Category Archives: Uncategorized

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை

மற்றும்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு

காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்

நூல்கள் வெளியீட்டு நிகழ்வு

தலைமை: பேராசிரியர் மாண்பமை இரா.தாண்டவன் அவர்கள்

துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம்

நூல் : அத்திப்பாக்கம் வேங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு

(ஆதிக்க சாதிகள் – இந்து மதம்: ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகத் தொழிற்பட்ட வரலாறு)

வெளியிடுபவர் : தோழர் ஆர்.நல்லக்கண்ணு

பெறுபவர் : பேராசிரியர் கோ.இரவீந்திரன்

தலைவர் – இதழியல் துறை – சென்னைப் பல்கலைக்கழகம்

நூல் : சென்னை இலௌகிக சங்கம்

(தத்துவவிவேசினி – THINKER இதழ்க் கட்டுரைகளின் பதிப்பு – 6 தொகுதிகள்)

வெளியிடுபவர் : நீதியரசர் கே.சந்துரு அவர்கள்

பெறுபவர் : பேராசிரியர் இரா.மணிவண்ணன்

தலைவர் – அரசியல் மற்றும் பொது வாழ்வியல் – சென்னைப் பல்கலைக்கழகம்

இடம் : பவள விழாக் கலையரங்கம்

மெரினா வளாகம் – சென்னைப் பல்கலைக்கழகம்

(கடற்கரை – திருவள்ளுவர் சிலை எதிர்)

28.10.2013 மாலை 4.00

கருத்தரங்கம்

காலனியக்காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிக சங்கமும்

29.10.2013 காலை 10.00 – 1.00

முதல் அமர்வு

தோழர் எஸ்.வி.இராஜதுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிவொளி இயக்கம்

ஆளிணிவாளர் க.திருநாவுக்கரசு

தத்துவவிவேசினியில் காலனியம் குறித்த பதிவுகள்

தோழர் ஜி.இராமகிருஷ்ணன்

சென்னை இலௌகிக சங்கத்தினரின் அறிவியல் கண்ணோட்டம்

தோழர் ஆ.சிவசுப்பிரமணியன்

காலனிய பொருளாதாரமும் சென்னை இலௌகிக சங்கமும்

இரண்டாம் அமர்வு

29.10.2013 பிற்பகல் 2.30 – 5.00

ஆளிணிவாளர் வ.கீதா

தத்துவவிவேசினி முதல் குடியரசு வரை : தொடர்ச்சியும் மாற்றமும்

தோழர் கொளத்தூர் மணி

பெரியாரும் சென்னை இலௌகிக சங்கமும்

தோழர் பெ.மணியரசன்

பத்தொன்பதாம் நூற்றாண்டு மறுமலர்ச்சியும் சென்னை இலௌகிக சங்கமும்

ஆளிணிவாளர் ரவிக்குமார்

சென்னை இலௌகீக சங்கம் : பார்ப்பனீய எதிர்ப்பும் சாதி மறுப்பும்

மூன்றாம் அமர்வு

30.10.2013 காலை 10.00 – 1.00

பேராசிரியர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்

ஐரோப்பிய புத்தொளி மரபும் சென்னை இலௌகிக சங்கமும்

பேராசிரியர் தமிழவன்

சென்னை இலௌகிக சங்கம் : சில அவதானிப்புகள்

பேராசிரியர் சுந்தர் காளி

ஆடியும் லிங்கமும்: தொன்மங்களை வாசிப்பதில் தத்துவவிவேசினியின் இருவேறு வழிமுறைகள்

ஆளிணிவாளர் ஸ்டாலின் இராஜாங்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி : ம.மாசிலாமணி

நான்காம் அமர்வு

30.10.2013 பிற்பகல் 2.30 – 5.00

பேராசிரியர் ந.முத்துமோகன்

தத்துவவிவேசினி முன்னெடுக்கும் மெளிணியியல் விவாதம்

ஆளிணிவாளர் ஞான. அலாளிணிசியஸ்

அகில இந்தியச் சமூக மாறுதலுக்கான பின்னணியில் சென்னை இலௌகிக சங்கம்

தோழர் விடுதலை இராசேந்திரன்

இலௌகிக சங்கத்தினரின் பெண் சார்ந்த கண்ணோட்டம்

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

இலௌகிக சங்கத்தினரின் மூடநம்பிக்கை குறித்த பரப்புரைகள்

பேராசிரியர் தொ.பரமசிவன்

தமிழக நாத்திக மரபும் சென்னை இலௌகிக சங்கமும்

குறிப்பு : பேராசிரியர் வீ.அரசு பதிப்பித்துள்ள சென்னை இலௌகிக சங்கம்

(ஆறு தொகுதிகள் : 3330 பக்கங்கள்) என்னும் ஆக்கத்தை அடிப்படையாகக் கொண்டு

இக்கருத்தரங்கம் நிகழ உள்ளது. இத்தொகுதிகளை நியு செஞ்சுரி புத்தக நிறுவனம்

அண்மையில் வெளியிட்டுள்ளது.

அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

உலக எழுத்தாளர் வரிசை 5 : ஜார்ஜ் சேம்ப்ர்

ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun)AVT_Jorge-Semprun_3796

ஜார்ஜ் சேம்ப்ர் மாட்ரிட்டில் (ஸ்பெயின்) பிறந்து  பாரீஸில் (பிரான்சு) மறைந்தவர்.  மேட்டுக்குடியில் பிறந்த பொதுவுடமைவாதி, ஸ்பெயின் மார்க்கோ முதல் ஜெர்மன் இட்லர்வரை இவரை பிடித்து சிறையிலடைக்க அல்லது கொல்ல காத்திருந்தார்கள். அரசியலோடு எழுத்திலும் தீவிர பங்களிப்பு. பிரெஞ்சு -ஸ்பானிஷ் இரண்டிலும் எழுதுவார். எழுத்தோடு தத்துவம் பேசியவர்.

சூழலைக் காட்டிலும் அக புறவய அனுபவங்களை தமது எழுத்தில் கொண்டுவரவும் அதனூடாக வாசிப்பை புதிய தளத்தில் நிறுத்தி அவ்வனுபவத்தை வாசகரையும் உணரச்செய்வதில் தேர்ந்தவர் ஜார்ஜ் சேம்ப்ர் (Jorge Semprun). ஒரு ஞாயிற்றுக்கிழமை, பூஷன்வால்ட் (‘Quel beau dimanche!) என ஆரம்பித்து வாசகரை வழிமறித்து தேடிக்கொள்ளும் சாமர்த்தியம் அவர் எழுத்துக்கு நிறையவே உண்டு. நளனுக்கு வாய்த்ததுபோல ‘தீவினைக் கொடுமை’யைக் காலமும், சரித்திரமும் அவருக்கு சோதனையாக அறிமுகப்படுத்துகிறது, புலிவாலைப்பிடித்த போதை அனுபவம். அதனை மயக்கத்தின்வழிநின்றே ஒரு போர்வீரனின் தீரத்துடன் எதிர்கொள்ளவும், ஒரு கலைஞனின் திறத்துடன் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு முடிந்தது. நாஜிகளின் வதைமுகாமில் உள்ளத்தாலும் உடலாலும் தேய்ந்துகொண்டிருந்தபோது கண்ணெதிரே நிகழ்ந்த, சக மனிதகூட்டத்தின் தினசரிகள் மீதான தாக்குதலைத்  (கடுங்குளிர், பசிக்கு உணவின்மை, கொடுமைகள், ஈவிரக்கமற்ற கொலைகள், முகவாட்டங்கள், சோர்வுகள், கடுந்துன்பத்தின் முக்கல்கள் முனகல்கள் இன்னும் இதுபோன்றவற்றையெல்லாம் புறச் சம்பவங்களக் கணக்கில் கொள்ளாது) தவிர்த்து  – முகாமில் தமமக்குள் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களை சொல்லவேண்டியது அவசியம் என்கிறார். நாஜிகளுடைய வதை முகாம்களைப் பற்றிய கட்டுரைகள், வரலாறுகள், புனைவுகள்  ஏராளமாக வந்துள்ளனவென்றாலும், அதனை இலக்கியமாக்க இவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது. முகாம் வாழ்வை ஓர் யோகிபோல கடந்து வந்திருக்கிறார். அதற்கு ஒருவேளை அவரது தத்துவ அறிவு காரணமாக இருக்கலாம்.

ஜார்ஜ் சேம்பர் ஒரு ரிபப்ளிகன், எதேச்சதிகாரத்தின் எந்தவடிவமும் மக்களுக்கு எதிரானது என்கிற உண்ர்வுபூர்வமான குரல்களுக்கிடையில் அவர் குரலும் இடம்பெற்றது. ஸ்பெயின் நாட்டில் பிராங்க்கோ என்கிற கொடுங்கோலனின் ஆட்சி காலத்தில் தொடங்கிய தலைமறைவு வாழ்க்கை பிரான்சு நாட்டை நாஜிகள் ஆக்ரமித்திருந்தபோதும் நீடித்தது. பொதுவுடமைக் கொள்கையில் தீவிர ஆர்வலர், கட்சியில் அக்கறையுடன் வினையாற்றியவர் எனினும் ஸ்டாலினிஸத்துடன் உடன்பட மறுத்து விலகிக்கொண்டார். தீவிரமான அரசியல் நிலைப்பாடுகளுக்காக எழுத்தை ஒருபோதும் மறந்ததோ, தியாகம் செய்யவோ இல்லை, அவ்வெழுத்தை அவர் சார்ந்த அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டவரும் அல்ல.

