Category Archives: Uncategorized

கலகம் செய்யும் இடதுகை

1நண்பர் வெங்கட சுப்புராய நாயக்கர் மொழிபெயர்ப்பில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பு- பிரெஞ்சிலிருந்து மொழி பெயர்க்கபட்டவை -. இத்தொகுப்பில் எட்டு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒருவிதம்.

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நாயகரை அறிவேன். மொழிபெயர்ப்பாள நண்பரிடம் அதிசயிக்கும் விடயம், எந்தத் தகவலையும் நகைச்சுவையுடன் சொல்லும் ஆற்றல். ஏதோ சட்டை பையிலிருந்து எடுப்பதுபோல உரையாடலின் போது  வேடிக்கையாக வாரத்தைகள் வந்துவிழும். சொல்லிக்கொண்டிருப்பதை துண்டித்துவிட்டு, அவரது சாதுர்யமான வார்த்தை விளையாட்டினை இரசித்து, சிரிக்கவேண்டிவரும். அவரது இந்த இயல்பான குணம், நாள்தோறும் கி.ராவை சந்திப்பதை அவர் வழக்கமாக்கிக் கொண்டிருப்பதால்  கூடுதலாக மெருகேறி இருக்கிறதென்பது என் அனுமானம். இந் நகைச்சுவை உணர்வு, மொழிபெயர்ப்பிற்கு  தேர்வு செய்த கதைகளிலும் எதிரொலிக்கிறது, .

ஒவ்வொரு சிறுகதைக்கும் முன்பாக அக்கதை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்புகள் தொகுப்பில் இருக்கின்றன. சுருக்கமான இந்த அறிமுகம் அக்கதை குறித்த பொதுபார்வையை வாசகனுக்கு அளித்து, வாசிப்பிற்கு அவனை தயார்படுத்துகிறது. அடுத்து குறிப்பிடவேண்டியது சிறுகதைகளுக்கான பெயர்கள். ஜோடி பொருத்தம் என்ற சிறுகதை பியர் கிரிப்பாரி என்பவர் எழுதியிருக்கிறார். மூலக்கதையில் ஆசிரியர் என்ன பெயர்வைத்திருந்தாலும், மொழி பெயர்ப்பாளர் சூட்டிய பெயர் மிகக் கச்சிதமாகப் பொருந்துகிறது, அவ்வாறே ‘கலகம் செய்யும் இடதுகை’ என மற்றொரு சிறுகதையின் பெயர். இச்சிறுகதையின் தலைப்பே நூலுக்குரிய பெயராகவும் அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் ஒவ்வொரு சிறுகதைக்கும் தமிழ்சூழலுக்குப் பொருந்துகிற, தமிழ் வாசகனை அந்நியப்படுத்தாதப் பெயர்களை கொடுத்திருக்கிறார்: சொர்க்கத்தின் கதை, அந்த பச்சை டைரி, திருடா என்ன வாழ்க்கையடா உன் வாழ்க்கை ஆகியவற்றை உதாரணமாகக் கூறலாம்.. ஒரு படைப்பிற்குப் பெயர் சூட்டுவதில் உள்ள சிக்கல், மொழிபெயர்ப்பிலும் உள்ளன. மூலநூலின் பெயர், மொழிப்பெயர்ப்பு செய்யவிருக்கிற மொழியுடனும், மண்ணுடனும் மக்களுடனும் இணங்கிப்போக சாத்தியமில்லையெனில் பொருத்தமான வேறு பெயரை தேர்வு செய்யவேண்டும். நாயகர் அதை மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார்.  பெயரை படிக்கிறபோதே அக்கதையையும் படித்தாக வேண்டுமென்கிற ஆவலை, நூல் நம்மிடத்தில் ஏற்படுத்தித் தருகிறது, நூலுக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் கிடைக்கும் முதல் வெற்றி இது.

பன்முகத் தன்மைகள் கொண்ட கதைகள்:

இத்தொகுப்பிலுள்ள எட்டுகதைகளும்: மனித வாழ்க்கையின் ‘இருப்பு’ மற்றூம் அசைவியக்கத்தைக் குறியீடுகளாக அடையாளப்படுத்துகின்றன:  மொழி, உத்தி, நடை, காலமென்ற கூறுகளால் ஊட்டம் பெற்ற அவற்றுள் தன்னை எழுதுதலும் உண்டு, தன்மையிற் சொல்லப்பட்டதுமுண்டு; உருவகக் கதைகளும் இருக்கின்றன. ஜோடிப்பொருத்தம் என்ற பெயரைக்கேட்டதும், ஆண் பெண் சம்பந்தப்பட்ட சிறுகதையென நினைப்போம், ஆனால் அச்சிறுகதை ஒரு ஜோடி செருப்புகளின் கதை. முழுக்கதையையும் இங்கே சொல்வது அறமாகாது. மற்றொரு உருவகக்கதை, கலகம் செய்யும் இடதுகை.

எனக்கு இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ‘அந்த பச்சை டைரி’, ‘அவளுடைய கடைசிக் காதலன்’, ‘அடையாளம்’,  ‘நெஞ்சத்தைத் துளைத்தவள்’ ஆகியவை நான் விரும்பி வாசித்த கதைகள், மனித மனதின் பல்வேறு வடிவங்களை, சூழலின் எடுப்பார் கைப்பிள்ளையாக அவை செயல்படும் விந்தையை கதைப்போக்கில் சந்திக்கிறோம்.

“வெங்கட சுப்புராய நாயகரின்’ மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கிய தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கிய பணி. சுப்புராய நாயக்கர் அதைச் செய்திருக்கிறார்.” (முன்னுரை -பிரபஞ்சன்)

மேற்கண்டவரிகளை இந்நூலுக்கு அளித்துள்ள முன்னுரையில் இறுதியாக பிரபஞ்சன் எழுதியிருக்கிறார். இந்நூலின் மொழியாக்கப் பெருமையை விவரிக்க இவ்வரிகளே போதுமானவை. நண்பர் பஞ்சாங்கமும் ‘தீராநதி’ இதழில் இதற்கு மதிப்புரை எழுதி இருப்பதாக அறிகிறேன். மொழிபெயர்ப்பிற்கென இலக்கண வரைவுகள் இருக்கின்றனவா? எதை மொழி பெயர்க்கலாம், எப்படி மொழி பெயர்க்கலாம்?  என்ற பெயரில் அவரவர்க்கு கருத்துகள் இருக்கின்றன. இப்போதைக்கு எனக்குத் தெரிந்த எளிமையான வழி, புதிதாக மொழி பெயர்ப்பு துறைக்கு வருபவர்கள் நாயக்கரின், ‘கலகம் செய்யும் இடது கை நூலை’ கட்டாயம் வாசிக்க வேண்டும். இவற்றிலுள்ள சில கதைகள், தமிழில் புதிய முயற்சிகளில் இறங்க நினைக்கும் படைப்பாளிகளுக்கும் உதவும்.

………………………………………………….

கலகம் செய்யும் இடதுகை

பிரெஞ்சு மொழிபெயர்ப்பு சிறுகதைகள்
ஆசிரியர் வெங்கட சுப்புராய நாயகர்

வெளியீடு:
நற்றிணை பதிப்பகம்
பழைய எண்:123A, புதிய எண்:243 A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி,
சென்னை-600005
இந்தியா
———————————————————-

மொழிவது சுகம்: ஜூன் 1-2013

1. அண்மையில் சந்தித்த நண்பர்களும் எழுத்தாளர்களும்:

முனைவர் இளங்கோவன்: blog mu.e

புதுச்சேரிக்கு செல்கிறபோதெல்லாம் அண்மைக்காலங்களில் நானும் நண்பர் நாயகரும் அதிகாலையில் நடப்பதற்குச் செல்வது வழக்கம். சரியாகக் காலை 5.30க்கெல்லாம் வீட்டிற்கு வந்திடுவார். நடந்து முடித்ததும் சிற்சில சமயங்களில் நண்பர்களை சந்திக்க காலைநேரத்திலேயே நாயக்கர் ஏற்பாடு செய்திடுவார். அப்படித்தான் இம்முறை நண்பர் இளங்கோவனைச் சந்திக்க நேர்ந்தது. முதன் முதலாக மு.இளங்கோவனைச் சந்தித்தது நண்பர் இலக்கியம் சீனு.தமிழ்மணி நடத்திவரும் புத்தக விற்பனை அகத்தில். அங்கே சிறியதொரு கலந்துரையாடலை சீனு. தமிழ்மணி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் ஓரிரு நிமிடங்கள் உரையாடியிருப்போம். மரியாதை நிமித்தமாக நடந்த அவ்வுரையாடல் அறிமுகம், நலன் விசாரிப்பு என்று சுருக்கமாக முடிந்தது.

பாரதிதாசன் கல்லூரியில் பேராசியராகப் பணியாற்றும் இளங்கோவன் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாக இம்முனைவர்களின் ரிஷிமூலங்களை அறித்திருப்பதால், இந்த அலங்காரங்காரங்களை கண்டு அதிகம்  மிரள்வதில்லை. விதிவிலக்காக 25 விழுக்காடு முனைவர் பட்டங்கள் சரியானவர்களை சென்றடைந்து பெற்ற இழுக்கை நேர் செய்து விடுகின்றன. அதுபோன்ற முனைவர்களையும் நிறைய சந்தித்திருக்கிறேன். நண்பர் நாயக்கர், மு.இளங்கோவன் ஆகியோர் இந்த 25 விழுக்காட்டினர் வரிசை.

பொதுவாகப் பேராசிரியர்கள், தங்கள் கல்விகாலத்தில் வாசித்திருப்பார்கள், அன்றி பாடம் எடுக்கவேண்டுமே என்ற தலையெழுத்திற்காக புத்தகத்தைப் புரட்டும் பேராசிரியர்களும் இருக்கிறார்கள்; இவர்களால் மொழியோ, கல்வியோ மேம்பாட்டினை அடையாதென்று தெரியும், வாங்கும் சம்பளத்திற்கு வஞ்சமின்றி வகுப்பில் பாடம் நடத்தி மாணவர்களை ஏய்க்க முடியாதென்றோ என்னவோ மரத்தடியிலும் கல்லூரி சிற்றுண்டி சாலைகளிலும் தங்கள் வக்கிரங்களைக்கொட்டித் தீர்த்து களைத்து போவார்கள் அப்படியொரு ஆங்கில பேராசிரியர் ஒருவரை அண்மையிற் பாரதிதாசன் கல்லூரியில் கண்டேன். நண்பர்களும் நானும் தலையிலடித்துக்கொண்டோம்.

முனவர் மு. இளங்கோவன் இளைஞர், “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்’ அவர் உடன்பிறந்தவை என நினைக்கிறேன். வயதிற்கும் பெற்றுள்ள கீர்த்திக்கும் நிறைய வேறுபாடுகள். செம்மொழி இளம் அறிஞர் விருதை இந்தியக் அரசு அளித்துள்ளது, குடிரசு தலைவரிடமிருந்து அண்மையில் இவ்விருதைப் பெற்றுள்ளார். இவரது ‘இணையம் கற்போம்’ நூல்  மொழியன்றி கணினி தொழில் நுட்பத்திலும் நண்பருக்குள்ள நுண்மான் நுழைபுலத்தைத் தெரிவிக்கின்றன. இதுவன்றி ‘அயலகத் தமிழர்கள்’ என்கிற நூல், பிறநாட்டில் வாழ்ந்து விளம்பரமின்றி தமிழ்த் தொண்டாற்றும் பெருமகன்களின் சிறப்பை பேசுகிற ஒரு நூல். நாட்டுபுற கலையிலும் தேர்ந்த ஞானம், அவ்வியல்சார்ந்து நூலொன்றையும் படைத்திருக்கிறார். உலகில் எங்கெல்லாம் தமிழ் மேடையேற்றப்படுகிறதோ அங்கே நண்பரும் மேடை ஏற்றப்படுக்கிறார். அவரால் தமிழுக்கும் தமிழால் அவருக்கும் பெருமை. நண்பர் மு. இளங்கோவன் பேசும் தமிழ் கேட்கவே அவர் நடைவாசலில் காத்திருக்கலாம்.

http://muelangovan.blogspot.fr/
———————————

2. வாசித்து கொண்டிருக்கிற நூல்: பஞ்சாங்கம் கட்டுரைகள் 11

மாதத்தில் ஒருநூலையேனும் வாசித்து முடிக்கவேண்டும் என்ற சபதத்தில் அண்மையில் ஓட்டை விழுந்திருக்கிறது, கூடிய சீக்கிரம் அதை அடைத்தாக வேண்டும். நண்பர் பஞ்சாங்கத்தின் இலக்கிய திறனாய்வு கட்டுரைகளின் இரண்டாம் பாகத்தை அண்மையில் வாங்கினேன் வாசித்துக்கொண்டிருக்கிறேன். பதிப்புரை ஆசிரியர் இந்நூலில் 60 கட்டுரைகள் இருப்பதாகக் கூறுகிறார்.  முதற்கட்டமாக இக்கால இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அடுத்த இரண்டுகிழமையில் இதை பற்றி எழுதுகிறேன்.

