அரசியல், சமூகம் இரண்டிலும் முத்திரையைப் பதித்து புகழையும் பெருமையையும் ஒருசேர சம்பாதித்த பெண்மணி. இரண்டு கிழமைகளுக்கு முன்பு(ஜூன்30) தமது 89 வயதில் மறைந்த இவருக்காக, பிரான்சு நாட்டின் ஒட்டுமொத்த சமூகமும், ஊடகமும் தங்கள் திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை இரத்துசெய்துவிட்டு, இவர் சார்ந்த வரலாற்றை மீள்வாசிப்பு செய்தனர். அதிபர் முன்னிருந்து செலுத்திய அஞ்சலியில் அரசியல் பேதமின்றி எல்லா தரப்பினரும் கலந்து கொண்டனர். முத்தாய்ப்பாக மறைந்த இப்பெண் தலைவரின் உடலுக்கு ‘பாந்த்தெயோன்’ ஆலயத்தில் இடமுண்டு என்பதை அதிபர் மக்ரோன் தெரிவிக்கவும் செய்தார். பாரீஸில் இருக்கும் இவ்வாலயம், ஐந்தாம் நூற்றாண்டில் பாரீஸ் நகரின் நிர்வாகியாகப் பொறுப்பேற்றிருந்த புனித ழெனெவியெவ் (Sainte Geneviève) பூத உடலுக்கென எழுப்பிய ஆலயம். பின்னர் பிரான்சு வரலாற்றின் தவிர்க்கமுடியாத தலைவர்களின் உடல்களுக்கும் அங்கு இடமளிக்கபட்ட து. இன்றைய தேதியில் ரூஸ்ஸோ, வொல்த்தேர், விக்தொர் யுகொ, எமில் ஸோலா, க்யூரி தம்பதியினர் என ஒரு சில பிரமுகர்களுக்கே இடம் அளித்திருக்கிறார்கள். நாட்டின் தந்தை எனக்கொண்டாடப்படும் முதல் அதிபரும் படைபாளியுமான ஜெனரல் தெகோலுக்கோ (Général De Gaulle) உலகப்புகழ்பெற்ற பிற பிரெஞ்சு அரசியல்வாதிகளின் உடல்களுக்கோ அங்கு இடமளிக்காதது வியப்புக்குரிய செய்தி. ஒரு சில வருடங்களுக்கு முன்பு அல்பெர் கமுய் உடலை அங்கு கொண்டுபோகலாமென, அவருடைய நூற்றாண்டு விழாவின்போது அப்போதைய அதிபர் விருப்பத்தினைத் தெரிவித்த போது. அல்பெர் கமுய் குடும்பத்தினர் அதனை நிராகரித்துவிட்டனர். பெண்களின் வேதநூல் என அழைக்கப்படும் ‘இரண்டாம் பாலினம்’ நூலை எழுதிய சிமொன் தெ பொவ்வாருக்குக்கூட இடம் அளிக்கவில்லை. இது பற்றிய சர்ச்சைகளுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
யூதத்தால் நேர்ந்த சோதனை
இரண்டாம் உலகப்போர் சூழல், நாஜிகளின் பிடியிலிருந்த பிரான்சு, பிறப்பால் யூதர், போன்ற காரங்களை வைத்து பெண்மணிக்கும் அவருடைய குடும்பத்தைச்சேர்ந்த பிறருக்கும் என்ன நேர்ந்திருக்குமென்பதை எளிதாக கணிக்கமுடியும். யூதர்கள் என்கிறபோதும் சமயக் கொள்கையில் முற்போக்காளர்களாக இருந்ததால் தம்பதிகள் இருவருமே நடைமுறை வாழ்க்கையில் சமய நெறிகளை கடைப்பிடிப்பதில்லை. நாஜிகளுக்கு அடிமைப்பட்டுக்கிடந்த விஷி அரசாங்கம் யூத இனத்தை அழிக்க முனைந்தபோது, சிமொன் தந்தை ஜாக்கோப்(Jacob) என்ற யூதப்பெயருக்குப் பதிலாக ழாக்கியெ (Jacquier) என்று பெயரைக்கூட மாற்றிப்பார்த்தார். சிமொன் பெற்றோர்களின் மதநம்பிக்கையின்மையோ, தந்தையின் பெயர்மாற்றமோ நாஜிகளின் ‘கெஸ்ட்டாபொ’ என்ற ரகசிய காவற்படையினரின் கைது நடவடிக்கையைத் தடுக்கவில்லை. 