பிரான்சும் திரைப்பட விழாக்களும்

செசார் தேசிய திரைப்பட விருது-2012

இபோதெல்லாம் இந்தியத் திரைபடத்துரையினருக்கு ஆஸ்கார் விருதுகளில் அக்கறையிருக்கிறதோ இல்லையோ கான் (Cannes) திரைப்பிடவிழாவில் கலந்துகொள்ள ஆவலாய் இருக்கிறார்கள். ஆஸ்கார்போல அதுவுமொருநாள் அலுத்துபோகக்கூடும். கான் திரைப்படவிழாவைத் தவிர்த்து பிரான்சு நாட்டில் ஆப்ரிக்க  லத்தீன் அமெரிக்கா திரைபட விழா, ஐரோப்பிய திரைப்படங்களுக்கான விழா, கேலிச்சிந்திரங்களுக்கான திரைபடங்கள்விழா, இத்தாலிய படவிழா, அமெரிக்க திரைப்படவிழா, பெண்கலைஞர்களை மையமாகக்கொண்ட திரைப்படங்கள் விழா, சமூக விழிப்புணர்வு தரும் திரைப்படங்கள் விழா, குறும்படங்கள் விழா, நார்வே சுவீடன் திரைப்படங்கள் விழா, குற்றவியல் படங்கள், அதீதக் கற்பனைகளை கதைக்களனாகக் கொண்ட படங்களென ஆண்டுதோறும் பிரான்சுநாட்டில் 24 திரைப்படவிழாக்கள் நடைபெறுகின்றன. இது தவிர தேசிய திரைப்பட விருது விழாவும் பிப்ரவரிமாதத்தில் செசார் தேசிய திரைப்பட விருது விழாவென்ற (Cérémonie des César du cinéma) பெயரில் நடை பெறுவதுண்டு.

செசார் தேசிய திரைப்பட விருது விழா 1975ம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் சிறந்த நடிகர், நடிகை, இயக்குனர், இசை அமைப்பாளர், சிறந்த துணை நடிகர், நடிகை அறிமுகக் கலைஞரென பட்டியலிட்டுப் பரிசுகளை வழங்குகிறார்கள். விருது  குழுவினர், அரசாங்கத்தின் தலையீடின்றி செயல்படுகிறார்கள். அமைப்பு ஒரு தன்னாட்சி உரிமையுள்ள இயக்கம். அமெரிக்காவுக்கு ஆஸ்கார் விழா எப்படியோ அப்படி பிரான்சு நாட்டிற்கு செசார் தேசிய திரைப்பட விழா. இவ்வருடம் “L’Artiste (The Artist) என்ற ஊமைப்படம் பல பரிசுகளைத் தட்டிசென்றது. இப்படத்தைப் பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் எழுதியிருந்தேன். சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகையென பரிசுகளைக் குவித்தபோதும் சிறந்த நடிகருக்கான செசார் விருது ‘Intouchables’ (‘தீண்டத் தகாதவர்கள்) படத்தில் நடித்திருந்த கறுப்பரான ஒமர் சி (Omar Sy)க்கு கிடைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சில சினிமாக்களிலும் இதுவரை துணைபாத்திரங்களில் நடித்திருந்த ஒமர் சிக்கு தகுந்த பரிசென்றே சொல்லவேண்டும். L’Artiste படத்தின் கதா நாயகன் Jean Dujardin (ழான் துய்ழர்தென்)  ஏமாற்றத்துக்குள்ளானார். அவரது ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அதற்கடுத்த வாரத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற விழாவில் L’Artiste திரைப்படம் பலபரிசுகளை வென்றது. அதில் சிறந்த நடிகருக்கான பரிசும் அடங்கும்.

ஆசிய திரைப்படங்களுக்கான விழா

பிரான்சு நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த (மார்ச்-7-11) ஆசிய திரைப்படங்களுக்கான விழா’( Festival international des cinémas d’Asie –FICA)  நமக்கு முக்கியமானது. இந்தியத் திரைப்படத்துறையினர், இப்படியொரு திரைப்பட விழா பிரான்சுநாடைபெறுகிறதென்பதை அறிந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. சீனா, ஈரான், ஜப்பான், பிலிப்பைன், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்றன. வழக்கம்போல இந்தியாவின் பெயரை காணவில்லை. புதிய முயற்சிகளிலிறங்கும் நமது தமிழ்ப்பட இயக்குனர்கள் கவனத்திற்கொள்ளவேண்டிய விழா. விழாவுக்கு இஸ்ரேலிய பாலஸ்தீனியரான இயக்குனர் எலியா சுலைமான் (Elia Suleiman) தலமை வகித்தார், அவரொரு நல்ல நடிகருங்கூட. மொர்ட்டெஸா பாஷ்பாப் (Morteza Farshbab)என்ற ஈரானிய இயக்குனரின், துக்கம் (Mourning) தாமரை விருதைப் பெற்றது. விமர்சகர்களின் தங்கத் தாமரை விருதை ஜப்பானிய இயக்குனர் சொனோ சியொன் (Sono Sion) உழைப்பில் வெளிவந்திருந்த ‘Himlizu’ வென்றது. சீனாவின் புகழ்பெற்ற இயக்குனரான வாங் சியாஷ¤வாய் (Wang Xiashuai)யும், ஜப்பான் நாட்டின் இயயக்குனருமான கியோஷி குரொசொவா (Kiyoshi Kurosawa)வும் கௌரவிக்கப்பட்டனர்.

————————————–

 

உள்ளத்தில் ஒளியுண்டாயின்

எல்லோரும் எழுதுகிறார்கள். சில எழுத்துக்கள் ஈர்க்கின்றன. சிலவற்றை வாசிக்கிறபோது அருவருப்புடன முகத்தைச் சுளிக்க வேண்டியிருக்கிறது. தமிழில் நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆற்றல்களுக்கும் குறைவில்லை. ஆனால் உள்ள சோகம் பெரும்பானமையான எழுத்துக்கள் Fabrication ஆக இருப்பது. அண்மைக்காலங்களில் சிற்றிதழ் படைப்புகள் குறிப்பாக கவிதைகளில் பல இந்தப் Fabrication சரக்குகுகளாக உள்ளன.

இம்மாதம் சிற்றிதழொன்றில் கட்டுரையொன்றை வாசிக்கநேர்ந்து இடையிலிருந்த ஒரு வரி என்னை அதிர்ச்சிக்குள்ளாகியது. இப்படிகூட படைப்பாளியொருவரால் கற்பனை செய்யமுடியுமா? என நினைத்துக்கொண்டேன். குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலந்ததுபோலவிருந்த அவ் வரியைக் கொண்டு கட்டுரையாளரின் மனத்தை எடைபோடமுடிந்தது. தொடக்க காலத்தில் கசாப்பு கடை வைத்திருப்பாரோ என்ற சந்தேகம். ஆனால் அங்கே கூட நிச்சயம் மனித உயிர்களைப் பலிகொடுக்கும் சந்தர்ப்பம் அமைந்திருக்காதென நம்பலாம்.

தமது கட்டுரையில் காலத்தின் பாய்ச்சலை சொல்லவந்த கட்டுரையாளர்:

“குழந்தையின் அறுக்கப்பட்ட குரல்வளையிலிருந்து பெருகும் குருதியைப்போல் பாய்கிறது காலம்” என்று எழுதுகிறார். வளரும் எழுத்தாளர்கள் இதுபோன்ற விபரீதமான Avant -Guarde’ களைத் தவிர்ப்பது அவசியம். அவ்வரியை மீண்டும் எழுதுவதற்குக்கூட தயங்கினேன். கற்பனையென்றாலுங்கூட, இத்தனை பயங்கரமாகமாகாவா? தாதா -மற்றும் மீ எதார்த்த ஓவியக் கண்காட்சிக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். படைப்பில் மட்டற்ற சுதந்திரத்தை சுவாசித்த அவர்களால்கூட குரல்வளையை அறுப்பதையெல்லாம் கற்பனை செய்ய காணாது.

பிரிட்டனிலுள்ள தொலைகாட்சியொன்று சிங்கள ராணுவ அட்டூழியங்களின் ஒரு பகுதியாக பன்னிரண்டு வயது சிறுவனின் மார்பில் குண்டுகள் துளைத்திருந்த காட்சியை ஓளிபரப்ப நாம் துடித்தோம். உலகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்று சொல்ல இயலாதென்றாலும் தமிழர்களிடத்தில் மிகப்பெரிய அதிர்வை அக்காட்சி உண்டாக்கியிருந்தது. இன்னாருடைய மகன் என்பது மட்டும் ஒரு காரணமல்ல, வேட்டை மிருகங்களின் கூரிய நகங்களினால் சிதையுண்டவன் ஒரு சிறுவன் என்பதால், அக்கொடூரக் காட்சி நம்முள் பாதிப்பைத் தந்தது. யுத்தமென்றாலும் கடைபிடிக்கவேண்டிய அறங்கள் தெளிவாக இருக்கின்றன. அறிவுஜீவிகளென சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் ஓர் அறம் வேண்டாமா? இப்படியா குழந்தையின் குரல்வளையை அறுத்தெடுத்து கற்பனைசெய்ய வேண்டும். காலத்தின் பாய்ச்சலை உவமைபடுத்த இவருக்கு வேறு உதாரணங்கள் இல்லையா அல்லது வறட்சியா? விரும்பியே எழுதினாரெனில் இவர்களுக்கும் ராஜ பக்ஷேக்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கமுடியும்?

1973ல் வட சென்னையில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது வேதாச்சலம் என்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பேசவந்திருந்தார். தமது உரையைத் தொடங்கியவர், « கூட்டத்தில் அமர்வதற்கு முன்பு பசியோடிருந்தேன். தெம்பாக பேசமுடியுமா என்றிருந்தவேளை எனக்குச் சிற்றுண்டியும் சிறுநீரும் அளித்தீர்கள் », என அடுக்குமொழியில் பேசுவதாக நினைத்துக்கொண்டு உளற, அந்த உளரலை இதோ இன்றும் கூட மறக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழில் வித்தியாசமாக சிந்திக்கிறேன் எழுதுகிறேனென சொல்லிக்கொள்கிற பலபேர்களின் எழுத்தில் இதுபோன்ற விபரீதங்களை வாசிக்க நேரிடுகிறது. பாரதி சொன்னதும் நினைவுக்கு வருகிறது “உள்ளத்தில் ஒளியுண்டாயின் வார்த்தையில் ஒளியுண்டாகும்

———————————————–

இசைவானதொரு இந்தியப் பயணம்

பிப்ரவரி -8 -9

பிரெஞ்சு நண்பர்களுடனான எனது இந்தியப் பயணத் திட்டத்தில் பிப்ரவரி எட்டு மற்றும் ஒன்பது தேதிகள் வேறுவகையானவை. இலக்கியம் சார்ந்திராதவை. ஆனாலும் மனித உயிர்கள் -சமூகம் – மானுடம் -பிரபஞ்சம் தவிர்த்ததொரு இலக்கியம் இருக்கமுடியுமா என்ன? இவற்றை பற்றிய பிரக்ஞையின்றி இலக்கியம் இயங்கமுடியாதென்கிற ஓர்மைக்கு உங்களைப் போலவே நானும் சொந்தக்காரன்.

இங்கே ஓர் உண்மையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். கடந்த ஓராண்டிற்கு முன்பு பிரான்சு நாட்டில் நான் வசிக்கிற Strasbourg நகரில் தமிழ் விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம் அதனை சொல்புதிது என்ற அமைப்பின் பேராலேயே நடத்தினோம். தமிழர் குடியேறியுள்ள நாடுகளில்லெல்லாம் அவர்கள் எண்ணிக்கைக்கு ஈடாக தமிழ்ச் சங்கங்கள் இருக்கும். பிரான்சிலுமுண்டு. எனக்கு நவீன இலக்கியங்களில் கவனம். நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் பிறபகுதிகளைப்போலவே பிரான்சிலும் குறைவு. எனக்கோ அதனைத் தவிர்த்து வேறு திசையில் தலைவைத்து படுக்க விருப்பமில்லை. பள்ளியில் கல்லூரியில் தொன்ம இலக்கியங்களை படித்தது, இப்போதும் அவ்வப்போது வாசிக்க நேருகிறது, அதுபோதும். எனது முழுக்கவனத்தையும் நவீன இலக்கியத்தில் செலுத்த விரும்புகிறேன்.  இந்திரன் பிரான்சுக்கு வருகிறாரே அவரைக்கொண்டு தமிழ் நிகழ்ச்சியொன்றை நான் இருக்கின்ற ஊரில் செய்யலாமென்று நடத்தவும் செய்தேன். பின்னர் தொடர்ந்து அதனை செயல்படுத்த முடியாமைக்கு இரண்டு காரணங்கள்:

1. நவீன தமிழ் இலக்கியமென்பதே குமுதம், ஆனந்தவிகடன், ராணி, குங்குமம் என்கிற வெகுசனபுரிதலுக்கு பாடமெடுக்க கையாலாகாதவனாக நான் இருந்தேன் என்பது முதற்காரணம்.

2. இலக்கியவாதிகள் என சொல்லிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோர் தமிழிலக்கிய வரலாற்றை பதினெட்டாம் நூற்றாண்டுக்கு மேல் தெர்¢ந்திராதவர்கள் அல்லது தெரிந்திருந்தும் புரட்டிப்பார்க்க விருப்பமில்லாததாவர்கள் என்பது இரண்டாவது காரணம்.

