மொழிவது சுகம் ஜூன் 27 -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -2:-

உரையாடல் அல்லது அளவலாவல் (Discours)

வெகுசன வழக்கில் Discours என்ற பிரெஞ்சு சொல் ‘மேடைப் பேச்சு’ என்ற பொருளில் இன்றும் பொதுவாக வழங்கப்படுகிறது. செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் ‘Discours என்ற சொல்லுக்கு முக்கியப்பேச்சு என்றே பொதுவில் பிரெஞ்சு மக்கள் பொருள்கொள்கிறார்கள். நவீன இலக்கியம் என்றைக்கு மொழியியலின் பார்வைக்கு உட்பட்டதோ அன்றையதொடக்கம் ‘ Analyse de discours’ அல்லது ‘உரையாடல் ஆய்வு’ இன்றியமையாததொரு பார்வையாக, குறிப்பாக திறனாய்வாளர்களுக்கு இருந்து வருகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியும் தமது படைப்பு Analyse de discours’ தேர்வில் ஜெயிக்கவேண்டுமென நினைத்து படைப்பதில்லை. Discours சொல் தொடக்கக்காலத்தில் ஆங்கில மொழி உலகில் ஒரு பொருளிலும், பிரெஞ்சு மொழி உலகில் ஒரு பொருளிலும், இருந்து வந்தபோதிலும் இன்று படைப்பொன்றை அளக்கும் கருவியாகப் பொதுவில் திறனாய்வாளர்கள் -எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். Analyse de discours புனைவை ஒருபடித்தான பரிசீலனைக்கு உட்படுத்துவதில்லை. மாறாக ஓர் புனைவின் உரையாடலை முன்வைத்து நிகழ்த்தப்படும் வெவ்வேறுவிதமான ஆய்வுகளும் எழுப்பப்படும் விவாதங்களும் அனைத்துமே இதிலடங்கும்.

 

இரண்டு உலகயுத்தங்களின் முடிவில், யுத்தகாலத்தில் நடைபெற்ற செய்தி பரிமாற்றங்கள், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் இடம்பிடித்த செய்திகளின் தன்மை, மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய அவற்றின் பிரச்சார உத்திகள் பற்றிய ஓர் ஆய்வினை அலெரிக்க தகவல் மற்றும் கருத்து பரிமாற்ற துறை, இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் மேற்கொண்டது. இம்முயற்சி உரையாடல் ஆய்வின் கீழ் (‘Analyse de discours’) வந்தது. 1960களில் கணினித் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி இதற்குப் பெரிதும் உதவியது. சொற்கள் சார்ந்த பல்வேறுகோட்பாடுகளை அளவிட தொழில்நுட்ப செயல் முறைகளும் உதவின. இவற்றோடு குறியியலும் இணைந்து கொள்ள மெல்ல மெல்ல Discours குறித்த நுண்மைகள் கவனத்திற்கும் ஆய்வுக்கும் உரியவை ஆயின.

 

பிரெஞ்சுக்காரகள் எதிலும் தங்களுடைய அடையாளத்தை காணவிரும்புகிறவர்கள். ‘A la Française’ (பிரெஞ்சுப் பாணி )எனப் பெருமிதமாக கூறிகொள்பவர்கள்.  அப்படியொரு அடையாளத்தை வலியுறுத்த அறுபதுகளில் ‘Ecole Française d’analyse du discours” என்கிற ஓர் அமைப்பு மிஷெல் பெஷொ(Michel Pêcheux என்பவரின் கீழ் இயங்கிவந்தது. அவ்வமைப்பு அரசியல் உரைகளை மொழியியல் கட்டமைப்பின் கீழ் ஆய்வுக்கு உட்படுத்தியது.  தனித்ததொரு அடையாளத்தை Discoursக்குத் தந்த மெய்யியல் அறிஞர் மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault).. மனிதர்களின் உரையாடல் அவர்களின் சமூகத்தால் கட்டமைக்கப்படுகிறது, என்றார்.

 

மிக்காயெல் பக்தின் (Mikhail Bakhtin) என்ற ரஷய அறிஞருக்கு உரையாடல் பரிமாற்றத்தில், ஒரு புறம் பிரதான கதைசொல்லி இன்னொரு புறம் பிற கதைமாந்தர்கள். இவ்விரு பிரிவினரின் தனித்தனிப் பேச்சு அல்லது இவர்களுக்கிடையேயான பொதுவானப் பேச்சு ‘Discours’ ஆகிறது.

 

Analyse de discours’ இலக்கிய உரையாடலை (discours) மொழியின் செயல்பாடாகக் காண்கிறது. இரு தரப்பினருக்கிடையே நிகழும் கருத்து பரி மாற்றம் உரையாடலில் பங்குகொள்ளும் மனிதர்களின் சமூகம் மற்றும் வாழ்வியல் படிநிலைகள் சார்ந்தது. ஒரு மனிதனின் இயல்பை வார்த்தைகளாக வெளிப்படுத்துகிற இச்செயல் ஒரு சமூக அமைப்பில் அவனுக்குள்ள இடத்தை தீர்மானிக்க உதவும்.

 

ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது

பிரான்சு நாட்டின் தேசிய நூலகங்களுடனான சந்திப்பு இம்முறை லீல் (Lille) நகரில் இருநாட்கள் நடந்தது. இதனை முன்னிட்டு தமக்குக் கவலை அளிப்பதாகக் கூறி பிரெஞ்சு கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்  உண்மையில் நமக்குத்தான் கவலையை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆணடைக்காட்டிலும் புத்த்கவிற்பனையில் அதிகம் பின்னடைவு இல்லையாம் ( 2013 -0,6%: 2014 -07%). எனினும் வெளிவந்த புத்தகங்களின் தலைப்புகள் எண்ணிக்கை 80255.

 

51% பிரெஞ்சு மக்கள் வருடத்திற்கு ஒரு புதிய புத்தகமும், 10% பிரெஞ்சு மக்கள் வருடத்திற்கு ஒரு பழைய புத்தகமும், 3% மக்கள் வருடத்திற்கு ஒரு டிஜிட்டல் புத்தகமும் வாங்குவதாக அந்த அறிக்கைத் தெரிவிக்கிறது. கூடுதலாக ஒரு கொசுறு செய்தி. 2014ல் வெளிவந்த மொத்த நாவல்களின் எண்ணிக்கை 547 இதில் மொழிபெயர்ப்பு நாவல்கள் 195, பிரெஞ்சு நாவல்கள் 352. இந்தியில் கூட இவ்வளவு மொழிபெயர்ப்புகளும், சொந்த மொழி நாவல்களும் வந்திருக்குமா என்பது சந்தேகமாக இருகிகிறது.

———-


‘.

மொழிவது சுகம் ஜூன் 20 2015

அ. இலக்கிய சொல்லாடல்கள்

1. அபத்தம்

அபத்தம் அல்லது l’absurde என்ற பிரெஞ்சு சொல்லை பிரெஞ்சு படைப்பாளியும் சிந்தனாவாதியுமான அல்பெர் கமுய் தன்னுடைய The Myth of Sisyphus (1942) என்ற நூலில் மெய்யியல் சிந்தனையாக வைத்திருந்தார். இச்சிந்தனை உலகின் நிச்சயமின்மையைக் கவனத்திற்கொண்டு உருவானது. அபத்தமும், நிச்சயமின்மையும் ‘மரத்தை மறைத்தது மாமத யானை’ குணத்தைக்கொண்ட சிந்தனைகள். ழான் போல் சார்த்த்ருவை பொறுத்தவரை தம்மைப் பெரிதும் ‘நிச்சயமின்மை’ சிந்தனையோடு (Being and Nothingness(1943) இணைத்துக்கொண்டு செயல்பட்டவர். எனினும் ‘அபத்தம்’ என்ற சொல்லை முன்பே சார்த்த்ருவும் அவருடைய இலக்கிய பங்காளி ‘அல்பெர் கமுய்’ யும் அவரவர் படைப்புகளில் கையாண்டிருக்கிரார்கள். சார்த்த்ரு எழுதிய ‘Nausea’ (1938) நாவலிலும், அல்பெர் கமுய் எழுதிய ‘The Stranger'(1942) நாவலிலும் ‘அபத்தம்’ என்ற சொல்லாடல் வருகிறது. ‘அல்பெர் கமுய்’ யைப் பொறுத்தவரை ‘உலக நடப்போடு ஒட்டி ஒழுகாதது, நம்பிக்கைகளை ஒட்டுமொத்தமாக மறுத்தல், விளையும் கசப்புணர்வு அனைத்தும் ‘அபத்தம்’. இவர்கள் இருவரின் நாவல்களில் இடம்பெறும் கதைமாந்தர்களை மேற்குலகில் வேறுசில படைப்பாளிகளின் எழுத்திலும் காணமுடிகிறதென்றாலும், பரிவை நிராகரிக்கிற விரக்தி மனநிலை; சமூகத்துடன் ஒட்டுதலின்மை அதன் அபத்தங்களை அடையாளப்படுத்தியும், அவற்றுக்கு மாற்றாக உலக இயல்பிற்கு பொருந்தாத (தன்னிலிருந்தே தன்னைப் பகிஷ்கரித்துக்கொள்கிற) சமயம், வரலாறு இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டதொரு சிந்தனையை இட்டு நிரப்புதல் என்கிற புதிய தேடலுடன் அபத்தம் கையாளப்படுவது இவர்களிடம் மட்டுமே நிகழ்கிறது.

சார்த்ருவின் ‘Nausea’ கதை நாயகன் Antoin Roquentin ஓர் அதிசயமான உயிரி, கடந்த காலத்திலிருந்து பறிக்கப்பட்டவன், இருத்தலில் மட்டுமே விழிக்க நேர்ந்தவன், இழந்த காலத்தை திரும்பவும் சந்திக்க வாய்ப்புகளற்றவன், இனி அவனுக்கும் அவனைக் கட்டமைத்த சாரத்திற்கும் (essence) எவ்வித பந்தமுமில்லை, எல்லாம் முடிந்தது. அல்பெர் கமுய் படைக்கும் மாந்தர்கள் எவ்வித கடப்பாடுமின்றி இருத்தலை தொடர்பவர்கள்; தற்காப்பற்ற காரியங்களில் இறங்குபவர்கள்; ஆதியந்தமில்லாத, கடவுளைக் காணமுடியாத ஓர் உலகில் துணிந்து காரியம் ஆற்றக்கூடியவ்ர்கள். அபத்தம் என்பதே அர்த்தத்தை, பொருளை, நியாயத்தைக் கேள்விக்குட்படுத்துவது. ஆக மொழிக்குறித்த நமது பார்வையையே புரட்டிப்போடுகிறது. சொல்லப்போனால் அபத்தம் என்பது “ஏதோ ஒன்று” அர்த்தத்தை இழந்து சக்கையாகிப்போவதால் உருவாவது அல்ல, அந்த ஏதோ ஒன்றை தேடுகிறபோது அதனைக் கண்டடைய முடியாமற்போகிற நமது இயலாமையால் உருவாவது.

 

ஆ. பிரான்சில் என்ன நடக்கிறது?

வால்ஸ் கேட்:

பிரான்சு நாட்டில் நடப்பது அதிபர் ஆட்சி, இரண்டு கட்டகளாக நடக்கும் அதிபர் தேர்தலில் பிரெஞ்சு குடியுரிமைப் பெற்ற்வர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு ஐந்தாண்டுக்கு ஒரு முறை (அண்மைக்காலம் வரை ஏழு ஆண்டுகளாக இருந்தது) , அதிபரை நேரடி தேர்வுமுறையில் முடிவு செய்கிறார்கள். சோஷலிஸ்டு கட்சியைச் சேர்ந்த பிரான்சுவா ஹொலாந்து (François Hollande) தற்போதைய அதிபர். இவருடைய கட்சியில் அதிபராக வருவதற்குரிய வாய்ப்பினைப் பெற்றிருந்த நபர் பாலியல் வழக்கில் சிக்கிக்கொள்ள அதிர்ஷ்ட்டம் இவரைத் தேடிவந்தது. கட்சியின் உட்கட்டதேர்தலில் அதிபர் வேட்பாளர்களாக எதிரெதிராக நின்றவர்கள்தான் ஹொலாந்தும், மனுவல் வால்ஸ¤ம்(Manuel Valls): முன்னவர் அதிபர், பின்னவர் பிரதமர்.

