பனிமூட்டம்

ழான் – ப்போல் திதியெலொரான்
பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
ஓவியங்கள்: கார்த்திகேயன்
பன்னிரண்டு ஆண்டுகள். ஆமாம்! கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். ‘மரியா’ என்னுடைய இரண்டு பெண்களில் மூத்தவள், இதற்கெல்லாம் காரணம் அவள்தான். இரண்டொரு நாட்களில் சொடுக்கு போட்டதுபோல நடந்து முடிந்ததல்ல. போராடிப் பார்த்தேன், கட்டிப் புரளவில்லை, மற்றபடி பெரியதொரு யுத்தம் நடந்தது. தனது முடிவிற்கு ஆதரவாக அவள் முன்வைத்த நியாயங்களும் கொஞ்சநஞ்சமல்ல, எனினும் நிர்ணயிக்கப்பட்ட தேதியை ஆரம்பத்தில் மட்டுமே என்னால் தள்ளிப்போட முடிந்தது. எலிஸ்பெத் இரண்டாவது மகள், தனக்கு இதில் சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோல அமைதியாக இருந்தாள், வெகுநாட்களாகவே, தர்மசங்கடமான சூழல்களில் மதில்மேல் பூனைபோல இருந்து பழக்கப்பட்டவள். இப்பிரச்சினையைக் குறித்துத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் தனது மூத்த சகோதரிக்குக் கொடுத்திருந்தாள், பெரியவளோ இதற்காகக் காத்திருந்தவளே அல்ல. அவர்கள் முடிவுக்கு எதிராக எனது ஆட்சேபம் வெகுகாலம் நீடித்ததென்னவோ உண்மை. ‘மரியா’வின் ஓயாத வற்புறுத்தலைக் கிழட்டுக்கழுதையின் பிடிவாதத்துடன் தள்ளிப்போட்டும் வந்தேன். “பொதுவாக இந்த முடிவு எல்லாருக்கும் நல்லது, விடுதியும் தூரத்தில் இல்லை. நம்ம வீட்டிலிருந்து காரில் பத்து நிமிடப் பயணம். உங்களைப் பார்க்க, நாங்களும் ஒவ்வொரு வாரமும் வரப்போறோம். எனக்கும் பொறுப்பானவர்கள் கையிலே உங்களை

ஒப்படைச்சிருக்கேன் என்ற நிம்மதி.” என்றாள் அவள்.

‘ஷத்தோ ரூ’ புற நகர்ப் பகுதி எனது இறுதிகாலத்தை முடித்துக்கொள்வதற்கான இடமல்லவென்றும், பால்யவயதிலிருந்தே கடலுக்கு வெகு அருகில் வாழ்ந்து பழகிவிட்டு இப்போது அதைவிட்டு விலகியிருப்பதென்றால் கடினமென்றும் அவள் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறிப் பார்த்தேன், எடுத்த முடிவில் அவள் பிடிவாதமாக இருந்தாள். மரியாவின் வாதங்கள் என்னை இங்கே கொண்டுவந்து சேர்க்கவில்லை என்பதொன்றுதான் கடைசியில் இவ்விஷயத்தில் எனக்குள்ள சிறிய ஆறுதல். சமையலறைக்குள் நான் வழுக்கி விழுந்ததும், கேடுகெட்ட தொடை எலும்பு, நாட்பட்ட சுள்ளி போல இரண்டாக உடைந்ததும் இங்கு வரக் காரணம். ‘ரோஸ்’ – வீட்டுவேலைகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருந்த பெண்மணி – சமயலறை ‘சிங்க்‘ அடியில் நான் விழுந்துகிடந்ததைக் கண்டிருக்கிறாள். முதல் நாள் முன்னிரவிலிருந்து கேட்பாரற்று, சுயமாக எழுந்திருக்கவும் முடியாமல் கிடந்திருக்கிறேன். இப்படியொரு சம்பவத்திற்குப் பிறகு சம்மதித்துத்தானே ஆகவேண்டும். சிகிச்சைக்குப் பிறகு ஆறு கிழமைகள் மரியா வீட்டில் உடலைத் தேற்றிக் கொள்ளத் தங்க நேரிட்டது. அந்நாட்களில் தான் எஞ்சியிருந்த எனது பிடிவாதத்தை மூத்தமகளால் கரைக்க முடிந்தது.

‘லெ க்ளிஸின்’ (Les Glycines)1 என்ற பெயரை முதன்முதலாக என்னிடத்தில் அவள் உச்சரித்தபோதே வெடவெடத்தது. இப்பகுதியில் ‘ஷெவால் பிளாங்’ (Cheval blanc)2 என்ற விநோதமான பெயர்கொண்ட தங்கும் விடுதிகள் அநேகம். அதைப்போலவே ‘லெ க்ளிஸின்’ என்ற பெயரில் முதியோர் காப்பகங்களும் ஏராளம். பெயர்தான் ‘கிளிஸின்’ என்றிருந்ததே தவிர, கட்டிடத்தில் நான்குபக்கங்களிலும் அரிதாகக்கூட ஒரு கிளிஸினைக் காணமுடியவில்லை. அவை படர்வதற்கு சுவர்கள்தான் ஏற்றவை, எனினும் சுவர்களில் இல்லை. தோட்டத்திலாவது முளைத்திருக்கும் அறிகுறி தெரிந்ததா என்றால், இல்லை. ‘ஷெவால் பிளாங்’ என்ற பெயர்கொண்ட ஓட்டல்கள் அருகில் வெள்ளைக் குதிரைகளை நம்மால் பார்க்க முடிகிறதா என்ன? இன்றைக்குங்கூட இதுபோன்ற பெயர்களை ‘ஏன்’ வைக்கிறார்கள், ‘எதற்காக’ வைக்கிறார்கள் என்பது எனக்கு மர்மமாகவே இருந்துவருகிறது. இதுபோன்ற புதிர்களுக்கு எவரிடமும் பதிலிருப்பதாகத் தெரியவில்லை. தவிர, இந்த ‘ஏன்’ மற்றும் ‘எதற்கு’ மனிதர்கள் அனைவருக்குமே கேலிக்குரியதாக இருக்கின்றனவென்று நினைக்கிறேன். நான் தங்கியுள்ள இவ்விடத்தில் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று கேட்பது எங்களுக்கு அவசியமில்லையாம், அதற்கான வயதையெல்லாம் கடந்துவிட்டோமாம், சொல்கிறார்கள். இரண்டு செவிலியர்கள், துணையாகச் சிப்பாய்கள்போல இரண்டு தடியர்கள்; அவர்கள் இட்டதுதான் அதிகாரம், வைத்ததுதான் சட்டம், ஒருவரும் அச்சட்டங்களை வளைத்துவிடமுடியாது. இரவுக்கொன்று பகலுக்கொன்று, என்றும் நிரந்தரம்!

சூரியனைக் காண்போமா என்றிருக்கிறது. இதமான வெப்பம் மட்டுமல்ல, அதனுடைய ஒளிக்கும் இங்கே பற்றாக்குறை. எப்படி நிகழ்ந்ததென்று புரியாதவகையில் நிர்மலமான வானிலையின் இடத்தில் ஊத்தை பிடித்த பனிமூட்டம், எங்கிருந்து வந்ததோ? பூமிமீது ஓயாமல் வடிந்துகொண்டிருக்கிறது. இன்றைய தினத்திலும் காலைப்பொழுதை மொத்தமாக மூழ்கடித்துக்கொண்டிருப்பது அதுதான்; விரிந்து கிடக்கும் தோட்டம், மரங்கள், இரும்பினால் செய்யப்பட்ட வெளி வாயிற்கதவு எதுவும் கண்ணிற்படவில்லை. அழுக்கடைந்த மிகப்பெரிய பஞ்சுப்பொதி அவற்றை விழுங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில், இங்கே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. பனிமூட்டம் சூது நிறைந்தது. ஒருவகையில் முதுமைபோல. சோர்வைக் களைந்து அது புத்துணர்ச்சி பெறுவது இரவு வேளைகளில். பிறகு சந்தடிகளின்றி உங்கள் மீது தாக்குதலைத் தொடுக்கும். ஓரிடத்தையும் விட்டுவைப்பதில்லை, தந்திரமாக நுழைந்துவிடும். தன்னை வெளிக்காட்டாமல் நமது எண்ணங்களை மரத்துப்போகச் செய்யும், நினைவுகளை முடக்கிவிடும். விடிந்ததும் மறுபடியும் பனிமூட்டம், எங்கும் – எல்லா இடங்களிலும், அப்படியெல்லாம் உங்களை விட்டு எங்கும் போகமாட் டேன், உங்களோடுதான் இருப்பேன் என்பதைப்போல. இன்றும் வழக்கம்போல கடைசி ஆளாக உணவகத்திற்கு வந்துசேர்ந்தேன். வெகுநாட்களாகவே இதுபோன்றதொரு வேடிக்கையான பழக்கம் என்னிடம் இருக்கிறது. காப்பகத்திலுள்ள மற்றவர்களைப்போல விரைவாக நான் நடப்பதில்லையென்று நீங்கள் நினைக்கக்கூடாது. அந்த மற்றவர்களிலும் பெரும்பாலோர் இங்கு ஜிம்மர் சட்டத்தின் உதவியின்றி நடப்பதில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், எனது தாமதத்திற்கு அவர்களைப்போல எனக்குப் பசி இல்லை என்றும் கூற முடியாது. எனினும் ஸ்பானிய காளைச்சண்டையில், உயிருக்குப் போராடும் விலங்கைக் கொல்லும் புண்ட்டியெரோ(Puntillero)3 ஆசாமியிடம் காணும் பழமையான அனிச்சை செயல் என்னிடமும் இருந்தது. கடைசியில்தான் அது நடக்கிறது, கிட்டத் தட்ட எல்லாவற்றையும் சொல்லிமுடித்த பிறகு, இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்காக நானே முடித்துவைக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஒரு சிறிய பீங்கான் கோப்பைக்கு முன்பாக அமர்ந்திருக்கிறேன். உணவகத்தின் ஊழியை ழிசேல் லெவஸ்ஸெர், உங்களுக்கு எது விருப்பம், தேநீரா காப்பியா என்று வினவுகிறாள். கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் காலையில் கடவுள் விதித்தபடி கொஞ்சமாகப் பால்விட்டு காப்பி குடிக்கிறேன், இப்பெண்ணும் அதே பிடிவாதத்துடன் எனக்கு காப்பி வேண்டுமா, தேநீர் வேண்டுமா என நிதமும் கேட்டபடி இருக்கிறாள். “மத்மஸல் லாவ் வெவஸ்ஸெர்! தயவுசெய்து வழக்கம்போல கொஞ்சம் பால்விட்டு காப்பி கொடேன்!” வலதுபக்கம் அமர்ந்திருந்த பெண்மணி முனங்கினாள். எதிரே இறுகிக் கடினமாகவிருந்த ரொட்டி, குழைந்த வெண்ணெய், வாயில் வைக்கமுடியாத அளவிற்கு சர்க்கரை கலந்திருந்த ஜாம். பெண்மணியிடம், “நீ எப்போதும் குறைகூறிக் கொண்டிருப்பவள்” என்று கூற நினைத்த எனது விருப்பம், மேசையில் எனக்கு முன்பாக வைக்கப்பட்ட ஒரு கண்ணாடித் தம்ளர் தண்ணீரையும் மூன்று மாத்திரைகளையும் பார்க்காமல் இருந்திருந்தால் நிறைவேறி இருக்கும்; வார்த்தைகளை விழுங்கிக்கொண்டேன். மறுநாள் சூரிய உதயத்தை காணாமற் போய்விடுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக நான் விழுங்கவேண்டிய மாத்திரைகள் அவை. இரத்த அழுத்தத்திற்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு மாத்திரை, தைராய்டு பிரச்சினைக்காக வெள்ளை மாத்திரை, பிறகு வெளிர் நீலத்தில் ஒன்று. இருப்பிலிருந்து நம்மை விலக்கிவைக்கக் கண்டுபிடித்ததில் முதுமையைக் காட்டிலும் வேறு சாபம் இருக்கமுடியாது. இங்குள்ள சிலருக்கு வானவில்லில் இருக்கிற அத்தனை நிறத்திடமும் உரிமையுண்டு. மேசையில் குவிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளை விழுங்கவே பெரும்பான்மையான நேரத்தை அவர்கள் செலவிடுவார்கள். மாத்திரைக் குவியலோடு பூஜ்ய விழுக்காடு கொழுப்புச் சத்துடைய வெண்ணெய் என்ற பெயரில் ஏதோ ஒன்று தடவப்பட்ட ரொட்டியும் காத்திருக்கும். இங்கே அனைத்துமே பூஜ்ய விழுக்காடு கொண்டவைதான். நாங்கள் ஆரோக்கியமாகச் சாகவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். நேற்றிரவுகூட ஒருவர் புறப்பட்டிருந்தார். லெ கிளிஸின் காப்பகங்களில் ‘இறப்பு’ என்ற சொல்லை மிகவும் கவனமெடுத்துத் தவிர்த்துவருகிறார்கள். காப்பகத்தில் ஒரு சில பகுதிகள் இருக்கின்றன, அங்கு ‘இறப்பை’ எந்த நேரமும் சந்திக்க வாய்ப்புண்டு. எனினும் மரணத்தை நேரிடையாகச் சந்திக்கும் விஷயத்தில் துணிச்சல் கூடாதென்று வழக்கமாகவே பிடிவாதம் காட்டி வருகிறார்கள். அச்சந்திப்பைத் தவிர்க்க, வலம் வரவேண்டும், மரியாதையுடன் விலகிக்கொள்ளவேண்டும், ‘புறப்பாடு’ என்ற அழகானதொரு வார்த்தை ஆடைகொண்டு மரணம் உடுக்கப்பட்டிருக்கிறது. உணவகத்தில் அன்று காலையில் தியானச்சூழல் நிலவியது என்றெல்லாம் என்னால் கூறிக்கொண்டிருக்க முடியாது. வழக்கத்திற்கு மாறாக சப்புக்கொட்டுவதும் மெல்லுவதும் சற்றுக் குறைந்திருந்தது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை வாய்களுக்குச் சாப்பிடும் ஆர்வம் குறைவாக இருந்திருக்கும். பார்வைகள் ஓரிடத்தில் நிலையாய் இல்லை. கரண்டிகளும் பிறவும் எழுப்பும் ஓசைகள்கூட மிகவும் அடக்கமாக ஒலிக்கின்றன. இன்மையின் வெளிப்படையான அறிகுறி ஒன்றே ஒன்றுதான், எல்லோருடைய பார்வையும் அதன்மீதுதான் கூடுதலாக இருந்தது: மர்செல் கர்னியெ இல்லாத காலி நாற்காலி அது. உணவகத்தில் நட்டநடுவே வாய் பிளந்துகொண்டிருந்த அக்காட்சி மிகவும் கொடுமையானது.

