Category Archives: Uncategorized

மேடையேற்றப்படாத ஒரு விவாதம்.

எழுத்தாளனை அடையாளப்படுத்துதெது படைப்பா, கொள்கைத்தேர்வா?  -ஒரு பிரெஞ்சு படைப்புலக அண்மைக்கால சர்ச்சை

Polémique என்ற பிரெஞ்சு சொல்லுக்கு மூலம் கிரேக்கமொழி: பட்டிமன்றம், தருக்கம், வாய்ச்சண்டை, சொற்போர், வாதம் கொஞ்சம் கதவைத் திறந்தால் அனல் வாதம், புனல்வாதமென அவ்வளவையும் சேர்த்துக்கொள்ளலாம். பக்கவாதம் இதிலடங்காதது.  ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்/பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்கிறது மணிமேகலை. இலக்கிய சர்ச்சைக்கும் இப்படியொரு விதியை வைக்கலாம். ‘சர்ச்சை’ மேடையேற்றப்படாத ஒரு விவாதம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதிய விதிமுறைக்குள் அதுவும் வரக்கூடியது. பெரும்பாலும் அரைவேக்காட்டுத்தனமாகவிருக்கிற இன்றைய பட்டிமன்றங்களை நாம் கணக்கிற்கொள்ளகூடாது. அங்கே வைக்கப்படும் வாதம், மறுப்பு அனைத்தும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மேடையேற்றப்படும் நாடகம் -பம்மாத்துகள் -பாசாங்குகள். போலியான குரல்கள் ‘சர்ச்சைக்குள்’ ஒலிக்காதென்பது ஆறுதலான செய்தி. பொதுவாகக் கலகக்குரல்கள் அல்லது எதிர்ப்புக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக நம்புகிறார்கள், கோபத்துடன் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்கிறார்கள். சர்ச்சையின் முடிவில் தங்கள் எழுப்பும் வினாவிற்கு தெளிவான விடைகிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருக்கிறது. தமிழ்மண்ணில் பாங்கறிந்து சர்ச்சையில் இறங்குகிறார்களோ இல்லையோ பிரெஞ்சு மண்ணில் மணிமேகலையில் கூறப்பட்டுள்ள விதியை நன்கு உள்வாங்கிக்கொண்டு சர்ச்சையில் இறங்குவதாகவே நினைக்கிறேன்.

இனம், மொழி, நாடு என உழைத்த மக்களை நினைவு கூர்வதென்பது இன்றைக்கு ஒரு சடங்காகவே மாறிவிட்டது. பிரான்சு நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடம் தோறும் அவ்வருடத்தில் யார் யாரையெல்லாம் நினைவு கூர்தல்வேண்டும், அரசு சார்பில் செய்யப்படவேண்டியவையென்ன என்பது பற்றி அது தொடர்பான அமைச்சும் அதிகாரிகளும், இதற்கென நியமிக்கப்பட்டிருந்த குழுவினரும் கலந்து பேசுவர். 2011ம் ஆண்டும் அப்படி கலந்து பேசிய பின் பட்டியலொன்றை தயார் செய்தனர். அப்பட்டியலில் இடம்பெற்றவர்களுள் செலின் என்று அழைக்கபடும் லூயிஸ் ·பெர்டினாண் செலின் (Louis-Ferdinand Céline) என்பவரும் ஒருவர். நவீன இலக்கியத்தைக்குறித்த விவாதமோ, கலந்துரையாடலோ பகுப்பாய்வோ நடைபெற்றாகவேண்டுமெனில் செலின் தவிர்க்க முடியாத நபர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இருவர்: ஒருவர் மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust), மற்றவர் செலின். Journey to the End of the Night மிக முக்கியமானதொரு படைப்பு. சொற்களை அதிகம் விரயம் செய்யக்கூடாதென்பவர். கொச்சை சொற்களை படைப்புகளில் கணிசமாகக் கையாண்டு அப்படியொரு முறைமைக்கு வழிகோலியவர். பிரெஞ்சு இலக்கியம் ஒரு தேர்ந்த படைப்பாளியென்கிற வகையில் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது.  செலின் இறந்து (1961ம் ஆண்டு ஜூலையில் இறந்திருந்தார்)  ஐம்பதாவது நினைவஞ்சலியென்பதால் அதனை ஓர் அரசுவிழாவாக, மிகச்சிறந்த முறையில் கொண்டாடவும் திட்டமிட்டார்கள். அரசுவிழா பொறுப்பாளராக தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டார். புகழஞ்சலி மலரும் தயாரானது. மலருக்கு முன்னுரை வழங்கியவர் ‘அலென் கொர்பன்’ என்ற வரலாற்றிஞர். மலருக்கு நாட்டின் கலை, இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சரால் அக்கறையுடன் எழுதப்பட்ட அணிந்துரையும் இடம்பெற்றது. ஆசியருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையிற் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. செலின் படைப்புளில் அதிக ஈடுபாடுகொண்டவரும், விற்பன்னருமான ஹாரி கொதார் (Henri godard) எழுதிய வரிகள் வியப்பில் ஆழ்த்துபவை. வழக்கமான புகழஞ்சலிக்குரிய சொற்கள் அங்கில்லை, வேறு தொனியிலிருந்தன. சில ஐயப்பாடுகளை எழுப்பின:

“செலினுக்கு விழா எடுக்கத்தான் வேண்டுமா?பிரெஞ்சு இலக்கியத்திற்கு அவரளித்துள்ள பங்களிப்பை மறுக்கவியலாத அதேவேளை கேள்விக்குச் சாதகமானதொரு பதிலைத் தருவதற்குத் தயங்க வேண்டியவர்களாகவுள்ளோம். நினைவாஞ்சலி கூடாதென்பதற்கு காரணங்கள் தெளிவாக உள்ளன. யூதர்கள்மீது தீராத வெறுப்பையும் கசப்பையும் வைத்திருந்தார். ப்ரூஸ்டுடன் பிரெஞ்சிலக்கிய வெளியை பகிர்ந்துகொண்டு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்த்திய சாதனைகளும் மறக்ககூடியல்ல” என்றெழுதி சர்ச்சையை ஹாரி கொதார் துவக்கி வைத்தாரெனலாம்.

ஹாரி கொதார் உபயோகித்த சொற்களை இரண்டாவது முறையாக வாசிப்பீர்களெனில், ‘செலினை’ ஒரு படைப்பாளியாக ஏற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில், அவரை ஒரு இனவெறியாளராக தயக்கமின்றி அவர்  சுட்டுவதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கு செலினைப்பற்றி கூடுதலாக சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். 1930களின் இறுதியில் இனவெறியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் செலின் ஈடுபட்டாரென்ற செய்தியை இங்கே கோடிட்டுக்காட்டினால் செலின் என்ற எழுத்தாளனுக்குள்ள எதிர்ப்புகளை புரிந்துகொள்ளக்கூடும்.  “யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட எனக்குத் தயக்கங்களில்லை; யூதர்களின் முதல் எதிரியாக என்னைக் காட்டிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்”, என்று வெளிப்படையாகவே தெரிவித்தவர் செலின். பிரான்சு நாட்டை ஜெர்மன் ஆக்ரமித்திருந்தபோது பிரான்சிலிருந்த நாஜி அபிமானிகள் நடத்திய இதழுக்குத் தொடர்ந்து எழுதிவந்தார். அப்பத்திகளில் யூதர்களின் இருத்தலைக் கடுமையாக விமர்சித்திருந்தார். செலின் யார் என்பது ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஹாரி கொதார் எழுப்பிய ஐயங்களைக் கையிலெடுத்துக்கோண்டு செர்ழ் கிளார்பெல்டு (Serge Klarsfeld) கிளர்ந்தெழுந்தார். கிளார்பெல்டு வழக்கறிஞர், எழுத்தாளர், அவரது படைப்புகள் முற்றுமுதலாக நாஜிகளுக்கு எதிரானது. பிரெஞ்சு மொழியில் நாஜிகளைப்பற்றிய கொடூரமான பிம்பத்தை உரிய சாட்சியங்களுடன் கட்டமைத்திருக்கிறார். தம் பெற்றோர்களை கொலைமுகாமில் பலிகொடுத்தவர். எல்லாவற்றிர்க்கும் மேலாக நாஜிகளின் வதை முகாம்களிலிருந்தும், கொலைமுகாம்களிலிருந்தும் உயிர் பிழைத்தவர்களைக்கொண்டு ஏற்படுத்திய அமைப்பொன்றின் தற்போதைய தலைவர்.

செர்ழ் கிளார்பெல்டு இதற்கெனவே காத்திருந்திருந்ததுபோல அரசாங்கத்தின் முடிவினை உடனடியாகக் கண்டித்தார்: “யூதர்களை தமது ஊத்தைபிடித்த எழுத்துக்களால் கண்டித்து எழுதியன் பலனாக பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட காரணமாகவிருந்த படைப்பாளரொருவரின் (செலின்) ஐம்பதாவது இறப்பு ஆண்டைக் கொண்டாடுவது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையென்ற நினைப்பே அவமானத்திற்குரியது. செலினைக் கொண்டாடுகிறபோது அப்பாவி யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் வயது பேதமின்றி வதைமுகாம்களுக்கும், கொலை கிடங்குகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதும், அவர்களில் குறைந்த எண்ணிக்கையினரே உயிர்பிழைத்தார்கள் என்பதும் நினைவுக்கு வரக்கூடுமேயண்றி செலினுடைய படைப்புகள் வாராது, எனவே உடனடியாக அமைச்சர் செய்யவேண்டியது 2011ம் ஆண்டு கொண்டாட்டப் பட்டியலிலிருந்து செலினை நீக்குவதாகும்”, என்பது போல அவரது அறிக்கை இருந்தது. இவ்வறிக்கை Le Figaro, Le nouvel Observateur போன்ற பிரெஞ்சு இதழ்களின் இணைய தளங்களிலும் இடம்பெற்றது.

அமைச்சரின் எதிர்வினை என்னவாக இருக்கும், என்பதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி அகாதமியைசேர்ந்த மொழியிலறிஞர் பிரெடெரிக் வித்து (Frédéric Vitoux),என்பவரின் கூற்றும் அலட்சியப்படுத்தக்கூடியல்ல: “இங்கே பிரச்சினை செலின் என்ற படைப்பாளியல்ல ‘கொண்டாட்டம்’ என்கிற  சொல்லே. அவரது 50வது நினைவஞ்சலி ஆண்டை ஏதோ செலினுக்கு இப்போதுதான் மகுடம் சூட்டப்போவதுபோல நினைத்துக்கொண்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றுவரையிலும் அவருக்குள்ள இடம் உறுதியாகவே இருக்கிறது. இந்த ஆண்டில் அவரது எழுத்துக்களை மீண்டும் நினைவஞ்சலி என்ற பெயரில் மறு வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கமுடியும். அவருடைய களங்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற பகுதியைக்கூட சார்பற்ற விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கலாம்.” என்றார் அவர். இதற்கு ஆதரவாகவும் மறுதலிக்கும் வகையிலும் கருத்துகள் குவிந்தன.

இந்தப்பிரச்சினையில் இன்னொன்றையும் விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டியிருக்கிறது. நாஜிகளின் பேரழிவுக்குள்ளான இனம் யூதரினம் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதற்கான நீதி வழங்கப்படவேண்டியதுதான், வழங்கியும் விட்டார்கள். ஆனால் அதையே காரணமாக வைத்து எதிர் தரப்பினரின் குரல்வளையை இவர்கள் இன்னும் எத்தனைகாலத்திற்கு நெறித்துக்கொண்டிருக்கப்போகிறார்கள். இன்றைய தேதியில் உலப்பொருளாதாரமும் அரசியலும் இந்த இனத்தின் கையில்தான் உள்ளது. பிரெஞ்சு கலை இலக்கிய பண்பாட்டுத்துறை அமைச்சர் செலின் நினைவுதினத்தை அனுசரிப்பது தொடர்பாக என்ன முடிவு எடுத்திருப்பாரென நினைக்கிறீர்கள்? பிரான்சு நாட்டின் அதிபர் ஒரு யூதர், பிரதமர் யூதர், அமைச்சர்களில் பாதிக்குமேல் யூதர்கள். எதிர்கட்சி தலைவர் ஒரு யூதர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள்கூட யூதர்களாக இருக்கலாம். இந்நிலையில் முடிவு நீங்கள் நினைப்பதுபோலத்தான் அமைந்தது. செலினை யூதரின துரோகியாகப்பாவித்து அரசு அவருக்கான விழாவை பட்டியலிலிருந்து நீக்கியது. எனக்கு ஒரு படைப்பாளியை படைப்பை மட்டுமே வைத்து பார்க்கவேண்டும். படைப்பில் ஒன்றிரண்டு யூத எதிர்ப்புக்கூட இருந்துபோகட்டுமே அதனாலென்ன? சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறநாட்டில் அதற்கு வாய்ப்பில்லையானால் எப்படி?

———————————————-

இந்தியாவின் எதிரி ஆங்கிலமும் ஆங்கிலேயரும்:

இந்திய அதிபரின் செய்தி தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய பவன் கே. வர்மா என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த Becoming Indian என்ற நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. வர்மாவின் வேறு  இரண்டு நூல்களும் ஏற்கனவே பிரெஞ்சில் வெளிவந்து கவனத்தை பெற்றவையென்பதால் இப்புதிய நூலின் மீது பிரெஞ்சு ஊடகங்கங்களின் கவனம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக விழுந்துள்ளது.