ஆக அத்தி பூப்போல நடந்தேறிய எனது சொல்புதிது இலக்கிய அமர்விற்கு எனது நீண்டகால நண்பர்களான சவியெ, மனே தம்பதியினரையும் அழைத்திருந்தேன். நிகழ்வில் ஒரியக் கவிஞர் டாக்டர் மனோரமா பிஸ்வால் அவர்களின் கவிதைத்தொகுப்பொன்று பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டு  “L’heure du retour” என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக வெளிவந்தது – ஒரிய மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்குக் கொண்டுவந்திருந்தவர் சூரிய காந்த்த கயனென்கிற மொரீஷியர். இதில் என்பங்கு எதுவுமில்லை முழுக்கமுழுக்க நண்பர் இந்திரனின் முயற்சி. இந்திரன் உரையில் இந்திய இலக்கியங்கள் குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் பிரெஞ்சில் வரவேண்டுமென்கிற தமது உள்ளகிடக்கையை வெளிப்படுத்தினார். நானும் எனது உரையில் அதன் அவசியத்தை உணர்ந்தவன் போல பேசினேன். தொடர்ந்து மொழிபெயர்ப்பில் குறிப்பாக ஆங்கிலத்தில் அல்லாத மாநில மொழிகளில் வெளிவந்துள்ள இலக்கியங்களை பிரெஞ்சில் கொண்டுவருவதென்கிற கனவை நனவாக்க ஓர் அமைப்பை ஏற்படுத்துவதென்ற யோசனையை முன்வைத்தேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்கள் பின்னர் சந்தித்தபோது அமைப்பினை உருவாக்க ஒத்துழைப்பதாக வாக்களித்தார்கள்; இத்துறையில் பிரான்சிலிருக்கும் புதுச்சேரி தமிழருக்கு அதிக நாட்டமினமையால் பிரெஞ்சு நண்பர்களோடு சேர்ந்து செயல்படுவது உத்தமமென தொடங்கினோம். இந்நண்பர்கள் தீவிர இலக்கியவாதிகளில்லை. அமெச்சூர் கவிஞர்கள். அவர்கள் கவிதைகளில் பல நன்றாகவுமிருந்தன. எனவே அவர்கள் துணையுடன் எனது அமைப்பைத் தொடங்குவதென தீர்மானித்தேன். இருபதாண்டுகளுக்கு மேலாக அவர்கள் மூவரும் எனக்கு நண்பர்கள். எனவே தெரியாத பலாக்காயைக் காட்டிலும் தெரிந்த கலாக்காய் மேலானதென்கிற பழமொழிக்கு ஏற்ப தொடங்கினேனென வைத்துக்கொள்ளுங்கள். நண்பர் சவியே என்னிடத்தில் கிறித்துவ மதத்தை பேசாவிடினும் இறைநம்பிக்கை அதிகமாக இருந்தது. மனே தம்பதியினரும் இறைநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களில் நண்பரான பிரான்சுவா மனே  கரித்தாஸ் (Caritas) என்கிற தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகிறவர். ஆக நண்பர்கள் மூவரும் இந்தியாவில் கிராமப்பகுதிகளில் தொண்டு நிறுவனங்களின் பணியைப் பார்வையிடவேண்டுமென்று ஆசைபட்டனர்.  பிரான்சுவா மனேவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கரித்தாஸ் பொறுப்பாளராக இருக்கும் இயக்குனர் ஜான் ஆரோக்கியராஜ்  பழக்கமென்பதால் அவரைத் தொடர்புகொண்டு ஆவன செய்யப்பட்டது.

இந்த ஏற்பாடு முழுக்க முழுக்க மனே தம்பதினர் ஏற்பாடென்று சொல்லலாம். முதலில் இதனை நான் எதிர்த்தேன். இலக்கியப்பணி என்று  ஆரம்பித்துவிட்டு வேறு திசையில் பயணிக்க எனக்கு விருப்பமுமில்லை நேரமமுமில்லை. தவிர பொதுவாக ஐரோப்பியர்களுக்கு ஒரு விதமான ‘Voyeurism’ உண்டு. நமது அறிவைக்காட்டிலும் அறியாமையைத் தெரிந்துகொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். இந்தியாவில் தேனீக்கள் மொய்க்கும் மலர்களை படம் பிடிக்கமாட்டார்கள், ஆனால் ஈக்கள் மொய்க்கும் மனிதர்களையும் பண்டங்களையும் காட்சிப்படுத்துவார்கள். இந்த அலகினை  இலக்கியத்திற்கும் உபயோகிக்கிறார்கள் என்பதுதான் சோகம். இந்நிலமைக்கு இந்தியர்களான நாமும் ஒருவகையில் பொறுப்பு. அழும் பிள்ளைக்கு பால் கொடுக்கவிரும்பாத இயலாத தாய்மார்களாக நாம் இருக்கிறோம்.  எனினும் நண்பர்களால் இந்திய இலக்கியத்திற்கு நாலு நல்லது நடக்குமெனில் சகித்துக்கொள்வதென முடிவு எடுத்தேன்.

முதல்நாள் மாலை சென்னையிலிருந்து ஜான் ஆரோக்கியராஜ் நாங்கள் கேட்டுக்கொண்டபடி வாடகைக் காரை பிடித்து புதுச்சேரி வந்திருந்தார். அவருடைய வாகனத்தில் புறப்பட்டு புதுச்சேரி அண்ணா நகரிலிருந்த ‘Rural Education and Action for Liberation’ [REAL]. என்கிற தொண்டு நிறுவனத்திற்குச் சென்றோம். நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான திருவாளர் எம்.ஏ லாரன்ஸ¤ம் அவரது அலுவலக ஊழியர்களும் வரவேற்றனர். எங்களுக்குச் சந்தணமாலைகள் போட்டார்கள். காப்பியும் பிஸ்கட்டும் கிடைத்தன. ஸ்தாபனத்தின் தொடக்கம் அதன் வளர்ச்சி, இயங்கும் விதம், களப்பணியாற்றும் ஊர்கள், பணி பற்றிய விவரங்கள் அனைத்தையும் சோர்வின்றி ஆர்வத்துடன் விளக்கினார்கள்.

1960ம் ஆண்டு திண்டிவனம் அருகே எண்ணாயிரமென்ற கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கிராமத்தின் விளிம்பு நிலைமக்களும், தலித் மக்களும் படும் துயரத்தைக் காணச்சகியாமல் இத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியதாக அறிந்தோம். ஆரம்பத்தில் ஏழு உறுப்பினர்கள் இன்றோ 132 அமைப்புகள் இருக்கின்றன.  பெண்கள் கல்வி, வங்கிக்கடன், முதியோர் கல்வி, சுற்றுப்புற சூழல் என இவர்கள் ஆற்றும் பணியினைக் கண்ணுற்ற ஆட்சியாளர்கள் ஓட்டுவங்கியின் மகத்துவத்தை அறிந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். எனினும் இன்றளவும் சுற்றுவட்டாரங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இவர்கள் முதுகெலும்பாக இருந்துவருகிறார்கள். REAL அமைப்பின் தலைவர், தமிழ்நாடு புதுச்சேரி மாநில கரித்தாஸ் நிர்வாகி, கள ஊழியோர்கள் ஆகியோரின் துணையுடன் கோட்டக்குப்பம், கூனிமேடு பின்னர் எண்ணாயிரமென்று சென்றோம்.

பிப்ரவரி 9ந்தேதி காலை ஐந்து மணி அளவில் ஏனம் வெங்கிடாசலப்பிள்ளை வீதியிலிருந்த எங்கள் அறைகளைக் காலிபண்ணிவிட்டு பெரிய பெட்டிகளையெல்லாம் நண்பர் நந்திவர்மன் வீட்டில் போட்டுவிட்டு கைப்பைக்களுடன் திண்டுக்கல் புறப்பட்டோம்; அங்கே நண்பர் இந்திரன் எங்களுடன் சேர்ந்துகொண்டார்; விழுப்புரம் திருச்சி வழியாக திண்டுக்கல் பயணப்பட்டோம்.  அங்கும் நிர்வாகிகள், நிறுவனத்தின் ஊழியர்கள் தொண்டு நிறுவனத்தினர் வரவேற்பளித்தார்கள். அவர்களுடைய பணிகளை விளக்கினார்கள். பல்வேறு கிளை நிறுவனங்கள் அவர்களின் பிரத்தியேக பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பின் பெண்தலைவிகள் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்கள். அன்று மதியம் திண்டுக்கல் அருகே இருபது கி.மீட்டர் அருகிலொரு கிராமத்தில் வரவேற்பு: கும்மியாட்டம் தேவராட்டம் என சிரத்தையோடு எல்லாவற்றையும் ஆடினார்கள். முதல் நாள் விழுப்புரம் மாவட்டத்தில் சந்தித்த சுய உதவி குழுக்களைக்காட்டினாலும் திண்டுக்கல் மகளிர் சுய உதவி குழு வசதி கூடியதாக இருந்தது. ஆனால் திண்டுக்கல் சுய உதவி குழுவும் சரி முதல் நாள் விழுப்புரம் மாவட்டத்தைசேர்ந்த சுய உதவி குழுக்களுக்கும் சரி மனப்பாடம் செய்ததுபோல ஒப்பித்தார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவில் தாங்கள் கிராமப்பஞ்சாயத்து தேர்தலில் உறுப்பினர் ஆகியிருப்பதாக தெரிவித்தார்கள். இவைகளெல்லாம் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த தைரியம் என்றார்கள். நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார்கள். நாங்கள் போனஇடங்களிலெல்லாம் மாலைகள், குளிர்பானங்கள் அல்லது தேனிர் என்றவகையில் ரூபாய் ஐம்பதிலிருந்து நூறுவரை செலவு செய்திருப்பார்கள். ஏழைப்பெண்களின் உழைப்பில் வந்த காசு. அப்பெண்கள் ஒவ்வொருவருக்கு  புண்ணியவான்கள் வரமளிக்கவந்திருக்கிறார்கள் என்ற நினைப்பிருந்தது. அவர்கள் செய்திருந்த மணிமாலைகள், பொம்மைகள் போன்றவற்றைக் காண்பித்தார்கள். பிற பெண்கள் அமைப்புடன் போட்டியிட்டு பரிசுகள் வென்ற சந்தோஷத்தையும் பகிர்ந்துகொண்டனர். பெண்களில் அநேகருக்கு வெள்ளைதோல்காரர்கள் இரட்சகர்களென்கிற நினைப்பு. எண்ணாயிரத்தில், ஒரு மில்  தொடங்கி வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுத்தால் புண்ணியமாப்போகுமென்று பெண்ணொருத்தி கூறியது ஓயாமல் ஒலிக்கிறது.

———————————————

கவனம்பெற்ற பதிவுகள் – ஏப்ரல் 7

கூடங்குள அணுமின் உலையை மூடுவவதற்கான வழிமுறையும் அசதா என்பவரின் கவிதையும்:
http://mugaiyurasadha.blogspot.fr/”

அசதா என்பவரின் வலைப்பூவிலுள்ள “கூடங்குளத்து சாஸ்தா” வாசிக்கப்படவேண்டிய கவிதை. அண்மைக்காலங்களில் கவிதகள் மீது அதிகம் நாட்டமின்றி இருந்தவன், எந்திரத்தனமான உற்பத்திகளில் கலைஞனைக் காணாததால் ஏற்படும் சோகம் சகித்த முடியாதது. இக்கவிதை மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

அணுஉலை மின்சாரத்திற்கு ஆதரவானவன் நான்  ஆனால் எனக்கு ‘நாராயண்சாமி’களைக்காட்டிலும் ‘உதயகுமார்’ போன்றவர்களின் மீது மரியாதையுண்டு. ஆனால் அணு உலைக்கு ஏன் ஆதரவளிக்கிறேன் என்பதை நண்பர்களுக்குச் சொல்லியாகவேண்டும்.

1. உலகில் அணுஉலையை வேண்டாமென முடிவெடுத்துள்ள நாடுகள்  படிப்படியாக அதனைச் சார்ந்திருப்பதை குறைத்துக்கொண்டுவரவேண்டுமென்று சொல்கிறார்களேயன்றி நாளைக்கே மூடிவிடலாம் எனக்கூறுவதில்லை. இதில் பாதிப்படைந்த ஜப்பான், ரஷ்ய நாடுகளில்கூட அதுதான் உண்மை.

2. அணு உலையைக் காட்டிலும் மலிவான நம்பகமான மின்சார உற்பத்திமுறை தற்போதைக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

3. அணு உலையால் ஆபத்து என்ற கருத்தியம்: மறுக்கமுடியுமா என்ன? விபத்து நடந்தால் அப்பகுதியே புல் பூண்டற்று போய்விடும் என்கிறார்கள்.  யாரில்லை என்பது? ஆனால் இன்றைக்கு எங்கே ஆபத்தில்லை வாகனவிபத்தென்று பயணம் செய்யாமல் விடுகிறோமா? அல்லது விமான விபத்தென்று பறக்காமல் தவிர்ப்போமா? பத்திரமாக போய்ச்சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் காரில் ஏறுகிறோம். பாதுகாப்பான பயணமென்கிற உத்தரவாதத்தை நம்பியே விமானத்தில் பறக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக விமான விபத்துகள் நடவாமலில்லை. பயணிக்காமல் இருக்கிறோமாவென்ன? அதுபோலத்தான் அணு உலை மின் தாயாரிப்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

முதலில் அணுமின்சாரம் வேண்டாம் என்கிறவர்கள் அதன் பயபாட்டை முற்றாக நிராகரிக்க வேண்டும். பிறவகை (அனல், புனல், காற்று…) மின்சாரங்களை மட்டுமே உபயோகிப்போமென அவர்கள் தீர்மானமாக இருக்கவேண்டும். சாத்தியமில்லையா காவிளக்கு உபயோகத்திற்கு மீண்டும் திரும்புகிறோம் எனச்சொல்லி வாழ்ந்து காட்டவேண்டும். நாமும் அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம்.

