Category Archives: Uncategorized

மொழிவது சுகம்:- ஜூன் 12

அம்பானிவீடும் சென்னை விமான தளமும்:

அண்மையில் அருந்ததிராய் கட்டுரையொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அது அம்பானி மும்பையில் கட்டியெழுப்பிய ‘வசந்தமாளிகை’  ‘Antilla’ பற்றியது. அவரது மனைவிக்காக கட்டினார் என்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இந்த வசந்த மாளிகையைக்காண மும்பை வாசிகள் கூடுகிறார்களென்று பேச்சு. அண்ணாந்து பார்த்துவியக்கிறார்களாம். எங்கள் கிராமத்திலிருந்து சென்னைக்கு சுற்றுலா வருவார்கள். அந்த ஒரு நாள் சுற்றுலாவின்போது ஒருமணிநேரமோ இரண்டுமணிநேரமோ மீனம்பாக்கம் அருகே பேருந்தை நிறுத்தி காத்திருந்து விமானங்கள் வந்திறங்குவதைப் பார்ப்பார்கள். பழைய திரைப்படங்களில் கதாநாயகன் விமானத்தில் இறங்குவதை காண்பிக்கவென காட்சிகளை வலுக்கட்டாயமாக சேர்ப்பதுண்டு. கதாநாயகனோ அல்ல கதாநயகியோ யாரேனும் இருவரில் ஒருவர் மாளிகைக்குச் சொந்தக்காரர்களாக  இருக்கவேண்டும். வயிறு ஒட்டிப்போன ரசிகர்களை நம்பியே பிலிம் சுருள்கள் இருந்தன. விமானங்களின் எண்ணிக்கையும் பெருகி, நகரவாழ்க்கை அதிசயங்களுக்கும் பழகியிருக்கும் இந்நாட்களில்கூட தென்மாவட்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில் 30 ஆண்டுகளுக்கு முன்பாக அதே ஆர்வத்துடன் விமானத்தை பார்க்கும் பயணிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ‘Antilla’ வைப்பற்றிய அருந்ததிராயின் கட்டுரையை வாசித்தபோது விமானத்தை வேடிக்கைப்பார்க்கும் தென்மாவட்ட கிராமத்து மனிதர்கள்தான் நினைவுக்கு வந்தார்கள். நியூயார்க்கிலோ, சிங்கப்பூரிலோ ‘Antilla’விற்கு இம்முக்கியத்துவம் கிடைக்குமாவென்று சொல்லவியலாது. உலகில் சேரிகள் நெருக்கமாகவுள்ள நகரங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆப்ரிக்க ஆசிய நாடுகளிலுமுள்ளன, ஏன் இந்தியாவில் சென்னையைக்கூட குறிப்பிடலாம். எனினும் மும்பை நகருக்கு அம்பானியின் தயவால் இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. மும்பை குடிசைவாசிகள் புண்ணியம் செய்திருக்கவேண்டும். அதிலும்  ஹெலிகாப்டர் உபயோகத்திற்கான தளம், 27மாடிகள், 9 லிப்டுகள், மாடியிலேயே பூங்கா, உடற்பயிற்சிக்கான கூடம், வாகனங்கள் நிறுத்த ஆறுமாடிகள், 600 பணிஆட்களென்றால் சும்மாவா. தற்போதைக்கு ‘Antilla’ வில் ஆள் நடமாட்டமில்லையாம். அதாவது குடிபோகாமல் இருக்கிறார்கள். வாஸ்த்து சாஸ்த்திரம் பார்த்து கட்டவில்லையோ? அதனாலென்ன அறுபதினாயிரம் மனைவியர், அக்குரோணி கணக்கில் சேனைகள், அஷ்டதிக்கு பாலகர் என்றெல்லாம் கற்பனைகளை வரித்துப் பழகிய நமக்கு இந்த மாளிகையை மையமாகவைத்து புனையப்படும கதைகள் கசக்கவா செய்யும். அமெரிக்காவிலும் மேற்கத்திய நாடுகளிலும் முதலாளிகள் சுவாசிக்க பிராணவாயுயின்றிதவிக்க இந்தியப்பொருளாதாரத்தில் இவர்கள் காட்டில் மழை. 1.22 பில்லியன் மக்கத்தொகைகொண்ட பாரதத்தின் மொத்த தேசியவருவாயில் 25 சதவீதம் அம்பானியையொத்த முதல் நூறு பணக்காரர்களிடம் இருக்கிறதாம். இவர்களைப்போன்றவர்களும் புதிதாய் இந்தியப்பொருளாதாரத்தில் தலையெடுத்திருக்கிற 300மில்லியன் நடுத்தர வர்க்கமும் நாளொன்றுக்கு இருபது ரூபாய்க்கு வழியற்ற 800 மில்லியன்மக்களின் வாழ்க்கையைக்குறித்தும், வாழ்வாதாரங்களைக்குறித்தும் பிரக்ஞையற்று வாழ்வதாக அருந்ததிராய் எழுதுகிறார், யோசிக்கவேண்டியிருக்கிறது.

பிரான்சுவா ஒலாந்து

எதிர்பார்த்ததுபோலவே பிரான்சுநாட்டு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஒலாந்து வெற்றிபெற்றிருக்கிறார். இந்த ஒலாந்து என்ற சொல்லை ஆனந்தரங்க பிள்ளையின் நாட்குறிப்பில் கண்டேன். ஆனந்தரங்கபிள்ளைக்கும், இன்றைய பிரெஞ்சு அதிபருக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? எதையாவது எழுதலாம். கற்பனையிருப்பின் முடிச்சுகளா இல்லை. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பில் வருகிறவர்கள் டச்சுகாரர்களென்று நாமழைத்த  ஓலாந்துகாரர்கள்.

பிரான்சுவா ஓலாந்து அதிபர் தேர்தலுக்கு நின்றபோது, ஆட்சியிலிருந்த வலதுசாரி கட்சியும் அவர்களது அனுதாபிகளும் கடுமையாக விமர்சித்தார்கள். அவர் தேர்தலில் நின்று ஜெயித்தும் ஆயிற்று. அங்கொன்றும் இங்கொன்றுமாக புலம்பலும் தொடர்கிறது. மொத்த வாக்காளார்களில் 80 சதவீதத்தினர் தங்கள் உரிமையைப் பயன்படுத்தியிருந்தனர். பிரான்சுநாட்டின் அரசியலமைப்பு விதிப்படி முதல் சுற்றில் வெற்றிபெற்றிருந்த முதலிரண்டு வேட்பாளர்களும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பிற்கு  அனுமதிக்கப்பட்டிருந்தனர். சோஷலிஸ்டுகட்சியின் ஒலாந்தும், வலதுசாரிகளின் சர்க்கோசியும் மோதினார்கள். போனமாதம் எழுதியிருந்ததைத்போன்றே ஒலாந்து வெற்றிபெற்றார். சர்க்கோசிக்கு எதிரான அலையே ஒலாந்துவின் வெற்றிக்கு உதவியதென சொல்லவேண்டும். பிரான்சுவா ஒலாந்து 52 விழுக்காடு வாக்குகளையும், சர்க்கோசி 48 விழுக்காடு வாக்குகளையும் பெற்றிருந்தார்கள்.

“வளர்ச்சியைப் புறக்கணித்து செலவினைக் குறைக்கவேண்டும்” என்று ஐரோப்பிய கூட்டமைப்பு எடுத்திருந்த முடிவை பிரான்சுவா ஒலாந்து மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்த சொல்கிறார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த பலரும் வலதுசாரி பின்புலத்திலிருந்துவந்தவர்களென்பதால், பசியேப்பக்காரகளின்  சஞ்சலத்தைக்காட்டிலும் புளிஏப்பக் காரர்களின் சங்கடங்கள் அவர்களுக்கு முக்கியமாகபட்டன. ஒலாந்துக்கு பசிஏப்பக் காரர்களின் சஞ்சலங்கள் முக்கியம். அவரது தேர்தல் வாக்குறுதிகள் தெளிவாக இருக்கின்றன. அவருக்கெதிராக கட்சிகட்டிகொண்டிருந்த ஐரோப்பிய வலதுசாரிகள், இறங்கிவந்திருக்கிறார்கள். பொருளியல் நிபுணர்களின் விமர்சன தொனியிலும் இறக்கமிருக்கிறது. நேற்றுவரை ஆட்சியிலிருந்த வலதுசாரி நடந்ததனைத்திற்கும் தாங்கள் பொறுப்பல்ல, அதற்கு உலகத்தில் ஏற்பட்ட நெருக்கடியே காரணம் என்றார்கள். புதிய அதிபரின் வாக்குறுதிகளை நம்பத் தயாரில்லை என்கிற சர்க்கோசி அனுதாபிகளுக்கு,  தங்கள் சர்க்கோசி சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததில் வருத்தங்களில்லை. பிரான்சிலேற்பட்ட நெருக்கடிக்கு சர்க்கோசியும் அவரது சகாக்களும் பொறுப்பல்ல என்றும் உலகம் திணித்ததாக கூறவும் அவர்களுக்கு தயக்கமில்லை.

இந்த உலகம் எங்கிருந்து வந்தது, யார்கையில் இருக்கிறது? தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு நாட்டிலும் கைவிரல் எண்ணிக்கையிலிருக்கிற மனிதர்களிடம் உலகப்பொருளாதாரம் இருக்கிறது. உலகத்தின் தலைவிதியை இந்தச் சிறுகூட்டமே கைவலிக்காமல் எழுதுகிறது. அதை எழுதியதில் சர்க்கோசிகளுக்கும் பங்குண்டு. இன்றைய முதலாளியியத்திற்கு சில செப்படிவித்தைகள் தெரியும். சீனாவில் மாவோயிஸம்; பொதுவுடமைகாரர்களுக்கு சோஷலிஸம் -மார்க்ஸிஸம்; அமெரிக்காவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முதலாளியியம்; இந்தியாவுக்கு ஜனநாயக சோஷலிஸமென மேடைக்கும் எதிரிலிருக்கும் ரசிகர்க¨ளைப் பொறுத்தும் எந்த வேடமும் முதலாளித்துவம் தரிக்கும். நேற்றுவரை பிரான்சு சர்க்கோசி குத்திரைபட்டிருந்தது.. இன்று ஒலாந்து முத்திரை. பீடித்துள்ள நோய்க்கு இதுதான் மருந்து என்று அறியாதபோது புதிய மருந்தையும் முயற்சிக்க வேண்டியதுதான். தற்போதைக்கு புதிய மருத்துவரின் கைராசிபற்றி கருத்து கூற உடனடியாக எதுவுமில்லை. அவருடைய ஒலாந்து முகராசியை பலரும் நம்புகிறார்கள். ஒலாந்து தீவிர இடதுசாரியுமல்ல. இங்கிலாந்தின் முன்னாள் அதிபர் தோனி பிளேர் ரகம். ஆக உருப்படியான மாற்றங்களுக்கு உத்தரவாதமுண்டு. சிக்கனத்தின் அடிப்படையிலான பொருளாதார நடவடிக்கைக்கு மாறாக ஒலாந்து வற்புறுத்தும் வளர்ச்சியின் அடிப்படையிலான பொருளாதாரக்கொள்கையின் யோசனைக்கு ஆதரவாக சில ஐரோப்பிய தலைவர்களன்றி, ஒபாமாவின் அரசும் செவிசாய்த்திருக்கிறது

புதிய அதிபர் பதவியேற்றதும், ஆட்சிபொறுப்பிலிருந்த வலதுசாரி அரசாங்கம் விலகிக்கொண்டது. அதிபர் ஒலாந்துவின் சோஷலிஸ்டு கட்சியின் அமைச்சரவை பதவியேற்றுள்ளது. எனினும் ஜூன்மாதத்தில் நடைபெறவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலில் இவர்கள் பெரும்பான்மை பெற்றாலொழிய ஆட்சியில் நீடிப்பது சாத்தியமில்லை. பிரெஞ்சு குடியாட்சியில் அதிபர் ஒரு கட்சி, ஆள்பவர்கள் ஒருகட்சி என்ற காட்சிகள் புதியதல்ல. எனினும் இப்போதுள்ள சூழல் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கலாம். அன்றியும் ஒலாந்து தமது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், எதிர்கட்சிவசமிருக்கிற நிர்வாகமே காரணமெனக்கூறி நாளை தந்திரமாக தப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. பெரும்பான்மையான கருத்துகணிப்புகள் புதிய அமைச்சரின் சோஷலிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆக அதிபரின் அமைச்சரவை தப்பி ஜீவித்திருக்க வாய்ப்புண்டு. சட்டவரைவிற்கு உட்படுத்தவேண்டிய எந்தவொரு முடிவையும் பாராளுமன்றத் தேர்தல் நடந்தேறும்வரை இடைக்கால அரசாங்கம் எடுக்கமுடியாது. புதிய அதிபர் தற்போதைக்கு உடனடியாக அவரால் செய்யமுடிந்த சிலவற்றை நடைமுறைபடுத்தியிருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக தமது அமைச்சரவையில் ஆண்களும் பெண்களும் சம எண்ணிக்கையிலிருப்பார்கள், எனத் தெரிவித்திருந்தார். அதைபோலவே புதிய அமைச்சரவையில் 17 ஆண்கள், 17 பெண்கள். அடுத்து அதிபர் தமது ஊதியத்தையும் அமைச்சர்கள் ஊதியத்தையும்; தங்கள் இருதரப்பு செலவினங்களையும் 30 சதவீதம் குறைப்பதாக அறிவித்திருந்தார். அதையும் நடைமுறை படுத்தியிருக்கிறார். இனி பிறநடவடிக்கைள் குறித்து ஜூன்மாத பாராளுமன்ற தேர்தலுக்குபிறகே சொல்லமுடியும்.