நூலாசிரியர் இந்தியனென்கிற தமது அடையாளத்தை வரையறுக்க இயலாமல் தவிக்கிறார், இத்தவிப்பு நூலின் கடைசிப்பக்கம்வரை நீடிக்கிறது.  அதற்கான காரணங்களும் அவராலேயே ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா இன்றளவும் விடுதலைபெறவில்லை என்பதில் ஆசிரியர் தெளிவாக இருக்கிறார். வர்மாவை பொறுத்தவரை ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியிருந்தாலும் அரசியல் பொருளாதாரமென்று இன்றளவும் இந்தியாவை வழிநடத்துவது ஆங்கிலேயரின் நிழல். அவர்கள் தந்திரமாக விட்டுச்சென்ற ஆங்கிலம் காலணியாதிக்ககாலத்தினும் பார்க்க கீழ்மையனானதொரு ஆதிக்க அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறது. வர்மாவுடைய கருத்தின்படி காலணியாதிக்கம் விட்டுச்சென்றுள்ள வர்க்கபிரிவு ஆங்கில மொழி அறிந்தவர்கள், அறியாதவர்கள். இவர்களில் முதற் பிரிவினர் ஆங்கிலேயரின் இடத்தைப்பிடித்துக்கொண்டு  பெரும்பான்மை இந்தியரை அடிமைகளாக நடத்துகின்றனர் என்கிறார் வர்மா. அந்நியமொழியான ஆங்கிலம் இந்தியாவின் சுயமான கல்வி, கட்டிடக்கலை, பிற கலைகள், திரைப்படங்கள், சங்கீதம், இலக்கியம், பண்பாடு என அனைத்தையும் பாழடித்துவிட்டது என்பது வர்மாவின் குற்றச்சாட்டு. இந்தியாவில் நடப்பதனைத்தும் எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே வெட்டி -ஒட்டும் வேலை அதாவது சுயாதீன முயற்சிகளால் இயங்குபவை அல்ல.  இந்தியப்பட்டறையில் நாம் செய்வதனைத்தும் நகலெடுக்கும்பணிதான். உலகில் மிகப்பெரிய அறிவுலகிற்கு  சொந்தக்காரர்களாக இருந்த இந்தியர்கள். ஆங்கிலக்கல்விமுறையினால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செக்குமாடுகளாக உழைக்கக்கற்றுக்கொண்டதன்றி வேறுபலன்களை காணவில்லை என்பது அவரது வாதம்.

மெக்காலே பிரபு என்பவனால் ஏறக்குறைய இருநூற்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுவிட்ட இந்தியாவின் தலைவிதிக்கு இந்தியர்களும் பொறுப்பு என்கிறார் வர்மா. வில்லியம் பெண்டிங் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் அன்றைய இந்தியத் தலைவர்கள் இருபிரிவினராக இருந்திருக்கின்றனர். ஒரு சாரார், “எங்களை ஆள்வதற்கு எங்கள் மொழியை நீங்கள் கற்பதுதான் முறையென வற்புறுத்த மற்றொரு பிரிவினர் (ஆங்கிலேயர்களும் அவர்களின் விசுவாசிகளும்) ஆளுகின்ற வர்கத்தின் மொழியை குடிகள் ஏற்பதுதான் முறை எனக் கூறியிருக்கின்றனர். விளைவாக ஆளும்வர்க்கத்திற்கும் மக்களுக்குமிடையே இடைத்தரகர்களாய் ஒரு கூட்டம் முளைத்து அக்கூட்டத்தின் பிழைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளே நுழைந்தது என்கிறார், வர்மா.  கீழைசிந்தனைகளில் தமக்கென ஒரு பாரம்பர்யத்தைப்பெற்றிருந்த இந்தியா ஆங்கிலத்தை அனுமதித்ததன் மூலம் தமது தலைவிதியையே மாற்றி எழுதிக்கொண்டது. ஆங்கிலேயர் விட்டுச்சென்ற இடத்தில் ஆங்கிலத்தை அறிந்த ஒரு புதிய நடுத்தரவர்க்கம் தங்களை ஆங்கிலேயராக மட்டமைத்துக்கொண்டு அதிகாரத்திற்குள் நுழைந்தது. தவிர இந்தியப்பண்பாட்டிற்குள்ளும் பல அத்துமீறல்களை நிகழ்த்தியதோடு இந்தியாவின் கல்வியும் கலையும் ஆங்கிலத்தினூடாகத்தான் உலக அங்கீகாரம் பெறமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது வேதனைக்குரியது என்கிறார் பவன் கே.வர்மா.

காங்கிரஸ் இயக்கங்கண்ட இந்தியர்கள் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதுபோல அவர்கள் மொழியையும் துணிச்சலுடன் வெளியேற்றியிருக்கவேண்டும் என்கிறார். நம்மவர்களின் விவேகமற்ற அணுகுமுறைகளுக்கு நூலாசிரியர் சில வரலாற்று சம்பவங்களையும் சாட்சிக்கு அழைக்கிறார். உபநிஷத்திற்கும் வேதாந்ததிற்கும் உரை எழுதிய ராஜாராம் மோகன் ராய் என்பவர்தான் சமஸ்கிருத கல்விமுறைக்கு எதிராகவும், ஆங்கில கல்விமுறைக்கு ஆதரவாகவும் அப்போதைய கவர்னர் ஜெனரலிடம் மனுகொடுத்தவராம். ஆக மெக்காலேவின் அறிக்கைக்கு ராய் பிரிட்டிஷ் நிர்வாகிகளிடம் கையளித்த விண்ணப்பமும் ஒரு வகையில் காரணம். விதேசிகளை விதந்தோதும் இந்தியரின் போக்கிற்கு அன்றே உதாரணங்கள் இருந்திருக்கின்றன என்கிறார். இனவாதியும், இந்தியர்களை மிகக்கேவலமாக விமர்சித்து பழகியிருந்த (அப்புத்தகங்கள் இந்தியச்சந்தையில் இன்றும் கிடைக்கின்றனவாம்) எட்வின் லுட்டியென் (Edwin Lutyens) வசம் இந்திய தலைநகரான புதுடில்லியை நிர்மாணிக்கும் பொறுப்பை அளித்ததும், இந்திய பாரம்பர்யதைக் கேலிசெய்தும், இந்தியர்களைப் பழித்தும் பேசிய லெ கொர்புசியே (Le Corbusier) என்பவரிடம் நேரு சண்டிகார் நகரை நிர்மாணிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததையும் வர்மா வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேற்கத்திய அறிவை சிலாகிக்கும் போக்கு இன்றளவும் தொடர்வதை ஆசிரியர் மறக்கவில்லை. இன்றுங்கூட இந்தியாவில் எத்தனை விருதுகள் பட்டங்கள் பெற்றாலும் அக்கலைஞனோ, படைப்பாளியோ வெளிநாட்டில் விருதுபெற்றால்தான், ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டால்தான், இந்தியாவில் பெரியவனென ஏற்றுக்கொள்கிறார்களென வருந்துகிறார்.

நூலில் இரண்டு விஷயங்கள் உறுத்துகின்றன: ஒன்று ஆங்கிலத்திற்கு மாற்றாக நூலாசிரியர் இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்கபடவேண்டும் என்பது. இன்றைய தேதியில் இது சாத்தியப்படுமா? அறுபதுகளில் நிகழ்ந்த மொழிக்கலவரங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அடுத்து ஆங்கிலத்தையும் ஆங்கிலேயர்களையும் வரலாற்று ஆதாரங்களையெல்லாம் வம்புக்கிழுத்து விமர்சிக்கிறவர், நூலை ஆங்கிலத்தில் எழுதியிருப்பது.

———————————–

இசைவானதொரு இந்தியப்பயணம்-15

பிப்ரவரி-15

முதல்நாள் பலமுறை எழுத்தாளர் சின்னப்ப பாரதியின் நண்பர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தொலைபேசியில் அழைத்திருந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆய்வு மாணவர் ஜெகதீசனும் அழைத்திருந்தார். பதினைந்தாம் தேதியன்று தில்லி பல்கலைகழகத்தில் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதில் ஆர்வமும் அத்துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வும் மேற்கொண்டிருக்கும் மாணவர்களுடன் ஓரு கலந்துரையாடலையும்  தில்லி பல்கலைகழக தமிழ்துறை ஏற்பாடு செய்திருந்தது.

காலை பத்துமணி அளவில் ஜெகதீசன் வாகனத்துடன் வந்திருந்தார். அவ்வாகனத்திலேயே தில்லி
பல்கலைகழகத்திற்கு சென்றோம். என்னுடன் பிரெஞ்சு நண்பர் சவியெ தெபெல், புதுச்சேரி காஞ்சிமாமுனி பட்டமேற்படிப்பு கல்லூரியின் பிரெஞ்சு பேராசிரியர் நாயகர் வந்திருந்தனர். தில்லி பல்கலைகழக தமிழ்துறை தலைவர் பேராசிரியர் நாச்சிமுத்து, உடன் பணியாற்றும் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோருடனான சந்திப்புகள் எதிர்பாராதது. பேராசியர் நாச்சிமுத்தையும் சந்திசேகரனையும் பற்றி எழுதும் முன்பாக, தமிழ் பேராசிரியர்களை எனது பார்வைவரம்பிற்குள் மூன்று இனமாக தென்படுகின்றனர் என்பதைச் சுருக்கமாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அ. தமிழின் தொன்ம இலக்கியங்களில் உண்மையாக ஆர்வமுற்று, தங்கள் நுண்மான் நுழைபுலத்தை அதற்கெனவே அளித்து கண்துஞ்சாமல் ஆரவாரமின்றி தமிழுக்காக உழைப்பவர்கள் முதல்வகை.

ஆ. இரண்டாம்வகையினரின் தொன்ம இலக்கியபற்றுதலை குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. அதேநேரம்  இவர்கள், தமிழென்பது தொன்மம் நவீனம் இரண்டும் சார்ந்ததென்ற கருத்தியத்தின் உடமையாளர்கள்.

இ. இம்மூன்றாம் வகையினர், அசப்பில் முதலாம் வகையினரைப்போல தோற்றம்கொண்டவர்கள். பழகினால் வெகு எளிதில் பித்தளையென தெரியவரும். இவர்களைத் தமிழ்க்கூத்தர்கள் எனலாம். கிராமங்களில் நடக்கும் தெருகூத்துகளில் வருகிற ராஜாக்கள் இவர்கள். கட்டியக்காரனிடம், அவனி அம்பத்தாறு ராஜாக்களும் எனது திருமுகம் காணவந்திருக்கிறார்கள்வென கேட்கும் கூட்டம்.

மூன்றாவது கூட்டத்தை நான் மதிப்பதில்லை, முதலாவது அணியினரிடம் தொடர்புகளில்லை.  எனக்கு விருப்பமான தமிழ் பேராசியர்கள் இரண்டாவது இனம். தொன்மம், நவீனம் இரண்டிற்கும் பாலமாக இருப்பவர்கள். இவர்களைப்போன்றவர்களிடம் பயிலும் மாணவர்களே எதிர்கால தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்களென்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. இவர்களுடைய தமிழ்தேசிய உணர்வு பொருளுடையது. கணத்தில் நினைவைத் தட்டுகிற பெயர்கள் ம.லெ. தங்கப்பா, தமிழவன் ஆகியோர். அண்மையில் தில்லியில் சந்திக்க நேர்ந்த பேராசிரியர்கள் நாச்சிமுத்து, சந்திரசேகரன் ஆகியோரும் இப்பட்டியலுக்குள் வருகின்றனர்.

பேராசிரியர் நாச்சிமுத்தும் சந்திரசேகரனும் நவீன இலக்கியவாதிகளை போற்றுகிறவர்கள். இன்றைய படைப்புகள் பலவற்றை உடனுக்குடன் வாசிக்கிறார்கள் என்பதை அவர்களோடு அளவளாவி புரிந்துகொண்டேன். அண்மையில் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதுபோன்றே தமிழில் ஏராளமாக சொற்கள் இருந்தும் இன்றைய எழுத்தாளர்கள் அதை பயன்படுத்துவதில்லையேவென்ற தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்கள்; தமிழல்லாத பிறசொற்களை நீங்கள் தவிர்க்கவேண்டுமென வற்புறுத்தினார்கள். ‘என்ன செய்வது எங்களால் முடிந்தது அது, நிறைய சொற்கள் தெரிந்த நீங்கள் எழுதமாட்டேனென இருக்கிறீர்களே’ எனக் கூறியபோது, பேராசிரியர் நாச்சிமுத்து முகத்தில் எவ்வித மாற்றமில்லை. அதைச்சிரித்துக்கொண்டே தலையாட்டிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தார். அவரது கருத்து நியாயமானதென்பதை பிற்பாடு உணர்ந்தேன். நாஞ்சில் நாடன் துபாயில் தெரிவித்திருந்த கருத்தும் அதை ஒட்டியே இருந்தது. ஒரு மூத்த பேராசிரியர் -நவீன இலக்கியத்தில் பற்றுதலுள்ள ஒருவர் அக்கறையுடன் சுட்டிக்காட்டிய இக்குறையை முடிந்த அளவு தவிர்க்கவேண்டுமென அன்று சபதமெடுத்துக்கொண்டேன்.

