்லை. ஒரு மாட்டைச் சந்தையில் பிடிப்பதுபோலத்தான் தரகருடன் வியாபாரம் பேசுகிறான். காதல் கூட தன்னையும் தன் குடும்பத்தையும் கரைசேர்க்க பெண்ணின் பின்புலம் உதவுமெனில்   ஆணின் மனம் அக்கறை காட்டுகிறது.  புகுந்த வீடு அவளுக்குத் தொழுவம். காரியம் யாவிலும் கைகொடுப்பவளாக அல்ல, நுகத்தடிக்குப் பொருந்துவள், குடும்ப பாரத்தை இழுப்பவள், சுமப்பவள். ஆனால் மாட்டிற்கு ஒரு விலையுண்டு, உரிய விலையை விற்பவனுக்கு அளித்தாலொழிய  உடமை யாக்கிக்கொள்ளல் சாத்தியமில்லை. ஆனால் இவ்விலங்கிற்கு உரிய விலையை விற்பவர்தான் வாங்குபவனுக்குத் தரவேண்டும் .

இப்பெண்பார்க்கும் வலியை ஏ ராஜலட்சுமி என்ற கவிஞர் :

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

 

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

அப்பாவின் அவசரகடிதம் !

என்றோ ஒரு நாள் என்று நிகழ்ந்தது

இப்பொழுது அடிக்கடி அவஸ்தையாய்…

ஜாதகப் பொருத்தம் வருமானம்

குடும்ப நிலை வீட்டுச் சூழல்

ஒவ்வொன்றிலும்  கழன்றுவிடும்

ஏதோ ஒன்று

சரியில்லை என்று. (எனக்கான காற்று)

 

வாசல் – கனிமொழி

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டைபோட்டுக்கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று. (கருவறை வாசனை )

 

என்ன விலை காதலே -வைகைச் செல்வி

‘ ………………………..

………………………………………….

கல்யாணம் ஆகிவிட்டால்

கல்லாகி விடுவேனோ ?

கயவர்கள் உலகத்தில் சுய நலமே வாழ்க்கையெனில் – எனக்கு

பந்தக்கால் தேவையில்லை

சொந்தக்கால் போதுமடா. (அம்மி)

 

புதின இலக்கியத்தித்திலும் திருமணம் குறித்து படைப்பாளிகள் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் தங்கள் கொந்தளிப்பையும்  கோபத்தையும் காட்டவே செய்கிறார்கள்.

‘நம்ம கையில ஒழைப்பு இருக்கு. எவந்தயவும் நமக்குத் தேவையில்லை. ஆம்பள இல்லாம நம்மளால வாழமுடியாதா என்ன ?’ (மனுசி -பாமா, ப.117)

‘எனது உடலுக்குச் சொந்தக்காரி நான். அதைக் கொடுப்பதையும் கொடுக்காமலிருப்பதையும் தீர்மானிப்பதும் நானாகத்தான்  இருக்கவேண்டும். இந்தச் சுதந்திரத்தை இழக்க எனக்கு ஒரு போதும் சம்மதமில்லை.’ (மனுசி-பாமா. ப.208)

திருமணத்தை மறுத்து குரலெழுப்பும் பெண் எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எனில்  மணமான அன்றே சல்மாவின், இரண்டாம் ஜாமங்களின் கதையில் வரும் பிர்தவ்ஸ் தன் புதுக்கணவன் யூசுபின் தோற்றத்தைப் பார்த்த கணத்தில், ‘ நான் உன்னோடு வாழப்போவதில்லை. என்னைத் தொடவேண்டாம் ‘ (பக்கம் 35, இ.ஜா.கதை)  என்கிறாள். கதையில் அவள் முடிவைக்கேட்டு நாவலாசிரியர் ஊரே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்ததாக  எழுதுகிறார். பிர்தவ்ஸ் என்ற பெண்ணின்  வார்த்தைகளைக் கேட்டு நூலாசிரியரின் துணிச்சலான இவ்வரிகளை வாசிக்கிறபோது நாமும் உறைந்து போகிறோம். காரணம் நூலாசிரியரைப் போலவே அப்பெண்ண்ணும்  ‘ வயதுக்கு வந்த பெண்கள் வீட்டு வசல்படியைத் தாண்டுவதே இல்லை ; வெளியிலிருந்து வீட்டுக்குள் எந்த அன்னிய ஆண் வந்தாலும்  அவர் முன் தலைகாட்டக்கூடாது என்கிற ஒழுங்கைக் கடைபிடிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவள்.

சமயமும் பெண் இலக்கியமும்

ஆண்களைக் காட்டிலும் சமய நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்கள் பெண்கள். ஆனால் உலகில் மதங்களுக்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை,  மதங்கள் பெண்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை.

‘பெண்ணாவது தெய்வமாவது ஆதி ! என் எண்ணப்படி எது நடக்கிறது ? பாத்திமாவுடன் பேசியபடி பாலைவனத்தைச் சுற்றி வர ஆசை. மேரி கையிலிருந்து குழந்தையை வாங்கி என் இடுப்பில் வைத்துக்கொண்டு பெத்லஹெம் மற்றும் சுற்று புற பிரதேசங்களைப் பார்த்துவர  ஆசை. இப்படி இவன் காலடியில்  உட்கார்ந்திருப்பதில் என்ன சுகம் ?  அக்கடா என்று படுக்க  ஒரு பாம்பு படுக்கை உண்டா எனக்கு ?’ (காட்டில் ஒரு மான் ப. 38)  என ஆதிசேஷனைப் பார்த்து லட்சுமி கேட்பதாக அம்பை எழுதுகிறார்.

‘ ஹனீபா தன் கணீர்குரலில் , « இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று  சொல்லுவதில்லை » என்று பாடிக்கோண்டிருந்தார். பிர்தவ்ஸுக்குச் சிரிப்பு வந்த து. « நானும் தான் என்னவோ கேட்டேன். எதைக்கொடுத்தானாம் ?’ (ப.188 ) என்று இரண்டாம் ஜாமங்களின் கதையில் தன் கதைமாந்தர்களில் ஒருவரைவைத்து வினவுகிறார் சல்மா.

பண்பாடும் பெண் இலக்கியமும்.

பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள மரபையும் பண்பாடுகளையுங்கூட நவீன பெண் இலக்கியம் சகித்துக்கொள்ளாது என்பதைச் சொல்லவும் உதாரணங்கள் இருக்கின்றன.

விளக்குகள்  என்ற கவிதையில்  வைகறைச்செல்வி :

 

‘……….

குத்துவிளக்கென்று

பெண்ணைச் சொல்வார்

ஆங்கோர் மூலையிலே

மோனத்தவம் செய்வதற்கும்

எடுப்பார் கையிலெல்லாம்

அடங்கி இருப்பதற்கும் ( அம்மி -ப. 72)  என்று எழுதுகிறபோதும்,

 

‘குறள் போட்டி, தேவாரப் போட்டி எல்லாம் நாங்க வெக்கிறோம். பெண்கள் பரிசு வாங்கினா கன்னா பின்னாட்டு பரிசு தரமாட்டோம். குத்து விளக்கு தருவோம்…..ஒண்ணுமில்லைம்மா நம்ம பண்பாடு முழுக்க முழுக்க பெண்கள் கையில் இருக்கும்மா’ (ப. 124, காட்டில் ஒரு மான்) என்று  ஓர்ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாக புத்தககக் கடைகாரர் ஒருவர் வாய்மொழிக்கொண்டு  அம்பை வைகைச் செல்வியின் மேலே கூறப்பட்டக் கவிதையை உறுதிபடுத்துகிறபோது, இப்படி ஒரு பிரிவினரை ஒடுக்குவதற்கென வகுத்துக்கொண்ட நமது பண்பாடுகளின் மீது பகுத்தறிவுகொண்ட மனிதர் எவரும் கோபம் கொள்வது இயற்கை.

இறுதியாக பொதுவெளியில் பெண்களின் நிலமையென்ன ?  என்பதைத் தெரிவிக்க இரு கவிதைகள்

உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ?   – வைகைச்செல்வி

‘என் தாயே !

நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை

அங்கே மா மரத்தின் கீழே

என் வயதுப்பெண்கள்

நட்சந்திரங்களுடன் பேசுகையில்

இங்கே நானோ,

சிம்னி வெளிச்சத்தில்

அரிசியிலே கற்களைப் பொறுக்குகிறேன்.

…………………

நேற்று ஒருவன் பாரதியைக் காதலித்தான்

இன்று நான் கதலிக்கிறேன்

அவனுக்குப் பெயர் பாரதிதாசன்.

தாசனுக்குப் பெண்பால் எனில்

தமிழே என்பால் கல்லெறியும்’  (அம்மி – ப. 23)

 

வீடுகளால் ஆன இனம் – மாலதி மைத்ரி

 

ஊரில் அனைத்து வீடுகளும்

நடப்பட்ட பெண்களென நிற்கின்றன

சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்

யாரோ ஒரு ஆணிற்காக ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன

வயதுக்கேற்றபடி த் தம் உறவுகளுக்காக

கொலைகாரன் திருடன்

குடிகாரன் துரோகி மோசடிக்காரன்

ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்

கொடுங்கோலன் காமவெறியன்

சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்

இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை

அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது

உடம்பு தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து

உயிரும் உணவும் அளித்து

அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்

 

ஆண்கள் வீட்டைப் புணர்வதன்மூலம்

பூமியை வளர்க்கிறார்கள்

பெண்களையல்ல

காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.(நீரின்றி அமையாது உலகு ப. 35)

 

 

ஆணோ பெண்ணோ படைப்புவேறு தான் வேறுஅல்ல  என நினைப்பவர் எவரோ, தான் படைக்க நினைப்பதற்கு உதாரணமாக முடிந்தமட்டும் தன்னையும் சொந்த அனுபவத்தையும்  பொதுப்படுத்தும் எழுத்தாற்றல் எவருக்குச் சாத்தியமோ  அவரே என்வரையில் ஒரு நல்ல படைப்பாளி. கலையும் இலக்கியமும் அழகியலுக்கு அப்பாற்பட்டு, புலன்களைக் கடந்து இதயத்திற்குச் சிலிர்ப்பூட்ட வேண்டும், அறிவையும் மனதையும் அலைக்கழிக்கவேண்டும்.

இரண்டாம் ஜாமங்களின் :  சொஹ்ரா, றைமா, அமீனா, சவூரா, நூரம்மா, மும்தாஜ், பிர்தவ்ஸ், வயிற்றுப்பிழைப்புக்காக இவர்களுடன் பிணைத்துக்கொள்ளும் மாரியாயி

பெண் என்ற இனம் பொதுவாக இரண்டாம் தளத்தில் நிறுத்தப்படுவது ஒரு பக்கமெனில் அவள் தலித்தாக பிறந்ததால் இச்சமூகத்தின் கருநாக்குகளுக்குக் கூடுதலாக பதில் சொல்லவேண்டியிருக்கிறது, நெருக்கடிகளுக்குப் பலியாக வேண்டியிருக்கிறது என்பதை தெரிவிக்கும் பாமாவின் மனுசி  ‘ராசாத்தி’.

அம்பையின் சீதாயணத்திற்குக் கனவுகாணும் அடவி செந்திரு,  அகம்பாவ ஷண்முகத்தை மேடையில் வீழ்த்தும் செண்பகம்.

பெண்களின் துயரங்கள் அனைத்தும் குடும்பம், திருமணம் ஆண்-பெண் உறவு ஆகிய வேர்களின் மூலாதாரத்தில் கிளைவிடுகிறதென்று உறுதிராக நம்பும் திலகவதியின் நேசத்துணை பாகீரதி..

இவர்களை வாய் பேசவைத்த படைப்பாளிகள், கவிதையுடாக பெண் இருத்தலை வலியுறுத்தும் கவிஞர்கள், இவர்கள் அனைவரின் குரலும், மாலதி மைத்ரி தமது ‘புலி’ கவிதையில் சொல்வதுபோல எல்லாரையும் தாண்டி  எல்லாவற்றையும் தாண்டி இன்று ஆண்களின் தலைமாட்டருகே காத்திருக்கிறது. விழித்தால் தப்பித்தோம். உறங்குவதுபோல பாவனை செய்தாலோ, பெண்புலிதானே என அலட்சியம் செய்தாலோ ஆபத்து ஆண் வர்க்கத்திற்கு இல்லை, சமூகத்திற்கு.

——————————————————————————–

 

 

 

 

 

பெண் இலக்கியம் – நாகரத்தினம் கிருஷ்ணா

பெண் என்ற சொல் குறித்து அச்சொல் தரும் பிம்பம் குறித்து, அப்பிம்பத்தின் வளர்நிழல், தேய்நிழல் குறித்து எத்தகைய நோக்கினை, நோக்கிற்குரிய பொருளை இவ்வுலகும், அதனுள் அடங்கிய சமூகமும் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்கிறபோது அச்சமூகத்தின் அங்கமாகிய  நம்மீது – ஆணினத்தின் மீது எரிச்சலும் கோபமும் வருகிறது. இருமை வாத ஒழுங்கின்படி பருப்பொருள் உயிர் இருவேறெனக்கொள்வதில் சிக்கலில்லை ஆனால் ஆண்xபெண் என்கிற இருமையியத்தை தராசில் இட்டு, ஒன்றை எடைகூடியதாகவும் மற்றொன்றை எடைகுறைந்த தாகவும் காட்டுகிற  இந்த ஆண்சமூகத்தின் கட்டளை கற்களில்தான் பிரச்சினையே.  இறைநம்பிக்கை அடிப்படையில் உருவானது  மனிதர் வாழ்க்கை.. நமது சமூகத்தின் மரபுகள் இருமைவாதத்தை சமயநெறிகளின் அடிப்படையில் புண்ணியம்x பாவம், சொர்க்கம்x நரகம், நன்மைxதீமை  ஆகியவற்றின் வழிமுறையில்  ‘ஆண்xபெண்’ ஐயும் நிறுத்தி பொருள் காண்பது தான் நமக்குள்ள சிக்கல்.

நித்தம் நித்தம் வீட்டிலன்றி சாலையில், பேருந்தில், அலுவலகங்களில், பொதுவெளிகளில்  எங்கும் பெண்கள் என்கிறபோது  பெண்களற்ற  சமூகம்  மூலவரற்ற கருவறைக்குச் சமம் என்கிற ஞானத்தில்,  நமது பகுத்தறிவு முரண்நகையாக தெளிவு பெற்றிருக்கிறபோது மனிதர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கலை இலக்கிய படைப்புகள் பெண்களையும் கருத்தில்கொண்டு உருவாவது இயற்கை, இலக்கியத்தில் பெண்கள் இடம்பெறுவது ஒருவகையான சமூக நீதி.  இந்தச் சமூக நீதி சரியாக வழங்கப்படுகிறதா, யார் வழங்குவது முறை என்பதுதான் நமக்கு முன்னுள்ள கேள்வி.

« ஆண்கள் சமூகம் மூன்று வகைகளாகப் பெண்களைப் பிரித்திருக்கிறது. இயற்கையில்  பெண்கள் எப்படி இருக்கவேண்டுமென சமுதாயம் எதிர்பார்க்கிறதோ அவ்வாறு இருக்கிற சராசரி பெண்கள் முதல்வகை. தனக்காக என்றில்லாமல் பிறருக்கென வாழப்பழகிய அர்ப்பணிப்பு பெண்கள் இரண்டாம் வகை, புதிர்ப்பெண்கள் மூன்றாவது வகை. பெண்ணினத்தால் அனுகூலம் பெற்ற மனிதர்கள்  ஏற்படுத்திய வகைப்பாடே இவை மூன்றும். » என்கிறார் பெண்ணினத்தின் விவிலியம் எனப்படும் ‘இரண்டாம் பாலினம்’ நூலின் ஆசிரியர் சிமொன் தெ பொவ்வார்,   முத்தாய்ப்பாக, « ஒவ்வொரு ஆணும் தனிப்பட்ட வகையில் இப்பிரிவுகளால்  நன்மை அடைகிறான் » என்பதோடு, «  இதுபோன்ற பிரிவுகளின் அடிப்படையில் பெண்களுக்கெதிராகச் சட்டங்களை இயற்றுவதும், நெறிமுறைகளை வகுப்பதும் தந்தைவழிச் சமூகத்திற்கு எளிது », என்கிறார்.

சமூகமும் பெண்களும்   

உலகங்கும் நிறம் இனம் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களில் இந்த இரண்டிலும் சாராது சிறுமை படுத்தப்படுவதில் பெண்களும் அடக்கம் என்பதுதான் பெண்ணினத்தின் பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு குரலெழுப்பிய  சிமொன் தெ பொவ்வாரின் நூல் தெரிவிக்கிறது. பெண்விடுதலைக்கான போராட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஓர் அலுவகத்தில் ஆணும் பெண்ணும் பதவியிலும், வாங்கும் ஊதியத்திலும், பெறும் சலுகைகளிலும் சமமென்றே சட்டம் கருதினாலும், அதை முறைப்படுத்தினாலும் இருவேறு உலகங்களை அவர்கள் அலுவலக வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதாக ஒரு பிரெஞ்சு இதழ் தெரிவிக்கிறது:

எதிர்ப்படும் உங்களுக்கு அலுவலகத்தில் வணக்கம் தெரிவிக்க மறந்தால்:

ஆண் எனில்: அவனுக்கு இன்று ஏதோ பிரச்சினைகள்.

பெண் எனில்: அவளுக்குத் திமிறு

நிறுவனத்தின் இயக்குனரோடு உணவு விடுதியில் சேர்ந்து சாப்பிடுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள்

ஆணென்றால்: கூடிய சீக்கிரம் அவனுக்கு பதவி உயர்வு காத்திருக்கிறது

பெண்ணென்றால்: இயக்குனருக்கும் அவளுக்கும் ஏதோ கசமுசா

வேலையில் கறாராக இருப்பதாக வைத்துக்கொண்டால்

ஆணென்றால்: தனக்குள்ள அதிகாரத்தை பிரயோகித்தத் தெரிந்தவன்
பெண்ணென்றால்: என்ன இருந்தாலும் அந்தப்பொம்பிளைக்கு இத்தனை ஆர்பாட்டம் கூடாது

மாலையில் அலுவலகத்தில் கூடுதலாக சில மணி நேரம் இருக்கவேண்டி இருக்கிறது

ஆணென்றால்: அவனுக்கு வேலையிலே அவ்வளவு அக்கறை
பெண்ணென்றால்: என்னவோ நடக்குது கேமரா வைக்கணும்

கூடுதலாக ஊதியம் கேட்பது

ஆணென்றால்: அவனுக்கு வேறு எங்கோ நல்ல வேலை கிடைப்பதற்கு சாத்தியங்கள் இருக்கவேண்டும்.
பெண்ணென்றால்: இப்போது அவள் வாங்குகிற சம்பளமே அதிகம்

அலுவல் விஷயமாக வெளிநாடு செல்லவேண்டும்

ஆணென்றால்: மனைவி பிள்ளைகளை விட்டு இப்படி அடிக்கடி பிரயாணம் செய்வது சிரமம்தான்
பெண்ணெனில்: இப்படி அடிக்கடி ஊர்மேயறாளே புருஷன் கண்டுகொள்வதில்லையா?

அலுவலகங்களைத் தவிர வீட்டிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறையாமலிருப்பதை மேற்கு நாடுகளில் காணமுடிகிறது. அதிலும் சமயம், சாதி, எண்ணற்ற உட்பிரிவுகள்  என்கிற பாகுபாடுள்ள இந்தியச் சமூகத்தில். பண்பாட்டின் பேராலும், மரபின் பேராலும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள்  மேற்குநாடுகளைக் காட்டிலும் அதிகம் என்றே சொல்லவேண்டும். கிறிஸ்துவ மதத்தைக் காட்டிலும், இங்கு இந்துமதத்தைச் சார்ந்த பெண்களுக்குச்  சிக்கல்கள் அதிகம். இந்துமதத்தைச் சார்ந்த பெண்களைக்காட்டிலும் இஸ்லாமிய பெண்களுக்குக் கூடுதல் நெருக்கடிகள். பிராமண வகுப்பைச்சார்ந்த பெண்ணைக்காட்டிலும் தலித் பெண்ணிற்கு கல்வி வாய்ப்புகள் இங்கு குறைவு. குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்களில் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதில் ஆகட்டும், கல்விக்கூடங்களுக்கு அனுப்புவதிலாகட்டும் ‘பொட்டை புள்ளை’களுக்கு அநீதிதான்.  இந்நிலையில் உள்ள நமது சமூகத்தின் பெண்ணிலக்கியத்தை யாரிடம் தேடுவது எங்கே தேடுவது என்று கேள்வி.

