ரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*

(கட்டுரையாளர் : தமிழ்ப் பேராசிரியர், சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி -670115)

  1. Picture 1       பிரான்ஸ் தேசத்திலிருக்கும் நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் ஏற்கனவே நான்கு நாவல்களையும் ஐந்து சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். கட்டுரையாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் ஒன்பது நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தற்போதைய நாவல் ‘ரணகளம்’.

எழுத்தாளன் தான் வாழும் காலத்தின் குரல். சமூக வளர்ச்சியையும், சமூக அவலங்களையும் பதிவுசெய்பவன். சமகாலப் பிரச்சினைகளை படைப்புகளில் நேரடிப் பிரதியாகச் சொல்லுதல் இயலாது. நேரடிப் பிரதியெனில் , படைப்பாளி புறத் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். வரலாற்றைப் புனைவாக மாற்றி எழுதலாம். வரலாற்றில் புனைவும் இருக்கும். புனைவிலும் வரலாறு இருக்கும். நேற்றைய வரலாற்றில் இடங்களை மாற்றி பெயர்களை மாற்றி எழுதலாம் என்கிறது புதிய வரலாற்றெழுதியியல். படைப்பின் கதாபாத்திரங்கள் நிஜப்பாத்திரங்களாக உலவிடும் சூழலில், படைப்பாளன் ஒரு மறைப்பிரதியைத்தான் முன் வைக்க வேண்டிவரும் அல்லது படைப்புத் தொட்டிருக்கும் சிக்கல், படைப்பாளிக்குமான சிக்கலாக மாறிவிடும். உதாரணத்திற்கு மூன்றுபேர் சம்பந்தப்பட்ட வரலாற்று நிகழ்வில், மூன்று வரலாறும், மேலாக நான்காவதாக ஒரு வரலாறும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விற்கும் வெளிப்படுத்தப்பட்ட வரலாறு, மறைக்கபட்ட வரலாறு, அழிக்கப்பட்ட வரலாறு என்று மூன்று கோணங்கள் உண்டு. சார்புத்தன்மையின்றி எந்த வரலாற்றையும் எழுத இயலாது. பிரதியில் ஒரு நிகழ்வைப்பற்றிய பல கோணங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகே எது எந்தச் சார்பு என்பதை அறிய முடியும்.

உண்மையில், படைப்புப் பிரதியா ? வாசகப் பிரதியா ? படைப்பாளியின் பிரதி குறிப்புப் பொருளாக அல்லாமல், வாசகன் குறிப்புப் பொருளைப்பெற்று, அதனை ‘வாசகப் பிரதி’யாகப் பெறுகிறானா ? எனில், அனைவருக்குமான ஒரேகுறிப்புப் பொருளா ! 50 அல்லது 100 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படைப்பை வாசிக்கும் வாசகனுக்கு அக் குறிப்பு பொருள் கிடைக்குமா ? கிடைத்தால் அது படைப்பின் வெற்றி. இந்தச் சூழலில் இந்தக் குறிப்பிட்ட காலத்தில் வாழும் மனிதர்களின் மனதில் எழும் கேள்விகளை, மனதிலுள்ள சந்தேகங்களைக் கிளறிடும் நாவல் ‘ரணகளம்’.

நாவலை வாசிக்கிற அத்தனை வாசகர்களுக்கும் நாவல் காட்டும் கதாபாத்திரங்களை எளிதில் அடையாளம் காண இயலும். கடந்த ஆண்டு, தமிழ்ச் சூழலில் வாழும் மக்களுக்கு, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் உவப்பாக இருந்திருக்காது. முதல்வரின் மரணம், தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த அரசியல் களேபரங்கள்….எல்லாம் ரணகளம்தான். ஆனால் முதல்வரின் மரணத்தில் இருக்கும் மர்மம், மரணத்திற்கான காரியவாதிகள், காரணங்கள் எனத் தான் சந்தேக்க்கிற விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லிவிட முடியாத சூழலில், புனைவில் அதே போன்றதொரு ‘சாம்ராஜ்ஜியத்தை‘ எழுப்பி, அதில் வாசகப் பிரதியை உருவாக்குவதில் வெற்றிகொள்கிறார் நாவலாசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா.

