Category Archives: Uncategorized

இலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-4:

‘பெண்-  மொழி-புனைவு          

தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக்கோட்பாடுகள் என்பதை அடுத்து க.பஞ்சாங்கத்திண் பெண்ணியல் சார்ந்த கட்டுரை வரிசைகளில் முக்கியத்துவம் பெறுவது பெண்-மொழி- புனைவு. இதே பெயரில் கட்டுரை ஆசிரியரின் நூலொன்றும் வந்துள்ளதாக, நவீன இலக்கிய கோட்பாடு நூல் நமக்குத் தெரிவிக்கிறது.

பெண்பற்றிய கற்பிதம் பிற கற்பிதங்களைப்போலவே ‘மொழி-புனைவு’ என்கிற இரு காரணிகளின் சேர்க்கையால் உருவானது என்பது ஆசிரியரின் கருத்து. இதனை முன்வைத்ததில் ஆணுக்குப் பெரும்பங்குண்டு என்பதை உறுதிபடுத்துகிற ஆசிரியர் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைத்ததும் அதுவேதான் என்கிறார். “ஒரு தந்தை வழி சமூகத்தில், ‘பெண்ணின் அடையாளம்’ என்பது ஆணால் புனையப்பட்ட ஒன்றுதான். ஆண் பெண் உறவு முறையில் ஆணின் அதிகாரம் பெண் உலகத்திற்குள் நுழைவதில் பெரும் பங்கு அளித்திருப்பது மொழிதான் என்பது தெரிகிறது”. “இந்த மொழியின் திருவிளையாடல் தமிழ்ப் பண்பாட்டை வடிவமைப்பதில் ஆழமான செல்வாக்கு செலுத்தியுள்ள தொல்காப்பியத்தில் எவ்வாறு ஆணின் மொழியாக வெளிப்படுகிறது? இவ்வாறு ஆண் கற்பித்துள்ள ‘அர்த்தத்தை மாற்றி பெண் தன் நோக்கில் அர்த்தங்களைக் கற்பிக்க இன்று எவ்வாறு தன் இயக்கத்தை அமைத்துக்கொள்ளவேண்டும்? எனும் இரண்டின் அடிப்படையில் இந்தக் கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது ” என எடுத்த எடுப்பிலேயே தமது கட்டுரையின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார்,
” இது இந்த உலகத்தின் இயற்கை ; இது இந்த பெண்ணின் இயற்கை குணம்” என்று ஒரு பொருளின் இயற்கைப் பண்பை அறிந்துகொண்டதாக உரிமைகொண்டாடுவதெல்லாம் நம்முடைய ‘மொழி’ என்கிற வாய்ப்பாடு மூலம் நமக்கு வந்து சேர்ந்த புனைவுகள்தாம்” எனக் கட்டுரையைத் தொடங்குகிற ஆசிரியர்,  லக்கான் (Jacques lacan) மற்றும் •பூக்கோ(Michel foucault) என்கிற இரு பிரெஞ்சு அறிஞர்களின் கருத்துருவாக்கங்களின் அடிப்படையில் தமது வாதங்களை வைக்கிறார்.

“அம்மாவிடம் இருந்து பிரித்துத் தன்னைத் தனியாக அடையாளம் காணும் உணர்வைக் குழந்தையானது குறியீட்டு ஒழுங்குடைய மொழி எனும் அமைப்பிற்குள் நுழைந்த பிறகுதான் அடைகிறது” என்கிற லக்கான் கூற்றையும்; ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பது அதிகாரம் யாருடைய கட்டுபாட்டுக்குள் இருக்கிறதோ அவர் புனைந்து தருகிற மொழிதான் அப்பொருளுக்கான அர்த்தம் என்றாகிறது”, என்கிற •பூக்கோ கூற்றையும் தெரிவித்து, ஒரு பொருளுக்கான அர்த்தத்தைக் கட்டமைப்பதில் ஆசிரியர் மொழிக்கும் புனைவுக்கும் உள்ள ஆற்றலைத் தெரிவிக்கிறார்.
ழாக் லக்கான் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஓர் உளப் பகுப்பாய்வாளர். பிராய்டின் உளவியல் ஆய்வுமுடிவுகள் உயிரியல் உண்மைகளைக் காட்டிலும் பெரிதும் மொழிக் கூறுடன் இணக்கமானவை என்ற கருத்தியத்தை முன் வைத்தவர். குழந்தைப்பருவத்தில் முதன் முதலாக தன்னைப் பிறராக அறியநேரும் ஆடிப் படிநிலை( Stade du miroir)பற்றி விரிவாக ஆய்வு செய்தவர்.

மிஷெல் •பூக்கோ ஒரு தத்துவவாதி, முன்னவரைபோலவே பிரான்சு நாட்டைச்சேர்ந்தவர். அறிவுக்கும் அதிகாரத்திற்குமான உறவை வரையறுத்தவர். வெவ்வேறு துறையச் சார்ந்தவர்களாயினும் ‘தன்’ னை கட்டமைத்தலில் (subjectivation) மொழியின் பங்கு என்ன என்பதை தெளிவுபடுத்தியதில் ஒன்றிணைகிறவர்கள்.

“அதிகாரம் எப்பொழுதும் தான் அதிகாரம் செலுத்துகிற பொருளின் மொழியை பிடுங்கிகொள்கிறது அல்லது அடக்கிவைத்துவிடுகிறது” (ந.இ.கோ.பக்.58)” என்ற பூக்கோவின் கருத்துருவாக்கத்தை முன்வைக்கும் கட்டுரை ஆசிரியரின் சொற்றொடரில் உள்ள ‘அதிகாரத்தை’ எப்படி வேண்டுமானாலும் பொருள்கொள்ளலாம். ‘அதிகாரம்’ என்ற ஒற்றைசொல்லின் பின்புலத்தில் பல காரணிகள் தனித்தோ, இணைந்தோ இருக்கின்றன. ஆண்-பெண்; தடித்தவன்-மெலிந்தவன்; கற்றவன்-கல்லாதவன்; பெரும்பான்மை-சிறுபான்மை; கோபம்-அமைதி; என்கிற இருமை வரிசைகளில் முதலாவது அதிகாரத்தைப் பொதுவில் கைப்பற்றுகிறது. நியதிக்கு மாறாக இந்த ஜோடியில் இரண்டாவது முதலாவதை அதிகாரம் செலுத்துகிற தருணமும் உருவாகலாம். அப்போதும் இந்த ஜோடிகளில் ஒன்று, அவர்களுக்கிடையில் ஏதோவொரு செயல்பாட்டில் மற்றதிடம் போட்டியிட முடியாத கட்டத்தில் தான் அடிமையாக, பிறமை எஜமானனாக அதிகாரத்தைக் கையிலெடுகிறது. எதிரியின் ஆயுத உரிமத்தை இரத்து செய்து நிராயுதபாணியாக்கினால் வெகு எளிதாக அவனைப் பலிகொடுக்கலாம். மொழி ஆயுதத்தை அதிகாரம் தனதாக்கிக்கொள்ளும் சூட்சமும் அதுவேதான்.

“தேவ பாடையைப் பேசக்கூடாது மீறிப் பேசினால் நாக்கு வெட்டப்படும்” எனும் மனுதர்ம சட்டம்; “யாகாவாராயினும் நாகக்க” எனும் வள்ளுவன்; “என் காதலன் என்னைவிட்டு அகலும் படியாக ப் பேசிய ஊரார் ‘நா’வானது ஏழு நண்டு மிதித்த ஒரு நாவல் பழம்போல அழுகுகிப்போக,” சாபமிடும் குறுந்தொகைத் தலைவி; வாயாடி மனைவியிடமிருந்து மணவிலக்கு பெற அனுமதித்த பண்டைய சீன நாட்டின் சட்டம்; பெண்ணின் ‘நா’விற்கு எதிரான வழக்கிலிருக்கும் பழமொழிகள் என அனைத்துமே ஆசிரியருக்கு அதிகாரத்திற்கும் மொழிக்குமுள்ள நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்தும் சான்றுகள்.

தொல்காப்பியம்: ஓர் ஆணின் அதிகார அணுகுமுறை

இதன் தொடக்கத்தில் கூறியதுபோல கட்டுரை ஆசிரியருக்கு தொல்காப்பியர் ஆணாதிக்கத்தின் பிரதிநிதி. ஆசிரியர் சொற்களில் எடுத்துரைப்பதெனில் “மொழிக்குள்ள ஆற்றலை புரிந்துகொண்டு……பெண்ணின் வாய் மொழியில் கை வைக்கிறார்”. களவின் மரபை நெறிப்படுத்துகிற தொல்காப்பியர் ‘சிறத்தல்’ தலைவிக்கும், ஐயம் தலைவர்க்கும் உரியதென்பதையும், கைக்கிளையில் “சொல் எதிர் பெறாமல், சொல்லிச் சொல்லி இன்புறுவதற்கு ஆணுக்கே அவர் இடம் தருகிறார் எனக்கூறியும் தொல்காப்பியர் “ஆணோடு கொள்ள நேர்கிற ஆரம்ப உறவிலேயே பெண்ணுக்கான சொல்லாடல் தடை செய்யப்படுகிறது” என்கிறார்.
தொல்காப்பியரை பெண்ணின் எதிரி என நிறுவ ஆசியர் கூறும் மற்றொரு எடுத்துக்காட்டு “காதல் வாழ்வின் தொடக்கத்தில் ஏற்படுகின்ற வேட்கை, இடைவிடாது நினைத்தல், மெலிதல், நாணம், நீங்குதல்… முதலான மனநிகழ்வுகளை தலைவன் தலைவி இருவருக்கும் பொதுவெனக்கூறும் தொல்காப்பியர் இம்மன நிகழ்வுகளின் தொடர்விளைவான மொழிப்படுத்தி பேசுவது மட்டும் ஆணுக்கே உரியதென கூறுவது கட்டுரை ஆசிரியர் எடுத்துக்காட்டியிருப்பதுபோல எவ்விதத்திலும் நியாயமில்லைதான். அதுபோலவே பஞ்சாங்கத்திடம் தொல்காப்பியர் வாங்கிக் கட்டிக்கொள்ளும் மற்றொரு இடம் கற்பியலில் ‘பிரிவின்’ கீழ் “மொழி எதிர்மொழிதல் பாங்கற்குரித்தே” எனக்கூறி தலைவின் வாயை அவர் (தொல்காப்பியர்) அடக்கும் இடம். கட்டுரை ஆசியருக்கு தொல்காப்பியர் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் அடையாளம். பெண்களின் மொழி ஒடுக்கப்பட்டு ஆண்களின் மொழி உருவாக்கத்திற்குக் காரணமானவர். தமிழ்மரபில் காணும் பெண்ணின் தாழ் நிலைக்கு தொல்காப்பியரும் பொறுப்பு.

டார்வின் மற்றும் பிராய்டு
தொல்காப்பியரை அடுத்து டார்வினும் பிராய்டும் நண்பர். க.பஞ்சாங்கத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். டார்வின் சிந்தனையும், பிராய்டுவின் சிந்தனையும் ‘ஆண் வலிமையானவன் பெண் மென்மையானவள்’ என்ற தொல்காப்பியத்தின் சிந்தனையை முன்வைக்கின்றன என்கிற கருத்தியம் ஓர் உணர்ச்சிவேகத்தில் நண்பரிடம் உருவாகியிருக்கலாம் என்பதென் எண்ணம். “வலிமையுள்ளவை வாழும் மற்றவை மாயும்” என்கிற டார்வின் கூற்றையும் அதுபோலவே பிராய்டின் பகுப்பாய்வு முடிவுகளையும் ஆணாதிக்க குரலாகப் பார்ப்பது சரியாகாது. அறிவியல் முடிவுகள் தொல்காப்பியம்போல பண்பாட்டு அரசியல் பேசவந்ததல்ல, மரபுகளால் கட்டமைக்கப்பட்டதுமல்ல. அவை ஆய்வின் முடிவுகள், பகுத்தறிவின்பாற்பட்டவை. டார்வினினுடைய இயற்கை தேர்வு என்ற முடிவின்படி ஓர் உயிரினத்தின் முடிவானது அதன் உயிர் அணுக்கள், பிற உயிரினங்கள், சுற்று சூழல்கள் சார்ந்த விடயம். இத்தகைய சூழலில் பிறவற்றைவிட சிறந்த முறையின் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளும் ஓர் உயிரினமே பிழைத்து உயிர்வாழக்கூடியதாக இருக்கும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். எனவே வலிமை என்ற சொற் பிரயோகத்தை பெண்களுக்கு எதிரான அரசியலுக்குரியது என்ற முடிவுக்கு வர இயலாது. அவ்வாறே யூதர் பிரார்த்தனையின்படி “கடவுளே என்னை ஒரு பெண்ணாக படைக்காததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்” என்று ஆண்களும்; “கடவுளே என்னை ஆண்களின் விருப்பப்படி படைத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன்” எனப் பெண்களும் சொல்வதாலேயே அம்மரபிலிருந்து வந்த பிராய்டு ஒரு ஆணாதிக்க ஆசாமியாகத்தான் இருக்க முடியும் என நினைப்பதும், அவர் கண்டறிந்த ‘உளப்பகுப்பாய்வு உண்மை’, ஆணாதிக்க சிந்தனையெனத் தீர்மானிப்பதும் முறையாகாது. ஆணாதிக்க தொல்காப்பியர் மரபிலிருந்து, தமிழ்ப்பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்க ஒரு கட்டுரை ஆசிரியர் கிடைக்கிறபொழுது, பிராய்டு விடயத்திலும் அது ஏன் சாத்தியமாகாது?

