இரவு -(la Nuit) – கி தெ மொப்பசான்

                                             (கதை பிரசுரமான ஆண்டு 14 juin 1887)

இரவென்றால் எனக்கு அப்படியொரு தாபம். ஒருவர் தன்னுடைய நாட்டை, அல்லது ஆசைநாயகியை ஆழமாகவும், இயல்பாகவும், தன்னை மீறிய மையலுடனும் நேசிப்பதுபோல எனக்கும் இரவின்மீது தணியாத மோகம். மோகமெனில் எப்படி? காண்பது, நுகர்வது, நிசப்தத்தைச் செவிமடுப்பது, அதன் அந்தகாரத்தை வருடுவதென இருக்கவே இருக்கின்றன புலன்கள்.

சூரிய ஒளி, நிரமலமான வானம், அனற் காற்று, பிரகாசமான அதிகாலை மென்காற்று என்கிற பேதங்களற்று பகற்பொழுதில் எல்லா நேரங்களிலும் வானம்பாடிகள் பாடும். மாறாக ஆந்தை, இரவுப்பொழுதில் கருமைநிறப் புள்ளிபோல இருண்டவெளியில் பறந்து செல்லும், இரவின் பிரம்மாண்டம் தரும் போதையில், இன்பத்தின் உச்சத்தில் எழுப்பும் அதன் அலறல் அதிர்வும் ஒருவகை சோகமும் தோய்ந்தது.  

பகற்பொழுது எனக்கு சோர்வை மட்டுமின்றி எரிச்சலையும் அளிக்கிறது. அதன் இரைச்சலும் மூர்க்கமும் ஊரறிந்தவை. காலையில் மிகுந்த சிரமத்துடன் படுக்கையிலிருந்து எழுகிறேன், ஆடை அணிவது அலுப்புடனேயே நடந்து முடிகிறது, வீட்டை விட்டு வெளியிற் செல்கிறபோது, துளியும் மகிழ்ச்சியில்லை. நாள் முழுக்க எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு அசைவும், பாவமும், வார்த்தைகள், சிந்தனைகளென்று அனைத்தும் உடலை அழுத்துகிற பெரும் பாரத்தை இறக்கிவைப்பதுபோன்ற ஆயாசத்தை எனக்குத் தருகின்றன.

மாறாக சூரியன் மேற்கில் மறைகிறபோது, ​​எனதுடல் முழுக்க விளங்கிக்கொள்ள இயலாததொரு மகிழ்ச்சி. ஒருவகையில் நான் துயில்களையும் நேரம் மட்டுமல்ல உயிர்ப்புடன் எழுந்து நடமாடும் நேரமும் அதுதான். மெள்ள மெள்ள இருட்டத் தொடங்க  ​​நான் முற்றிலும் வேறொருவன். அதாவது பகற்பொழுதைக் காட்டிலும் இளமையாகவும், வலிமையுடனும், கூடுதல் எச்சரிக்கையுடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். விண்ணிலிருந்து விழுந்த மென்மையும், அளவிற் பெரியதுமான இருளின் பாரம் இரவுநேரத்தில் அதிகரிக்கிறது: கைக்குப் பிடிபடாத, ஊடுருவ முடியாத பேரலை ஒன்றினைப்போல, நகரத்தை மூழ்கடிக்கிறது. அனைத்தையும் ஒளித்துவைப்பதோடு,  வண்ணங்கள், வடிவங்களைத் துடைத்தழித்து, குடியிருப்புகளையும், உயிர் ஜீவன்களையும் நினைவுச்சின்னங்களையும் தொட்டுத் தழுவுகிறது.

இக்காட்சிகளால் என்னுள்ளும் மகிழ்சியோடு ஆந்தைபோல கூவவும், கூரைகளில் பூனைகள் போல் ஓடவும் ஆசை ; ஒருவித ஆவேசமும், உத்வேகமும் கலந்ததொரு காதல் விருப்பம் எனது நாடிநரம்புகளை முறுக்கேற்ற நடக்கிறேன், இரவு மூடிய புறநகர்ப் பகுதிகள், பாரீஸ் நகரத்தை ஒட்டிய காடுகள் என்று அலைகிறேன், அதிலும் பின்னதில் எனது விலங்குச் சகோதரிகள் அவர்களைக் கள்ளத்தனமாக வேட்டையாடவந்த மனிதர்களென்று  இருதரப்பினரின் நடமாட்டத்தையும் காதில் வாங்கமுடியும்.  

ஆயுதம் எடுத்தவனுக்கு ஆயுதத்தாலே மரணம். எனக்கும் அப்படியொன்று நேர்ந்தது, எவ்வாறு சொல்வது? அதைத் தெரிவிக்க முடிந்தாலும், புரியும்படி கூற வேண்டுமில்லையா?  எனக்கு அது போதாது, ஆம் இதற்குமேல் சொல்லப் போதாது, எனக்குத் தெரிந்ததெல்லாம், இப்படி அது இருந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பது. அவ்வளவுதான்.

எனவே நேற்று – நேற்றா? – ஆம், அநேகமாக, அதற்கு முன்பு, வேறொரு நாளில், வேறொரு மாதத்தில், வேறொரு வருடம் அப்படியெதுவும் நிகழவில்லை என்கிறபோது ஐய்யமின்றி நேற்றாகத்தான் இருக்கவேண்டும் – என்னால் உறுதிபடுத்த முடியவில்லை. பொழுது விடியவில்லை. கிழக்கில் உதிக்கவேண்டிய சூரியனும் இக்கணம்வரையில் இல்லை, ஆக நேற்றாகத்தான் இருக்கவேண்டும். எப்போதிலிருந்து இரவு நீடிக்கிறது? எப்போதிலிருந்து? யார் சொல்லமுடியும்? யார் அறிவார்?

அதனால் நேற்றிரவும் வழக்கம்போல இரவு உணவிற்குப் பிறகு வெளியிற் சென்றேன்.

வானிலை நன்றாக இருந்தது. சற்று வெப்பத்துடன் இருந்தபோதிலும் மிகவும் இனிமையான காலநிலை. பெரியவீதிகளை நோக்கி நடந்தபோது தலைக்குமேல், வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்த கருமைநிற ஆறு, வீதிக் கூரைகளால் துண்டாடப் பட்டிருந்தன. ஓரிடத்தில் அது வளைந்து, உண்மையான ஆறுபோலவே அலைகளை உண்டாக்கி நட்சத்திரங்களை உருட்டி விளையாடுகிறது.

தலையை உயர்த்திப் பார்க்க கோள்கள் முதல் எரிவாயு விளக்குகள் வரை நிர்மலமான வானில் அனைத்தும் தெள்ளத் தெளிவாக இருந்தன. விண்ணிலும் சரி நகரத்திலும் சரி பிரகாசமாக தீ பிழம்புகள் போல் நட்சத்திரங்களும, விளக்குகளும் பிரகாசிக்க, இருளே ஒளிர்வதுபோல தோற்றம். கதிரவன் காயும் பகற்பொழுதுகளைக் காட்டிலும் ஒளிரும் இரவுகள் மகிழ்ச்சிக்குரியவை.

அகன்ற அவ்வீதியில், கஃபேக்களே பற்றி எரிவதுபோல ஜெகஜோதியாய் விளக்குகள்;  சிலர் வாய் விட்டு சிரிக்கிறார்கள், வேறு சிலர் நுழைய விருப்பமில்லாதவர்கள்போல கடந்து செல்கிறார்கள், மற்றும் சிலர் மதுபானங்களையும் வேறு பானங்களையும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஒரு நாடக அரங்கு. அதற்குள் சென்று, ஒரு சில நிமிடங்களைக் கழித்திருப்பேன். எந்த நாடக அரங்கு? ஏதோ ஒன்று. ஏன் நுழைந்தோம் என வருந்தும் அளவிற்கு அங்கே அப்படியொரு ஒளிவெள்ளம்: பொன்னிற பால்கனியின்  வெறுப்பூட்டும் ஒளி, மிகப்பெரிய ஸ்படிக சரவிளக்கின் செயற்கை மின்னொளி,  நுழைவாயில் விளக்கொளி, மற்றும் துயரூட்டக்கூடிய செப்பனிடபடாத அங்கிருந்த பிற வெளிச்சங்கள் அவ்வளவும் மனதில்  உண்டாக்கிய அதிர்ச்சியில், கசப்புடன் வெளியில் வந்தேன்.

தொடர்ந்து நடந்த நான் ஷாம்ஸ்-எலிஸே(1) பகுதிக்கு வந்து சேர்ந்தேன், அங்கும் இசை, பாடலென்று எப்போதும் கொண்டாட்டமாக இருக்கிற கஃபே-பார்களும் அருகிலிருந்த மரங்களின் இலைகள் தழைகளுங்கூட  தீப்பிடித்தவைபோல் ஒளியூட்டப்பட்டிருந்தன. மஞ்சள் ஒளியில் அமிழ்ந்திருந்த செஸ்ட்நட் மரங்கள் மஞ்சள் வண்ணம் பூசப்பட்டவை போல பாஸ்போரெஸ் சாயலில் மினுங்கிக்கொண்டிருந்தன. கோள உருண்டைபோன்ற மின்சார விளக்குகள் சற்று மங்கலாக ஒளிரும் நிலவுகள் போலவும், விண்ணிலிருந்து விழுந்த திங்களின் முட்டைகள் போலவும், ஜீவனுள்ள  இராட்சஸ முத்துகள்போலவும், இருந்தன. ஆனால் அவற்றின் உயர்குல தோற்றம், முத்துவெள்ளை நிறமென்கிற பெருமைமிகு அடையாளத்தின் கீழ் அசூயையான அழுக்கான வலைபோன்றதொரு தோற்றத்தில் வாயுமண்டலத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதும், அங்கிருந்த வண்ணக் கண்ணாடிச் சரத்தினாலும் அவ்விடம் சோபையின்றி இருந்தது.

ஆர்க் தெ த்ரியோம்ஃப்(2)  கீழ் நின்றேன், அங்கிருந்தபடி இருபக்கமும் தீக்கோடுகள்போல நீளும் தெருவிளக்குகள், நட்சத்திரங்களுடன் பாரீஸின் மையப்பகுதியை நோக்கிச் செல்லும் பிரம்மாண்டமான வீதியை சில நிமிடங்கள் நின்று இரசிக்கவேண்டும். தலைக்குமேல்  வானில் எதற்கென்று விளங்கிக் கொள்ளவியலாத வகையில், பெருவெளியில் இறைக்கபட்ட நட்சத்திரங்களால் உருவான வினோத வடிவங்கள் நம்மை கனவுகள், கற்பனைகளென்று அழைத்துச் செல்லும்.

பூலோஞ் காட்டிற்குள்(Bois de Boulogne) நுழைது, வெகுநேரம் எவ்வளவு நேரமென்று அளவிடப் போதாமலேயே நீண்ட நேரம் அங்கிருந்தேன். உடலில் இதுவரை அனுபவித்திராததொரு நடுக்கம், திடீரென மனம் கடுமையான உணர்ச்சிக்கு வயப்பட, வரம்பு மீறிய கற்பனைகள் கடைசியில் என்னைப் பித்தனாக்கின.

பிறகு வெகுநேரம், ஆம் ! வெகுநேரம் நடந்து களைத்து, புறப்பட்ட இடத்திற்குத்  திரும்ப வந்தேன்.  

ஆர்க் தெ த்ரியோம்ஃப்பிற்குத் திரும்ப வந்தபோது, நேரம் என்ன ? தெரியாது. பெருநகரம் உறங்கிக் கொண்டிருக்க, மேகங்கள், கனத்த பெரிய மேகங்கள் மெல்ல மெல்ல வானில் படர்ந்துகொண்டிருந்தன.

இம்முறை, ஏதோவொரு வித்தியாசமான சம்பவம் நிகழவிருப்பது உறுதியென  உள்மனம் எச்சரித்தது. குளிர்காற்று பலமாக வீச, இரவை, பிரியத்திற்குரிய எனது இரவை நெஞ்சில் பாரமாக உணர்ந்தேன். நீண்ட பெரியவீதியில் மனிதர் நடமாட்டமில்லை. இரண்டே இரண்டு காவலர்கள், அரசு வாகனங்கள் நிறுத்தத்தின் அருகே உலாத்திக் கொண்டிருந்தனர். சாலையோரங்களில் வாயு விளக்குகள், எந்தநேரத்திலும் இறுதி மூச்சை விடாலாம் என்பதுபோல எரிந்துகொண்டிருந்ததால், அதிக வெளிச்சமில்லை. சந்தைக்குக் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் வாகனங்கள் வரிசையாகச் சென்றன.

கேரட்டையும், நூல்கோலையும், முட்டைக்கோசையும் ஏற்றிச்செல்லும் வண்டிகள் மெதுவாகவே சென்றன. வண்டியோட்டிகள், உறங்கிக் கொண்டிருக்கவெண்டும், அவர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் அறிகுறிகளில்லை குதிரைகள், வண்டிக்கான பாதையில் சீராக அடியெடுத்துவைத்து வரிசையில் போகின்றன. ஒவ்வொரு முறையும் சாலை விளக்குகளைக் கடக்கிறபோதெல்லாம் கேரட்டுகள் சிவப்பு நிறத்திலும், நூல்கோல்கள் வெள்ளைவெளேரென்றும், முட்டைகோசுகள் பச்சை நிறத்திலும் பிரகாசித்தன ; சிவப்பெனில் தீபோலவும், வெள்ளையெனில் வெள்ளிபோலவும், பச்சையெனில் மரகதத்தையொத்த நிறத்திலும் அவ்வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தன. அவைகளைப் பின்தொடர்ந்து நானும் சென்றேன். ஆனால் ராயல் வீதிபக்கம் திரும்பி மறுபடியும் பெரியவீதிகளுள்ள பகுதியை வந்தடைந்தேன். அப்பகுதிச் சந்தடியின்றி இருந்தது. கஃபேக்கள் மூடப்பட்டுவிட்டன. தாமதப்பட்டவர்கள் மட்டும் வீடு திரும்பும் அவசரத்தில் வேகமாக நடந்துகொண்டிருந்தனர். சவத்தை ஒத்த ஜீவனற்ற இப்படியொரு பாரீஸ் நகரை நான் ஒரு போதும் கண்டதில்லை. சட்டைப் பையிலிருந்து கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை மணி இரண்டு.

ஏதோவொரு சக்தி உந்தித்தள்ள, நடக்கவேண்டும் போலிருந்தது. எனவே பஸ்த்தி(la Bastille) வரை நடந்தேன். அங்கே, ஜூலை நினைவுத்தூணையும்(3), அதன்மீது அமைக்கபட்ட  பொன்ன்னிற தேவதூதன் உருவத்தையும் பிரித்துக்காண முடியாதவகையில் இருள் வியாபித்திருந்தது, இதுவரை பார்வை ஊடுறுவ இயலாத அப்படியொரு இரவை நான் கண்டதில்லை. மிகப்பெரிய பருமனுடன் வளைந்த கூரைபோலிருந்த மேகங்கள், நட்சத்திரங்களைச் சூழ்ந்து அவற்றை பூமியில் புதைக்க முனையும் எண்ணத்துடன் கீழிறங்குவதுபோலிருந்தன.

காட்சியிலிருந்து விடுபட்டிருந்தேன். என்னைச் சுற்றி ஒருவரும் இல்லை. ஷத்தோ தோ(Château d’eau) என்கிற இடம். குடிபோதையில் இருந்த ஒருவன் என்மீது  ஏறக்குறைய மோதுவதுபோல நெருங்கி பின்னர் காணாமற் போனான். சிறிது நேரம் அவனுடைய சீரற்ற மற்றும் சத்தமான காலடிகளை மட்டும் கேட்க முடிந்தது. ஃபொபூர் – மோன்மார்த்த்ரு (Faubourg -Montmartre) பகுதியை நெருங்கியபோது குதிரைவண்டியொன்று என்னைக் கடந்து, சேன் (Seine) நதி திசைநோக்கிச் சென்றது. நான் வண்டிக்காரரை அழைத்தேன், பதில் இல்லை. பெண்ணொருத்தி ட்ரூஓ வீதி (rue Drouot)அருகே சுற்றிக்கொண்டிருந்தாள்: “ஐயா, கொஞ்சம் நில்லுங்களேன்”, என்றவளின் கை என் பக்கமாக நீள, அதைத் தவிர்ப்பதற்காக நடையை வேகப்படுத்தினேன். பிறகு எதுவுமில்லை. வோட்வீல்(Vaudeville) நாடக அரங்கிற்கு முன்பாக ஒருவர் சாலவத்தைத் துருவிக்கொண்டிருக்க, கையில் பிடித்திருந்த சிறிய விளக்கு தரைமட்டத்தில் ஆடிக்கொண்டிருந்தது. அவரிடம்: “ஏங்க மணி என்னன்னு சொல்லமுடியுமா?”, எனக் கேட்டேன்.

 “எனக்கு எப்படித் தெரியும், எங்கிட்ட கடிகாரமா இருக்கு?» என உறுமும் தொனியில் அவர் பதிலிருந்தது.

திடீரென எரிவாயு விளக்குகள் அணைந்திருப்பதைக் கவனித்தேன். இன்னும் விடியவில்லை, இதுபோன்ற பருவகாலத்தில், எரிவாயுவைச் சிக்கனமாக உபயோகிக்கும் எண்ணத்துடன் முன்கூட்டியே அணைத்திருக்கிறார்கள். ஆனால், பகற்பொழுது  வெகு தூரத்தில் இருந்தது, அத்தனைச் சீக்கிரம் விடியுமென்று தோன்றவில்லை.

– நல்லது சந்தை கூடும் இடத்திற்குப் போகலாம்,  அதாவது, கொஞ்சம் ஜீவனுடன் இருக்கும், என நினைத்தேன்.

தொடர்ந்து நடந்தேன். என்னை வழிநடத்தப் போதாமல், காட்டுக்குள் நடப்பது போல மெதுவாக நடந்தேன், தெருக்களை ஒரு வகையில் அடையாளம் கண்டும், அவற்றைக் கணக்கிட்டுக் கொண்டும் முன்னேறினேன்.

கிரெடி லியொன்னே (Credit Lyonnais) வங்கி முன்பாக நாயொன்று உறுமியது. கிராமோன் வீதி ( rue de Grammont) வழியாகத் திரும்பிய பிறகு எனக்குக் குழப்பம். சில நிமிட அலைச்சலுக்குப்பிறகு சுற்றிலும் இரும்புத் தண்டுகளில் வேலியிட்டிருந்த பங்குச் சந்தையை அடையாளம் கண்டேன். மொத்த பாரிஸ் நகரமும் அச்சுறுத்தும் வகையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. ஆனாலும், வெகு தொலைவில் குதிரை வண்டியொன்று ஓடிக் கொண்டிருந்தது. அவ்வண்டி, ஒரு வேளை என்னைக் கடந்து சென்றிருக்கலாம். நான் கவனத்திற் கொள்ளவில்லை. அவ்வண்டியை எப்படியாவது பிடிக்கவேண்டுமென நினைத்து அவற்றின் சக்கரங்கள் போடும் சத்தத்தை குறிவைத்து, மனிதரின்றி, பிணங்கள் கிடப்பதுபோல இருளில் மூழ்கியிருந்த தெருக்கள் வழியாக நடந்தேன்.

திரும்பவும் எங்கிருக்கிறேன் என்கிற குழப்பம். எரிவாயு விளக்குகளை  அணைக்கவேண்டிய வேளையில் அணைக்காமல், முன்கூட்டியே அணைப்பதென்பது எவ்வளவு முட்டாள்தனம்! அவ்விடத்தில் என்னைத்தவிர வேற்று மனிதரில்லை. தங்கள் அலுவல் முடித்து தாமதாமாக வீடு திரும்புகிற மனித ஜீவன்களுமில்லை. வீதி வீதியாய் அலையும் மனிதருமில்லை, காதல்வயப்பட்ட   பூனையின் சிணுங்கலுமில்லை. மொத்தத்தில் ஒன்றுமில்லை.

இரவு ரோந்து வரும் காவலர்கள் எங்குபோய்த் தொலைந்தார்கள்?  “நான் உரத்தக்குரலில் கத்தினால் அவர்கள் வரக்கூடும்”, என எனக்குள் கூறிக்கொண்டேன். கூவி அழைத்தேன், எவ்விதப் பதிலுமில்லை. மறுபடியும் சத்தம் போட்டேன்.  அசாத்தியமான இரவு பலவீனமான என் குரலோசையை நெரிக்க, எதிரொலிகள் ஏதுமின்றி ஜீவனை விட்ட குரல் காற்றில் கலந்தது. வேறுவழியின்றி “உதவி! உதவி ! உதவி ! எனக் கூவினேன்.

கதியற்ற எனது அழைப்பு கேட்பாரின்றி முடிந்தது. சரி நேரம் என்ன ? சட்டைப்பயிலிருந்த கடிகாரத்தைக் கையிலெடுத்தேன். மணிபார்க்க தீக்குச்சி வேண்டும், என்னிடமில்லை. அதன் சிறிய விசைப்பொறி எழுப்பும் டிக்-டிக் ஓசையை இதற்கு முன்  அறிந்திராத வினோதமான மகிழ்ச்சியுடன் காதில் வாங்கினேன், ஆக. நான் தனி மனிதனில்லை, உண்மையில் எல்லாமே புதிரானவைதான் ! இம்முறை ஒரு குருடனைப்போல கையிலிருக்கிற பிரம்பைக்கொண்டு சுவர்களைத் தட்டியும் தடவியும், பொழுது புலர்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் கடைசியில் தெரிகிறதா என்பதை அறிவதற்கு தலையை உயர்த்தி ஆகாயத்தை அவ்வப்போது பார்த்தவண்ணமும் நடக்கத் தொடங்கினேன். ஆனால் வான்வெளியோ இருண்டிருந்தது, கீழேயுள்ள நகரத்தைக் காட்டிலும் கூடுதலாக இருண்டிருந்தது.   