படைப்பாளியின் பிரதியில் முழுவதும் இடம்பெறும்சொல் ‘அக்கா’. ஆனால் வாசகப் பிரதியில் உருவாகிடும் சொல் ‘அம்மா’. அவர் எல்லோருக்கும் அக்கா /அம்மா. அம்மாவாகப் பதிந்திருக்கும் நபரை, அக்கா என விளிக்கும் ஒரே ஒரு நிஜப் பாத்திரத்தைப் புனைவாக்கி எழுதியிருக்கிறார். மறைந்த முதல்வரின் சிகிச்சைத் தொடர்பான மர்மங்கள், இறுகிய கட்டுப்பாடுகள், மரணம் தொடர்பாக எழுப்பப்பட்ட சந்தேகங்கள் எனக் கேள்விப்பட்ட ; கிளப்பிவிடப்பட்ட செய்திகளைக்கொண்டு, ஒரு பிரதியை லாவகமாக உருவாக்கியிருக்கிறார். நாவலின் முதற்பகுதியும், இறுதிப்பகுதியும் நிச்சயம் இதை உறுதிப்படுத்தும். களத்தையும், சூழலையும், பெயர்களையும் மாற்றி, படைப்பில் வெற்றி கொள்கிறார் ஆசிரியர். கண்டுபிடிக்கப்படவேண்டியது, அக்கா எழுதியதாகச்சொல்லப்படும் ‘டைரி’ மட்டுமே. உண்மையில் அப்படியொரு டைரி இருக்கவேண்டுமென்பது படைப்பாளியின் விருப்பம்.

கிராமத்தில் திருமணமாகாமல் இருக்கும் அக்கா, புதுச்சேரியில் மளிகைக் கடை, உணவு விடுதி, ஜவுளிக்கடை நடத்திவரும் வயதானவருக்கு இரண்டாந்தாரமாகிறார். அவர் இறந்ததும், அவருடைய நிர்வாகத்தைத் தான் பொறுப்பேற்றுக்கொள்கிறார். வீட்டில் வேலைசெய்யும் கனகத்தின் பேச்சைக்கேட்டே எல்லாம் நடக்கிறது. நிர்வாகம் மறைமுகமாக கனகத்தின் கையிலேயே இருக்கிறது. கலா டீச்சர் சாயலில் இருக்கும் கனகம், அக்காளைக் கவனிப்பதாகச்சொல்லி, அக்காளைக் கொல்லக் கூட்டு சதியில் செய்கிறார். எல்லாமே அக்காவுக்கு மரணப் படுக்கையில்தான் புரிகிறது. ஆனால் மருத்துவமனையில் தீவிரமான கட்டுப்பாடு, நெருக்கடி, அத்தனையையும் ஒரு டைரியில் எழுதி, சிறுவயதில் அக்காளோடு விளையாடும், ஒரு கட்டத்தில்  அக்காவே மானசீகமாக கணவராக ஏற்றுக்கொள்ளும் கதைசொல்லியின் கையில் சேர்ப்பித்து விடுகிறார்.

இந்திராகாந்தி கொலை, ராஜிவ்காந்தி கொலை என்று நாவலில் பழைய அரசியல் நிகழ்வுகள் விவரிக்கபடுகின்றன. ராஜிவ் காந்தி கொலை நாளையும், அப்போது ஏற்பட்ட அரசியல், சமூக நெருக்கடிகளை விவரிப்பதன் மூலம், பிரதி தற்போதைய கால கட்டத்தை மறைமுகமாக விவரிக்கிறது. முன்பு இப்படி நடந்தது, இப்படி நடந்தது என்று சொல்வதன்மூலம், இப்போதைய நிகழ்வை விமர்சிக்கிறது. இது கால மயக்கப் பிரதி.

