பிரான்சு நிஜமும் நிழலும்- 8 : குடிமக்களும் ஆட்சியாளர்களும் -1.

“Arrête ce cinéma” என அலறுகிறார் ஒரு மேயர் அவருக்கு என்ன பிரச்சினை. நகரில் கேட்பார்ற்றுச் சுற்றித் திரிகிற ஒன்றிரண்டு மாடுகள் தான் பிரச்சினை. அலறிய இடம். நீதிமன்றம்.

 
இரவு பதினோறு மணிக்குக் களைத்து படுக்கிறார். விவேக்கின் பிரெஞ்சு மேக் உள்ளூர்வாசி ஒருவர், “சன்னலை திறந்தால், தெருவாசலில் ஒரு பசுமாடு நிற்கிறது, நகராட்சி காவல் துறைக்கு போன் போட்டு அரைமணி ஆயிற்று, இதுவரை பதிலில்லை, ஏதாவது செய்ய முடியுமா? இந்த மாட்டை அப்புறப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுக்கமுடியுமா?” என மறுமுனையில் கேட்டுக்கொண்டால், தொலைபேசியை எடுத்த மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகுதான் படுக்கை, மனைவி எல்லாம். தவறினால் நீதிமன்றத்தில் அவரைக் கொண்டுபோய் நிறுத்தலாம்.

 
“1988ம் ஆண்டே மாட்டுக்குச் சொந்தக்காரருக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டது 2004ம் ஆண்டு மேயரானேன், சம்பந்தப்பட்ட நபருக்கு பல கடிதங்கள் நகராட்சியின் சார்பில் எழுதியிருக்கிறேன். எனினும் அவருடைய மாடுகள் எங்கள் நகராட்சியின் எல்லைக்குட்பட்டப் பகுதிகளில் அவ்வப்போது சுற்றித் திரிவது தொடர்கின்றது. அம்மாடுகளை பிடித்துச்சென்று அடைத்தும் பார்த்தாயிற்று, ஒவ்வொரு முறையும் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி மாடுகளை மீட்டுச் செல்லும் மாடுகளுக்குச் சொந்தக்காரர், மாடுகளை கவனியாமல் அலைய விடுவது தொடர்கிறது. எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு கேட்டு இங்கு வரவேண்டிய தாயிற்று”  என நீதிமன்றத்தில் புலம்பிய மேயர் “ரூலான்ஸ்’ என்ற நகரைச் சேர்ந்தவர். உள்ளூரின் நிர்வாகப் பிரச்சினைகளோடு, சுற்றித்திரியும் மாடொன்று ஒரு நாயை முட்டினால் கூட, காற்றில் ஒரு மரக்கிளை முறிந்து அப்புறப்படுத்தாமல் கிடந்தால் கூட ஒரு மேயர் தண்டிக்கப்படலாமென பிரெஞ்சு சட்டம் சொல்கிறது.

 
நாட்டின் அதிபர் பிரான்சு நாட்டின் கப்பல் கட்டும் தளமொன்றிர்க்கு (Saint-Nazaire) வருகை தருகிறார். அங்கிருந்த தொழிலாளர்களுடன் வரிசையாக கைகுலுக்கிக்கொண்டு வருகிறார் ஆனால் ஒர் இடது சாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் (Sébastien Benoît), அதிபர், தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிப்பதாகக்கூறி, அவருடன் கை குலுக்க மறுக்கிறார். நீங்கள் பிரெஞ்சு குடிமகனாக இருந்தால், தனி ஆளாக நின்று மேயரை மட்டுமல்ல நாட்டின் அதிபரைக்கூட சாலையில் தடுத்துநிறுத்தி பிரச்சினைகளை வைக்க, உங்கள் கோபத்தைக்காட்ட, விமர்சிக்க முடியும் என்பதற்கு அண்மை உதாரணம் இது. இந்த பிரெஞ்சுக் குடி மகன் யார்?

 

பிரெஞ்சுக் குடியுரிமை.

 

பிரான்சு நாட்டில் பிரெஞ்சுக் குடியுரிமை நான்கு வழிமிறைகளில் கிடைக்க வாய்ப்புள்ளது:
1. Droit du Song இரத்த அடிப்படையிலான உரிமை: பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் பிரெஞ்சுக் குடிமகனாக இருப்பின் அவர்களுடைய குழந்தையும் இயல்பாகவே பிரெஞ்சுக் குடிமகனாக முடியும்.

 

2. Droit du sol: பிறந்த இடத்தை அடிப்படையாகக்கொண்ட உரிமை: இது இரு வகைப்படும்:

 
அ. Double droit du sol: பிறந்த மண்சார்ந்த (பிரான்சு) சார்ந்த இரட்டை உரிமை இதன்படி பெற்றோர் வெளிநாட்டினராக இருந்து, அவர்களில் ஒருவர் பிரான்சு நாட்டில் பிறந்திருந்து, அவர்களுடைய குழந்தை பிரான்சு நாட்டில் பிறந்திருந்தால், இவ்வுரிமையின் அடிப்படையில் குடியுரிமைத் தானாகக் கிடைக்கும்.

 

ஆ. Droit du sol simple différé: பிறந்த நாட்டின் அடிப்படையிலான ஒற்றை உரிமை: பெற்றோர்கள் இருவருமே வெளிநாட்டில் பிறந்தவர்களாக இருந்தாலுங்கூட, அவர்களுடைய பிள்ளை பிரான்சு நாட்டில் பிறந்திருந்தால் குடியுரிமைக்கு வழியுண்டு. பதினாறுவயதிலிருந்து விண்ணப்பிக்கலாம். தவிர பதினோறு வயதிலிருந்து தொடர்ந்தோ, விட்டுவிட்டோ ஐந்து ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வசித்திருக்கவேண்டும். பதின்மூன்று வயதிலிருந்து பதினாறு வயதிற்குள் விண்ணப்பம் செய்த்வதாக இருப்பின் பிள்ளையின் பெற்றோர் அதனைச் செய்யவேண்டும்.

 

3. Naturalisation – தனது பூர்வீகக் குடியுரிமையைத் துறந்து பிரான்சுநாட்டின் குடியுரிமையைப் பெறும் முறை. சட்டப்படியான தகுந்த வயதை அடைந்து, குறைந்தது ஐந்து ஆண்டுகள் பிரான்சு நாட்டில் வாழ்ந்த ஒரு வெளிநாட்டவர் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர் உயர்கல்வி பெற்றவராக இருந்தாலோ, அவரால் பிரான்சு நாட்டிற்குப் பயன்கள் உண்டு என அரசாங்கம் நினைத்தாலோ இரண்டு ஆண்டுகள் பிரான்சு நாட்டில் தங்கியிருந்தாலே போதுமானது. ஆனால் நீதிமன்றத்தால் அவர் தண்டிக்க்பட்டவராக இருக்கக் கூடாது. ஆனாக் இவ்வகை விண்ணப்பத்தை அரசாங்கம் காரணத்தை வெளிப்படையாகக்கூறாமல் நிராகரிக்க முடியும். தவிர நேர்காணலில் விண்ணப்பதாரர் பிரெஞ்சு மொழியில் அவருக்குள்ள தேர்ச்சியையும், பிரெஞ்சு சமூகத்துடனும், பண்பாட்டுடனும் அவர்க்குள்ள இணக்கத்தை உறுதி செய்தல்வேண்டும்.

 

4. Le Mariage – திருமணத்தின் அடிப்படையிலும் குடியுரிமை கோரலாம். பிரெஞ்சு குடுடியுரிமைபெற்ற ஓருவரை மணமுடித்த ஆண் அல்லது பெண் நான்காண்டு குடும்ப வாழ்க்கைக்குப்பிறகு விண்ணப்பிக்கவேண்டும், விண்ணப்பிக்கும் தருணத்தில் விண்ணப்பதாரரின் கணவன் அல்லது மனைவி பிரெஞ்சுக் குடியுரிமையுடன் இருக்கவேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதிகளாக இருந்தால் ஐந்து ஆண்டுகளுக்குபிறகு விண்ணப்பிக்கலாம். இங்கும் விண்ண்ப்பதாரர் பிரெஞ்சு மொழி தேர்ச்சி, பிரெஞ்சு பண்பாடு, சமூகம் இவற்றுடனான ஆர்வம் இவற்றை உறுதி செய்வது அவசியம்.
2010 கணக்கின்படி 143000 வெளிநாடினர் புதிதாக பிரெஞ்சுக்குடியுரிமை பெற்று பிரான்சு நாட்டில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரான்சு நாட்டில் குடி உரிமை மறுத்து அந்நியர்களாகவே தங்கள் வாழ்க்கையைத் தொடருகிற மக்களும் இருக்கவே செய்கின்றனர். பிரான்சு நாட்டின் மக்கள் தொகையில் அவர்களின் விழுக்காடு ஆறு. அதாவது 3.8 மில்லியன் மக்கள்

 

வாக்குரிமை – பெண்கள், அந்நியர்கள்

 

பிரான்சு நாட்டில் வாக்குரிமை வரலாறு பதினெட்டாம் நூற்றாண்டில் சரியாகச்சொன்னால் பிரெஞ்சுபுரட்சிக்குப் பிறகு மக்களுக்கு வாய்த்தது. பிரெஞ்சுப் புரட்சியை வழி நடத்தியவர்கள் பூர்ழ்வாக்கள் (Bourgeoise) Bourg என்றால் நகரம் (உதாரணம் -Strasbourg) ஆக நகரவாசிகள் என சுருக்கமாக வைத்துக்கொள்ளலாம். எனவே 1789 வாக்கில் குறைந்த பட்ச வரித்தொகையை செலுத்தியவர்களுக்கே வாக்குரிமை எனச்சொல்லப்பட்டது. வாக்குரிமையின் ஆரம்பகாலத்தில் எல்லா நாடுகளுமே இதே கடைபிடித்திருக்கின்றன. தவிர வாக்களிக்கும் வயது 30 ஆகவும் ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற நிலமை இருந்த்து. பிரெஞ்சுப் புரட்சியில் பெண்கள் பங்கெடுத்திருந்த போதிலும் இரண்டாம் உலகப்போர்வரை பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை. அவர்கள் ஒன்றரை நூற்றாண்டுகாலம் தங்கள் வாக்கைப்பயன்படுத்த காத்திருந்தார்கள். 1944ம் ஆண்டு ஏப்ரல்மாதம் 21ந்தேதிதான் பிரெஞ்சுப் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை ஆண்களுக்கு ஈடாகப் பெற்றார்கள். தவிர 1946 வரை மேற்கு ஐரோப்பா பிரெஞ்சுப் பிரதேசத்தில் வசித்த ஐரோப்பியர்களுக்கே வாக்குரிமை இருந்தது. பிரான்சு நாட்டின் கடல்க்டந்த பிரதேசங்களில் வாழ்ந்த கறுப்பரின மக்களுக்கும் பிரான்சு நாட்டின் காலனி மக்களுக்கும் ஓட்டுரிமை இல்லை. அவ்வாறே 1988வரை நிரந்தர முகவரி இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டு வந்தது. 18வயதை அடைந்த ஆணும் பெண்ணும் வாக்குரிமையைப் பயன் படுத்த முடியுமென்றாலும் இந்த உரிமையை பிரான்சு நாட்டில் வாழும் பிரெஞ்சுக் குடிமைபெற்ற பதினெட்டு வயதைப் பூர்த்தி செய்த மக்களே பயன்படுத்த முடியும். அவர்களைப்போலவே பிரெஞ்சுக் குடியுரிமையற்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் (உதாரணம் :ஜெர்மன், இங்க்கிலாந்து குடியுரிமையைப் பெற்றவர்களும் பிரான்சு நாட்டின் தேர்தல்களில் வாக்கு அளிக்க முடியும்) ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் வசித்தாலும் அவர்கள் சட்டத்திட்குட்பட்ட பிரஜைகளாக, நாட்டின் பொருளாதாரம் பிற துறைகளில் உதவுபவர்களாக இருப்பினும் பிரெஞ்சு குடியுரிமையைத் தேர்வு செய்யாததால் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை.

(தொடரும்)

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள் -5: மாத்தாஹரி நாவல் குறித்துதிரு வே. சபாநாயகம்

Sabaஅரவணைக்கும் கைகளில் மரணிக்கும் பெண்கள்

– வே.சபாநாயகம்
பொதுவாக, மொழிபெயர்ப்புகள் மற்றும் அந்நிய மண்ணின் நிகழ்வுகளையும்,
பாத்திரங்களையும் கொண்டு எழுதப்படும் நாவல்கள் – வாசகரை மருட்டும் அந்நியத்தன்மை
கொண்டவைகளாக அமைவது இயல்புதான். ஆனால் பிரான்சு நாட்டில் வாழும் Matahari1புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தாஹரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.
கதையின் மையம் – பெண்கள் அவர்கள் எந்த நாடாயினும் – எப்போதும், எந்த மட்டத்திலிருந்தாலும் காலம்காலமாய் அல்லல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகிற வர்கள்தாம் என்பது. இருபதாம் நூற்றண்டின் மூன்று காலகட்டங்களில் மூன்று பெண்கள் – மார்த்தாஹரி, பவானி, ஹரிணி பிரான்சில் ஒரே மாதிரியான அல்லலுக்கும் வதைக்கும் ஆளாவதை மூன்று அடுக்குகளில் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்போடு நாவல் சொல்கிறது.

 
இருபதாம் நூற்றண்டின் துவக்கத்தில் ஹாலந்தில் பிறந்து பிரான்சுக்குப் போன மாத்தாஹரி என்பவள் பார்ப்பவரை எல்லாம் வசப்படுத்தும் அற்புத அழகி. அதிகாரிகளும், இராணுவத்தினரும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவளது அழகுக்கு அடிமையாகிறார்கள். தானாய் வாய்க்கும் சந்தர்ப்பங்களினால் அவள் தன் உடலையே முன்னிறுத்தி தனக்கென ஒரு அதிகார மையத்தை உருவாக்கிக் கொள்கிறாள். பின்னால் அவள் ஒரு வேவுக்காரியாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகிறாள். ஆனால் இறந்த பின்னரும் அவள் வழிபாட்டுக்குரிய ஒரு தேவதையென அவளது ரசிகர்களால் உருவாக்கப்பட்டு அவள் பெயரில் இயக்கங்களும் புனைவுகளும் பெருகி, அமானுஷ்யப் பிறவியாய் பூஜிக்கப்படுகிறாள்.

 
புதுச்சேரியில் ஒரு வழக்கறிஞராக இருந்த பவானி, அவள் காதலித்து மணந்த தேவசகாயத்தின் வற்புறுத்தலால் அவளுக்கு விருப்பமில்லாமலே பிரான்சுக்குச் சென்று குடியேறுகிறாள். அவள் தோற்றத்திலும் அழகிலும் அச்சு அசலாய் மார்த்தாஹரியைப் போல இருப்பதால் மார்த்தாஹரியின் பெயரால் இயங்கும் ‘மார்த்தஹரி சமயக்குழு’ அவளை மார்த்தஹரியின் மறுபிறவியென்று கருதி அவளையும் வழிபாட்டுக்குரியவளாக ஆக்க முயல்கிறது. பவானியின் கணவன் தேவசகாயமும் மார்த்தாஹரியின் உபாசகனாக ஆக்கப்பட்டு¢, அவனும் பவானியை மார்த்தாஹரியென்றே நம்புவதுடன் அவளை மார்த்தாஹரியென்றே அழைக்கவும் செய்கிறான். இவர்களால் ஏற்படும் மன உளைச்சலாலும் தேவசகாயத்தின் கொடுமைகளாலும் பவானி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கிறாள். அதற்குக் காரணமானவன் என்பதால் தேவசகாயமும் சிறையில் அடைக்கப்படுக்கிறான்.
பவானியின் மகள் ஹரிணி தன் தாயின் மரணம் தற்கொலை அல்ல எனச் சந்தேகித்து பவானியின் நாட்குறிப்பில் கண்ட நபர்களை ஒவ்வொருவராகத் தொடர்பு கொண்டு உண்மையை அறிய முயல்கிறாள். ஆனால் வேறொரு உண்மையை – பவானி தன்னைப் பெற்றவள் அல்ல, வளர்த்தவள் என்பதையும் தான் தேவசகாயத்துக்கும் எலிசபெத் என்பவளுக்கும் பிறந்தவள் என்றும் அறிகிறாள். அவளுக்கு ஆதரவாய் வரும் அவளது காதலன் அகால மரணமுற மனஉளைச்சலுக்கு ஆளாகிறாள். வலைத்தளம் மூலம் இரண்டாம் வாழ்க்கை பற்றி அறி¢ய முயன்று, தான் மார்த்தாஹரியின் மகள் நோனாவின் மறுபிறவி என்று நம்புகிறாள். பின்னர் தன் தகப்பன் தேவசகாயத்தைச் சிறையில் சந்தித்துவிட்டு, காணாமல் போகிறாள்.

 

– இப்படி ஒரே நூற்றாண்டின் முன்று காலகட்டங்களில் வாழ்ந்த மூன்று பெண்களுடைய அவல வாழ்வும் ஒரேமாதியாக அமைந்துள்ள இந்த நாவல், பதிப்புரையில் திரு.கோ.ராஜாராம் சொல்வதுபோல் ‘அரவணைக்க நீளும் கைகளில் இறுக்கப்பட்டு மரணிக்கும் பெண்களின் குறியீடாக’ அமைந்திருக்கிறது எனலாம்.

 
நாவலின் தொடக்கமே புதுமையான அறிமுகத்துடன் வாசிப்பைத் தூண்டுகிறது. நாவல் பிறந்த கதையை ஒரு மாய யதார்த்த உக்தியோடு சொல்வதில் ஆரம்பிக்கிறார் ஆசிரியர். நடக்காத, நடக்க முடியாத ஒன்றைக் கற்பிதம் செய்து, இறந்துபோன கதாபாத்திரமே கதை சொல்லியுடன் உரையாடுவதும் நாவல் முழுதும் ஆங்காங்கே தோன்றி மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதும், கதையை வளர்க்க உதவுவதுமாய் ஒரு மயக்கத்தை வாசகர்க்கு உண்டாக்கி நாவலின் சுவையைக் கூட்டுகிறார். கதை நிகழ்வுகளும் ஒரு நேர்க்கோட்டுப்பாணியில் இல்லாமல் – ஒரு திறமையான திரைப்படத் தொகுப்பாளர் காட்சிகளை வெட்டி ஒட்டி சுவைகூட்டுவது போல திரு.கிருஷ்ணா அவர்கள் காட்சிகளை மாற்றி மாற்றிச் சொல்வதும் தமிழ் நாவல் தளத்தில் ஒரு புதிய ரசமான உக்தியாகும்.

 
இவரது முதல் நாவலைப் போலவே இதிலும் முழுதும் பெண்களையே – அவர்களது அவலங்களையே மையப்படுத்தினாலும் இது ஒரு பெண்ணிய நாவலாக மட்டுமின்றி, நமது பெண்களின் திருமண வாழ்வோடு ஒப்பிடச்செய்கிற பிரஞ்சுக் கலாச்சாரத்தின் வித்தியாசமான கூறுகளையும், பல நுட்பமான தகவல்களையும், அதன் இந்தியப் பாதிப்புகளையும் அனுபவ ரீதியாகப் பதிவு செய்துள்ள ஆவணமாகவும் திகழ்கிறது.
பாத்திரப் படைப்புகளும், அவை தொடர்பான புருவம் உயர்த்தும் நிகழ்வுகளும் ‘கல்கி’ யின் ‘சோலைமலை இளவரசி’ நாவலை நினைவூட்டுகின்றன. அந்நாவலில் வருவது போலவே மார்த்தாஹரி, பவானி ஆகிய வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த பாத்திரங்களின் அனுபவங்களும் இணையாக நிகழ்வது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய் உள்ளன.
நடையில் ‘சுஜாதா’வின் பாதிப்போடு கூடிய ஒரு லாகவம் தெரிகிறது. வாசிக்க அலுப்புத் தராத சுகமான நடை. வருணனையில் கிருஷ்ணா சோபிக்கிறார். ஸ்தல விவரணங்கள் கலைத்தன்மையுடன் அழகாக வந்திருக்கின்றன. அத்தியாயம் 4ல் மார்த்தாஹரியின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நிகழ்வை வர்ணிக்கும் இடம் உருக்கமாக இருப்பதுடன் ஆசிரியரின் அற்புதமான கலாரசனையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. சின்னச் சின்ன அத்தியாயங்கள் – இன்றைய அவசர உலகில் வாசகனின் ஆயாசத்தைத் தவிர்க்க உதவும் உக்தியாகும். தேவைக்கும் அதிகமான பிரஞ்சு வார்த்தைகள் ஆங்காங்கே வாசிப்பைக் கொஞ்சம் தடைப் படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாய் நீக்கி எழுதிவிடவும் முடியாதுதான்.

 

தன்னை மட்டுமின்றி, திருமதி. சுதாராமலிங்கம், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் ஆகிய வாழும் பாத்திரங்களையும் நாவலோடு இணைத்து எழுதி இருப்பதும், மாலதி மைத்ரி போன்ற சமகால கவிஞர்களின் கவிதை வரிக¨ளை தக்க இடங்களில் கையாண்டி ருப்பதும், பாரதியின் பாதிப்பில் – மழை பற்றிய வருணனையில் – எழுதப்பட்டிருக்கும் வரிகளும், ‘உண்மையையே பேசுகிறேன், உரத்துப் பேசுகிறேன்” என்கிற ஆசிரியரின் ஒப்புதல் வாக்கு மூலம் தேவைப் படாமலே அவரது நேர்மையான, பாசாங்கற்ற பதிவு மனைதக் காட்டுவதாக உள்ளன. இதனால் திரு.நாகரத்தினம்கிருஷ்ணாவின் அடுத்த நாவலை வாசகர் விரும்பித்தேடிப் படிப்பார்கள் என்று நிச்சயம் சொல்லலாம்.