பெண்ணியல் கோட்பாடுகள்

இறுதியாக க.பஞ்சாங்கம் மேலை நாட்டுப் பெண்ணியற் கருத்துகள் அடிப்படையில் பெண்ணுக்கான மொழியை உருவாக்கவேண்டுமென்கிறார். “ஆணாதிக்கம் நிறுவியுள்ள இந்தக் குறியீட்டு அமைப்பு முறையில் இருந்து பெண் வெளியேவர மொழி உலகம் உருவாவதற்கு முன்பு இருந்த இயற்கையான- உண்மையான மூலப்பெண்னாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள இவள் என்ன செய்யவேண்டுமென்ற கேள்வியையும் எழுப்பி அதற்குப் பதில் கூறுவதுபோல “பெண்ணின பாலியலுக்கான சில கோட்பாடுகள் இருக்குமானால் அவைகள் ஆண்களின் மொழிக்கு வெளியேதான் இருக்க முடியும்” என ‘பெண்னெனும் படைப்பு’ நூலிலிருந்து மேற்கோள் காட்டுவதோடு, பெண்களுக்கான மொழியை உருவாக்க ஹெலென் சீக்ஸ் என்கிற மேலை தேயத்து பெண்மணியின் யோசனைகளைப் (பெண்கள் கவிதைப் படைக்கவேண்டுமென்பது அதிலொன்று) பின்பற்றசொல்கிறார். அதேவேளை தமிழ்ச்சூழலுக்குப் பொருந்துபடியான அப்பெண்மொழி அமையவேண்டும் என முடிக்கிறபோது வழக்கம்போல தமிழினத்தின் மீது கட்டுரை ஆசிரியருக்குள்ள உண்மையானப் பற்றுதலை விளங்கிக்கொள்ள முடிகிறது.

(தொடரும்)

 

‘கா•ப்கா’வின் பிராஹா -1

Prague 008பாரீஸ் புறநகர் பகுதியிலுள்ள ‘வொரெயால்’ தமிழ்க் கலாசார சங்கம் என்றதொரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செக் (Czech) நாட்டு தலை நகரம் ‘பிராகு'(Prague)விற்கு மூன்று நாட்கள் பயணமாக சென்றுவந்தேன். பிரான்சுநாட்டில், எல்லா நாடுகளையும் போல தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் சங்கங்கள் வைத்துள்ளனர். உழைப்பு, ஊதியம், பிள்ளைகள் கல்வி என தாயகத் தமிழர்களைப்போலவே வாழ்க்கையை செலுத்துகிற அயலகத் தமிழர்களுக்கு இடைக்கிடை உற்சாகமூட்ட பண்டிகை தினங்களைக் கொண்டாடுதல், உள்ளூர் நகர நிர்வாகங்களின் உதவியுடன் வார இறுதியில் தமிழ்க் கற்பித்தல், இசை, நாட்டிய வகுப்ப்புகளுக்கு ஆவன செய்தல், வருடத்திற்கு ஒரு முறை, பெரும்பாலான அங்கத்தினர்களின் விருப்பத் தேர்வுக்கு உட்பட்ட ஊர்களுக்கு அழைத்துச்செல்லுதல் போன்றவற்றில் சில சங்கங்கள் ஆர்வமுடன் செயல்படுகிறார்கள்.
வொரெயால் பகுதி தமிழ்ச் சங்க அங்கத்தினர்களுடன் பேருந்தில் ஏற்கனவே, ரோம், ஜெனீவா, பைசா, வெனீஸ் என்றெல்லாம் பயணித்த அனுபவம் உண்டு. பின்னர் பேருந்தைத் தவிர்த்து இடையில் சில ஆண்டுகள் வேறுவகைப் போக்குவரத்து சாதனங்களில் சுகம் கண்டாயிற்று. வொரெயால் தமிழ்ச்சங்க தலைவர் இலங்கைவேந்தன் சில நெருக்கடிகளால் நிறம்மாற வேண்டியிருக்கிறதென்கிற குறையத் தவிர்த்து, தமது கடின உழைப்பு காரணமாக பாரீஸ் இந்தியத் தமிழர்களிடை அறிமுகம் பெற்றவர். மார்ச் மாத இறுதியில் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிராகு போகும் திட்டம் இருக்கிறது, நீங்களும் கலந்துகொண்டால் மகிழ்ச்சியாக இருக்குமென்றார். மனதில் அழுக்கின்றி, அவர் உண்மையைத் தொட்டு; உரையாடலைத் தொடர்ந்தபோது, சுவாசத்தின் இடைவெளிகளில் இரண்டு பயணிகள் குறைந்தார்கள் அதனால் அழைத்தார் என்ற நினைப்பினை ஒதுக்கிவிட்டு, சம்மதித்தேன்.

வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்தில் பயணிப்பதில் உள்ள சங்கடங்கள் அச்சுறுத்தின. பிரான்சு நாட்டின் வடகிழக்கில் இருக்கும் எனது நகரமான ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg)நகருக்கும் செக் நாட்டின் தலைநகரான பிராகு நகருக்கும் அதிக தொலைவில்லை; கிட்டத்தத்த 600 கி.மீ. பாரீஸ் செல்ல 500 கி.மீட்டர் ஆகிறது. அதுவும் தவிர பாரீஸிருந்து அவர்கள் செல்லும் பேருந்து பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியைக் கடந்தே போகவேண்டும், அதாவது எனதுப் பிரதேசத்தைத் தொட்டுச் செல்லவேண்டும். ஆக ஸ்ட்ராஸ்பூர்கிலிருந்து பாரீஸ் சென்று பிராகு செல்லும் பயணம் மலையைக்கெல்லி எலியைப் பிடிப்பதற்குச் சமம். ஆறுமனி நேரத்தில் சென்றடையக்கூடிய பயணத்திற்கு பதினெட்டு மணி நேரம் செலவிட்டதை நீங்கள் எப்படி எடுத்துகொள்கிறீர்களோ ஆனால் எனக்கெப்போதும் எலிக்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மலையைக் கெல்லிப்பார்ப்பதில் விருப்பம் அதிகம். அதிலும் கடந்த சில வருடங்களாக எனது தினசரிகள் வாசிப்பு, எழுத்து, இணையம் என்ற சொற்களோடு பிணைந்த வெளியாக இருந்து வருகிறது. மனிதர்களோடு கலப்பதும், கைகோர்ப்பதும், உரையாடுவதும் குறிஞ்சிப்பூவிற்குக் காத்திருக்கும் நிலமைதான். எழுத்தென்கிற காரியம் தனிமையை வலியுறுத்தினாலும்; சலவை செய்த, ஞானம் பூசிய, மேட்டிமைத்தன சொற்கள் அலுப்புறுகிறபோது சராசரி மனிதர்கள், அவர்கள் முகங்கள், கண்கள்; குரல்கள், அவற்றின் ஏற்ற இறக்கங்கள்; குறும்புகள், கலகலப்புகள்; கேட்டறியாத பேச்சுகள், எளிமையான வார்த்தையாடல்கள் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்கியதில் நாராயணன் அவர் சகோதரர் திருநாவுக்கரசு இருவருக்கும் பெரும் பங்குண்டு. சக பயணிகளில் கிருஷ்ணராஜ் என்னை அதிகம் நேசிக்கும் ஒருவர். அவரது தொடர்பு முகநூல் வழியாக சிற்சில வார்த்தை பரிவர்த்தனைகளுடன் இருந்துவந்தது. கூடுதலாக சிறிது நேரம் ஒதுக்கி பேச இப்பயணம் வாய்ப்பை அளித்தது. இராமலிங்கர்மீது தீராக் காதலும் பக்தியும் கொண்டுள்ள இளைஞர் அறிவழகன் ( குறிப்பாக தமிழ் மொழிமீது அவர்வைத்திருக்கும் அளப்பரிய அன்பை மறக்காமல் இங்கே குறிப்பிடவேண்டும். அவர் உரையாடலின் பெரும் பகுதி நமது மொழிக்கு ஏதேனும் செய்யவேண்டுமே என்கிற தொனியில் இருந்தது.), குமார், சங்கர், குரோ என பயணத்திற்கு மகிழ்ச்சியூட்ட பலர் இருந்தனர்.

மே 8 2014

பாரீஸிலிருந்து பேருந்து மே 7ந்தேதி இரவு சுமார் 11.30 மணி அளவில் புறப்பட்டது. இரவு 9.30 அல்லது அதிகபட்சமாக 10 மணிக்கெல்லாம் உறங்கிவிடும் பழக்கம் கொண்டிருந்த எனக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘நேரத்தில் தூங்கத் தவறினால் உனக்கு உறக்கம் வராது’ எனத் தூக்கவாச முனிவரின் சாபத்தை வாங்கிவந்திருக்கிறேன். போததற்கு சில பயணிகள் வேட்டுச்சத்தம் கேட்ட வௌவால்களாக ஆர்ப்பரிக்க, கண்களைத் தொட்ட உறக்கம் இமைகளை எட்டாமலேயே கூடுதலாக அலைக்கழித்தது. பாரீஸிலிருந்து குறைந்தது 1000 கி.மீதூரமாவது பிராகு இருக்கும். ஜெர்மன் வழியாகச் செக் நாட்டிற்குள் புக வேண்டும். மறுநாள் அதாவது மே 8 அன்று பிராகு நகரிலுள்ள ஓட்டலை அடைந்தபோது பிற்பகல் இரண்டு மணி. காலைக்கடன்கள், உணவு எடுத்துக்கொள்ள, இருநூறு கி.மீட்டருக்கு ஒருமுறை பேருந்து ஓட்டுனர்கள் மாறிக்கொள்ள என வாகனம் இடைக்கிடை நிறுத்தப்பட்டது.

கா•ப்கா வின் பிராகு நகரத்தை பிராஹா(Praha) என செக் மொழியில் அழைக்கிறார்கள். செக் நாடு வெளித்தோற்றத்தில் வளர்ந்ததொரு ஐரோப்பிய நாடுபோலவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ள எங்களுக்கு நுழைவு அனுமதி தேவையில்லை. நாங்கள் தங்கிய ஓட்டல் நான்கு நட்சத்திர ஓட்டல் எனச்சொல்லப்பட்டது. IATA அந்த ஓட்டலுக்கு நான்கு நட்சத்திரத் தகுதியை அளிக்க வாய்ப்பில்லை. ஓட்டல் கட்டிடத்தின் வெளி பராமரிப்பு கம்யூனிஸ பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பியத்தின் கடந்தகாலத்தை நினைவூட்டியது. இரவானால் இருளில் பதுங்கிக்கொள்கிறது. 19வது மாடியில் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள். ஓரளவு விசாலமான அறை, சலவைமணம் குறையாத வெண்பனியை தூவியதுபோல விரிப்புகள், ஒருக்களித்து படுத்து கை நீட்டினால் வானத்தைத் தொட்டு நட்சத்திரங்களில் இரண்டொன்றை பறித்துவிடலாம், விழிமூடினால் சட்டென்று துயில்கொள்ள முடியும், சில சில்லறை அசௌகரியங்களை சகித்துக்கொண்டால், இரவை சுகமாக கழிக்க முடியும்.

மதியம் 3 மணிக்கு ஓட்டலைவிட்டு வெளியில் வந்தோம். அறையின் வெப்பத்திற்கு எதிர்பாட்டுபோல சிலுசிலுவென்று எதிர்கொண்ட காற்றைத் தழுவியபடி வீதிகளைக் கடக்கவேண்டியிருந்தது. மனிதர் நடமாட்டத்தை அதிகம் தவிர்த்த தெருக்கள். அடர்ந்த புல்வெளிகள், மரங்கள் இடையே வெளிர் பச்சை அல்லது காவிநிற மூப்படைந்த வீடுகள்; வீட்டு எண்கள் புதிதாகத் தரப்பட்டிருக்கின்றன. பழைய எண்கள் இரத்தசிவப்பு தகட்டில் இன்னமும் பளிச்சென்று மின்னுகின்றன. எதிர்ப்பட்ட இரண்டொரு முகத்திலும் மனிதர்கள் இல்லை. பெண்கள் உட்பட சிறுவர்களிடத்திலுங்கூட சின்னதாய் ஒரு மத்தாப்பு சிரிப்பு ம்..இல்லை. பெண்கள் ஏதோ யுத்த நிழலில் இருப்பவர்கள்போல முகத்தை இறுக்கிக்கொண்டு நடக்கிறார்கள். பிரான்சு நாட்டில் செக் பெண்கள் அழகாய் இருப்பதாக நினைப்பதுண்டு. பிராகு நகரத்தில் அது பொய்யென்று தோன்றியது. தங்கியிருந்த ஓட்டலில் அதற்கான விடையும் கிடைத்தது. உள்ளூர் மனிதர்களிடம் செக் அல்லது ஸ்லாவ் மொழி பேசுகையில் அழகின்றி இருக்கிற பெண் வரவேற்பாளருக்கு பிரெஞ்சில் பேசுகிறபோது ஒரு களை வந்துவிடுகிறது. புறப்படும் நாளன்று, “அதிகம் பிரெஞ்சு பேசிப் பழகிக்கொள், அழகாய் இருப்பாய் என்றேன்.

பிற்பகல் மூன்றரையிலிருந்து நான்கு மணி அளவில் Strasnicka என்கிற இடத்திலிருந்து ஒரு மூன்று அல்லது நான்கு வழித்தடங்களைக் கடந்து ம்யூசியம் என்ற இடத்திற்கு வந்தோம். பிராகு நகரத்தின் புது நகரம் என்ற பகுதியில் அது இருக்கிறது. அங்கிருந்து பார்க்க வேண்டிய இடங்களில் அனேகம் கூப்பிடு தூரத்தில் என்றார்கள். இப்பகுதி பிராஹா நகரத்தின் இதயப்பகுதி. பொதுவாக ஐரோப்பிய நகரங்களுக்கென்று ஓர் சிறப்பு இருக்கிறது. கலை, இலக்கியம், அறிவியல் என எத்துறையை எடுத்துக்கொண்டாலும் புதிய தேடலில் அக்கறைகொண்ட ஆர்வலர்களைக் கொண்டவை அவை. புதிய தேடலில் ஆர்வத்துடன் இயங்கும் இம்மக்கள்தான் தங்கள் பழமையைக் போற்றுவதிலும் பராமரிப்பதிலும் முன் நிற்கிறார்கள். இப்பண்பிற்கு செக் நாடும் அதன் தலைநகரான பிராஹாவும் ஓர் உதாரணம். கோத்திக், மறுமலர்ச்சிக் காலம், பரோக், நவீனம் அவ்வளவும், வெகுகாலம் கம்யூனிஸத்தின் பிடியில் கட்டுண்டு அண்மையில் தான் அவை சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றன என்பதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. முரட்டுக் கணவனிடம் வாழ்க்கைப்பட்ட பெண் விடுதலை பெற்றதுபோல அவை இருந்தன.