காலைமுடியும் தருவாயில் நடந்தேறிய கலந்துரையாடலில் தமிழ் மொழிபெயர்ப்பில் அக்கறைகொண்ட மாணவர்கள், பேராசிரியர் நாச்சிமுத்து, பேராசிரியர் சந்திரசேகரன்,  நாயகர், நான், நண்பர் தெபெல் ஆகியோர்கலந்துகொண்டோம். அன்றைக்கு எனக்கு மகிழ்ச்சி அளித்த சம்பவம் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் சம்பந்தமாக நூல்களை ஆய்வுசெய்திருந்த மாணவர் ஜெகதீசன் எனது படைப்புகளையும் மையப்பொருளாக  எடுத்துக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறாரென்ற செய்தி.

உரையாடலில் மொழி பெயர்ப்புதொடர்பான எனது பார்வைகள், அனுபவங்கள் கையாளும் முறைகளென்கிற  கேள்விகளுக்கு பதிலளித்தேன். உடன் வந்திருந்த பிரெஞ்சு நண்பர் கவிதையொன்றை அண்மையில் மொழிபெயர்த்திருந்தேன் நான் மொழிபெயர்த்திருந்த கவிதை அவரது கவிதையோடு பொருந்துகிறதா எனத் தெரிந்துகொள்ளவிரும்பியவர்கள்போல அவரிடம் பேராசிரியர்கள் இருவரும் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு  தமது கவிதை உருவான சூழல், அக்கவிதை இடம்பெறும் கிராமப்புறம், தமது இறை நம்பிக்கை என்று விளக்கமளித்தார்.  ஒருகட்டத்தில் என்னை சோதனைபோடுவதுபோல அவர்கள் வினாக்களிருந்தன, நானும் எரிச்சலுற்றேன் என்பதை மறுக்கவில்லை. நண்பர் சவியேவிற்கு தமது கவிதைபற்றி இத்தனை அக்கறையெடுத்து விளக்கமளிக்க சொல்கிறார்களே என்ற மகிழ்ச்சி. பிறகு நாயக்கரும் மொழிபெயர்ப்பாளரென்ற வகையில் தமது அனுபங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் பல்கலைகழக உணவு விடுதிக்குச்சென்றோம். அங்கே பிரெஞ்சுதுறை பேராசிரியர் அஜித் என்பவர் அறிமுகம் கிடைத்தது. பரமக்குடிகாரரான இவரொரு தி.க விசுவாசி. ஒரு மொழிபெயர்ப்பு நூலையும் கொடுத்தார். பொதுவான கருத்துகளை பகிர்ந்துகொண்டு வெளியில் வந்தபோது மணி 3 ஆனது. ஏற்கனவே எடுத்திருந்த வாகனம் சிறியதாக இருந்ததால் மூவரின் பெட்டிகளை வைக்க போதாதென்று தீர்மானித்து வேறுவாகனத்தை கொண்டுவர பேராசிரியர் சந்திரசேகரன் ஏற்பாடு செய்தார். பேராசிரியர் சந்திசேகரனிடம் விடைபெறுகிறபோது ‘சரித்திர சறுக்கல்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை பரிசாக அளித்தார். படித்துபார்த்தேன் நல்ல பல கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. பின்னர் ஒருமுறை அவற்றைகுறித்து எழுதுகிறேன். பல்கலைகழக நண்பர்கள் சற்று பெரியதொரு வாகனத்தை இம்முறை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அங்கிருந்து விடைபெற்று வாகனத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் புதுச்சேரி அரசாங்கத்தின் விருந்தினர் மாளிகைக்குச் சென்று பெட்டிகளை எடுத்துக்கொண்டு பிரெஞ்சு தூதரகத்தில் திருமதி ஜூடித் ஒரியோல் என்பருடனான எங்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேராக தில்லி தமிழ்ச்சங்கம் காவற்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாதமியின் பரிசினினை வென்றிருந்த சு. வெங்கிடேசனுக்கு பாராட்டுவிழா என்றார்கள் அதையும் முடித்துவிட்டு  விமானநிலையம் செல்லத் திட்டம்.

13ந்தேதி அன்று பிரெஞ்சு தூதரகத்திற்கு அல்லியான்ஸ் பிரான்ஸேஸ் முகவரி தேடி சென்றிருந்ததால் மீண்டும் தூதரகத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களில்லை. ஆனால் தூதரகத்திற்கு சென்று அலுவலக காவலதிகாரிகளை விசாரித்தபோதுதான் திருமதி ஜூடித் அலுவலகம் ஔவரங்கசீப் சாலையில் இருக்கிறதென தெரியவந்தது.  தூதரக கலைபண்பாட்டுத் துறை அதிகாரி திருமதி ஜூடித் ஒரியோலிடம் பிரான்சிலிருக்கிறபோதே  சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கச்சொல்லி கேட்டிருந்தேன். பிற்பகல் மூன்றரை மணி அளவில் தூதரகத்தில் அவரது அலுபலகத்தில் சுருக்கமான எங்கள் அறிமுகத்திற்குப் பிறகு பிரச்சினைகள் குறித்து பேசபட்டன. பிரெஞ்சு நூல்களை மொழிபெயர்ப்பு சம்பந்தமாக தாம் உதவ முடியுமெனவும், தமிழிலிருந்து பிரெஞ்சில்கொண்டுபோக தம்மால் எதுவும் செய்யலாகாதெனவும் தெரிவித்தார். உண்மையில் தில்லி பிரெஞ்சு தூதரக அதிகாரியின் சந்திப்பில் பெரிய பயன்பாடுகளென்று எதுவுமில்லை.

தில்லி அல்லியான்ஸ் பிரான்சேஸ் இயக்குனரை முடிந்தால் சந்திக்கலாமென்பது  எனது பிரெஞ்சு நண்பர் தெபெல்லின் விருப்பம். 13ந்தேதி தில்லியில் காந்தி சமாதியை பார்த்துமுடித்துவிட்டு சாந்தி பாத்திலிருந்த பிரெஞ்சு தூதரகத்தில் முகவரியை வாங்கிக்கொண்டு லோடிஎஸ்டேட்டிலிருந்த  அல்லியான்ஸ் பிரான்சேஸை தேடிப்போனபோதுதான்  தில்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒருவர்மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கண்டோம். இரவு தொலைகாட்சி செய்தியை பார்த்தபோதுதான் நடந்த விபரீதத்தை விளங்கிக்கொள்ள முடிந்தது. அன்றைய தினம் சம்பவத்தின் வீச்சை முழுமையாக உணரத் தவறியதாலோ என்னவோ அதை 13ந்தேதி நிகழ்வில் பதிவு செய்யவும் தவறியிருக்கிறேன்.

தில்லி அல்லியான்ஸ் பிரான்சேய்ஸ்லிருந்து தில்லி தமிழ்ச்சங்கம், காவற்கோட்டம் சு.தமிழ்செல்வனுக்கு சாகித்ய அகாதமி பரிசினை வென்றமைக்காக ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு நண்பர்கள் அனைவரும் சென்றோம். அங்கே வடக்கு வாசல் ஆசிரியர் நண்பர் பென்னேஸ்வரனை சந்தித்தேன்.  நண்பர் பி.எ.கிருஷ்னனும் வந்திருந்தார். அவரோடு உரையாட நிகழ்ச்சி வாய்ப்பு ஏற்படுத்தித் தந்ததென சொல்லவேண்டும். நிகழ்ச்சி முடியுமுன்பே புறப்பட்டு அருகிலிருந்த தமிழர் ஒருவர் நடத்திய மெஸ்சில் தட்டைக் கையில் ஏந்தியபடி  இரவு உணவை முடித்துக்கொண்டு விமானதளத்திற்கு வந்தோம். நண்பர் நாயகரும் ஜெகதீசனும் என்னையும் எனது பிரெஞ்சு நண்பரையும் விமான தளத்தில் இறக்கியபின் புறப்பட்டு சென்றார்கள். புதுதில்லி பயணம் நன்கமைந்ததற்கு நாயகருக்கு நன்றி சொல்லவேண்டும் அவர் இல்லையென்றால் பயணம் சோர்வைத் தந்திருக்கலாம். தில்லி பயணத்தில் தம்பி ஜெகதீசனின் பங்கையும் அவரை அறிமுகப்படுத்தி உதவவைத்த பேராசிரியர்கள் சந்திரசேகர், நாச்சிமுத்து ஆகியோரையும் அவர்களைசந்திக்க காரணமாகவிருந்த பேராசிரியர் பாலசுப்பிரமணியையும், எழுத்தாளர் கு. சின்னபாரதியையும் மறக்கவியலாது.
————————————–

Chassé-Croisé:France-Inde

அன்புடையீர்,

 ஏற்கனவே தங்களுக்கு எழுதியதுபோன்று இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம். இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பதிப்பிக்கும் முடிவு அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது:

 எனது அமைப்பு மூலம் தொகுப்பை வெளியிட இயலாது. இந்தியப்புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கவேண்டாமென அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். சொந்தமாக வெளியிட நிதி ஆதாரமில்லை. தவிர அப்படி வெளியிட்டாலும் நண்பர்களுக்கு இலவசாமக கொடுப்பதன்றி வேறு பயன்களை எதிர்பார்க்கமுடியாது. எனவே பிரெஞ்சு பதிப்புலகத்தையன்றி வேறு உருப்படியான வழிகள் தற்போதைக்கு இல்லை.

 அவர்களும் தேர்விற்கும்:சில தகுதிகளை நிர்ணயித்திருக்கிறார்கள்.

 – பிற நாடுகளைபோலன்றி மொழிபெயர்ப்பாளர்கள் தாய்மொழி பிரெஞ்சாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

-, உலகின் பிற பகுதிகளைப்போலவே மொழி பெயர்ப்பு தேர்வுக்குழுவினரின் எதிர்பார்ப்புக்கு உகந்ததாக இருக்கவேண்டும்.

 இவ்வ்வளவு சிக்கல்கள் இருக்கிறபொழுது எதற்காக செய்கிறேனென  நீங்கள் முனுமுனுப்பதும் காதில் விழுகிறது.

 வாழ்க்கைப்பயணத்தை உழைப்பும் நம்பிக்கையுமென்ற இருகால்களைக்கொண்டே தொடங்கியவன். பாவண்ணன் சிறுகதை மரம் வளர்ப்பதை பற்றி பேசுகிறது. மரம் நட்டவர்களெல்லாம் நடுமுன் யோசித்திருந்தால் நிழல் என்ற சொல்லே இல்லாதொழிந்திருக்கும். ஒன்றிரண்டாவது துளிர்க்குமென நம்பியே நடுவோம்.

 எனது வாடா நம்பிக்கையேகூட   ‘உலகமே நம்பிக்கைகொண்டோரால் உயிர்த்திருக்கிறது’ என்பதுதான்.

 மீண்டும் தங்கள் கவனத்திற்காக: http://franceindechassecroise.wordpress.com

 நா.கிருஷ்ணா

மொழிவது சுகம் – ஏப்ரல் 27

Rosemary’s baby -Roman Polanski

அண்மையில் Arte என்கிற பிரெஞ்சு தொலைகாட்சியில் புகழ்பெற்ற ரோமன்போலெஸ்க்கியின் ரோஸ்மரியின் குழந்தை (Rosemary’s baby) படத்தை காணநேர்ந்தது. ரோஸ்மரி நாடகங்களில் துணைநடிகராக நடிக்கின்ற அவரது கணவர் இருவரும் நியூயார்க் நகரில் ‘Bramford’ என அழைக்கப்படும் தொகுப்புவீடொன்றில் குடியேறுகிறார்கள்.அவர்களுக்கு அண்டைவீட்டினராக அறிமுகமாகும் வயதான தம்பதியினர்  இளம் தம்பதினியினர் மீது காட்டும் அளவற்ற பாசம் ரோஸ்மரிக்கு சந்தேகத்தைக்கொடுக்கிறது. தொகுப்பு வீடு, அவ்வீட்டில் வசிக்கும் பிற குடித்தனகாரர்கள், வயதான தம்பதியினர் என ஒரு மர்ம முடிச்சில் திரைக்கதையை மிக துல்லியமாக சொல்லியிருக்கிறார்கள். ரோஸ்மரியாக நடிக்கும் மியா ·பரோ (Mia Farrow) வின் நடிப்பு அபாரம். நம் வீட்டுபெண்போல இருக்கிறார். தொடக்கத்தில் சாதுர்யமானவளாகவும், கெட்டிக்காரியாகவும் அறிமுகமாகிறவள்  பின்னர் பரிதாபமாக தோற்று துவளும்போது எரிச்சல் வருகிறது. சாத்தான் அபிமானிகளான கூட்டத்தின் சிலந்தி வலையில் சிக்குண்டு மெல்ல மெல்ல இரையாவது கொடுமை. மறக்க முடியாதபடம். படத்தின் மூலம்  Ira Levin என்பவரின் விற்பனையில் சாதனை படைத்த திகில் நாவலான  Rosemary’s baby க்குச் சொந்தமானது. எனக்கென்னவோ Roman Polansky படங்களிலேயே சிறந்தது இதுவாகத்தான் இருக்குமென்று அபிப்ராயம் ( அவரது மற்ற படங்களை மீண்டும் ஒருமுறை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் வரை). இதன் தொடர்ச்சியாக The Tenant, மற்றும்  ஒரு படம் (பெயர் நினைவிலில்லை) வந்தன. பிறகு இருக்கவே இருக்கிறது ரோமான் போலஸ்கியின் பெயரைக் கொண்டாடவென்று The China Town.  எனக்கென்னவோ ஸ்பீல் பெர்க்கை காட்டிலும் ரோமன் போலஸ்கி திரைக்கதையில் மன்னர். உண்மை கற்பனையைக்காட்டிலும் சுவாரஸ்யமானது என்பதற்கு அவரது வாழ்க்கையில் ஏராளமான நிகழ்வுகள்.  1969ல் இலண்டனுக்கு படப்டிப்பிற்கு சென்றிருந்த பொழுது அவரது கர்ப்பினி மனைவியும் அன்றைய தினம் வீட்டிற்கு வந்திருந்த நண்பர்கள் சிலரும்  ஹிப்பி கூட்டமொன்றால் கொடூரமாக கொலையுண்டதே கூட ஒரு திகில் நாவலுக்கு ஈடான சம்பவங்களைக் கொண்டது.  நேரம் கிடைக்கும்போது ரோமன் போலஸ்கி பற்றி எழுதுகிறேன்.
————————————-

எரியுங்கள் உங்கள் ஓவியத்தை – அவர்கள் இரக்கமில்லாதர்களென்று.