 

ஜார்ஜ் சேம்ப்ர் அரசியல் எழுத்து என்ற இரு குதிரை சாரட்டில் பயணித்தவர் என்பதால், அவர் அரசியல் வழித்தடத்தையும் நாம் இங்கே பேசியாகவேண்டும். உண்மையைச் சொல்வதெனில் இளம்வயதில் நானும் ஒரு பொதுவுடமைக் கட்சியின் அனுதாபியாக, திராவிட கொள்கைகளில் பிடிப்புள்ளவனாக இருந்திருக்கிறேன், அதுகூட சரியான வார்த்தை அல்ல. ஏனெனில் எனது அந்த வயதில் அரசியல் சார்பென்பது எனது தகப்பனாருக்கு எதிரான மன நிலையில் உருவானது, பெரியார் அல்லது கார்ல் மார்க்ஸ் மீதுள்ள பிடிப்பினால் உருவானதல்ல. எனது தகப்பனாருக்கு எதெல்லாம் பிடித்ததோ அதெல்லாம் எனக்கு பிடிக்காதது, உணவு உட்பட. அப்படியொரு மனநிலையில் இருந்தேன். கிராமத்தில் நாடகம் எழுதி நடிப்பது, பாலம் என்ற இயக்கம்,  இதே மன நிலையில்தான் இளங்கலைப் படிப்பை சென்னையில் இராயபுரத்தில் தங்கித் தொடர்ந்தேன் ( துறைமுகத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்திருந்த பகுதி) சர் தியாகராயக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது பீடி சுற்றும் தொழிலாளர்கள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, தீக்கதிர் பத்திரிகையை விரும்பி வாசித்ததுண்டு, ஆனாலும் என்னை உறுப்பினராக வேண்டுமென்று படிவத்தை நீட்டிய பொழுது மறுத்தேன். அதே நேரத்தில் பழைய காங்கிரசு நடத்தும் கூட்டங்களிலும் கலந்துகொண்டதுண்டு. சோ நடத்திய துக்ளக் இதழை விரும்பிப் படிப்பேன். கட்சிபேதமின்றி அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்கிறவர்கள் பக்கம் இருப்பதை இப்போதும் உணர்கிறேன். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் பிடிக்காமல் போய்விடுகின்றன. இதற்கு உளவியல் ரீதியில் ஏதேனும் காரணம் இருக்குமா எனத் தேடவேண்டும். பொதுவுடமைக் கட்சியில் என்  அனுபவத்தில் உணர்ந்தது, அக்கட்சியின் தொண்டர்கள் பிறரை நம்புவதில்லை, தலைவர்களை தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை. பொதுவில் இருதரப்பும் எதார்த்த உலகோடு சம்பந்தப்பட்டவர்களல்ல. ஆனாலும் ஒன்றை உறுதியாக நம்பலாம். அரசியலில் பிறகட்சிகளைக் காட்டிலும் ஒன்றிரண்டு யோக்கியவான்களைப் பெற்றிருக்கிற கட்சியும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

ஜார்ஜ் சேம்ப்ரின் ‘Quel beau dimanche!’  (ஞாயிற்றுக்கிழமைக்குதான் என்ன அழகு!) என்ற அவரது சுய வரலாறு அல்லது புனைவு தற்செயலாக போலந்து நாட்டில் ‘Solidarnose’ பிறந்த அன்று வெளிவந்தது. அதாவது 1980ம் ஆண்டு ஜனவரிமாதம். ஜார்ஜ் சேம்பரின் வாழ்க்கையை அறிந்தவர்கள் வியப்படைவார்கள். நாஜிகளின் கொலை முகாமில் அடைபட்டிருந்த காலத்தில் நெஞ்சில் ஊறிய துன்ப உணர்வுகளை ஐந்து நாவல்களில் எழுதியிருந்தார். அவை 1963க்கும் 2001க் கும் இடைப்பட்டகாலத்தில் அவை வெளிவந்தன. அவற்றுள் இப்படைப்பை நடுவில் வைக்கலாம். இந்நூலுக்கு முன்பு வந்த le Grand voyage, l’Evanouissement என்ற இரண்டு நாவல்களிலும் தந்து கடந்த காலத்தை எட்டநின்று  அதனுடன் எவ்வித சமரசமுமின்றி விமர்சனம் செய்திருக்கிறார் எனில் பின்னர் எழுதிய இரண்டிலும் ( L’Ecriture ou la Vie, Le mort qu’il fait) தமது எதிர்காலத்தைப் பற்றிய  தீர்க்க தரிசனத்தை எடுத்துரைக்கிறார். ஸ்பெயின் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டதின் விளைவாக இருபதாண்டுகாலம் ஸ்பெயினுக்கும் பிரான்சுக்குமாக தலைமறைவு வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. அவர் வாழ்க்கையை மாற்றியது சொலிஜெட்சினா ( Solijenitsyne) நூலொன்று எனச் சொல்கிறார்கள் “எனது நினைவுகளை பரிசீலிக்கவும், விமர்சன உணர்வுக்குறிய எல்லா உரிமைகளும் மடை திறந்து, என்னைத் தனகெதிராகத் மாற்றும் திறனை தன்னிடம் வளர்த்தெடுத்ததென அவரே பின் நாளில் எழுதுகிறார்.

