Monthly Archives: ஓகஸ்ட் 2011

பிரெஞ்சுத் தமிழர்கள்

‘மிஸியே’, ‘மதாம்’, பீரோ, ஒப்பித்தால், ‘சொல்தா’ ‘ருய் ரொமென் ரொலான்’, ‘ஹோட்டெல் தெ வீல்’, அல்லியான்ஸ் பிரான்ஸேஸ், லிஸ்ஸே பிரான்ஸே இதுபோன்ற சொற்களும், காவல் துறையின் ‘சிவப்பு கெப்பி, ‘ஆயி மண்டபம்’ போன்ற குறியீடுகளும், அன்னை எனப்படும் அரவிந்தரின் ஆன்மீகத் தோழியான மீரா அல்·பான்ஸாவும் என்றென்றும் புதுச்சேரியை பிரான்சு நாட்டோடு இணைத்து நினைவூட்டுபவர்கள். ஆனால் பிரெஞ்சு தமிழர்கள் என்கிறபோது அவர்கள் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல. பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொருவகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ்சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களாகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்களெனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறிவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.

காலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச்சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரி தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்கு குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸ¤க்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகபோரின் போது பிரான்சு பிறகாலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமதுவசமிருந்த இந்திய காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தனர். பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து,  புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்'(De-facto settlement’) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல்  இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டு குடியுரிமைகளூள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறுமாதகாலம் நீட்டிக்கவும் செய்தார்கள். அதன் பலனாக கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால் வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரி தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.

பிரெஞ்சுத் தமிழர்களின் இன்றையை சமூக கூறுகள், பண்பாடுகளென்ன? என்பது சிக்கலானதொரு கேள்வி. நாமிருக்கும் உலகம் பொருள்முதல் வாதத்தை மட்டுமே பிரதானமாகக்கொண்டது. மனித இனமும் விற்பனையை மட்டுமே அல்லது விலைபோவதை மட்டுமே கருத்திற்கொண்டு இயங்கும் சரக்காகிப்போனதொரு நிலையில்: பண்பு, தொன்மம், அறம் இவைகளெல்லாம்கூட -விற்பனையின் கிடைக்கும் இலாபத்தின் அடிப்படையில் அவ்வப்போது உருமாற்றம் பெற்று ஆயுளை நகர்த்தும் நிர்ப்பந்தத்தில் உள்ளன. பிரெஞ்சுத் தமிழர்களின் சமூகக்கூறுகள் தமிழ்நாட்டைப்போலவே பல கூட்டு வடிவங்களை முன்னிறுத்துகின்றன. பொதுவாகப் பிரெஞ்சுத் தமிழர்கள், பண்பாட்டு அடையாளமென்று  முன்னிறுத்துவது அவரவர் ‘இருத்தலை(Existence) உயர்த்திப்பிடிக்கும் குணமேயன்றி தமிழரின் அரிதானப் பெருமையை உண்மையில் மீளப்பெறும் முயற்சிகளில்லை.

பிரெஞ்சுத் தமிழர்களை ஒரு வசதிக்காகவும், மானுடவியல் தெளிவுறுத்தும் உண்மைகள் அடிப்படையிலும் மூன்றுவிதமாக அடையாளப்படுத்தலாம். தமிழை மறந்தவர்கள், மறந்து கொண்டிருப்பவர்கள், மறக்க இருப்பவர்கள். தமிழை மறந்தவர்களென்று பிரெஞ்சு மண்ணுக்கு பதினேழு, பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வந்துசேர்ந்த தமிழர்களின் இன்றைய சந்ததியினரைச் சொல்லலாம். இவர்கள் மேலே குறிப்பிட்ட ரெயூனியன், குவாதுலுப், பிரெஞ்சு கயானாவை சேர்ந்தவர்கள், அடுத்து புதுச்சேரி காரைக்கால் மக்களின் சந்ததியினராக ஹனாய், சைகோனிலிருந்து இவர்களுடன் இணைந்துகொண்டவர்கள், மூன்றாவதாக மொரீஷியஸிலிருந்து குடிபெயர்ந்து பிரான்சு நாட்டில் வசிப்பவர்கள். மொரீஷியஸ் தமிழர்களுள் ஒரு பிரிவினர் மட்டுமே தங்களைத் ‘தமுல்'(Tamul) அதாவது தமிழர்கள் எனக் கூறிக்கொள்வார்கள். கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலுங்கூட இவர்களுக்கு ‘இல்லை’. காரணம் இவர்கள் தீ மிதிக்கிறார்கள், காவடி எடுக்கிறார்கள், கோவிந்தனுக்குப் பூசை வைக்கிறார்கள், மாரியம்மனுக்கு கஞ்சி ஊற்றுகிறார்கள். திருவாசகத்தையும், ஒன்றிரண்டு திருப்புகழையும் பிரெஞ்சில் அப்படியே எழுதிவைத்துக்கொண்டு கதிரசனும் (கதிரேசனும்) பொக்கிலியும்(பொற்கலையும்) வாசிப்பவர்கள். ஆக இவர்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவது தமிழ்த்தாயோ தமிழன்னையோ அல்ல முருகனும், மாரியம்மனும். இதுபோன்ற நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் இவர்கள் முழுக்க முழுக்க மேற்கத்திய வாழ்க்கைநெறியைப் பின்பற்றுவர்கள். பிரெஞ்சுத் தமிழர்களில் இரண்டாவது வகையினருக்கு: இருபதாம் நூற்றாண்டில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலிருந்து குடியேறியவர்களையும், திருமணம் மற்றும் வேறு காரணங்களை முன்னிட்டு (இந்த வேறுகாரணங்களில் அறுபதுவயது பெண்மணியைப் பிரெஞ்சு குடியுரிமைக்காக மணப்பதும் அடக்கம்) பிரான்சுக்குப் புலம்பெயர்கிறவர்களையும் உதாரணமாகக் கொள்ளலாம். மொரீஷியர்கள் தங்களை ‘தமுல்'(Tamoul) என்று சொல்லிக்கொள்ளத் தயங்குவதில்லை. தமிழ்ச் சங்கங்கள் வைத்து பொங்கல், தீபாவளி, பாரதி, கம்பன், அண்ணா என்று கொண்டாடினாலும் புதுச்சேரிமக்கள் அண்மைக்காலம்வரை தங்களை தமிழரென வெளிப்படையாக அறிவித்துக்கொள்வது குறைவு அல்லது அதனைத் தவிர்க்க நினப்பவர்கள். பிரான்சு நாட்டில் குடியிருக்கும் ஒரு புதுச்சேரிவாசியை நீங்கள் யாரென்று கேட்டீர்களெனில் அவர் சட்டென்று சொல்வது, ‘Je suis Pondicherien'( புதுச்சேரியைச் சேர்ந்தவன்). பிரெஞ்சு வரலாறும் அவர்களை புதுச்சேரியைச் சேர்ந்த பிரெஞ்சுக்காரர்களென்றே (Franco-Pondicherians) கருதிவந்திருக்கிறதே தவிர ‘பிரெஞ்சுத் தமிழர்கள்’ என்ற சொல்லாட்சியின் கீழல்ல. நாற்பதுகள், ஐம்பதுகள் அறுபதுகளில் பிரான்சுக்கு வந்தவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு ராணுவத்திற்குச் சேவகம் செய்யவென்று வந்தவர்கள், அவர்கள் தமிழை மறக்காமலிருக்க நீங்கள் நினைப்பதுபோல கம்பனோ திருவள்ளுவனோ காரணமல்ல சிவாஜிகணேசனும் எம்ஜிஆரும். இக்காலங்களில் நன்கு படித்த இரண்டிலிருந்து ஐந்து சதவீத புதுச்சேரி தமிழர்களும் பிரான்சுக்கு வந்திருக்கிறார்கள், அவர்கள் பல்கலைகழகங்களிலோ உயர் பணிகளிலோ இருப்பவர்கள். தமிழால் எனக்கென்ன லாபம்? என்று வலம் வருபவர்கள். எண்பதுகளில் வந்த புதுச்சேரிகாரர்கள் அதிக எண்ணிக்கையில் தமிழ்ச்சங்கங்களை நிறுவி வருடத்தில் ஒன்றிரண்டு நாட்கள் பட்டிமன்றம், கவிதையென்று அமர்க்களப்படுத்துகிறார்கள். இப்போக்கிற்கு இதேகாலங்களில் பிரான்சுக்கு வரநேர்ந்த இலங்கைத் தமிழர்கள் காரணமாக இருக்கலாம். தமிழ், தமிழ் மக்கள் என்ற சொல்லைப் பிரெஞ்சுக்காரர்கள் அறியப்படநேர்ந்ததே எண்பதுகளில்  இலங்கைத் தமிழர்களின் வருகைக்குப் பின்பென்றுதான் சொல்லவேண்டும்,  காரணம் இலங்கைத் சகோதரர்கள் தமிழர்களென்ற குலக்குறியுடன் பிரான்சுக்கு வந்தவர்கள் அகதித் தகுதி பெறுவதில் ஆரம்பித்து, பண்பாட்டிலும் பிறவற்றிலும் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டிய நெருக்கடி அவர்களுக்கு இருந்தது. இதே இலங்கையிலிருந்து எண்பதுகளுக்கு முன்பு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்தவர்கள் இந்த அளவிற்குத் தமிழுணர்வைக் கொண்டவர்களல்லவென்பதையும் நினைவு கூர்தல் வேண்டும்.