நேஷனல் மியூசியமும் வென்ஸ்லஸ் சதுக்கமும் (Wenceslas Square)

Prague 022நேஷனல் ம்யூசியத்திலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தால் மிகப்பெரிய சதுக்கமொன்று வருகிறது. பிராஹா நகரின் முக்கியமான சதுக்கங்களில் ஒன்று என்றார்கள். அதன் தலைமாட்டில் பொஹீமிய வம்சத்தில் வந்த புனித வென்ஸ்லஸ் (St.Wencesles) குதிரையில் ஆரோகனித்திருப்பதுபோன்றதொரு சிலை. தீவிர பக்திமான் ஆனால் குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருப்பதற்கும் அவர் சுயவரலாற்றிர்க்கும் சம்பந்தமில்லை. தந்தை இறந்தவுடன் அம்மாவின் பரமரிப்புக்கு அஞசி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவராம். இந்தப்பாட்டிக்கு மருமகளே எமனாக வந்திருக்கிறாள். கிறித்துவ மத போதனைகளைக் கேட்டுக் கேட்டு, கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வளர்ந்த வென்ஸ்லஸ், ஓர் அமைதி விரும்பி. யுத்தத்தைத் தவிர்க்க எதிரிகளுக்குக் கப்பம் செலுத்தியவர். அதனைச் சகித்துகொள்ளாத அவ்ர் சகோதரனே சதி செய்து, அவர் எழுப்பிய தேவாலயத்திலேயே வைத்து கொலைசெய்கிறான். பின்னர் அவருக்கு புனிதர் பட்டம் கிடைக்கவும் அவனே காரணம் என்கிறார்கள். எல்லாக் காலத்திலும் அதிகாரத்திற்கென்று பிரத்தியேக மூளையுண்டு என்பதை வரலாறு இங்கே மீண்டும் தெரிவிக்கிறது. வென்ஸ்லஸ் சிலையிலிருந்து இருபது அல்லது இருபத்தைந்து மீட்டர் தூரத்தில் இரண்டு கறுப்பு நிற சலவைகல்லினால் ஆன பாளங்கள் (slabs) இருக்கின்றன. மெழுகு திரியைகொளுத்திவைத்துவிட்டு ஓர் இளம்ஜோடி படம்பிடித்துக்கொண்டது. சுற்றிலும் அணைக்கப்படாமல் நிறைய மெழுகுத் திரிகள் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. அருகிற் சென்று பார்த்தேன். செக் மொழியில் எழுதியிருந்தார்கள். இரவு இணைய தளத்தில் தட்டிபார்த்தபோதுதான், சோவியத் யூனியன் ஆக்ரமிப்பின்போது அவ்விளைஞர்கள் இருவரும் உயிர்ர்த் தியாகம் செய்தவர்கள் என விளங்கிக்கொண்டேன். அதில் ஒருவர் தீக்குளித்தவராம். இன்றைக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் குதிப்பதெனில் இச்சதுக்கத்தில்தான் கூடுகிறார்களாம். வெகுகாலம் இச்சதுக்கத்தில் குதிரை வியாபாரமும் நடைபெற்றுள்ளது. Prague 024  Prague 028 Prague 027 Prague 025 Prague 031  Prague 027  Prague 032 Prague 010இச்சதுக்கத்தின் இரு பக்கமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்ரமித்திருக்கின்றன. மிச்சமுள்ள இடங்களில் துரித உணவகங்கள், தாய் மஸாஜ் நிறுவனங்கள் (9.99 யூரோவுக்கு உடம்பைப் பிடித்துவிட தாய்லாந்துபெண்கள்(?) காத்திருக்கிறார்கள்), நாணயம் மாற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்தாலும் இங்கிலாந்தைப்போல யூரோ உபயோகத்தில் இல்லை. க்ரோனா என்கிற கிரௌன் தான் தேசிய நாணயம் ஒரு யூரோவுக்கு 27 கிரௌன். விலை அதிகமாக தெரிகிறது. கிரிஸ்டல் பொருட்கள், வில உயர்ந்த கற்கள் அவற்றில் தயாரான மணி மாலைகள், காதணிகள், கழுத்தணிகள், கைவளைகள். பிராஹாவில் இப்பகுதியிலும் இதனை ஒட்டிய பழைய நகர வீதிகளிலுமே உல்லாசப்பயணிகளையும் உள்ளூர் மக்களையும் சுறுசுறுப்பான வியாபாரத்தையும் பார்க்க முடிகிறது. தேசிய வாக்கியம் ‘Pravda vítězí’ அதாவது வாய்மையே வெல்லும்.
(தொடரும்)

 

 

 

சமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை

-ந. முருகேசபாண்டியன்

(கிருஷ்ண்ப்ப நாயக்கர் குறித்த இக்கட்டுரை சம கால நாவல்கள் என்ற தலைப்பில் ந. முருகேசபாண்டியன் எழுதி தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்தது. க.பஞ்சாங்கம் எழுதி காலசுவடில் வெளிவந்த கட்டுரையை ஏற்கனவே நீங்கள் இதே பகுதியில் வாசித்திருக்கலாம், வாசிக்காத நண்பர்கள், விமர்சனங்கள் என்ற தலைப்பில் வாசிக்கலாம். -நா.கிருஷ்ணா)

Na.krishna -New books3 001

கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (நாவல்)
நாகரத்தினம் கிருஷ்ணா
சந்தியா பதிப்பகம்,
நியுடெக் வைபவ், 53ஆம் தெரு,
அசோக் நகர்,
சென்னை. 83
பக்கங்கள்: 256, விலை: ரூ. 160

பூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பதிவுகள் வரலாறாக உருமாறுகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்த எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ,செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது.செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டிடத் தொகுதி மட்டுமல்ல.அந்தக் கோட்டை யார் வசம் இருகின்றதோ அவரது கையில் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டை முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் கொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது.
வரலாற்றைப் புனைவாக்கும்போது பல்வேறு வரலாறுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபட்ட சாத்தியங்களை முன்வைத்துச் சொல்லப்படும் நிகழ்வுகள் வாசிப்பில் சுவராசியத்தைத் தருகின்றன. ஹரிணி என்ற இளம்பெண் பிரான்சிலிருந்து புதுச்சேரி வந்து, செஞ்சிக் கோட்டை பற்றிய தகவல்களைத் தேடிப் போகின்றாள். பெரியவர் சடகோபன்பிள்ளையிடமிருந்து செஞ்சி பற்றிய வெளியிடப்படாதகிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி கிடைக்கின்றது.அவளது தேடல் துரிதமாகின்றது.மரணக் கிணறு, தங்கப் புதையல், பழி வாங்கக் காத்திருக்கும் முண்டக்கண்ணி அம்மன் என மர்மங்களால் நிறைந்த செஞ்சிக் கோட்டை கவர்ச்சிமிக்கதாகின்றது.
தமிழில் வரலாற்றுப் புனைவு எனில் அழகிய ராஜகுமாரிகள், வீரமான ராஜகுமாரர்கள். அரண்மனைகள், சதியாலோசனைகள் என நீள்வது வழக்கம். நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் வழியே சித்திரிக்கும் செஞ்சியின் கதை மாறுபட்டுள்ளது. படைபலத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம் எப்படியெல்லாம் மனித உடல்களை வேட்டையாடியது என்பது நம்பகத்தன்மையுடன் புனை வாக் கப்பட்டுள்ளது. அதிலும் மதத்தின் பின்புலத்தில் இயங்கும் அரசின் கொடுங்கரம் எல்லாத் திசைகளிலும் நீள்கின்றது. எல்லா மதங்களும் மரணத்தை முன்வைத்துப் பாவ புண்ணியம், நரகம், சொர்க்கம் பற்றிய பயமுறுத்தல்களுடன் அரசதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு உடல்களை வதைத்தலும், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தலும் செய்துள்ளன.
கி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரம் சிதம்பரம் வரை நீள்கிறது.சிதம்பரம் நகரிலுள்ள சிவனின் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமைத் தீட்சிதரான சபேச தீட்சிதர் சகலவிதமான செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார். பேரழகியான சித்ராங்கி தாசியுடன் உறவு எனச் சௌகரியமாக இருகின்றவரின் வாழ்க்கையில் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவிலில் பெருமாள் கோவிலை மறு நிர்மாணம் செய்வதற்காக வர இருக்கிறார் என்ற தகவல் துயரத்தைத் தருகிறது. தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து மன்னரிடம் விண்ணப்பித்துப் பெருமாள் கோவில் கட்டுவதைத் தடுக்க முயல்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தபோது, இருபது தீட்சிதர்கள் ஒவ்வொருவராகக் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே, அன்றைய காலகட்டத்தில் நிலவிய முரண்கள் அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. இயேசு சபை பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் புனைந்துள்ளவை, வாசிப்பில் பதற்றத்தைத் தருகின்றன. நேரில் பார்த்தது போன்ற விவரிப்பு முக்கியமானது.
கடந்த காலம், நிகழ்காலம் எனப் பயணித்த நாவல், இறுதி யில் கி.பி. 2050ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கிறது. ஹரிணியின் மகளான பவானி பிரான்சிலிருந்து செஞ்சிக்கு வருகிறார். அங்கு ஹரிணிக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவங்களுக்குப் பின்னர் மறைந்துள்ள சதிகள் அம்பலமாகின்றன. கிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி அடுப்பில் எரிந்து சாம் பலாகிறது. கோட்டை ஏற்படுத்தும் மர்மம் போலவே செஞ்சிக்கு வந்த ஹரிணிக்கும் ஏற்பட்டது விநோதம்தான்
பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்.

——————————————————-
ந. முருகேசபாண்டியன்- murugesapandian2011@gmail.com
நன்றி தி இந்து தமிழ் நாளிதழ் – February 15, 2014 00:00 IST Updated: February 15, 2014 12:05 IST

 

நண்பர் க.பஞ்சாங்கத்துடன் சில நாட்கள்

கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி நண்பர் பஞ்சாங்கம் பாரீஸ் வந்திருந்தார். ஏப்ரல் பன்னிரண்டு அன்று பாரீஸ் நகரில் உள்ள திருவள்ளுவர் கலைக்கூடம் நடத்திய பத்தாவது ஆண்டுசிழாவில் கலந்துகொண்டு ‘திருக்குறளும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். விழாவில் அவரது பொறுப்பில் தயாரான சங்க மலரையும் வெளியிட்டார். மலருக்கு அரும்பணி ஆற்றிய நண்பர்கள் சீனு தமிழ் மணிக்கும், வெ.சுப.நாயக்கருக்கும் இங்கே நன்றியை நினைவு கூர கடமைப்பட்டிருக்கிறேன். இதுநாள்வரை இங்குள்ள எந்த அமைப்பும் அப்படியொரு செறிவான இலக்கிய தரமிக்க மலரை நான் அறிந்தவரை இதற்கு முன்பு பாரீஸில் வெளியிட்டதில்லை. வருங்காலத்தில் அது சாத்தியமாகலாம்.

நண்பர் பஞ்சாங்கம்  Strasboourgல் விருந்தினராக வந்திருந்தார். இருந்தது சில நாட்களே என்றாலும் இதயத்திற்கு நிறைவைத் தந்த நாட்கள். இங்கிருந்து சுவிஸ் மற்றும் ஜெர்மன் அழைத்து சென்றிருந்தேன். பின்னர் ஏப்ரல் பதினெட்டு அன்று இரயிலில் பாரீஸ் அனுப்பிவைத்தேன். திருவள்ளுவர் கலைக்கூட நண்பர்கள் அவரை 20 அன்று வழி அனுப்பிவைத்தனர். சில ஒளிப்படங்கள் நண்பர்களுக்காக:
P1000915

IMGP7805IMGP7811P1000908P1000909P1000910 IMGP7729

IMGP7795

 

 

 