ஆனால் இவ்விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் தந்திரமாக நடந்துகொண்டன. அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டின் அண்டைமாநிலங்களும் சரி இந்திய மத்திய அரசும் தமிழர் விரோத போக்கைக் தங்கள் நெறியாக கடைபிடிக்கிறார்கள். இந்நிலையில் கூடங்குளத்தை அணுமின்னுலையை மூடுவதற்கு ஒரு வழி இருக்கிறது. போராட்டக்குழு கூடங்குளம் மின்சார உற்பத்திமுழுவதையும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வழங்கச் சொல்லவேண்டும், அப்படிக்கூறினால் இந்திய அரசு  நாளைக்கே கூடங்குளத்தை மூடிவிடுவார்கள்.

————————–

மொழிவது சுகம் ஏப்ரல் 7

 பிரெஞ்சு-இந்திய கலை இலக்கிய பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் பகிர்ந்துகொள்ளல்: 

 பிரான்சு நாட்டில் சில நண்பர்கள் உதவியுடன் தோற்றுவித்துள்ள மேற்கண்ட அமைப்பு குறித்து இதே பகுதியில் பகிர்ந்துகொண்டுள்ளேன். அமைப்பின் நோக்கங்கள் குறித்தும் அதில் சொல்லியிருந்தேன். இரு தரப்பிலும் (நவீன) இலக்கியம், கலை, பண்பாட்டு பரிமாற்றங்கள் சம அளவில் நடைபெறவேண்டுமென்பது அடிநாதம். கனவுகள் ஏராளம். அவற்றில் ஒரு சிலவற்றையாவது நனவாக்கவேண்டும் என்ற உறுதியுமுள்ளது. பிரச்சினை அங்கிருந்து கொண்டு வருவதிலில்லை. இங்கிருந்து கொண்டுபோவதில்தானுள்ளது. பிரபஞ்சன், இந்திரன், தமிழவன், எஸ்.ரா. ஜெயமோகன், பாவண்ணன் போன்ற மூத்த படைப்பாளிகளையும்; காலச்சுவடு கண்ணன், சந்தியா நடராஜன் போன்ற பதிப்பாள நண்பர்களின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு இயங்கத் திட்டம். முதல் கட்டமாக கடந்த மாதம் ஐந்தாம் தேதி புதுச்சேரியில் பிரெஞ்சு மற்றும் தமிழ்க் கவிதை வாசிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இக்கவிதை வாசிப்ப்பில் பிரெஞ்சு கவிதைகளாக பொதுலேர், சேவியர், பிரான்சுவாஸ் கவிதைகளும்; தமிழ்க் கவிதை வாசிப்பில் நண்பர் இந்திரன், மாலதிமைத்ரி, கடற்கரய் கவிதைகளும் வாசிக்கபட்டன. ஆக முதற் சந்திப்பு இரு தரப்பு கவிஞர்களுடன் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு முன்னாள் நீதிபதியும், தமிழ்- பிரெஞ்சு பண்பாட்டின் ஏக பிரதிநிதியாக புதுச்சேரியில் இன்றளவும் திகழ்கிற பெருந்தகை தாவீது அன்னுசாமி தலமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நண்பர் எஸ். ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பல அரிய யோசனைகளை வழங்கியிருக்கிறார். இனி வடம்பிடித்து தேரை இழுத்துச்செல்லவேண்டும்-முடிந்தவர்கள் கைகொடுங்கள்.

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது, இந்திரனுக்கு மொழி பெயர்ப்பு விருது:

இந்திரன் எனக்கு வாய்த்துள்ள இனிய நண்பர்களில் ஒருவர், இங்கே கவிஞர் மதுமிதாவுக்கு நான் நன்றி சொல்லவேண்டும். அவர் ஊடாகத்தான் இவரது அறிமுகம் கிடைத்தது. கவிஞர், கலை விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் என பலமுகங்கள் கொண்டவர் . அவரது அறைக்குள் வந்த ஆப்ரிக்க வானம் (மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு) எனது அறைக்கும் வந்தது. இயல்பிலேயே கவிஞர் என்பதால் அவர் சொற்களை தேடுவதில்லை, சொற்கள் அவரைத் தேடிவரும் போலும்; சொற் தேர்வில், அதனைக் கையாளும் திறனில் ஒரு தேர்ந்த பொற்கொல்லனுக்குரிய கலைஞானம் ஒளிர்வதைக் கண்டு பிரம்மித்திருக்கிறேன்.  ஒரியக் கவிஞர் மனோரமா பிஸ்வாஸ் பத்ராவின் கவிதைத் தொகுப்பு “பறவைகள் ஒருவேளைத் தூங்கிப்போகலாம்” என்கிற தலைப்பில் இந்திரன் அவர்களால் மொழிபெயர்க்கப்படிருப்பதை நண்பர்கள் அறிந்திருப்பீர்கள். சாகித்ய அகாடமியின் 2011 மொழிபெயர்ப்பு விருதினை கவிஞர் இந்திரனுக்கு, இந்த ஒரிய மொழி கவிதை பெற்று தந்துள்ளது. இந்தியத் துணைக்கண்டம் தொடங்கி உலகம் முழுக்க பரவியுள்ள அவருடைய நண்பர்கள் மகிழ்ச்சிகொண்டிருக்கும் தருணம், அவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம். காலம் கடந்து வழங்கப்பட்டிருப்பினும் உரிய நபருக்கு இவ்வருடத்திய மொழிபெயர்ப்பு விருது அளிக்கப்பட்டுள்ளதென்கிற வகையில் அகாடமிக்கு நன்றி.

2011ம் ஆண்டுக்கான இயல் விருது நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இவ்வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, படைப்புலகில் மிக முக்கியமான விருது. வெயிற் போதின் செவ்வியை ஒளியூட்டவும், மூச்சிரைப்பற்ற சொற்களால் உணர்வுகளோடு உசாவவும் அறிந்தவர் நண்பர். வெயிற் காதலர் யாமத்தின் மீது மையலுற்ற செயல்கண்டு அதிசயித்திருக்கிறேன், அவர் படைப்புகளின் உள்ளார்ந்த எளிமை கண்டு மலைத்ததுமுண்டு. அவரது உழைப்பை நன்கறிவோம். ஒரு சாதனையாளருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருப்பதில் ஆச்சரியங்களில்லை. வெம்புழுதி வீசுகிற தமிழ்ச்சூழலில் கதிராகியும் நாணல்போல நிலைத்து நிற்க பக்குவம் வேண்டும் நண்பருக்கு நிறையவே உண்டென்பதை அண்மையில் நேரில் அறிந்தேன். வாழ்த்துக்கள்.

இந்தியாவும் சாலை விபத்துக்களும்:

இந்தியாவில் பயணம் செய்யும் ஒவ்வொருமுறையும் விபத்தில்லாமல் திரும்பவேண்டுமே என நினைத்துக்கொள்வேன். எனது சகோதரர் துணைவியார் வாகன விபத்தில் இறந்தார். இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் உறவினர் நண்பர்களென்று யாரேனும் ஒருவர் விபத்தில் இறந்திருக்கிறார்கள். உலகில் இந்தியாவில்தான் சாலைவிபத்துகள் அதிகமென்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசின் நெடுஞ்சாலை மற்றும் தரைவழி போக்குவரத்துத் துறையின் உத்தியோகபூர்வமான அறிக்கையின்படி  படுகாயமுற்றவர்கள், கால் கை இழந்தவர்களைத் தவிர்த்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மாத்திரம்

2010ஆம் ஆண்டில் 1.3 இலட்சம்பேர். 2009ம் ஆண்டைக் காட்டிலும்(125660) 4,1 சதவீதம் அதிகம். இந்தியாவின் ஆறில் ஒரு பகுதி நிலபரப்பையும், மிகக்குறைவான மக்கட் தொகையையும் கொண்ட பிரான்சு நாட்டில் 2011ம் ஆண்டில் வாகனவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3970பேர்கள், 2010 ஆண்டைக்காட்டிலுல் (3992) 22 உயிர்களை அரசு காப்பாற்றி யிருக்கிறது. இந்த ஆண்டு மேலும் சில சதவீதத்தை குறைப்பதென்று விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது. இந்திய சாலைவிபத்துகளுக்கு மக்கட் தொகையையும், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையும் காரணமெனக்கூறி அலட்சியபடுத்திவிடமுடியாது. போக்குவரத்து விதிமீறல்கள் இங்கு அதிகம். தவிர சாலை பாதுகாப்பு குறித்த ஞானமோ அல்லது விழிப்புணர்வோ இங்கில்லை. மத்தியமாநில அரசுகள், காவல்துறை, பொதுமக்களென அனைவருக்கும் இதில் பங்குண்டு. இவ்விடயத்தில் ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையான விதிமுறைகளைப் பின் பற்றுகின்றன. ஓட்டுனர் உரிமம் இதற்கு நல்லதொரு உதாரணம். எழுத்துத் தேர்வு, ஓட்டுனர் தேர்வு என இரண்டிலும் தேறவேண்டும். இரண்டாண்டிலிருந்து ஐந்தாண்டுகள்வரை இதற்குத் தேவைப்படும், அல்லது சோர்ந்து ஓட்டுனர் உரிமம் வேண்டாமென ஒதுங்கிக்கொள்கிறவர்களும் உண்டு. ஒருமுறைபெற்றுவிட்டால் வாழ்நாள் முழுதும் வைத்திருக்கலாம். இதற்கிடையில் 1992ம் ஆண்டிலிருந்து ஓட்டுனர் உரிமத்தில் புள்ளிகள் மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றவுடன் அவருக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும் அடுத்த மூன்றாண்டுகளில் அவர் எவ்வித விதிமீறல்களுக்கும் உள்ளாகவில்லையெனில் கூடுதலாக 6புள்ளிகள் பெறுவார் ஆக மொத்தத்தில் 12 புள்ளிகள். ஒவ்வொரு தவறுக்கும் இழைக்கும் விதிமீறலுக்கொப்ப அபராதத் தொகையோடு ஒன்றிலிருந்து பல புள்ளிகளை இழக்கவேண்டிவரும். அடுத்த மூன்றாண்டுகளில் தவறேதும் இழைக்கவில்லையெனில் இழந்தப் புள்ளிகளைத் திரும்பப் பெறலாம். அனைத்துப் புள்ளிகளையும் இழக்க நேர்ந்தால் திரும்பவும் ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பித்து மீண்டும் தேர்வுகளில் வெற்றிபெற்றாக வேண்டும். விண்ணப்பமும் இழந்த நாளிலிருந்து ஆறுமாதங்கள் கழித்தே ஏற்கப்படும். தவிர பாதுகாப்பான வாகனமும் முக்கியம். புதிதாக வாங்கப்பட்ட வாகனம் நான்காண்டுகளுப்பிறகு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை அரசாங்கத்தின் அங்கீகரிக்கபட்ட நிறுவனங்களில் பல சோதனைகளுக்குப் (டயர், பிரேக், விளக்குகளென கிட்டத்தட்ட இன்று 70க்கும் மேற்பட்ட சோதனைகளுள்ளன.) உட்படுத்தவேண்டும். பாதுகாப்பான வாகனமென அத்தாட்சி பெற்றபிறகே அவ் வாகனத்தை மீண்டும் உபயோகிக்க முடியும்.

Le Silence du bourreau:

« ஒரு கொலையாளியின் மௌனம் » என்று தமிழில் கூறலாம். அண்மையில் பிரெஞ்சு படைப்புலகை உலுக்கிய ஒரு நூல். மரணத் தண்டனை தீர்ப்பான பிறகு, எந்த நேரமும் அது நிறவேற்றப்படலாமென தவித்து மாய்வதற்கு ஈடான மன உளைச்சல் வேறொன்றிருக்க முடியாதென்பதை அண்மைக்காலத்தில் நாம் கவனம் பெற்றிருந்தோம். அது மனசிதைவுக்கும் காரணமாகலாம். பிரான்சுவா பிஸோ(Francois Bizot) ஓர் இனவரைவியலறிஞர்(ethnologist), நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1971ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஓர் ஆய்வின் பொருட்டு இரண்டு நண்பர்களுடன் கம்போடியா சென்றவரை கேமர் ரூழ் என்ற கம்போடிய பொதுவுடமைக் கட்சியின் படைவீரர்கள்  கைது செய்து அவசர அவசரமாக மரணதண்டனை விதிக்கப்பட்டு, அடர்ந்த காட்டில் காவலில் வைக்கின்றனர். அவரது சிறைக்காவலனின் பெயர் டூஷ் (Douch), 28 வயது. அவரைக்காட்டிலும் மூன்று வயது குறைவான இளைஞன். சிறைக்காவலனென்றாலும், நன்கு கற்றறிந்தவன் என்கிறார் ‘பிஸோ’. பிரெஞ்சு நன்கு பேசிய காவலன், கேமர் ரூழை வழிநடத்திய மார்க்ஸிய தலைவரான போல் போட்டின் (Pol Pot) தீவிர அபிமானி. ஒரு கிறிஸ்துமஸின் போது அதிர்ஷ்ட்டவசமாக மேலிடத்து உத்தரவுப்படி பிஸோவுக்கு விடுதலை என்று கூறி சிறைக்காவலன் விடுவிக்கிறான். பிசோவின் நண்பர்கள் இருவருக்கும் விதி வேறாக இருந்தது. பிரான்சுக்குத் திரும்பிய பிஸோவுக்கு அவரது சிறைக்காவலனின் முகம் சுத்தமாக மறந்துபோனது. வருடங்கள் கடக்கின்ற்ன. காலம் மாறுகிறது கேமர் ரூழின் கொலைதாண்டவத்தில் பங்களித்த பலரும் ஒருவர் பின்னொருவராக கைதுசெய்யப்படுகின்றனர். செய்தித் தாளில் இவரைப் பொறுத்தவவரை மிக அமைதியாகவும் இனிய நண்பராகவும் விளங்கிய சிறைக்காவலர் பற்றிய செய்தியை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகிறார். கம்போடிய கேமர் ரூழ் பற்றி அறிந்தவர்களுக்கு S21 வதைமுகாம் அந்நியமல்ல. அந்த வதைமுகாமின் சூத்ரதாரியாகத் திகழ்ந்த ‘டூஷ்’ போல் போட்டிற்கு எதிரானவர்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் 40000 உயிர்கள் கொலை செய்யப்பட நேரிடையாகவும் குறைந்தது 1.7 மில்லியன் மக்களின் படுகொலைக்கு மறைமுகமாகவும் காரணமாக இருந்திருக்கிறான். பத்தாண்டுகளுக்கு முன்பு தமது சிறை அனுபவத்தைத் தொகுத்து நூலாக படைத்திருந்த பிஸோ, இப்போது டூஷின் ஆளுமை, தனித்தன்மைகள், பிற குணங்களென உளப்பகுப்பாய்வு செய்திருக்கிறார்.

