ஒரு மொழி பெயர்ப்பு சிக்கல்

_l-ecrivain-chinois-feng-tang-

புது தில்லியில் அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அண்டை வீட்டுக்காரரான சீனாவை இந்தியா அழைத்திருந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்குமுள்ள ஏழாம் பொருத்தம் தெரிந்ததுதான். வீட்டிற்கு அழைத்து விருந்தே போட்டாலும் கை கழுவிகிறபோது விருந்து விஷமாகிப் போவது இன்று நேற்றல்ல நேரு காலத்திலிருந்து தொடரும் உண்மை. சீன அதிபர் Xin Jinping இந்தியா வந்திருந்தபோது , இந்திய அரசு இந்த அழைப்பை விடுத்திருக்கிறது. ஏற்றுக்கொண்ட சீனாவும் 8 எழுத்தாளர்கள் 81 பதிப்பகங்கள் என கலந்துகொள்ள விழாவும் களைகட்டியிருக்கிறது. யார் கண் பட் டதோ   இருதரப்பும் கசப்புடன் பிரியும்படி ஒரு சம்பவம்.

தாகூரின் Stray Birds (திசையற்ற   பறவைகள்) கவிதை சீனமொழியில் வந்திருக்கிறது. மொழி பெயர்ப்பாளர் சீனமொழியில் பிரபல வெகுசன எழுத்தாளரும்,   மொழிபெயர்ப்பாளருமாக சமீபக் கால த்தில் புகழடைந்துள்ள Feng Tang என்ற இளைஞர்.

அக்கவிதையில்

“காதலனுக்காக உலகு, தனது பெருவெளி முகமூடியைக் களைகிறது” –

(The World puts off its mask of vastness to its lover) என்று ஒரு வரி வருகிறது

இதனை சீனமொழியில்  மொழிபெயர்த்தவர் அதாவது Feng Tang:

“உலகம் ,   காதலனுக்காக,  தனது பெருவெளியை மறைத்திருந்த உள்ளாடையைக்   களைகிறது”

என்று தந்திருக்கிறார். அதாவது

Le monde, pour son amant, retire son masque d’immensité ”

என்றிருக்க வேண்டியதை

“ Le monde, pour son amant, retire les sous-vêtements recouvrant son immensité. ”

என பிரான்சு நாட்டின் தினசரி ‘ Le Monde’ சொல்கிறது.

 

இத்தவறை சீன வாசகர் ஒருவர் கண்டறிந்த ஏதோ ஒரு தினசரிக்கு எழுத ( கடந்த டிசம்பர் மாதம் ) ஒரு சில சீன இதழ்களும் இதனைப்பண்பாட்டு பயங்கரவாதம்என வர்ணித்ததோடு , மொழிபெயர்ப்பாளரை வக்கிரமான ஆசாமியென கண்டிக்கவும் செய்தன.

அதேவேளை மொழிபெயர்ப்பாளர்  தான் மொழிபெயர்த்த து சரியே என வாதிப்பதாகவும்,  அபருக்கு ஆதரவாக சில சீன  இதழ்களும் எழுத்தாளர்களும் இது மொழிபெயர்ப்பாளர் உரிமை எனவும் வாதிக்கின்றன..  இருந்த போதும் எதற்குப் பிரச்சினையென சீன பதிப்பகம் பதிப்பித்த கவிதைத் தொகுப்பைத் திரும்பப்பெற்றிருக்கிறது.  பதிப்புரிமையைச் சீனர்களுக்குத் தந்த இந்திய  பதிப்பாளரும் ‘Nyogi Books’ – உரிமையாளருமான Bikash Nyogi  « வங்க்காள மொழியிலிருந்து ஆங்க்கிலத்திலும், ஆங்க்கிலத்திலிருந்து சீன மொழிக்கும் சென்றதால் இது மொழிபெயர்ப்பில் தவறு நிகழ்ந்து விட்ட து « – என சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

 

நன்றி Le Monde 21 -1-2016

 

 

 

எப்போதோ எழுதியது -2 (1973)

 ஆத்தோரமாயிருக்கும்….

 

ஆத்தோரமாயிருக்கும்

காத்தாடித் தோப்புக்குள்ள

ஆத்தா நீ சின்னப்பொண்ணு

கண்ணிவச்ச- அதைப்

பாரத்தா இந்தப் புய

சொக்கிப் போனான்!

 

சேத்தோரமாயிருக்கும்

சிறு நண்டு குறுகுறுப்ப

சித்தாட சின்னப்பொண்ணு

கண்ணுக்குள்ள- நீ

சிலுசிலுன்னு பாத்துவைக்க

வேத்து போனான்!

 

நாட்டாமை கருப்பஞ்சோல

நடுச்சாம இரவு வேள

சீட்டாட்டம் முடிச்சுப்புட்டு

காத்திருந்தான்

காத்திருந்து காத்திருந்து

நீத்துப்போனான்

 

வேட்டவலம் சந்தையிலே

வேட்டிய மடிச்சுக் கட்டி

காட்டாறா வலம் வந்து

நோட்டமிட்டான் -மனச

கருப்பஞ் சக்கையாக்கிப்புட்டு

மறைஞ்சுப்போன!

 

அம்மாவாசை கருக்கலிலெ

அயிரைமீனு சுட்டுத் தின்ன

கம்மாகரையில் காத்திருப்பான்

சின்னப்பொண்ணு – நீ அவன்

கன்னம் சேர்த்து சொல்லவேணும்

பாட்டு ஒண்ணு!

  • நா.கிருஷ்ணா

தடம் பதித்த சிற்றிதழ்கள் – வே. சபா நாயகம்

 

நெரு நல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையை உலகிற்குக் கொடுக்கும்Sabanayagam பட்டியலில் சிற்றிதழ்களுக்கும் இடமுண்டு, . இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கிற நேரத்தில் இரண்டொரு சிற்றிதழ்கள் புதிதாய்ப் பிறந்திருக்கலாம்,, ஒரு சில தங்கள் ஆவியை விட்டிருக்கலாம் ஏதோ ஒரு வேகத்தில் தொடங்கி , சொந்தப் படைப்புகளுக்கு முன்னுரிமைகொடுத்து, நவீன தமிழிலக்கிய மரபுப்படி இரண்டொரு இதழ்களில் எதிரிகளையும் வசைபாடிவிட்டு, முடியாதவர்கள் இரண்டொரு மாதங்களிலும் முடிந்தவர்கள் இரண்டொரு வருடங்ககளிலும் அதன் ஜீவனை முடித்திருந்தால், விட்ட ஜீவனுக்குப் பெயர் சிற்றிதழ்.

நண்பர் சு. ஆ. வெங்கிட சுப்புராய நாயகர் எங்கோ எப்போதோ படித்ததாகச் அடிக்கடி சொல்வார்:

“இந்தப் பத்திரிகையில் இவனைக் கிழி

அந்தப் பத்திரிகையில் அவனைக் கிழி

இருவரும் போடவில்லையெனில்

நீயே ஒரு பத்திரிகைத் தொடங்கி

எல்லோரையும் கிழி ”

 

திரு வே. சபா நாயகம் அவர்களின் தடம் பதித்த சிற்றிதழ்கள் கட்டுரைத் THADAMதொகுப்பைப் படித்தபோது மேலே சொல்லப்பட்டது உண்மையென நிரூபணம் ஆயிற்று. பெரும்பாலோருக்கு சிற்றிதழ் என்பது தன்னையும் தன் எழுத்தையும் முன்னிலைப் படுத்தவும்,  களத்தில் இருக்கிற, சகச் சிற்றிதழ்களை,சக எழுத்தாளர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பழி தீர்த்துக்கொள்ளும் ஆயுதம், சிலருக்கு, எலிவளையென்றாலும் தனிவளையெனில் சுதந்திரமாக ஒன்றைச் சொல்லமுடியும் என்ற ஆத்ம திருப்தி. காரணங்கள் எதுவாயினும் தரமான சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களால், நவீன தமிழிலக்கியத்திற்கு மட்டுமல்ல மரபிலக்கியத்திற்கும் புதிய வாசனையும், புதிய பார்வையும் கிடைத்திருக்கிறது. சிற்றிதழ்களால் அடையாளம் பெற்றவர்களை வெகுசன இதழ்களும் தேடிவந்து கொண்டாடுவது சிற்றிதழ்களுக்குக் கிடைத்திருக்கிற பெருமை. இன்றைக்கு காலச்சுவடு, தீரா நதி, உயிர்மை, உயிரெழுத்து, காக்கைச்சிறகினிலே, சிற்றேடு, மணற்கேணி, மணல்வீடு, திசையெட்டும் என பட்டியலிடவேண்டிய இதழ்கள் ஏராளம், தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களின் இருத்தலைத் தெரிரிவிக்க தமிழர்கள் வாழ்கிற நிலப்பரப்பெங்கும் சிற்றிதழ்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவற்றுடன் இணைய இதழ்களையும் மறக்காமற் கணக்கிற் கொள்ளவேண்டும். இவை அனைத்துமே அதனதன் பாதையில் நவீனத் தமிழை வளர்த்தெடுக்கின்றன.

 

இருந்தபோதிலும் ஒரு சிற்றிதழை நடத்துவதென்பது அத்தனை எளிதல்ல. ஆயிரம் பிரதிகளை அரசு நூலகங்கள் வாங்க முடிந்தால் பெரிய வரம். சந்தாவைச் செலுத்திவிட்டு ஆளுக்கொரு கவிதையுடனோ படைப்புடனோ சந்தா செலுத்தும் வாசகர்கள் எழுத்தாளர் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள் போடத் தவறினால், சந்தாவைப் புதுப்பிக்காமல் போகலாம். எதிரி இதழில் எதையாவது எழுதலாம் அல்லது வேறொரு சிற்றிதழையே தொடங்கலாம். வாசகர் கிடைத்தாலும் எழுத்தாளருக்குப் பற்றாக்குறை,  ஆசிரியரே எத்தனைபெயரில் எழுத முடியும். ஒருசில இதழ்கள் சாமர்த்தியமாக   நிலைய வித்துவான்களை ஏற்பாடு செய்துவிடுகின்றன. அடுத்து, அச்சடித்த இதழ்களை விற்று முதல் காணவேண்டும். நிதி ஆதாரப் பிரச்சினை சிற்றிதழ்களுக்குத் தொன்று தொட்டு இருந்து வந்திருக்கின்றன. விற்காத இதழ்களை இலவசமாகக் கொடுத்தாலும், அடுத்த இதழையாவது காசு கொடுத்து வாங்குவார்கள் என்ற உத்தரவாதம் கிடையாது.

கடந்த காலம்போல அல்லாமல் இன்றைக்குச் சில சிற்றிதழ்கள் சாமர்த்தியமாக நடந்துகொள்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகள் , வெகுசன இதழ்களுக்குப் போட்டியாக சினிமா, அரசியலை விவாத்திற்கு எடுத்துக்கொள்வது போன்றவற்றைக்கொண்டு சிற்றிதழ்களைக் காப்பாற்ற முடிகிறது பிறகு நல்லி சின்னசாமி செட்டியார் போன்ற பரோபகாரிகளின் உதவியுங்க்கூட இன்றைய சிற்றிதழ்களைப் பொருளாதார நெருக்கடியில்லாமல் பார்த்துக்கொள்கிறது. இந்தகைய சமார்த்தியம் போதாத, எந்தவித் திட்டமிடலும் இல்லாத சிற்றிதழ்கள் வீட்சியைத் தவிர்ப்பது கடினம். சாமர்த்தியமுள்ள இதழ்கள்கூட விற்பனையில் மேற்குலுடன் ஒப்பிடுகிறபோது சந்தோஷப்படும் நிலையிலில்லை. இவ்வாறான தமிழ்ச்சூழலில் ஒரு சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதும் பெரும் சிரமம்தான்

 

இக்கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் திரு வே. சபாநாயகம். சிறுகதைகள், நெடுங்ககதைகள், நாவல், கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள், சிறுவர் கதைகள், திறனாய்வுகள் எனப் படைப்புலகில் அகலக் கால் வைத்திருந்தாலும் பாதங்களை அழுந்த ஊன்றியவர். ஓய்வின்றி எழுதிக்கொண்டிருப்பவர். கவிதை ஒவியம் ஆகியவற்றிலும் தேர்ந்தவர் விருதுகள் பரிசுகள் என வாங்கிக் குவித்திருந்த போதும், அவரது எளிமை என்னை வியப்பில் ஆழ்த்தும். அவருடைய “எழுத்துக் கலை பற்றி இவர்கள்” என்ற தொடரையும், “எனது இலக்கிய அனுபவங்கள்” என்ற கட்டுரைத் தொடரையும் விரும்பி பலமுறை வாசித்திருக்கிறேன். அதே ஆர்வத்துடனேயே ‘தடம் பதித்த சிற்றிதழ்கள்’- என்ற இக்கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன், தொகுப்பு என்னை ஏமாற்றவில்லை.

 

இக்கட்டுரைத் தொகுப்பில் இருபது சிற்றிதழ்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதழுக்கொன்று என இருபது விரிவானக் கட்டுரைகள். அதென்ன இருபது சிற்றிதழ்கள், மற்றவை என்ன ஆயிற்று? என்ற கேள்வியை ஆசிரியர் நம்மிடம் எதிர்பார்த்ததைப்போல::

 

“மணிக்கொடி தொடங்க்கி, சமீபத்தில் நின்றுபோன சுபமங்க்களாவரை இலக்கிய ஆர்வமும் எழுச்சியும் மிக்கவர்களால் தொடங்கப்பட்டு, சிலகாலம் வந்து, பிறகு ஏதேதோ காரணங்களால் நின்று போன இலக்கிய பத்திரிகைகள் ஏராளம். அவைகளில் இன்றும் நினைவில் நிற்பதாக, இலக்கிய உலகில் தடம்பதித்து, இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் வாழும் பத்திரிகைகள் சிலவற்றின் சாதனைகளையும், அவை நின்று போன காரணங்க்களையும் இப்போது எண்ணிப் பார்ப்பது சுவாரஸ்யமானதாக இருக்கும்.” என தகுந்த பதிலையும் கூறிவிடுகிறார்.

 

பொதுவாக இதுபோன்ற தகவல் செறிவுள்ள கட்டுரைக்கு சொல்லப்படும் விடயங்களைக்காட்டிலும் எழுதின்றவரின் ஞானத்தை முன்னிலைப்படுத்தும் நோக்கம் கூடுதலாக இருக்கும் (கல்விமான்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எழுதுகிறார்களாம்) அதனாலேயே நம்மைப்போன்ற வாசகர்களை மிரட்டுவதற்கென்ற மொழி நடையைத் தேடிப்பிடிப்பார்கள். வே. சபா நாயகம் எழுத்து அப்படி அல்ல. தவிர அவருடைய கட்டுரைகளில் பாகுபாடுகளில்லை. அவரால் நடை, கசட தபற, இலக்கியவட்டம், ஞானரதம் வானம்பாடியென எழுதுகிறபோதும் சரி, வண்ணங்கள், களரி, இன்று என எழுதும்போதும் சரி சம்பந்தப்பட்ட சிற்றிதழ்கள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டிச் சொல்ல முடிந்திருக்கிறது. முழுமையான தகவல்கள் எனச் சொல்லக்காரணம், ஒவ்வொரு சிற்றிதழுக்குமென்றும் எழுதப்பட்ட கட்டுரையில் முதல் இதழ் வந்த ஆண்டு, எத்தனைப் பக்கங்கள், எத்தனை இதழ்கள், என்ன விலை, யாரால் தொடங்ககப் பட்டது? இதழாசிரியர் பெயர், படைப்புகளை எழுதியவர்கள் யார், யார்? எந்தெந்த படைப்புகள் கவனம் பெற்றன போன்றவிபரங்களைச் சேகரித்து ஆசிரியர் சொல்லியிருக்கிறார். மிகவும் கடுமையானப் பணி. ஒப்புக்காக எழுதப்பட்டதல்ல. இத்தகைய புள்ளிவிவரங்களுக்கிடையிலும் , எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டைகளையும் மறைக்கவில்லை. சொல்லப்பட்டிருக்கிற சிற்றிதழ்களில் நடை, கசட தபற, அன்னம் விடு தூது, இலக்கிய வட்டம், வானம்பாடி, சுட்டி, கவனம், ஞானரதம், சுவடு ஆகிய இதழ்கள் முக்கியமானவை. இருபது இதழ்களிலிருந்தும் , இன்றிருக்கும் சிற்றிதழ்கள் பாடம் கற்கவேண்டியவையும் கற்கக்கூடாதவையும்   நிறையவே இருக்கின்றன. இவற்றைத் தவிர இந்த இருபது இதழ்களுக்கும் கீழ்க்கண்ட ஐந்து விடயங்க்களில் உள்ள ஒற்றுமை மிக முக்கியமானது:

 

அ. இதற்கு முன்பு வேரொரு சிற்றிதழில் பணியாற்றியவர் அல்லது பணியாற்றியவர்கள் அங்கிருந்து வெளியேறி புதிய இதழினைத் தொடங்க்குகிறார்கள்.

 

ஆ. தொடங்கும் அனைவரும் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்தப் போவதாகச் சூளுரைக்கிறார்கள்.

 

இ. இலக்கிய சர்ச்சைகள் என்ற பெயரில் எழுத்தாளர்கள் கட்டிப் புரளுகிறார்கள்.

 

ஈ தீவிர இலக்கியம் என்பதே கவிதைகள் என அதிகம் விளங்கிக்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

 

உ நிதி ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக முன்வைத்து கடையை மூடுகிறார்கள்.

 

 

நாமறிந்த மூத்த படைப்பாளிகள் பலரின் பயிற்சிக் களமாக சிற்றிதழ்கள் இருந்துள்ளன. நடை இதழில் சி.மணி, ஞானக்கூத்தன்போன்றோரையும் – “ஞானக்கூத்தனின் பெயர் பிரபலமாவதற்குக் காரணமான பல சிறந்தக் கவிதைகள் நடை’ யில் வந்தன” எங்கிறார், வே.ச. 1970ல் வெளிவந்த ‘கசடதபற’ இதழில் சா. கந்தசாமி நா.முத்துசாமி, அசோகமித்திரன் முதலானப் பெயர்களைச் சந்திக்கிறோம். கசட தபற இதழில் ஞானக்கூத்தனைத் தவிர்த்து இன்று புதுக்கவிதயென்றால் நினவுக்கு வரக்கூடிய ஆத்மா நாம், கல்யாண்ஜீ,, கலாப்பிரியா, தேவதச்சன் என பலரும் எழுதியிருக்கின்றனர்.

