பிப்ரவரி -8 -9
பிரெஞ்சு நண்பர்களுடனான எனது இந்தியப் பயணத் திட்டத்தில் பிப்ரவரி எட்டு மற்றும் ஒன்பது தேதிகள் வேறுவகையானவை. இலக்கியம் சார்ந்திராதவை. ஆனாலும் மனித உயிர்கள் -சமூகம் – மானுடம் -பிரபஞ்சம் தவிர்த்ததொரு இலக்கியம் இருக்கமுடியுமா என்ன? இவற்றை பற்றிய பிரக்ஞையின்றி இலக்கியம் இயங்கமுடியாதென்கிற ஓர்மைக்கு உங்களைப் போலவே நானும் சொந்தக்காரன்.
இங்கே ஓர் உண்மையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும். கடந்த ஓராண்டிற்கு முன்பு பிரான்சு நாட்டில் நான் வசிக்கிற Strasbourg நகரில் தமிழ் விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம் அதனை சொல்புதிது என்ற அமைப்பின் பேராலேயே நடத்தினோம். தமிழர் குடியேறியுள்ள நாடுகளில்லெல்லாம் அவர்கள் எண்ணிக்கைக்கு ஈடாக தமிழ்ச் சங்கங்கள் இருக்கும். பிரான்சிலுமுண்டு. எனக்கு நவீன இலக்கியங்களில் கவனம். நவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் பிறபகுதிகளைப்போலவே பிரான்சிலும் குறைவு. எனக்கோ அதனைத் தவிர்த்து வேறு திசையில் தலைவைத்து படுக்க விருப்பமில்லை. பள்ளியில் கல்லூரியில் தொன்ம இலக்கியங்களை படித்தது, இப்போதும் அவ்வப்போது வாசிக்க நேருகிறது, அதுபோதும். எனது முழுக்கவனத்தையும் நவீன இலக்கியத்தில் செலுத்த விரும்புகிறேன். இந்திரன் பிரான்சுக்கு வருகிறாரே அவரைக்கொண்டு தமிழ் நிகழ்ச்சியொன்றை நான் இருக்கின்ற ஊரில் செய்யலாமென்று நடத்தவும் செய்தேன். பின்னர் தொடர்ந்து அதனை செயல்படுத்த முடியாமைக்கு இரண்டு காரணங்கள்:
1. நவீன தமிழ் இலக்கியமென்பதே குமுதம், ஆனந்தவிகடன், ராணி, குங்குமம் என்கிற வெகுசனபுரிதலுக்கு பாடமெடுக்க கையாலாகாதவனாக நான் இருந்தேன் என்பது முதற்காரணம்.
2. இலக்கியவாதிகள் என சொல்லிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையோர் தமிழிலக்கிய வரலாற்றை பதினெட்டாம் நூற்றாண்டுக்கு மேல் தெர்¢ந்திராதவர்கள் அல்லது தெரிந்திருந்தும் புரட்டிப்பார்க்க விருப்பமில்லாததாவர்கள் என்பது இரண்டாவது காரணம்.
ஆக அத்தி பூப்போல நடந்தேறிய எனது சொல்புதிது இலக்கிய அமர்விற்கு எனது நீண்டகால நண்பர்களான சவியெ, மனே தம்பதியினரையும் அழைத்திருந்தேன். நிகழ்வில் ஒரியக் கவிஞர் டாக்டர் மனோரமா பிஸ்வால் அவர்களின் கவிதைத்தொகுப்பொன்று பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டு “L’heure du retour” என்ற பெயரில் கவிதைத் தொகுப்பாக வெளிவந்தது – ஒரிய மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்குக் கொண்டுவந்திருந்தவர் சூரிய காந்த்த கயனென்கிற மொரீஷியர். இதில் என்பங்கு எதுவுமில்லை முழுக்கமுழுக்க நண்பர் இந்திரனின் முயற்சி. இந்திரன் உரையில் இந்திய இலக்கியங்கள் குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் பிரெஞ்சில் வரவேண்டுமென்கிற தமது உள்ளகிடக்கையை வெளிப்படுத்தினார். நானும் எனது உரையில் அதன் அவசியத்தை உணர்ந்தவன் போல பேசினேன். தொடர்ந்து மொழிபெயர்ப்பில் குறிப்பாக ஆங்கிலத்தில் அல்லாத மாநில மொழிகளில் வெளிவந்துள்ள இலக்கியங்களை பிரெஞ்சில் கொண்டுவருவதென்கிற கனவை நனவாக்க ஓர் அமைப்பை ஏற்படுத்துவதென்ற யோசனையை