Category Archives: Uncategorized

மொழிவது சுகம் – ஜனவரி 24, 2015

1. சியாட்டல்   சுர ம்
ஒரு மாதத்திற்கு முன்பு எங்கள் பெரியமகள் குடும்பம் லாஸ் ஏஞ்செல்ஸிலிருந்து சியாட்டலுக்கு குடிவந்துவிட, நாங்களு ம் இங்கு வரவேண்டியிருந்தது. வந்த மறுநாள் முதல் காய்ச்சல். எனதுபெரிய மகளுக்கு அமெரிக்க வாழ்க்கை என்றான பிறகு நான்கைந்து முறை அமெரிக்கா வர நேர்ந்திருக்கிறது, ஆனால் உடல் நல பாதிப்பு என்பது இதுதான் முதல். பிற மேற்கத்தியநாடுகள் எப்படியென்று தெரியாது, மக்கள் நலன் சார்ந்த சேவைகளில் பிரான்சுக்கும் அமெரிக்காவிற்கும் மலைக்கும் மடுவுக்குமான பேதம் உள்ளது. பத்துநிமிட வாகனப் பயணத்திற்குப் பின்னரே ஒர் இருபத்து நான்கு மணிநேர கிளினிக் . ரிசப்ஷனிலிருந்த பெண் என் ஜாதகத்தைக் கேட்டு எழுதி வாங்கிக்கொண்டார். கேள்வித்தாள்களைக்கொடுத்து நிரப்பச்சொல்லிவிட்டு பதவிசாகவிரல் நகத்தைக் கொறிக்க ஆரம்பித்திருந்தார். கேட்டிருந்த கேள்விகள் சில மன உளைச்சலுக்கு ஆளாக்கின என்றுசொல்லி வழக்குப் போடலாமா ? என்றுயோசனை. சுப்பிரமணியசுவாமியை உங்களுக்குத் தெரியுமென்றால் கேட்டுச்சொல்லவும். உங்கள் இன்சூரன்ஸையெல்லாம் பிரான்சுநாட்டில் பார்த்துகொள்ளுங்கள், எங்கள் கட்டணத்தைப் பைசாப் பாக்கியின்றி கட்டிவிட்டு டாக்டரைப் பாருங்கள் என ரிசப்ஷன் பெண் மொத்தத் தொகையையும் கேட்டுவாங்கிக்கொண்டாள்.

டாக்டர் கேட்ட முதற்கேள்வி அண்மையில் ஆப்ரிக்கநாடொன்றிற்கு சென்று வந்ததுண்டா ? இல்லை என்றேன். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் என்று கேள்விக் கணைகளைப் பெருக்கிக்கொண்டுபோன சீன டாக்டர் மீது எனக்கு எரிச்சல் வந்தது. எனக்குத் தெரிந்து பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்துதான் மாலி நாட்டிற்குச் சென்றுவந்தார், எனது சுரத்திற்கு ஒருவேளை அவர் காரணமாக இருப்பாரென சந்தேகிக்கிறீர்களா டாக்டர் என்றேன், அதன் பிறகு கேள்விகள் இல்லை, ஒரு மாத்திரையைக் கொடுத்து விழுங்கச்செய்தார். பிரிஸ்கிரிப்ஷன் கைக்குவந்தது. வெளியில்வந்தபோது ரிசப்ஷன் பெண் 0.51 செண்ட்ஸ் பாக்கியிருக்கிறது என்றாள். எதற்கு என்றுகேட்டேன். டாக்டர்கொடுத்த மாத்திரைக்குஎன்றாள். அந்த நிமிடமே அல்பெர் கமுய்யில் ஆர ம்பித்து கார்ல் மார்க்ஸ்வரையிலான மதுரை வீரன்களை மனதில் வரித்துக்கொண்டு தீவிர காம்ரேட் ஆகி ஏகாதிபத்யத்தை எதிர்ப்பதென்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆமென் !

 

2. இரண்டு இளைஞர்கள் இரண்டு மார்க்கங்கள்

 

« je ne suis pas les héros, je suis Lassana Bathily »

lassana
ஒட்டடைக் குச்சி உருவம், இளமையும் ஆரோக்கியமும் கடிமனம் புரிந்த உடல், வயதுஇருபத்து நான்கு, பெயர் லஸ்ஸானா பதிலி (Lassana Bathily), மார்க்கம் இஸ்லாம். ஒன்றிர்ண்டு விழுக்காட்டினரை வைத்து ஒட்டு மொத்த சமுதாயத்தைக் குறைசொல்லகூடாதென என்னைப்போலவே நீங்களும் எண்ணுகிறீர்களெனில் நமது வாதத்திற்கு வலுசேர்க்கும் இளைஞர்.
ஷார்லி ஹெப்டோ கொலைகாரர்களை பிரெஞ்சு போலிஸார் சுற்றிவளைத்த அதே வேளை, பாரீஸ் நகரின் மற்றொரு பகுதியில் ஒரு யூதர் கடையில் நுழைந்த மற்றொரு கொலைகாரன் அங்கிருந்த வாடிக்கையாளர்களில் நால்வரைக்கொன்றுவிட்டு மற்றவர்களைப் பிணையக்கைதிகளாகப் பிடித்துவைத்துக்கொள்கிறான். அந்த யூதரின்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த இளைஞர் லஸ்ஸானா ஆபத்தையுணர்ந்து வாடிக்கையாளர்களில் இரண்டுவயது குழந்தைஉட்பட பதினைந்துபேரை தந்திரமாக நிலவறையிலுள்ள ஒர் குளிர்பதனிட இடத்தில்வைத்து க் காப்பாற்றிப் பின்னர் பத்திரமாகஅவர்களை வெளியேற்றியிருக்கிறார். இந்த இளைஞரின் உதவியினாலேயே பொலீஸார் தாக்குதலை நடத்தி தீவிரவாதியைக்கொன்று பிற பிணயக்கைதிகளிமீட்டிருக்கிறார்கள்,

அவரை ஹீரோ எனச் சித்தரித்து எழுதும் பத்திரிகைகளுக்கு :

« என்னை ஹீரோ எனச் சொல்லவேண்டாம், நான் ல்ஸ்ஸானா அவ்வளவுதான் » -என்பது அவர் பதில்
« நீங்கள் யூதர்களைக் காப்பாற்றியிருக்கிறீர்கள் « என அவரைச் சிலர் விமர்சிக்கிறபோது, « நான் மனித உயிர்களையல்லவா காப்பாற்றினேன் » என அடக்கமாகப் பதில் வருகிறது.
களவாய் பிரான்சு நாட்டிற்கு வந்து கடந்த பத்தாண்டுகளாக தற்காலிக விசாவில் இருந்த இளைஞருக்கு 19-1-2015 அன்று முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பிரான்சு நாட்டு பிரதமர், உள்துறை அமைச்சர் இருவருமாகக் கலந்துகொண்டு பிரெஞ்சு குடியுரிமையை வ ழங்கிக் கௌரவித்திருக்கிறார்கள்
———————————————————————————————-

இலங்குநூல் செயல் வலர் – க.பஞ்சாங்கம்-11

panchuபேச்சும், பனுவல் வாசித்தலும்

 

உயிரியக்கம் ஓசையால் உறவாடுகிறது. புலன் உணர்வுகளின் வெளிப்பாடுகள் அனைத்துமே ஒருவகையில் பேச்சின் உட்பிரிவுகள்தாம். நமது பார்வைக்கும் உறவுக்கும் ஓசையும் மொழியும் தரும் உருமாற்றம் ‘பேச்சு’. மொழியைக் குழைத்தும் பிசைந்தும் கிடைக்கிற பேச்சுக்கு இலக்கியம் ஓர் நிரந்தர பிம்பத்தை ஏற்படுத்தித் தருகிறது பேச்சு செயல்பட சில அத்தியாவசியப் பொருட்கள் தேவை.ஓசை, உச்சரிப்பு, தொனி, கால பிரமாணம், பேசுபவர் கேட்பவர் இருவருக்குமிடையேயான உறவு, பேச்சில் தொடர்புடைய இரு மனிதர்களின் தகுதரம், இடங்கள் (உதாரணத்திற்கு நேருக்கு நேரா, ஆளுக்கொரு திசையில் இருந்துகொண்டா?) பேச்சுக்கு பேசுகின்ற நபரின் தேவை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அள்விற்கு கேட்பவர் என்று ஒருவர் வேண்டும் இல்லையேல் அப்பேச்சால் எவ்வித பயனுமில்லை. நட்போ பகையோ இரண்டிற்கும் பேச்சு வேண்டும். எண்ணத்தை ஓசையுடன் பகிர்ந்து கொள்ள பேச்சு உதவும், அதே எண்ணத்தை மௌனமாக பகிர்ந்துகொள்ள எழுத்து உதவும். பேச்சு மொழி கேட்கும் தருணத்தில் மட்டுமே செயல்படமுடியும், மாறாக எழுத்து வடிவ பேச்சு எழுதிய தருணத்தைக் கடந்து நிற்கும். எடுத்துரைப்பில் பேச்சு தவிர்க்கமுடியாததொரு தனிமம். எடுத்துரைப்பு குறித்த பேராசிரியரின் திறனாய்வு கட்டுரைகளில் எட்டாவது அத்தியாயத்தில் பேச்சும், அதனைத் தொடர்ந்து பனுவல் வாசிப்பும் இடம்பெற்றுள்ளன

கிரேக்கத்ததுவாதிகள் பிளாட்டோ, அரிஸ்டாடில் இருவரின் பேச்சுக்களைபற்றிய சிந்தனைகளுடன் கட்டுரை தொடங்குகறது. பேச்சு, பாவனையான பேச்சு என்ற இருவகையான பேச்சுகள் அவற்றின் உட்கூறுகளைப்பற்றிய சிலவிளக்கங்களும் நமக்குக்கிடைக்கின்றன. எழுத்திலக்கியத்தை பொறுத்தவரை பாவனைபேச்சு முக்கியம் பெறுகிறது. பாவனைபேச்சே நாடகம் எனச் சொல்லப்படுகிறது. அரிஸ்டாட்டில் கருத்தின்படி பாவனையானப் பேச்சு, வார்த்தை சார்ந்தது மட்டுமல்ல, போலச் செய்தல் என்ற செயல்பாடும் அதற்குள் வருகிறது. ஆசிரியர் “போலச் செய்தலைப் பல்வேறுவகையில் பொருள்கொள்ள வாய்ப்பிருப்பினும், அதனில் நாடகமாந்தர்களின் உடலசைவு, பேச்சு, நடத்தல் போன்றவைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்”, என்கிறார்.
காட்சிப்படுத்துதல் பனுவல் என்று வருகிறபோது அதன் பங்குதாரர்களின் நிலமை என்ன? முதலாவதாக எடுத்துரைப்பாளர், இவர் காட்சிபடுத்துதலில் நிகழ்ச்சிகள் அல்லது உரையாடல்கள் நேரடியாகக் காட்டப்பட்டதால் காணாமற்போய்விடுகிறார், வாசகர்கள் பனுவலில் தன் வாசிப்பின் மூலம் பார்த்ததையும் கேட்டதையும் குறித்து தானே ஒரு முடிவு மேற்கொள்ளும் உரிமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

இது தவிர இன்றைய நாவல் கலை என்ற ஒன்று உருவானதற்கு நாவலாசிரியர்கள் தங்கள் கதைக் காட்சிப்படுத்தவேண்டிய ஒன்று என்கிற சிந்தனைக்கு இடம்கொடுத்ததே காரணமென்ற தகவலையும் கட்டுரை ஆசிரியர் தருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி, பிரெஞ்சு முடியாட்சி தமது செல்வாக்கை இழந்திருந்த காலம். பிரெஞ்சு நிர்வாசபையில் பிரபுக்களும், மதகுருமார்களும் பொருளாதார நெருக்கடிகாலத்திலும் பெற்றிருந்த சலுகைகள் பொதுமக்கள் பிரநிதித்துவசபையையும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரு சில பூர்ஷ்வாக்களையும், ஒன்றிரண்டு மதகுருமார்களையும் எரிச்சலைடையச் செய்தன. அதன் பின்னர் நடைபெற்ற பிரெஞ்சு புரட்சியையும் அதன் அரசியல் விளவுகளையும் அறிவோம். கலை இலக்கியத்தில் வேறொரு புரட்சிக்கு அது காரணமாயிற்று. படைப்பிலக்கியவாதிகள் முடியாட்சி, மதகுருமார்கள், பிரபுக்கள், அதீதக் கற்பனைகள், வியந்தோதல்கள் அதாவது கற்பனாவாதம் கூடாதென்று எதார்த்தவாதத்தின் பக்கம் ஒதுங்குகிறார்கள். சராசரி மாந்தர்களும் அவர்களுடைய பிரச்சினைகளும் புனைவுகளில் இடம்பெறத் துவங்கின. நேர்க்கூற்று முறை தவிர்க்கபட்டது. கதைமாந்தர்களூடாக பேசினார்கள். பேராசிரியர் குறிப்பிடுகிற காட்சிப்படுத்தும்போக்கு இக்காலகட்டத்தில்தான் புதினங்களில் அதிகம் காண முடிந்தது. பாவனையானப் பேச்சு என்பது வார்த்தைபேச்சு மற்றும் போலசெய்தல் என்று பார்த்தோம் – பொதுவில் இதனைக் காட்சிப்படுத்துதல் என வைத்துக்கொண்டு, இம்முறை கற்பனாவாத பேச்சுமுறையைக் காட்டிலும் சரியானதாவென்ற கேள்விக்கு, இரண்டிலும் சாதகப் பாதகப் பலன்கள் ஒரு பனுவலில் இருப்பதற்கு வாப்புகள் உண்டெனவும், எடுத்துரைப்பின் வெற்றி தோல்வி என்பது உத்திகளில் இல்லை அவற்றின் செயல்பாட்டிலேயே உள்ளன என்றும் தெரிய வருகிறது.

 

போலச் செய்தலில் ஏற்படும் சிக்கல்கள்

 

போலச்செய்தல் என்பது நாடகப் பேச்சு அல்லது காட்சிபடுத்துதல். இத்தலைப்பில் காட்சிப்படுத்தலிலுள்ள சிக்கல்களை பேராசிரியர் கூறியுள்ளார். ஒரு புனைகதை எடுத்துரைப்ப்பில் இடம்பெறும் நிகழ்வுகளை அப்படியே உள்ளது உள்ளவாறு (tel qu’il est) காட்சிப்படுத்தவியலாத சூழல் இருப்பதற்கு பனுவல் மொழியையும் குறியீட்டையும் நம்பியிருப்பதைக் காரணமாகச் சொல்கிறார். அதேவேளை மொழிகொண்டு ஏறக்குறைய ஒரு போலச்செய்தலை ( முழுமையானப் போலச்செய்தல் அல்ல) அதாவதொரு காட்சிபடுத்துதலை செய்யமுடியும் எனத் தெரியவருகிறது. அப்படி காட்சிபடுத்துகிறபோது எடுத்துரைப்பில் எடுத்துரைப்பாளர் தமது இடத்தைத் தொலைக்கிறார், விளைவாக அவர் கையிலுள்ள காட்சிப்படுத்த உதவுகிற மொழிக் கேமரா, நாவலில் முக்கித்துவம் பெறுகிறது. காட்சிக்குதவுகிற இப் பாவனைமொழி கால அளவு, தகவல் அளவு என்பதுபோன்ற பல்வேறு அளவீடுக் கருவிகளைக்கொண்டு வெவ்வேறுவிதமான செயல்பாட்டுதளத்தில் இயங்குகிறது. அவை நேரடிப்பேச்சு, சுருக்கம், மறைமுகச்சொல்லாடல், சுதந்திரமான மறைமுகச் சொல்லாடல், நேரடிச் சொல்லாடல், சுதந்திரமான நேரடிசொல்லாடல், சுதந்திரமான மறைமுகச்சொல்லாடல் என வகைப்படுத்தப் பட்டுள்ளன. புனைவில் அதிகம் இடம்பெறும் சுதந்திரமான மறைமுகச்சொல்லாடலின் மொழி இயல்கூறுகளுக்கு உதாரணமாக அறிவிப்பு சார்ந்த வினைச்சொற்கள், காலம் காட்டும் அமைப்பு, வினாக்கள், விவாத முறைக்கூறுகள் சொல்லப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுவகைகள் என நாம் அறியவருபவை:

1. பேசுபவர்களை அடையாளப்படுத்துவது மற்றும் என்னபேசவேண்டும் என்பதை வடிவமைப்பது

2. ஒரு பனுவலின் பன்முகத்தன்மையை (பேச்சாளர்கள் மற்றும் அவர்களின் அணுகுமுறைகளில்) பெருக்கிக்காட்டுதல்

3. மற்றொரு மாற்றமைப்பினை அதே பனுவலுக்குள் அடையாளங் காண உதவுவதால், பனுவலுக்குக் கூடுதலான அர்த்தச் செறிவை அளித்தல்.

4. சிந்தனையை மறுவுருவாக்கம் செய்துகொள்ள வழியமைத்துத் தருவதால் நனவோடை உத்திக்குப் பயனளிக்கிறது.

5. கதை மாந்தர்களின் தன்மைக்கேற்ப பனுவலுக்குள் ஒளிந்திருக்கும் படைப்பாளியின் நடவடிக்கைகளையும் மறுவுருவாக்கம் செய்ய துனைசெய்தல்.

 

பனுவல் வாசித்தல்:

 

எடுத்துரைப்பினை திறனாய்வுக்கு எடுத்துக்கொண்ட ஆசிரியர் இப்பகுதியில் வாசிப்பு அதன் தன்மைகள், இயங்கும் விதம், அதன் அடிப்படிப்படையில் கிடைக்கிற வாசகர்கர்களின் பன்முகத்தன்மை ஆகியவற்றை விளக்க முற்படுகிறார். ஒரு புனுவலைப் படைத்தலைப்போலவே, அப்பனுவலை வாசித்தலும் படைப்பிலக்கியத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதனை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் ஆசிரியர் இப்பகுதியில் சொல்லியிருக்கிறார். “ஒரு பனுவலை ஒரு பொருளில் இரண்டுதடவை வாசிக்க முடியாதென்பதின் அடிப்படையிலேயே” வாசித்தல் இயங்குதளத்தில் எடுத்துரைப்பு குறித்து திறனாய்வுசெய்தவர்கள் அக்கறை காட்ட காரணமாயிற்று. இங்கே, ” ஒரு பனுவல் வாசிக்கப்படுகிற தருணத்தில்மட்டுமே உயிர்ப்பினை பெறுகிறது எனவே ஒரு பனுவல் வாசகனின் பார்வையிலிருந்து பார்க்கப்படவேண்டும்” என்கிற ஐசர் என்பவர் கருத்தும் மிக முக்கியமானது. தனது சிந்தனையை, கற்பனையை தனக்குரிய மொழியில் நடையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு படைப்பாளி பனுவலில் கொண்டுவருகிறார். அப்பனுவலில் தான் சொன்னதாக படைப்பாளி நினைத்ததையெல்லாம் அதே கனத்துடனும், அடர்த்தியுடனும், மென்மையுடனும் வாசிப்பவர் உள்வாங்கியிருப்பாரா என்பது கேள்வி.

 

“பனுவலின் உருவாக்கத்தில் வாசகர் பங்கெடுப்பதுபோலவே வாசகரை வடிவமைப்பதில் பனுவல் பங்கெடுக்கிறது” என்ற கருத்தும் சிந்திக்கத்தக்கது. ஆக முழுக்க முழுக்க ஒரு படைப்பாளியால் அல்ல, ஒரு வாசகராலேயே பனுவலொன்றின் சிறுமையும் பெருமையும் தீர்மானிக்கப்படுகின்றன என்ற உண்மையை அண்மைக்காலத்தில் முன்வைக்கபட்ட எடுத்துரைப்பு சிந்தனைகள் தெரிவிக்கின்றன. வாசகரை முதன்மைப்படுத்தும் இந்த அணுகு முறையை பேராசிரியரின் கட்டுரை ‘நிகழ்தல்’ என்று சொல்கிறது. இருவகை நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

 

1. தன்னிச்சையாய் சுயமாய் இயங்கும் நிகழ்வு
2. பலபடித்தாய் இயங்கும் நிகழ்வு
நிகழ்வை ஆற்றுகிற வாசகர்களை அவர்களின் அணுகுமுறையின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்கள்:

1. உண்மையான வாசகர்கள்
2. மேலான வாசகர்கள்
3. அறிவார்ந்த வாசகர்கள்
4. இலக்கிய வாசகர்கள்
5. மாதிரி வாசகர்கள்
6. உள்ளுணர்வு வாசகர்கள்
7. கொள்கைவாசகர்கள்

 

மேற்கண்ட ஏழுவகை வாசகர்கள் பல்வேறு திறனாய்வாளர்களால் சுட்டிக்காட்டபட்டவர்கள். சற்று ஆழ்ந்து பரிசீலித்தால் இன்னுங்கூட சில பெரும்பிரிவுகளையும், கிளைபிரிவுகளையும் அவற்றில் சேர்க்க முடியும். தொல்காப்பிய ஆசிரியர் காட்டுகிற வாசகர் ஓர் உதாரணம் : “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடைய மாந்தர்” -பனுவலோடு இரண்டறக் கலந்து ஒட்டிக்கிடக்கிற ஒருவர்.

 

வாசித்தலின் இயங்கியல்

 

ஏற்கனவே நாம் பார்த்ததைப்போன்று பனுவலின் மொழி, அதன் குறியீடு, அதுசார்ந்த சிக்கல்கள், வாசகரின் அணுகுமுறைகள் ஆகியவற்றைப் பொருத்தது.. தொடக்கத்தில், வாசகரின் தனித்தன்மையை விரட்டிவிட்டு தனது போக்கிற்கேற்ப வாசகரை அது மாற்றுகிறதென்றும், சிறிது சிறிதாகத் தகவல்களைத் தருவதன்மூலம் எந்நேரமும் அவற்றை இணைத்துகொள்ளும்படியான சூழலை அமைத்துக் கொடுக்கிறதென்றும், அதனால் பல வாசிப்புப் படிநிலைகளுக்கு வாசகர்கள் போகமுடிகிறதென்றும், வாசித்தலின் இறுதிப்பகுதி பனுவல் குறித்த முடிவான ஒரு கருத்தினை எட்ட உதவுகிறதெனவும் தெரியவருகிறது.

 

ஒரு பனுவலுக்குள் படைப்பாளரைப் பொறுத்து பல்வேறு வாசிப்பு அணுகுமுறைகள் கிடைக்கின்றன. இது மிகவும் சிக்கலானது பனுவலில் படைத்தலுக்குத் தீர்மானமாக இவைதான் விதிகள், இலக்கனங்கள் என்றில்லை என்பதாலேயே வாசிப்பும் ஓர் திறந்த வெளியாக இருக்கிறது அங்கு புரிதலுக்குரிய முயற்சிகள் ஓயாமல் நிகழ்கின்றன. வாசிப்பும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வாசிப்பவரின் திறனுக்கொப்ப நிகழ்கிறது.

 

பனுவலை இயல்பானத் தன்மைக்குக்கொண்டுவருதல்:

 

புழக்கத்திலிருக்கிற சில சொல்லாடல்களோடு உறவுபடுத்திக்கொள்வதையே, ஒரு பனுவலை இயல்புத் தன்மைக்குக்கொண்டு வருதல் என்கிறார்கள், உதாரணம் ரொலா பார்த்தின் ‘சமிக்கை’.

சமிக்கை என்றால் என்ன? “ஏற்கனவே மன அமைப்பில் உறைந்துபோன தூரத் தோற்றம், ஏதோ ஒன்றின் பல்வேறுபட்ட சிதறல் கனவாகும். இவைகள் அனைத்தும் ஏற்கனவே வகுக்கப்பட்டவை, பார்க்கப்பட்டவை, செய்யப்பட்டவை, அனுபவிக்கப்பட்டவை. சுருக்கமாகச்சொல்வதெனில் ஏற்கனவே இருப்பவைகளை எழுப்பி விடுபவை (ந.இ.கோ பக்கம் 241)

 

எவ்வாறு ஒரு பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி வாசகரைத் தூண்டுகிறது

 

“நான் இன்னும் முழுமையாக இந்தப்பனுவலை அறியவில்லை அல்லது உணரவில்லை’ என்று வாசகரைத் தவிக்க வைக்கிற பனுவல் தொடர்ந்து வாசிக்கும்படி செய்கிறதாம். இத்தவிப்பினை இருவகைகளில் பனுவல் உருவாக்குகிறதென்று அறிகிறோம்

 

1. காலம் தாழ்த்தல் 2. இடைவெளிகள்
1. காலம் தாழ்த்தல்

 

தகவல்களைச் சொல்லவேண்டிய இடத்தில் சொல்லாமல் தள்ளிப்போடுதலே காலம் தாழ்த்தல். தகவல்களை அதற்கு முக்கியத்துவத்திற்கேற்ப இருவகை கால அலகுகளால் பிரித்திருக்கிறார்கள்

அ. எதிர்காலம் சார்ந்தது ஆ. இறந்த காலம் சார்ந்தது

அ. எதிர்காலம் சார்ந்தது: அடுத்தது என்ன? என்ற வினாவை உயிர்ப்புடன் வைத்து, ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் பணியைப் பனுவல் செகிறது

ஆ. இறந்தகாலம் சார்ந்தது: முடிவைத் தெரிவித்துவிட்டு, முடிவின் காரணம், அதற்குப் பொறுப்பு யார்? புதிருக்கு விடைதேட இம்முறை உதவுகிறது.