தமிழ்த்தேசிய உணர்வுடன் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமிழையும் கொண்டுவந்தார்கள். தமிழ் சங்கங்கள் ஊடாக தமிழைப் போதிப்பதோடு உயர் நிலைப் பள்ளி இறுதிவகுப்புத் தேர்விலும் தமிழை ஒரு பாடமாக எடுக்க முடிகிறதென்றால் அது இலங்கைத் தமிழர்களின் முயற்சி, அதற்கு உறுதுணையாகவிருந்த புதுச்சேரிகாரரான பாரீஸ் சொர்போன் பல்கலைக்கழகத்தின் l’Institut National des Langues et Civilisations Orientales தமிழ் பேராசிரியர் நண்பர் முடியப்பநாதனையும் இங்கே குறிப்பிடவேண்டும். எண்பதுகளுக்குப் பிறகு பாரீஸ் நகரில் Gare du Nord என்ற பகுதி தமிழர் பகுதியாக மாறி இருக்கிறது. இங்கு பெயர்ப்பலகைகளெல்லாம் தமிழில் வைக்கப்படவேண்டுமென்று சட்டங்கள் ஏதுமில்லை, இருந்தபோதிலும் பெயர்ப்பலகைகளைத் தூய தமிழில் பார்க்க முடியும். தமிழர்களுக்கே உரிய குணத்துடன் கோவில்களை நிறுவி, வழிபாடு, பூசைகள், சடங்குகள் எப்போதும்போல தொடருகின்றன. இந்து கோவில்கள் மட்டுமல்ல கிறிஸ்துவ தேவாலயங்களிலும் தமிழில் பூசைகள் நடக்கின்றன. இங்கு எமது நிறத்தையும் முகத்தையும் பார்த்து தமிழரல்லாத ஒருவர் பிரான்சு நாட்டில்  ‘வணக்கம்’ என்று கூறினால் அப்பெருமை இலங்கைத் தமிழர்களைச் சார்ந்தது.

இந்தியத் தமிழரோ இலங்கைத் தமிழரோ தமிழ் அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் எவரென்று பார்த்தால் அவர் தங்கள் ஆயுளில் ஒரு பகுதியை இந்தியாவிலோ இலங்கையிலோ செலவிட்டவராக இருப்பார். மொழிமீதான காதல் எங்கும் அரும்பும், ஆனால் மொழிஉணர்வினை பிறந்த மண்ணில் பெற்றால்தான் உண்டு.
———-
நன்றி: அமுதசுரபி பொங்கல் மலர்

பிரான்சை தெரிந்துகொள்ளுங்களேன் -1: பிரெஞ்சு மொழி

உலக நாடுகளில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உபயோகத்திலிருக்கிற மொழி பிரெஞ்சு. பிரெஞ்சும் இலத்தீன் மொழியின் பாரம்பர்யத்தில் உதித்ததுதான், அது எட்டியுள்ள இடமும் ஆங்கிலத்திற்கும் சிறிதும் சளைத்ததல்ல. மொழி மாநாடுகளும், ஞானசூன்ய ஆய்வுகட்டுரைகளும், பட்டிமன்றங்களும் தமிழை வளர்த்துவிடும் என நம்பும் திராவிடத்தின் ஆர்ப்பாட்ட அரசியலின்றி மொழி வளர்க்கும் இனம் பிரெஞ்சினம். அவர்கள் மொழிவரலாறும் அரசியல் வரலாறும் வேறுவேறல்ல.

சூது, தந்திரம், வர்த்தகம், காலனி ஆதிக்கம், மதமாற்றம், கலை, பண்பாடு, தொழில்கள், அறிவியல் வளர்ச்சி என அனைத்தும் பிரெஞ்சு மொழியின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றன. ஒன்றை இங்கே சுட்டிக்காட்டவேண்டும் இங்கிலாந்தும் -பிரான்சு நாடும் இருமைப் பண்புகளின் அடிப்படையில் எதிராளிகளாக இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் தங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து அரச குடும்பத்தின் முக்கிய மொழியாகவும், ஆங்கில கனவான்களின் மொழியாகவும், பிரெஞ்சு இருந்துவந்ததென்பது சரித்திரம் தரும் உண்மை. இன்றைக்கும் ஆங்கில மொழி வல்லுனர்கள் அநேகர் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசவும் எழுதவும் வல்லவர்கள். ஆங்கிலத்தித்தில் எழுதும் படைப்பாளிகளுக்கும் இது பொருந்தும். இத்தகைய மனப்பாங்கை பிரெஞ்சு எழுத்தாளர்களிடம் பார்க்க முடியாது. ஆக ஆங்கிலம் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட  இடத்திலெல்லாம் பிரெஞ்சு ஊடுறவ காரணமாயிற்று. ஆங்கில நாவல்களில் படைப்புகளில் பிரெஞ்சு மொழியை இடைக்கிடை புகுத்துவதென்பது நாகரீகமாயிற்று; விளைவு பிரெஞ்சு ஆங்கிலம் நுழைந்த இடத்திலெல்லாம் இலைமறை காயாக உடன் சென்றது. இதற்கு எதிர்மாறானது ஆங்கிலத்தின் நிலமை.  ஆங்கிலம் தெரிந்த பிரெஞ்சு எழுத்தாளரை விரல்விட்டு எண்ணிவிடலாம், அப்படியே தெரிந்தாலும் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தவே மாட்டார்கள். அப்படி உபயோகிக்க நேர்ந்தாலும் மிகவும் தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்கள் இருந்தாலொழிய உபயோகிப்பதில்லை.

உலகில் 33நாடுகளில் அரசு மொழியாக பிரெஞ்சு இருக்கிறது. தவிர உலகில் புதிய மொழியைக் கற்பவர்கள் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக தேர்வுசெய்வது பிரெஞ்சு. 175 மில்லியன் மக்கள் உலகில் பிரெஞ்சு மொழியை நன்கு எழுதவும் பேசவும் தெரிந்தவர்களெனவும் 100 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கையிலும் அம்மொழியை உபயோகிக்கத் தெரிந்தவர்கள். உலகின் மிக முக்கியமான அரசு சாரா நிறுவனங்கள் அனைத்திலும் பிரெஞ்சு முக்கியமானதொரு மொழியென்ற தகுதியுமுண்டு.

——–

எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை, வாழிய நிலனே: அன்னா ஹஸாரே

அன்னா ஹஸாரேவை எனக்கு அறிமுகப்படுத்தியவை இந்திய ஊடகங்கள். சொந்தச்செலவில் பொன்னாடை போர்த்திக்கொண்டு ஊர்முழுக்க தண்டோரா போடும் இந்திய மனப்பான்மைக்கு விலக்காக ஓர் அபூர்வ மனிதர். ஊர் பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு உழைக்கின்ற ஒன்றிரண்டு உத்தமர்கள் இந்தியாவில் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறபோது மனதிற்கு நிறைவாக இருக்கிறது. இந்தியா, அரசியல் கொள்ளைகூட்டத்திடமிருந்து விடுபடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது நறிகுறவர் கூட கைத் தொலைபேசி வைத்திருக்கிறார் என்பதிலில்லை. தனிமனித ஒழுக்கத்தைப் போற்றுகின்றவர்களின் எண்ணிக்கையும், சட்டத்தை மதிக்கிறவர்களின் எண்ணிக்கையும், கலையையும் பண்பாட்டையும் வளர்த்தெடுக்கின்றவர்களின் எண்ணிக்கையையும் பொறுத்தது அது. மனித குலத்தில் எந்தக்கும்பலில் இந்த எண்ணிக்கையினர் கணிசமாக இருக்கிறார்களோ, பெருமைகளை பாசாங்கற்ற செயல்பாடுகளால் நேர் நிறுத்துகிறார்களோ அக்கும்பல், அந்த இனம் – அவர்களை சேர்ந்த நாடு வாரலாற்றின் கவனத்தை தனது பக்கம் ஈர்க்கிறது.