———–

3. பிரான்சில் என்ன நடக்கிறது: Salle de Shoot

அரசியல்வாதிகளுக்கு ஆளும் திறன் இருக்கிறதோ இல்லையோ, மக்களை திசைதிருப்புவதில் அசகாய சூரர்கள். பிரான்சு நாட்டு ஆளும் கட்சியும் விதிவிலக்கல்ல. பிரெஞ்சு வரலாற்றில் முன்னெப்போதும் கண்டிராத அளவு வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரத்தில் தேக்கம். தொலைத்தொடர்பு, மின்சக்தி , மின்சார சாதனங்கள், மின்னணுப்பொருட்கள் ஆகிவற்றின் சரிவென்றாலும் அத்தியாவசியப்பண்டங்களின் விலை உயர்வு மிக மோசமாக இருக்கிறது. நாட்டில் அத்தியாவசிய உணவான பகத் என்கிற நீண்ட ரொட்டி 2002க்கு முன்னால் அதாவது பிரெஞ்சு நாணயமான பிராங் உபயோகத்தில் இருக்கையில் 3 பிராங்கிலிருந்து 4 பிராங்வரை விற்றது, சராசரியாக 0,50 செண்ட்ஸ், இன்று 1யூரோ. இந்நிலையில் கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில் வை என்பதுபோல ஆளும் இடது சாரிகள் ஓரின திருமணத்திற்கு சட்டவரைவு கொடுக்க, எதிர்ப்பாளர்கள் இப்பிரச்சினையை விடப்போவதில்லையென வீதியில் இறங்கியிருக்கிறார்கள். அதன் ஆதரவாளர்களில் பலருக்குங்கூட நாட்டில் வேறு முக்கியமான பிரச்சினைகளிருக்க அரசாங்கம் இதனை ஏன் கையில் எடுக்கவேண்டுமென கேட்கிறார்கள். இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல Salle de Shoot திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். பாரீஸ் மாநகராட்சி, கார் துய் நோர் என்ற பகுதியில் ( தமிழர்கடைகள் நிறைந்துள்ள பகுதி) முதற்கட்டமாக Salle de Shoot ஐ திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இது எதற்காக? போதை மருந்து உபயோகிப்பாளர் இடம்தேடி  திருட்டுத் தனமாக அலையவேண்டியதில்லை. ஹாய்யாக வந்து புகைத்து ‘ஆனந்தப்படலாம். நாட்டின் தற்போதைய நிலமைக்கு ஒரு முழம் கயிறு கொடுத்தால் தேவலாம் என அரசாங்கத்தைப் பலரும் கேட்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

—————————————-

கான் உலகத் திரைப்படவிழா -2013

cannes66 வது கான் உலகத் திரைப்படவிழா இரண்டு வார (மே15 -26) கோலாகலமான நிகழ்வுகளுக்குப் பிறகு நேற்று பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

அ. முழுநீளத் திரைப்படங்கள்

1. தங்கக்கீற்று எனக் கொண்டாடப்படும் Palme d’Or Palme d'or இவ்வருடம் துனிசியா நாட்டைச் சேர்ந்த  அப்தெலாத்திப் கெஷிஸ் (Abdelatif Kechiche) என்பவர் எழுதி இயக்கியிருந்த La vie d’Adbéle – Chapitre 1et 2 (Blue is the warmest colour) திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆளும் இடதுசாரிகள் ஓருபாலினத் திருமணத்தை சட்டபூர்வமாக உறுதிபடுத்தியிருக்க (உலகில் 13 நாடுகளில் ஏற்கனவே இத்திருமணம் அதிகாரபூவமாக ஏற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது) அதனை வழிமொழிவதுபோல கான் திரைப்படவிருது அறிவிப்பு செய்தி இருக்கிறது.

La vie d’Adèle Chapitre 1 et 2

கதைச்சுருக்கம்: அதெல் பதினைந்து வயது இளம்பெண். வயதுக்குரிய அனைத்து தடுமாற்றங்களுக்கிடையில் தான் பெண்ணென்கிற பாலினபேதத்தில் உறுதியாக இருக்கிறாள். அதன் அடிப்படையில் தன் வயதொத்த பையன்களிடம் ஈர்ப்புகொண்டு அவர்களுடன் சேர்ந்து சுற்றவும் செய்கிறாள். ஒருநாள் தலைக்கு நீலச்சாயம் பூசியிருந்த இவளினும் கூடுதல் வயதுகொண்ட பெண்ணொருத்தியைப் பொதுவிடமொன்றில் எதிர்பாராமல் சந்திக்கிறாள். தனது வாழ்க்கையில் ஏதோ நிகழவிருப்பதை அவள் மனது ஆரூடம்போல உணர்த்துகிறது. பதின் பருவம் எழுப்பும் கேள்விகளுக்கு தனியொருத்தியாக விடைதேட முயல்வதும் அதன் காரணமாக பெற்றோர்கள், தன்னைச்சுற்றியுள்ள உலகம் அதன் நியதிகள், பார்வைகள் ஆகியவற்றின் மீது வெறுப்புறுவதும் அதன் விளைவான செயல்பாடுகளும் திரைப்படம்.

இயக்குனர் அபெத்லாத்திப் கெஷிஸ் பற்றி ஓரிரு வார்த்தைகள்.  பிறந்தது 1960ம் ஆண்டு டிசம்பர் 7ந்தேதி. இதுவரை எழுதி இயக்கியவை மூன்றே மூன்று திரைப்படங்கள், அதற்குள் உலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரென பெயர்பெற்றிருக்கிறார். இவர் இயக்கத்தில் வந்த வேறு இருபடங்கள்: 1. L’Esquive (Games of Love and Chance – 2004) 2. La graine et le Mulet (The Secret of the Grain). இப்படங்கள் அவருக்கு வருடந்தோறும் பிரெஞ்சு திரைப்பட விழா வழங்கும் சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதுகளை கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன.  இவ்வருடம் ஸீபீல்பெர்க் தலமையிற் கூடிய திரையுலக மேதைகள் அவரது உழைப்பையும் கலைஞானத்தையும் மீண்டும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

2. Grand Prix du Festival de Cannes -2013

1967ம் ஆண்டிலிருந்து கான் உலகத் திரைப்படவிழா குழுவினர் தனித்தன்மையும், திரைப்படக் கலையில்  புதிய முயற்சிகளையும் கொண்டிருக்கிற முழு நீள திரைப்படமொன்றிற்கு பரிசளித்து வருகிறார்கள். அவ்வகையில் Coen சகோதரர்கள் என அழைக்கப்படுகிற அமெரிக்காவைச் சேர்ந்த  Joel David Coen (1954) மற்றும் Ethen Jesse Coen எழுத்து, இயக்கம் தயாரிப்பில் வந்துள்ள ‘Inside Liewyn’ திரைப்படத்திற்கு Grand Prix -2013 பரிசு கிடைத்துள்ளது.

பிற பரிசுகள்:

3. சிறந்த இயக்குனர் விருது

மெக்சிக் நாட்டைச்சேர்ந்த இயக்குனர் Amat Escalante – திரைப்படம் ‘Heli’

4. ஜூரிகளின் பரிசு:

புதிய இயக்குனர்களில் நம்பிக்கைக்குரியவர்களை ஊக்குவிக்கும் பரிசு. இவ்வருட ஜப்பானியர் Hirakazu Kore-Edaவுக்கு கிடைத்துள்ளது. திரைப்படம் Tel père, Tel fils ( Like Father, Like son)

5. சிறந்த திரைக்கதை

சீன இயக்குனர் Jia Zhanske என்பவர் பெற்றுள்ளார், திரைப்படம் – A touch of Son

6. சிறந்த நடிகை:

Asghar Farhadi என்ற ஈரானியர் இயக்கிய Le Passé (The Past) என்ற படத்தில் நடித்த நடிகை Bérénice Bejoக்குக் கிடைத்துள்ளது. சிறந்த நடிகை. பலமுறை இவருக்கு பரிசுகள் கைநழுவிய சோகக்கதையுண்டு. அண்மை ஏமாற்றம் The Artist படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதை இழந்தது. மூன்றாம் பிறை தமிழ் திரைப்படத்திற்கு ஏற்பட்ட அனுபவம்.

7. சிறந்த நடிகர்

Bruche Dern: திரைப்படம் – Nebraska, இயக்கம்- Alexander Payene

ஆ. . குறும் படங்கள்

1. சிறந்த குறும்படம்

Safe – இயக்கம் கொரிய இயக்குனர் Boon Byong

2. சிறப்புப் பரிசு
Havale Jordur (Whale Valley) திரைப்படம். இயக்கம்: Gudmundur Arner Gudmundssen – ஐஸ்லாந்து.

3. தங்ககேமரா

திரைப்படம் Ilo Ilo, இயக்குனர் Anthony Chen -சிங்கப்பூர்.

இ. Un certain regard (A certain type of look) பரிசு

1. திரைப்படம்
The Missing Picture- இயக்கம் Rithy Pinh

2. ஜூரி பரிசு
2. Omar – இயக்கம் – Hany aby assad
—————-

மொழிவது சுகம் – மே 18 -2013

1. கான் திரைப்பட திருவிழா -2013

66 வது கான் திரைப்படவிழா இம்மாதம் 15,தேதியன்று  தொடங்கிவைக்கபட்டது. இவ்வருட பிரதம விருந்தினர் டைட்டான் புகழ் நடிகர் Leonardo di Caprio. தவிர அவருடைய ” The Great Gatsby” தொடக்க நாள் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது.  ஜூரிகள்: Steven Spielberg (USA), Christopher Waltz (Austria), Daniel Auteuil (France), Nicole Kidman ( Australia). முதலாவது ஜூரிகுறித்து புதிதாய் சொல்ல ஒன்றுமில்லை. மற்ற நால்வரும் நடிகர்கள். மே. 15லிருந்து -26 க்குள் போட்டியில் கலந்துகொள்கிற 20 படங்களை ஜூரிகள் பார்வையிட்டு பரிசுக்குரிய திரைப்படங்களை மே. 26ந்தேதி அறிவிப்பார்கள். ஆக 10 நாட்கள் கான் நகர La Croisette அவென்யுவில் திருவிழா. மிகப்பெரிய நடிகர் நடிகைகளென பெயரெடுத்துள்ள அனைவருக்கும் உள்ள கனவு என்றாவது ஒருநாள் தங்கள் வாழ்நாளில் கான் திரைப்படவிழா அரங்கின் சிவப்பு கம்பளத்தில் ஒரு முறை கால்பதித்திட வேண்டும்.

Monsoon Shootout – அமித்குமார்

Amid kumarஇவ்வருட கான் திரைப்படவிழாவில் அதிகாரபூவமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒர் முழுநீள இந்தியத் திரைப்படம் -Monsoon Shootout.  கலை இலக்கியமென்று காத்திரமாக இயங்குகிற Arte பிரெஞ்சு தொலைகாட்சி நிறுவனம், இப்படத்தைத் தயாரித்த நான்கு தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று. மற்ற மூன்று நிறுவனங்கள்: இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மன். படத்தின் இயக்குனர் அமித் குமார் ஏற்கனவே The Bypass என்ற குறும்படத்தின் மூலம் மேற்கத்திய திரைப்படவிமர்சகர்களின் பாராட்டுதலைப் பெற்றவர். இந்தியாவில் பிறந்து ஆப்ரிக்காவில் வளர்ந்த இவர், பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் வார்ப்பு.