நன்றி .திண்ணை
——————————————-

பிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்

மனிதர் சுதந்திரத்திற்குக் கேடு என்கிறபோது, இரட்சகர்களில் ஒருவராக அறிவித்து பிரான்சு தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அகதிகள் பிரச்சினை எனில் கண்ணீர் வடிக்கிறது, ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. சிரியா அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கண்டிக்கிறபோது உரத்து கேட்கிற குரல் வளகுடா நாடுகளில், சீனாவில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறபோது, நமத்துப் போகிறது. அமெரிக்காவிற்கு விடுதலைச் சிலையை அனுப்பிவைத்த நாடு, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை’ நாட்டின் கோட்பாடாக உலகிற்கு அறிவிக்கும் நாடு என்ற பெருமைகளைக்கொண்ட பிரான்சு நாட்டின் சொந்த வரலாறு கொண்டாடக்கூடியதாக இல்லை.

 
பிரான்சு நாட்டின் நிலப்பரப்பு 675000 ச.கி.மீ, இந்தியாவின் நிலப்பரப்பில் (3288000 ச.கி.மீ) ஏறக்குறைய ஆறில் ஒரு பங்கு ஆனால் மக்கட்தொகையில் இந்தியாவினும் பார்க்க பலமடங்கு குறைவு (67.5 மில்லியன் மக்கள்). ஹெக்டார் ஒன்றுக்கு ஒருவர் என்ற வீதத்தில் மக்கட்தொகை என்பதால் பொருளாதாரப் பகிர்வில் ஏற்றத் தாழ்வுகள் அதிகமில்லை. கிருத்துவ மதம் 80 விழுக்காடு மக்களின் மதமாக இருந்தபோதிலும், தீவிரமாக மதச்சடங்குகளை; சம்பிரதாயங்களைப் பின்பற்றுபவர்கள் குறைவு. இனவெறி, நிறபேதம் ஆகியவை அண்மைகாலங்களில் தலைதூக்கியிருப்பது உண்மை என்கிறபோதும் நாஜிக்கள் கால அனுபவங்களை நினைவுகூர்ந்து, அக்கொடூரங்களைத் திரும்ப அழைப்பதில்லை என்றிருப்பவர்களே அதிகம். நாட்டின் ஒரே மொழியாக பிரெஞ்சு இருப்பது மிகப்பெரிய அனுகூலம்.

 
பொதுவாகவே பிற ஆயுதங்களினும் பார்க்க மொழி ஆயுதம் ஒப்பீடற்றது. தங்கள் மொழியின் பலத்தை அதன் வீச்சை மேற்கத்தியர்கள் நன்கு உணர்ந்தவர்கள். மார்க்ஸ் சமயத்தை போதைப்பொருள் என்றார். எனக்கென்னவோ மொழிதான் போதைப்பொருளாகப் படுகிறது. மேற்கத்தியர்கள் கொண்டுவந்த ஆங்கிலமும், பிரெஞ்சும், ஸ்பானிஷும்- உலகின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தி இவைதான் என கற்பிதம் செய்யப்பட்டபோதையில் மயங்க்கிக் கிடக்கிறோம். கல்வி, அறிவியல், மற்றும் பொருளாதார வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இன்று உலகின் இயல்புகளை இம்மொழிகள் புரட்டிப்போட்டிருக்கின்றன. இப்போதைக்கு அசலான சிகிச்சை அளித்த நாடுகள் மீண்டிருக்கின்றன. தங்கள் மொழிக் கயிறுகொண்டு உலகின் பல பகுதிகளில் சுதந்திரக் குரல்வளைகள் வெகு எளிதாக நெறிக்கப்பட்டன. அதிகாரத்தால், பொருளால் சாதிக்காததை மொழியால் சாதித்தார்கள். சிறுபான்மையினரை அடிமைப் படுத்த மொழி ஒர் ஆயுதம். காலனி ஆதிக்கத்தின்பேரால் பிற நாடுகளை இவர்கள் தேடிச் சென்றபோதும், இன்று அகதிகளாக இவர்களைத் தேடிவரும் மக்களிடமும் – இவர்களின் மொழிதான், அற்புத விளக்காக அட்சயபாத்திரமாக கையில் கொடுக்கப்படுகிறது- இவர்கள் கொடுக்கும் அட்சய பாத்திரம் மணிமேகலைக் கையிலிருக்கிற அட்சய பாத்திரமல்ல, பரதேசிகள் கையிலிருக்கும் திருவோடு, பிச்சையெடுக்க மட்டுமே பயன் தரும். நம்மைப் பிச்சைகார்ர்களென அவர்கள் மேற்குலக நாடுகள் புரிந்து வைத்திருக்கின்றன.

 
உண்மயைச்சொல்லப்போனால் பிரான்சு நாடு மேற்கு ஐரோப்பிய நாடுமட்டுமே அல்ல. அதன் பெரும் அளவு நிலப்பரப்பு ஐரோப்பாவில் இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். கிட்டத்தட்ட 1000 கி.மீ நீளம் கிழக்கு மேற்காகவும் 1000கி.மீ நீளம் வடக்குத் தெற்காகவும் பரந்துகிடக்கிற மேற்கு ஐரோப்பாவில் இருக்கும் பிரான்சு நாட்டின் 22 பிராந்தியங்களிலும் (தற்போதையை கணக்கின்படி கூடிய விரைவில் நிர்வாகச் செலவைக் குறைக்க இவற்றில் பதினைந்து பிராந்தியங்களை ஒன்றோடொன்று இணைத்து ஏழு பிராந்தியங்களாக மாற்றும் திட்டம் இருக்கிறது) தென் அமெரிக்காவில் கயானா; அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள குவாதுலூப், மர்த்தினிக் முதலான பிராந்தியங்கள்; பசிபிக் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சு போலினெஸி, நூவல் கலெதொனி பிராந்தியங்கள்; இந்தியப் பெருங்கடலிலுள்ள ரெயூயூனியன், மயோத் முதலானவை; பிறகு அண்டார்டிக்க்கில் ‘லா த்தேர் அதெலி’ ஆகிய அனைத்துப் பிரதேசங்களிலும் புவியியல் அமைப்பு,இனம், சமயம், பண்பாடு என மக்கள் வேறுபட்டிருப்பினும் அவர்களை அடக்கியாள நாட்டின் ஒரு மொழிக் கொள்கை உதவுகிறது. பிரெஞ்சு மொழிதான் பிரதான மொழி. பிரெஞ்சுப் பிரதேசங்களைப் பற்றி எழுத நினைத்த இவ்வேளையில், மொழிக்கும் பிரான்சுநாட்டின் அதிகாரத்தை ஆளுமையை திடப்படுத்தும் ஊட்டசக்தியாக பிரெஞ்சு மொழியின் பயன்பாடு இருக்கிறது என்பதைக் கூறுவது அவசியமாகிறது. பிரான்சு நாட்டில் பிராந்திய மொழிகள் உதாரணத்திற்கு அல்ஸாசியன், கோர்ஸ், கனாக் பாஸ்க், கத்தலான், ஒக்ஸித்தான் போன்றவை இருக்கின்றன. ஆனால் அவை இன்று செல்வாக்கின்றி இருக்கின்றன. இவற்றின் காரணத்தை விளங்கிக்கொண்டால் எதிர்காலத்தில் தமிழுக்கும் அப்படியொரு நிலமை ஏற்படாதவாறு தடுக்கவியலும், குறிப்பாக ‘தமிழ் வாழ்க’ என மேடையேறும் கூட்டம் விளங்கிக் கொள்ளுதல் அவசியம்.
அல்ஸாசியன், கோர்ஸ், கனாக் பாஸ்க், கத்தலான், ஒக்ஸித்தான் எனப் பல மொழி சிறுபான்மை மக்களிடையே ‘கனாக்’ மக்கள் மேற்குலக ஐரோப்பியரிடமிருந்து இனத்தால், பண்பாட்டால், மொழியால் வேறுபட்டவர்கள். தாங்கள் அடிமைப் பட்டிருப்பதாக நினைத்தார்கள், தங்கள் இருத்தலை தெரிவிக்க நினைத்தார்கள். ‘இதுவரை சரி ! இனி சரிவராது !’ எனச் சொல்ல நினைத்தார்கள். அவ்வப்போது கிளர்ச்சியில் இறங்குகிறார்கள், அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்களின் கிளர்ச்சி அடைந்தால் விடுதலை தவறினால் அவர்களின் உயிரிழப்பில் முடிந்த்தாகத்தான் வரலாறுகள் தெரிவிக்கின்றன. கனாக் மக்கள் விடயத்திலும் அதுதான் நடந்த து.

 

1988ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேதி 22: நாட்டில் அதிபர் தேர்தல் முதற் சுற்று நெருங்கிகொண்டிருந்த நேரம், பிரான்சு நாட்டுக்குச்சொந்தமான கடல் கடந்த பிராந்தியங்களில் நூவல் கலெதொனி பிராந்தியத்தில், கனாக் சோஷலிஸ்ட் விடுதலை முன்னணி (Front de la Libération nationale Kanak Socialiste) அமைப்பைச் சேர்ந்த இரு அங்கத்தினர்கள், யூனியன் கலெதொனியன் அமைப்பின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்த அல்போன்ஸ் தியானு என்பவரைச் சந்திக்கிறார்கள். FLNKS உறுப்பினர்கள் இருவரும், யூனியன் கலெதொனியன் இளைஞரைச் சந்தித்த நோக்கம் உள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வது. ஏற்கனவே அப்படியொரு கோரிக்கையையை முன்வைத்து காவல் நிலையமொன்றை முற்றுகையிட அவர்கள் கோரிக்க நிறைவேறியுள்ளது. ஆனால் இம்முறை அவர்கள் கோரிக்கை: நடக்கவிருக்கும் தேர்தலில் குறிப்பாக பிராந்திய நிர்வாகத் தேர்தலில் வாக்களிக்கிற உரிமை தீவின் பூர்வீக மக்களுக்கே உரியதென்றும்; அரசாங்கத்தால் குடியமர்த்தப்பட்ட ஐரோப்பியருக்கு தங்கள் தலைவிதியைத் தீர்மானிக்க உரிமை இல்லையெனக்கூறி அரசாங்கத்திடம் தேர்தலை நடத்தக்கூடாதென்றார்கள். காவல் நிலையத்தை முற்றுகையிட முனைந்தபோது காவலர்கள் எதிர் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. இரண்டு காவலர்கள் உயிரிழக்கிறார்கள். காவல் நிலைய முற்றுகை இப்படியொரு இக்கட்டான் நிலமையில் முடிந்ததற்கு யூனியன் கலெதொனியனே காரணமென சொல்லப்படுகிறது. சிறை பிடித்தவர்கள் பிணைக்கைதிகளுடன் இரு பிரிவாக ஆளுக்கொரு திசைக்குச் சென்றனர். ஒரு பிரிவு அடுத்த நான்கு நாட்களுக்குப் பிறகு நிர்வாகத்திற்கு அடிபணிந்து சரணடைந்தது. மற்றொரு பிரிவு இடது சாரி அதிபர் பதவிலிருந்ததால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வரும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் என நினைத்தார்கள். ஆனால் முடிவு வேறுவிதமாக அமைந்தது.

 

 

அப்போது அதிபராக சோஷலிஸ்டுக் கட்சியை சேர்ந்த பிரான்சுவா மித்தரான் என்பவரும் பிரதமராக வலதுசாரி கட்சியைசேர்ந்த ழாக் சிராக் என்பவரும் இருந்தார்கள். இருவரும் அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள், எதிரெதிர் அணியில் நின்றார்கள். இப்பிரச்சினையில் கனாக் சுதந்திரப்போராளிகளுக்கு ஆதராவக எந்த முடிவினை எடுத்தாலும் அது பெருவாரியான ஐரோப்பிய பிரெஞ்சு மக்களின் வாக்கினை இழக்கக் காரணமாகலாம். எனவே வலதுசாரி கட்சியைசேர்ந்த ழாக் சிராக் தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ராணுவத் தாக்குதல் நடத்தி பிணைக் கைதிகளாக உள்ள காவலர்களை மீட்பதென்று முடிவெடுத்தார். இடதுசாரி அதிபர் மித்ரானும் இதை ஏற்கவேண்டியக் கட்டாயம். விளைவாக ‘விக்டர் நடவடிக்கை யினால்’ (Opération Victor) 19 கனாக் போராளிகளைக் கொன்று ராணுவம் பிணைக்கைதிகளாக இருந்த காவலர்களை ராணுவம் மீட்டது. இந்நடவடிக்கையில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள். ஆனால் பிரெஞ்சு அரசாங்கம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் பல போராளிகளை அவர்கள் பிடிபட்டபிறகு கொல்லப்பட்டார்கள் என்ற விமர்சனத்தை மனித உரிமை ஆணையம் வைத்திருக்கிறது. கனாக் அமைப்பினர், ராணுவம், நூவல் கலெதொனி தொடர்ந்து பிரெஞ்சு நிர்வாகத்தில் இருக்கவேண்டும் என்கிறவர்கள் எனப் பலரும் இந்நடவடிக்கைக் குறித்து மாறுபட்ட கருத்தினை வைக்கிறார்கள். இந்நிலையில் வேறுவழியின்றி FLNKS பிரதிநிதி அரசாங்கத்த்தின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு சில உறுதிமொழிகளைப் பெற்றதைத்தவிர பெரிதாக பலனேதுமில்லை. அதிலொன்று 2014 -2018க் குள் பூர்வீகமக்கள் விரும்பினால் படிபடியாக ராணுவம், காவல்துறை, நீதித்துறை, நாணயம் இவை நீங்கலாக பிறவற்றில் சுதந்திரமாக செயல்படுவதற்கான அனுமதி. ஆனால் இவையெல்லாம் உண்மையில் நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. நூவல் கலெடொனிதவிர, கோர்ஸ், பாஸ்க் மக்கள் கூட தங்கள் சுதந்திரத்திற்காக கனவுகொண்டிருப்பவர்கள்தான்.

 

ஆக 1960 களில் ‘நூவல் கலெதொனி ‘பூர்வீக மக்கள் சொந்த நாடு குறித்த கண்ட கனவு 1988ல் சிதைந்த கதை இது. பதினெட்டாம் நூற்றாண்டில் புரட்சிக்குப் பின் பிரெஞ்சு குடிமக்களுக்கு அறிவித்த ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ பொய்யாய் பழங்கதையாய் போனகதையின் சுருக்கம்.
.
———————————————————

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள்-4

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:
‘நீலக்கடல்’ குறிப்பாக… – தேவமைந்தன்.

 

\dmaindan1nilakadal(தேவமைந்தன்ஒருகுறிப்பு:-தேவமைந்தனின்இயற்பெயர்அ. பசுபதி. 11-03-1948ல் கோவையில் பிறந்த இவர் புதுச்சேரி அரசின் தாகூர்கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணிபுரிந்துதன் 52-ஆம் அகவையில் விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம் ஆண்டு முதல் தேவமைந்தன் படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில் ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் வானொலி உரைகள் நிகழ்த்திவருபவர். ‘செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகிவருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக் கழகத்தில் தேவமைந்தன் ஆற்றியஉரை, கீற்று.காம்–இல் பதிவேற்றப் பட்டுள்ளது. திண்ணை.காம்–ல் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவரும் தேவமைந்தனின் கவிதைப்பக்கங்கள் மரத்தடி.காம், புதுச்சேரி.காம், வார்ப்பு.காம், கவிகள்.தமிழ்.நெட், கீற்று.காம் ஆகிய வலையேடுகளில்உள்ளன.
http://kalapathy.blogspot.com,
http://360.yahoo.com/pasu2tamil,
http://httpdevamaindhan.blogspot.com ஆகிய வலைப்பூக்கள் இவருடையவை.)

———————————

புதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:
‘நீலக்கடல்’ குறிப்பாக… – தேவமைந்தன்.

 

1673 ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன் முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச் சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன. 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன.

 

1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப் பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே ‘இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகா  மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரியின் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது. மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் ‘புதுவை வரலாறும் பண்பாடும்’ ‘தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும்’ போன்ற நூல்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதி குறிப்பு முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பல வற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை அந்த நூல்கள். இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் ‘புதுவைக் கலைமகள்’ என்ற ‘மாத சஞ்சிகை’ நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி, வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன.  1916ஆம்  ஆண்டில், ‘புதுவைக் கலைமக’ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், ‘ரமணி’ என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு ‘குணா குணவாராய்ச்சி” (புதுவைக் கலைமகள்– [1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும். சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் ‘ரமணி’ போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார். “உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு  ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்” என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார். இந்த அடிப்படையிலேயே – தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா! நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலானவற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு ‘Les Tamouls A L’lle Maurice – Ramoo Sooria Moorthy,’ ‘Les Indienes A L’lle de France, ‘ ‘A Lougnon – (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)’ முதலான பற்பல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.

 

புதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய ‘ஆண்களும் பெண்களும்'(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார். பிரான்சுக்குப் போய்வரும்  தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப் பட்டிருக்கிறார்  பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு ‘பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்’ என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார். “என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய  தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்!” என்று பிரபஞ்சன் மொழிவது ‘எழுத்தாளர் தர்ம’த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து ‘வைகறை’ என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய ‘எழுத்தாளர் தர்மம்’ என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) “எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு வந்து சேர்த்தார்கள்? தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்து விடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை” என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.
இருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கட’ல் (திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு [தெமி 1×8] பக்கங்கள் நிரம்பிய நாவல் – முன்னுரைகள் நீங்கலாக…) அந்தப் போலி வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்தி லெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது, திண்ணை.காம்-இல்  தொடராக வெளிவரும் ‘மாத்தா ஹரி” இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த ‘சொல்தா வாழ்க்கை’யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன. சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316) பிரபஞ்சனின் ‘மகாநதி” (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி – விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன், தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல். பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம். குவர்னதோர் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன. தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப் போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையைஉயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை – என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது.

 

அவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர். மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன் குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம் செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே. தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக் காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன.

 

பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற நாவல் ‘மானுடம் வெல்லும்’ என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது.  இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன். (மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி) ‘வானம் வசப்படும்,’ ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு – சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே (மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, “மசூதியை இடிக்க வேண்டாம்!” என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார். 1987இல் ‘வாழ்க்கை ஒரு விசாரணை’ நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர். எவருக்கும் அஞ்சாதவருங்கூட. “நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்?” என்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன. பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் ‘சிதறல்கள்(1990)’ நாவலில் காணமுடியும்.

 

சென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது. பாவண்ணனின் ‘ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),’ மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும்.  பாவண்ணன் படைத்த ‘இது வாழ்க்கை அல்ல(1988)’ என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும் உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா? ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண்ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள்.

 

புதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் ‘நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14)

 

“ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால் வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள் (இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்” என்று சொல்லும் பிரபஞ்சன்(‘உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்’: நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

 

பதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி ‘நீலக்கட’லில் ஐக்கியமாகின்றன. பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது. ‘நீலக்கடல்.’ பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து ‘டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் ‘அன்னத் தீவு’ என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் ‘மொரீஸ்’ என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் ‘பிரஞ்சுத் தீவு’ என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். (“பெயரில் என்ன இருக்கிறது!” என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.)
ஆம். “பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது.”(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம். தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே. ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் ‘கருமாறி ‘ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள். தாந்திரிக நிலையில் “வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி”(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் – கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் – தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் ‘கருமாறிப் பாய்வ’தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல – தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) ‘நீலக்கடல்’ நாவலில்தான் பார்க்க முடிகிறது.

 

சரி. ‘நீலக்கட’லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். “சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் – நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் – நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis – லூயி துறைமுகம்). கடல் – தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.) பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் – தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவி களிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது. யாருக்காகக் காத்திருக்கிறாள்? பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். “தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்.”(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா? காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் – மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள் தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான். “கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?”(ப.13) என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம் தருகிறார் நாவலாசிரியர்.ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய “புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது” என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது. (மத்திய ஆட்சிப்பகுதிகள் – 6: புதுச்சேரி. qu.in ‘மனோரமா இயர்புக்’)

 

‘நீலக்கடல்’ குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது.
இதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). ‘உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.’ அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார். புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை ‘The Serpent Of Paradise’ என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார். நீட்ஷே, “சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்?” என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். ‘தாந்திரிக மைதுனம்’ என்ற சடங்கைப் பற்றி (Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது – ‘நீலக்கட’லில் அலை – 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான். ” The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini”(op.cit.p.91) என்பது செர்ரனோவின் பதிவு. வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது.
‘நீலக்கட’லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ‘சொர்க்கத்தின் சர்ப்ப’த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. ‘நீலக்கட’லில் அமானுஷ்யமானதாக வருவது, ‘சொர்க்கத்தின் சர்ப்பத்’தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ‘நீலக்கடல்’ நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையின் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் “பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு… மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்” என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் – தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது. ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் – தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை – வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவு இல்லம் ஆகிய ‘காஞ்சி மனை’யில், அதன் நிர்வாகி’யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது.பின்தொடரும் ‘அடங்கல்’ – மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான ‘தினா’ புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. ‘உயிர்ச்சேதம்’ பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது  மறை மெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520)  “பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது”(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும். இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி – கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் ‘பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி”யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் – சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108) நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. “நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக”(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன்  சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!” என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா?” அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) ‘உளவியலுக்கான சார்பியல்’ (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். ‘The World According To Garp’ என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது. மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. “தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே.” இதில் ‘தன்’ என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது? இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது…

 

‘நீலக்கடல்’ நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன? “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்”(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு?