இலக்கியத்தில் பெண்கள்

தமிழ் நிலத்தில் பெண்கள் சங்க காலம் தொட்டு கல்விகற்று ஆண்களுக்கு நிகராகத் திகழ்ந்துவந்துள்ளனர் என்பது உண்மைதான். ஆனாலும் அவர்களின் விழுக்காடுகள் குறைவு.  மகளிரில் பெரும்பாலோர் ‘மனை உறை’ மகளிராக வாழ்ந்து போருக்கான ‘வீர மறவர்களை ஈன்று புறம் தருதல்’ அறம் எனப் போற்றியதாகத்தான் சங்க கால வாழ்க்கை நெறி தெரிவிக்கிறது.  அக்கால இலக்கியங்களும் இவற்றையே எதிரொலிக்கின்றன. நவீன தமிழ் படைப்பாளுமைகளில் முதன்முதலாக பெண்ணினத்திற்கு குரல்கொடுத்தவர் பாரதி. ‘நத்தைப் புழுவைபோல ஆணும் பெண்ணும் கூடப்பிறக்கிறோம். இதில் உடன் பிறந்தான் ஆண்டான் ; உடன் பிறந்தவள் அடிமை, சுவாமி சுத்த பாமர ஜனங்கள்’, என்றதோடு ஆண்வர்க்கத்தைப் பார்த்து, ‘பெண் உயராவிட்டால் ஆண் ஏது ?’ எனக் கேட்டவர். அவரைத் தொடர்ந்து ஆண் எழுத்தாளர்கள் பலர் தங்கள் படைப்புகளில் பெண்களைப் புதிய கோணத்தில் படைத்திருப்பினும், ஒரு வகையில் அவை குற்ற உணர்வின்  வெளிப்பாடே. தவிர பெண் எனில்  ஏதோ அச்சம், நாணம், கற்பு, தியாகம் ; அழகு, மென்மையான உடல், இனிமையான குரல் என்று ஒரு சில பண்புகளுக்காகவே என்பதுபோல கட்டமைக்கும் போக்கும் ; சீதையாக, தமயந்தியாக, சாகுந்தலாவாக, ஆண்டாளாக, வாசுகியாக, கண்ணகியாக , மாதவியாக, கோப்பெரும் தேவியாக மொத்தத்தில் பெண்ணை உயர்த்துவதுபோல எழுத்தைப்படைத்ததும்  அவளைக் காதலன் அல்லது கணவனின் நிழலாகச் சித்தரிப்பதற்கே. நவீன ஆண்படைப்பாளிகளையும் இந்த அடிப்படையிலேயே அணுக வேண்டியுள்ளது.    « இலக்கியவாதிகள் பெண்களைக் காட்டும் சித்திரங்களனைத்தும் சொந்தச் சரக்கல்ல. ஏற்கனவே நமது பழங்கதைகளில் கட்டமைக்கப்பட்ட பெண்ணையே இவர்கள் மீளுருவாக்கம் செய்திருக்கிறார்கள், தவிர எழுத்தாளர்கள் காட்டுகிற பெண் வடிவம் பெண்களுடையதுமல்ல, அவர்களின் கற்பனைவடிவம் »  என்ற சிமொன் தெ பொவ்வார்  கூற்று  சிந்தனைக்குரியது.

பெண்ணிலக்கியம்

‘பெண்ணியக் கவிதை’ என்று வகைப்படுத்துவதைவிட ‘பெண்களின் கவிதை’ என்றோ ‘பெண் கவிதை’ என்றோ வகைப்படுத்திக்கொள்வது நல்லதாக இருக்கும். என்கிறார், கவிஞர் மாலதி மைத்ரியின் ‘நீரின்றி அமையாது உலகு’ கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்கிய கவிஞர் பிரம்மராஜன்.  அவர் வழிமுறையிலேயே  பெண்ணிய இலக்கியத்தை, ‘பெண்களின் இலக்கியம்’  என்றோ, பெண் இலக்கியம் என்றோ வகைப்படுத்திக் கொள்வதுதான் நல்லதாக இருக்கும், காரணம் இவை  பெண்களை முன்னிறுத்தி, பெண்ணுரிமைக்காக வாதிடும் பெண்படைப்பாளிகளின் இலக்கியம்.

பெண்களுக்காக குரல்கொடுத்த, குரல்கொடுக்கிற ஆண் இலக்கியவாதிகளின் நல்லெண்ணத்தில் குறை இல்லை. ஒர் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவருக்காக வழக்காடுவதும், தம் கட்சிக்கார ருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் கேட்பதும் சனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபு. எனினும்   பாதிக்கப்பட்டவரே தமது வலியை,  சந்தித்த துயரங்களை, படும் வேதனைகளை, இழைக்கப்படும் அநீதிகளைத் தெள்ளத் தெளிவாக நீதிமன்றத்தில் வைக்க முடியுமானால் அவர்களின் குரலைத்தான் இச்சமூகம் செவிமடுக்கவேண்டும் அதுதான்  நியாயம், முறையுங்கூட.

« நாவலுக்கு உலவும் பெண்கள் என் உலகத்தில் என்னோடு  உலவும் பெண்கள். என் உலகத்தில் என்னோடு சகபயணிகளாக இருந்து கொண்டிருப்பவர்கள் . அவர்களுக்கென சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களுக்குப் பொருந்தாத யதார்த்தமானவர்கள். எல்லா மனித ஜீவன்களையும் போல தம் வாழ்வை , வாழவும் நேசிக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும்  எல்லைக்குள்ளிருந்தபடியே தங்களுடைய சந்தோஷங்களை, கனவுகளை, ரகசியங்களை, துயரங்களைத் தேடிக் கொள்பவர்கள், பிறருடைய சவுகரியத்துக்காகவோ, அசவுகரியத்துக்காகவோ ஒரு வார்த்தையைக்கூட நான் எழுதவில்லை. மொத்த நாவலிலுமே இது இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன், அவ்வளவுதான். » (இரண்டாம் ஜாமங்களின் கதை முன்னுரையில் – நூலாசிரியர் சல்மா)

« திருமணத்தையும்  சாதியையும் உடும்புப் பிடியாக பிடித்துக்கொண்டிருக்கிற இந்தச் சமுதாயத்தில்  தன்னந்தனியாக வாழ முடிவெடுத்து வாழ்வதிலுள்ள சிக்கல்களையும், சுகதுக்கங்களையும் , இன்னல் இடையூறுகளையும், இன்பதுன்பங்களையும் முழுமையாக அனுபவித்ததன் வெளிப்பாடுதான் இந்த ‘மனுசி’ . திருமணத்தை ஒரு கையிலும் சாதியத்தை மறுகையிலும் வைத்துக்கொண்டு பெண்ணைச் சிதைத்து சின்னா பின்னமாக்கும் இந்தச் சமூக அமைப்புக்குள் இருந்துகொண்டு  ஒரு போராட்ட வாழ்க்கையை  வாழ்ந்து விடவேண்டும்  என்ற கனவும், அதனை நனவாக்கிட எனக்குள் எழுந்த வேகத்தின், தாகத்தின் வீரிய விதைகளே இவ்வெழுத்துக்கள். » (மனுசி முன்னுரையில் -நூலாசிரியர் பாமா)

« பெண் இன்று மட்பாண்டமில்லை. யார் உடைத்தும் அவள் சிதறிப் போகமாட்டாள். அவள் இன்று கல்வி பெறுகிறாள். உயர் தேர்வுகளில் இடம்பெறுகிறாள். பணி செய்ய அலுவலகம் போகிறாள். சம்பாதிக்கிறாள். தன்னைக் கௌரவமாகப் பேணிக்கொள்கிறாள். சமூகத்தோடு இசைவாகத் தன்னைப் பொருத்திக்கொல்கிறாள் » ( நேசத்துணை – முன்னுரையில் நூலாசிரியர் திலகவதி)

ஆக இலக்கிய அலகு களுக்கு அப்பாற்பட்டது பெண்ணிலக்கியம். ஓர் இலக்கிய பிரதிக்குரிய அல்லது தேவையான பிரத்தியேகப் பண்புகளுடன் ஒடுக்கபட்ட பெண்ணினத்தின் குலாகவும் ஒலிப்பது இவற்றின் சிறப்பு. அது விடுதலைக்குரல், அடிமைபட்டுக் கிடக்கும் வர்க்கத்தின்  சுதந்திரக் குரல். « உன்னிலும் நான் உயந்தவள் ! » என்கிற அகங்காரம் இல்லை. « உன்னிலும் நான் எந்த விதத்தில் தாழ்ந்தவள் ? » எனக் கேட்கும் குரல்.  மேடும்பள்ளமுமாக இருக்கிற  மானுடச் சமூகத்தை சமப்படுத்த விழையும் குரல். இக்குரல்கள் அவரவர் பின்புலம், பெற்றகல்வி உற்ற அனுபவம் ஆகியவற்றிற்கேற்ப மென்மையாகவோ, வன்மையாகவோ ஒலித்தாலும் பெண்களுக்கென எழுதப்பட்ட விதியைத் திருத்த முற்பட்டவை, இதுநாள்வரை சகித்திருந்தோம், இனி சகிப்பதில்லை என ஒலிக்கும் குரல்கள்.

« அடிவயிற்றில் நெருப்பை வச்சிக்கிட்டு எத்தனை நாள் அலைய முடியும் ? » இதை  பல  பெண்களிடமிருந்து பல்வேறு தருணங்களில் நான் கேட்டிருக்கிறேன். இந்த வாக்கியம் நம் சமூகத்தின் பெண் இருப்பு சார்ந்த அச்சத்தை உணர்த்துவதாக இருந்தாலும் அது வேறெதையோ சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. » என்கிறார் மாலதி மைத்ரி

நவீன தமிழ் இலக்கிய பெண் படைப்பாளிகள் குறிப்பாக கவிஞர்கள்   இன்றைய தேதியில் ஆண் படைப்பாளிகளைப்போலவே ஆளுக்கொரு கவிதைத் தொகுப்பை வைத்துக்கொண்டு பதிப்பக க் கதவுகளை தட்டுகின்ற போதிலும் எனக்கு வாசிக்க கிடைத்த நவீன தமிழ் கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள்  அனைத்துமே  ஒரு நல்ல படைப்புக்குரிய அடர்த்தியையும், ஆழத்தையும், நேர்த்தியையும் பெற்று, கூடுதலாக  பெண் விடுதலைக்காக வாதிடுகின்றன.

அம்பை, பாமா, திலகவதி, வைகைச்செல்வி, இளம்பிறை, சதாரா மாலதி, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், மாலதி மைத்ரி, சல்மா,அனார், குட்டி ரேவதி, சுகிர்தராணி, தமிழ்நதி அ.வெண்ணிலா, என நீளும் பட்டியலில் புதிய தலைமுறையினரும் இணைந்துகொண்டுள்ளனர்  இவர்களின் படைப்புக்களின் வடிவத் தேர்வு எதுவாக இருப்பினும், பெண்களை முன்னிலைப்படுத்தி, பெண்களின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பவையாக உள்ளன. காட்டழிப்பை கண்டிக்கும் நேரத்திலும்  கவிஞர் வைகைச் செல்வி « கருவில் பெண்ணை அழிப்பார்க்குக் காட்டை அழித்தல் பெரிதாமோ ? » எனப் பெண்ணினத்தின் பிரச்சினையை மறப்பதில்லை,  என்பதை உதாரணத்திற்குக் கூறவேண்டும்.

மணவாழ்க்கையும் பெண்ணிலக்கியமும்

இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை அல்லது நாமறிந்த தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை குடும்ப வாழ்க்கையிலும் பொதுவாழ்க்கையிலும் சரி, பெண்களின் கருத்துக்களைப் புறம்தள்ளுவது இன்றளவும் தொடர்கிறது. சுற்றம் சூழ பெண்பார்க்கச் செல்லும் ஓர் ஆண்,  தன் வாழ்க்கைத் தோழியின் மனதை அறிய முற்படுவதில்லை. ஒரு மாட்டைச் சந்தையில் பிடிப்பதுபோலத்தான் தரகருடன் வியாபாரம் பேசுகிறான். காதல் கூட தன்னையும் தன் குடும்பத்தையும் கரைசேர்க்க பெண்ணின் பின்புலம் உதவுமெனில்   ஆணின் மனம் அக்கறை காட்டுகிறது.  புகுந்த வீடு அவளுக்குத் தொழுவம். காரியம் யாவிலும் கைகொடுப்பவளாக அல்ல, நுகத்தடிக்குப் பொருந்துவள், குடும்ப பாரத்தை இழுப்பவள், சுமப்பவள். ஆனால் மாட்டிற்கு ஒரு விலையுண்டு, உரிய விலையை விற்பவனுக்கு அளித்தாலொழிய  உடமை யாக்கிக்கொள்ளல் சாத்தியமில்லை. ஆனால் இவ்விலங்கிற்கு உரிய விலையை விற்பவர்தான் வாங்குபவனுக்குத் தரவேண்டும் .

இப்பெண்பார்க்கும் வலியை ஏ ராஜலட்சுமி என்ற கவிஞர் :

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

 

‘எப்பொழுதும் போல் ‘உடனே கிளம்பி வா’

அப்பாவின் அவசரகடிதம் !

என்றோ ஒரு நாள் என்று நிகழ்ந்தது

இப்பொழுது அடிக்கடி அவஸ்தையாய்…

ஜாதகப் பொருத்தம் வருமானம்

குடும்ப நிலை வீட்டுச் சூழல்

ஒவ்வொன்றிலும்  கழன்றுவிடும்

ஏதோ ஒன்று

சரியில்லை என்று. (எனக்கான காற்று)

 

வாசல் – கனிமொழி

அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டைபோட்டுக்கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று. (கருவறை வாசனை )

 

என்ன விலை காதலே -வைகைச் செல்வி

‘ ………………………..

………………………………………….

கல்யாணம் ஆகிவிட்டால்

கல்லாகி விடுவேனோ ?

கயவர்கள் உலகத்தில் சுய நலமே வாழ்க்கையெனில் – எனக்கு

பந்தக்கால் தேவையில்லை

சொந்தக்கால் போதுமடா. (அம்மி)

 

புதின இலக்கியத்தித்திலும் திருமணம் குறித்து படைப்பாளிகள் சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் தங்கள் கொந்தளிப்பையும்  கோபத்தையும் காட்டவே செய்கிறார்கள்.

‘நம்ம கையில ஒழைப்பு இருக்கு. எவந்தயவும் நமக்குத் தேவையில்லை. ஆம்பள இல்லாம நம்மளால வாழமுடியாதா என்ன ?’ (மனுசி -பாமா, ப.117)

‘எனது உடலுக்குச் சொந்தக்காரி நான். அதைக் கொடுப்பதையும் கொடுக்காமலிருப்பதையும் தீர்மானிப்பதும் நானாகத்தான்  இருக்கவேண்டும். இந்தச் சுதந்திரத்தை இழக்க எனக்கு ஒரு போதும் சம்மதமில்லை.’ (மனுசி-பாமா. ப.208)

திருமணத்தை மறுத்து குரலெழுப்பும் பெண் எழுத்தாளர்கள் ஒரு பக்கம் எனில்  மணமான அன்றே சல்மாவின், இரண்டாம் ஜாமங்களின் கதையில் வரும் பிர்தவ்ஸ் தன் புதுக்கணவன் யூசுபின் தோற்றத்தைப் பார்த்த கணத்தில், ‘ நான் உன்னோடு வாழப்போவதில்லை. என்னைத் தொடவேண்டாம் ‘ (பக்கம் 35, இ.ஜா.கதை)  என்கிறாள். கதையில் அவள் முடிவைக்கேட்டு நாவலாசிரியர் ஊரே அதிர்ச்சியில் உறைந்துபோய் இருந்ததாக  எழுதுகிறார். பிர்தவ்ஸ் என்ற பெண்ணின்  வார்த்தைகளைக் கேட்டு நூலாசிரியரின் துணிச்சலான இவ்வரிகளை வாசிக்கிறபோது நாமும் உறைந்து போகிறோம். காரணம் நூலாசிரியரைப் போலவே அப்பெண்ண்ணும்  ‘ வயதுக்கு வந்த பெண்கள் வீட்டு வசல்படியைத் தாண்டுவதே இல்லை ; வெளியிலிருந்து வீட்டுக்குள் எந்த அன்னிய ஆண் வந்தாலும்  அவர் முன் தலைகாட்டக்கூடாது என்கிற ஒழுங்கைக் கடைபிடிக்கும் குடும்பத்தைச் சார்ந்தவள்.

சமயமும் பெண் இலக்கியமும்

ஆண்களைக் காட்டிலும் சமய நம்பிக்கையில் ஆழ்ந்த ஈடுபாடுள்ளவர்கள் பெண்கள். ஆனால் உலகில் மதங்களுக்குப் பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை,  மதங்கள் பெண்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை.

‘பெண்ணாவது தெய்வமாவது ஆதி ! என் எண்ணப்படி எது நடக்கிறது ? பாத்திமாவுடன் பேசியபடி பாலைவனத்தைச் சுற்றி வர ஆசை. மேரி கையிலிருந்து குழந்தையை வாங்கி என் இடுப்பில் வைத்துக்கொண்டு பெத்லஹெம் மற்றும் சுற்று புற பிரதேசங்களைப் பார்த்துவர  ஆசை. இப்படி இவன் காலடியில்  உட்கார்ந்திருப்பதில் என்ன சுகம் ?  அக்கடா என்று படுக்க  ஒரு பாம்பு படுக்கை உண்டா எனக்கு ?’ (காட்டில் ஒரு மான் ப. 38)  என ஆதிசேஷனைப் பார்த்து லட்சுமி கேட்பதாக அம்பை எழுதுகிறார்.

‘ ஹனீபா தன் கணீர்குரலில் , « இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று  சொல்லுவதில்லை » என்று பாடிக்கோண்டிருந்தார். பிர்தவ்ஸுக்குச் சிரிப்பு வந்த து. « நானும் தான் என்னவோ கேட்டேன். எதைக்கொடுத்தானாம் ?’ (ப.188 ) என்று இரண்டாம் ஜாமங்களின் கதையில் தன் கதைமாந்தர்களில் ஒருவரைவைத்து வினவுகிறார் சல்மா.

பண்பாடும் பெண் இலக்கியமும்.

பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள மரபையும் பண்பாடுகளையுங்கூட நவீன பெண் இலக்கியம் சகித்துக்கொள்ளாது என்பதைச் சொல்லவும் உதாரணங்கள் இருக்கின்றன.

விளக்குகள்  என்ற கவிதையில்  வைகறைச்செல்வி :

 

‘……….

குத்துவிளக்கென்று

பெண்ணைச் சொல்வார்

ஆங்கோர் மூலையிலே

மோனத்தவம் செய்வதற்கும்

எடுப்பார் கையிலெல்லாம்

அடங்கி இருப்பதற்கும் ( அம்மி -ப. 72)  என்று எழுதுகிறபோதும்,

 

‘குறள் போட்டி, தேவாரப் போட்டி எல்லாம் நாங்க வெக்கிறோம். பெண்கள் பரிசு வாங்கினா கன்னா பின்னாட்டு பரிசு தரமாட்டோம். குத்து விளக்கு தருவோம்…..ஒண்ணுமில்லைம்மா நம்ம பண்பாடு முழுக்க முழுக்க பெண்கள் கையில் இருக்கும்மா’ (ப. 124, காட்டில் ஒரு மான்) என்று  ஓர்ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாக புத்தககக் கடைகாரர் ஒருவர் வாய்மொழிக்கொண்டு  அம்பை வைகைச் செல்வியின் மேலே கூறப்பட்டக் கவிதையை உறுதிபடுத்துகிறபோது, இப்படி ஒரு பிரிவினரை ஒடுக்குவதற்கென வகுத்துக்கொண்ட நமது பண்பாடுகளின் மீது பகுத்தறிவுகொண்ட மனிதர் எவரும் கோபம் கொள்வது இயற்கை.

