Category Archives: Uncategorized

என்னைக் கவர்ந்தப் பெண்கள்

20150916_094052

ஓர் உயிரி தனது இருப்பை உறுதிபடுத்தவும், தன்னை முன்னெடுத்துச் செல்லவும், தொடக்கக்காலத்தில் ‘இயற்கை’ நெறியின்படி வினையாற்றியது. காலப்போக்கில் தனிமனிதன் கூட்டமாக வாழ முற்பட்டபோது சமூகம் என்ற அமைப்பு அனைத்து உயிர்களுக்கும் பொதுவான வாழ் நெறிகளை அமைத்துக்கொடுத்து அதன்படி வாழவேண்டுமென ‘உயிரியின் இருப்பை’ நிர்ப்பந்தித்தது, ஒரு கூட்டுச் சமூகத்தில் தனிமனிதனின் விருப்பு வெறுப்புகள், அவை கற்பிக்கும் செயல்பாடுகள், பிற மனிதர்களின் இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஓர் உயிரியின் இருப்பை உறுதிபடுத்தும் முனைப்பு, மற்றொரு உயிரியின் இருப்பை மறுக்ககூடாதென்பதுதான் நவீன சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. நாம் விரும்புவதும் விரும்பாததும்; உண்பதும் உடுத்துவதும்; கட்டுவதும் இடிப்பதும் நம்முடைய தேவை நிமித்தம் நடைபெறவேண்டுமென்றாலும், நம்மைச் சார்ந்த நம்மோடு கூட்டாக இயங்குகிற பிற உயிரிகளின் தேவைகளையும் குறைந்தளவேனும் அவை பூர்த்திசெய்யாதுபோனால் குழப்பமும் கலகமுமே மிஞ்சும், காரணம் இச்சமூகத்தில் ஒரே நேரத்தில் நாமாகவும் பிறராகவும் நாம் இருக்கிறோம்.

எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன் என்பதே கூட ஒருவகையில், சிலரைக்கூட குறிப்பிட்டு நேசிக்க நாம் தயாரில்லை என்பதாகத்தான் பொருள். பேச்சுக்கு என்று வைத்துகொண்டால் கணவன் என்றால் மனைவி, காதலன் என்றால் காதலி அல்லது இதற்கு எதிர்மாறாக; அடுத்து பிள்ளைகள் என்றால் பெற்றோரிடத்திலும்; பெற்றோர்கள் என்றால் பிள்ளைகளிடத்திலும்; சகோதரர்கள் சகோதரரிகளுக்கிடையிலும் பரஸ்பர அன்பு நிலவுமென சமூகம் நம்புகிறது, பிறகு நட்பின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவரை நேசிக்கிறோம் அன்பு பாராட்டுகிறோம். எனினும் நவீன உலகில் இவ்வுறவுகளின் ஆயுட்காலம் பரஸ்பர அன்பைக் காட்டிலும், பரஸ்பர எதிர்பார்ப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது.

நித்தம் நித்தம் பிறரைச் சந்திக்கிறோம். மனைவி, மக்கள், அண்டைவீட்டுக்காரர், உடன் பயணிப்பவர், அலுவலகங்கள், கடைகள், பொது இடங்கள்: எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள். இவற்றில் ஒரு சில முகங்களே ஏதோ சில காரணங்களால் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேரிட்டு, நம்மில் இருக்கின்றன, பெரும்பாலாவை பனிபோல, மலர்போல, மழைபோல இயற்கை நிகழ்வாக வருவதும் போவதுமாக இருக்கின்றன. இக்கூட்டத்திடை எவ்வித நிர்ப்பந்தமுமின்றி, எதிர்ப்பார்ப்புகளின்றி ஒரு சில முகங்களை, அம்முகங்கள் தாங்கிய மனிதர்களை நேசிக்கிறோம். ஓர் வாசகன் எழுத்தாளனை நேசிப்பது, ஒரு ரசிகன் தன்னுடனை நடிகன், நடிகைக்கு, பாடகன் இப்படி யாரோ ஒருவனை ஆராதிப்பது, சமூக நலனில் அக்கறைகொண்ட ஒருவன் சமூக ஆர்வலர் ஒருவரிடம் காட்டும் மரியாதை ஆகியவை நிர்ப்பந்தகளற்ற எதிர்பார்ப்புகளற்ற அன்பு. சிற்சில நேரங்களில் நாம் முரண்பட நினைக்கும் விஷயங்களில், இன்னொருவர் முரண்படுகிறார்; நாம் நமது எதிர்ப்புக்குரலை பதிவு செய்ய தயங்குகிறபோது, துணிச்சலின்றி முடங்குகிறபோது வேறொருவர் அதனைச் செய்கிறார். அது எதிர்ப்புகுரலாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை பிறரிடத்தில் காட்டும் கரிசனமாக இருக்கலாம், அந்த வினைக்காக, நமது மனநிலைக்கு ஒத்திசைந்து ஆற்றும் செயலுக்காக அம்மனிதரை போற்றுகிறோம். அப்படி நமது அன்பிற்குரியவர்களாக, நமக்கு மனதுக்கு இசைந்தவர்களாக, நமது விருப்ப இலக்கணங்களுக்கு உட்பட்டவர்களென்று ஒரு கூட்டத்தையா கைகாட்ட முடியும். விரல்விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம் அவ்வகையில் பெண்கள் நால்வரைப்பற்றி பதிவு செய்ய விருப்பம். ஏன் பெண்கள், ஆண்களில்லையா? “பெண் உயராவிட்டால் ஆண் ஏது?” என்பான் பாரதி, ஆணித்தரமான உண்மை. அரசியல், நிர்வாகம், அறிவியல், பொருளாதாரம் எனப் பலதுறைகளிலும் சாதனைப் படைத்துள்ள பெண்களிடம் ஆண்களின் ஆளுமையும், கம்பீரமும் ஒருபுறமிருக்க, ஆண்களிடம் காணக் கிடைக்காத கருணையும் தாயுள்ளமும் அவர்களை -பெண்களை உயரத்தில் நிறுத்துகிறது.

 

அ. பாரதி கண்ணம்மா:
கண்ணம்மா ஓர் அழகு தேவதை, மித். ‘கண்ணம்மா’ என்ற சொல்லின் அடர்த்தியை, அதன் திரட்சியை, மணத்தை, பசுமையை ‘கற்பனை நவிற்சியின்’ ஒட்டுமொத்த பருமையை, உபாசிப்பவனாய் அதன் இண்டு இடுக்குகளைதொட்டுப் பரவசத்தில் திளைக்கிற பாரதியைக் ‘கண்ணம்மா’ பாடல்களில் காண்கிறோம். கண்ணம்மா பாரதியுடைய செல்லம்மா. குயிற்பாட்டில் தத்துவத்தை சொன்னவனுக்கு, ‘கண்ணம்மா’ பெயரில் ஒரு செல்லம்மா கிடைத்திருக்கிறாள். பாரதி பாடிய, ஆராதித்த, மருவ ஆசைகொள்ளும் கண்ணமாக்களை இன்றளவும் படிமங்களாக, ஜீவன் சொட்டும் காட்சிகளாக மனதில் அசைகின்றன, மல்லிகை மணம் தோய்ந்த ஈரக்காற்றாக நெஞ்சைக் குளிருவிக்கின்றன. அந்நாட்களில் : தெருவாசலில் கோலமிடும்போதும், அன்றலர்ந்த பூசனிப் பூவை கோலத்திடை பூக்கவைக்க நடத்தும் ஒத்திகையின்போதும், கோலமிட்டு பாவாடைத் தடுக்க தலைவாசலைக் கடக்கிறபோதும்; தெருவாசலில் அண்டைவீட்டுப் பெண்ணுடன் உரையாடியபடி பார்வையைத் தெருவில் சிந்துகிறபோதும் ; ஒரு கையில் ஊஞ்சல் சங்கிலியும் மறுகையில் புத்தகமுமாக, ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்திருப்பவள், ஆண்வாசனை உணரரப்பட்ட கணத்தில் ஓடி மறைகிற போ¡தும்; கிணற்று நீர்ல் முகம் அலம்பி புழக்கடையின் முந்தானை விசிற நடந்து வருகையிலும் சந்தித்தத இளம்வயது செல்லம்மாக்கள் பலரும் கண்ணம்மாக்கள்தான்.

பெண்ணியம் பற்றி தமிழில் அதிகம்பேசிய ஆண் பாரதி. இன்று வரை அவன் அளவிற்கு பெண்கள் உட்பட கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்விடுதலைக் குறித்து மேசியவர்கள் குறைவு. பெண்களைக் காட்டிலும் கூடுதலாக எதிர்பாலினத்திடம் கிறங்கிக் போகிறவர்கள் ஆண் கவிஞர்கள். பாரதி அழுது ஆர்பாட்டம் பண்ணுபவனல்ல, மறந்துங்கூட கண்ணைக் கசக்கியவனில்லை; தமிழைத் தாயென்றும், இந்திய நாட்டைப் பாரதமாதாவென்றும், பாரத தேவியென்றும் உருவகப்படுத்தியவன்; எந்த நேரமும் நின்மையல் ஏறுதடீ குறவள்ளி, சிறுகள்ளி எனப் பொங்கினவன். வீரத் தாய்மார்களை வேண்டியவன். “அந்நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத் தன்மையையும் இந்நாட்களிலே ஆண்மக்கள் காட்டும் பேடித்தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆ நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இந்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக்காட்டிலும் ஒரே அடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாகயிருக்குமே என்று மனம் குமுறுகின்றது” (1) என இந்திய நாட்டைக் குறித்து வருந்துகிற நேரத்திலும் பெண்களைத் தோளில் சுமக்கிறான். அவனுடையக் ‘கண்ணம்மா’ இந்த பெருமிதத்தின் விளைச்சல். அவள் மாசறு பொன், அப்பழுக்கற்ற நீதி. மனித இன உயர்பாலினத்தின் ஒரு துளியென்றாலும் பாரதியின் கவிதைக் கடலிற் கலந்து ஆண்கள் மனதில் ஒரு பெரும் சூறாவளியையை வாசிப்புதோறும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவள்.

கண்ணம்மாவைக் காதலியாகக் காண்கிறபோது, காதலில் திளைப்பது போலவே பாரதியிடம் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தெற்கத்திய காற்றின் அணுகுமுறை அவனிடம் தெரிகிறது, அவளுடைய வட்ட கருவிழிகள், மலரொளியொத்த புன்னகைகள், நீலக்கடலையொத்த நெஞ்சின் அலைகள், குயிலோசையொத்த குரலோசை இன்னும் இதுபோன்ற தகுதிகள் அனைத்துமே காதல்வயப்படும் எல்லா ஆண்களுக்கும் – அவனொரு கவிஞனாகவும் இருப்பான் எனில் எளிதாக அமையக்கூடும். மாறாக அவள் “பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம் வாய்த்த செல்லம்மாவாக, கண்ணம்மாவாக வாய்க்கும் பேறு ‘பாரதி’க்கு மட்டுமே வாய்க்கும். அந்தக் கண்ணம்மாவை ‘மருவ’, பாரதி ‘மூத்தோர் சம்மதி’க்குக் காத்திருந்தது வியப்புதான், மாறாக அவளைக் கொண்டாடவும் குலதெய்வாகப் போற்றவும் ஒருவர் சம்மதியும் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் அவசியமல்ல, தமிழும் அதன் சொற்களும் சம்மதிக்க வேண்டும், அதொன்றுதான்.

ஆ. சுதா ராமலிங்கம்:

Sudha“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்” என்ற குறள் நினைவுக்கு வருகிறபோதெல்லாம் தோழியர் சுதா இராமலிங்கத்தை நினைத்துக்கொள்வேன். ஆண்நண்பர்களென்றாலும் பெண் நண்பர்கள் என்றாலும் பரஸ்பர தேவைகளை ஒட்டியே நட்பு உருவாகிறது. அதன் ஆயுளும் அத்தேவைகள் நீட்சியைப் பொருத்தே அமையும். என் வாழ்நாளில் பல நண்பர்கள் குறுக்கிட்டிருக்கிறார்கள், பழகி இருக்கிறார்கள் பள்ளி, கல்லூரி, பணி, இருந்த நாடு, இருக்கிற நாடு, என்ற கூறுகளுக்கேற்ப நட்பு உருவாகிறது. உருவாவது போலவே சில ஆண்டுகளுக்குப் பிறகு உருக்குலைந்து சருகாகி காற்றில் கலந்தும் போகிறது. காரணங்கள் இரு தரப்பிலும் இருக்கின்றன. நானே கூட காரணமாக இருக்கலாம். அவர்களது எதிர்பார்ப்பிற்கு நானோ எனது எதிர்பார்ப்பிற்கு அவர்களோ பொருந்தாதது நட்பின் முறிவுக்குக் காரணமாக இருக்கலாம். வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானவர். இன்றைக்கும் இலக்கிய எல்லைக்கு அப்பால், இரத்த உறவுகளைக் கடந்து இந்தியாவிற்கு வருகிறபோதெல்லாம் தவறாமல் நேரில் சந்தித்து பரஸ்பர நலன் விசாரிப்புகளை பரிமாறிகொள்ளும் அளவிற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் நட்பு தொடருகிறது.

நட்பு தொடங்கிய காலத்தில், அவர் நாடறிந்த வழக்கறிஞர் என்பதோ, அவருடைய இடது சாரி சிந்தனையோ, மனித உரிமை ஆனையத்தில் தீவிரமாகச் செயல்படுகிறவரென்றோ, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தமது ‘யாதுமாகிநின்றாய்” கட்டுரைத் தொகுப்பில் அவரைப்பற்றியும் எழுதியிருப்பாரென்றோ எனக்குத் தெரியாது. அப்போதைய நிலையில் ஏன் இப்போதும் கூட அவரது சமூகத் தகுதி என்னிலும் பார்க்கக் கூடியதே. எனினும் எங்கள் இருவரிடத்திலும் பாசாங்கற்ற, உண்மையான அப்பிப்ராயங்கள் இச்சமூக அமைப்பின் மீதும், அதன் செயல்பாட்டின் மீதும் சொல்ல இருந்தன, இருக்கின்றன. அநீதிக்கு எதிராக கோபமும், பாதிக்கபட்டோரிடம் சுயாதீன உத்வேகத்துடன் கூடிய அக்கறையும் பரிவும் இருப்பதை உணரும் சந்தர்ப்பங்கள் இருவருக்கும் அமைகின்றன. நட்பு என்பது ஏதோ ஒரு தளத்தில் – ஒரு புள்ளியில் – இரு வேறு மனிதர்களிடை உணர்வு ஒத்துப்போகவேண்டும், அது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படவும் வேண்டும். ஒத்தக் கல்வியோ, ஒந்த பொருளாதார நிலமையோ, ஒத்த துறையோ அதனைக் கையளிப்பதில்லை. அவர் இந்தியாவிலும் நான் பிரான்சு நாட்டிலென்று வாழ்ந்தாலும்; அவர் மூத்த வழகறிஞராகவும், People’s Union for Civil Liberties உறுப்பினர் எனத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்க; நான் எழுத்து, வாணிகம் எனக் கவனம் செலுத்த நேரிட்டாலும் பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் தொலைபேசி, முகநூல், சந்தர்ப்பம் அமைகிறபோது நேரில் என்று அளவளாவிக்கொண்டு இருக்கிறோம். “மாத்தா ஹரி” என்ற எனது நாவலில் கற்பனை மாந்தர்களைத் தவிர்த்து வாழும் காலத்து படைப்புலக நண்பர்களும் இடம்பெற்றிருப்பார்கள். படைப்புலகம் சார்ந்திராது நாவலில் இடம்பெறுகிற ஒன்றிரண்டு பெயர்களில் வழக்கறிஞர் சுதா இராமங்கமும் ஒருவர்.

