Category Archives: Uncategorized

பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்-3

ஷாம்பெய்ன்: ஆங்கிலத்தில் ஷாம்பெய்ன் எனசொல்லப்படும் வார்த்தை பிரெஞ்சிலிருந்து வந்தது ஆனால் அதை பிரெஞ்சில் ஷம்ப்பாஞ்ன் என்று சொல்லவேண்டும். பிறந்த நாள் கொண்டாட்டமா, பரிட்சையில் பாஸா? பெரும் பண்டிகையா? விளையாட்டில் வெற்றியா? தேர்தலில் டெப்பாசிட்டாவது தேறியதா? லாட்டரி சீட்டில் ஒரு மில்லியன் டாலர் விழுந்ததா? காதலித்த பெண் எனக்கு நல்ல மாபிள்ளை வாச்சிருக்கார், மறக்காம ரிசப்ஷனுக்கு வந்திடுங்கோ என்கிறாளா? தூங்கு தண்டனை தற்காலிகமாக ரத்தா? எல்லா சந்தோஷத்துக்கும் கொண்டாவென்று இருக்கும் ஒரே பானம் champagne.

இந்த champagne என்ற சொல்லை Champagne என்று எழுதினால் கவனியுங்கள்- ‘c’ க்குப் பதிலாக ‘C’ என்று எழுதியிருக்கிறேன். – அது பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியைச்சேர்ந்த பிரதேசம். அப்பிரதேசத்தின் முழுப்பெயர் Champagne-Ardenne. இந்த Champagne பிரதேசத்தில் தயாரிக்கப்படும் மதுபானமே champagne. பிரான்சுக்கு வந்தால் இப்பிரதேசத்திற்கு போய்வாருங்கள். அங்குள்ள vignoble எனப்படும் திராட்சைத் தோட்டங்களில் எப்படி ஒயினை ருசித்துப்பார்க்க அதன் தயாரிப்பாளர்கள் அனுமதிக்கிறார்களோ அதுபோலவே Champagne பிரதேசத்தில் அத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் champagneஐ ருசித்துப்பார்க்க அனுமதி அளிக்கிறார்கள். அச்சடங்கிற்கு Dégustation என்று பெயர், நம்ம ஊரில் அல்வா கடைகளில் வாயில் போட்டுப்பாருங்கள் என்று கொடுப்பதில்லையா? அதுபோல.

ஷாம்பெய்னும் உண்மையில் ஒருவகை ஒயின் ஆகும். அதாவது Le Vin Péstillant என்பார்கள் ஆங்கிலத்தில் The Sparkling wine, தமிழில் காஸ் ஒயின் – சோடா ஒயினென்றும் சொல்லலாம். ஏற்கனவே கூறியபடி Champagne பிரதேச champagne தாயாரிப்பாளர்களுக்கு மட்டுமே அப்பெயரை வைத்துக்கொள்ள உரிமையுண்டு, பிரான்சிலே கூட வேறு பிரதேசங்களில் தயாரிக்கப்படும் அதே வகை தயாரிப்புகளுக்கு அப்பெயரை வைக்க உரிமையில்லை. எனவே மற்ற பிரதேசத்துக்கார்கள் உதாரணம் எங்கள் பகுதியில் (Alsace) Vin mousseaux எனக்கூறி விற்கவேண்டியிருக்கிறது. இதர ஐரோப்பிய நாடுகளிங்கூட இதுதான் நிலமை ஸ்பெயின் நாட்டினர் தங்கள் தயாரிப்பினை cave என்கின்றனர். இத்தாலி நாட்டினருக்கு Prosecco, ஜெர்மனுக்கு Sekt. ஐரோப்பியர்கள் என்றில்லை உலகில் எந்த நாடும் champagne என்ற பெயரில் விற்பனை செய்யக்கூடாது. ஆஸ்திரேலியாவில் Australian sparlking wine என விற்பனை செய்வதாக சொல்லப்படுகிறது. எத்தனை பெயர்கள் இருந்தபோதும் உலகில் ஷாம்பெய்ன் என்ற வார்த்தையின் வியாபார மகத்துவத்தை பலரும் அறிவர். எனவே அப்பெயரைத் திருட்டுத்தனமாக உபயோகிப்பதும் உலகில் நடக்கிறது அப்படி யாராவது வியாபாரம் செய்வதை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்தால் Champagne பிரதேச champagne தயாரிப்பாளர் கூட்டுறவு அமைப்பு உங்களுக்குத் தகுந்த வெகுமதியைத் தரும்.