ஹொலாந்து பெரும்பான்மை மக்களின் வாக்கின்படி 2012ல் அதிபரானார். இவர் மக்களால் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. பிற நாடுகளில் நடப்பதைப்போலவே இவருக்கு முன்பு அதிபராகவிருந்த நிக்கோலா சர்க்கோசியின் எதிர்ப்புவாக்குகள் ஹொலாந்துவை அதிபராகத் தேர்வு செய்ய காரணமாயின. இவரும் பிற அரசியல்வாதிகளைப் போலவே வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். அதிபர் ஆட்சி வழக்கத்தின்படி தமது கொள்கைகளை (?) நிறைவேற்ற பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் அணியிலிருந்து தமக்கிசைவான ஒருவரை பிரதமராக அதிபர் தேர்ந்தெடுப்பார். பிரதமர் தமது அமைச்சரவை சகாக்களை, அதிபரின் ஒப்புதலுடன் தேர்வு செய்வார். அதன்படி ஹொலாந்து அதிபர் தேர்தலில் வென்றதும் தனது கட்சியைச்சேர்ந்த ழான் ழாக் அய்ரோ (Jean-Marc Ayrault) என்பவரை பிரதமர் ஆக்கினார். 2014 மார்ச்வரை வண்டி ஓடியது. மக்களிடத்தில் அதிருப்தி பெருகியது சமாளிக்க அய்ரோவை நீக்கிவிட்டு, அப்போதைய உள் துறை அமைச்சர் மனுவல் வால்ஸை பிரதமராக்கினார்.

தற்போதையை கணிப்பின் படி பிரெஞ்சு மக்களுக்கு அதிபர் மற்றும் அவரது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. நாட்டின் எந்தவொரு அதிபரும் இதுநாள்வரை இப்படியொரு நம்பிக்கை இழப்பை எதிர்கொள்ளவில்லையென பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சோஷலிஸ்டுகளுக்கு ஆதரவாக நிற்கிற இடதுசாரிகள்கூட ஹொலாந்தும் அவரது வழிகாட்டுதலில் நடக்கிற பிரதமர் ‘வால்சு’வினுடைய அமைச்சும் இடதுசாரிகொள்கைகளை கைவிட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர் . ஆளும் கட்சியினரின் ஒரு பிரிவினரும் (இதில் முன்னாள் அமைச்சர்களும் அடக்கம்) இவர்களின் நடவடிக்கையை எதிர்ப்பதுதான் அதிபருக்குக் கூடுதல் தலைவலி. இந்நிலையில் தான் ‘வால்ஸ் கேட்’ பிரச்சினை கடந்த இரண்டுவாரங்களாக பிரெஞ்சு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டு அடங்கியது.

நான்காண்டுகளுக்கொருமுறை நடக்கும் ஐரோப்பிய காற்பந்தாட்டக் கோப்பைக்கான போட்டி இம்முறை 2016 ம் ஆண்டு பிரான்சு நாட்டில் நடக்க உள்ளது இது சம்பந்தமாக பேச பிரதமர் வால்ஸ் ஐரோப்பிய நாடுகளின் காற்பந்தாட்ட அமைப்பின் (UEFA) தலைவரைக்காண (ஜூன் மாதம் 6ந்தேதி சனிக்கிழமை) பெர்லின் சென்றார். இதற்கு அரசாங்கத்தின் விமானத்தை உபயோகிக்க வேண்டியிருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இதில் எவ்விதக் குற்றமும் இல்லை என்பதுபோலத்தோன்றும். ஆனால் எதிர்கட்சிகளும், பத்திரிகையாளர்களில் பெரும்பாலோரும், இடதுசாரிகளில் சிலர் உட்பட பிரதமரின் இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணமிருக்கிறது.

முதலாவது காரணம் இதற்காக வால்ஸ் பெர்லின் செல்லவேண்டியதில்லை. பாரீஸிலேயே பிரதமர் நினைத்திருந்தால் UEFA தலைவரை சந்தித்திருக்க முடியும். UEFA தலைவர் மிஷெல் பிளாட்டினி பிரான்சு நாட்டின் முன்னாள் காற்பந்தாட்ட வீரர், அழைத்திருந்தால் பிரதமர் அலுவலகத்திற்கே வந்து அவரைச் சந்தித்திருப்பார். அன்றைய தினம் ஐரோப்பிய லீக் சாம்பியன் பெர்லினில் நடந்தததும் அதில் மோதிய இரு அணிகளில் ஒன்று ஸ்பெயின் நாட்டைசேர்ந்த பார்சலோனா என்பதும் ( பிரான்சு பிரதமர் மனுவல் வால்ஸ் பிறப்பால் ஸ்பெயின் நாட்டவர், குறிப்பாக பார்சலோனாவில் பிறந்தவர்) பார்சலோனா காற்பந்தாட்ட சங்கத்தின் பரம ரசிகர் என்பதும் கூடுதல் செய்திகள். பிரதமர் UEFA தலைவரைக் காணத்தான் சென்றார், ஐரோப்பிய லீக் இறுதிப்போட்டியைக் காண நேர்ந்தது தற்செயலாக நிகழ்ந்தது என்பதை எவரும் நம்பத் தயாரில்லை, ஏனெனில் பிதமருடன் அவருடைய பிள்ளைகளும் ( இந்தியாவில் அதிபர், பிரதமருடன் அவருடன் தூரத்து உறவுகளெல்லாங்கூட அரசாங்க செலவில் பயணம் மேற்கொள்வது தப்பே இல்லை) லீக் போட்டியைக் காணச்சென்றிருக்கிறார்கள். பிரத்மர் வால்ஸ் ஏதேதோ காரணத்தைக் கூறி சமாளித்துப் பார்த்தார், எதிரான விமசனங்கள் குறைந்தபாடில்லை. இதுவரை காணாதவகையில் இடதுசாரி அரசின் மீது மக்களின் நம்பிக்கை சரிந்திருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்க வேறுவழியின்றி தம் பிள்ளைகளின் பயணச்செலவை (தன்னுடையதை அல்ல) அரசாங்க கஜானாவிற்குத் திருப்பி அளிப்பதாகக் கூறியிருக்கிறார். ஒருவாரத்திற்குப்பிறகு அவரது வீம்பைக் குறைத்துக்கொண்டிருந்தாலும் சோஷலிஸ்டுகள் அடுத்தமுறை ஆட்சியை பிடிப்பது கடினம்தான் என்கிறார்கள்.

——————–

அண்மையில் வெளிவந்த கா•ப்காவின் நாய்க்குட்டி (நாவல்) முதல் அத்தியாயம்)

பிராஹா, செக் குடியரசு: 2013, ஏப்ரல், 6 சனிக்கிழமை

 

 

நோக்கமற்ற தேடுதல் இருக்கிறதா? அல்லது தேடுதல் இல்லாத மனிதர்கள் உண்டா? கண்ணுக்கெட்டியவரை மனிதர்கள் – ஒவ்வொரு நாளும் ஒன்றைத் தேடிக்கொண்டிருப்பவர்கள். உடமையாக்கிக்கொண்ட பிறகு, திருப்தியுறாமல் வேறொன்றைத் தேடுவார்கள். கண்டறிய வேண்டிய பொருள் அல்லது கைக்கு எட்டவேண்டிய பொருள் இவர்களுக்கோ, இவர்களின் சுற்றத்திற்கோ சில கணமேனும் மகிழ்ச்சிதரக்கூடியதென்கிற கனவில் பதட்டத்துடன் அலைபவர்கள். தேடும் இக்கணம்வரை கண்ணிற்படாமலேயே கைக்கு எட்டாமலேயே, பொருள் ஒளிந்து விளையாடலாம். அல்லது சற்று முன்பாக குழந்தையின் சிறுபொம்மைபோல அது கைநழுவி மேசைக்கு அடியிலோ, சோபாவிற்குக் கீழேயோ விழுந்து கிடக்கலாம். தன்னைக்கொண்டாடிய குழந்தையின் அரவணைப்பிற்காக பொம்மைக்கும் ஏக்கங்கள் உண்டு, தணியுமா என்பதைக் காலம் தீர்மானிக்கவேண்டும். அதுவரை குழந்தை தேடும், தேவையெனில் பெற்றோர்களும் தேடலாம். தேடும் பொருள் எப்பொழுதும் நமது பார்வை பரப்பிற்கு வெளியிலிருக்கிறது. இருள் விலகி பொழுது புலர்ந்து தேடலை எளிதாக்கலாம். வயதுக்குரிய, உடலுக்குப் பொருத்தமான, மூளைக்குகந்த தேடுதல் இருக்கிறது. தேடுதல் எதுவாயினும் தேவையைக்காட்டிலும், அதன் பெறுமதி ஒரு குன்றிமணியேனும் தூக்கலாக இருக்கவேண்டுமென்பது விதி. தேடலில் உள்ள சிக்கல், பெரும்பாலான நேரங்களில் நாம் தேடும் பொருள் மற்றவர் இடத்திலும், மற்றவர் தேடும்பொருள் நம்மிடத்திலும் இருக்கிறது. பிறர் தேடுகின்றார்களேயென்று தமக்கு வேண்டாத பொருளை ஒருவரும் விட்டுக்கொடுப்பதுமில்லை. அவள் சராசரி மனிதர்கூட்டத்தில் ஒருத்தி, தேடுவது பரம்பொருளுமல்ல, இருந்தும் தேடும்பொருள் இதுவரை கிடைக்கவில்லை.

பிராகு அல்லது பிராஹா (செக் மொழியில்) ‘செக்’ நாட்டின் தலை நகரம். செக் குடியரரசைக் காட்டிலும் தலை நகரம் ‘பிராஹா’ அதன் குறுக்கே ஓடும் வெட்லாவா நதிபோல வயதில் மூத்தது, பல தலைமுறைகளைக் கண்டது. பொஹீமியப் பேரசு, ஜெர்மானியப் புனித ரோமப் பேரசு, அண்மைக்காலம் வரை செக்கோஸ் லோவோக்கியா ஆகியவற்றின் தலைநகரென்ற வரலாற்றைக் கொண்டது. மத்திய ஐரோப்பாவின் கலைவளத்தையும் பாரம்பரியத்தையும் பெற்றிருக்கிற பிராஹா நகரில் தான் பிற சுற்றுலாபயணிகளிலிருந்து வேறுபட்டவளாய் நித்திலா அலைந்துகொண்டிருக்கிறாள்.

‘பிராஹா’ நகரத்திற்கு நேற்றுமாலை வந்தாள். வாகீசனுடைய சினேகிதன் தெரிவித்த ஓட்டல் முகவரிக்குச் சென்று அவனைப்பற்றி விசாரித்தாள். அதுபோன்ற பெயரில் யாருமில்லை என்று ரிசப்ஷனில் கிடைத்த பதில், பாதி உற்சாகத்தை குறைத்துவிட்டது. தங்கள் ஓட்டலுக்கு வேறு சில கிளைகள் பிராஹாவில் இருப்பதாகவும் அங்கே சென்று விசாரிக்கும்படியும் ரிசப்ஷனிஸ்ட்டுகளில் ஒருத்தி கூறினாள். அவள் கூறியதைச் செயல்படுத்த பலமுறை யோசித்து பின்னர் தற்காலிகமாக கைவிட்டாள். அவள் கூறிய ஓட்டல்கள் திசைக்கு ஒன்றாய் புறநகர்ப் பகுதியில் இருந்தன. அங்கெல்லாம் சென்று தேடத் தற்போதைக்குத் துணிச்சலும் இல்லை நேரமும் இல்லை. பாரீஸ் நகரில் பல இடங்களுக்குத் தனியே போய்வந்திருக்கிறாள், இருந்த போதிலும் தனி ஆளாக இந்த ஊருக்குப் புறப்பட்டு வந்தது தவறு. தவிர பிரான்சு அரசாங்கம் தமது வதிவிடத்தை உறுதி செய்யாத நிலையில் அசட்டுத் தைரியத்துடன் பிராஹா புறப்பட்டு வந்திருக்கக்கூடாது. வறட்டு கௌவுரவம் பார்க்காமல் ஹரிணி அக்காளை அழைத்திருந்தால் வந்திருப்பாள் எனவும் நினைத்தாள். நீதி மன்றத்தில் வீராப்பாக அவரிடம் பேசிவிட்டு தற்போது அவரை அழைத்து வந்திருக்கலாமோ இவரை அழைத்து வந்திருக்கலாமோ என்றெல்லாம் யோசித்து குழப்பிக்கொள்வது தேவையா என்றும் நினைத்தாள். வாகீசன் தன்னுடைய பொருள். அவனை உடமை ஆக்கிக்கொள்ள போதாது தவறவிட்டவள் அவள். எனவே அவள்தான் அவனைத் தேடிக் கண்டெடுக்கவேண்டும், அதுதான் முறை. சோர்ந்து போகாதே தேடு! கிடைப்பார் எனத் தனக்குச் சமாதானம் கூறிக்கொண்டாள்.

தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள், ‘இல்லை’. கடந்த இரண்டு நாட்களைப்போல இந்த ‘இல்லை’யை அத்தனை ச் சுலபமாக ஏற்க மனம் தயாரில்லை. கால்களிரண்டும் கனத்தன. காலையிலிருந்து எதுவும் சாப்பிடாததை வயிறு நினவூட்டியது. அடி உதட்டை மடித்து பற்களை அழுந்தப் பதித்து வயிற்றை அலட்சியம் செய்தவளாக பார்வையின் பரப்பை அதிகரித்தாள். அவன் இல்லையென்றாலென்ன, அவனாக இருக்கலாமோ என சந்தேகிக்க அவன் முகத்தின் சாயலில் அவள் இதயத் துடிப்பைச் சுண்டிவிட; முன் தலையையும் மார்பையும் வேர்வையால் நனைத்து அவளிடம் பதட்டத்தை உருவாக்கக்கூட ஒருவருமில்லை. பெருந்திரளாக கூடியும், வியந்தும், கலைந்தும் செல்கிற மனிதர் கூட்டத்திடை, அதிசயமாக இந்தியத் துணைக்கண்ட மனிதரின சாயலில் ஒரு ஜீவன்கூட கண்ணிற்படவில்லை, சலிப்புடன் கால்போனபோக்கிலே நடக்கிறாள்.

பிற்பகல் தனது, எல்லைக்கோட்டை நெங்கிக்கொண்டிருக்கிறது. உள்ளூர்மக்கள் – வேலை முடிந்து வீடு திரும்புகிறவர்கள் – குறுக்கிடும் மனிதர்களில் சிலரிடம் ஒதுங்கியும், சிலரைத் தள்ளிக்கொண்டும் வேகமாய் நடக்கிறார்கள், பலர் நடப்பதுபோல ஓடுகிறார்கள். இரயிலையோ, பேருந்துகளையோ பிடிக்கும் அவசரம் கால்களில். சுற்றுலா பயணிகளுக்கு நேரமிருக்கிறது. கால்களைப் பிணைந்திருப்பதைப்போல அவர்கள் நடையில் தொய்வு. நேஷனல் மியூசியத்தின் முகப்பை படமெடுத்துக்கொண்டிருந்தவர்கள் போக மற்றவர்கள் வென்ஸ்லஸ் சதுக்கத்தில் கண்களையும், இறங்குவரிசையில் நீளமாக அமைந்த படிகளில் கால்களையும் வைத்து இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். எத்தனை மணிநேரமாக வெளியில் அலைகிறார்களோ? முகங்கள் கருத்திருக்கின்றன, விழிவெண்படலத்தில் அழுக்கும், கண்மணிகளில் அலுப்பும் தெரிகிறது. தங்கச் சரிகைபோல, சதுக்கத்தை வெயில் மூடியிருக்கிறது. சதுக்கத்தை மூடியதுபோக மிச்சம்மிருந்தவை மனிதர்களின் இமைளிலும், தலைமுடிகளிலும் பொன் தூவிகள்போல ஒட்டிக் கிடக்கின்றன. அந்திக்காற்றோடு வெயிலும் சலசலக்கிறது. மனிதர் கையிலிருந்து நழவி விழுந்ததைக் கொத்துவதற்கு தரை இறங்கிய புறாவொன்றை மனிதர் கால்கள் விரட்ட, அச்சமும் ஏமாற்றமுமாக இறக்கைகளை படபடவென்று அடித்து பறந்துபோகிறது. தலையில் கெப்பி அணிந்த இளம்பெண்ணொருத்தி நிழற்குடையின் கீழ் ஐஸ் விற்றுக்கொண்டிருக்கிறாள். அவள் அணிந்திருக்கும் டெனிம் ஜாக்கெட் பெரிதாக இருக்கிறது, பொத்தானிடப்டாமல் திறந்து கிடக்கிறது. உள்ளே தெரிந்த பனியனில் ‘ஐ லவ்’ மட்டும் தெரிகிறது, ‘ பிராஹா ‘ என்ற வார்த்தை டெனிம் ஜாக்கெட்டுக்குள் ஒளிந்திருக்க வேண்டும். இவள் நெருங்கி அவளைக் கடந்தபோது, பரபரப்பான தனது வியாபாரத்திற்கிடையிலும் இவளைப் பார்த்து சிரிக்கிறாள். காற்றில் அலையும் தனது குட்டை பாவாடைபற்றிய அக்கரையின்றி வியாபாரத்தில் மும்முரமாக இருக்கிறாள். சுற்றுலா பயணிகளின் கூட்ட வெள்ளம் அவளைத் தள்ளிக்கொண்டு போகிறது. பொஹீமிய வழித்தோன்றலான புனித வென்ஸ்லஸ் (St.Wencesles) குதிரையில் ஆரோகனித்திருக்கிற சிலை முன்னே சில நொடிகள் நிற்கிறாள்.

-“மன்னிக்கவேண்டும், எங்கள் இருவரையும் சிலைமுன்னே வைத்து ஒரு படம் எடுக்க முடியுமா?”- திரும்புகிறாள்.

நடுத்தரவயது சீனத் தம்பதிகள்; தோல் நீக்கிய ஆல்மண்ட் பருப்புபோன்ற கண்களைச் சுருக்கிய, பல்வரிசைதெரியும் சிரித்த முகங்கள். கணவர் கையில் டி.எஸ்.எல்.ஆர் கனோன் புகைப்படகருவி கைமாறுவதற்குத் தயாராகக் காத்திருக்கிறது. நெற்றியில் விழுந்த கேசங்களை ஒதுக்கிவிட்டு தலையாட்டுகிறாள். கேமராவை இவளிடம் கொடுத்துவிட்டு அதைக் கையாளும் நுட்பத்தைச் சுருக்கமாக சீனஆங்கிலத்தில் தெரிவிக்கிறார். அருகிலிருந்த பெண்மணி (மனைவி?) எடுக்கவிருக்கும் நிழற்படத்திற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தவள், கழுத்தில் ஒதுங்கியிருந்த மணிமாலைக்கு மார்பிடையே இருந்த குழியில் இடமொதுக்கித் தந்து திருப்திபட்டவளாய் இவளைநோக்கிப் புன்னகைக்கிறாள். அப்புன்னகை, தம்பதிகள் இருவரும் சிலை அடிக்குச்சென்று சேர்ந்தாற்போல இவளைத் திரும்பிப்பார்த்தபோதும் அவளுடைய உதட்டுச் சாயத்தோடு ஒட்டியிருக்கிறது. தள்ளி நின்று கோணம் பார்க்கிறாள். பிற பயணிகள் இவர்கள் படம்பிடிப்பதற்கு ‘தொந்திரவு ஆகிவிடக்கூடாது’ என்பதுபோல ஒதுங்கி நடக்கிறார்கள். சீனர் விவரித்தவண்ணம் கிளிக் செய்தத் திருப்தியில், அவர்களிடம் கேமராவைத் திருப்பிக் கொடுக்கிறாள். வாங்கிய சீனர் எடுத்திருந்த படத்தை எல்.சி.டி. ஸ்க்ரீனில் கொண்டுவந்து இவளிடம் காட்டுகிறார். இவள் தலையை இலேசாகச் சாய்த்துப் படத்தைப் பார்த்து முறுவலிக்கிறாள். கேமராவைக் கையில் வாங்கிய தம்பதிகள் இருவரும் சேர்ந்தாற்போல தலைகளை இறக்கி நன்றி கூறி விலகி நடக்கிறார்கள்.

வென்ஸ்லஸ் சிலையிலிருந்து இருபது அல்லது இருபத்தைந்து மீட்டர் தூரத்தில் ஸ்லேட் நிறத்திலிருந்த சலவைக்கற்களில் இரண்டு இளைஞர்களின் மார்பளவு உருவங்கள், ஒற்றை ரோஜா கிளைகளும், ஒன்றிரண்டு மலர் வளையங்களும் அவற்றின் எதிரில் தரையிற் கிடக்கின்றன. மெழுகுவர்த்தியொன்றை கொளுத்தி நட்டுவிட்டு ஓர்இளம்ஜோடி படம்பிடித்துக்கொள்கிறது. எரியும் மொழுகுத்திரிகளின் சிறு தீ நாக்குகள் காற்றை ருசித்துக்கொண்டிருக்கின்றன. அருகிற் சென்று பார்க்கிறாள். செக் மொழியில் எழுதியிருக்கிறார்கள். ஓர் இளம்பெண், முடிந்தமட்டும் இவள் காதை நெருங்கி “சோவியத் யூனியன் ஆக்ரமிப்பின்போது அவ்விளைஞர்கள் இருவரும் உயிர்த் தியாகம் செய்தவர்கள்” என ஆங்கிலத்தில் விளக்கினாள். ‘அப்படியா?” என்ற வார்த்தையின்றி தலையாட்டல்மூலம் விளக்கத்தைக் அங்கீகரிக்கிறாள், தொடர்ந்து நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஒரு முறுவல். சதுக்கத்தின் இரு பக்கமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்ரமித்திருக்கின்றன. கனவில் மிதப்பவள்போல பார்த்துகொண்டு நடக்கிறாள் நிதானமாகப் பார்வையை நான்குபக்கமும் ஓடவிட்டபடி நடக்கிறாள். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கலாம். முடிச்சு முடிச்சாக திரளுகிற சுற்றுலாபயணிகள்; பெண்களை குறிவைத்து திறந்துள்ள படிகம் அல்லது பளிங்கு கல் பொருள் விற்பனையகங்கள், தோல் பொருட்கள், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள்; மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழியும் காப்பி பார்கள், உணவகங்கள்; கவனத்தைச் செலுத்தாது தாண்டுகால் வைத்து ஒன்றிரண்டு குறுகலான தெருக்களில், திருப்பி எழுதிய ‘ட’ வடிவ வரைபாதையில் நடந்தபோது கண்ணுக்குப் புலனாகாத ஒரு குழலூதி அவளைக் கவர்ந்துசெல்வதுபோல இருக்கிறது.

ஒரு திறந்த வெளியில் மீண்டும் மனித சமுத்திரத்தில் விழுந்திருக்கிறாள். உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகள். சீருடைபோன்ற ஒற்றை வண்ண மழைக் காப்பு ஆடைகள். பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்பும் பொறுப்புமிக்க தம்பதிகள். இளம் காதலர்கள். தோழிகள். நண்பர்கள். அல்லது இவை எதுவுமே அற்ற மனிதக் கலவை. ஆபூர்வமான உடையணிந்து இசைகச்சேரி அல்லது நாடக விளம்பரத்திற்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முகங்களுக்கிடையில் நடந்தபோது தன்னை ஒர் இம்ப்ரஸனிச ஓவியமாக உணர்ந்தாள். கூட்டம் அத்தனையும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அவர்களுடைய அந்திவெயில் முகங்களில் செந்தூர நிழல்கள் ஏடுகள்போல மிதக்கின்றன. கும்பலை நெருங்காமல் தள்ளி நிற்கிறாள், நேர் எதிரே வானியல் கடிகாரம். கடிகாரத்துடன் இருக்கிற நான்கு பொம்மைகளும் பதினைந்தாம் நூற்றாண்டு பிராஹா மக்களின் மன நிலையை எதிரொலிக்கின்றனவாம். கூடியிருந்த பயணிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல நான்கு பொம்மைகளில் ஒன்றான எலும்புக்கூடு, மணல் நிரம்பிய நாழிகைக் கண்ணாடிக் குடுவையை ‘ணங்’ என்று தட்டித் திருப்பி வைக்கிறது. பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் கடிகாரத்திற்கு மேலாக இருக்கிற இரண்டு சன்னல்களைக் கடந்து வரிசையாகக் கூட்டத்தைப் பார்த்து கை அசைத்தபடி கடந்து செல்கிறார்கள். இறுதியாக சேவற்கோழியின் கொக்கரிபோடு காட்சி முடிவுக்கு வருகிறது. இதுகுறித்த அக்கறையின்றி தங்கள் அன்றையைப் பொழுதைக்குறித்த கவலையோடு ஜாஸ் இசைக்கும் ரோமா கலைஞர்கள். மெல்ல கூட்டம் கலையத் தொடங்கியது. பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர் நகரக் கதீட்ரலிலும் பார்த்திருக்கிறாள் . எனினும் புதுநிலத்தில், தன்னை அறிந்திராத மனிதர்களிடை முகவரியின்றி ஒன்றை அறியநேர்வதும் பரவசப்படுவதும் சுகமாக இருக்கிறது.