மான்சூன் ஷ¥ட் வழக்கமான இந்தியா மசாலா அல்லவாம். ஒரு பக்கம் புதிதாய் நியமனம்பெற்று வந்திருக்கும் காவலதிகாரி, இன்னொரு பக்கம் அவர் வேட்டையாடவேண்டிய கொடூர மனம் படைத்த நிழல் உலக தாதா. இருவரின் உள்ளுணர்வுகளை திரைக்கதையில் அழகாக இயக்குனர் வெளிக்கொணர்ந்திருக்கிறாராம். படத்தைக்குறித்து மேற்கத்திய இதழ்கள் வைத்திருக்கும் அபிப்ராயங்களை வாசிக்கிறபொழுது கண்டிப்பாக ஏதோ ஒரு பரிசை இப்படம் வெல்வது உறுதியென தெரிகிறது.
——————-

2. Mariage pour tous – Marriage for all

ஒரு வருடத்திற்கு முன்பு பிரான்சு அதிபராகப் பொறுப்பேற்ற சோஷலிஸ்டு கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து கொடுத்த வாக்குறுதி. அதன் படி கடந்த வெள்ளிகிழமை அதாவது 17/05/2013 அன்று பிரான்சுநாட்டு அரசியல் நிர்ணயசபை  ஓரின திருமண சட்டவரைவிற்கு தமது ஒப்புதலை அளித்தது. அதற்கு முன்பாக நாட்டின் நீதித்துறை அமைச்சர், அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதல் பெற்றதும் நாட்டின் ஒருபாலின திருமணம் ஜூன் மாதத்திலிருந்து அனுமதிக்கப்படுமென்று தெரிவித்திருந்தார். அதற்கேற்ப முதல் ஒருபாலினத் திருமணம் மே 29ந்தேதி மொன்பெலியெ என்ற நகரில் நடைபெற உள்ளது. நகர மேயர், ஆளுங்கட்சியைச்சேர்ந்த ஓர் இடது சாரி. மாறாக வலது சாரி கட்சிகள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதால் அக்கட்சிகளின் மேயர்கள் தங்கள் நகரத்தில் இத்திருமணத்தை நடைமுறைபடுத்தமாட்டார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையில்  ஒருபாலினத் திருமணத்தை பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பதாகக் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்க மதத்தில் தீவிர மதவாதிகள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இம்மாதம் 27ந்தேதி எதிர்ப்பாளர்கள் பிரான்சு நாடெங்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளார்கள்.
——-

3. இப்படியும் நடந்தது…

இம்மாதம் 4ந்தேதி பிரெஞ்சு தினசரியைப் புரட்டியபோது ஓர் வியப்புக்குரிய செய்தி.  ஒவ்வொரு நாளும் வலைப்பூவில் இடவேண்டுமென நினைத்து தள்ளிபோய்விட்டது. எழுதாமற்போனால் பிறவி எடுத்த பயனை அடையாமற்போய்விடுவேன் என்பதுபோல அச்சம்: பாரதத்தாய் மன்னிப்பாளாக. என்றாவதொரு நாள் இந்திய தேசத்திலும் இதுபோன்ற அதிசயங்கள் நடைபெற்றாகவேண்டுமென்ற வேண்டுதலுடன் எழுதுகிறேன்.

மே மூன்றாம்தேதி பாரீசிலுள்ள கிழக்குதிசை இரயில் சந்திப்பிற்கு பெண்மணி ஒருவர் சென்றார். அவர் செல்லவேண்டிய நகரம் நாட்டின் வடபகுதியிலுள்ள ரேன்ஸ் (Reims). குறிப்பிட்ட பிளாட்பார்மில் அந்த இரயிலை பிடிக்கவேண்டும். வந்தவர் எதிர்புறம் நின்றிருந்த அதிவேக இரயிலில் ஏறிவிட்டார் அது நான்ஸி நகருக்கு போகும் இரயில்.

இரயில் நகர்ந்தபோது அறிவிப்பை உள்ளே கேட்ட பிறகுதான் செய்திருக்கும் தவறு எவ்வளவு பெரியதென்ற உண்மை அப்பெண்மணிக்கு தெரியவந்திருக்கிறது. அழத் தொடங்கிவிட்டாராம். அருகிலிருந்த சகபயணிகள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். நான்சி நகரில் இறங்கியதும் அவர் தங்குவதற்கும் மறுநாள் தங்கள் வாகனத்தில் ரேன்ஸ் நகரில் கொண்டு விடுவதாகவும் சமாதானம் செய்திருக்கிறார்கள். பெண்மணியோ தான் அன்று ரேன்ஸ் நகரில் இருக்கவேண்டிய நிப்பந்தத்தை தெரிவித்திருக்கிறார்.

சகபயணிகளில் ஒருவர் பிரச்சினையை பரிசோதகரிடம் தெரிவித்திருக்கிறார்.  பயணிகள், பரிசோதகரிடம் எட்டு கி.மீட்டரில்  வரக்கூடிய Champagne -Ardenne நிலையத்தில் இரயிலை நிறுத்த வாய்ப்புண்டா எனக்கேட்டிருக்கிறார்கள். பொதுவாக அதிவேக இரயில்கள் அங்கு நிற்பதில்லை. இந்த இரயிலும் மணிக்கு 240.கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.  பரிசோதகர் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டார். 30 நொடிகளில் மேலிடத்து ஒப்புதல் கிடைத்ததாம்.  ரேன்ஸ் நகருக்குப்போய்க்கொண்டிருக்கிற இரயிலையும் ஒருசில நிமிடங்கள் Champagne -Ardenne நகரில் நிறுத்த ஏற்பாடு செய்தார்கள்.  அதன்படி  Champagne -Ardenne  இரயில் நிலையத்தில் இரு இரயில்களும் நிறுத்தப்பட்டு பயணியைப் பத்திரமாக ரேன்ஸ் நகருக்கு வழி அனுப்பிவைத்திருக்கிறார்கள். இப்பிரச்சினையால் பாரீஸ் -நாண்சி இரயில் வழக்கத்தைக்காட்டிலும் 3 நிமிடங்கள் தாமதமாக வந்துசேர்ந்ததைத் தவிர வேறு சங்கடங்கள் பயணிகளுக்கு இல்லையாம். ஆமென்.
—————

4. கடந்த வாரம் படித்த நூல்

நூல் பேராசிரியர் பஞ்சாங்கத்துடையது. பெயர். கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்.  இந்நூலில் மூன்று ஆளுமைகளை தரிசித்தேன். முதலாவது கி.ராஜநாராயணன், இரண்டாவதாக இராஜநாராயணனின் இயற்கை உபாசிப்பை மிக நுணுக்கமாக ஆய்ந்து, சொல்வேள்வி நடத்தும் பேராசிரியர், மூன்றாவதாக இந்நூலுக்கு முன்னுரை என்ற பெயரில் அமுதைப் பொழியும் பேராசிரியை  மீனாட்சியின் எழுத்து. கி. ராஜநாராயனனின் கிராமமும், அதன் மக்களும், பிற பங்குதாரர்களும் நமக்கு என்றுமே அலுக்காதவர்கள். அவர்களை பேராசிரியர் க. பஞ்சாங்கம் அறிமுகபடுத்துகிறபோது மேலும் உயர்ந்துவிடுகிறார்கள், அம்மாக்கள் கையளிக்கும் சோற்றுருண்டைபோல அவ்வளவு ருசி. தவிர அவரது தமிழ் ஞானம் நூலை பகுத்தாய்வுசெய்ய கூடுதலாகவே உதவி இருக்கிறது. இன்னொரு முறை கி.ரா. வின் எழுத்துக்களை தேடிபிடித்து வாசிக்க செய்திருக்கிறார். நமது நூலகத்தில் அவசியம் இருக்கவேண்டிய நூல். .
—————————————————————–

எழுத்தாளன் முகவரி -13: எழுத்து வியாதி

roger-caras_KKwkdRoger A. Caras ஓர் எழுத்தாளர், விலங்கு அபிமானி. விலங்குகளைக்குறித்து நிறைய புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். அமெரிக்காவின் முக்கிய தொலைகாட்சி நிறுவனங்களில் பறவைகள், விலங்கு சம்பந்தமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவந்திருக்கிறார். திரைப்படத் துறையையும் விட்டுவைக்கவில்லை. நாய், பூனை ஆகியவற்றிர்க்கு நீங்கள் அபிமானியெனில்  Cat is watching, Dog is listening என்ற அவருடைய இரண்டு நூல்களும் உங்களுக்குத் தேவைப்படலாம். விலங்குகளை மையமாக வைத்து ஒன்றிரண்டு புனைவுகளையும் படைத்திருப்பதாக அறிகிறேன். இந்த ரோஜெர்தான் எழுத்து வியாதி பற்றி பேசுகிறார். ஆங்கிலத்தில் Writer’s block என்று பெயராம். மருத்துவ நூல்களில் இந்நோய் பற்றிய மேல்விபரங்கள் கிடைக்காதென்று  எச்சரிக்கவும் செய்கிறார்.  நண்பர்கள் யாரேனும் இப்பெயரை முன்னதாக அறிந்திருக்கலாம். அவர் கட்டுரை ஒன்றை படிப்பதற்கு முன்பாக நான் அறிந்ததில்லை. இந் நோய்க்கு ஆளாகாதவர் எழுத்தாளரே இல்லை என்று ரோஜெர் துண்டைப்போட்டுத் தாண்டுகிறார்.

இவ்வியாதிக்கான அறிகுறிகளென்ன? எப்படி தெரிந்துகொள்வது? எந்தப் பரிசோதனைசாலைக்குச்சென்று இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாம்? பொது மருத்துவர்களே போதுமா அல்லது நிபுணர்களை பார்க்கவேண்டுமா? என்று சில கேள்விகள் உங்களைப்போலவே எனக்கும் இருந்தன. பெயரேதுமில்லாமலேயே வதைக்கும் நோய்களை நாம் அறிவோம், இப்படி புதுப்புது பெயர்களில் வெருட்டும் நோய்களும் இன்னொரு பக்கம். தமிழிலக்கியத்தில் பசலை நோய் என்று ஒன்றுண்டு. இன்றுவரை அது என்ன நோயென்று நான் விளங்கிக்கொண்டதில்லை. படித்தவற்றில் சொல்லப்பட்ட விளக்கங்களெல்லாம் எங்கள் ஊரில் பேயோட்டும் பண்டாரம் சொல்வதுதான். ரோஜெரின் Writer’s blockஐயும் அப்படி யொரு பசலை நோய் இனத்தில் சேர்த்துக்கொண்டேன். எழுத்துவியாதி: தொத்துவியாதியா, பரம்பரை வியாதியா? மனநோயா? உடல் நோயா? குணப்படுத்தகூடியதா? அல்லோபதிக்கு இணங்குமா சித்தவைத்தியமே போதுமா? எனது சிற்றறிவுக்கு உட்பட்டு ஒன்றிரண்டு விளக்கம் கொடுப்பதற்கு முன்பாக எழுத்து வியாதி, தொத்து நோய் அல்ல என்பதை உறுதிப்படுத்த இயலாதென்றாலும்,  அதொரு பரம்பரை வியாதியுமல்ல. .

இந்த எழுத்துவியாதிக்கு ரோஜெர் தரும் விளக்கம் அந்நோய் மன அழுத்தம், சித்தபிரமை, தன்னிரக்கம், தசைபிடிப்பு என எல்லாம் கலந்த ஓர் கலவை. அது நமக்கிருக்கிறதா இல்லையா என்பதை எப்படி தெரிந்துகொள்வதாம்? உங்கள் மேசையில் சிறிய அளவு பேப்பர் கிளிப்புகளை ஒரு பக்கமும், பெரிய அளவு பேப்பர் கிளிப்புகளை இன்னொரும் பக்கமும் என சேர்க்க ஆரம்பித்தல் நோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்கிறார். அடுத்த அறிகுறி இதுநாள்வரை உங்கள் மின்னஞ்சலில் குப்பையென  ஒதுக்கி வாசிக்காமல்விட்ட கடிதங்களைத் தேடிப்பிடித்து வாசிப்பதும், எவ்வித தேவையுமில்லை என்கிற கடிதங்களை எழுதுவதும், அம்மாதரியான கடிதங்களுக்கு வேலைமெனக்கெட்டு பதில் எழுதுவதும், வெகுநாளாக சந்திக்காதிருந்த நண்பர்களை போனில் தொடர்பு கொள்வதும், தன்னை யாரும் கண்டுக்கொள்ளவில்லையென கவலைப்படுவதுமென ரோஜெர் நிறைய காரணங்களை அடுக்குகிறார்.