அவரது முக்கிய படைப்புகள்:

1. Le grand voyage (The Long Voyage) Gallimard, 1963
2. L’Ecriture ou la Vie (Writing or Life) Gallimard, 1994
3. Quel beau dimanche! ( What a beautiful sunday)

————————————————–

நூல் அறிமுகவிழா படங்கள்

வெ.சுப நாயகரின் மொழிபெயர்ப்பு ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல்  அறிமுகவிழா படங்கள்

Naya-1வெ.சுப. நாயகரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ சென்னையில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. முக்கிய பல ஆளுமைகள் பலர் கலந்துகொண்டு:நூலை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்பது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தி.

நா.கிருஷ்ணா

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார்

நூற்றாண்டு விழா

தமிழிசை மூதறிஞர் குடந்தை ப. சுந்தரேசனாருக்கு நூற்றாண்டு விழா எடுக்கும் முகமாக அது பற்றிய செய்தியும் அவரைபற்றிய அரியதகவல்களும் கொண்டு முனைவர் மு. இளங்கோவன் தமது வலைப்பூவில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார்.

தமிழ்மொழிபால் உண்மையான அக்கறைகொண்டுள்ள உள்ளங்கள் விழாகுழுவினரை தொடர்புகொண்டு தோள்கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

http://muelangovan.blogspot.in/

நா.கிருஷ்ணா

———————————————

நூல் வெளியீடு : அப்பாவின் துப்பாக்கி

invitation new                                                             எதிர் வரும் அக்டோபர் 20ந்தேதி சென்னையில் இனெர் சலீம் என்ற குர்திய திரைத்துறை வல்லுனர் பிரெஞ்சில் எழுதிய ‘அப்பாவின் துப்பாக்கி’ நூல் அறிமுகவிழா நடக்க உள்ளது இந்நூலை பிரெஞ்சிலிருந்து மொழிபெயேத்திருப்பவர் நண்பர் பேராசிரியர் வெங்கிட சுப்புராய நாயக்கர்.

அதே நாளில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு நூலொன்றையும் வெளியிட இருக்கிறார்கள். இரண்டு நூல்களுமே காலச்சுவடு வெளியீடுகள்.

நண்பர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுமென பணிவான வேண்டுகோள்

அன்புடன்
நா.கிருஷ்ணா

உலக எழுத்தாளர் வரிசை -4

லோரா காசிஷெக் ( Laura Kasisschke)Laura

பிரான்சுநாட்டை பொருத்தவரை ஒரு நல்ல நாவலாசிரியராக அறியப்பட்ட பெண்மணி. அமெரிக்காவில் இவர் ஒரு நல்ல கவிஞர் என்கிறார்கள். எனக்கு கவிஞராக அல்ல நாவலாசிரியராக அறிமுகம். ஒன்றிரண்டு தமிழ்க் கவிதைகள் தருகிற அலுப்பு பிறமொழி கவிதைகள்வரை நீள்கிறது. எனவே அறிமுகமான பெயர்களைத் தேர்வு செய்து கவிதைகளை வாசிக்க வேண்டியிருக்கிறது. லொரா கசிஷ்க் என்றா லோரா காசிஷெக் என்றா எப்படி உச்சரிப்பதென அவரது படைப்பொன்றை வாங்கியபோது (அட்டையில் போட்டிருந்த பெண்மணியின் தோற்றத்தில் ஈர்க்கப்பட்டு) குழப்பங்கள் இல்லை. ஆனால் இன்று, அவரைப்பற்றி எழுத உட்கார்ந்தபோதுதான் இப்படியொரு சங்கடம் அதிலிருப்பது தெரியவந்தது. எழுத்தாளர் பெண்மணி கணவர், பிள்ளைகளென கொஞ்சம் சமர்த்தாக குடித்தனம் பண்ணிக்கொண்டு மிச்சிகன் பல்கலைகழகத்தில் ஆசிரியபணியையும் செய்து நேரம் கிடைக்கிறபோது நாளொன்றுக்கு நான்கு மணிநேரத்தை எழுத்திற்குச் செலவிடுவதாக் பிரெஞ்சு இலக்கிய இதழ் ‘Lire’ சத்தியம் செய்கிறது.

வீட்டிற்கு ஒரே மகள், இளம்வயதிலேயே  வளர்ந்தபெண்போல பாவித்து பெற்றோர்கள் தோழமையுடன் அவரை நடத்தியிருக்கிறார்கள். தனது வயதொத்த சிறுமிகள் போலன்றி அலுப்புதரும் வாழ்க்கை முறையில் தப்பிக்க வாசிப்பையும் எழுத்தையும் தேர்வு செய்தாராம்.

