Category Archives: Uncategorized

படித்ததும் சுவைத்ததும்- 8: பாவண்ணன் ஓர் எழுத்துப்போராளி

பாவண்ணன் ஒர் எழுத்துப்போராளி

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்: சிறுகதைகள் கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்புலகின் அவ்வளவு வடிவங்களிலும் ஆழமான ஞானம்கொண்ட மனிதர். தமிழ்ப்படைப்புலகில் பாவண்ணனுக்கென்று தனித்த இடமுண்டு. அந்த இடத்தை இன்று நேற்றல்ல என்றைக்கு எழுத்துலகில் அவர் காலடியெடுத்துவைத்தாரோ அன்று தொடக்கம் கட்டிக்காத்து வந்திருக்கவேண்டுமென்பது என்பதென் அனுமானம். ஆனால் அதனைக் தக்கவைத்ததில் எழுத்தாளர் பாவண்ணனைக் காட்டிலும்;  நல்ல குடும்பத் தலைவராக, அரசு ஊழியராக, சமூகத்தை உளமார நேசிப்பவராக இருக்கிற பாவண்ணன் என்கிற மனிதருக்குப் பெரும் பங்கிருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கிய துறையில் சொந்த வாழ்க்கையில் ஒரு நேர்க்கோட்டைக் கிழித்து அதனின்று ஓர் மி.மீட்டர் கூட பிறழாமல் நடப்பதைக் கொள்கையாகவே ஏற்றுக்கொண்ட மனிதர். அவரைப்போலவே அவரது இலக்கிய ஆளுமையும் எளிமையானது, பகட்டிலிருந்து விலகி நிற்பது; எதார்த்த சமூகத்தை, அதன் பங்காளிகளைக் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபங்களை, அவற்றின் ஈரத்துடன், கவிச்சி போகாமல் பொத்தி வைத்து படைப்புதோறும் மணக்க மணக்கச் சொல்லத் தெரிந்தவர். எழுத்துவேறு வாழ்க்கைவேறு என்றில்லாமல் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிற படைப்பிலக்கியவாதிகள் இங்கு அபூர்வம். பாவண்ணன் அத்தகைய குறிஞ்சிப்பூக்களிலொருவர். தமிழ்ச்சூழலைச் புரிந்துகொண்டு எந்தக் குழுவினரையும் சார்ந்திராமல் படைப்புண்டு தானுண்டு என ஒதுங்கி இருக்கத் தெரிந்த சாமர்த்திய சாலியுங்கூட.

பாவண்ணனைக் கொண்டாட இரண்டு காரணங்கள் எனக்கிருக்கின்றன. முதலாவதாக தமிழில் சிறுகதையென்றதும் மேற்குலகப் படைப்புகளுக்கு இணையாக எனக்கு நினைவுக்குவருகிற ஒரு சில எழுத்தாளர்களில் பாவண்ணனும் ஒருவர். இவர்கள் கதைகள் மானுடம்சார்ந்த பிரச்சினைகளை, பொறுப்புள்ள மனித மனத்தின் கவலைகளைக்கொண்டு  அளவிடுபவையாக இருக்கின்றன. பாவண்ணனைப்பற்றி எழுத விரும்பியதற்கு இரண்டாவது காரணம், அவர் என்னைப்போலவே தமிழ்நாட்டைச்சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்துக்காரர்,  வாழ்க்கையின் பெரும்பரப்பை புதுச்சேரியோடு பிணைத்துக் கொண்டவர்.

நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள் என சாதனைகளைக் குவித்திருந்தபோதிலும் ஒளிவட்டத்தைத் தவிர்த்து அமைதிதவழும் முகமும் வசீகரமான குறுநகையுமாக அவரை முதன்முறை நான் அவரைக் கண்டது மறக்கவியலாது. எவ்வித பந்தாவுமின்றி, சினேகிதப் பாங்குடன் கைகுலுக்க முன்வந்தபோது உயர்ந்த அவரது மனிதம் இன்றுவரை குறையின்றி மனதில் நிலைத்திருக்கிறது.

பாவண்ணன் கதைகள் குறிப்பாக சிறுகதைகள்:

நவீன இலக்கியத்தில் இன்றைய தேதியில் சிறுகதைகளை அதிகம் காண நேர்வதில்லை. இன்று வெளிவரும் புனைகதை வடிவங்களில் சிறுகதை தொகுப்புகள் எத்தனை, நாவல்கள் எத்தனை என்பதை ஒப்பிட்டுபார்த்து சிறுகதை எழுத்தாளர்கள் அருகிவருவதைத் தெரிந்துகொள்ளலாம். சிறுகதைக்குரிய பண்புகள் அனைத்தையும் நாவல்கள் எடுத்துக்கொண்டுவிட்டன என்பதும் ஒருகாரணம். ஒரு நல்ல சிறுகதை என்பது வாசித்துமுடித்ததும் நிறைவைத் தரவேண்டும், வாசகரிடத்தில் ஆசிரியர் சொல்லவந்தது முள்போல தைத்திருக்க வேண்டும், ஏன் அப்படி எழுதினார் என்ற கேள்வியை எழுப்பவேண்டும். பாவண்ணன் சிறுகதைளில் பெரும்பாலானவற்றிடம் இப்பண்பினைக் காண்கிறோம். விவரிப்புகளைக் குறைத்து, சிக்கனமாக வார்த்தைகளைக் கையாண்டு எதார்ந்த உலகிலிருந்து அதிகம் விலாமல் கதை சொல்லும் பாணி அவருடையது. அவரது சிறுகதைகளில் சிலவற்றை இக்கட்டுரைக்காகத் திரும்பவும் வாசித்த இத்தருணத்திலும் மனதில் நிற்பவையாக இருப்பவை.  வண்ண நிலவன், வண்ணதாசன் போன்ற தமிழ்ச்சிறுகதை ஓவியர்கள் தீட்டும் சித்திரங்களுக்கு இணையானவை அவை.

சூறை

வருவாயற்றுப்போன இரயில்வே ஸ்டேஷனை, நிர்வாகம் மூட நினைக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டராக பொறுப்பேறிருக்கும் கதை சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஸ்டேஷனில் பணியாற்றியவர். “அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸ்டேஷன் கட்டிடம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ஊரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸ் ஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன”  என்கிற ஒப்பீட்டுடன் கதை தொடங்குகிறது. செல்லரித்த பழைய நிழற்படத்தையொத்து நிற்கிற கட்டிடமும் பிறவும் ஊர்மக்களால் எப்படி கபளீகரம் செய்யப்படுகிறது என்பதுதான் கதை.  விட்டகுறை தொட்டகுறையென்று ஸ்டேஷனிடத்தில் தீராத காதல்கொண்டிருக்கும் கதைசொல்லிக்கு அந்த ஸ்டேஷனுக்கு அப்படியொரு தண்டனையை (நிரந்தரமாக மூடும்) தர மனம் ஒப்புவதில்லை. மூடப்படாலிருக்க நியாயங்களைத் தேடுகிறார். அந்நியாயங்களைப் பட்டியலிட்டு உயரதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பவும் செய்கிறார்.  ஆனால் இரயில்வே நிர்வாகத்திற்கு இவர் முன்வைக்கும் நியாயங்களைக் காட்டிலும், அந்த ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கு தரும் உண்மை பெரியது. அதனைக்கூட கதைசொல்லியால் சகித்துக்கொள்ள முடிகிறது  ஆனால் கண்னெதிரே ஸ்டேஷன் கொள்ளை போவதை வேடிக்கைப் பார்ப்பதன்றி வேறெதுவும் செய்ய இயலாத தனது கையாலாகதத்தனத்தை  சகிக்க முடிவதில்லை.  ஸ்டேஷன் மாஸ்ட்டரின் குமுறல் தீயில் எண்ணை வார்ப்பதுபோல, ஸ்டேஷனில் வேலைசெய்யும் ஊழியர்களின் அவலக்குரல்:

“அம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிர்ந்து போனார்கள் அவர்கள்.

என்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் ? என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செய்ய இயலாத வெற்றுக்கோபம்.

போவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால ? என்றான் ஒருவன்.

சேங்க்ஷன் போஸ்ட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.

அப்ப எங்க கதி ?

போய்த்தான் ஆவணும்”

இதற்கும் கூடுதலாக பிரச்சினையின் ஆழத்தை, ஏமாற்றத்தை வாசகர்களிடம் கொண்டு செல்லமுடியுமா என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டமனித மனங்களில் இவரும் பயணித்து  வெகு உருக்கமாகத் தீட்டியிருக்கிறார். அதுபோலவே தமது நினைவுகளில் தேங்கிக்கிடக்கும் தடயங்கள் சிறுகச் சிறுக தம் கண்னெதிரிலேயே அழிக்கப்படுவதை கண்டு குமுறும் ஸ்டேஷன் மாஸ்டரின் விரக்தியும், ஏமாற்றமும் மிக அழகாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது:.

“சரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும் சாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.

சாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது அது. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது”.

என்கிற விவரக் குறிப்பு ஸ்டேஷனின் மரண சாசனம், கைவிடப்பட்ட நோயாளியின் இறுதி நிமிடங்களை நினைவூட்டும் காட்சி. அவரது சிறுகதைகளில் “சூறை” எனக்கு மிகவும் பிடித்ததொரு சிறுகதை.

பிரந்தாவனம்

இக்கதையும் அவரது ஏனையக் கதைகளைப்போலவே நடுத்தரக் குடும்பத்தை மையமாகக்கொண்டது. பொம்மைக்கு உருகும் ஒரு பெண்மணி, எதற்கும் கணக்குப் பார்க்கும் ஒரு கணவன், கணக்கைப் புரிந்துகொள்ள காட்டும் அக்கறையில் நூற்றில் ஒருபங்கு அக்கறையைக்கூட மனைவியின் உணர்ச்சிகளிடம் காட்டாதவன். கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு அவர்கள் ஆதரவில் கல்வியைத் தொடருகிற கதைசொல்லியான ஒரு சிறுவன். இவர்கள் மூவரும்தான் கதை மாந்தர்கள். சிறுவனும் அவன் அண்ணியென அன்போடு அழைக்கிற பெண்மணியும் ஒரு நாள் கடைக்குப் போகிறார்கள். போகிற நாளில் வண்டியில் பொம்மைவைத்து விற்கப்படுகிற கடையொன்றை பார்க்க நேரிடுகிறது.  அவ்வண்டியிலிருந்த கிருஷ்ணன் பொம்மை அவ்பெண்மணியை ஈர்க்கிறது: “தலையில் மயில் இறகோடு சிரித்துக்கொண்டு இருந்தது குழந்தை கண்ணன் பொம்மை. அச்சு அசலான கண்களைப் போல பொம்மைக் கண்களில் ஈரம் ததும்பி இருந்தன. இதோ இதோ என்று விரலைப் பற்றிக்கொண்டு கூடவே ஓடிவந்துவிடும் குழந்தையைப் போல இருந்தது. பொம்மையின் அழகைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணியின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது” எனக் கதையாசிரியர் எழுதுகிறபோது  கதையில் வரும் அண்ணிக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்குங்கூட பொம்மையிடத்தில் காதல் வருவது இயல்பு. பொம்மையை வாங்கத்துடிக்கும் அப்பெண்மணியின் ஆசைகளுக்குப்பின்னே பல தருக்க நியாயங்கள் இருக்கின்றன. பொம்மையை வாங்கி வீட்டிற்குக்கொண்டுவந்து அவ்வப்போது கொஞ்சி மகிழ நினைக்கிறாள். பேரம்பேசி பொம்மையை வாங்குவதில் பிரச்சினையில்லை. ஆனால் செலவுக்கணக்கில் கறாராக இருக்கும் கணவனை எப்படி சமாளிப்பது? பொம்மையை வாங்க பணத்திற்கு எங்கே போவது? வீட்டுசெலவில் அதை மூடிமறைக்கலாம் என்றாலும், அதையும் கண்ணில் விளக்கெண்ணைகொள்டு கண்டுபிடித்து ஏன் எதற்கென கேள்விகேட்கும் கணவனுக்கு என்ன பதில் சொல்வது? என்கிற அறிவின் கேள்விகளையெல்லாம் உணர்ச்சி அலட்சியம்செய்து, கதைசொல்லியின் யோசனையின் தெம்பில் பொம்மையை வாங்கிவிடுகிறாள். பொம்மைக்கான செலவை அழுக்கு சோப்பு வாங்கியதாகக் கணக்கும் காட்டுகிறாள். கணவனின் கழுகுக் கண்கள் வீட்டிற்கு ‘எட்டு’ரூபாய் செலவில் வந்திருக்கும் பொம்மையை அறியாமலேயே அழுக்கு சோப்பிற்கு அந்த மாதம் கூடுதலாகச் செலவிட்ட தொகை அநாவசியம் என கண்டிக்கிறது. குருட்டு தைரியத்தில் வாங்கப்பட்ட பொம்மையை அலமாரியில் ஒளித்து வைத்து வேண்டுமென்கிறபோது, கணவனுக்குத் தெரியாமல் எடுத்துப்பார்த்து மகிழலாம் என்பதுதான் பெண்மணியின் திட்டம். பொம்மைமீது அவள் செலுத்தும் அன்பும், எந்த நேரத்திலும் குட்டுவெளிப்படலாம் என்ற நிலையில் அவள் மனம் படும் பாடும், சிறுவனின் இக்கட்டான நிலமையும் பாவண்ணன் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதைப் பறைசாற்றும் படிமமாக கதைச் சொல்லப்படுள்ளது.

‘முள்’

‘முள்’ சிறுகதையும் பாவண்ணன் கதைகளில் மிக முக்கியமானது. பொதுவாக பாவண்ணன் தன்மை கதை சொல்லலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறார். இக்கதையும் அதற்குத் தப்பவில்லை. கதை சொல்லியான இளைஞன் தன்னிலும் மூத்தவயதுகொண்ட சகஊழியரை அண்ணன் என அ¨ழைத்து அவருடையக் குடும்பத்தோடு நெருங்கிப்பழகுகிறான். அந்த வீட்டுப் பெண்மணியை அண்ணி யெனவும், அவ்வீட்டுப் பிள்ளைகள் இவனை சித்தப்பா என்று அழைத்தும் அன்யோன்யமாகவே பழகுகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தவீட்டிற்குச் சென்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறான். அந்தச் சந்தோஷத்தை குலைப்பதுபோல, ஊழியரின் சொந்தத் தம்பி தனது மனைவி, குழந்தையுடன் வெளிநா¡ட்டிலிருந்து வருகிறான்.  சொந்தத் தம்பி வந்திருக்கிற நிலையில், இவன் யார்? அவ்வீட்டில் அவனுக்குரிய இடம் எது? என்ற கேள்விகள் எழுகின்றன. இப்ப்டியொரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு தமிழில் கதை எழுதுகிறவர்கள் அபூர்வம். இப்படியொரு கதைக் கருவை கையாண்டிருக்கிறாரே என்பதற்காக மட்டும் பாவண்ணைப் பாராட்டவில்லை. அப்பிரச்சினையை மையமாக வைத்து கதைசொல்லியின் அண்ணனாக இருக்கிற சக ஊழியர், அவர் மனைவி, வீட்டுப் பிள்ளைகள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பி மனைவி இப்படி வெவ்வேறு மனிதர்களின் வினைகளையும் எதிர்வினைகளையும் கொண்டு எதார்த்த உலகை காட்சிப்படுத்தியிருப்பதற்காகவும் பாராட்ட வேண்டியிருக்கிறது.

பாவண்ணைன் படைப்பு மாந்தர்கள்

இவர் படைப்பில் இடம்பெறும் மனிதர்கள் மேல்தட்டுமக்களா, மெத்த படித்த வர்க்கமா என்றால் இல்லை. பரம ஏழைகளா என்றால் இல்லை. ஆனால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்கள், ஆலைத் தொழிலாளிகளாக இருப்பார்கள். வாழ்வை அதன் போக்கிலே அனுசரித்துபோகிற வெகுசன கூட்டத்தின் பிரதிநிதிகள், அலங்காரமற்ற மனிதர்கள். கள்ளங்கபடமின்றி உரையாடத் தெரிந்தவர்கள். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நகரங்களில் அல்லது அதையொட்டிய பகுதிகளில்  காண்கிற வெள்ளந்தியான மனிதர்கள்.

” ‘காலையில மொடக்கத்தான் கீரை பறிச்சிட்டு வந்து குடு’னு ராத்திரி கேட்டாரு. வாக்கிங் போனப்ப ஏரிப் பக்கத்துலேர்ந்து பறிச்சியாந்தேன். குடுக்கறதுக்காக வந்து எழுப்புனா, கொஞ்சம்கூட அசைவே இல்லடா. தொட்டா ஐஸ் கட்டியாட்டம் சில்லுனு இருந்திச்சி. ஓடிப் போயி டாக்டரக் கூட்டியாந்து காட்டுனேன். பாத்துட்டு ‘ராத்திரியே உயிர் பிரிஞ்சிடிச்சி’னு சொன்னாரு” “கடேசியா ஒரு தடவ மூஞ்சியப் பார்த்துக்குறவங்க பாத்துக்குங்க” –  (சுவரொட்டி )

நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்று குத்தலாகப் பதில் சொன்னார் சித்தப்பா. “நாய குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும், அது வாலக் கொழச்சிக்கினு போற எடத்துக்குத்தான் போவுமாம். பணத்த கண்ணால பார்த்ததும் மாணிக்கம் பயலுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும். தண்ணியடிச்சிட்டு எங்கனாச்சும் ரோட்டுல உழுந்து கெடப்பான்.’ -( தாத்தா வைத்தியம்)

“இன்னாடா சங்கமாங்கி ஆடுன்னா ஆடறதுக்கு நீ வச்ச ஆளாடா அவுங்க” என்று அவள் குரல் உயர்கிறது. லுங்கிக்காரன் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. “மார்ல கைவச்சிப் பேசற அளவுக்கு ஆயிடுச்சாஸ என் சாண்டா குடிச்சவனே, போடா போய் ஒங்காத்தா மார்ல கைவச்சி ஆடச் சொல்லுடா இல்லன்னா ஒங்கக்கா மார்ல கைவச்சி ஆடச் சொல்லு” என்று கைநீட்டிச் சொல்கிறாள். “என்னமோ ரெண்டுங்கெட்டானுங்க நாலு ஆட்டம் அடி ரெண்டு காசு சம்பாரிக்க வந்தா திமிராடா காட்டற திமிரு” என்கிறாள். ( வக்கிரம்)

இப்படி உரையாடலில் அக்காலத்தில் தென் ஆற்காடு, வட ஆற்காடு என அழைக்கப்பட்ட பிரதேசங்களில் ( எனக்கு இன்னும் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலையென  நீளும் பட்டியலில் அத்தனைப் பிடித்தமில்லை) காணும் வட்டார வழக்குகள், கதையில் வரும் பெயர்கள் உட்பட (உ.ம். ‘மண்ணாகட்டி’)  எனக்குப் பிடித்தமானவை.

மேற்குலகில் திறனாய்வாளகள் ஒரு படைப்பாளியை அவன் படைத்த படைப்பு, படைப்பில் இடம்பெறும் மாந்தர்கள், கதை நடைபெறும் தளம், கதைமாந்தர்களின் உரையாடல், கதைசொல்லல்  ஆகியவற்றை ‘Being there’  என்ற சொல்லுடன் இணைத்துப் பார்ப்பார்கள். அச்சொல்கொண்டே அப்படைப்பாளியை மதிப்பிடவும் செய்வார்கள். பாவண்ணனும் தனது படைப்பிலக்கியத்தில் வடிவம் எதுவாயினும் ‘Being there’ ஆக உருமாற்றம் பெறுகிறார். கதையென்றால் கதைசொல்லியாக கதைமாந்தராக, கதைக்களனாக அதற்குள் அவரே எங்கும் நீக்கமற நிறைந்துவிடுகிறார், கட்டுரைகளிலும் இதுதான் நடக்கிறது. அதிகம் தன்னிலையில் சொல்லப்படுவது காரணமாக இருக்கலாம், கதைமாந்தர்களைக் கதை மாந்தர்களாகப் பார்க்க முடிவதில்லை. பாத்திரங்களைக் கடந்து ஆசிரியர் முன்வந்து நிற்பது ஒரு குறை. இருந்தபோதிலும் கிராமப்பின்புலத்திலிருந்து வந்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் தெரிந்த மனிதர்களாக, இதற்கு முன்பு எங்கோ பார்த்ததுபோன்ற (déjà vu) தோற்றத்தை அவருடைய படைப்பு மாந்தர்கள் தருவது சிறப்பு. அடுத்ததாக அவரது படைப்புகளில் காணும் உயர்பண்பு: ‘கலை மக்களுக்காக’ என்ற நம்பிக்கையில் எழுதுகோலை கையில் எடுத்திருப்பது. வடிவங்கள் எதுவாயினும் பாவண்ணன் எழுத்துக்கள் அல்லது அவரது படைப்புகள் கருவாக எடுத்துக்கொள்கின்ற பிரச்சினைகள் தனிமனிதனைக்கடந்து பொது நியாயத்தின்பாற்பட்டவையாக இருப்பது அவற்றின் தனித்துவம்.

பாவண்ணன் ஒர் எழுத்துப் போராளி

போராளி என்பவன் யார்? வாய் மூடி கிடப்பவனல்ல; ஆமாம் போடுபவனல்ல; அநீதிக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்பவனல்ல; தனக்காகப் போராடுபவனல்ல. வேறு யார், அவர்கள் எப்படி இருப்பார்கள்?  அவர்கள் எழுத்தாளர்களெனில்  பா.ஜெயப்பிரகாசம், பாவண்ணன் போல இருப்பார்கள் சத்தமின்றி இயங்குவார்கள். சமூகத்திற்குத் தீங்கு என்றால் ஆயுதமின்றி, ஆர்பாட்டமின்றி அமைதியாகப் புரட்சியில் இறங்குவார்கள். இருவருமே பார்க்க சாதுவானவர்கள், ஆனால் எழுத்தென்றுவந்துவிட்டால் அவர்கள் எடுக்கிற விசுவரூபத்திற்குமுன்னால் அநீதிகள் சிறுத்துபோகும். வாடா போடா என எதிரியுடன் அடிதடியில் இறங்கும் இரகமல்ல, அன்பாய்த் தோளைத்தொட்டு திருத்த விரும்புபவர்கள், நவீன படைப்பிலக்கிய இலக்கணத்திற்கு மாறாக நீதியை இலைமறைகாயாக வலியுறுத்த முனைவர்கள்.

பாவண்ணன் எழுத்துக்களில் சமூக அக்கறையைத் தவிர வேறு நோக்கங்களில்லை.  படைப்பிலக்கியத்தின் வடிவம் எதுவாயினும் தமது மேதமையை உறுதிபடுத்தும் எண்ணங்களும் கிடையா. கண்களை அகல விரித்து வாசகர்கள் பிரம்மிக்கவேண்டும், ரசிக மனங்களைக் கிறங்கச் செய்யவேண்டும் என்பதுபோன்ற ஆசைகளும் இல்லை. மாறாக பாலீதீன் பைகள் கூடாது, மணற்கொள்ளைத் தடுக்கப்படவேண்டும், குடியிலிருந்து அடித்தட்டு மக்கள் விடுபடவேண்டும், திருநங்கைகளை சிறுமை படுத்தும் மனிதர்களை கண்டிக்க வேண்டும், முதியவர்களை அரவணைக்க வேண்டும், பூமியெங்கும் மரங்களை நடவேண்டும்,  காடுகளைப் பராமரிக்கவேண்டும் என்பது உயரிய குறிக்கோள்கள் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கலை மக்களுக்கானதென்கிற சிந்தனை அவசியம். அந்த ஒரு காரணத்திற்காகவே பாவண்ணனைக் கூடுதலாக நேசிக்கலாம், அவரை எழுத்துப்போராளியென அழைக்கவும் அதுவே காரணம்.

 

———————————————————————————-

 

பெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி

நாவல்கலையினூடாக  வகைபிரித்தல்

காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றையும் தனது விருப்பம் போல் உருவாக்கி விரியும் நாவல் இலக்கியப்பரப்பிற்கு எல்லைகள் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அது யாருடைய வாழ்க்கை வரலாற்றையும் விரிவாகச் சொல்லும் நோக்கம் கொண்ட இலக்கியவகையும் இல்லை. இது ஒன்றைத்தவிர நாவலென்னும் இலக்கியக்கலைக்கு வரையறை எதையும் சொல்லிவிடமுடியும் எனத் தோன்றவில்லை.

எழுதப்பட்ட ஒரு நாவலின் நிலவியல் பின்னணிகளையும் மொழிக்கூறுகளையும் அறியும்போது வட்டார நாவல் என வகை பிரிக்கிறோம். அதேபோல் காலப் பின்னணியைக் கணிக்கும்போது வரலாற்று நாவலாக மாறும் வாய்ப்பு உண்டு. தமிழில் எழுதப்பட்டு வாசிக்கப்பட்ட வரலாற்று நாவல்கள் பெரும்பாலும் வரலாற்றாசிரியர்களால் அறியப்பட்டு, உறுதிசெய்யப்பட்ட காலத்தைப் பின்னணியாகக் கொண்டவை, அறியப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நகரங்களில் நடந்ததாகவே அவற்றின் கதைகளும் சொல்லப்படுகின்றன. அப்படிச் சொல்லப்பட்ட கதைகளில் அரசர்களின் பெயர்களும் கூட வரலாற்றுத் தரவுகளால் உறுதிசெய்யப்பட்டனவாக இருக்கின்றன. வரலாற்று நாவலாசிரியர்கள் முன்வைத்த வரலாற்றுப் பாத்திரங்களையே தலைப்பாக்கிச் சொல்வதை எளிய வழிமுறையாகப் பலரும் பின்பற்றினார்கள். வரலாற்றுப் புனைவுகளில் புதிய திசைகளில் பயணம் செய்த பிரபஞ்சன் (மானுடம் வெல்லும்)அந்த எளியமுறைக்கு மாற்றை முன்வைத்தவர்.

அறியப்பட்ட வரலாற்றைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு புனைவான வரலாற்றை உருவாக்குவதன் மூலம் சமூகநாவல்கள் உருவம் கொள்கின்றன. புனைவான கிராமங்கள் அல்லது நகரங்களை உருவாக்கும் நாவலாசிரியர்களின் நாவல்களிலும் ஆண்டுக் கணக்குகளைச் சுலபமாகக் கண்டு சொல்ல முடியும். வாசிப்பவர்களுக்குக் கூடுதலான வரலாற்றறிவும் நிலவியல் பார்வையும் இருந்தால் அறியப்பட்ட வரலாற்றின் பின்னணியைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம். அதன் மூலம் ஒரு புனைவான நாவலை வரலாறாகவும் சமூக இருப்பாகவும் இயங்கியலாகவும் வாசிக்கமுடியும். ஆனால் உருவாக்கப்படும் பாத்திரங்கள் எப்போதும் புனைவாகவே இருக்கும்; இருக்கவேண்டும். அதுவும் அறியப்பட்ட மனிதர்களாக இருக்கும் நிலையில் அவை தன் வரலாறாகவோ/ வரலாற்றுப்புனைவாகவோ ஆகிவிடும். இவ்வளவு சிக்கல்களையும் தாண்டித்தான் அல்லது உள்வாங்கிய பின்பே ஒரு எழுத்தாளர் நாவலை உருவாக்குகிறார். இதன் மறுதலையாக இவ்வளவு புனைவுகளையும் உடைத்துப் புரிந்துகொள்பவனே நாவலின் வாசகனாகவும் விமரிசகனாகவும் மாறுகிறான் என்றும் சொல்லலாம்.