 

2. இடைவெளிகள்

 

ஒரு பனுவலைத் தொடர்ந்து வாசிக்கும்படி செய்வதில் இடைவெளிகளுக்குப் பங்கிருக்கின்றன எனசொல்லப்படுகிறது. அதென்ன இடைவெளி? வாழ்க்கையை இயக்குகிற அனைத்திலும் இடைவெளிகள் இருக்கின்றனவென்றும் உதாரண்மாக இயறகைக்கும் மனிதனுக்குமான இடைவெளி, அறிவு இடைவெளி, உணர்வு இடைவெளி… போன்றவை. எனவே இவற்றைபற்றி பேசுகிற பனுவலிலும் இடைவெளிகள் தவிர்க்க முடியாதவை பேராசிரியர் ஐசர் கருத்தை மேற்கோள் காட்டுகிறார்:

 

“எந்தவொரு கதையும் முழுமையாகச் சொல்லப்படுவதில்லை. உண்மையில் தவிர்க்க முடியாத சில கூறுகளை நீக்கிவிட்டுச் சொல்வதன் மூலமாகத்தான் ஒரு கதை தனக்கான இயக்கத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. கதையின் ஓட்டம் எப்பொழுது தடைபடுகிறதோ, கதை எப்பொழுது எதிர்பாராத திசையில் வாசகரை இழுத்துச் செல்லத் தொடங்குகிறதோ அப்பொழுது எல்லாம், தன் சொந்த காரண காரண-காரிய அறிவு பலத்தின்மூலம் தொடர்பினை நிறுவிப் பனுவல் விட்டுச்சென்ற இடைவெளிகளை நிரப்பிக்கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது”

 

எனவே தகவல் இடைவெளி, காலம் தாழ்த்துதலினும்பார்க்க முக்கியத்துவம் வாய்ந்தது. தவிர இடைவெளியில் உள்ள கீழ்க்கண்ட பண்புகள் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை.

– அது தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் இருக்கிறது

– தற்காலிக இடைவெளி ஏதோ ஒரு இடத்தில் நிரப்பக்கூடியதாகவும், நிரந்தர இடைவெளி இறுதிவரை நிரப்ப முடியாமலும் போய்விடுகிறது

– வாசிக்கிற கணத்தில் ஈர் இடைவெளி தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்ற முடிவுக்கு வர இயலாதது

– தற்காலிக இடைவெளிகள் காலத்தின் நேரத்திற்கும் பனுவலின் நேரத்திற்கும் இடையிலுள்ள முரண்களால் உருவானவை

– பனுவலில் இடைவெளிகள் அதற்குரிய வளத்தோடு சிறப்பாக அமைந்திருக்கும்போது வாசிப்பு செயல்பாடு இயல்பாகவே இடைவெளியை நிரப்புகிறது.

ஆகப் பொதுவில் காலம் தாழ்த்த்துதலும் இடைவெளியும் வாசகர் ஆர்வத்தைத் தூண்டித் தொடர்ந்து பனுவலை வாசிக்க வைக்கின்றன.

-முற்றும்
———————————————————————————-
பி.கு. ஏற்கனவே லூறியதுபோன்று இக்கடுரைகள், பேராசிரியரின் கட்டுரைகளுக்கான அறிமுகமேயன்றி முழுமையானவை அல்ல. அக்கடுரைகளின் முழுப்பயனையும் அடைய பேராசிரியர் நூலை வாசிக்கவேண்டும். நவீன இலக்கிய கோடுபாடுகள் தொகுப்பிலுள்ள் எடுத்துரைப்பு பற்றிய உண்மைகள் படைப்பிலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் பயனுள்ள பகுதி, படைப்பாளிகள் வாசகர்கள் என்ற இரு தரப்பினருக்கும் உதவகூடியவை. படைப்பாளிகக்கு ஒரு பனுவலைத் தரமாக படைக்க உதவும் என்பதைப்போல வாசகர்களுக்கு ஓர் பனுவலை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையை அளிக்கும். பேராசிரியரின் கடல் போன்ற மொழிஞானத்தையும் உழைப்பின் பயனையும் முழுமையாகப் பெற அவரது நூல்களை வாங்கிப் பயனடையுங்கள் – நன்றி:

க.பஞ்சாங்கம் கட்டுரைகள்: நவீன இலக்கியகோட்பாடுகள்
காவ்யா பதிப்பகம்
சென்னை -24

—-

மொழிவது சுகம் டிசம்பர் 30 -2014

1. புது வருட வாழ்த்துகள்

1408393734-bonne-annee-2015-004
அன்பினிய நண்பர்களுக்கும் தோழியருக்கும் இனிய வாழ்த்துகள்.

பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் இயற்கை நெறி. 2014ம் ஆண்டு கசப்பு இனிப்பு இர்ண்டையும் ஊட்டியிருக்கக்கூடும். இவற்றின் கலவையில் ஏற்றத்தாழ்வுகளும் இருந்திருக்கக்கூடும், இருந்தும் தனித்தோ கைகோர்த்தோ கடந்துவந்திருக்கிறோம். 20 15 ம் பல ஆச்சரியங்களை பொத்திவைத்திருக்கக்கூடும். நல்லதோ கெட்ட்தோ எதுவாயினும் துணிவுடன் எதிர்கொள்வோம், வாழ்த்துகள்!
அன்புடன்
நா. கிருஷ்ணா

2. வாசித்தவை
2014ம் ஆண்டில் தமிழில் வாசித்தவற்றில் புதியவை, பழையவை இரண்டும் உள்ளன. வண்ணதாசனின் ஒரு சிறு ஓசை, காலபைரவனின் கடக்க முடியாத இரவு, சந்திராவின் காட்டின்பெருங்கனவு ஆகியசிறுகதை தொகுப்புகளும் கவிஞர் சுகுமாரனின் வெலிங்டன், தமிழவனின் முஸல்பனி, குமார செல்வாவின் குன்னிமுத்து ஆகிய நாவல்களும் புதியவற்றுள் அடங்கும்.
பழையவற்றுள் யு.ஆர் அனந்தமூர்த்தியின் பாரதிபுரம், அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு, கரிச்சான்குஞ்சுவின் பசித்தமானிடம், சா. கந்தசாமியின் சாயாவனம் ஆகியவற்றை இரண்டாவது முறையாக வாசித்தேன். சல்மாவின் இரண்டாம் சாமங்களின் கதையும் எனக்குத் திரும்ப வாசிக்க வேண்டுமென்று தோன்றியது, வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

3. எழுதியவை

 

இவ்வருடத்தில் எழுதிச் சாதித்தது பெரிதாகஒன்றுமில்லை. குறிப்பிட்டுசொல்லவேண்டியது பிராஹாவிற்கு சென்று காஃப்கா பிறந்த மனையில் ஒரு சில மணித்துளிகளைக் கழித்ததன் விளைவாக உருவான நாவல். காப்காவின் நாய்குட்டி என்ற பெயரை தற்காலிகமாக வைத்திருக்கிறேன். காலச்சுவடிடம் கொடுத்துள்ளேன். காலச்சுவடு தத்துவத்தின் சித்திரவடிவம் என்ற கட்டுரைத் தொகுப்பையும் கொண்டுவருகிறார்கள். நற்றிணை பதிப்பகம் பிர்சுரிக்கும் பயணக்கட்டுரை தொகுப்பும், சிறுகதைதொகுப்பும் இரண்டு வருடங்களாக அவ்வப்போது எழுதிவந்தவை.

 

4. பிரெஞ்சு மொழியில்

 

டொமினிக் வித்தாலியோ என்ற பிரெஞ்சு பெண் மணியுடன் சேர்ந்து மொழிபெயர்த்துள்ள அம்பையின் சிறுகதைத் தொகுப்பு வெளிவருகிறது.
http://www.zulma.fr/livre-de-haute-lutte-572109.html
ஆனால் எனக்கு மிகவும் மகிழ்வைத் தந்தது பிரெஞ்சு மொழி இலக்கிய இதழொன்று எனது சிறுகதையை வெளியிட்டது
http://www.cousinsdepersonne.com/2014/12/le-bananier-dandoni/
மேற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளும் பிரெஞ்சு மொழிபக்கமும் எனதுகவனத்தைச் செலுத்த வைத்திருக்கின்றன, நண்பர் நாயகர் தலையீட்டினால் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பிரெஞ்சு மொழியில் மாத்தாஹரி நாவலை மொழிபெயர்க்கிறார். காலச் சுவடு வெளியிட உள்ள நாவலையு ம் பிரெஞ்சு மொழியில் கொண்டுவரவிருப்பம். இதனை என் விருப்பம் என்பதைதக் காட்டிலும், 25 ஆண்டுகால பிரெஞ்சு நண்பர் தெபெல் விருப்பம் என்று சொல்லவேண்டும்.

 

5. வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட 20 நூல்கள்

 

ஒரு சமூகத்தை மாற்றி அமைக்கும் வல்லமை நூலுக்கு உண்டா என்பதை நம்மால் உறுதிப் படுத்த முடியாது ஆனால் படித்த புத்தகங்களால் வரலாற்றை மாற்றி எழுதிய தனிமனிதர்களை அறிந்திருக்கிறோம். France 5 என்ற பிரெஞ்சு தொலைகாட்சி சேனல் தனது பார்வையாளர்களிடம் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்த நூல்எது ? என்றொரு கருத்துக் கணிப்பை கடந்த மூன்றுமாதங்களாக நடத்தி வந்தார்கள். அம்முடிவின்படி பிரெஞ்சு மக்களின் வாழ்க்கையை மாற்றிஅமைத்த 20 நூல்களை வரிசைப் படுத்தியிருக்கிறார்கள்.

நூல்கள் என்பதால் தவறானபாதைக்குக் கொண்டுசென்றிருக்காது என நம்பலாம்.
1. Le petit Prince (The Little Prince) –Antoine de Saint-Exupéry
2. L’Etranger – (The Stranger) – Albert Camus
3. Voyage au bout de la nuit (Journey to the end of the Night)- Louis Ferdinand Céline
4. L’écume des jours (Froth on the Daydream) – Boris Vian
5. A la recherche du temps perdu (In Search of Lost time) –Marcel Proust
6. Le Grand Meaulnes – Alain Fournier
7. L’alchimiste (The Alchemist) –Paulo Coelho
8. Belle du seigneur – Albert Cohen
9. Cent ans de solitude (One Hundred years of Solitude)-Gabriel Garcia Marquez
10. Les Fleurs du Mal – Charles Baudelaire
11. La Peste (The Plague) – Albert Camus
12. Harry Potter –J.K.Rowling
13. 1984 – George Orwell
14. Le monde selon Garp (The World According to Garp)-John Irving
15. Crime et Châtiment (Crime and Punishment) –Fiodor Dostoïevski
16. Le seigneur des Anneaux (The Lord of the Rings)- J.R.R. Tolkien
17. Le Parfum (Perfume) – Patrick Sûskind
18. Le journal d’Anne Frank (The Diary of a Young Girl)-Anne Frank
19. Madame Bovary – Gustave Faubert
20. Les Misérables – Victor Hugo
——–

இலங்கு நூல் செயல்வலர் -க.பஞ்சாங்கம்-9 : எடுத்துரைப்பு படிநிலைகள்

panchuசிமூர் சாட்மன் ஓர் அமெரிக்க இலக்கியம் மற்றும் திரைப்பட விமர்ச்கர். வட அமெரிக்காவைச் சேர்ந்த மிக முக்கியமான எடுத்துரைப்பியல் நிபுணர். பேராசியரின் எடுத்துரைப்பு படிநிலைகளைப்பற்றிய இக்கட்டுரை, இந்த அமெரிக்கரின் உண்களை முன்வைத்து பேசுகிறது.

உள்ளுறை எழுத்தாளரும் – உள்ளுறை வாசகரும்

பொதுவாகவே எடுத்துரைப்பியல் என்றதும் அதனை இயக்கும் எதிரெதிர் துருவங்களாக செயல்படுவர்களில் ஒருவர் எழுத்தாளர் மற்றவர் வாசகர் என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த அத்தியாத்தில் பேராசிரியர் சாட்மன் முன்வைத்த கருத்தியத்தின் அடிப்படையில் வேறு சில உண்மைகளைத் தெரிவிக்கிறார். அதன்படி வெகுசன அறிவு நம்பிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்- வாசகர் என்கிற செயல்பாட்டாளர்களோடு வேறுசிலரும் எடுத்துரைப்பை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் மொத்தம் ஆறுபேர்: படைப்பை அளிப்பவர்கள் மூவர், படைப்பைப் பெறுபவர்கள் மூவர். அளிப்பவர் அணியில் முதலாமவர் உண்மையான எழுத்தாளர், அடுத்து வருபவர்கள் அல்லது முதல் நபருக்குத் துணைநிற்பவர்கள் உள்ளுறை எழுத்தாளர், எடுத்துரைப்பாளர். பெறுபவர் அணியில் முதலாமவர் உண்மையான வாசகர் அடுத்து இடம்பெறுபவர்கள் உள்ளுறை வாசகர், எடுத்துரைப்பைக் கேட்பவர்.

இவர்களில் எழுத்தாளர் அணியில் செயல்படுகிற ‘உள்ளுறை எழுத்தாளர் ‘ (எதிரணியில் சமன் படுத்த உள்ளுறை வாசகர்)மிக முக்கியமானவர். இந்த உள்ளுறை எழுத்தாளர், குறிப்பிட்ட படைப்புக்கென எழுத்தாளரிடமிருந்து பிறவி எடுப்பவர், பிரதான எழுத்தாளர் நிரந்தரமானவர், பல படைப்புகளிலும் தொடர்ந்து இடம்பெறுகிறார். மாறாக உள்ளுரை எழுத்தாளர் பிறப்பும் இறப்பும் குறிப்பிட்ட படைப்போடு முடிந்துவிடுகிறது. ‘மனிதப்பண்பு ஏற்றப்பட்டவ்ராகத் தோற்றமளிக்கிறார். எனவே இவர் எழுத்தாளரின் ‘இரண்டாவது சுயம்’ இன்னொரு விந்தையான கருத்தும் நமக்குக் கிடைக்கிறது. உள்ளுரை எழுத்தாளர் பிரதான எழுத்தாளரின் அல்லது உண்மையான எழுத்தாளரின் ஓர் அங்கமாக இருப்பினும் முழுப்படைப்பிற்கான மூளை மற்றும் ப¨ப்பின் விதிகளுக்கான மூல ஆதாரமாக இருப்பதால் சாட்மென் முடிவின்படி உள்துறை எழுத்தாளர் அறிவுதளத்திலும், ஒழுக்கத் தரத்திலும் உண்மையான எழுத்தாளரைக் காட்டிலும் மேம்பட்டவராக இருப்பாரென அறிகிறோம்.

இங்கே நமக்குத் தெரியவேண்டிய மிகப்பெரிய உண்மை, உளதுறை எழுத்தாளரும் உண்மையான எழுத்தாளரும் சமமானவர்கள் அல்ல என்பது முதலாவது. படைப்பை நடத்திச்செல்கிற உள்ளுறை எழுத்தாளரின் சிந்தனை, நம்பிக்கை, உணர்வு நிலை ஆகிவற்றிலெல்லாங்கூட நேரெதிரான நிலைப்பாட்டிற்குச் சொந்தக்காரராக உண்மையான எழுத்தாளர் இருப்பார் என்பது இரண்டாவது. இவை நிகழ்வதற்கு ஆசிரியரின் கட்டுரை சொல்லும் காரணம், உண்மையான எழுத்தாளரின் சுய அடையாளம் புறவாழ்வில் அவர் எதிர்கொள்ளுகிற வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. அதே நேரத்தில் உள்ளுறை எழுத்தாளரின் அடையாளம், எழுதப்படும் படைப்போடு இணைந்து இரண்டறக்கலந்து நிலைப்பெற்று இருக்கக்கூடியது ( ந.இ.கோ. பக்கம் 216). எதிரணியில் இருக்கிற உள்ளுறை வாசகர் இந்த உண்மையை அறிந்தே இருக்கிறார், ஆனால் பிரச்சினை விளிம்பில் இருக்கிற உண்மையான வாசகர் பல நேரங்களில் உள்ளுறை எழ்த்தாளரை உண்மை எழுத்தாளரிடம் தேடிக்களைப்பதைக் காண்கிறோம். சாட்மன் கூற்று “உள்ளுறை எழுத்தாளர், உண்மை எழுத்தாளரிடம் மட்டுமின்றி எடுத்துரப்பாளரிடமும் வேறுபட்டவர் எனக் கூறுகிறது. தவிர ஒரு படைப்பை முன்னெடுத்து செல்கிற உள்ளுறை எழுத்தாளர் படைப்பு முழுவதும் மௌனம் சாதிப்பதால் அவரை எடுத்துரைப்பவராகக் கருதக்கூடாதென்றும் அறிவுறுத்தப்படுகிறோம். “எடுத்துரைப்பாளர் என்பவர் பனுவலின் நேரடியான குரலாகவும் அல்லது பேசுபவராகவும் அமைய உள்ளுறை எழுத்தாளர் குரல் அற்றவராகவும் மௌனநிலையில் உறைந்து இருப்பவராகவும் கருதப்படுகிறார்”(ந.இ.கோ. பக்கம் 216)

அடுத்து நாம் புரிந்துகொள்ளவேண்டியவர் உள்ளுறை வாசகர். உள்ளுறை எழுத்தாளருக்கு எதிர்வரிசையில் இடம்பெறும் உள்ளுறை வாசகரின் இலக்கணங்கள் உள்ளுறை எழுத்தாளருக்குப் பொருந்தக்கூடியவை: 1.உள்ளுறை எழுத்தாளரைப்போலவே பனுவல் உருவாக்கும் நபர் 2. உண்மை எழுத்தாளரிடமிருந்து வேறுபடும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உண்மையான வாசகரிடமிருந்தும் எடுத்துரைப்பைக் கேட்பவரிடமிருந்தும் வேறுபடுவார். ஒவ்வொரு பனுவலுக்குள்ளும் உள்ளுறை எழுத்தாளரைப்போலவே உள்ளுறை வாசகரும் இருக்கிறாரென்றும், மாறாக ஒவ்வொரு பனுவலும் ‘எடுத்துரைப்பாளரையும் -கேட்பவரை’யும் கொண்டிருக்கவேண்டுமென்கிற நிர்ப்பந்தமில்லையென்றும், நாவலின் தேவை பொறுத்து அதனை பாவிக்கலாமென்றும் அறிகிறோம். ஒரு பனுவலில் எடுத்துரைப்பாளர் இருக்கிறபோது உள்ளூறை எழுத்தாளர்-எடுத்துரைப்பாளர் – கேட்பவர்-உள்ளுறைவாசகர் என்ற சங்கிலித்தொடரில் செய்தி பரிமாறப்படுகிறது என அறிகிறோம். எடுத்துரைப்பாளர்- கேட்பவர் இல்லாதபோது, செய்தி நேரடியாக உள்ளூறை எழுத்தாளரிடமிருந்து – உள்ளுறை வாசகருக்குப் போய்ச்சேருகிறது.

சாட்மன் கூற்றின் அடிப்படையில் சில சந்தேகங்களைக் கட்டுரை ஆசிரியர் எழுப்புகிறார்:

முதலாவதாக ஒரு பனுவலில் உள்ளூறை எழுத்தாளருடைய இடம் எது?
பனுவலைப் பகுத்தாராயவும், வாசகர்களின் நடத்தையினைப் பகுத்தாராயவும் பெரிதும் உதவுமென நம்பப்படும் உள்ளுறை எழுத்தாளர் கோட்பாடு தகவல் பரிமாற்றத்தில் உதவுவதில்லை ( உள்ளூறை எழுத்தாளரின் மௌனம், நேரடியாகத் தகவல் அறிவிப்பில் பங்கின்மை…) என்பதால் உருவாகும் குழப்பம்; அடுத்ததாக எடுத்துரைப்பாளர் குறித்தும் கேட்பவர் குறித்தும் கொடுக்கிற விளக்கங்களால் எழும் சிக்கல்.

இந்நிலையில் மேற்கண்ட சிக்கலிலிருந்து விடுபட இரண்டு வழிமுறைகளை பேராசிரியர் தெரிவிக்கிறார்:

1. உள்ளுறை எழுத்தாளர், உள்ளுறை வாசகர் ஆகிய இருவரையும் தகவல் பரிமாற்றம் நிகழ்கிற எடுத்துரைப்புச் சூழலிலிருந்து அப்புறப்படுத்துவது.
2. எடுத்துரைப்பவர் கேட்பவர் ஆகிய இருவரையும் எடுத்துரைப்புச் சூழலில் கட்டாயமாக இடம்பெறச்செய்வது

தவிர ஒரு கதையில் எப்போதும் கதைசொல்லி இருந்துகொண்டேதான் இருக்கிறார் என்பதால் எடுத்துரப்பின் நிகழ்வுக்கு சாட்மன் கூறுவதைப்போல ஆறுபேர் தேவையில்லை: உண்மையான எழுத்தாளர், உண்மையான வாசகர்; எடுத்துரைப்பாளர், கேட்பவர் என்ற நால்வர் கூட்டணியே போதுமானது.

ஆக மீண்டும் எழுத்தாளர் – வாசகர் என்ற எளிமையான சொல்லாடல்களை மறந்து கதைசொல்லலே ஓர் எடுத்துரைப்பு நிகழ்வாகப் கொள்ளப்படுவதால் மீண்டும் நாம் இப்பிரச்சினையை எடுத்துரைப்பவர் -கேட்பவர் பிரச்சினையாகக் கருதலாம். எடுத்துரைப்பு என்ற பொறுப்பில் அமருகிறபோது, வெற்றிகரமாக நிறைவேற்ற போர்த்திறம் சார்ந்த திட்டங்களையும் உபாயங்களையும் ஓர் எடுத்துரைப்பாளன் விரும்பியோ விரும்பாமலோ மேற்கொள்கிறான்.

இப்பகுதியில் அடுத்ததாகப் பேசப்படுவது எடுத்துரைப்பிற்கும் கதைக்கும் உள்ள உறவுகள்:

அ. காலம் சார்ந்த உறவுகள்

எடுத்துரைப்பு என்பது நிகழ்வுகளால் பின்னப்படுவதால் காலத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றும் அதனதன் தன்மையில் சம்பவத்தைக் கேட்பவருக்கு நம்பிக்கைதரும்விதத்தில் சொல்ல உதவுகின்றன. பிறவற்றைக் காட்டிலும் இறந்தகாலம் கதைசொல்லல் தனித்தன்மையை பெற்றதாகிறது. நடக்கிற, நடக்கவிருக்கிற சம்பவத்தை ஆரூடமாகச் சொல்லவருகிற செய்திகளில் பொதுவாகவே நாம் ஆர்வம் காட்டுவதில்லை. இறந்த கால சம்பவங்கள் எண்பிக்க முடிந்தவையென்ற நம்பிக்கையைத் தரக்கூடியவை அல்லது அவ்வாறான தோற்றம் கொண்டவை என்பதாலேயே செய்தித் தாள்களில் ஆரம்பித்து, புனைகதைவரை அதிகம் இறந்தகாலத்தைப் பேசுபவையாக உள்ளன, இவ்வித எளிதான உளவியல் காரணத்தோடு, ஒரு சம்பவத்தை அது நடந்துமுடிந்தபின்னரே சொல்லமுடியும் என்ற பொதுவானப் புரிதலும் இறந்த காலத்தைப் பயன்படுத்த காரணமாகிறது. அடுத்ததாக அதிகமில்லையென்றாலும் ‘நிகழ இருப்பதாக’ சொல்ல உதவுகிற எடுத்துரைப்பும் இருக்கவே செய்கின்றன அவற்றைக்குறித்தும் கட்டுரை ஆசிரியர் சுருக்கமாக பேசுகிறார். நிகழ இருப்பதை எடுத்துரைப்பது எதிர்காலத்திலும் சொல்லலாம், நிகழ்காலத்திலும் கூறலாம் என்கிறார். காலம் சார்ந்த எடுத்துரப்பில் மூன்றாவதாக வருவது செயலும் எடுத்துரைப்பும் ஒரே தருணத்தில் நிகழ்வதுபோல தோற்றம் கொண்டிருப்பது. நாட்குறிப்பில் இடம்பெறும் பதிவுகள், செய்திதாள்களின் சம்பவத்தை நேரடிவர்ணணைபோல சொல்லும் விதம் ஆகியவற்றை இவற்றிர்க்கு உதாரனங்களாகக் காட்டுகிறார்கள். இப்பகுதியில் கால அளவை நிர்ணயித்து கதைசொல்லலில் ஏற்படும் சிக்கல்கள், நவீன கதையாடல்கள் பலவற்றுள் அவை தவிர்க்கப்படும் விதம் போன்றவற்றையும் ஆசிரியர் அலசுகிறார்.

ஆ. துணைமை உறவுகள் அல்லது எடுத்துரைப்பின் படிநிலைகள்:

இத்தலைப்பின் கீழ் எடுத்துரைப்பிலுள்ள படிநிலைகள் குறித்து விளக்கங்கள் கிடைக்கின்றன.