1944 ஆம் ஆண்டு, சிமொன் பள்ளி இறுதிவகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மறுநாள் கைது செய்யப்படுகிறார். பின்னர் அவருடைய சகோதரி, பெற்றோர்கள் சகோதரர் என அனைவரும் கைதாகிறார்கள். வதைமுகாமுக்கு கொண்டுசென்று விஷவாயு, அல்லது நாஜிகளின் வேறு மரண உத்திகளால் கொல்லப்படுவது உறுதி, இனி உயிருடன் திரும்பசாத்தியமில்லை என்ற நிலையிலேயே அவுஸ்விட்ஸ் (Auschwitz)வதைமுகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே அவர்களைத் தனித்தனியாகப் பிரித்து பெயருக்குப் பதிலாக எண்ணைத் தந்து, அந்த எண்ணை சூட்டுக்கோலால் உடலில் பதிக்கவும் செய்தனர். சிமொன் எண் 78651. இவர்கள் கைதுக்கு உதவி செய்தது, அன்றைய பிரான்சு நாட்டின் விஷி அரசாங்கம். இந்த அரசாங்கம் மட்டுமே ஈவிரக்கமின்றி தமது சொந்த நாட்டின் பிரஜைகளை கிட்ட தட்ட 73000 பேர் கைது செய்ய காரணமாக இருந்தது. போர்முடிவுக்கு வந்து விடுவிக்கப்பட்டபோது அவுஸ்விட்ஸ் வதை முகாமிலிருந்து 3 சதவீத மக்களே மீட்கப்பட்ட னர். அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் நமது சிமொனும், அவரது சகோதரியும் அடக்கம். சிமொனின் தாய், தந்தை, சகோதரர் அனைவரும் கொலையுண்டனர். அவுஸ்விட்ஸ் கொலைமுகாமின் பாதிப்பில் வெகுநாட்கள் பிறரிடம் உரையாடுவதற்குக்கூட சிமொன் தயங்கினார்.
பெண்விடுதலையில் சிமொனின் பங்களிப்பு
இட து சாரி மனோபாவம் கொண்டவர் என்கிறபோதும் கணவர், பிள்ளைகள், குடும்பமென அக்காலத்திய பெண்கள் வாழ்நெறி கோட்டைத் தாண்டாத அன்னை ; நாஜிகள் வதைமுகாம்களில் பெண்களை நடத்திய விதம், பிரான்சு நாட்டில் சமைப்பது, பெருக்குவது, பிள்ளைபெறுவது எனவாழ்ந்த பெண்களின் இக்கட்டான நிலை ; இவைகளெல்லாம் இளம்வயது சிமொனை அதிகம் யோசிக்க வைத்திருக்க வேண்டும். விளைவாக, சட்டப்படிப்பை விரும்பி தேர்வு செய்கிறார், மாஜிஸ்ட்ரேட் ஆகவும் பணியாற்றுகிறார். அந்நாளில் பெண்கள் கனவு காணமுடியாத அரசியலுக்குள் துணிந்து பிரவேசிக்கவும் செய்தார். 1969 ஆம் நாட்டின் முதல் பெண் அமைச்சர் என்ற தகுதியுடன் சட்ட அமைச்சரானார். 1974 ஆம் ஆண்டு வலெரி ழிஸ்கார் தெஸ்த்தென் (valéry Giscard d’Estaing) அதிபராக தேர்வானபோது, ழாக் சிராக் (Jacques chirac) அமைச்சரவையில் சுகாதார அமைச்சர். நாட்டின் முதல் பெண் அமைச்சர் என்பதைத் தவிர, ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதவியில் அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெயரும் கிடைத்த து. அடுத்து 2010 ல் பிரெஞ்சு மொழி அகாதமி உறுப்பினராகும் வய்ப்பும் அமைகிறது. இவ்வளவு பெருமைகளுக்கு உரியவர் என்கிறபோதும்,1974 ஆம் ஆண்டு இவரால் கொண்டுவரப்பட்ட கருக்கலைப்பு உரிமைச் சட்டமே இவரது பெருமையை பெரிதும் உயர்த்தியது எனக்கூறலாம்.
