மொழிவது சுகம் ஆக்ஸ்டு 17 , 2019

மெய்போலும்மே மெய்போலும்மே !

அண்மையில் ஒரு வண்ணத்துப்பூச்சியின் காத்திருப்பு என்ற தலைப்பில் என் கண்முண் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் ஒரு சிறுகதையை எழுதியிருந்தேன். அக்கதையை நண்பர் பஞ்சு,  சுருக்கமாக பாராட்டி இருந்தார். அவரை நண்பருக்கும் மேலாக எனது குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கிறேன்.  எனது தந்தையோ, தாயோ தமக்கையோ சகோதரரோ  என் பிள்ளைகளை குறை சொல்லி பார்த்த தில்லை. அதனால் எனது பிள்ளைகளிடத்தில் குறைகள் இல்லை  எனக்கூறவும் மாட்டேன்.

படைப்பு என்பது சுதந்திரமானது, படைப்பவனில் சிந்தனையில் எவ்வித குறுக்கீடுமின்றி தன்னை மகிழ்வித்துக்கொள்ளும் பொருட்டு நிகழும் சம்பவம்.

கிழக்குக் கடற்கரை சாலையில் மகாபலிபுரத்தை நெருங்கும் தருவாயில், சாலையோரத்தில் புத்தரும், தங்கள் களையானத் தோற்றத்தை வழித்துபோட்டுவிட்டு ‘ஐய்யோ பாவமென’   காட்சி அளிப்பார்கள். அவர்கள் கையில் ஆளுக்கொரு திருவோட்டையோ, அல்லது ஆராதனை தட்டையோ வைத்தால், எடுப்பார் கைப்பிள்ளையாக மாற இருக்கும் இடைபட்ட காலத்தில் பணம் சம்பாதித்து த் தருவார்கள். சில சிலைகள் அநாதைப்பிணங்களைப்போல கிடத்தியிருப்பதையும் பார்த்திருக்கிறேன். இச்சிலைகளை பிரசவித்தவர்கள் கலைஞர்கள் ஆயினும் தொழிற்முறை கலைஞர்கள். வீடுகட்டும் கொத்தனாரும் அவர்களும் ஒன்றுதான்.  நல்ல விலையைக் கேட்டுப்பெறவேண்டும் என்ற என்ற எண்ணத்துட ன் சுத்தியையும் உளியையும் கையிலெடுப்பவர்கள். இக் கல்தச்சர்களிடம் உற்பத்தி ஆகிறபொருட்களை வாங்குகிற வியாபாரி சில விதிமுறைகளை வைத்திருப்பார். அது கலைக்கான விதிமுறையல்ல விலைக்கான விதிமுறை. பாரீஸ் சேன் நதி ஒரம் விற்கப்படும் ஓவியங்களும் இந்த ரகத்தவைதன். ஒரு படைப்பு கலையாகும் நிகழ்வின் முதற்படி வயிற்றினை அடிப்படையாக க் கொண்டிருத்தல் இல்லை, இதயத்தை அடிப்படையாக கொண்ட து. கலையூற்றின் முதற்கண் திறக்கப்படுவது இதயமாக இருக்கவேண்டும், படைத்தபின்னர் படைப்புக்கு எதுவேண்டுமானாலும் நிகழலாம், பறவைகள் எச்சமிட அரசமரத்தடியும் வாய்க்கலாம், மொரீஷியஸுக்கோ, தென் கொரியாவுக்கோ கப்பலும் ஏறலாம்.

ஓர் ஆணும் பெண்ணும் கூடுவதும், விளைவாக கரு தரிப்பதும் இயற்கை நிகழ்வு இதயமும் புலன்களும் இணைந்த, முயற்சி. உற்பத்தியாகும் தருணத்தில் சம்ப்ந்தப் பட்ட படைப்பாளிகள் மகன் அல்லது மகள் கலெக்டர் ஆவானா ?  ஆவாளா ?ஊழல் செய்து கோடிகள் சம்பாதிக்கும் சாமர்த்தியம் வருமா என்றெல்லாம் உணர்ந்து யோசித்து கூடுவது இல்லை. அப்படி நிகழ்ந்தால் தான் படைப்பு.  அவர்கள் பெற்றப்பிள்ளைகள் அதனதன் தகுதிக்கேற்ற வரவேற்பை, பின்னர் பெறுகின்றனர். இந்நிலையில் தம்பதிகளிடம் என் பிள்ளை இப்படி இருக்கிறான் உன்பிள்ளையும் கண்கள் பெரிதாகவும் மூக்கு கழுகினைப் போலவும், காது பனைமட்டைபோலவும் அல்லது அவரவர் விருப்பத்திற்ற வர்ண னைகளுடன் குழந்தயைப் பெற தம்பதிகளை  அண்டைவீட்டுக்கா ர்கள் வற்புறுத்துவது உளியெடுக்கும் சிற்பிகளிட த்தில் பிள்ளையாரின் வயிற்றைப் பெரிதாகவை, மாரியம்மன்னின் பிருஷ்டமும் மார்பகங்களும் சற்றுப் பெரிதாக இருந்தால் ஐரோப்பாவில் விலைபோகும் என மாமல்லபுர சிலைகளை வாங்கிவிற்கும் மொத்தவியாபாரிகளும்  இடைத்தரகர்களும் குறுக்கிடுவதை ஒத்தது ஆகும்.

படைப்பு  என்பது சுதந்திரமாக பிறர் குறுக்கீடின்றி படைத்தவனின் சுய இன்பத்தின்பொருட்டு நிகழ்வது

———————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s