கொலையாளிக்குள்ளும் எல்லாமிருக்கிறது. சமூகப்பார்வையில் குற்றவாளிகள், கொலையாளிகள் இடத்தை மறு கட்டமைப்பு செய்கிறார். பிஸோவுக்கு  கொலையாளியும் நம்மைபோலவே ஒரு மனிதன். சவப்பரிசோதனைசெய்யும் ஒரு மருத்துவருக்குள்ள திட்பமும், திறனும் கொலையாளிக்கும் பொருந்தும். இலட்சகணக்கான மனிதர்களை, உயிர்ப்பலியை ஒரு சடங்குபோல நிறைவேற்றிய டூஷ், பிஸோவை பொறுத்தவரை சராசரி மனிதன், இந்த சராசரிக்கு இலக்கணங்கள் ஏதும் தேவையில்லையெனில் சற்று மிகையாக சொல்லவேண்டுமெனில், விபத்தை சர்வசாதாரண்மாக எட்டிப்பார்த்த கையோடு வீடு திரும்பி சுவைத்துண்ணும் மனிதர்களுள் ஒருவன். பிரான்சுவா பிஸோ படைப்பில் தம்மையொரு மானுடவியலறிஞராகவோ, மெய்மைவாதியாகவோ முன்னிறுத்தவில்லை ஒரு கைதியின் பார்வையில் சிறைக்காவலனை பகுப்பாய்வு செய்திருக்கிறார். ஆசிரியருக்கு தீங்கென்பது வானத்திலிருந்து குதிப்பதல்ல, அல்லது எதிரெ இருப்பவன் அல்லது இருப்பவளுமல்ல. நமக்குச்சொந்தமானது, நம்மோடு உண்டு உறங்கி நமக்குள் தசையாக நரம்பாக, இரத்தமாக நம்முள் வாழ்ந்து நம்மிடமிருந்து தன்முகம்காட்ட தருணத்திற்காக காத்திருப்பது.

—————

 

கதையல்ல வரலாறு- 4

இட்லரின் பிணம் -(தொடர்ச்சி)

5.         ஏப்ரல் மாதம் 30ந்தேதி.

பங்க்கரிலிருந்த ஒரு அறையைக்கூட இட்லர் மறக்கவில்லையாம் ஒவ்வொரு அறையாக சென்று அங்கிருந்தவர்களிடம் நலன் விசாரித்தும் தைரியம் சொல்லியும் திரும்பியிருக்கிறார். ஒருவரும் அன்றிரவு உறங்கவில்லையாம். இட்லரின் மரணத்தை அறிவித்தபோது கோயபெல்ஸையும் அவரது மனைவியையும் தவிர்த்து உணவு விடுதியில் வெகு நேரம் மற்றவர்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். பின்னர் கோயபெல்ஸின் மனைவி அமெரிக்கர்கள் நடத்திய விசாரனையின் போது, இடலரின் தீவிர அபிமானிகளாக இருந்தவர்கள் கொஞ்சங்கூட நாகரீகமின்றி அப்படி நடந்துகொண்டதை வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

ஹைன்ஸிடம் தமக்கு உறக்கம் வரவில்லையென சொல்லியிருக்கிறார். பின்னர் நிம்மதியாய் அனைவரும் உறங்கட்டும், என்றாராம். காலை ஆறுமணி அளவில் பொர்மானுடைய  செயலாளரை அழைத்து தம்முடைய செல்லப்பிராணியான நாய் புளொந்திக்கு விஷம் கொடுத்து கொல்லுமாறு கட்டளையிட, அதை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

காலை சுமார் பத்துமணிக்கு ஹைன்ஸிடம் என்ன நிலமையில் நாடு இருக்கிறதென விசாரித்திருக்கிறார். ஹைன்ஸ் விசாரித்துவிட்டு, “வெள்ளம் தலைக்குமேல் வந்தாயிற்று, ரஷ்யர்கள் எந்த நேரமும் நம்மை கைதுசெய்ய இங்குவரலாம் என்று பதில் கூறியிருக்கிறார். இட்லர் தலையை ஆட்டி அப்படியா என்று கேட்டுக்கொண்டாராம். அங்கே அமர்ந்திருந்த ஆக்ஸ்மான் சட்டென்று எழுந்து, “என்னிடம் தீரமிக்க 200 இளைஞர்களும், ஒரு டாங்கியும் உள்ளது. விரும்பினால் நீங்கள் தப்புவதற்கு ஏற்பாடு செய்வேன் என்றிருக்கிறார்..

“வேண்டாம் அது தேவையற்ற வேலை. நான் இறக்க விரும்புகிறேன்”, என்று இடலரிடமிருந்து பதில் வருகிறது.

சம்பவத்திற்குப் பிறகு ரஷ்யாவில் பதினோறு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த ஹைன்ஸ் விடுதலைக்குப்பிறகு அவரது நண்பர்களிடத்தில், ” உங்களோடு எங்களையும் இறக்க அனுமதிக்கவேண்டுமென்று இட்லரிடம் கேட்டுக்கொண்டதாகவும், தடுத்த இட்லர், “நீங்கள் உயிர்வாழ்வது அவசியம், என்றேனும் ஒருநாள் இன்னுமொரு எஜமானர் ஜெர்மனுக்குத் திரும்பக்கூடும்”, எனப் பதிலிறுத்ததாகவும் கூறியிருந்தார்.

ட்ரோவர்- ரோப்பர் கூறியிருந்ததற்கு மாறாக இறந்த அன்று ·பூயுரெர், ஏவா பிரௌனுடன் மதிய உணவருந்தியதாக லேன்ழ் கூறுகிறார். உணவருந்திய பிறகு நெருங்கிய நண்பர்களிடம் விடைபெற்றுக்கொள்ள வந்தாராம். டாங்கியொன்றினால் கொல்லப்படவிருந்த போர்மன், தமது ஆறு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றபிறகு, தங்களையும் சாகடித்துக்கொண்ட கோயெபெல்ஸ் ஆகியோர் அந்த நெருங்கிய வட்டாரம். கோயெபெல்ஸிடம் மிகவும் மனம் திறந்து இட்லர் பேசியிருக்கிறார். தமது ஆடையிலிருந்த பொன்னாலான சிலுவையை நண்பரின் ஆடையில் குத்திவிட்டு நெகிழ்ந்திருக்கிறார். அடுத்ததாக லேன்ழிடம் வந்த இட்லர் 1935லிருந்து எனது நிழல்போல தொடர்ந்தவன், உன்னை மறக்க முடியுமா என்றாராம். ஏவா பிரௌனும் லேன்ழிடம் விடைபெற்றுக்கொண்டாராம். அவர், தமது சகோதரியைச் சந்திக்கநேர்ந்தால் அவளுடைய கணவரை என் கணவர் ஆணையின் பேரில் சுட நேர்ந்ததென்ற உண்மையை தெரிவிக்கவேண்டாமென்றும் அதனை சோவியத் ராணுவம் செய்ததாகச் தெரிவிக்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். லேன்ழ் அவ்வாறே செய்வதாக கூறினார்.

பிறகு இட்லரும் அவரது புதிய மனைவியுமாக தங்கள் படுக்கை அறைக்குத் திரும்பியுள்ளனர். அவர்களின் வேண்டுகோளின்படி இரு துப்பாக்கிகள் தோட்டாக்களிட்டு கொடுக்கப்பட்டன. “அதிகாலை 3.35க்கு வேட்டு சப்தம் கேட்டது, ஒரே ஒருமுறை. உடனே படுக்கை அரைக்குள் நுழைந்தேன். ·புயூரெர் இட்லர் திவானொன்றில் அமர்ந்திருந்தார். வலப்புறம் தலையில் சுட்டுக்கொண்டிருந்தார். எல்லோரும் சொல்வதுபோல வாயில் சுட்டுக்கொல்லவில்லை. கைத்துப்பாகிக் கீழே கிடந்தது. கீழே விரிப்பில் இரத்தம். அவரருகில் ஒரு சோபாவில் சற்று சாய்ந்து படுத்திருப்பதுபோன்ற நிலையில் ஏவா பிரௌன், அநேகமாக விஷம் குடித்து இறப்பதென்பது அவரது விருப்பமாக இருந்திருக்கவேண்டும்”, என்கிறார் லேன்ழ்.  அவரது கூற்றை வரி பிசகாமல் இறுதிக்காலத்தில் அங்கிருந்தவர்கள் உறுதிபடுத்துகிறார்கள். இட்லரும் அவரது புது மனைவியும் இறந்திருப்பதை நேரில் பார்த்த சாட்சியங்கள்: பொர்மான், கோயெபெல்ஸ், லேன்ழ், கென்ஷ், ஆக்ஸ்மான் ஆகியோர். பின்னர் இச்சம்பவத்தின் சாட்சியாக இருந்தவர்களில் பொர்மான் மற்றும் கோயெபெல்ஸ் தலையெழுத்தை அறிவோம். ஆக இட்லரின் இறப்பு பற்றிய மர்மப்புனைவுகளுக்கு எஞ்சிய மூவர்தான் பொறுப்பாகிறார்கள். அவர்களைத் தவிர வேறு சாட்சியங்களில்லை. ஆக தற்கொலை செய்துகொண்ட இரு உடல்கள் அந்த அரையிலிருந்தன. அடுத்து செய்யவேண்டியதென்ன. ரஷ்யர்களின் கைக்கு உடல்கள்போகக்கூடாது என்பது இட்லரின் கடைசி விருப்பம். அதனை நிறைவேற்றியாகவேண்டும். இரு உடல்களையும் எரிக்க போதுமான மண்ணெண்னெய் வேண்டும். 30ந்தேதி காலையிலேயே தேவையான எண்ணைக்காக முன்னேற்பாட்டுடன் நடந்துகொண்டிருக்கிறார்கள். இட்லரின் மெய்க்காவலர் கெனெஷ் போர்மனிடம், “இரு உடல்களை எரிக்கவேண்டிய வேலை தம்மிடம் ஒப்படைக்கபட்டதாக” , தெரிவித்திருக்கிறார். தொலைபேசியில் இட்லரின் வாகன ஓட்டியான எரிக் கெம்கா என்பவரை அவர் அழைத்து அப்பணியை ஒப்படைத்திருக்கிறார்.

மெய்க்காவலரின் தொலைபேசி வேண்டுகோளுக்கிணங்க 200 லிட்டர் மண்ணெண்னெயுடன்  இட்லரின் வாகன ஓட்டி வந்த போது பிற்பகல் ஆரம்பம். பிறகுதான் இறந்திருப்பது தம் எஜமானரும் அவரது புதிய மனைவியும் என்கிற உண்மையும் அவருக்குத் தெரியவருகிறது. நண்பர்கள் அனைவருமாக சேர்ந்து இரு உடல்களையும் துணியிற்சுற்றி பங்கருக்கு வெளியிலிருந்த தோட்டத்தை அடைந்தபொழுது பெர்லின் குண்டுமழையில் நனைந்துகொண்டிருக்கிறது. மிக மோசமான தாக்குதலுக்கு பெர்லின் உள்ளாகியிருந்தது. பங்க்கரில் அதன்பாதிப்புகள் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்தன. வாயிலுக்கு மிக அருகிலேயே கிடைத்த இடத்தில் உடல்களிரண்டையும் கிடத்தி எண்ணெயை ஊற்றி தீ வைக்கிறார்கள். இட்லர், ஏவா பிரௌன் உடல்களிரண்டும் கொழுந்துவிட்டு எரிந்தபோது, நாம் கூறியிருந்த ஆறுபேரைத்தவிர வேறு சிலரும் சாட்சிகளாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இட்லரின் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள். எரிந்த தீ அடங்கியவுடன் பெரிதாய் எதுவும் உடல்களில் எதுவும் எஞ்சவில்லையென்கிறவர்கள் இவர்களில் உண்டு. லேன்ழ் மீண்டும் இட்லரின் அறைக்குத் திரும்பியிருக்கிறார். எஞ்சியிருந்த இட்லரின் ராணுவ உடைகள், ஏவா பிரௌனின் ஆடைகள் பிறகு தடயமென்று சந்தேகிக்கப்பட்டவை அனைத்தையும் மேலே கொண்டுவந்து எரித்திருக்கிறார்கள். லேன்ழ் உடல்கள் எரிந்ததுபோதாதென்று நினைக்கிறார், இட்லரின் தலை எரிந்திருக்கிறதே தவிர உடலின் பிறபாகங்கள் முழுமையாக எதிர்பார்த்த அளவு எரிக்கப்படவில்லை. Gleitcommando என்கிற படைபிரிவில் ஆறுபேரை அழைத்து இரு உடல்களையும் குண்டுகள் விழுந்துள்ள பள்ளத்தில் ஏதேனும் ஒன்றில் புதைத்துவிடுமாறு கட்டளை பிறப்பித்திருக்கிறார். லேன்ழ் வார்த்தைகளை நம்புவதெனில் இட்லர் உடல்களுக்கு நேர்ந்த இந்த இறுதி தலைவிதியை அவர் நேரில் பார்த்தவரல்ல. அவர் மட்டுமல்ல இறுதியாக இட்லரின் பிணத்தைப்பார்த்த ஆறு பேரில் ஒருவர்கூட இட்லர் உடலையும், ஏவா உடலையும் புதைத்தபோது இருக்கவில்லை.