அக்காள் இறந்தது 1991 மே 21 என்று குறிப்பிடப்படுகிறது. உண்மையில் அது ராஜிவ்காந்தி இறந்த நாள், கொலை செய்யப்பட்ட நாள். நாவலில் ராஜிவ்காந்தி இறப்பும், அதற்குப் பிறகான சம்பவங்களும் நேரிடையாக இடம்பெறுகின்றன. அக்காள் சிகிச்சைக்காக ‘ஹிப்போகிரட்டஸ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதே மருத்துவமனையில்தான் முன்பு, அவர் கணவரும் சேர்க்கப்பட்டிருந்தார்.. ஹிப்போகிரட்டஸ் என்பவர் மருத்துவத்தின் தந்தை எனப்படுபவர். எனினும் சிகிச்சையளிக்கும் முன் அவர் ‘அப்பல்லோ’ என்னும் கிரேக்கக் கடவுளை வணங்கிவிட்டுத்தான் தொடர்வார். ஆக ஹிப்போகிரட்டஸ் என்ற சொல்லின் ஒலிக்குறிப்பும், பொருள் குறிப்பும் இங்கு நமக்கு முக்கியம். அக்காள் குணமடைய வேண்டும் என அவரது நிர்வாக ஊழியர்கள், பிரார்த்தனைகள் செய்வது, வேண்டுதல் நிறைவேற்றுவது எல்லாம் நிஜத்தின் பிரதிபலிப்பு. அக்காள் குணமடைய வேண்டுகிறார்களா அல்லது அக்காள் இறந்துபோக வேண்டுகிறார்களா எனக் கூறியிருப்பது பகடி.

அக்காளின் கணவருக்கு, கனகத்தின் ஏற்பாட்டிலேயே அக்காள் வசிய மருந்தைக் கொடுக்கிறார். அது ‘ மெல்லக் கொல்லும் விஷம் ‘  என்பது அக்காளுக்கு மெல்லவே புரிகிறது. தனக்கும் அதே வசிய மருந்தைக் கொடுத்துவிட்டாள் என்பதும் மரணப்படுக்கையில்தான் புரிகிறது. வீட்டிலிருந்து கனகம் காணாமல் போவதும், சில நாட்கள் கழித்து மறுபடியும் கனகம் வீட்டிற்குள் வருவதும் நமக்குத் தெளிவாகப் புரிகிறது. முழுக்க முழுக்க கனகத்தை ‘வில்லி’யாக மாற்றியிருக்கிறது நாவல் ; அக்காவுக்கு எதுவுமே தெரியாது என்பது போல.  வாசகப் பிரதியில் இது முரணாகப்படுகிறது. அக்காளின் கணவருக்கு வாரிசு இல்லை. அக்காளைத் திருமணம் செய்தபிறகும் வாரிசு இல்லை. கனகமும், அக்காள் கணவரின் அண்ணன் மகனும் சேர்ந்து நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்கிறார்கள் என்று நாவல் முடிகிறது. இது ஒரு அரசியல் ரணகள நாவல்.

  1. கெண்ட் ஹாரஃப் எழுதிய நாவலாக இருந்து, அதே பெயரில் திரைப்படமான ‘Our souls at night’ -ஐ பார்த்தபோதுதான், துணை என்ற சொல்லைக்குறித்து, இப்படி ஒரு நாவல் எழுதத் தோன்றியதாக ஆசிரியர் முன்னுரையில் சொல்கிறார். அடுத்தடுத்த வீடுகளில், முதுமையில் தனிமையில் இருக்கும் ஆணும் பெண்ணும் பழகுவதுதான் நாவல்; திரைப்படத்தின் கதை அவர்களுடைய உடல், உள்ளம் சார்ந்த வேதனைகள் ஆகியவைத் திரைப்படத்தில் இருக்கின்றன. அவர்களின் உறவைப்பற்றி ஊரே தவறாகப் பேசுகிறது. தனிமையில் இருக்கும் யாருக்கும் ஒரு ‘துணை’ அவசியமென்கிறது.

ரணகளம் நாவலில், அக்காளின் கணவர் முதல் மனைவி இறந்த பிறகு, முதுமையிலும் தனக்கொரு துணையைத் (அக்கா) தேடிக்கொள்கிறார். அவர் வேலை வேலை என்று அலைவதனால், வீட்டு வேலைக்காரி கனகம் அக்காவுக்குத் துணையாகிறாள். அக்காள் கண்வர் இறந்த பிறகு, அக்காள் கதை சொல்லியைஅழைத்து (கதைசொல்லிக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும்) தனக்கு மாலையிடச் சொல்லி, தானும் அவனுக்கு மாலையிட்டு, மானசீகமாக அவனைக் கணவனாக எற்றுக்கொள்கிறார். மனதளவில் ‘துணை’  தேடிக் கொள்கிறார். கூடவே இருக்கும் கனகம் துணை வினையாகிவிட்டதென புரிந்துகொள்கிறார்.

