Category Archives: Uncategorized

மொழிவது சுகம் – மே 18 -2013

1. கான் திரைப்பட திருவிழா -2013

66 வது கான் திரைப்படவிழா இம்மாதம் 15,தேதியன்று  தொடங்கிவைக்கபட்டது. இவ்வருட பிரதம விருந்தினர் டைட்டான் புகழ் நடிகர் Leonardo di Caprio. தவிர அவருடைய ” The Great Gatsby” தொடக்க நாள் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்தது.  ஜூரிகள்: Steven Spielberg (USA), Christopher Waltz (Austria), Daniel Auteuil (France), Nicole Kidman ( Australia). முதலாவது ஜூரிகுறித்து புதிதாய் சொல்ல ஒன்றுமில்லை. மற்ற நால்வரும் நடிகர்கள். மே. 15லிருந்து -26 க்குள் போட்டியில் கலந்துகொள்கிற 20 படங்களை ஜூரிகள் பார்வையிட்டு பரிசுக்குரிய திரைப்படங்களை மே. 26ந்தேதி அறிவிப்பார்கள். ஆக 10 நாட்கள் கான் நகர La Croisette அவென்யுவில் திருவிழா. மிகப்பெரிய நடிகர் நடிகைகளென பெயரெடுத்துள்ள அனைவருக்கும் உள்ள கனவு என்றாவது ஒருநாள் தங்கள் வாழ்நாளில் கான் திரைப்படவிழா அரங்கின் சிவப்பு கம்பளத்தில் ஒரு முறை கால்பதித்திட வேண்டும்.

Monsoon Shootout – அமித்குமார்

Amid kumarஇவ்வருட கான் திரைப்படவிழாவில் அதிகாரபூவமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒர் முழுநீள இந்தியத் திரைப்படம் -Monsoon Shootout.  கலை இலக்கியமென்று காத்திரமாக இயங்குகிற Arte பிரெஞ்சு தொலைகாட்சி நிறுவனம், இப்படத்தைத் தயாரித்த நான்கு தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று. மற்ற மூன்று நிறுவனங்கள்: இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மன். படத்தின் இயக்குனர் அமித் குமார் ஏற்கனவே The Bypass என்ற குறும்படத்தின் மூலம் மேற்கத்திய திரைப்படவிமர்சகர்களின் பாராட்டுதலைப் பெற்றவர். இந்தியாவில் பிறந்து ஆப்ரிக்காவில் வளர்ந்த இவர், பூனா பிலிம் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் வார்ப்பு.

மான்சூன் ஷ¥ட் வழக்கமான இந்தியா மசாலா அல்லவாம். ஒரு பக்கம் புதிதாய் நியமனம்பெற்று வந்திருக்கும் காவலதிகாரி, இன்னொரு பக்கம் அவர் வேட்டையாடவேண்டிய கொடூர மனம் படைத்த நிழல் உலக தாதா. இருவரின் உள்ளுணர்வுகளை திரைக்கதையில் அழகாக இயக்குனர் வெளிக்கொணர்ந்திருக்கிறாராம். படத்தைக்குறித்து மேற்கத்திய இதழ்கள் வைத்திருக்கும் அபிப்ராயங்களை வாசிக்கிறபொழுது கண்டிப்பாக ஏதோ ஒரு பரிசை இப்படம் வெல்வது உறுதியென தெரிகிறது.
——————-

2. Mariage pour tous – Marriage for all

ஒரு வருடத்திற்கு முன்பு பிரான்சு அதிபராகப் பொறுப்பேற்ற சோஷலிஸ்டு கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து கொடுத்த வாக்குறுதி. அதன் படி கடந்த வெள்ளிகிழமை அதாவது 17/05/2013 அன்று பிரான்சுநாட்டு அரசியல் நிர்ணயசபை  ஓரின திருமண சட்டவரைவிற்கு தமது ஒப்புதலை அளித்தது. அதற்கு முன்பாக நாட்டின் நீதித்துறை அமைச்சர், அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதல் பெற்றதும் நாட்டின் ஒருபாலின திருமணம் ஜூன் மாதத்திலிருந்து அனுமதிக்கப்படுமென்று தெரிவித்திருந்தார். அதற்கேற்ப முதல் ஒருபாலினத் திருமணம் மே 29ந்தேதி மொன்பெலியெ என்ற நகரில் நடைபெற உள்ளது. நகர மேயர், ஆளுங்கட்சியைச்சேர்ந்த ஓர் இடது சாரி. மாறாக வலது சாரி கட்சிகள் இச்சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதால் அக்கட்சிகளின் மேயர்கள் தங்கள் நகரத்தில் இத்திருமணத்தை நடைமுறைபடுத்தமாட்டார்கள் என்று தெரிகிறது. இதற்கிடையில்  ஒருபாலினத் திருமணத்தை பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பதாகக் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. கத்தோலிக்க மதத்தில் தீவிர மதவாதிகள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இம்மாதம் 27ந்தேதி எதிர்ப்பாளர்கள் பிரான்சு நாடெங்கும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளார்கள்.
——-

3. இப்படியும் நடந்தது…

இம்மாதம் 4ந்தேதி பிரெஞ்சு தினசரியைப் புரட்டியபோது ஓர் வியப்புக்குரிய செய்தி.  ஒவ்வொரு நாளும் வலைப்பூவில் இடவேண்டுமென நினைத்து தள்ளிபோய்விட்டது. எழுதாமற்போனால் பிறவி எடுத்த பயனை அடையாமற்போய்விடுவேன் என்பதுபோல அச்சம்: பாரதத்தாய் மன்னிப்பாளாக. என்றாவதொரு நாள் இந்திய தேசத்திலும் இதுபோன்ற அதிசயங்கள் நடைபெற்றாகவேண்டுமென்ற வேண்டுதலுடன் எழுதுகிறேன்.

மே மூன்றாம்தேதி பாரீசிலுள்ள கிழக்குதிசை இரயில் சந்திப்பிற்கு பெண்மணி ஒருவர் சென்றார். அவர் செல்லவேண்டிய நகரம் நாட்டின் வடபகுதியிலுள்ள ரேன்ஸ் (Reims). குறிப்பிட்ட பிளாட்பார்மில் அந்த இரயிலை பிடிக்கவேண்டும். வந்தவர் எதிர்புறம் நின்றிருந்த அதிவேக இரயிலில் ஏறிவிட்டார் அது நான்ஸி நகருக்கு போகும் இரயில்.

இரயில் நகர்ந்தபோது அறிவிப்பை உள்ளே கேட்ட பிறகுதான் செய்திருக்கும் தவறு எவ்வளவு பெரியதென்ற உண்மை அப்பெண்மணிக்கு தெரியவந்திருக்கிறது. அழத் தொடங்கிவிட்டாராம். அருகிலிருந்த சகபயணிகள் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். நான்சி நகரில் இறங்கியதும் அவர் தங்குவதற்கும் மறுநாள் தங்கள் வாகனத்தில் ரேன்ஸ் நகரில் கொண்டு விடுவதாகவும் சமாதானம் செய்திருக்கிறார்கள். பெண்மணியோ தான் அன்று ரேன்ஸ் நகரில் இருக்கவேண்டிய நிப்பந்தத்தை தெரிவித்திருக்கிறார்.

சகபயணிகளில் ஒருவர் பிரச்சினையை பரிசோதகரிடம் தெரிவித்திருக்கிறார்.  பயணிகள், பரிசோதகரிடம் எட்டு கி.மீட்டரில்  வரக்கூடிய Champagne -Ardenne நிலையத்தில் இரயிலை நிறுத்த வாய்ப்புண்டா எனக்கேட்டிருக்கிறார்கள். பொதுவாக அதிவேக இரயில்கள் அங்கு நிற்பதில்லை. இந்த இரயிலும் மணிக்கு 240.கி.மீ வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.  பரிசோதகர் அடுத்த ஓரிரு நிமிடங்களில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொண்டார். 30 நொடிகளில் மேலிடத்து ஒப்புதல் கிடைத்ததாம்.  ரேன்ஸ் நகருக்குப்போய்க்கொண்டிருக்கிற இரயிலையும் ஒருசில நிமிடங்கள் Champagne -Ardenne நகரில் நிறுத்த ஏற்பாடு செய்தார்கள்.  அதன்படி  Champagne -Ardenne  இரயில் நிலையத்தில் இரு இரயில்களும் நிறுத்தப்பட்டு பயணியைப் பத்திரமாக ரேன்ஸ் நகருக்கு வழி அனுப்பிவைத்திருக்கிறார்கள். இப்பிரச்சினையால் பாரீஸ் -நாண்சி இரயில் வழக்கத்தைக்காட்டிலும் 3 நிமிடங்கள் தாமதமாக வந்துசேர்ந்ததைத் தவிர வேறு சங்கடங்கள் பயணிகளுக்கு இல்லையாம். ஆமென்.
—————

4. கடந்த வாரம் படித்த நூல்

நூல் பேராசிரியர் பஞ்சாங்கத்துடையது. பெயர். கி. ராஜநாராயணனின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும்.  இந்நூலில் மூன்று ஆளுமைகளை தரிசித்தேன். முதலாவது கி.ராஜநாராயணன், இரண்டாவதாக இராஜநாராயணனின் இயற்கை உபாசிப்பை மிக நுணுக்கமாக ஆய்ந்து, சொல்வேள்வி நடத்தும் பேராசிரியர், மூன்றாவதாக இந்நூலுக்கு முன்னுரை என்ற பெயரில் அமுதைப் பொழியும் பேராசிரியை  மீனாட்சியின் எழுத்து. கி. ராஜநாராயனனின் கிராமமும், அதன் மக்களும், பிற பங்குதாரர்களும் நமக்கு என்றுமே அலுக்காதவர்கள். அவர்களை பேராசிரியர் க. பஞ்சாங்கம் அறிமுகபடுத்துகிறபோது மேலும் உயர்ந்துவிடுகிறார்கள், அம்மாக்கள் கையளிக்கும் சோற்றுருண்டைபோல அவ்வளவு ருசி. தவிர அவரது தமிழ் ஞானம் நூலை பகுத்தாய்வுசெய்ய கூடுதலாகவே உதவி இருக்கிறது. இன்னொரு முறை கி.ரா. வின் எழுத்துக்களை தேடிபிடித்து வாசிக்க செய்திருக்கிறார். நமது நூலகத்தில் அவசியம் இருக்கவேண்டிய நூல். .
—————————————————————–

எழுத்தாளன் முகவரி -13: எழுத்து வியாதி

roger-caras_KKwkdRoger A. Caras ஓர் எழுத்தாளர், விலங்கு அபிமானி. விலங்குகளைக்குறித்து நிறைய புத்தகங்களை எழுதிக் குவித்திருக்கிறார். அமெரிக்காவின் முக்கிய தொலைகாட்சி நிறுவனங்களில் பறவைகள், விலங்கு சம்பந்தமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்திவந்திருக்கிறார். திரைப்படத் துறையையும் விட்டுவைக்கவில்லை. நாய், பூனை ஆகியவற்றிர்க்கு நீங்கள் அபிமானியெனில்  Cat is watching, Dog is listening என்ற அவருடைய இரண்டு நூல்களும் உங்களுக்குத் தேவைப்படலாம். விலங்குகளை மையமாக வைத்து ஒன்றிரண்டு புனைவுகளையும் படைத்திருப்பதாக அறிகிறேன். இந்த ரோஜெர்தான் எழுத்து வியாதி பற்றி பேசுகிறார். ஆங்கிலத்தில் Writer’s block என்று பெயராம். மருத்துவ நூல்களில் இந்நோய் பற்றிய மேல்விபரங்கள் கிடைக்காதென்று  எச்சரிக்கவும் செய்கிறார்.  நண்பர்கள் யாரேனும் இப்பெயரை முன்னதாக அறிந்திருக்கலாம். அவர் கட்டுரை ஒன்றை படிப்பதற்கு முன்பாக நான் அறிந்ததில்லை. இந் நோய்க்கு ஆளாகாதவர் எழுத்தாளரே இல்லை என்று ரோஜெர் துண்டைப்போட்டுத் தாண்டுகிறார்.

இவ்வியாதிக்கான அறிகுறிகளென்ன? எப்படி தெரிந்துகொள்வது? எந்தப் பரிசோதனைசாலைக்குச்சென்று இரத்த பரிசோதனை செய்துகொள்ளலாம்? பொது மருத்துவர்களே போதுமா அல்லது நிபுணர்களை பார்க்கவேண்டுமா? என்று சில கேள்விகள் உங்களைப்போலவே எனக்கும் இருந்தன. பெயரேதுமில்லாமலேயே வதைக்கும் நோய்களை நாம் அறிவோம், இப்படி புதுப்புது பெயர்களில் வெருட்டும் நோய்களும் இன்னொரு பக்கம். தமிழிலக்கியத்தில் பசலை நோய் என்று ஒன்றுண்டு. இன்றுவரை அது என்ன நோயென்று நான் விளங்கிக்கொண்டதில்லை. படித்தவற்றில் சொல்லப்பட்ட விளக்கங்களெல்லாம் எங்கள் ஊரில் பேயோட்டும் பண்டாரம் சொல்வதுதான். ரோஜெரின் Writer’s blockஐயும் அப்படி யொரு பசலை நோய் இனத்தில் சேர்த்துக்கொண்டேன். எழுத்துவியாதி: தொத்துவியாதியா, பரம்பரை வியாதியா? மனநோயா? உடல் நோயா? குணப்படுத்தகூடியதா? அல்லோபதிக்கு இணங்குமா சித்தவைத்தியமே போதுமா? எனது சிற்றறிவுக்கு உட்பட்டு ஒன்றிரண்டு விளக்கம் கொடுப்பதற்கு முன்பாக எழுத்து வியாதி, தொத்து நோய் அல்ல என்பதை உறுதிப்படுத்த இயலாதென்றாலும்,  அதொரு பரம்பரை வியாதியுமல்ல. .