அரசாங்கம் தமது நிதியில் ஒரு சதவீதத்திற்கு குறைவாக கலை மற்றும் பண்பாட்டுதுறைக்கு ஒதுக்கியிருக்கிருப்பது எரிச்சலூட்டியிருகிறது நவீன ஓவியங்களின் அருங்காட்சியக இயக்குனர் ஒருவருக்கு. கோபமுற்ற அவர் தமது காட்சிகூடத்திலிருந்த ஓவியங்களை அதை படைத்த அல்லது வரைந்த ஓவியர்கள் சம்மதத்துடன் அவர்களையும் அழைத்துவைத்துக்கொண்டு தெருவில் போட்டு எரித்திருக்கிறார், தொடர்வாரென்றும் தெரிகிறது.

மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இத்தாலி அரசாங்கம், கலை பண்பாட்டு துறைக்கு எப்படி நிதியை ஒதுக்க முடியும் என அரசாங்கம் கேட்க, அருங்காட்சி அகத்தின் இயக்குனரோ’ அடப்பாவிகளா, இத்தாலி நாட்டின் பொருளாதாரமே கலையையும் பண்பாட்டையும் ஆதாரமாகக்கொண்டதாயிற்றே அதை அலட்சியம் செய்தால் உருப்படுவீர்களா? எனக் கேட்கிறார். இயக்குனர் பெயர் Antonio Manfredi நேப்பிள் அருகில் கசோரியா என்ற இடத்திலிருக்கும் சமகால ஓவியகூடத்தின் இயக்குனர். எரிக்கப்பட்ட முதல் ஓவியம் ஒரு பிரெஞ்சு ஓவியருக்குச் சொந்தமானது, பெயர் Séverine Bourguignon. அருங்காட்சியக இயக்குனர் எங்களிடம் இருக்கும் உங்கள் ஓவியத்தை எரிக்கபோகிறேன் எனக்கூறியபோது அதற்கென்ன சந்தோஷமாக நடத்திக்கொடுக்கிறேனென தீப்பெட்டியுடன் வந்திறங்கினாராம். ஒன்றிரண்டல்ல 200 ஒவியங்கள், எல்லாவற்றையும் எரித்துவிட்டுதான் பிறவேலைகள் என்கிறார் இயக்குனர். எரித்தபிறகு அவருக்கு அங்கென்னவேலை?

ம.லெ. தங்கப்பா  கவிதை

நண்பர் அ. பசுபதி தங்கப்பா  கவிதை ஒன்றை மடலிட்டிருந்தார். அவருடைய வலைப்பூவில் இக்கவிதை இருக்கிறதாம் தங்கப்பாவைவை போலவே எளிமையும் அழகும் ஆழமும் கொண்ட கவிதை:

ஆடு மேய்க்கலாம் – வாடா
ஆடு மேய்க்கலாம்
கேடு செய்திடும் – கல்விக்
கிடங்கை விட்டு வா (ஆடு மேய்க்கலாம்)

ஒரு படித்தவன் மக்கட்கு
உழைக்கவில்லையே!
வருவதியாவையும் – போட்டான்
வயிற்றில் கொள்ளையே! (ஆடு மேய்க்கலாம்)

பாதி மாந்தர்கள் – ஐயோ,
பசியில் சாகிறார்.
ஏது செய்கிறார் – தம்பீ
இங்குக் கற்றவர்? (ஆடு மேய்க்கலாம்)

பொருளை நாடுவர் – பேயாய்ப்
போட்டி போடுவார்
பெரிய கல்வியர் – தாமே
பிழைகள் செய்கிறார் (ஆடு மேய்க்கலாம்)

கல்வி என்று போய் – நெஞ்சைக்
கறைப் படுத்தலின்,
புல் நிலங்களில் – தம்பி
புரள்தல் இன்பமே! (ஆடு மேய்க்கலாம்)

கற்ற பேர்களே – நெஞ்சின்
கனிவு மாறினர்
முற்றும் தன்னலம் – தன்னில்
மூழ்கிப் போயினர். (ஆடு மேய்க்கலாம்)

அன்பு செய்திடக் – கல்வி
அறிவு தேவையா?
பண்பில் மேம்பட – எழுத்துப்
படிப்பும் வேண்டுமா? (ஆடு மேய்க்கலாம்)
——————————–

இசைவானதொரு இந்தியப்பயணம்-தில்லி

பிப்ரவரி -13

புதுச்சேரி அரசினருக்குச்சொந்தமான விருந்தினர் மாளிகை சாணக்யபுரியில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற அத்தனை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் விருந்தினர் மாளிகைகளை வைத்திருக்கின்றன. தில்லி வந்திறக்கிய முதல் நாள் இரவு புதுச்சேரி அராசங்கத்தின் பயணியர் விடுதியில் ஏற்பட்ட  அனுபவத்தை எழுதியிருந்தேன். எது எப்படியோ புது தில்லியில் மலிவாக தங்கவும், உண்ணவும் வேறெங்கும் சாத்தியமில்லையென துணிந்து கூறலாம். 30 வருடத்திற்கு முன்பு நேரு யூத் கேந்திராவில் இருந்தேன். அப்போது தில்லிக்கு வந்தேன். தென்னிந்திய உணவிற்காக எங்கள் கிராமத்தைச்சேர்ந்த முதலியார் ஒருவர் ஆர்.கே.புரத்தில் உணவு விடுதியொன்று நடத்தினார். தில்லியிலிருந்த இரண்டுவாரமும் இரண்டு நாளைக்கு ஒரு முறை அங்கே சென்றுவிடுவதுண்டு. என்னுடன் புதுச்சேரி நண்பர்களும், தமிழ்நாட்டு நண்பர்களும் இணைந்துகொள்வார்கள். விடுதி மலிவாக இருப்பதாலோ என்னவோ வருகின்ற விருந்தினர் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும்போலிருக்கிறது. விடுதி ஊழியர்களில் ஒரே ஒரு தமிழரை பார்க்க முடிந்தது. இரவு விடுதியில் உறங்குவதற்குமுன் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் நாயகர், புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் மு. இளங்கோவன் பணி நிமித்தமாக சென்னை வந்திருப்பதாகக் கூறியிருந்தார். காலையில் வரவேற்பு கூடத்தில் அவரை சந்திக்க முடிந்தது. சிலர் என்றும் மார்க்கண்டேயனாக இருப்பார்கள், மு. இளங்கோவன் அந்த ரகம். ஏன் நாயகரும் அப்படித்தான். இருவர் வயதையும் அத்தனை சுலபமாக எடைபோடமுடியாது. நாயகரின் முழுபெயர் க.அ. வெங்கட சுப்பு¡ய நாயகர். அவர் முழுப்பெயரையும் பாரத்துவிட்டு, நண்பர் தேவமைந்தன் அறிமுகப்படுத்தியபோது எனக்கு எங்கள் கிராமத்தில் கூண்டுவண்டியிலிருந்து தள்ளாடிக்கொண்டே இறங்கும் நாயக்கர்கள் ஞாபகத்திற்கு வந்தனர். வந்தவரோ அநியாயத்திற்கு இளைஞராக இருந்தார்.

நண்பர் மு. இளங்கோவன் தில்லியில் அவரறிந்த தமிழர் ஒருவர் வாகனங்களை வாடகைக்கு விடுகிறார் என்றார். எனது பிரெஞ்சு நண்பர் இந்தியாவிற்கு வந்த நாளிலிருந்து, வாடகைக்கு வாகனத்தை எடுத்தால் நான் ஓட்டுவேனே என்று சொல்லிக்கொண்டுவந்தார், தில்லியிலும் மறக்காமமல் நினைவுபடுத்தினார். எனக்கு அச்சம் அவர் வாகனத்தை ஓட்டுவதிலில்லை. ஆனால் இந்தியச்சாலையில் விதிகள் வேறு. ஏதோவொரு சர்க்கஸில் சேர்ந்து கயிற்றில் நடக்க பயிற்சிபெற்றிருக்கவேண்டும். எனவே விஷப்பரிட்சைகள் வேண்டாமென்று அவர் கோரிக்கையை தவிர்த்துவிட்டேன். இத்தாலி அரசாங்கத்தைத்போல, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கோடி கொடுக்க நம்மால் ஆகாதென்பது முதற்காரணம்: அவர் வாகனத்தை ஓட்டியது இந்திய எல்லைக்குள் அல்ல என இந்திய உச்ச நீதிமன்றத்த்தில் வாதாட திறமைபெற்ற மத்திய அரசாங்கத்தின் அட்டர்னியும் எங்களுக்கில்லையென்பது இரண்டாவது காரணம். மு. இளங்கோவின் தயவில் கரோல் பாக் தமிழரை தொலைபேசியில் பிடித்து வாகனத்தை வரவழைத்தோம். வாகன ஓட்டி நேபாளி. இந்திய தலைநலரில் அண்டைநாடுகளிலிருந்து பிழைப்பு நடத்துபவர்கள் பத்து சதவீதத்தினர் இருப்பார்களென வாகன ஓட்டி கூறிய ஞாபகம். எனக்கு அவ்வளவு இருக்காது என்பதுபோல தோன்றியது. வட இந்தியாவில் எல்லோரும் ஒரே சாயலில் இருப்பது போன்று தோற்றம். எனவே பாகிஸ்தானியரையும், பாங்களாதேஷ் மக்களையும் பிரித்து அடையாளப்படுத்துவதிலுள்ள சிரமங்கள், நேபாளியரையும், திபெத் மக்களையும் வடகிழக்கு இந்தியரிடமிருந்து வேறுபடுத்தி பார்ப்பதிலும் உள்ளன. எங்கே போகவேண்டுமென வாகன ஒட்டி கேட்டபோது உங்கள் விருப்பம்போல செய்யுங்களெனகூறிவிட்டு அமைதியானோம்.

அதற்குமுன்னால் ஓர் அதிசயம் நடந்தது, அதைப் பகிர்ந்துகொள்ளவில்லையெனில் தலைவெடித்துவிடும் அபாயமுண்டு. விடுதியின் துப்புரவு ஊழியர் ஒருவர் தெபெல் அறையின்முன்னால் நானூறு ரூபாய்கிடந்ததாகக் கூறி எங்களிடம் கொடுத்தார். எனக்கு அந்த ஊழியரின் செயல் மிகுந்த வியப்பைத் தந்தது.  பொதுவாக கீழே கிடந்தால் திருப்பி கொடுப்பதென்பது வழக்கமே அல்ல என நம்மில் பலர் எண்ணிக்கொண்டிருக்க அவர் செயல் அசாதரணமானதுதான். பல நட்சத்திர ஓட்டல்களில் எனக்குக் கிடைத்த அனுபவம் வேறு.  நாம் மறந்துபோகும் குளிர் கண்ணாடி, கோட்டு, முகச்சவரம் செய்யும் உபகரணங்கள் திரும்ப வந்து கேட்டால் கிடைக்காது. எனவே புதுச்சேரி அரசாங்க பயணியர் விடுதியில் பணியாற்றும் நேர்மையான அக்கடைநிலை ஊழியருக்கு ஏதேனும் ஊக்குவிக்கும் வகையில் அளித்திருக்கலாம். பிரெஞ்சு நண்பர் துப்புரவு ஊழியருக்கு பத்தோ இருபதோ கொடுப்பாரென எதிர்பார்த்தேன். 50 ரூபாய்கூட கொடுத்திருக்கலாம் அது பெரிய தொகையே அல்ல. அவராக முன் வந்து செய்யாததை நாம் சொல்லி செய்யச்சொல்வது அதையும் அந்நியர்கள் முன்னிலையில் இங்கிதமாக தெரியவில்லை. தவிர மூன்றாம் நாள் அறையைக் காலிசெய்யும்போது கொடுக்கலாமே என்ற எண்ணம் மனதிலுதிக்க அமைதியானேன். ஆனால் அந்த வ்ஊன்றாம் நாளில் அதை சுத்தமாக மறந்துபோனது.