6.         1946 ஆண்டுவாக்கில் இச்சம்பவம் குறித்து பல்வேறு வதந்திகள்; கெனெஷ் கூற்றின்படி எஞ்சியிருந்த எலும்புகளை ஒரு பெட்டியில்வைத்து சோவியத் வீரர்களின் கண்களிலிருந்து தப்பிக்க புதைக்கப்ட்டதாக கூறினார். இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொண்ட ட் ரோவர் – ரோப்பெர்¢ கருத்துகூற மறுத்துவிட்டார். இடல்ரின் பாதுகாப்பு படையைசேர்ந்தவர்களின் சாட்சியங்களை பதிவு செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். அன்றையதினம் தொடர்ந்து குண்டுதாக்குதல் நிகழ்ந்ததாகவும் எரித்த உடல்களை புதைப்பதற்கென தேடியபோது மாயமாய் மறைந்துவிட்டன எனவும் அச்சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் ஒன்றாம் தேதி நள்ளிரவு சோவியத் படைகள் பங்க்கருக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினார்கள். ஹாரி மங்கெர்ஹௌசென் (Harri Mangerhaussen) என்கிற காவலர் ஒருவரை கைது செய்கிறார்கள். பத்து நாள் விசாரணை. இட்லரோடு தமக்கு எவ்விதத் தொடர்புமில்லையென அவர் மறுக்கிறார். கடைசியில் அவன் தான் கென்ஷ் வாக்குமூலத்தின்படி இட்லர் மற்றும் ஏவா உடலை புதைத்தவனென தெரிய வருகிறது. அவனை  அழைத்துக்கொண்டு புதைத்த இடத்தில் தோண்டினார்கள் ஆனால் உடல்களிரண்டும் கிடைக்கவில்லை.

மேமாத இறுதியில் ஹாரி மங்கெர்ஹௌசென் சோவியத் காவலர்கள் சிறையிலிருந்து விடுவித்து வாகனமொன்றில் ஏற்றிக்கொண்டு பெர்லினுக்கு வெளியே பின்லோ (Finlow) காட்டுபகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு மரத்தலான ஒரு பெட்டியைத் திறந்து அதில் கரிக்கட்டையாகக்கிடந்த மூன்று உடல்களைக் காட்டி அடையாளம் தெரிகிரதா என்றார்கள். பார்க்கும் நிலையில் அங்கு உடல்களில்லை. இருந்தாலும் ஹாரி மங்கெர்ஹௌசென் அவ்வுடல்கள் கோயெபெல்ஸ், அவரது மனவி மக்தா கொயெபெல்ஸ், மற்றும் இட்லருக்குச் சொந்தமானவை என அடையாளப்படுத்துகிறார். மீண்டும் அவரை சிறையில் அடைக்கிறார்கள். பிறகு அவரையிம் சோவியத்திற்குக்கொண்டு சென்று 11 ஆண்டுகள் சிறையில் வைக்கின்றனர். விடுதலைபெற்று அவரால் அறியவந்தவைதான் மேற்கண்ட தகவல்கள். தகவலை நம்புவதா வேண்டாமா என்கிற சந்தேகம் வருகிறது. கடைசியாக அவ்வுடல்களை ரஷ்யர்களுக்கு அவர் அடையாளம் காட்டியதாகவும், உடல்கள் ரஷ்யர்கள் வசமே இருக்கவேண்டுமென்று அவர் சத்தியம் செய்கிறார். இதை வலுப்படுத்த அவரைத் தவிர வேறு சாட்சியங்களில்லை. காரணம் ஸ்டாலின், ஜூர்க்கோவ் போன்றவர்கள் ஹிட்லரின் எஞ்சிய உடலை காணவில்லையென பத்திரிகையாளர்களுக்கு பேட்டிகொடுத்தவர்கள்.

ஆனால் ஹாரி மங்கெர்ஹௌசென் கூற்றை ஏற்கத்தான் வேண்டுமென்று சிலர் சொல்கிறார்கள். காரணம் 1946ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி சோவியத் நிர்வாகம் பிரெஞ்சு அரசாங்கத்தை ஒருமுக்கிய சம்பவத்தின் சாட்சியாக இருக்க மிக நம்பிக்கைக்குரிய ஒரு பிரதிநிதியை தங்கள் வசமிருக்கும் ஜெர்மனுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கிறார்கள். அவர்களும் ஹாரி ரத்னௌ (Henri Rathnau) என்பவரை அனுப்பிவைக்கிறார்கள். ஹார் ரத்னௌவை பிரெஞ்சு அரசாங்கம் அனுப்பிவைத்தது தற்செயலாக நிகழ்ந்ததல்ல. அவரது பூர்வீகம் ஜெர்மன். இனவெறியினரால் தமது எதிர்காலம் பாதிக்கப்படலாமென்று கருதி பிரான்சுநாட்டுக்கு தமது மனவியுடன் வந்தவர் குடியுரிமைபெற்று நிரந்தரமாகவே தங்கிவிட்டார். சோவியத் யூனியன் அழைப்பின்பேரில் அவர்கள் வசமிருந்த ஜெர்மனுக்குசென்ற ஹாரி ரத்னௌ அப்படியென்ன கண்டார்.

7          1946ம் ஆண்டு ஜனவரி 17ந்தேதி நடந்ததென்ன?

கொடுத்திருந்த கெடுவின்படி சரியாக பகல் 12.30க்கு  இட்லர் பதுங்கியிருந்ததாக நம்பப்பட்ட Chancellery என்ற ஜெர்மன் சோஷலிஸ நிர்வாகத்தின் தலைமை கேந்திரமியங்கிய இடத்திற்கு ஹாரி ரத்னௌ வந்திருந்தார். இவரை எதிர்பார்த்து சோவியத் ராணுவ அதிகாரி ஸ்ட்ராகோவ் (Stragov). அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் பிரதிநிதிகளும் வருவார் என்கிறார் ஸ்ட்ராகோவ். அவர்கள் வர தாமத மாகிறது. பொறுமை இழந்தவர்களாக இவர்கள் மட்டும் பணியைக் கவனிப்பதென புறப்பட்டார்கள்.  பிறபகல் 1.15 மணிக்கு ஆரம்பமாயிற்று. அதிகாரிகளுடன் லூக் என்கிற இட்லரின் முன்னாள் காவலர், பிறகு இட்லரின் பல் மருத்துவர் இருவரும் இருந்தனர். மூன்றே கால் மணி அளவில் ஒரு மீட்டர் ஆழத்திற்கு பள்ளத்தை தோண்டியிருந்தார்கள், தோண்டிய இடத்தில் முதலில் ஒரு உடல் மிகவும் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மெண்மணியின் உடலென்பதில் அவர்களுக்குச் சந்தேகமில்லை. இரண்டாவது உடலைப் பரிசோதித்த சோவியத் மருத்துவர்கள் ஓர் ஆணுடல் என்கிறார்கள். பின்னர் இரு உடல்களையும் இடலர் மற்றும் ஏவா பிரௌன் உடல்களென முடிவுக்கு வருகிறார்கள். இச்செய்தியை Paris -Match என்கிற பிரெஞ்சு இதழுக்கு அளித்த பேட்டியில் ஹாரி ரத்னௌ பின்னர் தெரிவித்திருந்தார். ஆனாலும் இந்த உண்மையை 1964வ் ஆண்டுவரை வெளி உலகிற்கு சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கவிரும்பவில்லை. குறிப்பாக ஹாரி ரத்னௌ சோவ்யத் அரசாங்கத்தின் விருப்பத்தின் காரணமாக வாயடைத்திருந்தாலும், பிரான்சும் இந்த விடயத்தில் மௌனம் சாதித்திருந்தது அதிசயம். ரஷ்யர்களின் இசைவின்றி அமெரிக்காவும் பிரிட்டனும் இட்லர் பற்றிய விசாரணையை தொடங்கிய நிலையில் ரஷ்யா தன் இருத்தலையும் மரியாதையையும் காப்பாற்ற வேண்டியிருந்தது. தங்களிடமிருந்த முடிச்சுகளை அத்தனை சுலபமாக அவிழ்க்க அவர்கள் தயாரில்லை. தவிர இட்லரின் உடலை அடையாளப்படுத்துவதில் சிக்கல்களிருந்திருந்தன.  இட்லரின் பல் சிகிச்சை சம்பந்தமான ஆவணங்கள் அவர்களுக்குத் தேவைபட்டன. அச்சிகிச்சைத் தொடர்பானவர்களிடமிருந்து உருதிப்பாடான தகவல்கள் தேவையிருந்த காரணத்தாலும், ரஷ்யர்கள் இட்லரின் உடலை உறுதிப்படுத்த தயங்கியிருக்கிறார்கள்.

ஜூன்மாதம் 9ந்தேதி ஜூக்கோவ் இட்லரின் உடலை அடையாளப்படுத்த முடியவில்லை என்கிறார். ஜூலை 16ந்தேதி போட்சாமில் (Potsam) ஸ்டாலின், இட்லர் அர்ஜெண்ட்டைனாவிலோ ஸ்பெயினிலோ உயிரோடு இருக்கலாமென்கிறார், ஆனால் 1946ம் ஆண்டு 17ந்தேதி அவர்கள் ரத்னௌ என்கிற பிரெஞ்சு அரசாங்கத்தின் பிரதிநிதி முன்னால் இட்லர் உடலை உறுதிபடுத்த முனைகிறார்கள்.  சோவியத் யூனியனுக்குள்ள சங்கடத்தை சோவியத் வசமிருந்த ஜெர்மனை நிர்வகித்துவந்த ரஷ்ய படைத் தலைவர் மூலம் தெளிவாகவே  புரிந்துகொள்கிறோம். இட்லர் பதுங்கியிருந்த பாதாள கோட்டம் வீழ்ந்ததென்று அறியவந்தவுடன் உடனடியாக அவ்வ்விடத்திற்கு ரஷ்ய படைத் தளபதி இவான் க்ளிமான்க்கோ (Ivan Klimenko)  படையுடன் வந்திருக்கிறார். இட்லர் இல்லை. மிகக்கவனமாக தேடியிருக்கிறார்கள். அங்கிருந்த பலரை கைதும் செய்கின்றனர் ஆனால் இட்லரோ கோயபெல்ஸோ என்ன ஆனார்களென தெரியவில்லை. “பிறகு கூடம் வாசலென்று வந்து நிற்கிறார்கள். பங்க்கருக்கு வெகு அருகில் கோயெபெள்ஸ் அவருடைய மனைவி ஆகியோரின் இரு உடல்களும் கிடைக்கின்றன. மே.2 மற்றும் 3 தேதிகளில் க்ளிமான்க்கோ கைதிகளிடம் விசாரணை நடத்துகிறார். ஒரு கைதி மூலம்  முதல் நாள் திருமணம் செய்துகொண்ட மனைவி ஏவாவுடன் இட்லர் தற்கொலை செய்துகொண்ட செய்தி கிடைக்கிறது. அக்கைதியே கொயெபெல்ஸ் அவரது மனைவி , பிள்ளைகள் உடல்களையும் அடையாளம் காட்டுகிறார். தோட்டத்திற்குக் கைதியைக் கொண்டுவந்த இடத்தில் அங்கிருந்த பல பிணங்களுக்கிடையில் இட்லரை வெகுசுலபமாக சுட்டிக்காட்ட முடிகிறது. உடலை உள்ளே கொண்டுவந்தபார்த்தபோது இட்லர் உடலல்லவென்று அவர்களுக்கு புரிந்தது. காரணம் கொண்டுவந்த உடலின் மீசை நரைக்காமலிருந்தது. தேடுதல் வேட்டை தொடர்ந்தது கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு ஓரிடத்தில் இடிபாடுகளுக்கிடையில் இட்லர், ஏவா பிரௌன், சற்று தள்ளி இரண்டு நாய்களின் உடலையும் கண்டெடுத்ததாக முடிக்கிறார் க்ளிமான்க்கோ.

இவருடைய அறிக்கையோடு ஹாரி மங்கெர்ஹௌசென் கூற்றையும் சேர்த்தால் புதிர் அவிழ்ந்துவிடும்.  இவ்வளவு உண்மைகளையும் ஸ்டாலின் தொடக்கத்தில் மறைத்து அவர் உயிரோடிருக்கிறார் என அறிவித்தது ஏன்? உயிரோடு இருக்கிற விலங்கை வேட்டையாடுகிறேனென்றால் உலகம் நம்பும். ஆம் அவருக்கு எஞ்சியிருக்கிற நாஜிகளின் வேரை அறுத்தெடுக்க இட்லர் உயிரோடிருக்கிறார் என்கிற பொய் உதவிற்று. தவிர அமெரிக்காவும் பிரிட்டனும் மாத்திரம் நாஜிகள் விஷயத்தில் தலையிட்டால் எப்படி? அவர்களின் முடிவில் தமக்கு உடன்பாடில்லை என்பதை வெளி உலகிற்கு உணர்த்தவும் இட்லர் பற்றிய மர்மம் சோவியத் நிர்வாகத்திற்குத் தேவைபட்டது.