கடைசியாக ஒரு புதிர்: பிரான்சிலுங்கூட ஒயின் இல்லாத வீடொன்று உண்டு, அது யார் வீடு தெரியுமா? விடைதெரியாதர்கள் நண்பர் காலச்சுவடு கண்ணனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

குறுந்தொகை ‘நாயகர்’

அண்மைக்காலங்களில் பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகளை சிற்றிதழ்களில் வாசிக்க நேர்ந்த வாசகர்களுக்கு வெங்கட சுப்ராய நாயக்கர் என்ற பெயர் அறிமுகமான பெயராக இருக்கக்கூடும். பெயரைப் படித்து நீங்கள் ஏதோ சுதந்திரப் போராட்ட தியாகி தமிழ் சிற்றிதழ்பக்கம் ஒதுங்கியிருக்கிறார் என்றெல்லாம் கற்பனை செய்யவேண்டாம். விஜய நகர பேரரசின் எச்ச சொச்ச நாயக்கர்களில் ஒருவராக இருக்குமோ என்ற சந்தேகத்தைக்கூட நீங்கள் தவிர்க்கலாம் ஏனெனில் புதுச்சேரியிலும் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களிலும் வன்னியர்களில், ஒரு பிரிவினருக்கு நாயக்கர் என்றே பெயர்.

மெலிந்த தேகம், ஒடுங்கலான முகம், போன்சாய் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்போல நன்கு கத்தரித்த குட்டையான கேசம். பலத்த காற்றென்றாலும் படிந்த தலை மயிர் எழுந்திருக்காது, அத்தனை அடக்கம். ஆனாலும் மனிதரின் கைக்கு எப்போதும் அதன் மீது தனி கவனமுண்டு. பேண்டுக்குமேல் சட்டை, முழுக்கையை மணிகட்டு தெரிய மடித்திருப்பார். புதுச்சேரி என்றதும் எனது ஆழ் மனதில் நோஸ்த்தால்ஜியாவாக ஓர் பிம்பம் உயிர்த்தெழும், எழுபதுகள்வரை அந்த புதுச்சேரிவாசியை தினசரி வாழ்க்கையில் – நேருவீதியிலோ, மாத்ரு கபேயிலோ, இந்தியன் காபி ஹவுஸிலோ, காலை பதினோரு மணிக்கு பெரிய மார்க்கெட்டிலோ, மாலை ஆனால் ஒதியஞ்சாலை திடலில் பேத்தாங் ஆட்டத்தின் ‘பூல்’களுடனோ – சந்திக்காமலிருந்ததில்லை. கண்ணிற் பட்டோமோ இல்லையோ ‘போன்ழூர் ம்ஸே’ என்பார்கள். மதாம், புள்ளைங்க சௌக்கியமா? கேட்பார்கள். இந்த இரண்டாவது விசாரிப்பில் அவர்களைக் கடந்து செல்ல முடியாது. நிற்க வேண்டும். பேசவேண்டும். பேசவேண்டும் – பேசவேண்டும். வீட்டிற்குத் திரும்ப மீண்டும் உங்களுக்கு உங்கள் மதாம் (மேடம் இங்கே மனைவி) ஞாபகம் வரவேண்டும். ஆனாலும் பேச்சின் முடிவில் சலிப்பு தோன்றாது. மறுநாள் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் ‘போன்ழூர் ம்சே’ என்று வலிய சில நேரங்களில் உங்களுக்கு முன்னே நடப்பவர் அவர்தானா என்பதை உறுதிபடுத்த முடியாத நிலையிலுங்கூட தோளைத்தொட்டு பேசுவீர்கள், அப்படியொரு நெருக்கமான சினேகிதத்தை மனதில் வார்த்திருப்போம்.