சாணக்கியபுரியில் இருக்கிறபோதெல்லாம் ஏதோ ஐரோப்பாவில் இருப்பதுபோல இருக்கிறது. எனினும் 30 ஆண்டுகளுக்கு முந்தய சாணக்கியபுரி இல்லை. அப்போது இன்னும் புதியதாக இருந்தது.. சாந்தினி சவுக், பழைய டில்லி என்றுக் கடந்தபோகிறபோதுதான் இந்தியா என்ற ஞாபகம் வந்தது. முதலில் நாங்கள் பார்த்தது குதுப்மினார். குதுப்மினார் பழைய மிடுக்கு குறையாமல் இருக்கிறது. மூன்று நூற்றாண்டுகள் மூன்று மன்னர்கள் கட்டி எழுப்பிய உலகத்தின் மிகப்பெரிய மினார்களில் ஒன்று என்கிறார்கள்.. இந்தியாவில் மசூதிகளில் மினார்கள் குறைவு. துருக்கியில் கலை நுணுக்கத்துடன் எழுப்பட்ட மினார்களை பார்க்கமுடிந்தது. குதுப்மினாரை பார்த்த பின்பு இந்தியா கேட் சென்றோம். இந்தியா கேட்டை பார்த்தபோது கம்பீரமான இந்தியாவை பார்க்க முடிந்தது. வெளிநாட்டினர், பிற மாநில மக்களென்று கூட்டம் நிறைய. நிழற்படகலைஞர்கள், இந்தியா கேட்டை தபால் அட்டையில் விற்கிற சிறுவர்கள். வழக்கப்போல கூட்டத்தை நம்பி நடக்கிற தள்ளுவண்டி வியாபாரிகள் போன்ற காட்சிகளை மனதிற் நிறுத்த முடிந்தது. இந்திய ஜவான் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்

அங்கிருந்து ராஷ்டிரபதி பவன். வாகனத்தை தூரத்திலேயே நிறுத்தி இறங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. காவல் துறையின் கெடுபிடி நிழற்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம். வாகன ஓட்டி எதிரெதிராகவிருந்த இரு சிவப்பு கட்டிடங்களைக்காட்டி ஒன்று நிதி அமைச்சகத்திற்கும் மற்றது பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சொந்தமானதென்றார். இந்திய அதிபரைப் பற்றி பேச்சுவந்தபோது இந்தியாவில் அதிபர்களும், ஆளுனர்களும் அரசாங்கப் பணத்தை ஆற்றில் கொட்ட ஏற்பட்ட பதவிகளன்றி அவற்றால் வேறு உபயோகங்களில்லையென பிரெஞ்சு நண்பரிடம் எரிச்சலுடன் கூறினேன். அண்மையில் ‘இந்து’ நாளிதழில் படிக்க நேர்ந்த செய்தியின் படி அதிபர் பொறுப்பிலிருக்கும் அம்மணி இந்திய வரலாற்றிலேயே இதுவரை அறிந்திராத அளவிற்கு வெளிநாட்டுப்பயணங்களால் நாட்டின் கருவூலத்தை ஏப்பம் விட்டிருக்கிறார். காரணம் ஒவ்வொரு பயணத்தின் போதும் அவரது குடும்பமென்ற ஒரு பெரிய படை உலகத்தை வலம் வந்திருக்கிறது பொதுமக்களின் பணத்தில். இந்தியாவில் ஆளுனர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.

பிற்பகல் ஒரு மணி அளவில் கன்னாட் பிளேஸ். மதிய உணவிற்கு, நல்ல உணவு விடுதியைத் தேடி மிகவும் சிரமப்பட்டோம். கிளப்போலவிருந்த உணவு விடுதியொன்றிற்குள் நுழைந்தோம். உள்ளே நல்ல ஆடை தரித்திருந்தால்தான் அனுமதிப்போம் என்றார்கள். காவலர்கள் ஒருமுறைக்கு இருமுறை எங்களைப் பார்த்த பின்பே அனுமதித்தார்கள். பிற்பகல் ராஜ்காட் சென்றோம். சாலைக்கு மறுபக்கம் காந்தி நினவரங்கம் இருக்கிறது. அடுத்தடுத்து நேருவுக்கு இந்திராகந்திக்கு ராஜிவ் காந்திக்கு சரண்சிங்கிற்கு என சமாதிகள் இருக்கின்றன. ராஜ்காட் தவிர வேறெங்கும் நாங்கள் போகவில்லை. இந்தவியாதி தமிழகத்திற்கும் தொற்றியிருக்கவேண்டும். மெரீனா பீச் சமாதிகள் பீச்சாக மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம். மற்ற சமாதிகள் எப்படியோ காந்தி சமாதியில் காதலர்களையும், அவர்கள் மீது கூழாங்கல்லை எறிந்துவிட்டு ஓடும் பையன்களையும் கண்டோம். டிட்டோ, மாண்டெலா போன்ற தலைவர்கள் நட்டிருந்த மரக்கன்றுகளிடத்தில் வெறும் அறிவிப்பு மட்டுமே இருந்தன. ஓரளவிற்கு களைத்திருந்தோம், அடுத்து பிர்லா மந்திர் லட்சிமி நாராயனன் கோவில். பிர்லா லட்சுமிக்கு கோவில் எடுக்காமல் வேறு யாருக்கு எடுப்பார். இங்கே கடுமையாகக் காவல். ஒருமுறைக்கு பலமுறை சோதனையிட்டபின் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

பிப்ரவரி 14

முதல் நாள் பிற்பகலே பணிக்கர் போக்குவரத்தில்  ஆக்ரா, பதேபூர்சிக்ரி, மதுரா வுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்திற்கு, விருந்தினர் மாளிகையில் பணிபுரியும் தமிழரிடம் நாயக்கர் ஏற்பாடு செய்திருந்தார்.  அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் கீழே இறங்கியாயிற்று. பேருந்து விடுதியின் வாசலுக்கே வந்து அழைத்துபோகுமென்றார்கள். நல்ல குளிர். ஆறேகால் மணிக்கு பணிக்கர் நிறுவனத்தின் வாகனம் எங்களை ஏற்றிக்கொண்டது வாகனத்தில் வேறு இரண்டுபேர் இருந்தனர். எங்கள் அனைவரையும் கரோல் பார்க் பேருந்து நிறுத்தத்தில் கொண்டுபோய்விட்டனர். வொல்வோ ரக பேருந்து வசதிக்கு குறைவில்லை ஆளுக்கு ஒரு பாட்டில் மினரல் தண்ணீரை நிர்வாகம் கொடுத்திருந்தது. காலை எட்டு எட்டரைமணி அளவில் நல்ல உணவு விடுதியொன்றில் காலை உணவு. அங்கிருந்து முதலில் ஆக்ராகோட்டை. அங்கே பேருந்தில் ஏறிய வழிகாட்டி பதேபூர் சிக்ரி, ஆக்ரா இரண்டு பொறுப்பையும் ஏற்றிருந்தார். ஆக்ரா தலைநகரான விதம்;  லோடிகள், பாபர், ஹ¤மாயூன், அக்பர்,ஷாஜகானெனெ ஒருவர்பின் ஒருவராக ஆக்ராவை ஏற்றுக்கொண்டது,   கோட்டையை பற்றிய உண்மை வரலாறு, கட்டுகதைகள், சொந்த சரக்குகளென வழிகாட்டி இடைவிடாது எல்லாவற்றையும் பாடமெடுப்பதுபோல கூறிக்கொண்டு வந்தார். அரசரின் அந்தப்புரம், மாளிகையில் கலைவேலைபாட்டிற்காக உபயோகிப்பட்ட விலைமதிப்பற்ற கற்கள், அரசிகள் நீராடுமிடம், ஷாஜகானின் அந்திமக் காலம், கோஹினூர் வைரமென அவர் புனையவும் நாங்கள் கேட்கவும் நிறைய இருந்தது. பதேபூர் சிக்ரிக்கும் தாஜ்மகாலுக்கு இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு நுழைவு கட்டணமாக 500 ரூபாய் வசூலித்தது அநியாயம்.

பிறகு மதிய உணவுக்குப்பிறகு கைத்தொழில் நிறுவனம் என்றபெயரை சொல்லி உத்திரபிரதேசம் அரசாங்கத்திற்கும் சொந்தமில்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு அழைத்து சென்று வெளியில் விற்கிற தாஜ்மகாலை வாங்விடாதீர்கள் நாங்கள்தான் அசலான சலவைக்கல்லில் செய்த தாஜ்மகாலை விற்கிறோம் (இந்த செய்தி மட்டுமே உண்மை) என சுற்றுலாவாசிகளை கவர சர்க்கரை பாகில் நனைத்த வியாபார சொற்களைபோட்டு பொருட்களை விற்க முயற்சிக்கிறார்கள். இதுதவிர தமிழ்நாடா கேரளாவா என விசாரித்து சென்னை குமரன் சில்க்ஸ் மொத்தவிலைக்கு அளிக்கும் சரக்கை உங்களுக்கு சில்லரையிலும் தருகிறோமெனக்கூறி பட்டுபுடவைகளை விற்றார்கள். பேரம் பேச தெரிந்தால் தோல் பொருட்கள் விலை பரவாயில்லை. நண்பர் நாயகர் ஒரு ஜோடி செருப்பு வாங்கினார்.

தாஜ்மகாலை இப்போதெல்லாம் பேருந்துகள் நெருங்கிவிடக்கூடாதாம். பேருந்துகள் கக்கும் புகை உலக அதிசயத்தை பாழ்படுத்திவிடலாமென்ற அச்சம் ஏற்க கூடியதே. எங்கள் வழிகாட்டி தெற்கு வாயிலைத் தவிர்த்துவிட்டு ( நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள் என்பது ஒரு காரணம்; எங்களை அதிக நேரம் கடையில் நிறுத்தியிருந்தால் நேரமின்மை என்பது மற்றொரு காரணம்) ஒவ்வொரு வாயிலாக எங்களை இழுத்துக்கொண்டு வழிகாட்டி ஓடினாரென்று சொல்லவேண்டும். ஏதோ ஒருவாசலில் இறுதியாக நுழைந்தோம். தாஜ்மகாலுக்காக அவ்வளவு சிரமத்தையும் ஏற்கலாம் போலிருந்தது நல்ல வெயில். யமுனையின் தோற்றம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஷ¥க்களை தவிர்க்க அவைகளின் மீது பிளாஸ்ட்டிக் உரைகளை அணிந்துகொண்டு நடக்கலாம் என்பதென்கிற யோசனை துருக்கியிலும் கடைபிடிக்கபடுகிறது. மாலை நாலரை மணிக்கு வெளியில் வந்து பேருந்து பிடித்து மதுராவரும்போது மணி ஆறாகிவிட்டது. கிருஷ்ணர் பிறந்த இடமாம். முதன்முறையாக வந்திருந்தேன். வித்தியாசமான கோவில். இங்கேயும் பலத்த காவல். வெளியில் தெளிவாக எழுதியிருந்தது: புகைப்படகருவிகள் அனுமதியில்லை. நண்பர் தெபெல் புகைப்பட கருவியுடன் நுழைய காவலர்கள் அவரை உள்ளே விட மறுத்தார்கள். நண்பர் நாயக்கருடன் அதை கொண்டுபோய் பாதுகாப்பகத்தில் கொடுத்துவிட்டு மீண்டும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். மதுரா கோவிலின் பின்பக்கம் மசூதியொன்றிருக்கிறதென்றார்கள் பார்க்கவில்லை.

மதுராவில் கொஞ்சம் பழம் வாங்கி சாப்பிட்டோம். அங்கு தேனீர் நன்றாக இருந்தது. இரவு விடுதிக்குவரும்போது மணி பத்தாகிவிட்டது. நல்லவேளை புறப்படும்போதே சொல்லிவைத்திருந்ததால் இரவு உணவு காத்திருந்தது.
—–

மொழிவது சுகம் – ஏப்ரல் -23


பிரான்சு அதிபர் தேர்தலும் – கருணாநிதியும்

எதிர்பார்த்ததுபோலவே அதிபருக்கான தேர்தல் முதற்சுற்றின் முடிவின் படி இரண்டாம் சுற்றுக்கு சர்க்கோஸியும்(Sarkozy), ஹொலாந்தும் (Hollande) தேற்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொடக்கமுதலே கருத்துக்கணிப்புகள் உருதிபடுத்திய தேர்வாளர்களின் வரிசைஎண் பிறழவில்லை. ஹொலாந்து (Socialiste) சர்க்கோஸி (UMP), மரி லெப்பென் (Front National), ழான் லுய்க் மெஷான்சொன் (Front de Gauche), பிரான்சுவா பைய்ரு(Modem) என வற்புறுத்தப்பட்ட ஆருடத்தில் மாற்றமில்லை. மாறாக முதலிரண்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டிற்கும் கருத்துகணிப்பிற்கும் அதிகவித்தியாசங்களில்லை என்கிறபோதும் அடுத்தடுத்தவந்த வேட்பாளர்களின் வாக்கு சதவிதத்தில் கணிப்புகள் பொய்த்திருக்கின்றன.

இவர்களில் இனவாதியும் தேசியவாதியான மரிலெப்பென் 18 விழுக்காடுவாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் எண்ணிக்கையில் மக்களை கவர்ந்தும் எதிர்பார்த்த அளவில் வாக்குகளைக் குவிக்கத் தவறியிருக்கிறார் தீவிர இடதுசாரியான ழான் லுயிக் மெலான்ஷோன். அவர் பெற்ற வாக்குகள் சதவீதம் பதினோரு சதவீதம். பத்து சதவீத வாக்குகளைபெறுவார் என நம்பப்பட்ட பிரான்சுவா பைரூ பெற்ற வாக்குகளோ 9 விழுக்காடு.