முன்வைத்தேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்த நண்பர்கள் பின்னர் சந்தித்தபோது அமைப்பினை உருவாக்க ஒத்துழைப்பதாக வாக்களித்தார்கள்; இத்துறையில் பிரான்சிலிருக்கும் புதுச்சேரி தமிழருக்கு அதிக நாட்டமினமையால் பிரெஞ்சு நண்பர்களோடு சேர்ந்து செயல்படுவது உத்தமமென தொடங்கினோம். இந்நண்பர்கள் தீவிர இலக்கியவாதிகளில்லை. அமெச்சூர் கவிஞர்கள். அவர்கள் கவிதைகளில் பல நன்றாகவுமிருந்தன. எனவே அவர்கள் துணையுடன் எனது அமைப்பைத் தொடங்குவதென தீர்மானித்தேன். இருபதாண்டுகளுக்கு மேலாக அவர்கள் மூவரும் எனக்கு நண்பர்கள். எனவே தெரியாத பலாக்காயைக் காட்டிலும் தெரிந்த கலாக்காய் மேலானதென்கிற பழமொழிக்கு ஏற்ப தொடங்கினேனென வைத்துக்கொள்ளுங்கள். நண்பர் சவியே என்னிடத்தில் கிறித்துவ மதத்தை பேசாவிடினும் இறைநம்பிக்கை அதிகமாக இருந்தது. மனே தம்பதியினரும் இறைநம்பிக்கை கொண்டவர்கள். அவர்களில் நண்பரான பிரான்சுவா மனே கரித்தாஸ் (Caritas) என்கிற தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றுகிறவர். ஆக நண்பர்கள் மூவரும் இந்தியாவில் கிராமப்பகுதிகளில் தொண்டு நிறுவனங்களின் பணியைப் பார்வையிடவேண்டுமென்று ஆசைபட்டனர். பிரான்சுவா மனேவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கரித்தாஸ் பொறுப்பாளராக இருக்கும் இயக்குனர் ஜான் ஆரோக்கியராஜ் பழக்கமென்பதால் அவரைத் தொடர்புகொண்டு ஆவன செய்யப்பட்டது.
இந்த ஏற்பாடு முழுக்க முழுக்க மனே தம்பதினர் ஏற்பாடென்று சொல்லலாம். முதலில் இதனை நான் எதிர்த்தேன். இலக்கியப்பணி என்று ஆரம்பித்துவிட்டு வேறு திசையில் பயணிக்க எனக்கு விருப்பமுமில்லை நேரமமுமில்லை. தவிர பொதுவாக ஐரோப்பியர்களுக்கு ஒரு விதமான ‘Voyeurism’ உண்டு. நமது அறிவைக்காட்டிலும் அறியாமையைத் தெரிந்துகொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் அதிகம். இந்தியாவில் தேனீக்கள் மொய்க்கும் மலர்களை படம் பிடிக்கமாட்டார்கள், ஆனால் ஈக்கள் மொய்க்கும் மனிதர்களையும் பண்டங்களையும் காட்சிப்படுத்துவார்கள். இந்த அலகினை இலக்கியத்திற்கும் உபயோகிக்கிறார்கள் என்பதுதான் சோகம். இந்நிலமைக்கு இந்தியர்களான நாமும் ஒருவகையில் பொறுப்பு. அழும் பிள்ளைக்கு பால் கொடுக்கவிரும்பாத இயலாத தாய்மார்களாக நாம் இருக்கிறோம். எனினும் நண்பர்களால் இந்திய இலக்கியத்திற்கு நாலு நல்லது நடக்குமெனில் சகித்துக்கொள்வதென முடிவு எடுத்தேன்.
முதல்நாள் மாலை சென்னையிலிருந்து ஜான் ஆரோக்கியராஜ் நாங்கள் கேட்டுக்கொண்டபடி வாடகைக் காரை பிடித்து புதுச்சேரி வந்திருந்தார். அவருடைய வாகனத்தில் புறப்பட்டு புதுச்சேரி அண்ணா நகரிலிருந்த ‘Rural Education and Action for Liberation’ [REAL]. என்கிற தொண்டு நிறுவனத்திற்குச் சென்றோம். நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவருமான திருவாளர் எம்.ஏ லாரன்ஸ¤ம் அவரது அலுவலக ஊழியர்களும் வரவேற்றனர். எங்களுக்குச் சந்தணமாலைகள் போட்டார்கள். காப்பியும் பிஸ்கட்டும் கிடைத்தன. ஸ்தாபனத்தின் தொடக்கம் அதன் வளர்ச்சி, இயங்கும் விதம், களப்பணியாற்றும் ஊர்கள், பணி பற்றிய விவரங்கள் அனைத்தையும் சோர்வின்றி ஆர்வத்துடன் விளக்கினார்கள்.