 

இ. சிமொன் தெ பொவ்வார் (Simone de Beauvoir):Simone

 

பொவ்வார்’ ஓர் அக்கினி தேவதை. இருபதாம் நூற்றாண்டின் பெண் அதிசயம்.”நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு” எனப் பாரதி எதிர்பார்க்கிற புதுமைப் பெண் இலக்கணத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும் பெண்மணி. ” நான் சந்தித்த பெண்களிலேயே சிமொன் தெ பொவ்வார் ஒருத்திதான் புத்தி கூர்மையும் அழகும் ஒருங்கேப் பெற்ற பெண்மணி அல்லது உங்களுக்கு அப்படி யாரேனும் தெரிந்தவர் ஒருவர் இருந்தால் அவர்களில் இவரும் ஒருவர்” என ஜெர்மன் பத்திரிகையாளரும் பிற்காலத்தில் பெண் இயங்களில் ‘சிமொன் தெ பொவ்வாருடன் இணைந்துகொண்ட அலிஸ் ஷ்வார்ஸெர் சொல்கிறார். பெண்கள் அழகாகவும் புத்திகூர்மையுடைவர்களாக இருப்பவர்கள் அரிது, அதிசயமாக நடைபெறக்கூடியது. பெண்களுடைய ‘பைபிள்’ எனப்படும் அவருடைய ‘இரண்டாம் பாலினம்’ என்ற அரியதொரு படைப்பை வாசிக்க நேர்ந்தது. பெண்கள் படைப்பை, உயிரியல் கட்டமைப்பை, மானுட இருப்பை அவர்கள் உயிர் வாழ்க்கையை அத்ன் சிக்கல்களை, காலம் காலமாய் அந்த அழகியலுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அன்றாட அவலங்களை அமிலச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்தார். சமயத்தின் பேராலும், மரபின்பேராலும் பெண்களை இழிவுபடுத்தும் மூடர்களின் இழிந்தப் போக்கை அவரளவிற்கு கண்டித்தவர்கள் உலகிலில்லை. அறிவு, அழகு, நுண்ணுணர்வு, அள்ப்பரிய மனோபாவம், நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றல்:சிமொன் தெபொவ்வார்.
அரசியல் இலக்கியம் இரண்டிலுமே சில பக்கங்கள் அவர் காலத்தில் பிரான்சு நாட்டில் ஒளிர்ந்ததெனில் அதில் சிமொன் தெ பொவ்வாரின் பங்களிப்பு பிறர்கவனத்தில் கொள்வதற்குரிய நியாயங்களுடன் இருந்துள்ளது. “நான் நானாக இருப்பதிலுள்ள சவால்களை எதிர்கொள்ள தயார்” என்ற வாக்கியம் “கடமை தவறாத இளம்பெண்ணொருத்தியின் நினைவுகள் என்றொரு நூலில் இடம்பெறுகிறது. பெற்றோர் நிழலிலிருந்து மீளத் துணிந்த இள்ம்பெண்ணின் அசட்டுக்குரலென அதை ஒதுக்கிவிடமுடியாது. பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொருவருவரிடத்திலும் வயது பேதமின்றி, சமயங்களைக் கடந்து, எல்லைகளை மறந்து ஒலிக்கவேண்டிய குரல். இந்த நூற்றாண்டிலும் குறிப்பாக, விளக்கப்போதாதா அல்லது நியாயப்படுத்த சாத்தியமற்றவைகளை மதம், மரபுகொண்டு பெண்களை அடிமைப்படுத்தி சுகங்கண்ட மனிதர் கூட்டத்துக்கு ( இதிலும் பெண்களும் அடக்கம் என்பதை கிஞ்சித்தும் மறக்கக்கூடாது) எதிராக ஒலிக்கவேண்டிய குரல். அது நாள்வரை சிமோனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் முடிவுகளையும் தீர்மானிப்பவர்களாக இருந்த அவருடைய தந்தையும் தாயும், பிறரும் ஆதி அந்தமின்றி அவர் நிறுத்துகிற ‘நான்’ என்ற வார்த்தையின் முன்பாக துவளுகிறார்கள். எதை விரும்பவேண்டுமோ அதை விரும்ப எதை நிராகரிக்கவேண்டுமோ அதை நிராகரிக்க, சிந்தனைக்கு உகந்ததைச் தேர்வு செய்ய தன்னைத் தயார்படுத்திக்க்கொண்டு காலத்தை எதிர்கொண்ட சிமொன் தெ பொவ்வாரை, நாம் விரும்பாமற் போனால்தான் ஆச்சரியம்.

 

இ. பிரான்சுவா சகான் ( Françoise Sagan):

 

Sagan
“அழகான இளம் ராட்சஸி” என பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற இலக்கிய விமர்கர் ‘மொரியாக்’ (François Mauriac)கினால் வர்ணிக்கபட்டவர். “பதினெட்டு வயதில் 188 பக்கங்களால் நான் அடைந்த புகழ் ஒரு வாணவேடிக்கை” என நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவருடைய அந்த நூலின் பெயர் “வணக்கம் துயரமே” ( Bonjour tristesse), எனது மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவந்தது. அந்த எழுத்தாள பெண்மணியை நேசிக்க நேர்ந்தது அப்படித்தான். சமகால பிரெஞ்சு பெண் எழுத்தாளர்களில் உலகமெங்கும் பரந்த அள்வில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் ஒருவர் உண்டென்றால் அவர் பிரான்சுவா சகன் மட்டுமே. ஏற்கனவே பல மில்லியன் பிறதிகள் விற்பனை கண்ட அவரது நாவல் இன்றளவும் விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இவரது பலவீனமாகக் மதுவும் போதைப் பொருட்களூம், தன்னைத் திடப்படுத்திக்கொள்ள அவருக்கு மது தேவைபட்டது. விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் விருப்பமானவை. விபத்தொன்றில் ஆறுமாதத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்து வெளிவந்தபோது வலிகளிலிருந்து நிவாரணம் பெற போதைமருந்துக்கு அடிமையானார். அவரைச் சந்திக்க பத்திரிகயாளரும் ஊடகத்தினரும் சூதாட்ட விடுதிக்கும், இரவு விடுதிகளுக்கும் தேடிப்போகவேண்டும். பந்தயக் கார்களில் மோகம் கொண்டவர் என்பதால் வேகம், விபத்து, கோமாவென அடிக்கடி மருத்துவமனை, மரணத்தோடு நெருக்கம் என வாழ வேண்டியிருந்தது. தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த உலகப் புகழ்பெற்ற அவருடைய சிறுநாவலை எழுதிய நிகழ்வும் விபத்தென்று தான் சொல்லவேண்டும். பிரென்சுக் கவிஞர் ரெம்போ (Arthur Rimbaud) வின் கவிதை ஒன்றை (Illuminations) படித்து முடித்துவிட்டு அதன் பாதிப்பில் நாவலை எழுதப்போக, பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் ஒரு பெரும் புயலை உண்டாக்கியது. இந்நாவலில் 17 வயது இளம்பெண்ணொருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்களை மிகுந்த எதார்த்தத்துடன் கூறியிருப்பார். நாவல் வெளிவந்த காலத்து சமூக நெறிகளை, பத்தாம் பசலி கொள்கைகளை நிராகரித்திருந்தது. இருபது புதினங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் கவிதைகள் என இவர் எழுதிக்குவித்திருந்தபோதிலும் எனக்கு ‘வணக்கம் துயரமே’ பிரான்சுவா சகனை மட்டுமே பிடிக்கிறது, பிடிக்கிறது என்ற வார்த்தை எனக்கு அவர் மீதுள்ள காதலை ஒரு சதம்கூடத் தெரிவிக்கப்போதாது.
——————————————————————————————
1. பக்கம் – 10 – மலாலவி பாரதியாரின் பெண்ணியக் கட்டுரைகள் -தொகுப்பு முனைவர் க.பஞ்சாங்கம்.

பிரான்சு நிஜமும் நிழலும் -5: உணவும் -விருந்தும்.

“savourer de bons petits plats”

“உலகில் எந்த நாட்டுமக்களும் தங்களைப் போல திருப்தியாக சாப்பிடுவதில்லை” என 80 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் நினைப்பதாக வாக்கெடுப்புத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.. இங்கே திருப்தியாக என்பதற்கு ‘வயிறார’ சாப்பிடுவதென்ற பொருள் இல்லை. உணவை சமைப்பது, பரிமாறுவது, விருந்தினர்களுடன் உண்பது எனபவற்றில் சில நாகரீகமான விதிகளை வைத்திருக்கிறார்கள் அதைத் தாங்கள் கடைபிடிப்பதாக நம்பவும் செய்கிறார்கள். யுனெஸ்கோவின் கலாசார பாரம்பர்ய உடமைப்பட்டியலில் பிரெஞ்சு உணவு இடம் பெற்றுள்ளதும் அவர்கள் பெருமிதத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

ஓர் உயிரியின் அடிப்படைத் தேவைகளில் உணவு முதலிடத்தைப் பெறுகிறது. உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே என்கிறார் திருமூலர். மனித இனம் ஓரிடத்தில் நிலையாய் வாழத்தொடங்கியபிறகு அந்தந்த இடத்தின் தட்பவெப்பநிலைக்கேற்பக் கிடைத்தவற்றை உண்ணத் தலைப்பட்டு, அவற்றிற்குப் பற்றாகுறை ஏற்பட்டபோது தாங்களே உற்பத்திசெய்து, விலங்குகளென்றால் வேட்டையாடி வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டனர். தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, அதியாவசியமான நீர் என்று இயற்கையைச்சார்ந்தே உணவு தானியங்கள், காய் கனிகள், கீரைவகைகள், கால்நடைகளென்று உண்ணும் பொருட்களின் உற்பத்தித் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இயற்கை சாராத கூறுகளான சமயம், சமூகம், மரபு, பண்பாடு போன்றவை நாம் எதைச் சாப்பிடவேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என முடிவெடுக்கின்றன. இவற்றைத்தவிர அறிவியல், போக்குவரத்து, தகவல்தொடர்புசாதனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சமையல் புத்தகங்கள், குறிப்புகள், பரவை முனியம்மாக்கள், தாமோதரன்கள் இப்படி வயிற்றினை நாக்கினை வழிநடத்த பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள்.

உணவுக்கும் மனிதரின் குணத்திற்கும் தொடர்பிருக்கும் போலிருக்கிறது. கொடிய விலங்குகள் என வர்ணிக்கப்படுபவைகளுக்கும், சாதுவான விலங்குகள் என வர்ணிக்கப்படுபவற்றிர்க்கும் உணவுமுறையில் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஆடு, மாடு, முயல் போன்றவை சாதுவாக இருப்பதற்கும்; புலி, சிங்கம்போன்ற காட்டுவிலங்குகளின் மூர்க்கத்திற்கும் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணியா? அஹிம்சை வழி முறையை காந்தி தேர்வு செய்ததில் அவரது உணவுமுறைக்கும் பங்கிருக்கிறதென்பது உண்மையா?

இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கிறோம். எல்லா உணவுகளும் எல்லா நாடுகளிலும் கிடைக்கின்றன. பிரெஞ்சு பர்ப்யூம்களைபோலவே, பிரான்சு நாட்டு ஒயின்களும் இந்திய முக்கிய நகரங்களில் கிடைக்கின்றன. இந்தியத் தந்தூரி, நான்(Nan), மசாலா (curry) ஆகியவை உலகெங்கும் அறியப்பட்டிருப்பதைபோலவே பிரான்சிலும் கிடைக்கின்றன. தீபாவளியென்றால், எங்கள் வீட்டில் அதிரசம், முறுக்கு, சோமாஸ், போளி, லட்டு( அதுவும் பூந்தி லட்டு எப்போதாவதுதான் ரவா லட்டே அதிகம்) இதைத்தான் செய்திருக்கிறார்கள். மைசூர்பாகு, ஜாங்கிரியை கல்கி, விகடன் தீபாவளி மலர்களில்தான் பார்க்கவேண்டும்.தவறினால், புதுச்சேரி உறவினர்கள் யாரேனும் அபூர்வமாக வாங்கிக்கொண்டுவந்தால்தானுண்டு. ஆனால் தற்போது கிராமத்தில்கூட ‘ஸ்வீட் ஸ்டால்கள்’ திறந்துவைத்திருக்கிறார்கள். கலர் கலராக அடுக்கிவைத்திருக்கிறார்கள், கவர்ச்சிக்கு ஈக்களின் ரெக்கார்ட் டான்ஸ் வேறு. புதுச்சேரிக்கு ஒர் அமெரிக்கன் KFC என்றால், குக்கிராமத்திற்கு ஒரு பாம்பே ஸ்வீட்ஸ்டால் ஏன் கூடாது, தாராளமாக வரலாம், ஆனால் கொழுக்கட்டைகளுக்கு பாதிப்பிருக்கக்கூடாது.

பிரான்சு நாட்டிலும் உலகின் ஏனைய நாடுகளைப்போலவே உலக நாடுகளின் ரெஸ்ட்டாரெண்ட்கள் இருக்கின்றன. ஐரோப்பியரல்லாத ரெஸ்ட்டாரேண்ட்களில் இந்திய மற்றும் சீன ரெஸ்ட்டாரெண்ட்கள் பிரெஞ்சுக்காரர்கள் விரும்பிப் போகக்கூடியவை. இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்கு காந்தி யென்றோ, இந்திராவென்றோ, பாம்பே என்றோ, தில்லி என்றோ, தாஜ்மகால் என்றோ பெயர்வைப்பது பொதுவாக வழக்கில் இருக்கிறது. இந்தியா உட்பட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காந்தி தற்போதைக்கு ஒரு வியாபாரப் குறியீடு என்பதால், பாகிஸ்தானியர்கள் உட்பட காந்தி என்ற பெயரைத்தான் வைக்கிறார்கள், ‘ஜின்னா’ வென்று தங்கள் ரெஸ்டாரெண்டிற்கு பெயரிடுவதில்லை.

‘உணவென்பது உயிர்வாழ்க்கைக்கான ஒரு கலை’ (l’alimentation est un art de vivre)

பிரெஞ்சுக்காரகள் உணவுப்பொருட்களையும், உண்பதையும் உயிர்வாழ்க்கைக்கான ஒரு கலையாகத்தான் பார்க்கிறார்கள். உலகெங்கும் “பிரெஞ்சு உணவுக்கலை”க்கும் (la gastronomie française), பிரெஞ்சு சமையலுக்கும் (la cuisine française) எத்தகைய வரவேற்பும், மரியாதையும் இருக்கிறதென்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஓவியம், சிற்பம், படைப்பிலக்கியத்தைப்போல சமையலும் அவர்கள் கலைகளுள் ஒன்று. வெறும் வார்த்தை அலங்காரத்தோடு இது முடிந்துவிடுவதல்ல. நீங்கள் விருந்தினர் என்றால் சாப்பிடுவதற்கு முன் – சாப்பிடும்போது – சாப்பிட்டபின் -உங்களை வழி அனுப்பும் வரை உங்களைத் தொடர்வது. உணவின் சுவை என்பது அழைத்தவர் ‘காரம், கரிப்பு, உவர்ப்பு, இனிப்பு இவற்றின் கூட்டுத் தொழில்நுணுக்கத்தின் தயாரிப்பு மட்டுமல்ல சமைத்த உணவிற்குப் பொருத்தமான தட்டுகளைத் தேர்வுசெய்வது, சாப்பிடத்தூண்டும் வகையில் அவற்றைக் காட்சிப்படுத்துவது, பவ்யமாகப் பரிமாறுவது; அழைக்கப்பட்ட விருந்தினர் கண்கள், கைகள், வாய் மூன்றையும் நளினமாகத் தொழிற்படுத்தி உண்பது அவ்வளவும் அடங்கும். பிரெஞ்சு உணவில் நான்கு சொற்கள் அடிப்படையானவை: ரொட்டி, மாமிசம், பாற்கட்டி, ஒயின். இவற்றைத் தவிர சிம்பொனி இசைக்கலைஞர்கள் உபயோகிக்கிற பகத் ( Baguette) என்கிற பெயரிலேயே அழைக்கப்டுகிற குச்சிபோன்ற நீண்ட ரொட்டியும் பிரெஞ்சுக்காரர்களின் அடையாளம். இங்கும் பிரதேச அடையாளங்களைக்கொண்ட உணவுவகைகளுக்கு உதாரணமாக அல்ஸாஸ் (Alsace)பிரதேசத்தின் ‘தார்த் ஃப்ளாம்பே(Tarte flambée) ஷுக்ரூத்(choucroute); அக்கித்தேன்(Aquitaine) பிரதேச ‘லெ ஃபுவா கிரா'(le foie gras), ‘லெ கொன்ஃபி தெ கனார்’ (le confit de canard); தொர்தோஜ்ன் (Dordogne) பிரதேச ‘லெ தூரன்'(le tourin), ‘லெ ஃபிலெ தெ பெஃப்’ (le filet de bœuf), ‘சோஸ் பெரிகெ’ (sauce Périgueux) போன்றவற்றைக் கூறலாம். அதுபோல பிரனெ அட்லாண்டிக் (Pyrénées-Atlantiques), கோர்ஸ்(Corse), ப்ரெத்தாஜ்ன் (Bretagne) உணவுகளும் பிரசித்தம். பாரீஸுக்கென்று பிரபலமான உணவுகள் இருக்கின்றன, தவிர பிரெஞ்சு ஷேஃப்(Chef)களும் புதிது புதிதாய் தாயாரித்து வாடிக்கையாளரின் பாராட்டுதலுக்காகக் காத்திருக்கிறார்கள். உலகின் பிறபகுதிகளைபோலவே இயற்கை விவசாய உற்பத்திப்பொருகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
உணவு வேளைகள்:

1. Le Petit déjeuner – காலை உணவு: இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாகச் சாப்பிடுகிற (அட்டைப்பெட்டிகளில் அடைத்த) céréale பிரெஞ்சுக்காரர்கள் இல்லங்களை ஆக்ரிமித்திருந்த போதிலும், பிரான்சு நாட்டின் தேசிய காலை உணவாக இடம்பிடித்திருப்பது க்ருவாஸ்ஸான்(Croissant). இப்பிறை வடிவ பேஸ்ட்ரி வகை ரொட்டி; பால் கலவாத காப்பி, ஆரஞ்சு ஜூஸ், தேநீர், ஷொக்கொலா என்கிற சாக்லேட் பானம் இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் காலை நேரங்களில் அவசரமாகத் தினசரியை மேய்ந்தபடி ஒரு பேஸ்ட்ரி (viennoiserie) கடையிலோ, ரெஸ்ட்டாரெண்டிலோ, நட்சத்திர ஓட்டலொன்றின் டைனிங் ஹாலிலோ ஐரோப்பியர் ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் அநேகமாக அவர் பிரெஞ்சுக்காரராக இருப்பார். இன்று புதுச்சேரி உட்பட உலகெங்கும் க்ருவாஸ்ஸான் கிடைத்தாலும் பிரான்சு நாட்டுத் தயாரிப்புக்கு ஈடாக இல்லை. அப்படி பிரான்சு அல்லாத வேறு நாடுகளில் நன்றாக இருந்தால் அநேகமாக அந்தப் பூலான்ழெரி (Boulangerie) என்ற ரொட்டிக்கடையை நடத்துபவர் மட்டுமல்ல அங்குள்ள ரொட்டிகளைத் தயாரிப்பவரும் பிரெஞ்சுக்காரராக இருக்கவேண்டும். பிரெஞ்சுக்காரர்கள் வேறு ஏதேனும் (Pain au chocolat, baguette avec de la beurre, du miel, de la confiture) காலை உணவாக எடுக்க நேர்ந்தாலும் அது எளிமையானதாகவே இருக்கும், ஆங்கிலேயர்போல காலையிலேயே பேக்கன், ஆம்லேட் என்று வயிற்றில் திணிக்கும் வழக்கமில்லை.