 புதுவகை நாவல்கள்

பாத்திரங்களை உருவாக்குவதில் பெருமளவு வேறுபாடுகள் இல்லையென்றபோதும் காலம், வெளி ஆகியனவற்றை உருவாக்குவதில் நேர்கோட்டுத்தன்மையைக் குலைப்பதைப் புதுவகை நாவல்கள் முக்கியமான உத்தியாக நினைக்கின்றன. நேர்கோடற்ற தன்மையினூடாகப் பாத்திரங்களின் புறச்சூழலையும் அகநிலைப்பாடுகளையும் சந்திக்கச் செய்வதும் நடக்கின்றன. விலகிப்போவதையும் உருவாக்குகின்றன. இணைதலும் விலகலுமான எழுத்துமுறையின் மூலம் நமது காலத்து மனோநிலையான- நவீனத்துவ முறையைக் கடந்த பின் நவீனத்துவ மனநிலையைக் கட்டமைக்க முடியும்.  முதன்மையாக நான் எழுதும் நாவலில் விரியும் எதுவும் பெருங்கதையாடலின் கூறுகள் கொண்டதல்ல என்பதை எழுதுபவன் உணர்த்த முடியும். அண்மையில் வாசிக்கக் கிடைத்த ஒரு தமிழ் அத்தகைய உணர்த்துதலைக் கச்சிதமாகச் செய்தது.அந்த நாவலின் வெளி ஆச்சரியப்படத்தக்க விதமாகப்  பெருவெளிப் பரப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபரப்பான ஊர்களில் நிலைகொள்ளாது, மாநிலம் மற்றும் தேசம் என்னும் நிலவியல் சட்டகங்களைத் தாண்டி, கண்டத்தையும் கடக்கும் வெளியைக் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது அந்த நாவல். அந்த வகையில் இந்நாவலைத் தமிழின் முக்கியமான வரவு எனச் சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.நாவலின் பெயர் காப்காவின் நாய்க்குட்டி(மே,2015). எழுதியவரின் பெயர் நாகரத்தினம் கிருஷ்ணா. நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ் நிலப்பரப்பில் வாழும் தமிழ் எழுத்தாளர் அல்ல; அவர் வாழும் நகரம் பிரெஞ்சு நாட்டின் ஸ்ட்ராபோர்டு  என்பதால் இப்பெருவெளி எழுத்து சாத்தியமாகியிருக்கிறதோ என்றுகூடத் தோன்றுகிறது. உலக இலக்கிய வரலாற்றில் நன்கு அறியப்பட்ட பெயர் ப்ரான்ஸ் காப்கா. காப்காவின் முக்கியமான நாவலொன்று (Der Process/Trial-விசாரணை) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது. பிரெஞ்சு நாட்டில் வாழும் நாகரத்தினம் கிருஷ்ணா, காப்கா என்னும் ஜெர்மானிய நாவலாசிரியரின் பெயரோடு ஒரு நாய்க்குட்டியை இணைத்துத் தனது நாவலுக்கு ஏன் தலைப்பு வைக்கவேண்டும் என்ற ஆவலே அந்த நாவலை வாசிக்கத்தூண்டும் காரணங்களில் முதன்மையாகிவிட்டது எனக்கு.

கட்டமைப்புப் புதுமை

அறியப்பட்ட இலக்கிய ஆளுமையான காப்கா என்ற குறிப்பான பெயரைத் தலைப்பாகக் கொண்ட அந்த நாவலின் பக்கங்களுக்குள் நுழைந்தால் ஒவ்வொரு இயலுமே குறிப்பான தகவல்களோடு தொடங்கி இருக்கிறதைக் கவனிக்கலாம். ஒரு நாட்குறிப்பின் பக்கங்களைப் போல ஒவ்வொரு இயலும் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டு, தேதி, கிழமை ஆகிய தகவல்கள் முன்நோக்கிய வரிசையில் தரப்பட்டிருந்தால் ஒரு நாட்குறிப்பை வாசிக்கும் அனுபவம் கிடைக்கக்கூடும். அதன்மூலம் எழுதியவரின் மனப்பதிவுகளை வாசிக்கிறோம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.  ஆனால் காலக் குறிப்புகளோடு வெளியின் விவரங்களான நகரம் மற்றும் தேசக் குறிப்புகளையும் தந்திருப்பதால் வாசிப்பவர்க்குத் தரப்படுவது நாட்குறிப்பனுபவம் இல்லை என்றாக்கப்பட்டிருக்கிறது. இடம், மற்றும் காலமென இரண்டும் ஒன்றிணைக்கப்பட்ட பின்பு பாத்திரங்களின் வினைகளும் உரையாடல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் வாசிப்பவர்களுக்குக் கிடைப்பது வேறுவகையான உணர்வு. கிடைக்கும் உணர்வு,  வரலாற்றைப் புனைவாக வாசிக்கும் அனுபவம். வெளிப்பாட்டு நிலையில் சமகாலத்தை மையமாக்கும் நாவல் என்னும் இலக்கியவடிவம் வரலாற்றுக்குள் நுழைவதின் நேர்மறைக் கூறுகளில் முதன்மையானது நம்பகத்தன்மையை உருவாக்குவது. அதல்லாமல் இன்னும் சில நேர்மறைக்கூறுகளும் உள்ளன. அதேபோல் எதிர்மறைக் கூறுகளும் உள்ளன. அவை பற்றித் தனியாக விவாதிக்கலாம்.

 

குறிப்பான குறிப்புகளும் நம்பகத்தன்மையும்  

 

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவல், பிராஹா, செக் குடியரசு/ 2013, சனிக்கிழமை  ஏப்ரல்,6 எனக் குறிப்பான வெளி மற்றும் காலக்குறிப்போடு முதல் இயலைத்  தொடங்குகிறது. நாவலின் கடைசி இயலான   47 வது இயலும் அதே  பிராஹா, செக் குடியரசு 2013, ஏப்ரல் 6 சனிக்கிழமை என அதே நாளிலேயே முடிகிறது.  இதனால்  ஒரேநாளில், ஒரு நகரத்தில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என நினைத்துவிடும் வாய்ப்பிருக்கிறது.  தொடங்கிய புள்ளியில் நடந்த ஒரு மாயத்தை விடுவிக்கும் ரகசிய விடுவிப்பாக எழுதப்பட்டுள்ள இந்நாவலின் காலக்கணக்குகளைக் கவனமாகக் கணக்கிட்டால் கால அளவு நான்கு ஆண்டுகள் என்பது தெரியவரலாம். நான்காண்டுகளில் நடந்த சில நிகழ்வுகள் ஒரு மையத்தைச் சென்று அடைவதற்காக  உருவி எடுத்துத் தரப்பட்டுள்ளன. அதேபோல் நிகழ்வுகளின் தொடக்க வெளியாக ஐரோப்பாவின் செக் நாட்டுத் தலைநகர் பிராஹாவாக இருந்தாலும் அதிகமான நிகழ்வுகள் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராபோர்டு நகரத்திலேயே நடக்கின்றன. ஸ்ட்ராபோர்டு நகரத்திற்கு  இலங்கையின் முல்லைத்தீவிலிருந்தும்    இந்தியாவின் புதுச்சேரி நகரத்திலிருந்தும் வந்து சேர்ந்த மனிதர்கள் சந்தித்த நடைமுறைச் சிக்கல்களும் மனவியல் உறுத்தல்களுமே நாவலின் களம். இவ்வெளிகள் தவிரப் பயணவெளிகளாக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட்டும், எந்தெந்தத்தேசமெனத் தெரியாத பயண வழித்தடங்களும்கூட நாவலின் பரப்பில் வந்து போகின்றன .காப்காவின் நாவல் நிகழ்வெளியால் மட்டுமல்லாமல் தரப்பட்டுள்ள குறிப்பான காலக் குறிப்புகளாலும்கூடப் பெருவெளி எழுத்தாக இருக்கிறது. காலத்தை அதன் நிகழ்தகவில் வரிசைப்படுத்தும்போது முதல் நிகழ்வாக 2009 மே 20, புதன்கிழமையை தொடக்க நாளாகச் சொல்லலாம். இந்த நாள் இலங்கைத் தீவில் நடந்த மனிதப் பேரழிவுக்குப் பிந்திய ஒரு நாள் என்னும் குறிப்பு என்பதை மறந்துவிடக்கூடாது. மொழியையும் சமயத்தையும் அடையாளமாகக் கொண்ட பெரும்பான்மைச் சிங்கள பௌத்த ஒடுக்குமுறைக்கெதிராகத் தமிழ்/இந்துச் சிறுபான்மையினம் நடத்திய விடுதலைப்போரில் மனிதப்பேரழிவு நடந்த இடம் முல்லைத்தீவு. அந்த வரலாற்றுக் குறிப்போடு தொடங்கும் அந்த இயலில் முல்லைத்தீவிலிருந்து கிளம்பிக் கொழும்பு வழியாக இந்தியா வந்து, எந்தெந்த நாடுகள் வழியாகவும் நகரங்கள் வழியாகவும் செல்கிறோம் என்பதை அறியாமல் பயணம் செய்த ஒரு பெண்ணை (நித்திலா) அவளது அகதி அடையாளத்தோடு பிரான்ஸில் தங்கவைத்துவிட ஒரு பெண் (ஹரிணி) உதவுகிறாள். அப்படி உதவும் அவள் நித்திலாவோடு எந்த உறவும் கொண்டவள் அல்ல. ஆனால் தமிழ்பேசும் ஆடவனுக்கும் பிரெஞ்சு பேசும் பெண்னொருத்திக்கும் பிறந்தவள். அவளது முயற்சியில் அவளது நண்பர்களும் பங்கெடுக்கிறார்கள். அவர்களின் முயற்சிக்குப் பின்னிருக்கும் மனநிலை என்ன? என்பதே நாவல் எழுப்பும் அடிப்படை வினா. இந்த வினாவிற்கான விடையைப் பெற இன்னும் சிலரின் பயணமும் காரணங்களாக இருக்கின்றன. அந்தப் பயணமும் செக் நாட்டின் பிராஹாவை நோக்கிய பயணமே. இந்தப் பயணம் நித்திலாவின் பயணம்போல நெருக்கடியால் விரும்பி மேற்கொண்ட பயணமல்ல. தற்செயல் நிகழ்வுகளால் நகர்த்தப்படும் பயணம்.

இந்தியாவின் தென்கோடி நகரமான கன்யாகுமரியிலிருந்து 2010, நவம்பர்,12, வெள்ளிக்கிழமை காலை கிளம்பி, ரயிலில் டிக்கெட்டில்லாப் பயணியாக ஏறி, அந்த ரயிலில் வரும் ஒரு வெள்ளைக்காரனோடு ஒட்டிக்கொண்டு வட இந்தியாவின் புதுடெல்லி வந்து, ரிஷிகேஷில் தங்கியிருந்து இந்திய ஆன்மீகத்தின் அடையாளமாக ஆன ஒருவன், செக் குடியரசின் தலைநகரான பிராஹா வந்து சேரும் சாமியாரின் பயணம். இவ்விரு பயணிகளும் மூன்றாவதாக ஒரு கதைக்கண்ணியில் இணைக்கப்படுகிறார்கள். அந்தக் கண்ணி, புதுச்சேரியின் பிரெஞ்சிந்தியர்களுக்குள்ள இரட்டைக் குடியுரிமையைப் பயன்படுத்தி பிரான்சில் வாழும் குடும்பம். அவர்களது உதவியால் பிரான்ஸ் வந்த சேர்ந்தவன் வாகீசன் என்னும் இளைஞன்.

நாவலின் வெளியைப் பெருவெளியாகவும், குறிப்பான நான்காண்டு காலத்தை நிகழ்வுகளின் காலமாகவும் கொண்ட காப்காவின் நாய்க்குட்டியை அதன் ஆசிரியர் உருவாக்கியிருக்கும் சொல்முறையும் தொனியும் முக்கியமானவை. ரகசியங்களைத் தேடும் துப்பறியும் பாணியும், அதனால் கிடைக்கக்கூடிய விசாரணையின் விடுவிப்புமான சொல்முறையும் நாவல் முழுக்கப் பின்பற்றப்பட்டிருக்கிறது. மனிதத் தன்னிலைக்குள் அலையும் குற்றவுணர்வுக்கான காரணங்கள் மனிதர்களிடம் மட்டுமே இருப்பதில்லை; அவர்கள் வாழும் அமைப்புகளின் விதிகளிலும் இருக்கின்றன என்பதைத் தனது படைப்புகளில் அடியோட்டமாக வைத்து எழுதியவர் காப்கா. அதனை நினைவூட்டம்விதமாகத் தலைப்பைத் தேர்வுசெய்த நாகரத்தினம் கிருஷ்ணா தனது எழுத்துமுறையை விசாரணையின் தன்மையில் உருவாக்கியதன் மூலமும் தலைப்புப்பொருத்தத்தைச் செய்ய நினைத்திருக்கிறார்.

நித்திலா அகதியாகத் தொடர்ந்து இருக்கத்தக்கவளா? வெளியேற்றப்பட வேண்டியவளா? என்ற விசாரணைக்குப் பின்னால் பல துப்பறியும் பணிகள் நடக்கின்றன. துப்பறியும் பணியில் ஈடுபடுபவள் முழுநேரத்துப்பறியும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவள் அல்ல. ஐரோப்பிய நீதிமன்றங்கள் பின்பற்றும் நடைமுறைப்படி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படும் நித்திலாவின் பேச்சை மொழிபெயர்க்கப்போனவள் ஹரிணி. அவளது மொழிபெயர்ப்புப்பணி கூடத் தற்செயலாக நேர்ந்தது. வழக்கமாக மொழிபெயர்ப்புச் செய்யவேண்டியவர் வரமுடியாததால், தனது வேலையைத் தற்காலிகமாகக் கைவிட்டுவிட்டு மனச்சோர்வோடிருந்த ஹரிணி தற்செயலாகத் தான் ஏற்றுக் கொண்டாள். ஏற்றுக் கொண்ட அவளுக்கு நித்திலாவின் மௌனமும், பேச விரும்பாத இறுக்கமும் பல ரகசியங்களைக் கொண்டது என நினைக்கவைக்கிறது. அதுவே அவளுக்கு ஏதாவது உதவிசெய்தாகவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

இறங்கித் துப்பறிகிறபோது நித்திலா திருமணம் ஆகாமலேயே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொண்டவள் என்ற உண்மை தெரியவருகிறது. ஆனால் அந்த குழந்தை அவளிடம் இல்லை. அவளைப் பிரான்சிற்கு வரவழைத்த அக்காவிடம் இருக்கிறது. அக்காளும் அத்தானும் தங்கள் குழந்தை என்றே வளர்க்கிறார்கள். நித்திலாவின் குழந்தைக்குக் காரணமான ஆண் யார்? எதையும் வாயைத்திறந்து சொல்ல மறுக்கிறாள் நித்திலா. எந்தத் தீர்ப்பையும் ஏற்கும் மனவலிமையோடு கூண்டேறி இறங்கிக் கொண்டிருக்கிறாள் அவள். இந்த மனவலிமைதான் ஹரிணியை உற்சாகமடையச் செய்கிறது.

ஹரிணியைப் பொறுத்தவரையில் அந்தக் குழந்தை நித்திலாவின் குழந்தை என்று நிரூபித்துவிட்டால் அங்கேயே அவளை அகதியாகத் தங்கவைத்துவிடலாம் அதற்கான துப்பறிதலும் விசாரணைகளுமாக நாவல் பல முடிச்சுகளோடு நகர்கிறது. செயலாகக் கைவ் முறையானதங்கள் நாட்டிற்குள் நுழைந்தவர் முறையான அனுமதியின்றி நுழைந்தவராக இருந்தபோதிலும் சொந்தநாட்டுக் குடியுரிமைச் சட்டங்களும், உலக மன்றங்களில் ஒத்துக் கொண்ட அகதியுரிமைச் சட்டங்களும் அனுமதித்தால் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என்ற உயரிய நடைமுறைகளைக் கொண்ட நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குடியேற்றமுறையான விசாரணையின் அடிப்படையிலும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் அகதியாக ஒருவரைத் முல்லைத் தீவிலிருந்து நித்திலாவை ஸ்ட்ராபோர்ட் நகரத்திற்கு வரவைத்தவர்கள் அவளது அக்காவும், அவரது கணவரும். வரச்சொன்னபோது இருந்த காரணம், அவளுக்கு அங்கு அகதி உரிமையோடு புதுச்சேரியிலிருந்து வந்து பிரான்சில் தங்கியிருக்கும் வாகீசனைத் திருமணம் செய்து வைத்து போராளியாக வாழ்ந்தவளைக் குடும்பப் பெண்ணாக மாற்றிவிடலாம் என்ற ஆசைதான். அவனது புகைப்படத்தையெல்லாம் காட்டி அழைத்த அத்தானும் அக்காவும் அவள் வந்த பின்னர் அவனைக் கண்ணிலேயே காட்டவில்லை. நீண்ட காலமாகத் தங்களுக்குக் குழந்தை இல்லையென்பதால் அவளைத் தானே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆசை அவளது அத்தானுக்கும் இருந்தது.

அக்காவின் கணவனால் உண்டான பிள்ளையா? நித்திலாவை விட்டு விலகிய பின் இந்திய மரபுகளின் மீது பிடிமானம் கொண்ட அத்ரியானா என்னும் பிரெஞ்சுப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட வாகீசனால் கிடைத்த பிள்ளையா என்ற கேள்விக்கான விடை தெரிந்த ஒரேயொருத்தி நித்திலா மட்டுமே. அவளோ வாய் திறக்க மறுக்கிறாள். தொடர்ந்த முயற்சியில் ஹரிணிக்குத் தோல்வியே கிடைக்கிறது என்றாலும், அந்தக் குழந்தையின் தாய் நித்திலா தான் என்பதை நிரூபிக்கமுடிகிறது. அந்த நிரூபணம் போதும். நீதிமன்றம் அவளை பிரான்ஸிலேயே அகதியாகத் தங்க அனுமதித்துவிடும். அதை நிறைவேற்றும் விசாரணையோடு நாவலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

தரவுகள், சாட்சிகள், விசாரணைகள், சட்ட நுணுக்கங்கள் எல்லாம் அங்கே நிறைவடைந்தாலும் விசாகனைத் துரத்தும் குற்றம் என்னும் நாய்க்குட்டி – நாய்க்குட்டியாக மாறிய அத்ரியானா என்னும் மனச்சாட்சி- காப்கா மியூசித்திற்குப் பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குதித்து அவனைக் குதறியெடுப்பதாக எழுதுவதோடு நாவலை நிறைவு செய்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களின் வழியாக நகரும் துப்பறிதல் , விசாரணை அதன் முடிவில் கிடைக்கும் நீதி என்பதன் வழியாக ஒரு வாசிப்புத் தளம் உருவாக்கப்படுகிறது. அத்தேசத்திற்குப் புலம்பெயர்ந்தும் இடம்பெயர்ந்தும் சென்று சேர்ந்த இந்திய மற்றும் இலங்கைக் குடிமக்கள் வழியாக இன்னொரு வாசிப்புத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டையும் உருவாக்கி நம் காலத்தின் முக்கியமான சொல்லாடலான குற்றநீதியோடு தொடர்புடைய புள்ளியில் கொண்டுவந்து இணைப்பது இந்நாவலின் முக்கியமான விசாரணை. அவ்வகையில் இந்நாவல் உலக இலக்கியப்பரப்புக்குள் நுழையும் தன்மைகொண்டது .

நன்றி: தீரா நதி பிப்ரவரி 2016

படித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்

கதை மனிதர்கள்’ – பேராசிரியர் கா. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’  –

பேராசிரியர்  க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற – கதை மனிதர்கள், என்ற உண்மை. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ அத்தனை கோடி கதைகள் இருக்கின்றன. ஓவொரு மனிதனும் தனித்தவன் என்பதுபோல அவனுள் உறைகிற கதைகளும் நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து, பொழுதுசார்ந்து தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. புனைவுகளுக்குக் கவர்ச்சியைத் தருவது இத்தனித்த்துவம் தான். எனினும் எல்லோரும் கதை சொல்லிகளாக அவதாரம் எடுப்பதில்லை, கதை சொல்ல முன்வருவதில்லை.  சிலர் மட்டுமே முனைகிறார்கள். இந்தச் சிலரை தூண்டுவது எது? அந்த உந்துதலின் பிறப்பிடம் எது?

உரிய காலத்தை எதிர்பார்த்து, காற்றுடன் இசைந்து முதுமைக் தட்டிய இலைகளை உதிர்க்கும் மரங்களைப் போல,  மறக்க முடியாத நினைவுகளை உதிர்க்க,  இந்தக் கோடானுகோடி மக்கட் திரளில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை; தங்கள் வழித்தடத்தை; குறுக்கிட்ட மேடு பள்ளங்களை; அடித்தக் கூத்தை, கும்மாளத்தை; வாங்கிய அடியை; வாழ்க்கை அனுபவத்தின் வடுவாக நிலைத்துவிட்ட புண்ணை, அதன் தீரா வலியை  பிறரோடு பகிர்ந்து கொள்ள,  ஒரு சிலரை மாத்திரம்  பிடறியில் கை வைத்துத்  தள்ளுவது எது?

கதை சொல்லல்  கதை சொல்லிக்கு மனப்புண்ணை ஆற்ற உதவும் சுய மருந்தா?  இன்றைய மானுட வாழ்க்கை வேலைத்திட்டங்களால் ஆனது. எழுதுவோம், படிப்போம், உண்போம், உறவுகளுடன் பேசுவோம், நண்பர்களுடன் தொலைபேசியில் கதைப்போம், இவைகளில் பெரும்பாலானவை படுக்கையை விட்டு எழுந்திருக்கிறபோதே வரையறுக்கப்பட்டவை. ஆனாலும் இவற்றை நிறைவேற்றுகிறபோது சில நேரங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி செரிக்காத உணவுபோல நெஞ்சில் கடந்த காலச் சம்பவங்கள் குறுக்கிடுகின்றன.

மனிதர்களின் ஆழ்மனது விசித்திரமானது, உறங்கும் பாம்பை ஒத்தது. நமது வெளி நடவடிக்கைகளில் ஏதோ ஒன்றினால் சீண்டப்பட விழித்துக்கொள்கிறது. இது நாள்வரை ஊமைக்காயமாக உணரப்பட்ட ஒன்றை, – (« குறைந்தது இருந்த கடனை மூன்று கூறாகப் போடும்போதாவது “மூத்தவனுக்கு வேணாம்பா” என்று அம்மா சொல்லியிருக்கலாம். மூத்த அக்காவாவது சொல்லி இருக்கலாம். அண்ணன்மார் உழைப்பில் படித்த தம்பியாகிய நான் சொல்லி இருக்கலாம். பாகப்பிரிவினையை முன்னின்று நடத்திய அந்தச் சின்னய்யா சொல்லி இருக்கலாம். யாரும் சொல்லவில்லை ») – உண்மை வலியாக பிரகடனம் செய்வித்து. சிகிச்சைக்கு ஆவன செய் என உத்தரவிடுகிறது. அவ்வாறானறானதொரு கட்டளையை நிறைவேற்ற பிறந்ததே இந்நாவல் என்பதென் ஊகம்.

கதை சொல்லி நாவலை இப்படித் தொடங்குகிறார்:

“காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுகிறேன் ஆறுமணிக்குள் மைதானத்திற்குச் சென்று விடுகிறேன். குறிப்பிட்ட ஒரே இடத்தில் வண்டியை நிறுத்துகிறேன். என்றும் அதே திசையில் அதே பாதையில். ஒவ்வொரு நாளும் வேறு வேறாக மாற்றினால் என்ன ? என்பதோடு சரி. மாற்ற இந்த மனம் இருக்கிறதே அது ஒத்துக்கொள்வதே இல்லை. மாற்றினால் அன்றைக்கு ஏதாவது எதிர்பாராதத் தீங்கு நேரலாம் என்ற அச்சத்தை மனம் விடாபிடியாக வைத்திருக்கிறது ”  பின்னர் அவர் பயந்ததுபோலவே கதை சொல்லியின் சகோதரனிடமிருந்து:’சித்தப்பா, அத்தைக்குப் பல் இடுவுள ஒரு கட்டி வலிக்கினுச்சி, டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனோம். கேன்சரா இருக்குமோன்னு சந்தேகப்படுறார். எதுக்கும் மதுரைக்குப் போயி டெஸ்டு பண்ணி கன்ஃபாம் பண்ணிக்கங்க என்கிறார்”.

இந்த நாவலின் தொடக்கப் பகுதியை இத்தனை அக்கறை எடுத்து இங்கே சொல்லக் காரணம், ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையொன்றிலும் இப்படியொரு அனுபவம். கதையின் பெயர் ‘சகோதரிகள்’ (The Sisters).  கதைசொல்லியான சிறுவனுக்கு இங்கும் பெயரென்று எதுவுமில்லை. அவன் தனது வழிகாட்டியான கத்தோலிக்க பாதிரியார் இறக்கும் தருவாயில் இருப்பதை : “இம்முறை தேறமாட்டார், அவருக்கே நம்பிக்கை இல்லை” என அவன் கூறுவதாக ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையைத் தொடங்குகிறார். சாதாரண மனிதர்கள் நம்பிக்கை இழப்பது வேறு விடயம் ஆனால் நம்பிக்கையையே ஆதாரமாகக்கொண்ட சமய நெறியில் நிற்பவர் நம்பிக்கையை இழக்கிறார், என்பது வேறு.

‘அக்காள்’ நாவல் கதைசொல்லி சாதாரண மனிதரல்ல. வாழ்வைப் பகுத்தறிவோடு அணுகக்கூடியவர். நாவலில் இடம்பெறும் அவரது பேச்சும் செயலும் பின்னர் அதனை உறுதி செய்கின்றன, இருந்தும் ஏன் இந்தத் தடுமாற்றம். இது பொதுவில் மேதைமைகளிடம் காணும் பலவீனம்.  மேதமை என்பது சிறிது கறைபடிந்த சித்திரம். அவர்கள் பொதுமக்களில் ஒருவரும் அல்ல, மனோபலம் கொண்ட பராக்கிரமசாலிகளும் அல்ல. அவர்களை அவர்களே சரியாகப் புரிந்துகொண்டதில்லை என்பதாலேயே இதுபோன்றதொரு குழப்பங்களை எதிர்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் குழம்பாமற்போனால் இதுபோன்ற படைப்புகளுக்கும் வாய்ப்பின்றி போய்விடும். இலக்கியம் இட்டு கட்டியதாக இருக்கக்கூடாது, இயல்பான மனித மனங்களின் வடிகாலாக இருக்கவேண்டும். ‘அக்காள்’ நாவல் தொடக்கம்முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. பாதிரியார் படுக்கையில் இருப்பதைக்கூறி கதைக்குள் ஜேம்ஸ் ஜாய்ஸ் இழுத்துப்போகும் தந்திரம் க.பஞ்சாங்கத்திற்கும் கூடிவந்திருக்கிறது. புனைவின் ஆரம்பத்திலேயே, அக்காளின் வாய்ப்புற்று செய்தி கதை சொல்லியைப்போலவே அவரது அண்ணன் மகன் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ‘அக்கா’, நமது இரக்கத்தை தொடக்கத்திலேயேபெற்றுவிடுகிறார், விளைவாக கதைசொல்லி மாத்திரமல்ல கனத்த மனத்துடன் வாசிப்பவரும் அவருடன்  பயணிக்க வேண்டியிருக்கிறது.