வானம்பாடி கவிஞர்கள் ஒத்துழைப்புடன் 1984ம் ஆண்டு வெளியான அன்னம் விடுதூது கவிஞர் `மீராவின் பொறுப்பிலும், கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் , கவிஞர் அழ்ப்துல் ரகுமானை சிறப்பாசிரியராகவும் கொண்டிருந்தபோதிலும், “ அரசியல் விமர்சனம், இலக்கிய விளக்கம் , அறிவியல் சாதனைகள், சமூகப்பிரச்சினைகள் , ஓவியம், நாடகம், சினிமா………இலக்கிய அக்கப்போர்கள், நூல் மதிப்புரைகள், கவிதைகள் கதைகள் என்று ஒன்று பாக்கியில்லாமல் திகட்டத் திகட்டவாசகர்க்கு ‘ விருந்தளித்தது என்கிறார் வே.சபா நாயகம். இன்றைய தமிழின் முக்கியமான சிறுகதை ஆசிரியர்கள் எழுதியிருந்தபோதிலும் இச்சிற்றிதழில் “கவிதைகள் கட்டுரைகள் அளவிற்கு அதிகம் பெறவில்லை” என்பது கட்டுரை ஆசிரியருக்குக அன்னம் குறித்த குறை இருந்திருக்கிறது.

“இலக்கிய வட்டம் “ முழுக்க முழுக்க க.நா.சு. வை முன்னவராகவும் மூலவராகவும் கொண்டு வெளிவந்திருக்கிறது. நகுலன், டிகே துரைசாமி என்ற பெயரிலும் கதை கவிதை எழுதியாக அறிகிறோம். இவர்களைத் தவிர கிருஷ்ணன் வம்பி, நசிகேதன், சுந்தர ராமசாமி ஆகியூரது படைப்புகளும் இடம் பெற்றிருந்தன எங்கிறார் வே.சபா நாயகம்.

இத்தொகுபிலுள்ள முக்கியமான கட்டுரைகளில் வானம்பாடி சிற்றிதழ் பற்றியதுமொன்று   ‘மானுடம் பாடும் வானம்பாடி’ எனத் தன்னைப்பிரகடனப்படுத்திக்கொண்ட இதழில் புவி அரசு, ஞானி, இளமுருகு, அக்னிபுத்திரன் சிற்பி, மு.மேத்தா பிரபஞ்சன், தமிழன்பன், கல்யாண்ஜி, தமிழவன், பா. செயப்பிரகாசம் சிதம்பர நாதன் என நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள்.

இப்பட்டியலில் அப்போதே இலக்கியத்துடன் சமூக பிரக்ஞையைக் கையாண்டதற்கு உதாரணம்போல ‘சுட்டி’ என்ற சிற்றிதழும் இடம்பெற்றுள்ளது. . இவ்விதழ் எண்பதுகளின் தொடக்கத்தில் வந்திருக்கிறது ஆசிரியர் நாராயண பாரதி. இதழ் ஒருவரையும் விட்டுவைக்கவில்லை, எதையும் எவரையும் கடுமையாக விமர்சித்ததின் பலன் 950 பிரதிகளுடன் தொடங்கிய இதழ் ஆறே மாத்தில் 12000 இதழ்களை எட்டி 107வது இதழை 25000 பிரதிகளை விற்க முடிந்த சாதனைக்குப்பின் சந்தாதாரர்களுக்குக் கூட த் தெரிவிக்காமல் மூடிவிட்டார்களாம்.

இச்சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களில் முக்கியமானது, எழுத்தாள நண்பர்களுக்கிடையே நடந்த இலக்கிய சர்ச்சைகள். எந்த அளவிற்கு இலக்கியத்திற்கு முக்கியம்கொடுத்தனவோ அதே அளவிற்கு சர்ச்சைகளிலும் குறிப்பாக கசட தபற போன்ற பெரிய இதழ்கள் ஆர்வம் காட்டியுள்ளது சுவாஸ்யமான தகவல். உலகமெங்கும் இலக்கியவாதிகளிடையே சர்ச்சை என்பது அவர்கள் இரத்த்தத்தில் ஊறியதாக கடந்தகாலத்தில் இருந்திருக்கிறது. க.நா.சு. வின் இலக்கியவட்டம், வானம்பாடி ஆகிய இதழ்களில் பங்க்காற்றியவர்களும் சர்ச்சைகளில் ஆர்வம் காட்டி யிருக்கிறார்கள்.

 

சிற்றிதழ்களைப் பற்றியத் தகவல்களை குறையின்றி திரட்டித் தருவது நோக்கம் என் கிற போதும் அவற்றால் நவீனதமிழிலக்கியம் அடைந்த பலனைக் குறைத்து மதிப்பிடமுடியாது என்பதைப்போல, வே. சபா நாயகம் சந்தர்ப்பம் வாய்க்கிற போதெல்லாம் அவற்றைப் பாராட் ட த் தவறுவதில்லை.

“மிகுந்த உழைப்பு மேற்கொண்டு சி. மணி யாப்பியம் என்ற 50 பக்கத்துக்கும் மேற்பட்ட யாப்பிலக்கணம் பற்றிய எளிமையான பயனுள்ள இலவச இணைப்பை பொருளாதாரப் பிரச்சினையிருந்தும் நடை மூன்றாவது இதழுடன் ‘செல்வம்’ பெயரில் எழுதியளித்திருந்தார்…… நடையின் சாதனைகளில் முக்கியமானதாக இதைச் சொல்லாம் “ (பக்கம் 11)

 

“கசட தபற” சோதனை முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறது குறிப்பாகப் புதுகவிதைக்கு அது நிறையவே செய்த து” (பக்கம் 16)

 

“ஆரோக்கியமான அருமையான விஷயங்க்களை வெளியிட்டு ஒட்டுமொத்தம் பாராட்டுதல்களுக்குள்ளாகி வீறு நடை போட் ட அன்னம் “ (பக்கம் 33)

 

“ ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடனேயே அதன் இலக்கியத் தரம் தெரிந்துவிடும் என்ற கருத்து உண்டு. அப்படி முதல் இதழைப் பார்த்த துமே சாதனை புரியும் சாத்திய கூறுகளுடன் ‘அஃக்’ என்றொரு இலக்கியப் பத்திரிகை” (பக்கம் 59)

 

திரு.வே. சபா நாயகத்தின் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான இதழ்கள் அனைத்தும் இன்றைய நவீன தமிழிலக்கியம் அடைந்துள்ள வளர்ச்சிக்குக் காரணமானவை. ஏன் அவை நின்றுபோயின என்பது பலரும் அறிந்த து தான் , தவிர தொடங்ககும்போது கொள்கை முழக்கத்துடன் வந்தவை என தெரிகிறது. அவற்றைச் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே என்ற கோபங்கூட அவர்கள் தொடர்ந்து இதழை நடத்த முடியாமற்போனதற்குக் காரணமாக இருக்கலாம். புதிதாய் இதழ் தொடங்குகிறவர்கள் இந்த நூலிலிருந்து கற்பதற்கு, தெரிந்துகொள்வதற்கு நிறைய இருக்கின்றன. இன்று வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் சிற்றிதழ்களோடு இத்தொகுப்பிலுள்ள பழையச் சிற்றிதழ்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பாருங்கள். நல்ல விடயங்களைச் சொல்ல சாத்தியமெனில் சில சமரசங்களும் செய்துகொள்ளுதல் அவசியம். இறுதியாக வெற்றி பெற்ற சிற்றிதழ்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள்: சினிமா அரசியலுக்கு ஒதுக்கியதுபோக ஒன்றிரண்டு பக்கங்களை வே. சபா நாயகம், பாரதிபுத்திரன், பக்தவச்சல பாரதி, பழ. அதியமான், க.பஞ்சாங்கம் இன்னும் இது போன்றோரின் நூல்களைக் கவனத்திற்கொள்ள, வாசகர்களிடம் கொண்டுசெல்ல ஏதேனும் செய்யுங்கள். இவர்களின் உழைப்பையும் சிற்றிதழ்கள் கவனித்தால்தானுண்டு.

நன்றி சொல்வனம்

தடம் பதித்தச் சிற்றிதழ்கள்
ஆசிரியர்: வே.சபா நாயகம்
மணியம் பதிப்பகம்
14/39 இரத்தின முதலி தெரு
குறிஞ்சிப்பாடி-607302

————————————————————————

 

மொழிவது சுகம் பிப்ரவரி 26-2016

பேசாதிரு மனமே (1980)

இரத்தத்தின் இரத்தங்களும்
இரசவாத நடனமிட
கச்சைகள் கட்டிடுவர்
கலங்காதிரு மனமே !

காவிக்குப் பல்லிளித்து
கருத்துக்கு முகம் சுளிக்கும்
பாவிகள் சாதகத்தைப்
படியாதிரு மனமே !

உள்ளத்தில் சிறுமைகளை
உரமிட்டு வளர்த்தவர்கள்
கள்ளத்தால் கதையளப்பர்
கலங்காதிரு மனமே !

நட்பென்று வந்திடுவர்
நலங்கெட பொய்யுரைப்பர்
விலங்கினும் கீழின ங்கள்
விலைபோகாதிரு மனமே !

பிட்டுக்குமண் சுமந்து
பிரம்படி பட்ட ஈசன்
கட்டைக்கும் நாள் குறிப்பர்
கலங்காதிரு மனமே !

எதிர் வீட்டுத் தமிழனை
எட்டி உதைத்து விட்டு
பிறவித் தமிழுக்கென்பர்
பேசாதிருமனமே !

– நாகரத்தினம் கிருஷ்ணா

படைப்பிலக்கியத்தில் ஆர்வம் கொண்ட பலருக்கும் அவர்களின் தமிழ் ஆசான் கள் முதற்காரணம். நான் உயர் நிலைப் பள்ளியில் படித்தபோது எனக்கு வாய்த்த தமிழ் ஆசிரியர்களை மறக்க முடியாது :  ஒருவர் திரு நா.கிருஷ்ணசாமி, மற்றவர் திரு இராசேந்திரன்.  இருவரையும் அண்மையில் சந்தித்தேன். இவர்களின் ஆசியால் எல்லோரையும்போல கவிதையில் தான் எனது இலக்கிய வாழ்வும் ஆரம்பம்.  எழுபதுகளில் கண்ணதாசன் தனிப்பாடல்களில் தீராத மோகம். அவற்றின் உந்துதலில் ஒரு தொகுப்பை வெளியிட்டேன், தலமை திரு. அவ்வை  நடராசன்,  தொகுப்பிற்கு முன்னுரையும் அவருடையதுதான்.  பல இன்றும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிற வெகுசன இதழ்களில் பிரசுரமானவை. எனினும் தொடர்ந்து கவிதைள் எழுதாது, உரை நடைபக்கம் ஒதுங்கினேன். பிரசுரிப்பதில்லையே தவிர, அவ்வப்போது கவிதைகள் எழுத நேரிடுகிறது. அண்மையில் பா இரவிக் குமாருடையக்  கவிதைத் தொகுப்பை வாசித்துவிட்டு தொடர்ந்து எழுதுங்களேன் என வற்புறுத்தியபொழுது, அவர் என்னிடம் கூறிய பதில், ” நிறைய எழுதி வைத்திருக்கிறேன்” பிரசுரிக்கத் தயக்கம் என்றார். அவர் பதிலை என்னுடையதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.

உண்மையைச் சொன்னால்  கவிதை விடயத்தில் அப்படி யொரு தயக்கம் என்னிடத்தில் இருக்கிறது. நான் சட்டென்று வெந்து தணியும் ஆசாமி, வெறித்தனம் என்னுள் தீப்பற்றி எரிகிறபோது  கவிதை எனக்குச் சுயசிகிச்சை மருந்தாக இருக்கிறது. எழுதி ,  எழுதிய வேகத்தில் கிழித்தும் போடுவதுண்டு. இந்தச் சூழலில் ஒரு முடிவெடுத்தேன், பழையவற்றை அசைபோட்டு , புதிதாய் எழுதிக்கொண்டிருப்பவற்றிர்க்கு (கண்ணதாசன் பாணியில் அல்லாத புதுக்கவிதைகளுக்கு)  என்றேனும் ஒரு நாள் களம் அமைத்துக்கொடுக்கலாமா என்று பார்க்கிறேன். அதற்கான முதற்படி இது.

மொழிவது சுகம் பிப்ரவரி 21 62016

அ.சிறகின் கீழ் வானம் – கு.அ. தமிழ்மொழி

Siraguநான்கைந்து ஆண்டுகளுக்கு முனபு புதுவையில் நண்பர் சீனு. தமிழ்மணி நட த் திய நிகழ்ச்சியொன்றிற்குச் சென்றிருந்தபோது இக்கவிதை ஆசிரியைக் கண்டிருக்கிறேன். கவிதைத்தொகுப்பு வந்தபோது , நூலாசிரியருக்குப் பன்னிரண்டு வயது என்ற குறிப்பு உள்ளது. இத்தொகுப்பினை அண்மையில் தான் நண்பர் தமிழ்மணியிடமிருந்து பெற்றேன். தொகுப்பைப் போகிற போக்கிலே நம்பிக்கையின்றிதான் புரட்டிப்பார்த்தேன் எனினும், பிற்காலத்தில் சாதனையாளர்காகப் பிரம்மிப்பூட்டுகிற மனிதர்களின் இளம்பிராராயத்திய வியப்பூட்டும் அபாரத் திறன் இவரிடமும் தெரிந்த து.

விளையும் பயிர் முளையில் தெரியும் என்றொரு பழமொழி தமிழிலுண்டு. தமது போராட்ட குணத்திற்கரிய தொனியைச் சொற்களுக்கு அளித்து, உணர்வுகளுக்குரிய வண்ணத்தைக் குழைத்து ஹைக்கூ எழுதியுள்ளார், கு.அ. தமிழ்மொழி. எங்கோ சிலருக்குத்தான் பெயர்பொருத்தம் அமையும், பெயர் சூட்டிய பெற்றோர்களுக்கு நன்றி. ஓவியத்தையொத்த அவருடைய ஹைக்கூ சித்திரங்கள் நமது புருவங்க்களை உயர்த்தி பிரம்மிக்க வைக்கின்றன.

« யார் போட்ட து
ஓசோனில் ஓட்டை
சூழல் கேடு »

« ஆபத்தான வளைவு
மெதுவாகச் செல்லவும்
விரைவுப் பேருந்து »

« ஆங்க்கிலேயன் அன்று
ஆங்க்கிலம் இன்று
அடிமைத் தமிழர்கள் »

போன்ற கவிதைகளிற் தெறிக்கும் எள்ளலும், கோபமும் சூடு சுரணையுள்ள சமூகத்திற்கு உலக்கை இடி, குறிப்பாக ஹைக்கூவை முடித்துவைக்கும் வார்த்தைள் சாட்டையைச் சொடுக்குவதுபோல இருக்கின்றன.

வாசிக்கின்றவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க க் கூடியக் கவிதைகளுக்கும் பஞ்ச்சமில்லை.

« சிரிக்கிறார்
காந்தி
கள்ள நோட்டு »

« நேரம் தெரியாமல்
ஓடிக்கொண்டிருக்கிறது
கடிகாரம் »

« விடுதலை நாளில்
வாங்கினார்
கூண்டுக்கிளி «

« புத்தரிடம்
கேட்கிறான்
ஆசைய நிறைவேற்று »

« வாடிப் போனாள்
வெயிலில்
பூவிற்பவள் »

இது போன்ற நூற்றுக்கு மேற்பட்ட நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய கவிதைள் தொகுப்பில் உள்ளன. தமிழ் நாட்டில் பொது இடங்க்களில் இவற்றைத் தட்டிகளில் எழுதிவைத்து, இந்தக் ஹைக்கூ தீக்குண்ட த்தில் இறங்க்கிச்செல்லுமாறு தமிழர்களைப் பணிக்கவேண்டும். மகாமகத் தமிழன் மரமண்டைக்கு இதெல்லாம் புரியவேண்டுமே.
கு.அ. தமிழ்மொழி விளைந்த நிலம் அப்படி. தாத்தா சுதந்திர போராட்ட வீர ர். கவிஞரின் தந்தையுடன் அதிகம் நெருக்கமில்லை என்கிறபோதும் அவரது பெரிய தந்தை சீனு தமிழ்மணியை பல ஆண்டுகளாகவே அறிவேன். மொழிப்பற்று, தமிழ்தேசியம், பகுத்தறிவுக் கொள்கையென்று வாழ்க்கையை அமைத்துக்கொண்ட குடும்பம் அவர்களுடையது. இதுபோன்ற குடும்பங்கள், வீதிக்கொன்று இருந்தால் கூட தமிழினம் கடைத்தேறும் என நினைப்பவன் அப்படியொரு பின்புலத்தில் வந்த பெண்புலி என்பதால் , கவிதைகளும் பாயும் புலிகளாக இருக்கின்றன.

செல்வி கு.அ. தமிழ்மொழிக்கு பல முகங்கள், ஒரு வேளை வயதுக்கொன்று என பல முனைகளில் தமது ஆற்றலை வெளிப்படுத்தியிருக்கக்கூடும். நூலின் பிற்சேர்க்கையாக இடம்பெற்றிருக்கிற புகைப் படங்கள், அவரின் சாதனைச் சாட்சியங்கள். வரைந்த ஒவியத்திற்குப் பரிசு, ஆடிய நடனத்திற்குப் பரிசு, பேசிய பேச்சுக்குப் பரிசு, எழுதியப் பாட்டிற்குப் பரிசு, வகுப்பில் முதல் மாணவி என்பதற்காகப் பரிசு என பங்கெடுத்த அனைத்திலும் பரிசுகள் இவரைத் தேடிவந்து அவை பெருமைப் பெற்றிருக்கின்றன. இளம் வயதிலேயே மாணவர் தொண்டியக்கத்தின் செயலாளர், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டம், தமிழ் நலக் காப்பணி சார்பில் போராட்டம் என களத்திலும் துணிச்சலைக் காட்டியிருக்கிறார். இதழொன்றிற்கு அளித்திருந்த பேட்டியையும் வாசித்தேன். இளம்வயதென்றாலும், ஆரோக்கியமான சிந்தனைக்குச் சொந்தக் கார ராகவும் இருக்கிறார்., தான் எடுக்கும் முடிவில் நியாயத் தை உணர்வதால் அதில் அவர் உறுதியுடன் இருப்பதையும் அறிய முடிகிறது. இவையெல்லாம் அவரது ஹைக்கூக்களை திரும்பவும் வாசிக்க வைத்தன.

