பிப்ரவரி -4.
அதிகாலை நான்கு மணி எங்கள் வாகனம் புதுச்சேரியை நெருங்கிக்கொண்டிருந்தது. பிரெஞ்சு நண்பர்கள் மூவரும், உலக அளவில் பணியாற்றி வருகிற தொண்டு நிறுவனமொன்றின் சென்னைக் கிளையின் நிர்வாகி ‘ஆரோக்கி’ என்ற பெயரில் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜான் ஆரோக்கிய ராஜும், என்னோடு வாகனத்தில் பயணித்தவர்கள். நண்பர் நந்திவர்மனை தொலைபேசியில் பிடித்தாகவேண்டும். அவர் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் விழித்திருப்பேனென உத்தரவாதமளித்தும் எனக்குள் அச்சமிருந்தது.
நண்பர் நந்தி வர்மன் குறித்து இரண்டொரு வார்த்தைகள் சொல்லவேண்டும். உங்களில் பலரையும் போன்று ‘அரசியல்’ செய்யும் எவரும் எனக்கு பூச்சாண்டிகள். அரசியலை தொழிற்படுத்துபவர்களை இருவகையாகப்பிரிக்கலாம் முதலாவது தரப்பினர் முழு நேர அரசியல்வாதிகள், இரண்டாவது தரப்பினர் தொழில்முறை அரசியல்வாதிகளல்ல அப்படி கூறிகொள்ளவும் மாட்டார்கள் ஆனால் ஓர் தேர்ந்த அரசியல்வாதிக்குரிய அத்தனை இலக்கணங்களுக்கும் பொருந்தக்கூடியவர்கள். நண்பர் நந்திவர்மன் இந்த இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டவர். இன்றைய தேதியில் எனது அனுபவத்தில் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் செயல்பாட்டினையும் வைத்து ஒரு சிலரைக் கொண்டாடவேண்டுமெனில் திருவாளர்கள் தமிழருவி மணியன், நல்லக்கண்ணும் நமது கவனத்திற்குரியவர்கள். அவ்வரிசையிலே நண்பர் நந்திவர்மனையும் வைக்கலாம்.
லால்பகதூர் சாஸ்திரி சாலையில் அவர் காத்திருந்தார். ஏனாம் வெங்கிடாசலபதி சாலையில் எண் 22ல் எங்களுக்கு அறைகள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன. அறைக்கு 600ரூபாய் வாடகைக் கொடுத்தோம். நண்பர்கள் எதிர்காலத்தில் தவிர்க்கவேண்டிய இடம். பிரெஞ்சுக்காரர்கள் அங்கே அதிகமாக வந்து தங்குவதையும் பார்த்தேன். அவர்கள் தேர்வுக்கு வேறுகாரணங்கள் இருக்கலாம். எனக்கு நிறைவாக இல்லை.
காலையில் ஐந்து மணிக்கு படுக்கச்சென்றபோது பள்ளிவாசல் அழைப்பு. நண்பர் ஆபிதின் கதையிலா அல்லது நகைச்சுவையாக சொல்லப்பட்ட அவரது எழுத்துகளிலா அல்லது வேறு எங்கேயுமா என்று தெரியவில்லை. அக்கதையில் சொல்லப்படிருப்பதைபோன்றுதான் அந்தப் பாங்கு இருந்தது. அதன்பிறகு உறக்கம் வரவில்லை. குளித்துவிட்டு நண்பர்களுடன் காலை உணவிற்காக நேருவீதிக்கருகிலிருந்த ‘ஹாட் பிரெட்’டிற்குச் சென்றோம். ஐரோப்பிய காலை உணவிற்குப் பழக்கப்பட்டவர்களுக்கு உகந்த இடம். அது Brunch ஆக முடிந்தது. மதியம் அறைக்குச்சென்று ஓய்வு. இரண்டு அல்லது இரண்டரைக்கு நாயகர் எங்களை சந்திக்க வந்தார். மாலை நந்திவர்மனுடன் நாளைய நிகழ்ச்சி குறித்து விவாதிக்க இருந்து தவறி விட்டது. அவர் அவசரமாக சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததென்றார். மாலை நாயகர், பிரெஞ்சுநண்பர்கள் என நால்வருமாக கன்பத் ராம் சென்றோம். பிரெஞ்சு நண்பர்களுக்கு அந்தச்சூழல் பிடித்திருந்தது. காபி வடையெனச் சாப்பிட்டுவிட்டு திரு தாவீது அன்னுசாமியைப் பார்க்கச்சென்றோம். முன்னதாக அவருக்கு தொலைபேசியில் எங்கள் வருகையை நினைவூட்டியிருந்தோம்.