‘சிறுவன்’, ‘இளைஞன்’, ‘குடும்பத்தலைவன்’ என்று கதைசொல்லியின் மூன்று வாழ்க்கைப் படி நிலைகளோடு கைகோர்க்கும் அக்காவின் வாழ்க்கை எப்படித் தொடங்கியது, எப்படி வலம் வந்தது, எப்படி முடிந்தது என்பதுதான் நாவல். பனையேறி குடும்பங்களை அதிக எண்ணிக்கையில்கொண்ட கிராமமொன்றில் அம்மா, சகோதரர்கள், சகோதரிகள் என்று வாழும் கூட்டுக்குடும்பம், “அம்மா போன (இறந்த)பிறகு குடும்பங்களை இணைக்கிற ஒரு “சரடு” அறுந்து போனதுபோல் ஆயிற்று. அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை என்று ஓடியது”. என கதையாசிரியர் கூறுவதைப்போல, குடும்ப உறுப்பினர்கள் திசைக்கொருவராக சிதறுண்டு சடங்கிற்கும் சம்பிரதாயத்திற்கும் கைகோர்ப்பது என்பது புதியதல்ல என்றாலும்,  கதைக்களனுக்குகந்த எடுத்துரைப்பைக் கையாண்டு எளிமையான, பாசாங்கற்ற மொழியில் கதையை நகர்த்துவதால் கதைமாந்தர்களோடு ஒன்றிவிடுகிறோம். கதை சொல்லி நினைவுகளை மீட்பதன் மூலம் தன் குடும்பத்துச் சிதைவில் தன்பங்கும் இருக்கிறதெனத் தன்னைத்தானே தண்டித்துக்கொண்டாலும். அச்சவுக்கடி ஒட்டுமொத்த சமூகத்தின்மீது விழுகிறது.

நாவலின் பெயராக இடம்பெற்றிருக்கும் மூத்த அக்காள் தான் மையப் பாத்திரம்: வீட்டு வேலைகளை மட்டுமே அறிந்த அந்த அக்காள், தாயும் உறவும் கைகாட்டிய பனையேறி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு காட்டு வேலைக்குபோவதும், பத நீர் காய்ச்சுவதும்;   பின்னர் ஆற்றில் மூழ்கிய மகனை தேடி ‘காட்டு  ராஜாவைப் பார்த்தியா?’ என்று ஒவ்வொரு வீடாய்த் தேடுவதும், துக்குமாட்டிக்கொண்ட மகளுக்காக  தம்பியிடம் “தூக்கித் தூக்கிச் சுமந்தியே. சுமை வெச்சிட்டுப் போயிட்டாளேடா. நான் என்ன பண்ணுவேன், பாதவத்தி. நான் பாவி. நானிருக்கக் கூடாது.” என்று அழுது புலம்புவதும் ;  “‘என்ன சொல்ற? இருக்காது. மாமாவாக இருக்காது. நீ யாரையோ பாத்துட்டு என்னமோ சொல்ற. கண்ணென்ன குருடாப் போச்சா?”  என புருஷனை கண்மூடித்தனமாக நம்புவதும்  என்று ‘அக்கா’வைக் கதைசொல்லி காட்சிபடுத்துகிறபோதெல்லாம் வெள்ளந்தியான அப்பெண்ணுக்காக நாமும் துடிக்கிறோம்.  அவளே பின் நாளில்  “வெஞ்சனம் கொடுப்பதற்குக் கணக்குப் பார்க்கிறாளே” எனத் தாய் புலம்பும் அளவிற்கு  மாறியதாக கதை சொல்லி தெரிவிக்கிறபோது, கிடைத்த வாழ்க்கையை அணுசரித்துப் போகும் அவள் சூழல் புரிந்து பரிதாபப் படுகின்றோமே தவிர கோபங்கொள்வதில்லை. மாறாக  சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் அவள் கதைசொல்லியிடம் அன்பைப் பொழியத் தவறுவதில்லை. நாவலுக்கான பிறப்பிடம் அவர் பொழியும் அன்பாகத்தான் இருக்கவேண்டும். « அவள் பாடிய தாலாட்டுப் பாடல்தான் எனது முதல் இலக்கிய சுவை, பின்னாளில் தமிழிலக்கியத்தை எடுத்துப் படிப்பதற்கானத் தூண்டல் கூட அக்காவிடமிருந்து அரும்பி இருக்குமோ ? » என்று கதை சொல்லி தனக்குத் தானே கேட்டுக்கொள்வது நமது ஊகத்தை உறுதி செய்கிறது.

இப்பெண்மணியைத் தவிர  « சின்ன வயசிலேயே தகப்பனை இவந்த பசங்க புருஷனை இழந்த மனைவி என்றுள்ள குடும்பத்தின் வெள்ளைச் சீலை உடுத்திய பேச்சிஅம்மா,மூத்த அண்ணன், சின்ன அண்ணன்,  சின்ன அக்காள், அவர் கணவர்,  கோபம் வந்தால் மூஞ்சை காட்டி விட்டு வெளியேறும் மச்சான், ஆட்டு வியாபாரம் செய்யும் சின்னய்யா, மாங்குடி அண்ணன், ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் அண்ணாச்சி, அண்ணாமலைப் பல்கலையில் படித்த பிச்சை, பண்ணையார் வீட்டு மைனர் ஜெயராமன் என நாவல் முழுக்க  கதைகளைச் சுமக்கிற மனிதர்கள்.

பனையேறிகளின் வாழ்க்கை முறையை அவர்களுக்குள்ள நெருக்கடியை, எதிர்கொள்ளும் ஆபத்தை வேறு எந்த நாவலிலும் இப்படி வாசித்த அனுபவமில்லை.

இறுதியாக  நூலாசிரியரை அடையாளம் காண ஓர் உதாரணம்.

« மதம் மாறக் காரணமென்ன ?

கோயிலுக்குள்ள நம்மள நுழைய விடாதபோது நாமயேன் அதுல இருக்கனும் ? மரியாதை  எங்க இருக்கோ அங்க போக விரும்புவதுதானே மனித மனசு »

நூலாசிரியரின் படைப்பிலக்கியங்கள் – ஒட்டுப்புல், ஒரு தலித் அதிகாரியின் மரணம், அண்மையில் வாசித்த ஒரு நூல்,  அனைத்துமே ‘தன்னை அறிதல் என்ற தேடல் நோக்கில் இருக்கின்றன.  இப்படைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது. தவிர இ ந்நாவலில்  இரண்டு விடயங்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.  முதலாவதாக உண்மை அடுத்தது எளிமை.  நாவலை வெவ்வேறு கோணத்தில் அணுகலாம் என்றுகூட தோன்றிற்று அதற்கு இது இடமல்ல. ஆர்வத்துடனான நண்பர்களின் வாசிப்பிற்கு வேகத்தடையாக இருக்க விருப்பமில்லை. ஒன்றுமட்டும் உறுதி, எவ்வித ஆரவாரமுமின்றி நாவல் தனக்கான இருத்தலைச் சாதித்துக்கொள்ளும், தரமான வாசகர்கள் விரும்பி வாசிப்பார்கள்.

அக்கா (நாவல்)

ஆசிரியர் : கா. பஞ்சாங்கம்

வெளியீடு:

அகரம்

மனை என்1 நிர்மலா நகர்

தஞ்சாவூர் 613007

தமிழ்நாடு

 

 

 

 

 

 

காஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்

ஜே. அசோக்குமாரின் சிறுகதைகளை வாசித்திருக்கிறே,ன். நான் விரும்பும் நம்பிக்கைக்குறிய இளைய தலைமுறை எழுத்தாளர். இதுவைரை சந்தித்ததில்லை. இருவாரங்களுக்குமுன்பு நிகழ்ச்சிகுறித்து தெர்வித்தார். இன்ப அதிர்ச்சி. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். ஜே. அசோக்குமாருக்கும், அவருடைய தஞ்சைக்கூடல் இலக்கியவட்ட நண்பர்களுக்கும் நன்றி நன்றி. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாமற்போனது வருத்தமே. ஒருமுறை நேரில் சந்தித்து எனது நன்றியைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன். மீண்டும் நன்றி.

படித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்

சுந்தர ராமசாமியின் சிருஷ்டி ரகசியம்

நவீன தமிழ் இலக்கியம் என்கிறபோது கவிதைக்கு பாரதியும், சிறுகதைக்கு புதுமை பித்தனும் எப்படியோ, அப்படி நாவலுக்கு சுந்தர ரமாசாமி. தமிழ் படைப்பிலக்கிய மும்மூர்த்திகள் என்று இவர்களைத்தான் அடையாளப்படுத்த முடியும். மூவரும் அவரவர்துறையில் ‘avant-gardiste’கள். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் வடிவத்தையும் மிக நேர்த்தியாகவே சுரா கையாண்டவர். பகுத்துணரக்கூடிய, சீர்தூக்கிபார்க்கவல்ல வாசகர்களையும் அதற்கிணையான பாராட்டுதல்களையும்   குவித்துக்கொண்டதைப் போலவே, நேர்மையற்ற விமர்சகர்களின் தாக்குதலுக்கு ஆளானதிலும் அவருக்கு நிகர் அவர்தான். இக்கட்டுரை ஒரு திறனாய்வு அல்ல. ஓர் சராசரி வாசகனுக்கு சற்று கூடுதலான வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் சுரா என்ற இலக்கிய தச்சனை உள்வாங்கிக் கொண்டதன் சுருக்கம்.

 

தீவிர  இலக்கியமும் வெற்றியும் அரிதாகவே இணையும், அதிசயமாக ஒன்றிணைகிறபோதும் விற்பனையில் வெகுசன இலக்கியத்துடன் போட்டியிடக்கூடிய நிலமையில் அவை இருப்பதில்லை. இந்நிலையில் பல நல்ல படைப்புகளை விருதுகளே நமக்கு அறிமுகப்படுத்துகின்றன. அவ்விருதுகளில் ஓட்டைகள் இருப்பின் காலம் தூக்கி எறிந்துவிடும், நூலக ரேக்குகளில் அநாதைப்பிணமாகிவிடும். சுரா வின் எழுத்து விருதுகளால் அலங்கரிக்கப் பட்டவையுமல்ல. அவரை விமர்சித்தவர்கள் கூட வாஸ்து சரியில்லையென குறை கூற முடிந்ததே தவிர அவர் கட்டி எழுப்பிய மாளிகையின் கலை நுட்பங்களையோ, கதவுகளின் சித்திரவேலைபாடுகளையோ, சன்னல்களும் சாத்திரங்களும் கண்ணுள்ளவர்களுக்கு அளித்த காட்சிபிரவாகங்களையோ குறைசொல்ல முடிந்ததில்லை.

 

சுராவின் படைப்பிலக்கிய வடிவங்களில் நாவல்கள் எனக்குப் பிடித்தமானவை. சிறுகதைகளைக்காட்டிலும், நாவலில் அவரது முழுமையான பரிணாமத்தை : அவ்வளர்ச்சி எட்டிய உயரத்தை, கண்ட ஆழத்தை அளவிட என்பதைக்காட்டிலும், விளங்கிக்கொள்ள முடிந்தது. அவரது சம காலத்திய அல்லது அவருக்குப் பின்பு எழுதபட்ட நாவல்களோடு ஒப்ப்பீடு செய்து அவர்கள் அப்படி இவர் இப்படி என்று எழுதுவதும் சரியல்ல என்பதென் கருத்து. இவை சுரா வின் நாவல்கள். சுரா என்ற எழுத்துக் கலைஞனின் தூரிகைக்குச் சொந்தமானவை. கண்காட்சிக்காக அல்ல தம்மை அலைக்கழித்த சிந்தனைகளை அவற்றின் முடிவில் உருவானக் கருத்துக்களை பிறருக்குத் தெரிவிக்க தீட்டியவை. « கருத்துக்களின் மோதல் பதற்றத்தையும் தரக்கூடியது » என்பது எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு மட்டுமல்ல அவருக்கும் தெரியும். தவிர « எதிரே இருப்பவர்களின் உறவுகளுக்குஅதிக முக்கியத்துவம் அளிக்க அளிக்க கருத்து மங்கிக்கொண்டே போகிறது. மனித குலத்திற்கு முக்கியம் அளிக்கும்போது கருத்து கூர்மைபடுகிறது. இந்தக்கூர்மை எதிர் நின்று பேசும் தனிமனிதர்களை எப்போதும் காயப்படுத்துகிறது. ஒரு சில மனிதர்களுக்காக விட்டுகொடுக்க முடியுமா ? » என ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள் ‘ நாவலில் ஒலிக்கும் கருநாகப்பள்ளியின் குரல் அவருடையதுதான். எடுத்த முடிவில் உறுதியாய் இருந்தாரென்றும் தெரிகிறது. எனது சகமனிதனைப் பற்றிய எனது அபிப்ராயம் இது, எனது சமூகத்தைப்பற்றிய எனது விமர்சனம் இது, இவர்களின் அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. இது கசப்பு இது இனிப்பு, என்பதைத் தாம் சுயவரம்செய்துகொண்ட வார்த்தைகளில் பேசுகிறார், வாதிடுகிறார். அவற்றுடன் உடன்படவேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் நமக்கில்லை, கதவுகள் திறந்தே இருக்கின்றன, வாசல் வரை வந்து வழி அனுப்பவும் அவர் தயார். உண்மையில் சுரா தன் ரசனை, தனது ருசி, தனது நிறம், தனது வாசனை, தன் விருப்பமென ( சுரா வார்த்தைகளில் சொல்வதெனில்) ‘தன் உள்ளொளியைக்காண’ எதனையெல்லாம் படைத்தாரோ அவைதான் நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாக அவரை கொண்டு நிறுத்திற்று.

 

சுராவின் கதை மூலம்

 

சமையற்கலையில் தேர்ந்த ஒருவன் சமைக்கிறபோது. தான் விரும்பியவகையில் சமைத்து, ருசித்துப்பார்த்து திருப்தியுற்ற பின்னரே வந்திருக்கும் விருந்தினருக்கு படைக்க நினைக்கிறான். நல்ல எழுத்தாளனிடத்திலும் இது நிகழ்கிறது. தன்னை சந்தோஷப்படுத்தும் எழுத்து பிறரையும் சந்தோஷப்படுத்தும் என்ற நம்பிக்கை, எனவே தனக்காக முதலில் எழுதுகிறான். தெரியவந்த செய்தி, நேர்ந்த அனுபவம் அல்லது ஏதோ ஒன்று அவன் மன அலைகளில் கரையொதுங்கத் தவறி திரும்பத்திரும்ப மேலே வருகிறது. உணர்சிகளை ஒதுக்கிவைத்து அறிவைப்பிசைகிறது. தூக்கத்தைக்கெடுக்கிறது. பிடறியில் அடித்து ஊமையா நீ ! பேசித்தொலையேன்  என்கிறது. எனவே சொல்லவேண்டியதைத் தீர்மானிக்கிறான். அதை உரைக்கவும், கேட்கவும், மறுக்கவும் ஆட்கள் வேண்டும், பொருத்தமானவர்களையும், தன் கலையாற்றலுக்கு பங்கம் நேராத மொழியையும் தேர்வு செய்கிறான். சிறந்த படைப்புகள், நல்ல எழுத்தாளன் எனக் கொண்டாடப்படும் மனிதர் அனைவரிடத்திலும் இது நிகழும்.

« காற்றாடி மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சரிந்து மண்ணில் விழுந்த காட்சியை ஒதுங்கி நின்று வேடிக்கைபார்த்தது இப்பொழுது கூட பசுமையாக என் நினைவில் தங்கி நிற்கிறது…… அடி மரம் அலற மரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகச் சாயும். கிளைகள் தரையில் மோதி நொறுங்கும். அதிர்ச்சியில் மரம் மேலே சற்று எம்பி உயர்ந்து மீண்டும் தொப்பென்று விழுந்து சரியும். பாரதப்போர் முடிந்த குருஷேத்திரம் மாதிரி பிணக்காடாய் காட்சி அளித்தது தோப்பு. » (ஒரு புளியமரத்தின் கதை பக்.57)

 

இச்சம்பவத்தினைக் கண்ட சுரா மனதளவில் பாதிக்கப்பட்டதன் விளைவு ‘ஒரு புளிய மரத்தின் கதை’ ஜே.ஜே சில குறிப்புகளை எழுதத் தூண்டியது எது ?

 

« தமிழ் நாவல்களில், அதாவது தமிழ்க் காதல் கதைகளில் அல்லது தமிழ்த் தொடர்கதைகளில் என் மனதைப் பறிகொடுத்திருந்த காலம். அன்று வானவிற்கள் ஆகாயத்தை மறைத்திருக்க, தடாகங்கள் செந்தாமரைகளால் நிரம்பியிருந்தன. உலகத்துப் புழுதியை மறைத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். ஆஹா, தொடர்கதைகள் ! ஒரு குட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கிறார்கள். பரிசு சீட்டு யாருக்கு விழும் ? கண்டுபிடிக்க முடிந்ததில்லை என்னால். நானும் மாறி மாறி அவனுக்கு இவள், இவளுக்கு அவன் என்றெல்லாம் கணக்குப் போட்டுப் பார்ப்பேன். யூகங்களை நொறுக்கி எறிந்துவிடுவார்கள் மன்னன்கள். » (ஜே.ஜே.சி . பக்-14)

 

மேற்குலகும், இந்தியாவின் பிற மாநிலங்களும் துணிச்சலுடன் புதிய முயற்சிகளில் இறங்க, அவ்வாறான முயற்சியில், பரிசோதனையில் தமிழ்நாடு இல்லை என்ற கவலை அவர்  மனதைத் தொடர்ந்து அரித்து வந்திருக்கிறது சுரா மட்டுமல்ல அன்றைக்கு நம்மில் 99 விழுக்காட்டினர் இவற்றை வாசித்தவர்கள் தாம். ஆனால் சுரா இதற்குத் தம்வழியில் தீர்வு காணவிரும்பினார். அத்தீர்வை அல்பெர் கமுய் மரணத்துடன் இணைத்து வசீகரித்த அண்டைமாநில எழுத்தாளனில் தன்னைக் காணமுனைந்ததின் விளைவு : ‘ஜே.ஜே சில குறிப்புகள்’.

 

உண்மையைச் சொல்லப்போனால் நவீனத்துவம், பின் நவீனத்துவம் பற்றிய வாசனை நான் அறியாது இருந்த காலத்தில் சுரா நக்கல் செய்யும் தொடரொன்றில்தான் சுஜாதா கைகாட்ட, ஜே.ஜே. சில குறிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன்.  இன்று எல்லையற்ற கற்பனைகள், வாசகர்களை உணர்ச்சிக்கடலில் தள்ளும் மெலோ டிராமாக்கள் போன்றவற்றை படைபிலக்கிய உலகம் ஓரளவு நிராகரித்துவிட்தென்றுதான் கூறவேண்டும் மேலை நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பரவலாக்கப்பட்ட கல்வி அறிவு இந்த மாற்றத்திற்கு மூலகாரணம். எனினும் அம்மாற்றம் இங்கு மெதுவாகவே நிகழ்ந்தது.

 

குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலில் பிறப்பு எப்படி நிகழ்ந்தது. ஆசிரியர் கூற்றின்படி « ஜே.ஜே சில குறிப்புகளில் பாலு தன் குடும்பத்தோடு கோட்டயத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வந்த து 1939 ஆம் வருடம் செப்டம்பர் மாதம், இரண்டாவது உலகம்காயுத்தம் அறிவிக்கப்பட்ட அன்றோ அதற்கு அடுத்த நாளோ என்று குறிப்பிட்டிருந்தேன். காலம் பற்றிய மயக்கம் ! இன்று அது இல்லை. » என்று நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆக இக்காலத்தை தெளிவாக வாசகர்களுக்குச் சொல்லிவிடவேண்டும் என்பதோடு, பாலுவைப்பற்றியும் விரிவாகப் பேச விஷயங்கள் இருக்கின்றன என்று சுரா நினைத்திறார்.

 

இவை அவருடைய நாவல்களின் தோற்றத்திற்கான காரணங்கள். இப்பிரச்சினைகளை நாவலாக்குவதெப்படி, அதற்கான கதைமாந்தர்களை தேர்வுசெய்வதெப்படி எதைச் சொல்வது, எப்படிக்கூறினால் தன் எண்ணம் சிறக்கும் என்றெல்லாம் பின்னர் சிந்தித்திருக்கவேண்டும்.

 

உள்ளொளியும் உண்மையும் :

 

‘ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிறது எங்கள் ஊர் யானை’ (கவிஞர் சுயம்புலிங்கம்) ரக படைபிலக்கிய விழாக்கால கோவில் யானைகளுக்கிடையில், நாமார்க்கும் குடியல்லோம் எனத் திரிந்த காட்டுயானை சுரா.  எவருடனும் எவற்றுடனும் சமரசம் செய்துகொள்ளாத படைப்பாளி. « எங்கும் இந்த கதைதான், பாரதி ஜமீனுக்குத் தூக்கு எழுதினான். புதுமைபித்தனும் எம்.கே.டி. பாகவதருக்கு வசனம் எழுதப்போனான். »  (ஜே.ஜே சி.கு. பக்கம் – 36) என்று தாம் கொண்டாடிய பாரதியையும் புதுமைப்பித்தனையுங்கூட கண்டிக்க காரணங்கள் இருந்தன, அத்தகைய ஒழுக்க மீறலைத் தாம் செய்யக்கூடாது எனத் தீர்மானமாக இருந்திருக்கிறார்.

 

« அவன் எழுத்தாளன், தன் உள்ளொளிகாண எழுத்தை ஆண்டவன். மிக முக்கியமான  விஷயமல்லவா இது ? அபூர்வம் அல்லவா ? » (ஜே.ஜே சி.கு. பக்கம் -9)

 

« சிந்திக்கும் மனிதனுக்கு ஒருபாஷைதான் உண்டு. உண்மையின் பாஷை அது » (ஜே.ஜே சி.கு. பக்கம் – 11)

 

உள்ளொளியைக் காண்பதும் தம்மை சுயவிசாரணை (introspection) செய்து அதன்மூலம் தம்மையும், தம்மைச் சுறியுள்ள மனிதர்களையும் நிகழும் சம்பவங்களையும் மூளையில் பரப்பி, கொழுப்பு நீக்கி, கசடுகளிலிருந்து பிரித்தெடுத்துக் ககண்டறிந்த உண்மைகளை அந்தந்த பாத்திரங்கள் ஊடாக அவற்றின் தன்மைக்கேற்ப மொழிநடையில் பகிர்ந்துகொள்வதும்  மூன்று நாவல்களிலும் இயல்பாய் நடக்கிறது.

 

« அது தானாகப் பிறந்தது, தன்னையே நம்பி வளர்ந்தது. இலைவிட்ட து பூ பூத்தது. பூத்துக் காய் காயாக காய்த்ததில் இலைகள் மறைந்தன. ……வானத்தை நோக்கித் துழாவின கைகள். வேர்கள் மண்ணுக்குள் புகுந்து அலைந்தன. ஆமாம் சுய மரியாதையுடன் நிறைவாழ்வு வாழ்ந்த மரம் அது. » (ஒ.பு.கதை பக்.-14)

« கனவானுக்குத் தனது தோரணைகள்மீதும் தனது பண்பாடுகள்மீதும் தாங்க முடியாத வெறுப்பு ஏற்படுகிறது ….தான் சன்மார்க்கியல்ல, வெறும் மனிதன் என முச்சந்தியில் நின்று உரக்கக் கூவி , தனது மேலங்கியைக் கிழித்தெறிந்துவிட்டு இன்ப வெள்ளத்தில் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. » (ஒ.பு.கதை பக்.68)

« மனிதன் தன்னை சகஜமாக வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விட்டது. பரிபூரணத்தின் குரூரமான உருண்டைகள் பொறுப்பற்று அவன் முன் உருட்டப்படுகின்றன…..இந்த இரண்டாயிரம் வருடங்களாக மனிதன் அடைந்திருக்கும் சங்கடங்கள்… அவமானங்கள், தன் கரங்களால் தன் தலைமீது அவன் போட்டுக்கொண்ட அடிகள். இவற்றிலிருந்து அவனுக்கு முற்றாக விடுதலை கிடைக்கவேண்டும். அவன் இயற்கையாய் பயணத்தைத் தொடரட்டும். அவன் கால் சுவடுகளில் துளிர்ப்பவை எவையோ அவைதாம் நாகரிகம். » (ஜே.ஜே.சி.குபக்42)

« எனக்குப் புத்திசாலி என்று பெயர். ஒவ்வொன்றையும் தீர ஆராய்ந்து கனகச்சிதமாக அறிமுகப்படுத்துகிறவன் என்றுபெயர் பிறர் நினைக்கும் அளவுக்கு சாமர்த்தியம் என்னிடம் இல்லை என்பது உள்ளூர தெரிந்துகொண்டே இருக்கிறது. மற்றவர்களுக்கும் அது தெரிந்துவிடாமல் மறைத்து கொண்டிருப்பதுதான் உண்மையில் என் சாமர்த்தியம். என் வேஷம் தான் நான் என்று பிறர் நினைக்கும்படி செய்துவிடுகிறேன். » (குழ.பெண்.ஆண்கள் -பக்.182)

 

தம்மைப் புடம்போட்டுபார்த்து தம்மைப்பற்றிய உண்மைகளை ஏற்பதோடு அவற்றை பிறமனிதருடன் பகிர்ந்துகொள்ள சுயபுனைவு(autofiction) உத்தி. ஒரு சாதுர்யமான தேர்வென்றுதான் சொல்லவேண்டும். மூன்று நாவல்களுமே சுய புனைவு வகை. இவற்றுள் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ சமுத்திரம். கதை மாந்தர்களின் எண்ணிக்கையும் அதற்கேற்ப அதிகம் எனவே படர்க்கையில் சொல்லப்படுகிறது. ‘ஒரு புளியமரத்தின் கதையி’லும், ‘ஜே.ஜே சில குறிப்புகளி’லும் கதை மாந்தர்களின் எண்ணிக்கை குறைவு எனவே தன்மையில் உரைக்க சௌகரியம். படைப்பாளிகள் அனைவருமே புனைவென்று முன்வைக்கும் எழுத்தில் தங்கள் உண்மைஅனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே செய்கிறார்கள். எனினும் சுயபுனைவுகளில் உண்மைக்குக் கூடுதலாக இடமுண்டு, அவை போலி உண்மைகளாகவும் இருப்பதில்லை.

 

இளமைக்காலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் என்பதால் முதலிரண்டு நாவல்களிலும் எரிமலையின் அருகில்  நிற்பதைப்போன்ற உணர்வு வாசகனுக்கு. தன்மையில் சொல்லப்படுவதால் எனக்கென்ன பயம் என்ற தொனி.  சமூகம், அதன்  நெறிமுறைகள், இயக்கமுறை மொத்தமும் அவருடைய கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. சுயநலஅரசியல்வாதிகளின் சதுரங்க விளையாட்டு காலங்காலமாகவே பொது நலனுக்கு எதிரானவை என்பதைச்சொல்ல ஒரு புளியமரத்துக்கதை யெனில். ஜே.ஜே சில குறிப்புகளில் அவர் சாடுவது வெகுசன இலக்கியவாதிகளை.  ‘ஒரு புளியமரத்துகதையில்’ வரும் திருவிதாங்கூர் நேசன் இதழும்,  இசக்கியும், காதரும், தாமு போன்ற அரசியல்வாதிகளும் சரி  ‘ஜே.ஜே சிலகுறிப்புகளில்’ இடம் பெற்றிருக்கிற திருச்சூர் கோபாலன், முல்லைக்கல்மாதவன் நாயர், பொங்குமாக்கடல் தாமரைக்கனி போன்றவர்களும் மலையாளக்கரையில் இருக்கிறார்களோ இல்லையோ தமிழ்மண்ணில் சிரஞ்சீவிகளாக சுராவின் கனவுகளைப் பொய்யாக்குவதென்று பிடிவாதமாக இருக்கவேசெய்கிறார்கள்.