அகன்ற வீதிகள், மரங்கள், வீடுகள் வீடுகளைச் சுற்றிலுமிருக்கிற பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், நடை ஓட்டத்திற்கென நைக் ஸ்போர்ட்ஸ் ஷ¥க்கள் அணிந்து செல்லும் இள்வயது பெண்கள், அவர்களைத் துரத்திக்கொண்டு செல்லும் ஆண்கள், சிரிப்பை உதட்டிலும் கசப்பை மனத்திலுமாக இருத்திக்கொண்டு ஓரக் கண்களால் நம்மை பார்த்துக்கொண்டு தங்கள் நாயைக் கொஞ்சியபடி லிப்டில் இறங்குகிற நடுத்தர வயது பெண்மணி, விள்ம்பரங்களில் பார்க்கிற முகங்கள் போல சிரித்தபடி வீட்டைவிட்டு இறங்குகிற ஜோடிகளென அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலஸ் அருகிலுள்ள பசாடின நகரில் எனது மகளைப் பார்க்கச் செல்கிறபோதெல்லாம் மனதிற் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற காட்சிகள் லோரா காஷிஷெக் நாவல்களிலும் இடம்பெறுகின்றன. நடுத்தர குடும்ப (பேற்கத்திய நாடுகளிலும், அமெரிக்காவிலும் நடுத்தர குடும்பமென்று சொன்னால் இந்தியாவில் நாம் காண்கிற நடுத்தர வர்க்கமல்ல அதற்கு மேலே) பெண்களின் பிரச்சினகளை இவர் பொதுவாக கதைகளுக்கான கருவாக எடுத்துக்கொள்கிறார். ஆர்பாட்டமின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார்களென நம்பப்படுகிற நடுத்தர குடும்பங்களின் தலைக்குமேலே ஒன்றல்ல இரண்டல்ல பல டாமக்கிளீஸ் கத்திகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் திசைச் சிக்கல், வற்றாத துன்பங்கள், ஆபத்து விளிம்பில் கால் கடுக்க நிற்கிறார்கள். இவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்மணி என்பதால் அவர்களின் பிரச்சினைகளை எளிதாகக் கையாளுகிறார்.

அவரது முக்கிய நாவல்கள் :

1. A moi pour toujours  (Be mine)
2. En un monde parfait (In a perfect world)

பார்சலோனா-2

Barcelona1

முதல்நாள்மாலை  ஐந்துமணிக்குமேல், எங்கள்  விடுதியிலிருந்து  புறப்பட்டுச்சென்றோம்இருமருங்கிலும்  அணிவகுத்துநிற்கும்  மரங்கள். எதிர்ப்படும்மனிதர்களைகவனமுடன் தவிர்த்து, எழுத்தோடும் நிலையில் குத்துக்காலிட்டு  அமர்ந்தபடி, கும்பல்நடுவே வைராசாவை என நம்மைப் பார்த்து தூண்டில்போடும் மூணுசீட்டுரக மங்காத்தா  ஆசாமிகளின் வசீகரிக்கும் குரலை சாமர்த்தியமாக  ஒதுக்கிவிட்டுவேற்றுலக மனிதர்கள்போலவும், இடைக்கால மனிதர்கள் போலவும், வரலாற்று புருஷர்கள்போலும் வேடம்பூண்டு ஜீவிக்கும் மனிதர்களையும்பூக்கடைகளையும், ஐரோப்பாவின் பெரியநகரங்களின் சுற்றுலாப்பகுதிகளில் காண்கிற பிறஅம்சங்களையும் போகிறபோக்கில் ரசித்து, மகிழ்ச்சியுடன் உலாவர உதவும் ரம்பலா வீதியைக்குறித்து நிறைய எழுதலாம். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் லாரம்பலாவென்று எங்கள் கைவசமிருந்த வழிகாட்டிக் குறிப்பில் சொல்லப்பட்டிருந்தாலும் கட்டலோன் மொழியில் லெரம்பால்என்கிறார்கள்; அரபுச் சொல்லான ரமலாஸ் அதற்கு மூலம் என்கிறார்கள்

Barcelona3பிலாசா தெ கட்டலோனாவில் ஆரம்பித்து இறங்கி கிழக்கே நடந்தால் கொலம்பஸ் நினைவுத் தூண்வரை லாரம்பலாவின்ஆதிக்கந்தான். கொலம்பஸ்நினைவுத்தூணைக்கடக்கிறபோது, சிலுசிலுவென்றுகாற்று, உப்புநீரின்மணம், வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் உல்லாசப்படகுகள், வலதுபக்கம்சற்றுதூரத்தில் துறைபிடித்துநிற்கும் உல்லாசக்கப்பல்கள், துறைமுகம், சரக்குக்கப்பல்கள்துறைமுகத்தை நெருங்கியதும் அனுமதிக்காகக் காத்திருக்கும் சரக்குவாகனங்கள்.

Barcelona4கரையோரங்களில் கலைஞர்கள் உருவாக்கியுள்ள மணற்சிற்பங்களை வியந்துமகிழலாம். மனமிருந்தால்அக்கலைஞர்களுக்கு உதவலாம், கிராஸியாஸ் என்றுசொல்லி வாங்கிக்கொள்கிறார்கள். பிறகு தண்ணீர்தண்ணீர்மத்தியதரைக்கடல்: பார்த்தவுடன் ஸ்படிகம்போன்றகடல்நீரைக் கைகொள்ள அள்ளிக்கொள்ளத்தோன்றும். நீலநிற மஸ்லினைப்போர்த்திக்கொண்டதுபோல கடலுக்கடியில் மணல்மூடியதரை; அதில் நொடிக்கொருதரம் நட்சத்திரக் கும்பலொன்று நிதானமாய் அசைந்து செல்வதுபோல மீன்கள்நீந்தும் அழகையும், கரகாட்டக்காரியின் பாவடைபோல விரிந்து பின்னர்நிலைக்குத்திரும்பும் நீர்த்திரைகளையும் பார்த்துமகிழநேரம் போதாது.