 

  1. ரணகளம் நாவல் ஒருவகையில் பெண்ணிய நாவல். பெண்களின் வேதனைகளை, தவிப்புகளை, கட்டுப்பாடுகளை, அடையவேண்டிய சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறது. ஆணின் பலவீனத்தைப் பற்றி பேசுகிறது. பெண் விரும்பும் அதிகாரத்தை, அன்பை இருவழிகளில் விளக்குகிறது.

தான் வயதான ஒருவரைத் திருமணம் செய்ய , சம்மதித்ததன் காரணம் பற்றி அக்கா கூறுவது, பெண் வாழும் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. அக்காளின் படிப்பு, அக்காளின் உண்ணும் பழக்கம், முதிர்கன்னி நிலைமை என எல்லாமே பெண் ஆணை மையப்படுத்தியே இருக்கிறாள் என்பதை வெளிப்படுத்துகிறது. அக்காளின் அப்பா இறந்த பிறகு அம்மா அடைவது சுதந்திரம் மற்றும் நிம்மதி. மகன் சுப்புராஜ் விதவைத் திருமண மாநாட்டில் கலந்துகொள்ள போவதாகச் சொல்லும்போது, அம்மாவுக்கு அப்படி ஒரு திருமணத்தைச் செய்யலாமே என்று அக்காள் சொல்கிறார். அப்போது அம்மா, « ‘62 வயசாகிற எனக்கு 26 வயசுல ஒரு பையனைக் கொண்டு வரட்டும், சம்மதிக்கிறேன்’ என்றவள், சுப்புராஜ் முகம் சுளித்த தைப் பார்த்து, ‘ஏன்டா….உங்க பெரியாருக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா ?’ எனக் கோபத்துடன்  கேட்டாள். தொடர்ந்து என்னிடம், ‘அடி போடி ! புருஷன் போனப்புறம் இப்பத்தான் எனக்கு விடுதலை கிடைச்சதா நினைச்சு சந்தோஷமா இருக்கேன், அதைக் கெடுத்திடாதே’  என்றாள். »(ப 95) எனக்கூறுவதும் புரியும்.

கிராமத்திற்குக் கலாடீச்சரின் வருகை, பெண்னைப் பழிசுமத்தும் பஞ்சாயத்தில் கலா டீச்சர் பேசுபவை, பெண்களின் வாழ்முறை, திருமணம் என அத்தனையும் நாவல் அரசியல் பிரதியானாலும், மறுபுறம் பெண்ணியப் பிரதியாகவும் இருக்கிறது. கிராமத்து வீட்டை அக்கா ‘கட்டி’ ஆண்டவள்தான். வீட்டு நிர்வாகத்திலிருந்து வணிக நிர்வாகம் என அதிகாரத்தை நோக்கிய நகர்வாக அக்காளின் நகர்வு இருக்கிறது. அதிகாரச் சூழலில், தன் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலைத்த பிறகு, அக்கா தான் ஒரு சாதாரணப்பெண்ணாக , ஏதோ ஒரு முனுசாமிக்கு மனைவியாக வாழ்ந்திருக்கலாம் என்று அங்கலாய்ப்பது முரண்.

அடிவருடிகள், துதிபாடிகள், அடிமைகள் என இருபவர்களுக்கு, அதிகாரத்தில் இருப்பவர்கள் அடிமைகளாகிவிடுவதும் முரண். பாரதி, பெரியார், புதுச்சேரி நகரம், கிராமம் சார்ந்த பதிவுகளும் நாவலில் உண்டு. தொடக்கத்தில் எமன் வரும் பகுதி , கதைக்குள் நுழைய உதவும் நல்ல கற்பனை. இந்நாவலை விரிவாகப் பேச இன்னும் இடமுண்டு.

நீலக்கடல், மாத்தா ஹரி, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, காஃப்காவின் நாய்க்குட்டி ஆகியவை இவருடைய பிற நாவல்கள்.

  •    கட்டுரையாளர் :முனைவர் ஜிதேந்திரன், தமிழ்ப் பேராசிரியர், சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி -67011

 

———————————————————

26047505_1779219605441809_5161767557754892563_n

ரணகளம்  நாவல்

ஆசிரியர் : நாகரத்தினம் கிருஷ்ணா

வெளியீடு:

சந்தியா பதிப்பகம், சென்னை

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s