2. Le déjeuner அல்லது le repas du midi- மதிய உணவு: மதிய உணவுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போதெல்லாம் பணிநேரத்தில் ஒரு மணிநேரமே சாப்பிடுவதற்கான நேரமென்று ஒதுக்கப்படுகிறது இதில் ஓர் அரைமணிநேரத்தை உண்பதற்கென்று ஒதுக்கி அவசரகதியில் சாப்பிடுவதற்குப் பெயர் கஸ்க்ரூத் (le casse-croûte). சாண்ட்விச், ஹாம்பர்கர் இரகங்கள் அவை. வீடுகளிலும் அநேகமாக சமைக்க நேரமில்லையெனில் டின்களில் அடைத்துவைத்த உணவுகளை சுடவைத்து உண்பது வழக்கமாகிவிட்டது. மாறாக வார இறுதிநாட்களில் நிதானமாக( பன்னிரண்டு மணிக்கு உட்கார்ந்தால் இரண்டு இரண்டரைமணி நேரம்) மேசையில் அமர்ந்து பேசியபபடி சாப்பிடுவார்கள்

3. Le dîner அல்லது le repas du soir. மாலை உணவு: இதனை இரவு உணவு என அழைப்பதில்லை. பொதுவாக மாலை ஆறுமணியிலிருந்து இரவு எட்டுமணிக்குள் முடித்துக்கொள்வார்கள். விருந்தினர் வந்தால் இரவு மேசையைவிட்டு எழுந்திருக்க பன்னிரண்டு மணி ஆனாலும் பெயர் என்னவோ ‘le repas du soir’ தான். இரவு வேளைகளில்தான் அதிகம் அனுபவித்து உண்பார்கள். எனவே திருமணங்கள், பிறந்த நாள், வேறுவகையான கொண்டாட்டங்கள் அனைத்துமே முகூர்த்தநாள் பார்க்காமல் வார இறுதிநாட்களில் நடபெறுகின்றன, விருந்தும் இரவுவேளைகளில். இவ்விருந்தும் கொண்டாட்டமும் விடிய விடிய நீடித்தாலுங்கூட ‘la soirée’ என்றுதான் பெயர். மற்றபடி மதியம் இரவு இரண்டுவேளைகளிலும் முறைப்படி உண்பதெனில் எடுத்துக்கொள்ளும் உணவு வரிசைகளில் வேறுபாடுகளில்லை. அவை பொதுவாக ஆந்த்ரே (l’entrée), பிளா ஃப்ரன்சிபால் (le plat principal), தெஸ்ஸெர் (le dessert) என்று மூன்று கட்டமாக நடைபெறும்.

அ. l’Entrée அல்லது l’hors d’œuvre : ஆங்கிலத்தில் இதனை appetizer என்கிறார்கள். முக்கியமான உணவைச் சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளும் எளிமையான உணவு அநேகமாக சலாத் (salade) அல்லது தெரீன் (terrine) அல்லது சூப் இவற்றில் ஏதேனும் ஒரு வகை சார்ந்ததாக இருக்கும்.

ஆ. Le plat principal பிரான்சு நாட்டில் கிடைக்கும் காய்கறிகள், கடலுணவுப்பொருட்கள், மாமிசங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி (charcuterie) ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுபவை

இ. Le Dessert இனிப்பு பண்டமாகவோ, ஐஸ்கிரீம் ஆகவோ, பாற்கட்டி ஆகவோ இருக்கலாம்.
பெரும்பாலும் ஒயினுடனேயே சாப்பிடுகிறார்கள். சாதாரண நாட்களில் குடும்பங்களின் வசதி மற்றும் படி நிலையைப் பொறுத்தது அது. மாறாகப் விருந்தினரை அழைத்திருந்தால் ஒயின் கட்டாயம், முக்கியப்பண்டிகை நாட்களில் அல்லது கொண்டாட்டங்களில் ஷாம்பெய்னும் முக்கியம். ஷாம்பெய்னும் பிரெஞ்சு சொத்துதான். பிரான்சு நாட்டில் Champagne என்றொரு பிரதேசத்தில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒருவகை வெள்ளை ஒயின் (le vin blanc)தான் பின்னாளில் ஷாம்பெய்ன் ஆனது. அதுபோல பிரெத்தாஜ்ன் பகுதியில் ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்பட்டும் ‘Cidre’ம் பிரசித்தம்.அதுபோல பிரான்செங்கும் ஒயின் தயாரிக்கப்பட்டாலும் பொர்தோ (Bordeaux) என்ற பிரதேசம் பிரபலமானது.

உணவு மேசையில் கடைபிடிக்கப்படவேண்டியவை

விருந்துக்கு அழைத்திருந்தால், நல்ல ஒயின் பாட்டிலொன்றை பரிசாகக்கொண்டுபோவது நலம். கன்னங்களில் முத்தம் கொடுத்து வரவேற்ற பிறகு முதன்முறையாக அந்த வீட்டிற்கு வந்திருக்கிறவர்கள் என்றால், உங்கள் ஓவர் கோட்டை வாங்கி அதற்குரிய இடத்தில் மாட்டுவார்கள். உணவு உட்கொள்ளப்படுவதற்கு முன்பாகப் பொதுவாக அப்பெரித்திஃப்( l’apéritif’)ஐ வரவேற்புக் கூடத்தில் வைத்துக் கொடுப்பார்கள். இது அநேகமாக விஸ்கியாக இருக்கும். முடிந்ததும் « மேசைக்கு » என்பதைக் குறிக்கும் வகையில் “à table” என விருந்துக்கு அழைத்த வீட்டுப் பெண்மணி கூறினால், உணவு தயார், மேசையில் உட்காரலாம் என்று அர்த்தம். அப்பெண்மணியே அவரவர்க்கான இருக்கையையும் காட்டுவார் அல்லது வாய்மொழியாகத் தெரிவிப்பார். பெரிய விருந்துகளில் நாற்காலிக்கு முன்பாக மேசையில் அழைக்கப்பட்டவ்ர்களின் பெயர்கள் இருக்கும். பொதுவாக தம்பதிகள் எதிரெதிராகவோ, ஒரு ஆண் ஒரு பெண்ணென்ற வரிசையிலோ உட்காருவது வழக்கம். மேசையில் கையைப் போடாமல் நேராக உட்காரவேண்டும். சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பாக விருந்துக்கு அழைத்தப் பெண்மணியே ‘போன் அப்பெத்தி’ (Bon appétit) எனக்கூறி விருந்தை ஆரம்பித்துவைப்பார். விருந்தினர்கள் பதிலுக்கு ‘போன் அப்பெத்தி’ எனக்கூறகூடாது. ‘merci’ என நன்றியைத் தெரிவித்தால் போதும்.உணவுப் பரிமாறல் (l’entrée, le plat principal) இடப்புறமிருந்தும், le dessert வலப்பக்கமும் பரிமாறத் தொடங்கவேண்டும். ஏதாவதொரு உணவு பிடிக்காதவகை எனில் ‘நன்றி வேண்டாம்’ எனக்கூறி மறுக்கவேண்டும். கைகளால் பொதுவாகச் சாப்பிடக்கூடாது, ஏதாவதொரு உணவுப்பொருளுக்குக் கையை உபயோகிக்க வேண்டியதெனின் எதிரில் அமர்ந்திருக்கும் விருந்துக்கு அழைத்த வீட்டுப் பெண்மணியே வழிகாட்டுவார். கூடையில் ‘Pain’ எனும் ரொட்டித்துண்டுகளை வைத்திருப்பார்கள். அவற்றைக்கையால் எடுக்கலாம். ஆனால் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கேட்டால் ரொட்டித்துண்டைக் கையில் எடுத்துக்கொடுக்கக்கூடாது, ரொட்டித்துண்டுகள் கூடையை எடுத்துக் கையில் தரலாம். பிரெஞ்சுக்காரர்கள் பொதுவாக நிறைய பேசுவார்கள், அதிலும் இரவு உணவின்போது அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பார்ககள். பொதுவாக ஒயின் பாதிக் குடிக்கபட்டு வைத்திருந்தால், உங்களுக்கு இனி ஒயின் வேண்டாம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்வார்கள். வேண்டியிருந்தால் ஒயின் கோப்பைக் காலியாக இருக்கவேண்டும். உணவு உட்கொள்ளும்போது வாயில் உணவை வைத்துக்கொண்டு பேசக்கூடாது. அதுபோலவே முட்கரண்டியையோ கத்தியையோ ஆட்டிபேசவும் கூடாது, பிரெஞ்சுக்காரகளுக்கு ஏப்பம் விடுவது நாகரீகமல்ல, அசம்பாவிதமாக ஏதேனும் நடந்தால் ‘பர்தோன்’ (pardon) எனக்கூறி மன்னிக்கக்கோருவது வழக்கம். சாப்பிட்டு முடிந்ததும் சில வீடுகளில் டிழெஸ்திபிற்கு (Digestif ) என்றிருக்கிற அதாவது செரிமானத்திற்கு உதவுகிற மதுவைத் தருவார்கள். சிலர் காப்பியோ, தேனீரோ பருகிவிட்டு விடைபெறுவது உண்டு. புறப்படுகிறபோது அழைத்த விருந்தினர்கள் உங்கள் ஓவர்கோட்டை மறக்க வாய்ப்புண்டு, தவறாமல் கேட்டு அணியுங்கள். புறப்படும் முன்பாக சக பாலினத்திடம் கைகுலுக்கலும், எதிர்பாலினத்திடம் கன்னத்திற்கு இரண்டென முத்தங்களும் விடைபெறலை பூர்த்திசெய்யும்.
(தொடரும்)

மூத்த படைப்பிலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் –1

நீலக்டல் நாவல் குறித்து முனைவர்.ரெ.கார்த்திகேசு.

இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நாவல் : நீலக்கடல் – நூலாய்வு

– மலேசிய எழுத்தாளர் : முனைவர்.ரெ.கார்த்திகேசு.

(முனைவர்ரெ.கார்த்திகேசுஅவர்கள்மலேசியா, பினாங்குநகரைச்சேர்ந்தவர். மலேசியஅறிவியல்பல்கலைக்கழகத்தில்பொதுமக்கள்தகவல்சாதனைத்துறையில்பேராசிரியராகஇருந்துஓய்வுபெற்றவர். மலேசியவானொலி, தொலைக்காட்சியின்முன்னாள்அலுவலர். தமிழ்கூறும்நல்லுலகத்திற்கும்மலேசியாவிலும்நன்கறியப்பட்டசிறுகதைஎழுத்தாளர், நாவலாசிரியர், இலக்கியத்திறனாய்வாளர். அனைத்துலகநாடுகள்பலவற்றில்கலந்துகொண்டுஆய்வுக்கட்டுரைகளைச்சமர்ப்பித்தபெருமைக்கும்உரியவர்இவர்!)

2005 இல் பதிப்பிக்கப்பட்ட “நீலக்கடல்” என்னும் இந்த நாவல் தமிழ் நாட்டிலும் அதற்கு வெளியிலும் கூட இன்னும் அதிகம் அறியப்படாமலும் பேசப்படாமலும் கிடக்கிறது. இருந்தும் இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.

நாவலை எழுதியுள்ளவர் பிரஞ்சுக் குடிமகனாக பிரான்சில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா என்னும் எழுத்தாளர். முன்பு பாண்டிச்சேரியில் வாழ்ந்தவர். இணையத்தில் அதிகம் எழுதும் இவரை இணைய வாசகர்கள் அறிந்திருக்கிறார்களேயன்றி பொதுவான வாசகர்கள் இன்னும் அறியவில்லை.

தமிழில் இப்படி இணைய உலகத்தில் முகிழ்த்து அச்சுக்கு வரும் எழுத்தாளர்கள் தொகை இனியும் பெருகப் போவதால் இது ஒரு குறிப்பிடத் தக்க தொடக்கம்.

இதைச் சொல்லும் பொழுது இணையத்தில் வரும் தரமான படைப்புக்களை அச்சுக்குக் கொண்டு வருவதற்கென்றே தோன்றியுள்ள “எனி இந்தியன்” பதிப்பகம் பற்றியும் குறிப்பிட வேண்டும். அமெரிக்கத் தமிழர்களால் நடத்தப்படும் இந்தப் பதிப்பகம் இதுவரை கட்டுரைகள், அறிவியல் புனைகதைத் தொகுப்பு என்ற வடிவில் சிலபுத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறது. http://www.anyindian.com என்ற தளத்தில் விவரங்கள்பெறலாம்.

நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் அன்றி பிரஞ்சு மொழியையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சிலிருந்து பல படைப்புக்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து இணையத்தில் பதிப்பித்துள்ளார். “பிரஞ்சு இலக்கியம் பேசுகிறேன்” என்னும் ஒரு நூலைத் தமிழில் தந்துள்ளார்.

அவருடைய பாண்டிச்சேரி மற்றும் பிரெஞ்சு மொழிப் பின்னணியைப் பயன் படுத்திக் கொள்ளும் இந்த நீலக்கடல் நாவல் தன் கதைப் பின்னணியை பாண்டிச்சேரியிலும் மொரிஷியசிலும் கொண்டிருக்கிறது. கதை நடக்கும் காலம் பிரஞ்சுக் காலனித்துவ காலமான 18ஆம் நூற்றாண்டும் பின் நிகழ் காலமான 2000ஆம் ஆண்டுகளும் ஆகும்.

2000ஆம் ஆண்டுகளில் பெர்னார் ·போந்தேன் என்னும் ஒரு பிரெஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் தன் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆராய வருகிறார்.

முக்கியமாக 1943இல் தனது மூதாதையர்களில் ஒருவரான பெர்னார் குளோதன் என்பவர் பற்றிய தமிழ்க் கடிதம் ஒன்றின் உண்மையினை அறிய வருகிறார்.

அந்த ஆய்வில் முன் காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் செல்வாக்காக இருந்த மதுரை நாயக்கர் வழிவந்த அரச குடும்பங்களின் ரகசியங்கள் சிலவற்றைக் கண்டெடுக்கிறார். இந்த ரகசியங்கள் அவரை ஆற்காடு நவாபு காலத்தில் வஞ்சிக்கப் பட்ட நாயக்கரின் வாரிசான ஒரு பெண், பிரெஞ்சுக்காரர்கள் நிறுவிய இன்னொரு காலனியான மொரிஷியசில் ஒளிந்திருப்பதாக அவருக்குத் தெரிகிறது. இந்தப் பெண் பிரெஞ்சு வீரர் ஒருவரைக் காதலித்ததாகவும் அறிகிறார். இந்த பிரெஞ்சு வீரர் தன் மூதாதையானபெர்னார் குளோதன் என அறிகிறார்.

இந்தப் பின்கதை பாண்டிச்சேரிக்கும் மொரிஷியசுக்குமாக மாறி மாறி அலைகிறது. அதோடு 18ஆம் நூற்றாண்டுக்கும் நிகழ்காலத்துக்கும் கூட அலைகிறது. அதற்கும் மேலாக இந்தப் பாத்திரங்கள் எல்லாம் இந்தியாவின் வேதகால வரலாற்றிலிருந்து திரும்பத் திரும்ப பிறந்து வந்து இந்த நாடகங்களை ஆடுவதாகவும் அவர் அறிகிறார். பெர்னார் குளோதனின் நிறைவேறாத காதலை அவர் அறிவதோடு கதை முடிகிறது.

ஆனால் இந்தக் காதல் யுகங்கள் தோறும் வெவ்வெறு பாத்திரங்களைக் கொண்டு தொடரக் கூடும் என்று நாவலாசிரியர் கோடி காட்டுகிறார். ஆகவே வரலாறும் மர்மமும் கலந்த புனைவு.

கதைச்சுவையும் சம்பவச் செறிவும் உள்ள நல்ல நாவல்தான் நீலக் கடல். மொரிஷியசைப் பின்னணியாகக் கொண்டு இன்னொரு நாவல் தமிழில் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை. இல்லை என்று எடுத்துக் கொண்டால் அந்த வகையில் இது முதல். ஆனால் பாண்டிச்சேரியைப் பின்னணியாகக் கொண்ட இன்னொரு அரிய நாவலான பிரபஞ்சனின் “வானம் வசப்படும்” இங்கு நினைவு கூரத் தக்கது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் இந்தப் படைப்பில் பிரபஞ்சனின் எழுத்தின் தாக்கம் நிறைய இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்த நூலுக்கான முன்னுரையையும் பிரபஞ்சனே எழுதியுள்ளார்.

பிரபஞ்சனைப் போலவே கிருஷ்ணாவும் ஆனந்தரங்கம் பிள்ளை டயரியியிலிருந்து தகவல்களை எடுத்துப் பயன் படுத்தியுள்ளார். ஆனால் பிரபஞ்சனுக்கும் இவருக்கும் உள்ள குறிப்பான ஒற்றுமை இவர் பயன் படுத்தியிருக்கும் நடைதான். ஏறக்குறைய ஆனந்தரங்கம் பிள்ளை டயரியில் உள்ள 18-ஆம் நூற்றாண்டின் நடையே பிரபஞ்சனிடமும் கிருஷ்ணாவிடமும் இருக்கிறது. கிட்டத்தட்ட பரமார்த்த குரு கதை எழுதிய பெஸ்கி பாதிரியர் பயன் படுத்திய நடை போன்றது இது. இது இந்த இருபதாம் நூற்றாண்டு வாசகர்களாகிய நமக்கு ஒரு எரிச்சலையே உண்டு பண்ணுகிறது எனலாம்.

எனினும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார்.