ஓர் இளம்பெண் இவளை நெருங்கி, ” யூரோ மாற்றனுமா?”, எனக்கேட்டபோது வேண்டாம் என சொல்ல நினைத்து, முக இறுக்கத்துடன் தலையை இருமுறை ஆட்டுகிறாள். “என்ன சொல்கிறீர்கள், வேண்டுமா வேண்டாமா?” என மறுபடியும் இளம்பெண் அவளை நடக்க அனுமதிக்காதவள் போல குறுக்கே நின்று கேட்கிறாள். கேட்டது மாத்திரமல்ல, சட்டென்று அவள் கைப்பையைத் தொடவும் செய்கிறாள். இவள் மூளை’ஆபத்து, கவனமாய் இரு’ என எச்சரிக்கவும், நிலமை புரிந்து பெண்ணின் கையை வேகமாய்த் தட்டிவிட்டு மேலே நடக்கிறாள். திரும்பத் திரும்ப நடந்த வீதிகளிலேயே நடப்பதுபோலவும் கனவுலகில் சஞ்சரிக்கிற உணர்வும் வருகின்றன.

இவளைச் சுற்றியுள்ள மனிதர்களில் பெரும்பாலோர் ஆர்வத்துடன் நகரைச் சுற்றிப்பார்க்கிறார்கள். இவள் கண்கள் மட்டும், தேடலில் கழிகிறது. தேனீக்கள் போல கூட்டம் கூட்டமாக பிராஹா நகர சுற்றுலா தலங்களை மொய்க்கிற மனிதர்களிடை, பேருந்துகளில் பயணம் செல்வர்களிடை, உணவு விடுதி மேசைகளில், பூங்காவிலுள்ள இருக்கைகளில், கடைகளில் எதையோ வாங்குபவனாகவோ அந்த முகத்தையும் அந்த முகத்துக்கு உடையவனையும் தேடுகிறாள். அவனைத் தேடி அலுத்த நேரங்களில் பிராஹா நகரத்தின் தெருக்களில் அலைகிறாள். நேற்று படகுபிடித்து வெட்லாவா நதியில் ஒரு மணிநேரம் பயணித்தது அலைச்சலின் வலியை குறைக்க உதவியது. நதிக்கரை ஓரமிருந்த பழமைவாய்ந்த பிராஹா நகரத்தில் கட்டிடங்கள், கலை அற்புதங்கள், பிராஹா கோட்டை, நேஷனல் தியேட்டர், எனப் பார்த்துக்கோண்டே போனபோது பத்தடி நீளத்திற்கு ஒரு பெயர்ப்பலகை, அதில் ‘காப்கா மியூசியம்’ என்று எழுதியிருந்தது.

பிரான்சிலிருந்து புறப்படும்போது காப்காவோ, மிலென் குந்தெராவோ மனதில் இல்லை. வாகீசன் மாத்திரமே மனதில் இருந்தான். ஓர் இரவு வெகு நேரம் இலக்கிய உரையாடலை அவனுடன் நடத்தி அவள் தெரிந்துகொண்ட பெயர்கள் பிராஹா வாசிகளான குந்தெராவும் காப்காவும், வாகீஸனைத் தேடி அலையும் கால்கள், காப்காவின் தடத்தை தேர்வுசெய்தபோதும் அதே ஆர்வத்துடன் நடந்தன. காப்கா பிறந்த வீட்டைப்பார்த்தாள். அவர் அடக்கம் செய்ததாக நம்பப்படும் யூதர்களின் புதிய கல்லறைக்கும் சென்றாள். யூதர்களின் பழைய கல்லறையில் காப்கா ஆவியாகத் திரிவதாகவும், ஆவியையேனும் சந்தித்துவிடவேண்டுமென்றும் ஒரு முறை பேச்சிடையே குறிப்பிட்டான், ஒருவேளை காப்காவைத் தேடி கல்லறைகளில் அலைந்துகொண்டிருப்பானோ?

எத்தனை நிமிடங்கள் நடந்திருப்பாள் அல்லது எவ்வளவு தூரம் நடந்திருப்பாள் என்று தெளிவாக உறுதிபடுத்தமுடியவில்லை. யூதர்களின் பழைய கல்லறைக்கு முன்னால் நிற்கிறாள். கல்லறை நுழைவு வாயிலில் பெரிய இரும்புக்கதவு. ஓர் ஆள் உள்ளே நுழையலாம் என்பதுபோல திறந்திருக்கிறது. இவ்வேளையில் திறந்திருக்கும் வழக்கமுண்டா? என்பதையெல்லாம் யோசிக்கும் மனநிலையிலில்லை. உள்ளே நுழைய முயன்றபோது, கதவு ‘கரகர’வெனக் கிறீச்சிட்ட சத்தம் அசாதரணமாக ஒலித்து நடுக்கத்தை ஏற்படுத்தியது. சற்றுமுன்புவரை அவளுடன் தொடர்ந்த வாசமும், வெப்பமும், மனிதர் குரல்களும் சட்டென்று அடங்கின. உறையவைக்கும் குளிரும், கல்லறை மணமும் இவளைச் சூழ்ந்தது. கண்ணெதிரே இருள் படுக்கைகளில் ஆழ்துயிலில் கல்லறைகள், ஒழுங்கற்ற வரிசைகளில் நேராகாவும், சாய்ந்தும் கற்கள். மனிதர் வந்துபோகும் சுவடின்றி அநாதைகள் போலிருக்கின்றன. மெல்லிய இருளில் பொதிகள் குவித்திருப்பதுபோல புதர்களும் காட்டுச்செடிகளும். பராமரிப்பற்ற கல்லறை. கண்களை மூடி தியானிப்பதுபோல நிற்கிறாள். காப்காவிற்கா, வாகீசனுக்கா என குழம்பினாள். இமைமயிர்களில் மின்மினிப்பூச்சிகள் கரிய இருளின் சிலந்திக் கண்கள்போல ஒளிர்கின்றன. அச்சம் பிராண்டியது, நாக்கு வறண்டு உடம்பு உதறி அடங்கியது. திரும்பி நடக்கலாம் என்று யோசித்தபோது ‘வள் வள்’ என்று சப்தம். எங்கிருந்து வந்ததென பார்க்கிறாள். அவளைச்சுற்றி நான்கைந்து மீட்டர் தூரம்வரை மெலிந்த இருள். நாயின் தோற்றத்தில் எந்த ஜீவனுமில்லை. மெல்லிய இருள்கூட்டிற்கு, அப்பால் சற்று தடித்த இருள், மரங்கள் அடர்ந்த புதர்களா வேறு ஏதேனுமா எனவிளங்கிக்கொள்ள இயலாதவகையில் மலைபோலகுவிந்து கண்ணுக்கெட்டியவரை நீண்டு வியாபித்திருந்தது. அவ்விருளிலிருந்து குரைத்த நாய் வெளிவருமா என்று காத்திருருந்தாள்; வந்தால் தைரியாகக் எதிர்கொள்வதெனவும் தீர்மானித்தாள். அவர் எதிர்பார்த்தற்கு மாறாக, எதிரிலிருந்த கல்லறை அசைவதுபோல இருக்கிறது. உடல் மீண்டும் வெடவெடக்கிறது, இதயம் வேகமாகத் துடிக்கிறது. திரும்பிப்பார்க்க்கூடாதென்று தனக்குள் முனுமுனுத்துக்கொள்கிறாள். வேகமாக நடந்து கல்லறை வாயிற் இரும்புக் கதவை தள்ளித் திறந்து வெளியில் வந்ததும், இதய ஓட்டம் நிதானத்திற்கு வருகிறது. உடல் நடுக்கமும் தணிந்திருக்கிறது. வேகமாக சற்று முன் வந்த திசையில் நடக்கிறாள் அவளுக்கு முன்பாக ஒரு நாய்குட்டி. அவள் கட்டுபாட்டில் இல்லை என்பதுபோல கால்களிரண்டும் நாய்க்குட்டியைத் தொடருகின்றன. ஒரு வேளை தேடலுக்கான விடையா. அலைச்சலுக்கான முடிவா? நாய்க்குட்டி அவளுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறது. சிலுசிலுவென்று காற்றடித்தபோதிலும் உடலில் வெப்பம் உறைத்தது. மேலே போட்டிருந்த ஸ்வெட்டரை உருவித் தோளிற் போட்டுக் கொண்டாள். நாய்க்குட்டியை மறந்தவளாக குறுகலான வீதிகளிற் புகுந்து வடக்கே நடந்தபோது, சற்று முன்பிருந்த இடிபாடுகளில்லை. காற்றில் தற்போது இறுக்கமும், தூசும், ரெஸ்டாரெண்ட் மசாலாக்களின் வாசமும் தூக்கலாக இருக்கின்றன. பழைய நகரத்தின் மாலா ஸ்ட்ரானா பகுதி. ஸ்லாவ் மொழியில் உள்ள பெயர்களை நினைவு கூர்வது கடினம். பலமுறை ச் சொல்லிப்பார்த்துக்கொண்ட பெயர்கள் தற்போது ஞாபகத்தில் இல்லை.

வெல்ட்டாவா நதியின்இருகரைகளையும் இழுத்துப் பிடித்திருப்பதுபோல சார்லஸ் பாலம், அ தன் வாயிலில் நிற்கிறாள். இருள் மெல்ல மெல்ல நிரம்பிக் கொண்டிருக்கிறது. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே நீரில் கரைந்திருந்தது. இருளோடு கலந்து சிலுசிலுவென்று காற்று. பாலத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய கோபுரம். கோபுரத்தைக் கடந்ததுமே இடதுபுரம் உணவு விடுதிகள். நீரில் கால் நனைப்பதுபோல அமர்ந்துகொண்டு ஜோடி ஜோடியாக உணவருந்தும் மனிதர்கள்.பாலத்தின் மீது நடப்பது சுகமாக இருக்கிறது. கரையோரங்கள் பொன்னாரங்களில் வைரம்பதித்ததுபோல மஞ்சள் ஒளியில் ஜொலிக்கின்றன. ஒளிரும் உல்லாசப் படகுகள், நீரின் சலசலப்பையும்; கால்களால் பாலத்தில் நீளத்தையும், சொற்களால் காற்றினையும் கலகலப்பாக்கிக்கொண்டிருக்கிற மனிதர்ச் சந்தடியை குலைத்துவிடக்கூடாதென்பதுபோல படகுகளின் எஞ்சின்கள் மெல்ல உறுமுகின்றன, இலைபோல சொகுசாய் நீர் இழுத்த இழுப்புக்கு உடன்பட்டு மிதந்து போகின்றன. அந்திப்பொழுதின் அழகைக்கூட்டப் பாலத்தின் நெடுகிலும் தெருப்பாடகர்கள், ஜாஸ் கலைஞர்கள், கிட்டார்களின் சினுங்கல்கள், அவற்றில் மயங்கி நிரந்தரமாக பாலத்தின் கைப்பிடி நெடுகிலும் கல்லாய் சமைந்தவிட்ட பரோக் காலத்து கன்னங்கரேல் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஐரோப்பியர் இருவர் தண்ணீர் பக்கம் கைகாட்டுகின்றனர்,” Not there, look at your left!” தலையை நிமிர்த்தி பார்த்த நடுத்தர வயதைக் கடந்த பெண் “yes yes, now I see” என்கிறாள்”. இவள் வழக்கமாக உல்லாசப் பயணிகளிடம் காண்கிற செயல்கள்தானென நினைக்கிறாள். அவர்களுடன் சீனர்கள் கும்பலொன்று சேர்ந்துகொண்டது. அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறபோதும் அவர்கள் கைகளும் பார்வையும் ஐரோப்பிய தம்பதிகள் பார்த்த திசைநோக்கி இருக்கின்றன. அடுத்த சில நொடிகளில் பார்ப்பவர் எண்ணிக்கை அதிகரிக்க நித்திலா எதிர்த் திசையிலிருந்த பாலத்தின் கைப்பிடியை நோக்கி ஓடுகிறாள். நதியிலிருந்த ஒரு படகில் பரபரப்பு, நீரில் இருவர் குதித்திருப்பது தெரிகிறது. இதற்குள் கரையோரம் சைரன் ஒலிக்க hasič, sanitka என்றெழுதிய வாகனங்கள். என்ன? என்பதுபோல அருகிலிருந்த ஐரோப்பியரை விசாரிக்கிறாள். ‘தெரியவில்லை’ நானும் உங்களைப்போல இப்போதுதான் வந்தேன்”- என்கிறார். “படகிலிருந்து யாரோ ஆற்றில் விழுந்திருக்கவேண்டும் ” அருகிலிருந்தவர் குறுக்கிட்டார். “பிறகு”? -இவள். “பிறகென்ன, இது போன்ற விபத்துகளுக்கென்றுள்ள பாதுகாப்பு படையினர் நீரில் விழுந்த நபரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்”

கைத் தொலைபேசி ஒலிக்கிறது. எடுக்கிறாள். மறு முனையில் பாரதி.