இலங்கு நூல் செயல் வலர்: க.பஞ்சாங்கம் -3 : பெண்ணியல் கோட்பாடுகள்

சிமொன் தெ பொவ்வார் எழுதிய ‘இரண்டாம் பாலினம்’ 1949ம் ஆண்டே வெளிவந்திருந்தது, எனினும் 1970 ஆண்டிலேதான் பெண்கள் விடுதலைக்கான இயக்கம் பிரான்சு நாட்டில் தொடங்கியது. பிற மேற்கத்திய நாடுகளைப் போன்றே அறிவியலிலும்; பெரும் புரட்சியை நடத்திக்காட்டி ஆண்டவர்களைச் சிரச்சேதம் செய்வித்து இனி நாங்கள் அடிமை இல்லையென வெகுண்டெழுந்த மக்களை அரசியலிலும், மனித வாழ்க்கையை நேர்த்தியாகச் சொல்வதுமட்டுமல்ல அதனை மரபுகளிலிருந்து விடுவிக்கவும் தெரிந்திருக்கவேண்டும் என கலை இலக்கியத்திலும் மெய்ப்பித்து காட்டிய பிரான்சு நாட்டில் கூட பெண்கள் எழுபதுகள்வரை அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்றே இதற்குப் பொருள்கொள்ள வேண்டியிருக்கிறது. பிரான்சுபோன்ற ஒரு வளர்ந்த நாட்டில், தனி மனிதச்சுதந்திரத்தை உயிர் மூச்சாக கொண்டிருக்கிற நாட்டில் எழுபதுகளில் ஆரம்பித்துவைத்த பெண் விடுதலைக்கான இயக்கம் அவர்களின் வாழ்க்கையை புரட்டிப்போட்டிருக்கிறதா என்றால் இல்லை. இருபத்தோராம் நூற்றாண்டிலும்பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது, இன்றும்கூட தங்கள் உரிமைகளை வற்புறுத்த, பாசாங்கு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சமுதாயத்தை தட்டி எழுப்ப சற்று தீவிரமான வழிமுறைகளை சில பெண்ணியக்கங்கள் பின்பற்றுகின்றன. கடந்த அரைநூற்றாண்டாக அவர்கள் கையாண்ட வழிமுறைகள் எவ்வித பலனையும் தர இல்லை, இந்நிலையில் சில பெண்கள் சற்று முகம்சுளிக்கும் வகையில் போராடினால்கூட அதனை நியாயம் என கொள்ளவேண்டியிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் அண்மைக்காலத்து புள்ளிவிவரகணக்குகள் கூட சமூக அமைப்பில் இருபாலினங்களில் வழக்கம்போல பெண்பாலினம் முடங்கிகிடப்பதாகவே தெரிவிக்கின்றன. இச்சூழலில் கல்வியில் பின்தங்கிய, மரபுகளில் ஊறிய, மதம் சாதி கட்டமைப்புகளில் முடங்கிக் கிடக்கிற இந்தியாபோன்ற நாடுகளில் ‘பெண்ணியக்கம்’, ‘பெண்விடுதலை’ போன்ற சொல்லாடல்கள் தரும் புரிதல் குறித்து அதிகம் யோசிக்கவேண்டியிருக்கிறது. ‘இங்கே பத்தினிபெண் என்றால் கணவன் சோரம் போக: அவனைக் கூடையிற் சுமந்தேனும் பரத்தை வீட்டிற்குக் கொண்டுசெல்ல தெரிந்தவள், அவன் கொழுத்து ஊர் மேய்ந்தால் ஊரை எரிக்கக் கடமைப் பட்டவள், அவன் தவறு இழைத்து உயிர்விட்டால், இவளும் உயிர்விட்டு மறுகணம் சொர்க்கம் செல்லும் சூட்சமம் அறிந்தவள். இவர்களின் எச்சங்களாக வாழ்கிற இந்தத் தலைமுறை பெண்களின் நிலமை என்ன? வெகுசன பத்திரிகைகளில் ஆண்கள் குற்றங்களை அடக்கி வாசித்து அல்லது வாசிக்காமலேயே, பெண்கள் குற்றத்தை பெரிது படுத்தி செய்தியாக்குவதையும்; தொலைக்காட்சி தொடர்களில் எருமைமாடுகளைக் குடும்பப்பெண்ணாகச் சித்தரிப்பதையும்; திரைப்படங்களில் பெரிய நடிர்களில் ஆரம்பித்து கதாநாயகியின் விரல் கனம் இல்லாதபையன்கள்வரை அவளிடம் ‘நான் ஆண்பிள்ளை டீ’ என்பதையும் பார்க்கிறோம். ஆகவேதான் பத்தாம்பசலித் தனமான நெறிகளில் குளிர்காய்கிற இந்தியச் சமுதாயத்தில் பெண்ணியக்கோட்பாடுகள் குறித்து பேசுவதும் எழுதுவதும் அவசியமாகிறது.

க.பஞ்சாங்கம் அடிப்படையில் ஒரு மார்க்ஸியவாதி. இயல்பாகவே மார்க்ஸியவாதிகள் பிறரைக்காட்டிலும் விளிம்பு நிலை மக்களிடத்தில் அதிகம் அக்கறைகொண்டவர்கள். விடுதலை, புரட்சி போன்ற சொற்களில் அதிகம் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள். எனவே ‘பெண் விடுதலை’ சார்ந்து பஞ்சாங்கம் எழுதுகிறபோதும், உரையாற்றுகையிலும் நமக்கு வியப்பைத் தரவில்லை. பஞ்சாங்கத்தின் எழுத்தும் சரி, அவர் பேச்சும் சரி ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஓர் ஒற்றை இயக்கமாக, சோர்வின்றி, உரத்து, எவற்றுடனும் எவருடனும் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்பட்டு வந்திருக்கிறதென்பதையும் நாம் அறிவோம். க. பஞ்சாங்கத்தின் ‘நவீன இலக்கிய கோட்பாடுகளுக்கு முன்னுரை எழுதிய ‘பாரதிபுத்திரன்’ என்ற நண்பர் “பஞ்சு துணிவானவர். தன் அறிவுக்கும், உணர்விற்கும் என்றும் நேர்மையானவர்”, என்று கூறி “இனம், மொழி, வர்க்கம், பால் ஆகிய நிலைகளில் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட தமிழினம், தமிழ்மொழி, தலித்துகள், உழைப்பாளர்கள், பெண்கள்’ என்று அவர் உழைப்புத் தளங்களைப் பட்டியலிடுகிறார்.

பெண்கள் சார்ந்து, பெண்ணியம் என்ற பொருள் சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் அதிகம்.பெண்களில் பெண்களுக்காக கவிதையன்றி கதையாடலில் பெண்ணுரிமைக்கான எழுத்தென்று ‘அம்பை’ எழுத்தைசொல்லவேண்டும். வேறு பெண்களிடத்தில் இன்றுவரை அத்தகைய மூர்க்கத்தை கண்டதில்லை. பத்தாம் பசலி மனிதர்களிடையே ‘ரௌத்திரம் பழகத்’ தெரிந்த பெண்கள் ஒரு தேவை. ஆண் படைப்பாளிகளில் பெண்ணுரிமைக்கு தம்து எழுத்தை உபயோகித்தவர் பிரபஞ்சன். அதன்பிறகு க.பஞ்சாக்கத்திடம் அத்தகையதொரு செயல்பாட்டைக் காண்கிறேன். பிரபஞ்சன் பேச்சுக்கும் க.பஞ்சாங்கம் பேச்சுக்கும் அடிப்படையில் வேற்றுமை இருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சனின் வாதங்கள் சமூக அறத்தை அடிப்படையாகக் கொண்டவை. க.பஞ்சாகத்தின் வாதங்கள் அறத்தோடு சாட்சிகளையும் தடயங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.

‘தமிழ் இலக்கியச் சூழலில் பெண்ணிய கோட்பாடுகள்’; பெண்-மொழி-புனைவு’; பெண் நிலை நோக்கு திறனாய்வு; ‘திறனாய்வு – ஆணின் மொழி’; ‘ஹெலென்சீல்கு’ என்பவரைபற்றிய ஏழு கட்டுரைகள்; பெண்ணெனும் படைப்பு – சில மானுடவியல் குறிப்புகள் என்பதன் கீழ் ‘பெண்ணியமும் விஞ்ஞானமும்’, ‘தாய்மையும் பாலியலும்’, ‘வேட்டை ஆடுதலா? சேகரித்தலா?’, ‘காமமும் சுய பிரக்ஞையும்’, ‘கருவுயிர்த்தலும் ஆணாதிக்கமும்’; ‘பெண்களின் தேடல்’; ‘புதிய பெண்ணியக் கோட்பாடு அடிப்படையில் சங்க இலக்கிய பெண்பாற் புலவர்களின் கவிதைகள்’, ‘வேதநாயகம் பிள்ளையின் பெண் நலச் சிந்தனைகள்’, பாரதிதாசனின் தமிழ்ப் பெண்ணியம்’, ‘கு.சின்னப்ப பாரதி படைப்புகளும் பெண்பற்றிய புனைவுகளும்’, ‘பிரபஞ்சனும் பெண்விடுதலையும்’; ஐம்பது ஆண்டுகால விடுதலை இந்தியாவில் பெண்களின் நிலை’, ‘பொருளாதாரப் பின்னணியில் பெண்களின் நிலை; ‘பொருளாதார பின்னணியில் பெண்’, ‘இளம்பெண்களின் சிக்கல்களும் சமூக நடைமுறைகளும்’, ‘பாலியல் வன்முறை’, உழைக்கும் பெண்கள்’, எய்ட்ஸ் தடுப்பு விளம்பரமும் பெண்ணின் அடையாளமும்’, ‘கி.ராவின் பெண்கள்’, என்று அவருடைய கட்டுரைகளில் பெண்களை மையப்பொருளாகக் கொண்டவை எண்ணிக்கையில் கணிசமாக இருக்கின்றன. தெ.பொ.மீயைப் பற்றி பேசும்போதுகூட பெண்ணுலகம் சார்ந்த அவரது வாழ்நெறியைக் கொண்டாடுகிற க.பஞ்சாங்கத்தை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

‘தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக் கோட்பாடுகள்:

‘தமிழ் இலக்கிய சூழலில் பெண்ணியக் கோட்பாடுகள்’ அவருடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூலில் க.பஞ்சாங்கத்தின் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளுள் முதலாவதாக வருகிறது. இக்கட்டுரையிலும் அவரது பிறகட்டுரைகள் போலவே தலைப்புக்கான நோக்கத்தைக் கட்டுரையின் நோக்கமாகத் தெரிவிக்கிறார். “எந்தவொரு கருத்தாக்கத்திற்கும் ‘உலகப்பரப்பு’ என்ற தளமும் உண்டு; தாய்மொழி, தாய்மண் என்ற தேசிய இனத்தளமும் உண்டு (இந்த ‘உலகப்பரப்பு’ என்பது நம்மைப்பொறுத்தவரை மேலைநாடு சார்ந்தது; ஆங்கிலமொழிசார்ந்தது என்பதையும் பதிவு செய்துகொள்ளவேண்டும்) எனவே தமிழ் இலக்கிய சூழலில் சிறப்பாக வெளிப்படும் பெண்ணியப்பார்வைகளை அடையாளம் கண்டு விளக்க முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது”(பக்.47, நவீன இலக்கிய கோட்பாடுகள்). கட்டுரையை பெண்ணியம் தொடர்பான மேலை நாடுகளின் நூல்கள் அவற்றின் தாக்கத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள் துணைகொண்டு எழுதியுள்ளார். அதனைக் காலம் மற்றும் பெண்ணியம் பற்றி தெரிவிக்கும் கருத்தியத்தின் அடிப்படையில் அல்லது அவரே கூறியுள்ளது போன்று மேலை நாட்டுக்கோட்பாடுகளைச் சார்ந்தும், தேசியம், சாதியம் சார்ந்த கோட்பாடுகளைச் சார்ந்தும் பிரித்தறியலாம்.

கட்டுரையின் ஆரம்பத்தில்: “ஓவையார் எழுத்துக்களை ஒரு பெண்ணின் எழுத்தாகத் தனியாகப் பிரித்து அடையாளம் கண்டவன்’ பாரதி என்று மறக்காமல் நினைவூட்டுகிறார். “ஒவையாரைப்போல் கவிதையும் சாஸ்திரமும் செய்யக்கூடிய ஓர் ஆண்மகன் இங்கு பிறந்திருக்கிறானா?” எனப் பாரதி கேட்டதாக வருகிறது. நமக்குப் பதில் சொல்ல ஒன்றுமில்லை, கேட்பவன் ஓர் ஆண்மகன் மட்டுமல்ல, இந்திய தேசத்தின் மிகப்பெரிய கவிஞன், ‘புதுமைப் பெண்’ என்ற திட்பமான சொல்லாடலை கற்பித்தவன், நாட்டின் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர் சுதந்திரத்திற்கும் கவிதை பாடியவன். “ஒவையாரைப்போல ஓர் ஆண்மகன் கவிதை செய்திருக்கிறானா? என்கிற பாரதியின் வினாவை க.பஞ்சாங்கம் சுட்டுகிறபோது அதற்கான நியாயத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. கட்டுரையின் தொடக்கத்தில் பெண்ணியம் உட்பட ‘எந்தவொரு கருத்தாக்கத்திற்கும் ‘உலகப்பரப்பு’, ‘தேசியபரப்பு’ ஒன்றுண்டு, நம்மைப்பொறுத்தவரை உலகப்பரப்பு என்பது ‘மேலை நாடு சார்ந்தது’ ஆங்கிலமொழி சார்ந்தது’ என்பதை நினைவூட்டும் க.பஞ்சாங்கம், இங்கே பாரதியின் குரலைப் பதிவு செய்யும் நோக்கம் “இங்கு மட்டுமல்ல எங்குமே ஒவையைபோல ஒருத்தி அவள் காலத்தில் மட்டுமல்ல இன்றுவரை பிறக்கவில்லை” எனவே எல்லாவற்றிர்க்கும் மேலைநாடுகளை உதாரணம் காட்டவேண்டாம் என்பதாகத்தான் அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மேலை நாட்டு பெண்ணியம் சார்ந்த சிந்தனைகள்:

இக்கட்டுரையில் கிடைக்கிற முதலாவது செய்தி “முனைவர் தேவத்தா முயற்சியில்1986 ஆம் ஆண்டு தெரசா மகளிர் பல்கலைகழகம் மதுரையில் நடத்திய ‘ பெண்கள் படைப்பில் பெண்கள்’ என்ற கருத்தரங்கே” பெண்ண்ணிய திறனாய்விற்குத் தூண்டுகோலாக அமைந்தது என்பதாகும். அக்கருத்தரங்கில் கல்வியாளர்களும், சிவசங்கரி போன்ற எழுத்தாளரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். சிவசங்கரி “எழுத்தை ஆண் எழுத்து பெண் எழுத்து என்று பால் அடிப்படையில் பிரிப்பது தகாது” என்றதை அன்றைய சூழலில் எதார்த்தம் என ஆசிரியர் சொல்கிறார். முனைவர் தேவதத்தா முயற்சியில் தெரஸா பல்கலைகழம் 1992ல் வெளியிட்ட ‘பெண்ணியக் கலைச்சொல் விளக்கக் கையேடு’ தொடங்கி 1997ல் வெளிவந்த ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ என்ற தொகுப்பு நூலுக்கு மாலதி மைத்ரி எழுதிய முன்னுரைவரை அவ்வளவும் பெண்ணியச் சொல்லாடல்களை தமிழில் வளர்த்தெடுக்க காரணமாயிற்று என்கிறார். இரா. பிரேமாவின் பெண்ணியம் ஓர் அறிமுகம் என்ற நூலும் மேலைநாட்டு பெண்ணியச் சிந்தனையை விரிவாக எடுத்துரைத்தது என்ற தகவலும் உண்டு. இருபதாம் நூற்றாண்டு ‘சிந்தனை மரபு’, பிறதுறைகளைபோலவே பெண்ணியல் சிந்தனையிலும் மேலை நாட்டு சிந்தனைமரபின் தாக்கத்தைப் பெற்றுள்ளது என்கிற தமது கூற்றை சிமொன் தெ பொவ்வாரின் ‘இரண்டாம் பாலினம்’ முதலான நூல்களின் துணைகொண்டு உறுதிபடுத்துகிறார். அதுவன்றி “பெண்ணுக்கான மொழியை மட்டுமல்ல பெண்களுக்கான இலக்கிய கொள்கை ( இலக்கிய கொள்கைகளே கூடாது என்ற கருத்தும் உண்டு), பெண்களுக்கான கதையாடல், வடிவம், உத்தி முதலியன அனைத்தும் புதிதாக உருவாக்கப்படவேண்டும் என்ற புதிய சிந்தனை தமிழ்சூழலில் பரவியதற்கு, ரெமன் செல்டனின் “பெண்ணியல் திறனாய்வு” கட்டுரை -(பெண்ணியம் சார்ந்த இலக்கிய கோட்பாடுகள் உயிரியல், அனுபவம், மொழி, உளநெறி, சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்தவை) – ஒரு முக்கிய காரணம் என்கிறார். கோவை ஞானி நடத்திய ‘நிகழ்’ இதழில் இதன் மொழி பெயர்ப்பு வந்திருக்கிறது என்பது கூடுதல் தகவல். தமது ‘பெண்ணெனும் படைப்பு’ நூலிலும் இக்கட்டுரை இடம் பெற்றிருக்கிறதென்கிற தகவலையும் ஆசிரியர் தருகிறார்.

இந்திய தேசியம் சார்ந்த பெண்ணியல் சிந்தனைகள்:

மேலை நாட்டு பெண்ணிய இலக்கிய கோட்பாடுகள் பரவிய அதே காலத்தில் தேசிய உணர்வின் அடிப்படையில் இந்துமத சீர்திருத்தப்பணியில் ஈடுபட்டவர்கள் பெண்களுக்கு ஆதரவாகச் சட்டடங்கள் இயற்ற காரணமாகிறார்கள். “இந்திய தேசியப் போராட்டத்தை ஒட்டி எழுந்த பல்வேறு விழிப்புணர்வோடு கூடிய புரிதலின் ஒரு பகுதியாக” அதனைக் கண்ணுறும் க. பஞ்சாங்கம், இந்திய சுதந்திரத்திற்கு முன்னும் (இங்கேயும் மேற்கத்தியர்கள்?) அதன் பின்னும் இந்து மத கட்டமைப்பில் உருவான ‘பெண்ணை’ விடுவிக்க ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புகளும் பிறரும் முயன்றதன் விளைவாக “”பாறையாய் இறுக்கமுற்றுக்கிடந்த இந்திய ஆண்-பெண் உறவு முறை நெகிழத் தொடங்கியது”(பக்.50-ந.இ.கோ) என்கிறார். மாறாக அவர்கள் முயற்சியும், உருவான சட்டங்களும் பெண்ணுரிமைக்கு ஆதரவான இந்தியக்குரலாகப் பின்னர் வந்த திறனாய்வாளர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டனவென்பதை பரிமளம் என்பவரின் ‘இந்துப் பெண்ணியம் (1995) என்ற நூலூடாகவும், கி. இராசா என்பவரின் இந்தியப் பெண்ணியம் (1997 என்ற நூலூடாவும் நிறுவுகிறார்.

கி.இராசா “குடும்பம் என்ற அமைப்பை உருவாக்குவதிலும் வளர்ப்பதிலும் அதைக் காத்து அடுத்த தலைமுறைக்குத் தருவதிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமபங்குண்டு . இருவருமே தங்கள் கடமைகளை உணர்ந்து குடும்பம் என்ற நிறுவனத்தில் பணியாற்றுதல் வேண்டும்” என்கிற போது அதற்கு பதிலளிக்கும் விதமாக “குடும்பத்தில், மதத்தில், கல்வியில், அரசியலில், கலை இலக்கியத்தில், பொருளாதார உறவில் பெண்ணின் நிலை என்ன? அங்கெல்லாம் அவள் எவ்வாறு இரண்டாதரக் குடிமகளாக நடத்தப்படுகிறாள்? அதற்கான மூலகாரணம் என்ன? முதலிய கேள்விகளைக் கேட்காமல் அவற்றிர்க்கப்பால் பொறுமை காத்து, குடும்பத்தை நிலை நிறுத்தவேண்டும் ; தேசத்தை காக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் பார்வையாக இருக்கிறது. இத்தகைய இந்தியப் பெண்ணியம் பேசுகிறவர்கள்தங்களுக்குள் வினைபுரியும் ஆண் நலம் சார்ந்த கருத்துக்களீல் இருந்து விடுபடமுடியாத தன்னிலையை புரிந்துகொள்ளும் சக்தியின்றி மேலை நாட்டு பெண்ணியப்பார்வைகளைத் தங்களுக்கு முற்றும் அந்நியமானவை என்பதுபோலவும் அவைகள் அற்பத்தனமானவை என்பதுபோலவும் புனைந்துகொண்டு, நமக்கான இந்தியப் பெண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தவும் முயலுகின்றனர்.” (பக்.51 ந.இ.கோ) எனக் கண்டிக்கிறார். க.பஞ்சாங்கத்தை பொறுத்தவரை இந்திய தேசியம் சார்ந்த பெண்ணியம் மிதவாத பெண்ணியம், மேலை நாட்டுபெண்ணியக்கூறுகள் சிலவற்றை எதிர்க்கக்கூடிய சிந்தனை. அது மாத்திரமல்ல பரிமளம் ‘இந்துப்பெண்ணியம்’ என்ற பார்வையில் தி.ஜா நாவலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதில் க.பஞ்சாங்கத்திற்கு உடன்பாடில்லை. தி.ஜாவின் பெண்ணிய விடுதலை குறித்தபார்வையை ‘இந்தியப் பெண்ணியப் பார்வை’ என்பதற்குள்ளேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்.

தமிழ் மருமலர்ச்சி கால பெண்ணியல் சிந்தனைகள்:

பாரதியும், பாரதிதாசனும் தமிழ் மறுமலர்ச்சிகால பெண்ணியல் சிந்தனைக்கு காரணமாகிறார்கள். இவர்களின் கவிதைகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகளை (“நாணமும் அச்சமும் நாய்களுக்கு வேண்டுமாம்”, (பாரதியார்), ” அச்சமும் நாணமும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ் நாட்டின் கண்கள்”, (பாரதிதாசன்)) முன் வைக்கும் கட்டுரை ஆசிரியர், இந்திய தேசிய பெண்ணியல் சிந்தனைகளைப்போலவே இவர்கள் இருவரின் பெண்ணியல் சிந்தனைகள் தமிழ், தமிழ் தேசிய நலன் சார்ந்தவை, என்கிறார்.

தலித் பெண்ணியல் சிந்தனைகள்:

அம்பேத்கார் நூற்றாண்டின்போது எழுந்த தலித்திய சிந்தனை, அதனை ஒட்டிய தலித் பெண்ணுரிமை பற்றி பேசுகிறார். பொதுவாகவே ஒடுக்கப்பட்ட இனத்தின்மீது தனி கரிசனத்துடன் வினையாற்றுகிற க.பஞ்சாங்கம், இங்கே பெண்கள் தலித்தாகவும் அடையாளம் பெறுகிறபோது பிரச்சினையில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவரின் கருத்தின்படி “இந்திய சமூகத்தில் தலித்துகள் என்ற கட்டுமானத்தில் முழுவதும் வினையாற்றியிருப்பது சமூகம். ஆனால் பெண்கள் என்ற கட்டுமானத்தில் சமூகத்தோடு இயற்கையின் பங்களிப்பும் இடம் பெற்றுள்ளது. இருவரையும் ஒடுக்கிய ஆதிக்க சமூகத்தின் செயல்பாட்டுத் தந்திரம் இரண்டிலுமே ஒன்றுபோலவேதான் அமைந்துள்ளது; பொருள் ஆதாரத்தைப் பறிப்பது; வேலை பிரிவினை அமைப்பது; நடமாடும் வெளியை வரையறுப்பது; மொழியைப்பிடுங்குவது… (பக்கம் 53 ந.இ.கோ). ஆசிரியருக்கு, தலித் ஆணைக்காட்டிலும் தலித் பெண் கூடுதலாக ஒடுக்கபடுகிறாள். ஒரு தலித் பெண் இஅரண்டு முறை ஒடுக்கப்படுகிறாள் என்ற கருத்து கவனத்திற்கொள்ளப்படவேண்டியது. ‘தலித்’ என்ற அடையாளத்தினால் பெறும் அடக்குமுறை .ஒன்று, மற்றது பெண் என்பதால் கிடைப்பது. ஆக ஒரு தலித் பெண்ணுக்கான பெண்ணுரிமை, பொத்தாம் பொதுவானதல்ல, சாதிரீதியாகவும் அணுகவேண்டும் என்ற அவரது கருத்தை மறுப்பதற்கில்லை.

(தொடரும்)

 

 

 

நண்பர் க. பஞ்சாங்கம் பிரான்சு வருகை

சிறந்த திறனாய்வாளரும், எழுத்தாளரும், கவி ஞருமான முனைவர்.க பஞ்சாங்கம் எனது அழைப்பை ஏற்று பிரான்சுக்கு வருகிறார். பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் தமது பத்தாவது ஆண்டு விழாவை திருவள்ளுவர் விழாவாக கொண்டாடும் நிகழ்வில் – (ஏப்ரல் 12) சிறப்புரை ஆற்றவிருக்கிறார். தலைப்பு: “திருக்குறளும் தமிழ் மறுமலர்ச்சியும்”. நண்பர் ஏப்ரல் 11லிருந்து 22 வரை பிரான்சில் இருக்கிறார். பாரீஸில் அநேகமாக ஏப்ரல் 13 அல்லது 14வரை தங்கிவிட்டு ஸ்ட்ராஸ்பூர் வர இருக்கிறார் ஐந்து அல்லது ஆறு நாட்கள் இருந்தபின்பு பாரீஸ் வந்து அங்கிருந்து 22ந்தேதி இந்தியா திரும்பத் திட்டம். இலக்கிய நண்பர்கள் விரும்பினால் பாரீஸிலோ அல்லது ஸ்ட்ராஸ்பூரிலோ வாய்க்கும் நேரத்தை பொறுத்து அவரைச் சந்திக்கலாம். இது ஒரு குறுகிய பயணத் திட்டம் என்பதால் நண்பர்கள் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளசொல்லி வற்புறுத்தவேண்டாம். பன்னிரண்டாம் தேதி நிகழ்வு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முனைவர் க. பஞ்சாங்கம் பற்றிய ஒரு காணொளி:

தொடர்புகட்கு.
நா.கிருஷ்ணா: 07 63 22 15 64

———————————————————

“பிரான்சு திருவள்ளுவர் கலைக்கூடம் ஏப்ரல் 12 பிற்பகல் 2 மணி அளவில் பாரீஸில் (Salle des Fêtes, Avenue du Générale De Gaulle, 93360 -Montmagny) ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி விபரம்:

Lay - 003

மொழிவது சுகம் மார்ச் 2014

வணக்கம் நண்பர்களே!

ஜனவரி மாதம் 12ந்தேதி இந்தியா சென்றது. கிட்டதத்த ஒன்றரை மாதம் இந்தியாவில் இருக்க நேர்ந்தது, கைவசம் மடி கணினியை கொண்டு சென்றிருந்தும் பல பிரச்சினகள். அதிகம் உபயோகிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பழுதுபார்த்து இணைப்பை கொடுக்கவே பத்து நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டனர். புதுச்சேரி வீட்டில் சில சில்லறை வேலைகள் இருந்தன. ஒப்பந்தப்படி மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிற ‘அம்பை சிறுகதைகளில் ‘அடவி’ கதையை முடித்தாக வேண்டும். 17ந்தேதி புத்தக கண்காட்சியில் லெ கிளேசியோவின் ‘குற்ற விசாரணை’ நாவல் வெளியீடு நடைபெற்றது. அன்றைக்கு காலச்சுவடு பதிப்பகத்தின் மூன்று நூல்களை வெளியிட்டார்கள். அதில் ‘குற்றவிசாரணையும்’ ஒன்று. பிரபஞ்சன் வெளியிடுவதாக இருந்தது. திடீரென்று ஏற்பட்ட அவரது உடல் நலமின்மை காரணமாக நண்பர் பஞ்சாங்கத்தை வெளியிடக் கேட்டுக்கொண்டேன், அவரும் எவ்வித மறுப்புமின்றி சம்மதித்தார். நிகழ்வன்று பல நண்பர்களை சந்திக்க முடிந்தது. பி.எ. கிருஷ்ணன், இரா.முருகன், சுகிர்த ராணி, பேராசிரியர் நாச்சிமுத்து. ஆகியோரை குறிப்பிட்டு சொல்லவேண்டும். நிகழ்ச்சிக்கு வந்திருந்த கவிஞர் தமிழ்நதியுடன் பேசமுடியாதது ஒரு குறை. பிறகு 20, 21, 22 கோவையில் தாயகம் கடந்த தமிழ் நிகழ்வு. அது பற்றி தனியாகவே ஒரு கட்டுரையை இப்பகுதியில் எழுதியிருந்தேன். ஜனவரி 23ந்தேதி நண்பர் நாயக்கரின் கல்லூரியில் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் பற்றிய ஓர் உரையை ஏற்பாடு செய்திருந்தார். துறைத் தலைவர் திரு டானியலுக்கும், நாயக்கருக்கும் நன்றிசொல்லவேண்டும். இதற்கிடையில் கொஞ்சம் ‘அடவி’ சிறுகதை மொழிபெயர்ப்பை முடிக்க கால அவகாசம் கேட்டிருந்தேன்.