மலேசியத் தமிழ் வாசகர்களைப் பொறுத்தவரை மொரிஷியஸ் நாட்டினை வளப்படுத்த அவர்கள் அப்பாவித் தமிழர்களைப் பிடித்துப் போய் நடத்திய விதம் நம் நாட்டின் ஆரம்ப ஒப்பந்தத் தொழிலாளர்களின் கதையோடு ஒத்திருப்பது இன்னொரு சுவையான ஒப்பீடாக இருக்கும்.

******

பிரான்சு நிஜமும் நிழலும் – 4

பிரெஞ்சுக் குடும்பம்

இன்றிருக்கிற சராசரி பிரெஞ்சுக்குடும்பமொன்றின் கூறுகள் உலகெங்குமுள்ள எல்லா நாடுகளிலும் படித்த மேல்தட்டு மக்களுக்குரியவைதான். புலன்களுக்கு அறிவைக்காட்டிலும் வீரியம் அதிகம். தங்களுடனான மோதலில் வீழ்ந்த அறிவை அத்தனை எளிதாக நெஞ்சுயர்த்த அவை அனுமதிப்பதில்லை. எளிதில் சோர்வுறும் குணங்கொண்ட அறிவும், புலன்களை அனுசரித்து வாழப் பழகிக்கொள்கிறது. ஆற்றல் உள்ளவர்கள் ஜெயிக்கிறார்கள், உணர்ச்சி அறிவைக்காட்டிலும் பலசாலி. உலகமனைத்தையும் மேற்கத்தியர்கள் அறிவால் வெல்ல முடிந்தது, உணர்ச்சியிடம் தோற்றுப்போனார்கள். உலகத்தின் வீழ்ச்சி உணர்ச்சிவசப்படுதலில்தான் தொடங்குகிறது. உணர்ச்சியைக் கண்கள், காது, வாய், மனம் என்று தனித்தனியாக அனுமதித்தால் தப்பித்தோம் – பிரித்தாளவேண்டும். அவற்றைக் கூட்டாகச் (உடலை) செயல்படவிட்டால் ஆபத்து. மேற்கத்தியர்களிடம் கற்றுக்கொள்ளக் கூடாதது என்று ஒன்றிருக்குமானால் இன்றைய அவர்களுடைய குடும்ப அமைப்பைச் சொல்வேன். சமூகப் பண்பாடுகளில் ஒன்றான குடும்பஅமைப்புமுறை இன்று மேற்கத்திய நாடுகளில் குலைந்துவருகிறது – எச்சரிக்கையாக இல்லாதுபோனால் நம்மையும் ஒரு நாள் தின்றுதீர்த்துவிடும்.

குடும்பம் என்றாலென்ன ? பொதுவானதொரு மூதாதையர் வழிவந்த இரத்த உறவுகளில் இறந்தவர்போக மிஞ்சியவர்கள், சமூக அறத்தின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வது. ஒருவருக்கொருவர் இன்பத்தையும் துபத்தையும் பகிர்ந்துகொள்வது, நெருக்கடி காலங்களில் தமது குடும்பத்தைசேர்ந்தவர்களுக்குத் துணை நிற்பது. இந்த இலக்கணங்களுக்குப் பொருந்துகிற குடும்பம்தான், ஒரு நல்ல சமூகத்தையும், தொடர்ந்து நாட்டையும் கட்டமைக்க முடியும்.

பிரான்சு நாட்டில் குடும்ப அமைப்பு நேற்று எப்படி இருந்தது?

இந்த நேற்று இரு பொருளைக்கொண்டது, முதலாவது நேற்று 30 வருடங்களுக்கு முன்பாக இந் நாட்டிற்கு (பிரான்சுக்கு) வந்த காலத்தைக் கணக்கில் கொள்ளவேண்டிய நேற்று, மற்றது ஒரு வயதான (70?) பிரெஞ்சுக் காரரிடம் நினைவில் இருக்கிற சுமார் ஐம்பது ஆண்டுகாலத்திற்கு முந்தைய பிரான்சு. எனது பார்வையில் ஒரு பிரெஞ்சுக் குடும்பம் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாமல் அப்படியே இருப்பதுபோல இருக்கிறது. ஆனால் பிரெஞ்சுக் காரர் புலம்புகிறார்.

இன்றைய பிரெஞ்சுக் சமூகத்தில் – குடும்பத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளைப் பார்க்கிறபோது நவீன பிரெஞ்சுக் குடும்பம், பாரம்பர்யப் பிரெஞ்சுக் குடும்பத்தைக்காட்டிலும் மேம்பட்டதென்கிற பொதுவானதொரு தோற்றத்தைத் தரும். நவீனப் பிரெஞ்சுக் குடும்பம் கட்டற்ற சுதந்திரத்தின் பெயரால் வானமே எல்லையென்று இருக்கின்ற கூரைகளை பிய்தெறிந்ததின் பலன், குடும்பம் என்ற அமைப்பு இன்று மழையிலும் வெயிலிலிலும் பாதுகாப்பற்று துன்புறுவதை சுகமென்று வர்ணிக்கிறபோது எரிச்சல் வருகிறது. பிரெஞ்சுக்காரிடம் கேட்டேன், “குடும்ப அமைப்பு என்பது பண்பாட்டுச்சின்னம், அதனைக் கட்டமைப்பது ஒரு சமூகத்தின் அறங்கள், இந்நிலையில் உங்கள் குடும்பம் என்ற குறியீடு அல்லது ஒழுங்குமுறை (system) ஐரோப்பியர்கள் என்கிற பொதுகுணத்திற்கு உரியதா, அல்லது உங்களுடையதா?” எனக்கேட்டேன். இரண்டொரு நிமிடங்கள் யோசித்தார், என்ன சொல்வதென யோசித்திருப்பார்போல, நுணி மூக்கைச் சொரிந்தபடி, ” மேற்கத்திய பண்புகளோடு, சாப்பாட்டு மேசையில் ‘பொர்தோ’ ஒயினையும், கமாம்பெர் பாற்கட்டியையும் (Le fromage Camembert), சேர்த்தீர்களானால் அதுதான் இன்றைக்கு பிரெஞ்சு பண்பாடு, என்பதுபோல, ஐரோப்பியருக்குரிய பொதுபண்புகளும், எங்களுடையதும் கலந்ததுதான் ” எனப் பதிலிறுத்தார், சமாளித்துவிட்டோம் என்கிற திருப்தி முகத்தில் தெரிந்தது.
இரண்டொரு நிமிடங்கள் அமைதியாக இருந்தவர் மனதில் என்ன தோன்றியதோ: ” உங்கள் பண்பாடு என்ன? இங்கே நீங்கள் எங்களைப்போலத்தானே வாழ்கிறீர்கள்?” எனச் சீண்டினார். 30 ஆண்டுகால புதுச்சேரி தமிழர்களின் பிரெஞ்சுப் பண்பாடென்று எதைச்சொல்வது? எனத் தயங்கினேன்.அவருக்குப் பதில் சொல்வதுபோல, ” சோறு சாப்பிடுகிறோம், மனைவி புடவை உடுத்துகிறாள், சிறுவயது பிள்ளைகள் என்றால் அவர்கள் விஜய் அல்லது ரஜனியின் ரசிகர்களாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம், வளர்ந்ததும் குலம் கோத்திரம் பார்த்து நாங்கள் கைகாட்டுகிற பையனையோ பெண்ணையோ கல்யாணம் செய்துகொள்ளவேண்டுமென்று பிள்ளைகளிடம் எதிர்பார்க்கிறோம், உழைத்தோ உழைக்காமலோ (பிரான்சில் முடியும்) இங்கேயோ ஊரிலோ வீடோ, அப்பார்ட்மெண்ட்டோ வாங்கவேண்டுமென்று நினைக்கிறோம்” – எனக்கூறினேன். அவர் சிரித்தார். சிறிது தாமதித்து “எங்களுக்கு இதுபோன்ற பண்பாட்டுக் கவலைகள் இல்லை” எனக்கூறியவரிடம் மறுபடியும் ஓர் எள்ளல் சிரிப்பு.

“2015ல் தமிழ்ப் பண்பாடு என்றுசொல்லிக்கொள்ள இருப்பதென்ன?” என்னிடமே கேட்டுக்கொண்டு அதற்குப் பதிலையும் கூறிப்பார்த்தேன். கன்னியாகுமரியில் ஆரம்பித்து தமிழர்களின் புண்ணிய ஸ்தலமான சென்னைவரை நம்மிடம் நான் நினைத்தைவிட கலந்துகட்டிய பண்பாடுகள் வரிசையில் நிற்கின்றன. கிராமங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக பெண்பிள்ளைகள் வெளியிற் செல்ல உகந்த நேரம் பொழுது புலர்வதற்கு முன்பாக அல்லது பொழுது சாய்ந்தபின். மற்ற நேரங்களின் சன்னற்கம்பிகளை பிடித்துக்கொண்டு நிற்பார்கள். கணவன் மனைவியாக ஆன பிறகும் உழைக்கும் மக்களிடம் பிரச்சினைகளில்லை, ஆனால் சில வீட்டுப் பெண்கள் நான்கு சுவருக்குள்தான் அடைந்து கிடக்கவேண்டும், வெளியிற் போனால் கணவருக்குப் பின்னால் பத்தடி தள்ளிதான் மனைவிபோகவேண்டும், அதுதான் நல்ல (?) குடும்பத்துப் பண்பாடு என்பார்கள். புதுச்சேரிக்கு வந்தபோது அங்கே திருமணமான புது ஜோடியொன்று ரிக்ஷாவில் சேர்ந்து சினிமாவுக்குப் போனதை எங்கள் தந்தை வழி பாட்டி, “இதென்ன கலிகாலம், கொஞ்சங்கூட வெட்கமில்லாம!” என்றது நினைவில் இருக்கிறது. சென்னையில் சபையர் தியேட்டரில் படம் தொடங்கியதும் காதல் ஜோடிகளுக்கு மெரீனா பீச்சில் கிடைக்காத பண்பாட்டுச் சுதந்திரமுண்டு. இது போக சற்று ஒரிஜினலாக செட்டியார்களுக்கென காரைக்குடிப்பக்கம் சில தமிழ்ப்பண்பாடுகள், நாஞ்சில் நாடனைகேட்டால் நாஞ்சில் நாட்டுப்பண்பாடு என ஒரு புத்தகமே எழுதுவார், பிறகு கி.ரா.வின் கரிசல் காட்டுப் பண்பாடு, திருநெல்வேலி, மதுரை, தஞ்சையென்று திசைக்கொரு பண்பாடு இருக்கிறது. இதுபோக நாயக்கர்கள், மராத்தியர்கள், நவாபுகள், நிஜாம்கள், ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்கள் விட்டுச்சென்ற பண்பாடுகள் இருக்கின்றன. இவைகளைப் புடைத்து தூற்றினால் பதர்போக தமிழகக் களத்துமேட்டில் மணப்பந்தல், தாலி, சோறு, பொங்கல் பண்டிகை, ஐம்பது வயதைக் கடந்த பெண்களுக்குப் புடவை, கீழ் சாதி, மேல் சாதி, தலைவர்களுக்கு அடிமட்டத் தொண்டரென்றால் உயிர்த் தியாகமும் அமைச்சரென்றால் தீச்சட்டியும்; நடிகர்களுக்குப் பாலாபிஷேகமும், பொழுது சாய்ந்தால் நல்ல குடிமகன்களாக இருப்பதும் தமிழ்நாட்டுப் பண்பாடு. பிறகு இருக்கவே இருக்கிறது பீஜித்தீவில் ஆரம்பித்து மொரீஷியஸ் வரை உலகமெங்கும் தீமிதித்தல், காவடி எடுத்தல்..ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறவற்றை யோசித்தபோது பிரெஞ்சுக் காரர் குறுக்கிட்டு “என்னிடத்தில் பகிர்ந்து கொள்ளேன்!” – என்றார்.

நான், அடுத்தவரிடம் குறைகாண்பது சுலபம் என்பதால் “உங்கள் குடும்ப அமைப்பு எப்படி முன்பு போலவே இருக்கிறதா? மாற்றம் தெரிகிறதா? “, எனக்கேட்டேன்

“முன்பெல்லாம் மரபான பிரெஞ்சுக் குடும்பம் என்பது கணவன் மனைவி பிள்ளைகள் என்று வாழ்ந்தக் காட்சியை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம், சில குடும்பங்களில் இரண்டு மூன்று சந்ததியினர் கூட இருப்பார்கள்” பிள்ளைகளுக்குப் திருமணத்தைப் பெற்றோர்களே நடத்திவைத்தார்கள்; வருகின்ற பெண் அல்லது பிள்ளை நல்ல குடும்பமா? அவர்களால் குடும்பத்திற்கு என்ன இலாபம்; என சகலத்தையும் யோசித்தே திருமணங்கள் நடந்திருக்கின்றன” என்றார். அதேவேளை கடந்த காலத்திலிருந்த ஒரு வைதீகப் பிரெஞ்சுக் குடும்பம் ( La famille traditionnelle française) உலகின் பிற பகுதிகளைப்போலவே தந்தை வழிமுறைக்கு முக்கியத்துவம் தருகிற ஓர் ஆனாதிக்கக் குடும்பம்: ஆண்கள் வேலை செய்தார்கள் ஆண்கள் யுத்தம் செய்தார்கள், ஆண்கள் அரசியல் செய்தார்கள்; பெண்கள் எச்சில் எடுதார்கள், பத்துபாத்திரம் தேய்த்தார்கள், பெருக்கினார்கள் வாரினார்கள், பிள்ளைகளைச் சீராட்டினார்கள், உடன் கட்டை மட்டும் ஏறவில்லை, மற்றபடி இந்தியபெண்களுக்கிருந்த அதே நிலமைதான். சங்க காலத்திலேயே பெண்கவிஞர்களைச் சந்தித்திருக்கிற நமக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பிரெஞ்சுப் பெண்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாத விஷயம் வியப்பை அளிக்கலாம்.

நவீன பிரெஞ்சுக் குடும்பம்:

இன்று நிலமை வேறு சமூக அமைப்பில் மதத்தின் தலையீடு குறைந்ததும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றமும் வைதீகப் பிரெஞ்சுக் குடும்ப அமைப்பைப் புரட்டிப்போட்டது. இந்தியாவைப் போலவே பதிவுத் திருமணம், சம்பிரதாயத் திருமணம் பிரான்சு நாட்டிலும் உள்ளன. தமிழில் நாம் அறிந்த பதிவு திருமணத்தைத்தான் இங்கே ‘le mariage civil’ என்ற பெயரில் நகரசபைகளிலும், மாநகராட்சிகளிலும் மேயர்களால் நடத்தி வைக்கபடுகின்றது. மதத்தின் பேரால் தேவாலயங்களில் ‘le mariage religieux’ நடத்திவைக்கப்படுகிறது. ஆனால் அண்மைக் காலங்களில் அரசே வழிவகுத்துக்கொடுத்த ஆண் பெண் கைகோர்த்தல் மேற்குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளையும் உதறிவிட்டது அல்லது செல்வாக்கைக் குறைத்துவிட்டது எனலாம். கடந்த பத்து ஆண்டுகளாக எவ்வித உறுத்தலுமின்றி ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். பிரெஞ்சு அரசாங்கம், குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்வதும் 80 விழுக்காடு பெண்கள் கல்விபெற்றவர்களாக இருப்பதும், 25 வயதிலிருந்து -45 வயது வரையிலான பெண்கள் பிறரைச்சார்ந்திராமல் சொந்தச் சம்பாத்தியத்தில் வாழ்வதும், தனித்திருக்கும் துணிச்சலை கொடுத்துவிடுகிறது. தவிர புதிதாக கொண்டுவரப்பட்ட ‘Le PACS’ (Pacte Civil de Solidarité -1999) சட்டம் தகுந்த வயதை அடைந்த ஒருவன் அல்லது ஒருத்தி சகபாலினம் அல்லது எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருவன் அல்லது ஒருத்தியோடு ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து வாழ அனுமதிக்கிறது. இந்நிலையில் பாரம்பர்ய திருமணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இன்றைக்கு ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமான கணவன் -மனைவி பந்தம் PACS முறைமையை அடிப்படையாகக் கொண்டது. மூன்று தம்பதிகளில் ஒரு ஜோடி பிரான்சு நாட்டில் விவாகரத்து செய்துக்கொண்டதாக இருக்கிறது. ஒப்பந்தந்த அடிப்படையில் சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நவீன பிரெஞ்சு குடும்ப அமைப்பை அணுக் குடும்பம் ( la famille nucléaire ) என்றும், கலப்புக்குடும்பம் (la famille composée ou recomposée) என்றும் வகைபடுத்தலாம். ‘அணுக்குடும்பம்’ என்பது ஏற்கனவே கூறியதுபோல பாரம்பர்ய திருமணச் சடங்கினால் இணையும் தம்பதிகள். ‘கலப்புக் குடும்பம்’ என்பது தம்பதிகளில் ஒருவர் தனது பிள்ளைகளுடன் தனித்து வாழ்வது அல்லது மணவிலக்குப்பெற்ற கணவனோ மனைவியோ விவாகம் செய்துகொண்டோ அல்லது செய்துகொள்ளாமலோ இன்னொரு ஆண் அல்லது பெண்ணுடன் அவர்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வது ஆகும். இவகைக்கு Le PACS முதுகெலும்பு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2013) ஓரினத் திருமணத்தையும் சட்டப்படி அங்கீகரித்து, தீவிர சமய வாதிகள், வலதுசாரிகள் கோபத்தை பிரெஞ்சு இடதுசாரி அரசாங்கம் சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.