————————–

 

இசைவானதொரு இந்தியப் பயணம் -7

பிப்ரவரி 7

இன்றாவது சொந்த அலுவல்களைக் கவனிப்பதென்ற தீர்மானமாக இருந்தேன். வீட்டிற்குப் பதில் சொல்லவேண்டுமே. இரண்டு வார இந்தியப் பயணத்திற்காக வீட்டை மறந்துவிடமுடியுமா? பிரெஞ்சு நண்பர்களுக்கு முடிகிறது. நம்மால் ஆவதில்லை. வீட்டிற்குத் திரும்பினால், வெளியுலக பிழைப்பு பற்றிய கவலைகள் கொசுக்கள் போல சுற்றிவரும், ஏதோ வந்தோம் போனோமென்று கொசுக்கள் இருக்காது. நமக்கு அறுசுவை மன்னரே சமைத்தால் கூட ஆறு நாட்களுக்கு மேல் வேண்டாம் சாமி! கொஞ்சம் இரசஞ்சோறு இருந்தால் போடுங்கள் புண்ணியமாய்ப் போகுமென்று சொல்வோம். கொசுக்களுக்களுக்கு அலுக்காது போலிருக்கிறது, எப்படி தொடர்ந்து காரம், உப்பு சப்பற்ற இரத்தத்தை குடிக்கின்றனவோ? இந்தியர் கவலைகளும் கொசுக்கள் இரத்தம் குடிக்கும் வினைமுறை சார்ந்ததுதான். சொல்லப்போனால் அவைகளே தேவலாம். வங்கியில் ஒரு சின்ன வேலை இருந்தது. எனினும் சில நேரங்களில் ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்க நேர்ந்தாலும் அறிமுகமான வங்கி அலுவலர்கள் காணாமற் போய்விடுகிறார்கள். வரிசை இன்றி நீட்டப்படும் கைகளில் உங்கள் கை நீளமாகவோ, உயர்த்தப்படும் தலைகளில் உங்கள் முகம் வங்கி அலுவலரின் கடைக்கண்பார்வைக்கு திருப்திதரக்கூடியதாகவோ இருக்கவேண்டும், இல்லையென்றில் இப்படியொரு பிறவி எடுக்க நேர்ந்ததே என்று வருந்தி வியர்வையைத் துடைத்துக்கொண்டிருக்கவேண்டியதுதான். இந்த வம்பெல்லாம் வேண்டாமென்று நான் போகும்பாதெல்லாம் உள்ளூர் நண்பர்களை துணைக்கு வைத்துக்கொள்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இருவராக நுழைகிறபோது சரி, மூன்று பேராக நுழைகிறபோது தமக்கு துப்பாக்கியும் ஒன்றுதான் மீசையுமொன்றுதான் சாதிபேதமெல்லாம் கிடையாது என்பது போல நின்றிருந்த காவலர் ஆசாமி எங்கள்மீது சந்தேகப் பார்வையை ஓடவிட்டபோது, பணியில் அவருக்குள்ள அக்கறையை புரிந்துகொள்ள முடிந்தது. நண்பர்கள் நாயகர், சுகுமாரன் நானென மூவருமாக மேலாளர் அறைக்குள் நுழைந்து அவர் இந்திச் சாயம் பூசிய ஆங்கிலத்தைப்புரிந்துகொண்டு எனது தேவையை பிரெஞ்சு சாயம் பூசிய ஆங்கிலத்தில் விளக்க, மேலாளர் தமக்குக் கீழ் பணிபுரியும் அலுவலரிடம் விடயத்தைச் சொல்ல அவர் தமக்குக்கீழ் பணிபுரியும் அலுவலரை ஏவ; மேலாளரின் அரைமணியில் காரியம் முடிந்துவிடுமென்ற அளவீடு ஒரு மணியைக் கடந்திருந்தது நாங்கள் வெளியில் வந்தபோது. மீண்டும் மூவருமாக நந்திவர்மன் வீட்டிற்குத் திரும்பினோம். புதுச்சேரி நண்பர்கள் இருவரும் விடைபெற்றுக்கொண்டார்கள்.

நண்பர் நந்திவர்மன் வழிகாட்டலின்பேரில் பிரெஞ்சு நண்பர்களுடன் ‘EFEO’ எனப்படும் L’Ecole française d’Extrême-Orient என்ற நிறுவனத்திற்குச் சென்றோம். பாரீஸ் நகரைத் தலைமைக்கேந்திரமாகக் கொண்டு செயல்படும் இவ் அமைப்பு ஆசிய நாடுகளின் கலை இலக்கியம் பாண்பாடுகள் குறித்து ஆய்வு செய்துவரும் நிறுவனமாகும். இந்தியாவில் புதுச்சேரி, பூனா ஆகிய இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. இது தவிர தனது பெயருக்கேற்ப ஆசிய நாடுகளெங்கும் கிளைகள் பரப்பியுள்ளது: சைகோன், ஆங்க்காங். கோலாலம்பூர், இரங்கூன்..  தூரக்கிழக்கு ஆசியநாடுகளைப் பற்றிய அபிமானிகளுக்கும் அத்துறை சார்ந்து செயல்படும் மூத்த கல்வியாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் நிறுவனத்தின் வழிகாட்டுதலும் துணையும் போற்றுதலுக்குரியது. தொல்பொருள், தொன்ம இலக்கியம் சார்ந்து அரிய நூல்களும் அவ்வப்போது பதிப்பிக்கப்பட்டு வெளிவருகின்றன. இங்குள்ள நூலகம் முக்கியமானது. ஆய்வு மையத்தின் வெளியீடுகளை இங்கே விலைக்கும் பெறலாம். எனது செஞ்சி நாவலுக்கு வேண்டிய சில நூல்களை இங்கிருந்தே பெற்றேன்.
அன்றைய தினம் நாங்கள் சந்தித்த பேராசிரியர்களில் மூவர் முக்கியமானவர்கள்:

1. பேராசிரியர் விஜெயவேணுகோபால்: கல்வெட்டுக்கள், வழிப்பாட்டுவடிவங்கள் சின்னங்கள், ஏடுகள் வாசிப்பு ஆகிய துறைகளில் ஈடுபட்டிருக்கும் அறிஞர். பல ஆய்வு நூல்களின் ஆசிரியர்.  Pondicherry inscriptions part I மற்றும் Pondicherry inscriptions part II  முக்கியமானவை. நூல்கள்.

2. பேராசிரியர் ஏவா வில்டென் (Eva Wilden), EFEO Pondichèry /Hamburg University – ஜெர்மன் நாட்டைசேர்ந்த சங்க நூல்களில் தேர்ச்சி பெற்றவர் குறுந்தொகையை பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்

3. பேராசிரியர் Jean Deloch ஐ இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். ஏற்கனவே எனது செஞ்சி நாவலுக்கான ஆதாரத் தேடலுக்கு அவரது உதவி தேவையாக இருந்தது. அவரைச்சந்திக்க காரணமாக இருந்தவர் திரு நந்திவர்மன். முதல் சந்திப்பில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக புதுச்சேரியில் இருக்கிறேன் என்ற அந்தப் பிரெஞ்சு தமிழரின் கண்களை நேராகச் சந்திக்க கூசினேன். தமிழையும் தமிழர் பண்பாட்டையும் நேசிப்பவர்களெல்லாம் தமிழரெனில் இவருமொரு தமிழர். ஓய்வுக்குப் பிறகும் புதுச்சேரியின் மீதும் தென்னிந்திய அறிவுடமைகளின் மீது கொண்டிருந்த காதலாலும் புதுச்சேரியிலேயே தங்கிவிட்டார். செஞ்சியில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொண்டு செஞ்சி – தமிழர்களின் மிக பாதுகாப்பானதொரு நகரம் (Senji – Ville fortifளூe du pays tamoul) என்ற அரியதொரு நூலை கொண்டுவந்திருக்கிறார். (இந்நூலை EFEO நிறுவனத்தில் வாங்க இருந்தேன் – நாயக்கர் அவரது நூலை இரவலாகக் கொடுத்து என்னை காப்பாற்றினார் – பத்திரமாக ஒப்படைக்க வேண்டுமென்பது இப்போதைய கவலை). இவரது கடும் உழைப்பில் பத்து நூல்களுக்கு மேல் வந்துள்ளன. ஜான் தெலோஷ் உடனான உரையாடல் பிரான்சு -இந்தியாவென ஒப்பீடாக இருந்தது. இந்தியாவை விட்டுக்கொடுக்கவேயில்லை. ஓர் இந்தியர் இந்தியாவின் மீது கொண்டிருக்கிற அபிமானத்திற்கு இம்மியும் குறைந்தல்ல அவரது உணர்வெனச் சொல்லவேண்டும். மூன்று சந்திப்புகளுமே பல நல்ல தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியது.
கடற்கரை அருகில் இருந்த உணவு விடுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு நண்பர்களுடன் பிற்பகல்
ஷாப்பிங். மலிவாக இருந்தனவென்று பருத்தி சட்டைகளை வாங்கினார்கள். இரவு நந்தி வர்மன் ஆனந்தா இன்னில் அவரது நண்பர் வைத்தியநாதனுடன் இணைந்து எங்கள் நால்வருக்கும் விருந்து கொடுத்தார். அறைக்குத் திருப்பியதும் அதுவரை ஆன செலவின் குறிப்பை நண்பர்களுக்கு ஆளுக்கொரு பிரதிகொடுத்த பின்னர் கா·காவின் வழக்கு ( Le Procès) என்ற நூலை மூன்றாவது முறையாக (?) படிக்க ஆரம்பித்தேன்.
—————————————————–

துருக்கி – (அண்ட்டல்யா-கப்படோஸ்-அண்ட்டல்யா) .

வணக்கம் நண்பர்களே,

கடந்த திங்கள் முதல் ஒரு வாரம் எனது மனவியுடன் துருக்கிக்கு வந்திருக்கிறேன். மத்தியதரை கடலிலுள்ள அண்ட்டால்யா(Antalya)வில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு மூன்றுநாட்கள் ஏசியாமைனரிலுள்ள கப்படோஸில்(Cappadoce) இருந்துவிட்டு நேற்று(31மார்ச்) மீண்டும் அண்ட்டாலியா, 3ந்தேதி வரை இங்கிருந்துவிட்டு பாரீஸ் திரும்புகிறோம்சொல்ல நிறைய இருக்கின்றன விரைவில் எழுதுகிறேன்.

கதையல்ல வரலாறு- 4

இட்லரின் பிணம் -(தொடர்ச்சி)

3. ஜெர்மனியை நான்குதிசைகளிலும் நேசப்படைகள் சூழ்ந்து கடுமையான தாக்குதல மேற்கொண்டிருந்தார்கள். சோவியத்படைகள் பெர்லிநுக்குள் நுழைந்திருந்தன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாக தீர்மானித்த நேசப்படைதலைவர்களின் கவனம் முழுக்க இப்போது இட்லரை குறிவைத்திருந்தது. பெர்லின் நகரில் கடுமையான பாதுகாப்பு வளையத்தின் உதவியுடன், எவ்விதத் தாக்குதலையும் தாக்குபிடிக்கக்கூடிய இரும்புப்பெட்டகம்போன்ற ரகசிய அறையொன்றில், சோவியத் படைகளின் தம்மை நெருங்கிக்கொண்டிருக்கும் செய்தியை காதில்வாங்கியவண்ணம் முகத்தில் தோல்வியில் நிழலைத் தவிர்த்து அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு அதிசயம் நடந்து தாம் தப்பிக்கக்கூடும் என்ற நம்பிக்கையும் மனிதருக்கு இருந்திருக்கிறது. கடந்த காலத்தில் பிரஷ்ய நாட்டு மன்னர் பிரெடெரிக்கிற்கு இக்கட்டான நேரம் அவரது தலையெழுத்து அவ்வளவுதான் என நினைத்திருந்த நேரத்தில் அவரது எதிரியான ரஷ்ய பேரரசி எலிசபெத் இறப்பு அவரை மீட்டுத்தந்தது எனலாம். அதுபோன்றதொரு அதிட்டம் தமக்கும் வருமென இட்லர் நினைத்திருந்ததாகவும் அதை தமது நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டதாகவும் சொல்கிறார்கள். அவர் நினைத்ததுபோலவே கோயபெல்ஸ¤ம், போர்மெனும் கையில் ஒரு தந்தியுடன் பாதாள அறைக்கு வரவும் செய்தார்கள். அவர்கள் கையிலிருந்த தந்தி ரூஸ்வெல்ட் இறந்த செய்தியை தெரிவித்திருந்தது.

அவ நம்பிக்கைகொண்ட நண்பர்களே பார்த்தீர்களா? கிடைத்திருக்கும் செய்தி என்னவென்று தெரியுமா? ரூஸ்வெல்ட் இறந்து விட்டாராம்., என்ன நான் சொல்வது காதில் விழுந்ததா? எதிர்பார்த்ததுபோலவே ர்ருஸ்வெல்ட் இறந்திருக்கிறான்! – என மகிழ்ச்சியில் கூற, அங்கே உடனடியாக இறுக்கம் குறைந்து சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்தார்கள். ஷாம்பெய்ன் உடைக்கபட்டிருக்கிறது. அடுத்த வந்த நாட்களில் மனிதர் மீண்டும் பழைய தெம்புடன் மிச்சமிருந்த தளபதிகளுக்கும் அவரது படைகளுக்கும் ஆனை பிறப்பித்திருக்கிறார். முதலாவது தளபதி வென்க் (Wenck) படை. பிறபடைகளின் எஞ்சிய வீரர்களெல்லாம் இப்போது இவரது தலமையில் இருந்தனர். அது தவிர இட்லர்மீது இன்னமும் அபிமானம் வைத்திருந்த இளைஞர்கள், முதல் உலகப்போரில் பணியாற்றிய ஜெர்மானியர்களென பலருமிருந்தனர். பூஸ்ஸெ (Bousse)மற்றொரு தளபதியிடம் 40000பேர் வீரர்கள் இருந்ததாகச் சொல்லப்பட்டது. பின்னவர் நென்க் படையுடன் சேர்ந்துகொண்டார். தாக்குதலை கைவிடவேண்டாம் என்கிறார் இட்லர், ‘பழைய நெனைப்புடா பேராண்டிஎன்ற தொனியில் கட்டளையும் பிறப்பிக்கிறார். ஆனால் தளபதிகள் இருவருமே தங்கள் எஜமானர் கட்டளையை அலட்சியம் செய்கின்றனர். இருவருமே மோதுவதைத் தவிர்த்து குறைந்த பட்சம் இருக்கின்ற தங்கள் வீரர்கள் உயிருக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாதென நினைத்தவர்கள்போல அமெரிக்கர்வசமிருக்கும் ஜெர்மன் எல்லைக்குத் திரும்புகிறார்கள். ரஷ்யர்களிடம் தங்கள் உயிருக்கு உத்தரவாதமிருக்காதென்பதை ஊகித்திருந்தார்கள். பாதாள அறைக்குள்ளிருந்துகொண்டு தமது குரலுக்கு இன்னமும் செவிமடுக்கிறார்களென என நினைத்ததுபோல தொடர்ந்து இட்லரிடமிருந்து ஆணைகள் இவர்களுக்குக் கிடைத்தன. அவர்தான பிறப்பித்தாரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். ஏனெனில் பாதாள அறைக்குள் பதுங்கியிருந்ததாகசொல்லப்பட்ட இட்லர் உலகத்தையே நடுங்கவைத்த பழையவரல்ல. இவர் வேறு.