« நித்திலா எங்கிருக்கிற? «

« பிராஹாவில்தான் வேறெங்க. குழந்தை எப்படி இருக்கிறான்? »

« குழப்படி இல்லாமல் ஒழுங்காய் இருக்கிறான்., உன் அக்கா கதைக்கவேணும் எண்டு சொன்னா, கொஞ்சம் பொறு போனை அக்காட்டைக் கொடுக்குறன. »

« உன்ர மனசுல என்ன நினைக்கிற ? நான் உயிரோடிருக்கவா வேண்டாமா? ஊரு சனங்களுக்குப் பதில் சொல்ல முடியலை. ஒழுங்கா ஊருக்கு வந்து சேர்! »

தொடர்ந்து அவள் ஏதேதோ புலம்பிக்கொண்டிருக்க இவள் போனைக் துண்டித்துவிட்டாள், இரண்டொரு நிமிடங்கள் கழித்துப் பாரதிக்குப் போன் போட்டாள். மறுமுனையில் பாரதியின் “ஹலோ!”

« அக்காள் இன்னும் பக்கத்தில் நிற்கிறாளா? »

« ஓம்! »

« அவளை எப்படியாவது சமாளி. நாளைளக்கு நான் வாரன். »

« நீ போனதற்கு ஏதேனும் பலனுண்டா? »

« இதுவரை இல்லை. ஆனால் அவர் கிடைக்கும் மட்டும் தேடப் போரன், என்ன புதினம்? »

« சட்டத் தரணி தன்னை வந்து சந்திக்கச் சொன்னா. »

« ரெண்டொரு நாளில் பார்க்குறன் என்டு சொல்லு.”- என இவள் கூறிமுடித்ததும், மறுமுனையில் தொலைபேசி மூச்சிழந்தது. கைக் கடிகாரத்தில் நேரத்தைப்பார்த்தாள். இரவு ஒன்பது மணி. உடனே புறப்பட்டால்தான் பத்துமணிக்குள் ஓட்டலை அடைய முடியும். நாளைக்கு காலையில் பிரான்சு செல்ல சௌகரியமாக இருக்குமென நினைத்ததும். வேகமாக மெட்ரோ ஸ்டேஷனை நோக்கிச் சென்றாள்.

சாரலஸ் பாலத்தின் வடக்கு வாயிலில் இறங்கி நடந்தபோது நதியை ஒட்டிய கூட்டம் கலையாதிருக்கிறது. கூட்டத்திடை நடுத்தர வயதில் தம்பதிகள் தனித்துத் தெரிந்தனர், பெரியவர் இந்தியர்போல இருந்தார். ஓரிரு வினாடிகள் அவரை அவதானித்தாள். பின்னர் தொடர்ந்து நடந்தாள். நடையில் முழுக்கவனத்தையும் செலுத்தாது இரண்டொருமுறை திரும்பிப் பார்திரும்பிப் பார்க்கவும் செய்தாள். நிலவொளியியின் மடியில் வெல்ட்டாவா நதி ஆழ்ந்த நித்திரையில் இருந்தது, நாய்க் குட்டி கூட்டத்தில் ஓரமாய் நின்றிருந்தது அது வீண்கற்பனைபோலவும் இருந்தது.



———————————————

Kafka Naykutti Wrapper 3-1கா·ப்காவின் நாய்க்குட்டி (நாவல்) Rs.295

ஆசிரியர் : நாகரத்தினம் கிருஷ்ணா
காலசுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிட்டெட்
669 – கே/பி.சாலை, நாகர்கோவில்- – 629001

———————————————

மொழிவது சுகம் ஜூன் 6 -2015

விரல் குறைந்த மாட்டுத் தரகர்கள்

 

உலகமெங்கும் கோலோச்சுக்கொண்டிருக்கிற கொக்கோ கோலாவிற்குக்கூட வாடிக்கையாளரை நிரந்தரமாக்கிக்கொள்ள தொடர்ந்து மீடியாவில், விளம்பரத்தில் இடம்பெற்றாகவேண்டும். காம்ரேட்டுகள் உலகிற்கும் சரி, இது பொருந்தும். தமிழ் படைப்புலகும் இதற்கு விதிலக்கல்ல. ஒவ்வொரு சிற்றிதழுக்கும் குழு இருக்கிறது, படைப்பிலக்கியம் என்ற பெயரில் போற்றுவதும் தூற்றுவதும் இருக்கிறது. கிராமங்களில் இலக்கிய உரையாடல்கள், சந்திப்புகள் என்ற பெயரில் பல நேரங்களில் ஊசல் பொருட்களில் வாசனாதி திரவியங்களைச் சேர்த்து “சகல துக்க நிவாரணி. சர்வ ரோக நிவாரணி. சர்வ பாபநாசினி” என வாதிட நண்பர்களை வைத்திருக்கிறார்கள். மாட்டுத் தரகர்கள் ஒரு மாட்டினை விலைபேச தன் கையையும் எதிராளியின் கையையும் ஒரு துண்டால் மறைத்து, விரல்களைபிடித்து விலை பேசுவார்கள். ஒரு விரலுக்கு நூறு ரூபாய் என்று கணக்கு. எங்கள் ஊரில் வெங்கிட்டு என்ற மாட்டுத்தரகரை 900த்திற்கு மேல் பேரம் பேச தெரியாது எனக்கிண்டல் செய்வார்கள், காரணம் அவருக்கு இடது கையில் நான்கு விரல்கள் மட்டுமே இருந்தன. இந்த வெங்கிட்டுகள் தமிழ்ப் படைப்புலகிலும் இருக்கிறார்கள் என்பதை சென்னையில் நடந்த ஒர் நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டேன்.
அண்மையில் ஒரு எழுத்தாளரிடமிருந்து மடல் வந்தது. எழுதியவர் என் வீட்டுத் துணைவியார் நலனையெல்லாம் விசார்த்துவிட்டு “தமது சிறுகதைகள் பிரெஞ்சில் வரவேண்டும் என்று நினைப்பதாகவும் அதற்கு என்னுடைய எதிர்பார்ப்பு என்ன? எனக் கேட்டிருந்தார். இதுதான் முதல்முறை அல்ல, இதற்கு முன்பும் அவரிடமிருந்து இதுபோன்ற கடிதங்கள் வந்திருந்தன. இவரைப் போல பலருக்குத் தங்கள் படைப்பு பிரெஞ்சில் இடம் பெறவேண்டும் என்ற அவா இருக்கிறது. எனக்கு எழுதவும் செய்கிறார்கள். தவறில்லை. இயல்பான ஆசைதான், யாருக்கு இல்லை? பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு என்பது குறிப்பாக பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் அந்நாவல் வெளிவந்த மொழியில் பெற்ற வரவேற்பினை யொட்டி ஆங்கிலத்திலோ பிரெஞ்சிலோ இடம் பெறுகிறது.. தமிழ்ச்சூழலில் அது நல்ல நூலாக இருந்தாலுங்கூட அதைப்பற்றி படைப்புலகம் சார்ந்திராத பிறர் பேசுவது குறைவு. தமிழ்ப் படைப்புகளை படைப்புலகம் சார்ந்திராதவர்கள் வாங்குவதும் குறைவு. இந்த எழுத்தாள வாசகர்களை நம்பியே தமிழ் படைப்புகள் இருக்கின்றன இந்நிலையில் பெரும்பாலான படைப்பிலக்கியவாதிகள் ” நீ என்னைப்பற்றி எழுது, நான் உன்னைப் பற்றி எழுதுகிறேன், அல்லது நீ என்பின்னால் நில் நான் உன்னைப்பற்றி வலைப்பூவில் எழுதுகிறேன்” ” பரிசுக்கு ஏற்பாடு செய்கிறேன்” எனப் பரஸ்பர ஒப்பந்தத்துடன் செயல்படுகிறார்கள். எனவே நல்லப் படைப்பாக இருந்தாலுங்கூட, சந்தேகிக்க வேண்டியிருக்கிறது, தமிழ்ச் சமூகம் அப்படியொரு சூழைலை இங்கு ஏற்படுத்தியிருக்கிறது. நீலக்கடல் நாவல் வெளியீட்டின் போது கி.பி. அரவிந்தன, புதுச்சேரியில் ஒருவர் பெயரைக்கூறி அவரைத் தெரியுமா? எனக்கேட்டார். தெரியாது என்றேன். இதென்ன புதுச்சேரியை சேர்ந்தவர் என்கிறீர்கள் அவரைத் தெரியாது என்கிறீர்கள் எனக்கூறி அவர் பெயரைத் தெரிவித்தார். நீலக்கடல் வெளியீட்டின்போது அவரைச் சென்று பார்த்தேன். வருகிற பத்திரிகையாளர்களுக்கு உறையில் வைத்து பணம் தரவேண்டும் என்றார். நான் பதில் பேசாமல் வந்துவிட்டேன். அண்மையில் ‘கா·ப்காவின் நாய்க்குட்டி நாவல் விழா செய்தி புதுச்சேரி நாளிதழ்களிலும் தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் இடம்பெற்றது. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த்த தமிழ்ச்சங்க தலைவரால் கிடைத்த விளம்பரம் அது, இல்லையென்றால் “கா·ப்காவின் நாய்க்குட்டி வெளியீட்டு விழா” வெளியில் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை ஆக பெருமாள் -பூங்குழலி தம்பதிகளுக்கு மீண்டும் நன்றி.

 

இந்தியாவிலிருந்து 28 மே திரும்பியிருந்தேன், பத்து நாட்கள் ஆகப்போகிறது. இங்கிருந்து போகிறபோது பல எழுத்தாளர்களைப் பார்க்கவேண்டுமென திட்ட மிட்டிருந்தேன். ஒவ்வொருமுறையும் எஸ். ராமகிருஷ்ணன் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் தமிழவன், பாவண்ணன், ந. முறுகேசபாண்டியன், கி.அ. சச்சிதானந்தன் ஆகியவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடவேண்டும் என்ற ஆசையில் புறப்படுவதுண்டு. அது கைக்கூடுவதில்லை. மூன்றுவாரங்களை ஒதுக்கிப் போகிறபோது எதையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. போகிறபோதெல்லாம் வீடு பழுது பார்க்கின்ற வேலைகளில் கைவைப்பதால் அவ்வளவு சீக்கிரம் முடிவதில்லை இதன் விளைவாக எழுத்துலக நண்பர்களைப் பார்க்க முடிவதில்லை. இந்தியாவில் நான்கைந்து மாதம் தங்கினால் நிறைய எழுத்தாளர் நண்பர்களுடன் நேரத்தை செலவிட முடியும். இங்கும் கடைநிர்வாகத்தில் சிக்கலான நேரங்களில் எனது தலையீடு அவசியமாக இருக்கிறது. எனவே அதிகப்பட்சம் ஒருமாதத்திற்கு மேல் தங்க முடிவதில்லை. ஈரோது தமிழன்பன் வீடுவரைசென்று, “இந்த நேரத்தில் அவரைச் சந்தித்து தொந்திரவு செய்யவேண்டுமா?” எனத் திரும்பியதும் நண்பர் பஞ்சாங்கத்துடன் கூடுதலாக உரையாட வாய்ப்பு அமையவில்லை என்பதும் பெருங்குறை.

 

சில சந்தோஷம் தரும் நிகழ்வுகள் நடந்தன நண்பர் பஞ்சாங்கம், நாயகர், தமிழ்மணி ஆகியோருடன் எனது கிராமத்தில் சில மணிநேரங்களைச் செலவிட்டோம். மறக்க முடியாத தருணம் அது. அதுபோல சென்னையில் தமிழவன் நண்பர் முத்துகிருஷ்ணனைச் சந்தித்தது, .

——————————————-

கா·ப்காவின் நாய்க்குட்டிக்கு விடுதலை

கடந்த சில மாதங்களாக என் கைவசமிருந்த நாய்க்குட்டியை கீழிறக்கிவிட்டிருக்கிறேன்.கள்ளர்களைக்கண்டால் குரைக்கவும், நல்லவர்களிடம் நெருங்கவும் தெரிந்த நாய்.