பிப்ரவரி 1 நண்பர் க. பஞ்சாங்கத்தின் ‘அழுததும் சிரித்ததும்’ கட்டுரை தொகுப்பு வெளியீட்டுவிழாவை ஏற்பாடு செய்திருந்தோம். கோவையிலிருந்து சிறப்பு சொற்பழிவாற்ற க.பஞ்சாங்கம் படைப்புகளின் முதல் வாசகரும், அவருடைய இனிய நண்பரும், கோவை அரசு கலைகல்லூரியின் பேராசிரியருமான முனைவர் துரை வந்திருந்தார். விழா சிறப்பாக நடந்தது. பல்கலை கழக அளவில் முனைவர் க.பஞ்சாங்கம் படைப்புகள் பற்றிய ஆய்வரங்கம் ஒன்றை கட்டாயம் நடத்தவேண்டும். பிப்ரவரி மாதம் நான்காம் தேதி திருவாரூர் மத்திய பல்கலை கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் நாச்சிமுத்து, தங்கள் மாணவர்களுடன் ஓர் கலந்துரையாடலை, திடீரென்று ஏற்பாடு செய்திருந்தார். சீனு தமிழ்மணியை அழைத்துக்கொண்டு திருவாரூர் சென்றேன். தமிழவன், க.பஞ்சாங்கம் போல நாச்சிமுத்துவும் நவீன தமிழ் இலக்கியத்தில் அக்கறைகொண்டு இயங்குபவர். ஏற்கனவே புது தில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலை கழகத்தில் மொழிபெயர்ப்பு மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்து அறிமுகமாகி இருந்தார்.
பிப்ரவரி 7 ந்தேதி அமெரிக்காவிலிருந்து வந்த மூத்த மகள் குடும்பத்தை வரவேற்க சென்னை விமான நிலயத்திற்கு சென்றிருந்தோம், அங்கிருந்து நேராக மதுரை, எங்கள் சம்பந்தி வீட்டிற்கு. மறு நாள் மதுரை கல்லூரி ஒன்றில் வெ. இறையன்பு நூல்கள் பற்றிய ஆய்வரங்கம் இருக்கிறது, வாங்களேன் பேசிக்கொண்டிருப்போம் என நண்பர் ந. முருகேசபாண்டியன் அழைத்திருந்தார். வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம் மதிய உணவை கல்லூரியிலேயே முடித்துக்கொண்டோம். வெ. இறையன்புவிடம் அறிமுகமும் செய்துவைத்தார்.  மூத்த கவிஞரான கலாப்பிரியாவை அங்கே சந்திக்க நேர்ந்தது மற்றொரு வரம். இளைஞரும் கவிஞருமான ஆத்மார்த்தியையும் சந்தித்தேன். அவருடைய கவிதை நூல் ஒன்றை என்னிடம் வழங்கினார். மதுரையிலிருந்து ஒரு நாள் எங்கள் சம்பந்தியின் பூர்வீக ஊரான வத்திராயிருப்புக்கு சென்றுவந்தோம், பரமக்குடி அருகே இருக்கிறது. அதற்கடுத்த நாள் எங்கள் மருகமனின் சகோதர் பெங்களூருக்குத் தனது சகோதரர் குடும்பத்தை அழைத்திருந்தார். எங்களையும் அவர்களுடன் வரச்சொல்லி வற்புறுத்தினார். ஆக எல்லோருமாக பெங்களூர் சென்றோம். மார்த்தஹல்லியில் இரண்டு நாள் இருந்தோம். நண்பர்கள் தமிழவனையும், பாவண்ணனையும் வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம் என நினைத்தேன். பெங்களூர் பயணம் திட்டமிடல் இல்லை. தொலைபேசியில் இரண்டொருமுறை தொடர்புகொண்டும் அவர்களை பிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு துணைவியுடன் புதுச்சேரி வந்து சேர்ந்தேன்.

பிப்ரவரியில் (16) மூத்த எழுத்தாளரும், சிறந்த விமசகருமான திரு வே.சபாநாயகம் அவர்களின் 80 வது அகவையை முன்னிட்டு அவரது முன்னாள் மாணாக்கர்களும், நண்பர்களும், இலக்கிய அன்பர்களும் ஒரு பெருவிழாவை விருத்தாசலத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள், பெற்றோர்களைச் சுற்றினால் உலகையை சுற்றிவந்ததுபோல எனச்சொல்லபடுகிற நமது புராணக் கதைக்கு ஒப்ப எனக்கு அந்நிகழ்ச்சி உதவியது எனலாம். என்னை அடையாளம் காட்டியவர்களில் வே.சபாநாயகம் ஒருவர். ஒவ்வொரு முறையும் இந்தியா செல்லும்போதெல்லாம் அவரை காணவேண்டும் என நினைப்பேன். தொலைபேசியில் அவ்வப்போது உரையாடி இருக்கிறேன். மென்மையான குரல், வயது குரலுக்கு ஒரு மிருதுத் தன்மையையும் ஏற்படுத்தியிருந்தது. ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டுக்காக கோவை செல்லவேண்டியிருந்தது உண்மைதான். எனினும் திரு வே.சபாநாயகம் அவர்களின் அகவை நிகழ்வு எனது இந்தியப் பயண நாட்களில் அமைந்தது எந்த திடமிடலாலும் நேர்ந்ததல்ல. ஒன்றை அல்லது ஒருவர் மேல் உண்மையாக அன்பு வைக்கிறபோது இதுபோன்ற அதிசயங்கள் நிகழும் போலும். தமிழ் நாட்டில் முக்கிய எழுதுதாளர்கள் அவ்வளவு பேரையும் சந்தித்திருக்கிறார், அவர்களோடு சடங்காக அல்ல சரிசமதையாக உட்கார்ந்து உரையாடி இருக்கிறார், உண்டு மகிழ்ந்திருக்கிறார். அதனால் தான்  80வது அகவை நிகழ்ச்சியில் என்னையும் மேடையேற்றி அவர் அருகில் அமர்த்திக்கொண்ட அக்கணத்தை நமது புராண கதையோடு ஒப்பிட்டேன். அன்றலர்ந்த தாமரைபோல என்று ஓர் உவமை சொல்வார்கள் அப்படியொரு முகம். மாணவர்கள், நண்பர்கள், உறவினர் இவர்களுடன் அவர் எப்படி நடந்துகொண்டிருப்பார் என்பதற்கு அன்று திரண்டிருந்த கூட்டமே சாட்சி. கவிஞர் பழமலை தலைமையில் ஒரு பெரிய குழு விழாவை மிகச்சிறப்பாக முன்னின்று நடத்தினார்கள். நாயக்கர், சீனு.தமிழ்மணி மூவருமாக சென்றிருந்தோம். அன்பிற்குரிய குறிஞ்சிவேலன், திரு. பி.ச. குப்புசாமி ஆகியோரை சந்தித்தேன். கண்மணி குணசேகரனை சந்திக்க நேர்ந்ததும் மகிழ்ச்சியை அளித்தது. கைகளைப் பற்றிக்கொண்டு முகத்தில் பரவசத்தை ஏற்றியவராய் ‘அண்ணே அண்ணே’ என்று அழைத்தபோது மயங்கித்தான் போனேன். ‘ பி.சுசீலா வின் ‘அத்தான்.. அத்தான்..’ கூட அதனை நேர் செய்ய முடியாது. பிப்ரவரி 21 மதுரையிலிருந்து எங்கள் மகளும் மருமகனும் புதுச்சேரி வந்திருந்தார்கள். மூண்று நாட்கள் தங்கிதியிருந்தார்கள், சென்னையில் அவர்கள் வாங்கியிருந்த ஓர் அப்பார்மெண்ட்டிற்கு சின்னதாக சடங்கு செய்துவிட்டு வந்தோம். பிறகு 27ந்தேதி அமெரிக்கா புறப்பட்டுபோன பெண்ணிற்கு வழி அனுப்புதல். 28ந்தேதி குற்ற விசாரணை நாவலுக்கும் நண்பர் நாயக்கரின் ‘அப்பாவின் துப்பாக்கி’ நாவலுக்கு புதுவையில் ஓர் அறிமுகவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. காலச்சுவடு கண்ணன், கவிஞர் சுகுமாரன், பா. ஜெயப்பிரகாசம், க. பஞ்சாங்கம் கலந்துகொள்ள நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.

nayakar

மார்ச் 3ந்தேதி பிரான்சுக்கு வந்த நாளிலிருந்து, தொழில் சம்பந்த பிரச்சினைகள், அம்பையின் ‘பிரசுரிக்கப் படாத கைப்பிரதியை’ மார்ச் 15க்குள் அனுப்ப வேண்டியதை மார்ச் 25 அன்றுதான் அனுப்பிவைத்தேன். பிரெஞ்சு இணையதளத்தை இரண்டு மாதங்களாக கவனிக்காமல் இருக்கிறேன், பஞ்சாங்கத்தைப் பற்றிய தொடரில் இப்போது கவனம். இடையிடையே முடிக்க வேண்டிய கடை கணக்கு என சொல்ல பிரச்சினைகளை சொல்ல்கொண்டேபோகலாம். தீர்வாகாது, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் கொடுத்திருந்தால் கூடுதலாக உழைக்கலாம்!

நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்ட படங்களை எனது புகைப்படகருவிலிருந்து எடுத்துப்போடுவதில் தற்போது சில சிக்கல்கள் இருக்கின்றன. தீர்ந்ததும் எடுத்துப்போடுகிறேன்.
———————————

 

 

தாயகம் கடந்த தமிழ் ஜனவரி 20,21,22: ஒரு நீங்காத நினைவு

 

DSC_0250

கடந்த ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்டு மாதமாக இருக்கும், நண்பர் மாலனிடமிருந்து கடிதம் வந்திருந்தது. கோவையில் நடைபெறவுள்ள ‘தாயகம் கடந்த தமிழ்’ மாநாட்டில் கலந்து கொள்ள இயலுமா எனக்கேட்டிருந்தார். என்ன பதில் சொல்வேன் எதிர்பார்ப்பீர்களோ அப்பதிலை மிக்க மகிழ்ச்சியுடன் எழுதினேன். கரும்பு தின்ன கூலியா என்பார்கள். ‘கோவை தமிழ் பண்பாட்டுமையம்’ கருப்புத்தோட்டத்தையும் கொடுத்து கருவூலத்தையும் திறந்துவைத்திருந்தார்கள். உயிர் உள்ளவரை மறக்கவொண்ணாத கனிவான விருந்தோம்பல்

கோவ தமிழ்பண்பாட்டு மையம் (http://www.centerfortamilculture.com):

கோவையில் தமிழ்ப்பண்பாட்டு மையம் என்றால் வியக்க என்ன இருக்கிறது? வள்ளுவன் காலத்தில் ‘திருவேறு, தெள்ளியராதல் வேறு” ஆக இருந்திருக்கலாம் ஆனால் அது உண்மையல்ல என்பதுபோல மையத்தின் புரவலர் மருத்துவர் நல்ல பழனிச்சாமியும் மருத்துவர் திருமதி பழனிச்சாமியும் மாநாடு நடைபெற்ற நாட்களில் ஒரு பெரிய மாநாட்டிற்கு முதுகெலும்பாக இருந்துவிட்டு எவ்வித ஆரவாரமுமின்றி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களாகக்  கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மக்கள் வரிப்பணத்தில் மகேசன்களாக வலம் வருகிற தமிழனத் தலைவர்களுக்கு மத்தியில் இத்தம்பதிகள் விதிவிலக்கு.

கோவை மருத்துவ மையத்தின் தலைவரும்  டாக்டர் என்.ஜி.பி கல்விநிறுனங்களின் தலைவருமான  மருத்துவர் நல்ல பழனிசாபி அவர்கள் ‘தமிழின் வளம் தமிழர் நலம்’ எனும் இலக்கோடு கடந்த ஆண்டு தொடங்கிய தொண்டு நிறுவனம் ‘தமிழ் பண்பாண்பாட்டு மையம்’:  நிறுவனம் தமிழ் இலக்கியம், தமிழறிஞர்கள் என்ற கருத்தியத்தின் அடிப்படையில் இயங்கிவருகிறது அறக்கட்டளை உறுப்பினர்களாகவும் டாக்டர் நல்ல பழனிச்சாமிக்கு வழிநடத்துகிறவர்களாக கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியமும், முனைவர் ப.க. பொன்னுசாமி அவர்களும் இருக்கிறார்கள். இம்மூவர் பேராதரவுடனும் திரு.மாலன் ஏற்பாடு செய்திருந்ததே ‘தாயகம் கடந்த தமிழ்’ கருத்தரங்கு. அன்பிற்குரிய ரெ.கா. ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தது கூடுதல் மகிழ்ச்சியை அளித்திருந்தது.