அதிகாலையில் கட்டிலில் மிகவும் அமைதியாகப் படுத்திருந்ததைக் கண்டோம். அவருடைய புறப்பாடு ஒருவருக்கும் வியப்பூட்டவில்லை. மாரடைப்புக்குப் பலியாகியதாகச் சற்று முன்பு காப்பகத்தின் நிர்வாகி திருமதி வெர்ழ்லெ கூறியிருந்தாள். தும்மியதில் தெறித்ததைத் தடுக்க உணவு மேசையிலிருந்த துணிகொண்டு வாயை மூடினேன். குருதிநாள் விரிசல், மாரடைப்பு, நுரையீரல் வீக்கம் காரணம் எதுவாயினும் கடைசியில் அதற்குப்பெயர் மாரடைப்பு. விநோதமான இக்கொரிடாவின் (Corrida)4 மூன்றாவது தெர்சியோ (Tercio)5வில் எங்களில் ஒரு நபரை மரணம் முடித்துவைக்கும் சம்பவத்தை எடுத்துச்சொல்ல ‘மாரடைப்பு’ என்ற சொல்லைக்காட்டிலும் மேம்பட்ட சொல் அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இங்குள்ளவர்களில் நான் மட்டுமே ‘எஸ்டோகாட்’

(Estocade)6 எப்படி நடக்கிறதென்பதை நேரில் கண்டவன். இங்கேயும் அதுதான் நடந்தது. வடிவிலும் கூர்மையிலும் குறைசொல்ல முடியாத ‘எஸ்டோகாட்.’ கிழங்களாக வலம்வருகிற ‘கிளிசிசின்’களில் மரணத்திற்கு ‘எஸ்டோகாடை’ உபயோகிப்பதில் ஒருபோதும் சங்கடங்கள் இருப்பதில்லை. நீண்ட நாட்களாகவே மர்செல் கர்னியெ தனக்கென்று வைத்திருந்த பாந்த்ரீ (banderilles)7 சிப்பத்துடன் சுற்றிவந்தார். கட்டுப்படுத்த இயலாமல் அதிகரித்திருந்த கொலாஸ்ட்ரோல், குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்த சர்க்கரை, களைத்திருந்த இரத்த நாளங்கள் என பிரச்சினைகளை வைத்துக்கொண்டு இறப்பதற்குத் தவணை கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தில் அவரும் ஒருவர், இங்கு அதுபோல டஜன் கணக்கில் பலர் இருக்கின்றனர். ஆவிகள்போல இருக்குமிடம் தெரியாமல் இருப்பார்கள். தங்கள் நேரத்தில் கணிசமான காலத்தை ‘சூப்’பிற்கென்று ஒதுக்கிக் காத்திருப்பார்கள். தங்கள் அறைகளைவிட்டு வெளியில் வருகிறார்களென்றால் அது வயிற்றை நிரப்ப உணவகத்திற்கு வருவதுதான். அதன்பின்னர் தங்கள் முதுமைக்கு அடிபணிந்து கூன்போட்ட முதுகுடன் சாய்வுநாற்காலிகளுக்குத் திரும்பி மீண்டும் அடுத்தவேளை உணவுக்கான நேரம் வரும்வரை காத்திருப்பார்கள். மர்செல் கர்னியெ கூட அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்தான். முழங்காலில் கிடக்கும் துண்டையும் புறங்கையையும் தடவிக்கொடுத்தபடி நாள் முழுக்கத் தனது இரவுமேசை மீதிருக்கும் கடிகாரத்தை அவதானித்த வண்ணம் இருந்தார். புறப்படுவதற்குத் தயாராகவிருக்கிற உயிர்கள், துறைமுகமேடையில் தாமதமின்றி நிகழவிருக்கிற புறப்பாட்டின் வரவை எதிர்பார்த்து வலம் வருவார்கள். ‘மர்செல் கர்னியெ’வின் காலியாகவிருந்த நாற்காலியை ஆவலுடன் பார்த்தேன்.

ஞாயிற்றுக்கிழமை, பார்வையாளர் களுக்கான நாள். நுழைவுவாயிலுக்கு நேர் எதிராகவிருந்த ஹால் பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தவண்ணம் பிற்பகலைச் செலவழித்தேன், என்னுடன் வேறு சிலரும் இருந்தனர். கண்ணாடித் தடுப்புக்கு மறு புறம் தெரிந்த உயிர்ப்பியக் கத்தில் எனது கவனம் இருந்தது. மணிக் கணக்காக அரைத்தூக்கத்தில் நான் இருக்கும் அந்தவேளையில், சிறுசிறு குழுக்களாக உறவினர்கள் உரத்துப் பேசியபடி வேகவேகமாக உள்ளே நுழைவார்கள். எல்லா ஞாயிற்றுக்கிழமை களையும் போலவே அன்றும் ‘மரியா’வை எதிர்பார்த்தேன், உணர்வு மழுங்கியிருந்த மூளை விழிப்புற்றுச் சென்ற வருடத்தில் அவள் இறந்ததை நினைவூட்டியது. வரக்கூடாத இடத்தில் வந்த கட்டியொன்று மூன்று மாதத்தில் அவள் உயிரைக் குடித்துவிட்டது. தனக்கு முன்பாகப் பிள்ளைகள் இறப்பைக் காண்பதென்பது கொடுமை, ஒருவருக்கும் நேரக் கூடாது. இரண்டும் இரண்டும் நான்கென்பதுபோல, தன்னுடைய மகளுக்கு முன்பாக தந்தை என்பதுதான் நியாயம்! எலிஸபெத்தும் அபூர்வமாக என்னைப் பார்ப்பதற்கு வருவதுண்டு. அவளுடைய ‘நீம்’ நகரம் ‘ஷத்தோ ரூ’விலிருந்து வெகுதூரம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு உணவிற்குப் பிறகு தொலைபேசியில் அழைத்துப் பேசுவாள்; ஆனால் எனக்குக் காது முன்புபோலக் கேட்பதில்லை. ஆயிரம்பேர் பேசினாலும் கடந்தகாலத்தில் என்னால் அடையாளப்படுத்த முடிந்த சொந்தப் பெண்ணின் குரல், தற்போது நீர்மப்பொருள் கொதிபோல மேலும்மேலும் கேட்கச் சாத்தியமற்ற ஒலியாகிவிட்டது. எனவே ஒருவித பாவனை உரையாடலை நடத்துகிறேன். “ஆம்”, “இல்லை”, “நல்லது” போன்ற என் வார்த்தைகள், முணுமுணுப்பாக, பொய்யான உரையாடலை ஆர்வத்துடன் நிகழ்த்தும். பின்னர் இருவருமாக “பிறகு பார்ப்போம்”, “அடுத்த வாரம் பேசலாம்”, “உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள் அப்பா”, “எனது அன்பு முத்தங்கள்” சொற்களால் அதனை முடித்துக்கொள்வோம். ஞாயிற்றுக்கிழமைகள் பொதுவில் எனது விருப்பத்திற்கு உகந்தவை அல்ல. இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எதையோ நினைவூட்டும் ஆணைகள் அவற்றில் பொதிந்திருக்கின்றன. குறிப்பாக “உண்மையான வாழ்க்கை என்பது இங்கே, நான்கு சுவர்களுக்குள் இல்லை, மாறாக வெளியே, அடர்ந்த பனிமூட்டத்திற்குள் இருக்கிறது, ஆனால் உங்களுக்குத் தற்போதைக்கு அங்கு செல்லச் சாத்தியமில்லை” என்பதைக் கூறுவதாக உள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்பாக, மர்செல் கர்னியெ உடலை எடுத்துச் சென்றார்கள். காளைச்சண்டையின் முடிவில் கொன்ற காளையை இழுத்துசெல்வதுபோன்ற சத்தம் எனது தலைக்குள் அப்போது கேட்டது. இப்போதெல்லாம் “மரணம் என்னை விரும்பவில்லையோ” என அடிக்கடி நினைக்கிறேன். கீழே இருக்கிற உயிர்களின் இறுதிப்பயணத்திற்குதவ, மரணத்திற்கு ஒருவேளை தொடர்ந்து வயதானதொரு புண்ட்டியெரோ (Puntillero) ஆசாமியின் தேவை இருக்கிறதோ? நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கான இடம் இங்குதான். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு காளைச் சண்டைத் திடலில் பெற்றிருந்த அதே இடம். ஏனென்றால் கிளிசின்களிலும் சில நேரங்களில் ‘எஸ்டோகாட்’

(Estocade)6ஐ சொருகியபின்பும் முடிவு தாமதமாகவே வருகிறது. இந்த அற்ப உயிர்த் தாரை வற்றாமல் பாய்வதற்குக் காலம் இன்னமும் இருக்கிறது. நள்ளிரவில் என்னுடைய கட்டிலைவிட்டு நழுவவேண்டும், நாள்பட்ட சடலமாகிப்போன வலிமூட்டையைக் கொஞ்சம் மறந்து, நடைக்கூடத்தில் இருளில் பதுங்கிச் செல்லவேண்டும். சரியான கதவைக் கண்டுபிடிக்கும்வரை இதயத் துடிப்புடன் ஒவ்வொரு அறையாகக் கடக்கவேண்டும், இரவு காவலர் பிடியில் அகப்பட்டுவிடாதென்ற பிரார்த்தனையும் முக்கியம்! கட்டில்வரை நெருங்குகிறேன். கடந்த காலத்தில் காளைச்சண்டை மணற் திடலில் செய்த அதே காரியம். இறுதி இழையை அறுத்து, அவற்றுக்கு விடுதலை அளிக்கிறேன். அதிசயமாக, கண்ணுக்குப் புலனாகாத அந்தத் தொப்புள்கொடியைத் துண்டிக்கும் தருணத்தில் மட்டுமே உயிர்வாழ்வதைப் போன்ற உணர்வு என்னிடம் இருக்கிறது, ஒருபோதும் பிறநேரங்களில் அதை உணர்ந்த அனுபவமில்லை. பிதா கர்னியெவின் இறுதிமூச்சைச் சிரமமின்றிப் பறிக்க முடிந்தது. பிறரைப்போலவே, முகத்தில் அழுத்திப்பிடித்த தலையணை, நுரையீரலில்

எஞ்சியிருந்த உயிரைக் குடித்து முடித்தது. எல்லாவற்றையும் செய்து முடித்தபிறகு கடைசியாக ஒருமுறை அவர்களை அவதானிப்பதுண்டு. அந்திக் கருக்கல் அவர்கள் முகத்தைத் திரையிட்டிருப்பினும், அஸ்தமித்த அவர்கள் பார்வையில் சிற்சிலசமயங்களில் ஒருவித நிம்மதி இழைகள் இருப்பதாகத் தோன்றும்.

நாளை, எனக்கு 102 வயது. ‘ழிஸ்லெர் லெவஸ்ஸெர்’ வியப்பில் வாய்பிளக்கவேண்டும் என்பதற்காகவே தேநீர் குடிக்க இருக்கிறேன்.

குறிப்புகள்:

1. Glycine ஒருவித கொடி; நீலம், வெள்ளை ஆகிய நிறங்கள்கொண்ட பூக்களையும் காணலாம்.

2. Cheval blanc – வெள்ளைக்குதிரை

3. Puntillero – காளைச் சண்டையின் இறுதியில், உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் காளையைக் கொல்வதற்கென உள்ள ஊழியர். அவர் உபயோகிக்கும் குறுவாளுக்கு ‘Puntilla’ என்று பெயர்.

4. Corrida – ஸ்பெயின் மற்றும் பிரான்சு நாட்டின் வடபகுதியில் நடக்கும் காளைச் சண்டை

5. Tercio – காளைச் சண்டையின் மூன்றாவது கட்டம் அல்லது இறுதிச்சுற்று

6. Estocade – காளைச்சண்டையில் காளையை அடக்கும் வீரனின் கையிலுள்ள வாள்

—————————————

நன்றி: காலச்சுவடு ஜனவரி இதழ்

கோட்டுக் கவிஞன் – ‘செந்தில் பாலா’ « மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன் » – என்ற கவிதைத் தொகுப்பை முன்வைத்து…..

ஓர் அசல் படைப்பிலக்கிய வாதி நேர்க்கோட்டில் நடக்க முயன்று தோற்பவன். அ ந் நேர்க்கோடு அவனைச் சர்ந்த சமூகம் ‘தனக்கன்று பிறர்க்கு’ எனப் போட்டுவைத்திருக்கும் கோடல்ல, தனக்கென்று நித்தம் நித்தம் அழித்தழித்துப் போட்டுக்கொள்ளும் கோடு. மீறுதல் அதற்காகத் தன்னை வருத்திக்கொள்ளுதல் என்கிற சுய விதிக்குள் வருவது. செந்தில் பாலா என்ற இளைஞரும் தனக்கென கோடுகளைக் கிழித்துக்கொண்டு அல்லாடுபவராக இருக்கிறார். எவ்வித முகப்பூச்சுகளுமற்று அகப்பசிக்கு கவிதை சமைக்கும் இந்த இளைஞர்களால் தமிழ்க்கவிதை யின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

 

மேற்குலகில் கலை கலைக்காக என்ற குரல் எழலாம். ஏற்றத் தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்குமாக உள்ள நாட்டில் , இறந்தபிணத்தை எடுத்துச் செல்லவும் சாதிபார்க்கும் ஒரு நாட்டில் சமூகப் பிரக்ஞையற்று ஒருபடைப்பிலக்கியவாதி இருக்க முடியுமெனில் அவன் நேர்மை குறித்து சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகுப்பு குறித்து மேலே செல்வதற்கு முன்பாக இளைஞர் செந்தில் பாலாவுக்கு வைக்கும் வேண்டுகோள், தனி மனித மயக்கத்தில் ஆழ்ந்திடாமல் அவ்வப்போது சகமனிதனைப் பற்றிய பிரக்ஞையுடனும் எழுதுங்கள்.

 

கலை கலைக்காகவா ? அல்லது கலை மக்களுக்காகவா ? என்ற விவாதம் மேற்கத்தியர்களுக்கே கூட இன்று அலுத்துவிட்ட து. ‘எனக்குத் தொழில் கவிதை’ என் கிறவர்கள் என்ன செய்கிறார்கள் ? வெகுசனப் புரிதலுக்கு உட்படாத அல்லது சாதாரணக் கண்கள் காணப் போதாதக் காட்சியை மொழிபெயர்க்கிறார்கள். சார்த்ரு ( Jean Paul Sartre) « ஒரு கலை படைப்பின் பிரதான நோக்கம் நமது வாழ்க்கையின் மிகமுக்கியமானவற்றை கவனத்திற்கொள்ளச் செய்வது » என் கிறார். கலை, படைப்பிலக்கியம் என இயங்கும் நெஞ்சங்கள் அனைத்திற்கும் இக்கூற்று பொருந்தும். ‘பார்த்தல் மட்டுமே எப்படி பார்வையாகும் ?‘ என இக்கவிதைத் தொகுப்பில் ஓரிடத் தில் செந்தில் பாலா கேட்பது கூட அந்தப் பொருளில்தான்.

 

அண்மையில் இந்தியா வந்திருந்தபோது புபுதுச்சேரி, கடலூர் சிதம்பரம், கும்பகோணம் எனப் பேருந்து நிலையங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. எல்லா பேருந்து நிலையங்க்களிலும் கூச்சமின்றி மனிதர்கள் கால் நடைகள்போல மூத்திரம்போய்கொண்டிருந்தார்கள். ஒரிடத்தில் சிவப்பு புடவை அணிந்த பெண்கள் கூட பேருந்தை சாலை ஒரத்தில் நிறுத்திவிட்டு எவ்விதக் கூச்சமுமின்றி இயற்கை உபாதைகளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். பார்க்க நேர்ந்த என்னைப்போன்ற ஒரு சிலர்தான் பதற்றத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்து. அக்காட்சி என்னுடன் பயணம் செய்த பலருக்கு ப் பழகியது என்பதை அவர்களில் இயல்பான செயல்பாடுகள் உறுதிசெய்தன. எனக்குங்க்கூட இவை உறுத்தாதவையாக இருந்துள்ளன- அதாவது – ஆண்கள் மட்டுமே இதற்குக் காப்புரிமை பெற்றவர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவரை. அன்றையதினம் அதிசயம்போல பேருந்தில் என்னுடன் பயணம் செய்த அனேகர் செந்தில் பாலா போல ‘பார்த்தல் மட்டுமே எப்படி பார்வையாகும் ?’ எனக் கேட்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

 

கூட்டம் கூட்டமாக அவசரகதியில் எந்திரத் தனமாக இயங்கும் இவ்வுலகில் கவிஞன் மாத்திரம் எதையோ காதில் வாங்கியபடி நிற்கிறான். எதையோ கண்டு மெய்சிலிர்க்கிறான். அகத்தில் திரையிட்டு தேம்பி அழுகிறான், சிரித்து மகிழ்கிறான் அல்லது அருவருப்புடன் முகம் சுளிக்கிறான். அவ்வனுபவத்தை மொழிபடுத்தினால் அவன் கவிஞன், தவறினால் பைத்தியக்காரன் என்பதற்குக் கீழ்க்கண்ட இச்சிறிய உருவகக் கவிதை நல்ல உதாரணம்:
« இன்றைய எனக்கான பகல் நேரம்
ஜன்னலில் எட்டிப் பார்த்தபடி காத்திருப்பது கண்டு
தாழ்ப்பாளுக்கு ஓய்வளித்து கதவு திறக்க
வெப்பத்தின் வலிபொறுக்காது
புரண்டுகொண்டிருந்தன
நேற்றைய குப்பைகள் »

 

« இன்றைய எனக்கான பகல் நேரம் » என்று எழுத எவருக்கும் சாத்தியம். ஆனால் « வெப்பத்தின் வலிபொறுக்காது புரண்டுகொண்டிருந்தன நேற்றைய குப்பைகள் » என்று எழுத வெகுசனப் பார்வையிலிருந்து விலக்கப்பட்ட்ப் பார்வையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

 

‘கணக்கின் கணக்கு ‘

கீழ்க்கண்ட கவிதைக்கு செந்தில் பாலா பெயர் சூட்டவில்லை. என்னுடைய சௌகரியத்திற்காகவும் உங்க்களுடைய சௌகரியத்திற்காகவும் ‘கணக்கின் கணக்கு’ என்ற பெயரை கவிதைக்கு வைத்தேன். கவிதைப் பனி உறைந்த நீர்படுகையை நினைவூட்டுகிறது. ஆழமற்ற நீர்பரப்ப்பு போல அமைதி பூசிய கவிதை. கால்களை, சில்லிட்ட நீரில் வைக்கிற்போது பாசியும் நொய்மணலும் சேர்ந்தொரு கலவை முழகாலைத் தொட்டு , முதுகுத் தண்டைக் குறுகுறுக்கச் செய்கிற கவிதை, வாழ்க்கையை வரவு செலவு கணக்கில் வைக்கிற மனிதம் பற்றிப் பேசுகிறது.