நண்பர்களால் நாயகர் எனப்படும் வெங்கட சுப்ராய நாயக்கரும் எனக்கு அறிமுகமானவிதமும் ஒரு வகையில் அப்படி நிகழ்ந்ததுதான் – உபயம் எங்கள் இருவருக்கும் பொதுவான இனிய நண்பராக இருக்கிற தாகூர் கலைகல்லூரி முன்னாள் பேராசிரியர் திரு தேவ மைந்தன் என்கிற பசுபதி அவர்கள். நாயகரும் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றிவருகிறார், அவர் முனைவருங்கூட. கற்பிக்கும் துறை பிரெஞ்சு இலக்கியம். அவருடைய வழிகாட்டுதலில் பல ஆய்வு மாணவர்கள் உள்ளனர் என்பது கூடுதல் செய்தி. தற்போது புதுவைப் பல்கலைகழகத்தைசேர்ந்த காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் பிரெஞ்சு மொழி பேராசிரியர்.

எனக்கும் நாயகருக்கும் நட்பு நீடிப்பதற்கான காரணம் இக்கட்டுரையின் முதல் வரியிலேயே இருக்கிறது. அதனை படித்தபோதே ஏன் அவரோடு ஒட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை நண்பர்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். அவரும் எனது எழுத்தை அவ்வப்போது பாராட்டி பேசுவார் நானும் அவரது முயற்சிகளை தொடர்ந்து விசுவாசித்து வந்திருக்கிறேன். பிரெஞ்சு படித்த புதுச்சேரி தமிழர்களில் மொழிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் குறைவு. நண்பர் பசுபதியும் சரி, நாயக்கரும் சரி தொன்ம இலக்கியத்தைபோலவே நவீன இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டுபவர்கள். இப்படி இரண்டிலும் ஆழ்ந்த ஞானமும் தீராத ஈடுபாடும் ஒருசேர அமைந்த பேராசிரியர்களை அரிதாகத்தான் பார்க்கமுடிகின்றது. நாயகர் பிரெஞ்சிலிருந்து தமிழில் சிறுகதைகளை மொழிபெயர்ப்பதோடு, தமிழ் சிறுகதைகளையும் பிரெஞ்சில் மொழி பெயர்த்துவருகிறார்.

நண்பரது அண்மைக்கால சாதனை மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்காக குறுந்தொகையை பிரெஞ்சில் மொழி பெயர்த்திருப்பது. பிரான்சைசேர்ந்த மற்றொரு நண்பர் கோபாலகிருஷ்ணன் பட்டினப்பாலையைத் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருப்பதாக செய்தி. இதுபோன்ற நல் உழைப்புகளை மனமுவந்து தமிழ் கூறும் நல்லுலகம் போற்றவேண்டும். குறுந்தொகையிலிருந்து சில பாடல்கள் பிரெஞ்சு மொழி பெயர்ப்புடன்:

3. குறிஞ்சிதலைவி கூற்று
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
தேவகுலத்தார்.
 
 
Poème 3
Situation poétique – tiṇai : Région montagneuse – kuṟiñci
 
L’héroïne  proteste à son amie qui a fait des remarques sur le héros :
Plus vaste que la terre,
plus haut que le ciel,
plus profond que le vaste océan,
est  mon amour pour cet homme
venant des montagnes,
où les abeilles fabriquent
du miel des fleurs de kuṟiñci aux tiges noires.
                                                            -Tēvakulattār
Note: L’amour est comparé à la terre qui s’étend horizontalement, au ciel qui s’étend en hauteur,  à l’océan qui s’étend en profondeur. Les fleurs de  kuṟiñci   fleurissent dans les régions montagneuses tous les douze ans.  Les abeilles fabriquent du miel de ces fleurs.  Elles ne vont pas butiner ailleurs. La jeune femme est certaine que son bien-aimé n’ira pas vers une autre femme.
 
kuṟiñci – Phelophyllum kunthianum
……………………..
20. பாலைதலைவி கூற்று
அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
கோப்பெருஞ்சோழன்.
 
 
Poème: 20
 
Situation poétique-  tiṇai : Région désertique –pālai
L’héroïne dit à son amie :
Cet homme
a oublié l’amour et la compassion.
Il a oublié aussi sa compagne
et s’en est allé chercher fortune.
S’il est intelligent qu’il le soit.
Nous, femmes, restons innocentes.
-Kōpperuñcōḻaṉ
 
Note : Innocente veut dire simple, sans complication; les quatre vertus de la femme indienne étaient la crainte, l’innocence, la timidité, la politesse. La logique de l’héroïne est fondée sur l’émotion contraire à celle de son homme qui préfère la quitter pour aller chercher fortune.
………………………..
40. குறிஞ்சிதலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
செம்புலப் பெயனீரார்.
 