நவீன பிரெஞ்சுக் குடும்பம் -கலப்பு குடும்பம் – சமூகத்தின் எதிர்பார்ப்பைத் துச்சமாகக் கருதுகிறது. தனிமனிதனின் உடல் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, மனிதத்தின் ஒழுங்குகளை கலைத்துப்போட்டிருக்கிறது. இரத்த உறவுகள்கொண்ட பிள்ளைகள், தம்பதிகள் ஆகியோரிடமே சிற்சில சமயங்களில் அசாதரண பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுகிறபோது, உடம்பின் இச்சையைமாத்திரம் கணக்கிற்கொண்டு ஒழுங்கைச் சிதைத்து கட்டமைக்கப்படும் நவீன குடும்ப அபைப்பு ஆனாதிக்கமோ பெண்னாதிக்கமோ அல்ல உணர்ச்சிகளின் ஆதிக்கம்- ஆபத்தானது.
(தொடரும்)
—————————————————–

பிரான்சு: நிஜமும் நிழலும் -3

கைகுலுக்கல் – Se serrer la main

 

பிரெஞ்சு பண்பாட்டில் கைகுலுக்குவதென்பது முன்பின் தெரியாத ஒருவரை முதன் முறையாக சந்திக்கிறபோதும் விடைபெறுகிறபோதும் இடம்பெறும் குறிப்பாக வியாபாரம், அலுவலகம் அல்லது பொதுவிடங்களில் சந்திப்பு நிகழ்கிறபோது கைகுலுக்கிக்கொள்வதென்பது மரபு. முதன் முறையாக உருவாகும் இந்த அறிமுகம் வியாபாரம் அல்லது அலுவல் நிமித்தமாக எத்தனைமுறை சந்திக்க நேர்ந்தாலும் கைகுலுக்கலே தொடரும். அதாவது அவர்கள் சந்திப்பு அலுவல் எல்லையைக் கடந்த நெருங்கிய நட்பு அல்லது உறவு என்ற வட்டத்திற்குள் பிரவேசிக்காதவரை. பிரெஞ்சு வழக்கில் கைகுலுக்கல் நளினமானது, சில நொடிகளே நீடிப்பது. ஆங்கிலேயரைப்போல இறுகப்பிடித்து ஆளையே பிடித்து உலுக்குவதுபோல கைகுலுக்கும் பண்பாடு பிரெஞ்சுக்காரர்களிடமில்லை. கைகளிரண்டும் அழுக்காகவோ, ஈரமாகவோ இருந்தால். பிரெஞ்சுக்காரர்கள் தோளை காண்பிப்பார்கள். நீங்கள் தொட்டு சந்திப்பை தொடரலாம் அல்லது விடைபெறலாம். வேறு சிலர் ஏதேனுமொரு விரலை நீட்டுவார்கள். அதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்குதான்.

 

காதலும் முத்தமும் :

 

“இது யார்தும்மா குழந்தை? தங்கச்சியா- தம்பியா? உங்கம்மாவுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையா? நீ தூக்கிவந்திருக்க!”

 

“இல்ல சார் என்னோடதுதான். திடீர்னு கல்யாணம் கூடிடுச்சி. அவர் எங்க வீட்டாண்டதான் இருக்கார். அப்பப்ப பார்ப்பாரு, ஒரு நாள் திடீர்னு ‘லவ்’ வை சொன்னாரு. நான் ஆரம்பத்துலே, எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னுதான் சொன்னன். அவர் கேட்கலை.?
“அப்புறமென்ன நீயும் லவ்வ சொல்லிட்ட, ஓடிப்போய் கல்யாணம்பண்ணிகிட்ட சரிதானே? ”

 

‘ ‘லவ் மேரேஜ்’, ‘லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ்’ என்ற வார்த்தைகள் தமிழ் சமூகத்தில் அதிகம் காதில் விழுகின்றன. ஒரு பக்கம் காதலைக் கொண்டாடும் தமிழ் சினிமாக்கள், இன்னொரு புறம் காதலைத் தீவிரமாக எதிர்க்கும் சாதிக்கட்சிகள் – இவ்விரண்டையும் செய்திகளாக்கும் தினசரிகள். ஆக மொத்தத்தில் தமிழ்மண்ணில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகம் மகசூலைத்தரும் பொருள் என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறதோ அவ்வளவு உண்மை காதல் திருமணம் இந்தியர் மரபில் மிகக்குறைவான விழுக்காடுகளுக்குரியவை என்பதும். பீஸா சாப்பிடப் பழக்கிக்கொண்டதை ப் போல இந்த நிலமையும் மாறலாம். நாளை மகனையோ மகளையோ பார்த்து ‘இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப்போற சீக்கிரம் லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கோ! என்கிற மேற்கத்தியர்களின் நிலமை எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடியாதது. பிரான்சு போன்ற நாடுகளில் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பெற்றோர்கள் சம்மதத்துடனே திருமணங்கள் நடந்திருக்கின்றன. இன்று மேற்கு நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்களிடை பெற்றோர்கள் ஏற்பாட்டில் திருமணங்கள் நடப்பதில்லை. ஓர் ஆணையோ அல்லது பெண்ணையோ விரும்புவது பெற்றோர்கள் சம்மதமின்றி நடக்கிறது என்பதால், திருமணச்செலவையும் அந்த ஜோடியே பார்த்துக்கொள்கிறது, பின்னர் அவர்கள் பிரிவும் பெற்றோர்களை எதிர்பார்க்காமலேயே நடைபெறுகிறது. ஓர் ஆணும் பெண்ணும் சேர்வதும் பிரிவதும் அவரவர் சொந்த விருப்பம், இரண்டிற்குமே உதவச் சட்டங்கள் இருக்கின்றன.

 

மனிதர்கள் கூடிவாழ்வது என்று தீமானித்தபிறகு, ஒரு கூட்டத்திற்கென பொதுவானதொரு வாழ் நெறியை அச்சமூகத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்களோ அல்லது அவர்களால் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு சிலரோ அறிவுறுத்துகிறார்கள். தனது தேவைகளை தான்மட்டுமே நிறைவேற்றிக்கொள்வது இயலாது என்றிருக்கிறபோது, தானல்லாத பிறர் வகுக்கும் நியதிக்கும் அவன் கட்டுப்பட்டான். அதுபோலவே இவன் பிறரோடு சேர்ந்து ‘இதுதான் சரி’ என்றதை ஏற்ற மனிதர்களும் இருந்தார்கள். பெருவாரியான மக்களால் ஏற்கப்பட்ட ஒரு வழக்கம் ஆண்டு பலவாக கடைபிடிக்கப்பட்டு மரபு ஆனது. மானுடம் பெற்றுள்ள வளர்ச்சிக்கு ஒப்ப வாழ் நெறிகளை விவாதத்திற்குட்படுத்தி தேவையெனில் சில மாற்றங்களை கொண்டுவருவது அவசியம், எதுவும் ‘taboo’ அல்ல என்று நினைத்த மேற்கத்திய சமூகத்தில் ஒரு பிரிவினர் “இப்போக்கு எதில் போய் முடியுமோ?” என்ற கவலையில் மூழ்கி இன்று தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வீதியில் இறங்குகின்றனர்.
ஒரு பிரெஞ்சுக் குடும்பம் இரண்டு பெண்கள்: ஒருத்தி நடுத்தர வயது, மற்றவள் உயர்கல்வி தொடர்பவள். ஒருத்திதாய், மற்றவள் மகள். தன்னுடன் பழகும் ஆண் நண்பன் தன்னிடம் காதலைத் தெரிவிக்கவில்லை என்ற வருத்தத்தைத் மகள், தாயிடம் தெரிவிக்கிறாள். தாயோ “அவசரப்படாதே அவன் உன்னிடம் பழகுவதைவைத்துப் பார்க்கிறபோது, விரும்புவதாகத்தான் தெரிகிறது, ஒரு வேளை எப்படிச் சொல்வது என தயங்குகிறானோ என்னவோ” என மகளுக்குச் சமாதானம் சொல்கிறாள். ஒரு வாரம் கழித்து மகள் இல்லாத சமயம் பார்த்து அவள் தாயிடம் இளைஞன் வருகிறான், தனது மனதிலுள்ள காதலைத் தெரிவிக்கிறான். பிரச்சினை என்னவெனில் அவன் காதல் வயப்பட்டது பெண்ணின் தாயிடமே அன்றி அவள் மகளிடம் அல்ல என்ற உண்மை. பெண்ணின் தாய்க்கு எதிர்பாராத இத்தகவல் அதிர்ச்சியை அளிக்தபோதிலும், தனக்கான நியாங்களின்படி அக்காதலை ஏற்பது சரி. இளைஞனுக்கு அவள் தரும் பதில் ஒரு பெரிய’Oui’ (Yes). அவள் பெண்ணேகூட தாய் எடுத்த முடிவினைக்கேட்டு அதிர்ச்சி அடைவதில்லை, பெண்கள் இருவரும் தாய்- மகள் என்ற உறவின் அடிப்டையில் இப்பிரச்சினையைப் பார்ப்பதில்லை, இரு பெண்களுக்கிடையேயான பிரச்சினையாக பார்க்கின்றனர். “எனது நலன் முக்கியம், மகளோ, மகனோ உறவினர்களோ, நண்பர்களோ, சமூகமோ வாழ்வில் குறுக்கிட, எனது நடத்தையை மதிப்பிட ஒன்றுமில்லை – என்ற இந்த பிரெஞ்சுக்காரர்களின் அல்லது மேற்கத்தியர்களின் போக்கு உலகமெங்கும் பரவி வருகிறது.

 

சுதந்திரத்திற்கு வானமே எல்லை என்கிற ‘Libertine’ கூட்டம் – Marquis de sade (1740 -1814) போன்றவர்கள் பிரெஞ்சு சமூகத்தில் இன்று அதிகம். அவர்கள் “மனம்போன போக்கில் வாழ்வேன், எனது தேவைகளும், உணர்ச்சிகளுமே எனக்கு முக்கியம்” என வாதிடுபவர்கள். விளைவாக ஓர் ஆணும் பெண்ணும் -அல்லது ஆணும் ஆணும் – அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்துவாழ (திருமணம் என்பது தற்போதைக்கு விலக்கப்பட்ட சொல்) காதல் – (l’amour) ‘இறைவணக்கம் போல’ பிரெஞ்சுக் காரர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அவர்களில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே முதற்பார்வையிலேயே ஏற்பட்ட மயக்கம் – coup de foudre, காதலுக்குக் காரணமாக இருக்கலாம், ஆங்கிலத்தில் ‘love at first sight’ என்கிறோமே அதே பொருளில். வயது, குடும்பம், சமூகம் என எவ்விதத் தளைகளும் அவர்களுக்கில்லை, தயக்கமின்றி ஒருவர் மற்றவரிடம் “Je t’aime’ (I love you) என்பார்கள்.

 

முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்த பிரான்சு நாட்டின் அதிபர் பிரான்சுவா ஒலாந்து (François Hollande) அதிபர் தேர்தலில் ஜெயித்து மேடையில் தோன்றியபோது தமது காதலி பத்திரிகையாளர் பெண்மணிக்குப் பகிரங்கமாக பிரெஞ்சு முத்தம் தர தயங்கவே இல்லை. அப்பெண்மணியின் இடத்தில் இன்று ஒரு நடிகை. இவரிடம் ‘Je t’aime’ என அதிபர் தெரிவித்து ஒருவருடம் ஆகப்போகிறது. இவருக்கு முன்பிருந்த அதிபர் சர்க்கோசியும் தனது அப்போதையை மனைவிய விவாகரத்து செய்துவிட்டு, இத்தாலி நாட்டைச்சேர்ந்த பாடகி ஒருவரை பதவிக்காலத்தில் காதலித்து மணம் செதுகொண்டார். பெரும்பாலான பிரெஞ்சுகாரர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணவன், மனைவி என வாழ்கின்றவர்கள்தான். முறைப்படி மணவிலக்கு பெற்றபிறகே இது நடைபெறுகின்றன என்றாலும் தங்கள் பிள்ளைகள் நலனில் அக்காறைகொள்ளாத இந்த நவீன வாழ்க்கை ஏற்கனவே கூறியதுபோன்று சொந்த நலனை மட்டுமே கருத்தில் கொள்கிற வாழ்க்கை முறை.

 

Faire le Bise – முத்த பரிமாற்றம்:

 

முத்தம் என்றாலே காதல் சம்பந்தப்படப் பொருள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் பிரெஞ்சு சந்திப்புகளில் கைகுலுக்கல்போல, முத்தங்கள் இரு மனிதர்களுக்கிடையேயான உறவின் வெளிப்பாடு. காதலன் காதலி, கணவன் மனைவி ஆகியோரன்றி நண்பர்கள் உறவினர்கள் அனைவரிடையேயும் முகமன் கூறவும் ஒருவர் மற்றவரிடம் தமக்குள்ள அன்பையும் நெருக்கத்தையும் வெளிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் முத்தமிட்டுக்கொள்வது வழக்கம். முத்தத்தை Bise அல்லது Bisu எனப்பொதுவாகச் சொல்வார்கள்.

 

காதலன் காதலி, கணவன் மனைவிக்கிடைய இடம்பெறும் முத்த பரிமாற்றம் உதடுகளை மையமாகக் கொண்டது. அதிலும் பிரெஞ்சு முத்தம் உலகம்புகழ்பெற்றது. இரண்டாம் உலகபோருக்குப்பின் அமெரிக்க வீர்கள் சொந்த நாடு திரும்பியபோது, காத்திருந்த காதலிக்கும், மனைவிக்கும் மணிகண்ணகில் தாங்கள் ஐரோப்பாவில் கற்றதென பிரெஞ்சு முத்தங்களை வழங்கியிருக்கிறார்கள்; இதன் விசேடம், உதடுகளோடு இருபாலரின் நாக்கும் ஒத்துழைக்கவேண்டும், பிரெஞ்சில் இம்முத்தத்தைச் அரங்கேற்றுவதற்கு Galocher என்று பெயர். Galocher என்பதற்கு Overshoe என்று பொருள். மழைக்காலத்தில் ஓவர் ஷூ போட்டு நடந்து பார்த்துவிட்டு காதலிக்கோ காதலர்க்கோ பிரெஞ்சு முத்தத்தைத் கொடுத்துப் பெயர்வைத்தது சரிதானா? எனத் தெரிவியுங்கள்.

 

இரண்டு நண்பர்கள் சந்திக்கிறபோது தன்னோடு இருக்கிற மூன்றாவது நபரை அறிமுகப்படுத்துகிறபோதும் கன்னத்தில் முத்தமிடலாம் குறிப்பாக அவர்கள் சிறுவர் சிறுமியராகவோ வயதில் மூத்தவராகவோ இருப்பின் முத்தமிட தயங்கவேண்டியதில்லை. முத்தமிடுவதா அல்லது கைகுலுக்கல்போதுமா என்பதை இரு நபர்களுக்கிடையேயான உறவு அல்லது நட்பின் அளவுகள், பாலினம் ஆகியவைப் பொதுவாக தீர்மானிக்கின்றன ( பல நேரங்களில் அவர்களின் முகங்கள்). சிநேகிதிகள் இருவர் அதாவது அவர்கள் ஒருவரையொருவர் நீ போட்டுக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமிருப்பின், சந்திக்கிறபோதும், புறப்படும்போதும் கன்னத்தில் முத்தமிட்டுக்கொள்ளலாம். எதிர் பாலினத்தைச்சேர்ந்த இருவர்கூட அவ்வாறு செய்யலாம். ஆனால் அவ்விருவரில் ஒருவரான பெண் அதை விரும்பாவிடில் ( அவர்கள் விலகி நின்று கை நீட்டுவார்கள் -கை குலுக்குவதற்காக) தவிர்ப்பது நாகரீகம். அவ்வாறே இருவர் சந்திக்கிறபோதும் பிரிந்து செல்கிறபோதும் முத்தமிடுவது தவிர்க்கபடுவதற்கு காரணங்களிருக்குமெனில் நிச்சயம் கைகுலுக்கவேண்டும்.

 

கன்னத்தில் முத்தமிடும் சம்பிரதாயத்தில் சில விதிமுறைகள் இருக்கின்றன.

 

1. இருவர் கன்னங்களும் மற்றவரின் கன்னத்தில் பாதி அளவைத் தாண்டக்கூடாது.

2. கன்னத்தில் உதடுகளை பதிக்காமல் முத்தமிடவேண்டும் கன்னத்தில் உதடுகள் பதிந்தால் அதற்கு வேறுபொருள்.

3. எண்ணிக்கை:

– கன்னத்தில் மாறிமாறி இரண்டு முறை முத்தமிட்டுக்கொள்வதென்பது (நட்பு, நெருங்கிய உறவுகள்) பொது வழக்காக இருக்கிறது.
சில நேரங்களில் சந்திப்பைத் தொடங்குகிறபோது மூன்று முத்தமென்றும் புறப்படும்போது இரண்டு முத்தமென்றுங்கூட சில பகுதிகளில் வழக்க முண்டாம்.

(தொடரும்)

பிரான்சு: நிஜமும் நிழலும் -2:

கேள்வி ஞானம் என்ற சொல்லை பலரும் அறிந்திருக்கிறோம். இக் கேள்விஞானம் அவரவர் பெறமுடிந்த தகவல்களின் அடிப்படையிலும், அத்கவல்களைப் பெற்ற நபரின் கற்பனை வளத்தைப் பொறுத்தும் உருவாவது. பிரான்சு நாட்டைப்பற்றியும் அப்படியொரு கருத்தினை நீங்கள் வைத்திருக்கலாம். அக்கருத்திற்கு வலு சேர்ப்பதோ அல்லது அதனைப் பலவீனப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. கிராமங்களில் பையன்கள் விளையாட உத்தி பிரிக்கும் போது, தன்னோடு வந்திருக்கும் புதிய பையனை அறிமுகப்படுத்த நினைக்கிற ஒருவன் ” கூழுப்பிள்ளை (உபயம் -கந்தர்வன் சிறுகதை) வீட்டுக்கு வந்திருக்காண்டா” என்பான். அந்தப் பையன் ‘கூழுப்பிள்ளை’ வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருப்பான், இருந்தும் பையன்கள் பார்வை சட்டென்று அவன் வயிற்றில் இறங்கும். அவன் வயிறும் கூழுப்பிள்ளை வீட்டு ஆண்களைப்போலவே பெருவயிறாக இருக்கவேண்டும் என்று அவர்கள்மனது தீர்மானித்ததை, பார்வையால் உறுதிசெய்துகொள்ளும் முனைப்பு அக்கண்களில் தெரியும். “கூழுப்பிள்ளை வீடு” என்ற அடைமொழி சிறுகச் சிறுகக் கட்டிய குளவிக்கூடு. அப்பையனைப்பற்றிய அசலான புரிதல் அவர்களிடத்தில் நிகழும் வரை அவ்விடத்தைக் ‘கூழுப்பிள்ளை வீடு’ என்ற சொல் நிரப்பும்.