ரோஜெர் எழுத்து நோய் முற்றிய நிலையில் அதன் சிக்கல்களை பேசுகிறார். எனக்கென்னவோ ஆரம்பநிலையிலியே இந்நோயை கண்டறியும் வாய்ப்பு தமிழில் இருக்கிறதென்பேன். உதாரணமாக பிள்ளை பருவத்தில் மண்ணைத் தின்று, அம்மண்ணும் கரிசல் காட்டுமண்ணாக இருந்து, குடித்தநீரும்  தாமிர பரணி தண்ணீராக இருந்தால் பின்னாளில் எழுத்துவியாதி வர 99 விழுக்காடுகள் சாத்தியமிருக்கிறது. பள்ளிக்குப்போகும் வயதில் பக்கத்துவீட்டு அக்கா உங்களை மாலைவேளைகளில் கோவிலுக்குத் துணைக்கு அழைத்து சென்றிருப்பாளா? அவள் கொடுத்த கடிதத்தை பத்திரமாக எதிர்வீட்டு மாமாவிடம் சேர்த்துவிட்டு அவர்கள் தயவில் எள்ளுருண்டையோ கடலைமிட்டாயோ வாங்கித் தின்றுவிட்டு கற்பனையில் மூழ்கி இருப்பீர்களா? இருபதுவயதில் காதல் கவிதை எழுதுவதுண்டா? சக நண்பர்கள் ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் என அலைந்தபோது நீங்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களை தேடியவரா? பணக்கார பெண்ணைப் பார்த்து திருமணம் செய்தோமா, வாழ்க்கையில் செட்டில் ஆனோமா என்றில்லாமல், உங்கள் எழுத்து நிராகரிக்கபட்டதென்பதற்காகவே சொந்த முதலீட்டில் சிற்றிதழ் சேற்றில் காலை விட்டிருக்கிறீகளா? வீட்டு நிர்வாகத்தை மனைவி ஏற்றுக்கொண்டிருக்க நேரத்தோடு இலக்கிய கூட்டத்திற்கு சென்று எழுத்தாள நண்பர்களிடையே உள்ள விருப்பு வெறுப்புகளை வெப்பமானியில் கணக்கிடுபவரா? உங்களுக்கு எழுத்து நோய் உண்டு உண்டு…

எழுத்துநோயிலிருந்து விடுபட என்ன வழி: ரோஜெர் வழிமுறை பஸ் ஸ்டாண்டிற்கு எதிரிலுள்ள ….லாட்ஜில் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் … சந்தியுங்கள் என்பதுபோல இருக்கிறது. சன்னல் பக்கம் நிற்பதையும், மாத்திரைகள் உபயோகத்தையும் தவிர்த்தால் அதுபோயே போய்விடும் என்கிறார். எனக்கென்னவோ அந்த நல்ல காரியத்தை சில எழுத்தாளர்களே உங்களுக்குச் செய்யக்கூடுமென்று தோன்றுகிறது. தவிர ‘இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது நான் ஒருவன் மட்டுமே’, என்ற எண்ணத்தை தவிர்ப்பதுகூட குணமடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாம். சில எழுத்தாளர்கள் (சம்பாதிக்கும் எழுத்தாளர்கள்) ஏற்கனவே கழுவிய காரை இரண்டாம் முறையாக கழுவியோ, தங்கள் தோட்டத்து புல்லை மீண்டும் ஒரு தடவை வெட்டியோ, சோர்ந்திருக்கும் வீட்டு நாயை மீண்டும் ஒருமுறை வெளியில் அழைத்து சென்றோ இந்நோயை தவிர்க்க முற்படுவார்களாம்.

நம் தமிழில் என்ன செய்கிறோம். நம்மையும் இந்த நோய் பீடிக்காமலில்லை, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை கையாளாமலும் இல்லை. சில நண்பர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதை தூசுதட்டி மறுபதிப்புக்கு சாத்தியமுண்டா என பதிப்பாளரை கேட்கிறார்கள். ஒரு சிலர் கேட்பதற்கு ஆளிருந்தால், “கேழ்வரகில் நெய்வடிகிறது”,  எனலாம் என்பதுபோல, “நேற்றிரவு பதினோருமணிக்கு நெடுங்கதை வணங்காமுடி போன் பண்ணினார், ஒரு மணி நேரத்திற்குமேல் என்னிடம் உரையாடியவர் “என்ன இருந்தாலும் உங்களைப்போல எழுதமுடியுமா? இன்றைக்கு நாங்கள் எழுதுவதெல்லாம், உங்களிடம்  கற்றதுதானே” என இவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கமாட்டார்களென நம்புவர்களிடத்தில் கதைவிடுவார். அவ்வாறில்லையா? ஈவ்னிங் ஸ்டார் போன் போட்டு தானெழுதியுள்ள பாடலைக்குறித்து எனது அபிப்ராயத்தைக்கேட்டாரென முக நூலில் எழுதுகிறவர்களுமுண்டு. வேறு சில நண்பர்கள் அத்திப்பட்டில் ஆரம்பித்து அண்டார்ட்டிக் வரையில், அகில உலக எழுதாக் கவிதை விருது, ஞாயிற்றுகிழமை பெருங்கதை விருதென்று தங்களுக்குள்ள ‘நெட் வொர்க்’கால் பெற்றிருப்பார்கள், எவ்வித கூச்சமுமின்றி ஆஸ்துமா நோயாளிபோல மூச்சிறைக்க அதனை விநியோகித்துக்கொண்டிருப்பார்கள்.

ரோஜெர் கைப்பக்குவத்தில் மருந்தொன்றை தயாரித்திருக்கிறார். அது அவருக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கிறது. எழுத்து வியாதியிலிருந்து தப்பிக்க சமைலறைக்குள் புகுந்து விடுவாராம். விதவிதமாக சமைப்பாராம். அதுபற்றிய புத்தகங்களையும் உடனுக்குடன் எழுதுவாராம். அவர் கூறும் யோசனை எழுத்துநோய் முற்றிய நிலையில் நிவாரணம் வேண்டுமெனில் வேறு படைப்பு துறைகளில் இறங்குவது நல்லது. அது ஓவியம், சிற்பம், சமையல், தோட்டக்கலை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பிற எழுத்தாளர்களைப்பார்த்து வயிறு எரிந்து, இதயவலியால் துடிப்பதைக்காட்டிலும் உகந்த வழிமுறை.

ரோஜெர் சொல்கிற எழுத்துநோய் உண்மையில் நமக்குண்டா அல்லது  வருவதற்கான சாத்தியங்கள் உண்டாவென்று எனக்குத் தெரியாது.  எழுதிக்கொண்டிருக்கையில் சட்டென்று சோம்பல் நம்மிட கைகோர்க்கிறதென்பது உண்மை. அச்சோம்பல்தான் எழுத்து நோயாவென்றும் தெரியாது. நமது மூத்த எழுத்தாளர்களில் பலர் இனி நான் எழுதுகோலை தொடமாட்டேன் என சத்தியம் செய்து சம்பாதித்த புகழை கட்டிகாப்பதற்கு வழிமுறைகளென்ன என்ற கவலையில் மூழ்கியிருக்க மேலை நாடுகளில்  எண்பது, தொண்ணூறு வயதிலும் எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறேன். எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவரவர் பணியில் முடக்கம் ஏற்படுவது இயற்கைதான். கல்லூரியில் பாடம் எடுத்ததுபோதும், மாலை ஆறுமணிக்கு மேல் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து பிழைக்கபோகிறேன் என்கிற பேராசிரியர்களுக்கும், பகல் முழுக்க கட்சிகாரர்கள், கோர்ட், வாய்தா என அலைந்து அலுத்துவிட்டது இனி ஓர் அரசியல் கட்சியில் தேர்ந்து தேர்தலில் நிற்கப்போகிறேன் என்கிற வழக்கறிஞர்களுக்கும் வரும் நோய்கூட அவ்வகையில் ஒரே இனம் தான்.

ஆக மீண்டும் எழுத்தைக் கையிலெடுப்பதுதான் எழுத்து நோயிலிருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழிமுறை.கந்துவட்டி பேராசிரியரைப்போல, அரசியற்களமிறங்க நினைக்கும் வழக்கறிஞரைப்போல, எழுத்தாளர்களும் இன்னொரு  நிலத்தில் கால்பதித்து அங்கேயும் அலுத்து நாளை மற்றொன்றை தேடி எதிலும் நிறைவுறாமற் தேய்ந்து கரையலாம். ஆனால் எந்தத் தொழில் செய்தாலும் நான் தனித்தவன் என்ற உணர்வு இல்லாவிட்டால் எப்படி? புகழுக்கும் விருதுக்கும் தகுதிவேண்டாமா? தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள் இருக்கலாம், ஆயிரக்கணக்கில் வழக்குரைஞர்கள் இருக்கலாம் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நாடறிந்தவர்களாக இருக்கிறார்கள். எழுத்திலும் அதற்கான சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன. எழுத்து வியாதி எழுதத் தூண்டுகிற வியாதியாக இருக்கவேண்டுமேயன்றி எழுதாமல் உங்களை முடக்கும் வியாதியாக இருக்கக்கூடாது. என்ன செய்யலாம்? எனக்குத் தெரிந்த வழி தொடர்ந்து எழுதுவது. கணினி முன் உட்காருங்கள், கூடாத காரியங்களை ( ரோஜெர் சொல்வதுபோல அர்த்தமற்ற கடிதங்களை தேடிப் படிப்பது, கூடாத காரியங்களில் கவனம்  என்றெல்லாம் வேண்டாம். உங்கள் எழுத்தில் புதிதாய் என்ன சேர்க்கலாம் என்று யோசியுங்கள் அது உத்தியாக இருக்கலாம், மொழியாக இருக்கலாம், கதை சொல்லலாக இருக்கலாம். சக நண்பர்கள், வாசகர்கள் உங்களைவிட புத்திசாலிகள் என்பது எப்போதும் நினைவிலிருக்கட்டும், எழுதுங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள்…

————————————————–

நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துலகம்

முனைவர் மு.இளங்கோவன்

தமிழ் இலக்கியங்களை உலகத் தரத்திற்கு எழுதவேண்டும் என்ற முயற்சியில் எழுத்தாளர்கள் பலர் பலவகையில் முயற்சி செய்கின்றனர். தமிழக எழுத்தாளர்களின் முயற்சியைப் போலவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் முயற்சிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவ்வகையில் புதுச்சேரியில் வாழ்ந்து, தற்பொழுது பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தமிழ் இலக்கியப்படைப்புகளை இக்கட்டுரை அறிமுகப்படுத்துவதுடன் அவரின் படைப்புகள் சிலவற்றை மதிப்பிடவும் முனைந்துள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டுக்கு அருகில் உள்ள கொழுவாரி என்ற ஊரில் 07.01.201952 இல் பிறந்தவர். பெற்றோர் இராதாகிருஷ்ணன் பிள்ளை, இந்திராணி அம்மாள். புதுவை காலாப்பட்டு பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். சென்னையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் இளங்கலைப் பொருளியல் படித்தவர் (1972).

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் படித்தவர். தொடக்கத்தில் விக்சு நிறுவனத்தின் முகவராக மூன்றாண்டுகள் பணியாற்றியவர். பின்னர் வருவாய்த்துறையில் புதுச்சேரியில் எழுத்தர் பணியாற்றினார். பின்னர்த் துணை வட்டாட்சியர் பணியில் இணைந்தார். கென்னடி டுட்டோரியல் கல்லூரியில் பணி, பின்னர் புதுவையின் அல்லயன்சு பிரான்சுவேயில் பிரெஞ்சு பயின்றார். துணிவணிகத்தில் சில காலம் ஈடுபட்டிருந்தார்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குத் தமிழாசிரியர் புலவர் நாகி அவர்களால் தமிழ் ஈடுபாடு உருவானது. பள்ளியில் எண்ணம் என்ற கையெழுத்து ஏட்டை நடத்தினார். 1973 முதல் கிருஷ்ணா என்ற பெயரில் எழுதினார். குமுதம், இராணி, குங்குமம் போன்ற ஏடுகளில் இவரின் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. 1977 இல் இவருக்குத் திருமணம். மனைவி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். 1985 இல் பிரான்சுக்குச் சென்றார். அங்குச் சென்று கணக்கியல் பட்டயப் படிப்பு முடித்தார். மூன்று ஆண்டுகள் நகர் மன்றத்தில் உதவிக் கணக்காளராகப் பணிபுரிந்தார். 1991 இல் மளிகைக்கடை வைத்து வணிகம் நடத்தினார். 1999 வரை இவர் எழுத்தில் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து வாசிப்புகளில் ஈடுபட்டிருந்தார்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் நிலா என்ற இதழினைத் தொடங்கி நடத்தினார். 1999 முதல் 2002 வரை இந்த இந்த இதழ் வெளிவந்தது. ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா. துணை ஆசிரியர் பாலகிருஷ்ணன். தமிழில் இணைய இதழ்கள் தோற்றம்பெற்ற சூழலில் தொடர்ந்து இணைய இதழ்களில் எழுதத்தொடங்கினார். மின்னம்பலம், ஆறாம்திணை, திண்ணை போன்ற புகழ்பெற்ற இணைய இதழ்களில் எழுதத் தொடங்கினார்.

 நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள்

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று பல வடிவங்களில் படைப்புகளை வழங்கியுள்ளார். இவர்தம் படைப்புகளில் நாவல்கள் பலவும் பல்வேறு சோதனை முயற்சிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே நேர்கோட்டில் கதை சொல்வதிலிருந்து விலகி, நூற்றாண்டுகளைக் கடந்தும், நாடு கடந்தும், கண்டம் கடந்தும், பண்பாடு நாகரிகம் கடந்தும் இவர்தம் கதைகள் அமைந்துள்ளன. காலத்திற்கு அமைந்த மொழிநடையைக் கையாண்டு படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

கதைக்கருக்களைத் தேர்வு செய்தல், செய்தி சேகரிப்பு, விவரிப்பு என்று ஒவ்வொன்றிலும் இவர் கவனம் செலுத்தியுள்ளார். கற்பனைகள் நிறைந்த மொழிநடையும், உவமை உருவக உத்திகளும் இயல்பாக இவர் புதினங்களில் மின்னி மிளிர்கின்றன. பன்மொழியறிவும், பன்னூல் பயிற்சியும் வாழ்க்கை குறித்த தெளிவும், மானுடத்தை நேசிக்கும் இயல்பும், பழைமையிலிருந்து புதுமையை உருவாக்க வேண்டும் என்ற உந்துதலும் இவர் படைப்புகளைச் செழுமையடையச் செய்துள்ளன. பழைய வரலாறுகளையும் சம்பவங்களையும் பொருத்தமான இடங்களில் பொருத்திக்காடியுள்ள இவரின் செய்நேர்த்தி வியக்க வைக்கின்றது. கற்பனை, வெளியீட்டில் மிகைப்படுத்தல் சிலவிடங்களில் தலைகாட்டினாலும் அவை படைப்பின் வேகத்தைத் தடுக்கவில்லை.

கப்பல்களின் போக்கு, காற்றடிக்கும் திசை, கடந்த நூற்றாண்டுகளில் அமைந்த கடற்பயண அனுபவங்களை உள்வாங்கி இவர் வரைந்துள்ள போக்கினைப் படிப்பவர்கள் வியக்காமல் இருக்கமுடியாது. இந்திய வரலாறு, பிரெஞ்சுநாட்டு வரலாறு, மொரீசியசு நாட்டு வரலாறு இவர் நாவல்களில் பொதிந்து கிடப்பதுபோல் உலக வரலாறுகளும் அங்கங்கு புலப்படுகின்றன.

வரலாற்றுப் புதினங்களில் கதையை மட்டும் நகர்த்தாமல் உரிய இடங்களில் வரலாற்றை எழுதிச் செல்வதும் இவரின் பாணியாக உள்ளது. கடல்கடந்த தமிழர்கள் ஒவ்வொரு நாடுகளில் எவ்வாறு கடும் உழைப்பில் அந்தந்த நாட்டை வளப்படுத்தினர் என்பதை நாவலில் மிகச்சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் இன்று தொழில் நிமித்தமும், பணி நிமித்தமும் செல்வதுபோல் இல்லாமல் பல சூழ்நிலைகளால் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதை இவர் நாவல்களால் அறியலாம்.

பசி, பஞ்சத்திலிருந்து தப்பிக்கவும், வெளிநாட்டார் அல்லது கண்காணிகளின் பசப்பு வார்த்தைகளாலும் பலர் வெளிநாடு சென்றுள்ளனர். சிலர் இங்குத் தவறு செய்துவிட்டுத் தண்டனைகள் அல்லது சமூக அடக்குமுறைகளுக்கு அஞ்சிச் சென்று நாடு திரும்பாமல் இறந்த செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுபோல் அயல்நாட்டுக்காரர்களைத் திருமணம் செய்துகொண்ட தமிழ்ப்பெண்கள், வெளிநாட்டுப் பெண்களை மணந்துகொண்ட தமிழக ஆண்கள் பற்றிய பல குறிப்புகளை இவர் புதினத்தில் காணமுடிகின்றது. தமிழர்களிடம் காலம் காலமாக இருந்துவரும் அடிமை உணர்வு, காட்டிக்கொடுக்கும் இயல்பு, நன்றி மறவாமை யாவும் இவர் புதினத்தில் இடம்பெற்றுள்ளன.

மொழிவது சுகம் என்ற தொடரை வாரந்தோறும் எழுதினார். இதில் வாரந்தோறும் தம் எண்ணங்களைப் பதிவுசெய்தார். சிந்தனை மின்னல்கள் என்ற குறிப்புடன் இந்தத் தொடர் நூலாக வெளிவந்துள்ளது. 24 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் பயனுடைய பல செய்திகள் உள்ளன. வெளிநாடுகளில் நூல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் மதிப்பீடுகளைப் படிக்கும்பொழுது எந்த அளவுக்குப் பரிசுக்குரிய நூல்கள் வாசிக்கப்படுகின்றன என்ற வியப்பு ஏற்படும். சமகால நடப்புகளைத் தீவிரமாக எண்ணி எழுதியுள்ள மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பிரான்சு நாட்டின் அரசியல், சமூகம், கலை, இலக்கிய முயற்சிகள் ஆசிரியரால் இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன. வாரந்தோறும் எழுதிய சிந்தனைகள் என்று அடக்கிவிடமுடியாதபடி தகவல்களின் களஞ்சியமாகவும், விவாதங்களின் தொகுப்பாகவும் பல கட்டுரைகள் உள்ளன.

வணக்கம் துயரமே என்ற நூல் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். 16 வயது பெண் தன்னுடைய அனுபவங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொள்வதாக உள்ள நூலாகும். பிரான்சில் அதிகம் விற்பனையான நூல் இதுவாகும். 160 பக்கம் கொண்ட நூல் நாகரத்தினம் கிருஷ்ணாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

காதலன் என்ற நாவல் பிரெஞ்சுப்புரட்சியை ஏற்படுத்திய நாவலின் மொழிபெயர்ப்பு வடிவமாகும். இளம் பெண்ணொருத்தித் தன் அனுபவங்களைக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.

மார்க்சின் கொடுங்கனவு என்னும் நூல் மூலதனம் நூல் பற்றிய விமர்சனமாகும்.

உலகங்கள் விற்பனைக்கு என்ற நூல் (அதிர்வுக்கதைகளின் தொகுப்பு) பிரெஞ்சிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட நூலாகும். இந்த நூலின் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும்.

கிருஷ்ணப்ப நாயக்கன் கௌமுதி என்னும் நாவல் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கன் என்பவனின் வரலாற்றைச் சொல்லும் புதினமாக வெளிவந்துள்ளது. செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்லும் வகையில் அக்காலத் தமிழக நிலையைச் சிறப்பாக இந்தப் புதினத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புதினத்தின் கதை இருபதாம் நூற்றாண்டுக்கும் பதினாறும் நூற்றாண்டுக்குமாகத் தாவித் தாவி நடக்கின்றது. செஞ்சி பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் பல அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாகச் செஞ்சியின் வரலாற்றை நினைவுகூர்ந்தாலும் அக்காலப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளை நூலாசிரியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதியில் சிதம்பரம் தீட்சிதர்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் கோவிந்தராசனுக்குச் சிலைவைக்கக் கூடாது என்று எதிர்ப்பைத் தெரிவித்து கோயில் கோபுரத்திலிருந்து வீழ்ந்து இறந்த செய்தியை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூலில் பழைமையும், புதுமையும் கலந்தபடி செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. படைப்பாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா அக் காலத்துக்குத் தகுந்த மொழிநடையைப் படைக்கும் நோக்கில் மிகுதியான சமற்கிருதச் சொல்லாட்சிகளை ஆண்டுள்ளார். சமகாலப் புதுச்சேரி வாழ்க்கையும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நீலக்கடல்

நீலக்கடல் என்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புதுச்சேரியைக் கைப்பற்றி ஆட்சி செய்த பிரெஞ்சியர்களைப் பற்றியும், பிரெஞ்சு தேசமாக விளங்கிய புதுச்சேரியிலிருந்து மொரீசியசு தீவுக்குச்(பிரெஞ்சு தீவு) சென்ற மக்களைப் பற்றியும் சிறப்பாக விவரிக்கின்றது. கடந்த காலங்களை விவரிப்பதுடன் அமையாமல் தற்கால புதுவை அரசியல் வரை இந்த நாவலில் செய்திகள் பதிவாகியுள்ளன. மொரீசியசு வரலாற்றை விவரிக்கும் முதல் தமிழ் நாவலாக இதனைக் குறிக்கலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் நீலக்கடல் நாவலில் பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளார். மக்களுக்கு வரலாற்று அறிவைக் கதைப்போக்கில் தந்துள்ளார். தாம் பயின்ற இந்திய வரலாறு, உலகவரலாறு, ஆன்மீக, வேதாந்த, சித்தாந்த சாத்திரங்களை இந்த நாவலில் தேன்தடவிய கனிபோல் தந்துள்ளார்.

முன்பு வெளிவந்த வரலாற்று நாவல்கள் என்பவை அரசன், குறுநில மன்னன் வீரதீரங்களை மட்டும் பேசும். சராசரி மக்களின் வாழ்க்கையை எதிரொலிக்காது. அரசியர்களின் அந்தப்புர வாழ்க்கை, பற்றிய செய்திகளையும் மிகைக் கற்பனைகளையும் கொண்டிருக்கும். உழைக்கும் மக்களின் துன்பம் மருந்துக்கும் இருக்காது. ஆனால் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் நாவலில் சாதாரண மக்களும் கதைப்பாத்திரங்களாக உலா வருகின்றனர். கொல்லாசாரியார்களும், தச்சாசாரியார்களும் உலவுகின்றனர். கிராமத்து மருத்துவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக உலவிக் கதையை நகர்த்துகின்றனர். திருப்புமுனைகள், அதிர்ச்சிகள் நாவலில் இடம்பெற்றுப் படிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றன.

பழமொழிகளும், சமயச்செய்திகளும், புராண இதிகாசச் செய்திகளும், ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்புச் செய்திகளும், இலக்கிய மேற்கோள்களும், வரலாற்றுக் குறிப்புகளும் உரிய இடங்களில் பக்குவமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடம் காலம் காலமாகப் படிந்துகிடக்கும் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை மிக நுட்பமாகத் தம் புதினத்தில் பதிவுசெய்துள்ளார்.

மக்களிடம் இருந்த பசி, பஞ்சம், கோப, தாபங்கள் பதிவாகியுள்ளன, மொரீசியசு தீவினை வளப்படுத்தத் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நேரில் கண்டுரைத்தவர்போல் இந்த நாவலில் கிருஷ்ணா பதிவு செய்துள்ளார். 520 பக்கத்தில் விரியும் நீலக்கடல் நாவல் தமிழில் வரவேற்கத் தகுந்த முயற்சியாகும். இந்த நாவலில் பிரெஞ்சு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் இடம்பெறுவதுபோல் அவர்களின் சொற்களும் மிகுதியாக ஆளப்பட்டுள்ளன. லஸ்கர், கும்பெனி, சொல்தா, போத்தல், குவர்னர், கப்பித்தேன், லெ பொந்திஷேரி, மிஸியே என்ற பல சொற்களின் ஆட்சியைக் குறிப்பிடலாம்.

நாவலில் கதை விவரிப்பு மட்டும் என்று அமையாமல் அக்காலத்தில் நிகழ்ந்த கப்பல் கட்டுமானம், கப்பல் செலுத்ததுதல், கப்பல் வாழ்க்கை, மாலுமிகளின் செயல்பாடுகள், கடல்பயணம், வணிகப்பொருள்கள், பிரெஞ்சுக்காரர்களின் மதுவிருந்து, காற்றின் வேகம், கரும்புவெட்டு, ஆப்பிரிக்கர் வாழ்க்கை, மொரீசியசு பழங்குடிமக்களின் வாழ்க்கை, மொரீசியசைப் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு உட்படுத்தியமை, பிரெஞ்சியர்கள் மக்களுக்கு வழங்கிய தண்டனைகள் யாவும் பதிவாகியுள்ளன.