——————–

துருக்கி பயணம்-5

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-30

இரண்டாம் நாளாக கப்படோஸ் பிரதேசத்தை பார்வையிட விருந்தோம்.  இப்பிரதேச மெங்கும்  பார்வைக்கும், தெரிந்து கொள்ளவும் கலைகூறுகளும் கல்விக்கூறுகளும் திகட்டும் அளவிற்கும் இருக்கின்றன,  வருடம் முழுக்க தங்கி பார்த்துவரலாம். கடந்தவாரம் எழுதியதுபோன்று  வரலாறு, புவியியல், பண்பாடு மூன்றும் தமது தழும்பை ஆழமாகப் பதிவுசெய்திருப்பதால் துருக்கிக்கு பயணிக்கும் மேலேகுறிப்பிட்டுள்ள துறை ஆர்வலர்கள் எவரும் இப்பிரதேசத்தைத் தவிர்க்கக்கூடாதென்பதில் கவனமாக இருக்கின்றனர். பாரசீகமக்கள், அஸ்ஸீரியன் மக்கள், கிரேக்க நாட்டவர், உலகின் ஏனைய நாகரீகங்களோடு ஒப்பிட்டு பெருமைபேச துருக்கியருக்கு வாய்ப்பளித்த இட்டிட்ஸ் (Hittites)களும் இப்பகுதியைக் கைப்பற்றி பலகாலம் ஆண்டிருக்கிறார்கள். கனிமவளம் நிறைந்த பகுதியானதால் (குறிப்பாக  வெள்ளியும் தங்கமும் ) படையெடுப்பிற்கு காரனமாகியிருக்கிறது. வந்தவர்கள் வழக்கம்போல மதத்தையும் மதத்தையொட்டிய நம்பிக்கையையும், நம்பிக்கையோடு விரவிய பண்பாட்டையும் பொதிகளாக கொண்டுவந்து சேர்த்திருக்கின்றனர். பாரசீகர்கள் இப்பகுதிக்கு கட்படுகா (Katpatuka) என்று பெயரிட்டிருக்கிறார்கள். ‘கட்படுகா’ என்றால் குதிரைகள் நாடு என்று பெயராம். அலெக்ஸாண்டர் தமக்கு வரவேண்டிய திரைப்பணத்திற்கு குதிரைகளை கொடுக்கும்படி கேட்டதாக குறிப்ப்ட்டிருந்தேன். கப்படோஸ் வரலாற்றோடு எனது பயண எழுத்தையும் ஓடவிடுவது உங்களுக்கு அயற்சியை தருமோ என்னவோ எனக்குத் தரக்கூடும் ஆகவே சுற்றுலா வாசிகளைக் கவர்ந்த அல்லது கவரங்கூடிய அருங்காட்சிகளுக்கு காரணமான முகத்துவாரத்தை அறிமுகபடுத்திவிட்டு இன்று பார்த்தவைகளை பட்டியலிடுகிறேன்.  ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டுவரை கப்படோஸ் பலமுறை சுன்னி பிரிவு அப்பாசிட் அரபு இனத்தவரின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. கிட்டதட்ட மூன்று நூற்றாண்டுகள். உயிர்பிழைக்க அடிக்கடி பதுங்குழிகளை தேடியவர்கள் அதையே நிரந்தரமாக்கிக்கொள்கிறார்கள். இப்பிரதேசமெங்கும் மலைகளிலும் நிலவறைகளிலும் வாழ்க்கையை அமைத்துக்கொண்டதற்கு இதுவே முதலும் முடிவான காரணம்.

காலை உணவிற்கு நாங்கள் மேசையில் அமர்ந்தபொழுது டாக்டருடன் அவர் மனைவியும் இறங்கியிருந்தார்; இன்று உடல்நலம் தேவலாம் என அவர் கூறிக்கொண்டாலும் முகத்தில் முந்தைய நாட்களில் கண்ட களையில்லை.

ஒர்த்தாயிஸ்ஸார் (Ortalhisar) – கொரேம் பள்ளதாக்கு ‘Goreme Valley):

காலையில் முதலிற் பார்த்தது ஒர்த்தேயிஸ்ஸார். மதிய உணவிற்குபிறகு பிற்பகல் மாலை ஐந்து மணிவரை கொரெம் பள்ளதாக்கென்கிற கொரெம் அருங்காட்சியகத்தை கண்டோம். இவ்விரண்டுமே கொரெம் நகரத்திற்கு வெளியே சில கி.மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றன. கப்படோஸ் பகுதியில் எரிமலைகள் வெடித்து அதன் லாவாக்களால் உருவான குன்றுகள் குடைவதற்கு எளிதாகவும் பாதுகாப்பிற்கு உகந்ததாகவும் இருந்திருக்கின்றன. மக்கள் குடியிருப்பிற்கு மட்டுமின்றி, கிருத்துவ குருமார்கள் தேவாலாயங்களுக்கும் அவை உதவின. (முதல் நாள்  மனிதஉருவில்  கண்ட தோற்றங்களுக்கும் அக்குன்றுகளில் மென்மையே காரணம். அம்மனித உருகொண்ட தோற்றங்களை Cheminளூe de fளூe என்று பிரெஞ்சில் அழைக்கிறார்கள் அல்லது நிலவியலில் hoodoo என்கிறார்கள்.) ஆக இப்பகுதி முழுக்க ஆர்தடோக்ஸ் கிருத்துவர்கள் வசம் இருந்திருக்கிறது. குகைகளில் பைசாண்ட்டைன் வகை ஓவியங்கள் இருக்கின்றன. ஒர்த்தாயிஸ்ஸார் வித்தியாசமானதொரு சிறுநகரம். மலைகோட்டைபோல தோற்றம் தரும் இக்கிராமமெங்கும் குடியிருப்புகள் புறாக்கூண்டுகள் போல உள்ளன. அரபு படைகளில் பயம் முற்றாக விலகிய பிறகு (பத்தாம் நூற்றாண்டில்) பூமிக்குமேலே திறந்தவெளியில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு மக்கள் வசித்திருக்கிறார்கள். அச்சிறிய நகரில் இடைக்காலத்தைச்சேர்ந்த ஒரு மசூதியுமிருந்தது. வீடுகள் எளிமையாக இருந்தன. நுழைவாயில்கள் கிரேக்கர் சாயலுடன் இருக்கின்றன. கப்படோஸ் பிரதேசத்தின் செராமிக் வகை அலங்கார தட்டுகள் பொம்மைகள் நிறைய கிடைக்கின்றன.  நாங்கள் சுற்றுலா சென்ற இடங்களிலெல்லாம் இதுபோன்ற கடைகள் ஏராளமாக இருந்தனவென்றாலும் இங்கே விலை மலிவு. கண்ணேறு கழிக்கவென்று, செராமிக்கில் செய்து நீலவண்னத்தில் மயிற்கண் தோற்றமும் அலங்காரப் பின்னலும்கொண்ட சில்லுகள் கிடைக்கின்றன. வீட்டு முகப்புகளிலோ வரவேற்பறைகளிலோ கட்டித் தொங்கவிடலாமென்றார்கள். ஐரோப்பியர்ககளுக்கு குதிரை லாடத்தைவீட்டுச் சுவற்றில் அடித்துவைக்கும் பழக்கமுண்டு. இந்நகரத்து வீதிமுழுக்க கடைகள், அவற்றுள் விதவிதமான பேரிச்சைகள், உலர்ந்த திராட்சைகள், பாதாம், பிஸ்தா, முந்திரி, வெள்ளரி பருப்புவகைகள் நியாயமான விலைகளில் கிடைக்கின்றன.

பிற்பகல் கொரெம் நகரில் ஒரு ஓட்டலில் நல்ல உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறகு அங்கிருந்து கொரெம் பள்ளதாக்கு, திறந்தவெளி அருங்காட்சியகம். காவல் பலமாக உள்ளது. அவ்வாறிருந்தும் சிற்சில இடங்களில் விஷமிகளின் அத்துமீறல்களை உணரமுடிந்தது. இங்குள்ள தேவாலயங்களுள் நுழைவாயில்களில் பெரும்பாலானவை ஓர் ஆள் மட்டுமே புகுந்து செல்லகூடியவை. ஒவ்வொருமுறையும் ஒரு குழுவினரை மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குமேல் உள்ளே இருக்க அனுமதிலில்லை. வெளியே காத்திருக்கிற குழுக்களின் எண்ணிக்கை அதிகமாகவிருந்ததால் இந்தத் திட்டம். ஐரோப்பியர்கள், அமெரிக்கர்களுக்குப்பிறகு அதிக எண்ணிக்கையில் சீனர்களையும் ஜப்பானியர்களையும் அங்கே சந்திக்க நேர்ந்தது. துருக்கிமொழியில் Kilise என்றால் தேவாலாயமென எங்கள் வழிகாட்டி சொன்னார். பிரெஞ்சு மொழியில் Eglise என்ற சொல்லுக்கு இது மிகவும் நெருக்கம். இந்த கொரெம் பள்ளதாக்கில் நிறைய Kiliseகள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நான்கைமட்டுமே நாங்கள் கண்டோம். அவற்றுள் இரண்டு முக்கியமானவை.

Elmali Kilise: மிகச்சிறியது பதினோறாம் நூற்றாண்டில் உருவானது. உள்ளே டார்ச்சை உபயோகித்தே எங்கள் வழிகாட்டி விளக்கவேண்டியிருந்தது காவி நிறத்திலிருந்த ஓவியங்களில் பைபிளோடு தொடர்புடைய சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

Tokali Kilise இவ்வாலயம் கொரெம் அருங்காட்சிகத்திற்கு வெளியே இருபது முப்பதுமீட்டர் தொலைவிலுள்ளது. வாடிகன் அரசாங்க நிதியுதவியுடன், இத்தாலி அரசின் தொழில் நுட்பத்தையும் பெற்று இங்கே புணருத்தான வேலைகள் நடக்கின்றன. அங்கும் பைபிளில் சொல்லப்படும் காட்சிகளை நினைவூட்டும் சித்திரங்கள்.

ஆறுமணிக்கு ஓட்டல் உணவை முடித்துக்கொண்டு இரவு விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  Folk மற்றும் ‘Belly Dance’ காணச்சென்றோம். இன்னும்பத்துவருடங் கழித்து கப்படோஸ் சென்றாலும் சுற்றுலாவாசிகளுக்கு இது வாய்க்கும். கொரெம் நகருக்கு வெளியே  இருந்தது. பெரியதொரு இரவு விடுதி. சுமார் இருநூறுபேர் அமர்ந்துபார்க்கக்கூடிய மண்டபம், சுற்றிலும் இருக்கைகள் -மேசைகள். உள்ளே நுழைகிறபோதே புகைப்படக்காரரை ஏற்பாடுசெய்து ‘கிளிக்’க்கிட்டார்கள். இரவு வெளியேறுகிறபோது தவறாமற் காத்திருந்து ஐந்து யூரோக்குப் ஒரு பீங்கான் தட்டின் பின்புறம் பதிவுசெய்த நமது நிழற்படத்தை நமது தலையிற்கட்டுகிறார்கள். முதலில் இசைக்கலைஞர்கள் வந்து அமர்கிறார்கள். இருக்கைகளுக்கெதிரே குளிர்பானங்கள் மது பாட்டில்கள் கொறிப்பதற்கு தீனி. உங்கள் விருப்பம்போல குடிக்கலாம்.

முதலாவதாக கிராமிய நடனம். ரஷ்யாவைச் சேர்ந்த கொக்காஸ் கலைஞர்கள் என்றார்கள். நடனம் மட்டும் கப்படோஸ் பிரதேசத்திற்குரியதாம். ஒருபெண்ணை மணக்க இருவர் போட்டி போடுகிறார்கள். அதற்கு ஆட்டம் பாட்டம் சண்டை எல்லாமுண்டு.  ஜெயித்தவனை புறம்தள்ளிவிட்டு பெண் தோற்றவனுக்கு கை நீட்டுகிறாள். மொழி புரியாதுபோனாலும், நம்ம ஊர் நையாண்டிமேளக் கலைஞர்கள் நினைவுக்கு வந்தார்கள். சுமார் ஒரு மணி நேர நிகழ்ச்சி. அடுத்து இளம்பெண்ணின் வயிற்றசைவு நடனம்.30 நிமிடம் தனியொருத்தியாகவும், அடுத்து சுற்றுலா வாசிகளுடன் அரைமணிநேரமென்றும் அவள் நடனம் இருந்தது.  randomமாக ஆண் பெண் பேதமின்றி அழைத்து ஒவ்வொருவரையும் வயிற்றை அசைத்து ஆடச் செய்தாள். பத்துபேர் இருக்கலாம். ஒவ்வொருவரோடும் இரண்டு அல்லது மூன்று நிமிடம் செலவிட்டிருப்பாள். சிலர் முயற்சி எடுத்து ஆடவும் செய்தனர். அவள் ஆட்டத்தினும் பார்க்க சில தொப்பை ஆசாமிகள் ஆட்டத்திற்கு கைத்தட்டல்கள். தேறும் ஆசாமிகளுக்கு பெண்ணின் முத்தமும் கிடைத்தது. வேடிக்கையாக இருந்தது. நிகழ்ச்சி முடிந்து வெளியேறியபோது அப்பெண்ணை சந்திக்க நேர்ந்தது. டாக்டரின் சகோதரி அவளிடம் பேசினார். இந்தப்பெண்ணா சற்றுமுன் அப்படி ஆடினாள் என நினைக்கும் அளவிற்கு உடையில் பெருத்தமாற்றம். பேருந்து ஏறும்போது கடுங்குளிர்காற்று இரவு ஒருமணிக்கு ஓட்டல் திரும்பினோம்.