 
காலச்சுவடு எம். எஸ் ‘விரும்பிப் படிக்கக்கூடியதாக இருந்தது’ என்றார். நண்பர் க. பஞ்சாங்கமும், பா. ரவிக்குமாரும் முழுமையாகப் பாராட்டியவர்கள். இருவருமே திறனாய்வாளர்கள்; க.பஞ்சாங்கத்தை அறிவேன் எனவே அவர் பாராட்டுதல் போலியானதல்ல. பா. இரவிகுமாரின் முகமும் உண்மை முகம். எழுத்தாளனாக இருப்பதில் உள்ள ஒரு சௌகரியம் மனிதர்களில் அசல் எது போலி எது என அறிய முடிவது.

 

தமிழ்நாட்டில், தமிழர்களிடத்தில் அடையாளம் பெற சில சித்து வேலைகள் தெரிந்திருக்கவேண்டும். இனம், சாதி தமிழரிடத்தில் எல்லா மட்டாங்களிலும் எதிரொலிப்பதைபோலவே எழுத்திலும் இடம் பெற்றிருக்கிறது. ஓர் எழுத்தாளனின் தகுதி இதன் அடிப்படையில்தான் எடைபோடப்படுகிறது.

 

ஐரோப்பாவில் வசிக்கிறேன், இந்தியத் தமிழனாக இருக்கிறேன், கடைவைத்திருக்கிறேன் காலச்சுவடுக்கு வேண்டிவனாக இருக்கிறேன் இவைகளெல்லாம் என்னை நிராகரிக்க வைக்கப்படும் தகுதிகள். தங்களைப்பற்றி எழுதுவேன் என எதிர்பார்த்து தங்கள் புத்தகங்களை அனுப்பிவைத்து ஏமாறுகிற படைப்பாளிகளுக்கும் ‘நான் நிராகரிக்கப்படவேண்டியவன்’. பிற காரணங்களும் இருக்கின்றன, அவற்றை பட்டியலிட விருப்பமில்லை. எனது எழுத்தை மட்டுமே பார்த்து ஏற்றுகொண்டவர்கள் பட்டியல் நம்பிக்கை தருகிறது, தொடர்ந்து இயங்க வைக்கிறது. திருவாளர்கள் பிரபஞ்சன், க.பஞ்சாங்கம், கி. அ. சச்சிதானந்தன், ரெ.கார்த்திகேசு, வே.சபாநாயகம், ந.முருகேசபாண்டியன், தமிழவன், பாவண்ணன், நறுமுகை இராதாகிருஷ்ணன், பா.இரவிக்குமார் அறிமுகமற்ற இளம்தலைமுறையினர் எனப் பலர் இருக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த படைப்புலகம் அல்ல இது, நாமிருப்பது கணினி உலகம். திறமையுள்ள எழுத்தாளனை காலமும் கணினியும் கவனித்துக்கொள்ளூம். எந்தக் குழுவும், சூதும் கவ்வ முடியாதது, வெந்தணலால் வேகாது, அசூயை வெள்ளங்கள் அடித்துக்கொண்டுபோகா.

 

பிரபஞ்சனும், பழ அதியமானும் நூல் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமற்போனது குறை. பிரபஞ்சன் வராதது ஏமாற்றத்தைத் தரவில்லை, எதிர்பார்த்ததுதான். ஆனால் அவர்கள் வந்திருந்தால் பா. இரவிகுமார், நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்ற்வர்களின் பேச்சு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை. நண்பர் க;பஞ்சாங்கமும் வழக்கம்போல நூலை முழுமையாகப் படித்துவிட்டு பாராட்டினார்; மனதிற்கு நிறைவாக இருந்தது. சென்னையிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நண்பர் இந்திரனுக்கும் நன்றி சொல்லவேண்டும்.

 
நண்பர் நாயகர், சீனு தமிழ்மணி, பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சி பொறுப்பினை ஏற்று செம்மையாக நடத்த உதவினார்கள். அண்மைக் காலத்தில் நல்ல நண்பர்களை, மனிதர்களை அடையாளப்படுத்த எழுத்து உதவியிருக்கிறது. திருவாளர்கள் பெஞ்சமின் லெபோ, நந்திவர்மன், தமிழ்ச் சங்க செயலர் பால சுப்பிரமணியம், திருமதி பூங்குழலி பெருமாள் அனவருக்கும் நன்றிகளை இச்சமயத்தில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். பசுபதி ஐயாவுக்கும் நன்றி.

 

நா.கிருஷ்ணா

“காப்காவின் நாய்க்குட்டி” நாவல் வெளியீட்டு விழா

Kaafkaavin Naaikkutti Wrapper Continue reading

காஃப்காவின் நாய்க்குட்டி – நாவல் ( காலச்சுவடு பதிப்பகம்)

அன்பினிய நண்பர்களே

வருகிற 23-5-2015 அன்று மாலை ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற எனது புதிய நாவல் புதுச்சேரி தமிழ்ச் சங்க அரங்கில் வெளியிட உள்ளோம்.
நிகழ்ச்சியில் திருவாளர்கள் பிரபஞ்சன், க. பஞ்சாங்கம், இந்திரன், பழ. அதியமான் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நிகழ்ச்சி பற்றிய முழு விபரத்தை அடுத்த வாரம் பதிவிடுகிறேன். நேரில் அழைத்ததாகக் கருதி நண்பர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும்.

__________________________________________________
‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை

 

காஃப்காவின் நாய்க்குட்டி’ என்ற நாவலின் தலைப்பினைப்போலவே, ‘பிராஹா நகரப் பயணம்’, ‘பயணத்தின் மூன்றாம்நாள்’ ‘காப்கா பிறந்த இல்ல’த்தைக் கண்டது, ‘நாவல் கருதரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவைகளே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம். பொதுவாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் தலைநகரங்கள் புகழ்வாய்ந்தவை, வரலாற்றுப் பெருமையும் கலைவளமும் கொண்டவை. மேற்கு ஐரோப்பாவில் பல நகரங்களை பார்க்கும் வாய்ப்பு அமைத்திருக்கிறது, மாறாக கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நகரங்களுக்கு சென்றதில்லை. பிராஹா¡விற்கு செல்லவேண்டும் என்ற எண்ணத்தை அதிகம் ஏற்படுத்தியவர் மார்கரெஃப் என்ற எங்கள் மருத்துவர். அவரிடம் செல்கிறபோகிறதெல்லாம், உடல் நலனைப்பற்றிய விசாரிப்புகள் அதுத் தொடர்பான தகவல் பரிமாற்றங்கள் என்பதைக் காட்டிலும், எங்கள் இருகுடும்பங்களைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள், விடுமுறையைக் கழித்த இடம், உள்ளூர் அரசியல் இன்ன பிற தவல்களாக இருக்கும். நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் காத்திருக்கிற நாட்களில்கூட ஓர் அரைமணிநேரமாவது உட்காரவைத்து இப்படி எதையாவது இறக்கிவைக்கவில்லையென்றால் அவர் தலைவெடித்துவிடும் என்ற முற் பிறப்பு சாபமோ என்னவோ? பிராஹா நகரம் பற்றி அவர் எங்களிடம் பேசியது அதிகம். இந்நிலையில்தான் சென்ற வருடம்(2014) ஜூன்மாதத்தில் திடீரென்று பாரீஸிலிருந்து ஒரு தமிழ்ச் சங்கத்தைச்சேர்ந்த குழுவொன்று பிராஹா செல்ல இருக்கிறோம் வருகிறீர்களா என அழைத்தனர். உடன் வந்திருந்த புதுச்சேரி நண்பர்களைப் பற்றி தெரியும் ஆதலால், காஃப்காவைப் பற்றி துளியும் சிந்தனையில் இல்லை. எனினும் மூன்றாம் நாள் புகழ்பெற்ற வெல்ட்டாவா நதியில் படகில் காலை பதினோரு மணி அளவில் பயணித்த போது, காஃப்கா மியூசியம் என்றெழுதிய பெயர்ப் பலகைக் கண்ணிற்பட்டது, நண்பர்களிடம், அதைப் பார்க்கும் எனது ஆசையைப் பகிர்ந்துகொண்டேன், ஆனால் அவர்கள் முகங்களில் வேறுவகையான பதில்களிருக்க அமைதியானேன். படகுப் பயணம் முடிந்ததும் பிற்பகல் நகரில் அவரவர் விருப்பம்போல சுற்றிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு இரவு எட்டு மணிக்கு வந்துவிடவேண்டும் என்பது பயணத் திட்டம். படகுச் சவாரி மதியம் சுமார் பன்னிரண்டரை மணிக்கு முடிந்தது. கரை இறங்கியதும் உடன் வந்தவர்கள் சிறுசிறு குழுவாய் பிரிந்து நடக்கத் தொடங்கினார்கள். பகலுவுணவின் தேவையை முடித்துக்கொண்டு காஃப்கா மியூசியத்தை பார்க்க முடியாததற்காக வருந்தியவாறு பழைய நகரைச் சுற்றிவந்தோம். மாலை ஐந்து மணி அளவில் காப்பிக் குடிக்காலாமென ஒரு ரெஸ்ட்டாரெண்டிற்குள் நுழைந்தோம். கோடைகாலம் என்பதால் சில நாற்காலிகளும் மேசைகளும் வெளியில் இருந்தன, ஒன்றில் அமர்ந்து காப்பி வரவழைத்துக் குடித்துவிட்டு உரையாடிக்கொண்டிருந்தபோதுதான் சற்று தூரத்தில் மற்றொரு ரெஸ்டாரெண்ட் கட்டிடத்தின் முகப்பில் கஃப்கா மார்பளவு சிலையைப் பார்த்தேன். காஃப்காவிற்கும் அந்த இடத்திற்கும் சம்பந்தமிருக்கிறதென்று உள்ளுணர்வு தெரிவித்தது. நண்பர்களை இழுத்துக்கொண்டு ஓடினேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன், ‘காஃப்கா பிறந்த இல்லம்’ என்றார்கள், அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. விடைபெற்றபோது அங்கிருந்த நாய்க்குட்டி என் கவனத்தைப் பெற்றது’, கிழட்டு நாயொன்றை மையமாகக்கொண்ட காஃப்காவின் சிறுகதையொன்றும் நினைவுக்கு வந்தது. வெளியில் வந்தபோதும் பேருந்தில் பயணித்தபோதும் நாய்க்குட்டித் திரும்பத் திரும்ப மனதை ஆக்ரமித்து அலைக்கழித்தது. இது ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பிறந்த கதை.

 

இந்நாவல் கடந்த ஜனவரியில் வந்திருக்கவேண்டும், ஆறுமாதங்கள் கூடுதலாக பதிப்பகத்தார் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அப்போதைக்கும் தற்போதைக்குமான இடைவெளியில் செய்தவை சிற்சில மாற்றங்கள் என்கிறபோதும் அப்பெருமை நண்பர் கண்ணனுக்கே உரியது. “அவசரப் படவேண்டாம் என்றார்”. அது நியாயமானதென்பதை இந்நாவலின் முதல் வாசகன் என்ற வகையில் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இநாவலை வாசித்துபார்த்து கவிஞர் மோகனரங்கன் சிற்சில கருத்துகளை முன்வைத்தார், அதன் அடிப்படையில் சில திருத்தங்களையும் கொண்டுவந்தேன். அவரைப்போலவே நாவலின் ஆக்கத்திற்கு உதவிய வேறு மூன்றுபோர் இருக்கிறார்கள். ஒருவர் பாரீசிலுள்ள உயிர்நிழல் ஆசிரியை லட்சுமி, நாவலில் வரும் 90 விழுக்காடு ஈழத் தமிழ்சொற்களை தந்து உதவியவர், மற்றவர் ஸ்ட்ராஸ்பூரிலுள்ள நண்பர் சூசை பாக்கியராஜ். இக்கதையில் வரும் பாரதி என்ற பெண்ணின் உண்மைப் பெயர் விமலினி, அவர் ஸ்ட்ராஸ்பூர் நகரில் வசிக்கிறார். கதையில் அதிகம் இடம்பெறுகிற ‘நித்திலா’, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக மொழிபெயர்ப்பு நிமித்தமாக நான் சந்தித்த பெண். ஆக வழக்கம்போல உண்மையும் புனைவும் இடம்பெற்றிருக்கின்றன. நாவல் வரவேற்பை பெறுமென்ற நம்பிக்கை இருக்கிறது. நல்ல நாவல் என நீங்கள் நினைத்தால் மேலே சுட்டிய மனிதர்களுக்கெல்லாம் அப்பெருமையில் பங்குண்டு, நாவல் உங்களை ஏமாற்றினால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு.
. (காஃப்காவின் நாய்க்குட்டி முன்னுரையில்)