புராணம், இதிகாசம், கூத்து, நாட்டுப்புறவியல் குறித்த பல செய்திகளைத் தாங்கியக் கருவூலமாக இந்த நீலக்கடல் நாவல் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வருணனைகள், அணி அமைப்புகள், பழமொழிகள் தனித்துக் கண்டு ஆராயத்தக்கன. “மூன்றாம் வகை நரகமான அந்ததாமிங்ரம் நரகம்” என்று மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.

“மெல்ல நிமிர்ந்ததும் வெட்கமுற்றவளாய், முகம் கவிழ்ந்து மெள்ளக் கதவடைத்துவிட்டு விடுவிடுவென்று உள்ளே போகத்தான் செய்தாள். ஆனால் இவன் மன வாசலைத் திறந்துகொண்டு கால்பதித்தவள் உள்ளத்துக்குள்ளே அல்லவா உட்கார்ந்துகொண்டாள்” (பக்கம்.465) என்று கற்பனையில் வரையும் நாகரத்தினம் அவர்களின் எழுத்துகளைத் தேர்ந்த வாசகர்கள் சுவைக்காமல் இருக்கமுடியாது. “துருவ நட்சத்திரத்தைக் குறிவைத்துப் பயணிக்கும் மரக்கலத்தினைப்போல, நெஞ்சம் அப்பெண்ணைக் குறிவைத்துப் பயணிக்கிறது”(பக்கம்.465). “சாவியைச் செருகித் திருப்ப எஞ்சின், அந்நிய மனிதனைக் கண்ட நாய்போல உர்ரென்றது” (பக்கம்.445) என்று உவமைகள் உரிய இடத்தில் சிறப்பாக ஆளப்பட்டுள்ளன.

காமாட்சி அம்மாள், தெய்வானை, கைலாசம், சில்வி, காமாட்சியம்மாள், பொன்னப்ப ஆசாரி, தேவராசன், காத்தமுத்து, வீரம்மா, பாகூர் உடையார், மனோரஞ்சிதம் அம்மாள், நீலவேணி, தானப்பமுதலியார், கனகராய முதலியார், வைத்தியர் சபாபதி படையாட்சி, பலராம் பிள்ளை, வேலாயுத முதலியார், ஆனந்தரங்க பிள்ளை, ஆதிகேசவலு ரெட்டியார், கம்மாளன் முருகேசன், மாறன், பரங்கிணி நடேசன், கேணிப்பட்டு கோவிந்தன், வேம்புலி நாயக்கர், சீனுவாச நாயக்கர், விசாலாட்சி, உள்ளிட்ட பல பாத்திங்கள் இடம்பெற்றுள்ளன.

அதுபோல் லாபூர்தொனே(பிரெஞ்சு தீவின் குவர்னர்), பெர்னார் குளோதான், துய்மா, துய்ப்ளே போன்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியை ஒட்டிய ஊர்களான முத்தியால்பேட்டை, வழுதாவூர், திருவக்கரை, பறங்கிப்பேட்டை, காரைக்கால்(அல்வா), கும்பகோணம், கடலூர், தொண்டைமாநத்தம், ஊசுடு ஏரி, வில்லியனூர், முத்தரையர்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களும் அதில் வாழும் மக்களும் இந்த நாவலில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஒரு வரலாற்றை மிக எளிமையாகக் கதைப்போக்கில் வெளியிட்டுள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்பு முயற்சி புதுமையாகவும், நேர்த்தியாகவும் அமைந்துள்ளது. புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர்கள் அடைந்த வரலாறு, ஆண்ட வரலாறு, மிகத்தெளிவாக எளிய நடையில் விளக்கப்புட்டள்ளன. வரலாறு, நாட்குறிப்பு, களப்பணி, வாய்மொழி மரப்புகளை உள்வாங்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். மொரீசியசு தீவில் தங்கியும் களப்பணியாற்றியும் செய்திகளைச் சேகரித்துள்ளார்.

தமிழகத்தின் ஏற்றப்பாட்டு, பழமொழிகள், உவமைகள் இந்த நாவலில் பொருத்தமாக ஆளப்பட்டுள்ளன.

 மாத்தா ஹரி

நாகரத்தினம் கிருஷணாவின் மற்றொரு அரிய படைப்பு மாத்தாஹரி புதினம் ஆகும். புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை என்ற குறிப்புடன் வெளிவந்துள்ள இந்தப் புதினம். பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்தப் புதினத்தை ஆசிரியர் படைத்துள்ளார். மாத்தாஹரி வேவுக்காரியாக அறியப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு 1917 இல் பிரான்சில் சுட்டுக்கொள்ளப்பட்டவள். மாத்தா ஹரி இராணுவவீரர்கள், இலக்கியவாதிகள், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள் எனப்பலரின் கனவுக்கன்னியாக இருந்தவள். அவள் வாழ்க்கையை மையமிட்டு பல படைப்புகள் பல வடிவங்களில் வெளிவந்துள்ளன. மாத்தா ஹரிக்குப் பிறகு பிரான்சுக்குப் போன பவானி, பவானியின் மகள் ஹரினியைப் பற்றிய கதையாக இந்த நாவல் உள்ளது.

மாத்தாஹரி, பவானி, ஹரினியின் வாழ்க்கை ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருப்பதை நாவலில் உணரமுடிகின்றது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள்

கட்டுரை
பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – (2005)
சிமொன் தெ பொவ்வார் – ஒரு திமிர்ந்த ஞானசெருக்கு (2008)
எழுத்தின் தேடுதல் வேட்டை- (2010)
கதையல்ல வரலாறு- 2013
மொழிவது சுகம் 2013
ஊர்ப்பேச்சு 2013

நாவல்

நீலக்கடல் (தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற நாவல்) 2005)
மாத்தா ஹரி (2008)
கிருஷ்ணப்ப நாயக்கர்கௌமுதி (செஞ்சி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல்) 2013

சிறுகதை

கனவு மெய்ப்படவேண்டும் -(2002)
நந்தகுமாரா நந்தகுமாரா -(2005)
சன்னலொட்டி அமரும் குருவிகள்-(2010)
சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது (அறிவியல் புனைகதைகள்))(2010)
மொழிபெயர்ப்பு

போர் அறிவித்தாகிவிட்டது- நவீன பிரெஞ்சு சிறுகதைகள் -(2005)
காதலன் – மார்கெரித் துராஸ் -பிரெஞ்சு நாவல் (2008)
வணக்கம் துயரமே – பிரான்சுவாஸ் சகாங் பிரெஞ்சு நாவல் -2009)
உயிர்க்கொல்லி (உலகச் சிறுகதைகள்- 2012

மார்க்சின் கொடுங்கனவு -டெனிஸ்கோலன் – 2012

உலகங்கள் விற்பனைக்கு (அதிர்வுக்கதைகள்) -2012

கவிதை
அழுவதும் சுகமே (2002)

நன்றி http://muelangovan.blogspot.in/

——————————–

சிற்றேடு ஏப்ரல் – ஜூன் காலாண்டிதழில் செய்தி:

சிற்றேடு ஏப்ரல் – ஜூன் காலாண்டிதழில் செய்தி:

திரு. தமிழவன் அவர்களை பொறுப்பாசிரியராகக் கொண்டு வரும் இதழ் ‘சிற்றேடு’ அவ்விதழில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவல் வெளியீடு குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.   அச்செய்தியை வெளியிட சிறிது தயக்கம். எனது நெருங்கிய இலங்கை நண்பர் மரியதாஸ் என்பவரிடம் கலந்து பேசினேன். எதற்காகத் தயக்கம் தாராளமாக வெளியிடுங்கள் என்றார். தமிழவன் ஏட்டில் வந்துள்ள செய்தி  புறம்தள்ளக்கூடியதா எனக் கேட்டார். தமிழவன் என்னை முன்பின் அறியாமலேயே  சிங்கப்பூர் இலக்கிய மாநாடொன்றில் வாசித்த கட்டுரையில் ‘மாத்தாஹரி நாவலை பாராட்டினார் என்பதை நவீன இலக்கியம் சார்ந்த நண்பர்கள் அறிவார்கள்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் புது நாவல் – செ.ஜெ.

மாத்தாஹரி என்ற மிகவும் வித்தியாசமான நாவலை எழுதி அனைத்துலகத் தமிழ் எழுத்து சார்ந்து புகழ்பெற்றுள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்க கௌமுதி’ என்ற நாவலில் வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் 26-1-2013 அன்று நடைபெற்றது. இந்த நாவல் ஒரு நாவலுக்குள் இன்னொரு நாவலாய் அமைப்புக்கொண்டிருக்கிறது. நாவல் வெளியீட்டுவிழாவில் கி.அ. சச்சிதானந்தம், கவிஞர் மதுமிதா, பேரா.விஜெயவேணுகோபால், எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன் ஆகியோர் பேசினர். ஆங்கிலப் பாதிப்புடன் தற்கால தமிழிலக்கியம் தோன்றியது. பிரெஞ்சு பாதிப்புத் தற்கால தமிழுக்குப் புதுத் தொனியையும் அழுத்தத்தையும் கொடுத்தது. பாரதிதாசன் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆனால் “புரட்சிகவி” என்ற கவிதை பற்றிய சில அபிப்ராயங்களைத் தவிர “பாரதிதாசனின் அமைப்பாக்கத்தில்” பிரெஞ்சு இலக்கிய பாதிப்பு பற்றிப் பாண்டிச்சேரியிலுள்ள தமிழாய்வுத் துறைகளில் ஆய்வு நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. நடக்கவேண்டும்.

எது எப்படி இருப்பினும், பிரெஞ்சு மொழியிலிருந்தும், பண்பாட்டிலிருந்தும் தமிழின் தற்காலத்தை வளப்படுத்த ஒருவர் கிடைத்துள்ளார் என்பது தமிழுக்கு யோகமாகும். (கடைசி சொற்கள் சி.சு. செல்லப்பாவுடையவை).

———————————————–

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு

1..இந்தியா – ஏப்ரல் 21 -கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு

ஏப்ரல் 12-13 காலச்சுவடு நண்பர் கண்ணன், கன்னியாகுமரியில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் கலந்துரையாடலுக்குப்பிறகு 17ந்தேதி புதுச்சேரியில் எனது சகோதரர்மகன் திருமணம். அதன் பிறகு நடந்த முக்கிய நிகழ்ச்சியெனில் செஞ்சியில் புதுவை ‘இலக்கியம்’ சீனு தமிழ்மணியின் நண்பர் பேராசிரியர் ஜெ. ராதாகிருஷ்ணன் என்கிற ‘நறுமுகை’ குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் கிருஷ்ணப்ப நாயக்கர் நூலை முன்வைத்து செஞ்சியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை சொல்லவேண்டும். திருச்சியிலிருந்து வந்திருந்த ந.முருகேசபாண்டியனுக்கும் மற்றவர்களுக்கும் ஓட்டலில் அறை, மதிய உணவு, நிகழ்ச்சியென அவ்வளவையும் குறிஞ்சி இலக்கியவட்டத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பார்வையாளர்களாக பேராசியர்கள், தமிழ் முதுகலை ஆய்வு மாணவர்கள், சிற்றிலக்கிய அபிமானிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேராசிரியர் க. பஞ்சாங்கம், ந. முருகேசபாண்டியன், திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனா ( இவர்  பேராசியர் அ. மார்க்ஸின் படைப்புலகத்தை முனைவர் தேர்வுக்கு ஆய்வுக்கு எடுத்துள்ளார், சிற்றிலக்கிய படைப்பாளி) ஆகியோரின் உரைகள் இருந்தன. மூவரின் உரையும் எனது எழுத்தை உயர்வாகவே மதிப்பிட்டிருந்தன. நவீன இலக்கிய உலகில் பேராசிரியர் க.பஞ்சாங்ககத்தையும், ந.முருகேசபாண்டியனையும் அறிந்தவர்கள் இருவரின் கருத்தையும் குறைத்து மதிப்பிட இயலாது. இன்றைய இலக்கிய சூழலில் பாரபட்சமற்ற விமர்சனத்தை வைக்கிற அரிதான ஒரு சிலரில் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களை அறிந்தோர்க்கு உண்மை புரியும். கிருஷ்ணப்ப நாயக்கர் குறித்த அவர்களின் மதிப்பீடு எனக்கு அரு மருந்து. உரைகளை ஒலிநாடாவில் பதித்து குறிஞ்சி வட்டம் இணைய தளத்தில் வெளியிடுவார்கள்.