நாடுகளும் அதுபோன்றவைதான். ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஆகிருதியை, தனித்தன்மையை, பலத்தை, பலவீனத்தை முதலிற் கட்டமைப்பதில் சமூகத்தைப்போல அவன் பிறந்த மண்ணிற்கும், நாட்டிற்கும் பங்கிருக்கிறது. பிரான்சு என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? பார்த்த திரைப்படங்கள், படித்தப் புத்தகங்கள், மேற்கு நாடுகளில் அதுவுமொன்று என்ற உண்மையையொட்டிய கற்பனைகள்; புதுச்சேரிவாசியாக இருந்து பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் ராணுவ வீரர்களிடம் உரையாடிய அனுபவமிருப்பின் அவர்கள் திரித்த கயிறுகள், உங்கள் சொந்தக் கற்பனை என அனைத்தும் சேர்ந்து ஒருவகையானச் சித்திரத்தைத் தீட்டியிருக்கும். பின்னர் சித்திரத்தின் பருமனைப் பெருக்கிப் பார்ப்பதும், குறைத்துப் பார்ப்பதும் உங்களின் கற்பனையையும் அக்கற்பனைக்கான சூழலையும் பொறுத்தது. பிரெஞ்சுக்காரன், அமெரிக்கன், இந்தியன், போலந்துவாசி, உகாண்டாக்காரன், பாகிஸ்தானியன் என்கிற நாட்டு அடையாளம் மனிதர்கள் பற்றிய முதல் புரிதலைத் தொடங்கிவைக்கின்றன. ஒரு மண்ணின் பெருமையும் சிறுமையும், அதன் வரலாறும் அறிவியல் முன்னேற்றமும், சாதனைகளும், சாபங்களும் அம்மண்ணின் குடிகளை நிழல்போல சாகும் வரை துரத்துகின்றன. இதற்கு வேர் எது? பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்குமான கல்யான குணங்கள் எங்கிருந்து வந்தன. Rome wasn’t built in a day என்பதுபோல சிறுக சிறுக அதனைக் கட்டியெழுப்பியவர்கள் வேறுயாருமல்ல அவர்களும் அந்நாட்டின் குடிகள்தான். இன்றைய இந்தியனின், பாகிஸ்தானியன் அல்லது பிரெஞ்சுக்காரனின் பெருமை சிறுமை இரண்டிற்குமே அவரவர் முன்னோர்கள் தான் பொறுப்பு. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை.

பிரெஞ்சு மக்களும் பண்பாடும்

உலகில் எப்பகுதியில் வசிக்க நேரினும் மனிதர்களுக்கான அடிப்படை உயிரியல் தேவைகளில் பேதமில்லை. பசிவந்தால் உண்பதும், இயற்கை உபாதைகளுக்கு வழி செய்து கொடுப்பதும், புலன்களைப் பயன்படுத்துவதிலும் மனித விலங்குகளிடை பேதமில்லை. எனினும் பண்பாடு வேறு, அது வாழ்வியக்கத்தின் விழுமியம். மனிதனுக்கு மனிதன் அது வேறுபடுவதைப்போலவே, சமூகம், இனம், நாடு சார்ந்து வேறுபடுவதுண்டு. ஓர் இடத்தில் நிலையாய் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் தங்களிடத்தில் ஏற்படுத்திக்கொள்கிற வாழ்க்கை நெறிகளின் தொகுப்பென்றும் பண்பாட்டைக் கூறலாம். கல்வி, சிந்தனை, அவன் சார்ந்த சமூகத்தின் தேவைகள், புவிசார் காரணிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய மரபு. உண்பது உயிரியல் தேவையெனில், எதை உண்பது? எப்படி உண்பது? எவருடன் உண்பது, உண்ணும்போது செய்யவேண்டியதென்ன செய்யக்கூடாதது என்ன? என்பதெல்லாம் பண்புகளாகப் பார்க்கப்டுகின்றன. ஆக மானுடத்திற்குப் பொதுவான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதில் பண்பாடுகள் குறுக்கிடுகின்றன. ஒரு சமூகத்தின் பண்பாடு மற்றொரு சமூகத்திற்கு வியப்பைத் தரலாம், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கலாம். ஒரு சமூகத்தின் பண்பாட்டை மற்றொரு சமூகத்தின் பண்பாட்டின் அடைப்படையில் உயவென்றோ தாழ்வென்றோ முடிவுக்குப் பொதுவில் வரமுடியாது. செவ்விந்தியர்களுக்கும், மலைவாழ்மக்களுக்கும் நகர சார் மக்களின் பண்பாடுகள் தாழ்ந்தவை என நினைக்க உரிமைகள் இருக்கின்றன. பல நூறு ஆண்டுகால காலனி ஆதிக்கம், அறிவியல் முன்னேற்றத்தின் அசுர வளர்ச்சி, ஊடகம், தகவல் மற்றும் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உலகமயமாக்கல் என பலவும் அண்மைக்காலங்களில் ஒற்றை பண்பாட்டை நோக்கி உலகம் பயணித்துக்கொண்டிருக்கக் காரணமென்ற சூழலில் பிரெஞ்சு பண்பாட்டில் நாம் தெரிந்துகொள்ள என்ன இருக்கிறதென பார்க்கலாம்:

 

மரியாதை, நாகரீகம், உபசாரம்:
ஓர் அந்நியனாக இருந்துகொண்டு பிரெஞ்சுக்காரர்களிடம் நான் பார்க்கும் குணம்: நேரம் தவறாமை, சட்டத்தை மதித்தல், எளிமை, வேலை நேரத்தை வேலைக்கென மட்டுமே செலவிடுதல், செய்யும் பணியில் அல்லது தொழிலில் அக்கறையுடனும், அர்பணிப்பு மனத்துடன் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ளுதல், மனதிலுள்ள வெறுப்பையோ கசப்பையோ துளியும் வாடிக்கையாளரிடமோ, நோயாளியிடமோ, நுகர்வோரிடமோ வெளிப்படையாகக் காட்டிகொள்ளாதது ஆகியவை. பேரங்காடியாக இருக்கலாம், வங்கியாக இருக்கலாம், அரசு அலுவலகங்களாக இருக்கலாம், தனியார் நிர்வகிக்கும் காப்பீடு நிறுவனங்களாக இருக்கலாம், மருத்துவ மனையாக இருக்கலாம் உங்களுக்கு உரிய நேரத்தை உங்களோடு செலவிட சம்பந்தப்பட்டவர் காத்திருப்பவார், இங்கே அது சேவை, தொழில் அல்ல. எதிர்பாராவிதமாக ஒன்றிரண்டு அசம்பாவிதங்கள் நடக்கலாம், ஆனால் அது அபூர்வமாக நிகழக்கூடியது.

 

மூன்று ஐரோப்பியர் இருக்குமிடத்தில் ஒருவர் மட்டும் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் பிரெஞ்சுக் காரராக இருப்பார் – (இது ஆங்கிலேயர்கள் பிரெஞ்சுகாரர்களைக் குறித்து வைத்திருக்கும் அனுபவத்திற்கு நேர்மாறானது ) ஆங்கிலேயரும், ஜெர்மன்காரரும் என் அனுபவத்தில் சிரித்து பார்த்ததில்லை. பிரெஞ்சுக் காரர் நம்முடன் சட்டென்று கை குலுக்குவார், வளவளவென்று பேசுவார். அவரைப்பற்றிக் கூடுதலாக நம்மிடம் தெரிவித்திருப்பார். எத்தனை வெளிப்படை, எவ்வளவு நெருக்கம் என்றெல்லாம் நினைத்து மனதிற்குள் பாராட்டிக்கொண்டிருப்பீர்கள். இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு உங்கள் கண்ணெதிதே காப்பியோ தேநீரோ வாங்கிப் பருகுவார். பிரெஞ்சு நண்பர் ரெஸ்ட்டாரெண்டுக்கு சாப்பிடப் போகலாம் என அழைப்பார் நீங்கள் இரண்டு பேர் எனில் பிரச்சினையில்லை. அதிக எண்ணிக்கையில் இருப்பீர்களெனில் அவரவர் பில்லுக்கு அவரவர்தான் பணம் கொடுக்கவேண்டும். இந்த அணுகுமுறையில் எவ்விதச் சங்கடமும் பிரெஞ்சுக்காரர்களுக்கு இருக்காது. பிரான்சுக்கு வர நேரிட்டால் உங்கள் ஆங்கிலத்திற்கு எல்லா இடங்களிலும் கதவு திறக்கும் என நம்பாதீர்கள், இந்தியாலோ அல்லது ஆங்கில மொழி பேசுகிற நாடுகளிலோ தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசும் பிரெஞ்சுக்காரர்கள், உள்ளூரில் தமக்கு ஆங்கிலம் வராது, தெரியாது என்பார்கள். நெப்போலியனுக்கு ஆங்கிலேயரால் நேர்ந்த தோல்வியை சகித்துக்கொள்ள இன்றளவும் பிரெஞ்சுக்காரர்கள் தயாரில்லை. எனவே குறைந்த பட்சம் பிரெஞ்சுக் காரர்கள் அடிக்கடி உபயோகிக்கும் ‘merci’ (நன்றி) என்ற வார்த்தையையாவது சொல்லப்பழகிக்கொண்டு பிரான்சுக்குள் வருவது நல்லது.

அ. நீ அல்லது நீங்கள் – tutoiement ou Vouvoiement

தமிழில் உள்ளதுபோல நீ என்ற சொல்லும் நீங்கள் என்ற சொல்லும் பிரெஞ்சில் இருக்கிறது. நீ என்று அழைப்பதை tutoiement என்றும் நீங்கள் என்று அழைப்பதை Vouvoiement என்றும் பிரெஞ்சில் சொல்வதுண்டு . அந்நியர்கள், புதிய மனிதர்கள், பரிச்சயமற்ற மனிதர்கள் ஆகியோரிடம் ‘நீங்கள்’ என்ற சொல் உபயோகிக்கப்படுகிறது. மாறாக ‘நீ’ என்ற சொல்லை சிறுவர் சிறுமியரிடமும், உறவினர்கள், நண்பர்கள் தோழிகள் ஆகியோரை அழைக்கவும் பயன்படுத்துகிறார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும் ‘நீ’ போட்டே அழைக்கிறார்கள். வயது ஒரு தடையே இல்லை. முன்பின் தெரியாதவர்கள் பழக நேரும்போது ‘நீங்கள்'(Vous) எனத் தொடங்கி பின்னர் நெருக்கம் ஏற்படுகிறபோது ‘நீ'(Tu) என ஒருவர்க்கொருவர் அழைத்துக்கொள்வது சகஜம். இருவரில் ஒருவருக்கு 15 வயதும், மற்றவருக்கு 90 வயது என்றாலும் ஒருமையில் அழைத்துக்கொள்வது அவர்கள் பார்வையில் இடைவெளியைக் குறைக்கிறது. இங்கு வந்து பல ஆண்டுகள் ஆன பிறகும், தற்போதும் பழகிய நண்பர்களை முதல் நாளில் விளித்ததைப்போலவே ‘நீங்கள்’ போட்டு அழைக்கிறேன். ‘ நீ’ என்று அழைக்க தயக்கமாக இருக்கிறது. எங்கள் கிராமத்தில் தள்ளாடும் வயதிலும் கூட வயதிற் சிறியவர்களை ‘வாங்க போங்க’ என அழைக்கும் பெரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். மனிதர் உயர்வு தாழ்வு இடைவெளியைக் குறைக்க பிரெஞ்சுக் காரர்களின் ‘நீ’ க்கு உரிய நியாயங்கள் சரியானவையென்றே நினைக்கிறேன்.

Bonjour – வணக்கம்

பிரெஞ்சுக்காரர்களின் வெற்றிக்கு அவர்கள் முகமனுக்காகச் செலவிடும் வார்த்தைகளுக்கும் சமிக்கைகளுக்கும் பெரும் பங்குண்டு. இருமனிதர்களின் பார்வைகள் சந்தித்தால் முகமன் இன்றிதமையாததென்பது அடிப்படை நாகரீகம். அவற்றை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கேற்ப ( அந்நியர், நண்பர், உறவினர் எனபதைப்பொறுத்து மாறுபடும்) எனினும் வார்த்தைகள், முறுவல்கள், கை குலுக்கல்கள் இரு கன்னங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் முத்தங்கள், தழுவல்கள், கட்டி அணைத்து முதுகில் தட்டுதல் என்று பிரான்சு நாட்டில் முகமனுக்குப் பல வடிவங்களுண்டு.

வீட்டைவிட்டு வெளியில் வருகிறேன், கதவைப்பூட்டிவிட்டுத் திரும்புகிறேன். எதிரே நான் அறிந்திராத குடும்பமொன்று (கணவன் மனைவி, பிள்ளைகள்) பூங்கொத்து சகிதம் பக்கத்து வீட்டிற்குச் செல்ல படியேறி வருகிறார்கள். அவர்களை இதற்கு முன்பாக பார்த்ததில்லை இருந்தும், குடும்பத் தலைவர் வாயிலிருந்து ‘Bonjour’ என்ற வார்த்தை. இதொரு அடிப்படைப் பண்பு. இதப் பண்பை எல்லா இடங்களிலும் எல்லா தருணங்களிலும் காணலாம் நீங்கள் சாலையோரத்தில் நடந்து போகிறீர்கள், அனிச்சையாக எதிரே வருகிறநபரை பார்க்க நேரிடுகிறது: அவர் ஆணோ பெண்ணோ, சிறுவரோ சிறுமியோ; கிழவனோ கிழவியோ; நாயுடன் நடதுபோகிறவரோ அல்லது காதலனின் தழுவல் பிடியிலிருந்து சட்டென விடுபட்டவளோ எவராயினும் உங்களுக்கு ஒரு ‘Bonjour” சொல்லாமல் கடந்து செல்லமாட்டார் பெரிய அங்காடிக்குள் நுழைகிறீர்கள், ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள், வாங்குவதா வாங்க வேண்டுமா எனக் குழப்பத்திலோ அல்லது வெறுமனே, மனைவியைத் திருப்திபடுத்தவேண்டியும், பர்சைக் காப்பாற்றும் யோசனையுடனும் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். வாங்கும் ஆசாமிகளா, கடைதோறும் இப்படி நுழைந்து நேரத்தை செலவிடும் தம்பதிகளா என்பதை விற்பனையாளர் உங்கள் முகங்களைப் பார்த்ததும் அறிந்திருப்பார், எனினும் உங்களை நெருங்கி “உங்களுக்கு உதவட்டுமா?’ எனக்கேட்பதற்கு முன்பாக விநயமாக இரண்டு ‘Bonjour’ களை பிள்ளையார் சுழிபோல செலவிட்டபிறகே விற்பனை உரையாடலைத் தொடங்குவார். பொருளை எடுத்துக்கொண்டு பணத்தை செலுத்தவருகிறீர்கள், காசாளரும் ஒரு ‘Bonjour’ க்குப் பிறகே பொருளுக்குரிய பணத்தை பெறுவார். அன்றைய தினம் அவர் இரு நூறு வாடிக்கையாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் அனைவருக்கும் முறுவலுடன் கூடிய ‘Bonjour’ ஒன்றை காசாளர் பெண்மணி செலவிடுவாள். பிரான்சு நாட்டில் இரயிலில் பயணம் செய்த அனுபவமிருப்பின், பரிசோதகர் பயணச்சீட்டை வாங்கி சரிபார்க்கும் முன்பாக ‘Bonjour’ தெரிவிக்காமல் உங்கள் கையிலிருந்து டிக்கெட்டை வாங்கமாட்டார். ஒரு இரயிலில் குறைந்தது நூறுபேருக்கு என்றாலும் ஒரு நாளைக்கு 500 பேருக்காவது அவர் ‘Bonjour தெரிவிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரில் போகிறீர்கள், அல்லது நடந்து போகிறீர்கள் உங்களிடம் உரிய அத்தாட்சி பத்திரங்கள் இருக்கின்றனவா என்பதைச் சோதித்துப்பார்க்க போலிஸார் நினைத்தாலும் மேற்கண்ட வார்த்தைதான் முதலில் வரும். ஆக நாடு முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் பல லட்சக்கணக்கான வணக்கங்கள் மனிதர்களிடையே பரிமாறிகொள்ள நேரிடுகிறது: முறுவலோடும் வணக்கத்தோடும் தொடங்கும் உரையாடல், இரு நபர்களுக்கிடையேயான இடைவெளியை குறைக்கிறது, உரையாடலை இலேசாக்குகிறது.

