படித்ததும்சுவைத்ததும் -15 : ஆந்தரேயி மக்கீன்

முன்பின் தெரியாதவனின் வாழ்க்கை

பிரெஞ்சு மொழியில் எழுதும் புலம்பெயர்ந்த படைப்பாளிகள் :

–  மூன்றாம்  உலக நாடொன்றில் பிறந்து அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக புலம்பெயர்ந்து, தங்கள் பிழைப்பை உறுதிசெய்துகொண்ட பின்னர் படைப்புலகிற்குள் நுழைகிறவர்கள் ஒருவகை ;

– அதேகாரணத்திற்காக சிறுவயதிலேயே பெற்றோருடன் பிரான்சு நாட்டில் குடியேறி கல்வியைப் பிரஞ்சு மண்ணில் முடித்து, பிரஞ்சு பண்பாட்டில் திளைத்து, மிகத் திறமையாக மொழியைக் கையாண்டு கவனம் பெறுகிற கிழக்கு ஐரோப்பியர்கள் இன்னொருவகை.

ஆந்த்ரேயி மக்கீன், இரண்டாவது அணியினரைச் சேர்ந்தவர்.  முன்னாள் சோவியத் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்சு நாட்டில் வாழும் எழுத்தாளர். கம்யூனிஸ நாடுகளின் அடக்குமுறைக்குத் தப்பித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்க்கையைத் தொடரும்  ஐம்பதைக் கடந்த கிழக்கு ஐரோப்பிய எழுத்தாளர்கள் இங்கிலாந்தைப்போல ஜெர்மனைப்போல பிரான்சு நாட்டிலும்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர்.

புலம்பெயர்ந்த எழுத்திற்கென்றுசில  பொதுவான குணங்கள் உண்டு : சொந்தமண்ணையும் உறவுகளையும் பிரிந்து, தன்னையும் தன்குடும்பத்தையும் எதிர்கால நலனுக்காக நிகழ்காலத்தில் அடகுவைத்து ;  தனது அடையாளம் வேரா கிளையா என்பது தெரியாமல் ; தொலைத்தவற்றையும், கண்டெடுத்தவற்றையும் சமன்செய்ய வக்கின்றி ; கடந்தகாலம்x நிகழ்காலம் ; தாய்நாடுxதஞ்சமடைந்த நாடு ; வாழ்ந்த ஊர்x வாழ்கின்ற  ஊர் எனும் இருமைப்பண்புகளில் சிக்குண்டு ; எங்கிருக்கிறேன், நான் யார் ? என்ற கேள்வியில் உழன்று ; ஆசிய சதுப்புநிலத்தில் சிக்கிய சைபீரிய பறவைபோல இரை மறந்து திசை நினைத்து வாடும் எழுத்து புலம்பெயர்ந்தவர் எழுத்து :  பிறந்த மண்ணைக்குறித்த ஏக்கம், பெருமிதம் – குடியமர்ந்த நாடு அளிக்கும் ஏமாற்றம் சோர்வு –   எனக் கதைக்கும்முறை.   ஆந்த்ரேயி மக்கீனிடமும் இவை எதிரொலிக்கின்றன.

‘ ஒரு நாள் மாலை நேரம். இருவரும் மலைச் சரிவொன்றில் பனிச்சறுக்கு விளையாடிக்கொண்டிருந்தார்கள். சாட்டையால் அடிப்பதுபோலக் குளிர்காற்று அவர்கள் முகத்தில் வீசிக்கொண்டிருந்தது உறைந்த பனித்துகள்கள் காற்றில் கலந்து  அவர்கள் கண்களை மறைத்தன. இறங்கும் வேகம் உச்சத்தை அடைந்தபோது, பின்னாலிருந்த அவ்விளைஞன் அவள் காதில் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா’, ’ என்கிற செக்காவ் வரிகளுடன்  நாவல் தொடங்குகிறது. ‘புலம் பெயர்ந்த ஒருவரின் தாயகம் அவர் தாயகத்தின் இலக்கியம்’(பக்கம் 24) என யாரோ ஒருவர் குறிப்பிட்டதாக நவலில் வரும் கூற்றை  ஆந்திரேயி மக்கீன் இங்கு நியாயப்படுத்துகிறார்.