கருகலைப்பு உரிமைச் சட்டம்
சிமொன் தெ பொவ்வாருடைய ‘இரண்டாம் பாலினம்’ நூல் 1949 ஆம் ஆண்டில் வெளிவந்தது என்கிறபோதும், பிரான்சு நாட்டில்பெண்கள் நிலமையில் பெரிதாக மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. 1968 ஆம் ஆண்டு மாணவர்கள் தொழிலாளர்கள் கிளர்ச்சி, பிரெஞ்சு பெண்களையும் தங்கள் நிலைகுறித்து சிந்திக்க வைத்தது. 1970 ஆம் ஆண்டு பெண்கள் விடுதலை இயக்கம் (Mouvement de la libération des femmes) உருவானது.அப்போதெல்லாம் கருக்கலைப்பு என்பது சட்டப்படிக் குற்றம். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி சோஷலிஸ நாடுகளிலும் பெண் என்பவள் பிள்ளை பெறும் எந்திரம். இந்நிலையில் 1971 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டுப் பெண்ணியில்வாதிகள் வீதியில் இறங்குகிறார்கள். கருக்கலைப்பு, தாய்மைப்பேறு ஆகியவற்றில் பெண்களும் தங்கள் கருத்தினை சொல்ல இருக்கின்றன. அது குறித்த முடிவினை எடுக்க ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கே முழு உரிமையும் வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி வீதியில் இறங்கினர். Manifeste des 343 என்ற பெயரில் 343 பிரெஞ்சு பெண்மணிகள் (படைப்பாளிகள், நடிகைகள், பத்திரிகையாளர்கள், பேராசிரியைகள்) 1974 ஆம் ஆண்டு சிமொன் தெ பொவ்வார் முன்னின்றுதயாரித்த அறிக்கை யொன்றில் தாங்களெல்லாம் கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்கள் என பகிரங்கமாக அறிவித்து கையொப்பமிட்டிருந்தனர். கருக்கலைப்பு சட்டப்படி குற்றம், குற்றத்திற்குரியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றிருந்த நிலையில் இப்படியொரு அறிவிப்பின் மூலம் அரசுக்கு சவால்விட்டது நாட்டில் பெரும் புயலை உருவாக்கியது. இப்பெண்களை வேசிகள் என ஆணுலகம் அழைத்தது. இத்தகைய சூழலில் தான், பெண்களின் உரிமைக்குரலுக்கு செவிசாய்த்து அவர்களின் கனவினை மெய்ப்பிக்கின்றவகையில் சட்டப்படியான கருக்கலைப்பு உரிமையை சிமொன் வெய் பிரெஞ்சு பாராளுமன்றத்தில் கொண்டுவந்தார். பாராளுமன்றம் முழுமுழுக்க ஆணுறுப்பினர்களால் நிரம்பியிருந்தது. விவாத த்தின் போது, சிமொன் கடுமையான ஏச்சுக்களையும், விமர்சனத்தையும் தாங்கிக்கொள்ளவேண்டியிருந்த து. இருந்தும் துணிச்சலுடன் தம்மை அமைச்சராகிய அதிபர், தமது பிரதமர், சக அமைச்சர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் அவையில் இச்சட்டத்தை நிறைவேற்றியது மிகப்பெரிய சாதனை.
—————————————————————–