1. செயல்படும் நிலை:

இது பொதுவாக முதல் எடுத்துரைப்பை நீட்டிக்க அல்லது தொடர்ந்து நிலை நிறுத்திக்கொள்ள கையாளும் முறை. இங்கே எதை எடுத்துரைக்கவிருக்கிறோம் என்பது முக்கியமிழந்து எடுத்துரைப்பது தொடர்ந்து நடைபெறவேண்டியே எடுத்துரைப்பது ஆகும். உதாரனத்திற்கு ‘ஆயிரத்தோர் இரவுகள்’ கதையில் வரும் கதைசொல்லலை ஆசிரியர் நினைவு கூர்கிறார். இங்கே கதைசொல்லியான “ஷெஹெராசதா” வுக்கு தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்துரைப்பு ஓர் தந்திரமாக பயன்படுகிறது

2. விளங்கவைக்கும் நிலை

எந்தேந்தச் சம்பவங்கள் தற்போதைய சூழலுக்கு காரணங்கள் என்ற கேள்விக்கு விளக்கமளிப்பதுபோல கதை சொல்வது அல்லது எடுத்துரைக்கும் முறை. இங்கும் கதைதான் முக்கியம், எடுத்துரைப்பது அல்ல என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

3. அடிக்கருத்து நிலை அல்லது கருத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட நிலை

இவ்வகையான எடுத்துரைப்பில் ஒப்புமை படுத்துதல் மற்றும் வேறுபடுத்திக் காட்டல் மூலமாக சொல்லவந்ததை அழுத்தம் திருத்தமாக உரைப்பது ஆகும்.

எடுத்துரைப்பாளர்கள் குறித்த ஒரு வகைமையாக்கம்

கதையில் எடுத்துரைப்பவரின் பங்களிப்பு, அவர் மீதான நம்பகத்தன்மை இவற்றின் மீதான அடிப்படையில் எடுத்துரைக்கும் தளம்பற்றி பேசும் பேராசிரியர் எடுத்துரைக்கப்படும் கதையைவிட உயர்ந்தவராக அல்லது மேலே இருப்பவராக ஒரு எடுத்துரைப்பாளர் தன்னைக் கருதிக்கொள்ளும்போது, அவரின் எடுத்துரைக்கும் தளம் புறநிலைவயப்பட்டதாக அமையுமென்றும்; அவ்வாறின்றி எடுத்துரைப்போடு தன்னையும் ஈடுபடுத்திக்கொள்பவராக எடுத்துரைப்பாளர் செயல்படும்போது அது இரண்டாவது தளத்தில் இயங்குவதாகக் கருதப்படுமென்றும்; இத்தளங்கள் பின்னர் மூன்று, நான்கென்று எடுத்துரைப்பவரின் பங்களிப்பைப் பொறுத்து மாறுமெனவும் தெரிவிக்கிறார்.

கதையில் பங்குபெறும் பரப்பளவு :

மேற்கண்ட வகையில் பல தளங்களில் இயங்குகிற எழுத்தாளர்களின் பங்களிப்பு படைப்பாளிகளின் உணர்ந்தறியும் ஆற்றலைபொறுத்ததனெனவும் பின்னர் அதன் அடிப்படையில் தன்னை முழுவதும் ஒளித்தோ அல்லது வெளிப்படையாகவோ எடுத்துரைப்புசார்ந்த உபாயங்களை கையிலெடுக்கிறார் என்றும் அற்கிறோம், அந்தவகையில் சுமார் எட்டுவிதமான ஆயுதங்கள் அவரது உதவிக்கு காத்திருக்கின்றன.

1. பின்புலம் குறித்த விவரிப்பு: இதில் எடுத்துரைப்பாளர் ஒப்பீட்டு அளவில் மிகக்குறைந்த அளவே வெளிப்படுவாரென்றும், நாடகம் அல்லது திரைப்படத்தினும் பார்க்க இங்கே மொழிகொண்டு பின்புலத்தை விவரிக்கவேண்டிய நெருக்கடி உள்ளதைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர் அதனாலேயே கதையாடல்மொழி எடுத்துரைப்பாளரின் மொழியாக அமைந்து, நாமும் சொல்லப்படும் பின்புலத்தைவைத்து எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை அளவிட முடிகிறதென்கிறார்.

2. கதைமாந்தர்களை அடையாளப்படுத்துதல்: கதையில் வரும் கதை மாந்தர்களை எடுத்துரைப்பவர் நேரடியாகவும் அல்து மறைமுகமாகவும்; தானாக முன்வந்தோ அல்லது பிறபாத்திரங்களின் ஊடாகவோ கதைமாந்தரின் பண்பினை வாசகர்களுக்குக் கூறலாம். இவற்றைக்கொண்டும் எடுத்துரப்பவரின் உணர்ந்தறியும் ஆற்றலைக் கணிக்க முடியும்.

3. காலம் சார்ந்த சுருக்கம்; எடுத்துரைப்பாளர் தான் எடுத்துரைக்கும் கதையின் காலத்தை ஒழுங்குபடுத்திக்கொள்ள ஏற்கனவே சொல்லப்பட்டவைகளை சுருக்கமாக கதையின் நடுவே சொல்வது எடுத்துரைப்பின் ஒருவகை குணமென்றும் அவ்வாறா¡னசூழலில் அவர் எடுக்கும் பல்வேறுவகையான முடிவுகள் கதைசொல்லலுக்கு உதவுவதோடு, எடுத்துரைப்பாளரின் உணர்ந்தறியும் ஆற்றலை விளங்கிக்கொள்ளவும் உதவுகிறது.

4. கதைமாந்தரை வரையறைப்படுத்துதல்: இங்கே இரண்டுவகையான உணர்ந்தறியும் ஆற்றலை எடுத்துரைப்பாளரிடம் காண்கிறோம்; முதலாவதாக கதை மாந்தரை அடையாளப்படுத்துதல் என்ற விவரிப்பின்மூலம் அக்கதைமாந்தரைப்பற்றி ஏற்கனவே கதைசொல்லி அறிந்திருக்கிறார் என்ற உண்மையொன்று. அடுத்து கதைபற்றிய துல்லியமான பிம்பம், அக்கதைமாந்தரை பொதுமைபடுத்துவதோடு, அவரின் பண்புநலன் எடுத்துரைப்பாளரின் மூலம் அதிகாரமையப்படுத்தப்படுகிறது. ஆக இதனாலும் எடுத்துரப்பவரின் ஆற்றல் நமக்குத் தெரியவருகிறது.

5. கதைமாந்தர் எதைச் சொல்லகூடாது அல்லது எதை எண்ணிப்பார்க்கூடாது என்பது குறித்த அறிதல்: கதைமாந்தரின் செயல்பாட்டை அல்லது ஞானத்தை எடுத்துரைப்பவர் தீர்மானித்திருப்பதை அக்கதைமாந்தரின் செயல்களும், பேச்சும் நமக்குக் காட்டிக்கொடுத்துவிடும். அதன் அடிப்படையிலும் எடுத்துரைப்பவரின் உணரும் ஆற்றலை விளங்கிக்கொள்ளமுடியும்.

6. விளக்கிச்சொல்லுதல் அல்லது விளக்ககுறிப்பு என்பது பனுவலின் இடையில் சொல்லப்பட்டிருக்கும் குறிப்பு அல்லது முன்வைக்கப்படும் கருத்து. இவ்வாறு சொல்லப்படுவது கதைமாந்தரையோ நிகழ்ச்சியையோ, சூழலையோ அல்லாமல் ஒரு குழு அல்லது சமூகம் அல்லது ஒட்டுமொத்த மனித இனம் என்று பெரிய அளவில் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமையும்.

7 அடிக்குறிப்பு: ஒரு புனைகதை உருவாக்கத்தில் அடிக்குறிப்பு என்ற உத்தியைப் பயன்படுத்துதல் என்பது பொதுவாக வழக்கத்திற்கு மாறானது. மேலும் எடுத்துரைப்பவரின் இருப்பை பெரிதும் விளம்பரப்படுத்துவாதகும் என்ற கருத்து வைக்கப்படுகிறது. மொழிபெயர்ப்புக்கோ, கட்டுரைகளுக்கோதேவைபடுவதுபோல புனைகதைக்கு அடிக்குறிப்பு அவசியமில்லை. ஆனால் அதற்கான தேவை இருக்கிறபோது அடிக்குறிப்பை பயன்படுத்துதல் கட்டாயமாகிறது.

8. நம்பகத் தன்மை: ஓர் எடுத்துரைப்பவர் அவர் சொல்லும் கதையையும் விளக்கத்தையும் வாசகர்கள் ஆதாரபூர்வமானவை என்று நம்பிக்கைகொள்ளும்படியாகச் செய்யமுடிந்தால் அவர் நம்பகத்தன்மையை ஏற்படுத்திதரும் எழுத்தாளர். இன்னொரு பக்கம் நம்பகத்தன்மையை வாசகரிடத்தில் ஏற்படுத்தித் தரவியலாத எடுத்துரைப்பாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பனுவலில் வாசகரிடத்தில் சந்தேகத் தன்மையை ஏற்படுத்தித் தருபவர்கள், அதற்கான காரனங்களை அவர்களே உருவாக்குகிறார்கள். நம்பகத் தன்மைக்கு எடுத்துரைப்பவரின் அறிவாற்றல், அவரது தனிப்பட்ட ஈடுபாடு, அவருடையசிக்கலான மதிப்பீட்டுமுறை ஆகியவைக் காரணமாகின்றன.

நம்பகமின்மைக்கு:
அ. எடுத்துரைப்பாளர் பார்வையிலிருந்து உண்மைகள் விலகி முரண்படுதல்
ஆ. பனுவல் மூலமாக வெளிப்படும் செயல்கள், உதாரணமாக எடுத்துரப்பாளரின் தவறுகள் சுட்டிக்காட்டி நிறுவிவிடும்போது
இ. பனுவலில் இடம்பெறும் கதைமாந்தர்களின் பார்வை எடுத்துரைப்பாளரின் பார்வையோடு முரண்பட்டு தொடர்ந்து மோதலுக்கு உள்ளாகும்போது
ஈ. எடுத்துரைப்பாளரின் மொழியே நம்பகத் தன்மையற்று இருக்கிறபோது.

(தொடரும்)

எஸ். பொ. என்ற மாமனிதன்

S.P எஸ். பொ. என இலக்கிய நண்பர்களால் அன்புடன் அழைக்கப்ட்ட எஸ். பொன்னுதுரையை தமிழ் இழந்திருக்கிறது.. சில வருடங்களுக்கு முன்பாக யுகமாயினி சித்தன் முயற்சியில் நண்பர் திருப்பூர் கிருஷ்ணன் அமுதசுரபி இதழ் சார்பாக ஒரு நிகழ்ச்சியை சென்னையில் எனக்காக ஏற்பாடு செய்திருந்தார். அநிகழ்வுக்கு திரு எஸ்.பொ. தலமை தாங்கினார். அப்போதுதான் அவரை முதன்முதலாக நேரில் சந்தித்தேன். அதன் பின்னர் சென்ற ஆண்டு கோவையில் நடைபெற்ற தாயகம் கடந்த தமிழ் நிகழ்வில் அவரைக் காணும் வாய்ப்பு பெற்றேன். அவர் பேசும் தமிழும் சரி எழுதும் தமிழும் சரி காண்டாமணிபோல ஒலித்தபின்னும் ஓசையில் நீள்பவை, நெஞ்சில் வெகுநேரம் எதிரொலிப்பவை. ‘காப்பிக் குடிக்கபோனபோது மனிஷி பார்த்துவிடக்கூடாதென்றார். அந்த அம்மாவிற்குத்தெரியாமல் இனிப்பை அதிகம் சேர்த்தே உடம்பைக் கெடுத்துக்கொள்கிறாரென தெரியவந்தபோது கோபம் வந்தது. நண்பர் க.பஞ்சாங்கமும் நானும் கோவைக்கு விமானத்திற்காக சென்னை மீனம்பாக்கத்தில் காத்திருந்தபோது அவரது உரையாடியது இன்றும் மனதில் இருக்கிறது, குழு அரசியலில் சிக்காத இலக்கியவாதி. அவர் உழைப்பை தமிழ் புரிந்துகொண்டிருந்தது, தமிழர்கள்தான் உணரவில்லை; எதையும் விளம்பரங்களைக்கொண்டு எடைபோட்டு பழகிய தமிழர்கள் அவர் அருமையை விளங்கிக்கொள்ளாதில் வியப்புகளில்லை. எஸ்.பொ.வின் தமிழ்ப் பங்களிப்பும் அது சார்ந்த ஒளிவட்டமும் விலைகொடுத்து பெற்றதல்ல, தமிழ் உள்ளவரை இருப்பார்.

இலங்கு நூல் செயல்வலர் க.பஞ்சாங்கம்: 8: – நோக்கு நிலை (Focalisation)

panchuண்விழிப்பதுமுதல் கண்ணுறங்குவம்வரை மேற்கத்தியர் முதலீடு செய்த அறிவு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறது. இன்றைய மனித வாழ்க்கை மேற்கத்தியர்களால் எழுதப்படுவது. கலை இலக்கியமும் அதற்கு விதிவிலக்கல்ல. “இன்றைய மனிதன் உண்மையில் செய்யவேண்டியது என்ன? என்ற கேள்வியைக் கேட்கிற அல்பெர் கமுய் ” அபத்த உலகில் பிறந்த மனிதனுக்குள்ள பங்கு, வாழ்க்கையை ஏற்பதும், அதனுடன் முரண்படுவதும், அதற்கு அடிமையாகாமலிருப்பதும்” என்கிறார்.  அல்பெர் காமுய் ஒத்த எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கலாம், ஆனால் அவனையொத்த சுய சிந்தனைவாதிகள் நமிடம் இல்லை. படைப்பிலக்கியம் என்பது இட்டுக்கட்டுவதும், வார்த்தை விளையாட்டுகளுமல்ல, ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி, வாசகனுக்கு இலைபோடுவது, வாசகனோடு விவாதிப்பது, தன்னைக்கடந்து செல்லவும் வெல்லவும் வாசகனை அனுமதிப்பது. நவீன இலக்கியத்தின் இன்றைய பரிணாமம் என்பது வாய்ச் சவடால்களால் கண்டதல்ல, சோர்வுறாத சிந்தனைச் சவடால்களால் உருப்பெற்ற்வை. சந்தைப்படுத்துதல் என்ற சொல்லுக்கு உளவியல் நோக்கில் பொருள்தேடவேண்டும், ஒவ்வொருமுறையும் நுகர்வோரிடத்தில் உபயோகிக்கும் பொருள் புதியது, கூடுதற் பயனை அளிக்கவல்லது என்ற நம்பிக்கையை அளிக்கவேண்டும். இதற்கு என்ன வழி? உற்பத்தியாளருக்குத் தனது பொருளைபற்றிய முழுமையான அறிவும் தெளிவும் வேண்டும், அதன் பின்னரே நுகர்வோரை நெருங்கவேண்டும். புரட்சியைத் தொழில்களில் மட்டுமல்லை சிந்தனைகளிலும் செய்துகாட்டுபவர்கள் மேற்குலகினர். நவீன இலக்கியத்தின் பல படிநிலைகள் இந்திய இலக்கிய மரபிற்குப் புதிதல்ல. அவற்றின் தடங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் ஒப்பீடு அளவில் ஆய்வு செய்து கீழைத் தடத்தில் ஓர் இலக்கிய மரபைக் கட்டமைக்க தவறி இருக்கிறோம்.

 

நோக்கு நிலை என்றால் என்ன?

 

“ஒரு பனுவலில் கதையென ஒன்று கதைசொல்லியின் மூலமாய் ஒரு காட்சிகோணத்தின் ஊடாகசொற்களால் முன்வைக்கபடுகிறது” (பக்கம் 207 ந.இ.கோ.) என்று எளிமையாகக் கட்டுரை ஆசிரியர் நமக்கு நோக்குநிலையை விளக்குகிறார். ஆங்லேயர்களாலும் அமெரிக்கர்களாலும் ஒரு கோணத்தில் பார்த்தல் எனக்கூறியதையே ழெரார்ட் ழெனெத் (Gérard Genette) என்ற பிரெஞ்சு இலக்கிய கோட்ப்பாட்டாளர் நோக்குநிலை என அழைப்பதாக தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ழெரார் ழெனெத் ஒரு பிரெஞ்சுக்காரர் என்பதால் அவரைப்பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தைச் செய்வது நல்லதென நினைக்கிறேன். 1930ல் பிறந்த ழெனெத் அமைப்பியல்வாதிகளில் ஒருவர், இலக்கிய விமர்சகர் அனைத்துக்கும் மேலாக பல இலக்கிய கருத்துருவாக்கங்களை முன்வைத்த மொழிஅறிஞர். அவருடைய Palimpsestes. La Littérature au second degré ( Editions Seuil -1982) முக்கியமானதொரு நூல். ‘பாலம்செஸ்ட்’ ( Palimsests) என்பது என்ன? ஒரு பனுவலில் சில சொற்களை அல்லது சில வரிகளை மாற்றிச்சொல்ல நினைக்கிறோமென்று வைத்துக்கொள்ளுங்கள், என்ன செய்கிறோம், ஏற்கனவே எழுதிய சொற்களை அல்லது வாக்கியங்களைக் கலைத்துவிட்டு அதன் மீது புதிய சொற்களை அல்லது புதிய வரிகளை எழுதுகிறோம், அவ்வாறு எழுதுகிறபோதும் பழைய சொற்களின் அல்லது வாக்கியங்களின் தடம் சரியாக கலைபாடமல் இருக்கிறதில்லையா அதன் பெயரே பாலம்செஸ்ட். ழெனெத்திற்கு இந்த பாலம்செஸ்ட்போலவே ஒவ்வொரு பனுவலிலும் ஏதோவொரு பனுவல் ஒட்டிக்கிடக்கிறது. சென்ற நூற்றாண்டில் எண்பதுகளில் இக்கருத்துருவாக்கத்தை ஜெனெத் முன்வைத்தபோது மேற்குலக விமர்சனதளம் பெரும் அதிர்வைக்கண்டது. இலக்கிய விமர்சனங்ளை வைக்கிறபோது ழெனெத்தின் புதிய அனுகுமுறையுடன் பனுவலை நெருங்க வேண்டியிருந்தது.

 

ழெனெத்தின் நோக்கு நிலை கோட்பாட்டின் பொருள் என்ன, எவ்வகையில் எடுத்துரைப்பை மேம்படுத்துகிறது என்பதையெல்லாம் பேராசிரியர் விரிவாகப் பேசியிருக்கிறார். இரண்டு கேள்விகள் எழுப்பப்ட்டிருக்கின்றன. முதற் கேள்வி யார் பார்ப்பது? இரண்டாவது: யார் பேசுவது? உடனடியாகவும் வெளிப்படையாகவும் நமக்குக் கிடைக்கக்கூடிய பதில் இரண்டும் ஒருவரே – அந்த ஒருவரை கதைசொல்லியென்றோ அல்லது எடுத்துரைப்பவர் என்றோ நாம் அழைக்கலாம், கூடுதல் விளக்கங்களை அறிவதற்கு பேராசியரின் நவீன இலக்கியகோட்பாடுகள் நூல் உங்களுக்கு உதவும்.

 

ழெனெத்தின் நோக்கு நிலையைச் சற்று எளிமைபடுத்தி புரிந்துகொண்டு, அதன் பிரதான கூறுகளில் கவனத்தைச் செலுத்துவோம். கதைசொல்லல் அல்லது எடுத்துரைத்தல் என்ற சொற்களில் இடம்பெறும் சொல்லல், உரைத்தல் இரண்டும் ‘பேசுதல்’ என்ற வினைச்சொல் குடும்பத்தைச் சேர்ந்தவை.,  இதனை Dégès என்ற கிரேக்க சொல்லால் அழைக்கிறார்கள். நோக்கு நிலையில் இரண்டாவதாக இடம்பெறும் ‘பார்த்தல்’ என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் Mimèsis என்று பெயர். ஆக நோக்கு நிலை என்ற சொல்லை இருவகையில் பொருள் கொள்ளலாம். முதலாவது நோக்குநிலையை ஓர் அறிவியல் கலைச்சொல்லாக அணுகும் வழிமுறை. அதன் படி இங்கே எடுத்துரைப்பின் பணி, வாசகரின் கவனத்தை ஒரு பொருள் அல்லது கதைமாந்தர் அல்லது இப்படி ஏதோ ஒன்றைப்பற்றிய விபரத்தின்மீது திருப்புவது – இதுவே யார் பார்ப்பது ( Mimèsis) என்ற கேள்விக்கான பதில். நோக்குநிலை பற்றிய இரண்டாவது அணுகுமுறை காட்சிவெளி சார்ந்த எடுத்துரைப்பு (la perspective narrative) .

 

நோக்கு நிலையின் செயல்பாடுகள் எடுத்துரைப்பில் தன்னிலை மற்றும் படர்க்கை மொழியாடல்களில் நடைபெறுகின்றன. இவை அனைத்திலும் சூத்ரதாரியாக இருப்பவர் கதைசொல்லி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எடுத்துரைத்தல் பற்றிய ஆய்வு என்பது ஒரு கதைக்கும் -சொல்லலுக்கும் உள்ள உறவு முறைகளை விளங்கிக்கொள்வது. நோக்கு நிலைவழி இவற்றை வகைப்படுத்தியிருக்கிறார் கட்டுரை ஆசிரியர்:

 

1. கொள்கை அளவில் நோக்கு நிலையும் எடுத்துரைத்தலும் வேறு வேறு
2. படர்க்கை மாந்தரை எடுத்துரப்பவராக பயன்படுத்துதல்
3. எழுவாய் வழி கதைசொல்லல்
4. நோக்கு நிலையைப்பொறுத்தவரை தன்மையில் சொல்லப்பட்டாலும் படர்க்கை நிலையில் சொல்லப்பட்டாலும் வேறுபாடுகள் இல்லை. இரண்டுமுறையிலும் பனுவல் உலகில் நோக்கு நிலைஎன்பது ஒரு கதை மாந்தரின் பண்பாடாகசெயல்படுகிறது. இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள ஒரே வேறுபாடு எடுத்துரைப்பவரின் அடையாள வேற்றுமைதான்.

 

மேற்கண்ட அடையாள வேற்றுமையை அறிவது ழெனெத்தின் கோட்பாட்டைக் கூடுதலாக விளங்கிக்கொள்ள உதவுமென நினைக்கிறேன். ழெனெத் நான்குவகை கதை சொல்லிகளை அறிமுகப்படுத்துகிறார்

 

I. கதைசொல்லி இடம்பெறலாம் அல்லது இடம்பெறாமலும் போகலாம் என்கிற சூழலில்:

 

1. கதைக்கு வெளியே கதை சொல்லி

 

இக்கதைசொல்லியை ழெனெத் Le narrateur extra diégétique என அழைக்கிறார். இங்கே கதை சொல்லி கதைமாந்தரல்ல. கதைக்கு வெளியே இருப்பவர், வாசகனிடம் நேரடையாகப் பனுவலைப் படைத்தவர் பேசுதல். ஹோமரின் ஒடிஸ்ஸியஸ் ஓர் உதாரணம்.
எடுத்துக்காட்டு: “முன்பொருகாலத்தில் சிவப்பி என்றொரு பெண்ணிருந்தாள். பெற்றோர்கள் அப்பெயரிட்டு அழைக்கக் காரணம்…” எனத் தொடங்கி பாடம் எடுக்கும் முறை. பெருமாலான பழைய நூல்கள் இவகையிலேயே கதைசொல்லலை நிகழ்த்தியிருக்கின்றன.

 

2. கதைக்குள் இருந்து கதை சொல்லல்.

 

இக்கதை சொல்லியை ழெனெத் Le narrateur intra diégétique என அழைக்கிறார். கதைசொல்லி கதைக்குள் இடம்பெறும் கதை மாந்தர்களில் ஒருவர். பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் சிம்மாசன பொம்மை பேசுவதுபோல கதைசொல்லப்படுவதை இங்கே உதராணமாகக் கொள்ளலாம்.

 

எடுத்துக்காடு: “என் பெயர் சிவப்பி, நான் பிறந்தபோது மிகவும் சிவப்பாக இருந்ததைவைத்து எனக்குப் பெற்றோர்கள்.. ” எனக் கதைமாந்தரே கதை கூறல் இவ்வகையில் அடங்கும்.

 

11 கதைக்குள் கதைசொல்லி என்றொரு கதைமாந்தர் இடம் பெற்றால்

 

1. பிறர்கதையைக்கூறும் கதைசொல்லி

 

ழெனெத் இக்கதைசொல்லியை Le narrateur hétéro diégétique என அழைக்கிறார். அவர் கதையில் வரும் பிறகதைமாந்தர்களைப் பற்றி பேசுபவராக இருக்கிறார். ஹரூகி முராகாமியின் ஸ்புட்னிக்கின் காதலர்கள் உதாரணம்.

எடுத்துக்காட்டு: “சிவப்பி என்ற எனது தோழியைப்பற்றி உங்களுக்குக் கூற வேண்டுமென நினைக்கிறேன்….”

 

2. தன்கதையைக்கூறும் கதை சொல்லி

 

ழெனெத் இவரை le narrateur homo diégétique என அழைக்கிறார். இவ்வகைக்கு உதாரணமாக யு.ஆர். அனந்தமூர்த்தியின் பாரதிபுரத்தைக் கூறலாம்.