4. ஜூலை 20, 1944ம் ஆண்டு இட்லர் மீது அவரது கடந்தகால அபிமானிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் தோல்வியை அடைந்ததென்றாலும், அச்சம்பவம் அவரை அரைமனிதராக மாற்றியிருந்ததாகச் சொல்கிறார்கள். வலதுகாலை அசைக்கமுடியாத நிலை. வலது கரமோ எந்நேரமும் நடுங்கிக்கொண்டிருந்தது. முகத்தில் தசைநார்களோ சுருங்குவதும் விரிவதுமாக இருந்திருக்கிறது. தலைவேறு ஆட்டம்போட்டபடி இருந்திருக்கிறது. ஆகமொத்தத்தில் மிகப் பரிதாபமானதொரு நிலை. ஏப்ரல் மாதம் 28ந்தேதி (1945) பெர்லின் ஒரு சில பகுதிகளில் நாஜிப்படையினர் தாக்குப்பிடிக்க முடிந்த இடங்களைத் தவிர்த்து மற்றபகுதிகளில் ரஷ்யர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர்.

பங்க்கர் என அழைக்கப்டும் மிகப்பாதுகாப்பான இட்லர் பதுங்கியிருந்த பாதாளை அறைஇருந்த இடமும் அதனைச்சுற்றியிருந்த ஏனைய பகுதிகளும் பெர்லின் நகரின் பிற பகுதிகளைப்போலவே கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளாயிற்று. அந்த நேரத்தில் அங்கே என்ன நடந்ததென சொல்ல நமக்குக் கிடைத்துள்ள ஒரே ஆதாரம், இட்லருடன் பங்க்கரில் இருக்க நேர்ந்த ராணுவ அதிகார் ஜெரார்ட் போல்ட் (Gerhard Boldt) என்பவர் அளித்துள்ள வாக்குமூலம். மிகத் தெளிவாக அப்பங்க்கரை விவரிக்கிறார் அவர். வெளியில் மனிதர் நடமாட்டங்களின்றி இருந்த அந்த பாதாள் அறைகளில்தான் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், அதிகாரிகளும், முக்கிய நிர்வாகிகளும் இருந்திருக்கின்றனர். உள்ளே நுழைய கடுமையான காவலுடன் ஒளித்துவைக்கப்பட்டதுபோல ஒரு கதவு. அதனைக்கடந்தால். இட்லரின் பிரத்தியேக பாதுகாப்பு படைப்பிரிவைச்சேர்ந்த (S.S. -Schutzstaffel) காவலர் ஒருவர் இருட்டிலிருந்து வெளியில் வருவார். பார்வையாளரில் அத்தாட்சிகளையும், அனுமதிப்பதற்கான உத்தரவையும் மிகக் கவனமாகப் பரிசீலிப்பார். அவருக்கு திருப்தியென்றால் உங்களை உள்ளே அழைத்துச் செல்வார். சுவரைஒட்டி நீள் வரிசையில் ஆயுதம் தாங்கிய காவலர்களைக் கடந்து செல்லவேண்டும். சிலர் புகைபிடித்துக்கொண்டு இருக்கலாம். வேறு சிலர் உரையாடியபடி இருக்கலாம். ஒரு சிலர் நீண்ட நடைகூடங்களில் உறங்குவதையும் பார்க்கலாம். வியக்கும் வைக்கும் விஷயம், அப்பாதாள அறைகளின் இன்னும் கட்டிமுடிக்காதன் அடையாளங்களும் ஆங்காங்கே இருந்தனவென்று போல்ட் தரும் சாட்சியம். இருப்பொனாலான சிறிய கதவுகளை தள்ளித் திறந்துகொண்டு ஐம்பது அல்லது அறுபது சிறிய அறைகளை கடந்து வந்தால் இறுதியாக பத்து வாயில்களைச் சந்திக்கலாம். அவற்றில் மூன்று மீண்டும் திரந்த வெளிக்கு அழைத்துசெல்ல மற்ற்வை பூமிக்குக்கீழே நம்மை வழி நடத்தி அழைத்துபோகுமாம். கீழே மறுபடியும் சிறு சிறு அறைகள். அவ்வறைகள் முழுக்க ரொட்டிகளும், பதனிடப்பட்ட உணவுக் குப்பிகளும் இருக்கும். மீண்டும் அங்கேயும் கூடங்களிலும், அறைகளிலும் ஏராளமான ராணுவவீரர்கள். இறுதியாக மிகக்குறுகிய வாயிலொன்று. அதைக்கடந்து செல்லும்போது கூடமெங்கும் தண்ணீர் தேங்கி நின்றிருந்ததாகச் சொல்கிறார். வெளிச்சமும் சொல்லிக்கொள்ளுபடி அங்கில்லையாம். இறுதியாக ·பூரரின் ஒளிந்திருந்த இடத்திற்குச் செல்ல 37 படிகள் கீழே இறங்கவேண்டுமாம். அங்கே மூன்று வாயில்கள் மூன்று கதவுகள். இங்கிலாந்து அரசால் அனுப்பட்ட ட்ரோவர் கூற்றின்படி முதல் கதவைத் தாண்டிசென்றால் இட்லரின் பிரத்தியேக பணியாளரின் அறை. இரண்டாவது அறை வெளிவிவகாரத்துறை அமைச்சருக்குச் சொந்தமானது. மூன்றாவது வாயில் இரண்டு குடியிருப்புகளுக்கு அழைத்து செல்லும். முதலாவது குடியிருப்பு பன்னிரண்டு மிகச்சிறிய அறைகள். இருபக்கமும் ஆறாறு அரைகளிருக்க இடையில் கூடம். வேண்டாத பொருட்களைவைக்க, இட்மரின் பிறபணியாளர்கள் தங்க, சைவை உணவு தயாரிக்க என்று அவை உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக மத்திய கூடத்தை அடைந்தால் சாப்பிடுதவற்கான அறையாகவும், அனைவருக்கும் மிக ஆபத்தான வேளையில் அடைக்கலம் தரவவும் அது உபயோகத்திலிருந்திருக்கிறது. அங்கிருக்கும் சுழல்படிகளை உபயோகித்தால் இரண்டாவது குடியிருப்பினை நெருங்கியிருப்போம். மிகவும் அகலமாகவும் ஓரளவு வசதிகூடியதாகவும் இருந்த அக்குடியிருப்பில்தான் இட்லரின் இறுதிமூச்சு புழங்கிற்று. சிறியதும் பெரியதுமாக மொத்தம் பதினெட்டு அறைகள் அங்கு இட்லரின் உபயோகத்திலிருந்தன என்கிறார் பேராசிரியர் ட்ரோவர். ஒரு மிகப்பெரிய அறை இரண்டாகப்பிரிக்கபட்டு ஒரு பகுதி இட்லருக்கும் மற்றொன்று பார்வையாளர்களுக்கென்றும் இருந்திருக்கிறது. பிற அறைகள் அன்றாட உயிர் வாழ்க்கை தேவைகள் அவ்வளவையும் நிறைவேற்றும் வகையிலிருந்திருக்கின்றன. தவிர மருத்துவர், செவிலிகள், செல்ல நாய்க்கான அறை, தப்பிக்க வழி என எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு கட்டியிருந்திருக்கின்றனர்.

தளபதி வென்க்கும் அவரது படைகளும் எங்கே போய் தொலைந்தார்களென்ற எரிச்சலில் மீண்டும் ஆணைகள் பிறப்பிக்கபட்டன. கிடைத்த பதில் வென்க் என்ற தளபதியோ அவரின்கீழ் இன்னமும் செயல்படக்கூடுமென்று நம்பப்பட்ட படையோ இல்லை என்பதுதான். ஆக இட்லர் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறார். வார்த்தைகளேதுமில்லை இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் இழந்திருந்த நிலையில் தளர்வுற்று அவரது அறைக்குள் திரும்பியதை மிகுந்த கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்: கோயெபெல்ஸ், போர்மன், மூத்த ராணுவ தளபதிகலுள் ஒருவரான க்ரெப்ஸ் (Krebs). தவிர அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவ்ர்களென நம்பப்பட்ட முன்னாள் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக எதிரிகளிடம் சமரசம் பேச தொடங்கிவிட்டதகவல்களும் வந்து சேருகின்றன. அந்த நேரத்திலும் நம்பிக்கை துரோகிகள் என சந்தேகித்தவர்களை கொலைசெய்யுமாறு ஆனபிறப்பிக்க அவர் தயங்கவில்லை. அப்படி சுடப்பட்டவர்களில் இட்லர் மணந்துகொண்ட நடிகை ஏவா பிரவுன் சகோதரியின் கணவ்ரும் ஒருவர்.

இட்லரின் இறுதிக்காலம் வரை மிக நெருக்கமாக இருந்தவர்கள் என்ற பட்டியலில் இருவர் மிக முக்கியமானவர்கள் ஒருவர் ஏவா பிரவுன், மற்றவர் ¨?ன்ஸ் லின்ழ். இந்த ¨?ன்ஸ் ஒரு ராணுவ அதிகாரி. இட்லரின் அருகிலேயே இருந்தவர். ஏவா பிரவுனை மணப்பதற்கும் அவரே காரணமென்கிறார்கள். அவரது ஆலோசனையின் பேரில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். ஏபரல் 27ந்தேதி ஏவாவை மணக்குமாறு ¨?ன்ஸ் வழங்கிய யோசனையை இட்லர் உடனே ஏற்கவில்லை. ஆனால் மறுநாள் சம்மதித்தார். ஏவா சகோதரியின் கணவர் ·பெகலென் (Fegelein) நம்பிக்கை துரோகியென இட்லரால் குற்றம்சாட்டப்பட்டு அவரது பாதுகாப்புபடையினரால் கொல்லபட்ட மறுநாள் நள்ளிரவில் அதாவது 29ந்தேதி திருமணம். திருமணச் சடங்கினை நடத்த ஏற்பாடு செய்யபட்ட அதிகாரி நாஜிகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இட்லரையும், ஏவாவையும் நீங்கள் ஆரியர்கள்தானே என உறுதிபடுத்திக்கொள்ளவும் தவரவில்லை. மணமக்கள் இருவரும் தாங்கள் ஆரியர்களென உறுதிசெய்தார்கள். அடுத்து சில மணி நேரங்களில் தமது இறுதி விருப்பத்தையும் தமது பெண் செயலர் உதவியுடன் எழுதிகையொப்பமிடுகிறார். முகல் உலப்போருக்குப்பின்பு தமக்கு பிரிட்டனுடனோ அமெரிக்காவுடனோ யுத்தத்தில் இறங்க விருப்பமில்லையென்றும் முழுமுழுக்க யூதர்கள் செய்த சதியென்றும் அதில் குறிப்பிட்டார். இடையில் நடந்து முடிந்த திருமணத்திற்கு எளிமையாக ஒரு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது. அவருடைய நெருங்கிய சகாக்களான கோயெபெல்ஸ், போர்மன், இட்லரின் இளைஞர் பேரவைத் தலைவர் ஆர்தர் ஆக்ஸ்மன், இரண்டு பெண்செயலாளர்கள், ¨?ன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டிருக்கின்றனர். விருந்து முடிந்து நண்பர்கள் கலையும் தருவாயில், ” சோஷலிஸத்தைப் புதைத்தாயிற்று. இழக்கக்கூடாததை இழந்தாயிற்று. இனி நாம் செய்யவேண்டியது கௌரவமாக மரணத்தை தழுவுவதுதான்“, எனக்கூறியபோது நண்பர்கள் அமைதியாக கேட்டுக்கொண்டார்கள்; இட்லரின் பெண்செயலாளர் ப்ரௌ ஜங் மாத்திரம் வாய்விட்டு கதறியபடி அவளுடைய அறைக்குள்சென்று கதவடைத்துக்கொண்டாளாம்.

 

அதிகாலை நான்குமணி, கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பியவர்போல இட்லர் தமது படுக்கைக்குத் திரும்பினார். இனி வாழ்ந்து ஆகப்போவதில்லை என்பதில் அவர் தீர்மானமாக இருந்தாரென்பதை சுற்றியிருந்தவர்கள் புரிந்துகொண்டார்கள். எதுவும் நடக்கலாம் என்கிற நிலமை. படுப்பதற்கு முன்பாக நண்பர்களிடத்தில் வேறொன்றையும் கூறியிருக்கிறார்? இரஷ்யர்களிடம் பிடிபட்டு ஒரு காட்சிப்பொருளாக என்னை அவர்கள் நடத்துவதை தாம் விரும்பவில்லை, என்றாராம். ஆனால் மறுநாள் அவர் நடந்துகொண்ட விதம்தான் வியப்புக்குரியது. அந்த மறுநாள் ஏப்ரல் 29 ந்தேதி. எதுவுமே நடக்காததுபோல வழக்கம்போல அதிகாலையிலேயெ விழித்துக்கொண்டிருக்கிறார். மதியம் வழக்கம்போல தமது நெருங்கிய சகாக்ககளுடன் யுத்த நிலவரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு கூட்டம் இரவு பத்துமணிக்கு நடைபெற்றிருக்கிறது. அக்கூட்டம் நடபெற்றபோது, சோவியத் படைகள் 300 மீட்டர் தூரத்தில் இவர்களை நெருங்கிகொண்டிருந்தார்கள். இரவு பங்கரிலிருந்த எல்லா பெண்களுக்கும் அழைப்பு விடுக்கும்படி தமது மெய்க்காவலரைக்கேட்டுக்கொண்டார். உணவு மண்டபத்தில் செயலர்கள், சமையல் பெண்கள், இதரப்பணிப்பெண்கள் என பெண்கள் அனைவரும் கூடினர். அவர்களோடு வெகுநேரம் உரையாடினார். உரையாடியபோது கண்கலங்கியதாவும் சொல்கிறார்கள்.