(தொடரும்)

பிரான்சு: நிஜமும் நிழலும் -1

காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனை தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்தொன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது, முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும் பிரார்த்தனைபோல உலகின் பிரசித்திபெற்ற நிறுவனங்களின் வர்த்தகக்குறி கொண்ட பைகள் (சராசரியாக நபர் ஒன்றுக்கு 2011ம் ஆண்டின் கணக்குப்படி 1470 யூரோ வரை சீனர்கள் இங்கே செலவிடுவதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது). அவர்களை இடை மறிக்கும் பாரீஸ்வாழ் சீனர்கள் குழுவொன்று சீன மொழியில் அச்சிட்ட நாளிதழை இலவசமென்று கொடுக்க முன் வருகிறது. ஆனால் பேருந்துகளில் வந்தவர்களோ அந்த நாளிதழை வாங்க மறுப்பதோடு, ஒருவகையான அச்ச முகபாவத்துடன் பேருந்தில் ஏறுகிறார்கள். செய்தித்தாளின் பெயர் “The Epoch Times”. சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள நாளிதழ். .மக்கள் குடியரசு என்று சொல்லிக்கொள்ளும் சீன நாட்டிலிருந்து உல்லாசப் பயணிகளாக வந்தவர்கள் பயணம் வந்த இடத்தில்கூட வாய்திறக்க அஞ்ச, பிரான்சு நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்களுக்கு தங்கள் குரலை வெளிப்படுத்தவும், அச்சில் பதித்து பகிர்ந்துகொள்ளவும் உரிமை இருக்கிறது.

மற்றொரு காட்சி : Ernst & Young என்ற அமைப்பும், L’express தினசரியும் ஆண்டுதோறும் வழங்கும் “உலகின் சிறந்த தொழிலதிபர்” என்ற விருதை கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘மொனாக்கோ'(Monaco) நாட்டில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ‘Mohed Altrad’ என்பவர் வென்றதாக செய்தி. பிரெஞ்சு தினசரிகளும் தொலைக்காட்சிகளும் முதன்முறையாக ஒரு “Français” (பிரெஞ்சுக்காரர் அல்லது பிரெஞ்சு குடியுரிமை உள்ளவர்) இவ்விருதை வென்ற செய்தியை பெருமிதத்துடன் தெரிவித்தன. ஆனால் இவருடைய பூர்வீகத்தைத் தெரிவிக்க ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் விரும்பவில்லை என்பதால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? விருதை வென்றவர் ஓர் இஸ்லாமியர், சிரியாவிலிருந்து பிரான்சுக்கு வந்தவர், உழைத்து முன்னேறியவர். அவர் இஸ்லாமியர் என்றாலும் பிரான்சு நாட்டின் புகழுக்குக் காரணமாக இருக்கிறார் எனவே பிரெஞ்சுகாரர்களுக்கு வேண்டியவர். மற்றொரு சம்பவவத்தில் வேறொரு காட்சி: ஓர் அமெரிக்க விமான நிறுவனம் தனது நாட்டிற்குப் பயணம் செய்யவிருந்த ‘மெதி'(Mehdi) என்ற இளைஞரிடம் துர்வாசம் இருப்பதாகக் கூறி பாரீஸ் விமான தளத்தில் இறக்கிவிட்டது. செய்திவாசித்தவர்கள் அவர் ஒரு பிரெஞ்சுக் காரர் அல்லது பிரெஞ்சு குடுயுரிமைப்பெற்றவர் என்பதைச் சாதுர்யமாகத் தவிர்த்து, அவர் அல்ஜீரிய நாட்டைச்சேர்ந்தவர் என்ற சொல்லை உபயோகித்தார்கள். பிரெஞ்சுக் காரர்களின் விசித்திரமான இந்த மனப்போக்கையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேற்கத்திய நாடுகள் என்றால் என்ன? பிரான்சும் பிரிட்டனும் பூமிப்பந்தின் எப்பகுதியில் இருக்கின்றன? என்பதை அறியாத வயதில் கிராமத்திளிருந்து மூன்று கல் நடந்து, பேருந்து பிடித்து அரைமணி ஓட்டத்திற்குப்பிறகு “அஜந்தா டாக்கீஸ் பாலமெல்லாம் இறங்கு” என்று நடத்துனர் கூவலில் அறிமுகமான புதுச்சேரிதான் அப்போது எனக்குப் பிரான்சாகத் தெரிந்தது. புதுச்சேரியைப்பற்றி ஓரளவு நினைவுபடுத்த முடிவது 1962ம் ஆண்டிலிருந்து. எங்கள் கிராமத்திற்கும் புதுச்சேரிக்கும் நெருக்கம் அதிகம். பெரும்பாலான உறவினர்கள் புதுச்சேரியில் இருந்தார்கள். உறவினர்களுக்கு கிராமத்தில் நிலங்கள் இருந்தன. அறுவடைகாலங்களில் எங்கள்வீட்டில் தங்கிவிட்டு கிளம்பிப்போவார்கள். அவர்கள் வீட்டிற்கு நாங்களும் போவதுண்டு. அப்படித்தான் புதுச்சேரி அறிமுகமானது. நேருவீதிக்கு வடகே இருந்த உறவினர்கள் வசதிபடைத்த குடும்பங்கள், Notaire ஆகவும், Huissier ஆகவும் இருந்தனர் மாறாக நேரு வீதிக்கு தெற்கே இருந்தவர்கள் பால் வியாபாரம் செய்பவர்கள் (பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் -தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் மொழிபெயர்த்த தேசிகப்பிள்ளை குடும்பம் இதற்கு விதிவிலக்கு). புதுச்சேரிக்குச் செல்லும்போதெல்லாம் பிரெஞ்சு கலாச்சாரத்தை பிரித்துணர முடியாத வயதென்றாலும், திண்டிவனம், கடலூர், விழுப்புரம் ஆகியவற்றிலிருந்து புதுச்சேரி வேறுபட்டது என்பதை விளங்கிக்கொண்டிருந்தேன். இந்த வேறுபாட்டை வலியுறுத்திய தனிமங்களில் கள்ளுக்கடை, சாராயக் கடைகள்; அரைக்கால் சட்டையில் மஞ்சள் தொடைதெரிய சைக்கிளில் செல்லும் திரட்சியான ஆஸ்ரமத்துப் பெண்களும் அடக்கம். தொடக்கப்பளிக்கே கூட பக்கத்து கிராமத்திற்கு போகவேண்டியிருந்த நிலையில், நாங்கள் அம்மம்மா என்று அழைத்த அம்மா வழி பாட்டியுடன் 60களில் புதுச்சேரியில் தங்கிப் படிக்கலானோம். காந்திவீதியின் தொடக்கத்தில் ஐந்தாம் எண் வீடு. புதுச்சேரி சற்று கூடுதலாக அறிமுகமானது அப்போதுதான். ராஜா பண்டிகையும், மாசிமகமும், கல்லறை திருவிழாவும், கர்னவாலும் பிரம்பிப்பைத் தந்தன நாங்கள் குடியிருந்த வீட்டிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு காவல்துறையில் பணியாற்றிவர், அவர் ‘சிப்பாய்’ ஆக இருந்தபோது எடுத்துக்கொண்ட படத்தைப் பெருமையுடன் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் ’14 juillet’ ( பஸ்த்தி சிறையைக் பிரெஞ்சு பிரெஞ்சு புரட்சியின்போது கைப்பற்றிய தினம் – இன்று தேச விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.) அன்று புதுச்சேரியில் விழா எடுப்பார்கள். தொடர்ந்து பிரெஞ்சு தூதரகத்தில், சிறிய அளவிளான விருந்திருக்கும், அவ்விருந்திற்கு குடியிருந்த வீட்டுக்காரர் அழைப்பினைப் பெற்றிருப்பார், என்னையும் அழைத்து செல்வார். அவர் ஷாம்பெய்ன் அருந்துவதில் ஆர்வத்துடன் இருக்க, எனது கவனம் கொரிக்கின்ற பொருட்கள் மீது இருக்கும். பிரெஞ்சுக்காரர்களையும் அவர்கள் பேசிய பிரெஞ்சு மொழியையும் பிரம்மிப்புடன் அவதானித்த காலம் அது. நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், கல்வி, பணி, மணம் அனைத்தும் புதுச்சேரியோடு என்றானது. எனது மனைவி உறவுக்காரபெண். அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை இருந்தது. அவரால் எனக்கும் கிடைத்தது. எனினும் வருவாய்த்துறை பணியைத் துறக்க சங்கடப்பட்டேன். ஏதோ ஒரு துணிச்சலில் புதுச்சேரி அரசு பணியைத் துறந்துவிட்டு இங்கு வந்தது சரியா என்ற கேள்வி இன்றைக்கும் இருக்கிறது. எனினும் தொடங்கத்தில் இருந்த உறுத்தல்கள் வெகுவாகக் குறைந்திருக்கின்றன. பிரான்ன்சு நாட்டில் சட்டத்தை மதித்தால் சங்கடங்கள் இல்லை.

அமெரிக்காவும் (வட அமெரிக்கா) மேற்குலகும், நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும் நவீன யுகத்தின் ‘Avant-gardistes’ கள். நமது அன்றாடம் அவர்களால் எழுதப்பட்டது, எழுதப்படுகிறது. காலையில் கண்விழிப்பது முதல் இரவு உறங்கப்போவதுவரை சிந்தனை, உணவு, நகர்வு, தகவல் தொடர்பு, காட்சி, கலை இலக்கியம் இப்படி மனித இயக்கத்தின் எந்தவொரு அசைவிலும் மேற்கத்தியரின் தாக்கம் இருக்கிறது. நூறு குறைகள் இருப்பினும் மானுடத்திற்கு ஆயிரமாயிரம் நன்மைகள். மூச்சுக்கு முன்னூறுமுறை அமெரிக்காவையும் மேற்கத்தியர்களையும் திட்டிவிட்டு, பிள்ளகளை பொறுப்பாக ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைத்தபின் தங்கள் விசாவுக்காக கால்கடுக்க அவர்களின் தூதரகத்தில் காத்திருக்கும் காம்ரேட்டுகள் இருக்கிறார்கள்.. எனக்குத் தெரிந்த இடதுசாரி புதுச்சேரி தோழர் ஒருவர் பிரான்சிலிருந்து துடைப்பம், டெலிவிஷன் என்று வாங்கிக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இறங்கினார். எதிரிகள் கூட மேற்கத்தியரிடம் கடனாகவோ விலைக்கோ பெற்ற வாளைத்தான் அவர்களுக்கு எதிராகச் சுழற்றவேண்டியிருக்கிறது.

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுவது. ஐக்கிய நாட்டு சபையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள். இந்த ஐவரில் சீனா நீங்கலாக மற்றவர்கள் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற்ற அணியைச் சேர்ந்தவர்கள். இனி மற்றொரு உலக யுத்தத்தை இப்பூமி தாங்காது எனத் தீர்மானித்தபோது,வெற்றி பெற்றவர்களே அதற்கான பொறுப்பையும் ஏற்றார்கள். அமெரிக்காபோல சீனா போல அல்லது ஒன்றிணைந்த சோவியத் யூனியன்போல பெரிய நாடுகள் என்று சொல்ல முடியாவிட்டாலும், காலனி ஆதிக்கத்தால் உலகின் பரந்த நிலப்பரப்பை தமது ஆளுகைக்கு உட்படுத்தியிருந்த பிரிட்டனும், பிரான்சும் ஐநா சபையில் நிரந்தர உறுப்பினர்கள் ஆனார்கள். அதனை இன்றுவரை கட்டிக்காக்கும் வல்லமை அவர்களிடம் இருக்கிறது. வல்லரசு என்றால் பொருளாதாரமும் ராணுவமும் என்றும் பலரும் நம்பிக்கொண்டிருக்க கலையும் இலக்கியமுங்கூட ஒரு நாட்டின் வல்லரசுக்கான இலக்கணங்கள் என இயங்குவதாலேயே இன்றளவும் தனித்துவத்துடன் நிற்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் நித்தம் நித்தம் புதுமைகளை விதைத்தவண்ணம் இருக்கிறார்கள். யுகத்தோடு பொருந்தக்கூடிய, யுகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யவல்லது எதுவோ அதைமட்டுமே மனித இனம் பூஜிக்கிறது, அதை அளிப்பவர்களையே கொண்டாடுகிறது. ‘Survival of the fittest’ என்பது நிரந்தர உண்மை. அதன் சூட்சமத்தை மேற்கத்தியர்கள் நன்றாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள் என்பதென் அனுமானம்.

பெருமைகளைப் பற்றி பேசுகிறபோது அதன் சிறுமைகளைப் பற்றியும் பேசத்தான் வேண்டும். பிரான்சு அப்பழுக்கற்ற நாடு அல்ல. 30 ஆண்டுகால பிரான்சு வாழ்க்கை பல ஏமாற்றங்களையும் தந்துள்ளது. அரசுக்குமேல் அதிகாரம் படைத்திருந்த மதத்தை எதிர்த்து சுதந்திரத்தின் மேன்மையை ருசிக்கவைத்த வொல்தேர் பிறந்த மண்ணில்தான் அச்சுதந்திரம் அனைவருக்குமானதல்ல, ஐரோப்பியருக்கு மட்டுமே பொருந்தும் என்று வாதிடக்கூடிய அறிவு ஜீவிகளையும் பார்க்கிறேன். அலுவலங்களில், அன்றாட பயணங்களில், உரிமைகளைக் கேட்டு நிற்கிறபோது குடியுரிமையைக் கடந்து எனது நிறமும், பூர்வீகமும் எனக்கான உரிமையைப் பறிப்பதில் முன்நிற்கின்றன. எனினும் இது அன்றாடப் பிரச்சினைகள் அல்ல ஆடிக்கொருமுறை அம்மாவசைக்கொருமுறை நிகழ்வது. சொந்த நாட்டில் சொந்த மனிதர்களால், ஒரு தமிழன் இன்னொரு தமிழரை அல்லது தமிழச்சியை நிறம், பொருள், சாதி, சமயம், செல்வாக்கு அடிப்படையில் நிராகரிப்பதை ஒப்பிடுகிறபோது இது தேவலாம்போல இருக்கிறது. இங்கே உழைப்பும் திறனும் மதிக்கப்படுகின்றன. இன்றைக்கும் ஏதொவொரு காரணத்தை முன்வைத்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானவர்கள் மேற்கத்திய நாடுகளை தேடி வருகிறார்கள்

உலகத் தினசரிகளில் அமெரிக்கா பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஏதோவொரு காரணத்தால் செய்தியில் பிரான்சு இடம் பெறுகிறது. உலக நாடுகளில் அதிகம் சுற்றுலா பயணிகளைக் ஈர்க்கிற நகரமாக பாரீஸ் இருப்பதைப்போலவே, உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரான்சு அதிபர் அழைப்பும், பாரீஸ் நகரில் கால்பதிப்பதும் கனவாக இருக்கிறது. ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறுப்புநாடாக இருப்பதைபோலவே, உலக நாடுகளின் நலன் கருதி (?) இயங்குகிற அத்தனை அமைப்புகளிலும் (எதிரெதிர் அணிகளிலுங்கூட ) பிரான்சு இடம்பெற்றிருப்பதென்பது ‘புவிசார் அரசியலில்’ இநாட்டுக்குள்ள முக்கியத்துவத்தைத் தெரிவிக்கிறது. உலகமெங்கும் பிரெஞ்சு மொழி பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலத்திற்கு நிகராக அல்லது ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக பரவலாக பேசப்படும், கற்கப்படும் முக்கிய மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று. உலகில் அதிகமக்களால் பேசப்படுகிற மொழியென சொல்லப்படும் மாண்டரின், இந்தி, ஸ்பானிஷ், அரபு மொழிகளைக்காட்டிலும் செல்வாக்குள்ள மொழி. அதுபோல நாம் முழக்கங்களாக மட்டுமே அறிந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் மக்களின் மூச்சுக்காற்றாக இருப்பதும் பிரெஞ்சு சமூகத்தின் வெற்றிக்கு காரணம். பிரான்சுநாட்டின் நிலம், நீர் மலைகள், பூத்துகுலுங்கும் கிராமங்கள், பரந்த வயல்வெளிகள், நகரங்கள், கிராமங்கள், பனிப் பூ சொரியும் குளிர்காலம், பூத்து மணம் பரப்பும் வசந்தம், சிலுசிலுக்கும் காற்று, இதமான வெயில் ரெம்போவின் கவிதைகள், குளோது மொனேயின் ஓவியங்கள், புதுப் புது நுட்பங்களையும் ரசனைகளையும் படைப்பிலக்கியத்தில் கொண்டுவந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், சேனல் 5 பர்ப்யூம், பொர்தோ ஒயின், பிரெஞ்சு பாலாடைக்கட்டிகள், ஏர்பஸ், சேன் நதி, லூவ்ரு, லூர்து அனைத்துக்கும் மேலாக ‘பெண்கள்’ என்று ஒரு மாமாங்கத்திற்கு சொல்ல இருக்கின்றன.

(தொடரும்)

நன்றி: சொல்வனம்

 

பேராசிரியர் க.பஞ்சு விற்கு ‘மேலும்’ இலக்கிய விமர்சகர் விருது.

panchuஇந்த ஆண்டு மேலும் இலக்கிய விமர்சன விருதினை பேராசிரியர் க.பஞ்சுவிற்கு அளித்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். பேராசிரிரை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு செய்தி. மேலும் பலவிருதுகளைப்பெற மனமார வாழ்த்துகிறோம். பேராசிரியர் தமிழவனுக்கும் ‘மேலும்’ இலக்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சிகுறித்த விவரம் கீழ்க்கண்ட அழைப்பிதழில் உள்ளது. நேரில் அழைத்ததுபோலக்கருதி நண்பர்கள் விழாவைச் சிறப்பிக்க வேண்டும். பஞ்சுவைக் கௌரவிப்பது தமிழைக் கௌவுரவிப்பதுபோல.