இந்த எழுத்துவியாதிக்கு ரோஜெர் தரும் விளக்கம் அந்நோய் மன அழுத்தம், சித்தபிரமை, தன்னிரக்கம், தசைபிடிப்பு என எல்லாம் கலந்த ஓர் கலவை. அது நமக்கிருக்கிறதா இல்லையா என்பதை எப்படி தெரிந்துகொள்வதாம்? உங்கள் மேசையில் சிறிய அளவு பேப்பர் கிளிப்புகளை ஒரு பக்கமும், பெரிய அளவு பேப்பர் கிளிப்புகளை இன்னொரும் பக்கமும் என சேர்க்க ஆரம்பித்தல் நோய்க்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் என்கிறார். அடுத்த அறிகுறி இதுநாள்வரை உங்கள் மின்னஞ்சலில் குப்பையென  ஒதுக்கி வாசிக்காமல்விட்ட கடிதங்களைத் தேடிப்பிடித்து வாசிப்பதும், எவ்வித தேவையுமில்லை என்கிற கடிதங்களை எழுதுவதும், அம்மாதரியான கடிதங்களுக்கு வேலைமெனக்கெட்டு பதில் எழுதுவதும், வெகுநாளாக சந்திக்காதிருந்த நண்பர்களை போனில் தொடர்பு கொள்வதும், தன்னை யாரும் கண்டுக்கொள்ளவில்லையென கவலைப்படுவதுமென ரோஜெர் நிறைய காரணங்களை அடுக்குகிறார்.

ரோஜெர் எழுத்து நோய் முற்றிய நிலையில் அதன் சிக்கல்களை பேசுகிறார். எனக்கென்னவோ ஆரம்பநிலையிலியே இந்நோயை கண்டறியும் வாய்ப்பு தமிழில் இருக்கிறதென்பேன். உதாரணமாக பிள்ளை பருவத்தில் மண்ணைத் தின்று, அம்மண்ணும் கரிசல் காட்டுமண்ணாக இருந்து, குடித்தநீரும்  தாமிர பரணி தண்ணீராக இருந்தால் பின்னாளில் எழுத்துவியாதி வர 99 விழுக்காடுகள் சாத்தியமிருக்கிறது. பள்ளிக்குப்போகும் வயதில் பக்கத்துவீட்டு அக்கா உங்களை மாலைவேளைகளில் கோவிலுக்குத் துணைக்கு அழைத்து சென்றிருப்பாளா? அவள் கொடுத்த கடிதத்தை பத்திரமாக எதிர்வீட்டு மாமாவிடம் சேர்த்துவிட்டு அவர்கள் தயவில் எள்ளுருண்டையோ கடலைமிட்டாயோ வாங்கித் தின்றுவிட்டு கற்பனையில் மூழ்கி இருப்பீர்களா? இருபதுவயதில் காதல் கவிதை எழுதுவதுண்டா? சக நண்பர்கள் ராஜேஷ்குமார், ரமணி சந்திரன் என அலைந்தபோது நீங்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றவர்களை தேடியவரா? பணக்கார பெண்ணைப் பார்த்து திருமணம் செய்தோமா, வாழ்க்கையில் செட்டில் ஆனோமா என்றில்லாமல், உங்கள் எழுத்து நிராகரிக்கபட்டதென்பதற்காகவே சொந்த முதலீட்டில் சிற்றிதழ் சேற்றில் காலை விட்டிருக்கிறீகளா? வீட்டு நிர்வாகத்தை மனைவி ஏற்றுக்கொண்டிருக்க நேரத்தோடு இலக்கிய கூட்டத்திற்கு சென்று எழுத்தாள நண்பர்களிடையே உள்ள விருப்பு வெறுப்புகளை வெப்பமானியில் கணக்கிடுபவரா? உங்களுக்கு எழுத்து நோய் உண்டு உண்டு…

எழுத்துநோயிலிருந்து விடுபட என்ன வழி: ரோஜெர் வழிமுறை பஸ் ஸ்டாண்டிற்கு எதிரிலுள்ள ….லாட்ஜில் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் … சந்தியுங்கள் என்பதுபோல இருக்கிறது. சன்னல் பக்கம் நிற்பதையும், மாத்திரைகள் உபயோகத்தையும் தவிர்த்தால் அதுபோயே போய்விடும் என்கிறார். எனக்கென்னவோ அந்த நல்ல காரியத்தை சில எழுத்தாளர்களே உங்களுக்குச் செய்யக்கூடுமென்று தோன்றுகிறது. தவிர ‘இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது நான் ஒருவன் மட்டுமே’, என்ற எண்ணத்தை தவிர்ப்பதுகூட குணமடைவதற்கான வழிமுறைகளில் ஒன்றாம். சில எழுத்தாளர்கள் (சம்பாதிக்கும் எழுத்தாளர்கள்) ஏற்கனவே கழுவிய காரை இரண்டாம் முறையாக கழுவியோ, தங்கள் தோட்டத்து புல்லை மீண்டும் ஒரு தடவை வெட்டியோ, சோர்ந்திருக்கும் வீட்டு நாயை மீண்டும் ஒருமுறை வெளியில் அழைத்து சென்றோ இந்நோயை தவிர்க்க முற்படுவார்களாம்.

நம் தமிழில் என்ன செய்கிறோம். நம்மையும் இந்த நோய் பீடிக்காமலில்லை, அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை கையாளாமலும் இல்லை. சில நண்பர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதை தூசுதட்டி மறுபதிப்புக்கு சாத்தியமுண்டா என பதிப்பாளரை கேட்கிறார்கள். ஒரு சிலர் கேட்பதற்கு ஆளிருந்தால், “கேழ்வரகில் நெய்வடிகிறது”,  எனலாம் என்பதுபோல, “நேற்றிரவு பதினோருமணிக்கு நெடுங்கதை வணங்காமுடி போன் பண்ணினார், ஒரு மணி நேரத்திற்குமேல் என்னிடம் உரையாடியவர் “என்ன இருந்தாலும் உங்களைப்போல எழுதமுடியுமா? இன்றைக்கு நாங்கள் எழுதுவதெல்லாம், உங்களிடம்  கற்றதுதானே” என இவரைப் பற்றி அதிகம் அறிந்திருக்கமாட்டார்களென நம்புவர்களிடத்தில் கதைவிடுவார். அவ்வாறில்லையா? ஈவ்னிங் ஸ்டார் போன் போட்டு தானெழுதியுள்ள பாடலைக்குறித்து எனது அபிப்ராயத்தைக்கேட்டாரென முக நூலில் எழுதுகிறவர்களுமுண்டு. வேறு சில நண்பர்கள் அத்திப்பட்டில் ஆரம்பித்து அண்டார்ட்டிக் வரையில், அகில உலக எழுதாக் கவிதை விருது, ஞாயிற்றுகிழமை பெருங்கதை விருதென்று தங்களுக்குள்ள ‘நெட் வொர்க்’கால் பெற்றிருப்பார்கள், எவ்வித கூச்சமுமின்றி ஆஸ்துமா நோயாளிபோல மூச்சிறைக்க அதனை விநியோகித்துக்கொண்டிருப்பார்கள்.

ரோஜெர் கைப்பக்குவத்தில் மருந்தொன்றை தயாரித்திருக்கிறார். அது அவருக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கிறது. எழுத்து வியாதியிலிருந்து தப்பிக்க சமைலறைக்குள் புகுந்து விடுவாராம். விதவிதமாக சமைப்பாராம். அதுபற்றிய புத்தகங்களையும் உடனுக்குடன் எழுதுவாராம். அவர் கூறும் யோசனை எழுத்துநோய் முற்றிய நிலையில் நிவாரணம் வேண்டுமெனில் வேறு படைப்பு துறைகளில் இறங்குவது நல்லது. அது ஓவியம், சிற்பம், சமையல், தோட்டக்கலை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். பிற எழுத்தாளர்களைப்பார்த்து வயிறு எரிந்து, இதயவலியால் துடிப்பதைக்காட்டிலும் உகந்த வழிமுறை.

ரோஜெர் சொல்கிற எழுத்துநோய் உண்மையில் நமக்குண்டா அல்லது  வருவதற்கான சாத்தியங்கள் உண்டாவென்று எனக்குத் தெரியாது.  எழுதிக்கொண்டிருக்கையில் சட்டென்று சோம்பல் நம்மிட கைகோர்க்கிறதென்பது உண்மை. அச்சோம்பல்தான் எழுத்து நோயாவென்றும் தெரியாது. நமது மூத்த எழுத்தாளர்களில் பலர் இனி நான் எழுதுகோலை தொடமாட்டேன் என சத்தியம் செய்து சம்பாதித்த புகழை கட்டிகாப்பதற்கு வழிமுறைகளென்ன என்ற கவலையில் மூழ்கியிருக்க மேலை நாடுகளில்  எண்பது, தொண்ணூறு வயதிலும் எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கிறேன். எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் அவரவர் பணியில் முடக்கம் ஏற்படுவது இயற்கைதான். கல்லூரியில் பாடம் எடுத்ததுபோதும், மாலை ஆறுமணிக்கு மேல் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து பிழைக்கபோகிறேன் என்கிற பேராசிரியர்களுக்கும், பகல் முழுக்க கட்சிகாரர்கள், கோர்ட், வாய்தா என அலைந்து அலுத்துவிட்டது இனி ஓர் அரசியல் கட்சியில் தேர்ந்து தேர்தலில் நிற்கப்போகிறேன் என்கிற வழக்கறிஞர்களுக்கும் வரும் நோய்கூட அவ்வகையில் ஒரே இனம் தான்.

ஆக மீண்டும் எழுத்தைக் கையிலெடுப்பதுதான் எழுத்து நோயிலிருந்து தப்பிப்பதற்கான சிறந்த வழிமுறை.கந்துவட்டி பேராசிரியரைப்போல, அரசியற்களமிறங்க நினைக்கும் வழக்கறிஞரைப்போல, எழுத்தாளர்களும் இன்னொரு  நிலத்தில் கால்பதித்து அங்கேயும் அலுத்து நாளை மற்றொன்றை தேடி எதிலும் நிறைவுறாமற் தேய்ந்து கரையலாம். ஆனால் எந்தத் தொழில் செய்தாலும் நான் தனித்தவன் என்ற உணர்வு இல்லாவிட்டால் எப்படி? புகழுக்கும் விருதுக்கும் தகுதிவேண்டாமா? தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான பேராசிரியர்கள் இருக்கலாம், ஆயிரக்கணக்கில் வழக்குரைஞர்கள் இருக்கலாம் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நாடறிந்தவர்களாக இருக்கிறார்கள். எழுத்திலும் அதற்கான சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன. எழுத்து வியாதி எழுதத் தூண்டுகிற வியாதியாக இருக்கவேண்டுமேயன்றி எழுதாமல் உங்களை முடக்கும் வியாதியாக இருக்கக்கூடாது. என்ன செய்யலாம்? எனக்குத் தெரிந்த வழி தொடர்ந்து எழுதுவது. கணினி முன் உட்காருங்கள், கூடாத காரியங்களை ( ரோஜெர் சொல்வதுபோல அர்த்தமற்ற கடிதங்களை தேடிப் படிப்பது, கூடாத காரியங்களில் கவனம்  என்றெல்லாம் வேண்டாம். உங்கள் எழுத்தில் புதிதாய் என்ன சேர்க்கலாம் என்று யோசியுங்கள் அது உத்தியாக இருக்கலாம், மொழியாக இருக்கலாம், கதை சொல்லலாக இருக்கலாம். சக நண்பர்கள், வாசகர்கள் உங்களைவிட புத்திசாலிகள் என்பது எப்போதும் நினைவிலிருக்கட்டும், எழுதுங்கள் எழுதிக்கொண்டேயிருங்கள்…

————————————————–

நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துலகம்

முனைவர் மு.இளங்கோவன்

தமிழ் இலக்கியங்களை உலகத் தரத்திற்கு எழுதவேண்டும் என்ற முயற்சியில் எழுத்தாளர்கள் பலர் பலவகையில் முயற்சி செய்கின்றனர். தமிழக எழுத்தாளர்களின் முயற்சியைப் போலவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் முயற்சிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவ்வகையில் புதுச்சேரியில் வாழ்ந்து, தற்பொழுது பிரான்சு நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் தமிழ் இலக்கியப்படைப்புகளை இக்கட்டுரை அறிமுகப்படுத்துவதுடன் அவரின் படைப்புகள் சிலவற்றை மதிப்பிடவும் முனைந்துள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கீழ்ப்புத்துப்பட்டுக்கு அருகில் உள்ள கொழுவாரி என்ற ஊரில் 07.01.201952 இல் பிறந்தவர். பெற்றோர் இராதாகிருஷ்ணன் பிள்ளை, இந்திராணி அம்மாள். புதுவை காலாப்பட்டு பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றவர். சென்னையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் இளங்கலைப் பொருளியல் படித்தவர் (1972).