இரண்டாவது சுற்றில் என்ன நடக்கும்.?

தீவிர இடதுசாரிகளும், இயற்கை விருப்பிகளும் தங்கள் ஆதரவு ஹொலாந்துக்கென்று வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு ஓட்டுகள் 99 விழுக்காடு சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளரான ஹொலாந்துக்கு உதவும். ஆனால் அது மட்டும் போதுமா என்ற கேள்விகள் இருக்கின்றன.

தீவிர வலது சாரியான மரி லெப்பென் பதினெட்டு சதவீத வாக்குகளை பெற்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து இடதுசாரியுமல்ல வலதுசாரியுமல்ல எனச்சொல்லிக்கொண்டிருக்கும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுகள் யாருக்கென்ற கேள்வி.

பைரூவின் ஆதரவாளர்கள் மெத்தபடித்தவர்கள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள். பைரூவிற்கு பின்னே திரண்டவர்கள் பைரூவின் நியாயமான செறிவுமிக்க அறிவுபூர்வமான கருத்துரைகளில் நம்பிக்கை வைத்து அவர் பின்னர் வந்தவர்கள். எனவே முதல் சுற்று வாக்குகள் அவ்வளவையும் சிதறாமல் அவர் கைகாட்டுகிற வேட்பாளருக்கு போடும் ஆட்டு மந்தைகளல்ல அவர்கள்.

அடுத்து மரி லெப்பென் என்பரின் ஓட்டு வங்கி. முதல் சுற்றில் இவருக்கு விழுந்த ஓட்டு. முழுக்க முழுக்க இனவாத ஓட்டு என்றோ வெளிநாட்டினர்மீதுள்ள வெறுப்பினால் விழுந்த ஓட்டு என்றோ சொல்ல இயலாது. பிரான்சு நாட்டில் இனவாதமும் வெளிநாட்டினர் மீதான வெறுப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த தீவிரவலதுசாரிக்கு விழுந்த ஓட்டுகள் வேறெங்கிருந்தும் வரவில்லை வழக்கம்போல ஆளும் கட்சியின் மீது இருக்கும் வெறுப்பிற்கும் கசப்பிற்கும் எங்கே நிவாரணம் தேடுவதென்று அலைந்துகொண்டிருந்த வலதுசாரியினரின் ஒரு பிரிவினருக்கும் – திரும்பத் திரும்ப சோஷலிஸ்டுகளுக்கும், யுஎம்பிக்களுக்கும்- ஓட்டளித்து அலுத்துபோன மக்களில் ஒரு பிரிவினருக்கும் மாற்றம் தேவைபட்டது, எனவே தங்கள் வாக்கை இப்பெண்மணிக்கு அளித்தார்கள். இவர்களுக்கு மாற்றம் வேண்டும். இவர்களில் பெரும்பனமையினரின் வாக்கு சர்க்கோசியைக்காட்டிலும், ஹொலாந்துக்கு ஆதரவாகவே நாளை இருக்கும். அதுவும் தவிர அடுத்துவரும் தேர்தலில் கணிசமாக பாரளுமன்ற உறுப்பினர்களைப் பெறவேண்டுமென்ற கனவிலிருகிற மரிலெப்பென் கட்சிக்கு, யுஎம்பியின் கட்சியின் சரிவு அவசியமாகிறது. ஒரு வேளை யுஎம்பி யின் கட்சியினர் மரிலெப்பென் கட்சியுடன் ரகசிய உடன்பாடு கண்டாலொழிய இதற்கு விமோசனமில்லை. சர்க்கோசியும் அவரது ஆதரவாளர்களும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுவங்களைபெறமுடியாத நிலையில், மரி லெப்பனின் ஓட்டுகளைப் பெற எல்லா தத்திரங்களையும் கையாளலாம்.

எது நடந்தாலும்…

சர்க்கோசியின் வாதத்திறமையும் தைரியமும் நாடறிந்ததுதான். இருந்தாலும் அவருடைய யோக்கியதையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதிபர் பதவிக்கான கண்ணியத்தைக் காப்பற்றியவரல்ல அவர். எனக்கு அவர் பிரான்சுநாட்டின் கருணாநிதி. ஹொலாந்துக்கு அனுபவமில்லை என்கிறார்கள். அரசியலில் நல்ல மனிதர்கள் அதிசயமாகத்தான் பூக்கிறார்கள், ஹொலாந்து ஜெயிக்கட்டும்- ஜெயிப்பார். அனுபவம்? அது தன்னால் வரும்…

_____

இசைவானதொரு இந்தியப் பயணம்-12

பிப்ரவரி 12

பன்னிரண்டாம் தேதி காலை விடுதிபொறுப்பிலிருந்தவர் கணக்கு தீர்க்கும்போது ஒரு நாள் வாடகை கொடுக்கவேண்டியிருக்கிறதென்றார். ஆக வைப்புதொகைபோக அவரிடம் ஒரு நாள்கட்டணத்துக்குண்டான  தொகை செலுத்தப்பட்டது. இதற்கு ரசீதெல்லாம் இல்லை. பொதுவாக இந்தியாவில் அநேக கொடுக்கல்வாங்கல்களுக்கு ஆதாரங்களில்லை. நூற்றுக்கு 90 சதவீதம் இப்படித்தான். இதுவே குற்றத்தை நினைக்காதவர்களுக்குகூட குற்றமிழைக்க தூண்டுதலாக இருக்கிறது. கிராம மணியக்காரராக எனது தகப்பனார் அரசாங்க சிட்டா அடங்கல் தாள்களை கையேடுகளாக தைத்துக்கொள்ள உதவியதும், அவர் வாங்கிய ஐந்தும் பத்தும் அப்போது எனக்கு இலஞ்சமாகவே தெரியவில்லை. இந்திய உத்தியோக பர்வதத்தில் இவைகளெல்லாம் அறங்கள் என நினைத்திருந்தேன். தூரத்தில் நின்று பார்க்கிறபொழுதுதான் அதனுடைய கொடூரம் விளங்குகிறது.

காலை சென்னையை நோக்கி புறப்பட்டோம். திண்டிவனம் தாண்டியதும் வண்டியை நிறுத்தி காலை உணவை முடித்துக்கொண்டோம். எங்கள் வாகன டிரைவர் வழக்கமான வாகன ஓட்டிகளைபோலவே ஒரு விண்ணப்பத்தை வைத்தார். அவர் கண்டாக்டரிடம் காட்டியதாகவும் கண்ணாடி மாற்றுவதற்காக ஒரு கணிசமான தொகை தேவைப்படுகிறதெனவும் கூறினார். இது பரவாயில்லை. ஒரு வாகனஓட்டி தாம் அநாதையெனவும் தம்மை தத்து எடுத்துக்கொள்ள முடியுமா எனவும் கேட்டு ஒரு கட்டத்தில் பிரெஞ்சு நண்பர் ஒருவரை மிரட்டும் அளவுக்குப்போயிருக்கிறார். அவர் பிரெஞ்சு தூதரகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் தலையிட பாதுகாப்புடன் விமானம் ஏறியதாகக்கூறினார். இந்தியப்பயணத்தை கொண்டாடும் நண்பர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவரவர் அனுபவம் அப்படி.

காலை பத்துமணி அளவில் பறங்கிமலையை அடைந்தோம். புனிததோமையார் கொல்லப்பட்டதாக நம்பப்படுமிடத்தில் போர்ச்சுகீசியர்கள் அவரது ஞாபகார்த்தமாக நினைவு சின்னம் ஏற்படுத்தியிருந்தார்கள் எனது இளங்கலை பட்டப்படிப்பை சென்னையில் முடித்திருந்தேன். அப்போதெல்லாம் காலையும் மாலையும் மின்சார ரயிலில் தாம்பரத்திலிருந்து கல்லூரிக்குப் பறங்கிமலையை கடந்துதான் செல்லவேண்டும். அதன் பிறகும் பலமுறை சென்னைக்கு சென்றிருக்கிறேன், தங்கியிருக்கிறேன். ஆனால் பறங்கிமலையில் ஏறியதில்லை. முதன் முறையாக ஏறினேன். மேலே மலையினினுன்று பார்க்கும் மீனம்பாக்கமும் சென்னையின் பிறபகுதிகளும் வேறுவகையான சென்னையை கண்முன்னே நிறுத்தியதை மறக்கமுடியாது. பெரு நகரத்தின் ஆரவாரங்களிலிலிருந்து விலகிக்கொண்ட நகரத்தின் ஒரு துண்டு அது. உயர்ந்தவைகள் எப்போது ஆராவராமின்றியே செயல்படுகின்றன. சாந்த்தோம் போவதற்கு முன்பாக நண்பர் சந்தியா நடராஜனையும், சூளைமேட்டில் சுதாராமலிங்கம் குடும்பத்தினரையும் சந்தித்து விடைபெற்றோம். பிரெஞ்சு நண்பர்களிடம் வள்ளுவர் கோட்டம் பற்றி பேசினேன். ஆனால் அங்கே இறங்கிபார்க்க ஆர்வம் இல்லாததும் சாந்த்தோம் செல்வதில் மட்டுமே குறியாக இருந்ததும் எனக்கு அவர்களுடைய மதம்பிக்கைமேல் வெறுப்புகொள்ள செய்தது. சாந்தோம் ஆலயத்தில் எப்போதும்போல வெளிநாட்டவரை நிறைய பார்க்க முடிந்தது. உள்நாட்டவர்களில் குறிப்பாக வெளிநாட்டவர் அதிகம். மதிய உணவை ஸ்பென்ஸர் பிளாஸாவிலிருந்த சரவண பவனில் எளிமையாக முடித்துக்கொண்டோம். அங்கேயே வியாசர்பாடியிலிருந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு கொடுக்கவேண்டியதொகைக்கு உரிய இந்தியரூபாயை யூரோ கொடுத்து மாற்றிக்கொண்டோம். அவருக்கு திண்டுக்கல் செலவும், ஒருவாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்த வாகனச்செலவும் கொடுக்க வேண்டியிருந்தது. பிறகு வியாசர்பாடியில் தொண்டு நிறுவன நண்பர் இருந்தார். வரவேற்று பரிசுகள் தந்தார், உணவளித்தார் கடைசியாக பில்லை கொண்டுவந்தார். நியாயயமான அணுகு முறைதான்.

மாலை நானும் நண்பர் சவியெ தெபெல்லும் தில்லி செல்வதாக இருந்தோம். எங்களுக்கு 8.40க்கு விமானம். மனே தம்பதியினர் நள்ளிரவில் லூப்தான்ஸா விமானம்பிடித்து பிராங்பர்ட்வழியாக பிரான்சு திரும்புவதாக இருந்தார்கள். எனவே நாங்கள் முன்னதாக விமான நிலையத்திற்கு கிளம்பினோம். எங்களுடன் தில்லி வரவிருந்த நண்பர் நாயகர் விமான நிலையத்தில் இணைந்துகொண்டார். புதுச்சேரி விருந்தினர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். எனினும் முன்னேற்பாடாக அங்கே ஏதேனும் பிரச்சினைகள் வந்தால்  ஆர்.கே புரத்தில் நண்பர்களுடன் தங்கிக்கொள்கிறேன், நீங்கள் இருவர் மட்டும் கிடைக்கும் ஒரு அறையில் புதுச்சேரி விருந்தினர் மாளிகையிலேயே தங்கிக்கொள்ளலாமென அறிவித்தார். ஏதேனும் செய்தாகவேண்டுமேயென நினைத்து  எழுத்தாளர் சின்னப்ப பாரதி கூறியிருந்த தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழ பேராசிரியர் கிடைப்பாரா என முயற்சித்தேன். பேராசிரிய பாலசுப்பிரமணியனை சென்னையில் பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 தேதிகளில் நான் சென்னையில் சந்திக்க வேண்டியது. என்னகாரணத்தாலோ அது நடைபெறவில்லை. எழுத்தாளர் சின்னப்பபாரதியிடம் பிரச்சினையைக்கூறினேன். என்ன சார் கொஞ்சம் முன்னாடிச்சொல்லக் கூடாதா என வருத்தப்பட்டார். பின்னர் நண்பர் காலச்சுவடு கண்ணனுக்கு எஸெம்ஸ் அனுப்பினேன். அவர் பிரச்சினையில்லையென உடனடியாக நண்பர் பி.எ.கிருஷ்ணன் பெயரையும் வேறு இரண்டு நண்பர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பு எண்களையும் கொடுத்தார். கவலைப்படாமல் போய் இறங்குங்களென நம்பிக்கையும் கிடைத்தது.