நண்பர் சவியே அவரிடம் சில எதிர்பார்ப்புகளை வைத்திருந்தார். சிலர் எதுபற்றியும் எவர் பற்றியும் சட்டென ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். அதே வேகத்தில் அம்முடிவை எளிதாக மாற்றிக்கொள்ளவும் செய்வார்கள். நண்பர் சவியே என்றழைக்கப்படும் தெபெல் அந்த ரகம். அவரை இருபது ஆண்டுகளுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. அதாவது பிரான்சுக்கு வந்த புதிதில். புதுச்சேரியில் வருவாய்த் துறையில் அரசாங்க ஆவணங்களுடனும், கோப்புகளுடனும் சேவகம் செய்து மாமியார்வீட்டு நிழலில் சுகமாய் வண்டி ஓட்டிக்கொண்டிருந்த காலத்தில் மனைவிமூலம் கிடைத்த பிரெஞ்சு குடியுரிமை எனது தூக்கத்தைக்கெடுத்தது. அது துருபிடித்து இற்றுப்போகாமலிருக்க பிரான்சுக்குப்போயே ஆகவேண்டுமென்ற விண்ணப்பத்தை அவ்வப்போது போட்டுவந்தேன். ஜூலை ஆகஸ்டுமாதங்களில் உதட்டிலும் உடையிலும் ஜிகினா மினுப்புடன் புதுச்சேரி வெள்ளித் திரைக்குவரும் சொல்தா குடும்பங்களின் துர் நாற்றம் பிடித்த ·பர்ப்யூம் வாசனையை வளப்பமாக நினைத்து எனக்கும் பிரான்சு கனவுகள் வந்தன. இந்த சொல்தாக்களும் இன்னபிற புதுச்சேரி பிரான்சுவாசிகளில் பலரும் துபாய் வடிவேலுக்கள் என்பதை புரிந்துகொண்டபோது காலம் கடந்திருந்தது. எனது படிப்புக்கு உகந்த மாடுகளைப் மேய்க்க பிரெஞ்சுமண்ணில் ஆகாதென்பதை புரிந்துகொண்டு தொழில் தொடங்க எத்தனித்தபோது நம்ம ஊர்போல பிரெஞ்சு மண்ணிலும் சிலகாரியங்களை தெரிந்தவர்கள் உதவியால் சாதிக்க முடிந்தது, முடிகிறது. நண்பர் சவியே உதவி இன்று வரை தொடங்குகிறது. வாடகைக்கு இடம்பிடித்து கடை வைப்பதைவிட சொந்தமாக இடத்தைவாங்கி அங்கே கடையைத் திறப்பதென்ற யோசனையையும் கூறி இடத்துக்குச்சொந்தக்காரரிடம் பேரம்பேசி அதை பதிவு செய்யும்வரை வரை உடனிருந்தான். கடந்த நவம்பரில் என்மகளுக்கு சுவிஸ் அருகில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலைகிடைத்தபொழுது அவள் தங்க ஒரு பெட் ரூம் கொண்ட இடத்தை வாடகைக்கு அவசரமாக பிடிக்கவேண்டியிருந்தது. அவனுடைய உதவியில்லையேல் கூடுதலாக ஒருவாரம் அலைந்திருப்போம். எனவே இந்த நன்றிக்கடனுக்காக அல்லது சுய நலத்திற்காக அவனோடு நட்பு பாராட்டவேண்டியிருக்கிறது.