 

இல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா? எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக (அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் ‘சாமர்த்தியம்.’ எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார்.
‘நீலக்கட’லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் ‘சொஸ்த லிகித’மான ‘தினசரிப்படி சேதிக் குறிப்’பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் ‘Narrative’ என்பதை மனத்துள் கொண்டு ‘நவிலல்’ என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். ‘நீலக்கட’லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் “இந்தப்படிக்குப் படித்துப்போட” முடியாது.

 

இலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus…pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற ‘Ars Poetica’ என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் ‘Purple Patch’ என்பது. “It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose — especially a descriptive passage — stand out from its context”(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று ‘நீலக்கட’லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள்.

 

‘நீலக்கட’லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் “நண்பனே!” என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் – கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்தியுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் – கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது.

 

புதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள்! கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.
(“ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க?”).. “மிசியே! போன்சூருங்க!” என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; “முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு’ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு’ருக்காதே.. இன்னா! கண்டுபுடிச்சிக்கினியா?” (காரைக்காலில் “என்ன புள்ளா!”வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், “தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி!” என்றும் தமிழோசையை “நாங்க படிச்சாச்சு..நீங்க..?” என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

 

பிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று.
—————————————————————
உதவிய நூல்கள்(அகர வரிசைப்படி):
கிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 – 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083. முதற் பதிப்பு. 2005.
சண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது ‘E’ குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் – 560 038. முதற் பதிப்பு. 1991.
சாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை – 600 041. ஏழாம் பதிப்பு. 1971.
சுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977.
தில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 605 008.
பிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை – 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990)
பிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை – 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993)
பிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.
Abrams, M.H., A Glossary of Literary Terms, Seventh Edition 2001.
Harcourt India Pvt. Ltd. New Delhi. First Published by Harcourt, Inc. 1999.
Serrano, Miguel., The Serpent Of Paradise(The Story of an Indian Pilgrimage),
Translated by Prank MacShane. Bell Books – Vikas Publishing house Pvt Ltd., Delhi 110006. 5 Daryaganj, Ansari Road,1975.
First published in 1974 by Routledge and Kegan Paul Ltd.,London.

பிரான்சு நிஜமும் நிழலும் -6: பிரெஞ்சு மக்கள்

உலகம் போகிற போக்கைப் பார்த்தால் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ கூற்றை ஒரு மெய்மைக் கருத்தாக தருக்க நியாயத்தின் முடிவாக ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான். உலகம் தோன்றிய நாள்தொட்டு புலப்பெயர்வுகள் இருக்கின்றன. பழங்காலத்தில் அடிப்படை தேவைகளின்பொருட்டோ, இயற்கை காரணங்களுக்காகவோ புலம்பெயர்ந்தார்கள். பின்னர் உபரித்தேவைகளை முன்னிட்டு பொருளாதாரத்தில் மேம்பட்ட அல்லது சுபிட்சமான நாடுகளைத் தேடி மக்கள் இடம் பெயர்ந்தார்கள். பழங்காலந்தொட்டே இனம், மதம் அடிப்படையிலான உள்நாட்டுப் பிரச்சினைகள் புலப்பெயரலுக்குக் காரணமாக இருந்து வந்திருக்கின்றன. எனினும் இதுநாள்வரை காணாத அளவில் அண்மைக் காலமாக புலப்பெயர்வு உலகெங்கும் அதிகரித்துவருகின்றன. அறிவுசார் புலப்பெயர்தலை பெரிதும் வரவேற்ற ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இடம்பெயரும் சராசரி மக்களின் புலப்பெயர்வை ஓர் அபாயமாகப் பார்க்கின்றன. காலம்காலமாக நிகழ்ந்துவரும் இப்புலபெயர்வுதான் மனிதனோடு ஒட்டிப்பிறந்த மண் அடையாடளத்தை உதறக் காரணமாக இருந்துவருகிறது. எனவேதான் பிரெஞ்சு மக்களைக்குறித்து எழுத நினைத்தபோது, புலப்பெயர்வும் சொல்லப்படவேண்டியதாக உள்ளது. இன்றைய இந்தியனோ, இலங்கையனோ, அமெரிக்கனோ அல்லது மேற்கு நாடுகளைச்சேர்ந்தவனோ “தனிஒருவன்” அல்ல; அவன் பலப் பண்புகளின் சங்கமம், பத்துத் தலையும் இருபது கைகளுங்கொண்ட இராவணன். அது போலவே, ஒரு பிரெஞ்சுக்காரன் என்பவன் எந்த நிறமாகவும் இருக்கலாம், எந்த மதமாகவும் இருக்கலாம், எந்த இனமாகவும் இருக்கலாம், தாய்மொழியாக எதுவும் இருக்கலாம், வடக்குத் தெற்கு, கிழக்கு மேற்கென்று வந்த திசை எதுவென்றாலும், தன் வாழ்நாளின் கணிசமான காலத்தைப் பிரான்சு நாட்டில் அல்லது அதன் தொலைதூர பிரதேசங்களில் (மர்த்தினிக், பிரெஞ்சு கயானா, குவாதுமுப் ரெயூனியன்) கழிக்க நேர்ந்த, பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற அனைவருமே ஒருவகையிற் பிரெஞ்சு மக்கள்தான். அப்படித்தான் அவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சொல்கிறது. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன. இந்த நாட்டிற்கு ஏதேதோ காரனங்களால் புலம்பெயர்ந்து வந்தவர்கள் அனைவரும் பிரெஞ்சுக்காரர்கள் ஆகிவிடமுடியுமா? என்னிடம்கூட பிரெஞ்சுப் பாஸ்போர்ட் இருக்கிறது. சட்டம் அதன் பெயரால் உரிமைகளையும், வழங்கியுள்ளது. ஆனால் ஒரு ஐரோப்பிய நாடொன்றைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு பிரெஞ்சுக் குடிமகனுக்கு நான் சமமா என்றால் இல்லை. எனக்கே என்னை பிரெஞ்சுக்காரனாக ஏற்பதில் குழப்பங்கள் இருக்கிறபோது அவர்களைக் குறை சொல்ல முடியாது.

 

பூர்வீகப் பிரெஞ்சு மக்கள்?

இன்றைய பிரெஞ்சுமக்களைப் பற்றி பேசுவதற்கு முன்பாக, பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட இம்மக்களின் சமூககம் வேர்பிடித்த காலம் அண்மைக்காலத்தில்தான் நிகழ்ந்தது, ஆயிரம் ஆண்டு பழமைகொண்ட வரலாறுக்கு அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. பிரெஞ்சுக் காரர்களின் பூர்வீக மக்கள் என்று பலரை வரலாற்றாசிரியர்கள் குறிப்ப்பிடுகிறார்கள். 13ம் நூற்றாண்டில் இந்திய ஐரோப்பிய வழியில்வந்த கெல்ட்டியர்கள் ஆயிரக்கணக்கில் இன்றைய பிரான்சுநாட்டில் குடியேறியதாகவும் அவர்களை ரொமானியர்கள் கொலுவா என அழைத்ததாகவும், அம்மக்களே பிரெஞ்சுக்காரர்கள் எனகூறுகிறவர்கள் இருக்கின்றனர் வேறு சில வரலாற்றாசிரியர்கள் பிரெஞ்சு மக்களின் முன்னோர்களென்று ரொமானியர்களைச் சொல்கிறார்கள் பிறகு பன்னிரண்டாம் நூற்றாடில் அரசாண்ட கப்பேசியன் முடியாட்சி, தம்மை •பிரான்க் முடியாட்சி என அறிவித்துக்கொண்டததென்றும் அவர்கள் அரசாங்கம் பிரான்சியா என்றும், மக்கள் பிரான்சியர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. இது தவிர பிரெத்தோன், பாஸ்க்,நொர்மான் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களும் பிரெஞ்சுக்காரர்களின் முன்னோர்கள் என்று வரலாறு சொல்கிறது.

 

புலம்பெயரும் மக்களும் பிரான்சும்

இன்றைக்கு பிரான்சு நாட்டின் குடிவரவு சட்டம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. பிரெஞ்சு மக்கள் இரண்டு பிரிவாக நின்று யுத்தம் செய்கிறார்கள். ஒரு பிரிவினர் தீவிர வலதுசாரிகள். இவர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்த செக், ஸ்லோவாக்கியா, போலந்து, அங்கேரி முதலான நாடுகளின் அகதிகள் எதிர்ப்பு நிலையை வரவேற்கிறவர்கள். குறிப்பாக செக், அங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் கிருஸ்துவர்களை மட்டுமே அகதிகளாக ஏற்போம் என்கின்றன. டென்மார்க் நாடு அகதிகளுக்கான சலுகைகளைக் குறைத்துக்கொண்டதன் மூலம் அகதிகள் தங்கள் நாட்டிற்கு வரும் ஆர்வத்தை மட்டுபடுத்தியிருக்கிறது. பிரான்சு நாட்டிலும் சில வலதுசாரிகள் தங்கள் நகரசபைகளில் கிருஸ்துவர்களுக்கு மட்டுமே இடமளிப்பதென தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த வலதுசாரிகள் சொல்லும் காரணம் ஈராக் மற்றும் சிரியா எல்லையில் இருக்கும் செழுமையான வளைகுடா நாடுகள் அகதிகளை ஏற்க முன்வராதபோது நாம் ஏன் உதவேண்டும் என்பதாகும். இந்த வாதம் பிரெஞ்சு மக்களில் ஒரு சிலருக்கு ஏற்புடையதாக இருக்கிறது. இந்நிலையில் பிரான்சு நாட்டு இடதுசாரிகளும் எதிர் வரும் தேர்தலைக் கணக்கிற்கொண்டு தங்கள் அகதிகள் ஆதரவு நிலையை சிறிது அடக்கி வெளிப்படுத்தபடவேண்டிய நிர்ப்பந்தம். ஈராக், சிரியா நாடுகளிலிருந்து வரும் அகதிகளை மட்டுமே ஏற்பது, பொருளாதார காரணங்களை முன்னிட்டு அகதித் தகுதிக்கு விண்ணப்பிக்கும் அந்நியர்களை நிராகரிப்பது, இனி வருங்காலத்தில் படிப்படியாக அகதிவிண்ணபங்களைக் குறைப்பது எனப் பேசிவருகிறார்கள்.
1793ம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியாளர்கள் தங்கள் அரசியல் சட்டத்தில், சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களுக்கு புகலிட அனுமதி வழங்குவதென” தீர்மானித்தார்கள். இதன்படி நல்ல பொருளாதார வாழ்க்கைக்காக பிரான்சு நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்க்கு எல்லைக்கதவுகள் திறந்தன. புகலிடம் தேடிவருபவர்களும் தங்கள் உழைப்பு, ஆற்றல், இரண்டையும் முழுமையாக அளித்து நாட்டின் பொருளாதாரம், ஜனநாயகம், பண்பாடு ஆகியவற்றிர்க்கு உதவுவார்கள் என பிரான்சு எதிர்பார்த்தது. இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜிய மக்களின் வருகை பிரான்சு நாட்டின் தொழிற்துறை வளரக் காரணமாயிற்று. அவ்வாறே முதல் உலகப்போருக்குப்பின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக போலந்து அர்மீனியா, ரஷ்யா மக்களால் பிரான்சு வளம்பெற்றது. அறுபதுகளில் வட ஆப்ரிக்க நாடுகள், ஆசிய பிரெஞ்சுக் காலனி மக்கள் பிரான்சு நாட்டின் ராணுவம் பொருளாதாரம் ஆகியவற்றிர்க்குப் பெரிதும் உதவியிருக்கிறார்கள். கலை இலக்கியமுங்கூட அதிக இலாபத்தை அடைந்திருக்கிறது வெளிநாட்டிலிருந்து பிரெஞ்சில் எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர்கள், ஓவியர்கள், பாடகர்கள் பட்டியல் நீளமானது: குந்தெரா, யூர்செனார், ஸொல்ல, மாலூ•ப் என நிறையக் கூறலாம்.

 

பிரான்சும் தமிழர்களும்:

பிரெஞ்சு தமிழர்கள் என்கிறபோது அவர்கள் புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல. பிரெஞ்சு மண்ணோடு, மொழியோடு, கலாச்சாரத்தோடு ஏதோவொருவகையில் தொடர்புடைய தமிழர்களெல்லாம் பிரெஞ்சுத் தமிழர்களெனில், மொரீஷியஸ் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுங்கூட பிரெஞ்சுத் தமிழர்களாகிறார்கள். ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழர்கள் பிரான்சில் இன்றைக்கு வசிக்கிறார்களெனில் அவர்கள் இந்தியா (புதுச்சேரி), இலங்கை, மொரீஷியஸ் நாடுகளிலிலிருந்து அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டு இங்கு குடியேறிவர்கள். இம்மூன்று பிரிவினரும் எண்ணிக்கை அளவில் ஏறக்குறைய சமமாகவே இருக்கிறார்கள்.

 

காலனிய ஆதிக்கத்தின் விளைவாக புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களும், மொரீஷியஸ் தமிழர்களும் பிரான்சுக்குக் குடியேறியவர்கள். இந்து மாக்கடலைச்சேர்ந்த பிரெஞ்சு தீவுகளில் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் 17ம் நூற்றாண்டிலேயே கப்பலில் கொண்டுவரப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். தொடக்கத்தில் அடிமைகளாகவும், பின்னர் தோட்டத் தொழிலாளர்களாகவும் உதாரணமாக பெனுவா துய்மா என்பவர் கவர்னராக இருந்த காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காப்பித்தோட்டத்தில் பணிபுரியவென்று 300 புதுச்சேரி தமிழர்கள் அழைத்துவரப்பட்டு ரெயூனியன் என்ற தீவில் குடியமர்த்தப்பட்டார்கள். நாளடைவில் அவர்கள் மர்த்த்தினிக், குவாதுலுப், பிரெஞ்சு கயானா தீவுகளென்று பரவி வசித்தனர். பின்னர் அவர்களில் பலர் ஐரோப்பிய எல்லைக்குள்ளிருந்த பிரெஞ்சு பிரதேசத்துக்கு குடிவந்தனர். இவ்வரலாறு மொரீஷியஸ¤க்கும் ஓரளவு பொருந்தும். 1940களில் இரண்டாம் உலகபோரின் போது பிரான்சு பிறகாலனிகளிலிருந்து எப்படி யுத்தத்திற்கு ஆள் சேர்த்ததோ அவ்வாறே தமதுவசமிருந்த இந்திய காலனிப்பகுதிகளிலிருந்தும் வீரர்களைக் கொண்டுவந்தது. புதுச்சேரி அடித்தட்டு மக்கள் பலரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தனர். பிரான்சு நாட்டில் இன்றுள்ள புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த இந்தியத் தமிழர்களில் பெரும்பாலோர் பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்தவர்களாகவோ அல்லது அவர்கள் சந்ததியினரின் இரத்த உறவுகொண்டவர்களாகவோ இருப்பார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றதை அடுத்து, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன்’இணைப்புத் தீர்மான ஒப்பந்தத்தின்'(De-facto settlement’) அடிப்படையில் இணைந்தது. இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் இந்தியாவுக்கும் பிரான்சுக்குமிடையில் மீண்டுமொரு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. தொடர்ந்து 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகார மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure Transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். இவ்வொப்பந்தம் புதுச்சேரி மக்களுக்கு இந்தியா அல்லது பிரான்சுநாட்டு குடியுரிமைகளூள் இரண்டிலொன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பினை நல்கி, அவ்வாய்ப்பினை மேலும் ஆறுமாதகாலம் நீட்டிக்கவும் செய்தார்கள். அதன் பலனாக கணிசமான அளவில் புதுச்சேரி, காரைக்கால் வாசிகள் மீண்டும் பிரான்சுக்கு வரநேர்ந்தது. இது புதுச்சேரி தமிழர்கள் பிரான்சுக்கு வரநேர்ந்த வரலாறு. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பிரான்சுக்குக் குடிவந்தவர்களென்பது அண்மைக்காலங்களில் திரும்பத் திரும்ப நாம் வாசித்தறிந்த வரலாறு.

 

பிரான்சு நாட்டில் குடியேறிய வெளிநாட்டினர் பொருளாதார அடிப்படையில் நன்றாகவே வாழ்கின்றனர். எக்காரணத்தை முன்னிட்டு புலப்பெயர்வு இருந்தாலும் நாட்டில் பிரச்சினை தீர்ந்தவுடன் அல்லது பொருளாதார காரணங்களால் இங்கு வந்தவர்கள் ஓரளவு பொருள் சேர்த்தவுடன் சொந்த நாட்டிற்குத் திரும்புவது வழக்கமில்லை. இன்று நேற்றல்ல புலம் பெயருதல் என்றைக்குத் தொடங்கியதோ அன்றிலிருந்தே இது ஒருவழிச் சாலையாகத்தான் இருக்கிறது. மதுரையிலிருந்து சென்னைக்குக் குடியேறினாலும் சரி, மாஸ்கோவொலிருந்து பாரீஸ¤க்கும் வந்தாலும் சரி, விதியொன்றுதான். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெற்றோர்கள் எப்படியிருப்பினும், பிள்ளைகள் குடியேறிய நாட்டின் பண்பாட்டில் ஊறியபின் உலருவது எளிதாக நடப்பதில்லை. தவிர சொந்த நாடு வந்த நாடு இருதரப்பின் பலன்களையும் எடைபோட்டுபார்க்கிறபோது வந்த நாட்டில் பலன்கள் கூடுதலாக இருப்பதும் ஒருகாரணம். புலம்பெயர்ந்த மக்களுக்கு மட்டும் நன்மையென எண்ணவே வேண்டாம். புலம்பெயர்ந்த மக்களை ஏற்ற நாடுகளுக்கும் இதில் இலாபம் பார்த்திருக்கின்றன.