தற்போது என்ன நேரமிருக்கும் ?  என யோசித்தபடி நடந்து கொண்டிருந்தேன், எனக்கென்னவோ வெகுநேரமாக முடிவின்றி நடந்துகொண்டிருக்கிறேன் எனப் பட்டது,  அதை உறுதிபடுத்துவதுபோல எனது கால்கள் பலவீனப்பட்டிருந்தன, மூச்சுவாங்கியது, பசி, பசி.. அகோரப்பசி.

கண்ணிற்படும் முதல் கதவின் மணியை அழுத்துவதென முடிவெடுத்து, அதுபோலவே ஒருவீட்டின் பித்தளைக் குமிழை இழுத்தேன். உள்ளே மணியொலித்தது, ஆனால் அவ்வொலியைத்தவிர அந்த வீட்டில் வேறு ஜீவன்கள் இல்லாததுபோல ஓருணர்வு.

காத்திருந்தேன், பதிலில்லை. கதவும் திறக்கப்படவில்லை. திரும்பவும் பித்தளைக் குமிழை இழுத்தேன், காத்திருந்தேன்…ம் பதிலில்லை.

பயத்தில் அங்கு நிற்காமல் அடுத்த வீட்டைத் தேடி ஓடினேன். இருபது முறை தொடர்ச்சியாக அக்குடியிருப்பின் மணியை இழுத்து பாதுகாவலர் உறங்கும் இருள் நிறைந்த கூடத்தில் ஒலிக்கச் செய்தேன். அம்மனிதர் எழுந்திருக்கவில்லை. அங்கிருந்து வேறு குடியிருப்புக்குச் சென்றேன். எனது பலத்தைப் பிரயோகித்து அழைப்பு மணியின் குமிழ்களை அல்லது சிறு வளையங்களை இழுப்பது, பிடிவாதமாக அக்கதவுகள் திறக்கப்படாமலிருக்க கால்களால் கதவை உதைப்பது அல்லது கைத்தடியால் கதவை அடிப்பதென்று ஒவ்வொரு வீட்டிலும் தொடர, சந்தைகூடும் இடத்தை அடைந்திருந்தேன். சந்தைகூடுமிடமும் நிசப்தமாக, நடமாட்டமின்றி, வண்டிகளின்றி,காய்கறிகள் அல்லது பூக்களின் குவியலின்றி  வெறிசோடிக் கிடந்தது. சந்தைக்கூடமும் வெறுமையாக, இயக்கமின்றி, கதியற்று பிணம்போல கிடக்கக் கண்டேன்.

       ஒருவித பயங்கரம் என்னைப் பீடித்திருப்பதைபோன்ற உணர்வு. என்ன நடந்தது ? கடவுளே என்னதான் நேர்ந்தது?

       நான் திரும்ப நடந்தேன். சரி நேரமென்ன ?ஆமாம், மணி என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நேரத்தில் எனக்கு அதை யார் சொல்லக்கூடும் ? என்ற கேள்வியும் மனதில் இருந்தது. ‘நினைவுக்கூட’ கடிகாரங்களில் அல்லது மணிக்கூண்டுகளில் உள்ள எந்தவொரு கடிகாரமும் அதைத் தெரிவிப்பதாக இல்லை.

       « கைக்கடிகாரத்தின் மேலிருக்கும் கண்ணாடியை எடுத்துவிட்டு முட்களை எனது விரல்களால் வருடிப் பார்க்கவேண்டும் », என நினைத்து. கடிகாரத்தை எடுத்துப்பார்க்க, அது ஓடவில்லை, நின்றிருந்தது. இல்லை, ஒன்றுமில்லை. நகரத்தில் எவித அதிர்வுமில்லை, எங்காவது சிறிது வெளிச்சம்.. ம் இல்லை, வெகுதொலைவில் எங்கேனும் குதிரை வாகனங்கள் ஓடும் ஒலி…ம் அதுவுமில்லை.

       நதியோரம் நடந்தேன், பனிக்குரிய குளிர்ச்சி நீரிலிருந்து வெளிப்பட்டது. சேன் நதி ஓடுகிறதா, என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

       எனக்குக் காரணம் தெரியவேண்டும். படிகட்டுகள் கண்ணிற்பட, இறங்கினேன். பாலத்தின் வளைவுகளின் கீழ், நதியின் நீரோட்டத்தில் நுரைத்துக்கொண்டு குமிழிகள் …. மறுபடியும் படிகள்…பிறகு மணல்…சேறு சகதியைத் தொடர்ந்து தண்ணீர் ….கையை நீரில் நனைத்தேன்…நதி மெல்ல சலசலத்தபடி நகர்கிறது …ஆம் தேங்கிநிற்கவில்லை…சில்லென்று இருக்கிறது;சிலுசிலுப்புடன் இருக்கிறது, சீதளத் தன்மையும் குளிர்ச்சியும்….கிட்டத்தட்ட உறைந்த நிலையில்…வீரியத்தைத் தொலைத்து… பிணம்போல சேன் நதி.

       திரும்பவும், பழைய நிலைக்கு மீளப் போதுமான பலம் எனக்கு ஒருபோதும் கிடைக்காதென்பது உறுதி. நானும் சாகப்போகிறேன், பசி, களைப்பு, கடுங்குளிரென உயிரைத் துறக்க எனக்கும் காரணங்கள் இருக்கின்றன.

           ——————————————————————————————————————

1. அவென்யூ தெ ஷாம்ஸ் – எலிஸே(Avenue des Champs-Élysées) அல்லது சுருக்கமாக Champs-Élysées,  என்பது பாரிஸில் உள்ள உலகின் மிகவும் அழகான,  ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் நீளமுடைய சாலையாகும்.

2. Arc de Triomphe என அழைக்கபட்ட போதிலும் அத முழுப்பெயர் ஆர்க்  தெ த்ரியோம்ஃப் தெ எத்துவால்(Arc de Triomphe de l’Étoile). முதலாம்  நெப்போலியன் I, Austerlitz யுத்தத்திற்கு மறுநாள் பிரெஞ்சு வீரர்களிடம் பேசியபோது, : “நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறபோது  வெற்றி வளைவொன்றின் கீழ் செல்வீர்கள் ”  என அறிவித்து அதன்படி ஆஸ்டர்லிஸ் யுத்தத்தில் ஆஸ்ட்ரியா, ரஷ்ய படைகளைத் தோற்கடித்து 1806 ல் தலைநகர் பாரீசில் கட்டப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

3. ஜூலை நினைவுத்தூண் (La colonne de juillet)என்பது 1830 இல் நிகழ்ந்த ஜூலை புரட்சியின் மூன்று நாட்களின் நினைவாக 1835 மற்றும் 1840 க்கு இடையில் பாரிஸில் உள்ள Place de la Bastilleல்  அமைக்கப்பட்ட தூண்..

_____________________________________________________________________________________________________

மொழிவது சுகம் : ‘மாப்பசான்’ ‘மொப்பசான்’ எது சரி?

உண்மையில் மொப்பசான் என உச்சரிப்பதுதான் சரி. அதிலும் பிரான்சு நாட்டில் இருந்துகொண்டு மொப்பசான் என உச்சரிக்கப்படுச்வதைக் காதில் வாங்கிகொண்டு, அவருடைய மொழிபெயர்ப்புக் கதைகளின் கீழ் மாப்பசான் எனப் போடுவது, இசை அபிமானிகள் வார்த்தையில் சொல்வதெனில் அபசுரம்.  நண்பரும், மொழிபெயர்ப்பாளருமான வெ. சு. நாயகர்,  இரண்டு முறை அவருக்கே உரிய நாகரீகமான முறையில் மாப்பசான் சிறுகதைகளை நான் மொழிபெயர்க்கப் போகிறேன் எனப் பதிவிட்டிருந்த போதும், அண்மையில் மாப்பசான் கதையொன்றை முகநூலில் பதிவிட்டிருந்தபோதும் ‘மொப்பசான்’  என அவருடைய கமெண்ட்டில் அப்பெயரைத்  திருத்திக் குறிப்பிட்டிருந்தார். 

நண்பர் நாயக்கருக்கும் எனக்கும் ‘மொப்பசான்’ என்று எழுதுவது சரி காரணம் ஏற்கனவே கூறியதுபோல நான் பிரெஞ்சு மொழி பேசும் ஒரு நாட்டில் இருப்பதோடு, இலக்கிய சார்ந்து புலன்களை அடகுவைத்து  நாட்களைக் கழிக்கிறேன். வெ.சு. நாயக்கர், பிரெஞ்சு மொழித் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறவர்.  மாணவர்களிடம் மொப்பாசான்  என்று பாடம் எடுத்துவிட்டு, வெளியில் மாப்பசான் என உச்சரிப்பதோ, எழுதுவதோ அவரைப் பொறுத்தவரை  நியாயமாகாது.

« ஆங்கிலத்தை  வி. எஸ். சீனிவாச சாஸ்திரியார்போல பேசமுடியுமா »  எனச் சொல்வதுண்டு. அதாவது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு  மாறாக அவர் ஆங்கிலேயர்களைப்போல ஆங்கிலத்tதில் அத்தனைச் சரளமாக சொற்பொழிவு ஆற்றுவார், உச்சரிப்பார் என்பதால் அப்படிச் சொல்வதுண்டு. என்னதான் கான்வெண்ட்டில் படித்துவிட்டு இங்கிலாந்து சென்றாலும் அல்லது அமெரிக்காவிற்குச் சென்றாலும் இந்தியாவிலிருந்து சென்ற முதல் தலைமுறை பேசும் ஆங்கிலத்திற்கும், அங்கேயே பிறந்து வளர்ந்த இன்றைய இந்திய தலைமுறைக்கும் உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. காந்தி ஆங்கிலத் திரைப்படத்தைப்  பார்த்தால், காந்தியாக நடிக்கும் பென் கிங்ஸ்லிக்கென ஒரு உச்சரிப்பை கொடுத்திருப்பார்கள், அதாவது இந்தியர் சாயலில் அவர் ஆங்கிலம் பேசவேண்டும் என்பதற்காக( இவ்வளவிற்கும் தமது பாரிஸ்ட்டர் பட்டத்தை இங்காந்தில் முடித்தவர்). நம்முடைய பழையத் திரைப்படங்களில் பட்டாணிக்கானாக வரும் நபருக்கென்று ஒரு தமிழிருக்கும் அதுபோல. உண்மையில் ஆங்கிலத்தை தாய்மொழியாகக்கொண்ட பிரிட்டிஷாரும் அமெரிக்கருங்கூட  ஆங்கிலத்தை வெவ்வேறு ஒலியில் பேசுகிறார்கள்.  

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும்பகுதி ஆங்கிலத் தாக்கத்தின் கீழ்  இருப்பதால் மேற்கத்திய பெயர்களை அவை ஆங்கிலம், இத்தாலி ஸ்பெய்ன், ஜெர்மனி என எந்த நாட்டிற்கு உரியவையாக இருப்பினும், ஆங்கில வழிதான் உச்சரிக்கிறோம். ஆங்கிலவழியில் அறியவந்த கொலம்பஸ் (Christobher Columbus) நமக்கு இன்று « சொலம்பசு », அவர் பிறந்த ஸ்பெய்ன் நாட்டில் Cristobal Colon, பிரான்சு நாட்டில் Christophe Colomb . அதேவேளை ஜெர்மானியரான கார்ல் மார்க்ஸை ஆங்கிலேயரும் பிறரும் கார்ல் மார்க்ஸ் என்றே எழுதுகிறார்கள், அழைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கார்ல் என்ற பெயர் ஆங்கிலத்தில் சார்லஸ், பிரெஞ்சுமொழியில் ‘ஷார்ல்’ ஸ்பெய்ன் மற்றும் போச்சுகீசிய மொழியில், ‘கர்லோஸ்’.

புதுச்சேரி பிரெஞ்சுக் காலனியாகவிருந்த பகுதி, பிரெஞ்சு மொழி சார்ந்து இயங்குகிறபோது அம்மொழியூடாகப் பெற்ற அச்சொற்கள் பிரெஞ்சுமொழிக்குரிய ஒலித்தன்மையுடன்(Phonetics) இருக்கவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு எங்களைப் போன்றவர்களுக்கு வருவது இயறகை. ஆனால் பிரெஞ்சுமொழிக்காரர்கள் வேற்று மொழி பெயர்களை அதற்கான  ஒலித்தன்மையுடன் உச்சரிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்கள்  மெத்தப்படித்தவர்கள், இலக்கியவாதிகள் என்றால் கூட கிரேக்கத்திலிருந்து வந்த சாகர்டீஸை ‘சொக்ராத்’ என்றுதான் உச்சரிக்கிறார்கள். ஸ்பைடர் மேன், பிரெஞ்சுக்காரர்களுக்கு ஸ்பிடர்மான், இதுபோல நூற்றுக் கணகில் உதாரணங்கள் இருக்கின்றன. பல தமிழர்களின் பெயர்கள் சிதைந்திருப்பதை (புதுச்சேரி மக்கள், மொரீசியஸ் மக்கள் பெயரைகளை) பிரெஞ்சு சூழலில் கேட்டால் வேறுபாடு புரியும்.  கிருஷ்ணாசாமி. ஏழுமலை போன்ற நூற்றுகணக்கான பெயர்கள்  பிரெஞ்சில் அல்லது ஆங்கிலத்தில் எப்படி எழுத்தப்படுகிறதென்பதை, எப்படி ஒலிக்கின்றன என்பதை நாம் அறிவோம். தூத்துக்குடியை, திருச்சியை, தரங்கம்பாடியை சிதைத்த ஆங்கிலேயர்கள் வழியில் இன்றைக்கும் அவர்கள் தமிழர்களாக இருந்தாலுங்கூட ஆங்கிலத்தில் கட்டுரையாக, நூலாக எழுதிறபோது வரலாற்றாசிரியர்கள் ஆய்வாளர்கள்  பழைய வழக்கிலிருந்து மீள்வதில்லை. டொரண்டோ, ஆஸ்திரேலியா, ஜன்னலென்று நாம் எழுதிக்கொண்டிருக்க நம்முடைய இலங்கைச் சகோதரர்கள் ரொறன்ரோ, அவுஸ்திரேலியா, யன்னல் என எழுதுகிறார்கள். நம்முடையா முன்னாள் முதலமைச்சர் தொடங்கி பலர் Jayalalitha, Jayaraman, என்றுதான் எழுழுதுகிறார்கள். இவற்றை மேற்குலக மக்கள் உச்சரிக்க  கேட்கவேண்டும்.

நவீன இலக்கிய அன்பர்கள் அண்மைக்காலமாகத்தான் கூடுதலாக பிரெஞ்சு எழுத்தாளர்களை, தத்துவ வாதிகளை அறிய வந்திருக்கிறார்கள். பலரும் ஆங்கிலம் வழி அறிய நேர்வதால் ஆங்கில ஒலியில் எழுதுகிறார்கள். குறிப்பாக அல்பெர் கமுய் , ஆல்பர்ட் காம்யூ என்றும் மொப்பசான் மாப்பசான் எனவும் சில பெயர்கள் கிட்டடத் தட்ட 30 ஆண்டுகாலமாக  வழக்கில் இருக்கின்றன. இந்நிலையில் பரவலாக ஓரளவு அறியப்பட்ட இப்பெயர்களை நவீன தமிழிலக்கிய பொதுவெளியில் வைக்கிறபோது சற்று குழப்பம். எனக்கும் அல்பெர் கமுய், மொப்பசான் என்று எழுதுவது சரி. ஆனால் பிரெஞ்சுக்காரர்களே முரண்பட்டு, கிரீஸ் நாட்டு சாக்ரடீஸை – Sōkrátēs –  தங்கள் மொழியில்  சொக்ராத் – Socrate என்றும், ஸ்பென் நாட்டு கொலம்பஸை –  Cristobal Colon, கிறீஸ்த்தோஃப் கொலோன் –  Christophe Colomb-  எனவும் ; கிருஷ்ணாசாமியை கிஷ்ணசாமி என  எழுதுவதும் சொல்வதும் சரி என்கிற விதியைப் பின்பற்றுகிறபோது ஏற்கனவே தமிழில் மாப்பசான் என்று அறிமுகமாகியுள்ள வழக்கிலுள்ள பெயரை மாற்றி மொப்பசான் என எழுத் தயக்கம்.   

எனவே இந்த நிலையில் ஓரளவு தெளிந்த கண்ணோட்டத்துடன் இருக்கிற உங்களிடம் வைக்கும் அன்புவேண்டுகோள். மொப்பசான்  அல்லது மாப்பசான் இவ்விரண்டில் எதைச் தேர்வு செய்யலாம்  என்பதைத் தெரிவித்தால், பெரும்பான்மை நண்பர்கள் விருப்பத்திற்கு உடன்படுகிறேன்.

————————————————————————————————————————–

விற்பனைக்கு(à vendre)….

                          கி தெ மாப்பசான்

                                       தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

சூரியன் உதிக்கும் போது,  பனி பெய்த பூமியில், ஒருபக்கம் வயல்கள், மறுபக்கம் கடலென்றிருக்க, இரண்டிற்கும் நடுவே நெடுக காலாற நடப்பதில்தான் எவ்வளவு சுகம்!  

 எவ்வளவு சுகம் !  கண்கள் ஊடாக ஒளியாகவும், மூக்குத் துவாரங்கள்  வழியாக சுவாசக் காற்றாகவும், உடலூடாக வீசும் காற்றாகவும் நம்முள் அது பிரவேசிக்கிற போது !

பூமி என்றதும் மிகவும் தெளிவான, அசாதரண, துல்லியமான, நினைவுகள் நம்மிடம், அந்நினைவு இனிமையான, கணநேர மனக்கிளர்ச்சிக்குரியது: ஒரு சாலையின் வளைவில், பள்ளத்தாக்கொன்றின் நுழைவாயிலில், ஆற்றங்கரையோரம், கண்ட காட்சிகளால், உணரப்படுபவை, மனதிற்கிசைந்த அழகான ஒருத்தியை சந்தித்ததுபோல, பூமி விஷயத்தில் மட்டும் இத்தனை பிரியமிக்க தருணங்களை நாம் நினைவில் வைத்திருப்பது ஏன் ?

நான் திக்குதிசையின்றி நடந்த நாட்கள் எத்தனையோ, அதில் ஒருநாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றைய தினம் ஃபினிஸ்த்தேர்(Finistère) முனையைக் குறிவைத்து பிரெத்தாஜ்ன்(Bretagne)  பிரதேச கடற்கரையையொட்டி, எவ்விதச் சிந்தனைகளுமின்றி வேகமாக நடந்து கொண்டிருந்தேன். பிரெத்தாஞ்ன் பிராந்தியத்தின் கண்ணுக்கினிய அழகான பகுதி, காம்ப்பெர்லே (Quimperlé) அதிக தூரத்தில் இல்லை, பக்கம். 

இளவேனிற்காலத்தின் காலைநேரம். நம்முடைய இருபதுவயது இளமையை மீட்டெடுக்கக்கூடிய, நம்பிக்கைகளை மறுகட்டமைப்புச் செய்து, பதின் வயது கனவுகளைத் திருப்பித்தரவல்ல காலைகளில் ஒன்று.

திசைகள் பிடிபடாத நிலையில், கோதுமை வயல்களுக்கும், அலைகடலுக்குமிடையில் நடக்கவேண்டியிருந்தது. அலைகளாவது அவ்வப்போது அசைந்தன, கோதுமைக் கதிர்களில் அசைவென்பதே இல்லை. முற்றிய  கோதுமைக் கதிர்களின் மணத்தையும்,கடற்பாசியின் மணத்தையும் நுகர்ந்தவண்ணம், எவ்வித சிந்தனையுமின்றி. முன்னோக்கி, பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த பயணத்தின் தொடர்ச்சியாக அன்று பிரெத்தாஞ் கடற்கரைப் பகுதிகளில் திரிந்து கொண்டிருந்தேன். சோர்வென்று எதுவுமில்லை, மாறாக சுறுசுறுப்பும், மகிழ்ச்சியும்,உற்சாகமும் என்னிடமிருக்க நடந்துகொண்டிருந்தேன்.

எதைக் குறித்தும் யோசனைகளில்லை. தன்னை மறந்து, ஆழமாக, சரீரத்திற்கு சுகமளிக்கும் இயற்கை இன்பத்தில் திளைக்கிறபோதும், சந்தோஷ மிருகம் புற்களிடையே ஓடும் போதும் அல்லது அதுவே ஒரு இராட்சஸ பறவைபோல  நீல ஆகாயத்தில் பகலவன் முன்பாக பறக்கிறபோதும் வாய்ப்பதெல்லாம் மகிழ்ச்சிக் கணங்கள்,  இந்நிலையில் எதைப் பற்றிச் சிந்திக்கபோகிறேன்? தூரத்தில் பக்திப் பாடல்களின்    ஓசை. அன்று ஞாயிற்றுக்கிழமை, எனவே கிறித்துவ சமய ஊர்வலமாக இருக்கலாம். இரண்டொரு அடியெடுத்துவைத்து திருப்பமொன்றில் அசையாமல் நின்றேன், மனதில் ஒருவித சிலிர்ப்பு. ஐந்து பெரிய மீன்பிடி பாய்மரப்படகுகள், அவற்றில் ஆண்கள், பெண்கள், குழந்தைகளென்று மனிதர்கூட்டம், அவர்கள் ப்ளூனெவென் (Plouneven) புனிதயாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களென விளங்கிக்கொண்டேன்.

சொற்பநேரமே நீடித்த மென்காற்று, பழுப்பு நிற பாய்மரக் கித்தான்களை ஊதித் தள்ள சிரமப்பட, படகுகளும் மெதுவாகச் சென்றன, அடுத்து, வீசிய மறுகணமே காற்று களைத்துப்போனதும், கித்தான்கள் பாய்மரங்களைத் தழுவிக்கொண்டு விழுந்திருந்ததும் காரணம்.