இந்திய ஊடகங்களின்றி வேறு வகையிலும் அன்னா ஹசாரேவை படிக்க முடிந்தது. உபயம்: அவரது சகாக்களான கிரண்பேடி, மற்றும் சாந்தி பூஷன்; அவரது குரலுக்கு செவி சாய்க்கும் நடுத்தர வர்க்கம், படித்த மக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலகர்கள், ஓய்வு பெற்ற முன்னாள் அரசு அலுவலர்கள், முதியோர்கள், இளைஞர்கள், குடும்பப்பெண்மணிகள் என்று அப்பட்டியல் நீளுகின்றது. ஆக மொத்தத்தில் ஒரு சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவருக்காக ஊர்வலம் போகிறார்கள், உண்ணாவிரதம் இருக்கிறார்கள், கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள். சராசரி இந்தியன் ஒருவனுக்கு பரவலாக நாடெங்கும் ஆதரவு திரண்டதில்லை. ஆக அவரை நம்புகிறேன். இந்த எனது நம்பிக்கைக்கு வலுவூட்டுவதுபோல முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் போன்றவர்களின் குரல்களும் ஒலிக்கின்றன.

அவரது போராட்டம் வெற்றி பெறவேண்டும் ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டுமென அண்ணல் காந்தியை பிரார்த்திக்கிறேன்.

ஆந்தரே ழித் -கடித இலக்கியத்தின் பிதாமகன்

 கடிதப் பரிமாற்றங்கள் முக்கியம். உரையாடலைக்காட்டிலும் எழுத்துருவம் பெறுகிற சொற்களுக்கு வலிமை அதிகம். எழுத்தில் ஒன்றை சொல்கிறபோது, தார்மீகமாக அவ்வெழுத்துக்கு எழுதுகின்றவன் நேர்மையாக இருக்கவேண்டியிருக்கிறது, உண்மையை பேசவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது அல்லது எழுதிய பொய்யை இதுதான் உண்மை என்று சாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. வாசகன் அங்கே எஜமான், எழுதுகின்றவன் அடிமை. எழுதப்பட்டது அடிமைசாசனம். இரட்டை நாக்கு இருக்கலாம், இரட்டை எழுத்தாணி இருக்கமுடியாது. எழுத்தாளன்-எழுத்து- வாசகன் என்ற மூவர்கூட்டணியில் இயங்குதளம் இலக்கியமெனில், கடிதங்கள் கூட இலக்கியமாகின்றன. இங்கேயும் எழுதியது யார்? எழுதப்பட்டதென்ன- எப்படி சொல்லப்பட்டிருக்கிறது? யாருக்கு எழுதியது? என்ற கேள்விகளுண்டான பதில்கள் முக்கியம். இலக்கியத்தின் வடிவமைப்புக்கு, பொய்களும் கற்பனைகளும் பிரதானமாக இருக்கிறபோது, கடிதமென்பது எழுதுபவனின் மனக்கண்ணாடியாக வாசகனோடு நெருங்கிய ஒட்டுதலைக்கொண்டதாக இருக்கிறது.

இலக்கியங்களிற் கூட புனைவை உண்மையெனச் சாதிப்பவன் -எழுத்தூடாக- வெற்றிபெறுகிறான். இன்றுள்ள தொழில் நுட்பங்கள் கடிதப் பரிமாற்றங்களை வெகுவாகக் குறைத்துவிட்டன. கைவலிக்க மனம் திறந்து உண்மைகளைப் பதிவு செய்யும் மடல்கள் இன்றில்லை. கடந்த காலத்தில் நண்பருக்கு, மகளுக்கு, காதலிக்கு, அன்னைக்கு என ஒற்றைவாசகர் அல்லது வாசகியை மனதிற்கொண்டு எழுதப்பட்ட பல கடிதங்கள் இன்றைக்கு இலக்கிய மதிப்பீட்டினைப் பெற்று பிறவாசகர்களைப் பெறுவதற்கு அதிலுள்ள சத்தியங்கள் மட்டும் காரணமல்ல ஆரம்பத்திற் கூறியதுபோன்று எழுதியது யார்? எழுதப்பட்டதென்ன? எப்படி சொல்லப்பட்டிருக்கிறது? யாருக்கு எழுதப்பட்டதென்கிற கேள்விகளுக்குண்டான பதில்களே காரணம்.

“நிழலில் ஒளியின்மையைத் தேடுவதுபோல தீயவற்றில் நல்லவை அல்லாதவற்றை தேடுபவர்கள் கலகக்காரர்கள்” என்ற ஆந்தரே ழித் 1947ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர், சிந்தனையாளர். ழித்தின் படைப்புவெளி நாவல்கள், தத்துவ விசாரங்கள், கட்டுரைகள், கற்பனை நாட்குறிப்புகள், கடித இலக்கியங்களென விரிவானதொரு எல்லைப்பரப்பினைக் கொண்டது. கடித இலக்கியத்தினூடாக தனிமனிதனை கட்டமைக்க அயர்வின்றி நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறார். இவரது வழிகாட்டுதலில் இலக்கிய அன்பர்கள் ஒரு சிலரால் தொடங்கி நடத்தப்பட்ட 1909 La Nouvelle Revue francaise (NRF) ஒரு தீவிர இலக்கிய இதழ். ஜெர்மன் ஆதிக்கத்திலிருந்து பிரான்சு விடுதலை பெற்றநேரத்தில் இவ்விதழுக்கு விதித்திருந்த தடையை, ஆந்த்தே ழித் மரணத்திற்குப் பின்னர் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விலக்கிக்கொண்டனர், மீண்டும் வெளிவந்தது. ஓர் இலக்கிய இதழ் நூறாண்டுகாலம் மக்கள் ஆதரவினை பெற்று நிலைத்திருக்கமுடியுமென்பதற்கு NRF சாட்சியம்.

ஜாய்ஸ் 1921ம் ஆண்டு பாரீஸ்வந்திருந்தபோது, பல பிரெஞ்சு எழுத்தாளர்களை கடுமையாக விமர்சித்திருந்தார், தப்பித்தவர் ஆந்தரே ழித் மட்டுமே. ஓரின புணர்ச்சியை சிலாகித்து ழித் எழுதியிருந்த கொரிடோன் (Corydon) என்ற பெயரில் வந்த கட்டுரையை அவ்வளவாக ரசிக்கவில்லை என்றபோதும் ழித்தின் நாவல்களில் குறிப்பாக Les Caves du Vatican மற்றும் La Symphonie Pastorale என்ற இரண்டு நாவல்களையும் பாராட்டி ஜாய்ஸ் பேசுகிறார்.

‘இந்திய தேசத்தின் கீழைப் பண்பு என்னைப் பெரிதாக வசீகரிக்கவில்லை’ என்றது மாத்திரமல்ல, ‘இந்தியா என்ற சொல் எதிராளி என்ற மனநிலையிலேயே என்னை வைத்திருந்தது, அம்மந்திரச்சொல் பலருக்கும் கிளர்ச்சியூட்டியிருக்கலாம் ஆனல் என்னளவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தத் தவறிவிட்டது’ என்பதான ஆந்தரே ழித்தின் மனப்பாங்கை பிரெஞ்சு படைப்பாளியான மால்ரோவும் தமது எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய நாடும், ஆன்மீக சிந்தனையும் மேற்கத்திய கல்விமான்கள் பலரிடத்திலும் அளவற்ற காதலை தொடர்ந்து ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த காலத்தில் துய்மால், ரொமென் ரொலான் என்றறிந்த பிரெஞ்சு படைப்பாளிகளைப்போலவே இன்றைக்கு பஸ்க்கால் கிஞ்ஞார், கிளேஸியோ போன்ற பிரெஞ்சு எழுத்தாளர்களூம் தங்கள் படைப்பியங்கு தளத்தில் அவ்வப்போது இந்திய தேசம், ஆன்மீகமென்று தேடி அலைவதுண்டு. ஆந்தரே ழித் அவர்களில் ஒருவரல்ல, “நான் தனித்தவன், பிறருடன் என்னை ஒப்பிடமுடியாது”, என தம்மைச் சுய மதிப்பீடு செய்திருந்தது அதற்குக் காரணமாக இருக்கலாம்.

‘இந்தியாவின் கீழைதேச முகத்திற்கோ, புரிந்துணர முடியாத அதன் ஆன்மீக சிந்தனைகளுக்கோ’ வசப்படாத அம்மனிதரை தாகூரின் இலக்கிய மொழி கவர்ந்தது. ஆந்தரே ழித் தேர்ந்த மொழிபெயர்ப்பாளர். ஜெர்மன், ஆங்கிலம் இத்தாலி ஆகிய மொழிகளை நன்கறிந்தவர், குறிப்பாக ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் அவருக்கு சிறந்த புலமை உண்டு. ஜெர்மன் மொழியினின்றும் ஆங்கிலத்திலிருந்தும் பல நூல்களை பிரெஞ்சுமொழிக்கு கொண்டுபோயிருக்கிறார். 1913ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு இரவீந்திர நாத் தாகூரின் கீதாஞ்சலிக்குக் வழங்கப்பட்டிருந்த நேரம். மொழிபெயர்ப்பு பணியும் இன்றியமையாத இலக்கியபணியென நம்பும் ஆந்தரே அந்நேரத்தில் ஆங்கிலத்திலிருந்து பல முக்கிய படைப்புகளின் மொழிபெயர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். தாகூரின் கவிதைகளை இந்திய தேசத்துக்கேயுரிய புராண இதிகாச சிந்தனைகளிலிருந்து விடுவித்துக்கொண்டதும் மந்திரச் சொற்களால் வடிக்கப்பட்டதுமான கவிதைகள்’, என கருதிய ழித் கீதாஞ்சலியின் கண்ணோட்டத்தில் பார்த்த இந்தியா வேறு. கீதாஞ்சலியை மாத்திரமல்ல கீதாஞ்சலியை எழுதிய கவிஞரையும் 1921ம் ஆண்டு பிரான்சுக்கு அழைத்து, இலக்கிய சந்திப்பொன்றிர்க்கு ஏற்பாடும் செய்தார். நேருவின் மகளும் ஆந்தரே ஜித்தின் மகளும் சுவிஸ்நாட்டில் இருந்தபொழுது நெருங்கிய சினேகிதிகளாக இருந்திருக்கிறார்கள். அவ்வகையில் நேரு இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பின்பு, ழித் அவரைச் சந்தித்திருக்கிறார்.