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகவியல் படித்தவர். தொடக்கத்தில் விக்சு நிறுவனத்தின் முகவராக மூன்றாண்டுகள் பணியாற்றியவர். பின்னர் வருவாய்த்துறையில் புதுச்சேரியில் எழுத்தர் பணியாற்றினார். பின்னர்த் துணை வட்டாட்சியர் பணியில் இணைந்தார். கென்னடி டுட்டோரியல் கல்லூரியில் பணி, பின்னர் புதுவையின் அல்லயன்சு பிரான்சுவேயில் பிரெஞ்சு பயின்றார். துணிவணிகத்தில் சில காலம் ஈடுபட்டிருந்தார்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குத் தமிழாசிரியர் புலவர் நாகி அவர்களால் தமிழ் ஈடுபாடு உருவானது. பள்ளியில் எண்ணம் என்ற கையெழுத்து ஏட்டை நடத்தினார். 1973 முதல் கிருஷ்ணா என்ற பெயரில் எழுதினார். குமுதம், இராணி, குங்குமம் போன்ற ஏடுகளில் இவரின் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. 1977 இல் இவருக்குத் திருமணம். மனைவி பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். 1985 இல் பிரான்சுக்குச் சென்றார். அங்குச் சென்று கணக்கியல் பட்டயப் படிப்பு முடித்தார். மூன்று ஆண்டுகள் நகர் மன்றத்தில் உதவிக் கணக்காளராகப் பணிபுரிந்தார். 1991 இல் மளிகைக்கடை வைத்து வணிகம் நடத்தினார். 1999 வரை இவர் எழுத்தில் கவனம் செலுத்தவில்லை. தொடர்ந்து வாசிப்புகளில் ஈடுபட்டிருந்தார்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பிரான்சில் நிலா என்ற இதழினைத் தொடங்கி நடத்தினார். 1999 முதல் 2002 வரை இந்த இந்த இதழ் வெளிவந்தது. ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா. துணை ஆசிரியர் பாலகிருஷ்ணன். தமிழில் இணைய இதழ்கள் தோற்றம்பெற்ற சூழலில் தொடர்ந்து இணைய இதழ்களில் எழுதத்தொடங்கினார். மின்னம்பலம், ஆறாம்திணை, திண்ணை போன்ற புகழ்பெற்ற இணைய இதழ்களில் எழுதத் தொடங்கினார்.

 நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள்

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று பல வடிவங்களில் படைப்புகளை வழங்கியுள்ளார். இவர்தம் படைப்புகளில் நாவல்கள் பலவும் பல்வேறு சோதனை முயற்சிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரே நேர்கோட்டில் கதை சொல்வதிலிருந்து விலகி, நூற்றாண்டுகளைக் கடந்தும், நாடு கடந்தும், கண்டம் கடந்தும், பண்பாடு நாகரிகம் கடந்தும் இவர்தம் கதைகள் அமைந்துள்ளன. காலத்திற்கு அமைந்த மொழிநடையைக் கையாண்டு படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

கதைக்கருக்களைத் தேர்வு செய்தல், செய்தி சேகரிப்பு, விவரிப்பு என்று ஒவ்வொன்றிலும் இவர் கவனம் செலுத்தியுள்ளார். கற்பனைகள் நிறைந்த மொழிநடையும், உவமை உருவக உத்திகளும் இயல்பாக இவர் புதினங்களில் மின்னி மிளிர்கின்றன. பன்மொழியறிவும், பன்னூல் பயிற்சியும் வாழ்க்கை குறித்த தெளிவும், மானுடத்தை நேசிக்கும் இயல்பும், பழைமையிலிருந்து புதுமையை உருவாக்க வேண்டும் என்ற உந்துதலும் இவர் படைப்புகளைச் செழுமையடையச் செய்துள்ளன. பழைய வரலாறுகளையும் சம்பவங்களையும் பொருத்தமான இடங்களில் பொருத்திக்காடியுள்ள இவரின் செய்நேர்த்தி வியக்க வைக்கின்றது. கற்பனை, வெளியீட்டில் மிகைப்படுத்தல் சிலவிடங்களில் தலைகாட்டினாலும் அவை படைப்பின் வேகத்தைத் தடுக்கவில்லை.

கப்பல்களின் போக்கு, காற்றடிக்கும் திசை, கடந்த நூற்றாண்டுகளில் அமைந்த கடற்பயண அனுபவங்களை உள்வாங்கி இவர் வரைந்துள்ள போக்கினைப் படிப்பவர்கள் வியக்காமல் இருக்கமுடியாது. இந்திய வரலாறு, பிரெஞ்சுநாட்டு வரலாறு, மொரீசியசு நாட்டு வரலாறு இவர் நாவல்களில் பொதிந்து கிடப்பதுபோல் உலக வரலாறுகளும் அங்கங்கு புலப்படுகின்றன.

வரலாற்றுப் புதினங்களில் கதையை மட்டும் நகர்த்தாமல் உரிய இடங்களில் வரலாற்றை எழுதிச் செல்வதும் இவரின் பாணியாக உள்ளது. கடல்கடந்த தமிழர்கள் ஒவ்வொரு நாடுகளில் எவ்வாறு கடும் உழைப்பில் அந்தந்த நாட்டை வளப்படுத்தினர் என்பதை நாவலில் மிகச்சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் இன்று தொழில் நிமித்தமும், பணி நிமித்தமும் செல்வதுபோல் இல்லாமல் பல சூழ்நிலைகளால் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதை இவர் நாவல்களால் அறியலாம்.

பசி, பஞ்சத்திலிருந்து தப்பிக்கவும், வெளிநாட்டார் அல்லது கண்காணிகளின் பசப்பு வார்த்தைகளாலும் பலர் வெளிநாடு சென்றுள்ளனர். சிலர் இங்குத் தவறு செய்துவிட்டுத் தண்டனைகள் அல்லது சமூக அடக்குமுறைகளுக்கு அஞ்சிச் சென்று நாடு திரும்பாமல் இறந்த செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுபோல் அயல்நாட்டுக்காரர்களைத் திருமணம் செய்துகொண்ட தமிழ்ப்பெண்கள், வெளிநாட்டுப் பெண்களை மணந்துகொண்ட தமிழக ஆண்கள் பற்றிய பல குறிப்புகளை இவர் புதினத்தில் காணமுடிகின்றது. தமிழர்களிடம் காலம் காலமாக இருந்துவரும் அடிமை உணர்வு, காட்டிக்கொடுக்கும் இயல்பு, நன்றி மறவாமை யாவும் இவர் புதினத்தில் இடம்பெற்றுள்ளன.

மொழிவது சுகம் என்ற தொடரை வாரந்தோறும் எழுதினார். இதில் வாரந்தோறும் தம் எண்ணங்களைப் பதிவுசெய்தார். சிந்தனை மின்னல்கள் என்ற குறிப்புடன் இந்தத் தொடர் நூலாக வெளிவந்துள்ளது. 24 கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பில் பயனுடைய பல செய்திகள் உள்ளன. வெளிநாடுகளில் நூல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கும் நீதிபதிகளின் மதிப்பீடுகளைப் படிக்கும்பொழுது எந்த அளவுக்குப் பரிசுக்குரிய நூல்கள் வாசிக்கப்படுகின்றன என்ற வியப்பு ஏற்படும். சமகால நடப்புகளைத் தீவிரமாக எண்ணி எழுதியுள்ள மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பிரான்சு நாட்டின் அரசியல், சமூகம், கலை, இலக்கிய முயற்சிகள் ஆசிரியரால் இந்நூலில் நினைவுகூரப்பட்டுள்ளன. வாரந்தோறும் எழுதிய சிந்தனைகள் என்று அடக்கிவிடமுடியாதபடி தகவல்களின் களஞ்சியமாகவும், விவாதங்களின் தொகுப்பாகவும் பல கட்டுரைகள் உள்ளன.

வணக்கம் துயரமே என்ற நூல் பிரெஞ்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூலாகும். 16 வயது பெண் தன்னுடைய அனுபவங்களையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொள்வதாக உள்ள நூலாகும். பிரான்சில் அதிகம் விற்பனையான நூல் இதுவாகும். 160 பக்கம் கொண்ட நூல் நாகரத்தினம் கிருஷ்ணாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

காதலன் என்ற நாவல் பிரெஞ்சுப்புரட்சியை ஏற்படுத்திய நாவலின் மொழிபெயர்ப்பு வடிவமாகும். இளம் பெண்ணொருத்தித் தன் அனுபவங்களைக் கூறுவதாக இந்த நூல் அமைந்துள்ளது.

மார்க்சின் கொடுங்கனவு என்னும் நூல் மூலதனம் நூல் பற்றிய விமர்சனமாகும்.

உலகங்கள் விற்பனைக்கு என்ற நூல் (அதிர்வுக்கதைகளின் தொகுப்பு) பிரெஞ்சிலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட நூலாகும். இந்த நூலின் முடிவுகள் வித்தியாசமாக இருக்கும்.

கிருஷ்ணப்ப நாயக்கன் கௌமுதி என்னும் நாவல் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கன் என்பவனின் வரலாற்றைச் சொல்லும் புதினமாக வெளிவந்துள்ளது. செஞ்சி நாயக்கரின் வரலாற்றைச் சொல்லும் வகையில் அக்காலத் தமிழக நிலையைச் சிறப்பாக இந்தப் புதினத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புதினத்தின் கதை இருபதாம் நூற்றாண்டுக்கும் பதினாறும் நூற்றாண்டுக்குமாகத் தாவித் தாவி நடக்கின்றது. செஞ்சி பற்றியும் சிதம்பரம் தீட்சிதர்கள் பற்றியும் பல அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன, குறிப்பாகச் செஞ்சியின் வரலாற்றை நினைவுகூர்ந்தாலும் அக்காலப் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளை நூலாசிரியர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதியில் சிதம்பரம் தீட்சிதர்கள் தில்லைச் சிற்றம்பலத்தில் கோவிந்தராசனுக்குச் சிலைவைக்கக் கூடாது என்று எதிர்ப்பைத் தெரிவித்து கோயில் கோபுரத்திலிருந்து வீழ்ந்து இறந்த செய்தியை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூலில் பழைமையும், புதுமையும் கலந்தபடி செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. படைப்பாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா அக் காலத்துக்குத் தகுந்த மொழிநடையைப் படைக்கும் நோக்கில் மிகுதியான சமற்கிருதச் சொல்லாட்சிகளை ஆண்டுள்ளார். சமகாலப் புதுச்சேரி வாழ்க்கையும் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நீலக்கடல்

நீலக்கடல் என்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் புதுச்சேரியைக் கைப்பற்றி ஆட்சி செய்த பிரெஞ்சியர்களைப் பற்றியும், பிரெஞ்சு தேசமாக விளங்கிய புதுச்சேரியிலிருந்து மொரீசியசு தீவுக்குச்(பிரெஞ்சு தீவு) சென்ற மக்களைப் பற்றியும் சிறப்பாக விவரிக்கின்றது. கடந்த காலங்களை விவரிப்பதுடன் அமையாமல் தற்கால புதுவை அரசியல் வரை இந்த நாவலில் செய்திகள் பதிவாகியுள்ளன. மொரீசியசு வரலாற்றை விவரிக்கும் முதல் தமிழ் நாவலாக இதனைக் குறிக்கலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் நீலக்கடல் நாவலில் பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளார். மக்களுக்கு வரலாற்று அறிவைக் கதைப்போக்கில் தந்துள்ளார். தாம் பயின்ற இந்திய வரலாறு, உலகவரலாறு, ஆன்மீக, வேதாந்த, சித்தாந்த சாத்திரங்களை இந்த நாவலில் தேன்தடவிய கனிபோல் தந்துள்ளார்.

முன்பு வெளிவந்த வரலாற்று நாவல்கள் என்பவை அரசன், குறுநில மன்னன் வீரதீரங்களை மட்டும் பேசும். சராசரி மக்களின் வாழ்க்கையை எதிரொலிக்காது. அரசியர்களின் அந்தப்புர வாழ்க்கை, பற்றிய செய்திகளையும் மிகைக் கற்பனைகளையும் கொண்டிருக்கும். உழைக்கும் மக்களின் துன்பம் மருந்துக்கும் இருக்காது. ஆனால் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடல் நாவலில் சாதாரண மக்களும் கதைப்பாத்திரங்களாக உலா வருகின்றனர். கொல்லாசாரியார்களும், தச்சாசாரியார்களும் உலவுகின்றனர். கிராமத்து மருத்துவர்கள் முக்கிய கதாபாத்திரங்களாக உலவிக் கதையை நகர்த்துகின்றனர். திருப்புமுனைகள், அதிர்ச்சிகள் நாவலில் இடம்பெற்றுப் படிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றன.

பழமொழிகளும், சமயச்செய்திகளும், புராண இதிகாசச் செய்திகளும், ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் நாட்குறிப்புச் செய்திகளும், இலக்கிய மேற்கோள்களும், வரலாற்றுக் குறிப்புகளும் உரிய இடங்களில் பக்குவமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களிடம் காலம் காலமாகப் படிந்துகிடக்கும் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்களை மிக நுட்பமாகத் தம் புதினத்தில் பதிவுசெய்துள்ளார்.

மக்களிடம் இருந்த பசி, பஞ்சம், கோப, தாபங்கள் பதிவாகியுள்ளன, மொரீசியசு தீவினை வளப்படுத்தத் தமிழ் மக்கள் பட்ட துன்பங்களை நேரில் கண்டுரைத்தவர்போல் இந்த நாவலில் கிருஷ்ணா பதிவு செய்துள்ளார். 520 பக்கத்தில் விரியும் நீலக்கடல் நாவல் தமிழில் வரவேற்கத் தகுந்த முயற்சியாகும். இந்த நாவலில் பிரெஞ்சு அதிகாரிகள், ஆட்சியாளர்கள் இடம்பெறுவதுபோல் அவர்களின் சொற்களும் மிகுதியாக ஆளப்பட்டுள்ளன. லஸ்கர், கும்பெனி, சொல்தா, போத்தல், குவர்னர், கப்பித்தேன், லெ பொந்திஷேரி, மிஸியே என்ற பல சொற்களின் ஆட்சியைக் குறிப்பிடலாம்.

நாவலில் கதை விவரிப்பு மட்டும் என்று அமையாமல் அக்காலத்தில் நிகழ்ந்த கப்பல் கட்டுமானம், கப்பல் செலுத்ததுதல், கப்பல் வாழ்க்கை, மாலுமிகளின் செயல்பாடுகள், கடல்பயணம், வணிகப்பொருள்கள், பிரெஞ்சுக்காரர்களின் மதுவிருந்து, காற்றின் வேகம், கரும்புவெட்டு, ஆப்பிரிக்கர் வாழ்க்கை, மொரீசியசு பழங்குடிமக்களின் வாழ்க்கை, மொரீசியசைப் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றி ஆட்சி அதிகாரத்திற்கு உட்படுத்தியமை, பிரெஞ்சியர்கள் மக்களுக்கு வழங்கிய தண்டனைகள் யாவும் பதிவாகியுள்ளன.