மனிதச் சுமைகாரணமாக படகுகள் தள்ளாடி நகர்ந்தன. படகிலிருந்த  அனைவரும்  பாடிக்கொண்டிருந்தனர். பெரிய தொப்பியை அணிந்திருந்த ஆடவர் கூட்டம் படகின் விளிம்பைஒட்டி நின்றவண்ணம் சத்தமிட்டுப் பாட, பெண்கள் கீச்சொலியில் கத்துகிறார்கள், இந்நிலையில் கரகரகரப்புடன் பாடும் பிள்ளைகளின் கம்மியக் குரல், பொதுவாகத் தோத்திரப்பாடல்களின் பெருங்கூச்சலில் அடங்கிப்போகும்  போலி குழலோசைகள் கதிக்கு ஆளாயின.

ஐந்து படகுகளின் பயணிகளும் பாடியது ஒரே தோத்திரப் பாடலை,அதைச் சத்தமாகவும்  பாடினார்கள், அப்பாடலின் சலிப்பூட்டுகிற ஒலி வானத்தை முட்டியது. ஐந்து படகுகளும் ஒன்றன் பின் ஒன்றாக, உரசிக்கொண்டு சென்றன.

அவர்கள் என்னை முந்திக்கொண்டதோடு, என்னைக்கடந்தும் சென்றார்கள். அவர்களுக்கும் எனக்குமான இடைவெளி தூரம் மெள்ள மெள்ள அதிகரிக்க பாடல் ஒசை பலவீனமடைந்து. இறுதியில் அடங்கியும் போனது.

இனிமையான விஷயங்களைக் கனவுகான ஆரம்பித்தேன், அதாவது இளம்வயது பையன்களைப்போலச்  சிறுபிள்ளைத்தனமான, சொகுசான கனவுகளை.   

கனவுக்குறிய வயதை எத்தனைச் சீக்கிரம் நாம் தொலைத்து விடுகிறோம். உயிர்வாழ்க்கையில், மகிழ்ச்சியான கணங்களே கனவுகாணும் வயதொன்றுதான்!  தனிதிருக்கிற கணத்திலெல்லாம், நம்ம்பிக்கைகளில் கவனத்தைச் செலுத்தவல்ல தெய்வீகமான மனோசக்தியை நெஞ்சில் சுமக்கிறொம், எனவே ஒருபோதும் நாம் துணையின்றியோ, சோகத்துடனோ, முகவாட்டத்துடனோ இருப்பதில்லை, அது எத்தனை விசித்திரமான பூமி ! அங்கு காடுமேடென்று அலைந்து திரியும் சிந்தனையின் அமானுஷ்ய கற்பனையில் எதுவும் நடக்கலாம். கனவுகளின் பொன்னுலகில், வாழ்க்கை எவ்வளவு ரம்மியமானது!

ம்! என் துரதிர்ஷ்டம், எல்லாம் முடிந்தது!

திரும்பவும் கனவு காணத் ஆரம்பித்தேன்.இளம்வயது கனவுகள் அல்ல, பின் எதைக் குறித்து?  எவற்றையெல்லாம் தொடர்ந்து எதிர்பார்ப்போமோ, எவற்றுக்கெல்லாம் ஆசைப்படுவோமோ அவற்றுக்காக : செல்வம்,புகழ்  பெண்கள் என்று அனைத்திற்கும் கனவு கண்டேன்.

நடந்துகொண்டிருந்தேன், முற்றிய கோதுமைக் கதிர்கள், என்விரல்களுக்கு வளைந்துகொடுத்து எனக்குக் கிளுகிளுபூட்ட தலைமுடியைக் கோதுவதுபோல, கோதுமையின் பொன்னிற தலையை வருடியபடி வேகமாக நடந்துகொண்டிருந்தேன்.

சிறிய மேடுபாங்கான நிலப்பகுதியை சுற்றிக்கொண்டு நடக்க, ஒரு குறுகிய, வட்டமான கடற்கரையின் முடிவில், அதைத் தொட்டதுபோல அமைந்திருந்த மூன்றடுக்கான நிலப்பாங்கில் வெள்ளைவெளேரென்று ஒரு வீடு.

இவ்வீட்டின் தோற்றம், எதற்காக என்னிடம் சந்தோஷ சிலிர்ப்பை ஏற்படுத்தவேண்டும், இதற்கான காரணம் என்ன, எனது மனம் அறிந்திருக்குமா? சிற்சில சந்தர்ப்பங்களில் இதுபோன்று சுற்றித் திரிகிறபோது, அப்பகுதிகளில் சிலவற்றை வெகுகாலமாக  அறிந்திருப்பதுபோலவும், மிகவும் பரிச்சயமானவை போலவும், மனதிற்குப் பரவசமூட்டுவதுபோலவும் உணர்கிறோம். இவற்றை நாம் அதற்கு முன்பாக கண்டிருக்க சாத்தியமில்லையா? இதற்கு முன்பு அப்பகுதியில் ஒருவேளை வாழ்ந்திருக்க முடியாதா? நம்மை அனைத்தும் ஈர்க்கின்றன, இன்பத்தில் மூழ்கடிக்கின்றன, அடிவானத்தின் மென்மையான கோடு,  மரங்களின் அமைப்பு, மணலின் நிறம்!

ஓ! உயரமான படிகள் போலமைந்த நில அடுக்குகளில் நிற்கும் அந்த வீடுதான் எவ்வளவு அழகு! பிரம்மாண்டமான படிகளாக  நீருள்ள திசைநோக்கி இறங்கியுள்ள அடுக்குகளின் நிலப்பரப்பில் உயரமான பழ மரங்கள். அவ்வடுக்குகளின் விளிம்புகளில், நெடுக மஞ்சள் வண்ண பூக்களுடன் ஸ்பெயின் தேச ழெனெ (genêts) வகைப் பூச்செடிகள் புதர்போல  மண்டிக்கிடக்க, ஒவ்வொரு அடுக்கும் தலையில் தங்கக் கிரீடத்தை அணிந்திருக்கும் தோற்றத்தை அளித்தது.

குடியிருப்பினால் காதல் வயப்பட்டிருக்க, நடப்பதை நிறுத்திக் கொண்டேன், அவ்வீட்டை எனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும், அங்கே வாழவேண்டும், அதுவும் கொஞ்ச காலத்திற்கல்ல நிரந்தரமாக என்பதுபோல, அதன்மீது காதலாகியிருந்தேன். 

வாயிலை நெருங்கினேன், இதயம் மட்டுமீறிய உந்துதலில் படபடவென அடித்துக்கொண்டது, தடுப்புச்சுவரின் சிறுதூண்களில் ஒன்றில், ஒரு பெரிய விளம்பர அட்டை, அதில்  “விற்பனைக்கு”, என்றொரு வாசகம். மறுகணம் யாரோ அவ்வீட்டை எனக்குத் தானமாக கொடுத்ததுபோல ஒரு இன்ப அதிர்ச்சி! ஏன் ? எதற்காக? எனக்குத் தெரியாது !

அவ்வீடு” விற்பனைக்கு”. எனவே,  தற்போதைய நிலையில்  கிட்டத்தட்ட ஒருவருக்கும் சொந்தமானதல்ல, நாளை யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாகலாம், நான் உட்பட, ஆம் எனக்கே கூட சொந்தமாகலாம்.!  எனக்கு! ஏன் இந்த விஷயத்தில் இப்படியொரு ஆழமான, விவரிக்கப் போதாத உணர்வு? இந்த வீட்டை வாங்க என்னால் ஆகாதென்பது நன்றாகத் தெரியும்! வாங்குவதற்கு என்னிடம் ஏது பணம்? அதனாலென்ன, அவ்வீடு விற்பனைக்குரியது என்ற சொல் முக்கியம். கூண்டில் அடைபட்டிருக்கும்  ஒரு பறவை அதன் எஜமானருக்கு மட்டுமே சொந்தம், மாறாக வானில் பறக்கும் பறவை பொதுவானது என்கிறபோது, நான் சொந்தமாக்கிக்கொள்ள முடியும்.

வளமான நிலப்பரப்பிற்குள் சென்றேன்.  ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிய அரங்குகளைப் போல நில அமைப்பு,  சிலுவையில் அறையப்பட்டத்  தோற்றத்துடன் எஸ்ப்பலியெக்கள் (espaliers)(1), கொத்து கொத்தாக பூத்திருந்த மஞ்சள் வண்ண ழெனெ பூக்கள்,  ஒவ்வொரு அடுக்கின் முடிவிலும் வயதான இரண்டு அத்தி மரங்கள், மொத்தத்தில் அத்தோட்டம்தான் எவ்வளவு அழகு!

ஒவ்வொரு அடுக்காக கடந்து நில அமைப்பின் கடைசி அடுக்கான மூன்றாவது அடுக்கில் நின்று, அடிவானத்தைப் பார்த்தேன்.  கீழே வளைந்தும், எங்கும் மணலாகவும் பரந்து கிடந்த  சின்னஞ்சிறு கடற்கரையை நிலப்பகுதியிலிருந்து கனத்த மூன்று  பழுப்பு நிற பாறைகள் பிரித்திருந்தன. இங்கிருந்து காண, கடல்வாயிலை அடைத்த பெருங்கதவுகள் போலவும் இருந்தன, தவிர  கடற் கொந்தளிப்பு நாட்களில், அப்பாறைகளில் அலைகள் மோதிச் சிதறுமென்பது நிச்சயம்.

 எதிர் முனையில் இரண்டு பாறைகள் அவற்றில் ஒன்று நிற்பது போலவும் மற்றது புற்களின் மீது படுத்திருப்பதுபோலவும் இருந்தன, நிற்பது மெனிர்(menhir) மற்றது தொல்மென்(dolmen)(2) என்றும் புரிந்தது. இரண்டும் பார்ப்பதற்கு கணவன் மனைவிபோலவும், ஏதோஒரு சாபத்தால் கற்களாக மாறியவை போலவும், முன்பொரு காலத்தில் தனித்திருந்த கடலை பல நூற்றாண்டு காலமாக தெரிந்துவைத்திருப்பவை போலவும், சிறிய வீடு முழுமையாக கட்டிமுடிக்கபடும்வரை தொடர்ந்து  அவதானித்து வந்ததுபோலவும் எனக்குப் பட்டது, விற்பனைக்கென்று உள்ள அச்சிறிய வீடு ஒருநாள் இடிந்து நொறுங்க, காற்றில் கலக்க, பின்னர்  அவ்விடத்தில் புல்பூண்டுமுளைக்க  அவற்றையுங்கூட  இந்த ஜோடி காண நேரலாமென எனக்குத் தோன்றியது.

பல நூற்றாண்டுகளைக் கண்ட ‘மெனிர் தொல்மென்’ தம்பதிகளே, நீங்கள் இருவரும் என் அன்புக்குரியவர்கள் ! என அக்கற்களிடம் தெரிவித்தேன்.

வீட்டின் வாயிற்கதவில் நின்று, சொந்தவீட்டின் அழைப்பு மணியை உபயோகிப்பதுபோல அடித்துவிட்டுக் காத்திருந்தேன்.  ஒரு பெண் கதவைத் திறந்தாள், பணிப்பெண் தோற்றம், சற்று வயதானவள்,  கருப்பு உடை, தலையில் மடத்துப்பெண்களின் வெண்ணிற தொப்பி. இப் பெண்மணியைக்கூட இதற்குமுன் பார்த்திருக்கவேண்டும் என்பதுபோல எனக்குப்,பட்டது.

-நீங்கள் பிரெத்தோன் பெண்மணியாக இருக்கவேண்டும், சரிதானே? – என அவளிடம் கேட்டேன்.

– இல்லை ஐயா, நான் லொர்ரேன்(Lorraine) பிராந்தியத்தைச் சேர்ந்தவள்” என பதிலிறுத்தவள் தொடர்ந்து: 

-நீங்கள் வீட்டைப் பார்க்க வந்தவரா?” »  எனக்கேட்க,

அவளிடம்:

« நீங்கள் நினைத்தது சரி! » எனக்கூறிவிட்டு, அப்பெண்மணியைத் தொடர்ந்தேன். அங்கிருந்த சுவர்கள், தளவாடங்களென ஒவ்வொன்றையும் என்னால் நினைவு கூர முடிந்தது. முன்கூடத்தில் என்வீட்டில்  வழக்கமாக எனது கைத்தடியை சாத்தி வைப்பது வழக்கம், அன்று அதைக்கூட அங்கு தேடினேன். வீட்டின் வரவேற்புக் கூடத்திற்குள் சென்றேன், சுவர்கள் கோரையில்முடைந்த விரிப்புகொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்க, கடல் நீரைப் பார்க்கும் வகையில் மூன்று மிகப்பெரிய சன்னல்கள். தீக்காயும் அடுப்பின் மீது அலங்காரமாக சீனத்துப் பீங்கானில் பொருட்கள், அவற்றோடு ஒரு பெண்ணின் பெரிய அளவு புகைப்படம். தாமதிக்காது, அதை நோக்கிச் சென்றேன். நிச்சயம் என்னால் அவளை அடையாளம் காணமுடியும் என்ற நம்பிக்கை காரணமாக. நினைத்ததுபோலவே, அவள் யாரென்று விளங்கியது, அதேவேளை அவளை ஒருபோதும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை என்பதும் நிச்சயம். அவளா அது? எனக்கு வியப்பு. எவளுக்காக காத்திருந்தேனோ, எவளை அடையவேண்டுமென விரும்பினேனோ அதேபெண்!  என்னுடைய கனவுகளில் ஒயாமல் துரத்தும் அம்முகத்தை நினைவு  கூர்ந்தேன். இரவுபகலாக செல்லும் இடமெல்லாம் என்னால் தேடப்படும் பெண் ; இன்னும் சற்று நேரத்தில் வீதியில், அல்லது கிராமப்புறம் பக்கம் போகிறபோது கோதுமைக் கதிர்களில் சிவப்புக் குடையோடு ; பயணம் முடித்து, ஓர் விடுதியில் தங்கலாம் எனப் போகிறபோது, என்னை முந்திக்கொண்டிருப்பவளாக அல்லது நான் பயணிக்கிற இரயில்பெட்டியில் சக பயணியாகவோ அல்லது எனக்கென திறக்கும் வரவேற்பு கூடத்தில் எனக்கு முன்பாகவோ காண நேரும், அதே பெண்.

நிழற்படப் பெண் அவள் தான், நிச்சயமாக, சந்தேகத்திற்கு இடமின்றி அவள்தான்! என்னை அவதானிக்கும் அவளுடைய கண்கள் ; தலைமுடியை ஆங்கிலப் பெண்களைப்போல முடிந்திருக்கும் பாங்கு ; குறிப்பாக அவளுடைய வாய் ; வெகுகாலமாக அவளை யாரென்று யூகிக்க உதவும் அவள் புன்னகை, அனைத்தும் அப்பெண்ணை அடையாளப் படுத்தின.

 – யார் இந்தப் பெண்?- எனப் பணிப்பெண்ணிடம் கேட்டேன்.

சுரத்தின்றி அவரிடமிருந்து பதில் வெளிப்பட்டது: « இதுவா … மேடம் » .

நான் விடவில்லை, “அந்த அம்மாள் உங்கள் எஜமானியா?”

« ஓ! இல்லை, ‘அப்பெண் என் எஜமானி இல்லை, ஐயா !» இம்முறை அவளுடைய பதிலில் தன் பணி நிமித்தமான  கடமையோடு, சிறிது எரிச்சலும் கலந்திருந்தன.

இருக்கையைத் தேடி அமர்ந்த பின்னர், பணிப்பெண்ணிடம், ” – கொஞ்சம் விவரமாக அதைச் சொல்லமுடியுமா ? எனக் கேட்டேன்.

அவள் திகைத்து, அசையாமல், அமைதியாக நின்றாள்.

நான் விடுவதாக இல்லை: “படத்தில் இருப்பவர் இந்த வீட்டின் எஜமானி அம்மாள், சரியா?

–   இல்லை, அதுவுமில்லை,

–  இந்த வீடு யாருக்குத்தான் சொந்தம் ?

–  என்னுடைய எஜமான் தூர்னெல்  என்பவருடையது.

புகைப்படத்தை நோக்கி விரலைச் சுட்டி:

–  அப்போது இந்தப் பெண்?

– அது வந்து மேடம் ….

–  அப்படியெனில், உங்கள் எஜமானின் மனைவி என்று சொல்?

–  இல்லை, ஐயா.

–  மனைவி இல்லையென்றால் வேறு யார், உங்க எஜமானுடைய வைப்பாட்டியா?

மடத்துப் பெண் சாயலைக்கொண்ட பணிப்பெண்ணிடம் பதிலில்லை. மாறாகப் புகைப்படப் பெண்ணோடு சம்பந்தப்பட்ட  மனிதருக்கு எதிராகத் தெளிவில்லா பொறாமையும், குழப்பமான கோபமும் என்னை பீடித்திருந்த நிலையில் பிடிவாதமாக என் கேள்வியைத் தொடர்ந்தேன்.

–  சரி, இருவரும் இப்போது எங்கே?

பணிப்பெண் தாழ்ந்த குரலில்:

– எங்கள் ஐயா பாரீசில் இருக்கிறார், ஆனால் மேடம் பற்றிய தகவல் எதுவும் தெரியாது.

 ஒரு விதச் சிலிர்ப்புடன்

 – அப்படியென்றால்,  அவர்கள் இப்போது ஒன்றாக இல்லை.

–  இல்லை ஐயா.

சற்று தந்திரத்துடன், வருத்தம் தோய்ந்த குரலில் :

– என்னதான் நடந்தது சொல்லுங்களேன், உங்கள் முதலாளிக்கு என்னால் ஏதாவது உதவ முடியுமா என்று பார்க்கிறேன். எனக்கு இந்தப் பெண்ணைத் தெரியும், மோசமானவள், என்றேன்.

பணிப்பெண், பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை. நான் சற்று வெளிப்படையாக பேசுவது, அப்பெண்மணிக்கு   நம்பிக்கை அளித்திருக்க வேண்டும்.

« ஓ! அதை என்னன்னு சொல்வது. எங்க வீட்டு ஐயாவுக்கு அத்தனைத்  துன்பத்தையும் கொடுத்தாள். இத்தாலிக்குப் போயிருந்தபோது அங்கு இருவருக்கும் பழக்கம், மணம் செய்துகொண்டதுபோல தன்னுடன் அழைத்தும் வந்தார். அவள் நன்றாகப் பாடுவாள். அவள் மீது எங்க ஐயா உயிரையே வைத்திருந்தார்.  அவர் நிலைமையைப் காண பரிதாபமாக இருக்கும். கழிந்த ஆண்டு, இந்தப்பக்கம் சுற்றுப் பயணமாக வந்தவர்கள், யாரோ ஒரு பைத்தியக்காரன் கட்டியிருந்த இந்தவீட்டைக் கண்டிருக்கிறார்கள். அவனை உண்மையில் ஒரு பைத்தியக்காரன் என்று தான் சொல்லவேண்டும், இல்லையெனில், கிராமத்திலிருந்து இத்த்னை கல் தூரத்தில் இப்படியொரு வீட்டைக் கட்டுவானா? வீட்டைப் பார்த்த மறுகணமே அதைவிலைக்கு வாங்கி, எங்க எஜமானுடன்  இந்தவீட்டில் குடியிருக்க அவளுக்கு ஆசை. அவளைச் சந்தோஷப்படுத்த எங்க ஐயாவும் வீட்டை வாங்கினார்.

கடந்த வருடம் பனிக்காலம் முழுக்க இங்கே அவர்கள் இருந்ததாகச் சொல்லமுடியாது, ஆனால் கோடைக்காலத்தை  இந்த வீட்டில்தான் கழித்தார்கள்.

“ஒரு நாள் மதிய உணவு நேரம், “செசரின்!” என்றென்னைக் கூப்பிட்ட  முதலாளி : « வெளியில் சென்றிருந்த, மேடம் வீடு திரும்பிட்டார்களா? » எனக்கேட்டார். « இல்லை ஐயா » – என்றேன்.“ அன்றைய தினம் நாள் முழுக்க காத்திருந்தோம். கோபத்தின் உச்சத்தில் முதலாளி இருந்தார். எங்கெங்கோ தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. போனவள் போனவளே, ஏன் எதற்காக என்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடையாது,  பணிப்பெண் பதிலைக் கேட்டதும், எனக்குத் தலைகால் புரியவில்லை.  மகிழ்ச்சியியை வெளிப்படுத்த பணிப்பெண்ணை முத்தமிடவும், அவள் இடுப்பைப் பிடித்தபடி நடனம் ஆடவும் விரும்பினேன்.

ஆகத் தற்போது புகைப்படக்காரி வீட்டு உரிமையாளரோடு இல்லை ! அவள் வீட்டை விட்டு போய்விட்டாள், நல்லவேளை தப்பித்தாள். இந்த மனிதரின் உறவு அவளுக்கு அலுப்பைத் தந்திருக்கவேண்டும், வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு அவளிடம் அம்மனிதர் நடந்துகொண்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் கிடைத்த செய்தியால் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

வயதான பணிப்பெண் இன்னும் தான் சொல்லவேண்டியது இருக்கிறது என்பதுபோல தொடர்ந்தார்: « என் முதலாளி கவலையில் வாடினார், என் கனவரிடமும் என்னிடமும் வீட்டை விற்கப் பணித்துவிட்டு, பாரிஸுக்குத் திரும்பிட்டார், வீட்டின் விலை இருபதாயிரம் பிராங்குகள்», எனகூறிவிட்டு நிறுத்தினாள்.

வேலைக்கரப்பெண் கூறியவைகளை காதில் வாங்கும் நிலையில் நானில்லை! எனது நினைவெல்லாம் புகைப்பட பெண்ணிடம் இருந்தது. மறுகணம், எப்படியேனும் அவளை கண்டுபிடித்து இங்கே அழைத்து வரவேண்டும். இளவேனிற்காலத்தில் இப்பிரதேசத்திற்குத் திரும்பவும் கூட்டிவந்து, அவள் மிகவும் விரும்பிய அழகான இவ்வீட்டை, உடையவர் தற்போது இங்கில்லை என்பதையும் கூறி , திரும்பக் காணச் செய்யவேண்டும். செய்யவேண்டியது அதொன்றுதான்.