 
Poème: 40
Situation poétique – tiṇai : Région montagneuse – kuṟiñci
Le héros s’adresse à sa bien-aimée :
Ta mère et ma mère,
se connaissent-elles?
Ton père et mon père
ont-ils des liens de parenté?
Toi et moi,
nous ne nous sommes jamais rencontrés.
Pourtant,
telle la pluie imprégnant la terre rouge
nos cœurs se mêlent et s’entremêlent.
-Cempulappeyanīrār
 
Note : Le héros observe que leur relation sera inséparable et éternelle comme  l’eau de pluie qui imprègne la terre rouge. Comme cette union est née spontanément, sans crier gare, le héros en est sûr. D’après Mani, cempulam se réfère à kuṟiñci – la région montagneuse.
 ………………….
 

பிரான்சைத் தெரிந்துகொள்ளுங்கள்-2

அன்றாட உணவு: பிரெஞ்சு மக்களுக்கு ரொட்டி ஒரு பிரத்தியேக உணவு.
இங்கே அதிகாலையிலேயே அதாவது காலை ஐந்து மணிக்கே ரொட்டிக்கடைகளை திறந்து வைத்திருப்பார்கள்.  பூலான்ழெரி (Boulangerie) என்கிற ரொட்டிக்கடைக்குச் சென்று வீட்டுக்கு,  அன்றைக்கு வேண்டிய ரொட்டிகளை வாங்குகிறார்களோ இல்லையோ தவறாமல் காலை உணவுக்கு வேண்டிய ரொட்டிகளை கட்டாயம் ஒர் அசலான பிரெஞ்சுக்காரன் கட்டாயம் வாங்கிவருவான். தினசரி ரொட்டியில் பகத் (Baguette)க்ருவாசான் (la Croissant) சாக்கலேட் க்ருவாசான் என அமெரிக்கர்கள் சொல்கிற சாக்லேட் ரொட்டி(le pain au chocolat) ஆகிய மூன்றும் முக்கியமானவை. பழங்காலத்தைப் போலன்றி இப்போது அநேக பிரெஞ்சுக்காரர்கள் பிறபொருட்களை வாங்குவதற்கென பேரங்காடிகளுக்குச் செல்கிறபொழுது ரொட்டிக்களையும் அங்கேயே வாங்கிக்கொள்ள நேர்ந்தாலும் ஆங்காங்கே இருக்கிற ஒன்றிரண்டு கடைகளில் இவற்றை வாங்குவதை ஒரு சம்பிரதாயமாக வைத்துள்ளனர். எனவே அரிதாகி வருகிற இதுபோன்ற ரொட்டிக்கடைகளில் கூட்டம் அதிகம்.

பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்களிலும், விமானங்களிலும் இந்த பிரெஞ்சு ரொட்டிகளை காலை உணவுக்கு வழங்குவதைப் பார்த்திரிப்பீர்கள். பகத்தை (Baguette) அதிகம் பார்த்திருக்க நண்பர்களுக்கு வாய்ப்பிருக்காது. இந்தியாவில் புதுச்சேரி சென்னை, பெங்களூர், நகரங்களில் பெரிய ரொட்டிகடைகளில் இப்பொழுது கிடைக்கிறது. பகத் என்ற சொல்லை அநேகமாக நீங்கள் கேட்டிருக்கலாம்  இசைக்குழுவை நடத்துபவர் கையிலிருக்கும் குச்சிக்கும், டிரம்ஸ் வாசிக்க உபயோகப்படும்  குச்சிகளுக்கும் பகத் என்றுதான் பெயர். பிரான்சுக்கு வந்தால் கையில் பகத்துடன் அதாவது நான் சொல்வது குச்சிபோன்ற நீண்ட ரொட்டியுடன் நடந்துபோகிற மனிதர்களை கட்டாயம் எதிர் கொள்வீர்கள். சிலர் வீடுவரை எடுத்துச்செல்லகூட பொறுமை இருக்காது, சூடாக இருக்கும்போது அதன் மணம் அப்படி, உடைத்து வாயில்போடச்சொல்லி வம்பு பண்ணும்.