செல்வி கு. அ. தமிழ்மொழியிடம் வேலு நாச்சியாரையும், மூவலூர் இராமாமிர்த த்தையும் சேர்த்துப் பார்க்கிறேன். ஒரு போராளிக்குரிய அத்துணை குணங்க்களும் பொருந்துகின்றன. இந்த ஐந்தாண்டுகால இடைவெளியில் வேறு பல தொகுப்புகளையும் அவர் கொண்டுவந்திருக்கலாம்,, கவிதையிலும் முதிர்ச்சிக் கண்டிருக்கலாம். கவிஞர் மாலதி மைத்ரி தலமையில் சிறுமியாக இருந்தபோதே கவிதை வாசித்திருக்கிறவர் ஆயிற்றே, எனவே எதிர்பார்ப்புகள் ஏராளம்.
———————————-
ஆ. Sept Vies

Netflix வசதி இருப்பதால் கட,ந்த சில மாதங்களாக நல்ல திரைப்படங்களைப் பார்க் க முடிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு ‘Sept Vies’ என்ற பட த் தைப் பார்த் தேன். தமிழில் 7 ஜீவன் கள் என மொழிபெயர்க்கலாம்.. இதொரு அமெரிக்கத் திரைப்படம் என்பதால் அதன் அசல் பெயர் ஆங்க்கிலத்தில் Seven Pounds’ எனக்குக் கதைப்படி பிரெஞ்சுப் பெயர் சரி. ஆங்கிலப் பெயரும் காரணமில்லாமல் வைத்திருக்கமாட்டார்கள், அவர்களுக்கான காரணம் எனக்கு விளங்க்காதிருக்கலாம். . அண்மையில் தாகூர் கவிதையொன்றை சீனர் ஒரு வர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்க அவரது அபத்தமான மொழிபெயர்ப்பு குறித்த கண்டனம் பிரெஞ்ச்சு தினசரிகளில் இடம்பெற்றிருந்தது. அது குறித்து சற்று விளக்கமாக அடுத்த மொழிவதும் சுகத்தில் எழுதுகிறேன்.
படத்தின் கதை நம்பும்படியாக இல்லை, திரைக்கதையும் மக்டொனாலில் அவசரகதியில் விழுங்க நேரும் உணவை நினைவூட்டுகிறது. என்றேனும் ஒரு நாள் உலக நாயகன் உல்டாப் பண்ணி தமிழ் இரசிகர்களின் தலையில் கட்டும் அபாயமும் நிறையவே இருக்கிறது.
கதைவாயகன் எதிர்கால மனைவியுடன் காரில் திரும்பும் போது, (அம்மாவுடனோ அப்பாவுடனோ காரில் வாயகன் திரும்பினால் சுவாரசியம் இருக்காதென்று அவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஹாலிவுட்டோ கோலிவுட்டோ வாஸ்து சாஸ்த்திரம் சினிமாவிற்கும் இருக்கிறது. காரில் திரும்பும் நாயகன் தனது கவனத்தை SMS செய்தியிற் செலுத்த ஏற்படும் விபத்தில் எதிர்கால மனைவி, இன்ன பிற ஜீவங்களென்று போன உயிர்கள் 7. குற்றம் உறுத்துகிறது. பிராயச்சித்தமாக பல்வேறு உடற் பிரச்சினைகளை முன்னிட்டு உயிருக்கு மன்றாடும் 7 ஜீவங்களுக்குத் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்து காப்பாற்ற நினைக்கிறான், விபத்துக்குக் காரணமான கதா நாயகன்.. சிபிச் சக்கரவர்த்திபோல அல்ல, தன்னைச் சாகடித்து. உதவிப்பெறப் போகும் உயிர்கள் செப்பு கலவாதத் தங்கமாவென உரசிப்பார்த்து தேர்வு செய்கிறான், இதற்கிடையில் கொஞ்சூண்டு காதலும் உண்டு.

வில் ஸ்மித் நடித்திருக்கிறார் என்பதைவிட நன்றாகவே நடித்திருக்கிறார் எனலாம். இருந்தாலும் அவரை அழுமூஞ்சியாகப் பார்க்க மனம் ஒப்பவில்லை
—————————————-

மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள் -8: மாத்தாஹரி நாவல் குறித்து – பேராசிரியர் பா. இரவிக்குமார்

      இரண்டாம் உரையாடல்

(மாத்தா ஹரி நாவலை முன்வைத்து)

                                                           பேராசிரியர் பா. ரவிக்குமார்,         

Ravikumar                                       

தமிழில் எழுதப்படும் பெரும்பாலான நாவல்கள், யதார்த்ததிற்கு உட்பட்ட நேர்கோட்டு நாவல்களாக இருக்கின்றன. தமிழ் வாசகர்கள் இத்தகைய நாவல்களை வாசிப்பதற்கு என்று பழக்கப்பட்டு விட்டார்கள். ஒருவகையில் தமிழர்களின் வாழ்க்கையேகூட பழக்கப்பட்ட வாழ்க்கைதான். இது ஏன்? இது எதற்கு? இது எப்படி என்பதையெல்லாம் அவர்கள் பெரும்பாலும் சிந்திப்பதில்லை. இந்தக் கூற்று, பெரும்பாலும் எல்லோருக்கும் பொருந்தும். விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குகள் விதிகள் அல்ல. பழக்கப்பட்ட வாழ்க்கை, வாழ்வதற்கு எளிதாக இருக்கிறது. வசதியாக இருக்கிறது. ஏன் இந்த எளிமையும், வசதியும் என்றால் வாழ்க்கையில் நடைபெறும் பல சம்பவங்களை நாம் மறந்துவிடுகிறோம்; அல்லது பலவற்றை மறந்துவிட வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், வாழ்க்கை அதன் தன்மையில் புதிர்கள் நிறைந்தது. அதனாலேயே அழகானது. ரகசியங்கள் நிறைந்தது. ஒரு பள்ளத்தாக்கின் மௌனம் போன்றது.

எந்தக் கதையைச் சொன்னாலும், நாகரத்தினம் கிருஷ்ணா, இந்தப் புதிர்களையும், அழகையும், ஆபத்துகளையும் தன் எழுத்தில் கொண்டுவர நினைக்கிறார்.

‘மாத்தா ஹரி’ தமிழில் எழுதப்பட்ட நேர்கோட்டு நாவல் அல்ல; ஆனால், நேர்கோட்டு நாவலைப் படிக்கின்ற அனுபவத்தைத் தரக்கூடிய நாவல். அண்மைக்காலங்களில் (கடந்த பத்தாண்டுகளில்) தமிழில் எழுதப்பட்ட வித்தியாசமான நாவல்.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துகளைப் புகழவேண்டும் என்பதற்காக இக் கூற்றைக் கூறவில்லை. தமிழில் எழுதும் எல்லோருமே புகழ்ச்சியை விரும்புகிறார்கள். நாகரத்தினம் கிருஷ்ணா எப்படியோ, எனக்குத் தெரியாது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் எழுத்துகளைக் கவனப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறேன்.

இந்த நாவலின் கதை இது; இது இதைச் சொல்கிறது……. அதைச் சொல்லவில்லை என்றெல்லாம் இந்த நாவலைப் பற்றி எதையும் கூறப் போவதில்லை. ஒரு முத்திரைக்குள் இந்த நாவலை அடக்கிவிடலாம் என்றால், அது நாவலாசிரியருக்குச் செய்யும் துரோகமாகிவிடும்.

மாத்தா ஹரி, பவானி, ஹரினி, என்கிற மூன்று பெண்களின் கதையை இந்த நாவலில் சொல்லிச் செல்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. உண்மையில் கதை சொல்லல் மூலமாக, வாழ்க்கை குறித்து ஒரு விசாரனையை மிக இயல்பாக நடத்தியுள்ளார்.

நாவல் என்பது வெறும் கதையல்ல என்பதை நாம் அறிவோம். கதையின் மூலமாகவும், கதை மாந்தர்களின் மூலமாகவும் வாழ்க்கை பற்றிய பார்வையை நாவலாசிரியரின் முன்வைக்கிறான். சுவாரஸ்யமான கதை சொல்லலின்மூலம், நாகரத்தினம் கிருஷ்ணா வாசகர்களுடன் இணைந்து, வாழ்க்கை குறித்த தேடலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.

1917 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நடனப் பெண்மணியான மாத்தா ஹரியைப் பற்றிய புனைவாகவும், புதுச்சேரியிலிருந்து புறப்பட்டுச் சென்ற பவானி என்ற பெண்ணைப் பற்றிய புனைவாகவும், அவளுடைய வளர்ப்பு மகள் ஹரினியைப் பற்றிய புனைவாகவும் இந்த நாவல் விரிகிறது. இடையில் நிறைய கதைமாந்தர்கள். மாத்தா ஹரியைத் திருமணம் செய்துகொண்ட ராணுவ அதிகாரி ருடோல்ப், மாத்தா ஹரியை நேசித்த அல்லது அவள் அழகில் மயங்கிய ஆண்கள், பவானியைத் திருமணம் செய்து கொண்ட தேவசகாயம், ஹரினியுடன் உறவு கொண்ட சிரில், அரவிந்தன், பவானியின் தந்தை, பாட்டி, தோழி பத்மா, தேவசகாயத்திடம் உறவு வைத்துக் கொண்ட எலிஸபெத், மாத்தா ஹரியின் மண்டையோட்டைத் தேடும் குளோத், பவானியை நேசிக்கும் பிலிப், நாவலின் இறுதியில் வரும் பஸ்கால் என்று ஏராளமான கதைமாந்தர்கள்.

ஆனால் மாத்தா ஹரி, பவானி, ஹரினி ஆகிய மூன்று கதை மாந்தர்களை மையமிட்டுதான் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்குள் நிறைய ஒற்றுமைகள். மாத்தா ஹரி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவள். கணவனால் வஞ்சிக்கப்பட்டவள். தான் தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையின் காரணமாக, சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டவள். ஜெர்மனியின் உளவாளி என்று குற்றஞ்சாட்டப்பட்டு, பிரான்ஸ்தேச அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டவள். ஹாலந்தில் பிறந்து, இந்தோனேஷியாவில் துன்பங்களை அனுபவித்து, பின்னர் விபச்சார வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு, மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்யப்பட்டவள். பேரழகி.

காலமும், இடமும் வேறு என்றாலும், கிட்டத்தட்ட பவானியும் மாத்தா ஹரியைப் போன்றவள். சுயசிந்தனைவாதி. பவானியும் தண் கணவன் தேவசகாயத்தால் வஞ்சிக்கப்படுகிறாள். இத்தனைக்கும் மிகத் தெளிவான பெண். திருமணமும், காதலும் வேண்டாம் என நினைத்தவள். ஒரு கட்டத்தில் பவானி இப்படி நினைக்கிறாள்:-

“நடுத்தர வர்க்கத்து பெண்ணாய்ப் பிறந்தவள், ஒரு குபயோக சுபதினத்தில், காதலித்தோ அல்லது காதலிக்காமலேயோ, கல்லுடனோ, புல்லுடனோ, குறைந்தபட்சம் மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்து, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தான் மலடி அல்லவென்று நிரூபித்தாக வேண்டும். கல்லுக்கும் புல்லுக்கும் பிடித்ததைச் சமைக்கவேண்டும், அவனது விருப்பத்திற்கென்று சினிமாவுக்குப் போகவேண்டும், அவனது விருப்பத்திற்கு நண்பர்களை உபசரிக்க வேண்டும், அவனது விருப்பத்திற்குப் படுக்க வேண்டும். நல்ல வேளை அவனுடைய விருப்பத்தைக் கேட்டுத்தான் மனைவியானவள் டாய்லெட் போகவேண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை” (ப.111)

இப்படி நினைக்கும் பவானிதான், சூழலின் காரணமாகத் தேவசகாயத்தைத் திருமணம் செய்துகொண்டு பிரான்ஸில் துன்புறுகிறாள். தற்கொலை செய்துகொள்கிறாள்; அல்லது கொலை செய்யப்படுகிறாள்.

தன் தாயின் இறப்பிற்குக் காரணத்தைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஹரினி, இருபத்தோராம் நூற்றாண்டைச் சேர்ந்தவள். சிரில், அரவிந்தன் போன்ற இளைஞர்களிடம் மிக இயல்பாக உடலுறவு வைத்துக் கொள்பவள். வாசகர்கள் அதிர்ச்சியுறும் வண்ணம் நாவலின் இறுதியில் காணாமல் போகிறாள்.

“எனினும், அவர்களின் மூவரும் வாழ்க்கையும் முன்னர் சொன்னதுபோல ஒரு நிறம். ஒரு வாசனை. ஒரு பயணம். இதன் பொருள், எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு வகையான நுகத்தடிகளைச் சுமக்கிறார்கள் என்று சொல்லி, இதைப் பெண்ணிய நாவல் என்று ஒரு சிமிழுக்குள் அடக்கிவிடமுடியுமா என்றால் முடியாது.” (ப.6) என்று மிகச் சரியாகவே, வாசகர்களையும் விமர்சகர்களையும் எச்சரிக்கை செய்துள்ளார் பிரபஞ்சன். வாழ்க்கை ஒரு வரையறைக்குள் அடங்குவதில்லை. இந்த நாவலையும் அப்படித்தான் கருத வேண்டியுள்ளது.

மாத்தா ஹரி, பவானி, ஹரினி ஆகிய மூன்று பெண்கிளன் கதைகையும் நேர்கோட்டில் கூறாமல், நாகரத்தினம் கிருஸ்ணா முன் பின்னாக, சௌகரியமாகக் கதையை மாற்றிக் கூறுகிறார்.

நாவலை எழுகும் நாகரத்தினம் கிருஸ்ணாவிடமே பவானி பேசுதல், நாவலின் இறுதியில் நாகரத்தினம் கிருஷ்ணா பவானியிடம் பேசுவதன்மூலம் வாசகர்களிடம் பேசுதல் முதலிய உத்திகள் வாசகர்களுக்குப் புதுமையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வாசகர்கள் அவரவர்களுக்குத் தேவையானதை இந்த நாவலின்மூலம் உணரலாம். பேரிலக்கியத்தின் தன்மை, வாசகர்களுடன் எப்போதும் உரையாடிக் கொண்டிருப்பதுதான். எது உண்மை? எது புனைவு? என்பதைப் பிரித்தறியாத வண்ணம், உண்மையும் புனைவும் கலந்த இலக்கியமாக இந்த நாவல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, ஸ்டராஸ்போ, இந்தோனேஷியா போன்ற பல நகரங்களைக் களமாகக் கொண்டு இந்த நாவலை எழுதியிருப்பதன்மூலம், பல்வேறு கலாச்சாரங்களின் தன்மையை மிக நுட்பமாகச் சித்தரித்துள்ளார் நாகரத்தினம் கிருஷ்ணா. பிற தமிழ் நாவலாசிரியர்களிடமிருந்து நாகரத்தினம் கிருஷ்ணா வேறுபடும் இடம் இது. பல உலக நாவல்களை வாசித்த அனுபவம், கிருஷ்ணாவிற்கு அற்புதமாகக் கைகொடுத்துள்ளது.

நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிநடையைத் தனியே கூறவேண்டும். நேர்கோடல்லாத நாவல்களில் வாசிப்புத் தன்மை (Readability) குறைந்துவிடுவதற்கான வாய்ப்பிருக்கிறது. நாவலின் எந்த இடத்திலும் இத்தன்மை குறையவில்லை. ஒரு நூற்றணாடு வாழ்ந்த அனுபவத்தையம், பல நாடுகளைப் பார்த்த அனுபவத்தையும் வாசகர்கள் ஒருங்கே பெறுவார்கள் என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.

வாழ்க்கை என்பதை ஒரு சாத்தியக்கூறு (Probability) என்று பார்க்கிறார் நாகரத்தினம் கிருஷ்ணா. ஹரினி என்னவானாள்? பவானியின் மரணம் கொலையா? தற்கொலையா? என்பதெல்லாம் பிரச்சனையில்லை. ஒரு துப்பறியும் நாவலாக இந்த நாவலை யாரும் கருதிவிடக்கூடாது. துப்பறியும் நாவலுக்குரிய சுவாரஸ்யம் இருக்கிறதே தவிர, உண்மையில், இது துப்பறியும் நாவலில்லை.

“வாழ்க்கை முழுதும் இரண்டு உரையாடல்களைத் தொடர்ந்து நடத்துகிறோம். இரண்டாவது உரையாடல், பொய் கலவாதது. அந்தரங்கமானது. நாமே நமக்கென்று நடத்தும் உரையாடல். இங்கே பரஸ்பர புரிதல்களில் சிக்கல்கள் இருப்பதில்லை, மறுப்புகள் இடம்பெறுவதில்லை” (ப.285) என்று நாவலின் இறுதியில் கூறுகிறார் நாகரத்தினம் கிருஷ்ணா.

நாவலின் இறுதி என்று கூறுவதும் ஒரு வசதி கருதிதான் என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

உண்மையில், இந்தப் பிரதி முதலும் முடிவும் அற்றதாக நீள்கிறது.

நாவல் முடியும் இடத்தில் வாழ்க்கை தொடங்குகிறது என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?

வாழ்க்கைக்கும்கூட முதல் ஏது? முடிவு ஏது?

இந்த அனுபவத்தைத் தந்த கிருஷ்ணாவிற்குத் தமிழ் வாசகர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்.

தமிழ் நாவலின் வரலாற்றை நாகரத்தினம் கிருஷ்ணா, தன் தத்துவப் பார்வையால் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளார் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

 

                                                                                                                      பா. இரவிக்குமார்

பாவண்ணன் என்ற ஒர் எழுத்துப் போராளி

“புதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார்.” என்கிறார் தேவமைந்தன்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள்: சிறுகதைகள் கட்டுரைகள், கவிதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்புலகின் அவ்வளவு வடிவங்களிலும் ஆழமான ஞானம்கொண்ட மனிதர். தமிழ்ப்படைப்புலகில் பாவண்ணனுக்கென்று தனித்த இடமுண்டு. அந்த இடத்தை இன்று நேற்றல்ல என்றைக்கு எழுத்துலகில் அவர் காலடியெடுத்துவைத்தாரோ அன்று தொடக்கம் கட்டிக்காத்து வந்திருக்கவேண்டுமென்பது என்பதென் அனுமானம். ஆனால் அதனைக் தக்கவைத்ததில் எழுத்தாளர் பாவண்ணனைக் காட்டிலும்;  நல்ல குடும்பத் தலைவராக, அரசு ஊழியராக, சமூகத்தை உளமார நேசிப்பவராக இருக்கிற பாவண்ணன் என்கிற மனிதருக்குப் பெரும் பங்கிருக்கிறது. தமிழ்ப் படைப்பிலக்கிய துறையில் சொந்த வாழ்க்கையில் ஒரு நேர்க்கோட்டைக் கிழித்து அதனின்று ஓர் மி.மீட்டர் கூட பிறழாமல் நடப்பதைக் கொள்கையாகவே ஏற்றுக்கொண்ட மனிதர். அவரைப்போலவே அவரது இலக்கிய ஆளுமையும் எளிமையானது, பகட்டிலிருந்து விலகி நிற்பது; எதார்த்த சமூகத்தை, அதன் பங்காளிகளைக் குறிப்பாக இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக இருக்கிற நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வனுபங்களை, அவற்றின் ஈரத்துடன், கவிச்சி போகாமல் பொத்தி வைத்து படைப்புதோறும் மணக்க மணக்கச் சொல்லத் தெரிந்தவர். எழுத்துவேறு வாழ்க்கைவேறு என்றில்லாமல் இரண்டையும் ஒன்றாகப் பார்க்கிற படைப்பிலக்கியவாதிகள் இங்கு அபூர்வம். பாவண்ணன் அத்தகைய குறிஞ்சிப்பூக்களிலொருவர். தமிழ்ச்சூழலைச் புரிந்துகொண்டு எந்தக் குழுவினரையும் சார்ந்திராமல் படைப்புண்டு தானுண்டு என ஒதுங்கி இருக்கத் தெரிந்த சாமர்த்திய சாலியுங்கூட.