Senji -5 JPGSenji -9 JPGSenji -10 JPGSenji -4 JPGSenji -2Senji -1
—————————

2. ஆளுமைகளுடன் சந்திப்பு.

இம்முறை சென்னை சென்று சந்திக்க நினைத்த எழுத்துலக நண்பர்களை கடுமையான வெயில் காரணமாக சந்திக்க இல்லை. திருவாளர்கள்:தமிழவன், எஸ். ராமகிருஷ்ணன், இந்திரன், பாவண்ணன், திலகவதி, திருப்பூர் கிருஷ்ணன், கி. அ. சச்சிதானந்தம், சந்தியா நடராசன்,மதுமிதா, சுதா ராமலிங்கமென திட்டங்கள் இருந்தும் வெயிலுக்குப்பயந்து சென்னை போகவில்லை. எனக்கு பெரும் இழப்பு. வருத்தங்கள் இருக்கின்றன.

அதை ஈடுகட்ட நண்பர் நாயக்கர், சீனு தமிழ் மணி உதவியால் சில ஆளுமைகளை புதுச்சேரியிலேயே சந்திக்க முடிந்தது. பெரியவர் கி.ரா., பேராசிரியர் க. பஞ்சாங்கம், ராஜேந்திர சோழன், ஜெயப்பிரகாசம் இச்சந்திப்புகள் குறித்து சிறிய தொடரொன்றை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசையிலிருக்கிறது. இவர்களைத் தவிர நண்பர் நாயக்கர், மு. இளங்கோ, சீனு.தமிழ்மணி, நறுமுகை ஆகியோரைப்பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.
———————————————-

எழுத்தாளனின் முகவரி -12: வரலாற்று நாவல்

உண்மையும் -புனைவும்

நன்கு அறியப்படாத (அறியப்பட்டதல்ல) வரலாற்றினை புனைகதையாகச் சொல்ல முற்படுபவதே ஒரு சரித்திர நாவல்.

சரித்திர நாவல் என்பது ஆதாரபூர்வமான உண்மைகளும், ஆசிரியனின் கற்பனைகளும் கலந்தது. இக்கலப்பு சீர்மையுடனும் ஒத்திசைவுடனும் நிகழ்த்தப்படுவது.  நன்கு அறியப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைகதை வடிவத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் பொதுவில் இருப்பதில்லை. வரலாற்று நாவலை எழுதுவதென்பது ஒரு சாதனை. கூடுதற் கவனம் வேண்டியிருக்கிறது. எது பற்றி எழுதுகிறோமோ அல்லது கதை சொல்ல ஆரம்பிக்கிறோமோ அது குறித்த முழுமையானப் பிழையற்ற தகவல்களை, முன்னதாக சேகரித்துக்கொண்டு அவற்றோடு இணைந்து கதையை நடத்தவேண்டும். சமூக புனைவுகளில் இவ்வித நியதிகளில்லை, அதனாற் சங்கடங்களும் குறைவு. சொற்களில் ஆளுமையும் கற்பனைத் திறனுமிருந்தால், எழுதிக்கொண்டுபோகலாம், “இடறி விழுந்தாலும்” அங்கே ‘கரடிவித்தை” எனச்சொல்லி சமாளிக்கும் திறனை எழுத்தாளனோ அல்லது அவன் ஏற்கனவே வாசகனிடத்தில் சம்பாதித்த புகழோ பெற்றிருப்பார்கள்.

சரித்திர நாவல் பிற நாவல்களைப்போலவே உண்மையும் புனைவும் கலந்தது. ஆனால் இதற்கு முந்தைய பத்தியில் குறிப்பிட்டதுபோன்று வரலாற்று புனைவில் இவ்வுண்மைகள் ஆதாரங்களைக்கொண்டதாக இருக்கவேண்டும். மாந்தர்கள் அவர்களோடு தொடர்புடைய சம்பவங்கள் என நேர்த்தி குலையாமால், வாசகனிடத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தித் தருதல் அதன் நோக்கம். காத்திரமான வரலாற்று நாவல்களில் இடம் பெறும் மாந்தர்கள் இரண்டுவகையினர்: முதல்வகையினர் நாவலாசிரியன் எழுத உட்காருவதற்கு முன்பாக தேடிஅலைந்த ஆதாரங்களிலிருந்துப் பெறப்பட்டவர்கள்; இரண்டாவது வகையினர் அவனது சொந்தக் கற்பனையிலிருந்து தருவிக்கப்பட்டவர்கள்.

Thomas Flemingதாமஸ் ·ப்ளிமிங் புகபெற்ற அமெரிக்க சரித்திர புனைகதை ஆசிரியர், The Offocers wives என்கிற நாவலின் பூர்வீகத்தைப் பற்றி பேசுகிறார். தமது நான்காண்டுகால ராணுவ அக்காதெமி வாழ்க்கையின் போது அதிகாரிகளைப்பற்றியும் அவர்களுடைய மனைவிமார்களைப்பற்றியும் நிறையத் தெரியவந்ததாம், குறிப்பாக பெண்களின் நடை உடை பாவனைகள், அவர்கள் நடந்துகொள்ளுவிதம், பழகும் முறைகள் ஆகியவற்றை அவதானித்து வந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அமெரிக்க படைகளைப்பற்றி, பெண்ணொருத்தியின் பார்வையில் இதுவரை சொல்லப்படாதது ஏன்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறார், இப்புதிய பார்வை ஒரு வரலாற்று நாவலுக்கு உதவுமென அவர் நினைத்தது வீண்போகவில்லை, கொரிய வியட்நாம் போருக்குப் பிந்திய அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை அவர் சொல்லியிருந்த முறை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. மனிதர்கள் காலத்தோடு வாழப்பழகியவர்களென்றாலும், அவர்களின் அடிப்படைப்பண்புகளில்  மாற்றங்கள் இல்லை. ஐம்புலன்களும், அவை நிகழ்த்தும் மாயங்களும் சாகாவரம் பெற்றவை. மனிதர்களின் பசியும், அன்பும், அழுக்காறும், அருளும், வாய்மையும், இன்னாசெய்தலும், காமமும் எக்காலத்திற்கும் பொருந்துபவை. ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலில் வரும் கிருஷ்ணப்ப நாயக்கரை நமது சமகால அரசியல்வாதியோடும், அதே நாவலில் வரும் செண்பகத்தை, அரசியல் வாதியின் மனைவியரில் ஒருத்தியாக மனதில் நிறுத்தி எழுதுகிறபோது, நாவலைக் கூடுதற் ஈடுபாட்டோடு என்னால் எழுதமுடிந்தது. ‘மாத்தா ஹரி’ நாவலில் முதல் உலகப்போரில் நியாயமின்றித் தண்டிக்கப்பட்ட ‘மாத்தாஹரி’க்கு, எனது உறவுக்காரப்பெண்ணொருத்தியின் வாழ்க்கை ஊடாக நீதி வழங்கினேன். புதுச்சேரியிலிருந்து வெளி நாடு வாழ்க்கைப்பற்றிய கனவுகளுடன் பிரான்சுக்கு வரும் பெண்களின் வாழ்க்கைமுறையை அந்நாவலிற் பயன்படுத்திக்கொண்டேன். இதுபோன்ற அணுகுமுறைகள் நாவலுக்கு நம்பகத் தன்மையையும் ஏற்படுத்தித்தருகின்றன.

 நடந்ததும் நடக்கவிருப்பதும்:

பொதுவாக கடந்தகாலமென்பது, நிகழ்காலத்தினும் பார்க்கக் கொடியது, கடுமையானது. கடந்தகால மனிதவாழ்க்கையின் இன்னல்கள், துயர்கள், இழைத்த தவறுகள், கற்ற பாடங்கள் ஆகியவற்றின் பொதுப்பலன்களே நிகழ்காலத்தில் பெற்றிருக்கும் நமது வளர்ச்சி. ஒரு தலைமுறை வாழ்க்கை, வருங்கால தலைமுறையின் நன்மைக்கு தன்னைப் பணயம் வைக்கிறது. பல இழப்புகளைச் சந்திக்கிறது. கடந்தகால வரலாற்றை மறுவாசிப்பு செய்வது, பின்வரும் சந்ததியினருக்கு எவ்வகையான வாழ்க்கைக்கு (இன்றைய நாம்)  உத்தரவாதம் தரப்போகிறோமென்பதை ஒருவகையில் உணர்வில் நிறுத்துவது. எக்காலத்திலும் வாழ்க்கையென்பது தடைகளின்றி களிமண்பூமியில் உருண்டோடும் நீர்த்தாரையாக இருந்ததில்லை. ஆங்காங்கே அதிர்வுகளையும் நடுக்கங்களையும்; யுத்தத்தையும் சமாதானத்தையும்; ஆக்கத்தையும் அழிவையும் கடந்தே ஆகவேண்டியிருக்கிறது. நெருக்கடிகள் வெயில் போலவும், கடும் பனிபோலவும் மனிதர் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவரவருக்குள்ள வாய்ப்பையும் ஆயுதங்களையும் கொண்டு களத்தில் அவற்றை உருவங்களாகவோ அருவங்களாவோ எதிர்கொள்கிறோம், நமது முன்னோர்களும் அதைச் செய்திருந்தனர். கடந்த காலத்திய நிகழ்வுகளையும், அவற்றின் பங்குதாரர்களையும் தேடிப்பெறுவதில் சரித்திர நாவலாசிரியர்களுக்கு இடையூறுகள் குறுக்கிடுவதில்லை. அவ்வாறு தேடிப்பெறும் தகவல்களூடாக நம்மைப்போலவே நமது முன்னோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பதும்; அவற்றின் முடிவுகளும் நமக்குத் தெரிய வருகின்றன, மாறாக சரித்திர நிகழ்வுகளில் பங்குபெற்ற நமது முன்னோர்களின் அலைச்சல்களென்ன -திட்டமிடல்களென்ன – குயுக்திகளென்ன என்பதுபோன்ற  நுணுக்கமான தகவல்கள் கிடைப்பதில்லை. கடந்த காலத்தின் இக்கோட்டை வாயிற்கதவைத் திறப்பதற்கு அசாதாரண பலமும், தந்திரமும் தேவைப்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் நம் மூதாதையர்கள் எவ்விதம் எதிர்கொண்டிருக்க முடியும் என்பதை அறிய அவர்கள் வாழ்க்கைக்குள் நம்மையும் இணைத்துக்கொள்ளுதல் அவ்வகையில் ஒரு தந்திரம். புனைவொன்றில் சாத்தியப்படும் இத்தந்திரத்தை வரலாறுகளில் காண்பதற்கில்லை. அக்பர் தானொரு சமயவிரோதியல்ல என நிரூபணம்செய்ய அவர் தேர்வு செய்த வழிமுறைகளிலொன்று இராஜபுதன பெண்ணொருத்தியை மணம் செய்துகொண்டது. பிற வழிமுறைகள் அக்பரின்  வரலாற்றை எழுத உதவலாம், ஆனால் அக்பரைப்பற்றிய புனைவொன்றை எழுத இராஜபுதனத்து பெண்ணை மணந்த தகவல் முக்கியமானது. அதனாற்றான் பல நேரங்களில் வரலாறுகள் நமக்குச் சோர்வைத் தருகின்றன. தவிரவும் அச்சோர்விற்கு பிரதான மனிதர்களிடம் மட்டும் வரலாறு கொள்ளும் அக்கறையும் ஒரு காரணம்.