இறுதியாக பொதுவெளியில் பெண்களின் நிலமையென்ன ?  என்பதைத் தெரிவிக்க இரு கவிதைகள்

உயிரினும் இந்தப் பெண்மை இனிதோ ?   – வைகைச்செல்வி

‘என் தாயே !

நீ மாதவம் செய்திருக்கத் தேவையில்லை

அங்கே மா மரத்தின் கீழே

என் வயதுப்பெண்கள்

நட்சந்திரங்களுடன் பேசுகையில்

இங்கே நானோ,

சிம்னி வெளிச்சத்தில்

அரிசியிலே கற்களைப் பொறுக்குகிறேன்.

…………………

நேற்று ஒருவன் பாரதியைக் காதலித்தான்

இன்று நான் கதலிக்கிறேன்

அவனுக்குப் பெயர் பாரதிதாசன்.

தாசனுக்குப் பெண்பால் எனில்

தமிழே என்பால் கல்லெறியும்’  (அம்மி – ப. 23)

 

வீடுகளால் ஆன இனம் – மாலதி மைத்ரி

 

ஊரில் அனைத்து வீடுகளும்

நடப்பட்ட பெண்களென நிற்கின்றன

சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்

யாரோ ஒரு ஆணிற்காக ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன

வயதுக்கேற்றபடி த் தம் உறவுகளுக்காக

கொலைகாரன் திருடன்

குடிகாரன் துரோகி மோசடிக்காரன்

ஊழல் செய்பவன் ஏமாற்றுபவன் விபச்சாரகன்

கொடுங்கோலன் காமவெறியன்

சாதிவெறியன் மதவெறியன் இனவெறியன்

இவர்கள் யாரையும் வீடு கைவிட்டுவிடுவதில்லை

அவரவருக்கான வீடு எப்போதும் இருக்கிறது

உடம்பு தொட்டிலாகவும் மார்பாகவும் இருந்து

உயிரும் உணவும் அளித்து

அரவணைத்துப் பாதுகாக்கப்படும் ஆண் பந்தங்கள்

 

ஆண்கள் வீட்டைப் புணர்வதன்மூலம்

பூமியை வளர்க்கிறார்கள்

பெண்களையல்ல

காலத்தை ஆளும் பெண்கள் வீடாவதில்லை.(நீரின்றி அமையாது உலகு ப. 35)

 

 

ஆணோ பெண்ணோ படைப்புவேறு தான் வேறுஅல்ல  என நினைப்பவர் எவரோ, தான் படைக்க நினைப்பதற்கு உதாரணமாக முடிந்தமட்டும் தன்னையும் சொந்த அனுபவத்தையும்  பொதுப்படுத்தும் எழுத்தாற்றல் எவருக்குச் சாத்தியமோ  அவரே என்வரையில் ஒரு நல்ல படைப்பாளி. கலையும் இலக்கியமும் அழகியலுக்கு அப்பாற்பட்டு, புலன்களைக் கடந்து இதயத்திற்குச் சிலிர்ப்பூட்ட வேண்டும், அறிவையும் மனதையும் அலைக்கழிக்கவேண்டும்.

இரண்டாம் ஜாமங்களின் :  சொஹ்ரா, றைமா, அமீனா, சவூரா, நூரம்மா, மும்தாஜ், பிர்தவ்ஸ், வயிற்றுப்பிழைப்புக்காக இவர்களுடன் பிணைத்துக்கொள்ளும் மாரியாயி

பெண் என்ற இனம் பொதுவாக இரண்டாம் தளத்தில் நிறுத்தப்படுவது ஒரு பக்கமெனில் அவள் தலித்தாக பிறந்ததால் இச்சமூகத்தின் கருநாக்குகளுக்குக் கூடுதலாக பதில் சொல்லவேண்டியிருக்கிறது, நெருக்கடிகளுக்குப் பலியாக வேண்டியிருக்கிறது என்பதை தெரிவிக்கும் பாமாவின் மனுசி  ‘ராசாத்தி’.

அம்பையின் சீதாயணத்திற்குக் கனவுகாணும் அடவி செந்திரு,  அகம்பாவ ஷண்முகத்தை மேடையில் வீழ்த்தும் செண்பகம்.

பெண்களின் துயரங்கள் அனைத்தும் குடும்பம், திருமணம் ஆண்-பெண் உறவு ஆகிய வேர்களின் மூலாதாரத்தில் கிளைவிடுகிறதென்று உறுதிராக நம்பும் திலகவதியின் நேசத்துணை பாகீரதி..

இவர்களை வாய் பேசவைத்த படைப்பாளிகள், கவிதையுடாக பெண் இருத்தலை வலியுறுத்தும் கவிஞர்கள், இவர்கள் அனைவரின் குரலும், மாலதி மைத்ரி தமது ‘புலி’ கவிதையில் சொல்வதுபோல எல்லாரையும் தாண்டி  எல்லாவற்றையும் தாண்டி இன்று ஆண்களின் தலைமாட்டருகே காத்திருக்கிறது. விழித்தால் தப்பித்தோம். உறங்குவதுபோல பாவனை செய்தாலோ, பெண்புலிதானே என அலட்சியம் செய்தாலோ ஆபத்து ஆண் வர்க்கத்திற்கு இல்லை, சமூகத்திற்கு.

——————————————————————————–

 

 

 

 

 

காலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்

panchu

(இறந்த காலம் நாவலுக்கு மூத்த திறனாய்வாளர் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் அணிந்துரை)

eranthakaalam_2 copy (1)

* ஆரோவில் குறிப்பிட்ட எவருக்கும் சொந்தமானதல்ல ; ஆரோவில் மனித இனம் முழுவதற்கும் சொந்தமானது ஆகும் ; ஆனால் ஆரோவில்லில் வசிக்கவேண்டும் என ஒருவர் விரும்பினால் அவர் தெய்வீக உணர்விற்கு விருப்பத்துடன் தொண்டு செய்பவராக இருக்கவேண்டும்.

 

* ஆரோவில் முடிவுறாத கல்வி, இடையறாத முன்னேற்றம், மூப்புறாத இளமை ஆகியவற்றின் இருப்பிடமாக விளங்கும்.

 

*  ஆரோவில் இறந்த காலத்திற்கும் வருங்காலத்திற்கும்  இடையேஒரு பாலமாக இருக்க விழைகிறது ; புற உலக, அக உலகக் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் பயன்படுத்தியபடி இது துணிவுடன் எதிர்கால நன்முடிவுகளை  நோக்கித் துடிப்புடன் முகிழ்த்து எழும்.

 

* ஆரோவில் மனித குல ஒருமைப்பாட்டிற்கு ஓர் உருவம் கொடுப்பதற்கான  உலகியல் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சிகளுக்குரிய நிலையமாக விளங்கும்.

 

இதுதான் 1968, பிப்ரவரி, 28 ஆம் நாள் ஆரோவில் நகரக் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும்போது ஸ்ரீ அன்னையே (1878 – 1973) வாசித்தளித்த ஆரோவில் சாசனம். 121 நாடுகளில் இருந்தும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் எடுத்துவரப்பட்ட பிடிமண்ணைச் சலவைக் கல்லால்  தாமரை மொட்டுவடிவில்  வடிவமைக்கபட்ட தாழியில் ஒன்றாகப்போட்டு, பிளாஞ்சி ராக்சேல் மிர்ரா என்ற இயற்பெயர் உடைய  ஸ்ரீ அன்னையால் (ஐ நாவின் யுனெஸ்கோ மற்றும் இந்திய அரசின் நிதி உதவியுடன்) ‘ சர்வதேச ஆன்மீக நகரமாக வளரும் ‘ என்று பிரமாண்டமான நோக்கத்தோடு விழுப்புரம் மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் புதுச்சேரிக்கு அருகில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஆரோவில் ; இப்படித் தமிழ்நாட்டின் தொன்மையான நிலத்தைப் பெரிய பெரிய கனவுவார்த்தைகளாகக் கூறி  ஏறத்தாழ 20 கிலோ மீட்டர்  சுற்றளவிற்கு விலையில்லாமலும் அடிமாட்டு விலைக்கும் நிலம் கொடுப்போர்க்கு  ஆரோவில்லில் வேலைதரப்படும் என்ற பொய்யான உறுதிமொழிகளாலும் ஆக்ரமிக்கபட்ட பூமிதான் ஆரோவில்.

 

இன்று தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஓடிவிட்டன ; பொன்விழா கண்டுவிட்ட இந்த நகரம் என்னவாக இருக்கிறது என்பதைப் படைப்பாளிக்கே உரிய கூர்மையான  பார்வையோடு புனைவு மொழியில் எடுத்துரைப்பதுதான்  நாகரத்தினம் கிருஷ்ணாவின் ஆறாவது நாவலாகிய  இந்த ‘ இறந்த காலம்‘. இந்தப் பிரதிக்குள் வாசிப்பு நிகழ்வதற்கு ஆரோவில் பற்றிய சில அறிமுகக் குறிப்புகள் தேவை என்று  கருதியதால்தான் இங்கே  அவைத்தரப்பட்டன.

 

பாரீஸ் பெருநகரில் பிறந்து வளர்ந்தவள் மீரா (27 வயது).தன் தாய் இஸாபெல்லை, அவள் குழந்தையோடு மணம்முடித்துக்கொண்ட வளர்ப்புத் தந்தை லூயிஸ்மேல் பெரிதும் பிரியம் கொண்டவள் மீரா. அத்தகையவரைப் பிரிந்து மற்றொரு ஆடவனோடு வாழப்போகிறேன் என்று முடிவெடுக்கும் அம்மாவின் செய்கையால் மனக்கலக்கத்திற்கு உள்ளாகிறாள் ; இத்தகையக் குடும்பச்சூழல் ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம், தனக்குள்ளேயே மற்றொரு குரல் அவளுக்குக் கேட்டவண்னம் இருக்கிறது. அது தன்னையும் மீரா என்றே சொல்லுகிறது ; « இறந்தகால நான்களின் தொகுப்பு‘ எனச்சத்தியம் செய்கிறது. சமூகம் கட்டமைத்த போலி ‘நான்’ஐச் சுமந்துகொண்டு உண்மையான நான்-ஐ ஒதுக்கி வாழ்வதாக » அவளுக்குள் மூச்சு விடாமல் தொணதொணக்கிறது.

 

இப்படியான மனநிலையில்தான் அவள் கையில் « ஆரோவில் » பற்றிய குறிப்புகள் அடங்கிய அட்டை கிடைக்கிறது. (ஆரோவில் பன்னாட்டு மையங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் 23 நாடுகளில் உள்ளன.) உடனே முடிவெடுக்கிறாள் ; 2017, நவம்பர் 18ல் புறப்பட்டுச் சென்னை வந்து ஆரோவில்லில் உள்ள ஆல்பர்ட்-தேவகி வீட்டின் மாடியில் ‘பேயிங் கெஸ்ட்டாகத்’ தங்குகிறாள் ; இத்தகையை மீராவின் பார்வையில் ஆரோவில்லில் நடக்கும் கதை சொல்லப்படுகிறது ; மீராவிற்கு இங்கே அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸிக்கா என்ற தோழி கிடைக்கிறாள் ; அவள் மூலம் புதுச்சேரி அரசு  ஊழியனான  மாதவனும் அவன் குடும்ப உறவுகளும் நட்பாகக் கிடைக்கின்றனர்.  இப்படியொரு பின்னனியை அமைத்துக்கொண்டு ஆரோவில்லின் நடப்புக்களை விவரிக்கிறார் கதைசொல்லி.

 

மீரா, ஆரோவில் « சாசனத்தை » வாசித்தபோது  தனக்கு ஏற்பட்ட மன உணர்வை  இவ்வாறு பதிவு செய்கிறாள்  :

 

« முதன் முறை வாசிக்கிறபோது கடைவிளம்பரமொன்றை வாசிக்கிற மனநிலைதான். தேர்ந்தெடுத்த விரயம் இல்லாத சொற்கள், வாக்கிய அமைப்பு, அவற்றை அச்சடிக்கப் பயன்பட்ட எழுத்துவகை, அவற்றின் அளவீடு அனைத்திலும் விளம்பர உத்திக்குரிய சாதுர்யம் என்றுதான் நினைத்தேன் »

 

இப்படித் தொடங்குகிறது ஆரோவில் குறித்த மீராவின் விமர்சனம் ; இதேபோல் « மாத்ரி மந்திர் » எனப்படும் அன்னை ஆலயம் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதை ஆடம்பரமாக உணர்கிறாள் ; ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஆன்மீக சோசலிஸம் என்று வர்ணிக்கப்படும் ஆரோவில்லில் இத்தகைய ஆடம்பரம் வேணுமா எனக் கேட்கிறாள்.

 

இன்னும் மாதவன் மூலமாக « ஆரோவில் ஒரு நவீனக் காலனித்துவக்குணம் கொண்டது ; தாங்கள் உயர்ந்த இனம் என்றும், அக்கம் பக்கத்திலுள்ள ஏழைத்தமிழர்களைக் காலனிக்காலக்கூலிகள் என்றும் கருதுகிறார்கள் ; அரவிந்தர் ஆஸ்ரமத்தை விரிவாக்கும் ஒரு திட்டம்தான் ஆரோவில் ; அதுவும் பெரிதும் இந்தியர்களால் நிரம்பிக்கிடக்கும் ஆசிரமத்திற்குள் ஐரோப்பியர்களையும் உள்ளே கொண்டுவரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது ஆரோவில்.

 

உலகமெலாம் ஒரு குடும்பம் எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிப்படையில் சமயமில்லை ; எல்லையில்லை ; பணம் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது ; ஆரோவில்லின் தற்போதைய நிலை என்ன ? பணமில்லாதவர் உள்ளே நுழைய முடியாது என்பதுதானே.

 

ஆரோவிலியன்கள் எல்லாருமே அரவிந்தருமல்ல, மீரா அல்ஃபஸ்ஸாவுமல்ல. « இங்கு வருகிறவர்கள் கர்மயோகிகள் அல்ல ; வாழ்க்கைப்போகிகள். சராசரி மனிதர்கள், தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் ; சில நல்லது நடந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாதென்றாலும், இந்த விடியல் நகரம்(ஆரோவில் என்றால் உதய நகரம் (அ) விடியல் நகரம் என்று பொருள்) இன்னும் வைகறையைக் கூடக்காணவில்லை » இப்படி நீளுகிறது மாதவனின் பார்வை.

 

இன்னும் ஆரோவிலியன் யாரும் தங்கள் பெயரில் நிலமோ, வீடோ வாங்கக்கூடாது என்பது விதியாக இருக்கிறது ; ஆனால் பல காட்சிகள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேகரித்து வாங்கிய ஏழை முடிவெட்டும் தொழிலாளியின் நிலம், அவர்கள் புத்திப்பேதலித்து வாழ்வையே இழந்து போகும் முறையில் அபகரிக்கப்படுகிறது என்பதும் நாவலில் சித்தரிக்கப்படுகிறது ; மேலும் தனித்தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு உற்பத்திசெய்து வாணிபம் செழிக்கிறது ; « ஆரோவில் ஒரு பணமற்ற சமூகமாக மலரும் » என்று சொல்லப்பட்ட மொழி என்ன ஆயிற்று ? உலோகத் தொழிற்கூடங்கள், விண்கலத்தில் செல்வோர் உண்ணும் உணவுப்பாசி உற்பத்திசெய்யும் தொழிற்சாலை என்று 140க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ‘சரக்குகள்’ உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

 

இன்னும் கொடுமைகளின் உச்சமாக ஆன்மீக நகரத்தை அசிங்கப்படுத்தும் பாலியல் குற்றங்கள் பிரதியில் பதிவாகியுள்ளன. 70களில் ஹிப்பி நாகரீகம் பிரபலமாக இருந்தபோது அந்தக் கும்பலில் இருந்து கோவா-வில் வந்து தங்கி, பிறகு அங்கிருந்து ஆரோவில்லின் தொடக்கக் காலத்திலிருந்தே இங்கே தங்கியிருக்கும் பிரெஞ்சுக்காரர் ‘துய்மோனும்’, மீராவிற்குத்தங்குவதற்கு மாடியில் இடம் அளித்த ஆஸ்திரேலியரும் சேர்ந்து ஈடுபடும் பாலியல் லீலைகள் கதைசொல்லியின் மேன்மையான எடுத்துரைப்பு மொழியில் சொல்லப்படுகின்றன. மீராவின் அமெரிக்கத்தோழி ஜெஸிக்காவின் பிறந்த நாள் விழாவைப் பயன்படுத்தி இருவரும் அவளைப்பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்துகின்றனர். அதிலிருந்து அன்றைக்குத் தப்பித்த மீராவை, மறுநாள் அதேபோல் மதுவை ஊற்றிக்கொடுத்து ஆல்பர்ட் தனது வீட்டிலேயே பாலியல் வல்லுறவு புரிகிறான். யோகத்தை ஏற்பதற்கு விலக்க வேண்டியவைகளாகஸ்ரீ அன்னையால் முன்மொழியப்பட்ட அரசியல், காமம், புகைப்பிடித்தல், மதுக்குடித்தல் ஆகிய நான்கும் இங்கே முனைமழுங்காமல் மும்முரமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன ; கதைசொல்லியின் வெறும் கற்பனை சார்ந்த புனைவு என்று இவற்றைஎளிதாகச் சொல்லிவிடமுடியாது.  2008, மே, 22இல்  இலண்டன் பிபிசி நிகழ்ச்சி ஒன்றில், குழந்தைகள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆரோவிலியன் குறித்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதற்குப் பிறகு இங்கேAuroville Child protection Service தொடங்கப்பட்டது என்பது வரலாற்று நிகழ்வு. எனவே இந்த நாவலில் வரும் மீரா ஓரிடத்தில் சொல்வதுபோல, « இது பாழ் கிணறில்லை என்றாலும் கரையேற இயலாத  உறைகிணறு » என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

இவ்வாறெல்லாம் படைப்பாளி தனது அலசல் பார்வைவையை முன்வைப்பதின் நோக்கம், வெறுமனே ஒன்றின்மேல் சேற்றை அள்ளி வீசுவது என்று எளிமையாகப் புரிந்துகொள்ளும் விபத்து நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது ; ஆனால் இப்படியான குறிக்கோளுடனும் கனவுகளுடனும்  எத்தனையோபேரின் உழைப்பின்மேல் எழுப்பப்பட்ட நகரம் இப்படி ஆனதே என்ற ஆதங்கத்தின் வெடிப்பு இந்த எழுத்து ; கதைசொல்லி ஆரோவில்லின் தொடக்கக் காலத்திலிருந்தே புதுச்சேரியில் வாழ்ந்தவர், பின்னர் புதுச்சேரி, ‘ மாவட்ட ஆட்சியர் ‘ அலுவலகத்தில் அரசு ஊழியராக வேலைபார்த்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனித்துவந்தவர் ; எனவே இத்தகைய விமர்சனப்பார்வை அவரையும் மீறி அவருக்குள் இருக்கும் படைப்பு மனதிற்குள்  இருந்து புறப்பட்டு வருவது.

 

மேலும் இது ஓர் ஆரோவில் பிரச்சனை மட்டுமல்ல. சமூகவாழ்வின் பிரச்சனையாகத்  தீராத நோயாகத் தொடர்கிறது. அதாவது பெரிய பெரிய இலட்சியங்களோடு தொடங்கப்பட்ட மனிதர்களின் இயக்கங்கள், அமைப்புகள் அனைத்தும் இப்படித்தான் சீரழிந்து முடிந்துள்ளன ; பிறகேன், மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட ஒளிமயமான  வாழ்வு குறித்த இலட்சியங்கள் ? இந்தக் கேள்விதான் படைப்பாளியை ஆட்டிப்படைக்கிறது ; மேலும் இத்தகைய இலட்சியங்களை விதைப்பவர்கள், இந்த இலட்சியங்களை உண்மையிலேயே பின்பற்றுபவர்களாகக் கூட இருக்கவேண்டாம், குறைந்தது அவர்கள் போதிக்கும் இலட்சியங்கள்மேல்  நூறு விழுக்காடு நம்பிக்கைக் கொண்டவர்கள்தானா ?  அதனால்தான் வரலாறு முழுக்க இலட்சியங்கள் இப்படிப்படுதோல்வி அடைகின்றனவா ? இப்படித் தூங்க முடியாத முரண் இழுவைக்குள் அடைபட்ட படைப்பு மனம்தான்  இந்த எழுத்தை இயக்குகிறதே ஒழிய, சாதாரணமாகச் சேற்றை அள்ளி அடிக்கும் வேலை இல்லை இது .வரலாறு தோறும் படைப்பாளிகள் இப்படித்தான் இயங்கியுள்ளார்கள்.