பாவண்ணனைக் கொண்டாட இரண்டு காரணங்கள் எனக்கிருக்கின்றன. முதலாவதாக தமிழில் சிறுகதையென்றதும் மேற்குலகப் படைப்புகளுக்கு இணையாக எனக்கு நினைவுக்குவருகிற ஒரு சில எழுத்தாளர்களில் பாவண்ணனும் ஒருவர். இவர்கள் கதைகள் மானுடம்சார்ந்த பிரச்சினைகளை, பொறுப்புள்ள மனித மனத்தின் கவலைகளைக்கொண்டு  அளவிடுபவையாக இருக்கின்றன. பாவண்ணனைப்பற்றி எழுத விரும்பியதற்கு இரண்டாவது காரணம், அவர் என்னைப்போலவே தமிழ்நாட்டைச்சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்துக்காரர்,  வாழ்க்கையின் பெரும்பரப்பை புதுச்சேரியோடு பிணைத்துக் கொண்டவர்.

நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் சிறுகதைகள் என சாதனைகளைக் குவித்திருந்தபோதிலும் ஒளிவட்டத்தைத் தவிர்த்து அமைதிதவழும் முகமும் வசீகரமான குறுநகையுமாக அவரை முதன்முறை நான் அவரைக் கண்டது மறக்கவியலாது. எவ்வித பந்தாவுமின்றி, சினேகிதப் பாங்குடன் கைகுலுக்க முன்வந்தபோது உயர்ந்த அவரது மனிதம் இன்றுவரை குறையின்றி மனதில் நிலைத்திருக்கிறது.

பாவண்ணன் கதைகள் குறிப்பாக சிறுகதைகள்:

நவீன இலக்கியத்தில் இன்றைய தேதியில் சிறுகதைகளை அதிகம் காண நேர்வதில்லை. இன்று வெளிவரும் புனைகதை வடிவங்களில் சிறுகதை தொகுப்புகள் எத்தனை, நாவல்கள் எத்தனை என்பதை ஒப்பிட்டுபார்த்து சிறுகதை எழுத்தாளர்கள் அருகிவருவதைத் தெரிந்துகொள்ளலாம். சிறுகதைக்குரிய பண்புகள் அனைத்தையும் நாவல்கள் எடுத்துக்கொண்டுவிட்டன என்பதும் ஒருகாரணம். ஒரு நல்ல சிறுகதை என்பது வாசித்துமுடித்ததும் நிறைவைத் தரவேண்டும், வாசகரிடத்தில் ஆசிரியர் சொல்லவந்தது முள்போல தைத்திருக்க வேண்டும், ஏன் அப்படி எழுதினார் என்ற கேள்வியை எழுப்பவேண்டும். பாவண்ணன் சிறுகதைளில் பெரும்பாலானவற்றிடம் இப்பண்பினைக் காண்கிறோம். விவரிப்புகளைக் குறைத்து, சிக்கனமாக வார்த்தைகளைக் கையாண்டு எதார்ந்த உலகிலிருந்து அதிகம் விலாமல் கதை சொல்லும் பாணி அவருடையது. அவரது சிறுகதைகளில் சிலவற்றை இக்கட்டுரைக்காகத் திரும்பவும் வாசித்த இத்தருணத்திலும் மனதில் நிற்பவையாக இருப்பவை.  வண்ண நிலவன், வண்ணதாசன் போன்ற தமிழ்ச்சிறுகதை ஓவியர்கள் தீட்டும் சித்திரங்களுக்கு இணையானவை அவை.

சூறை

வருவாயற்றுப்போன இரயில்வே ஸ்டேஷனை, நிர்வாகம் மூட நினைக்கிறது. ஸ்டேஷன் மாஸ்டராக பொறுப்பேறிருக்கும் கதை சொல்லி பல ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஸ்டேஷனில் பணியாற்றியவர். “அப்பொழுதெல்லாம் இப்படி இல்லை. பார்க்கும் போதே ஆர்வத்தைத் தூண்டும் செந்நிறத்தில் ஸ்டேஷன் கட்டிடம் நின்றிருக்கும் முகப்பில் மஞ்சள் நிறப் பெயர்ப்பலகை. கரிய வர்ணத்தால் முன்று மொழிகளில் எழுதிய ஊரின் பெயர். ஏழெட்டு சிமெண்ட் பெஞ்சுகள். இரும்புக் கிராதிகள். மறுபுறம் பெரிய கூட்ஸ் ஷெட். பக்கத்தில் இந்தியன் ஆயில் டேங்க். கசகசவென்று சதா நேரமும் ஒரு கூட்டம். இன்றோ சூறையாடப்பட்டுப் பாழான ஒரு புராதன இடம் போல முள்ளும் புதரும் மண்டிக் கிடக்கிறது. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் இருந்த இடத்தில் நாய்கள் படுத்துக் கிடக்கின்றன”  என்கிற ஒப்பீட்டுடன் கதை தொடங்குகிறது. செல்லரித்த பழைய நிழற்படத்தையொத்து நிற்கிற கட்டிடமும் பிறவும் ஊர்மக்களால் எப்படி கபளீகரம் செய்யப்படுகிறது என்பதுதான் கதை.  விட்டகுறை தொட்டகுறையென்று ஸ்டேஷனிடத்தில் தீராத காதல்கொண்டிருக்கும் கதைசொல்லிக்கு அந்த ஸ்டேஷனுக்கு அப்படியொரு தண்டனையை (நிரந்தரமாக மூடும்) தர மனம் ஒப்புவதில்லை. மூடப்படாலிருக்க நியாயங்களைத் தேடுகிறார். அந்நியாயங்களைப் பட்டியலிட்டு உயரதிகாரிகளுக்கு அறிக்கையாக அனுப்பவும் செய்கிறார்.  ஆனால் இரயில்வே நிர்வாகத்திற்கு இவர் முன்வைக்கும் நியாயங்களைக் காட்டிலும், அந்த ஸ்டேஷனின் வரவு செலவு கணக்கு தரும் உண்மை பெரியது. அதனைக்கூட கதைசொல்லியால் சகித்துக்கொள்ள முடிகிறது  ஆனால் கண்னெதிரே ஸ்டேஷன் கொள்ளை போவதை வேடிக்கைப் பார்ப்பதன்றி வேறெதுவும் செய்ய இயலாத தனது கையாலாகதத்தனத்தை  சகிக்க முடிவதில்லை.  ஸ்டேஷன் மாஸ்ட்டரின் குமுறல் தீயில் எண்ணை வார்ப்பதுபோல, ஸ்டேஷனில் வேலைசெய்யும் ஊழியர்களின் அவலக்குரல்:

“அம்முவரிடமும் விஷயத்தைச் சொன்னேன். அதிர்ந்து போனார்கள் அவர்கள்.

என்ன சார் இப்பிடி செய்றாங்க. புள்ளகுட்டிக் காரங்கள இப்பிடித் தூக்கியடிச்சா என்ன செய்றது சார் ? என்று முறையிட்டார்கள். எனக்கும் கோபமாய்த் தான் இருந்தது. எதுவும் செய்ய இயலாத வெற்றுக்கோபம்.

போவ முடியாதுன்னு சொன்னா என்ன சார் செய்ய முடியும் அவுங்களால ? என்றான் ஒருவன்.

சேங்க்ஷன் போஸ்ட்டயே ரத்து செஞ்சிட்டப்புறம் சம்பளம் வாங்க முடியாதுப்பா என்றேன் நான்.

அப்ப எங்க கதி ?

போய்த்தான் ஆவணும்”

இதற்கும் கூடுதலாக பிரச்சினையின் ஆழத்தை, ஏமாற்றத்தை வாசகர்களிடம் கொண்டு செல்லமுடியுமா என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்டமனித மனங்களில் இவரும் பயணித்து  வெகு உருக்கமாகத் தீட்டியிருக்கிறார். அதுபோலவே தமது நினைவுகளில் தேங்கிக்கிடக்கும் தடயங்கள் சிறுகச் சிறுக தம் கண்னெதிரிலேயே அழிக்கப்படுவதை கண்டு குமுறும் ஸ்டேஷன் மாஸ்டரின் விரக்தியும், ஏமாற்றமும் மிக அழகாய்ச் சொல்லப்பட்டிருக்கிறது:.

“சரக்குக்கூடம் பிரிக்கப்பட்ட இடத்தில் ஊர்ப் பெரிய மனிதர் ஆடுகளையும் மாடுகளையும் கொண்டு வந்து கட்டினார். தொடர்ந்து மற்றவர்களின் மாடுகளும் இளைப்பாறத் தொடங்கின. மாடுகளுக்கு அங்கேயே தீவனம் தரப்பட்டது. எங்கும் சாணம் குவியத் தொடங்கியது. அறையில் அரைமணி நேரம் கூட உட்கார முடியாது.

சாணத்தின் வீச்சமும் முத்திரத்தின் வீச்சமும் திணற வைத்து விடும். கழிவுகளில் உட்கார்ந்து வரும் ஈக்களும் வண்டுகளும் அறைக்குள் சுதந்தரமாக வந்து ரீங்கரிக்கும். கரிய பருத்த அவ்வண்டுகளைக் கண்டதுமே நான் அச்சம் கொள்வேன். மேலே உட்கார்ந்துவிடக் கூடாது என்று அவற்றைச் சூசூ என்று விரட்டியபடியே இருப்பேன். இரவு நேரங்களில் மனிதர்களும் உபாதைகளுக்கு ஒதுங்கும் இடமாகி விட்டது அது. திரும்பிப் பார்க்கக்கூடக் கூசும் அளவுக்கு அந்த இடத்தின் தன்மையே மாறிப்போனது”.

என்கிற விவரக் குறிப்பு ஸ்டேஷனின் மரண சாசனம், கைவிடப்பட்ட நோயாளியின் இறுதி நிமிடங்களை நினைவூட்டும் காட்சி. அவரது சிறுகதைகளில் “சூறை” எனக்கு மிகவும் பிடித்ததொரு சிறுகதை.

பிரந்தாவனம்

இக்கதையும் அவரது ஏனையக் கதைகளைப்போலவே நடுத்தரக் குடும்பத்தை மையமாகக்கொண்டது. பொம்மைக்கு உருகும் ஒரு பெண்மணி, எதற்கும் கணக்குப் பார்க்கும் ஒரு கணவன், கணக்கைப் புரிந்துகொள்ள காட்டும் அக்கறையில் நூற்றில் ஒருபங்கு அக்கறையைக்கூட மனைவியின் உணர்ச்சிகளிடம் காட்டாதவன். கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு அவர்கள் ஆதரவில் கல்வியைத் தொடருகிற கதைசொல்லியான ஒரு சிறுவன். இவர்கள் மூவரும்தான் கதை மாந்தர்கள். சிறுவனும் அவன் அண்ணியென அன்போடு அழைக்கிற பெண்மணியும் ஒரு நாள் கடைக்குப் போகிறார்கள். போகிற நாளில் வண்டியில் பொம்மைவைத்து விற்கப்படுகிற கடையொன்றை பார்க்க நேரிடுகிறது.  அவ்வண்டியிலிருந்த கிருஷ்ணன் பொம்மை அவ்பெண்மணியை ஈர்க்கிறது: “தலையில் மயில் இறகோடு சிரித்துக்கொண்டு இருந்தது குழந்தை கண்ணன் பொம்மை. அச்சு அசலான கண்களைப் போல பொம்மைக் கண்களில் ஈரம் ததும்பி இருந்தன. இதோ இதோ என்று விரலைப் பற்றிக்கொண்டு கூடவே ஓடிவந்துவிடும் குழந்தையைப் போல இருந்தது. பொம்மையின் அழகைக் கண்ட மகிழ்ச்சியில் அண்ணியின் முகம் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது” எனக் கதையாசிரியர் எழுதுகிறபோது  கதையில் வரும் அண்ணிக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்குங்கூட பொம்மையிடத்தில் காதல் வருவது இயல்பு. பொம்மையை வாங்கத்துடிக்கும் அப்பெண்மணியின் ஆசைகளுக்குப்பின்னே பல தருக்க நியாயங்கள் இருக்கின்றன. பொம்மையை வாங்கி வீட்டிற்குக்கொண்டுவந்து அவ்வப்போது கொஞ்சி மகிழ நினைக்கிறாள். பேரம்பேசி பொம்மையை வாங்குவதில் பிரச்சினையில்லை. ஆனால் செலவுக்கணக்கில் கறாராக இருக்கும் கணவனை எப்படி சமாளிப்பது? பொம்மையை வாங்க பணத்திற்கு எங்கே போவது? வீட்டுசெலவில் அதை மூடிமறைக்கலாம் என்றாலும், அதையும் கண்ணில் விளக்கெண்ணைகொள்டு கண்டுபிடித்து ஏன் எதற்கென கேள்விகேட்கும் கணவனுக்கு என்ன பதில் சொல்வது? என்கிற அறிவின் கேள்விகளையெல்லாம் உணர்ச்சி அலட்சியம்செய்து, கதைசொல்லியின் யோசனையின் தெம்பில் பொம்மையை வாங்கிவிடுகிறாள். பொம்மைக்கான செலவை அழுக்கு சோப்பு வாங்கியதாகக் கணக்கும் காட்டுகிறாள். கணவனின் கழுகுக் கண்கள் வீட்டிற்கு ‘எட்டு’ரூபாய் செலவில் வந்திருக்கும் பொம்மையை அறியாமலேயே அழுக்கு சோப்பிற்கு அந்த மாதம் கூடுதலாகச் செலவிட்ட தொகை அநாவசியம் என கண்டிக்கிறது. குருட்டு தைரியத்தில் வாங்கப்பட்ட பொம்மையை அலமாரியில் ஒளித்து வைத்து வேண்டுமென்கிறபோது, கணவனுக்குத் தெரியாமல் எடுத்துப்பார்த்து மகிழலாம் என்பதுதான் பெண்மணியின் திட்டம். பொம்மைமீது அவள் செலுத்தும் அன்பும், எந்த நேரத்திலும் குட்டுவெளிப்படலாம் என்ற நிலையில் அவள் மனம் படும் பாடும், சிறுவனின் இக்கட்டான நிலமையும் பாவண்ணன் ஒரு தேர்ந்த கலைஞன் என்பதைப் பறைசாற்றும் படிமமாக கதைச் சொல்லப்படுள்ளது.

‘முள்’

‘முள்’ சிறுகதையும் பாவண்ணன் கதைகளில் மிக முக்கியமானது. பொதுவாக பாவண்ணன் தன்மை கதை சொல்லலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்கிறார். இக்கதையும் அதற்குத் தப்பவில்லை. கதை சொல்லியான இளைஞன் தன்னிலும் மூத்தவயதுகொண்ட சகஊழியரை அண்ணன் என அ¨ழைத்து அவருடையக் குடும்பத்தோடு நெருங்கிப்பழகுகிறான். அந்த வீட்டுப் பெண்மணியை அண்ணி யெனவும், அவ்வீட்டுப் பிள்ளைகள் இவனை சித்தப்பா என்று அழைத்தும் அன்யோன்யமாகவே பழகுகிறார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்தவீட்டிற்குச் சென்று அவர்கள் வீட்டுப் பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறான். அந்தச் சந்தோஷத்தை குலைப்பதுபோல, ஊழியரின் சொந்தத் தம்பி தனது மனைவி, குழந்தையுடன் வெளிநா¡ட்டிலிருந்து வருகிறான்.  சொந்தத் தம்பி வந்திருக்கிற நிலையில், இவன் யார்? அவ்வீட்டில் அவனுக்குரிய இடம் எது? என்ற கேள்விகள் எழுகின்றன. இப்ப்டியொரு பிரச்சினையைக் கருவாகக்கொண்டு தமிழில் கதை எழுதுகிறவர்கள் அபூர்வம். இப்படியொரு கதைக் கருவை கையாண்டிருக்கிறாரே என்பதற்காக மட்டும் பாவண்ணைப் பாராட்டவில்லை. அப்பிரச்சினையை மையமாக வைத்து கதைசொல்லியின் அண்ணனாக இருக்கிற சக ஊழியர், அவர் மனைவி, வீட்டுப் பிள்ளைகள், வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பி மனைவி இப்படி வெவ்வேறு மனிதர்களின் வினைகளையும் எதிர்வினைகளையும் கொண்டு எதார்த்த உலகை காட்சிப்படுத்தியிருப்பதற்காகவும் பாராட்ட வேண்டியிருக்கிறது.

பாவண்ணைன் படைப்பு மாந்தர்கள்

இவர் படைப்பில் இடம்பெறும் மனிதர்கள் மேல்தட்டுமக்களா, மெத்த படித்த வர்க்கமா என்றால் இல்லை. பரம ஏழைகளா என்றால் இல்லை. ஆனால் அவர்கள் விவசாயிகளாக இருப்பார்கள், ஆலைத் தொழிலாளிகளாக இருப்பார்கள். வாழ்வை அதன் போக்கிலே அனுசரித்துபோகிற வெகுசன கூட்டத்தின் பிரதிநிதிகள், அலங்காரமற்ற மனிதர்கள். கள்ளங்கபடமின்றி உரையாடத் தெரிந்தவர்கள். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நகரங்களில் அல்லது அதையொட்டிய பகுதிகளில்  காண்கிற வெள்ளந்தியான மனிதர்கள்.