———————

கல்வராயன் மலையும், பிரான்சு மாணவியரும்.

நண்பர் ஆ.பசுபதி என்கிற தேவமைந்தன் மூலம் பிரான்சுநாட்டு நொர்மாண்டி பள்ளி மாணவியர் கல்வராயன் மலை -புள்ளுவக்குடியில் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டித் தந்துள்ள செய்தியை அறிந்தேன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் ஒன்று அப்பள்ளி மாணவியர் தமிழ்நாட்டிற்கு தங்கள் உழைப்பை நல்கியிருக்கிறார்களென்பது. இரண்டாவது அப்பள்ளி மாணவியரில் ஒரு பெண் நாங்கள் இருக்கும் பிரான்சில் நான் வசிக்கின்ற நகரைசேர்ந்தவர், குறிப்பாக அவரது பெற்றோர்களை அறிவேன்.

http://httpdevamaindhan.blogspot.com/

பிரான்சை தெரிந்துகொள்ளுங்களேன் -1: பிரெஞ்சு மொழி

உலக நாடுகளில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உபயோகத்திலிருக்கிற மொழி பிரெஞ்சு. பிரெஞ்சும் இலத்தீன் மொழியின் பாரம்பர்யத்தில் உதித்ததுதான், அது எட்டியுள்ள இடமும் ஆங்கிலத்திற்கும் சிறிதும் சளைத்ததல்ல. மொழி மாநாடுகளும், ஞானசூன்ய ஆய்வுகட்டுரைகளும், பட்டிமன்றங்களும் தமிழை வளர்த்துவிடும் என நம்பும் திராவிடத்தின் ஆர்ப்பாட்ட அரசியலின்றி மொழி வளர்க்கும் இனம் பிரெஞ்சினம். அவர்கள் மொழிவரலாறும் அரசியல் வரலாறும் வேறுவேறல்ல.

சூது, தந்திரம், வர்த்தகம், காலனி ஆதிக்கம், மதமாற்றம், கலை, பண்பாடு, தொழில்கள், அறிவியல் வளர்ச்சி என அனைத்தும் பிரெஞ்சு மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றன. ஒன்றை இங்கே சுட்டிக்காட்டவேண்டும் இங்கிலாந்தும் -பிரான்சு நாடும் இருமைப் பண்புகளின் அடிப்படையில் எதிராளிகளாக இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் தங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து அரச குடும்பத்தின் முக்கிய மொழியாகவும், ஆங்கில கனவான்களின் மொழியாகவும், பிரெஞ்சு இருந்துவந்ததென்பது சரித்திரம் தரும் உண்மை. இன்றைக்கும் ஆங்கில மொழி வல்லுனர்கள் அநேகர் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசவும் எழுதவும் வல்லவர்கள். ஆங்கிலத்தித்தில் எழுதும் படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும். இத்தகைய மனப்பாங்கை பிரெஞ்சு எழுத்தாளர்களிடம் பார்க்க முடியாது. ஆக ஆங்கிலம் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட  இடத்திலெல்லாம் பிரெஞ்சு ஊடுறவ காரணமாயிற்று. ஆங்கில நாவல்களில் படைப்புகளில் பிரெஞ்சு மொழியை இடைக்கிடை புகுத்துவதென்பது நாகரீகமாயிற்று; விளைவு பிரெஞ்சு ஆங்கிலம் நுழைந்த இடத்திலெல்லாம் இலைமறை காயாக உடன் சென்றது. இதற்கு எதிர்மாறானது ஆங்கிலத்தின் நிலமை.  ஆங்கிலம் தெரிந்த பிரெஞ்சு எழுத்தாளரை விரல்விட்டு எண்ணிவிடலாம், அப்படியே தெரிந்தாலும் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தவே மாட்டார்கள். அப்படி உபயோகிக்க நேர்ந்தாலும் மிகவும் தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்கள் இருந்தாலொழிய உபயோகிப்பதில்லை.