 

எடுத்துக்காட்டு: “சிவப்பியாகிய எனது கதையைச் சொல்லப்போகிறேன்..” எனத் தொடங்குவது ஆகும்.

 

நோக்கு நிலை வகைபாடுகள்:
இதனை இரண்டு முக்கிய தலைப்பின்கீழ் கட்டுரை ஆசிரியர் விவரிக்கிறார்:

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

 

1. கதையோடு தொடர்புடைய நிலைப்பாடு

 

இத்தலைப்பின் கீழ் சிலவகை நோக்குநிலைகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது அகநிலைபட்ட நோக்கு நிலை மற்றது புற நிலைபட்ட நோக்குநிலை.

புறவயப்பட நோக்குநிலை: எடுத்துரைப்பு முகவரோடு இது மிகவும் அணுக்கமானதென்று அறிகிறோம். எடுத்துரைப்பாளருக்கும் கதைமாந்தருக்கும் உள்ள உளவியல் கலந்த இடைவெளி மிகவும் குறுகிய அளவில் இருக்கிறபோது இது எழுவாய் எடுத்துரைப்பாக நிகழ்கிறது..

அகவயப்பட்ட நோக்குநிலை: இது பனுவலுக்குள் இடம்பெறுவது, பொதுவில் கதை மாந்தர்களின் நோக்குநிலையாக இது அமையுமென்றும், அதே வேளை சில நேரங்களில் அக நிலைபட்ட நோக்கு நிலைபடுத்துதல் என்பது பனுவலின் நிலை அமைதியோடு இணைந்து ஒன்றாகிவிடும் எனவும் கதைமாந்தர்களின் பண்பு நலன்களை அடையாளப்படுத்த தவறிவிடுமென்றும் சொல்லப்படுகிறது.

 
2. தொடர்ந்து நீடிக்கும் தன்மை

 

எடுத்துரைப்பு முழுவதும் நோக்கு நிலைப்படுத்துவதென்பது தொடர்ந்து நீடிக்கிறதென்றும்; நோக்கு நிலையின் கோணத்தையும் தன்மையினையும் இடம், களம், பல்வேறு வகைக் கூறுகள் தீர்மானிக்கின்றன என்பதையும் இப்பகுதியில் ஆசிரியர்எடுத்திரைத்திருக்கிறார்.

அ. வெளி அல்லது இடம்: இங்கே நோக்கு நிலைபடுத்துபவர் எடுத்துரைக்கும் பொருளிலிருந்து வெகு தூரத்தில் ஒரு புள்ளியில் இருந்துகொண்டு சொல்வதென்றும், இந்நிலைப்பாடு தொன்ம இலக்கியங்களில் அதிகம் இடம் பெற்றிருக்கிறதென்ற செய்தி கிடைக்கிறது.

ஆ. காலம்: ஒரு கதை மாந்தர் தமது கடந்தகாலத்தைப் பின்நோக்கிப் பார்ப்பதற்குக் காலம் துணை நிற்கிறது. இங்கே கடந்தவைஅனைத்தும் ஒரு காலத்திற்கு உரியவையாக பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட வெளி காலம் ஆகியவற்றோடு உள்வியல் கூறுகள், அறிதல் கூறுகள் உணர்ச்சிக்கூறுகள் கருத்துநிலைக்க்கூறுகள் என்கிற பல்வேறு அம்சங்கள் கதைசொல்லியின் நோக்குநிலையில் சூழலுக்கு ஏற்ப இடம் பெற்று கதைசொல்லலுக்கு துணை நிற்கின்றன.

(தொடரும்)

பத்ரிக் மொதியானோ -நோபெல் பரிசு!

France Nobel Literature பிரான்சு நாட்டில் வாழும் இந்தியன் என்றவகையில் இருவகையில் பெருமை.

முதலாவதாக அமைதிக்கான நோபெல்பரிசை பாகிஸ்தானிய சிறுமிக்கும் இந்தியருக்குமாக பகிர்ந்தளிந்து எல்லைச் சண்டையைத் தற்காலிகமாக நார்வே நோபெல் பரிசு நிறுத்திவைத்திருக்கிறது. பரிசுக்குறியவர்கள் இருவரும் இளஞ்சிறார்களுக்காக உழைத்திருக்கிறார்கள் என்கிறது தேர்வுக்குழு.

இரண்டாவதாக – பிரெஞ்சு இலக்கியத்திற்கு கிடைத்துள்ள நோபெல் பரிசு. ஒரு சிலருக்கு நோபெல் பரிசு கிடைக்க வாய்ப்புகளுண்டு என நான் நம்புபவர்களில் மிஷெல் ஹூல்பெக், பத்ரிக் மொதியானோ உண்டு, பிலிப் சொலியெ கூட அதற்கான தகுதிகொண்டவர்தான். ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, பிரெஞ்சு இலக்கியத்தை பரிசீலித்தபிறகே பிறமொழிகளில் வந்த நூல்களைத் தேர்வுகுழுவினர் தங்கள் கவனத்தில் கொள்கின்றனர் என்றார். அவர் சொல்வது உண்மையாகவும் இருக்கக்கூடும். இலக்கியத்திற்கான நோபெல் பரிசுபெற்ற உலக நாடுகளில் பிரான்சு முதலிடத்தைப் பெறுகிறது. இதுவரை 57 நோபெல் பரிசுகளை வென்றுள்ள பிரான்சு இலக்கியத்திற்கு மட்டும் 15 பரிசுகளை வென்றுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன.

பத்ரிக் மொதியானோவின் சிறுகதையை ஏற்கனவே மொழி பெயர்த்து திண்ணை இணைய இதழில் வந்துள்ளது. பின்னர் காலசுவடு வெளியீடான ‘உயிர்க்கொல்லி’ தொகுப்பிலும் இக்கதை உள்ளது நண்பர்களுக்காக:
சேன் நதி –
பத்ரிக் மொதியானோ

இடம் பூலோஞ், புவான்-துய்-ழூர் என்ற ஆற்றோர வீதி. சூரியனின் ஒற்றைக் கதிரொளியில் பிரகாசித்த கட்டடமொன்றின் சுவரில் பிளாஷ்’ (Blache) என்று நீல வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது, எழுத்துக்கள் மங்கியும் உரிந்துமிருந்தன. ‘அருகிலிருந்த காப்பிக் கடைக்காரனிடம் விசாரித்தேன். அவன், .’பிளாஷ்’ என்ற பேரில் வெகுகாலத்திற்குமுன் சந்தின் தொங்கலில் சைக்கிள் கடையொன்றை நடத்தியவன் இறந்துவிட்டதாகவும், அவனது ஒரேமகள் தனக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டு இளம்வயதில் புறப்பட்டுப் போனவவள், பிறகு திரும்பவேயில்லை”, என்றான்.

‘பிழு'(1) வின் தாயார்க்காரியான ‘கோந்த்தெஸை'(2) நினைத்துக்கொண்டேன். முதலாம் அல்பெர் வீதியிலிருந்த தொகுப்பு வீட்டிலிருந்த மேசையைக் குடைந்தபோது ‘பிளாஷ் ஒதெத்’ என்ற பெயரில் அடையாள அட்டையொன்று கையிற் கிடைத்தது. அடையாள அட்டையின் நிழற்படத்தினை பார்த்த மாத்திரத்தில் அவள் ‘பிளாஷ் ஒதெத்’ என்று புரிந்துவிட்டது. பாதையைத் தொலைத்துவிட்டு அலைகிறபோது, அதிர்ஷ்டவசமாக ஏதாவது நேரும், அப்படித்தான் எனக்கும் நடந்தது. ஒருநாள் மாவட்ட நிருவாக அலுவலகத்தில், “‘பிளாஷ்’ என்ற பெயரில் தகவல் ஏதேனும் கிடைக்குமா”, என்று அங்கிருந்த பெண் உதவியாளரை விசாரிக்கப்போக, அவள் கொஞ்சம் நல்லமாதிரியென நினைக்கிறேன், நான்கைந்து பக்கங்கள் தேறும் கையிற் திணித்தாள்.

அப்பெயர் பட்டியல்கள் தட்டச்சிலிருந்தன: சேன் நதியும் மார்ன் நதியும் சந்திக்கிற ஷராந்தோன் பக்கமிருந்த இரவுவிடுதிகளையெல்லாம் வலம் வந்தாயிற்று.

பட்டியலில் இருந்த பெயர்களில் பிளாஷ் ஒதெத், வயது பதினெட்டு, 23-bis, கே துய் புவான் துய் ழூர், பூலோஞ்- என்பதுமொன்று.

முதலாம் அல்பெர் வீதி, பூலோஞ் -ஆற்றோர சாலை பக்கமிருந்த ‘பிளாஷ்’ பெயர்கொண்ட சைக்கிள்கடை, தடிச்சி மதெலின் லூயி தனது சொகுசுப்படகை நிறுத்திவைக்கிற புத்தோ தீவு, நதியின் மற்றபக்கம், ஷரந்த்தோன் பாலம்.. அத்தனையும் சேன் நதியோடு சம்பந்தப்பட்டவைதான். ஏன், பிழுவின் கண்களை நினைத்துக்கொள்ளும்போதுகூட சேன் நதியின் நிறம்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

*******

அப்போது எனக்குப் பதினெட்டு வயது. நாடகப் பட்டறையில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த நேரம் – பள்ளிக்கு, ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கம்’ என்று பெயர். அந் நாடகப்பட்டறை மாணவர்களில் ‘பூபூல்’ என்றழைக்கபட்டத் தடியனைத் தவிர வேறெவரும் தொழில்முறை நாடக நடிகர்கள் இல்லை. பள்ளியில் வாரத்திற்கு மூன்றுமுறை மொத்த மாணவர்களுக்குமாகச் சேர்த்து, எங்கள் பயிற்சி ஆசிரியையால், ‘பொது வகுப்பு’ எனப் பெயர் சூட்டப்பட்ட சிறப்பு வகுப்புகள் நடந்து வந்தன, நான் தவறாமல் அவ்வகுப்புகளுக்குச் செல்வேன். நாடகப் பட்டறையை நிர்வாகியும் எங்களுக்குப் பயிற்சி ஆசிரியையுமாக இருந்த பெண்மணி ஒரு காலத்தில் ‘பிரெஞ்சு நாடகத்துறையில்’ தீவிரமாக உழைத்தவள். தனது பணிக்காலம் முடிவுக்கு வந்த நேரத்தில் நாடகத்துறையிலிருந்த ஈர்ப்பும், வெகுசனத் தொடர்பில் கொண்டிருந்த பற்றுமே ‘எத்துவால்’ அருகே, ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தை’ அவள்’ தொடங்குவதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன. ‘வழக்கமான மேடை நாடக அரங்குகள், திரை அரங்குகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிற்குத் தான் எதிரியென்று ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கம்’ வெளியிட்டத் துண்டு பிரசுரங்கள் தெரிவித்தன.

‘பொது வகுப்பு’ என்கிறபோதெல்லாம் இரவுடன் கூடிய கடும்பனிக்காலம் நினைவுக்கு வருகிறது. இரவு எட்டு மணியிலிருந்து பத்தரைமணி வரை எங்களுக்கு வகுப்பு. வகுப்பு முடிந்ததும் இருட்டில் கலப்பதற்கு முன்பாக பூபூலும் நானும் உரையாடியபடி வெளியேறுவோம். எங்கள் உரையாடலில் வேறு சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ‘புபூல்’, ‘சோனியா ஓ தொய்யே’ என்ற இரண்டு பெயர்களைத்தான் என்னால் இப்போது ஞாபகப்படுத்த முடிகிறது..

‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தின்’ நட்சத்திரமென்று அவளைச் சொல்லலாம். நாங்கள் அனைவரும் கலந்துகொள்கிற ‘பொது வகுப்பிற்கு’ மொத்தத்தில் இரண்டு அல்லது மூன்று முறைதான் அவள் வந்திருப்பாள். எங்கள் நாடகப் பட்டறை ஆசிரியரிடம், தனக்கென பிரத்தியேகமாகப் பாடஞ்சொல்லித் தர ஏற்பாடு செய்துகொண்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். தனி வகுப்பு என்பது எல்லோராலும் முடிகிற காரியமல்ல- அதற்கெல்லாம் பணம் வேண்டும். அவளைத் தவிர அங்கிருந்த வேறு மாணவர்களுக்கு, என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் – அதற்குச் சாத்தியமில்லை. அவள் நல்ல அழகு, முகமாத்திரம் சற்று ஒடுங்கலானது, நிர்மலமான கண்கள். பார்த்த மாத்திரத்தில் எவரையும் கவரக்கூடியவள், எங்கள் கவனத்தை ஈர்த்ததில் வியப்பேதுமில்லை. எங்களைக் காட்டிலும் கண்டிப்பாக ஒரு சில ஆண்டுகளாகிலும் வயதில் மூத்தவளாக இருக்கவேண்டும். போலந்து நாட்டு பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்தவளெனச் சொல்லிக்கொண்டாள். அவளைப்பற்றி இரண்டு மூன்று சஞ்சிகைகள் அந்த நேரத்தில் எழுதப்போக, கிட்டதட்ட ஒருமாத காலம் வகுப்பிற்கு அவள் வரவில்லை, எங்களுக்கு ஆச்சரியம். வெகுசீக்கிரம் பொது மேடைகளில் அவள் தோன்றவிருப்பதாகவும் அப்போது பேச்சிருந்தது.

‘கோந்த்தெஸ்’ என்ற பெயரை நாங்கள்தான் அவளுக்கு வைத்திருந்தோம். அப்பெண்ணுடைய முதல் மேடையேற்றத்தைப் பற்றிய எந்தக் கேள்வியையும் நாங்கள் கேட்டுவிடக்கூடாதென்பதில், நாடகப்பட்டறையின் நிர்வாகி கறாராக இருந்தாள். ஆனல் எங்கள் குழுவில் புபூல் மிகவும் கெட்டிக்காரன்; அவனுக்கு நாடக அரங்குகள், திரை உலகம், கேளிக்கை விடுதிகள் சம்பந்தப்பட்ட இடங்களின் அறிமுகம் இருந்ததால் அவளைப்பற்றிய எல்லாத் தகவல்களும் அவ்வப்போது வந்து சேர்ந்தன. முதலாம் அல்பெர் வீதியில் ஆடம்பரமான மாடி வீடொன்றில் ‘கோந்த்தெஸ்’ வசிப்பதாகவும், பின்புலத்தில் என்னவோ நடக்கிறதென்றும் பொடிவைத்துப் பேசினான்: “அவளை சௌகரியமாக யாரோ பராமரிக்கவேண்டும். நகைக்கடைகளிலும், துணிக்கடைகளிலும் இப்படி ஏராளமாக செலவு செய்ய எல்லோருக்கும் ஆகிற காரியமா என்ன?”, என்றான். “La Tour d’Argent (‘லா தூர் த்’அர்ழான்) உணவு விடுதியில் சுமார் பத்துபேருக்கான இருக்கைகளை முன்கூட்டியே சொல்லிவைத்து, இன்னார்தானென்றில்லை எவரையும் அவளுடன் உணவருந்த அழைக்கிறாளென்றும், வந்தவர்களுக்கு அன்பளிப்புகளை தாராளமாக வாரி வழங்குகிறாளென்றும், அன்பளிப்புப் பெற்றவர்கள் பதிலுக்கு அவளுக்கு வேண்டியதைச் செய்துகொடுக்கிறார்களென்றும் கூறி அவள் நினைத்ததை சாதிக்க முடிகிற தந்திரத்தை ஒரு முறை விளக்கினான். இப்படியெல்லாம் அவளை விமரிசித்தபோதிலும் புபூலுக்கு, தன்னையும் ஒருநாள் அவளுடன் உணவருந்த அழைக்கமாட்டாளா? என்ற ஏக்கம் நிறையவே இருந்தது..

சிறுமி ‘பிழு’ மாத்திரம் இல்லையெனில், எல்லாச் சம்பவங்களுக்கும் குப்பைக்குப் போகிற மலர்ச்செண்டின் கதிதான்.

எங்கள் நாடகப் பட்டறை மாணவர்களிடையே பரிசுபோட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த நாளொன்றில்தான் அவளை முதன் முதலில் சந்தித்தேன். நிகழ்ச்சியை பள்ளியிலேயே விசாலமாக இருந்த ஓர் இடத்தில் சில மாற்றங்கள் செய்து, நாடகப் பட்டறையின் முதல்வர் பெண்மணி ஏற்பாடு செய்திருந்தாள். சுமார் ஐம்பது பார்வையாளர்களும், கலையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் பரிசிக்குரியவர்களை தேர்வு செய்யவென்று நடுவர் ஒருவரையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

போட்டி ஏற்பாடு செய்திருந்தபோது, வகுப்புக்கு நான் புதிய மாணவன், மேடைக்கூச்சமும் இருந்தது, போட்டியில் கலந்துகொள்ளாமல் வெளியில் சென்றிருந்தேன். நான் திரும்ப வந்தபோது போட்டி நடந்து, பரிசுக்குறியவர்களை அறிவித்தும் முடித்திருந்தார்கள். நிகழ்ச்சி நடந்த மண்டபத்திலிருந்து பார்வையாளர்கள்கூட புறப்பட்டுபோய்விட்டார்கள். ஒரு சில நண்பர்களுடன் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்த புபூல் என்னைக் கண்டதும், பேச்சைத் துண்டித்துக்கொண்டு சட்டென்று என்னிடம்:

– முதல் பரிசைப் பெற்றது யாரென்று நினைக்கிற? கோந்த்தெஸ்- எனக்கு ‘ம்யூசிக்-?¡லுக்கான'(3) வாய்ப்பு கிடைத்திருக்கிறது, என்றான். எனது பாராட்டுதலை அவனுக்குத் தெரிவித்தேன்.

– ‘La Dame aux Camelias’ நாடகத்திலிருந்து மரணக்காட்சியைப் தேர்வு செய்து அவள் நடித்தாள். ஆனால் வசனத்தைச் சுத்தமாக மறந்துவிட்டாள், என்று என் காதில் முணுமுணுத்தான், தொடர்ந்து, திட்டமிட்டபடிதான் எல்லாம் நடந்தது தம்பி.. பேசிவைத்துக்கொண்டு அதன்படிதான் காய் நகர்த்தியிருக்கிறார்கள். நடுவருக்கும், நம்முடைய மதாம் சான்-ழேனுக்கும் உறையில் பணம் போயிருக்கிறது, என்றான்.

மதாம் சான்-ழேன் எங்கள் பயிற்சி ஆசிரியை, பிரெஞ்சு நாடக உலகம் அவளைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறது.

– “கோந்தெஸ்’க்காகவே நிழற்படக் கலைஞர்கள் வரவழைக்கபட்டார்கள் தெரியுமா? பேட்டிக்குக் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நட்சத்திரமென்றால் சும்மாவா? ம்.. பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்திருப்பாளென நினைக்கிறேன்” தொடர்ந்து புலம்பி கொண்டிருந்ததான்..

அப்போதுதான் கவனித்தேன், மண்டபத்தில் கடைசியாக சிவப்பு நிற வெல்வெட் இருக்கையொன்றில் சிறுமியொருத்தி உறங்கியபடியிருந்தாள்.

– யார் அது?- புபூலிடம் கேட்டேன்.

– ‘கோந்த்தெஸ்’ மகள். அவளுக்கு நேரமில்லையாம். மதியத்திற்கு, அந்தபெண்ணைப் பார்த்துக்கொள்ளும்படி என்னைக் கேட்டுக்கொண்டாள். ஒத்திகையொன்றிற்குப் போகவேண்டியிருக்கிறது, என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். உனக்கு சரிவருமா?

– உனக்காக வேண்டுமென்றால் செய்யறேன்.

– கொஞ்சநேரம் அவளைக் கூட்டிக்கொண்டு உலாத்து, பிறகு முதலாம் அல்பெர் வீதியிலிருக்கும் 21ம் எண் வீட்டில் அவளை கொண்டுபோய் சேர்த்திடு, வேறு பெரிதாக செய்ய ஒன்றுமில்லை.

– சரி.

– அப்போ நான் புறப்படறேன். கேளிக்கை விடுதிகளில் இனி நானும் மேடையேற வேண்டியிருக்கும்…

போகும்போதுதான் கவனித்தேன் பதட்டத்துடனிருந்தான். உடலில் முத்துமுத்தாக வியர்வைத் துளிகள்.

– புபூல், கவலையை விடு நான் பார்த்துக்குறேன். கேளிக்கை விடுதிகளில் நீயும் மேடை ஏற வாய்ப்பு அமையுமென்று சொல்ற.. வாழ்த்துக்கள்.

புபூலும் போன பிறகு மண்டபத்தில் எங்களைத் தவிர வேறு நபர்களில்லை. சிறுமி இன்னமும் உறக்கத்திலிருக்கிறாள். அவளை நெருங்கினேன். கன்னம் நாற்காலில் படிந்திருக்க, இடது கை தோளிலும், முன் கை மார்பிலுமாக இருந்தன. தலைமயிர் நெளியாய் நெளியாய் தேன் நிறத்திலிருந்தது. வெளிர் நீலத்தில் மேலங்கியொன்றை அணிந்திருந்தாள். கால்களில் பழுப்புவண்ண ஷூக்கள். ஏழு அல்லது எட்டு வயது இருக்கலாம்.

தோளில் மெல்லத் தட்டி எழுப்ப, கண் விழித்தாள்.

கோந்த்தெஸ் கண்களைப்போலவே சிறுமியின் விழிகளிரண்டும் சாம்பல்நிறத்தில் ஒளிர்ந்தன.

– வெளியிற் சென்று உலாத்திவிட்டு வரலாம். என்ன?

அவள் வியப்புக்குள்ளாகி இருக்கவேண்டும், முகத்தில் தெரிந்தது. எழுந்து கொண்டாள். அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டேன், இருவருமாக ‘மரிவோ நாடகப்பயிற்சி அரங்கத்தை’ விட்டு வெளியில் வந்தோம்.

அவென்யூ §?¡ஷ் வழியா இருவரும் நடந்து, மோன்சோ பூங்காவுடைய நுழைவாயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

– என்ன உள்ளேபோய் உலாத்திவிட்டு வரலாமா?

– ம்.- சம்மதம் என்பதுபோல தலையாட்டினாள்.

இடது திசையில் புல்வார் பக்கமாக, வண்ணம் உரிந்த ஊஞ்சல்களும், பழைய சறுக்குமரமொன்றும், மணற்திட்டொன்றும் இருந்தன..

– என்ன விளையாட ஆசையா?

– ஆமாம்.

அங்கே குழந்தைகள் பெரியவர்கள் ஒருவருமில்லை. சீக்கிரம் பனிகொட்டினாலும் கொட்டலாம், பஞ்சுபோல வெண்மையான மேகமூட்டத்துடன் வானம். இரண்டு அல்லது மூன்றுமுறை சறுக்கு மரத்தில் விளையாடியவள், தயக்கத்துடன் தன்னை ஊஞ்சலில் ஏற்றிவிடச் சொல்லி கேட்கிறாள். அப்படியொன்றும் எடை போட்டவளாக இல்லை. தூக்கி உட்காரவைத்ததும் ஊஞ்சலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

– உனக்கு என்ன பேரு?

– மர்த்தீன். ஆனா என்னை அம்மா பிழுவென்றுதான் கூப்பிடுவாள்.

மணல்திட்டில் ஒரு சிறிய முறத்தைப்பார்த்ததும், மண்ணைக் கிளறி விளையாட ஆரம்பித்தாள். அருகிலேயே சிமெண்ட்டால் செய்த இருக்கையொன்று இருந்தது. அதிலமர்ந்தபடி அவள் விளையாடப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் கவனித்தேன்: அவளணிந்திருந்த காலுறைகள் வித்தியாசமாகவிருந்தன: ஒன்று கரும்பச்சை வண்ணத்தில் முழங்கால் வரையும், மற்றொன்று நீலவண்ணத்தில் பழுப்பு வண்ண ஷூவை இறுக்கியிருந்த கயிற்றுக்கு மேலாக ஒரு சில செ.மீட்டர்கள் கூடுதலான அளவிலும் இருக்கக் கண்டேன். அன்றையதினம், உண்மையில் ‘கோந்த்தெஸ்’தான் தனது மகளுக்கு உடுத்தி அனுப்பியிருப்பாளா? என்றெனக்குச் சந்தேகம்.

அதிக நேரம் ஈரமணலில் இருந்தால், சிறுமியின் உடம்புக்கு ஆகாமற் போனாலும் போகலாம் என்ற பயத்தில், அவளுடைய ஷூக் கயிறுகளை ஒருமுறை சரிபார்த்தபிறகு பூங்காவின் மறுபக்கம் அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு சில குழந்தைகள் குடைராட்டின குதிரைகளில் சுற்றிவந்தனர். அவள் மரத்தலான அன்னமொன்றில் உட்கார விரும்பினாள். குடைராட்டினம் கிரீச்சிட்டுக்கொண்டு சுற்றியது. எனக்கெதிரே வரும்போதெல்லாம் வலது கையை உயர்த்தி ஆட்டினாள், இடது கரம் அன்னத்தின் கழுத்தை வளைத்துப் பிடித்திருக்க உதடுகளுக்கிடையே சிறிய புன்னகை.

ஐந்து சுற்று வந்திருப்பாள், அம்மா உன்னை எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள், சுரங்கப்பாதை ரயில் பிடித்து நாம் உடனே திரும்புவது அவசியம், என்று அவளிடம் கூறினேன்.