புராணம், இதிகாசம், கூத்து, நாட்டுப்புறவியல் குறித்த பல செய்திகளைத் தாங்கியக் கருவூலமாக இந்த நீலக்கடல் நாவல் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வருணனைகள், அணி அமைப்புகள், பழமொழிகள் தனித்துக் கண்டு ஆராயத்தக்கன. “மூன்றாம் வகை நரகமான அந்ததாமிங்ரம் நரகம்” என்று மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத செய்தியை மக்களுக்குத் தெரிவிக்கின்றார்.

“மெல்ல நிமிர்ந்ததும் வெட்கமுற்றவளாய், முகம் கவிழ்ந்து மெள்ளக் கதவடைத்துவிட்டு விடுவிடுவென்று உள்ளே போகத்தான் செய்தாள். ஆனால் இவன் மன வாசலைத் திறந்துகொண்டு கால்பதித்தவள் உள்ளத்துக்குள்ளே அல்லவா உட்கார்ந்துகொண்டாள்” (பக்கம்.465) என்று கற்பனையில் வரையும் நாகரத்தினம் அவர்களின் எழுத்துகளைத் தேர்ந்த வாசகர்கள் சுவைக்காமல் இருக்கமுடியாது. “துருவ நட்சத்திரத்தைக் குறிவைத்துப் பயணிக்கும் மரக்கலத்தினைப்போல, நெஞ்சம் அப்பெண்ணைக் குறிவைத்துப் பயணிக்கிறது”(பக்கம்.465). “சாவியைச் செருகித் திருப்ப எஞ்சின், அந்நிய மனிதனைக் கண்ட நாய்போல உர்ரென்றது” (பக்கம்.445) என்று உவமைகள் உரிய இடத்தில் சிறப்பாக ஆளப்பட்டுள்ளன.

காமாட்சி அம்மாள், தெய்வானை, கைலாசம், சில்வி, காமாட்சியம்மாள், பொன்னப்ப ஆசாரி, தேவராசன், காத்தமுத்து, வீரம்மா, பாகூர் உடையார், மனோரஞ்சிதம் அம்மாள், நீலவேணி, தானப்பமுதலியார், கனகராய முதலியார், வைத்தியர் சபாபதி படையாட்சி, பலராம் பிள்ளை, வேலாயுத முதலியார், ஆனந்தரங்க பிள்ளை, ஆதிகேசவலு ரெட்டியார், கம்மாளன் முருகேசன், மாறன், பரங்கிணி நடேசன், கேணிப்பட்டு கோவிந்தன், வேம்புலி நாயக்கர், சீனுவாச நாயக்கர், விசாலாட்சி, உள்ளிட்ட பல பாத்திங்கள் இடம்பெற்றுள்ளன.

அதுபோல் லாபூர்தொனே(பிரெஞ்சு தீவின் குவர்னர்), பெர்னார் குளோதான், துய்மா, துய்ப்ளே போன்ற பிரெஞ்சு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியை ஒட்டிய ஊர்களான முத்தியால்பேட்டை, வழுதாவூர், திருவக்கரை, பறங்கிப்பேட்டை, காரைக்கால்(அல்வா), கும்பகோணம், கடலூர், தொண்டைமாநத்தம், ஊசுடு ஏரி, வில்லியனூர், முத்தரையர்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களும் அதில் வாழும் மக்களும் இந்த நாவலில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஒரு வரலாற்றை மிக எளிமையாகக் கதைப்போக்கில் வெளியிட்டுள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்பு முயற்சி புதுமையாகவும், நேர்த்தியாகவும் அமைந்துள்ளது. புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர்கள் அடைந்த வரலாறு, ஆண்ட வரலாறு, மிகத்தெளிவாக எளிய நடையில் விளக்கப்புட்டள்ளன. வரலாறு, நாட்குறிப்பு, களப்பணி, வாய்மொழி மரப்புகளை உள்வாங்கி இந்த நாவலைப் படைத்துள்ளார். மொரீசியசு தீவில் தங்கியும் களப்பணியாற்றியும் செய்திகளைச் சேகரித்துள்ளார்.

தமிழகத்தின் ஏற்றப்பாட்டு, பழமொழிகள், உவமைகள் இந்த நாவலில் பொருத்தமாக ஆளப்பட்டுள்ளன.

 மாத்தா ஹரி

நாகரத்தினம் கிருஷணாவின் மற்றொரு அரிய படைப்பு மாத்தாஹரி புதினம் ஆகும். புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை என்ற குறிப்புடன் வெளிவந்துள்ள இந்தப் புதினம். பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்தப் புதினத்தை ஆசிரியர் படைத்துள்ளார். மாத்தாஹரி வேவுக்காரியாக அறியப்பட்டு, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு 1917 இல் பிரான்சில் சுட்டுக்கொள்ளப்பட்டவள். மாத்தா ஹரி இராணுவவீரர்கள், இலக்கியவாதிகள், நாடக ஆசிரியர்கள், கவிஞர்கள் எனப்பலரின் கனவுக்கன்னியாக இருந்தவள். அவள் வாழ்க்கையை மையமிட்டு பல படைப்புகள் பல வடிவங்களில் வெளிவந்துள்ளன. மாத்தா ஹரிக்குப் பிறகு பிரான்சுக்குப் போன பவானி, பவானியின் மகள் ஹரினியைப் பற்றிய கதையாக இந்த நாவல் உள்ளது.

மாத்தாஹரி, பவானி, ஹரினியின் வாழ்க்கை ஏறத்தாழ ஒரே மாதிரியாக இருப்பதை நாவலில் உணரமுடிகின்றது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள்

கட்டுரை
பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் – (2005)
சிமொன் தெ பொவ்வார் – ஒரு திமிர்ந்த ஞானசெருக்கு (2008)
எழுத்தின் தேடுதல் வேட்டை- (2010)
கதையல்ல வரலாறு- 2013
மொழிவது சுகம் 2013
ஊர்ப்பேச்சு 2013

நாவல்

நீலக்கடல் (தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற நாவல்) 2005)
மாத்தா ஹரி (2008)
கிருஷ்ணப்ப நாயக்கர்கௌமுதி (செஞ்சி வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல்) 2013

சிறுகதை

கனவு மெய்ப்படவேண்டும் -(2002)
நந்தகுமாரா நந்தகுமாரா -(2005)
சன்னலொட்டி அமரும் குருவிகள்-(2010)
சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது (அறிவியல் புனைகதைகள்))(2010)
மொழிபெயர்ப்பு

போர் அறிவித்தாகிவிட்டது- நவீன பிரெஞ்சு சிறுகதைகள் -(2005)
காதலன் – மார்கெரித் துராஸ் -பிரெஞ்சு நாவல் (2008)
வணக்கம் துயரமே – பிரான்சுவாஸ் சகாங் பிரெஞ்சு நாவல் -2009)
உயிர்க்கொல்லி (உலகச் சிறுகதைகள்- 2012

மார்க்சின் கொடுங்கனவு -டெனிஸ்கோலன் – 2012

உலகங்கள் விற்பனைக்கு (அதிர்வுக்கதைகள்) -2012

கவிதை
அழுவதும் சுகமே (2002)

நன்றி http://muelangovan.blogspot.in/

——————————–

சிற்றேடு ஏப்ரல் – ஜூன் காலாண்டிதழில் செய்தி:

சிற்றேடு ஏப்ரல் – ஜூன் காலாண்டிதழில் செய்தி:

திரு. தமிழவன் அவர்களை பொறுப்பாசிரியராகக் கொண்டு வரும் இதழ் ‘சிற்றேடு’ அவ்விதழில் கிருஷ்ணப்ப நாயக்கர் நாவல் வெளியீடு குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது.   அச்செய்தியை வெளியிட சிறிது தயக்கம். எனது நெருங்கிய இலங்கை நண்பர் மரியதாஸ் என்பவரிடம் கலந்து பேசினேன். எதற்காகத் தயக்கம் தாராளமாக வெளியிடுங்கள் என்றார். தமிழவன் ஏட்டில் வந்துள்ள செய்தி  புறம்தள்ளக்கூடியதா எனக் கேட்டார். தமிழவன் என்னை முன்பின் அறியாமலேயே  சிங்கப்பூர் இலக்கிய மாநாடொன்றில் வாசித்த கட்டுரையில் ‘மாத்தாஹரி நாவலை பாராட்டினார் என்பதை நவீன இலக்கியம் சார்ந்த நண்பர்கள் அறிவார்கள்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் புது நாவல் – செ.ஜெ.

மாத்தாஹரி என்ற மிகவும் வித்தியாசமான நாவலை எழுதி அனைத்துலகத் தமிழ் எழுத்து சார்ந்து புகழ்பெற்றுள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்க கௌமுதி’ என்ற நாவலில் வெளியீட்டு விழா பாண்டிச்சேரியில் 26-1-2013 அன்று நடைபெற்றது. இந்த நாவல் ஒரு நாவலுக்குள் இன்னொரு நாவலாய் அமைப்புக்கொண்டிருக்கிறது. நாவல் வெளியீட்டுவிழாவில் கி.அ. சச்சிதானந்தம், கவிஞர் மதுமிதா, பேரா.விஜெயவேணுகோபால், எஸ். ராமகிருஷ்ணன், தமிழவன் ஆகியோர் பேசினர். ஆங்கிலப் பாதிப்புடன் தற்கால தமிழிலக்கியம் தோன்றியது. பிரெஞ்சு பாதிப்புத் தற்கால தமிழுக்குப் புதுத் தொனியையும் அழுத்தத்தையும் கொடுத்தது. பாரதிதாசன் இதற்கொரு எடுத்துக்காட்டு. ஆனால் “புரட்சிகவி” என்ற கவிதை பற்றிய சில அபிப்ராயங்களைத் தவிர “பாரதிதாசனின் அமைப்பாக்கத்தில்” பிரெஞ்சு இலக்கிய பாதிப்பு பற்றிப் பாண்டிச்சேரியிலுள்ள தமிழாய்வுத் துறைகளில் ஆய்வு நிகழ்ந்துள்ளதா எனத் தெரியவில்லை. நடக்கவேண்டும்.

எது எப்படி இருப்பினும், பிரெஞ்சு மொழியிலிருந்தும், பண்பாட்டிலிருந்தும் தமிழின் தற்காலத்தை வளப்படுத்த ஒருவர் கிடைத்துள்ளார் என்பது தமிழுக்கு யோகமாகும். (கடைசி சொற்கள் சி.சு. செல்லப்பாவுடையவை).

———————————————–

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு

1..இந்தியா – ஏப்ரல் 21 -கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி கருத்தரங்கு

ஏப்ரல் 12-13 காலச்சுவடு நண்பர் கண்ணன், கன்னியாகுமரியில் ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் கலந்துரையாடலுக்குப்பிறகு 17ந்தேதி புதுச்சேரியில் எனது சகோதரர்மகன் திருமணம். அதன் பிறகு நடந்த முக்கிய நிகழ்ச்சியெனில் செஞ்சியில் புதுவை ‘இலக்கியம்’ சீனு தமிழ்மணியின் நண்பர் பேராசிரியர் ஜெ. ராதாகிருஷ்ணன் என்கிற ‘நறுமுகை’ குறிஞ்சி இலக்கிய வட்டம் சார்பில் கிருஷ்ணப்ப நாயக்கர் நூலை முன்வைத்து செஞ்சியில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை சொல்லவேண்டும். திருச்சியிலிருந்து வந்திருந்த ந.முருகேசபாண்டியனுக்கும் மற்றவர்களுக்கும் ஓட்டலில் அறை, மதிய உணவு, நிகழ்ச்சியென அவ்வளவையும் குறிஞ்சி இலக்கியவட்டத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். பார்வையாளர்களாக பேராசியர்கள், தமிழ் முதுகலை ஆய்வு மாணவர்கள், சிற்றிலக்கிய அபிமானிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் பேராசிரியர் க. பஞ்சாங்கம், ந. முருகேசபாண்டியன், திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனா ( இவர்  பேராசியர் அ. மார்க்ஸின் படைப்புலகத்தை முனைவர் தேர்வுக்கு ஆய்வுக்கு எடுத்துள்ளார், சிற்றிலக்கிய படைப்பாளி) ஆகியோரின் உரைகள் இருந்தன. மூவரின் உரையும் எனது எழுத்தை உயர்வாகவே மதிப்பிட்டிருந்தன. நவீன இலக்கிய உலகில் பேராசிரியர் க.பஞ்சாங்ககத்தையும், ந.முருகேசபாண்டியனையும் அறிந்தவர்கள் இருவரின் கருத்தையும் குறைத்து மதிப்பிட இயலாது. இன்றைய இலக்கிய சூழலில் பாரபட்சமற்ற விமர்சனத்தை வைக்கிற அரிதான ஒரு சிலரில் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களை அறிந்தோர்க்கு உண்மை புரியும். கிருஷ்ணப்ப நாயக்கர் குறித்த அவர்களின் மதிப்பீடு எனக்கு அரு மருந்து. உரைகளை ஒலிநாடாவில் பதித்து குறிஞ்சி வட்டம் இணைய தளத்தில் வெளியிடுவார்கள்.

Senji -5 JPGSenji -9 JPGSenji -10 JPGSenji -4 JPGSenji -2Senji -1
—————————

2. ஆளுமைகளுடன் சந்திப்பு.

இம்முறை சென்னை சென்று சந்திக்க நினைத்த எழுத்துலக நண்பர்களை கடுமையான வெயில் காரணமாக சந்திக்க இல்லை. திருவாளர்கள்:தமிழவன், எஸ். ராமகிருஷ்ணன், இந்திரன், பாவண்ணன், திலகவதி, திருப்பூர் கிருஷ்ணன், கி. அ. சச்சிதானந்தம், சந்தியா நடராசன்,மதுமிதா, சுதா ராமலிங்கமென திட்டங்கள் இருந்தும் வெயிலுக்குப்பயந்து சென்னை போகவில்லை. எனக்கு பெரும் இழப்பு. வருத்தங்கள் இருக்கின்றன.