செக்காவ் கதையில் வருகிற அத்தகைய சந்தர்ப்பமொன்றில், இந்நாவல் கதைநாயகன் ஷூட்டோவ் தன்னுடைய முன்னாள் ரஷ்யக் காதலி ‘யானா’ என்பவளிடம் உரைத்த காதல் மொழி என்பதோடு நேற்றைய லெனின் கிராடு அனுபவங்களைத் திரும்பப்பெறவும்,  தன் வேரினைத் தேடி அவன் பயணிக்கவும் உந்துதலாக அமைகிற மொழியும் இதுவே.  இருநூறுபக்கமுள்ள நாவலில் முதல்  79 பக்கங்களில்  சொல்லப்படும் கதைநாயகனின்  இரண்டு பெண்களோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை ஒரு புலம்பல். மாறாக நாவலின் பிற்பகுதியில், செயிண்ட் பீட்டர்ஸ் பர்கில் ஓட்டலொன்றில் (ஷூட்டோவ் முன்னாள் காதலி யானாவிற்குச் சொந்தமானது) வேண்டா விருந்தாளியாகக் கட்டிலில் கிடக்கிற வோல்ஸ்கி என்ற ‘முன்பின் தெரியாத’ கிழவனின்  இறந்த கால மீட்டெடுப்பு காட்சிகள் ஆந்திரேயி மக்கீன் ஒரு பேரிலக்கியவாதி என்பதை உறுதி செய்பவை. உண்மையில்  நாவலின்  இதயத் துடிப்பிற்குத் தமணியும் சிறையுமாக இருப்பவர்கள் வோல்ஸ்கி – மிலா ஜோடியினர் :  தம்பதிகளின் வாழ்க்கைப்பாதை  செப்பனிடப்படாத பாதை, கற்களும் முட்களும் நிறைந்த பாதை. பகைவர்கள் லெனின்கிராடை முற்றுகையிட்டிருக்க, தோழர்கள் என நம்பப் பட்ட ஆட்சியாளர்கள் சொந்த மக்களின்  வாழ்க்கையை முடமாக்கிய காலம்.

எழுத்தாளன் ஷூட்டோவுடைய  நிகழ்காலம், இறந்தகாலத்தைக்கொண்டு  மூன்று ஓவியச்சீலைகளை  ஆந்திரேயி மக்கீன் நம் கண்முன் விரிக்கிறார்.ஷூட்டோவ்-லெயா-பாரீஸ், ஒன்று ; ஷூட்டோவ்- யானா – செயிண்ட் பீட்டர்ஸ் பர்க், இரண்டு ; வோல்ஸ்கி-மிலா-லெனின் கிராட், மூன்று.

 

அ. ஷூட்டோவ்-லெயா- பாரீஸ்

கதை நாயகன் ஷுட்டோவ், ‘ ஐம்பது வயதாகிறது, நிறையப் படித்திருக்கிறான், ஆய்வு செய்திருக்கிறான், வறுமையைக் கண்டிருக்கிறான். அவ்வப்போது கொஞ்சம் வெற்றியையும் பார்த்திருக்கிறான்’  என்கிற தன்னைப்பற்றிய அவனது கர்வம்  அலட்சியப்படுத்தக்கூடியதல்ல.  அவனுக்குத் தான் வாசித்த நேற்றைய ரஷ்யக் காதல் கதை’மிக எளிமையானது, இருந்தாலும் சரியானது, பொருள் பொதிந்தது’ மாறாக இன்றைய பிரெஞ்சுக் காதல் கதைகள் ‘ நூறுபக்கம் பாரீஸ் நகர காமக் களியாட்டங்கள், பின்னர் மனச்சோர்வு’ இவ்வளவுதான். ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது ‘பிரெஞ்சு மொழி பேசும் கறுப்பரின எழுத்தாளன் ஒருவன் ‘அங்கிள் பென்’ விளம்பரத்தில் வருபவன்போல இளித்துக்கொண்டிருந்தான், மெல்லிய கண்ணாடி அணிந்த  சீனன் ஒருவன் தன்பார்வையை இங்கும்மங்கும்  சுழலவிட்டுக்கொண்டிருந்தான், அதிலும் குறிப்பக ரஷ்யனான ஷூட்டோவை  அடிக்கடிப்பார்த்துக்கொண்டிருந்தான், பிரஞ்சு இலக்கியம் உலக மயமானதற்கு முத்தான மூன்று சான்றுகள்’  என தன் எண்ணத்தில் எச்சிலைச் சுமக்கும் கதைநாயகனோடு, இளைஞர்களை இன நிற வேறுபாடின்றி மோகிக்கிற  பிரெஞ்சு வாலைக் குகமரி ஒருத்தி இரண்டரை ஆண்டுகள் குப்பைக் கொட்டியதே  நமக்கு அதிகமென்று தோன்றுகிறது  பாரீஸ் காதலி லெயா,பிரிவதென்று தீர்மானித்து அனைத்தையும் மூட்டைகட்டி வைத்துவிடுகிறாள் . அவனைவிட்டுப் பிரிந்து, இன்னொருவனுடன் செல்ல ஆயிரத்தெட்டுக் காரணங்கள் அவளுக்கு இருக்கின்றன :