வயதான பணிப்பெண்ணின் கைகளில் பத்து பிராங்குகளைப் போட்டேன். தற்போது புகைப்படம் என்கையில். வேகமாகச் சென்று அட்டையிலிருந்த  இனிமையான அம்முகத்தை வெறித்தனமாக முத்தமிட்டேன்.  

வீட்டைலிருந்து வெளியேறியவன், வந்த சாலையைப் பிடித்து புகைப்படப் பெண்ணை பார்த்தவண்ணம் நடந்தேன். தற்போது அவளுக்கு விடுதலை, விடுதலைக்கு பின் அவள் எவ்வளவு அழகு!  அவள் காப்பாற்றப்பட்டிருந்தாள்!  வீட்டு மனிதரைப் பிரிந்தாயிற்று. இன்றோ நாளையோ, இந்த வாரமோ, அடுத்த வாரமோ அவளை நான் சந்திக்கப் போவது நிச்சயம்! அம்மனிதரைப் பெண் பிரிய என்னுடைய அதிர்ஷ்டமே காரணமென்றும் நினைத்தேன்.

நான் அறிந்த அப்பெண்  தற்போது இவ்வுலகில் ஏதோவொரு மூலையில்  சுதந்திரமாக இருக்கிறாள், நான் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், எப்படியாவது அவளை தேடி கண்டுபிடிக்கவேண்டும்.

விளைந்த  கோதுமையின் வளைந்த கதிர்கள் மீன்டும் என் கை தடவலில் இருக்க, கடற்காற்றை உள்வாங்கி என் மார்பு புடைத்தது, முகத்தில் சூரியன் முத்தமிட்டது. விரைவில் அவளைச் சந்திப்பதும், “விற்பனைக்கு”  என்றுள்ள அந்த அழகான வீட்டில், இம்முறை நாங்கள் வசிப்பதும் நிச்சயம். இனி தான் விரும்பும் வீட்டைப் பிரிய  அவளுக்கு மனம்வராது!

எல்லையில்லா மகிழ்ச்சியுடனும், நம்பிக்கை அளிந்த போதையுடனும் நடந்துகொண்டிருந்தேன்.

_______________________________________________________________

  1. எஸ்ப்பலியெ (espaliers) : ஒரு வகையான தோட்டக் கலை, பழமரங்களையும், பூச்செடிகளையும் சுவரில் பதியம். செய்வதுபோல வளர்க்கும் முறை

2;மெனிர்(menhir) தொல்மென் (dolmen) இவற்றுள் முதலாவது, ஒரு வகை குத்துக்கல், இரண்டாவது படுக்கைநிலையில் உள்ள ஒரு கல், இரண்டும் இறந்தவர்கள் நினைவுச் சின்ங்கள்,  கற்காலங்களில் புழக்கத்தில் இருந்

பிரியாவிடை

                  பிரியாவிடை (Adieu)

( கதை பிரெஞ்சில் பிரசுரமான ஆண்டு 18 மார்ச் 1884)

  • கி மாப்பசான்
  • தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

நண்பர்கள் இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தனர். உணவகச் சன்னலில் இருந்து  பார்க்க வெளியே பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். கோடை இரவுகளில் பாரீசில் வீசும் இதமான காற்று உடலைத் தொட்டது. பாதசாரிகள் தலைகளை உயர்த்தி நடப்பதற்குரிய காரணம் விளங்க, உணவகத்திலிருந்து வெளியேறவேண்டும் என்கிற உந்துதல். அங்கே செல்லவேண்டும், காற்றுதரும் கனவுகளில் ஏதேதோ வருகின்றன : தழையத் தழைய இலைகளுடன் நிற்கும் மரங்கள்,  நிலவொளியில் ஜொலிக்கிற நதிகள், மின்மினிப் பூச்சிகள், வானம்பாடிகள், இவற்றிறில் எதைத் தேர்ந்தெடுப்பது, எங்கே செல்வது என்பதில் நண்பர்கள் இருவருக்கும் குழப்பம்.  

அவர்களில் ஒருவரான ஹாரி சிமோன் ஆழ்ந்த பெருமூச்சுடன் கூறினார்:

–  ம்,  எனக்கு வயதாகிவிட்டது, தற்போது அதுபற்றிய கவலைதான். முன்பெல்லாம், இதுபோன்ற மாலைவேளைகளில்,  துர்த்தேவதை இறங்கினதுபோல எனதுடல் இருக்கும். தற்போது மனதில் விசனத்தைத் தவிர வேறொன்றுமில்லை. வாழ்க்கை வேகமாக ஓடுகிறது.

மனிதருக்குக் கனத்த உடல், நாற்பத்தைந்து வயது இருக்கலாம், தவிர வழுக்கையும் அதிகம்.

மற்றவர், பியர் கர்னியெ, கொஞ்சம் கூடுதலான வயது, நன்கு மெலிந்திருந்தார், அதேவேளை உற்சாகமான ஆசாமி.  நண்பர் சொல்லி முடிக்கட்டுமெனக் காத்திருந்தவர்போல இவர் தொடர்ந்தார்:

” அன்பிற்குரிய சினேகிதரே, எனக்கும் வயதாகிவிட்டது,  அதைச் சிறிதும் உணராமலேயே நானும் இருந்திருக்கிறேன்.  மகிழ்ச்சி, திடகாத்திரமான உடல், சுறுசுறுப்பென்று பலவும் என்னிடம் இருந்தன. இருந்தும் கண்ணாடிமுன் நிற்கிற ஒவ்வொரு நாளும்    ​​வயது தனது கடமையை நிறைவேற்றுவது கண்களுக்குப் புலப்படுவதில்லை, காரணம்  அப்பணியை மெதுவாகவும், அதற்கான நியதிகளின் அடிப்படையிலும் நிறைவேற்றுகிறது. மாற்றங்களை உணரமுடியாத வகையில் மெல்ல மெல்ல நம் முகத்தை அது திருத்தி எழுதுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே வயதின் இரண்டு அல்லது மூன்றாண்டுகால கபளீகரத்திற்குப் பிறகு  நாம் அதிகம் மனம் உடைந்துபோவதில்லை. அதேவேளை  இம்மாற்றங்களை நாம் கொண்டாடவும் இயலாது. குறைந்தது ஆறு மாதங்கள் கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்க்காமலிருக்க நமக்குப் பொறுமை வேண்டும், அப்போதுதான்  இப்பிரச்சினையின் உண்மை தெரியவரும்.  அன்று,  தலையில் இடி விழுந்திருக்கும்!

சரி பெண்கள் நிலமை என்ன, அருமை நண்பா!, அதை  எப்படிச்சொல்ல?, மிகவும் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அவர்கள்! அவர்களுடைய  ஒட்டுமொத்த மகிழ்ச்சியும்,  பலமும், உயிர்வாழ்க்கையும் எதில் அடங்கியுள்ளது  தெரியுமா? சுமார் பத்துவருடகாலம் மட்டுமே நிலைத்திருக்கிற அவர்களுடைய அழகில்.

என் விஷயத்திற்கு வருகிறேன்,  நானும், எப்படியென்று சந்தேகிக்காமலேயே முதுமையை அடைந்துவிட்டேன், இன்னமும் நானொரு பதின் வயது இளைஞன் என்று எண்ணிக்கொண்டிருக்க, ஐம்பதுவயதை நெருங்கியிருந்தேன். குறைபாடுகள் ஏதுமின்றி வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் சென்றது. முதுமையின் வருகை கவனத்தைபெற்றதில்லை, இருந்தபோதிலும் அது கொடுமையானது, உண்மையைப் புரிந்துகொண்டபோது கிட்டத்தட்ட ஆறுமாதங்கள்  அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கிடந்து, பிறகு அதன் வழியில் செல்வதென முடிவெடுத்தேன்.

எல்லா ஆண்களையும் போலவே நானும் அடிக்கடி காதல் வயப்பட்டிருக்கிறேன், அவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று உண்டு.

சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, யுத்தம் முடிந்து சிறிதுகாலமிருக்கும், ஏத்ருத்தா(Etretat) கடலோரம்   அவளைச் சந்தித்தேன்.  காலைவேளையிலும், கடல் நீராடுகிறபோதும் அக்கடற்கரையின் அழகே தனி. குதிரை இலாடம்போல வளைந்து, செங்குத்தான வெண்ணிற பாறைகளால் சூழ்ந்திருக்கும். ஆங்காங்கே புதுமையான வகையில் வெடிப்பில் உருவான சிறு சிறு பிளவுகள். அவற்றுக்குக் ‘கதவுகள்’  என்று பெயடரிட்டிருக்கிறார்கள்.  செங்குத்தான பாறைகளில் ஒன்று மிகப்பெரியது, கடல் நீருக்குள், ஒரு பக்கம் தன்னுடைய பிரம்மாண்டமான காலை நீட்டிக் கிடத்தியதுபோலவும்,எதிர்பக்கம் மற்றொரு காலை, குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பது போலவும் தோற்றம் தரும் ; கடற்கரையெங்கும் பெண்கள் திரண்டிருப்பார்கள், சிறு நாக்குகள்போல பரவிக்கிடக்கும் கூழாங்கற்கள் நிறைந்த கடற்கரையில், பாறைகளுக்கிடையில் பெண்கள் குவிந்திருக்கும் காட்சி ஜொலிக்கும் வெள்ளாடைகளால் ஆன தோட்டமோ எனும் வியப்பைத் தரும். போதாதற்கு கடற்கரையும், பச்சை நீல வண்ணங்கள் கலவையிலான   கடல் நீரும், நிழலுக்கென விரித்திருந்த விதவிதமான குடைகளில் முழுவீரியத்துடன் காய்கிற சூரியனும் கண்களுக்கு விருந்தென்பதோடு, அக்காட்சி பரவசத்தையும் புன்னகையையும் நமக்கு அளிப்பவை.  கடல் நீருக்கு எதிரே  அமரலாமென்று செல்கிறோம். நீராடும் பெண்களைப் பார்க்கிறோம்.  சிலர் நீரை நோக்கிச் செல்கிறார்கள், பெரிய அலைகளைத் தவிர்த்துவிட்டு சிற்றலைகளின் நுரை விளிம்பை நெருங்குகையில், தங்கள் உடலைச் சுற்றியிருந்த மெல்லிய பருத்தித் துவாலையை  ஒயிலாக அவிழ்த்து எறிகிறார்கள். நீருக்குள் அடியெடுத்துவைப்பதில் பதற்றம் தெரிகிறது, தவிர நீரின் குளிர்ச்சி தரும்  சுகமான சிலிர்ப்பும், கணநேர சுவாச நெருக்கடியும் சிற்சில சமயங்களில் அவர்கள் தயக்கத்திற்கு காரணமாகின்றன.

கடல் நீராடலின் இச்சோதனையில், வீழ்பவர்களே அதிகம்.  கெண்டைக்கால் தசைப்பகுதியிலிருந்து மார்புவரை அதனை அவதானித்து தீர்மானிக்க முடியும். என்னதான்  மென்மையான  சரீரங்களுக்கு கடல் நீர் ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்ப்பென்கிற போதும் நீராட விரும்பாமல் கரைக்குத் திரும்புவதென்பது ஒரு சிலரின் பலவீனத்தையே காட்டுகிறது.  அந்த இளம் பெண்ணைக் முதன்முறையாகப் பார்த்தகணத்திலேயே  மனதில் பரவசம், ஒருவித மயக்கம். கடல் நீரின் சோதனைக்கு அவள் தாக்குப் பிடித்தாள், உறுதியாக நின்றாள். தவிர சிலரின் தோற்றங்களுக்கென்று ஒருவித வசீகரம் உள்ளது, அது கணத்தில் நமக்குள் நுழைந்து, எங்கும் பரவி நிரம்பும். நாம் எந்தப்பெண்ணைக் காதலிக்கப் பிறந்தோமோ அவளே நமக்கு அறிமுகமாகிறாள் என்பதென் கருத்து. இவ் உணர்வு தோன்றிய மறுகணம் உடலில் ஒரு சிலிர்ப்பு.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். முதன் முறையாக பெண்ணொருத்தியின் பிடிமானத்தில்சிக்குண்டது அப்போதுதான். எனது இதயத்தை  சூறையாடியிருந்தாள் கபளீகரம் செய்திருந்தாள்.  இப்படி ஒரு பெண்ணின் ஆதிக்கத்திற்கு அடிபணியும் அனுபவம் என்னை பயமுறுத்தியது என்கிறபோதும் அது இனிமையானது. கிட்டத்தட்ட ஒரு வகையில் சித்திரவதை,  அதே நேரத்தில், நம்பமுடியாத வகையில் மகிழ்ச்சி. அவள் பார்வை, புன்னகை, காற்றில் எழுந்தடங்கும் அவள் புறங்கழுத்து தலைமயிர், முகத்தில் காண்கிற மெல்லிய கோடுகள், முகக்கூறின் எந்த ஒரு சிறிய மெலிதான  அசைவும் என்னை மகிழ்வித்தன, புரட்டிப்போட்டன, பைத்தியமாக்கின. அவளுடைய தனித்தன்மையும், முகபாவமும், சமிக்கையும், செயல்பாடுகளும் என்னை ஆட்கொண்டிருந்தன, ஏன் உடைகளும், அணிகலன்களுங்கூட  என்னை வசியம் செய்திருந்தன. மரத்தளவாடத்தின் மீது கிடந்த அவளுடைய முகத்திரையையும், ஒரு நாற்காலியில் வீசப்பட்டிருந்த அவள் கையுறைகளையும்கண்டு  என் மனம் சலனப்பட்டிருக்கிறது. அவளுடையை ஆடைகளைப்போல  உடுத்தவேண்டுமென  எந்தப் பெண்ணாவது முயற்சித்தால்  அவளுக்குத் தோல்வி நிச்சயம் என நான் நினைப்பேன்.  விதவிதமான தொப்பிகள் அவளிடமிருந்தன, அவற்றைப் பிறபெண்களிடம் கண்டதில்லை.

அவள் திருமணமானவள், கணவன் வார இறுதியில் மட்டும் வீட்டிற்கு வருவான், என்னைக்கண்டும் காணாமலிருந்தான். எனக்கு அம்மனிதனிடத்தில் பொறாமையில்லை, அதற்கான பதிலும் என்னிடத்தில் இல்லை. மிக் கேவலமான ஓரு பிறவி,  சிறிதளவும் பொருட்படுத்தவேண்டிய மனிதனே அல்ல. அப்படியொரு மனிதனை என் வாழ்நாளில் அதற்கு முன் சந்தித்த தில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அவளைத்தான் நான் எப்படி நேசித்தேன்! அவள்தான் எவ்வளவு அழகு, எத்தனை நேர்த்தி, இளமை! அதாவது அவளே இளமையும், வனப்பும், புத்துணர்ச்சியுமாக இருந்தாள். பெண்ணென்றாலே அழகானவள், மென்மையானவள், தனித்தவள், வசீகரமும் கருணையும் ஒரு சேர உருப்பெற்றவள் என்றுணர்த்தியதும் அவள்தான், முன்னெப்போதும் அப்படியொரு எண்ணம் உதித்ததில்லை. தவிர கன்னங்களின் வளைவிலும், உதட்டின் அசைவிலும்,  சிறிய காதுகளின் வட்டமான மடிப்புகளிலும், மூக்கெஎன்று நாம் அழைக்கும்  இந்த கவர்ச்சியற்ற உறுப்பின் வடிவத்திலும்  என்னை மயக்கும் அழகு இருக்கிறதென்று ஒருபோதும் நான்புரிந்து கொண்டதில்லை.

இது மூன்று மாதங்கள் நீடித்தது, பின்னர் நான் அமெரிக்காவிற்கு புறப்பட்டேன், என் இதயமோ விரக்தி காரணமாக  நொறுங்கிப்போனது. இருந்தபோதும், அவளைப்பற்றிய நினைவுகள் உறுதியாகவும், வெற்றிக்களிப்புடனும் என்னுள் இருந்தன, அருகில் இருக்கையில் என்னை தன் வசம் எப்படி வைத்திருந்தாளோ அதுபோலவே நான் வெகு தூரத்திலிருந்தபோதும் என்னை  தன்வசம் வைத்திருந்தாள். வருடங்கள் கடந்தன.  அவளை மறந்தவனில்லை. அவளுடைய வசீகரமான உருவம் என் கண்ணெதிரிலும், இதயத்திலும் குடிகொண்டிருந்தது. என்னுடைய காதல் உண்மையாக இருந்தது, ஒருவகையில்  ஆரவாரமற்ற அன்பு. இன்றைக்கு அது   நான் சந்தித்த மிக நேர்த்தியானதும் கவர்ச்சியும் மிக்க  ஒன்றின் நினைவுப்பொருள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பன்னிரெண்டு வருடங்கள் என்பது  மிகவும் சொற்பம்! எப்படி போனதென்றே நமக்குத் தெரியாது! ஒன்றன் பின் ஒன்றாகச் வருடங்கள் உருண்டோடுகின்றன, அமைதியாகவும் வேகமாகவும், மெதுவாகவும், அவசரமாகவும், ஒவ்வொன்றும் நீண்டதென்கிறபோதும், கணத்தில் முடிந்துவிடும்!   வருடங்களின் எண்ணிக்கை வெகுசீக்கிரத்தில்  அதிகரித்துவிடும், அவை விட்டுச் செல்லும் தடயங்களும் மிகவும் சொற்பம். காலம் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்க, அங்கே ஒன்றுமிருக்காது, அவை முற்றாகத் தொலைந்திருக்கும், நமக்கு முதுமையை வருடங்கள் எப்படித் தந்தன என்பதையே  புரிந்துகொள்ள முடியாது.

கூழாங்கற்கள் நிறைந்த ஏத்ருதா(Étretatetat)கடற்கரையில் கழித்த அந்த அழகான காலத்தை விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தனபோல எனக்குத் தோன்றியது.

கடந்த வசந்த காலத்தில் நண்பர்களுடன் விருந்துண்ண  மெய்சோன்-லாஃபித்(Maisons-Laffitte)வரை செல்லவேண்டியிருந்தது.

இரயில் புறப்படவிருந்த நேரத்தில், கனத்த சரீரம்கொண்ட  பெண்மணி,  நான்கு சிறுமிகளுடன் எனது பெட்டியில்  ஏறினார். ஓரிரு நொடிகள் கவனம் அவரிடம் சென்றது: நல்ல அகலம், கையெது காலெது என்று சொல்லமுடியாத அளவிற்கு பருமன், முழு நிலவை யொத்த பெரிய  முகத்திற்குப் பொருத்தமாக ரிப்பன் கட்டியத் தொப்பி, தலையில். வேகமாக நடந்துவந்திருக்கவேண்டும் மூச்சிரைத்தது, குழந்தைகள் சளசளவென்று பேச ஆரம்பித்தனர். நான் தினசரியைப் பிரித்து வாசிக்கத் தொடங்கினேன்.

எங்கள் இரயில் அனியேர்(Asnières) நிலையத்தைக் கடந்திருக்கும், என் பக்கத்து இருக்கைப் பெண்மணி   திடீரென்று என்னிடம் :

–மன்னிக்கவும், நீங்கள் மிஸியெ கர்னியெ தானே? எனக்கேட்டாள்.

–  ஆமாங்க…நீங்க?

என்று நான் இழுக்க கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள். அது துணிச்சலான பெண்களுக்கே உரிய சிரிப்பு என்கிறபோதும், சிறிது வருத்தம் தோய்ந்திருந்தது. 

– உங்களுக்கு என்னைத் தெரியவில்லை?

அந்த முகத்தை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என்பது உண்மை, ஆனால் எங்கே ? எப்போது ? என்கிற கேள்விகள் இருந்ததால் பதிலளிக்கத் தயங்கினேன்.

— ம்… என்ன சொல்ல … உங்களை அறிந்திருக்கிறேன் என்பது  நிச்சயம், ஆனால் பெயரை நினைவு கூர இயலவில்லை.

பெண்மணியின் முகம் வெட்கத்தால் சிறிது சிவந்தது.

–  நான் மதாம் ழூலி  லெஃபேவ்ரு.

முகத்தில் அறைந்ததுபோல இருந்தது, இதற்கு முன்பு அப்படியொரு அனுபவமில்லை. ஒரு நொடியில் எனக்கு எல்லாம் முடிந்துவிட்டதென தோன்றியது. என் கண்களுக்கு முன்பாக முகத்திரையொன்று கிழிந்தது போலவும் கொடுமையான, மனதுக்கு ஒவ்வாத செய்திகளை   அறியப்போவதாகவும் உணர்ந்தேன்.

அவளா இவள்! பருமனான இந்தச் சராசரி பெண்மணி, அவளா? நான் கடைசியாக பார்த்தபிறகு இந்த நான்கு  பெண்களைப் பெற்றிருக்கிறாள். இந்த நான்கு சிறு ஜீவன்கள்  தங்கள் தாயைப் போலவே என்னை அன்று ஆச்சரியப்படுத்தின. அவர்கள் அவள் வயிற்றில் பிறந்தவர்கள்; நன்கு வளர்ந்தும் இருந்தார்கள், வாழ்க்கையில் அவர்களுக்கென்று விதிக்கபட்ட இடத்தையும் பிடித்தாயிற்று. மாறாக எழிலும், நேர்த்தியும், பகட்டுமாக இருந்த அற்புதப் பெண்மணியின் கதை முடிந்திருந்தது, நேற்றுதான் முதன்முறையாக அவளைச் சந்தித்தது போல் இருக்கிறது, இதற்குள் இப்படியொருமாற்றம்.  இது சாத்தியமா? கடுமையான வலியொன்றை இதயத்தில் உணர்ந்தேன், அவ்வலியை   கொடூரமானதொரு படைப்பை, இழிவானதொரு அழிவைக் கண்முன்னே நிறுத்திய இயற்கைக்கு எதிரானதொரு கிளர்ச்சி அல்லது பகுத்தறியப்போதாத ஒரு கோபம் எனவும் எடுத்துக்கொள்ளலாம்.