 

66.3 மில்லியன் மக்கட்தொகையைக்கொண்ட பிரான்சு நாட்டில், 70 விழுக்காடு மக்கள் பூர்வீக மக்களென்றும் மற்ற்வர்கள் இந்தத் தலைமுறையிலோ அதற்கு முன்போ புலம்பெயர்ந்து வந்தவர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள். இப்புலம்பெயர்ந்த மக்களிலும் 40 விழுக்காடுமக்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பிரான்சுக்குள் குடியேறிவர்கள். ஐரோப்பாவிலிருந்து புலம்பெயர்ந்து வருகிற மக்களுக்கு பிரச்சினைகள் பொதுவில் இருப்பதில்லை. ஆனால் ஆசிய ஆப்ரிக்க, தென் அமெரிக்க நாடுகளிலிருந்து புலம்பெயரும் மக்களிடமே உள்ளூர் மக்களுக்கு வெறுப்பிருக்கிறது. அந்த வெறுப்பினை உமிழ்கிறவர்கள் பெரும்பாலும் பூர்வீக பிரெஞ்சு மக்கள் அல்ல புலம்பெயர்ந்த ஐரோப்பியர்களின் வாரிசுகள். பிரான்சு நாட்டு மக்களில், பிற ஐரோப்பிய நாடுகளைப்போலவே கிறித்துவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இரண்டாவது மதமாக இஸ்லாம் இருக்கிறது சுமார் ஏழுமில்லியன் மக்கள் அச்சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். எனினும் 40 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாகவும், 60 விழுக்காடு மக்கள் ஏதாவதொரு சமயத்தைச் சார்ந்திருக்கிறபோதும் மதச்சடங்குகள், சம்பிரதாயங்களை பொருட்படுத்தாமல் வாழ்கிறவர்கள் என வாக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்றுதலைமுறைகளாக பிரான்சு நாட்டில் வாழ்ந்து வரும் மக்களின் குணம் எப்படி? எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். பரிசுப் பொருட்களுக்கு சட்டென்று மயங்குபவர்கள். அந்நியர்களை அத்தனை சீக்கிரம் பொதுவில் நம்ப மாட்டார்கள். தங்களைப்பற்றி உயர்ந்த அபிப்ராயங்கள் உண்டு, பிறரைக் குறிப்பாக மூன்றாவது உலக நாட்டினரை குறைத்து மதிப்பிடுவார்கள். வரலாறு பிரிட்டிஷ்காரர்களை உயர்த்தி பிடிப்பது காரணமாகவோ என்னவோ கனவில்கூட ‘So British!’ காதில் விழுந்துவிடக்கூடாது. ஆங்கிலம் கூடவே கூடாது ஆனால் அமெரிக்கர்கள் பேசினால் Bravo ! – ஆனால் இந்த ‘Bravo’ ’ இத்தாலியிலிருந்து புலம் பெயர்ந்து வந்தது,

 

(தொடரும்)

——-

மூத்த படைப்பிலக்கியவாதிகள் திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் -3

வாழ்வின் பன்முகப்பிரதி – க. பஞ்சாங்கம்
(‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவல் குறித்து முனைவர்.க.பஞ்சாங்கம்)kirushnappar_nayakar__21225

தமிழில் நாவல் என்ற இலக்கிய வகைமை தோன்றி ஒன்றரை நூற்றாண்டு காலத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் தமிழ்மனப்பரப்பில் ‘நாவல் என்பது பாட்டி சொல்லுகின்ற பழங்கதை போன்றதுதான்’ என்ற பார்வைதான் இன்னும் ஆழமாக நிலைபெற்றுள்ளது. கல்விப்புலத்திலும்கூடப் பெரும்பாலான தமிழ்ப் பேராசிரியர்கள் அப்படித்தான் மாணவர்களுக்கு ஒரு நானூறு பக்க நாவலைக் கதையாக மட்டும் சுருக்கி இரண்டு வகுப்பில் நடத்திமுடித்து விட்டு, இரண்டு மாதிரி வினாக்களையும் சொல்லி நாவலை மாணவர்களிடமிருந்து மட்டுமல்ல, தன்னிடமிருந்தும் அப்புறப்படுத்திவிடுகிறார்கள். மேலும், இத்தகைய முறையில் நடத்துவதற்கு ஏற்ப அமைந்துள்ள எழுத்துக்களைத்தான் ‘நாவல்’ என்ற பாடப்பகுதிக்குத் தேர்ந்தெடுத்து வைக்கிறார்கள் என்பது இன்னும் பெரிய அவலம். இத்தகைய நிலைக்கு நேர்எதிர்மாறாக நாவல் என்பது கதை சொல்வதல்ல; அந்தப் பின்புலத்தில் சமூகத்தை ஆவணப்படுத்துவது; வரலாற்றை, நிகழ்வுகளைப் புனைவாக உருமாற்றுவதன் மூலம் அவற்றை அழகியலாக்குவது; வாழ்வின் நீள்வலியையும் வாதையையும் மொழிப்படுத்தி இருப்பின் அதிசயத்தைக் கொண்டாடுவது; ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களை நிறுத்தி வாழ்வின் தீராத கவர்ச்சியாக இருக்கும் புதிர்களை நோக்கி மடைமாற்றி விடுவது; சமூகத்தின் ஆழத்தில் இயங்கும் எளிதில் பிடிபடாத நுண் அரசியலை, ஆதிக்கங்களை வெளிக்கொணர முயல்வது என்ற தளத்திலும் தமிழில் நாவல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன; அத்தகைய வரிசையில்தான் நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவல் வெளிவந்துள்ளது.
செஞ்சி ‘கிருஷ்ணபுரமென்றும்’ சிதம்பரம் ‘தில்லை’ என்றும் அழைக்கப்பட்ட கிருஷ்ணப்ப நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் (1597 – 1617) நடந்த வித்தியாசமான வரலாற்று நிகழ்வுகளைத் தனது புனைவிற்குள் கொண்டு வருவதன் மூலம் அற்புதமான ஒரு புதிய பிரதியைக் கட்டமைத்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. தமிழ்நிலம் சார்ந்த வாழ்வை, வரலாற்றை, இங்கிருந்து புலம்பெயர்ந்து போய் பிரான்சில் வாழ்ந்து கொண்டு – ஓர் அந்நியச் சூழலில் தன்னை இருத்திக் கொண்டு – நோக்குவதனால், அவருக்குள் இந்த மண் குறித்த கூடுதலான புரிதலும் அழகும் அசிங்கமும் கூடி வந்து கை கொடுத்துள்ளன போல் தோன்றுகிறது. ஏற்கனவே நீலக்கடல், மாத்தா ஹரி என்று இரண்டு நாவல்களை உலகத் தரத்தில் எழுதியுள்ளவர் என்பதும்குறிப்பிடத் தகுந்தது.

இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன. வாசகர்கள்தான் உருட்டி உருட்டி பின்னமுற்றுக் கிடக்கும் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே நகர வேண்டும். தில்லையில் தாசிக்குலப் பெண் சித்ராங்கியின் பணிப்பெண்ணான செண்பகத்திற்குக் கள்ள உறவில் பிறந்த ஒரு குழந்தை, விஜயநகரப் பேரரசின் இளவரசனாக முன்மொழியப்படும் நிலைக்கு எவ்வாறு கொண்டு செலுத்தப்பட்டான்; எதிர்பாராத நிகழ்வுகள் எப்படி மனித வாழ்வை வடிவமைக்கின்றன; என்பதுதான் நாவலின்அடிப்படை முடிச்சு. இந்த முடிச்சை வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு விதமாக அவிழ்க்கிற நிகழ்ச்சிகளைக் காலத்தாலும் இடத்தாலும் முன்னும் பின்னுமாக அடுக்கி வைத்திருப்பது தான்கதைசொல்லியின் மிகப்பெரிய பலம்.
இந்த நாவல் எடுத்துரைப்பின் பலம் அது கையாளும் மொழியில் இருப்பதாகப் படுகிறது. 17ஆம் நூற்றாண்டுத் தமிழ்மொழியில் எப்படிக் கதையை நிகழ்த்திச் செல்வது? என்ற பெரிய பிரச்சினையை நாவல் எதிர்கொண்டுள்ளது; சான்றாக, தில்லைவாழ் அந்தணர்கள் எப்படிப் பேசி இருப்பார்கள்? இன்றைக்குப் பிராமணர்கள் வீட்டில் பேசுகிற அந்தப் பேச்சுத்தமிழ் அன்றைக்குத் தோன்றியிருக்குமா? தெரியாத நிலையில் தீட்சதர்களின் பெயர்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகளின் தோரணை, தெருக்களின் முகம் முதலியவற்றைச் சொல்வதன் மூலமாகவே பிராமணக் குடும்பச் சூழலை வாசகர் மனத்திற்குள் கொண்டு செலுத்திவிடுகிறார்; அகராதிகளில் தேடிப்பிடித்துப் பிரத்தியேகமான வார்த்தைகளைக் கொண்டுவந்து வேலை வாங்கியுள்ளார்; நிகழ்ச்சிகளையெல்லாம் கதைமாந்தர்களை எல்லாம் இன்றைய யதார்த்தவாத எழுத்தாளர்கள் தங்களின் சாதனையாகக் கருதுகின்ற அந்தப் ‘பேச்சுமொழி உரைநடை’ இல்லாமலேயே சிறப்பாகப் படைத்துக் காட்டிவிடலாமென்பதை கிருஷ்ணா செய்துகாட்டிவிட்டார் என்கிற உண்மை, எனக்குள் பெரும் வெளிச்ச வெடிப்பாக இறங்கியது. இதுபோலவே ‘சேரி வாழ்வையும்’ பேச்சுமொழி உரையாடல் இல்லாமலேயே காட்சிப்படுத்த முடிந்திருக்கிறது.
மர்மங்களின் மேல் வெளிச்சத்துளிகளைத் தூவுவது போல ஒரு பாணியில் நாவலை எடுத்துச் செல்லும் கதை சொல்லி, வாழ்வில் எதிர்கொள்ள நேரும் அமானுஷ்ய விஷயங்களையும் தொன்மங்களையும் எடுத்துரைப்பிற்குப் பயன்படுத்தும்போது வாசிப்பின் ஆர்வமும் ஈடுபாடும் கூடிக்கொண்டே போகின்றன. படைப்பிற்குள் வாசகரும் தொழில்புரிய வேண்டிய சூழலை உருவாக்கிவிடுகிறார். “மரணக் கிணற்றுக்குள்” இருந்து கேட்கிற ஓலங்கள், ஹரிணி ஏதோ ஒரு பிடியில் சிக்கி ஓடிச் சென்று கிணற்றுக்குள் விழுவது போன்ற காட்சி, பேருந்து நிலையத்தில் சாமிநாதனென்று ஒருவனைப் பார்ப்பது, பிறகு அப்படி ஒரு ஆளே இல்லை என்று அறிய நேர்வது, செண்பகம் – கமலக்கண்ணி என்ற ரூப / அரூப மயக்கம், – இப்படிப் பல மர்மமான நிகழ்வுகள் மூலம், ஒரு வரலாற்று நாவலை வாழ்வின் புதிரைத் தேடும் பயணமாகப் படைத்து விடுகிறார்; அதனால்தான் 2050இல் ஹரிணியின் மகளான பவானி (அடுத்த தலைமுறை) மீண்டும் புதுச்சேரி, செஞ்சி என்று வந்து தன் அம்மா குறித்த பல உண்மைகளைத் தெளிவுபடுத்திக் கொண்டு திரும்பும்போது அவளுக்குப் பசுவய்யாவின்
எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்?
பாதத்தின் விளிம்பிலிருந்துதானா?
அல்லதுஅதன் அடியிலிருந்தா?
என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன என்று சொல்லி நாவலை முடிக்க முடிகிறது. 254 பக்கத்திற்கு இதுவரைப் புனைந்து வந்த அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் வெறும் நிழல்கள்தானா? எல்லாமே பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போய்விடுமா? தீராத வினையாய் வாசித்து முடித்த நமக்குள் தொடர்ந்து பயணிக்கிறது.
மதம், தாசி, அரசு என்ற மூன்றும் கூடிக்கொண்டு நாயக்கர் காலப் பொதுமக்களின் வாழ்வை எவ்வாறு சீரழித்தன என்று ஒரு வரலாற்று நாவல் போல இது புனையப்பட்டாலும் நிகழ்காலச் சமூகத்திலும் இந்தக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என முன்வைக்கின்ற அறச்சீற்றம் இப்புனைவுகளுக்குள் பொதிந்துவைக்கப்பட்டுள்ளது.
அகச்சமயம் புறச்சமயமென முறுக்கிக்கொண்டு கிடந்த பக்தி காலகட்டத்தை ஒட்டிப் புறச்சமயமான சமணத்தையும் பௌத்தத்தையும் கழுவேற்றி அழித் தொழித்த நிலையில் அகச்சமயத்திற்குள்ளேயே முரண்கள் முற்றி, தில்லை நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தனுக்கு என்ன இடமென்று இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளை அப்புறப்படுத்திய பின்பு, செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் தன் காலத்தில் மீண்டும் நடராஜர் கோயிலுக்குள் கோவிந்தராஜர் திருப்பணியைத் தொடங்குகிறார்; தீட்சதர்கள் தடுக்கிறார்கள்; சபேச தீட்சதர் அரசர் காலில் விழுந்து விண்ணப்பம் செய்கிறார்; “தாழ்மையாகப் பெரியவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்; முன்னோர்கள் காலத்தில் சைவவைணவ பிரிவினருக்கிடையே மாச்சர்யம் இருக்கக்கூடாது என்பதால் விபத்தாக(?) கனகசபைக்கருகிலேயே சித்திரக்கூடத்தையும் ஏற்படுத்திவிட்டார்கள். அப்பொழுதே நாங்கள் தடுத்திருக்க வேண்டும். தடுத்திருந்தால் இன்றிந்த பிரச்சினை எழாது. அச்சுதராயரைத் தொடர்ந்து இன்றைக்கு நீங்களும் வைணவ சன்னதியைக் கட்டியெழுப்புவதற்கு வந்து நிற்கிறீர்கள். நாட்டில் திருப்பணிக்குகந்த வைணவ ஸ்தலங்கள் ஏராளமாக உள்ளன. இது சிவ ஸ்தலம். கோவிந்தராஜர் இந்த ஆலயத்திலுள்ள பிற கடவுளர் போல பரிவார தெய்வங்களுக்குள் வருகிறாரே தவிர, அவருக்கு வேறு முக்கியத்துவங்கள் கூடாதென்பதுதான் எங்கள் பிரார்த்தனை. தீட்சதர்களாகிய நாங்கள் ஒருவருக்கும் பொல்லாங்கு பண்ண வேணுமென்று நினைக்கிறவர்களல்லாத படியால், அபகாரியம் செய்து சுவாமி ஆக்கினைக்கு ஆளாக வேண்டாமென்று தங்கள் பாதாரவிந்தங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்” என்கிறார்; முடிவாக என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டபோது, “எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் ஒரு கல்லைக்கூட கோவிந்தராஜருக்கென உள்ளே வைக்க அனுமதியோம்”. கோவிலில் நைவேத்தியம் செய்து பிழைக்கும் நீர் சவால் விடுகிறீரா? என்கிறது அதிகாரம்.
“கோபுரத்தில் ஏறி உயிரை விடுவோம்” என்று தீட்சதர் கையை அசைத்துப் பேசிய போது “சிகை அவிழ்ந்து பின்புறம் ஆடியது” எனக் காட்சிப்படுத்துகிறார் கதைசொல்லி. “உமக்கு அப்படியொரு பிரார்த்தனையிருந்தால் தாராளமாகச் செய்யும்” என்று மன்னன் சொல்லி முடிப்பதற்குள், “சங்கரா! ஒரு குரல் தெற்குக் கோபுரத்தின் திசைக்காய்க் கேட்டது. ஈஸ்வர தீட்சதர் இரண்டாம் பிறைமாடத்திலிருந்து குதித்திருந்தார். நச்சென்று சத்தம். காலைப்பரப்பிக் கொண்டு இறந்தார். மூளை சோற்றுப் பருக்கை போல இரத்த சிவப்பில் சிதறிக் கிடந்தது . . . பிரகாரமெங்கும் மகாதேவா! சதாசிவா! எனக் குரல்கள் கேட்டன”. ஒவ்வொருவராக விழத் தொடங்கினர்; ஏன் ஒவ்வொருவராகச் செத்து மடிய வேண்டும், “மொத்த பேரையும் சுடுங்கள்” என ஆணை பிறந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசிய மதபோதகர் பாதர் பிமெண்ட்டா அன்றைய இரவு தமது நாட்குறிப்பில் “கோபுரத்திலிருந்து குதித்து உயிரைவிட்ட தீட்சதர்கள் மாத்திரம் மொத்தம் இருபது பேரென மறக்காமல் குறித்துக்கொண்டார்”.
இந்தப் பகுதியைப் படிக்கும்போது இன்னும் அதிகமாக இந்நிகழ்ச்சியைப் புனைந்திருக்க வேண்டுமென எனக்குப்பட்டது; ஏனென்றால் இதுவரை தீட்சதர்கள் கோபுரத்தில் குதித்த இந்த வரலாறு, புனைவெழுத்திற்குள் வரவே இல்லை. இவர்தான் முதன்முதலில் இதைச் செய்துள்ளார்; மேலும் இந்நிகழ்வு வாய்வழிச் செய்திதான்; பெரிதும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் இங்கே இன்னும் நிலவிக்கொண்டிருக்கிறது; இது குறித்து நாகரத்தினம் கிருஷ்ணாவிடம் கேட்டேன்;”இது வரலாறு; அந்தப் போர்த்துக்கீசிய மதத்துறவி தனது நாட்குறிப்பில் தான் கண்டதை அப்படியே எழுதியுள்ளார்; அது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; நான் அதை பாரீஸ் நூலகத்தில் எடுத்து வாசித்துள்ளேன். வேறுசில வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அவர் எழுதியுள்ளது சரிதான் என்றும் தெரிகிறது. அதனால்தான் அவர் பெயரை அப்படியே நாவலில் சேர்த்துள்ளேன்” என்றார். இவ்வாறு கிருஷ்ணா கூறிய பிறகு, இதைத் தீட்சதர்களின் தனிப்பட்ட போராட்டமாக மட்டும் காட்டாமல், அவர்கள் தலைமையில் பொதுமக்களின் போராட்டமாகப் புனைந்திருக்கலாமே என்று எனக்குப்பட்டது. அரசை எதிர்த்து சபேச தீட்சதரின் மருமகன் ஜெகதீசன் சொல்வது போல உணர்ச்சிவசப்பட்டுத் திடீரென எடுத்த ஒரு முடிவு போல நாவலுக்குள் இது காட்டப்பட்டுள்ளது. சபேச தீட்சதரே ஒரு கட்டத்தில் ‘அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமே’ என்று மனம் மருகுவது போலச் சொல்லப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒரு போராட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால், அது குறித்துப் பலவிதமான உரையாடல்கள், பலவிதமான தரத்தில், தளத்தில் பல நாட்கள் நடந்திருக்க வேண்டும்; இந்தப் புனைவெழுத்து அத்தகைய உரையாடல்களைக் கைப்பற்ற முனைந்திருக்கலாமோ என்று பட்டது; மேலும், தீட்சதர்கள் இத்தகைய முடிவெடுப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது புனைவெழுத்தின் பிடிக்குள் வரவில்லை என்று எனக்குத் தோன்றியது.
வரலாறுதோறும் மதப்பிரச்சினைகளை– மதப் பிரிவுகளைக்–கூர்மைப்படுத்திப் பெருவாரி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்து விழிப்புணர்வு பொதுவெளியில் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. நாயக்கர் ஆட்சியிலும் இப்படித்தான் மதம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கதைசொல்லி மிக நுட்பமான அவதானிப்புடன் பதிவுசெய்துள்ளார். “ஏற்கனவே எழுந்தால் வரி, உட்கார்ந்தால் வரி . . . ஏழைக் குடியானவனுக்கு உடலுள்ளவரை கடல் கொள்ளாத கவலை” அவர்களின் இத்தகைய கவலைகள் அதிகாரத்திற்கு வினையாகிவிடக் கூடாது என்பதற்காகத் தான் மதப்பிரச்சினை எப்பொழுதும் செத்துவிடாமல் பொத்திப் பாதுகாக்கப்படுகிறது போலும்.
இந்த நாவலில் அதிகாரப் போட்டி நிகழும்போது கூடவே சொந்தபந்தம் என்பதெல்லாம் மாயமாய் மறைந்து, “கொலைக்களமாக” மாறிப்போகும் நிகழ்வுகளை வாசிக்கும்போதும், பெண் கொடுப்பதும் எடுப்பதும் எவ்வாறு அரசியலின் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போதும் அதிகாரத்திற்கும் ஈவிரக்கமற்ற மனிதக்கொலைகளுக்குமுள்ள வரலாற்றுப் பிணைப்பைக் கதைசொல்லி புனைவாக்கி இருக்கும் பாங்கு நமக்குள் இறங்கி வினைபுரிவதை உணரமுடிகிறது.
ஒரு விதமான முக்கோணக் காதல் மிகவும் மூர்க்கத்தனமான முறையில் இயங்கும் பாங்கு இந்நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை நீளுகிறது. தலைமைத் தீட்சதரின் மகளை பால்ய விவாகம் முடித்த கையோடு, நீண்ட ஆயுள் வேண்டி மணமாலையைக் காவிரிப் பெருக்கில் விடச் சென்ற பிள்ளைகளை ஆறு அடித்துச் சென்றுவிட, மணமகன் ஜெகதீசன் மட்டும் கிடைக்கிறான் உயிரோடு. அந்த ஜெகதீசனை ‘சித்ராங்கி’ என்ற தேவதாசியும், அவளது பணிப்பெண் செண்பகமும் காதலிக்கின்றனர். இந்தக் காதல் பின்னணி, தில்லை தொடங்கி கிருஷ்ணபுரம் (செஞ்சி) வரை நீளுகிறது. எடுத்துரைப்பிற்குள் வாசகர்களை வளைத்துப் போடுவதற்குக் கதைசொல்லிகளுக்கு வரலாறுதோறும் பயன்படும் மிகப்பெரிய கருவி இந்தக் காதல்தான். இந்தக் காட்சிகளையும் மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லியுள்ளார் கிருஷ்ணா என்பது சுட்டிக்கூறப்பட வேண்டிய ஒன்றாகும். வறுமையில் இடையர் குலத்தைச் சார்ந்த கார்மேகத்தை ஒண்டிப் பிழைக்க நேர்ந்த ஒரு சூழலிலும் தன் காதலை மறக்க முடியாமல், ஒரு கிறுக்கனாகத் தன் திண்ணையில் தூங்கும் ஜெகதீசனோடு படுத்துத் தன் மனம் வேட்ட உடலை அடைந்து மகிழ்கிறாள் தாசியான சித்ராங்கி; மற்றொருத்தியான செண்பகமோ தனக்கும் ஜெகதீசனுக்குமான கள்ள உறவில் பிறந்த மகன் விஜயநகரப் பேரரசின் இளவரசனாக்கப்படுவான் என்கிற பெரிய வாய்ப்பு பொய்யாகிவிட்ட சூழலில், தனக்கு அரசன் கொடுத்த ஏவல் ஆட்களால், கிறுக்கனாகத் திரியும் ஜெகதீசனை இழுத்து வந்து, அவன் கையில் கத்தியைக் கொடுத்துத் தன்னைக் குத்த வைத்துச் செத்து மடிகிறாள்; ”பாவி! எல்லாம் உன்னால்தானே” – என்று அவள் கத்தும்போது பரிதாபம் அதன் உச்சத்தைத் தொடுகிறது. ஒரு தமிழ்ப் புலவரின் மகளான செண்பகம் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (வரலாறு) எழுதுவதும் இப்படியாக இடையிலேயே முறிந்துவிடுகிறது. ‘கௌமுதி’ என்பதற்கு ‘வரலாறு’ என்று பொருள் சொல்வதுபோலவே “விழாக்கால நிலவு” என்று ஒரு பொருளும் சொல்லுகின்றன அகராதிகள். கதைசொல்லி ‘வரலாறு’ என்ற பொருளில்தான் பயன்படுத்தியிருப்பதாகச் சொன்னார்; ஆனால், ‘விழாக்கால நிலவு’ என்ற பொருளில் நாவலை வாசித்த போது, ஒரு புனைவெழுத்திற்குரிய அத்தனை ரசனையும் கூடி வந்ததாக உணர்ந்தேன்; இப்படித்தான் வாசகர்கள் மூலமாக எழுத்தாளரைவிடப் பிரதி பன்மடங்கு பெரிதாகத் தன்னை வளர்த்தெடுத்துக் கொள்கிறது போலும்.
நாவல் எழுத்து என்பது பன்முகப்பிரதியாகத் திரண்டு வர வேண்டும் என்பதற்கேற்பவும் இந்த நாவல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளது; நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுண்மை (ப.65/140), விவசாயிகளின் நிலைமை (ப.25), பாளையக்காரர்களின் பெண்பித்து பிடித்த நிலை (75, 79, 164) போர்த்துகீசியர்கள், ஒல்லாந்துகாரர்கள் என்ற வெள்ளைக் காலனித்துவத்திற்கு முன்னால் பாளையக்காரர்கள் ஏமாந்து போகும் தன்மை, இடங்கைச் சாதியார் தெருப்பக்கம் மதப்போதகர்கள் கண் வைப்பது (137) சேரிமக்களின் வாழ்நிலை (39-43) ஆண்மையச் சமூகத்தில் தாசிப்பெண்கள் படும்பாடு(49- 71) உள்நாட்டுப் போரின் விளைவுகள் (245) நிகழ்காலத்தில் இந்தியப் பிரெஞ்சுக் குடிமக்களின் புதுச்சேரி வீடுகள் அரசியல்வாதிகளின் உடல் முறுக்கிய ஆட்களால் ஆக்ரமிக்கப்படும் அவலம், புலம்பெயர்ந்து வாழநேரும் மனிதர்களின் மனநிலை, களஆய்வு, ஆராய்ச்சி என்று வரும் வெளிநாட்டு ஆய்வாளர் உலகில் நடக்கும் சதி, சூழ்ச்சி எனப் பன்முகப்பட்ட மனிதப் பிரச்சினைகளும் இப்புனைவு வெளிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாவல் எனும் இந்த வடிவத்தை நன்றாக உள்வாங்கியதோடு அதை வேலை வாங்கும் திறமும் உழைப்பும் எழுத்தின் நிர்வாக முறையையும் அறிந்தவராகக் கதைசொல்லி வெளிப்படுகிறார். தமிழ்ப் புனைகதையுலகம் இவர் எழுத்தால் கனம் பெறுகிறது.
‘அந்தப் பஸ்ஸைப் பிடித்துச் செல்லுங்கள்’ என்பதற்குப் பதிலாக ‘அந்தப் பஸ்ஸை எடுங்கள்’ என்று ஆங்கிலம் வருகிறது (ப.15). இதேபோல் அச்சுப்பிழையோ என்னமோ புரியாத சில தொடர்கள் (ப.18/23) இருக்கின்றன. மற்றொன்று ஒரு காதல் மடல், வெண்பா வடிவில் வருகிறது (ப.50)வெண்பா நன்றாகவே வந்துள்ளது. ஆனால், தளை தட்டுகிறது. கிருஷ்ணாவே எழுதினதாகச் சொன்னார்; அதை அடுத்த பதிப்பில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
நன்றி: காலச்சுவடு செப்டம்பர் 2013