ஏர் இந்தியாவுகென்றே எழுதிய விதியின்படி ஒரு மணிநேரம் தாமதமாக டில்லி தலை நகரை அடைந்தோம். தில்லி விமான நிலையத்தில் பிரம்மாண்டம் தலையைச் சுற்றியது. உண்மையில் அசந்துபோனேன். இரவு ஒருமணிக்கு தில்லி இந்திராகாந்தி விமானதளத்தில் இறங்கி பெட்டிகளை ட்ராலிகளில் தள்ளிக்கொண்டு மூவருமாக வெளியேற  நாகரத்தினம் கிருஷ்ணாவென அட்டையில் எழுதி காத்திருந்த இளைஞர்கள் கண்ணிற்பட்டனர். எழுத்தாளர் கு.சின்னப்பாரதியின் தயவினால் பேராசிரியர் பாலசுப்பிரணியன் அனுப்பிவைத்த ஜவஹர்லால் நேர் பல்கலைகழகத்தில் முனைவர் ஆய்வு செய்யும் மாணவர்களென அறிமுகத்திற்குப்பின்னர் தெரியவந்தது. ஜெகதீசன் என்ற மாணவர் குறிப்பாக பிரெஞ்சிலிருந்து தமிழாக்கம் செய்யப்படுபவைகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்கிறார். அவர் ஆய்வில் நான் இடம்பெற்றிருக்கிறேன் என்பது தில்லி பயனத்தில் மூன்றாம் நாள் எனக்கு தெரியவந்த செய்தி.

தில்லி பன்னாட்டு விமான தளத்திலுள்ள ஒரு வசதி, போகும் முவரியைக்கொடுத்து கட்டணத்தைச் செலுத்தி ரசீதுபெற்றுக்கொண்டவுடன் காத்திருக்கும் டாக்ஸிகள் வரிசையில் வந்து நம்மை ஏற்றிக்கொள்கின்றன. இந்த நற்காரியத்திற்கு தில்லி காவல் துறைக்கு நன்றி கூறவேண்டும். இரண்டு டாக்ஸிகளில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம். புதுச்சேரி விருந்தினர் மாளிகைக்கு முன்பாக இறங்கியவுடன் நடுத்தரவயது டாக்ஸி டிரைவர் பெட்டிகளுக்கு கூடுதலாகக் கட்டணம் கேட்டார். எல்லாவற்றையும் அங்கே செலுத்திவிட்டதாகத் தெரிவித்தேன். இளைஞரான டாக்ஸிடிரைவரிடம் நடுத்தரவயதுகாரர் சணடைபிடித்தார். அங்கேயே நீ தெளிவய் அவர்களிடம் கூறியிருக்கவேண்டுமென்றார். இளைஞர் அமைதியாக ஏதோ பதில் சொன்னார். பின்னர் டாக்ஸியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார். நடுதரவயதுகாரரும் புறப்பட உள்ளே விடுதியில் எங்களுக்கு வேறு பிரச்சினைகள் காத்திருந்தன.

நாயக்கர் பயந்ததுபோலவே புதுச்சேரி விருந்தினர் மாளிகை இரவு பொறுப்பாளர் ஒரு அறைதான் உங்களுக்குப் பதிவு செய்திருக்கிறதென்று குண்டைத் தூக்கிப்போட்டார். நண்பர் நாயக்கரும் நான் வேண்டுமானால் புதுச்சேரி நண்பர்கள் இருவர் வெளியில் தங்கியிருக்கிறார்கள் அவர்களுடன் இருந்துகொள்கிறேன், நீங்கள் இங்கே தங்குங்கள் என்றார். வேறொரு ஓட்டலில் அன்றிரவு அறைகளெடுத்து தங்கியிருக்க முடியுமென்றாலும், வெள்ளைக்கார நண்பர் முன்னால் எனக்கு அது கௌரவ பிரச்சினையாகபட்டது. புதுச்சேரி அரசாங்கம் நாயக்கரிடம் கொடுத்திருந்த அத்தாட்சியில் இருவர் பெயரில் அறை பதிவுசெய்திருப்பது தெளிவாக இருந்தது. அதை தில்லியிலுள்ள புதுச்சேரி விருந்தினர் மாளிகைக்கும் மின் நகலில் அனுப்பி இருக்கிறார்கள். ஆக எங்கள் தரப்பில் வாதாட ஆதாரங்களிருந்தன. விடுதி பொறுப்பாளராக வட இந்தியரிடம் தெளிவாகக் கூறினேன். என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ! நாங்கள் இங்கிருந்து போகும் உத்தேசமில்லை. இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களை இரவு நேரமாக இருந்தாலும் பரவாயில்லையென உடனடியாக அழையுங்கள் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன், என்றேன். அவர் என்னென்னவோ கூறினார். நானும் எனது முடிவை மாற்றிக்கொள்ளபோவதில்லை என்றேன். எனது குரல் பொறுப்பாளர் குரலைக்காட்டிலும் ஓங்கியே ஒலித்தது. ‘சாப், நான் என்ன செய்யட்டும் என்மீது தப்பில்லை. இங்கிருந்த ஊழியர்கள் செய்த தப்பு’ என்று கூற அது எனக்கு வசதியாய் போயிற்று. அடுத்த இரண்டு நிமிடங்களில் பேரேட்டில் எங்கள் பெயர்கள் பதிசெய்யப்பட சாவியை வாங்கிக்கொண்டு கொடுத்த இரண்டு அறைகளில் ஒன்றில் நானும் நாயக்கரும் மற்றதில் தெபெல்லும் தங்கிக்கொண்டோம். மறுநாள் வந்து சந்திப்பதாகக்கூறி மாணவர்கள் விடைபெற்றார்கள்.
————————–

இசைவானதொரு இந்தியப்பயணம்

பிப்ரவரி 11

அதிகாலை திண்டுகல்லிலிருந்து திரும்பியிருந்தோம். இம்முறை நந்திவர்மன் வீட்டெதிரேலேயே அறை எடுத்து தங்கினோம். அரவிந்தர் ஆஸ்ரமத்தோடு தொடர்புடையவர்களுக்குச் சொந்தமானது விடுதி. மறுநாள் அதிகாலை அறைகளை காலி செய்துவிட்டு சென்னை திரும்புவதாக இருந்தது. வாடகை இரண்டுநா¨ளைக்குக்கொடுப்பதா ஒரு நாள் கொடுப்பதா என்ற சிக்கல் இருந்தது. நிர்வாகிகளில் ஒருவரைத் தவிர இருவர் (‘முதல் நாள் சந்தித்த ஆஸ்ரமத்து பெண்மணி உட்பட) ஒரு நாள் வாடகை செலுத்தினால் போதுமென்றார்கள். எனக்கு அவர் ஒரு நாள் வாடகை என்கிறாரே, இவரிடம் செலுத்தினால் பிரச்சினை முடிந்தது நாளைக்கு எப்படியோ? என நினைத்து எனது நிலமையை விளக்கினேன். அவர் போகும்போது கொடுங்களென்றார். பதினோராம் தேதி விடுதிப் பொறுப்பிலிருந்தவர் வாடகை வசூலிப்பதைக்காட்டிலும் தம்மையும் தமது நண்பரையும் போகும் போது கவனித்துவிட்டுப்போங்கள் எனக்கெஞ்சுவதில் அக்கறை கொண்டவராக இருந்தார். நானும் இரண்டுநாள் வாடகை செலுத்தவேண்டியிருக்குமோவென நினைத்திருக்க ஒருநாளாக குறைந்திருந்த சந்தோஷத்தில் (உண்மையில் ஒரு நாள் வாடகை நாங்கள் கட்டுவதுதான் நியாயமுங்கூட) 50 ரூபாயைக் கொடுத்தேன். அவனுக்குக் கொடுத்தேன் ( மன்னிக்கவும் நான் காசுகொடுத்தபிறகு அந்த மானுடப்பிறவி சிறுத்துப் போனது. இவர்களில் ஆரம்பித்து சுப்ரீம் கோர்ட்டில் அரசுவக்கீல் இத்தாலிவிவகாரத்தில் மாநில மற்றும் மத்திய அரசுகெதிராக முகத்தில் கரியைப்பூசுவதை மரக்கட்டை இந்தியர்கள் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம், உணர்வுள்ள இந்தியன் கொதித்துதான் போவான்.

மீண்டும் பதினோறாம் தேதி அதிகாலைக்கு வருகிறேன். நண்பர் இந்திரனும் சென்னையிலிருந்து எங்களுடன் திண்டுக்கல் பயணத்திற்காக இணைந்துகொண்ட ஆரோக்கியராஜ் என்பவரும் நாமக்கலிருந்து புதுச்சேரி வந்து சேர்ந்தவுடனேயே புறப்பட்டு போனார்கள். மதியம் புதுச்சேரி அமைச்சர் ஒருவருடன் அண்ணாமலை ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன், என்று நண்பர் நந்திவர்மன் கூறினார். எனக்கு இதில் விருப்பமில்லை. இதுபோன்ற விருந்துகளினால் கிடைக்கப்போகும் நன்மைகள் என்னவென்று தெரியாது. தவிர எனக்கு மழைக்கு முளைத்த காளான்போல இந்த தேர்தலில் நட்சத்திரமாகி அடுத்த தேர்தலில் உதிர்ந்து விடுகிற எரிநட்சத்திரங்கள் மீது பிடிப்பு எப்போது இருந்ததுமில்லை. அமைச்சரைக்காட்டிலும் நந்திவர்மனை மதிப்பது முக்கியமாகப் பட்டது, சம்மதித்தேன். பன்னிரண்டு மணிக்கு வருவதாகக்கூறிய அமைசர் ஒரு மணிக்கு என்றாகி பின்னர் இரண்டு மணிக்கு வந்தார்.  அமைச்சர் என்கிறபோது இதைக்காட்டிலும் முக்கியபணிகள் இருந்திருக்கலாம். நாசூக்காக அவரும் இதை தவிர்த்திருக்கலாமே என்று தோன்றியது. அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம், அதை பிரசுரிக்க எனக்கு ஆர்வமில்லை

எங்கள் வீட்டு கல்யாண ஆல்பத்தில் ஒரு சிறுவன் எடுத்திருந்த நிழற்படங்களில் பெரும்பாலானவற்றுள் நிற்பான். இப்போது அச்சிறுவன் வளர்ந்து வாலிபநாக இருக்கிறான். இப்போதும் அப்படி போட்டோக்களுக்கிடையே ஓடி ஓடி நிற்பானா எனத்தெரியவில்லை. எனக்குத் தெரிந்து இதற்கெனவே மெனக்கெட்டு அலையும் மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். பிணத்தின் பக்கத்தில் படுத்து அவர்கள் போட்டோ எடுத்து பார்த்ததில்லை. பிணம் விஐபி உடையதாக இருந்தால் அதனுடனும் படமெடுத்து வீட்டில் மாட்டிவைப்பார்கள். ஒரு சிலர் விஐபிக்கள் தெருக்களில் பொதுமக்களுடன் கைகுலுக்கிறபோது இடையிற் கைகொடுத்து நண்பர்களை நிழற்படம் எடுக்கச்சொல்லி வீட்டில் மாட்டிவைத்திருக்க பார்த்திருக்கிறேன். கிளி ஜோஸ்யக்காரன் அண்ணாவுக்குப்பார்த்தேன், பெரியாருக்கு ஜோசியம்பார்த்தேன் என போட்டோக்களை காண்பிப்பதுபோல இவர்களுக்கு இப்படியொரு நோய். இதில் வேடிக்கை என்னவெனில் பிறரிடம் கேமராவைக்கொடுத்தால் எங்கே தவறிப்போகுமோ என நினைத்து மனவியை விட்டே போட்டி எடுக்கச் சொல்கிறார்கள். அந்த மனைவி இவர் மீது என்ன அபிராயங்களை வளர்த்துக்கொண்டிருப்பார் என்ற அடிப்படையில் என்னிடம் ஒரு சிறுகதைக்கூட உருவாகியது. . உளவியல் மாணவர்கள் முனைவர் பட்டத்திற்கு இப்பிரச்சினையை எடுத்துக்கொண்டு கூட ஆய்வு செய்யலாம்.

