அல்பெர் கமுய் என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் L’Homme Révolté என்ற பிரெஞ்சு நூலை தமிழில் ‘புரட்சியாளன்’ என்று மொழி பெயர்த்திருந்தேன். அது காலச்சுவடு வேளியீடாக 2016ல் வெளிவந்த து. ஆங்கிலத்தில் இதே நூல் ‘The Rebel’ என்ற பெயரில் வெளிவந்தது. சில நண்பர்கள் எனக்கு கிளர்ச்சியாளன் என்ற பெயரை சிபாரிசு செய்தார்கள். அவர்கள் ஆங்கில நூல்வழியில் அந்தப் பெயரை அணுகியிருக்கலாம். உண்மையில் ஆங்கில மொழிபெயர்ப்பு, மூல நூலின் பல பகுதிகளைத் தவிர்த்திருந்தது. அது மொழிபெயர்ப்பாளர், அதை அப்படியே ஏற்றுக்கொண்ட ஆங்கிலப் பதிப்பாளர் ஆகியோர் விருப்பம்.
தமிழில் சில கேள்விகள் ஆகாது. எனது மாத்தா ஹரி நூலுக்கு முன்னுரை எழுதிய எழுத்தாள நண்பர் ஒருவர் மாத்தா ஹரி பற்றி தான் முன்னமே அறிந்திருந்த தாகவும், அப்பெண்மணிபற்றிய படங்கள் சிலவற்றை ஏற்கனவே பார்த்திருப்பதாகவும் தெரிவித்திருப்பார். பிரான்சு நாட்டில் இருந்த எனக்கே மாத்தா ஹரி படங்கள் எளிதில் பார்க்க கிடைக்க வில்லை. எனது நூல் வெளிவந்தபோது, இணையத்தில் தற்போது உள்ளது போன்ற சௌகரியங்களில்ல. ஒரு Médiathèque மூலம் பார்க்க கிடைத்த து, எழுத்தாள நண்பர் மாதாஹரி படங்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தமிழில் மேடையில், இதழ்களில், பத்திரிகைகளில் துணிச்சலாக ஹெமிங்வே அம்மா சோறு பிசைந்து கொடுக்க, அவரும் நானும் பசியாறி இருக்கிறோம் என த் தெரிவித்தால் நம்பத் தயாராக இருக்கிறார்கள்.
மீண்டும் புரட்சியாளன் நூலுக்கு வருகிறேன். நான் இந் நூலுக்கு பெயர் சூட்டியபொழுது, எனக்கு மூலநூல் பிரெஞ்சு நூலான l’Homme révolté அன்றி ‘ The Rebel’ அல்ல. அடுத்து மூல நூல் ஆசிரியர் ‘The Rebel’ என்ற சொல்லுக்கு இணையாக அதே பொருளைத் தரக்கூடிய ‘La Rebelle’ எனும் சொல் பிரெஞ்சு மொழியிலிருந்தும் அதை வேண்டாம் என ஒதுக்கிவிட்டு l’Homme révolté என்ற பெயரை தேர்வு செய்திருக்கிறார். எனக்கு உறிச்சொல்லான révolté , என்ற சொல்லை கலகம், கிளர்ச்சி என்று தட்டையாக மொழி பெயர்த்து சிறுமைப் படுத்த விருப்பமில்லை. இங்கே நாரதர் கூட கலகக்காரன். அடுத்து கிளர்ச்சி என்ற சொல்லை தமிழில் புலனுணர்வு சார்ந்த ஒன்றாக காண்கிறப் போக்கும் இருக்கிறது. இத்தகைய சூழலில் l’Homme révolté, என்ற சொல்லை அதே பிரெஞ்சு மொழியில் l’homme de la révolution, அதாவது revolutionary man ஆக பொருள்கொண்டு புரட்சியாளன் என பெயர்வைப்பதுதான் பொருத்தமென்று நினைத்தேன்.
இது தவிர கிளர்ச்சியும் கலகமும் சுய நலம் கொண்டவை, பொது நலத்தின் விழுக்காடுகள் அதில் குறைவு, சோற்றில் உப்பில்லை என்று கூட கலகத்தில் இறங்கலாம், கிளர்ச்சி செய்யலாம். அதனாலேயே அவைகளுக்கு எளிதாக ஒடுக்கப் படும் வாய்ப்பும் அதிகம். ஆனால் புரட்சி அப்படியல்ல. பழைய ஆட்சியும் அதிகாரமும் புல் பூண்டற்று போக அவ்விடத்தில் முற்றிலும் புதிய ஒன்றை இட்டு நிரப்புவதும் செயல்படுத்துவதும் ஆகும். தங்கள் பக்கத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அதனை முன் நிறுத்த எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருப்பவர்கள் புரட்சியாளர்கள். நூறு போலீஸ்காரர்களைக் கண்டதும் கலைந்து போகும் போராட்டங்களை அல்பெர் கமுய் கணக்கிற்கொள்ளவில்லை. அவற்றைப் புரட்சியென வர்ணிக்கவும் கூடாது. புரட்சி யின்போது அதிகாரத்தில் இருப்பவர்கள், புரட்சியாளர்கள் இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் உண்டு. புரட்சி வரலாறுகளின் அடிப்படையில், புரட்சி மனிதனை அல்லது புரட்சியாளனை அடையாளம் காண்பது தான், அல்பெர் கமுய் நோக்கம்.
அனைத்துக்கும் மேலாக ஒரு மொழி பெயர்ப்பாளனாகிய எனக்கு எது நியாமாக நூலுக்குப் பொருந்திவரும் என்ற அடிப்படையில் ஒரு பெயரைத் தேர்வு செய்ய உரிமை இருக்கிறது. ஆலோசனைகளைக் கேட்டு பெறுவதில் எவ்வித தவறுமில்லை. எல்லா நேரங்களிலும் நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காதென்பது உண்மைதான். ஆனால் வருகிற ஆலோசனைகள் சரியானவை என்பதற்கு என்ன உத்தரவாதம்.
———————————
வாழ்த்துகள் சார்!!