————————————————————————————

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்,
நியுடெக் வைபவ், 53ஆம் தெரு,
அசோக் நகர்,
சென்னை. 83
பக்கங்கள்: 256, விலை: ரூ. 160

————————————————————————————————————————————

மொழிவது சுகம் செப்டம்பர் -2015

அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)

“காரணம் பிரயோகிக்கிற கட்டுப்பாடென்று எதுவும் இல்லாமல்; அழகியல், ஒழுங்கு, அறம் இவற்றைப் பற்றிய கவலைகளின்றிமனம்கூறுவதைத் தொடர்ந்து எழுதுவது” என்று படைப்பிலக்கியத்தில் தன்நிகழ்பாட்டினை உபதேசம் செய்த மீஎதார்த்தத்தின் தீவிர பிரசாரகர் பிரெஞ்சு கவிஞர் ஆந்த்ரே ப்ரெத்தோன் அதற்கு விளக்கம் தருகிறார். வீதியில் நடந்துபோகிறீர்கள் ஆயிரம்பேரில் ஒருவர் தனித்துத் தெரிவார். எஞ்சியிருக்கிற 999 பேர்கள் நிர்ணயித்தியிருக்கிற ஒழுங்குகளிலிருந்து தோற்றத்திலோ நடையிலோ அவர் முரண்பட்டிருக்கக்கூடும். அது அம்மனிதரின் விருப்பத்தின் பேராலும் நடக்கலாம், விருப்பமில்லாமலும் நடக்கலாம். மரபுகளை மீறுவதில், மறுப்பதில், முடியாது என்பதில் முன்னேற்றமும் அடங்கியுள்ளது என்பது உண்மை. இருட்டை மறுப்பது, அதனுடன் முரண்படுவது எடிசனுக்கு அவசியமாயிற்று. அதேவேளை மறுப்பெல்லாம் புரட்சியாகிவிடமுடியாது. அம்மறுப்பு மறுப்பாளனின் சமூகத்திற்காக அல்லது மனிதகுலத்திற்காக நடைபெறவேண்டும், அல்பெர் கமுய்யின் l’homme révolté வற்புறுத்துவது அதைத்தான். விளைவது நன்மையெனில் எவ்வித நிர்ப்பந்தமுன்றி உங்கள் மறுப்பிற்கு வலுவூட்ட பகிர்ந்துகொள்ள எஞ்சியிருக்கிற 999 பேர்களும் என்றில்லாவிட்டாலும் கணிசமான எண்ணிக்கையினர் முன்வருவார்கள், துணைநிற்பார்கள். மறுப்பின் பலனால் நன்மையெனில், அதனைக் கட்டிக்காக்கும் பொறுப்பைக் காலம் எடுத்துக்கொள்ளும் இரண்டு உலக யுத்தங்களும் அதன் விளைவுகளும், மேற்கத்திய கலைஞர்களிடமும் படைப்பாளிகளிடமும் கோபத்தை ஏற்படுத்தின. அதன் விளைவுகளே இப்புதுமைகளெல்லாம். ஓர் இலக்கியப் படைப்பு கலை நுட்பத்தை அனுமதிக்கலாம், ஆனால் அதன் அடிநாதமான கலையை அதன் உணர்வுகளை, அழகியலை நிராகரிக்கிற; கலையைத் தொழில் நுட்பத்த்தால் ஆக்ரமிக்கிற முயற்சிகள் உகந்ததல்ல. சுதந்திரத்திற்குக்கூட எல்லைகள் அவசியம். எல்லைகள் மீறப்படுகிறபோது அங்கு குழப்பங்களும் கலவரமுமே மிஞ்சும். எந்தச் சுதந்திரத்தை வேண்டி நின்றார்களோ அச்சுதந்திரமே சீற்றமெடுக்கிறபோது, சம்பந்தப்பட்டவர்களைப் பலிகொண்டதாகத்தான் வரலாறுகள் தெரிவிக்கின்றன.

தன்நிகழ்பாடு படைப்பை மீ எதார்த்த்வாதத்திடமிருந்து பிரித்துப் பார்க்க முடியாதென்பது உண்மைதான். ஆனால் இம்முறையிலான எழுத்துமுறை திடீரென்று வானத்திலிருந்து குதித்துவிடவில்லை. மெய்யியிலாளர்களுக்கும், உளவியல் மருத்துவர்களுக்கும் பெரும் பங்கிருக்கிறது. மீஎதார்த்தவாதத்திற்கு முன்பாகவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கற்பனை நவிற்சிவாதிகளில் சிலர் குறிப்பாக ஹைன்ரிக் ஃபொன் கிளைஸ்ட் (Heinrich Von Kleist), நியாயம் நிராகரிக்கிற இருண்மைகளை இலக்கியத்தில் பயன்படுத்திக்கொள்வதென தீர்மானித்தது கி.பி 1810லேயே நடந்தது. தன்நிகழ்பாடு படைப்பூடாகத் தோற்றப்பாடு ஒப்புமைகளை, குறிப்பாக ஆழ்மனதின் விழிப்பை, ஆவி வசப்பட்ட மனநிலையின் வெளிப்பாட்டை மீ எதார்த்ததிற்கு முன்பாகவே எழுத்தாக்க முனைந்திருக்கிறார்கள், கற்பனை நவிற்சிவாதிகளின் இம்முயற்சி அப்போது பகுத்தறிவு வாதத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்டது. 1889ம் ஆண்டில் ஜெர்மனைச் சேர்ந்த மெய்யியல் வல்லுனர் மெயெர் (Meyer), ஓர் உளவியல் ஆய்வு அமைப்பை நிறுவி ‘டெலிபதி’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஹிப்னாட்டிஸம், உளப்பகுப்பாய்வு போன்ற ஆழ்மனதை அறிவதற்கு எடுத்துக்கொண்ட அறிவியல் முயற்சிகள் பின்னாளில் இலக்கியத்தில் புது முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு உதவியது. ஆக மீஎதார்த்தவாதிகளுக்கு முன்பாகவே தன் நிகழ்பாடு எழுத்திற்கு வித்திடப்பட்டுவிட்டது, அதன் பலனை அறுவடைசெய்தவர்கள் என வேண்டுமானால் மீ எதார்த்தவாதிகளைக்கூறலாம். அவான் கார்டிஸ்ட்டுகள் (avant-gardistes) அல்லது நவீன கலை மற்றும் பண்பாடுகளுக்கு முன்னோடிகள் எனக்கூறிக்கொண்டவர்கள் செய்தப் பிரச்சாரமும், பேரார்வத்துடன் இலக்கியத்தில் இயங்கியவர்களை விருப்பம்போல கலையையும் இலக்கியத்தையும் கையாளவைத்தது, எனவே அதனையும் மீ எதார்த்தத்திற்கும், தன் நிகழ்பாடுஎழுத்திற்கும் ஒரு காரணி எனலாம். 1889ல்  “உளவியல் தன்நிகழ்பாடு”(l’automatisme psychologique) என்கிற சொல்லை முதன் முதலாக உபயோகித்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய உளவியல் அறிஞர் எனக்கொண்டாடப்படுகிற பிரான்சு நாட்டைசேர்ந்த பியெர் ழனெ(Pierre Janet). அவர் தன்னுடைய உளவியல் தன்நிகழ்பாட்டிற்குத் தந்த விளக்கம்: “மனிதச் செயல்பாடுகளில் எளிமையானதும் அடிப்படையானதும்”. அவர் இருவகையான தன்நிகழ்பாடுகளைக் கூறுகிறார்: ஒன்று முழுமையான தன் நிகழ்பாடு, மற்றது முழுமையல்லாத தன்நிகழ்பாடு. இவ்விரண்டு தன்நிகழ்பாடுகளும் ஆழ்மனதின் பரப்பை அடிப்படையாகக்கொண்டவை. அடுத்ததாக ஆந்தரே ப்ரெத்தோன் (André Breton), பிலிப் சூப்போ (Philippe Soupault) என்பவருடன் இணைந்து எழுதி 1919ல் வெளிவந்த “காந்தப் புலங்கள்”(‘les champs magnétiques) பிறகு 1924ம் ஆண்டு அவரே எழுதிய “மீஎதார்த்த சித்தாந்த விளக்கம் (Manifeste du surréalisme ) என்ற நூலிலும் மீஎதார்த்த கோட்பாட்டிற்கு விளக்கங்கள் கிடைத்தன. அதன்படி “பேச்சு ஊடாகவோ, எழுத்தின் வழியோ அல்லது வேறு வழிமுறைகளிலோ சிந்தனையின் உண்மையான செயல்பாடுகளை வெளிப்படுத்துதல் உளவியல் தன்நிகழ்பாடு”. பாரீஸில் கண்ணுக்குப் புலப்படுகிற பொருளைமட்டுமே வரைவது (Art figuratif), என்ற இயக்கம் மும்முரமாக செயல்பட்டகாலத்தில், அதற்கு எதிராக மீஎதார்த்தத்தின் தாக்கத்தில் அரூப ஓவியங்களில் நாட்டங்கொண்ட கனடா நாட்டு ஓவியர்களில் சிலர் 1940களில் தன்நிகழ்பாட்டில் கவனம்செலுத்தினார்கள், அவர்களைத் தொடர்ந்து கவிஞர்கள் சிலரும் இத்  ‘தன் நிகழ்பாடு’ எழுத்தில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்கள். தன் நிகழ்பாடு என்ற எழுத்துமுறையின் புரவலர்கள் மீஎதார்த்தவாதிகள் (Surréalistes), கற்பனை நவிற்சிவாதத்தை(Romantisme) அதீதக் கற்பனை என்ற இவர்கள்தான் அதீதக் கற்பிதத்தை எழுத்தில் திணித்தார்கள் என்பது சகித்துக்கொள்ள முடியாத முரண்நகை.

ஆ: சிரியா
சிரியா நாட்டின் குழந்தையொன்று போரின் காரணமாக ஐரோப்பிய நாடொன்றிர்க்கு அகதிகளாகக் குடும்பத்துடன் புற்றப்பட்டபோது கடல் விபத்தில் இறக்க, சடலம் துருக்கிக் கடற்கரையில் ஒதுங்கியது, உலகறிந்த செய்தி. அப்புகைப்படம் உலகத்தின் மன சாட்சியை உலுக்கியதோ என்னவோ, ஐரோப்பிர்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது 4மில்லியன் ஏழை மக்கள், அகதிகளாக நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜோர்டான், லிபி, துருக்கி, ஈராக்கென்று, அகதிகள் முகாம்களில் குவிந்ததுபோக, ஆட்கட த் தல் தொழில் செய்பவர்களுக்குப் பணத்தை ஏற்பாடு செய்வதற்கு முடிந்த வசதி படைத்தவர்கள், நடுத்தர குடும்பங்ககள் வழக்கம்போல ஐரோப்பிய நாடுகளின் கதவுகளைத் தட்டுகிறார்கள். இம்மக்களை ஏற்பதற்கு எல்லைகளில் இருக்கிற இஸ்லாமிய நாடுகள் முன்வருவதில்லை. இதில் செல்வத்தில் கொழிக்கும் வளைகுடாநாடுகளும் அடக்கம். அவர்கள் அகதிகளுக்கான ஐநா ஒப்பந்தத்தில் கையொப்பம் இடவில்லையாம், மகாக்கேவலமான சப்பைக்கட்டு. சிரியா பிரச்சினையில் அம்மக்களின் பிரச்சினைகளினும் பார்க்க சிரிய அதிபர் பஷாரெல் ஆஸாத் திற்கு ஆதரவாளர் அணி எதிரிகள் அணி அவரவர் சுயலாபத்தை அடிப்படையாகக்கொண்டு ரஷ்யாவும் அமெரிக்காவும் பிரிந்தும் சிரியா தீர்வு எதையும் எட்டிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். யுத்தத்தை தொடர்ந்து அனுமதிப்பதிலும் அவர்களுக்கு இலாபம் இருக்கிறது, காலம்காலமாக காப்பாற்றிவருகிற கௌளவுரவத்திற்கும் எதுவும் நேர்ந்திடக்கூடாது என்ற சூழலில் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக பிரான்சும் – ஜெர்மனும் அகதிகள் எந்த விகிதாச்சாரத்தில் பகிர்ந்துகொள்ளலாமென ஆலோசிக்கிறபோது, மேற்கத்தியர்களின் மற்றொரு தரப்பு: கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அந்தப் பேச்சே வேண்டாம் என்கிறார்கள். செக் நாடு கிருஸ்துவர்களை மட்டும் அகதிகளாக ஏற்போம் என்கிறது. ஹங்கேரி ஒருவரும் வேண்டாம் என்கிறது. பிரச்சினை அகதிகள் மட்டுமல்ல, காம்ரேட்டுகள் நிர்வாகம் வைத்துவிட்டுபோன தரித்திரம் இன்னும் விட்டகுறை தொட்டகுறையாக இருக்கிறது. அம்மி குழவியே காற்றில் பறக்கிறபோது, அவர்கள் என்னசெய்வார்கள். அகதிகளை ஏற்பதா கூடாதா என்ற விவகாரம் அரசாங்கங்களிடம் மட்டுமல்ல மேற்கத்திய மக்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரெஞ்சு தத்துவவாதிகளுள் ஒருவர் பெர்னார் ஆரி லெவி (Bernard-Henri Lévy): “சிரியா குழந்தையின் ஒதுங்கிய சடலத்தின் புகைப்படம் என்னை உலுக்கிவிட்டது, நமக்கொரு பாடத்தை புகட்டியிருக்கிறது” எனக்கூற , மற்றொரு தத்துவவாதி மிஷெல் ஓன்ஃப்ரே ( Michel Onfray) திரைப்பட ஆளுமை மிஷெல் ஒதியார் வார்த்தைகளில் , “அட முட்டாப் பயல்களா! அவர்கள் எதற்கு துணிந்தவர்களென்று தெரியாதா. அப்படி செய்ததால் தானே, நமக்கும் பிரச்சினை என்னன்னு புரியுது” எனப்பதிலுரைக்க, எதிர்வரும் தேர்தல்களில் ஐரோப்பிய நாடுகளின் அரசியல்வாதிகளுக்கு ஐரோப்பியரல்லாத மக்கள் விவாதப் பொருளாக இருக்கப்போகிறோம் என்பது உண்மை அதன் எதிரொலிதான் ரிப்ப்ளிகன் கட்சியைச் சேர்ந்த ஓர் தலைவர் « பிரான்சு நாடு வெள்ளையர் இன நாடாக இருக்கவேண்டு ம்» என்ற தம் விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்தது.
—————————————————-

——————–

மூத்த படைப்பிலக்கியவாதிகள், திறனாய்வாளர்கள் விமர்சனங்கள் -2

« மாத்தாஹரி « நாவல் பற்றி மூத்த இலக்கியவாதி திரு கி அ. சச்சிதானந்தன் அவர்கள்

Matahari-2புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை
– கி. அ. சச்சிதானந்தம்

Matahari1ஓர் அசலான நாவல் தனித்தன்மையோடு இருக்கும்; தனக்கென்று ஒரு முகவரியைக் கொண்டிருக்கும்; அப்போதுதான் அது இலக்கியமாகிறது. மீண்டும் மீண்டும் படிக்கப்படுகிறது. நினைவில் எழுந்து அசைபோட வைக்கிறது. அதைப் பற்றிய வினாக்கள் எழுகின்றன; விடைகள் கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஒரு சமயத்தில், கிடைத்த விடை சரியெனப்படுகிறது, பின்னால் சரியில்லை எனத் தெரிகிறது. இப்படிப்பட்ட நாவல்தான் ‘மாத்தா ஹரி – புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை.

இது நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரண்டாவது நாவல். மனித வாழ்க்கையை வரையறுத்துவிடலாம். ஒரு சூத்திரத்தில் சொல்லிவிடலாம் என்பதெல்லாம் அர்த்தமற்றது. சொல்லிவிடலாம் என்பவன் முட்டாள்.

மாத்தா ஹரி – ‘புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை’ புறப்பட்டவள் எங்கு போய்ச் சேர்ந்தாள் என்று குறிப்பிடவில்லை. அவள் போய்ச் சேர்ந்தது பிரெஞ்சு நாட்டுக்கு. புதுச்சேரிக்குத் திரும்பி வராமலே அங்கு கல்லறையில் உறங்கிக்கொண்டிருக்கிறாள். கதை என்றால் ‘இட்டுக் கட்டியது’, ‘கற்பனை செய்யப்பட்டது’ என்று பொருள். ஆனால் படிக்கும்போதும் படித்து முடித்துவிட்டபோதும் அப்படி ஓர் உணர்வே தோன்றவில்லை. இந்நாவலை நிதானமாகப் படித்துப் போகவேண்டும். கவனம் சிதறாமல் படிக்க வேண்டும், இல்லாவிட்டால் தடுமாற்றம், குழப்பம், என்ன படித்தோம் என்று பின்னோக்கி படித்த பக்கங்களைப் புரட்டவேண்டும். அப்படி நாவலின் சொல்லாடல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எல்லா கதைமாந்தர்களும் தன்மையிலும் படர்க்கையிலும் பேசுகிறார்கள். முக்காலமும் அதன் நேர் வரிசையில் வராமல் நிகழ்காலச் சம்பவங்கள் இறந்தகாலத்திலும், இறந்தகாலச் சம்பவங்கள் நிகழ்காலத்திலுமாக நாவலில் எடுத்துச் செல்லப்படுகிறது. அவ்வப்போது ஆசிரியர் வந்துவிடுவார். அவர் வருவதற்கும் காரணம் இருக்கிறது. இந்தப் புதுச்சேரிப் பெண்ணான பவானியை ஆசிரியருக்குத் தெரியும் என்பதனால்.