மாலை 7மணி அளவில் ஆசிரியர் வெங்கிடேசனாரைச் சந்தித்ததையும் இங்கே பதிவுசெய்யவேண்டும். இவர் ஒரு மரபுக் கவிஞர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், புல்லாங்குழல் கலைஞர். அவர் வீட்டிற்குள் நுழையும்போது கர்ணகடூர குரலில் ஏசு அழைக்காமலிருந்தால் அவருக்குச் சந்திக்க நேரிட்ட தருணங்கள் கூடுதல் மகிழ்ச்சியைத்  தந்திருக்கும். அவர் லால்பகதூர் சாலையில் வசிக்கிறார். இந்திய சம்பிரதாயப்படி காரமும் இனிப்பும் வழங்கப்பட்டன. வயது எழுபதுக்குமேல் என்றார் நம்பமுடியவில்லை. அடிக்கடி தலைகாட்டிய கருப்பானை அவர் அதட்டியபோதும் அஞ்சாமல் உலாவந்ததைக்கொண்டே அவர் வயதை நம்பவேண்டியிருந்தது. புல்லாகுழலில் ஒரு இசைத்துண்டை வாசித்துக்காட்டினார். அவர் எழுத்தைக்காட்டிலும் இசை எங்களை கூடுதலாக வசீகரித்தது. அவருடைய மூத்தமகள் திருமதி பூங்குழலியையும் அவரது துணைவர் திரு பெருமாளையும் அறிவேன். இருவரும் புதுச்சேரியில் ஆசிரியப்பணி ஆற்றுகிறவர்கள். சிலகாலம் விடுப்பு எடுத்துக்கொண்டு பிரான்சுநாட்டில் வந்து தங்கியிருந்தார்கள். அவ்வமயம் திருமதி பூங்குழலி பட்டிமன்றங்களில் கலந்துகொண்டு நன்றாக பேசுவார். கத்தரித்ததுபோல விவாதங்களைவைத்து, எடுத்துக்கொண்ட தலைப்பினின்று பிறழாமல் உரையாடும் வல்லமை அவருக்குண்டு.
———————-

சிற்பங்களே எனது வார்த்தைகள்- படைப்புகளைக்கொண்டு எனது இருப்பை நியாயப்படுத்துகிறேன் -கபி க்ரெட்ஸ் (Gaby Kretz)

அவரைச் சந்திப்பதற்கு முன்பு அவரது குழந்தைகளைச் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்திப்பு ஒரு பிற்பகலில் ஜீவனுள்ள அந்திவெயிலின் திரைமறைவில் ஒரு தேவாலயத்தில் வைத்து நிகழ்ந்தது. அவரது குழந்தைகள் குழப்படியற்ற குழந்தைகள். பிரபஞ்சம் அங்கே படிமங்களாக உயிர்பெற்று அசைந்தன. மானுட உயிரியக்கத்தின் குறியீடுகளாக கபி க்ரெட்ஸென்ற  கலைஞர் சமைத்திருந்த சிற்பங்கள் இருக்கக் கண்டேன். கலை நுணுக்கமும் அழகியல் பார்வையும் ஒருங்கே அமைந்த படைப்புகளென்று அவற்றை சொல்லவேண்டும். அமைதியும் சன்னமான மின்சாரஓளியும் குடிகொண்டிருந்த சூழலில் நீந்தியபடி சிற்பங்களை வரிசையாகப் நண்பருடன் பார்த்து முடித்து நிமிர்ந்தபோது சிட்டு குருவி முனுமுனுப்பதுபோல குரல்கள். நண்பர் அவர்தான் என்றார். எனக்குத் தயக்கமாக இருந்தது. நிழல்போல அவரைத் தொடர்ந்துசென்று பெண்மணி முன் நின்றேன். மொட்டவிழாத சிரிப்பு, கூர்மையான கண்கள். நெற்றியில் நிழல்போல் அசையும் தலைமையிர். எதிரிலிருப்பவர்களை உள்வாங்கி மனதிற்குள் பிசைந்து பிரதியெடுப்பதுபோன்றதொரு பார்வை.  நண்பர் ஓரிருவார்த்தைகளில் அவருடைய சிற்பங்களை சிலாகித்துவிட்டு,  இரண்டாவது முறையாக அவற்றைக் காணவந்தத தமது நோக்கத்தை நியாயப்படுத்துகிறார். இதற்கிடையில் என்னைபற்றிய அறிமுகமும் நடந்து முடிகிறது.

 சிற்பக் கலை மானுடத்தின் அழுத்தமான பிரதிகள். சொற்களை மறுதலித்து  ஊமைமொழியில் உரையாடும் கலைவடிவங்களில் ஓவியமும் சிற்பமும் தன்னிகரற்றவை. ஓவியமும் சிற்பமும் ஒரே இனமென்றாலும் ஓவியத்தின் முப்பரிமாணவடிவமென்று சிற்பத்தைக் குறிப்பிடலாம். தொடு உணர்வை சிற்பக் கலையினும் பார்க்க வேறொன்றால் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும் சொல்ல முடியுமமென்று நினைக்கவில்லை. ஏனையகலைகளைக் காட்டிலும் சிற்பகலையுடன் ஒரு நெருக்கத்தை நம்மால் ஏற்படுத்திக்கொள்ள இதுவே காரணமென்று நினைக்கிறேன். சிற்பக் கலைக்குள்ள மற்றொரு சிறப்பு இவர் அவைரைப்போல, அந்த சிற்பத்தைப்போலவென்று ஒரு கலைஞரை அவரது படைப்பை மற்றொருவருடனோ, பிரிதொரு படைப்புடனோ போகிறபோக்கில் ஒப்பீடுசெய்வதில் சங்கடங்களுண்டு. சிற்ப கலைஞனும் சரி அவரது படைப்புகளும் சரி தனித்தவை.

கலைஞர் கபி க்ரெட்ஸ் நவீன கற்பனையுடன்கூடிய வெண்களிமண்ணிலான சுடுமண் சிற்பங்கள் வடிப்பதில் தேர்ந்தவர். அவரது சிற்பங்களை காணும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்தவர் சேவியர் என்ற நண்பர். இருவரும் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருநாள் பாரீசிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். பேச்சுக்கிடையில் கிருஷ்ணா! ஸ்ட்ராஸ்பூர் அருகில் சிற்பக் கண்காட்சியொன்று நடைபெறுகிறது. நீ அதை விரும்புவாய் என்று நினைக்கிறேன், ஆகையால் இருவருமாகச் சென்று பார்த்து வருவோம்’, என்றார். அண்மையில் ஓவிய கண்காட்சியொன்றிற்குச்சென்று மனம் ஒன்றாமல் ஏமாற்றத்துடன் உதிர்த்த எனது வார்த்தைகளுக்கு நிவாரணம் தேடுகிறார் நண்பர் என்பதாக அப்போதைக்கு நினைத்துக்கொண்டேன். அருங்காட்சியகங்களுக்குப் போகிறபோது சிற்பங்களையும், ஓவியங்களையும் பார்க்கின்ற சந்தர்ப்பம் வாய்ப்பதுண்டு. பொதுவில் அனைவரையும் போலவே கூடுதலாக நேரம் எடுத்துக்கொண்டு அவசரமின்றி நிதானமாக அவற்றை பார்க்க நேரும். அம்மாதிரி நேரங்களில் நீங்கள் பொறுமையாகப்பாருங்கள் எனக் கூறிவிட்டு கிடைக்கிற இடத்தில் அலுப்புடன் எனது மனைவி  உட்கார்ந்துவிடுவாள். அநேக தருணங்களில் ஓவியம் மற்றும் சிற்பக் காட்சிகள் எங்கள் திட்டத்தில் இடம்பெறாமல் போவதுண்டு. நண்பர் தான் கண்ட காட்சியை, தமக்கு நேர்ந்த அனுபவத்தை எனக்கும் எப்படியாவது ஏற்படுத்தித் தருவதென்று தீர்மானித்துவிட்டதால் ஒரு ஞாயிற்றுகிழமை அவரும் நானுமாக கபி க்ரெட்ஸ் சிற்பங்களை பார்ப்பதென்று முடிவெடுத்துச் சென்றோம். கபி க்ரெட்ஸ் என்ற பெண் சிற்பக்கலைஞரின் நுணுக்கமான உணர்வுகளை அவர் படைத்திருந்த சிற்பங்களூடாக புரிந்துகொள்ள வாய்ப்பமைந்தது இப்படித்தான்.

 மானுடத்தின் வழித்தடங்களை, உயிர்வாழ்க்கையின் உள்ளுணர்வை சிற்பங்களூடாக நம்மிடம் பகிர்ந்துகொள்ள கபி க்ரெட்ஸ் அகத்தில் கால்கடுக்க வெகுதூரம் நடந்திருக்கவேண்டும். பல்வேறு கருப்பொருளில்  மனித உயிர்களை இரத்தமும் சதையுமாக ஒரு சிற்பக் கலைஞருக்கேயுரிய கவி உள்ளத்துடன் வடிவமைத்திருக்கிறார். ஆரம்பம், உறவு, துன்பம், வழித்தடம், வழிகாட்டி, மகோன்னதம், ஒளி, சக்தி, மூச்சு, திசைமயக்கம் போன்றவை அவரது கருப்பொருட்களில் சில. வடிவங்கள் தோறும் தம்மையும் இணைத்துக்கொண்டு, ஆன்மீகத் தேடலை கலைஞர் தமது சிற்பங்களூடாக அவர் நிகழ்த்தியிருந்தார். மனித குணத்தின் ஓட்டைகளையும், விரிசல்களையும்  வென்ற நிம்மதியையும் எட்டிய அனுபூதி நிலையையும் சிற்பங்களின் முகத்தில் – காணமுடிந்தது. பனித்த கண்கள், புன்னகைபூத்த உதடுகள், சிறைத்த தலை என்ற பொதுஇலக்கணம்கொண்டு சிற்பங்கள் இருந்தன. அச்சிற்பங்கள் அனைத்துமே ஏகாந்த பிரதிகள், ஆனால் அவர்கள் ஒருவராக, இருவராக, மூவராக, கும்பலாக நின்று மானுடவாழ்க்கையின் இரகசியங்களை முனுமுனுக்கிறார்கள். சிற்பங்களில் பலர் பௌத்த பிட்சுகளாக எனக்குத் தெரிந்தார்கள். அப்பிட்சுகள் இடைக்கால கிருத்துவ மடாலயத்திற்குள் பிரவேசித்திருப்பதுபோல உணர்வு. ஓர் இந்தியனென்ற வகையில் அச்சிற்பங்களை பரபிரம்மங்களாகக் கண்டேன். எத்தனை யுகங்கள்,  ஊழிக்காலங்கள் வரினும் போயினும் நிலைபேறுடைய கடைபேருண்மையை சுமக்கும் சிற்பவடிவங்கள் அவை. அவரது படைப்புகளை ஒரு தேவாலயத்தின் பின்புலத்தில் காட்சிபடுத்தியமைக்குப் பிரத்தியேகக் காரணங்கள் இருக்கமுடியுமா என்ற கேள்வி எழுந்தது. அமைதி குடிகொண்டிருக்கும் எந்தச்சூழலும் அச்சிற்பங்கள்வழி உணர்த்தப்படும் உண்மைகளுக்குப் பொருத்தமாகவே இருக்குமென தோன்றியது. எனவே அவரை குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து பார்க்க சங்கடப்பட்டேன். “எனது படைப்பு மாந்தர்கள் பெரும்பாலும் கண்களை மூடி, தியானத்தில் ஆழ்ந்து அக உலகத்தில் மூழ்கிய ஆன்மீக மனிதர்கள். அவர்களை அறிமுகப்படுத்த தேவாலயச் சூழல் ஒத்ததாக இருக்கிறது மற்றபடி மதம் அல்லது கோட்பாடு என்ற முத்திரையின் கீழ் எனது படைப்புகளை அடையாளப்படுத்த விருப்பமில்லை, பிரபஞ்சத்தின் குறியீடுகளென சொல்லிக்கொள்ளவே விருப்பம்”, என்ற கபி க்ரெட்ஸின் கறாரான பதில் எனது அனுமானத்தை உறுதிபடுத்துவதாகவே அன்று அமைந்தது.

கலைஞர் கபி க்ரெட்ஸை மீண்டும் நண்பரும் நானும் அவரது கலைகூடத்தில் சென்று சந்தித்தோம். உரையாடலின்போது சிற்பக்கலையில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், சிற்பத்தை படைக்கிறபோது மனதிலுதிக்கும் எண்ணங்கள் அதற்கான காரணங்கள் எனப்பொதுவாகச் சில கேள்விகளை முன் வைத்தேன். கபி க்ரெட்ஸ் சித்திர கலை, ஓவியம் தீட்டுதல் என ஆர்வங்கொண்டிருந்த மிக அடக்கமான கிராமத்துபெண். தொடக்கத்தில் தனதிருப்பை பிறருக்குணர்த்த ஓவியங்களும் சித்திரங்களும் தேவையாய் இருந்த என்றார்.  “வெண்களிமண்ணில் சிற்பங்களை உருவாக்குகிறபோது ஆரம்பம் முதல் முடிக்கின்றவரை எனது உணர்வுகளை குறையின்றி அதனோடு பகிர்ந்துகொள்ளும் மன நிலைக்கு ஆளாகிறேன். அவ்வுணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்தவும் முடிகிறதென்று பரிபூரணமாக நம்புகிறேன். பரபரப்புடன் இயங்கும் உலகச்சூழலில் நம்முள் நிதானத்தையும் அமைதியையும் தேடவேண்டியவர்களாக இருக்கிறோம். சிற்பக்கலை அதற்கு வழிவகுக்கிறது”, என்ற பதிலில் எனது பல கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன.   இளைமைமுதற்கொண்டு கலைகளில் இருந்த ஆர்வத்தினால் ஒற்றைபெண்ணாக இத்தாலிக்குப் புறப்பட்டு போனார். அங்குதான் சுடுமண்வகை சிற்பங்களில் அவருக்கு காதல் பிறக்கிறது. சிற்பக் கலையை பயில ரோம் நகர வீதிகளில் குருவைத் தேடி அலைந்திருக்கிறார். அப்படிக்கிடைத்தவர்தான் the name of the rose போன்ற திரைப்படங்களில் பணியாற்றி பெரும் புகழ்பெற்றிருந்த Filomeno Crisara. அவரிடம் குருகுலவாசம். இன்று கபி க்ரெட்ஸ் ஒரு தேர்ந்த சிற்பக்கலைஞர். வருடம்தோறும் உலகின் பல பாகங்களுக்கும் சென்று கண்காட்சிகளை நடத்திவருகிறார். “விரல்கொண்டு ஓவியம் தீட்டுவதைக்காட்டிலும் கைகொள்ள களிமண்ணையெடுத்து உருவங்களை சமைப்பதில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கிறதென்று” உரையாடலின் போது அவர்தெரிவித்த வார்த்தைகள் பேரின்பத்தில் உய்யும் நிலை.

——–