 

எல்லாவற்றிர்க்கும் அல்லது எல்லோருக்குள்ளும்
ஒரு கணக்கு இருக்கிறது
மௌனத்துக்குள்ளும் முணுமுணுப்புக்குள்ளும்
புலம்பலுக்குள்ளும்
வேடிக்கைப் பார்ப்போருக்குள்ளுங்கூட
ஒரு கணக்கு இருக்கிறது
அனைவருக்குள்ளும் ஒரு கணக்கு
ஒடிக்கொண்டே இருக்கிறது

எல்லாவற்றிர்க்கும்
கணக்குப் பார்க்க முடியாது அல்லது கூடாது
அதிலும் ஒரு கணக்கு இருக்கிறது
உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கும் கணக்கிற்கும்
வெளியில் பேசும் கணக்கிற்கும்
சம்பந்தமே இருக்காது ஆனால் இருக்கும்
ஒரு கட்டத்தில் எல்லா கணக்குகளும்
பொய்த்துபோகின்றன

அனாயசமாக
கணக்கு
அது ஒரு கணக்கைப்போட்டுவிட்டு
மிக இயல்பாகப் போய்கொண்டிருக்கிறது.

 

இங்கே மனிதர்கள் அனைவருமே ஏதோவொரு கணக்குடன் முகமன் கூறி , ஏதோவொரு கணக்கில் கட்டியணைத்து, ஏதோவொரு கணக்கின் அடிப்படையில் பிரிவையும் தீர்மானிக்கின்றனர். எல்லோருக்குமே விடைசரியாகவே இருக்குமென்ற நம்பிக்கை. ஆனால் நமக்கும் மேலே கணக்கோ வேறொரு கணக்குடன் நமது விதியை எழுதிக்கொண்டிருக்கிறது.

 

எல்லாபடைப்பாளிகளிடம் காணக்கூடியதுதான். கவிஞன் நதியோ, நிலாவோ, தெற்கத்தி காற்றோ அல்ல. மனிதன். இச்சமூகத்தில் ஒருவன். உங்கள் அண்டைவீட்டுக்காரனாக இருக்கலாம். அலுவலகத்தில் உங்கள் வலப்பக்கம் அமர்ந்து கோப்பு பார்ப்பவனாக இருக்கலாம். ஏன் உங்கள் சகோதரனாகவோ சகோதரியாகவோ கூட இருக்கலாம். உங்களிடம் கவிதையொன்று எழுதியிருக்கிறேன் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்கிறபோது, தவறாமல் இரண்டொரு நொடிகள் ஒதுக்கி அக்குழந்தைக் கட்டியது மணல்வீடென்றாலும் கோட்டையெனக் கூறப் பழகிக்கொள்ளுங்கள். ஒரு கவிஞனைப் போற்றுவது மரம் வளர்ப்பது போன்றது

 

« கேட்பாரற்று கிடப்பது பற்றி எழுதி
யாரிடமாவது படித்துக்காடும்பொருட்டு
கவிதைக்குறித்தும் கவிதைக்களம் குறித்தும்
பேசத்தொடங்கிவிடுகிறேன்

எதிரிலிருப்பவர்கள் கவனம்
இங்கில்லை என்பதிலிருந்துதான்
தெரிந்துகொள்கிறேன்
எனது கவிதையோடே
செத்துக்கொண்டிருக்கிறேன் என்று »

 

செந்தில் பாலாவின் இக்கவிதையைப் படிக்க நேரும் எவரும் இனி ஒருபோதும் கவிதையையோ கவிஞனையோ அலட்சியம் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்.

 

‘அடைதலும் அடைத்தலும்’ இத்தொகுப்பிலுள்ள ஒரு முக்கியமான கவிதை. கவிஞனாக தனது இருத்தலைக் கற்பித்துகொள்வதால் எழுத நேரும் கவிதை. செந்தில் பாலா இயல்பை முன் நிறுத்திப்பாடிய கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. இக்கவிதை அவர் இயல்பே கவிதையாக ஒளிர்வதுதான் என்பதைப் பறைசாற்றும் விதத்தில் இருக்கிறது.

 

அடைதலும் அடைத்தலும்

« எல்லோரையும் போல வாரச்சந்தையில் வாங்கிவிட்டேன்
குருவிகள் வளர்ப்பது பெரும் பாவமென்று
எனக்குத் தோன்றவில்லை

அப்படிப்பார்த்தால் வளர்ப்பதென்பதே பாவம் தான்
……………………….
……………………………

வளர்க்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே வளருகின்றன
மாடுகளும், ஆடுகளும், கோழிகளும் கூட

வளர்த்தல் வேறு, வளருதல் வேறு புரிகிறது என்றாலும்
யாரும் வளருவதே இல்லை
…………………………
………………………….

கூண்டுக்குள் அடைபட்டுக்கிடப்பதை
பொறுக்க முடியாமல் பறக்கவிட்டுவிட்டேன்
ஆனாலும்
எங்களை யாரேனும் விட்டாலும் கூட
எங்கே செல்வோம் பறக்க. »

வினாக்குறியின்றி முற்றுபுள்ளிவைத்து கேள்வியையே பதிலாக முடித்து இச்சமூகத்தைப் பட்டியாக அல்லது தொழுவமாகவும் மனிதர்கள் வளர்ப்பு விலங்குகளாகவும் கண்டுவருந்துகிற கவியுள்ளம் இறுதியில் எங்களை யாரேனும் விட்டாலுங்கூட எங்கு செல்வோம் பறக்க எனக் கவிஞர் நமது சர்பாக போதாமையில் வருந்துகிறபோது, நம்மால் இயலக்கூடியது ஒன்றேஒன்றுதான் சமூகத் தொழுவத்தில் அடைபட்டு கிடப்பது.

« இறுதியாக
எதையாவது எழுதாமல்
தூங்கமுடிந்ததில்லை என்பதெல்லாம்
நிச்சயம் எனக்குக் கிடையாது » என்றும்

« இதையெல்லாம் எழுதியிருக்கலாமே
என்றபடி தூங்கிக் கொண்டிருக்கிறேன் » என்றும் செந்தில்பாலா சொல்கிறார்.

எனவே விழித்த தும் மறக்காமல் கவிதை எழுதும் பழக்கத்தை செந்தில் பாலா தொடர்வது தமிழ்க் கவிதை உலகிற்கு பயன் தரும் என்பதை நெருக்கமான நண்பர்கள் நினைவூட்டவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்
_____________
மனிதர்களைக் கற்றுகொண்டு போகிறவன்
ஆசிரியர் : செந்தில் பாலா
பதிப்பாளர் : நறுமுகை, 25 /35 தேசூர்பாட்டை, செஞ்சி -605 202

‘கைரேகைக்கொடியில் கனவுப் பூ’ – பா. இரவிக்குமார்

« கலக்குரலைக் கர்னாடக க் காரனிடம் எதிர்பார்க்கலாம். அவன் வெவரம் தெரியாதவன். நாம் நமது சொரணையுள்ள தமிழ் எழுத்தாளர்கள் வழி நடப்போம். ‘பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் வேண்டாம், பகுத்தறியாமல் துணியாதே என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என்பது நமது படைப்புலக மேதைகளுக்குத் தெரியாதா என்ன ? »

படைப்பிலக்கியத்தில் கவிதை எழுதுவது அத்தனை எளிதான செயல் அல்ல .ருந்தும் தமிழில் அதிகம் கவிதை எழுதப்படுகிறது. இன்றைக்கு உலகில் அதிகம் கவிதை எழுதுபவர்கள் தமிழராகத்தான் இருக்க வேண்டும். பதிப்பாளர்கள் கவிஞர்களைக் கண்டால் ஒடுகிறார்கள். இன்று கவிதை எழுதுபவர்களை (தமிழில்) மூவகையினராகப் பிரிக்கலாம். தமிழ் படித்து, யாப்புப் படித்து, கவிதை வாசிக்க மேடைகிடைத்தால் வாழ்த்துப்பா, இரங்கற்பா எனக் கவிதை எழுதிகொண்டிருப்பவர்கள். ஆண்டுக்கு ஐந்துகவிதை எழுதுவதால் இலக்கண சுத்தமாக எழுதுவார்கள். ஆனால் கவிதைக்குரிய இலட்சணங்களைக் கோட்டைவிட்டிருப்பார்கள். அடுத்தவர்கள் பதின் வயதினர். கொஞ்சம் தமிழ் ஆர்வம் கொஞ்சம் வயதுக்கோளாறு என்ற சுரவேகத்தில் கவிதை எழுத ஆரம்பித்து, ஏதாவதொரு சிற்றிதழில் பிரசுரமானதும், முக நூலில் வைரமுத்துவை திட்டுவார்கள் (உள்ளூர வைரமுத்துவாக வரும் ஆவல் இருந்தாலுங்கூட). சொந்தச் செலவில் கவிதைப் புத்தகம்போட்டு தொடர்ந்து உழைப்பவர்கள் நிலைபெறவும் மற்றவர்கள் தொலைந்துபோகவும் இதில் வாய்ப்பிருக்கிறது

மகாகவி பாரதிக்கு கவிதையில் வாழ்பவனே கவிஞன், கவிதை எழுதுபவன் அல்ல. அவன் கவிதையையே வாழ்க்கையாக உடையோன் . வாழ்க்கையையே கவிதையாகச் செய்தோன். வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தல் என்பதென்ன ? வாழ்க்கை முழுதும் கவிதையாக வாழ்ந்து முடிபவன்.தனது காலத்தின் மனித வாழ்க்கையைக் கவிதைகளில் பதிவு செய்கிறவன், அதன் உயர்வு கண்டு பெருமிதமும், தாழ்வுகண்டு பெரும் சீற்றத்திற்கும் ஆளாகிறவன். அவன் « தேடிச் சோறு நிதம் தின்ன்று, பல சின்னசிறுகதைகள் பேசி » வாழ்ந்து கரைகிற மனிதக் கூட்டத்தில் ஒருவனல்லன். தமது மொழியாற்றலை கவிப்புலமையை சகமனிதன் உயர்வுக்கு உபயோகிக்கிறவன். சமூக பிரக்ஞையோடு கவிதை செய்பவன். எட்டயபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிவரை சமகால வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தவன், பாரதி. குயிற்பாட்டில் தத்துவமும், சொல்லத் தெரிந்திருந்தான், ‘கண்ணம்மா கண்ணம்மா’ என காதலில் உருகவும் அறிந்திருந்தான் . வாழ்க்கையைக் கவிதையாகச் செய்தலென்பதன் அடையாளம் இது.
பா. இரவிக்குமார் என்ற இந்த இளைஞரிடம் சகமனிதனைப்பற்றிய அக்கறை தெரிகிறது. இச்சமூகத்தின் போக்கு குறித்து க் கவலைப்படுபவராக இருக்கிறார். ஆக பாரதி வைத்திருக்கிற கவிஞன் சட்டைக்குக் கச்சிதமாகப் பொருந்தும் இளைஞர். பா. இரவிக்குமார் பெயருக்கு முன்னால் கவிமாமன்னன் , கவிவேந்தன், கவி நாட்டாமை என்கிற பட்டங்கள் எதுவுமில்லை. கவிஞர் என்ற சொல்லையும் தவிர்த்திருந்தார். ஆக நல்ல கவிதைகள் எழுதியிருக்கக்கூடும் என்ற நம்பிக்கையிலேயே அவருடையக் கவிதைத் தொகுப்பைத் திறந்தேன், ஏமாற்றம் அதிகமில்லை.

இத்தொகுப்பிலுள்ள முதல் கவிதை . எனக்கும் உங்களுக்குமான ‘கடைசி சந்திப்பு’
என வாசகர்களை மிரட்டுவதுபோன்றதொரு கவிதைத் தலைப்பைக் கொண்டிருக்கிறது.

கடைசி சந்திப்பு

கடைசி சந்திப்பு/ஏற்படுத்தும் ரணங்கள்/சொல்லி முடியாதவை
அறைக்குள் என்றால்/ ஆறுதலாகச்/சற்றே விசும்பலாம்
சாலையில் என்றால்/அபத்தமாக எதையோ/பேசவேண்டி இருக்கும்.

எந்த த் தருணத்தில்/பிரிகிறோம்/என்பதைச் சொல்ல முடியாது/துல்லியமாக
ஏதோ ஒர் ஏக்கத்தின்/அல்லது /ஏதோ ஒரு கனவின் /மரணம் அது
சபித்தவோ வாழ்ந்தவோ/ சக்தியற்று/ஒரு சிறுவனின்/குமுறலெனத்/துடிக்கும் நெஞ்சம்

உயிர் /அறுபடும் நொடியில்/கண்ணீரின்/ உயிர்ப்பு அது

இனி/பார்க்கவே கூடாது /என்ற முடிவுடனும்../ஒரே ஒரு முறை/
சந்திக்கமாட்டோமா /என்ற ஏக்கத்துடனும் /நாம் பிரிந்தத் தருணத்தில்தான்
நான் இறந்து போனேன்.

கவிதை என்பது இறுக்கமானது, சொற்களை விரயம்செய்யாமல் சொல்லவேண்டியவற்றைக் கவிதைக்குரிய உபகரணங்களைக்கொண்டு விளக்க முற்படுவது. இக்கவிதையில் கடைசி சந்திப்பு என்ற சொல்லே நிழ்வின் மொத்தபாரத்தையும் சுமந்து வதைபடுகிறது கடைசி சந்திப்பை ரணங்கள் எங்கிறார் கவிஞர். ரணங்கள் நாள்பட்டவை. ஆறாப்புண்களைத்தான் ரணங்கள் என்கிறோம். ரணங்ககளின் வலியை வார்த்தைகள் கொண்டு விளக்கமுடியாது. அதனால் தான் அதனை « சொல்லி முடியாதவை » எங்கிறார். கவிதைக்குரிய கருவிகளை நாடாமல் அதாவது உருவகம், உவமை என்று சுற்றி வளைக்காமல் « ஏதோ ஓர் ஏக்கத்தின் அல்லது ஏதோ ஒரு கனவின் மரணம் அது » என்கிறார். « சபிக்கவோ வாழ்த்தவோ சக்தியற்று ஒரு சிறுவனின் குமுறலென துடிக்கும் நெஞ்சம் » என்றும், « உயிர் அறுபடும் நொடியில் கண்ணீரின் உப்பு அது » என்றும் உருவகப்படுத்துகிறார். உண்மையில் கடைசிசந்திப்பு என்பது ஒரு வகையான பொய்யான வீம்புடனும், மீண்டும் சந்திக்கமாட்டோமா என்ற ஏக்கத்துடனும் நிகழ்வதாலேயே « நாம் பிரிந்த தருணத்தில் தான் நான் இறந்துபோனேன் » எனக் கூறுகிறபோது « பெண்ணை ஏமாற்றும் வழக்கமான ஆணின் தந்திரமோ எனச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் காதலன் இறந்திருந்தால் கடைசி சந்திப்பு என்ற கவிதையை எழுதியிருக்க முடியாது,

இன்றைய உலகில், அதிகாரமென்பது சகமனிதரை அடக்கி ஆள்வதற்கு என்பதோடு, அந்த அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அவசியம் எனில் மொத்த மனிதர்களையும் அழித்தொழித்துவிட்டு தனி மனிதனாக அவன் மட்டும் மிஞ்சினால் கூட போதுமென்று நினைக்கிறான்.