கீழ்க்கண்ட youtubeஐ வலைத்தலத்தில் கிடைக்கிறது. நாங்கள் சென்ற இடத்தில்தான் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். மண்டபம், கலைஞர்கள் ஆடும்பெண் உட்பட நாங்கள் பார்த்த நிஜத்தின் நிழலென்பதில் துளியும் சந்தேகமில்லை.

(தொடரும்)

துருக்கி பயணம்-4

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

மார்ச்-29

நேற்றே கப்படோஸ¤க்குக் வந்திருந்தபோதும், இன்றுதான் கப்படோஸை உண்மையாக தரிசித்தோம். பயணத்தில் கப்படோஸில் கழித்த இரண்டு நாட்களும் உன்னதமானவை. ஒவ்வொரு தருணமும் பல்வேறு காட்சிகளை ஓயாமல் அடுகடுக்காய் அறிமுகப்படுத்திற்று எனலாம். இவற்றை ஏற்கனவே இன்னொரு நாட்டில் வேறொரு பிரதேசத்தில் கண்டிருக்கிறேனென ஒப்புமைபடுத்தவியலாத காட்சிகள். கப்படோஸ் பிரதேசத்திலிருந்த மூன்று நாட்களும் உக்ருப் (Ugrup) என்ற நகருக்கருகே தங்கினோம்.

காலையில் எங்களுடன் நட்பு பாராட்டிய டாக்டர் தம்பதியருள் பெண்மணிக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவ குடும்பமென்றதால்,  அதனை எதிர்கொள்ளும் மனத் திட்பம் அவர்களிடமிருந்தது. அதாவது மனத் திட்பம் மட்டுமே இருந்தது. அதன் விளைவாக அன்றைய பொழுதைப் பெண்மணி ஓட்டல் அறையிலேயே கழிக்கவேண்டியிருந்தது. முதல் நாள் பேருந்தில் வரும்போது, எங்கள் வழிகாட்டி பலூனில் பறக்க விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்துகொள்ளாலாமென தெரிவித்திருந்தார். அதற்கான கட்டணம் தனி. நபரொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு 250 யூரோவென்றார்கள். என் மனைவிக்கு விருப்பமில்லாததால் தவிர்க்கவேண்டியிருந்தது. அதுவும் தவிர முதல் நாள் பலூனில் பறப்பதைப்பற்றி எங்கள் வழிகாட்டி கூறும்போது வானிலை வேறு மோசமாக இருந்தது. எங்கள் குழுவிலிருந்த 30பேரில் பறப்பதற்கு பதிவு செய்துகொண்டதென்னவோ ஒரேயொரு ஜோடிதான். காலையில் பேருந்தில் புறப்படுவதற்கு முன்பாக அவர்கள் பலூனில் பறப்பதென்று ஏற்பாடு. பலூனில் பறப்பதென்று முடிவெடுத்த ஜோடியில் பெண்மணியைப் பார்த்துப் பயந்தது நிஜம். எனக்காக அல்ல. அவரது கனவருக்காக. கணவரை பலூனிலிருந்து தள்ளிவிடுவதற்காகவே பதிவு செய்திருப்பாரோ என்பதைப்போல பெண்மணியின் தோற்றம். பேருந்தில் ஏறியபோது அந்தஜோடி பேருந்தில் ஏறுகிறதா என்று பார்த்துக்கொண்டேன். .

கப்படோஸ் ஓர் அதிசயப்பிரதேசம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு: எரிமலை வெடிப்பு, உறைநிலைக்கு கீழான வெப்பம், குளிர்காலங்களில் கடுமையான பனிப்பொழிவு, ஹோவென்று சுற்றி சுழன்று அடிக்கும் (‘தெர்விஷ்?) காற்று ஆகிய நான்கும் கூட்டணி அமைத்துக்கொண்டு ஓர் விநோதமான இயற்கை காட்சியை செதுக்கியுள்ளன. விநோதமான சிற்பங்கள். தாதாயிஸமும், மீயெதார்த்தமும் அன்றே ஒத்திகைக்குப் பழகிக்கொண்டதுபோல. முகமற்ற விண்ணுலக மாந்தர்கள் பூமியில் கால பதித்ததும் சிலையாகக் கடவது என சாபமிட்டதுபோல அடுக்கடுக்காக நிற்கிறார்கள். அதுமாத்திரமல்ல வேறொரு அதிசயமும் உண்டு பிரதேசமெங்கும் மலையைக் குடைந்தும், பூமியின் கீழும் இன்றைக்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஓட்டல்கள், ரெஸ்ட்டாரெண்டுகள். கேளிக்கை விடுதிகள்,குடியிருப்புகள் இருக்கின்றன. கப்படோஸ் வரலாற்றில் ஆசிய ஐரோப்பிய பெரு நாகரீகங்கள் தங்கள் தடங்களைப் பதித்துள்ளன. எல்லா மனிதர்களும் வந்துபோயிருக்கிறார்கள்.

துறவிகள் பள்ளதாக்கு- Monks’ Valley: ஆறாம் நூற்றாண்டில் முதன்முதலாக கிறித்துவர்கள் கப்படோஸில் மலைகளைக் குடைந்தும் பூமிக்கும் கீழும் வாழ்ந்த இடம். அப்படி வாழ்வது அவர்களுக்கு இயற்கையிடமிருந்துமட்டுமல்ல பிற மதத்தினரிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்ள உதவியிருக்கிறது.  மூன்றாவதாக நாங்கள் சென்று பார்த்தது முஸ்தாபாபாசா (Mustapapasa) என்ற சற்றே பெரிய கிராமம் அல்லது மிகச்சிறியதொரு நகரம். 1923 வரை கிரேக்கர்கள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து சினோசா எனும் சிறு நகரம் இங்கும் பண்டைய கிரேக்கவீடுகளுக்கிடையில் நடந்து சென்றோம்.

மாலை ஆறுமணிக்கு ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம். இன்றிரவு ‘செமா’ என அழைக்கப்படும் The whirling Dervish நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால், இரவு உணவை ஏழரை மணிக்குள் முடித்துக்கொண்டு பேருந்துக்குள் தயாராக இருக்கவேண்டுமெனச் சொல்லப்பட்டிருந்தது. இதற்கு முந்தைய கட்டுரையில் இச்சுழல் நடனத்தின் நதிமூலத்தை தெரிவித்திருந்தேன்.

மெவ்லானா செலாலெதின் (1207-1273) கற்பனையில் உதித்த இச்சடங்கில் துருக்கியரின் மரபு, நம்பிக்கை, வரலாறு, பண்பாடு என நான்கும் கலந்திருக்கின்றன. இச்’செமா'(Sema) ஏழு பகுதிகள் கொண்ட ஒருவகையான மறைஞானப் பயணம். நவீன விஞ்ஞானம் தெரிவித்ததைத்தான் அன்றே மெவ்லான ‘செமா’ மூலமாக மெய்பித்திருக்கிறார். அதாவது உலகத்தின் இருப்பு தன்னைத்தானே சுற்றும் இயல்புசார்ந்தது. இப்படி சுற்றாத பொருளோ அல்லது உயிரியோ உலகில் எதுவுமில்லை. அது கண்ணுக்குத் தெரியாமல் நிகழ்கிறது. எலெக்ட்ரான் புரோட்டானும் அணுக்களில் ஆரம்பித்து கிரகங்கள் வரை இந்த அற்புத நிகழ்வை நடத்துகின்றன. இதில் நாமும் ஓர் அங்கம். மனித உடலில் இரத்த சுழற்சியும் பிறவும் இதற்கு சாட்சி. மண்ணிற் தோன்றி மண்ணில் மறையும் மனிதன் பிறப்பு இறப்புங்கூட இதனையே தெரிவில்லிறது. ‘செமா’ ஊடாக மனிதன் தனது தன்முனைப்பை துண்டித்துக்கொண்டு அன்பூடாக சத்தியத்தை எட்டுகிறான். தெர்விஷ் கலைஞர்கள் அணியும் தலைப்பாகை அல்லது தொப்பி கல்லறையின் குறியீடு, அவர்களுடைய வெள்ளை அங்கி சவத்தை மூட உதவும் துணியின்குறியீடு சுற்றுகிறபோது இடது கை பூமிக்கும் வலதுகை வானத்தை நோக்கியும் விரிகிறது. இறைவன் அருளைவேண்டி இதயத்தை சுற்றிவருவது செமா என்கிறார்கள். மொத்தம் 7 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். முதலில் முகம்மது நபியின் பெருமையைச்சொல்லி ஆரம்பித்து வைக்கிறார்கள், அடுத்து தோலிசைக்கருவிகொண்டு சத்தமெழுப்புகிறார்கள், பிறகு வயலின் போன்றவாத்திய இசைக்கருவி தொடருகிறது. உயியின் முதல் மூச்சை அது வழங்குகிறதாம். நான்கவதாக டெர்விஷ்கள் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்கிறார்கள். பிறகு ஒரு வட்டமாக நடக்கத் தொடங்குகின்றனர். ஐந்தவதாக சுற்றத் தொடங்குகிறார்கள். இறுதியில் எட்டும் உச்சநிலையை பௌத்தம் நிர்வானா என்பதைப்போல, தெரிஷ்கள் ·பெனபில்லா (Fenafillah) என்கிறார்கள் அதாவது முழுமையான சரணாகதி.   எங்கள் ஓட்டலிருந்து வெகு அண்மையில் ஒரு நிலவறை மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, மேடை நடுவிலிருக்க பார்வையாளர்கள் சுற்றி உட்காரவைக்கப்பட்டிருந்தோம். அவர்கள் சுற்றுகிறபோது பல நேரங்களில் சுற்றுவது அவர்களா நாமா என்ற கேள்வியை தவிர்க்க முடிவதில்லை.

(தொடரும்)

 

 

மேடையேற்றப்படாத ஒரு விவாதம்.

எழுத்தாளனை அடையாளப்படுத்துதெது படைப்பா, கொள்கைத்தேர்வா?  -ஒரு பிரெஞ்சு படைப்புலக அண்மைக்கால சர்ச்சை

Polémique என்ற பிரெஞ்சு சொல்லுக்கு மூலம் கிரேக்கமொழி: பட்டிமன்றம், தருக்கம், வாய்ச்சண்டை, சொற்போர், வாதம் கொஞ்சம் கதவைத் திறந்தால் அனல் வாதம், புனல்வாதமென அவ்வளவையும் சேர்த்துக்கொள்ளலாம். பக்கவாதம் இதிலடங்காதது.  ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்/பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்கிறது மணிமேகலை. இலக்கிய சர்ச்சைக்கும் இப்படியொரு விதியை வைக்கலாம். ‘சர்ச்சை’ மேடையேற்றப்படாத ஒரு விவாதம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதிய விதிமுறைக்குள் அதுவும் வரக்கூடியது. பெரும்பாலும் அரைவேக்காட்டுத்தனமாகவிருக்கிற இன்றைய பட்டிமன்றங்களை நாம் கணக்கிற்கொள்ளகூடாது. அங்கே வைக்கப்படும் வாதம், மறுப்பு அனைத்தும் கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் மேடையேற்றப்படும் நாடகம் -பம்மாத்துகள் -பாசாங்குகள். போலியான குரல்கள் ‘சர்ச்சைக்குள்’ ஒலிக்காதென்பது ஆறுதலான செய்தி. பொதுவாகக் கலகக்குரல்கள் அல்லது எதிர்ப்புக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக நம்புகிறார்கள், கோபத்துடன் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்கிறார்கள். சர்ச்சையின் முடிவில் தங்கள் எழுப்பும் வினாவிற்கு தெளிவான விடைகிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருக்கிறது. தமிழ்மண்ணில் பாங்கறிந்து சர்ச்சையில் இறங்குகிறார்களோ இல்லையோ பிரெஞ்சு மண்ணில் மணிமேகலையில் கூறப்பட்டுள்ள விதியை நன்கு உள்வாங்கிக்கொண்டு சர்ச்சையில் இறங்குவதாகவே நினைக்கிறேன்.