1960ம் ஆண்டு திண்டிவனம் அருகே எண்ணாயிரமென்ற கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கிராமத்தின் விளிம்பு நிலைமக்களும், தலித் மக்களும் படும் துயரத்தைக் காணச்சகியாமல் இத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியதாக அறிந்தோம். ஆரம்பத்தில் ஏழு உறுப்பினர்கள் இன்றோ 132 அமைப்புகள் இருக்கின்றன. பெண்கள் கல்வி, வங்கிக்கடன், முதியோர் கல்வி, சுற்றுப்புற சூழல் என இவர்கள் ஆற்றும் பணியினைக் கண்ணுற்ற ஆட்சியாளர்கள் ஓட்டுவங்கியின் மகத்துவத்தை அறிந்து உள்ளே நுழைந்திருக்கிறார்கள். எனினும் இன்றளவும் சுற்றுவட்டாரங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இவர்கள் முதுகெலும்பாக இருந்துவருகிறார்கள். REAL அமைப்பின் தலைவர், தமிழ்நாடு புதுச்சேரி மாநில கரித்தாஸ் நிர்வாகி, கள ஊழியோர்கள் ஆகியோரின் துணையுடன் கோட்டக்குப்பம், கூனிமேடு பின்னர் எண்ணாயிரமென்று சென்றோம்.
பிப்ரவரி 9ந்தேதி காலை ஐந்து மணி அளவில் ஏனம் வெங்கிடாசலப்பிள்ளை வீதியிலிருந்த எங்கள் அறைகளைக் காலிபண்ணிவிட்டு பெரிய பெட்டிகளையெல்லாம் நண்பர் நந்திவர்மன் வீட்டில் போட்டுவிட்டு கைப்பைக்களுடன் திண்டுக்கல் புறப்பட்டோம்; அங்கே நண்பர் இந்திரன் எங்களுடன் சேர்ந்துகொண்டார்; விழுப்புரம் திருச்சி வழியாக திண்டுக்கல் பயணப்பட்டோம். அங்கும் நிர்வாகிகள், நிறுவனத்தின் ஊழியர்கள் தொண்டு நிறுவனத்தினர் வரவேற்பளித்தார்கள். அவர்களுடைய பணிகளை விளக்கினார்கள். பல்வேறு கிளை நிறுவனங்கள் அவர்களின் பிரத்தியேக பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைப்பின் பெண்தலைவிகள் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்கள். அன்று மதியம் திண்டுக்கல் அருகே இருபது கி.மீட்டர் அருகிலொரு கிராமத்தில் வரவேற்பு: கும்மியாட்டம் தேவராட்டம் என சிரத்தையோடு எல்லாவற்றையும் ஆடினார்கள். முதல் நாள் விழுப்புரம் மாவட்டத்தில் சந்தித்த சுய உதவி குழுக்களைக்காட்டினாலும் திண்டுக்கல் மகளிர் சுய உதவி குழு வசதி கூடியதாக இருந்தது. ஆனால் திண்டுக்கல் சுய உதவி குழுவும் சரி முதல் நாள் விழுப்புரம் மாவட்டத்தைசேர்ந்த சுய உதவி குழுக்களுக்கும் சரி மனப்பாடம் செய்ததுபோல ஒப்பித்தார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவில் தாங்கள் கிராமப்பஞ்சாயத்து தேர்தலில் உறுப்பினர் ஆகியிருப்பதாக தெரிவித்தார்கள். இவைகளெல்லாம் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த தைரியம் என்றார்கள். நண்பர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் அளித்தார்கள். நாங்கள் போனஇடங்களிலெல்லாம் மாலைகள், குளிர்பானங்கள் அல்லது தேனிர் என்றவகையில் ரூபாய் ஐம்பதிலிருந்து நூறுவரை செலவு செய்திருப்பார்கள். ஏழைப்பெண்களின் உழைப்பில் வந்த காசு. அப்பெண்கள் ஒவ்வொருவருக்கு புண்ணியவான்கள் வரமளிக்கவந்திருக்கிறார்கள் என்ற நினைப்பிருந்தது. அவர்கள் செய்திருந்த மணிமாலைகள், பொம்மைகள் போன்றவற்றைக் காண்பித்தார்கள். பிற பெண்கள் அமைப்புடன் போட்டியிட்டு பரிசுகள் வென்ற சந்தோஷத்தையும் பகிர்ந்துகொண்டனர். பெண்களில் அநேகருக்கு வெள்ளைதோல்காரர்கள் இரட்சகர்களென்கிற நினைப்பு. எண்ணாயிரத்தில், ஒரு மில் தொடங்கி வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுத்தால் புண்ணியமாப்போகுமென்று பெண்ணொருத்தி கூறியது ஓயாமல் ஒலிக்கிறது.
———————————————