* முதலாவதாக அவனுடைய வயது முக்கியக்காரணியாகப் படுகிறது. அவனுக்கு அவள் தந்தை வயது, அவளுக்கு அவன் மகள் வயது. இங்கே மாக்ஸ் கலோ(Max Gallo) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘பெண்களின் பார்வை’ (Le regard des femmes) கதை நாயகன் பிலிப் இதே வயது காரணமாக காதலி லிசா தன்னைவிட்டு விலகிப்போவதாக புலம்பும் காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை.

* இரண்டாவதாக இவன் செக்காவ் ரசிகன், ‘கிரங்கவைக்கும் குளிர், எளிதில் மருளும் காதலர்கள் ‘ என செக்காவ் படைப்புக் காட்சியை ஒரு எழுத்தாளனாகப் பார்ப்பவன். ஷூட்டோவிற்கு, செக்காவ்  ‘ நான் உன்னைக் காதலிக்கிறேன், நதேன்கா ‘ என்ற வரியைக்கூட காவியமாக்கும் திறமைசாலி.  ஆனால் லெயா தெய்வமாகக் கொண்டாடும்  எழுத்தாளர்கள் புத்தகங்களில் ‘…காதல் மணம் வீசுவதில்லை. எச்சில் நாற்றம்தான் வீசுகிறது… அருவருப்பு ….  ‘  என்கிற  நிலமை.

இப்படி நடுத்தர வயதைக்கடந்த எழுத்தாளனுக்கும், அவன் மகள் வயதுடைய பெண்ணொருத்திக்கும் இடையிலான பேதங்கள் அவர்களுக்கிடையே தீராத வாக்குவாதத்திற்குக் காரணமாக ஒரு நாள் அவன் ரஷ்யப்பெயரை ‘சர்க்கஸ் கோமாளி’ எனக் கோபத்துடன் நக்கல் செய்து அவர்கள்  உறவுக்கு விடைகொடுக்கிறாள்.

‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பு, கதை நாயகனை பாரீஸிலிருந்து லெனின்கிராடிற்கு அதாவது இன்றைய செயிண்ட் பீட்டர்ஸ் பர்கிற்கு துரத்துகிறது. அவன் நினைவில் நிழற்படமாகவிருக்கிற  ‘யானா’ என்கிற முன்னாள் காதலியையும் அவள் சார்ந்த லெனின்கிராடு நினைவுகளையும் உயிர்ப்பிக்க ‘வெகு நாட்களுக்கு முற்பட்ட முகவரிகள் ! வேடிக்கையான சின்ன சின்ன தொலைபேசி எண்கள் ! பழைய பயண பையிலிருந்த எடுத்த கையேட்டுக் குறிப்புகளைப் படித்து பழைய வாழ்க்கையை  தம்முடைய இளமைக்காலத்தை மீட்டெடுக்க நினைப்பது, நாவலின் முதல் பகுதி.