– அங்க்கிள் எனக்கு நடந்துபோகணும்

– சரி. உனக்கு அப்படியொரு ஆசைன்னா, நடந்தே திரும்புவோம்.

கூடாதென்று சொல்ல எனக்குத் தைரியம் காணாது. அவளுடைய தந்தையைப் போல் நடந்துகொள்வதற்கான வயதும் எனக்கில்லை.

மோன்சோ வீதி, அவென்யூ ஜார்ஜ்-5 எனக் கடந்து மீண்டும் சேன் நதி பக்கம் வந்தோம். கட்டடச்சுவர்கள் சூரிய ஒளியிலிருந்து விடுபட்டுக்கொண்டிருந்த நேரம், வெகு சீக்கிரம் அத்தனையும் இருட்டில் கலந்துவிடும். நேரமில்லை, கொஞ்சம் வேகமாக நடக்கவேண்டும். அன்றைய தினமும் அந்தி சாயும் நேரத்தில் எனக்கேற்படும் வழக்கமான மனக் குமுறல்கள். சிறுமியும் என்னுடைய மனநிலையில்தான் இருந்திருக்கவேண்டும் இல்லையென்றால் அத்தனை இறுக்கத்துடன் எனது கையை பற்றியபடி நடப்பாளா?

மாடியை அடைந்தபோது, சலசலவென்று பேச்சும் சிரிப்பும் கலந்தொலித்தது. ஐம்பது வயது மதிக்கக்கூடிய பெண்மணி, தலைமுடியைக் குட்டையாகக் வெட்டிக்கொண்டிருந்தாள் சதுரமுகம், பார்க்க ‘புல்-தெரியெர்’ வகை நாய்க்குண்டான சுறுசுறுப்பும், துடிப்பும் தெரிந்தது. கதவைத் திறந்தாள். ஒருவிதமான அவநம்பிக்கையுடன் மேலுங்கீழுமாக எங்களைப் பார்த்தாள்.

– வணக்கம் மதாம் மதெலென்-லூயி, – சிறுமி

– வணக்கம், பிழூ.

– நான்தான் இவளை வெளியே அழைத்துக்கொண்டு போனேன்.

– உள்ளே வாங்க

நுழைவுக் கூடத்து தரைமுழுக்க பூங்கொத்துகள். வரவேற்பறையில் கடைசியாகத் தெரிந்த இரட்டைக் கதவினூடாகக் கும்பல் கும்பலாய் மனிதர்கள்.

– கொஞ்சம் பொறுங்க, சோனியாவைக் கூப்பிடறேன், – சொன்னவள் ‘புல்-தெரியர்’ நாய்போலிருந்த பெண்மணி.

சிறுமியும் நானும்- இருவருமாக நுழைவுக் கூடத்தில் காத்துக் கிடந்தோம், எங்களைச் சுற்றிலும் கேட்பாரற்று கிடக்கும் பூங்கொத்துகள்..

– பூங்கொத்துகள் நிறையதான் வந்திருக்கின்றன…,- நான்.

– எல்லாம் அம்மாவுக்கு.

‘கோந்தெஸ்’ வெளிப்பட்டாள்; தோளில் கற்கள் பதித்த கறுப்பு நிற வெல்வெட்டாலான ஆடை, தேவதைபோல ஜொலித்தாள்.

– மறுப்பேதும் சொல்லாமல் ‘பிழு’ வைத் வெளியில் அழைத்துபோன உங்க நல்ல மனசைப் பாராட்டணும்.

– என்ன இதையெல்லாம் நீங்க பெரிசு பண்ணிகிட்டு… இன்றைக்கு நடந்த போட்டியில் உங்களுக்கு முதற் பரிசு கிடைத்ததாமே, பாராட்டுகள்.

– நன்றி.. மிகவும் நன்றி

எனக்கு உடம்பை என்னவோ செய்தது. அந்த இடத்தைவிட்டு சீக்கிரம் புறப்பட்டால் நல்லது என்பதுபோல தோன்றியது. அவள் தனது மகள் பக்கம் திரும்பினாள்.

– பிழு, அம்மாவுக்கு இன்றைக்கு மிகவும் முக்கியமான தினமென்று தெரியுமில்லை…

சிறுமியின் கண்கள் சட்டென்று அகலவிரிந்து அவள் மீது பதிந்தன. அக்கண்களில் வெளிப்பட்டது அச்சமா? வியப்பா?

– பிழு, அம்மாவுக்கு பெரியதொரு வெகுமதி கிடைச்சிருக்குத் தெரியுமா? அதற்காகக் அம்மாவுக்கு நீ முத்தம் கொடுத்தாகணும்…

சொன்னாளே தவிர சிறுமியின் திசைக்காய்க் குனிந்தவளில்லை. சிறுமி கால்விரல்களை ஊன்றி, எம்பி முத்தமிட மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ‘கோந்த்தெஸ்’ சிறுமி தன்னை முத்தமிட எடுத்துக்கொண்ட முயற்சிகளை கவனித்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை, அவள் கவனம் இறைந்து கிடந்த பூங்கொத்துகளிற் சென்றது.

– பிழு, பார்த்தியா? எவ்வளவு பூக்கள்! இவற்றையெல்லாம் எடுத்து ஜாடியில் வைக்கக்கூட இப்போது எனக்கு நேரமில்லை. வந்திருக்கும் நண்பர்களை கவனிச்சாகணும், பிறகு அவர்களை இரவு விருந்துக்கு அழைத்துப் போகணும். இராத்திரிக்கு எத்தனை மணிக்குத் திரும்புவேனோ தெரியாது… நீங்க இன்றிறவு பிழுவை பார்த்துக்க முடியுமா?

நான் மறுக்கமாட்டேன் என்பதைத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்ததைப் போல, அவள் கேட்ட தோரணை இருந்தது.

– உங்க விருப்பம் அப்படீண்ணா, செய்தால் போச்சு.

– உங்களுக்கும் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்றேன். இரவு இங்கேயே நீங்கள் தூங்கிக்கொள்ளலாம்.

எனக்குப் பதில்சொல்லக் கூட நேரம் கொடுக்கவில்லை, சட்டென்று. சிறுமி பிழுவின் பக்கம் திரும்பினாள்.

– பிழு செல்லம்.. அப்போ நான் கிளம்பட்டுமா? நண்பர்கள் எனக்காக காத்திருக்காங்க பாரு.. அம்மாவை மறந்திடாதே..என்ன? – குனிந்து சிறுமியின் நெற்றியில் செயற்கையாய் முத்தமிட்டாள்.

– மிஸியே, உங்களுக்கு மறுபடியும் நன்றி.

அதிகம் அலட்டிக்கொள்ளாமல், வர§ற்பறையில் காத்திருந்த நண்பர்களைத் தேடி சென்றாள். அத்தனை இரைச்சல்களுக்கிடையிலும், வெடித்து பிறகு மெலிந்து அடங்கிய சிரிப்பிலிருந்து அவளைத் தனியே என்னால் அடையாளப்படுத்த முடிந்தது.

அவர்கள் படிகளில் இறங்கிச் செல்ல செல்ல, ஒன்றன் பின்னொன்றாக குரல்களும் தேய்ந்து அடங்கின. பிழுவும் நானுமாக தனித்து இருந்தோம். சிறுமி சாப்பிடும் அறைக்கு என்னைக் கூட்டிச்சென்றாள். இருவரும் எதிரெதிராக மார்பிள் மூடிய நீள்சதுர மேசையொன்றில் அமர்ந்தோம். நான் உட்கார்ந்திருந்த நாற்காலியோ வீட்டின் பின்புறத்தில் தோட்டவெளியில் பொழுதைக்கழிக்க உபயோகிக்கப்படும் வகையைச் சார்ந்தது. அதுவும் ஆங்காங்கே துரு பிடித்து மிகப் பழையதாக இருந்தது. அவள் உட்கார்ந்திருந்ததோ வெல்வெட்மெத்தை தைத்த முக்காலி. தலைக்கு நேராகத் தொங்கவிடப்பட்டிருந்த பல்பிலிருந்து விழுந்த வெளிச்சம் மொத்தமும் எங்கள் மீதுதான் படிந்திருந்தது.

– சீன சமையற்காரனொருவன் உணவைப் பரிமாறினான்.

– இவரெப்படி, நல்ல மனிதர்தானே? – பிழுவைக் கேட்டேன்.

– ஆமாம்.

– என்ன பேர்?

– தியூங்.

சிலை போல விறைத்து உட்கார்ந்தபடி சூப்பை முடிப்பதில் கவனமாக இருந்தாள். உண்டு முடிக்குவரை வாய் திறக்கவில்லை.

– என்ன நான் எழுந்திருக்கலாமா?

– ம்.

அவளுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். சுவரும் அலங்காரங்களும் நீல வண்ணத்திலிருந்தன. மரச்சாமான்களென்று சொன்னால் இரண்டே இரண்டுதான்: ஒன்று சிறுபிள்ளைகளுக்கான கட்டில். மற்றொன்று இரண்டு சன்னல்களுக்கும் இடையிலிருந்த வட்டமேசை. மேசையில் போட்டிருந்த விரிப்பின் மீது மேசை விளக்கொன்று இருந்தது.

அறையோடு சேர்ந்தாற்போல இருந்த குளியல் அறைக்குள் நழுவினாள். பல்துலக்கும் சத்தம் கேட்டது. வெளியில் வந்தபோது வெண்ணிற இரவு ஆடையிலிருந்தாள்

– தயவு செய்து ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டு வரமுடியுமா? அவள் கேட்டவிதம், நான் அவள் வேண்டுகோளை தப்பாக எடுத்துக்கொள்ளப்போகிறேன் என்ற கவலையில் தொனிப்பது போலிருந்தது.

– அதற்கென்ன கொண்டுவருகிறேன்

– பிழு கொடுத்த டார்ச் விளக்கின் துணையுடன் சமையலறையை தேடிக்கொண்டு போனேன். பயமுறுத்தும் இருட்டில், அவள் ஒருத்திமாத்திரம் தனியாக உலாத்துகிறபோது இந்த டார்ச்சே கூட ஒருவகையில் சுமைதான், நினைத்துக்கொண்டேன். பெரும்பாலான அறைகள் காலியாக இருந்தன. வழியெல்லாம் டார்ச் விளக்கை ஒளிர வைக்க முயற்சித்தபோதிலும், நிறுத்தவும் அணைக்கவுமான பொத்தான் சரியாக நடக்கவில்லை. பார்ப்பதற்கு கைவிடப்பட்டக் குடியிருப்புபோல, மாடியிருந்தது. சுவரில் செவ்வக வடிவிலிருந்த கறைகள் அவை ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்களாக இருக்கவேண்டும். மற்றொரு அறை அநேகமாக ‘கோந்த்தெஸ்’ உடையதாக இருக்கவேண்டும், பெரியதொரு கட்டில் போட்டிருக்க, சற்றேரக்குறைய அதே அளவிலான வெண்ணிற சாட்டின் துணியால் அக்கட்டில் மூடப்பட்டிருந்தது. தரையில் ஒரு தொலைபேசி, கட்டிலைச் சுற்றிலும் சிவப்பு ரோஜாக்கள், பவுடர் டப்பியொன்று, ஒரு மப்ளர்…

சமையலறை மேசையில், சீனன் இரண்டு வேற்று மனிதர்களோடு சீட்டைக்கலைத்துப்போட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அவர்களில் ஒருவன் அவனைப்போலவே சீனன், மற்றவன் ஐரோப்பியன்.

– சிறுமிக்காக ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுபோக வந்தேன்.

குழாயிருக்கும் திசையைக் காட்டினான். கண்ணாடித் தம்ளர் நிரம்பியதும் அவர்கள் பக்கம் மீண்டும் என்பார்வை சென்றது. விரித்திருந்த துணியில், வகை வகையாய் உணவுகள் தயாரிக்கும் முறைபற்றிய அட்டைகள். அவற்றைத்தான் பந்தயம் வைத்திருந்தார்கள். அங்கிருந்து வெளியேறினேன். கதவு பின்புறம் மூடப்பட்டதற்கான கிறீச்சென்று சத்தம்.

மீண்டும் வெறிச்சோடிக்கிடந்த அறைகளை ஒவ்வொன்றாக கடந்துவந்தேன். அண்மையில்தான், அவசர அவசரமாக அங்குள்ள தளவாடங்களைகாலி செய்திருக்கவேண்டும்.. அவற்றைப் பாதுகாப்பதற்கென நிறுவனங்கள் இருக்கின்றனவே அங்கே ஒப்படைத்து பத்திரபடுத்தியிருப்பார்களோ? ஆனால் வெள்ளை சாட்டின் துணியினால் மூடப்படிருந்த பெரிய கட்டில்; சுவரை ஒட்டியிருந்த சோபா; இரண்டு பெட்டிகளும், பயணப் பையொன்றுமாக அடுக்கப்பட்டிருந்த இரண்டு நாற்காலிகள் ஆகியவற்றைத் தற்காலிகமாக அங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கவேண்டும். .

அவளுடைய கட்டிலில் எனக்காகக் காத்திருந்தாள்.

– எனக்காக சில பக்கங்களை வாசிக்க முடியுமா?

குரலில், அவளுடைய வேண்டுகோளை மீண்டும் நான் தப்பாக எடுத்துக்கொள்ளபோகிறேன் என்ற கவலை. மேலட்டை பழுப்படைந்திருந்த ‘Le Prisonnier de Zenda’ என்ற புத்தகத்தை என் கையிற் கொடுத்தாள். அவள் வயதுக்கு அப்புத்தகத்தில் ஆர்வம் காட்டியது கண்டு எனக்கு வியப்பு. நான் வாசிக்க, கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு அமைதியாக் கேட்டாள், கண்களில் அப்படியொரு பிரகாசம்.

ஓர் அத்தியாயம் முழுவதையும் படித்து முடித்தேன். அந்த அறையிலிருந்த விளக்கை மாத்திரமல்ல பக்கத்து அறை அலங்கார விளக்கையும் அணைக்க வேண்டாமென்றாள். இருட்டுக்குப் பயந்தாள். அவள் தூங்குகிறாளா என்று பார்க்க மூடியகதவுகளை விலக்கி பார்க்கவேண்டியிருந்தது. பிறகு மாடிமுழுக்க அலைந்ததில் தோலினாலான சோபாவொன்றை கண்டேன், இரவை அதிலேயே கழிந்தது.

மறுநாள் காலை, ‘கோந்த்தெஸ் குழைந்தையைப் பராமரிக்கிற வேலை தந்தால், செய்வேனா என்று கேட்டாள். அவளுடைய கலையுலக வாழ்க்கையும், உல்லாச உலகும் பிழுவைக் கவனித்துக்கொள்ள தடையாக இருந்தனவாம். ஆக, அவளுக்கு எனது உதவி தேவையாயிற்று. தனிமையிலிருந்து தப்பிக்கவென்று மரிவோ நாடகப் பயிற்சி பள்ளியில் சேர்ந்திருந்த எனக்கு, அதைத் தொடரமுடியாமற்போனது குறித்து வருத்தங்களில்லை. எனக்கென்று இப்போது சில பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. உணவிற்கும், உறைவிடத்திற்கும் வசதி செய்து கொடுத்தார்கள், முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு என் மீது நம்பிக்கையும் ஏற்பட்டது.

ழான்-குழோன் வீதியில் குல்ம் என்ற பெயரில் பள்ளியொன்றிருந்தது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருத்தி அதை நடத்திவந்தாள். அவளிடம் பிழுவுக்குத் தனி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையிலும், பின்னேரமும் பிழுவை அழைத்துவருவதற்காக அந்தப் பள்ளிக்குச் சென்றபோதேல்லாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டேன் அதாவது பிழுவைத் தவிர வேறு சிறுமிகள் அங்கு படிப்பதற்கான அறிகுறிகளில்லை. அமைதியாகவும் இருண்டும்கிடக்கிற உபயோகத்திலில்லாத தேவாலயத்தைப்போல ஒரு வகுப்பறையில் அவளும் சுவிஸ் பெண்மணியுமாக அமர்ந்திருப்பார்கள். அங்கே அவள் படித்த நேரம்போக மற்ற நேரங்களில் முதலாம் அல்பெர் வீதியிலுள்ள புற்களிட்ட பாதையிலோ, ட்ரொக்காடேரொ பூங்காவிலோ என்னையும் பிழுவையும் காணலாம், பிறகு நதிக்கரை வீதிகள் வழியாக வீட்டிற்குத் திரும்புவதை வழக்காமக் கொண்டிருந்தோம்.

எல்லாமே இரவும் பனியுமான பேழைக்குள் அரங்கேறியவை. பிழுவுக்கு ஏதோ இரவிடம் மட்டும் பயம் என்றில்லை, திரைத் துணிகளில் தெரியும் அவளுடைய அறை மின்சார விளக்கின் நிழலிடத்திலும், கதவிடுக்கினூடாகக் கண்ணிற்படும் பக்கத்து அறையின் லஸ்கர்கர் விளக்கிடத்திலுங்கூட அவளுக்கு அச்சமுண்டு. அவற்றையெல்லாம் தன்னைநோக்கி நீளும் கரங்களாக நினைத்துப் பயந்து கட்டிலில் சுருண்டு படுப்பவளை அணைத்துக்கொண்டு, பயப்பட ஒன்றுமில்லையென அவள் உறங்குவரை தைரியமூட்டவேண்டும். அவளை பயமுறுத்தும் நிழல்களைத் தவிர்க்க அல்லது அவற்றை இல்லாமல் செய்ய பல வழிகளிலும் முயற்சிப்பதுண்டு.

நானறிந்த எளியவழிமுறை திரைத்துணிகளை இருபக்கமும் ஒதுக்கிவைப்பது, ஆனால் விளக்கொளி எனது அமைதியான தற்காப்பு முயற்சியைக் காட்டிகொடுத்துவிடும். மின்சார விளக்கைக் கொஞ்சம் வலது பக்கம் கொஞ்சம் இடதுபக்கமென இடம்மாற்றம் செய்து பார்ப்பேன், ம்..பலனில்லை, நிழல்கள் எப்போதும்போல பயமுறுத்திகொண்டுதானிருந்தன.

அவளைப் பார்த்துக்கொள்வதென்கிற பணியில் சேர்ந்து சரியாக பதினைந்து நாட்கள் கடந்திருந்தன. என்னுடைய துணை ஒருவகையில் அவளுடைய அச்சத்தை தவிர்த்திருக்கவேண்டுமென்றே நினைக்கிறேன், இல்லையெனில் Prisonnier de Zenda புத்தகத்தின் படிக்கவேண்டிய அன்றைய அத்தியாத்தை முடிக்கும்முன்பாகவே, திரைத் துணிகளில் தெரிகிற கைகளைப்பற்றிய கவலைகளின்றி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

கடும்பனிபெய்த குளிர்காலம் அது. பாரீஸில் நாங்கள் குடியிருந்த இடம், முதலாம் அல்பெர் வீதி, நவீன ஓவியத்திற்கான அருங்காட்சியக கட்டத்தின் முன்பிருந்த திறந்தவெளி, ஒன்றின் மேலொன்றாக அடுக்கிவைத்ததுபோல இருக்கின்ற ‘பஸ்ஸி’ குன்றின் சரிவில் தெரிகிற வீதீகள் என எல்லாமுமாக சேர்ந்து அப்பகுதியே ஆங்காடின் (4) போல இருக்கிறது. கொன்கோர்டு திடலில்(5) குதிரைமீது சவாரிசெய்வதுபோல பெல்ஜிய அரசர்(முதலாம் அல்பெர்)சிலை. வெள்ளை வெளேரென்று மன்னர் ஏதோ பனிச்சூராவளியில் அகப்பட்டு தப்பித்துவந்தவர் போலவிருந்தார். பழைய பொருட்களுக்கான கடையொன்றில், கவனிப்பாரற்று மூலையிற் கிடந்த மரத்தால் செய்த பனிச் சறுக்கு வண்டியொன்றை பிழுவுக்கு விளையாட உதவுமென்று வாங்கினேன். ட்ரொக்காடேரொ பூங்காவிற்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த அவளுக்கு அதிக சிரமமற்ற சரிவில் விளையாடினாள். மாலை நதிக்கரை வீதிகள் வழியாக இருவருமாக வீடு திரும்பியபொழுது அவளது வழக்கபடி விறைத்தவாறு பனிச்சறுக்கு வண்டியில் உட்கார்ந்து வந்தாள். பார்க்க ஏதோ கனவுலகில் சஞ்சரிப்பவள்போல இருந்தாள், வண்டியை நான் இழுத்து வந்தேன். சட்டென்று வண்டியை வண்டியை நிறுத்தி விளையாடினேன். மரங்கள் அடர்ந்த காடொன்றில் தன்னந்தனியே அகப்பட்டுக்கொண்டதுபோல இருவரும் பாவனை செய்கிறோம். அந்த விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது, அவள் கன்னங்களிரண்டும் சந்தோஷத்தில் சிவந்துவிட்டன.

இரவுநேர கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் புறப்படும் அவசரத்தில் (மாலை எழுமணி அளவில்) கோந்த்தெஸ் மகளுக்குக் கொடுக்கும் முத்தங்களைப் பற்றி சொல்லி என்ன ஆகப்போகிறது. அந்த வீட்டில் புரியாதப் புதிராக இருந்த மதெலென்-லூயீஸ் என அழைக்கப்பட்டவளுக்கு பின்னேரம் முழுக்க தொலைபேசியில் கதைத்தாகவேண்டும், எங்களைக் கவனிக்க அவளுக்கும் நேரமில்லை. குஸ்தி போடுபவனைப்போல முகத்தை வைத்துக்கொண்டு தொனதொனவென்று தொலைபேசியில் பேசவேண்டிய அவசியம் என்னவோ? ஈரமற்ற குரலில், கேட்கின்றவர்களுக்கு அவளுடைய அலுவலகத்தில் சந்திப்பதற்கான நேரத்தைச் சொல்கிறாள், முகவரியும் கொடுக்கிறாள், “ஆர்க்காட் த்யு லிடோ”, ஆம் அங்குதான் அவளுடைய அலுவலகமுள்ளது. கோந்த்தெஸ் மீது அவளுடைய ஆதிக்கம் நிறைய என்பது வெளிப்படை. அவள் சோனியாவென்று பெயர்சொல்லி அழைத்ததில்லை, எப்போதும் ‘ஒதெத்’ என்றழைத்தே பழகியவள். புபூல் சொல்வதுபோல கோந்த்தெஸுக்கு வேண்டிய ஆடம்பர செலவுக்காண பணத்தை இவள்தான் கொடுக்கிறாளோ?, என்னை நானே கேட்டுக்கொண்டேன். முதலாம் அல்பெர் வீதியில் தான் இவளும் வசிக்கிறாளா? கேளிக்கைகளையும் கொண்டாட்டங்களையும் முடித்துக்கொண்டு அதிகாலையில் திரும்புகிறபோது பெரும்பாலும் அவளும் சோனியாவும் ஒன்றாகத்தான் வருகிறார்கள். ஆனால் அவளது அலுவலகத்தில்தான் மதலின் லூயி தூங்குகிறாளென நினைக்கிறேன்.

கடைசிகாலத்தில் சொந்தமாக ஒரு சொகுசு படகொன்று வாங்கியிருந்தாள், அதை எப்போதும் புய்த்தோ தீவென்று சொல்கிற இடத்தில் கரையோரமாக நிறுத்தி வைத்திருப்பாள். ஒரு ஞாயிற்றுக் கிழமை அவளை படலில் வைத்து பார்க்கவென்று பிழு, கோந்த்தெஸ், நானென்று மூவருமாகச் சென்றிருந்தோம். உள்ளே விருந்தினர்களை உபசரிக்கவென்று வசதி செய்யபட்டு மெத்தை தைத்த நாற்காலிகளெல்லாம் வாங்கிப்போட்டிருந்தார்கள். அன்றையதினம் தொப்பியும், காற்சட்டையுமணிந்து பார்க்க உடற்பெருத்த இளம் கப்பல் பணியாளர்போல இருந்தாள், முகத்தில் கவலை தெரிந்தது.

எங்களுக்குத் தேநீர் வழங்கினாள், தேக்குமரத்திலான சுவற்றில் சிவப்பு சட்டமிட்ட நிழற்படம் தொங்கிக்கொண்டிருந்தது. குட்டையாக வெட்டப்பட்ட தலைமயிருடன் படத்தில் இருந்தவள் அவளுடைய சிநேகிதி, சுர்கூஃப் (6) வழி வந்தவள்; தோணித்துறை, படகு, மழையில் நனையும் துறைமுகம் என்பதான அவளதுபாடல்கள் பிரசித்தம். பாடகி ஏற்படுத்திய தாக்கத்தில்தான் சொகுசுபடகை வாங்கியிருப்பாளா?

இரவு வந்தது. மதெலென்- லூயியும், கோந்த்தெஸ்ஸும் என்னையும் பிழுவையும் விருந்தினர்களை உபசரிக்கும் இடத்திலேயே தனித்து விட்டிருந்தனர். புதிர் விளையாட்டொன்றை அவளுக்கென்று கண்டுபிடித்தேன், இடம் பெரியதாக இருந்ததால் ஆர்வத்துடன் சிரமங்களின்றி விளையாடப் பழகிக்கொண்டாள்.