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தேன். அவளுடைய கைகளைப் பற்றினேன்.  என் கண்களில்  நீர்கோர்த்தது. அவளுடைய இளமைக்காகவும், அதன் மரணத்திற்காவும்  அழுதேன், காரணம் என்னைப் பொறுத்தவரை கனத்த சரீரத்திற்குரிய பெண்ணை நான் அறிந்தவனில்லை.

அவளிடமும் சலனம் தெரிந்தது,  தடுமாற்றத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டன:

“நான் நிறைய மாறிஇருக்கிறேன், இல்லையா? என்ன செய்வது, நமக்காக எதுவும் காத்திருப்பதில்லை. நீங்கள்தான் பார்க்கிறீர்களே, இன்று நானொரு தாய், அதாவது தாய்மட்டுமே ;  ஆம் நல்ல தாயாக இருக்கிறேன், பிறவற்றுக்கெல்லாம் பிரியாவிடை கொடுத்தாயிற்று,  எல்லாம்  முடிந்தது.  உண்மையில் நாம் மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் நீங்கள் என்னை அடையாளம் காண்பது கடினம் என்றுதான்  நினைத்திருந்தேன். நீங்கள் மட்டும் என்ன, அன்றிருந்தது போலவா இருக்கிறீர்கள், நிறைய மாற்றம் ;  தவறுதலாக எதையும் சொல்லிவிடக்கூடாது என உறுதிபடுத்திக்கொண்டு உங்களிடம் பேச எனக்கும் சிறிது நேரம் பிடித்தது. தலை, முகம் அனைத்திலும் நரை தெரிகிறது . யோசித்துப்பாருங்கள், பன்னிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன! பன்னிரண்டு ஆண்டுகள்! என் மூத்த மகளுக்கு தற்போது பத்து வயது.

அவள் மகளைப் பார்த்தேன். தாயின் முந்தைய  அழகை சிறுமியிடம் கண்டேன், இருந்தும் அவ்வுருவில்   முழுமையில்லை, சில முடிவு செய்யப்படாமலும், அடுத்து நிகழலாம் என்பதுபோலவும் எனக்குத் தோன்றியது. வாழ்க்கையை அன்று வேகமாகக் கடந்து செல்லும் இரயிலாகத்தான் கண்டேன்.

மெய்சோன் லாஃபித் நிலையத்தில் இரயில் நின்றது. என்னுடைய அந்த நாள் தோழியின் கையில் மெல்ல முத்தமிட்டேன். மனம் உடைந்திருந்ததால்,  அசட்டுத்தனமான சில உளறல்கள் அன்றி பெண்மணியிடம் சொல்லிக் கொள்ள  அன்று என்னிடம் வார்த்தைகளில்லை.  

மாலை, தனித்து என் வீட்டில், கண்ணாடி முன் நின்றவன் அகலவேயில்லை, நீண்டநேரமாக என்னை நானே பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் இளமை பூரித்த எனது உடலும் முகமும்,  பழுப்பு மீசையும், கருத்த தலை முடியும்  மனதில் நிழலாடின.  தற்போது நான் முதியவன், அனைத்திடமிருந்தும் விடைபெற்றாயிற்று.

—————————————————-

“எப்போதும் கைபேசி, காதுபேசி என அலைந்து திரிந்து மற்றவர்களை அலட்சியம் செய்தே அழிந்த மனிதனின் வம்சம்தானே”   – (காலாழ் களரில் உலகு ) – வித்யா அருண்

                         

சிறுகதைகள் அளவிற் சிறியவை, முக்கிய கதை மாந்தர்களாக ஒன்றிரண்டுபேர் இடம்பெற்றிருப்பார்கள். களமும் பொழுதும் குறுகிய பரப்பிற்குள் அடங்கியவை, உண்மையில் அவை மனித உயிர்வாழ்க்கையின் காட்சித் துணுக்குகள், அடிக்கோடிட்டு சொல்லப்படுபவை.  ஒருதேர்ந்த சிறுகதையாளர், தன்வாழ்க்கையில் தான்சார்ந்த சமூக நிகழ்வை, தனது படைப்பென்கிற புகைப்படக் கருவியில் ‘கிளிக்’ செய்கிறார். கலைஞரின் கலைத்துவ ஞானம், புகைப்படக் கருவியின் செயல்திறனுடன் இணைந்து எது சிறந்ததோ, எது முக்கியத்துவம் வாய்ந்ததோ, எது பின்னாட்களில் நினைவூகூரப்பட்டு மனதிற்கு ஆறுதல், மகிழ்ச்சி, சுகம்,  தரவல்லதோ அதை தன் கருவியில் பதிவு செய்து வாழ்க்கையின் ஈரத்தை, வறட்சியை, தென்றலை, புயலை, வெறுமையை, அபரிதத்தை  சகமனிதரோடு பகிர்ந்துகொள்கிறார். ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளரிடமும் இத்திறனைச் சந்திக்கிறோம். 

« காலாழ் களரில் உலகு » அண்மையில் கிடைத்த ஒரு சிறுகதை தொகுப்பு, படைப்பாளி சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இளம் குடும்பத் தலைவி. பெயர் வித்யா அருண். அவர் குடுபத்தலைவி மட்டுமல்ல, உயர் கல்விபெற்று, பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை பொறுப்பில் இருக்கிறவர், இந்தியப்பண்பாடு  தமிழ்மரபு என்கிற பின்புலத்திற்குச் சொந்தக்காரர்,நவீனம் தொன்மமென இலக்கியத்தின் இருகூறுகளிலும் ஆழமான ஈடுபாடு கொண்டவர்.  இவை அனைத்தும் புனைவின்  மையப் பொருளில், சொல்லும் மொழியில், உத்தியில், கதையைக் கட்டமைக்கும் திறனில், பெரும்பாலான இவருடைய கதைகளில் தெளிவாக வெளிப்படுகின்றன.

நூலுக்கு  முன்னுரை எழுதியுள்ள  எழுத்தாள நண்பர் நாஞ்சிலார் « காலாழ் களரில் உலகு » என்ற  சிறுகதைநூலின் பெயர்  குறித்து அவருக்கே உரித்தான ஆர்வத்துடன்  வேர்மூலத்தைத் தேடி வியக்கிறார். கவித்துமான மொழியில், நூலின் பெயர்கொண்ட சிறுகதையில் அன்றி பிறகதைகளிலும், அவற்றைக்  காட்சிப்படுத்த கையாளும் காலப் பிரமாணங்களினாலும் பேராசிரியர் க. பஞ்சாங்கம் மொழியில் சொல்வதெனில் சுகமான வாசிப்புக்குச் சிறுகதை ஆசிரியர் துணைசெய்கிறார்.

ஏழாம் அறிவு, மோனம், வழித்துணை, தொட்டால் பூ மலரும், கானல் காலங்கள், வெட்டென மற எனத் தொகுப்பில்  பன்னிரண்டு சிறுகதைகள். ஒவ்வொரு கதையும்  ஆசிரியரையும், ஆசிரியரைச் சூழ்ந்துள்ள உலகையும், மனிதர்களையும், அவர்கள் மனங்களையும் அவற்றின் வாசத்தை உணரவும் அவர்களோடு பயணிக்கவும் உதவுகின்றன. செயல்பாடுகளே மனிதர் இருத்தலைத் தீர்மானிப்பதாக பிரெஞ்சுத் தத்துவவாதி சார்த்துரு கூறுவார். இப்பன்னிரண்டு சிறுகதைகளும் ஓர் எழுத்தாளரின் « தன் »னையும்,  « பிறரை »யும் கூர்ந்து கவனித்து அவர்கள் இருத்தலைப் பேசுகின்றன. கட்டுரையின் தொடக்கத்தில் நூலாசிரியர் யார், என்பதைத் தெரிவித்திருந்தேன் இந்த « யார் ? » சிறுகதைகளாக, வாழ்க்கைச்சித்திரங்களாக பிக்காசோ மொழியில் – பூடகமும் நவீனமும் இணைந்து- இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலமென்று மூன்று உலகிலும் பயணிக்கிறது.

« ஏழாம் அறிவு », « காலாழ் களரில் உலகு » இரண்டும் அறிவியல் புனைகதைகள். இரண்டும் வித்தியாசமான கற்பனை ( கொரோனா வுக்கு நன்றி), பிற்காலத்தில் நம்முடைய மனிதச் சந்ததியினர் இக்கதையில்  நடமாடும் உயிரினங்களாக மாறவும் நேரலாம், நேற்றுவரை குரங்காக இருந்தவர்கள்தானே நாம் எதுவும் நடக்கலாம்.

« மோனம் », « தொட்டால் பூ மலரும் », இருகதைகளும் ஒரு தாயின், ஒரு சாராசரி குடும்பப்பெண்ணின் ஆசைகள், நிராசைகள் ; எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள் ; மருட்சிகள் மன உளைச்சல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கின்றன.

« வழித்துணை », « வெட்டென மற », « போகாதே » மூன்று சிறுகதைகளும் இன்று உயர்கல்வி பெற்று ஆண்களுக்கு நிகராக பணியாற்றுகிற பெண்களுக்குள்ள நெருக்கடிகளையும் சிக்கல்களையும் அவிழ்க்கின்றன. மேற்குநாடுகளில், பெண்விடுதலை என்பது ஓரளவிற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒன்று ஆனால்  இந்தியப்பெண்களுக்கு இன்றளவும் அது எட்டாகனி. இப்புதுமைப் பெண்ணின்  அடையாளம் அலுவலகத்தில் திறமைசாலி, ஐம்பதுபேரை வைத்து வேலை வாங்குகிறாள், ஸ்கூட்டியில் வேலைக்குப் போகிறாள், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுவாள், என்பதெல்லாம் பெற்றோருக்கும் ஏன் அவளை மணமுடித்த கணவனுக்குக்கூட  மகிழ்ச்சி அளிப்பவைதான். இருந்தும் அவள் பிறந்தவீட்டையும்,  புகுந்த வீட்டையும் மறக்காமல் இருக்கவேண்டும், எத்தனை மணிக்குத் திரும்பினாலும், எவ்வளவு பிரச்சினைகளை சமாளித்துவிட்டு வீடு திரும்பினாலும், வீட்டின் பராமரிப்பு, பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடம், குடும்பத்தின் வரவு செலவு அனைத்தும் அவள் தலையில்தான் விடியும். வேலைசார்ந்து பயணம் மேற்கொள்கிறபோது  « அம்மா ஏன்போற ? எப்போ வருவே அம்மா ? » என பெட்டியை மூடும் நேரத்தில் மகன் கேட்டால், இவளுக்கு வயிறு பிசையத் தொடங்கும்.  « ஆத்திலே ஒருகால் சேத்திலே ஒருகால் »என்பார்கள் படித்த வேலைக்குப் போகும் பெண்களுக்கு’ » என்கிறார், ‘போகாதே’ சிறுகதையில் நூலாசிரியர். இக்கதைகள் உயர் அலுவலராக பன்னாட்டு நிறுவங்களில் வேலை பார்க்கும் பெண்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளை மூன்று விதமான கதைக் களனில் தன்மையில் வளவளவென்றில்லாமல் சிக்கனமான மொழியில் எதைச் சொல்லவேண்டுமோ அதைக் கச்சிதமாகத் தெரிவிக்கின்றன.

இத்தொகுப்பில் « அதிர்வலைகள் », நவீன யுகத்தின் உறவுச் சிதைவுகளையும், « கானல் காலங்கள் » மனப் பிறழ்வுக்கு உள்ளான மனைவியின் நிலைமை கண்டு ஆற்றாமையில் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பக் கணவனின் குமுறலையும் பேசுபவை. இவை இரண்டுங்கூட தரமான சிறுகதைகள்.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, « புதையல் » என்ற சிறுகதையையும். « அது இருளால் செய்த ஒரு வழிச்சாலை » என்ற சிறுகதையையும். முதல்கதை பொதுக்கழிவறையைச் சுத்தம் செய்கிற ஒரு தமிழ்ப் பெண்மணியின் கதை, அப்பணியின் அத்தனைக் கூறுகளும், தொழிலாளிப் பெண்மணியின்  ஒருநாள் வாழ்க்கை கொண்டு மனச்சுளிப்பின்றி சொல்லப்படுகின்றன. அதுபோல பெண்களின் தலையாய பிரச்சனைகளை, பலரும் சொல்லத் தயங்கும் சபிக்கபட்ட பெண்பிறவியின் உயிரியல் பிரச்சனகளை, துணிச்சலுடன் « அது இருளால் செய்த ஒரு வழிச் சாலை » என்கிற கதையில் பெண்ணுக்கேயுரிய வலிகளுடன், அவள் சுமக்கும் பாரத்தை மொழி மருத்துவரின் துணைகொண்டு இறக்கிவைக்கிறார். ஒவ்வொரு ஆணும் தன் மனைவியுடன் உள்ளன்போடு கைகோர்க்க, இதனைக் கட்டாயம் வாசிக்கவேண்டும்.

ஓர் ஆரம்பம் ஒரு முடிவு,   இடையில் எதையாவது நிரப்பி நானும் கதைஎழுதினேன், என கதைவிடும்  உலகில், மனித உணர்வுக்கும், உள்ளத்தின் குரலுக்கும் செவிமடுத்து அழகான வார்த்தைகள் கொண்டு தொய்வற்ற நடையில் கதைசொல்லும் நூலாசிரியரை திறனைப்  பாராட்டுகிறென்.

——————————————————————–

காலாழ் களரில் உலகு- வித்யா அருண்

தொடர்புக்கு :kavidhya@gmail.com

மானுடம் காலாண்டிதழ்: அறத்தின் குரல்

மானுடம் காலாண்டிதழ் நண்பர்கள் அண்மையில் தங்கள் இதழ்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்தனர். அவற்றை அனுப்பிய நண்பர், அறந்த்தின் குரல் என்ற பெயரிட்டே அவற்றை மின் அஞ்சலில் அனுப்பியும் வைத்தார்.

மானுடம் என்பது, நிற இன வேற்பாடுகளைக்கொண்ட மனிதர்கூட்டம் முழுமைக்கான சொல் என்கிற போதும் அறத்தின் குரல் தேசத்துக்குத் தேசம் வேற்படுகிறது, அவரவர் பண்பாடு, சமூகம், சார்ந்து ஒலிப்பது. இந்தியாவின் அறமும் பாகிஸ்தானின் அறமும் ஒன்றல்ல. கீழைநாடுகளின் அறமும் மேற்கத்திய நாடுகள் அமைத்துக்கொண்ட அறமும் ஒன்றல்ல. ஈரான் அறம் வேறு, அமெரிக்காவின் அறமும் வேறு வேறு, கற்காலத்தின் அறம் வேறு இருபதாம் நூற்றாண்டின் அறம் வேறு, கண்ணகிக்கும் மாதவிக்கும் வேறு வேறு அறங்கள். அறிவியல் உண்மையின் அடிப்படையில் அது எழுதப்படுவது அல்ல அவரவர் பார்வையின் உண்மையில் எழுதபடுவது. மானுடம் என்ற உயிரியின் உறுப்புகள் என்கிறபோதும் புலனுக்கு வகுக்கப்பட்ட  அறத்தின் வழி ஒழுக கடமைபட்டுள்ளன. ஆம் அறம்,  பெற்ற ஞானம், உற்ற அனுபவம்,  சார்ந்த சமூகம் என்கிற அடிப்படைகளின் உண்டியல் சேமிப்பு. அவை கடமை, செஞ்சோற்றுக் கடன், மூடத்தனம் இதுபோன்ற திசைமானிகளால் வழி நடத்தப்படும் அபாயங்கள் இருக்கின்றன.

தமிழில் பருவ இதழ்கள் ஏராளமாக வருகின்றன. தமிழ், மொழி, இலக்கியம், சமூகம், மனித வாழ்க்கை அது சார்ந்த  ஆய்வுகள் கருத்துக்கள், விசாரணைகள், விவாதங்கள் அவற்றில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இலக்கிய திங்களிதழ், மாத இதழ், காலாண்டிதழ், என்றபெயரில் அச்சிலும், காலத்தோடு இணைந்து மின்னிதழ், இணைய இதழ்களும் வருகின்றன. புரட்டுகிறபோதே அவற்றின் வாசனைகளை முகர்ந்துவிடுகிறோம், அவற்றில் சுகந்தம் துர்நாற்றம் இரண்டுமுண்டு. குழுவின் குல தெய்வ இலக்கியத்திற்கு  பிரார்ந்த்தனைகளை நிறவேற்றவேண்டிய கடமைகள் ஒருசிவலவற்றிற்க்கு  இருக்கின்றன. புரவலர்கள், ஆயுள் சந்தாதாரர்கள், சந்தாதாரர்கள் எடைக்கேற்ப பால் காவடி, பன்னீர்காவடி, தீ மிதித்தல், அலகு குத்துதல், செடல் தேர் இழுத்தல் உண்டு. உக்கிரத்தைப்பொறுத்து கோழியோ, ஆடோ காவு வாங்கியபின் மலையேறி திரும்ப பாதைக்கு வரலாம்.

‘மானுடம்’ எவ்வித ஒய்யாரங்களுமின்றி இலக்கியபணி ஆற்றுகிற, அக்காலத்திய  டி.ஸ். பட்டணம்பொடி போல  காரசாரமான கட்டுரைகளுடன் வருகின்றன. பெரும்பாலானவை புருவத்தை உயர்த்தவைக்கின்றன, மனித இனம் சார்ந்த கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சிகள் அவை. இதழ்கள் ஒவ்வொன்றிலும் பேராசிரியர்கள், மூத்த இலக்கியவாதிகள், ஆரோக்கியமான சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் எனபலரும் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இதழ்களைப் புரட்டும்போது கலைக் களஞ்சியமொன்றை புரட்டும் அனுபவம்.

இக்கட்டுரைகள் இலக்கிய வாசகர்களுக்கு மட்டுமின்றி, உயர்கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு, ஆய்வு மாணவர்களுக்கு உதவக் கூடியவை. தமிழை வளர்ப்பதென்பது, தமிழ் அறிவை வளர்ப்பதென்பது இது போன்ற இதழ்களை ஆதரித்து முன்னெடுத்துச் செல்வதில் இருக்கிறது. மானுட த் தேரை தமிழிலக்கிய வெளியில் வலம்வரச் செய்ய உழைக்கும் நண்பர்களைப் பாராட்டுகிறேன்.

நாடா கொன்றோ, காடா கொன்றோ

 

 “ ஆரோவில் நகரைச்சேர்ந்த ஆறு குடியிருப்புவாசிகள் மீதான காவல்துறையின் வழக்குப் பதிவு துரதிஷ்டமானது: ஆரோவில் நகர நிர்வாகம் கருத்து

அண்மையில் (22 May 2022) ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் வெளிவந்த இச்செய்தி இணைப்பை நண்பர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் எனக்கு அனுப்பிவைத்தார். செய்தி புதுச்சேரி ஆரோவில் நகரம் பற்றியது, நண்பர் இச்செய்தியை எனக்கு அனுப்பியதற்கான காரணத்தை இக்கட்டுரையை வாசிக்கின்ற நண்பர்களில் ஒரு சிலர் (எனது படைப்புகளை அறிந்தவர்களாக இருப்பின்) ஊகித்திருக்கக் கூடும், மற்றவர்களுக்கு ‘ஏன்’ என்ற கேள்வி எழலாம். 2019 இறுதியில் வெளிவந்த என்னுடைய நாவல் ‘இறந்த காலம்’ ஆரோவில் நகரையும் அதன் இன்றைய பிரச்ச்னைகளையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒரு நாவல்.

« ஆரோவில் » நகரை, அதன் பிறப்பை, விடியல்நகரம் என்ற பொருள் கொண்ட இச்சிறுநகரத்தை, யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிற வரிக்குச் சாட்சியமாகலாம் என்கிற நம்பிக்கையைத் தமிழறிந்த மக்களுக்கு ஊட்டிய மனிதர்களின் கானகத்தை,  ஆன்மீக மார்க்ஸியக் கனவை நனவாக்க இந்திய மண்ணில், தமிழ் நாட்டில் புதுச்சேரிக்குக் கூப்பிடு தூரத்தில் அமைந்த மேற்கத்திய சாயல் கொண்ட கீழைதேசத்து சர்வதேச நகரின்  தற்போதைய ‘தான்’(self) அடையாளத்தை  அறிந்தவர்களுக்கு அல்லது ‘இறந்தகாலம்’ நாவலை வாசித்தவர்களுக்கு ஆங்கில தினசரியில் அண்மையில் வெளிவந்த இச்செய்தி வியப்பினை அளிக்க வாய்ப்பில்லை.