இனம், மொழி, நாடு என உழைத்த மக்களை நினைவு கூர்வதென்பது இன்றைக்கு ஒரு சடங்காகவே மாறிவிட்டது. பிரான்சு நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடம் தோறும் அவ்வருடத்தில் யார் யாரையெல்லாம் நினைவு கூர்தல்வேண்டும், அரசு சார்பில் செய்யப்படவேண்டியவையென்ன என்பது பற்றி அது தொடர்பான அமைச்சும் அதிகாரிகளும், இதற்கென நியமிக்கப்பட்டிருந்த குழுவினரும் கலந்து பேசுவர். 2011ம் ஆண்டும் அப்படி கலந்து பேசிய பின் பட்டியலொன்றை தயார் செய்தனர். அப்பட்டியலில் இடம்பெற்றவர்களுள் செலின் என்று அழைக்கபடும் லூயிஸ் ·பெர்டினாண் செலின் (Louis-Ferdinand Céline) என்பவரும் ஒருவர். நவீன இலக்கியத்தைக்குறித்த விவாதமோ, கலந்துரையாடலோ பகுப்பாய்வோ நடைபெற்றாகவேண்டுமெனில் செலின் தவிர்க்க முடியாத நபர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இருவர்: ஒருவர் மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust), மற்றவர் செலின். Journey to the End of the Night மிக முக்கியமானதொரு படைப்பு. சொற்களை அதிகம் விரயம் செய்யக்கூடாதென்பவர். கொச்சை சொற்களை படைப்புகளில் கணிசமாகக் கையாண்டு அப்படியொரு முறைமைக்கு வழிகோலியவர். பிரெஞ்சு இலக்கியம் ஒரு தேர்ந்த படைப்பாளியென்கிற வகையில் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது.  செலின் இறந்து (1961ம் ஆண்டு ஜூலையில் இறந்திருந்தார்)  ஐம்பதாவது நினைவஞ்சலியென்பதால் அதனை ஓர் அரசுவிழாவாக, மிகச்சிறந்த முறையில் கொண்டாடவும் திட்டமிட்டார்கள். அரசுவிழா பொறுப்பாளராக தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டார். புகழஞ்சலி மலரும் தயாரானது. மலருக்கு முன்னுரை வழங்கியவர் ‘அலென் கொர்பன்’ என்ற வரலாற்றிஞர். மலருக்கு நாட்டின் கலை, இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சரால் அக்கறையுடன் எழுதப்பட்ட அணிந்துரையும் இடம்பெற்றது. ஆசியருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையிற் சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டன. செலின் படைப்புளில் அதிக ஈடுபாடுகொண்டவரும், விற்பன்னருமான ஹாரி கொதார் (Henri godard) எழுதிய வரிகள் வியப்பில் ஆழ்த்துபவை. வழக்கமான புகழஞ்சலிக்குரிய சொற்கள் அங்கில்லை, வேறு தொனியிலிருந்தன. சில ஐயப்பாடுகளை எழுப்பின:

“செலினுக்கு விழா எடுக்கத்தான் வேண்டுமா?பிரெஞ்சு இலக்கியத்திற்கு அவரளித்துள்ள பங்களிப்பை மறுக்கவியலாத அதேவேளை கேள்விக்குச் சாதகமானதொரு பதிலைத் தருவதற்குத் தயங்க வேண்டியவர்களாகவுள்ளோம். நினைவாஞ்சலி கூடாதென்பதற்கு காரணங்கள் தெளிவாக உள்ளன. யூதர்கள்மீது தீராத வெறுப்பையும் கசப்பையும் வைத்திருந்தார். ப்ரூஸ்டுடன் பிரெஞ்சிலக்கிய வெளியை பகிர்ந்துகொண்டு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்த்திய சாதனைகளும் மறக்ககூடியல்ல” என்றெழுதி சர்ச்சையை ஹாரி கொதார் துவக்கி வைத்தாரெனலாம்.

ஹாரி கொதார் உபயோகித்த சொற்களை இரண்டாவது முறையாக வாசிப்பீர்களெனில், ‘செலினை’ ஒரு படைப்பாளியாக ஏற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில், அவரை ஒரு இனவெறியாளராக தயக்கமின்றி அவர்  சுட்டுவதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கு செலினைப்பற்றி கூடுதலாக சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். 1930களின் இறுதியில் இனவெறியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் செலின் ஈடுபட்டாரென்ற செய்தியை இங்கே கோடிட்டுக்காட்டினால் செலின் என்ற எழுத்தாளனுக்குள்ள எதிர்ப்புகளை புரிந்துகொள்ளக்கூடும்.  “யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட எனக்குத் தயக்கங்களில்லை; யூதர்களின் முதல் எதிரியாக என்னைக் காட்டிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்”, என்று வெளிப்படையாகவே தெரிவித்தவர் செலின். பிரான்சு நாட்டை ஜெர்மன் ஆக்ரமித்திருந்தபோது பிரான்சிலிருந்த நாஜி அபிமானிகள் நடத்திய இதழுக்குத் தொடர்ந்து எழுதிவந்தார். அப்பத்திகளில் யூதர்களின் இருத்தலைக் கடுமையாக விமர்சித்திருந்தார். செலின் யார் என்பது ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஹாரி கொதார் எழுப்பிய ஐயங்களைக் கையிலெடுத்துக்கோண்டு செர்ழ் கிளார்பெல்டு (Serge Klarsfeld) கிளர்ந்தெழுந்தார். கிளார்பெல்டு வழக்கறிஞர், எழுத்தாளர், அவரது படைப்புகள் முற்றுமுதலாக நாஜிகளுக்கு எதிரானது. பிரெஞ்சு மொழியில் நாஜிகளைப்பற்றிய கொடூரமான பிம்பத்தை உரிய சாட்சியங்களுடன் கட்டமைத்திருக்கிறார். தம் பெற்றோர்களை கொலைமுகாமில் பலிகொடுத்தவர். எல்லாவற்றிர்க்கும் மேலாக நாஜிகளின் வதை முகாம்களிலிருந்தும், கொலைமுகாம்களிலிருந்தும் உயிர் பிழைத்தவர்களைக்கொண்டு ஏற்படுத்திய அமைப்பொன்றின் தற்போதைய தலைவர்.

செர்ழ் கிளார்பெல்டு இதற்கெனவே காத்திருந்திருந்ததுபோல அரசாங்கத்தின் முடிவினை உடனடியாகக் கண்டித்தார்: “யூதர்களை தமது ஊத்தைபிடித்த எழுத்துக்களால் கண்டித்து எழுதியன் பலனாக பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட காரணமாகவிருந்த படைப்பாளரொருவரின் (செலின்) ஐம்பதாவது இறப்பு ஆண்டைக் கொண்டாடுவது அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையென்ற நினைப்பே அவமானத்திற்குரியது. செலினைக் கொண்டாடுகிறபோது அப்பாவி யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் வயது பேதமின்றி வதைமுகாம்களுக்கும், கொலை கிடங்குகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதும், அவர்களில் குறைந்த எண்ணிக்கையினரே உயிர்பிழைத்தார்கள் என்பதும் நினைவுக்கு வரக்கூடுமேயண்றி செலினுடைய படைப்புகள் வாராது, எனவே உடனடியாக அமைச்சர் செய்யவேண்டியது 2011ம் ஆண்டு கொண்டாட்டப் பட்டியலிலிருந்து செலினை நீக்குவதாகும்”, என்பது போல அவரது அறிக்கை இருந்தது. இவ்வறிக்கை Le Figaro, Le nouvel Observateur போன்ற பிரெஞ்சு இதழ்களின் இணைய தளங்களிலும் இடம்பெற்றது.

அமைச்சரின் எதிர்வினை என்னவாக இருக்கும், என்பதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி அகாதமியைசேர்ந்த மொழியிலறிஞர் பிரெடெரிக் வித்து (Frédéric Vitoux),என்பவரின் கூற்றும் அலட்சியப்படுத்தக்கூடியல்ல: “இங்கே பிரச்சினை செலின் என்ற படைப்பாளியல்ல ‘கொண்டாட்டம்’ என்கிற  சொல்லே. அவரது 50வது நினைவஞ்சலி ஆண்டை ஏதோ செலினுக்கு இப்போதுதான் மகுடம் சூட்டப்போவதுபோல நினைத்துக்கொண்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றுவரையிலும் அவருக்குள்ள இடம் உறுதியாகவே இருக்கிறது. இந்த ஆண்டில் அவரது எழுத்துக்களை மீண்டும் நினைவஞ்சலி என்ற பெயரில் மறு வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கமுடியும். அவருடைய களங்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற பகுதியைக்கூட சார்பற்ற விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கலாம்.” என்றார் அவர். இதற்கு ஆதரவாகவும் மறுதலிக்கும் வகையிலும் கருத்துகள் குவிந்தன.

இந்தப்பிரச்சினையில் இன்னொன்றையும் விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டியிருக்கிறது. நாஜிகளின் பேரழிவுக்குள்ளான இனம் யூதரினம் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதற்கான நீதி வழங்கப்படவேண்டியதுதான், வழங்கியும் விட்டார்கள். ஆனால் அதையே காரணமாக வைத்து எதிர் தரப்பினரின் குரல்வளையை இவர்கள் இன்னும் எத்தனைகாலத்திற்கு நெறித்துக்கொண்டிருக்கப்போகிறார்கள். இன்றைய தேதியில் உலப்பொருளாதாரமும் அரசியலும் இந்த இனத்தின் கையில்தான் உள்ளது. பிரெஞ்சு கலை இலக்கிய பண்பாட்டுத்துறை அமைச்சர் செலின் நினைவுதினத்தை அனுசரிப்பது தொடர்பாக என்ன முடிவு எடுத்திருப்பாரென நினைக்கிறீர்கள்? பிரான்சு நாட்டின் அதிபர் ஒரு யூதர், பிரதமர் யூதர், அமைச்சர்களில் பாதிக்குமேல் யூதர்கள். எதிர்கட்சி தலைவர் ஒரு யூதர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள்கூட யூதர்களாக இருக்கலாம். இந்நிலையில் முடிவு நீங்கள் நினைப்பதுபோலத்தான் அமைந்தது. செலினை யூதரின துரோகியாகப்பாவித்து அரசு அவருக்கான விழாவை பட்டியலிலிருந்து நீக்கியது. எனக்கு ஒரு படைப்பாளியை படைப்பை மட்டுமே வைத்து பார்க்கவேண்டும். படைப்பில் ஒன்றிரண்டு யூத எதிர்ப்புக்கூட இருந்துபோகட்டுமே அதனாலென்ன? சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறநாட்டில் அதற்கு வாய்ப்பில்லையானால் எப்படி?

———————————————-

இந்தியாவின் எதிரி ஆங்கிலமும் ஆங்கிலேயரும்:

இந்திய அதிபரின் செய்தி தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய பவன் கே. வர்மா என்பவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த Becoming Indian என்ற நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. வர்மாவின் வேறு  இரண்டு நூல்களும் ஏற்கனவே பிரெஞ்சில் வெளிவந்து கவனத்தை பெற்றவையென்பதால் இப்புதிய நூலின் மீது பிரெஞ்சு ஊடகங்கங்களின் கவனம் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக விழுந்துள்ளது.

நூலாசிரியர் இந்தியனென்கிற தமது அடையாளத்தை வரையறுக்க இயலாமல் தவிக்கிறார், இத்தவிப்பு நூலின் கடைசிப்பக்கம்வரை நீடிக்கிறது.  அதற்கான காரணங்களும் அவராலேயே ஆதாரங்களுடன் முன்வைக்கப்படுகின்றன. பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா இன்றளவும் விடுதலைபெறவில்லை என்பதில் ஆசிரியர் தெளிவாக இருக்கிறார். வர்மாவை பொறுத்தவரை ஆங்கிலேயர் இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியிருந்தாலும் அரசியல் பொருளாதாரமென்று இன்றளவும் இந்தியாவை வழிநடத்துவது ஆங்கிலேயரின் நிழல். அவர்கள் தந்திரமாக விட்டுச்சென்ற ஆங்கிலம் காலணியாதிக்ககாலத்தினும் பார்க்க கீழ்மையனானதொரு ஆதிக்க அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறது. வர்மாவுடைய கருத்தின்படி காலணியாதிக்கம் விட்டுச்சென்றுள்ள வர்க்கபிரிவு ஆங்கில மொழி அறிந்தவர்கள், அறியாதவர்கள். இவர்களில் முதற் பிரிவினர் ஆங்கிலேயரின் இடத்தைப்பிடித்துக்கொண்டு  பெரும்பான்மை இந்தியரை அடிமைகளாக நடத்துகின்றனர் என்கிறார் வர்மா. அந்நியமொழியான ஆங்கிலம் இந்தியாவின் சுயமான கல்வி, கட்டிடக்கலை, பிற கலைகள், திரைப்படங்கள், சங்கீதம், இலக்கியம், பண்பாடு என அனைத்தையும் பாழடித்துவிட்டது என்பது வர்மாவின் குற்றச்சாட்டு. இந்தியாவில் நடப்பதனைத்தும் எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் எல்லாமே வெட்டி -ஒட்டும் வேலை அதாவது சுயாதீன முயற்சிகளால் இயங்குபவை அல்ல.  இந்தியப்பட்டறையில் நாம் செய்வதனைத்தும் நகலெடுக்கும்பணிதான். உலகில் மிகப்பெரிய அறிவுலகிற்கு  சொந்தக்காரர்களாக இருந்த இந்தியர்கள். ஆங்கிலக்கல்விமுறையினால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் செக்குமாடுகளாக உழைக்கக்கற்றுக்கொண்டதன்றி வேறுபலன்களை காணவில்லை என்பது அவரது வாதம்.

மெக்காலே பிரபு என்பவனால் ஏறக்குறைய இருநூற்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டுவிட்ட இந்தியாவின் தலைவிதிக்கு இந்தியர்களும் பொறுப்பு என்கிறார் வர்மா. வில்லியம் பெண்டிங் பிரபு கவர்னர் ஜெனரலாக இருந்த காலத்தில் அன்றைய இந்தியத் தலைவர்கள் இருபிரிவினராக இருந்திருக்கின்றனர். ஒரு சாரார், “எங்களை ஆள்வதற்கு எங்கள் மொழியை நீங்கள் கற்பதுதான் முறையென வற்புறுத்த மற்றொரு பிரிவினர் (ஆங்கிலேயர்களும் அவர்களின் விசுவாசிகளும்) ஆளுகின்ற வர்கத்தின் மொழியை குடிகள் ஏற்பதுதான் முறை எனக் கூறியிருக்கின்றனர். விளைவாக ஆளும்வர்க்கத்திற்கும் மக்களுக்குமிடையே இடைத்தரகர்களாய் ஒரு கூட்டம் முளைத்து அக்கூட்டத்தின் பிழைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளே நுழைந்தது என்கிறார், வர்மா.  கீழைசிந்தனைகளில் தமக்கென ஒரு பாரம்பர்யத்தைப்பெற்றிருந்த இந்தியா ஆங்கிலத்தை அனுமதித்ததன் மூலம் தமது தலைவிதியையே மாற்றி எழுதிக்கொண்டது. ஆங்கிலேயர் விட்டுச்சென்ற இடத்தில் ஆங்கிலத்தை அறிந்த ஒரு புதிய நடுத்தரவர்க்கம் தங்களை ஆங்கிலேயராக மட்டமைத்துக்கொண்டு அதிகாரத்திற்குள் நுழைந்தது. தவிர இந்தியப்பண்பாட்டிற்குள்ளும் பல அத்துமீறல்களை நிகழ்த்தியதோடு இந்தியாவின் கல்வியும் கலையும் ஆங்கிலத்தினூடாகத்தான் உலக அங்கீகாரம் பெறமுடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது வேதனைக்குரியது என்கிறார் பவன் கே.வர்மா.