அதை ஈடுகட்ட நண்பர் நாயக்கர், சீனு தமிழ் மணி உதவியால் சில ஆளுமைகளை புதுச்சேரியிலேயே சந்திக்க முடிந்தது. பெரியவர் கி.ரா., பேராசிரியர் க. பஞ்சாங்கம், ராஜேந்திர சோழன், ஜெயப்பிரகாசம் இச்சந்திப்புகள் குறித்து சிறிய தொடரொன்றை வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசையிலிருக்கிறது. இவர்களைத் தவிர நண்பர் நாயக்கர், மு. இளங்கோ, சீனு.தமிழ்மணி, நறுமுகை ஆகியோரைப்பற்றியும் விரைவில் எழுதுகிறேன்.
———————————————-

எழுத்தாளனின் முகவரி -12: வரலாற்று நாவல்

உண்மையும் -புனைவும்

நன்கு அறியப்படாத (அறியப்பட்டதல்ல) வரலாற்றினை புனைகதையாகச் சொல்ல முற்படுபவதே ஒரு சரித்திர நாவல்.

சரித்திர நாவல் என்பது ஆதாரபூர்வமான உண்மைகளும், ஆசிரியனின் கற்பனைகளும் கலந்தது. இக்கலப்பு சீர்மையுடனும் ஒத்திசைவுடனும் நிகழ்த்தப்படுவது.  நன்கு அறியப்பட்ட வரலாற்று நிகழ்வின் புனைகதை வடிவத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் பொதுவில் இருப்பதில்லை. வரலாற்று நாவலை எழுதுவதென்பது ஒரு சாதனை. கூடுதற் கவனம் வேண்டியிருக்கிறது. எது பற்றி எழுதுகிறோமோ அல்லது கதை சொல்ல ஆரம்பிக்கிறோமோ அது குறித்த முழுமையானப் பிழையற்ற தகவல்களை, முன்னதாக சேகரித்துக்கொண்டு அவற்றோடு இணைந்து கதையை நடத்தவேண்டும். சமூக புனைவுகளில் இவ்வித நியதிகளில்லை, அதனாற் சங்கடங்களும் குறைவு. சொற்களில் ஆளுமையும் கற்பனைத் திறனுமிருந்தால், எழுதிக்கொண்டுபோகலாம், “இடறி விழுந்தாலும்” அங்கே ‘கரடிவித்தை” எனச்சொல்லி சமாளிக்கும் திறனை எழுத்தாளனோ அல்லது அவன் ஏற்கனவே வாசகனிடத்தில் சம்பாதித்த புகழோ பெற்றிருப்பார்கள்.

சரித்திர நாவல் பிற நாவல்களைப்போலவே உண்மையும் புனைவும் கலந்தது. ஆனால் இதற்கு முந்தைய பத்தியில் குறிப்பிட்டதுபோன்று வரலாற்று புனைவில் இவ்வுண்மைகள் ஆதாரங்களைக்கொண்டதாக இருக்கவேண்டும். மாந்தர்கள் அவர்களோடு தொடர்புடைய சம்பவங்கள் என நேர்த்தி குலையாமால், வாசகனிடத்தில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தித் தருதல் அதன் நோக்கம். காத்திரமான வரலாற்று நாவல்களில் இடம் பெறும் மாந்தர்கள் இரண்டுவகையினர்: முதல்வகையினர் நாவலாசிரியன் எழுத உட்காருவதற்கு முன்பாக தேடிஅலைந்த ஆதாரங்களிலிருந்துப் பெறப்பட்டவர்கள்; இரண்டாவது வகையினர் அவனது சொந்தக் கற்பனையிலிருந்து தருவிக்கப்பட்டவர்கள்.

Thomas Flemingதாமஸ் ·ப்ளிமிங் புகபெற்ற அமெரிக்க சரித்திர புனைகதை ஆசிரியர், The Offocers wives என்கிற நாவலின் பூர்வீகத்தைப் பற்றி பேசுகிறார். தமது நான்காண்டுகால ராணுவ அக்காதெமி வாழ்க்கையின் போது அதிகாரிகளைப்பற்றியும் அவர்களுடைய மனைவிமார்களைப்பற்றியும் நிறையத் தெரியவந்ததாம், குறிப்பாக பெண்களின் நடை உடை பாவனைகள், அவர்கள் நடந்துகொள்ளுவிதம், பழகும் முறைகள் ஆகியவற்றை அவதானித்து வந்திருக்கிறார். திடீரென்று ஒருநாள் அமெரிக்க படைகளைப்பற்றி, பெண்ணொருத்தியின் பார்வையில் இதுவரை சொல்லப்படாதது ஏன்? என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறார், இப்புதிய பார்வை ஒரு வரலாற்று நாவலுக்கு உதவுமென அவர் நினைத்தது வீண்போகவில்லை, கொரிய வியட்நாம் போருக்குப் பிந்திய அமெரிக்கர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளை அவர் சொல்லியிருந்த முறை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது. மனிதர்கள் காலத்தோடு வாழப்பழகியவர்களென்றாலும், அவர்களின் அடிப்படைப்பண்புகளில்  மாற்றங்கள் இல்லை. ஐம்புலன்களும், அவை நிகழ்த்தும் மாயங்களும் சாகாவரம் பெற்றவை. மனிதர்களின் பசியும், அன்பும், அழுக்காறும், அருளும், வாய்மையும், இன்னாசெய்தலும், காமமும் எக்காலத்திற்கும் பொருந்துபவை. ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலில் வரும் கிருஷ்ணப்ப நாயக்கரை நமது சமகால அரசியல்வாதியோடும், அதே நாவலில் வரும் செண்பகத்தை, அரசியல் வாதியின் மனைவியரில் ஒருத்தியாக மனதில் நிறுத்தி எழுதுகிறபோது, நாவலைக் கூடுதற் ஈடுபாட்டோடு என்னால் எழுதமுடிந்தது. ‘மாத்தா ஹரி’ நாவலில் முதல் உலகப்போரில் நியாயமின்றித் தண்டிக்கப்பட்ட ‘மாத்தாஹரி’க்கு, எனது உறவுக்காரப்பெண்ணொருத்தியின் வாழ்க்கை ஊடாக நீதி வழங்கினேன். புதுச்சேரியிலிருந்து வெளி நாடு வாழ்க்கைப்பற்றிய கனவுகளுடன் பிரான்சுக்கு வரும் பெண்களின் வாழ்க்கைமுறையை அந்நாவலிற் பயன்படுத்திக்கொண்டேன். இதுபோன்ற அணுகுமுறைகள் நாவலுக்கு நம்பகத் தன்மையையும் ஏற்படுத்தித்தருகின்றன.

 நடந்ததும் நடக்கவிருப்பதும்:

பொதுவாக கடந்தகாலமென்பது, நிகழ்காலத்தினும் பார்க்கக் கொடியது, கடுமையானது. கடந்தகால மனிதவாழ்க்கையின் இன்னல்கள், துயர்கள், இழைத்த தவறுகள், கற்ற பாடங்கள் ஆகியவற்றின் பொதுப்பலன்களே நிகழ்காலத்தில் பெற்றிருக்கும் நமது வளர்ச்சி. ஒரு தலைமுறை வாழ்க்கை, வருங்கால தலைமுறையின் நன்மைக்கு தன்னைப் பணயம் வைக்கிறது. பல இழப்புகளைச் சந்திக்கிறது. கடந்தகால வரலாற்றை மறுவாசிப்பு செய்வது, பின்வரும் சந்ததியினருக்கு எவ்வகையான வாழ்க்கைக்கு (இன்றைய நாம்)  உத்தரவாதம் தரப்போகிறோமென்பதை ஒருவகையில் உணர்வில் நிறுத்துவது. எக்காலத்திலும் வாழ்க்கையென்பது தடைகளின்றி களிமண்பூமியில் உருண்டோடும் நீர்த்தாரையாக இருந்ததில்லை. ஆங்காங்கே அதிர்வுகளையும் நடுக்கங்களையும்; யுத்தத்தையும் சமாதானத்தையும்; ஆக்கத்தையும் அழிவையும் கடந்தே ஆகவேண்டியிருக்கிறது. நெருக்கடிகள் வெயில் போலவும், கடும் பனிபோலவும் மனிதர் வாழ்க்கையைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவரவருக்குள்ள வாய்ப்பையும் ஆயுதங்களையும் கொண்டு களத்தில் அவற்றை உருவங்களாகவோ அருவங்களாவோ எதிர்கொள்கிறோம், நமது முன்னோர்களும் அதைச் செய்திருந்தனர். கடந்த காலத்திய நிகழ்வுகளையும், அவற்றின் பங்குதாரர்களையும் தேடிப்பெறுவதில் சரித்திர நாவலாசிரியர்களுக்கு இடையூறுகள் குறுக்கிடுவதில்லை. அவ்வாறு தேடிப்பெறும் தகவல்களூடாக நம்மைப்போலவே நமது முன்னோர்களும் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பதும்; அவற்றின் முடிவுகளும் நமக்குத் தெரிய வருகின்றன, மாறாக சரித்திர நிகழ்வுகளில் பங்குபெற்ற நமது முன்னோர்களின் அலைச்சல்களென்ன -திட்டமிடல்களென்ன – குயுக்திகளென்ன என்பதுபோன்ற  நுணுக்கமான தகவல்கள் கிடைப்பதில்லை. கடந்த காலத்தின் இக்கோட்டை வாயிற்கதவைத் திறப்பதற்கு அசாதாரண பலமும், தந்திரமும் தேவைப்படுகிறது. தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் நம் மூதாதையர்கள் எவ்விதம் எதிர்கொண்டிருக்க முடியும் என்பதை அறிய அவர்கள் வாழ்க்கைக்குள் நம்மையும் இணைத்துக்கொள்ளுதல் அவ்வகையில் ஒரு தந்திரம். புனைவொன்றில் சாத்தியப்படும் இத்தந்திரத்தை வரலாறுகளில் காண்பதற்கில்லை. அக்பர் தானொரு சமயவிரோதியல்ல என நிரூபணம்செய்ய அவர் தேர்வு செய்த வழிமுறைகளிலொன்று இராஜபுதன பெண்ணொருத்தியை மணம் செய்துகொண்டது. பிற வழிமுறைகள் அக்பரின்  வரலாற்றை எழுத உதவலாம், ஆனால் அக்பரைப்பற்றிய புனைவொன்றை எழுத இராஜபுதனத்து பெண்ணை மணந்த தகவல் முக்கியமானது. அதனாற்றான் பல நேரங்களில் வரலாறுகள் நமக்குச் சோர்வைத் தருகின்றன. தவிரவும் அச்சோர்விற்கு பிரதான மனிதர்களிடம் மட்டும் வரலாறு கொள்ளும் அக்கறையும் ஒரு காரணம்.

வரலாற்று மாந்தர்களும் வரலாற்று புனைகதை மாந்தர்களும்:

இந்தியச் சுதந்திரப்போரென்பது காந்தி, நேரு, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் இவர்களைமட்டுமே கொண்டதா? ஆயிரம்பக்கங்களில் வரலாறு எழுதப்படுகிறபோதும் இவர்களின் வீர தீரங்களை மட்டுமே பேசுவது சராசரி மனிதர்களாகிய நமக்கு அலுப்பை தரவில்லையா? சுதந்திரப்போராட்டத்தின் போது இத்தலைவர்கள் வீட்டுப் பெண்கள் அதனை எப்படி எதிர் கொண்டார்கள், இச்சுதந்திர போராட்டத் தலைவர் ஒருவரின் எதிர் வீட்டுக்காரர் மன நிலையென்ன, அவர் இந்திய விடுதலைப்போரை ஆதரித்தாரா எதிர்த்தாரா? பெரு நகரங்களில் சரி, கிராமங்களிலும் குக்கிராமங்களிலும் வாழ்ந்த மக்கள் கூட ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்கு போராடினார்களா? மாடசாமிகளும் தொப்புளான்களும், உள்ளூர் ஆண்டைகளிடம் கொத்தடிமைகளாக பலதலைமுறைகளாக இருந்தவர்கள், அவர்களுக்கு இந்த விடுதலையால் கிடைக்கும் இலாபமென்ன? இதையெல்லாம் வரலாறு சொல்லுமா? பேசியிருக்கிறதா? ஆக புனைவுகளில் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்கிறது. அக்கால அரசர்கள், கோவிலைக் கட்டினார்கள், குளத்தை வெட்டினார்கள், மான்யம் வழங்கினார்கள். எங்கிருந்து வழங்கினார்கள்? யாருடையப்பணம்? என்ற கேள்விகளைக்கேட்டு அதற்குரியப் பதிலை முன் வைக்கவேண்டும். நீலக்கடல் நாவலிலும் சரி, அண்மையில் வெளிவந்துள்ள கிருஷ்ணப்ப நாயக்கர் நாவலிலும் சரி வரலாறு நினைவுகூர்கிற ட்யுப்ளே, லாபொர்தெனே, ஆனந்த ரங்கப்பிள்ளை; கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோருக்கு ஈடாக மாடசாமி, தொப்புளான், தீட்சதர் போன்றோரை வைத்து பேசியிருக்கிறேன். ஒரு சிலரின் பிறப்பும், சூழலும் காலமும் அரியாசனத்தில் வைத்துக் கொண்டாடுகிறது, ஆனாலும் கொண்டாகும் அளவிற்கான எவ்விதச்சாதனையையும் அவர்களில் 95 விழுக்காட்டினர் செய்வதில்லையென்பது எனது தரப்பு வாதம்.  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியில் வரும் தொப்புளான் எதிர்பாராதவிதமாக வழிப்பறிக்குத் திரும்புகிறான், சராசரி மனிதனாக வாழ்க்கையை எதிர்கொண்டவன், வெள்ளந்தியாக ஐயோ தப்பில்லையா என யோசிக்கிறான், பின்னர் கிருஷ்ணப்ப நாயக்கரும் அதைத்தானே செய்கிறாரெனத் தன்னைச் சமாதானம் செய்துகொள்கிறான். இருபதாம் நூற்றாண்டிலும் எவ்வித மாற்றமுமின்றி வரலாறு திரும்ப எழுதப்படுவதைக் காண்கிறோம். கிருஷ்ணப்ப நாயக்கர் அன்று அரசர், இன்றைக்கு நம் கண்முன்னே ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கலாம். ஆக கிருஷ்ணப்ப நாயக்கர்களும் தொப்புளான்களும் வேறு பெயரில் இருக்கவே செய்கிறார்கள். இன்றைய வாசகர்களுக்கு கடந்த கால வரலாற்றில் மறைக்கப்படுகிற இதுபோன்ற (வரலாற்று) உண்மைகளைப் புனைவாகச் சொல்வது அவசியமாகிறது.  பொதுவில் சரித்திர நிறுத்தும் கதை மாந்தர்களுக்கு அதிகப்பக்கங்களை ஒதுக்குவதில்லை, அவர்களை முதன்மைப் பாத்திரங்களாக முன் நிறுத்தும் வழக்கமும் எனக்கில்லை. நீலக்கடல், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டிலும்  இதனை வழக்கமாகப் பின்பற்றியிருந்தேன்.