ஆந்தரே ழித்தின் எழுத்துக்கள் வரம்பற்ற சுதந்திரத்தை ஆதரித்தவை, ஆதிக்கத்தின் எத்தகைய வடிவத்தையும் முற்றாக நிராகரித்தவை. மரபு, அறநெறிகள் என்ற விலங்குகள் சிரத்தையின்றி போகிறபோக்கிலே உடைத்தெறியப்படுகின்றன. “நமக்கென வாய்த்தவையும், நமதென வரித்துக்கொண்டவையும், பிறர் எவரிடத்தும் காணக்கிடைக்காததென்று மனிதப் பண்பினை தனிமைப் படுத்துகிறார்.’ ‘உன்னைக்காட்டிலும் ஒன்றை பிறரால் சிறப்பாக செய்யவியலுமெனில் அந்த ஒன்றை நீ செய்யாமலிருப்பது மேல்’, என்று அவர் கூறும் யோசனை, மனிதர்களின் அத்தனை செயல்பாடுகளுக்கும் பொருந்தும். தமது சிந்தனையை ‘தனி மனிதனின் விசித்திரமான குணம்(Idiosyncrasie)’ என வகைமைக்குள் அடக்குகிறார்: அவரது சிந்தனை உலகில் ஐரோப்பா ஒரு பக்கம் ஆப்ரிக்கா மறுபக்கம்; அல்ஜீரியா இடப்பக்கமெனில் சுவிஸ் நாடு வலப்பக்கம். பிஸ்காரா(அல்ஜீரியா)வைப் பேசுகிற ழித், பெரேவின்(சுவிஸ்) குறித்தும் எழுதுகிறார். ஊசியிலை மரங்களை கொண்டாடுகிறபோதும், பேரீச்சை மரங்களை சிலாகிக்க தவறுவதில்லை.

மரபுகளைத் தளர்த்திக்கொள்ளாமை, நெறிமுறைகளில் பிடிவாதம், சமூகப் பண்புகளிடத்தில் மரியாதை என்ற கருத்தியங்களால் உருப்பெற்றிருந்த ழித் பின்னாட்களில் உரையாடல், விவாதம், எதிர்வினை, முரண்பாடுகளென்று கலகக் குரலுடன் திரிந்தவர். நண்பர்களைக்கூட எதிரணியில் நிறுத்தி விவாதிப்பதில் ஆர்வம், விவாதத்திற்கு துணை வேண்டியதில்லை. நண்பர்களை அருகில் அமர்த்தி விவாதத்தைத் துவங்கும் வழக்கமுமில்லை. “சர்ச்சை, சண்டைபிடித்தல், மனம் நெகிழ்தல், தொடர்ந்து விவாதத்துக்குரிய பொருளுக்கு வளம் சேர்த்தலென்பது எழுத்தாளருக்கு நோக்கமாக இருந்திருக்கின்றன என்கிறார், வலேரி (ழித்துக்கு வலேரி எழுதிய கடிதம் -28 ஜூன் 1906). ழித்தின் பரம ரசிகரும், பேராசிரியருமான குளோது மர்த்தான் என்பவரின் கடுமையான உழைப்பில் ஆந்தரே ழித்தின் கடிதங்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சொந்தங்கள், நண்பர்கள், பிறருடள் ழித் உரையாட கடித மொழியும், அதன் வடிவும் பெரிதும் துணைபுரிந்திருக்கின்றன.

பத்து வயதில் பெற்றோர்களுக்கு ழித் எழுதியதுதான் அவருடைய முதல் கடிதம். விவாதத்தின்போதே எதிராளியாக தாமும், தம்மிடத்தை எதிராளிக்கும் அளித்து விவாதத்தை புணரமைக்கும் திறனும் அவருக்கு கைவந்திருக்கிறது. ‘அவன் என்று குறிப்பிடுகிறேன், ஆனால் அந்த அவன் வேறுயாருமல்ல நானே’ என்று கூறி வியப்பில் ஆழ்த்துகிறார். ஒரு கட்டத்தில் எனது எழுத்துக்களில் நான் ‘X’என்று குறிப்பிடும் முகம்தெரியாத நபர் நீங்கள் நினைப்பதுபோல வேறுயாரோ அல்ல அதுவும் நானே’ என்ற ரகசியத்தையும் ஒளிக்காமல் கூறுகிறார். கடித பரிமாற்றங்கள் அவரது Journal என்கிற அகவயது பதிவுகளைக் காட்டினும் தீட்சண்யமிக்கவை. கடிதமொழிகளூடாக நாம் சந்திக்கிற ழித் தம்மை தாமாவாகவே காட்டிக்கொள்கிறார்: எளிமை, பொய்முகமின்மை, இயல்பாய் வெளிப்படும் உரையாடல், செப்பனிடப்படாத தரிசனம், கபடமற்ற குரல் என அவற்றை பதிவு செய்யலாம். பொதுவாகவே ஆந்தரே ழித்தின் படைப்புகள் அவரது சொந்த வாழ்க்கையின் உண்மை பதிவுகள்.

ழித்துடன் கடிதப் பரிமாற்றங்கள் செய்துக்கொள்பவர்களுள் அவ்வப்போது தலைகாட்டும் புதுமனிதர்களைத் தவிர, Happy Few என்கிற வட்டத்தைச் சேர்ந்த அவருக்கு நெருங்கிய நண்பர்களுமுண்டு. ழித்-ஜேம்ஸ்; ழித்-குளோதல்; ழித்-புரூஸ்ட்; ழித்-வலேரி; ழித்-மர்த்தென் துய்க்கார்; ழித்-மொரியாக்… என பட்டியலை கைவலிக்க எழுதிக்கொண்டிருக்கலாம். ஆந்த்ரே ழித்தின் படைப்புகளை குறிப்பாக அவரது கடித பரிமாற்றங்களை வாசிக்கிற எவரும் தம்முள் பலராக அவர் வாழ்ந்துள்ளமையை உணரக்கூடும். ஒன்றிரண்டல்ல இரண்டாயிரம் நபர்களுக்கு 25000 கடிதங்கள் அவர் எழுதியிருக்கிறாரென குளோது மர்த்தென் கணக்கு வைத்திருக்கிறார். பிறருக்கு எழுதுவதும், பிறரோடு உரையாடுவதும், பிறருடன் விவாதிப்பதும் தம்மை மதிப்பீடு செய்ய உதவியதாக ழித் நம்புகிறார். ஆந்தரே ழித்தின் கடித பரிமாற்றங்களுள் ழித்திற்கும்-போல்வலேரிக்குமான கடிதப்போக்குவரத்துகள் குறிப்பிடவேண்டியவை. Correspondance -Gide-Valery என்ற பெயரில் பல பதிப்புகளை கண்டுள்ள இந்நூல் உலக இலக்கியங்களுக்கு பிரெஞ்சு படைப்புலகம் வழங்கியுள்ள கொடை என்கிறவர்கள் உண்டு. இந்நூலில் ழித்தும்- கவிஞர் போல் வலேரியும் 1890க்கும் 1942க்கும் இடையில் எழுதிக்கொண்ட கடிதங்கள் உள்ளன. இருவருமே சமகாலத்தவர், சிந்தனைக்கு இலக்கியவடிவம் கொடுப்பதில் தேர்ந்தவர்கள். முதற்பதிப்பின்போது 500 கடிதங்கள் கிடைத்தனவென்றும் மறு பதிப்பின்போது நூறு கடிதங்களை கூடுதலாகக் கிடைத்து பதிப்பித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆந்தரே ழித்தின் படைப்புகளில் சுயசரிதைகள் வடிவில் எழுதப்பட்ட புனைவுகளும் முக்கியமானவை. இப்புனைவுகளை வாசிக்கிறபோது எதிர்கால இலக்கிய உலகில் நிகழவிருக்கும் மாற்றங்களுக்கு பிரெஞ்சு வாசகர்களைத் தயார்படுத்தும் அக்கறையை எழுத்தாளரிடத்திற் காண்கிறோம். கற்பனா வாத இலக்கியத்திற்கும், சுயகதை இலக்கியத்திற்கும் உரிய ‘தான்’, ‘தனது’ சொற்களின் பல வடிவங்கள் அவர் படைப்பில் நமக்கு அறிமுகமாகின்றன. எனினும் முழுமையாகத் தம்மை கற்பனாவதத்திடம் ழித் ஒப்படைப்பதில்லை. அதனிடம் (கற்பனா வாதத்திடம்) கையளிக்காமலேயே பிறர் தம்மை எளிதில் அடையாளப்படுத்துவதற்கு உதவும் தந்திரமாக சுயகதை புனைவு வடிவத்தை இலக்கியத்திற்கு அவர் தேர்வுசெய்திருக்கவேண்டுமென கருத வேண்டியுள்ளது. அவரது தந்திரங்களையும் சந்தேகிக்கவே செய்கிறோம். அவ்வாறான மன நிலையை வாசகர்களிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் ஏற்படுத்தும் சூட்சமத்திலேயே அவரது திறன் அடங்கியுள்ளதென வியப்பவர்களுமுண்டு. தமது அந்தரங்க நகர்வுகளை, அசைவுகளை, மெல்லிய சலனங்களை எழுதுவதன் முதல் நோக்கம் தனக்குள் இருக்கும் வாசகனுக்கு. தம்மிடமுள்ள ‘தான்’ மட்டுமல்ல அடுத்துள்ள பிறரிடத்திலும் தமது அந்தரங்கம் பகிர்ந்துகொள்ளப்படமேண்டுமென்பது அவரது உப நோக்கம். வாசகர்களான நாம் படிக்கிறபோது நமது மனநிலையை அவரும் வாசிக்கிறார்.