இந்த நாவலின் தொடக்கம், பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த திரைப்படமான ‘மகாத்மா காந்தி’ நினைவுக்கு வந்தது. இத்திரைப்படத்தின் முதற்காட்சியே மகாத்மா காந்தி சுடப்படுகிறார். காது செவிடுபட பின்னணி சப்தம். இப்படம் காந்தியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிப்பதாகும். காந்தி வாழ்க்கையைக் காட்டிவிட்டுத்தானே இறுதியாக அவர் இறப்பைக் காட்டி படத்தை முடித்திருக்கவேண்டும். மாறாக, இறப்பை முதலில் காட்டிவிட்டு வாழ்ந்த வாழ்க்கையைக் காட்டுகிறதே. திரைப்படம் என்பதனால் எப்படி வேண்டுமானாலும் சுதந்திரத்தை எடுத்துக்கொள்ளலாமா என்று எழும் வினா தர்க்கரீதியானதுதான். சிந்தித்துப் பார்த்தபோது காந்தி இறந்துவிட்டார்; ஆனாலும் அவர் வாழ்ந்துகொண்டிருப்பவர் என்பதைக் காட்டவேதான் அந்த உத்தி கையாளப்பட்டதாக உணர்ந்தேன். இது படைப்புச் சுதந்திரம்; இதுதான் கலை.

இந்நாவல் புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பெண் பவானியின் வாழ்க்கை. அவளின் மரணம் நாவலின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ட்ராஸ்பூர் நகரின் மத்திய கல்லறையில் அவள் இருப்பிடம் (பக். 19) ஒன்று, இரண்டு, மூன்றாவதாக இருந்த கல்லறையில், பவானி தேவசகாயம் பிறப்பு 27. 06. 1959, இறப்பு 10. 02. 1992’ (பக். 20).

ஹரிணி தன் தாய் பவானி தேவசகாயத்தின் மரணம் தற்கொலையா அல்லது இயற்கையாக சம்பவித்ததா என்பதைக் கண்டறிய அவளுடைய வாழ்வில் குறுக்கிட்டவர்களைச் சந்திப்பதால் கிடைக்கும் தகவல்களேதான் இந்த நாவல். பவானி வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவர்கள்: பத்மா, தேவசகாயம் – இவர்கள் தமிழ் பிரான்சு குடிமக்கள், எலிசபெத், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ பிரான்சு நாட்டு வெள்ளைக்காரர்கள்.

ஹரிணி தன் பெற்றோர்களான தாய் பவானி, தந்தை தேவசகாயம் ஆகியோருடன் குழந்தையாக இருக்கும்போது பிரான்சு நாட்டுக்கு வருகிறாள். பவானி இறந்துவிடுகிறாள்; தேவசகாயம் போதைப்பொருள் விற்றதற்காகச் சிறையிலடைக்கப்படுகிறான். ‘எல்லா அனாதைக் குழந்தைகளையும் போலவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் மாவட்ட நிர்வாகம் பவானி தேவசகாயத்தின் மகள் ஹரிணியை வளர்க்கும் பொறுப்பையும் ஒரு குடும்பத்திடம் ஒப்படைத்தது. அதற்கான உதவித்தொகையையும் கொடுத்து வந்தது.’ (பக். 22). ஒரு கம்பெனியில் வேலை செய்யும் இளம் பெண்ணாக, சுதந்திரம் உள்ளவளாக, தனியாக வாழ்பவளாக அறிமுகமாகிறாள். ‘நேற்று மாலை நிர்வாக இயக்குநரான இளைஞன் சிரிலோடு பாதுகாப்பு எதுவும் எடுத்துக்கொள்ளாமல் உறவு’ கொண்டது. (பக். 23).

இந்நாவல் கதாமாந்தர்களின் செயல்பாடுகள், எண்ணங்கள், நடத்தைகள், நோக்கங்கள், காலவரிசைப்படி சொல்லப்படாமல், முன்னும் பின்னுமாகத் தாவித் தாவி, பாய்ச்சலோடு போகின்றன. அதாவது இறந்த காலத்தின் சம்பவங்கள் முன்னதாகவும், நிகழ்காலச் சம்பவங்கள் பின்னதாகவும் சொல்லாடல் நிகழ்கின்றது; இடையிடையே ஆசிரியரின் குரல் கேட்கிறது. எண்ணங்கள் தூலப் பொருள்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. புறத்திலுள்ள தூலப் பொருளா, மன ஓட்டங்களா? (எ. கா. பக். 44-45)

பவானியின் கதைதான் இந்நாவல். அவள் யார்? பிரெஞ்சுக்காரியான எலிசபெத் முல்லெர் சொல்கிறாள் ‘மயக்கமடையாத குறை. அப்படியொரு அழகுப் பெண்மணியை என் வாழ்நாளில் அதற்கு முன்பு சந்தித்ததில்லை. அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்களும் சரி, அன்றைக்கு அக்கட்டடத்தில் வேறுபணியில் இருந்த மற்ற ஊழியர்களும் சரி சிலையாகச் சமைந்து போனார்கள். வாளிப்பான உடல், பட்டினைப் போன்ற முகம், நாசி துவாரங்களை ஒளித்த மூக்கு, உலர்ந்திராத சிவந்த உதடுகள், இடையில் நிழலாடும் வெண்பற்களின் உதவியோடு உதடுகள், சிரிக்க முயல்வது போன்ற பாவனை, வெல்வெட் போல இரண்டு விழிகள். தீப்பொறி போல கண்மணிகள். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியதுபோல, தலை முதல் இடைவரை நீண்டிருந்த கூந்தல்.’ (பக். 27).

பவானியை புதுச்சேரியில் வழக்குரைஞராக அறிமுகமாகிறோம். அவள் சிந்தனை ‘பெண் என்பவள் பிறர் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை எனவே இதற்கு என்னால் உடன்பட முடியாது.’ (பக். 44). தேவசகாயம்தான் பவானியைத் தன்னை திருமணம் செய்துகொள்ள மன்றாடுகிறான். கெஞ்சுகிறான். அப்போது அவள் மனம் குழம்புகிறது, மூளையைக் கசக்கிப் பிழியும் கேள்விகள், சிந்தனை ஓட்டங்கள் இவையெல்லாமே அவள் திருமணம் செய்யமாட்டாள் என்ற முடிவையே சுட்டிக் காட்டுகின்றன. அவள் பாட்டியின் தீடிரென்று சம்பவித்த மரணம் திருமணத்திற்குக் காரணமாக இருக்கிறது. ஏனென்றால் அவள் சின்னக் குழந்தையாகவே இருந்தபோது அவள் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டாள். ஏன் என்றால் அவளுக்கு மீண்டும் சினிமாவில் நடித்துப் புகழும் பணமும் பெற வேண்டுமென்று ஆசை. ஓடிப்போனவளை நினைத்து வருந்திய அவளது தகப்பனும் செத்துப் போய்விடுகிறாள். ஆக அவளுக்கு இந்த உலகத்தில் ஆதரவாக இருந்தது அவள் தந்தைவழிப் பாட்டி. பாட்டி உயிரோடு இருக்கும் வரை பவானி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தன் கவலையை வெளியிட்டுக்கொண்டிருந்தாள். அவளும் இறந்துவிட்ட பிறகு? அதனால்தான் என்னவோ தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டாள். ஆக அறிவுபூர்வமாக வாழ்க்கை போவதில்லை… அவள் தேவசகாயத்தைத் திருமணம் செய்யாமல் இருந்தால் நாவலே இல்லை! பவானி திருமணம், பிரெஞ்சு நாட்டில் அவள் வாழ்க்கை எல்லாம் ஊழ்வினையா? வாழ்க்கையை அறிவுபூர்வமாகச் சிந்தித்த பவானி தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட்டுவிட்டாள். தலைவிதி இல்லாமல் என்ன?

தேவசகாயம் எப்படிப்பட்டவன்? ‘அவனால பத்துப் பெண்களுக்குத் தாலி கட்டவும், நூறு பிள்ளைகளைப் பெத்துக்கவும் முடியும். என்னுடைய தகப்பனாரைவிட அவனுடைய தகப்பனாருக்கு இருக்கிற சொத்தும் அதிகம், வாங்கற பென்ஷனும் அதிகம். அவன் கவிதைகள் எழுதுவான். அவன் கொஞ்சம் வித்தியாசமானவன். ஒரு சமயம் ரஜினி படத்தை முதல் நாளே பார்க்கணும் என்பான். இன்னொரு சமயம் மார்க்கோ, •பெரேரி என்ற இத்தாலிய இயக்குநரின் படங்கள் பாத்திருக்கிறாயா என்பான். தனது பிறந்த நாளைக்கு ஒரு பெரிய ஓட்டலில் எங்களுக்கு டின்னர் கொடுத்துட்டு, மறுநாள் மடத்துக்குச் சென்று அநாதைப் பிள்ளைகளோட சாப்பிடப் போறேன் என்பான்.’ (பக். 59). தேவா சின்னப் பையனாக இருந்தபோது, அவரின் தந்தையார் தெருவில் மாம்பழம், வெள்ளரிப்பிஞ்சு கூவி விற்பவளைக் கூட்டி வைத்துக்கொள்கிறார். அவளைத் தன் தாயாக தேவாவினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. (பக். 117) இவனுக்கு கஞ்சா என்ற மரியுவானா பழக்கம் ஏற்பட்டது. ‘பௌர்ணமி இரவொன்றில், திருவக்கரை வக்கிரகாளியைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் சாது ஒருவர், ‘அம்மனைச் சாந்த சொரூபியாக இவனுள் காண உதவும் ‘ஒளடதம்’ என்று அறிமுகப்படுத்தி வைத்தார். நாளொன்றுக்கு இரண்டு முறை இம்மருந்தை எடுத்துக்கொண்டால், குறைந்தது 150 ஆண்டுகள் உயிர்வாழலாமென உத்திரவாதம் செய்கிறார்.’ (பக். 120) விளைவு? ‘சகல புவனங்களையும் மயக்கும் மோகினியாக இவனுள் வக்கிரகாளி அம்மன்… மாத்தா ஹரி… ம். இல்லை. பவானி’. (பக். 121).

தேவசகாயம் காளி உபாசகன் என்று சொல்லக் கேள்வி. புதுச்சேரியில் இருக்கிறபோது அடிக்கடி திருவக்கரைக்குச் சென்று வருவானாம். பழம் பூவென்று வீடு முழுக்க நிறைந்துவிடும். நாக்கைத் திருத்திக்கொண்டு, கண்களை விரியத் திறந்தபடி பக்கத்திற்கு ஒன்பது கைகளென்று, கபால மாலையணிந்த காளி. முகம் மட்டுமல்ல, கரிய அந்த உடலிலும் உக்கிரத்தைப் பார்க்கலாம். அதனருகிலேயே மாலை சாற்றிய மாத்தா ஹரியின் முழு உருவப்படம். விடிய விடிய பூஜை நடக்கும். கட்டி கட்டியாய் கற்பூரத்தை எரிப்பார்கள். கத்தை கத்தையாய் ஊதுபத்தி கொளுத்துவார்கள்.’ (பக். 189).

ஆக, தேவசகாயம் பவானியின் அழகிற்காக அவளைத் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளிடம் மாத்தா ஹரியைக் காண்கிறான். பவானியைப் புணரும்போது தன் மனைவியாகவும், அதே சமயத்தில் வணங்கும் தாயாக மாத்தா ஹரியாகப் பார்க்கிறான். தேவசகாயம் ஒருவித மனநோயாளியா என்ன? பணக்காரனான தேவசகாயம் பவானியிடம் அப்படி மன்றாடி மண்டியிட்டு மணம் புரிந்துள்ளான். ஏன் கெஞ்ச வேண்டும்? “தேவா, பல முறை சொல்லிவிட்டேன். நான் மாத்தா ஹரி இல்லை. பவானி… பவானி… பவானி.” “உனக்கு பவானி, எனக்கு மாத்தா ஹரி.” காலில் விழுகிறான். மீண்டும் மீண்டும் பித்துப்பிடித்தவன் போல என் கால்களில் விழுகிறான். (பக். 88).

மாத்தா ஹரி யார்? 1917 ஆண்டில் தன் அழகான உடலை வைத்துக்கொண்டு செருமானிய நாட்டுக்கு உளவு வேலை செய்தாள் என்று பிரான்சுக்காக தூக்கிலிடப்பட்டாள். அவளைப் பற்றி ஏராளமான புத்தகங்களும், வந்திருக்கின்றன. அவள் வாழ்க்கை பற்றி விரிவான குறிப்புகள். (பக். 28லிருந்து 33; பக். 80-81) மாத்தா ஹரிக்கு என்று ஒரு சமயக்குழு அதாவது ‘கல்ட்’ உருவாகியிருக்கிறது. (பக். 176 -178).

எலிசபெத் முல்லர், குளோது அத்ரியன், பிலிப் பர்தோ ஆகியவர்கள் இந்த கல்ட்டுடன் சம்பந்தமுள்ளவர்கள்.

‘குளோது அத்ரியன் பிரெஞ்சுக்காரன். வயது அறுபது. ஹிப்பி, நியூடிஸ்ட், எக்கொலொஜிஸ்ட், மரணதண்டனைக்கு எதிரி. கடைசியில் மாத்தா ஹரியின் பரம ரசிகர்.

அவரது அறையின் நான்கு சுவர்களிலும் நீங்கள் பார்ப்பது அனைத்துமே மாத்தா ஹரியின் படங்கள் தாம். குழந்தையாக, விடலைப் பெண்ணாக, வாலைக்குமரியாக, தேவதையாக, குற்றவாளியாக சுவரெங்கும் மாத்தா ஹரி அலங்கரித்துக்கொண்டிருக்கிறாள்’. (பக். 136) பிரெஞ்சு நாட்டு அருங்காட்சியகத்திலுள்ள மாத்த ஹரியின் மண்டையோடு காணாமல் போய்விடுகிறது.

இந்தச் சூழலில் சம்பந்தப்பட்டவர்கள் யாரோ திருடியிருக்கிறார்கள்.‘குளோது பிஞ்சிலேயே பழுத்தார். போதைப் பழக்கம் அதன் தேவைக்காக சின்னச் சின்னத் திருட்டுகள். எழுபதுகளில் ஹிப்பி இயக்கத்தில் சேர்ந்து கோவாவில் முழுநிர்வாண வாழ்க்கையை விரும்பும் கூட்டத்துடன் சேர்மானம்… ஆரோவில் பகுதியில் தங்கி இருந்தார்.’ (பக். 138).

பவானி வாழ்க்கைக்கும், மாத்தா ஹரி வாழ்க்கைக்கும் பொதுவான, ஒற்றுமை அம்சங்கள் இல்லை. ஆனால் மாத்தா ஹரி சமயக் குழுவிலிருப்பவர்களினால் பவானி வாழ்க்கை பாதிக்கப்பட்டது அவ்வளவுதான்.

இந்நாவலின் களம் புதுச்சேரியிலும், பிரான்சு நாட்டிலும் இடம் பெறுகிறது.

புதுச்சேரி வாழ் தமிழ் பிரெஞ்சு குடிமக்கள் வாழ்க்கை துவக்கமாக வெளிப்படுகிறது. ‘பத்மாவிற்குப் பிறந்த நாள். பகல் விருந்தில் கோழி, ஆடு, ஐஸ்கிரீம் என அனைத்தும் இருந்தன. பிரெஞ்சு அரசாங்கத்தின் பணம். அவள் தகப்பன், பிரெஞ்சு ராணுவத்தில் துப்பாக்கி பிடித்த நேரத்தைக் காட்டிலும் வெள்ளைத்தோல் கேப்டனுக்கு பிரியாணி செய்துபோட்ட நேரங்களும், கால், கை பிடித்த நேரங்களும் அதிகம். பதினைந்து ஆண்டுகள் தெரிந்த இரண்டொரு பிரெஞ்சு வார்த்தைகளோடு பிரான்சில் தள்ளிவிட்டு புதுச்சேரியில் வீடு, கார் என்று வாங்கி வைத்துக்கொண்டு உள்ளூர்வாசிகளின் வயிற்றெரிச்சல்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்’ (பக். 42-43) ‘நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தித் தெரியுமே. சிலர் ஒழுங்காகவும் இருக்கலாம். அவங்களைச் சொல்லலை. ஆனால் நிறைய பேர், ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே தன் வீட்டிலே குடிச்சது போதாதுன்னு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்துவிடுவார்கள். பெண்கள் குசினிக்குள் இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோலப் பேசுவான். விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும் கறியையும் வறுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். ’

நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது. (எடுத்துக்காட்டாக பார்க்க பக். 46-50, பவானியின் குழந்தை பற்றியும் அவனின் தந்தையைப் பற்றிய அத்தியாயம் 7ல்.)

ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது.
—————————————————————————————————

நூல்: மாத்தாஹரி – புதுச்சேரியிலிருந்துபுறப்பட்டஒருபெண்ணின்கதை
ஆசிரியர்: நாகரத்தினம்கிருஷ்ணா
பக்கங்கள்: 288 விலை: ரூ. 150
வெளியீடு: எனிஇந்தியன்பதிப்பகம்
102, பி.எம்.ஜி. காம்ப்ளெக்ஸ்,
57, தெற்குஉஸ்மான்சாலை,
தி. நகர்,, சென்னை – 17.

என்னைக் கவர்ந்தப் பெண்கள்

20150916_094052

ஓர் உயிரி தனது இருப்பை உறுதிபடுத்தவும், தன்னை முன்னெடுத்துச் செல்லவும், தொடக்கக்காலத்தில் ‘இயற்கை’ நெறியின்படி வினையாற்றியது. காலப்போக்கில் தனிமனிதன் கூட்டமாக வாழ முற்பட்டபோது சமூகம் என்ற அமைப்பு அனைத்து உயிர்களுக்கும் பொதுவான வாழ் நெறிகளை அமைத்துக்கொடுத்து அதன்படி வாழவேண்டுமென ‘உயிரியின் இருப்பை’ நிர்ப்பந்தித்தது, ஒரு கூட்டுச் சமூகத்தில் தனிமனிதனின் விருப்பு வெறுப்புகள், அவை கற்பிக்கும் செயல்பாடுகள், பிற மனிதர்களின் இருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஓர் உயிரியின் இருப்பை உறுதிபடுத்தும் முனைப்பு, மற்றொரு உயிரியின் இருப்பை மறுக்ககூடாதென்பதுதான் நவீன சமுதாயத்தின் எதிர்பார்ப்பு. நாம் விரும்புவதும் விரும்பாததும்; உண்பதும் உடுத்துவதும்; கட்டுவதும் இடிப்பதும் நம்முடைய தேவை நிமித்தம் நடைபெறவேண்டுமென்றாலும், நம்மைச் சார்ந்த நம்மோடு கூட்டாக இயங்குகிற பிற உயிரிகளின் தேவைகளையும் குறைந்தளவேனும் அவை பூர்த்திசெய்யாதுபோனால் குழப்பமும் கலகமுமே மிஞ்சும், காரணம் இச்சமூகத்தில் ஒரே நேரத்தில் நாமாகவும் பிறராகவும் நாம் இருக்கிறோம்.

எல்லா உயிர்களையும் நேசிக்கிறேன் என்பதே கூட ஒருவகையில், சிலரைக்கூட குறிப்பிட்டு நேசிக்க நாம் தயாரில்லை என்பதாகத்தான் பொருள். பேச்சுக்கு என்று வைத்துகொண்டால் கணவன் என்றால் மனைவி, காதலன் என்றால் காதலி அல்லது இதற்கு எதிர்மாறாக; அடுத்து பிள்ளைகள் என்றால் பெற்றோரிடத்திலும்; பெற்றோர்கள் என்றால் பிள்ளைகளிடத்திலும்; சகோதரர்கள் சகோதரரிகளுக்கிடையிலும் பரஸ்பர அன்பு நிலவுமென சமூகம் நம்புகிறது, பிறகு நட்பின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவரை நேசிக்கிறோம் அன்பு பாராட்டுகிறோம். எனினும் நவீன உலகில் இவ்வுறவுகளின் ஆயுட்காலம் பரஸ்பர அன்பைக் காட்டிலும், பரஸ்பர எதிர்பார்ப்புகளால் தீர்மானிக்கப்படுகிறது.