காங்கிரஸ் இயக்கங்கண்ட இந்தியர்கள் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதுபோல அவர்கள் மொழியையும் துணிச்சலுடன் வெளியேற்றியிருக்கவேண்டும் என்கிறார். நம்மவர்களின் விவேகமற்ற அணுகுமுறைகளுக்கு நூலாசிரியர் சில வரலாற்று சம்பவங்களையும் சாட்சிக்கு அழைக்கிறார். உபநிஷத்திற்கும் வேதாந்ததிற்கும் உரை எழுதிய ராஜாராம் மோகன் ராய் என்பவர்தான் சமஸ்கிருத கல்விமுறைக்கு எதிராகவும், ஆங்கில கல்விமுறைக்கு ஆதரவாகவும் அப்போதைய கவர்னர் ஜெனரலிடம் மனுகொடுத்தவராம். ஆக மெக்காலேவின் அறிக்கைக்கு ராய் பிரிட்டிஷ் நிர்வாகிகளிடம் கையளித்த விண்ணப்பமும் ஒரு வகையில் காரணம். விதேசிகளை விதந்தோதும் இந்தியரின் போக்கிற்கு அன்றே உதாரணங்கள் இருந்திருக்கின்றன என்கிறார். இனவாதியும், இந்தியர்களை மிகக்கேவலமாக விமர்சித்து பழகியிருந்த (அப்புத்தகங்கள் இந்தியச்சந்தையில் இன்றும் கிடைக்கின்றனவாம்) எட்வின் லுட்டியென் (Edwin Lutyens) வசம் இந்திய தலைநகரான புதுடில்லியை நிர்மாணிக்கும் பொறுப்பை அளித்ததும், இந்திய பாரம்பர்யதைக் கேலிசெய்தும், இந்தியர்களைப் பழித்தும் பேசிய லெ கொர்புசியே (Le Corbusier) என்பவரிடம் நேரு சண்டிகார் நகரை நிர்மாணிக்கும் பொறுப்பை ஒப்படைத்ததையும் வர்மா வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். மேற்கத்திய அறிவை சிலாகிக்கும் போக்கு இன்றளவும் தொடர்வதை ஆசிரியர் மறக்கவில்லை. இன்றுங்கூட இந்தியாவில் எத்தனை விருதுகள் பட்டங்கள் பெற்றாலும் அக்கலைஞனோ, படைப்பாளியோ வெளிநாட்டில் விருதுபெற்றால்தான், ஆங்கிலேயரால் அங்கீகரிக்கப்பட்டால்தான், இந்தியாவில் பெரியவனென ஏற்றுக்கொள்கிறார்களென வருந்துகிறார்.

நூலில் இரண்டு விஷயங்கள் உறுத்துகின்றன: ஒன்று ஆங்கிலத்திற்கு மாற்றாக நூலாசிரியர் இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்கபடவேண்டும் என்பது. இன்றைய தேதியில் இது சாத்தியப்படுமா? அறுபதுகளில் நிகழ்ந்த மொழிக்கலவரங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அடுத்து ஆங்கிலத்தையும் ஆங்கிலேயர்களையும் வரலாற்று ஆதாரங்களையெல்லாம் வம்புக்கிழுத்து விமர்சிக்கிறவர், நூலை ஆங்கிலத்தில் எழுதியிருப்பது.

———————————–

இசைவானதொரு இந்தியப்பயணம்-15

பிப்ரவரி-15

முதல்நாள் பலமுறை எழுத்தாளர் சின்னப்ப பாரதியின் நண்பர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தொலைபேசியில் அழைத்திருந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆய்வு மாணவர் ஜெகதீசனும் அழைத்திருந்தார். பதினைந்தாம் தேதியன்று தில்லி பல்கலைகழகத்தில் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பதில் ஆர்வமும் அத்துறையில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வும் மேற்கொண்டிருக்கும் மாணவர்களுடன் ஓரு கலந்துரையாடலையும்  தில்லி பல்கலைகழக தமிழ்துறை ஏற்பாடு செய்திருந்தது.

காலை பத்துமணி அளவில் ஜெகதீசன் வாகனத்துடன் வந்திருந்தார். அவ்வாகனத்திலேயே தில்லி
பல்கலைகழகத்திற்கு சென்றோம். என்னுடன் பிரெஞ்சு நண்பர் சவியெ தெபெல், புதுச்சேரி காஞ்சிமாமுனி பட்டமேற்படிப்பு கல்லூரியின் பிரெஞ்சு பேராசிரியர் நாயகர் வந்திருந்தனர். தில்லி பல்கலைகழக தமிழ்துறை தலைவர் பேராசிரியர் நாச்சிமுத்து, உடன் பணியாற்றும் பேராசிரியர் சந்திரசேகரன் ஆகியோருடனான சந்திப்புகள் எதிர்பாராதது. பேராசியர் நாச்சிமுத்தையும் சந்திசேகரனையும் பற்றி எழுதும் முன்பாக, தமிழ் பேராசிரியர்களை எனது பார்வைவரம்பிற்குள் மூன்று இனமாக தென்படுகின்றனர் என்பதைச் சுருக்கமாக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அ. தமிழின் தொன்ம இலக்கியங்களில் உண்மையாக ஆர்வமுற்று, தங்கள் நுண்மான் நுழைபுலத்தை அதற்கெனவே அளித்து கண்துஞ்சாமல் ஆரவாரமின்றி தமிழுக்காக உழைப்பவர்கள் முதல்வகை.

ஆ. இரண்டாம்வகையினரின் தொன்ம இலக்கியபற்றுதலை குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. அதேநேரம்  இவர்கள், தமிழென்பது தொன்மம் நவீனம் இரண்டும் சார்ந்ததென்ற கருத்தியத்தின் உடமையாளர்கள்.

இ. இம்மூன்றாம் வகையினர், அசப்பில் முதலாம் வகையினரைப்போல தோற்றம்கொண்டவர்கள். பழகினால் வெகு எளிதில் பித்தளையென தெரியவரும். இவர்களைத் தமிழ்க்கூத்தர்கள் எனலாம். கிராமங்களில் நடக்கும் தெருகூத்துகளில் வருகிற ராஜாக்கள் இவர்கள். கட்டியக்காரனிடம், அவனி அம்பத்தாறு ராஜாக்களும் எனது திருமுகம் காணவந்திருக்கிறார்கள்வென கேட்கும் கூட்டம்.

மூன்றாவது கூட்டத்தை நான் மதிப்பதில்லை, முதலாவது அணியினரிடம் தொடர்புகளில்லை.  எனக்கு விருப்பமான தமிழ் பேராசியர்கள் இரண்டாவது இனம். தொன்மம், நவீனம் இரண்டிற்கும் பாலமாக இருப்பவர்கள். இவர்களைப்போன்றவர்களிடம் பயிலும் மாணவர்களே எதிர்கால தமிழின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்களென்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. இவர்களுடைய தமிழ்தேசிய உணர்வு பொருளுடையது. கணத்தில் நினைவைத் தட்டுகிற பெயர்கள் ம.லெ. தங்கப்பா, தமிழவன் ஆகியோர். அண்மையில் தில்லியில் சந்திக்க நேர்ந்த பேராசிரியர்கள் நாச்சிமுத்து, சந்திரசேகரன் ஆகியோரும் இப்பட்டியலுக்குள் வருகின்றனர்.

பேராசிரியர் நாச்சிமுத்தும் சந்திரசேகரனும் நவீன இலக்கியவாதிகளை போற்றுகிறவர்கள். இன்றைய படைப்புகள் பலவற்றை உடனுக்குடன் வாசிக்கிறார்கள் என்பதை அவர்களோடு அளவளாவி புரிந்துகொண்டேன். அண்மையில் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதுபோன்றே தமிழில் ஏராளமாக சொற்கள் இருந்தும் இன்றைய எழுத்தாளர்கள் அதை பயன்படுத்துவதில்லையேவென்ற தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்கள்; தமிழல்லாத பிறசொற்களை நீங்கள் தவிர்க்கவேண்டுமென வற்புறுத்தினார்கள். ‘என்ன செய்வது எங்களால் முடிந்தது அது, நிறைய சொற்கள் தெரிந்த நீங்கள் எழுதமாட்டேனென இருக்கிறீர்களே’ எனக் கூறியபோது, பேராசிரியர் நாச்சிமுத்து முகத்தில் எவ்வித மாற்றமில்லை. அதைச்சிரித்துக்கொண்டே தலையாட்டிவிட்டு உரையாடலைத் தொடர்ந்தார். அவரது கருத்து நியாயமானதென்பதை பிற்பாடு உணர்ந்தேன். நாஞ்சில் நாடன் துபாயில் தெரிவித்திருந்த கருத்தும் அதை ஒட்டியே இருந்தது. ஒரு மூத்த பேராசிரியர் -நவீன இலக்கியத்தில் பற்றுதலுள்ள ஒருவர் அக்கறையுடன் சுட்டிக்காட்டிய இக்குறையை முடிந்த அளவு தவிர்க்கவேண்டுமென அன்று சபதமெடுத்துக்கொண்டேன்.

காலைமுடியும் தருவாயில் நடந்தேறிய கலந்துரையாடலில் தமிழ் மொழிபெயர்ப்பில் அக்கறைகொண்ட மாணவர்கள், பேராசிரியர் நாச்சிமுத்து, பேராசிரியர் சந்திரசேகரன்,  நாயகர், நான், நண்பர் தெபெல் ஆகியோர்கலந்துகொண்டோம். அன்றைக்கு எனக்கு மகிழ்ச்சி அளித்த சம்பவம் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் சம்பந்தமாக நூல்களை ஆய்வுசெய்திருந்த மாணவர் ஜெகதீசன் எனது படைப்புகளையும் மையப்பொருளாக  எடுத்துக்கொண்டு ஆய்வு செய்திருக்கிறாரென்ற செய்தி.

உரையாடலில் மொழி பெயர்ப்புதொடர்பான எனது பார்வைகள், அனுபவங்கள் கையாளும் முறைகளென்கிற  கேள்விகளுக்கு பதிலளித்தேன். உடன் வந்திருந்த பிரெஞ்சு நண்பர் கவிதையொன்றை அண்மையில் மொழிபெயர்த்திருந்தேன் நான் மொழிபெயர்த்திருந்த கவிதை அவரது கவிதையோடு பொருந்துகிறதா எனத் தெரிந்துகொள்ளவிரும்பியவர்கள்போல அவரிடம் பேராசிரியர்கள் இருவரும் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு  தமது கவிதை உருவான சூழல், அக்கவிதை இடம்பெறும் கிராமப்புறம், தமது இறை நம்பிக்கை என்று விளக்கமளித்தார்.  ஒருகட்டத்தில் என்னை சோதனைபோடுவதுபோல அவர்கள் வினாக்களிருந்தன, நானும் எரிச்சலுற்றேன் என்பதை மறுக்கவில்லை. நண்பர் சவியேவிற்கு தமது கவிதைபற்றி இத்தனை அக்கறையெடுத்து விளக்கமளிக்க சொல்கிறார்களே என்ற மகிழ்ச்சி. பிறகு நாயக்கரும் மொழிபெயர்ப்பாளரென்ற வகையில் தமது அனுபங்களை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் பல்கலைகழக உணவு விடுதிக்குச்சென்றோம். அங்கே பிரெஞ்சுதுறை பேராசிரியர் அஜித் என்பவர் அறிமுகம் கிடைத்தது. பரமக்குடிகாரரான இவரொரு தி.க விசுவாசி. ஒரு மொழிபெயர்ப்பு நூலையும் கொடுத்தார். பொதுவான கருத்துகளை பகிர்ந்துகொண்டு வெளியில் வந்தபோது மணி 3 ஆனது. ஏற்கனவே எடுத்திருந்த வாகனம் சிறியதாக இருந்ததால் மூவரின் பெட்டிகளை வைக்க போதாதென்று தீர்மானித்து வேறுவாகனத்தை கொண்டுவர பேராசிரியர் சந்திரசேகரன் ஏற்பாடு செய்தார். பேராசிரியர் சந்திசேகரனிடம் விடைபெறுகிறபோது ‘சரித்திர சறுக்கல்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை பரிசாக அளித்தார். படித்துபார்த்தேன் நல்ல பல கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன. பின்னர் ஒருமுறை அவற்றைகுறித்து எழுதுகிறேன். பல்கலைகழக நண்பர்கள் சற்று பெரியதொரு வாகனத்தை இம்முறை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அங்கிருந்து விடைபெற்று வாகனத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் புதுச்சேரி அரசாங்கத்தின் விருந்தினர் மாளிகைக்குச் சென்று பெட்டிகளை எடுத்துக்கொண்டு பிரெஞ்சு தூதரகத்தில் திருமதி ஜூடித் ஒரியோல் என்பருடனான எங்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து நேராக தில்லி தமிழ்ச்சங்கம் காவற்கோட்டம் நாவலுக்கு சாகித்ய அகாதமியின் பரிசினினை வென்றிருந்த சு. வெங்கிடேசனுக்கு பாராட்டுவிழா என்றார்கள் அதையும் முடித்துவிட்டு  விமானநிலையம் செல்லத் திட்டம்.