ழித்தின் சுயபுனைவு அணுக்கத்தை மூவகையாகக் பிரிக்கலாம். தம்மை நிழலினினின்று வெளிச்சத்திற்கு கொண்டுவருவதென்பது முதற்படி. ஒளித் திட்டுக்குள் நிறுத்திவைப்பட்ட தனக்குத் தானே ஈவிரக்கமற்று தீர்ப்பு வழங்குவதென்பது இரண்டாம் படி. தாம்வழங்கிய தீர்ப்பிற்கு வாசகனிடம் மேல் முறையீடு செய்வதும் நீதிகேட்பதும் மூன்றாம் படி. அவரிடம் தண்டனைக்குள்ளாகிற தனிமனிதன் நமக்குள்ளும் இருக்கிறான் என்கிறபோது தண்டனைக்குரியவன் நீதிபதியா குற்றவாளியா என்ற கேள்விகளைத் தவிர்க்க முடிவதில்லை. ஆந்தரே ழித்தின் சுய சரிதைகளை வாசிக்கிறபோது எதிர்காலத்தை நிகழ்காலமாகப் பாவித்துக்கொண்டு பாம்புபோல ஆரவாரமின்றி சருகுகள், புதர்கள், முட்செடிகள், ஈரமணல், சரளைக்கற்களென்று ஊர்ந்து செல்லும் அனுபவம் நமக்கு வாய்க்கிறது.

சுயசரிதை புனைவுகள் வரிசையில் நான்கு நூல்கள் Paludes, As if it die, The Counterfeiters ஆங்கில மொழியாக்கத்தில் கிடைக்கின்றன. நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை இவை. நாவல்கள், கட்டுரைகள், புனைவுகள், பயணக்கட்டுரைகள், காத்திரமான விமர்சனங்களென்று அவரது படைப்புகளின் எண்ணிக்கை நூற்றுக்கு குறையாமல் இருக்கின்றன. குடும்பவாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆந்தரே ழித் தன்னினப்புணர்ச்சியில் ஆர்வங்கொண்டவர். இதை சுயபுனைவுகளில் சொல்லவும் தவறியதில்லை. __________________________________________________________

தமிழரும் பெருமையும்…

இந்து பத்திரிகை, ஊழலைக்குறித்து CNN-IBN & CNBC-TV18 நடத்திய கருத்துகணிப்பை வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவிலே இன்றைய தேதியிலே பாரத தேசத்தின் ஊழல் பெருமக்களாக நான்கு பெயர்களை சுட்டியிருக்கிறது அவர்களில் மூன்று பெயர்கள் தமிழினத்திற்குச் சொந்தமானவை. தமிழினத்திற்கு தி.மு.க கொண்டு சேர்த்திருக்கிற மகத்தான பெருமை, இனி இந்தியக் துணைக்கண்டத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் பேசப்படும். மக்களால் அதிகம் அறியப்பட்டவர் ஷீலா தீட்சத்தின் கல்மாடியா, கருணாநிதியின் ராஜாவா என்று சன் டி.வியில் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்யலாம். குறிப்பாக தமிழ் வருடப்பிறப்பன்று அரங்கேற்றினால் மிகப்பொருத்தமாக இருக்கும். தி.மு.க பெயரில் ஊழலுக்கென்று ஒரு விருதை உருவாக்கி முதல் விருதை கலைஞருக்கே கூட அவரது அபிமானிகள் சூட்டி மகிழலாம், அல்லது கவிதை தாசர்களால் ஒரு கவி அரங்கம் ஏற்பாடு செய்யலாம். இரண்டு நாட்களுக்கு முன்பு தினமணி வெளியிட்டிருந்த தலையங்கம் கலைஞர் புலம்பல் குறித்து நன்றாகவே சாடியிருந்தது. பிற அரசியல் கட்சிகளையும் தினமணி குட்டத்தவறவில்லை. உண்மைதான் இந்தியாவில் ஊழலில்லாத ஓர் அரசியல் கட்சி, ஓர் அரசியல் வாதி இருக்க முடியுமா? செய்தித்தாள்களில் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் முகங்களைப் பாருங்கள். உத்தமத்தின் சாயலில் ஒரு துணுக்கைக்கூட நாம் அவற்றில் பார்ப்பதரிது.

நண்பர்கள் கேட்கலாம் பிரான்சில் இல்லையா அமெரிக்காவில் இல்லையா? ஏனில்லை இங்கேயும் ஜேப்படி உண்டு, வழிப்பறியுண்டு, கொள்ளையுண்டு, கொலையுண்டு அதாவது சமூகத்தின் அமைதிக்கு கேடினை விளைவிக்ககூடிய எல்லா செயல்பாடுகளுமுண்டு. விழுக்காடுகளில்தான் ஏற்ற தாழ்வுகள். சமூகத்தை அரிக்கும் கரையான்படைத் தாக்குதல்கள் இந்தியாவில் அதிகம். நம்மிடம் ஆகக் கூடுதல். நம்மைப்பற்றிய ஒரு சுய பார்வை தேவை. மும்பையிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் திருவனந்தபுரத்திலும் பல நேரங்களில் தமிழரெனில் முகம் சுளிக்கும் போக்கு இருக்கிறது. இந்தப் பார்த்தினீயத்திற்கான வேரெங்கே இருக்கிறது என்பதைக் கண்டாக வேண்டும். கல்தோன்றி மண்தோன்றா காலத்து என ஆரம்பித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டது போதும்.
——————————

அல்பெர் கமுய் இறப்புக்கு KGB காரணமா?

1960ம் ஆண்டு நடந்த கார் விபத்தொன்றில் அல்பெர் கமுய் இறந்தாரென்பதை நம்மில் பலரும் அறிவோம். அக் கார்விபத்துக்குக் காரணம் முன்னாள் சோவியத் யூனியனின் உளவுபடை என்றால் நம்புவீர்களா? நம்பவேண்டும் என்கிறார் இத்தாலி நாட்டைச்சேர்ந்த கல்வியாளர் Giovanni Catelli. கிழக்கு ஐரோப்பிய விவகாரங்களை கரைத்துக்குடித்தவர் என்பதால், இத்தாலி நாட்டின் தினசரியான Il Corriere Della Sara பிரசரித்துள்ள இவருடைய செய்தி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. Giovanni Catelliயின் தகவலுக்கு ஆதாரம் செக் நாட்டுக் கவிஞர் Jan Zabranna, இவர் தமது Lifetime நூலில் KGBக்கு நெருக்கமான ரஷ்ய நண்பரைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஆக இந்த ரஷ்யரின் தகவற்படி அப்போதைய ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Chepilov சொந்தத் தலையீட்டில், அல்பெர் கமுய் பயணம்செய்யவிருந்த வாகனத்தின் டயர் சேதப்படுத்தப்பட்டதெனவும், பின்னர் அதிவேகமாக செல்லுத்தப்பட்ட அக்கார் சதிகாரர்களின் திட்டபடி விபத்துக்குள்ளானதென்றும் கூறுகிறார்கள். ரஷ்ய அமைச்சருக்கும் அல்பெர் கமுய்க்கும் அப்படியென்ன பெரிய பகை? பம்பாய் தாதாக்களுக்கும் அண்மையில் கொலையுண்ட பத்திரிகையாளருக்கும் என்ன பகையோ அதுவேதான். 1957ம் ஆண்டு Franc-Tireurs என்ற பிரெஞ்சு தினசரியில் கமுய் 1956ம் ஆண்டு ஹங்கேரி எழுச்சியை சோவியத் படை இரும்புக்கரம்கொண்டு அடக்கியதற்கு ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை வெளிப்படையாகக் குற்றம் சாட்டி எழுதியிருந்ததாகவும், அப்பிரச்சினையே ரஷ்ய அமைச்சரின் கோபத்தைத் தூண்டியதாகவும் சொல்லப்படுகிறது.