அப்பனிக்காலத்தில், சேன்நதியில் புது வெள்ளம் – சொகுசுப்படகின் சன்ன¨லை நீர்மட்டம் தொட்டிருந்தது. லீலா பூக்களின் மணமும் சேற்றின்மணமும் சொகுசுப்படகுக்குளேயும் இருந்தன.

இருவருமாக படகில் சதுப்பு நில பிரதேசங்களெங்கும் பயணித்தோம். நதியில் தொடர்ந்து செல்ல செல்ல எனக்கும் வயதுகுறைந்து அவள் வயது பையனாக மாறினதுபோல நினைப்பு, ‘லெ ப்வா'(le Bois) வுக்கும் ‘லா சேன்'(La Seine)னுக்கும் இடையிலிருக்கிற பூலோஜ்ன்(7) கடல்வரை சென்றிருந்தோம், நான் பிறந்ததும் அங்குதான்.

பிழுவுடன் தனிமையிலிருக்கிறபோது, இரவுநேரங்களில் அந்த ஆளின் காலடிச் சத்தத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை கேட்டிருப்பேன். அவனுக்கு முப்பது வயதிருக்கும்.. அவனிடத்தில் ஒரு திறப்பு இருக்கவேண்டும், முன் கதவினை உபயோகிக்காமல் வேலைக்காரர்களுக்கான கதவின் வழியாக உள்ளே வருகிறான். முதல் முதலாக அவனைச் சந்திக்க நேர்ந்தபொழுது தனது பெயர் ‘ழான்-பொரி” என்றும் ‘சோனியா’வுக்குத் தான் சகோதரனெறும் அறிமுகபடுத்திக்கொண்டான். ஆனால் இருவருக்கும் இனிஷியல் வேறாக இருந்தது ஆச்சரியம்?

ஓ’தொயே என்றழைக்கப்படும் சோனியாவுடைய குடும்பத்தவர்களுக்குப் பூர்வீகம் அயர்லாந்து; பிரபுக்கள் வம்சத்தைச் சார்ந்தவர்கள்; பதினெட்டாம் நூற்றாண்டில் போலந்து நாட்டில் குடியேறியவர்கள் பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்களென்ற ரகசிய தகவலை மெல்லிய குரலில் ஒருநாள் மதெலென் என்னிடம் தெரிவித்தாள். தகவல் உண்மையெனில் எதற்காக அவள் தன்னை சோனியா ஓ’தொயே என்று அழைத்துக்கொள்வதற்குப் பதிலாகத் ‘சோனியா ஓதெத்’தென்று வெளியிற் சொல்லிக்கொள்கிறாள்?

சோனியாவின் சகோதரனென்று சொல்லிக்கொண்டு ஒடுங்கிய முகமும், மெல்லிய தேகமுமாக இருந்த ‘ழான்-பொரி’, பார்க்க எனக்கு நல்லமனிதனாகத்தான் தெரிந்தான். சீன சமையற்காரன் பறிமாற அவன் சாப்பிடுவதென்பது வழக்கமாக நடப்பது, ஒரு சில நாட்கள் அப்படியான சந்தற்பங்கள் அவனுக்கு அமைவதில்லை. அந்நாட்களில் எங்களுடன் சாப்பிடவிரும்பி தேடிக்கொண்டு வருவான், நாங்களும் – பிழுவும் நானும் – அவனுடன் சேர்ந்து உணவருந்துவோம். சிறுமியிடத்தில் அதிகம் வெளிக்காட்டிக்கொள்ளாத பிரியம் அவனிடத்திலிருந்தது. அவளுடைய தகப்பனோ? உடைவிஷயத்தில் மிகுந்த கவனம் எடுத்துக்கொள்பவன் என்பதை, டையுடன் பின்னும் குத்தியிருக்கப் புரிந்துகொண்டேன். இரவில் படுப்பது எங்கே? முதலாம் அல்பெர் வீதியிலென்றால் சோனியாவின் அறையிலா அல்லது குடியிருப்பில் மூலையில் போட்டுவைத்திருக்கிற சோபாவிலா?

வருகிறபோதெல்லாம் வெகுநேரம் கழித்து பொதுவாக ‘ழானுக்கு’ என்று எழுதப்பட்ட காகித உறையுடன் புறப்பட்டுச்செல்வான். பெரிய எழுத்துக்களில் அதை பார்க்கிறபோதே சோனியாவுடைய கையெழுத்தென்று விளங்கிவிடும். மதெலென் இருக்கிறபோது எங்களைப் பார்க்க அவன் வருவதில்லை.

ஒரு நாள் இரவு சிறுமி தூங்கும்போது, அவள் அருகிலிருக்க விரும்பினான். அவளுடைய கட்டிலருகே அமர்ந்து ‘Prisonnier de Zinda’ வாசிக்கக் கேட்டான். பிறகு இருவரும் சிறுமியை முத்தமிட்டு படுக்க வைத்தோம்.

வரவேற்பறை (எனக்கு அப்படி அழைக்க விருப்பமில்லை) என்று சொல்லப்படுகிற பெரிய அறையொன்றில் சீனன் மதுவை ஊற்றிக்கொடுத்தான்.

– ஒதெத் எனக்கென்னவோ புரிந்துகொள்ளமுடியாத பெண்ணாக இருக்கிறாள்…

சட்டென்று தனது பர்சிலிருந்து முனை மடிந்து பழுத்திருந்த ஒரு நிழற்படத்தை எடுத்து நீட்டினான்.

– பிற்காலத்தில் பெரிய அளவில் ஒதெத் வாழ்விலேற்பட்ட மாறுதல்களுக்கு அந்நிகழ்ச்சிதான் ‘தொடக்கம்’. ஐந்து வருடங்கள் ஆகிறது. முக்கியமான நபரொருவரின் கண்ணிற்படநேர்ந்தது அன்றைய இரவு கொண்டாட்டத்தின்போதுதான். போட்டோ எப்படி, பிரமாதமாக இல்லை?

வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட மேசைகள், ஓவ்வொரு மேசையிலும், படாடோபமாக உடையணிந்த மனிதர்கள், மண்டபத்தில் கோடியிலிருந்த மேடையில் ஓர் இசைக்குழு. ஒளிமழையில் நனைந்தபடி காகித அட்டைகளால் ஆல்ப்ஸ்மலையை தத்ரூபமாக கொண்டுவந்திருந்தார்கள். மலைகள், அருகிலிருந்த. கிறிஸ்துமஸ் மரம், மரத்தாலான மூன்று சிறு குடில்களென அனைத்துமே செயற்கைப்பனியில் மூழ்கியிருந்தன. எதிரே விருந்தினர்களாக கறுப்பு கோட்டிலும், இரவுக்கான கேளிக்கை உடையிலும் ஆண்களும் பெண்களும், இரண்டு வரிசைகளில் விறைத்துக்கொண்டு நிற்கிற ஆல்ப்ஸ்மலை ஆபத்துதவிகள் 30பேர். அவர்கள் அருகே நிறுத்திவைத்திருக்கிறக பனிச்சறுக்கு மட்டைகள். தரையெங்கும் பனிமூடியிருக்கிறது, அதுவும் செயற்கையாக இருக்கவேண்டும். இரவு முழுக்க ஆபத்துதவிகளால் எப்படித்தான் விறைத்து நிற்க முடிந்ததோ, அவர்களுக்கு அது சிரமாக இல்லையா? நிகழ்ச்சியில் ஒதெத்துடைய பங்குதான் என்ன? நிகழ்ச்சி நன்றாக நடக்க ஒத்துழைத்ததுதான் அவளுடைய பங்கா அல்லது வேறு ஏதேனுமா? ழான்பொரியிடம் தயக்கமின்றி எனது சந்தேகத்தைக் கேட்டேன்.

– அதுவொரு கேளிக்கை இரவு. ‘பனிச்சறுக்கு விளையாட்டு இரவு’ என்ற பெயரில் நடத்தினோம்.

ஒதெத்துடைய ‘தொடக்கமென்று’ சொல்லப்படுகிற கேளிக்கை இரவுக்கான அர்த்தமற்ற அப்பனிக்காலமும் செயற்கை இரவும் பல நேரங்களில் உண்மைபோல தோற்றந்தந்து, குழப்பின. அதிலிருந்து தப்பிக்க சன்னலைத் திறந்துவைத்துக்கொண்டு முதலாம் அல்பெர் வீதியில் பெய்யும் பனியை அவதானிக்கலானேன்.

– குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலையை ஒதெத் உனக்குக் கொடுத்திருக்கிறாளே, நல்ல ஊதியமா?

– ஆமாம்,- யோசிப்பதுபோல சட்டென்று முகம் மாறியது.

– சிறுமியை இவ்வளவு பொறுப்பாக பார்த்துக்கொள்ளும் நீங்க உண்மையில் நல்லவர்தான்.

அவனை வழியனுப்ப வாசற்கதவுவரை சென்றவன், “அவனும் அவன் சகோதரியும் பிரபுக்கள் வம்சமா? பதினெட்டாம் நூற்றாண்டில் அயர்லாந்திலிருந்து போலந்துக்கு குடியேறியதாகச் சொல்லப்படுவதில் உண்மை இருக்குமா?” மனதை அரித்துக்கொண்டிருந்த தகவல்கள் குறித்து அவனிடம் விசாரித்தேன். அக்கேள்விகள் அவனைக் குழப்பியிருக்கவேண்டும், முகத்தைப் பார்க்க அப்படித்தான் தெரிந்தது.

– என்ன … நாங்கள் போலந்து நாட்டவர்களா? யார் சொன்னது..ஒதெத்தா?

அவனது பெரிய கனடா கம்பளி ஆடையைய அணிந்துகொண்டான்.

– உங்களுக்கு விருப்பமென்றால், நாங்கள் போலந்து நாட்டவர்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம். ஆனால் நாங்கள் ‘போர்த் தோரே'(8) போலந்துக்காரர்கள்.

இறங்கிகொண்டே அவன் சிரித்த சிரிப்பு படிகளில் பரவித் தணிந்தது. கோட் ராக் வைத்திருக்குமிடத்தில் நான் சிலைபோல நின்றேன்.

இருண்டும், தரை விரிப்புகள் சுருட்டப்பட்டும், ஆள் நடமாட்டமின்றியும் இருந்த அறைகளை மீண்டும் கடந்து வந்தேன். தளவாடங்கள் அகற்றப்பட்ட அடையாளத்துடனிருந்த வெற்றுத்தரையைப் பார்க்க ஏதோ அமீனா புகுந்த வீடுபோல இருந்தது. சீனர்கள் இருவரும் வழக்கம்போல சமையற்கட்டுக்குள் சீட்டுவிளையாடியபடி இருக்கவேண்டும்.

அவள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். ஒருக்களித்து கன்னத்திற்கு தலையணையை கொடுத்திருந்தாள். ஆள் அரவமற்று வெறிச்சோடிகிடக்கும் வீட்டில் சிறுமி ஒருத்தி உறங்குவதும், அவளைக் கண்காணிக்கவென்று அருகிலேயே ஒருவன் இருப்பதும், அப்படியொன்றும் அலட்சியபடுத்தக்கூடிய விஷயங்களல்ல.

எல்லாம் ஒரு நாள் குட்டிச்சுவரானது. பிழுவை எப்பாடுபட்டாகிலும் கேளிக்கைக் கூட மேடைகளில் ஏற்றி நட்சத்திரமாக்கிக்காட்டுவதென்ற மதெலென் லூயியின் யோசனையை, சோனியா சந்தோஷத்துடன் வரவேற்றதோடு அதை நிறைவேற்றி காட்டுவதென்றும் தீர்மானம் செய்ததே அதற்கான காரணம். அவர்களிருவரின் விருப்பத்தை நிறைவேற்றவேண்டி பிழுவுவைத் தயார் செய்ய ஆரம்பித்தார்கள். முறைப்படி கொடுக்க வேண்டிய பயிற்சியையும் பாடத்தையும் கொடுத்தால் பிழுவும் நாளைக்கே அமெரிக்க குழந்தை திரை நட்சத்திரத்தைப்போல பேரும் புகழும் அடையலாம் யார் கண்டது. இனி தன்னுடைய வாழ்க்கையே பிழுதான் என்று முடிவெடுத்தவள்போல தனது கலைவாழ்க்கையைக் குறித்து அக்கறைகொள்வதை சோனியா முற்றாகத் தவிர்த்தாள். மதெலென் லூயியும், சோனியாவும் தங்கள் நிறைவேறாத ஆசைகளை சிறுமி பிழுவின்மூலம் அடையத் தீர்மானித்ததாகத்தான் எனக்குப் பட்டது.

ழான் குட்ழோன் வீதி, க்யுல்ம் பள்ளி தலைமை இயக்குனரான பெண்மணியிடம், பிழு இனி அவளது தனிவகுப்புக்கு வர சந்தர்ப்பமில்லையென்றேன். தனக்கிருந்த ஒரே மாணவியை இழந்த வருத்தம் அவளுக்கு. அவளுக்காகவும் பிழுவுக்காகவும் நானும் வருந்தினேன்.

இனி தயாரிப்பு நிறுவனங்களுக்கு விதவிதமான ஆடை அலங்காரத்துடன் நிழற்படங்கள் எடுத்து அனுப்பவேண்டியிருக்குமில்லையா? அந்த ஆடைகளையெல்லாம் வைப்பதற்கு இடம் வேண்டுமே, முன்னேற்பாடாக அலமாரியொன்று தருவிக்கப்பட்டது. குதிரை வீரனைப்போல, நார்வே பனிச்சறுக்கு வீராங்கனையான சொஞ்சா ¦?னிக்கே உரிய பாவனையில், ஆடைஅலங்கார துறைசார்ந்த சிறுமியைப்போல விதமான உடைகள் தயாரிக்கப்பட அவற்றை அணிந்துப் பார்க்கவென்றே நேரங்காலமின்றி அவர்கள் வெளியில் போகவேண்டியிருந்தது. மதெலென் லூயியும் சோனியாவும், மூடிய சொகுசுக்காரில் சிறுமியை வலிய அழைத்துக்கொண்டுபோய் திணிப்பதும், பனிமூடிய முதலாம் அல்பெர் வீதியிலிருந்து கார் புறப்பட்டுப்போவதுமான காட்சி நாள் தவறாமல் நடந்தது. என்னால் முடிந்ததெல்லாம் சன்னலூடாக வேடிக்கைப் பார்ப்பது, பார்த்தேன். அந்நேரத்தில் மதெலென்-லூயியைப் பார்க்க சர்க்கஸ் கூடாரங்களில் குதிரைகளை பயிற்றுவிக்க கையில் சாட்டையுடன் திரிகிற பயிற்சியாளர்போல இருப்பாள்.

பிழுவின் நட்சத்திர தகுதிக்காக, அடுத்தடுத்து பயிற்சி வகுப்புகள், அத்தனை வகுப்புக்களுக்கும் அழைத்துசெல்லும் பொறுப்பு எனக்கென்று ஆயிற்று.: பியானோ வகுப்பு, நடன வகுப்பு, சொற்களை சரியாக உச்சரிக்க போட்ழோன் வீதியிருந்த எங்கள் பழைய ஆசிரியை என ஏற்பாடு செய்திருந்தார்கள். பயிற்சி வகுப்பு முடிந்த நேரங்களில் எனா வீதிலிருந்த நிழற்பட நிறுவனமொன்றிற்கு செல்லவேண்டும், அங்கே பலவிதவிதமான தோற்றத்தில், விதவிதமான ஆடை அலங்காரத்துடன் பிழுவைப் படமெடுப்பார்கள். குதிரை ஏற்ற வகுப்புமுண்டு. அது புலோஜ்ன் பகுதியிலிருந்த குடைராட்டின மரக்குதிரையில் நடந்தது- அதுவொன்றுதான் திறந்தவெளியில் அவளெடுத்துக்கொண்ட பாடம். அந்த வகையில் சிறுமிக்கு மிகவும் சந்தோஷம், சிவந்த கன்னங்களூடாக அம்மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டாள். சின்னன்சிறு பிள்ளையாய், கொள்ளை அழகுடன் அதிகாலை பனிமூட்டத்தையும், பனிப்பொழிவையும் நினைவூட்டும் சாம்பல் வண்ணக்குதிரையில் அவள் சுற்றிவரும் காட்சி இன்றைக்கும் கண்முன்னே தெரிகிறது.

பாடங்கள் பயிற்சிகள், படமெடுத்துக்கொள்ளவென்று ஸ்டுடியோக்கள் என அலைந்து களைத்தபோதிலும், குழந்தை பிழு ஒருவரிடமும் தனது வருத்தத்தை சொல்லிக்கொண்டதில்லை. மதெலென் லூயியும், சோனியாவும், அவளை படுத்தியதுபோதும் என்று நினைத்தார்களோ என்னவோ, அவளுடை வழக்கமான காரியங்களிருந்து விடுதலைத் தந்தார்கள். இருவருமாக ட்ரொக்காடெரோ பூங்காவரை சென்று வந்தோம். குழந்தை பனிச் சறுக்கு வண்டியியிலே ஆழ்ந்து உறங்கிவிட்டாள்.

பாரீஸ் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது என்றாகிவிட்டது, நான் பிரான்சின் தென்பகுதியிலிருந்த ‘லெ மிதி'(9) க்குச் செல்வதென்று தீர்மானித்தேன். நகராட்சி பள்ளியில் என்னுடன் படித்த நண்பன் கொடுத்த அடையாள அட்டையில் இருந்த பெயர்கூட மறந்துவிட்டது. பிழுவை பிழுவென்று ஒருவரும் அழைத்ததில்லை, சோனியாவும் அப்படித்தான், சோனியா என்ற பெயரில் ஒருவரும் அவளை அழைத்து கேட்டதில்லை. என்னையும் லெனோர்மாண்ட் என்று பெயரிட்டு ஒருவரும் அழைத்ததில்லை.

பிழுவை என்னுடன் அனுப்பிவையுங்கள், லெ மிதியில் அவள் சந்தோஷமாக இருப்பாள் என்று சொல்லிப்பார்த்தேன் பலனில்லை. பிறரை சந்தோஷப்படுத்தி பார்த்திராத கனத்த சாரீரத்தவளான மதெலென் லூயி அவளை திரை நட்சத்திரமாக்கித் தீருவது என்ற யோசனையில் பிடிவாதமாக இருந்தாள். சோனியாவோ சுயமாக சிந்திக்கப் போதாதவள், உறுதியற்றவள், எண்ணத்தில் தெளிவற்றவள்… பிறகு ‘Sonate au clair de lune’ போன்ற பாடலைக் கேட்பதில் பித்தாக இருப்பவள்…எனினும் அவள் எதையோ பிறரிடம் மறைக்கிறாள் என்பது நிச்சயம், மெல்லிய திரைக்கும், புகைமூட்டத்திற்கும் பின்னே சேரிப்பெண் ஒருத்தி ஒளிந்திருக்கிறாள்.

ஒரு நாள் விடியற்காலை, சிறுமி உறக்கம் கலைவதற்காக முன்பாகவே நான் புறப்பட்டு விட்டேன். ஒரு சில மாதங்கள் கடந்திருக்கும், நீஸ் நகரில் வார இதழொன்றில் திரைச்செய்திகள் தலைப்பிட்ட பக்கத்தில், அவளுடைய படத்தை போட்டிருந்தார்கள். ‘Le Carrefour des archers’ என்ற திறைபடத்தில் அவளும் நடிப்பதாகச் செய்தி. இரவுக்கான ஆடை, முகம் கொஞ்சம் ஒடுங்கியிருப்பதுமோல தெரிந்தது, கையில் டார்ச்சுடன் யாரையோ தேடுவதுபோல- படம். படத்திலிருந்த இடங்கூட முதலாம் அல்பெர் வீதியிலிருந்த தொகுப்பு வீட்டை ஒத்திருக்கிறது. யாரைத் தேடுகிறாள்?

ஒருவேளை என்னையா?

அதன்பிறகு அவளைப் பற்றிய எந்த செய்திகளுமில்லை. எத்தனையோ பனிக்காலங்கள் வந்துபோய்விட்டன. அவற்றைக் கணக்கிடத்தான் எனக்குத் தைரியமில்லை.

புபூலும் ஒரு வழியாக வாழ்க்கையில் ஜெயித்துவிட்டான், நெகிழ்வும், துள்ளலும் கொண்ட ஒரு ரப்பர் பந்தின் குணத்தை அவன் பெற்றிருந்தது காரணமாகவிருக்கலாம். ழான் கூட்ழோன் வீதியிலும், க்யுல்ம் பள்ளியிலும் காலையும் மாலையும் தேடிச்சென்று என்னால் அழைத்து வரப்பட்ட அவள் இனியில்லையென்றாகிப்போனது. நதிக்கரை வீதிகளில் இப்பொழுதும் நடந்துபோகிறேன். குதிரைகளில் முதலாம் அல்பெர் சிலையையும், சிமொன் பொலிவார் சிலையையும் பார்க்கிறேன், இரண்டுக்குமான இடைவெளி ஒரு நூறு மீட்டர்கள் இருக்கலாம். குளிர்காலத்தில், சிலைகளிரண்டும் வெண்பனியால் போர்த்தப்பட்டிருப்பதை பார்க்கிறபோதெல்லாம், எப்போதோ வந்துபோன அப்பனிக்காலத்தை நினைத்துக்கொள்கிறேன். குதிரை வீரர்கள் மாத்திரம் அங்கேயே இருக்கிறார்கள், இடம்பெயர விருப்பமில்லை போலிருக்கிறது. தங்களுக்குபின்னே சாம்பல் வண்ன நீரில் தோணிகள் ஏற்படுத்திய ததும்பும் நீரலைகளைக் குறித்த அக்கறையின்றி விறைத்துக் கொண்டு குதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள்.

நன்றி திண்ணை,

காலச்சுவடு -வெளியீடான உயிர்க்கொல்லித் தொகுப்பிலிருந்து.
——————————————————————————————————–

1. பிழு(Bijou)- jewel- பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் பிரியத்துக்குரிய பொருளை செல்லமாக ‘பிழு’ என்று சொல்லிக்கொள்வார்கள், தமிழில் ‘என் தங்கம்’, ‘என் வைரம்’ என்று சொல்லிக்கொள்வதுபோல.

2. Comptesse- பிரபுவின் மனைவி அல்லது பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த பெண்மணி.

3. Music-Hall – பாரீஸில் உள்ள புகழ்பெற்ற கேளிக்கை விடுதி

4. பனி உறைந்த ஏரிகளும், பனிமூடிய மலைகளும் நிறைந்த சுவிஸ் நாட்டின் தென்பகுதிலுள்ள குளிர்கால விளையாட்டிற்கு புகழ்பெற்ற ஸ்தலம்.

5. Place de la Concorde- பாரீஸில் புகழ்பெற்ற ஷான்செலீஸே அவென்யூவுக்கு அருகிலுள்ள மிகப்பெரிய திறந்தவெளி

6. Robert Surcouf பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த பிரெஞ்சு போர்கப்பல் தளபதி

7. Boulogne, பிரான்சு நாட்டின் வடபகுதியைச் சேர்ந்த கடற்கரை பிரதேசம்

8. Porth Dore – போர்த் தொரே- தமிழில் சொல்வதென்றால் நுழைவு வாயில்- பாரிஸ் மாநகரத்தின் உட்புக பல நுழைவிடங்களுள்ளன, அவற்றுள் இதுவுமொன்று. 1920-30களில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்துவந்த ஏழை போலந்துமக்களைக் குறித்த அருங்காட்சியகமொன்று அங்கிருந்தது.

9. பிரான்சுக்கு தெற்கேயுள்ள பிரதேசம்
—————————————–

தன்னை எழுதுதல்

இருபத்தோராம் நூற்றாண்டில் படைப்பிலக்கியத்தை தனதாக சுவீகரித்துக்கொண்டு தழைத்து கிளைபரப்பியிருக்கும் ‘தன்னை எழுதுதல்’ (Ecriture de soi) எழுத்து வகைமைக்கு காரணங்கள் பல. ஆனால் அதன் வேர் இருத்தலியலும் அதன் மீதான விசாரணையும் என்பதை தொடக்கத்திலேயே அழுந்தப் பதிவு செய்துவிடலாம்.

எழுத்துக்கு வேர் பேச்சு எனில், தன்னை எழுதுதலுக்குத் ‘தன்னைப் பேசுதல்’. மனித வரலாற்றில் தொடக்கத்தில் பேச்சாளனும், பின்னர் எழுத்தாளனும் வருகிறார்கள். மேடையில் ஊரறிய அல்லது நாலுபேரிடம் தனது தனது சுபகீர்த்திகளைச் சொல்லப் பழகியவனுக்குத்: தனது அபகீர்த்தியினை, தனது அகவெளியின் அழகுகளை, ஆபாசங்களைப் பகிர்ந்துகொள்ள அல்லது தனியொருவனாக மனதிற்படுகிற வதைகளுக்கு வடிகால் தேடிக்கொள்ள ‘தன்னைப் பேசுதலைத்’ தொடக்கத்தில் இரண்டொருவரிடம் தொழிற்படுத்தியிருக்கவேண்டும். மனிதன் எழுதத்தொடங்கியபோதே ‘தன்னை எழுதுதல்’ பிறக்க இல்லை, அது பைய வளர்ந்ததால் நெடிய வரலாற்றினை கொண்டிருக்கிறது. தனது அந்தரங்கங்களை இரண்டொருவரிடம் வாய்மொழி ஊடாகப் பகிர்ந்துகொண்ட ஆரம்பகால மனிதன், தற்போது முச்சந்தியில் கூச்சமற்று பறைகொட்டித் தெரிவிக்கிறான். கொண்டாடப்பட வேண்டியவற்றைமட்டுமல்ல பழிக்கஞ்சவேண்டியவற்றையும் பகிர்ந்துகொள்கிறான். இதற்கு அசாத்திய துணிச்சல் தேவை.