வரலாற்று மாந்தர்களும் வரலாற்று புனைகதை மாந்தர்களும்:

இந்தியச் சுதந்திரப்போரென்பது காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் இவர்களைமட்டுமே கொண்டதா? ஆயிரம்பக்கங்களில் வரலாறு எழுதப்படுகிறபோதும் இவர்களின் வீர தீரங்களை மட்டுமே பேசுவது சராசரி மனிதர்களாகிய நமக்கு அலுப்பை தரவில்லையா? சுதந்திரப்போராட்டத்தின் போது இத்தலைவர்கள் வீட்டுப் பெண்கள் அதனை எப்படி எதிர் கொண்டார்கள், இச்சுதந்திர போராட்டத் தலைவர் ஒருவரின் எதிர் வீட்டுக்காரர் மன நிலையென்ன, அவர் இந்திய விடுதலைப்போரை ஆதரித்தாரா எதிர்த்தாரா? பெரு நகரங்களில் சரி, கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வாழ்ந்த மக்கள் கூட ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்கு போராடினார்களா? மாடசாமிகளும் தொப்புளான்களும், உள்ளூர் ஆண்டைகளிடம் கொத்தடிமைகளாக பலதலைமுறைகளாக இருந்தவர்கள், அவர்களுக்கு இந்த விடுதலையால் கிடைக்கும் இலாபமென்ன? இதையெல்லாம் வரலாறு சொல்லுமா? பேசியிருக்கிறதா? ஆக புனைவுகளில் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது. அக்கால அரசர்கள், கோவிலைக் கட்டினார்கள், குளத்தை வெட்டினார்கள், மான்யம் வழங்கினார்கள். எங்கிருந்து வழங்கினார்கள்? யாருடையப்பணம்? என்ற கேள்விகளைக்கேட்டு அதற்குரியப் பதிலை முன் வைக்கவேண்டும். நீலக்கடல் நாவலிலும் சரி, அண்மையில் வெளிவந்துள்ள கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலிலும் சரி வரலாறு நினைவுகூர்கிற ட்யுப்ளே, லாபொர்தெனே, ஆனந்த ரங்கப்பிள்ளை; கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோருக்கு ஈடாக மாடசாமி, தொப்புளான், தீட்சதர் போன்றோரை வைத்து பேசியிருக்கிறேன். ஒரு சிலரின் பிறப்பும், சூழலும் காலமும் அரியாசனத்தில் வைத்துக் கொண்டாடுகிறது, ஆனாலும் கொண்டாகும் அளவிற்கான எவ்விதச்சாதனையையும் அவர்களில் 95 விழுக்காட்டினர் செய்வதில்லையென்பது எனது தரப்பு வாதம்.  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியில் வரும் தொப்புளான் எதிர்பாராதவிதமாக வழிப்பறிக்குத் திரும்புகிறான், சராசரி மனிதனாக வாழ்க்கையை எதிர்கொண்டவன், வெள்ளந்தியாக ஐயோ தப்பில்லையா என யோசிக்கிறான், பின்னர் கிருஷ்ணப்ப நாயக்கரும் அதைத்தானே செய்கிறாரெனத் தன்னைச் சமாதானம் செய்துகொள்கிறான். இருபதாம் நூற்றாண்டிலும் எவ்வித மாற்றமுமின்றி வரலாறு திரும்ப எழுதப்படுவதைக் காண்கிறோம். கிருஷ்ணப்ப நாயக்கர் அன்று அரசர், இன்றைக்கு நம் கண்முன்னே ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கலாம். ஆக கிருஷ்ணப்ப நாயக்கர்களும் தொப்புளான்களும் வேறு பெயரில் இருக்கவே செய்கிறார்கள். இன்றைய வாசகர்களுக்கு கடந்த கால வரலாற்றில் மறைக்கப்படுகிற இதுபோன்ற (வரலாற்று) உண்மைகளைப் புனைவாகச் சொல்வது அவசியமாகிறது.  பொதுவில் சரித்திர நிறுத்தும் கதை மாந்தர்களுக்கு அதிகப்பக்கங்களை ஒதுக்குவதில்லை, அவர்களை முதன்மைப் பாத்திரங்களாக முன் நிறுத்தும் வழக்கமும் எனக்கில்லை. நீலக்கடல், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டிலும்  இதனை வழக்கமாகப் பின்பற்றியிருந்தேன்.

தாமஸ் ·ப்ளீமிங்க் நாவல்களில் தமது சண்டைக்காட்சிகளை விவரித்து சொல்வதை வரவேற்கிறார். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியை எழுதுகிறபோது அதன் முக்கியத்துவத்தை உணரத்தவறிவிட்டேன். அடுத்த நாவலில் அதை சரிசெய்யவேண்டுமென நினைக்கிறேன். சரித்திர நாவல் எழுதும் நண்பர்கள் தாமஸ் யோசனையைப் பின்பற்றலாம். ஜான் ஹெர்சே (John Hersey) கூற்றுப்படி வரலாற்றாசிரியர்கள் உண்மைகளையும்;  புனைகதை ஆசிரியர்கள் கற்பனைகளை சொல்லப் பிறந்தவர்கள். ஆனால் வரலாற்று புனவுகளை எழுதுகிறவர்கள் இந்நியதிக்குப் பொருந்த மாட்டார்களென்கிறார் தாமஸ் ·பிளிமிங். அவரைப் பொறுத்தவரை வரலாற்று புனவை எழுதுகிறவன், இவை இரண்டிற்கும் இடையில் இயங்கக்கடமைப்பட்டவன்.

———————————————————–

மொழிவது சுகம் – ஏப்ரல் 1 -2013

1. Lilas இலக்கிய பரிசு -2013

‘Prix Lilas’ (Lilac Prize) 2007ல் பிரான்சு நாட்டில் அறிமுகமான இலக்கிய பரிசு. பெண்படைப்பாளிகளுக்கென்று பெண்களால் ஏற்படுத்தப்பட்டது. நோக்கம் பெண்ணிலக்கியத்தை ஊக்குவிக்கவேண்டும். பிரெஞ்சு மொழியில் எழுதும் பெண்எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒன்றை தேர்வுசெய்து வருடா வருடம் பரிசு வழங்குகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ‘Orange Prize’ க்கு இணையானது. குழுவில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், ஆறாவது ஜூரி மட்டும் வருடத்திற்கொருமுறை புதுப்பிக்கப்படுகிறார். இவ்வருடத்தில் 12 புதினங்கள் போட்டியில் கலந்து கொண்டன. அவற்றில் ஆறு இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.  வெல்லும் படைப்பாளி 3000 யூரோவுக்கான காசோலையும், ‘Mont blanc’ தயாரிப்பில் பிளாட்டினமும் தங்கமும் கலந்ததொரு பேனாவும், பாரீஸில் புகழ் பெற்ற ‘Clossarie Des Lilas’ ரெஸ்ட்டாரண்டில் விருந்தும் பெறுகிறார். இறுதி பட்டியலில் இடம்பெறும் ஆறு பேரில் எனது வாக்கு ‘Sylvie Bocqui’ என்கிற பெண்மணிக்கு. Sylvieஇவர் ‘Strasbourg’ ஐச் சேர்ந்தவர் என்பது இரண்டாவது காரணம். முதற்காரணம் ‘Une saison’ நாவல், நட்சத்திர ஓட்டலில் ‘House Keeper’ ஆக வேலைபார்க்கும் இளம்பெண்ணொருத்தியின் தனிமையையும், அலுவலையும் பற்றி உரைக்கிறது. வாடிக்கையாளர்கள் புறப்பட்டுச்சென்றதும் ஒவ்வொரு அறையாக நுழைந்துவெளிவரும் பெண்ணின் நிழலுக்குள் அடைக்கலம் தேடியிருக்கும் அவளது தனிமையின் வெக்கை நம்மைச் சுடுகிறது. வெளிஉலகத்தைவிட்டு வெகுதூரத்தில் கனவில் வாழும் ஒருத்தியின் தினசரிகள் கதையாக நீளுகிறது. .

2. வாசித்ததில் மனதிற் பதிந்தவை:

அ. அகநாழிகை: பொன் வாசுதேவன் கவிதை

விசையுந்தி எம்பி நீர்வெளி மேல்வந்து
கணநேரம் காற்று சுவைத்து
சற்றே ஆறுதலுற்று நிஜமுணர்ந்து நீர் மீளும் மீன்

சிறுபாம்புக் குவியலென நகர்ந்தபடியிருக்கும்
நீர்ப்புல மேல்பரப்பாய்
ஓயுதலற்றுச் சிறகசைக்கும் கேள்விகள்

விழிகளின் உள்ளூடுருவி
அண்மையில் புலப்படும் அகத்தெளிவின் சலனங்கள்

சரிந்து நீண்டு கவிழ்ந்த இருளில்
மெல்லப் புதையும் நான்

கன்னம் நனையப் பரவி காது நுனி சிதறி
வெளியேறிக் கசியும் நீர்
உணர்த்தும் கால ஜென்மங் கடந்த புதிர்ப்பித்து

———————————-

ஆ. நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா -ஷாஜி

“நாம் பயன் படுத்தும் ஒலிக்கருவிகளில் கேட்கும் இசையின் தரமானது பதிவுசெய்யப்படதில் பாதியைக்கூட எட்டுவதில்லை” என கட்டுரையின் இடையில் வரும் வரிகளின் உண்மையை ஓரளவிற்கு அறிந்தவன். ஷாஜி அளவிற்கு இசை நுட்பத்தில் தேர்ந்தவல்லவென்றாலும், இசையை பாமரனாக அனுபவிப்பவன். பல்வேறு பழங்குடிமக்களின் பாடல்களிலிருந்து சீன நாட்டின் மரபான வாத்தியகருவி இசைவரை எதையும் விடுவதில்லை. வாசிப்பு- இசை- சினிமா மூன்றும் எனது ஆயுளை நீட்டிக்கத் தேவை. இசையில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கவேண்டிய கட்டுரை.

http://www.musicshaji.blogspot.fr/
—————————————————

இ. நினைவுத் தடங்கள் வே. சபாநாயகம்.

‘நான் இரசித்த முன்னுரைகள்’ தொடரில் திரு. வே.சபாநாயகம், வல்லிக்கண்ணன் தமது கடிதங்கள் தொகுப்பொன்றிர்க்கு எழுதிய முன்னுரையை பதிவு செய்திருக்கிறார். தகவற் தொடர்பு: தொலைபேசி-மின்னஞ்சல் -முக நூலென அருவ நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற இந்நாளில், ஊடகப்பொருள்கள் மட்டுமல்ல  அவற்றின் உள்ளடக்கமும் குறுகிவிட்டன. உணர்வுகளை உண்மையிற் பரிமாறிக்கொண்டதுபோக இன்றைக்கு அதே உணர்வுகளை ஓரிருவார்த்தைகளில் உதறிக்கொள்கிறோம் -. இன்றைய வாழ்க்கையின் தன்னலபோக்கினால் விளைந்திருக்கும் கெடுதல். மனித மனங்களை இணைப்பதில் கடிதங்களின் பங்கென்ன என்பதை, பதிவை வாசித்து அறியுங்கள்.

http://ninaivu.blogspot.fr/

ஈ. மழை -வண்னதாசன்
‘இன்று..ஒன்று..நன்று’  தொடரில், ‘மழை’ குறித்து வண்ணதாசன் எழுதியது  அவரது வலைத்தளத்தில் மறு பிரசுரம் கண்டுள்ளது. வண்ணதாசனல்ல,  கல்யாண்ஜி முகம் காட்டுகிறார். கடவுளே! இவர்களுக்கு மட்டும் எப்படி இதுபோல எழுத வருகிறதென பலரை நான் பொறாமையுடன் வாசிப்பதுண்டு, வண்ணதாசன் அவர்களில் முதல் வரிசைக்காரர். மனிதர் நிறைய எழுதவேண்டும். எனக்கும் மழை என்றால் மோகம். விரும்பி பலமுறை திரும்பத் திரும்ப வாசித்தேன்.

http://vannathasan.wordpress.com/
————————————————————————–

3. இந்தியா.. இந்தியா

திரும்பவும் இந்தியா செல்லவேண்டியிருக்கிறது, சொந்த வேலைகள், குடும்ப விசேடங்களென காத்திருக்கின்றன. ஏப்ரலில் இந்தியப் பயணமென்று முடிவானதால் அதற்கு முன்னதாக 2012க்கான கணக்கை முடிக்கவேண்டும். வருமான வரித்துறை பொதுவாக மே 1ல் பேலன்ஸ் ஷீட் அனுப்பவேண்டுல், நேரமினமையால் இப்போதே முடித்துவிடலாம் என உட்கார்ந்து இரவுபகலாக செய்யவேண்டியிருக்கிறது எழுத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இடையில் ஒருவாரத்திற்கு இணையத் தொடர்பு துண்டிப்பு ஏற்பட தலைவலி, இப்போதுதான் சிறிது மூச்சுவிடுகிறேன். இரண்டு நல்ல சிறுகதைகளை மொழிபெயர்த்து அம்ருதாவிற்கொன்றும், சிற்றேடுக்கு ஒன்றும் அனுப்பியிருக்கிறேன்.

————————————-