நித்தம் நித்தம் பிறரைச் சந்திக்கிறோம். மனைவி, மக்கள், அண்டைவீட்டுக்காரர், உடன் பயணிப்பவர், அலுவலகங்கள், கடைகள், பொது இடங்கள்: எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள். இவற்றில் ஒரு சில முகங்களே ஏதோ சில காரணங்களால் திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேரிட்டு, நம்மில் இருக்கின்றன, பெரும்பாலாவை பனிபோல, மலர்போல, மழைபோல இயற்கை நிகழ்வாக வருவதும் போவதுமாக இருக்கின்றன. இக்கூட்டத்திடை எவ்வித நிர்ப்பந்தமுமின்றி, எதிர்ப்பார்ப்புகளின்றி ஒரு சில முகங்களை, அம்முகங்கள் தாங்கிய மனிதர்களை நேசிக்கிறோம். ஓர் வாசகன் எழுத்தாளனை நேசிப்பது, ஒரு ரசிகன் தன்னுடனை நடிகன், நடிகைக்கு, பாடகன் இப்படி யாரோ ஒருவனை ஆராதிப்பது, சமூக நலனில் அக்கறைகொண்ட ஒருவன் சமூக ஆர்வலர் ஒருவரிடம் காட்டும் மரியாதை ஆகியவை நிர்ப்பந்தகளற்ற எதிர்பார்ப்புகளற்ற அன்பு. சிற்சில நேரங்களில் நாம் முரண்பட நினைக்கும் விஷயங்களில், இன்னொருவர் முரண்படுகிறார்; நாம் நமது எதிர்ப்புக்குரலை பதிவு செய்ய தயங்குகிறபோது, துணிச்சலின்றி முடங்குகிறபோது வேறொருவர் அதனைச் செய்கிறார். அது எதிர்ப்புகுரலாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை பிறரிடத்தில் காட்டும் கரிசனமாக இருக்கலாம், அந்த வினைக்காக, நமது மனநிலைக்கு ஒத்திசைந்து ஆற்றும் செயலுக்காக அம்மனிதரை போற்றுகிறோம். அப்படி நமது அன்பிற்குரியவர்களாக, நமக்கு மனதுக்கு இசைந்தவர்களாக, நமது விருப்ப இலக்கணங்களுக்கு உட்பட்டவர்களென்று ஒரு கூட்டத்தையா கைகாட்ட முடியும். விரல்விட்டு எண்ணிச் சொல்லிவிடலாம் அவ்வகையில் பெண்கள் நால்வரைப்பற்றி பதிவு செய்ய விருப்பம். ஏன் பெண்கள், ஆண்களில்லையா? “பெண் உயராவிட்டால் ஆண் ஏது?” என்பான் பாரதி, ஆணித்தரமான உண்மை. அரசியல், நிர்வாகம், அறிவியல், பொருளாதாரம் எனப் பலதுறைகளிலும் சாதனைப் படைத்துள்ள பெண்களிடம் ஆண்களின் ஆளுமையும், கம்பீரமும் ஒருபுறமிருக்க, ஆண்களிடம் காணக் கிடைக்காத கருணையும் தாயுள்ளமும் அவர்களை -பெண்களை உயரத்தில் நிறுத்துகிறது.

 

அ. பாரதி கண்ணம்மா:
கண்ணம்மா ஓர் அழகு தேவதை, மித். ‘கண்ணம்மா’ என்ற சொல்லின் அடர்த்தியை, அதன் திரட்சியை, மணத்தை, பசுமையை ‘கற்பனை நவிற்சியின்’ ஒட்டுமொத்த பருமையை, உபாசிப்பவனாய் அதன் இண்டு இடுக்குகளைதொட்டுப் பரவசத்தில் திளைக்கிற பாரதியைக் ‘கண்ணம்மா’ பாடல்களில் காண்கிறோம். கண்ணம்மா பாரதியுடைய செல்லம்மா. குயிற்பாட்டில் தத்துவத்தை சொன்னவனுக்கு, ‘கண்ணம்மா’ பெயரில் ஒரு செல்லம்மா கிடைத்திருக்கிறாள். பாரதி பாடிய, ஆராதித்த, மருவ ஆசைகொள்ளும் கண்ணமாக்களை இன்றளவும் படிமங்களாக, ஜீவன் சொட்டும் காட்சிகளாக மனதில் அசைகின்றன, மல்லிகை மணம் தோய்ந்த ஈரக்காற்றாக நெஞ்சைக் குளிருவிக்கின்றன. அந்நாட்களில் : தெருவாசலில் கோலமிடும்போதும், அன்றலர்ந்த பூசனிப் பூவை கோலத்திடை பூக்கவைக்க நடத்தும் ஒத்திகையின்போதும், கோலமிட்டு பாவாடைத் தடுக்க தலைவாசலைக் கடக்கிறபோதும்; தெருவாசலில் அண்டைவீட்டுப் பெண்ணுடன் உரையாடியபடி பார்வையைத் தெருவில் சிந்துகிறபோதும் ; ஒரு கையில் ஊஞ்சல் சங்கிலியும் மறுகையில் புத்தகமுமாக, ஊஞ்சலில் ஒருக்களித்துப் படுத்திருப்பவள், ஆண்வாசனை உணரரப்பட்ட கணத்தில் ஓடி மறைகிற போ¡தும்; கிணற்று நீர்ல் முகம் அலம்பி புழக்கடையின் முந்தானை விசிற நடந்து வருகையிலும் சந்தித்தத இளம்வயது செல்லம்மாக்கள் பலரும் கண்ணம்மாக்கள்தான்.

பெண்ணியம் பற்றி தமிழில் அதிகம்பேசிய ஆண் பாரதி. இன்று வரை அவன் அளவிற்கு பெண்கள் உட்பட கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பெண்விடுதலைக் குறித்து மேசியவர்கள் குறைவு. பெண்களைக் காட்டிலும் கூடுதலாக எதிர்பாலினத்திடம் கிறங்கிக் போகிறவர்கள் ஆண் கவிஞர்கள். பாரதி அழுது ஆர்பாட்டம் பண்ணுபவனல்ல, மறந்துங்கூட கண்ணைக் கசக்கியவனில்லை; தமிழைத் தாயென்றும், இந்திய நாட்டைப் பாரதமாதாவென்றும், பாரத தேவியென்றும் உருவகப்படுத்தியவன்; எந்த நேரமும் நின்மையல் ஏறுதடீ குறவள்ளி, சிறுகள்ளி எனப் பொங்கினவன். வீரத் தாய்மார்களை வேண்டியவன். “அந்நாட்களில் மாதர்கள் காட்டிய வீரத் தன்மையையும் இந்நாட்களிலே ஆண்மக்கள் காட்டும் பேடித்தன்மையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஆ நமது உயர்வு கொண்ட பாரத ஜாதி இந்தனை தாழ்ந்த நிலைக்கு வருவதைக்காட்டிலும் ஒரே அடியாக அழிந்து போயிருந்தாலும் சிறப்பாகயிருக்குமே என்று மனம் குமுறுகின்றது” (1) என இந்திய நாட்டைக் குறித்து வருந்துகிற நேரத்திலும் பெண்களைத் தோளில் சுமக்கிறான். அவனுடையக் ‘கண்ணம்மா’ இந்த பெருமிதத்தின் விளைச்சல். அவள் மாசறு பொன், அப்பழுக்கற்ற நீதி. மனித இன உயர்பாலினத்தின் ஒரு துளியென்றாலும் பாரதியின் கவிதைக் கடலிற் கலந்து ஆண்கள் மனதில் ஒரு பெரும் சூறாவளியையை வாசிப்புதோறும் ஏற்படுத்திக்கொண்டிருப்பவள்.

கண்ணம்மாவைக் காதலியாகக் காண்கிறபோது, காதலில் திளைப்பது போலவே பாரதியிடம் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தெற்கத்திய காற்றின் அணுகுமுறை அவனிடம் தெரிகிறது, அவளுடைய வட்ட கருவிழிகள், மலரொளியொத்த புன்னகைகள், நீலக்கடலையொத்த நெஞ்சின் அலைகள், குயிலோசையொத்த குரலோசை இன்னும் இதுபோன்ற தகுதிகள் அனைத்துமே காதல்வயப்படும் எல்லா ஆண்களுக்கும் – அவனொரு கவிஞனாகவும் இருப்பான் எனில் எளிதாக அமையக்கூடும். மாறாக அவள் “பொங்கித் ததும்பித் திசையெங்கும் பாயும் புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக்கோலம் வாய்த்த செல்லம்மாவாக, கண்ணம்மாவாக வாய்க்கும் பேறு ‘பாரதி’க்கு மட்டுமே வாய்க்கும். அந்தக் கண்ணம்மாவை ‘மருவ’, பாரதி ‘மூத்தோர் சம்மதி’க்குக் காத்திருந்தது வியப்புதான், மாறாக அவளைக் கொண்டாடவும் குலதெய்வாகப் போற்றவும் ஒருவர் சம்மதியும் அவனுக்கு மட்டுமல்ல எனக்கும் அவசியமல்ல, தமிழும் அதன் சொற்களும் சம்மதிக்க வேண்டும், அதொன்றுதான்.

ஆ. சுதா ராமலிங்கம்:

Sudha“புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும்” என்ற குறள் நினைவுக்கு வருகிறபோதெல்லாம் தோழியர் சுதா இராமலிங்கத்தை நினைத்துக்கொள்வேன். ஆண்நண்பர்களென்றாலும் பெண் நண்பர்கள் என்றாலும் பரஸ்பர தேவைகளை ஒட்டியே நட்பு உருவாகிறது. அதன் ஆயுளும் அத்தேவைகள் நீட்சியைப் பொருத்தே அமையும். என் வாழ்நாளில் பல நண்பர்கள் குறுக்கிட்டிருக்கிறார்கள், பழகி இருக்கிறார்கள் பள்ளி, கல்லூரி, பணி, இருந்த நாடு, இருக்கிற நாடு, என்ற கூறுகளுக்கேற்ப நட்பு உருவாகிறது. உருவாவது போலவே சில ஆண்டுகளுக்குப் பிறகு உருக்குலைந்து சருகாகி காற்றில் கலந்தும் போகிறது. காரணங்கள் இரு தரப்பிலும் இருக்கின்றன. நானே கூட காரணமாக இருக்கலாம். அவர்களது எதிர்பார்ப்பிற்கு நானோ எனது எதிர்பார்ப்பிற்கு அவர்களோ பொருந்தாதது நட்பின் முறிவுக்குக் காரணமாக இருக்கலாம். வழக்கறிஞர் சுதா இராமலிங்கம் சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமானவர். இன்றைக்கும் இலக்கிய எல்லைக்கு அப்பால், இரத்த உறவுகளைக் கடந்து இந்தியாவிற்கு வருகிறபோதெல்லாம் தவறாமல் நேரில் சந்தித்து பரஸ்பர நலன் விசாரிப்புகளை பரிமாறிகொள்ளும் அளவிற்கு பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் நட்பு தொடருகிறது.

நட்பு தொடங்கிய காலத்தில், அவர் நாடறிந்த வழக்கறிஞர் என்பதோ, அவருடைய இடது சாரி சிந்தனையோ, மனித உரிமை ஆனையத்தில் தீவிரமாகச் செயல்படுகிறவரென்றோ, எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தமது ‘யாதுமாகிநின்றாய்” கட்டுரைத் தொகுப்பில் அவரைப்பற்றியும் எழுதியிருப்பாரென்றோ எனக்குத் தெரியாது. அப்போதைய நிலையில் ஏன் இப்போதும் கூட அவரது சமூகத் தகுதி என்னிலும் பார்க்கக் கூடியதே. எனினும் எங்கள் இருவரிடத்திலும் பாசாங்கற்ற, உண்மையான அப்பிப்ராயங்கள் இச்சமூக அமைப்பின் மீதும், அதன் செயல்பாட்டின் மீதும் சொல்ல இருந்தன, இருக்கின்றன. அநீதிக்கு எதிராக கோபமும், பாதிக்கபட்டோரிடம் சுயாதீன உத்வேகத்துடன் கூடிய அக்கறையும் பரிவும் இருப்பதை உணரும் சந்தர்ப்பங்கள் இருவருக்கும் அமைகின்றன. நட்பு என்பது ஏதோ ஒரு தளத்தில் – ஒரு புள்ளியில் – இரு வேறு மனிதர்களிடை உணர்வு ஒத்துப்போகவேண்டும், அது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படவும் வேண்டும். ஒத்தக் கல்வியோ, ஒந்த பொருளாதார நிலமையோ, ஒத்த துறையோ அதனைக் கையளிப்பதில்லை. அவர் இந்தியாவிலும் நான் பிரான்சு நாட்டிலென்று வாழ்ந்தாலும்; அவர் மூத்த வழகறிஞராகவும், People’s Union for Civil Liberties உறுப்பினர் எனத் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்க; நான் எழுத்து, வாணிகம் எனக் கவனம் செலுத்த நேரிட்டாலும் பல்வேறு அலுவல்களுக்கிடையிலும் தொலைபேசி, முகநூல், சந்தர்ப்பம் அமைகிறபோது நேரில் என்று அளவளாவிக்கொண்டு இருக்கிறோம். “மாத்தா ஹரி” என்ற எனது நாவலில் கற்பனை மாந்தர்களைத் தவிர்த்து வாழும் காலத்து படைப்புலக நண்பர்களும் இடம்பெற்றிருப்பார்கள். படைப்புலகம் சார்ந்திராது நாவலில் இடம்பெறுகிற ஒன்றிரண்டு பெயர்களில் வழக்கறிஞர் சுதா இராமங்கமும் ஒருவர்.

 

இ. சிமொன் தெ பொவ்வார் (Simone de Beauvoir):Simone

 

பொவ்வார்’ ஓர் அக்கினி தேவதை. இருபதாம் நூற்றாண்டின் பெண் அதிசயம்.”நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு” எனப் பாரதி எதிர்பார்க்கிற புதுமைப் பெண் இலக்கணத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தும் பெண்மணி. ” நான் சந்தித்த பெண்களிலேயே சிமொன் தெ பொவ்வார் ஒருத்திதான் புத்தி கூர்மையும் அழகும் ஒருங்கேப் பெற்ற பெண்மணி அல்லது உங்களுக்கு அப்படி யாரேனும் தெரிந்தவர் ஒருவர் இருந்தால் அவர்களில் இவரும் ஒருவர்” என ஜெர்மன் பத்திரிகையாளரும் பிற்காலத்தில் பெண் இயங்களில் ‘சிமொன் தெ பொவ்வாருடன் இணைந்துகொண்ட அலிஸ் ஷ்வார்ஸெர் சொல்கிறார். பெண்கள் அழகாகவும் புத்திகூர்மையுடைவர்களாக இருப்பவர்கள் அரிது, அதிசயமாக நடைபெறக்கூடியது. பெண்களுடைய ‘பைபிள்’ எனப்படும் அவருடைய ‘இரண்டாம் பாலினம்’ என்ற அரியதொரு படைப்பை வாசிக்க நேர்ந்தது. பெண்கள் படைப்பை, உயிரியல் கட்டமைப்பை, மானுட இருப்பை அவர்கள் உயிர் வாழ்க்கையை அத்ன் சிக்கல்களை, காலம் காலமாய் அந்த அழகியலுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, அன்றாட அவலங்களை அமிலச் சொற்கள் கொண்டு நிரப்பியிருந்தார். சமயத்தின் பேராலும், மரபின்பேராலும் பெண்களை இழிவுபடுத்தும் மூடர்களின் இழிந்தப் போக்கை அவரளவிற்கு கண்டித்தவர்கள் உலகிலில்லை. அறிவு, அழகு, நுண்ணுணர்வு, அள்ப்பரிய மனோபாவம், நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றல்:சிமொன் தெபொவ்வார்.
அரசியல் இலக்கியம் இரண்டிலுமே சில பக்கங்கள் அவர் காலத்தில் பிரான்சு நாட்டில் ஒளிர்ந்ததெனில் அதில் சிமொன் தெ பொவ்வாரின் பங்களிப்பு பிறர்கவனத்தில் கொள்வதற்குரிய நியாயங்களுடன் இருந்துள்ளது. “நான் நானாக இருப்பதிலுள்ள சவால்களை எதிர்கொள்ள தயார்” என்ற வாக்கியம் “கடமை தவறாத இளம்பெண்ணொருத்தியின் நினைவுகள் என்றொரு நூலில் இடம்பெறுகிறது. பெற்றோர் நிழலிலிருந்து மீளத் துணிந்த இள்ம்பெண்ணின் அசட்டுக்குரலென அதை ஒதுக்கிவிடமுடியாது. பெண்ணாய்ப் பிறந்த ஒவ்வொருவருவரிடத்திலும் வயது பேதமின்றி, சமயங்களைக் கடந்து, எல்லைகளை மறந்து ஒலிக்கவேண்டிய குரல். இந்த நூற்றாண்டிலும் குறிப்பாக, விளக்கப்போதாதா அல்லது நியாயப்படுத்த சாத்தியமற்றவைகளை மதம், மரபுகொண்டு பெண்களை அடிமைப்படுத்தி சுகங்கண்ட மனிதர் கூட்டத்துக்கு ( இதிலும் பெண்களும் அடக்கம் என்பதை கிஞ்சித்தும் மறக்கக்கூடாது) எதிராக ஒலிக்கவேண்டிய குரல். அது நாள்வரை சிமோனுடைய தேவைகளையும் விருப்பங்களையும் முடிவுகளையும் தீர்மானிப்பவர்களாக இருந்த அவருடைய தந்தையும் தாயும், பிறரும் ஆதி அந்தமின்றி அவர் நிறுத்துகிற ‘நான்’ என்ற வார்த்தையின் முன்பாக துவளுகிறார்கள். எதை விரும்பவேண்டுமோ அதை விரும்ப எதை நிராகரிக்கவேண்டுமோ அதை நிராகரிக்க, சிந்தனைக்கு உகந்ததைச் தேர்வு செய்ய தன்னைத் தயார்படுத்திக்க்கொண்டு காலத்தை எதிர்கொண்ட சிமொன் தெ பொவ்வாரை, நாம் விரும்பாமற் போனால்தான் ஆச்சரியம்.

 

இ. பிரான்சுவா சகான் ( Françoise Sagan):

 

Sagan
“அழகான இளம் ராட்சஸி” என பிரான்சு நாட்டின் புகழ்பெற்ற இலக்கிய விமர்கர் ‘மொரியாக்’ (François Mauriac)கினால் வர்ணிக்கபட்டவர். “பதினெட்டு வயதில் 188 பக்கங்களால் நான் அடைந்த புகழ் ஒரு வாணவேடிக்கை” என நேர்காணலில் தெரிவித்திருந்தார். அவருடைய அந்த நூலின் பெயர் “வணக்கம் துயரமே” ( Bonjour tristesse), எனது மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவந்தது. அந்த எழுத்தாள பெண்மணியை நேசிக்க நேர்ந்தது அப்படித்தான். சமகால பிரெஞ்சு பெண் எழுத்தாளர்களில் உலகமெங்கும் பரந்த அள்வில் கொண்டாடப்பட்ட எழுத்தாளர் ஒருவர் உண்டென்றால் அவர் பிரான்சுவா சகன் மட்டுமே. ஏற்கனவே பல மில்லியன் பிறதிகள் விற்பனை கண்ட அவரது நாவல் இன்றளவும் விற்பனையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது.

இவரது பலவீனமாகக் மதுவும் போதைப் பொருட்களூம், தன்னைத் திடப்படுத்திக்கொள்ள அவருக்கு மது தேவைபட்டது. விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் விருப்பமானவை. விபத்தொன்றில் ஆறுமாதத்திற்கு மேல் மருத்துவமனையில் இருந்து வெளிவந்தபோது வலிகளிலிருந்து நிவாரணம் பெற போதைமருந்துக்கு அடிமையானார். அவரைச் சந்திக்க பத்திரிகயாளரும் ஊடகத்தினரும் சூதாட்ட விடுதிக்கும், இரவு விடுதிகளுக்கும் தேடிப்போகவேண்டும். பந்தயக் கார்களில் மோகம் கொண்டவர் என்பதால் வேகம், விபத்து, கோமாவென அடிக்கடி மருத்துவமனை, மரணத்தோடு நெருக்கம் என வாழ வேண்டியிருந்தது. தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்த உலகப் புகழ்பெற்ற அவருடைய சிறுநாவலை எழுதிய நிகழ்வும் விபத்தென்று தான் சொல்லவேண்டும். பிரென்சுக் கவிஞர் ரெம்போ (Arthur Rimbaud) வின் கவிதை ஒன்றை (Illuminations) படித்து முடித்துவிட்டு அதன் பாதிப்பில் நாவலை எழுதப்போக, பிரெஞ்சு படைப்பிலக்கிய உலகில் ஒரு பெரும் புயலை உண்டாக்கியது. இந்நாவலில் 17 வயது இளம்பெண்ணொருத்தியின் உடல், மன, பாலுணர்வு உளைச்சல்களை மிகுந்த எதார்த்தத்துடன் கூறியிருப்பார். நாவல் வெளிவந்த காலத்து சமூக நெறிகளை, பத்தாம் பசலி கொள்கைகளை நிராகரித்திருந்தது. இருபது புதினங்கள், திரைப்படங்கள், கட்டுரைகள் கவிதைகள் என இவர் எழுதிக்குவித்திருந்தபோதிலும் எனக்கு ‘வணக்கம் துயரமே’ பிரான்சுவா சகனை மட்டுமே பிடிக்கிறது, பிடிக்கிறது என்ற வார்த்தை எனக்கு அவர் மீதுள்ள காதலை ஒரு சதம்கூடத் தெரிவிக்கப்போதாது.
——————————————————————————————
1. பக்கம் – 10 – மலாலவி பாரதியாரின் பெண்ணியக் கட்டுரைகள் -தொகுப்பு முனைவர் க.பஞ்சாங்கம்.

பிரான்சு நிஜமும் நிழலும் -5: உணவும் -விருந்தும்.

“savourer de bons petits plats”

“உலகில் எந்த நாட்டுமக்களும் தங்களைப் போல திருப்தியாக சாப்பிடுவதில்லை” என 80 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் நினைப்பதாக வாக்கெடுப்புத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது.. இங்கே திருப்தியாக என்பதற்கு ‘வயிறார’ சாப்பிடுவதென்ற பொருள் இல்லை. உணவை சமைப்பது, பரிமாறுவது, விருந்தினர்களுடன் உண்பது எனபவற்றில் சில நாகரீகமான விதிகளை வைத்திருக்கிறார்கள் அதைத் தாங்கள் கடைபிடிப்பதாக நம்பவும் செய்கிறார்கள். யுனெஸ்கோவின் கலாசார பாரம்பர்ய உடமைப்பட்டியலில் பிரெஞ்சு உணவு இடம் பெற்றுள்ளதும் அவர்கள் பெருமிதத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும்.