திரு தாவீது அன்னுசாமிக்கு தம்மைப்பற்றிய சில விவரங்களை அளித்து அவரிடம் நட்பினை எதிர்பார்த்திருந்தான். அவ்விவரங்கள் அடங்கிய மடல் என்னிடம் வந்தபோது எனக்கென்னவோ அவை அதிகமாகத் தெரிந்தன. ஒருவரைப்பற்றிய அக்கறைகளை கசப்புகளை புரிந்துகொள்ளாமல் நம்மைப் பற்றிய தகவல்களை நானென்றால் அத்தனை எளிதாக பகிர்ந்துகொள்ளமாட்டேன். திரு தாவீது அன்னுசாமி அவர்களுடனான சந்திப்பு என் வரையில் ஒரு நீதிபதி, கல்விமான் என்ற தகுமைகளுக்கு பொருந்துபவர் எவ்வாறு நடந்துகொள்வாரோ அவ்வாறுதான் அவர் எங்களைவரவேற்றார். அளவளாவினார். செலவிட்ட மணித்துளிகளில் அவரது நுண்மான் நுழைபுலத்தை அறியமுடிந்தது. பிரான்சு நாட்டைப்பற்றிய பூகோள அறிவும், பிரான்சில் வாழும் புதுச்சேரி மனிதர்களைப்பற்றிய கேள்வி ஞானமும் தமிழிலக்கியத்தின் மீதும் குறிப்பாக மொழிபெயர்ப்புகள் விடயத்தில் அவருக்கிருந்த அக்கறையும் வியக்கவைத்தன.
இதற்கிடையில் நந்திவர்மனிடமிருந்து தொலைபேசி. எங்கள் அறை தண்ணீர் குழாயைத் திறந்துவைத்துவிட்டு போய்விட்டோம் என்ற குற்றச்சாட்டுடனான தொலைபேசி அழைப்பு. எனக்கென்னவோ அது நாங்கள் வாடகைக்குத் தங்கியிருந்த இடத்திற்கு உரிமையானவரின் அநாவசிய பதற்றமாகத் தெரிந்தது. நாங்கள் சாவாதானமாக திரும்புவதென தீர்மானித்தாலும், நெஞ்சத்தில் ஓர் ஓரத்தில் அந்த அழைப்பு பதற்றத்தை உட்காரவைத்திருந்தது. அதற்குப் பிறகு திரு தாவிது அன்னுசாமியுடனான உரையாடலில் ஒட்டுதலில்ல. விடை பெற்றுகொண்டு அறைக்குத் திரும்பியபொழுது நான் நினைத்ததுப்பொல அதொரு பொருளற்ற அழைப்பாக இருந்தது. மறுநாள் வீட்டுக்கு உடையவரை சந்தித்தபோது எப்போதோ ஒரு முறை அப்படி நடந்ததாம். வெளியில் தண்ணீர் ஒழுகவே எங்கள் அறையிலிருந்து வந்திருக்குமோவென சந்தேகித்தாராம். ‘நல்ல ஆசாமியென நினைத்துக்கொண்டேன்.’
இரவு சைவ விடுதியொன்றில் சப்பாதி பூரி யென்று சாப்பிட்டுவிட்டு, புதுச்சேரி கடற்கரையில் காலார நடந்தோம். எந்த மாற்றமுமின்றி புதுச்சேரி கடற்கரை இருந்தது. ஆதாவது ஆங்காங்கே தோண்டிவைத்திருந்தார்கள். கடற்கரைக்கு வந்தவர்கள் தின்று தீர்த்த பொட்டலங்கள் பொதிகள் காற்றில் பறந்தன. வழக்கம்போல நொறுக்குத் தீனிகளுக்கான கடைகள். அந்நியர்கள் மீது படையெடுக்கத்தெரிந்த தொண்டைமண்டல பிச்சைக்காரர்கள். மெர்க்குரி லைட்டுகள், விட்டில் பூச்சிகள், வாலை உயர்த்தி விசுக்கென ஓடும் நாய்கள். தொப்பைபோட்ட மனிதர்கள், கணவருடன் தலைவிதியே என்று நடக்கும் பெண்மணி, குழந்தையை முன்னால் நடக்கவிட்டு பூரிக்கும் பெற்றோர் etc.. etc..
தொடரும்…