« ஏன் எதற்கு என்று தெரியாமல்
யார் யாருக்காகவோ
ஆடவேண்டியிருக்கிறது

அதிகாரத்தை நிலை நிறுத்த
சகலரையும் பலிகொடுக்கையில்
அரசன் அல்லது அரசி நான்

துக்கம் தோய்ந்த விரல்களால்
எவர் எவரையோ
வெட்ட வேண்டியிருக்கிறது
……….

வெட்டப்பட்டுப் பரிதாபமாய்
வீழ்கையில்
ஒரு சாதாரண சிப்பாய் நான்

என்பவை ‘பொய் முகங்கள்’ கவிதையில் இடம் கிற வரிகளில் தோய்ந்துள்ள உண்மைகள் அனைவருக்கும் பொருந்தும்.

தொகுப்பிலுள்ள மற்றொரு முக்கியமான கவிதை, ‘கனவில் வரும் பிணங்கள்’. இதொரு கொடுங்கனவென்று தலைப்பு நமக்கு சொல்கிறது. அர்த்த ராத்திரியில் குழந்தை அலறி அழும். வளர்ந்தவர்கள் என்றால் நடு இரவில் திடுக்கிட்டு எழுவார்கள். வேர்வையில் நனைந்திருப்பார்கள். ஒரு தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு உறங்கமுயற்சிப்பார்கள். கனவு கொடுங்ககனவாகிப் போவதே பிரதானக் காரணம். மூளை நரம்பியல் வல்லுனர்கள் , உறக்க ஒழுங்கின்மையின் போது கொடுங்க்கனவுகள் எற்படுகின்றன என் கிறார்கள். நமக்கு எப்போது கொடுங்கனவு வருகிறது என்பது முக்கியமல்ல ? ஏன் கொடுங்கனவு காண்கிறோம் என்பதும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. உலகெங்கும் எதேதோ காரணங்ககளுக்காக மனித இனம் பிளவுண்டு மோதுவது, வெட்டி மடிவது இன்று தொடர்கதையாகி இருக்கிறது. சமயம், நிறம், இனம், சாதி, எனக் கட்டிப்புரள காரணங்களும் உள்ளன. ‘ பொய் முகங்களில்’ கவிஞன் தன்னுள் இருக்கும் கொலைவெறிச் சிமிழைத் திறந்துபார்க்கிறான். இங்கே அதற்கான புறக் காரணத்தைக்கூறி, படுகளத்தின் பார்வையாளாகி கையறு நிலையில் கதறுகிறான். எழுதியவர் தமிழ்க்கவிஞர், அண்டை மா நிலமான கர்னாடக படைப்பிலக்கியவாதி அல்ல, அவர்களுக்கு எழுத்தும் வாழ்க்கையும் ஒன்று. நாம் காகிதப்புலிகள். கொடுங்கனவு கண்ட கையோடு ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திகொண்டால் சுபம் இக்கேடுகெட்ட சமுகத்தை இடித்துரைக்க பா. இரவிக்குமாரும் தயாரில்லை.
« திரிசூலங்கள் பற்றியும்
கொலைவெறிகொண்ட கண்கள் பற்றியும்
எதுவும் தெரியாமலேயே
அந்தக் குழந்தைகள் இறந்த து
எவ்வளவு நல்லது ?
……………………..
…………………………….

கனவில் ஒரு பிணம் வந்து
நீ இந்துவா ? எனக்கேட்டால்
கடவுளே !
என்ன பதில் சொல்வேன் ?

எனச் சங்க டத்தை அந்தக் கடவுளிடமே முறையிட்டால் சிக்கல் தீர்நது. கலக்குரலைக் கர்னாடக எழுத் தாளனிடம் எதிர்பார்க்கலாம். அவன் வெவரம் தெரியாதவன். நாம் நமது சொரணையுள்ள தமிழ் எழுத்தாளர்கள் வழி நடப்போம். ‘பகலில் பக்கம் பார்த்து பேசு இரவில் அதுவும் வேண்டாம், பகுத்தறியாமல் துணியாதே என்றெல்லாம் நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்களென்பது நமது படைப்புலக மேதைகளுக்குத் தெரியாதா என்ன ?
இத்தொகுப்பில் உள்ள ‘கடைசி இரவு’, ‘நான் தாகமாய் இருக்கிறேன்’ , ‘சுதந்திரம்’, ‘இந்த வாழ்க்கை’ பிற முக்கியமான கவிதைகள்.
———————————————————————-

கைரேகைக் கொடியில் கனவுப்பூ

ஆசிரியர் பா. இரவிகுமார்

வெளியீடு

மித்ர ஆர்ட்ஸ்& கிரியேஷன்ஸ்

சென்னை  84

மு. அரிகிருஷ்ணன்

கடந்த ஒருவருடமாகவே நச்சரித்து வந்தார் . நானும் பிடிகொடுக்காமல் நழுவிவந்தேன் . இறுதியில் பிடிவாதம் ஜெயித்தது. பிடிவா த த் தி ன் பெயர் மு . அரிகிருஷ்ணன்  பல படைபாளிகளோடு என்னையும் களரி கலை இலக்கியம் மற்றும் கூத்துகலைஞர்கள் ஆதரவு அமைப்பு சேலம் அருகே ஏர்வாடி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் நிகழ்விற்கு (2-1-16) அழைத்திருந்தார்கள். நண்பர் பஞ்சுவுடன்  நானும் கலந்துகொண்டேன்

அரிகிருஷ்ணன் புஜக்கட்டையும் தலைக் கிரீடமுமாக இருப்பாரோ என எதிர்பார்த்தேன். இல்லை நட்சத் திர எழுத்தாளர்களில் ஆரம்பித்து முதற்படைப்பு சிற்றிதழில் வந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கிற இளம் படைப்பாளர்வரை இங்கே அனைவருக்கும் தங்கள் இருத்தலை கவனம் பெறச்செய்ய குறைந்தபட்சம் கீரிப்பிள்ளை பாம்புச் சண்டையையாவது களமிறக்குகிறபோது (இலக்கிய சேவைதான் நம்புங்கள்) தன் இருத்தலை கூத்துக் கலைஞர்களின் அடையாளத் தேடலில் செலவிடுகிற மனிதரை எப்படி எடுத்துகொள்வது?. அரசியலைப்போலவேஎழுத்திலும் விளம்பரமே கரைசேர்க்கும் என்ற சூட்சமத் தீவில் அரிகிருஷ்ணானும் சிக்கி இருக்கிறார் . எனினும் சேலம் மாவட்ட கூத்துக்கலைஞர்களை அமெரிக்க மண்ணில் கால்பதிக்க, கிராமியத் திடல்களில் அறுவடை நாட்களில் பின்னிரவுகளில் தோல்பாவை கூத்துகளில் ஒலித்த குலுரலுக்குரிய முகங்களை ஆங்கிலத் தினசரிகளில் இடம் பெற, பார்வையாளரிடமிருந்து பெற்ற ஐந்து ரூபாய் பத்து ரூபாய் சன்மானத்தைச் சாராயக்டையில் சேர்க்கும்வரை தொட்டுமகிழும் கைகள் முன் முறையாக விருதுகளையும் சான்றிதழ்களையும் காமெரா முன்பாக கையிற்பிடிக்க வாய்ப்பினை அளித்த அரிகிருஷ்ணனை நாம் மறந்தாலும் கூத்துக் கலைஞர்கள் மறக்கமாட்டார்கள் அரிகிருஷ்ணனோடு, அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவுகளும் சொல்லப்போனால் கிராமம் முழுக்க பல மாதங்கள் சோர்வின்றி உழைத்கிறார்கள் என்பது நடந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரியவந்தன.

அரிகிருஷ்ணன் பணி அரியப் பணி . தற்போது தமிழ் நாட்டில் கலை இலக்கியதுறையில் இருக்கிறவர்கள் சென்ற தலைமுறையினர் இல்லை. ஆரோக்கியமான பொருளதார சூழலில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்கள் அரிகிருஷ்ணன் போன்றோரின் முயற்சிக்குத் துணை நிற்கிறார்கள்.  சாகித்ய  அகாடமி  அளித்த விருதையும் பணத்தையும் சுயமரியாதையுள்ள நமது எழுத்தாளர்கள் திருப்பித் தாராமற் போனதன் காரணம் அவர்கள்  ஒருவேளை அரிகிருஷ்ணன் போன்றவர்களுக்கு உதவுவதாக இருக்கலாமென என்னுடன் வந்த நண்பர் ஒருவர் கூறினார். கலை இலக்கியதுறை சார்ந்த மனிதர்கள் பிரச்சினையில் உழல அதைப் பார்த்துகொண்டிருக்க எப்படி   அவர்க ளுக் கு மனம் வரும்?  ஆக இனி நலிந்த எழுத்தாளர்களுக்கு பிரச்சினை வராமற் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு  பரிசு பெறும் எழுத்தாளர்களைச் சேர்ந்தது என்பதைக் கேட்க இனிமையாக இருக்கிறது.
————————————————————–

நன்றி நன்றி

கடந்த  டிசம்பர் 27 மாலை நண்பர் பேராசிரியர் க.பஞ்சு தலைமையில் எனது நாநன்கு நாவல்கள் பற்றிய  திறனாய்வும் , திறனாய்வாளர் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு  – ‘வாழ்வின் பன்முகப் பிரதிகள்’ , நண்பர் பஞ்சுவைப் பற்றிய ‘இலங்கு நூல் செய வலர் – க. பஞ்சாங்கம்’  ஆகிய இரண்டும் வெளியிடப்பட்டன.

நண்பர் சீனு தமிழ்பணி கடந்த ஆண்டு ‘காப்காவின் நாய்க்குட்டி’ புத்தக வெளியீட்டின்போது எனது நூல்கள் பற்றிய திறனாய்வை  நடத்தவேண்டும் என விரும்பினார். உணர்ச்சி வேகத்தில் சொல்லிவிட்டார் என்றுதான்  நினைத்தேன். ஆனால் தொடர்ந்து வற்புறுத்திவந்தார். இந்த வற்புறுத்தல் பின்னர் நண்பர்கள் பஞ்சு, நாயகர் இருவர் ஊடாக வலுப்பெற்றது . நான்கு நாவல்கள், ஐந்து  சிறுகதைத் தொகுப்புகள் ஒன்பது கட்டுரை தொகுப்புகள் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு ஐந்து மொழிபெயர்ப்புகள், தமிழிலிருந்து  பிரெஞ்சுக்கு அம்பையின் சிறுகதைகள் என செய்திருந்தும் எனது இருத்தல் அத்தனை முக்கியத்துவம் பெற்றதல்ல.   நான் அறியப்படவேண்டும் எனவிரும்பிய நண்பர்களுக்கு நன்றி. தமிழர்கள் நினைவுகொள்ள மறந்தாலும் தமிழ் என்னை நினைவுகொள்ளூம் என்ற நம்பிக்கையிலேயே எழுதிவருகிறேன். இப்படிச்சொல்வதற்குக் காரணம் இருக்கிறது  நான் தனியே தமிழுலகில் ஈட்டாத புகழை அம்பையின் சிறுகதைகளை ஒரு பிரெஞ்சு பெண்மணியின் ஒத்துழைப்புடன்  இணைந்து செய்ததில் இன்று பிரெஞ்சு படைப்புலகில் எனது பெயரும் பதிவாகி இருக்கிறது. எனது சிறுகதையை Cousins de personnes  என்ற இதழும் பிரசுரித்துள்ளது.  கார்த்திக் தேவராஜ் என்றகணினித் துறை இளைஞர், ஆங்கிலத்தைத் திறமையாகவும் இலாவகமாகவும் கையாளக்கூடியவர்,  பெங்களூரிலிருந்து நீலக்கடலை மொழிபெயர்க்க விரும்பி  முதல்  அத்தியாயத்தை மொழிபெயர்த்தும் அனுப்பியுள்ளார்.  நாயகர், ஒரு பிரெஞ்சு நண்பர் ஆகியோரின் உதவியுடன் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி அவர்களால் மாத்தா ஹரி நாவல் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்படுகிறது.

 

தமிழில்  நல்ல எழுத்துக்களைக் காழ்ப்பின்றி பாராட்டுகிற மனிதர்களும் இல்லாமில்லை. திருவாளர்கள் க. சச்சிதானந்தம், வே. சபா நாயகம், ரெ. கார்த்திகேசு, பிரபஞ்சன், தமிழவன்,க. பஞ்சசாங்கம்,  நா. முருகேசபாண்டியன் , தேவமைந்தன்; இன்றைக்குப் பா. ரவிக்குமார், க. முத்துகிருஷ்ணன், இலண்டனிலிருந்து சிறந்த வருங்க்கால புலம்பெயர்ந்த எழுத்தாளராக பரிணமிக்க உள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் ஆகியோர் நான் கேட்டுக்கொண்டு மதிப்புரை எழுதியவர்களல்ல என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.  ஆக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைத்தால் எழுத்தும் ஊட்டத்துடன் இருந்தால்  நமது எழுத்துக் கவனிக்கப்படும் என்ற  நம்பிக்கை வேண்டும்(குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு).    இது கணினி உலகம், 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலமை இன்றில்லை.நல்ல படைப்புகள் காலம் தாழ்ந்தும் கவனிக்கப்படும், உங்கள் மீது நம்பிக்கை வையுங்க்கள். இல்லையென்றால்  சு.ரா வின் இனிய நண்பர் எம். எஸ் தொலைபேசியில் அழைத்து ‘காஃப்காவின் நாய்க்குட்டி’  நாவலைப் பாராட்டுவாரா? பா ரவிக்குமார், நறுமுகை, கார்த்திக்  தேவராஜ், ரா. கிரிதரன் போன்ற இளைஞர்களின் ஆதரவு எனது எழுத்திற்கு வாய்த்திருக்குமா?இங்கே  செஞ்சி இலக்கிய வட்டத்தின் துணைகொண்டு இளைஞர்களை உற்சாகப்படுத்திவரும்  நறுமுகை இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் ஒன்றிரண்டுபேர் இருக்கவே செய்கிறார்கள்.குறுகிய காலத்தில் நான் பெற்ற அடையாளத்திற்கு இந்த நல்ல உள்ளங்க்களே காரணம். இளைஞர்களே சோர்வின்றி எழுதுங்கள்.