 

சுராவும் கதை மாந்தர்களும்

 

சுராவின் பாத்திரபடைப்புகளில் எனக்குப் பிரியமானவர்களில்  அநேகர் ‘குழந்தைகள், பெண்கள் ஆண்களில்’ தான் இருக்கின்றனர். பாலு என்கிற பெரிய குடும்பத்து குழந்தை உள்ளத்தைப்போலவே, வறுமையினால் பிஞ்சிலே பழுத்திருந்த லச்சம் சாதுர்யம் என்னைக் கவர்ந்தது. லச்சத்திற்கும் பாலுவிற்கும் இடையில் நடக்கும் உரையாடலை ரசித்து வாசிக்க வேண்டியவை. லஎஸ்.ஆர்.எஸ்ஸுக்குவாய்த்த லட்சுமியைப் பற்றி ஆயிரம் பக்கங்கள் எழுதலாம். « முல்லை பூத்துக்கிடக்கு. போய் பாருங்கோன்ன்னு தினசரி சொல்றா ஆனந்தம். நடக்க முடிஞ்சால் தானே ? அவ வச்சுக்க க் கூடாது. எனக்கு வச்சுக்க முடியாது ! » என எத்தனை எளிதாகச் சொல்லமுடிகிறது. எஸ்.ஆர்.எஸ் என்ற சாமர்த்தியசாலி இருட்படிமத்தை வெகு எளிதாகத் தோற்கடிக்க நறுமணத்துடன் ஜொலிக்கும் பெரிய தீச்சுடர் அவள். பிறகு « ரதிவீட்டில் ரம்பை சமையற்காரி »என்பதுபோல வந்து சேர்ந்த ஆனந்தம். பல கை மாறிய நாராயணி, தளியல் சேது அய்யர், வள்ளி…

 

மூன்று நாவல்களிலுமே கதைகள், கிளைக்தைகள் அதற்கேற்ப பாத்திரங்கள்.

 

« அடேயப்பா எத்தனைக் கதைகள் ! எவ்வளவு விசித்திரமான பாத்திரங்கள் ! எவ்வளவு கோணலும் நெரிசலுங்கொண்ட மன இயல்புகள் ! » (ஒ.பு.கதை பக்.15) என சுராவின் வார்த்தைகளைக்கொண்டே நாமும் வியக்க வேண்டியுள்ளது.

 

ஜே. ஜே. பாத்திரம் உருவாக ஆல்பெர் கமுய்மேலிருந்த பிரியமும், சுரா நேசித்த மலையாள எழுத்தாளரும் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் ஜே. ஜே சில குறிப்புகளை எழுதுகிறபோது அவனாகவே சுரா வாழ்ந்த்திருப்பார் என்பதுதான் நிஜம். «  ஜே.ஜே – நான். நான் ஆகவேண்டியதை ஜே. ஜே ஆகியிருப்பது. » (ஜே.ஜே. சிலகுறிப்புகள் பக். 23)

 

சுய புனைவு என்பதால் கற்பனை மனிதர்கள் குறைவு மூன்று நாவல்களுமே பாலுவை சுற்றிவருபவை. பாலுசார்ந்த மனிதர்களையும் அவன் அனுபவங்களையும் பேசுபவை. பெரும்பாலான கதை மாந்தர்கள் கற்பனைகளல்ல என்பதை ஊகிப்பதில் சிக்கல்களில்லை.

 

« 1958 இல் எங்கள் ஊரில் நான் விரும்பும் நாவலாசிரியர் ஒருவர் தங்கியிருந்தார். நானும் இலக்கிய நண்பரும் வெகுநேரம் ஆசையோடு அவருடன் பேசிக்கொண்டிருப்போம். பேச்சு அலுப்புற்ற வேளைகளில் அந்த ஓட்டலின் இரண்டாவது மாடியில் நின்று பஜார் இயக்கங்களை வேடிக்கைப்பார்த்தபடி இருப்போம். அங்கிருந்து நேராகக் கீழே பார்த்தால் சினிமா தியேட்டரை ஒட்டிப் பொரிகடலைகாரி ஒருத்தி உட்கார்ந்துகொண்டிருப்பது தெரியும். அவளுடைய சிரம் வெட்டி வைக்கப்பட்டிருப்பதுபோல தெரியும். இந்தக் கோணத்தில் பார்க்க நேர்ந்த தால் அவள் என் மனசில் இடம்பெற்றாள். » என்பது தமது பாத்திர தேர்வு குறித்து சுரா தரும் வாக்குமூலம். சுராவின் அபிமானம்பெற்ற ஜோசஃப் ஜேம்ஸ்ஸு, எம்.கே அய்யப்பன், பேராசிரியர், சாரம்மா. தாமோதர ஆசான், செல்லத்தாய், வள்ளிநாயகம் பிள்ளை ;எஸ்.ஆர்.எஸ், ரமணி , லட்சுமி, லச்சம், டாக்டர் பிஷாரடிபோன்ற நிஜ மனிதர்களும் சரி,  அவர் சண்டைபிடிகிற கற்பனை மனிதர்களும் சரி வேறு கண்டத்திலிருந்து குதித்த மனிதர்களாக இருக்க முடியாது. பாலுவின் தேசத்தைச் சேர்ந்தவர்களே.

 

சுராவின் இலக்கியம்

 

« கதைகளின் முடிவுகள் மட்டுமல்ல வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு முக்கியம் » (ஜே.ஜே சி.கு. பக்கம் -90)

« தோற்றங்கள் அல்ல தோற்றங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையே இலக்கியத்திற்கு ஆதாரமாகும்.. இதில் ஒரு நாளும் மாற்றம் இல்லை.  » (ஜே.ஜே சி.கு. பக்கம்-91)

 

உள்ளொளியைக் காண்பது, சிந்தனையை உண்மை மொழியில் தெரிவிப்பது, அத்தெரிவித்தலுக்கு உபயோகிக்கும் சொற்களை கவனமாகத் தேர்வுசெய்வது  ஆகியன, சுரா வகுத்துக்கொண்ட படைப்பு நெறிகளைத் தெரிவிக்கின்றன. மூன்று நாவல்களிலும் மறந்துங்கூட தான் வகுத்துக்கொண்ட இலக்கியகோட்பாட்டிலிருந்து விலகியவர் அல்ல. உதாராணங்காட்ட மூன்று நாவல்களையும் இங்கே பிரதிபடுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு வார்த்தையையும் இலக்கியப்படுத்தியிருக்கிறார். ஒரு புளியமரத்தின் கதையில் வரும் நவீன பூங்காவின் காட்சி சித்தரிப்பு. குழந்தை பெண்கள் ஆண்களில் வரும் மழைக்காட்சி, ஏன்  செஞ்சாறு கொழகொழவென்று பசுவின் வயிற்றோடு இரு பக்கங்களிலும் வழிந்தது என நாம் அற்பமென்று அலட்சியப்படுத்தும் ஒரு துக்கடா காட்சியைக்கூட still-frameஆக மாற்றும் அழகும் கலைதான், இலக்கியம்தான்.

 

அவரது எள்ளல் நடையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

 

« உத்தியோகம் பார்த்த காலங்களில் ஒழுங்காக இருந்து பரிதவித்து விட்டாராம் அவள் அப்பா. அதற்குப் பரிகாரமாக பென்ஷன் வாங்கியதும் பிருஷ்டத்தை எல்லோரும் பார்க்குப்படி சொரிந்துகொள்ளவேண்டுமாம். சுதந்திர த்தைப் பற்றித்தான் என்னென்ன கற்பனைகள். »(குழ.பெண்.ஆண்கள் பக்-236)

« புளியமரத்தடியைப் பெருக்கிய தோட்டி அன்று விசேஷ சிரத்தை எடுத்துக்கொண்டு பெருக்கினான்….கீழே விழுந்துகிடந்த சுதந்திரக்கொடியை மட்டும் சிறுகுழந்தைக்கு சட்டை தைக்க உதவும் என்ற எண்னத்தில் சுருட்டி மடியில் வைத்துக்கொண்டான் »(ஒ.புளி.கதை பக்.76)

« அவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியிருந்த சம்பளத்தொகை எங்களுடைய ஏழை முனிசிபாலிடியை பொறுத்தவரை கௌபீனத்தை அவிழ்த்து தலைப்பாகைக் கட்டிக்கொள்ளும் காரியம். » »(ஒ.புளி.கதை பக்.60)

 

இறுதியாக ஒன்றைச் சொல்லவேண்டும். ஜே.ஜே சிலகுறிப்புகள் நூலுக்கும் அர்த்தமற்ற குற்றசாட்டுக்கள் உண்டு. சமூக வாழ்க்கை என்பது கூட்டு வாழ்க்கை. புரிதல் நம்முடையதாக இருக்கலாம் நாமாக கற்றதுபோக சிலவற்றை இச்சமூகமும் போதிக்கிறது. பால் பூத்திற்கு செல்லும்போதும், பேருந்தில் இன்னொருவர் இறங்கிய நிறுத்தத்தில் நாமும் இறங்க வேண்டியிருந்தது என்பதாலும், உணவு விடுதியில் எதிர்மேசையில் இருப்பவர் ஆர்டர் செய்ததை நாமும் ஆர்டர் செய்து சாப்பிட்டோம் என்பதாலும், சவரக்கத்தியைக் கழுத்தில் இறக்குகிறபோது தேவையின்றி வந்துபோகிற அச்சமும் எல்லோருக்கும் பொதுவான அனுபவங்கள்தான், ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் மொழியில்தான் இலக்கிய ஆளுமைகள் வேறுபடுகிறார்கள்.

———————————————————–

 

படித்ததும் சவைத்ததும் -3: ‘புயலில் ஒரு தோணி’ப. சிங்காரம்

படித்ததும் சுவைத்ததும் – 4 : ‘புயலிலே ஒரு தோணி’ – ப. சிங்காரம்

(இத்தொடரிலுள்ள கட்டுரைகள் அவ்வப்போது எழுதப்பட்டு சிற்றிதழ்களிலும், திண்ணைமுதலான இணைய இதழ்களிலும் வெளிவந்தவை)

 

“பண்டைநாள் பெருமைபேசி மகிழும் இனத்தாரிடம் நிகழ்கால சிறுமைகள் மிகுந்திருக்கும்” என உரிமையோடு தமிழினத்தைச் சாடுகிற அசலான இனப்பற்றுள்ள ப. சிங்காரம் தமிழினத்தின் காவலரோ, தமிழினத் தலைவரோ அல்ல ஆனாலும் இனத்தின் எதிர்காலம் குறித்த கவலைகளை தமது எழுத்துகளில் தயக்கமின்றி தெரிவித்திருக்கிறார். எத்தனை படித்தாலும், எங்கே வாழ்ந்தாலும் “அடுத்தக் காட்சிக்காக சினிமா ஜோடனையுடன் தவம் செய்கிறது தமிழர்கூட்டம்”-(பக்கம் 114 -புயலில் ஒரு தோணி ) என்ற அடையாளப்படுத்திக்கொண்டிருக்கும் தமிழினத்தின் பொதுபிம்பத்திற்கும், தங்கள் இலக்கியவெளியை தமிழிலக்கிய வரலாற்றில் முதல் இருநூறு பக்கங்களில் குறுக்கிக்கொண்டு மொழியை வளர்ப்பதாக நம்பிக்கொண்டிருக்கிற பிதாமகர்களுக்கும் ப. சிங்காரம் போன்றவர்கள் அவசியமற்றவர்கள். ஆனால் வாசிப்பு, எழுத்து, படைப்புபென்று அலைகிற நம்மைப் போன்றோருக்கு அவர் தவிர்க்கமுடியாதவர் ஆகிறார்.

சராசரி மனிதனைக்காட்டிலும், கலைஞன் எளிதில் உணர்ச்சிவசப்படுபவன், உண்மையோடு கைகோர்க்கிறவன், சிறுமை கண்டு கொதித்துப்போகிறவன். படைப்பு: ஒருவகையான ஆயுதம், ஊடகம். படைப்பாளி தமக்குள் இருக்கும் அந்த மற்றொருவனை சமாதானப்படுத்தும் தந்திரம். ப. சிங்காரமும் அதைத்தான் செய்திருக்கிறார். அவரால் எழுதப்பட்டவை இரண்டே இரண்டு நூல்கள். அவர் எழுத்தைப் புரிந்து, அவரைப்புரிந்து ஊக்குவிக்க அப்போதைய படைப்பிலக்கிய சூழல் தவறி இருக்கிறது. அதற்கு அவரும் ஒருவகையில் பொறுப்பு. “இப்போதுதான் சுஜாதா, சிவசங்கரி கதைகளை எடுத்து வாசித்துப் பார்த்தேன். விஷயமே இல்லாம இருக்கு. ரெண்டு பக்கங்கூட வாசிக்க முடியலை.” என்ற அவரது எரிச்சலும், “தமிழில் இதுவரை நல்ல நாவல்கள் எழுதிய நாவலாசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். “அவங்க எழுதியதை படிக்கவில்லை”, என்றாறென அவரைச் சந்தித்த ந. முருகேச பாண்டியன் தரும் வாக்குமூலமும், மாற்றுதளத்தில் இயங்கிய தமிழ் படைப்பாளிகளை பற்றியோ, அவர்கள் தம் படைப்புகள் குறித்தோ ஞானம் ஏதுமின்றியே வாழ்ந்து மடிந்திருக்கிறார் என்பதை உறுதிபடுத்துகின்றன.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம் புணரி கிராமத்தில் பழனிவேல் நாடார், உண்ணாமலை அம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனான ப. சிங்காரம் பிறந்த ஆண்டு 1920. சிங்கம் புணரி தொடக்கப்பள்ளி, மதுரை செயிண்ட் மேரீஸ் பள்ளியென்று கல்வியினை முடித்து பிழைப்புத் தேடி இந்தோனேஷியாவிற்குச் சென்றிருக்கிறார். இடையில் 1940 ஆண்டுவாக்கில் இந்தியாவிற்கு வந்திருந்தபோதிலும், 1946ல் இந்தியா திரும்பியவர் மதுரையில் நிரந்தரமாக தங்கி தினத்தந்தியின் பணியாற்றி இருக்கிறார். முதல் நாவல் ‘கடலுக்கு அப்பால்’ 1950ம் ஆண்டு எழுதப்பட்டு கலைமகள் நாவல் போட்டியில் முதல் பரிசினைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது நாவல் ‘புயலிலே ஒரு தோணி’ 1962ல் எழுதபட்டு கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது இரண்டு நாவல்களையும் இணைத்து தமிழினி முதல் பதிப்பை 1999ம் ஆண்டிலும், இரண்டாவது பதிப்பினை 2005ம் ஆண்டிலும் வெளியிட்டிருப்பதை அறியமுடிகிறது. இந்த மூன்றாண்டுகள் இடைவெளியில் மூன்றாவது பதிப்பினை வெளியிட்டிருப்பார்களா என்று தெரியவில்லை.

‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ என்ற இரு நாவல்களும், நல்ல நாவல்கள் என்பதற்கான இலக்கணங்களைத் தவிர்த்து, புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளன் ஒருவனின் படைப்புகளாக அவை என்னை பெரிதும் கவர்ந்தன. கண்ணிற பட்ட அவலங்களை ஒளிக்காமல், ஒதுங்கிப்போகாமல் வெளிக்கொணர்ந்த ப. சிங்காரத்தின் உணர்வும், மனதை நச்சரிக்கும் தாய்நாட்டு ஏக்கமும், அவர் அமைத்துக்கொண்ட துறவு வாழ்க்கையும், முரண்பாடுகள் ஏதுமின்றியே உறவுகளிடம் அவர் ஒதுங்கிவாழ்ந்தமை போன்ற அம்சங்களில் என்னைக்கண்டது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆசிரியரே சொல்லுவதுபோன்று ‘புயலில் ஒரு தோணி’ இரண்டாம் உலகப்போரைபற்றிய நாவலா? என்றால் ஆமோதிக்கவும் முடியவில்லை, மறுக்கவும் முடியவில்லை. கதைக் களம் யுத்தகாலம். தாயகம் பற்றிய பல கனவுகளுடனிருந்த கதை நாயகனை யுத்தம் சுவீகரித்துக் கொள்கிறது, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஆதிக்க யுத்தம், அவர்களுடைய காலனி நாடுகளையும் விட்டுவைக்கவில்லை, உலகின் பலமுனைகளிலும் நடைபெறும் யுத்தமும் அதன் வெற்றி தோல்விகளும் அப்பாவி மக்களின் தினசரி வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகின்றன என்பதுதான் கதைக்கான Trame. ஒரு சில அத்தியாங்களில் டாய் நிப்பன் (ஜப்பானியரின்) படையின் ராணுவ திட்டங்கள், கடற்படை நடவடிக்கைகள், விமானத் தாக்குதல்கள், நேச நாடுகளுடைய பதிலடிபற்றிய விபரங்கள் தெளிவாகச் சொல்லபட்டிருக்கின்றன. ஜப்பானியபடை மெடான் நகருக்குள் நுழைவதுடன் ஆரம்பமாகும் கதை. ரஷ்யாவுக்குள் நுழைந்த நாஜிப்படைகள் ஈட்டும் வெற்றி, ஜப்பானியரின் நீதகா யாமா நோபுரே போர்த்திட்டம், பெர்ள் ஹார்பர் தாக்குதல், பிரிட்டிஷார் வசமிருந்த தெற்கு ஆசியாவைத் தங்கள் வசம்கொள்ள ஒரே நேரத்தில் பல திசைகளில் ஆயிரக்கணக்கான மைல் இடைவெளியுள்ள இடங்களில் போர்தொடுத்து கண்ட வெற்றிகளென்று ஜப்பானியர் தற்காலிக வெற்றிக் களிப்பில் திளைத்திருந்த நேரம். யுத்தகால விபரீதங்களையும் ஆசிரியர் நாம் திடமனதின்றி வாசிக்க இயலாதென்கிற அளவிற்கு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.

“வடக்கேயுள்ள பேப்பேயெம் பெட்ரோல் கிடங்கு சீறி எரியும் தீக்குரல் இப்போது தெளிவாகக் கேட்கிறது..இடையிடையே பீப்பாய்கள் வெடிக்கும் ஓசை: ட்ராஅஅம்…ட்ராஅஅம்…அச்சின் மாட்ஸ்கப்பை கிடங்குகள் உடைந்து கிடக்கின்றன. அவற்றினுள் ஈசல்போல் மொய்த்திருக்கும் மனிதக் கும்பலின் களவு- வெறி இறைச்சல்; வெளியே ஓவல் டின், டயர், பூட்ஸ், டார்ச் லைட்டுகளுடன் விரையும்- இடறிவிழும் ஆட்கள், மனிதக்கூட்டம் அகப்பட்டதை அள்ளிச் சேர்த்து சுமக்க முடியாமல் சுமந்து செல்கிறது.(பக்கம்- 24);

“புல்லாந்தரையில் பிறந்த மேனிக் கோலத்தில், மல்லாந்த உருவங்கள், சுற்றிலும் வேற்று மானிடர். சூரியனின் பட்டபகலில் ஊரறிய உலகறிய காதறிய கண்ணறியக் கட்டாய உடலாட்டு. ஆயயவோய்! ஓ மரியா! ஆயயயோவ்!” (பக்கம் – 25),

“ஹக்கா- வில்ஹெல்மினா முக்கு வெற்றிடத்தில் பிளந்த வாயும் மங்கிய கண்களுமாய் ஐந்து தலைகள் மேசைமீது கிடந்தன- இல்லை நின்றன. சூழ்ந்திருந்த ஜப்பானியர் சிரித்து விளையாடினர்.(பக்கம்-30)

ஆயுதத்தினாலுற்ற வெற்றிக்குப்பின்னே கொலை, கொள்ளை கற்பழிப்பு என்ற பழிவாங்கல் படலம், தளையுண்டிருக்கிறவரை சாதுவாகவும், நுகத்தடி நீங்கியதும் துள்ளுகிற மனித மிருகங்களின் பற்களிலும் கால்களிலும் சிக்கித் தவிக்கும் மானிடத்தின் பரிதாப நிலையை விவரித்து இருப்பதாலேயே போர்பற்றிய நாவலென்றொரு வரையறைக்குள் அவசரப்பட்டு திணிப்பதும் நியாயயமாகாது. அதனை மறுப்பதற்கு ஆசிரியரது வார்த்தைகளேபோதும், வேறு சாட்சிகள் வேண்டாம். “இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்திலே எங்க இருக்கு? ஆனா போன இடத்துல என்ன இருக்குண்ணு கூர்மையாகப் பார்க்க மாட்டாங்க. அப்படி பார்த்திருந்தாகன்னா இன்னக்கித் தமிழிலே ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்” என்று ந. முருகேச பாண்டியனிடம் அவர் வெளிப்படுத்தும் ஆதங்கத்தினை, தமது நாவலில் புரிந்துகொண்டு செயல்பட்டிருப்பதன் மூலம் நாவலை எழுத அவருக்கு வேறுகாரணங்களும் இருக்கின்றன.

படைப்பவனில்லாத நாவலெது? கதை நாயகன் ஊடாகவும் பிற மாந்தர்கள் ஊடாகவும் சொந்த மண் உழப்படுகிறது. அந்த நாள் நினைவுகளில் ஆசிரியர் மூழ்கித் திளைக்கிறார், கூடவே விடுபடமுடியாமல் இனம், நாடு சார்ந்த கனவுகள் கவலைகள் அது சார்ந்த கோபங்கள், ஆவேசங்கள்.

“பாண்டி! உங்கள் நாட்டுக்கு எப்போது விடுதலை?”

“அடுத்த தைப்பூசம்.”

“தைப்பூசத்தன்று பரம்பரை வழக்கபடி காவடியாட்டம் தான்” (பக்கம் -30)

“கோட்டைக் கொத்தளங்களைத் தகர்த்தெறிந்த தமிழ் வீரர்களின் கொடிவழியில் வந்தோரிற் சிலர், இதோ….. பண்டைய ஸ்ரீவிஜய அரசின் ஒரு பகுதியான சுமத்ராவிலிருந்து மற்றொரு பகுதியான மலேயாவை நோக்கித் தொங்கானில் செல்கின்றனர். கடல் கடந்து போய்ப் புத்தம் புதுமைகளை கண்டறிந்து செயல் புரிய வேண்டுமென்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டல்ல – வயிற்றுப் பிழைப்புக்காக.”(பக்கம்-71)

“தமிழ் மக்கள் முன்னேற வேண்டுமானால் முதல் வேலையாகப் ‘பொதியமலை போதை’யிலிருந்து விடுபடவேண்டும். அதுவரையில் முறையான மேம்பாட்டு முயற்சிகளுக்கு வழிபிறக்காது. ‘திருக்குறளைப் பார்! சிலப்பதிகாரத்தைப் பார்! தஞ்சைப் பெரியகோயிலைப்பார்! காவேரி கல்லணையைப்பார்!” என்ற கூக்குரல் இன்று பொருளற்ற முறையில் எழுப்பப்படுகிறது.”

“வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக் கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

– மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள்

– இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள்

– பர்மாவில் மூட்டைத் தூக்குகிறார்கள்

– கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள்

– பாரத கண்டம் எங்கும் பரவி பிச்சை எடுக்கிறார்கள் (பக்கம் – 132)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் உலகமெங்கும் வாழ்ந்த தமிழினத்தின் அவல நிலை, இன்றைக்கு உலகெங்கும் சிதறி வாழும் பெரும்பான்மைத் தமிழரின் அடிப்படை குணமாக மாறிப் போயிருக்கிறது. திரைகடலோடியும் திரவியும் தேடு என்பதில் மட்டும் குறியாய் இருக்கும் தமிழினத்தை உலகெங்கும் பார்க்கிறோம்: நமக்கு வன்முறையிலோ, அடிமைப்பட்டோ பொருளீட்டவேண்டும், மற்றபடி இனப்பற்றாவது மொழிப்பற்றாவது. தன்னை சுய விசாரனைக்குட்படுத்தாத தனிமனிதன் மாத்திரமல்ல, இனமும் உருப்படாது.

புயலில் ஒரு தோணி நாவலாசிரியருக்கு சொந்த நாட்டின் ஏக்கங்களும் நோஸ்ட்டால்ஜியாக நிறைய வருகின்றன. சேதாரமின்றி தமது நெஞ்சத்தை அவரால் விடுவிக்க முடிவதில்லை. பாண்டியன் தொடங்கி, ஆவன்னா என்று சொல்லப்படுகிற ஆண்டியப்ப பிள்ளைவரை பலரும் ஊர் நினைவில் திளைக்கிறவர்கள். வேலையோடு வேலையாய், பெட்டியடிப் பையன்கள் அடுத்தாளாகி வசூலுக்குப் போகும் நாளையும், அடுத்தாட்கள் மேலாளாகி ஆட்டி வைக்கும் காலத்தையும் எண்ணிக் கனவு காண்பார்கள். “திருப்பத்தூரில் கார் ஏசண்டுகள் சின்ன இபுராகிமும் சாமிக்கண்ணுவும் வந்தே மாதரம் ஐயர் கிளப்பு கடைக்கு முன்னே, நானாச்சு நீயாச்சென்று கட்டி புரண்டு மல்லுகட்டியது; வலம்புரிக் கொட்டகை சுந்தராம்பாள் நாடகத்தில் புதுப்பட்டி ஆட்களுக்கும் திருப்பத்தூர்காரர்களுக்கும் இடையே பொம்பளைச் சங்கதியாய் நடந்த கலகம்; சிராவயல் மன்சு விரட்டில் மாரியூர்க் காரிக்காளையை வல்லாளப்பட்டி ஐயன் பந்தயம்போட்டு பிடித்தது போன்ற பழம் நிகழ்ச்சிகளை சலிப்பின்றி மீண்டும் மீண்டும் பேசிபேசி..” ( பக்கம் -36) அவர்கள் மகிழ்கிறவர்கள்.

“அந்தக்காலம் திரும்புமா… கையைச் சுழற்றி பாடிக்கொண்டே தெருவில் ஓடலாம். அப்பாயி செட்டியார்கடை மசால் மொச்சை! ராளிப் பாட்டி விற்கும் புளி வடை! தெருப்புழுதியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டை பெரியாயிடம் பிட்டும் அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும்.. போனதுபோனதுதான். அது ‘மறை எனல் அறியா மாயமில்’ வயது (பக்கம் -98) என்று ஏங்குகிறவர்கள்.

“இங்கினக் கிடந்துக்கிணு சீனன் மலாய்க்காரனோட மாரடிக்கிறதுக்கு வதிலாய் ஊர்ல போயி என்னமாச்சும் ஒரு தொழிலைப் பார்க்கலாம்… ஊர்ல இருக்கிறவுகள்ளாம் சம்பாரிக்கலையா.. நாமள்தான் அக்கறையில என்னமோ கொட்டிக்கிடக்குதுண்ணு வந்து இப்படி லோலாயப்படுறம்” ( பக்கம்-86) என்பது வெளிநாட்டில் வாழும் அநேகர் தவறாமல் சொல்வது.

இந்த ஏக்கத்திற்கு மாற்றாகவும், தங்கள் இனத்தின் கையாலாகாதத்தனத்தின் மீதிருந்த கோபத்திற்கு வடிகாலாவும் எதிர்பாராமல் குறுக்கிட்ட யுத்தம் அமைகிறது. போர்காரணமாக நிலைகுலைந்து கலங்கிநின்ற தென் கிழக்காசியத் தமிழரின் கவலையை ஓரளவுக்கேணும் போக்கும் அருமருந்தாக இந்தியச் சுதந்திர சங்கமும், அதன் போர் அமைப்பாக ‘ஆஸாத் ஹிந்த் ·ப்வ்ஜிலும்’ இருக்கவே ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர் பயிற்சி பெறுகின்றனர், “இந்தியச் சமுதாயத்தையே மாற்றித் திருத்தி அமைக்கபோவதாகவும் அதற்குத் தேவையான தகுதியும், திறமையும் தம்மிடம் இருப்பதாக” (பக்கம் -140) பாண்டியனும் அவனது கூட்டாளிகளும் நம்புகிறார்கள்:

“நாம் எதை நம்புவது?”