உலகில் 33நாடுகளில் அரசு மொழியாக பிரெஞ்சு இருக்கிறது. தவிர உலகில் புதிய மொழியைக் கற்பவர்கள் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தேர்வுசெய்வது பிரெஞ்சு. 175 மில்லியன் மக்கள் உலகில் பிரெஞ்சு மொழியை நன்கு எழுதவும் பேசவும் தெரிந்தவர்களெனவும் 100 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கையிலும் அம்மொழியை உபயோகிக்கத் தெரிந்தவர்கள். உலகின் மிக முக்கியமான அரசு சாரா நிறுவனங்கள் அனைத்திலும் பிரெஞ்சு முக்கியமானதொரு மொழியென்ற தகுதியுமுண்டு.

——–

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே: அன்னா ஹஸாரே

அன்னா ஹஸாரேவை எனக்கு அறிமுகப்படுத்தியவை இந்திய ஊடகங்கள். சொந்தச்செலவில் பொன்னாடை போர்த்திக்கொண்டு ஊர்முழுக்க தண்டோரா போடும் இந்திய மனப்பான்மைக்கு விலக்காக ஓர் அபூர்வ மனிதர். ஊர் பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு உழைக்கின்ற ஒன்றிரண்டு உத்தமர்கள் இந்தியாவில் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறபோது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. இந்தியா, அரசியல் கொள்ளைகூட்டத்திடமிருந்து விடுபடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நறிகுறவர் கூட கைத் தொலைபேசி வைத்திருக்கிறார் என்பதிலில்லை. தனிமனித ஒழுக்கத்தைப் போற்றுகின்றவர்களின் எண்ணிக்கையும், சட்டத்தை மதிக்கிறவர்களின் எண்ணிக்கையும், கலையையும் பண்பாட்டையும் வளர்த்தெடுக்கின்றவர்களின் எண்ணிக்கையையும் பொறுத்தது அது. மனித குலத்தில் எந்தக்கும்பலில் இந்த எண்ணிக்கையினர் கணிசமாக இருக்கிறார்களோ, பெருமைகளை பாசாங்கற்ற செயல்பாடுகளால் நேர் நிறுத்துகிறார்களோ அக்கும்பல், அந்த இனம் – அவர்களை சேர்ந்த நாடு வாரலாற்றின் கவனத்தை தனது பக்கம் ஈர்க்கிறது.

இந்திய ஊடகங்களின்றி வேறு வகையிலும் அன்னா ஹசாரேவை படிக்க முடிந்தது. உபயம்: அவரது சகாக்களான கிரண்பேடி, மற்றும் சாந்தி பூஷன்; அவரது குரலுக்கு செவி சாய்க்கும் நடுத்தர வர்க்கம், படித்த மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலகர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அலுவலர்கள், முதியோர்கள், இளைஞர்கள், குடும்பப்பெண்மணிகள் என்று அப்பட்டியல் நீளுகின்றது. ஆக மொத்தத்தில் ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவருக்காக ஊர்வலம் போகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள், கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள். சராசரி இந்தியன் ஒருவனுக்கு பரவலாக நாடெங்கும் ஆதரவு திரண்டதில்லை. ஆக அவரை நம்புகிறேன். இந்த எனது நம்பிக்கைக்கு வலுவூட்டுவதுபோல முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றவர்களின் குரல்களும் ஒலிக்கின்றன.

அவரது போராட்டம் வெற்றி பெறவேண்டும் ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டுமென அண்ணல் காந்தியை பிரார்த்திக்கிறேன்.

மாத்தா ஹரிக்கு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை -2011 சிறப்பு விருது –

அண்மையில் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது -2011 அறிவிப்பில் சிறப்பு பரிசினை வென்றுள்ள பத்து வெளிநாட்டினரில் மாத்தா ஹரி நாவலுக்காக எனது பெயரையும் அறிவித்திருக்கிறார்கள்.

இலங்கையைச் சேர்ந்த டென்மார்க்கில் தற்போது வசித்துவரும் திரு. ஜீவகுமாரன் இதே வரிசையில் பரிசினைப்பெற்றிருக்கும் மற்றொரு எழுத்தாளர். அவர் இத்தகவலை 26 ஜுலை 2011 அன்று முதன்முதலாக எனக்கு எழுதியிருந்தார். ஒருவாரத்திற்கு முன்பு எனது மரியாதைக்குக்கும் அன்பிற்குமுரிய நண்பர் இந்திரனும் உங்களுக்குப் பரிசு கிடைக்க வாய்ய்ப்பிருக்கிறதென்று தெரிவித்திருந்தார். எனினும் இப்பரிசுத்தகவலை எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஒருவருக்கும் (விதிவிலக்காக நெருங்கிய நண்பர் பசுபதி அறிவார்) நான் சொல்லவில்லை. இங்கே வலைத் தலத்தில்கூட இடவில்லை. காரணம் இதுதான்:

நீலக்கடல் நாவல் தமிழ் நாடு அரசின் வெளிவாட்டினருக்கான பரிசினை வென்றிருக்கும் செய்தியை 2007ல்  திடீரென்று அறியவந்தபோது பெரும் மகிழ்ச்சியை அளித்தது, உண்மையில் குதூகலப்பட்டேன்.  இரண்டாவது நாவல் மாத்தா ஹரிக்கும் ஏதாவதொரு பரிசு கிடைக்குமென எதிர்பார்த்தேன், எனக்கு மாத்தா ஹரி பிடித்தமான நாவல்.  எதுவுமில்லையென்றானதில் மிகுந்த ஏமாற்றம். அப்போதுதான் நண்பர் ஒருவர், அன்பிற்குரிய மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் 2008ல் வெளிவந்த நூல்களுள் தமக்கு விருப்பமான முதல் பத்து நூல்களைத் தேர்வு செய்து தமது வலைத்தலத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் அதில் ஐந்தாவது இடத்தை மாத்தா ஹரிக்கு அவர் கொடுத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். இங்கே வரிசை எண் முக்கியமல்ல,  ஒரு மூத்த எழுத்தாளர் மனமுவந்து தேர்வு செய்தததை அந்த நாவலுக்குக்கிடைத்த பரிசாகவே கருதினேன்.  இன்றைக்கும் அந்த சந்தோஷம் நிலைத்திருக்கிறது, தவிர மாத்தா ஹரிக்கு திருவாளர்கள் கி.அ. சச்சிதானந்தமும், வே.சபாநாயகமும் எழுதியுள்ள விமர்சனமும் ஒருவகையில் எனக்கு நிறைவைத் தந்திருந்தது.

இந்நிலையில் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது அறிவிப்பு வந்தபோது மிக அமைதியாகவே ஏற்றுக்கொண்டேன். தவிர இவ்விடயத்தில் நண்பர் இந்திரன் தலையீடு இல்லையெனில் எனக்குக் கிடைத்திருக்குமா என்ற சந்தேகம். அவர்தான் இரண்டுமாதங்களுக்கு முன்பு சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருதுக்கு உங்கள் நூல் வேண்டும் அனுப்ப முடியுமாவென்று கேட்டிருந்தார். சராசரி எழுத்தாளனுக்குள்ள ஆசையில் அனுப்பியும் விட்டேன். அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நூலையும் அனுப்பியிருப்பதாக பின்னர் தெரிவித்தார். இடையில் திடீரென்று சிபாரிசு காரணமாகத்தான் அதற்குப் பரிசு என்ற நிலை வந்துவிடுமோ என்றெனக்கு அச்சம். நண்பர் இந்திரனிடம் எனது மன நிலையைச் சொன்னேன். ‘நாகி” ஏன் இப்படி குழப்பிக்கொள்கிறீர்கள், புத்தகத்தை அனுப்பியதோடு எனது வேலை முடிந்தது, நன்றாக இருந்தால் கொடுப்பார்கள் இல்லையெனில் இல்லையென்றார். இதில் எனது பங்கு எதுவுமில்லை என ஒதுங்கிக்கொண்டாலும் மனதிற்குச் சங்கடமாக இருந்தது. மாத்தா ஹரி நூலை போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ள சொல்லலாமா என்று நினைத்து. வீட்டில் கலந்தாலோசித்த அன்று, முடிவினை அறிவித்திருந்த மின்னஞ்சல் ஆரம்பத்தில் தெரிவித்திருந்ததுபோல இலங்கை ஜீவகுமாரன் மூலம் வந்திருந்தது. நண்பர் இந்திரனும் தகவலை உறுதிசெய்தார். தொடர்ந்து குழப்பமாக இருந்தது. என்னைப்போன்ற எழுத்தாளனுக்கு இதுபோன்ற டானிக்குகள் தேவைதான் என்பது இன்றைய மனநிலை.