மீண்டும் 27 ந்தேதி நிகழ்ச்சிக்கு வருகிறேன்  வித்திட்ட நண்பர் சீனு தமிழ்மணி எனது இலக்கிய பயணத்திற்கு வழித்துணையாக அமைந்து உடன் பயணிக்கும்   நண்பர் சு. ஆ வெங்கிட சுப்புராய நாயகர், எழுத்தாளன் என்பவன் எழுதுவதுபோல இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பவன்  நான். அத்தி பூத்தாற்போல சிலர் இருக்கவே  செய்கிறார்கள்.  அவர்களில் நாஞ்சில் நாடன், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன் , வண்ணதாசன், வண்ண  நிலவன், கண்மணி குணசேகரன் என்பவர்களோடு அதிகம்  நெருக்கம் இல்லையென்றாலும்  அப்படியானவர்களாகத்தான் இருப்பார்கள்  என்பதற்கு அவர்கள் வாழ்க்கையே சாட்சி.   பொய்யான, பகட்டான தமிழ்ச் சூழலில் அண்மைக்காலத்தில்  நெருங்கிப்பழகி பிரம்மிக்கின்ற ஒருவர்  பேராசிரியர் பஞ்சு, அவர் வழிகாட்டுதலில்  நிகழ்ச்சி ஏற்பாடுகள் தொடங்கி  சிறப்பாக முடிந்தது.    நண்பர்கள் சீனு தமிழ்மணி, நாயகர், பேராசிரியர் பஞ்சு  ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்

காலசுவடுபதிப்பகம் ஐந்து  நாட்களில் புத்தகத்தை முடித்து அனுப்பி வைத்தார்கள்  நண்பர் கண்ணன் எளிமைக்கும் வெள்ளந்தியான உள்ளத்திற்கும் அறியப்பட்ட இனிய நண்பர் களந்தை பீர் முகம்மது அவர்களை  நிகழ்ச்சியில் பங்க்கேற்க அனுப்பியும் வைத்தார். காலச்சுவடு பதிப்பகத்திற்கு மிகவும் நன்றி

நண்பர்கள் மற்றும் எனது அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட திருவாளர்கள் அ.ராமசாமி, ந முருகேசபாண்டியன், பாரதிபுத்திரன் , பா. ரவிக்குமார், நறுமுகை ஜெ ராதாகிருஷ்ணன் அனைவருக்கும் நன்றிகள்

 

எனது பள்ளி தமிழாசிரியர்கள் திருவாளர்கள் நாகி, ராஜேந்திரன், மூத்த இலக்கியவாதியும் திறனாய்வாளர்மான வே. சபா நாயகம், தேவமைந்தன், நந்திவர்மன் என என்மீது அன்புகொண்டுள்ள பெருந்தகைகள் கலந்துகொண்டது பெரும் பேறு. அவ்வாறே அ. பெருமாள் , பூங்குழலி பெருமாள் தம்பதிகளுக்கும் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற நண்பர்களுக்கும்  நெஞ்சார்ந்த  நன்றிகள்

 

அன்புடனும் பணிவுடனும்

நா.கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்கள் திறனாய்வு

வணக்கம்

அன்பினிய நண்பர்களுக்கு

தற்போது புதுச்சேரியில் இருக்கிறேன், கைத் தொலைபேசி எண் / 98 43 13 93 03

எதிர்வரும் டிசம்பர்  27 அன்று மாலை 4மணி அள்வில் எனது நான்கு நாவல்கள் குறித்த திறனாய்வு நண்பர்கள் முயற்சியால் புதுச்சேரியில் நடைபெற உள்ளது  மூத்த திறனாய்வாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.  நிகழ்ச்சி பற்றிய விபரம் விரைவில்

வணக்கத்துடன்

நா கிருஷ்ணா

முனைவர் க. பஞ்சு வின் தலித் இலக்கிய பார்வையை முன்வைத்து

panchu
பேராசிரியர் பஞ்சு இடதுசாரி சிந்தனையாளர், மொழி அறிஞர், திறனாய்வாளர், நவீனப் படைப்பிலக்கியத்தில் ஆர்வங்கொண்டவர், பெண்ணியவாதி என்றெல்லாம் அறியப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் தலித் இலக்கிய ஆதரவாளராகவும் இருப்பதில் வியப்புகளில்லை. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே என்று தமது படைப்புகளைக்கொண்டும்(1), உரைகளிலும், தமது தலித் ஆதரவு நிலையை தொடர்ந்து உறுதி செய்துவருபவர்.
தமிழ்ச் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களும், தலித் மக்களும் கடந்த காலத்தினும் பார்க்க இன்றைக்குக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பெரியார், அம்பேத்கார் போன்றவர்களின் பங்களிப்பை மறுக்கவியலாதென்றாலும், அவர்கள் இன்றியும் இம்மாற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும். பேராசிரியர் கட்டுரைகளிலேயே அதற்கான விடைகள் உள்ளன. மனிதர்களைக் காட்டிலும் நீதியை எண்பிக்க, ‘காலம்’ ஒருபோதும் தவறியதில்லை எனினும் அதற்கு நாம் காத்திருக்கவேண்டும். எப்போது அதனைச்செய்யும் இன்றா நாளையா, அடுத்த தேர்தலிலா? நூறு வருடங்கள் கழித்தா? நமக்குத் தெரியாது என்பது அதிலுள்ள சிக்கல். அதுவரை? ஒடுக்கப்பட்டவர்களின் கதியென்ன? பள்ளிகூடத்தைத் திறந்துவிட்டிருக்கிறார்கள் என்பதால் மழைக்கு அங்கு ஒதுங்கிக்கொள்ளலாமா? பொறுமையுடன் சகித்துக்கொண்டு அல்லது மைக் கிடைத்ததென்று படபடவென்று பொறிந்துதள்ளி கண்ணைக் கசக்கி மீடியாவில் இடம்பிடித்ததால் தீர்வு கிடைத்துவிடுமா? பிறவிடயங்களைப்போலவே இப்பிரச்சினையிலும் அடிப்படையில் ஓர் உண்மை இருக்கிறது. அது, பொதுவில் பாதிக்கப்பட்டவர்கள்தான் தங்கள் முயற்சியில் விமோசனத்திற்கு வழிகாணவேண்டுமென்கிற உண்மை. மீட்பதற்கு ‘மெசியா (Messiah) என்றொருவர் வரமாட்டார் என்ற உண்மை. இன்னொரு அய்யோத்தி தாசரோ பெரியாரோ, அம்பேத்கரோ, உடனடியாக வருவார்களென்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை என்ற உண்மை. ஏழேன் பொத்தியே (Eugène Pottier) என்றொரு பிரெஞ்சுக் கவிஞர் பாடிய புரட்சி பாடல்வரிகள்தான் இந் நேரத்தில் நினைவுக்கு வருகிறது:

மகா இரட்சகரென்று எவருமில்லை
கடவுளில்லை, சீசரில்லை,
மனிதர் உரிமையைக் காட்டிக்காக்கும்
ரொமானியர்களின் ட்ரிப்யூனும் இன்றில்லை
உற்பத்தியாளர்களே, நம்மை நாமே
காப்பாற்றிக்கொள்வோம்! (1)
இங்கே கவிஞர் உற்பத்தியாளர்கள் என்றழைப்பது முதலாளிகளை அல்ல, தங்கள் உழைப்பை நல்கி உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் தொழிலாளர்களை. உழைக்கும் வர்க்கம் புத்தி தெளிந்தாலன்றி விமோசனமில்லை என்கிறார் கவிஞர்.
ஒடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவர்க்கும் பாடல் பொருந்தும். இந்தியாவை பொறுத்தவரை வெகுகாலமாகவே இங்கே வர்க்கபேதம் பற்றிய புரிந்துதுணர்வை சாக அடிப்பதே சாதிய வெறிதான். ஓரிடத்தின் சமூகம், பூகோளம், பண்பாடு, தனி மனிதனின் அபிலாஷைகள் இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாத மார்க்ஸியமும் இதற்குப் பெரிதும் உதவமுடியாது. இந்தப்பின்னணியில்தான் இந்தியாவில் தலித் அரசியல், தலித் இலக்கியம் போன்றவற்றைப் பார்க்கவேண்டும்
க. பஞ்சாங்கம் தலித் சமூகத்திற்கு எதிரான அவலங்கள், தலித் இலக்கியம் இரண்டையுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார். ஓடி ஒளிதலோ, மழுப்பலோ இன்றி மனதிற்கு நேர்மையாகத் தோன்றுபவற்றைச் சொல்வதில் வழக்கம்போல தெளிவும் துணிவும் இருக்கின்றன. ‘தலித்’ சமூகத்தை முன்வைத்து கட்சி அரசியல், இலக்கிய அரசியல் இரண்டையும் பேசுகிறார். இரண்டிலுமே விடியல் என்பது முற்றாக அச்சமுதாயமக்களைச் சார்ந்தது என்பதை நம்பும் க.பஞ்சு, அச்சமூகத்திற்கு தலித் ஆதரவாளர்களின் பங்களிப்பும் அவசியமானதுதான் என்பதைத் தெரிவிக்கும் பஞ்சு, அதனைத் தலித் அல்லாத பிறமக்களின் கண்ணோட்டத்துடன் எடைபோட்டுப் பார்க்கிறார்.
‘தலித்’ என்ற சொல்லை தலித் அல்லாதவர்கள் பயன்படுத்துகிறபோது பொதுவில் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. தலித் ஆதரவாளர்கள் அனைவருமே பேராசிரியர் க. பஞ்சாங்கத்தைப் போன்றவர்கள் அல்ல. இங்கு தலித் ஆதரவாளர் எனப் பிரகடனபடுத்திக்கொண்டு அரசியல், இலக்கியம் போன்றவற்றில் ஒரு பாசாங்கு அரக்கு மாளிகையை எழுப்புபவர்கள் அநேகம். நூறு குறைகள் இருந்தாலும், புல்லுக்கும் நீர்பாய்ச்சுபவர்களாக இருப்பினும், தலித் மக்களுக்கு நம்பகமானவர்களாக தலித் தலைவர்களே இருக்க முடியும். அதுபோலவே பூரணமானதொரு தலித் இலக்கியத்தைத் தலித் அல்லாதார் படைத்துவிடமுடியாது. தலித்திற்கு ஆதரவாக இருப்பதுபோல தலித் தலைவர்கள் அல்லாத கட்சிகளும் காட்டிக்கொள்கின்றன. இடது சாரி கட்சிகளைத் தவிர்த்து பிறவற்றை இவ்விடயத்தில் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. கட்சி சார்ந்த தலித் அரசியலை மறந்துவிட்டு, இலக்கிய அரசியலில் தலித்’ என்ற சொல்லின் நிலமைஎன்ன? அதன் ஆகிருதி என்ன, வீச்சு என்ன? நிகழ்த்தும் விளையாட்டுகள் என்ன? தன் இருத்தலை ஆழமாக வேரூன்றிக்கொள்ள போதுமான அடியுரம் அதற்குண்டா? பிறர் ஆதரவு அவசியமா என்பதை இனி பேராசிரியர் எழுத்துக்கொண்டே பரிசீலிக்கலாம்.
1. தலித் இலக்கியத்தில் ஆதரவாளர்களின் பங்கு
இக்கட்டுரை முழுக்க முழுக்க தலித் அல்லாத பிறர், தலித் இலக்கியவாதிகளுக்கு, தலித் எழுத்துக்களுக்கு உதவக்கூடிய யோசனையை வழங்குகிறது. ‘இது தலித் இலக்கியத்திற்கான காலம்’ என்ற முழக்கத்துடன் கட்டுரை தொடங்குகிறது. அதை நியாயப்படுத்த தலித் எழுத்துக்களும், எழுத்தாளர்களும் இலக்கியத்தில் முன்னெப்போதும் கண்டிராத வகையில் விருதுகளையும் பரிசுகளையும் வென்றிருப்பது முனைவர் க. பஞ்சுவினால் சுட்டப்படுகின்றன.
தலித் எழுத்து’ யார் எழுதுவது? என்ற கேள்வியும் ‘தலித் ஆதராவளர்’ செய்ய வேண்டியதும்.
தலித் எழுத்தை தலித்தாகப் பிறந்தவர்தான் எழுத வேண்டுமா? தலித் அல்லாத பிறர் எழுத முடியாதா என்ற கேள்வியைக்கேட்டு, அதற்குப் பதிலளிக்கின்ற வகையில் நீண்டதொரு விளக்கத்தைப் பஞ்சு தருகிறார். இங்குதான் ‘தலித் ஆதரவாளர்’ என்ற பதம் கட்டுரை ஆசிரியரின் உபயோகத்திற்கு வருகிறது.
“படைப்புத் தளத்தில் தலித் ஆதரவாளர்கள், தலித்தியத்திற்கு சார்பாக நின்று கவிதையோ, கதையோ, நாவலோ எழுதலாம். ஆனால் அந்த எழுத்துக்கள் « தலித் ஆதரவாளர்களின் எழுத்துக்கள் அல்லது படைப்புகள »” என்ற தனித் தலைப்பின் கீழ் பகுக்கப்பட்டு தலித் இலக்கியத்திற்குப் பக்கபலமாக நின்றுதான் வினை புரிய முடியுமே ஒழிய தலித் இலக்கியமாகக் கருதிவிட முடியாது.” எனக்கூறும் பேராசிரியர், ” இலக்கியத்திற்கு உயிர் நாடியாக விளங்குவது ‘நம்பகத் தன்மை’ இந்த ந்ம்பகத் தன்மையை தலித்தாகப்பிறந்து, வாழ்ந்து வளர்ந்த ஓர் உயிரிதான் சரியாகக் கட்டமைக்க முடியும்” எனக்கூறி தலித் இலக்கியத்தை யார் எழுதவேண்டுமென்ற விவாதத்திற்கு முற்றுபுள்ளி வைக்கிறார்.
இந்த இடத்தில் எனக்கு அமெரிக்க வரலாறு நினைவுக்கு வந்தது. 17ம் நூற்ராண்டில் அடிமைகளாக வட அமெரிக்காவிற்குக் கொண்டுவரப்பட்ட கறுப்பின மக்கள், ஆப்ரிக்க அமெரிக்கர்களாக அடையாளம் பெற்றபோதும், ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்க மண்ணிற் குடியேறிய ஐரோப்பிய அமெரிக்கரோடு ஒப்பிடுகிறபோது வாழ்நிலை மெச்சத்தகுந்ததாக இல்லை. ஒரு மனித உயிரிக்குத் தரவேண்டிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு பலகாலம் துன்பத்தில் உழன்று, விரக்தியின் உச்சத்தில் புரட்சியில் குதித்தனர். அமெரிக்க வெள்ளை இனத்தவருக்குத் தாங்கள் எந்தவிதத்திலும் குறைந்தவரில்லை என்பதை நிரூபித்தாகவேண்டும் என்ற சூழலில் அவர்கள் கையிலெடுத்த ஆயுதம் இசை, தங்கள் உள்ளக் குமுறலைப் பறையடித்து தெரிவிக்க விரும்பியர்களைப்போல Drums அவர்களுக்குப் பயன்பட்டிருக்கிறது. ( ஆய்வு மாணவர்கள் கவனத்திகொள்ளவேண்டிய பொருள்) கையில் கிடைத்தவற்றையெல்லாம் (கரண்டி, தட்டு, எதையும் விடுவதில்லை) தட்டி ஓசையை எழுப்ப ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக பின்னாளில் ஜாஸ் இசை, இலக்கியம் எனத்தொட்டு அவர்களின் எதிர்ப்புக்குரலைப் பதிவு செய்தனர்:
“The black folks make the cotton
And the white folks get the money.”
என்றெல்லாம் எழுதி, தங்கள் ஆறாத் துயரை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் எஜமானர்களாக இருந்து இவர்களை துன்புறுத்தி வேலைவாங்கிய வெள்ளை துரைமார்களில் ஒன்றிரண்டு நல்ல துரைமார்களும் இருக்கவே செய்தனர். ஆனால் அவர்களால் இவர்களின் வலியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த முடியுமா? அதை பாதிக்கப்பட்ட கருப்பரின மக்களின் குரலாகக் எடுத்துக்கொள்ள முடியுமா? இசைக்கும் இலக்கியத்திற்கும் நேர்மையாக நடந்துகொண்டதாகப் பொருள்படுமா?ஆக, நண்பர் க. பஞ்சு கூறுவதுபோல தலித் இலக்கியத்தையும் ஒரு தலித் படைப்பதுதான் முறை, நியாயம். பேராசிரியர் கூறுகிற நம்பகத் தன்மைக்கும், இலக்கிய நேர்மைக்கும், அவை மட்டுமே உதவும்.
அ. வாசகர்கள்
தலித் ஆதரவாளர்கள் செய்யவேண்டியது தலித் இலக்கியத்திற்கு பக்கபலமாக நிற்பது. க.பஞ்சு தரும் யோசனை. வாசகர்களாக இருந்து, அப்படைப்புகளுக்கு முன்னுரிமைதருவது: “வாசகர் என்ற தளத்தில் தலித் ஆதரவாளர்கள் தலித் கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பினை தலித் எழுத்துக்களை விலைக்கு வாங்கி விற்பனைக்குப் பக்க பலமாக நிற்க முடியும்” என்கிறார்.
ஆ. திறனாய்வாளர்கள்
“தலித் இலக்கியத்தினை ஒரு தலித்தாகப் பிறந்தவர்தான் படைக்கவேண்டும் என்கிற கருத்தாக்கத்தைக் கட்டமைத்ததுபோல தலித் இலக்கியத்தை மற்றொரு தலித்தே திறனாய்வு செய்யவேண்டும் என்கிற கருத்தாக்கம் உருவாகவில்லை” – என க. பஞ்சு வருத்தப்படுவதில் முழுவதாக உடன்பாடில்லை. தலித் இலக்கியங்கள் ‘தலித்’ அடையாளம் என்கிற சிறப்பு அடையாளத்தைக் கொண்டிருந்தாதுலும், அவை தமிழ் இலக்கியத்தின் கிளைப் பிரிவை சேர்ந்தது. மாராத்திய தலித் இலக்கியமும், தமிழ்த் தலித் இலக்கியமும் வேறுபட்ட மொழியையும், வேறுபட்ட உரையாடலையும் நடத்த வாய்ப்பிருக்கிறது இதனையெல்லாம் உள்வாங்கிக்கொள்கிற திறனாய்வாளர் பொது நிலத்திலிருந்துதான் வரவேண்டும். தலித் திறனாய்வாளர் தலித் சார்பு நிலை எடுக்கும் ஆபத்துமுள்ளது. தலித் இலக்கியத்தின் குரல், தலித் மக்களுடைய குரலென்றாலும், தலித் அல்லாத பிறரிடத்திலும் போய்ச்சேரவேண்டும், அவர்கள் வலிகளை தலித் அல்லாத பிறர் உணர்வதுதான் அதன் உள்நோக்கமாக இருக்க முடியும். இந்நிலையில் அவ்வலியை பகிர்ந்துகொள்ள முடிந்த, இலக்கியம் அறிந்த, வாசிப்புத் திறன்கொண்ட நடுநிலை திறனாய்வாளர்கள் திறனாய்வு செய்வதில் எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாதென நினைக்கிறேன். முனைவர் க.பஞ்சுவே நல்ல உதராணம்.
இ. இதழ்கள் பதிப்பகங்கள்
இங்கே தமி¢ழ் ஊடகங்கள், சிற்றிதழ்கள் தலித் இலக்கியத்திற்குச் செய்துவரும் பங்களிப்புகளும், இவற்றைத் தவிர தலித் படைப்பாளிகளால் நடத்தப்படும் இதழ்கள் அளித்துவரும் பிரத்தியேகப் பங்களிப்புகளும் நினைவுகூரப்படுகின்றன. தலித் இலக்கியத்திற்கு ஆதரவாக இருந்துவரும் பதிப்பகங்களைப் பட்டியலிடும் க.பஞ்சு அவற்றை சந்தேகிக்கவும் செய்கிறார். “தலித் அரசியலும் தலித் இலக்கிய சொல்லாடலும் முதலிடத்தை நோக்கி நகர்கிற ஒரு காலகட்டத்தில், அவைகளை நுகர்வுபண்டமாக மாற்றிச் சந்தைச் சரக்காக விற்க முயல்கிற பதிப்பகத்தாரையும் வெகுஜன ஊடகத்தையும் தனியே அடையாளம் கானவேண்டும் என்றும் சொல்லத் தோன்றுகிறது” என்கிற பஞ்சுவின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் தலித் இலக்கியத்தின்மீது பதிப்பகங்கள் காட்டும் அக்கறைக்குக் காரணம் எதுவாயினும், அவர்கள் தரும் ஒத்துழப்பு தலித் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
2. தலித் இலக்கியமும் தலித் ஆதரவாளர்களும்
க.பஞ்சுவின் இக்கட்டுரை தலித் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் என்னென்ன சிக்கல்களைப் எதிர்கொள்கிறார்கள் என்பது பற்றி பேசுகிறது.