“இருள் விலகி ஒளி பிறக்குமென்பதை.”

“ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது”( பக்கம் -50) என்ற பாண்டியனுடைய விரக்தி கலந்த சிரிப்பில் ந. முருகேசபாண்டியன் சந்தித்த மதுரை ப. சிங்காரத்தைப் பார்க்கிறோம்.

இந்தியச் சுதந்திரத்தில் சுபாஸ் சந்திர போஸின் பங்கினை வரையறுக்க உரிய ஆதாரங்கள் இல்லாத நிலையில், அவருடன் தங்களை இணைத்துப் புதையுண்ட தென் கிழக்காசிய தமிழ் இளைஞர்களின் பங்களிப்பும் கவனத்தைப் பெறாமலேயே போனது மிகப்பெரிய சோகம். நாவலாசிரியர் பங்களிப்பு அவ்விழப்பை ஈடு செய்ய முயற்சிப்பது புரிகிறது. நாவலாசிரியர் தகுந்த அதற்கான ஆதாரங்களை பின் இணைப்பில் சேர்த்திருந்தால் ஓர் ஆவணமாகக்கூட இந்நாவல் பின்நாட்களில் உபயோகம் கண்டிருக்கும்.

ஜப்பானிய துருப்புகள் வருகையை வேடிக்கைப் பார்க்கவென்று மெடான் நகர வீதியொன்றில் இந்தோனேஷிய மக்கள் ஆர்வத்துடன் கூடியிருக்கிறார்கள். “அன்னெமெர் காதர் மொய்தீன் ராவுத்தரின் பெரிய கிராணி பாண்டியன் சைக்கிளை தள்ளிக்கொண்டு, வடக்கேயிருந்து கெசாவன் நடைபாதையில் வருகிறான். நிறம் தெரியாத சராயும், வெள்ளை சட்டையும் அணிந்த, வளர்ந்து நிமிர்ந்த உருவம். காலடி ஒரே சீராய் விழுந்து ஒலி கிளப்புகிறது. வாயில் தீயொளி வீசும் சிகரெட்.” என்ற கதை நாயகனின் சிக்கனமான அறிமுகத்தில் பலத் தகவல்கள் அடங்கியுள்ளன. நிறம் தெரியாத சராய், வெள்ளை சட்டை, வளர்ந்து நிமிர்ந்த உருவம், ஒரே சீராய் ஒலி எழுப்பும் காலடிகள், தீயொளி வீசும் சிகரெட், பாண்டியன் என்ற பெயருக்கான தேர்வு அனைத்திலும் ஒரு கசிவற்ற முழுமை அல்லது எல்லை மீறா கச்சிதம் இருக்கிறது. கறாரான இக்குணப்பொதிகளை சுமந்தபடி வலம்வரும் பாண்டியனை எங்கும் பார்க்கிறோம். மெடான் சந்துகள்; வட்டிக்கடை தமிழர்கள் நிறைந்த மொஸ்கி ஸ்ட்ராட்டில்; “கடமையிலிருந்து வழுவாமலே, இயலாதவர்க்கு உதவ வேண்டிய அவசியத்தை” (பக்கம்- 44), அர்னேமிய ஆற்றுப் படுகையில் செயல்படுத்துகிற நேரத்தில்; “இந்தாம்பிள இவுஹ குளிக்யணும், ஜல்தியா வென்னிபோடு” என்று பினாங் சீனி இராவுத்தர்கடை அப்துல் காதர் அன்பு உபசரிப்பிற்கு, “வெந்நீர் வேண்டாம், பச்சைத் தண்ணீரே போதும்”, என்ற நாசூக்கான மறுப்பில்; “நானோ இல்லறத்தை வெறுக்கும் இளைஞன்”(பக்கம் – 59) என்பதிலுள்ள அகம்பாவத்தில்; ஜராங் லெப்டினென்ட் ஆக மாறியது தொடங்கி கண்ணிற் தெரிகிற கொலைவெறியென பல பாண்டியன்களை சந்திக்கிறோம். “கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு” (பக்கம் – 26) என்பதற்கு அவனே சாட்சி.

காட்சியை நேர்முகப்படுத்துவதாகட்டும்:

“காலை நேரத்தில் கிட்டங்கி முழுவதும் நன்மணம் கமழும் -மல்லிகை சாம்பிராணி, அரகஜா. அன்றாடச் சலவை ஆடையும் பரக்கப் பூசிய திரு நீறுமாய்க் கைமேசைகளுக்குப் பின்னே, கடன் சீட்டுகளையும் குறிப்புப் பேரேடுகளையும் புரட்டியவாறு அடுத்தாட்கள் அமர்ந்திருப்பர். பெட்டியடி பையன் கால்களை சம்மண்மாய் இறுக்கிப்பூட்டிப் பெட்டகத்தோடு பெட்டகமாய் நேர்முதுகுடன் உட்கார்ந்து, பாங்கியில் சமால் போடுவதற்காக பணம் எண்ணிக் கண்ணாடிக் காகிதங்களில் சுருட்டிக்கொண்டிருப்பான்…..” (பக்கம்- 36)

மொழியைக் கையாளும் லாவகமாக இருக்கட்டும்:

“வானும் கடலும் வளியும் மழையும் மீண்டும் ஒன்றுகூடிக் கொந்தளிக்கின்றன. வானம் பிளந்து தீ கக்கியது. மழைவெள்ளம் கொட்டுகிறது. வளி முட்டிப் புரட்டுகிறது. கடல் வெறிக்கூத்தாடுகிறது. தொங்கான் நடுநடுங்கித் தாவித் தாவித் குதிகுதித்து விழுவிழுந்து நொறுநொறு நொறுங்குகிறது. சாகிறோம். சாகப்போகிறோம். மூழ்கி முக்குளித்து மீன் கொத்தி அழுகித் தடம் தெரியாத சாவு சாவு சாவு…”(பக்கம்- 108)

மென்மையான நகைச்சுவையாகட்டும்:

“பொண்டாட்டியக் கூப்பிடச் சொன்னா மாமியாளைக் கூட்டியாந்து விடுகிற பயல்ங்கிரது சரியாப்போய்ச்சுது. போடா கொதக்குப்பலே, போ.”(பக்கம் – 65)

“மந்தை மாடுகள் வருவதும் போவதுமே சின்ன மங்கலம் பெண்களின் காலக்கோல்… ஆனால் யூனியன் ஆபீஸ் பெரிய கடிகாரத்தை அவ்வளவு திண்ணமாய் நம்பமுடியாது. ஒரு நாள் உச்சிப்பொழுதில் அது ஆறு மணி அடித்தது..”(பக்கம் -99)

ஒரு நல்ல பின் நவீனத்து நாவலுக்குரிய அத்தனை இலட்சணங்களும் இருக்கின்றன. புயலில் ஒரு நாவல் 1964ல் எழுதப்பட்டதாக சொல்லப்டுகிறது. நாவலைப் படிக்கிறபோது சமீப காலமாக தமக்கென ஒரு அடையாளத்துடன் தீவிரமாக இயங்கிவரும் குண்ட்டெர் கிராஸ¤ம் (Gunter Grass), லூயி தெ பெர்னியேரும் (Louis de Bernieres) நினைவுக்கு வருகிறார்கள்

—————————————————————————————————————–

புயலில் ஒரு தோணி- கடலுக்கப்பால் -நாவல்கள்

விலை -180ரூ

ஆசிரியர் – ப. சிங்காரம்

தமிழினி பதிப்பகம்- சென்னை -14

 

படித்ததும் சுவைத்ததும் -2 : முஸல்பனி – தமிழவன்

உண்மை என்ற ஒன்றில்லை

புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் லெ.கிளேசியோ தனது ‘குற்ற விசாரணை நாவலுக்கு  எழுதிய முன்னுரையில் “எதார்த்தவாதத்தில் பெரிதாய் எனக்கு அக்கறையில்லை ‘(உண்மை’ என்று ஒன்றில்லை என்ற கருத்து மேலும் மேலும் என்னிடத்தில் வலுப்பெற்று வருகிறது) இந்நாவல் முழுவதும் ஒரு புனைவென்ற எண்ணத்தைக் கட்டமைக்க விரும்பும் எனக்குள்ள எதிர்பார்ப்பு வாசிப்பவரிடத்தில் சிந்தனைத் தாக்கத்தைக் குறைந்த பட்சம் தற்காலிகமாவது ஏற்படுத்தித் தருதல்”- எனக் குறிப்பிடுவார். உயிர்வாழ்க்கை என்பது ஒரு வகை புனைவு. பொய்வடிவத்தில் உண்மைகளும், உண்மையென்று பொய்களும் அல்லது இரண்டும் கலந்த கலவையாக, அருதியிட்டு கூறவியலாத தன்மையினதாக இருக்கிற நமது வாழ்க்கை சார்ந்த கலையின் எந்தவொரு வடிவமும் உண்மையை மையமாகக்கொண்டதென்பது அல்லது எதார்த்தமென வாதிடுவது கேலிகூத்தாகாவே முடியும்.

 

“அழிவை எதிர்க்க இலக்கியத்தால் மட்டுமே முடியும்” என்ற நம்பிக்கையுடன் அயர்வுறாமல் கல்விப்பணியோடு படைப்பிலக்கியத்திலும் தீவிரமாகப் பங்காற்றிவந்திருக்கிற தமிழவனின் ‘முஸல் பனி’ நாவலை வாசித்த தருணத்திலும் வாசித்து முடித்தபோதும் லெ கிளேசியோவிற்கும் இவருக்கும் மன நிலையிலும், வினைத்திட்பத்திலும், ஓர் இணக்கமிருப்பதைக் கண்டேன். நவீன தமிழும், தமிழவனும் வெவ்வேறானவர்களல்ல என்பது வெகுகாலமாகவே திடமாய் மனதிற் பதிந்திருப்பதால் இதில் வியக்க ஒன்றுமில்லை. ஏனைய துறைகளைப்போலவே இலக்கியமும் மாற்றத்திற்கு உட்பட்டது. அம்மாற்றமும் நாளை மறுநாளோ, நாளையோ, இன்று பிற்பகலோ நிகழ்ந்தால் போதும் என்பதல்ல, இக்கணமே நிகழ்ந்தாகவேண்டும் தவறினால் எப்போதும்போல காலத்தால் பின் தள்ளப்படும். இலக்கியம் என்பது ஒருமொழியின், அம்மொழியூடாக ஓர் இனத்தின் தராதரத்தை தீர்மானிக்கும் உரைகல். அந்த இலக்கியம் காலத்தோடு பயணிக்கும் திறன்கொண்டதாக இருத்தல் அவசியம்.புனைவுகள் கவிதைகள் வாசிப்பும்; ஓவியங்கள் சிற்பங்கள் புரிதலும் ஒன்றிரண்டு மனிதர்களிடம் கூடுதலாக வினைபுரிகின்றன. அவர்களின்சிந்தைகளில் கிளர்ச்சியை ஊட்டி வாசித்தவனை எழுத்தாளனாகவும்; இரசித்தவனை கலைஞனாகவும் உருமாற்றம் செய்து எழுதவும், தீட்டவும், வடிக்கவும் தூண்டுகின்றன:

 

நூலினான உரையினனான

நொடியோடு புணர்ந்த பிசியினான

ஏது நுதலிய  முதுமொழியான

மன்றமொழிகிளர்ந்த மந்திரத்தான

கூற்றிட வைத்த குறிப்பினான (தொல்-செய்யுள்165)

 

என்றெழுதிய தொல்காப்பியருங்கூட இன்றைக்கிருந்தால் கூடுதலாகச் சில வடிவங்களைக் குறித்து பேசியிருப்பார். நியாண்டர்தால் மனிதன் தொடங்கி நவீன மனிதர் வரையிலான கால நீட்சியில் இயங்குவெளியும் அவற்றின் உட்கூறுகளும், குணங்களும் தம்மைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டு வருகின்றன. இலக்கிய கோட்பாடுகளுக்கும் இவ்விதி மொழி பேதமின்றி உலகின் எப்பகுதி ஆயினும் பொருந்தும். முஸல்பனியின் நூலாசிரியர் முன்னுரையில் கூறுவதுபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான தமிழிலக்கியத்தைக் கண்டுபிடிப்பதில் விஞ்ஞான முறை, கறார் தன்மை, தமிழ்யாப்பின் உள்ளொழுங்கு, தொல்காப்பியத்தின் அகண்ட தன்மையும் முக்கியம். நவீன தமிழிலக்கிய கோட்பாடாக அவற்றைக் கையாளுவது காலத்தின் கட்டாயம். இதே நூலின் முன்னுரை இறுதியில் தெரிவிக்கும் கருத்தில்   ஓரளவு முரண்பட்டாலும் இன்றைய தமிழ்ச் சூழலில் பலரும் நினைப்பதுபோல அல்லது எழுதிக்கொண்டிருப்பதுபோல நவீன இலக்கியம் என்பது எதார்த்த மென்ற பெயரில் எட்டுகால் பூச்சிக்கு எத்தனை கால்களென்று கேட்டு பதிலைப் பெறுவது அல்ல.

 

கீழைதேயத்து படைப்பாளிகளுக்கு இம்முஸல்பனி நாவலை முன்வைத்து (நேர்வினையாகவும், எதிர்வினையாகவும்) சில பொறுப்புணர்வுகளை தமிழவன் விதைத்திருக்கிறார். கெ. அய்யப்ப பணிக்கர் தமது, ” இந்திய இலக்கிய கோட்பாடுகள்” என்ற நூலில் எழுப்பியுள்ள வினாக்கள் முஸல் பனி நாவலுக்கும்  பொருந்தும். இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ் நாவல்கள் அடிப்படையில் மூன்று உண்மைகளை மனதிற்கொண்டு வினையாற்ற கடமைப்பட்டிருக்கிறோம்:

 

  1. ஐரோப்பிய மரபு: காலனி ஆதிக்கத்தினால் கிடைத்த ஐரோப்பிய சிந்தனை மரபு
  2. பன்முகத்தன்மைகொண்ட இந்திய மரபு
  3. தமிழ் மரபு

 

ஆக இன்றைய தமிழ் நவீனமென்பது மேற்கொண்ட மூன்று மரபுகளையும் உள்வாங்கிகொண்டு செயல்படுவது. உலக இலக்கியங்களோடு இணைந்து பயணிக்க ஐரோப்பிய மரபையும், பாரம்பரிய மரபயும் இணைத்து ஒரு புதியமரபில் இயங்குவது காலத்தின் கட்டாயம்.

 

முஸல் பனி நாவல் என்ன சொல்கிறது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? ஆசிரியர் சொல்வதுபோல அதன் பூடக மொழியா? குறியீடுகளா? படிமங்களா? எடுத்துரைப்பா? இருப்பியல்வாதியான தமிழவனை பின் நவீனத்துவத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது இயலாத காரியம்.. தமிழர் வரலாற்றை, பெருமைகளை, கீர்த்திகளை, வடக்கில் இமயம்வரைசென்று கொடிநாட்டிய புகழை சங்க இலக்கியங்களும் காப்பியங்களும் பெருமிதம் பொங்க படைப்பிலக்கியத்திற்குக் கொண்டுவந்த காலம்போக, அப்பழம்பெருமைக்கு நேர்ந்த வீழ்ச்சியை, அபகீர்த்தியை, குறிப்பாக அண்மைக்காலங்களில்  தமிழினத்திற்கு இழக்கப்பட்ட அநீதி கண்டு கொதி நிலையில் சுமார் நூறுபக்கங்களில் தமிழ் தேசிய உணர்வின்பாற்பட்டு இப்படைப்பிலக்கியத்தை கொண்டுவந்திருக்கிறார். இம்முயற்சிக்கு வழமைபோல இருபத்தொன்றாம் நூற்றாண்டு மேற்கத்திய கதை சொல்லல்  உத்தி கைகொடுத்திருக்கிறது. மொழியிலும் இலக்கியத்திலும் தமிழர்கள் முன்னோடிகள். மேலை நாடுகள் தங்களுக்கான மொழியெது என்ற தேடலில் இருந்த காலத்தில் திணைகள், அகம் புறமென்று தமிழர் வாழ்க்கைச் சித்திரம் மிக நுட்பமாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு  மேற்கத்திய ஆமைகள் தொடர்ந்து முந்திக்கொண்டுவருகின்றன.

 

இருபத்தொன்றாம் நூற்றாண்டு கதைசொல்லல் என்றால் என்ன? விரல்விட்டு எண்ணிக்கொண்டிருந்த காலமோ சுவரில் பற்றுவைத்த காலமோஇன்றில்லை. இலக்கியம் என்பது மூத்தோர் சொல்லோ அற நூலோ அல்ல. தொடக்க காலத்தில் கல்வியென்பதே இம்மை மறுமை,நெறிமுறைகள் என்று இயங்கின. இன்று அக்கல்வி மொழி, அறிவியல்,வரலாறு, புவியியல், தத்துவம்போன்ற பெரும் பிரிவுகளும், நுணுக்கமான பல உட்பிரிவுகளும் கொண்டது. நேற்றைய இலக்கிய அப்பியாசம் யாப்பில்தேர்ச்சிபெற்று அறநூல்களை எழுதவும், வயிற்றுபாட்டிற்கு செல்வர்களை அண்டிப் பிழைக்கவும் செய்தது. இன்று மனித இனத்தின் அறிவு வளர்ந்திருக்கிறது, விரிவடைத்திருக்கிறது. இன்றைய இலக்கியமும் சுதந்திரமானது, எண்ணற்ற நுட்பங்களுடன் இயங்குவது. நவீன இலக்கியம் இவற்றையெல்லாம் கணக்கிற்கொள்ளாமல் முழுமை அடைய இயலாது.

 

காலனி ஆதிக்கம் நமது பண்பாட்டை புரட்டிப்போட்டதுபோலவே நமது சிந்தனையிலும் பெரும் மாற்றத்தைக்கொண்டுவந்தது. விரும்பியோ  விரும்பாமலோ மேற்கு நாடுகளின் தத்துவமும், தர்க்கமும், ஓர்மையும், கலை நுணுக்கமும், இலக்கிய பார்வையும் உலகெங்கும் வியாபித்துவிட்டன. அதன் காரணமாக இன்று உலக இலக்கியம் என்பது மேற்கத்திய இலக்கிய கோட்பாட்டின் வழிவந்தவை என்ற புரிதல் உள்ளது. தென் அமெரிக்க படைப்புகள், வட அமெரிக்க படைப்புகள்; ஆப்ரிக்க நாடுகளின் படைப்புகள்; இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் படைப்புகள் ஆகியவற்றுள் மேற்கத்திய நாடுகளின் சிந்தனைத் தாக்கங்களிருக்கவே செய்கின்றன. அதேவேளை தொல்காப்பிய்னைபோன்ற ஒரு முப்பாட்டனை பெற்றிருந்த நமக்கு மேற்கத்திய அறிவுக்கு முன்னால் முழு சரணாகதி என்பது கற்பனையிலும் சாத்தியமில்லை. அதிலும் உலகின் பெரும்பாலான படைப்பிலக்கியங்கள் அறத்தைபோதிப்பதே இலக்கியம் என்று எண்ணிக்கொண்டிருந்தவேளை நமது சங்க இலக்கியங்கள் அகம் புறமென்று மனிதர் வாழ்க்கையைப் பிரித்து படைப்பிலக்கியத்தை ஆரம்பித்து வைத்தன.

 

நண்பர் தமிழவன் ‘முஸல் பனி’, முன்னுரைக்கு எட்டு பக்கங்களை ஒதுக்கியிருக்கிறார், தனது நாவல் குறித்து விரிவாகப் பேசுகிறார். முஸல்பனி வாசகனுக்கு அதற்கான அவசியமிருப்பதாகப் படவில்லை. இப்பிரசங்கம் நாவலின் மதிப்பை கூட்டவில்லை. எனினும் அளவிற் சிறியதாக இருந்து புகழின் உச்சத்தை எட்டிய நாவல்கள் உலகில் அனேகம். படைப்பிலக்கியத்தினை அளவிட மொழியும், எடுத்துரைப்பும் சொல்லப்படும் விஷயமுமே முக்கியம், பக்கங்களின் எண்ணிக்கை அல்ல.

 

தெகிமோலா என்பதை கண்டமாகவோ, நாடாகவோ வைத்துக்கொள்லலாம். முஸல்பனியில் ஆரம்பித்து, அத்திகரிப்பா,எட்டு திசைகள், முன்னூற்றுஅறுபத்தைந்து படிகள், மண்ரா பட்டணம், காண முடியாத உண்மை, ஆதி இலக்கணகாரன் ஆகியவை  பெயர்கள்களாகவும் குறியீடுகளாகவும் வருகின்றன. அகவய நோக்கில் முதலில் கண்பார்வைக்கும் பின்னர் சிந்தனைக்குள்ளும் ஒடுங்குகிற ஒவ்வொன்றிர்க்கும் பெயர்கள் தவிர்க்க முடியாதவை. இப்பெயர்கள் பேராசியர் பஞ்சாங்கம் சொல்வதுபோல மனிதரின் நிலம் சார்ந்து இடப்படுகின்றன. இதனுடன் ஓரினத்தின் மரபையும் இணைத்துக்கொள்ளவேண்டும். இப்பெயர்கள் ஊடாகத்தான், அப்பெயரை ஒட்டிய மனிதரின் இயல்புகள் பொருளின் பண்புகள் ஆகியவற்றைக் குறித்த மேம்போக்கான கருத்துக்களை கணப்பொழுதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். அக்கருத்தியங்களை நோக்கி நம்மை முன் நகர்த்தவும் செய்கிறோம். ஆனால் அப்பெயர்கள் நிலையாய் ஓரிடத்தில் இருப்பதில்லை, தொடுவானம்போல விலகிச் செல்கின்றன. அடர்த்தியான பனிமூட்டம் நாம் அண்மித்ததும் கலைவதுபோல தோற்றம் தருவதும் நாம் கடந்ததும் மீண்டும் அடர்ந்து படர்வதுமாக ஒரு சித்துவிளையாட்டினை நிகழ்த்துகிறது. குறிப்பாகத் தமது முழுமையை பிறர்  அறிந்துவிடக்கூடாதென்கிற முனைப்புடன் அவை செயல்படுகின்றன. இக்கண்பொத்தி விளையாட்டு அபரிதமான புனைவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வழிவகுக்கின்றன. தமிழவன் இதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

 

அத்திகரிப்பாவும் அவனது நாடு தெகிமொலாவும், 3300 ஆண்டுகளுக்குப்பின்பு அவன் வழித்தோன்றலாக வருகிற முஸல்பனியும் அவர்கள் வாழ்க்கை சரிதத்தோடு பயணிக்கும் தொன்மமும், குறியீடுகளும் உருவகமும் சொற்காட்சிகளாக விரிந்து அழகுசேர்க்கும் படிமங்களுக்கும் நாவலில் பஞ்சமில்லை. அவற்றை அளவுடன் கையாண்டிருக்கலாமோ? என்ற மனக்குறையும் அவ்வப்போது தலைகாட்டுகிறது. ஆசிரியர் கூறுவதுபோல நூல் முழுக்க தமிழர் வரலாறு, அவ்வரலாற்றோடு பிணைந்த  நினைவுகள், நிகழ்வுகள், கலை இலக்கியம், சிறுமைகள், பெருமைகள் என பலவும்  நூல் முழுதும் விரவிக்கிடக்கின்றன. அத்திகரிப்பாவுக்கு எட்டு திசைகள் இருந்தாலும் அவற்றுக்கு பெயர்கிடையாதென்பதும்; மண்ரா பட்டணம் அதன்  இருமைப்பண்புகள்; ‘பாத்திக்கட்டி பிரிந்திருக்கும் மக்கள்’ (அங்கே  காதல் என்ற சொல் கலவரத்தை நிகழ்த்தும், அவர்களின் தினசரி வாழ்க்கையை படுகளமாக்கும்), ‘காண்பதற்குப் பயணம் செய்பவர்கள்’ (ஒரு முறை கண்கள் நிறைய கண்டுவிட்டால் தங்கள் இனமும் குடும்பங்களும் விடுதலை பெற்றுவிடும் என்ற பொது உளவியலை நம்பிய இனத்தைச்சேர்ந்த்தவர்கள்), ‘சூத்திரங்களில் இருந்தபடிஅழுத எழுத்துக்கள்’,முப்பத்தொரு தீர்க்கதரிசிகள் என்பதுபோன்ற சொற்றொடர்களைக்கொண்டு தமிழர் சரித்திரத்தை மீண்டும் நினைவூட்டுகிறார்.

 

தமிழவனின் இச்சோதனை முயற்சி இலக்கியத்தில் சூராவளியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, உறங்கப்பழகிய தமிழர்களில் ஒன்றிரண்டுபேராவது விழித்தெழுவார்கள் என்று நம்புகிறேன். உலகில் இன்று நவீன இலக்கியம் என்பது பிறதுறைகளைப்போலவே மேற்கத்திய தாக்கத்தோடு வளர்ந்தது. தமிழிலக்கியம் அதிலொன்று. எனினும் வளர்ச்சியில் மேற்கத்திய உலகுடன் நமது இலக்கியம் இணையாக இருக்கின்றதா என்றால் இல்லை. எடுத்துரைப்பிலும் உத்தியிலும் ஓர் இருபது முப்பது ஆண்டுகள் எப்போதும் பிந்தியவர்களாகவே இருக்கிறோம். ‘முஸல்பனி’ நாவல் அக்குறையை தவிர்க்க முயன்று வெற்றியும் பெற்றிருக்கிறது என்று சொல்லவேண்டும்.அம்முயற்சி திருவினையா என்பது அடுத்த கட்ட விவாதம். ஆனாலும் தமிழின் Avant-gardiste ஆன தமிழவனின் இச்சோதனைமுயற்சியை கவனத்திற்கொள்ளாதவர்கள் கிணற்றுதவளைகளாகத்தான் இருக்கவேண்டும்.

____________________________________________________________________

 

 

படித்ததும் சுவைத்ததும் – 1

தடம் பதித்த சிற்றிதழ்கள்வே. சபா நாயகம்

நெரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையை உலகிற்குக் கொடுக்கும் பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, .  இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம்,, ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம் ஏதோ ஒரு வேகத்தில் தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமைகொடுத்து,  நவீன தமிழிலக்கிய மரபுப்படி  இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும் வசைபாடிவிட்டு, முடியாதவர்கள் இரண்டொரு மாதங்களிலும்  முடிந்தவர்கள் இரண்டொரு வருடங்ககளிலும் அதன் ஜீவனை முடித்திருந்தால், விட்ட ஜீவனுக்குப் பெயர் சிற்றிதழ்.