” ‘காலையில மொடக்கத்தான் கீரை பறிச்சிட்டு வந்து குடு’னு ராத்திரி கேட்டாரு. வாக்கிங் போனப்ப ஏரிப் பக்கத்துலேர்ந்து பறிச்சியாந்தேன். குடுக்கறதுக்காக வந்து எழுப்புனா, கொஞ்சம்கூட அசைவே இல்லடா. தொட்டா ஐஸ் கட்டியாட்டம் சில்லுனு இருந்திச்சி. ஓடிப் போயி டாக்டரக் கூட்டியாந்து காட்டுனேன். பாத்துட்டு ‘ராத்திரியே உயிர் பிரிஞ்சிடிச்சி’னு சொன்னாரு” “கடேசியா ஒரு தடவ மூஞ்சியப் பார்த்துக்குறவங்க பாத்துக்குங்க” –  (சுவரொட்டி )

நெனப்புதான் பொழப்பைக் கெடுக்குது’ என்று குத்தலாகப் பதில் சொன்னார் சித்தப்பா. “நாய குளிப்பாட்டி நடு ஊட்டுல வெச்சாலும், அது வாலக் கொழச்சிக்கினு போற எடத்துக்குத்தான் போவுமாம். பணத்த கண்ணால பார்த்ததும் மாணிக்கம் பயலுக்குப் பழைய ஞாபகம் வந்திருக்கும். தண்ணியடிச்சிட்டு எங்கனாச்சும் ரோட்டுல உழுந்து கெடப்பான்.’ -( தாத்தா வைத்தியம்)

“இன்னாடா சங்கமாங்கி ஆடுன்னா ஆடறதுக்கு நீ வச்ச ஆளாடா அவுங்க” என்று அவள் குரல் உயர்கிறது. லுங்கிக்காரன் இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. “மார்ல கைவச்சிப் பேசற அளவுக்கு ஆயிடுச்சாஸ என் சாண்டா குடிச்சவனே, போடா போய் ஒங்காத்தா மார்ல கைவச்சி ஆடச் சொல்லுடா இல்லன்னா ஒங்கக்கா மார்ல கைவச்சி ஆடச் சொல்லு” என்று கைநீட்டிச் சொல்கிறாள். “என்னமோ ரெண்டுங்கெட்டானுங்க நாலு ஆட்டம் அடி ரெண்டு காசு சம்பாரிக்க வந்தா திமிராடா காட்டற திமிரு” என்கிறாள். ( வக்கிரம்)

இப்படி உரையாடலில் அக்காலத்தில் தென் ஆற்காடு, வட ஆற்காடு என அழைக்கப்பட்ட பிரதேசங்களில் ( எனக்கு இன்னும் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலையென  நீளும் பட்டியலில் அத்தனைப் பிடித்தமில்லை) காணும் வட்டார வழக்குகள், கதையில் வரும் பெயர்கள் உட்பட (உ.ம். ‘மண்ணாகட்டி’)  எனக்குப் பிடித்தமானவை.

மேற்குலகில் திறனாய்வாளகள் ஒரு படைப்பாளியை அவன் படைத்த படைப்பு, படைப்பில் இடம்பெறும் மாந்தர்கள், கதை நடைபெறும் தளம், கதைமாந்தர்களின் உரையாடல், கதைசொல்லல்  ஆகியவற்றை ‘Being there’  என்ற சொல்லுடன் இணைத்துப் பார்ப்பார்கள். அச்சொல்கொண்டே அப்படைப்பாளியை மதிப்பிடவும் செய்வார்கள். பாவண்ணனும் தனது படைப்பிலக்கியத்தில் வடிவம் எதுவாயினும் ‘Being there’ ஆக உருமாற்றம் பெறுகிறார். கதையென்றால் கதைசொல்லியாக கதைமாந்தராக, கதைக்களனாக அதற்குள் அவரே எங்கும் நீக்கமற நிறைந்துவிடுகிறார், கட்டுரைகளிலும் இதுதான் நடக்கிறது. அதிகம் தன்னிலையில் சொல்லப்படுவது காரணமாக இருக்கலாம், கதைமாந்தர்களைக் கதை மாந்தர்களாகப் பார்க்க முடிவதில்லை. பாத்திரங்களைக் கடந்து ஆசிரியர் முன்வந்து நிற்பது ஒரு குறை. இருந்தபோதிலும் கிராமப்பின்புலத்திலிருந்து வந்திருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் தெரிந்த மனிதர்களாக, இதற்கு முன்பு எங்கோ பார்த்ததுபோன்ற (déjà vu) தோற்றத்தை அவருடைய படைப்பு மாந்தர்கள் தருவது சிறப்பு. அடுத்ததாக அவரது படைப்புகளில் காணும் உயர்பண்பு: ‘கலை மக்களுக்காக’ என்ற நம்பிக்கையில் எழுதுகோலை கையில் எடுத்திருப்பது. வடிவங்கள் எதுவாயினும் பாவண்ணன் எழுத்துக்கள் அல்லது அவரது படைப்புகள் கருவாக எடுத்துக்கொள்கின்ற பிரச்சினைகள் தனிமனிதனைக்கடந்து பொது நியாயத்தின்பாற்பட்டவையாக இருப்பது அவற்றின் தனித்துவம்.

பாவண்ணன் ஒர் எழுத்துப் போராளி

போராளி என்பவன் யார்? வாய் மூடி கிடப்பவனல்ல; ஆமாம் போடுபவனல்ல; அநீதிக்கு வழிவிட்டு ஒதுங்கி செல்பவனல்ல; தனக்காகப் போராடுபவனல்ல. வேறு யார், அவர்கள் எப்படி இருப்பார்கள்?  அவர்கள் எழுத்தாளர்களெனில்  பா.ஜெயப்பிரகாசம், பாவண்ணன் போல இருப்பார்கள் சத்தமின்றி இயங்குவார்கள். சமூகத்திற்குத் தீங்கு என்றால் ஆயுதமின்றி, ஆர்பாட்டமின்றி அமைதியாகப் புரட்சியில் இறங்குவார்கள். இருவருமே பார்க்க சாதுவானவர்கள், ஆனால் எழுத்தென்றுவந்துவிட்டால் அவர்கள் எடுக்கிற விசுவரூபத்திற்குமுன்னால் அநீதிகள் சிறுத்துபோகும். வாடா போடா என எதிரியுடன் அடிதடியில் இறங்கும் இரகமல்ல, அன்பாய்த் தோளைத்தொட்டு திருத்த விரும்புபவர்கள், நவீன படைப்பிலக்கிய இலக்கணத்திற்கு மாறாக நீதியை இலைமறைகாயாக வலியுறுத்த முனைவர்கள்.

பாவண்ணன் எழுத்துக்களில் சமூக அக்கறையைத் தவிர வேறு நோக்கங்களில்லை.  படைப்பிலக்கியத்தின் வடிவம் எதுவாயினும் தமது மேதமையை உறுதிபடுத்தும் எண்ணங்களும் கிடையா. கண்களை அகல விரித்து வாசகர்கள் பிரம்மிக்கவேண்டும், ரசிக மனங்களைக் கிறங்கச் செய்யவேண்டும் என்பதுபோன்ற ஆசைகளும் இல்லை. மாறாக பாலீதீன் பைகள் கூடாது, மணற்கொள்ளைத் தடுக்கப்படவேண்டும், குடியிலிருந்து அடித்தட்டு மக்கள் விடுபடவேண்டும், திருநங்கைகளை சிறுமை படுத்தும் மனிதர்களை கண்டிக்க வேண்டும், முதியவர்களை அரவணைக்க வேண்டும், பூமியெங்கும் மரங்களை நடவேண்டும்,  காடுகளைப் பராமரிக்கவேண்டும் என்பது உயரிய குறிக்கோள்கள் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில் கலை மக்களுக்கானதென்கிற சிந்தனை அவசியம். அந்த ஒரு காரணத்திற்காகவே பாவண்ணனைக் கூடுதலாக நேசிக்கலாம், அவரை எழுத்துப்போராளியென அழைக்கவும் அதுவே காரணம்.

நன்றி : பதாகை – பாவண்ணன் சிறப்பிதழ்

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி- ரா. கிரிதரன்

Giri

(திரு. ரா. கிரிதரன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். தற்போது இலண்டனில் பணியாற்றி வருகிறார். வளர்ந்து வரும் நல்ல சிறுகதை எழுத்தாளர். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறு நாவல்கள் எழுதியுள்ளார் கர்னாடக சங்கீதம் – ஓர் எளிய அறிமுகம் எனும் நூலை தமிழாக்கம் செய்துள்ளார். சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த ‘ நந்தா தேவி’ சிறுகதை இவரது எழுத்தாளுமைக்கும் கதைசொல்லலுக்கும் நல்ல உதாரணம், தமிழுக்குப் புதிது. சொல்வனம், காந்தி டுடே இணைய இதழ்களிலும; வார்த்தை, வலசை சிற்றிதழ்களிலும் படைப்புகளைக் காணமுடியும். பதாகை இணைய இதழ் இரண்டுவாரங்களுக்கு முன்பாக பாவண்ணன் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. இதழ் நன்கு வரப்பெற்று பாவண்ணனுக்குப் பெருமை சேர்த்திருக்கிறது. இதழின் பொறுப்பாசிரியர் ரா.கிரிதரன். பிறந்த மண் புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்க உள்ள அன்புத் சகோதரர்.http://solvanam.com/?author=25 ; http://beyondwords.typepad.com)

காஃப்காவின் நாய்க்குட்டி – மஜ்ஜையின் ருசி

– ரா. கிரிதரன்

Kaafkaavin Naaikkutti Wrapper
இலண்டனிலிருக்கும் முக்கியமான சுற்றுலாத்தளங்களில் ஒன்றான டிரஃபால்கர் சதுக்கத்திற்கு ஓர் இருள் கவியும் நேரத்தில் சென்றிருந்தேன். உலக முகங்களில் சகல தினுசுகளும் பார்க்கக் கிடைக்குமிடம். புன்னகைக்கும் ஐரோப்பிய முகங்கள், புகைப்படமெடுத்து இருட்டை வெளிச்சத்தில் ஆழ்த்தும் சீனர்கள், காதலர்கள், மெத்ரோ பிடிக்க ஓடும் அலுவலகர்கள், சண்டை பிடிக்கும் அம்மா மகள், வாத்தியக்கருவி இசைப்பவர்கள் என ஒரு புத்துலகில் பிரவேசித்தது போலொரு நெகிழ்வுக்கூடல். சிங்கங்களின் சிலைகளுக்குப் பின்னே தெரிந்த ஆளுயரத் தொட்டிகளிலிருந்து நீரூற்று நடனத் துளிகளில் குழந்தைகளின் சந்தோஷங்கள் பல்லாயிரமாகத் தெறித்தன. உலகத்திலேயே மிகவும் அழகான சதுக்கம் எனத் தோன்றியது. அழகானப் பொழுதும் கூட. இவற்றுக்கு நடுவே ஆங்காங்கே தனிமையில் பிரக்ஞையற்றுச் சுற்றும் சிலரும் தெரிந்தனர். நாம் அறிந்த சில முகங்கள் – பங்களாதேஷ், பாகிஸ்தான் சில சமயம் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பிழைப்புக்காக வந்து தனித்துச் சுற்றுபவர்களும் இருந்தனர். அவர்களது தனிமை அந்த சதுக்கத்தின் குதூகலத்தில் கரைந்துகொண்டிருந்தது. பிறிதொரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு அதே இடத்துக்கு வரநேர்ந்தது. நீரூற்று சலனமற்றுக் கிடந்தது, தெருவிளக்கிலிருந்தும் கடைகளிலிருந்தும் வெளிப்பட்ட நியான் வெளிச்சம் கருங்கல் சுவர்களில் மோதிப்படர்ந்திருந்தன. காற்றின் ஓசையைத் தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அழும் குழந்தை கையில் அது வேண்டியதைத் திணித்தது போல நிசப்தம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடை வாசல்களில் சிலர் மூட்டை போல குளிருக்குச் சுருண்டு படுத்திருந்தனர். வெறும் தனிமை மட்டுமே இருந்தது.

நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ நாவலைப் படித்து முடித்தபோது என்னையும் அப்படிப்பட்ட தனிமை சூழ்ந்தது போலுணர்ந்தேன். கும்மாளங்களும், குதூகலங்களும் முடிந்த பிற்பாடு வரும் தனிமை அல்ல இது. நம் கண்முன்னே திரிந்த மனிதர்கள் அவரவர் தேடல்களைத் தொடரத்தொடங்கிவிட்டதில் நம்மை சூழும் தனிமை. அப்படியாகப் படிக்கும்தோறும் சந்தோஷத்தைக் கொடுத்த படைப்பு. அதற்குப் பல காரணங்கள் உண்டு; குறிப்பாக, புதுவிதமானக் களத்தில் சொல்லப்பட்ட அகப்பயணம் பற்றிய கதையாக நாவல் இருந்தது ஒரு காரணம். நாவலில் வரும் சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட துல்லியமாகத் துலங்கி வந்து நம்முடன் இருந்தது அடுத்த முக்கியமான காரணம். எனக்கு சந்தோஷத்தைத் தந்தது என்பதால் கதை மிக இலகுவான சிக்கலைப் பற்றிச் சொல்கிறது என நினைக்கவேண்டாம். மனித வாழ்வின் அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு படைப்பு படிப்பவர் மனதில் ஆகப்பெரிய தாக்கத்தை அபத்தத்தின் வழியே உருவாக்க முடியும் என்பதைக் காட்டும் படைப்பு. ஒரு நவீன நாவல் இம்மூன்று முக்கியமான தளங்களையும் கணக்கில் கொண்டு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தைத் தரமுடியும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.

‘நீலக்கடல்’, ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி’, ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்’, ‘எழுத்தின் தேடுதல் வேட்டை’ போன்ற புத்தகங்களுக்குப் பிறகு நான் படிக்கும் அவரது நாவல். முதலிரண்டு நாவல்களும் மிகவும் சம்பிரதாயமான கூறுமுறையில் எழுதப்பட்டவை. ‘நீலக்கடல்’ பிரெஞ்சு ஆட்சியின்போது மொரீசியஸ் தீவில் நடந்த தமிழர் காலனியாதிக்கத்தைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். பலவிதங்களில் இந்த நாவல் தமிழ் நவீன இலக்கியத்துக்கு முன்னோடியாக அமைந்திருக்கிறது. காலனியாதிக்கத்தைப் பற்றி நவீன வரலாற்றுப் பிரக்ஞையுடன் எழுதப்பட்ட முதல் நாவல் என இதை வகைப்படுத்தலாம். குறிப்பாக பிரஞ்சு காலனியாதிக்கம் உலக சரித்திரத்தில் மிகவும் கோரமான பக்கத்தைக் கொண்டது. நமது புதுச்சேரி முன்னோர்கள் இதை நேரடியாக அனுபவித்தவர்கள். பிரஞ்சு காலனியாதிக்கம் பிரிட்டீஷ் ஆட்சியை ஒப்பிட்டால் அதிக வன்முறையற்றது எனும் பொதுப்பிம்பத்தை பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, ‘மானுடம் வெல்லும்’ போன்ற நாவல்கள் கோடிட்டுக் காட்டியது என்றால் நீலக்கடல் அக்காலகட்டத்து வாழ்க்கையை வாழ்ந்து காட்டியிருக்கும் ஒரு ஆழமானப் படைப்பு எனலாம். சரித்திரக் கதையில் அமைந்திருக்கும் காதல், வீரம் போன்ற ஒற்றைப்படையான மிகை உணர்வுகளைத் தாண்டி வரலாற்று பூர்வமாக மனித அவலத்தையும், ஆதிக்கத்தின் கரிய பக்கத்தையும் காட்டிய நாவல்.

எழுத்து முறையில் ‘நீலக்கடல்’ செவ்வியல் பாணியை ஒத்திருந்தது என்றால் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ பின்நவீனத்துவத்தின் கூறுமுறையை ஒத்திருக்கிறது எனலாம். எழுத்துமுறையில் ‘காஃப்காவின் நாய்க்குட்டி’ அடைந்த பாய்ச்சலைக் காட்டுவதற்காக சொல்லப்பட்ட இந்த ஒப்பீடு அன்றி பின்நவீனத்துவ பாணியில் மையமற்று சொல்லப்பட்ட கதையாக இருக்கிறது எனும் அர்த்தத்தில் அல்ல. மிகத் திட்டவட்டமான மையமும், வாழ்க்கை தரிசனமும் ஒருங்கே அமைந்திருப்பதால் சில புனைவுக் கற்பனைகளையும் (பேசும் நாய்க்குட்டி) மீறி யதார்த்தத்தில் ஊறிய படைப்பாகவே அமைந்திருக்கிறது. அண்மைக்காலத்தில் இத்தனை சுவாரஸ்யமாக எழுதப்பட்ட மிகச் சொற்பமான நாவல்களில் இதுவும் ஒன்று என்பதும் இதன் பலம்.

மனித வாழ்க்கை துவங்கிய நாளிலிருந்து சந்திக்கும் சிக்கல்களான இடப்பெயர்வு,மனித உறவுகள் மீதான அதிகாரம் தரும் தத்தளிப்பு போன்றவற்றிலிருந்து விடுதலையைத் தேடி அலையும் மனிதர்களின் கதை இது. புதுச்சேரியிலும், யாழ்ப்பாணத்திலும், பிரான்ஸிலும், பிராஹாவிலும் நடக்கும் கதையாக அமைந்திருந்தாலும் மனிதர்கள் சந்திக்கும் சிக்கல்களில் பெரிய மாற்றமொன்றும் இல்லை. விடுதலை வேட்கை அரிக்காத மானுடனே கிடையாது எனும்போது தேசக்கட்டுப்பாட்டால், உறவுகளின் துஷ்பிரயோகத்தால், நெருங்காத உறவின் உஷ்ணத்தால் சிறைபட்டிருக்கும் மனிதன் பெறத்துடிக்கும் முதல் கைவிளக்கு விடுதலை. அதற்கானத் தேடுதலில் அலைபவர்கள் விலையாகக்கொடுப்பது என்ன? கொடுத்த விலைக்குக் கிடைத்த சுதந்திரம் மதிக்கத்தக்களவு இருக்கிறதா அல்லது மற்றொரு சிறையா? சிறையிலிருந்து சிறை, அங்கிருந்து வேறொரு தங்கக்கூண்டு என வழிதெரியாத இருட்டுக் குகைக்குள் கடக்கும் மானுட வாழ்வின் மதிப்பென்ன?

இந்த நாவலின் நித்திலா, ஹரிணி, கமிலி, வாகீசன், சாமி என ஒவ்வொருவரும் கற்பனாவாதிகள், தேடுதலில் ஈடுபடுபவர்கள், ஏமாளிகள் என நமக்குத் தோன்றிய வகையில் வகைப்படுத்தலாம். அவர்கள் தேடும் ஒவ்வொரு விஷயமும் ஏதோ ஒரு உயர்ந்த லட்சியத்தை நோக்கிய பயணமாக இருப்பதில்லை. தங்கள் சொந்த இருப்பை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வாழ்வின் குழப்பங்களுக்குத் தீர்வு ஏற்பட, உறவுச்சிக்கல்களிலிருந்து விடுபட என லட்சியங்கள் மண்ணில் பாவித்து பல சமயம் பிறர் காலடியிலும் தேய்ந்துவிடுகிறது – அக்காவின் புருஷனால் திருமணத்துக்குத் துரத்தப்படும் நித்திலா போல. ஏதோ ஒரு வகையில் எல்லாரும் விடுதலைக்காக ஏங்கி நிற்பதோடு மட்டுமல்லாது தங்களது ஸ்வாதீனமான இருப்பிடத்தை விட்டு விலக வேண்டிய அவசியத்துக்கும் உள்ளானவர்கள்.