சமயங்கள் கோலோச்சிய காலத்தில் (இன்றுங்கூட?) ‘தன்னை உரைத்தலின்போது’ கேட்கிறவனிடம் மண்டியிடவேண்டியிருக்கிறது, இவனுக்கும் கேட்பவனுக்குமான உறவு ‘கீழ்-மேல்’ என்ற நியதிக்குரியது. ‘கீழ்’ அசுத்தம், மேல் சுத்தம்; பாவசங்கீர்த்தனம் செய்கிறவன் பாவி, ஈனப்பிறவி. கேட்பவன் இவனை உய்விக்க வந்தவன், ஒருவகையில் இரட்சகன். வாய்மொழியின்போது கேட்போரின் முகபாவங்களை நேரில் எதிர்கொள்கிற இக்கட்டுகள் உண்டு, எழுத்தில் அவ்வாறான சங்கடங்கள்கூட இல்லை. பேச்சு ஊடாக இரண்டொருவர் பகிர்ந்துகொண்ட இவனது ‘சுயம்’, எழுத்து ஊடாக நூறு, ஆயிரம், இலட்சம்பேர்களை சென்றடையும் வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாசிப்புக்கூட்டத்தில் இவனோடு சமதளத்தில் நிற்பவர் அநேகர். எழுத்தில் வாசிக்கிற அந்த ‘அநேகரை’ப் படைக்கிறவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை. வாசிக்கிற அவர்களுக்கும் இவன் யாரென்ற கேள்வி அத்துணை முக்கியமல்ல. ரொலான் பார்த் சொல்வதுபோல எழுதுபவன் வாசகனிடம் நூலை ஒப்படைத்துவிட்டு விலகிக்கொள்கிறான். இன்று ஊடகமும் தொலைத்தொடர்பு சாதனங்களில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சியும் கூடுதல் துணிச்சலை(?) தருகின்றன. ” சங்கடங்கள் காரணமாக மாடியிலிருந்து குதித்து இன்று காலை தற்கொலை செய்துகொள்ள இருக்கிறேன்” என முக நூலில் எழுதும் பதின்பருவத்தினர் உள்ள காலமிது.

தன்னை எழுதுதல் இன்று பல உட்பிரிவுகளை கொண்டு மேற்குலகில் இயங்குகிறதென்ற போதிலும் பொதுவில் அதனை சுயவரலாறு, சுயபுனைவு என்ற இரு பிரிவுக்குள் அடக்கிவிடலாம். இவ்விரண்டுள் சுயவரலாறு மூத்தது, 19ம் நூற்றாண்டு அதன் தொடக்கமென இலக்கியவரலாறுகள் தெரிவிக்கின்றன. இச்சுயவரலாறு என்பது நாம் அதிகம் வாசித்திருக்கிற …… அன்னாருக்கும் இன்னாருக்கும் தை திங்கள்…. மகவாய் பிறந்தேன் என ஆரம்பித்து உத்தமர்களாகவும் சாதனையாளர்களாவும் தங்களை வெளிஉலகிற்கு கற்பிதம் செய்யும் உயர்வு நவிற்சி அணி வகைப்பாடு அல்ல, தங்கள் வாழ்க்கையை உள்ளபடி விளங்கச்சொல்வது, நடந்ததை நடந்தவாறு சொல்வது:

“எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும்
சொல்முறை தொடுப்பது தன்மை ஆகும்”

என தண்டிலங்கார ஆசிரியர் பொருளுரைப்பதை இங்கே நினைவுகூரத்தக்கது.

என்றைக்கு மனிதன் தனது வாழ்க்கையைப் பிறர் வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டானோ அன்றைக்கே அவனது சுய விருப்பு வெறுப்புகள் முக்கியம் இழந்தன. தனது உணர்ச்சிகளைச் சிரைத்துக்கொண்டு வாழவும், அறிவுகொண்டு உணர்ச்சிகளை வெல்லவும் போதித்தார்கள், ஒழுக்கத்தையும் கற்பையும் கட்டாயம் ஆக்கினார்கள், அவற்றையெல்லாம் அறநூல்கள் என்றார்கள். குடும்பமும், சாத்தியமற்றவிடங்களில் சமயங்களூம் உட்புகுந்தன. கடவுள், ஊழ், சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்கள் கொண்டு மனிதர்களை அச்சுறுத்தி அவர்களின் ‘தான்’ உணர்வினைப் பொசுக்கி இருக்கிறார்கள். ‘நான்’ என்ற சொல் கர்வத்தின் குறியீடென்றும் கடவுளிடமிருந்து மனிதனை அப்புறபடுத்திவிடுமென்றும் திரும்பத் திரும்பப் போதித்தார்கள். புலன்களையும் அதுசார்ந்த உணர்ச்சிகளையும் தனது கட்டுக்குள் வைத்திருப்பது திருமடங்களின் வாழ்க்கை நெறி, அனைத்தையும் துறந்தவர்களே கடவுட் சேவைக்கு உகந்தவர்கள். பாவசங்கீர்த்தனங்கள் கூட மனிதர்களின் சுயபரிசோதனைகளுக்கு உதவவில்லை. இக்கட்டத்தில்தான், எங்கே கதவுகள் அடைக்கப்பட்டனவோ அங்கிருந்தே ‘தன்னை எழுதுதல்’ சுயவரலாறுகளுக்கு முன்பாகத் தோன்றின.

செயிண்ட் ஆகஸ்டீன் என்பவர் எழுதிய ‘பாவசங்கீர்த்தனம்’ ( confession -Saint Augustin ), மோந்தேஞ் என்பவரின் சுய பரிசோதனை (Les Essais – Michel de Montaigne), மிஷெல் தெ மரோல், ரெட்ஸ் கார்டினல் ஆகியோரின் ‘நினைவுகள்’ (Mémores) போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். பக்தி இலக்கியத்திலும், சித்தர் பாடல்களிலும் உதாரணங்கள் சொல்ல நமக்கு நிறைய இருக்கின்றன. இவர்கள் அனைவரிடமும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் குருமார்கள், தேவ இரட்சகனின் பிரதிநிதிகள். அவசியம் என்கிறபோதெல்லாம் மேய்ப்பவனிடம் இந்த ஆடுகளுக்கு முறையிடும் வாய்ப்புகள் இருந்தன. எனினும் பாவங்கள் அரிப்பிலிருந்து நிவாரணம் தேடவேண்டிய நெருக்கடியும் அவர்களுக்கு இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து, இலக்கிய வாதிகள் உள்ளே நுழைகிறார்கள். பிரான்சு நாட்டில் ஷத்தோபிரியான், லமார்த்தின், கஸனோவா போன்றோர் குறிப்பிட வேண்டியவர்கள். இவர்கள் அனைவரும் என்ன பெயரிட்டு அழைத்திருப்பினும், எழுதுபொருள் அவர்கள் வாழ்க்கைப்பற்றிய ஆவணங்களாக, சாட்சியங்களாக, நினைவூட்டல்களாக இருக்கின்றன.

எனினும் தன்னை எழுதுதலை தெளிவுபடுத்திய முதலாவது இலக்கியவாதி (பிரெஞ்சு இலக்கிய உலகைப் பொறுத்தவரை) ரூஸ்ஸோ. . செயல்பாடுகளால் மனிதர்கள் கட்டமைக்கப்படுகிறார்கள் என நம்பும் இருத்தலியல் வாதிகளான சார்த்துருவும் சிமோன் தெ பொவாருங்கூட (2) ‘நான் ‘ ‘எனக்கு’ என்று உருவெடுக்கும் கருத்தியத்தின் அடிப்படையிலேயே தங்கள் இருத்தல் சுயவரலாற்றை எழுதினார்கள், ஆனால் அங்கு ‘இருத்தல்’ ‘சாரத்திற்கு- முந்தையது என்பதை வலியுறுத்த ‘தன்முனைப்பு’ தன்னைத்தானே விடுவித்துக்கொண்டதும் நடந்தது. தன்னை எழுதுதல் புதிய பாய்ச்சலுடனும், புதிய பரிமாணங்களுடனும் தழைத்தகாலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும். சிக்மண்ட் பிராய்டு உருவாக்கிய உளவியல் பகுப்பாய்வு பெரும் அளவில் உதவியது, காரண காரிய தர்க்கவியலை மறுத்து; உயிர்வாழ்க்கையில் வடுவாக நின்றுபோன சம்பவங்களைக் கணக்கிற்கொள்ளாமல்; சிறுகச்சிறுக ஆன்மா(3) (subject) கட்டமைத்துக்கொள்ளூம் உள்ளுடம்பை(Subjectivity) அதன் பண்பை சிறப்பித்தது. சுயவரலாறு என்பது ஒரு மனிதர் அல்லது பெண்மணியின் வாழ்க்கையில் சம்பவித்த மறக்கவியலாத தருணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதென்றும், சம்பந்தப்பட்ட மனிதர்களின் அகவய பண்புகளைக் கட்டமைப்பதே அதன் முழுமையான நோக்கமென்றும் கருதுகிற சிந்தனை வலுவுற்றது இக்காலக்கட்டத்தில்தான். In Search of Lost Time (தொலைத்த காலத்தைத் தேடி) புகழ் இலக்கியவாதி மர்செல் புரூஸ்ட்(Marcel Broust) தன்னை எழுதுதலில் புதிய விந்தையை நிகழ்த்தியிருந்தார். ‘தன்னை’ விசாரணக்கு உட்படுத்தி தனது செயல்பாடுகளுக்கான ‘காரண காரியத்தை’ ஆய்வதுதான் தன்னை எழுதுதலில் அவர் அறிமுகப்படுத்தும் வகைமை. இம்ப்ரெஷனிஸ ஓவியர்கள், “மேலோட்டமாக நாங்கள் வரைந்த ஓவியத்தை மட்டும் பார்க்காதீர்கள், அந்த ஓவியங்கள் ஊடாக எங்கள் கண்களைப் பாருங்கள்” – என்றார்கள். சுயவரலாற்றிலும் அது நிகழ்ந்தது அங்கே கதைமாந்தர் இடத்தை கதைசொல்லி அபகரித்து தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். அமைப்பியல் வாதத்தின் பங்கும் இதிலுண்டு, அவர்கள் தன்னை எழுதுதலைக் குறியியல் பரிணாமமாகப் பார்த்தனர். “தன்னைப் பற்றிய புனைவில்” ‘படைப்பு -ஆளுமை நிறமிழக்கிறது, ‘சுயவரலாறு’ அல்லது ‘தன் சரித்திர’த்திடம் அவன் செய்துகொள்ளும் ஒப்பந்தம் தன்னை உரசிப்பார்க்க அவனுக்கு உதவுகிறது. அதனால் யார் எழுதியது? எழுதியவரின் ஆளுமை என்ன, வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்குள்ள கவச்சிகள் குறைந்து, உண்மைகள் என்று சொல்வதைத் (மேன்மை கீழ்மையை) தெரிந்துகொள்ளும் ஆர்வத்தைப் பிறரிடம் தூண்டுகிறது. இதில் ஒன்றைப்புரிந்துகொள்ளவேண்டும் தொடக்கத்தில் கூறியதுபோன்று சுயசரிதைகளில், “எழுதுபவரைத் தேடுவதாகப் பாசாங்குசெய்து, வாசகர்கள் தம்மை தேடுகிறார்கள்” என்பதே உண்மை. தன்னை எழுதுவதென்பது சில வேளைகளில் தன்னைச் சொல்வது, தன்னை விவரிப்பது. தனது நம்பிக்கையை, தனது அவநம்பிக்கையை பேசுவது:

” எப்படியாச்சும் ஒரு நல்ல வேலையைத் தேடிகிட்டு, சுயமா சம்பாரிச்சுகிட்டு யாரையுமே எதிர்பாராமே நம்ம காலுலே நாமே நிக்கனும்னு அவளுக்குள்ள தீர்மானமா ஒரு முடிவெடுத்துக்கிட்டா” ( மனுசி- பாமா பக்கம்- 19)

“முன் வாசல் படி இறங்கும்போது அவன் விட்டுவிட்டு வள்ளியின் முகத்தைப் பார்த்தான். அவளை அணைத்து அவள் முகத்தில் முத்தம் இட வேண்டுமென்று பாலுவுக்குத் தோன்றிற்று” ( குழைந்தைகள் பெண்கள் ஆண்கள் -சுந்தர ராமசாமி; பக்கம் 595)

” ஒரே ஒரு கருத்தை என் மனது சுற்றுகிறது. ஆனால் இந்த மையத்தில் புலையர்கள் உயிருள்ள மனிதர்களாக இன்னும் எனக்குத் தென்படவில்லை. மறையும் மாலைப் பொழுதில் வரும் நீளமான நிழல்கள், தொலைவிலேயே நின்று கேட்டுக்கொண்டிருக்கும் கருப்பு நிழல்கள்….இரவு எப்படிப் புணர்கின்றன, எப்படி யோசிக்கின்றன. குழந்தைகளை எப்படிக் கொஞ்சுகின்றன, எப்படி அழுகின்றன -எதுவுமே தெரியாது. பெயர்களே மறந்து போகின்றன. யார் பிள்ளன், யார் கரியன், யார் முத்தன்… ( பாரதிபுரம் -யு.ஆர். அனந்தமூர்த்தி; பக்கம் -166)

மேற்கண்ட உதாரணங்களிலிருந்து “மேற்கத்தியர்கள் மட்டுமே ‘தன்னைஎழுதுதலில் பங்கெடுத்தவர்கள்” என்ற கருத்தை மறுக்க முடிகிறது. ஆனால் மேலை நாட்டினரோடு ஒப்பிடுகையில் இது குறைவுதான். தவிர ஒரு பார்வையாளனாக தன்னை வைத்து நாவலைப் படைக்கிறபோதே புனைவில் இடம்பெறும் ஒவ்வாமைகளை படைப்பாளியோடு இணைத்துப் பார்க்கும் மனநிலைகொண்ட இந்தியச்சமூகத்தில் இதுவே அதிகம். தவிர இங்கே ‘தன்னை எழுதுதல்” என்ற முயற்சியே கூட ஒர் இந்தியத் திரைப்படகதைநாயகனை முன்னிறுத்துவதுபோன்ற பாமரத்தனமான செயலாக இருக்குமே ஒழிய, ஓர் உள்ளுடம்பின் உண்மையான ஆளுமையைப் (அழுக்குகளையும் சேர்த்து) புரிந்துகொள்ள வழிவகுக்காது. இதற்கு ஒரு வகையில் போலியான ஒரு மரபைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியச் சமூகமும் பொறுப்பு. செர்ழ் தூப்ரோஸ்கி (Serge Doubrovsky) ஒரு பிரெஞ்சு படைப்பிலக்கியவாதி, விமர்சகர், பிரெஞ்சு மொழி பேராசிரியர் “தன்னை எழுதுதல் குறித்த தெரிவித்தது: “எழுத்தாளன் இறந்தாலென்ன? அவனுக்கு மறுபிறவியை ஏற்படுத்தித்தர ‘தன்னை எழுதுதல்’ இருக்கிறதென” கூறியவர். அவருக்கு “அச்சடித்த காகிதத்தளத்தில் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் ஏற்படுத்தி தரும் சந்திப்பே ‘தன்னை எழுதுதல்’. அவருக்கு முன்பாக எழுத்தாளன் இறக்கிறான் என அறிவித்திருந்த ரொலான் பர்த், தூப்ரோஸ்கி கூற்றை வழிமொழிவதுபோல “ரொலான் பர்த் பற்றி ரொலான் பர்த்” என்ற தமது சுயசரிதையை எழுதி மறுபிறவி கண்டதை இங்கே குறிப்பிடவேண்டும்.

நன்றி சொல்வனம்
——————————————————————
1. Cd. Page 46 -Le magazine Littéraire Avril 2013
2. Les Mots – J.P. Sartre, Mémoires d’une jeune fille rangée
3. உளப்பகுப்பாய்வில் Subject, subjectivity என்ற இரு சொற்களுக்கும் சரியான தமிழ்ச் சொற்களை கையாளுவது அவசியமாகிறது. Subject என்கிற சொல் உளப்பகுப்பாய்வின் படி ஓர் ‘being’ (உயிருரு). எனவே தமிழில் உளப்பகுப்பாய்வு பொருளில் ‘Subject’ஐக் குறிக்க ‘ஆன்மா’ பொருத்தமானது. அதுபோல ‘Subject’ தன்னில் கட்டமைக்கும் ‘subjectivity’ஐ ‘சூக்கும சரீரம்’ அல்லது ‘உள்ளுடல்’ எனலாம் அதை ‘அகநிலை’ (தற்போது அநேகர் உபயோகிக்கும் சொல்) என்ற சொல்லால் குறிப்பிடுவது உளப்பாகுபகுப்பாய்வு பொருளுக்கு ( அதற்கென உள்ள கராதிகளைப் பார்க்கவும்) எவ்விதத்திலும் பொருந்தவில்லை . அதுபோல பிறரிடம் அல்லது வெளி உலகிடம் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள Subject எடுக்கும் உருவமே உளப்பகுப்பாய்வின்படி ‘Object’. அதனைக் குறிக்க வழக்கிலுள்ள ஸ்தூல சரீரம் அல்லது ‘வெளியுடல்’ இரண்டிலொன்றை பாவிக்கலாம்.
—————————————————————

கனவுப்பெண் – கவிஞர் அனார் கவிதைகளை முன்வைத்து

“ஈழத் தமிழின் நபீனக் கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார்” – கவிஞர் சேரன்
தன்னுடைய இருப்புக்கு எதிரான நிலவரங்களை விமர்சிக்கிற அனாரின் கவிதைகள் அந்த இருப்பை உன்னதமானதாகவே உணர்த்துகின்றன” – கவிஞர் சுகுமாரன்

 

கடந்த ஜனவரியில் இந்தியா வந்திருந்தபோது கவிஞர்கள் சிலர் தங்கத் தொகுப்புகளைக் கொடுத்தார்கள், வேறு சிலர் தங்கள் நாவல்களைக் கொடுத்தார்கள். இரு தரப்பு நண்பர்களுமே தங்கள் படைப்புகளை கொடுத்தபோது இவற்றைக்குறித்து எழுதவேண்டும் என்று கேட்கவில்லை, அதற்கான அவசியமும் அவர்களுக்கு இல்லை. படைப்புகளை அளித்தவர்களில் சிலர் தபிழ்ப் படைப்புலகில் நன்கறியப்பட்டவர்கள்; மற்றவர்களும் தமது படைப்புகள் ஊடாக தொடர்ந்து கவனத்தைப் பெற்றுவருபவர்கள். புனைவுகளைக் குறித்து எனது கருத்துக்களை முன்வைப்பதில் சிக்கல்கள் இல்லை. கவிதைகளைக் குறித்து எழுதும்போது தயக்கம் வருகிறது. ‘எனக்குத் தொழில் கவிதை’ அல்ல. ஒரு காட்சியைக் கண்டு வியக்கவும், பிரமிக்கவும்; வாடவும், வருந்தவும்; அநீதிகண்டு துடிக்கவும், ஆவேசம்கொள்ளவும் செய்கிறோமெனில் நமக்குள்ளும் கவிதை இருக்கிறது. இக்குணங்கள் ஒரு கவிதையை ரசிப்பதற்கான முதற்படி. ஆனால் புறத்திலும் கவிஞர்களாக வாழ்கிறவர்கள் தங்கள் பரவசத்தை, உணர்ச்சியை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்தவர்கள் தமது கண நேர உணர்ச்சி அனுபங்களை விசும்பலை, செறிவான பொருத்தமான வார்த்தைகொண்டு நிரந்தரப்படுத்த முடிந்தவர்கள். காணும்தோறும் மகிழ்ச்சியைத் தருகிற படச்சுருளைப் போல, அவர்கள் சமைக்கும் படிமங்கள் கவிதைகளை வாசிக்கும் தோறும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. எனினும் ஒரு கவிதையைப் புரிந்துகொள்ளவும், இதயத்தில் வாங்கிக்கொள்ளவும், உணர்வுதான் முக்கியம். இடைத்தரகனான அறிவையும், அறிவின் மொழிகளையும் (உவமை, உருவகம், படிமம், குறியீடு, தொன்மம் ஆகியவற்றை) மறந்து புலன்களால் அதாவது தொட்டும், முகர்ந்தும், சுவைத்தும் கவிதைகளை வாசிப்பது போதுமானது.

‘பரிசில் வேண்டும் பாடாண் திணை’ கவிஞர்கள், கடந்த காலத்தைப்போலவே இன்றும் இருக்கவே செய்கிறார்கள். ‘காதல்’ சொல்ல கவிதையெழுத வந்து, பிறகு காணாமற்போகிற காளான் கவிஞர்கள் வருடத்திற்கு ஆயிரம் பேராவது தேறுவார்கள். இப் பெருங்கூட்டத்திடை, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குரல்கள் தனித்து ஒலிக்கின்றன. அக்குரல்கள் நம்மில் சிலரிடம் ஊமைக்குரலாக ஒலிப்பவைதாம். நம்மிடம் ஊமைக்குரலாக ஒலித்த குரல், தொழில்முறை கவிஞர்களிடம் கலைவடிவம் பெறுகிறது. இந்த உலகம் முரண்படுவோர்களால் கண்ட முன்னேற்றம். சமகால கவிஞர்கள் மண்ணில் காலூன்றி நிற்பவர்கள். ”கேழ்வரகில் நெய் வடிகிறது” என்றெல்லாம் எழுதி ஏமாற்ற முடியாது. என்பதை நன்கறிந்தவர்கள். இதற்கு முந்தைய பத்தியில் கூறியிருப்பதுபோல அறிவைக்குறைத்துக்கொண்டு உணர்ச்சிகளுக்கு சற்று கூடுதலாக இடமளிக்கும் இன்றைய கவிதைகளில் ‘தனிமனிதன், சமூகம்’ இரண்டும் மையப்பொருட்கள். அதிலும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் கட்டமைக்கபட்ட நமது சமூகத்தில், பெண்களுக்குச் சொல்ல நிறையவே இருக்கின்றன. மதங்களும், புராணங்களும் இதிகாசங்களும் -சங்கக் கவிதைகள் உட்பட தீட்டியுள்ள பெண்சித்திரங்கள் அவர்களுக்கு ஆதரவானவை அல்ல. அன்பானவள், அடக்கமானவள், குடும்பப்பெண், மகாலட்சுமி ( கவனியுங்கள் ‘சரஸ்வதி’ என்ற சொல்லை சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறோம்) போன்ற கவர்பொருளுடனான தூண்டில்கள் நம்மிடம் அதிகம். அவளை மஞ்சள் குங்குமமிட்ட ‘தொழுவ லட்சுமி’யாய் வைத்திருப்பதில் நமக்குப் பெருமிதம். வீட்டுப் பசுவென்றாலும் கொம்பைத் தற்காப்புக்கேனும் பயன்படுத்தாமலிருந்தால் எப்படி? தங்கள் கோபத்தைக் கைப்பிடி உப்பில் காட்டி கணவனைத் தண்டிக்கும் ‘குடும்பப் பெண்’களின் தந்திரமும், கையெறி குண்டாக கவிதைகளைப் பயன்படுத்தும் படைப்பிலக்கிய பெண்களின் தார்மீக கோபமும் அவ்வகை கொம்புகள்தாம்.