தாமஸ் ·ப்ளீமிங்க் நாவல்களில் தமது சண்டைக்காட்சிகளை விவரித்து சொல்வதை வரவேற்கிறார். கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதியை எழுதுகிறபோது அதன் முக்கியத்துவத்தை உணரத்தவறிவிட்டேன். அடுத்த நாவலில் அதை சரிசெய்யவேண்டுமென நினைக்கிறேன். சரித்திர நாவல் எழுதும் நண்பர்கள் தாமஸ் யோசனையைப் பின்பற்றலாம். ஜான் ஹெர்சே (John Hersey) கூற்றுப்படி வரலாற்றாசிரியர்கள் உண்மைகளையும்;  புனைகதை ஆசிரியர்கள் கற்பனைகளை சொல்லப் பிறந்தவர்கள். ஆனால் வரலாற்று புனவுகளை எழுதுகிறவர்கள் இந்நியதிக்குப் பொருந்த மாட்டார்களென்கிறார் தாமஸ் ·பிளிமிங். அவரைப் பொறுத்தவரை வரலாற்று புனவை எழுதுகிறவன், இவை இரண்டிற்கும் இடையில் இயங்கக்கடமைப்பட்டவன்.

———————————————————–

மொழிவது சுகம் – ஏப்ரல் 1 -2013

1. Lilas இலக்கிய பரிசு -2013

‘Prix Lilas’ (Lilac Prize) 2007ல் பிரான்சு நாட்டில் அறிமுகமான இலக்கிய பரிசு. பெண்படைப்பாளிகளுக்கென்று பெண்களால் ஏற்படுத்தப்பட்டது. நோக்கம் பெண்ணிலக்கியத்தை ஊக்குவிக்கவேண்டும். பிரெஞ்சு மொழியில் எழுதும் பெண்எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒன்றை தேர்வுசெய்து வருடா வருடம் பரிசு வழங்குகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ‘Orange Prize’ க்கு இணையானது. குழுவில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், ஆறாவது ஜூரி மட்டும் வருடத்திற்கொருமுறை புதுப்பிக்கப்படுகிறார். இவ்வருடத்தில் 12 புதினங்கள் போட்டியில் கலந்து கொண்டன. அவற்றில் ஆறு இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.  வெல்லும் படைப்பாளி 3000 யூரோவுக்கான காசோலையும், ‘Mont blanc’ தயாரிப்பில் பிளாட்டினமும் தங்கமும் கலந்ததொரு பேனாவும், பாரீஸில் புகழ் பெற்ற ‘Clossarie Des Lilas’ ரெஸ்ட்டாரண்டில் விருந்தும் பெறுகிறார். இறுதி பட்டியலில் இடம்பெறும் ஆறு பேரில் எனது வாக்கு ‘Sylvie Bocqui’ என்கிற பெண்மணிக்கு. Sylvieஇவர் ‘Strasbourg’ ஐச் சேர்ந்தவர் என்பது இரண்டாவது காரணம். முதற்காரணம் ‘Une saison’ நாவல், நட்சத்திர ஓட்டலில் ‘House Keeper’ ஆக வேலைபார்க்கும் இளம்பெண்ணொருத்தியின் தனிமையையும், அலுவலையும் பற்றி உரைக்கிறது. வாடிக்கையாளர்கள் புறப்பட்டுச்சென்றதும் ஒவ்வொரு அறையாக நுழைந்துவெளிவரும் பெண்ணின் நிழலுக்குள் அடைக்கலம் தேடியிருக்கும் அவளது தனிமையின் வெக்கை நம்மைச் சுடுகிறது. வெளிஉலகத்தைவிட்டு வெகுதூரத்தில் கனவில் வாழும் ஒருத்தியின் தினசரிகள் கதையாக நீளுகிறது. .

2. வாசித்ததில் மனதிற் பதிந்தவை:

அ. அகநாழிகை: பொன் வாசுதேவன் கவிதை

விசையுந்தி எம்பி நீர்வெளி மேல்வந்து
கணநேரம் காற்று சுவைத்து
சற்றே ஆறுதலுற்று நிஜமுணர்ந்து நீர் மீளும் மீன்

சிறுபாம்புக் குவியலென நகர்ந்தபடியிருக்கும்
நீர்ப்புல மேல்பரப்பாய்
ஓயுதலற்றுச் சிறகசைக்கும் கேள்விகள்

விழிகளின் உள்ளூடுருவி
அண்மையில் புலப்படும் அகத்தெளிவின் சலனங்கள்

சரிந்து நீண்டு கவிழ்ந்த இருளில்
மெல்லப் புதையும் நான்

கன்னம் நனையப் பரவி காது நுனி சிதறி
வெளியேறிக் கசியும் நீர்
உணர்த்தும் கால ஜென்மங் கடந்த புதிர்ப்பித்து

———————————-

ஆ. நாம் சரியாகத்தான் இசை கேட்கிறோமா -ஷாஜி

“நாம் பயன் படுத்தும் ஒலிக்கருவிகளில் கேட்கும் இசையின் தரமானது பதிவுசெய்யப்படதில் பாதியைக்கூட எட்டுவதில்லை” என கட்டுரையின் இடையில் வரும் வரிகளின் உண்மையை ஓரளவிற்கு அறிந்தவன். ஷாஜி அளவிற்கு இசை நுட்பத்தில் தேர்ந்தவல்லவென்றாலும், இசையை பாமரனாக அனுபவிப்பவன். பல்வேறு பழங்குடிமக்களின் பாடல்களிலிருந்து சீன நாட்டின் மரபான வாத்தியகருவி இசைவரை எதையும் விடுவதில்லை. வாசிப்பு- இசை- சினிமா மூன்றும் எனது ஆயுளை நீட்டிக்கத் தேவை. இசையில் ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கவேண்டிய கட்டுரை.

http://www.musicshaji.blogspot.fr/
—————————————————

இ. நினைவுத் தடங்கள் வே. சபாநாயகம்.

‘நான் இரசித்த முன்னுரைகள்’ தொடரில் திரு. வே.சபாநாயகம், வல்லிக்கண்ணன் தமது கடிதங்கள் தொகுப்பொன்றிர்க்கு எழுதிய முன்னுரையை பதிவு செய்திருக்கிறார். தகவற் தொடர்பு: தொலைபேசி-மின்னஞ்சல் -முக நூலென அருவ நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிற இந்நாளில், ஊடகப்பொருள்கள் மட்டுமல்ல  அவற்றின் உள்ளடக்கமும் குறுகிவிட்டன. உணர்வுகளை உண்மையிற் பரிமாறிக்கொண்டதுபோக இன்றைக்கு அதே உணர்வுகளை ஓரிருவார்த்தைகளில் உதறிக்கொள்கிறோம் -. இன்றைய வாழ்க்கையின் தன்னலபோக்கினால் விளைந்திருக்கும் கெடுதல். மனித மனங்களை இணைப்பதில் கடிதங்களின் பங்கென்ன என்பதை, பதிவை வாசித்து அறியுங்கள்.

http://ninaivu.blogspot.fr/

ஈ. மழை -வண்னதாசன்
‘இன்று..ஒன்று..நன்று’  தொடரில், ‘மழை’ குறித்து வண்ணதாசன் எழுதியது  அவரது வலைத்தளத்தில் மறு பிரசுரம் கண்டுள்ளது. வண்ணதாசனல்ல,  கல்யாண்ஜி முகம் காட்டுகிறார். கடவுளே! இவர்களுக்கு மட்டும் எப்படி இதுபோல எழுத வருகிறதென பலரை நான் பொறாமையுடன் வாசிப்பதுண்டு, வண்ணதாசன் அவர்களில் முதல் வரிசைக்காரர். மனிதர் நிறைய எழுதவேண்டும். எனக்கும் மழை என்றால் மோகம். விரும்பி பலமுறை திரும்பத் திரும்ப வாசித்தேன்.

http://vannathasan.wordpress.com/
————————————————————————–

3. இந்தியா.. இந்தியா

திரும்பவும் இந்தியா செல்லவேண்டியிருக்கிறது, சொந்த வேலைகள், குடும்ப விசேடங்களென காத்திருக்கின்றன. ஏப்ரலில் இந்தியப் பயணமென்று முடிவானதால் அதற்கு முன்னதாக 2012க்கான கணக்கை முடிக்கவேண்டும். வருமான வரித்துறை பொதுவாக மே 1ல் பேலன்ஸ் ஷீட் அனுப்பவேண்டுல், நேரமினமையால் இப்போதே முடித்துவிடலாம் என உட்கார்ந்து இரவுபகலாக செய்யவேண்டியிருக்கிறது எழுத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை. இடையில் ஒருவாரத்திற்கு இணையத் தொடர்பு துண்டிப்பு ஏற்பட தலைவலி, இப்போதுதான் சிறிது மூச்சுவிடுகிறேன். இரண்டு நல்ல சிறுகதைகளை மொழிபெயர்த்து அம்ருதாவிற்கொன்றும், சிற்றேடுக்கு ஒன்றும் அனுப்பியிருக்கிறேன்.

————————————-

மொழிவது சுகம் மார்ச் -17 -2013

1. பிரான்சை தெரிந்து கொள்ளுங்கள்:

பிரெஞ்சு மொழியை முதல் மொழியாகவோ துணைமொழியாகவோ கொண்டுள்ள நாடுகளுக்கிடையேயான பிரெஞ்சு மொழிக் கருத்தரங்கு வழக்கம்போல  இந்த ஆண்டும் 16-03-2013 அன்று தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒருவாரம் நடைபெறும் நிகழ்ச்சியின் கருப்பொருள் “தொலைதூரத்தில் விதைத்த பத்துவார்த்தைகளைச் சொல்”. கருத்தரங்கின் முடிவில் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளிலொன்று, ‘பிரெஞ்சு மொழியை தாய்மொழியாகக் கொண்டிராத ஆசிரியரால் பிரெஞ்சில் எழுதப்பட்ட படைப்பிலக்கியத்திற்கு பரிசொன்றை அறிவிக்க இருப்பது. Kundera, Atiq Rahimi, Eugène Green, Vassills Alexakis, எனப் பலர் இருக்கிறார்கள்; அந்த வரிசையில் இடம்பெற எனக்கும் கனவுகளுண்டு. ஆனால் அதற்கான பிரெஞ்சு மொழி என்னிடத்தில் தற்போதைக்கு இல்லை.

பிரெஞ்சுமொழி அத்தனை சுலபமான மொழி அல்ல:

– தெளிவான இலக்கணம் கிடையாது விதிவிலக்குகள் ஏறாளமாகக் குறுக்கிடும். அரசாங்கப் பொதுதேர்வுகளிலும், பிறவற்றிலும் இன்றைக்கும் சொல்வது எழுதுதல் பிரெஞ்சில் உண்டு.

– வினைத்திரிபுகள் (conjugation) குழப்பத்தை அளிப்பவை

– வாக்கிய அமைப்பு முறை  சிக்கலானது.

– இதுதவிர கறாரான விதிமுறைகள், போன்ற ஏராளமான மிரளவைக்கும் சங்கதிகள் பிரெஞ்சு இலக்கணத்திலுண்டு.

எனினும் மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்கள் பிரெஞ்சை தாய்மொழியாகக்கொண்டவர்களல்ல, இருந்தும் கற்றுத் தெளிந்து பிரெஞ்சில் எழுதுகிறார்கள். நீலக்கடல், மாத்தாஹரி, அண்மையில் வெளிவந்த  கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி  ஆகியவற்றை எழுதும்போதே ஒரு காலத்தில் பிரெஞ்சில் அவை வெளிவருமென்ற கனவுகளுடன் எழுதினேன். மாத்தாஹரியை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதன்பின்னர் பிரெஞ்சில் கொண்டுவரலாமென நினைத்து கி.அ. சச்சிதானந்தம் சொன்னாரென்று இலண்டனிலிருந்த பத்மனாப ஐயரிடம் ஒன்றுக்கு இரண்டு பிரதிகள் அனுப்பினேன் இரண்டுவருடத்திற்கு மேல் ஆகின்றன இதுவரை பதிலில்லை, சம்பிரதாயத்திற்காக அதன் தலைவிதி குறித்து ஒருவரி எழுதியிருக்கலாம். ‘அறுவடைக்கு ஆள்பிடிக்க அலைந்த விவசாயியின் கதை தாமதமாக நினைவுக்கு வந்தது. கொஞ்சம் தமிழுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு – அல்லது குறைத்துக்கொண்டு பிரெஞ்சில் எழுதவேண்டுமென்று தீர்மானித்திருக்கிறேன்.