13ந்தேதி அன்று பிரெஞ்சு தூதரகத்திற்கு அல்லியான்ஸ் பிரான்ஸேஸ் முகவரி தேடி சென்றிருந்ததால் மீண்டும் தூதரகத்தைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களில்லை. ஆனால் தூதரகத்திற்கு சென்று அலுவலக காவலதிகாரிகளை விசாரித்தபோதுதான் திருமதி ஜூடித் அலுவலகம் ஔவரங்கசீப் சாலையில் இருக்கிறதென தெரியவந்தது.  தூதரக கலைபண்பாட்டுத் துறை அதிகாரி திருமதி ஜூடித் ஒரியோலிடம் பிரான்சிலிருக்கிறபோதே  சந்திப்பிற்கு நேரம் ஒதுக்கச்சொல்லி கேட்டிருந்தேன். பிற்பகல் மூன்றரை மணி அளவில் தூதரகத்தில் அவரது அலுபலகத்தில் சுருக்கமான எங்கள் அறிமுகத்திற்குப் பிறகு பிரச்சினைகள் குறித்து பேசபட்டன. பிரெஞ்சு நூல்களை மொழிபெயர்ப்பு சம்பந்தமாக தாம் உதவ முடியுமெனவும், தமிழிலிருந்து பிரெஞ்சில்கொண்டுபோக தம்மால் எதுவும் செய்யலாகாதெனவும் தெரிவித்தார். உண்மையில் தில்லி பிரெஞ்சு தூதரக அதிகாரியின் சந்திப்பில் பெரிய பயன்பாடுகளென்று எதுவுமில்லை.

தில்லி அல்லியான்ஸ் பிரான்சேஸ் இயக்குனரை முடிந்தால் சந்திக்கலாமென்பது  எனது பிரெஞ்சு நண்பர் தெபெல்லின் விருப்பம். 13ந்தேதி தில்லியில் காந்தி சமாதியை பார்த்துமுடித்துவிட்டு சாந்தி பாத்திலிருந்த பிரெஞ்சு தூதரகத்தில் முகவரியை வாங்கிக்கொண்டு லோடிஎஸ்டேட்டிலிருந்த  அல்லியான்ஸ் பிரான்சேஸை தேடிப்போனபோதுதான்  தில்லியில் இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒருவர்மீது தாக்குதல் நடத்தியிருக்கக் கண்டோம். இரவு தொலைகாட்சி செய்தியை பார்த்தபோதுதான் நடந்த விபரீதத்தை விளங்கிக்கொள்ள முடிந்தது. அன்றைய தினம் சம்பவத்தின் வீச்சை முழுமையாக உணரத் தவறியதாலோ என்னவோ அதை 13ந்தேதி நிகழ்வில் பதிவு செய்யவும் தவறியிருக்கிறேன்.

தில்லி அல்லியான்ஸ் பிரான்சேய்ஸ்லிருந்து தில்லி தமிழ்ச்சங்கம், காவற்கோட்டம் சு.தமிழ்செல்வனுக்கு சாகித்ய அகாதமி பரிசினை வென்றமைக்காக ஏற்பாடு செய்திருந்த விழாவிற்கு நண்பர்கள் அனைவரும் சென்றோம். அங்கே வடக்கு வாசல் ஆசிரியர் நண்பர் பென்னேஸ்வரனை சந்தித்தேன்.  நண்பர் பி.எ.கிருஷ்னனும் வந்திருந்தார். அவரோடு உரையாட நிகழ்ச்சி வாய்ப்பு ஏற்படுத்தித் தந்ததென சொல்லவேண்டும். நிகழ்ச்சி முடியுமுன்பே புறப்பட்டு அருகிலிருந்த தமிழர் ஒருவர் நடத்திய மெஸ்சில் தட்டைக் கையில் ஏந்தியபடி  இரவு உணவை முடித்துக்கொண்டு விமானதளத்திற்கு வந்தோம். நண்பர் நாயகரும் ஜெகதீசனும் என்னையும் எனது பிரெஞ்சு நண்பரையும் விமான தளத்தில் இறக்கியபின் புறப்பட்டு சென்றார்கள். புதுதில்லி பயணம் நன்கமைந்ததற்கு நாயகருக்கு நன்றி சொல்லவேண்டும் அவர் இல்லையென்றால் பயணம் சோர்வைத் தந்திருக்கலாம். தில்லி பயணத்தில் தம்பி ஜெகதீசனின் பங்கையும் அவரை அறிமுகப்படுத்தி உதவவைத்த பேராசிரியர்கள் சந்திரசேகர், நாச்சிமுத்து ஆகியோரையும் அவர்களைசந்திக்க காரணமாகவிருந்த பேராசிரியர் பாலசுப்பிரமணியையும், எழுத்தாளர் கு. சின்னபாரதியையும் மறக்கவியலாது.
————————————–

Chassé-Croisé:France-Inde

அன்புடையீர்,

 ஏற்கனவே தங்களுக்கு எழுதியதுபோன்று இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம். இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பதிப்பிக்கும் முடிவு அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது:

 எனது அமைப்பு மூலம் தொகுப்பை வெளியிட இயலாது. இந்தியப்புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கவேண்டாமென அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். சொந்தமாக வெளியிட நிதி ஆதாரமில்லை. தவிர அப்படி வெளியிட்டாலும் நண்பர்களுக்கு இலவசாமக கொடுப்பதன்றி வேறு பயன்களை எதிர்பார்க்கமுடியாது. எனவே பிரெஞ்சு பதிப்புலகத்தையன்றி வேறு உருப்படியான வழிகள் தற்போதைக்கு இல்லை.

 அவர்களும் தேர்விற்கும்:சில தகுதிகளை நிர்ணயித்திருக்கிறார்கள்.

 – பிற நாடுகளைபோலன்றி மொழிபெயர்ப்பாளர்கள் தாய்மொழி பிரெஞ்சாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.

-, உலகின் பிற பகுதிகளைப்போலவே மொழி பெயர்ப்பு தேர்வுக்குழுவினரின் எதிர்பார்ப்புக்கு உகந்ததாக இருக்கவேண்டும்.

 இவ்வ்வளவு சிக்கல்கள் இருக்கிறபொழுது எதற்காக செய்கிறேனென  நீங்கள் முனுமுனுப்பதும் காதில் விழுகிறது.

 வாழ்க்கைப்பயணத்தை உழைப்பும் நம்பிக்கையுமென்ற இருகால்களைக்கொண்டே தொடங்கியவன். பாவண்ணன் சிறுகதை மரம் வளர்ப்பதை பற்றி பேசுகிறது. மரம் நட்டவர்களெல்லாம் நடுமுன் யோசித்திருந்தால் நிழல் என்ற சொல்லே இல்லாதொழிந்திருக்கும். ஒன்றிரண்டாவது துளிர்க்குமென நம்பியே நடுவோம்.

 எனது வாடா நம்பிக்கையேகூட   ‘உலகமே நம்பிக்கைகொண்டோரால் உயிர்த்திருக்கிறது’ என்பதுதான்.

 மீண்டும் தங்கள் கவனத்திற்காக: http://franceindechassecroise.wordpress.com

 நா.கிருஷ்ணா

மொழிவது சுகம் – ஏப்ரல் 27

Rosemary’s baby -Roman Polanski

அண்மையில் Arte என்கிற பிரெஞ்சு தொலைகாட்சியில் புகழ்பெற்ற ரோமன்போலெஸ்க்கியின் ரோஸ்மரியின் குழந்தை (Rosemary’s baby) படத்தை காணநேர்ந்தது. ரோஸ்மரி நாடகங்களில் துணைநடிகராக நடிக்கின்ற அவரது கணவர் இருவரும் நியூயார்க் நகரில் ‘Bramford’ என அழைக்கப்படும் தொகுப்புவீடொன்றில் குடியேறுகிறார்கள்.அவர்களுக்கு அண்டைவீட்டினராக அறிமுகமாகும் வயதான தம்பதியினர்  இளம் தம்பதினியினர் மீது காட்டும் அளவற்ற பாசம் ரோஸ்மரிக்கு சந்தேகத்தைக்கொடுக்கிறது. தொகுப்பு வீடு, அவ்வீட்டில் வசிக்கும் பிற குடித்தனகாரர்கள், வயதான தம்பதியினர் என ஒரு மர்ம முடிச்சில் திரைக்கதையை மிக துல்லியமாக சொல்லியிருக்கிறார்கள். ரோஸ்மரியாக நடிக்கும் மியா ·பரோ (Mia Farrow) வின் நடிப்பு அபாரம். நம் வீட்டுபெண்போல இருக்கிறார். தொடக்கத்தில் சாதுர்யமானவளாகவும், கெட்டிக்காரியாகவும் அறிமுகமாகிறவள்  பின்னர் பரிதாபமாக தோற்று துவளும்போது எரிச்சல் வருகிறது. சாத்தான் அபிமானிகளான கூட்டத்தின் சிலந்தி வலையில் சிக்குண்டு மெல்ல மெல்ல இரையாவது கொடுமை. மறக்க முடியாதபடம். படத்தின் மூலம்  Ira Levin என்பவரின் விற்பனையில் சாதனை படைத்த திகில் நாவலான  Rosemary’s baby க்குச் சொந்தமானது. எனக்கென்னவோ Roman Polansky படங்களிலேயே சிறந்தது இதுவாகத்தான் இருக்குமென்று அபிப்ராயம் ( அவரது மற்ற படங்களை மீண்டும் ஒருமுறை பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் வரை). இதன் தொடர்ச்சியாக The Tenant, மற்றும்  ஒரு படம் (பெயர் நினைவிலில்லை) வந்தன. பிறகு இருக்கவே இருக்கிறது ரோமான் போலஸ்கியின் பெயரைக் கொண்டாடவென்று The China Town.  எனக்கென்னவோ ஸ்பீல் பெர்க்கை காட்டிலும் ரோமன் போலஸ்கி திரைக்கதையில் மன்னர். உண்மை கற்பனையைக்காட்டிலும் சுவாரஸ்யமானது என்பதற்கு அவரது வாழ்க்கையில் ஏராளமான நிகழ்வுகள்.  1969ல் இலண்டனுக்கு படப்டிப்பிற்கு சென்றிருந்த பொழுது அவரது கர்ப்பினி மனைவியும் அன்றைய தினம் வீட்டிற்கு வந்திருந்த நண்பர்கள் சிலரும்  ஹிப்பி கூட்டமொன்றால் கொடூரமாக கொலையுண்டதே கூட ஒரு திகில் நாவலுக்கு ஈடான சம்பவங்களைக் கொண்டது.  நேரம் கிடைக்கும்போது ரோமன் போலஸ்கி பற்றி எழுதுகிறேன்.
————————————-

எரியுங்கள் உங்கள் ஓவியத்தை – அவர்கள் இரக்கமில்லாதர்களென்று.

அரசாங்கம் தமது நிதியில் ஒரு சதவீதத்திற்கு குறைவாக கலை மற்றும் பண்பாட்டுதுறைக்கு ஒதுக்கியிருக்கிருப்பது எரிச்சலூட்டியிருகிறது நவீன ஓவியங்களின் அருங்காட்சியக இயக்குனர் ஒருவருக்கு. கோபமுற்ற அவர் தமது காட்சிகூடத்திலிருந்த ஓவியங்களை அதை படைத்த அல்லது வரைந்த ஓவியர்கள் சம்மதத்துடன் அவர்களையும் அழைத்துவைத்துக்கொண்டு தெருவில் போட்டு எரித்திருக்கிறார், தொடர்வாரென்றும் தெரிகிறது.

மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இத்தாலி அரசாங்கம், கலை பண்பாட்டு துறைக்கு எப்படி நிதியை ஒதுக்க முடியும் என அரசாங்கம் கேட்க, அருங்காட்சி அகத்தின் இயக்குனரோ’ அடப்பாவிகளா, இத்தாலி நாட்டின் பொருளாதாரமே கலையையும் பண்பாட்டையும் ஆதாரமாகக்கொண்டதாயிற்றே அதை அலட்சியம் செய்தால் உருப்படுவீர்களா? எனக் கேட்கிறார். இயக்குனர் பெயர் Antonio Manfredi நேப்பிள் அருகில் கசோரியா என்ற இடத்திலிருக்கும் சமகால ஓவியகூடத்தின் இயக்குனர். எரிக்கப்பட்ட முதல் ஓவியம் ஒரு பிரெஞ்சு ஓவியருக்குச் சொந்தமானது, பெயர் Séverine Bourguignon. அருங்காட்சியக இயக்குனர் எங்களிடம் இருக்கும் உங்கள் ஓவியத்தை எரிக்கபோகிறேன் எனக்கூறியபோது அதற்கென்ன சந்தோஷமாக நடத்திக்கொடுக்கிறேனென தீப்பெட்டியுடன் வந்திறங்கினாராம். ஒன்றிரண்டல்ல 200 ஒவியங்கள், எல்லாவற்றையும் எரித்துவிட்டுதான் பிறவேலைகள் என்கிறார் இயக்குனர். எரித்தபிறகு அவருக்கு அங்கென்னவேலை?