 

ஆ. ஷூட்டோவ் – யானா- செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்

சோவியத் யூனியன் ருஷ்யாவாகவும், லெலின் கிராடு  செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் எனவும் மறுபிறவி கண்டபிறகு , ஷூட்டோவ்  தன் காதலி ‘ யானா’விடம் கடந்த கால லெனின்கிராடு நினைவுளை எதிர்பார்ப்பது கேலிக்குரியது. எதையோ நினைத்து தாயகம் திரும்பும் கதைநாயகன் நாம் நினைப்பதுபோலவே ஏமாற்றத்திற்குள்ளாகிறான். பழைய லெனின் கிராடு இல்லை, ‘மேற்கத்திய நாகரிகத்தின் சாரத்தை அவன் பிரான்சில் கூட காணத வகையில் இங்கு கொண்டுவந்துவிட்டார்கள்.’  புரட்சியின் பேரால் கொல்லப்பட்ட  இரண்டாம் நிக்கலிஸின் கொள்ளுப்பேரனுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் அது.  ‘கிரேக்க பாதிரிமார்கள் புனிதரின் எச்சமிச்சங்களை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். ஓரின சேர்க்கையை விரும்பும் இரண்டு ராக் பாடகிகள் ஆங்கிலேயரின் மிதமிஞ்சிய நாணத்தைச் சாடுகிறார்கள். பெர்லுஸ்கோனி பவரோத்தியுடன்  டூயட் பாடுகிறார். ரஷ்ய சிலவராட்சி உறுப்பினர் ஒருவர் ஆல்ப்ஸ் மலையில் ஆறு சேலட்கள் வாங்குகிறார்’ கதை நாயகன் எதிர்பார்த்த  ‘லெயா’ வயது ‘யானா’ இன்று முதுமை வயதில் ருஷ்யா எடுத்துள்ள புதிய அவதரத்திற்கேற்ப ‘கொத்து கொத்தான ஹாலோஜன் மின் விளக்குகளின் கீழ் பிரகாசிப்பவள் ‘. மேற்குலகின் நகலாக காட்சி அளிக்கும் இன்றைய ருஷ்யாவின் நடைமுறைகள் அவனுடைய இனத்தோடு சேரும் சுக உணர்வும்,இருபது ஆண்டுகள்கழித்து நம்முடைய உலகத்தோடு தொடர்புகொள்வோம்  என்ற நம்பிக்கையும்’ பொய்க்க காரணமாக இருக்கின்றன.   

        ‘ ரஷ்யா அதற்கும் அதன் விதிப்பயனுக்குமிடையே  குறுக்கிட்ட அறுபது எழுபது ஆண்டுகால  நிகழ்ச்சிகளைத் துடைக்க முயலுகிறது. ஆம் அழகான ஒன்றை அச்சமும், அறிவுசார் அடிமைத்தனமும் ஆயிரமாயிரம் கொலைகளும் கலந்து சேறும் சகதியுமாக ஆகிவிட்டன’, ‘ஷூட்டோவ் மனதுக்குகுள் சிரித்துகொண்டான். தெளிவு மனதைக் காயப்படுத்தியது. அவனைக் கண்டு கொள்ளாமலேயே வரலாறு தன் போக்கைத் துறந்து மீண்டும் தூய்மை ஆகின்றது. அவனோ எல்லோரும் மறக்க விரும்பும் அம்மோசமான காலக்கட்டத்தின் சேற்றிலேயே உழன்றுகொண்டிருந்தான். ‘நான் வந்தது தவறு’, என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்’(பக்கம் 74), என ஷுட்டோவ் நினைக்கிறான்.

 

இ. வோல்ஸ்கி – மிலா – லெனின்கிராட்

        ‘ யாரிடமாவது மனம் திறந்து தனது பயனற்றுப் போன பயணம், யானாவிடம் மீண்டும் இணைய முடியாத சோகம் ஆகிய எல்லாவற்றையும் சொல்லிவிடவேண்டும்’(பக்கம் 78) என்றிருந்த ஷுட்டோவுக்கு  புதையலைப் போல ஒரு சந்திப்பு. பாரீஸ் வாழ்க்கையிலிருந்தும், தன்னைக் கைவிட்ட ‘லெயா’ என்ற இளம்பெண்ணின் இழப்பளித்த துயரத்திலிருந்தும் தப்பிக்க ஷூட்டோவ் தேடிவரும் லெனின்கிராட் நகர இளமைக்காலத்தையும்  நாற்பதுகளில் கண்ட சோவியத்யூனியனையும்  ஒரு முதியவர் வடிவில் செயிண்ட்பீட்டர்ஸ்பர்க் இவனுக்கென்றே பத்திரபடுத்தி வைத்திருக்கிறது.  