அனாரின் கவிதை மொழி

“பெருங்கடல் போடுகிறேன், உடல் பச்சை வர்ணம், “எனக்குக் கவிதை முகம்” என்று மூன்று கவிதைத் தொகுப்புகளை கவிஞர் எனக்களித்திருந்தார். அனார் ஒருகவிஞர் என்பதும், இருபது ஆண்டுகால ஈழ யுத்ததின் சாட்சியாக இருந்த ஓர் இஸ்லாமியத் தமிழ் பெண் என்பதும், அன்னாருடைய கவிதைகள் பற்றிய சிற்சில அபிப்ராயங்களை உருவாக்கியிருந்தன. எதிர்பார்ப்பிற்கு மாறாக சமகால ஈழ கவிஞர்களிடமிருந்து மாறுட்ட பாடுபொருட்களை அவர் கவிதைகளில் காண முடிந்தது. அனாரின் கவிதைமொழிக்குள் பிரவேசித்ததும் எனக்குப் பாரதியாரின் “சோதிமிக்க நவ கவிதை’ என்ற வரிதான் நினைவுக்கு வந்தது. உணர்வுகளை மீ எதார்த்த நிலையில் இத்தனைச் சுதந்திரமாக எழுத்துவடிவில் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
நவீன கவிதையின் நெளிவு சுளிவுகளையும், கட்டுமானங்களையும் வண்ணங்களையும் புரிந்துகொண்ட பின்நவீனத்துவ கவிஞர். சிற்சில கவிதைகளில் அவை விழலுக்கு இறைத்த நீராகின்றன என்பதையும் இங்கே சுட்டத்தான் வேண்டும். கவிதைத் தொகுதிகள் முழுவதும் கவிஞர் சுகுமாரன் கூறுவதைப் போல, ” படிமச் செறிவான கவிதை மொழியைப் பயன்படுத்துகிறார்”. கற்பனையின் புதுமையும், சொற்களில் செழுமையும் அவரது கூடுதல் பலம்: “நிலை கொள்ளாது ஆடும்/ பொன் மிளிர்வுத் தூவல்களில் / ரயில் பட்டுப்புழுவைபோல நீளுகிறது.” (போகும் ரயில்). “காரிருளில் பாய்ந்தோடும்/ கறுப்புக் குதிரையின் கண்களில்/ இறுகி மின்னுகின்றது என்னுடைய கண்ணீர்” ( கருமை). “இலைச்சுருட்டிச் செவ்வெறும்புகள்/ஆளும் மரமெங்கும்/ இனிப்பாய்க் கசியும்/ மரப்பிசின் ஒழுகி உறைந்து/ மணிச்சிற்பங்கள்/ காட்டிய வரிசைகள்” ( அரூபன்). இவற்றை வெறுமனே படிமங்களால் ஆனக் கவிதைகள், எனக் கடக்க மனம் இடம் கொடுப்பதில்லை. ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பில் “சந்திர கிரகணத்தின் ஸர்ப்பம்” கவிதையில் இடம் பெறும் இவ்வரிகளை ‘ஒரு சோறு’ பதமாக எடுத்துக்கொண்டேன்:

“…..நினைவுப் பந்தலின் கீழ்
காட்டுமல்லிகையின் வாசனை
ஸர்பத்தை வரவழைக்கிறது
மேனி மினுக்கத்தில்
தெளிவின் மென்மையில்
தாழம்பூ மண்டபம் விரிகிறது.”

அவருடைய கவித்துவத்தை அளக்க கீழ்க்கண்ட வரிகளும் உதவும்:

“தத்திச்செல்லும் பிள்ளையின் பாதச்சுவடுகள்
நிலவு பொறுக்கியுண்ணும்
மிக இனிக்கின்ற உணவோ”
…………………………….
……………………………..

” என பசுங்குருத்துச் சூரியன்
உதிக்க அதிகாலை இருள் நீங்கும்
உறங்க பொன்னந்தி பாய்விரிக்கும்” (நிலாக் குட்டி)

 

கனவுப்பெண்

 

அனார் கவிதைகளின் பெண்குரல் கனவுகளுக்கு நெருக்கமானது “கனவுகள் காண ஏங்கும் கனவு நான்” (சுலைஹா); “கனவுகளின் பாளைகளில் சேரும் ‘கள்’ என பொங்கும் இவ்விரவை நீ கொஞ்சம் நான் கொஞ்சம் பிடிக்கலாம் நிறையும் வரை” (குடுவையில் நிரையும் இரவு); “படியும் கனவுப் பனி வெள்ளைக்கரு/ ஒளிரும் மென்தகிப்பு மஞ்சள் கரு என/ உருமாறியது மச்சம்” (மண்புழுவின் கண்); “இரவுத் தேன் கூடு நிரம்பியிருக்கிறது / கனவில் இருந்தபடி/ முதலாவது நீலத்தேனைப் பருகிடும் தருணம்/ மலை நகரந்து போகிறது. ( நீலத்தேன்); கனவின் துவாரங்கள் வழி/ சொட்டித் தேங்கிய/ காமக் கடல் அலைகள் பாய்கின்றது/ சிலந்தி வயிற்றினுள்” (பெண் சிலந்திப்பூச்சியின் வீடு); “கனவின் கத்திகள் பாய்ந்த கவிதையை/ ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்” (குரல் என்ற நதி அல்லது திராட்சை ரசம்); ” வாழ்வின் கனாக்காலம் முழுவதும்/ பருவங்கள் மாறி மாறி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் (வண்னத்துப் பூச்சியின் கனாக்காலக் கவிதை); ” முயலின் பளபளக்கும் கண்களாய்/ மிரட்சுயுடன்/ உன்னை வெறித்தபடி இருக்கும் என் கனவு”(வெறித்தபடி இருக்கும் என்கனவு).

தனிமைப்படுத்தபட்ட பெண்ணின் ஏக்கமும் கனவுகளும் அனார் கவிதைகளில் மையப்பொருளாக இருக்கின்றன. திரும்பத் திரும்பத் தமது இருப்பை முன்னிறுத்தியும் சோர்வுராதப் பெண் குரல் எல்லா கவிதைகளிலும் கேட்கிறது. காதலும் தேடலுமாக கழியும் பொழுது. அலைக்கழியும் வாழ்க்கை. மதத்தின் பேராலும் மரபுகள் பேராலும் பெண்களை விலங்கிட்டு இருட்டறைக்குள் வைத்திருக்கும் குருட்டு சமூகத்தைச் சேர்ந்த பெண் வெளிச்சத்திற்கு ஏங்குவது இயல்பு. கதவுகள் திறக்குமென்ற எதிர்பார்ப்பில்லை. சன்னல்கள் திறப்பதே போதுமானதுதான். இறை தூதரைகாதலித்த சுலைஹாவாக தம்மை கற்பிதம்செய்து மா¡ர்தட்டும் அப்பெண்ணுக்குள் “கடந்தகால சாபங்களை மீளவும் எதிர்கால சவால்களை வெல்லவும்” கனவுகள் இருக்கின்றன. ஆனால் நிஜத்தில் அவள் வாழ்க்கை வேறுவகையாக விதிக்கப்பட்டிருக்கிறது ‘போகும் இரயில்’ கவிதையும், ‘கருமை’ என்ற கவிதையும் ஓர் அப்பாவி பெண்ணின் கனவுக் குரலாக பொருமுகிறது. பட்டுப்புழுவைபோல என்ற உவமைக்கு ஆளாகும் இரயில், கவிதை முடிவில் ராட்த்சத பூரானென்கிற உவமை ஆகுபெயராக உருமாறி தரும் சோகம் கொடியது. கற்பனையில் கூட பெண்ணுக்கு வெளிச்சம் எட்டிவிடக்கூடாதென்பதுபோல அவளது நிஜம் குறுக்கிட்டு அக்கனவுகளைக் கலைத்துவிடுகிறது. கவிஞர் மொழியில் சொல்வதெனில் ” கனவுக்குள்ளே முழு ஏமாற்றத்துடனும் முட்டி மோதுகிறேன்”(சுவர் ஓவியம்). இந்தப் பரிதாபக்குரலுக்கு, காலம் பெருமிதத்தைப் பூட்டுகிற தருணமும் வாய்க்கிறது.

“பெண் உடல் பூண்ட இயற்கை நான் ”

“காற்றில் வசிப்பவன்
காலத்தைத் தோன்றச்செய்பவன்…
இன்றென்னைத் தீண்டலாம்” (குறிஞ்சியின் தலைவி -உடல் பச்சை வானம்)

என்ற வரிகளைப் படிக்கிறபோது அக்குரலை ஒரு பெண்ணியக் குரலாகத்தான் பார்க்க முடிந்தது. பெண்ணியம் என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எதிரானதல்ல. ‘ஆண்’ பாலின முத்திரையொன்றுபோதும் தாம் செலவாணியாக என நினைக்கும் அற்ப புத்திகொண்ட ஆனாதிக்கத்திற்கு எதிரானது. அனார் கவிதைகளில் பெண்குரல் பொலபொலவென்று கண்ணீர்விடுவதில்லை, மூக்கைச்சிந்துவதில்லை. காதல் வயப்படும்போது கூட “கத்திகளால் கைகளையோ கனிகளையோ வெட்டிக்கொள்ளாதவள், நான் யூசுப்பைக் காதலிப்பவள், சுலைஹா”, என முழங்கக்கூடிய தைரியம் பெண்ணியத்திற்கு உரியது.

ஈழ யுத்தம் குறித்து அனார்

அனார் தமது கவிதைள் ( கைவசம் இருக்கும் தொகுப்புகளின் அடிப்படையில்) ஈழ யுத்தத்தைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. சமகால ஈழக்கவிதைகளில் ஈழப்போரும் அதன் விளைவுகளும் அதிகம் இடம்பெற்றிருப்பதால் அவற்றை ஓர் அளவோடு கையாண்டிருக்கிறார். யுத்தத்தின் கோரங்கள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றன, பூடக மொழிக்கு இடமில்லை. ஆனால் யுத்தத்தை பாடுகிற அனார் வேறு. காதலும் தேடலுமாக காலத்தைக் கழித்த கனவுப்பெண்குரலுக்குரிய கவிஞரல்ல இவர், யுத்தகளத்தை நேரில் கண்ட புறநானூற்று தாய். ‘பெருங்கடல் போடுகிறேன்’ தொகுப்பில் ‘மாபெரும் உணவுமேசை’ ஓர் உதாரணம்:

“சிசுக்களின் மூளையாலான
மிளகுரசம் (புதினா சேர்த்தது)
கண்ணாடிக் குவளைகளில் ஊற்றப்பட்டிருக்கிறது”

“………………………………..
கொல்லப்பட்டக் குழந்தையின்
உடலிலிருந்து கொட்டுகின்றது இரத்தம்
மிக நிசப்தமாக
மிக குழந்தைத் தனமாக” (மேலும் சில இரத்தக் குறிப்புகள்)

இறுதியாக கவிஞர் அனார் பற்றி எப்படி சொல்லி இக்கட்டுரையை முடிக்கலாம் என யோசித்தபோது, அவரது வரிகளே உதவிக்கு வந்தன.

“நான் பாடல் எனக்குக் கவிதை முகம்”

நன்றி – காலச்சுவடு, செப்டம்பர் 2014
———————————————————————-

மொழிவது சுகம் செப்டம்பர் 7- 2014

1. பிரான்சில் என்ன நடக்கிறது?

அ. வொல்த்தேருக்கு நேர்ந்த கதி:

நமக்கு நகைச்சுவை என்ற பெயரில் குறளை விருப்பம்போல திருத்திச் சொல்வதைத் திரைப்படங்களில் கேட்டுப் பழகிவிட்டது. அதையே சகித்துக்கொள்ளலாம் என்பதுபோல வேடிக்கையொன்று பிரான்சு நாட்டில் நிகழ்ந்திருக்கிறது. Ferney- Voltaire என்பது பிரான்சு நாட்டில் உள்ள ஒரு கொம்யூன், அதாவது பேரூராட்சி. பிரான்சு -சுவிஸ் எல்லையிலிருக்கிற ஊர். சுவிஸ் நாட்டிற்கு குறிப்பாக ஜெனீவாவிற்கு வெகு அருகிலிருந்ததாலும் அப்போதைய அரசியல் சூழலாலும் இவ்வூரை வசிப்பதற்கென வொல்த்தேர் தேர்வு செய்து (1759) இருந்தார். அறிவொளிகால தத்துவவாதியும் – படைப்பாளியுமான வொல்த்தேர்க்கு மரியாதை செலுத்தும்வகையில் அவரது பொன்மொழிகள் அடங்கிய செப்புத் தகட்டினை கொம்யூன் வைக்க நினைத்தது. வரவேற்கக்கூடிய யோசனைதான். கொம்யூனும் அதற்கான நிதியை ஒதுக்கியது. கல்வி ஆண்டு தொடங்கும்போது அதாவது செப்டம்பர் மாதத்தில் அதன் திறப்புவிழா இருக்கவேண்டுமென மேயர் நினைத்தார். அந்த அவசரமே அவரை சந்தியில் நிறுத்த காரணமாகி இருக்கிறது.

“சொற்பிழை, வாக்கிய பிழையுடன் அமைத்து வொல்த்தேர் சொல்லவந்ததையே மாற்றிப்பொருள்கொள்ளும் வகையில் கூற்றுகள் செப்புத் தகடுகளில் இருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?. நீண்ட வாக்கியத்தை சுருக்குகிறேனென்று அதன் பொருளையே கேலிக்குரியதாக்கி இருக்கிறார்கள்” என்பது குற்ற சாட்டு. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் விடுமுறைக்குப் பிறகு செப்டம்பர் மாதத்தில்தான் மீண்டும் திறப்பார்கள். கொம்யூன், வொல்த்தேருக்கு இந்த மரியாதையை(?) கல்வி ஆண்டின் தொடக்கப் பரிசாக உள்ளூர் மாணவர்களுக்கென அறிவித்திருந்தது நகைமுரண். “Rien ne se fait sans un peu d’enthousiasme” (சிறிதளவேனும் ஆர்வமின்றி எதையும் செய்துமுடிப்பதில்லை அல்லது ஒன்றைச் செய்ய சிறிதளவாயினும் ஆர்வம் வேண்டும்) என்ற வாக்கியம் “rien ne se fait sans peu d’enthousiasme” ( சிறிதளவு ஆர்வத்துடன் செய்யப்பட்டதென்று எதுவுமில்லை) என்று கொம்யூன் பதித்துள்ள தகட்டில் இருந்தது. அதுபோல Printing accentலும் தவறுகள் இருந்திருக்கின்றன.

இதைக் கண்டித்திருக்கும் பிரெஞ்சு தினசரிகள்: “இத்தவறுகள் Franck Ribéry (பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் – பிரெஞ்சு மொழியைப் பிழையுடன் பயன்படுத்துவபவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகுபவர்களில் ஒருவர்) குடியிருப்பு வழித்தடத்தில் வைத்திருந்தால் கூட சகித்திருக்கலாம் அவர்கள் வைத்திருப்பது வோல்த்தேர் தமது மாளிகையிலிருந்து ஜெனீவா செல்லும் பாதையில். இது அவருக்குச் செய்யும் அவமரியாதை” எனக் கண்டித்திருக்கிறா¡ர்கள். பிழையுள்ள பொன்மொழிகள் அகற்றப்பட்டுள்ளன. “தவறுகளுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இருக்கிறோம்”, என அறிவித்திருக்கிறார் மேயர்.

கடந்த சில ஆண்டுகளாவே மொழி அனுதாபிகள், « பிரெஞ்சு மொழியியை ஒரு சாரார் சரியாக உபயோகிப்பதில்லை » என குறைகூறிவருகிறார்கள்: பிழைபட உபயோகிப்பது, வாக்கியப் பிழைகள், ஒரே பொருளைத் தரும் இருசொற்களை பயன்படுத்துவது, ஆங்கில சொற்கள் உபயோகமென.. குற்றசாட்டுகள் உள்ளன.

அண்மையில் எடுத்த கருத்துக்கணிப்பு பிரெஞ்சு மொழியை கொலைசெய்கிறவர்கள் யார் யார் எனத் தெரிவித்துள்ளது. அதன்படி 78% விளையாட்டுவீரர்கள் பிரெஞ்சு மொழியை ஒழுங்காக உபயோகிப்பதில்லையாம், அடுத்ததாக நட்சத்திரங்கள் 51%( நடிகர்கள், பாடகர்கள்); பத்திரிகையாளர்களும் தப்பவில்லை 19%. ஆங்கிலசொற்களை கலந்து பேசுவதும் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். பத்து பேருக்கு 7 பேர் ஆங்கிலச் சொற்களை கலந்து பேசுகிறார்கள். அவர்களில் 13% பேர் அடிக்கடி ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பவர்கள். குறிப்பாக 18லிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 29% ஆங்கிலச் சொற்களை உபயோகிக்கிறார்களாம்.

ஆ. புத்தகம் படுத்தும்பாடு:

வலெரி த்ரியெர்வெலெர் (Valérie Trierveiler) பிரான்சு நாட்டின் இந்நாள் அதிபர் பிரான்சுவா ஹொலாந்து(François Hollande)வின் முன்னாள்காதலி. 2013ம் ஆண்டு பிப்ரவரிமாதம் இப்பெண்மணி இந்தியாவிற்கு வந்திருக்கிறார் (2013). காந்தி சமாதிக்கு கதலருடன் மலர் வளையமெல்லாம் வைத்திருக்கிறார். அடுத்த ஜனவரி மாதம் ஊட்டச்சத்துப்பற்றாக்குறை குழந்தைகளின் நலனை முன்வைத்து அவர் நடத்தும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் மும்பைக்கு வரவிருக்கிறார். அதிபர் திடீரென்று இப் பத்திரிகையாளர் பெண்மணியைக் கைவிட்டு ஜூலி கயெ (Julie Gayet) என்கிற நடிகைமேல் காதல்கொண்டுவிட, பத்திரிகையாளர் பெண்மணி அதிபரோடு இருந்த நாட்களையும் அவரது அரசியலையும், பக்கத்திற்குப்பக்கம் குற்றம் சாட்டி « Merci pour ce moment » (அத்தருணத்திற்கு நன்றி) என்ற நூலை எழுதியிருக்கிறார். இருக்கிறார். நான்கைந்து நாட்களுக்கு முன்பு முதற்பதிப்பாக இரண்டு லட்சம் புத்தகங்கள் வெளிவந்து விற்று முடிந்திருக்கிறது. மீண்டும் இரண்டாவது பதிப்பு. ஆங்கிலத்திலும் விரைவில் வர இருக்கிறது இதுவரை ஒரு மில்லியன் யூரோவை அவர் சம்பாதிருக்கக்கூடும் என்கிறார்கள்; முதற்பதிப்புக்குமட்டும் பதிப்பகம் ஐந்து லட்சம்யூரோவை கொடுத்திருக்கிறது. ஏற்கனவே அதிபர் பிரான்சுவா ஹொலாந்துவின் சோஷலிஸ்டுகளின் அரசாங்கத்தை, இடதுசாரிகள் அனைவரும் விமர்சிக்கிறார்கள்; அண்மையில் அரசின் கொள்கை ஏழைகளுக்கானதல்ல எனக்கூறி முக்கியமான அவரது கட்சியைச்சேர்ந்த மூன்று அமைச்சர்கள் (நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர்) பதவி விலக வலது சாரி மனப்பாங்குகொண்ட இவருடைய சோஷலிஸ்ட் கட்சி பிரதமர், மனுவெல் வால்ஸ் புதிய அமைச்சரவை பதவியேற்று இரண்டுவாரங்கள்கூட ஆகவில்லை. அதற்குள் இந்த அம்மாவின் புத்தகம் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமீபத்திய கருத்துக்கணிப்பு 13% பிரெஞ்சுமக்களே அதிபர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிவிக்கிறது. பிரெஞ்சு அதிபர்கள் வரலாற்றில் எந்தவொரு அதிபருக்கும் இப்படியொரு நிலமை உருவானதில்லையாம்.
2. அண்மையில் வாசித்த புத்தகம்: பசித்த மானுடம் -கரிச்சான் குஞ்சு

முதன் முதலாக வாசித்தேன்.

கணேசன் – கிட்டு இரு மனிதர்கள், இருவேறு வாழ்க்கை, பழமை மரபுகளில் ஊறிய குடும்பங்களின் வழித் தோன்றல்கள். வயிற்றுப் பசியைக்காட்டிலும் உடற்பசி அதிகமாக பேசப்படுகிறது. பெண்களை பரத்தைகளாக சித்தரித்திருக்கிறது. இக்காலத்தில் எழுதப்படிருந்தால் ஒரு வேளை Aides நோயைக் கதைநாயகனுக்குக் கொடுத்திருப்பார். இங்கே குஷ்டம். பெண்போகத்தால் வரும் நோய் குஷ்டம் என்ற நம்பிக்கையில் பெருவாரியான மக்கள் வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட நாவல். மேற்கத்திய நாவல்களில் தான் நுணுக்கமான அவதானிப்பை கவனித்திருக்கிறேன் எழுதுவதற்கு முன்னால் ஒரு குஷ்ட ரோகியின் உடலை ஈபோல மொய்த்திருப்பாரோ என்ற சந்தேகம் வருகிறது. அவ்வளவு நுண்ணிய பார்வை. 1978ல் முதற் பதிப்பு வந்திருக்கிறது. அக்காலத்தில் இப்படியொருநாவல் என்பது மிகப்பெரிய புரட்சிதான். இன்று கற்பனையைக் காட்டிலும் நாவலில் சுய அனுபவங்கள் மேலோங்கி இருக்கற காலம். இந்நாவலும் அதற்கு விதிவிலக்கல்ல. நோயினை, நோயாளியை, மனித மன விகாரங்களை ஒளிவு மறைவின்றி பேசுகிறது எனவே தனித்துவம் பெற்ற நூல் எனக்கூறலாமா? அதனினும் பார்க்க மேலான தகுதிகள், பெருமை சேர்க்கிற கூறுகள் நாவலில் இருக்கின்றன. முதலாவதாக கதை சொல்லியைப் படைத்திருக்கும் விதம். தன்னிலையிலும், படர்க்கையிலும் அவன் கதை தஞ்சை எழுத்துக்களுக்கே உரிய அடர்த்தியுடனும் அழகுடனும் சொல்லப்படிருக்கிறது. மையம் விளிம்பு என்கிற மயக்க நிலையில் கதை நாயகர்கள்.

இரு கதை நாயகர்களுமே ஆரம்பகால வாழ்க்கை சுகமானதல்ல. ஏன் கதை முழுவதுமே அவர்கள் வாழ்க்கை கடுமையானதுதான் என்பதைத் தெரிவிக்கிறது, அவர்கள் வாழ்க்கையில் மேடுபள்ளங்கள் இருந்தாலுங்கூட.

கணேசன் “சத்திரா போஜா மடா நித்திரா” என்று வாழ்க்கையைத் தொடங்கியவன்:
“ஊரில் எங்கு கல்யாணம், கருமாதி நடந்தாலும் தானும் அம்மாவும் போய்க் காசு வாங்கிகொண்டும் கடுமையான வசவுகள் வாங்கிக்கொண்டும் சாப்பிட்டுவிட்டும் வந்ததெல்லாம் உண்டு. அப்பொழுது எனக்கு ஐந்தாறு வயதிருக்குமா? ” என கடந்தகாலத்தை நினைவூட்டி நமக்கும் “எனது வாழ்க்கை இப்படித்தான் தொடங்கியது” என்பதை கூச்சமின்றி தெரிவிப்பததன் மூலம் இன்றைய தனது நிலைமைக்கு சப்பைகட்டு கட்டுகிற கணேசன் தாய் தந்தையற்ற அநாதை.
“கிட்டாவின் தந்தை இறந்தபோது அந்தக் குடும்பத்திற்கு ஐந்து மா நிலமும் ஆயிரம் ரூபாய் கடனும் இருந்தது”. ஓர் விதவைத் தாயாராள் வளர்க்கப்பட்டவன்.

கணேசனின் இளம்வயதுக்கு பத்மா: “.. நீள மூஞ்சி, சுருட்டை மயிர் அவ்வளவு சேப்பு இல்லை.. கண் ரொம்ப அழகாயிருக்கும்” விசிப்பலகையிலே “மெதுவா அவனை ஒருக்களிக்க சொல்லிவிட்டுத் தானும் படுத்துக்கொள்ளும்” பத்மா.
கிட்டாவுக்கு ஒரு நீலா தன் முகத்தையும் மார்பையும் கிட்டாவின் மேல் படும்படி உராய்ந்து “சூடே ஒரு ருசி.. சேப்பே ஒரு அழகு இல்லையா கிட்டா” என்று கேட்டவள்.

இருவர் வாழ்க்கையிலுமே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள். இருரையுமே எதிர்பாராத திருப்பங்களுடன வாழ்க்கை அழைத்துசெல்கிறது.

அனாதையான கணேசனை ஏற்றிவிட சங்கரியென்றும், ராயர் என்றும், வாத்தியார் என்றும் ரட்சகர்கள் குறுக்கிடுகிறார்கள் ஆனால் அவன் தலையெழுத்தை ‘சிங்க ரவுத்து’ எனும் சனி மாற்றி எழுதுகிறது. விதவை பாலாம்பாளால் வளர்க்கப்பட்ட கிட்டு சாமர்த்திய சாலி. தொட்டதெல்லாம் துலங்குகிறது காரோட்ட கற்றுகொள்ளவந்த கிட்டாவின் வாழ்க்கையில் குறுகிட்ட ராசுவும், செட்டியாரும் அவனை தனவந்தனாக மாற்றுகிறார்கள். இருவர் வாழ்க்கையும் ஏதோ ஒரு அறத்தை சத்தமில்லாமல் போதிக்கின்றன:

“இந்த அறிவுக்குப் பழைய நினைவே கனவாகத்தான் தெரிகிறது. தூக்கத்தில் கனவைத் தவறாகக் காண்பதுபோலவே விழித்திருக்கும்போதும் இந்த நனவையும் நன்றாகத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறேனோ. ஒன்றுமே புரியவில்லையே; பிறகு என்றாவது புரியப்போகிறதோ? ” என்று கேட்கிற கணேசனே இறுதியில் “விழிச்சிண்டிருந்தா எல்லாம் தெரியணுமே, அப்ப எனக்கு ஒண்ணுமே தெரியரதில்லை. நானே இருக்கிறதில்லை அப்பல்லாம் .. ஆனா சந்தோஷம் பொங்கிண்டிருந்தப்பலே தோணும் பின்னாடி.” என்கிறான். கனேசன் தோற்றவனா ஜெயித்தவனா? என்ற கேள்வி படித்து முடித்தபின்பும் நைந்த கயிறை பிடித்திருப்பதுபோல மனதிற் தொங்கிக்கொண்டிருக்கிறது. கடைசி நான்கைந்து பக்கங்களுக்காவே பலநூறுமுறை வாசிக்கலாம்.

நன்றி: திண்ணை
——-