நேர்கோட்டு பாணியில் அல்லாது கதை ஒவ்வொரு கதாப்பாத்திரங்களினூடாகத் தாவித்தாவி செல்கிறது. அப்படித் தாவிச் செல்வதிலும் ஒரு ஒழுங்கு அமைந்திருக்கிறது. தனது காதலன், அக்கா கொடுத்த தகவலின்படி தன்னைத் திருமணம் செய்யப்போகும் வாகீசனைத் தேடி இலங்கைவாசியான நித்திலா ஐரோப்பிய பிராஹா நகரத்தை வந்தடைவதிலிருந்து கதை தொடங்குகிறது. மிகச் சரியான இடம்தான். கதையில் தொடக்கத்தில் கொடுக்கப்படும் தேதிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது – 2013, ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கும் கதையாகத் தொடங்குகிறது. நித்திலா ஓரு முன்னாள் போராளி. இலங்கை உள்நாட்டுப்போரின் இயக்கத்தில் பயிற்சி எடுத்தவள். போர் முடிந்து மறுசீரமைப்பின்போது இலங்கை அரசால் புகலிடம் கொடுப்பட்டாலும், இயக்கத்தில் ஈடுபட்டதை மறைத்ததினால் விசாரணைக்குத் தேடப்படும் குற்றவாளி. பிரான்ஸிலிருக்கும் அக்காளும் மாமாவும் அழைத்ததன் பேரில் வந்துவிடுகிறாள். பிராஹா நகரில் தன்னந்தனியாக வாகீசனைத் தேடி அலைவது எதனால்? ஹோட்டலில் வேலை செய்யும் வாகீசன் ஒரு எழுத்தாளனாக ஆசைப்படுபவன். பிராஹா நகரில் பிரான்ஸ் காஃப்காவின் நினைவிடங்களில் நேரத்தைக் கழிக்க விருப்பப்படுபவன் – பிராஹா வருவதற்கான முகாந்திரங்கள் கச்சிதமாக அமைந்திருக்கும் தொடக்கம்.

சார்லஸ் பாலமும், வெல்ட்டாவா நதியும் பிராஹாவின் பிரதானமான அடையாளங்கள். சார்லஸ் பாலம் பழைய பிராஹாவை நவீனப் பகுதியோடு இணைக்கும் மிக முக்கியமான இடமாகும். வெல்ட்டாவா நதியைத் தாண்டி நிற்கும் பாலம் நெடுக கருங்கல் சிற்பங்களும், நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டு சுற்றுலா மையமாகக் காட்சி அளிக்கிறது. இந்த நாவலில் வெல்ட்டாவா நதியும் இந்த பாலமும் தேடுதலின் தவிப்பைக் காட்டும் படிமமாக உருவாகியுள்ளது. பிராஹா நகரில் வாகீசனைத் தேடும் நித்திலா பாலத்தைக் கடக்கும்போது அங்கு படகு கவிழ்ந்து ஒரு ஜோடி இறந்துவிட்டதை அறிகிறாள். கூடவே ஒரு வயதான இந்தியர் அவளைப்பார்ப்பதை கவனிக்கிறாள். இவர்கள் அனைவரையும் ஒரு நாய்க்குட்டி பார்ப்பதையும் கண்டுகொள்கிறாள். வண்ண ராட்டினத்தைச் சுற்றும்போது வெள்ளையும் வண்ணங்களும் சேர்வதும் பிரிவதுமாகக் கண்ணுக்குத் தெரிவது போல இங்கிருந்து ஒவ்வொரு கதாபாத்திரமும் துலங்கி எழத்தொடங்குகிறது. அவ்வப்போது அவர்களது தேடுதலின் தீவிரம் அதிகரிக்கும்போது பிராஹா நகரின் சார்லஸ் பாலத்தின் மீது அவர்களது வாழ்க்கைப் பயணம் குறுக்கும் நெடுக்குமாகக் கடப்பதுமாக அமைகிறது.

இந்த இடத்தில் ஒரு நேர்கோட்டான பாதையில் செல்லாமல் ஒரு புதிர்வட்டப்பாதையில் செல்லும்படி ஆசிரியரைத் தூண்டியிருக்கும் விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார்க்கிறேன். கன்னியாகுமரியில் பெண்ணாசையால் வாழ்வைத் தொலைத்து பின் சுதாரித்து மீண்டவர் பிள்ளைகள் பெரியவர்களானதும் அதே பெண்ணின் ஒப்புதலில் திடுமென வாழ்விலிருந்து நிராயுதபாணியாக நீக்கப்படும் சாமியின் சித்திரம். புதுச்சேரிக்கு சுற்றுலா செல்லும் பிரான்சு தேசத்து எலிஸபெத்தும் தமிழனும் இணைந்த புதிர் நொடியில் உருவாகிப்பிறந்த ஹரிணி ஒரு புறம். மாமனின் துன்புறுத்தலைத் தவிர்க்க திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாக நம்பி வரவழைக்கப்பட்ட வாகீசனைத் தேடி நித்திலாவின் பயணம் ஒரு திசையில். ஊருக்குத் திரும்ப முடியாது எழுத்தாளனாகவும் ஸ்திரப்பட முடியாது ஹோட்டலில் காலத்தைக் கழிக்கும் வாகீசன் விசா சிக்கலுக்காகத் திருமணம் செய்துகொள்ளும் வாழ்க்கை. இவையனைத்தையும் இணைப்பது அவர்களது இருத்தலின் மீதிருக்கும் ஆதாரப்பிடிப்பு. இவர்கள் அனைவரும் முன்னர் வாழ்ந்த வாழ்வைவிட மேலான ஒன்றை அடையும் முயற்சியில் நம்மைப்போன்றவர்கள் தாம். ஆனால் அவர்களின் நிஜ உலகம் ஒரு நாய் வேட்டைக்களம். புதைகுழி. வீழ்ந்தால் மீளமுடியாத நிலையில் இந்தப்பயணம் அவர்களது ஜீவமரண முடிவைத் தாங்கிய ஒன்று.

ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்ட கதையாக அமைந்தாலும் அவர்களது வாழ்க்கை லட்சியம் ஓருடலாக்குகிறது. அவர்களது வாழ்விலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பக்கங்களை அடுத்தடுத்த பகுதிகளாகப் படிக்கும்போது நமக்கு எந்தவிதமான குழப்பமும் ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் நித்திலா வாழ்வில் வரும் சிறு வெளிச்சம் ஹரிணியின் வாழ்வைக் காட்டுகிறது. நித்திலாவுக்காக மொழிபெயர்ப்பாளராக வரும் ஹரிணியின் போராட்டம் அவளது அம்மாவுடனான சங்கமத்துக்கு உதவுகிறது. அம்மாவிடம் கொஞ்சமும் உதவி கேட்கக்கூடாது எனும் வீறாப்புடன் வாழ்ந்து வருபவள் நித்திலாவின் விசா சிக்கலுக்காக நாடு கடத்துவதைத் தவிர்ப்பதற்காக எலிஸெபத்துடன் பேசத்தொடங்குகிறார். ஹரிணியின் அம்மாவோடு ஒரு புது பிணைப்பு உருவாகிறது. அதே போல, கொடூர வாழ்விலிருந்து நித்திலாவை மீட்கப்போராடும் வாகீசன் தனது விசா சிக்கலைத் தீர்ப்பதற்காக ஒரு பிரான்ஸ் நாட்டுப்பிரஜையைத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி ரிலே ரேஸ் போல சக மனித உறவுகளுக்குள் இருக்கும் முடிச்சுகளை இன்னும் சிக்கலாக்கி பாத்திரங்களை பகடைக்காயாக மாற்றியிருக்கிறார் ஆசிரியர். அவர்களை நன்றாகவே அலைக்கழிய வைக்கிறது.

ஜன்னலில் விரையும் சொட்டு நீரைப்போல ஏதோ ஒரு நிதானத்துக்கு வரத்துடிப்பது போல ஏனோ இந்த கதாபாத்திரங்களுக்கு வாழ்வு அமைந்துவிட்டது. சடசடவென ஒரு குழிக்குள் விழுவதும் பின்னர் நிதானமாக எழுந்து முழு சக்தியைத் திரட்டி தேடுவதுமாக வாழ்வைக் கழிக்கிறார்கள். அந்தத் தேடுதலும் தகுந்த முடிவைத் தருவதில்லை. சிலர் தேடுதலுக்காகவே பிறந்தவர்கள் – அவர்களது இயல்பு தங்கள் இயல்பை சந்தேகிப்பது. அங்கிருந்து நகர்வதும் அலைவதும் மட்டுமே.

“ஹரிணி தான் உட்கார்ந்திருந்த சோபாவிலிருந்து எழுந்து, எலிஸபெத்தின் கைகளைப் பிடித்து மண்டியிட்டிருந்தாள். எலிஸபெத் சோபாவிலிருந்து இறங்கினார். அவள் முகத்தை தனது மார்பில் சேர்த்து அணைத்தார். வெதுப்பான ஹரிணியின் கண்ணீர் எலிஸபெத்தின் சன்னமான மேலாடையை நனைத்து மார்பைத் தொட்டது. அவள் கைகள் மேலும் இறுகின. இரு பெண்களின் விம்மலும் தேம்பலும் வெகுநேரம் அங்கே கேட்டது”

பல கதாபத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் இந்த நாவலின் வெற்றி அவர்களுக்கிடையே இருக்கும் அக ஆழத்தை சரியான அளவு காட்டியதில் இருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் ஒருவரது செயல் மற்றொருவரின் தேவையை நிரப்புகிறது. அதன் மூலம் இருவரும் அகவிடுதலையில் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். புதுத் தளம் புதுச் சிக்கல்கள். கதாபாத்திர வார்ப்பினால் மட்டுமே உருவான இணைப்பு மட்டுமல்ல, இந்த நாவலின் அடியாழத்தில் அதிகாரத்துக்கும், விடுதலைக்கும் உண்டான இழுபறி ஆட்டமும் ஒரு காரணம். சொல்லப்போனால், நாவலின் தரிசனம் இந்த இழுபறி ஆட்டத்தில் அமைந்திருக்கிறது.

இலங்கையில் போர் முடிந்து சீரமைப்பு நிலைமைத் தொடங்கியதில் பாதிக்கப்பட்ட பல அகதிகளில் நித்திலாவும் ஒருத்தி. போர் நின்றுவிட்டால் அகதியாக காலத்தைக் கழிப்பவர்கள் தங்களது சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பது அரசு விதி. அது எப்படி நடக்கிறது என்பதை அந்த விதி பார்ப்பதில்லை. நன்னடத்தை விதிகளால் அரசியல் அகதிகளுக்கு இடம் கொடுக்க இருக்கும் சுதந்திரம் அதைப் பறிக்கவும் அரசுக்கு வழிவகுக்கிறது. நித்திலாவின் சுதந்திரம் இந்த அதிகாரத்தின் முனையில் ஊசலாடுகிறது. ஆனால் அரசு குடியுரிமைச் சிக்கலை சரிசெய்தாலும் மத்யூஸ் மாமனின் தொந்திரவிலிருந்து அவளுக்கு விடுதலை கிடையாது. அதை வாகீசன் கையில் அவள் ஒப்படைத்தால், அவனும் ஒரு சூழ்நிலைக் கைதி என்பதை அறியாமலேயே. சுதந்திரம், சமத்துவக்கனவை கனவாகவே வைத்திருக்கும் பிரான்ஸில் சுதந்திரம் என்பது பண்டமாற்று முறையைப் போன்றது என்பதை நித்திலா, வாசீகன், ஹரிணி வாழ்க்கை நிரூபிக்கிறது என்றால் கன்னியாகுமரியிலிருந்து, பிராஹா வந்தாலும் ஆன்மசுதந்திரம் என்பது தேடிக்கொண்டே இருக்கும் நித்திய பயணம் மட்டுமே என்பதை சாமி காட்டுகிறார்.

இத்தனை உள்ளடுக்குகளைக் கொண்ட நாவலை நாகரத்தினம் கிருஷ்ணா தனது திறமையான புனைவு மொழி மூலம் குழந்தை விளையாட்டு போலாக்கிவிட்டார். வாசகனின் கவனத்தைத் தொடர்ந்து தக்கவைக்குவிதமான நடுவாந்திர மொழிப் பிரயோகம். நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்ததன் மூலம் ஒருவித அவசர கதியைப் புகுத்த முடிந்திருக்கிறது. அதே சமயத்தில் நித்திலாவின் கதையில் வரும் இலங்கைத் தமிழ் எவ்விதமான விலக்கத்தையும் கொடுக்காது இலங்கை அகதியின் வாழ்க்கையைத் தத்துரூபமாகக் காட்டுகிறது. பொதுவாக நான் பார்த்தவரை அது இருதலைக்கொல்லி வாழ்க்கை தான். சொந்த சமூகத்தின் விடுதலை தனக்கிடப்படும் மூக்கணாங்கயிறு எனும் நிலைமை வேண்டுதலுக்கு எதுவுமில்லாத நிலைக்கு மக்களைத் தள்ளிவிடும். அந்த மனநிலையைக் காட்டும் நித்திலாவின் கதாபாத்திரம் மிகக்கச்சிதமானப் படைப்பு. அவளது குறிப்பு வரும்பகுதிகள் மட்டும் கதையாகச் சொல்லப்படாமல் அவள் எழுதிய குறிப்புகளாகவே பதியப்பட்டிருந்தால் நாவல் இன்னொரு ஆழத்தை சந்தித்திருக்கும். இது மட்டுமே எனக்கு சிறு குறையாகத் தெரிந்தது.

அகப்பயணத்தைப் போல புறப்பயணமும் நெடியது. கன்னியாகுமாரி, புதுச்சேரி, பாரீஸ், ஸ்டிராஸ்பூர், பிராஹா என தங்கள் கவலைகளைச் சுமந்தபடி அவர்களது வாழ்வு ஓடிக்கொண்டேயிருக்கிறது. நாய்க்குட்டியாக மாறிவிடும் வாகீசனும் அவனது பிரெஞ்சு மனைவியும் கூட ஒருவிதத்தில் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைந்துவிட்டார்கள் எனலாம். கதையின் புனைவு உத்தியாக மட்டும் நின்றிருந்தால் ஆழத்தைக் கூட்டியிருக்காது. நாய்க்குட்டியாகப் பாவித்து வாகீசன் பேசுபவை திக்கற்றவனின் சுயபுலம்பலாகவே தோன்றுகிறது.

மீண்டும் ஒருமுறை டிரஃபால்கர் சதுக்கத்தில் நான் கழித்த அதிகாலைப் பொழுதை நினைத்துப்பார்க்கிறேன். தனித்துவிடப்பட்டது போல சோபைகூடிய வெளி. ஏதோ ஒருவிதத்தில் தேடுதலைத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள் வந்துசெல்லும் crossroads ஆக நம் வாழ்க்கை மாறிவிட்டது. கூட்டுரோட்டு சந்திப்பு போல சிலர் சேர்கிறார்கள், சிலர் பிரிகிறார்கள். வாழ்வின் அபத்தத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் தவிப்பவர்களுக்கு மத்தியில் தங்கள் குழப்பங்களுக்கும் கவலைகளுக்கும் ஏதேனும் ஒருவிடிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் இந்த crossroads வழியே ஓடிக்கொண்டே இருக்கின்றனர். வாழ்க்கை மீதான பிடிப்பு, இருத்தலின் தேவை என சமாதானப்பேச்சு எத்தனை சொன்னாலும் தேடுதல் எனும் தளத்தை வாழும் கலை என்பதாக எடுத்துக்கொள்வதில் தான் தீர்வு அமைந்திருக்கிறது. அக்கலையை மிக நேர்த்தியாகக் காட்டும் நாவலாக காஃப்காவின் நாய்க்குட்டி அமைந்திருக்கிறது. நீலக்கடல் முதல் நாகரத்தினம் கிருஷ்ணாவைத் தொடர்ந்து வருபவன் எனும் முறையில் அவரது அடுத்தகட்ட பயணத்துக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்

—————————————————————–
நன்றி: சொல்வனம் இதழ்

பனிமூட்டம்

ழான் – ப்போல் திதியெலொரான்
பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
ஓவியங்கள்: கார்த்திகேயன்
பன்னிரண்டு ஆண்டுகள். ஆமாம்! கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இங்கிருக்கிறேன். ‘மரியா’ என்னுடைய இரண்டு பெண்களில் மூத்தவள், இதற்கெல்லாம் காரணம் அவள்தான். இரண்டொரு நாட்களில் சொடுக்கு போட்டதுபோல நடந்து முடிந்ததல்ல. போராடிப் பார்த்தேன், கட்டிப் புரளவில்லை, மற்றபடி பெரியதொரு யுத்தம் நடந்தது. தனது முடிவிற்கு ஆதரவாக அவள் முன்வைத்த நியாயங்களும் கொஞ்சநஞ்சமல்ல, எனினும் நிர்ணயிக்கப்பட்ட தேதியை ஆரம்பத்தில் மட்டுமே என்னால் தள்ளிப்போட முடிந்தது. எலிஸ்பெத் இரண்டாவது மகள், தனக்கு இதில் சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோல அமைதியாக இருந்தாள், வெகுநாட்களாகவே, தர்மசங்கடமான சூழல்களில் மதில்மேல் பூனைபோல இருந்து பழக்கப்பட்டவள். இப்பிரச்சினையைக் குறித்துத் தீர்மானிக்கும் முழு அதிகாரத்தையும் தனது மூத்த சகோதரிக்குக் கொடுத்திருந்தாள், பெரியவளோ இதற்காகக் காத்திருந்தவளே அல்ல. அவர்கள் முடிவுக்கு எதிராக எனது ஆட்சேபம் வெகுகாலம் நீடித்ததென்னவோ உண்மை. ‘மரியா’வின் ஓயாத வற்புறுத்தலைக் கிழட்டுக்கழுதையின் பிடிவாதத்துடன் தள்ளிப்போட்டும் வந்தேன். “பொதுவாக இந்த முடிவு எல்லாருக்கும் நல்லது, விடுதியும் தூரத்தில் இல்லை. நம்ம வீட்டிலிருந்து காரில் பத்து நிமிடப் பயணம். உங்களைப் பார்க்க, நாங்களும் ஒவ்வொரு வாரமும் வரப்போறோம். எனக்கும் பொறுப்பானவர்கள் கையிலே உங்களை

ஒப்படைச்சிருக்கேன் என்ற நிம்மதி.” என்றாள் அவள்.

‘ஷத்தோ ரூ’ புற நகர்ப் பகுதி எனது இறுதிகாலத்தை முடித்துக்கொள்வதற்கான இடமல்லவென்றும், பால்யவயதிலிருந்தே கடலுக்கு வெகு அருகில் வாழ்ந்து பழகிவிட்டு இப்போது அதைவிட்டு விலகியிருப்பதென்றால் கடினமென்றும் அவள் விளங்கிக் கொள்ளும் வகையில் கூறிப் பார்த்தேன், எடுத்த முடிவில் அவள் பிடிவாதமாக இருந்தாள். மரியாவின் வாதங்கள் என்னை இங்கே கொண்டுவந்து சேர்க்கவில்லை என்பதொன்றுதான் கடைசியில் இவ்விஷயத்தில் எனக்குள்ள சிறிய ஆறுதல். சமையலறைக்குள் நான் வழுக்கி விழுந்ததும், கேடுகெட்ட தொடை எலும்பு, நாட்பட்ட சுள்ளி போல இரண்டாக உடைந்ததும் இங்கு வரக் காரணம். ‘ரோஸ்’ – வீட்டுவேலைகளுக்கு எனக்கு ஒத்தாசையாக இருந்த பெண்மணி – சமயலறை ‘சிங்க்‘ அடியில் நான் விழுந்துகிடந்ததைக் கண்டிருக்கிறாள். முதல் நாள் முன்னிரவிலிருந்து கேட்பாரற்று, சுயமாக எழுந்திருக்கவும் முடியாமல் கிடந்திருக்கிறேன். இப்படியொரு சம்பவத்திற்குப் பிறகு சம்மதித்துத்தானே ஆகவேண்டும். சிகிச்சைக்குப் பிறகு ஆறு கிழமைகள் மரியா வீட்டில் உடலைத் தேற்றிக் கொள்ளத் தங்க நேரிட்டது. அந்நாட்களில் தான் எஞ்சியிருந்த எனது பிடிவாதத்தை மூத்தமகளால் கரைக்க முடிந்தது.