        பத்து நாளைக்கு முன்னால் ஒரு முதியோர் இல்ல த்தில் சேர்க்கப்பட இருந்தார். அதற்குள் மூன்றாவது நூற்றாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. எல்லாம் மூடப்பட்டுவிட்டன. விளைவு,  எங்களுக்கு  ஒட்டும் உறவும் இல்லாத இந்த வயோதிகரை நாங்கள் வைத்திருக்க வேண்டியதாயிற்று !’(பக்கம்54 ) என முதியவரை ஷூட்டோவின் முன்னாள் காதலி அறிமுகப்படுத்துகிறாள். அவள்  கூறியதுபோல பத்துநாளைக்கு முன்பாக கிழவரை முதியோர் இல்லத்தில் சேர்த்திருந்தால், இந்த நாவலே இல்லை. ஷூட்டோவ் மட்டுமல்ல நாமும் ஏமாந்திருப்போம். முன்பின் தெரியாதவன் வாழ்க்கை என நாவலுக்கு பெயரிட்டதும், எழுத முற்பட்ட தும் முதியவரின் கல்லறை காரணமாகத்தான், என்பது நாவல் இறுதியில் தெரிய வருகிறது.

சில நேரங்களில் மனிதர் வாழ்க்கையில் சந்திப்பு என்பது அவர்களின் விதியைத் தீர்மானிக்கிற சம்பவமாகவும் அமைவதுண்டு.  வோல்ஸ்கி ஓர் இசைநாடகக் கலைஞன், தொழிலுக்கேற்ப நன்குபாடவும் செய்வான். அவனைப்போன்றே இசைநாடகப் பாடகியாகவும் நடிகையாகவும் இருப்பவள் மிலா. இருவரின் முதல் சந்திப்பு  எதேச்சையாக  இசைக்கல்லூரி  மாணவர்கள்காக  இருந்தபோது நிகழ்கிறது. ‘செம்பட்டை முடியுடன் கூடிய ஓர் இளம்பெண்’ ஆன  ‘மிலா’வை, ‘தன்னுடைய பாட்டின் மென்மையினால் வாழ்ந்து விடலாம், தன்னை வெற்றிகொண்டவர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு, இருளிலும் கூடப் பிரகாசிக்கும் கண்களைக்கொண்ட பெண்களைக் கவரமுடியும்’ என்று வோல்ஸ்கி மனப்பால் குடித்திருந்த தருனத்தில்  சந்திக்கிறான்.   பிரிவோம் சந்திபோம்’  என்ற சூத்திரத்தினால் முடையப்பட்ட வோல்ஸ்கி – மிலா உறவில் எதிர்பாலின வேட்கைக்கு அதிகப் பங்கில்லை. அவர்கள் பரஸ்பர அன்பிற்குச் சாட்சியாக இருப்பது  நூற்றுக்கணக்கான லெனின்கிராட் வாசிகளைப்போல  ‘உன்னிடம் மட்டுமே என் கனவுகளை ஒப்படைக்கிறேன் அன்பே’, என்ற பாடல் மட்டுமே.  ‘மிலாவுக்கு எப்படியோ, அவனுக்கு ஊர் மெச்சும் இசைநாடகக் கலைஞனாக புகழ்பெறும் கனவுகள் இருந்தன.  ஆனால் விதி வேறு திட்டங்களை வைத்திருந்தது.   இவர்களுக்கிடையே நிகழும் மூன்று சந்திப்புகளும், அவை துளிர்க்கின்ற தருனம் முதல்  இற்றுவிழும் நொடிவரை சொல்லப்படும் வாழ்க்கையும், பின்புலமாகச் சித்தரிக்கப்படும் சோவியத் யூனியனும் நம் நெஞ்சைவிட்டு அகலாதவை.