அண்மையில் அல்பெர் கமுய்யின் வாழ்க்கைச் சரிதத்தை எழுதிய பிரெஞ்சு தத்துவவாதி Michel Onfray இச்செய்தியை மறுக்கிறார். ரஷ்யர்கள் அல்பெர் கமுய் மீது கோபம் கொண்டிருந்ததென்னவோ உண்மைதான் என்றாலும் அவர்கள்தான் விபத்தை ஏற்படுத்தியவர்கள் என்பதை தான் நம்பமாட்டேன் என்கிறார். தமது மறுப்புக்கு அவர் சொல்லும் காரணம், அன்றைய தினம் கமுய் இரயிலில் பயணம் செய்யத் தீர்மானித்து பயணச்சீட்டை வாங்கிவைத்திருந்தாரென்றும், கடைசி நிமிடத்தில் இரயிற் பயணத்தை ரத்து செய்து தம்முடைய பதிப்பாளர் சகோதரர் மகனுடன் தற்செயலாக பயணம் செய்ய நேரிட்டது என்கிறார். தவிர பயணம் செய்த வாகனம் அல்பெர் கமுய் உடையது அல்லவென்றும், அவரது சொந்த வாகனத்தை அன்றைக்குத் தொடும் எண்ணம் அவருக்கு துளியுமில்லை என்கிறார்.

ஆக அல்பெர் கமுய்யின் அகால மரணத்தின் புதிர் நீடிக்கவே செய்கிறது. அவர் புனைவுகள் அனைத்துமே மரணத்தை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிப்பவை. அடுத்து ரஷ்யாவுடனான பகை திடீரென்று முளைத்ததல்ல. கிழக்கு பெர்லினில் -(1953) ஆரம்பித்த காம்ப்ரேட்டுகளுடனான பகை புதாபெஸ்டுவரை (1956) தொடர்ந்தது. இருவருமே – டெத்திஸமும் கம்யூனிஸமும் கமுய்க்கு எதிராக காய் நகர்த்தியிருக்கக்கூடும் என்பதுங்கூட ஓர் அபத்தமான உண்மைதான்.

காஃப்காவின் தீரா ‘வழக்கு’

பிரான்ஸ் காஃப்காவின் ‘வழக்கு”(Der Prozess- The Trial) புனைகதையின் நாயகன் ஜோசெப் K. போன்றே, நாவலின் மூலாதாரமான கையெழுத்து பிரதியும் விநோதமான வழக்கில் சிக்குண்டு தவிக்கிறது. ஏவா ஹோப் என்ற டெல் அவிவ் (Tel Aviv) நகரவாசியான பெண்மணியின் வீட்டிலிருந்து காவல்துறையினருக்கு பின்னிரவு ஒருமணி அளவில் அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்திருக்கிறது. ‘வீட்டிற்குள் திருடனிருக்கிறான்  உடனே வரவேண்டும், என்ற பதட்டக் குரலை நம்பி சைரன் சகிதம் காவல்துறையினர் வந்திறங்கியபோது திருடவந்தவன் மாயமாய் மறைந்திருந்தான். திருமதி ஏவா ஹோப் வீட்டில் நுழைந்த கள்வனுக்குப்  பொன்னோ பொருளோ நோக்கமல்ல. பின்னே தமிழ் மரபில் திருடவந்தது இதயத்தை என்றெல்லால் கற்பனை வேண்டாம், ஏனெனில் பெண்மணிக்கு 72 வயது. களவாணிப்பயல் பின் எதற்காக வந்தான் எனக் கேட்கிறீர்கள் இல்லையா? இந்த எண்ணம் உள்ளூர் பொலீசாருக்கும் வந்திருக்க வேண்டும். பெண்மணியைக் கேட்டிருக்கிறார்கள். கிடைத்த பதில்: காஃப்காவின் எஞ்சியிருக்கிற கையெழுத்து பிரதிகளை திருட வந்திருக்கலாம் என்பது. திருமதி ஏவா ஹோப், காஃப்கா விட்டுச்சென்ற எழுத்துக்களின் இன்றைய வாரிசுதாரர்.

செக்நாட்டைச் சேர்ந்த நண்பரும் எழுத்தாளருமான மாக்ஸ் ப்ரோடிடம்(Max Brod) முடிக்கப்படாத தமது ‘The Trial’ நாவலின் கையெழுத்து பிரதியை, காஃப்கா இறுதிக்காலத்தில் ஒப்படைத்திருந்தார். மாக்ஸ் ப்ரோட் அப்பிரதியைப் தமது பெண் செயலாளருக்குப் பரிசாகக் கொடுத்தார். எஸ்த்தெர் ஹோப் என்ற பெயர்கொண்ட அப்பெண்மணி பின்னாளில் தமது பெண்களுக்கு உரிமைசெய்து ஆவணப்படுத்த அவர்களில் ஒருத்தி 1988ம் ஆண்டு ஜெர்மன் அரசாங்கத்தின் நூலகத்திற்கு நல்ல விலைக்கு விற்றார். ஆக தற்போது ஜெர்மன் நாட்டில் மார்பக் அம் நெக்கர்(Marbach am Neckar) நகரின் நூலகத்தில் அது பாதுகாப்பாக இருக்கிறது. காஃப்காவும், மாக்ஸ் ப்ரோடும் நெருங்கிய சினேகிதர்கள். காசநோயில் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் காஃப்கா, 1824ஆம் ஆண்டு இறந்தபோது, நூலின் கையெழுத்துப் பிரதியை தாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நண்பர் எரித்துவிடுவாரென மனமார நம்பினார். நண்பரிடம் அதற்கான உறுதிமொழியைக் காஃப்கா கேட்டுப்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. காஃப்காவின் இறுதி ஆசையை நண்பர் நிறைவேற்றவில்லை. 1939ம் ஆண்டு பிராகு (Prague) நகரம் நாஜிப் படையினரால் கைப்பற்றபட்ட நிலையில் அங்கிருந்து தப்பிய காஃப்காவின் நண்பர், எஞ்சியிருந்த காஃப்கா படைப்புகளை மறக்காமல் உடன்கொண்டுசென்றிருக்கிறார். மாக்ஸ் ப்ரோடு 1968ம் ஆண்டு இறந்ததும் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல காஃப்காவின் கையெழுத்து பிரதிகள் அனைத்தும் அவரது விருப்பப்படி எஸ்த்தெர் ஹோப் என்ற செயலாளரை அடைகின்றன. அவரது இறப்புக்குப் பிறகு, செயலாளர் பெண்மணியின் மகள்களிருவரும் காஃப்கா படைப்புகளுக்கு உரிமை கொண்டாடுகிறார்கள்.