     நாவலை வாசிக்காத நண்பர்களுக்குச் சுருக்கமாகச் சில செய்திகள். ஆரோவில் நகரம் அறுபதுகளின் இறுதியில் உருவானதொரு சர்வதேச நகரம். புதுச்சேரியை அறிந்தவர்கள் அரவிந்தர், அன்னை, அரவிந்தர் ஆஸ்ரமம் போன்ற பெயர்களைக் கேட்டிருக்கக் கூடும். பிரிட்டிஷ் இந்தியா காலத்தில், ஆங்கிலேயருக்கு அவர்கள் ஆட்சிக்கு – எதிரானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள், தண்டனையிலிருந்து தப்பிக்க, பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்த புதுச்சேரிக்கு அடைக்கலம் தேடி வந்தனர். வந்தவர்களில், வங்காளத்தைச் சேர்ந்த அரவிந்தரும் ஒருவர். புதுசேரியில் அவர் ஆன்மீகவாதியாக மாறி ஓர் ஆஸ்ரமத்தையும் நிறுவினார். அவருடைய பெண்சீடராகவும், பின்னர் ஆன்மீகத் தோழியராகவும்  மாறியவர்தான் பிரெஞ்சுப் பெண்மணியான மீரா அல்ஃபஸா, என்கிற « அன்னை ». இவருடைய ஆசியுடன் உருவானதுதான் ஆரோவில் நகரம். அடிக்கல் நாட்டியபோது அதன் இலட்சியங்கள் உன்னதமானவை :

« ஆரோவில் ஒரு சர்வதேச நகரமாகத் திகழவேண்டுமென  விரும்புகிறது, இங்கு உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் ஆண்களும் பெண்களும் அமைதியாகவும், முற்போக்கான நல்லிணக்கத்துடனும், எல்லாவற்றிற்கும் மேலாக மதம், அரசியல், மற்றும் நாடு என்கிற அடையாளத்தைக் கடந்து  வாழமுடியும். ஆரோவில்லின் நோக்கம் மனித ஒற்றுமையை நிலைநாட்டுவது. »

ஆக ஆரோவில்லை நிர்மாணித்தவர்களின் நோக்கத்தைக் குறைசொல்லமுடியாது. பிரச்ச்னை ஆரோவில்லையும் ஆஸ்ரமத்தையும் தொடர்ந்து நிர்வகித்தவர்களிடையே உருவான அரசியல் மற்றும் ஆதிக்கப்போட்டிகள். சில ஆரோவிலியன்களின் அத்துமீறல்கள். விளைவாகப் பிரச்சனைகள் வீதிக்கு வந்தன. பல குற்றசாட்டுகள், வழக்குகள் என ஒரு சராசரி நகரமாக மாறியதன் விளைவாக இன்று இந்திய அரசாங்கத்தின் நேரடிக் கண்காணிப்பில், கனவு நகரம்.  அடிக்கல் நாட்டப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன. நகரை நிர்மாணித்தவர்களின் கனவு நிறைவேறியதா, சத்தியம் செய்ததுபோல சமய பேதமின்றி நிறபேதமின்றி உலகின் பல முனைகளிலிருந்தும் வருகின்ற மக்கள் ஆரோவில் குடிமகனாக வாய்ப்புண்டா ? நகரை விரிவாக்க அபகரிக்கபட்ட நிலங்களுக்கு உரிய நட்ட ஈடு ஏழைத் தமிழக விவசாயிகளுக்கு வழங்கபட்டதா ? என எழும் கேள்விகளுக்குத் தெளிவான பதில்களில்லை .  

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

என்கிறார் வள்ளுவர். அதாவது “எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை ».என குறளுக்கு மு.வ.விளக்கம் தருகிறார்.

கானக விலங்குகளை எடுத்துக்கொள்வோம். வள்ளுவன் கூறுவதுபோல அனைத்தும்  பிறப்பில் ஒத்தவைதான். எனினும் இயல்பில் சில கோரைப் புற்களையும் இலைதழைகளையும் மேய்ந்து பசியாற, வேறு சில பசிக்குத் தங்களுக்குத் தீங்கிழைக்காதவற்றை கொன்று பசியாறவேண்டிய இயற்கைத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. இயற்கையின் இந்த அநீதியிலிருந்து தம்பிக்க முதல்வகை விலங்குகள் குற்றமிழைத்தவரைத் தண்டிக்கப் பலமின்றி, ஓடி ஒளியவேண்டிய நெருக்கடி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என நமக்கு வள்ளுவர் ஆறுதல் கூறினாலும், ஓர் உயிரின் இயல்பும், இயற்கை குணமும் அதன் பெற்றோர் உயிர் அணுக்களையும் சார்ந்தது என்கிறது அறிவியல். ஆனால் அதிலிருந்து மெள்ள மெள்ள விடுபட மனிதனால் முடியும். காரணம் மனித விலங்கு ஆறறிவு கொண்ட இனம். மனிதரினத்திற்கும் இயற்கை குணங்கள் உண்டென்கிற போதும் பல அடையாளங்களை முன்னிறுத்தி தமது சுயத்தை சமூகத்தில் பதிவுசெய்தாலும்,  அனைவரும் எதிர்பார்ப்பது அமைதியும் சுபிட்சமும் கூடிய வாழ்க்கை. ஆனால் அது அத்தனை எளிதானதல்ல என்பதை வரலாறுகள் உறுதிசெய்கின்றன. யுத்தங்களை வேடிக்கைபார்த்ததுபோதும் என ஒரு கட்டத்தில் தீர்மானித்து அமைதிகாண முயற்சிப்பதில்லையா ?  எழுத்தும் ஒரு சமுகத்தின் மக்களிடையே இணக்கமான சூழ்நிலையை உருவாக்க, குறைகளை களைய தமது கதைமாந்தர்கள் ஊடாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

      கொடிய விலங்கிடமிருந்து, காட்டில் சாதுவான மிருகங்கள் உயிரைக் காத்துக்கொள்ள ஓடி ஒளிகின்றன. விலங்குகளின் புறதோற்றம் கொண்டு, அவை கொடியவையா அல்லவா எனத் தீர்மானிக்கமுடியும். மனிதரின் புறத்தோற்றம் என்பது என்ன ? அது ஒருவரைப் பார்த்து யார் எனக்கேள்வி கேட்பதில் தொடங்குகிறது ? அவரது அடையாளத் தேடலின் ஆரம்பம் அது. 

      ஒரு பெண்ணும் அவள் வீட்டுப் பசுவும் கருவுறுகிறார்கள் என்பதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். ஒரு பசுவின் பேறுகாலம் ஒன்பது மாதங்கள் எனச்சொல்லப்படுகிறது. பெண்ணிற்குப் பேறுகாலம் பத்து மாதங்கள். இருவருக்கும் பிரசவ வலியும் சம்பவ நிகழ்வும் வள்ளுவர் குறள்படி அதிகவேற்றுமைகள் இல்லை. ஆனாலும் பிறந்த குழந்தையை அடையாளப் படுத்த தாய் மட்டும் போதாதென்று அவனது கணவனையும்( உண்மையில் தாய் மட்டுமே குழந்தையின் தந்தையை அறிவாள் என்கிறபோதும்) முன்னிறுத்தவேண்டிய சமூகத் தேவை மனிதருக்கு உள்ளது. கன்றுக்குத் தன் தந்தையை  தாயுடன் உறவுகொண்ட காளையை அடையாளப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தங்கள் இல்லை.

ஓர் உயிரை மனிதன், பறவை, பூச்சி, விலங்கு என பகுத்து அடையாளம் காண ஆரம்பித்து மெள்ள மெள்ள ஆண் பெண், கொடிய சாதுவான, காடு வீடென அடையாளம் பெற்று குறிப்பாக மனித உயிர் பின்னர் ஆப்ரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என இன அடையாளமும்;  இந்தியன், பிரான்சு நாட்டவன், ஸ்பெயின் நாட்டவன் என்கிற  தேச அடையாளமும், இன்னும் நுணுக்கமாக அதற்குள் நுழைந்து தமிழன், மலையாளி, தெலுங்கன் வங்காளி என பல குறியீடுகள் மனிதர்களின் அடையாளச் சங்கிலியில் கண்ணிகளாகளாக இருக்கின்றன. இவை அனைத்துமே செய்தொழில் அளித்த அடையாளங்களில்லை, பிறப்புதரும் உயிரியல் அடையாளங்கள், புற அடையாளங்கள். இவை நமது உடன் பிறந்த அடையாளங்கள்.  

மனிதருக்கு இன்னொரு அடையாளம் அது அவனுடைய அக அடையாளாம். விலங்குகளித்திலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்டும் அடையாளம் : அறிவும், அதன்விளைவாக சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும்.

விலங்குகள் பிறர் கட்டளைக்கு கீழ்ப் படிய மட்டுமே தெரிந்தவை, அவை இன்று என்னால் உழமுடியாது என கிளர்ச்சியோ, ஒட்டுமொத்த உழவுமாடுகளையும் சேர்த்துக்கொண்டு, நிலம் எங்களுக்குச் சொந்தம், இனி மனிதர்கள் நிலத்தை உழவேண்டுமென புரட்சியிலோ இறங்குவதில்லை.  மனிதன் சிந்திக்கிறான், சிந்தித்து அதனபடி நடக்கிறான். முட்டாளாக இருந்தால் கூட யோசித்து ஒரு முடிவச்சொல்கிறான். அம்முடிவுப்படி செயல்படுகிறான். அடிமையாக இருப்பதும், ஆள்பவனாக இருப்பதும் மனிதன் கற்றவை கேட்டவை மட்டுமின்றி, அவன் அனுபவத்தினாலும் எடுக்கிற முடிவு.  அடிமையாக இருந்தது போதும் என கிளர்ச்சியில் இறங்குவதும், ஒட்டுமொத்த மாற்றம் வேண்டி புரட்சியில் இறங்குவதும் அவன் அறிவு தரும் வழிகாட்டலில். நடக்கின்றன. இது அம்மனிதனைச் சார்ந்த சமூகம், ஊர் அனைத்திற்கும் பொருந்தும்.

மனிதர்களின் அகஅடையாளம் நூறுவிழுக்காடு தீமையை மட்டுமே கொண்டோ அல்லது நன்மையைமட்டுமே கொண்டோ உருவாவது அல்ல அவரவர்க்கு கிடைக்கும் வாய்ப்பும் வசதியும், அமையும் சமூகச் சூழலும் பெற்ற கல்வியும், அனுபவமும் அதனைத் தீர்மானிக்கின்றது. நகரீக சமூகம் வன விலங்குகளுக்கான நீதிமுறையிலிருந்து விலக்களித்து மெலியாரை வலியாரிடமிருந்து காப்பாற்ற சட்டத்தையும் சாட்சிகளைக்கொண்டு இழைத்த குற்றங்களுக்குக் குற்றவாளி பொறுப்பென்கிறது. காரணம் குற்றம் இழைக்கிறவன் மனிதன், விலங்கு அல்ல. அவன் விரும்பினால், முனைந்தால் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகளைத் தவிர்க்கமுடியும், விலங்குகளிடமிருந்து அவனை வேறாக அடையாளப்படுத்துகிற அவனுடைய அறிவுக்கும் உணர்ச்சிக்குமான போராட்டத்தில் யார் வெல்கிறார்கள் எனபதை பொறுத்தது அது.

இயற்கை, இயல்பு என்பது ஒழுங்கின்மை பண்பைக்கொண்டது. காட்டில் செடிகொடியும்பிறவும்  அதன் இயல்பில் வளரலாம், பிறவற்றை நிராகரித்து தம் நலம் பேணலாம். மாறாக ஒரு நகருக்கு அழகூட்ட பொது பூங்காவிற்கு கொண்டுவரப்படும் செடியும், கொடியும் மரமும் சில ஒழுங்குகளுக்கு, நியதிகளுக்கு உடபடவேண்டும் அதுதான் பூங்காவிற்கு அழகைத் தரும். ஆரோவில் நகருக்கு மட்டுமல்ல, எல்லா சமூகத்திற்கும் இதுபொருந்தும்.

 நாடா கொன்றோ ; காடா கொன்றோ;

அவலா கொன்றோ ; மிசையா கொன்றோ;

எவ்வழி நல்லவர் ஆடவர்,

அவ்வழி நல்லை ; வாழிய நிலனே

                                – ஔவை

_______________________________________

இறந்த காலம் (நாவல்)

ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா

சந்தியா பதிப்பகம், சென்னை

புதுச்சேரியின் அடையாளங்கள் – வரலாறு காட்டும் தொன்மையும் தொடர்ச்சியும்- முனைவர் அ.இராமதாசு

                                                                                  – நாகரத்தினம் கிருஷ்ணா

        வரலாறு என்பது காலத்தின் வடுக்கள். தேசத்தின், ஓர் இனத்தின், ஓர் ஊரின் பெருமை சிறுமைகளை, உற்ற பெருமித த்தை, அடைந்த அவமானத்தை ச் சொல்வது. அக் குறிப்பிட்ட நிலம் சார்ந்த மக்களின் இறந்த காலத்தைப் பேசும் பண்பாட்டு ஆவணம். வரலாறுகள் உண்மை என நம்பப்படுவதால், ஆதாரங்களை அடித்தளமாக கொண்டு கட்டப் படவேண்டும்.  

              நூலாசிரியர் முனைவர்  அ. இராமதாசு சராசரி பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, துணை முதல்வர், மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர், தொடக்க கல்வித் துணை இயக்குனர், கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர், இணை இயக்குனரென தம்மைக் கல்வி உலைக்களத்தில் உருமாற்றப்பெற்ற கல்விமான், முனைவர். நிறைகுடம். ஏதோ பணி செய்தோம், சம்பாதித்தோம் என்றில்லாமல்  ஓய்வு பெற்றபின்பும்  ஆய்வுகளில் கவனம் செலுத்தி புதுச்சேரி நகரின் வரலாற்றுத் தடத்தில்  பயனித்து கண்டறிந்த தடயங்களை, படித்தறிந்த ஆவணங்களை – ஆய்ந்து தெளிந்த உண்மைகளை நமது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே ‘புதுச்சேரியின் அடையாளங்கள்’ என்கிற இத் தொல்லியல் நூல்.

பதினான்கு அத்தியாயங்கள்.  புதுச்சேரியை அறிந்த மனிதர்களுக்கு முனைவர் அ. இராமதாசு நம் கண்முன் நிறுத்தும், கற்றூண்களும், கலங்கரை விளக்கமும், வாராவதியும் பிறவும் புதியதல்ல ஆனால் அவற்றின் பிறப்பும், தொடக்கமும் அதனையொட்டிய பல செய்திகளும் நம்மில் பலர்  அதிகம் அறிந்திராதவை.

உதாரணமாக , புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலைக்கு அழகூட்டுகிற கற்றூண்கள் எங்கிருந்து வந்தன, எப்போது வந்தன, அவற்றின் உயரம்  என்ன வேலைப்பாடுகள் என்ன – என ஆழமாக உரிய ஆவணங்களின் துணைகொண்டு விவரித்துக் கொண்டு போகிற முனைவர் « உருவாக்கபட்டு நான்னூறு ஆண்டுகளைக் கடந்துள்ள போதிலும் பெரிய அளவில் சிதைந்து விடாமல் இன்றும் பெருமையோடு காட்சியளிக்கும் கருங்கல் தூண்களை இப்போது நம்மால் உருவாக்க இயலாதுஎன்பதை உணர்ந்து மேலும் பலதலைமுறைகளைகண்டு களிக்கும் வகையில் அதிகப்பொறுப்போடு அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும் » ( பக்கம் 8  ) என்று ஓர் அக்கறைகொண்ட புதுச்சேரிவாசி என்கிற வகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விண்ணப்பமும் வைக்கிறார். இதற்கிடையில் கற்தூண்களைக் குறித்து ஒரு பெரும் வரலாறே நம் கண்முன்னே  நதிபோல சுழன்றோடுகிறது.

ஒரு தேசத்தை, அதன் கருவறையாக நின்று மனித உயிர்களை சுமக்கிற சிற்றூர் பேரூரின்  சுவடுப் பனைகளில் ஏறி இறங்கும் ஆர்வம் எல்லோருக்கும் வராதென்பது தெரிந்த துதான்,  நம் வாழ்நாளில் அதனை கடக்கின்றபோதேனும், கருத்தரித்த வயிற்றின் அருமை பெருமைகளை அறிய முயல்வோமா என்றால், இல்லையென்றே சொல்லவேண்டியிருக்கிறது. பாமர ர்களை விடுங்கள் படித்த மனிதர்களுக்கே கூட  இங்குள்ள மதுச்சாலைகளின் முகவரி தெரிந்த அளவிற்கு புதுச்சேரியின் தொன்ம வரலாற்றின் சாட்சியங்களையோ அவற்றின் முகவரியையோ அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இன்று காலை பாரதியார் பூங்காவில் நடந்தேன், சிலை அரசியலிலும் தமிழர்கள் தேர்ந்தவர் என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் பாரதியார் சிலையின் காலடியில் ஒரு  குப்பைப் பையொன்று காக்கை அலகொன்றின் கவனத்தைப் பெற்றிருந்தது.  பாரதி இதொரு பிரச்சனையே அல்ல என்பதுபோல நின்றிருந்தான். பாரதிக்கே இந்த கதியெனில், கற்றூண்கள்  பராமரிப்பை, புதுச்சேரி நிர்வாக எந்திரத்திடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்.  

தொன்மங்களைத் தேடித் தேடி ஆவணபடுத்தும் நூலாசிரியர் : புதுச்சேரி அங்காடிகள், அவற்றுக்கு மகுடமாக அமைந்த மணிகூண்டுகள், கலங்கரை விளக்கம், தாவரவியல் பூங்காக்கள் முதலியவற்றினைக் குறித்தும் விரிவான செய்திகளை, பல தொல்லியல் கல்விமான்களின் நூற்குறிப்புகள் துணைகொண்டு விரிவாகப் பதிவுசெய்துள்ளார். புதுச்சேரி காலனிய ஆட்சியிலிருந்த போக்குவரத்து வாகனங்கள், பஞ்சாலைகளின் தோற்றமும் முடிவும், அவை இயங்கிய விதம்,அவைசார்ந்த அரசியல், தொழிலாளர் பிரச்சனைகள், காலனிய அரசு அவற்றை அணுகிய விதம், தொடர்ந்து கட்சிபேதமின்றி  புதுச்சேரி ஆட்சியாளர்கள் தொழிலாளர் நலனில் காட்டிய அக்கறை, விளைவாக  மூடப்பட்ட பஞ்சாலைகள் என வரலாற்றை வலியுடன் எழுதுகிறார்.

நூலிலுள்ள எந்தவொரு அத்தியாயத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது, ஒவ்வொன்றிலும் செறிவானத் தகவல்கள், குறிப்பாகக் கீழ்க்கண்டவை :

அ. ஆறுகளும் ஏரிகளும்

புதுச்சேரியில் 1889 ஆம் ஆண்டில் விவசாயத்திற்காக் பெரிய ஏரிகள் உள்ளிட்ட 59 ஏரிகளும், 9 பெரிய வாய்க்கால்களும், 5  தடுப்பணைகளும், 202 நீரூற்றுகளும், 12 பெரிய கேணிகளும்  53 நீர்த்தேக்கங்களும் இருந்தன என்கிற உண்மையை 1889ம் ஆண்டில் லூயிஸ் ஹாரிக் எழுதியுள்ள குறிப்புடன் தொடங்கும் ஆசிரியர் புதுச்சேரியில் பாய்ந்த, பாய்கிற ஆறுகளை : செஞ்சி ஆறு, திருக்காஞ்சி ஆறு, அரியாங்குப்பம் ஆறு, சுண்ணாம்பு ஆறு, பம்பை ஆறு, குடுவை ஆறு, மலட்டாறு, பெண்ணையாறு எனப்பட்டியலிட்டு அவற்றைபற்றிய விரிவானதகவல்களுடன் எழுதியுள்ளா.  இவற்றில் பல தகவல்கள் அரியவை, புதியவை. இவை மட்டுமல்ல, நீர் சார்ந்த, நீர்ப்பாசனம் சார்ந்த ஒட்டுமொத்த தகவகளின் கலைக் களஞ்சியம் எனவும் இந்நூலை நாம் கருத்லாம்.  

ஆ. துய்ப்ப்ளெக்சு மாளிகை, கோட்டையும் அரணும்,

காலனிய நிர்வாகத்தின் போது பிரெஞ்சு நிர்வாகிகள் வாழ்ந்த மாளிகையும், அதனுடன் இணைந்த கோட்டையையும் பின்னர் அவற்றுக்கு நேர்ந்த கேட்டையும்  என்னைப் போலவே உங்களில் சிலர் வாசித்திருக்க க் கூடும், இங்கும் ஆசிரியர் சோர்வின்றி பல அரியத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ளார். உதாரணமாக புதுச்சேரியினல் முதன் முதலாக கட்டப்பட்ட பர்லோன் கோட்டையைப் பற்றிப் பேசுகிறபோது :

« 1688ல் கட்டப்பட்ட அக்கோட்டைக் கடலிலிருந்து 400 அடிதூரத்தில் அமைந்திருந்த து. பிரெஞ்சுக் காரர்களுக்கு முன்பு புதுச்சேரியில் தங்கி வர்த்தகம் செய்துவந்த டேனிஷ்கார ர்கள் கட்டியிருந்த கட்ட டத்திற்கு 50 அடி வடக்கில் அக்கோட்டை ஏற்படுத்தப்பட்டது. சதுரமா அல்லது நீள் சதுரமா என்று கூற முடியாத ஓர் ஒழுங்குமுறையற்ற வடிவில் நான்கு கோபுரங்களோடு அது இருந்த து. கோட்டையின் வடக்குப் புறத்திலும் தெற்குப் புறத்திலும் சிறிய கொத்தளங்கள் அமைக்கபட்டிருந்தன. சில ஆண்டுகள் கழித்து, அரை வட்ட வடிவிலான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுக் கோட்டையின் வடக்குப்  பகுதி பலப்படுத்தப்பட்ட து. 32 பீரங்கிகள்கோட்டை மதிற் சுவரில் வைக்கப்பட்டிருந்தன. கோட்டைக்குள் பிரான்சுவா மர்த்தனும் கும்பெனி அலுவலர்களும் குடியிருந்தனர் . கப்புசின் பாதிரியாளர்களின் சிறிய தேவாலயம் ஒன்று கோட்டைக்குள் அமைந்திருந்த து. கோட்டையை எழுப்புவதற்கான ஒப்புதல் பெற்ற செஞ்சியை ஆண்ட ராம்ராஜாவுக்கு (சிவாஜியின் இரண்டாவது மகன்)  5000 சக்கரம் பிரான்சுவா மர்த்தன் கொடுத்தார் (Alfred Martineau, 1962) »(பக்கம் 114 ) என ஆழமான தகவல்கள்.  