 

இந்த இழுபடும் முரண்விசையிலிருந்து தற்காலிகமாகத் தப்பிக்கத்தான் கதைசொல்லி ஒரு தந்திரத்தைக் கையாளுகிறார் ; அந்தக் காமுகர் இருவரும் அஸ்ஸாம் மாநிலத்திற்குச்  சுற்றுலா சென்றபோது, « குழந்தையைக் கடத்துபவர்கள் » என்று 16 பேர் அடங்கிய கும்பலால் கொல்லப்படுகிறார்கள் . இது, « தான் உயர்ந்த நோக்கோடு தொடங்கிய ஒன்று, இப்படியானதே » என்று கருதிய ஸ்ரீ அன்னையின்  அமானுஷ்ய சக்தியால் நிகழ்ந்தது என்பதுபோல வாசகர்கர்கள் கருதும்படி, நாவலை முடிக்கிறார்.

 

 

நவீனகால ஆரோவில்லின்கதை சொல்லுவதன்  ஊடே, இந்த நாவலில் பிரஞ்சுக் காலக்கட்டத்தில், புதுச்சேரியின் எளிய மக்களை வேரோடு அள்ளிக்கொண்டுபோய் தங்களின் பிறகாலனிய நாடுகளில் ஒன்றான « இந்தோசீனாவில் »  கொட்டிய  பிரஞ்சுக் காலனியவாதிகளின் ஈவிரக்கமற்ற சுரண்டல் வரலாற்றையும் ஊடுபிரதியாகக் கதைசொல்லிப் பதிவு செய்துள்ளார் ; இது தமிழ் வாசகர்களுக்குப் புதிது. ‘ரெனோன்சியாசியோன்’ (la renonciation) எனப்படும் பிரெஞ்சுக் குடியுரிமை தருகிறோம் என்ற பேரில் கொண்டு சென்று இராணுவத்தில் சிப்பாய்களாக்கிப் பன்றிக்கறியும் நூடூலும் கொடுத்துப் பழக்கி  அவர்களின் போரக் களத்தில் அவர்களுக்காகச்  சாகடித்து  ‘இரத்த வரி’ (l’impôt de sang) வாங்கிய காலனியக் காலஅதிகார மூளையின் தந்திரங்களையெல்லாம் உடைத்துக் காட்டுகிறார் ; தம்பி சதாசிவத்திற்குத்தமக்கை வேதவல்லி எழுதும் மடலில் இந்தோ சீனாவில் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையை « உறியடி வாழ்க்கை» என்கிறார் ; கைகளில் கம்பும்,  கண்களில் மறைப்பும், கால்களில் தடுமாற்றமுமாக இலக்கின்றி வீசும் கம்பு காற்றில் அலைகிறது » என்கிறார்.

 

மேலும் « சொந்த மண்ணைப்பிரிந்து வாழும் வாழ்க்கையும் தற்கொலையும் ஒன்றுதான் ; நினைவுகளும் ஏக்கமும் நெஞ்சை இறுக்க , அவற்றின் கைகளை விலக்க விருப்பமின்றி, காலவிரயத்துடன் கூடிய ஒரு புதியவகைத்  தற்கொலையை  நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன் »  என்கிறார். கதை சொல்லியும் ஒரு புலம்பெயர்ந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பவர் என்பதால், அதன் வலியையும் வேதனையையும் உறவுகளின் மடல்வழியாக வாசிக்கத் தரும்போது வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும் , ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் செலுத்துகிற இந்தத்தொடர் உழைப்பும், கீழைத்தேய மரபிற்கு ஏற்பத் தானொரு அறநெறிப்பட்ட கதைசொல்லி  என்பதைச்  சொல்லிய வண்ணம் இருக்கின்றன.  இத்தகைய நாவல்களை இன்றைய பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில்  அணுகி ஆராய்ந்து ஒரு இணைப்பிரதியை உருவாக்க க் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ப இவர் நாவல்களை இணைக்கும் ஹரிணி இந்த நாவலிலும் வருகிறார்.

 

 

இந்தோசீனாவில் சிக்கிச் சிதறுண்ட புதுச்சேரி மக்கள் குறித்து ஒரு தனி நாவலே எழுத எண்ணியிருப்பதாக அறிவித்துள்ளார் ; அதை அவர் கட்டாயம் செய்து முடிக்கக் காலம் துணை செய்யவேண்டும். ஏனென்றால் கதை சொல்லலின் உடற்கூறை, அதன் இரத்த நாளங்களின் வெப்பத்தை எல்லாம் அறிந்துகொண்டு மொழிமேல் வினைபுரியும் அற்புதமான கதைசொல்லியாக விளங்குகிறார் ; நன்றாக முழுமையாக விளைவதற்கு முன்பே அறுவடை செய்துகொண்டு வந்து, செயற்கையாகப் பாடம் செய்து ஒன்றுகூட வீணாகாமல் விற்று, நல்ல காசு சம்பாதித்துவிட முடியுமென்கிற சந்தைச் சூழல், தமிழ் க்கலை இலக்கியத்துறையிலும் பரவி அனைத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிற ஒரு நிலையில், இத்தகைய கதை சொல்லிகள் பெரிதும் கொண்டாடப்பட வேண்டுமென விழைகிறேன்.

 

கதைகட்டுவதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்கும் கதைமாந்தர் தேர்வும், இவர்களை இணைக்கும் மொழியாடலும் ஒரு சிறிதும் பிசிறு இன்றிக் கச்சிதமாக வந்து விழுகின்றன.எனவே வாசிப்பு அனுபவம் எளிதாகக் கூடி வருகிறது; ஓர் எழுத்தின் வெற்றி என்பது இறுதியில் இதுதானே !  இந்த வெற்றித் தொடரட்டும்.

 

 

சிங்கப்பூர்                                                                                        க. பஞ்சாங்கம்

22 -11 – 2018

கைப்பேசி : 9003037904

மின்னஞ்சல் : drpanju49@yahoo.co.in

____________________________________________________________

இறந்த காலம்  – நாவல்

ஆசிரியர்:  நாகரத்தினம் கிருஷ்ணா

சந்தியா பதிப்பகம், சென்னை.

 

இறந்த காலம் – நாவல்

eranthakaalam_2 copy (1).jpg  நண்பர்களுக்குப் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!   

பேராசிரியர்  க பஞ்சாங்கத்தின்  மிகச் சிறப்பான அணிந்துரையுடன்   சந்தியா பதிப்பக வெளியீடாக   புதிய நாவல் வெளிவருகிறது. அணிந்துரையை  விரைவில் இத்தளத்தில் பதிவேற்றம் செய்வேன்.

 

 நாவலிலிருந்து……

 

.- புதுச்சேரி பற்றிய உன் முதல் அபிப்ராயமென்ன?

 

மாதவன் வழக்கம்போல கேள்வியை வீசினான். அரவிந்தர் ஆஸ்ரமத்தில் சமாதி தரிசனத்தில் சில நிமிடங்களை செலவிட்டபின் வெளியில் வந்த மீராவுக்கு இரண்டாவது முறையாக மாதவனை அப்பெண்ணுடன் சேர்த்துப்பார்த்தபோது மனதில் ஒருவித கசப்பை உணர்ந்தாள். இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெஸிக்காவுடன் இருந்தபோது, மாதவனைத் தனது இரு சக்கர வாகனத்தில் கொண்டுவந்து இறக்கிய அப்பெண்ணின் முகபாவமும் வெறுப்பை உமிழ்கின்ற வகையில் ஸ்கூட்டியை வேகமாகத் திருப்பிச் சென்றதும் நினைவிற்கு  வந்தது. ஜெஸிக்காவிடம் விசாரித்திருக்கலாம். அவளுக்கு இவர்களைப் பற்றி கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. சிலவேளைகளில் அவர்களுக்குள் ஆயிரமிருக்கும் அதை நாம் தெரிந்து ஆவதென்ன என்று இவளைத் திருப்பியும் கேட்டிருப்பாள். தன்னை இங்கிதமற்றவள் எனக் கருதி அவள் ஒதுங்கவும் சந்தர்ப்பமுண்டு. அந்தகைய சூழலைச் சந்திக்க மீரா தயாரில்லை. மாதவனே ஒரு நாள் வாய் திறந்து சொல்லும்வரை இப்பிரச்சினையை எழுப்புவதில்லையென்று முடிவுசெய்தாள்.

 

ஆஸ்ரமத்தைவிட்டு வெளியில்வந்த பின், இவள் திட்டமிட்டிருந்தபடி  மணக்குள வினாயகர் கோவிலுக்கு மாதவன் அழைத்துப்போனான். இவளுடைய ஒரு ரூபாய் நாணயத்திற்கு கோவில் யானை தும்பிக்கையால்  ஆசீர்வாதம்  செய்தது.  அதன்பின் தங்கள் காலணிகளை அவற்றின் பாதுகாப்பிடத்தில் கழற்றி ஒப்படைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைந்தார்கள். கோவிலுக்குள்  மூன்று ஐரோப்பியர்கள், ஆர்வத்துடன் சுவரிலிருந்த  சுதைச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களைக் கடந்து,  மேலே சென்றார்கள். மாதவன் இவளை நடக்கவிட்டு பின்னால் வந்தான். அவள் விருப்பத்திற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளட்டும் என்பது காரணமாக இருக்கலாம். மூலவரைப் பார்க்க நின்ற வரிசையில் அதிகக் கூட்டமில்லை. பார்க்கப் போகிறாயா எனச் சைகை செய்தான். அவள், நீ எனக் கேட்டாள்?  அங்கிருந்த ஒரு மூதாட்டிக் குறுக்கிட்டு, “உள்ளேபோய் பாரும்மா, சக்தியுள்ள பிள்ளையாரு கேட்டதெல்லாம் கொடுப்பாரு” என இவளுக்குச் சிபாரிசு செய்தார். மாதவன் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னான்.  அவள், “ உனக்கு சம்மதமென்றால் சிறிது நேரம் உட்கார்ந்திருந்துவிட்டுப் போகலாம்” என்றாள்.   கோவில் பிரகாரத்தில் சில பக்தர்களைப்போல இவர்களும் உட்கார்ந்தார்கள். ஏன் அவள் உட்கார விரும்பினாள் என்பதை அர்ச்சனைத் தட்டுடன் உட்கார்ந்திருந்த தம்பதிகள் மீது படிந்திருந்த பார்வைத் தெரிவித்தது. மாதவன் அவள் கண்களைப் பார்த்தான், பிற்பகலும் அல்லாத காலையுமல்லாத  பகல் நேர ஒளிப்பொட்டொன்று மீராவின் கரு நீல விழியில் ஈரத்துடன் மினுங்கியது. அதன்  ஈரமண்டலத்தில்  சிறு நிழல்களாக தம்பதியும் ஒரு குழந்தையும். மீராவின் பார்வையைத்தொடர்ந்து இவன் பார்வையும் மெல்ல அடியெடுத்துவைத்து தம்பதிகளிடத்தில்  முடிந்தது. இளம் வயது தம்பதிகள். அவர்கள் மடியில் பாவாடைச் சட்டையில்  ஒன்று அல்லது இரண்டு வயது மதிக்கத்தக்கப் பெண் குழந்தை. அவள் எழுந்திருக்க முயற்சிக்க தாய் அவளை வலிந்து மடியில் நிறுத்தினாள்.  சில நிமிடங்கள்தான், வயிற்றில் அணைத்திருந்த கைகளின் பிடி தளர, குழந்தை சட்டென்று குதியாட்டம் போட்டுக்கொண்டு மீராவை நோக்கி ஓடிவந்தத து.  குழந்தையை மடியில் இருத்தி உன்பெயரென்ன, என்று கேட்டாள். அது, ‘ தாதா’ என்றது. பின்னர் இவள் மடியிலிருந்து திமிரிக்கொண்டு,  முதுகில் சுமந்திருந்த பையை இழுத்தது.  மீரா அப்பையை முதுகிலிருந்து கழற்றி அதிலிருந்துசாக்லேட் பாரொன்றில் ஒரு துண்டை உடைத்துக் கொடுத்தாள். கடித்துத் தின்ற குழந்தை மறுபடியும் கைநீட்டியது.  சட்டென்று எழுந்த தாய்  குழந்தையின் முதுகில் தட்டி, தூக்கி மடியில் இருத்திக்கொள்ள, குழந்தை இவளையேப் பார்த்துக்கொண்டிருந்தது. மீரா சாக்லேட்பாரைக் குழந்தையிடம் நீட்டினாள். தாய் இடை மறித்து, “வேண்டாங்க கெட்ட பழக்கம்! யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கிறா!“, என்றாள். மீரா புரியாமல் மாதவனைப் பார்த்தாள். “பிறகு சொல்றேன், போகலாம்!” என்று எழுந்து நடந்தான். இவளும் எழுந்து அவனைப் பின் தொடர்ந்தபோது,  சந்தித்த குழந்தையின் பார்வை மனதைப் பிசைந்தது. வெளியில் வந்ததும், கைப்பையிலிருந்த கேமராவைக்கொண்டு ஆனையுட னும் ஆனையின்றியும், நுழைவாயிலை ஒட்டிய கடையையும், பாத அணிகளை பாதுகாத்த பெண்மணியையும் படம்பிடித்தாள்.

 

அருகிலிருந்த உணவு விடுதியொன்றில் மதிய உணவைச் சாப்பிட்டார்கள். தென் இந்திய உணவை முதன் முதலாக கையால் சாப்பிடுவது மீராவைப் பொறுத்தவரை சுகமான அனுபவம். அதன் பின்னர் காலனிகால வெள்ளையர் பகுதியில் கால் போனபோக்கில் நடந்தார்கள்.  கடற்கரையில் காந்தி சிலையிலிருந்து துய்ப்ளே சிலைவரை இருவருமாக நடந்து திரும்பியபின், பழைய கலங்கரை விளக்கிற்கெதிரே இருந்த சிமெண்ட் கட்டையில் கடலைப் பார்த்தவாறு உட்கார்ந்தார்கள். இதுவரை சராசரி மனிதர்களைப் போலவும் வழிகாட்டிப்போலவும் ஆஸ்ரமம், மணக்குள விநாயகர் கோவில், பாரதிப்பூங்கா, ஆயி மண்டபம், கவர்னர் மாளிகை, இந்தோசீனா வங்கி யுகோ வங்கியாக மாறிய கதை கடற்கரை ஓரமிருந்த தேவாலயம்.என்று அறிமுகப்படுத்திக்கொண்டும் இடைக்கிடை குட்டிகுட்டிக் கேள்விகளுக்குப் பதில் தெரிவித்துக்கொண்டுமிருந்த மாதவன்,  இருவரும் உட்காரக் காத்திருந்ததுபோல, “ புதுச்சேரி பற்றி உன் அபிப்ராயமென்ன?” என்று கேட்டான்.

 

சிலநொடிகள் தாமத த்திற்குப் பின் பதில் வந்தது.

 

– எந்தப் புதுச்சேரி பற்றி என்னுடைய கருத்தைச் சொல்ல.  மேற்கின் எச்சங்களாகத் தங்கிப்போன வீதிகள், காலனி ஆதிக்க வரலாற்றுச்சின்னங்கள் ஆகியவற்றிற்கிடையே கடந்த நான்கு மணி நேரமாக நான் கண்ட கடற்கரை, ஆஸ்ரமம், இந்துக்கோவிலென்றிருக்கிற கிழக்குப் புதுச்சேரியைப் பற்றியா அல்லது பேருந்துநிலையம், காளான்கள் போன்ற புறநகர்பகுதிகள் என்றிருக்கும் மேற்குப் புதுச்சேரி பற்றியா? இவை இரண்டில் உனது தேர்வு எது?  என்னைக்கேட்டால் காலையில் உன்வீட்டிற்கு வருவதற்கு முன்பாக பார்த்த மேற்கு புதுச்சேரி அழகு. அது இயற்கையாக இருக்கிறது. சரண்யா, மாதவன், ரங்கநாயகி அம்மா, ஈஸிசேரில் ஒரு அப்பா என்றிருக்கிற குடும்பத்தைப்போல. உன் அம்மாவையும், சரண்யாவையும் எங்கள் வீட்டிற்கு கடத்திப் போகலாமா என்றுபார்க்கிறேன்.  என் அம்மாவிற்கும் ரங்கநாயகி அம்மாள் பற்றி ஒரு மின்னஞ்சல் எழுதும் எண்ணமிருக்கிறது.  அபிப்ராயம் புதுச்சேரி என்ற ஊரைப்பற்றியது என்றால் அவரவர் ஊர், அவரவருக்கு அழகு. உனக்குப் புதுச்சேரி அழகெனில். அமெரிக்கா ஜெஸிக்காவிற்கு அவள் பிறந்த பசடீனா அழகு. அந்தவகையில் பாரீஸ் எனக்கு அழகு.  பாரீஸை மறந்துவிட்டு புதுச்சேரியியின் அழகைப்பேசு என்றால் ஆரோவில் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது பார்த்த பேருந்து நிலையம் அழகு, ஆட்டோவில் வந்தபோது விநோதமான குழல் வாத்தியமும், டமடம மேளமுமாக, கொத்தாக இலைகளை பிடித்துக்கொண்டு மஞ்சள் ஆடையில் நாக்கைத் துருத்திக்கொண்டு ஆடியபடி நடந்த பெண்மணி அழகு. கோணிப்பையை விரித்து, வெற்றிலைச் சாறை துப்பிய வேகத்திலேயே கொத்தமல்லி புதினாவென்று கூவி விற்ற பெண்மணி அழகு, வெத்திலை எச்சிலை காலில் வாங்கிய மனிதர் முகம் சுளித்தது அழகு, அவர் மீது மோதிக்கொண்ட சிறுவன் அழகு, Tiens! எப்படி அதைச் சொல்ல மறந்தேன், கோவிலில் பார்த்த குழந்தைகூட அழகுதான். புதுச்சேரியைக் காண என்பதைக்காட்டிலும் புதுச்சேரி மனிதர்களைப்  பார்க்க வந்தேன் என்று சொல்வதுதான் சரி.  மனிதர்கள் மூலமாகத்தான் ஒரு நகரம் அழகைப் பெறுகிறது. உண்மையில் புதுச்சேரியைத் தேடி வந்தேன் என்று சொல்வது இன்னும் கூட பொருத்தமாக இருக்கும். பாரீசில் இல்லாத  சில புதுச்சேரியில் இருக்கின்றன. புதுச்சேரியில் கிடைக்காத சில பாரீசில் கிடைக்கலாம்.  மனிதர்கள் பயணம் செய்யும் நோக்கமே இங்கே இல்லாதவை அங்கே கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான். அரவிந்தர் தோழி புதுச்சேரிக்கு வந்தது அவருக்குப் பாரீஸில் கிடைக்காத அரவிந்தரைத் தேடி. அரவிந்தரால் அவர் தோழிக்குப் புதுச்சேரி அழகு. எனக்கும் நான் தேடும் பொருள் கிடைக்கும் இடமெல்லாம் அழகுதான்.  கோவிலில் சட்டென்று அந்தப்பெண், குழந்தையை என்னிடமிருந்து ஏன் பறிக்கவேண்டும். எனக்கு சங்கடமாகப் போய்விட்ட து. நானென்ன குழந்தையைக் கடத்திபோய்விடுவேன் என நினைத்தாளா, குழந்தைக்குச் சாக்லேட் கொடுக்க ஆசைப்பட்டது தப்பா?