காஃப்கா எழுத்துக்களின் தற்போதைய வாரிசுதாரர் இஸ்ரேலிய பிரஜை. ‘ஜெர்மன் வசமிருக்கும் ‘The Trial’ புனைவின் கையெழுத்துப் பிரதியை, தம்மிடம் ஒப்படைக்கபடவேண்டுமென இஸ்ரேல் நாட்டு தேசிய நூலகம் அணமையில் கேட்டுக்கொண்டுள்ளது. ‘ஆவணப் பாதுகாப்புச்சட்டத்தின்படி தகுந்த வகையில் கையெழுத்துப் பிரதி முன்னதாக அரசின் பரிசீலனைக்கு உட்படுத்தபட்டு அவற்றிலுள்ள வரலாற்று தகவல்கள் சரிபார்க்க அனுமதிக்கப்பட்டிருக்கவேண்டும், அது தவிர ஆவணத்தின் முக்கியத்துவம் கருதி, பாதுகாப்பிற்காக வேண்டிய நகல்களை எடுத்தபின்பே கையெழுத்துப்பிரதியை வெளியிற் கொண்டு சென்றிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறெதுவும் செய்யப்படாமலேயே ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதி விற்கப்பட்டிருக்கிறதென்பது இஸ்ரேல் சொல்லும் காரணம். ஆனால் காஃப்கா யூதரேத் தவிர இஸ்ரேலியரல்ல, தாய்மொழியும் ஜெர்மன். காஃப்கா படைப்புகள் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்டன, எனினும் இஸ்ரேல் நாட்டின் தேசிய நூலக இயக்குனர் Shamuel Har Noy, அந்நூலிலுள்ள சில வரலாற்று பிழைகள் திருத்தப்படவேண்டுமென்கிறார். காஃப்காவின் நண்பரான ப்ரோடுவின் இறுதி விருப்பத்தை முன்வைத்தும் இயக்குனர் சிலபிரச்சினைகளை எழுப்புகிறார். காஃப்காவின் பிற கையெழுத்துப்பிரதிகளைப் பற்றிய ப்ரோடுவின் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்க அவர் விரும்பியதில்லையெனவும், இஸ்ரேலைத் தவிர வேறு நாட்டிற்கு மூலப்பிரதி கொண்டுசெல்லப்படுவதை ஒருக்காலும் அவர் ஏற்கமாட்டாரென்றும் சாதிக்கிறார். ப்ரோடுவின் இறுதிவிருப்பமென்று எழுதப்பட்டுள்ள உயிலை அவரவர்க்கு விருப்பமான வகையில் பொருள்கொள்ள முடியுமென்கிறார்கள். கையெழுத்துப்பிரதியின் தற்போதைய உரிமையாளருடைய வழக்கறிஞர் என்ன சொல்கிறார்? 1974ம் ஆண்டு  உரிமையாளர்களுக்கிடையேயான குடும்ப வழக்கில் டெல் அவிவ்  நகர (இஸ்ரேல்) நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்: ப்ரோடு,  வாரிசுதாரர்களுக்கு காஃப்கா உடமைகள் குறித்த வழிகாட்டுதல்கள் எதையும் உயிலில் தெரிவிக்கவில்லையென்றும், காஃப்காவின் படைப்புகளை விருப்பம்போல கையாள வாரிசுதாரருக்கு(எஸ்த்தர்ஹோப்- பின்னர் அவர் மகள்கள்)உரிமையுண்டெனவும் கூறியுள்ளதை அவர் நினைவூட்டுகிறார். 1988ம் ஆண்டு லண்டனில் எஸ்த்தர் ஹோப்பின் மகள்களிருவரும் ஏலவிற்பனையில் கலந்துகொண்டு ‘The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை விற்கமுனைய ஜெர்மன் அரசாங்கம் 1.98 மில்லியன் டாலர்கொடுத்து அதை வாங்கியுள்ளது. இந்நிலையில் தமக்கு(ஜெர்மன் நாட்டிற்கு) ஒருக்காலும் கையெழுத்துப் பிரதியை இஸ்ரேல் அரசாங்கத்திடம் திருப்பித் தரும் எண்ணமில்லையென தெளிவாக அறிவித்திருக்கிறது. நவீன இலக்கிய உலகில் ஓர் படைப்பாளியின் கையெழுத்துப் பிரதிக்கு இவ்வளவு விலைகொடுத்து வாங்கபட்டதற்கு வேறு சான்றுகளில்லை. இந்த விற்றல் வாங்கல் விவகாரத்தில் தரகராகச் செயல்பட்டவருடையக் கூற்றின்படி 4மில்லியன் டாலர்வரை காஃப்காவின் கையெழுத்துப் பிரதிக்கு ஜெர்மன் அரசாங்கம் கொடுக்க அப்போது தயாராக இருந்திருக்கிறது.

1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டிலுள்ள நூலகமொன்றிர்க்கு காஃப்காவின் வேறுசில கையெழுத்துப் பிரதிகளை, (The castle, America…) மாக்ஸ் ·ப்ரோடு தானமாக வழங்கியிருந்தபோதும், ”The Trial’ நூலின் கையெழுத்துப் பிரதியை அவ்வாறு கொடுக்கவில்லை என்பதை நினைவுகூர்தல் வேண்டும், காரணம் காஃப்கா அதனை தமது இலக்கிய நண்பருக்கு பரிசாகக் கொடுத்திருந்தார். ‘The Trial’ ‘ கையெழுத்துப் பிரதி விற்கப்படுவதற்கு முன்பாக காஃப்கா தமது சினேகிதியான ·பெலிஸ் போயருக்கு(Felice Bauer) எழுதிய 327 கடிதங்களை 1987ம் ஆண்டு எஸ்த்தர் ஹோப் 550 000 டாலருக்கு விற்றிருந்தார். 2007ல் எஸ்த்தர் ஹோப் இறந்தபோது காஃப்காவின் எழுத்துக்களென மாக்ஸ் ப்ரோடு விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான கையெழுத்துப்பிரதிகள் கடிதங்களாகவும், ஆவணங்களாகவும், படைப்புகளாகவும் அவரிடம் இருந்திருக்கின்றன. இன்று அவற்றின் தலைவிதி கேள்விக்குறியாகியிருக்கிறது. ஓர் இலக்கியவாதியின் கையெழுத்துப்பிரதிகள் என்ற குறியீட்டை இழந்து, கார்ல் மார்க்ஸ் வர்ணிப்பதுபோல விற்பனை சரக்காக, அதாவது சரக்குகளெனில் அவை புலன்களால் உணரமுடிந்தவை உணரமுடியாதவையென்ற இரு பிரிக்கவியலாத பண்புகளைக்கொண்ட சமூகப் பொருளாக(social thing) மாறி உள்ளதெனலாம். ‘உருமாற்றம்’மென்ற சிறுகதையை எழுதிய காஃப்காவுக்கு இந்த விதிப்பொருத்தம் நிகழ்ந்திருப்பதுதான் வேடிக்கை. தவிர எஞ்சியுள்ள காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகள் இன்றைய தினம் அவற்றின் நிறத்தையும் குணத்தையும் இழந்து துண்டாடப்பட்டு விற்கபடுவதாகவும் கேள்வி. ஏனெனில் அவற்றில் அக்கறைகொண்டு முறையாக வரிசைபடுத்த மாக்ஸ் ப்ரோடு இன்றில்லை.  தவிர எதற்காக வெளிப்படையாக விற்பனையில் இறங்கி தேவையற்ற வழக்குகளை சந்திக்கவேண்டுமெனவும் உடமையாளர்கள் நினைக்கிறார்கள்.

இப்பிரச்சினையில் காஃப்காவின் நண்பர் மாக்ஸ் ப்ரோடை குறை சொல்ல ஒன்றுமேயில்லை. ப்ரோட் இல்லையெனில் இன்றைக்கு காஃப்காவைக் குறித்து நமக்குச் சொல்ல ஒன்றுமில்லை. காஃப்காவின் நாவல்கள் மூன்றுமே அவரது இறப்பிற்கு பின்னர் நண்பரின் முயற்சியால் பதிப்பிக்கப்பட்டவை. இஸ்ரேலிய சஞ்சிகையான Haaretz தரும் தகவலின்படி எஸ்த்தர் ஹோப் இறந்தபோது அவர் வசமிருந்த கையெழுத்துப் பிரதிகளில் முக்கியமானவை ஏற்கனவே பிரசுரமாகியிருப்பினும், எஞ்சியிருப்பவைகளும் அலட்சியப்படுத்தக்கூடியவைகளல்ல. காஃப்காவின் சொந்தவாழ்க்கைப் பதிவுகள், இலக்கிய தடங்கள், வரலாற்று சாட்சியங்கள் என அப்பட்டியல் நீள்கிறது. யுனெஸ்கோவின் பாரம்பரிய வளம் மற்றும் வளாகத்தைப்போல உலகத்தின் பொதுசொத்தாக அறிவித்து பாதுகாக்கப்படவேண்டிய காஃப்காவின் இலக்கிய சாட்சியங்கள் இரகசியமாக வங்கிப் பெட்டகங்களிலும், பிற இடங்களிலும் உரிய பராமரிப்பின்றி கரப்பான்களுக்கும் செல்லரிப்புகளுக்கும் இரையாகின்றனவே என வருந்துகிறவர்களும் உண்டு.

இறுதியாக ”The Trial’ ‘ நாவலைக்குறித்து எழுதாவிடில் இக்கட்டுரை நிறைவடையாது. நாவலுக்கான சமிக்கைகள் 1914லியே தெரிகின்றன. காஃப்கா இப்படியொரு நாவலை எழுதவிருக்கும் எண்ணத்தை தமது சஞ்சிகையொன்றில் வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தமது நெருங்கிய சிநேகிதியான பெலிஸ் போயர் உறவில் ஏற்பட்ட கசப்பு, நாவலை அலைக்கழித்திருக்கிறது. ஒரு பகுதியை முடிக்காமலேயே இன்னொன்று பிறகு வேறொன்றென எழுத்தாளரின் மனநிலை நாவலோடு கண்ணாமூச்சி ஆடியிருக்கிறது. பலமுறை நாவல் திருத்தப்பட்டிருக்கிறது. 1917ம் ஆண்டு இரண்டாம் முறையாக பெலின்போயரோடு ஏற்பட்டக் கசப்பு நாவலை வெகுவாகப் பாதித்தது. 1924ம் ஆண்டு காஃப்கா இறந்தபோது ”The Trial’ நாவலின் தலைவிதிக் கேள்விக்குரியதாகவே இருந்திருக்கிறது. ”என்னவோ எழுதினேன், புத்தகமாக்க விருப்பமில்லை” என்பதுதான் காஃப்கா தெரிவித்தது. 1925ம் ஆண்டு நண்பரின் விருப்பத்துக்கு மாறாக மாக்ஸ்ப்ரோடு பதிப்பிக்க விரும்பினார், எனினும் அதற்காக அவர் பட்ட சிரமங்கள் அதிகம். முதலாவதாக அங்கொன்றும் இங்கொ¡ன்றுமாகவிருந்த அத்தியாயங்களை வரிசைபடுத்த அவர் எடுத்துக்கொண்ட முயற்சி, அடுத்து முடிக்கப்படாத பத்திளையெல்லாம் நீக்கினார். தவிர நூலாசிரியரும் பதிப்பிக்க முயன்ற நண்பரும் யூதர்களென்ற உண்மை பதிப்பாளர்களுக்குக் கசந்தது, நிராகரித்தார்கள். ஆக மொத்தத்தில் இன்றிருக்கும் நாவல் ·ப்ரோடுவின் புரிதலுக்கேற்ப, சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் காலவரிசையைக் கணக்கிற்கொண்டு கட்டமைக்கப்பட்ட நாவல். காஃபாவின் நண்பர் மிகச் சிரத்தையுடன் கண்ட வெற்றி.