மனதில் இன்னமும் நெருடல்கள் இருப்பினும் மாத்தா ஹரியை தேர்வு செய்த கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை குழுமத்திற்கும் குறிப்பாக மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு. கு சின்னப்ப பாரதி அவர்கட்கும், என்மீது அக்கறைகொண்டு எனி இந்தியன் பதிப்பகத்தின் பணி முடங்கியிருக்கிற சூழ்நிலையில் மாத்தா ஹரி நூலை அறக்கட்டளைக்கு உரிய காலத்தில் அனுப்பிவைத்து பரிசு பெற உதவிய அன்பிற்குரிய  நண்பர்  இந்திரனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மாத்தா ஹரிக்கு பரிசெனில் வழக்கம்போல திண்ணைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன், குறிப்பாக நண்பர் கோ. ராஜாராம் அவர்கட்கு. நீலக்கடல் நாவல் போலவே மாத்தாஹரி நாவலும் திண்ணையில் வெளிவந்தது. அவர்கள் தொடங்கிய எனி இந்திய பதிப்பகமே பின்னர் புத்தகமாகவும் அதனைக் கொண்டுவந்தாரகள். எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட சிமொன் தெ பொவ்வார் கட்டுரைதொகுதியும் மிகசிறப்பானதொரு நூல், உரிய வகையில் அடையாளம் பெறுமென நம்புகிறேன். ஏற்கனவே கவிஞர் தமிழ்நதி  அவருடைய பத்து விருப்ப நூல்களுள் ஒன்றாக அதனை தேர்வு செய்திருக்கிறார், என்ன நடக்கிறதென பார்ப்போம்.

நா.கிருஷ்ணா

எழுத்தாளர் ரெ.கா.

மலேசியாவிலிருந்து ஓயாமல் எழுதிக்கொண்டிருக்கும் ரெ.கா என அழைக்கப்படும் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவை அனைவரும் அறிவோம். எளிய மொழியில், நீர்பரவல்போன்ற நடையில் மனித உறவின் நடைமுறை சிக்கல்களை எழுத்தில் கொண்டுவருவதில் தேர்ந்தவர். வளர்ந்து வரும் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார். எனது வளர்ச்சியில் பலரும் பங்கு வகுத்திருக்கிறார்கள், சில விழுக்காடுகளுக்கு ரெ.காவும் சொந்தக்காரர்.

ரெ.கா வுக்குள்ள அறிவியல் ஞானமும், அறிவியல் புனைகதைகளில் ஈடுபாடும் பலரும் அறிந்தது. அவரது வலைதளத்தில் அண்மையில் இட்டுள்ள பதிவுகள் எதிர்காலத்தில் மனித இனம் எங்கே வாழக்கூடும் என்பது பற்றிய சிந்தனைகளை விவாதிக்கிறது, உலக நாடுகள் இத்துறையில் மேற்கொண்டுள்ள ஆய்வுகளையும் முயற்சிகளையுங்கூட பகிர்ந்துகொள்கின்றன. மிகவும் சுவாரஸ்மாக சொல்லப்பட்டிருக்கிற இப்பதிவை அவசியம் வாசிக்கவேண்டும்.

அவரது தள முகவரி:http://reka.anjal.net/?p=198

எஸ்.ரா.வுக்கு நன்றிகள்

தமிழின் மூத்த எழுத்தாளரும், படைப்பிலக்கிய ஆளுமைகளுள் முதல் வரிசையில் இருப்பவருமான வணக்கதிற்குரிய நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எனது தளத்தை தமது தளத்தில் அறிமுகபடுத்தியிருக்கிறார். ஏற்கனவே மாத்தா ஹரி நூலை 2008ல் தமிழில் வெளிவந்த முக்கிய நூல்களுல் ஒன்றாக அவரது விருப்பத் தேர்வில் இடமளித்திருந்தார். அந்தச் செய்தி காலம்தாழ்ந்தே கிடைத்திருந்தது. உரியகாலத்தில் எனது நன்றியை தெரிவிக்கமுடியாமல் போய்விட்டதே என்று வருந்தினேன். மனதில் எவ்வித இடரலுமின்றி அன்போடு எனது தளத்தை தமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி தமது உயர்பண்பை மறுபடியும் வெளிப்படுத்தியிருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

பணிவுடன்
நா.கிருஷ்ணா