19ந்தேதியே சென்னை வந்துவிட்டேன். நண்பர்  கண்ணன், அண்மையில் காலச்சுவடு இதழோடு தொடர்புடைய படைப்பாளிகள் பெற்றிருந்த பரிசுகளுக்காக அவர்களைப் பாராட்டும் வகையில் ஒரு சிறிய விருந்தொன்றைக்கொடுத்தார். அதில் கலந்துகொண்டு சென்னையிலேயே தங்க வேண்டியதாகிவிட்டது. பிரான்சு நாட்டிலிருந்து வருவதற்கு முன்பாக நண்பர் பஞ்சாங்கத்திடம் கோயம்புத்தூர் வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவரும் சம்மதித்திருந்தார். 20ம் தேதி காலையில் நண்பர் க.பஞ்சாங்கம் தனது மகன் வீட்டிலிருந்து சொந்த வாகனத்தில் வந்திருந்தார். அவருடனே விமான நிலையத்திற்கு சென்றேன். மாநாட்டில் கலந்துகொள்ளவிருந்த திருவாளர்கள் எஸ்.பொ., சேரன், பெருந்தேவி, மலேசியாவைச்சேர்ந்த டாக்டர் கிருஷ்ணன் மணியன், முனைவர் சீதாலட்சுமி  ஆகியோரைக் காணமுடிந்தது. நண்பர் பஞ்சு, எஸ்.பொ. ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அப்பக்கமாகச் சென்ற ஒருவர், காலடியில் பாருங்கள் கண்ணாடி கிடக்கிறது என்றார். குனிந்து பார்த்தேன். எனது மூக்குக் கண்ணாடி இரண்டாக கிடந்தது, வலதுபக்க கண்ணாடி சில்லும் கழண்டுக்கிடந்தது. பிரச்சினை புரிந்தகணம் சோர்வு தட்டியது. கோயம்புத்தூர் சென்ற உடனேயே ஏதேனும் செய்தாக வேண்டும் என நினைத்தேன். நண்பர் பஞ்சும் இது பெரிய பிரச்சினை அல்ல கோயம்புத்தூரில் சரி செய்துவிடலாம் என்றார். அவர் பேச்சு தெம்பினை அளித்தபோதிலும் உற்சாகத்தை இழந்திருந்தேன். கோயம்புத்தூர் விமானத்தில் ஏறியதும் நண்பர் பஞ்சுவும் நானும் எங்கள் இருக்கையில் அமர்ந்தபோது பக்கத்து இருக்கையில் மலேசியாவிலிருந்து வந்திருந்த டாக்டர் கிருஷ்ணன் மணியன். “இலங்கையில் மணியனுடன் தங்கியிருந்தேன் இரவெல்லாம் சிரிந்து வயிறு புண்ணாகிவிட்டது”, என்றார் பஞ்சு. அவர் கூறியதைப்போலவே அடுத்தடுத்து டாக்டர் கிருஷ்ணன் மணியன் கூறிய சம்பவங்களைக் கேட்டுக்கேட்டு அப்படி சிரித்தோம்.  உடைந்த மூக்குக் கண்ணாடியை எப்படிச் சரி செய்யப்போகிறோம் என்றிருந்த கவலைகளையெல்லாம், மணியன் பேச்சினால் காணாமற் போயிருந்தன.

உரியநேரத்தில் கோவைக்கு வந்துவிட்டோம். விமானநிலையத்திற்கு டாக்டர் நல்ல பழனிச்சாமி, சிற்பி, பொன்னுசாமி மூவருமே வந்திருந்தது எதிபாராத இன்ப அதிர்ச்சி. கவிஞர் சிற்பியை முதன் முதலாகச் சந்திக்கிறேன்.  திரு பொன்னுசாமி ஒழுங்குகளுக்கு பழகிக்கொண்டிருக்கவேண்டும், சிரிப்பதாகட்டும், கை குலுக்குவதாகட்டும் உரையாடுவதிலாகட்டும் கச்சிதமும் ஒழுங்கும் கைகோர்க்கின்றன. சிற்பி வேறு மாதிரியான மனிதர் முதல் நாள் சந்திப்பிலேயே ஏதோ வெகு நாட்களாக நம்மை தெரிந்து வைத்திருப்பபவர்போல கைகுலுக்கலில் ஒரு நெருக்கம்மும் அக்கறையும் இருந்தது. முகத்தில் நகைக்கடைவெள்ளிபோல வசீகரமான ஒரு சிரிப்பு. முகத்துடன் சிரிப்பா, சிரிப்புடன் முகமா? என்பதான குழப்பம் நமக்கு வருகிறது. பசி வேளையிலும்,  உண்டுமுடித்து பிறருடன் அவர் உரையாடுகிறபோதும் கவனித்தேன். நிறைகுடத்தில் நீர் தளும்பி சிந்துவதுபோல சிரிப்பை சிந்திக்கொண்டிருக்கும் முகம். கருத்தரங்கு முடித்து புதுவை திரும்பி நான்கைந்து நாட்கள் ஆனபிறகு ஒரு நாள் தொலைபேசியில் அவரிடம் பேசினேன், அப்போதும் சிரிப்புடன்கூடிய  அதே முகம் மறு முனையில். கோயம்புத்தூரில் இருந்த மூன்று நாட்களும் மறக்கமுடியாத இன்னொருவர் ஓர் இளைஞர். நண்பர் மாலன் மின் அஞ்சலில் அவரைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். தொலைபேசியில் முதன் முறையாக தொடர்புகொண்டேன். கோயம்புத்தூர்காரர்போலத்தான் பேசினார்( அவர் கோயம்புத்தூர்காரர் இல்லை என்பதை பின்னர் புரிந்துகொண்டேன்).  பயண ஏற்பாடுகள், பிற தகவல்களுக்கென தொடர்பிலிருந்த கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர்தான் அந்த இளைஞர். சுறுசுறுப்பானவர், பெயர் மணிகண்டன். அவர் பேச பொழுதெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கலாம். கருந்தரங்கு ஏற்பாடுகளுக்கு முன்பாக, கருத்தரங்கு முடிந்தபின்னர் சற்று கணயர்ந்திருக்கலாம். விழா நாட்களில் அவர் உறங்கியிருக்க வாய்ப்பே இல்லை. கருத்தரங்கின் வெற்றியில் மணிகண்டனுக்கும் பெரும்பங்குண்டு.

ஓட்டலில் எங்கள் அறைக்கு வந்து சிறிது ஓய்வெடுத்தபிறகு மணிகண்டன் நண்பர்களிடம் எனது மூக்குக் கண்ணாடியை பழுதுபார்க்கும் பொறுப்பை அளித்தேன். அடுத்த அரைமணி நேரத்தில் சரிசெய்யப்பட்ட கண்ணாடியுடன் மணிகண்டன் நண்பர்கள் வந்தார்கள். மாலை நான்கு மணிக்கு தொடக்க விழா¡ ஏற்பாடு செய்திருந்த அரங்கிற்கு சின்னங்சிறு பேருந்துகளில் அழைத்துச்செல்லப்பட்டோம்.  முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு ராமசுப்பிரமணியன் கருதரங்கைத் தொடங்கிவைத்தார். சிலம்பொலி செல்லப்பன் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கு கட்டுரைகள் அடங்கிய நூலும் வெளிப்பட்டது. மாலன் தாயகம் கடந்த தமிழ் கருத்தரங்கு குறித்து ஓர் அறிமுக உரையை நிகழ்த்தினார். ரெ.கார்த்திகேசுவை முதன்முதலாக பார்க்கிறேன். மெலிந்த உருவம் கூர்மையான பார்வை, தெளிவான பேச்சு. இந்திரனை எங்கே காணவில்லை என நினைத்தேன். அவர் அறிவித்தபொழுது அவர் கையை உயர்த்த அவர், வந்திருப்பது தெரியவந்தது. நலன் விசார்த்துக்கொண்டோம். நாஞ்சில் நாடன் மூன்று வரிசை தள்ளி அமர்ந்திருந்தார். தொடக்கவிழா நிகழ்ச்சி முடிந்தபின்னர் பார்க்கலாம் என நினைத்த போது அவர் இல்லை. .

DSC_0316
21ந்தேதி காலையில் புதுச்சேரியிலிருந்து வெங்கட சுப்புராய நாயக்கரும்,  இலக்கியம் சீனு தமிழ்மணியும் வந்திருந்தார்கள்  தாயகம் கடந்த தமிழ் ஓர் அறிமுகம் என்ற அமர்வில் ரெ.கார்த்திகேசுவின்கீழ் கட்டுரை வாசித்தனுபவம் மறக்க முடியாது. முதல் அமர்வு தேநீர் இடைவேளையின்போது நாஞ்சில் நாடன் அவ்ர்களிடம் பேசினேன். நான் விரும்பி வாசிக்கிற எழுத்தாளர்களில் நாஞ்சிலார் ஒருவர். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், நாஞ்சில்நாடன், பிரபஞ்சன் இவர்கள் எழுத்தில் தலைகாட்டும் அறச்சீற்றத்தை சமூக அக்கறைகொண்ட எவரும் விரும்பவே செய்வோம். அவர்கள் எழுத்தின் தனித்தன்மைக்கு அக்கோபமும் ஒரு காரணம். என் வாழ்நாளில் தேடிப்போய்பார்த்த படைப்பாளிகள் சொற்பம். அந்த சொற்ப எண்ணிக்கைக்குள் நாஞ்சில் நாடனையும் கொண்டுவந்து சேர்க்கவேண்டும். கோயம்புத்தூர் அருகே நாஞ்சிலார் வசிக்கிறார் என்பதை அவர் கூறியபோதுதான் தெரியவந்தது. முன்னதாகச் தெரிந்திருந்தால் ஒரு நாள் கோவையில் இருந்துவிட்டு வந்திருக்கலாம் என நினைத்தேன். நாஞ்சிலாரையும் சென்று பார்த்திருக்கலாம். நாஞ்சிலார் தவிர, அ. ராமசாமி, இமையம், சுப்ரபாரதிமணியன், கவிஞர் குடியரசு ஆகியோரையும் சந்தித்தேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் நாளில் சந்திக்க நேர்ந்தவர்களில் இலங்கையிலிருந்து வந்த கவிஞர் சகோதரி அனார்.  அவரது கவிதைதத்தொகுப்புகள் சிலவற்றை அன்போடு அளித்தார். அக்கவிதைகள் குறித்து எழுதவேண்டும் நன்கு அறியப்படவேண்டிய படைப்புகள் அவை. அவரது கவிதை ஒன்றை பல மாதங்களுக்கு முன்பு எனது வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறேன். அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. கணவர் குழந்தை சகிதம் இலங்கையிலிருந்து வந்திருந்தார். ரெ.காவிற்கு பிறகு மலேசியாவலிருந்து வந்திருந்த டாக்டர் ஷண்முகம் சிவாவும் மறக்கமுடியாத இன்னொரு நபர். நண்பர் பஞ்சாங்கம் அவருடைய சிறுகதையை வாசித்துவிட்டு, மகனைப் பார்க்க சிங்கப்பூர் சென்றபோது அவரைச் சந்திக்க வேண்டும் என நினைத்தாராம். அக் கனவு கோயம்புத்தூரில் நிறைவேறியதாகத் தெரிவித்து மகிழ்ந்தார். நாயகரும், தமிழ்மணியும் இரவு உணவிற்கு பிறகு புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்கள்.

22ந்தேதி எனது அமர்வில் கல்ந்துகொண்ட கலைமகள் என்ற சீனப்பெண்தான் மொத்த விழாவிற்கும் நட்சத்திரம் போல வலம்வந்தார். பத்திரிகைகாரர்களும் அவரை விடவில்லை. நல்லவேளை அவர் கட்டுரையை வாசிக்காமல் தன்னோடு கொண்டுவந்திருந்த ஆல்பத்தை காட்டி சமாளித்ததால் தப்பித்தோம். இரவு வெகு நேரம் உண்டு முடித்துவிட்டு பேசிக்கொண்டிருந்ததால் எங்களைச் சந்திக்கவந்த கவிஞர் சிற்பியையும், திரு. பொன்னுச்சாமியையும் தவறவிட்டிருந்தோம். இரண்டாம் நாள் அமர்வில் தொழில் நுட்ப அமர்வு முக்கியமானது. மறுநாள் கால உணவிற்குப்பிறகு  நண்பர். பஞ்சாங்கம் ஈரோட்டில் ஒரு கருந்தரங்கில் கலந்துகொள்ள கிளம்பிப்போனார். மொத்தத்தில் கோயம்புத்தூர் அனுபவம் என்றும் நினைவு கூறத்தக்கது.

மீண்டும் ஒருமுறை விருந்தோம்பலுக்கு இலக்கணம்படைத்த தமிழ் பண்பாட்டு மையம் தலைவர் நல்லபழனிச்சாமி, அறங்காவலர்கள் கவிஞர் சிற்பி, முனைவர் ப.க.பொன்னுசாமி, நண்பர் மாலன், ரெ.கார்த்திகேசு, பம்பரம்போல் சுழன்று வந்திருந்த விருந்தினர்களைக் குறையின்றி கவனித்துக்கொண்ட திரு.மணிகண்டன் குழுவினர்,  அனைவரையும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

————————–

வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு

இரு நிகழ்வுகள்

1. எனது புதிய மொழி பெயர்ப்பு நூல்

2008ல் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோவின் (Le Clézio)KUTRA VISAARANAI-print

தேதி 17-1-2014, புக்தக கண்காட்சி அரங்கம் மாலை சுமார் 4மணி அளவில்

குற்ற விசாரணை‘ (Le Procès Verbal) என்ற பெயரில் தமிழில் காலச்சுவடு வெளியீடாக வருகிறது

முதற் படியை  திரு பிரபஞ்சன் வெளியிடுகிறார்

முனைவர் வெ.சுப. நாயகர், பிரெஞ்சு பேராசிரியர், காஞ்சி மாமுனி பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி, பெற்றுகொள்கிறார்.