‘லெ க்ளிஸின்’ (Les Glycines)1 என்ற பெயரை முதன்முதலாக என்னிடத்தில் அவள் உச்சரித்தபோதே வெடவெடத்தது. இப்பகுதியில் ‘ஷெவால் பிளாங்’ (Cheval blanc)2 என்ற விநோதமான பெயர்கொண்ட தங்கும் விடுதிகள் அநேகம். அதைப்போலவே ‘லெ க்ளிஸின்’ என்ற பெயரில் முதியோர் காப்பகங்களும் ஏராளம். பெயர்தான் ‘கிளிஸின்’ என்றிருந்ததே தவிர, கட்டிடத்தில் நான்குபக்கங்களிலும் அரிதாகக்கூட ஒரு கிளிஸினைக் காணமுடியவில்லை. அவை படர்வதற்கு சுவர்கள்தான் ஏற்றவை, எனினும் சுவர்களில் இல்லை. தோட்டத்திலாவது முளைத்திருக்கும் அறிகுறி தெரிந்ததா என்றால், இல்லை. ‘ஷெவால் பிளாங்’ என்ற பெயர்கொண்ட ஓட்டல்கள் அருகில் வெள்ளைக் குதிரைகளை நம்மால் பார்க்க முடிகிறதா என்ன? இன்றைக்குங்கூட இதுபோன்ற பெயர்களை ‘ஏன்’ வைக்கிறார்கள், ‘எதற்காக’ வைக்கிறார்கள் என்பது எனக்கு மர்மமாகவே இருந்துவருகிறது. இதுபோன்ற புதிர்களுக்கு எவரிடமும் பதிலிருப்பதாகத் தெரியவில்லை. தவிர, இந்த ‘ஏன்’ மற்றும் ‘எதற்கு’ மனிதர்கள் அனைவருக்குமே கேலிக்குரியதாக இருக்கின்றனவென்று நினைக்கிறேன். நான் தங்கியுள்ள இவ்விடத்தில் ‘ஏன்’ ‘எதற்கு’ என்று கேட்பது எங்களுக்கு அவசியமில்லையாம், அதற்கான வயதையெல்லாம் கடந்துவிட்டோமாம், சொல்கிறார்கள். இரண்டு செவிலியர்கள், துணையாகச் சிப்பாய்கள்போல இரண்டு தடியர்கள்; அவர்கள் இட்டதுதான் அதிகாரம், வைத்ததுதான் சட்டம், ஒருவரும் அச்சட்டங்களை வளைத்துவிடமுடியாது. இரவுக்கொன்று பகலுக்கொன்று, என்றும் நிரந்தரம்!

சூரியனைக் காண்போமா என்றிருக்கிறது. இதமான வெப்பம் மட்டுமல்ல, அதனுடைய ஒளிக்கும் இங்கே பற்றாக்குறை. எப்படி நிகழ்ந்ததென்று புரியாதவகையில் நிர்மலமான வானிலையின் இடத்தில் ஊத்தை பிடித்த பனிமூட்டம், எங்கிருந்து வந்ததோ? பூமிமீது ஓயாமல் வடிந்துகொண்டிருக்கிறது. இன்றைய தினத்திலும் காலைப்பொழுதை மொத்தமாக மூழ்கடித்துக்கொண்டிருப்பது அதுதான்; விரிந்து கிடக்கும் தோட்டம், மரங்கள், இரும்பினால் செய்யப்பட்ட வெளி வாயிற்கதவு எதுவும் கண்ணிற்படவில்லை. அழுக்கடைந்த மிகப்பெரிய பஞ்சுப்பொதி அவற்றை விழுங்கியுள்ளது. நவம்பர் மாதத்தில், இங்கே இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது. பனிமூட்டம் சூது நிறைந்தது. ஒருவகையில் முதுமைபோல. சோர்வைக் களைந்து அது புத்துணர்ச்சி பெறுவது இரவு வேளைகளில். பிறகு சந்தடிகளின்றி உங்கள் மீது தாக்குதலைத் தொடுக்கும். ஓரிடத்தையும் விட்டுவைப்பதில்லை, தந்திரமாக நுழைந்துவிடும். தன்னை வெளிக்காட்டாமல் நமது எண்ணங்களை மரத்துப்போகச் செய்யும், நினைவுகளை முடக்கிவிடும். விடிந்ததும் மறுபடியும் பனிமூட்டம், எங்கும் – எல்லா இடங்களிலும், அப்படியெல்லாம் உங்களை விட்டு எங்கும் போகமாட் டேன், உங்களோடுதான் இருப்பேன் என்பதைப்போல. இன்றும் வழக்கம்போல கடைசி ஆளாக உணவகத்திற்கு வந்துசேர்ந்தேன். வெகுநாட்களாகவே இதுபோன்றதொரு வேடிக்கையான பழக்கம் என்னிடம் இருக்கிறது. காப்பகத்திலுள்ள மற்றவர்களைப்போல விரைவாக நான் நடப்பதில்லையென்று நீங்கள் நினைக்கக்கூடாது. அந்த மற்றவர்களிலும் பெரும்பாலோர் இங்கு ஜிம்மர் சட்டத்தின் உதவியின்றி நடப்பதில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், எனது தாமதத்திற்கு அவர்களைப்போல எனக்குப் பசி இல்லை என்றும் கூற முடியாது. எனினும் ஸ்பானிய காளைச்சண்டையில், உயிருக்குப் போராடும் விலங்கைக் கொல்லும் புண்ட்டியெரோ(Puntillero)3 ஆசாமியிடம் காணும் பழமையான அனிச்சை செயல் என்னிடமும் இருந்தது. கடைசியில்தான் அது நடக்கிறது, கிட்டத் தட்ட எல்லாவற்றையும் சொல்லிமுடித்த பிறகு, இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்காக நானே முடித்துவைக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஒரு சிறிய பீங்கான் கோப்பைக்கு முன்பாக அமர்ந்திருக்கிறேன். உணவகத்தின் ஊழியை ழிசேல் லெவஸ்ஸெர், உங்களுக்கு எது விருப்பம், தேநீரா காப்பியா என்று வினவுகிறாள். கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஒவ்வொரு நாளும் காலையில் கடவுள் விதித்தபடி கொஞ்சமாகப் பால்விட்டு காப்பி குடிக்கிறேன், இப்பெண்ணும் அதே பிடிவாதத்துடன் எனக்கு காப்பி வேண்டுமா, தேநீர் வேண்டுமா என நிதமும் கேட்டபடி இருக்கிறாள். “மத்மஸல் லாவ் வெவஸ்ஸெர்! தயவுசெய்து வழக்கம்போல கொஞ்சம் பால்விட்டு காப்பி கொடேன்!” வலதுபக்கம் அமர்ந்திருந்த பெண்மணி முனங்கினாள். எதிரே இறுகிக் கடினமாகவிருந்த ரொட்டி, குழைந்த வெண்ணெய், வாயில் வைக்கமுடியாத அளவிற்கு சர்க்கரை கலந்திருந்த ஜாம். பெண்மணியிடம், “நீ எப்போதும் குறைகூறிக் கொண்டிருப்பவள்” என்று கூற நினைத்த எனது விருப்பம், மேசையில் எனக்கு முன்பாக வைக்கப்பட்ட ஒரு கண்ணாடித் தம்ளர் தண்ணீரையும் மூன்று மாத்திரைகளையும் பார்க்காமல் இருந்திருந்தால் நிறைவேறி இருக்கும்; வார்த்தைகளை விழுங்கிக்கொண்டேன். மறுநாள் சூரிய உதயத்தை காணாமற் போய்விடுவேனோ என்ற அச்சத்தின் காரணமாக நான் விழுங்கவேண்டிய மாத்திரைகள் அவை. இரத்த அழுத்தத்திற்காக இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு மாத்திரை, தைராய்டு பிரச்சினைக்காக வெள்ளை மாத்திரை, பிறகு வெளிர் நீலத்தில் ஒன்று. இருப்பிலிருந்து நம்மை விலக்கிவைக்கக் கண்டுபிடித்ததில் முதுமையைக் காட்டிலும் வேறு சாபம் இருக்கமுடியாது. இங்குள்ள சிலருக்கு வானவில்லில் இருக்கிற அத்தனை நிறத்திடமும் உரிமையுண்டு. மேசையில் குவிக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளை விழுங்கவே பெரும்பான்மையான நேரத்தை அவர்கள் செலவிடுவார்கள். மாத்திரைக் குவியலோடு பூஜ்ய விழுக்காடு கொழுப்புச் சத்துடைய வெண்ணெய் என்ற பெயரில் ஏதோ ஒன்று தடவப்பட்ட ரொட்டியும் காத்திருக்கும். இங்கே அனைத்துமே பூஜ்ய விழுக்காடு கொண்டவைதான். நாங்கள் ஆரோக்கியமாகச் சாகவேண்டும் என்பது அவர்களின் விருப்பம். நேற்றிரவுகூட ஒருவர் புறப்பட்டிருந்தார். லெ கிளிஸின் காப்பகங்களில் ‘இறப்பு’ என்ற சொல்லை மிகவும் கவனமெடுத்துத் தவிர்த்துவருகிறார்கள். காப்பகத்தில் ஒரு சில பகுதிகள் இருக்கின்றன, அங்கு ‘இறப்பை’ எந்த நேரமும் சந்திக்க வாய்ப்புண்டு. எனினும் மரணத்தை நேரிடையாகச் சந்திக்கும் விஷயத்தில் துணிச்சல் கூடாதென்று வழக்கமாகவே பிடிவாதம் காட்டி வருகிறார்கள். அச்சந்திப்பைத் தவிர்க்க, வலம் வரவேண்டும், மரியாதையுடன் விலகிக்கொள்ளவேண்டும், ‘புறப்பாடு’ என்ற அழகானதொரு வார்த்தை ஆடைகொண்டு மரணம் உடுக்கப்பட்டிருக்கிறது. உணவகத்தில் அன்று காலையில் தியானச்சூழல் நிலவியது என்றெல்லாம் என்னால் கூறிக்கொண்டிருக்க முடியாது. வழக்கத்திற்கு மாறாக சப்புக்கொட்டுவதும் மெல்லுவதும் சற்றுக் குறைந்திருந்தது என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை வாய்களுக்குச் சாப்பிடும் ஆர்வம் குறைவாக இருந்திருக்கும். பார்வைகள் ஓரிடத்தில் நிலையாய் இல்லை. கரண்டிகளும் பிறவும் எழுப்பும் ஓசைகள்கூட மிகவும் அடக்கமாக ஒலிக்கின்றன. இன்மையின் வெளிப்படையான அறிகுறி ஒன்றே ஒன்றுதான், எல்லோருடைய பார்வையும் அதன்மீதுதான் கூடுதலாக இருந்தது: மர்செல் கர்னியெ இல்லாத காலி நாற்காலி அது. உணவகத்தில் நட்டநடுவே வாய் பிளந்துகொண்டிருந்த அக்காட்சி மிகவும் கொடுமையானது.

அதிகாலையில் கட்டிலில் மிகவும் அமைதியாகப் படுத்திருந்ததைக் கண்டோம். அவருடைய புறப்பாடு ஒருவருக்கும் வியப்பூட்டவில்லை. மாரடைப்புக்குப் பலியாகியதாகச் சற்று முன்பு காப்பகத்தின் நிர்வாகி திருமதி வெர்ழ்லெ கூறியிருந்தாள். தும்மியதில் தெறித்ததைத் தடுக்க உணவு மேசையிலிருந்த துணிகொண்டு வாயை மூடினேன். குருதிநாள் விரிசல், மாரடைப்பு, நுரையீரல் வீக்கம் காரணம் எதுவாயினும் கடைசியில் அதற்குப்பெயர் மாரடைப்பு. விநோதமான இக்கொரிடாவின் (Corrida)4 மூன்றாவது தெர்சியோ (Tercio)5வில் எங்களில் ஒரு நபரை மரணம் முடித்துவைக்கும் சம்பவத்தை எடுத்துச்சொல்ல ‘மாரடைப்பு’ என்ற சொல்லைக்காட்டிலும் மேம்பட்ட சொல் அவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இங்குள்ளவர்களில் நான் மட்டுமே ‘எஸ்டோகாட்’

(Estocade)6 எப்படி நடக்கிறதென்பதை நேரில் கண்டவன். இங்கேயும் அதுதான் நடந்தது. வடிவிலும் கூர்மையிலும் குறைசொல்ல முடியாத ‘எஸ்டோகாட்.’ கிழங்களாக வலம்வருகிற ‘கிளிசிசின்’களில் மரணத்திற்கு ‘எஸ்டோகாடை’ உபயோகிப்பதில் ஒருபோதும் சங்கடங்கள் இருப்பதில்லை. நீண்ட நாட்களாகவே மர்செல் கர்னியெ தனக்கென்று வைத்திருந்த பாந்த்ரீ (banderilles)7 சிப்பத்துடன் சுற்றிவந்தார். கட்டுப்படுத்த இயலாமல் அதிகரித்திருந்த கொலாஸ்ட்ரோல், குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்த சர்க்கரை, களைத்திருந்த இரத்த நாளங்கள் என பிரச்சினைகளை வைத்துக்கொண்டு இறப்பதற்குத் தவணை கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தில் அவரும் ஒருவர், இங்கு அதுபோல டஜன் கணக்கில் பலர் இருக்கின்றனர். ஆவிகள்போல இருக்குமிடம் தெரியாமல் இருப்பார்கள். தங்கள் நேரத்தில் கணிசமான காலத்தை ‘சூப்’பிற்கென்று ஒதுக்கிக் காத்திருப்பார்கள். தங்கள் அறைகளைவிட்டு வெளியில் வருகிறார்களென்றால் அது வயிற்றை நிரப்ப உணவகத்திற்கு வருவதுதான். அதன்பின்னர் தங்கள் முதுமைக்கு அடிபணிந்து கூன்போட்ட முதுகுடன் சாய்வுநாற்காலிகளுக்குத் திரும்பி மீண்டும் அடுத்தவேளை உணவுக்கான நேரம் வரும்வரை காத்திருப்பார்கள். மர்செல் கர்னியெ கூட அக்கூட்டத்தைச் சேர்ந்தவர்தான். முழங்காலில் கிடக்கும் துண்டையும் புறங்கையையும் தடவிக்கொடுத்தபடி நாள் முழுக்கத் தனது இரவுமேசை மீதிருக்கும் கடிகாரத்தை அவதானித்த வண்ணம் இருந்தார். புறப்படுவதற்குத் தயாராகவிருக்கிற உயிர்கள், துறைமுகமேடையில் தாமதமின்றி நிகழவிருக்கிற புறப்பாட்டின் வரவை எதிர்பார்த்து வலம் வருவார்கள். ‘மர்செல் கர்னியெ’வின் காலியாகவிருந்த நாற்காலியை ஆவலுடன் பார்த்தேன்.

ஞாயிற்றுக்கிழமை, பார்வையாளர் களுக்கான நாள். நுழைவுவாயிலுக்கு நேர் எதிராகவிருந்த ஹால் பெஞ்சு ஒன்றில் உட்கார்ந்தவண்ணம் பிற்பகலைச் செலவழித்தேன், என்னுடன் வேறு சிலரும் இருந்தனர். கண்ணாடித் தடுப்புக்கு மறு புறம் தெரிந்த உயிர்ப்பியக் கத்தில் எனது கவனம் இருந்தது. மணிக் கணக்காக அரைத்தூக்கத்தில் நான் இருக்கும் அந்தவேளையில், சிறுசிறு குழுக்களாக உறவினர்கள் உரத்துப் பேசியபடி வேகவேகமாக உள்ளே நுழைவார்கள். எல்லா ஞாயிற்றுக்கிழமை களையும் போலவே அன்றும் ‘மரியா’வை எதிர்பார்த்தேன், உணர்வு மழுங்கியிருந்த மூளை விழிப்புற்றுச் சென்ற வருடத்தில் அவள் இறந்ததை நினைவூட்டியது. வரக்கூடாத இடத்தில் வந்த கட்டியொன்று மூன்று மாதத்தில் அவள் உயிரைக் குடித்துவிட்டது. தனக்கு முன்பாகப் பிள்ளைகள் இறப்பைக் காண்பதென்பது கொடுமை, ஒருவருக்கும் நேரக் கூடாது. இரண்டும் இரண்டும் நான்கென்பதுபோல, தன்னுடைய மகளுக்கு முன்பாக தந்தை என்பதுதான் நியாயம்! எலிஸபெத்தும் அபூர்வமாக என்னைப் பார்ப்பதற்கு வருவதுண்டு. அவளுடைய ‘நீம்’ நகரம் ‘ஷத்தோ ரூ’விலிருந்து வெகுதூரம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு உணவிற்குப் பிறகு தொலைபேசியில் அழைத்துப் பேசுவாள்; ஆனால் எனக்குக் காது முன்புபோலக் கேட்பதில்லை. ஆயிரம்பேர் பேசினாலும் கடந்தகாலத்தில் என்னால் அடையாளப்படுத்த முடிந்த சொந்தப் பெண்ணின் குரல், தற்போது நீர்மப்பொருள் கொதிபோல மேலும்மேலும் கேட்கச் சாத்தியமற்ற ஒலியாகிவிட்டது. எனவே ஒருவித பாவனை உரையாடலை நடத்துகிறேன். “ஆம்”, “இல்லை”, “நல்லது” போன்ற என் வார்த்தைகள், முணுமுணுப்பாக, பொய்யான உரையாடலை ஆர்வத்துடன் நிகழ்த்தும். பின்னர் இருவருமாக “பிறகு பார்ப்போம்”, “அடுத்த வாரம் பேசலாம்”, “உடம்பைக் கவனித்துக்கொள்ளுங்கள் அப்பா”, “எனது அன்பு முத்தங்கள்” சொற்களால் அதனை முடித்துக்கொள்வோம். ஞாயிற்றுக்கிழமைகள் பொதுவில் எனது விருப்பத்திற்கு உகந்தவை அல்ல. இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எதையோ நினைவூட்டும் ஆணைகள் அவற்றில் பொதிந்திருக்கின்றன. குறிப்பாக “உண்மையான வாழ்க்கை என்பது இங்கே, நான்கு சுவர்களுக்குள் இல்லை, மாறாக வெளியே, அடர்ந்த பனிமூட்டத்திற்குள் இருக்கிறது, ஆனால் உங்களுக்குத் தற்போதைக்கு அங்கு செல்லச் சாத்தியமில்லை” என்பதைக் கூறுவதாக உள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்பாக, மர்செல் கர்னியெ உடலை எடுத்துச் சென்றார்கள். காளைச்சண்டையின் முடிவில் கொன்ற காளையை இழுத்துசெல்வதுபோன்ற சத்தம் எனது தலைக்குள் அப்போது கேட்டது. இப்போதெல்லாம் “மரணம் என்னை விரும்பவில்லையோ” என அடிக்கடி நினைக்கிறேன். கீழே இருக்கிற உயிர்களின் இறுதிப்பயணத்திற்குதவ, மரணத்திற்கு ஒருவேளை தொடர்ந்து வயதானதொரு புண்ட்டியெரோ (Puntillero) ஆசாமியின் தேவை இருக்கிறதோ? நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கான இடம் இங்குதான். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு காளைச் சண்டைத் திடலில் பெற்றிருந்த அதே இடம். ஏனென்றால் கிளிசின்களிலும் சில நேரங்களில் ‘எஸ்டோகாட்’