ம.லெ. தங்கப்பா  கவிதை

நண்பர் அ. பசுபதி தங்கப்பா  கவிதை ஒன்றை மடலிட்டிருந்தார். அவருடைய வலைப்பூவில் இக்கவிதை இருக்கிறதாம் தங்கப்பாவைவை போலவே எளிமையும் அழகும் ஆழமும் கொண்ட கவிதை:

ஆடு மேய்க்கலாம் – வாடா
ஆடு மேய்க்கலாம்
கேடு செய்திடும் – கல்விக்
கிடங்கை விட்டு வா (ஆடு மேய்க்கலாம்)

ஒரு படித்தவன் மக்கட்கு
உழைக்கவில்லையே!
வருவதியாவையும் – போட்டான்
வயிற்றில் கொள்ளையே! (ஆடு மேய்க்கலாம்)

பாதி மாந்தர்கள் – ஐயோ,
பசியில் சாகிறார்.
ஏது செய்கிறார் – தம்பீ
இங்குக் கற்றவர்? (ஆடு மேய்க்கலாம்)

பொருளை நாடுவர் – பேயாய்ப்
போட்டி போடுவார்
பெரிய கல்வியர் – தாமே
பிழைகள் செய்கிறார் (ஆடு மேய்க்கலாம்)

கல்வி என்று போய் – நெஞ்சைக்
கறைப் படுத்தலின்,
புல் நிலங்களில் – தம்பி
புரள்தல் இன்பமே! (ஆடு மேய்க்கலாம்)

கற்ற பேர்களே – நெஞ்சின்
கனிவு மாறினர்
முற்றும் தன்னலம் – தன்னில்
மூழ்கிப் போயினர். (ஆடு மேய்க்கலாம்)

அன்பு செய்திடக் – கல்வி
அறிவு தேவையா?
பண்பில் மேம்பட – எழுத்துப்
படிப்பும் வேண்டுமா? (ஆடு மேய்க்கலாம்)
——————————–

இசைவானதொரு இந்தியப்பயணம்-தில்லி

பிப்ரவரி -13

புதுச்சேரி அரசினருக்குச்சொந்தமான விருந்தினர் மாளிகை சாணக்யபுரியில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கிற அத்தனை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் விருந்தினர் மாளிகைகளை வைத்திருக்கின்றன. தில்லி வந்திறக்கிய முதல் நாள் இரவு புதுச்சேரி அராசங்கத்தின் பயணியர் விடுதியில் ஏற்பட்ட  அனுபவத்தை எழுதியிருந்தேன். எது எப்படியோ புது தில்லியில் மலிவாக தங்கவும், உண்ணவும் வேறெங்கும் சாத்தியமில்லையென துணிந்து கூறலாம். 30 வருடத்திற்கு முன்பு நேரு யூத் கேந்திராவில் இருந்தேன். அப்போது தில்லிக்கு வந்தேன். தென்னிந்திய உணவிற்காக எங்கள் கிராமத்தைச்சேர்ந்த முதலியார் ஒருவர் ஆர்.கே.புரத்தில் உணவு விடுதியொன்று நடத்தினார். தில்லியிலிருந்த இரண்டுவாரமும் இரண்டு நாளைக்கு ஒரு முறை அங்கே சென்றுவிடுவதுண்டு. என்னுடன் புதுச்சேரி நண்பர்களும், தமிழ்நாட்டு நண்பர்களும் இணைந்துகொள்வார்கள். விடுதி மலிவாக இருப்பதாலோ என்னவோ வருகின்ற விருந்தினர் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும்போலிருக்கிறது. விடுதி ஊழியர்களில் ஒரே ஒரு தமிழரை பார்க்க முடிந்தது. இரவு விடுதியில் உறங்குவதற்குமுன் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் நாயகர், புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் பேராசிரியர் மு. இளங்கோவன் பணி நிமித்தமாக சென்னை வந்திருப்பதாகக் கூறியிருந்தார். காலையில் வரவேற்பு கூடத்தில் அவரை சந்திக்க முடிந்தது. சிலர் என்றும் மார்க்கண்டேயனாக இருப்பார்கள், மு. இளங்கோவன் அந்த ரகம். ஏன் நாயகரும் அப்படித்தான். இருவர் வயதையும் அத்தனை சுலபமாக எடைபோடமுடியாது. நாயகரின் முழுபெயர் க.அ. வெங்கட சுப்பு¡ய நாயகர். அவர் முழுப்பெயரையும் பாரத்துவிட்டு, நண்பர் தேவமைந்தன் அறிமுகப்படுத்தியபோது எனக்கு எங்கள் கிராமத்தில் கூண்டுவண்டியிலிருந்து தள்ளாடிக்கொண்டே இறங்கும் நாயக்கர்கள் ஞாபகத்திற்கு வந்தனர். வந்தவரோ அநியாயத்திற்கு இளைஞராக இருந்தார்.

நண்பர் மு. இளங்கோவன் தில்லியில் அவரறிந்த தமிழர் ஒருவர் வாகனங்களை வாடகைக்கு விடுகிறார் என்றார். எனது பிரெஞ்சு நண்பர் இந்தியாவிற்கு வந்த நாளிலிருந்து, வாடகைக்கு வாகனத்தை எடுத்தால் நான் ஓட்டுவேனே என்று சொல்லிக்கொண்டுவந்தார், தில்லியிலும் மறக்காமமல் நினைவுபடுத்தினார். எனக்கு அச்சம் அவர் வாகனத்தை ஓட்டுவதிலில்லை. ஆனால் இந்தியச்சாலையில் விதிகள் வேறு. ஏதோவொரு சர்க்கஸில் சேர்ந்து கயிற்றில் நடக்க பயிற்சிபெற்றிருக்கவேண்டும். எனவே விஷப்பரிட்சைகள் வேண்டாமென்று அவர் கோரிக்கையை தவிர்த்துவிட்டேன். இத்தாலி அரசாங்கத்தைத்போல, பாதிக்கப்பட்டவருக்கு ஒரு கோடி கொடுக்க நம்மால் ஆகாதென்பது முதற்காரணம்: அவர் வாகனத்தை ஓட்டியது இந்திய எல்லைக்குள் அல்ல என இந்திய உச்ச நீதிமன்றத்த்தில் வாதாட திறமைபெற்ற மத்திய அரசாங்கத்தின் அட்டர்னியும் எங்களுக்கில்லையென்பது இரண்டாவது காரணம். மு. இளங்கோவின் தயவில் கரோல் பாக் தமிழரை தொலைபேசியில் பிடித்து வாகனத்தை வரவழைத்தோம். வாகன ஓட்டி நேபாளி. இந்திய தலைநலரில் அண்டைநாடுகளிலிருந்து பிழைப்பு நடத்துபவர்கள் பத்து சதவீதத்தினர் இருப்பார்களென வாகன ஓட்டி கூறிய ஞாபகம். எனக்கு அவ்வளவு இருக்காது என்பதுபோல தோன்றியது. வட இந்தியாவில் எல்லோரும் ஒரே சாயலில் இருப்பது போன்று தோற்றம். எனவே பாகிஸ்தானியரையும், பாங்களாதேஷ் மக்களையும் பிரித்து அடையாளப்படுத்துவதிலுள்ள சிரமங்கள், நேபாளியரையும், திபெத் மக்களையும் வடகிழக்கு இந்தியரிடமிருந்து வேறுபடுத்தி பார்ப்பதிலும் உள்ளன. எங்கே போகவேண்டுமென வாகன ஒட்டி கேட்டபோது உங்கள் விருப்பம்போல செய்யுங்களெனகூறிவிட்டு அமைதியானோம்.

அதற்குமுன்னால் ஓர் அதிசயம் நடந்தது, அதைப் பகிர்ந்துகொள்ளவில்லையெனில் தலைவெடித்துவிடும் அபாயமுண்டு. விடுதியின் துப்புரவு ஊழியர் ஒருவர் தெபெல் அறையின்முன்னால் நானூறு ரூபாய்கிடந்ததாகக் கூறி எங்களிடம் கொடுத்தார். எனக்கு அந்த ஊழியரின் செயல் மிகுந்த வியப்பைத் தந்தது.  பொதுவாக கீழே கிடந்தால் திருப்பி கொடுப்பதென்பது வழக்கமே அல்ல என நம்மில் பலர் எண்ணிக்கொண்டிருக்க அவர் செயல் அசாதரணமானதுதான். பல நட்சத்திர ஓட்டல்களில் எனக்குக் கிடைத்த அனுபவம் வேறு.  நாம் மறந்துபோகும் குளிர் கண்ணாடி, கோட்டு, முகச்சவரம் செய்யும் உபகரணங்கள் திரும்ப வந்து கேட்டால் கிடைக்காது. எனவே புதுச்சேரி அரசாங்க பயணியர் விடுதியில் பணியாற்றும் நேர்மையான அக்கடைநிலை ஊழியருக்கு ஏதேனும் ஊக்குவிக்கும் வகையில் அளித்திருக்கலாம். பிரெஞ்சு நண்பர் துப்புரவு ஊழியருக்கு பத்தோ இருபதோ கொடுப்பாரென எதிர்பார்த்தேன். 50 ரூபாய்கூட கொடுத்திருக்கலாம் அது பெரிய தொகையே அல்ல. அவராக முன் வந்து செய்யாததை நாம் சொல்லி செய்யச்சொல்வது அதையும் அந்நியர்கள் முன்னிலையில் இங்கிதமாக தெரியவில்லை. தவிர மூன்றாம் நாள் அறையைக் காலிசெய்யும்போது கொடுக்கலாமே என்ற எண்ணம் மனதிலுதிக்க அமைதியானேன். ஆனால் அந்த வ்ஊன்றாம் நாளில் அதை சுத்தமாக மறந்துபோனது.

சாணக்கியபுரியில் இருக்கிறபோதெல்லாம் ஏதோ ஐரோப்பாவில் இருப்பதுபோல இருக்கிறது. எனினும் 30 ஆண்டுகளுக்கு முந்தய சாணக்கியபுரி இல்லை. அப்போது இன்னும் புதியதாக இருந்தது.. சாந்தினி சவுக், பழைய டில்லி என்றுக் கடந்தபோகிறபோதுதான் இந்தியா என்ற ஞாபகம் வந்தது. முதலில் நாங்கள் பார்த்தது குதுப்மினார். குதுப்மினார் பழைய மிடுக்கு குறையாமல் இருக்கிறது. மூன்று நூற்றாண்டுகள் மூன்று மன்னர்கள் கட்டி எழுப்பிய உலகத்தின் மிகப்பெரிய மினார்களில் ஒன்று என்கிறார்கள்.. இந்தியாவில் மசூதிகளில் மினார்கள் குறைவு. துருக்கியில் கலை நுணுக்கத்துடன் எழுப்பட்ட மினார்களை பார்க்கமுடிந்தது. குதுப்மினாரை பார்த்த பின்பு இந்தியா கேட் சென்றோம். இந்தியா கேட்டை பார்த்தபோது கம்பீரமான இந்தியாவை பார்க்க முடிந்தது. வெளிநாட்டினர், பிற மாநில மக்களென்று கூட்டம் நிறைய. நிழற்படகலைஞர்கள், இந்தியா கேட்டை தபால் அட்டையில் விற்கிற சிறுவர்கள். வழக்கப்போல கூட்டத்தை நம்பி நடக்கிற தள்ளுவண்டி வியாபாரிகள் போன்ற காட்சிகளை மனதிற் நிறுத்த முடிந்தது. இந்திய ஜவான் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன்

அங்கிருந்து ராஷ்டிரபதி பவன். வாகனத்தை தூரத்திலேயே நிறுத்தி இறங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. காவல் துறையின் கெடுபிடி நிழற்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பினோம். வாகன ஓட்டி எதிரெதிராகவிருந்த இரு சிவப்பு கட்டிடங்களைக்காட்டி ஒன்று நிதி அமைச்சகத்திற்கும் மற்றது பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் சொந்தமானதென்றார். இந்திய அதிபரைப் பற்றி பேச்சுவந்தபோது இந்தியாவில் அதிபர்களும், ஆளுனர்களும் அரசாங்கப் பணத்தை ஆற்றில் கொட்ட ஏற்பட்ட பதவிகளன்றி அவற்றால் வேறு உபயோகங்களில்லையென பிரெஞ்சு நண்பரிடம் எரிச்சலுடன் கூறினேன். அண்மையில் ‘இந்து’ நாளிதழில் படிக்க நேர்ந்த செய்தியின் படி அதிபர் பொறுப்பிலிருக்கும் அம்மணி இந்திய வரலாற்றிலேயே இதுவரை அறிந்திராத அளவிற்கு வெளிநாட்டுப்பயணங்களால் நாட்டின் கருவூலத்தை ஏப்பம் விட்டிருக்கிறார். காரணம் ஒவ்வொரு பயணத்தின் போதும் அவரது குடும்பமென்ற ஒரு பெரிய படை உலகத்தை வலம் வந்திருக்கிறது பொதுமக்களின் பணத்தில். இந்தியாவில் ஆளுனர்களும் இதைத்தான் செய்கிறார்கள்.