லாரம்பலாவை வீதி என்பதைக்காட்டிலும், அகன்ற நடைபாதை என்றுசொல்வதுமிகவும் பொருத்தமானது. சுமார் 150 அடி அகலங்கொண்ட அச்சாலையில் சுமார் ஐம்பது அடிகளை இருமருங்கிலும் வாகனங்களின் போக்குவரத்துக்கென்று ஒதுக்கியிருக்கிறார்கள், மீதியுள்ள சாலை மக்கள் நடமாட்டத்திற்கென்று தாரைவார்க்கப் பட்டிருக்கிறது. பார்சலோனா நகரில்பார்க்கவேண்டியவை என்று நாங்கள்தீர்மானித்திருந்த அல்லது அப்படியொருதீர்மானத்திற்கு எங்களைக் கொண்டுவந்திருந்த புகழ்வாய்ந்த இடங்கள், கட்டிடங்கள், போதைதரும் வெளிகள் அனைத்துமே இந்தரம்பலாவைச் சுற்றியிருந்தன என்பதால், பார்சலோனாவில் தங்கியிருந்த ஐந்துநாட்களிலும் ரம்பலாவின் காலைநேரங்களும்மாலை நேரங்களும் பழகியிருந்தன.

Barcelona2

ரம்பலா பாதசாரிகளை,கடற்கரையைநோக்கிச்செல்லுபவர்கள், கடற்கரையிலிருந்து திரும்புபவர்கள் என இருவகையாகப் பிரித்தாலும் உலகின் எல்லா பெரியநகரங்களின் பாதசாரிகளின் கால்களுக்குள்ள குணங்கள் ரம்பலா பாதசாரிகளுக்கும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை, அர்த்தமற்று கால்போனபோக்கிலே நடப்பவர்கள், அவசரகதியில் எதையோஅல்லது எவரையோ தேடிப்போகிறவர்களைப் போலநடையும் ஓட்டமுமாய் விரைந்துசெல்பவர்கள், தேவதைகள், தேவர்கள், பரத்தைகள், அசுரர்கள், பணம்படைத்தவர்கள், பிச்சைஎடுப்பவர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், ரோஜாவிற்கும் பாகிஸ்தானியர், குளிர்பானங்கள் அடைத்த சிறுடின்களைக் கூவிவிற்கும் சிவப்பிந்தியர், ஏமாளிகளுக்காகக் காத்திருக்கும் கிழக்குஐரோப்பிய ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்; மலைப் பாம்புபோலமரத்தில் சுற்றிக்கொண்டு கஞ்சாபுகைக்கும் ஆசாமி, அவனருகே வானத்தை விழிவெண்படலத்தால் அளந்தபடிசொள்ளொழுகஉறங்கும் பெட்டை, திரிசடை சிவனார் போன்ற தலைமுடியும் சிவந்தகண்களுமாய் வயலினா, மாண்டலினா எனத் தீர்மானிக்கமுடியாத இசைக்கருவியை  வாசிப்பதில் லயித்திருக்கும்மனிதர்; புராண இதிகாசநாயகர்களாக, சரித்திரபுருடர்களாகவும், வேடம்தரித்து வெள்ளை அல்லது பொன்வண்ணத்தில் நாள்முழுக்க, பாதசாரிகள் இரக்கப்பட்டுஅல்லது தாமாக மனமுவந்துதரும் ஒற்றைநாணயத்தை வாங்குகிறநேரங்கள் தவிர்த்துபிறநேரங்களில் அசைவின்றி மணிக்கணக்கில் சிலைபோலநிற்கும் வீதிக்கலைஞர்களென ரம்பலாபற்றிச் சொல்லநிறைய இருக்கிறது

– – தொடரும்

மொழிவது சுகம் செப்டம்பர் 27 -2013

1. கீற்று இணைய தளம்: க. பஞ்சாங்கத்தின் கட்டுரைகள்

அண்மையில் கீற்று இணைய இதழில் நண்பர்  க. பஞ்சாங்கத்தின் கட்டுரைகள் இரண்டை வாசிக்க நேர்ந்தது. அவரது இலக்கிய திறனாய்வு கட்டுரைகளை தற்போது அக்கறையுடன் வாசித்துவருகிறேன். தற்கால இலக்கியவெளியில் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கிற பலரின் கட்டுரைகளில் இருக்கும் புழுக்கம், வெற்று சுமைகள் இவர் எழுத்தில் இல்லையென்பது வாசகர்களுக்குள்ள சௌகரியம்.  எடுத்துரைக்கும் பொருளும், எடுத்தாளும் சொற்களும் அவரொரு மூதறிஞர் என்பதை உறுதிபடுத்துபவை. அவர்மொழியின் வாயசைவையும், தொனியின் முழு பரிமாணத்தையும் உள்வாங்கிக்கொள்ள குறைந்த பட்ச அக்கறை போதுமானது. எழுத்திலுள்ள அபூர்வ கவர்ச்சிக்கு, அடிப்படையில் அவரொரு கவிஞர் என்பது காரணமாக இருக்கலாம். வழக்கம் போலவே நுட்பமானதொரு அவதானிப்பு. .