இ. அரிக்கமேடு

கீழடி உண்மைகள் அறிவதற்கு முன்பாக அரிக்கமேடு ஆய்வும், அறியவந்தவையும்  தமிழர் வரலாற்றுச் சான்றுகள். அரிக்கமேட்டைப் பற்றிய முதல் தகவல் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிடைத்ததாக அறிகிறோம். இது தவிர படிப்படியாக அந்நிலப்பகுதி குறித்த அரசியல் வரலாறு, ஆய்க்கான ஏற்பாடுகள், திட்டங்கள், இருபதாம் நூற்றாண்டில் முப்பதுகளில் மூவர்கொண்ட பிரெஞ்சுகுழு ஒன்று அங்கு சென்று சேகரித்த தகவல், கிடைத்தபொருட்களைப் பற்றிய தகவல்கள். பொதுகே, பழவேற்காடு, அருவாநாடுஇவற்றுக்கு இடையே உள்ள சிக்கல்கள், ஊகங்கள் குழப்பங்களுக்கிடையில் புதுச்சேரி என்ற சொல் முதன் முதலாக 16 நூற்றாண்டில் போர்ச்சுகீசியரின் தரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த து என்கிற தகவலையும் அறிகிறோம்.

ஐரோப்பிய நாடுகளில் பிரான்சு  தேசம் கலை, இலக்கியத்தில் தனித்துவம் பெற்ற ஒரு தேசம். அவை காலனிய பிராந்தியத்திலும் எதிரொலித்தன. அவற்றிலும் புதுச்சேரி ஆசியப் பிராந்தியத்தில், இந்தியத்துணைகன்டத்தில்  தனக்கென பிரத்தியேக அடையாளத்தை வகுத்துக்கொண்ட நகரம். முனைவர் ஆ. இராமதாசு அவர்களின் இந்நூல் ஒரு கலங்கறை விளக்கமாக நின்று, பண்ட்டைய புதுவையைப் புரிந்துகொள்ள  உதவுகிறது. இந்நூலின் துணைகொண்டு ஒரு வரலாற்று சுற்றுலாவை புதுவை பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரலாம். புதுவை அரசு சுற்றுலாத் துறையும், நகரின் கடந்த காலத்  தடயங்களை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்நூல் வழிகாட்டுதலில் ஒரு நகரச் சுற்றுலாவிற்கு வழிகோல முடியும்.

உறங்குவது போலுஞ் சாக்காடு

எதிர்வரும் 8ந்தேதி இந்தியா வர உள்ள நிலையில் எனது மனைவியின் ஒன்றுவிட்ட சகோதர ர்,  பெயர் பலராமன், பொதுப்பணித் துறையில் ஒப்பந்தங்கள் எடுத்து செய்வார், எனது புதுச்சேரி வீட்டைக் கட்டிக் கொடுத்தவர். முதிர்ந்த வயது, உதிரும் வயதுங்கூட. அவர்  இறந்த செய்தி காலையில்  கிடைத்தது. புதுச்சேரியில் நான் சென்று பார்க்க இருந்த உறவினர்களில் முக்கியமானவர். நீலக் கடல் நாவலில் பலராம பிள்ளை என்றொரு கதை பாத்திரம்  அவர் நினைவில் உருவானதுதான். பெர்னார்ஃ போத்தெனுக்கு துபாஷாக இருப்பார்.  மிகவும் அதிர்ச்சியையும் துக்கத்தையும் அளித்த செய்தி.

«  உறங்குவது போலுஞ் சாக்காடு » என வள்ளுவன் ஆழமாக மரணம் குறித்துப் பாடியிருப்பான்.

மாத்தாஹரி நாவலிலும் கதை நாயகி பவானியின் எதிர்பாராத இறப்பை வாய்ப்பாகக் கொண்டு மரணத்தைக் குறித்து எழுதியிருப்பேன். இங்கே பதிவு செய்திருப்பது நான் தற்போது மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்   ‘அதிரியன்  நினைவுகள்’ நாவலில் இருந்து :

« மெல்ல மெல்ல என்னை கைவிடும் விலைமதிப்பற்ற நற்பேறுகளில் உறக்கமும் ஒன்று. குறைந்த நேரத்தை உறக்கத்திற்கென ஒதுக்கி அதையும் சரிவர உறங்காமல் துன்பப்படும் மனிதன், ஒன்றுக்கு பலவாக தலையணைகளைக் கொடுத்து இக்குறிப்பிட்ட சுகத்தினை வேண்டி வெகு நேரம் தவமிருக்கிறான். இரு உடல்களில் பிரதிபலிக்கிற இணக்கமான துயில் மட்டுமே உடலுறவிற்கு   தவிர்க்கமுடியாத மிகச் சரியானதொரு பிற்சேர்க்கையாக இருக்கமுடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இங்கே எனக்கு ஆர்வமூட்டுகிற விஷயம் தன்னை நன்கு சுகிக்க வேண்டுமென்பதற்காக உறக்கத்தின் அணூகுமுறையிலுள்ள பிரத்தியேகப் புதிர்தன்மை : அதன் வண்ணம், அதன் அடர்த்தி, அதன் சுவாச ரிதம் அனைத்திலும் நிகழக்கூடிய மாற்றங்கள், இவைதவிர உறக்கத்தின்போது  கிடைக்கிற இறப்பையும் சந்திக்கும் வாய்ப்பு எனப்பார்க்கிறபொழுது உறக்கத்தை ஒரு  பெருங்கடலோடு ஒப்பிடமுடியும். இந்த உறக்கமெனும் சமுத்திரத்தில்   ஆடையைக் களைந்து, தனியொருவனாக, நிராயுதபானியாக தவிர்க்க முடியாதது என்பதுபோல மனிதன் தலைகீழாகப் பாய்ந்து ஆபத்துடன் விளையாகிறான்.  உறக்கம் தரும் ஒரே நம்பிக்கை, அதிலிருந்து  மீண்டு நாம் வெளியில் வரமுடியும் என்கிற உண்மை. குறிப்பாக எவ்வித மாற்றமுமின்றி உறங்குவதற்கு முன்பாக எப்படி இருந்தோமோ அப்படி வெளியில் வரமுடியும். காரணம், வினோதமானதொரு தடையுத்தரவுக்கு நாம் கட்டுப்பட்டவர்கள், எனவே கண்ட கனவுகளின் எஞ்சியவற்றை, முழுமையாக நம்முடன் கொண்டு வர சாத்தியமில்லை, அப்படி வரமுடிந்தால் ஒருவகையில் நாம் சிதைந்த மனிதர்கள். நமக்கு நம்பிக்கைதரும் பிறிதொரு  விஷயம், நம்முடைய சோர்வுக்கு உறக்கம் தரும் சிகிச்சை. இச்சிகிச்சை தற்காலிகமானது என்கிறபோதும், இனியும் அவ்வாறான நிலைக்குப் போகக்கூடாதென்று நம்முடன் ஒப்பந்த்ம் செய்துகொண்டதைப்போல, மிகவும் தீர்க்கமான வழிமுறைகளுடன்  அளிக்கப்படும் சிகிச்சை அது. இங்கும், பிற இடங்களில் நடைபெறுவதைப்போல ‘இன்பமும்’ ‘கலையும்’ பேரின்ப மயக்கத்தின்பொருட்டு உணர்வுபூர்வமாக சரணடைகின்றன,  ‘தான்’ஐ காட்டிலும் மிகவும் பலவீனமாகவும், திடமாகவும், இலகுவாகவும், தடுமாற்றத்துடனும் இருப்பதற்கு ‘கலையும்’ ‘இன்பமும்’ சாதுர்யத்துடன் சம்மதிக்கின்றன.  கனவுகளின் வியப்பிற்குரிய மக்களைக் குறித்து  பின்னர் பேசுகிறேன், அதற்கு முன்பாக மரித்தலுக்கும், உயிர்த்தெழுலுக்கும் நெருக்கமான  தூய உறக்கம் மற்றும் தூய விழிப்பு குறித்து பேச வேண்டும் குறிப்பாக பதின்பருவத்தின்போது உறக்கம் சட்டென்று நடத்திய தாக்குதலை இங்கே நினைவுகூர்கிறேன். நன்றாக உடுத்திய நிலையில் அவனிருக்க, கணிதம் அல்லது சட்டம் சம்பந்தமான பாடங்களிலிருந்து விடுவித்து திடீரென உறக்கம் அப்பையனை தன்வசமெடுத்துக் கொள்ளும். புத்தகம் கைநழுவ, அவன் உறக்கத்தில் வீழ்வான்.  அவ்வுறக்கம் ஆழமானது, செறிவானது, இதுவரை உபயோத்திராத சக்தியையெல்லாம் பிரயோகித்து செயல்படுகிறதோ என்றுகூட சொல்லக்கூடிய பரிபூரன அனுபவத்தினை, மூடிய விழிமடல்களின் ஊடாக பெற முயற்சித்த உறக்கம். பிறகு கானகத்தில் நாள்முழுக்க விலங்குகளை வேட்டையாடி அலுத்து, வெற்றுத்துரையில் கணத்தில் நித்திரைபோவதும், நாய்களின் குரைப்புச் சப்தம் கேட்டோ அல்லது எனது மார்பில் அவை பிறாண்டுவதாலோ விழித்துக்கொண்ட அனுபவங்களும் சொல்வதற்கு இருக்கின்றன.  என்னை பலமுறை வியப்பில் ஆழ்த்தியதோடு, மனவுளைச்சலை ஏற்படுத்திய அனுபவமென்று சொன்னால் அது, ஒவ்வொருமுறையும் கூடுவிட்டு கூடுபாய்ந்து புதிய அனுபவத்தினை எதிர்பார்க்கிறநேரத்தில், ஏதோவொரு சக்தி என்னை மீண்டும் இழுத்துவந்து எனது சொந்த சரீரத்திற்குள் சாமர்த்தியமாக அடைத்துவிடுகிறது.  அவ்வுடல் படுத்தவுடன் நித்திரைகொள்ளும் பாக்கியவான்களுக்கு, ஓர் அற்ப பிண்டம், எனக்கோ – அத்ரியன் என்ற அந்தச்கூடு – அதனைச் சிறிது நேரம் ரசிக்க நல்லதொரு சந்தர்ப்பம் அளிக்கும் ஜடம், அதாவது கடந்தகாலத்தை மறந்திருக்கும் சரீரம்  சரியா ?

ஆனால் உயிர் வாழ்க்கையின் மூன்றில் ஒருபகுதியை தனதாக்கிக்கொள்ளும் ஒரு நிகழ்வை – உறக்கத்தை-  நாம் அதிகம் பொருட்படுத்துவதில்லை. காரணம் அது தரும் நன்மைகளை புரிந்துகொள்ள எளிமையான அணுகுமுறை வேண்டும் அது நம்மிடமில்லை. உறங்கும்போது காயஸ் கலிகுலா (Caïs Caligula)வும் ஒன்றுதான் நீதிக்குப் பெயர்பெற்ற அரிஸ்டித் (le Juste Aristide)ம் ஒன்றுதான். உறங்கும் நிலையில் என்னுடைய முக்கியமான சிறப்புரிமைகள் பொருளற்றவைகளாகி விடுகின்றன.

 நல்லது, உறக்கமின்மை என்றால் என்ன ? அடுக்கடுக்காக சிந்தனைகள், தொடர்ந்து விதர்க்கங்கள், அடையும் தெளிவு,  அதற்கேற்ப கட்டமைக்கும் விளக்கம், இமை மூடிய கண்களின் தெய்வீகமான மடமைக்கு ஆதரவாக  அல்லது கனவுகளின் பாண்டித்ய மூடத்தனத்திற்காக தனது மகுடத்தை துறக்க மறுத்து, நமது அறிவு பைத்தியக்காரத்தனமாக பிடிவாதம் காட்டுகிறது என்பதன்றி வேறென்ன ? ஆக, உறக்கமின்றி தவிக்கும் அம்மனிதன்(கடந்த சிலமாதங்களாக என்னிடம் அவனைக் காண்பதற்கு நிறைய சந்தர்ப்பங்கள்) ஏறக்குறைய அநேக விஷயங்களை  வேண்டுமென்றே நம்ப மறுக்கிறான். ‘மரணத்தின் உடன்பிறப்பே…’ ஐசோகிரட்டீஸ்(Isocarate) உரையின் ஆரம்பமே தவறு, பேச்சாற்றல் மிக்க  கலைஞர் ஒருவரின், அலங்கார வார்த்தைகளாகவே இத்னை எடுத்துக்கொள்ள வேண்டும். அண்மையில்தான் மரணத்தைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.  மரணத்திடம், இன்றைய மனிதர் சூழல் அறியத்தவறிய பலரகசியங்கள் உள்ளன. இருப்பினும், ஓரளவு மறக்கப்பட்டதும், அதிகம் புரிந்துகொள்ள முடியாததுமான மரணத்தின் இரகசியங்கள் மிகவும் சிக்கலானதும் ஆழமானதுமாகும். விளைவாக ஏதோ ஓர் இடத்தில் உறக்கமென்ற ஊற்றும், மரணமென்ற ஊற்றும் ஒன்றுடனொன்று நன்கு கலந்திருப்பதைப் போன்ற உணர்வு.

அழகியல் உற்சவம் : ஜெயமோகன்

கதையாடல் என்பது புராணிகம் ஐதீகம் காலத்திலிருந்து மனித வாழ்க்கையின் அகம் புறம் என்ற இரண்டையும் பேசுவது. ஆரம்பகாலங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் நலனை பொது நெறியாகக் கொண்டு இணக்கமான, அமைதியான வாழ்வு என்பதை நோக்காக அமைத்து : நற்குடி பிறப்பு, பருவ வயதை அடைந்ததும் மணமுடித்தல், மக்கட்பேறு, பொருளீட்டல், வறியவர்க்கு உதவுதல், இறுதியில் இறைவன் அடி சேர்தல் என்ற வரிசையில் அமைத்துகொண்ட கதையில் பொதுநலனுக்கு எதிரானவைகளைத் தீயவை எனச் சித்தரித்து, அவ்வழியில் செல்கிறவர்களை தீயமனிதர்களாக அடையாளமிட்டு அவர்களுடைய அவல முடிவைக் கூறி, புனைவுகளில் சமூக அறத்தை உயர்த்திப் பிடித்தார்கள். இணக்கமான அமைதியான வாழ்வு தசரதராமன் அரச குடும்பத்திற்கு மட்டுமல்ல, அய்யோத்திக் குடிமக்களுக்கும் தேவை என்பதை காலம் போதிக்க, கதைசொல்லில் மாற்றம் நிகழ்ந்தது. பொதுபுத்திக்கான சமூகம், என்பதை உப களமாக, துணை நிலமாக வடித்துக்கொண்டு இன்று தனி மனிதனின் புறத்தைக் காட்டிலும் அகவாழ்க்கை, அதன் சிக்கல், அவன் நெஞ்சில் பிடிவாதமாக உட்கார்ந்திருக்கிற ஊமுள் சாக்குபோக்குகள் ஆகியவற்றை முன்நிறுத்தி, இன்று  கதைசொல்லிகளின் திறனுக்கேற்ப கதைகேட்கிறவர்களின் ஞானத்திற்கேற்ப புனைவுகள் படைக்கப்படுகின்றன. மரபும், இயற்கையும், வாழ்க்கை முறையும் நமது உணர்வுகளைத் தீர்மானிக்கின்றன, சுவையைத் தீர்மானிக்கின்றன. காவிய கதையாடலுக்கான இடம் இன்றில்லை, சகமனிதனின் அகமும் புறமும் இன்று பாடும்பொருளாக, எழுதும் பொருளாக இருக்கிறது,

கதைசொல்லியையும், அவனால் சொல்லப்படும் கதையும் கேட்கின்ற அனைவருக்கும், வாசிக்கின்ற மொத்தபேருக்கும் விரும்பத் தக்கதாக இருக்கவேண்டுமென்கிற கட்டாயம் எதுவுமில்லை. நம்முடைய புட்டும், கொழுக்கட்டையும் பாவ்பஜ்ஜி சாப்பிடுகிற்வர்களுக்கும் பிடித்தாகவேண்டும் என்கிற நிர்ப்பந்தங்கள் இருக்கமுடியாது. சிறுவயதில் என் வீட்டில எனக்குப் பிடித்த உணவு என் சகோதரருக்குப் பிடிக்காது, அவருக்குப் பிடித்தது எனக்குப் பிடிக்காது. எனக்குப்  பிடிக்காததை அம்மா சமைத்திருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக சாப்பிடாமல் எழுந்து சென்றிருக்கிறேன். அதேவேளையில் விரும்பியதைச் செய்திருந்தால் கேட்டும் சாப்பிட்டிருக்கிறேன்.

« எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு » என்கிறது குறள். கலை இரசனை அல்லது ஒரு கலைமீதான அபிமானம் என்பது அறிவு சார்ந்ததாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை, அது முதலில் உணர்வு சார்ந்தது. எனவே வள்ளுவன் கூறும் மெய்ப்பொருளை இங்கே படைப்பிலக்கியமெனில்,  அறிவை இரசனையென்று பொருள் கொளவேண்டும், இப்பிரச்சனையை அணுகவேண்டும்.  

தமிழிலக்கிய சூழலில் எழுத்தாளர் ஜெயமோகனுக்கென்று ஒரு தனித்துவமுள்ளது. தமிழில்  அவருடைய படைப்புகள் சிலவற்றை விரும்பி வாசித்திருக்கிறேன், ஏன் எதற்கு என்கிற கேள்விகளுடன் மனதில் அசைபோட்டிருக்கிறேன். நான் போற்றுகிற எழுத்தாளர்களில் ஒருவர். அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. மாறாக அவருடைய கதையாடல் திறனை, மொழியை கலைப்டுத்தும் ஆற்றலை வியக்கும் மனிதர்களில் நானும் ஒருவன். சங்கச்சித்திரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது மிகுந்த ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன். அவருக்குக் கடிதமும் எழுதினேன், அக்கடிதத்திற்குப் பதிலும் அளித்திருந்தார். நாகர்கோவில் சென்றிருந்தபோது எம்.எஸ்ஸுடன் எழுத்தாளரை அவர் இல்லத்தில் சந்தித்தேன். எனது எழுத்தின் மீது திடமான நம்பிக்கை இருப்பதாலும், தமிழிலக்கியத்திலும், நவீன இலக்கிய கோட்பாட்டில் ஆழ்ந்த ஞானமும், திறனாய்வில் தேர்ச்சியும் மிக்க பேராசிரியர் க. பஞ்சாங்கம் போன்ற  சான்றாண்மைகளின் நட்பும், தமிழ் ஆங்கிலம், பிரெஞ்சு எனும் மூன்று மொழிபடைப்புகளின் தீவிர வாசகன் என்கிற தகுதியும், எழுத்தாளர் ஜெயமோகன் தமிழ் நவீன இலக்கியத்திற்கு அளித்துள்ள கொடையை நன்றியுடன் நினைவுகூர எனக்கொரு வாய்ப்பினைக் காலம் அளித்துள்ளது.

கலையும் இலக்கியமும்

பெண்ணின் நோக்கும் சுவையை, பிறர் பிறர்க்கு
எண்ணி நோக்கி இயம்ப அரும் இன்பத்தை,
பண்ணின் நோக்கும் பரா அமுதை, பசுங்
கண்ணின் நோக்கினர், உள்ளம் களிக்கின்றார்.

கம்பன் நவீன இலக்கிய கோடபாட்பாடின் கருத்தாக்கமான நோக்கு நிலையை தாம் முன்னரே அறிந்தவன்போல பெண்கள் நோக்கும் சுவையை அதாவது அவர்தம் ஐம்புலன் பெறும் இன்பத்தை இசைவடிவான பரம்பொருளைக் கண்டவர்கள் அடைந்தனர் என  அயோத்தியா காண்டத்தில் கங்கைப் படலத்தில் எழுஎதுகிறான்.

« கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
 »

(காமத்துப்பால், களவியல், புணர்ச்சி மகிழ்தல்)

வள்ளுவரும் பெண்களில் நோகில் ஐம்புலன்களுகும் தனித்தனியாக அடையும் இன்பத்தை பெறு ஆற்றல் ஐபுலன்களில் ஒன்றான கண்களுக்கு உண்டென்பதை இரு வரிகளில் உறுதிசெய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறான். வள்ளுவன், கம்பன் இருவருக்கும் நோக்கமொன்றுதான், ஐம்புலன்களில் பார்வையை, நோக்கும் செயலை முதன்மைப்படுத்துவது. ஈர்க்கின்ற பொருளுக்கென விழிக் கதவுகள் திறக்க பிற புலன்கள் வரவேற்பிற்குத் துணை நின்று அதனதன் பண்பூடாக உடலுக்கும் ஆன்மாவிற்கும் மகிழ்ச்சியை ஊட்டுகின்றன.

வள்ளுவன் பெண்களின் நோக்கினை அடிப்படையாக கொண்டு முன்வைக்கும் கருத்து, கம்பனுக்கு பிரிதொரு பார்வையை கட்டமைக்கவும் அக்கலையூடாக, நோக்கு தரும் இன்பத்தை அவனுடைய பரம்பொருளை கண்ணுற்றவர்கள் மாத்திரமின்றி அவன் படைப்பை வாசிக்கிறவர்களிடமும் கொண்டுபோய் சேர்க்கிறான்.  இது அழகு என்ற குறியீட்டுக்குரிய திறன், கலையும் அழகும் வேறுவேறல்ல, இருந்தும் அது : அகம் புறம், ஆழமான மேலோட்டமான, பூடமாக வெளிப்படையாக, மையம் விளிம்பென இருவேறு பண்புகளால் கட்டமைக்கப்பட்ட மாதொருபாகன். கலை என்பது பொதுவில் சகமனிதர்களின் புலன்சார்ந்த உணர்வுகளையும் மனக்கிளர்ச்சியையும் தட்டியெழுப்புவதை மட்டுமே நோக்கமாக கொண்டது அல்ல. அறிவென்கிற சோதனைச்சாலயில் ஏன் எதெற்கென்ற கேள்விகளுக்கு விடைகாண முயல்வது. அழகென்பது இயற்கையானது, கலை அறிவோடு கலந்த கற்பனைதிறன் வெளிப்பாடு.