நண்பர்  சு. ஆ. வெங்கிட சுப்புராய நாயகர்  எங்கோ எப்போதோ  படித்ததாகச்  அடிக்கடி சொல்வார்:

“இந்தப் பத்திரிகையில் இவனைக் கிழி

அந்தப் பத்திரிகையில் அவனைக் கிழி

இருவரும் போடவில்லையெனில்

நீயே ஒரு பத்திரிகைத் தொடங்கி

எல்லோரையும் கிழி ”

திரு வே. சபா நாயகம் அவர்களின் தடம் பதித்த சிற்றிதழ்கள் கட்டுரைத் தொகுப்பைப் படித்தபோது மேலே சொல்லப்பட்டது  உண்மையென நிரூபணம் ஆயிற்று. பெரும்பாலோருக்கு  சிற்றிதழ் என்பது  தன்னையும் தன் எழுத்தையும் முன்னிலைப் படுத்தவும்,   களத்தில் இருக்கிற, சகச் சிற்றிதழ்களை,சக எழுத்தாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பழி தீர்த்துக்கொள்ளும் ஆயுதம், சிலருக்கு, எலிவளையென்றாலும் தனிவளையெனில் சுதந்திரமாக ஒன்றைச் சொல்லமுடியும் என்ற ஆத்ம திருப்தி.  காரணங்கள்  எதுவாயினும்  தரமான சிற்றிதழ்கள் மற்றும்  இணைய இதழ்களால், நவீன தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல மரபிலக்கியத்திற்கும் புதிய வாசனையும், புதிய பார்வையும்  கிடைத்திருக்கிறது. சிற்றிதழ்களால் அடையாளம் பெற்றவர்களை வெகுசன இதழ்களும் தேடிவந்து கொண்டாடுவது சிற்றிதழ்களுக்குக் கிடைத்திருக்கிற பெருமை. இன்றைக்கு காலச்சுவடு, தீரா நதி, உயிர்மை, உயிரெழுத்து, காக்கைச்சிறகினிலே, சிற்றேடு, மணற்கேணி, மணல்வீடு, திசையெட்டும் என பட்டியலிடவேண்டிய இதழ்கள் ஏராளம்,  தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களின் இருத்தலைத் தெரிரிவிக்க தமிழர்கள் வாழ்கிற நிலப்பரப்பெங்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றுடன் இணைய இதழ்களையும் மறக்காமற் கணக்கிற் கொள்ளவேண்டும். இவை  அனைத்துமே அதனதன் பாதையில்  நவீனத் தமிழை வளர்த்தெடுக்கின்றன.

இருந்தபோதிலும் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயிரம் பிரதிகளை அரசு நூலகங்கள் வாங்க முடிந்தால் பெரிய வரம். சந்தாவைச் செலுத்திவிட்டு ஆளுக்கொரு கவிதையுடனோ படைப்புடனோ  சந்தா செலுத்தும் வாசகர்கள் எழுத்தாளர் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்  போடத் தவறினால், சந்தாவைப் புதுப்பிக்காமல் போகலாம். எதிரி இதழில்  எதையாவது எழுதலாம் அல்லது வேறொரு சிற்றிதழையே தொடங்கலாம். வாசகர் கிடைத்தாலும் எழுத்தாளருக்குப் பற்றாக்குறை,   ஆசிரியரே எத்தனைபெயரில் எழுத முடியும். ஒருசில இதழ்கள் சாமர்த்தியமாக   நிலைய வித்துவான்களை ஏற்பாடு செய்துவிடுகின்றன. அடுத்து,  அச்சடித்த இதழ்களை விற்று முதல் காணவேண்டும். நிதி ஆதாரப் பிரச்சினை சிற்றிதழ்களுக்குத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றன. விற்காத இதழ்களை இலவசமாகக் கொடுத்தாலும், அடுத்த இதழையாவது காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது.

கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள்  சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன.  புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு  சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது  பிறகு  நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட  இன்றைய  சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது.  இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத   சிற்றிதழ்கள்  வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது  சந்தோஷப்படும் நிலையிலில்லை.  இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்

இக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர்  திரு வே. சபாநாயகம். சிறுகதைகள்,  நெடுங்ககதைகள், நாவல், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறுவர் கதைகள், திறனாய்வுகள் எனப் படைப்புலகில் அகலக் கால் வைத்திருந்தாலும்  பாதங்களை அழுந்த ஊன்றியவர். ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவர். கவிதை  ஒவியம் ஆகியவற்றிலும்  தேர்ந்தவர்  விருதுகள் பரிசுகள் என வாங்கிக் குவித்திருந்த போதும், அவரது எளிமை என்னை வியப்பில் ஆழ்த்தும். அவருடைய “எழுத்துக் கலை பற்றி இவர்கள்” என்ற தொடரையும், “எனது இலக்கிய அனுபவங்கள்”  என்ற கட்டுரைத் தொடரையும் விரும்பி பலமுறை வாசித்திருக்கிறேன்.  அதே ஆர்வத்துடனேயே ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’- என்ற இக்கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன், தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை.

இக்கட்டுரைத் தொகுப்பில் இருபது சிற்றிதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதழுக்கொன்று என இருபது விரிவானக் கட்டுரைகள். அதென்ன  இருபது சிற்றிதழ்கள், மற்றவை என்ன ஆயிற்று? என்ற கேள்வியை ஆசிரியர் நம்மிடம் எதிர்பார்த்ததைப்போல::

“மணிக்கொடி தொடங்க்கி, சமீபத்தில் நின்றுபோன சுபமங்க்களாவரை இலக்கிய ஆர்வமும் எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சிலகாலம் வந்து, பிறகு ஏதேதோ காரணங்களால்  நின்று போன இலக்கிய பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக, இலக்கிய உலகில் தடம்பதித்து, இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்று போன காரணங்க்களையும் இப்போது எண்ணிப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.” என தகுந்த பதிலையும் கூறிவிடுகிறார்.

பொதுவாக இதுபோன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைக்கு  சொல்லப்படும் விடயங்களைக்காட்டிலும் எழுதின்றவரின்  ஞானத்தை முன்னிலைப்படுத்தும்  நோக்கம் கூடுதலாக இருக்கும் (கல்விமான்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எழுதுகிறார்களாம்) அதனாலேயே  நம்மைப்போன்ற வாசகர்களை மிரட்டுவதற்கென்ற மொழி நடையைத்  தேடிப்பிடிப்பார்கள். வே. சபா நாயகம்  எழுத்து அப்படி அல்ல.  தவிர அவருடைய கட்டுரைகளில்  பாகுபாடுகளில்லை. அவரால்  நடை, கசட தபற, இலக்கியவட்டம், ஞானரதம்  வானம்பாடியென  எழுதுகிறபோதும் சரி, வண்ணங்கள், களரி, இன்று என எழுதும்போதும் சரி  சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டிச் சொல்ல முடிந்திருக்கிறது.  முழுமையான தகவல்கள் எனச் சொல்லக்காரணம், ஒவ்வொரு சிற்றிதழுக்குமென்றும் எழுதப்பட்ட கட்டுரையில் முதல் இதழ் வந்த ஆண்டு, எத்தனைப் பக்கங்கள்,  எத்தனை இதழ்கள், என்ன விலை, யாரால் தொடங்ககப் பட்டது?  இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார்?  எந்தெந்த படைப்புகள் கவனம் பெற்றன  போன்றவிபரங்களைச் சேகரித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மிகவும் கடுமையானப் பணி. ஒப்புக்காக எழுதப்பட்டதல்ல. இத்தகைய புள்ளிவிவரங்களுக்கிடையிலும் , எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டைகளையும் மறைக்கவில்லை. சொல்லப்பட்டிருக்கிற சிற்றிதழ்களில் நடை, கசட தபற, அன்னம் விடு தூது, இலக்கிய வட்டம், வானம்பாடி, சுட்டி, கவனம், ஞானரதம், சுவடு ஆகிய இதழ்கள் முக்கியமானவை. இருபது இதழ்களிலிருந்தும் , இன்றிருக்கும் சிற்றிதழ்கள் பாடம் கற்கவேண்டியவையும் கற்கக்கூடாதவையும்   நிறையவே இருக்கின்றன.   இவற்றைத் தவிர இந்த இருபது இதழ்களுக்கும் கீழ்க்கண்ட  ஐந்து விடயங்க்களில் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது:

அ.       இதற்கு முன்பு வேரொரு சிற்றிதழில் பணியாற்றியவர் அல்லது பணியாற்றியவர்கள்  அங்கிருந்து வெளியேறி புதிய இதழினைத் தொடங்க்குகிறார்கள்.

ஆ.      தொடங்கும் அனைவரும் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தப் போவதாகச் சூளுரைக்கிறார்கள்.

இ.    இலக்கிய சர்ச்சைகள் என்ற பெயரில்  எழுத்தாளர்கள் கட்டிப் புரளுகிறார்கள்.

ஈ     தீவிர இலக்கியம் என்பதே கவிதைகள் என அதிகம் விளங்கிக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

உ.      நிதி ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக முன்வைத்து கடையை மூடுகிறார்கள்.

நாமறிந்த மூத்த படைப்பாளிகள் பலரின் பயிற்சிக் களமாக சிற்றிதழ்கள் இருந்துள்ளன.  நடை இதழில் சி.மணி, ஞானக்கூத்தன்போன்றோரையும் – “ஞானக்கூத்தனின் பெயர் பிரபலமாவதற்குக் காரணமான பல சிறந்தக் கவிதைகள் நடை’ யில் வந்தன” எங்கிறார், வே.ச. 1970ல் வெளிவந்த ‘கசடதபற’ இதழில் சா. கந்தசாமி நா.முத்துசாமி, அசோகமித்திரன் முதலானப் பெயர்களைச் சந்திக்கிறோம்.  கசட தபற இதழில் ஞானக்கூத்தனைத் தவிர்த்து இன்று புதுக்கவிதயென்றால் நினவுக்கு வரக்கூடிய ஆத்மா நாம், கல்யாண்ஜீ,, கலாப்பிரியா, தேவதச்சன் என பலரும் எழுதியிருக்கின்றனர்.

வானம்பாடி கவிஞர்கள் ஒத்துழைப்புடன் 1984ம் ஆண்டு வெளியான அன்னம் விடுதூது கவிஞர் `மீராவின் பொறுப்பிலும், கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் , கவிஞர் அழ்ப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும் கொண்டிருந்தபோதிலும், “ அரசியல் விமர்சனம், இலக்கிய விளக்கம் , அறிவியல் சாதனைகள், சமூகப்பிரச்சினைகள் , ஓவியம்,  நாடகம், சினிமா………இலக்கிய அக்கப்போர்கள், நூல் மதிப்புரைகள், கவிதைகள் கதைகள் என்று ஒன்று பாக்கியில்லாமல் திகட்டத் திகட்டவாசகர்க்கு ‘ விருந்தளித்தது என்கிறார்  வே.சபா நாயகம்.  இன்றைய தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் எழுதியிருந்தபோதிலும் இச்சிற்றிதழில் “கவிதைகள் கட்டுரைகள் அளவிற்கு அதிகம் பெறவில்லை” என்பது கட்டுரை ஆசிரியருக்குக அன்னம் குறித்த  குறை இருந்திருக்கிறது.

“இலக்கிய வட்டம் “ முழுக்க முழுக்க க.நா.சு. வை முன்னவராகவும் மூலவராகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது.  நகுலன், டிகே துரைசாமி என்ற பெயரிலும் கதை கவிதை எழுதியாக அறிகிறோம். இவர்களைத் தவிர கிருஷ்ணன் வம்பி, நசிகேதன், சுந்தர ராமசாமி ஆகியூரது படைப்புகளும் இடம் பெற்றிருந்தன எங்கிறார் வே.சபா நாயகம்.

இத்தொகுபிலுள்ள முக்கியமான கட்டுரைகளில் வானம்பாடி சிற்றிதழ் பற்றியதுமொன்று   ‘மானுடம் பாடும் வானம்பாடி’ எனத் தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்ட இதழில் புவி அரசு, ஞானி, இளமுருகு, அக்னிபுத்திரன் சிற்பி, மு.மேத்தா பிரபஞ்சன், தமிழன்பன், கல்யாண்ஜி, தமிழவன், பா. செயப்பிரகாசம் சிதம்பர நாதன் என நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.

இப்பட்டியலில் அப்போதே இலக்கியத்துடன் சமூக பிரக்ஞையைக் கையாண்டதற்கு உதாரணம்போல  ‘சுட்டி’  என்ற சிற்றிதழும் இடம்பெற்றுள்ளது. . இவ்விதழ் எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கிறது ஆசிரியர் நாராயண பாரதி. இதழ் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் எவரையும்  கடுமையாக விமர்சித்ததின் பலன் 950 பிரதிகளுடன் தொடங்கிய இதழ்  ஆறே மாத்தில் 12000 இதழ்களை எட்டி 107வது இதழை 25000 பிரதிகளை விற்க முடிந்த சாதனைக்குப்பின் சந்தாதாரர்களுக்குக் கூட த் தெரிவிக்காமல் மூடிவிட்டார்களாம்.

இச்சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களில்  முக்கியமானது, எழுத்தாள நண்பர்களுக்கிடையே  நடந்த இலக்கிய சர்ச்சைகள். எந்த அளவிற்கு இலக்கியத்திற்கு முக்கியம்கொடுத்தனவோ  அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் குறிப்பாக  கசட தபற போன்ற பெரிய இதழ்கள் ஆர்வம் காட்டியுள்ளது சுவாஸ்யமான தகவல். உலகமெங்கும் இலக்கியவாதிகளிடையே சர்ச்சை என்பது அவர்கள் இரத்த்தத்தில் ஊறியதாக கடந்தகாலத்தில் இருந்திருக்கிறது.  க.நா.சு. வின் இலக்கியவட்டம், வானம்பாடி ஆகிய இதழ்களில் பங்க்காற்றியவர்களும் சர்ச்சைகளில் ஆர்வம் காட்டி யிருக்கிறார்கள்.

சிற்றிதழ்களைப் பற்றியத் தகவல்களை குறையின்றி திரட்டித் தருவது நோக்கம் என் கிற போதும் அவற்றால்  நவீனதமிழிலக்கியம் அடைந்த பலனைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதைப்போல, வே. சபா  நாயகம் சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் அவற்றைப் பாராட் ட த் தவறுவதில்லை.

“மிகுந்த உழைப்பு மேற்கொண்டு சி. மணி யாப்பியம் என்ற 50 பக்கத்துக்கும் மேற்பட்ட யாப்பிலக்கணம் பற்றிய எளிமையான பயனுள்ள இலவச இணைப்பை பொருளாதாரப் பிரச்சினையிருந்தும் நடை மூன்றாவது இதழுடன் ‘செல்வம்’ பெயரில் எழுதியளித்திருந்தார்…… நடையின் சாதனைகளில் முக்கியமானதாக இதைச் சொல்லாம் “ (பக்கம் 11)

“கசட தபற” சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பாகப் புதுகவிதைக்கு  அது நிறையவே செய்த து” (பக்கம் 16)

“ஆரோக்கியமான அருமையான விஷயங்க்களை வெளியிட்டு ஒட்டுமொத்தம் பாராட்டுதல்களுக்குள்ளாகி வீறு நடை போட் ட அன்னம் “ (பக்கம் 33)

“ ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடனேயே அதன் இலக்கியத் தரம் தெரிந்துவிடும் என்ற கருத்து உண்டு. அப்படி முதல் இதழைப் பார்த்த துமே சாதனை புரியும் சாத்திய கூறுகளுடன் ‘அஃக்’ என்றொரு இலக்கியப் பத்திரிகை” (பக்கம் 59)

திரு.வே. சபா நாயகத்தின் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான இதழ்கள் அனைத்தும் இன்றைய நவீன தமிழிலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமானவை.  ஏன் அவை நின்றுபோயின என்பது பலரும் அறிந்த து தான் , தவிர தொடங்ககும்போது கொள்கை முழக்கத்துடன் வந்தவை என தெரிகிறது. அவற்றைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபங்கூட அவர்கள் தொடர்ந்து இதழை நடத்த  முடியாமற்போனதற்குக் காரணமாக இருக்கலாம்.  புதிதாய் இதழ் தொடங்குகிறவர்கள்  இந்த நூலிலிருந்து கற்பதற்கு,  தெரிந்துகொள்வதற்கு  நிறைய இருக்கின்றன. இன்று வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும்  சிற்றிதழ்களோடு இத்தொகுப்பிலுள்ள பழையச் சிற்றிதழ்களின் செயல்பாடுகளை  ஒப்பிட்டு பாருங்கள். நல்ல விடயங்களைச் சொல்ல சாத்தியமெனில் சில சமரசங்களும்  செய்துகொள்ளுதல் அவசியம். இறுதியாக வெற்றி பெற்ற சிற்றிதழ்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: சினிமா அரசியலுக்கு ஒதுக்கியதுபோக ஒன்றிரண்டு பக்கங்களை  வே. சபா நாயகம், பாரதிபுத்திரன், பக்தவச்சல பாரதி, பழ. அதியமான், க.பஞ்சாங்கம் இன்னும் இது போன்றோரின் நூல்களைக் கவனத்திற்கொள்ள, வாசகர்களிடம் கொண்டுசெல்ல  ஏதேனும்  செய்யுங்கள். இவர்களின் உழைப்பையும் சிற்றிதழ்கள் கவனித்தால்தானுண்டு.

 

————————————————————————

 

 

 

ரா. கிரிதரன்

Guirtdaran.jpgரா. கிரிதரன் இலண்டன் வாழ் இளைஞர், இளைய தலைமுறை எழுத்தாளர். ஒரு பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளியாக வருவார் என்ற நம்பிக்கை. ஆங்கிலம், தமிழ் இருமொழியிலும் எழுதக்கூடிய வல்லமை இவருக்கு உண்டு. இத்தகைய இளைஞர்களால் தமிழ் புனைகதை உலகம் ஊட்டம்பெறும்.

‘அரூ’ என்ற அறிவியல் புனைகதைகளுக்கான இணையதளம் அண்மையில் நடத்தியபோட்டியில்,  பங்குபெற்ற அறுபதுக்கும் மேற்பட்டஅறிவியல் புனைகதைகளுள், பரிசுபெற்றுள்ள மூன்றுகதைகளில் ஒன்று இவருடையது. தேர்வாளர்களில் ஒருவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

மேலும் பல வெற்றிகளை ஈட்ட உளமார வாழ்த்துகிறேன்.

 

பல்கலனும் யாம் அணிவோம்

ரா. கிரிதரன்

அக்கா, அக்கா?

ம்..சொல்லு

புது வருடத்தீர்மானம் ஏதாவது எடுத்திருக்கியா?

ஆமாம்

என்னது?

என் கண்மணியை விட்டுப்பிரியமாட்டேன்னு!

*

என் இமைக்குள் கண் உருள்வதை உணர்ந்தபோது தூங்கி எழுந்ததை அறிந்தேன். இரண்டு நாட்களுக்கு முன் கண்ணுக்குள் செலுத்திய சிறிய நுண்ணிகள் பாப்பாவை விரியச்செய்திருந்தன. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் கண்ணைத் திறந்துவிடலாம் எனச் சொல்லியிருந்த டாக்டர் ரே இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பச் சொல்லிவிடுவார். இதுக்குச் சந்தோஷப்படுவதா எனத் தெரியவில்லை. வீட்டில் விநாஸ் காத்துக்கொண்டிருப்பான் எனும் நினைப்பே பொங்கி எழச்செய்தது. கண்ணீர் கட்டுக்கடங்காமல் என்னை மீறி வழிந்தது. தானாகக் கண்ணைத் துடைக்கச் சென்ற கையை ஆல்ஃபா பிடித்திழுத்துக் கண்ணிலிருந்து நீரை இழுத்துக்கொண்டது. மிகக்கச்சிதமான இழுவை. கண் சிமிட்டுவது போல வேகமாக நீர் காய்ந்துவிட்டது. நான் எழுந்து ஓட முற்படும் எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். விநாஸை நினைத்து என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

“அவளைப் பாருங்கள். முகத்தில் தசை துடிக்கிறது”, அம்மா என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றாள். கண்ணீர் கரைந்து சென்ற தடம் அவளது கன்னத்தைப் பளபளப்பாகக் காட்டியது.

“சரோ..”, அம்மாவைச் சமாதானப்படுத்திய அப்பாவின் மிருதுவான குரலைக் கேட்டபின்னும் எழ இயலாத என் மீது மிகுந்த ஆத்திரம் வந்தது.

என் கண்கள் இதுவரை மனிதர்கள் கண்டிராத வண்ணங்களையும் பரிமாணங்களையும் காட்டும். இதுவரை மனிதர்கள் கண்டது வெறும் பொம்மலாட்டப் படங்கள் மட்டுமே. முப்பரிமாணங்கள். மரத்தைக் காணும்போது பச்சையின் பல ஆழங்களையும் மரப்பட்டைகளின் ரேகைக்கோடுகளையும் பப்பாளிப்பழம் போல என்னால் துல்லியமாக உணர முடியும். இவையனைத்தும் டாக்டர் ரே என்னிடம் சொன்னவை.

“டாக்டர், வீட்டுக்கு அழைத்துச்செல்ல முடியுமா?”, அப்போது அறைக்குள் நுழைந்த டாக்டர் ரேயிடம் அம்மா கேட்டாள்.

கண்கள் மெல்லத் துடிப்பை அதிகரிக்க முயன்றபோது நான் கட்டுப்படுத்திக்கொண்டேன். நான் எழுந்ததை அவர்கள் அறியக்கூடாது. உடனடியாக அந்த எண்ணம் எத்தனை முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தேன். ஆயிரமாயிரம் மைல்கள் கடந்து, கிட்டத்தட்ட காலத்தை முன்னோக்கிக் காணும் கண்களை அடைந்திருக்கும் இயந்திரமான ஆல்ஃபாவுக்கு நான் எழுவதற்கு முன்னரே என்னை எழச்செய்யும் மின் தகவல் போய்ச்சேர்ந்திருக்கும்.

முன் ஒரு நாள் அப்பாவுடன் புராதனமான கோயில் வளாகத்துக்குச் சென்றபோது, “மயக்கும் கண்களைப் பாருடா. எப்படிச் செருகிக்கிடக்கு பார். தூங்கறான்னு நினைச்சியா? மனசு அப்படியொரு விழிப்போடு இருக்கு.” என்பார். “மனசா?”. “ஆமாம்,” எனச் சொன்னவர் என் கண்களை நேராகப் பார்க்கவில்லை. மனசு என்பது புராணப்பொருள். இன்றைக்கு மனசுக்குள் இருக்கும் பல அடுக்குகளுக்கு இடையே செய்தி பகிர்ந்துகொள்ளும் விதம் பற்றி எல்லாருக்கும் தெரியும். அப்பாவிடம் கேட்டால், அந்தச் செய்திகளை முழுமையாகத் தெரிந்துகொண்டால்கூட மனதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்பார். மனசு எனப் பேசுவதுகூடப் பழைய பாணி ஆகிவிட்டது. பல தலைமுறைகளுக்கு முன்னர் வாழ்ந்த மூத்தக்கிறுக்கர் வரிசையில் உங்களைச் சேர்த்துவிடுவார்கள்.

“இன்னும் சில நாட்கள் இவள் இங்கே இருக்க வேண்டும். ஜனனிக்கும் எங்களுக்கும் தேவையான சில பரிவர்த்தனைகள் செய்ய வேண்டியுள்ளது”, என்றார்.

ஆழ்நிலை உறக்கத்தில் இருந்தபோதும் என் முகத்தில் சந்தோஷம் பரவியது. விட்டால் கட்டிலிலிருந்து குதித்துப் பத்து முறை மருத்துவமனையைச் சுற்றி குட்டிக்கரணம் அடித்திருப்பேன்.

“உங்க மகளுக்கு..மன்னிக்கவும் மகனின் தகவல் இணைப்புகள் எங்க வோர்டக்ஸோடு சேரவில்லை. வோர்டெக்ஸ் தயாராக உள்ளது. முதல் முறை அதனுடன் இணையும் கான்சியஸ்னஸ் முழுமையாகச் சேர்ந்த பின்னரே தகவல் பரிமாற்றத்தைத் தொடங்க முடியும். இன்னும் ரெண்டு நாட்கள் ஆகும் என நினைக்கிறேன்”, ரே யோசித்துப் பேசுவது போல ஒவ்வொரு வார்த்தையாக மெதுவாகப் பேசினார்.

“இங்குக் கொண்டுவருவதற்கு முன்னர் இணைப்பைச் சரி பார்த்திருக்க முடியாதா?”, அம்மாவின் குரல் கோபத்தைக் காட்டியது.

“பொதுவாக வீட்டிலிருக்கும்போதே சோர்ஸின் மூளையிலிருக்கும் தகவல்களை வோர்டெக்ஸ் பகுக்கத் தொடங்கிவிடும்”, மன்னிப்பு கேட்கும் தொனியில் ரே பேசினார். “இப்போதெல்லாம் ஆல்ஃபாக்கள் மனிதர்களுடன் ஜோடியாக வேலை செய்கின்றன. அதனால் தாமதம் இருக்கலாம்”.

தூரத்திலிருந்து சிம்பன்சிகளின் சிரிப்பொலி பலமாகக் கேட்டது. என் இடது கண் துடித்தது.

டாக்டர் ரே ஆல்ஃபா தகவல் மையத்தின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர். எல்லா நிகழ்வுகளையும் போல ஆல்ஃபாக்கள் தாமதமாகவே தீவுக்கு வந்து சேர்ந்திருந்தன. இயந்திரங்களுக்கென நகரங்கள் உருவான பின்னர், தேவை ஏற்பட்டாலொழிய மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அவை வருவதில்லை.

கடல்கொண்ட நிலம் வரித்துச்சென்றதை கிழக்காசியத் தீவுகளில் கொட்டித்தீர்த்தபின் இருநூறு ஆண்டுகளுக்குப் பின் வந்த மற்றொரு பெரிய கடற்கோள் இந்நிலத்தைத் தாய் நிலத்திலிருந்து பிரித்திருந்தது. பருவப்பெண்ணின் முகக்கொப்புளம் போல இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மேலெழுந்தது இந்தப் புது மதுரை எனும் தீவு. அசுர உணவுக்குப் பின் இயற்கை கை உதறிய பல மண்மேடுகள் ஆழங்களிலிருந்து மேலெழுந்து புதுத் தீவுக்கொத்துக்களாக உருவாயிருந்தன. அத்துடன் ஆழத்திலிருந்து வந்த புது உயிரினங்களும். இங்கிலாந்தின் டார்வின் ஆராய்ச்சி மையத்திலிருந்து வந்த ஆய்வாளர்களுடன் ஆல்ஃபா இயந்திரங்களின் புது உலக நிறுவனமும் இணைந்து இத்தீவுகளில் தோன்றிய புது கனிமங்களையும், ஆழ் கடல் பிராணிகளையும் ஆய்வு செய்தனர்.

விக்டோரியா ஆய்வு மையமும் ஆஸ்திரேலியா அரசும் இணைந்து உருவாக்கிய முதல் ஆல்ஃபாக்கள் கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்கு முன்னர், அதாவது இருபத்து இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் பியோர்டோ ரீக்கா திட்டக்குழுவின் மேற்பார்வையில் விளைந்தவை. ஆல்ஃபாக்கள் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை இயந்திரங்கள். அதற்கு இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவான நம்பிக்கை இயந்திரங்கள் (அ) உதவி இயந்திரங்களின் அடுத்த தலைமுறை.

கிட்டத்தட்ட உலகின் அனைத்து அறிவுஜீவிகளும் ஒன்று கூடி எடுத்த இயந்திரப்பிரகடனம் ஐசக் அசிமோவின் மூன்று விதிகளுக்குப் பின்னர் அடுத்த தலைமுறை உயிர் பற்றிய மனிதச் சிந்தனையில் பெரிய மாற்றத்தை உருவாக்கியது.

1. மனிதர்கள் உருவாக்கும் இயந்திரங்கள் இப்பிரபஞ்சத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றும் விதிக்குக் கட்டுப்பட்டவை.

2. இயந்திரங்கள் மனிதனின் அடுத்தகட்டம். ஜடப்பொருளான உடலின் எல்லைகளைக் கடப்பதற்காக மட்டுமே மனிதனால் உருவாக்கப்படுபவை. மனிதனுக்கு மாற்றாக அல்ல.