பிரெஞ்சு மொழி குறித்தும்,  அதன் சிக்கலான இலக்கண விதிமுறைகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் – உலகமொழி எனப்படுகிற ஆங்கிலம், பிரெஞ்சுச் சொற்களை அதிகம் கடன்வாங்கியிருக்கும் மொழி என்பதும் உண்மை. அதுபோலவே அமெரிக்காவில் அதிகம் உபயோகத்திலிருக்கிற முதல் பத்து சொற்களில் நான்கு பிரெஞ்சு சொற்களாம்:  http://www.merriam-webster.com/info/2012words.htm

—————————————-

2. “Rem Tene, Verba sequentur’

ஒரு நாவலாசிரியன் எவ்வாறு உருவாகிறான்?

போதுமான விருப்பமும் அதில் நியாயமும் இருந்தால்  எழுத வரலாம் அப்படித்தான் 49ம் வயதில் எனக்கும் நேரந்தது என்கிறார் உம்பர்ட்டோ எக்கோ. அவருடைய “The name of the Rose” விற்பனைச் சாதனையை உலகம் அறியும். 17மில்லியன் பிரதிகள் விற்றனவாம்.  “ஓர் இளம் எழுத்தாளனின் பாவ சங்கீர்த்தனம்’ (Confessions d’un jeune romancier) என்ற அவருடைய நூல் அண்மையில் வந்துள்ளது. நமது நாவலாசிரியர்க்கு, ‘பொய்யினாற் சிறைபட்டிருக்கும் கைதிகள்’ எழுத்தாளர்கள் என்ற எண்ணம் வெகுநாளாக இருந்திருக்கிறது. தோமஸ் அக்கினோ பற்றி அவர் எழுதிய முனைவர் தேர்விற்கான  ஆய்வறிக்கை ஒருகுற்ற புனைவுபோல இருந்ததாக கிண்டலடித்திருக்கிறார்கள். ஒருமுறை அவரது தோழியொருத்தி  குற்றபுனைவொன்றை எழுதுமாறு வற்புறுத்த, அதற்குத் தடாலடியாக 500 பக்கங்களில் இடைக்காலத்தில் திருமடமொன்றில் நடப்பதுபோன்ற குற்ற புனைவை எழுதித் தருகிறேனெனப் பதில் கூறியிருக்கிறார்.  அதன் பின்னர் மர்மமான நூலொன்றை வாசிக்கிற கிருத்துவ துறவி விஷம்வைத்துகொல்லப்படுவதுபோன்ற சுவாரஸ்யமான கற்பனையும்  உதித்திருக்கிறது. ஆச்சரியமூட்டும் வகையில் வீட்டு அலமாரியில் இடைக்காலத்தைபற்றியும், திருமடம், சேசுசபையினர்  வேண்டிய தகவல்கள் அனைத்தும் இவருக்காக காத்திருப்பது தெரிய வந்தது,  ஆக நாவல் பிறக்கிறது. நாவல் எழுத விரும்புபவர்களுக்கு அவர் தரும் புத்திமதி ‘கருப்பொருளை மனதில் நிறுத்துங்கள், சொற்கள் தன்னால் வரும் (Rem Tene, Verba sequentur’).

—————————————————————————————————————-

நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள் -4

அன்புள்ள அப்பாவுக்கு

கதை பிறந்த கதை: விமானப்பயணம், வெளிநாட்டு கணவன், ஐரோப்பிய வாழ்க்கை, எனக்கனவுகளுடன் வந்து, தங்கள் கனவுகள் மெல்ல மெல்ல நிறமிழந்ததும், பின்னிரவுகளில் கடந்தகால நினைவுகளின் தணுப்பில் நிகழ்காலத்தை அணுகி விதியுடன் சமரசம் செய்துகொள்ளும் பெண்களைப்பற்றிய மற்றொரு கதை.

கதைக்களம் பிரான்சு. வெளி நாடுகள் என்றாலும் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தாலும் பொதுவில் பெண்களுக்கு ஒரே அனுபவம்தான்.

குங்குமம் இதழில் 10-02-01 அன்று பிரசுரமானது.

அன்புள்ள அப்பாவுக்கு

                                                                                   பாரீஸ் 10-12-2000

அன்புள்ள அப்பாவுக்கு,

இங்கு நான், உங்கள் மருமகப்பிள்ளை இருவரும் நலம். அதுபோல உங்கள் நலனையும் அம்மா, அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா அனைவரின் நலனையும் அறிய ஆவல். உங்களிடமிருந்து கடிதத்தை எதிர்பார்த்தேன். கடந்த இரண்டுமாதங்களாக பதிலில்லை. இப்போதெல்லாம் முன்புபோல நீங்கள் அடிக்கடி கடிதம் போடுவதில்லை.  என்ன கோபம்?

உங்களுக்கு சர்க்கரை குறைந்திருக்கிறதா?  இங்கிருந்து அனுப்பிய கருவியில் உங்கள் சர்க்கரை அளவைப் பார்ப்பதுண்டா? அடிக்கடிப் பார்த்து கண்ட்ரோலில் வைத்திருக்கவும். மாத்திரைகளை வேளாவேளைக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ளவும்.

அவ்வப்போது தலைசுற்றல் வருகிறதென அம்மா சொன்னார்கள், இப்போது பரவாயில்லையா? அவர்களுக்கும் ஒருவேளை சர்க்கரை இருக்குமோ? நான் போன முறை சொன்னது ஞாபகமிருக்கட்டும் அவரையும் குழந்தைவேல் டாக்டரிடம் காண்பித்து கம்ப்ளீட்டாக செக்-அப் செய்யவேண்டும். அண்ணி மறுபடி உண்டாகி இருப்பதாக எழுதியிருந்தீர்கள். சந்தோஷமாக இருந்தது. அதுபற்றியும் விசாரித்ததாகச்சொல்லவும். முன்புபோல ஏமாற்றக்கூடாதென்றும் ஒரு குட்டிப்பையனை பெற்றுத்தரனுமென்றும் அழுத்தம் திருத்தமா அவங்கக்கிட்டே சொல்லுங்கள்.

அண்னன் ஆபீஸ் பிரச்சினைகள் முடிந்ததா? ரூபாய் ஐம்பதினாயிரம் பணம் கட்டினால் கேஷியர் பிரமோஷன் கிடைக்குமென்று எழுதியிருந்தீர்கள். நானும் எனது பக்கத்து அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிற ஆப்ரிக்க பெண்ணொருத்தியிடம் நாலாயிரம் பிராங்க் கடன் வாங்கி அனுப்பினேன். பிரச்சினை தீர்ந்ததா?

எனக்கு என்ன எழுதறதுன்னு தெரியலை. திரும்பத் திரும்ப இப்படி எழுதறேனேன்னு நினைக்கவேண்டாம். எழுதாமலிருக்கவும் முடியலை. இவரது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய கடிதங்களில் எழுதியிருந்ததுபோலவே இப்போதும் பிரெஞ்சு பெண்ணோடுதான் இருக்கிறார். வீட்டிற்கு ஒழுங்காக வருவதில்லை. திடீரென்று வீட்டு நினைப்பு வந்தவர்போல வருவார், தனியாக அல்ல அவருடைய வெள்ளைக் வெள்ளைக் குதிரையோடு. வீட்டில் நுழைந்தவுடன் ஹாய்யாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு,”கொமான் சவா? (எப்படி இருக்கிறாய்)”, என அக்குதிரை கனைக்கும். “ஷெரி, எஸ்கெத்தா உய்ன் சிகாரெத் (டியர், சிகரெட் உன்னிடமிருக்குமா?) எனக்கேட்கவும், அவரும் அவள் வாயில் வைத்து பற்ற வைப்பார். மூக்கிலும் வாயிலும் அவள் விடும் புகை! சகிக்காது. அடுத்து கையோடு கொண்டுவரும் பீர் பாட்டிலை ஆளுக்கொன்று திறந்து கொண்டு,  விடிய விடிய கும்மாளம் அடிப்பார்கள். எதுவும் கேட்டுவிடக்கூடாது. கேட்டால் தீர்ந்தது. குடித்து முடிக்காத பாட்டில் எனது தலையிலோ தப்பிக்க முடிந்தால் சுவரிலோ மோதிச் சிதறும்.

எப்போதாவது ஒருமுறை வீட்டிற்கு வந்தாலும் சந்தோஷம் இருக்கிறதா? ச சு·பி ! ·பே பா லெ சினேமா! (போதும் ·பில்ம் காட்டாதே) என மாடியில் குடியிருக்கிறவர்கள் எழுந்துவரட்டும் என்பதுபோல கத்துவார். பிறகு விஸ்கி பாட்டிலைத் திறந்துகொண்டு சோபாவில் தொபீரென உட்காருவார். அவள் சிரிப்பாள். என்னை வைத்துக்கொண்டே அவர்கள் நடந்துகொள்ளும் விதம்…. எழுதவே கூசுகிறது.

எனக்கு பயமாக இருக்கிறது. பயம் அவர்கிட்ட இல்லை என்கிட்டதான். நான் படித்த படிப்பு, கற்றுகொண்ட தைரியமெல்லாம்  என்னை அநாதை ஆக்கிட்டதென்கிற பயம். ‘எல்லாம் விதிப்படின்னு’ அம்மா சொல்வாங்களே, அந்தக்குரல் கூட அழுது தொண்டை கட்டிட்டதுன்னா சரியா வரமாட்டேங்குது.

எதிர்வீட்டுக்கொரட்டில ரிக்ஷாக்கார குடும்பமொன்று இருந்தது ஞாபகமிருக்கா? அவன் பேருகூட ‘வரதன்’ன்னு ஞாபகம். குடித்துவிட்டு மனைவியை அடிக்கிற மறுநாள் ‘எம்.ஜி.ஆர். படத்துக்கு ஜோடியா போவாங்க. அம்மா அவளை கேலிசெய்வாங்க. அந்த மாதிரி ‘மறு நாள்’ அமைஞ்சாகூட போதும்னு மனசு சொல்லுது. நானும் அம்மாவின் கேலியை ஏற்று வரதன் மனைவியைப்போலவே சிரித்து மழுப்ப தயார்.

பக்கத்திலிருக்கும் ஆப்ரிக்க பெண்தான் எல்லா உதவிகளையும் செய்கிறாள். சோஷியல் மேடத்திடம் அவ்வப்போது அழைத்துச்சென்று எனக்குச் சாப்பாட்டிற்கு வழி செய்கிறாள். பிரான்சுக்கு வருவதற்கு முதல் நாள் அம்மா,” உனக்குப் பிடிச்சதுண்ணு வத்த குழம்பும், சுட்ட அப்பளமும் செய்தேன், வயிற்றுக்கு ஒழுங்கா சாப்பிடு!” என்றார்கள்.  ரொம்ப பசிச்சா? அம்மாவின் இரவல் குரலால் என்னை நானே கேட்டுக்கிட்டு, சாப்பிட உட்காருகிறேன்.

பிரெஞ்சு பாஷை எனக்கு இன்னும் பிடிபடவில்லை. நான் படித்த படிப்பிற்கு அங்கீகாரமில்லை. இரண்டுவாரங்களாக ஒரு வயதான தம்பதிகளிடம் வீட்டு வேலை பார்க்கிறேன். மற்ற நேரங்களில் எதையாவது நினைத்துக்கொண்டு அழுகிறேன். அழும்போதுகூட யாராவது பக்கத்தில் இருந்தால்தானே ஆறுதல். சேர்ந்தாற்போல தொடர்ந்து சில நாட்கள் ஓய்வின்றி அழணும், அதுவும் உங்களையெல்லாம பக்கத்தில் வைத்துக்கொண்டு. அது முடியுமா அப்பா? இந்தியாவுக்கு வந்து விடட்டுமா? எனக்கு உடனே கடிதம் போடவும்.

இப்படிக்கு
கலா
—————————————
புதுவை, 05-02-2001

சௌபாக்கியவதி கலாவுக்கு,

அப்பா அம்மா இருவரும் ஆசீர்வதித்து எழுதிக்கொண்டது. இங்கு நாங்கள் இருவரும் நலம். அதுபோல உன் அண்ணன், அண்ணி, குழந்தை சௌம்யா ஆகியோரும் நலம்.

சௌம்யாவுக்கு எப்போதும் உன் ஞாபகம் தான். அண்ணனுக்கு கேஷியர் உத்தியோகம் கிடைத்து ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறான். எனக்கு சர்க்கரை அளவு கட்டுபாட்டில் இருக்கிறது, நீ பயப்பட வேண்டியதில்லை. அம்மாவின் தலைச்சுற்றல் குறைந்திருக்கிறது. போனவாரங்கூட டாக்டரிடம் காட்டினோம். புதிதாக சோனி கலர் டி.வி. ஒன்று சமீபத்தில் வாங்கினோம். அவளுக்கு மிகவும் சந்தோஷம். மெகாசீரியல்களைப் பார்க்க காலை பதினோருமணிக்கே உட்கார்ந்துவிடுகிறாள்.

நீ எங்களைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிராதே. நீ சந்தோஷமாக இருந்தால்தான் எங்களுக்கு நிம்மதி. உன் கடிதத்தைப் பார்த்ததிலிருந்து அம்மா ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை.  அவளும் புலம்ப ஆரம்பித்துவிட்டாள். எல்லோரும் உனது நினைவாகவே இருக்கிறோம். தைரியமாக இரு. அவசரப்படவேண்டாம். எல்லாவற்றிர்க்கும் மேலே வேதபுரீஸ்வரர் இருக்கிறார்; நம்முடைய வேண்டுதல் வீண்போகாது; அந்த ஊரிலும் கோவில்கள் இருப்பதாக அறிந்தேன்; நேரம் கிடைக்கும்போது போய்வா; பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். திரிபுரசுந்தரி கடாட்சத்தால் ஒரு குழந்தை பிறந்தால், குறைகளெல்லாம் தீர்ந்துவிடும். பேரனோ பேர்த்தியோ எதுவென்றாலும் பரவாயில்லையென அம்மா சொல்லச்சொன்னாள்.