 

– ஆமாம் தப்பு. நீ சொல்வதுபோல குழந்தையைக் கடத்தவே சாக்லேட் கொடுக்கிற, என்று அந்தப்பெண் நினைத்திருந்தாலும் எனக்கு வியப்பில்லை. இங்கே குழந்தை கட த்தல் என்ற செய்தியை அடிக்கடி தினசரிகளில் படிக்கிறார்கள். அதனால் முன் பின் தெரியாதவர்களிடத்தில் குழந்தை என்கிறபோது தாய்க்குச் சந்தேகம் வருகிறது. எங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மாணிக்கம், பிரான்சில் இருக்கிறார் தனக்கேற்பட்ட அனுபவமென்று ஒரு பிரச்சினையை கூறினார். ஒரு முறை  சாலையில் நடந்து போகிறபோது,  கனமானதொரு பையுடன், ஒரு வயதானப்பெண்மணி  படியேறுவதைப் பார்த்திருக்கிறார்.   அவளை நெருங்கி, என்னிடம் கொடுங்கள், நான் மேலே கொண்டுவந்து தருகிறேன் எனக்கூறி பையைத் தொட்டிருக்கிறார். அந்த மூதாட்டி என்னப் புரிந்துகொண்டாரோ, “திருடன் திருடன்” என்று கூச்சலிடவும், கூடிய மக்கள் காவல்துறையை அழைக்கவும். ஒரு பிற்பகலை காவல் நிலையத்தில் அவர் கழிக்கவேண்டியிருந்ததாம். அவர்களுக்குப் புரியவைப்பதற்குள் போதம் போதுமென்று ஆகிவிட்டதாம். உதவின்னு போனாலே பிரச்சனைகளை சத்திப்பது எனக்கும் நடந்திருக்கிறது. பொது இடத்தில்  பெரும்பாலும் பிரச்சனை இல்லை. தனியாக இருக்கிறபோது அதுபோல நடந்துகொள்ளாதே.  இங்கு குழந்தைக் கட த்தல் புரளிகள் அதிகம், அதிலும் பெண்குழந்தைகள் என்றால் கவனமாக இருக்க வேண்டும்.   முன்பெல்லாம் எங்கள் அண்டைவீட்டு பர்வதம் அக்காள் மகளைத் தூக்கி விளையாடுவதுண்டு.  இப்போதெல்லாம் அப்படிச்செய்வதில்லை.

 

– ஏன்?

 

– பாலியல் குற்றங்களைப்பற்றிய செய்திகளை அதிகமாக நாளேடுகளில் வாசிக்கிறோம்.  தப்பு செய்தவனைத் தண்டிப்பது நியாயம். செய்யாத ஒருத்தனை செய்தவனாகச் சித்தரித்து தண்டிக்கவும் வாய்ப்புகள் உண்டு. நீ சின்ன வயதாக இருந்து உனக்கோ, உனக்கு வேண்டப்பட்டவர்களுக்கோ என்னைப் பிடிக்கலைன்னு வச்சுக்க என்மேல ஒரு புரளியைக் கிளப்பி  சுலபமா தண்டிக்கலாம். உண்மை, ஆதாரம்  போன்றவைக்கெல்லாம் அவசியமில்லை.  மேடையை நீதிமன்றம்போலவும் தம்மை நீதிபதியாகவும் நினைத்துக்கொண்டு, தண்டனை வழங்கும் மக்கள் எங்கள் நாட்டில் அதிகம்.

 

– ஏதோ இங்குமட்டும் நடக்கிறமாதிரி சொல்ற. பிரான்சுல கூட இதுபோன்றதொரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவள் என்று நம்பப் பட்ட சிறுமி வளர்ந்து பெரியவள் ஆனதும்  அந்த வயசுலே புரியாம குற்றம் சாட்டிட்டேன் என்று சொல்ல பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குபின் குற்றவாளிகள்  விடுவிக்கப்பட்டக் கதையுண்டு. அதற்காக என்ன செய்ய முடியும்?

 

– தவறான சாட்சியங்கள் அடிப்படையில் விதிவிலக்காக அப்பாவிகள் தண்டிக்கப்படுவது நடக்கக் கூடியதுதான். அது கூடாதென்பதற்காகத்தான் நீதிமன்றங்களில் பல அடுக்குகள் இருக்கின்றன. ஆனால் சந்தேகத்தின் பேரில், வதந்திகளின் அடிப்படையில், ஒருவனை அல்லது ஒருத்தியை குற்றம்சாட்டுவதும், தங்கள் கருத்தை விசாரணையில் திணிப்பதும் தீர்ப்பின் போக்கை மாற்றிவிடும்.  அதுமாதிரியான சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம், அதனால் இங்கு கவனமாக நடந்துகொள். எப்போது கல்லெறிவார்களென்று சொல்ல முடியாது. எங்கள் மக்களுக்கு வேடிக்கையும் கல்லெறிவதும் ஒரு பொழுதுபோக்கு. உன்னிடம் கேட்கவேண்டுமென்று நினைத்து பிறகு மறந்து விடுகிறேன், மீரா என்ற பெயர் உனக்கு எப்படி?

 

– காலையில் ஜெஸிக்காவும் போன் செய்தபோது, திடீரென்று இக் கேள்வியை எழுப்பினாள். ஒருவகையில் எனக்கும் பூர்வீகம் புதுச்சேரிதான். 1920களில் என் அம்மாவழித் தாத்தா பிரெஞ்சு ராணுவத்தில சேர்ந்து இந்தோசீனா போயிருக்கிறார்.  இரண்டாவது உலகயுத்தத்தின்போது தாத்தாவும் அவருடய வியட்நாமிய மனைவியும் தங்கள் ஒரே மகளை அழைத்துக்கொண்டு பிரான்சுக்குத் திரும்பிஇருக்கிறார்கள். தாத்தாவுக்கு இந்தியா பூர்வீகம் என்பதால் எனக்கு மீரா என்று பெயர் வைத்திருக்கலாம். சரி உனக்கென்ன ஆரோவில் என்ற பெயர் மேல அப்படியொரு கோபம்.

 

– எங்க வீட்டுக் கூடத்தில் மாட்டியுள்ள படத்தில் இருக்கிற தாத்தாவைத் தெரியுமில்லையா? இந்தக் கோபம் அவர்கிட்டே இருந்து எனக்கு வந்திருக்கலாம். காந்தி அபிமானி. பிரிட்டிஷ் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தோடு ஒப்பிடும் அளவிற்கு இங்கே பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்கிறவர்.  இங்கு போராட்டமென்று நடந்ததெல்லாம் கலவரம் என்பது அவர் கருத்து. தியாகிகள்னு சொல்லனும்னா ஆலைத் தொழிலாளிகளைத் தான் சொல்லனும் என்பார்.  அவருடைய பங்காளிவீட்டுல ஒரு குடும்பமே அதனாலப் பாதிக்கப்பட்டதென்கிற வருத்தம் அவருக்கு.  நீ தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாய் எனில் என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ஆரோவில்லில் இருக்கும் உங்களுடைய ஆட்கள் பலருக்கும் தாங்கள் உயர்ந்த இனமென்கிற எண்ணம் நிறைய.  அக்கம்பக்கத்திலிருக்கிற ஏழைத் தமிழர்களை  காலனிகால கூலிகளாகப் பார்க்கிறார்கள்.

 

காலனி ஆதிக்கத்தின்போது  புதுச்சேரி நகரத்தின் ஒரு பகுதியைத் தங்களுக்கென  உங்கள் மக்கள் ஒதுக்கிக்கொண்டார்கள். பிறகு அரவிந்தரோடு மிரா அல்ஃபஸ்ஸா சேர்ந்துகொள்ள  பிரெஞ்சு அரசாங்கம் இந்த ஆன்மீக ஜோடிக்கு, கேட்டவரத்தையெல்லாம் கொடுத்தது. வெள்ளையர் பகுதிகளெல்லாம்   ஆஸ்ரமத்தின் கைக்கு வந்தன. இதன் அடுத்த கட்டமாகத்தான்  ஆரோவில்லைப் பார்க்கவேண்டும். பெருகும் அபிமானிகளின் எண்ணிக்கைக்கு ஒப்ப ஆஸ்ரமத்தை விரிவாக்க ஆரோவில், அரவிந்தரின் தோழிக்குத் தேவைப்பட்டது.  உலகமெல்லாம ஒரு குடும்பம்  எனும் ஆன்மீக மார்க்ஸியத்தின் அடிபடையில் சமயமில்லை, எல்லையில்லை, பொருள் வேண்டியதில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது.  ஆரோவில்லில் தற்போதைய நிலமை என்ன?  பணமில்லாதவர் உள்ளேநுழையமுடியாது.  சுதந்திரம் சமத்துவம் என்ற உங்கள் தேசத்து வார்த்தைகளெல்லாம் இங்கும்  உச்சரிக்கப்பட்டன. அரசியல் மார்க்ஸியம் எப்படியோ இந்த ஆன்மீக மார்க்ஸியம் கண்டது என்னைப் பொறுத்தவரை தோல்வி. சமத்துவத்தை நிலைநாட்ட ஆசைபட்டால் சுதந்திரத்தைத் துறக்கவேண்டும், சுதந்திரம் இருக்குமிடத்தில் சமத்துவத்திற்கு வாய்ப்பேஇல்லை. இரண்டையும் இணைப்பது எப்படிச் சாத்தியம்? சமயம் பாமர மக்களை  அடிமைப்படுத்த என்றால், ஆன்மீகம் அறிவாளிகளை அடிமைகொள்ள.  ஜெஸிக்காவை சந்தித்ததுபோல பிரான்சுவாஸ், செலின், எதுவார், கிற்ஸ்டோபர் என ஆரோவில் மனிதர்களை சந்தித்துப் பேசு,  ஒவ்வொரு மனிதரிடமும் ஒருவகையான ஆரோவில் கனவு இருப்பது புரியும்.  அதுபோல அக்கம்பக்கத்திலுள்ள கிராம மக்களிடமும் பேசிப் பழகு.  நீ புரிந்துகொள்ளவேண்டிய இன்னொன்று, ஆரோவிலியன்கள் எல்லோருமே  அரவிந்தருமல்ல,  மிரா அல்ஃப்ஸ்ஸாவுமல்ல. வாழ்க்கையின் முதிர்ச்சியில், வயதின் முதுமையில், அவர்கள் கண்ட கனவுலக வீட்டின் கதவைத் தட்டுகிறவர்களெல்லாம் வாழ்க்கையை வாழ்ந்திராத மனிதர்களாக இருப்பது பெரும்பிரச்சனை. இங்கு வருகிறவர்கள் கர்ம யோகிகள் அல்ல, வாழ்க்கை போகிகள், சராசரி மனிதர்கள். தப்புகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.  ஊர்கூடி தேர் இழுக்கிறபோது, மொத்தபேருக்கும் எந்த திசையில் தேர் போகவேண்டும், எங்கெங்கு ஆராதனைக்கு நிற்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். சில  நல்லது நடந்திருக்கிறது என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் இந்த விடியல் நகரம் இன்னும் வைகறையைக்கூடகாணவில்லை,   மூச்சுவிடாமல் பேசிக்கொண்டுபோன மாதவனை அமைதிப் படுத்தாவிட்டால், இவளுக்குத் தலை வெடித்துவிடும் ஆபத்திருந்தது.

 

–  மீன் பிடி படகென்று நினைக்கிறேன், அதன் தலைக்குமேலே எவ்வளவு கடற்காகங்கள் பார். இறக்கை முளைத்த மேக க்கூட்டம் போலில்லை, என்று வியந்து அவன் கவனத்தை திசை திருப்ப முயன்றாள்.

 

– என்ன நீண்ட நேரம்பேசி, போரடிச்சிட்டேனா?

 

– இல்லை. எல்லாவற்றையும் இன்றைக்கே முடிச்சுட்டா,  வரும் நாட்களில் என்னிடம் சொல்ல எதுவும் இருக்காதில்லையா, அதற்காக. தவிர நானும் புறப்படவேண்டும்.  இப்போதே கிளம்பினால்தான் எட்டுமணிக்குள்ளாக என் குடியிருப்புக்குத் திரும்பமுடியும், என்று சங்கடத்துடன் அவள் புறப்பட்டபோது, “வீட்டிற்கு வா, எனது இரு சக்கரவாகனத்தில் உன்னை அழைத்துபோகிறேன்”, என்றான். ஆரோவில் பற்றிய மாதவனின் கருத்தில் சோர்ந்திருந்த  மீராவுக்கு, அவனுடைய இந்த உதவி தேவைப் பட்டது.

 

இருவருமாக மாதவன் வீட்டிற்குத் திரும்பியபொழுது, வீட்டில் நுழைந்தவுடன் பலநாள் பழகியள்போல சரண்யா சிறுகுழந்தைபோல ஓடிவந்து மீராவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். மாதவன், “மெதுவா.. மெதுவா! அவங்கக் கையை பிய்ச்சு எடுத்துடப்போற! “என்றான்.  மாதவன் தந்தையாக இருக்கவேண்டும் கூடத்தில் சாய்வு நாற்காலியில் நாளிதழ் ஒன்றை முகத்தை மறைத்து பிடித்தபடி வாசித்துக்கொண்டிருந்தார். நாளிதழின் பக்கத்தை உயர்த்திப் பிடித்திருந்த அவர் விரல்களை  மீரா பார்த்தாள். மாதவன் விரல்களைப்போலின்றி மிகவும் மெலிதாகவும் நீளமாகவும் இருந்தன.  காலடிகளின் சப்தமும், தொடர்ந்து அண்ணனும் தங்கையும் எழுப்பிய குரல்களும் அவரது கவனத்தைத் திருப்பி இருக்கவேண்டும். நாளிதழை பாதிமடித்தபடி “வணக்கம்மா! பிரான்சுன்னு சொன்னாங்க, எங்கே பாரீஸா?”, எனக்கேட்டுவிட்டு, “சரண்யா லைட்டைப்போடு,  அந்தப்பெண்ணை உட்காரவைத்துப் பேசு!” எனக் கட்டளையிட்டுவிட்டு மீண்டும் மடித்த தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினார்.

 

மாதவன்,” வாயாடிகிட்ட பேசிக்கிட்டிரு,  வருகிறேன் !” என்றவன் வீட்டின் பின்பக்கம் போனான்.   சரண்யா, “ கைடு சர்வீச ஒழுங்காகச் செய்தானா, இல்லைப் பேசி அறுத்தானா?  அவன் கிட்ட நீங்க தள்ளி உட்கார்ந்து பேசனும். காதுல பஞ்சு அடைச்சுக்கனும். வார்த்தைகளாலேயே மிதிச்சுடுவான். ஏழை பணக்காரர்கள், தொழிலாளிகள் முதலாளிகள்,சுரண்டல் வர்க்கபேதம் என பேச ஆரம்பிச்சிடுவான்”, என்று கூற,  மீரா  “ ஏன் இந்த வயசுல அப்படித்தான் இருக்கனும், அதிலென்ன தப்பு.”  என்றாள்.  அதைக் கேட்ட மாதவன் தந்தை ‘க்கூம்’ எனக் கனைத்தார்.  “ஸ்ஸ்…மெதுவாய்ப்பேசுங்க. அப்பா காதில் விழுந்தால் வம்பு,” என்றாள் சரண்யா, விரலை வாயில் வைத்து, பிறகு மெதுவாக இவள் காதில், “ அவருக்கு ஆங்கிலம் பேச வராதே தவிர , நாம் என்ன பேசறோம் என்பது புரியும்.” என்றாள்.  தொடர்ந்து”இன்னொரு நாளைக்கு இதைப்பத்திப்பேசலாம். ஏதாச்சும் குடிக்கிறீங்களா?”,  எனக்கேட்டாள். “பக்கத்தில் தானே இருக்கிறேன், இன்னொரு முறை வீட்டிற்கு வருவேன். உங்கள் அண்ணன்  வந்தால் புறப்பட்டு விடுவேன்”, என்று தெரிவித்த மீரா, “எங்கே அம்மாவைக் காணோம்”, என்று ரங்கநாயகி அம்மாளைப்பற்றி விசாரித்தாள்.  “அம்மா கோவிலுக்குப் போயிருக்கிறார்கள்”, என்பது சரண்யாவின் பதில். பின்வாசலுகுக்குச் சென்றிருந்த மாதவன் திரும்ப வந்தான், “அம்மா வர லேட்டாகும், அவள் இருந்தால் உன்னை இரவு உணைவை சாப்பிடச்சொல்லி வற்புறுத்துவாள்”, என்றான். “இல்லை இப்போதே ஆறரைக்கு மேல் ஆகிவிட்டது”. என்ற மீராவின் பதிலுக்குபிறகு, மாதவன் காத்திருக்கவில்லை. தனது இருசகரவாகனத்தை நடையிலிருந்து தெருவில் இறக்கினான்.

 

படி இறங்குகையில் சரண்யாவிடம், “எனாக்குத் தமிழ் கற்றுதருவாயா” என மீரா கேட்டாள். “நீங்கள் பிரெஞ்சுக் கற்றுதர சம்மதித்தால் சந்தோஷமாக கற்றுக்கொடுப்பேன்”, என்பது சரண்யாவின் பதில். அவள் காதைப்பிடித்து செல்லமாக க் கன்னைத்தைத் விரல்களால் தட்டிவிட்டு, குடும்பத் தலைவரிடமும் சொல்லிக்கொண்டு மீரா புறப்பட்டாள்.

 

இருபது நிமிட ஓட்டத்திற்கு பிறகு ஆரோவில் நகரில் மீரா தங்கியிருந்த குடியிருப்பை நெருங்கியபோது, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, விளக்குகள் அணைந்திருந்தன.  சுற்றிலும் இருட்டு. மாதவனே கூட நிழலுருவாக மாறியிருந்தான். உடலில் மெல்ல அச்சம் படர்வதை உணர்ந்தாள். இது போன்ற அனுபவங்கள் புதிதில்லை என்றாலும் அந்நிய நாட்டில், அதிகம் மனிதர் நடமாட்டமில்லாத காடுபோல வளர்ந்திருக்கும் மரங்களுக்கிடையில், ஓர் இளைஞனுடன்,  இது முதல் அனுபவம்.

 

– என்ன நடந்தது? எனக்கேட்டாள்.

 

–  நான் பதில் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலா என்ன?  மின்சாரத் தடை என்பது   எங்களுக்குப் புதிதல்ல. இனி ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ ஆகலாம். அல்லது இரவு முழுக்க மின்சாரம் வராமல் போனாலும் போகும். இப்போது இரண்டு பேர் உங்களைக் கடத்த  வருவார்கள்.அவர்களிடம் உன்னை ஒப்ப்டைத்துவிட்டு நான் கிளம்பவேண்டும்.  இதற்கெல்லாம் தயாராத்தான்  பிரான்சுல இருந்து வந்திருப்பீங்க இல்லையா? என்று பரிதாபக் குரலில் கேட்க, மீராவுக்கு எரிச்சலும் கோபமும் வந்தது.

 

– உன் தங்கை சொன்னது சரியாகத்தான் இருக்கிறது.  விளையாடும் நேரமா இது.  ஆரோவில்லில் சூரிய ஒளி மின்சாரத்திற்காக அனேக இடங்களில் பேனல்களைப் பார்த்தேனே.

 

– அது போதிய மின்சாரத்தை அளிக்கிறதென்று சொல்ல முடியாது. மின்சாரப் பற்றாக்குறை ஒருபக்கமெனில்,  மின்சார பராமரிப்பு குறைகளும் உண்டு. சரி உட்காரு, இன்னும் கொஞ்சம்தூரம் தான் போயிடலாம்.

 

மாதவன் கூறியதைப்போலவே இவள் விருந்தினராகத் தங்கியுள்ள ஆல்பர்ட் – தேவகி வீட்டை  ஐந்து நிமிட ஓட்டத்தில் அடைந்தனர். தேவகி வீட்டுவாசலில் நின்றிருந்தார்.  மீரா, இரு சக்கரவாகனத்திலிருந்து இறங்கிய மறுகணம், “இனி பிரச்சினையில்லை. பிறகு பார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டு மாதவன் புறப்பட்டான்.  காத்திருந்த தேவகியை நெருங்கியதும் தடைப்பட்டிருந்த மின்சாரப் பிரச்சினை முடிந்ததுபோல, விளக்குகள் எறிந்தன. இவள் கையைப் பிடித்த தேவகி:

 

– இருட்டுவதற்குள் வரப் பார், அவ்வப்போது சில அசம்பாவிதங்களும் இங்குநடக்கின்றன, என எச்சரித்து உள்ளே அழைத்து போனார்.