3. இயந்திரமும் மனிதனும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. எப்போதும் அவை மற்றொன்றை அழிக்க முடியாது.

டாக்டர் ரே கிளம்பியதும் நான் தூங்கவேண்டும் என்பதற்காக அம்மாவும் அப்பாவும் கிளம்பிவிட்டனர். அம்மா வாசலை அடையும்வரை என் அறை இருந்த திசையைத் திரும்பிப்பார்த்தபடி நடந்திருப்பாள். எனக்காவது அறிவியல் இருக்கிறது, அவளுக்கு உங்க ரெண்டு பேர் மட்டுமே உலகம் என அப்பா அடிக்கடி சொல்லுவார். நானும் அப்பாவைப்போலத்தான் அறிவியலில் மட்டும் ஆர்வம் உள்ளவள் என நினைத்துக்கொண்டிருந்தேன் – தம்பி விநாஸ் வரும்வரை.

விநாஸ். என் தம்பியானாலும் வயது வித்தியாசத்தினால் நான் அவனுக்கு இன்னொரு அம்மா என அம்மா சொல்லுவாள். ஆனால், எனக்கென்னவோ பத்து வயது வித்தியாசம் என்பது ஒரு வயதாகக் குறைந்திருந்தாலும் விநாஸ் என் கண்மணிதான் என நினைப்பேன். அவன் பிறந்த பின்னர் நான் தனியாக இருந்த நினைவே இல்லை. கடந்த ஒரு நாளாக இப்படிச் சிறைக்கூடம் போலிருக்கும் மருத்துவமனையில் கிடப்பதுதான் நான் இந்தப் பத்து வருடத்தில அவனை முதல் முறை பிரிந்திருப்பது.

என்னால் தூக்கத்தில்கூட மூன்று விதிகளையும் சொல்ல முடியும். அப்பாவுடன் அடிக்கடி இதைப்பற்றி விவாதித்திருக்கிறேன்.

“அது எப்படி நம்மைவிட அதிகமாகச் சிந்திக்கும் இயந்திரங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்?”

“நம் நனவிலியைப் பகுத்து ஆராய்வதை நாம்தான் ஆல்ஃபாக்களுக்குக் கற்றுக்கொடுத்தோம். இப்படி யோசித்துப்பார், நம் கண்கள் ஒவ்வொருமுறை சிமிட்டும்போது லட்சக்கணக்கான தகவல்களை உள்வாங்குகின்றன. அவற்றில் ஒரு சதவிகிதம்கூட நாம் பயன்படுத்துவதில்லை. நண்பன் வருகிறானா என ஜன்னலிலிருந்து எட்டிப்பார்க்கிறோம். அவனது உருவத்தோடு வெளி உலகம் முழுவதும் நம் பார்வைக்குக்கிட்டுகிறது. அத்தகவல்களை நாம் உள்வாங்கும்போது ஏற்படும் அனுபவம் பெரும்பான்மையில் வீணான அனுபவமே. சிலருக்கு அவை எங்காவது சென்று அமர்ந்துகொண்டு பிறகு வேறொரு வடிவில் வெளிப்படும். இவற்றை ஏதாவது இயந்திரம் அலசும்போது நமது ஆழ் மனதின் பிரக்ஞை மற்றும் நனவிலி எப்படி அமைந்திருக்கு எனப் புரிந்துகொள்ளும். ஆனால் நமது ஆல்ஃபாக்களால் இன்னும் நம் மனம் இயங்குவதைப் பிரதி செய்ய முடியவில்லை”

அவர் சொல்வதை வேண்டுமென்றே எதிர்ப்பது போல, “மனிதனுக்கே தேவையில்லாத அந்த தகவல்களை இயந்திரம் எடுத்து என்ன செய்யப்போகுது? அதான் வேஸ்டா இருக்கு ஆல்ஃபாக்கள்”, எனச் சீண்டினேன்.

“நாம் தூங்கும்போது மூச்சு, உடம்பின் பாகங்கள், கனவு நிலை எல்லாமே நனவிலி கண்காணிச்சுகிட்டே இருக்கு. சொல்லப்போனா, வெளிப்படையா நமக்கு இருக்கும் உள்ளீட்டுப் பாகங்களைவிட, நம் உடம்புக்கு உள்ளே ஆயிரம் மடங்கு பிரபஞ்சமா சிஸ்டம் விரிஞ்சு கிடக்கு. கிட்டத்தட்ட அண்டமே நம் உள்ளே இயங்கறா மாதிரி. இதை நமது பழைய பாடல்கள் அண்டமும் பிண்டமும் என ஆகப்பெரியதையும் ஆகச்சிறியதான அணுவையும் ஒப்பிட்டுப்பேசியிருக்கு. நம் ஆழ்மனம் செயல்படும் விதம் அது. நமது ஒவ்வொரு அணுக்களும் தகவல்களைச் சேகரிச்சுகிட்டே இருக்கும். சொல்லப்போனா, காந்தம் போலத் தகவல்கள் சேகரிக்கும் கிடங்குதான் நமது உடல். அதனாலதான் மூளை இறந்தபின்னாடிகூடப் பல சமயங்களில் நமது ஒவ்வொரு பாகமும் செழிப்பா செயல்படுது. நம்மால் ஆல்ஃபாக்களுக்கு இந்தத் தன்னுணர்வை முழுமையா கொடுக்க முடியலை”

“துரதிர்ஷ்டம்தான்”

“நம்ம அதிர்ஷ்டம்னும் சொல்லலாம். மனிதனும் இயந்திரங்களும் சுமுகமாக உலவும் எதிர்காலத்தை நம் ஆய்வாளர்கள் கனவு கண்டாங்க. ஆனால் நன்மை இயந்திரங்கள் மட்டுமே உருவாக்கணும் என பியோர்ட்டோ ரீக்கோ மாநாட்டில் முடிவெடுத்த பின்னர், பல அரசுகள் ரகசியமாக அவற்றை மீறத்தொடங்கின. எல்லாம் அதிகாரப் போதைதான் காரணம். எத்தனை முயன்றும் அவற்றால் மனிதனின் தன்னுணர்வை உருவாக்க முடியலை. ஆல்ஃபாக்களின் வோர்டெக்ஸ் மையம் போல இதுக்கு முன்னால் இருந்த செண்டேரியன் மையத்தில் மனித மூளை இருந்த புரதச்சத்துக்களையும், அமிலங்களையும் கொண்டு மூளையின் பிரதியைக் கச்சிதமாக உருவாக்கினர். மூளையில் இருக்கும் உடலின் வரைபடம், ரசாயன மின்னணு இயக்கிகள், நீயூரான்கள் எனும் தகவல் பரிமாறும் இணைப்புகள் எனச் செயற்கை மூளை கச்சிதமாகத் தயார். ஆனால் தன்னுணர்வு அதையும் மீறியது. அது இல்லாது மூளை மண் போல உட்கார்ந்திருந்தது. தன்னுணர்வு என்பதே ஒரு வடிவமற்ற வடிவம் என்பதைக் கண்டுபிடித்தனர். நீருக்கும், ஆவிக்கும், பனிக்கும் உள்ளே H2O இருப்பதைப் போல். . பிரக்ஞைபூர்வமான இருப்பு. ஒரே கனிமம் வெவேறு சக்திகள். அதில் ஓர் இருப்புதான் நனவிலி ”

“கச்சிதமான மூளையை அமிலங்கள் கொண்டு செஞ்சுட்டாங்கன்னா வெற்றிதானே”

“அதான் இல்லைன்றனே. சரிவிகிதத்தில் உருவாக்கிய மூளையாலும், நரம்பு மண்டலங்களாலும் தகவல்களைச் சேகரிக்க முடிந்ததே தவிர சரியான முடிவுகளை எடுக்கத் தெரியவில்லை. நானே அந்தக் கலவையைக் கையில் எடுத்துப்பார்த்திருக்கிறேன். வெதுவெதுப்பான கூழ். அப்போதுதான், நமது பிரக்ஞை என்பதே தகவலுக்கும் முடிவுக்கும் இடையே நமது மூளை இணைப்புகள் எடுக்கும் புது வடிவம் என்பதைக் கண்டுகொண்டார்கள். தனித்தனியாக மூளை, நரம்பு என முடிவு எடுக்கும் பகுதிகளை உண்டாக்கினாலும், கூட்டாக அவை இயங்கவில்லை..இதுக்கு மேல் உனக்குப் புரிய வைக்க நீ இன்னும் வளரணும். போய்த்தூங்கு”, எனச் செல்லமாகத் தலையில் குட்டினார்.

நான் விநாஸைக் கட்டிக்கொண்டு படுத்துக்கொண்டேன். எட்டு வயதானாலும் இன்னும் சரிவரப் பேச்சு வரவில்லை. தனது தேவையை ஒழுங்காகச் சொல்லத் தெரியாத கண்மணி.

எத்தனை விந்தையான ஆய்வுகள். மூளையின் தனித்தன்மையால் மட்டுமே நாம் தப்பிப்பிழைத்திருக்கிறோம் எனும் நினைப்பே உதறல் தந்தது. ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது. என் உடல் சில்லிட்டது. கால்கள் நடுங்கத்தொடங்கின. தேவையற்ற அச்சம் கொள்கிறோமோ என ஒரு கணமும் அதீத பய உணர்ச்சியும் என்னை அலைக்கழித்தன. எப்போதும் வெதுவெதுப்பாக இருக்கும் விநாஸின் உடலை நெருக்கமாக அணைத்தபடி தூங்கிப்போனேன்.

ஆல்ஃபாக்கள் நம் பிரக்ஞையைப் பிரதி எடுக்கத் தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் என்ன ஆவோம் என்ற கேள்வியைவிடத் தேவையில்லாத நனவிலி என ஒரு சிலரை விலக்கத் தொடங்கினால் அம்மனிதர்களின் உபயோகம் என்ன எனும் கேள்வி அதிக அச்சத்தைத் தந்தது.

கனவில் கொழகொழவென்ற தசைக்கட்டி ஒன்று என் மூக்கருகே வந்தது. கெட்டுப்போன தேங்காய்ப்பழத்தின் வாசனை. தற்செயலாக நானும் விநாஸும் அதனுள்ளே விழுந்தோம். ஆழத்தில் தரைதட்டியபின்னே எழுந்து நிற்க முயன்று வழுக்கியபடி இருந்தோம். எனக்கு வியர்க்கத் தொடங்கியது. விநாஸ் என்னை விட்டுப்போகாதே எனக் கத்தியபடி அவனை இறுகப் பிடித்துக்கொண்டேன்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அருகே உருவான மற்றொரு குழியை நோக்கி விநாஸ் வழுக்கிச்சென்றான். நான் அலறியபடி அவனைத் தொடர்ந்தேன். தொட்டுவிடும் தூரம் இருந்தாலும் அவன் என் கைக்கு அகப்படவில்லை. ஆ எனக் கத்தியபடி எழுந்து அழுதான். துர்கனவு அவன் கையை அழுந்தச்செய்திருந்தது. விடாமல் அரைமணி நேரம் அழுதான். நான் அவன் வாயில் வழிந்த கோழையைத் துடைத்தபடி அவனைத் தேற்றினேன். மெல்ல விசும்பியபடி அவன் தூங்கத்தொடங்கினான். முகமெல்லாம் கண்ணீரும் எச்சிலுமாக இருந்த அவனை அணைத்து அள்ளி முத்தமிட்டேன்.

அடுத்த நாள், எதையோ தேடும்போது அப்பா ஒளித்துவைத்திருந்த ரகசியத்தைக் கண்டுபிடித்தேன். இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே இருந்த உறவைத் தக்கவைக்கவும், பொது மனிதர்களுக்கு அவற்றின் பயன்பாடு பற்றிப்பேசவும் அப்பா உருவாக்கிய பயிற்சிக் காணொளிகள் இயந்திரங்களின் வருடாந்திர தூர்வாரும் பிரொக்ராமில் கண்டுபிடித்தேன். இதையெல்லாம் நிரந்தரமாக நீக்க வேண்டுமா என அந்தத் தூர்வாரும் பிரொக்ராம் கேட்டபோது எதுவோ அவற்றைப் பார்க்கும்படி என்னை உந்தியது. உடனடியாக சிறு குவாண்டம் பிட்டுகளாகச் சுருக்கப்பட்டிருந்த காணொளிகளைத் தரவிறக்கிப்பார்த்தேன்.

அப்பாவின் வியர்வைச் சுரப்பியைக்கொண்டு மறையாக்கம் செய்யப்பட்ட தகவல்களை என் தனிப்பட்ட மரபணு சுரப்பித் தொகுப்பைக் கொண்டு மறைவிலக்கம் செய்தேன். அப்பா போட்டிருந்த மென்பொருள் பூட்டை முதல் முறையாக உடைத்தேன். அவர் ஒளித்துவைத்திருந்த காணொளி என் முன்னே பிரசன்னமானது. பார்க்கப்பார்க்க அப்பாவின் மற்றொரு பக்கம் என்முன்னே புதிதாக உருவானது. என் இயந்திர எதிர்ப்புக்கேள்விகளை உதாசீனப்படுத்தியவர் மனிதர்களுடனான உறவைப் பற்றிய அடிப்படைச் சந்தேகங்களைப் பதிவு செய்திருந்தார்.

“இயந்திரங்களை உருவாக்கிய முதல் ஆய்வு மையமான அப்பல்லோ மையம் பியோர்ட்டொ ரீக்கா ஒப்பந்தத்தில் முதல் ஆளாகக் கையெழுத்து இட்டதோடு, அந்த பிராஜெக்டுக்கு நிதியும் அளித்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நூறாவது ஆண்டு விழாக்கொண்டாட்டத்தில் இந்தப் பிராஜெக்டுக்கான முதல்கட்ட நிதி சேகரிப்புத் தொடங்கியது. அதனால் இந்தப் பிராஜெக்டுக்கு எலான் மஸ்க் டிரீம்ஸ் எனும் முதல் வடிவமைப்பும், மஸ்க் 11 எனும் பதினோறு இயங்கு விதிகளும் இயற்றப்பட்டன”

அப்பாவின் குரல் இனிமையாக இருக்கிறது. அவரும் மிக இளமையாக இருக்கிறார். அதையும் மீறி அவரது முன்வழுக்கைக்கான தொடக்கத்தை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவரது கண்களில் நான் மட்டுமே அடையாளம் காணக்கூடிய தவிப்பு தெரிகிறது.

“இயந்திரங்களும் மனிதர்களும் ஒன்றாக வாழும் கனவு இயங்குவிதிகளில் ஒன்று. இயந்திரங்களுக்குத் தேவையான அறிவை மட்டும் தந்தால் போதுமென்று தொடங்கப்பட்ட பிராஜெக்டுகள் தோல்வியைக் கண்டன. நமக்கு முழுமையாக உபயோகப்பட வேண்டும் என்றால், இயந்திரங்கள் தாமாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் வேண்டியது அவசியமாக இருந்தது. அப்படி முடிவெடுக்கும் இயந்திரங்கள் விரைவிலேயே தங்கள் தனித்தன்மையைச் சுயப்பாதுகாப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கின. அழிப்பது விதிகளுக்குப் புறம்பானது என்பதால் மனிதர்களை வெஜிட்டபிள் போல ஆக்கத்தொடங்கின. deactivate human thinking. அதற்குப் பிறகு நம் சிந்தனைக்குத் தேவையில்லாத தகவல்களை அதி முக்கியமானவை போலக்கொடுத்து நமது மூளைத்திறனை விரயமாக்கின. நல்லவேளையாக, இதை ஆரம்பத்திலேயே உணர்ந்த ஆல்பெர்ட் கெய்டோ எனும் ஆய்வாளர், தன்னுணர்வு எனும் செயலியைக் கட்டுப்படுத்தத்தொடங்கினார். ஆனால் அதற்கு அவசியமில்லாததுபோல, இயந்திரங்களின் செயலிகள் மனிதனைப்போல பிரக்ஞாபூர்வமான முடிவுகள் எடுக்க முடியாமல் தவித்தன. இதனால் நாம் இன்று பார்க்கும் ஆல்ஃபாக்களின் தொடக்கம் உருவாயின. இயந்திரம் போன்ற செயல்பாடு மற்றும் மனித பிரக்ஞையின் அளவிலா சாத்தியங்களையும் சேர்த்து செயல்படும் அடுத்தகட்ட ஹைப்ரிட் வகைகள். இந்த இயந்திரங்களுக்கு நமது நினைவிலி ஓர் உள்ளீடு மட்டுமே. நமது தீவில் இந்த அறிதலை அடைந்த ஆல்பெர்ட் கெய்டோ இதனை முதலில் கருத்தாக முன்வைத்த தளையசிங்கத்தின் பெயரில் ஆய்வகத்தை உருவாக்கினார். அடுத்த கட்ட இயந்திரமும் மனிதனும் சேர்ந்த ரெட்டை ஜோடி புது உயிராக இங்கே பரிணாமத் துவக்கம் கண்டது”

அப்பா பேசுவதைக் கேட்கும்போது என்னை அறியாமல் சந்தேகமும் பயமும் உண்டானது. விநாஸ் என்னை வெளியே விளையாட வரும்படி சைகை காட்டினான். அவனுக்கான உலகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? இரட்டை உயிரியக்கத்தில் மனிதன் மட்டும் வாழ்நாள் முழுவதுமே குழந்தை போல இருந்தால் அவனது வாழ்வுக்கு உத்தரவாதம் உண்டா? பலவிதமான கேள்விகள் என்னை அரித்தன. என் கண்மணி, என் குழந்தையைக் கைவிடும் எதையும் மனம் ஏற்றுக்கொள்ளாது. அது மனிதனின் ஆற்றலை ஆயிரம் மடங்கு பெருக்கினாலும், அவனைக் கடவுள் போல மாற்றினாலும் சரி என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

விநாஸ் தந்த மண் உருண்டைகளில் சிறு விலங்குகளைப் பிடித்து உருவாக்கிக்காட்டினேன். அவனுக்குப் பிடித்த குரங்கின் வாலை முதல் அழுத்தி உருவாக்கியதும், வாயை மூடிக் கண்கொள்ளாமல் சிரித்தான். குரங்கின் வால் போதும். அதுதான் அவனுக்குக் குரங்கு.

“புலன்களின் உச்சகட்ட எல்லைகளை இந்த இயந்திரங்கள் அடைந்தன. பல நூறு மைல்கள் தாண்டியும் தெரியும் மிகத் துல்லியமான பார்வை, நரம்பு மண்டலத்தின் மின் அதிர்வை உணர்ந்து அதற்கேற்றார்போலத் தகவல்களைத் திரட்டுதல், இதயத்துடிப்பைக் குறைப்பது மற்றும் ஏற்றுவது, மரபணுவின் தகவல்களைப் படிப்பது என மனிதனைத் தகவல்களாக மிக எளிதில் இயந்திரங்கள் படிக்கத்தொடங்கின. மனித மூளை மற்றும் நரம்புமண்டலத்திலிருந்து தகவல்கள் இயந்திரங்களை உடனடியாக அடையும்படி செயலிகள் உருவாயின. தினமும் உட்கொள்ளும் மாத்திரைகளின் மூலம் இடையறாத செய்திப் பரிமாற்றத்தை இயந்திரங்களுடன் மனிதன் உருவாக்கினான். மனிதர்களுக்கு எந்தப் பின்விளைவுகளும் இல்லை. அதே சமயம், இயந்திரங்களின் மூலமாகப் பால்வீதியின் பல இடங்களையும், பூமியின் மத்தியிலிருக்கும் தீ உருவாக்கியிருக்கும் புதுவிதக் கனிமங்களையும், அதீத சூட்டில் ஜீவித்திருக்கும் ஜெல்லிக்கிருமிகளையும் மனிதன் ஆராயத்தொடங்கியிருந்தான். பூமியின் மத்தியில் வாழும் நுண்கிருமிகள், அளப்பரிய சூட்டில் உருகிவழிந்து ஓடும்போதே குளிர்ந்து இறுகி ஆவியாக மீண்டும் உருகும் தன்மையைப் பெற்றிருந்தன. உயிர் இம்மாற்றங்களில் தங்குகிறது. நொடிக்கு நொடி உருமாறுவதே அங்கே உயிர் எனப்படுகிறது. மனித மூளை நொடிக்கு நொடி எடுக்கும் முடிவுகளின்போது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மாறும் புரதத்தன்மையில் ஏன் நமது பிரக்ஞையும், நனவிலியும் குடிகொண்டிருக்கக்கூடாது என ஆராயத்தொடங்கினார்கள். பிரக்ஞைக்கு ஒரு புரத வடிவம்; நனவிலிக்கு அதே புரதத்தின் வேறொரு தன்மை – முன்னர் பார்த்த நீர், பனி, ஆவி உதாரணம் போல. மனித மூளையின் ஜெல்லித்தன்மைக்குத் தேவையான கனிமத்தை இயந்திரங்கள் இங்கிருந்து எடுத்து வந்தன. இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி மனித உடல் எட்டாத பல இடங்களுக்கு நம் சிந்தனையை எடுத்துச் செல்லும் மீடியாவாக இயந்திரங்கள் மாறின.”

“மனிதனின் அறிதல் எல்லை உட்கார்ந்த இடத்திலிருந்தே விரியத்தொடங்கியது. அவன் வாயுமண்டலத்தைத் தாண்டிச்சென்று இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.”

மெல்ல மறையத்தொடங்கிய அப்பாவின் முகத்தில் சொல்லமுடியாத தவிப்பு மட்டும் மிச்சம் இருந்தது. மனிதனும் இயந்திரமும் தங்கள் அமைப்பிலிருந்து விலகாது ஒன்றாக வேலை செய்வதை நம்பமுடியாத இயக்கமாக அவர் உணர்ந்ததாக எனக்குத் தோன்றியது.

**

நான் அலறியபடி எழுந்தேன். என் குரல்வளை நிசப்தமாக்கப்பட்டிருந்தது. இதயத்துடிப்பு தலையில் கேட்டது. என் போர்வையை விலக்கிக் கட்டிலில் உட்கார்ந்தேன். விநாஸனை ஏதோ செய்யப்போகிறார்கள். என் செல்லத் தம்பி. சொல்லக்கூட முடியாமல் கண்கள் விரிய பயத்தோடு சுவரில் ஒண்டியிருப்பான். மாத்திரைகளை விழுங்கச்சொல்லித் துன்புறுத்துவார்கள். ஆல்ஃபாக்களின் அடுத்த கட்ட சோதனை.

மனிதனும் இயந்திரமும் தங்கள் அமைப்பிலிருந்து விலகாது ஒன்றாக வேலை செய்வதை நம்பமுடியாத இயக்கமாக அவர் உணர்ந்ததாக எனக்குத் தோன்றியது.

என் கைகள் நடுங்குகின்றன. அப்பாவுக்குத் தெரிந்திருக்கும். அவர் ஆய்வகத்தின் வேலையைத் துறந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனாலும், ஆய்வின் அடுத்தகட்ட முன்னேற்றங்களை நண்பர்கள் அவரிடம் பகிர்ந்துகொண்டிருந்தனர். மனிதனும் இயந்திரமும் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கி பல வெற்றிகரமான செயல்களைச் செய்துவிட்டனர். தனித்தனியாக ஆழ்மனதை அறியத்தொடங்கிய இயந்திரங்கள் அடுத்தக்கட்டச் சோதனையாகக் கூட்டுநினைவிலியை உருவாக்கத்தொடங்கியிருந்தன. இங்குதான் மனிதனுக்கும் சமூகத்துக்கும் இருக்கும் உறவின் சிக்கல்களை அவை அடுத்தகட்ட ஆய்வாக எடுத்துக்கொண்டன. மனிதனின் சமூக உறவு பலவிதமானச் சிக்கல்களைக் கொண்டது. மனிதனுக்கு மிகப்பெரிய அரண் அது. அதே சமயம் அவனை வளர விடாமல் செய்வதும் அதுதான். அந்த அமைப்பை உடைப்பது மூலம் இயந்திரங்கள் தங்களுக்குப் பிரத்யேகமான கூட்டு நினைவிலியைக் கட்டமைக்கத் தொடங்கும் பயிற்சியில் ஈடுபடத்தொடங்கின.

அதற்கு முதல் எதிரி, மனிதனின் உறவுகள். முடிவுகளை எடுக்கத்தயங்குவதில் உறவுகளுக்கு இடையேயான சிடுக்குகள் முக்கிய காரணம் என இயந்திரங்களின் மென்பொருள் கணித்துச் சொன்னது. உறவுகளையும், சமூகத்தின் பிரக்ஞாபூர்வமானத் தொடர்பையும் அவன் நீக்கும்போதே விடுதலை பெறுகிறான். அதுவரை சிந்தனையின் எல்லை விரிவதில்லை என்பதை ஆல்ஃபாக்கள் புரிந்துகொண்டன. மனிதன் முழுமையாக விடுதலை பெற்றால் மட்டுமே இயந்திரங்களுக்கு அடுத்தகட்ட அறிவு சாத்தியமாகும்.

“எந்த பிரக்ஞை இயந்திரங்களின் வளர்ச்சிக்கு உதவியதோ அதுவே இப்போது பெரிய தடையாகிப்போனது”

விநாஸ் சிறு வார்த்தைகளைச் சேர்த்துப் பேசத்தொடங்கியபோது அவனுக்கு வயது பதினொன்று.

“க்கா வரை படம்..”, என அவன் சொல்லி முடித்தபோது நான் கேவிக்கேவி அழத்தொடங்கியிருந்தேன். அதைப் பாதகமான விளைவாக எடுத்துக்கொண்டவன் நான் அழக்கூடாது என்பதற்காகப் பேசத்தயங்கினான். மெல்ல அவனது பயத்தைப் போக்குவதற்காக நான் படிப்பை வீட்டிலிருந்து தொடர்ந்திருந்தேன். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதில் சந்தோஷமே.

விநாஸின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள் முடித்த இரவு, எங்கள் வீட்டு வாசலில் அனைவரும் உட்கார்ந்திருந்த ஒரு தருணம். விநாஸ் என் மடியிலேயே தூங்கியிருந்தான். அவன் பேசத்தொடங்கியது காலை முதல் நெகிழ்ச்சியான உணர்வுகளை எல்லாருக்கும் அளித்திருந்தது.

“நம் புராணத்தில ஒரு கதை இருக்கு ஜனனி”

“செத்ததின் வயிற்றில் சிறு குட்டிப் பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் – அப்படின்னும் நம்மாழ்வாரைப் பார்த்து கேட்டாராம் மதுரகவினு இன்னொரு ஆழ்வார். அப்போது அவருக்கு வயது பதினொன்னு. அதுவரை அவர் பேசியதே இல்லை. கண்ணைத் திறந்ததுகூட இல்லை. உயிர் இருக்கா இல்லையான்னுகூடத் தெரியாது. புளியமரத்தின் பொந்தில் அசையாமல் உட்கார்ந்திருந்தார். ”

“பேசத்தெரியாதவரிடம் கேள்வியா?”

“ஆம். கேளு. அதுக்கு அவர் ‘அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்னு’ ஒரு பதில் சொன்னார்”

“அப்படின்னா?”