இரண்டாவது சந்திப்பு  நிகழும்போது : இரண்டாம் உலகப்போர், லெனின் கிராட் முற்றுகை, குண்டுவீச்சு, தினம் தினம் கல்லறையாக மாறும் வகையில் ஆயிரமாயிரம்பேர் இறந்துகொண்டிருக்கிறார்கள். பஞ்சமும் பசிநோயும் மக்களை வாட்டுகிறது. தற்போது அவன் இசைநாடகக் கலைஞன் இல்லை. பிணம் சுமப்பவன். ஆம் தங்களைச் சுற்றிலும் இறந்து கிடக்கும் சடலங்களை உயிரோடிருப்பவர்கள்தான் கல்லறைக்குக் கொண்டு செல்லவேண்டும். அதன்படி ஒரு பிணத்தை வண்டியில் போட்டு இழுத்துச் செல்கிறான். இவனைப்போலவே பெண்ணொருத்தி பிணவண்டியை இழுத்து வருகிறாள். இருவரும் மூச்சுவாங்க சற்று ஓய்வெடுத்து, கைவசமிருக்கும் காய்ந்த ரொட்டியைக் கடிக்கிறபோது, தங்கள் காரியத்தை இலகுவாக்கும் நோக்கில் வோல்ஸ்கி அப்பெண்ணிடம் பேச்சு கொடுக்கிறான் :

– நான் என் அணடைவீட்டுக்காரர்  பிணத்தை இவ்வாறு சுமந்து செல்வேன் என்று எதிர்பார்க்கவில்லை .வருத்தமாக இருக்கிறது. உங்களுடைய பிணம் யாருடையது ?

        – என் அம்மா !  என்று அவளிடமிருந்து பதில் வருகிறது.

        இருவரும் ஒரு நிமிடம் முகத்தில் எவ்வித சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல், பொங்கி எழுந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு மவுனமாக நின்ற இடத்திலேயே  நின்றார்கள். குளிர் பூஜ்யத்துக்குக் கீழ் முப்பது டிகிரி. அழுவதற்கு அதுவல்ல நேரம். ‘ (பக்கம் 98  )என ஆந்திரேயி மக்கீன் எழுதுகிறார்.

எதிரபாராமல் இசை நாடக அரங்கும் இவர்களுக்குக் கதவைத்திறக்கிறது. புணர்வாழ்வு கிடைத்த தென கலைஞர்கள் இருவரும்  கிடைத்தப் பாத்திரமேற்று நடிக்கின்றனர். இவர்களின் மகிழ்ச்சி அதிக நாள் நீடிப்பதில்லை. யுத்தம் வோல்ஸ்கி – மிலா ஜோடியைப் பிரிக்கிறது. வோல்ஸ்கி லெனின்கிராடை காப்பாற்றும் பொருட்டு போர்முனைக்குச் செல்கிறான். யுத்தம் செய்யும் களம் நிலையாக ஓரிடம் என்று சொல்லமுடியாததால் இருவருரிடையே கடிதப்போக்குவரத்துகள் இல்லை. ஆகத் திரும்பப் பிரிவினைச் சந்திக்கின்றனர்.

மூன்றாவது சந்திப்பு –  நீண்ட இடைவெளி,  ஒரு சனிக்கிழமை நிகழ்கிறது.  வோல்ஸ்கி  தனது கடந்த காலத்தில் மூழ்கி இருக்கிறபோது முகவரியொன்று நினைவுக்கு வர  ‘மிலா’ வைப்பற்றி விசாரிக்கலாம் என்று அங்கு போகிறான்.  வழியில்  பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒருந்தியை ‘செம்பட்டை முடி பரத்தை, போரின் விளவு’ என்று முனுமுனுத்துவிட்டு, சற்று தூரத்தில் துணி காயவைத்துக் கொண்டிருந்த  பெண்மணியிடம் ‘மிலா’வைப் பற்றி விசாரிக்கிறான். அவள் காறித் துப்பிவிட்டு ‘உன் சல்லாபங்களைத் தொடங்க இரவுவரைகூட காத்திருக்க கூடாதா, வெட்க க்  கேடு, இனி பகலில்கூட வருவார்கள்’, என்கிறாள். திரும்ப வருகிறபோது பெஞ்சில் அமர்ந்திருந்த பெண்னை மறுபடியும்  காண்கிறான் :

அவள் கவிழ்ந்தடித்துப் படுத்திருந்தாள். தாலாட்டைப்போல, அவள் அன்பே உன்னோடு மட்டும் என் கனவைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று பாடினாள். அடுத்த அடி அவனுக்கு ஞாபகம் வந்தது. சற்று உரத்த குரலில் பாடினான். அப்போது அவள் உதடுகள் அசைந்த து அவனுக்கு வியப்பாக இல்லை. கண்கள் மூடியபடியே ஒரு புன்னகையைச் சிந்தி அவளுக்குள் இருந்த இன்னொரு ஜீவனை எழுப்பிவிட்டு பாடவைத்தாள். வோல்ஸ்கி அவளைத் தூக்கிவிட்டான். அவனுடன் அவள் சென்றபோது ஓர் இனிய கீதத்தின் தாக்கத்தால் அவள் தள்ளாடி நடந்தாள்.