 

———————————————————————————

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புதிய நாவல்

அன்பினிய நண்பர்களுக்கு  வணக்கங்கள்

 

வயது அதிகரிக்கிறபொழுது, காலமும் நேரமும் கிடைத்தற்கரிய பொருளாக இருக்கிறது. பிறகு வயதுக்கே உரிய தொல்லைகள்.

புதிதாக ஒரு நாவலை எழுதி முடித்துள்ளேன். எனது படைப்புகளை பிரெஞ்சில் கொண்டுபோகும் எண்ணத்துடன், எனது மற்றுமொரு நூலை   மொழிபெயர்க்கத்தொடங்கியுள்ளேன்.

 

எனது புதிய நாவல் : இறந்த காலம்

இன்றைய ஆரோவில் நகரை மையமாக வைத்து சொல்லப்படும் கதையில் அரவிந்தரின் ஆன்மீகத் தோழி மிரா ரா அல்ஃபஸ்ஸா புதுச்சேரிவந்த காலத்தில் (1914) தொடங்கி 1954 வரையிலான புதுச்சேரி, அதேகாலத்தில் ரெனோன்சாசியோன்(Renonciation) என்ற பெயரில் தங்கள் பூர்வீக அடையாளத்தை துறந்து பிரெஞ்சுக் குடியினராக மாறி, தங்களை வாழ்விக்க வந்த வள்ளல்களாக பிரெஞ்சுக்கார்களைக் கருதி அவர்களுக்காக (தங்களுக்காகவும்) இந்தோ சீனா (சைகோன்)சென்ற தமிழர்களைப்பற்றியும் கொஞ்சம் பேசுகிறேன்.நவீனமும் சரித்திரமும்  பின்னப்பட்ட, நாவல்.

 

புதுச்சேரி  வரலாறு என்பது இந்தோ சீனாவையும் சார்ந்த து.  காலனிகால வரலாறில்  பிரெஞ்சுக்காலனிகள் எங்கெங்கெல்லாம் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று கிறித்துவமத த்தில் விழுந்து, மேற்குலக நாகரீகத்தில் கரைந்துபோன தமிழர்கள் ஒருபக்கமெனில்,   பண்பாட்டைப் போற்றுவதாகச் சொல்லிக்கொண்டு   தேர் இழுத்தலிலும்.  தீமிதித்தலிலும் தீவிரம் காட்டும் மக்கள்  இன்னொரு பக்கம். ஒரு தலைமுறைக்குப் பிறகு புலம்பெயரும் அனைவரிடமும் நிகழும் விபத்திற்கொப்ப மொழியைத் தொலைத்து, வீட்டில் அம்மா, அப்பா அம்மம்மா சொற்களை வாய்க்கரிசியாக உபயோகிக்கும் இம்மக்களை அவர்களின் இழப்புகளை  அவர்களின் நடுவே ஒரு தமிழனாக நின்று எழுதியிருக்கிறேன். இரைச்சல் மிக்க தமிழ் சூழலில் இவர்களின் கேவலும் விசும்பலும் காதில் விழுமா என்று தெரியவில்லை. இந்தோ சீனா தமிழர்களின் வாழ்க்கையை மட்டுமே ஆதாரமாக கொண்டு ஒரு நாவல் எழுதும் எண்ணமும் உண்டு . எல்லாம் ஆசைகள் தான் சொல்வதுபோல பல நேரங்களில் என்னால் செயல்பட முடிவதில்லை.

பதிப்பகம்

பதிப்பகங்களைப் பொறுத்தவரை, சந்தியா எனக்குப் பிறந்தவீடெனில் காலச்சுவடு புகுந்த வீடு. இருவருமே என்னைப் புரிந்து தொழிலுக்கு அப்பாற்பட்ட நட்புடன் பழகுகிறவர்கள். இந்த நாவலை சந்தியா பதிப்பகம்வெளியிடுகிறது.  காக்கை உட்கார பணம்பழம் விழுந்த கதையாக பாலியல் குற்றம்  நாவலின் மையப்பொருள். இதை நான்கு மாதங்களுக்கு முன்பு எழுதத் தொடங்கியபோது , இன்றைக்கு உலகமெங்கும் பேசப்படும் பொருளாக அப்பிரச்சினை மாறுமென  நினைக்கவில்லை.

மதுரையில் அண்மையில் மயில்கள் பல விஷம் வைத்துக்கொல்லப்பட்டதாகப் படித்த செய்தி, நாவலின் விதை, அது ஆரோவில்லில் மரமாகியிருக்கிறது.

———————————————————–

பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள்

குளிரகாலம் முடிந்து இளவேனிற்காலம் தொடங்கி ஒருவாரம் ஆகிறது, கடந்த சில  நாட்களாகவே இரவுபகலாக பனிபொழிந்து கொண்டிருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய  நாடுகளில் டிசம்பர் தொடங்கி மார்ச் வரையில், என்னைப்போன்ற பாவப்பட்ட மனிதர்களை வாட்டுவதெற்கென அவ்வப்போது பூமியின் துருவப் பகுதிகள் அனுப்பி வைப்பதாக நம்பப்படுகிற கடுங் குளிர்காலப் பனி. தொலைகாட்சி வானிலை அறிவிப்பாளர்கள் – அதிலும் பெண் அறிவிப்பாளர்கள் என்றால், அவள் சொல்வதை எங்கே காதில் வாங்கமுடிகிறது – எச்சரித்தும்,  உடுத்தவேண்டியவற்றை  உடுத்தத் தவறி வெளியில் கால் வைக்கிறபோதுதான், அதன் வீரியத்தை உணரமுடிகிறது. திறந்த வாசற்கதவை அடைத்துவிட்டு,  திரும்பவும் வீட்டுக்குள்   நுழைந்து குளிரைச் சமாளிக்கப் பொருத்தமாக  ஒரு கம்பளிச்சட்டை, ஒரு கம்பளி ஸ்கார்ஃப், ஒருகம்பளிச் ஜாக்கெட், என்று  வெளியில் வந்தேன்.

குடியிருப்புகளின் கூரைகள், இலைகளை உதிர்த்த மரங்கள், மோட்டார் வாகனங்கள், சாலைகள்,  நடைபாதைகளென, திறந்தவெளியில் வானத்தின் கண்காணிப்பில் இருந்தனவற்றில் விதை நீக்கிய பஞ்சை உலர்த்தியதுபோல,  எங்கும் பனி. போதாதென்று, ‘பனி’ வெண் சாம்பல் தூவலாக  காற்றில் அலைந்து பூமியைத் தேடிக்கொண்டிருந்தது. மழைத்தூறல்கள் தங்கள் பாட்டுக்கு விழுந்துகொண்டிருந்தன. அவற்றின் வினையில் குறுக்கிடக்கூடாது எனப் பனிப்பொழிவு எச்சரிக்கப்பட்டிருக்கவேண்டும்,  மழைத்தூறல்களுக்கு இடையூறின்றி  சாதுர்யமாகத் தப்பித்து,காற்றின் வீச்சுக்கு ஈடுகொடுத்து, காற்பந்தாட்ட வலைக்குள் பந்தைப் போட்ட ஆட்டக்காரரின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள, பிற  வீரர்கள்  ஒருவர்பின் ஒருவராக தாவிவிழுந்து அவரை மூடிமறைப்பதுபோல, சீவல்களாக உதிரும் பனித்துகள்கள் ஒன்றின்மீது ஒன்று விழுந்துகொண்டிருக்கன.  வாகனங்கள், வளர்ந்த செடிகொடிகள், மரங்கள் ஆகியன மட்டுமின்றி ;  திக்கற்ற  புழுக்கள், வண்டுகள், சிறு சிறு பூச்சிகளின் உயிர்வாழ்க்கையும்  நசுக்கப்படுவதை  எதார்த்தமாக கருதிக்கொண்டு படி இறங்கினேன்.  திரையிடாத  என் முகத்தில்  உறைந்த  நீரை வாரி இறைத்த துபோல பனிக்காற்று தாக்குகிறது. முகத்தை நனைத்தக் காற்றை வழித்து எரிந்த பின், குடியிருப்பு அருகில்போடப்படிருந்த  படிகளைக் கவனத்துடன் அடையாளப்படுத்திக்கொண்டு , காலெடுத்துவைத்தபோது, மிதிபடும் பனி, சப்பாத்துகளில் பிதுங்கி மனித அழுக்கின் அடையாளம் பாதச்சுவடுகளாகப் பின் தொடர்வதை ரசித்தவன், நேரத்தின் நெருக்கடியை உணர்ந்தவனாய் நடந்தேன்.

வாகனத்தை எடுக்க குடியிருப்பின் பின்பகுதிக்கு வரவேண்டும். பனியைத் தரித்திருந்த ஊசியிலை மரங்களுக்கு இடையே,  சிலுசிலுவென்று  குறுக்கிடும் காற்றுத் திரைகளை விலக்கி, தரையெங்கும் கொட்டிப் பரப்பியிருந்த பனியை மிதித்து துவைத்தபடி, காரஜ் எண்ணை மனத்திரையில்  சரிபார்த்துக்கொண்டு  நடந்து எதிரில்  நின்றேன். குடியிருப்புகளின்  பின்புறத்தில், எனக்கு இடது பக்கமாக  நிற்கும் இலைகளை உதிர்த்து நிற்கும் ஒக் மரங்களின் மீது எனது பார்வை சென்று முடிந்தது.

இதேவேளையில் பிறகாலங்கள் எனில் சிட்டுக் குருவிகள் பெருங்கும்பலாகக்  கூடி அப்பகுதியைக் கடந்து செல்கிற எந்த மனிதரையும் திரும்பவைக்கிற வகையில் ‘க்ரிக்..க்ரிக்’ என சத்தமிடும், குறிப்பாக பத்து அல்லது பதினோருமணிக்கு. அவைகளுக்குள்ளும் பிரச்சினைகள் இருக்கும்போல : சற்றே பெரிதான தடித்த கிளையொன்றில் இருகுருவிகள் உட்கார்ந்திருக்க, கீழும் மேலும், எதிரிலும் பக்கவாட்டிலும் கிளைகள்,கொம்புகளில் வாதி, பிரதிவாதி, சாட்சிகள், ஜூரிகள் என்று   ஒரு   நீதிமன்ற காட்சி கச்சிதமாமாக அரங்கேறும்.  கனம்  நீதிபதி அவர்களே என ஆரம்பித்து  வாதிடும் பறவைகளின் தொனியைக்கொண்டு, வழக்கை ஊகிக்க முயன்று, குழப்பத்துடன் கிளம்பிச்சென்றது அதிகம்.   `முதல்  நாள்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குருவிக்கு மறு நாள் என்ன  நேர்ந்திருக்கும் என யோசிப்பதுண்டு. அதை விளங்கிக்கொள்ள, மரத்தில் அமர்ந்திருக்கும் குருவிகூட்டத்தில், அப்பறவையைத் தேடி அலுப்புற்றிருக்கிறேன். ஒருமுறை அப்படியொன்றைத் தேடிக்கொண்டிருந்த வேளை, எங்கள் குடியிருப்பின் முதல் மாடியில் குடியிருக்கும் பெண்மணி, முகத்தில் பல கேள்விகளைத் தேக்கிக்கொண்டு என்னைப் பார்ப்பது மட்டுமல்ல, அதுமுதல்  எப்போதேனும் என்னைக் கடந்து செல்லவேண்டிய இக்கட்டு உருவாகிறபோதெல்லாம், கால்கள் பின்னிக்கொள்ளத் தடுமாறுகிறாள், தம் குழந்தைகளை சேர்த்தணைத்தபடி முகத்தைப் பராக்கு பார்ப்பதுபோல வைத்துக்கொண்டு அச்சத்துடன்   நடந்து, சில அடிதூரம் சென்றபின் திரும்பிப் பார்க்கிறாள்.

காலை பத்து முப்பதுக்கு நீதிமன்றத்தில் இருக்கவேண்டும் என்பது நினைவுக்கு வந்த து. சம்பந்தப்பட்ட வழக்கு பத்து நாற்பத்தைந்திற்கோ, பதினொன்றிற்கோ தொடங்கலாம், எனினும் அரசாங்கம் தரும் மொழிபெயர்ப்புக்கான கட்டணத்தைப் பெறுகிறபோது, அவர்கள் கோரிக்கை கடிதத்தின்படி  பத்து முப்பதுக்கு விசாரணை மண்டபத்தில் இருப்பதுதான்  நியாயமாக இருக்க முடியும். வாகனத்தை எடுத்துக்கொண்டு பிரதான சாலையில் ஊர்ந்தவேளை, பனிப் பொழிவு நின்று சூரியனை அனுமதித்திருக்க, சாலையோரங்களிலும், நடைபாதையிலும், கட்டிடங்களின் கூரைகளிலும் விழுந்து கரையாமலிருந்த பனிகளில் பொன் நீலத்தில் சூரிய ஒளி நட்சத்திரங்களாக பிரகாசிப்பதும் மறைவதுமாக இருந்த அழகை ரசிக்க நேரமின்றி சாலையில் கவனம் செலுத்தினேன். சாலைகள், வீதிகள், திருப்பங்கள்  நன்கு பழகியவை என்கிறபோதும், சரியானவற்றை இருமுறை தவறவிட்டதற்கு, வழக்கமாக காண்கிற  குருவிகள் விசாரணை, இல்லை என்றானது காரணமாக இருக்கலாம்.

வாகனத்தை  இடம் பார்த்து  நிறுத்தி, இடத்திற்கான கட்டணத்தைச் செலுத்த எந்திரத்தில் வாகன எண்ணைப் பதிவுசெய்து, கடனட்டையை நுழைக்க, எவ்வளவு  நேரத்திற்கு என்ற கேள்வி. குறைந்தது ஒரு மணி  நேரம் தேவைப்படும். நிறுத்தியுள்ள வாகனங்கள் நேரத்திற்குரிய தங்கள் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனவா எனச் சோதித்துக்கொண்டு செல்லும் நகரசபை ஊழியர்களைப் பார்த்ததும், அவர்கள் திரும்ப  இப்பக்கம் வருவது இப்போதைக்கில்லை , அதற்குள் வாகனத்தை இங்கிருந்து அகற்றிவிடமுடியும் என்று கணக்கிட்டு, அவர்கள் போகட்டுமெனக் காத்திருந்து, எவ்வளவு குறைவாகச் செலுத்த முடியுமோ அக்கட்டணத்தைச் செலுத்தி, இரசீதை காரில் வைத்தபின்  கையிற் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்,  மணி 10.15.

நீதிமன்றத்தில் நுழைந்தபோது எனக்கு முன்பாக ஐந்துபேர் சோதனைக்கு உட்பட காத்திருந்தார்கள். பயங்கரவாதத் தாக்குதல்கள் பெருகியபின் எல்லா இடங்களிலும் சோதனைக்குப் பின்னரே அனுமதி என்றாகிவிட்ட து. எனது முறைக்குப் பத்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. குளிருக்கென போட்டிருந்த ஜாக்கெட், வாலெட், கைத்தொலைபேசி  மூன்றையும் கன்வேயர் பெல்ட்டில் வைத்துவிட்டு சோதனைகளை கடந்து முதற்தளத்தில்  அழைத்திருந்த  விசாரணைக் கூடத்தைக் கண்டுபிடிக்க கூடுதலாகப் பத்து  நிமிடங்கள் தேவைப் பட்டன.

பத்து முப்பதுக்கு விசாரணை மன்றம் எண் 13ல் இருக்கவேண்டும். என் கைக்கெடிகாரம் பத்து முப்பத்தைந்தைக் காட்டியது.  மண்டபத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. தயக்கத்துடன் கதவைத் தட்டினேன். வரலாம் என்ற அனுமதிக் குரலைக் காதில் வாங்கியபடி உள்ளே  நுழைந்தேன். எனக்கு நேர் எதிராக போடப்பட்டிருந்த மேசையின் பின்புறம்  நீதிபதி, அவரிடமிருந்து சில அடிகள் தள்ளி பக்கவாட்டில் மிகச்சிறிய தட்டச்சு எந்திரத்துடன் பெண்செயலர். அவருக்கு  எதிரில் ஆசனங்களில் வழக்கறிஞர்கள்.  நீதிபதி என்ற பொருளுக்குச் சமனாக வைத்த எடைகற்கள்போல அவருக்கு எதிரே நாற்காலிகளில் வரிசைக்கு இரண்டொருவர் என அமர்ந்திருக்கும்,  அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள்.   எல்லோருடைய பார்வையும் என் முகத்தில் இருந்தது.  தாமதத்திற்கு விளக்கம் என்றபேரில் விரயம் செய்யப்படும் வார்த்தைகளில் சலிப்புற்று அமைதியாய் நின்றேன். வழக்கறிஞர் பெண்மணிகளில் ஒருவர், தனது கைக்கெடிக்காரத்தைப்பார்த்தார். நீதிபதி பெண்மணி என்னிடம், « முன்வரிசையில் உட்காரலாம். குற்றவாளியைக் காவலர்கள் அழைத்துவரும் தோம் » எனச்சொல்லவும், காலியாகவிருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தேன்.

பெண் செயலருக்குப் பின்புறமிருந்த கதவைத்  தள்ளிக்கொண்டு இரு காவலர்கள், நடுத்தர வயது மனிதர் ஒருவரை அழைத்துவந்தனர். அழைத்துவந்த மனிதரின் கைவிலங்கை அகற்றி, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியபின், காவலர் இருவரும் பக்கத்திற்கொருவராக  நின்றகொண்டனர்.  அவருடையை ஐரோப்பிய   நிறம், உயரம், எனது மொழிபெயர்ப்பு வழக்கிற்கு உரியவரல்ல எனபதைத் தெரிவித்தன.  அடுத்தடுத்த நீதிபதியின் கேள்விகளை வைத்தும், குற்றவ்வாளியின் பதில்களைக்கொண்டும் தெரியவந்த செய்திகள் : ஹாலந்து நாட்டவர், பத்திரிகயாளர், ஒரு நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிலையில்தான் பாடகி ஒருத்தியுடன் அறிமுககம், கவிதைகளும் எழுதுபவள். அவளின் நட்பில் அவளை முன்னுக்குக்கொண்டுவர ஏராளமாக செலவு, ஒரு நாள் அவர் வெறும் ஆள் என்றவுடன், அப் பெண்மணி இவரை உதறிவிட்டு வெளியேறுகிறாள். பத்து ஆண்டுகளுக்கு மேலாக பெரிய நகைக்கடைகள், ஆயத்தஉடை கடைகள் முதலானவற்றில்  விலையுயர்ந்த நகைகள் ஆடைகள் வாங்குவது, நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது. அவற்றிர்குரிய பணத்தை, பொய்த் தகவல்களின் அடிப்படையில் வங்கியில் பெற்ற  கடனட்டைகள்,காசோலைகளில்  செலுத்துவது, பிடிபடுவது, சிறைசெல்வது.

குற்றவாளியிடம் கேட்கும் வழக்கமானக் கேள்விகளைக்  கேட்டு அதற்குண்டான பதில்களைப் பெற்றுமுடிந்த பின் பெண்நீதிபதி தம் கையிலிருந்த பேனாவை கோப்பு அருகே வைத்தார், நிமிர்ந்து உட்கார்ந்தார், ஏதோ முதன் முறையாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள  நபரை காண்பதுபோல புருவத்தைக் குறுக்கிச் சில கணங்கள் அவர் முகத்தைப் பார்த்தார்.பார்வைக்கான விளக்கத்தைக் குற்றவாளிக்கும் எங்களுக்கும் தரமுற்பட்டவர்போல :

–  உங்களைப்பார்க்கிறபோது குற்றவாளியாகத் தெரியவில்லை பார்க்க நல்ல மனிதர்போல தெரிகிறீர்கள். எப்படி இக்குற்றங்களை தொடர்ந்து செய்கிறீர்கள் இதிலிருந்து விடுபட நினைத்த தில்லையா ? – என்று கேட்டார்.