பணிவுடன்
நா.கிருஷ்ணா, வே சுப.நாயகர், சீனு தமிழ்மணி

Melum

மொழிவது சுகம் ஜூன் 27 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -2:-

உரையாடல் அல்லது அளவலாவல் (Discours)

வெகுசன வழக்கில் Discours என்ற பிரெஞ்சு சொல் ‘மேடைப் பேச்சு’ என்ற பொருளில் இன்றும் பொதுவாக வழங்கப்படுகிறது. செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் ‘Discours என்ற சொல்லுக்கு முக்கியப்பேச்சு என்றே பொதுவில் பிரெஞ்சு மக்கள் பொருள்கொள்கிறார்கள். நவீன இலக்கியம் என்றைக்கு மொழியியலின் பார்வைக்கு உட்பட்டதோ அன்றையதொடக்கம் ‘ Analyse de discours’ அல்லது ‘உரையாடல் ஆய்வு’ இன்றியமையாததொரு பார்வையாக, குறிப்பாக திறனாய்வாளர்களுக்கு இருந்து வருகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியும் தமது படைப்பு Analyse de discours’ தேர்வில் ஜெயிக்கவேண்டுமென நினைத்து படைப்பதில்லை. Discours சொல் தொடக்கக்காலத்தில் ஆங்கில மொழி உலகில் ஒரு பொருளிலும், பிரெஞ்சு மொழி உலகில் ஒரு பொருளிலும், இருந்து வந்தபோதிலும் இன்று படைப்பொன்றை அளக்கும் கருவியாகப் பொதுவில் திறனாய்வாளர்கள் -எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். Analyse de discours புனைவை ஒருபடித்தான பரிசீலனைக்கு உட்படுத்துவதில்லை. மாறாக ஓர் புனைவின் உரையாடலை முன்வைத்து நிகழ்த்தப்படும் வெவ்வேறுவிதமான ஆய்வுகளும் எழுப்பப்படும் விவாதங்களும் அனைத்துமே இதிலடங்கும்.

 

இரண்டு உலகயுத்தங்களின் முடிவில், யுத்தகாலத்தில் நடைபெற்ற செய்தி பரிமாற்றங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் இடம்பிடித்த செய்திகளின் தன்மை, மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய அவற்றின் பிரச்சார உத்திகள் பற்றிய ஓர் ஆய்வினை அலெரிக்க தகவல் மற்றும் கருத்து பரிமாற்ற துறை, இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மேற்கொண்டது. இம்முயற்சி உரையாடல் ஆய்வின் கீழ் (‘Analyse de discours’) வந்தது. 1960களில் கணினித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி இதற்குப் பெரிதும் உதவியது. சொற்கள் சார்ந்த பல்வேறுகோட்பாடுகளை அளவிட தொழில்நுட்ப செயல் முறைகளும் உதவின. இவற்றோடு குறியியலும் இணைந்து கொள்ள மெல்ல மெல்ல Discours குறித்த நுண்மைகள் கவனத்திற்கும் ஆய்வுக்கும் உரியவை ஆயின.

 

பிரெஞ்சுக்காரகள் எதிலும் தங்களுடைய அடையாளத்தை காணவிரும்புகிறவர்கள். ‘A la Française’ (பிரெஞ்சுப் பாணி )எனப் பெருமிதமாக கூறிகொள்பவர்கள்.  அப்படியொரு அடையாளத்தை வலியுறுத்த அறுபதுகளில் ‘Ecole Française d’analyse du discours” என்கிற ஓர் அமைப்பு மிஷெல் பெஷொ(Michel Pêcheux என்பவரின் கீழ் இயங்கிவந்தது. அவ்வமைப்பு அரசியல் உரைகளை மொழியியல் கட்டமைப்பின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தியது.  தனித்ததொரு அடையாளத்தை Discoursக்குத் தந்த மெய்யியல் அறிஞர் மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault).. மனிதர்களின் உரையாடல் அவர்களின் சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறது, என்றார்.

 

மிக்காயெல் பக்தின் (Mikhail Bakhtin) என்ற ரஷய அறிஞருக்கு உரையாடல் பரிமாற்றத்தில், ஒரு புறம் பிரதான கதைசொல்லி இன்னொரு புறம் பிற கதைமாந்தர்கள். இவ்விரு பிரிவினரின் தனித்தனிப் பேச்சு அல்லது இவர்களுக்கிடையேயான பொதுவானப் பேச்சு ‘Discours’ ஆகிறது.

 

Analyse de discours’ இலக்கிய உரையாடலை (discours) மொழியின் செயல்பாடாகக் காண்கிறது. இரு தரப்பினருக்கிடையே நிகழும் கருத்து பரி மாற்றம் உரையாடலில் பங்குகொள்ளும் மனிதர்களின் சமூகம் மற்றும் வாழ்வியல் படிநிலைகள் சார்ந்தது. ஒரு மனிதனின் இயல்பை வார்த்தைகளாக வெளிப்படுத்துகிற இச்செயல் ஒரு சமூக அமைப்பில் அவனுக்குள்ள இடத்தை தீர்மானிக்க உதவும்.

 

ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது

பிரான்சு நாட்டின் தேசிய நூலகங்களுடனான சந்திப்பு இம்முறை லீல் (Lille) நகரில் இருநாட்கள் நடந்தது. இதனை முன்னிட்டு தமக்குக் கவலை அளிப்பதாகக் கூறி பிரெஞ்சு கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்  உண்மையில் நமக்குத்தான் கவலையை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆணடைக்காட்டிலும் புத்த்கவிற்பனையில் அதிகம் பின்னடைவு இல்லையாம் ( 2013 -0,6%: 2014 -07%). எனினும் வெளிவந்த புத்தகங்களின் தலைப்புகள் எண்ணிக்கை 80255.

 

51% பிரெஞ்சு மக்கள் வருடத்திற்கு ஒரு புதிய புத்தகமும், 10% பிரெஞ்சு மக்கள் வருடத்திற்கு ஒரு பழைய புத்தகமும், 3% மக்கள் வருடத்திற்கு ஒரு டிஜிட்டல் புத்தகமும் வாங்குவதாக அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது. கூடுதலாக ஒரு கொசுறு செய்தி. 2014ல் வெளிவந்த மொத்த நாவல்களின் எண்ணிக்கை 547 இதில் மொழிபெயர்ப்பு நாவல்கள் 195, பிரெஞ்சு நாவல்கள் 352. இந்தியில் கூட இவ்வளவு மொழிபெயர்ப்புகளும், சொந்த மொழி நாவல்களும் வந்திருக்குமா என்பது சந்தேகமாக இருகிகிறது.

———-


‘.

மொழிவது சுகம் ஜூன் 20 2015

அ. இலக்கிய சொல்லாடல்கள்

1. அபத்தம்

அபத்தம் அல்லது l’absurde என்ற பிரெஞ்சு சொல்லை பிரெஞ்சு படைப்பாளியும் சிந்தனாவாதியுமான அல்பெர் கமுய் தன்னுடைய The Myth of Sisyphus (1942) என்ற நூலில் மெய்யியல் சிந்தனையாக வைத்திருந்தார். இச்சிந்தனை உலகின் நிச்சயமின்மையைக் கவனத்திற்கொண்டு உருவானது. அபத்தமும், நிச்சயமின்மையும் ‘மரத்தை மறைத்தது மாமத யானை’ குணத்தைக்கொண்ட சிந்தனைகள். ழான் போல் சார்த்த்ருவை பொறுத்தவரை தம்மைப் பெரிதும் ‘நிச்சயமின்மை’ சிந்தனையோடு (Being and Nothingness(1943) இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். எனினும் ‘அபத்தம்’ என்ற சொல்லை முன்பே சார்த்த்ருவும் அவருடைய இலக்கிய பங்காளி ‘அல்பெர் கமுய்’ யும் அவரவர் படைப்புகளில் கையாண்டிருக்கிரார்கள். சார்த்த்ரு எழுதிய ‘Nausea’ (1938) நாவலிலும், அல்பெர் கமுய் எழுதிய ‘The Stranger'(1942) நாவலிலும் ‘அபத்தம்’ என்ற சொல்லாடல் வருகிறது. ‘அல்பெர் கமுய்’ யைப் பொறுத்தவரை ‘உலக நடப்போடு ஒட்டி ஒழுகாதது, நம்பிக்கைகளை ஒட்டுமொத்தமாக மறுத்தல், விளையும் கசப்புணர்வு அனைத்தும் ‘அபத்தம்’. இவர்கள் இருவரின் நாவல்களில் இடம்பெறும் கதைமாந்தர்களை மேற்குலகில் வேறுசில படைப்பாளிகளின் எழுத்திலும் காணமுடிகிறதென்றாலும், பரிவை நிராகரிக்கிற விரக்தி மனநிலை; சமூகத்துடன் ஒட்டுதலின்மை அதன் அபத்தங்களை அடையாளப்படுத்தியும், அவற்றுக்கு மாற்றாக உலக இயல்பிற்கு பொருந்தாத (தன்னிலிருந்தே தன்னைப் பகிஷ்கரித்துக்கொள்கிற) சமயம், வரலாறு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு சிந்தனையை இட்டு நிரப்புதல் என்கிற புதிய தேடலுடன் அபத்தம் கையாளப்படுவது இவர்களிடம் மட்டுமே நிகழ்கிறது.

சார்த்ருவின் ‘Nausea’ கதை நாயகன் Antoin Roquentin ஓர் அதிசயமான உயிரி, கடந்த காலத்திலிருந்து பறிக்கப்பட்டவன், இருத்தலில் மட்டுமே விழிக்க நேர்ந்தவன், இழந்த காலத்தை திரும்பவும் சந்திக்க வாய்ப்புகளற்றவன், இனி அவனுக்கும் அவனைக் கட்டமைத்த சாரத்திற்கும் (essence) எவ்வித பந்தமுமில்லை, எல்லாம் முடிந்தது. அல்பெர் கமுய் படைக்கும் மாந்தர்கள் எவ்வித கடப்பாடுமின்றி இருத்தலை தொடர்பவர்கள்; தற்காப்பற்ற காரியங்களில் இறங்குபவர்கள்; ஆதியந்தமில்லாத, கடவுளைக் காணமுடியாத ஓர் உலகில் துணிந்து காரியம் ஆற்றக்கூடியவ்ர்கள். அபத்தம் என்பதே அர்த்தத்தை, பொருளை, நியாயத்தைக் கேள்விக்குட்படுத்துவது. ஆக மொழிக்குறித்த நமது பார்வையையே புரட்டிப்போடுகிறது. சொல்லப்போனால் அபத்தம் என்பது “ஏதோ ஒன்று” அர்த்தத்தை இழந்து சக்கையாகிப்போவதால் உருவாவது அல்ல, அந்த ஏதோ ஒன்றை தேடுகிறபோது அதனைக் கண்டடைய முடியாமற்போகிற நமது இயலாமையால் உருவாவது.

 

ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது?

வால்ஸ் கேட்:

பிரான்சு நாட்டில் நடப்பது அதிபர் ஆட்சி, இரண்டு கட்டகளாக நடக்கும் அதிபர் தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற்வர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஐந்தாண்டுக்கு ஒரு முறை (அண்மைக்காலம் வரை ஏழு ஆண்டுகளாக இருந்தது) , அதிபரை நேரடி தேர்வுமுறையில் முடிவு செய்கிறார்கள். சோஷலிஸ்டு கட்சியைச் சேர்ந்த பிரான்சுவா ஹொலாந்து (François Hollande) தற்போதைய அதிபர். இவருடைய கட்சியில் அதிபராக வருவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றிருந்த நபர் பாலியல் வழக்கில் சிக்கிக்கொள்ள அதிர்ஷ்ட்டம் இவரைத் தேடிவந்தது. கட்சியின் உட்கட்டதேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக எதிரெதிராக நின்றவர்கள்தான் ஹொலாந்தும், மனுவல் வால்ஸ¤ம்(Manuel Valls): முன்னவர் அதிபர், பின்னவர் பிரதமர்.

ஹொலாந்து பெரும்பான்மை மக்களின் வாக்கின்படி 2012ல் அதிபரானார். இவர் மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. பிற நாடுகளில் நடப்பதைப்போலவே இவருக்கு முன்பு அதிபராகவிருந்த நிக்கோலா சர்க்கோசியின் எதிர்ப்புவாக்குகள் ஹொலாந்துவை அதிபராகத் தேர்வு செய்ய காரணமாயின. இவரும் பிற அரசியல்வாதிகளைப் போலவே வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். அதிபர் ஆட்சி வழக்கத்தின்படி தமது கொள்கைகளை (?) நிறைவேற்ற பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் அணியிலிருந்து தமக்கிசைவான ஒருவரை பிரதமராக அதிபர் தேர்ந்தெடுப்பார். பிரதமர் தமது அமைச்சரவை சகாக்களை, அதிபரின் ஒப்புதலுடன் தேர்வு செய்வார். அதன்படி ஹொலாந்து அதிபர் தேர்தலில் வென்றதும் தனது கட்சியைச்சேர்ந்த ழான் ழாக் அய்ரோ (Jean-Marc Ayrault) என்பவரை பிரதமர் ஆக்கினார். 2014 மார்ச்வரை வண்டி ஓடியது. மக்களிடத்தில் அதிருப்தி பெருகியது சமாளிக்க அய்ரோவை நீக்கிவிட்டு, அப்போதைய உள் துறை அமைச்சர் மனுவல் வால்ஸை பிரதமராக்கினார்.

தற்போதையை கணிப்பின் படி பிரெஞ்சு மக்களுக்கு அதிபர் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. நாட்டின் எந்தவொரு அதிபரும் இதுநாள்வரை இப்படியொரு நம்பிக்கை இழப்பை எதிர்கொள்ளவில்லையென பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சோஷலிஸ்டுகளுக்கு ஆதரவாக நிற்கிற இடதுசாரிகள்கூட ஹொலாந்தும் அவரது வழிகாட்டுதலில் நடக்கிற பிரதமர் ‘வால்சு’வினுடைய அமைச்சும் இடதுசாரிகொள்கைகளை கைவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர் . ஆளும் கட்சியினரின் ஒரு பிரிவினரும் (இதில் முன்னாள் அமைச்சர்களும் அடக்கம்) இவர்களின் நடவடிக்கையை எதிர்ப்பதுதான் அதிபருக்குக் கூடுதல் தலைவலி. இந்நிலையில் தான் ‘வால்ஸ் கேட்’ பிரச்சினை கடந்த இரண்டுவாரங்களாக பிரெஞ்சு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டு அடங்கியது.

நான்காண்டுகளுக்கொருமுறை நடக்கும் ஐரோப்பிய காற்பந்தாட்டக் கோப்பைக்கான போட்டி இம்முறை 2016 ம் ஆண்டு பிரான்சு நாட்டில் நடக்க உள்ளது இது சம்பந்தமாக பேச பிரதமர் வால்ஸ் ஐரோப்பிய நாடுகளின் காற்பந்தாட்ட அமைப்பின் (UEFA) தலைவரைக்காண (ஜூன் மாதம் 6ந்தேதி சனிக்கிழமை) பெர்லின் சென்றார். இதற்கு அரசாங்கத்தின் விமானத்தை உபயோகிக்க வேண்டியிருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இதில் எவ்விதக் குற்றமும் இல்லை என்பதுபோலத்தோன்றும். ஆனால் எதிர்கட்சிகளும், பத்திரிகையாளர்களில் பெரும்பாலோரும், இடதுசாரிகளில் சிலர் உட்பட பிரதமரின் இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணமிருக்கிறது.

முதலாவது காரணம் இதற்காக வால்ஸ் பெர்லின் செல்லவேண்டியதில்லை. பாரீஸிலேயே பிரதமர் நினைத்திருந்தால் UEFA தலைவரை சந்தித்திருக்க முடியும். UEFA தலைவர் மிஷெல் பிளாட்டினி பிரான்சு நாட்டின் முன்னாள் காற்பந்தாட்ட வீரர், அழைத்திருந்தால் பிரதமர் அலுவலகத்திற்கே வந்து அவரைச் சந்தித்திருப்பார். அன்றைய தினம் ஐரோப்பிய லீக் சாம்பியன் பெர்லினில் நடந்தததும் அதில் மோதிய இரு அணிகளில் ஒன்று ஸ்பெயின் நாட்டைசேர்ந்த பார்சலோனா என்பதும் ( பிரான்சு பிரதமர் மனுவல் வால்ஸ் பிறப்பால் ஸ்பெயின் நாட்டவர், குறிப்பாக பார்சலோனாவில் பிறந்தவர்) பார்சலோனா காற்பந்தாட்ட சங்கத்தின் பரம ரசிகர் என்பதும் கூடுதல் செய்திகள். பிரதமர் UEFA தலைவரைக் காணத்தான் சென்றார், ஐரோப்பிய லீக் இறுதிப்போட்டியைக் காண நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்தது என்பதை எவரும் நம்பத் தயாரில்லை, ஏனெனில் பிதமருடன் அவருடைய பிள்ளைகளும் ( இந்தியாவில் அதிபர், பிரதமருடன் அவருடன் தூரத்து உறவுகளெல்லாங்கூட அரசாங்க செலவில் பயணம் மேற்கொள்வது தப்பே இல்லை) லீக் போட்டியைக் காணச்சென்றிருக்கிறார்கள். பிரத்மர் வால்ஸ் ஏதேதோ காரணத்தைக் கூறி சமாளித்துப் பார்த்தார், எதிரான விமசனங்கள் குறைந்தபாடில்லை. இதுவரை காணாதவகையில் இடதுசாரி அரசின் மீது மக்களின் நம்பிக்கை சரிந்திருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்க வேறுவழியின்றி தம் பிள்ளைகளின் பயணச்செலவை (தன்னுடையதை அல்ல) அரசாங்க கஜானாவிற்குத் திருப்பி அளிப்பதாகக் கூறியிருக்கிறார். ஒருவாரத்திற்குப்பிறகு அவரது வீம்பைக் குறைத்துக்கொண்டிருந்தாலும் சோஷலிஸ்டுகள் அடுத்தமுறை ஆட்சியை பிடிப்பது கடினம்தான் என்கிறார்கள்.

——————–