அ. ‘பிராமணர் அல்லாதவர்களும்’ – ‘தலித் அல்லாதவர்களும்’
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அறியவந்த ‘பிராமணர் அல்லாதவர்கள்’, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறியவந்த தலித் அல்லாவதர்கள்’ ஆகிய இரண்டு சொற்களையும் கொண்டு சில உண்மைகளை விளக்குகிறார்.’ « பிராமணர் அல்லாதவர்’ என்று கட்டும்போது அல்லாதார் நடுவில் பிராமணர்களுக்கு ஆதரவாளர்களாகச் சிலரும் உருவாயினர் என்பதைப்போல, ‘தலித் அல்லாதவர்’ என்ற மனப்பான்மை உயர்சாதியினர் நடுவில உருவாகும்போது ‘தலித் ஆதர்வாளர்கள்’ எனச் சிலரும் உருவாலியுள்ளனர். ஆனால் ‘பிராமணர் ஆதரவாளர்களாக’ இயங்குவதும் ‘தலித் ஆதரவாளர்களாக’ இயங்குவதும் ஒன்றல்ல என்பதை யாரும் எளிதாக புரிந்துகொள்ள முடியும் »” – என்கிற பேராசிரியரின் கூற்று முழுக்க முழுக்க உண்மை . இதனை அடிப்படையாகக்கொண்டு தலித் ஆதர்வாளர்கள் எதிர்கொள்கிற பிரச்சினைகளை வரிசைப்படுத்துகிறார்.
ஆ. தலித் ஆதரவாளர்கள் புறக்கனிக்கப்படுகின்றனர்
“பிராமண ஆதரவாளராக இயங்கும்போது சமூக அந்தஸ்தும் உயர்வும் கூடுவதற்குத் தமிழ்ச் சமூகத்தில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது; ஆனால் தலித் ஆதரவாளராக இயங்கும்போது தலித்துகளுக்கு ஏற்படுவதுபோலவே தாழ்வும் புறக்கனிப்பும் இழிவும் வந்து சேர்கின்றன” – என்கிறார்
பிராமண ஆதரவாளர்கள் ஒரு படிமேலே போய் பிராமணர்களே வியக்கும்வகையில் தங்களைப் பிராமணர்களாக கற்பிதம் செய்துகொண்டு வலம் வந்ததும் இங்கு நடந்துள்ளது. அதற்கு மாறாக தலித் ஆதராவாளர்கள், தாங்கள் தலித் அல்லவென்று அவ்வப்போது சமூகத்திற்கு நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் கூறுவதைப்போல தலித்துகளுக்கு ஏற்படும் தாழ்வும் புறக்கணிப்பும் தமக்கு நேர்ந்துவிடக்கூடாதென்கிற எச்சரிக்கை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
இ. தலித் ஆதராவளர்களிடத்தில் தலித் மக்கள் கொள்கிற சந்தேகம்.
‘தலித் ஆதரவாளர்கள்’ தங்களை முன் நிறுத்திக்கொள்ளாமல் தங்களைத் தாங்களே கண்கானித்துகொள்ளவேண்டியதிருக்கிறது, காரணம் தலித் ஆதரவாளர்களிடத்தில் தலித் மக்கள் முழுமையாக நம்பிக்கை கொள்வதில்லை. குறிப்பாக இலக்கிய தளத்தில் இத்தகைய சந்தேகப் பார்வைகள் தீவிரமாக வெளிப்படுகின்றன. இலக்கிய தளத்தில் இயல்பாகவே விளங்குகின்ற போட்டி, பொறாமை, தன்னை நிலைப்படுத்த முயலும் தந்திரம் எல்லாம் சேர்ந்து தலித் ஆதரவாளர்களாக இருப்பது பன்மடங்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது . இந்த நிலையில் “மேல் சாதி மேட்டிமைப்பார்வை உனக்குள்ளும் இறைந்து கிடக்கிறது” என்ற குற்ற சாட்டிற்கு உள்ளாவோம் என்ற நிலைக்கு தலித் ஆதரவாளர்கள் தள்ளப்படுகின்றனர்.” என்கிற பேராசியரின் கூற்றும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான்.
தலித்துகள் நம்மை ஏன் சந்தேகிக்கிறார்கள்?” எனத் தலித் ஆதரவாளர்கள் யோசிக்க வேண்டும்; “நம்மை ஆதரிக்கிறவர்களை ஏன் சதேகிக்கிறோம்?” என்ற கேள்வியைத் தலித்துகளும் தம்மிடம் கேட்டுக்கொள்ளவேண்டும்

.
தலித் ஆதராவளர் ஒரு சிலரின் திருதராட்டிர தழுவலை, தலித்துகள் புரிந்துகொண்டிருப்பது அவற்றில் ஒன்று. சூடுபட்ட பூனைகள் எல்லா பாலையும் சந்தேகிக்கவே செய்யும் என்பதுமனித இயல்பு. தவிர மனிதர் பண்பில் ‘ஆதரவாளர்’, ‘பாசக்காரர்’, ‘உடன் பிறவா’ சொற்களெல்லாம் பயணாளிக்கு இலாபத்தைத் தருமென்றால் கொண்டாடப்படுவதும், நட்டத்தைத் தருமென்றால் தூக்கி எறியப்படுவதும் இயற்கை. நம்வீட்டுக் குழந்தையைக் தூக்கலாம், கொஞ்சலாம், பரிசுகள் அளிக்கலாம். தவறிழைக்கிறபோது தண்டிக்கவும் செய்யலாம். ஆனால் அடுத்தவீட்டுக் குழந்தையென்றால் தூக்கவும் கொஞ்சவும் பரிசளிக்கவும் மட்டுமே உரிமையுண்டு. பத்து நாள் கொஞ்சியிருக்கின்றேனே, ஒரு நாள் கண்டித்தால் என்ன தப்பு என்று நினைத்தோமென்றால் முடிந்தது. இனி எங்கள் வீட்டிற்கு வராதே எங்கள் குழந்தையைத் தூக்காதே என்கிற கண்டிப்புக் குரலைக் கேட்க வாய்ப்புண்டு. தலித் படைப்பாளிகளும் தங்களுடைய எழுத்தைப் பாராட்டுகிற தலித் அல்லாதாரை வாழ்த்துவதும், அதே தலித் அல்லாதார் எதிர்மறையான கருத்துகளை வைக்கிறபொழுது அவர் நேர்மையைச் சந்தேகிக்கவும் செய்வதென்பது இயல்பு.
ஈ. தலித் ஆதரவாளரின் இருப்பு
« தலித் இலக்கியத்தைத் தலித்துதான் படைக்க முடியும் என்ற நிலையில் தலித் ஆதரவாளர் எழுத்தும் தலித் எழுத்தாக முடியாத நிலையில், அவருடைய இருப்பே வினாக்குறியாகிவிடுகிறது. இன்னிலையில் தலித் இலக்கியம் குறித்தே பேசிக்கொண்டிருந்தால், தன் எழுத்துக்குறித்து பேசுவதற்கான சூழலைஎப்படிக் கட்டமைப்பது » என்ற நெருக்கடி அவருக்கு ஏற்படுகின்றது. எனவே « சிந்தனைத் தளத்திலும் அரசியல் தளத்திலும் தலித் ஆதரவாளராக வெளிப்படுகிற படைப்பாளிகளில் சிலர், இலக்கிய தளத்தில் தலித் இலக்கியம் குறித்துப் பேசுவதைத் தவிர்க்கின்றனர் » எனப் முனைவர் க.பஞ்சு கூறுவதிலும் பொருளுண்டு. தலித் எழுத்தாளர்களே தங்கள் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள மந்திர தந்திர பிரயத்தனங்களில் பெரும் பொழுதைக் கழித்துக் கவனமாக இருக்கிறபோது, ஊருக்கு உழைத்து என்ன பலன் கண்டோம் என்ற கேள்வி ஆதராவாளருக்குத் தோன்ற தவறினாலும், அவர் நலனின் அக்கறைகொண்ட நான்குபேர் நினைவூட்டவே செய்வார்கள். « தலித் இலக்கியம் தோன்றிய அளவிற்குத் தலித் இலக்கியம் குறித்த எழுத்துகள் பெரிதும் தோன்றவில்லை » என்கிற க.பஞ்சுவின் ஆதங்கத்தை துறைசார்ந்த மக்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்.

உ. தலித் இலக்கியங்கள் இரக்கத்தை எதிர்பார்க்கின்றனவா?
“பொதுவாக எல்லா இலக்கியத்திற்குள்ளும் உள்ளோடும் ரத்தத் துடிப்பாக நின்று இயங்கிக்கொண்டிருப்பது “இரக்க உணர்வை- கருணை மனோபாவத்தை” உற்பத்தி செய்கிற முயற்சிதான், தலித் இலக்கியத்திற்கும் இந்த இரக்க உணர்வை உற்பத்தி செய்வதுதான் அடிப்படையாக அமைந்துள்ளது; தலித் கவிதைகளிலாவது ஒரு வகையான முழக்கமிக்க அர்சியல் கவிதைகளைக் கானமுடிகிறது. புனைகதைகளில் இந்த இரக்க உணர்வு உற்பத்திதான் பிரதானமான ஒன்றாகச் செயல்படுகிறது. அதனாலேயே கூடத் தலித் புனைகதைகள் பலவும் எல்லா மொழியிலும் சுயசரிதை இலக்கியமாகவே வெளிப்பட்டு பலருக்கும் வாசிப்புப் பொருளாக விளங்குகின்றன, எனக் கருத வாய்ப்பிருக்கிறது” – என்ற பஞ்சுவின் கருத்திற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. “தலித் இயக்கமும், தலித் இலக்கியமும் பாரதம் தழுவியதாக உலகம் தழுவியதாக பரந்து விரிந்த தளத்திற்கு நகர்ந்திருக்கின்றன” என்கிற பஞ்சாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொண்டாலும், பஞ்சு தெரிவிக்கிற உலகத்தில் ( நமக்கு உலகம் எனப்படுவது இன்றுவரை மேற்குலகும், வட அமெரிக்காவுமாக இருப்பதன் அடிப்படையில்) தலித்துகளின் குரலாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக பார்க்கப்படுகிறதே அன்றி இலக்கியமாக பார்க்கப்படுவதில்லை, என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு எமே செசேரோ (Aimé Césaire,) லெயோ போல்ட் செதார் சங்கோர்( Léopold Sédar Senghor) ஈடான கவிஞர்களைத் தலித் இலக்கியம் தரவில்லை அல்லது அவ்வாறான கவிஞர்கள் இருந்தும் அவர்களை முன் நிறுத்த தமிழ்ச்சூழல் மட்டுமல்ல இந்தியாவேகூட தவறிவிட்டதோ என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
தொடர்ந்து க.பஞ்சு வெகுசனப்பரப்பில் தலித் இலக்கிய வாசகர்கள் குறைவு என்றும், கல்லூரிகளிலும் தலித் படைப்புகளிடத்தில் தலித் அல்லாத மாணவர்கள் காட்டும் அக்கறை குறைவென்றும் வருத்தப்படுகிறார். தொடர்ந்து தலித் அல்லாத பேராசியர்களிடத்திலே கூட இத்தகைய மனநிலை இருக்கிறதென்று அவர் குமுறுவது கவலை அளிக்கிற ஒன்றுதான். அதுபோலவே இடது சாரி இயங்கங்கள், தமிழ் தேசிய இயக்கங்கள், பெண்ணிய அமைப்புகள் ஆகியவை தலித் இயக்கத்தையும் தலித் இலக்கியத்தையும் தங்கள் செயல்திட்டத்தில் ஒருபகுதியாகப் பார்ப்பதும் பேரசிரியரைச் சங்கடப்படுத்துகிறது.

3. இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே!
புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காரக்காலில் பேரசிரியர் நிகழ்த்திய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் இப்பகுதி. தொன்றுதொட்டு தமிழர் சமூகத்தில் தலித் மக்களின் நிலமை என்ன? சமயசீர்திருத்தவாதிகள் தலித்துகளை ஆதரித்ததில் உள் நோக்கம் இருக்க முடியுமா? ஆட்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் தலித் மக்களின் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்களைக் கொண்டுவந்ததா? கடந்த காலத்தில் தலித மக்களின் முன்னேற்றத்திற்கென உழைத்த தலித்தின தலைவர்கள் யார் யார்? அவர்களின் எழுச்சி இடையில் தொய்வு அடைய எதுகாரணம் ? என்றெல்லாம் பேசிவிட்டு இன்றைய தலித் இலக்கியம் குறித்து ஓர் விரிவான விளக்கத்தைத் தருகிறார். கவிஞர்கள், புனைகதை ஆசிரியர்கள், திறனாய்வாளார்கலென தலித் படைப்பிலக்கியவாதிகளின் பட்டியலையும்; தலித் மக்களைப் பொருளாகக்கொண்டு எழுதுகிற தலித் அல்லாத எழுத்தாளர்களைப் பற்றிய பட்டியலையும் க.பஞ்சு தருகிறார். இன்றைய தலித் எழுத்துக்களில் காணப்படும் பண்புகளென்று சிலவற்றைக் குறிப்பிடவும் அவர் தவறுவதில்லை: அ. “புனித உடைப்புக்களை, அதன் மூலம் வெளிப்படும் ‘அதிர்ச்சிகளை’ உற்பத்தி செய்வதைத் தனது எழுத்துப்பாணியாக கொள்ள முயலுகிறது”. ஆ. தலித் மக்களின் வாழ்க்கையை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டு அடையாளங்களைத் தங்கள் எழுத்தில் பதிவு செய்வதன் மூலம் மனித நாகரீக வளர்ச்சிக்குத் தாங்கள் ஆற்றியிருக்கும் பங்களிப்பினை உரத்து கூவுதல். இ. தலித்து இலக்கியம் உயிரோட்டமுள்ள பேச்சுமொழியை அதனுடைய எல்லாவிதமான கூறுகளோடும் பயன்படுத்த முயலுகிறது. ஆகியவை அவை.
எனினும் « கொடியன் குளம் நிகழ்வு, பொருநையாற்றில் அடித்து தூக்கி எறியப்பட்ட நிகழ்வு, இவையும் பல சாதிக் கலவரங்களும் கள ஆய்வு செய்யப்பட்டுக் கட்டுரைகளாக , தகவல் படங்களாக வெளிவருகின்றன. ஆனால் ஒரு கவிதையாக, ஒரு நாவலாக, ஒரு சிறுகதையாக ஏன் எழுதப்படவில்லை? » என்ற பேராசிரியரின் கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் காணவேண்டும்.

இறுதியாக நண்பர் பஞ்சுவின் கட்டுரையை முன்வைத்து:

அ. ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள்
முதலாவதாக இன்றையத் தமிழ் சமூகத்தில் பெருவாரியான மக்கள் தலித் ஆதரவாளர்களாக இல்லாமலிருக்கலாம், ஆனால் தலித்தியத்திற்கு உண்மையில் -சுயத்தில் – எதிரானவர்களும் அல்ல. தினசரிவாழ்க்கையே போராட்டமாக இருக்கிறபோது, அவர்களுக்கு இதுபோன்ற அரசியல் வீணற்றவேலை. ஆனால் தன் இருத்தலை சமூகத்தில் முன் நிறுத்துகிறபோது, அச்சமூகத்தின் தராசு தன்னை எப்படி எடைபோடுமென்கிற கேள்வி எழுகிறது. இதில் படித்தவர்களேகூட ‘பரம்பரைபரம்பரையாக’, ‘தொன்றுதொட்டு’, ‘முன்னோர்கள்’ ஏற்படுத்திய அறமென்று சாதி அரசியலை நம்புவதோடு, தங்களைச் சுற்றியுள்ள நாலுபேர் என்ற இருட்டைக் கண்டு அஞ்சுகிற இந்திய சமூகத்தில், பாமரர்களைப்பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த நாலுபேர் பற்றிய அச்சம் தலித் அல்லாத மக்களிடம் மட்டுமில்லை, தலித்துகளிடமும் இருக்கிறது. இக் கற்பிதம் செய்யப்பட்ட அச்சத்தை தங்களுக்குச் சாதகமாகத் திசைதிருப்பி, அதன் பலனை அறுவடை செய்ய, பலவீனமானவர்களைத் தேர்வு செய்து அவர்களை மீட்கவந்த இரட்சகர்களாக சிலர் தங்களை முன் நிறுத்துகிறபோது, ‘நாலுபேர் இருட்டை’க்கண்டு அஞ்சும் மனோபாவம் உடைய மனிதர்கள் வழித்துணைக்கு ஆள் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்வார்கள். தலித்தியத்திற்கு எதிராகக் களத்தில் இறங்குவது இப்படித்தான் தொடங்குகிறது. இன்று தலித்தியத்திற்கு அதிகம் எதிரிகளாக இருக்கிறவர்கள் ‘பிராமணர் அல்லாதவர்கள்தான்’, பிராமணர் அல்லாத பிற சாதியினர்தான் அதாவது கிராமங்களைப் பொறுத்தவரை அல்லது முகங்கள் அதிகம் தெரிந்தவையாக உள்ள இடங்களில்.
அவ்வாறே தலித் மக்கள் ஆதரவாளர்களெனக் கூறிக்கொண்டு அடிமடியில் கை வைக்கிற ‘அனுகூல சத்ரு’க்கள் பற்றிய எச்சரிக்கையாகவும் க.பஞ்சுவின் கட்டுரைகளை எடுத்துக்கொள்ளலாம். அரசியல் கட்சிகளில், தலித்திய ஆதரவில் இடதுசாரிகளின் நேர்மையை எவ்வாறு சந்தேகிக்க முடியாதோ அவ்வாறே இலக்கியவாதிகளில் க.பஞ்சு அ.மார்க்ஸ் போன்றவர்களைச் சந்தேகிக்கமுடியாமலிருக்கலாம், ஆனால் தலித் ஆதரவாளரென நேசக்கரம் நீட்டுகிற எல்லா கைகளும் சூதற்றவை அல்ல.
ஆ. தலித் தலைவர்களும் தலித் எழுத்தாளர்களும்
க.பஞ்சுவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பல தலித் அறிவுஜீவிகளைப் பட்டியலிட்டு, பின்னாளில் அதுபோன்ற முயற்சிகள் தொய்வடைந்துபோனதற்கு என்ன காரணமென ஓரிடத்தில் கேட்டிருக்கிறார். அதுபோலவே காரைக்காலில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் தலித்மக்கள் சாதிக்கட்சிக் காண்பதில் தவறில்லை என்ற கருத்தையும் வைத்திருக்கிறார். கட்சி அரசியலில் நியாயங்கள் இருப்பதாகவே வைத்துக்கொண்டாலும், அது தலைவர்களை அடையாளப்படுத்த மட்டுமே உதவியிருக்கிறது. சமூகத்திற்கு அவர்கள் சாதித்ததென்ன என்ற கேள்வி எழுகிறது. தலிதியசாதிக் கட்சிக்குள்ள நியாயத்தை தலித் அல்லாத அறிவு ஜீவிகள் புரிந்துகொள்ளலாம், ஆனால் படிக்காத பிற சாதியிலுள்ள பாமரமக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் அதன் விளைவுகள் என்ன? என்பது பற்றியெல்லாம் யோசிக்கவேண்டும். பஞ்சுவைப்போன்ற நடுநிலை மனிதர்கள்தான் இது குறித்தும் ஆழமாக விவாதிக்கவேண்டும்.தலித் மக்களின் விடுதலைக்கு, கட்சி அரசியலைக்காட்டிலும் சமூக அரசியல்தான் நம்பகமானது. அரசியல் கட்சிவைத்து திராவிடக் கட்சிகள சாதித்ததைகாட்டிலும்(?) பெரியார் என்ற தனிமனிதர் சமூகத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வு அதிகம். அயோத்திதாசர் போன்றவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, நிரப்ப தலித் அறிவு ஜீவிகளில் எவரும் முன்வராதது இங்க்கு பெருங்குறை, அவ்வாறு வந்திருந்தால் இன்று தலித்துகள் கூடுதலாகப் பலனடைந்திருப்பார்கள்.
தலித் கட்சித் தலைவர்க்கு ஏற்படும் நெருக்கடி தலித் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. தலித் அல்லாத வசிஷ்ட்டர்களின் ஆசீர்வாதத்திற்கு அவர்கள் காத்திருப்பது ஒரு பக்கமெனில் ; தலித் அல்லாதவர்களின் இதழ்களால், தலித் அல்லாத பிற ஜாம்பவான்களால் அரவணைக்கப்படாதத் தலித் எழுத்துகள், அடையாளம் பெறாமற்போகிற ஆபத்தும் இங்கிருக்கிறது. மேற்குலகில் கறுப்பரினத்தைச் சேர்ந்த தீவிர இலக்கிய வாதிகள் Négritude’ என்ற சொல்லாடல் கொண்டு நிகழ்த்திய ‘இலக்கிய அரசியலை’ தலித் இலக்கியவாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்; அதன் வீச்சும் வேகமும் தலித் இலக்கியத்துடன் கலக்கவேண்டும்; தலித் எழுத்தென்பது ஒடுக்கப்பட்டவர்களின் பரிதாபக் குரலாக இல்லாமல், கலகக் குரலாய் ஒலிக்கவேண்டும். பேராசிரியர் க.பஞ்சு போன்றவர்களின் கனவை நானவாக்குவதற்கு அதொன்றுதான் வழி.

——————————————————————
1. நவீன இலக்கியக் கோட்பாடுகள் (காவ்யா வெளியீடு) கட்டுரைத் தொகுப்பிலிருந்து
2. N’est pas de sauveurs suprêmes
Ni Dieu, ni César, ni tribun ;
Producteurs, sauvons-nous nous-mêmes !

——————————————-

மூத்த இலக்கியவாதி திறனாய்வாளர் விமர்சனங்கள்-6: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் குறித்து நா.முருகேசபாண்டியன்

சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை
ந. முருகேசபாண்டியன்

Naa.mu
பூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பதிவுகள் வரலாறாக உருமாறுகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்த எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ,செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது.செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டிடத் தொகுதி மட்டுமல்ல.அந்தக் கோட்டை யார் வசம் இருகின்றதோ அவரது கையில் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டை முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் கொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது.

வரலாற்றைப் புனைவாக்கும்போது பல்வேறு வரலாறுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபட்ட சாத்தியங்களை முன்வைத்துச் சொல்லப்படும் நிகழ்வுகள் வாசிப்பில் சுவராசியத்தைத் தருகின்றன. ஹரிணி என்ற இளம்பெண் பிரான்சிலிருந்து புதுச்சேரி வந்து, செஞ்சிக் கோட்டை பற்றிய தகவல்களைத் தேடிப் போகின்றாள். பெரியவர் சடகோபன்பிள்ளையிடமிருந்து செஞ்சி பற்றிய வெளியிடப்படாதகிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி கிடைக்கின்றது.அவளது தேடல் துரிதமாகின்றது.மரணக் கிணறு, தங்கப் புதையல், பழி வாங்கக் காத்திருக்கும் முண்டக்கண்ணி அம்மன் என மர்மங்களால் நிறைந்த செஞ்சிக் கோட்டை கவர்ச்சிமிக்கதாகின்றது.
தமிழில் வரலாற்றுப் புனைவு எனில் அழகிய ராஜகுமாரிகள், வீரமான ராஜகுமாரர்கள். அரண்மனைகள், சதியாலோசனைகள் என நீள்வது வழக்கம். நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் வழியே சித்திரிக்கும் செஞ்சியின் கதை மாறுபட்டுள்ளது. படைபலத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம் எப்படியெல்லாம் மனித உடல்களை வேட்டையாடியது என்பது நம்பகத்தன்மையுடன் புனை வாக் கப்பட்டுள்ளது. அதிலும் மதத்தின் பின்புலத்தில் இயங்கும் அரசின் கொடுங்கரம் எல்லாத் திசைகளிலும் நீள்கின்றது. எல்லா மதங்களும் மரணத்தை முன்வைத்துப் பாவ புண்ணியம், நரகம், சொர்க்கம் பற்றிய பயமுறுத்தல்களுடன் அரசதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு உடல்களை வதைத்தலும், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தலும் செய்துள்ளன.
கி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரம் சிதம்பரம் வரை நீள்கிறது.சிதம்பரம் நகரிலுள்ள சிவனின் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமைத் தீட்சிதரான சபேச தீட்சிதர் சகலவிதமான செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார். பேரழகியான சித்ராங்கி தாசியுடன் உறவு எனச் சௌகரியமாக இருகின்றவரின் வாழ்க்கையில் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவிலில் பெருமாள் கோவிலை மறு நிர்மாணம் செய்வதற்காக வர இருக்கிறார் என்ற தகவல் துயரத்தைத் தருகிறது. தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து மன்னரிடம் விண்ணப்பித்துப் பெருமாள் கோவில் கட்டுவதைத் தடுக்க முயல்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தபோது, இருபது தீட்சிதர்கள் ஒவ்வொருவராகக் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே, அன்றைய காலகட்டத்தில் நிலவிய முரண்கள் அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. இயேசு சபை பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் புனைந்துள்ளவை, வாசிப்பில் பதற்றத்தைத் தருகின்றன. நேரில் பார்த்தது போன்ற விவரிப்பு முக்கியமானது.
கடந்த காலம், நிகழ்காலம் எனப் பயணித்த நாவல், இறுதி யில் கி.பி. 2050ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கிறது. ஹரிணியின் மகளான பவானி பிரான்சிலிருந்து செஞ்சிக்கு வருகிறார். அங்கு ஹரிணிக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவங்களுக்குப் பின்னர் மறைந்துள்ள சதிகள் அம்பலமாகின்றன. கிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி அடுப்பில் எரிந்து சாம் பலாகிறது. கோட்டை ஏற்படுத்தும் மர்மம் போலவே செஞ்சிக்கு வந்த ஹரிணிக்கும் ஏற்பட்டது விநோதம்தான்
பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்.
ந. முருகேசபாண்டியன்- murugesapandian2011@gmail.com
நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் – February 15, 20014

‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்

panchuஎதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும் இலக்கியமும் அதன் பிறப்பு தொட்டு ‘புரியவில்லை’ என்ற சொல்லை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றுள் திறனாய்வாளர்கள், கலை விமர்சகர்கள் அபூர்வாமானது, மெய் சிலிர்க்கவைப்பது, பிரம்மிக்க வைப்பது என புளகாங்கிதமடைகிற படைப்புகள் கூட இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின என்பதும் உண்மை.

இரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் தமது புதிய நாவலொன்றை அனுப்பி எனது கருத்தைக் கேட்டிருந்தார். அதனை விமர்சனமாக எழுதினால் இதழொன்றில் பிரசுரிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்நண்பர் அண்மையில் வெளிவந்திருந்த எனது புதிய நாவல்குறித்த ஒரு மதிப்புரையை இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பியிருந்தார், நாவலைப்பற்றிய உயர்வானக் கருத்தை அதிற் பதிவு செய்திருந்தார். பதிலுக்கு அவர் நாவல் குறித்து அதே பார்வையுடன் உயர்வாக எழுதவேண்டும் என்பது தமிழ்ப் புனைகதை உலகின் எழுதப்படாத விதி. நண்பரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, அவருடைய நாவல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை அனுப்பிவைத்தேன். இதில் ஓர் உண்மைப் பொதிந்துள்ளது. நண்பரின் என்னுடைய நூலைப்பற்றிய நேர் மறையான விமர்சனத்தை எப்படி ஒட்டுமொத்த வாசகர்களின் ஏகோபித்த கருத்தாகக் கொள்ள முடியாதோ அதுபோலவே நண்பரின் நூலைப்பற்றிய என்னுடைய எதிர்மறையான கருத்தையும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. மனிதர்க்கு மனிதர் அவரவர் வாசிப்பு திறன்சார்ந்து எடுக்கின்ற முடிவு தனித்தன்மைக் கொண்டதாக இருக்கக்கூடும். இங்கே நூலை வாசிக்காமலேயே இகழும் கூட்டத்தையோ, வேண்டியவர் எழுதினார் எனவே நன்றாக இருக்கிறது என எழுதும் கூட்டத்தையோ கணக்கிற்கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும் பிறரின் அபிப்ராயத்தைக்கொண்டு ஒரு நூலைப் பற்றிய எவ்வித முன் முடிவுகளையும் எடுப்பது சரியல்ல. கலையும் சரி இலக்கியமும் சரி வெறும் அறிவுசார் வெளிப்பாடுகளோ முடிவுகளோ அல்ல, அவை புலன்களோடும் கலந்தவை. ஓர் பாடல் ஒருவருக்கு இனிமையாகவும் மற்றவருக்கு பெரும் ஓசையாகவும், ஒரு நடிகன் ஒருவரால் விரும்பப்படவும், பிறரால் தூற்றப்படவும், ஒரு பண்டம் ஒரு நாவிற்குச் சுவையாகவும் பிறிதொன்றிர்க்கு வேண்டாததாகவும் இருப்பதைப்போலவே கலையும் இலக்கியமும் இரண்டுபேரில் ஒருவருக்கு ஏற்கக்கூடியதாகவும் மற்றவர் நிராகரிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். பொதுவில் புலன்சார்ந்த விருப்பு வெறுப்புகள் அனைத்துமே, ஒரு மனிதனைக் கட்டமைக்கிற இயற்கை மற்றும் சமூகக் கூறுகள் தீர்மானிப்பவை. எனவேதான் ஒரு ஓவியத்தையோ, சிற்பத்தையோ, கவிதையையோ, கதையையோ விமர்சிப்பதாகக் கூறி முன்வைக்கப்படும் ‘புரியவில்லை’ என்ற பதத்தையும் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.

பஞ்சுவைக் காட்டிலும் வேறொருவர் இச்சொல்லை இத்தனை நுணுக்கமாக ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கமுடியாது. தீர்ப்பினை முடிவுசெய்தபிறகு குற்றவாளியை விசாரணக்கு உட்படுத்துகிற ராணுவ அல்லது புரட்சி நீதிமன்ற நடைமுறைகள் அவர் இயல்புக்கு மாறானவை என்பதை அறிவோம். இக்கட்டுரையிலும் அந்நேர்மைக் காப்பற்றப்பட்டுள்ளது. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நியாங்களும் அவற்றுக்குரிய வாதங்களும் ‘புரியவில்லை’ யின் பொருட்டு தெள்ளத்தெளிவாக மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகின்றன.

‘கலைஞன்-படைப்பு-சுவைஞன்

“ஒரு இலக்கியத்தை- ஓவியத்தை – அனுபவிப்பதற்கு முழுதும் புரியவேண்டும் என்பது அவசியமில்லை என்று டி.எஸ் எலியட்டின் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாமா” என்று கட்டுரையின் தொடக்கத்தில் அச்சுறுத்துவதுபோல ஒரு கேள்வியை ஆசிரியர் எழுப்பினாலும், அவர் அப்படிச்செய்யக்கூடியவரல்லர் என்பதும் நாம் அறிந்ததுதான். தொடர்ந்து ‘புரியவில்லை’ என்பவர்களுக்கு ஜெயகாந்தன் அளித்த பதிலென்று கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரிகள் சுவாரஸ்யமானவை: « நீங்கள் படிப்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல; வேறு யாருக்கோ எழுதப்பட்டது என்பதுமா உங்களுக்குப் புரியவில்லை? புரியவில்லையென்றால் பேசாமல் விட்டுவிடுங்களேன் ». இப்பதிலில் இருக்கிற நியாயத்தின் விழுக்காடுகள்பற்றி கேள்வி எழினும், ஜெயகாந்தன் குரலில் அதனைக் கற்பனை செய்துபார்க்கிறபோது நமக்கு பேதி காண்கிறது. ஜெயகாந்தனிடம் கேள்வியை வைத்த நபர் நொந்துபோயிருப்பார் என்பது நிச்சயம். டி. எஸ் எலியட் கூறியதைத்தான் ஜெயகாந்தன் அவருடைய பாணியில் தெரிவித்திருக்கிறார்.

« ‘கலைஞன்-படைப்பு-சுவைஞன்’ இந்த மூவரும் ஒரே ரத்த ஓட்ட மண்டலத்தில் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதால் ஒன்றில் குறை ஏற்பட்டாலும் கலையிலும், கலை அனுபவத்திலும் குறை ஏற்படத்தான் செய்கிறதென்றும், பார்வையாளனை நினைவில் வைத்துப் படைக்கப்படும் படைப்பு எவ்வாறு தோல்வி காணுமோ, அவ்வாறே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கப்படும் படைப்பும் தோல்வி காணத்தான் செய்யும் » என்கிற பேராசிரியரின் கருத்தின் பிற்பகுதியை முழுமையாக ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கம்.

உண்மையில் சந்தை உலகில் நுகர்வோனுடைய ரசனைக்கேற்ப அல்லது அப்படி நம்பவைத்து கலையை, இலக்கியத்தை விற்கத்தெரிந்தவர்களின் சரக்குகள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவர்களுக்குத் தோல்வி அரிதாகத்தான் ஏற்படும். அதுபோலவே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கும் படைப்பும் தோல்வியைக் காணும் என்பதிலும் எனக்கு முழுமையாக உடன்பாடில்லை. பொதுவாக நல்ல இலக்கியங்கள் வாசகனை வாசலில் நிறுத்திக்கொண்டு கைகுலுக்க எழுந்து வருவதில்லை, மாறாக அது வீதிக்கு வந்ததும் எதிர்ப்படும் முகங்கள் தெரிந்த முகங்களாக இருந்தால் கை குலுக்குகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் நல்ல படைப்புகளாக இருந்தாலுங்கூட அரசியல்வாதி நடைபயணம்மேற்கொள்கிறபோது ஆட்களைத் திரட்டுவதுபோல வாசகர்களைத் திரட்டும் சாமர்த்தியம் இருப்பின் அவர்தான் இலக்கியசந்தையில் ‘பெஸ்ட் ஸெல்லெர்’. ஆக இங்கு ‘புரியவில்லை’ என்ற பிரச்சினைகள் எழவாய்ப்பே இல்லை. இங்கு படித்து புரியவில்லை என்பவர்களை காட்டிலும், படிக்காமலேயே ‘புரிகிறது’ என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள் (இதற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் தேடிக்கொண்டிருப்பது வீணற்ற வேலை). ஆகையால் ஆக இதுபோன்ற வாசகர்களை வலைவீசிப்பிடிக்கும் சாதுர்யம்கொண்ட எழுத்தாளர்கள் வாசகர்களை அறவே மறந்துவிட்டும் எழுதலாம்.

‘புரியவில்லை’ யார் காரணம்?

‘புரியவில்லை’ பிரச்சினை எதனால் எழுகிறது, யார் காரணம் வாசகனா? படைப்பாளியா? என்று கேள்விக்கு இருவிதமான ‘புரியவில்லை’களைத் தெரிவித்து, இரண்டுபேரையுமே குற்றவாளிகள் என்கிறார் ஆசிரியர். முதலாவது ‘புரியவில்லை’ படைப்பாளிகளால் உருவாவது: « புதியபாதை போடுகிற – சோதனை முயற்சியில் இறங்குகிற- கலை படைப்புகளை ஒட்டி » – என்கிறார் பஞ்சு. அடுத்தது வாசகர்களிடமிருந்து உருவாவது: « ஐன்ஸ்டீன் ‘சார்பு நிலைக் கொள்கை’ புரியவில்லை என்றால் அதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு, அந்தத் துறையில் தனக்குக் கல்வி அறிவு போதாது என்று சரியான முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் ஓர் ஓவியமோ, ஒரு கவிதையோ புரியவில்லையென்றால், இது ஒரு மோசமான ஓவியம் (அ) கவிதை என்று உடனே மதிப்பிட்டு முடிவு கூறிவிடுகிறார்கள் » (பெட்ராண்ட் ரஸ்ஸல் கூறியதாகக் கூறப்படுகிறதென்று – ஆசிரியர் தெரிவிக்கிறார்). முதலாவதாகச் சொல்லப்பட்ட « முயற்சியில் இறங்குகிற கலைஞன், அர்ப்பணிப்புத் தன்மையோடு செயல்படும்போது, படைப்போடு தன் பணியைச் சுருக்கிக்கொள்ளாமல், தன் பாதையை மற்றவர்களுக்கும் பழக்கப்படுத்தவேண்டிய நெருக்கடியான கடமையையும் மேற்கொள்கிறான். தன் பாதையை ஓர் இயக்கமாக்குகிறான். அவன் ஒரு சமூக இயக்கத்தோடு இணையும்போது அவன் கடமை எளிதாகிவிடுகிறது. அவன் படைப்புத் தன்மை மரபாகி விடுகிறது »- என்கிறார்.

எப்போது புதிய முயற்சி மரபாகிறது என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு சமூகத்தில் ஒருவரோ சிலரோ கூடி அறிமுகப்படுத்தும் சடங்கு தம்மில் பெரும்பான்மையோரின் நன்மைக்கு உதவும் என நம்பிக்கையை விதைக்க முடிந்தால் அச்சடங்கு மரபாகிறது. மேற்குலகில் கலையில் இலக்கியத்தில் மேற்கொண்ட பல சோதனை முயற்சிகள் பின்னாளில் ஆதரவற்றுபோனதற்கு பெரும்பாலான இலக்கியவாதிகளின் நம்பிக்கையை அச்சோதனை முயற்சிகள் பெறாததே காரணம். மாறாக ரஸ்ஸல் கூற்றென்று சொல்லப்பட்டதை ஆசிரியர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. « புரியாததற்கு கலைஞன் பொறுப்பில்லை; வாசகனின் கலை அறிவு போதாமையே என்று ஒரே அடியாகச் சொல்லிவிடலாமா? « எனக்கேட்கிறார். பேராசிரியர் கூறுவதைப்போல ஐன்ஸ்டீனுடைய ‘சார்பு நிலைக்கொள்கை’ யைப் பொருளாதாரம் படிக்கும் மாணவன் தனக்குப் “புரியவில்லை” எனக்கூறினால், உனக்குப் புரியாது அதற்குரிய கல்வி உனக்கில்லை எனக்கூறிவிடலாம், ஆனால் பௌதிகம் படிக்கும் மாணவன் புரியவில்லையென்றால் அவனுக்குப் புரியும்படி அவனுடைய பேராசிரியர் போதிக்கவில்லை என்றுதானே பொருள்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக இலக்கியத்துடன் பரிச்சயம் உள்ள, ஆழமான வாசிப்பு உள்ளவர்கள் நேர்மையாக புரியவில்லைஎன்று சொல்கிறபோது அவர்களின் கருத்தை படைத்தவர் கவனத்திற்கொள்ளவேண்டுமே தவிர, பஞ்சு கூறுவதைப்போல வாசகனின் கலை அறிவு போதாமையைச் சாக்காகச் சொல்லி, படைப்பாளி நழுவ முடியாது.

கலை மக்களுக்காக?

வேறொரு கேள்வியையும் கட்டுரை ஆசிரியர்வைக்கிறார்: “ஓரளவு கலைகளோடு பர்ச்சயம் உள்ளவர்களுக்கே ‘புரியவில்லை’ என்ற நிலை ஏற்படும்போது, பொது மக்களின் நிலை என்ன? எந்த மக்களின் நலனுக்காகப் படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதோ, அந்த மக்களுக்கு இது புரியுமா? ” எனக் கேட்கிறார். இதுவும் நியாயமான கேள்விதான். எல்லா மக்களுக்கும் படைப்பு போய்ச்சேரவேண்டியதுதான். ஆனால் இதில் சில ஐயங்கள் எழுகின்றன. எல்லோரும் சாப்பிடவேண்டும் என்று இலைபோடுகிறோம். பசி இருக்கிறவன், உட்காருகிறான், சாப்பிடுகிறான். உட்காரமாட்டேன், சாப்பிடமாட்டேன் என்பவனை என்னசெய்வது. நாம் இலைபோடமுடியும், உணவை பரிமாறமுடியும், உண்பதற்கு வாசகன்தான் முயற்சிகள் எடுக்கவேண்டும். ஆக இந்த ‘புரியவில்லை’ பிரச்சினையை எழுத்தாளர் -வாசகர் இருவருமே புரிந்துகொண்டு இறங்கிவரவேண்டும், இப்புரிதல் இருவருக்குமே உதவும்.
‘புரியவில்லை’ – தீர்வுகள்

புரியவில்லை என்ற பிரச்சினைக்கு பேராசிரியர் சில தீர்வுகளையும் முன்மொழிகிறார். அவற்றுள் ஒன்று புரியவில்லைக்கு எதிர்சொல்லான புரிதலைத் தனிப்பட்ட ரசனையோடு பொருத்திப் பார்க்காமல் செயல்பாட்டுடன் சம்பந்தப்படுத்திப்பார்த்தல். « பாரதியின் பாடல்களைப் படித்துவிட்டு சுரண்டும் அமைப்பிற்கு சேவகம் செய்த-செய்கிற- பழம்பெரும் படிப்பாளிகளைவிட தெருவில் ‘அச்சம் இல்லை அச்சம் இல்லை!’ என்று பாடிக்கொண்டுபோன பாமரர்கள்தாம் பாரதியைச் சரியாக புரிந்துகொண்டார்கள் »- என்று கூறுகிறபோது, நாம் வாயடைத்துபோகிறோம். பஞ்சு கூறுவதைப் போலவே ரூஸ்ஸோவின் ‘சமூக ஒப்பந்தம்’ நூல் பெருமை பெற்றது அதனைப் புரிந்துகொண்டவர்களால் அல்ல, அதனைப் புரட்சியாகச் செயல்படுத்தியவர்களால் என்ற உண்மை பேராசியரின் கருத்திற்கு வலு சேர்க்கிறது. இரண்டாவது தீர்வாக பஞ்சு முன் வைப்பது. ‘பயிற்சி’: « தர்க்கமற்ற மிகவும் சிக்கலான ஒரு மொழி அமைப்பை குழந்தையொன்று பயிற்சியில் தன்மயமாக்கிக் கொள்வது போல, படைப்பைப் புரிந்துகொள்வதிலும் இந்தப் பயிற்சிக்குப் பங்குண்டு. இலக்கியம் படைப்பது பழக்கமாகிப்போவதுபோல, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதும் பழக்கமாகிப் போய்விடவேண்டும »-என்கிறார். தவிர ‘புரியவில்லை’ என்பதைத் தவிர்க்க ‘முயற்சி’யும் இன்றையமையாதது எனக்கூறி புரிந்துகொள்வதில்லுள்ள ஐந்து தளங்களைக் குறிப்பிட்டுள்ளார் 1. ஒரே பார்வையில் உடனடியாகப் புரிந்துகொள்வது. 2. தன் அனுபவ அடிப்படையில் புரிந்து கொள்வது. 3. தன் கொள்கை அடிப்படையில் புரிந்துகொள்வது 3. கலா பூர்வமாய் புரிந்துகொள்வது 5. நாம் அறியாமலேயே நமக்குள் வாய்க்கும் மரபு அடிப்படையில் புரிந்துகொள்வது. புரிதல் அனைந்துமே இவற்றில் ஏதாவதொன்றின் உதவியுடன் நடப்பதென்பது ஆசிரியரின் கருத்து.

இறுதியாக இலக்கியத்தைப் புரிதல் என்பது மொழியைப் புரிதல் மட்டுமல்ல, மனிதன் தன்னை, தனது சமூகத்தை, தன்கால சமூக இயக்கங்களின் சாரத்தை, தன் பிழைப்பை, இசை ஓவியம் முதலிய பிறகலைகளைத், துறைகளைப் புரிதல் என முத்தாய்ப்பாக ஆசிரியர் தரும் விளக்கம் கோடி பெறும்.

நன்றி.  திண்ணை
——————————————–