ஓர் உயிரியின் அடிப்படைத் தேவைகளில் உணவு முதலிடத்தைப் பெறுகிறது. உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே என்கிறார் திருமூலர். மனித இனம் ஓரிடத்தில் நிலையாய் வாழத்தொடங்கியபிறகு அந்தந்த இடத்தின் தட்பவெப்பநிலைக்கேற்பக் கிடைத்தவற்றை உண்ணத் தலைப்பட்டு, அவற்றிற்குப் பற்றாகுறை ஏற்பட்டபோது தாங்களே உற்பத்திசெய்து, விலங்குகளென்றால் வேட்டையாடி வயிற்றுப் பசியைப் போக்கிக் கொண்டனர். தட்பவெப்ப நிலை, மண்ணின் தன்மை, அதியாவசியமான நீர் என்று இயற்கையைச்சார்ந்தே உணவு தானியங்கள், காய் கனிகள், கீரைவகைகள், கால்நடைகளென்று உண்ணும் பொருட்களின் உற்பத்தித் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இயற்கை சாராத கூறுகளான சமயம், சமூகம், மரபு, பண்பாடு போன்றவை நாம் எதைச் சாப்பிடவேண்டும் எதைச் சாப்பிடக்கூடாது என முடிவெடுக்கின்றன. இவற்றைத்தவிர அறிவியல், போக்குவரத்து, தகவல்தொடர்புசாதனங்கள், நட்சத்திர ஓட்டல்கள், சமையல் புத்தகங்கள், குறிப்புகள், பரவை முனியம்மாக்கள், தாமோதரன்கள் இப்படி வயிற்றினை நாக்கினை வழிநடத்த பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள்.

உணவுக்கும் மனிதரின் குணத்திற்கும் தொடர்பிருக்கும் போலிருக்கிறது. கொடிய விலங்குகள் என வர்ணிக்கப்படுபவைகளுக்கும், சாதுவான விலங்குகள் என வர்ணிக்கப்படுபவற்றிர்க்கும் உணவுமுறையில் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஆடு, மாடு, முயல் போன்றவை சாதுவாக இருப்பதற்கும்; புலி, சிங்கம்போன்ற காட்டுவிலங்குகளின் மூர்க்கத்திற்கும் உணவு பழக்கவழக்கங்களும் ஒரு காரணியா? அஹிம்சை வழி முறையை காந்தி தேர்வு செய்ததில் அவரது உணவுமுறைக்கும் பங்கிருக்கிறதென்பது உண்மையா?

இருபத்தோராம் நூற்றாண்டில் இருக்கிறோம். எல்லா உணவுகளும் எல்லா நாடுகளிலும் கிடைக்கின்றன. பிரெஞ்சு பர்ப்யூம்களைபோலவே, பிரான்சு நாட்டு ஒயின்களும் இந்திய முக்கிய நகரங்களில் கிடைக்கின்றன. இந்தியத் தந்தூரி, நான்(Nan), மசாலா (curry) ஆகியவை உலகெங்கும் அறியப்பட்டிருப்பதைபோலவே பிரான்சிலும் கிடைக்கின்றன. தீபாவளியென்றால், எங்கள் வீட்டில் அதிரசம், முறுக்கு, சோமாஸ், போளி, லட்டு( அதுவும் பூந்தி லட்டு எப்போதாவதுதான் ரவா லட்டே அதிகம்) இதைத்தான் செய்திருக்கிறார்கள். மைசூர்பாகு, ஜாங்கிரியை கல்கி, விகடன் தீபாவளி மலர்களில்தான் பார்க்கவேண்டும்.தவறினால், புதுச்சேரி உறவினர்கள் யாரேனும் அபூர்வமாக வாங்கிக்கொண்டுவந்தால்தானுண்டு. ஆனால் தற்போது கிராமத்தில்கூட ‘ஸ்வீட் ஸ்டால்கள்’ திறந்துவைத்திருக்கிறார்கள். கலர் கலராக அடுக்கிவைத்திருக்கிறார்கள், கவர்ச்சிக்கு ஈக்களின் ரெக்கார்ட் டான்ஸ் வேறு. புதுச்சேரிக்கு ஒர் அமெரிக்கன் KFC என்றால், குக்கிராமத்திற்கு ஒரு பாம்பே ஸ்வீட்ஸ்டால் ஏன் கூடாது, தாராளமாக வரலாம், ஆனால் கொழுக்கட்டைகளுக்கு பாதிப்பிருக்கக்கூடாது.

பிரான்சு நாட்டிலும் உலகின் ஏனைய நாடுகளைப்போலவே உலக நாடுகளின் ரெஸ்ட்டாரெண்ட்கள் இருக்கின்றன. ஐரோப்பியரல்லாத ரெஸ்ட்டாரேண்ட்களில் இந்திய மற்றும் சீன ரெஸ்ட்டாரெண்ட்கள் பிரெஞ்சுக்காரர்கள் விரும்பிப் போகக்கூடியவை. இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் தங்கள் ரெஸ்ட்டாரெண்டிற்கு காந்தி யென்றோ, இந்திராவென்றோ, பாம்பே என்றோ, தில்லி என்றோ, தாஜ்மகால் என்றோ பெயர்வைப்பது பொதுவாக வழக்கில் இருக்கிறது. இந்தியா உட்பட இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்குக் காந்தி தற்போதைக்கு ஒரு வியாபாரப் குறியீடு என்பதால், பாகிஸ்தானியர்கள் உட்பட காந்தி என்ற பெயரைத்தான் வைக்கிறார்கள், ‘ஜின்னா’ வென்று தங்கள் ரெஸ்டாரெண்டிற்கு பெயரிடுவதில்லை.

‘உணவென்பது உயிர்வாழ்க்கைக்கான ஒரு கலை’ (l’alimentation est un art de vivre)

பிரெஞ்சுக்காரகள் உணவுப்பொருட்களையும், உண்பதையும் உயிர்வாழ்க்கைக்கான ஒரு கலையாகத்தான் பார்க்கிறார்கள். உலகெங்கும் “பிரெஞ்சு உணவுக்கலை”க்கும் (la gastronomie française), பிரெஞ்சு சமையலுக்கும் (la cuisine française) எத்தகைய வரவேற்பும், மரியாதையும் இருக்கிறதென்பதைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஓவியம், சிற்பம், படைப்பிலக்கியத்தைப்போல சமையலும் அவர்கள் கலைகளுள் ஒன்று. வெறும் வார்த்தை அலங்காரத்தோடு இது முடிந்துவிடுவதல்ல. நீங்கள் விருந்தினர் என்றால் சாப்பிடுவதற்கு முன் – சாப்பிடும்போது – சாப்பிட்டபின் -உங்களை வழி அனுப்பும் வரை உங்களைத் தொடர்வது. உணவின் சுவை என்பது அழைத்தவர் ‘காரம், கரிப்பு, உவர்ப்பு, இனிப்பு இவற்றின் கூட்டுத் தொழில்நுணுக்கத்தின் தயாரிப்பு மட்டுமல்ல சமைத்த உணவிற்குப் பொருத்தமான தட்டுகளைத் தேர்வுசெய்வது, சாப்பிடத்தூண்டும் வகையில் அவற்றைக் காட்சிப்படுத்துவது, பவ்யமாகப் பரிமாறுவது; அழைக்கப்பட்ட விருந்தினர் கண்கள், கைகள், வாய் மூன்றையும் நளினமாகத் தொழிற்படுத்தி உண்பது அவ்வளவும் அடங்கும். பிரெஞ்சு உணவில் நான்கு சொற்கள் அடிப்படையானவை: ரொட்டி, மாமிசம், பாற்கட்டி, ஒயின். இவற்றைத் தவிர சிம்பொனி இசைக்கலைஞர்கள் உபயோகிக்கிற பகத் ( Baguette) என்கிற பெயரிலேயே அழைக்கப்டுகிற குச்சிபோன்ற நீண்ட ரொட்டியும் பிரெஞ்சுக்காரர்களின் அடையாளம். இங்கும் பிரதேச அடையாளங்களைக்கொண்ட உணவுவகைகளுக்கு உதாரணமாக அல்ஸாஸ் (Alsace)பிரதேசத்தின் ‘தார்த் ஃப்ளாம்பே(Tarte flambée) ஷுக்ரூத்(choucroute); அக்கித்தேன்(Aquitaine) பிரதேச ‘லெ ஃபுவா கிரா'(le foie gras), ‘லெ கொன்ஃபி தெ கனார்’ (le confit de canard); தொர்தோஜ்ன் (Dordogne) பிரதேச ‘லெ தூரன்'(le tourin), ‘லெ ஃபிலெ தெ பெஃப்’ (le filet de bœuf), ‘சோஸ் பெரிகெ’ (sauce Périgueux) போன்றவற்றைக் கூறலாம். அதுபோல பிரனெ அட்லாண்டிக் (Pyrénées-Atlantiques), கோர்ஸ்(Corse), ப்ரெத்தாஜ்ன் (Bretagne) உணவுகளும் பிரசித்தம். பாரீஸுக்கென்று பிரபலமான உணவுகள் இருக்கின்றன, தவிர பிரெஞ்சு ஷேஃப்(Chef)களும் புதிது புதிதாய் தாயாரித்து வாடிக்கையாளரின் பாராட்டுதலுக்காகக் காத்திருக்கிறார்கள். உலகின் பிறபகுதிகளைபோலவே இயற்கை விவசாய உற்பத்திப்பொருகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
உணவு வேளைகள்:

1. Le Petit déjeuner – காலை உணவு: இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாகச் சாப்பிடுகிற (அட்டைப்பெட்டிகளில் அடைத்த) céréale பிரெஞ்சுக்காரர்கள் இல்லங்களை ஆக்ரிமித்திருந்த போதிலும், பிரான்சு நாட்டின் தேசிய காலை உணவாக இடம்பிடித்திருப்பது க்ருவாஸ்ஸான்(Croissant). இப்பிறை வடிவ பேஸ்ட்ரி வகை ரொட்டி; பால் கலவாத காப்பி, ஆரஞ்சு ஜூஸ், தேநீர், ஷொக்கொலா என்கிற சாக்லேட் பானம் இவற்றுள் ஏதேனும் ஒன்றுடன் காலை நேரங்களில் அவசரமாகத் தினசரியை மேய்ந்தபடி ஒரு பேஸ்ட்ரி (viennoiserie) கடையிலோ, ரெஸ்ட்டாரெண்டிலோ, நட்சத்திர ஓட்டலொன்றின் டைனிங் ஹாலிலோ ஐரோப்பியர் ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் அநேகமாக அவர் பிரெஞ்சுக்காரராக இருப்பார். இன்று புதுச்சேரி உட்பட உலகெங்கும் க்ருவாஸ்ஸான் கிடைத்தாலும் பிரான்சு நாட்டுத் தயாரிப்புக்கு ஈடாக இல்லை. அப்படி பிரான்சு அல்லாத வேறு நாடுகளில் நன்றாக இருந்தால் அநேகமாக அந்தப் பூலான்ழெரி (Boulangerie) என்ற ரொட்டிக்கடையை நடத்துபவர் மட்டுமல்ல அங்குள்ள ரொட்டிகளைத் தயாரிப்பவரும் பிரெஞ்சுக்காரராக இருக்கவேண்டும். பிரெஞ்சுக்காரர்கள் வேறு ஏதேனும் (Pain au chocolat, baguette avec de la beurre, du miel, de la confiture) காலை உணவாக எடுக்க நேர்ந்தாலும் அது எளிமையானதாகவே இருக்கும், ஆங்கிலேயர்போல காலையிலேயே பேக்கன், ஆம்லேட் என்று வயிற்றில் திணிக்கும் வழக்கமில்லை.

2. Le déjeuner அல்லது le repas du midi- மதிய உணவு: மதிய உணவுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தற்போதெல்லாம் பணிநேரத்தில் ஒரு மணிநேரமே சாப்பிடுவதற்கான நேரமென்று ஒதுக்கப்படுகிறது இதில் ஓர் அரைமணிநேரத்தை உண்பதற்கென்று ஒதுக்கி அவசரகதியில் சாப்பிடுவதற்குப் பெயர் கஸ்க்ரூத் (le casse-croûte). சாண்ட்விச், ஹாம்பர்கர் இரகங்கள் அவை. வீடுகளிலும் அநேகமாக சமைக்க நேரமில்லையெனில் டின்களில் அடைத்துவைத்த உணவுகளை சுடவைத்து உண்பது வழக்கமாகிவிட்டது. மாறாக வார இறுதிநாட்களில் நிதானமாக( பன்னிரண்டு மணிக்கு உட்கார்ந்தால் இரண்டு இரண்டரைமணி நேரம்) மேசையில் அமர்ந்து பேசியபபடி சாப்பிடுவார்கள்

3. Le dîner அல்லது le repas du soir. மாலை உணவு: இதனை இரவு உணவு என அழைப்பதில்லை. பொதுவாக மாலை ஆறுமணியிலிருந்து இரவு எட்டுமணிக்குள் முடித்துக்கொள்வார்கள். விருந்தினர் வந்தால் இரவு மேசையைவிட்டு எழுந்திருக்க பன்னிரண்டு மணி ஆனாலும் பெயர் என்னவோ ‘le repas du soir’ தான். இரவு வேளைகளில்தான் அதிகம் அனுபவித்து உண்பார்கள். எனவே திருமணங்கள், பிறந்த நாள், வேறுவகையான கொண்டாட்டங்கள் அனைத்துமே முகூர்த்தநாள் பார்க்காமல் வார இறுதிநாட்களில் நடபெறுகின்றன, விருந்தும் இரவுவேளைகளில். இவ்விருந்தும் கொண்டாட்டமும் விடிய விடிய நீடித்தாலுங்கூட ‘la soirée’ என்றுதான் பெயர். மற்றபடி மதியம் இரவு இரண்டுவேளைகளிலும் முறைப்படி உண்பதெனில் எடுத்துக்கொள்ளும் உணவு வரிசைகளில் வேறுபாடுகளில்லை. அவை பொதுவாக ஆந்த்ரே (l’entrée), பிளா ஃப்ரன்சிபால் (le plat principal), தெஸ்ஸெர் (le dessert) என்று மூன்று கட்டமாக நடைபெறும்.

அ. l’Entrée அல்லது l’hors d’œuvre : ஆங்கிலத்தில் இதனை appetizer என்கிறார்கள். முக்கியமான உணவைச் சாப்பிடுவதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளும் எளிமையான உணவு அநேகமாக சலாத் (salade) அல்லது தெரீன் (terrine) அல்லது சூப் இவற்றில் ஏதேனும் ஒரு வகை சார்ந்ததாக இருக்கும்.

ஆ. Le plat principal பிரான்சு நாட்டில் கிடைக்கும் காய்கறிகள், கடலுணவுப்பொருட்கள், மாமிசங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சி (charcuterie) ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படுபவை

இ. Le Dessert இனிப்பு பண்டமாகவோ, ஐஸ்கிரீம் ஆகவோ, பாற்கட்டி ஆகவோ இருக்கலாம்.
பெரும்பாலும் ஒயினுடனேயே சாப்பிடுகிறார்கள். சாதாரண நாட்களில் குடும்பங்களின் வசதி மற்றும் படி நிலையைப் பொறுத்தது அது. மாறாகப் விருந்தினரை அழைத்திருந்தால் ஒயின் கட்டாயம், முக்கியப்பண்டிகை நாட்களில் அல்லது கொண்டாட்டங்களில் ஷாம்பெய்னும் முக்கியம். ஷாம்பெய்னும் பிரெஞ்சு சொத்துதான். பிரான்சு நாட்டில் Champagne என்றொரு பிரதேசத்தில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஒருவகை வெள்ளை ஒயின் (le vin blanc)தான் பின்னாளில் ஷாம்பெய்ன் ஆனது. அதுபோல பிரெத்தாஜ்ன் பகுதியில் ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்பட்டும் ‘Cidre’ம் பிரசித்தம்.அதுபோல பிரான்செங்கும் ஒயின் தயாரிக்கப்பட்டாலும் பொர்தோ (Bordeaux) என்ற பிரதேசம் பிரபலமானது.

உணவு மேசையில் கடைபிடிக்கப்படவேண்டியவை

விருந்துக்கு அழைத்திருந்தால், நல்ல ஒயின் பாட்டிலொன்றை பரிசாகக்கொண்டுபோவது நலம். கன்னங்களில் முத்தம் கொடுத்து வரவேற்ற பிறகு முதன்முறையாக அந்த வீட்டிற்கு வந்திருக்கிறவர்கள் என்றால், உங்கள் ஓவர் கோட்டை வாங்கி அதற்குரிய இடத்தில் மாட்டுவார்கள். உணவு உட்கொள்ளப்படுவதற்கு முன்பாகப் பொதுவாக அப்பெரித்திஃப்( l’apéritif’)ஐ வரவேற்புக் கூடத்தில் வைத்துக் கொடுப்பார்கள். இது அநேகமாக விஸ்கியாக இருக்கும். முடிந்ததும் « மேசைக்கு » என்பதைக் குறிக்கும் வகையில் “à table” என விருந்துக்கு அழைத்த வீட்டுப் பெண்மணி கூறினால், உணவு தயார், மேசையில் உட்காரலாம் என்று அர்த்தம். அப்பெண்மணியே அவரவர்க்கான இருக்கையையும் காட்டுவார் அல்லது வாய்மொழியாகத் தெரிவிப்பார். பெரிய விருந்துகளில் நாற்காலிக்கு முன்பாக மேசையில் அழைக்கப்பட்டவ்ர்களின் பெயர்கள் இருக்கும். பொதுவாக தம்பதிகள் எதிரெதிராகவோ, ஒரு ஆண் ஒரு பெண்ணென்ற வரிசையிலோ உட்காருவது வழக்கம். மேசையில் கையைப் போடாமல் நேராக உட்காரவேண்டும். சாப்பிட ஆரம்பிப்பதற்கு முன்பாக விருந்துக்கு அழைத்தப் பெண்மணியே ‘போன் அப்பெத்தி’ (Bon appétit) எனக்கூறி விருந்தை ஆரம்பித்துவைப்பார். விருந்தினர்கள் பதிலுக்கு ‘போன் அப்பெத்தி’ எனக்கூறகூடாது. ‘merci’ என நன்றியைத் தெரிவித்தால் போதும்.உணவுப் பரிமாறல் (l’entrée, le plat principal) இடப்புறமிருந்தும், le dessert வலப்பக்கமும் பரிமாறத் தொடங்கவேண்டும். ஏதாவதொரு உணவு பிடிக்காதவகை எனில் ‘நன்றி வேண்டாம்’ எனக்கூறி மறுக்கவேண்டும். கைகளால் பொதுவாகச் சாப்பிடக்கூடாது, ஏதாவதொரு உணவுப்பொருளுக்குக் கையை உபயோகிக்க வேண்டியதெனின் எதிரில் அமர்ந்திருக்கும் விருந்துக்கு அழைத்த வீட்டுப் பெண்மணியே வழிகாட்டுவார். கூடையில் ‘Pain’ எனும் ரொட்டித்துண்டுகளை வைத்திருப்பார்கள். அவற்றைக்கையால் எடுக்கலாம். ஆனால் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் கேட்டால் ரொட்டித்துண்டைக் கையில் எடுத்துக்கொடுக்கக்கூடாது, ரொட்டித்துண்டுகள் கூடையை எடுத்துக் கையில் தரலாம். பிரெஞ்சுக்காரர்கள் பொதுவாக நிறைய பேசுவார்கள், அதிலும் இரவு உணவின்போது அலுக்காமல் பேசிக்கொண்டிருப்பார்ககள். பொதுவாக ஒயின் பாதிக் குடிக்கபட்டு வைத்திருந்தால், உங்களுக்கு இனி ஒயின் வேண்டாம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்வார்கள். வேண்டியிருந்தால் ஒயின் கோப்பைக் காலியாக இருக்கவேண்டும். உணவு உட்கொள்ளும்போது வாயில் உணவை வைத்துக்கொண்டு பேசக்கூடாது. அதுபோலவே முட்கரண்டியையோ கத்தியையோ ஆட்டிபேசவும் கூடாது, பிரெஞ்சுக்காரகளுக்கு ஏப்பம் விடுவது நாகரீகமல்ல, அசம்பாவிதமாக ஏதேனும் நடந்தால் ‘பர்தோன்’ (pardon) எனக்கூறி மன்னிக்கக்கோருவது வழக்கம். சாப்பிட்டு முடிந்ததும் சில வீடுகளில் டிழெஸ்திபிற்கு (Digestif ) என்றிருக்கிற அதாவது செரிமானத்திற்கு உதவுகிற மதுவைத் தருவார்கள். சிலர் காப்பியோ, தேனீரோ பருகிவிட்டு விடைபெறுவது உண்டு. புறப்படுகிறபோது அழைத்த விருந்தினர்கள் உங்கள் ஓவர்கோட்டை மறக்க வாய்ப்புண்டு, தவறாமல் கேட்டு அணியுங்கள். புறப்படும் முன்பாக சக பாலினத்திடம் கைகுலுக்கலும், எதிர்பாலினத்திடம் கன்னத்திற்கு இரண்டென முத்தங்களும் விடைபெறலை பூர்த்திசெய்யும்.
(தொடரும்)