பிற்பகல் ஒரு மணி அளவில் கன்னாட் பிளேஸ். மதிய உணவிற்கு, நல்ல உணவு விடுதியைத் தேடி மிகவும் சிரமப்பட்டோம். கிளப்போலவிருந்த உணவு விடுதியொன்றிற்குள் நுழைந்தோம். உள்ளே நல்ல ஆடை தரித்திருந்தால்தான் அனுமதிப்போம் என்றார்கள். காவலர்கள் ஒருமுறைக்கு இருமுறை எங்களைப் பார்த்த பின்பே அனுமதித்தார்கள். பிற்பகல் ராஜ்காட் சென்றோம். சாலைக்கு மறுபக்கம் காந்தி நினவரங்கம் இருக்கிறது. அடுத்தடுத்து நேருவுக்கு இந்திராகந்திக்கு ராஜிவ் காந்திக்கு சரண்சிங்கிற்கு என சமாதிகள் இருக்கின்றன. ராஜ்காட் தவிர வேறெங்கும் நாங்கள் போகவில்லை. இந்தவியாதி தமிழகத்திற்கும் தொற்றியிருக்கவேண்டும். மெரீனா பீச் சமாதிகள் பீச்சாக மாறாது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. தமிழ்நாட்டில் எதுவும் நடக்கலாம். மற்ற சமாதிகள் எப்படியோ காந்தி சமாதியில் காதலர்களையும், அவர்கள் மீது கூழாங்கல்லை எறிந்துவிட்டு ஓடும் பையன்களையும் கண்டோம். டிட்டோ, மாண்டெலா போன்ற தலைவர்கள் நட்டிருந்த மரக்கன்றுகளிடத்தில் வெறும் அறிவிப்பு மட்டுமே இருந்தன. ஓரளவிற்கு களைத்திருந்தோம், அடுத்து பிர்லா மந்திர் லட்சிமி நாராயனன் கோவில். பிர்லா லட்சுமிக்கு கோவில் எடுக்காமல் வேறு யாருக்கு எடுப்பார். இங்கே கடுமையாகக் காவல். ஒருமுறைக்கு பலமுறை சோதனையிட்டபின் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

பிப்ரவரி 14

முதல் நாள் பிற்பகலே பணிக்கர் போக்குவரத்தில்  ஆக்ரா, பதேபூர்சிக்ரி, மதுரா வுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்திற்கு, விருந்தினர் மாளிகையில் பணிபுரியும் தமிழரிடம் நாயக்கர் ஏற்பாடு செய்திருந்தார்.  அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் கீழே இறங்கியாயிற்று. பேருந்து விடுதியின் வாசலுக்கே வந்து அழைத்துபோகுமென்றார்கள். நல்ல குளிர். ஆறேகால் மணிக்கு பணிக்கர் நிறுவனத்தின் வாகனம் எங்களை ஏற்றிக்கொண்டது வாகனத்தில் வேறு இரண்டுபேர் இருந்தனர். எங்கள் அனைவரையும் கரோல் பார்க் பேருந்து நிறுத்தத்தில் கொண்டுபோய்விட்டனர். வொல்வோ ரக பேருந்து வசதிக்கு குறைவில்லை ஆளுக்கு ஒரு பாட்டில் மினரல் தண்ணீரை நிர்வாகம் கொடுத்திருந்தது. காலை எட்டு எட்டரைமணி அளவில் நல்ல உணவு விடுதியொன்றில் காலை உணவு. அங்கிருந்து முதலில் ஆக்ராகோட்டை. அங்கே பேருந்தில் ஏறிய வழிகாட்டி பதேபூர் சிக்ரி, ஆக்ரா இரண்டு பொறுப்பையும் ஏற்றிருந்தார். ஆக்ரா தலைநகரான விதம்;  லோடிகள், பாபர், ஹ¤மாயூன், அக்பர்,ஷாஜகானெனெ ஒருவர்பின் ஒருவராக ஆக்ராவை ஏற்றுக்கொண்டது,   கோட்டையை பற்றிய உண்மை வரலாறு, கட்டுகதைகள், சொந்த சரக்குகளென வழிகாட்டி இடைவிடாது எல்லாவற்றையும் பாடமெடுப்பதுபோல கூறிக்கொண்டு வந்தார். அரசரின் அந்தப்புரம், மாளிகையில் கலைவேலைபாட்டிற்காக உபயோகிப்பட்ட விலைமதிப்பற்ற கற்கள், அரசிகள் நீராடுமிடம், ஷாஜகானின் அந்திமக் காலம், கோஹினூர் வைரமென அவர் புனையவும் நாங்கள் கேட்கவும் நிறைய இருந்தது. பதேபூர் சிக்ரிக்கும் தாஜ்மகாலுக்கு இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு நுழைவு கட்டணமாக 500 ரூபாய் வசூலித்தது அநியாயம்.

பிறகு மதிய உணவுக்குப்பிறகு கைத்தொழில் நிறுவனம் என்றபெயரை சொல்லி உத்திரபிரதேசம் அரசாங்கத்திற்கும் சொந்தமில்லாத ஒரு தனியார் நிறுவனத்திற்கு அழைத்து சென்று வெளியில் விற்கிற தாஜ்மகாலை வாங்விடாதீர்கள் நாங்கள்தான் அசலான சலவைக்கல்லில் செய்த தாஜ்மகாலை விற்கிறோம் (இந்த செய்தி மட்டுமே உண்மை) என சுற்றுலாவாசிகளை கவர சர்க்கரை பாகில் நனைத்த வியாபார சொற்களைபோட்டு பொருட்களை விற்க முயற்சிக்கிறார்கள். இதுதவிர தமிழ்நாடா கேரளாவா என விசாரித்து சென்னை குமரன் சில்க்ஸ் மொத்தவிலைக்கு அளிக்கும் சரக்கை உங்களுக்கு சில்லரையிலும் தருகிறோமெனக்கூறி பட்டுபுடவைகளை விற்றார்கள். பேரம் பேச தெரிந்தால் தோல் பொருட்கள் விலை பரவாயில்லை. நண்பர் நாயகர் ஒரு ஜோடி செருப்பு வாங்கினார்.

தாஜ்மகாலை இப்போதெல்லாம் பேருந்துகள் நெருங்கிவிடக்கூடாதாம். பேருந்துகள் கக்கும் புகை உலக அதிசயத்தை பாழ்படுத்திவிடலாமென்ற அச்சம் ஏற்க கூடியதே. எங்கள் வழிகாட்டி தெற்கு வாயிலைத் தவிர்த்துவிட்டு ( நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தார்கள் என்பது ஒரு காரணம்; எங்களை அதிக நேரம் கடையில் நிறுத்தியிருந்தால் நேரமின்மை என்பது மற்றொரு காரணம்) ஒவ்வொரு வாயிலாக எங்களை இழுத்துக்கொண்டு வழிகாட்டி ஓடினாரென்று சொல்லவேண்டும். ஏதோ ஒருவாசலில் இறுதியாக நுழைந்தோம். தாஜ்மகாலுக்காக அவ்வளவு சிரமத்தையும் ஏற்கலாம் போலிருந்தது நல்ல வெயில். யமுனையின் தோற்றம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஷ¥க்களை தவிர்க்க அவைகளின் மீது பிளாஸ்ட்டிக் உரைகளை அணிந்துகொண்டு நடக்கலாம் என்பதென்கிற யோசனை துருக்கியிலும் கடைபிடிக்கபடுகிறது. மாலை நாலரை மணிக்கு வெளியில் வந்து பேருந்து பிடித்து மதுராவரும்போது மணி ஆறாகிவிட்டது. கிருஷ்ணர் பிறந்த இடமாம். முதன்முறையாக வந்திருந்தேன். வித்தியாசமான கோவில். இங்கேயும் பலத்த காவல். வெளியில் தெளிவாக எழுதியிருந்தது: புகைப்படகருவிகள் அனுமதியில்லை. நண்பர் தெபெல் புகைப்பட கருவியுடன் நுழைய காவலர்கள் அவரை உள்ளே விட மறுத்தார்கள். நண்பர் நாயக்கருடன் அதை கொண்டுபோய் பாதுகாப்பகத்தில் கொடுத்துவிட்டு மீண்டும் எங்களுடன் இணைந்துகொண்டார்கள். மதுரா கோவிலின் பின்பக்கம் மசூதியொன்றிருக்கிறதென்றார்கள் பார்க்கவில்லை.

மதுராவில் கொஞ்சம் பழம் வாங்கி சாப்பிட்டோம். அங்கு தேனீர் நன்றாக இருந்தது. இரவு விடுதிக்குவரும்போது மணி பத்தாகிவிட்டது. நல்லவேளை புறப்படும்போதே சொல்லிவைத்திருந்ததால் இரவு உணவு காத்திருந்தது.
—–

மொழிவது சுகம் – ஏப்ரல் -23


பிரான்சு அதிபர் தேர்தலும் – கருணாநிதியும்

எதிர்பார்த்ததுபோலவே அதிபருக்கான தேர்தல் முதற்சுற்றின் முடிவின் படி இரண்டாம் சுற்றுக்கு சர்க்கோஸியும்(Sarkozy), ஹொலாந்தும் (Hollande) தேற்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொடக்கமுதலே கருத்துக்கணிப்புகள் உருதிபடுத்திய தேர்வாளர்களின் வரிசைஎண் பிறழவில்லை. ஹொலாந்து (Socialiste) சர்க்கோஸி (UMP), மரி லெப்பென் (Front National), ழான் லுய்க் மெஷான்சொன் (Front de Gauche), பிரான்சுவா பைய்ரு(Modem) என வற்புறுத்தப்பட்ட ஆருடத்தில் மாற்றமில்லை. மாறாக முதலிரண்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டிற்கும் கருத்துகணிப்பிற்கும் அதிகவித்தியாசங்களில்லை என்கிறபோதும் அடுத்தடுத்தவந்த வேட்பாளர்களின் வாக்கு சதவிதத்தில் கணிப்புகள் பொய்த்திருக்கின்றன.

இவர்களில் இனவாதியும் தேசியவாதியான மரிலெப்பென் 18 விழுக்காடுவாக்குகளை பெற்று மூன்றாவது இடத்திலும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பெரும் எண்ணிக்கையில் மக்களை கவர்ந்தும் எதிர்பார்த்த அளவில் வாக்குகளைக் குவிக்கத் தவறியிருக்கிறார் தீவிர இடதுசாரியான ழான் லுயிக் மெலான்ஷோன். அவர் பெற்ற வாக்குகள் சதவீதம் பதினோரு சதவீதம். பத்து சதவீத வாக்குகளைபெறுவார் என நம்பப்பட்ட பிரான்சுவா பைரூ பெற்ற வாக்குகளோ 9 விழுக்காடு.

இரண்டாவது சுற்றில் என்ன நடக்கும்.?

தீவிர இடதுசாரிகளும், இயற்கை விருப்பிகளும் தங்கள் ஆதரவு ஹொலாந்துக்கென்று வெளிப்படையாக அறிவித்து இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு ஓட்டுகள் 99 விழுக்காடு சோஷலிஸ்டு கட்சியின் வேட்பாளரான ஹொலாந்துக்கு உதவும். ஆனால் அது மட்டும் போதுமா என்ற கேள்விகள் இருக்கின்றன.

தீவிர வலது சாரியான மரி லெப்பென் பதினெட்டு சதவீத வாக்குகளை பெற்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து இடதுசாரியுமல்ல வலதுசாரியுமல்ல எனச்சொல்லிக்கொண்டிருக்கும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுகள் யாருக்கென்ற கேள்வி.

பைரூவின் ஆதரவாளர்கள் மெத்தபடித்தவர்கள், சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள். பைரூவிற்கு பின்னே திரண்டவர்கள் பைரூவின் நியாயமான செறிவுமிக்க அறிவுபூர்வமான கருத்துரைகளில் நம்பிக்கை வைத்து அவர் பின்னர் வந்தவர்கள். எனவே முதல் சுற்று வாக்குகள் அவ்வளவையும் சிதறாமல் அவர் கைகாட்டுகிற வேட்பாளருக்கு போடும் ஆட்டு மந்தைகளல்ல அவர்கள்.

அடுத்து மரி லெப்பென் என்பரின் ஓட்டு வங்கி. முதல் சுற்றில் இவருக்கு விழுந்த ஓட்டு. முழுக்க முழுக்க இனவாத ஓட்டு என்றோ வெளிநாட்டினர்மீதுள்ள வெறுப்பினால் விழுந்த ஓட்டு என்றோ சொல்ல இயலாது. பிரான்சு நாட்டில் இனவாதமும் வெளிநாட்டினர் மீதான வெறுப்பும் இருக்கவே செய்கிறது. ஆனால் இந்த தீவிரவலதுசாரிக்கு விழுந்த ஓட்டுகள் வேறெங்கிருந்தும் வரவில்லை வழக்கம்போல ஆளும் கட்சியின் மீது இருக்கும் வெறுப்பிற்கும் கசப்பிற்கும் எங்கே நிவாரணம் தேடுவதென்று அலைந்துகொண்டிருந்த வலதுசாரியினரின் ஒரு பிரிவினருக்கும் – திரும்பத் திரும்ப சோஷலிஸ்டுகளுக்கும், யுஎம்பிக்களுக்கும்- ஓட்டளித்து அலுத்துபோன மக்களில் ஒரு பிரிவினருக்கும் மாற்றம் தேவைபட்டது, எனவே தங்கள் வாக்கை இப்பெண்மணிக்கு அளித்தார்கள். இவர்களுக்கு மாற்றம் வேண்டும். இவர்களில் பெரும்பனமையினரின் வாக்கு சர்க்கோசியைக்காட்டிலும், ஹொலாந்துக்கு ஆதரவாகவே நாளை இருக்கும். அதுவும் தவிர அடுத்துவரும் தேர்தலில் கணிசமாக பாரளுமன்ற உறுப்பினர்களைப் பெறவேண்டுமென்ற கனவிலிருகிற மரிலெப்பென் கட்சிக்கு, யுஎம்பியின் கட்சியின் சரிவு அவசியமாகிறது. ஒரு வேளை யுஎம்பி யின் கட்சியினர் மரிலெப்பென் கட்சியுடன் ரகசிய உடன்பாடு கண்டாலொழிய இதற்கு விமோசனமில்லை. சர்க்கோசியும் அவரது ஆதரவாளர்களும் பிரான்சுவா பைரூவின் ஓட்டுவங்களைபெறமுடியாத நிலையில், மரி லெப்பனின் ஓட்டுகளைப் பெற எல்லா தத்திரங்களையும் கையாளலாம்.

எது நடந்தாலும்…

சர்க்கோசியின் வாதத்திறமையும் தைரியமும் நாடறிந்ததுதான். இருந்தாலும் அவருடைய யோக்கியதையில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை, அதிபர் பதவிக்கான கண்ணியத்தைக் காப்பற்றியவரல்ல அவர். எனக்கு அவர் பிரான்சுநாட்டின் கருணாநிதி. ஹொலாந்துக்கு அனுபவமில்லை என்கிறார்கள். அரசியலில் நல்ல மனிதர்கள் அதிசயமாகத்தான் பூக்கிறார்கள், ஹொலாந்து ஜெயிக்கட்டும்- ஜெயிப்பார். அனுபவம்? அது தன்னால் வரும்…

_____