அ. தொல்காப்பியரின்  நன்நயப் பொருள்கோள்

தொல் இலக்கியங்களைப் பற்றிய அவரது பார்வை ஒருபோதும் பொதுவில் பலரும் பயணிக்கிற தடத்திற்கு உரியதல்ல. நம்மை வியப்பில் ஆழ்த்துவதெற்கென்றே சில கேமரா கோணங்களை பிரத்தியேகமாக உபயோகிக்கும் திறன் அவருக்குண்டு. நவீன இலக்கியத்தின் பல சிந்தனைகளை தொல் காப்பியர் அன்றே முன் மொழிந்திருக்கிறாரென நண்பர் சான்றுகளை முன் வைக்கிறபோது,  வியப்புடன் பெருமிதம் கொள்ளவேண்டியிருக்கிறது

ஆ. ஞானியும் தமிழ்தேசியக் கருத்தாக்கமும்
கோவை ஞானியின் தமிழ் தேசியம் குறித்து விரிவானதொரு பார்வை இக்கட்டுரை. ஆசிரியர் ‘தேசியம்’ என்ற உணர்வின் விளை நிலம் மேற்கு நாடுகளாக இருக்க முடியாது, தமிழகமாக இருக்கலாமென்ற ஊகத்துடன் கட்டுரையை ஆரம்பித்திருக்கிறார். கோவை ஞானி வழக்கமாக நாம் எதிர்கொள்கிற காம்ரேட் அல்ல, கார்ல் மார்க்ஸைக் உணர்ச்சியுடன் வாசிப்பவரல்ல அறிவுடன் வாசிப்பவர் அதனால்தான் அவரால் தமிழ் தேசியம் பேசமுடிமிகிறது. நண்பர் பஞ்சுவின் இக்கட்டுரை, ஞானி தமிழ் தேசியத்தைக் கட்டமைக்க கையிலெடுத்த உபகரணங்கள் என்ன, அவர் வடிவமைத்த தேசியத்தின் அடிப்படை பண்புகள் என்ன என்றெல்லாம் சொல்லிக்கொண்டு போகிறது. நூல்களிலுள்ள ஞானியின் கருத்துகளை போகிறபோக்கில் வழிமொழிந்துவிட்டுச்செல்லாமல் நண்பர் பஞ்சு தமிழ் தேசியத்தின் இன்றைய நிறைகுறைகள் குறித்தும் விவாதிக்கிறார்.

http://www.keetru.com/index.php?option=com_aisection&id=24989&Itemid=139

2. நூல் தொகுப்பாளர் பழங்காசு ப.சீனுவாசன்

நண்பர் மு.இளங்கோவன் தமது இணையதளத்தில் அறிமுகம் செய்துள்ள பெருந்தகை. சொல்லப்பட்டிருந்த தகவலைப் படித்தபோது சுவாசமே நின்று போய்விடும்போல இருந்தது. இந்தியா போன்ற ஒரு நாட்டில், இந்த யுகத்தில் இப்படியும் சில மனிதர்கள். ஒரு நூற்றாண்டு அறிவு கருவூலத்தை தாய்க் கருவை சுமப்பதுபோல கட்டிக்காத்து வருகிறார். வாழ்க நீ எம்மான்! நண்பர் இளங்கோவனுக்கு நன்றிகள்.

http://muelangovan.blogspot.in/

3. பிரான்சில் என்ன நடக்கிறது?

நேற்றைய பிரெஞ்சு தினசரியில் இப்படியொரு செய்தி, வாசித்து முடித்தபோது வியப்பாக இருந்தது.

கடந்த 26 செப்டம்பர் 2013 அன்று பிரான்சு நாட்டைச்சேர்ந்த ஓர் இளம் மலையேறி ஆல்ப்ஸ் மலையில் சிறியதொரு பேழையை கண்டெடுத்திருக்கிறார். திறந்து பார்த்தபோது அதனுள் சிறு சிறு சுருக்குப் பைகளில் விலையுயர்ந்த கற்கள் இருந்திருக்கின்றன. அப்பைகளில் ‘Made In India’ என்ற வாசகம் இருந்தனவாம். அவற்றின் மதிப்பு 130000 யூரோவிலிருந்து ளூ246000 யூரோவரை எனசொல்லபடுகிறது. இளைஞர் கண்டெடுத்த புதையலை, தனக்கென ஒதுக்கிகொள்ளாமல் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார். தொலைத்தவர்களோ அவர்களின் வாரிசுதாரர்களோ கேட்டுவந்தால் அவர்களிடம் ஒப்படைப்பார்களாம், வரவில்லையெனில் புதையல் கண்டெடுத்த இளைஞருக்கு கிடைக்குமென செய்தி சொல்கிறது உடையவர்கள் இந்தியர்கள் எப்படி?