(Estocade)6ஐ சொருகியபின்பும் முடிவு தாமதமாகவே வருகிறது. இந்த அற்ப உயிர்த் தாரை வற்றாமல் பாய்வதற்குக் காலம் இன்னமும் இருக்கிறது. நள்ளிரவில் என்னுடைய கட்டிலைவிட்டு நழுவவேண்டும், நாள்பட்ட சடலமாகிப்போன வலிமூட்டையைக் கொஞ்சம் மறந்து, நடைக்கூடத்தில் இருளில் பதுங்கிச் செல்லவேண்டும். சரியான கதவைக் கண்டுபிடிக்கும்வரை இதயத் துடிப்புடன் ஒவ்வொரு அறையாகக் கடக்கவேண்டும், இரவு காவலர் பிடியில் அகப்பட்டுவிடாதென்ற பிரார்த்தனையும் முக்கியம்! கட்டில்வரை நெருங்குகிறேன். கடந்த காலத்தில் காளைச்சண்டை மணற் திடலில் செய்த அதே காரியம். இறுதி இழையை அறுத்து, அவற்றுக்கு விடுதலை அளிக்கிறேன். அதிசயமாக, கண்ணுக்குப் புலனாகாத அந்தத் தொப்புள்கொடியைத் துண்டிக்கும் தருணத்தில் மட்டுமே உயிர்வாழ்வதைப் போன்ற உணர்வு என்னிடம் இருக்கிறது, ஒருபோதும் பிறநேரங்களில் அதை உணர்ந்த அனுபவமில்லை. பிதா கர்னியெவின் இறுதிமூச்சைச் சிரமமின்றிப் பறிக்க முடிந்தது. பிறரைப்போலவே, முகத்தில் அழுத்திப்பிடித்த தலையணை, நுரையீரலில்

எஞ்சியிருந்த உயிரைக் குடித்து முடித்தது. எல்லாவற்றையும் செய்து முடித்தபிறகு கடைசியாக ஒருமுறை அவர்களை அவதானிப்பதுண்டு. அந்திக் கருக்கல் அவர்கள் முகத்தைத் திரையிட்டிருப்பினும், அஸ்தமித்த அவர்கள் பார்வையில் சிற்சிலசமயங்களில் ஒருவித நிம்மதி இழைகள் இருப்பதாகத் தோன்றும்.

நாளை, எனக்கு 102 வயது. ‘ழிஸ்லெர் லெவஸ்ஸெர்’ வியப்பில் வாய்பிளக்கவேண்டும் என்பதற்காகவே தேநீர் குடிக்க இருக்கிறேன்.

குறிப்புகள்:

1. Glycine ஒருவித கொடி; நீலம், வெள்ளை ஆகிய நிறங்கள்கொண்ட பூக்களையும் காணலாம்.

2. Cheval blanc – வெள்ளைக்குதிரை

3. Puntillero – காளைச் சண்டையின் இறுதியில், உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் காளையைக் கொல்வதற்கென உள்ள ஊழியர். அவர் உபயோகிக்கும் குறுவாளுக்கு ‘Puntilla’ என்று பெயர்.

4. Corrida – ஸ்பெயின் மற்றும் பிரான்சு நாட்டின் வடபகுதியில் நடக்கும் காளைச் சண்டை

5. Tercio – காளைச் சண்டையின் மூன்றாவது கட்டம் அல்லது இறுதிச்சுற்று

6. Estocade – காளைச்சண்டையில் காளையை அடக்கும் வீரனின் கையிலுள்ள வாள்

—————————————

நன்றி: காலச்சுவடு ஜனவரி இதழ்

கோட்டுக் கவிஞன் – ‘செந்தில் பாலா’ « மனிதர்களைக் கற்றுக்கொண்டு போகிறவன் » – என்ற கவிதைத் தொகுப்பை முன்வைத்து…..

ஓர் அசல் படைப்பிலக்கிய வாதி நேர்க்கோட்டில் நடக்க முயன்று தோற்பவன். அ ந் நேர்க்கோடு அவனைச் சர்ந்த சமூகம் ‘தனக்கன்று பிறர்க்கு’ எனப் போட்டுவைத்திருக்கும் கோடல்ல, தனக்கென்று நித்தம் நித்தம் அழித்தழித்துப் போட்டுக்கொள்ளும் கோடு. மீறுதல் அதற்காகத் தன்னை வருத்திக்கொள்ளுதல் என்கிற சுய விதிக்குள் வருவது. செந்தில் பாலா என்ற இளைஞரும் தனக்கென கோடுகளைக் கிழித்துக்கொண்டு அல்லாடுபவராக இருக்கிறார். எவ்வித முகப்பூச்சுகளுமற்று அகப்பசிக்கு கவிதை சமைக்கும் இந்த இளைஞர்களால் தமிழ்க்கவிதை யின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

 

மேற்குலகில் கலை கலைக்காக என்ற குரல் எழலாம். ஏற்றத் தாழ்வுகள் மலைக்கும் மடுவுக்குமாக உள்ள நாட்டில் , இறந்தபிணத்தை எடுத்துச் செல்லவும் சாதிபார்க்கும் ஒரு நாட்டில் சமூகப் பிரக்ஞையற்று ஒருபடைப்பிலக்கியவாதி இருக்க முடியுமெனில் அவன் நேர்மை குறித்து சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகுப்பு குறித்து மேலே செல்வதற்கு முன்பாக இளைஞர் செந்தில் பாலாவுக்கு வைக்கும் வேண்டுகோள், தனி மனித மயக்கத்தில் ஆழ்ந்திடாமல் அவ்வப்போது சகமனிதனைப் பற்றிய பிரக்ஞையுடனும் எழுதுங்கள்.

 

கலை கலைக்காகவா ? அல்லது கலை மக்களுக்காகவா ? என்ற விவாதம் மேற்கத்தியர்களுக்கே கூட இன்று அலுத்துவிட்ட து. ‘எனக்குத் தொழில் கவிதை’ என் கிறவர்கள் என்ன செய்கிறார்கள் ? வெகுசனப் புரிதலுக்கு உட்படாத அல்லது சாதாரணக் கண்கள் காணப் போதாதக் காட்சியை மொழிபெயர்க்கிறார்கள். சார்த்ரு ( Jean Paul Sartre) « ஒரு கலை படைப்பின் பிரதான நோக்கம் நமது வாழ்க்கையின் மிகமுக்கியமானவற்றை கவனத்திற்கொள்ளச் செய்வது » என் கிறார். கலை, படைப்பிலக்கியம் என இயங்கும் நெஞ்சங்கள் அனைத்திற்கும் இக்கூற்று பொருந்தும். ‘பார்த்தல் மட்டுமே எப்படி பார்வையாகும் ?‘ என இக்கவிதைத் தொகுப்பில் ஓரிடத் தில் செந்தில் பாலா கேட்பது கூட அந்தப் பொருளில்தான்.

 

அண்மையில் இந்தியா வந்திருந்தபோது புபுதுச்சேரி, கடலூர் சிதம்பரம், கும்பகோணம் எனப் பேருந்து நிலையங்களைக் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. எல்லா பேருந்து நிலையங்க்களிலும் கூச்சமின்றி மனிதர்கள் கால் நடைகள்போல மூத்திரம்போய்கொண்டிருந்தார்கள். ஒரிடத்தில் சிவப்பு புடவை அணிந்த பெண்கள் கூட பேருந்தை சாலை ஒரத்தில் நிறுத்திவிட்டு எவ்விதக் கூச்சமுமின்றி இயற்கை உபாதைகளைக் கழித்துக்கொண்டிருந்தார்கள். பார்க்க நேர்ந்த என்னைப்போன்ற ஒரு சிலர்தான் பதற்றத்துடன் தலையைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்து. அக்காட்சி என்னுடன் பயணம் செய்த பலருக்கு ப் பழகியது என்பதை அவர்களில் இயல்பான செயல்பாடுகள் உறுதிசெய்தன. எனக்குங்க்கூட இவை உறுத்தாதவையாக இருந்துள்ளன- அதாவது – ஆண்கள் மட்டுமே இதற்குக் காப்புரிமை பெற்றவர்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவரை. அன்றையதினம் அதிசயம்போல பேருந்தில் என்னுடன் பயணம் செய்த அனேகர் செந்தில் பாலா போல ‘பார்த்தல் மட்டுமே எப்படி பார்வையாகும் ?’ எனக் கேட்பவர்களாகத்தான் இருந்தார்கள்.

 

கூட்டம் கூட்டமாக அவசரகதியில் எந்திரத் தனமாக இயங்கும் இவ்வுலகில் கவிஞன் மாத்திரம் எதையோ காதில் வாங்கியபடி நிற்கிறான். எதையோ கண்டு மெய்சிலிர்க்கிறான். அகத்தில் திரையிட்டு தேம்பி அழுகிறான், சிரித்து மகிழ்கிறான் அல்லது அருவருப்புடன் முகம் சுளிக்கிறான். அவ்வனுபவத்தை மொழிபடுத்தினால் அவன் கவிஞன், தவறினால் பைத்தியக்காரன் என்பதற்குக் கீழ்க்கண்ட இச்சிறிய உருவகக் கவிதை நல்ல உதாரணம்:
« இன்றைய எனக்கான பகல் நேரம்
ஜன்னலில் எட்டிப் பார்த்தபடி காத்திருப்பது கண்டு
தாழ்ப்பாளுக்கு ஓய்வளித்து கதவு திறக்க
வெப்பத்தின் வலிபொறுக்காது
புரண்டுகொண்டிருந்தன
நேற்றைய குப்பைகள் »

 

« இன்றைய எனக்கான பகல் நேரம் » என்று எழுத எவருக்கும் சாத்தியம். ஆனால் « வெப்பத்தின் வலிபொறுக்காது புரண்டுகொண்டிருந்தன நேற்றைய குப்பைகள் » என்று எழுத வெகுசனப் பார்வையிலிருந்து விலக்கப்பட்ட்ப் பார்வையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

 

‘கணக்கின் கணக்கு ‘

கீழ்க்கண்ட கவிதைக்கு செந்தில் பாலா பெயர் சூட்டவில்லை. என்னுடைய சௌகரியத்திற்காகவும் உங்க்களுடைய சௌகரியத்திற்காகவும் ‘கணக்கின் கணக்கு’ என்ற பெயரை கவிதைக்கு வைத்தேன். கவிதைப் பனி உறைந்த நீர்படுகையை நினைவூட்டுகிறது. ஆழமற்ற நீர்பரப்ப்பு போல அமைதி பூசிய கவிதை. கால்களை, சில்லிட்ட நீரில் வைக்கிற்போது பாசியும் நொய்மணலும் சேர்ந்தொரு கலவை முழகாலைத் தொட்டு , முதுகுத் தண்டைக் குறுகுறுக்கச் செய்கிற கவிதை, வாழ்க்கையை வரவு செலவு கணக்கில் வைக்கிற மனிதம் பற்றிப் பேசுகிறது.

 

எல்லாவற்றிர்க்கும் அல்லது எல்லோருக்குள்ளும்
ஒரு கணக்கு இருக்கிறது
மௌனத்துக்குள்ளும் முணுமுணுப்புக்குள்ளும்
புலம்பலுக்குள்ளும்
வேடிக்கைப் பார்ப்போருக்குள்ளுங்கூட
ஒரு கணக்கு இருக்கிறது
அனைவருக்குள்ளும் ஒரு கணக்கு
ஒடிக்கொண்டே இருக்கிறது

எல்லாவற்றிர்க்கும்
கணக்குப் பார்க்க முடியாது அல்லது கூடாது
அதிலும் ஒரு கணக்கு இருக்கிறது
உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கும் கணக்கிற்கும்
வெளியில் பேசும் கணக்கிற்கும்
சம்பந்தமே இருக்காது ஆனால் இருக்கும்
ஒரு கட்டத்தில் எல்லா கணக்குகளும்
பொய்த்துபோகின்றன

அனாயசமாக
கணக்கு
அது ஒரு கணக்கைப்போட்டுவிட்டு
மிக இயல்பாகப் போய்கொண்டிருக்கிறது.

 

இங்கே மனிதர்கள் அனைவருமே ஏதோவொரு கணக்குடன் முகமன் கூறி , ஏதோவொரு கணக்கில் கட்டியணைத்து, ஏதோவொரு கணக்கின் அடிப்படையில் பிரிவையும் தீர்மானிக்கின்றனர். எல்லோருக்குமே விடைசரியாகவே இருக்குமென்ற நம்பிக்கை. ஆனால் நமக்கும் மேலே கணக்கோ வேறொரு கணக்குடன் நமது விதியை எழுதிக்கொண்டிருக்கிறது.

 

எல்லாபடைப்பாளிகளிடம் காணக்கூடியதுதான். கவிஞன் நதியோ, நிலாவோ, தெற்கத்தி காற்றோ அல்ல. மனிதன். இச்சமூகத்தில் ஒருவன். உங்கள் அண்டைவீட்டுக்காரனாக இருக்கலாம். அலுவலகத்தில் உங்கள் வலப்பக்கம் அமர்ந்து கோப்பு பார்ப்பவனாக இருக்கலாம். ஏன் உங்கள் சகோதரனாகவோ சகோதரியாகவோ கூட இருக்கலாம். உங்களிடம் கவிதையொன்று எழுதியிருக்கிறேன் அபிப்ராயத்தைச் சொல்லுங்கள் எனக் கேட்கிறபோது, தவறாமல் இரண்டொரு நொடிகள் ஒதுக்கி அக்குழந்தைக் கட்டியது மணல்வீடென்றாலும் கோட்டையெனக் கூறப் பழகிக்கொள்ளுங்கள். ஒரு கவிஞனைப் போற்றுவது மரம் வளர்ப்பது போன்றது

 

« கேட்பாரற்று கிடப்பது பற்றி எழுதி
யாரிடமாவது படித்துக்காடும்பொருட்டு
கவிதைக்குறித்தும் கவிதைக்களம் குறித்தும்
பேசத்தொடங்கிவிடுகிறேன்

எதிரிலிருப்பவர்கள் கவனம்
இங்கில்லை என்பதிலிருந்துதான்
தெரிந்துகொள்கிறேன்
எனது கவிதையோடே
செத்துக்கொண்டிருக்கிறேன் என்று »

 

செந்தில் பாலாவின் இக்கவிதையைப் படிக்க நேரும் எவரும் இனி ஒருபோதும் கவிதையையோ கவிஞனையோ அலட்சியம் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன்.

 

‘அடைதலும் அடைத்தலும்’ இத்தொகுப்பிலுள்ள ஒரு முக்கியமான கவிதை. கவிஞனாக தனது இருத்தலைக் கற்பித்துகொள்வதால் எழுத நேரும் கவிதை. செந்தில் பாலா இயல்பை முன் நிறுத்திப்பாடிய கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. இக்கவிதை அவர் இயல்பே கவிதையாக ஒளிர்வதுதான் என்பதைப் பறைசாற்றும் விதத்தில் இருக்கிறது.

 

அடைதலும் அடைத்தலும்

« எல்லோரையும் போல வாரச்சந்தையில் வாங்கிவிட்டேன்
குருவிகள் வளர்ப்பது பெரும் பாவமென்று
எனக்குத் தோன்றவில்லை

அப்படிப்பார்த்தால் வளர்ப்பதென்பதே பாவம் தான்
……………………….
……………………………

வளர்க்கப்படுகிறோம் என்பதை அறியாமலேயே வளருகின்றன
மாடுகளும், ஆடுகளும், கோழிகளும் கூட

வளர்த்தல் வேறு, வளருதல் வேறு புரிகிறது என்றாலும்
யாரும் வளருவதே இல்லை
…………………………
………………………….

கூண்டுக்குள் அடைபட்டுக்கிடப்பதை
பொறுக்க முடியாமல் பறக்கவிட்டுவிட்டேன்
ஆனாலும்
எங்களை யாரேனும் விட்டாலும் கூட
எங்கே செல்வோம் பறக்க. »

வினாக்குறியின்றி முற்றுபுள்ளிவைத்து கேள்வியையே பதிலாக முடித்து இச்சமூகத்தைப் பட்டியாக அல்லது தொழுவமாகவும் மனிதர்கள் வளர்ப்பு விலங்குகளாகவும் கண்டுவருந்துகிற கவியுள்ளம் இறுதியில் எங்களை யாரேனும் விட்டாலுங்கூட எங்கு செல்வோம் பறக்க எனக் கவிஞர் நமது சர்பாக போதாமையில் வருந்துகிறபோது, நம்மால் இயலக்கூடியது ஒன்றேஒன்றுதான் சமூகத் தொழுவத்தில் அடைபட்டு கிடப்பது.

« இறுதியாக
எதையாவது எழுதாமல்
தூங்கமுடிந்ததில்லை என்பதெல்லாம்
நிச்சயம் எனக்குக் கிடையாது » என்றும்

« இதையெல்லாம் எழுதியிருக்கலாமே
என்றபடி தூங்கிக் கொண்டிருக்கிறேன் » என்றும் செந்தில்பாலா சொல்கிறார்.

எனவே விழித்த தும் மறக்காமல் கவிதை எழுதும் பழக்கத்தை செந்தில் பாலா தொடர்வது தமிழ்க் கவிதை உலகிற்கு பயன் தரும் என்பதை நெருக்கமான நண்பர்கள் நினைவூட்டவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்
_____________
மனிதர்களைக் கற்றுகொண்டு போகிறவன்
ஆசிரியர் : செந்தில் பாலா
பதிப்பாளர் : நறுமுகை, 25 /35 தேசூர்பாட்டை, செஞ்சி -605 202