‘என்று மக்கீன் அந்த ஜோடியின்  சந்திப்புகளை எழுதுகிறபோதெல்லாம்  படைப்பு அமரத்துவம் பெற்றுவிடுகிறது.  இந்த இடைப்பட்டக் காலத்தில்  அநாதைச் சிறுவர்களைக் காப்பாற்றத் தான் எடுத்த முயற்சிகளையும் அவர்களின் ஒரு வேளை ரொட்டிக்காக தாய்நாட்டின் உயர் ராணுவ அதிகாரிஒருவனுக்குச் சோரம் போகத் தொடங்கி இன்று ஓர் வேசியாக வெளி உலகிற்கு அறியப்பட்டுள்ள அவலத்தையும் பகிர்ந்துகொள்கிறாள்.

மிலா ஓர் இசை ஆசிரியை ஆகவும், வோல்ஸ்கி ஓர் அஞ்சல்துறை ஊழியனகாவும்  மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிக்க, ஸ்டாலின் அரசாங்கத்தின் இரகசியக் காவற்படை பொய்யானக் குற்றச் சாட்டை முன்வைத்து இவர்களைச் கைது செய்கிறது. அன்றைய வழக்கபடி விசாரனை, கடுங்குளிர் நிலவும் பிரதேச முகாம்களில் சிறையென,  பிரிவு இவர்களின் வாழ்க்கையில் மறுபடியும் குறுகிடுகிறது. ‘மிலா’ உடனான நான்காவது சந்திப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வோல்ஸ்கி  ஏமாற்றத்திற்கு ஆளாகிறார்.

 

நாவலின் இறுதியில் கூறுவதுபோல ‘எழுதுவதற்குத் தகுதியான வார்த்தைகள், மொழியில் சொல்லமுடியாத வார்த்தைகள்தான்’  என்பதாலோ என்னவோ, அந்த சொல்லமுடியாதவை  நெஞ்சில் ஏதேதோ அனுபவங்களாக விம்மித் துடிப்பதை உணருகிறோம். உணர்ச்சிப்பெருக்கில்  வார்த்தையின்றி  வோல்ஸ்கி கிழவனைப்போலவே பேச்சை வெறுத்து மௌனத்தில் ஆழ்கிறோம்.  ‘போர்கள், முகாம்கள், இரண்டு உயிர்களின் வலுவற்ற உறவுகள் என இப்படித்தான் கோல்ஸ்கி – மிலா ஜோடி வாழ்க்கை இருக்கின்றது.

வாழ்க்கையில் முதன் முதலாக எந்த ஊரும் சொந்த ஊர் இல்லையென்றும், அவன் போகும் இடங்கூட விரும்பிப் போகும் இடமில்லையென்றும், ஆயினும் இதுவரை இல்லாத அள்வுக்கு அவனுடைய சொந்த நாட்டின் மீது பற்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த நாடு ஓர் இடத்தைக் குறிக்கவில்லை. ஒரு சகாப்தத்தைக் குறித்த து – வோல்ஸ்கி வாழ்ந்த சகாப்தம். …ஆம் வெட்கப்படவேண்டிய அரக்கத்தனமும் கொலைவெறியும் தலைவிரித்தாடிய அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தலையைத் தூக்கி ஒருவன் வானத்தைப் பார்த்திருக்கிறான்’  என்பது பாரீஸுக்கு திரும்பும் ஷூட்டோவ் மனநிலை. நம்முடைய மனநிலையும் அதுதான்.

இதுபோன்ற நூல்கள் தமிழில் வருவதனால், தமிழ் படைப்புகள் கூடுதல் வளம் பெறும். பதிப்பகத்திற்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் தமிழ் படைப்புலகம்  நன்றி கூற கடமைப்படுள்ளது.

—————————————————————-

முன்பின் தெரியாதவனின் வாழ்க்கை (நாவல் )

தமிழில் பேராசிரியர் திரு  கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

 

————————————————————————————————-

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s