நீதிபதியின் கேள்வி என்னை நிமிர்ந்து உட்காரச் செய்தது. குற்றவாளியின் முகத்தை சற்று  கூர்ந்து கவனித்தேன். செய்த குற்றத்தின் அறிகுறிகளின்றி, பால்போல தெளிவான முகம், படிய வாரியத்தலை, அணிந்திருந்த கண்ணாடியும், மூக்கின் கூர்மையும், உடைகளில் செலுத்தியிருந்த அக்கறையும் சந்தேகிக்க முடியாதவைதான். என்ன பதில் சொல்லப் போகிறார் என  நீதிபதியைப் போலவே அனைவரும் காத்திருக்கிறோம்.  பதில் அவர் நெஞ்சுக்கும், உதட்டிற்குமிடையில்  எங்கோ தயங்கி  நிற்பதுபோல எனக்குப் பட்டது. அதற்கு முகவுரைபோல மெலிதாக அவிழ்ந்த சிரிப்பு அவர் உதடுகளைக் கடக்க, பார்வயாளர்கள் மத்தியிலும் இலேசாகச் சிரிப்பு.  நீதிபதி எரிச்சலுற்றார். குற்றவாளியின் வழக்கறிஞர் ஏதோ சொல்ல முற்பட்டார். அவரைத் தடுத்த  நீதிபதி, « தற்போது குற்றவாளி எதற்காகச் சிரிக்கிறார் என்பதை அவர் வாயால் சொல்லட்டும் »- என்றார்.

அவையில்  நிசப்தம்.  குற்றவாளி மௌனத்தை கலைத்துக்கொண்டவர்போல  மெலிதாகத் தொண்டையைக் கனைத்து அதற்கு ஐரோப்பிய வழக்கப்படி சம்பிரதாய மனிப்பும் கேட்டார், பின்னர் :

–  உங்க கேள்வியிலேயே பதிலிருக்கு மேடம், உண்மையில் நல்லவர்கள்போல இருப்பதால் குற்றம் இழைப்பது எளிதாகிறது, சுலபமாக மற்றவர்களை ஏமாற்றவும்முடியும். என் பிரச்சினை உங்களுக்குப் புரிகிறதில்லையா ? – என்று கேட்டு  பெண்  நீதிபதியின் முகத்தைப் பார்த்தார்.

நீதிபதிப் பெண்மணி பதில் கூறுவதைத் தவிர்த்து, தம் முன்பிருந்த கோப்பு காகிதங்களின் முனைகளை மடிப்பதும் பிரிப்பதுமாகத்  பதற்றத்தைக் தணித்துக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார்.

– மேடம், நான் என் பதிலை முடிக்கவில்லை, உங்கள் அமைதி, எனது பதிலில் உள்ள நியாயத்தினால் என நினைக்கிறேன். இன்னொரு கேள்வியும் எனது பதிலோடு கேட்க இருக்கிறது, அதையும் கேட்டுவிட்டால் மனதுக்கு நிம்மதி !

குற்றவாளியின் குரல் நீதிபதியின் சேட்டைகளை சட்டென்று முடிவுக்குக் கொண்டுவந்தன. கண்களை அகல விரித்து, தலையைச் சொடுக்கியவர், ஒரு சடங்குபோல  எதிரிலிருந்த எங்களை ஒரு நொடி பார்த்தார், பின்னர் குற்றவாளிப் பக்கம் கண்களைத் திருப்பியவர், « சொல்லுங்க கேட்கிறேன் » என்பதுபோல தலையைக் குலுக்கினார்.

– நீங்க உட்படஇங்கே இருக்கிறவங்க  அனைவருமே பார்வைக்கு  நல்ல மனிதர்கள்போலத்தான் இருக்கிறோம். விதிவிலக்காக குற்றத்தைக் கூடுதலாகத்  துரத்துவதும், பதிலுக்குத் தண்டனை என்னைத் துரத்துவதும் ஒருவித போதை  விளையாட்டாகிப்போனது. அது சுகமாகவும் இருக்கிறது . பெரும்பான்மை மனிதர்களைப்போல அளவாகப் பழகிக் கொள்ள எனக்குத் தெரியவில்லை, அப்படி இருந்திருந்தால்  பார்வையாளர் கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்திருக்கலாமில்லையா ?

நீதிபதி தலையை பதில் எதையும் கூறாமல், தலையைத் திருப்பி பார்வையாளர்களைப்பார்த்தார்.அரசு வழக்கறிஞர், தமது காரியதரிசி என்று அவர் பார்வை ஓடி,  கடைசியாக குற்றவாளியினுடைய வழக்கறிஞரிடத்தில் முடிவுக்கு வந்தது. காரணத்தைப் புரிந்துகொண்டவர்போல குற்றவாளியின் வழக்கறிஞர் இருக்கையைவிட்டெழுந்து, பார்வையாளர்களுக்கும் நீதிபதிக்கும் இடையில் நின்று இருதரப்பினரையும் தமது வாதம் ஈர்க்கவேண்டும் என்பதை உணர்ந்து, சொற்களுக்கேற்ப குரலை உயர்த்தியும் தாழ்த்தியும்  தரப்பு வாதத்தை வைத்தார்.  தொடர்ந்து குற்றவாளிக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம், கடைமைக்காக என்றிருந்தது.  எனது மொழிபெயர்ப்புக்குரிய குற்றவாளியை அழைத்தபோது மணி பதினொன்றரை. முடிவாகக் குற்றவாளிகளின் தண்டனைக்  குறித்த தீர்ப்புகளை வழங்க  நீதிபதி  முப்பது நிமிடம் எடுத்துக்கொண்டார்.

காலை பன்னிரண்டு முப்பது.  நீதிபதியின் பெண்காரியதரிசி,  என்னை அழைத்து அன்றைய பணிக்கான ஊதியப் படிவத்தை அளித்து, உங்கள் ஒன்றரை மணி  நேரத்தை இரண்டு மணி  நேரமென்று போட்டிருக்கிறேன் மகிழ்ச்சிதானே என்கிறார். குற்றவாளிகள் தரப்பில் வாதிட வந்த வழக்கறிஞர்கள், குற்றவாளிகளைச் சூழ்ந்து தெம்பூட்டிக்கொண்டிருந்தனர்,  அவர்களுக்கு  விலங்குபூட்டக் கைகளில் விலங்குடன் காத்திருந்த காவலர்களிடமிருந்து தப்பிக்க நினைத்தவர்கள்போல நீதிபதிகள் முதல் பார்வையாளர்கள்வரை அவசர அவசரமாக வெளியேறிக்கொண்டிருந்தோம்.

நன்றி  : மலைகள்  இணைய இதழ்

——————————————-

குறையொன்றுமில்லை

(கணையாழி ஜூன் மாத இதழில் வெளியான சிறுகதை)

 

 

குளிரூட்டப்பட்ட சபா. மனிதர்கூட்டத்தின் வெப்பத்தினால் வியர்த்து, திணறிக்கொண்டிருந்தது. மண்டபத்தை தன் நிறத்திற்கு உருமாற்றியிருந்த மின்சார ஒளி, தங்கத்தை மா ஆக்கி மண்டபமெங்கும் தூவியதுபோல மினுங்கிற்று. ஆடைகளின் மணத்தையும், தலைகளின் சொடுக்கையும், கண்களின் சிமிட்டலையும், ஈறுண்ணிகளில் பிடிபட்டிருந்த பற்களின் கூத்தையும், சமிக்கைகளில் முடிந்த வார்த்தைகளையும், கைகளின் வீச்சையும், கால்களின் தயக்கங்களையும் அவற்றின் உரிமையாளர்களையும் முகர்ந்து திருப்தியுறும் கணந்தோறும் இசையின் அதிர்வுகளையும், நாதத்தின் எடையையும், தாள கதியையும் துல்லியமாக அளந்து பழகிய மனம் அதில் இழையோடும் அபசுரத்தின் வலியில் துடித்தது.

 

« இந்த மாதிரியொரு கூட்டத்தை நம்ம சபாவில் இதற்குமுன்ன பார்த்த தில்லைய்யா ! » என நெருங்கிய சினேகிதரும், பாடகருமான  சாம்பசிவம் காதில் கிசுகிசுத்த கையோடு தோளில் தட்டிவிட்டுச்  சென்று இருக்கையில் அமர்கையில் இவருக்குப் பெருமைபிடிபடவில்லை. சினேகிதரின் பார்வையிலும், மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சொற்களிலும் தோளைத் தட்டிய கையிலும் வெக்கை இல்லாமலில்லை. இருந்தும் அதைபொருட்படுத்தவில்லை, பொருட்படுத்தியிருந்தால் இந்த அளவிற்கு அவர் வளர்ந்திருக்க முடியாது.

 

தமது ஒரே பிள்ளையின் கர்னாடக இசை அரங்கேற்றம். மேடையில் ஜமுக்காளம் விரித்து பக்கவாத்தியங்கள் காத்திருக்கின்றன. விழா நாயகன் தேவகுமாரன் அகலக்கரை போட்ட ஜரிகைவேட்டி, ஜிப்பாவில் ஒருவரும் ஞாபகம் வைத்திராத பல்போன பாடகர் ஒருவருடன் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருந்தான். அந்த மனிதர்மீது எப்போதும் திரிந்த பால் வாசம் வரும், பாரீஸிலிருந்து தருவிக்கபட்ட வாசனை தைலங்களில் மணக்கிற பலரிருக்க மகன் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதருடன் உரையாடுவதுகண்டு முகம் சுருங்கியது. தமிழ் நாடே அரங்கிற்குள் குவிந்திருந்தது. இதைக் காட்டிலும் வேறென்ன பெருமை வேண்டும். எழுந்து நின்று  அரங்கை ஒருமுறைப் பார்க்கவும் செய்தார். மனதைப் பிரதிபலிப்பதுபோல சபா ஓளியால்  நிரம்பி சன்னமான அதன் அலைகளில் மகாமகத் தீர்த்தவாரிபோல மனிதத் தலைகள்.  பெருமிதம் அபரிதமாகவே சுரந்து தொண்டையை நிரைத்து, முடிவில் வாயில் கசந்தது. பெருமிதம் செரிமானம் ஆகாததற்கு என்ன காரணமென யோசித்தார். ஏதேதோ காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து போயின.எதையும் பிரச்சினையோடு முடிச்சுபோட இயலவில்லை. இறுதியில் « அதுவாக இருக்குமோ ? »- என்று மனதில் ஒரு சிறு சந்தேகம். « அடட ! எப்படி இதை அலட்சியப்படுத்தினேன்»? » என  நினைத்தவர், பின்னர் « ஆம் அதுவாகத்தான் இருக்கும் » எனத் தம்மைச் சமாதானப் படுத்திக்கொண்டார். பிரச்சினையின் வேரைக் கண்டதினால் கூடுதலாக வலித்தது.

சற்றுமுன்புதான் மண்டபத்தின் வாயிலில் நின்று கண்ணுக்கெட்டியவரை காசாம்பு தெரிகின்றாளா என்று  வீதியைப் பார்த்தார். தெரியவில்லை. ஏமாற்றத்துடன் காத்திருந்தபோது, மணிகண்டன் ஓடிவந்தான். இவருக்குக் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் கடம் வாசிக்கிற செங்கல்வராயனின் மகன். இளைஞன், கஞ்சிரா கலைஞன். முக்கிய விருந்தினர்களை வரவேற்கும் பொறுப்பை அவனிடம் விட்டிருந்தார். ஒவ்வொரு மூறையும் அப்படியாரேனும் வரும்போது, இவருடைய கைபேசி சிணுங்கும், சுதாகரித்துக்கொண்டு எழுந்து, வந்த பிரமுகரை எதிர்கொண்டழைத்து உதவியாள் தாம்பாளத்தில் நீட்டும் சால்வையைப் போர்த்தி, இரண்டொரு சம்பிரதாய வார்த்தைளில் இரத்தின சுருக்கமாக வரவேற்றுவிட்டு, பிரமுகருக்கென ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அவரை அமர்த்திவிட்டு இவர் ஒதுங்கிக்கொள்வார்.

« ஐயா நீங்க போங்க, அந்த அம்மா வந்தா நான் அழைச்சு உள்ளே உட்கார வைக்கிறேன், நீங்க எதுக்காக சிரமப்படனும், முக்கியமானவங்கல்லாம் உள்ளே இருக்காங்க, நீங்க அவங்களைப் போய்ப்பாருங்க. கவர்னர் வரும்போது சபா செகரட்ரியோட நீங்க இங்க இருந்தால் போதும் ! » என்றான் மணிகண்டன். அவனுக்கே எரிச்சலாக இருந்தது. முதலில் பிரமுகர்கள் வாயிலில் நுழைகிறபோது தாம் முன்னிருந்து வரவேற்பது நல்லதென்று நினைக்கிறாரோ என  நினைத்தான். அப்படி நினைப்பதில் உள்ள நியாயமும் அவனுக்குப் புரியாமலில்லை. ஆனால் இந்தியா மட்டுமல்லாது, ஐரோப்பா, அமெரிக்கா மேடைகளிலும் இந்தியச் சங்க்கீதத்தின் பெருமையை உலகறியச் செய்துவரும், பத்ம விபூஷன், சங்கீத சாம்ராட் விருதுகளுக்கு உரியவருமான ஒர் இசை சக்கரவர்த்தி கேவலம் வீட்டில் சமையற்காரியாக இருந்த பெண்மணி ஒருத்தியின் வரவுக்காகத் தவிப்பது அநாகரீகமாகப் பட்டது. நாளை யாராவது எதையாவது எழுதிவைத்தால், இது நாள்வரை அவர் சேர்த்துவைத்த பேரும் புகழும் என்ன ஆகுமென யோசித்தபோது கோபம் கோபமாக வந்தது. « சே ! எத்தனை பெரிய மனிதர், இப்படியா இருப்பார் ?  அப்படியொரு அசிங்கம் இருந்தால்கூட அதை வெளியில் காட்டிக்கொள்ளலாமா ? » என்றெல்லாம் மணிகண்டன் யோசித்தான். « ஐயாவின் மகனுக்கு இந்த கண்றாவியெல்லாம்  தெரிந்திருக்குமா? தெரிந்து என்ன செய்வது, பெரிய மனுஷனென்பதால் இதுபோன்ற அசிங்கங்களுக்கு அவர்களும் பழகிக் கொண்டிருப்பார்களோ என்னவோ, யாருக்குத் தெரியும் ? » எனத் தலையில் அடித்துக்கொண்டான்.

மணிகண்டன் வார்த்தையை ஏற்று, அரங்கிற்குள் திரும்ப நுழைந்தார். இருபக்க இருக்கைகளுக்கு இடையில் அமைந்திருந்த பாதையில் செருப்புக்கு  நோகக்கூடாதென்பது போல நடந்தார். பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு சிலர் புன்னகைத்தனர். சிலர் எழுந்திருக்க முயன்றனர். அவர்களைக் திரும்பவும் நாற்காலியில் அமரும்படி சைகையால் கேட்டுக்கொண்டார். அவர்கள் பட்டும்படாமல் இருக்கைகளில் அமர்ந்து காட்டிய வித்தையை ரசிக்கும் மனநிலையில் அவரில்லை. மெல்ல நடந்து பிரபல நடிகருக்கு அருகில் காலியாகவிருந்த  நாற்காலியில் உட்கார்ந்தார்.

– நான் இரண்டொரு கீர்த்தனைகளை கேட்டுவிட்டு கிளம்பனும்.  கவர்னர் வந்ததும் நிகழ்ச்சியைத் ஆரம்பிச்சிடுவீங்க இல்லையா ?

« தொடங்கித்தான் ஆகனும் . »  என்ற இவரின் சுரத்தில்லாதப் பதிலைக்கேட்டு நடிகர் சங்கீத சாம்ராட்டின் முகத்த்தைப் படிக்க முயன்று தலையைத் திருப்பிக்கொண்டார்.  இவர் எழுந்து  நின்றார், தலையைத் திருப்பி ஐந்தாவது  மண்டபத்தை பார்த்தார், ஒவ்வொரு தலையாகப் பார்த்தார். காசாம்புவின் தலை தெரியவில்லை.  அவளுடைய தலை அசாதரனமானதொரு தலை. சோளக்கொல்லைப் பொம்மை பானைபோல உடலுக்குப் பொருந்தாத தலை. இழுத்து முடித்த கொண்டை, காதிலணிந்துள்ள மாட்டலையும் தோட்டையும் அதிகம் மறைக்காமல் காதை உரசிக்கொண்டிருக்கும். கைப்பிடி அளவு காதுகளிரண்டும், கன்னத்திடம் விவாகரத்து பெற்றவைபோல, ஒதுங்கியிருக்கும். தரையில் குதித்துவிடுவோம் என்பதுபோல கண் இரப்பைகளில் முட்டிக்கொண்டு நிற்கும் விழிவெண்படலங்கள்.

காசாம்புவைத்தவிர அழைத்தவர்கள் எல்லோரும் ஒருவர் பாக்கியின்றி வந்திருக்கிறார்கள்: அரசியல் வாதிகள், நடிகர்கள்,  தொழிலதிபர்கள். கர்நாடக இசை உலகின் சக்கரவர்த்திகள், சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், குடிமக்கள். பத்திரிகையாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என மொத்தபேரும் வந்திருக்கிறார்கள். இன்னும் சற்று  நேரத்தில் கவர்னரும் வந்துவிடுவார்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காசாம்பு இவர்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தாள். வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வது, ஒழித்து வைத்திருக்கிற பத்துபாத்திரங்களைத் தேய்த்து, கிணற்றடியில் குவிந்திருக்கும் துணிகளையும் சோப்பு போட்டு துவைத்து அலசி காயவைத்துவிட்டு, போய்விடுவாள். துவைக்கிற வேலையில்லாத நாட்களில் மார்க்கெட்டிற்குச் சென்று கறிகாய்களையும் வாங்கிவருவாள். சமையலறைக்குள் நுழைய இவருடைய மனைவி உயிரோடு இருந்தவரைஅவளுக்கு அனுமதியில்லை. மகனுக்கு ஐந்து வயது இருக்கையில் காய்ச்சலில் படுத்த மனைவி திடீரென்று இறந்ததும், என்ன செய்வதென்கிற கலக்கம்.  காரியமெல்லாம் முடிந்ததும், ஆறுதல் கூறிய உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக அவரவர் வீடுபோய்ச் சேர்ந்தார்கள். மாமியார் மட்டும் போகாமல் பேரனைப்பார்த்துக்கொண்டு வீட்டில் தங்கியிருந்தார். அந்த அம்மாள் அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக இருக்க, ஒரு மாதம் கழித்து வந்திருந்த மாமனாருடன் சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். உறவினர்களும் நண்பர்களும் மறுமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்கள். சங்கீதம் ஒன்று போதும் வேறெதுவும் தனக்கு வேண்டாமென்றார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வழக்கம்போல வேலையை முடித்து  வீட்டுக்குக் கிளம்பிய காசாம்புவிடம் :

– உனக்கு சமையல் தெரியுமா ?- எனக்கேட்டார்.

அவளிடமிருந்து பதிலில்லை, மாறாக நிலை வாயிற்படியைத் தாண்டி கால்வைக்காமல், திரும்பியவள் வரவேற்பறையைக் கடந்து அடுக்களைக்குள் நுழைந்து அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சாம்பார், ரசம், மோர், அவரைக்காய் பெரியல், உருளைக்கிழங்க்கு வறுவல் என சாப்பாட்டு மேசையில் பரப்பியிருந்தாள். மாமியார் போனதிலிருந்து ஓட்டல் சாப்பாட்டில் அலுத்திருந்தவர், இப்படியொரு விருந்தை எதிர்பார்க்கவில்லை. மகனும் இவருமாக மேசையில் அமர்ந்ததும் காத்திருந்ததுபோல பரிமாறவும் செய்தாள். சோற்றைப்பிசைந்து சிறியதாக உருண்டைபிடித்து மகனுக்கு ஊட்ட முனைந்தபோது, அவள் முந்திக்கொண்டு ஊட்டவும் செய்தாள். சிறுவன் தேவகுமாரன் முதலில் தயங்கினான். சோற்றை நாவில் புரட்டி உமிழ் நீரோடு மெல்ல ஆரம்பித்தபோது பையன் கண்களில் நீர் கோர்த்து புரை எறியது. இவர் தண்ணீர் தம்ளரை எடுக்கச் சென்றபோது தடுத்துப் பையனுக்குத் தண்ணீரைக்கொடுத்து, தலையை இலேசாகத் தட்டி முதுகில் தடவிக் கொடுத்தாள்.