(தொடரும்)

இசைவானதொரு இந்தியப்பயணம்-6

பிப்ரவரி-6

காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு கல்லூரி புதுச்சேரி இலாசுபேட்டையில் இருக்கிறது. புதுச்சேரிமக்களும் கல்விநிறுவனங்கள் புதுச்சேரி பல்கலைகழகம் எனத் தொடர்புவைத்துக்கொண்டு பணியாற்றும் நண்பர்களும் அதனை அறிவார்கள்.அங்குள்ள பிரெஞ்சு மொழித் துறையில் நண்பர் வெங்கட சுப்புராய நாயக்கர் என்கிற நாயகர் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பிப்ரவரி ஆறாம் தேதி நண்பரும் அவரது துறைதலைவர் பேராசிரியர் தனியல் ஜெயராஜும் ஓர் ஹைக்கூ பயிற்றரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து எங்களை அழைத்திருந்தார்கள். எங்கள் குழுவிலிருந்த ஆசிரியையான பிரான்சுவாஸ் என்பவருக்கு அவ்வழைப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரணம் அவர் ஆசிரியை என்பது ஒன்று. மற்றொன்று அவருக்கு கவிதையில் ஹைக்கூ வடிவம் மிகவும் பிடித்தமானதென்பது மற்றொன்று. இதனை முதல் நாள் நாயகர் இது குறித்து அவர்களோடு எங்களோடு பேசவந்திருந்தபோதே அறிந்திருந்தேன். அதுவும் தவிர இதுபோன்ற எழுத்து பயிற்றரங்கங்களில் மிகவும் ஈடுபாட்டுடன் பணியாற்றிய முன் அனுபவங்கள் இவ்வழைப்பை ஓர் ஈடுபாட்டுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அவருக்குக் கொடுத்திருந்தன.

காலையிலேயே நண்பர் நந்திவர்மனின் உதவிஉயுடன் ஒரு சிறிய வாகனத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். அதற்கு முன்னால் தமது வீட்டிற்கு வந்தால் அங்கிருந்து பக்கத்திலிருக்கும் அரவிந்தர் ஆஸ்மரத்தின் செயலரை சந்தித்துவிடலாம். அச்சந்திப்பு பிரெஞ்சு நண்பர்களின் பிற்பகல் ஆரோவில் பாரவையிடலுக்கு உதவியாக இருக்குமென்கிற யோசனையை முன்வைத்திருந்தார். எனக்கும் சரி பிரெஞ்சு நண்பர்களுக்கும் சரி வியப்பினை அளித்த விஷயம் அரவிந்தர் ஆஸ்ரமத்தின்மீது மிகக்கடுமையாக விமர்சனங்களை நந்திவர்மன் வைக்கிறபோதும், எவர்க்கும் அஞ்சாமல் தமது எண்ணங்களைத் உள்ளூர் தமிழ் தினசரிகளில் மட்டுமின்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆங்கிலத் தினசரிகளில் எழுதுகிறபோதும் அதையும் தவறாமல் அந்நிறுவனத்தைச் சேர்ந்த பிரமுகர்களும் காரியதரிசிகளும் வாசிக்கிற நேர்கிறபோதும் எப்படி இரு தரப்பினரும் சுமுகமாக காய்த்தல் உவத்தலின்றி உறவாடமுடிகிறதென்பதுதான். அதை எனது நண்பர்கள் ஆஸ்ரமத்தின் காரியதரிசியிடம் கேட்கவும் செய்தார்கள். அவர் ‘Lui, C’est un bon bandit’ என வேடிக்கையாகக் கூறினார். பின்னர் அதனை விளக்க முற்பட்டவர்போல “எங்களுக்குள் முரண்கள் இருந்தாலும் நாங்களிருவரும் நல்ல நண்பர்கள் என்றார். தமது எதிரிகள்கூட பாராட்டும் குணத்தை நந்திவர்மன் பெற்றிருந்தார் என்பதை இங்கே  கட்டாயம் பதிவு செய்யவேண்டும். ஆஸ்ரம செயலரிடம் அவர்கள் கல்வி முறை, அக்கல்விமுறையில் பிரெஞ்சு மொழிக்குள்ள பங்கு, அவர்கள் அமைப்புக்குள் வரவிரும்புகின்றவர்களிடம் அவர்களின் எதிர்பார்ப்புகளென பல்வகைப்பட்டப் பொருள்களில் நீண்ட எங்கள் உரையாடல் முடிவுக்குவந்தபோது காலை 9.30. பத்துமணிக்கு நாங்கள் நாயகர் கல்லூரியில் இருக்கவேண்டுமென்பதால் விடைபெற்றுக்கொள்ள் வேண்டியதிருந்தது. எங்கள் வாகனம் சரியான நேரத்திற்கு வந்ததும் எங்கள் உரையாடல் துண்டிக்கப்பட ஒருகாரணம்.

எங்கள் வாகன ஓட்டி நாங்கள் செல்லவேண்டியது புதுச்சேரி பல்கலைக் கழகமென தவறாக புரிந்துகொண்டிருந்தார். நாயக்கருடனான தொலைபேசி உரையாடல் காலாபட்டிற்கு என்றிருந்த எங்கள் திசையை இலாசுபேட்டைக்கு மாற்றஉதவியது. நாயக்கர் பத்துமணியென ஹைக்கூ பயிற்றரங்கத்திற்கான நேரத்தை ஒதுக்கியிருந்ததால் ஐந்து நிமிட தாமதத்தை பிரெஞ்சு நண்பர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ஆக பதற்றத்துடன் கல்லூரியில்நுழைந்தோம். நுழைவாயிலிலேயே மாணவர்கள் இருவர் எங்களை எதிர்பார்த்தவாறு இருந்ததால் கூடுதல் தாமதம் தவிர்க்கப்பட்டது. தங்கள் இயக்குனர் வந்தால் நிகழ்ச்சியை தொடங்கிவிடலாமெனக்கூறி திரு தனியல் ஜெயராஜ் சொன்னார். பிரெஞ்சு மொழித்துறையின் அலுவலகத்தில் காத்திருக்கவேண்டியிருந்தது. இந்த இடைபட்டநேரத்தில் எங்களுக்கு இனிப்பு, காரம், தேனிரென உபசரிப்பிற்கும் குறைவில்லை.

நிகழ்ச்சி தொடங்க 10.40 ஆகியிருந்தது. சுமார் முப்பது மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர் துறை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார். எங்களைஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்தினார்கள். கல்லூரி இயக்குனரின் உரைக்குப்பிறகு பொன்னாடை, நினைவுப்பரிசுகளென இந்தியச்சடங்குகள் அரங்கேறின. பிரெஞ்சு நண்பர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் புதிது. அவர்கள் முகத்த்தில் இதுவரை கண்டிராத மகிழ்ச்சி. பயிற்றரங்கத்தின் பார்வையாளர்களாக உள்ளூர் இலக்கிய நண்பர்கள் சீனு தமிழ்மணி, பக்தவச்சலம் ஆகியோர் வந்திருந்தனர். நண்பர் சீனு தமிழ்மணி நாயகர்,தேவமந்தன் ஆகியோரால் எனக்கு அறிமுகமானவர். புதுச்சேரியில் தீவிர நவீன தமிழிலக்கிய வாதிகளுக்கு நன்கு பழக்கப்பட்ட பெயர். ‘இலக்கியம்’ என்ற பெயரில் ஒரு புத்தககடையை குயவர்பாளையத்தில் நடத்துகிறார். ஹைக்கூவின் தமிழ் வடிவமான துளிப்பா அபிமானி. அவரது குடும்பமே கவிஞர்கள் குடும்பமெனில் மிகையில்லை. மற்றொரு நண்பரான பக்தவச்சலம் அண்மைக்காலம்வரை பிரான்சு நாட்டில் வாழ்ந்துவிட்டு இப்பொழுது புதுச்சேரியில் வசிக்கிறார். தமிழ் பிரெஞ்சு இரண்டிலும் ஆழ்ந்த ஞானமுடையவர், சைவை சித்தாங்களின் தீவிர அபிமானி, அவற்றின் மொழிபெயர்ப்பில் தீவிரமாக இறங்கியுள்ளார். புதுச்சேரி அரசு இவர்களைப் போன்றவர்களுக்கு உதவலாம். இது குறித்துத் தனியாக எழுதவேண்டும்.. நிகழ்ச்சியின் மையக் கருவினைத் தொட்டிருந்தபோது பதினோருமணி ஆகியிருந்தது. பிரான்சுவாஸ் உற்சாகமடைந்து கையில் சாக்பீஸை எடுத்துக்கொண்டு மீண்டும் ஆசிரியபணிக்குத் திரும்பியிருந்தார். ஹைக்கூவின் இலக்கணத்தை விளக்கினார். மாணவர்களைக்காட்டிலும் அன்றைக்கு ஹைக்கூவின் உற்சாகத்தைக் காட்டியவர்கள் நால்வர் ஒருவர் பிரான்சுவாஸின் கணவர் பிரான்சிஸ் மனெ,மற்றொரு நண்பர் சவியெ தெபெல், பக்தவச்சலம், நான்காவதாக வகுப்பெடுத்த பிரான்சுவாஸ். எனக்கதில் ஆர்வமில்லை. பொதுவாக இலக்கியத்திற்கு பெரும்பலானாவர்களைப்போலவே வடிவம், விதிகள் இலக்கணங்களென்கிற தளைகள் கூடாதென்பதென் கட்சி. மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு Hiver – Winter – குளிர்காலம். Hiver என்ற பிரெஞ்சு சொல்லை குளிர்காலம் என்று மொழிபெயர்த்துவிடலாம். ஆனால் பண்பாடு, புவியியல் நோக்கில், உணர்வில் குளிரும் winterம் ஒன்றல்ல. வந்திருந்த மாணவர்கள் தமிழ்நிலப்பரப்பைச் சார்ந்தவர்கள் என்பதால அவர்கள் ஹைக்கூவில் மார்கழி இடம்பெறுமென்ற எனது நம்பிக்கை பொய்த்துபோனதில் எனக்கு ஏமாற்றம். ஒரு குழுவிற்கு ஐந்து மாணவ மாணவிகள் வீதம் ஆறுகுழுக்களாகப் பிரிக்கபட்டு, கவிதைகள் முயற்சிக்கப்பட்டன. பெரும்ம்பாலான மாணவர்கள் தொடக்கத்தில் குழம்பினாலும் பின்னர் ஆர்வத்துடன் எழுதினார்கள். ஒப்பேற்றிய புனைவுகள், பிறழ்வான சொற்கள் எனவிருந்தாலும் ஓரளவு ஹைக்கூ இலக்கணத்தை புரிந்துகொண்டவைகளாகவே அக்கவிதைகளிருந்தன. ஒரு சில மாணவர்களின் கவிதைகள் கூடுதலாகவே எங்களைக் கவர அனைவருக்கும் உண்மையில்மகிழ்ச்சி. இப்பயிற்சி அரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்த பிரெஞ்சு மொழித்துறையை எவ்வளவு பாராத்தினாலும் தகும்.

பயிற்றரங்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் கும்பலாக நின்று நிழற்படமெடுத்த்துக்கொண்டோம். பிரெஞ்சு நண்பர்கள் ஆரோவில்லை பார்ப்பதற்காக காரில் விடைபெற்றார்கள். பயிற்றரங்கில் கலந்து கொண்ட மாணவமாணவிகளுக்குப் உள்ளூர் கட்சி அரசியல் நடத்துபவர்களின் பாணியில் பிரியானி பொட்டலங்களை வழங்கினார்கள். எங்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. நண்பர் நாயகர் அவரது வீட்டிற்கு அழைத்த்திருந்தார். திருவாளர் பக்தவச்சலம் நாயகர் மூவருமாக மதிய உணவை அங்கேதான் உண்டோம்.  நாயகருடன் எப்பொது பேசினாலும் நேரம் போதாது. வேடிக்கையாக உரையாடக்கூடியவர். அவரே என்னைபுதுச்சேரியில் உரிய இடத்தில் கொண்டுபோய் சேர்த்தார். எனது அறையில் உறவினர் மணிவண்ணன் எனக்காகக் காத்திருந்தார். பிரெஞ்சு நண்பரகள் ஆரோவில் பார்க்கப்போனது எனக்கு வசதியாகப்போயிற்று. எனது மனைவி தரப்பு உறவினர்கள் ‘வானவில்’ நகர் என்ற இடத்தில் இருக்கிறார்கள். தாம்பரத்திலிருந்த வந்திருந்த உறவினர் மணிவண்ணனுக்கும் அவர்கள் உறவினரென்பதால் இருவருமாக அங்கே சென்றோம். நண்பர்களின்றி இருந்ததால் இரவு உணவை அடையாறு ஆனந்தபவனில் நான்கு நாட்களுக்குப்பிறகு எனக்காகசாப்பிட்டேன்.
————————————————————————————————