இரண்டு விமான விபத்துகள்

இந்திய நாட்டிற்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் ஆல்ப்ஸ்   மலையில் விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றன

முதல் விபத்து நடந்தது 1950ல்.  ஏர் இந்தியாவிற்குச் சொந்தமான Malabar Princess 1950ம் ஆண்டு நவம்பர் மாதம் 3ந்தேதி விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது பயணம் செய்த 58 பேரும் இறந்திருக்கிறார்கள். இரண்டாவது விபத்து, பதினாறு ஆண்டுகள் கழித்து அதாவது 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ந்தேதி நடந்திருக்கிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் பெயர் கஞ்சன்ஜுங்கா. இவ்விமானமும் ஏர் இந்தியாவிற்குச் சொந்தமானது. நியுயார்க்- பம்பாய் என பயணித்த அவ்விமானம் 117 பயணிகளுடன் அதே இடத்தில் விபத்திற்குள்ளாக ஒருவரும் தப்பவில்லையாம். ஆக அவ்வப்போது ஆல்ப்ஸ் மலையின் ஒரு பகுதியான் மோன் -பிளாங் மலையில் இப்படி ஏதாவது கிடைப்பது வழக்கமாம்.

http://alpes.france3.fr/2013/09/26/un-alpiniste-trouve-un-incroyable-tresor-sur-le-massif-du-mont-blanc-326057.html
—————————————

நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது

மணற்கேணி ஆய்விதழ் இவ்வருட நிகரி சமத்துவ விருதுபெறும் சாதனையாளர்களை அறிவித்துள்ளது.. நண்பர் ரவிக்குமார் அழைத்திருக்கிறார். 

நண்பர்கள் திரளாக கலந்துகொண்டு இது போன்ற முயற்சிகளை ஊக்குவித்தல் வேண்டும்.

———————————————————————————–

          நிகரி – சமத்துவ ஆசிரியர் விருது 

downloaddownload_004கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளைக் களையும் விதமாகப் பணியாற்றிவரும் தலித் அல்லாத பள்ளி ஆசிரியர் ஒருவரையும், கல்லூரி ஆசிரியர் ஒருவரையும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் அவர்களுக்கு விருதளித்து கௌரவிக்க முடிவுசெய்துள்ளோம். தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணமுடிப்பும் , பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். இது ‘ நிகரி’ விருது என  அழைக்கப்படும்.

இதற்கான விழா இந்திய சாதி ஒழிப்பு வரலாற்றில் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பூனா ஒப்பந்தம் ஏற்பட்ட செப்டம்பர் 24 ஆம் தேதி விழுப்புரம் சாந்தி அரங்கத்தில் நடைபெறவுள்ளது. கட்சி அரசியல் சார்பற்ற எளியதொரு நிகழ்வில் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் வே .வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இந்த ஆண்டுக்கான விருது கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு தா.பாலு , திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் திரு அ .ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. அவர்களது புகைப்படங்களும் அவர்களைப் பற்றிய குறிப்புகளும் விழாவுக்கான அழைப்பிதழும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவும் நிகழ்வு குறித்த செய்தியைத் தங்கள் பத்திரிகையில் வெளியிட்டு உதவவும் வேண்டுகிறேன்.

அன்புடன்

ரவிக்குமார்

ஆசிரியர், மணற்கேணி 

குறிஞ்சி வட்டம் -51

செஞ்சியில் உள்ள குறிஞ்சி வட்ட நண்பர்கள் தொடர்ந்து படைப்பிலக்கியவாதிகளை உற்சாகப்படுத்திவருபவர்கள் ஞாயிறன்று (22 செப்.2013) அன்று நடந்த நிகழ்ச்சி பெண்கவியுலகத் திறனாய்வு சார்ந்தது. மூன்று பெண்கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகள் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

1. இரா. தமிழரசியின் ‘மரக்கலம் திரும்பும் பறவை’ கவிதைத் தொகுப்புக் குறித்து முனைவர் வே. நெடுஞ்செழியன் (திருவண்ணாமலை) திறனாய்வு செய்திருக்கிறார்.

2. பா. உஷாரணியின் ‘மரம் வைத்த வீடுகள்’ பற்றி, பேராசிரியர் அ.மான்விழி ரஞ்சித் (திருவண்ணாமலை)
திறனாய்வு செய்திருக்கிறார்.

3. மனுஷியின் ‘குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்’ என்பது பற்றி புதுவையைச்சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் இரா. கந்தசாமி திறனாய்வு செய்துள்ளார்.

அதிகம் அறியப்படாத படைப்பாளிகளின் வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் குறிஞ்சி வட்டத்திற்கு நன்றிகள்.