– நா.கிருஷ்ணா
nakrishna@live.fr

எழுத்தாளன் முகவரி -18: நூலகமும் எழுத்தாளனும்

‘வாசிப்பு இன்றியமையாதது’ என நம்புகிற ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களின் நானும் ஒருவன். படைப்பிலக்கியத்தின் எத் துறையை எடுத்துக்கொண்டாலும் வாசிப்பும் உள்வாங்க்கிகொள்ளும் திறனும் முக்கியம். ‘படைப்பிலக்கியதுறையில்’ வெறும் கையை வைத்துக்கொண்டு முழம்போடமுடியாது. நவீன இலக்கிய அபிமானிகள் தெளிவாகச் சிந்திக்கக்கூடியவர்கள். அவர்களை முன்வைத்து படைக்கிறபோது அதற்கான தகுதியை நமது படைப்பிற்கு ஏற்படுத்தித் தரவேண்டும். ‘இவனா? என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறான்? என நினைக்கிற, நூலைத் தொட்டு பார்க்காமலேயே மதிப்பிடுகிற மனிதர்களைப் பெரிது படுத்துகிறீர்களோ இல்லையோ மேலே குறிப்பிட்ட வாசகருக்கு நாம் உண்மையாக இருக்கவேண்டும். அவர் அறிவுக்கேற்ப, படைப்பிலக்கியத்தில் செய்திருக்கிற ‘கால’ முதலீட்டிற்கு ஈடான இலாப அனுபவத்தை ஏற்படுத்தித் தரும் கடமையும் பொறுப்பும் படைப்பாளிக்கு இருக்கிறது. ஒரு படைப்பாளி வாசகர் ஒருவருக்குத் தரும் வாசிப்பு அனுபவத்தில், அப்படைப்பாளி பிற ஆசிரியர்களின் எழுத்துக்களை வாசித்துப்பெற்ற அனுபவமும் சேர்ந்தது. பிற உற்பத்தி தொழிகளில் உள்ளதுபோலவே ஒரு பொருளின் உற்பத்தியில் முதற் பொருள்களாக படைப்பாற்றலும், கற்பனைத் திறனும் உள்ளதெனில் அததன் துணைப்பொருட்கள் பட்டியலில் வாசிப்பை சேர்ப்பது கட்டாயம். எனவேதான் எழுத்துக்கும் கூடுதலான நேரத்தை வாசிப்புக்கு படைப்பாளியொருவன் ஒதுக்கவேண்டும். படைப்புத்துறை சார்ந்து வாசிப்புக்குரிய நூல்களை தேர்வு செய்யலாம். எல்லாவற்றையும் வாசிப்பதென்பது ஒருவகை, தேர்ந்தெடுத்து வாசிப்பதென்பது ஒருவகை.

 

வாசிப்பின் நேரத்தையும், வாசிக்கின்ற படைப்பயும் பொறுத்தே உங்கள் படைப்பு அமைகிறது. எழுதவும் வேண்டும் வாசிக்கவும் வேண்டும் என்பதால் நேரம் காணாதுதான். மேற்கத்திய எழுத்தாளர்களின் சௌகரியமான வாழ்க்கை தமிழில் முழுநேர எழுத்தாளர்களாக இருக்கிற நட்சத்திர எழுத்த்தாளர்களுக்கே வெறு கனவாக முடிகிறபோது, ஏதோ எங்களால் உங்களுக்கு விலாசம் கிடைக்கிறதே அதுபோதா எனும் உத்தம தமிழ் பதிபாளர்களை நம்பியா ஒரு தமிழ் எழுத்தாளன் பெண்டாட்டி, பிள்ளைகளுடன் ஜீவிக்கமுடியும். எனவே வேறு பணிகளில் இருந்துகொண்டு எழுத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனக்குத் தொழில் வணிகம். கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பாரத்தை என் மனைவியில் தலையில் இறக்கிவைத்துவிட்டு எழுத்தில் கவனம் செலுத்தினாலும், அப்போதைக்கப்போது நிறுவனத்திலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தியப்பொருட்கள் அங்காடிகடையைத் தவிர, ஒரு Immobilier Société யும் இருக்கிறது. இரண்டுமே மிகச் சிறிய நிறுவனங்கள், என்றாலும் இரண்டின் நிர்வாக விஷயங்கள், பொருட்களை வாங்குவது அவற்றின் விலையைத் தீர்மானிப்பது, வாடிக்கையாளரைக் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், விற்பனை வரி சம்பந்தமான தொடர்புகள், வருடாந்திர கணக்குகள் என பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. இதற்கிடையில் அவ்வப்போது மொழிபெயர்ப்புப் பணியையும் உப தொழிலாக செய்கிறேன். அதைக்கடந்துதான் வாசிப்பு எழுத்து என்று இயங்கவேண்டியிருக்கிறது.

 

நூல்களையும் இதழ்களையும் எப்படி தேர்வு செய்கிறேன்?

 

வீட்டில் சிறியதொரு நூலகம் இருக்கிறது, சிறுக சிறுகச் சேர்த்து உருவாக்கிய நூலகம். புதுச்சேரி வருகிறபோதெல்லாம் தமிழ் நூல்களை வாங்கிக்கொண்டு வருகிறேன். தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் வாசிக்கிறேன். மாதத்திற்கு மொழிக்கொன்று முடிக்கவேண்டுமென்பது திட்டம், அதைக் கடை பிடித்தும் வருகிறேன். தமிழில் காலச்சுவடு, தீராநதி இதழ்கள் வீட்டிற்கு கடந்த பத்தாண்டுகளாக வருகின்றன. கடை வைத்திருப்பதால் வெகு சன இதழ்களை வாசிக்கவும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. பிரெஞ்சு இலக்கிய திங்கள் இதழ் ‘Le Magazine Littéraire’ வீட்டிற்கு வருகிறது. தமிழ் நூல்களை மதிப்புரை எழுதுகிறவர்கள் யார் என்ற அடிப்படையிலும், நண்பர்களின் சிபாரிசிலும், புத்தகங்களை random ஆக ஒன்றைப் பிரித்து வாசிக்கிறபோது ஏதேனும் இரண்டு வரிகளில் உண்மையும், சொல் நேர்த்தியும் இருப்பின் வாங்கிவிடுவேன். பிரெஞ்சில் நூல்களைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. தினசரிகள், இலக்கிய திங்கள் இதழ்கள், ‘France Culture’ வானொலி ஆகியவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை 90 விழுக்காடுகள் நம்பலாம், குறிப்பாக François Busnel என்கிற இலக்கிய திறனாய்வாளரை கண்ணை மூடிக்கொண்டு நம்புகிறேன். மதிப்புரை எழுதத் தகும் என்ற நூல்களைத் தேர்வு செய்தே எழுதுவார். அண்மைக்காலமாக ஆங்கிலமொழியில் படைப்புகளை தேர்வுசெய்ய எனது மகள் உதவுகிறார். தமிழ் நூல்கள் சிலவற்றை நூலாசிரியர்களிடமிருந்து நேரடியாக அன்பளிப்பாக பெற்றிருக்கிறேன். ஈழத்தைச் சேர்ந்த நண்பர் மரியதாஸ் நான் இருக்கிற இதே ஊரில் வசிக்கிறார். எனது நாவல்கள் பதிப்புக்குப் போகும் முன்னும் பின்னும் வாசிப்பவர், ஆலோசனைகளும் வழங்குவார். அவற்றில் உடன்பாடிருக்குமானால் ஏற்கவும் செய்வேன். ஆனால் தமிழில் அவர் கல்கி, சாண்டில்யன், மு.வ. இவர்களைத் தாண்டிபோனதில்லை. அவர்களுக்கு அடுத்தபடியாக எஸ்.பொ.வத் தெரிந்து வைத்திருந்தார். மாறாகச் சங்க இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை. தமிழண்ணல், ஜெயமோகன், அண்மையில் நாஞ்சில் நாடன் இவர்களெல்லாம் சங்க இலக்கியங்களை பற்றி எழுதியபோது அவைகுறித்து விடிய விடிய அவரும் நானுமாக உரையாடி இருக்கிறோம். (அண்மையில் நண்பர் க. பஞ்சாங்கம் பிரான்சு வந்திருந்தபோது, அவரிடம் அழைத்துசென்றேன். கடந்த ஓராண்டுக்கு மேலாக கட்டில் வாழ்க்கை என்றிருப்பதால், பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் சந்திப்பு அவருக்கு ஆறுதலைத் தரும் என்று நம்பினேன், அது வீண்போகவில்லை.) அவர் எனக்குப் பரிசளித்த ஆங்கில நூல்கள்அதிகம். இவை எனது நூலகத்திற்கு எப்படியெல்லாம் நூல்கள் வந்தடைகின்றன என்பதற்கு சற்று விரிவானதொரு விளக்கம்.

 

நூலகம் ஏன்?

 

வருடா வருடம் வாங்கி சேர்க்கின்ற நூல்களைத் தவிர வார மாத இதழ்கள் வீட்டிற்கு வருகின்றன என்று கூறி இருந்தேன், இவற்றைத் தவிர இணைய இதழ்கள் வலைப்பூக்கள்என்றுள்ளன. பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் தினசரிகள் இவ்வளவும் வாசித்தபின்னும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பிரெஞ்சு பொது நூலகத்திற்குச்சென்று நூல்களைக் கொண்டு வருகிறேன். ஒரு தடவையில் ஐந்து நூல்கள் எடுக்கலாம். தற்போது நூல்கள் புத்தகமாகவும், குறுந்தகடுகளிலும் கிடைப்பது ஒரு வசதி. ஆக சில நேரங்களில் குறுந்தகடு நூல்களையும் கொண்டு வருகிறேன், வாகனத்தில் போட்டுக்கேட்க வசதியாக இருக்கிறது.

 

இந்நிலையில் நாம் நூலகத்திற்குச் செல்ல பிரத்தியேகக் காரணங்கள் இருக்க முடியுமா? நிறைய இருக்கின்றன. உலகின் அத்தனை எழுத்தாளர்களும் ஒன்று கூடுகிற இடம் நூலகம். நூலகங்களில் இடம்பெறுதல் என்பது அந்நூல்களுக்கான மிகப்பெரிய விருது, வேறு பரிசுகளோ, விருதுகளோ, விமர்சனங்களோ, சிபாரிசோ வேண்டாம். ஒரு நூற்றாண்டைக் கடந்தும், எழுத்தாளன் காலத்தில் கரைந்தபோதும் அவன் படைப்பு நீர்த்துப்போகாமல், செல்லரிக்கப்படாமல் இருக்குமென்றால் அப்படைப்பில் நாம் எழுத்தாளனாக வருவதற்குரிய சூட்சமங்கள் இருக்கின்றன. அவை நாம் வாசிக்க வேண்டியவை. எழுத்தாளனாக வர நினைத்தால், நூலகத்திற்குச் செல்லும் வாய்ப்பைப் பெருக்கிக்கொள்ளுங்கள். என்னதான் இடம் பொருள் என நம்மிடமிருந்தாலும் ஒரு நல்ல நூலகத்தை உருவாக்கவோ பராமரிக்கவோ நமக்கு நேரமும் காணாது

 

எனக்கு எழுத்தின் மீது பற்றுதலை உருவாக்கியதில், நூலகங்களுக்கும் பங்கிருக்கிறது. ஒரு நூலகத்தின் வேலை நேரத்தை தெரிந்துகொண்டு பத்து மணிக்குத் திறக்கிறார்கள் என்றால் பதினோரு மணிக்கு உள்ளே நுழையுங்கள். கடையொன்றிர்க்குள் ஒரு பொருளை வாங்குவதற்காக நுழைகிற வாடிக்கையாளருக்குக் கிடைக்காத வரவேற்பு அங்குண்டு. தலைக்குமேலே உள்ளே உட்கூரைகூட தனிப்பட்ட அக்கறையுடன் நம்மை கவனிக்கிறதோ என எண்ணத் தோன்றும். ஊழியர்களின் மரியாதையான பார்வை முதலாவதாக, அதற்கடுத்து நூலகங்களுக்கென்றே உள்ள அமைதியான சூழல். ‘வேறு இடத்தில் அப்படியாதொரு ஒத்திசைவைகொண்ட மனிதர்களைச் சந்திக்க நமக்கு சாத்தியமா என்று தெரியவில்லை, ஆகச் சமரசம் உலாவும் இடம். இறந்தபின் ஏதோ சொர்க்கம் சொர்க்கம் என்று பேசிக்கொள்கிறார்களே அது இப்படியிருந்தால் தேவலாம் என் பல நேரங்களிக் நினைத்ததுண்டு.