– « காரத்தை மட்டும் கொஞ்சம் குறைத்துகொள் ! », என்றார். அவள் தலையாட்டினாள். இரவுக்கு அன்று பொங்கலையும் தேங்காய் சட்டினியையும் தயாரித்துவைத்துவிட்டு புறப்பட்டபோது, கையெடுத்துக் கும்பிட்டு :

–   « நான் இசைக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறேன், தேசாந்திரி வாழ்க்கை. என் மகனைப் பசியின்றி பார்த்துக்கொண்டால் போதும். மற்றதையெல்லாம் என் உதவியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள் ». – என்றதற்கும் அவளிடமிருந்து பதிலாகக் கிடைத்தது தலையாட்டல்தான். மாதத்தில் பதினைந்து நாட்கள் விமானத்தில் பறந்தார். கொழும்பு, இலண்டன், பாரீஸ், நியூயார்கென கச்சேரி செய்துவிட்டுத் திரும்புவார். மகனின் பிறதேவைகளைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் இருந்தபோதும், ருசியாய் சமைத்து அவனுடைய வயிற்றுப்பசி தேவையைப் பூர்த்திசெய்ததுதி காசாம்பு.

அந்த நாள் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அக்டோபர் மாதம்.  மகன் அவன் பாட்டி வீட்டுக்கு செங்கல்பட்டுவரை போயிருந்தான். வெளியில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. சென்னைவந்திருந்த மும்பை சபா செகரட்ரி வீட்டிற்கு வந்திருந்தார், அவருடன் சேர்ந்து வழக்கத்திற்கு அதிகமாக மது அருந்தியிருந்தார்.  நண்பரை வழியனுப்பிவைத்துவிட்டு அமர்நதவரை, வெளியில் பெய்த மழையும் தனிமையும் வாட்டியது. இவருடைய நாட்டைக்குறிஞ்சியில் கரைந்துபோகும் ரசிகையைக் கைப்பேசியில் தொடர்புகொண்டார், கிடைக்கவில்லை.  நிதித் துறை செயலராக இருக்கும்  பெண்மணி ஒருத்தியையும் தெரியும், தொலைபேசியை எடுத்தவள் அமைச்சருடன்  தில்லியில் இருப்பதாகத் தெரிவித்தாள். வெறுப்புடன் கைபேசியைத் தூக்கி எரிந்துவிட்டு சோபாவில் வெறுப்புடன் அமர்ந்தார். முதுகில் ஈரத்தை உணர்ந்ததும், சன்னற்கதவுகள் சாத்தப்படாமலிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. எழுந்து சென்று அதனைச் செய்து முடித்துவிட்டு, சோபாவில் திரும்ப உட்கார்ந்த போது. தெருக்கதவு தட்டப்படும் சத்தம். எழுந்து சென்று கதவைத் திறந்தார். வாட்சுமேன் ஏகாம்பரம்.  « காசாம்பு வந்திருக்காங்க, பத்திரிகை கொடுத்துட்டு போகனுமாம். » – என்றான். ஏகாம்பரத்தின் முதுகுத் திரையை  விலக்கியவளாக வெளிப்பட்ட காசாம்புவை உள்ளே வர தலையாட்டிவிட்டுக் கதவைச் சாத்தினார்.  நூல்புடவையின் உட்காருமிடத்தில்  நிறம் மங்கியும், முந்தானையில் எண்ணெய் பிசுக்குமாக பார்த்துப் பழகிய காசாம்பு இல்லை. குங்கும நிறத்தில்ஒரு ஜார்ஜெட் புடவை, அதற்குப் பொருத்தமாக ஒரு இரவிக்கை, அவளுடைய பெரிய தலையில் தாழம்பு கலந்த கனகாம்பரம், நெற்றியில் ஒரு சிவப்பு பொட்டு. பிரம்மிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

கையிலிருந்த பையிலிருந்து ஒரு சிறிய தாம்பாளத்தட்டை எடுத்தாள். அதில் அதே பையிலிருந்து, ஒரு சீப்பு வாழைபழத்தையும் வெத்திலைப்பாக்கு, தேங்காயையும், இறுதியாக உறையுடன் ஒரு திருமண அழைப்பிதழையும் வைத்து  நீட்டியபடி :

–   மகனுக்கு கல்யானம் குதிர்ஞ்சிடுச்சி, அண்ணன் மவதான். பொறுமையா முடிக்கலாம்னு இருந்தோம். சின்னஞ்சிறிசுக அவசரப்பட்டுட்டாங்க. வடபழனியிலே வச்சிருக்கோம், என ஒரேமூச்சில் சொல்லி முடித்தாள்.

அவளுடைய இருபது ஆண்டுகால வேலையில் இரண்டு வாக்கியம் முழுதாக அவள் பேசிக் கேட்க நேர்ந்தது அன்றைக்குத்தான்.  ஜண்டைவரிசைபோல ஒப்பித்தவவற்றை அவள் உடல் மீது படிந்திருந்த கண்களை அகற்றாமல் கேட்டுக்கொண்டவர் :

–   உள்ளே போ ! டவல் ஏதாவது கிடக்கும் தலையைத் துவட்டிக்கோ !- என்றார்.

– இன்னும் இரண்டு வீடுகள்தான், அதை முடிச்சுட்டா வீட்டுக்குத் திரும்பிடுவன், பிரச்சினையில்லை. நீங்க பத்திரிகையை எடுத்துக்கொண்டு என்னை அனுப்பனும் ! – இவருடைய முகத்தைப் பார்க்காமல் அவளிடமிருந்து வார்த்தைகள் வந்தன.

அவசரத்தைப்புரிந்துகொண்டவர் போல அவளுடைய மணிக்கட்டைப் பற்றினார். இவர் முகத்தைப் பார்க்காமலேயே காசாம்பு, பிடித்த அவருடைய கையை மெல்ல விலக்கினாள். தொடர்ந்து அழைப்பிதழையும் பிறபொருட்களையும் அங்கிருந்த சிறு கூடையில் எந்திரகதியில் வைத்தபின், கதவைத் திறந்துகொண்டு போனவள் திரும்ப வரவில்லை. அழைப்பிதழுக்கு மரியாதை கொடுத்து அவள் மகன் கல்யாணத்திற்குப் போயிருக்கவேண்டும். காசாம்புவின் முகத்தைப் பார்க்க இவருக்குத் தயக்கமாக இருந்தது. போகவில்லை.

சம்பவம்  நடந்து ஐந்து ஆண்டுகள் கழிந்திருந்தன. இவருடைய மகனுக்கு இசை அரங்கேற்றம். காசாம்புவை கூப்பிட வேண்டிய நியாயம் இருந்தது. அழைப்பிதழை மூன்றாவது நபரிடம் கொடுத்தனுப்புவதும் சரியல்ல என நினைத்து, கார் போக முடியாத சந்தில், அரைகிலோமீட்டருக்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு, சாரதி தடுத்தும் பிடிவாதமாக காசாம்புவை நேரில் சந்தித்து அழைப்பிதழைக் கொடுத்திருந்தார்.

மெல்ல நடந்து சபா வாயிற்பகுதிக்கு வந்தார். நுழைவாயிலையொட்டி அரங்கிற்குள் விருந்தினர்களை வரவேற்க ஏதுவாக சிறிய கூடம். மேசைபோட்டு வெள்ளித் தட்டுகளில் ரோஜா பூக்கள், பன்னீர் சொம்பு, சந்தணக்கிண்ணம், குங்குமப் பரணி சகிதம் காத்திருந்த பெண்கள், தங்கள் பணியை மட்டுமல்ல, தங்கள் செயற்கை முறுவலையும்  பேசிவைத்துக்கொண்டதுபோல சட்டென்று  நிறுத்திக்கொண்டு  இவரைப் பார்த்தனர். அவர்களில் ஒருத்தி, தலையில் மல்லிகையோடு இரண்டு ரோஜாக்களும் இருந்தால் அழகுதானே என்று நினைத்து  எடுத்துச் சொருகியிருந்தாள்.  இவரைக் கண்டதும்  சட்டென்று அவற்றை எடுத்து கைப்பிடியில் மறைக்க முயன்றாள். அருகிலிருந்த மற்றொருத்தி வாயைமூடி கமுக்கமாகச் சிரிக்கவும், இவர் அவர்களைப் பார்க்காதவர்போல வாயிலைக் கடந்து வெளியில் வந்தார்.

இரு சக்கர வாகனத்திலும், காரிலுமாக அழைத்தவர்கள் வந்து இறங்கிக் கொண்டிருதார்கள். அரைமணி  நேரத்திற்கு முன்பாகப் பார்த்த காவல்துறை உயர் அதிகாரி இடைக்கிடை கசங்கிய கர்ச்சீப் ஒன்றால்  கழுத்தையும் முகத்தையும் அழுந்த துடைத்தபடி இன்னமும் பெட்டிக்கடையில் புகைத்துக்கொண்டு  நிற்கிறார். இவரைப் பார்க்கவில்லை, பார்த்திருந்தால் சிகரெட்டை அணைக்காமல் தூக்கி எரிந்திருப்பார். சற்றுமுன் அப்படித்தான் செய்தார். சற்றுத் தள்ளி கும்பலாக  ஒரு இன்ஸ்பெக்டரும் காவலர்களும். எல்லோருமே கவர்னருக்காக காத்திருக்கிறார்கள், அவர் வந்துபோனதும் கரைந்துவிடுவார்கள். சாலையில் பேருந்துகளும், சரக்கு வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் மனிதர்களும் இவரைப் பற்றிய பிரக்ஞையின்றி கடந்துபோகிறார்கள். சபாவிற்குள் திரும்ப நுழைந்தவர் மணிகண்டனை அழைத்தார் :

– துக்கடாவில் ‘குறையொன்றுமில்லை’ யை சேர்க்கவேண்டாம்னு என் மகனிடம் சொல்லிடு, என்றார்.

சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை ! நமக்கெல்லாம் உயிரின்வாதை ! – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )

சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை ! நமக்கெல்லாம் உயிரின்வாதை !
– ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )

ஒன்றிரண்டு அல்ல பத்து உயிர்கள் ! சுனாமியால் அல்ல, விபத்துக்களால் அல்ல அரசு பயங்கரவாத த்தால். உலகில் எங்கென்றாலும் ஒரு சனநாயக நாட்டில் போராட்ட த்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு என்பது ஏற்கமுடியாத ஒன்று.

– ஏங்க எங்க கிளம்பிட்டீங்க !
– வேறெங்க பொதுப்பிரச்சினைன்னு எல்ளொரும் கலந்துகிறப்ப நாம போகலைன்னா எப்படி ?
– ஸ்னோலின் எங்கடி கிளம்பிட்ட ?
– வேறெங்க ஃபிரண்டு வீட்டுக்குத்தான், நாளைக்கு ரிஸல்ட் வருதில்லை அது விஷயமா பேசத்தான்.
– சரி சரி போனோம் வந்தோம்னு வந்து சேரு !
– தொண தொணன்னு உனக்கு இதே வேலையா போச்சு. நான் என்ன சின்ன குழந்தையா ? அப்பா கிட்ட சொல்ல மறந்திடாத ! நாளைக்கு ரிசல்ட்டை நல்லா செலிபரேட் பண்ணனும் !
*****
இப்படி மனைவிடம் சொல்லிவிட்டு வந்த கணவன், அம்மாவிடம் சொல்லிக்கொண்டு போன பத்தாம் வகுப்பு தேர்வின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற பெண் என பத்து உயிர்களை மட்டும் பலியாகவில்லை, அவர்கள் மீது வளர்த்துக்கொண்ட நம்பிக்கைகளை, கனவுகளையும் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாக்கி என்ன சாதிக்க இருக்கிறது இந்த அரசு.

அரசு உடமைகளை எரித்தவர்களைத் தண்டிக்க வேண்டியதுதான் அதற்காக இப்படியா ?

கி.பி 2000 பிப்ரவரி 2 மூன்று வேளாண் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி என்ற மாணவிகளை பேருந்தோடு உயிரோடு எரித்த கொலைகார ர்களை எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை ஒட்டி விடுதலை செய்யவிரும்புவதாகச் செய்தி. அதே அரசுதான் போராட்டக் கார ர்கள். வன்முறையில் இறங்கியதாகச் சொல்லி சுடச்சொல்லி இருக்கிறது, வெட்கக் கேடு !

வழக்கம்போல ஒரு நபர் விசாரணைக் கமிஷன், ஒரு உயிருக்குப் பத்து இலட்சம், இதற்கென்றே பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி இருப்பார்கள் போல.

எதிர்க் கட்சித் தலைவர் ஒரு கோடி கொடுத்தால் சரியாகிவிடும் என நினைக்கிறார். மக்களை புரிந்துவைத்திருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் தமிழ் நாட்டில் குறைந்த து 50 கட்சிகள் இருக்கின்றன. இவர்கள் அனைவருக்குமே மக்களின் பிரச்சினைகளை காட்டிலும் அடுத்து வரும் தேர்தலில் தங்கள் இருத்தலை எப்படிக் கட்டிக் காப்பதென்பது பிரச்சினை.
மக்கள் பிரச்சினைக்காக இவர்கள் என்றால் ஒன்று சேர்ந்து போராடமாட்டார்களா?

நாம் எப்போதும் ஒன்று சேராதவர்கள் என்பதால்தான் ஈழப்பிரச்சினையிலிருந்து ஸ்டெர்லைட் வரை இழப்புகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியே போராட்டத்தை அறவழியில் நடத்துங்கள், அப்பாவி உயிர்கள் பலியாக களம் அமைத்துக் கொடுக்காதீர்கள்.

———————-

விருதுகள் ! விருதுகள் !

அண்மையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திலிருந்து ‘ உலகத் தமிழறிஞர்களுக்கான விருதுகள்’  -2018 என்ற அறிவிப்பின் கீழ் ஒரு கடிதம் வந்தது. அதில் இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய  விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என்று குறிப்பிட்டிருந்த தோடு விண்ணப்ப படிவத்தையும்  அனுப்பியிருந்தார்கள்.  படிவத்தில்  விண்ணப்பதாரரின் பிறந்த தேதி, பெயர், எழுதிய நூல்கள் (ஒவ்வொன்றிலும் ஒரு படியை அனுப்பவேண்டும்) . தவிர விண்ணப்பதாரர்  தமக்குத் தேவையான விருதையும் குறிப்பிடவேண்டும் எனச்சொல்ல்லப்பட்டிருந்தது. இதுதான் முதன் முறையல்ல

கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் எனக்கு இம்மடல் கிடைக்கிறது.  இரண்டு ஆண்டுகளாக நான்  விணப்பிக்கவில்லை.  கடந்த ஜனவரியில் மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுடனான சந்திப்பில் நண்பர்  முருகேசப்பாண்டியன் முன்னிலையில் பேசிய அருமை நண்பர் முனைவர் பசும்பொன்,, 2018 ஆ ஆண்டு விருதுக்கு எனக்கு  வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருமிருந்தார்.  இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளைப்போலவே  இந்த ஆண்டும் நான் விண்ணப்பிக்கவில்லை.

விருதின் மீதும், விருதளிக்கும் நண்பர்கள் மீதும், அரசுமீதும் குறைகூற ஒன்றுமில்லை. விருதைபெறும் நண்பர்களையும் குறைத்து மதிப்பிட இல்லை.  

இருந்தும் எனக்கு தனிப்பிட்ட வகையில் சில நெருடல்கள் இருக்கின்றன :குற்றவிசாரணைnilakadalMatahari1

அ) முதலாவதாக 5  நாவல்கள், 5 சிறுகதைதொகுப்புகள்,9 கட்டுரைதொகுப்புகளும் ; மொழிபெயர்ப்புகளில் : பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு 9 நூல்களையும், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு அம்பை சிறுகதை தொகுப்பையும் செய்துள்ளேன் ; மாத்தாஹரி நாவல் பிரெஞ்சிலும்,  சிறுகதைகளில் சில Short Edition, Bonnes nouvelles, ஆகியவற்றிலும் வந்துள்ளன.  இவற்றில் எல்லால் ஒரு படியை அனுப்புவதென்பது இயலாத காரியம்.

ஆ) இரண்டாவதாக விருதுக்காக விண்ணப்பம் செய்வதும், இந்த விருதுக்கு நான் தகுதியானவன்  அதைக்கொடுங்கள் என யாசிப்பதும் சரியல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து.  சம்பந்தப்பட்டவர்களே தகுதிக்குரியவர்களை தேர்வு செய்து மகிழ்ச்சி தரும் செய்தியை எதிர்பாராமல் திடீரென்று பெறும் இன்பத்திற்கு ஈடேது ?

இ. நான் தமிழ் அறிஞன் இல்லை, எழுத்தாளன். பல தமிழ்ப் பேராசியர்களைக் காட்டிலும் தமிழை நன்றாக எழுதுவேன், அவ்வளவுதான். எங்களைப்போன்றவர்களை ஒதுக்கிவிட்டு, உள்ளூரிலேயே பல தமிழ் அறிஞர்பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்களைப் போற்றுங்கள், நாங்களும் இங்கு தலை நிமிர்ந்து வாழ்வோம்.

இந்நிலையில் விருதுக்கு விண்ணப்பிப்பதும், எனக்கு இந்த விருதைத் தாருங்கள் என கேட்டுப் பெறுவதும் முறையல்ல என்பதென் தாழ்மையான கருத்து.

இரண்டு முறை எனது நாவல்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் கிடைத்தன. அவை விண்ணப்பித்து பெற்றவை அல்ல. தாமாக கிடைத்தவை, அப்படியே பிறவற்றையும் எதிர்பார்க்கிறேன். விண்ணப்பித்துத்தான் பேறவேண்டுமென்றால் எனக்கு வேண்டாம்.

அண்மையில் மதுரையில் ஆயர் விருது(விண்ணப்பமின்றி), எனக்குக் கிடைத்தது. சாதி அடையாளம் தாங்கிய அவ்விருதை வாங்கச் சங்கடப்பட்டேன். விருதினை பெறும் முன் நண்பர் பஞ்சு, சந்தியா நடராஜன், தமிழ்மணி, பத்திரிகையாளர் பாண்டியன்  ஆகியோரிடம்என் மன நிலையைப் பகிர்ந்துகொண்டேன், நண்பர்கள் தவறில்லை என்றார்கள். தவிர விருதை வழங்கியவர்களின் அன்பிற்கும்,  என்மீது அவர்கள் வைத்துள்ள மரியாதைக்கும் அவ்விருதைப்பெறுவது நியாயமாகப் பட்டது.

ஒவ்வொரு நாவலுக்கும் குறைந்தது ஐந்து மதிப்புரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. திருவாளர்கள் க.பஞ்சாங்கம், அ.ராமசாமி,ந.முருகேசபாண்டியன், கி.அ. ச.ச்சிதானந்தம் ரெ.கார்த்திகேசு, வே.சபா நாயகம் என பலர்  எழுதியிருக்கின்றனர். இவர்களின் அங்கீகாரம்தான் விருது.  இவ்வெழுத்து விருதுகள் கேட்டுப்பெற்றவையுமல்ல. ஓராண்டிற்குமுன்பு இதுவரை நான் சந்தித்தே இராத இலண்டனிலிருந்து கிரிதரன் என்பவர் நீலக்கடல் குறித்து ஒரு தொடரையும், அண்மையில் திரு நெல்வேலியிலிருந்து ஜிதேந்திரன் என்ற முன்பின் கண்டிராத  குற்றவிசாரணை என்ற மொழிபெயர்ப்பு நாவல் குறித்தும், ரணகளம் நாவல் குறித்தும் எழுதியிருக்கிறார்கள். இவைதான் விருது.