“பிரக்ஞை உருவாவதற்கு வெளியே இருந்து எந்த ஓர் உள்ளீடு தேவையில்லை. செத்ததின் வயிறில்கூட உருவாகிவிடும். அந்தப் பிரக்ஞை வளர்வதுக்கும் எந்த உள்ளீடும் உடலிலிருந்து தேவையில்லை. தூரத்து இயக்கி போல இது பேரியக்கத்தின் சிறு உதாரணம். தான் எனும் அகங்காரம் வளர்வதற்கு வேண்டுமானால் உள்ளீடு தேவை. ஆனால் அது தொடங்குவதற்கு எதுவும் தேவையில்லை. சொல்லப்போனால் உயிரின் ரகசியமே அதுதான். நம்ம ஆல்ஃபாக்களிடம்கூட அதுக்கான பதில் இல்லை. உயிர் தொடங்கியது எப்படி? ஏன் பறவை பறக்குது, நரி வஞ்சகம் செய்யுது, யானை எங்கோ இருக்கும் இன்னொரு யானையோடு பேசுது, திமிங்கலம் பிற மீன்களைப் பலவந்தமா உடலுறவு கொள்ளுது? எதுக்கும் காரணம் கிடையாது ”

“இவ்வளவு அறிவியல் வளர்ச்சி இருந்தும் இதுக்கெல்லாம் காரணம் இல்லியா? கொஞ்ச நாளில் தெரிஞ்சிடும்பாரு”

“அறிவியல் ஒரு பகுதி மட்டுமே நிரூபணம். நிரூபணமான எல்லாப் பகுதிகளையும் சேர்த்துப்பார்த்தாகூட முழு உண்மை கிடைக்காது. இடைவெளி இருக்கும். ”

**

உயிர் தொடங்கியது எப்படி? ஏன் பறவை பறக்குது, நரி வஞ்சகம் செய்யுது, யானை எங்கோ இருக்கும் இன்னொரு யானையோடு பேசுது, திமிங்கலம் பிற மீன்களைப் பலவந்தமா உடலுறவு கொள்ளுது? எதுக்கும் காரணம் கிடையாது.

சில வருடங்களாகத் தீவிலிருந்து வந்த செய்திகள் அப்பாவின் பயத்தை உண்மையாக்கின. முடிவெடுக்கும் இயந்திரமாக முழுமையாக இயங்குவதற்குத் தடையாக இருக்கும் பலவற்றை நீக்குவதற்கு இயந்திரங்கள் ரகசியமாக முயல்வதாகச் செய்தி பரவியது. இது பியோர்ட்டோ ரீக்கா விதிகளுக்குப் புறம்பானது என்று ஒரு சாராரும், தொடக்கத்தில் அப்படித் தெரிந்தாலும் இந்த ஆய்வின் முடிவு மனிதனை ஆல்ஃபாக்களோடு மேலும் நெருக்கமாக இயங்க வைக்கும் என்று பிறரும் சாதகபாதக விவாதங்களைத் தொடங்கினர்.

சமூக அமைப்பைக் கலைத்து விளையாடுவதன் மூலம் மனிதனின் இருப்புக்கே அர்த்தம் இல்லாமல் ஆகும் எனும் குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியதில் ஆல்ஃபாக்களின் இயந்திர மையம் தங்கள் அடுத்த கட்ட ஆய்வை ஒத்தி வைக்க முடிவு செய்தன.

நான் அந்த ஆய்வின் முடிவை நினைத்துப் பல நாட்கள் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டேன். ஆய்வின் அடுத்தகட்ட வளர்ச்சிகள் பற்றிய செய்தி புரளிகளாகக் கசியத்தொடங்கியது. அன்று மழை இரவு என ஆல்ஃபாக்கள் அறிவித்ததில் புதிய மதுரை தொடங்கி தளையசிங்கம் ஆய்வு நிலம் வரை வானம் மறையும்படியான நீர் சேகரிப்புக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எங்கள் வீடு இருந்த தீவில் இளமழை பொழிந்து விட்டிருந்தது. விநாஸுக்கு மழை என்றால் மிகவும் பிடிக்கும். எல்லாவற்றுக்கும் பயப்படுபவன் மழை வரப்போவதை அறிந்ததும் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிடுவான்.

நான் அவனது அறைக்குச் சென்றேன். தூக்கத்தில் சொற்களை உருவாக்கியபடி படுத்திருந்தான். பெரும்பாலும் உளறல்கள். அன்றைக்கு அவனைச் சுற்றி நடந்ததை வார்த்தைகளாக்க முயல்வான். வெளியே கேட்பவை உமிழ்நீரில் கரைந்த வார்த்தைகளை மீறி வெளிப்படுபவை. அருகே செல்லும்போது, “க்கா, கா” என வார்த்தைகளுக்கு இடையே சொல்வது கேட்டதும் என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனை அப்படியே அணைத்துக்கொண்டேன்.

அருகே யாரையும் அண்டவிடாத அவனது பிஞ்சு விரல்கள் உறக்கத்திலேயே என்னை இறுகப்பற்றியது. அக்கா, அக்கா என அவனது வாய் உளறிக்கொண்டிருந்தது. என் மூச்சு மேலும் கீழும் சீரற்று இருந்தது. இல்லை, இவனை என்னால் கைவிட முடியாது. நெஞ்சுக்குள் கனம் அழுத்தியது.

“விநாஸ், நீ என்னோட உயிர்”, என இறுக அணைத்துக்கொண்டேன். இவனைப் போன்ற குழந்தைகளைத் திரட்டி ஆல்ஃபாக்கள் தங்கள் உறவு நீக்கி எனும் அடுத்தகட்ட ஆய்வைத் தொடங்கியிருந்தன. எப்படிக் காப்பாற்றப்போகிறேன் என நான் திடமாகச் சிந்திக்கத்தொடங்கினேன்.

**

“மனதை இயற்கையான வகையில் பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்துவது, புற உடலின் எல்லைகளை மீறுவதற்கு ஆல்ஃபாக்களின் இயந்திரங்களைப் பயன்படுத்துவது என ஒன்றுக்கு ஒன்று உதவியாக இரட்டை சிஸ்டம் எத்தனை வீரியமானது தெரியுதா? இதைச் சிந்தித்தவன் மனிதனின் அடுத்த கட்ட வளர்ச்சியை மிகக்கச்சிதமாக உருவாக்கியவன். அவன் இதை Benevolant Dictator என்றான். இரட்டை நியூட்ரான் நட்சத்திரங்கள் போல ஒன்றைவிட்டு ஒன்று பிரிய முடியாத அடுத்தகட்ட உயிரினம் நாமும் ஆல்ஃபாவும். அத்தனை இரக்கம் நம்மை என்ன செய்யும்?”

நான் பதில் சொல்லவில்லை. டிக்டேட்டர் எனும் சொல்லிலேயே என் மனம் அச்சம் கொண்டுவிட்டது. ரெட்டை சிஸ்டம் பியோர்ட்டோ ரீக்கா விதிமுறையை மீறாது என்றாலும், ஆல்ஃபாக்கள் செயற்கை அறிவை முழுமையாக அடைந்துவிட்டால் என்னவாவது எனும் கேள்வியை நான் கேட்காமல் செயலற்று நின்றிருந்தேன்.

“நம்மில் சிலர் தேவையில்லாது போகலாமே”, என மெல்ல என் சந்தேகத்தை முணுமுணுத்தேன்.

ஏனோ அப்பா முழுமையாக இத்திட்டத்துடன் இணைந்துவிட்டார். ஆரம்பத்தில் இருந்த சந்தேகங்கள் அவரிடம் கலைந்துவிட்டன. இதில் எங்கள் அனைவரின் விடுதலையைக் காண்கிறாரோ எனும் குழப்பம் எனக்குத் தொற்றிக்கொண்டது.

“சுயப்பிரக்ஞைக்கான தேவையை எந்திரங்கள் முழுமையாகத் தெரிந்துகொண்டுள்ளன. பல்லாயிரம் வருடங்களாக வளர்ந்து வந்த நமது மனதின் படிநிலைகளை அவற்றால் நகல் செய்ய முடியாது. விலங்குகளுக்கு ஜாக்ரத் மட்டுமே மிக அதிகமாக உண்டு. பாதுகாப்பு உணர்வு – குட்டிகளுக்கும் தனக்குமான பாதுகாப்பு. நம் மனம் இயற்கை பரிணாம மாற்றத்துக்கு உள்ளாகும்வரை எந்திரங்களால் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. எந்திரத்தின் வடிவமைப்பில் நாம் இதுபோன்ற உள்ளீட்டை அளிக்கவில்லை. நம் கல்லீரலுக்கு இதயத்துடிப்பின் உள்ளீடு தேவையில்லாதது போல”, எனச்சொல்லிப் பெருமையாகப் பார்த்தார் அப்பா.

அவரது முடிவு தவறு எனக் கூடிய சீக்கிரமே புரிந்துபோனது. கல்லீரலுக்கு இதயத்துடிப்பின் உள்ளீடு தேவையில்லாததாக இருக்கலாம், ஆனால் உடலில் இருந்த அனைத்து பாகங்களும் உடலியக்கக்கடிகாரத்தின் படி ஒருங்கிணைந்துள்ளதை அவர் மறந்துவிட்டார். காலம் பொதுவானதாக இருப்பது போல உடலின் பாகங்களும், மனதின் கணக்குகளும் உடலியக்கக் கடிகாரத்தின் அடிமைகள்.

மனிதன் மற்றும் எந்திரங்களின் கூட்டு இயக்கம் அடுத்தகட்டப் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டுமானால் கூட்டு நனவிலியின் தனிப்பட்ட அமைப்பான ஜாக்ரத்தை உடைக்கவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் புரிந்துகொண்டனர். அதைச் செய்தால் மட்டுமே மனிதன் முழுமையாக விடுதலை அடைந்து கூட்டாகச் சிந்தித்து செயல்பட முடியும். பல்லாயிரக்கணக்கான முடிவுகளை உடனடியாக எடுக்கும் மனிதனின் ஆழ்மனம் கூட்டாக இயங்கும்போது எந்திரங்களால் உருவாக்க முடியாத பெரிய கருத்தாக்கங்கள் சாத்தியப்படும். இது ஆல்ஃபாக்களை உருவாக்கிய ஆய்வாளர்களின் ரகசியத் திட்டம். மனிதனின் சிந்தனையைக் கட்டுப்படுத்துவது எனச்சொன்னால் விதிமீறல். ஆல்ஃபாக்களே அதை அனுமதிக்காது. ஆனால், மனிதனின் தளைகளை அறுக்கப்போகிறோம் என்பது விடுதலை. அடுத்தக்கட்டப் பாய்ச்சலுக்கான முன் ஏற்பாடு. ஆல்ஃபாக்களின் வேகத்தை எட்டக்கூடிய பிரதி உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்திப்பார்க்கும் திட்டமும் அதில் அடக்கம். அதில் சேரும்படி நகர் எங்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தாயகத்தின் அரசு ஆய்வுக்கழகம் ஆல்ஃபாக்களின் திட்டத்துக்குச் சான்றிதழ் வழங்கியது – “போர்ச் சமூகத்தின் உச்சகட்ட தியாகம் நவகண்டம். சுயபலி. உயிரைத் துச்சமாக மதிக்கும் நிகழ்வு ஒரு சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்காகச் செய்யப்படுவது. நவகண்டம் போல இதுவும் உச்சகட்ட துறக்கம். மனிதனின் அடுத்த கட்டத்துக்காக மனித உறவுகளை நீக்கம் செய்த உடல்களுக்கான ஏற்பாடு”.

முதல் முறை மனிதன் முழுமையாக விடுதலை அடையப்போகிறான். மதம், தத்துவம், உறவுகள், கடவுள் நம்பிக்கை எனும் அனைத்தையும் ஆட்டிப்படைத்த உணர்ச்சிகளை உடைக்கும் முதல் பிராஜெக்ட்.

சுயபலி. உயிரைத் துச்சமாக மதிக்கும் நிகழ்வு ஒரு சமூகத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்காகச் செய்யப்படுவது.

அந்த அழைப்பு கொடுத்த நடுக்கத்தை நான் உதாசீனப்படுத்தியபடி இருந்தேன். கண்ணில் படும் விளம்பரங்களையும், நண்பர்களிடையே நடந்த உரையாடல்களையும் முழுவதுமாகத் தவிர்த்தேன். எங்கள் குடும்ப நண்பர்களில் ஒருசிலர் கை, கால்கள் எனச் சில உறுப்புகளைப் பொருத்திக்கொண்டு வந்தனர். நான் கூடியவரையில் அம்மா அப்பாவிடம் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்தேன்.

வழக்கம்போலத் தோட்டத்தில் விளையாடி முடித்த மாலை நேரம். விநாஸை முந்திக்கொண்டு நான் வீட்டுக்குள் செல்ல நேர்ந்தது. மேலும் கீழுமாக அலைந்ததில் அரைமணி நேரம் கழித்து அவனைக் காணாமல் பகீரென்றது. விநாஸ் அத்தனை எளிதாகக் காணாமல் போகக்கூடியவன் அல்ல. தோட்டத்தின் அனைத்து மூலைகளிலும் அலைந்தேன். கால்கள் கொண்டு சென்ற வழி அனைத்தும் விநாஸின் பெயரைக் கத்தியபடி அலைந்தேன். இருள் சூழத்தொடங்கிவிட்டது. நிதானத்தை இழந்து பிதற்றியபடியே வீட்டின் உள்ளும் வெளியேயும் சுற்றினேன். ஒரு கட்டத்தில் பயம் கவ்விக்கொண்டது. ஆய்வகத்தின் விளம்பரங்களை அவனும் ஆர்வத்துடன் பார்த்தது நினைவுக்கு வந்து தலைசுற்றியது. அவனுக்கு எந்தளவு புரியும் என்பதைப் பற்றி நான் அந்நிமிடம் யோசிக்கவில்லை. அவன் எப்படி வீட்டை விட்டுச் சென்றிருப்பான் எனும் தர்க்கம் சார்ந்த சிந்தனை இருக்கவில்லை. மனம் ஒன்றை முடிவு செய்து என்னை நம்பச்செய்தது போல ஒரு வேகத்துடன் பின் கதவைச் சாத்திவிட்டு வெளியே செல்ல எத்தனித்தபோது சோலார் அறையின் கதவு காற்றில் மோதி எனக்கு மட்டுமே கேட்கும்படி சத்தம் வந்தது. இத்தனை ஓட்டங்களிலும் என் மனம் சிறு சத்தத்தைக்கூட அறிந்துகொள்ளும் நிதானத்தோடு இருப்பதை எண்ணி ஆச்சர்யமானது. அவசரமாகச் சென்று கதவைத் திறந்தேன். அங்கிருந்த குரோட்டன்ஸ் செடிகளின் இலைகளைத் தடவியபடி விநாஸ் நின்றுகொண்டிருந்தான்.

கோபத்திலும் ஆற்றாமையிலும் முழு வேகத்தோடு தோளைப்பிடித்து என் பக்கமாகத் திருப்பினேன். அதை எதிர்பாராத அவன் நிதானம் தவறிக் கீழே விழுந்தான். அப்படியே தூக்கி அவனை அள்ளி அணைத்துக்கொண்டேன்.

*

டாக்டர் ரே கண்கட்டை அவிழ்த்தார். முதலில் மங்கலாகத் தெரிந்த உலகத்துக்குக் கண் கொஞ்ச நேரத்தில் பழகிவிட்டது. இதுவரை வண்ணங்களையே பார்த்திராதவளை மலர்வனத்துக்குள் அனுப்பியது போல, நான் பார்ப்பது கனவு உலகம் போல இருந்தது.

“வெல்கம். எந்திரங்களின் முதல் ஆய்வில் உருவான தீர்க்கப்பார்வை கொண்ட கண்பாப்பாக்கள் பொருத்தப்பட்ட ஆயிரம் சிறுமிகளில் ஒருத்தி நீ”, எனக் கைகொடுத்தார்.

பளிச்சென கழுவிய கண்ணாடி போல என்னைச்சுற்றி புது வடிவங்களும், வண்ணங்களும் துலங்கி வந்தன. பரிமாணங்கள் ஒன்றோடு ஒன்று முயங்கியதில் தூல வடிவங்கள் தங்கள் சிறு எடைப் பள்ளங்களில் சற்றே அழுந்தியிருந்தன. ஒன்றை ஒன்று ஈர்த்தும் விலகியும் அமைந்த புறச்சூழல் இறுகிய வடிவாக இல்லை. மாறாக ஒவ்வொரு நொடியும் மாறியபடி இருக்கும் நெகிழ்வானப் புறப்பொருள் தொகுப்பாக உலகம் தெரிந்தது. சீரான வண்ணங்களாக இல்லாமல் சுற்றியிருந்தவை வண்ணங்களின் சாத்தியத்தொகுப்பாகக் குழைவாகக் காட்சியளித்தது.

என் கை விரல்களை உற்று நோக்கினேன். இருட்டுக்குப் பழகிய கண்கள் போல மெல்ல என் பழைய உலகம் என்னை விட்டு விலகியது.

அடுத்தடுத்த நாட்களில் என் உடல் உறுப்புகளுக்குப் பதிலாக மீக்கடத்துத்திறன் கொண்ட பாகங்கள் பொருத்தப்பட்டன. பூமியின் மத்தியில் ஓடும் ஊன்பசைக் கனிமத்தைக்கொண்டு உருவாக்கப்பட்ட உராய்வுகள் ஏற்படாத மூட்டுகள் வேகத்தை அதிகப்படுத்தின. உடலியக்கக் கடிகாரத்தைக் கண்காணிக்கும் மின்கடத்திகள் நரம்பு மண்டலத்தின் பாதையில் பொருத்தப்பட்டன. மெல்ல நான் ஒரு ஆல்ஃபாவாக மாறிக்கொண்டிருந்தேன்.

என் உடலைவிட்டு எடுக்கப்பட்ட உறுப்புகள் தந்த போலி உணர்ச்சிகளும், புதிதாகப் பொருத்தப்பட்ட எந்திரக் கைகளும் சேர்ந்து நான்கு கைக்கொண்ட பண்டையத் தமிழ்க் கடவுளின் ஆற்றலைப் பெற்றது போல உணர்ந்தேன். எடுக்கப்பட்ட பழைய உறுப்புகள் என் பழைய உறவுகளை அரவணைத்த தினங்களை மீண்டும் பெறக் காத்திருந்தன. பொருத்தப்பட்ட புது உறுப்புகள் புற எல்லைகளை மீறி என்னை உந்திச்செல்ல துடித்துக்கொண்டிருந்தன.

என் நினைவுகள் விநாஸைச் சுற்றி வந்துகொண்டிருந்தன. அவனுக்கு இந்நேரம் ஆல்ஃபாக்களுடன் உறவாடும் மருந்துகளை அளித்துவிட்டிருப்பார்கள். நாற்பத்து எட்டு மணி நேரங்கள் என டாக்டர் ரே சொல்லியிருக்கிறார். அவனது நனவிலி பாகம்பாகமாகக் கோக்கப்பட்டு வோர்டெக்ஸுக்குச் செல்லவேண்டிய பிரத்யேகத் தகவல் உயர் அழுத்தக்கம்பிகளில் பயணத்தின் முடிவை அடைந்திருக்கும்.

நான் ஆல்ஃபாக்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கியிருந்தேன். எனது நரம்புமண்டலத்தின் தகவல் மையத்தையும், வெளி நிகழ்வுகளுக்கான எதிர்வினையைத் தொகுத்து வழங்கும் சிறு தகடும் மெல்லப் பிரியத்தொடங்கின.

நான் புது அனுபவத்துக்குத் தயாராவதை ஆய்வாளர்கள் ஆர்வத்தோடு கண்காணித்தார்கள். தகவல்கள் வோர்டெக்ஸுக்கு ஏறிப்போகும் அதே வேளையில், என் விநாஸின் சுய அடையாளங்கள் என்னுள்ளே தரவிறங்கியிருக்கும். அனுபவமாக என்னுள்ளே வந்த விநாஸும் நானும் வேறல்ல. நான் அவனது உறுப்பாகவும், அவன் என் பிரக்ஞையாகவும் சேர்ந்த ரெட்டை ஜோடி. ஆல்ஃபாவாக நான் இருக்கும்வரை என் கண்மணி என்னுடனேயே பிரக்ஞைபூர்வமாக இருப்பான். இந்தப் புது உணர்வைப் பகுக்க முடியாமல் வோர்டெக்ஸ் தகவல் மையம் தடுமாறும்.

*

அக்கா, அக்கா

ம்ம். சொல்லு

இள மழை பெய்யத்தொடங்குது ஒரு நடை போவோமா?

வா. என் விரலைப் பிடிச்சிக்கோ.


நன்றி :  அரூ இணைய இதழ்

 

மொழிவது சுகம் பிப்ரவரி 3, 2019

 

செட்டியார் சரக்கும் பேராசிரியர் க. பஞ்சாங்கமும் : வளரும் எழுத்தாளர்களுக்கு!

ஒர் ஆணோ பெண்ணோ பண்பில், நலனில் தன்னையொத்த, தன்னைப் புரிந்துகொள்கிற எதிர் பாலினத்துடன் இணைசேர்கிறபோதுதான், பாலின பயன்பாட்டினை எட்டுகிறான் அல்லது  எட்டுகிறாள்.  படைப்பும் அத்தகையதுதான். தனக்கான தன்னைப் புரிந்துகொள்ளகூடிய வாசகன் அல்லது வாசகி  அதற்குக் கிடைக்கவேண்டும், அப்படிக் கிடைக்கிறபோதுதான் அப்படைப்பும் தனது பிறவிப் பயனை அடைகிறது.

தமிழ்ச் சூழலில் படைப்பு அங்கீகரிக்கப்பட  என்பதைக் காட்டிலும் அங்கீகரிக்கப்படாமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.  செட்டியார் மிடுக்கா சரக்கு  மிடுக்கா ? என்ற பழமொழியை அறிந்திருப்பீர்கள்.  படைப்பை பொறுத்தவரை சரக்கைப்பற்றிய அக்கறையுடன் நுகர்ந்து பாராட்டுக்கிறவர்கள் இங்கு குறைவு, மேற்குலகிலும், வட அமெரிக்காவிலுங்கூட படைப்பிலக்கிய விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ளபட்ட எழுத்தாளர்களுக்கு வாசகர்கள் குறைவு.

 

நீங்கள் அங்கீகரிக்கபட என்பதைக் காட்டிலும் அங்கீகரிக்கப்படாமல் போவதற்குப் பல காரணங்களுண்டு.  சக எழுத்தாளரிடம், சகக் கட்டுரையாளரிடம், சகக் கவிஞரிடம் சக மொழிபெயர்ப்பாளரிடம் தொலைபேசியில் பாராட்டுதலைப் பெறலாம், அவரும் நீங்களுமாக தனித்திருக்கிறபோது ஒருவரையொருவர்  பாராட்டி மகிழலாம்.  ஆனால் அதே௳னிதர்  நாமற்ற பொதுவெளியில் நமது படைப்புகுறித்து பேசுவது அரிது. அதேவேளை   பிறர் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிற  நாம், நமது நண்பர்களின் படைப்புத் திறனை, பிற ஆற்றல்லை அவரை ஊக்குவிக்கின்றவகையில் நேரடியாகவோ, அவரில்லாத பொதுவெளிகளில் பாராட்டியுள்ளோமா எனத் தெளிந்து பேசி இருக்கிறோமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

 

அடுத்து நண்பர்கள் அல்லாத பிற மனிதர்களிடம் அடையாளம் பெறுவது எப்படி ?  முதலாவது உபாயம், இயற்கைச் சிகிச்சைமுறை : நமது நிறம், சாதி, பொருளாதாரநிலை, குலம், கோத்திரம் போன்றவை எளிதில்  பிறரிடம் அனுதாபத்தைப் பெற்று அடையாளம் நல்கும். பிறகு இருக்கவே இருக்கின்றன செயற்கை வழிமுறை அதாவது  நவீன மருத்துவ சிகிச்சை : நம்மை நாமேகொண்டாடிக்கொள்ளுதல் உதாரணமாக புத்தவெளியீடு, நம்மைப்பற்றிய கருத்தரங்கம், திறனாய்வு, சமூகத்தில் நட்சத்திர அந்தஸ்துள்ள மனிதர்களுடனான புகைப்படம், சாக்ரடீஸ்போல தெக்கார்த் போல சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்வது கூடுதல் பலம். சில பட்டிமன்ற பேச்சாளர்கள் நியூயார்க்கில் ஒர் கூட்டத்தில் என்று பேசுவதுபோல  ஹெமிங்வேயுடன் பேசிக்கொண்டிருந்த போது, மாப்பசான் சிறுகதைகளில் எனக்குப் பிடித்தது என  நாமும் எழுதலாம்,  நண்பர்களை பயமுறுத்தலாம்.  தவறினால் இலக்கிய மகா சக்கரவர்த்திகள் அரியணையில் வீற்றிருக்கிறபோது கைகட்டி நிற்கும் தொழில் நுட்பமெல்லாம் தெரிந்திருக்கவேண்டும். இவையெல்லாம் பந்திக்குமுந்துவதற்கான எளிய வழிமுறைகள்.

இருந்தும் பதிப்பகம், குழு அரசியல், உங்கள் பக்கத்தில் நிற்பவர் யார் போன்ற காரணிகள் குறுக்கே நிற்கலாம்.

 

சரி எனக்கு இதெல்லாம் போதாதே எழுத்தைமட்டும் நம்புகிறேனே  நான் அங்கீகாரம் பெற என்ன வழி, எனக் கேட்கிறீர்களா ?  எழுதுங்கள், எழுதிகொண்டே இருங்கள். நேற்று எழுதியது நிறைவைத் தரவில்லை என்ற மனத்துடன் எழுதுங்கள். நம் எழுத்தில் ஏதோ குறை இருக்கிறது  அறியப்படாத தற்கு அதுவொன்றே காரணம்  எனக்கருதி உழையுங்கள்.  விமர்சனம் எதுவென்றாலும் ஏற்றுகொள்ளுங்கள். எந்தப்படைப்பும் சிலரால் விரும்பக்கூடியதாகவும் வேறு சிலரால் வெறுக்கத் தக்கதாகவும் இருக்கும். ஒரு படைப்பை எல்லோரும் விரும்பினாலோ அல்லது வெறுத்தாலோ   காரணம்  எதுவாயினும் அது படைப்பல்ல தயாரிப்பு. சிலர் உங்களை மட்டம் தட்ட விமர்சனம் செய்வார்கள், சிலர் ஆஹா ஓஹோவென்பார்கள் இரண்டையும் சந்தேகியுங்கள். நிரபராதிகளின் எதிர்காலம்  சீக்ஃப்ரிட் லென்ஸ்  எழுதிய நாடகம்.  சூழ்நிலைகள் மனிதர்களை நிரபராதிகளாவும், குற்றவாளிகளாவும் எவ்வாறு உருமாற்றம் செய்கின்றன என்பதை எளிய நாடகத்தில் ஆசிரியர் மேடையேற்றி இருப்பார். இதே நாடக்த்தை நீங்களோ நானோ எழுதினால் ஒன்றுமில்லை என போகிற போக்கில்  சொல்லக்கூடிய மனிதர்கள் அதே நாடகத்தை ஒரு விஐபி எழுதினால் படைப்புலகின் பிரம்மா என வர்ணித்து வாயைச் சுழற்றுவார்கள். இவ்ற்றையெல்லாம் பெருட்படுத்தவேண்டாம். காரியம் எதுவென்றாலும் மனதை முழுமையாகச் செலுத்தி ஈடுபாட்டுடன்  செய்தால் உரிய பலனுண்டு, எழுத்தும் அதிலொன்று.  செட்டியார் மிடுக்கா எனப்பார்க்காமல்  செட்டியார் சரக்கின் தரத்தைப் பார்க்கிற பேராசிரியர் க பஞ்சாங்கம் போன்றவர்கள் இவ்வுலகில் ஒன்றிரண்டுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால்தான் நான்  அடையாளம் பெற்றேன். நீங்களும் பெறுவீர்கள். பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்காக அன்றி உண்மையாக, முழுமையாக வாசியுங்கள். சோர்வின்றி எழுதுங்கள்.