 

சன்னமான மின்சார ஒளி, அவ்வப்போது உயிர் பெரும் காற்று – நமதுடலைச் சுற்றுவதற்குப் பதிலாக நெஞ்சைத் தொட்டு மயங்க்கம் தரும்; தரையை ஒத்தி எடுக்கும் பாதங்கள், காற்ற்றின் முனுமுனுப்புகளாக காதில் விழும் சொற்கள்; மெல்ல முன்னேறுகிறோம். தவம்போல புத்தகங்களில் ஆழ்ந்திருக்கும் மனிதர்களைக் கடந்தால் அங்கே நமக்காக அவர்கள் காத்திருப்பார்கள், வசாகாவரம் பெற்ற்வர்கள். யார் வேண்டுமானாலும் அவர்களுடன் கை குலுக்கலாம், கட்டி அணைக்கலாம். நிறம் பார்ப்பதில்லை, இன பார்ப்பதில்லை, குலம் கோத்திரம் சாதி எதுவும் வேண்டாம்: முதல் நாள் வேறொருவர் கொண்டுபோய் திருப்பித் தந்திருப்பார், இன்று நமக்காக அவை காத்திருக்கும். உலகில் பிறதுறைகளுக்கில்லாதாத பெருமை எழுத்திற்கு உண்டு, இங்கே எடுத்துரைக்கும் ஆற்றலும் மொழிவன்மையும், கற்பனை வளமும் கொண்ட எவருக்கும் நூலகத் தட்டுகள் இடம் கொடுக்கின்றன.. மெல்ல நெருங்கி அவற்றில் ஒன்றைதொட்டுப்பாருங்கள். உங்கள் கைப்பட்டதும் கண்பார்த்ததும் என்றோ மறைந்துபோன எழுத்தாளன் உயிர்த் தெழுவான்: அல்பெர் காமுய், தாஸ்த்தாவெஸ்கி, ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெமிங்வே, முராகாமி, என்று எவராகவும் அது இருக்கலாம். அவர்களுடன் தொடங்குகிற உங்கள் உரையாடல் ஒரு நாள் அவர்களில் ஒருவராக உங்களையும் மாற்றினால் ஆச்சரியப்படமாட்டேன்.

————————————

“வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழி”

பாரிசீலிருந்து கவிஞர் கி.பாரதிதாசன் அனுப்பியிருந்த செய்தியைத் மின்ஞஞ்சலில் வாசித்தேன். பின்னர் திரு. முருக பத்மபாபனும் அச்செய்தியை தெரிவித்திருந்தார். சில கணம் துடித்து பின்னர் மனதைச் சமாதானபடுத்திக்கொண்டேன். திரு மதிவாணன் புதுசேரியில் இறந்தார் என்பதுதான் அச்செய்தி.

திரு மதிவாணன் ஆசிரியப்பணியில் இருந்தவர், அண்மைக்காலத்தில் பிரான்சுக்கு குடியேறியவர். இறப்பு தொட்டுவிடும் தூரத்தில் அவர் இல்லை. எப்போதும் நமது வாசலில் இறப்புக் காத்திருக்கிறது எனபது உண்மை. இன்றோ நாளையோ பிறந்தவர் அனைவரும் இறக்கவேண்டுமென்பது இயற்கை நியதி. எனினும் சில இழப்புகள் நம் நெஞ்சைப் பிழிகின்றன.

பாரீஸ் முத்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு செயராமன், நண்பர் பெஞ்சமின் லெபோ ஆகியோருடன் ஒரு முறை எங்கள் வீட்டிற்குவந்திருந்தார். அதுதான் மதிவாணன் என்ற இளைஞருடனான  முதல் சந்திப்பு. அதற்கடுத்து எப்போதேனும் இரண்டொரு முறை பாரீஸ் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது, மொத்த சந்திப்பைக் கணக்கிற்கொண்டாலும் சுமார் 30 நிமிடம் அவரோடு உரையாடியிருப்பேன். பல நேரங்களில் தமிழ் இனத்தின்மீது கசப்பும் வெறுப்பும் கோபமும் வருவதுண்டு, ஆனாலும் அவர் வேறுமனிதராக இருந்தார். வித்தியாசமானவராகத் தெரிந்தார். ஒரு மூன்றுமணிநேரம் விழா எடுத்து, ஆரவாரமாக தமிழின்பேரால் மேடையில் ஒரு கூட்டம் முட்டிமோதிக்கொண்டிருக்கும், ஆனால் இவரோ பரமசாதுவாக பார்வையாளர் கூட்டத்திடை, வாடும் செடிக்கு தேடித் தேடி நீர்வார்ப்பதுபோல வல்லினத்தைப் பெரிதும் தவிர்த்த வாய்மொழியால் மனிதர்களைப் உபசரித்து, தமிழ் வளர்த்த இளவல். புதுச்சேரி தமிழரில் ஓர் அபூர்வம், பசுமை மங்கா அருகம்புல். ஒதியமரங்களைக் காட்டிலும் அருகம்புல்தான் வழிபாட்டுக்குரியது

நா.கிருஷ்ணா

மொழிவது சுகம் 18 ஏப்ரல் 2015

பேச்சும் எழுத்தும்

 

பேச்சாளனாக நான் வாங்கிய இரண்டு பரிசுகள், ஒன்று காலாபட்டு அரசு உயர்நிலைபள்ளியில், மற்றது. சென்னை சர் தியாகராயர் கல்லூரியில் – மொழியில் எனக்கிருந்த பற்றைத் தெரிவிக்கும் சான்றுகளாக – பல வருடங்கள் வீட்டில் வைத்திருந்து பின்னர் கரையானுக்கு இரையாகி காலத்தில் கரைந்தது நடந்திருக்கிறது. உயர் நிலைப்பள்ளியில் படிக்கிறபோது மதுரைச் தமிழ்ச்சங்கம் நடத்திய கட்டுரை, கதைப் போட்டிகளிலும், கல்லூரியில் படிக்கிறபோது கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்து வெற்றி பெற்றிருந்தபோதும் அதனை மதித்ததில்லை. பேச்சுப்போட்டியில் பெற்ற வெற்றிகளையே பெரிதாகக் கொண்டாடி இருக்கிறேன். பேச்சு என்னைக் கவர்வதற்கு அந்நாட்களில் பலருக்குமிருந்த காரணம் எனக்கும் இருந்தது. பெரும்பாலானத் தமிழர்களைபோலவே பேச்சுகளைக்கேட்க இலக்கியவிழாவுக்குச் செல்வதுண்டு. இலக்கியமேடைகளில் பொதுவாக முதல் நான்கைந்து வரிசைகளில் ஆழமான சிந்தனை கொண்ட கற்றறிந்த பெருமக்கள் அமர்ந்திருப்பர். மேடையில் அமர்ந்திருப்போர் கவனத்துடன் பேசுவார்கள். நாவன்மையோடு சொல்வன்மையும் ஆழமும் நுட்பமும் கொண்டதாக அப்பேச்சு அமையும். பின்னர் காலம் மாறியது. திராவிடக் கட்சிகள் பின்னாட்களில் பேச்சுமொழியை ஏச்சு மொழியாக, வசைமொழியாக இரட்டை அர்த்தம் தொனிக்கும் மொழியாக, மாற்றி அதற்கு பெருமைசேர்த்தார்கள் -குறிப்பாக எழுபதுக்குப் பின்னர். காரணம் அவர்களுக்கு முன்பாக கூடியிருந்த மக்களின் அறிவை அவர்கள் விளங்கிக்கொண்டிருந்தனர் இக்கொள்ளை நோய் இலக்கிய மேடைகளையும் விட்டுவைப்பதில்லை. முதல் நான்கைந்து வரிசைகளிலும் தற்போது வெகுசன இரசனைகொண்டவர்கள் ஆக்ரமித்துவி ட்டதுதான். இன்றைக்கு அதையும் கடந்து விளம்பர யுகம் என்பதால் தொலைக்காட்சியில் எத்தனை நேரம் ஒருவரின் முகம் காட்டப்படுகிறதோ அதைபொறுத்தே அம்மனிதனின் அறிவையும் நுண்மான் நுழைபுலத்தையும் தீர்மானிக்கிறவர்களாக இருக்கிறோம். விவாதமேடையில் யாரையெல்லாம் தினம் தினம் கூப்பிடுகிறார்களென ஒரு சராசரி மனிதன் பார்க்கிறான். அவனுக்கு அவர்கள்தான் பெருந்தகைகள். இது ஏதோ தமிழ்நாட்டில் மட்டும நடக்கிறதென சொல்லி விரக்தி அடையக்கூடாது. உலகெங்கும் நிலவும் உண்மை.

 

இந்த விளம்பர உலகில் எழுத்து பாதிக்காமல் இருக்கிறதா? சாத்தியம் உண்டா? பெரிய எழுத்தாளர்கள்கூட ரஜனி வந்து வெளியிட்டால் கூடுதல் கவனம் பெறலாம் என நினைக்கிறகாலம். இந்த நிலையில், இந்த விளம்பர உலகில் விருதும், பரிசும் ஓர் எழுத்தாளனை அவனது எழுத்தைத் தீர்மானிக்கும் உறைகல்லாக, தராசு ஆக இருக்க முடியுமா?
விளையாட்டுப்போட்டிகளுக்கு ஓர் எல்லைக்கோடு இருக்கிறது, ஓடும் தூரம் இருக்கிறது. ஆக வெற்றி பெற்றவனை காலமும் தூரமும் கணிக்க உதவுகிறது. போரில் வெற்றியைத் தீர்மானிக்க எதிராளியின் தோல்வி உதவுகிறது. பொருளாதார வெற்றியைத் தீமானிக்க அசையும் அசையா சொத்துகள் உள்ளன. குடும்பவாழ்க்கையின் வெற்றியைகணிக்க தாம்பத்தியமும், பிள்ளைளின் சமூகப் படி நிலையும் இருக்கின்றன. பேசாளன் வெற்றியைக்கூட – அன்று உடன் பேசியவர்களோடு ஒப்பீடு செய்து ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் எழுத்தின் வெற்றியைத் எப்படி தீர்மானிப்பது? யார் தீர்மானிக்கிறார்கள்? எப்படி தீமானிக்கிறார்கள். தேர்வாளர்களின் பெரும்பான்மையோரில் வாக்குகளைபெற ஏதேனும் மந்திரம் இருக்கிறதா?

 

விருதுவாங்கிய எழுத்தாளர்கள், பரிசு பெற்ற எழுத்தாளர்கள், சிஷ்யர்களை பெருக்கிக்கொள்ள முடிந்த எழுத்தாளர்கள், சினிமாவுக்கு கதைவசனம் எழுத உட்காரும் எழுத்தாளர்கள் – இவர்களெல்லாம் பெரியவர்கள் மற்றவர்கள் சிறியவர்கள் என்றும் வெகுசுலபமாகத் தீர்மானிக்க முடியாதத் துறையாக; காலம் மட்டுமே வெற்றி தோல்வியைக் கணிக்க முடிந்த துறையாக எழுத்து இருப்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு பரிசு என்பது என்னைப்போன்ற அதிகம் அறியபடாத எழுத்தாளர்களுக்கு ஒரு சிறிய அங்கீகாரம், தேவைதான், ஆனால் பெருமைப்பட ஒன்றுமில்லை. உலகெங்கும் பரிசினை அறியாத விருதுகளை ஈட்டாத எழுத்தில் சாதனை புரிந்த பல பெயர்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. எனவேதான் நண்பர் இந்திரன் இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் தமிழ்நாடு அரசு பரிசு பெற்றிருக்கும் செய்தியை அறிவித்தபோது அதிர்ச்சி, மகிழ்ச்சி, அச்சம் என்ற கலவை மனதிற் புரண்டது, என்னால் தடுக்க இயலவில்லை.

 

இச்சம்பவத்தில் எனக்கு மகிழ்ச்சி தந்த விஷயம், செய்திக்குப் பின்னர் கிடைத்த மேன்மக்களின் வாழ்த்துகள்.kirushnappar_nayakar__21225
அவை மட்டுமே நிஜம், பரிசு ஒரு Virtual image. நண்பர்கள் பாராட்டுதலில் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது, “தலைக்கனம் கொள்ளாதே, கவனத்துடன் தொடர்ந்து எழுது!” என்பதுதான் அது.
தமிழ் நாடு அரசு பரிசுபெற்ற ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் மதிப்புரை – பேராசியர் க. பஞ்சாங்கம் காலச்சுவடு இதழில் எழுதியது:
1. வாழ்வின் பன்முகப்பிரதி:
http://www.kalachuvadu.com/issue-165/page69.asp
வணக்கத்திற்குரிய ந.முருகேசபாண்டியன் ‘தி இந்து’ தமிழ் தினசரியியில் எழுதியிருந்தது:
2. சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
http://tamil.thehindu.com/general/literature/சமகாலத்து-நாவல்கள்-செஞ்சியின்-கதை
—————————————-
———————