‘அழகு’ என உச்சரிக்கிறபோது, நம் கண் முன்னே உள்ள பொருளின் எதார்த்த வடிவமும், வனப்பும் அப்பொருள்மீது விருப்பத்தை தருகிறது. தமிழ் அறிஞர் தி.சு  நடராசன் கருத்துப்படி « புலப்பாட்டுத் திறனைக் காட்டுகிற நுண்ணர்வாகிய இவ்வழகு கேட்போர் பார்ப்போரின் புலனறிவோடும் மன நிலையோடும் செயல்படுகிறது. பொருளுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் இடையிலான உணர்வு நிலை, அழகுக்கும் அதன் நுகர்வுக்கும் மிகவும் முக்கியமானது … » « எனவே அழகு என்பது பொருளின் (object) பண்பு மட்டுமல்ல, காண்பவரின் மன உணர்வை(subject) அதாவது அவ்விரண்டின் உறவையும் சார்ந்தது ஆகும் » என்கிறார்.

 இலக்கியம் மொழியை அடிபடையாகக் கொண்தொரு கலை. ஒரு தேர்ந்த கலைஞன் மொழியை இசையாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், கையாளுகிறான். பலரும் உபயோகித்துவந்த பாதையோரம் கிடந்த பாறாங்கல் ஒன்று அவ்வழியாகப்போன ஸ்தபதியின் கண்பட்டு, கற்பனைத் திறனுடன் வினையாற்றப்பட சில மாதங்களுக்குப்பிறகு கருவறை மூலவராக கோவிலில் நிற்கிறது. ஜெயமோகன் ஒரு தேர்ந்த எழுத்துச்சிற்பி.

எழுத்தாளர் ஜெயமோகன் புனைவுகளில் காணும் அழகியல் பண்பை,  சொல் விளையாட்டை,  அதாவது தேர்ந்த ஒரு பொற்கொல்லர்போல எங்கே வார்த்தைகளை பதித்தால் வாக்கியம் அழகு பெறும் எனபதில் தெளிந்து கையாளும் சொற்கொல்லராக வார்த்தைகளை வாசகனுக்கு அர்த்தமாக்கிக்கொள்ள உதவும் உத்தியை, வர்ணனையை, நடையை, உவமங்களின் புதிய வரவை கன்னியாகுமரி நாவலை முன்வைத்து இங்கே இலக்கிய அபிமானிகளுடன் பகிர்ந்துகொள்வது கட்டுரையின் நோக்கம்.

கதை மாந்தர்கள் :

ரவி,

கதை நாயகன் தொழில் : பட இயக்குனர், மலையாளத் திரைப்பட உலகைச் சேர்ந்தவன்.  88ல் ஏகயாய ராஜகுமாரி என்ற சினிமாவை இயக்குவதற்கு முன்பு அப்படத்திற்காக கன்னியாகுமரியில் தங்கியிருந்தபோது « ராத்திரி இருட்டில கடற்கரைல நடக்கிறது, பகலில படுத்து தூங்கறது, தனக்குத்தானே பேசிக்கிறது, சிரிக்கிறது, கடைசீல ஒரு இருப்பு, ஒரு எழுத்து, அதாக்கும் ஏகயாய ராஜகுமாரி ! கதைன்னா அதுகதை….  அதுமாதிரி கதை, அது மாதிரி படம் இந்த மலையாள ஃபீல்டில எண்ணி அஞ்சு தேறாது… » என மொத்த மலையாளப் பட உலகமும் நேற்றுவரை கொண்டாடிய ஒரு மனிதன், இன்று அவனுடைய திரைப்பட இருப்பு கேள்விக்குறி. அதே  திரைப்பட உலகம் « இண்ணை தேதிவரை வேற ஒரு படமும் அந்த ரேஞ்சுக்கு வரலை. அது சொல்லாம இருக்கப்பிடாது… » என அவன் முகத்துக்கெதிரே விமர்சனமும் செய்கிறது. இவனும் « ஏகாய ராஜகுமாரிதான் என்படம். அது எந்த இடத்தில் தொட்டதோ அதுதான் என் இடம். அங்க மறுபடியும் தொட்டாகனும். அதுக்காக மறுபடியும் அதே படத்தை எடுக்க முடியாது. மறுபடியும் அதே மனநிலையில அதே ஆவேசத்தில்நான் ஒரு முயற்சி பண்ணனும். அதுக்காகத்தான் இங்கே வந்தேன் » எனத் தன் இழப்பை மீட்டெடுக்க திரும்பவும் கன்னியாகுமரி வந்திருக்கிறான். பெண்கள், மது, சுருக்கென்ற கோபம், சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள், தன் இருத்தலை நிறுவ பிறரை நிராகரிக்கும் அற்ப குணம் இவைதான் ரவி, இங்கே அப்பழுக்கற்ற மனிதர்கள் என்று யாrராவது உண்டா என்ன, அவன் ஒரு கலைஞன் என்பதால் தன்னை ஊரறிய அம்மணபடுத்திக்கொள்வதில் அப்படியொரு மூர்க்கம், வெறி.

விமலா

ரவி வாழ்க்கையில் குறுக்கிட்ட முதல் பெண். கல்லூரியில், இளம் வயதில் காதலிக்கிறார்கள். உள்ளத்தைப் புரிந்துகொண்டது போதாதென்று ஒருவர் மற்றவர் உடலைப் புரிந்துகொள்ள நாள் குறித்து,  ரவியின் ஆதமார்த்த தலமான கன்னியாகுமரிக்கு  காதல் யாத்திரையாக புறப்பட்டு வருகிறார்கள். அங்கே என்ன நடந்தது ? எதிர்பாராமல் நடந்ததொரு சம்பவம் அவர்கள் உறவைத் துண்டாடியது எப்படி ? நெருக்கடி காலங்களில்தான்  மக்களின் உண்மை குணம் வெளிப்படுகிறது.  அவசரத்தேர்வுகளை எதிர்கொள்ளும் போதுதான், மனிதர்கள்  எங்கனம்  உண்மையில் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது வாழ்க்கையில் உண்மை, கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும் இது பொருந்தும். கன்னியாகுமரியில் நடந்த அந்த மிகப்பெரிய அசம்பாவிதத்திற்குப் பிறகு இருவர் வாழ்க்கையும் ஆளுக்கொரு திசை என்றாகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏகாய ராஜகுமாரிபோல இன்னொரு படம் எடுத்து தன் திரைப்பட வாழ்க்கையை திடப்படுத்திக்கொள்ளும் கனவுடன் கன்னியாகுமரிக்குத் தமது திரையுலக நண்பர்களுடன் வந்திருக்கும் ரவி அமெரிக்காவிலிருந்து ஒரு டாக்டராக இந்தியா வந்துள்ள விமலாவை சந்திக்கிறான். இச்சந்திப்பே கதையை ஊசி, நூலை அழைத்துச் செல்வதுபோல நகர்த்த நாமும் விடுகதைக்கான விடையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கதையில் பயணிக்கிறோம்.

பிரவீணா

வாய்ப்புக்காக காத்திருக்கும் நடிகை, எதற்கும் தயார். கையில் எரிக்கா யங்(Erica Jong) எழுதிய ‘Fanny’ ; வாய்ப்புக்காக காத்திருக்கும் பெண் என்பதால் ரவியோடு படுகையைப் பகிர்ந்துகொள்வதில் தாராளம். எனினும் பேச்சு, செயல், சாயல் அனைத்திலும் நுட்பமும் தன்னம்பிக்கையும் இயல்பாக மெய்பிக்கப்படுகிறது.

« மிக நுட்பமான பெண். அவளை அஞ்சுவதும், வெறுப்பதும், மோகம் கொளதும், வெல்லத் துடிப்பதும் அதனால்தான். ஆனால் அவளை வெல்ல முடியாது. ஏனெனில் எந்தக் களத்திலும் அவள் எவரையும் சந்திப்பதில்லை…. » இது ரவியின் மனதில் பிரவீனாபற்றிய அபிப்ராயம்.

பிற பாத்திரங்கள்

மேலே சொல்லபட்ட மூவரும் நாவலின் முக்கிய பாத்திரங்கள், இவர்கள் தவிர ரவியின் திரையுலக மனிதர்கள் : வேணுகோபால், நாராயணன். ரவியை முறைப்படி மணம் செய்துகொண்டு, கணவன் எங்கே எவளுடன் இருக்கின்றானோ என்றெழும் சந்தேகத்தை நிவர்த்திசெய்துகொள்ள அவ்வப்போது தொலைபேசி அழைப்பூடாக நாவலில் குறுக்கிடும் ரமணி, விமலாவின் கிரேக்க நண்பன், பல ஆண்டுகளுக்கு விமலாவின் உடலை சீரழித்தவனாக அறிமுகமாகும் காசநோய்க்காரன் ஸ்டீபன் என நமக்கு அறிமுகமானாலும், இவர்கள் எண்ணிக்கையில் அதிகமில்லை, அவர்கள் பங்களிப்பு, நாவலை நகர்த்த குறிப்பாக ரவியுடைய முகவிலாசத்தையும், மனவிலாசத்தையும் கூடுதலாக விளங்கிக்கொள்ள உதவுகிறது.

கதையும் கதையாடலும்

கதைசொல்லி, ஒரு கதைக்கான பொருள், கதையைக் கேட்பவன் அல்லது வாசகன். இம்மூன்றும் கதையாடலுக்குக் கட்டாயம். அதன் பொருண்மைகள் எதுவாயினும் ‘இந்திய இலக்கிய கோட்பாடுகள்’ என்ற நூலில் வெ. அய்யப்ப பணிக்கர் என்பவர் ஆறு சொற்களை கதையாடலின் முக்கியம் வாய்ந்த வேர்ச்சொற்களாகக் காண்கிறார். அவை « எவன் ? அல்லது எவள் ?, எப்போது ?, எங்கே ?, என்ன ?, எதற்காக ?, எப்படி ? ». கன்னியாகுமரி நாவலும் இதற்குரிய பதிலை தெளிவாகவே வைத்திருக்கிறது.

ஒரு புனை கதை இலக்கியம் ஆவது எப்போது ?

கட்டுரையின் ஆரம்பத்தில் தெரிவித்ததைப்போன்று அழகியலில் அடங்கியிருக்கிறது அதன் உயிர் மூச்சு. இலக்கியம் மொழி சார்ந்த கலை. ஒரு சமகால படைப்பாளி தம்முடைய வாழ்க்கைச் சூழலில், தான் அங்கம் வகிக்கும் சமூகம் சார்ந்து பெற்ற அனுபவங்களை, பெற்ற உணர்வுகளை,  அதன் அடிப்படையில் எடுத்த முடிவுகளை, சந்தோஷங்களை, துயரங்களை, முரண்களை உரிய பாத்திரங்கள் மூலமாக சொல்ல நினைக்கிறான். இலக்கிய நடை அதற்கு உதவுகிறது. ‘அ’ என்று சொன்னால் காதுக்கு இனிமைக் கிடைப்பதில்லை, ‘ஆ’ என நீட்டி முழங்கவேண்டும். அப்போதுதான் எழுத்து இசையாகும், கவனம் பெறும். வாசகன் படைப்பாளியின் சொற்களை அர்த்தப்படுத்திக்கொள்வதில் இலக்கியமில்லை அச்சொற்களைக் கடந்து நிற்கும் கவிஞனின், புனைகதை ஆசிரியனின் நோக்கத்தை, எண்ணத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு சம்பவத்தை, மன நிலையை விவரிக்க படைப்பாளி ஆற்றல் மிக்கச் சொற்களை உபயோகிக்கவேண்டும். அச்சொற்கள் வாசிப்பவர் மனதைச் சென்றடையும்போது அவர்கள் உள்ளத்தில் படைப்பாளி சொல்லாமல் விட்ட செய்திகளும் புரிகின்றன. துரதிஷ்டவசமாக இந்த அனுபவத்தைப் பெறும் திறமை எல்லா உள்ளங்களுக்கும் இருப்பதில்லை. வெற்றிகரமாக இச்செயல்பாட்டை அரங்கேற்ற கோபிசந்த் நாராங்  என்பவர் சொல்பதுபோல சொல்லின் மிகச் சிறந்த உற்பத்தித் திறனை படைப்பாளி புரிந்தவராக இருக்கவேண்டும். ஜெயமோகனின் கட்டுரைகள், நாவல்கள், சிறுகதைகள் அனைத்திலும் இந்த ஆற்றலைக் காண்கிறோம்.

« மாலை வெயிலின் நெந்நிறம்  ஈர மென்மணல் மீது தகதவென ஒளிர்ந்து, குமிழிகள் துகள்களாக மாறி அழிய, உலர்ந்து மறைந்தது. அவள் சற்று தூரம் விலகிச் சென்றுவிட்டிருந்தாள் . அவள் பாதத் தடங்கள் மீது, அலை வெண்நுரை விசிறிப் பரவிச் சென்றது. »(பக்கம் 10)

« இந்தக் கடற்கரைக்கு எத்தனையோ வருஷமா திரும்பத் திருப வந்திட்டிருக்கேன். இங்கே என்ன இருக்கு ? கண்டிப்பா இது ஒரு அழகான கடற்கரை இல்லை. இன்னைக்கு இருக்கிற நிலமையைப் பார்த்தா உலகத்திலேயே அழுக்கான ஆபாசமான கடற்கரைகளில ஒண்ணுன்னு கூடச்சொல்லிடலாம். ஆனா இங்க என்னமோ ஒண்ணு இருக்கு, மத்த கடற்கரையில இல்லாதது. இப்ப சொன்னேனே இந்தத் தரைக்கு அடியில மூணு பிரம்மாண்டங்கள் மோதற உச்சக் கட்ட மௌனம் இருக்கு. அதுக்கு மேல சித்தாட கட்டிகிட்டு மூக்குத்தி ஒளியோட தூய கன்னியா தேவி காத்திட்டிருக்கா »(பக்கம் 27)

« விரிந்த பாதையின் இருபுறமும் பெரிய கொன்றை மரங்கள், முதலை உடம்புடன், சாமரக்கொத்து இலைகளுடன், மஞ்சள் நிற பூக்குலைகளுடன் நின்றன. தரையெங்கும் மஞ்சள் நிற பூக்கள். பெண்கள் சிறு சிறு குழுக்களாகச் சென்றுகொண்டிருந்தார்கள்……பெண் முகங்களில், கழுத்துச் சரும மென்மைகளில், முழங்கை மென்மயிர்களில். பின்னல்களின் முடிப்பிசிறுகளில், அலைபாயும் பாவாடைகளில் முற்றிலுமாக தன்னை மறந்திருந்தான். (பக்கம் 41)

இதுபோல நிறைய உதாரணங்களை நூல் முழுக்கத் தரமுடியும், அதிலும் குறிப்பாக ரவியின் பழைய நினைவுகள் ஊடாக காதலி விமலா வுடனான தருணங்களை அவர்களிடையே பரிமாறிக்கொள்ளபட்ட இளமை பூரித்த உரையாடலை வாசிக்கிறபோது, மடியேந்திபெற்ற இலக்கியப்பூக்களை மார்பில் அணைத்து மகிழ்வதைப்போன்ற உணர்வை வாசகர்கள் பெற முடியும்

இப்படி வர்ணனைகளில் சோபிக்கிற பகுதிகள் ஒருபக்கமெனில்,அத்தியாயம் 10ல்

விமலாவை அவமானப் படுத்துவதாக நினைத்துக்கொண்டு « ஆமா நீ எஞ்சாய் பண்ண. உனக்கு நான் பத்தலை . அந்த நாலு தடியனுங்க வந்தப்பதான் உனக்குத் திருப்தியாச்சு . அதை மறக்க அழுது நாடகமாடற » எனப் போடுகிற கூச்சலும்,  

அத்தியாயம் 13Lல் தமது இறுமாப்பும், அகங்காரமும் சிறுமையுற, ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதுபோல பிரவீனாவுக்கு எதிராக ரவி கொட்டுகிற வார்த்தைகளும் அவனைக் கூடுதலாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன. இவைதவிர விமலாவின் பேச்சில் ஒருவித பெருமிதத்தையும், பிரவீனாவின்  வார்த்தைகளில் அறிவுக்கூர்மையையும் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார், சொற்களைக் கொண்டு பாத்திரங்களின் தன்மையைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

ஆண் பெண் வர்ணைகளிலும் இலக்கியம் ஒரு மொழி சார் கலை என்பதை படைப்பாசிரியர் வாய்ப்பு அமைகிறபோதெல்லாம் உறுதிபடுத்துகிறார்.

« அவள் தலை மயிரை நீவியபடி எதிரே வந்தமர்ந்தாள். கனமான மங்கிய நிறம் கொண்ட காதிப் புடவை. சிறு முகப்பருக்கள், சிவந்து நிற்கும் மேக்கப் முற்றிலும் இல்லாத முகம், மெல்லிய உடல், ஏதோ செயற்கை உலோகத்திலான மாலையும் தோடுகளும்-பல்கலைகழக மாணவிக்குரிய தோற்றம் »(பக்கம் 22)

« பறக்கும் தலைமயிரை கைகளால் விலக்கியபடி, ஒளிகொப்பளிக்கும் கடலைப் பார்த்தபடிஒரு கணம் நின்றாள். நீல நிற ஜீன்ஸும் வெண்ணிற டீ ஷர்ட்டுமாக வெள்ளைக்காரி போலிருந்தாள். பட்டுப் பாவாடையும் தாவணியும் அணிந்து இரட்டைச் சடைபோட்டு, பிச்சிப்பூ சூடி குங்குமப்பொட்டும் குடிகூரா பௌடருமாக கல்லூரிக்கு வருவாள். சுழலும் கண்களுடன் மார்பில் புத்தகங்களை அடுக்கியபடி சிரிப்பின் ஒளி பூசிய முகத்துடனவள் தோழிகள் நடுவே வரும் காட்சிமட்டும் நினைவில் பிரகாசமான தணித்த வண்னத்தில் பதிந்திருக்கிறது. »(பக்கம் 10)

சில நேரங்களின் சில மனிதர்களின் நடவடிக்கைகள் நமது புருவங்களைச் சிலிர்ப்புடன் அனிச்சையாக உயர்த்தச் செய்யும். அத்தகைய அனுபவத்தை  நண்பர் ஜெயமோகன் சொற்களைகொண்டு  ஒரு தேர்ந்த மொழி ஒப்பனையாளரின் கலைஞானத்துடன் வாக்கியங்களைப் படைக்கிறார்.

« நாராயணன் பேச்சை அவன் முறித்து உட்புகுந்தான் »,

« இருட்டின் கனத்தப் போர்வை கடலின் ஓசைக்குக் கார்வையைக் கூட்டியிருந்தது. காற்றாலான பெரிய அருவி ஒன்று கடலிலிருந்து நிலம் நோக்கிக் கொட்டிகொண்டிருந்ததில் உடல் குளிர்ந்து நடுங்கி நிற்பதாக உணர்ந்தான் »

« தலைசுழன்று கால்கள் பதறின காதுகளில் ரீங் என்ற ஒலியும் வாயில் அமிலக் குமட்டலும் வந்தன. »

« சிவப்பும் சாம்பலும் பரவி விரிந்த வானத்தின்கீழே ஆழ்ந்த நீல நிறம் பெற்ற நீர்பரப்பு சுருண்டு எழுந்துவந்து கரையில் வெண் இறகாக விரிந்து பரவியது. மீண்டும் சுருண்டெழுந்தது. . »

இவைதவிர, வடிவமைப்பு, உவம வழக்குகள் என ஜெயமோகன் எழுத்துக்களில் கொண்டாடுவதற்கு விஷயங்களுக்கு பஞ்சமில்லை.

    இறுதியாக

« சப்ளைம்னு சொல்லிட்டா ஆச்சா ?  எனக்குப் புரியலை அது…

அது ஒரு அனுபவம்ங்கிறப்ப எப்படி அதை வரையறுத்துச் சொல்லமுடியும் ? ஆனா உங்களுக்குத் தெரியும் நான் என்ன சொல்றேன்னு . கலையனுபவம் இல்லாதவங்க யாருமில்லை. அதனால இதை உணர முடியாதவங்கன்னும் யாருமில்லை.

மனசு பொங்குதே அதைச் சொல்றியா ?….

உச்சக்கட்ட அனுபவம்னு வச்சிக்கிடுங்க இல்லை பெரிய தார்மீகமான மன எழுச்சி, இல்லை பிரபஞ்ச ரீதியான ஓர் உண்மையைத் தரிசிக்கிறது, இல்லை மனசுக்கு சாத்தியமான உச்சக்கட்ட உணர்ச்சி நிலைய அடையறது-ஏதோ ஒண்ணு. இல்லை இதில எல்லாமும்தான். ஒண்ணு இல்லைன்னா இன்னொண்ணூம் இல்லாம ஆயிடலாம். ஒருபக்கா அரசியல் படத்தோட உச்சக்கட்ட ஆவேசமும் ஒரு வயலின் சங்கீதத்தோட அற்புதமான ஒரு குழைவும் ஒரே அனுபவம் தான்னு நான் சொல்வேன். கலைன்னா அந்த உச்சத்தை நோக்கிபோற ஒரு யாத்திரை மட்டும் தான். அது இல்லைன்னா வேற ஒண்ணூமில்ல. அதை உள்வாங்கிக்க முடியாதவங்கதான் வேற எதையாவது பேசிகிட்டிருப்பாங்க »(பக்கம் 114)

மனப்பூர்வமாக நீங்கள் சொல்கிற கருத்தை ஏற்கிறோம் சாரே,

கன்னியா குமரி நாவல் கதை நாயகன் ரவிக்கு வேண்டுமானால் ஏகாய ராஜகுமாரி ஒன்று போதும் என சாபமிருக்கக்கட்டும், உங்களிமிருந்து பல ஏகாய ராஜகுமாரிகளை எதிர்பார்த்து மேன்மாடங்கள் காத்திருக்கின்றன என்பதை மட்டும் நினைவூட்டுகிறோம்.

———————————————————————————————————————————————.