ஆண்களென்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். நீதான் அட்ஜெஸ்ட் பண்ணிப்போகவேண்டும். உன் ஜாதகத்தை நமது ஜோஸியரிடம் காட்டினேன். சனிதிசை நடப்பதாகச் சொன்னார். இன்னும் இரண்டு ஆண்டுகள் நீ சிரமப்படவேண்டியிருக்குமென்று கூறினார். பிறகு யோகதிசையாம். நான் திருநள்ளார் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வருகிறேன். சற்று பொறுமையுடன் இருந்து நீதான் அவரைத் திருத்தவேண்டும். கடவுள் கிருபையால் எல்லாம் நல்லபடிமுடியும்.

உன் தோழி கல்பனா ஸ்டேட்ஸ்லிருந்து வந்திருந்தாள். போன வருடம் வாங்கிய மனையில் வீடு கட்ட ஆரம்பித்துவிட்டார்கள். முப்பது லட்சத்துக்கு எஸ்டிமேட் போட்டிருக்கிறார்கள். இருபது இலட்சத்திலேயே நாம் பிரமாதமாகக் கட்டிவிடலாம். நம் வீட்டு எதிரிலேயே 1400 சதுர அடிகள் கொண்ட மனை விற்பனைக்கு வருகிறது. ஏதாவது ஏற்பாடு செய்து பணம் அனுப்பு. அங்கெல்லாம் சவரன் என்னவிலை போகிறது? வரும்போது கொண்டுவந்தால் உங்கள் ஊர் பணத்தைக் காட்டிலும் கூடுதலாக இலாபம் தரும். அண்ணனுக்கு ‘ரேமெண்ட்வெல்’ வாட்ச்  ஒன்று வேண்டுமாம். யாரிடமாவது மறக்காமல் கொடுத்தனுப்பவும். சௌம்யாவுக்கு கிண்டர் சாக்லேட் ஒரு பாக்கெட்டும் எனக்கு ஒரு கெல்லெட் ஷேவிங் செட்டும் ஏற்பாடு செய்யவும்.

இப்படிக்கு
அப்பா
நன்றி குங்குமம் 10-02-2001
————————————————————-

மொழிவது சுகம் பிப்ரவரி 25 2013

அ. இந்தியப் பயணம்

தில்லி, ரிஷிகேஷ், ஹரித்துவார், ஜெய்ப்பூர்

ஜனவரி 11 லிருந்து பிப்ரவரி 14 வரை இந்தியாவில் கழிந்தது. ஜனவரி 14 லிருந்து 20 வரை புது தில்லி சென்றிருந்தோம். இம்முறை எனது மனவியுடன் சென்றிருந்தேன். நண்பர் வெ. சுப. நாயகர் அவர் துணைவியாருடன் வந்திருந்தார். ஒரு வாரம் மிக நன்றாகக் கழிந்தது. முதல் நாள் தில்லி. இரண்டாம் நாள் ரிஷிகேஷ், ஹரித்துவார் பார்த்துவிட்டுத் திரும்பினோம் மூன்றாம் நாள் ஒய்வு,  உள்ளூரில் பார்க்கவேண்டியவற்றைச் சென்று பார்த்தோம். தில்லி குளிர்பற்றி எங்களுக்குப் பெரிதாய் சொல்ல ஒன்று மில்லை அடுத்த இரண்டு நாட்கள் ஜெய்ப்பூர், ஆக்ரா, பதேபூர் சிக்ரி, மதுரா  எனக் கழிந்தன. மறுநாள் (20 ஜனவரி) பிற்பகல் சென்னை திரும்பினோம். நாயக்கர் அன்றே புதுச்சேரி சென்றுவிட்டார். நான்  உறவினருடைய காரில் பிற்பகல் புத்தகக் கண்காட்சிக்குச்சென்றேன். என் வாழ்நாளில் அப்படியொரு கூட்டத்தைச் சந்தித்ததில்லை. எழுத்தாளர் நண்பர்களில் சிலரைச் சந்திக்க முடிந்தது. அடுத்த ஒரு வாரம் புதுச்சேரியை விட்டு எங்கும் போகவில்லை. வீட்டிற்குப் பெயிண்ட் அடிக்க  ஏற்பாடு செய்திருந்தோம். இப்போதெல்லாம் இந்தியாவில் இதற்கெல்லாம் கணிசமாக செலவு செய்யவேண்டுமென புரிந்துகொண்டேன். எஞ்சியப்பொழுது கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீட்டுவிழா சம்பந்தமாக கழிந்தது. நண்பர் எஸ். ராமகிருஷ்ணனும், தமிழவனும் தங்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையில் எனது அழைப்பினை ஏற்று புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டது மன நிறைவாக இருந்தது. விழா சிறப்பாக அமைய அண்ணாமலை பாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று நண்பர் பெருமாளும் அவர் துணைவியாரும் உதவினார்கள். அவர்கள் தவிர திரு நந்திவர்மன், நாயக்கர், சீனு தமிழ்மணி ஆகியோரும் விழா சிறக்க காரணமாக இருந்தார்கள். சென்னையிலிருந்து உடல் நலன் பாதித்திருந்த நிலையிலும் கலந்துகொண்ட பெரியவர் கி.அ. சச்சிதானந்தத்தின் வருகையை மறுப்பதற்கில்லை. தோழி மதுமிதா அவர் சகோதரி, நண்பர் ஷங்கர நாராயணன், அகநாழிகை வாசுதேவன் நண்பர் சந்தியா நடராஜன் எனப்பலர் கலந்து கொள்ள விழா எதிர்பார்த்தைக் காட்டிலும் நன்றாக இருந்தது. இடையில் ஒரு நாள் மட்டுமே சென்னைக்குச் செல்ல முடிந்தது. மனைவியைக் ஓல்டு மகாபலிபுரம் சாலையிலிருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு நாயக்கரும் நானும்  எஸ். ராமகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்றிருந்தோம். வெகு நேரம் உரையாடினோம். நண்பர் எஸ். ஆர். சில யோசனைகளைத் தெரிவித்தார். அவைகளை பிரான்சிலிருக்கும் நண்பர்களிடம் கலந்துபேசி நடைமுறைப்படுத்தும் எண்ணமிருக்கிறது. பிரான்சில் எனக்கு வேண்டிய நண்பர்கள் அனைவருமே பாரீஸில் இருக்கிறார்கள். நண்பர்களை நேரில் சந்தித்தே அதுபற்றி பேசமுடியும். புதுவையில் 7ம் தேதி உறவினர் வீட்டுத் திருமணமொன்றில் வெகுகாலத்திற்குப் பிறகு உறவினர்கள் சிலரைச் சந்திக்க முடிந்தது.

எட்டாம் தேதி காலை நண்பர் நாயக்கர் தமது கல்லூரியில்:

“Insiders’ and outsiders’ perspective of France” என்ற தலைபைக்கொடுத்து பேசக்கேட்டிருந்தனர். பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் படிக்கும் முதுகலை மாணவர்கள் வந்திருந்தனர். பேராசிரிய நண்பர்கள் ராஜா, தனியல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. உயர்கல்வி மாணவர்களிடையே சொற்பொழிவு செய்வது இது மூன்றாவது முறை. புதுச்சேரி பல்கலை கழகத்தில் தமிழ்த்துறையில்  மொழிபெயர்ப்பு அனுபவம் குறித்து 2011ல் பேசினேன், நண்பர் நந்திவர்மன் ஏற்பாடு செய்திருந்தார். 2012ல் தில்லி ஜவஹர்லால்நேரு பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்புபற்றிய கலந்துரையாடலை பேராசிரியர்கள் நாச்சிமுத்துவும், சந்திரசேகரனும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நண்பர் நாயக்கரும் நானும் கலந்துகொண்டோம்.

மதுரை

எட்டாம் தேதி இரவு மதுரை சென்றோம். இந்தியாவில் நீண்டதூரம் பயணமெனில் பேருந்தை தவிர்ப்பது நலம். ரதிமீனா என்றொரு சொகுசு பேருந்து, சொகுசு பெயரில் மட்டுமே. படுக்கைக்கும் சேர்த்து பணம் கொடுத்திருந்தோம். உறங்கவே முடியவில்லை. சம்பந்தி இரவில் காரோட்டத் தயங்குவதால் ஆட்டோ வைத்துக்கொண்டு சென்றோம். ஆட்டோவிற்கு இரு மடங்கு கட்டணம் கொடுத்து செல்லவேண்டியிருந்தது. மதுரையிலும் கொசு நிறைய இருக்கிறது. மதியம் புதுச்சேரியிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை வந்திருந்த நண்பர் நந்திவர்மன் கல்வெட்டு பேராசிரியர் ஒருவருடன் வந்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதுபோலவே புதுவையில் நடந்த புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளாத நண்பர் ந. முருகேசபாண்டியன் இளங்கவிஞர் ஒருவருடன் மறுநாள் வந்திருந்தார். இரண்டு மணிநேரத்திற்கு மேல் நீண்ட எங்கள் உரையாடல் பிரான்சு, மொழிபெயர்ப்புகள், அயலகத் தமிழர்; கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி எனக் கழிந்தது.  நேரம் போதவில்லை என்ற வருத்தத்துடனேயே பிரிந்தோம். மறுநாள் புதுச்சேரிக்கு பேருந்துகள் பிடித்து வந்தது மிகவும் கொடூரமான அனுபவம். இனி மதுரை செல்வதெனில் இரயிலோ, வாடகைக் காரோ எடுத்துசெல்வதென தீர்மானிக்க வேண்டியதாயிற்று. சகோதரர் மகனுக்கு திடீரென்று திருமண ஏற்பாடுகள் செய்து நாங்கள் பிரான்சுக்கு புறப்பட இருக்கிறோம் என்பதால்  13ந்தேதி நிச்சயத்தாம்பூலம். திருமணம் ஏப்ரல் 15ந்தேதி வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 12, 13, 14 தேதிகளில் கன்னியாகுமரியில் நண்பர்களுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்கிறது. நண்பர் கண்ணனிடம் வருவதாகச்சொல்லியிருக்கிறேன்.

பிப்ரவரி 14 சென்னையில் விமானமெடுத்து துபாய் வழியாக 15ந்தேதி பாரீஸ் வந்து இறங்கினோம். இரண்டு நாட்கள் பாரீஸில் மகன் வீட்டில் கழிந்தன. 16ந்தேதி ஸ்ட் ராஸ்பூர் வந்து சேர்ந்தேன். கடந்த ஒருவாரமாக பிரான்சில் கடுங்குளிர், பனியும் அதிகம். ஒவ்வொரு நாளும் -5, -10 என்று பாகைமானிபயமுறுத்த வெளியிற் செல்ல யோசிக்கிறேன்.

—————————————————

ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது?

Belle et bête (Beauty and the beast)
பிரான்சு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. கடந்த ஒருவாரமாக சென்னைப் பத்திரிகையாளர்களின் மொழியிற்சொல்வதெனில்
மிகவும் பரபரப்பாக பேசப்படும் விவகாரம் ஒரு நூல். நூலின் தலைப்பு Belle et bête.

பிரெஞ்சு எழுத்தாளர் கிளேஸியோ  ‘உலகில் உண்மையென்று எதுவுமில்லையெனவும், அனைத்துமே கற்பனை அல்லது புனைவு என்பார். எனக்கும் அதில் உடன்பாடுண்டு. இயற்கை, உயிர்கள், இயக்கம், வெளி, இருத்தல், சூன்யம், புள்ளிகள், கோடுகள் ஓடும் நீர், தேங்கிய குட்டை, வெப்பம், குளிர்  இப்படி கண்ணுக்குத் தோற்றம் தரும் அனைத்துமே பொய் அல்லது மாயை என முடிவுக்கு வருவதொன்றே அநேகக் கேள்விகளுக்கு எளிதான பதிலான அமையும். மார்க்ஸ் போன்றே பொருளின் மதிப்பு பௌதிக வடிவத்தைச் சார்ந்ததல்ல என நம்மை தேற்றிக்கொள்ளமுடிந்தால் நிம்மதியாக உறங்கி எழலாம். சக எழுத்தாளரிடம் தயக்கமின்றி கை குலுக்கலாம், உட்கார்ந்து பேசலாம், சொல்லிக்கொண்டு புறப்படலாம்.

மர்செலா லாகுப்(Marcela lacub) என்ற பெண்மணி முகவரியைத் தொலைத்த ஓர் அரசியல்வாதியுடனான ஆறுமாத அந்தரங்க அனுபவத்தை, ” Belle et bête” நம்முடன பகிர்ந்துகொள்கிறார். இப்பெண்மணி யாரோ எவரோ அல்ல, பிரான்சுநாட்டின் தேசிய ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், சட்ட நிபுணர், நேரம் வாய்த்தால் எழுதவும் செய்வார்.  நூலின் தலைப்பின்படி ‘Belle’ இப்பெண்மணியென்றால்,  ‘bête” யாரென்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அம்மணி தேடிப்போன ஆணிடம் முகமன் கூறினார், கை குலுக்கினார். நேரமிருந்தால் இருவரும் நாளை இரவு சேர்ந்து டின்னர் சாப்பிடலாமா என்றார். டின்னர் முடித்ததும் அரைபார்வையில் போதை தளும்ப, எனது கட்டில் இருவரைத் தாங்கக்கூடியதென்றார். அந்த ஆண் அல்லது ‘bête’ வேறு யாருமல்ல பிரெஞ்சு ஜனாதிபதி யென்றவெண்ணெய் திரண்டு வந்தபோது நியூயார் ஓட்டலொன்றில் தாழியை உடைத்தவர். நாவடக்கம் கொண்ட ஆசாமிக்கு புலனடக்கம் பலகாத தூரம். சீதையைத் தொடாமற் இராவணன் கெட்டதாக கீழைதேச பண்பாடு எழுதுகிறது. இவர் பெண்களைத் தொட்டே கெட்டு குட்டிசுவரானவர்.

———————————-