எல்லா நாவல்களையும்போலவே ‘The Trial’  உண்மையும் புனைவும் சம விகிதத்தில் சொல்லபட்ட ஒரு நாவல். இருபதாம் நூற்றாண்டின் தொடக்ககால மனிதரையும், அவரது  சமூகத்தைப் பற்றியதுமான விமர்சனமென்றாலும், இந்த நூற்றாண்டுக்கும் பொருந்தும். உலகில் அறுபடாத பண்புகளாகிப்போன அபத்தமும், சூதும், உருவாக்குகிற புதைமணலில் நித்தம் நித்தம் சிக்கித்தவிக்கும் நாதியற்றவர்களின் குரல் நாவல் முழுக்க ஒலிக்கிறது. நாவலின் பெரும்பகுதி ஆசிரியரின் சொந்தவாழ்க்கையின் எதிரொலி. கதைமாந்தர்கள் அவர்கள் பெயரில் முதல் எழுத்தால் சுட்டப்படுகிறார்கள் ‘Nouveau roman’ வரிசையில் எழுதபட்ட படைப்பிலக்கியங்களில் காஃப்காவைப்போலவே பல படைப்பாளிகள் இம்முறையை கையாண்டிருக்கிறார்கள். தமிழிலும் சுந்தர ராமசாமி தமது பாத்திரங்களின் சர்வ வல்லமை குறியீடாக  ஒற்றை எழுத்து நாமகரணத்தை அரங்கேற்றியிருக்கிறார். வழக்குவிசாரணையின் நாயகன் கே. அசாதரணமானச் சம்பவமொன்றின் சாதாரணமனிதன். இங்கே மேலே குறிப்பிட்ட சர்வ வல்லமை என்பது முட்டை ஓடுபோல. உண்மையில் இவர்கள் பலவீனமானவர்கள், ஒருவித போலிகள்-பாசாங்கு மனிதர்கள்-  They’re all impostures – விழுந்தால் நொறுங்கிப்போகும் சராசரிமனிதர்கள். காஃபாவைப்போலவே நாயகன் Kவும் மனப்பாதிப்புக்கு உள்ளானவன், அவனுடைய தவிப்பும் கலக்கமும் காஃப்காவுடையது. ஒருமுறை குஸ்த்தாவ் ஜானுக்(Gustav Janouch) என்ற நண்பரிடம் காஃப்கா, தன்னுடைய தனிமை மிகக்கொடியதென்றும் காஃப்காவைத் தவிற வேறு எவருடைய தனிமையுடனும் அதனை ஒப்பிடமுடியாதென வேடிக்கையாகக் கூறியதையும் இங்கே நினைவு கூர்தல் வேண்டும். குறிப்பாக பெலிஸ் போயர் இல்லா வெறுமை ஊமுட்களாகக் குத்த, முகந்தெரியாத எதிரியிடம் மோதி உருக்குலையும் எரிச்சலில்  ”Our enemy feeds on the blood we lose. He gnaws our heart, and look how strong he grows'(The Enemy) என்ற பொதுலேரின்(Baudelaire) எதிரொலிக்குரலை நாவலில் கேட்க முடிகிறது. அத்தனிமை  கிணற்றில் விழுந்து குரலெடுத்துக் கதறும் பசுபடும் துன்பத்தைக் கண்டும் சொல்லவியலாமற் தவிக்கும் ஊமையனுக்கு நிகரானது – ‘கூவல் குரால்ஆன் படுதுயர் இரவில் கண்ட  உயர்திணை ஊமன்போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே!(குறுந்தொகை-224)

‘The Trial’  உண்மையில் ஓர் விநோதமான வழக்கு. அல்பெர் காம்யூவின் அந்நியன் நாயகன் அபத்தத்தின் போக்கிற்கு இணங்கி தனக்கான முடிவினை எதிர்பார்த்து நீதிவிசாரணைக்கு உட்படுபவன். இங்கே ஜோசெப்.கே அதாவது காஃப்காவின் ”The Trial’  கதை நாயகன், அபத்தத்திற்கு முரண்பட்டு, தனக்கான முடிவு எதுவென்று அறியாமலேயே விசாரணைக்கு உட்படுகிறான். அந்நியன் நாயகன் விலங்கிடப்பட்ட நான்கு சுவர்களுக்குள் நிறுத்தபட்ட ஒரு கைதியெனில் காஃப்காவின் நாயகன் ஒருவகையான எதிர்மறை சுதந்திரத்திடன் (Negative Liberty) தினசரிவாழ்க்கையைத் தொடர அனுமதிக்கபட்டு வழக்கைச் சந்திக்கக் கேட்டுக்கொள்ளபடுபவன்.  ஜோசப் கே. வங்கியொன்றில் அதிகாரி. விடுதியொன்றில் தங்கி தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் இந்த நூற்றாண்டின் சராசரி மனிதர்களான நம்மில் ஒருவன்.  அன்றைய தினம் ஜோசெப் கேவுக்கு 30வது பிறந்த தினம். வழக்கம்போல விழித்தவனைத்தேடி சனிதிசை காவலர்கள் வடிவில் வருகிறது. அறைக்குள் நுழையும் காவலர்கள், கைது செய்கிறார்கள். விசாரனைக்கு அழைத்துபோகிறார்கள். செய்த குற்றமென்ன ஜோசெப் கே யோசித்துப் பார்க்கிறான். எந்தக்குற்றமும் எதன்பொருட்டும், யாருக்காவும் இழைத்ததாக நினைவில்லை. அவனைக் கைது செய்தவர்களுக்கேனும் அவன் செய்த குற்றம் தெரியுமா, தெரியாதென்கிறார்கள். மேலதிகாரத்தின் கட்டளையை நிறைவேற்றினேன் என்கிறார்கள்.

– உங்கள் அறையை விட்டு எங்கும் போகக்கூடாதென்று பிரான்ஸ்(மற்றொரு காவலதிகாரியின் பெயர்) சொல்லியிருப்பாரே? உங்களை கைது செய்திருக்கிறோம்.

– புரியுது, ஆனால் எதற்காக என்னை கைது செய்திருக்கிறீர்களென்பதுதான் விளங்கலை.

– கே. சொல்வதிலும் நியாயமிருக்கிறது

– இங்கே பாருங்க என்னைப் பற்றிய தகவல்களெல்லாம் இந்த பேப்பரில் இருக்கின்றன..

– இதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்யப்போகிறோம். இவற்றைக் காட்டி விசாரணையிலிருந்து தப்பி விடலாமென்று மட்டும் நினைத்திடவேண்டாம். இவ்விடயத்தில் எங்கள் தரப்பில் எந்தத் தப்புமில்லை. மேலிடத்து உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறோம், அவ்வளவுதான். பத்துமணிநேரம் காவலில் வைத்திருக்கவேண்டும், எங்களுக்குச் சம்பளமும் அதற்காகத்தான் கொடுக்கப்படுகிறது. இங்கே தப்பு எக்கட்டத்திலும் நிகழவில்லையென்றும் எங்களுக்குத் தெரியும், என்ன செய்வது. இது நடந்தாக வேண்டும். எங்கள்(துறையின்) பணி மக்கள்கூட்டத்திலே கலந்திருக்கிற குற்றத்தைப் பொறிவைத்து பிடிப்பதல்ல, மாறாக குற்றம் எங்களைத் தேடி வருமாறு பார்த்துக்கொள்வது, எங்கள் விதிமுறை அப்படி.(1)
———————————————————————–

1. The Trial – Le Proces – Franz Kafka நாவலின் பிரெஞ்சு நாடகவடிவத்திலிருந்து எடுத்தாளப்பட்ட உரையாடல். நாடகமாக்கம் Alain Timar.