2. எதிர் வரும் ஜனவரிமாதம் 20,21, 22 தேதிகளில்

கோவை தமிழ் பண்பாட்டு மைய ஆதரவில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் கலந்துகொள்ளும் மாநாட்டுக்கான தொடக்க விழா அழைப்பு இது Tamil Invite

நிகழ்ச்சி நிரல்களை கீழ்க்கண்ட இணைய முவரியில் பெறலாம். வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்துகொள்ளலாம்.

http://www.centerfortamilculture.com/

இவ்விரு நிகழ்வுகளுக்கும் முடிந்தால் நேர்ல் வந்து சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்

நாகரத்தினம் கிருஷ்ணா

மொழிவது சுகம் டிசம்பர் டிசம்பர் 28 – 2013

புத்தாண்டு வாழ்த்துகள் –2014

 spectaclereveillonno-kyip

நண்பர்கள் அனைவருக்கும் இனிய புதுவருட வாழ்த்துகள்.  நிறைகுறைகள் இல்லாதது வாழ்க்கை அல்ல! இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. சொந்த வாழ்க்கையிலும் சரி குடும்பம், நாடு, உலகம் என அனைத்திலுமே மேடுபள்ளங்கள் இருக்கவே செய்கின்றன.  மகிழ்ச்சி மழையில் நனைந்த தருணங்களும், கையறு நிலையில், சாய்ந்துகொள்ள தோள்கிடைக்காதா என வாடிய சூழலும் இல்லாமலில்லை. எனக்கு உங்களுக்கு, அடுத்த நபருக்கு என இருக்கவே செய்கின்றன, எனினும் ஓடும் நீராக வாழ்க்கையை தொடரவே  இப்பிறவி வாய்த்திருக்கிறது.

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிதுவரம் கிடைத்திருக்கிறது, நோய் நொடிகள், எனவந்தாலும் ஆரோக்கியத்தை பெற்று ஆயுளை நீட்டிக்கொள்வதற்கான சூழலும் நிலவும் உலகம். ஆக 95 விழுக்காடுகள் வாழ்க்கை நம் கையில்.  ‘எதிர்பார்ப்புகளைநம்மால் மட்டுமே பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கைக்கு இடமளித்து வினையாற்றுவது அந்த 95 விழுக்காடுகளை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். மிச்சமுள்ள 5 விழுக்காட்டினை எதிர்பாராத சோகங்கள், மகிழ்ச்சிகள் நடத்துகின்றன என வைத்துக்கொண்டாலும் அதனை பக்குவமாக கையாளுவோமானால் நிறைவான வாழ்க்கைக்கு தொடர்ந்து உத்தரவாதம்.

வாழ்க்கைத் தேர்வும் நண்பர்களும்

முன்பு தென் ஆற்காடு மாவட்டத்திலும் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் இருக்கும் கொழுவாரிஎன்ற சிறுகிராமத்தில் எனது வாழ்க்கை ஆரம்பித்தது, பின்னர்  அங்கிருந்து அதே தென்னாற்காடு மாவட்டத்தை சேர்ந்த கழுப்பெரும்பாக்கம், அனுமந்தை; செங்கல்பட்டு மாவட்டத்தில் மாம்பாக்கம்; புதுச்சேரி மாநிலத்தைச்சேர்ந்த காலாப்பட்டு,  புதுச்சேரி -(இந்திய வாழ்க்கையில் பெரும் பகுதியைக் கழித்த ஊர்);  அடுத்து சென்னை.  1985க்கு பிறகு பொருள் தேடி புலம் பெயர் வாழ்க்கை: பிரான்சு நாட்டில் ஸ்ட்ராஸ்பூர், (பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதி)Strasbourg 1  இந்நெடிய வாழ்க்கை பயணத்தில் அரிதான பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிகல்லூரி  என்ற கல்வி வாழ்க்கையில்; விக்ஸ் பிரதிநிதியாக, பயன முகவர் அலுவலக ஊழியனாக, புதுச்சேரி கென்னடி டுட்டோரியலில் ஆசிரியப்பணி, பிறகு 1985வரை புதுச்சேரி வருவாய் துறையில் பணி, பிரான்சுநாட்டில் மீண்டும் பல்கலைகழ்கத்தில் சேர்ந்து இந்திய படிப்பை முறைபடுத்திக்கொண்டது, கணக்கியலில் பட்டயம், ஸ்ட்ராஸ்பூர் நகராட்சிக்குட்பட்ட அமைப்பொன்றில் உதவி கணக்காயர் பணி, மாலைக் கல்வியில் மொழிபெயர்ப்பு பட்டயத்திற்கான கல்வி, தொடர்ந்து 1991ல் சுயமாக தொழில் செய்ய ஆரம்பித்து சிறியதொரு மளிகைகடை. என்னை நிலை நிறுத்திக்கொண்டபிறகு இளமைக்கால எழுத்து ஆர்வம் அக்கினிக் குஞ்சாக என்னுள் தகிக்க எழுத்திற்குத்  1999ல் திரும்பவும் வந்தேன்.

வாழ்க்கைத் தேர்வில் தெளிவாக இருந்திருக்கிறேன். தொடக்கத்தில் சங்கடங்களை அளித்த போதிலும் முடிவுகள் தேர்வை நியாயப்படுத்தியிருக்கின்றன. பெற்றோர்கள் பார்த்துவைத்த திருமணம் என்றாலும், எனது மனைவியைப் பார்த்தபோது இவளால் நான் உயர்வேன் என மனம் உரைத்தது. அதுபோலவே பிரான்சுக்கு வர செய்த முடிவு. என்னுடன் பணிசெய்த பலர் வருவாய்துறையில் உயர்பதவியில் இன்று இருக்கிறார்கள், இருந்திருந்தால் .. என்ற எண்னமெல்லாம் சில நேரங்களில் மனதை அலைக்கழிக்கும், இருந்தும் அச்சமயம் எடுத்த முடிவில் தவறில்லை. அங்கே கையூட்டுகளோடு காலம் தள்ளினாலொழிய வளர்ந்திருக்க சாத்தியமில்லை. இங்கேவந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர்களுக்கே உரிய சுதந்திர உணர்வில் சுயதொழில் செய்ய ஆரம்பித்து ஒரு பிரெஞ்சு நண்பரோடு சேர்ந்து வணிக செய்ய ஆரம்பித்தபோது, இந்தியப்பொருட்கள் தொடர்பான விஷயங்கள் என்பதால் எனக்கு முழுசுதந்திரமும் வேண்டும், என்றேன். குறுக்கிடக்கூடாது எனத் தெளிவாக கூறினேன். அவர் கணிசமான தொகையை முதலீடு செய்ய இருந்த நேரத்தில் எனது இந்த பதிலில் அதிர்ச்சி அடைந்து விலகிகொண்டார். ஒரு வாரம் கழித்து திரும்பவும் அதே தொகையுடன் வந்தார். உனது பதில் பிடித்திருந்தது, நீ மட்டுமே தொழில் செய் எனக்கூறி  காசோலையைத் திரும்பவும் என்னிடம் தந்தார், முடிந்தபோது திருப்பிக்கொடுக்க சொன்னார். அவருடனான நட்பு இன்றுவரை தொடர்கிறது. தனி ஆளாக வியாபாரத்தில் இறங்கிய முடிவில் தவறில்லை கடையின் வளர்ச்சி, அதன் தொடர்ந்த இயக்கம் தெரிவிக்கும் உண்மை. 2005ல் ஜெர்மனியிலுள்ள Global Foods உரிமையாளர், M. Pandari பாரீஸின் கிழக்கு பகுதியில் ஒரு மொத்த விற்பனை அகத்தை திறக்கவேண்டுமென்றுகூறி சேர்ந்து செயல்படலாம் எனத் தெரிவித்தார். ஆனால் எழுத்தில் முழுமூச்சாக இறங்குவதென தீர்மானித்து அவரது யோசனையை நிராகரித்தேன். பிரெஞ்சு நண்பர் முட்டாள் தனமான முடிவென்றார். எனினும் எடுத்த முடிவில் தவறில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.

 இக்கால பயணத்தில் நண்பர்களும் அந்தந்த வாழ்க்கைக்கு ஏற்ப மாறிகொண்டு வந்திருக்கிறார்கள். பிறந்த மண், கல்வி நிலையங்கள், வாழுமிடம், செய்யும் தொழில், ஆர்வம்காட்டும் துறைகள், உறவுகள் ஆகியவை  நமது நண்பர்களை தீர்மானிக்கின்றன. அகம் புறம் இரண்டும் அதனதன் தேவைக்கேற்ப, பாரதூரங்களின் அடிப்படையில் நண்பர்களை தேர்வுசெய்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல இயலாது இதுதான் வாழ்க்கை. நேற்றிருந்ததை மறந்ததாகச்சொல்லும் பலநண்பர்கள் தங்களுடைய நேற்றுகளைசௌகரியமாக மறந்திருப்பார்கள். நமக்கு மேலாக வளர்ந்துவிட்டதாக இவர்கள் நம்பும் ஒருவர் நம்மை மறந்துவிட்டார் என குற்றம் சாட்டுகிறபோது, நமக்கு கீழேயாகிப்போன எத்தனை நண்பர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்  என்பதை யோசிக்க வேண்டுமில்லையா? பள்ளிகாலத்தில் பள்ளி நண்பர்கள், கல்லூரி காலத்தில் கல்லூரி நண்பர்கள், பணிக்காலத்தில் சக அலுவலக ஊழியர்கள் நண்பர்கள். தவிர வாழுமிடமும் சமூக நிகழ்வுகளும் சில நண்பர்களைக்கொண்டுவந்து சேர்க்கின்றன. எல்லா நட்புமே நீடிப்பு என்பது இரு தரப்பினரின் ஒத்த சிந்தனையை பொருத்தது. அதற்கு உத்தரவாதம் இருக்குமெனில் அல்லது அது தொடரும் வரை நட்பும் தொடரும்.

 எழுத்தில் என்ன சாதித்தேன் என்பது கேள்வியில்லை, ஆனால் எண்ணத்தால் உயர்ந்தமனிதர்களோடு உரையாட முடிகிறது, சில மணித்துளிகளை அவர்களோடு கழிப்பதற்கான தருங்களை எழுத்து ஏற்படுத்தி தருக்கிறது. படுத்தால் சங்கடங்களின்றி உறங்கும் வாழ்க்கை, இதைக்காட்டிலும் வேறென்ன செல்வம் வேண்டும்?

ஜே.டி. குரூஸ் சாகித்ய அகாதமி பரிசு.

கொற்கை நாவலை படிக்கவில்லை. அவரது ஆழிசூழ் உலகை படித்திருக்கிறேன். மனதிற்கு மிக சந்தோஷ்மாக இருந்தது. இவருக்கு கொடுக்கவில்லை அவருக்குக் கொடுக்கவில்லை என்ற புலம்பல் வேண்டாம். ஜே.டி.குரூஸ் அதற்கு முற்றிலும் தகுதியானவர். அது தவறான தேர்வல்ல  என்பது நமது மனதிற்குத் தெரியும். அவர் தொடர்ந்து பல நல்ல படைப்புகளை அளிக்கவேண்டும். தமிழ் படைப்புலகம் செழிப்புற ஜே.டி. குரூஸ் போன்ற படைப்பாளிகள் அடையாளம் பெறவேண்டிய தருணம். எந்தப் பின்புலமும் அல்லாமல் முழுக்கமுழுக்க படைப்பினை முன்வைத்து தேடிவந்த விருது. வாழ்த்துகள், எங்களுக்காக நிறைய எழுதுங்கள்.

அமெரிக்க தேவயானி

இந்தியாவா? என மூக்கில் விரலைவைத்த சம்பவம். இந்தியா தூதரக அதிகாரியை விசா தவறுதலுக்காக அமெரிக்கா நடத்தியவிதம் கண்டு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர்வரை பிறகு உலகெங்கும் இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் இந்தச் சொரணை நமக்கு எல்லாவற்றிலும் வேண்டும், தொடர்ந்தும் பேண வேண்டும். வழக்கம்போல அமெரிக்கா என்பதால் காம்ரேட்டுகள் கொதித்துபோனார்கள், இப்பிரச்சினையில் சிக்குண்ட அந்த வேலைக்காரி பெண்ணைக் குறித்து மருந்துக்கும் வார்த்தையில்லை. அநேகமாக சொல்லியிருந்தால் தோழர் நல்லகண்ணு சொல்லியிருக்கலாம், முணுமுணுத்திருக்கலாம். வேறு தோழர்கள் சொல்ல வாய்ப்பில்லை. இலங்கைத் தமிழர்கள் செத்தொழிந்ததோ, நாள் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடத்தும் விதமோ அவர்கள் காதில் விழவும் விழாது, கிருஸ்துமஸ் கேக் வெட்டலுக்கிடையில் நேரமிருக்கும்போது கொஞ்சம்  அடித்தட்டு மக்களையும் அவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். அரசியல்வாதிகளில் மனசாட்சிக்கு செவிசாய்க்கிறவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் எனில்  அவர்கள் மார்க்ஸியவாதிகளாகத்தான் இருப்பார்கள் என இன்னமும் என்னைப்போன்ற மனிதர்கள் நம்புகிறார்கள் அதனைப் பாழ்படுத்தவேண்டாம்.

ஊழல் ஆசாமிகளை ஒதுக்காதவரை ஒலிம்பிக்கில் இடமில்லை என சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு இந்தியாவை நீக்கியது குறித்த கவலை இன்மையும், தூதரக அதிகாரி தவறே செய்யவில்லையென வக்காலத்துவாங்குவதில் காட்டும் அவசரமும் இந்தியாவின் பிம்பத்தை பெரிதாய் உயர்த்திவிடாது.

டில்லி கெஜ்ரிவால்

முதன் முறையாக ஆம் ஆத்மி என்ற மக்கள் நலனை முன்னிலைபடுத்தக்கூடிய ஓர் அரசு டில்லியில் பதவி ஏற்றிருக்கிறது. விளைவு அவசர அவசரமாக லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. அவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். கேலிக்குரியவர்களாக மாறிவிடக்கூடாது. அத்தியாவசியமானவற்றிற்கு முன்னுரிமை அளித்து ஊழலற்ற ஆட்சியை அவர்கள் ஆட்சியில் இருந்த குறைந்த காலத்தில் தந்திருக்கிறார்கள் என்கிற எண்ணத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துவதைப் பொருத்தே அவர்களின் எதிர்காலம் மட்டுமல்ல இந்தியாவில் எதிர்காலமும் தீர்மானிக்கப்டும். அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் எதிர்காலம் வழக்கம்போல ஊழல் ஆசாமிகளின் பிடியில் தான்.

 ——————————